செவ்வாய், 31 டிசம்பர், 2013

இயற்க்கை விஞ்சானி - நம்மாழ்வார்

ராதே கிருஷ்ணா 01-01-2014

இயற்க்கை விஞ்சானி - நம்மாழ்வார்













From the album: Cover Photos
By Ravi Nag
Dr Nammalvar - 1938 - 2013 இதை கவர் பேஜில் பகிர்வதை பெருமை அடைகிறேன்.......

இயற்க்கை விஞ்சானி - நம்மாழ்வார் இறைவனடி சேர்ந்துவிட்டார்........அவரை சரியாய் பயன்படுத்தியிருந்தால் நாம் இன்னும் அதிகம் மெனக்கெட்டு இருந்திருக்கலாம் சுற்று சூழலிலும் விவசாயத்திலும். அவர் கூறியதிலே எனக்கு பிடித்த ஒன்று உங்களுக்கும்.............

நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்களை பின்பற்றினாலே போதும் வாழ்வில் நோயற்ற வாழ்க்கைச் சூழலில் வாழலாம் !!!

இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம்,கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வார்.

"'எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால்,பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.

தினமும் காலையில் கம்பு, தினை மாவு, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து கஞ்சிவைத்துக் குடிக்கிறேன். இந்தக் கஞ்சி விஷம் இல்லாதது. அதாவது, ரசாயனம் இல்லாதது. கரும்புக்கு ரசாயனம் இடுவதால் வெல்லத்தில் ரசாயனம் இருக்கிறது. பனை மரத்தில் ஏறி நம் ஆட்கள் இன்னும் பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதனால்தான் பனை வெல்லம் சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது.

பகல் வேளையில் ரசம் அல்லது மோர் மட்டுமே சேர்த்துக் கொஞ்சமாக சாதம் சாப்பிடுகிறேன். இடையில் காய்கறி ரசம். இரவில் இரண்டு அல்லது மூன்று இட்லி மட்டுமே ஆகாரம். பசிக்காவிட்டால் சாப்பிடுவது இல்லை. இதுதான் என்னுடைய சாப்பாட்டு அட்டவணை.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விடுதிகளில் சாப்பிடுவது இல்லை. அதிகபட்சமாக நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் பழங்கள், கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் மட்டுமே என் உணவு. காபி, டீ சாப்பிடுவதைவிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் டன் அளவு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களையே இன்றைக்கு மக்கள் சாப்பிடுகிறார்கள். நோயோடு பலரும் வாழ்வதற்கு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் ஒரு முக்கியமான காரணம்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் நன்றாக இருக்கும். உடல், மன ஆரோக்கியத்துக்கு இயற்கை ஒரு பெரிய வரப்பிரசாதம். செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும். இதை ஒரு சிகிச்சைமுறையாகக்கூட மருத்துவர்கள் சொல்வார்கள். தாவரங்களிடமும் செல்லப் பிராணிகளிடமும் அன்பு செலுத்திப் பாருங்கள். அதன் மகத்துவம் புரியும்'' இன்றைய இளைஞர்களின் புகை, மதுப் பழக்கம் அதிகமாக இருக்கிறது

''மது, புகை வியாபாரிகள் தங்களது லாபத்துக்காக இளைஞர்கள் மீது இந்தப் பழக்கத்தைத் திணிக்கிறார்கள். வருங்காலத் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்கள், மது - புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரலையும் குடலையும் கெடுத்துச் சீரழிகிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சமூகச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் சிக்கல் என்று எல்லாத் தரப்பிலும் பிரச்னைகள் குவிகின்றன. இதை அனைவரும் சேர்ந்து ஒருமித்துக் கண்டிக்க வேண்டும். 'உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் நாம் செய்யக் கூடாது’ என்ற உறுதியான சுயக் கட்டுப்பாடு ஒன்றே இதுபோன்ற தீய பழக்கங்களின் பிடியில் சிக்காமல் நம் சமூகத்தை காக்கும்.

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்’

- என்கிறார் வள்ளுவர்.

அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அதில் கலக்கும் ரசாயனங்கள் நம் வயிற்றுக்குள் சென்றும் அதே வீரியத்தோடுதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பசித்தால் மட்டுமே உணவு, அதுவும் இயற்கை உணவு; அதையும் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரோடு சேர்த்து ரசித்து மென்று சாப்பிட்டால் எப்படி வரும் வியாதி? எல்லாமே கலைதான்!

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும்,உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு. நான் நாள் தவறாமல் யோகாசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைச் செய்கிறேன். முதுகெலும்பை நேராக வைத்திருக்கும் வஜ்ராசனமும் செய்வேன். இவைதான் என் ஆரோக்கிய ரகசியம்'' என்று குறிப்பிடுகின்றார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக