சனி, 8 பிப்ரவரி, 2014

'கற்பகம்' படம் மூலம் புகழின் சிகரத்தை தொட்டார் கே.ஆர்.விஜயா

raadhe krishnaa 09-02-2014



Raghu Bv shared Veera Rajan's photo.
'கற்பகம்' படம் மூலம் புகழின் சிகரத்தை தொட்டார் கே.ஆர்.விஜயா
**********************************************************

Photos from Veera Rajan's post in Old Tamil Film Images
By Veera Rajan
'கற்பகம்' படம் மூலம் புகழின் சிகரத்தை தொட்டார் கே.ஆர்.விஜயா
**********************************************************

கே.ஆர்.விஜயா - 2
--------------------------
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "கற்பகம்" படத்தில் நடித்துப் புகழ் பெற்ற கே.ஆர்.விஜயா, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்து புகழின் சிகரத்தை தொட்டார்.
குறுகிய காலத்தில் 400 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தார்.

டைரக்டரும், கதை - வசன கர்த்தாவுமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், அவர் தயாரித்த "கற்பகம்" படத்துக்கு ஒரு புதுமுகத்தை தேடி வந்தார். கே.ஆர்.விஜயா பற்றி அறிந்து, அவரை அழைத்து வரச்சொல்லி நேரில் பார்த்தார்.

தன்னுடைய கற்பகம் கதாபாத்திரத்துக்கு மிகப்பொருத்தமானவர் என்று தீர்மானித்து, கே.ஆர்.விஜயாவை ஒப்பந்தம் செய்தார்.

படத்தில் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இருந்தார்கள்.
எனினும், விஜயாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம்.
அதை சிறப்பாக செய்தார், கே.ஆர்.விஜயா.

'கற்பகம்' வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது.
அந்தப் படத்தின் மூலம், நட்சத்திர அந்தஸ்து பெற்றார், கே.ஆர்.விஜயா.

"மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா" என்ற பாடல் காட்சியில், ரசிகர்களை கண் கலங்க வைத்தார்.

பொதுவாக, விஜயாவின் தோற்றமும், புன்னகையும் அனைவரையும் கவர்ந்தன.
"கற்பகம்" ஒரே படத்தின் மூலம், ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்.

"கற்பகம்" 1963 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியது.
அதே சமயத்தில், எம்.ஜி.ஆர். நடித்த "பரிசு", சிவாஜிகணேசன் நடித்த "அன்னை இல்லம்" ஆகிய படங்களும் வெளிவந்தன.

இந்தக் கடும் போட்டியை சமாளித்து, வசூலிலும் வெற்றி கண்டது "கற்பகம்."

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் "கற்பகம்" என்ற ஸ்டூடியோவை உருவாக்குவதற்கு, இந்தப்படம் அடைந்த வெற்றிதான் காரணம்.

கே.ஆர்.விஜயாவுக்கு ஏக காலத்தில் பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ்ப்பட உலகில் அவருடைய 'சீசன்' தொடங்கியது என்றே கூறலாம்.

சிவாஜிகணேசனுடன் "கை கொடுத்த தெய்வம்" படத்தில் இணைந்து நடித்தார்.
இப்படம், 1964 ஜுலையில் வெளியாகியது.

சின்னப்பதேவர் தயாரித்த "தொழிலாளி" படத்தில், எம்.ஜி.ஆருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்தார்.
இப்படம் 1964 செப்டம்பரில் வெளியாகியது.

தொடர்ந்து சிவாஜியுடன் "செல்வம்", "சரஸ்வதி சபதம்", "கந்தன் கருணை", "நெஞ்சிருக்கும்வரை", "இருமலர்கள்" முதலிய படங்களில் நடித்தார்.

"இருமலர்கள்" படத்தில் பத்மினியும் நடித்திருந்தாலும், சிவாஜியை மணக்கும் முறைப்பெண்ணாக விஜயா நடித்தார்.
சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயா மூவரும் போட்டி போட்டு நடித்த அற்புத படம் "இருமலர்கள்."

எம்.ஜி.ஆருடன் நடித்த "பணம் படைத்தவன்", "விவசாயி" ஆகிய படங்களும் பெரிய வெற்றி பெற்றன.

பிரபல பட அதிபர் நாகிரெட்டி, "இதயக்கமலம்" படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார்.
முதலில், சிவாஜிகணேசன், சரோஜாதேவியை வைத்து கறுப்பு - வெள்ளையில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டார்கள்.
பின்னர், புதுமுகங்களைப் போட்டு, கலரில் எடுக்க முடிவு செய்தார்கள். அதன்படி, கே.ஆர்.விஜயாவும், ரவிச்சந்திரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இதில் கே.ஆர்.விஜயாவுக்கு இரட்டை வேடம். பிரமாதமாக நடித்தார்.
ஆரூர்தாஸ் வசனம் எழுதிய இப்படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

"உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல", "தோள் கண்டேன் தோளே கண்டேன்", "மலர்கள் நனைந்தன பனியாலே..." முதலான பாடல்கள் ஹிட் ஆயின.

"பஞ்சவர்ணக்கிளி", "ராமு", "பட்டணத்தில் பூதம்", "தங்கை" என்று கே.ஆர்.விஜயாவுக்கு வெற்றிப்படங்கள் தொடர்ந்தன.

திருச்சியில் நடந்த விழாவில், கே.ஆர்.விஜயாவுக்கு "புன்னகை அரசி" என்ற பட்டம் வழங்கப்பட்டது.

சில படங்களில், அம்மன் வேடத்தில் சிறப்பாக நடித்தார்.

புகழின் உச்சியில் இருந்த கே.ஆர்.விஜயா, திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்வில் ஈடுபட முடிவு செய்தார்.

முடிக்க வேண்டியிருந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, பிரபல தொழில் அதிபர் வேலாயுத நாயரை மணந்தார்.

அதன்பின் படங்களில் நடிப்பதில்லை என்று தீர்மானித்தார்.
ஏராளமான வாய்ப்புகள் வந்தும், அவற்றை உதறித் தள்ளினார்.







குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்த 'புன்னகை அரசி'
************************************************
கே.ஆர்.விஜயா
**************


தன் வசீகரப் புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் "புன்னகை அரசி" கே.ஆர்.விஜயா.

இவரது பூர்வீகம் திருச்சூர்.
இயற்பெயர் தெய்வநாயகி.
தந்தை சித்தூரில் நகைக்கடை வைத்திருந்தார்.
விஜயா தன் தாயாருடன் திருச்சூரில் வசித்து வந்தார்.

தந்தைக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், குடும்பம் பழனிக்கு குடியேறியது.

பழனிக்கு வரும் பக்தர்களுக்கு விஜயாவின் தந்தை உதவிகள் புரிவார். தந்தையைப் பார்க்க, மலை உச்சிக்கு தினமும் ஐந்தாறு முறை ஏறிச்செல்வார், விஜயா.

பழனியில் அம்மன் கோவில் ஒன்று இருக்கிறது.
விஜயா பத்து வயதாக இருக்கும்போது, அங்கு நடைபெற்ற ஒரு நாடகத்தில் நடனம் ஆடினார்.

பின்னர், கே.பி.தங்கமணி என்பவர் நடத்தி வந்த நாடகக்குழுவில் சேர்ந்தார்.
வால்பாறை, தாராபுரம், காங்கேயம் முதலிய இடங்களில் நடந்த நாடகங்களில் பங்கு கொண்டார்.

இந்த சமயத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு நாடகங்களில் நடிப்பதற்காக பழனிக்கு வந்தார்.
நாடகம், நடனம் ஆகியவற்றில் கே.ஆர்.விஜயாவுக்கு உள்ள திறமை பற்றி நண்பர்கள் மூலம் அறிந்தார்.
விஜயாவை பார்க்க விரும்பினார்.
அப்போது, திருச்சூரில் இருந்த தன் பாட்டி வீட்டுக்கு அவர் சென்றிருந்தார்.

"அதனால் என்ன? எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சென்னை வந்து என்னைப் பார்க்கலாம்" என்று விஜயாவின் தந்தையிடம் தெரிவித்தார், தங்கவேலு.

திருச்சூரில் இருந்து கே.ஆர்.விஜயா திரும்பியதும், நடந்ததை அவரிடம் கூறினார், அவர் தந்தை.
தக்க சமயத்தில் சென்னைக்குச் செல்வதென்று இருவரும் முடிவு செய்தனர்.

இந்த சமயத்தில் பழனியில் பொருட்காட்சி நடந்தது.
அப்போது பிரபல திரைப்பட நடிகராக விளங்கிய எஸ்.எம்.குமரேசன் (ஜுபிடரின் 'அபிமன்யூ' படத்தில் கதாநாயகனாக நடித்தவர்) பழனி பொருட்காட்சியில் நாடகம் நடத்த வந்திருந்தார்.
அவருடைய "வள்ளித் திருமணம்" நாடகத்தில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கே.ஆர்.விஜயாவுக்கு கிடைத்தது.

விஜயாவின் புன்னகையும், நடிப்பும் குமரேசனை கவர்ந்தன. "சென்னைக்கு வரும்போது என்னைப் பாருங்கள். என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்" என்று விஜயாவிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து, 1961-ம் ஆண்டு கடைசியில், கே.ஆர்.விஜயாவின் குடும்பம் சென்னையில் குடியேறியது.

அப்போது, கதாசிரியர் விருதை ந.ராமசாமி ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தார்.
அதில் கே.ஆர்.விஜயா சேர்ந்து சில நாடகங்களில் நடித்தார்.

பி.ஏ.குமார் தயாரித்த "மகளே உன் சமத்து" என்ற படத்தில், கே.ஆர்.விஜயாவுக்கு சிறு வேடம் கிடைத்தது.

நியூடோன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது.
எம்.ஆர்.ராதா நடித்த காட்சி படமாகிக் கொண்டிருந்தது.
அவருக்கு இரண்டு பக்கமும், இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் கே.ஆர்.விஜயா.

அவரைப் பார்த்த எம்.ஆர்.ராதா, "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.

"தெய்வநாயகி" என்று மெல்லிய குரலில் கூறினார், விஜயா.

"தெய்வநாயகியா? நோ... நோ...! இதெல்லாம் ஓல்டு மாடல் பெயர். சினிமாவுக்கு எடுபடாது. விஜயா... கிஜயா... இப்படி ஏதாவது பெயர் வைத்துக்கொள்!" என்றார், ராதா.

அவர் கருத்தை விஜயாவின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். அன்றே தெய்வநாயகி, கே.ஆர்.விஜயாவாக மாறினார்.

இதன்பின், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தயாரித்த "முத்து மண்டபம்" படத்தில், ஊனமுற்ற பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு கே.ஆர்.விஜயாவுக்கு கிடைத்தது.

பின்னர் "விளக்கேற்றியவள்" படத்திற்கு ஒப்பந்தம் ஆனார்.

இதன் இடையே, மலையாளப்பட உலகில் இருந்து அழைப்பு வந்தது. "கால்பாடுகள்" என்ற மலையாளப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

இந்த சமயத்தில், கே.ஆர்.விஜயாவின் வாழ்க்கையில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது.




























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக