செவ்வாய், 28 ஏப்ரல், 2015

பார்வை இல்லாதோருக்கு பயன் தரும் பயோனிக் கண்ணாடி!

 ராதே கிருஷ்ணா 28-04-2015










பார்வை இல்லாதோருக்கு பயன் தரும் பயோனிக் கண்ணாடி!

இந்தியாவில் மட்டும் இரண்டரை கோடிப் பேர் பார்வையை இழந்து தவிக்கிறார்கள். இப்படி இழந்த பார்வையை மீட்டுத் தருவதற்கு மருத்துவ உலகம் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறது. இவற்றில் சமீபத்திய வரவு, பயோனிக் கண்!

இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவதற்கு முன்னால் நமக்குப் பார்வை எப்படிக் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வது நல்லது…கண்ணின் வெளியில் தெரிகிறவெண்மையான பகுதிக்கு ‘ஸ்கிலீரா’ என்று பெயர். அதன் மேல் படர்ந்திருக்கும் மெல்லிய திசு உறைக்குக் ‘கஞ்சங்டிவா’ என்று பெயர். அடுத்து ஒரு வட்டமாகத் தெரிவது ‘ஐரிஸ்’. கண்ணுக்கு நிறம் தருவது இதுதான்.

நீலம், பச்சை, மாநிறம், கறுப்பு என்று ஏதேனும் ஒரு நிறத்தில் இது அமைந்திருக்கும். இதன் நடுவில் ‘பாப்பா’ என்று அழைக்கப்படுகிற ஒரு துவாரம் இருக்கும். இதன் வழியாகத்தான் நாம் பார்க்கிற காட்சிகள் கண்ணுக்குள் நுழைகின்றன.

கைக்கடிகாரத்தை மூடியிருக்கிற கண்ணாடி மாதிரி ஐரிஸை மூடியிருக்கிற திசுப்படலத்துக்கு ‘கார்னியா’ என்று பெயர். கண்ணில் ரத்தக்குழாய் இல்லாத பகுதியும் இதுதான். நிறமில்லாத பகுதியும் இதுதான்.

கேமராவில் உள்ள அப்பர்ச்சர் அமைப்பு மாதிரிதான் இதுவும். அதிக வெளிச்சம் வந்தால் பாப்பா சிறிதாகச் சுருங்கி விடுகிறது. குறைந்த வெளிச்சம் என்றால் பெரிதாக விரிந்து கொடுக்கிறது. இந்தச் செயலுக்கு இதன் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிலியரி தசைகள் உதவுகின்றன.

கார்னியாவுக்குப் பின்புறம் விழிலென்ஸ் உள்ளது. அதற்குப் பின்னால் விழித்திரை உள்ளது. நாம் பார்க்கும் பொருளின் பிம்பத்தைக் கார்னியாவும் லென்சும் விழித்திரையின் மேல் விழச்செய்கின்றன.

இந்த பிம்பம் விழித்திரையிலிருந்து கிளம்பும் கண் நரம்பு வழியாக மூளைக்குக் கடத்தப்படுகிறது. அந்தக் காட்சி ஆக்சிபிடல் கார்டெக்ஸ் பகுதியில் பகுக்கப்படுகிறது. இதன் பலனால் நாம் பார்க்கும் பொருள் என்ன என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

இந்தக் கட்டமைப்பில் எங்கு பிழை ஏற்பட்டாலும் பார்வை குறையும்; அல்லது பறி போகும். கார்னியாவில் பழுது ஏற்பட்டால், தானமாகப் பெறப்பட்ட கார்னியாவைப் பொருத்தி பார்வையை மீட்கலாம். லென்ஸில் பாதிப்பு ஏற்பட்டு கிட்டப்பார்வை,

தூரப்பார்வை தோன்றுமானால் கண்ணில் கண்ணாடி அணிந்துகொண்டோ, கான்டாக்ட் லென்ஸைப் பொருத்திக்கொண்டோ சமாளித்து விடலாம். லென்ஸில் கேடராக்ட் வந்து பார்வை குறைந்தால் செயற்கை லென்ஸைப் பொருத்திக் கொள்ள, பார்வை கிடைத்துவிடும். விழித்திரைக் கோளாறுகளால் பார்வையை இழக்கும்போது லேசர் சிகிச்சை கைகொடுக்கிறது.

பார்வை பறிபோன ஒருவருக்கு இப்படிப் பல வழிகளில் பார்வையை மீட்டுத்தரும் மருத்துவ உலகம், மரபுக்கோளாறி னால் ஏற்படுகிற பார்வை இழப்பை மீட்டுத் தருவதற்கு இன்னமும் சரியான வழியைக் கண்டுபிடிக்கவில்லை. இவர்களுக்குக் கை கொடுக்கவே இப்போது வந்திருக்கிறது பயோனிக் கண்கள்.

‘பயோனிக்’ என்றால் எலெக்ட்ரானிக் மற்றும் மென்பொருள்களால் தயாரிக்கப்பட்ட செயற்கை உடலுறுப்பு என்று அர்த்தம். உடலில் இயற்கை உறுப்பு செய்யும் அதே வேலையை இந்த பயோனிக் உறுப்பு உடலின் வெளியிலிருந்து செய்யும்.

முதன்முதலில் 1983ல் போர்ச்சுக்கீசிய மருத்துவர் ஜோவோ லோபோ ஆன்டியூன்ஸ் என்பவர்தான் பயோனிக் கண் பொருத்தும் முறையைக் கண்டுபிடித்தார். இவருடைய கண்டுபிடிப்பில், வெறும் இருட்டாகத் தெரிந்த ஒருவருக்கு பயோனிக் கண்ணைப் பொருத்தியதும் சிறிது வெளிச்சமும் காட்சிகள் நகர்வதும் தெரிந்தன. காட்சிப் பொருள் முழுவதுமாகத் தெரியவில்லை. இவருக்குப் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அமைப்பில் பல மாறுதல்களைச் செய்து முழுமையான பார்வை கிடைப்பதற்கு முயற்சித்து வந்தனர்.

அவர்கள் முயற்சிக்கு இப்போது ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்தச் சாதனையைப் புரிந்திருப்பவர்கள் அமெரிக்காவில் ரோசெஸ்டரில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த 68 வயது ஆலன் ஜெராடுக்கு இருபதாண்டுகளுக்கு முன்பு விழித்திரையில் ‘ரெட்டினைட்டிஸ் பிக்மென்டோசா’ என்ற நோய் வந்து பார்வை பறிபோனது.

இது ஒரு பரம்பரைக் கோளாறு. மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை இல்லை என்ற நிலைமைதான் இதுவரை நீடித்தது. இவருக்கு பயோனிக் கண்ணைப் பொருத்தி சாதித்திருக்கிறார் டாக்டர் ரேமண்ட் லெஸ்ஸி. இவர்தான் இந்த ஆராய்ச்சிக்குழுவின் தலைவர்.

‘‘முதலில் ஆலனின் வலது கண்ணின் விழித்திரையில் சிலிக்கன் சில்லைப் பொருத்தினோம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு ‘செகண்ட் சைட்’ நிறுவனம் இவருக்கென்றே தயாரித்துக் கொடுத்த பயோனிக் கண்ணாடியைத் தந்தோம்.

கண்ணாடியின் மூக்குப் பகுதியில் உள்ள கேமரா, எதிரே காண்கிற காட்சிகளைப் படமெடுத்து அவரது பாதிக்கப்பட்ட விழித்திரைக்குச் செலுத்த, அங்குள்ள சிலிக்கன் சில்லு அந்தக் காட்சிகளை மின் சமிக்ஞை களாக மாற்றி பார்வை நரம்பு வழியாக மூளைக்கு அனுப்ப, மூளை எதிரே பார்ப்பது பூவா, பழமா, பேருந்தா, ஆட்டோவா என்று தெரிவித்து விடுகிறது.

இருப்பினும் ஒரு சராசரி மனிதரால் பார்க்க முடிகிற மாதிரி தெள்ளத் தெளிவாகக் காட்சிகள் தெரியாது. ஆனால் இப்போது எதிரே இருப்பவரை அடையாளம் காண முடிகிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அவருடைய மனைவியைப் பார்த்து அதிசயத்துப் போவார் ஆலன்’’ என்கிறார் ரேமண்ட் லெஸ்ஸி.

‘குச்சியை வைத்து தட்டுத் தடுமாறி நடப்பதற்குப் பதிலாக இந்தப் பயோனிக் கண்ணாடியை அணிந்த பிறகு தன்னம்பிக்கையுடன் என்னால் நடக்கமுடிகிறது. இதுவரை வெறும் இருட்டையே பார்த்துக்கொண்டிருந்த நான் இப்போது கறுப்பு வெள்ளையில் காட்சிகளைப் புரிந்து கொள்கிறேன், பழகப் பழக இன்னும் நன்றாகப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு இது ஒரு உற்ற தோழனாக உதவுகிறது’’ என்று மகிழ்கிறார் ஆலன்.




















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக