ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

தத்துவமயமான விநாயகர்


ராதே கிருஷ்ணா 21-09-2015




Mannargudi Sitaraman Srinivasan shared his post to the group: KANCHI ACHARYAS.
16 hrs
Mannargudi Sitaraman Srinivasan added 2 new photos.
தத்துவமயமான விநாயகர்
விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.
பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து "உன் சிரசையே எனக்குப் பலி கொடு" என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.
சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது.
அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் "இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்" என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் 'டாண்' என்று, "பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதையு இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்" என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, 'வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்' என்று தெரிந்தது.
அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.
கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு 'ஸ்தூல காயர்' என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை! சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.
இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி, என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். சுவாமி எதை வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கும் கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளையார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், 'பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்' என்று காட்டுகிறார்.
ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். இந்தப் பிள்ளையார் என்கிற யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்விதம் இந்த யானை காட்டியது. நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.
நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்; ஆராத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார்.
அவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை. இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் "பிள்ளையார்", "பிள்ளையார்" என்றே விசேஷித்து அழைக்கிறோம்.
எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.
பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.
"தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.
விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.





















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக