ஞாயிறு, 19 ஜனவரி, 2014

கைலயங்கிரியிலே சிவபெருமானும், உமையம்மையாரும்

ராதே கிருஷ்ணா 20-01-2014








கைலயங்கிரியிலே சிவபெருமானும், உமையம்மையாரும் வீற்றிருக்கின்றனர். சிவனும், உமையும் அர்த்தனாரீசுவரராக ஆண்பாதியும் பெண் பாதியுமாக ஒன்றாகவே இருப்பவர்கள். உமையம்மை சிவபெருமானின் இடது பாகத்திலே இருக்கிறார். சிவபெருமானின் திரு முடியிலே கங்கா தேவியாரும் இருக்கிறார்.

இவ்வாறு ஒன்றாக நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாக இருந்து உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். சக்தியில்லாது சிவம் இல்லை. சிவம் இல்லாது சக்தியில்லை. என்பது மெய்பொருள் உண்மை.

இவ்வாறு நீக்கமறாது சிவனும் உமையும் திருக்கைலாயத்தில் இருந்த போது உமையம்மையார் சிவபெருமானைத் தாள் பணிந்து சிவாமி! எனக்கு ஒரே புழுக்கமாக இருக்கிறது. எனவே நான் கங்கைக்குச் சென்று ‘ஸ்நானம்’ செய்து விட்டு வருகிறேன். எனக்குத் தாங்கள் அனுமதி தாருங்கள் என்று வேண்டினார்.

சிவபெருமான் ‘தந்தேன் சென்று வருக! என்று திருவாய் மலர்ந்தருளினார். உமாதேவியார் சிவபெருமானின் திருப்பாதங்களைப் பணிந்து கங்கைக்கு ‘ஸ்நானம் செய்யச் சென்றார்.

கங்கைக்கரைக்குச் சென்ற உமாதேவியார் தனது திருவருட் சக்தியினால் தன் உடலில் பூசி நீராடுவதற்காகக் கொண்டு வந்த சந்தணக் குழம்பின் ஒரு பகுதியினால் ஒரு திருக்குமாரனைத் தோற்றுவித்து அக்குமாரனின் திருக்கரத்திலே ஒரு ஆயுதத்தையும் கொடுத்து ‘மைந்தனே! நான் இலங்கையிலே நீராடச் செல்கின்றேன்.

நீராடி விட்டு மீண்டும் வரும் வரைக்கும், இவ்வாயிலில் நீ நின்று காவல் புரிய வேண்டும். இங்கு எவரையும் எக்காரணம் கொண்டும் உள்ளே வருவதற்கு நீ அனுமதிக்கக் கூடாது” என்று கட்டளையிட்டு உமாதேவியார் கங்கைக்கு நீராடச் சென்றார்.

உமாதேவியார் கங்கையிலே நீண்ட நேரம் நீராடிக் கொண்டு இருந்துவிட்டார். சிறுவனும் கங்கைக் கரையிலே வாயில் காவல் செய்து கொண்டிருந்தான்.

கைலயங்கிரியிலே இருந்த சிவபெருமான் கங்கையிலே நீராடச் சென்ற உமாதேவியார் நீண்ட நேரமாகியும் இன்னும் வரவில்லையே! என்று உள்ளம் பதறிக்கொண்டு எதற்கும் நான் சென்று பார்ப்பதே சரி என்று கங்கைக் கரைக்கு வந்தார்.

கங்கைக்கரையின் தலைவாயிலில் ஒரு அழகிய சிறுவன் கையில் ஆயுதம் தாங்கிக் கொண்டு காவல் காத்துக்கொண்டிருப்பதைக் கண்டு சிவபெருமான் தம்பி! உமாதேவியார் கங்கைக்கு நீராட வந்தார். அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. நான் அவரை உடனே போய்ப்பார்க்கப் போகின்றேன் என்று காவலில் நின்ற சிறுவனிடம் கூறினார். அந்தச் சிறுவன் சுவாமி! தாங்கள் பெண்கள் நீராடும் போது அங்கு போகக் கூடாது என்று சொன்னான். சிவபெருமான் அந்தக் காவல் சிறுவனிடம் பலவாறு கூறியும் அந்தச் சிறுவன் சிவபெருமானின் பேச்சைக் கேளாது கங்கையும் செல்ல அனுமதிக்காது தடை செய்து கொண்டே இருந்தான்.

சிவபெருமான் பொறுமையை இழந்தார். ஆத்திரங் கொண்டு தனது கையில் இருந்த வாளினால் அச்சிறுவனின் தலையை வெட்டினார். அந்த அழகிய சிறுவன் தலைவேறு உடல் வேறாகத் தரை மீது வீழ்ந்தான். அவ்வேளையிலே கங்கையில் நீராடி முடித்துக் கொண்டு உமாதேவியார் அங்கே வந்தார். தான் காவலுக்கு வைத்த பாலகன் தலை துண்டிக்கப்பட்டு படிமிசை கிடப்பதையும் சிவன் கையில் வாளுடன் நிற்பதையும் கண்டு உள்ளம் பதைபதைத்து உருகினார். உமைக்கு அடங்காக கோபம் ஏற்பட்டு விட்டது. நீங்கள் ஏன் எனது பாலகனை வெட்டிக்கொலை செய்தீர்கள்? என்று சிறுவனின் உயிரற்ற உடல் மீது விழுந்து கதறி அழுது புலம்பினார். இதனைக் கண்ட சிவபெருமான் தானும் பதைபதைத்துத் துக்கம் மிகக் கொண்டார்.

சிவபெருமான் உமையம்மையின் நிலை கண்டு வருந்தற்க! என்று தேற்றிவிட்டு உடனே பூதகணங்களை வரவழைத்து “நீங்கள் இக்கணமே! உயிர்களில் எல்லாம் பெரிய ஒரு யானையின் தலையைக் கொண்டு வரவேண்டும்” என்று கடடளையிட்டார். உடனே பூதகணங்கள் எல்லாம் சிவனின் கட்டளைக்கு அடிபணிந்து அக்கணமே ஒரு யானையின் தலையைக் கொண்டு வந்து சிவனின் திருக்கரங்களில் கொடுத்தன. சிவபெருமான் உடனே அந்த யானைத் தலையை அந்த அழகிய பாலகனின் உடலோடு மிகவும் பொருத்தமுற இணைத்து வைத்தார். என்ன அற்புதம்! உடனே ஆனை முகமும் ஐந்து கரமும் பேழைபோல் பெருத்த பெருவயிறும் கொண்ட அழகிய வேழமுகத்து விநாயக் கடவுள் தோன்றினார்.

இக்காட்சி கண்ட உலகநாதனாகிய சிவனும், உலக நாயகியாகிய உமையும் மகிழ்ச்சிக் கடலிலே மூழ்கி நின்றனர். ஐங்கரக்கடவுள் அபயக்கரம் காட்டி, தும்பிக்கையை உயர்த்தி அம்மை அப்பனை நமஸ்கரித்து வணங்கி நின்றார்.

சிவபெருமான் ஆனைமுகனைப் பார்த்து நீ இன்றிலிருந்து கணங்கள் படைக்கெல்லாம் தலைவனாகுக! நீயே கணங்களுக்கெல்லாம் அதிபனாகுக! உன்னையே முதலில் எல்லோரும் வணங்குவாராக! உன்னை வணங்குவோருக்கு சர்வவிக்கினங்களையும் நீயே தீர்த்துக் கருணை வழங்குவீராக! அதனால் நீயே விக்கினேஸ்வரனாகவாயாக! ஈரேழு உலகங்களையும் நீயே அதிபதியாக இருந்து பாதுகாப்பாயாக! என்று சிவபெருமான் வினாயகக் கடவுளுக்குக் கூறினார்.

அர்த்தனாரீஸ்வரராகிய சிவனும், உமையும் கணங்களுக்கு அதிபதியாகிய கணபதியை அழைத்துக் கொண்டு திருக்கைலயங்கிரியின் தலைவாயிலில் கோயிலில் இருத்தினர்.

சர்வவிக்கினம் தீர்க்கும் வேழமுகத்து விநாயகர் அம்மையும் அப்பனுமாகிய சிவனும், உமையும் கைலயங்கிரியிலே வீற்றிருக்கத் தேவர்கள், முனிவர்கள், இருஷிகள் அனைவரும் வணங்கும் முழுமுதற் கடவுளாக வாயிலில் கோயில் கொண்டு இருந்து கருணை பொழிந்து கொண்டிருந்தார்.

திருக்கைலயங்கிரிக்குச் சிவனையும், உமையையும் பணிந்து வணங்க வரும் தேவர்கள், முனிவர்கள், இருஷிகள் எல்லோரும் முதலில் வணங்கிவிட்டுத்தான் அர்த்தனாரீஸ்வரர் ஆகிய சிவனையும், உமையையும் வணங்குவர். கைலயங்கிரியிலே விநாயகரை வணங்கும் ஒவ்வொருவரும் தோப்புக்கரணம் போட்டுக் கும்பிட்டுக்குட்டிக் கொள்ளும் முறைமை அன்றிலிருந்து தோன்றியது. தோப்புக்கரணம் போடும் போது வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் நுனிகளைப்பிடித்து மூன்று முறை குந்திக்குந்தி எழுந்து மாறிப்பிடித்த கைகளினால் தங்கள் நெற்றியில் மூன்று முறை குட்டிக் கும்பிட்டு வணங்கிவிட்டு அதன்பின் அம்மை, அப்பரை வணங்குவதற்கு தேவ அடியார்கள் சென்று வணங்குவதும் அன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது.

தனக்கு மேல் ஒரு தலைவனில்லாப் பெரும் தலைவரான விநாயகர் அன்றிலிருந்து எல்லாக் கடவுளர்களுக்கும் முதலில் வணங்கப்படும் கருணைக் கடவுளாக விளங்குகின்றார். சர்வ உயிர்களையும் காத்து வாழவைக்கும் கருணை வள்ளல் கணபதியை நாம் வணங்கிப் பிறவிப் பெருங்கடலைக் கடந்துய்வோமாக!






























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக