ராதே கிருஷ்ணா 11-12-2013
பலன்தரும் பரிகாரத் தலம்: பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும்!
By இராம.விஜயகுமார்
First Published : 23 December 2011 10:00 AM IST
கன்னிவாடி சோமலிங்க சுவாமி ஆலயம்!
வாழும் காலத்தில் ஏற்பட்ட தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய, பல தலங்கள் உள்ளன. ஆனால் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்களால், வாழும் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு பரிகாரம் செய்யக்கூடிய தலமாக அமைந்துள்ளது அருள்மிகு சோமலிங்க சுவாமி ஆலயம்.
விஷ்ணு மலையில் சிவன்: "ஹரிகேச பர்வதம்' என்று சித்தர்களால் அழைக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில் உள்ளது இத்திருத்தலம். சிவனுடைய திருத்தலம், விஷ்ணுவின் பெயரால் அழைக்கப்படும் மலையில் அமைந்திருப்பது சிறப்பு. இம்மலையை தூரத்திலிருந்து பார்க்கும் போது விஷ்ணு பகவான் ஆதிஷேசன் மேல் சயனித்திருப்பதைப் போன்று காட்சி தருகிறது. நம் முன்னோர்கள் கோவில் வழிபாட்டை மூன்றாகப் பிரித்துள்ளனர். அதன்படி இது நிலக் கோவிலாகவும், மலைக் கோவிலாகவும், குகைக் கோவிலாகவும் உள்ளது மற்றொரு சிறப்பு.
பெயர்க் காரணம்: கன்னிவாடி என்று இத்தலத்திற்கு பெயர். கரூரார் மற்றும் கொங்கணர் ஆகிய இரு சித்தர்களும் போகருக்கு பத்மினி ரகத்தைச் சேர்ந்த பெண்ணைத் தேடிச் சென்றனர். கிடைக்காததால் கற்சிலையை உயிராக்கிக் கொண்டு வந்தனர். அதை "கல் நீ வாடி' என்று அழைத்ததால் கன்னி வாடி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
திருவிளையாடல் புராணத்தில் சிவன் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்துவிட்டு பார்வதியுடன் ஆகாய மார்க்கமாகச் சென்றார். அப்போது இம்மலையின் அழகைக் கண்ட பார்வதி நின்று ரசித்தார். அப்போது முன்னால் சென்ற சிவன் "பூவைக்கன்னி வாடி' என்று அழைத்ததால் இது கன்னிவாடி என அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
குகையில் லிங்கம்: ஒரு சிறு கர்ப்ப கிரகத்திற்குள் சிவன் லிங்க வடிவில் சோமலிங்கராக அருள்பாலிக்கிறார். கர்ப்ப கிரகத்தின் மீது கூம்பு வடிவிலான சிறு கோபுரம் உள்ளது. கோவிலுக்கு முன்பாக நந்திபகவான் அமர்ந்துள்ளார். இடது புறமாக விநாயகர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதன் பின்னால் மெய்கண்ட சித்தர் வாழ்ந்த, தீப வடிவிலான குகை உள்ளது. இதற்கு அருகில் மலை மீதிருந்து மூலிகைகள் கலந்த, சுவையுடைய ஊற்று நீர் வந்து சேருகிறது. இதற்கு "வேதியூற்று' என்று பெயர். இந்த ஊற்று அகஸ்தியரால் உண்டாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதனை அருந்துபவர்கள் நீண்ட ஆயுள் பெறுவர் எனபதும் நம்பிக்கை. இந்த ஊற்றின் அருகில்தான் முருகனின் நவபாஷான சிலையை போகர் உருவாக்கினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆதாரமாக சிலையை உருவாக்க போகர் பயன்படுத்திய அரைத்த உரலும், சாம்பலும் இன்னும் உள்ளன.
அகஸ்தியர், போகர், கொங்கனர், கரூவூரார், கோரக்கர் போன்ற சித்தர்களே சிவபெருமானை சோமலிங்க சுவாமியாக பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.
பரிகாரம்: லிங்கத்திற்கு அபிஷேகம் செய்துவிட்டு இங்குள்ள வேதியூற்று நீரை பருகுவோருக்கு பலன் கிடைக்கிறது. குறிப்பாக பூர்வ ஜென்ம தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகார ஸ்தலமாக இது விளங்குகிறது. இங்கு வழிபாடு செய்வதால் கல்வியறிவு பெருகும். தடைபட்ட திருமணம் நடந்தேறும். மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை நீங்கும். மழலை பாக்கியம் உண்டாகும்.
விசேஷங்கள் : இக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜை நடந்து வருகிறது.
மாதா மாதம் பிரதோஷ தினத்தன்று சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. அப்போது பக்தர்களால் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இதுதவிர குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூஜை பொருட்கள் மற்றும் மாலைகளை கன்னிவாடி பேருந்து நிறுத்தத்திலேயே வாங்கிக் கொள்ள வேண்டும்.
அமைவிடம்: ஒட்டன்சத்திரத்திலிருந்து மதுரை செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கன்னிவாடி. பழனி சாலை வழியாகவும் பேருந்து வசதி உண்டு. கன்னிவாடி பேருந்து நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.
மேலும் விவரங்களை அறிய 99769-62536, 96887}89108 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக