சனி, 26 டிசம்பர், 2015

திருவெம்பாவை

ராதே கிருஷ்ணா 26-12-2015






திருவெம்பாவை

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, பல நூற்றாண்டுகளாக, மார்கழி மாதத்தில், இந்துக்களால் பாடப்பட்டு வருகின்றன. கன்னிப் பெண்கள் ஒருவரை மற்றொருவர் துயிலெழுப்பி, அனைவரும் ஒருங்கு சேர்ந்து நீர்நிலைகளுக்குச் சென்று கூட்டமாக நீராடியவாறு தாங்கள் வழிபட்டு வந்த பாவைத் தெய்வத்திடம், தங்களது வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வேண்டும் என்றும் வேண்டியபடி பாடுவதாக அமைந்த பாடல்கள் இவை. திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள் கொண்டவை. முதல் எட்டு பாடல்கள் மகளிர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு எல்லோருமாக இறைவனின் புகழினை பாடியவாறு நீராடச் செல்லுதலையும், ஒன்பதாவது பாடலில் தங்களது வேண்டுகோளை இறைவனிடம் வைப்பதையும், பத்தாவது பாடலில் இறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மையை கேட்டு அறிவதையும் உணர்த்துகின்றன. அடுத்த பத்து பாடல்கள் அனைவரும் சேர்ந்து நீராடுதலை உணர்த்துவதாகவும் அமைந்துள்ள பாடல்கள்.

திருவெம்பாவையின் இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பத்து பாடல்களையும், மார்கழி மாதத்தில் பாடுவது மரபு. சிறு பெண்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடலாக பல பாடல்கள் அமைந்துள்ளதையும், ஒத்த வயதினர் பேசும்போது அவர்களுக்குள்ளே எழும் கேலியும் பரிகாசமும் ஆங்காங்கே தொனிப்பதையும் நாம் உணரலாம். ஒவ்வொரு பாடலின் இறுதியில் வரும் ஏலோர் எம்பாவாய் என்ற தொடரை, பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்லாக சிலர் கருதுகின்றனர். சிலர், பாவை போன்ற பெண்ணே, நீ சிந்திப்பாயாக என்று பொருள் கொள்கின்றனர். இந்த பாடல்களில் பல தத்துவக் கருத்துகள் புதைந்து கிடைக்கின்றன. அவற்றை விரித்தால் உரையின் நீளம் பெருகும் என்பதை கருத்தில் கொண்டு, எளிமையான உரை கொடுக்கப்படுகின்றது.

திருவெம்பாவை பதிகம் திருவண்ணாமலையில் அருளியது.

இப்பகுதியில் வெளியாகும் பாடல்களை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கியவர்கள் - மயிலாடுதுறை சொ. சிவக்குமார், என். வெங்கடேஸ்வரன், எஸ். வெங்கட்ராமன்.

Story List


திருவெம்பாவை: பாடல் 19 

எங்களை, உனது அடைக்கலப் பொருளாக ஏற்று நீ காக்க வேண்டும், என்று எங்களது தந்தைமார்கள் நாளை எங்கள் திரும.....






திருவெம்பாவை: பாடல் 5 

திருமாலும் நான்முகனும் அறிய முடியாத, மலை போன்று உயர்ந்து காணப்பட்ட சிவபெருமானை நாம் எளிதில் அறிந்துக.....






Story List



திருவெம்பாவை: பாடல் 20 
எங்கள் தலைவனே, அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகத் திகழும் உனது திருவடித் தாமரையை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்துப் பொருட்களுக்கும்

திருவெம்பாவை: பாடல் 19 

எங்களை, உனது அடைக்கலப் பொருளாக ஏற்று நீ காக்க வேண்டும், என்று எங்களது தந்தைமார்கள் நாளை எங்கள் திரும.....

திருவெம்பாவை: பாடல் 18 

அண்ணாமலையான் ஆகிய இறைவனின் திருப்பாதங்களில், தங்களது தலைகளைச் சாய்த்து வழிபடும் தேவர்களின் கிரீடத்தி.....

திருவெம்பாவை: பாடல் 17 

நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே, திருமால், நான்முகன் மற்றுள்ள தேவர்கள் ஆகியோரிடத்தில் இல்லாத அன்பும் .....

திருவெம்பாவை: பாடல் 16 

கடலில் இருக்கும் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாக மாறி, கருநிற மேகங்களாக மாறுகின்றன,

திருவெம்பாவை: பாடல் 15 

ஒரு முறை எனது பெருமான் என்று தனது வாய் திறந்த சொன்ன எமது தோழி, அதன் பின்னர், வாய் ஒழியாமல் பெருமானின.....


திருவெம்பாவை: பாடல் 14 

காதுகளில் அணிந்துள்ள குழை ஆபரணங்கள் ஆடவும், உடலின் பல்வேறு இடங்களில் அணிந்துள்ள பசும்பொன்னால் செய்யப.....

திருவெம்பாவை: பாடல் 13 

நீராட இருக்கும் பொய்கை கருங்குவளை மலர்களையும், செந்தாமரை மலர்களையும் உடையதாய், கூட்டங் கூட்டமாக பறவை.....

திருவெம்பாவை: பாடல் 12 

பெருமானே, எங்களுடன் இறுக்கமாக பிணைந்துள்ள பிறவிப் பிணி எங்களை விட்டு நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில்......

திருவெம்பாவை: பாடல் 11 

வண்டுகள் மொய்க்கும் குளத்தினில் புகுந்த நாங்கள், முகேர் என்ற ஒலி ஒலிக்குமாறு எங்களது கைகளால் குடைந்த.....

திருவெம்பாவை: பாடல் 10 

ஏழு பாதாள உலகங்களையும் தாண்டி, சொற்களால் விவரிக்க முடியாத எல்லையையும் தாண்டி நிற்பன பெருமானது திருவட.....



Story List

திருவெம்பாவை: பாடல் 9 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தோன்றிய பொருட்களுக்கும் பழமையாக விளங்கும் இறைவனே, வரும் காலத்தில் பு.....

திருவெம்பாவை: பாடல் 8 

பொழுது புலரப்போவதை உணர்த்தும் வகையில் கோழி கூவியதைக் கண்டு, மற்ற பறவைகளும் கூவிவிட்டன; பல இடங்களிலும.....

திருவெம்பாவை: பாடல் 7 

உன்னுதல் = நினைத்தல். பேதை என்ற சொல் இங்கே பெண்ணின் பருவத்தை குறிப்பதல்ல, அறிவிலி என்ற பொருள்பட அமைந.....

திருவெம்பாவை: பாடல் 6 

மான் போன்று மருண்ட பார்வை உடைய பெண்மணியே, நேற்று நீ பேசும்போது, நானே வந்து உங்கள் அனைவரையும் வந்து எ.....

திருவெம்பாவை: பாடல் 5 

திருமாலும் நான்முகனும் அறிய முடியாத, மலை போன்று உயர்ந்து காணப்பட்ட சிவபெருமானை நாம் எளிதில் அறிந்துக.....



Story List

திருவெம்பாவை: பாடல் 4 

முத்து போன்று ஒளி வீசும் பற்களை உடையவளே, இன்னும் உனக்கு பொழுது புலரவில்லை போலும்.

திருவெம்பாவை: பாடல் 3 

முத்து போன்ற வெண்பற்களை உடையவளே, நேற்று நீ என்ன பேசினாய் என்பது உனக்கு நினைவில் உள்ளாதா?

திருவெம்பாவை: பாடல் 2 

விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் மலர்ப்பாதம் என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார்.

திருவெம்பாவை: பாடல் 1 

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, பல நூற்றாண்டுகளாக, மார்கழி மாதத்தில், இந்துக்களால் பாடப்பட்டு வரு.....







திருவெம்பாவை: பாடல் 1

First Published : 17 December 2015 12:00 AM IST

   ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
   சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
   மாதே வளருதியோ வன்செவியோ நின் செவி தான்
   மாதேவன் வார் கழல்கள் பாடிய வாழ்த்தொலி போய்
   வீதி வாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
   போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
   ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
   ஈதே எம் தோழி பரிசு ஏல் ஓர் எம்பாவாய் 
பொன். முத்துக்குமரன் குரலில்..

சற்குருநாதன் குரலில்...
விளக்கம்
போது = மலர்கள். போதார் அமளி = பூப்படுக்கை. வளருதல் = தூங்குதல். தூக்கம் என்ற சொல் மங்கலச் சொல்லாக கருதப்படுவதில்லை. மேலும் சிறு குழந்தைகளின் தூக்கத்திற்கு ஏற்றவாறு குழதையின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தான் தாலாட்டு பாடல்களில் தூக்கம் என்ற சொல் தவிர்க்கப்பட்டு கண் வளராய் என்று பாடுகின்றார்கள். வாள் தடங்கண் = அகலமாகவும், வாள் போன்று கூர்மையாகவும் காணப்படும் கண்கள். வன்செவி = வலிமையான செவி, தாங்கள் பாடுவதை கேட்டும், தூக்கம் கலைந்து எழுந்திராமல் இருப்பதால், இரும்பால் செய்யப்பட்ட வலிமையான செவியோ என்று வெளியில் இருக்கும் ஒருத்தி கூறுகின்றாள். ஏதேனும் ஆகாள் = ஒன்றுக்கும் பயன்படாமல் இருத்தல்.

பொருள்

ஆதியும் அந்தமும் இல்லாத, அரிய சோதியாகிய சிவபெருமானை நாங்கள் பாடுகின்றோம். எங்களது பாடலைக் கேட்ட பின்னரும், வாள் போன்று கூர்மையாகவும் அகலமாகவும் காணப்படும் கண்களை உடைய பெண்ணே, நீ உறங்குகின்றாயே, உனது செவிகள் என்ன வலிமையான செவிகளா, எங்களது பாடல் உனது காதில் விழவில்லையா? இவ்வாறு முதல் தோழி, வீட்டின் உள்ளே இருக்கும் தோழியைப் பற்றி குறையாக சொல்ல, அதற்கு பதில் அளிக்கும் முகமாக அடுத்த தோழி பின்வருமாறு கூறுகின்றாள். பெருமானின் நீண்ட பாதங்களை நாம் வாழ்த்தி பாடிய பாடல்களைக் கேட்ட அவள், இறைவனைப் பற்றிய சிந்தனையில் விம்மி, விம்மி தன்னையே மறந்துவிட்டாள். ஆனால், அனிச்சைச் செயலாக அவளது உடல் படுக்கையில் புரள்கின்றது. இது தான் உள்ளே இருக்கும் தோழியின் நிலை. எனவே அவளது நிலை பாராட்டுக்கு உரியது.



திருவெம்பாவை: பாடல் 2

First Published : 18 December 2015 12:00 AM IST


 

   பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
   பேசும்போது எப்போது இப் போது ஆர் அமளிக்கே
   நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
   சீ சீ இவையும் சிலவோ விளையாடி
   ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
   கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
   தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
   ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய்

பொன். முத்துக்குமரன் குரலில்..
சற்குருநாதன் குரலில்...

விளக்கம்
விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் மலர்ப்பாதம் என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். தங்களது சுயநலம் கருதி வானவர்கள், இறைவனை வேண்டுவதால், அவர்களின் நிலையை எண்ணி, தங்களை முழுதாக அர்ப்பணிக்காத நிலையை எண்ணி, இறைவன் நாணி கூசுவதாக இங்கே கூறுகின்றார். அதற்கு மாறாக, நாம் முழுதுமாக இறைவனுக்கு ஆட்பட்டு இருப்பதால், தனது திருவடிகளை தந்து அருளுவதற்காக, இறைவன் நமது அருகில் வருகின்றார் என்று பெண்களின் வாய்மொழியாக சொல்லி, நாம் எப்படி இறைவனிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை இங்கே உணர்த்துகின்றார்.
பொருள்
நகைகள் அணிந்த பெண்ணே, இரவிலும் பகலிலும். எப்போது நாம் பேசினாலும், எனது அன்பு பெருமானுக்கு உரியது என்று நீ கூறுவாய்; ஆனால் இப்போது நீ படுக்கையின் மீது பாசம் வைத்து இன்னும் உறங்குகின்றாய் போலும் என்று வெளியே இருக்கும் தோழி கேலியாக பேசுகின்றாள். உள்ளிருந்தவாறு அவள் அளிக்கும் பதில்: அழகிய அணிகலன்களை அணிந்தவர்களே, நமக்கு கேலிப் பேச்சுகள் பேசுவதற்கு உரிய நேரமும் இடமும் இதுவல்ல. வானவர்களின் போலியான அன்பினைக் கண்டு நாணி வெட்கம் அடையும் இறைவன், தனது மலர் போன்ற திருவடிகளை நாம் பற்றிக் கொள்வதற்காக நமக்கு தந்து அருளும் வண்ணம் நம்மை நெருங்கி வரும் தருணத்தில், நமக்குள்ளே ஒருவரை ஒருவர் ஏசும் விளையாட்டுகள் தேவையற்றவை. நாம் அனைவரும், அனைத்து தேசங்களிலும் இறைவனாக கொண்டாடப் படுபவனும், சிவலோகத்தின் தலைவனும், தில்லைச் சிற்றம்பலத்தில் நடமடுபவனும் ஆகிய ஈசனின் அன்பர்கள் என்பதை புரிந்துகொண்டு செயல்படுவோம்.



திருவெம்பாவை: பாடல் 3

First Published : 19 December 2015 12:00 AM IST


 

   முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்தென்
   அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
   தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
   பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
   புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
   எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
   சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
   இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் 
பொன். முத்துக்குமரன் குரலில்...

சற்குருநாதன் குரலில்...

விளக்கம்
அள்ளூறி = வாயூறி, கடை = வாயிற்கதவு. பற்று என்ற சொல் எதுகை கருதி பத்து என்று திரிந்தது. பாங்கு = மேன்மை. புன்மை = கீழ்த்தன்மை, குற்றம். உள்ளே உறங்கிக்கொண்டு இருக்கும் பெண்ணை விடவும், அவளுக்கு முன்னர் எழுந்திருந்து வீதிகளில் இறைவனின் புகழினைப் பாடிக்கொண்டு வரும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம், வீதியில் இருப்பவர்களுக்குத் தோன்றுகின்றது. அதன் பயனாக, அவர்களது பேச்சில் ஒரு ஏளனம் தென்படுகின்றது.

பொருள்
முத்து போன்ற வெண்பற்களை உடையவளே, நேற்று நீ என்ன பேசினாய் என்பது உனக்கு நினைவில் உள்ளாதா? நாங்கள் உன்னை எழுப்ப வருவதற்கு முன்னமே, தான் எழுந்திருந்து எங்களை எதிர்கொள்வேன் என்றும், சிவபெருமான் எனது தந்தை, எனக்கு இன்பம் அளிப்பவன், எனக்கு அமுதமாக இனிப்பவன் என்றெல்லாம் உனது வாயினில் எச்சில் ஊறுமாறு பேசினாயே, ஆனால் இன்று அத்தனையும் மறந்துவிட்டு உறங்கிக்கொண்டு இருக்கின்றாயே, சீக்கிரம் எழுந்து வந்து உனது வாயிற்கதவை திறப்பாயாக. இதனைக் கேட்டு எழுந்த பெண்ணுக்கு கோபம் வர, அவள் பின்வருமாறு கூறுகின்றாள்: ஈசன் பால் மிகுந்த பற்று உடையவர்களே, பழ அடியார்களே, மேன்மை கொண்டவர்களே. என்னைப் போன்ற புது அடியார்கள், குற்றம் ஏதும் செய்தாலும், அதனை பொறுத்துக் கொண்டு என்னையும் ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு இழுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ. இவ்வாறு உள்ளே இருந்த படியே தங்களது தோழி பேசியதைக் கேட்ட வெளியில் இருந்த பெண்கள், தங்களது தோழி மனம் வருந்தி பேசியதை உணருகின்றனர். அவளைத் தேற்றும் வண்ணம் பின்வருமாறு கூறுகின்றனர், தோழியே நீ புதியதாக வந்து சேர்ந்தவள் என்று எண்ணிக் கொள்ளாதே, நீ முன்னம் இறைவனைப் பற்றி பேசும்போது உனது வாயினில் எச்சில் ஊறியதைக் கண்ட நாங்கள், நீ இறைவன் பால் வைத்திருக்கும் அன்பு ஆழமானது என்பதை புரிந்து கொண்டோம். நமக்குள் பழைய அடியவர், புதிய அடியவர் என்ற பிரிவினை தேவையில்லை. நமது மனம் தூய்மையாக இருந்தால் போதும். மனம் தூய்மையாக இருக்கும் நாம் அனைவரும் செய்ய வேண்டிய செயல் ஒன்றே ஒன்றுதான், அது நமது இறைவனாகிய சிவபெருமானின் புகழினைப் பாடுவதுதான்.



திருவெம்பாவை: பாடல் 4

First Published : 20 December 2015 12:00 AM IST

 


ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேல் ஓர் எம்பாவாய் 
பொன். முத்துக்குமரன் குரலில்...
சற்குருநாதன் குரலில் கேட்க...

விளக்கம்
நித்திலம் = முத்து. ஒண்ணித்தில = ஒள்+நித்திலம். ஒள் = ஒளி பொருந்திய. அவம் = வீணான செயல். மருந்து = அமுதம். விழுப்பொருள் = மேன்மையான பொருள்.
பொருள்
முத்து போன்று ஒளி வீசும் பற்களை உடையவளே, இன்னும் உனக்கு பொழுது புலரவில்லை போலும். வீட்டினில் உள்ளே இருந்த பெண் அங்கே இருந்தவாறே, வரவேண்டிய பெண்கள், கிளியின் நிறத்தையும் மென்மையான மொழியையும் கொண்ட பெண்கள், அனைவரும், வந்துவிட்டார்களா என்று கேட்கின்றாள். அவளது கேள்விக்கு விடை அளிக்கும் முகமாக, சற்றுப் பொறுத்துக்கொள்வாய், நாங்கள் எண்ணிச் சொல்கின்றோம் என்று பதில் அளிக்கின்றார்கள். சென்ற மூன்று பாடல்களில் தாங்கள் எழுப்பித் தங்களுடன் சேர்த்துக்கொண்ட பெண்கள் எவரும், அனைவரும் வந்தனரா என்ற கேள்வியைக் கேட்கவில்லை. எனவே இந்த பெண்ணின் கேள்விக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற சந்தேகம், வெளியே உள்ள தோழிகளுக்கு எழுகின்றது. ஒருக்கால், வெளியில் இருப்பவர்கள் எண்ணி முடிக்கும் வரையில், தான் மறுபடியும் சிறிய தூக்கம் போடுவதற்காக இந்த கேள்வி எழுப்பட்டதோ என்ற ஐயம் எழவே, தாங்கள் எண்ணுவதை நிறுத்திவிட்டு பின்வருமாறு கூறுகின்றார்கள். தோழியே, மறுபடியும் தூங்க ஆரம்பித்து உனது காலத்தை நீ வீணாக கழிக்காதே: தேவர்கள் அமுதம் அருந்துவதற்காக தான் நஞ்சை உண்டதால் அவர்களுக்கு அமுதம் போன்றவனும், வேதங்களில் குறிப்பிடப்படும் மேம்பட்ட பொருளாகவும், எங்களது கண்ணுக்கு இனியவனாகவும் உள்ள சிவபெருமானின் புகழினைப் பாடி, உள்ளம் கசிந்து உருகும் நிலையில் உள்ள நாங்கள், எங்களுடன் இருப்பவர்களை எண்ணுவதில் நேரத்தை வீணாக்கமாட்டோம். நீயே வெளியே வந்து எங்களுடன் இருப்பவர்களை எண்ணுவாயாக. எண்ணி முடித்த பின்னர் எவரேனும் வரவில்லை என்பதை உணர்ந்தால், நீ மறுபடியும் சென்று உறங்கலாம்.






திருவெம்பாவை: பாடல் 5

First Published : 21 December 2015 12:00 AM IST

 

   மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
   போலறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்
   பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
   ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
   கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டுஞ்
   சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
   ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
   ஏலக் குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்

பொன். முத்துக்குமரன் குரலில்...

சற்குருநாதன் குரலில் கேட்க...

விளக்கம்
பொக்கம் = பொய். படிறீ = வஞ்சகம் நிறைந்தவள். ஏலம் = கூந்தலில் பூசப்படும் சாந்து. கோதாட்டும் = குற்றங்களிலிருந்து நீக்கும். கோலம் = வடிவம். சீலம் = எளிமையான தன்மை. தங்களது வலிமையினால் செருக்கு கொண்டு, நீண்டு நெடியதாய் நின்ற தீப்பிழம்பின் அடியையும் முடியையும் தாங்கள் கண்டுவிடலாம் என்று திருமாலும் பிரமனும் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் காணமுடியவில்லை. அகந்தைக்கு ஆட்படாத இறைவன், அன்புக்கு கட்டுப்பட்டு தனது உருவத்தை அடியார்களுக்கு காட்டுவான் என்பது சைவ சித்தாந்தம். எனவே தனது அன்பினால், தான் இறைவனை கண்டுவிடுவேன் என்று, வீட்டினில் உள்ளே இருக்கும் பெண் பேசியதை, சுட்டிக் காட்டி அவளது தோழிகள் கூறுவதாக அமைந்த பாடல். இறையுணர்வில் ஈடுபடும் பெண்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் கவனம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், என்பது திருப்பாவையில் வரும் மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. அவ்வாறு இருக்கையில் இந்தப் பெண், தனது முடிக்கு வாசனை தரும் சாந்தினை பூசிக்கொள்வது அவளது போலியான அன்பினை வெளிப்படுத்துகின்றது என்பதை உணர்த்தும் வண்ணம், ஏலக் குழலி என்று அவளை அழைக்கின்றார்கள்.

பொருள்
திருமாலும் நான்முகனும் அறிய முடியாத, மலை போன்று உயர்ந்து காணப்பட்ட சிவபெருமானை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம் என்று வீம்பாக பேசிய பெண்ணே, பால் போன்றும் தேன் போன்றும் இனிமையாக பேசும் வஞ்சகியே, நீ எழுந்து வந்து உனது வீட்டு வாயிலைத் திறப்பாயாக: உனக்கு இறைவன் பால் உண்மையில் அன்பு உள்ளதென்றால், நாங்கள் விண்ணோர்களும் மண்ணோர்களும் அறிய முடியாத அவனது உருவத்தை பாடியபோதே நீ எழுந்திருக்க வேண்டும்: அவனது உருவத்தை பாடிய நாங்கள், அவன் நம்மை ஆட்கொண்டு நமது குற்றங்களை நீக்கிய, பெருமானது எளிய தன்மையை பாடிய போதும் நீ எழவில்லை. அத்துடன் நிற்காமல் நாங்கள் சிவனே சிவனே என்று உரக்க கூவியதையும் உணராமல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நீ, சிவபெருமான் பால் வைத்திருக்கும் அன்பு உண்மையானது அல்ல. பாவை நோன்பு நோற்கும் நாங்கள் அனைவரும், எங்களை அழகுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. அனால் நீயோ, உனது முடிக்கு நறுமணம் தரும் சாந்தினை பூசிக்கொள்கின்றாய். இதிலிருந்து உனது அன்பின் தன்மை எத்தகையது என்பதை நாங்கள் அனைவரும் கண்டு கொண்டோம்.





திருவெம்பாவை: பாடல் 6

First Published : 22 December 2015 12:00 AM IST

  மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
  நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
  போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
  வானே நிலனே பிறவே அறிவரியான்
  தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
  வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
  ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
  ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

கரூர் சுவாமிநாதன் குரலில்..

சற்குருநாதன் குரலில்...
விளக்கம்
நென்னல் = நேற்று. தலையளித்து = கருணை செய்து. வான் வார் கழல் = ஆகாயத்தில் விளங்கும் அழகிய திருவடி. பெண்களின் பார்வையை மானின் மருண்ட பார்வைக்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. சென்ற பாடலைப் போன்று இந்த பாடலும் வெளியே நிற்பவர்களின் கூற்றாக அமைந்துள்ளது. வானும் நிலனும் அறிய முடியாதவன் என்று இங்கே, வானத்தில் உள்ள விண்ணவர்களையும், பூவுலகில் உள்ள மண்ணவர்களையும் குறிக்கின்றார்.

பொருள்
மான் போன்று மருண்ட பார்வை உடைய பெண்மணியே, நேற்று நீ பேசும்போது, நானே வந்து உங்கள் அனைவரையும் வந்து எழுப்புவேன் என்று கூறினாய். அந்த பேச்சு, காற்றில் எந்த திசையில் பறந்து சென்றது, சொன்ன சொல்லைக் காப்பாற்ற இயலாத நீ அதற்கு வெட்கம் கொள்ளாமலும் இருக்கின்றாய். நீ சொல்லிய சொல், எந்த திசையில் பறந்து சென்றது என்பதை எங்களுக்கு சொல்வாயாக. உனக்கு இன்னும் பொழுது விடியவில்லை போலும். வானுலகத்திலும், பூவுலகத்திலும் உள்ளவர்கள் அறிய முடியாத சிவபெருமான், நம் மீது கொண்ட கருணையினால், அவன் தானே இறங்கி வந்து நம்மை ஆட்கொண்டருளி ஆகாயத்தில் விளங்கும் தனது திருவடிகளை, நமக்குத் தந்துள்ளான். அவனது திருவடிகளின் சிறப்பினை நாங்கள் பாடிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் நீயோ, வாயிற்கதவைத் தான் திறக்கவில்லை, உனது வாயினைத் திறந்தாவது ஏதேனும் வார்த்தை பேசலாம் அல்லவா. ஏன் அதுவும் செய்யாமல் இருக்கின்றாய்? அவனது புகழினைக் கேட்ட பின்னரும் உள்ளமும் உடலும் உருகாமல் இருக்கும் நிலை உனக்கே உரிய தனித் தன்மை. அவ்வாறு இருக்கும் உனக்கும், எங்களுக்கும், உலகில் உள்ள ஏனையோருக்கும் தலைவனாக உள்ள சிவபெருமானின் புகழினை நாங்கள் பாடிக் கொண்டு இருப்போம்.




திருவெம்பாவை: பாடல் 7

First Published : 23 December 2015 12:00 AM IST

  அன்னே இவையும் சிலவோ பல அமரர்
  உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
  சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
  தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
  என்னானை என்னரையன் இன்னமுதென்று எல்லோமும்
  சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
  வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
  என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

கரூர் சுவாமிநாதன் குரலில்..
சற்குருநாதன் குரலில்...

விளக்கம்
உன்னுதல் = நினைத்தல். பேதை என்ற சொல் இங்கே பெண்ணின் பருவத்தை குறிப்பதல்ல, அறிவிலி என்ற பொருள்பட அமைந்துள்ளது. இந்த பாடல் முழுவதும் எழுப்ப வந்தவர்களின் கூற்றாக அமைந்துள்ளது. சின்னம் என்பதற்கு இருவகையான பொருள்கள் கூறப்படுகின்றன. பெருமானுடன் தொடர்புகொண்ட, திருநீறு, உருத்திராக்கம், இடபம் என்பன முதல் பொருள். சங்கு, தாரை போன்று அதிகாலையில் இசைக்கப்படும் இசைக்கருவி என்பது இரண்டாவது பொருள். உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்மணியின் செயல்பாடுகள், பெருமான் மீது அவளுக்கிருந்த ஆழ்ந்த பக்தியை குறிப்பிடுவதாக உணர்ந்த தோழிகளுக்கு, அவள் இன்னும் உறங்கிக்கொண்டிருப்பது வியப்பை அளிக்கின்றது. அதனால்தான் என்னே என்ற வியப்புக்குறியுடன் தங்களது பேச்சினைத் தொடங்குகின்றார்கள். யானை சிறுவர்களையும் பெரியவர்களையும் ஒரு சேர கவரும் தன்மை வாய்ந்த மிருகம். உருவில் பெரியதாக இருந்தாலும் பழகுவதற்கு இனிய மிருகம், அதேபோன்று, அனைவர்க்கும் பெரியவனாகிய பெருமானுடன் பழகப் பழக, நாம் அவனது எளிய தன்மையை புரிந்துகொள்ளலாம். எனவே பெருமானை யானையுடன் இங்கே மணிவாசகர் ஒப்பிடுகின்றார்.
பொருள்
தேவர்கள் பலரும் நினைப்பதற்கு அரியவனும், ஒப்பற்ற ஒருவனும், மாபெரும் சிறப்பை உடையவனும் ஆகிய சிவபெருமானை நினைத்து, அதிகாலை நேரத்தில் சின்னங்கள் ஒலிக்கும் போது, சிவ சிவ என்று சொல்பவளே, தென்னாட்டுக்கு உரிய சிவனே என்று எவரேனும் சொல்வதற்கு முன்னமே, தீயினைச் சாரும் மெழுகு போன்று உருகும் உள்ளத்தை உடையவளே, நேற்று வரை இவ்வாறு இருந்த உனக்கு இன்று என்ன நேர்ந்து விட்டது, உனது தற்போதைய நிலை எங்களுக்கு மிகவும் வியப்பாக உள்ளது. அனைவர்க்கும் பெரியவனாகிய பெருமான் யானை போன்று பழகுவதற்கும் நாம் சிந்திப்பதற்கும் நினைப்பதற்கும் மிகவும் எளியவன் என்றும், எங்களது தலைவன் என்றும், அமுதம் போன்று எங்களுக்கு இனிமையானவன் என்றும், நாங்கள் ஒன்றாக சேர்ந்தும், தனித்தனியாகவும், அவனது புகழினைப் பாடுகின்றோம். அதனைக் கேட்ட பின்னரும் உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கின்றாயே, வலிய நெஞ்சம் கொண்ட அறிவில்லாத பெண் போன்று, எந்த விதமான தாக்கமும் இல்லாமல் இருக்கின்றாயே, இவ்வாறு இருப்பதும் உனது பண்பு போலும்.



திருவெம்பாவை: பாடல் 8

First Published : 24 December 2015 12:00 AM IST

  கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
  ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
  கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
  கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
  வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
  ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
  ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
  ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்

கரூர் சுவாமிநாதன் குரலில்..

சற்குருநாதன் குரலில்...

விளக்கம்
குருகு = பறவை. ஏழில் = ஏழு துளைகளை உடைய இசைக் கருவி, நாகசுரம். கேழில் = ஈடு இணையற்ற. ஏழை = உமையம்மை. இந்த பாடல் முழுவதும் வெளியில் இருப்பவர்கள் கூற்றாக அமைந்துள்ளது. ஆழியான் = திருமால். பெருமான் மீது கொண்டிருந்த அன்பினால், ஓர் பூக் குறையக் கண்டு, தனது கண்ணையே தோண்டி எடுத்து இறைவனுக்கு மலராக சமர்ப்பணம் செய்த அன்பின் தன்மை. தன்னுடன் ஒத்து வாராதவர்களை, நீ வாழ்ந்து போவாயாக என்று இளக்காரமாக கூறுவது போன்று, இங்கே உறக்கம் கலையாமல் இருக்கும் பெண்ணைப் பார்த்து, நீ இன்பமாக தூங்கி வாழ்வாயாக என்று ஏளனப் பேச்சு ஒலிப்பதை நாம் உணரலாம்.
பொருள்
பொழுது புலரப்போவதை உணர்த்தும் வகையில் கோழி கூவியதைக் கண்டு, மற்ற பறவைகளும் கூவிவிட்டன; பல இடங்களிலும் ஏழு துளைக் கருவிகளைக் கொண்ட நாதசுரம் எனப்படும் இசைக் கருவி முழங்கின: வெண் சங்குகளும் ஒலித்தன: ஈடு இணையற்ற பரம்பொருளின், ஒப்பற்ற கருணையை நினைத்து சிறந்த பொருள் நயம் கொண்ட பாடல்களை நாங்கள் பாடினோம். இவை எதையும் நீ கேட்டு பொழுது புலர்ந்துவிட்டது என்பதை உணரவில்லையா? அப்படி என்ன ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளாய்? தொடர்ந்து தூக்கத்தில் ஆழ்ந்து நீ வாழ்வாயாக. தனது கண்ணினையே பறித்து மலராக இறைவனுக்கு அர்ப்பணம் செய்த திருமாலைப் போன்று, சிவபிரானிடத்தில் அன்பு கொண்டவள் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் உனது அன்பு தூக்கத்தின் பால் உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். ஊழிக்காலத்தையும் கடந்து நின்ற இறைவனை, உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமானை, வாய் திறந்து நீ பாடுவாயாக.




திருவெம்பாவை: பாடல் 9

First Published : 25 December 2015 12:00 AM IST

  முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
  பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
  உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
  உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
  அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
  சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
  இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
  என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய்
கரூர் சுவாமிநாதன் குரலில்..
சற்குருநாதன் குரலில்...
விளக்கம்
நீராடுவதற்காக சென்ற பெண்கள் அனைவரும் இணைந்து தங்கள் வேண்டுகோளை பெருமானிடம் வெளியிடுவதாக அமைந்த பாடல். நல்ல பண்புகள் கொண்ட கணவன் அமையவேண்டும் என்று வேண்டுவது தான் பாவை நோன்பின் குறிக்கோள். அந்நாள் வரை சிவபெருமானை வணங்கி போற்றி வந்த பெண்கள், இனி வரும் நாட்களிலும் அவ்வாறே தாங்கள் இருக்க வேண்டும் என்ற ஆசையில், உனது அடியார்களே எங்களுக்கு கணவராக வாய்க்க வேண்டும் என்பதை இங்கே தெரிவிக்கின்றார்கள். இதே கருத்து இந்த பதிகத்தின் பதினெட்டாவது பாடலிலும் சொல்லப்படுகின்றது. பெற்றி = தன்மை. பிரான் = தலைவன். பாங்கு = உரிமை. தொழும்பு = அடிமையாக இருத்தல்.
பொருள்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தோன்றிய பொருட்களுக்கும் பழமையாக விளங்கும் இறைவனே, வரும் காலத்தில் புதுமையாக தோன்றவிருக்கும் பொருட்களையும் கடந்து நிற்கும் தன்மை படைத்தவனே. உன்னைத் தலைவனாக ஏற்ற சிறப்பான அடியார்களாகிய நாங்கள், உனது அடியார்களின் திருப்பாதங்களைப் பணிவோம்: அத்தகைய அடியார்களையே எங்களது கணவர்களாக ஏற்று, அவர்களது உரிமைப் பொருளாக நாங்கள் திகழ்வோம். அவரது சொற்களை ஏற்று, மிகுந்த விருப்பத்துடன், அவரது கட்டளைகளை எங்களது கடமைகளாக கருதி நிறைவேற்றுவோம்; இவ்வாறான வாழ்க்கை, எங்களது இறைவனாகிய உனது கருணையால் எங்களுக்கு கிடைக்கப் பெற்றால், எந்தவிதமான குறையுமின்றி நாங்கள் வாழ்வோம்.



திருவெம்பாவை: பாடல் 10

First Published : 26 December 2015 12:00 AM IST

  பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
  போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
  பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
  வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
  ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
  கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
  ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
  ஏதவனைப் பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய்
கரூர் சுவாமிநாதன் குரலில்..

சற்குருநாதன் குரலில்...

விளக்கம்
சொற்கழிவு = சொல்லின் எல்லையைக் கடந்தவன். சொல்லுக்கு அப்பாற்பட்டவன். நீராட குளத்திற்குச் சென்ற பெண்கள் தங்களுக்கு முன்னே அங்கே வேறு ஒரு பெண்கள் கூட்டம் இருந்ததைக் கண்டனர். கன்னி மாடத்தில் இருந்துகொண்டு, கோயில் திருப்பணியை தங்களது முழுநேரப் பணியாக கொண்டவர்கள் இந்த பெண்கள். பிணாப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் இந்த பெண்கள், தங்களது இறைத்தொண்டின் மூலமாக இறைவனைப் பற்றி அதிகமாக அறிந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், தங்களது ஐயங்களை அவர்களிடம் கேட்டறிந்துகொள்ள முயற்சி செய்யும் பாடல். சிவபெருமானைப் பற்றி தாங்கள் அறிந்த விவரங்களை பாடலின் முதல் ஐந்து அடிகளில் சொல்வதையும் நாம் உணரலாம்.
பொருள்
ஏழு பாதாள உலகங்களையும் தாண்டி, சொற்களால் விவரிக்க முடியாத எல்லையையும் தாண்டி நிற்பன பெருமானது திருவடிகள். நிறைந்த மலர்களால் அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியோ அனைத்து பொருட்களின் முடிவுகளையும் கடந்தது. உமை அம்மையைத் தனது உருவத்தின் ஒரு பகுதியில் ஏந்தியுள்ள பெருமானின் திருவுருவம் ஒன்றல்ல. உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் அவன் கலந்திருப்பதால். அனைத்து உயிர்களின் வடிவங்களும் அவனது திருவுருவங்கள். வேதங்கள், தேவர்கள், மற்றும் மனிதர்கள் அனைவரும் அவனது புகழினைச் சொல்ல முயற்சி செய்தாலும், எவராலும் சொல்ல முடியாத அளவுக்கு பெருமையினை உடையவன். அவன் அடியார்களின் தோழன். எப்போதும் அடியார்களின் நடுவே உள்ளவன். குற்றமற்ற குலத்தைச் சார்ந்த பெண்களே, சிவபெருமானின் கோயிலில் திருத்தொண்டு புரியும் பிணாப்பிள்ளைகளே, சிவபெருமானது ஊர், அவனது திருநாமங்கள், அவனது உற்றார் மற்றும் அயலார்கள், அவனைப் புகழ்ந்து பாடும் தன்மை ஆகியவற்றை எங்களுக்கு எடுத்துரையுங்கள்.







திருவெம்பாவை: பாடல் 11

First Published : 27 December 2015 12:00 AM IST

  மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
  கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
  ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போல்
  செய்யா வெண்ணீறாடீ செல்வா சிறு மருங்குல்
  மையார் தடங்கண் மடந்தை மணவாளா
  ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
  உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்
  எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஓர் எம்பாவாய்

பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்
பாடியவர் சற்குருநாதன்
விளக்கம்
மொய் = வண்டுகள். தடம் = அகன்ற. மொய்யார் தடம் பொய்கை = வண்டுகள் மொய்க்கும் அகன்ற குளம். மருங்குல் = இடை. எய்யாமல் = இளைத்து வருந்தாமல். இறைவன் செய்யும் ஐந்து தொழில்களும், அவன் எந்த சிரமும் மேற்கொள்ளாமல் செய்யப்படுவதால், விளையாட்டு என்று இங்கே கூறப்படுகின்றது,
பொருள்
வண்டுகள் மொய்க்கும் குளத்தினில் புகுந்த நாங்கள், முகேர் என்ற ஒலி ஒலிக்குமாறு எங்களது கைகளால் குடைந்து குடைந்து நீராடுகின்றோம். சிவபெருமானை வணங்கி வழிபட்டு வரும் பரம்பரையில் வந்த நாங்கள் எப்போதும் உனது திருவடிகளின் பெருமையை நினைத்தபடியே வாழ்ந்து வருகின்றோம். இப்போதும் நீராடும் போதும் உனது திருவடிகளின் பெருமையினை பாடுகின்றோம். அணுகுதற்கு அறிய தீப்பிழம்பு போன்று செம்மையான நிறத்தை உடையவனே, திருநீற்றினை உடலெங்கும் பூசியவனே, வீடுபேறு எனப்படும் நிலையான செல்வத்தை உடையவனே, சிறிய இடையினையும், மை பூசியதும் அகன்று காணப்படுவதும் ஆகிய கண்களை உடைய பார்வதி தேவியின் மணாளனே, உனது திருவருளின் உதவியினால், உனது திருவிளையாடல் மூலம், வாழ்வினில் உய்வினை அடையும் அடியார்கள் பல படிகளைக் கடந்து முன்னேறுவது போன்று, நாங்களும் எங்களது வாழ்வினில் உன்னை எப்போதும் புகழ்ந்து பாடும் இந்த நிலையினை அடைந்துள்ளோம். நாங்கள் இனிமேல் பிறவிப் பிணியில் அகப்பட்டு, பல பிறவிகள் எடுத்து வருந்தி இளைக்காதவாறு நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.





திருவெம்பாவை: பாடல் 12

First Published : 28 December 2015 12:00 AM IST

  ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
  தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
  கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
  காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
  வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
  ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்பப்
  பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
  ஏத்தி இருஞ்சுனை நீராடேல் ஓர் எம்பாவாய்

பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்
பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
ஆர்த்த = பிணைத்துள்ள. ஆர்த்து ஆடும் = ஆரவாரம் செய்தவாறு நீராடும். புனித தீர்த்தங்கள், அவைகளில் முழுகிக் குளிக்கும் மனிதர்களின் பாவங்களைக் களைவது போன்று, நமது மாசுகளைக் களைந்து, மலங்களின் பிடியிலிருந்து நம்மை மீட்பவன் என்பதால் இறைவனை தீர்த்தன் என்று இங்கே கூறுகின்றார்.

பொருள்
பெருமானே, எங்களுடன் இறுக்கமாக பிணைந்துள்ள பிறவிப் பிணி எங்களை விட்டு நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் உன்னைக் குறித்த சிந்தைனையில் மூழ்கிக் குளிக்கின்றோம். பல நலங்கள் உடைய சிற்றம்பலத்தில், தனது கையினில் தீப்பிழம்பினை ஏந்தியவாறு நடமாடும் கூத்த பிரான், இந்த வானத்தையும் உலகத்தையும் படைத்தும், காத்தும், மறைத்தும் திருவிளையாடல்கள் புரிகின்றான். அவனது சிறப்புகளையே பேசியவாறு நாங்கள், எங்களது கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் அணிந்துள்ள மேகலை முதலிய அணிகலன்கள் ஆரவாரம் செய்யவும், கூந்தலில் அணிந்துள்ள மலர்களைச் சூழும் வண்டுகள் ரீங்காரம் செய்யவும், பூக்கள் நிறைந்துள்ள இந்த பொய்கையில் நீராடுகின்றோம். எங்களை அடிமையாக உடைய சிவபெருமானின் பொன்னான பாதங்களை புகழ்ந்தவாறு, இங்குள்ள பெரிய சுனையில் நீராடலாம், அனைவரும் வாருங்கள்.




திருவெம்பாவை: பாடல் 13

First Published : 29 December 2015 12:00 AM IST

  பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
  அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
  தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
  எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
  பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
  சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
  கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
  பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்

பாடியவர் சற்குருநாதன்
 

விளக்கம்
சிவபெருமானைப் பற்றி சிந்தித்த வண்ணம், பேசிய வண்ணம் நீராடச் சென்ற பெண்களுக்கு, குளத்தினைக் கண்டவுடன், பெருமானின் தோற்றமும் அம்மையின் தோற்றமும் நினைவுக்கு வருகின்றன. குளத்தில் உள்ள கருங்குவளை மலர்கள் அன்னையின் நிறத்தையும், பறவைகள் கூட்டங் கூட்டமாக இருக்கும் நிலை அன்னையின் கையில் இருக்கும் வளையல்களையும், செங்கமலப் பூக்கள் பெருமானின் நிறத்தையும் பொய்கையின் அருகில் இருக்கும் பாம்புகள் பெருமானின் உடலில் பின்னியிருக்கும் பாம்புகளையும் நினைவுபடுத்தவே, பொய்கையினை பெருமானும் பிராட்டியும் கலந்து இருக்கும் நிலையினை உணர்த்துவதாக கூறுகின்றார்கள். குருகு என்பதற்கு பறவைகள் என்றும் வளையல்கள் என்று இரண்டு விதமான பொருள்கள் கொள்ளலாம்.

பொருள்
நீராட இருக்கும் பொய்கை கருங்குவளை மலர்களையும், செந்தாமரை மலர்களையும் உடையதாய், கூட்டங் கூட்டமாக பறவைகளை உடைத்ததாக விளங்குகின்றது. மேலும் அருகில் பாம்புகள் ஒன்றுகொன்று பிணைந்தவாறு காணப்படுகின்றன. இவ்வாறு இருக்கும் நிலை குளிக்கச் சென்ற பெண்களுக்கு, குவளை மலர்கள் அம்மையின் நிறத்தையும், பறவையினங்கள் அம்மையின் கையில் அணிந்துள்ள வளையல்களையும், செங்கமல மலர்கள் பெருமானின் நிறத்தையும், அருகில் உள்ள பாம்புகள் அவனது மேனியில் தவழும் பாம்புகளையும் நினைவூட்டவே, பெருமானும் பிராட்டியும் இணைந்து நிற்கும் நிலை போன்று பொய்கையில் உள்ள பல பொருட்கள் இணைந்துள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களது அக அழுக்குகளை நீக்கிக்கொள்ள விரும்புவோர் பெருமானையும் பிராட்டியையும் நாடுவது போன்று, புற அழுக்குகளை நீக்கிக்கொள்ள விரும்பும் மனிதர்கள் குளத்தினை நாடுகின்றார்கள். இந்த தன்மையிலும் இங்குள்ள குளம், பெருமானும் பிராட்டியும் இணைந்திருக்கும் நிலையை ஒத்துள்ளது. இவ்வாறு உள்ள குளத்தில் பொங்கி வருகின்ற நீரினில் பாய்ந்து, நமது கையில் அணிந்துள்ள வெண்சங்கு வளையல்களும், காலில் அணிந்துள்ள சிலம்புகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒலிகளை எழுப்ப, மகிழ்ச்சியால் நமது மார்பகங்கள் விம்மிப் புடைக்க, குடைந்து நீராடுவதால் குளத்தில் உள்ள நீர் மேலே பொங்கி எழும்புமாறு, தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்தினில் நாம் நீராடுவோமாக.




திருவெம்பாவை: பாடல் 14

First Published : 30 December 2015 12:00 AM IST

   காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
  கோதை குழலாட வண்டின் குழாமாடச்
  சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
  வேதப் பொருள் பாடி அப்பொருள் ஆமாபாடிச்
  சோதி திறம் பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
  ஆதி திறம் பாடி அந்தம் ஆமாபாடிப்
  பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
  பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்
பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்

பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
பேதித்தல் = வேறுபாடு செய்தல். தவறு செய்யும் குழந்தையை அடித்தும் கண்டித்தும் திருத்தும் ஒரு தாய், அவ்வாறில்லாத குழந்தையை கண்டிப்பதில்லை. ஏன், முன்னம் தவறு செய்து தண்டிக்கப்பட்ட அதே குழந்தை, தவறு செய்யாத தருணங்களில், தாயின் பாராட்டுதலைப் பெறுவதையும் நாம் காண்கின்றோம். ஒவ்வொரு உயிரும், இறைவனைப் பற்றி அறிந்துள்ள நிலையில், பாசங்களை அறுத்த நிலையில் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. எனவே அந்தந்த உயிரின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப, இறைவனின் அருளின் திறம் மாறுபட வேண்டிய அவசியம் உள்ளது. பெண்கள் அணிந்துள்ள மலர்களில் உள்ள தேனைப் பருகுவதற்காக சூழும் வண்டுகள், பெண்கள் அமிழ்ந்து குளிக்கையில் மலர்கள் நனைவதால், கூந்தலை விட்டு அகலுகின்றன. நீர்நிலைக்கு மேல் கூந்தல் எழும்போது வண்டுகள் மலர்களைச் சூழ்கின்றன. இவ்வாறு அவை மேலும் கீழும் சென்று வருவது வண்டுகள் ஆடுவது போல் தோன்றுகின்றது. ரீங்காரமிட்டு எப்போதும் பாடும் வண்டுகள் ஆடுகின்றன, காதில் அணிந்துள்ள குழைகள், உடலில் அணிந்துள்ள ஆபரணங்கள் மற்றும் கூந்தலில் சூடியுள்ள மலர்கள் ஆகியவை ஆடும் ஆட்டத்தில் கலந்துகொண்டு வண்டுகளும் ஆடுகின்றன என்று நயமாக கூறுகின்றார்.
பொருள்
காதுகளில் அணிந்துள்ள குழை ஆபரணங்கள் ஆடவும், உடலின் பல்வேறு இடங்களில் அணிந்துள்ள பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆடவும், கூந்தலில் சூடியுள்ள மலர்மாலைகள் ஆடவும், மாலைகளைச் சூழுந்துள்ள வண்டுகள் ஆடவும், நாம் அனைவரும் இந்த குளிர்ந்த நீர்நிலையில் நீராடுவோம். அவ்வாறு நீராடும் போது, சிற்றம்பலத்தில் நடமாடும் கூத்தனைப் பாடுவோம், வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக இருக்கும் சிவபெருமானையும், பரஞ்சோதியாகத் திகழும் அவனது தன்மையையும், அவனது தலையில் சூடப்பட்டுள்ள கொன்றை மாலையையும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக அவன் திகழும் தன்மையையும், அனைத்து உயிர்களுக்கும் அந்தமாக அவன் திகழும் தன்மையையும், உயிர்களின் தன்மைக்கு ஏற்றவாறு வேறு வேறு விதங்களில் நமக்கு கருணை காட்டி நமது ஞானத்தினை வளர்க்கும் அம்மையின் திருவடிகளின் தன்மையையும் பாடி நாம் நீராடுவோமாக.




திருவெம்பாவை: பாடல் 15

First Published : 31 December 2015 12:00 AM IST

  ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம் பெருமான்
  சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
  நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
  பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
  பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
  ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
  வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
  ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்

பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
வாய் ஓவாள் = வாய் ஒழியாமல் பேசுவாள். ஓவா = இடைவிடாத. தாரை = தீர்த்துளி. வார் = கச்சு. ஏர் = எழுச்சி. தங்களின் தோழி ஒருத்திக்கு நடந்த அனுபவங்களை விவரித்துக் கூறும் ஒரு பெண்மணி, அவ்வாறான மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த இறைவனை பாடியவாறு நீராடலாம் என்று கூறுகின்றாள். வித்தகர் = சாமர்த்தியம் உடையவர். அரையன் = அரசன்.

பொருள்
ஒரு முறை எனது பெருமான் என்று தனது வாய் திறந்த சொன்ன எமது தோழி, அதன் பின்னர், வாய் ஒழியாமல் பெருமானின் சிறப்புகளைப் பேசுகின்றாள். பெருமானைப் பற்றிப் பேசுவதால், அவளின் சிந்தை களிப்புற்று, கண்களிலிருந்து தாரை தாரையாக, இடைவிடாது கண்ணீர் வழிகின்றது. மற்ற தேவர்களைப் பணியாத அவள், நிலத்தினில் விழுந்து சிவபெருமானைப் பணிந்த பின்னர், நிலத்திலிருந்து எழாமல் வெகுநேரம் கிடக்கின்றாள். இவ்வாறு, இந்த பெண்ணைத் தன் மீது பித்துக்கொள்ளச் செய்த சிவபெருமானை, சாமர்த்தியம் உடையவனை, மார்பினில் நகைகளையும் கச்சினையும் அணிந்த பெண்களாகிய நாம் அனைவரும், நமது வாயார பாடி, பொய்கையில் உள்ள நீரின் திவலைகள் மேலே எழுமாறு, பாய்ந்து நீராடுவோம்.





திருவெம்பாவை: பாடல் 16

First Published : 01 January 2016 12:00 AM IST

  முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
  என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
  மின்னிப் பொலிந்து எம் பிராட்டி திருவடி மேல்
  பொன்னம் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
  என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
  தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
  முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
  என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

பாடியவர் கரிவலம்வந்தநல்லூர் சுந்தர்
பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
மகளிர் அனைவரும் ஒன்று கூடி மழை பொழிய வேண்டி பாடும் பாடல் இது. இட்டிடை = மிகவும் சிறிய இடை. சுருக்கி = வற்றச் செய்து. சிலம்பி = ஒலித்து. சிலை குலவி = வில்லினை வளைத்து. முன்னி = முதலில். பொய்கையில் பெருமானும் பிராட்டியும் இணைந்து இருப்பதுபோல் கண்டு மகிழ்ந்த பெண்கள், மழையுடன் தொடர்புகொண்டுள்ள, மேகம், இடி, மின்னல், மழை அனைத்தும் எவ்வாறு இறைவியின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றன என்று உருவகிக்கும் பாடல்.
பொருள்
கடலில் இருக்கும் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாக மாறி, கருநிற மேகங்களாக மாறுகின்றன, அவ்வாறு மாறிய மேகங்கள், எம்மை உடையவளாகிய தேவியின் நிறத்தை ஒத்து விளங்குகின்றன. அத்தகைய மேகங்கள் ஒன்றுக்கொன்று உராய்ந்து, தேவியின் சிறுத்த இடைபோன்று மின்ன, பிராட்டியின் காலில் அணிந்துள்ள சிலம்புகள் இடித்து ஏற்படுத்தும் ஓசையினை ஒத்த இடிகள் முழங்க; தேவியின் புருவத்தினைப் போன்று வளைந்த வானவில் ஆகாயத்தில் தோன்ற, தான் பிரியாது இருக்கும் பெருமானின் அன்பர்களுக்கு, உமையம்மை தானே முன் வந்து அருளுவதைப்போன்று, மழை பொழிந்து உலகம் செழிக்க வேண்டும்.




திருவெம்பாவை: பாடல் 17

First Published : 02 January 2016 12:00 AM IST

  செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
  எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக்
  கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
  இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
  செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
  அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
  நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
  பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்
பாடியவர் கரிவலம்வந்தநல்லூர் சுந்தர்
பாடியவர் சற்குருநாதன்


விளக்கம்
செங்கணவன் = திருமால். திசைமுகன் = நான்முகன். கொங்குண் = நறுமணத்தினை உடைய. ஒரு பெண்மணி தனது தோழிக்கு கூறுவதாக அமைந்த பாடல். சேவகன் = வீரன்.
பொருள்
நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே, திருமால், நான்முகன் மற்றுள்ள தேவர்கள் ஆகியோரிடத்தில் இல்லாத அன்பும் இன்பமும் எம்மிடம் வைத்துள்ள இறைவன், எங்களது குற்றங்களை நீக்கி, எமது இல்லங்களில் எழுந்தருளி, தனது பொன் போன்ற திருப்பாதங்களை எங்களது தலையில் சூட்டி அருள் புரிந்து, எங்களை பெருமைப் படுத்துகின்றான். அத்தகைய வீரனை, அழகிய கண்களை உடைய அரசினை, அடியார்களுக்கு ஆரமுதமாகத் திகழ்பவனை, எங்கள் பெருமானை, நமக்கு எல்லா நலங்களும் வாய்க்குமாறு, புகழ்ந்து பாடி, தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்தில் பாய்ந்து நீராடுவோமாக.




திருவெம்பாவை: பாடல் 18

First Published : 03 January 2016 12:00 AM IST

   அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
  விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றாற்போல்
  கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
  தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
  பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கு ஒளி சேர்
  விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
  கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
  பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

பாடியவர் கரிவலம்வந்தநல்லூர் சுந்தர்
பாடியவர் சற்குருநாதன்


விளக்கம்
வீறு அற்றாற்போல் = ஒளி மழுங்கிக் காணப்படுதல். கண் ஆர் இரவி = கண்களில் நிறைந்து நாம் காண்பதற்கு உதவும் சூரியன். கரப்ப = மறைக்க. தாரகை = நட்சத்திரம்.

பொருள்
அண்ணாமலையான் ஆகிய இறைவனின் திருப்பாதங்களில், தங்களது தலைகளைச் சாய்த்து வழிபடும் தேவர்களின் கிரீடத்தில் உள்ள பலவகையான மணிகள், இறைவனின் திருப்பாதங்களின் ஒளியின் முன்னே தங்களது பொலிவை இழக்கின்றன. அது போன்று, நமது கண்களில் நிறைந்து நாம் காண்பதற்கு உதவும் சூரியன் உதிக்கும் சமயத்தில் இருள் அகலுகின்றது, மற்றும் வானில் அது வரை ஒளியுடன் திகழ்ந்த நட்சத்திரங்கள் ஒளி மழுங்கி அகல்கின்றன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும், ஒளி நிறைந்த ஆகாயமாகவும், நிலமாகவும் இருக்கும் இறைவன், மேலே குறிப்பிட்ட பொருட்களிலிருந்து வேறாகவும், நமது கண்களில் நிறைந்த அமுதமாகவும் உள்ளான். அவனது திருவடிகளைப் பாடியவாறு, தாமரைகள் நிறைந்த இந்த குளத்தினில் நாம் பாய்ந்து நீராடுவோம்.






திருவெம்பாவை: பாடல் 19

First Published : 04 January 2016 12:00 AM IST

  உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
  அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
  எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
  எம் கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க
  எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
  கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
  இங்கு இப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
  எங்கெழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்
பாடியவர் கரிவலம்வந்தநல்லூர் சுந்தர்
பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
பாவை நோன்பு நோற்பதன் நோக்கமே, தங்களது விருப்பபடி, கண் நிறைந்த கணவன் அமைய வேண்டும் என்று வேண்டுவது தான். எத்தகைய கணவன் தங்களுக்கு அமைய வேண்டுமென்று, தங்களது விருப்பத்தை இறைவனிடம் சமர்ப்பித்து, வேண்டும் பாடல். நமது இந்து மதத் திருமணங்களில் தொன்றுதொட்டு சொல்லப்படும் ஒரு சொல், இங்கே பாடலின் முதல் பகுதியாக வருகின்றது. தனது பெண்ணை, தனது மருமகனிடம் தாரை வார்த்துக் கொடுக்கும் தகப்பனார், சொல்லும் வார்த்தை தான் அது. தான் இத்தனை நாள் பாதுகாத்து வந்த பெண்ணை, இன்று உன்னிடம் அடைக்கலமாகத் தருகின்றேன், இனி வரும் நாட்களில் அவளை பாதுகாக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்பதுதான் அது. தனக்கு வரும் கணவர், சைவநெறியினை பின்பற்றுவராக இருக்க வேண்டும் என்ற கவலை நீராடும் பெண்களுக்கு ஏற்படுகின்றது. தாங்கள் அந்நாள் வரை செய்து வந்த சிவ வழிபாடு, தங்களது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடக்க வேண்டும் என்ற ஆசையில் விளைந்த கவலை இது,
பொருள்
எங்களை, உனது அடைக்கலப் பொருளாக ஏற்று நீ காக்க வேண்டும், என்று எங்களது தந்தைமார்கள் நாளை எங்கள் திருமணத்தில், எங்களுக்கு கணவராக வாய்க்கவிருக்கும் ஆண்மகனிடம் சொல்லப்போகும் சொல். பரம்பரை பரம்பரையாக அனைத்து தந்தையரும் சொல்லும் அந்தச் சொல், எங்களது உள்ளத்தில் அச்சத்தை தோற்றுவிக்கின்றது. ஒருகால் எங்களது கணவர், உன்னுடைய அடியாராக இல்லாமல் இருந்துவிடுவாரோ என்ற அச்சம் எங்களுக்கு எழுகின்றது. உன்னிடம் எங்களது விருப்பமான தீர்மானத்தை உரைக்கின்றோம், நீ அதனைக் கேட்டு அந்த விருப்பம் நிறைவேறுமாறு அருள் புரிவாயாக. எங்களது மார்புகள், உனது அன்பர் அல்லாதவரின் தோள்களைச் சேரக்கூடாது. எங்களது கைகள் உன்னைத் வேறு எந்த தெய்வத்திற்கும் பணி செய்யக்கூடாது. இரவும் பகலும் எப்போதும் எங்களது கண்கள் உன்னைத் தவிர வேறு எவரையும் காணக்கூடாது. இத்தகைய பரிசினை, நீ எங்களுக்கு அருளினால், நாங்கள் எந்த கவலையும் இன்றி வாழ்வோம். தினமும் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதிப்பது போன்று, உலகினில் நடக்கும் நிகழ்வுகள் மாறினாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.




திருவெம்பாவை: பாடல் 20

First Published : 05 January 2016 12:00 AM IST

   போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
  போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
  போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
  போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
  போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
  போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
  போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
  போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பாடியவர் கரிவலம்வந்தநல்லூர் சுந்தர்
பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
இந்தப் பாடல் முழுவதும் இறைவனின் திருவடிப் பெருமையை பேசுகின்றது. ஐந்து தொழில்களையும் இறைவன் செய்யும் தன்மையை, இறைவனின் திருவடிகளுக்கு ஏற்றி, தோற்றமாகவும், போகமாகவும் (இன்ப துன்பங்களை அளித்து காக்கும் நிலை), ஈறாகவும், மறைந்து இருக்கும் பொருளாகவும், அனைத்து உயிர்களும் உய்வதற்கான வழியாகவும் விளங்கும் தன்மை இங்கே கூறப்படுகின்றது. திருவடிகளை நாம் பற்றிக்கொண்டால் தான் உய்ய முடியும் என்பதால், இறைவன் கருணை கூர்ந்து அவனது திருவடிகளை, நாம் பற்றிக்கொள்வதற்கு ஏதுவாக, நமக்கு அருள வேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கப்படுகின்றது.

பொருள்
எங்கள் தலைவனே, அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகத் திகழும் உனது திருவடித் தாமரையை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்துப் பொருட்களுக்கும் இறுதியாக இருக்கும் சிவந்த மலர் போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்து உயிர்களையும் தோற்றுவிக்கும் பொன்னான திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்துப் பொருட்களையும் காத்தும், இன்ப துன்பங்களை நுகரச் செய்தும் அருள் புரியும் பூ போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்குவதற்கு உரிய இடமாக விளங்கும் திருவடியை எமக்கு அருள்வாயாக. திருமாலும் நான்முகனும் கண்டு அறிய முடியாத தாமரை போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. எங்களை எல்லாம் ஆட்கொண்டு உய்விக்கும் பொன் மலர் போன்ற திருவடிகளை எமக்கு அருள்வாயாக. நாங்கள் செய்யும் மார்கழி நீராடலும், பாவை நோன்பும் உமது அருள் எங்களுக்கு கிட்டுவதற்கு வழி வகுக்க வேண்டும். மார்கழி நீராடலையும், உம்மையும், உமது திருவடிகளையும், இறைவனே நாங்கள் போற்றுகின்றோம்.

















































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக