புதன், 4 டிசம்பர், 2013

மாயா இனத்தவர்

ராதே கிருஷ்ணா 04-12-2013

மாயா இனத்தவர்

மாயாக்கள் இருந்தார்களா? பல நூற்றாண்டுகளுக்கு முன், தெளிவற்ற காரணத்தோடு, ஒரு இனம் உலகின் பார்வையிலிருந்து காணாமற் போகிறது. அந்த இனத்தின் பெயர் மாயா. அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை. நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோவிலின் வேலைபாடுகள் நிறைவடையவில்லை. சிலைகள் பாதியாய் ஊருவம் வாங்கி நிற்கின்றன. அனைத்துக் கட்டுமாணங்களும் பாழடைந்து புதைந்து கொண்டிருக்கிறது. வேண்டுதல்களும், மாய மந்திர வேலைகளும் நின்றுவிட்டது. அன்று முதல், இவ்வினத்தின் மூதாதைகளின் புத்திசாலிதனமும், கற்பித்தலும் காற்றோடு கலந்துவிட்டது. மிச்சம் மீதி இருந்த மாயா இனத்தவர்களுக்கு எழுத்தின் மீதும் படிப்பறிவின் மீதும் கண் பார்வையற்று போயிற்று. அவர்களுக்கு வாழ்க்கை நேறியும் மறந்து போயிற்று. அவ்வினம் மிருகத்தன்மையை அடைந்தது. மேற் கூறியவை மெக்ஸிகோ நாட்டின் காட்டுப் பகுதியில் மர்மமாய் தோன்றி மறைந்த மாயா நாகரிக அராய்ச்சியாளர்களின் அறிக்கை. 1000 வருடங்களுக்கும் மேலாக இவ்வளவு ஆச்சரியமும், அற்புதமும் நிறைந்த நாகரிகம் புதைந்து கிடந்த்தை யாரும் கண்டறியவில்லை. 1839-ஆம் ஆண்டு, அமேரிக்காவை சேர்ந்த எழுத்தாளரான John Lloyd Stephens தமது உதவியாளர் ஒருவரின் துணையோடு அங்கே செல்கிறார். பாழடைந்த பழமைமிக்க நகர பகுதி அங்கே உதித்து மறைந்ததை அவர் கண்டுபிடிக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகாலமாக செடிகொடிகள் படர்ந்திருந்த கட்டிடங்கள் கலைதிறன் மிக்க வேலைபாடுகளோடு உறுதியோடு இருக்கக் காண்கிறார். அடுத்ததாக அவர் ஒரு விசித்திரத்தை காண்கிறார். அவ்விடத்தில் மனிதர்கள் யாரையும் காண முடியவில்லை. நீண்ட காலமாக அவ்விடம் நாதியற்று கிடந்திருக்கிறது. அன்று முதல் அவ்விடம் ஆராய்ச்சிக்குள்ளாகிறது. ஆராய்ச்சியின் மேல் ஆராய்ச்சிகள் நடந்து புதைந்து போன மாயா இனத்தவரின் வரலாற்றைத் தோண்டி எடுக்கிறார்கள். மாய இனத்தவர்கள் ஆச்சரியமிக்க நாகரிகத்தை உருவாகியுள்ளார்கள், பலப் பல துறைகளில் அறிவு திறன்மிக்கவர்களாக திகழ்திருக்கிறார்கள். இவையாவும் உலக நாகரிகம் வளர்ராத காலத்தில் நடந்தவை. இந்த கண்டுபிடிப்பின் மகிழ்ச்சியில், ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு விந்தையும் உதித்தது. ஒரு நகரத்தை வளர்ச்சியடைய செய்து பின்னர் எதற்காக அதைவிட்டு மறைந்தார்கள் என்பதே அவர்களின் வியப்பாகும். மாயா இனத்தவர்கள், அவர்களின் பொற்காலத்தின் போது உலகிற்குப் பயனுள்ள பல துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்திருக்கிறார்கள், கலைத்திறனும் புத்திக் கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்கப் பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால் இப்பகுதி அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அழிக்கப்பட்டது. இச்செயல் உலகிற்கு மாயா இனத்தவரை பற்றிய பல உண்மைகளை உணர்த்த முடியாமலும் செய்துவிட்டது. அது நமக்கு பெரும் நஷ்டமும் கூட. தற்சமயம் நமக்கு வெளிபடையாக கிடைத்திருப்பது அந்நாகரித்தை பற்றிய சிறு துளியளவு கண்டுபிடிப்புகள் மட்டுமே. இவையாவும் அவ்விடத்தில் கிடைக்கப் பெற்ற சில துண்டு எழுத்துகளின் வடிவில் கிடைத்தவையாகும். இந்த மர்ம நகரில் பெரும் கற்களைக் கொண்ட கட்டிட வேலைபாடுகள் உள்ளன, பெரிய அளவிளான நகர வடிவமைப்பு, எழுத்துக்கள், மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின் போற்றதக்க கலைத்திறன்களாகும். இவை தற்போதய தொழில்நுட்பத்தைவிடவும் மேலானவையாகவே கருதப்படுகிறது. எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறது. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலை மாயா இனத்தவரின் வான் ஆராய்ச்சி நுட்பத்தை குறிக்கிறது. இதைத் தவிர்த்து கட்டிடங்களின் உட்புறமும் வெளிப்புறமும் பல வகையான எண்களால், வான் மாற்றங்களை பற்றிய விடயங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது. மாயாக்களால் எப்படி ஆசாத்தியமிக்க கட்டிடங்களை எழுப்ப முடிந்தது? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? இவர்களது கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த மர்ம நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாயக்கள் இப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்ததும், அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும் அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். மாயாக்கள் எவ்விதமான தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தகய நகரத்தை அமைத்தார்கள் என்பதும் கோள்விக்குறியே. அராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சிக் காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயாக்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்டப் பொற்காலம் எனவும் கூறுகிறார்கள். 900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். அனாலும் இது முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில் மாயாக்கள் மறைந்து போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குக் காரணம் மாயா நகரப் பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்றுக் கிடந்தது தான். இதன் பின் ஆராய்ச்சியாளர்கள், மாயாக்களின் வம்சாவழியினர் தென் அமேரிக்க பகுதிகளில் இன்றளவும் வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களில் பல பிரிவினர் இருந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள். மாயாக்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். மாயாக்களின் கலைத் திறன் மிகவும் நுட்பமானது, சிற்பக் கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. கட்டிட கலையும் இவற்றுள் அடங்கும். மாயாக்களால் Tikal, Palenque, Copan, Kalakmul, Dos Pilas, Uaxactun, Altun Ha போன்ற நகரங்கள் மிகவும் திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். மாயா நகர பகுதியில் காணப்படும் stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் heiroglyphik எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மை. Bonamak என்ற இடத்தில் அமைந்த மாயாக்களின் சிற்ப கலைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாகத் தங்களது ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள் மாயாக்களின் நாகரிக வளர்ச்சியைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன. மாயாக்களின் எழுத்தின் அடிப்படையில், இச்சிற்பங்களை வடிவமைத்தவர்கள் தங்களது பெயரை சிற்பத்தின் எதாவது ஒரு இடத்தில் பொறித்துள்ளார்கள். இதனால் சிற்பிகள் மாயாக்களின் காலத்தில் பேற்றதக்கவர்களாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. சிற்பகலை வருங்கால சந்ததியினருக்கு இவர்களின் சரித்திரத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என முன்னதாகவே இவர்கள் அறிந்திருக்கின்றனர். மாயாக்களால் நுட்பமாய் செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயினும் உறுதியாகவே இருக்கின்றன. பிரமிடு, வழிபாட்டு இடங்கள் மற்றும் வியாபார தளங்கள் இந்நாகரிக வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளன. இவையே ஆராய்ச்சியாளர்கள் மாயா நாகரிகத்தை அறிந்து கொள்ளச் சிறந்த தடயமாய் அமைந்தது. மாயாக்கள் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள். பிரமிடுகள் உயரமான மலை பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவன் இருக்கும் சொர்க வாசலை அவர்கள் சுலபமாக நெருங்க முடிவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர் . ஆராய்ச்சியாளார்களின் கவனத்தை ஈர்த்த இன்னோரு விசயம் மாயாக்களின் விளையாட்டு மையம். ஒவ்வோரு மாயா நகர பகுதிகளிலும் மிகப் பெரிய பந்து விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இம்மைதானங்கள் ஆங்கில எழுத்தின் ‘I’ ‘ஐ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மாயாக்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது. 1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது. இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வான் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளன. சுவாரசியமான ஒரு நாவலில் கடைசிப் பக்கம் இல்லாமல் போனால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது மாயாக்களின் வரலாறும். மேலும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக