ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரும்... கீத கோவிந்தமும்

ராதே கிருஷ்ணா 28-09-2015



ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரும்... கீத கோவிந்தமும்
தமிழகம் மட்டுமின்றி- இந்தியா மட்டுமின்றி- வெளிநாட்டு ஆன்மிக மக்களின் போற்றுதலுக்கு உரியவராகவும் இருந்தவர், இன்றும் பலர் உள்ளங்களில் வாழ்பவர் காஞ்சி காமகோடி சங்கராச்சார்ய மஹா சுவாமிகள் என்று போற்றப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
நூறாண்டுகள் வாழ்ந்த மஹான்! அவருக்கும் கீத கோவிந்தத் துக்கும் உள்ள தொடர்பைக் காண்போம்.
வைகாசி விசாக பௌர்ணமி நாளில்தான் பிருந்தாவனத்தில்- பாண்டீர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா- கிருஷ்ண திருமணம் நடந்ததாம். ஸ்ரீமத் பாகவதம் கூறாத ராதையை- ராதா- கிருஷ்ண திருமணத்தை கீத கோவிந்தம் என்னும் சிருங்கார ரச காவியம் கூறுகிறது. இதனை இயற்றியவர் ஜெயதேவர். அதனை மிகவும் ரசிப்பார் காஞ்சி மஹா பெரியவர்.
ஒரு சந்நியாசி சிருங்கார ரசம் கலந்த கீத கோவிந்தத்தை ரசிக்கிறாரென்றால் அது சாதாரண சிருங்கார ரசமா? அந்த ஜெகந்நாதரே ரசித்த கீதமல்லவா!
பூரி ஜெகந்நாத க்ஷேத்திரத்தில் ஸ்ரீ மஹா பெரிய வரின் ஆக்ஞையின் பேரில், ஜெயதேவர்- மீரா விக்ரகத்துடன் காமகோடி மடம் கட்டப் பட்டுள்ளது என்றால், கீத கோவிந்த- ஜெகந் நாத மகிமையை ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் எந்த அளவுக்கு உணர்ந்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
விழுப்புரத்தில், சுப்பிரமணியன்- லட்சுமி தம்பதியருக்குத் தவப்புதல்வனாய் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ மஹா பெரியவர். வைகாசி விசாகப் பௌர்ணமி அன்று சிவபெருமானே ஜோதி சொரூபனாக- முருகப் பெருமானாக அவதரித்தார். (அதற்கு அடுத்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் மஹா பெரியவர்.) சுவாமிமலை சுவாமிநாதனே குலதெய்வம் என்பதால், மகா பெரியவரின் இயற்பெயரும் சுவாமிநாதன் ஆயிற்று.
விசாக- அனுஷ நட்சத்திரங்களுக்கு வேதத்தில் "ராதா' என்று பெயராம். வட மொழியில் அனுஷத்திற்கு அனுராதா என்று பெயர். ராதைக்கு அடுத்தது. எனவே விசாகன் ராதையுமா னான். சிவனே ராதையாகப் பிறந்து கண்ணனுடன் ராச லீலை புரிந்தான் என்று தேவி புராணம் கூறுகிறது. சிவனே கந்தனாக அவதரித்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. ஆக, கந்தனே ராதையானான் என் றும் சொல்லலாம். ராதையின் மகிமையை கர்க சம்ஹிதை, பிரம்ம வைவர்த்தம், தேவி பாகவதம் போன்ற நூல்கள் கூறுகின்றன. அதன்படி ராதா- மாதவன் திருமணம் நடந்த தினம் விசாக பௌர்ணமியே.
எனவேதான் ஸ்ரீ மஹா பெரிய வருக்கு ராதா- கிருஷ்ண வைபவத்தில் விருப்பம் உண்டாயிற்று எனலாம்.
கிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஒரு சந்நியாசி. அவரது சீடன் ஒருவன் பிச்சை யிட்ட பெண்மணியின் முகத்தைப் பார்த்தான் என்பதை அறிந்து அவனை விலக்கினார். அதனால் அந்த சீடன் தன் உயிரையே மாய்த்துக் கொண்டான். அத்தகைய சைதன்ய மகாபிரபு ராதா கிருஷ்ண இயக்க (ஒநஃஞச) சந்நியாசி. அவர் 12 ஆண்டுகள் பூரி ஜெகந் நாதர் கோவிலிலேயே வாழ்ந்து, தனது 50-ஆவது வயதில் ஜெகந்நாதரின் திருவடியில் கலந்தார். எனவே சந்நியாசிகளின் ராதா- கிருஷ்ண பிரேமை என்பது மிகவும் உயர்ந்த நிலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஸ்ரீ ரமண மகரிஷியைப் பற்றி இன்று ஆன்மிக உலகம் அறிகிறது என்றால், அப்பெருமை ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரையே சாரும். அயல் நாட்டிலிருந்து வந்த பால் பிரண்டன் என்பவர் பல இந்திய ஆன்மிகவாதிகளைச் சந்தித்து விட்டு வேதனையோடு தன் நாடு திரும்ப ஆயத்தமாகும்போது, ஒரு அன்பர் மஹா பெரியவரைத் தரிசிக்க காஞ்சிக்கு அவரை அழைத்து வந்தார். ஸ்ரீ மகா பெரியவரைப் பார்த்ததுமே நெகிழ்ந்து போனார் பால் பிரண்டன். அவரையே தன் குருவாகக் கொள்ள அனுமதி கேட்க, ஸ்ரீ மஹா பெரியவர் அதை மறுத்து, " ஸ்ரீ ரமண மகரிஷியை நாடு' என்றார்.
அங்கிருந்து திரும்பிய பால் பிரண்டன் திருவண்ணாமலை செல்லவில்லை. தன் நாடு செல்ல விமான டிக்கெட்டுக்குப் பதிவு செய்துவிட்டு சென்னை ஹோட்டலில் தங்கியிருந்தார். அன்றிரவு... அது கனவா அல்லது நனவா என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் தங்கியிருந்த அறையில் தோன்றிய ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர், "அருணாச் சலம் சென்று ரமணரைத் தரிசிக்காமல் உம் நாடு திரும்ப வேண்டாம்' என்று கூறினாராம். வியந்துபோன பால் பிரண்டன் தன் பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டு திருவண்ணா மலை சென்று ரமணரைத் தரிசித்தார்.
பேசாமலேயே ரமணரின் அனுபூதியைப் பெற்று மிகவும் நெகிழ்ந்து போனார். அந்த பால் பிரண்டன்தான் ரமணரின் புகழை உலகம் முழுக்கப் பரப்பினார். ரமணரும் ஒரு சுவாமிநாதன்- கந்த அவதாரம்தானே. காஞ்சிப் பெரியவர் திருவண்ணாமலை சென்றிருந் தாலும் ரமணரைச் சந்தித்த தில்லை. இதன் மூலம் ஆன்மிகப் பெரியவர்களுக்கு பௌதிக தரிசனம் தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
எவ்வித ஆடம் பரத்தையும் விரும்பாதவர் மஹா பெரியவர். சுயநலம், பண ஆசை போன்ற அனைத்தையும் அறவே வெறுத்து ஒதுக்கியவர்; எளிமையின் சின்னம். வைணவ, கன்னட மடாதிபதி களுக்கும்; தேவார, திருப்புகழ், திருமுறை மடாதிபதிகளுக்கும் இடையே ஒற்றுமையை வளர்த்து, ஒவ்வொன்றும் சீருடன் தழைத்திட வழிவகுத்த பெருமையும் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவ ரையே சாரும்.
பெரிய பண தானம் எதையும் எதிர்பார்க் காமல், பிடியரிசித் திட்டம், மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் பிரசாதம் வழங்குவது, சிறைச் சாலையில் உள்ள கைதிகளுக்கு தர்மம் செய்வது, ஆன்மிகம் போதிப்பது என்று எளிமையாக அனைவரையும் சமூக நலனுக்கு இழுத்தவர் மகா பெரியவர். இத்தனை சிறப்பு வாய்ந்த மஹா பெரியவரின் கீத கோவிந்த ஈடுபாட்டை இனி காண்போம்.
ஜெயதேவரின் கீத கோவிந்தம் ராதா- கிருஷ்ண விரக பிதற்றல்களை விவரிப்பது. 24 பாடல்களே கொண்டது; அஷ்டபதி எனப்படுவது. பூரி ஜெகந்நாதரே உவந்தது- எழுதியது என்று பூரியிலும் காசியிலும் பறைசாற்றப்பட்டது. (இதில் 19-ஆவது அஷ்டபதியை எழுதும்போது ஜெயதேவர் குழப்பமாகி எழுதாமல் எழுந்து சென்றுவிட, அவர் உருவில் ஜெகந்நாதரே அந்த அஷ்டபதியை எழுதினார் என்பர்.) ராதா என்பது ஜீவாத்மா; கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா- பரமாத்மா ஐக்கியத்தை- முக்தி நிலையை விளக்குபவையே இந்தப் பாடல்கள்.
ஸ்ரீ மஹா பெரியவர் தன் சிறு வயதில் கும்பகோணம் மடத்திலிருந்தபோது, பாலு பாகவதர் என்பவரை மடத்திற்கு வரவழைத்து, பல நாட்கள் அந்த 24 பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்டு அதன் மகிமையை உணர வைத்தார். அந்தப் பாடல்களில் உள்ள ஆண்பால்- பெண்பால் உணர்வு சார்ந்த பதங்களைத் தள்ளி, ஜீவாத்மா- பரமாத்மா இணைப்பை உணர வேண்டும் என்று கூறினார்.
பின்னாட்களில் ஆஞ்சனேய சுவாமி (ஸ்ரீ அனந்த ஆனந்த சரஸ்வதி சுவாமி) என்பவர் காஞ்சி மடத்திலேயே 24 அஷ்டபதி களையும் பாடுவார். இதை குடிசை யோரம் அமர்ந்து ஸ்ரீ மஹா பெரியவர் கேட்டு ரசிப்பார். இந்த பஜனை சம்பிரதாயம் முழுவதும் தமிழ், வடமொழி ஆகியவற்றில் 1967-லேயே மடத்தின் சார்பில் பிரசுரிக்கப்பட்டது என்றால், நாம பஜனைக்கு மஹா பெரியவர் எவ்வளவு மதிப்பளித்தார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
காஞ்சி மடத்தின் 62-ஆவது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ராதா- கிருஷ்ண அஷ்டபதிபோல் காஞ்சி காமாட்சி- ஏகாம்பரநாதர் சங்கம லீலைகளை "சிவகீதி மாலா' என்ற பெயரில் 20 அஷ்டபதிகளாக எழுதினார். அதையும் ஸ்ரீ மஹா பெரியவர் கேட்டு ரசிப்பார்.
ஸ்ரீ மஹா பெரியவரின் 75-ஆவது வயது பவழ விழாவின் போது, "சிவகீதி மாலா' என்னும் சிவ அஷ்டபதியையும், ராமகவி இயற்றிய ராமாயணம் முழுதும் கொண்ட ராமாஷ்டபதியையும் பிரசுரிக்கச் செய்தார். இன்றும் அதனை காம கோடி ஆச்சாரியர்கள் பக்தி பாவத் துடன் ரசிக்கிறார்கள்.
எனவே, ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரின் ஜெயந்தியான வைகாசி விசாக- அனுஷ நாட்களில் நாம சங்கீர்த்தனத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்;
" குருவருள் பெற்று பேரின்பமுடன் வாழ்வோம்."
காஞ்சியில் கோயில் கொண்டாய் நீயே
தினம் குறை பல தீர்ப்பது அறிவேன் உன் சேயே
சேவடி நினைத்திட சேவையில் திளைத்திட
ஷேமங்கள் சேர்த்திடுவாய் தினம் நீயே
இரு கை உயர்த்தி ஆசிகள் அளிக்கும் உன்னை
இருத்தி மனதில் செய்யும் பூஜைகள் ஏற்கின்றாய்
நம்பிய பேருக்கு நல்லதை தருகின்றாய் - அவர்
துன்பத்தை போக்கியே நீ திருவருள் செய்கின்றாய்
பாரெல்லாம் உன் பெருமை நாளும் உரைத்திட
ஊராம் தபோவனத்தில் நீயும் அமர்ந்திருப்பாய்
ஒருவரும் துணையில்லை என்றே வரும் அடியவரை
திருக்கரம் நீட்டி நீயும் அழைத்தே ஏற்கின்றாய்
உன் திருவடி தந்து நீயும் தினமும் காக்கின்றாய்
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரின் திருவடிகள் சரணம்!!


















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக