சனி, 14 டிசம்பர், 2013

"உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?"

ராதே கிருஷ்ணா 15-12-2013

"உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?"





"உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?"
.
மகா பெரியவாளின் கேள்வி.



[மகா பெரியவாளின் அறிவுரைகள் பல முறை நகைச்சுவையுடன் கலந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்கள் பல முறை பக்தர்கள் முன் நடந்துள்ளது.)

ஒருமுறை இருபதுபேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் அவரை தரிசிக்க வந்திருந்தனர். ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருக்க, அனைவரையும் ஆசிர்வதிக்கும் முன் பெரியவர் ஆண்கள் கூட்டத்தை நோக்கி கேட்டார்.

"உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?".

திடீரென்று சம்பந்தமில்லாத கேள்வியை கேட்டு அதிர்ந்து போனாலும், அனைவரும் சமாளித்துக் கொண்டு கை தூக்கினர்.

பெண்கள் அமர்ந்திருந்த பக்கத்தை நோக்கி "இந்த கேள்வி உங்களுக்கு இல்லை. கையை கீழே இறக்குங்கள்" என்றுவிட்டு ஆண்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி "சரி! சாம்பார் செய்வது எப்படி என்று விளக்குங்கள்" என்றார்.

ஒரு நாள் கூட சமையல் அறை பக்கம் எட்டிக்கூட பார்க்காத ஆண்கள் பலரும் பலவிதத்தில் விவரித்தனர்.

"சம்பார்பொடி, தேவையான உப்பை, புளி தண்ணீர் இவை கலந்து கொதிக்க வைத்தால் சாம்பார் ரெடி" இது ஒருவர் விளக்கம்.

"மிளகாய் வற்றலை தேவையான பருப்பு வகைகளுடன் எண்ணை விட்டு வறுத்து எடுத்து பொடியாக்கி, புளியை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீருக்கு தேவையான உப்பை போட்டு, கொதிக்க வைத்து இறக்கும் வேளையில் மல்லி, கருவேப்பிலை இலைகளை போட்டு சாம்பார் தயாரிக்கவேண்டும்" இது ஒருவர்.

இப்படி பல ஆண்களும் பல விதத்தில் விவரிக்க பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் தலையாட்டிக்கொண்டே இருந்தார்.

சட்டென்று அனைவரையும் அமைதியாக இருக்க கை காட்டி விட்டு பேசினார்.

"நீங்கள் அனைவருமே ஞானிகள். நான் என்ன ஞானி?

அந்த எளிய பக்குவம் கூட எனக்கு வரவே இல்லையே!" என்றார்.

கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். பெரியவர் என்னவோ மனதில் நினைத்து தான் இதை சொல்கிறார் என்று மடத்து சிப்பந்திகளும் புரிந்து கொண்டு அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெரியவர் பேசலானார்.

"இத்தனை பேர் விளக்கம் அளித்தீர்கள். ஒருவர் கூட "தான்" போட வேண்டும் என்று சொல்லவில்லையே. அந்த தான் என்பதை மறந்தவர்கள் அல்லவா ஞானிகள். நான் பேசும் போது கூட அந்த "தான்" என்கிற வார்த்தையை உபயோகப் படுத்துகிறேனே. நீங்கள் அதையும் மறந்து அல்லவா மிக எளிய விஷயத்தை விவரிக்கிறீர்கள். அது தான் நமது மதத்தின் பெருமை. சின்ன சின்ன விஷயங்களில் கூட ஞானம் அடைய வேண்டி வார்த்தைகளை, கருத்துக்களை நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் அனைவரும் க்ஷேமமாக இருக்கலாம். அனைத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள். செம்மை அடையலாம்" என்று கூறி அனைவரையும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

"தான்" என்கிற வார்த்தை இரண்டு அர்த்தங்களை உட்கொண்டது. ஒன்று "நான்" என்பது பொருள். இன்னொன்று சாம்பாரில் போட உபயோகிக்கும் காய்கறி வகைகள்.

பெரியவர் மிகப் பெரிய உண்மைகளை எப்படி எளிய வழியை கையாண்டு நமக்கு உபதேசித்தார் என்பதற்கு இது மிக எளிய உதாரணம்.
 — with Kaliamurthy Twad.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக