செவ்வாய், 25 நவம்பர், 2014

நாம ஜெபத்தின் மகிமையை

ராதே கிருஷ்ணா 26-11-2014





அன்பர்களே ! இது ஒரு பெரிய பதிவுதான் என்றாலும் பொறுமையாக படித்து புதிய அனுபவத்தை பெறுமாறு கேட்டு கொள்கிறேன்

ஆன்மீக அன்பர்களே ! அடியேன் பல முறை நாம ஜெபத்தின் மகிமையையும் அதன் அவசியத்தையும் பற்றி சொல்லியிருக்கிறேன் ! நாம ஜபத்தை மனதிலும் சொல்லலாம் உரக்கவும் சொல்லலாம் ! ஆண்டாள் திருப்பாவையில் " ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் " என்கிறாள் . அரவம் என்றால் சத்தம் ; பேரரவம் என்றால் மிகுந்த சத்தம் என்று அர்த்தம். ஆகவே நாம ஜபத்தை பஜனையை உரக்க சொல்லுங்கள்.
நமக்கு குரல் வளம் இல்லை என்றல்லாம் எண்ணவேண்டாம். பகவானை ஸ்வரம் தாளம் முதலிய எந்த வெளி உபகரணங்களும் மகிழ்விக்க முடியாது. அவன் அன்பென்னும் ஸ்வரத்தை மட்டுமே அறிந்து கொள்வான். அன்பின் மொழியை புரிந்து கொள்வான் ; அன்பின் ருசியை அறிவான். ஆகவே எந்த வித தயக்கமும் இல்லாமல் அவன் நாமம் சொல்லுங்கள்.

அடியேன் தங்களுக்கு இது பற்றி ஒரு சம்பவத்தை கீழே விவரிகின்றேன் அது எதோ குரல் வளத்தை மட்டும் சொல்வதற்காக இல்லை! இது பகவானின் மாயா லீலையை நமக்கு உணர்த்தபோகிறது.

இடம் : இந்திரப்ரஸ்தம் : காலம் : பாண்டவர்கள் வனவாசத்திற்கு முன்

பீமசேனன் ஒரு நாள் இரவு நேரம் உல்லாசத்துடன் பாடத் தொடங்கினார். அவரது கனமான குரல் எதிரொலிக்கத் தொடங்கவே தர்மராஜர் கூப்பிட்டு அன்புடன் "தம்பி! இறைவன் நாமத்தை பாடுவது உத்தமமானதுதான். ஆனால் நீ எங்காவது தனிமையாகச் சென்று பாடினால் நன்றாக இருக்கும். மற்றவர்கள் உறக்கத்திற்கு தடை ஏற்பட நீ காரணாமாக இருக்க கூடாது.

பீமசேனன் அண்ணனின் பேச்சை ஏற்றுக் கொண்டார். அந்த நாட்களில் அவர் கொஞ்சம் கவலையாக வாழ தொடங்கியிருந்தார். குந்தி தேவி கனிவுடன் விசாரித்தும் பீமசேனன் ஒன்றும் சொல்லாமல் இருக்கவே குந்தி தேவி தருமராஜனிடம் கவலையுடன் "பீமன் இப்போழுதல்லாம் வயிறு நிறைய சாப்பிடுவதில்லை. அவனை மன வருத்ததோடு பார்ப்பது மிகுந்த துயரம் அளிக்கிறது" என்று கூறினார்.

தாயார் கேட்ட போதே பதிலேதும் கூறாதவனிடம் சகோதரன் கேட்டால் சொல்லுவான் என்று எப்படி நம்பமுடியும்? தர்மர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இது பற்றி கூறினார். தான் இது பற்றி யோசிப்பதாக பாண்டவர்க்கு அடைக்கலம் தரும் அந்த வள்ளல் கூறிவிட்டார்.

பீமசேனன் கவலைக்குக் காரணம் இருந்தது. அவர் அண்ணனை (தர்மராஜரை) தரௌபதியுடன் தனித்திருக்கும் பொது சாரளத்தின் வழியாக தற்செயலாகப் பார்த்து விட்டார். அண்ணன் திரௌபதியின் பாதங்களருகே உட்கார்ந்திருந்ததாகத் தோன்றியது. "திரௌபதி மகாராஜாவிடமா இவ்வளவு அதிகப் பிரசங்கித் தனமாக நடந்து கொள்கிறார்? என்னிடமும் இவள் இது போல் துடுக்குத்தனம் செய்தால் நான் எப்படி சகித்துக் கொள்ள முடியும்" என்று பீமசேனன் திடுக்கிட்டு விட்டார்.
தம்பதிகள் தனிமையில் பரஸ்பரம் எப்படி உட்காருகின்றனர் என்பது மற்றவர்கள் பார்க்கவோ யோசிக்கவோ வேண்டிய விஷயமல்ல. அன்பில் பெரியவர் சிறியவர் என்னும் பேதம் மறைந்து விடுகிறது. எப்போதாவது மனைவி ஊடல் கொண்டால் அது அன்பிற்கு அடையாளமாகும். அப்போது கணவன் பலவாறு வேண்டி அவளை மகிழ்விக்கிறான். இது போன்ற ஒரு வினாடியில்தான் பீமசேனனின் பார்வை பட்டு விட்டது. அவரைப் போன்ற மல்லர் இதையெல்லாம் அறிந்து கொள்வது கஷ்டம்தான். தன் நேர்மையான குணத்தால், திரௌபதிக்கு கர்வம் உண்டாகியுள்ளதாக ஒரு எண்ணம் பீமனுக்கு ஏற்பட்டது. அவருக்கும் திரௌபதியிடம் காரிய தொடர்பு ஏற்படத்தான் செய்யும்; இப்பொழுது அவர் தன் இந்தத் துயரத்தை யாரிடம் எப்படி கூறுவார்?

கவலையின் காரணமாக தூக்கம் வரவில்லை. எழுந்து முற்றத்திற்கு வந்தார். " முகுந்த கோவிந்தா கோபாலக்ருஷ்ண " என்று கணீரென பாடத் தொடங்கினார். அவரது குரலால் எல்லோருடைய தூக்கமும் கலைந்துவிட்டது. மகாராணி திரௌபதிதான் தருமரிடம் தம்பிக்கு புரிய வைக்குமாறு கூறினார். யுதிஷ்டிரர் வந்து கூறியதும் அதை ஏற்று கொண்டாலும் இன்னும் அதிக துயரம் கொண்டார். அவருக்கு குரல் இனிமை கிடைக்கவில்லை தான்! இது என்ன அவர் குற்றமா? இந்த சம்பவத்தைத்தான் ஆரம்பத்தில் எழுதியிருந்தேன். பீமசேனன் ராஜமாளிகையை விட்டு கிளம்பினார். நகரத்திலிருந்து வெகு தூரம் யமுனை ஆற்றுக்கு சென்று விட்டார். நிசப்தமான இரவு,தூய்மையான ஆகாயம், அமுதம் பொழியும் வெண்ணிலவு! தான் எவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்பதே பீமசேனனுக்கு தெரியவில்லை. நான்கு புறமும் காட்டை பார்த்ததும் இப்போது யார் தூக்கத்திற்கும் தடை நேராது என்று ஆறுதல் கொண்டார்.

"முகுந்த கோவிந்த கோபாலக்ருஷ்ண
முகுந்த கோவிந்த கோபாலக்ருஷ்ண"

என்று பீமசேனன் பாடத் தொடங்கினார் . தன்னையே மறந்து விட்டார். துயருற்ற, கவலையுள்ள, வருத்தம் கொண்ட பீமசேனனது உள்ளம் சீக்கிரமே சஞ்சலமற்றதாகியது. கண்கள் தாமாகவே மூடி கொண்டன. கண்ணீர் தாரை தாரையாக பெருக்கடுத்தது. குரல் தழுதழுக்கவே இன்னும் குரல் கட்டைகுரலாகிவிட்டது.

இசையில் சுரம் அல்லது வீணையின் ஜங்காரட்தையும் இனிமையையும் கேட்டு மான்கள் அருகே ஓடி வரலாம்; ஆனால் அங்கு பீமசெணனின் பாட்டின் தவனியைக் கேட்டு மான் மட்டுமென்ன, காட்டு ராஜா சிங்கமே பயந்து காட்டினுள் வெகு தூரம் ஓடிவிட்டது. ஆனால் ஒருவன் இருந்தான். இந்திரபிரஸ்தத்திலேயே இருந்தான். அவன் இந்த இசையின் தவ்னியில் கூட தன்னை மறந்து விட்டான். ராஜமாளிகையிலிருந்து எழுந்து வந்து அதே இரவில் பீமனுக்கு அருகில் உட்கார்ந்து ரசிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் அப்படிப்பட்டவன்தான். அவனை ஸ்வரம் - தாளம் முதலிய எந்த வெளி உபகரணங்களும் மகிழ்விக்க முடியாது. அவன் அன்பென்னும் ஸ்வரத்தை மட்டுமே அறிந்து கொள்வான். அன்பின் மொழியை புரிந்து கொள்வான் அன்பின் ருசியை அறிவான். பீமனின் குரல் எத்தகைய கர்ண கடூரமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர் அன்பில் திளைத்து இறைவனைப் பாடிகொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த அன்புச் செல்வம் உறங்குவது சாத்தியமாகுமா? அவன் ஈர்க்கப்பட்டு வந்துவிட்டான். பீமசேனன் கீர்த்தனை பாடுவதில் எந்த அளவு லயித்து இருந்தாரோ அதே லயிப்பில் தன்னை மறந்த நிலையில் அந்த இசையின் குரலில் அவன் அசைந்தாடி கொண்டிருந்தான். அவனது அகன்ற கண்கள் நீரை பொழிந்துகொண்டிருந்தன. அவன் மிக மெதுவாக கை தட்டத் (தாளமுட) தொடங்கினான். பீமனின் தன்னை மறந்த லயிப்பு கலைந்துவிட்டது. கண்கள் திறந்ததும் எதிரில் இருக்கும் அவனை பார்த்து வியப்புடன் "ஸ்ரீ கிருஷ்ணா! நீ இந்த நேரம் இங்கு ....? என்று கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணனும் தன் மேலாடையால் கண்களைத் துடைத்துக் கொண்டு "சகோதரா பீமா ! நீ இவ்வளவு அழகா பாடுவேன்னு தெரியாதே ! என்னை மிகவும் திருப்தி அடைய செய்து விட்டாய் ! நான் மகிழ்ச்சியோடு இருக்கும் இந்த தருணத்தில் உனக்கு வேண்டிய வரத்தை கேள் " என்றார். ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை கேலி செய்கிறாரோ என்று ஒரு வினாடி தோன்றியது ஆனால் அந்த தாமரைக் கண்ணன் தன் கண்களை தொடைத்துக் கொண்டதைக் கண்டு உண்மையிலையே கண்ணன் ரசித்திருக்கிறான் என தோன்றியது. என் இசை கோவிந்தனுக்கு பிடிக்கிறது. இனி உலகம் முழுவதற்கும் பிடிக்காமல் போனாலும் கவலை இல்லை. என் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துவிட்டது. இனி எனக்கு என்ன குறை வரம் கேட்க்க? ஸ்ரீ கிருஷ்ணர் மறுபடி ஏதாவது கேள் என்று வலியுறுத்தினார். இரு வினாடிகள் யோசித்த பீமன் "இந்த ரிஷி முனிவர்கள் அடிக்கடி உன் மாயையை பற்றி கூறுகிறார்களே, அந்த உன் மாயை எத்தகையது? எப்படிருக்கும்? நான் அந்த மாயையைக் காண விரும்புகிறேன் என்றார். ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஆர்வம் உண்டாகவில்லை. அவர் அமைதியான குரலில் "பீமா என்னைப் பார் எனது மாயையைப் பார்த்து என்ன செய்ய போகிறாய் " என்றார். உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருகின்றேனே ! உன் மாயையை பார்க்க விரும்புகிறேன் என பீமன் பிடிவாதம் செய்தார். ஒருவாறாக அந்த மதுசூதனனும் சம்மதித்தார் " நாளை இரவு முதல் ஜாமத்தில் வந்து அதோ அந்த ஆல மரத்தின் மீது மறைந்து உட்கார்ந்து கொண்டு கவனமாக நடப்பதை பார் என்று சொல்லிவிட்டு கிளம்பி போனார். கிருஷ்ணனும் பீமனும் அரண்மனை திரும்பி விட்டனர் .

ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிட்ட ஆலமரம் காட்டின் நடுவில் இருந்தது. அதற்க்கு அருகில் வெகு தூரம் வரை மரங்களோ செடிகளோ கொடிகளோ இல்லாமல் தரை சமதளமாக இருந்தது. இரவு முதல் ஜாமத்தின் ஆரம்பத்திலேயே பீமன் கிருஷ்ணன் குறிப்பிட்ட ஆலமரத்தின் மீதேறி பொருத்தமான இடத்தில் யார் பார்வைக்கும் படாதவாறு அமர்ந்து தரையையே நோட்டமிட்டார்.

சந்திரன் வானத்தின் மேல் எழும்பினான். காடே நிலவொளியில் ஜொலித்தது. இரவு சஞ்சாரம் தொடங்கி கொண்டிருக்கும் போதே பல ஒளிமயமான தேவதைகள் வந்து அந்த தரையை தூய்மைப்படுத்த துவங்கினர். வாசனை திரவியங்களை தெளித்து விலைஉயர்ந்த விரிப்புகளை விரித்தனர் . நிறைய தேவதைகள் சிம்மாசனங்களை கொண்டு வந்து வரிசையாக போட துவங்கினர் !

ஒரு ஒளிமயமான திவ்ய சிம்மாசனம் வந்தது ! எதோ பெரிய ராஜாதிராஜன் வரப்போகிறார் என்பது போல! அதற்க்கு அருகிலேயே சிறுது கீழே பூமியில் அதைவிடக் கொஞ்சம் குறைவான ஒளி பொருந்திய அரியணை போடப்பட்டது. இதற்க்கு பிறகு இரண்டிரண்டாக இணைந்த அரியணைகளாக மூன்று அரியணைகள் போடப்பட்டபின் மற்ற அரியணைகள் வரிசையாக அமைந்தன. நிச்சயம் இன்று எதோ ஒரு தேவதைகளின் பொது கூட்டம் நடைபெற விருக்கிறது என்பதை அறிவித்தது.

மாசற்ற வெண்மையான நிலவு ! தேவதைகளே ஒளி பொருந்திய சரீரம் படைத்தவர்கள் ! அத்தோடு ஒளி விட்டு பிரகாசிக்கும் தீவட்டிகளை ஏந்தியவாறு ஆங்காங்கு தேவப் பணியாளர்கள் வந்து நின்று கொண்டார்கள். பின் முக்கிய தேவதைகள் வரத்தொடங்கினர். அக்னி குபேரன் வாயு எமன் இந்திரன் போன்ற பல தேவர்களை அவர்களது தோற்றம் வாகனம் ஆகியவற்றால் பீமன் புரிந்து கொண்டான். தேவர்கள் தங்கள் வாகனங்களை சற்று தொலைவிலேயே விட்டு விட்டு வந்தனர். பணியாட்கள் அவர்களை அழைத்துசென்று அவர்களுக்கான ஆசனங்களில் அமர செய்தனர்.

தேவர் கந்தர்வர் கின்னரர் ஆகிய எல்லோருடைய தலைவர்களும் வந்து அமர்ந்தாயிற்று. அசுரர் தைத்யர் தானவர்கள் வர்க்கங்களும் தங்கள் சமுதாயுத்துடன் வந்து உட்கார்ந்தனர். அவர்களில் மிக சிலரையே பீமனுக்கு அடையாளம் தெரிந்தது.

கடைசியில் சரஸ்வதியுடன் பிரும்ம தேவரும் லக்ஷ்மியுடன் விஷ்ணுவும் பார்வதியுடன் சிவனும் வந்தனர். அவர்கள் இரண்டிரண்டாக இணைந்த அரியணைகளாக மூன்று அரியணைகள் மீது தம்பதி சகிதமாக அமர்ந்தனர் . பீமசேனன் மனதில் இப்பொழுது குழப்பம் உண்டாகியது. " கடைசியில், நடுவிலுள்ள பெரிய அரியணை யாருக்கு ? இரண்டாவது சிறுதளவு குறைந்த அரியணை யாருக்கு? இந்த மும்மூர்த்திகளும் சாமானிய ஆசனங்களில் உட்க்காருமளவு அத்தகைய பெரியவர் யார் என சிந்தித்தார். அவன் அதிக நேரம் யோசிக்க அவசியமில்லாமல் ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார். மும்மூர்த்திகள் உட்பட அனைவரும் எழுந்து நின்று கை கூப்பி வணங்கினர். அவர் இந்திரதிகளின் பக்கம் பார்க்க மட்டுமே செய்தார். மும் மூர்த்திகளிடம் இரு நொடிகள் மட்டுமே எதோ பேசிவிட்டு இரண்டாவதாக இருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

திடீரென்று " மஹா மாயை பகவதி வந்து கொண்டிருக்கிறார் என்ற ஜெயகோஷம் எதிரொலித்தது. எல்லோரும் பவ்யமாக எழுந்து நின்று கை கூப்பி தலை வணங்கினர். வந்தவர் யாரிடமும் பேசாமல் உயர்ந்த பெரிய அரியாசனத்தில் அமர்ந்தார். பீமனுக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை ஏனென்றால் எல்லோராலும் மரியாதை செய்யப்பட்டவர் திரௌபதி. மும்மூர்த்திகளும் முன்னால் வந்து தலை வணங்கிய போது புன்சிரிப்புடன் மட்டுமே அவர்களை பார்த்தார். எல்லோரும் வந்துவிட்டார்களா ? என்று திரௌவபதி ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்டார். கிருஷ்ணரும் "பாண்டவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் " என்று கூறினார்.

பீமனை தவிர யுதிஷ்டிரர், அர்ஜுனன் நகுல சகாதேவன் ஏனையோரும் கை கட்டியப்படி வந்து நின்றனர்.
" பீமன் எங்கே இருக்கிறான் ? அவனுடைய ரத்தமில்லாமல் என்னுடைய கப்பரை முழுவதும் நிரம்பாமல் குறைவாக இருப்பதை நீ பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்” என்றார் திரௌபதி! பீம சேனனுக்கு இதை கேட்டதும் அந்த இரவிலும் சரீரத்திலிருந்து வியர்வை வெள்ளம் பெருகியது. பெரிய சூரனாக இருந்தாலும் பயத்தால் உடல் நடுங்கியது.
யுதிஷ்டிரர், அர்ஜுனன் நகுல சகாதேவன் ஏனையோரை பார்த்து பீமன் எங்கே? என்றார். இந்த கப்பரையை நிரப்பும் வேலையை நீங்கள்தான் செய்யவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கோபமாக கூறினார் . தேவர்கள் பீமன் அரசமாளிகையில் இல்லை என்றனர். அதற்க்கு திரௌபதி, "அவன் எங்கே இருக்கிறான் என கண்டுபிடியுங்கள் என்று அதட்டினார். திடீரென நாரதர் எழுந்து நின்றார் ! அவர் கூட பெசுவதர்ற்கு அனுமதி பெற வேண்டி இருந்தது . ஆணை கிடைத்ததும் "பீமன் இங்கு அருகிலுள்ள ஆலமரத்தின் மேல் மறைந்திருக்கிறான் என்றார் . த்ரௌபதி கோபத்துடன் உரத்த குரலில் யம கிங்கரர்களை அழைத்து பீமனை இழுத்து வாருங்கள் என்று கட்டளை இட்டார். அவர்களும் தீப்பந்தத்துடன் ஆலமரத்தை நெருங்கினர். பீமசேனன் பயத்தால் கீழே குதித்துவிட்டார். அவர் ஓடிவிட விரும்பினார்.

பீமன் கீழே குதித்து ஆச்சரியத்துடன் இங்குமங்கும் பார்க்க எங்குமே தேவர்களோ தேவசபையோ பாண்டவர்களோ த்ருவ்பதியோ கிருஷ்ணனோ யாருமே இல்லை. அந்த பூமி தூய்மையாகவும் இல்லை. தலை குனிந்தபடி பீமன் நகரத்திற்கு திரும்பினார். வழியிலேயே கிருஷ்ணனை சந்தித்தார். என்ன பீமா என்னுடைய மாயையை பார்த்தாயா? என்று புன்னகையுடன் வினவ பீமன் " சுவாமி தங்களின் மாயையை பார்த்தேன் நீங்கள் இனிமேல் ஒரு போதும் அத்தகைய மாயையை காண்பிக்கவேண்டாம் என்றார். கிருஷ்ணனும் சிரித்துக்கொண்டே பீமனுடன் அரண்மனைக்கு திரும்பினார். ஆனால் பீமனின் முகம் தொங்கியே இருந்தது. அவர் கவலையாகவே இருந்தார். தாயார் குந்தி அவரிடம் காரணத்தை கேட்டதும் பீமன் அழுதே விட்டார். தான் கண்டதையெல்லாம் தாயாரிடம் கூறினார். மேலும் பீமசேனன் "ஸ்ரீ கிருஷ்ணன் காட்டிய இந்த மாயை முற்றிலும் ஆதாரமில்லாமல் போகாது. த்ரௌபதிதான் மஹா மாயை என்பதை உணர்ந்தேன். ஆனால் அவளுடைய முடிவு பெறாத கப்பரை என் மனத்திலிருந்து மறைய மாட்டேன் என்கிறது என்றார்.

தாயார் குந்தி தன் மகனுக்கு ஆறுதல் கூறினார். அப்பொழுதே எதோ பேசிக்கொண்டனர். அந்த யோஜனையினால் பீமன் கவலை இல்லாது தூங்க முடிந்தது.

காலையில் எழுந்ததும் த்ரௌபதி தன் மாமியாரின் கால்களை வணங்குவது நித்ய நியமாக வைத்திருந்தார். பீமசேனன் காலையில் த்ரௌபதி வரும் முன்னர் குந்தியின் அறையில் மறைந்திருந்து த்ரௌபதியின் வருகைக்காக காத்திருந்தார். .த்ரௌபதி வழக்கம்போல் குந்தியை வணங்கினார். குந்தி ஆசிர்வாதம் செய்தபின் த்ரௌபதியிடம் "நீ என் நம்பிக்கையை வீணாக்காமல் இருப்பதாக வாக்கு தந்தால், இன்று உன்னிடம் ஒன்று கேட்ப்பேன்" என்றார். த்ரௌபதி "அம்மா கட்டளை இடுங்கள்" என்றார். குந்தி "மருமகளே ! எனக்கு என் ஐந்து புதல்வர்களுடைய வாழ்வுக்குமான வரம் தா” என்று கேட்டார்.

த்ரௌபதி திடீரென்று தலையை குனிந்து கொண்டு பற்களால் நாக்கை அடக்கிக் கொண்டார். இரண்டு வினாடி நிறுத்தி "சரி அம்மா" என்றார். அவர் மனதிற்குள் " ஸ்ரீ கிருஷ்ணா ! உன் விருப்பம் நிறைவேறட்டும் என்று கூறிக் கொண்டார்.

இந்த சம்பவம் நிகழ்ந்திராவிடில் மஹா பாரத யுத்தத்தில் பீமசேனன் உயிர் தப்பியிருக்க முடியுமா என்பது தெரியாது.
அன்பர்களே ! இந்த சம்பவம் உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஸ்ரீ கிருஷ்ணர் உங்களுக்கு எல்லாவித நன்மைகளையும் அளிக்கட்டும். அனுதினமும் நாம ஜபம் செய்வோம் ! அது நம்மை மாயையிலிருந்து நம்மை காப்பாற்றி ஸ்ரீ கிருஷ்ணனுடன் சேர்க்கட்டும் !

என்றும் தங்கள் நலம் மட்டுமே விரும்பும்
அன்பன் ரமணி ராமஸ்வாமி
 — 





















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக