சனி, 2 மார்ச், 2013

12 ஜோதிர் லிங்க தலங்கள்..புதிய பகுதி!

ராதே கிருஷ்ணா 02-03-2013


12 ஜோதிர் லிங்க தலங்கள்..புதிய பகுதி! 


ஆதியும் அந்தமும் இல்லா சிவபெருமான் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்கள் ஏராளம் இருந்தாலும், ஜோதிர் லிங்கங்களாக அருள் புரியும் திருத்தலங்கள் 12 ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க திருத்தலங்கள் பற்றிய முழு தகவல்கள் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

Temple images
















 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்

Jothir Lingam

அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்
 
[Image1]



அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்



 
மூலவர்:ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி
 தல விருட்சம்:-
 தீர்த்தம்:கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் (வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவிபட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலான இடங்களில் உள்ளன.)
 ஆகமம்/பூஜை:-
 பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம்
 ஊர்:ராமேஸ்வரம்
 மாவட்டம்:ராமநாதபுரம்
 மாநிலம்:தமிழ்நாடு
 


பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

கடலிடை மலைகள் தம்மால் அடைத்து மால் தரும் முற்றித் திடலிடைச் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத் தொடலிடை வைத்து நாவில் சுழல்கின் றேன் தூய்மையின்றி உடலிடை நின்றுப் பேரா ஐவர்ஆட் டுண்டு நானே.

-திருநாவுக்கரசர்


தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டுத்தலங்களில் இது 8வது தலம்.
 திருவிழா:
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.
 தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம்உலகப்புகழ் பெற்றது. அம்மனின் சக்தி பீடங்களில் இது சேது பீடமாகும். மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் - 623 526, ராமநாதபுரம் மாவட்டம்.
போன்:
+91-4573 - 221 223.
 பொது தகவல்:
பிரகாரத்தில் சீதை, மணலில் லிங்கம் பிடிக்க, அதற்கு ராமர் பூஜை செய்யும் காட்சி சிலையாக வடிக்கப் பட்டுள்ளது. அருகில் ஆஞ்சநேயர், சுக்ரீவன் உள்ளிட்ட வானர வீரர்களும் இருக்கின்றனர்.

மேலும் நளன், நீலன், கவனால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளும் இப்பிரகாரத்தில் உள்ளன.

சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர்.

அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
பிரார்த்தனை
இரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர்.

நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
 தலபெருமை:
காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.

கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும்.
சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்: புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர். எமதர்மராஜா அவர்களை விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார். "மகாளயம்' என்றால் "கூட்டமாக பூமிக்கு வருதல்' எனப்பொருள். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.

ஜோதிர்லிங்கம் : சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று ராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.
இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, "ஜோதிர்லிங்கம்' ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

முதல் தரிசனம் : ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, "விஸ்வநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.

உப்பு லிங்கம் : ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

அக்னி தீர்த்தம் பெயர் ஏன்? : ராமேஸ்வரம் கடல், "அக்னி தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் "அக்னி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்வதுண்டு.

காலில் சங்கிலியுடன் பெருமாள் : குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.

மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

தீர்த்தமாடுவதின் பலன் : பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

தீர்த்தமும் பலனும்:
1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்:  வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
 9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
 14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

பாதாள பைரவர் : ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு "பாதாள பைரவர்' என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

சுக்ரீவன் கோயில் : சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

காவியுடையில் இரட்டை விநாயகர் : பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் நிஜ பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.

பதஞ்சலி முக்தி தலம் : பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம். பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால், நம் கண்களுக்கு தெரியமாட்டார்.

விபீஷணன் ஸ்தாபித்த ரங்கநாதர் : அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார். ராமர் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

மூன்றாம் பிரகார சிறப்பு : 
முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது.

ஸ்படிக லிங்க பூஜை : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இத்தலம், "சேதுபீடம்' ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.

12 ஜோதிர்லிங்க தரிசனம்! : இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும் ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

விவேகானந்தர் வருகை : வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவில்,""அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார்.

தூய்மையில்லாமல் கோயிலுக்குள் செல்பவர்கள், தங்களின் பாவங்களோடு மேலும் ஒரு பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,'' என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

தீவுக்குள் ராமர் கோயில் : விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். ராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு "கோதண்டராமர்' என்பது திருநாமம். இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான்.

அவனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.

ராமாயண திருவிழா : ராமநாதர் கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர்.

ராமலிங்க பிரதிஷ்டையின்போது ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்க பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.

வால் இல்லாத ஆஞ்சநேயர் : 
கயிலாயத்தில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார். ஆனாலும், அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது. ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில், சிப்பி பதிந்திருப்பதைக் காணலாம்.

சீதையை மீட்பது குறித்து ராமர் ஆலோசித்த இடத்தில், "ராமர் பாதம்' இருக்கிறது.  பொதுவாக கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.

கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு.  வடநாட்டு பக்தர்கள் தலையில் ராமாயணம் புத்தகத்தை சுமந்து கொண்டு ராமநாத சுவாமி சன்னதியை சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.
  தல வரலாறு:
சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் லிங்கம்அமைத்தாள். அந்த லிங்கத்தை ராமர் பூஜித்ததால் "ராமநாதசுவாமி' என்ற திருநாமம் அமைந்தது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். 
விஞ்ஞானம் அடிப்படையில்: 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றது.
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்

Jothir Lingam
[Image1]
மூலவர்:மல்லிகார்ஜுனர்,( ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
உற்சவர்:-
அம்மன்/தாயார்:பிரமராம்பாள், பருப்பநாயகி
தல விருட்சம்:மருதமரம்
தீர்த்தம்:பாலாநதி
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருப்பருப்பதம்
ஊர்:ஸ்ரீசைலம்
மாவட்டம்:கர்நூல்
மாநிலம்:ஆந்திர பிரதேசம்
பாடியவர்கள்:
அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டுத்தலங்களில் ஒன்று.
 திருவிழா:
தெலுங்கு வருடப்பிறப்பு, ஆவணி மாத சப்தமி பூஜை, மஹா சிவராத்திரி, யுகாதி பண்டிகை, கார்த்திகை சோமவாரம் திருவிழா, பிரதோஷம்
 தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்திதேவர் அவதரித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது. ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் சக்தி பீடங்களில் இது சைல பீடம்.
திறக்கும் நேரம்:
காலை 5 மதியம் 3 மணி, மாலை 5.30 - இரவு 10 மணி. காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.
முகவரி:
அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம் - 518 100. (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம்.
போன்:
+91- 8524 - 288 881, 887, 888.
 பொது தகவல்:
கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.

ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், நம் கண்களுக்கு விருந்தாகின்றது.

ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் முதலியன தரிசிக்கத் தக்கன. தெற்கு வாயில் கோபுரம் "ரங்க மண்டபம்' எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது.  இக்கோயிலிலிருந்து அருகிலுள்ள நாகார்ஜுனர் அணைக்கு செல்ல விசைப்படகு வசதி உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சத்திரங்கள் உள்ளன.

மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும். அடர்ந்த காட்டுப்பகுதியாக இம்மலை இருப்பதால், தனியார் வாகனங்கள் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை செல்ல அனுமதி கிடையாது. அரசு பஸ்கள் மட்டுமே செல்லும். திங்கள், வெள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது.

சனகல பசவண்ணா நந்தி: இத்தலத்தில் பிரதான  மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சாட்சி கணபதி: ஸ்ரீசைல சிகரத்திற்கு 2. கி.மீ. தூரத்தில் சாட்சி கணபதி திருக்கோயில் உள்ளது. மஹா விஷ்ணுவானவர், விநாயகரின் உருவத்தில் உட்கார்ந்திருந்திருக்கிறார். இந்த கணபதி தன்னை காணவரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள், யார் இல்லாதவர்கள் என கைலாசத்தில் (ஸ்ரீ சைலத்தில்) உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பதால் இவரை சாட்சி கணபதி  என்பர். எனவே பக்தர்கள் தமக்கு மோட்சம் கிட்ட வேண்டும் என்று கருதி தத்தம் கோத்திரங்களை கூறி சாட்சி கணபதியை வணங்கிய பின் பக்தியுடன் ஸ்ரீ சைலம் வாயில் நுழைகின்றனர்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற சுவாமிக்கும் அம்மனும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 தலபெருமை:
மல்லிகார்ஜுனர்: மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் "மல்லிகார்ஜுனர்' எனப்படுகிறார்.

சிறப்பம்சம்: பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதார ஸ்தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.

ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார்.

நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள்  சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.

மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசைலம் - பக்தி ஞானம் உலகப்பற்றின்மை ஆகியவற்றிற்கு புகழ் பெற்றது. ஸ்ரீசைலம் வேதாந்திகள், பரமயோகிகள், சித்தி பெற்ற புருஷர்கள், மகாதவசிகள், இருக்கும் தவஸ்தலமே இப்புண்ணிய ஷேத்திரம் இதற்கு தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு.

கிருதாயுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் அவதாரபுருஷரான ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும், ஆதிசங்கரரும், பூஜைகள் செய்த புண்ணிய ஷேத்திரம்.

ஸ்ரீசைல சிகரத்தை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை. இந்த புண்ணிய தலத்திற்கு ஈடானது எங்கும் என்றும் இல்லையென இதன் புகழ் பரவிக்கிடக்கின்றது.

ஸ்ரீபர்வதம், ஸ்ரீநகரம், ஸ்ரீ கிரி, ஸ்ரீ சைலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த ஷேத்திரம் நல்லமல என்னும் மலைக்காட்டு பகுதியில் (ஆந்திரா கர்நூல் மாவட்டத்தின்) கிருஷ்ண நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது. ஸ்ரீபிரம்மராம்பா தேவி பதினெட்டு மஹாசக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறாள். சித்தி பெறுபவருக்கும், சாமான்ய பக்தருக்கும் அபூர்வமான அனுபவத்தை இந்த ஷேத்திரம் கொடுக்கின்றது.

எல்லா கோயில்களிலும் குளித்து கைகால்கள் கழுவி ஒன்றும் சாப்பிடாமல் கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு எந்த வித நித்திய கர்மங்களையும் செய்யாமல் மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்யலாம். இதற்கு தூளி தரிசனம்  என்பர். தூய்மையான மனதோடு, சாதி, மத பேதமின்றி மூலவரான ஜோதிர் லிங்கத்தின் தலையை தொட்டு வணங்கலாம். வெறும் தரிசனத்தினாலேயே எல்லாவிதமான சுகங்களையும் பக்தர்கள் அனுபவிப்பார்கள் என்ற பெயரும் புகழினை பெற்றிருக்கும் இறைவன் ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி ஆவார்.

மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக்கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்கினார். படைவீரர்களை தெற்கு நோக்கி யாத்திரை தொடங்க உத்திரவிட்டான். ஸ்ரீ மல்லிகார்ஜுனேசுவரரை தரிசித்து 10 நாட்கள் உபவாசம் இருந்து தியானத்தில் ஈடுபட்டான். தீவிர பக்தியாலும் தனது வைராக்கிய மனோபாவத்தாலும் மனைவி மக்களை மறந்து இங்கேயே எஞ்சிய வாழ்க்கையில் கழித்துவிட எண்ணினான். அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்நிலையில் ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி திவ்யகட்கத்தை (பெரிய வாள்) அளித்து கடமை உணர்வை போதித்து, பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும், தியான மந்திரையும் உருவாக்கி அன்று முதல் பல வெற்றிகள் பெற்று சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் அழைக்கப்படுகிறார்.
  தல வரலாறு:
சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,""தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்,''என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார்.

நந்தி தவம் செய்த "நந்தியால்' என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. 
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



அருள்மிகு குஷ்மேஸ்வரர் (கிருஷ்ணேஸ்வரர்) திருக்கோயில்

Jothir Lingam
[Image1]
மூலவர்:குஷ்மேஸ்வரர் (குங்குமணேசுவரர், கிருஷ்ணேஸ்வரர்)
உற்சவர்:-
அம்மன்/தாயார்:குங்குமணேசுவரி
தல விருட்சம்:-
தீர்த்தம்:சிவாலய தீர்த்தம், ஏலா ஆற்றின் தீர்த்தம்.
ஆகமம்/பூஜை:-
பழமை:2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:வேரூல்
மாவட்டம்:அவுரங்காபாத்
மாநிலம்:மகாராஷ்டிரா
பாடியவர்கள்:
-
 திருவிழா:
சிவராத்திரி, பிரதோஷம் முதலிய திருவிழாக்கள் காணப்படுகின்றன.
 தல சிறப்பு:
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.
திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு குஷ்மேஸ்வரர் திருக்கோயில் வேரூல், அவுரங்காபாத் மாவட்டம். மகாராஷ்டிரா மாநிலம்.
போன்:
+91
 பொது தகவல்:
விநாயகர், முருகர், பைரவர், அனுமன், ஆமை வடிவம். இங்கு நாம் தரிசிக்க வேண்டியை மூலவர், அங்கேயே பளிங்கு கல்லில் செய்யப்பட்ட அம்மன் சிலை மற்றும் பரிவாரத் தெய்வங்கள் ஆகும். சிவாலயத் தீர்த்தக்குளமும், கோயில் கோபுர அமைப்பும் சிற்பங்களும், முன் மண்டபமும் காணலாம். கோயில் சிவப்பு கல்லால் கட்டப்பட்டுள்ளது காணலாம். ஏலா ஆற்றுத் தீர்த்தம் காணலாம்.
பிரார்த்தனை
இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டுச் சென்றால் மறுபிறவி என்பதே கிடையாது.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள மூலவருக்கு குங்குமம், வில்வம் இவற்றால் அபிஷேகம், அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
 தலபெருமை:
குங்குமணேசுவரம் மகாராட்டிராவிலுள்ள ஐந்து ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. சிவலிங்கமும், கோயிலும் சிவப்பாகக் காணப்படுகிறது. சிற்பக் கலை நுணுக்கம் வாய்ந்த கோயில். பார்வதி தேவியால் ஜோதிர் லிங்கம் ஆக்கப்பட்ட தலம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து வழிபட்டுச் சென்றால் மறுபிறவி என்பதே கிடையாதாம். சிவாலயத் தீர்த்தத்தில் நீராடியவர்கள் சுவர்க்கம் புகுவார்கள். மகா சிவராத்திரி அன்று இத்தீர்த்தமாடி ஈசனை வழிபட்டவர் மோட்சம் அடைவார்களாம். உலகப் புகழ் பெற்ற எல்லோராக் குகைக்கோயில் ஒரு கிலோ மீட்டருக்கு அருகே உள்ளதால், எல்லோரா தரிசிக்க வரக்கூடியவர்கள் இங்கே வந்து சாமி தரிசனம் செய்து விட்டுப் போகிறார்கள். குங்குமணேசுவரம் சமவெளிப்பிரதேசத்தில் உள்ளதலம். கடற்கரை ஏதுமற்ற மத்தியப் பகுதியில் உள்ளதலம். போவதற்கு எந்தவிதத் தடங்கலும் அற்ற தலம். எனவே பக்தர்கள் சவுகரியத்தை ஒட்டியும் தலத்தில் அதிகமழை வெப்பகாலம் தவிர்த்தும் ஆண்டு முழுதும் எப்போது வேண்டுமானாலும் யாத்திரை மேற்கொள்ளலாம்.

பார்வதி தேவியானவர் சிவ பெருமானை நோக்கி இங்கு ஒரு சமயம் தவம் செய்து கொண்டிருந்தார். அம்பிகை இங்குள்ள ஏலா என்னும் நதியில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு வந்தார். பார்வதி தேவியார் குங்குமம் கொண்டு சிவலிங்கத்தை அர்ச்சனை செய்து வந்தார். சிவலிங்கம் குங்குமம் போன்று சிவந்து காணப்பட்டது. குங்குமேசுவரர் எனப்பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒரு ஜோதிர்லிங்கம் தாபிக்க சிவனும் பார்வதியும் திருவுளம் கொண்டனர். ஒருநாள் பார்வதி தேவியார் ஏலாநதியில் நீராடி, மாற்றாடை அணிந்து சிவபூசையில் அமர்ந்தார். பார்வதி தேவியார் தமது இடது உள்ளங் கையில் சிறிது குங்குமத்தை வைத்து வலது கை ஆள்காட்டி விரலால் ஓம் நம சிவாய எனக் கூறித் தேய்த்தார். அப்போது அவரது கையில் மிகவும் பிரகாசமான ஜோதி தோன்றியது. அப்போது ஈசனும் பார்வதி தேவி வழிபட ஒரு ஜோதிர்லிங்கம் படைப்பதற்காக இந்த ஜோதி தோன்றியது என அசரீரியாகக் கூறினார். பார்வதி தேவியின் கையினின்றும் தோன்றிய ஜோதியானது, பார்வதி தேவி வழிபட்ட சிவலிங்கத்தில் ஐக்கியமாகியது. அப்போது சிவலிங்கம் மிகவும் பிரகாசமான ஜோதிர்லிங்கமாகப் பிரகாசித்தது. மேலும் குங்குமம் போன்று சிவப்பாகவும் ஜொலித்தது. பார்வதி தேவியும் மிகுந்த பக்தியுடன் வணங்க, சிவபெருமான் நேரில் வந்து பார்வதி தேவியைத் திருமணம் செய்து கயிலைக்குக் கூட்டிச் சென்றார். இவ்விதமாக இங்கு ஜோதிர் லிங்கம் தோன்றியது. மக்களும் பக்தியுடன் இன்றும் வழிபட்டு வருகின்றனர். 
  தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இத்தலம் ஒரு சிறுகிராமமாக இருந்தது. அக்கிராமத்தில் சுதர்மன் என்ற பிராமணன் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் சுதேஹா என்பதாகும். இருவரும் இனிதே இல்லறம் நடத்திவந்தனர். நீண்ட நாட்களாக அவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லாமையினால் சுதேஹா மிகவும் மனம் வருந்தினாள். எனவே தனது வருத்தம் நீங்கத் தன் தங்கை கிருஷ்ணை என்பவளைத் தனது கணவனுக்கு இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து வைத்தாள். கிருஷ்ணை மிகுந்த சிவபக்தி கொண்டவள். தினமும் 108 சிவலிங்கங்களைக் களிமண்ணால் செய்து சிவவழிபாடு செய்து, அந்த சிவலிங்கங்களைச் சிவாலய ஏரியில் போட்டு விடுவாள். சிவ பெருமான் அருளால் கிருஷ்ணைக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. யாவரும் மகிழ்ந்து அக்குழந்தையை அன்புடன் கவனமாக வளர்த்து வந்தனர். அதுவரை சலனமின்றி இருந்த சுதேஹைக்கு இப்போது பொறாமையும், தனக்கு மதிப்புக் குறைந்துவிட்டது என்ற தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு விட்டது. அதனால் பெரிதும் மனம் புழுங்கினாள். இவ்வளவுக்கும் காரணம் கிருஷ்ணையின் மகன்தான் என எண்ணி, அம்மகன் தூங்கும் போது கொன்று, உடலைச் சாக்கில் கட்டி சிவாலய ஏரியில் போட்டு விட்டாள். இதை அறிந்த கிருஷ்ணை கலங்காமல் சிவபெருமான் தன் மகனைக்காப்பாற்றுவார் எனத்திடமான நம்பிக்கைகொண்டு, அன்றும் 108 சிவலிங்கங்கள் செய்து சிவலிங்கப்பூசையில் ஈடுபட்டாள். சிவ பெருமானிடம் அழுதுமுறையிட்டு தன் மகனைக் காக்க வேண்டினாள். வழக்கம் போல் லிங்கங்களைக் சிவாலய ஏரியிலிட்டாள். என்ன ஆச்சரியம்! அவளது மகன் மிகவும் பிரகாசமான ஒளியுடன் ஏரியின் நீரிலிருந்து எழுந்து வந்தான். சிவபெருமான் கிருஷ்ணைக்குக் காட்சி தந்து ஆசீர்வதித்தார். கிருஷ்ணையின் வேண்டுதலின்படி சிவபெருமான் இங்கேயே கோயில் கொண்டு மக்களைக் காப்பதாக வரமளித்தார். அதன்படியே இங்கே சிவன் கோயில் உண்டாகியது. அக்கோயிலுக்கு கிருஷ்ணேசுவரம் என்னும், சிவலிங்கத்திற்குக் கிருஷ்ணேசுவரர் என்றும் பெயர் வழங்கலாயிற்று. 
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. 
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில்

Jothir Lingam
[Image1]
மூலவர்:பீமாசங்கரர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:கமலாட்சிபச்சிஷ்டா தேவி
தல விருட்சம்:-
தீர்த்தம்:மோட்சகுண்டம், சர்வ தீர்த்தம், குடசாரண்ய தீர்த்தம், பீமாநதி.
ஆகமம்/பூஜை:-
பழமை:2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:பீமா சங்கர்
மாவட்டம்:புனே
மாநிலம்:மகாராஷ்டிரா
பாடியவர்கள்:
-
 திருவிழா:
சிவராத்திரி, பிரதோஷம்
 தல சிறப்பு:
இது 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. மூலவர் கூம்புவடிவில் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில், சகியாத்திரி மலைத்தொடரில் பீமாசங்கரம், புனே மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம்.
போன்:
+91
 பொது தகவல்:
இங்கு விநாயகர், கவுரி, இராமர், இலக்குமணர் பரிவார மூர்த்திகள் உள்ளனர். பீமா சங்கரம் கோயில் மலைச்சாரலில் உள்ளது. கோயிலுக்குச் செல்லும் வழி மேலேயிருந்து கீழே பள்ளத்தாக்கு நோக்கிச் செல்கிறது. வழி நெடுகப் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. மூலத்தானத்தில் சிவலிங்கம் பூமிமட்டத்திலிருந்து கீழே உள்ளது. கோயில் கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது. கருங்கற்களால், பலவிதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மூலவருக்குப் பரிவார தேவதைகளாக மற்றுமொரு பீமேசலிங்கம், நந்தி, அம்மன் முதலியவர்கள் உள்ளனர். மேலே உள்ள கோபுரக் கலசத்தை நாம் அவசியம் தரிசிக்க வேண்டும். சிற்பங்கள் மிக அழகாக உள்ளன.
பிரார்த்தனை
சந்திரபாகா நதியில் நீராடி, பீமசங்கரப் பெருமானை வழிப்பட்டால், மனிதர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுள்ளது. மோட்ச குண்டத்தில் நீராடினால் மோட்சம் கிடைக்கும்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து, பூ, வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
 தலபெருமை:
பீமன் என்னும் அரக்கனுக்காக, சிவபெருமான் இங்கே தோன்றி ஜோதிர்லிங்கமாக விளங்குவதால் பீமாசங்கரம் எனப் பெயர் பெற்றது. இந்த திருக்கோயில் ஒரு கானகத்தின் நடுவே அமைந்துள்ளது. புனேயிலுள்ள கேத் என்ற இடத்துக்கு வட மேற்கே முப்பது மைல் தொலைவில் போவாகிரி என்ற கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தின் புறத்தே இந்தக் கானகம் அமைந்திருக்கிறது. பீமா அல்லது சந்திரபாகா நதியின் தோற்று வாயில் இந்தக் கோயில் உள்ளது. நானாபட்னாவிஸ் என்ற பக்தர் இந்த ஆலயத்தைக் கட்டினார். புனேயிலிருந்து பஸ்ஸிலும் போகலாம். வெளிப்புறத் தரை மட்டத்துக்குக் கீழே, ஒரு முழ உயரத்தில் கருப்பக்கிருகத்தில்  இந்த லிங்கம் அமைந்திருக்கிறது. அமைதியான, மனதுக்கு இதம் அளிக்கும் சூழ்நிலை.
கோயில் மிகவும் பழமையானது. முக்கிய சாலையிலிருந்து மூன்று கி.மீ. தூரம் கீழே படிக்கட்டு மூலம் இறங்க வேண்டும். மலைச்சரிவுப் பள்ளத்தாக்கில் கோயில் உள்ளது. கோயில் தனியே உள்ளது. பக்கத்தில் எதுவும் இல்லை. போகும் வழியில் படிக்கட்டில் உள்ள கடைகள்தாம். மலைக் காட்டுப்பகுதி. கோயிலின் வலதுபக்கம் பீமாநதி, சிறு ஓடைபோல ஓடுகிறது. சிறு தொட்டியில் நீரைத் தேக்கிவைத்து பக்தர்கள் நீராடுகின்றனர். மேலும் மோட்ச குண்டம், சர்வ தீர்த்தம், குடசாரண்ய தீர்த்தம் உள்ளன. கோயில் கோபுரம் வாழைப்பூ போன்று, கூம்பு வடிவில் மிக உயரமாக உள்ளது. மிகவும் அழகிய, மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கோயில் திகழ்கின்றது. போவாகிரி என்ற சிற்றூர் இதன் அருகே உள்ளது. தற்போது கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ராமர்கோயில் கட்டப்பட்டுள்ளது. சலவைக் கல்லினாலான இராமர், சீதை முதலானோர் விக்கிரகங்கள் உள்ளன. இந்துக்களின் புனித யாத்திரைத்தலம். பீமாசங்கரம் கோயில் முன்மண்டபம் விசாலமாகவுள்ளது. கர்ப்பகிரகத்தின் உள்ளேயும் மூலத்தான இடம் பூமி மட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ளது. *படிக்கட்டிறங்க வேண்டும் - விசாலமாக உள்ளது. பூமியை ஒட்டியே சிவலிங்க ஆவுடையார் வட்டமாக உள்ளது.  சிவலிங்கம் சுமார் ஓர் அடி உயரமே உள்ளது. பக்தர்கள் சிவலிங்கத்தைச் சுற்றிலும் வட்டமாக அமர்ந்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்ய முடியும். ஆண், பெண் அனைவரும் உள்ளே செல்லலாம். ஆனால் ஆண்கள் சட்டைபோடாமல் செல்ல வேண்டும். இம்மலையில் மூலிகைகளின் காற்று வீசுகிறது. வழிக்கடைகளில் மூலிகை மருந்து விற்கிறார்கள்.
  தல வரலாறு:
மூன்று அரக்கர்கள் பிரம்மாவைக் குறித்துத் தவம் இருந்தனர். அவருடைய அருளினால் இணையற்ற பலத்தைப் பெற்றனர். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்குச் செல்லும் ஆற்றலையும் பெற்றனர். தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இடையூறு விளை வித்தனர். தாங்கொணாத துன்பம் அனுபவித்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அந்த மூன்று அரக்கர்களையும் அழிக்கச் சிவபெருமான் மாபெரும் உருத்தாங்கி, பல ஆயுதங்களுடன் போரிட்டார். சிவபெருமான் எடுத்த உருவம் அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. அதனால் தான் டாகினி என்றும் இந்தத் தலத்தைச் சொல்லுவார்கள். அதனால் இறைவனுக்குப் பீமசங்கரர் என்ற திருநாமம் உண்டாயிற்று. தேவர்களும் முனிவர்களும் வேண்ட அங்கேயே தங்கி அருள் புரியத் தொடங்கினார் இறைவன். கும்பகர்ணனுக்கும் கற்கபி என்ற அரக்கிக்கும் பிறந்த பீமன், தன் தாய் வழிப் பாட்டனை சுதீக்ஷ்ணன் என்ற முனிவரும், பெரிய தந்தை ராவணனை ராமனும் கொன்றனர் என்பதை அறிந்து, அந்தணர்களையும் அரசர்களையும் அழிக்க எண்ணி, நான்முகனை நோக்கித் தவம் செய்து, அவன் அருளால் வலிமை பெற்றான்.
தன்னிகர் இல்லாத பலம் பெற்றதும் மன்னர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். காமரூபத்து இந்தத் தம்பதி சிறந்த சிவ பக்தர்கள். சிறையிலும் இவர்கள் சிவபூஜை செய்தார்கள். இப்படிப் பூஜை செய்ய அனுமதித்தால் சிவபெருமான் அருளால், தன்னையே, அழிக்கக்கூடும் என்று உணர்ந்து, பூஜையை நிறுத்தும்படி கட்டளை யிட்டான் பீமன். அவர்கள் அவன் சொல்லைக் கேட்கவில்லை. அதனால் கோபம் கொண்ட பீமன், அவர்களை வெட்ட வாளை உருவினான். அவர்கள் வழிபட்டுவந்த லிங்கத்திலிருந்து சிவ பெருமான் தோன்றிப் பீமனைச் சங்கரித்தார். அந்த அரச தம்பதிகளின் வேண்டுகோளின்படி அங்கேயே கோயில் கொண்டார். பீமனைச் சங்கரித்ததால் பீம சங்காரம் என்ற திருநாமம் உண்டாயிற்று.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இது 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. மூலவர் கூம்புவடிவில் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு. 
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்

Jothir Lingam
[Image1]
மூலவர்:திரியம்பகேஸ்வரர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:ஜடேசுவரி
தல விருட்சம்:-
தீர்த்தம்:குசாவர்த்த தீர்த்தம், கங்காத் துவாரம், கோடிதீர்த்தம், பல்வ தீர்த்தம், நீலகங்காதீர்த்தம், கோதாவரி, ராமகுண்டம், லட்சுமண குண்டம், கவுதம குண்டம், வாணாசி தீர்த்தம், மணிகர்ணிகத் தீர்த்தம், கஞ்சன் தீர்த்தம்.
ஆகமம்/பூஜை:-
பழமை:2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:திரியம்பகம்
மாவட்டம்:நாசிக்
மாநிலம்:மகாராஷ்டிரா
பாடியவர்கள்:
-
 திருவிழா:
பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, கும்பமேளா
 தல சிறப்பு:
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு திரியம்பகேசுவரர் திருக்கோயில், திரியம்பகம், நாசிக் மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலம்.
போன்:
+91
 பொது தகவல்:
மகாவிஷ்ணு, பிரம்மா, கிருஷ்ணர், பலராமர், ராமர், பாலாஜி, கங்காதேவி, விநாயகர், நந்தி, கோதாவரி அம்மன் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலை மீது அமைந்துள்ளது ஆலயம்.
பிரார்த்தனை
இறந்த முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்தால் அவர்கள் சுவர்க்கம் அடைவார்கள் என்பதும், சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து, தகுந்த வழிபாடு செய்தால் அது நீங்கிவிடும் எனவும் நம்புகின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள மூலவருக்கு மலர்கள் மற்றும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
 தலபெருமை:
திரியம்பகம் பன்னிரு ஜோதிர் லிங்கத்தலங்களில் ஒன்று. இதனருகே பிரம்ம கிரியில் கோதாவரி நதி உற்பத்தி ஆகிறது. அம்மலையில் கவுதமர் வாழ்ந்த குகையும், அவரால் உண்டாக்கப்பட்ட புனித தீர்த்தமும் உள்ளன. கவுதமர் வழிபட்ட 1008 லிங்கங்களும் அக்குகையில் உள்ளன. ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்ற இயற்கை சூழல் நிலவுதால் சித்தர்கள் வாழ்ந்த இடங்களும், ரிஷிகள் வாழ்ந்த தபோ வனங்களும் உள்ளன. மூலஸ்தானத்தில் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன. அதில் நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும் அதிசயம் நிகழ்கிறது. புனித தீர்த்தங்கள் பல உள்ளன. குரு சிம்ம ராசியில் வரும் போது பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் எல்லாப்பக்கங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரியம்பகேசத்திற்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள மலைப்பகுதியானது அமைதிக்கும் மனநிம்மதிக்கும் ஏற்ற இடம் எனப் பல காலத்திலும் பல யோகிகளும், சாமியார்களும், பக்தர்களும் வந்து தங்கி அமைதி காண்கின்றனர். யாத்திரை வந்த பக்தர்களும் மனம் நிறைவு பெற்றுச் செல்கின்றனர். உலகில் உள்ள புனித ஆறுகளும், குளங்களும், தேவர்களும் கூட இங்கே வந்து அவர்கள் அடைந்த பாவங்களைப் போக்கித் தூய்மை பெற்றுச் செல்லும் சிறப்புமிக்க தலம். சிவபெருமானே இதுபுனிதத் தலம் என, சிபாரிசு செய்த தலம் ஆகும். குசாவர்த்த தீர்த்தத்தைத் திருமாலே இங்கேயிருந்து காவல் காத்து வருகிறார் எனில் இதன் சிறப்பு கூறவும் முடியாது. கும்பமேளா காலத்தில் இத்தீர்த்தம் மேலும் புனிதம் அடைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மகமாதம் தசமி யன்று நிலாவில் தேவர்கள் வந்து கோதாவரியை வாழ்த்துகின்றனர். அதனை இத்தலத்தில் பெரிய விழாவாகக் கொண்டாடுகின்றனர். இராமர் இலக்குமணருடன் இங்கே வந்து, தமது தந்தை தசரதருக்கு இத்தீர்த்தத்தில் சிரார்த்தம் செய்து, அவரது ஆத்மா சாந்தியடையச் செய்துள்ளார். எனவே இங்கே, இறந்த முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்தால் அவர்கள் சுவர்க்கம் அடைவார்கள். சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து, தகுந்த வழிபாடு செய்தால் அது நீங்கிவிடும். இக்கோயில் சிவாஜி மகாராஜா காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. பல சொத்துக்களும், நகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. தினசரி, ஒரு முக வெள்ளிக்கவசம் வைத்து வழிபாடு நடைபெறுகிறது. திங்கள் மட்டும் ஐந்து முகத்தங்கமுலாம் பூசப்பட்டது வைத்து பூசிக்கப்படுகிறது. இக்கோயில் சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
  தல வரலாறு:
பிரம்மகிரியில் கவுதமர் என்ற மகா தவசியும் முனிவருமானவர், தமது மனைவி அகல்யாவுடன் தபோவனம் அமைத்துத் தவம் செய்துவந்தார். அவரது தவவலிமையால் பிரம்மகிரிப் பகுதியில் மழை பெய்து செழிப்பாக இருந்தது. மற்றப்பகுதிகளில் மழையில்லாமல் பஞ்சம் ஏற்பட்டு குடிப்பதற்குக் குடிநீர் கூடக் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். இதனால் தமது தினசரிப் பூஜைகளைச் செய்ய முடியாத பல முனிவர்கள் வேறு இடங்களிலிருந்து இங்கு வந்து குடியேறினார்கள். தம் குடும்பத்துடன் வந்து முனிவர்களை, கவுதமரும் அன்புடன் வரவேற்று அப்பகுதியில் தபோவனம் அமைத்து நன்கு வாழ வைத்தார். காலம் செல்லச் செல்ல ஒருசில முனிவர்கள் கவுதமர் மீது பொறாமை கொண்டனர். அவரது தவ வலிமையைக் குறைக்க வேண்டும். அவரை எப்படியாவது இப்பகுதியினின்றும் விரட்டி விட வேண்டும் என எண்ணினர். அதில் ஒரு முனிவருக்கு விநாயகரை வரவழைக்கும் மந்திரம் தெரியும். எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து யாகம் செய்து, விநாயகரை வரவழைத்துத் தங்களது வேண்டுதலைக் கூறினார்கள். விநாயகர் முனிவர்களது எண்ணம் தவறானது என்றும், அதனால் தீங்கு ஏற்படும் என அறிவுரை கூறிச் சென்று விட்டார். முனிவர்கள் விடுவதாக இல்லை. பார்வதி தேவியின் தோழிகளில் ஒருவரான ஜெயா என்ற வன தேவதையை வரவழைத்து, ஒரு பசுவாக உருவெடுத்து கவுதமமுனிவர் ஆசிரமத் தோட்டத்தில்மேயும்படிச் செய்தனர். தோட்டத்தில் ஒரு பசு மேய்வதைக் கண்ட கவுதமமுனிவர் தர்ப்பைப் புல்லால் பசுவை விரட்டினார். மாயப் பசுவானதால் பசு இறந்தது போல் நடித்துப் படுத்துக் கிடந்தது. மற்ற முனிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, கவுதம முனிவர் மேல் பசுவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டினர். பசுவைக்கொன்ற தோஷம் நீங்க பிரம்மகிரி மலையை 108 முறை சுற்றி வரவேண்டும் எனவும், 1008 லிங்கங்கள் வைத்துப் பூசை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.

கிரியைப் சுற்றப் போதுமான வலிமையில்லாமையினால் கவுதமர், 1008 மண்லிங்கங்களை வைத்து விரதமிருந்து சிவபெருமானை வைத்து வழிபட்டார். கடும் தவம் மேற்கொண்டார். சிவபெருமான் குற்றமற்ற கவுதம முனிவர்முன் தோன்றினார். தீயமுனிவர்கள் எண்ணம் தவறு என்றும், கவுதமருக்குப் பசுவைக் கொன்ற தோஷம் இல்லை என்றும் கூறினார். கவுதமரும் மகிழ்ந்து ஈசனிடம் தீய முனிவர்களின் தீய எண்ணம் மறையவும், அவர்கள் செய்த தவறின் தோஷம் அவர்களை விட்டு நீங்கவும், நாடு செழிப்பாக ஆகி மக்கள் பஞ்சமின்றி வாழவும் அருள் புரிய வேண்டும் எனவும் வரம் கேட்டார். சிவபெருமான் தமது ஜடாமுடியினின்றும் சிறிது கங்காதீர்த்தம் வரவழைத்துக் கவுதமரிடம் கொடுத்துச் சென்றார். சிவபெருமான் கொடுத்த நீரே ஆறாகப் பெருகி ஓடியது. அதுவே கோதாவரி அல்லது கவுதம நதி என்று கவுதமரின் பெயரால் தற்போது விளங்குகிறது. அந்தக் கோதாவரி நதி நீரில் மூழ்கி கவுதமர் தாம் இழந்த தபோ பலமெல்லாம் பெற்றார். தீய முனிவர்களையும் அவர்கள் தோஷம் நீங்க நீராடக் கூறினார். ஆனால் கோதாவரி நதி நீர் மறைந்துவிட்டது. கவுதமர் மீண்டும் தர்ப்பைப்புல்லைத் தக்க மந்திர உபதேசம் செய்து மறைந்த கோதாவரி நீர் குசாவர்த்தகம் என்னும் இடத்தில் தோன்றச்செய்து, தீய முனிவர்களை அதில் நீராட வைத்து அவர்கள் தோஷம் நீங்கச் செய்தார். அதன்பிறகு நாடு செழித்து நாட்டு மக்கள் பஞ்சமின்றி வாழ, கோதாவரி நதியாக நாட்டில் ஓடச் செய்தார். அதன்படியே இன்றும் பிரம்மகிரியில் உற்பத்தி ஆகும் கோதாவரி, முதலில் ஆல மர வேரிலிருந்து தோன்றி, மலைக்குள் சிறு தொட்டியில் நிறைந்து, பின் மீண்டும் மறைந்து குசாவர்த்தம் என்னும் குளத்தில் வெளிப்படுகிறது. பின்பு கோதாவரி நதியாகத் திரியம்பகேசுவரர் கோயில் முன்பு கோடி தீர்த்தமாக உருவெடுத்து, இன்றும் ஓடுகிறது.

இந்தக் கதையே வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. போதிய மழை இல்லாமையால், உலகத்தின் நன்மையின் பொருட்டு கவுதம முனிவர், தம் மனைவி அகல்யையுடன் பிரம்மகிரியில் கடுந்தவம் செய்தார். வருணன் கட்டளைப்படி ஒரு குளத்தை உருவாக்கினார். வருணனின் அருளால், அந்தக் குளத்தில் வற்றாமல் நீர் சுரந்தது. நீர் வளம் மிகுந்து அவருடைய ஆசிரமம் செழிக்கத் தொடங்கியது. மற்ற முனிவர்களும் தம் தம் பத்தினிகளுடன் இங்கே வந்து தங்கினர். சில நாட்களில் ரிஷி பத்தினிகளுக்குள் விரோதம் உண்டாயிற்று. அகல்யையின் கர்வத்தை அடக்க, அவளை இந்த இடத்தை விட்டே துரத்த வேண்டும் என்று மற்ற ரிஷிபத்தினிகள் தீர்மானித்து, விநாயகரின் நியாயத்தை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. பசு உருத் தாங்கிய விநாயகர், கவுதமர் பயிரிட்டிருந்த செடிகளைப் போய் மேய்ந்தார். பசுவைத் துரத்தக் கோலுடன் கவுதமர் ஓடியதுமே, அந்த மாயப் பசு உயிர் துறந்தது. அதனால் பசுவதை செய்த தோஷம் ஏற்பட்டு விட்டதாக மற்ற முனிவர்கள் கூறினார்கள். இந்த தோஷம் நீங்க, பிரம்ம கிரியை 101 முறை வலம் வரவேண்டுமென்றும், ஒரு கோடி மண் லிங்கங்களைப் பிடித்து வணங்க வேண்டுமென்றும், கங்கையை இந்த இடத்துக்கு வரவழைக்க, வேண்டுமென்றும், அந்த முனிவர்கள் கூறினார்கள். கவுதமரும் கடுந்தவம் இயற்றத் தொடங்கினார். அவருடைய தவத்துக்கு இரங்கி, சிவபெருமான் தரிசனம் அளித்தார். ரிஷி பத்தினிகளின் கெட்ட எண்ணத்தைக் கூற, தோஷம் எதுவும் கிடையாது என்றும் சொன்னார். தம் சடை முடியிலிருந்து சிறிதளவு கங்கா நீரையும் கொடுத்தார். அந்த நீரைப் பிரம்மகிரியில் வளர்ந்திருந்த பெரிய அத்தி மரத்தின் வேரில் விட்டார் கவுதமர். கங்கை பெருகத் தொடங்கிற்று. கவுதமர் இந்த நதியைக் கொண்டு வந்தமையால் கோதாவரி அல்லது கவுதமி என்று அழைக்கப்படுகிறது. தம்மிடமிருந்த குசத்தினால் (தர்ப்பை) கங்கையின் போக்கை மாற்றி, மற்ற முனிவர்களும் தூய்மையடையச் செய்தார் கவுதமர். பவித்ர தேசம் என்று அழைக்கப்படும் இந்தத் தல மூர்த்தியைத் தரிசித்தால் மனமாசுகள் அகன்று ஆன்ம ஒளி சிறக்கும்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. 
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்

Jothir Lingam
[Image1]
மூலவர்:சோமநாதர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:பார்வதி, சந்திரபாகா
தல விருட்சம்:-
தீர்த்தம்:திரிவேணி தீர்த்தம், கபில தீர்த்தம், சூரிய சந்திர குண்டம்
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:பிரபாசப் பட்டணம்
மாவட்டம்:ஜுனாகட்
மாநிலம்:குஜராத்
பாடியவர்கள்:
-
 திருவிழா:
சிவராத்திரி, பிரதோஷம்
 தல சிறப்பு:
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. அம்மனின் சக்திபீடங்களில் இது பிரபாஸா பீடம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் பிரபாசப் பட்டணம், ஜுனாகட் குஜராத்.
போன்:
+91 2876 231200, 232 694, 231 212
 பொது தகவல்:
இங்கு அனுமன், விநாயகர், துர்கை, பைரவர், காளி போன்ற பரிவார தெய்வங்கள் உள்ளன. இத்தலத்தில் 135 சிவபெருமான் கோயில்களும், 5 விஷ்ணு கோயில்களும், தேவிபார்வதிக்கு 25 கோயில்களும், சூரியனுக்கு 16 கோயில்களும், 5 விநாயகர் கோயில்களும் உள்ளன. நாகர், சந்திரனுக்கு கோயில்கள் உள்ளன. மே முதல் செப்டம்பர் வரை யாத்திரை செல்ல ஏற்ற மாதங்கள். ஆனாலும் வருடம் முழுவதும் யாத்ரிகர்கள் வருகின்றனர். கோடையில் குளிர்ச்சியாகவே இருக்கும்.

கோயில் அமைப்பு: சோமநாதபுரத்தில் இருகோயில்கள் உள்ளன. ஒன்று ராணி அகல்யாபாயால் கட்டப்பட்டது. இங்கு கருவறைக்கு செல்ல குறுகிய பாதை வழியே படிக்கட்டுகளில் இறங்கினால் பாதாளத்தில் சிவலிங்கத்தை தரிசிக்கலாம். மீண்டும் படிக்கட்டுகளில் ஏறினால் விஸ்வநாதர், அன்னபூரணி, விநாயகர், பைரவர், காளி சன்னதிகளைத் தரிசிக்கலாம். மகிஷாசுரமர்த்தினி சன்னதியும் உண்டு.

புதிய கோயில்: புதிய சோமநாதர் கோயில் கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டுள்ளது. சலவைக் கற்களால் அமைந்த இக்கோயிலில் பார்வதி, அனுமன், துர்கை, விநாயகருக்கு சன்னதிகள் உள்ளன. கர்ப்பகிரகத்தின் மேலே பல கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. 
பிரார்த்தனை
சகல பாவங்களும் நீங்கவும், இறப்பிற்கு பின் முக்தி கிடைக்கவும் இங்குள்ள சோமநாதரை வழிபட்டு செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சோமநாதரை வில்வ இலையாலும், மலர்களாலும் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
 தலபெருமை:
சோமன் என்று சொல்லக்கூடிய சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றமையால் சோமநாதம் எனப் பெயர் உண்டாகியது. சோமநாதபுரம் உலகம் தோன்றிய காலம் முதலே சிறந்த தலமாக விளங்கியது. பிரபாசப் பட்டணம் எனப் புகழ்பெற்றது. ஏனெனில், இத்தலத்தின் கடற்கரையில் ஓரிடத்தில், ஒரு குறிப்பிட்ட சமயத்தில், சூரிய ஒளியும், சந்திர ஒளியும் பிரகாசிக்கும். புராணகாலம், வேத காலம், இதிகாச காலம், தற்காலம் என இப்படிப் பல காலங்களிலும் புனிதத் தலமாக விளங்கி வருகிற சிறப்புடையது இத்தலம். நமது நாட்டின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தலையாய தலம். இரண்யா நதி, கபில நதி, சரஸ்வதி நதி ஆகிய மூன்று நதிகளும் திரிவேணி சங்கமத்தில் ஒன்று கூடுகின்றன. இந்த இடம் புனிதமாகக் கருதப்படுகிறது. பாண்டவர்கள் காலத்தில், அவர்கள் பலமுறை இங்கே வந்து வாழ்ந்தும், தவம் செய்தும் உள்ளார்கள். சரித்திர காலத்தே சரித்திர ஆசிரியர்கள் சோமநாதத்தின் புகழைப் பற்றி எழுதியதை அடிப்படையாக வைத்து, ஆப்கானிஸ்தானப் பேரரசன் கஜினி முகமது 17 தடவை படையெடுத்து வந்து, சோமநாதபுரத்தைப் தாக்கிப் பெரும் செல்வத்தைக் கொண்டு சென்று - தன் ஊரைச் சொர்க்க புரியாக ஆக்கினான். அவன் சோமநாத லிங்கத்திற்கு அடியில் பெரும் ஒளிவரும் ரகசியம் அறிந்து அதனைக் களவாட முயற்சித்தான். ஏழுமுறை இக்கோயிலை இடித்துத் தள்ளினானாம். ஆனால் அந்த ஒளியின் ரகசியத்தை அவனால், அறியமுடியவில்லை. பெரும் செல்வத்தை மட்டும் வாரிக்கொண்டு போனானாம். சுதந்திரம் அடைந்த பின்னர் வல்லபாய் பட்டேல் அவர்களின் முயற்சியால் புதிய சோமநாதம் கோயில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் தாபித்த சாரதா பீடம் உள்ளது. நமது நாட்டின் நான்கு திக்குகளிலும் உள்ள நான்கு புனிதத் தலங்களில் மிகவும் சிறந்த தலம் சோமநாதம் ஆகும்.

இது கண்ணன் காலில் வேடன் அம்பு பட்ட இடம். கண்ணன் உயிர் நீங்கிட, தனியே கிடந்த உடலை அர்ச்சுனன் கண்டெடுத்த இடம். கண்ணன் உடல் தகனம் செய்த இடம் - ஆகிய இம்மூன்று இடங்களும் உள்ள தலம். பலராமர் பாம்பாக மாறிப் புற்றினுள் மறைந்த இடமும் இங்கே உள்ளது. சோமநாதரின் பழைய கோயில் புதிய கோயிலின் இடது புறமுகப்பில் உள்ளது.
  தல வரலாறு:
சந்திரனின் மற்றொரு பெயர் சோமன் என்பது. சந்திரன் மிக்க அழகானவன். எனவே, தக்கன் என்பவரது 27 பெண்களும் சந்திரனை விரும்பித் திருமணம் செய்து கொண்டனர். சந்திரன் தனது கடைசி மனைவி ரோகிணி என்பவளிடம் மட்டும் பிரியமாக நடந்து கொண்டான். அதனால் மற்ற 26 பெண்களும் தங்களது தந்தையிடம், சந்திரனின் பாகுபாடு பற்றி முறையீடு செய்தனர். தக்கனும் சந்திரனைக் கூப்பிட்டு, எல்லா மனைவிகளிடமும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள அறிவுரை கூறியும் பயனில்லாத காரணத்தால், தக்கனுக்குக் கோபம் வந்து, சந்திரனுக்குத் தொழு நோய் ஏற்பட்டுத் துன்பப்பட, சாபம் கொடுத்து விட்டார். சாபத்தின் படி சந்திரனுக்குத் தொழுநோய் உண்டாகி, சந்திரன் அழகெல்லாம் கெட்டுப் போய்விட்டது. அதனால் உலகின் உயிர்கள் வாழக் காரணமான அமிர்தம் சுரக்கும் சக்தியும் குறைந்து விட்டது. சந்திரனின் 16 கலைகளில் தினம் ஒன்றாக 15 நாட்களில் 15 கலைகள் போய்விட்டன. உலகில் உள்ள உயிர்கள் வாடவே, தேவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அவிர்ப்பாகம் நின்று விட்டது. தேவர்கள் சந்திரனைக் கூட்டிக் கொண்டு பிரம்ம தேவரிடம் சென்று முறையிடவே, அவர் குஜராத்தில் பிரபாசத் தீர்த்தம் என்னும் திரிவேணி சங்கமத்தில் சந்திரனை நீராடச் செய்தார். இங்கே சிவலிங்கம் தாபித்து விரதமோடிருந்து சிவபெருமானை வழிபட்டு, சில நாட்கள் தவமிருக்கக் கூறினார். ஓராயிரம் ஆண்டுகள் இங்கே சந்திரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான்.

சந்திரனின் தவத்திற்கு இரங்கிய ஈசன், சந்திரன் முன்பு தோன்றினார். சந்திரனைச் சாபத்தின் பிடியிலிருந்து காத்தார். 15 நாட்கள் சந்திரனின் கலைகள் குறையவும், 15 நாட்கள் சந்திரனின் கலைகள் வளரவும் வரம் கொடுத்தார். உலகத்து உயிர்களை முன்பு போலவே காக்க, சந்திரனிடம் அமிர்தம் சுரக்கும் சக்தியையும் அருளினார். சந்திரனைப் பிறைச் சந்திரனாகத் தன் முடியில் சூடிக் கொண்டார். சிவபெருமான் சந்திரனுக்குக் கோழிமுட்டை வடிவில் ஒரு ஜோதிர்லிங்கத்தைக் கொடுத்துச் சென்றார். சந்திரன் வழிபட்ட இடத்தில் அந்த ஜோதிர்லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, அதன்மீது பெரிதான ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து, சிவபெருமான் எப்போதும் இங்கே ஜோதிர்லிங்கமாக இருந்து மக்களுக்கு அருள்புரிய வேண்டுமெனச் சந்திரன் சிவபெருமானை வேண்டிக் கொண்டு வழிபட்டான். அந்த லிங்கமே சந்திரனின் பெயரால் சோம நாதலிங்கம் எனப் பெயர் பெற்றது. அந்த இடமே சோமநாத புரமாகும். இன்றும் சோமநாதபுரத்துக் கடற்கரையில் சந்திரன் ஒளி பிரகாசமாக ஒளிரும் எனக் கூறுகின்றனர். அந்தச் சோமநாதரே ஜோதிர்லிங்கம் என்கின்றனர். 
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. அம்மனின் சக்திபீடங்களில் இது பிரபாஸா பீடம் ஆகும். 
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்

Jothir Lingam
[Image1]
மூலவர்:நாகநாதர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:நாகேஸ்வரி
தல விருட்சம்:-
தீர்த்தம்:பீம தீர்த்தம், கோடி தீர்த்தம், நாகதீர்த்தம்.
ஆகமம்/பூஜை:-
பழமை:2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:தாருகாவனம்
மாவட்டம்:ஜாம்நகர்
மாநிலம்:குஜராத்
பாடியவர்கள்:
-
 திருவிழா:
சிவராத்திரி, பிரதோஷம் முதலிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
 தல சிறப்பு:
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், தாருகாவனம், ஜாம்நகர் மாவட்டம், குஜராத் மாநிலம்.
போன்:
+91
 பொது தகவல்:
விநாயகர், முருகன், மற்றும் லிங்கங்கள், நந்திதேவர் பஞ்சபாண்டவர்கள், தாருகவன முனிவர்களும் அவர்களது பத்தினிகளும் பிட்சாடனர், மோகினி வடிவத் திருமால் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள நாகநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள மூலவருக்கு வில்வ இலையால் அபிஷேகம் செய்து வேண்டிச் செல்கின்றனர்.
 தலபெருமை:
நாகநாதரின் கோயில் மிகப்பழமையானது. ஜோதிர்லிங்கத் தலங்களிலேயே முதன்முதல் தோன்றிய தலம் என்றும் கூறுகின்றனர். கோயிலின் நான்கு பக்கங்களிலும் உயர்ந்த மதிற்சுவர்களும் உள்ளே பரந்த விசாலமான இடமும் உள்ளது. கிழக்குப் பக்கத்திலும், வடக்குப்பக்கத்திலும், வாயில்கள் உள்ளன. அதில் வடக்கு பக்கம் வாயில் மட்டும் பெரிதாகவும், புழக்கத்திலும் உள்ளது. கோயில் கோபுரம் வாழைப்பூ போன்று கூம்பு வடிவில் மிக உயரமாகவும், அநேக சிற்பவேலைப்பாடுகளுடன் கூடியதாகவும் காணப்படுகிறது. கோயில் கோபுரத்தின் கீழ் கர்ப்பகிரகத்தினுள் ஒரு மேடை மட்டுமே உள்ளது. கர்ப்பகிரகத்தின் இடப்பக்கம் மூலையில் மட்டும் ஒரு நான்கடி நீளம், நான்கடி அகலமுள்ள சுரங்கப் பாதை உள்ளது. அதன்வழியே உள்ளே சென்றால் பூமிக்கடியில் ஒருசிறு அறையில் மூலவர் நாகநாதர் இருக்கின்றார். அந்தச்சதுரமான துவாரத்தின் வழியே பக்தர்கள் குதித்து தான் இறங்க வேண்டும். மேலே வரும்போது தாவித்தான் ஏறி வர வேண்டும். பக்தர்கள் நெருக்கத்தின் காரணமாக உள்ளே செல்வதும், மேலே ஏறி வருவதும் வயதான பக்தர்களுக்குச் சற்றுக்கடினமாகவே உள்ளது.

பாதாள அறையில் நிற்கமுடியாது. மேற்கூறை தலையில் முட்டிக்கொள்ளும். பக்தர்கள் குனிந்து சென்று மூலவரைச் சுற்றி அமர்ந்து தான் சாமியைத் தரிசிக்க வேண்டும். மூலலிங்கம் சிறியதாக உள்ளது. வெள்ளியிலான முகபடாம் கவசம் வைத்து வழிபடுகின்றனர். அங்கு அமர்ந்திருக்கும் பண்டாவிற்கு தட்சிணை கொடுத்தால் கவசத்தை நீக்கி லிங்கதரிசனம் செய்ய வழி செய்கின்றனர். அந்தக் கர்ப்பகிரகத்தினுள் காற்றோட்டவசதி கிடையாது. தற்போது பேன் வசதி செய்துள்ளார்கள். என்றாலும் அதிகமான பக்தர்கள் உள்ளே சென்றால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் பொறுமை காத்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். 
  தல வரலாறு:
நாகநாதம் என்னும் இக்கோயில் உள்ள பிரதேசம் முன்பு பெரும் காடாகவும், வனமாகவும் இருந்தது. அக்காலத்தில் இது தாருகவனம் எனப் புகழ் பெற்றதாக விளங்கியது. தாருகவனத்தில் பல ரிஷிகளும், முனிவர்களும், தங்கள் மனைவிமார்களுடன் வாழ்ந்து வந்தனர். தாருகவன முனிவர்கள் மிகுந்த தவ வலிமையாலும், தங்களது பத்தினிகளின் பதிவிரதத் தன்மையாலும் மிகவும் கர்வம் கொண்டனர். இறைவன் இல்லை, தவம் செய்தலே சிறந்தது என்றும் இன்னும் பலபடியாக நாத்திகம் பேசிவந்தனர். மேலும் சிவபெருமானையும் மதியாமல் அவமரியாதையாகவும் பேசியும் செயலில் ஈடுபட்டும் வந்தனர். தங்களது தர்ம பத்தினிமார்களின் கற்புநிலையைக்கொண்டு மிகவும் கர்வம் கொண்டிருந்தனர். ஒருவன் எவ்வளவுதான் பலமிக்கவனாக இருந்தாலும் அவனுக்கு மிகுந்த பலத்தையும் புகழையும் தருவது அவனுடைய மனைவியின் மாண்பே ஆகும். தாருக வனத்து முனிவர்களின் கர்வத்தை அகற்றி அவர்களை நல்வழிக்குத் திருப்ப வேண்டுமென சிவபெருமான் திருவுளம் கொண்டார். எனவே சிவபெருமான் மிக அழகிய ஆண்மகனின் திருஉருவம் கொண்டு நிர்வாணமாகத் தாருகவனம் சென்றார். தாருகவனத்து முனிவர்கள் பர்ணக சாலை தோறும் சென்று வாசலில் நின்று பிச்சாந்தேகி எனக்கூறி, பிச்சாடனமூர்த்தியாக பிச்சை கேட்டார். பிச்சையிட வந்த முனிவர்களின் பத்தினிகள் பிச்சாடன மூர்த்தியின் அழகையும் பிரகாசத்தையும் கண்டு தம் கருத்தையிழந்து அவர் உருவுமேல் மோகம் கொண்டனர். பத்தினிமார்கள் அனைவரும் தம் கருத்தழிந்து சிவபெருமான் பின்னாலேயே தங்களையும் அறியாமல் சென்றனர். தாருகவனத்து முனிவர்கள் அனைவரும் தத்தம் மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டே அப்பெண்கள் பின்னாடியே பதறிக் கொண்டு ஓடினார்கள். சிவலீலை என்னவென்று கூறுவது?

முனிவர்களின் மனைவிமார்கள் சிவபெருமான் பின்னாடியே வர அவர் சிவசிவ எனக் கூறிக்கொண்டே பெரும்காட்டுப் பகுதிக்குச் சென்றார். நடுக்காட்டில் ஒரு குளத்தின் கரையிலிருந்த ஒரு பெரும் நாகப்பாம்பின் புற்றுக்குள் சென்று மறைந்து விட்டார். முனிவர் மனைவியர் யாவரும் அப்பாம்புப் புத்தினை அணுகி அதனையே சுற்றிச் சுற்றி வந்தனர். தாருகவனத்து முனிவர்கள் அவர்களை எவ்வளவோ வருந்தி வேண்டிக் கூப்பிட்டும் அவர்கள் வரவில்லை. சிவபெருமான் நுழைந்த பாம்புப்புற்றினுள்ளிருந்து மிகுந்த பிரகாசம் வெளியே வந்தது. யாவரும் உள்ளே எட்டிப்பார்க்கையில் சிவபெருமான் ஜோதிர்லிங்கமாகக் காட்சி தந்தார். அந்த ஜோதிர்லிங்கத்தின்மீது ஐந்து தலை நாகம் படமெடுத்து குடை போல நின்றது. இக்காட்சியைக் கண்ட அனைவரும் வந்தது சிவபெருமானே என உணர்ந்தனர். தங்கள் கர்வத்தை விட்டு சிவபெருமானைப் புகழ்ந்து அவரை வழிபட்டனர். அவ்விடத்தே பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்தான் இத்தலம் ஆகும். இவ்வாறு சிவபெருமான் பிட்சாடனராக சிவலீலை புரிந்து தாருகவனத்து முனிவர்களின் கர்வத்தைப் போக்கி நாத்திகவாதத்தையும் போக்கி நாகப்பாம்பின் புற்றுக்குள் நாகத்தின் குடையுடன் காட்சி தந்தமையினால் நாகநாதர் எனவும் தலத்திற்கு நாகநாதம் எனவும் பெயர் வந்தது. ஜோதி வடிவமுடன் காட்சி தந்தமையினால் ஜோதிர் லிங்கமாயிற்று. 
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. 
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

Jothir Lingam
[Image1]
மூலவர்:மகாகாளேஸ்வரர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:சங்கரி, ஹரசித்திதேவி
தல விருட்சம்:ஆலமரம்
தீர்த்தம்:சிப்ராநதி தீர்த்தம், சூரிய குண்டம், நித்திய புஷ்கரணி, கோடிதீர்த்தம்.
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:அவந்திகா
ஊர்:உஜ்ஜைனி
மாவட்டம்:உஜ்ஜயினி
மாநிலம்:மத்திய பிரதேசம்
பாடியவர்கள்:
-
 திருவிழா:
சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, கார்த்திகை மாதப் பவுர்ணமி, ஆடி - நாகு பஞ்சமி
 தல சிறப்பு:
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. அம்மனின் சக்திபீடங்களில் இது மகோத்பலா பீடம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் உஜ்ஜைனி- 456 001, மத்தியபிரதேசம்.
போன்:
+91 734 2550563.
 பொது தகவல்:
இத்தலத்தில் விநாயகர், ஓங்காரேசுவரர், தாரகேசுவரர், பார்வதி தேவி, சுப்ரமணியர், நந்தி ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். ஏழு மோட்ச நகரங்களில் உஜ்ஜைனியும் ஒன்று. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை என்பன அவை. சுதன்வா என்ற ஜைன அரசன்தான், அவந்திகை என்ற இந்த நகரத்துக்கு உஜ்ஜைனி என்று பெயரிட்டான். கார்த்திகை மாதப் பவுர்ணமி இங்கே சிறப்பாகப் கொண்டாடப்படுகிறது. அந்தச் சமயத்தில் கவி காளிதாசரின் நினைவு விழாவும் நடக்கிறது. இந்த நகரத்தின் அருகில், ரிணமுக் தேசுவரர், மங்களேசுவரர், பராகணபதி கோயில், கண்ணனின் குருவான ஸாந்தீபனி முனிவரின் ஆசிரமம், பர்த்ருஹரியின் குகை முதலியன காண வேண்டிய முக்கிய இடங்கள். சிப்ரா நதிக்கரை இயற்கை எழில் மிகுந்தது. ஜயஸிம்ஹன் நிறுவிய வான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. ஏரியின் அருகில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. அதில் ஒரு தளம் பூமி மட்டத்துக்குக் கீழே இருக்கிறது. ரயில் நிலையத்திலிருந்து கோயில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. போபாலிலிருந்தும் போகலாம்!
பிரார்த்தனை
அசுரகுணம் மறைய, கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள சிப்ரா நதியில் நீராடி வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு பூ, வில்வத்தால் அர்ச்சனை, அபிஷேகம் செய்கின்றனர்.
 தலபெருமை:
ஒரு தடவை பூஜித்த பொருள்களை நிர்மால்யம் என்பார்கள். நிர்மால்யத்தைக் களைந்து புதிததாக அலங்கரிப்பது மரபு. ஆனால், இந்த வழக்கத்தை இந்த ஜோதிர்லிங்கத்தைப் பொறுத்தவரை அநுஷ்டிப்பதில்லை. பிரசாதத்தையும், வில்வம் போன்ற தளிர்களையும் மீண்டும் உபயோகிப்பது வழக்கமாக இருக்கிறது. மகாகாளவனம் என்று இந்தத் தலத்தை ஸ்கந்தபுராணம் கூறுகிறது. சிப்ரா நதி, புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது என்று அக்கினி புராணம் குறிக்கிறது. இந்த நதியில் மூழ்கி மகாகாளரை வணங்கி, காளி தரிசனம் செய்தால், கல்வியும் அறிவும் பெருகும், அசுர குணம் மறையும் என்பது அனுபவ உண்மை.

உஜ்ஜயினியை உத்+ஜைன  = ஜைன சமயத்தை உச்ச நிலைக்கு கொண்டு வந்த நகரம் என்பது பொருள். மாமன்னர் விக்ரமாதித்தன் அரசாண்டு வெற்றியை தந்த மாநகர். தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் இதுவும் ஒரு புனித தலமாகும்.
உஜ்ஜயினி பல காலமாகப் பிரசித்தி பெற்ற தலம். பல மன்னர்கள் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த தலம். இங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. எனவே உஜ்ஜயினிக்கு வருடம் முழுவதும் யாத்திரை செல்லலாம். கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பெரிய நகரம் ஆனதால் தங்குவதற்கு வசதி, உணவு வசதியும் உள்ளன. உஜ்ஜயினி காலம் காலமாகப் பல சிறப்பம்சங்கள் கொண்ட நகரம். புராண காலம், சரித்திர காலம், இராமாயண, மகாபாரத இதிகாசங்கள் காலம் ஆகிய கால கட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த தலம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தலத்தில் கும்பமேளா விழா கொண்டாடப்படும் புனிதத் தலம். கிருஷ்ணர், பலராமர், சுதாமர் ஆகியோர் உஜ்ஜயினியில் தான் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றுள்ளார்கள். கிருஷ்ணர் இங்கே வானசாத்திரம் கற்றதாகவும் கூறுகின்றனர். இப்பிரதேசத்தில் முன்னொரு காலத்தில் அசுரர்களும், வேதாளங்களும் நிறைந்திருந்தமையால், பக்தர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் கயிலையை விட்டு இங்கே சதா எழுந்தருள வேண்டியது ஆகிவிட்டது. முன்காலத்தில் மாளவதேசத்தின் தலைநகராகவும், விக்கிர மாதித்திய மகாராஜாவின் தலை நகரமாகவும் விளங்கியது. இந்துக்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் ஆகிய மதத்தினரின் முக்கிய யாத்திரை தலமாகும். தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் இதுவும் ஒரு சிறந்த புனிதத் தலமாகும். அசோகச் சக்ரவர்த்தி உஜ்ஜயினி வர்த்தகர் மகளையே மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். மவுரியப் பேரரசின் கிளைத் தலைமைப் பீடம் இங்கே இருந்திருக்கிறது. அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜயினி பேசப்படுகிறது. பாணினி, பெரிபுளூசு, ஹியான்சான் போன்ற வெளிநாட்டுத் தூதர்கள் உஜ்ஜயினி வந்து இத்தலத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். பதஞ்சலி, காளிதாசன், திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கியப் படைப்பில் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள். திரிபுர அசுரர்களைச் சிவபெருமான் வெற்றி கொண்ட புனிதத்தலம் உஜ்ஜயினி ஆகும். மகாபாரத காலத்தில் அவந்தி இளவரசர்கள், கவுரவர்கள் பக்கம் நின்று மகாபாரதப்போரில் யுத்தம் புரிந்தனர் என்றும் கூறப்படுகிறது. உஜ்ஜயினியில் சித்திவடம் என்ற அதிசய ஆலமரம் ஒன்று உள்ளது. அது பல நூறு வருடங்களாகச் சிறிய அளவிலேயே இருந்து வருகிறது. அக்கினித் தீர்த்தமெனும் புனித சிப்ராநதி தீர்த்தம் நல்ல முறையில் வைத்துள்ளார்கள். இங்கே இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியதால், ராமர் காட் என்னும் குளியல் கட்டம் ஏற்பட்டு உள்ளது. இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர்.

உலகப் பிரசித்தி பெற்ற சிவத்தலம். தமிழ் இலக்கிய நூல் பெருங்கதை என்பதில் வரும் உதயணன் கதை நிகழ்ச்சிகள் நடந்த தலம் உஜ்ஜயினி என்கின்றனர். பட்டி, விக்கிரமாதித்தர் ஆகியோர் காளியிடம் வரம் பெற்று சாகசங்கள் பல புரிந்து ஆட்சி செய்த தலம். விக்கிரமாதித்த ராஜாவின் தெய்வீக சிம்மாசனம் இருந்த இடம் இது. இங்கு வான ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இது 1693ல் நிறுவப்பட்டது. இதனை நட்சத்திர மண்டபம் என்கின்றனர். இங்கு அதிசயிக்கத்தக்க கட்டிடங்கள் உள்ளன. இக்கட்டிடங்களின் நிழலைக் கொண்டு மணி, நிமிடம், திதி, நட்சத்திரம் இவற்றை அறிய முடியும். இங்கு மற்றும் ஓர் அதிசயம் என்னவென்றால் தமிழ் மொழியும், முருங்கைக்காயும் இன்னதென்று மக்கள் அறியாமலிருக்கின்றனர். சாலி வாகன சகாப்தம் என்ற ஒரு சகாப்தத்தையே உண்டாக்கிய திறமை மிக்க அரசர் இங்கு ஆட்சி செய்துள்ளார்.
  தல வரலாறு:
மகாகாளர் என்ற ஜோதிர்லிங்கத்தைப் பற்றிச் சிவபுராணத்தில் கூறியுள்ள கதை இது- அவந்திமாநகரில் விலாசன் என்ற அந்தணன் இருந்தான். சிறந்த சிவபக்தன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன், இந்த நகரைச் சூறையாடி, மக்களைத் துன்புறுத்தினான். குடிகள் விலாசனை அணுகி, தங்களைக் காக்கும்படி வேண்டினர். சிவலிங்கம் பிடித்து வைத்து அன்றாடம் பூசை செய்வது அந்தணர் வழக்கம். ஒரு நாள் அவர் அப்படிச் செய்யத் தொடங்கிய போது, அந்த அரக்கன் வந்து, பூஜைப் பொருள்களைத் தூக்கி எறிந்து, சிவலிங்கத்தையும் அழித்தான். அந்தக் கணத்தில் பெருத்த சப்தம் எழுந்தது. எல்லாரும் திடுக்கிட்டனர். அந்த லிங்கத்திலிருந்து வெடித்துப் பிளந்து கொண்டு மகாகாளர் தோன்றி, தூஷணை அழித்தார். அரக்கன் அழிந்த மகிழ்ச்சியில் மக்கள், மகாகாளரை அங்கேயே தங்கி, தங்களைக் காக்கும்படி வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மகாகாளர் லிங்க உருவில் ஆவிர்ப்பவித்தார். தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதையின் வீட்டில் விட்டு, அங்கே பிறந்திருந்த பெண்ணை வசுதேவர் தூக்கி வந்தார். அந்தப் பெண்ணைக் கம்ஸன் விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டப் போனான். ஆனால் அந்தக் குழந்தை காளி உருக்கொண்டு இங்கே தங்கி விட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. காளிதாசருக்கு அருள் புரிந்த காளி மாதா இவள்தான்.

மகாகாளி வரலாறு : உஜ்ஜயினியில் மகாகாளர் கோயில் இருப்பது போலவே, மகாகாளி கோயிலும் சிப்ர நதிக்கரையில் உள்ளது. இக்காளி கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. விக்கிரமாதித்திய மன்னனும், பட்டியும் இந்த மகா காளியிடம் வரம் பெற்றுத்தான், பல வருடங்கள் ஆட்சி புரிந்து பல சாகசங்கள் செய்ததாகக் கூறப்படுகின்றன. இந்த மகா காளிக்கு ஹரசித்திதேவி என்ற வேறு பெயரும் உண்டு. இப்பெயருக்கு ஒரு புராணக்கதை கூறுகின்றனர். ஒரு சமயம் கயிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியும் வெகு உல்லாசமாகக் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது சண்டன், பிரசண்டன் என்ற இரண்டு அசுரர்கள் அங்கே வந்தனர். அவர்களிருவரும் தவமிருந்து மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத வரம் பெற்றிருந்தனர். வரத்தின் பலத்தினால் ஆணவம் கொண்ட அவ்விரு அரக்கர்களும் தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களை அடிமை ஆக்கினர். தேவர், முனிவர், மக்கள் யாவரையும் துன்பப்படுத்தினர்.

கயிலாயம் வந்து அங்கும் அமைதியைக் குலைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல் புரிந்து வந்த நந்தி தேவரை அடித்து இம்சை செய்தனர். சிவபெருமானும் பார்வதி தேவியும் ஆடும் சொக்கட்டான் ஆட்டத்திற்கு இடையூறு செய்தனர். சிவபெருமானைப் போருக்கும் அழைத்தனர். சிவபெருமான் பார்வதி தேவியிடம், சண்டன் பிரசண்டன் பெற்ற வரம் பற்றிக் கூறினார். அவர்களை அழைக்கும் வல்லமை பார்வதி தேவிக்கே உள்ளது என்றும் கூறினார். எனவே அவ்விரு அசுரர்களையும் அழித்து விடக் கூறினார். பார்வதி தேவியும் தன்பதியான அரனுடைய சித்தம் அறிந்து, தமது உல்லாசத்திற்குக் கேடு உண்டாக்கிய அசுரர்கள் மீது கடுங்கோபம் கொண்டு மகாகாளியாக மாறினார். நவசக்தி தேவிமார்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு, மிகுந்த கோபத்துடன் அசுரர்களுடன் போருக்குச் சென்றார். மகாகாளியின் உருவத்தைக் கண்ட அசுரர்கள் இருவரும் பயந்து போய், உஜ்ஜயினி காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர். மகாகாளி அவர்களை விடாமல் பின்தொடர்ந்து வந்து போரிட்டார்.

அரக்கரிருவரும் எருமைக்கடா உருவம் எடுத்து தேவியைப் பலமாகத் தாக்கினர். நவசக்தியுடன் தேவி சிங்கவாகனம் ஏறிவந்து, அவ்வரக்கர்களை வதம் செய்தார். அரன் என்னும் சிவபெருமான் சித்தத்தைப் பூர்த்தி செய்தமையால், மகாகாளிக்கு அரசித்தி தேவி எனப்பெயர் வழங்கலாயிற்று. அரசித்தி தேவியாக மகாகாளி தோன்றிய இடத்தில் ஒரு கோயில் கட்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர். மகா காளிக்கு எருமைக்கடா பலியிடும் வழக்கமும் ஏற்பட்டது. சிப்ரா நதிக்கரையில் அரசித்திதேவி கோயில் இன்றும் உள்ளது. விக்ரமாதித்தியன் குலதெய்வம் இந்தத் தேவியே ஆகும். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவராகவும் வரப்பிரசாதியாகவும் இன்றும் விளங்கி வருகின்றார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. அம்மனின் சக்திபீடங்களில் இது மகோத்பலா பீடம் ஆகும். 
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




அருள்மிகு ஓம்காரேஷ்வரர் திருக்கோயில்

Jothir Lingam
[Image1]
மூலவர்:ஓம்காரேஷ்வரர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:அமலேஸ்வரி
தல விருட்சம்:-
தீர்த்தம்:கோடி தீர்த்தம், கபில தீர்த்தம், நர்மதை நதி
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:மேற்கு நிமாட்
மாவட்டம்:மாந்தாதா
மாநிலம்:மத்திய பிரதேசம்
பாடியவர்கள்:
-
 திருவிழா:
விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, மூன்று கால பூஜை.
 தல சிறப்பு:
12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. கர்ப்பகிரகம் ஓங்கார வடிவில் அமைந்து அதன் நடுவில் சிவலிங்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் மாந்தாதா, மேற்கு நிமாட் மத்தியபிரதேசம்.
போன்:
+91
 பொது தகவல்:
இங்கு மகாகாளர், அமலேசுவரர், பஞ்சமுக கணபதி, சித்தீசுவரர், லட்சுமி நாராயணர் போன்ற பரிவார மூர்த்திகள் உள்ளனர். மழைக்காலம், அதிக வெயில்காலம் தவிர்த்து இத்தலத்திற்கு ஆண்டு முழுதும் யாத்திரை மேற்கொள்ளலாம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் யாத்திரைக்கு உகந்த காலம்.
பிரார்த்தனை
இங்குள்ள ஓங்காரேஸ்வரரை வழிபட்டால் செல்வம் பெருகும், மோட்சம் கிடைக்கும், பிறவிப் பிணி நீங்கும், நர்மதையில் நீராடினால் பாவம் தீர்ந்து புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு வில்வ இலை மற்றும் பூவால் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்கின்றனர்.
 தலபெருமை:
இங்கு ஜோதிர்லிங்கம் தோன்றக் காரணமான விந்திய மலை, முதலில் ஓம்கார வடிவில் மண்ணால் பீடம் அமைத்து, அதில் சிவலிங்கம் வைத்துப் பூஜித்ததால் இத்தலம் ஓங்காரம் எனப்பெயர் பெற்றது என்பர். மற்றும் ஒரு காரணம் கூறுகின்றனர். நர்மதை நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று கூடி, ஓங்காரத்தின் வரிவடிவம் போலக் காட்சி தருவதால், இத்தலம் ஓங்காரம் எனப்பெயர் பெற்றது எனவும் கூறுகின்றனர். கோயில் மூன்று அடுக்குகளாக உள்ளது. கீழ் தட்டில் ஓங்காரீசுவரரும், நடுத்தட்டில் மகாகாளரும், மூன்றாம் தட்டில் சித்தீசுவரரும் உள்ளனர். மூலஸ்தானத்தில் உள்ள ஓங்காரீசுவரர் மீது, கீழே இருபனைமர ஆழத்திலுள்ள நர்மதை ஆற்று நீர் மேலே வந்து தானே அபிஷேகம் ஆகிறது.

சிவபெருமானை மாந்தாதா வழிபட்ட தலம் ஓம்காரேஷ்வர்! யாக வேள்விகளுடன் முக்கடவுள்களையும் மகிழ்வித்த மாந்தாதா பதிலுக்குப் பெற்றது சிவபெருமானின் இந்த ஓம்கார லிங்கத்துடன் தானும் வாசம் செய்யவேண்டும் என்பது மட்டுமே! ஓம்கார மாந்தாதா என்றே இந்தச் சிறு குன்று இன்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தக் குன்றை சிரத்தையுடன் பக்தர்கள் வலம் வருகின்றனர். பரிக்கிரமா என்ற கிரிப்பிரதட்சண வழியில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பல அமைந்துள்ளன. ஓம்காரேஷ்வர் நர்மதையின் போக்கில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் அதிக புனிதமும் முக்கியத்துவம் பெற்றது ஓம்காரேஷ்வரர் தீர்த்தம். முப்பத்து முக்கோடி தேவர்கள் எப்போதும் உறைந்திருக்கும் தலம் இது என புராணங்கள் குறிப்பிடுகின்றன. நூற்றியெட்டு சிவலிங்கங்களைப் பெற்ற புண்ணியத் தலம். சிவபுரி, விஷ்ணுபுரி என இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது ஓம்காரேஷ்வர். சிவபுரியில் ஓம்காரேஷ்வர் எனவும், விஷ்ணுபுரியில் அமரேஸ்வர் (அல்லது மமல்லேஷ்வர்) எனவும் இறைவர் எழுந்தருளியுள்ளார். ஓம்காரேஷ்வர், மாந்தாதா என்ற திருநாமத்தாலேயே பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறார். நர்மதையும் காவேரி எனப்படும் அதன் துணை நதியும் சங்கமமாகும் இடம் ஓம்காரேஷ்வர். இரண்டு நதிகளும் அவற்றின் போக்கில் ஓம்காரா மாந்தாதா என்ற குன்றுள்ள தீவை ஏற்படுத்தி உள்ளன. குன்றும் இரு பாகங்களாகப் பிரிந்திருப்பதால் மேற்புறத்திலிருந்து நோக்கும்போது இத்தீவு ஓம் என்ற எழுத்தைப் பிரதிபலிக்கிறது. விந்திய மலை தன் வளர்ச்சிக்காக ஓம்காரேஷ்வரை வேண்டியது. தேவர்கள் பின்னர் வேண்டியதற்கு இணங்க இறைவர் ஓம்காரேஷ்வர், அமரேஸ்வர் இரண்டு லிங்கங்களாகப் பிரிகிறார்.

ஒரு முறை நாரதமுனி விந்திய மலைப் பகுதியில் சஞ்சரித்து விந்தியராஜனைக் காண்கின்றார். அவரைத் தொழுது வணங்கிய கிரிராஜன் சகல வளங்களுடன் மேன்மையையும் கீர்த்தியும் உடைய விந்திய பர்வதம் தாங்கள் வருகையால் மேலும் மேன்மை பெறுகிறது என கர்வமும் பெருமையும் பொங்க உரைக்கிறான். கிரிராஜனுக்கு ஆசி வழங்கிய நாரதர் பதிலுக்கு ஒரு பெருமூச்சை மட்டும் எழுப்புகிறார். துணுக்குற்ற விந்தியராஜன், என்ன நாரதரே... பெருமூச்சு விடுகிறீர்கள்? விந்திய பர்வதத்துக்கு என்ன குறை? என்று வினவுகிறான். அப்போது மேரு மலையின் சிகரங்கள் எப்படி விண்ணைத் தொடும் அளவு உயர்ந்திருக்கின்றன என்பதை நாரதர் விந்தியராஜனுக்கு விளக்குகிறார். எனவே, மேரு மலையின் உச்சத்தை விஞ்ச எண்ணிய விந்தியராஜன் ஓம்காரேஷ்வர் தலத்துக்கு வந்து மண் வடிவில் சிவலிங்கத்தை எழுப்பி கடுந்தவம் புரியலானான். ஆறு மாத காலம் இம்மியளவும் அசையாமல் கடும் தவம் இருந்த விந்தியராஜனின் பக்தியை மெச்சிய ஈஸ்வரன், கிரிராஜனுக்கு வேண்டிய வரத்தையும் அளிக்கிறார் (பின்னர் விந்திய மலையின் வளர்ச்சியை நிறுத்த அகஸ்தியர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்துவிட்டுத் தெற்கிலேயே தங்கிவிடுகிறார்). விந்தியராஜனுக்கு வரமளிக்கத் தோன்றிய இறைவனை தேவர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் ஓம்காரேஷ்வரிலேயே நிலையாகத் தங்கும்படி இறைஞ்சுகின்றனர். அதுவரை பிரவண சொரூபமாய் ஒன்றாக இருந்த ஓம்கார் லிங்கம் இரண்டாகப் பிரிகிறது. ஒரு பாதி சதாசிவமாக ஓம்காரேஷ்வர் ஆகிறது. மறுபாதி மண் லிங்கத்துடன் ஜோதியாய்க் கலந்து அமரேஸ்வர் அல்லது மமலேஷ்வர் ஆகிறது. இவ்விரண்டும் ஓம்காரேஷ்வர் தீர்த்தத்தின் இருகரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. காவேரி என்கின்ற சிறிய நதி ஓம்காரேஷ்வர் அருகில் நர்மதையுடன் இணைகிறது. விசித்திரம் என்னவென்றால் அது நர்மதையை இரண்டு முறை சந்திக்கிறது. முதல் முறை அது நர்மதை நதியுடன் கலக்காமல் கடந்து செல்வதாக நம்பப்படுகிறது! மாந்தாதா குன்றை வலம் வந்த பின் காவேரி நர்மதையுடன் இணைகிறது எனக் கருதுவோரும் உண்டு! பின்னர் சுமார் இரண்டரை கி.மீ.க்கு அப்பால் நர்மதையை மீண்டும் சந்தித்து இணைகிறது. இதை காவேரி-நர்மதையின் இரண்டாவது சங்கமம் என்று குறிப்பிடுவோரும் உண்டு. இரண்டு சங்கமங்களுக்கு நடுவே உள்ளது மாந்தாதா குன்று. ஓம் என்ற எழுத்தை ஒத்த வடிவாதலால் இவ்விடம் ஓம்காரேஷ்வர் எனப் பெயர் பெற்றது. ஒரு தீவாக உள்ள இந்த புண்ணிய இடத்தில் ஓம்காரேஷ்வர் குடிகொண்டிருக்கிறார்.

நர்மதை-காவேரி சங்கம இடத்தில் குபேர் பண்டாரி தீர்த்தம் உள்ளது. குபேரன் இங்கு முதலில் வாரம் ஒருமுறை மட்டுமே ஆகாரம் ஏற்று பின்னர் மாதம் ஒரு முறை மட்டுமே கனிகளைப் புசித்து நூறு வருடங்கள் தவமிருந்தான். யக்ஷர்களுக்கு ராஜாவாக இருக்க பகவான் சங்கரரிடமிருந்து வரம் பெற்றான். இந்த சங்கம இடம், சுவர்க்கத்தின் வாசல் என்று சொல்லப்படுகிறது. இங்கு ஸ்நானம் முடித்து எள், நீருடன் பித்ருக்களுக்கு கர்மா செய்வது மிகவும் உகந்தது. ஓம்காரேஷ்வர் சன்னதியை அடையும் முன் முதன்முதலில் நாம் தரிசிப்பது பஞ்சமுகி கணேஷ் என்கிற ஐந்துமுக விநாயகர். மாந்தாதா அரசனின் பிதா யுவனாஸ்வா யாகம் நடத்திய இடம் இது. கணபதி பூஜையின்போது பிள்ளையார் அவனுக்கு ஐந்து முகங்களுடன் காட்சி அளித்தார். வேதங்களின் மாதா காயத்ரியும் ஐந்து திருமுகங்களுடன் காட்சி தருகிறாள். ஓம்காரேஷ்வர் சன்னதிமுன் சுக்தேவ்ஜி பிரதிமை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் இரவும் சிவபெருமான் பார்வதியுடன் இங்கு விளையாட வருவதாக ஐதீகம். பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் அந்த நம்பிக்கையை சோதனை செய்ய ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஒரு ஆங்கிலேய அதிகாரி முயன்றிருக்கிறார். இரவு சுக்தேவ் சிலையின் பின்புறம் ஒளிந்தபடி இருந்த அவரின் உயிரற்ற உடல் மட்டுமே மறுநாள் கிடைத்ததாம். இத்தலத்தின் ஒரு மூலையில் மாந்தாதா தவமிருந்ததாகச் சொல்லப்படுகிறது. முன்னேறிச் சென்றால் பிரணவ சொரூபமாய் ஓம்காரேஷ்வர் தரிசனம் கிடைக்கிறது. அவ்வளவு உயரத்திலும் லிங்கத்தின் கீழ் எப்போதும் தென்படும் நர்மதையின் நீர் வியப்பையும் புல்லரிப்பயும் தருகிறது ! லிங்கத்தின் மேற்புறம் தேவி பார்வதியின் பிரதிமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஐந்து தளங்களாக உள்ள இந்தக் கோயிலில் மற்ற தளங்களில் முறையே மஹாகாளேஷ்வர், சித்தநாத், கேதாரேஷ்வர், குப்தேஷ்வர் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.

சன்னதியின் பிரதட்சண மார்க்கத்தில் பகவான் துவாரகாதீரா சிலையும் காணப்படுகிறது. சுமார் எட்டடி உயரமுள்ள இந்தச் சிலை கறும் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. முகவாய் அருகே வைக்கப்பட்டுள்ள வைரக்கல் பார்வையைக் கவருகிறது. சிவபெருமானின் ஏனைய அவதார வடிவங்களான ராமேஷ்வர், ஜுவாலேஷ்வர், அந்தகேஷ்வர், நவக்கிரஹணேஷ்வர், ஜூமகேஷ்வர் என அனைத்துக் கடவுள்களும் ஆலயத்தை அலங்கரிக்கின்றனர். சந்தோஷி மாதா, நர்மதை ஆகிய தேவிகளின் கோயில்களும் உட்புறம் அமைக்கப்பட்டிருக்கின்றன. தென்கரையில் உள்ள மமலேஷ்வரைத் தரிசனம் செய்யாமல் ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கத்தின் தரிசனம் பூர்த்தியாவதில்லை. மமலேஷ்வர் சன்னதியில் தினந்தோறும் சுமார் ஒன்றேகால் லட்சம் மண் லிங்கங்கள் பிடிக்கப்பட்டு லிங்கார்ச்சனை செய்யப்படுகிறது. நர்மதாஷ்டகம் உதயமான இடமே இதுதான். நர்மதையின் நீர்மட்டத்திலிருந்து சுமார் நூற்றைம்பது அடி உயரத்தில் காளிகா கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோயிலுக்கு அருகே ஒரு குகையும் உள்ளது. அந்தக் குகையில்தான் குரு கோவிந்த பாதாச்சாரியர் அரிய தவத்தை மேற்கொண்டார். அந்த மேன்மை வாய்ந்த குகையில்தான் ஆதி சங்கராச்சார்யரும் தனது குருவிடமிருந்து ராஜ யோகத்துக்கான சிட்சை பெற்றதாகத் தெரிகிறது. இரண்டரை ஆண்டு காலம் தன் குருவுடன் இந்தக் குகையில் தங்கி ஆதி சங்கராச்சார்யர் ஞானம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு நாள் குரு கோவிந்த பாதாச்சார்யர், குகையில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அது மழைக்காலம்...திடீரென மழை அசுர வேகத்தில் பெருகி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது. நீர்மட்டம் உயர்ந்து குகையின் அருகிலும் வரத் துவங்கியது. நதியின் பிரவாக ஆற்றலை உணர்ந்த சங்கரர் குருவின் நிஷ்டையைக் கலைக்க மனமில்லாமல் ஒரு கமண்டலத்தை குகை வாயிலில் வைத்து நர்மதையைத் துதிக்கலானார். அந்தத் துதி குகையின் அனைத்துப் புறங்களிலிருந்தும் எதிரொலிக்கத் தொடங்கியது. நர்மதையின் பிரவாகம் குகையில் நுழையாமல் கமண்டலத்தில் அடைக்கலம் புகுந்தது. சங்கரர் அங்கு எழுப்பிய துதியே நர்மதாஷ்டகம் என்று வழங்கப்படுகிறது. ஓம்காரேஷ்வர் கோயிலிலிருந்து கிழக்குப் புறம் சுமார் நான்கு கி.மீ. தொலைவில் கோட்கேடா என்ற இடத்தில் நர்மதைக் கரையில் ஸாத் மாத்ரா என்றழைக்கப்படும் சக்தி பீடம் அமைந்துள்ளது. ஸப்த மாத்ருகா என்று முதலில் வழங்கப்பட்ட தலம் இது. இந்த புனித தீர்த்த தலத்தில் ஏழு தேவிகளின் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை முறையே பிராஹ்மி, மஹேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசி(ன்)ஹி, ஏந்திரி (ஏந்திரி தேவியை இந்திராசனி அல்லது இஜாசனி என்று அழைப்பதும் உண்டு) ஆகியன. நர்மதையைச் சுற்றி வாழும் குடும்பங்கள் ஒவ்வொரு தேவியையும் குடும்ப வழக்கத்துக்கேற்ப குலதேவியாகக் கருதுகிறார்கள்.
  தல வரலாறு:
இஷ்வாகு வம்சத்து அரசன் யுவனாஸ்வா. யுவனாஸ்வா அரசனுக்கு நூறு மனைவிகள். கவலையுற்ற அரசன் நீண்ட யோசனைக்குப் பின் வனம் சென்று முனிவர்களை தரிசித்து அவர்களுடன் தெய்வீக காரியங்களில் ஈடுபட முடிவு செய்தான். அதிக ரிஷி முனிவர்கள் நிறைந்த யாகசாலைக்கு ஒரு முறை அவன் செல்ல நேர்ந்தது. வாடிப் போயிருந்த மன்னனின் முகம் அந்த தவ முனிவர்களுக்கு அவனது மனநிலையை எடுத்துக் காட்டியது. தன் மனதை அரிக்கும் கவலையை முனிவர்களிடம் பகிர்ந்துகொண்டான் அரசன். அரசனைத் தேற்றிய முனிவர்கள், இந்திர தெய்வதா என்ற யாகத்தை நடத்தி முடித்தனர். அந்த யாகத்தின் பிரசாதமாக மந்திரங்களின் சக்தி ஏற்றப்பட்ட நீர் அரசனுக்கு முனிவர்களால் வழங்கப்பட்டது. அரசனின் மனைவிகள் சக்தி நிறைந்த அந்த நீரைப் பருகினால் கர்ப்பமாவது உறுதி என்றும் முனிவர்கள் உரைக்கின்றனர்.

யாகம் முடிந்த வேளையிலேயே மன்னனது மனக் கவலை ஓரளவு தீர்ந்தது. அன்றிரவு நிம்மதியாக உறங்கத் தொடங்குகிறான். இடையில் நா வறட்சி ஏற்படுகிறது. எழுந்தவனுக்கு முனி ஸ்ரேஷ்டர்களுக்கு இடையூறு தர வேண்டாம் என்ற நல்லெண்ணம் தோன்றுகிறது. யாகம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த மண் பாண்டத்திலிருந்த நீரைப் பருகுகிறான். அதிகாலையில் எழுந்த முனிவர்கள் மண்பாண்டத்தில் அந்த சக்தி நீர் இல்லாதது கண்டு திகைப்புறுகின்றனர். ஒவ்வொருவரையும் விசாரணை செய்கின்றனர். அரசன் யுவனாஸ்வா நள்ளிரவில் தான் அதைப் பருகியதைக் குற்ற உணர்வுடன் அவர்களுக்குத் தெரிவிக்கிறான். விதியை மாற்ற இயலாது என்று சொல்லி முனிவர்களும் அரசனை வழியனுப்பி வைக்கின்றனர். நாளடைவில் அரசன் கர்ப்பமுறுகிறான். மந்திரிகள் தந்த அறிவுரைக்கேற்ப சிசு பிறந்ததும் காட்டில் விடப்படுகிறது. வனத்தில் தேவர்கள் அந்த குழந்தையைப் பராமரிக்கின்றனர். இந்திரனின் விரல் மூலமே அந்தச் சிசு அமிர்தம் பருகி வளர்ந்ததாக ஸ்கந்த புராணம், தேவி பாகவதம் ஆகியவற்றில் சொல்லப்படுகிறது. மாம் தாதா என்ற சொல்லுக்கு என்னிடமிருந்து (என்னைப்) பருகும் என்று இந்திரனே கூறியதாகப் பொருள். எனவே, அந்த சிசு மாந்தாதா என்ற பெயரைப் பெறுகிறது. பிறந்த குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் இங்கு முளைத்ததாக ஒரு நம்பிக்கை! யுவனாஸ்வா உயிர் துறந்ததும் பெரும் பராக்கிரமசாலியான மாந்தாதா முடிசூடப்படுகிறான். சீலமும் குடிமக்களின் நல்வாழ்வுமே அவனது குறிக்கோளாக இருந்தன. ஒரு முறை நாட்டில் மழையின்றி வறட்சி ஏற்பட்டிருந்தது. பண்டிதர்கள் ஏகாதசி விரதத்தின் பலனை அரசனான மாந்தாதாவுக்குத் தெரிவிக்கின்றனர். அதுவும் அமாவாசைக்குப் பின் வரும் பாத்ரபாதா மாதத்தின் (பத்மனாபா) ஏகாதசியில் தொடங்கினால் மழை பெய்வதில் துவங்கி, நாட்டில் வேறு என்னென்ன நற்பயன்கள் விளையும் என்பதையும் அவர்கள் அரசனுக்கு எடுத்துரைக்கின்றனர். தானே ஒரு எடுத்துக்காட்டாக நின்று ஏகாதசி விரதத்தைத் தொடங்குகிறான் மாந்தாதா. நாட்டின் வறட்சியும் மறைகிறது. பூவுலகையே ஒருகுடை கீழ் தர்ம சீலத்துடன் ஆண்ட மாந்தாதாவின் கீர்த்தி புராணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

யாவத்ஸூர்ய உதேதிஸ்ம யாவச்சப்ரதிஷ்டதி !
ஸர்வ தத்யௌவநாஷ்வஸ்யஹ மாந்தாதுஹ ÷க்ஷத்ர முச்யதே !!
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. கர்ப்பகிரகம் ஓங்கார வடிவில் அமைந்து அதன் நடுவில் சிவலிங்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு. 
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்

Jothir Lingam
[Image1]
மூலவர்:வைத்தியநாதர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:தையல்நாயகி
தல விருட்சம்:-
தீர்த்தம்:பரளி தீர்த்தம், சூரிய தீர்த்தம், கங்கா தீர்த்தம்.
ஆகமம்/பூஜை:-
பழமை:2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:பரளி
மாவட்டம்:பீட்
மாநிலம்:மகாராஷ்டிரா
பாடியவர்கள்:
-
 திருவிழா:
சிவராத்திரி, நவராத்திரி, ஹோலிப் பண்டிகை, தீபாவளி, கார்த்திகை முதலிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
 தல சிறப்பு:
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், பரளி, பீட் மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம்.
போன்:
+91
 பொது தகவல்:
விநாயகர், கார்த்திகேயர், வீரபாகு, நந்தி, ஐயப்பன். திருமால், காளி ஆகிய பரிவாரமூர்த்திகள் உள்ளனர்.
மற்றொரு கோயில்: பீகாரில் பர்லி என்ற ஊரிலும் ஒரு சிவன் கோயில் உள்ளது. இதுவே வைத்தியநாதம் என்கிறார்கள் சிலர். ராவணன் சிவபெருமானை வேண்டி ஒரு லிங்கத்தை பெற்று இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் அதை தூக்கிச்செல்லமுடியாமல் ஒரு இடத்தில் வைத்துவிட்டான். அங்கேயே தங்கி சில நாட்கள்வழிபாடு செய்தான். அதுவும் நோய் தீர்க்கும் கோயில் என்பதால், வைத்தியநாதம் என்ற பெயர்பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. பாட்னாவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது.
பிரார்த்தனை
வைத்தியநாதம், வைத்தியநாதர் தரிசனம் செய்வதால் ஜோதிர்லிங்கம் தரிசனம் செய்த பலன் கிடைக்கும். மேலும் இங்கே மருந்தையே மலைபோல் குவித்து, அக்குன்றின் மீது அம்மையும், வைத்திய நாதரும் ஜோதிர்லிங்கமாக அமர்ந்து இருப்பதால், உயிர்களின் தீராத உடற்பிணியையும், தீராத சகலநோய்களையும் தீர்த்து வைப்பார்கள். ஓம் நமசிவாய என்ற மந்திரம் உடற்பிணியை மட்டுமல்ல பிறவிப்பிணியையும் போக்கி மோட்சத்தையும் கொடுக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். எனவே நமக்கு நோயற்ற நல்வாழ்வை இறைவன் அருளுவார். அன்னை பசியற்ற வாழ்வை வழங்குவார். முருகன் வெற்றியை நல்குவார். கணேசர் சகல நன்மையும் அருளுவார்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம், அர்ச்சனை செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
 தலபெருமை:
பரளி வைத்திய நாதம் என்ற தலம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஐந்து ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. நம் நாட்டில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இத்தலத்தில் சிவபெருமான் மருந்தீசர் என மருந்து மலைக் குன்றின் மீது சிவலிங்கமாக அமர்ந்து உள்ளார். அம்மையும், அப்பனும் மருந்துகளுடன் அமர்ந்து உலக உயிர்களை ரட்சிக்கின்றனர். மக்களின் தீராத வினைகளைத் தீர்த்து வைக்கின்றனர். கோயில் குன்றின்மீது அழகாக கோட்டை போல் காணப்படுகிறது. கோயில் மிகப் பழமை வாய்ந்தது எனினும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வைத்திய நாதம் கோயில் ஒரு சிறு குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கோயிலின் வடக்குப்பக்கமும் கிழக்குப் பக்கத்திலும் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. கோயில் கோபுரம் அறைக்கோள வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றிலும் கோட்டை யாகக் கட்டியுள்ளார்கள். கோபுரமும், விளக்குத்தூண்களும் அழகாக உள்ளன. விளக்குத்தூண் மரத்தில் இலைகள் உள்ளதுபோலக் கற்களால் கட்டியுள்ளனர். கோபுரத்தின் மீது தங்கக்கலசம் உள்ளது. கோயில் இரண்டு பிராகாரங்களாக அமைக்கப்பட்டுள்ளது. வைத்திய நாதர் அழகிய சுமாரான லிங்கவடிவில் காட்சி தருகிறார். கர்ப்பகிரகத்தின் உள்ளே நாம் சென்று சிவலிங்கத்தை தொட்டு அபிஷேகம் ஆராதனை முதலிய வழிபாடுகளைச் செய்யலாம். வைத்திய நாதர் தவிர வேறு பரிவாரத் தெய்வங்களும் உள்ளன. நமக்கு அவர்கள் மொழி புரியாததால் அதிகமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அங்குள்ள மக்கள் மராத்திமட்டும் பேசுகின்றனர். இந்தியும் ஆங்கிலமும் கூடத்தெரியாது போல இருக்கிறது. தமிழில் நாம்பேசும்போது நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றனர். கர்ப்பகிரகத்தின் முன்னுள்ள விசாலமான அந்த மண்டபத்தில் பல தூண்கள் சிற்ப வேலைப்பாடுடன் காணப்படுகின்றன. பளிங்குத் தரை போடப்பட்டுள்ளது. தரையின் நடுவே ஆமை வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பூசாரிகள் நன்கு ஒத்துழைத்து சாமி தரிசனமும், அபிஷேகம் செய்யவும் உதவுகின்றனர். அவர்கள் மந்திரம் சொல்ல நாமும் அவற்றைக் கூறி சிவபெருமானை வழிபட வைக்கின்றனர். சுற்றுப்பிரகாரங்களில் வேறுபல தெய்வங்கள் உள்ளன. ஓரிடத்தில் அனுமன் சன்னதியும், விநாயகர் சன்னதியும் அடையாளம் கண்டுவழிபட முடிந்தது. வடக்குப்பக்கம் பல படிகளில் கீழே இறங்கினால் கடைவீதி காணப்படுகிறது. குன்றும் கோயிலும் அமைதியான இயற்கை எழில்மிக்க சூழலில் அமைந்துள்ளது.
வைத்திய நாதத்தில் முதலில் கோயில் அமைந்துள்ள குன்றினையும், கோயிலையும், கிழக்கேயிருந்தும் வடக்கேயிருந்தும் தரிசிக்க வேண்டும். கோயில் கோட்டைபோல் அமைந்துள்ளதாலும், இரண்டு பிராகாரங்கள் உள்ளதாலும் அவற்றில் பல மூர்த்திகள் உள்ளதையும் தரிசிக்க வேண்டும். கோயிலைச் சுற்றி குன்றின் மீது சில சிறுசிறு கோயில்களும் உள்ளன. கோயிலில் சிற்பங்களும் சித்திரங்களும் உள்ளன. அவற்றைக் காண வேண்டும். மூலவர் வைத்திய நாதரையும், அம்பாளையும் தரிசிக்க வேண்டும். இத்தலத்தில் விளக்குக்கம்பம் மரத்தில் கிளைகிளையாக அடுக்காகக் காணப்படுவது போல் அமைத்துள்ளார்கள். நமது தென்னாட்டுப்பக்கம் கோயில் முன்பு சிறு சதுரமான மேடை, அதன் நடுவே ஒரு கல்தூண் வைத்து அதன் உச்சியில் சட்டி வைப்பதற்கு ஒரு நிலை அமைத்து அதில் ஒரு புதிய சிறுபானையில் எண்ணெய் திரிவிட்டு விளக்கு ஏற்றுவார்கள். அதுபோன்று இங்கே இல்லை. பலமூர்த்திகள் சுற்றிலும் உள்ளன. ஓரிடத்தில் அனுமன், விநாயகர் உள்ளனர். கோயில்முன் மண்டபத்தில் தரையில் ஆமை வடிவம், நந்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.
  தல வரலாறு:
முன்னொரு யுகத்தில் வீரமகேந்திரபுரி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சூரபத்மன் என்ற அசுரன் அரசாண்டு வந்தான். அவன் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் செய்து 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகமாக அரசாள வரம் பெற்றான். அதோடு சாகாவரமும் பெற்றான். அவனது தம்பிகள் தாராசுரன், சிங்கமுகாசுரன் ஆகியோரும் சிவபெருமானிடம் பல வரங்களும் பெற்றிருந்தனர். சூரபத்மன் தேவலோகத்தையும் வென்று இந்திரன் மகன் ஜெயந்தன் முதலான தேவர்களையும் சிறைப்பிடித்து வந்தான். தேவர்களையும், அவர்களுக்கு உதவும் முனிவர் மற்றும் ரிஷிகளையும், மனிதர்கள் பலரையும் சிறையிலடைத்து கொடுமைகள் பல செய்து வந்தான். சிறைப்படாத தேவர்களும் முனிவர்களும் பிரம்மாவையும், திருமாலையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சூரபத்மனை வதம் செய்து எல்லா அண்டங்களையும் காக்க வேண்டும் என வேண்டினர். சிவபெருமான் சூரபத்மனை அழிக்கத் திருவுளம் கொண்டு முருகப்பெருமானை தம் நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாக்கினார். முருகன் வளர்ந்து பெரியவராகி தேவர்களைக் காக்க தேவசேனாதிபதியாகச் சென்று சூரபத்மனுடன் போர் செய்து தேவர்களை மீட்டு வந்தார். இந்தக் கடுமையான தேவாசுரப் போரின் போது இருபக்கங்களிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் படுகாயம் அடைந்தனர். போரில் காயம்பட்டுத் துன்பம் அடைந்தவர்களைக் காப்பாற்ற சிவபெருமான் வைத்தியராக, பார்வதி தேவியுடன் வந்து வீரர்களுக்கு வைத்தியம் செய்தார். தேவையான மருந்துகளை ஒரு மலை போல் குவித்து, அதன் மீது அமர்ந்து அம்மையும் அப்பனும் அடிபட்ட வீரர்களுக்கு உதவி செய்தனர்.
போரின்முடிவில் தேவர்களும், முனிவர்களும் விடுதலை பெற்றமைக்கு முருகப் பெருமானைப் பெரிதும் போற்றி வணங்கினர். இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் சிவபெருமானே என முருகப்பெருமானும், தேவர்களும் முனிவர்களும், மனிதர்களும் மருந்து மலை மேல் அமர்ந்திருந்த அம்மை அப்பனை தரிசித்து நன்றி கூறி வழிபட்டனர். யாவருக்கும் வேண்டிய வரம் தந்தார் சிவபெருமான். அப்போது தேவர்களும், முனிவர்களும், பக்தர்களும் அம்மை அப்பரை இங்கேயே இப்படியே என்றும் எழுந்தருளி உலகை ரட்சிக்க வேண்டும் என வரம் கேட்டார்கள். அதன்படியே அம்மையும் அப்பனும் ஜோதிவடிவமாக ஒரு சிவலிங்கத்தில் ஐக்கியமாகினர். இன்றும் அந்த மலைமீது இருந்து அம்மையப்பர் அருள்பாலித்து வருகின்றனர். இந்த சிவலிங்கமே இங்கே ஜோதிர்லிங்கமாக விளங்குகிறது. சிவபெருமான் வைத்தியராக வந்து வீரர்களுக்கு வைத்தியம் செய்தமையினால் வைத்திய நாதர் என்ற பெயர் பெற்றார். தலத்திற்கு வைத்திய நாதம் என்ற பெயரும் உண்டாகியது.
பரளி என்ற கிராமம் அருகே இருந்தமையினால் பரளி வைத்திய நாதம் எனப் பெயர் விளங்குகிறது. சுருக்கமாக பரளி என்றும் கூறுவர். பரளி வைத்திய நாதம் தவிர பீகாரில் ஒரு வைத்திய நாதம் கூறப்படுகிறது. பீகார் தலை நகரம் பாட்னாவிலிருந்து ஜஸித் என்னும் ஊர்வழியாக கிழக்கே சென்றால் 20. கி.மீ.ல் இத்தலம் உள்ளதாகக் கூறுகின்றனர். இராவணன் கைலாயம் சென்று சிவபெருமானை வேண்டி ஒரு லிங்கம் பெற்று இலங்கை போகும் போது இங்கேயே அந்த லிங்கத்தை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாம். அங்கே இராவணன் வழிபாடு செய்தான். கோயில் ஒரு மேட்டின் மீதுள்ளது. இங்கே கவுரி, திரிபுரசுந்தரி, காயத்திரி, விநாயகர், முருகன், காளி, பைரவர், ராமர் முதலியவர்கள் உள்ளனர். இக்கோயிலைச் சுற்றிலும் 25 கோயில்கள் உள்ளன. இங்கே சிவகங்கை என்னும் தீர்த்தக்குளம் இராவணனால் உண்டாக்கப்பட்டதும், சந்திரகூபம் என்ற தீர்த்தமும் உள்ளன. மேலும் கங்கை யமுனைத் தீர்த்தமும் கொண்டுவந்து வைத்திய நாதேசுவரருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மாசி மாதம் பிரம்மோற்சவம் இங்கே நடைபெறுகிறது. பங்குனி உத்திரமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோயில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், கதவுகள் காணப்படுகின்றன.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. 
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்

Jothir Lingam
[Image1]
மூலவர்:காசி விஸ்வநாதர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:விசாலாட்சி
தல விருட்சம்:-
தீர்த்தம்:கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.
ஆகமம்/பூஜை:-
பழமை:2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்.
ஊர்:காசி
மாவட்டம்:வாரணாசி
மாநிலம்:உத்திர பிரதேசம்
பாடியவர்கள்:
-
 திருவிழா:
தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி.
 தல சிறப்பு:
இந்தியாவில் 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி-221 001, வாரணாசி மாவட்டம்,- உத்தரப்பிரதேசம் மாநிலம்.
போன்:
+91 542-239 2629
 பொது தகவல்:
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள். காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.


இந்த கோயிலை முதன்முதலில் கட்டியது யார் எனக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோயிலின் பழங்கால வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோயில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப் பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோயில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். இதிலிருந்து காசி கோயில் ஒரு புண்ணி சத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின் சின்னம் என்பதும் நமக்கு புரிகிறது.


இங்கு அன்ன பூரணி, சத்திய நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். விசுவநாதர் கோயில் கர்ப்பகிருகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.


கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி. ஆதி விசுவநாதர் கோயிலிருந்த இடத்தில் மசூதி உள்ளது. அந்த நந்தியின் அருகேதான் ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்த கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்னபூரணி கோயிலும், விசாலாட்சி கோயிலும் தனியே சிறிது தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோயில் நமது தென்னாட்டுப் பாணியில் உள்ளது. இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.

பிரார்த்தனை
வியாச காசியில், வியாசர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம். காசிக் காவலர் பைரவர் கோயிலில், காசிக் கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால், நம்மைத் தீய சக்திகள் அண்டாது. கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விசுவநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது - என்று முனிவர்கள் பலர் கூறியுள்ளனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் தம் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
 தலபெருமை:
இங்கு விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது. விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தர வாகினி என்று அழைக்கின்றனர்.


தீர்த்தக் கட்டங்கள்: கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும்.இதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும். அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகிறார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும். பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.

மகாராஜா ரஞ்சித்சிங் கோயிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். காசியில் மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றுமே அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன்பிறகே சூட்டப்பட்டது. பொதுவாக வயதானவர்களே இந்த தலத்திற்கு போய்வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இளைஞர்களும் இங்கு சென்றுவரலாம். ஏனெனில் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒரு அறிவுத் திருத்தலம் ஆகும். கல்வியும் ஞானமும் தரும் புண்ணிய ஸ்தலம் இது. காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டிவிநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் என்னைப் போல் அரைகுறையாகத் தான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்வதைப் போல இந்த விநாயகரின் வடிவமைப்பு அமைந்துள்ளது. எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபடவேண்டும்.


பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது. காசி என்றால் மிகப் பிரகாசம் என்று பொருள். பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர். பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர். சிவபெருமான் விரும்பி மகாமயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர். கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில்சுமந்துகொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர். வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.


பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது. அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர். இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது. அதிக வெப்பகாலம், அதிக மழைக்காலம், தவிர ஆண்டு முழுதும் காசியாத்திரைக்கு ஏற்ற காலங்கள் ஆகும். முன்பெல்லாம் கால்நடையாகவோ, மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் யாத்திரை போவார்கள். ஆனால் தற்போது ரயில், பேருந்து, விமானம் மூலம் யாத்திரை செய்வதால் எப்பொழுது வேண்டுமானாலும் காசியாத்திரை மேற்கொள்ளலாம்.


நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும். நம் நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது, காசி - இராமேசுவரம் யாத்திரை மேற்கொள்ளும் சிறப்புமிக்க தலம் காசி ஆகும். பூலோகக் கைலாசம் என்று சைவர்கள் போற்றும் தலம். காசிக்கு நிகரான தலம் மூவுலகிலும் இல்லை என ஆன்மீகவாதிகள் கூறுவர். ஈசன் காக்கும் மகாமயானம் இங்கே உள்ளது. காசியில் இறப்போர் உடனே மோட்சம் அடைவார்கள். காசி என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். இங்கே இறக்கும் உயிர்களுக்குச் சிவபெருமான் காதில் ராமமந்திரம் ஓதி மோட்சம் அடைய வழி செய்கின்றார். காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும். நம் நாட்டிலுள்ள புனிதத்தலங்களில் தலை சிறந்த தலம் காசிப்பதியே ஆகும். லோகமாதா அன்னபூரணி காசிய ம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார். காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், காசியில் காவாசி அவினாசி என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர். தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.


கங்கையின் மகிமை உணர்ந்தவர்கள், சிவகங்கை, நூபுரகங்கை, கங்கைகொண்ட சோழபுரம் எனவும் தங்கள் ஊர்களுக்குப் பெயரிட்டு மகிழ்கின்றனர். மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும். அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி. மகாராஜா ரஞ்சித் சிங், காசி விசுவநாதர் ஆலய விமானத்தைப் பொன் தகடுகளால் வேய்ந்தார். இன்றும் கோபுரம் தங்கமாக ஒளிர்கிறது. கோயில் தூண்களில் சிற்பங்கள் உள்ளன. காசியில் மீட்டருக்கு ஒரு கோயில் எனப் பலகோயில்கள் உள்ளன. கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும். சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில். காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.

  தல வரலாறு:
இமயத்தில் சிவபெருமானை உதாசீனம் செய்துவிட்டுத் தக்கன் யாகம் செய்தார். தமது கணவனை அவமதித்த தங்கள் யாகத்தை தடுக்கச் சென்ற பார்வதி தேவியைத் தக்கன் அவமதித்து விட்டார். அதனால் பிராணத்தியாகம் செய்த பார்வதி தேவியின் உடலை, சிவபெருமான் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தார். இதனைப் பார்த்த திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலின் பாகங்களைத் துணித்தார். ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு பாகம் விழுந்தது. ஆவேசம் தணிந்த சிவபெருமான் மகாமயானமான காசிக்கு, மீதமுள்ள உடல் பாகத்தைக் கேதார நாத்திலிருந்து கொண்டு வந்தார். மகாமயானத்தில் பார்வதி தேவியின் உடலை அக்கினியில் இடமுனைந்தார். சிவபெருமான் பார்வதி தேவியின் காதில் தாரக மந்திரம் உபதேசம் செய்தார். அப்போது அவரது காதிலிருந்த காதணி எங்கேயோ விழுந்து விட்டதை அறிந்தார். அப்போது அங்கே திருமால் தமது சக்கரத்தால் ஒரு தீர்த்தக் கிணறு தோண்டி, அதனருகே அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தார். சிவன் அவரை அணுகி பார்வதி தேவியின் காதணி பற்றிக் கேட்டார். திருமால் தாம் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே உள்ள கிணற்றைச் சுட்டிக் காட்டினார். சிவபெருமான் அக்கிணற்றை எட்டிப்பார்க்கையில் அவரது காதிலிருந்த குண்டலமும் கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றினுள்ளிலிருந்து பிரகாசமான பேரொளியுடன் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்தச் சிவலிங்கத்தில் சிவபெருமானின் சக்தியும் பார்வதி தேவியின் சக்தியும் ஒன்றாக ஐக்கியமாகி இருந்தது.


திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பெருமானை நோக்கித் தமது தவத்தை தொடர்ந்து மேற்கொண்டார். சிவபெருமான், திருமால் முன்பு விசுவரூபம் கொண்டு தோன்றினார். திருமால் விரும்பும் வரம் யாதெனக் கேட்க, அவர் இங்கு பிரதிஷ்டை செய்த ஜோதிர் லிங்கத்திலிருந்து எப்போதும் மக்களை ஆசிர்வதிக்க வேண்டினார். மேலும் சிவபெருமான் ஜடாமுடியிலிருக்கும் கங்கை இத்தலத்தில் வந்து சிவபெருமானை அர்ச்சிப்பதுடன், இத்தலம் வந்து கங்கையில் நீராடும் மக்களுடைய பாவங்களைப் போக்க வேண்டும் எனவும், சிரார்த்தம் செய்தால் அவர்கள் பாவம் எல்லாம் விலகி புனிதம் அடைந்து சுவர்க்கம் போக வேண்டும் எனவும் வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரம் தந்து, தாமும் அந்த லிங்கத்தில் ஒளியாக ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருமாலுக்கு விசுவரூபம் காட்டித் தந்தமையால், சிவலிங்கத்திற்கு விசுவநாதர் எனப்பெயர் உண்டாகியது. அதன்பின்பு விசாலாட்சியாக அவதாரம் கொண்டிருந்த அன்னை பார்வதி தேவியை, சிவபெருமானுக்குத் திருமால் திருமணம் செய்து வைத்தார். பிரம்மதேவர் பல யாகங்கள் செய்து அவர்கள் திருமணத்திற்கு உதவி செய்தார். இவ்வாறு திருமாலின் வேண்டுதலின்படி ஜோதிர்லிங்கமாகத் தோன்றிய சிவன் விசுவநாதர் என வழங்கப்பட்டு வருகிறார். காசியைப் பற்றி ஏகப்பட்ட புராணக் கதைகள் உள்ளன. ஏனெனில் காசியம்பதி வேதகாலம், புராண காலத்திற்கு முற்பட்டது. பல தேவர்களும், முனிவர்களும், மன்னர்களும், இங்கு தவம்செய்து பேறு பெற்றுள்ளார்கள். சூரியனின் புத்திரர்கள் எமனும், சனி பகவானும் சிவபெருமானை நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும், எமலோகத்திற்கு அதிபதியாகவும், பதவி பெற்றார். சனிதேவன் சிவபெருமான் அருளால் நவக்கிரகங்களில் ஒரு கிரகமாகப் பதவி பெற்றார்.


பிரம்மாவே இங்கு யாகம் செய்தும், தவம் செய்தும் பிரம்ம பதவியைப் பெற்றார் எனில், காசியின் மகிமையும் தொன்மையும் யாரால் எடுத்துக் கூற முடியும்? சப்தரிஷிகள் என்னும் ஏழு ரிஷிகளும் இங்கு தவம் செய்து, சிவபெருமான் அருளால் நட்சத்திரப் பதவியடைந்துள்ளார்கள். காசியில் இரவு பூஜை சப்த ரிஷிகள் பூஜை என மிகவும் சிறப்பாக, தினசரி நடைபெறுவதால் இத்தலத்தை அவர்கள்தான் தாபித்தார்களோ என ஓர் எண்ணம் உண்டாகிறது. இராமபிரான் முன்னோர்களில் ஒருவரான ஹரிச்சந்திரன் வரலாறு அறியாதோர் இலர். அவர் விசுவாமித்திரர் சோதனைக்குட்பட்டு காசியில் வந்து சுடலையைக் காத்து, மனைவியைப் பிறர்க்கு விற்றுத் துன்பப்பட்டும், பொய்யே பேசாமல் முடிவில் சிவபெருமான் அருளால் இழந்த செல்வம் எல்லாம் பெற்று சுபிட்சம் அடைந்தார். இதிசாக காலத்தில் இராமர் இங்கிருந்து சிவலிங்கம் கொண்டு சென்று, இராமேசுவரத்தில் வைத்து வழிபட்டு, இராவணனை வதைத்த தோஷம் நீங்கப் பெற்றார் என இராமயணத்தில் வரலாறு காண்கிறோம். மகாபாரதக் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காசி வந்து வழிபாடுகள் செய்ததாகவும் மகா பாரதத்தில் வரலாறு கூறப்படுகிறது. இன்னும் இப்படி எத்தனையோ புராணங்கள் காசிப் பதியைப் பற்றியுள்ளன. புராண காலத்தில் சத்தியபுரம் என்னும் ஊரில் பூரித்தியும்னன் என்பான் அரசாண்டு வந்தான். அவனுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள். இன்பத்தில் மூழ்கியிருந்ததால் அவனால், அரசாட்சியை சரிவர கவனிக்க இயலவில்லை. இதனைச் சாதகமாக்கி அவனது விரோதிகள் அவனை நாட்டை விட்டுத் துரத்தி விட்டனர். விபாவரை என்னும் தமது பட்டத்து ராணியை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, மன்னன் விந்திய மலைச்சாரலில் வந்து வாழ்ந்து வந்தான். வறுமையின் கொடுமையால் தன் மனைவியையே கொன்றுவிட்டான். அவள் மாமிசத்தை உண்ணப் போகும் போது, இரண்டுசிங்கங்கள் அங்கே வர பூரித்தியும்னன் ஓடிவிட்டான். அப்படி அவன் ஓடும்போது அவன்எதிரே வந்த நான்கு பிராமணர்களைக் கொன்று தின்ன முற்பட்டான். அப்போது பிராமணர்களது கையிலிருந்த வேத ஏடுகள், மான்தோல் ஆசனம், அவர்கள் அணிந்திருந்த பூணூல் இவைகளைக் கண்டதாலும் தொட்டதாலும் அவனுக்குப் புத்தி தெளிந்தது.


பூரித்தியும்னன் தான் செய்த பெண் கொலை, பிராமணர்கள் கொலை இவைகளினால் பாவ ஆத்மாவாக ஆகிவிட்டதை உணர்ந்தான். பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பற்றவே அவன் பெரும் சண்டாளன் ஆகிவிட்டான். காட்டில் அலைந்து சாகல்யா என்ற தவமுனிவரைக் கண்டு பாவவிமோசனம் கேட்டான். அந்த முனிவர் ஐந்து கருப்புத் துணிகளைக் கொடுத்து அவனை உடுத்திக் கொள்ளக் கூறினார். காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி விசுவநாதரைத் தரிசித்தால் பாவ விமோசனம் ஆகும் என்று கூறினார். அவனும் முனிவர் சொற்படி, காசிக்குச் சென்றான். அவன் காசிமண்ணை மிதித்ததும் ஒரு துணி வெண்மை ஆகிவிட்டது. கங்கையில் மூழ்கி எழுந்தான். என்னே ஆச்சர்யம்! இறந்த அவனது மனைவி அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு உடன் எழுந்தாள். மற்றும் ஒரு கருப்பு ஆடை வெண்மை ஆகிவிட்டது. இரண்டு ஆடைகளையும் கங்கையில் அவிழ்த்து விட்டு மூன்று ஆடைகளுடன் கரை யேறினான்.


இரண்டாவது அதிசயம்! இவனால் கொல்லப்பட்ட நான்கு பிராமணர்களும் கரையில் நின்று கொண்டு தம்பதிகள் இருவரையும் வரவேற்றனர். அவனதுபாவம் தீர மந்திரம் ஓதி அட்சதை தெளித்தனர். மூன்றாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. கணவன் மனைவி இருவரையும் மணி கர்ணிகா கட்டத்தில் அவர்கள் மூழ்கச் செய்தனர். நான்காவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. பின்பு விசுவநாதரைத் தொட்டு, பக்தியுடன் வழிபடக் கூறினர். அவ்விருவரும் அதன்படியே வழிபட, ஐந்தாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. அவனது பாவங்கள் எல்லாம் நீங்கிப் புனிதன் ஆனான். விசுவநாதர் ஆலயத்தின் முன்பு அவர்கள் இருவரையும் அவனது எதிரிகள் அன்புடன் வரவேற்றனர். நாட்டிற்கு அழைத்துச் சென்று, அவனது அரசை அவனிடமே கொடுத்து, மீண்டும் பூர்த்தியும்னனை அரசனாக்கினர். எனவே கங்கையில் மூழ்கி காசி விசுவநாதரைத் தரிசித்தால் கொடிய பாவங்களும் நீங்கிவிடும். எனவேதான் காசிக்கு விடும் பக்தர்கள், தம்பதிகளாக, இரு ஆடைகள் அணிந்து கங்கையில் மூழ்கி, ஓர் ஆடையை கங்கை நீரில் விட்டுவிட வேண்டும் என்கின்றனர். கரைக்கு வந்து பிராமணர்களைத் தரிசித்து அவர்களுக்கு தானம் வழங்க வேண்டும் என்றும் கூறுவர். விசுவநாதர் ஆலயம் சென்று விசுவநாதரைத் தொட்டு வழிபட வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றனர். அவ்வாறு செய்தால்தான், நாம் நம்மையும் அறியாமல் செய்த பாவங்கள் கூட விலகும் என்கின்றனர்.


இவ்வரலாற்றினால் நாம் கங்கை நீராடும் முறைக்கு விளக்கம் அறிகின்றோம். மாபலிச்சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்ட நாராயணன், திருவிக்கிரமராக ஓங்கி வளர்ந்து உலகளந்து விட்டு, மற்றொரு காலை தேவலோகம் வரை நீட்ட, ஆகாச கங்கை நீர்கொண்டு பிரம்மா அத்திருப்பாதத்தைக் கழுவிப் பூஜித்தார். அப்போது பெருக்கெடுத்து ஓடிய கங்கை நீரைச் சிவபெருமான் தன் சடையில் தாங்கிப் பூமியில் விட்டார். அந்த கங்கையே காசியில் புனிதத்தீர்த்தமாக விளங்குகிறது என்கின்றனர்.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இந்தியாவில் 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு. 
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




அருள்மிகு கேதாரீஸ்வரர் திருக்கோயில்

Jothir Lingam
[Image1]
மூலவர்:கேதாரீஸ்வரர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:கேதார கவுரி
தல விருட்சம்:
தீர்த்தம்:உதககுண்ட தீர்த்தம், கவுரி குண்டம், மந்தாகினி தீர்த்தம்.
ஆகமம்/பூஜை:-
பழமை:2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:கேதார்நாத்
மாவட்டம்:ருத்ரப்ரயாக்
மாநிலம்:உத்தராஞ்சல்
பாடியவர்கள்:
-
 திருவிழா:
மகா சிவராத்திரி
 தல சிறப்பு:
இத்தலம் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. மேலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இங்குள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர்.
திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி:
கேதாரீஸ்வரர் திருக்கோயில் நந்ததேவி மலை, கேதார்நாத், கவுரி குண்ட் - 246476. ருத்ரப்ரயாக் மாவட்டம், உத்ரகாண்ட் மாநிலம்.
போன்:
+91 1364 - 267228., 263231
 பொது தகவல்:
பரிவார மூர்த்திகள் பைரவர், பிள்ளையார், நந்தி, பாண்டவர்கள், கண்ணன், ஆதிசங்கரர், மாருதி, ஈசாணிஸ்வரர் விஷ்ணு, கார்த்திகேயன், அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். யாத்திரைக்கு ஏற்ற காலம்: இக்கோயில் வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது (அதாவது புத்தாண்டு தினத்தன்று) பொது ஜன தரிசனத்திற்காக திறப்பார்கள். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோயில் திறந்திருக்கும். அதன் பின்னரே தீபாவளியை ஒட்டி கோயில் நடை அடைக்கப்படுகின்றது. பின்னர் ஆறு மாத காலம் இமயமலையின் கடும் குளிர் காரணமாக இக்கோயில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுவிடும். எனவே, பொதுவாக கேதார் யாத்திரை புறப்படும் முன்னர் அங்குள்ள சீதோஷ்ணம், கோயில் திறப்பு போன்ற விபரங்களை நன்கு தெரிந்த பின்னர் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

கேதார்நாத் திருக்கோயில் தீபாவளியை ஒட்டி, கோயில் மூடப்படும் முன்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படும். பின்னர் நடை மூடப்படும். அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் பனிக்கட்டிகளை அகற்றி கோயிலை திறக்கும் பொழுது கோயிலில் உள்ள விளக்கு அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். இந்த அற்புதக்காட்சிகளை காண ஏராளமான அளவில் பக்தர்கள் கேதார்நாத் நோக்கி வருவது வழக்கம். இக்கோயில் சம்பிரதாயப்படி ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மனிதர்களுக்காகவும், பனி மூடியிருக்கும் காலத்தில் தேவர்கள் வழிபடுவதாகவும் ஐதீகம். முன்பு கேதாரநாதம் நமது நாட்டின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் வடகோடி இமயமலையில் இருந்த நந்ததேவி சிகரத்தில் சுமார் 3583 மீட்டர் (11750 அடி) உயரத்தில் உள்ளது. சிவபெருமான் விரும்பியிருக்கும் புனித தலம். தற்போது புதிய உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ளது.
பிரார்த்தனை
பிரார்த்தனை நிறைவேற இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
 தலபெருமை:
சிவபெருமான் விரும்பியிருக்கும் புனிததலம் கேதார்நாத். கவுரி குண்ட்-ல் உள்ள அக்னி குண்டத்தில் (வெந்நீர் ஊற்று) நீராடிய பின்னரே 14 கி.மீ. மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். கார், பஸ், வேன்கள் யாவும் கவுரி குண்ட் வரை மட்டுமே செல்ல முடியும். திருமால் நரநாராயணராக இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர்லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச்செய்தாராம். இது அத்தகைய புனித தலம். ஸ்ரீஆதிசங்கரர் இக்கோயிலை திருப்பணி செய்து உலகறிய சிறக்கச்செய்துள்ளார். ஆதிசங்கரர் சுவாமிகள் கேதார்நாத் தரிசனம் செய்து முடித்த பின்னர் தான் வாழ்ந்தது போதும் என்று முடிவுசெய்து, இங்கு சிவபெருமானை வேண்டிக்கொண்ட பின்னர் தன்னை இனிமேல் யாரும் பின்தொடர வேண்டாம் என்று இக்கோயிலின் பின் வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக சொர்க்கத்தை (இறைவனடி) அடைந்தார் என்று கூறப்படுகின்றது.

அதுபோல இங்குதான் பாண்டவர்கள் பிறந்து வளர்ந்ததாகவும், சில காலம் வாழ்ந்ததாகவும் கேதார்நாத் கோயிலின் பின்புறம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் கூறுகின்றனர். அர்ச்சுனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்வரம் பெற்றதும் இத்தலமே. இராவணன் தவம் செய்து கயிலாய மலையை தூக்க முயன்று முடியாமல் உயிர்பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும்.

இமயமலை - கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும், பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா என்ற நதியும், ருத்ர பிரயாக் என்ற இடத்தில் கலந்து பல்வேறு நதிகளை இணைத்து, ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது. புனித கங்கா என்ற ஒரு பெயரில் இந்தியாவில் கவுரி குண்ட் -டிலிருந்து கேதார்நாத் வரை செல்லும் 14 கி.மீ. மலைப்பாதையில் பசுமையான காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ஆல்பைன் மரங்களும் நிறைந்து காணப்படுகின்றது. பல நீரோடைகளும் நதிகளும் கேதாரிலிருந்து மந்தாகினி நதியாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. சிவ அஷ்டோத்திரம், சிவநாமாவளி, சிவசகஸ்ர நாமம் ஆகியவை நடத்தலாம். பூஜைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தரிசனம் செய்ய கட்டணம் ஏதும் இல்லை. இது தவிர பக்தர்கள் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து கேதார்லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கி தழுவிக்கொள்கின்றனர்.

இமயமலையில் இத்தலம் உள்ளதால் யாத்திரை செய்யவும், இறைவன் தரிசனத்திற்கும் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இமயமலையில் யாத்திரை செய்யும்போது மக்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. பாண்டவர்கள் வைணவர்கள். வைணவர்கள் சிவன் கோயில் கட்டி சிவபெருமானை வழிபட்டது. மத ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். இத்தலத்தில் சிவலிங்கம் மற்றெந்தத் தலத்திலும் இல்லாத ஒன்றாக, முற்றிலும் மாறுபட்டதாக ஒரு முக்கோண வடிவில் உள்ள பாறை. சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. ஜோதிர்லிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். கேதார் நாத் கோயிலில் பல சிற்பங்கள் உள்ளன. பக்தர்கள் அதனைத் தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலைத் திருப்பணி செய்து சிறக்கச் செய்துள்ளார். அவரது கோயிலும் இங்கே உள்ளது. கேதார் நாதம் போகும் வழியில் பல புண்ணியத் தலங்களும், புனிதத்தீர்த்தங்களும் உள்ளன. அவைகளைத் தரிசனம் செய்தவர்கள் புனிதம் அடைகின்றார்கள். இங்கே பல அடி உயரத்தில் பனிபடர்ந்த மலையில் இரண்டு வெந்நீர் ஊற்றுக்கள், பக்தர்களுக்காகவே உண்டாக்கியதுபோல இருப்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும். ஆதிசங்கரரும் இவ்வழியே தான் சுவர்க்கம் சென்றார். அவர் தாபித்த சக்திபீடம் இங்கே உள்ளது என்கின்றனர்.

இராவணன் தவம் செய்து, கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமல் உயிர் பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். இத்தலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமருடைய கோடாலி உள்ளது. பொதுவாக இமயமும், வனப்பகுதியும் பக்தர்கள் மனங்கவரும்படியாகவும், அவர்கள் பக்தியுணர்வை மேலும் வளர்க்கக் கூடியதாகவும் உள்ளது.

பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று! யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்ததையும் கொண்டு சென்று கேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
  தல வரலாறு:
மகாபாரத போரில் பல்வேறு வீரர்களைக்கொன்று குவித்து வெற்றி பெற்ற பாண்டவர்கள் பாப விமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி வாரணாசி செல்கின்றனர். அங்கே அவர் இல்லையென்றும் இமயமலையில் வாழ்வதாகவும் கேள்விப்பட்ட பின்னர் இமயமலையை நோக்கி வருகின்றனர். அப்போது இமயமலை காடுகளில் சிவபெருமானை தேடி பாண்டவர்கள் அலைகின்றனர். பின்னர் இளைப்பாறும்போது சிவபெருமான் அசரீரி வாயிலாக தான் மனித உருவிலோ அல்லது தெய்வமாகவோ காட்சிதரமுடியாது என்றும், முடிந்தால் தன்னை கண்டுபிடிங்கள் என்றும் சிவபெருமான் கூறி மறைந்தார். பின்னர் மிக உயரமான கேதார் சிகரத்தின் காடுகளில் திரிந்தபோது காட்டில் ஏராளமான எருமைகள் மேய்வதை பாண்டவர்களில் பலசாலியான பீமன் கண்டார். அதில் ஒரு எருமையின் முன் கால்களில், ஒரு காலில் மட்டும் சலங்கை கட்டியிருந்ததை கண்டு, அந்த எருமை தான் சிவபெருமானாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து ஓடிச்சென்று எருமை உருவில் இருந்த சிவபெருமானை தொட்டு வணங்கினார். ஆனால் சிவபெருமான் எருமை உருவத்திலிருந்து பூமிக்குள் நுழைந்தார். பீமன் எருமையை தொட்டு நிறுத்தியதால் எருமை உருவின் முதுகு பகுதி மட்டும் பூமியின் மேல் பகுதியில் அசையாமல் நின்று விட்டது. எனவே கேதார்நாத்தில் எருமை உருவில் சிவபெருமானின் முதுகு பகுதியை மட்டும் தரிசிக்கலாம். பின்னர் அசரீரி மூலம் கேதார்நாத்தில் தனது முதுகு பகுதியை இங்கு தரிசிக்கலாம் என்றும், பஞ்ச பாண்டவர்கள் மோட்சம் பெற நேபாளில் உள்ள பசுபதி நாத்தில் பஞ்சமுகங்களுடன் காட்சியளிப்பதாகவும் கூறி மறைந்தார். பின்னர் பாண்டவர்கள் பசுபதி நாத்தில் சிவபெருமானை தரிசித்த பின்னர் கேதார்நாத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு கோயிலாக கட்டி உலகிற்கு அர்ப்பணித்தனர். தற்போதுள்ள கேதார்நாத் கோயில் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் திரௌபதியுடன் பாண்டவர்கள் கேதார் தரிசனத்திற்கு பின்னர் இமயமலை வழியாக சுவர்க்கம் நோக்கி சென்றனர் என்று வரலாறு கூறுகின்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலம் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. மேலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இங்குள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். 
 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


































































































































































































/



































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக