திங்கள், 7 ஜனவரி, 2013

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு

ராதே கிருஷ்ணா 07-01-2013



விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு



பொன்மொழிள்

ஆ! நீங்கள் மட்டும் உங்களை அறிந்து விட்டால்... நீங்கள் ஆன்மாக்கள், தெய்வங்கள், என்றைக்காவது நான் தெய்வத்தை இழிவு செய்வதாகத் தோன்றுமானால், அது உங்களை மனிதர் என்று சொல்லும்போதே எல்லோரிலும் இறைவன் உள்ளான். ஆன்மா இருக்கிறது. மற்றவையெல்லாம் கனவு, மன மயக்கம். -சுவாமி விவேகானந்தர்

செய்திகள்

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் சிறப்பு!

இந்தியாவின் கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம் 'விவேகானந்தர் பாறை' என்று அழைக்கப்படுகிறது. தேசத்தின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே 

வரலாறு

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 1

ஓம் காளி... ஜெய் காளி... என்ற கோஷம் விண்ணை முட்டுமளவு ஒலித்துக் கொண்டிருக்கும் நகரம் அது. அந்த கோஷம் நள்ளிரவு வேளையில் கூட ஆங்காங்கே கேட்கும். அம்பிகையை வீரத்தின் 














கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் சிறப்பு!ஜனவரி 04,2013
1
இந்தியாவின் கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம் 'விவேகானந்தர் பாறை' என்று அழைக்கப்படுகிறது. தேசத்தின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள ஒரு சிறு பாறை. அங்கிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைத் தரிசிக்க உலகம் முழுவதிலுமிருந்து- மக்கள் வந்து செல்கிறார்கள். அந்தப் பாறையில் அப்படி என்ன விசேஷம்?

1892, டிசம்பர் 24-ஆம் தேதி, காவியுடை உடுத்த சந்நியாசி ஒருவர் கடல் நடுவே இருந்த இந்தப் பாறைக்குச் செல்ல உதவுமாறு அங்கிருந்த மீனவர்களை வேண்டினார். ஆனால் மீனவர்கள் யாரும் உதவவில்லை. அதனால் இளம் சந்நியாசி சலிப்படையவில்லை; கடலில் குதித்து நீத்தியே அந்தப் பாறையை அடைந்தார். அங்கு டிச. 24, 25, 26 ஆகிய தேதிகளில், மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவத்தில் ஆழ்ந்தார். அந்தத் தவத்தின் இறுதியில், அவருக்குள் ஒரு புதிய ஞான ஒளி உதித்தது. புத்தருக்கு போதிமரம் போல, அந்த இளம் துறவிக்கு ஞானம் வாய்த்தது அந்தப் பாறையில். அவர்தான் உலகையே தனது அறிவாலும் பேச்சாலும் வென்ற சுவாமி விவேகானந்தர்.

1888-ஆம் ஆண்டு துவங்கி 1893 வரை நாட்டின் பல பகுதிகளிலும் அவர் நிகழ்த்திய சுற்றுப்பயணமே அந்த ஞானத்துக்குக் காரணம். நடந்தும், வண்டியிலும், ரயிலிலும் பல்லாயிரம் மைல்களைக் கடந்து தேசத்தை வலம் வந்தபோது, அவர் எண்ணற்ற மக்களைச் சந்தித்தார்; அவர்களது இன்ப துன்பங்களை நேரில் கண்டார். இடையே 1892, டிசம்பரில் குமரிமுனை வந்தார். இதை அவரே தனது உரையில் .. குமரி முனையில், தென்கோடி முனையில் உள்ள பாறையில் தான் எனக்கு அந்த யோசனை உதித்தது. நம்மிடையே எண்ணற்ற துறவிகள் இருக்கின்றனர். அவர்கள் பல உபதேசங்களைச் செய்கின்றனர். இருந்தும் அனைத்தும் வீணாகின்றன. அப்போதுதான் எனது குருதேவரின் உபதேசம் நினைவில் வந்தது. பசியால் துடிப்பவனுக்கு மத போதனை தேவையில்லை என்பதுதான் அது. நாடு என்ற முறையில் நாம் நமது தனித்தன்மையை இழந்திருக்கிறோம். அதுவே இந்தியாவின் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். நாம் மக்களை இணைத்தாக வேண்டும்” இதுவே அந்தத் துறவி கண்டறிந்த உண்மை. குமரிமுனை பாறையில் அவர் செய்த தவம் பின் நாளில் மிகப்பெரிய வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது.
Bookmark and Share





விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 1டிசம்பர் 27,2012
3
ஓம் காளி... ஜெய் காளி... என்ற கோஷம் விண்ணை முட்டுமளவு ஒலித்துக் கொண்டிருக்கும் நகரம் அது. அந்த கோஷம் நள்ளிரவு வேளையில் கூட ஆங்காங்கே கேட்கும். அம்பிகையை வீரத்தின் சின்னமாக பாவித்து வணங்குவர் அந்நகரத்து மக்கள். ஆம்... கல்கத்தா...அது காளியின் நகரம். அந்நகரத்தின் வடக்கே இருந்த சிம்லா என்ற பகுதியில் அரண்மனை போல் இருந்த அந்த வீட்டில் இருந்து மங்கள வாத்தியங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. புதுப்பெண் புவனேஸ்வரி சர்வ அலங்காரங்களுடன் ஒரு சாரட்டில் அழைத்து வரப்பட்டாள். மாப்பிள்ளை விஸ்வநாதன் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தான். இருக்காதா பின்னே...! கல்வியும், பணமும் இல்லாத மனைவியர் மீதே பாசம் செலுத்தும் ஆண்மக்களை கொண்டது இந்த புண்ணிய தேசம். மனைவி பிரிந்து விட்டால் சிவபெருமானே மனம் வெம்பிப் போகிறார் என்று கதை சொல்லும் நாடு இது... நிலைமை இப்படி இருக்கும் போது, படித்த ஒருத்தி, அதிலும் செல்வச்சீமாட்டி தனக்கு மனைவியாக வாய்க்கிறாள் என்றால் மகிழ்ச்சி இரட்டிப்பாகத்தானே இருக்கும்! புவனேஸ்வரி ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எல்லாப் பாடல்களையும் ஒரே மூச்சில் சொல்லி விடுவாள்.செல்வ வளமிக்கவள் என்றாலும், எளிமையையே விரும்பினாள். வளமைக்கு மத்தியிலும், தன்னிடம் ஒரு கைத்தொழில் இருக்க வேண்டுமென அவள் நினைத்தாள். அதன் விளைவு அவள் தையல் கற்றுக் கொண்டாள். சமையலில் அவள் ஒரு பெண் நளன். இறைப்பற்று மிக்க அவள், காளிமாதா! என் குடும்பத்துக்கு பொன்னைக் கொடு, பொருளைக் கொடு. என் வக்கீல் கணவருக்கு அதிக வழக்குகளைக் கொடு. அவற்றில் எல்லாம் அவர் ஜெயக்கொடி நாட்டி, உலகப்புகழ் பெறும் வாய்ப்பைக் கொடு, என்று உலகியல் சார்ந்த விஷயமாக கேட்டதே இல்லை.

தாயே! நீ என்ன தர வேண்டுமென நினைக்கிறாயோ அதைக் கொடு. அது துன்பமாகக் கூட இருக்கட்டுமே! அந்த துன்பத்தை அனுபவிப்பதன் மூலம் தான் நான் உன்னை அடையமுடியும் என்றால், அதை புன்கையுடன் ஏற்றுக்கொள்கிறேன். என்னையே உன்னிடம் சமர்ப்பித்த பிறகு, நீ எதைத் தந்தாலும் அது உன்னைச் சார்ந்தது தானே! என்பாள். எவ்வளவு பெரிய உயர்ந்த உள்ளம் பாருங்கள்! ஆம்... உலகத்திற்கே ஒளிதரப்போகும் வீரமகனைப் பெறப் போகும் தாயல்லவா அவள்! தைரியம் அவள் உடலோடு கலந்ததாகத்தானே இருக்கும்! விஸ்வநாதன் மட்டுமென்ன...சாதாரணமான மனிதரா? அவரது கதை மிகப்பெரியது. கல்கத்தாவிலேயே புகழ் பெற்ற தத்தர் குடும்பம் அது. அவரது முப்பாட்டனார் ராமமோகன தத்தரே ஒரு வக்கீல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கல்வி என்றால் கிலோ எவ்வளவு என கேட்கப்பட்ட அந்தக் காலத்தில், வக்கீல் குடும்பம் என்றால் கொஞ்ச நஞ்ச மதிப்பா இருந்திருக்க வேண்டும்! ராம மோகன தத்தருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் காளி பிரசாத். இன்னொருவர் துர்கா சரணர். துர்கா சரணரும் தந்தையைப் போலவே மிகப்பெரிய படிப்பாளி. சமஸ்கிருதம், ஆங்கிலம்...ஏன்...பாரசீக மொழியையும் கற்றுக் கொண்டார். அவற்றில் திறம்பட பேசுவார். படிப்பார். எழுதுவார். இவ்வளவும் இருந்தால், அவருக்கு பெண் கொடுக்க ஒரு கூட்டமே மொய்க்காதா? ஆனால், துர்காசரணருக்கோ இல்லற வாழ்வில் நாட்டமில்லை. உறவினர்களும், தந்தையும் அவரைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினர். அந்த அன்புப்பிடியில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. திருமணமும் முடிந்து விட்டது. அவருக்கு விஸ்வநாதன் என்ற மகன் பிறந்தான்.

விஸ்வநாதன் பிறந்த பிறகு, துர்காசரணருக்கு மீண்டும் துறவற எண்ணம் மேலோங்கியது. ஒருநாள் அவர் வீட்டை விட்டு போய்விட்டார். அப்போது விஸ்வநாதனுக்கு வயது மூன்றுதான். கணவனைக் காணவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், கலங்காத மனதுடன் மகனை தனியே வளர்த்தாள் சரணரின் மனைவி. ஒருநாள், காசிக்குப் புறப்பட்டாள். கங்கையில் நீராடிவிட்டு, விஸ்வநாதர் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். கோயில் படிக்கட்டில் ஏறினாள். திடீரென கண்கள் சுழன்றன. அப்படியே மயங்கி விழுந்து விட்டாள். யாரோ முகத்தில் தண்ணீர் தெளித்தனர். விழித்தாள். அதிர்ந்து விட்டாள். நீங்களா...? ஆம்...தன் முன்னால், கண்ணுக்கு கண்ணான கணவர் துர்காசரணர் இருப்பதைப் பார்த்தாள். குழந்தை விஸ்வநாதன் அருகில் இருந்து அழுது கொண்டிருந்தான். துர்காசரணர் அவளிடம் எதுவும் பேசவில்லை. அவளாலும் ஏனோ பேச முடியவில்லை. கண்களில் இருந்து நீர் மட்டும் வழிந்தது. கணவரைத் தன்னோடு சேர்த்து வைத்த விஸ்வநாதருக்கு மனதால் நன்றி தெரிவித்தாள். தன்னோடு கல்கத்தாவுக்கு வந்துவிடுவார் என எதிர்பார்த்தாள். துர்காசரணரின் நிலையோ வேறு மாதிரியாக இருந்தது. மனைவியை நீண்ட நாளுக்கு பிறகு சந்தித்தாலும், அவர் மகிழ்ச்சியை வெளிக்காட்டவில்லை. நீ சுகமா, குழந்தை சுகமா? உறவினர்கள் நலமா? எதையுமே அவர் கேட்கவில்லை.

மாயை..இவ்வுலக வாழ்க்கை மாயை என்று மட்டும் அவளிடம் மெதுவான குரலில் சொன்னார். அதாவது, உன்னை என் மனைவியாக நான் பார்க்கவில்லை. நீ யாரோ ஒரு பெண். உனக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தேன். மீண்டும் உன்னுடன் சேர்ந்து வாழ என்னால் இயலாது. இல்லறத்தை என் மனம் நாடவில்லை என்பதே அவர் மாயை என்று சொன்னதன் பொருள். இது அவளுக்கும் புரிந்து விட்டது. இவர் இனி இல்லறத்தை நாடமாட்டார். காசியில் துறவியாக இருக்கவே விரும்புகிறார் என்று. நியாயம் தான்...இத்தனை நாளும் இவர் நம்மைப் பிரிந்து துறவியாக வாழ்ந்து விட்டார். இவரைப் பிரிந்ததால் நானும் துறவி போல வாழ்ந்து விட்டேன். இனி சேர்ந்து வாழ்ந்தாலும், வாழாவிட்டாலும் அதனால் ஆகப்போவதென்ன? அவருடைய மனநிலையையே நானும் வளர்த்துக் கொள்கிறேன் அவள் அவரிடம் ஏதும் பேசவில்லை. எழுந்தாள். அவரைத் திரும்பியே பார்க்கவில்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு கோயிலை நோக்கி நடந்தாள்.
Bookmark and Share

மேலும் வாழ்க்கை வரலாறு



















விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 2டிசம்பர் 27,2012
விஸ்வநாதரை தரிசித்து விட்டு ஊர் திரும்பி விட்டாள். மனைவியை யாரோ ஒருத்தியாக நினைத்து, கண்டுகொள்ளாமல் போன துர்காசரணரும் எங்கெங்கோ அலைந்து, விதிவசமாக கல்கத்தாவுக்கே வந்து சேர்ந்தார். ஆனால், வீட்டுக்குப் போகவில்லை. தன் நண்பரின் வீட்டுக்குப் போய் சேர்ந்தார். பழைய நண்பர் தன் வீட்டுக்கு வந்த செய்தியை, துர்காசரணரின் வீட்டுக்கு சொல்லி அனுப்பிவிட்டார் அந்த நண்பர். அவ்வளவுதான். உறவுக்காரர்கள் குவிந்து விட்டனர்.துர்கா! நீர் இப்படி செய்தது முறைதானா? உம் மனைவியை பிரிய எப்படி மனம் வந்தது? மனைவி கிடக்கட்டும். கைக்குழந்தையான விஸ்வநாதனுமா உம் மனதை விட்டு அகன்று விட்டான்? என்று அர்ச்சனை செய்தனர்.துர்காசரணர் எதற்கும் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார். உறவினர்கள் அவரைக்குண்டுக்கட்டாகத் தூக்கி ஒரு வண்டியில் வீட்டுக்குக் கூட்டிச் சென்று விட்டனர். சரணரின் மனைவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால், துர்காசரணரோ மவுனமாகவே இருந்தார்.

குழந்தையைக் கையால் கூடத் தொடவில்லை. மனைவியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உறவினர்கள் ஆலோசித்தனர். இப்படி செய்தால் இவர் சரிப்பட்டு வரமாட்டார். இவரை ஒரு அறையில் அடைத்து விடுவோம். இல்லாவிட்டால், இவர் திரும்பவும் காசி, ராமேஸ்வரம் என ஓடிவிடுவார் என்று முடிவெடுத்து, அறையிலும் அடைத்து விட்டனர். உள்ளே சென்ற துர்காசரணர் உண்ணாவிரதம் ஆரம்பித்து விட்டார். மூன்றுநாட்களாக பச்சைத்தண்ணீர் கூட பல்லில் படவில்லை. சரணரின் மனைவிக்கு பயமாகி விட்டது. என் மீது அன்பு கொண்டு நீங்கள் செய்த காரியத்திற்கு நன்றி. ஆனால், இப்படியே போனால் என் மாங்கல்யத்தையே இழந்து விடுவேன் போலிருக்கிறதே! அவர் எங்கு வேண்டுமானாலும் போகட்டும். அவர் உயிருடன் இருந்தால் அதுவே போதும். அவரை விட்டு விடுங்கள், என்றாள்.

உறவினர்களுக்கும் அது சரியென்று படவே, அறைக்கதவை திறந்து விட்டனர். அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. கூண்டில் இருந்து விடுபட்ட பறவை போல சென்றவர் தான். அதன்பிறகு அவர் எங்கு போனார் என்பதை அவரது மனைவியோ, உறவினர்களோ தங்கள் இறுதிக்காலம் வரை தெரிந்து கொள்ளவே முடியவில்லை. இப்படி விஸ்வநாதன், தந்தை முகம் பார்த்தறியாமலே வளர்ந்து விட்டார். அவருக்கும் புவனேஸ்வரிக்கும் திருமணமும் நடந்து முடிந்து விட்டது. விஸ்வநாதன்- புவனேஸ்வரி தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். புவனேஸ்வரி அம்மையாருக்கு ஒரே ஒரு மனக்குறை. இந்த உலகில் சாதாரணமாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் குறை தான் அது. காசி விஸ்வநாதா! இரண்டு பெண்களைக் கொடுத்தாய். ஏன் ஒரு ஆண்குழந்தையைத் தர மறுக்கிறாய்? அவள் காசிநாதனை வேண்டிக்கொண்டே இருந்தாள். காசிக்கு போய், விஸ்வநாதர் சன்னதியில் நின்று நேரடியாக வேண்டிக்கொள்ள அவளுக்கு ஆசை தான். ஆனால், கணவர், குழந்தைகளை விட்டுச்சென்றால் கவனித்துக் கொள்ள சரியான ஆள் வேண்டும். மேலும், பெண் குழந்தைகள் போதாதா? என அவர் சொல்லிவிட்டால் என்ன செய்வது? எனினும், அக்காலத்தில் காசிக்குச் செல்ல முடியாதவர்கள், அங்கேயே குடியிருப்பவர்களைக் கொண்டு, சில நேர்ச்சைகளைச் செய்வது வழக்கம். புவனேஸ்வரியின் அத்தை வீடு காசியில் இருந்தது. அந்த அத்தைக்கு தகவல் சொல்லி, அவர் மூலமாக விஸ்வநாதருக்கு நேர்ச்சைகளைச் செய்தாள். ஒருநாள், புவனேஸ்வரியின் கனவில் அதிபிரகாசமான ஒளிவெள்ளம் தோன்றியது. பரமேஸ்வரன் தியானநிலையில் தோன்றினார். அதே நிலையில், ஒரு குழந்தையாக உருமாறினார். புவனேஸ்வரியின் உடலில் அந்த ஒளி பாய்வது போல் இருந்தது. அவள் திடுக்கிட்டு விழித்தாள். இந்த கனவு கண்டபிறகு சில நாட்களிலேயே கர்ப்பவதியாகி விட்டாள். மகிழ்ச்சியின் உச்சத்தில் அவள் இருந்தாள். நிச்சயமாக, அந்த பரமசிவனே தன் வயிற்றில் பிறப்பான் என நம்பினாள். விஸ்வநாதா! பரமேஸ்வரனே! இம்முறை உன்னிடம் நான் விண்ணப்பித்திருப்பது ஆண் குழந்தைக்காக! அதை மறந்து விடாதே, என தினமும் தியானம் செய்தாள்.அவளது கோரிக்கை நிறைவேறியது.

சூரியபகவான் மகரராசியில் என்று நுழைகிறாரோ, அன்று அவரது பிரகாசம் அதி பயங்கரமாக இருக்கும். அந்த நாளை வடநாட்டவர் மகர சங்கராந்தி என்றும், தென்நாட்டவர் பொங்கல் என்றும் கொண்டாடுவர். மகர ராசியில் பிறந்தவர்கள் எந்த விலை கொடுத்தேனும், என்ன செய்தேனும் நினைத்ததை சாதித்துக் காட்டுவார்கள் என்றும் சொல்வதுண்டு. இப்படி மகரத்திற்கு முக்கியத்துவம் தரும் அந்த இனியநாளில், புவனேஸ்வரிக்கு பிரசவவலி ஏற்பட்டது. சிவசிவா! உன் அடியாளான என் பிரார்த்தனையை ஏற்று, தயவு செய்து எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடு, என்று பிரார்த்தித்தபடியே வலியையும் தாங்கிக் கொண்டாள் அந்தத்தாய்.அன்று 1863, ஜனவரி12 திங்கள்கிழமை. சிவனுக்குரிய கிழமை திங்கள். புவனேஸ்வரியின் பிரார்த்தனை பலித்தது. கூனிக்கிடந்த உலகத்தின் முதுகெலும்பை நிமிர வைக்க அவதரித்தார் அந்த மகான். ஆம்...விவேகானந்தர் பிறந்து விட்டார்.குழந்தையைப் பார்க்க உறவினர்கள் புவனேஸ்வரியின் வீட்டில் குவிந்து விட்டார்கள்.இவன் அவனுடைய தாத்தா துர்காசரணரைப் போலவே இருக்கிறான், என்று தான் பெரும்பாலோனோர் சொன்னார்கள். இல்லறத்திற்கு பிறகும் துறவறம் பூண்ட அந்த தாத்தாவையும் தாண்டி, இல்லறத்துக்குள்ளேயே நுழையாமல், உலகின் ஆன்மிகப்புரட்சியை ஏற்படுத்தப் போகும் வீரத்துறவியல்லவா அவர்! குழந்தைக்கு பெயர் சூட்ட ஏற்பாடுகள் நடந்தன.குடும்பத்தார் அவனுக்கு தங்கள் குலப்பெயரான தத்தாவையும் சேர்த்து, நரேந்திரநாத் தத்தா என பெயர் வைக்க வேண்டும் என்றனர். புவனேஸ்வரிக்கு அந்தப்பெயரில் விருப்பமில்லை.இவன் காசி விஸ்வநாதரின் அருளால் பிறந்தவன். அதனால் விஸ்வநாதன் என்ற பெயர் தான் பொருத்தம். ஆனாலும், என் கணவரின் பெயரும் அதுவாகவே இருப்பதால், அதே பெயரில் அவனை அழைப்பது மரியாதையாக இருக்காது. அதனால், அவனுக்கு நான் வேறு பெயர் வைக்கப் போகிறேன், என்று சொல்லி, அதே பெயரால் குழந்தையை அழைக்கவும் ஆரம்பித்து விட்டாள். ஆனால், குடும்பத்தார் அதை ஏற்கவில்லை.
Bookmark and Share



விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 3ஜனவரி 03,2013
புவனேஸ்வரி அம்மையார் மகனுக்கு சூட்டிய பெயர் விரேஸ்வரன். அந்தப் பெயரிலேயே அவரை அழைத்தார். ஆனால், ஊரார் முன் அவர் குடும்பத்தினர் வைத்த நரேந்திரநாத் தத்தா என்ற பெயர் தான் நிலைத்தது. அதுவும் சுருங்கி, நரேன் என்ற பெயர் தான் நிலைத்தது. குழந்தை நரேனுக்கு ஐந்து வயது எட்டிவிட்டது. அந்த சமயத்தில் அவன் செய்த சேஷ்டைகள் அதிகம். சேஷ்டை என்றால் சாதாரணமான சேஷ்டை அல்ல...வெறித்தனமான சேஷ்டை. அவன் செய்யும் சேஷ்டையில் புவனேஸ்வரி மட்டுமல்ல, பொறுமை மிக்க சகோதரிகள் இருவரும் கூட எரிச்சலடைந்து விடுவார்கள். உறவினர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால், உடனே கிளம்பி விடுவார்கள். அவர்களை பாடாய்படுத்தி விடுவான். சில சமயங்களில் அவனது சப்தம் பக்கத்து வீடுகளையே கலக்கி விடும். அதுபோன்ற சமயங்களில் புவனேஸ்வரி ஒரு பானை தண்ணீரை எடுத்து வந்து நரேனின் தலையில் கொட்டி விடுவார். அதற்கும் அவன் அடங்கமாட்டான். அவனை சகோதரிகள் இருவரும் பிடித்துக் கொள்ள, புவனேஸ்வரி அவனது காதில் நம சிவாய, நமசிவாய என ஓதுவார். அந்த மாய மந்திரம் மட்டுமே அவனைக் கட்டுப்படுத்தும்.

அப்படியே பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவான். மறுநாள் மீண்டும் சேஷ்டை ஆரம்பித்து விடும், ஒரு சமயத்தில் அவனது சகோதரிகளிடம் வம்புச்சண்டை இழுத்தான் நரேன். அவர்கள் அவனை விரட்டினர். பிடிபடாமல் தப்பி ஓடினான். ஓரிடத்தில் கழிவுநீர் ஓடை குறுக்கிட்டது. நரேனால் தப்ப முடியாத நிலை. சகோதரிகளிடம் சிக்கிக் கொள்வோமே என்ன செய்யலாம் என கடுகளவு நேரம் தான் சிந்தித்தான். அவனது குட்டி கால்களைக் கொண்டு, அந்த ஓடையை தாண்டுவது என்பது இயலாத காரியம். உடனே சாக்கடைக்குள் குதித்து விட்டான். உள்ளேயே நின்று கொண்டான். அந்தப் பெண்களால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தக் குட்டிப்பயலைப் பிடிப்பதற்காக அவர் களும் சாக்கடைக்குள் இறங்க முடியுமா என்ன!

சிறுவயதிலேயே உனக்கு எவ்வளவு தைரியம்? என்றுகத்தினர் சகோதரிகள்.தப்பிக்க வேண்டும் என நினைத்து விட்டால் கடலுக்குள் கூட குதிப்பேன், என்றான் நரேன்.நிஜம் தான்...பிற்காலத்தில் வாழ்க்கைக் கடலில் இருந்து தப்பித்து ஆன்மிக ஞானம் பெற அவர் தென்குமரிக் கடலில் குதித்தும் விட்டாரே!தாய் புவனேஸ்வரிக்கு இந்த தகவல் சென்றது. அவள் கண்ணீர் வடித்தாள். சிவபெருமானே! நான் உன்னிடம் கேட்டது பிள்ளை வரம். ஆனால், நீ உன் பூதகணங்களில் ஒன்றை அனுப்பி என் வயிற்றில் பிறக்கச் செய்து விட்டாயே! என்று சொல்வாள்.தாயும், சகோதரிகளுமாய் சேர்ந்து ஒரு முடிவெடுத்தனர். இவனை அடக்க நாம் மூவர் மட்டும் போதாது. இன்னு இரண்டு பணிப்பெண்களை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று. அதன்படியே ஐந்து பேர் சேர்ந்து ஒரு ஐந்து வயது சிறுவனை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்படியானால், விவேகானந்தர் சின்னவயதில் சேஷ்டைகள் மட்டும தான் செய்திருக்கிறாரா? அந்த வீரக்குழந்தையிடம் நல்ல குணங்கள் எதுவுமே இல்லையா? என்று சிந்திக்கலாம். எந்தளவுக்கு நரேன் சேஷ்டை செய்வானோ, அதே அளவுக்கு நல்ல குணங்களையும் கொண்டிருந்தான். யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவான். அதன் மதிப்பைப் பற்றி அவன் கவனிப்பதில்லை. தன் வயதை ஒத்த சிறுவர்களுக்கு தன்னிடமுள்ள விளையாட்டு பொருட்களை வாரி வழங்கி விடுவான். சாதுவான மிருகங்கள் என்றால், அவனுக்கு அளவு கடந்த பிரியம். தன் வீட்டில் வளர்க்கப்பட்ட பசுக்களைத் தடவிக் கொடுப்பான். அவை மா என கத்தும்போது, அவற்றின் தேவையை அறிந்து புல், வைக்கோல் போடுவான். தண்ணீர் கொண்டு வந்து வைப்பான். வீட்டுக்கு வரும் புறாக்களுக்கு இரை போடுவான். வீட்டில் வளர்த்த மயில் ஒன்றின் மீது அவனுக்கு ரொம்ப இஷ்டம். அதை தன் நட்பு போலவே கருதினான். மேலும் வீட்டில் இருந்த குரங்கு, ஆடு, வெள்ளை பெருச்சாளி ஆகியவற்றுக்கு இலை, காய்கறிகள், உணவு கொடுத்து மகிழ்வான். தர்மசிந்தனை அவனிடம் அதிகம். துறவிகள் யாரையாவது கண்டுவிட்டால், அவர்களுக்கு உணவோ, உடையோ எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுத்து விடுவான். ஒருமுறை வீட்டில் இருந்த விலைஉயர்ந்த பட்டு சால்வையை ஒரு துறவிக்கு கொடுத்து விட்டான். இதையறிந்த தாய், இவனை இப்படியே விட்டால், வீட்டிலுள்ள எல்லாவற்றையும் தானம் செய்து, நம்மை ஒன்றுமில்லாமல் செய்து விடுவான் போல் இருக்கிறதே! என நினைத்தார்.

ஒருமுறை நான்கைந்து துறவிகள் வீட்டுப் பக்கமாக வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் தேவையை நரேனிடம் சொன்னார்கள்.நரேன் அவற்றை எடுக்கப் போன சமயம் புவனேஸ்வரி கவனித்து விட்டார். அவனை ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டாள். நரேன் விடாக்கண்டன் ஆயிற்றே! அந்தத் துறவிகளை தன்னை அடைத்து வைத்த அறை ஜன்னல் பக்கமாக வந்தான். அந்த அறையில் இருந்த சில ஆடைகளை ஜன்னல் வழியாக துறவிகளை நோக்கி வீசி எறிந்தான். ஒரே ஒருவருக்கு மட்டும் ஒன்றும் கொடுக்க வழியில்லை. சற்றே யோசித்த நரேன், தான் அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து அவரிடம் கொடுத்து விட்டான். வயதும் கூடியது. பத்து வயதைக் கடந்து விட்டான். சேஷ்டை, தானம் என்ற மாறுபட்ட குணங்களின் வடிவமாகத் திகழ்ந்த நரேன், பாடம் படிக்கும் போது மட்டும் நல்ல பிள்ளையாகி விடுவான். அம்மா கதை சொன்னால் போதும். உம் கொட்டிக்கொண்டு கவனமாகக் கேட்பான்.அம்மாவுக்கு ராமாயணமும், மகாபாரதமும் அத்துப்படி. ராமனின் கதையை உருக்கத்துடன் அவள் சொல்வதைக் கேட்பான் நரேன். சீதாதேவி பட்டபாடுகளை அவள் விவரித்த போது, நரேன் நெஞ்சம் நெகிழ்ந்து போவான்.அம்மா! அவளுக்கு ஏற்பட்ட சிரமம் யாருக்கும் வரக்கூடாது, என்பான். ராமபிரான் சீதையைப் பிரிந்து தவித்தது அவன் மனதில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவரது வில்வித்தை அவனுக்குள் வீரத்தை ஊட்டியது.சீதாராமன் மீது ஏற்பட்ட பக்தியில், அவர்களது மண்சிலையை கடைக்கு போய் வாங்கி வந்தான். அவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுக்கு மந்திரங்கள் தெரியும். அவன் ராமன் சிலைக்கு பூஜை செய்வான்.ஒருநாள் இருவரும் ராமன் சிலையுடன், இருவரும் மாயமாகி விட்டனர். அவனது நண்பன் வீட்டாரும், நரேனுடன் விளையாடப் போன தங்கள் மகனைக் காணவில்லையே என வந்து விட்டனர். வீட்டில், உறவினர்கள் வீடுகளில் தேடியலைந்தனர். எங்குமே அவர்கள் இல்லை. புவனேஸ்வரியும், சகோதரிகளும் தவித்தனர்.
Bookmark and Share




விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 4ஜனவரி 03,2013
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒரேயொரு அறை மட்டும் பூட்டிக்கிடந்தது. அந்த அறையை தள்ளிப்பார்த்தனர். உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது தெரிந்தது. எல்லா உறவினர்களும் வந்து விட்டனர். அவர்கள் தங்கள் பலம் கொண்ட மட்டும் கதவை தட்டிப் பார்த்தனர். பதில் ஏதும் இல்லை. பயம் ஆட்டிப் படைத்தது. வேறு வழியின்றி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். ஒரு மூலையில் நரேந்திரனும், அவனது தோழனும் நிஷ்டையில் இருப்பதை பார்த்தனர். தாய் புவனேஸ்வரி மகனை அன்புடன் அணைத்துக் கொண்டாள். இப்படியாக ராமன் மீது இளம் வயதிலேயே அபார பக்தி வைத்திருந்தார் விவேகானந்தர்.ஆனால், இது நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஒருமுறைஇல்லறவாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைப் பற்றி யாரோ சிலர் பேசிக்கொண்டிருக்கும் போது நரேந்திரன் கேட்டுவிட்டான். அவனது சிறிய மூளை வேறுவிதமாக சிந்தித்தது.

திருமண வாழ்வில் இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது என்றால் நாம் வணங்கும் ராமரே இதே தவறை அல்லவா செய்திருக்கிறார். அப்படியானால் ராமர் தவறு செய்திருக்கிறார். தவறு செய்த ராமன் எப்படி கடவுளாக முடியும். இனிமேல், இந்த ராமனை வணங்க மாட்டேன் என கூறிவிட்டு, சீதாராமர் பொம்மையை தூக்கி வீசினான். பொம்மை நொறுங்கி விட்டது. அம்மாவிடம் ஓடிச் சென்றான். கதறி அழுதான். எனது ராமன் தவறு செய்துவிட்டான். அவன் இல்லறத்தில் இறங்கியது தவறு. அதன் காரணமாக அவன் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான். எனவே, ராமனை வணங்க மாட்டேன். எனக்கு வேறு ஏதாவது வழி சொல் என்றான். புவனேஸ்வரி அவனைத்தேற்றினாள். இதற்காக கவலைப்படாதே! உனக்கு கல்யாணம் செய்த சுவாமிகளை பிடிக்கவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ளாத சுவாமியின் பொம்மையை தருகிறேன். காசியில் இருக்கும் கைலாசநாதர் தவயோகத்தில் இருப்பவர். அவரது சிலையை உனக்கு தருகிறேன். அந்த துறவி பொம்மையை வைத்து விளையாடு. அந்த பொம்மைக்கு பூஜை செய், எனச் சொல்லி விஸ்வநாதரின் தவக்கோல பொம்மையைக் கொடுத்தாள்.

இந்த பொம்மைதான் நரேன் என்ற சிறுவன், விவேகானந்தர் என்ற மாபெரும் சக்தியாக உருவெடுக்க காரணமாயிற்று.கைலாசநாதரின் துறவிக்கோலத்தை நரேன் பெரிதும் ரசித்தான். அவரைப் போலவே தாமும் ஒரு துறவியாக வேண்டும் என நினைத்தான். அந்த பொம்மையின் முன்னால் அமர்ந்துவிட்டால் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டான். தன் நண்பர்களை தியான விளையாட்டுக்கு வருகிறாயா? எனச் சொல்லி அழைப்பார். பல நண்பர்கள் வருவார்கள். ஒருநாள் தியானம் செய்துகொண்டிருந்த போது, ஒரு நல்ல பாம்பு அந்த வழியாக வந்தது. அது சீறும் சத்தம் கேட்டு மற்ற நண்பர்கள் ஓடிவிட்டனர். நரேந்திரனையும் எழுப்பினர். ஆனால், நரேந்திரன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அவனை யாராலும் எழுப்ப முடியவில்லை. நல்ல பாம்பு அவனருகே வந்தது. படமெடுத்து அவன் முன்னால் நின்றது. என்ன நினைத்ததோ தெரியவில்லை. மீண்டும் ஊர்ந்து சென்றுவிட்டது. இப்படி எதற்கும் கலங்காமல் இளம் வயதிலேயே விவேகானந்தரின் தியான வாழ்க்கை அமைந்தது. 1870ல் ஈஸ்வரசந்திர வித்யாசாகர பள்ளியில் நரேன் சேர்ந்தான். மிகவும் துடிப்பாக இருப்பான்.

கோலி விளையாட அவனுக்கு மிகவும் பிடிக்கும். மல்யுத்தம் அதைவிட பிடித்த விளையாட்டு. வகுப்பு இடைவேளையில் மைதானத்தில்தான் அவனைப் பார்க்க முடியும். அதுமட்டுமின்றி, ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே அவனது மனதில் இருந்தது. அதற்கு அச்சாரமாக கல்கத்தாவில் ஒரு கேஸ் தொழிற்சாலையையும், சோடா கம்பெனியையும் வைத்தான். பள்ளியில் படித்துக் கொண்டே இந்த தொழிலையும் அவன் கவனித்துக் கொண்டான். ஒரு கட்டத்தில் பள்ளியில் ஆங்கில வகுப்பு துவங்கினர். அந்நிய மொழி என்பதால் நரேந்திரனுக்கு அது பிடிக்கவில்லை. இருந்தாலும் ஆசிரியர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க அதையும் கருத்தூன்றி படித்தான். பிற்காலத்தில் சிகாகோ நகரில் அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்த இந்த மொழி அவனுக்கு கை கொடுத்தது.பிறருக்கு ஒரு துன்பம் வந்தால் நரேந்திரனுக்கு பொறுக்க முடியாது. பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒரு ஆசிரியர் தன் சக மாணவனை அடித்து விட்டார் என்பதற்காக விவேகானந்தர் ஒரு பெரும் போராட்டமே நடத்தி விட்டார்.

ஒருநாள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஆசிரியர் ஒரு மாணவனை கடுமையாக அடித்து விட்டார். அதைப் பார்த்து விவேகானந்தரின் நாடி நரம்புகள் துடித்தன. அவர் ஆசிரியரை கேலி செய்யும் வகையில் சத்தம் போட்டு சிரித்தார். உடனே, ஆசிரியரின் கோபம் விவேகானந்தர் மீது திரும்பியது. நீ உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உன்னையும் அடித்து நொறுக்குவேன் என ஆசிரியர் எச்சரித்தார். விவேகானந்தர், அதை கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். ஆசிரியருக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. விவேகானந்தரின் காதைப் பிடித்து திருகினார். விவேகானந்தர், சற்றும் கண்டு கொள்ளவில்லை. காதில் இருந்து ரத்தம் வடிந்தது. அப்போதுதான், நிலைமையை புரிந்து கொண்ட விவேகானந்தர் ஆத்தரமும், அழுகையும் பொங்க, இனிமேலும் என் காதை திருகினால் நான் சும்மா விட மாட்டேன். என்னை அடிக்க நீங்கள் யார்? ஜாக்கிரதையாக இருங்கள். இனிமேல் என் அருகில் நீங்கள் வரக்கூடாது, என சப்தம் போட்டான். அந்த சமயத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளே வந்தார். அவரிடம் நடந்ததை தைரியமாக சொன்னார். இனிமேல் பள்ளிக்கே வரமாட்டேன் என சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். ஆனாலும், தலைமையாசிரியர் அவரை சமாதானம் செய்து வகுப்பில் இருக்க வைத்தார். அவரது விசாரணையில் ஆசிரியரின் பக்கம் நியாயம் இல்லை என்பது தெரியவந்தது. ஆசிரியரை அவர் கண்டித்தார். 
Bookmark and Share





விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 5ஜனவரி 03,2013
பள்ளியில் மட்டுமல்ல... வெளியில் பழகும் தன் நண்பர்களுக்காகவும்உயிரையே கூட கொடுப்பார் விவேகானந்தர்.அவருக்கு அப்போது வயது 11. ஒருமுறை கங்கையை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிப்பார்க்க சென்றனர் நரேனும் அவனது தோழர்களும். கங்கையின் அக்கரைக்கு படகில் போய்விட்டு அதே படகில் திரும்புவதற்காக ஏறினர். அந்த நேரம் பார்த்து உடன் வந்தவர்களில் ஒருவனுக்கு திடீர் மயக்கம்...என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் அவனைத்தூக்கிப் படகில் போட்டனர்.படகுக்காரன் பயந்துவிட்டான். தம்பிகளா! போகிற வழியில் இந்தப் பையனுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, என் படகில் யாருமே ஏறமாட்டாங்க! நீங்க எல்லாரும் இறங்கிடுங்க, என்றான்.எல்லாரும் அவனைக்கெஞ்சினர். நரேந்திரன் மிக பவ்யமாக அவனிடம் பேசி, இரண்டு மடங்கு கட்டணம் தருவதாகச் சொல்லி, ஒரு வழியாக படகில் ஏற்றியாயிற்று. கரை அருகே நெருங்கவும் படகுக்காரன் கூலியைக் கேட்டான். இவர்கள் பேசிய கூலியைக் கொடுத்தனர். அவன் தகராறு செய்தான். இன்னும் அதிகம் வேண்டும். இல்லாவிட்டால் கரைக்கு போகமாட்டேன்.

இந்த சுகமில்லாதவனையும் தூக்கிக் கொண்டு நீந்தி கரைக்கு போங்கடா, என்றான். விவேகானந்தர் பிற்காலத்தில் குமரிக்கடலில் குதித்து நீந்தப் போகிறவர் ஆயிற்றே! விடுவாரா என்ன! கங்கையில் குதித்து விட்டார். நீச்சலடித்து கரைக்கு வந்தார். அங்கே இரண்டு ஆங்கில சிப்பாய்கள் உலவிக் கொண்டிருந் தனர். அவர்களிடம் தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசி, படகுக்காரன் தகராறு செய்வதை விளக்கினார். புரிந்துகொண்ட அவர்கள் படகுக் காரனை சைகை காட்டி கரைக்கு அழைத்தனர். பையன்களை இறக்கிவிடும்படி கட்டளை யிட்டனர். படகுக்காரன் அலறிவிட்டான். உடனடியாக வந்து எல்லாரையும் இறக்கிவிட்டான். இப்படி சிறுவயதிலேயே நினைத்ததை சாதிக்கும் குணம் விவேகானந் தரிடம் ஏற்பட்டது. இன்னொரு முறை, அவரது நண்பர்கள் கல்கத்தா துறைமுகத்திற்கு வந்திருந்த ஆங்கிலேய போர்க்கப்பலை சுற்றிப்பார்க வேண்டுமென்ற விருப்பத்தை அவரிடம் தெரிவித்தனர்.

கப்பலைப் பார்க்க வேண்டுமென்றால் துரையிடம் அனுமதி வாங்க வேண்டும். அவரைப் பார்ப்பது குதிரைக் கொம்பு.அதிலும் ஒரு சிறுவனை யாராவது அனுமதிப்பார்களா? நம் சின்ன நரேந்திரன் கிளம்பி விட்டார். துரையின் அலுவலகத்துக்கு சென்றார். வாசலில் நின்ற காவலன் அவரைத் தடுத்து விட்டான்.டேய்! உள்ளே துரை இருக்கிறார். இங்கே என்னடா உனக்கு வேலை? என்றான்.நானும் என் நண்பர்களும் கப்பலைப் பார்க்க வேண்டும். எனக்கு வழிவிடுங்கள், என்றார் விவேகானந்தர்.போடா! பெரிய பெரிய ஆட்களுக்கே அந்த அனுமதி கிடைக்காது. நீ கப்பலில் ஏறுவதாவது. உழக்கு மாதிரி இருக்கிறே!ஆசையைப் பாரேன், என விரட்டி விட்டான்.முடியாது என்ற வார்த்தையே விவேகானந்தரின் வாழ்க்கை சரிதத்தில் ஒருமுறை கூட இடம் பெற்றதில்லை. சின்ன நரேன் யோசித்தார்.துரையின் அலுவலகத்திற்கு செல்ல குறுக்கு வழி இருக்கிறதா என சுற்றுமுற்றும் பார்த்தார். துரை அந்தக் கட்டடத்தின் மாடியில் இருப்பதை புரிந்து கொண்டார். கட்டடத்தின் பின்பகுதிக்குச் சென்றார். அங்கே மாடி படிக்கட்டு இருந்தது. அங்கே காவலர்கள் இல்லை.

இதில் ஏறினால், துரை இருக்கும் அறையை அடைந்து விடலாம் என அனுமானித்தான். பூனை போல பதுங்கி ஏறிவிட்டான்.அந்த படிக்கட்டு ஒரு அறையின் வாசலை அடைந்தது. உள்ளே எட்டிப்பார்த்தால் துரை இருந்தார். அங்கே ஒரு சிறிய வரிசை நின்றது. எல்லாரும் கப்பலைப் பார்க்க அனுமதி வாங்க வந்தவர்கள். நம் குட்டியும் வரிசையில் நின்று கொண்டார். துரை தலை நிமிராமலே எல்லாருக்கும் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார். விவேகானந்தரும் தனது விண்ணப்பத்தை நீட்ட ஏறிட்டு பார்த்தார் துரை. சிரித்து கொண்டார். கையெழுத்து போட்டு விட்டார். நன்றி சொல்லிவிட்டு வெளியேறினார் விவேகானந்தர்.இது மட்டுமா! அவரிடம் அச்சம் என்பதே இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்னொரு முக்கிய சம்பவத்தையும் சொல்லலாம். நமது குழந்தைகள் மாடிப்படியில் இருந்து இறங்கினாலே பார்த்து இறங்குடா, வழுக்கிடாமே என்போம். விவேகானந்தர் வீடும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் விவேகானந்தரைதிட்டிக்கொண்டும், பயமுறுத்திக் கொண்டும் தான் இருப்பார்கள். ஆனால், தனிப்பிறவியான விவேகானந்தர் இதையெல்லாம் காது கொடுத்து கேட்கவே மாட்டார்.

மரம் விட்டு மரம் தாவுவது அவரது அன்றாடப் பழக்கங்களில் ஒன்று.இதை நரேந்திரனின் தாத்தா கண்டிப்பார்.டேய் நரேன்! மரத்தில் இருந்து குதிக்காதே, என்பார். நரேனோ தாத்தா முன்னிலையிலேயே மரத்தில் இருந்து குதிப்பார். தாத்தாவுக்கு கடும் ஆத்திரம். அவரைத் தடுத்து நிறுத்த, நரேன்! அந்த மரத்தின் பக்கம் இனிமேல் போகாதே. அதன்மேல், ஒரு பிரம்மராட்சஸ் (பேய்) இருக்கிறது. அது உன் கழுத்தை நெரித்து விடும், என்றார். விவேகானந்தரும் தாத்தாவிடம், அப்படியா என்றார். அதன்பின் மற்ற பையன்கள் அந்த மரத்தின் பக்கம் போவதையே தவிர்த்து விட்டனர்.விவேகானந்தர் அடுத்த நிமிடமே மரத்தில் ஏறப்போனார். நண்பர்கள் தடுததனர். ஏறாதே நரேன். தாத்தா சொல்வது நிஜமாகத்தான் இருக்கும், என்று.நரேன் அவர்களிடம், அட மடையர்களா! நாம் இத்தனை நாளும் இந்த மரத்தில் ஏறியிருக்கிறோம். ஏதும் நடக்கவில்லை. இன்று புதிதாக என்ன நடந்து விடும்? ஒருவேளை தாத்தா சொன்ன ராட்சஸ் இதில் இருக்குமானால் அது நம்மை இதற்குள் பிடித்திருக்க வேண்டுமல்லவா? கொஞ்சமாவது யோசியுங்கள், எனச் சொல்லிவிட்டு மரத்தில் விறுவிறுவென ஏறினார். உச்சியில் இருந்து டைவ் அடித்தார். தாத்தா! இப்போ நான் என்ன செய்தேன் தெரியுமா? நீங்கள் சொன்ன ராட்சஸூக்கு டைவ் அடிக்க கற்றுக் கொடுக்கிறேன், என்று சொல்லி, சிரித்துக் கொண்டே ஓடிவிட்டார்
Bookmark and Share




விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 6ஜனவரி 03,2013
இளவயதைத் தாண்டி வாலிப பருவம் வந்ததும் வேறென்ன...விஸ்வநாத தத்தருக்கு மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. மகன் நரேந்திரனோ...திருமணமா... உஹூம்.. என்றார். ஆனாலும், அவர் மனதில் குடும்பநிகழ்வுகள் ஊசலாடாமல் இல்லை. குடும்பம், மனைவி, குழந்தைகள் என்று தன் மனதிற்குள் ஒரு படம் வரைந்து பார்த்தார். இதெல்லாம் வேண்டாம்...சத்திய சொரூபனான இறைவனை நேரில் காண வேண்டும், அதற்கு இல்லறம் சரி வராது. ஒரே ஒரு காவிஆடையுடன் உலகம் முழுக்க சுற்றியேனும் கடவுளைக் கண்டுவிட வேண்டும் என்றும் ஒரு படம் போட்டார்.விஸ்வநாததத்தர் தன் மகனிடம், நரேன்! நான் இப்போது ஒரு பெரிய பணக்கார சம்பந்தம் பேசி முடிக்க இருக்கிறேன். அவர்கள் உன்னை ஐ.சி.எஸ்.படிக்க இங்கிலாந்துக்கு அனுப்ப பணம் தருகிறார்கள். இதுதவிர ஏராளமான வரதட்சணையும் தருகிறார்கள். பெண்ணும் பேரழகி. நீ படித்து கலெக்டராக வேண்டும். உன்னை இந்த ஊரே பார்க்க வர வேண்டும், என்றார் கண்களில் கனவலைகள் மிதக்க.

நரேன் எப்படி இதற்கு ஒத்துக்கொள்வார்? இந்த கல்கத்தா நகரம் மட்டுமல்ல...இந்த உலகமே என்னை பார்க்க வரப்போகிறது? என்று எப்படி சொல்ல முடியும்? அவர் அமைதியாக மறுத்துவிட்டார்.இல்லை தந்தையே! திருமணம் என்ற பந்தத்துக்குள் என்னை தள்ளாதீர்கள். ஐ.சி.எஸ். என்ற படிப்பு வெறும் சம்பளத்தையும், அதிகாரத்தையும் தான் தரும். நான் ஞானம் என்ற பெரிய படிப்பைக் கற்றுக் கொள்ளப்போகிறேன். என்னை என் வழியில் விட்டு விடுங்கள், என்று சொல்லிவிட்டார். திருமணம் தொடர்பான நரேனின் பெற்றோர் விருப்பம் கானல்நீராகவே போய்விட்டது. நரேந்திரன் கல்கத்தாவில் சிறந்து விளங்கிய பிரம்மசமாஜத்தில் சேர்ந்தார். இந்த இயக்கத்தை ஸ்தாபித்தவர் ராஜாராம் மோகன்ராய். அதன்பின் பலர் நிர்வாகம் செய்தனர். விவேகானந்தரின் காலத்தில் அதை ஆட்சி செய்தவர் தேவேந்திரநாத் தாகூர். இவர் யார் தெரியுமா? இந்த தேசம் இன்றும் இசைத்துக் கொண்டிருக்கிறதே ஜனகணமன என்ற தேசியப்பாடல். அதனை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் தந்தை. இந்த இயக்கம் இந்துமதத்தில் அதுவரை இருந்த சில மூடப்பழக்க வழக்கங்களை களைந்தெறிந்து புதிய பாதையில் நடைபோட்டது. பல தெய்வ வழிபாடு வேண்டாம். ஒரே தெய்வம் என்பது இதன் கொள்கை.

கணவனை இழந்தபெண்கள் மீண்டும் திருமணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை இந்த இயக்கம் எதிர்த்தது. இப்படிப்பட்ட முற்போக்கான கொள்கைகள் நரேந்திரனை ஈர்த்தன. எனவே தான் இந்த இயக்கத்தில் சேர்ந்தார்.ஒருமுறை நரேந்திரன் தேவேந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவனது மனதுக்குள் ஒரு தாகம்.எல்லோரும் கடவுளைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், அவரை நேரில் பார்த்திருக்கிறார்களா? அப்படி யார் ஒருவர் பார்த்தாரோ அவரே எனது குரு. அவரிடம் இருந்து கடவுளைக்காணும் அந்த வித்தையை கற்பேன் என அடிக்கடி சொல்வார்.தேவேந்திரநாத்திடம் ஓடினார்.சுவாமி! தாங்கள் பிரம்ம சமாஜத்தின் மூத்த உறுப்பினர். தியானத்தில் கை தேர்ந்தவர். கடவுளின் கல்யாண குணங்களை பற்றி அதிகம் தெரிந்தவர். சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்னால் அவரைப் பார்க்க முடியுமா? அதற்காக நான் செய்ய வேண்டும்? என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினார்.

தேவேந்திரநாத் தாகூர் அந்த இளைஞனின் கண்களை உற்று நோக்கினார்.மகனே! நீ சிறந்த யோகியாவாய், என்றார்.நரேந்திரனுக்கு இந்த பதில் எரிச்சலை அளித்தது. நான் கேட்டதற்கு இவரிடம் பதில் கிடைக்கவில்லை. அப்படியானால், இவர்களெல்லாம் கடவுள் என்ற ஒருவர் இருப்பதாக நாடகமாடுகிறார்களா? கருணையின் வடிவம் கடவுள் என்பதெல்லாம் போலியான வாதமா? அவர் சிந்தித்தார்.விவேகானந்தரிடம் இருந்து நம் நாட்டு குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. எவ்வளவு பெரிய மனிதர் தேவேந்திரநாத்! அவரிடம் இருந்து நேரடி பதில் கிடைக்கவில்லை என்றதும், விவேகானந்தர் எப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறார் பாருங்கள். பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் இளைஞர்கள் ஏற்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் சொல்வது சரிதானா என்று சிந்திக்க வேண்டும்.இளம் வயதில் தாத்தா, மரத்தில் பூதம் இருக்கிறது, பிசாசு இருக்கிறது என்று சொன்னதை அவர் எப்படி நம்பவில்லையோ, அதே போல வாலிபப்பருவத்திலும், தேவேந்திரநாத் தாகூர் சொன்ன எதிர்மறை பதிலை விவேகானந்தர் ஏற்கவில்லை.

அப்படியானால் தேவேந்திரநாத் விபரம் தெரியாதவரா என்ற சந்தேகம் உங்களுக்கு எழக்கூடும். இது அந்தப் பெரியவர் ஒருவர் விவேகானந்தருக்கு வைத்த டெஸ்ட் என்று சொல்லலாம்.மார்க் அட்டையுடன் வீட்டுக்கு வரும் மகன் அதிக மார்க் பெற்றிருந்தால் பெற்றவர்கள் உன்னை விட உயர்ந்தவர் யாருமில்லை என பாராட்டும் போது குளிர்ந்து விடுகிறான். ஒரு அரசியல்வாதியை உம்மை விட சிறந்த நிர்வாகஸ்தர் யாருமில்லை என்றால், புகழ்ந்தவரை வாரியத்தலைவராக்கி விடுகிறார். புகழ்ச்சிக்கு மயங்காத உயிர்கள் இல்லை. நீ பெரிய யோகி என சொன்னவுடன் விவேகானந்தர் அந்த சொல்லில் மயங்கி, கடவுளைக் கண்டுவிட்டவர் போல நடிக்கப் போகிறாரா? அல்லது கடவுளைக் காணும் முயற்சியில் இறங்கப்போகிறாரா? என்று தேவேந்திரநாத் வைத்த தேர்வில் விவேகானந்தர் பாஸாகி விட்டார்.பின் அவர் என்ன செய்தார் தெரியுமா? தன் கேள்விக்கு பதிலளிக்காத பிரம்மசமாஜத்தில் உறுப்பினராக இருப்பதே வீண் என நினைத்து, அதிலிருந்து விலகி விட்டார். அவரது தாகம் அதிகரித்தது. கடவுளைப் பார்த்தாக வேண்டும்... அவரை நேரில் சந்தித்து பேசியாக வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்தார். அப்போது அவரது நினைவில் வந்தார் பேராசிரியர் ஹேஸ்டி.
Bookmark and Share





விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 7ஜனவரி 03,2013
பேராசிரியர் ஹேஸ்டியை அவர் சந்தித்து, கடவுளை நேரில் பார்க்க என்ன செய்ய வேண்டுமென கேட்டார்.பேராசிரியர் தனக்குத் தெரிந்த வரையில் தட்சிணேஸ்வரத்தில் இருக்கும் காளிகோயில் பூஜாரி ராமகிருஷ்ணரே கடவுளை நேரில் கண்டவர் என்றார். அவரைசந்திக்க ஆசை கொண்டார்நரேந்திரன். அவர் தட்சிணேஸ்வரத்துக்கு புறப்பட்டு விட்டார். ராமகிருஷ்ணரின் இல்லத்தை அடைந்தததும், அந்த மகானே பரவசமடைந்து விட்டார். வா! மகனே! இத்தனை காலம் காக்க வைக்க உனக்கு எப்படி மனம் வந்தது? என் மனதில் ஏற்படும் ஆன்மிக உணர்வுகளை உலகெங்கும் பரப்ப வந்தவனல்லா நீ? அந்த நாராயணனே நரேன் என்ற பெயரில் வந்ததாக எண்ணுகிறேன்,என்றார்.விவேகானந்தருக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை நம்மை பார்த்திராத இவர், நீண்டநாள் பழகியவர் போல உளறுகிறாரே! இவரை பைத்தியம் என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நிஜமாகவே அப்படித்தானோ! மேலும், நம் நோக்கம் என்ன? கடவுளை இவர் நேரில் பார்த்திருக்கிறாரா இல்லையா? அப்படி அவரைப் பார்க்க என்ன வழி என்பதற்குரிய ஆலோசனை மட்டுமே! ஆனால், இவர் வேறு என்னவெல்லாமோ பேசுகிறாரே, என்றவராய் அங்கிருந்த சீடர்களிடம் பாயை விரிக்கச் சொன்னார்.

சீடர்கள் அவரை ஆச்சரியமாய் பார்த்தனர்.இவர் இதுவரை யாரிடமும் இவ்வளவு பிரியமாய் பேசியதில்லையே. கல்கத்தாவில் இருந்து வந்த யாரோ ஒருவனிடம் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாரே! என நினைத்தவர்களாய் பாயைவிரித்தனர். ராமகிருஷ்ணர் நரேனிடம், நரேந்திரா! நீ பாடு, நான் கேட்க வேண்டும், என்றார். நரேந்திரன் சில வங்காளிப் பாடல்களைப் பாடினான். மனமே உன் மனைக்கு ஏகுமண்ணுலகு உனக்கு அந்நியமன்றோ மாறு வேஷமிட்டேன் மயங்குகிறாய் இங்கே பார்க்கும் இப் பாரெல்லாம் பஞ்ச பூதமெல்லாம் பரமே அன்றோ உனக்குமடமனமே! சத்திய சிகரத்தில் ஏறுக மனமே சளைத்து விடாமல் ஏறுக மனமே சாந்தி கொள்வாய் எந்தன் மடமனமே! என்று உச்ச ஸ்தாயியில் பாடினார். இந்தப் பாடலுக்கு சுருக்கமான பொருள் இதுதான்...மனிதன் பூலோகத்திற்கு தற்காலிகமாகத்தான் வந்திருக்கிறான். பஞ்சபூதங்களும், இவ்வுலகில் காணும் இன்பங்களும் தற்காலிகமானவையே. நம்மை அனுப்பிய சக்தியிடம் நாம் போயாக வேண்டும். அதற்கு முன் அனுப்பியவரை பார்த்தாக வேண்டும், என்பதுதான். ராமகிருஷ்ணர் அந்த ஆன்மிக வீரனின் உள்ளத்தைப் புரிந்து கொண்டார். கடவுளைக் காணும் வேட்கை நரேந்திரருக்குள் ஒளிந்திருப்பதைக் கண்டு கொண்டார். ஆனால், நரேனுக்கு சோதனைகள் வைக்க வேண்டாமா? அவர் எதுவும் சொல்லவில்லை.

மீண்டும் ஒருமுறை நரேந்திரன் ராமகிருஷ்ணரை சந்திக்க வந்தார். இப்போது ராமகிருஷ்ணரின் நடவடிக்கை வேறு மாதிரியாக இருந்தது. அவரை அறைக்குள் அழைத்துச் சென்று, தன் கால் பெருவிரலால் நரேந்திரனின் உடலில் அழுத்தினார். இதுவரை விவேகானந்தர் ஐயோ! என்னை விடுங்கள், என்னை காப்பாற்றுங்கள், எனக்கு வலிக்கிறது, என்ற வார்த்தைகளைக் கூட தெரிந்து வைத்துக் கொண்டதில்லை. இப்போது அவரே கத்திவிட்டார். சுவாமி! என்னை விடுங்கள். நான் எங்கோ செல்கிறேன். தங்கள் பாத ஸ்பரிசம் என்னை எங்கோ இழுத்துச்செல்கிறது. என்னை விட்டு விடுங்கள். என்னைப் பெற்றவர்களுக்கு நான் பிள்ளையாக திரும்பிப்போய் சேர வேண்டும், என கதறினார். ராமகிருஷ்ணர் காலை எடுத்தார். அதன்பிறகே தன்னிலைக்கு திரும்பினார் நரேந்திரன். சிரித்தபடியே நரேந்திரனின் மார்பில் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். நரேந்திரா! உன் எண்ணம் ஈடேறும். நீ இதையே தாங்கிக் கொள்ள முடியாத போது, கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை எப்படி பூர்த்தி செய்து கொள்ள இயலும்? சரி...எதற்கும் ஒரு காலம் இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட அந்தக்காலம் வரும்போது தான், உன் எண்ணம் நிறைவேறும், என்றார்.நரேந்திரனுக்கும் அதிசயமாக இருந்தது. இப்போது நான் சுயநினைவுக்கு திரும்பி விட்டேன். ஆனால், சற்றுமுன் என்ன நடந்தது? நான் இந்த பிரபஞ்சத்துக்குள் கரைந்து விடுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதே! அது எப்படி நடந்தது.

ஒருவேளை இவர் மாயவித்தை செய்பவரோ? மெஸ்மரிசம் என்று சொல்கிறார்களே! அதை அறிந்தவரோ? எது எப்படியோ போகட்டும். இனிமேல் இவர் அருகே போனால், இவரது ஸ்பரிசம் நம் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என முடிவெடுத்தார்.அதேநேரம் மற்றொரு கோணத்திலும் நரேந்திரன் சிந்தித்தார். ஒரு நிமிடத்தில் வலிமை பொருந்திய நம் மனதைச் சிதறடித்த இந்த மனிதரை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. இவரை பித்தர் என சொல்வதை ஏற்கமாட்டேன். நான் என்னவோ என்னை பலசாலி என கருதிக் கொண்டிருந்தேன். பகுத்தறிவு கருத்துக்களை சிந்தித்தேன். அவற்றை எல்லாம் ஒரு நொடியில் நொறுக்கிவிட்டாரே இந்த மகானுபாவர்? என்றும் சிந்தித்தார்.மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை விவேகானந்தரை உந்தித்தள்ளியது. ராமகிருஷ்ணருக்கும் இதே நிலை. அந்த தெய்வக்குழந்தை மீண்டும் வரமாட்டானா என்று. நினைத்தது போல, மூன்றாம் முறையாகவும் தட்சிணேஸ்வரம் வந்தார் நரேந்திரர். அவரை அழைத்துக் கொண்டு ஒரு தோட்டத்திற்கு சென்றார் ராமகிருஷ்ணர். அப்போது அவரது நினைவலைகள் பின்னோக்கி சென்றன.

ஒருமுறை அவர் தியானத்தில் இருந்த போது ஏழு ரிஷிகள் அவரது கண்களில் தென்பட்டனர். அப்போது வானத்தில் இருந்து வந்த ஒரு தெய்வக்குழந்தை ஒரு ரிஷியின் மடியில் அமர்ந்தது. தவத்தில் இருந்த அவர் பாதிகண்களைத் திறந்தார். மடியில் இருந்த குழந்தை அவரிடம், நான் பூலோகம் செல்கிறேன். அங்கே என்னுடன் வா, என்றது. மகரிஷி குழந்தையிடம், துன்பம் நிறைந்த அந்த உலகத்திற்கு போவதில் உனக்கு இத்தனை ஆனந்தமா? என்று கேட்டபடியே அவர் கண்மூடிவிட்டார். பூலோக வாழ்வுடன் போராடிக் கொண்டிருக்கும் பல உயிர்களை மீட்டு, தன் உலகுக்கு அழைத்துச் செல்ல வருகிறது என்பதை யார் அறிவார்? அந்தக் குழந்தை ஒளிவடிவாக மாறி நேராக பூலோகம் வந்தது. கல்கத்தாவின் சிம்லா பகுதியிலுள்ள கவுர்மோகன் முகர்ஜி தெருவிற்குள் புகுந்தது. விஸ்வநாததத்தரின் வீட்டுக்குள் புகுந்து, அவர் மனைவி புவனேஸ்வரியின் வயிற்றில் புகுந்தது. அந்த தாய் பெற்ற தெய்வீகப்பிள்ளையுடன் தான் நாம் இப்போது தோட்டத்தில் உலவிக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டார் ராமகிருஷ்ணர்.
Bookmark and Share




விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 8ஜனவரி 03,2013
நரேந்திரனுடன், பேசிக்கொண்டிருந்த அந்த வேளையிலேயே திடீரென பரவசநிலைக்கு போய் விட்டார் ராமகிருஷ்ணர். அவர் எந்தநேரத்தில் இப்படிப்பட்ட நிலையை அடைவார் என யாராலும் கணிக்க முடியாது. அந்த நாராயணனே கதாதரனாக (ராமகிருஷ்ணரின் முந்தையப் பெயர்) அவதரித்துள்ளார் என்பது ராமகிருஷ்ணருக்கும், அவரது சீடர்களுக்கும் தெரியும். அவர் இப்படிப்பட்ட நிலையை அடையும் போது அவரது சீடர்கள் அவரைத் தெய்வப்பிறவியாக எண்ணுவர். மற்றவர்களின் பார்வையில் அவர் பித்தராகப் படுவார். நரேந்திரன் அவரை அப்படியே உற்றுப்பார்த்தார். இப்போது ராமகிருஷ்ணரின் கை மெதுவாக நரேந்திரரைத் தொட்டது. அவ்வளவு தான்! இதற்கு முன் கால் கட்டைவிரலால் தன்னை அழுத்தியபோது ஏற்பட்ட அந்த உணர்வு மீண்டும் ஆட்கொண்டது. ஆனால், முதல்முறை அலறியது போல இம்முறை அவர் அலறவில்லை. தாங்கமுடியாத ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டாலும் கூட, நரேந்திரர் அப்படியே தன்னை மறந்துவிட்டார். அதன் பிறகு அவரது மனதில் எழுந்த எண்ண அலைகள் எப்படியோ இருந்தன. அவர் சிவபெருமானின் அவதாரமாக தனக்குத்தானே தெரிந்தார். அவரது முற்பிறப்பு அவரது மனக்கண் முன் வந்தது. அப்போது ராமகிருஷ்ணர் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டார்.

நரேந்திரா! உன் பூர்வ ஜென்ம கதையைச் சொல்?என்றதும், நரேந்திரன் பேச ஆரம்பித்தார். அடுத்த கேள்விகள், நீ எவ்வளவு காலம் இந்த பூமியில் வாழ்வாய்?, நீ இந்த உலகில் என்னென்ன ஆன்மிகப்பணிகள் செய்யப் போகிறாய்?... இப்படியே கேள்விகள் தொடர்ந்தன. இதற்கு நரேந்திரன் ஒவ்வொன்றாக பதில் சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் பரவசநிலையை விட்டு வெளியே வந்ததும், அவருக்கு என்ன நடந்தது என்பெதல்லாம் மறந்து விட்டது. எப்படியோ, இறைவனைப் பார்க்க முடியும் என்ற தன் கருத்தை மக்களிடம் பரப்ப ஒரு நல்ல சீடன் அமைந்துவிட்டான் என்பதில் ராமகிருஷ்ணருக்கு பரமதிருப்தி. சில சமயங்களில் விவேகானந்தர் தொடர்ந்து வராமல் போய்விடுவார். அப்போதெல்லாம் தன்னைத் தேடி வருகிறவர்களிடம், நரேந்திரனை எங்கு பார்த்தாலும் வரச்சொல்லுங்கள், என்பார் ராமகிருஷ்ணர். பொதுவாக சிஷ்யர்கள் தான் குருவைத்தேடி செல்வார்கள். இங்கே சிஷ்யனைத் தேடி குரு அலைந்து கொண்டிருந்தார். அதுதான் விவேகானந்தர் என்ற மாபெரும் மனிதனின் தனிச்சிறப்பு. நரேந்திரன் சிவ அம்சம் என்பதைப் புரிந்துகொண்ட ராமகிருஷ்ணர், யாராவது அவரை திட்டினால் கடுமையாகக் கோபப்படுவார்.

ஒருமுறை ஒரு பக்தர் ராமகிருஷ்ணரிடம், நரேந்திரர் தீயவர்களுடன் சேர்ந்து வெளியே சுற்றுகிறார். அவரை தீயபழக்கங்கள் ஆட்கொண்டுள்ளன, என்று புகார் சொன்னார். ராமகிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. நீ சிவநிந்தனை செய்கிறாய். நரேன் ஒருபோதும் தவறு செய்யமாட்டான் என்று அந்த காளியே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இனிமேல் இப்படி பேசினால், என் முகத்திலேயே விழிக்காதே, என திட்டி அனுப்பிவிட்டார். விவேகானந்தர் மீது ராமகிருஷ்ணர் அந்தளவு பற்றுக்கொண்டிருந்தார். ஒருமுறை ராமகிருஷ்ணரின் ஜெயந்திநாள் (ஜென்மநட்சத்திர நாள்) வந்தது. அவரிடம் ஆசி பெற பல சீடர்களும், பக்தர்களும் வந்தனர். விவேகானந்தர் மட்டும் வரவில்லை. அவரைக்காணாமல் மற்ற சீடர்களிடம், நரேன் வந்து விட்டானா? என கேட்டபடியே இருந்தார் ராமகிருஷ்ணர். அன்று மதியம் தான் வந்தார் ராமகிருஷ்ணர். அவரைப் பார்த்தவுடனேயே அவர் மீது சாய்ந்து விட்டார். அப்படியே சமாதிநிலைக்கு போய்விட்டார்.

ஒருமுறை அவரைக்காணாமல் அவர் கல்கத்தாவுக்கே போய்விட்டார். விவேகானந்தர் பிரம்மசமாஜத்தில் இருப்பதாக அறிந்து, அங்கேயே போய்விட்டார். அங்கே ஆன்மிகக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. விவேகானந்தரும் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே சமாதிநிலையடைந்த ராமகிருஷ்ணர் மேடையில் அப்படியே அமர்ந்து விட்டார். இது பிரம்மசமாஜ உறுப்பினர்கள் பலருக்கு பிடிக்கவில்லை. விவேகானந்தர் தான் இந்தச் சூழ் நிலையை சமாளித்து, அவரை தட்சிணேஸ்வரத்துக்கு கொண்டு வந்து சேர்த்தார். இப்படி சீடன்மீது, ராமகிருஷ்ணர் அதீத அன்பு செலுத்தினார். ராமகிருஷ்ணர் இப்படி சீடனின் நினைவாகவே இருந்ததால், அவர் கடவுளை நினைக்காமலே போய்விடுவாரோ என விமர்சித்தவர்களும் உண்டு. பிரதாப சந்திர ஹாஸ்தா என்ற பக்தர் இதை ராம கிருஷ்ணரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். ராமகிருஷ்ணருக்கு இந்தக் கேள்வி சிந்தனையை எழுப்பியது. இதை காளிதேவியிடமே கேட்டுவிட்டார் ராமகிருஷ்ணர். அவள் அவரிடம், மகனே! நான் எல்லா உயிர்களின் உள்ளத்திலும் ஒளிவீசுகிறேன் என்றாலும், தூய்மையான நரேன் போன்றவர்களின் உள்ளத்தில் மேலும் பிரகாசமாக ஒளி வீசுகிறேன், என்றாள். அதன்பின் நரேந்திரன் மீதான ராமகிருஷ்ணரின் மதிப்பு இன்னும் பல மடங்கானது.

இங்கே விவேகானந்தர் இவ்வாறு ஆன்மிகக்கோட்டை எழுப்பிக்கொண்டிருந்த வேளையில் தான், விஸ்வநாததத்தர் மறைந்தார். புவனேஸ்வரி தாயார் அழுது புலம்பினார். நரேந்திரனுக்கு இப்போது தான் தன்னிலை திரும்பியது. குடும்ப வரவு செலவை திருப்பிப்பார்த்தார். ஒன்றுமே மிஞ்ச வில்லை. கடன் அதிகமாக இருந்தது. கடன் கொடுத்தவர்கள் புவனேஸ்வரி அம்மையாரை நெருக்கினார்கள். ஆன்மிகம் என்பது ஒருபுறம் இருந்தாலும், விவேகானந்தர் படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்தார். பி.ஏ., முடித்து சட்டப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் வறுமையின் கோரப்பிடியில் அவர்கள் சிக்கினர். இருப்பதையெல்லாம் விற்று, மகனைப் படிக்க வைத்தார் புவனேஸ்வரி. ஆனால், அவர் வாரி வழங்கியதில் வசதியான உறவுக்காரர்கள் கூட அவரது வறுமையை எள்ளி நகையாடினர். இன்னும் சில உறவினர்கள், அவர்கள் குடியிருந்த வீட்டில் தங்களுக்கும் பாத்தியதை உண்டு எனவும், எனவே வீட்டை விற்று தங்கள் பணத்தைக் கொடுத்து விட்டு வெளியேறி விட வேண்டுமெனவும் கூறினர். புவனேஸ்வரி அதிர்ச்சியில் இருந்தார். விவே கானந்தர் தன் தாயைத் தேற்றினார். வீடு சம்பந்தமான வழக்கு கோர்ட்டுக்கு போனது. விவேகானந்தர் கோர்ட் படியேறினார்.
Bookmark and Share





விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 9ஜனவரி 03,2013
1
கோர்ட்டில் இருந்து என்ன தீர்ப்பு வருமோ என்ற நிலை... தீர்ப்பு வரும் வரை படிப்புக்கு பணம் வேண்டும். சாப்பாட்டுக்கு பணம் வேண்டும். அம்மாவைக் காப்பாற்ற வேண்டும். ஏதேனும் பகுதிநேர வேலைக்கு போனால் என்ன எனத் தோன்றியது. ஒரு வேலையில் சேர்ந்தார். அது பிடிக்கவில்லை. விட்டுவிட்டார். பல சமயங்களில் பட்டினியாய் கல்லூரிக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், நண்பர்களிடம் தான் சாப்பிடாமல் வந்தது பற்றி வாயே திறப்பதில்லை. மேலும், சாப்பிட்டவனை விட அதிக உற்சாகமாக பேசுவார் விவேகானந்தர். ஒருமுறை தன் தந்தையின் நண்பர்கள் நடத்திய அலுவலகங்களுக்குச் சென்று வேலை கேட்டார் விவேகானந்தர். இவர் வாசலில் நுழைகிறார் என்றாலே, கதவுகள் சாத்தப்பட்டன. அவர் வருத்தப்பட்டார். சிவலிங்கம் முன்பு அமர்ந்து, சிவனே, என்ன உலகம் இது. மனிதர்களுக்கு தெய்வீகத் தன்மையை படைத்த நீ, அவர்களுக்குள் இந்த ராட்சஷ குணத்தையும் ஏன் படைத்தாய்? உறவினர்கள் தான் விரட்டுகிறார்கள் என்றால், நண்பர்களுமா அப்படி இருக்க வேண்டும்.

எங்களால் வசதி பெற்ற இவர்கள், எங்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது, கழன்று கொள்வது ஏன்? என பிரார்த்தித்துக் கொண்டிருந்த வேளையில், விவேகானந்தர் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம், புவனேஸ்வரிக்கு அம்மையாருக்கு தெரியவந்தது. அவர் பூஜையறைக்கு வந்தார். நரேன்! ஏன் இன்னும் அந்த சிவனை வணங்குகிறாய். காலமெல்லாம் அவனைக் கையெடுத்தேன். அதற்கு பரிசாக என் மாங்கல்யத்தை பறித்தான். அதன்பிறகு சொத்துக்களைப் பறித்தான். உறவினர்களை மனம் மாறச் செய்தான். இப்போது, உன் தந்தையின் நண்பர்களே உன்னை அவமானப்படுத்த செய்தான். இல்லை... இந்த உலகில் தெய்வமில்லை. ஒருவேளை இருந்தாலும், அது பாவம் செய்தவர்களுக்கே துணை போகிற தெய்வம். அதை வணங்காதே, என கத்தினார். விவேகானந்தருக்கும் தாயின் வேதனை சரியென்றே பட்டது. ஆம்...ராமகிருஷ்ணர் சொல்வது போல, தெய்வம் இந்த உலகில் இருந்தால், அது நன்மையைத் தானே செய்ய வேண்டும். அது கேடு கெட்டவர்களிடம் பணத்தையும், நல்லவர்களிடம் வறுமையையும் ஒப்படைத்து வைத்திருக்கிறதே. நான் பைபிள் படித்திருக்கிறேன். அதில் வரும் சாத்தானிடம் ஆண்டவன் தனது ஆட்சியை ஒப்படைத்து விட்டானோ!... இப்படி சிந்தனை சிதற விவேகானந்தர் நாத்திகனாகவே மாறிவிட்டார்.

இதை விவேகானந்தரின் பழைய நண்பர்கள் பலர் பயன்படுத்திக் கொண்டனர். நரேன்! கடவுள் என்றும், பூதம் என்றும் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. இப்போதைய உன் குடும்பநிலை எங்களுக்கு தெரியும். எங்கள் தொழிலையே நீயும் செய். நாங்கள் செய்யும் தொழிலில் முறைகேடுகள் இருக்கலாம். ஆனால், பணம் வருகிறதே, வா என்றனர். இன்னும் சிலர், நரேன்! உன் மனம் புண்பட்டு போயிருக்கிறது. நீ போதையில் மித. கஷ்டங்களை மறந்து விடுவாய், என்றனர். விவேகானந்தரின் பேரழகில் மயங்கிய ஒரு பணக்கார பெண், நரேன்! பணம் தானே உனக்கு பிரச்னை! என் சொத்தையே உனக்கு தருகிறேன். ஆனால், நீ என் சொந்தமாக வேண்டும், என்றாள். தகாத செயலுக்கு அழைத்தாள். விவேகானந்தர் தன் பிரம்மச்சர்யத்தை மட்டும் விட மறுத்து விட்டார். அழியப்போகும் உடல் உன்னுடையது. அதை அனுபவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மரணம் உன்னை விரட்டுகிறது. அதற்கு முன் இந்த உலகத்துக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என சிந்தித்ததுண்டா? என அவளிடம் கேட்டார்.

கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்றால், இவளைப் போன்ற காமுகிகளையும் ஏன் படைத்தார்? பணத்திற்காக தங்களை விற்பவர்கள் ஒருபுறம், பணம்கொடுத்து தன்னை விற்க வருபவர்கள் மறுபுறம்? நாத்திகர்கள் சொல்வது நிஜம்தானோ? கடவுள் இந்த பூமியில் இல்லையோ? சில சமயங்களில், நமது பாவ புண்ணியங்களுக்கேற்ப கடவுள் தண்டனை தருகிறார் என்கிறார்களே! ஆனந்தமயமான கடவுள் அப்படி செய்வாரா? தவறுகளுக்கு மனிதன் தண்டனை தரலாம். ஆண்டவன் தண்டனை தருகிறான் என்றால் அவனை ஆனந்தமயமானவன் என எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நாத்திகத்துக்கும், ஆத்திகத்துக்கும் இடையில் கிடந்து தவித்தார் அவர். அந்த சமயத்தில் தான் குருநாதர் ராமகிருஷ்ணர் அவரது நினைவில் வந்தார். ஆம்...குருநாதர் காளிபக்தர். அவரிடம் சொன்னால், காளியிடம் நம் பிரச்னையைச் சொல்லி பணம் வாங்கித் தந்துவிடுவார். வறுமை தீர்ந்து விடும். காளிக்கு தெரியாதா நம் நிலைமை? என்ற படியே குருஜியை தேடிச்சென்றார். குருஜி! நான் உங்களைத் தேடி வந்துள்ளது எதற்கென உங்களுக்கே தெரிந்திருக்கும். வறுமை என் குடும்பத்தை ஆட்டிப்படைக்கிறது. இப்போது என் தேவை பணம். அதை காளிமாதா தருவாளா? நீங்கள் தான் அவளுடன் பேசுவீர்களே! என் பிரச்னையை அவளிடம் சொல்லுங்கள். பணம் கிடைக்கும் வழியை அவளிடமே கேட்டுச் சொல்லுங்கள், என்றார். ராமகிருஷ்ணர் சிரித்தார். மகனே! நீ சொல்வதைப் போல் லவுகீக இன்பங்களையெல்லாம் என்னால் காளியிடம் கேட்கமுடியாது.

உனக்கு ஒரு கஷ்டம் வந்ததும், நாத்திகவாதத்தை ஒப்புக்கொண்டாய். அதனால், உன் கஷ்டம் மேலும் மேலும் அதிகமாயிருக்கிறது. ஒன்று செய். நீயே இன்றிரவு காளி சன்னதிக்கு செல். அவளிடம், உன் குறையைச் சொல். அவள் தீர்த்து விடுவாள், என்றார். ராமகிருஷ்ணர் சொன்னதை அப்படியே நம்பினார் விவேகானந்தர். அன்றிரவு சரியாக 9 மணி. காளி சன்னதியில் அவள் முன்னால் இருந்தார் விவேகானந்தர். அவளது அகண்ட உருவத்தை பார்த்தார். அவளது மங்கள முகத்தைப் பார்த்தார். கால்கள் தடுமாறின. உடலெங்கும் ஒரு தெய்வீக போதை! அவர் தன்னையறியாமல் பேசத் துவங்கினார். அம்மா! நான் துறவியாக வேண்டும், எதையும் சந்திக்கும் விவேகம் வேண்டும். பக்தியும், ஞானமும் வேண்டும், என்றார். ஏதோ ஒரு பரவச உணர்வில் ராமகிருஷ்ணரிடம் திரும்பினார். மகனே! அம்பாளிடம் பணம் கேட்டாயா? என்றார். அப்போது தான், விவேகானந்தருக்கு நாம் எதற்காகப் போனோமோ, அதைக் கேட்க மறந்து விட்டோமே! என்ற அதிர்ச்சி ஏற்பட்டது. ராமகிருஷ்ணர் சிரித்தபடியே சொன்னார். பரவாயில்லை நரேன்! மீண்டும் அவள் சன்னதிக்கு போ. உன் பணத்தேவையை அவளிடம் சொல். போ, என்று. மீண்டும் காளியின் முன்னால் நின்றார் விவேகானந்தர்.
Bookmark and Share






விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 10ஜனவரி 03,2013
1
இந்த முறையும் விவேகானந்தர், அம்பிகையிடம் தான் கேட்க வந்ததை மறந்துவிட்டார். அம்பிகையின் முன்னால் நின்றபோது ஏதோ ஒரு பரவசநிலை ஏற்பட்டது. தாயே! எனக்கு பக்தியையும் ஞானத்தையும் தா, என்றே இந்த முறையும் வேண்டிக்கொண்டார். மறுநாள் குருநாதரைச் சந்தித்தார். ராமகிருஷ்ணர் அவரிடம், நரேன்! இம்முறையாவது அம்பிகையிடம் உன் பணத்தேவையை சொன்னாயா? என்றார். இல்லை என விவேகானந்தர் தலையசைத்தார். ராமகிருஷ்ணர் அவரிடம் கடிந்து கொள்வது போல் நடித்தார். நீ அசட்டுத்தனமாக நடந்து கொள்கிறாய். அம்பிகையை பார்த்த உடனேயே உன் தேவையை நீ சொல்லியிருக்கலாம் அல்லவா? உன்னை நீயே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கலாம் அல்லவா? இன்னும் ஒருமுறை முயற்சித்துப் பார். அம்பிகையிடம் உன் பணத்தேவையைச் சொல், என்றார். அந்த நிமிடமே விவேகானந்தர் அம்பிகை சன்னதிக்கு கிளம்பிவிட்டார். கோயில் வாசலில் கால் வைத்ததுமே ஏதோ ஒரு உணர்வு தடுத்தது. அம்பிகையிடம், கேவலம் பணத்துக்காக பிரார்த்தனை செய்யப் போகிறோமே? என்ற எண்ணம் சன்னதிக்குள் செல்ல முடியாமல் தடுத்தது.

அவளோ கருணை வாய்ந்தவள். என்ன கேட்டாலும் தருபவள். அதற்காக கேவலமான பணத்தையா கேட்கவேண்டும்! அவர் தலைகுனிந்தார். அம்பிகையின் முன்னால் சென்றார். அம்மா! ஞானத்தையும், பக்தியையும் தவிர எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை. அதை எனக்குக் கொடு, என்றார். சன்னதியில் இருந்து வெளியேறினார். மனம் திருப்தியாக இருந்தது. இதற்கெல்லாம் காரணம் ராமகிருஷ்ணரின் சித்தம்தான் என்பதை புரிந்து கொண்டார். மீண்டும் ராமகிருஷ்ணரிடமே சென்றார். குருவே! நான் பலமுறை அம்பிகையிடம் சென்றேன். என்னால் அவளிடம் பணம் கேட்க முடியவில்லை. அப்படிக்கேட்பதற்கே மனம் கூசுகிறது. ஆனால், என் குடும்ப வறுமை நீங்குவதற்காக உரிமையுடன் உங்களிடம் பணம் கேட்கிறேன். அதற்குரிய வரத்தை தாருங்கள், என்றார். ராமகிருஷ்ணர் மறுத்து விட்டார். மகனே! நீ என்னிடம் வெறும் பணத்தைப் பெறுவதற்காகவா அம்பிகை உன்னை என்னிடம் அனுப்பியிருக்கிறாள்! அம்பிகையின் சித்தம் அதுவல்ல. இருப்பினும் சொல்கிறேன். ஒரு பிடி அரிசிக்கும், கந்தை துணிக்கும் கஷ்டமில்லாமல் உன் குடும்பத்தார் இருப்பார்கள். புறப்படு, என்றார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்க வேண்டும் என்ற விவேகம் அவருக்குள் ஏற்பட்டது. அவர் உறவுகளைத் துறக்க தயாராகிவிட்டார். இனி எனக்கும் அந்த குடும்பத்திற்கும் சம்பந்தம் எதுவும் வேண்டாம். நான் துறவியாகப் போகிறேன் என உறுதி எடுத்துக் கொண்டார். இதன்பிறகு ராமகிருஷ்ணர் மறைந்து விட்டார். ராமகிருஷ்ணரின் சீடர்கள் விவேகானந்தரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். பேலூர் என்ற இடத்தில் ராமகிருஷ்ணரின் பெயரால் ஒரு மடம் நிறுவப்பட்டது. அங்கே ராமகிருஷ்ணரின் சிலை அமைக்கப்பட்டது. ராமகிருஷ்ணரின் சீடர்கள் முற்றிலுமாக வீட்டுத்தொடர்பை அறுத்து துறவறம் பூண்டுவிட்டனர். அவர்களில் லாட்டு, யோகின் என்பவர்கள் ராமகிருஷ்ணரின் துணைவியாரான அன்னை சாரதா தேவியுடன் தீர்த்த யாத்திரை கிளம்பினர். விவேகானந்தருக்கு மட்டும் குடும்பத்தின் வறுமை நிலை முழுமையான துறவறம் பூண முட்டுக்கட்டையாக இருந்தது. கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த சொத்து தொடர்பான் வழக்கு இழுத்தடித்தது. அதற்காக அவர் பலமுறை நீதிமன்றம் செல்வதை தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியிலும் அவர் பல இளைஞர்களை துறவறம் பூணச்செய்து மடத்திற்கு அழைத்து வந்தார். இதைக்கண்ட அந்த இளைஞர்களின் உறவினர்கள் விவேகானந்தரை கடுமையாக திட்டி தீர்த்தனர். இதற்கிடையே விவேகானந்தர் தங்கியிருந்த இடத்திற்குரிய ஒப்பந்தம் முடிந்துவிட்டது. ஒருபுறம் சீடர்களின் உறவினர்களின் ஏச்சும்பேச்சும், மறுபுறம் இடமே இல்லாத ஒரு நிலையும் அவரை வாட்டியது. இதற்கு மத்தியில் சீடர்களை எப்படி தக்கவைப்பது? என்ற பிரச்னை ஏற்பட்டது. புது இடத்தில் அவர்களை தங்க வைக்க வேண்டுமானால் பணம் வேண்டும். இதற்காக ஒருசிலரை நாடினார் விவேகானந்தர். அவர்களோ, நரேன்! இது உனக்கு வேண்டாத வேலை. நீ பல இளைஞர்களை கெடுக்கிறாய். அவர்கள் இல்லறத்தில் மூழ்கி சுகமான வாழ்வு வாழ்வதை ஏன் தடுக்கிறாய்? அதுமட்டுமின்றி நீயும் உன் சுகத்தை ஏன் அழித்துக்கொள்ள வேண்டும்? என்று கூறினர். விவேகானந்தரின் மீதுள்ள அக்கறையால்தான் அவர்களும் இவ்வாறு சொன்னார்கள். ஆனால், விவேகானந்தர் அவர்களின் கருத்தை ஏற்கவில்லை. இதன்பிறகு ஒரு அற்புதம் நிகழ்ந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சர், தனது இல்லறச்சீடர்களில் ஒருவரான சுரேந்திரநாதமித்ரர் என்பவரின் கனவில் தோன்றி, மித்ரா! நீ நரேந்திரனுக்கு அவன் கேட்கும் உதவியை செய், என்றார்.

சுரேந்திரநாதர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவருக்கும் மிகப்பெரிய அளவிற்கு செல்வம் இல்லை. இருந்தாலும், ஒரு சிறிய வீட்டை விவேகானந்தரும், அவரது சீடர்களும் தங்கியிருக்கும் வகையில் வாடகைக்கு அமர்த்திக் கொடுத்தார். வாடகையை அவரே கொடுத்து வந்தார். ஓரளவு உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். சுரேந்திரநாதரின் இந்த உதவி, விவேகானந்தரின் கண்களை குளமாக்கி விட்டது. கல்கத்தா அருகிலுள்ள பாராநகர் என்ற இடத்தில்தான் அந்தவீடு இருந்தது. அது படுமோசமான வீடு. பூதங்களும், பேய்களும் குடியிருப்பது போல இருளடைந்து கிடந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சரை எங்குதகனம் செய்தார்களோ அந்த சுடுகாட்டின் அருகில் வீடு அமைந்திருந்தது. பல்லிகள், எலிகள், பெருச்சாலிகள் வாழும் அந்த கூடாரத்திற்கு அவ்வப்போது பாம்புகளும் வந்துபோயின. பக்கத்தில் ஒரு குட்டை இருந்தது. அங்கிருந்து புறப்படும் கொசுக்கள் சீடர்களை வாட்டி வதைக்கும். இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அங்கு தங்குவதை சீடர்கள் பெருமையாகக் கருதினர். துன்பத்தை அனுபவிப்பதுதான் துறவு மேற்கொள்வதற்கு முதல் பயிற்சி என அவர்கள் நினைத்தனர். அந்த வீட்டில் இருந்த ஒரு அறையை அலங்கரித்து தெய்வ படங்களையும், மகான்களின் படங்களையும் வைத்தனர்.
Bookmark and Share












































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக