செவ்வாய், 21 மே, 2013

இந்தியாவின் பலம். அலறுகிறது சீனா!

ராதே கிருஷ்ணா 21-05-2013



இந்தியாவின் பலம். அலறுகிறது சீனா!

ராணுவ வலிமையில் பொதுவாக சீனாவுக்கு அடுத்தநிலைதான் எப்போதும் இந்தியாவுக்கு. ஆனால் இனி அப்படிச் சொல்ல முடியாது. சீனாவே அலறும் அளவுக்கு பலமிக்கதாக இந்திய ஆயுத பலம் மாறியிருக்கிறது, அக்னி 5 ஏவுகணை மூலம்!
அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துவிட்டது.

அக்னி ஏவுகணை 17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியது. இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும்.
சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை கொண்ட அணு குண்டையோ அல்லது வேறு ஆயுதங்களையோ இந்த ஏவுகணையால் ஏந்திக் கொண்டு 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும் (உண்மையில் இது 8000 கிமீ என்கிறது சீனா).

மூன்று பாகங்களைக் கொண்ட இந்த ஏவுகணை, ஏவப்பட்டவுடன் முதலில் பூமியிலிருந்து 40 கி.மீ. உயரத்தை அடையும். அத்தோடு அதன் முதல் பகுதி ராக்கெட் தனியே கழன்றுவிடும்.
இதையடுத்து அதன் இரண்டாவது ராக்கெட் செயல்பட்டு அதை மேலும் 150 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். இதன் பின்னர் அதன் 3வது ராக்கெட் இயங்கி அதை மேலும் 800 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும்.

இந்த உயரத்தை அடைந்த பின்னர் ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டர்கள், செயற்கைக் கோள் மற்றும் ரேடியோ சிக்னல்கள் உதவியோடு, அதை தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோக்கித் திருப்பும்.
இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில் இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்து குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும்.

3வது கட்ட ராக்கெட் செயல்பட ஆரம்பிக்கும்போது இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட 24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும்.

இந்த ஏவுகணையால் பாகிஸ்தான், சீனாவின் எந்தப் பகுதியையும், கிழக்கு ஐரோப்பாவையும், வடக்கு-கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்க முடியும்.
நிகோபார் தீவுகளில் இருந்து இதை ஏவினால் ஆஸ்திரேலியாவைக் கூட தாக்கலாம்.
திபெத் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்துள்ள நிலையில், இந்த அக்னி 5, சீனாவுக்கு எதிரான மிகப் பெரிய தற்காப்பாக இருக்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டும்தான் இத்தகைய திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ளன. இப்போது இந்தத் திறனைப் பெற்றுள்ள 5வது நாடு இந்தியாவாகும்.
இந்த ஏவுகணைக்கான தொழில்நுட்பத்தை இந்தியா, வேறு எந்த நாட்டு உதவியும் இல்லாமல் சுயமாக தானே உருவாக்கியுள்ளது என்பதுதான் மிக முக்கியமானது. சர்வதேச ஏவுகணைச் சட்டம் தடுப்பதால் இந்தியாவுக்கு இந்த விஷயத்தில் உதவ எந்த நாடும் முன்வரவில்லை. ராணுவத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவின் விஞ்ஞானிகளின் அபார முயற்சியின் பலன் இது.

அடுத்ததாக, இதைவிட அதிக திறன் கொண்ட ஏவுகணை ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியையும் இப்போதே ஆரம்பித்துவிட்டது இந்தியா. இது 10000 கிமீ வரை பாய்ந்து இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் பயத்தின் வெளிப்பாடு:

இந்த விவரங்களையெல்லாம் தெரிந்து கொண்டபிறகு, அலற ஆரம்பித்துள்ளது சீனா. பாகிஸ்தானை விட சீனாதான் இந்தியாவின் முதல் குறியாக இருக்கும் எனக் கருதும் அந்நாட்டு ராணுவம், இந்தியாவின் அக்னி 5 உண்மையில் 8000 கிமீ தூரம் தாக்கு அழிக்கும் வல்லமை கொண்டது. இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என கருத்து தெரிவித்துள்ளது.
அந் நாட்டின் அரசு பின்பலம் கொண்ட பத்திரிக்கைகள், இந்த ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக அவை குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் சீன ராணுவத்தின் மிலிட்டரி சயின்ஸஸ் பிரிவின் ஆராய்ச்சியாளரான டியு வென்லாங், அக்னி ஏவுகணை இந்தியா சொல்வது போல 5,000 கி.மீ. தூரம் மட்டும் பாயக்கூடியதல்ல. அது 8,000 கி.மீ. தூரத்தை கடந்து செல்லத் தக்கது என்று கூறியுள்ளார்.

மற்ற நாடுகளிடையே கலக்கத்தை உருவாக்குவதைத் தவிர்க்க இந்த ஏவுகணையின் உண்மையான திறனை இந்திய அரசு மறைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
சீன ராணுவ பல்கலைக்கழகத்தின் பேராசியரான ஷாக் ஷாவோஷாங் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், அக்னி 5 ஏவுகணையை இந்தியா மேலும் பலம் வாய்ந்த ஆயுதமாக வலுப்படுத்தக் கூடும் என்று கூறியுள்ளார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக