புதன், 14 ஜூன், 2017

ஸ்ரீ ரங்க கோபுர விமானத்தின் சிறப்பு

ராதே கிருஷ்ணா 14-06-2017




ஸ்ரீ ரங்க கோபுர விமானத்தின் சிறப்பு:-
மத்ஸ்யாவதாரம் கூர்மாவதாரம் ஹயக்ரீவர் போன்ற பல ரூபங்களில் மகாவிஷ்ணுவை தரிசித்த பிரம்மா குழப்பமடைந்து " மஹாவிஷ்ணுவே தங்களுடைய உண்மையான ரூபத்தை தரிசிக்க விரும்புகிறேன் " என்றார்.
அதற்க்கு விஷ்ணு பகவான் " அப்படிஎன்றால் " ஓம் நமோ நாராயணாய " எனும் அஷ்டாச்சரமந்திரத்தை ஜெபியும் " என்றார்.
உடனே பிரம்மதேவர் அஷ்டாச்சர மந்திரத்தை ஜபித்த வாறே பற்பல ஆண்டுகாலம் தவத்தில் ஆழ்ந்தார்.
பின்னர் மகாவிஷ்ணுவின் மனம் குளிர்ந்து க்ஷீர சாகரத்தில் ஒரு விமானத்தில் நாற்கரங்களுடன் சங்கு சக்ரதாரியாய் சயன கோலத்தில் பரவாசுதேவனாக தோன்றினார்.
பிரம்மதேவர் வேத கோஷங்கள் முழங்கி பலவாறு வணங்கினார்.
அப்படித்தான் திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து தோன்றியதாகும். பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இக்ஷ்வாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்
இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேக வைபவம் காண வந்திருந்த விபீஷணனுக்கு, ராமர் இவ்விமானத்தைப் பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரிக் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான்.
எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி’’ பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.
தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது.
பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடனும் (அந்தக் கிளி ‘‘வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்’’ என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது), தனக்கு வந்த கனவுத் தகவல் மூலமாகவும் விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானம் மற்றும் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.










































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக