புதன், 28 ஆகஸ்ட், 2013

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

ராதே கிருஷ்ணா 28-08-2013

கோபம் வார்த்தையிலும் இருக்கக்கூடாது

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்


சினிமா நூற்றாண்டு விழா கமிட்டிக்கு சிவாஜி ரசிகனின் கண்ணீர் கடிதம் – ஸ்பெஷல் ஸ்டோரி!

image
அன்புள்ள சினிமா நூற்றாண்டு விழா அமைப்பாளர்களுக்கு அடியேன் சிவாஜி ரசிகனின் அன்பு வணக்கம்…
நம்ம பாரத தேசத்துக்குள்ள சினிமா வந்து 100 வருஷம் ஆகிப்போச்சுங்களாம். நம்ம தமிழ்நாட்டுக்குள்ள சினிமா வந்து 75 வருஷம் ஆகிப்போச்சுங்களாம். அந்த விபரமெல்லாம் எனக்கு தெரியாதுங்க. நான் வணங்குற தெய்வம், என் அன்பு அண்ணன் சிவாஜி பத்திதான் எனக்கு தெரியுமுங்க. விழுப்புரம் கணேசனா இருந்தவரு சிவாஜி கணேசனா மாறின கதைதான் தெரியுமுங்க.
பராசக்திலேருந்து பூப்பறிக்க வருகிறோம் வரைக்கும் 300க்கும் கூடுதலா அவர் நடிச்ச படங்கதான் தெரியுமுங்க. சிவபெருமான், சிவத் தொண்டர், வீரபாகு, கிருஷ்ணன், இப்படியாப்பட்ட கடவுள்கள நாங்க அவர் உருவத்துலதாங்க பார்த்திருக்கோம்.
கப்பலோட்டிய தமிழன், பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன் இவுங்களையும் அவர் உருவத்துலதாங்க பார்த்திருக்கோம். இன்னிக்கு நாலு வேடத்துல நடிக்கிறோம் அஞ்சு வேடத்துல நடிக்கிறோம்னு பீத்திக்கிறாங்களே அன்னிக்கே 9 வேஷத்துல நடிச்ச மனுஷன் அவரு. சஸ்பென்ஸ் திரில்லர் படம் எடுக்குறோம்னு பெருமையா சொல்றாங்களே. புதிய பறவையை விடவாய்யா ஒரு சக்சஸ் த்ரில்லர் வேணும்.
அவரு பண்றதெல்லாம் ஓவர் ஆக்டிங்குன்னு அவருக்கு பிடிக்காதவங்க சிலபேரு சொல்லுவாங்க. அந்த காலத்துல அதுதான்யா நடிப்பு. அவரும் தேவர் மகன், முதல் மரியாதையில நீங்க சொல்ற யதார்த்த நடிப்ப காட்டலியா. சிலபேரு அவரு ரொம்ப சிக்கனவாதி, யாருக்கும் எதுவும் செய்றதில்லேன்னு நாக்குல பல்லுபடாம சொல்லுவாங்க.
மற்றவங்க மாதிரி உதவி பண்ணிக்கிட்டு அதை பப்ளிசிட்டி பண்ணிக்க தெரியாது அவருக்கு. வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை இருக்கே பாஞ்சாலங்குறிச்சியில அதுக்கு இடமும் வாங்கி கொடுத்து சிலைய அமைச்சும் கொடுத்தது யாரு.. இன்னும் நிறைய இருக்கு.
மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சு சொத்துல பாதிய இழந்தது யாருக்காவது தெரியுமாய்யா?, பொய் சொல்லத் தெரியாம, துரோகம் பண்ணத் தெரியாம வேளைக்கு ஒண்ண பேசத்தெரியாம அரசியலுக்கு நாம லாயக்கில்லேண்ணு ஒதுங்கினவருய்யா அவரு. காமராசர் ஒருத்தரை மட்டும்தான் கடைசி வரைக்கும் தலைவரா நினைச்சு வாழ்ந்தவரு. இன்னிக்கு புதுசா நடிக்க வர்றவங்க ரெண்டு படத்துலயே நாலு பங்களா கட்டிக்கிறாங்களே. ஆனா என் தலைவனுக்கு இப்பவும் அன்னை இல்லமும், ராயபுரம் சிவாஜி பிலிம்சும், சூரக்கோட்டை பண்ணையும்தான்ய்யா சொந்தம்.
இதையல்லாம் நான் ஏன் உங்களுக்கு எழுதுறேன்னா. சினிமாவோட 100வது பிறந்த வருஷத்தை கொண்டாடப்போறீங்க. ரொம்ப சந்தோஷம். அம்பது வருஷம் சினிமா நடிப்புன்னு வாழ்ந்தானே என் தலைவன் அவனுக்கு என்னய்யா செய்யப்போறீங்க.
இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கீங்க. அவரு செத்த அன்னிக்கு சினிமா உலகமே கூடி அழுததோட சரி, அதுக்குபிறகு அவரை மறந்துட்டு அவுங்கவுங்க வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த நடிகர் சங்கம் என்னிக்காவது அந்த மனுஷனோட பிறந்த நாளை நினைவு நாளை கொண்டாடி இருக்கா. ஆளுயரத்துக்கு அவரோட படத்தை மாட்டி வச்சிருக்காங்களே அதுக்காவது ஒரு மாலைய வாங்கிப் போட்டிருப்பாங்களா. ஆனா மேடையில பேசுறப்போ மட்டும் சிவாஜியை பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன்னு நாக்கூசாம சொல்லுவாங்க.
அடையார் சத்யா ஸ்டூடியோவுக்கு எதிர்ல 2005ம் வருஷம் 22ந் தேதி சிவாஜி மணிமண்டபம் கட்டப்போறோம்னு பூமி பூஜை போட்டப்ப அம்புட்டு சந்தோஷப்பட்டோம். இன்னிக்கு 8 வருஷம் தாண்டிப்போச்சு யாராவது அதை எட்டிப்பார்த்திருக்கீங்களாய்யா. அரசாங்கம் ஒதுக்கின 12 கிரவுண்டு இடமும் சும்மா கிடக்குது.
அரசு ஒதுக்கின இடத்தை பயன்படுத்தலேன்னா குறிப்பிட்ட வருஷத்துக்கு பிறகு அரசாங்கம் அதை எடுத்துக்கும் அந்த வருஷத்தையும் நெருங்குது தெரியுமாய்யா? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரெண்டு நடிகராவது ஆட்சிக்கு வேண்டியவங்களா இருக்கீங்க. யாராவது இதை அரசாங்கத்தோட கவனத்துக்கு கொண்டு போயிருக்கீங்களா?
சிவாஜி மணிமண்டபத்துல தியேட்டர் வரப்போவுது, நாடக கொட்டகை வரப்போவுது, நடிப்பு கல்லூரி வரப்போவுது, சிவாஜி மியூசியம் அமைச்சு அதுல அவரோட போட்டோ அவர் அணிந்த உடைகள் எல்லாத்தையும் வைக்கபோறோம்னு கதை கதையா சொன்னீங்க; எல்லாம் எங்கேய்யா போச்சு. சினிமால காட்டுற மாதிரியே சிவாஜி ரசிகனுக்கும் சீன் காட்டிட்டீங்கல்ல. அன்னிக்கு ஒரு கோடி ரூபாய்ல கட்டப்போறதா திட்டம் சொன்னீங்க. இன்னிக்கு ஒரு கோடி ரூபாய்ல காம்பவுண்டு சுவர்கூட கட்ட முடியாதுங்களே.
சரி அதுபோகட்டும் விடுங்க, அம்மா மணிமண்டபத்துக்கு இடம் கொடுத்தாங்க. அதை கட்டினா பேரு அம்மாவுக்கு போயிடும்னு, அய்யா அதை அப்படியே போட்டுட்டு நாற்பதாண்டுகால நண்பனுக்கு சிலை வைக்கறேன்னு பீச் ரோட்டுல சிலை வச்சாரு.
அதுக்கு இன்னய வரைக்கும் தினமும் மாலைபோடுறது சிவாஜி குடும்பந்தான்யா. அட அதுக்குகூடவா நடிகர் சங்கத்தால முடியாம போச்சு. அரசாங்கம் சார்புல பிறந்த நாள் நினைவு நாளுக்கு அமைச்சருங்க மாலை போட்டு மரியாதை செய்வாங்க. அந்த லிஸ்ட்டுலகூட என் தலைவன் இல்லய்யா. அட நீங்களாவது அவரது பிறந்த நாள், நினைவு நாளுக்கு அவரது சிலைக்கு மாலை போட்டிருக்கீங்களா. கர்நாடகாவுல போயி பாருங்க ராஜ்குமாரோட பிறந்த நாளை தீபாவளி மாதிரி கொண்டாடுறாங்க.
தெலுங்கு பக்கம் போயி பாருங்க என்.டி.ஆரை தெய்வமா கொண்டாடுறாங்க. நீங்க அந்த அளவுக்கு செய்யவேணாம்யா. அந்த மனுஷனை நினைச்சாவது பார்க்கலாமுல்ல.
இன்னும் நிறைய வவுத்தெரிச்சல் இருக்குது. யாருகிட்டபோயி சொல்றதுன்னுதான் தெரியல. ஏதோ நீங்க விழா கொண்டாடப்போறதால உங்ககிட்ட சொன்னா எதுனாச்சும் செய்வீங்கல்ல அதான் சொன்னேன்.
குறைஞ்ச பட்சம் அவரோட மணிமண்டபத்துக்காவது ஒரு வழி சொல்லாம நீங்க சினிமா 100 விழா கொண்டாடினீங்கன்னா சாமி இல்லாம தேர்திருவிழா கொண்டாடின மாதிரிதான் இருக்கும். தப்பா எதுனாச்சும் சொல்லியிருந்தா மன்னிச்சிருங்க சாமிங்களா.
அன்புள்ள

சிவாஜி ரசிகன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக