ஞாயிறு, 19 ஜனவரி, 2020

விதுர நீதி மஹாபாரதம்

ராதே கிருஷ்ணா 20-01-2020




  விதுர நீதி மஹாபாரதம் 


பொருளடக்கம்


ஒவ்வொரு பர்வத்தையும் சொடுக்கினால் அந்தந்தப் பர்வங்களின் பகுதிகள் {அத்யாயங்கள்} விரிவடையும்.

+/- 01 ஆதிபர்வம் 001-236

+/- 02 சபாபர்வம் 001-080

+/- 03 வனபர்வம் 001-313

+/- 04 விராடபர்வம் 001-072

+/- 05 உத்யோகபர்வம் 001-199

+/- 06 பீஷ்மபர்வம் 001-124

+/- 07 துரோணபர்வம் 001-204

+/- 08 கர்ணபர்வம் 001-096

+/- 09 சல்லிய பர்வம் 001-065

+/- 10 சௌப்திக பர்வம் 001-018

+/- 11 ஸ்திரீ பர்வம் 001-027

+/- 12 சாந்தி பர்வம் 001-365

+/- 13 அநுசாஸன பர்வம் 001-168

+/- 14 அஸ்வமேத பர்வம் 01-92

+/- 15 ஆஸ்ரமவாஸிக பர்வம் 01-39

+/- 16 மௌஸல பர்வம் 1-8

+/- 17 மஹாப்ரஸ்தானிக பர்வம் 1-3

+/- 18 ஸ்வர்க்காரோஹணிக பர்வம் 1-6

தன் நாட்டைக் கேட்ட யுதிஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 26

Yudhishthira asked for his kingdom! | Udyoga Parva - Section 26 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 26)
பதிவின் சுருக்கம் : போரை வெறுத்து அமைதியையே தான் விரும்புவதாகச் சஞ்சயனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; ஆசையை மனிதர்கள் விடுவதில்லை; ஆசையை அனுபவிப்பதனால் அது தணிவதில்லை என்று சொல்வது; திருதராஷ்டிரன் விதைத்ததையே அறுப்பதாகச் சொல்வது; விதுரரைத் துரியோதனனும் திருதராஷ்டிரனும் தள்ளி வைத்ததைக் கண்டிப்பது; தனது மகனின் தீய செயல்களைத் திருதராஷ்டிரர் அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டுவது; அர்ஜுனனும் கர்ணனும் சமமல்ல என்று சொல்வது; இந்திரப்பிரஸ்தத்தைக் கொடுத்துவிட்டால் தான் அமைதியடைவதாக யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது...

யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “போரைச்சுட்டிக் காட்டும் விதமான என்னுடைய எந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! சஞ்சயரே, போரை நினைத்து ஐயுற்று நீர் அஞ்சுகிறீர். ஓ! அய்யா, போரைக்காட்டிலும் அமைதியே விரும்பத்தக்கது. ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, மாற்று இருக்கும்போது போரிட எவன் விரும்புவான்? ஓ! சஞ்சயரே, எதுவும் செய்யாமலே, ஒருவன் தன் இதய விருப்பம் அனைத்தையும் அடையலாம் என்றால், அவன், எதையும் செய்ய விரும்பமாட்டான். {போரிட்டாலும்கூட} சின்னப் பிரச்சனையைத் தான் அவன் சந்திக்க நேரிடும் என்றாலும் அவன் போரில் ஈடுபட விரும்பமாட்டான் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எப்போதானாலும், ஒரு மனிதன் ஏன் போருக்குச் செல்ல வேண்டும்? போரைத் தேர்ந்தெடுக்கும்படி தேவர்களால் சபிக்கப்பட்டவன் எவன்?


பிருதையின் {குந்தியின்} மகன்கள் தங்கள் சொந்த மகிழ்ச்சியை விரும்புகிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களின் நடத்தை எப்போதும் நீதியாலும், உலக நன்மைக்கு உகந்ததாலும் குறிக்கப்படுகிறது. அவர்கள் நீதியினால் விளையும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள். தனது புலன்களின் வழிகாட்டுதலை விருப்பத்துடன் தொடர்ந்து சென்று, துன்பத்தைத் தவிர்த்து மகிழ்ச்சியை அடைய விரும்புபவன், துன்பத்தின் சாரம் கொண்ட நடவடிக்கையைத் தவிர வேறு எதையும் மேற்கொள்வதில்லை. இன்பத்துக்குப் பின்னால் பேராவல் கொண்டு ஓடுபவன், தன் உடலுக்குப் பாதிப்பை உண்டாக்குகிறான்; இத்தகு பேராவலில் இருந்து விடுபட்டவன், துன்பம் என்பது என்ன என்பதை அறிவதில்லை. தூண்டப்பட்ட நெருப்பில் அதிக எரிபொருளை {விறகை} இடும்போது, மிகுந்த சக்தியுடன் அது மீண்டும் சுடர்விட்டு எரிகிறது. அதே போல, ஆசை, அதன் பொருளை அடைந்தாலும், தூண்டப்படாத நெருப்பில் தெளிந்த நெய்யைவிடுவது போல, அது {நெருப்பு போன்ற ஆசை} தணிவதில்லை, சக்தியே பெறுகிறது.

நாங்கள் கொண்டிருப்பவற்றோடு, மன்னர் திருதராஷ்டிரரிடம் உள்ள அபரிமிதமான மகிழ்ச்சியையும் நிதியையும் ஒப்பீடு செய்து பாரும். பேறற்றவன் வெற்றியடைவதில்லை. பேறற்றவன் இசையின் குரலை {இசை போன்ற குரலை} அனுபவிப்பதில்லை. பேறற்றவன் மலர்மாலைகளையும் நறுமணப் பொருட்களையும் அனுபவிப்பதில்லை. அதே போல. பேறற்றவன், மணமிக்கக் குளிர்ந்த தைலங்களையும் அனுபவிப்பதில்லை. கடைசியாக, பேறற்றவன், நல்ல உடைகளை உடுத்துவதில்லை. இஃது இப்படி இல்லை என்றால், நாங்கள் குருக்களிடம் இருந்து விரட்டப்பட்டிருக்க மாட்டோம். இவை அனைத்தும் உண்மையே எனினும், இதுவரை யாரும் இதய வேதனைகளை அகற்றவில்லை.

மன்னர் {திருதராஷ்டிரர்}, தானே பிரச்சனையில் இருந்து கொண்டு, மற்றவர்களின் வலிமையில் பாதுகாப்பு தேடுகிறார். இது நல்லதில்லை. எனினும், பிறர் மீது அவர் {திருதராஷ்டிரர்} எந்த நடத்தையைக் கைக்கொள்கிறாரோ, அதையே அவர் மற்றவர்களிடமும் பெறட்டும்.

வசந்த காலத்தின் நடுப்பகல் வேளையில், புதர் நிறைந்த அடர்ந்த காட்டில் நெருப்பை வீசுபவன், காற்றின் துணையால் அந்நெருப்புச் சுடர்விட்டெரியும்போது, அத்தனைக்காகவும் வருத்தப்பட்டுத் தப்பிக்கவே விரும்புவான் என்பது நிச்சயம்.

ஓ! சஞ்சயரே, மன்னர் திருதராஷ்டிரர் இந்தச் செழிப்பனைத்தையும் கொண்டிருந்தும், ஏன் புலம்புகிறார்? ஏனென்றால், அவர் கோணலான வழிகளுக்கு அடிமையாகி, தீய ஆன்மா கொண்ட தனது தீய மகனின் அறிவுரைகளை முதலில் பின்பற்றி, தன் அறியாமையால் {மடத்தனத்தால்} அதை உறுதி செய்தார். தன் நலன்விரும்பிகளில் சிறந்தவரான விதுரரின் வார்த்தைகளைக் கேட்டு, ஏதோ அவர் தனக்கு எதிரி போல நினைத்துக் கொண்டு துரியோதனன் அவரை {விதுரரை} அலட்சியம் செய்தான்.

தனது மகன்களை மட்டுமே திருப்தி செய்ய விரும்பிய மன்னர் திருதராஷ்டிரர், தெரிந்தே அநீதியான பாதையில் நுழைபவராக இருந்தார். உண்மையில், தன் மகன் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவர் {திருதராஷ்டிரர்}, குருக்கள் அனைவரைவிடவும் ஞானவானும், தன் நலவிரும்பிகளில் சிறந்தவரும், பெரும் கல்வி உடையவரும், புத்திசாலித்தனமாகப் பேசுபவரும், நீதியின்படி செயல்படுபவருமான விதுரருக்குச் செவி சாய்க்கவில்லை.

பிறரிடம் மதிப்பை நாடுபவனும், பொறாமை கொண்டவனும், வெஞ்சினம் கொண்டவனும், அறம் பொருளை அடைவதற்கான விதிகளை மீறுபவனும், முறைமீறும் நாக்குடையவனும் {முறைமீறிப் பேசுபவனும்}, எப்போதும் தன் கோபத்தின் ஆணைகளையே செய்பவனும், புலன்நுகர் இன்பங்களில் மூழ்கிய ஆன்மா கொண்டவனும், பலரிடம் பகைமை கொண்டவனும், எந்த விதிக்கும் கீழ்ப்படியாதவனும், இணங்காத இதயம் கொண்ட தீய வாழ்வு வாழ்பவனும், தீய புரிதல் கொண்டவனுமான தனது மகனை மனநிறைவு கொள்ளச் செய்யவே மன்னர் திருதராஷ்டிரர் விரும்புகிறார். இது போன்ற ஒரு மகனுக்காக, மன்னர் திருதராஷ்டிரர் அறிந்தே அறத்தையும், இன்பத்தையும் கைவிட்டார்.

ஓ! சஞ்சயரே, நான் பகடையாடிக் கொண்டிருக்கையில், விதுரரின் ஞானம் நிறைந்த அற்புதமான வார்த்தைகள் திருதராஷ்டிரரின் பாராட்டைப் பெறாத போதே, குருக்களின் அழிவு அருகில் இருக்கிறது என நான் நினைத்தேன். ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பிறகு, விதுரரின் வார்த்தைகளை அவமதித்தபோதே, குருக்களைப் பிரச்சனை வந்தடைந்துவிட்டது. அவரது {விதுரரின்} ஞானத்தின் தலைமையின் கீழ் அவர்கள் இருந்த வரை, அவர்களது நாடு மலர்ச்சியடைந்த நிலையில் இருந்தது.

ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பேராசை கொண்ட துரியோதனுக்கு இப்போது யார் ஆலோசகர்கள் என்பதை என்னிடம் கேளும். துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி}, சூதரின் மகனான கர்ணனுமே அவர்கள்! ஓ கவல்கணரின் மகனே {சஞ்சயரே}, அவனுடைய இந்த அறியாமையைப் பாரும்!

திருதராஷ்டிரர் பிறரிடம் இருந்து அவர்களது அரியணையை எடுத்துக் கொண்டபிறகு, விதுரர் பிற இடங்களுக்குத் துரத்தப்பட்ட பிறகு, குருக்களிடமும், சிருஞ்சயர்களிடமும் எந்தச் செழுமையையும் எப்படிக் காண முடியும்? எனவே, நான் நினைத்தாலும் என்னால் அவற்றைக் காண முடியவில்லை. தன் மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர் இப்போது முழு உலகத்தின் பரந்த ஆட்சி உரிமையையும் பகையில்லாமல் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எனவே, முழுமையான அமைதி அடைய முடியாததாகும்.

ஏற்கனவே அவர் பெற்றிருப்பவற்றைத் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கருதுகிறார். போருக்காக அர்ஜுனன் தனது ஆயுதத்தை எடுக்கும்போது, அதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியும் எனக் கர்ணன் நம்புகிறான். இதற்கு முன்பு பல பெரிய போர்கள் நடைபெற்றன. அப்போதெல்லாம், ஏன் கர்ணனால் அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} எந்தப் பலனும் கிட்டவில்லை. கர்ணன், துரோணர், பாட்டனான பீஷ்மர் மற்றும் பிற குருக்களும், அர்ஜுனனுடன் ஒப்பிடத்தக்க வகையில் வில்லைத் தாங்குபவன் வேறு எவனும் இல்லை என்பதை அறிவார்கள். எதிரிகளை அடக்குபவனான அர்ஜுனன் உயிரோடு இருக்கும்போதே, துரியோதனன் ஆட்சியுரிமையை எப்படி அடைந்தான் என்பதை, பூமியில் கூடியிருக்கும் அனைத்து ஆட்சியாளர்களும் அறிவார்கள்.

போர்க்களத்திற்கு அவன் {துரியோதனன்} சென்ற போது, நாலு முழ வில்லைத்தவிர வேறு ஒன்றும் இல்லாத அர்ஜுனன், எப்படித் தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டான் என்பதை அறிந்தும், பாண்டு மகன்களின் உடைமைகளை அவனால் {துரியோதனனால்} கொள்ளையடிக்க இயலும் என்று அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} தனக்குப் பொருத்தமாகவே {மடத்தனமாக} நம்புகிறான். நீட்டி இழுக்கப்பட்ட காண்டீவத்தின் நாணொலியைக் கேட்காததாலேயே திருதராஷ்டிரன் மகன்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். பீமனின் கோபத்தைக் காணாத வரையில், தனது நோக்கம் ஏற்கனவே ஈடேறிவிட்டதாகவே துரியோதனன் நம்புவான். ஓ! அய்யா {சஞ்சயரே}, பீமன், அர்ஜுனன், வீரனான நகுலன், அமைதியான சகாதேவன் ஆகியோர் உயிருடன் இருக்கும் வரை இந்திரனும் கூட எங்கள் உடைமைகளைக் கொள்ளையிட அஞ்சுவான்.

ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, தன் மகனுடன் கூடிய முதிர்ந்த மன்னர் {திருதராஷ்டிரர்}, ஓ! சஞ்சயரே, போர்க்களத்தில் பாண்டு மகன்களின் கோப நெருப்பில் எரியப் போகும் தன் மகன்கள் அழியமாட்டார்கள் என்றே கருதுகிறார். ஓ! சஞ்சயரே, நாங்கள் எத்தகு துன்பத்தை அனுபவித்தோம் என்பதையும் நீர் அறிவீர்! நான் உம் மீது கொண்டிருக்கும் மதிப்பால், அவர்கள் அனைவரையும் மன்னிப்பேன். எங்களுக்கும் குருவின் மகன்களுக்கும் இடையில் நடந்தது அத்தனையும் நீர் அறிவீர். திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} நாங்கள் இதுவரை எப்படி நடந்திருக்கிறோம் என்பதையும் நீர் அறிவீர். பொருட்களின் நிலை இப்போது போலவே தொடரட்டும், நீர் அறிவுறுத்துவது போலவே நான் அமைதியை நாடுவேன். இந்திரப்பிரஸ்தம் எனது நாடாகட்டும், பாரதக் குலத்தின் தலைவனான துரியோதனன் எனக்கு இதைக் கொடுக்கட்டும்!" என்றான் {யுதிஷ்டிரன்}.

யுதிஷ்டிரனை எச்சரித்த சஞ்சயன்! - உத்யோக பர்வம் பகுதி 27

Sanjaya warned Yudhishthira! | Udyoga Parva - Section 27 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 27)
பதிவின் சுருக்கம் : நற்குணம் மிக்க யுதிஷ்டிரன் போரைக் குறித்துச் சிந்திக்கக் கூடாது என்றும், சொத்துக்காகப் போர் செய்வதைவிட பிச்சையெடுத்து வாழலாம் என்றும் சஞ்சயன் யுதிஷ்டிரனிடம் சொன்னது; உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று விட்டு அதன் மூலம் கிட்டும் இன்பத்தால் மறுமைக்கு ஆகக்கூடியது என்ன என்று கேட்பது; போரிடுவதென்றால், காட்டுக்கு அனுப்பிய போதே போரிட்டிருக்க வேண்டும் என்றும், காலந்தாழ்ந்து இப்போது போரிடுவது முறையானது அல்ல என்றும் சொல்வது; நல்வினையும் தீவினையும் இவ்வாழ்வுக்குப் பிறகும் நம்மைத் தொடர்ந்து வருவதால் அறச்சார்புடன் நடந்து கொண்டு போரைத் தவிர்ப்பதே நல்லது என்றும் சஞ்சயன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...

சஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, உனது நீதிமிக்க நடத்தையை இவ்வுலகம் கேள்விப்பட்டிருக்கிறது. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, நானும் அப்படியே காண்கிறேன். பெரும் கெடுபேறில் முடிவடையக்கூடிய இந்த வாழ்வு நிலையற்றதாகும்; இதைக் கருதி நீ அழிந்து போகலாகாது. போரில்லாமல் உனது பங்கைக் குருக்கள் கொடுக்கவில்லையெனினும், ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, அரசாட்சியை போரின் மூலம் அடைவதைவிட, அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளின் நாட்டில் நீ பிச்சை எடுத்து வாழ்வதே மிகவும் சிறந்தது என நான் நினைக்கிறேன். குறுகிய காலமே உள்ள இந்த மனித வாழ்வு, நிலையான துன்பத்திற்கும், நிலையற்ற தன்மைக்கும், பெரும் பழிக்கும் வழிவகுப்பதென்பதாலும், நல்ல பெயருக்கு {இணையாக} ஒருபோதும் ஒப்பிடப்படாதது என்பதாலும், ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, பாவத்தை நீ ஒருபோதும் புரிந்திடாதே.


ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, மரணத்துக்குட்பட்ட மனிதர்கள் கடைப்பிடிக்கும் ஆசைகள், அறம்சார்ந்த வாழ்வுக்கு தடைகளாகும். எனவே, புத்தியுள்ள ஒரு மனிதன், ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, இவையனைத்தையும் {ஆசைகளை} முன்பே கொன்று, அதன் மூலம் இவ்வுலகில் கறைபடியாப் புகழைப் பெற வேண்டும். செல்வத்தின் மீது கொண்ட தாகம், இந்த உலகில் விலங்கைப் {கட்டுகளைப்} போன்றதே ஆகும். அதை {செல்வத்தை} நாடுவோரின் அறம் அதனால் பாதிக்கப்படுகிறது. அறத்தை மட்டுமே நாடுபவன் புத்திமானாவான்; ஓ! அய்யா {யுதிஷ்டிரா}, ஆசைகள் அதிகரித்தால், ஒரு மனிதன் உலகியல் சார்ந்த தன் கவலைகளை அனுபவித்தே ஆக வேண்டும். வாழ்வின் அனைத்து கவலைகளுக்கும் மேலாக அறத்தை ஏற்கும் ஒரு மனிதன், சூரியனைப் போல பெரும் பிரகாசத்துடன் ஒளிர்கிறான்.

அறமற்ற தீய ஆன்மாக் கொண்ட மனிதன், இந்த முழு உலகத்தையே அடைந்தாலும், அவன் அழிவை அடைகிறான். நீ வேதங்களைக் கற்று, அந்தணத் துறவியின் வாழ்வை வாழ்ந்து, வேள்விச் சடங்குகளைச் செய்து, அந்தணர்களுக்கு தானங்களை அளித்திருக்கிறாய். (உயிரினங்களால் அடையத்தக்க) உயர்ந்த நிலையை நினைவு கூர்ந்து, இன்பத்தை அடையும் நோக்கில், பல ஆண்டுகளாக உன் ஆத்மாவை அதற்காக அர்ப்பணித்திருக்கிறாய்.

அபரிமிதமான மகிழ்ச்சிக்கும், வாழ்வின் இன்பங்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு,  தவப்பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தாமல் இருக்கும் ஒருவன், மிகவும் பரிதாபகரமான நிலையிலேயே இருக்க வேண்டும். அவனது பலமான உள்ளுணர்வு, இன்பம் பெறுவதை நோக்கியே அவனைத் தூண்டிவிடும். அவனது செல்வம் அவனைவிட்டுப் போன பிறகு, அவனது இன்பங்கள் அவனைக் கைவிட்டுவிடும். அதே போல, அடக்கமான வாழ்வு வாழாது, அறத்தின் பாதையைக் கைவிட்டு, பாவமிழைக்கும் ஒருவன், வரப்போகும் உலகத்தின் இருப்பில் {மறுமை உள்ளது என்ற} நம்பிக்கைக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட அந்த மனிதன், தான் இறந்த பிறகு, (நிறைய) வேதனைகளையே பெறுவான்.

நன்மையோ, தீமையோ, எதுவாக இருந்தாலும், எக்காரியத்தாலும் ஒருவனது செயல்கள் வரப்போகும் உலகத்தில் {மறுமையில்} அழிவடைவதில்லை. நல்லதும், தீயதுமான செயல்கள், அதைச் செய்பவனைத் (அடுத்த உலகத்திற்கான அவனது பயணத்தில்) தொடர்ந்தே செல்கின்றன; அது அவர்களது பாதையில் தொடர்ந்து செல்லும் என்பது நிச்சயம். அறச் சடங்குகளில், (அவற்றை நடத்தி வைக்கும் புரோகிதர்களுக்கு) அந்தணர்களுக்கு மரியாதையுடனும் பெருங்கொடையுடனும் அளிக்கப்படும் சுவை மிக்க உணவுக்கு ஒப்பாக, (இவ்வாழ்வில்) உனது வேலை அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இந்த உடல் நிலைத்திருக்கும் வரையே அனைத்து செயல்களும் செய்யப்படுகின்றன. இறப்புக்குப் பின் செய்ய வேண்டியது எதுவுமில்லை. நீதிமான்களால் போற்றப்படும் பலமிக்க {உயர்ந்த} செயல்களையே நீ செய்திருக்கிறாய். அது வரப்போகும் உலகில் {மறுமையில்} உனக்கு நன்மையைச் செய்யும். அங்கே (அடுத்த உலகில்) மரணம், முதுமை, அச்சம், பசி, தாகம், மனதிற்கு ஏற்பில்லாதவை ஆகியவற்றில் இருந்து ஒருவன் விடுபடுகிறான்; ஒருவனது புலன்களுக்கு இன்பத்தை அளிக்கவேண்டியன்றி, அவ்விடத்தில் செய்யத்தக்கது எதுவுமில்லை. ஓ! மனிதரின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, நமது செயல்களின் விளைவு இவ்வகையிலேயே இருக்க வேண்டும். எனவே, ஆசையின்பாற்பட்ட இனியும் இவ்வுலகில் எதையும் செய்யாதே.

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இவ்வுலகில் எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டு, அதன் மூலம் உண்மையையும் {சத்தியத்தையும்}, புகழையும், கபடற்றத்தன்மையையும், மனிதாபிமானத்தையும் விட்டுவிடாதே. நீ ராஜசூய, அஸ்வமேத வேள்விகளைச் செய்த நீ, பாவத்தைத் தன்னகத்தே கொண்ட எந்தச் செயலின் அருகிலும் நெருங்கிவிடாதே. பிருதையின் மகன்களே, அறத்தின் நிமித்தமாக ஆண்டாண்டுகளாக இத்தகு துன்பத்துடன் நீங்கள் காடுகளில் வசித்ததெல்லாம் {வசித்ததற்கான பயனெல்லாம்}, இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு, இப்போது வெறுப்புக்கு வழிகொடுத்து, இந்தப் பாவகரச் செயலைச் செய்தால், வீணாகப் போகும். இந்தப் படைகளெல்லாம் அப்போதும் உங்கள் முழு கட்டுப்பாட்டிலேயே இருந்தன; இந்தப் படைகள் அனைத்தையும் பிரிந்து நீங்கள் வன வாசம் சென்றது எல்லாம் வீணாகப் போகும். {இப்படிச் செய்வதாயிருந்தால் நீ வனம் சென்றிருக்க வேண்டாமே}.

போர் வீரர்களின் தலைமையில் தன் மகனுடன் இருக்கும் தங்கத் தேர் கொண்ட மத்ஸ்ய நிலத்தின் விராடன், சாத்யகி, கிருஷ்ணன் ஆகியோர் எப்போதும் உனக்குக் கீழ்ப்படிபவர்களாவர்; அவர்களே இப்போது உனக்குத் துணையாக இருக்கின்றனர். உன்னால் முன்பு வீழ்த்தப்பட்ட மன்னர்கள் அனைவரும், உங்கள் காரியத்தை முதலிலேயே ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். அனைவரும் அஞ்சக்கூடிய வலிமைமிக்க வளங்களுடனும், படையுடனும், அவர்களைத் தொடர்ந்து கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கொண்டுள்ள நீ, போர்க்களத்தில் உனது எதிரிகளில் முதன்மையானவர்களைக் {சகுனி முதலானோரைக்} கொன்றிருக்கலாமே. (அப்படிச் செய்திருந்தால்) நீ துரியோதனனின் கர்வத்தை அடக்கியிருக்கலாமே.

ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, உனது எதிரிகள் இவ்வளவு பலமாக வளர ஏன் அனுமதித்தாய்? உனது நண்பர்கள் பலவீனமடையவும் ஏன் செய்தாய்? ஆண்டாண்டு காலமாக வனத்தில் எதற்காக வசித்தாய்? சரியான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டு இப்போது ஏன் போரிட விரும்புகிறாய்? அறிவில்லாத, அநீதியான மனிதன் போரின் மூலம் செழிப்பை வெல்லலாம்; ஆனால் நீதிமானான அறிவுள்ள மனிதன், (நல்ல உள்ளுணர்வுக்கு எதிராகப்) போராடும் கர்வத்தைத் தவிர்த்து, வளமான பாதையில் இருந்து விழ மாட்டான்.

ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, உனது புத்தி அநீதியான பாதையை விரும்பாது. கோபத்தால், நீ ஒருபோதும் பாவச்செயலைச் செய்ததில்லை. நல்ல ஞானத்திற்கு எதிரான இந்தக் காரியத்தைச் செய்வதற்கான நோக்கமும் காரணமும் தான் என்ன? ஓ! வலிமைமிக்க மன்னா {யுதிஷ்டிரா}, நோய்க்கு {பிரச்சனைக்கு} சம்பந்தமே இல்லையெனினும், கோபம் கசப்பான மருந்தேயாகும்; அது {கோபம்} தலைவலியை உண்டாக்குகிறது, நல்ல புகழைக் கெடுக்கிறது, ஒருவனை பாவச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. அது நீதிமான்களாலேயே (கட்டுப்படுத்தப்படுகிறது) குடிக்கப்படுகிறது, நேர்மையற்றவர்களால் {அநீதியானவர்களால்} அல்ல. அதை {கோபத்தை} விழுங்கி {கட்டுப்படுத்தி} போரில் இருந்து விலகுமாறு நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். பாவத்திற்கு வழிவகுக்கும் கோபத்தை எவன்தான் விரும்புவான்?

பீஷ்மர், தனது மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} கூடிய துரோணர், கிருபர், சோமதத்தனின் மகன், விகர்ணன், விவிம்சதி, கர்ணன், துரியோதனன் ஆகிய அனைவரையும் கொன்று விட்டு கிடைக்கும் இன்பங்களை விட, பொறுமையே உனக்கு மிகுந்த நன்மையைத் தரும். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, நீ பெறும் அருள் எத்தன்மை உடையதாக இருக்கும்? அதை எனக்குச் சொல்! கடலை எல்லையாகக் கொண்ட இந்த முழு உலகையும் வென்றாலும், முதுமை, மரணம், இன்பம், வலி, அருள், துன்பம் ஆகியவற்றில் இருந்து நீ விடுபட முடியாது.

இவையனைத்தையும் அறிந்தவனானதால், நீ {யுதிஷ்டிரா} போரில் ஈடுபடாதே. உன் ஆலோசகர்கள் விரும்புவதால், இந்த வழியை மேற்கொள்ள நீயும் விரும்புகிறாய் என்றால், (அனைத்தையும் {செல்வமனைத்தையும்}) அவர்களிடம் கொடுத்துவிட்டு ஓடிவிடு. தேவர்களின் உலகத்திற்குச் செல்லும் இந்தப் பாதையில் இருந்து நீ விழுந்துவிடாதே!” என்றான் {சஞ்சயன்}.

கிருஷ்ணனே பெரிய நீதிபதி ! - உத்யோக பர்வம் பகுதி 28

Krishna is the great judge! | Udyoga Parva - Section 28 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 28)
பதிவின் சுருக்கம் : தன்னை சஞ்சயன் எப்படி நினைக்கிறான், நல்லவனாகவா? தீயவனாகவா என்று யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் வினவுவது; அறமும் மறமும் வழக்கமான காலங்களிலும் ஆபத்து காலங்களிலும் தங்கள் தன்மைகளை எப்படி மாற்றிக் கொள்கின்றன என்று சொல்வது; ஆபத்து காலத்திலும் விடாமல் தான் நினைப்பதே அறம் என்று இருப்பவன் மெச்சத்தகுந்தவன் அல்ல என்று சொல்வது; முன்னோர் சென்ற வழியையே தான் பின்பற்றுவதாக யுதிஷ்டிரன் உரைப்பது; கிருஷ்ணன் சொல்லும் எந்தக் கருத்தையும் தான் ஏற்பதாக சஞ்சயனிடம் யுதிஷ்டிரன் சொன்னது…

யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, நீர் சொல்வது போல, நமது செயல்கள் அனைத்திலும் நீதிமிக்க {நேர்மையான} செயல்களே முதன்மையானவை என்பதில் ஐயமில்லை. எனினும், நான் பயில்வது அறமா {தர்மமா?} அல்லது மறமா {அதர்மமா} என்பதில் நீர் முதலில் உறுதியடைய வேண்டும். மறம் {அதர்மம்}, அறத்தின் தன்மைகளை மேற்கொள்ளும்போது, அறமே மொத்தமாகத் தீமையாகப் பட்டுவிடும். {மறமாகத் தெரியும்} அறம் தன்னுடைய சுய உருவில் தோன்றும்போது, கற்றறிந்தவர்களே அதைத் தங்கள் புத்தியினால் கண்டறிவார்கள்.


நித்தியமானதும், முழுமையானதுமான அறம், மறம் ஆகிய இரண்டும், துன்ப {ஆபத்து} காலங்களில் தங்கள் பண்புகளை மாற்றிக் கொள்கின்றன. பிறப்பின் அடிப்படையில் ஒருவன் எந்த வகையைச் சார்ந்தவனோ, அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளையே அவன் வழுவாமல் பின்பற்ற வேண்டும். ஆனால், ஓ! சஞ்சயரே, துன்ப {ஆபத்து} காலங்களில் கடமைகள் வேறு வகைப்பட்டன என்பதை அறிந்து கொள்ளும். தனது வாழ்வாதாரங்கள் மொத்தமாகப் போன பிறகு, அனைத்தையும் இழந்த ஒரு மனிதன், தன் வகைக்குண்டான அங்கீகரிக்கப்பட்ட கடைமைகளை நிறைவேற்றுவதற்காக, வேறு வழிகளையே நிச்சயம் விரும்ப வேண்டும். தனது வாழ்வாதாரங்களை இழக்காத மனிதன், துயரத்தில் இருக்கும் மனிதன் ஆகிய இருவரும், ஓ! சஞ்சயா, தங்கள் நிலைகளை மாற்றிச் செயல்பட்டால், அவர்கள் நிச்சயம் பழிக்கப்படுவார்கள். {போதுமான செல்வத்தை வைத்துக் கொண்டு ஆபத்து கால அறத்தைப் பயில்வதும், ஆபத்தில் இருந்து கொண்டு செல்வநிலைக்கு ஏற்பட்ட அறத்தைக் கடைப்பிடிக்காதவனும், என இந்த இருவருமே நிந்திக்கத்தக்கவர்கள்}.

தங்களுக்கு அங்கீகரிக்கப்படாத செயல்களைக் கூட, தற்கொலையை {self-destruction = [சுய அழிப்பு]} விரும்பாத அந்தணர்களுக்குப் பரிகாரமாக படைப்பாளனே {பிரம்மனே} விதித்திருக்கிறான். தங்கள் வகைக்கு விதிக்கப்படாத காரியங்களையும், ஆபத்து காலங்களில், மக்கள் செய்யலாம் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. ஓ சஞ்சயரே, வழக்கமான காலங்களில் தங்கள் வகைக்குரிய செயல்களைச் செய்பவர்களைக் கருதுவது போலவே, ஆபத்து காலங்களில் தங்கள் வகைக்கு விதிக்கப்படாத செயல்களைச் செய்பவர்களையும் நீர் கருத வேண்டும். வழக்கமான காலங்களில்கூட மாறாக நடப்பவர்களையும், ஆபத்து காலங்களில் {தங்கள்} விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் {மட்டும்} பின்பற்றுபவர்களையும் நீர் நிந்திக்க வேண்டும்.

இதைப் போலவே, தங்கள் மனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பும் மனிதர்கள், தங்களை {சுயத்தைக்} குறித்த அறிவை {தன்னறிவை} அறிய முயலும் போது, சிறந்தவர்களுக்காக {அந்தணர்களுக்காக} விதிக்கப்பட்ட அப்பயிற்சிகள், அவர்களுக்கும் {அந்தணர்கள் அல்லாதோருக்கும்} சமமாகவே விதிக்கப்படுகிறது. எனினும், சுயத்தை அறியும் அறிவை அடைய {தன்னறிவைப் பெற – நான் யார் என்பதை அறிய} முயற்சிக்காத அந்தணரல்லோதர், தங்கள் வகைக்கு விதிக்கப்பட்ட பயிற்சிகளையே ஆபத்து காலங்களிலும் மற்ற காலங்களிலும் செய்ய வேண்டும். இந்த வழியையே நமது தந்தைமாரும், பாட்டன்மாரும், அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களும் பின்தொடர்ந்தார்கள். இதே கருத்தின்படியே, ஞானமடைய விரும்புவோரும் மற்றும் செயல்களைத் தவிர்ப்போரும், இதே நோக்கத்தையே கொண்டு தங்களைப், புராதன நம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்களாகக் கருதிக் கொள்கின்றனர் {regard themselves as orthodox}.

எனவே, வேறு வழியேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஓ! சஞ்சயரே, இந்தப் பூமியில் என்ன செல்வமெல்லாம் உள்ளதோ, தேவர்களிடம் என்னவெல்லாம் உள்ளதோ, அவற்றையோ, அல்லது அவர்களாலும் அடைய முடியாத பிரஜாபதியின் உலகத்தையோ, சொர்க்கத்தையோ, பிரம்மலோகத்தையோ அநீதியான வழிகளில் அடைய நான் முயற்சிக்க மாட்டேன்.

அறத்தின் கனிகளைக் கொடுப்பவனும், புத்திசாலியும், மதிநுட்பமுடையவனும், அந்தணர்களுக்காகக் காத்திருந்தவனும், அனைத்தையும் அறிந்தவனும், பல்வேறு வலிமைமிக்க மன்னர்களுக்கு ஆலோசனைகள் வழங்குபவனுமான கிருஷ்ணன் இதோ இருக்கிறான். எனவே, அமைதிக்கான அனைத்து ஆலோசனைகளைத் தவிர்த்து, நான் போரிட நேர்ந்தால், நான் என் சாதிக்குரிய கடைமைகளைக் கைவிட்டவன் என்று நிந்திக்கப்படுவேனா என்பதை அந்தக் கொண்டாடப்படும் கிருஷ்ணனே சொல்லட்டும். கிருஷ்ணனே இருதரப்பு நன்மையையும் நாடுபவனாக இருக்கிறான்.

இந்தச் சாத்யகி, சேதிகள், அந்தகர்கள், விருஷ்ணிகள், போஜர்கள், குகுரர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் கிருஷ்ணனின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, தங்கள் எதிரிகளைக் கொன்று, நண்பர்களை மகிழ்விக்கின்றனர். உக்கிரசேனர் தலைமையைக் கொண்ட விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள், கிருஷ்ணனால் வழிநடத்தப்பட்டு, இந்திரனைப் போன்றோராகி, உயர்ந்த மனம் கொண்டவர்களாக, உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக, பெரும் பலசாலிகளாக, மகிழ்ச்சிமிக்கவர்களாக இருக்கிறார்கள். வெப்ப காலம் முடிந்ததும், பூமியின் உயிரினங்கள் மேல் எப்படி மேகங்கள் {மழையைப்} பொழியுமோ, அப்படி, காசியின் மன்னனான அந்தப் பப்ரு மேல் கிருஷ்ணன் அருள்மாரி பொழிந்தான். அவன் {பப்ரு}, தனது அண்ணனாக விருப்பங்களுக்கு பலனளிக்கும் கிருஷ்ணனை அடைந்து, உயர்ந்த வளத்தை அடைந்துவிட்டான். ஓ! அய்யா? அவ்வளவு பெரியவனாவான் கிருஷ்ணன். அனைத்து செயல்களின் நன்மை தீமையைத் தீர்மானிக்கும் பெரும் நீதிமானாக அவனை நீர் அறிய வேண்டும். கிருஷ்ணன் எங்களுக்கு அன்பானவனும், மனிதர்களில் மிகவும் ஒப்பற்றவனுமாவான். கிருஷ்ணன் சொல்வதை நான் எப்போதும் அலட்சியப்படுத்துவதில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயனைக் கண்டித்த கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 29

Sanjaya, rebuked by Krishna! | Udyoga Parva - Section 29 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 29)
பதிவின் சுருக்கம் : இருதரப்பும் வளம்பெறவே தான் விரும்புவதாகக் கிருஷ்ணன் சொல்வது;  பாண்டவர்கள் எவ்வளவு பொறுமையாக இருக்கிறார்கள் என்றும், கௌரவர்கள் எவ்வளவு பேராசையுடன் இருக்கிறார்கள் என்றும் சுட்டிக் காட்டியது; இப்படியெல்லாம் இருந்தும் யுதிஷ்டிரனை எப்படி நிந்திப்பீர் எனச் சஞ்சயனைக் கிருஷ்ணன் கண்டிப்பது; இந்திரன், பிருஹஸ்பதி ஆகியோர் எப்படிச் சிரமப்பட்டுத் தங்கள் நிலையை அடைந்தார்கள் என்பதைச் சொல்வது;  தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் போரும் அறமே என நிறுவுவது; இந்தச் சச்சரவைத் தீர்த்து வைக்கத் தானே தனிப்பட்ட முறையில் கௌரவர்களைப் பார்க்கப்போவதாகச் சொல்வது; அமைதியேற்படவில்லையெனில் கௌரவர்களின் மரணம் நிச்சயம் என்று சொன்னது; இவை அத்தனையையும் திருதராஷ்டிரனிடம் தெரிவிக்குமாறு சஞ்சயனிடம் கிருஷ்ணன் சொன்னது...

கிருஷ்ணன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அழிந்து போகக் கூடாதெனவும், அவர்கள் வளம்பெற்று, தங்கள் விருப்பங்களை ஈடேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். அதே போல, பல மகன்களையுடைய மன்னர் திருதராஷ்டிரரும் வளம்பெற வேண்டும் எனவே விரும்புகிறேன். அதைவிட அதிகமாக, ஓ! சஞ்சயரே, அமைதியைத் தவிர வேறு எதுவும் மன்னர் திருதராஷ்டிரருக்கு தகுந்ததில்லை என நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இதுவே பாண்டுவின் மகன்களுக்கும் {பாண்டவர்களுக்கும்} முறையானது எனவும் நான் கருதுகிறேன்.


மிக அரிய குணமாகிய அமைதியான மனநிலையையே இக்காரியத்தில் பாண்டவர்கள் {இதுவரை} வெளிக்காட்டியிருக்கிறார்கள். எனினும், திருதராஷ்டிரரும், அவரது மகன்களும் இவ்வளவு பேராசை கொண்டோராக இருக்கும்போது, ஏன் பகை மிக வேகமாக வளராது என்பதற்கான காரணம் ஒன்றையும் நான் காணவில்லை. ஓ! சஞ்சயரே, சரி, தவறுக்குள் இருக்கும் நுண்ணிய ஒழுகலாறுகளை {நுட்பமான ஏற்புகளை} என்னை விடவோ, யுதிஷ்டிரரைவிடவோ அறிவீர் என்பது போல நீர் பாசாங்கு செய்ய முடியாது. {என்னை விடவோ, யுதிஷ்டிரரை விடவோ நீர் அதிகம் அறிவீர் என்பதாக நடிக்காதீர்}. எனில் {நீர் ஞானம் கொண்டவராக இருப்பின்}, தன் கடமையில் கவனமாக, ஆரம்பத்திலிருந்தே தன் குடும்பத்துக்கான நன்மையை மிகச்சிந்தித்து, (அறநெறி ஆய்வுகள்} தடை செய்பவற்றை ஏற்று நடந்து வரும் யுதிஷ்டிரரின் நடத்தையைக் குறித்து,   நீர் ஏன் நிந்திக்கிறீர்?

இக்காரியத்தைப் பொறுத்தவரை, அந்தணர்கள் பல்வேறு வகையான கருத்துகளோடு இருந்துள்ளனர். சிலர், இவ்வுலகத்தில் வெற்றி {முக்தி} என்பது செய்யும் வேலையைப் பொருத்தே அடையப்படுகிறது என்கிறனர். {கர்மமே முக்தியை அளிக்கும் என்று சிலர் சொல்கின்றனர்}. சிலர், செயல் தவிர்த்து ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஞானத்தால் முக்தி {வீடுபேறு} அடையப்படுகிறது என்றும் தீர்மானிக்கின்றனர். {கர்மத்தைத் தவிர்த்து, ஞானத்தால் முக்தியை அடைய வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர்}. உண்ணும் பொருட்களின் அறிவை ஒருவன் பெற்றிருந்தாலும் கூட, உண்ணாதவரை அவனுக்குப் பசி அடங்குவதில்லை என்று அந்தணர்கள் சொல்கிறார்கள். செயலின் கனியே {பலனே}, காணத்தக்க விளக்கத்தை {சாட்சியம்} அளிக்கின்றன. எனவே, செயலாற்றுவதற்கு உதவும் ஞானக்கிளைகளே {ஞான வகைகளே} பலனளிக்கின்றன! பிறவகை அல்ல {செயலற்று இருக்கச் சொல்லும் ஞானக்கிளைகள் அப்படிப் பலனளிப்பதில்லை}. தாகம் கொண்ட மனிதன் தண்ணீரைக் குடிக்கிறான், அச்செயலால் அவனது தாகம் தணிகிறது. செயலாலேயே விளைவு உண்டாகிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது. அதில்தான் செயலின் ஆற்றல் இருக்கிறது. செயலைவிட வேறு எதுவும் சிறந்தது என்று எவனாவது நினைத்தால், அவனது செயலும் சொற்களுமே பொருளற்றவை {அர்த்தமற்றவை} என்றே நான் கருதுவேன்.

மறு உலகத்தில், செயலின் அறத்தாலேயே {செயலின் ஒழுக்கத்தாலேயே} தேவர்கள் மலர்ச்சியுடன் இருக்கிறார்கள். செயலின் அறத்தாலேயே {தன்மையாலேயே} காற்று வீசுகிறது. செயலின் அறத்தாலேயே உறக்கமற்ற சூரியன், தினமும் எழுந்து, பகல் இரவுக்குக் காரணமாகிறான், சோமன் {சந்திரன்}, மாதங்களையும், அழுவங்களையும் {பக்ஷங்களையும் {Fortnights}}, விண்மீன் கூட்டங்களையும் கடக்கிறான். செயலின் அறத்தாலேயே, தன்னைத் தூண்டிக் கொள்ளும் நெருப்பு {அக்னி}, மனிதர்களுக்கு நன்மையைச் செய்கிறது. உறக்கமற்ற பூமாதேவி, இந்தப் பெரும் சுமையைத் தன் சக்தியால் தாங்கிக் கொள்கிறாள். உறக்கமற்ற ஆறுகள் {நதிகள்}, அனைத்து உயிர்களுக்கும் மனநிறைவை அளித்தபடி, நீரைச் சுமந்து வேகமாக ஓடுகின்றன.

{செயலின் அறத்தாலேயே} பெரும் சக்தி படைத்த உறக்கமற்ற இந்திரன், திசைப்புள்ளிகளும், சொர்க்கமும் ஒலிக்கும்படி மழையைப் பொழிகிறான். தேவர்களில் பெரியவனாக விரும்பிய அவன் {இந்திரன்}, புனிதமான அந்தணன் மேற்கொள்ளும் கடும் தவ வாழ்வை மேற்கொண்டான். இன்பத்தையும், இதயத்துக்கு ஏற்புடைய அனைத்தையும் இந்திரன் கைவிட்டான். கடுமையான உழைப்புடன் அறம், உண்மை, தற்கட்டுப்பாடு, பொறுமை, பாகுபாடின்மை, மனிதநேயம் ஆகியவற்றை அவன் கடைப்பிடித்தான். செயலின் காரணமாகவே, அவன் (அனைவரை விடவும்) உயர்ந்த நிலையை அடைந்தான். மேற்கண்ட வழியில் வாழ்வைத் தொடர்ந்த இந்திரன், தேவர்களின் உயர்ந்த ஆட்சியுரிமையையும் அடைந்தான்.

தற்கட்டுப்பாட்டுடன் கருத்தூன்றிய பிருஹஸ்பதி, ஓர் அந்தணர் வாழும் தவ வாழ்வைச் சரியான முறையில் வாழ்ந்தார். இன்பத்தைக் கைவிட்ட அவர், தனது புலன்களை அடக்கி, தேவர்களின் ஆசான் என்ற நிலையை அதன் காரணமாகவே அடைந்தார். அதே போலவே, ருத்ரர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், மன்னன் யமன், குபேரன், கந்தர்வர்கள், யக்ஷர்கள், தேவலோகக் கன்னியர், விண்மீன் கூட்டத்தினர் ஆகியோர் செயலின் அறத்தாலேயே தற்போதை நிலையை மறு உலகத்தில் அடைந்தனர்.

கல்வி, தவம், செயல் (ஆகியவை இணைந்த) வாழ்வை வாழும் தவசிகள் மறு உலகில் ஒளிர்கின்றனர். ஓ! சஞ்சயரே, அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோரில் சிறந்தோர் பின்பற்றும் விதி இஃது என்பதை அறிந்தும், ஞானமுள்ளோரில் ஒருவராக இருக்கும் நீர், குருக்களின் மகன்கள் சார்பாக ஏன் {போரைத் தவிர்க்க யுதிஷ்டிரனை நிந்திக்கும்} இந்த முயற்சியை மேற்கொள்கிறீர்?

யுதிஷ்டிரர் நிலையானவராக வேத கல்வியில் ஈடுபடுகிறார் என்பதை நீர் அறிவீராக. குதிரை வேள்வியையும், ராஜசூயத்தையும் செய்ய அவர்கள் விரும்புகிறார். அனைத்து வகை ஆயுதங்களையும், வில்லையும் எடுத்துக் கொண்டு, தேரில் ஏறி, கவசம் பூண்டு, குதிரைகளையும் யானைகளையும் செலுத்துகிறார். குரு மகன்களின் படுகொலையில் ஈடுபட வேண்டாத ஒரு செயல்வழியை இந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} கண்டால், அவர்கள் நிச்சயம் அதையே இப்போது கடைப்பிடிப்பார்கள். அப்போதுதான் அவர்களது அறம் காக்கப்படும், ஓர் அறத்தகுதிக்கான செயலும் அவர்களால் அடையப்படும். மனிதத்தன்மைகளால் குறிக்கப்படும் நடத்தையைப் பின்பற்றச் சொல்லி அவர்கள் பீமனை நிர்பந்திக்கவும் வேண்டிவரும்.

மறுபுறம், தங்கள் மூதாதையர் செய்ததையே செய்தால் {பாண்டவர்கள் போரிட்டால்}, தங்கள் கடமையைப் பெருமுயற்சியுடன் செய்து கொண்டிருக்கும்போது, தவிர்க்கமுடியாத விதியின் காரணமாக, மரணத்தைத் தழுவ நேர்ந்தாலும், அப்படிப்பட்ட மரணமும் அவர்களுக்குப் புகழையே கொடுக்கும். அமைதியை மட்டுமே அங்கீகரிப்பீர் என நீர் சொல்வீரானால், அறவிதிகளின் படி ஒரு மன்னன் போரிடுவது சரியானதா? போரிடாமல் இருப்பது சரியானதா? என்ற கேள்விக்கு நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர் என்பதைக் கேட்க விரும்புகிறேன். ஓ! சஞ்சயரே, நான்கு சாதிகளின் பிரிவுகளையும், அவை ஒவ்வொன்றுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கடமைகளையும் நீர் கருத்தில் கொள்ள வேண்டும். பாண்டவர்கள் செயல்படப்போகும் வழிமுறையை நீர் கேட்க வேண்டும். பிறகு அவற்றை உம் விருப்பப்படி புகழவோ நிந்திக்கவோ செய்யலாம்.

ஓர் அந்தணன் கல்வி கற்க வேண்டும், தானங்கள் அளிக்க வேண்டும், பூமியில் உள்ள அனைத்துப் புனிதமான இடங்களுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும்; (பிறருக்கு) அவன் {அந்தணன்} கற்பிக்க வேண்டும், பிறரால் செய்யப்படும் வேள்விக்குப் புரோகிதராகச் செயல்படுதல் மற்றும் அதற்குத்தகுந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும், அறிந்த மனிதர்களிடம் அவன் பரிசுகளை {தானம் [அ] பிச்சை]} ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதே போல, ஒரு க்ஷத்திரியன், மக்களை விதிகளின் படி பாதுகாக்க வேண்டும், தானமெனும் அறத்தைச் சுறுசுறுப்பாகப் பயில வேண்டும், வேதங்கள் முழுவதையும் கற்க வேண்டும், மனைவியைக் கொண்டு {மணந்து}, அறம்சார்ந்த இல்லற வாழ்வை வாழ வேண்டும். அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனாகவும், புனிதமான அறங்களைப் பயில்பவனுமாக இருந்துவிட்டால், அவன் பரமாத்மாவை எளிதில் அடைகிறான்.

ஒரு வைசியன் கல்வி பயில வேண்டும், வணிகம், உழவு {விவசாயம், கிருஷி} மற்றும் கால்நடை வளர்த்தல் மூலமாகச் செல்வத்தைத் திரட்டி, சுறுசுறுப்பாகப் பொருளீட்ட {சம்பாதிக்க} வேண்டும். அந்தணர்களும் க்ஷத்திரியர்களும் மகிழும் வண்ணம் செயல்பட்டு, நல்ல பணிகள் செய்யும், அறம் சார்ந்த இல்லறத்தானாக இருக்க வேண்டும்.

பழங்காலத்தில் இருந்து சூத்திரர்களுக்காகத் தீர்மானிக்கப்பட்ட கடமைகள் பின்வருபவை ஆகும். அவன் {சூத்திரன்} {அத்தியயனம் = வேதமோதல்} கல்லாமல், அந்தணர்களுக்குச் சேவை செய்து, அவர்களிடம் தங்களை ஒப்படைக்க வேண்டும். வேள்விகள் செய்ய அவனுக்கு மறுக்கப்பட்டுள்ளது; சுறுசுறுப்பாகவும், தனக்கு நன்மையைச் செய்யும் அனைத்து வகைச் செயல்களையும் அவன் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

{பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய} இவர்கள் அனைவரையும் மன்னன் (முறையாக) கவனித்து, தங்களுக்குரிய கடமைகளை, ஒவ்வொரு சாதியையும் சரியாகச் செய்ய வைக்க வேண்டும். அவன் புலனின்பங்களுக்கு அடிமையாகக் கூடாது. தனது குடிமக்களைச் சமமான அளவில் பாகுபாடின்றி நடத்த வேண்டும். நீதிக்கு எதிரான எந்த விருப்பங்களுக்கும், ஒரு மன்னன் கீழ்ப்படியக்கூடாது. நன்கு அறியப்பட்டவனாக, அனைத்து அறங்களையும் கொடையாகக் கொண்டவனாக, தன்னைவிடப் புகழத்தக்க வகையில் ஒருவன் இருந்தால், அவனைக் காணும்படி, ஒரு மன்னன், தனது குடிமக்களிடம் சொல்ல வேண்டும்.

எனினும், ஒரு தீயவன் {தீய மன்னன்}, இதைப் புரிந்து கொள்ள மாட்டான். பலத்தில் வளர்ந்து, மனிதத்தன்மையற்று, விதியின் கோபத்துக்கு இலக்காகி, பிறரின் செல்வங்களின் மீது தனது பேராசை கொண்ட கண்களைச் செலுத்துவான். அப்போதே ஆயுதங்கள், கவசங்கள், விற்களுக்கான தேவை ஏற்பட்டு, போர் நிகழ்த்தப்படுகிறது. கொள்ளைக்காரர்களைக் கொல்வதற்காக, இந்திரனே, இந்தத் தந்திரத்தை புதிதாகக் கண்டுபிடித்தான். கவசங்கள், ஆயுதங்கள், விற்கள் போன்ற தந்திரங்களையும் அவனே {இந்திரனே} கண்டுபிடித்தான். கொள்ளையர்களைக் கொல்வதால், அறத்தகுதியே அடையப்படுகிறது. விதியையும் அறத்தையும் மனதிற்கொள்ளாத நீதியற்ற குருக்களாலேயே {கௌரவர்களாலேயே}, துன்பம் தரும் பல தீங்குகளை இவர்கள் {பாண்டவர்கள்} அனுபவிக்க நேர்ந்தது. ஓ! சஞ்சயரே, இது சரியல்ல {நல்லதல்ல}.

இப்போது, தனது மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர், பாண்டு மகனுக்குச் சொந்தமானவற்றைக் காரணமே இல்லாமல் அபகரித்துள்ளார். மன்னர்களால் நோற்கப்பட்ட மிகப்பழமையான விதியை {அனாதியான ராஜதர்மத்தை} அவர் எண்ணிப் பார்க்கவில்லை. குருக்கள் அனைவரும் கூட அதையே செய்கிறார்கள். ஓ! சஞ்சயரே, பிறர் காணாத வகையில் செல்வத்தைத் திருடும் திருடன் மற்றும் திறந்த பகல்வெளிச்சத்தில் வலுக்கட்டாயமாக அதையே {செல்வத்தை} அபகரிப்பவன் ஆகிய இருவரும் கண்டிக்கத்தக்கவர்களே! திருதராஷ்டிரர் மகன்களுக்கும், அவர்களுக்கும் {திருடனுக்கும், வலுக்கட்டாயமாக அபகரிப்பவனுக்கும்} இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? கோபத்தினால் தூண்டப்பட்டு, தான் செய்ய நினைப்பதே நீதி எனப் பேராசையில் இருக்கும் அவன் கருதிக் கொள்கிறான்.

பாண்டவர்களின் பங்கு நிர்ணயிக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. அவர்களது பங்கை அந்த மூடன் ஏன் அபகரிக்க வேண்டும்? பொருட்களின் நிலை இவ்வாறிருக்கையில், போரிட்டு மடிவது கூட எங்களுக்குப் புகழையே தரும். அந்நியனிடம் பெறும் அரசாட்சியை விட, தந்தை வழியில் கிடைக்கும் நாடே சிறந்தது. ஓ! சஞ்சயரே, காலத்தால் மதிக்கப்படும் இவ்விதிகளை, மன்னர்களின் சபைக்கு மத்தியில் நீர் குருக்களிடம் {கௌரவர்களிடம்} எடுத்துச் சொல்ல வேண்டும். அதாவது, திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} கூட்டப்படும் மந்த புத்தி கொண்டவர்களும், ஏற்கனவே மரணத்தில் பிடியில் அகப்பட்டிருப்பவர்களுமான அந்த மூடர்களின் கூட்டத்தையே அப்படிச் {மன்னர்களின் சபை} சொன்னேன்.

சபா மண்டபத்தில் குருக்கள் நடந்து கொண்ட நடத்தையே, அவர்கள் செயல்கள் அனைத்திலும் மிகத் தீமையானதாகும். அதை மீண்டும் ஒரு முறை எண்ணிப்பாரும். புகழத்தக்க நடத்தை கொண்டவளும், புனித வாழ்வு வாழ்பவளும், துருபதன் மகளுமான பாண்டு மகன்களின் அன்பிற்கினிய மனைவி {திரௌபதி}, அழுது கொண்டிருந்த நிலையில்}, {கௌரவர்கள்} காமத்திற்கு அடிமையாகி, அவளைப் பிடித்தபோது, குருக்களின் தலைமையில் நின்ற பீஷ்மர் அதில் தலையிடவில்லையே. குருக்களில் கிழவர்களும் இளைஞர்களுமான அனைவரும் அங்கே இருந்தனர். அவளை {திரௌபதியைக்} கண்ணியக்குறைவாக நடத்தியதை அவர்கள் தடுத்திருந்தால், நான் திருதராஷ்டிரரின் நடத்தையில் மகிழ்ந்திருப்பேன். அவரது மகன்களின் இறுதி நன்மைக்காகவே அப்படி நடக்கவில்லை போலும்.

அவளது {திரௌபதியின்} மாமனார் {திருதராஷ்டிரன்} அமர்ந்திருந்த பொதுச்சபையின் மத்தியில் *கிருஷ்ணையை {திரௌபதியை} வன்முறையுடன் பற்றினான் துச்சாசனன். அங்கே {சபைக்கு} தூக்கிச் செல்லப்பட்டதும், இரக்கத்தை எதிர்பார்த்த அவள், விதுரரைத் தவிர வேறு யாரும் தன் பக்கத்தில் இல்லாததைக் கண்டாள். அறிவிலிக் கூட்டமாதலால், அங்கிருந்த மன்னர்கள் யாரும் எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. கடமை உணர்வு கொண்ட விதுரர் மட்டுமே எதிர்த்துப் பேசினார். நீதி நிறைந்த சொற்களைச் சிறு புத்தி படைத்த அந்த மனிதனுக்குச் (துரியோதனனுக்குச்} சொன்னார். ஓ! சஞ்சயரே, அப்போதெல்லாம் விதி எதுவென்றும், அறநெறி எதுவென்றும் நீர் சொல்லவில்லையே, இப்போது இங்கே வந்து பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} ஏன் பாடம் எடுக்கிறீர்?

*கிருஷ்ணை=கருப்பி / கருப்பானவள்

எனினும், அந்தச் சபைக்கு வந்த கிருஷ்ணை {திரௌபதி}, {பாண்டவர்கள் துன்பம் என்ற} பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, படகாக வந்து பாண்டவர்களையும் தன்னையும் காத்துக் கொண்டு அனைத்தையும் சரி செய்தாள். அந்தச் சபையில் கிருஷ்ணை நின்ற போது, அந்தத் தேரோட்டியின் மகன் {கர்ணன்}, அவளிடம் {திரௌபதியிடம்} அவளது மாமனாருக்கு {திருதராஷ்டிரருக்கு} முன்னிலையிலேயே, “ஓ! துருபதன் மகளே {திரௌபதியே}, உனக்கு வேறு புகலிடம் கிடையாது. திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} வீட்டில் தாதியாக {பணிப்பெண்ணாக} இருப்பதே உனக்குச் சிறந்தது. உனது கணவர்கள் வெல்லப்பட்டார்கள். இனி அவர்கள் {உனக்குக் கணவர்கள்} இல்லை. இனிய ஆன்மா கொண்ட நீ, வேறு எவரையாவது கணவனாகத் தேர்ந்தெடுப்பாயாக” என்றான். நம்பிக்கை அத்தனையையும் அறுக்கும் வகையில், கர்ணனிடம் இருந்து வந்த இந்தக் கூரிய அம்பு போன்ற வார்த்தை, அந்தச் சபையின் மென்மையான பகுதிகளைத் தாக்கி, பயங்கரமாக்கியது. அது {கர்ணனின் அந்த வார்த்தைகள்} அர்ஜுனனுடைய இதயத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது.

பாண்டுவின் மகன்கள் கரிய மான்தோல்களை அணிய முற்பட்ட போது, துச்சாசனன், எரிச்சலூட்டும் இந்த வார்த்தைகளைப் பேசினான். “இவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் அலிகளைத் தவிர வேறில்லை; நெடுநாள் நரகத்தை அடைந்து, இவர்கள் அழிந்து போனார்கள்” என்றான். காந்தார நிலத்தின் மன்னன் சகுனி, பகடையாட்டத்தின்போது யுதிஷ்டிரனிடம் சூது நிறைந்த தந்திரமான வார்த்தைகளைச் சொன்னான், “உன்னிடம் இருக்கும் நகுலன் என்னால் வெல்லப்பட்டான். நீ வேறு என்ன வைத்திருக்கிறாய்? இப்போது நீ உனது மனைவியான திரௌபதியைப் பந்தயமாக வைப்பதே சிறந்தது” என்றான் அவன் {சகுனி}. ஓ! சஞ்சயரே, பகடையாட்டத்தின்போது சொல்லப்பட்ட இழிந்த வகையைச் சார்ந்த இந்தச் சொற்கள் அனைத்தையும் நீர் அறிவீர்.

நான் தனிப்பட்ட முறையில் குருக்களிடம் சென்று இந்தக் கடினமான காரியத்தை நேர் செய்ய விரும்புகிறேன். பெரும் அருள்களை விளைவாகத் தருவதும், அறத்தகுதியை வளர்ப்பதுமான இந்தச் செயல், பாண்டவ காரியத்திற்குத் தீங்கில்லாமல், குருக்களுடன் அமைதியைக் கொண்டு வந்ததாக ஆகட்டும். குருக்களும் மரண வலையில் இருந்து மீட்கப்பட்டதாக ஆகட்டும். மனிதாபிமானமற்ற அனைத்துப் போக்குகளில் இருந்தும் விடுபட்டு, அறிவு நிரம்பிய வார்த்தைகளையும், நீதியின் விதிகளுக்கடங்கிய ஞானத்தின் வார்த்தைகளையும் குருக்களிடம் நான் பேசும்போது, திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, என் முன்னிலையில் அவற்றுக்குச் செவிசாய்ப்பான் என்று நான் நம்புகிறேன்.

நான் வரும்போது, குருக்கள் எனக்கு உரிய மரியாதையை அளிப்பார்கள் என நான் நம்புகிறேன். இல்லையெனில், ஏற்கனவே தங்கள் தீயச் செயல்களின் மூலம் எரிக்கப்பட்டு வரும் திருதராஷ்டிரரின் தீய மகன்கள், போருக்குத் தயாராக இருக்கும் அர்ஜுனன் மற்றும் பீமரால் எரிக்கப்படுவார்கள் என்று நீர் நிம்மதியாக இருக்கலாம். பாண்டுவின் மகன்கள் ({பகடை} ஆட்டத்தில்) வீழ்த்தப்பட்ட போது, திருதராஷ்டிரரின் மகன்கள் அவர்களிடம் கடுமையான முரட்டு வார்த்தைகளைப் பேசினர். ஆனால், நேரம் வரும்போது, துரியோதனனின் அந்த வார்த்தைகளை அவனுக்கு நினைவு படுத்துவதில் பீமர் கவனம் கொள்வார் என்பதில் ஐயமில்லை.

துரியோதனன், தீய உணர்வுகளுள்ள ஒரு பெரிய மரமாவான்; கர்ணன் அதன் அடிமரமாக {மரத்தின் மையப்பெரும் பகுதியாக} இருக்கிறான்; சகுனி அதன் கிளைகளாக இருக்கிறான்; துச்சாசனன், ஏராளமான அதன் பூக்களாகவும், பழங்களாகவும் இருக்கிறான்; (அதே வேளையில்) ஞானமுள்ள மன்னரான திருதராஷ்டிரர் அதன் வேராக இருக்கிறார்.

யுதிஷ்டிரர் நீதி எனும் பெரிய மரமாக இருக்கிறார்; அர்ஜுனன் அதன் அடிமரமாக இருக்கிறான்; பீமர் அதன் கிளைகளாக இருக்கிறார்; மாத்ரியின் மகன்கள் ஏராளமான அதன் பூக்களாகவும், பழங்களாகவும் இருக்கின்றனர்; {கிருஷ்ணனாகிய} நானும், அறமும் {தர்மமும்}, அறம்சார்ந்த மனிதர்களும் அதன் வேர்களாக இருக்கிறோம்.

தன் மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர் ஒரு காடாக இருக்கிறார்; அதே வேளையில், ஓ! சஞ்சயரே, பாண்டுவின் மகன் புலிகளாக இருக்கின்றனர். ஓ!, புலிகளோடு கூடிய அந்தக் காட்டை வெட்டி விடாதீர்கள். அதே போல, காட்டில் இருந்து அந்தப் புலிகளும் விரட்டப்படாமல் இருக்கட்டும். காட்டை விட்டு வெளியிலிருக்கும் புலி எளிதாகக் கொல்லப்படும்; புலியில்லாத காடும், எளிதில் வெட்டப்பட்டுவிடும் {அழிக்கப்படும்}. எனவே, புலியே அந்தக் காட்டுக்குப் பாதுகாப்பு ஆகும். காடே புலியின் உறைவிடம் ஆகும். {புலி காட்டைப் பாதுகாக்க வேண்டும்; காடு புலியைப் பாதுகாக்க வேண்டும்}.

திருதராஷ்டிரர்கள் கொடிகளாக இருக்கின்றனர், அதே வேளையில், ஓ! சஞ்சயரே, பாண்டவர்களோ ஆச்சா {சால} மரங்களாக இருக்கின்றனர். ஒரு பெரிய மரத்தைச் சுற்றிப் படராமல் கொடியால் மலர்ச்சியடையவே {செழித்து வளரவே} முடியாது. எதிரிகளை அடக்குபவர்களான அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, போருக்குத் தயாராக இருப்பதைப் போலவே, உண்மையில், திருதராஷ்டிருக்காகக் காத்திருக்கவும் {அவருக்காகப் பணிவிடை செய்யவும்} தயாராக இருக்கிறார்கள். இனி, எது அவருக்குச் சரியெனப் படுகிறதோ அதையே மன்னர் திருதராஷ்டிரர் செய்யட்டும். அறம்சார்ந்தவர்களும், உயர்ந்த ஆன்மா கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, போரிடத்தக்கவர்களாக இருந்தாலும், (தங்கள் சகோதரர்களிடம் {கௌரவர்களிடம்} இப்போதும் பொறுமையாகவே இருக்கிறார்கள். ஓ! கற்றவரே, இவை அனைத்தையும் (திருதராஷ்டிரருக்கு) உண்மையாகச் சொல்லும்" என்றான் {கிருஷ்ணன்}.

பங்கைக் கொடு அல்லது போரிடு! - உத்யோக பர்வம் பகுதி 30

Give  my share or else fight! | Udyoga Parva - Section 30 | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 30)
பதிவின் சுருக்கம் : தான் விடைபெற்றுக் கொள்வதாகச் சஞ்சயன் சொல்லி, தான் ஏதாவது குற்றமிழைத்திருந்தால் பொறுத்துக்கொள்ளுமாறு வேண்டுவது; சஞ்சயன் எக்குற்றமும் செய்யவில்லை என்று சொல்லி ஹஸ்தினாபுரத்தில் உள்ளோரை தான் நலம் விசாரித்ததாகச் சொல்லச் சொல்லி, யுதிஷ்டிரன் ஒரு நீண்ட பட்டியலைச் சொல்வது; துரியோதனன் ஆசையை அடைவதற்கு எந்தச் சாத்தியமும் இல்லையென்றும், அதில் எந்த நீதியும் இல்லை என்றும், இந்திரப்பிரஸ்தத்தைக் கொடுப்பது அல்லது போரிடுவது என்பதே தீர்வாகும் என்றும் யுதிஷ்டிரன் சஞ்சனிடம் சொல்வது...

சஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மனிதர்களின் தெய்வீக ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, நான் உன்னிடம் விடைபெற்றுக் கொண்டேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நான் செல்கிறேன். வளமை உனதாகட்டும். நான், எனது இதய உணர்வுகளில் மெய்மறந்து தாக்கிப் பேசும் வகையில் எதையும் சொல்லவில்லை என நம்புகிறேன். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பீமன், அர்ஜுனன், மாத்ரியின் மகன், சாத்யகி, சேகிதானன் ஆகியோரிடமும் நான் விடைபெற்றுச் செல்கிறேன். அமைதியும் மகிழ்ச்சியும் உங்களுடையதாகட்டும். மன்னர்கள் அனைவரும் என்னைப் பாசமிக்கக் கண்களால் காணட்டும்” என்றான் {சஞ்சயன்}.


யுதிஷ்டிரன் {சஞ்சயரிடம்}, “ஓ! சஞ்சயரே, உமக்கு விடை கொடுக்க எங்களை அனுமதிப்பீராக. அமைதி உமதாகட்டும்! ஓ! கற்றவரே, எங்களை நீர் ஒருபோதும் தவறாக நினைத்ததில்லை. அவர்களும் {கௌரவர்களும்}, நாங்களும், சபையில் இருப்போர் மத்தியில், உம்மை (குருக்களின்) தூய்மையான இதயம் கொண்டவராகவே அறிந்திருக்கிறோம். அதுதவிர, ஓ! சஞ்சயரே, இப்போது தூதராக வந்திருப்பது மட்டுமல்லாமல், எங்களது அன்புக்குரிய நீர் நன்றியுடையவராகவும், ஏற்புடைய {இனிமையான} பேச்சுடையவராகவும், அற்புத நடத்தை கொண்டவராகவும், எங்களிடம் பாசம் கொண்டவராகவும் இருக்கிறீர். உமது மனம் எப்போதும் {அஞ்ஞானத்தால்} மறைக்கப்பட்டது கிடையாது. கடினமாகப் பேசப்பட்டால் நீர் கோபத்துக்கு ஆளாக மாட்டீர். ஓ! சூதரே, வெட்டும் வகையில் மூர்க்கமான பேச்சுகளையோ, தவறான மற்றும் கசந்த பேச்சுகளையோ நீர் ஒருபோதும் பேச மாட்டீர். உமது சொற்கள் வன்மத்திலிருந்து {தீய நோக்கத்திலிருந்து} விடுபட்டு, எப்போதும் அறநெறியும் சார்ந்தே இருக்கும்.

அரசாங்கப் பிரதிநிதிகளில் {தூதர்களில்} நீரே எங்களுக்கு மிகவும் அன்புக்குரியவர். உம்மைத்தவிர வேறொருவரும் இங்கே வரக்கூடும். அவர் விதுரரே. முன்பெல்லாம், நாங்கள் எப்போதும் உம்மைக் காண்போம். உண்மையில், நீர் தனஞ்சயனைப் போன்றே எங்களுக்கு அன்புக்குரிய நண்பராவீர். ஓ! சஞ்சயரே, இங்கிருந்து விரைந்து சென்று, தூய சக்தியும், பிரம்மச்சரிய வகையின்படியான கல்விக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும், அதிலும் குறிப்பாக வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்து, இரவலர் {பிச்சைக்கார} வாழ்வை மேற்கொண்டிருக்கும் அந்தணர்களுக்காகவும், காட்டில் வாழ்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் துறவிகளுக்காகவும், பிற வகுப்புகளைச் {க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வகுப்புகளைச்} சார்ந்த முதிர்ந்தவர்களுக்காகவும் காத்திருந்து, ஓ! சஞ்சயரே, எனது பெயரால் அவர்களது நலம் உம்மால் விசாரிக்கப்படட்டும்.

ஓ! சூதரே, மன்னர் திருதராஷ்டிரரின் புரோகிதரிடமும், அவரது ஆசான்களிடமும், ரித்விக்குகளிடமும் சென்று அவர்களது நலத்தை நீர் விசாரிப்பீராக. நல்ல பிறப்பு பிறக்காவிடினும், முதிர்ந்த வயதும், சக்தியும், நல்ல நடத்தையும், பலமும் உள்ளவர்கள் மற்றும் எங்களை நினைவுகூர்ந்து பேசுபவர்களிடமும், தங்கள் சக்திக்குத் தக்க சிறு அறத்தையேனும் பயில்பவர்களிடமும், எனது அமைதிக்கான செய்தியை முதலில் சொல்லிவிட்டு, ஓ! சஞ்சயரே, பிறகு அவர்களது நலத்தை நீர் விசாரிப்பீராக. வணிகம் செய்து நாட்டில் வாழ்பவர்களிடமும், நாட்டின் முக்கிய அலுவல்களைச் செய்து வாழ்பவர்களின் நலத்தை நீர் அவர்களிடம் விசாரிப்பீராக.

அறநெறிகளை முழுவதும் அறிந்தவரும், எங்களது ஆலோசகரும், வேதங்களில் நிபுணத்துவம் பெற்றுப் பிரம்மச்சரியம் நோற்பவரும், ஆயுத அறிவியலை மீண்டும் முழுமையாகவும் நிறைவாகவும் செய்தவரும், எங்களிடம் எப்போதும் அருள்கூர்ந்து இருப்பவரும், எங்கள் அன்புக்குரிய ஆசானுமான துரோணரிடம், எங்கள் பெயரால் நீர் வணக்கங்களைத் தெரிவிப்பீராக.

பெரும் கல்வி கற்றவரும், பிரம்மச்சரிய வகை வாழ்வை நோற்று வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவரும், பெரும் சுறுசுறுப்பு கொண்டவரும், கந்தர்வ குலத்தின் இளைஞனைப் போல இருப்பவரும், அதுவும் தவிர ஆயுத அறிவியலை மீண்டும் முழுமையாகவும் நிறைவாகவும் செய்தவருமான அஸ்வத்தாமரின் நலத்தை நீர் அவரிடம் விசாரிப்பீராக.

ஓ! சஞ்சயரே, பெரும் தேர்வீரரும், தன்னறிவு {சுயஞானம்} கொண்டவர்களில் முதன்மையானவரும் சரத்வானின் மகனுமான கிருபரின் வசிப்பிடத்திற்குச் சென்று, எனது பெயரால் வணங்கி, உமது கையால் அவரது பாதத்தைத் தொடுவீராக.

வீரமும், ஊறிழையாமையும் {அஹிம்சையும்}, தவமும், ஞானமும், நல்ல நடத்தையும், வேத கல்வியும், பெரும் சிறப்பும், உறுதியும் யாரிடம் உள்ளதோ, அந்தக் குருக்களில் முதன்மையான பீஷ்மரிடம், அவரது பாதங்களைத் தொட்டு நான் நலமாக இருப்பதாகச் சொல்வீராக.

ஞானமுள்ளவரும், பெருமைக்குரியவரும், பெரும் கல்வி கற்றவரும், முதியோராலும் மதிக்கப்படுபவரும், குருக்களின் தலைவருமான கண்பார்வையற்ற {குருட்டு} மன்னரையும் (திருதராஷ்டிரரையும்} நீர் வணங்குவீராக.

ஓ! சஞ்சயரே, தீயவனும், அறியாமை கொண்டவனும், ஏமாற்றுக்காரனும், சீர்கெட்டவனும், முழு உலகத்தையும் இப்போது ஆட்சி செய்பவனும், திருதராஷ்டிரர் மகன்களில் மூத்தவனுமான சுயோதனனின் {துரியோதனனின்} நலத்தையும், ஓ! அய்யா {சஞ்சயரே}, நீர் விசாரிப்பீராக.

வலிமைமிக்க வில்லாளியும், குருக்களில் வீரனும், துரியோதனனுக்கு இளையவனும், தனது அண்ணனைப் போன்ற குணத்தையே உடையவனுமான தீயவன் துச்சாசனனின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.

ஓ! சஞ்சயரே, பாரதர்கள் மத்தியில் எப்போதும் அமைதி நில வேண்டும் என்பதைத்தவிர வேறு விருப்பங்களைப் பேணாதவரான, பாஹ்லீகர்களின் ஞானமிக்கத் தலைவரையும் நீர் வணங்குவீராக.

எண்ணற்ற அற்புத குணங்களைக் கொண்டவரும், ஞானியும், இரக்கமிக்க இதயம் கொண்டவரும், குருக்களிடம் கொண்ட பாசத்தால், அவர்களிடம் கோபமடையாதவருமான சோமதத்தரையும் நீர் வழிபடுவீராக.

சோமதத்தரின் மகன், குருக்கள் மத்தியில் பெரும் மரியாதைக்குரிய தகுதி படைத்தவனாவான். அவன் எனக்கு நண்பனும், எங்களுக்குச் சகோதரனும் ஆவான். வலிமைமிக்க வில்லாளியும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அவன் அனைத்து வகையிலும் தகுதியுடையவனே. ஓ! சஞ்சயரே, அவனது நலத்தை விசாரித்த பிறகு, அவனது நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களுடைய நலத்தையும் விசாரிப்பீராக.

குருக்கள் {கௌரவர்கள்} மத்தியில் கருத்தில் கொள்ளத்தக்கவர்களும், இளவயது கொண்ட பிறரும், மகன்கள், பேரர்கள், சகோதரர்கள் போன்ற உறவுமுறையை எங்களிடம் கொண்டோரும் அங்கே இருக்கிறார்கள். ஓ! சூதரே, அவர்கள் ஒவ்வொருவரிடமும், தகுந்தது என்று நீர் கருதும் வார்த்தைகளைப் பேசி அவர்களது நலத்தை விசாரிப்பீராக.

பாண்டவர்களுடன் போரிடுவதற்காகத் திருதராஷ்டிரர் மகனால் {துரியோதனனால்} கூட்டப்பட்டிருக்கும் கேகயர்கள், வசாதிகள், சால்வகர்கள், அம்பஷ்டர்கள், திரிகார்த்தர்கள் ஆகியோரும், கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் இருந்து பெரும் வீரத்துடன் வந்திருப்பவர்களும், உண்மையில், இவர்கள் அனைவரைக் காட்டிலும், கொடுமையற்றவர்களும், நல்ல வாழ்வு வாழ்பவர்களுமான மலை நாட்டுக்காரர்களுடைய மன்னர்களின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.

யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றைச் செலுத்தும் யாவரும், தரைப்படையில் போரிடுவோரும் சேர்ந்த, மதிப்புமிக்க மனிதர்கள் நிறைந்த அந்த வலிமைமிக்கப் படையிடம், நான் நலத்துடன் இருப்பதாகச் சொல்லி விட்டு, பிறகு அவர்களது சொந்த நலத்தை விசாரிப்பீராக.

மன்னருக்கு, வருவாய்க்கான காரியங்களிலோ, அவரது {மன்னரின்} வாயில் காப்போராகவோ, அவரது துருப்புகளின் தலைவர்களாகவோ, அவரது வரவு செலவு கணக்குகளைக் கவனிப்பவர்களாகவோ, மற்ற முக்கிய விவகாரங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதில் ஈடுபடும் அலுவலர்களாகவோ சேவையாற்றுபவர்கள் அனைவரையும் நீர் விசாரிப்பீராக.

ஓ! அய்யா, பிழையில் விழாதவனும், பெரும் ஞானம் கொண்டவனும், அனைத்து அறங்களையும் கொண்டவனும், இந்தப் போரை ஒருபோதும் விரும்பாதவனும், வைசிய மனைவி மூலம் திருதராஷ்டிரனின் மகனானவனுடைய {யுயுத்சுவின்} நலத்தையும் விசாரிப்பீராக.

பகடையின் தந்திரங்களில் ஒப்பற்றவனும், பிறர் கண்டுபிடிக்க இயலாத தந்திரங்களை உடையவனும், பகடையைக் கையாளும் கலையில் நிபுணனும், போரிலன்றி விளையாட்டில் வீழ்த்தப்பட முடியாதவனுமான [1] சித்திரசேனனின் நலத்தையும் நீர் கேட்பீராக.

[1] இந்த இடத்தில், வடமொழியில், “யோதூஜயோ தேவரதே நஸங்கயே” என்று வருவதாகவும், அதற்கு, “தேவரதனாலே கூட வெல்லப்பட முடியாதவனான சித்திரசேனன்” என்ற பொருளே வரும் எனவும் சொல்லப்படுகிறது. இங்கே கங்குலி “தேவரதே” என்பதற்கு, “சூதாட்டத்தில்” என்று பொருள் கொண்டிருக்கிறார்.

ஓ! அய்யா, காந்தாரர்கள் மன்னனும், மலைநாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவனும், ஏமாற்றுகரப் பகடையாட்டங்களில் ஒப்பற்றவனும், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} செருக்கை மேம்படுத்துபவனும், இயல்பாகவே பொய்மையை அடையும் அறிவுடையவனுமான சகுனியின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.

போரில் யாரும் தாக்கத் துணியாத பாண்டவர்களைத் எந்தத் துணையுமின்றி, தனது தேரில் ஏறித் தனியொருவனாகவே வீழ்த்தத் தயாராக இருப்பவனும், ஏற்கனவே தவறான வழியில் செல்பவர்களை மேலும் தவறாக வழிநடத்துவதில் ஒப்பற்றவனும், விகர்த்தனன் மகனுமான அந்தக் கர்ணனின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.

ஓ! அய்யா, எங்களிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒரே ஒருவரும், எங்கள் ஆசானும், எங்களை வளர்த்து உருவாக்கியவரும், எங்களுக்குத் தந்தையும், தாயும், நண்பருமாய் இருப்பவரும், எதிலும் தடங்கலற்ற புரிதல் கொண்டவரும், தொலைநோக்கு பார்வை கொண்டவரும், எங்கள் ஆலோசகருமான விதுரரின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.

அனைத்து முதிர்ந்த சீமாட்டிகள், தகுதியுடையவர்களாக அறியப்பட்டவர்கள் {மாதர்}, எங்களுக்குத் தாயைப் போன்றோர் ஆகியோர் ஓரிடத்தில் கூடும்போது அவர்களைச் சந்தித்து நீர் வணங்குவீராக. ஓ! சஞ்சயரே, அவர்களிடம் முதலில் நீர், “வாழும் மகன்களுக்குத் தாயாக இருப்போரே, உங்கள் மகன்கள் உங்களிடம் அன்பாகவும், கவனமாகவும், தகுந்த வழியிலும் நடந்து கொண்டு, உங்களை வசதியாக வைத்திருக்கிறார்கள் என நம்புகிறேன்” என்று சொன்ன பிறகு, “யுதிஷ்டிரன் தனது மகன்களுடன் நன்றாக இருக்கிறான்” என்று அவர்களிடம் நீர் சொல்வீராக.

ஓ! சஞ்சயரே, எங்கள் மனைவிமார் என்ற தகுதியிலுள்ள மங்கையரிடம் {சகோதரர் முறைகொண்டோரின் மனைவியராக இருக்க வேண்டும்} {ராஜபாரியைகளிடம்}, அவர்களது நலத்தை விசாரிக்கும் நீர், இவ்வார்த்தைகளில், “நீங்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள் என நான் நம்புகிறேன். உங்கள் நற்புகழுக்கு எந்தக் களங்கமும் ஏற்படவில்லை என நான் நம்புகிறேன். பழிக்கு ஆளாகாமல், கவனமாக உங்கள் வசிப்பிடங்களுக்குள் வாழ்கிறீர்கள் என நான் நம்புகிறேன். உங்கள் மாமனாரிடம் அன்பாகவும், புகழத்தக்க வகையிலும், கவனமான வழியிலும் நடந்து கொண்டு உங்களை வசதியாக வைத்துக் கொண்டுள்ளீர்கள் என நான் நம்புகிறேன். உங்கள் கணவனின் அனுகூலம் கிட்டும்படி நிலையான நடைத்தையை நீங்கள் மேற்கொள்வீராக” எனச் சொல்வீராக.

உமக்கு மருமகள் என்பது போன்ற உறவை எங்களிடம் கொண்ட இளம் மங்கையரிடம் {எங்கள் மருமகள்கள் போன்றோரிடம்}, ஓ! சஞ்சயரே, அவர்களது நலத்தை என் சார்பாக நீர் கேட்பீராக. அவர்களிடம் நீர், “உங்கள் கணவர்கள் அன்பாகவும், ஏற்புடையவர்களாகவும் இருக்கட்டும்; நீங்கள் உங்கள் கணவர்களுக்கு ஏற்புடையவராக இருப்பீராக; ஆபரணங்கள், ஆடைகள், நறுமணப் பொருட்கள் தூய்மை ஆகிவற்றை நீங்கள் பெறுவீராக; மகிழ்ச்சியாக இருப்பீராக; உங்கள் விருப்பத்தின் பேரில் வாழ்வின் இன்பங்களை அனுபவிப்பீராக; உங்கள் பார்வை அழகாகவும், உங்கள் பேச்சு இனிமையாகவும் இருக்கட்டும்” என்று சொல்லி, ஓ! அய்யா {சஞ்சயரே}, வீட்டில் இருக்கும் பெண்களின் நலத்தை நீர் விசாரிப்பீராக.

குருக்களுடையவர்களாக இருப்பினும், பெண் பணியாட்களிடமும், ஆண் பணியாட்களிடமும், அவர்களில் இருக்கும் கூனர்கள் முடவர்கள் ஆகிய பலரிடமும், நான் நன்றாக இருப்பதாகச் சொல்லிய பிறகு, அவர்களது நலத்தை நீர் விசாரிப்பீராக. அவர்களிடம் நீர், “திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} இன்னும் உங்களுக்கு அதே வகையான பழைய வாழ்வாதாரங்களைக் கொடுத்துக் கவனிக்கிறான் எனவும் உங்கள் வாழ்வுக்குத் தேவையான வசதிகளையும் கொடுக்கிறான் என நம்புகிறேன்” என்று சொல்வீராக.

அங்கக்குறை உள்ளவர்களிடமும், பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர்களிடமும் மனிதாபிமானம் கொண்டு, திருதராஷ்டிரர் கொடுக்கும் ஆடைகளையும், உணவையும் பெறும் குள்ளர்களிடமும் {உடல் வளர்ச்சி குறைந்தோரிடமும்}, குருடர்களிடமும் {பார்வையற்றோரிடமும்}, முதிர்ந்தவர்கள் அனைவரிடமும், கால்களற்று கைகளை மட்டுமே பயன்படுத்துவோர் பலரிடமும், நீர், “நான் நன்றாக இருக்கிறேன்” என்றும், “நான் அவர்களது நலத்தை விசாரித்தேன்” என்றும் சொல்லி, பின்வரும் சொற்களால், “அஞ்சாதீர்கள், துன்பங்கள் நிறைந்த உங்கள் மகிழ்ச்சியற்ற வாழ்வைக் கண்டு உற்சாகம் இழக்காதீர்கள்; ஐயங்கொள்ளாதீர்கள், உங்கள் முற்பிறவியில் நீங்கள் பாவங்களைச் செய்திருக்கலாம். எனது எதிரிகளைத் தண்டித்து, நண்பர்களை நான் மகிழச் செய்யும்போது, உணவையும், ஆடைகளையும் பரிசளித்து, நான் உங்களை மனநிறைவு கொள்ளச் செய்வேன்” என்று சொல்வீராக.

ஓ! அய்யா {சஞ்சயரே}, தலைவனற்றவர்கள், பலமற்றவர்கள், பொருளீட்ட வாழ்வில் வீணாக முயல்பவர்கள், அறியாமையில் இருப்பவர்கள், உண்மையில், பரிதாபகரமான சூழ்நிலைகளில் இருக்கும் மக்கள் அனைவரிடமும், நீர் நலத்தை விசாரிப்பீராக. ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பல பகுதிகளில் {நாடுகளில்} இருந்து திருதராஷ்டிரர்களின் பாதுகாப்பை நாடி வந்திருப்பவர்கள், எங்கள் வணக்கங்களுக்கு உரியவர்கள் ஆகிய பிறரையும் சந்தித்து அவர்களது நலத்தையும் அமைதியையும் விசாரிப்பீராக.

குருக்களிடம் தானாகவோ, அழைக்கப்பட்டோ வந்தவர்களிடமும், அனைத்துத் தரப்புகளில் இருந்து வந்திருக்கும் அனைத்து தூதர்களிடமும் அவர்களது நலத்தை விசாரித்து, நான் நன்றாக இருப்பதாகச் சொல்வீராக.

திருதராஷ்டிரர் மகனால் {துரியோதனனால்} அடையப்பட்ட வீரர்களைப் பொறுத்தவரை, இந்தப் பூமியில் அவர்களுக்கு {அந்த வீரர்களுக்கு} நிகரானவர்கள் எவரும் இல்லை. எனினும், அறமே நித்தியமானது. எனது எதிரிகளை அழிப்பதற்கான எனது பலமும் அந்த அறமே.

ஓ! சஞ்சயரே, திருதராஷ்டிரர் மகனான சுயோதனனிடம் நீர், “பகையில்லாமல் குருக்களை ஆளவேண்டும் என்று உனது இதயத்தை வேதனைக்குள்ளாக்கும் அந்த விருப்பத்திற்கு நடைமுறைச்சாத்தியமே இல்லை. அதில் எந்த நீதியும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை, உனக்கு ஏற்பில்லாத எதையும் நாங்கள் செய்ய மாட்டோம்! ஓ! பாரத வீரர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, எனக்குச் சொந்தமான இந்திரப்பிரஸ்தத்தைக் கொடுத்துவிடு, இல்லையேல் என்னோடு போரிடு!” என்று சொல்வீராக.


ஐந்து கிராமங்களையாவது கொடு! - உத்யோக பர்வம் பகுதி 31

Give atleast five villages! | Udyoga Parva - Section 31 | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 31)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனை வணங்கி, அவனது நலத்தை விசாரிக்குமாறும், பாண்டவர்களிடம் அவர் பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ள்ள வேண்டும் என்று எடுத்துரைக்குமாறும் சஞ்சயனை யுதிஷ்டிரன் கேட்டுக் கொண்டது; பீஷ்மரிடம் பேரர்களின் ஒற்றுமையைப் பேணத் தீர்மானிக்கச் சொன்னது; விதுரரிடம் அமைதிக்காக ஆலோசிக்கச் சொன்னது; துரியோதனனிடம், அவன் செய்த தீங்குகள் அனைத்தையும் தாங்கள் மன்னித்து விடுவதாகவும், தங்களுக்கு ஐந்து கிராமத்தையாவது கொடுக்குமாறும் சஞ்சயனை யுதிஷ்டிரன் சொல்லச்சொன்னது; அமைதிக்கும், போருக்கும், மென்மைக்கும், கடுமைக்கும் தான் தகுந்தவனாகவே இருப்பதாகவும் சொன்னது...

யுதிஷ்டிரன் {சஞ்சயரிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, நீதிமிக்கவர்கள், நீதியற்றவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பலமற்றவர்கள், பலமிக்கவர்கள் ஆகியோர் அனைவரும் படைப்பாளனின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றனர். சிறுவருக்கு ஞானத்தையும், கற்றோருக்கு மூடத்தனத்தையும் தன்விருப்பப்படி அந்தப் பரம்பொருளான கடவுளே கொடுக்கிறான். எங்களது பலம் குறித்து உம்மிடம் திருதராஷ்டிரர் கேட்டால், இங்கிருப்போர் அனைவரிடமும் உற்சாகமாகக் கேட்டு, உண்மையை உறுதி செய்து கொண்டு, அவரிடம் அனைத்தையும் உண்மையாகச் சொல்லும்.


ஓ! கவல்கணர் மகனே {சஞ்சயரே}, குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்று, வலிமைமிக்க திருதராஷ்டிரரின் பாதங்களைத் தொட்டு வணங்கி, எங்கள் பெயரால் அவரது நலத்தை விசாரிப்பீராக. குருக்கள் மத்தியில் அமர்ந்திருக்கும்போது, அவரிடம் {திருதராஷ்டிரரிடம்}, “ஓ! மன்னா, பாண்டுவின் மகன்கள், உமது ஆற்றலின் விளைவாக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஓ! எதிரிகளை அடக்குபவரே, இளம் வயதுடைய அந்தப் பிள்ளைகள் {பாண்டவர்கள்} உமது கருணையினாலேயே ஒரு நாட்டை அடைந்தனர். முதலில் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஒரு நாட்டை அளித்துவிட்டு, எப்போதும் நீர் அவர்களிடம் பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக்கூடாது. அதனால் {அப்படி நடந்தால்} அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} அழிவு ஏற்படும்!” என்று எங்கள் சார்பாகச் சொல்லும்.

ஓ! சஞ்சயரே, இந்த முழு நாடும் ஒருவருக்கே சொந்தமென்பது பொருந்தாது. மீண்டும் அவரிடம் {திருதராஷ்டிரரிடம்}, “ஓ! அய்யா, நாங்கள் ஒற்றுமையுடன் வாழ விரும்புகிறோம். எதிரிகளால் வீழ்த்தப்படும் நிலைக்கு நீங்கள் பாதிப்படைய வேண்டாம்” என்று எங்கள் சார்பாகச் சொல்லும்.

ஓ சஞ்சயரே, பாரதர்களின் பாட்டனும் {பிதாமகரும்}, சந்தனுவின் மகனுமான பீஷ்மரிடம் என் பெயரால் நீர் தலைவணங்க வேண்டும். எங்கள் பாட்டனை {பீஷ்மரை} வணங்கிய பிறகு, அவரிடம், “சந்தனுவின் குலம் அழிவின் விளிம்பில் இருந்த போது, நீரே அதைப் புதுப்பித்தீர். எனவே, ஓ! அய்யா, உமது பேரர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் நல்லுறவுடன் வாழ, உமது தீர்மானத்தின்படியே வழிவகை செய்யும்” என்பது சொல்லப்பட வேண்டும்.

பிறகு, குருக்களின் ஆலோசகரான விதுரரிடம், “ஓ! இனிமையானவரே, யுதிஷ்டிரனுக்கு நன்மை செய்யும் விருப்பத்துடன் அமைதியை ஆலோசியும்” என்று நீர் சொல்லும்.

பொறுமையற்ற இளவரசனான துரியோதனனிடம், அவன் குருக்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும்போது, “குருக்கள் கொல்லப்படுவதைக் காண மனம் இல்லாத காரணத்தால், அப்பாவியும், ஆதரவற்றவளுமான திரௌபதிக்கு சபையின் மத்தியில் நீ செய்த அவமதிப்புகளை, நாங்கள் அமைதியாகப் பொறுத்துக் கொள்வோம்” என்று மீண்டும் மீண்டும் மன்றாடுவீராக.

பழிதீர்க்கும் வலிமையைப் பாண்டுவின் மகன்கள் பெற்றிருந்தாலும், அதற்கு முன்பும் பின்பும் இரு சமயங்களிலும் செய்யப்பட்ட பிற தீங்குகளையும் அமைதியாகப் பொறுத்துக் கொள்கிறார்கள். இவை அனைத்தையும், உண்மையில், கௌரவர்கள் அறிவார்கள். ஓ! இனிமையானவனே {துரியோதனா}, மான் தோலுடுத்தச் செய்து எங்களை நாடு கடத்தவும் செய்தாய். குருக்கள் கொல்லப்படுவதை விரும்பாத நாங்கள் அதையும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம்.

குந்தியை அலட்சியம் செய்து, உனக்குக் கீழ்ப்படிந்தே கிருஷ்ணையைத் {திரௌபதியை} துச்சாசனன் இழுத்தான். அச்செயலையும் நாங்கள் மன்னிப்போம். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, நாட்டின் முறையான பங்கை நாங்கள் பெற வேண்டும். ஓ! மனிதர்களில் காளையே, பிறருக்குச் சொந்தமானவற்றில் இருந்து உனது பேராசை கொண்ட இதயத்தைத் திருப்பு. ஓ! மன்னா, அப்போதே மகிழ்ச்சி ஏற்பட்டு, நமக்கு மத்தியில் அமைதி நிலவும்.

நாங்கள் அமைதியையே விரும்புகிறோம்; {எனவே} பேரரசின் ஒரு மாகாணத்தையாவது எங்களுக்குக் கொடு. குசஸ்தலம் {அவிஸ்தலம்}, விருகஸ்தலம், மாகந்தி, வாரணாவதம் ஆகியவற்றையும், ஐந்தாவதாக நீ விரும்பும் ஏதாவதொன்றையும் கூடக் கொடு. இது கூட நமது சச்சரவை {வீண் சண்டையை} முடிவடையச் செய்யும். ஓ! சுயோதனா, உனது ஐந்து சகோதரர்களுக்கு ஐந்து கிராமங்களையாவது கொடு” என்று சொல்லி மீண்டும் மீண்டும் நீர் வேண்டிக் கொள்வீராக.

ஓ! சஞ்சயரே, ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எங்களுக்கும், எங்களது சகோதரர்களுக்கும் இடையில் அமைதி ஏற்படட்டும்.

அவனிடம் {துரியோதனனிடம்}, “சகோதரர்கள் சகோதரர்களைத் தொடரட்டும், தந்தையர் மகன்களுடன் ஒற்றுமையாக இருக்கட்டும். மகிழ்ச்சியானச் சிரிப்பில் குருக்களுடன் {கௌரவர்களுடன்} பாஞ்சாலர்கள் கலக்கட்டும். குருக்களையும், பாஞ்சாலர்களையும் மொத்தமாகவும் பலமாகவும் காணவே நான் விரும்புகிறேன். ஓ! பாரத குலத்தின் காளையே, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நாம் அமைதியடைவோமாக” என்றும் சொல்லும்.

ஓ! சஞ்சயரே, போருக்கும் அமைதிக்கும் சமத்திறன் கொண்டவனாக நான் இருக்கிறேன். நான் செல்வத்தை அடையவும், அறத்தை ஈட்டவும் தயாராக இருக்கிறேன். மென்மைக்கும் கடுமைக்கும் பொருத்தமானவனாகவே நான் இருக்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.


திருதராஷ்டிரனிடம் பேசிய சஞ்சயன்! - உத்யோக பர்வம் பகுதி 32

Sanjaya spoke to Dhritarashtra! | Udyoga Parva - Section 32 | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 32)
பதிவின் சுருக்கம் : சஞ்சயன் ஹஸ்தினாபுரத்தின் அரண்மனை வாயிலை அடைந்து திருதராஷ்டிரன் அனுமதிக்காகக் காத்திருந்தது; அனுமதி பெற்று உள்ளே சென்று யுதிஷ்டிரனின் வணக்கங்களைத் திருதராஷ்டிரனிடம் சொன்னது; யுதிஷ்டிரன் நலமாக இருப்பதையும், அவனது நோக்கங்களையும் சொன்னது; பாண்டவர்களுக்குப் பாவமிழைத்தால் குருக்களின் அழிவு நிச்சயம் என்று சஞ்சயன் எச்சரித்தது; திருதராஷ்டிரன் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டியது; பாண்டவர்களிடம் இருந்து விரைந்து திரும்பி வந்ததால் களைப்படைந்திருப்பதாகவும், தான் உறங்கச் செல்ல அனுமதி கொடுக்குமாறும் சஞ்சயன் வேண்டுவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்களால் வணங்கப்பட்டு விடைகொடுத்தனுப்பப்பட்ட சஞ்சயன், சிறப்புமிக்கத் திருதராஷ்டிரனின் கட்டளைகள் அத்தனையும் நிறைவேற்றிவிட்டு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான். ஹஸ்தினாபுரத்தை அடைந்த அவன், அதனுள் விரைவாக நுழைந்து, அரண்மனையின் அந்தப்புர வாயிலுக்குச் சென்றான். வாயில்காப்போனிடம், அவன் {சஞ்சயன்}, “ஓ! வாயில்காவலனே, பாண்டுவின் மகன்களிடம் இருந்து சஞ்சயன் வந்திருக்கிறான் என்று திருதராஷ்டிரரிடம் சொல். தாமதிக்காதே. மன்னர் விழித்திருந்தால் மட்டும், ஓ! வாயில்காவலனே, அவரிடம் சொல். அவரிடம் முதலில் தெரிவித்த பிறகே நான் உள்ளே நுழைய விரும்புகிறேன். பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததைத் தெரிவிக்க வேண்டிய சூழலில் தற்சமயம் இருக்கிறேன்” என்றான்.


இதைக் கேட்ட வாயில்காவலன், மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} சென்று, அவனிடம், “ஓ! பூமியின் தலைவா, நான் உம்மை வணங்குகிறேன். உம்மைக் காண விரும்பி சஞ்சயன் உமது வாயிலில் இருக்கிறார். அவர், பாண்டவர்களின் செய்தியைத் தாங்கி வந்திருக்கிறார். ஓ! மன்னா, அவர் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவீராக” என்றான்.

அதற்கு மன்னன் {திருதராஷ்டிரன் வாயில் காவலனிடம்}, “நான் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருக்கிறேன் என்று சஞ்சயனிடம் சொல். அவன் உள்ளே வரட்டும். சஞ்சயனை வரவேற்பாயாக. நான் அவனை வரவேற்க எப்போதும் தயாராக இருக்கிறேன். அனுமதி தடை அவனுக்கு எப்போதுமில்லை எனும்போது, அவன் ஏன் வெளியே இருக்க வேண்டும்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, மன்னனின் அனுமதியுடன், கூப்பிய கரங்களுடன், அந்த அகன்ற அறைக்குள் நுழைந்த அந்தச் சூதனின் மகன் {சஞ்சயன்}, பல ஞானிகள், வீரர்கள், நேர்மையான நபர்களால் பாதுகாக்கப்பட்டு, தனது அரியணையில் அப்போது அமர்ந்திருந்த விசித்திரவீரியனின் அரசமகனை {திருதராஷ்டிரனை} அணுகினான்.

சஞ்சயன் அவனிடம் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நான் சஞ்சயன். உம்மை நான் வணங்குகிறேன். ஓ! மனிதர்களின் தலைவா, இங்கிருந்து சென்ற நான், பாண்டு மகன்களைக் கண்டேன். உமக்கான வணக்கங்களைத் தெரிவித்த பாண்டுவின் மகனான புத்திக்கூர்மையுடைய யுதிஷ்டிரன், உமது நலத்தை விசாரித்தான். மிகவும் மகிழ்ந்த அவன் {யுதிஷ்டிரன்}, உமது மகன்களையும் விசாரித்தான். நீர் உமது மகன்களுடனும், பேரர்களுடனும், நண்பர்களுடனும், ஆலோசகர்களிடமும், உம்மை நம்பியிருக்கும் அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறீரா என வினவினான்” என்றான் {சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! குழந்தாய் {சஞ்சயா}, அஜாதசத்ருவுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எனது வாழ்த்துகளை {ஆசிகளை} அளித்து உன்னைக் கேட்கிறேன். ஓ! சஞ்சயா, பிருதையின் {குந்தியின்} மகனான கௌரவர்கள் மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது மகன்கள், சகோதரர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் நலமாக இருக்கிறானா?” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது ஆலோசகர்களுடன் நலமாக இருக்கிறான். ஏற்கனவே தனக்குச் சொந்தமாக இருந்த உடைமைகளை, அவன் {யுதிஷ்டிரன்} அடைய விரும்புகிறான். புத்திக்கூர்மையும், பரந்துப்பட்ட கல்வியும் கொண்டிருக்கும் அவன் {யுதிஷ்டிரன்}, அதையும் தவிரத் தொலைநோக்குடனும், அற்புத மனநிலையுடனும், கண்டிக்கத்தக்க எதையும் செய்யாமல், அறத்தையும், செல்வத்தையும் அடைய முயற்சிக்கிறான். அந்தப் பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அறத்தைவிட ஊறிழையாமை {அஹிம்சை} இன்னும் அதிக மேன்மையானது, செல்வம் குவிப்பதை விட உயர்ந்தது அறம். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வாழ்வின் உயர்ந்த நோக்கத்திற்கும், அறத்திற்கும் உகந்த நடைமுறையிலும், மகிழ்ச்சியிலும், இன்பத்திலும், அவனது மனம் எப்போதும் உள்ளது.

தன் சக்தியால் அல்லாமல், நூலால் இப்படியும் அப்படியும் இழுக்கப்படும் பொம்மையென (இவ்வுலகில்) மனிதன் நகர்கிறான். யுதிஷ்டிரனின் துன்பங்களைக் கண்ட பிறகு, விதியின் சக்தி, மனித முயற்சியின் விளைவுகளைவிட மேன்மையானது என்றே நான் கருதுகிறேன். நிச்சயம் துன்பத்தில் அழியப்போவதும், பாவகரமானதும், பேசக்கூடாததுமான உமது தகாத செயல்களைக் கண்டால், தகுந்த எதிரி கொடுக்கும் காலம் வரைதான் உமது இயல்புகளில் ஒன்று, பாராட்டை வெல்லக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

பாவங்கள் அனைத்தையும் விடுத்து, இனியும் வைத்துக் கொள்ள முடியாத தேய்ந்து போன சட்டையை ஒரு பாம்பு கழற்றி விடுவதைப் போல, நீரே தாங்கிக் கொள்ளும் வகையில் {உம்மால் அவனுக்கு இழைக்கப்பட்ட} பாவ மூட்டைகளை விடும் வீரனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, தனது இயற்கையான நிறைநிலையால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டுக்கும் முரணான உமது நடவடிக்கைகளையும், நீதிமான்களின் நடத்தையையும் கருதிப் பாரும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் கெடுபுகழ் பெற்ற நீர், அடுத்ததில் {மறு உலகில்} துன்பங்களையே அறுவடை செய்வீர்.

உமது மகனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் நீர், அவர்களை {பாண்டவர்களை} விலக்கி வைத்துவிட்டு, ஐயத்திற்குரிய சொத்தை அனுபவிக்க நினைக்கிறீர். அநீதியான இந்தச் செயல், உலகத்தில் உரக்கப் பேசப்படுகிறது. எனவே, ஓ! பாரதர்களில் முதன்மையானவரே, இந்த உமது செயல் உமக்குத் தகுந்ததன்று. ஞானமற்றவன், பிறப்பால் தாழ்ந்தவன், கொடூரன், நீண்ட நாள் பகை கொள்பவன், க்ஷத்திரிய அறங்களில் உறுதியாக நிலைத்து நிற்காதவன், சக்தியற்றவன், தீய மனநிலை கொண்டவன் ஆகியோரையும், உண்மையில், இது போன்ற குறிகளைத் தன்னிடம் கொண்டவனையும் பெருந்துன்பமே பின்தொடர்கிறது.

ஒருவன் நல்ல குலத்தில் பிறப்பதும், பலவானாவதும், புகழ்பெறுவதும், பல்வேறு கதைகளை அறிவதும், வாழ்வின் சுகங்களை அனுபவிப்பதும், புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுவதும், எப்போதும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள அறம் மறம் ஆகியவற்றின் தெரிவுமுறை அறிவதும் ஒரு மனிதனின் நல்லூழின் அறத்தினாலேயே நிகழ்கிறது.

புத்திக்கூர்மையும், துன்ப காலங்களின் அறம் மற்றும் மறம் ஆகியவற்றைத் தெரிவு செய்யும் முறையையும், அறத்தின் சடங்குகளையும் அறிந்த ஆலோசகர்களில் முதன்மையானவர்களால் கவனிக்கப்படும் எந்த மனிதன், தன் துறைகள் அனைத்தின் பயன்பாடுகளையும் தக்க வைத்துக் கொண்டும், தீச்செயல்களை ஆற்ற முடியும்?

உமது வேலையில் என்றும் அர்ப்பணிப்புடன் இருக்கும் இந்த ஆலோசகர்கள் {அமைச்சர்கள்}, இங்கே ஒற்றுமையாகக் காத்திருக்கின்றனர். (பாண்டவர்கள் தங்கள் பங்கைத் திரும்பப் பெறப் போவதில்லை என்ற) இதுவே அவர்களது உறுதியான தீர்மானமாக இருக்கிறது. எனவே, சூழ்நிலையின் சக்தியால் குருக்களின் அழிவு நேரப்போகிறது என்பது உறுதி. குற்றங்களால் தூண்டப்பட்டால், யுதிஷ்டிரன் உங்களுக்குத் தீமையை வேண்டி, தன் பாவங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்து, குருக்களை முன்கூட்டியே அழித்துவிடுவான். அந்தச் செயலின் பழி இவ்வுலகில் உமதே ஆகும்.

உண்மையில், பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன் இவ்வுலகத்தை விட்டு சொர்க்கத்துக்கே உயர்ந்து, அங்கே பெரிதாக மதிக்கப்பட்டான் என்றால், இது தேவர்களின் விருப்பத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? தனிப்பட்டவரின் முயற்சியால் ஆவது ஒன்றுமில்லை என்பதையே இது நிறுவுகிறது. இந்தக் காரியத்தில் எந்த ஐயமும் இல்லை.

உயர்பிறப்பு, வீரம் ஆகிய குணங்களைக் கண்டு, வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ நம்பி, (மனிதர்களிடம் உள்ள) வளமை, வறுமை, உறுதி, உறுதியற்ற தன்மை ஆகியவற்றையும் கண்ட மன்னன் பலி {மஹாபலி}, இதன் காரணங்களைத் தேடி, (முற்பிறவிகளில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த பிறவிகளுடைய சங்கிலித்தொடரின்) தொடக்கத்தைக் கண்டடையத் தவறி, காலமே அனைத்துக்கும் காரணம் என்று கருதினான்.

கண், காது, மூக்கு, தீண்டல் {தோல்}, நாக்கு ஆகியனவே {ஐம்பொறிகளே} ஒரு மனிதனின் ஞானத்துக்கான கதவுகள். ஆசை ஒடுங்கினால், இவை தங்களையே திருப்தி செய்து கொள்ளும். எனவே, மகிழ்ச்சியாகவும், அலட்டிக் கொள்ளாமலும் ஒருவன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதில் வேறு விதமாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். சரியாகச் செய்யப்பட்டால், ஒரு மனிதனின் செயல்கள், அவை விரும்பிய விளைவை நிச்சயம் ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். இப்படியே தாய் மற்றும் தந்தையின் செயலால் பிறந்த குழந்தை, உணவும், நீரும் கொடுத்து முறையாகப் பராமரிக்கப்படும்போது வளர்கிறது. மனிதர்கள் இவ்வுலகில், அன்பு, வெறுப்பு, இன்பம், வலி, புகழ், பழி ஆகியவற்றுக்கு ஆட்படுகிறார்கள். ஒரு மனிதன் நேர்மையாக நடந்து கொள்ளும்போது புகழப்படுகிறான்.

கணக்கிலடங்கா உயிர்களின் அழிவை நிச்சயம் கொண்டு வரப்போகும் பாரதர்களின் மன வேறுபாடுகளுக்கு (அதற்கு நீரே வேர் என்பதால்), உம்மையே நான் குற்றஞ்சாட்டுவேன். அமைதி தீர்மானிக்கப்படவில்லையென்றால், {அந்த} உமது தவறால், காய்ந்த புற்குவியலை {வைக்கோலை} எரிக்கும் சுடர்மிகும் நெருப்பைப் போல அர்ஜுனன் குருக்களை எரித்துவிடுவான்.

ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, எந்தத் தடையையும் ஏற்காத உமது மகன் சொல் கேட்டு, பகடையாட்டத்தின் போது சச்சரவைத் தவிர்க்காமல், வெற்றி மகுடம் தரிக்கப்பட்டதாகக் கருதிக் கொள்பவர் அனைத்து உலகிலும் நீர் ஒருவரே. இப்போது அதன் (உமது பலவீனத்தின்) கனியைப் {பலனைப்} பாரும். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நன்றிமிக்க ஆலோசகர்களை {விதுரர் போன்றோரை} மறுத்து, நம்பத்தகாதவர்களை {சகுனி, கர்ணன் போன்றோரை} ஏற்று, ஓ! குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, {அந்த} உமது பலவீனத்தின் காரணமாக, இந்தப் பரந்த செழிப்பான பேரரசை உம்மால் தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை.

எனது விரைந்த பயணத்தினால் களைப்பும் சோர்வும் அடைந்திருக்கும் நான், படுக்கைக்குச் செல்ல உமது அனுமதியைக் கேட்கிறேன். ஓ! மனிதர்களில் சிங்கமே {திருதராஷ்டிரரே}, நாளை காலை, சபா மண்டபத்தில் ஒன்றாகக் கூடும் குருக்கள், அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} வார்த்தைகளைக் கேட்பார்கள்” என்றான் {சஞ்சயன்}.



மற்ற பதிப்புகளில் உத்யோக பர்வம் பகுதி 20ல் {சஞ்சயன் அறிமுகம் பகுதியில் இருந்து} சஞ்சயயான பர்வம் என்ற உப பர்வம் ஆரம்பித்து 32ம் பகுதியான இந்தப் பகுதியுடன் முடிவடைகிறது. அடுத்த பகுதியில் இருந்து பிரஜாகரபர்வம் ஆரம்பிக்கிறது. ஆனால், நாம் கங்குலியில் வழியிலேயே சேனோத்யோக பர்வம் என்ற பெயரிலேயே தொடர்ந்து செல்கிறோம்... 


யார் ஞானி? - உத்யோக பர்வம் பகுதி 33அ

Who is wise? | Udyoga Parva - Section 33a | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 33) {விதுர நீதி - 1}
பதிவின் சுருக்கம் : உறக்கமிழந்த திருதராஷ்டிரன் விதுரனை வரவழைப்பது; யார் யாருக்கு உறக்கமில்லாமல் போகும் என விதுரன் சொல்வது; தனக்கு நல்லதைச் சொல்லுமாறு விதுரனை திருதராஷ்டிரன் வேண்டுவது; ஞானி என்பவன் யார் என்று ஒரு பெரிய நீண்ட பட்டியலை விதுரன் சொல்வது; ஞானியிடம் {பண்டிதனிடம்} உள்ள குணங்களை விதுரன் திருதராஷ்டிரனிடம் எடுத்துரைப்பது ... 

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், வாயில் காப்போனிடம், “நான் விதுரனைக் காண விரும்புகிறேன். தாமதமில்லாமல் அவனை {விதுரனை} இங்கே அழைத்து வா” என்றான்.

திருதராஷ்டிரனனால் அனுப்பப்பட்ட அந்தத் தாதுன் க்ஷத்ரியிடம் {விதுரனிடம்} சென்று, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே}, பலமிக்க மன்னனான நமது தலைவன் {திருதராஷ்டிரன்} உம்மைக் காண விரும்புகிறார்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட விதுரன் (புறப்பட்டு), அரண்மனைக்கு வந்து வாயில் காவலனிடம், “என் வரவை திருதராஷ்டிரருக்குத் தெரிவிப்பாயாக” என்றான். அந்த வாயில் காவலன் திருதராஷ்டிரனிடம் சென்று, “ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, உமது கட்டளையின் பேரில் விதுரர் இங்கே வந்திருக்கிறார். அவர் உமது பாதங்களைக் காண விரும்புகிறார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குக் கட்டளையிடுவீராக” என்றான்.


அதற்குத் திருதராஷ்டிரன் {வாயில்காப்போனிடம்}, “முற்போக்குப் பார்வையும், பெரும் ஞானமும் கொண்ட விதுரன் உள்ளே வரட்டும். விதுரனைக் காண நான் விரும்பாமலோ, தயார் நிலையில் இல்லாமலோ எப்போதும் இருந்ததில்லை” என்றான். பிறகு அந்த வாயில் காவலன் வெளியே சென்று விதுரனிடம் பேசினான். “ஓ! க்ஷத்ரி, ஞானமுள்ள மன்னனின் அந்தப்புரத்தில் நுழைவீராக. உம்மைக் காண எப்போதும் விரும்பாமலில்லை என்று மன்னர் சொல்கிறார்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திருதராஷ்டிரனின் அறையை அடைந்த விதுரன், சிந்தனையில் மூழ்கியிருந்த அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {திருதராஷ்டிரனிடம்}, கூப்பிய கரங்களுடன், “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, நான் விதுரன். உமது கட்டளையின் பேரில் இங்கு வந்திருக்கிறேன். {என்னால்} ஏதாவது செய்யப்படவேண்டுமானால் உத்தரவிடும். இதோ நான் இங்கே இருக்கிறேன்!” என்றான் {விதுரன்}.

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! விதுரா, சஞ்சயன் திரும்பிவிட்டான். என்னைக் கடிந்து கொண்டு அவன் {சஞ்சயன்} சென்றுவிட்டான். சபையின் மத்தியில், நாளை அவன் அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} செய்தியை வழங்குவான். அந்தக் குரு வீரன் {யுதிஷ்டிரன்} என்ன செய்தி அனுப்பியிருப்பான் என்பதை என்னால் இன்று உறுதி செய்ய இயலவில்லை. எனவே, எனது உடல் எரிகிறது {கொதிக்கிறது}, அது என்னைத் தூக்கமில்லாமல் செய்துவிட்டது. தூக்கமின்மையும், {உடல்} எரிச்சலும் {கொதிப்பும்} கொண்ட மனிதனுக்கு எது நன்மையானது என்பதை எங்களுக்குச் சொல். ஓ! குழந்தாய், நீ அறம் மற்றும் பொருளை {தர்மார்த்தங்களை} அறிந்திருக்கிறாய் .பாண்டவர்களிடமிருந்து சஞ்சயன் திரும்பி வந்ததிலிருந்து, எனது இதயம் அமைதியை அறியவில்லை. அவன் {சஞ்சயன்} என்ன சொல்லப்போகிறானோ என்ற அச்சத்தால் நிறைந்து இருக்கும் என் புலன்கள் அனைத்தும் குழம்பி இருக்கின்றன” என்றான் {திருதராஷ்டிரன்}.

{உறக்கமற்ற நிலை}


விதுரன் {திருதராஷ்டிரனிடன்}, “திருடன், காமுகன், தன் செல்வமனைத்தையும் இழந்தவன், வெற்றியடையத் தவறியவன், பலவீனமானவன், பலமான மனிதனால் தாக்கப்பட்டவன் ஆகியோரை உறக்கமின்மை ஆட்கொள்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பெரிய துயரங்களுக்கு நீர் ஆட்படவில்லை என நான் நம்புகிறேன். பிறர் பொருளின் மீது பேராசை கொண்டதால் நீர் வருந்தவில்லை எனவும் நான் நம்புகிறேன்” என்றான்.

{நன்மையானதும் அறநெறி நிரம்பியதும்}


 திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நன்மை தரக்கூடியதும், உயர்ந்த அறநெறிகள் நிறைந்தவையுமான வார்த்தைகளை நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். இந்த அரச முனிவர்களின் {ராஜரிஷிகளின்} குலத்தில், நீ மட்டுமே ஞானமுள்ளோரால் போற்றப்படுகிறாய்” என்றான்.

 விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “அனைத்து அறமும் அருளப்பட்ட மன்னன் (யுதிஷ்டிரன்), மூவுலகையும் ஆட்சி செய்யத் தகுந்தவனாவான்; இருப்பினும், ஓ! திருதராஷ்டிரரே, உம் தரப்பில் வைத்துக் கொள்ள அவன் எவ்வளவுதான் தகுந்தவனாக இருப்பினும், உம்மால் நாடுகடத்தப்பட்டான். அவன் கொண்டதுக்கெல்லாம் நேர்மாறான குணங்களையே நீர் கொண்டிருக்கிறீர்.

 என்னதான் அறம் மற்றும் அறநெறியுடன் இருந்தாலும், நீர் பார்வையற்றவராக இருப்பதால் {குருடராக இருப்பதால்}, முறையான பங்கை இன்னும் கொடுக்காமல் இருக்கிறீர். குற்றமற்ற தன்மை, அன்பு, நீதி, உண்மை மற்றும் சக்தியில் கொண்ட விருப்பம் ஆகியவற்றின் விளைவாலும், உம்மீது வைத்திருக்கும் மரியாதையாலும், எண்ணிலடங்கா தீங்குகளை யுதிஷ்டிரன் பொறுமையாகத் தாங்கிக் கொண்டே வருகிறான்.

பேரரசின் பராமரிப்பைத் துரியோதனன், சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன், துச்சாசனன் ஆகியோரிடம் கொடுத்த பிறகு, செழிப்பில் நீர் எவ்வாறு நம்பிக்கை கொள்ளலாம்?

{ஞானத்தின் குறியீடுகள்}


வாழ்வின் உயர்ந்த நிலைகளில் பணியாற்றாமல் தன்னறிவு {ஆத்ம ஞானம், சுயஞானம்}, முயற்சி {உழைப்பு}, பொறுமை, அறத்தில் உறுதி ஆகியவற்றைக் கொண்டவன் ஞானி {wise man} எனப்படுகிறான். மேலும், செயல்களில் ஈடுபாடு, புகழ்ச்சிக்குத் தகுதி, பழியைத் தவிர்ப்பது, நம்பிக்கை, மதிப்பு ஆகியவை ஞானம் கொண்ட மனிதனின் குறிகளாகும் {அங்கலட்சணமாகும்}. கோபமோ, மகிழ்ச்சியோ, செருக்கோ {கர்வமோ}, போலிப்பணிவோ, மலைப்போ, மாயையோ, ஒருவனை வாழ்வின் விளிம்புகளிலிருந்து நழுவச் செய்யவில்லையென்றால் அவன் ஞானி என்றே கருதப்படுவான்.

ஒருவனது செயல்களின் நோக்கங்களும், பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளும், பகைவரிடம் மறைக்கப்பட்டே இருந்தாலும், செய்த பிறகு மட்டுமே ஒருவனது செயல் அறியப்பட்டாலும் அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். எவனது பரிந்துரைக்கப்பட்ட செயல்கள் வெப்பத்தாலோ, குளிராலோ, அச்சத்தாலோ, செல்வத்தாலோ, வறுமையாலோ தடைப்படாமல் இருக்கிறதோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். எவனுடைய தீர்மானங்கள் விருப்பத்தில் இருந்து விடுபட்டு அறம் செல்வம் ஆகிய இரண்டையும் பின்தொடர்கின்றனவோ, எவன் இன்பத்தை அலட்சியம் செய்து, இரு உலகுக்கும் தகுந்த சேவைகளைத் தேர்ந்தெடுக்கிறானோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி முயற்சி செய்பவர்களும் {உழைப்பவர்களும்}, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திச் செயல்படுபவர்களும், எதையும் முக்கியமற்றதாக அலட்சியம் செய்யாதவர்களும் ஞானி என்று அழைக்கப்படுகிறார்கள்.

விரைந்து புரிந்து கொள்பவனும், பொறுமையாகக் கேட்பவனும், விருப்பத்தால் அல்லாமல் {காரியங்களை} அறிந்து கொண்டு தன் நோக்கங்களைத் தொடர்பவனும் {ஆசையால் அடையாமல் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அடைபவனும்}, கேட்கப்படாமல் அடுத்தவர் காரியங்களில் தனது மூச்சைக்கூட விடாதவனும், ஞானத்தின் முதன்மையான குறியீட்டைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடைய முடியாத பொருட்களுக்காக முயற்சிக்காதவர்களும், தொலைந்தவற்றுக்காக வருந்தாமல் இருப்பவர்களும், பேராபத்துக்களுக்கு மத்தியில் இருள் சூழ்ந்த மனத்தால் பாதிக்கப்படாதவர்களும், ஞானம் கொண்ட அறிவினை உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு வேலையை ஆரம்பித்த பிறகு அது முடிவடையும் வரை பெருமுயற்சி செய்பவனும், தன் நேரத்தை எப்போதும் வீணாக்காதவனும், தனது ஆன்மாவை கட்டுப்படுத்தி வைத்திருப்பவனும் ஞானிகளாகக் கருதப்படுகின்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஞானமுள்ளோர் எப்போதும் நேர்மையான செயல்களில் மகிழ்ந்து, மகிழ்ச்சியானதையும், செழிப்பானதையுமே செய்வார்கள், ந்து நன்மையானதோ, அதை அவர்கள் வெறுப்பதில்லை.

கங்கையின் வழியில் இருக்கும் ஒரு தடாகத்தைப் போல, எவன் மரியாதைகளில் மகிழ்ச்சி அடையவில்லையோ, ஏளனங்களுக்காக வருந்துவதில்லையோ, கலங்காமல், குளிர்ச்சியாக நீடிக்கிறானோ, அவனே ஞானி என்று எண்ணப்படுகிறான். (அனைத்தும் அழிவுக்கு உட்பட்டதே என்று) அனைத்து உயிரினங்களையும் அறிந்தவனும், அனைத்துச் செயல்களின் இணைப்புகளையும் நன்கறிந்தவனும், (தங்களது பொருட்களை) அடைய மனிதர்கள் கைக்கொள்ளும் வழிகளைக் குறித்த அறிவில் நிபுணத்துவம் வாய்ந்தவனும், ஞானி என எண்ணப்படுகிறான். எவன் துணிவுடன் பேசுகிறானோ, பல்வேறு தலைப்புகளில் உரையாடுகிறானோ, பேச்சுக்கலை அறிவியலை {தர்க்க சாஸ்திரத்தை} அறிந்தவனும், மேதைமை உடையவனும், புனித நூல்களில் உள்ளவற்றுக்குப் பொருளை விளக்கிச் சொல்பவனும் ஞானி என எண்ணப்படுகிறார்கள். எவன், காரணங்களால் கட்டுப்படுத்தப்பட்ட கல்வியைக் கற்கிறானோ, எவனுடைய காரணங்கள் {கொள்கைகள்} சாத்திரங்களைப் பின்பற்றி வருகிறதோ, நல்லவர்களை மதிப்பதில் எவன் எப்போதும் தவறாதவனாக இருக்கிறோனோ, அவன் ஞானி என்று அழைக்கப்படுகிறான்.


மற்ற பதிப்புகளில், உத்யோக பர்வம் 32ம் பகுதியில் சஞ்சயயான பர்வம் முடிந்து 33ம் பகுதியான இந்தப் பதிவில் இருந்து பிரஜாகர பர்வம் தொடங்குகிறது. உத்யோக பர்வம் பகுதி 33ல் இருந்து 41 வரை உள்ள பகுதிகளில் விதுர நீதி வருகிறது. அதுவே பிரஜாகர பர்வம் என்ற பெயரில் மற்ற பதிப்புகளில் உள்ளது. நாம் கங்குலியின் வழியிலேயே சேனோத்யோக பர்வம் என்றே தொடர்ந்து செல்கிறோம்.


  

யார் மூடன்? - உத்யோக பர்வம் பகுதி 33ஆ

Who is a fool? | Udyoga Parva - Section 33b | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 33) {விதுர நீதி - 2}
பதிவின் சுருக்கம் : மூடன் என்பவனது இலக்கணத்தை விதுரன் திருதராஷ்டிரனுக்கு எடுத்துரைத்தது; செருக்கடையாதிருத்தல், செல்வத்தைப் பகிர்ந்தளித்தல் ஆகியன மனிதனை ஞானியாக்கும் என்று சொல்வது;  கெடுநோக்கத்தில் புத்தியின் தலையீடு இருந்தால் எப்படி தனியொருவனை அழிக்காமல் மொத்த நாட்டையும் அது அழித்துவிடும் என்று சொல்வது; நஞ்சோ ஆயுதமோ ஒருவனைத் தான் கொல்லும், ஆனால் தீய ஆலோசனை ஒரு நாட்டையே அழித்துவிடும் என்று சொன்னது; பொறுமைசாலி, கோபக்காரன் ஆகியவர்களால் விளையும் செயல்களைச் சொல்வது ... 

{மூடத்தனம்}


{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} “மறுபுறம், சாத்திரத்தை அறியாமல் வீணானவனும், வறுமையிலும் செருக்குடன் {கர்வத்துடன்} இருப்பவனும், தன் நோக்கங்களை அடைய முறையற்ற வழிகளை நாடுபவனும் மூடனாவான். தன் சொந்த நோக்கங்களை விட்டு விட்டு, பிறரின் நோக்கங்களில் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்பவனும், நண்பர்கள் காரியங்களில் ஏமாற்றுத்தனத்தைக் {கபடத்தைக்} கடைப்பிடிப்பவனும் மூடன் என்று அழைக்கப்படுகிறான். விரும்பத்தகாத பொருட்களை விரும்புபவனும், நியாயமாக விரும்பத்தக்க பொருட்களைக் கைவிடுபவனும் {விரும்பாதவனும்}, சக்திவாய்ந்தவர்களிடம் பகை கொள்பவனும், மூட ஆன்மா கொண்டவனாகக் கருதப்படுகிறான்.


தன் எதிரியைத் தனது நண்பனாகக் கருதுபவனும், நண்பனிடம் பகை கொள்பவனும், தீய செயல்கள் செய்பவனும், மூட ஆன்மாக கொண்ட மனிதனாகச் சொல்லப்படுகிறான். ஓ! பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தனது திட்டங்களை வெளிப்படுத்திக் கொள்பவனும், எல்லாவற்றிலும் சந்தேகங்கொள்பவனும், குறுகிய காலமே செய்ய வேண்டியவற்றில் நீண்ட நேரத்தைச் செலவழிப்பவனும் மூடனாவான். பித்ருக்களுக்கு சிராத்தம் செய்யாதவனும், தெய்வங்களை வழிபடாதவனும், உன்னத மனம் கொண்ட நண்பர்களைப் பெறாதவனும், மூட ஆன்மா கொண்ட மனிதனாகச் சொல்லப்படுகிறான்.

அழையாத இடத்தில் நுழைபவனும், கேட்கப்படாத போதே அதிகம் பேசுபவனும், நம்பத்தகாத மனிதர்களை நம்புபவனும், மனிதர்களில் இழிந்தவனான மூடனாவான். தானே குற்றவாளியாக இருந்து கொண்டு, மற்றவர்கள் மீது பழிபோடுபவனும், தான் சக்தியற்றவனாக இருந்த போதும் கோபத்தை வெளிப்படுத்துபவனும், மனிதர்களிலேயே மிகப்பெரும் முட்டாளாவான். தனது சொந்த சக்தியை அறியாமல், அறம் பொருளில் {தர்ம அர்த்தங்களில்} இருந்து விலகிச்சென்று, அடைவதற்கு அரிதான பொருளை  விரும்பியும் போதுமான வழிவகைகளைக் கைக்கொள்ளாமல் இருப்பவன், அறிவற்றவனாகச் சொல்லப்படுகிறான். {தன் பலத்தை அறியாமல், அறம், பொருள் இல்லாத அடைய முடியாத பொருளை முயற்சியில்லாமலேயே விரும்புபவன் மூடனாவான்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தண்டனைக்குத் தகாதவனைத் தண்டிப்பவனும், மனிதர்கள் அறியாமலேயே அவர்களுக்கு அஞ்சலி செலுத்துபவனும், கஞ்சனுக்குச் சேவை செய்பவனும், சிறு புத்தி கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.

ஆனால், மகத்தான செல்வத்தையும், செழிப்பையும் அடைந்திருந்தாலும் அல்லது (பரந்த) கல்வியை அடைந்திருந்தாலும், ஒருவன் செருக்கடையாதிருந்தால், அவன் ஞானி என்று எண்ணப்படுகிறான். அதேபோல ஒருவன் செல்வச்செழிப்பு கொண்டிருந்தாலும், தானே உண்டு, அற்புத ஆடைகளை தானே உடுத்திக் கொண்டு, தன்னை நம்பியிருப்பவர்கள் மத்தியில் தனது செல்வத்தை பகிர்ந்தளிக்காதவனை {விநியோகிக்காதவனை} விட இதயமற்றவன் வேறு எவன் இருக்க முடியும்? ஒருவன் பாவங்களைச் செய்யும்போது, அதன் விளைவுகளின் பயனை அறுவடை செய்பவர்கள் பலராக இருப்பினும்,  (கடைசியில்), அந்தக் கனியை அனுபவித்தவர்கள் தீங்கில்லாமல் தப்பித்தாலும், {அந்தப் பாவங்களைச்} செய்தவனை மட்டுமே பாவம் சேரும். [1] 

[1] அதாவது, தான் செய்த பாவத்தின் மூலம் பலன்களை அனுபவித்தவர்கள் பலராக இருப்பினும், பாவத்தைச் செய்தவன் மட்டுமே அந்தப் பாவத்தால் பற்றப்படுகிறான் என்பது இங்கே பொருள்.

ஒரு வில்லாளி கணையை அடிக்கும்போது, அவன் ஒரு மனிதனையாவது கொல்வதில் வெல்லவோ வெல்லோமலோ போகலாம், ஆனால், அதில், ஒரு தனிப்பட்ட புத்திசாலி, தனது புத்தியைப் (கெடு நோக்கத்துடன்) செலுத்தும்போது, மன்னனோடு கூடிய மொத்த நாட்டையும் அவன் அழித்துவிட நேரும்.

ஒன்றின் மூலம் இரண்டைப் பகுத்துப் பார்த்து, மூன்றை, நான்கின் மூலம் அடக்கி, ஐந்தை வென்று, ஆறை அறிந்து, ஏழைத் தவிர்த்து மகிழ்ச்சியாக இருப்பீராக. [2]

[2] அதாவது {1} அறிவு {புத்தி} என்ற ஒன்றால், {1} நன்மை, {2} தீமை என்ற இரண்டைப் பகுத்துப் பார்த்து, {1} எதிரி, {2} நண்பன், {3} புறக்கணிக்கப்பட்டவன் ஆகிய மூவரையும், {1} பேசுதல் {சாம}, {2} கொடுத்தல் {தான}, {3} மிரட்டுதல் {பேத}, {4} தண்டித்தல் {தண்டம்} ஆகிய நான்கால் அடக்கி, {1} கண், {2} காது, {3} மூக்கு, {4} நாக்கு, {5} உடல் {தோல்} ஆகிய ஐம்பொறிகளையும் வென்று, {1} நட்பு {சந்தி}, {2} பகை {விக்கிரகம்}, {3} செலவு {யானம்}, {4} இருக்கை {ஆசனம்}, {5} பிரிதல் {துவைதம்}, {6} கூட்டல் {ஆச்சிரயம்} ஆகிய ஆறு குணங்களை {அரசரறுகுணங்களை} அறிந்து, {1} பெண், {2} சூது, {3} வேட்டை, {4} மது, {5} கடுஞ்சொல், {6} கடுந்தண்டனை, {7} பொருள் விரயம் ஆகிய ஏழையும் தவிர்த்து மகிழ்ச்சியாக இருப்பீராக என்பது இங்கே பொருள்.

{ஒன்றானது}


நஞ்சு ஒருவனேயே கொல்லும், ஆயுதமும் ஒருவனையே கொல்லும், ஆனால் தீய ஆலோசனைகள் மன்னனையும், குடிமக்களையும், மொத்த நாட்டையுமே அழித்துவிடும்.

ஒருவன் சுவைமிக்க உணவு எதையும் தனியாக உண்ணக்கூடாது, பொருளாதாயம் {லாபம்} சம்பந்தமான காரியங்களில் தனியாக ஆலோசிக்கக்கூடாது, தனியாக பயணத்தை மேற்கொள்ளக் கூடாது, உறங்கும் தோழர்களுக்கு மத்தியில் தனியாக விழித்திருக்ககூடாது. ஓ! மன்னா, உம்மால் புரிந்து கொள்ள முடியாத, இரண்டற்ற ஒன்று உண்மையே {சத்தியமே}. கடலில் படகைப் போன்று அதுவே {உண்மை}, சொர்க்கத்திற்கு வழியாக இருக்கிறது.

{மன்னிப்பு [அ] பொறுமை}


மன்னிக்கும் இயல்புடைய மனிதர்களுக்கு {பொறுமைசாலிகளுக்கு} ஒரே குறை மட்டுமே உள்ளது, மற்றொன்று இல்லை. மன்னிக்கும் இயல்புடைய மனிதனை, மக்கள் பலமற்றவன் என்று நினைக்கிறார்கள். அதுவே அந்தக் குறை. எனினும், அந்தக் குறையைக் கருத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மன்னிக்கும் இயல்பே பெரும் சக்தியாகும். மன்னிக்கும் இயல்பு {பொறுமை என்பது}, பலமற்றவர்களுக்கு அறமும், பலவான்களுக்கு ஆபரணமும் ஆகும். {சக்தியற்றவர்களுக்கு பொறுமை குணமாகிறது. சக்தியுள்ளவர்களுக்கு அதுவே அலங்காரமாகும்}.

மன்னிக்கும் இயல்பே இவ்வுலகில் (அனைத்தையும்) வெல்லும்; மன்னிக்கும் இயல்பால் {பொறுமையால்} அடையமுடியாதுதான் என்ன இருக்கிறது? எவனுடைய கையில் மன்னிப்பு எனும் கத்தி {ஆயுதம்} இருக்கிறதோ, அந்த மனிதனைத் தீய மனிதர்களால் என்ன செய்து விட முடியும்? புற்களற்ற {வைக்கோலற்ற} நிலத்தில் விழும் நெருப்பு தானே அணைந்துவிடுகிறது. மன்னிக்காத மனிதன் {பொறுமையில்லாதவன் = கோபப்படுபவன்} பெருங்கொடுமை செய்து தன்னைக் கறைப்படுத்திக் கொள்கிறான். நீதியே {தர்மமே} ஒரே உயர்ந்த நன்மை; மன்னிக்கும் இயல்பே {பொறுமையே} ஒரே உச்சபட்ச அமைதி;  அறிவே ஒரே உச்சபட்ச மனநிறைவு; மனிதாபிமானமே ஒரே ஏக மகிழ்ச்சியுமாகும்.



மகிழ்ச்சி மற்றும் துயரைக் கொடுப்பவை! - உத்யோக பர்வம் பகுதி 33இ

Which leads to happiness and calamity? | Udyoga Parva - Section 33c | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 33) {விதுர நீதி - 3}
பதிவின் சுருக்கம் : வாழ்வில் மகிழ்ச்சியையும், துயரத்தையும் தரக்கூடிய இரண்டானவை முதல் ஒன்பதானவை வரை திருதராஷ்டிரனுக்கு விதுரர் விளக்குவது ...

{இரண்டானவை}


{விதுரன் சொன்னான்} “போரிடத் திறனற்ற மன்னன், புனித இடங்களுக்குப் பயணம் போகாத அந்தணன் ஆகிய இருவரையும் பொந்துகளில் வாழும் விலங்குகளை {எலிகளை} ஒரு பாம்பு விழுங்குவதுபோல, இந்தப் பூமி விழுங்கிவிடும். கடுஞ்சொல் தவிர்ப்பது, தீயவற்றைப் புறக்கணிப்பது ஆகிய இரண்டையும் செய்வதால் ஒரு மனிதன் உலகில் புகழடைகிறான்.

ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, தங்கள் பாலினத்தைச் சேர்ந்த பிறர் {பெண்கள்} ஆண்கள் மேல் ஆசை கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக, வெறுமனே ஆண்களை விரும்பும் பெண்களும், பிறரால் ஒருவர் வழிபடப்படுகிறார் என்பதற்காக, வெறுமனே மற்றவரை வழிபடும் ஒருவன் ஆகிய இருவரும் தங்களுக்கென்று சுய விருப்பம் இல்லாதவர்கள் ஆவார்கள்.


ஏழையின் ஆசைகள், சக்தியற்றவன் கோபம் ஆகிய இரண்டும், உடலை வருத்தும் கூரிய முட்களைப் போன்றனவாகும். முயற்சியற்ற {உழைக்காத} இல்லறத்தான், வேலைகள் கொண்ட பிச்சைக்காரன் {சந்நியாசி} ஆகிய இருவரும் தங்களுடைய பொருந்தாச் செயல்களால் ஒளிருவதேயில்லை.

மன்னிக்கும் தன்மையோடிருக்கும் {பொறுமையோடிருக்கும்} சக்திமிக்க மனிதன், ஈகை குணம் கொண்ட ஏழை ஆகிய இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தைவிட உயர்ந்த பகுதியில் {வாழ்வது போல, இவ்வுலகில்} வாழ்வார்கள். நியாயமாக அடைந்த பொருட்களில், தகுதியற்றவர்களுக்கு அளிக்கப்படும் கொடை, தகுந்தவர்களுக்கு மறுக்கப்படும் கொடை ஆகிய இரண்டும் தவறான பயன்பாடு கொண்டவை என்றே கருத வேண்டும். தானமளிக்காத செல்வந்தன், செருக்குடைய {கர்வமுடைய} ஏழை ஆகிய இருவரையும், கழுத்தில் பாரமிக்க கற்களைக் கட்டி நீருக்குள் எறிய வேண்டும். யோகத்தில் {யோகா} சாதித்த பிச்சைக்காரன் {சந்நியாச}, வெளிப்படையான போரில் விழுந்த {கொல்லப்பட்ட} வீரன், ஆகிய இருவரும், {சொர்க்கத்திற்கு வழியாக இருக்கக்கூடிய} சூரியனையே துளைத்துவிடக் கூடியவர்களாவர்.

{மூன்றானவை}

ஓ! பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வேதங்களை நன்கறிந்தவர்கள், மனிதர்களின் வழிகள் நன்மை [1], மத்திமம் [2], தீயவை [3] என்பவற்றைச் சார்ந்தவை {மூன்றானவை} என்று சொல்லியிருக்கின்றனர். 
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள்  [1]நல்லவர்களாகவும்,  [2]அக்கறையற்றவர்களாகவும்,  [3]தீயவர்களாகவும் {மூன்று வகையிலேயே} இருக்கின்றனர். எனவே, அவரவருக்குப் பொருந்தும் வகையிலான வேலைகளில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும்.

[1] அமைதி, [2] கொடுத்தல் மற்றும் மிரட்டல், [3] போரிடுவது {தண்டிப்பது} என்றும் கொள்ளலாம்.

[1]மனைவி, [2]அடிமை, [3]மகன் ஆகிய மூவரும் தங்களுக்கு என்று சொத்து வைத்துக் கொள்ள முடியாது. அவர்களால் ஈட்டப்படும் அனைத்தும், அவர்களை உரியவர்களுக்கே சொந்தமாகும்.

[1]பிறர் பொருளைத் திருடுதல்,  [2]பிறர் மனைவி மீது மோகம் கொள்ளுதல், [3]நண்பனை மீறுதல் ஆகிய மூன்று குற்றங்களில் இருந்தும் பெரும் அச்சம் எழுகிறது.

ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் [1]காமம், [2]கோபம், [3]பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் வாயில்களாகும். எனவே, அனைவரும் இவற்றைத் {காமம், கோபம், பேராசை ஆகியவற்றைத்} துறக்க வேண்டும்.

பேராபத்தில் இருக்கும்போதுகூட, [1]தொண்டன், [2]“நான் உனதே” என்று சொல்லி உம் பாதுகாப்பை நாடும் ஒருவன், [3]உமது வசிப்பிடத்திற்கு வந்த ஒருவன் ஆகிய மூவரையும் கைவிடக்கூடாது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, [1]வரம் அளிப்பது, [2]மன்னனாவது, [3]மகனைப் பெறுவது ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கணக்கில் எடுத்தாலும் ஆபத்திலிருக்கும் எதிரியை விடுவிப்பதே [4] தகுதியில் பெரியதாகும்.

[4] எதிரியான யுதிஷ்டிரன், தன் உறவினர்களைக் கொல்வதிலிருந்து அவனை விடுவிப்பது என்பதை மறைபொருளாக விதுரர் சொல்வதாக இங்கே விளக்கப்படுகிறது.

{நான்கானவை}


ஒரு மன்னன் சக்திமிக்கவனாக இருப்பினும், [1]சிறுபுத்தி கொண்டோர், [2]காலந்தாழ்த்துவோர், [3]சோம்பேறி, [4]மேற்புகழ்ச்சி {முகத்துதி} செய்வோர் ஆகிய நான்கு பேரிடம் ஒருபோதும் ஆலோசனை செய்யக்கூடாது. 

ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, செழிப்பால் மகுடம்சூட்டப்பட்டு இல்லற வாழ்வு வாழ்பவனான உம்மிடம், [1]இரத்த உறவு கொண்ட முதியவர்கள், [2]உறவினர்கள், [3]வறுமையில் விழுந்த உயர் பிறப்பாளர்கள், [4]ஏழை நண்பர்கள் மற்றும் பிள்ளையற்ற சகோதரிகள் ஆகிய நால்வரையும் வசிக்கச் செய்வீராக.

ஓ! பலமிக்க மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} பிருஹஸ்பதி கேட்கப்பட்ட போது,  தேவர்கள் தீர்மானம், அறிவார்ந்தவர்களின் புரிதல்கள் {அவர்கள் ஒரு காரியத்தைப் புரிந்து கொள்ளும் முறை}, கற்றோரின் பணிவு, பாவிகளின் அழிவு ஆகிய நான்கும் ஒரே நாளில் நிகழக்கூடியதும், உடனே பலனளிக்கக்கூடிய திறம் கொண்டவையுமாகும் {அவை நான்கும் உடனே பலிக்கும்} என்று தீர்மானித்தார்.

அச்சத்தை விலக்கவல்லவைகளான [1]அக்னி ஹோத்ரம், [2]பேசாநோன்பு {மௌன விரதம்}, [3]கல்வி மற்றும் [4](பொதுவான) வேள்வி ஆகிய நான்கும், முறையற்ற வகையில் செய்யப்பட்டால், அவை அச்சத்தையே தரும்.

{ஐந்தானவை}


ஓ! பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தந்தை, தாய், நெருப்பு {அக்னி}, ஆன்மா, குரு ஆகிய ஐந்து நெருப்புகளும் ஒரு மனிதனால் மரியாதையுடன் வழிபடப்பட வேண்டியவை.

தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள், பிச்சைக்காரர்கள், விருந்தினர்கள் ஆகிய ஐவருக்குச் சேவையாற்றுவதால் ஒரு மனிதன் இவ்வுலகில் பெரும்புகழை அடைகிறான்.

நண்பர்கள், எதிரிகள், பாகுபாடற்றவர்கள், {உம்மைச்} சார்ந்து {நம்பி} இருப்பவர்கள், {உம்மைப்} பராமரிக்க உரிமையுள்ளவர்கள் ஆகிய ஐயவர், நீர் எங்கே சென்றாலும் உம்மைத் தொடர்வார்கள்.

{கண், காது, மூக்கு, நாக்கு, உடல் [தோல்] ஆகிய} ஐம்பொறிகளில் ஒரு பொறி ஓட்டையானால்கூட {பற்றுடையதானால்}, தோலால் செய்யப்பட்ட ஓட்டைப் பாத்திரத்தில் இருந்து நீர் ஒழுகுவது போல, ஒருவனுடைய அறிவு அதன் {அந்தப் பொறியின் குறைபாடு} வழியாக வெளியே நழுவிவிடும்.

{ஆறானவை}

உறக்கம், அயர்வு {தூக்கக் கலக்கம்}, அச்சம், கோபம், சோம்பல், காலதாமதம் ஆகிய ஆறு குறைகளையும் செழிப்பை அடைய விரும்பும் மனிதன் தவிர்க்க வேண்டும். 

சாத்திரங்களுக்கு விளக்கமளிக்க இயலாத குரு, கல்லாத புரோகிதர், பாதுகாக்க இயலாத மன்னன், ஏற்கவியலா {இனிமையற்ற} வார்த்தைகள் பேசும் மனைவி, வயலுக்குச் செல்ல விரும்பா மாட்டு மந்தையாளன் {இடையன்},  காட்டுக்காக கிராமத்தை துறக்க விரும்பும் நாவிதர் ஆகிய அறுவரையும் உடைந்த படகை கடலில் தள்ளுவது போலத் துறக்க வேண்டும்.

உண்மை, ஈகை {தானமளித்தல்}, விடாமுயற்சி {தளர்விலா உழைப்பு}, இரக்கம், மன்னிக்கும் மனநிலை, பொறுமை ஆகிய ஆறு குணங்களையும் ஒரு மனிதன் ஒருபோதும் விடக்கூடாது. 

பசுக்கள், தொண்டு, உழவு {விவசாயம்}, மனைவி, கல்வி, சூத்திரனின் செல்வம் ஆகிய ஆறும் புறக்கணிக்கப்பட்டால் உடனே அழிந்து விடும்.

கல்வி கற்ற சீடர்கள் தங்கள் குருக்களையும்; மணமானவர்கள் தங்கள் அன்னையரையும்; விருப்பங்கள் ஈடேறியவர்கள், பெண்களையும்; வெற்றியடைந்தவர்கள், உதவி செய்தவர்களையும்; ஆற்றைக் கடந்தவர்கள், {தங்களைச் சுமந்த} படகையும், பிணி குணமான நோயாளிகள், மருத்துவர்களையும் என இந்த ஆறு பேரும், தங்களுக்குக் கடமையாற்றியவர்களை மறந்து போவார்கள்.

உடல்நலன், கடன்படாநிலை, வீட்டில் வாழ்தல் {வெளிநாடு செல்லாமல் பிழைக்கக்கூடிய வாய்ப்பு உள்ள நிலை}, நன்மனிதர்களின் துணை, வாழ்வாதாரங்களுக்கான வழிகளில் உறுதி, அச்சமற்று இருத்தல் ஆகிய ஆறும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.

பொறாமையுள்ளோர், அருவருப்புள்ளோர், மனநிறைவற்றோர், கோபமுள்ளோர், எப்போதும் சந்தேகமுள்ளோர், பிறரின் நற்பேறைச் சார்ந்து இருப்போர் ஆகிய அறுவரும் எப்போதும் பரிதாப நிலையிலேயே {துக்கமாகவே} இருப்பர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, செல்வத்தை அடைதல், தடையற்ற உடல் நலன், இனிய பேச்சுடைய அன்பிற்குரிய மனைவி, கீழ்ப்படியும் மகன், இலாபகரமான அறிவு {செல்வம் ஈட்டக்கூடிய திறமை} ஆகிய ஆறையும் கொண்ட மனிதர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

மனித இதயத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும் {காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸரியம் [அதாவது] ஆசை, கோபம், பேராசை,  மோகம், வெறி, பொறாமை ஆகிய} அந்த ஆறையும் அடக்கியவன், தனது புலன்களை {பொறிகளை} வென்று, எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை. எனவே, அவன் ஆபத்துகளுக்கு இடம் கொடுப்பதில்லை.

திருடர்கள், பொறுப்பற்றவர்களாலும், மருத்துவர்கள், நோயாளிகளாலும், பெண்கள், காமத்தால் பாதிக்கப்பட்டவர்களாலும், புரோகிதர்கள், வேள்வி செய்பவர்களாலும், மன்னன், சண்டையிடுபவர்களாலும், கடைசியாக, கற்றோர், கல்லாதோராலும் என இந்த அறுவரும் மற்ற அறுவரால் வாழ்கின்றனர்.

{ஏழானவை}


உறுதியாக நிறுவப்பட்ட ஏகாதிபதிகளுக்குக் கூட அழிவை ஏற்படுத்தக் கூடியவையும், துயரத்தைத் அளிக்கக்கூடியவையுமான,  பெண்கள், பகடை, வேட்டை, மது, கடுஞ்சொல், கடுந்தண்டனை, செல்வத்தை வீணடித்தல் ஆகிய ஏழு தீமைகளை ஒரு மன்னன் கைவிட வேண்டும்.

{எட்டானவை}

அந்தணர்களை வெறுப்பது, அந்தணர்களுடன் சச்சரவு, அந்தணர்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்வது, அந்தணனின் உயிரைப் பறிப்பது, அந்தணர்களை நிந்திப்பதில் இன்பம் கொள்வது, அந்தணர்களின் புகழைக் கேட்டு வருந்துவது, {அறச்} சடங்குகளில் அவர்களை {அந்தணர்களை} மறப்பது, அவர்கள் {அந்தணர்கள்} எதையும் கேட்கும் போது, அவர்களைப் பழிவாங்குவது ஆகிய எட்டும் அழிவடைய விதிக்கப்பட்ட மனிதனின் உடனடி அறிகுறிகளாகும். அறிவுடைய மனிதன் இந்த வரம்புமீறல்களை அறிந்து கொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஓ! பாரதரே {திருதராஷ்டரரே}, நண்பர்களுடன் சந்திப்பு, அபரிமிதமான செல்வத்தை அடைவது, மகனின் அணைப்பு, கலவி, சரியான நேரங்களில் நண்பர்களுடன் உரையாடல், தன் தரப்பைச் சார்ந்த மனிதரின் முன்னேற்றம் {மேன்மை}, எதிர்பார்ப்பை {விரும்பியதை} அடைவது, சமூகத்தில் மரியாதை ஆகிய எட்டும் வாழ்வில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியின் சாரமேயாகும், இவை யாவையும் ஒருவனால் இங்கே {இவ்வுலகில்} மட்டுமே அடைய முடியும்.

அறிவு, உயர்பிறப்பு, தன்னடக்கம், கல்வி, ஆற்றல், நிதானமான பேச்சு, தன் சக்திக்குத் தக்க கொடை, செய்நன்றி அறிதல் ஆகிய எட்டு குணங்களும் ஒரு மனிதனைப் புகழடையச் செய்கின்றன.

ஒன்பதானவை


இந்த வீட்டுக்கு ஒன்பது வாயில்கள், மூன்று தூண்கள் மற்றும் ஐந்து சாட்சிகளாகும். அது ஆன்மாவால் நிரம்பியிருக்கிறது. இவையனைத்தையும் உண்மையில் அறிந்த ஞானமுள்ளவனே {கல்வி} கற்றவனாவான். [5]

[5] அதாவது, {மூச்சு விடும் செயல்பாடுகளான} இடகலை {இளை}, பிங்கலை {பிங்களை}, சுழிமுனை {சூஷுமனை} எனும்] மூன்று தூண்களில் நிற்கும் வீடான இந்த உடலுக்கு [இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்கு துவாரங்கள், ஒரு வாய், ஆசனவாய், குறி ஆகிய] ஒன்பது ஓட்டைகள் என்ற வாயில்களும், ஐம்பொறிகள் அந்த வீட்டில் வசித்து செயல்படுபவையாக - சாட்சிகளாக இருக்குன்றன. உடலாகிய அந்த வீட்டில் ஆன்மா என்ற தலைவன் வசிக்கிறான். அதை உண்மையில் அறிந்தவனே கல்விமானாவான் என்பதே பொருள்}.



  

ஆரியன் யார்? - உத்யோக பர்வம் பகுதி 33ஈ

Who is Arya? | Udyoga Parva - Section 33d | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 33 ) {விதுர நீதி - 4}
பதிவின் சுருக்கம் : பத்தானவை குறித்து விதுரன் திருதராஷ்டிரனிடம் சொல்வது; யாரைச் செழிப்பு அடையும்? மனிதர்களுக்கு அதிகாரியாகக் கருதப்படுபவன் யார்? எந்த மன்னனை செழிப்பு வந்து அடையும்? எவன் ஞானி? எவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்? எங்கும் புகழப்படுபவன் எவன்? அனைவராலும் எப்போதும் விரும்பப்படுபவன் எவன்?  ஆரியர்களால் கருதப்படும் ஆரியர்களில் சிறந்தவன் எவன்? தேவர்கள் எவனுக்குச் செழிப்பைத் தருவார்கள்? கருத்தில் கொள்ளவும், பயன்படுத்தவும் ஏற்றவை எவை?  எவனிடம் துயரங்கள் விலகி நிற்கின்றன?  என்பது யாவற்றையும், பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிடுவதே சிறந்தது என்றும் விதுரன் திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொல்வது.... 

{பத்தானவை}


{விதுரன் சொன்னான்} “ஓ! திருதராஷ்டிரரே,  1.போதையில் இருப்பவன், 2.கவனம் குறைந்தவன், 3.உளறுபவன், 4.களைப்பாக இருப்பவன், 5.கோபம் கொண்டவன், 6.பசியோடு இருப்பவன், 7.அவசரப்படுபவன், 8.பேராசை கொண்டவன், 9.பயம் கொண்டவன், 10.காமம் கொண்டவன் ஆகிய பத்து பேரும் அறம் எது என்பதை அறிய மாட்டார்கள். இது தொடர்பாக, சுயோதனனுக்கும் {சூதந்வாவுக்கும்} அசுரர்கள் தலைவனுக்கும் (பிரஹலாதனுக்கும்) இடையில், பிந்தையவனின் {பிரஹலாதனின்} மகன் சம்பந்தமாக நடந்த பழங்கதை ஒன்று மேற்கோள் காட்டப்படுகிறது.

காமத்தையும், கோபத்தையும் துறந்து, தகுந்தவனுக்குச் செல்வத்தை அளித்து, பாகுபாட்டை அறிந்து, கல்வி கற்று, சுறுசுறுப்பாக இருக்கும் மன்னனே அனைத்து மனிதர்களுக்கும் அதிகாரியாகக் கருதப்படுகிறான். பிறரை நம்பிக்கை கொள்ளச் செய்பவனும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளிப்பவனும்,  தண்டனையின் சரியான அளவை அறிந்தவனும், கருணை எப்போது காட்டப்பட வேண்டும் என்பதை அறிந்தவனுமான மன்னனையே செழிப்பு அடைகிறது.


பலமற்ற எதிரியைக் கூட அலட்சியம் செய்யாதவனும், எதிரியைப் பொறுத்தமட்டில் சந்தர்ப்பத்திற்காக ஆவலாகக் காத்திருந்து புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனும்; தன்னைவிட பலமான மனிதர்களிடம் பகைமையை விரும்பாதவனும்; சரியான நேரத்தில் ஆற்றலை வெளிப்படுத்துபவனும் ஞானியாவான்.  ஏற்கனவே வந்துவிட்ட துயரத்துக்காக வருந்தாதவனும், தனது அனைத்துப் புலனங்களையும் குவியச் செய்து முயற்சிப்பவனும், துயரமான காலத்தைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனுமே நிச்சயமாக மனிதர்களில் முதன்மையானவன் ஆவன். அவனது எதிரிகள் அனைவரும் வீழ்த்தப்படுவார்கள் என்பது நிச்சயம்.

பயனில்லாத நம்பிக்கையுடன் வாழ்வைக் கழிக்காதவனும், பாவிகளுடன் நட்பு கொள்ளாதவனும், அடுத்தவன் மனைவியை சீரழிக்காதவனும், ஆணவத்தைக் காட்டாதவனும், திருடாதவனும், நன்றிமறக்காதவனும், குடியில் ஈடுபடாதவனும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். செருக்குடன் மனித நாட்டத்தின் மூன்று நோக்கங்களை அடைய முயலாதவனும் கேட்கப்படும்போது உண்மையைச் சொல்பவனும், நண்பர்களுக்காகக் கூட சச்சரவு செய்யாதவனும், அலட்சியப்படுத்தப் பட்டாலும் கோபம் கொள்ளாதவனும் ஞானி என்று கணிக்கப்படுகிறான்.

பிறருக்கு இழைக்கப்படும் தீங்கைப் பொறுக்காதவனும், அனைவரிடமும் அன்பாக இருபவனும்,  பலமற்றவனாக இருப்பின் பிறருடன் பூசல் கொள்ளாதவனும், ஆணவமாகப் பேசாதவனும், சச்சரவை மறப்பவனும், எங்கும் புகழப்படுகிறான். கர்வம் கொண்ட முகத்தை எப்போதும் கொள்ளாதவனும், பிறரைக் கண்டித்து, தன்னைப் புகழாதவனும், தான் பெற வேண்டியவற்றுக்காக பிறரிடம் எப்போதும் கடுஞ்சொல் பேசாதவனும் அனைவராலும் எப்போதும் விரும்பப்படுவான். {அடங்கிய} பழைய பகைமை வளர்க்காதவனும், ஆணவத்துடனோ, மிகுந்த பணிவுடனோ நடந்து கொள்ளாதவனும், துயரத்தில் இருக்கும்போதும், முறையற்ற செயலைச் செய்யாதவனும், நன்னடத்தையுள்ளவன் {ஆரியர்களில் சிறந்தவன்} என்று மரியாதைக்குரியவர்களால் {ஆரியர்களால்} [1] கருதப்படுகிறான்.

[1] இந்த குறிப்பிட்ட வரியில் வரும் நன்னடத்தையுள்ளவன் என்பதை வேறு பதிப்பில் ஆரியன் என்று இட்டிருந்தார்கள். மூலத்தில் இந்த வரி எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் காண http://sacred-texts.com/hin/mbs/mbs05033.htm என்ற பக்கத்துக்குச் சென்றேன். இந்த வரி 93-ம் ஸ்லோகமாக வருகிறது என நினைக்கிறேன். 

அது பின்வருமாறு :
93 na vairam uddīpayati praśāntaṃ; na darmam ārohati nāstam eti
     na durgato 'smīti karoti manyuṃ; tam ārya śīlaṃ param āhur agryam

தனது மகிழ்ச்சியில் மிகவும் மகிழாதவனும், அடுத்தவர் துயரைக்கண்டு மகிழாதவனும், கொடையளித்துவிட்டு அதற்காகவருந்தாதவனும், நல்ல இயல்பும் நடத்தையும் கொண்ட மனிதன் எனச் சொல்லப்படுகிறான். பல்வேறு நாடுகளின் சடங்குகளில் ஞானத்தை அடைய விரும்புபவனும், பல்வேறு நாடுகளின் மொழிகளை அறிய விரும்புபவனும், பல்வேறு வகைகளிலான மனிதர்களின் பயன்பாடுகளை {சாதி தர்மங்களை} அறிய விரும்புபவனும், ஏற்றத்தாழ்வு அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன், அவன் எங்கே சென்றாலும், மகிழ்ச்சியாக இருப்பவர்களை விட ஏறுமுகம் பெறுவது {அதிக மகிழ்ச்சியடைவது} நிச்சயம்.

செருக்கு, மடமை, {மரியாதையில்லாத} துடுக்குத்தனம், பாவச்செயல்கள், மன்னனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது, நடத்தையில் கோணல், பலருடன் பகைமை, குடிகாரர்கள், பைத்தியக்காரர்கள், தீயவர்கள் ஆகியோருடன் சச்சரவு ஆகியவற்றை விட்டுவிடும் புத்திசாலி மனிதன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான். தன்னடக்கம், தூய்மை, நல்ல சடங்குகள், தேவர்களை வழிபடுதல், பரிகார விழாக்கள் மற்றும் உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் பிற சடங்குகள் ஆகியவற்றைத் தினமும் பயிலும் மனிதனுக்கு தேவர்களே செழிப்பை அளிக்கின்றனர்.

தாழ்ந்தவர்களோடு அல்லாமல் சம நிலை உள்ள மனிதர்களிடம் மண உறவு கொள்பவனும், தன் முன் மேம்பட்ட தகுதியுடைவயர்களை அமர்த்துபவனும், சம நிலை மனிதர்களுடன் பேச்சும், நடத்தையும், நட்பும் கொள்பவனுமான கற்றறிந்த மனிதனின் செயல்கள், கருத்தில் கொள்ளவும், பயன்படுத்தவும் ஏற்றவை ஆகும்.

தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்துவிட்டு மிதமாக உண்பவனும், அளவற்ற வேலைகளைச் செய்துவிட்டு மிதமாக உறங்குபவனும், யாசிக்கப்பட்டால் எதிரிகளுக்கும் கொடுப்பவனும் {தானம் அளிப்பவனும்}, தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வான். அவனிடம் இருந்து துயரங்கள் விலகி நிற்கின்றன.

எவனுடைய ஆலோசனைகள் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ {கமுக்கமாக பாதுகாக்கப்பட்டு}, நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறதோ, எவனுடைய செயல்களின் விளைவுகள் பிற மனிதர்களைக் காயப்படுத்துவதில்லையோ, அவன், தனது சிறு நோக்கங்களை அடைவதில் கூட வெற்றியாளனாகவே இருப்பான். அனைத்து உயிர்களுக்கு தீங்கிழையாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டவனும், உண்மையுள்ளவனும், மென்மையானவனும், ஈகை குணம் கொண்டவனும், தூய மனம் கொண்டவனும்,  அற்புதமான சுரங்கத்தைத் தோற்றுவாயாகக் கொண்ட விலைமதிப்பற்ற ரத்தினத்தின் தூய கதிர் போல, தன் உறவினர்களுக்கு மத்தியில் பெரும் ஒளியுடன் ஒளிர்வான்.

தன்னைத்தவிர வேறு யாருக்கும் தனது குற்றங்கள் அறியப்படாமல் இருந்தாலும், அதற்காக {அக்குற்றங்களுக்காக} வெட்கப்படுபவன், அனைத்து மனிதர்களுக்கும் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுகிறான். தூய இதயத்துடனும், அளவிலா சக்தியுடனும், சித்தத்தில் நிலை பெற்றும் இருப்பவன் தனது சக்தியின் விளைவாக சூரியனைப் போலவே ஒளிர்கிறான்.

(அந்தண) சாபத்தால் எரிக்கப்பட்ட மன்னன் பாண்டு, ஐந்து இந்திரர்களைப் போன்ற மகன்களைக் காட்டில் பெற்றெடுத்தார். ஓ! அம்பிகையின் மகனே {திருதராஷ்டிரரே}, நீரே அவர்களை வளர்த்து, அனைத்தையும் கற்பித்தீர். அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்படிபவர்கள் ஆவர். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} நியாயமாகச் சேர வேண்டிய பங்கான நாட்டைக் கொடுத்து, இன்பத்தில் நிறைந்து, உமது மகன்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீராக. பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் தேவர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோரின் நம்பிக்கையைப் பெறுவீர்” என்றான் {விதுரன்}.


உத்யோக பர்வம் பகுதி 33 நிறைவு

  

தன்னால் தன்னை அறிய வேண்டும்! - உத்யோக பர்வம் பகுதி 34

Know one's self by means of one's own self! | Udyoga Parva - Section 34 | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 34) {விதுர நீதி - 5}
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் மனதில் என்ன ஓடுகிறது என்றும் இருவருக்கும் நன்மை எதுவோ அதைச் சொல்லுமாறும் திருதராஷ்டிரன் விதுரனிடம் கேட்பது; ஒப்பந்தங்களை மதித்து அறம் பொருள் ஆகியவற்றை அறிந்து செயல்படுபவன் தனது நாட்டைத் தக்க வைத்துக் கொள்வான் என்று விதுரன் சொல்வது; புலன்களிடம் தோற்கும் மனிதன் அனைத்திலும் தோற்பதைச் சொல்வது; புலன்களைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைப்பது; தன்னையே அடக்கமுடியாதவனால் எதிரிகளை வீழ்த்த முடியாது என்று சொல்வது; பாவிகளோடு தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படும் இயற்கை நீதியை எடுத்துச் சொல்வது;  பேச்சைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும், அதைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் சொல்வது; தோல்வியடைய விதிக்கப்பட்டவனே புலன்களில் மயக்கம் கொள்வான் என்றும், அதனால் அவன் வீழ்வான் என்றும் சொல்வது; யுதிஷ்டிரன் திருதராஷ்டிரனின் புகழைப் பாதுகாக்கும்பொருட்டே துன்பத்தை அனுபவித்தான் என்றும், அவனே மூவுலகங்களையும் ஆளும் தகுதி படைத்தவன் என்று விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னது...

திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “உறக்கமற்று, துயரத்தால் எரிந்து கொண்டிருக்கும் மனிதன் என்ன செய்ய வேண்டும் என்பதை நீ எனக்குச் சொல். ஏனென்றால், நம்மில் நீ ஒருவனே, ஓ! குழந்தாய் {விதுரா}, அறம் மற்றும் பொருளை அறிந்திருக்கிறாய். ஓ! விதுரா, ஞானத்துடன் எனக்கு ஆலோசனை கூறுவாயாக. ஓ! மேன்மையான இதயம் கொண்டவனே {விதுரா}, எதிர்காலத் தீமைகளை அறிந்து கொண்டு, அஜாதசத்ருவுக்கு {யுதிஷ்டிரனுக்கு} நன்மையானவை என்றும், குருக்களின் நன்மையை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை என்றும் நீ கருதுவதைச் சொல்வாயாக. எனது முந்தைய குற்றத்தை நான் திரும்பிப் பார்க்கிறேன். பதட்டம் நிறைந்த இதயத்துடன் நான் உன்னைக் கேட்கிறேன், ஓ! கற்றவனே {விதுரா}, அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} மனதில் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சரியாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

{செயல்கள்}


அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஒருவனின் தோல்வியை {அவமானத்தை} விரும்பாத ஒருவன், கேட்கப்படாத போதும், தனது வார்த்தைகள் நன்மையானவையாகவோ தீமையானவையாகவோ, வெறுப்புடனோ, இனியுடனோ இருக்குமேயானாலும் கூட உண்மையைச் சொல்ல வேண்டும். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் குருக்களுக்கு நன்மை எதுவோ அதையே சொல்வேன். எது நன்மை என்றும், எது அறநெறி சார்ந்தவை என்றும் இரண்டையும் நான் சொல்வேன். நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீதியற்ற முறையற்ற வெற்றியின் வழிகளில் உமது இதயத்தை நிலைநிறுத்தாதீர். நியாயமான, முறையான வழிவகைகளில் தனது நோக்கத்தின் பயன்பாடு நிற்கவில்லையென்றால், அதன் வெற்றியைக் குறித்து ஒரு புத்திசாலி மனிதன் வருந்தக்கூடாது. ஒருவன் ஒரு செயலில் ஈடுபடும் முன்னர், செயலைச் செய்பவரின் திறன், செயலின் இயல்பு, அதன் நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்துச் செயல்களும் இவற்றையே சார்ந்திருக்கின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டே ஒருவன் செயல்பட வேண்டும். திடீர் உந்துதலால் {ஆர்வக் கோளாறால்} எதையும் செய்யக்கூடாது.

ஞானமுள்ளவன், தனது சொந்த திறனையும், செயலின் இயல்பையும், வெற்றியினால் உண்டாகும் விளைவுகளையும் முழுதும் கருத்தில் கொண்டே செயல்படவோ, செயல்படாமலோ இருக்க வேண்டும். நாட்டைப் பொறுத்தவரை அதன் விகிதாச்சாரம், அளவு, ஆதாயம், இழப்பு, கருவூலம், மக்கள் தொகை, தண்டை ஆகியவற்றை அறியாத மன்னன் தனது நாட்டை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அதே வேளையில், மறுபுறம், ஒப்பந்தங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை அறிந்து, அறம் மற்றும் பொருளின் அறிவை அறிந்தவன் தனது நாட்டைத் தக்க வைத்துக் கொள்வான்.

{புலனடக்கம்}


கோள்களால் பாதிக்கப்படும் நட்சத்திரங்களைப் போல, இவ்வுலகம் புலன்களால் பாதிக்கப்படுகிறது. கட்டுத்தப்படாத அவை தங்களுக்குரிய பொருட்களின் மீது செலுத்தப்படும்போது இவ்வுலகம் பாதிப்படைகிறது. வளர்பிறை நாட்களில் இருக்கும் நிலவைப் போல, இயற்கையான நிலையில் உள்ள தங்கள் ஐம்புலன்களால் வீழ்த்தப்படும் மனிதனின் துயரங்கள் அதிகரிக்கவே செய்யும். அவை எப்போதும் அவனைப் பல்வேறு செயல்பாடுகளை நோக்கி இட்டுச் செல்லும்.

தனது சுயத்தைக் {தன்னைக்} கட்டுப்படுத்தாத ஒருவன் தனது ஆலோசகர்களைக் கட்டுப்படுத்த விரும்புபவனோ, தனது ஆலோசகர்களைக் கட்டுப்படுத்தாது தனது பகைவர்களை வீழ்த்துபவனோ, கடைசியில் வலிமையை இழந்து போக நேரும். எனவே, முதலில் தன்னையே எதிரி என்று நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவன், கடைசியின் தனது ஆலோசகர்களையோ, எதிரிகளையோ வெல்வதில் தோல்வியுற மாட்டான். தனது புலன்களை வெல்பவனுக்கோ, தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்துபவனுக்கோ, குற்றமிழைப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கும் திறன் பெற்றவனுக்கோ, நீதியுடன் செயல்படுபவனுக்கோ, பொறுமையால் அருளப்பட்டவனுக்கோ பெரும் செழுமை காத்திருக்கிறது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவனின் உடல் அந்த ஒருவனின் தேராகும்; அதற்குள் இருக்கும் ஆன்மாவே அதன் ஓட்டுநராகும்; புலன்கள் அதன் குதிரைகளாகும். அந்த நன்கு பழக்கப்பட்ட அந்த அற்புதமான குதிரைகளால் இழுக்கப்படும் ஞானி, தனது வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக நடத்தி, நிம்மதியாகக் கண் விழிக்கிறான். அடக்கப்படாத, கட்டுப்படுத்த இயலாத குதிரைகள், நிபுணத்துவம் இல்லாத ஓட்டுநரால் செலுத்தப்பட்டு, பயணத்தின் வழியில் அழிவடைய நேர்கிறது; எனவே அடக்கப்படாத ஒருவனின் புலன்கள் அழிவுக்கே வழிகோலுகின்றன. அனுபவமற்ற மனிதன் ஒருவன், இந்த அடக்கப்படாத புலன்களால் வழிநடத்தப்பட்டு, நன்மையில் இருந்து தீமையையும், தீமையில் இருந்து நன்மையையும் பெற்று மகிழ்ச்சியைத் துயரம் எனக் குழப்பிக் கொள்கிறான்.

அறம் பொருள் ஆகியவற்றைக் கைவிட்டவன், புலன்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, செழிப்பு, வாழ்வு, செல்வம் மனைவி ஆகியவற்றைத் தாமதமில்லாமல் இழக்கிறான். புலன்களுக்கல்லாமல் செல்வங்களுக்கு மட்டுமே தலைவனாக இருப்பவன், புலன்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகத் தனது செல்வங்களை நிச்சயமாக இழக்கிறான். ஒருவன் தன்னைத் தன்னால் அறிய வேண்டும். {சுயத்தைச் சுயத்தால் அறியவேண்டும்}. தானே தனக்கு நண்பனாகவும் எதிரியாகவும் இருப்பதால், ஒருவன் தனது மனம், அறிவு மற்றும் புலனங்களைக் கட்டுப்படுத்தி, தன்னால் தன்னை அறிய வேண்டும். தானே தனக்கு நண்பனும், எதிரியும் ஆனதால், தன்னால் தன்னை வென்ற மனிதன், தன்னைத் தன் நண்பனாகக் கொள்கிறான்.

{ஆசையும் கோபமும்}

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரிய மீன் ஒன்று வலையின் மெல்லிய கயிறுகளை அறுப்பது போல, ஆசையும் கோபமும் ஞானத்தை அறுக்கும். அறத்தையும் பொருளையும் இவ்வுலகில் மதித்து வெற்றியின் வழிவகைகளை அடைய முயல்பவன், தான் வேண்டுவது அனைத்தையும் அடைந்து மகிழ்ச்சியை வெல்கிறான். மனம்சார்ந்த தனது ஐந்து எதிரிகளைக் கட்டுப்படுத்தாத ஒருவன், பிற புற எதிரிகளை வீழ்த்த விரும்பினால், உண்மையில் அவற்றால் {அந்த ஐந்து எதிரிகளால்} வீழ்த்தப்படுகிறான். தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தாத தீய மனம் கொண்ட மன்னர்கள், நாடாசையின் காரணமாகத் தங்கள் செயல்களாலேயே அழிவடைகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.

{தீயோருடன் நட்பு}


ஈரவிறகு, காய்ந்த விறகோடு எரிவது போல, பாவிகளோடு நிலைத்த தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படுகிறான். எனவே, பாவிகளோடு ஏற்படக்கூடிய நட்பைத் தவிர்க்க வேண்டும்.

அறியாமையில் இருப்பவன், பேராசை கொண்ட தனது ஐந்து எதிரிகளைக் கட்டுப்படுத்த தவறி, ஐந்து தனித்துவமான பொருட்களைக் கொண்டு பேரழிவில் மூழ்குகிறான். கபடமற்ற தன்மை, எளிமை, தூய்மை, மனநிறைவு, இனிமையான பேச்சு, தற்கட்டுபாடு {சுய கட்டுப்பாடு}, உண்மை, உறுதி ஆகியன எப்போதும் தீயவர்களின் குணங்களாகாது. தன்னறிவு {சுயஞானம்}, உறுதி, பொறுமை, அறத்தில் அர்ப்பணிப்பு, ஆலோசனைகளைக் கமுக்கமாக வைத்துக் கொள்வது, ஈகை ஆகியவை ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இழிந்த மனிதர்களிடம் இருப்பதில்லை.

தவறான நிந்தனைகள் {போலிக் குற்றச்சாட்டுகள்}, தீய உரைகள் மூலம் மூடர்கள் ஞானிகளுக்குத் தீங்கிழைக்கின்றனர். இதன் விளைவாக ஞானிகளால் செய்யப்பட்ட பாவங்களை அந்த மூடர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஞானிகள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு இப்படியே மன்னிக்கப்படுகின்றனர். தீய குணத்தாலேயே தீயவர்கள் பலம் பெறுகிறார்கள்; குற்றவியல் சட்டத்திலும், பலமற்றவர்களையும் பெண்களையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதிலுமே மன்னர்களின் பலம் இருக்கிறது. மன்னிக்கும் தன்மையிலேயே {பொறுமையிலேயே} அறம்சார்ந்தவர்களின் பலம் இருக்கிறது.

{பேச்சு [உரை]}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பேச்சைக் கட்டுப்படுத்தவதே மிகவும் கடினமானது என்று சொல்லப்படுகிறது. பொருள் நிறைந்த வார்த்தைகளுடன் கேட்பவர்களுக்கு இனிமையாக நீண்ட உரையை ஆற்றுவது என்பது எளிதானதல்ல. நன்கு பேசப்பட்ட பேச்சு, பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்; தீமையாகப் பேசப்பட்ட பேச்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தீமைகளுக்குக் காரணமாக இருக்கும். கணைகளால் துளைக்கப்பட்ட அல்லது கோடரியால் வெட்டப்பட்ட காடு மீண்டும் வளரலாம், ஆனால் காயப்படுத்தும் வகையில் தீய வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டுக் காயமடைந்த இதயம் மீண்டெழுவதில்லை {ஆறுவதில்லை}.

குறிப்பு--------------------------------------------------------------------
தீயினாற் சுட்டபுண்  உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

திருக்குறள் > அறத்துப்பால் > அடக்கமுடைமை
--------------------------------------------------------------------------------

கணைகள், குண்டுகள், பராசங்கள் ஆகிய ஆயுதங்களை உடலில் இருந்து எளிதில் எடுத்துவிடலாம், ஆனால், இதயத்தின் ஆழத்தில் குத்தப்பட்ட வார்த்தைகளாலான குறுவாளை வெளி உருவி எடுப்பது இயலாதது. வார்த்தைக் கணைகள் வாயில் இருந்து அடிக்கப்படுகின்றன. அதனால் தாக்குண்ட ஒருவன் அல்லும் பகலும் வருந்துகிறான். பிறரது உயிரையே அது தொட்டுவிடுவதால், கற்ற மனிதன் அத்தகு கணைகளை அடிக்கக்கூடாது.

{தோல்வி விதிக்கப்படும்போது}


தேவர்களால் தோல்வி விதிக்கப்பட்ட ஒருவன் புலன்களில் மயக்கம் கொள்வதாலேயே, கீழான காரியங்கள் செய்வதில் விழுகிறான். அறிவு மங்கிப் போய், அழிவின் விளிம்பில் இருக்கும் போது சரியாகத் தெரியும் தவறு, அவனது இதயத்தை உறுதியாக அடிக்கும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நீர் அதைத் தெளிவாகக் காணவில்லை. பாண்டவர்களிடம் கொண்ட பகைமையின் விளைவால், அறிவை மூடும் அந்த மேகம் {புலன்மயக்கம்} இப்போது உமது மகன்களைப் பீடித்திருக்கிறது.

அனைத்து நற்குறிகளையும் பெற்று, மூவுலகங்களையும் ஆளும் தகுதி பெற்ற யுதிஷ்டிரன் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறான். ஓ! திருதராஷ்டிரரே, உமது மகன்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, உமது வாரிசுகள் அனைவரிலும் முதன்மையான யுதிஷ்டிரன் பூமியை ஆளும்படி செய்வீராக. சக்தி, ஞானம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு, அறம் பொருள் ஆகியவற்றின் உண்மைகளை அறிந்து, நீதிமிக்க மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், ஓ! மன்னர்கள் மன்னா {திருதராஷ்டிரரே}, உம்முடைய புகழைப் பாதுகாக்கும்பொருட்டே, இரக்கம் மற்றும் கருணையால் பெரும் துன்பத்தை அனுபவித்தான்” என்றான் {விதுரன்}.

   

பிரகலாதன் தீர்ப்பு! - உத்யோக பர்வம் பகுதி 35அ

The declaration of Prahlada! | Udyoga Parva - Section 35a | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 35) {விதுர நீதி - 6}
பதிவின் சுருக்கம் : விதுரன் திருதராஷ்டிரனிடம், கேசினியை மணந்து கொள்ள விரும்பிய விரோசனன் மற்றும் சூதன்வானுக்குள் நடந்த சர்ச்சை குறித்த பழங்கதையைச் சொன்னது; கேசினி தன் தலைவனைச் சுயம்வரத்தில் தேர்ந்தெடுக்க விரும்பியது; விரோசனன் கேசினியிடம் சென்றது; விரோசனனிடம் கேள்வி கேட்ட கேசினி; அடுத்த நாள் சூதன்வான் வந்தது; யார் பெரியவர் என்பதில் அவர்களுக்குள் ஏற்பட்ட சர்ச்சை; சர்ச்சையைத் தீர்க்க அவ்விருவரும் பிரஹலாதனிடம் சென்றது; சூதன்வானே வென்றான் எனப் பிரஹலாதன் அறிவித்தது; சூதன்வான் விரோசனனுக்கு உயிரைக் கொடுத்தது ...

திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “ஓ! பெரும் அறிவுடையவனே, அறத்திற்கும் பொருளுக்கும் ஏற்புடைய இத்தகு வார்த்தைகளை எனக்கு மீண்டும் சொல்வாயாக. அவற்றைக் கேட்கும் தாகம் எனக்கு அடங்கவில்லை. நீ சொல்வது அழகாக இருக்கிறது” என்றான்.

{பழங்காலக் கதை - சூதன்வானுக்கும்  விரோசனனுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உரையாடல்}


விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “புனித இடங்கள் அனைத்திலும் நீராடுவதும், அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு காட்டுவதுமாகிய இரண்டும் சமமே. அனைத்து உயிரினங்களிடமும் அன்புகாட்டுவது முன்னதைவிட {புனித இடங்களில் நீராடுவதைவிட} ஒருவேளை விஞ்சியதாக இருக்கலாம். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரிடமும் அன்பைக் காட்டுவீராக. அதனால், இவ்வுலகில் பெரும் புகழை வெல்வீர், இதன்பிறகு {இவ்வுலகத்திற்குப் பிறகு} நீர் சொர்க்கத்தை அடைவீர்.

ஒரு மனிதனின் நற்செயல்கள் எவ்வளவு காலம் இவ்வுலகில் பேசப்படுமோ, ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, அவ்வளவு காலம் அவன் சொர்க்கத்தில் மகிமைப்படுத்தப்படுகிறான். இது தொடர்பாக, கேசினியின் {Kesini}கரங்களைத் திருமணத்திற்காகக் கேட்ட விரோசனன்  மற்றும் சூதன்வான் {Virochana and Sudhanwan} ஆகிய இருவருக்கும் மத்தியில் நடைபெற்ற உரையாடலைக் குறித்த ஒரு பழங்கதை மேற்கோள் காட்டப்படுகிறது.
ஒரு காலத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒப்பற்ற அழகுடன் கூடிய கன்னிகை ஒருத்தி, கேசினி என்ற பெயரில் இருந்தாள். ஒரு நல்ல கணவனை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட அவள் {கேசினி}, தன்வரிப்பில் {சுயம்வரத்தில்} தனது தலைவனைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தாள்.

*திதியின் மகன்களில் {அசுரர்களில்} ஒருவனான விரோசனன் அந்தக் கன்னிகையை {கேசினியை} அடைய விரும்பி, அந்த இடத்திற்குச் சென்றான். தைத்தியர்களின் தலைவனைக் {விரோசனனைக்} கண்ட கேசினி, அவனிடம் {விரோசனனிடம்}, “ஓ! விரோசனரே, அந்தணர்கள் மேன்மையானவர்களா? திதியின் மகன்கள் {அசுரர்கள்} மேன்மையானவர்களா? சூதன்வான் ஏன் மஞ்சத்தில் அமரக்கூடாது?” என்று கேட்டாள்.

*குறிப்பு:

அனைத்துயிர்களின் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 65

பிரம்மனுக்கு ஆறு {6} ஆன்மிக மகன்கள் இருந்ததாக அறியப்படுகிறது. அவர்கள் மரிச்சி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது ஆகியோர் ஆவர்.
மரிச்சியின் மகன் காசியபர் ஆவார். காசியபரிடமிருந்தே அனைத்து உயிர்களும் தோன்றின.

தக்ஷனுக்கு (பிராஜாபதிகளில் ஒருவர்) நற்பேறு பெற்ற பதிமூன்று {13} மகள்கள் இருந்தனர். {காசியபரே இந்த தக்ஷனின் 13 மகள்களுக்கும் கணவராவார்.} அந்த தக்ஷனின் மகள்களின் பெயர்கள் பின்வருமாறு: அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிராதா, விஸ்வா*, வினதை, கபிலா, முனி மற்றும் கத்ரு ஆவர். {Aditi, Diti, Danu, Kala, Danayu, Sinhika, Krodha, Pradha, Viswa, Vinata, Kapila, Muni, and Kadru}
{2} திதிக்கு ஹிரண்ய கசிபு என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். அந்த சிறப்புமிகுந்த ஹிரண்யகசிபுவுக்கு உலகம் போற்றும் ஐந்து மகன்கள் இருந்தனர். எல்லோருக்கும் மூத்தவனின் பெயர் பிரஹலாதன், அடுத்தவன் ஸாஹ்ரதன், மூன்றாமவன் அனுராதா, அவனுக்கு அடுத்தவர்கள் சிபியும், வஷ்கலாவும் ஆவர். ஓ பரதா {ஜனமேஜயா}, பிரஹலாதனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அவர்கள் விரோசனா, கும்பா மற்றும் நிகும்பா ஆவர். விரோசனாவுக்கு பெரும் சக்தி கொண்ட வாலி என்ற மகன் இருந்தான். அந்த வாலியின் மைந்தன், வனா என்பவன் பெரும் அசுரன் என்று அறியப்பட்டான். பெரும் நற்பேறு அருளப்பட்டு அவன் ருத்ரனை வழிபட்டு வந்தான். அதனால் அவன் மஹாகாலன் என்ற பெயராலும் அறியப்பட்டான்..........
விரோசனன் {கேசினியிடம்}, “பிரஜாபதியிடம் இருந்து எழுந்த {அசுரர்களாகிய} நாங்களே சிறந்தவர்கள். ஓ! கேசினி, நாங்களே அனைத்து உயிர்களுக்கும் மேலானவர்கள், இவ்வுலகு எங்களுடையது என்பதில் ஐயமில்லை. தேவர்கள் யார்? பிராமணர்கள் யார்?” என்று கேட்டான். அதற்குக் கேசினி {விரோசனரிடம்}, “ஓ! விரோசனரே, நாம் இவ்விடத்திலேயே இருப்போமாக. நாளை இங்கே சூதன்வான் வருவார். நீங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காண என்னை அனுமதிப்பீராக” என்றாள். அதற்கு விரோசனன் {கேசினியிடம்}, “ஓ இனியவளே, அச்சமுடைய பெண்ணே {கேசினி}, நீ சொல்வதை நான் செய்வேன். காலையில் நானும் சூதன்வானும் சந்திப்பதை நீ காண்பாய்” என்றான்

விதுரன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இரவு கடந்து, சூரிய வட்டில் எழுந்ததும், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கேசினியுடன் விரோசனன் காத்திருந்த அந்த இடத்திற்கு, ஓ! தலைவா, சூதன்வான் வந்தான். அங்கே பிரஹலாதன் மகனையும் {விரோசனனையும்}, கேசினியையும் கண்டான். அந்த அந்தணன் {சூதன்வான்} அங்கே வந்ததைக் கண்ட கேசினி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தனது இருக்கையில் இருந்து எழுந்து அவனுக்கு ஓர் இருக்கையை அளித்து, கால் கழுவ நீரும், ஆர்க்கியாவும் கொடுத்தாள்.

விரோசனனால் (தனது இருக்கையைப் பகிர்ந்து கொள்ளும்படி) கேட்கப்பட்ட சூதன்வான், அவனிடம் {விரோசனனிடம்} “ஓ! பிரஹலாதன் மகனே {விரோசனா}, நான் உனது அற்புதமான தங்க இருக்கையைத் தொட்டாலும், உனக்குச் சமமாக என்னைக் கருதிக் கொண்டு, உன்னுடன் அதில் அமர மாட்டேன்” என்றான். அதற்கு விரோசனன் “ஒரு பலகைத் துண்டு, ஒரு விலங்கின் தோல், புல்லாலோ வைக்கோலாலோ ஆன பாய், ஆகியவை மட்டுமே, ஓ! சூதன்வான், உமக்குப் பொருத்தமானவை. எனினும், ஒரே இருக்கையை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் தகுதி உமக்கில்லை” என்றான்.

அதற்குச் சூதன்வான் {விரோசனனிடம்}, “தந்தை மற்றும் மகன், ஒரே வயதும், சமமான கல்வியும் கொண்ட பிராமணர்கள், இரு க்ஷத்திரியர்கள், இரு வைசியர்கள், இரு சூத்திரர்கள் ஆகியோர் ஓர் இருக்கையில் ஒன்றாக அமரலாம். இவர்களைத் தவிர வேறு யாரும் ஒன்றாக அமரக்கூடாது. நான் அமர்ந்ததைவிடத் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, உன் தந்தை {பிரஹலாதன்} எனக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். நீயோ எல்லா ஆடம்பரங்களுடனும் வீட்டில் வளர்க்கப்பட்ட குழந்தை என்பதால், எதையும் உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றான்.

விரோசனன் {சூதன்வானிடம்}, “அசுரர்கள் மத்தியில் இருக்கும் எல்லாத் தங்கத்தையும், பசுக்களையும், குதிரைகளையும், பிற வகைச் செல்வங்களையும் நான் பந்தயமாக வைக்கிறேன். ஓ! சூதன்வான், இந்தக் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிக்க வல்லவர்களிடம் சென்று நாம் கேட்போம். வாரும்” என்றான். அதற்குச் சூதன்வான், “உனது தங்கம், பசுக்கள், வீரர்கள் ஆகியவற்றை விடு, ஓ! விரோசனா, நமது உயிர்களை இழக்கும்படி {பந்தயம் வைத்து}, இக்கேள்விக்குத் தகுந்த பதிலளிக்க வல்லோரிடம் கேட்போம்” என்றான். விரோசனன், “நமது உயிர்களைப் பிணை வைத்து, நாம் எவ்விடம் செல்வோம்? தேவர்கள் முன்னிலையிலோ, மனிதர்களில் எவர் மத்தியிலோ நான் நிற்க மாட்டேன்” என்றான். அதற்குச் சூதன்வான் {விரோசனனிடம்}, “நமது உயிர்களைப் பிணையாக வைக்கும் நாம், உனது தந்தையை {பிரகலாதனை} அணுகுவோம். பிரஹலாதன், தன் மகனுக்காகக் கூடப் பொய்மையை ஒருபோதும் சொல்ல மாட்டான்” என்றான் {சூதன்வான்}.

விதுரன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிப்பட்ட பிணையை ஏற்றுக் கொண்ட விரோசனன் மற்றும் சூதன்வான் ஆகிய இருவரும் கோபத்தால் உந்தப்பட்டு, பிரஹலாதன் இருக்குமிடத்திற்குச் சென்றனர். அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்ட பிரஹலாதன், “முன்பு ஒருபோதும் சேர்ந்து காணப்படாதவர்கள், இப்போது கோபம்கொண்ட இரு பாம்புகள் போல ஒரே சாலையில் ஒன்றாக வருகின்றனரே” என்று நினைத்து, “எப்போதும் சேராத நீங்கள், இப்போது சேர்ந்துவிட்டீர்களா? ஓ! விரோசனா, நான் உன்னைக் கேட்கிறேன். உனக்கும் சூதன்வானுக்கும் இடையில் நட்பேற்பட்டதா?” என்று கேட்டான் {பிரகலாதன்}.

அதற்கு விரோசனன் {பிரகலாதனிடம்}, “எனக்கும் சூதன்வானுக்கும் இடையில் எந்த நட்பும் கிடையாது. மறுபுறம் நாங்கள் எங்கள் உயிர்களைப் பிணையாக வைத்துள்ளோம். ஓ! அசுரர்களின் தலைவரே {தந்தையே}, நான் உம்மை ஒரு கேள்வி கேட்பேன், அதற்குப் பொய்யாகப் பதிலளிக்காதீர்!” என்றான். அதற்குப் பிரஹலாதன் {சூதன்வானிடம்}, “நீரும், தேனும், தயிர்க்கடைசலும் சூதன்வானுக்குக் கொண்டுவரப்படட்டும். ஓ! அந்தணா, நீ எங்களது வழிபாட்டுக்குத் தகுந்தவன். பருத்த ஒரு வெண்பசு உனக்குத் தயாராக இருக்கிறது” என்றான் {பிரகலாதன்}.

அதற்குச் சூதன்வான் {பிரஹலாதனிடம்}, “நீர், தேன் மற்றும் தயிர்க்கடைசல் ஆகியவை, இங்கே வரும் வழியிலேயே எனக்கு வழங்கப்பட்டன. நான் உன்னிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். பிரஹலாதா, அதற்கு உண்மையான பதிலளிப்பாயாக! பிராமணர்கள் மேன்மையானவர்களா? விரோசனன் {அசுரன்} மேன்மையானவனா?” என்று கேட்டான். அதற்குப் பிரஹலாதன், “ஓ! அந்தணா, இவன் எனது ஒரே மகன். நீயும் இங்கே இருக்கிறாய். {பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களும், நான் அறிந்தவர்களும், எனது அன்பிற்குரியவர்களுமான நீங்கள் இருவரும் இங்கே இருக்கும்போது, என்னால் எப்படிப் பதிலளிக்க முடியும்?} நீங்கள் இருவரும் சர்ச்சை செய்து வரும் இந்தக் கேள்விக்கு, என்னைப் போன்றோர் எவ்வாறு பதிலளிக்க முடியும்?” என்று கேட்டான்.

சூதன்வான் {பிரஹலாதனிடம்}, “உன்னிடம் இருக்கும் உன் பசுக்களையும் பிற விலைமதிப்பற்ற செல்வங்களையும் உனது மகனுக்குக் கொடு. ஆனால், ஓ! ஞானம் கொண்டவனே {பிரகலாதா}, இருவர் சர்ச்சை செய்து வரும்போது, அதில் உண்மையைத் தீர்மானிக்க வேண்டியவன் நீயே” என்றான். அதற்குப் பிரஹலாதன், “ஓ! சூதன்வான், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு உண்மையில்லாமல் பொய்யைச் சொல்லி, தனது நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் எப்படிப்பட்ட பாதிப்படைவான்? நான் இதை உன்னிடம் கேட்கிறேன்” என்றான்.

அதற்குச் சூதன்வான் {பிரகலாதனிடம்}, “இரவு நேரத்தில், தன் சக்காளத்தின் கரங்களில் துயிலும் தனது கணவனைக் காணும் ஒரு {கணவனைப் பிரிந்த} மனைவி ஏங்குவதைப் போலவும், பகடையில் தோற்ற ஒரு மனிதனைப் போலவும், சுமக்க முடியாத பெரும் துன்பச் சுமையால் கீழே விழுபவன் போலவும், நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் பாதிக்கப்படுவான். அப்படிப்பட்ட மனிதன், {நகரத்தின் வாயில்களைக் கடந்து} உள்ளே செல்ல தடை செய்யப்பட்டு நகரத்தின் வாயில்களுக்கு வெளியே பட்டினியுடன் தங்க வேண்டியிருக்கும். போலி சாட்சிகளைக் கொடுப்பவன், உண்மையில், எதிரிகளையே எப்போதும் கண்டடையும்படி விதிக்கப்படுகிறான்.

ஒரு விலங்கின் காரணமாகப் பொய் பேசுபவனது தலைமுறையினரில் ஏறுமுக வரிசையில் ஐந்து மூதாதையர் வானரசில் {சொர்க்கத்தில்} இருந்து கீழே தள்ளப்படுகின்றனர். ஒரு பசுவின் காரணமாகப் பொய் பேசுபவனது பத்து மூதாதையர் சொர்க்கத்தில் இருந்து கீழே தள்ளப்படுகின்றனர். ஒரு குதிரையின் காரணமாகப் பொய் சொன்னால் நூறு பேரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும், ஒரு மனிதனின் காரணமாகப் பொய் சொன்னால், தனக்கு முன் ஏறு வரிசையில் ஆயிரம் மூதாதையரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும் காரணமாக {அப்பொய்யைச் சொன்னவன்} இருப்பான். தங்கத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால், தனது குலத்தில் பிறந்த, பிறக்காத அனைத்து உறுப்பினர்களும் அழிவுக்குள்ளாகிறார்கள். நிலத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால் {ஒருவனுடைய} அனைத்தையும் அவன் பாழாக்கிக் கொள்கிறான். எனவே, நிலத்திற்காக ஒருபோதும் பொய் பேசாதே” என்றான் {சூதன்வான்}.

பிரஹலாதன் {தன் மகன் விரோசனனிடம்}, “ஓ! விரோசனா, அங்கிரஸ் என்னைக் காட்டிலும் மேன்மையானவர், அதே போல, சூதன்வான் உன்னைக் காட்டிலும் மேன்மையானவன். சூதன்வானின் தாய் உன் தாயைக் காட்டிலும் மேன்மையானவள். எனவே, ஓ! விரோசனா, நீ சூதன்வானால் வீழ்த்தப்பட்டாய். இந்தச் சூதன்வானே இப்போது உனது உயிருக்குத் தலைவனாவான் {எஜமானன் ஆவான்}. ஆனால், ஓ! சூதன்வான், நீ விரோசனனுக்கு அவனது உயிரைக் கொடுக்க வேண்டும் எனவே நான் விரும்புகிறேன்” என்றான் {பிரஹலாதன்}.

அதற்குச் சூதன்வான் {பிரஹலாதனிடம்}, “ஓ! பிரஹலாதா, அறத்தைத் தேர்ந்தெடுத்து, மோகத்தால் நீ பொய் சொல்லாதிருந்ததால், நான் உன் அன்பிற்குரிய மகனின் {விரோசனனின்} உயிரை அவனுக்கு அளிக்கிறேன். ஓ! பிரஹலாதா, என்னால் உனக்கு மீட்டளிக்கப்பட்ட உனது மகன் இதோ இருக்கிறான். எனினும், அவன், கன்னிகை கேசினியின் முன்னிலையில் எனது காலைக் கழுவ வேண்டும்” என்றான் {சூதன்வான்}.


   

உலகை எப்போதும் ஆள்பவர்கள் யார்? - உத்யோக பர்வம் பகுதி 35ஆ

Those who rule the earth for ever| Udyoga Parva - Section 35b | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 35){விதுர நீதி - 7}
பதிவின் சுருக்கம் : பொய்மை பேசுவது தகாது என்றும், தேவர்கள் காக்க விரும்புவோருக்கு என்ன செய்கின்றனர் என்றும் விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; நீதியும் அறநெறிகளும் வெற்றியைக் கொடுக்கின்றன; மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவனை வேதங்கள் ஏன் கைவிடுகின்றன? பாவிகளின் செயல்கள், அந்தணர்களைக் கொன்ற இழிகுணம் கொண்டோர், மிளிர்வைத் தரும் எட்டு குணங்கள், நீதியின் பாதைகள், பாவம், அறம், உறுதிப்படுத்த முடியாதவை ஆகியவை குறித்து விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொல்வது...

விதுரன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான் “இக்காரணங்களுக்காக, ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, நிலத்தின் {நிலத்தின் மீது கொண்ட ஆசையின்} காரணமாகப் பொய்மை பேசுவது உமக்குத் தகாது. உமது மகனின் மீது கொண்ட பாசத்தால் பொய் சொன்னால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது பிள்ளைகள், அமைச்சர்கள் ஆகிய அனைவருக்கும் அழிவு விரைந்து வரும். மாடு மேய்ப்பவர்களைப் போலக் கையில் தடிகளைக் கொண்டு தேவர்கள் பாதுகாப்பதில்லை; ஆனால், பாதுகாக்கப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவோருக்கு, அவர்கள் {தேவர்கள்} நல்ல புத்தியை அளிக்கின்றனர்.


ஒருவன் நீதி மற்றும் அறநெறிகள் ஆகியவற்றில் கொண்டுள்ள கவனத்தின் விகிதத்தின் படியே ஒருவன் தனது நோக்கங்களில் வெற்றியடைகிறான் என்பதில் ஐயமில்லை. பொய்மையில் வாழும் ஏமாற்றுகர மனிதனை, வேதங்கள், பாவத்தில் இருந்து மீட்பதே இல்லை. மறுபுறம், புதிதாய் சிறகு படைத்த பறவைகள் தங்கள் கூடுகளைக் கைவிடுவதைப் போல, அவன் {ஏமாற்றுகர மனிதன்} மரணப்படுக்கையில் கிடக்கையில், அவை {வேதங்கள்} அவனைக் கைவிடுகின்றன.

குடிப்பழக்கம், சண்டை, அதிக எண்ணிக்கையிலான மனிதர்களிடம் பகை, திருமணம் தொடர்பான அனைத்து மோதல்கள், கணவன் மனைவிக்கு இடையேயான உறவின் முறிவு, உட்பகை, மன்னனுக்குத் துரோகம் ஆகியவை அனைத்தும் பாவிகளின் செயலாகும். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

கைரேகை பார்க்கும் ஒருவன், வணிகராக மாறிய திருடன், வேடன், {யோகி வேடம் பூண்ட} மருத்துவன், எதிரி, நண்பன், இழிந்த தன்மை கொண்டவன் ஆகிய ஏழு பேரும் சாட்சி அளிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர். செருக்கின் காரணமாகச் செய்யப்படும் அக்னிஹோத்ரம், அதே போன்ற நோக்கத்துக்காக நோற்கப்படும் பேசாநிலை {மௌனம்}, அதே நோக்கத்திற்காகச் செய்யப்படும் கல்வி மற்றும் வேள்வி ஆகிய {அக்னிஹோத்ரம், பேசாநோன்பு, கல்வி, வேள்வி ஆகியவை} நான்கையும் {நான்கின் நோக்கத்தையும்} அறியாமல், தேவையில்லாமல் {அல்லது அளவுக்கு அதிகமாக} செய்தால் அவை தீங்கையே தரும்.

{அந்தணர்களைக் கொன்ற இழிகுணம் கொண்டவர்கள்}


வீட்டைக் கொளுத்துபவன், நஞ்சைக் கையாள்பவன், பரத்தமைத் தரகன் {விபச்சாரத் தரகன் a pander}, சோமச் சாறு {சோமலதை} விற்பனையாளன், அம்புகளைச் செய்பவன், கணியன் {ஜோதிடன்}, நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், பிறன்மனை நயப்பவன் {an adulterer}, கருக்கலைப்பு செய்பவன், தனது ஆசானின் படுக்கையை மீறுபவன், மதுவுக்கு அடிமையான பிராமணன், கூரிய சொல் கொண்டவன், பழைய புண்ணைக் கிளறுபவன், இறைமறுப்பாளன் {நாத்திகவாதி}, வேதங்களைத் தூற்றுபவன், கையூட்டு {இலஞ்சம்} பெறுபவன், பரிந்துரைக்கப்பட்ட வயதைத் தாண்டி புனித நூலைத் தரித்துக் {உபநயனம் செய்து} கொள்பவன், கமுக்கமாகக் கால்நடைகளைக் கொல்பவன் [1], பாதுகாப்பு வேண்டுபவனைக் கொல்வபவன் ஆகிய தார்மீக அடிப்படையில் இழிகுணம் கொண்ட இந்த அனைவரும், அந்தணர்களைக் கொன்றவர்களாகவே கருதப்படுவர்.

[1] இந்த இடத்தில், வேறு பதிப்பில் கிராமப் புரோகிதன் என்று இருக்கிறது.

{சோதனை}


தங்கம் நெருப்பால் சோதிக்கப்படுகிறது; நல்ல பிறப்பு பிறந்தவன் தனது ஒழுக்கத்தாலும், நேர்மையானவன் தனது நடத்தையாலும் சோதிக்கப்படுகிறான். துணிச்சலுள்ளவன், அச்சம் நிறைந்த காலத்திலும்; தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு} உள்ளவன், வறுமையான காலத்திலும்; நண்பர்களும் எதிரிகளும் துயரம் மற்றும் ஆபத்தான காலங்களிலும் சோதிக்கப்படுகின்றனர். முதுமை அழகை அழிக்கும், இலக்கில் {இலட்சியத்தில்} நம்பிக்கை பொறுமையையும், மரணம் வாழ்வையும், பொறாமை நீதியையும், கோபம் செழிப்பையும், தாழ்ந்தவருடன் சேர்க்கை நன்னடத்தையையும், காமம் பணிவையும், செருக்கு அனைத்தையும் அழித்துவிடும்.

{இந்த எட்டுக் குணங்கள் ஒருவனுக்கு மிளிர்வைத் தருகின்றன}


நற்செயல்களில் செழிப்புப் பிறக்கிறது, செயல்பாட்டின் விளைவாக அது வளர்கிறது, திறனின் விளைவாக அஃது ஆழமாக வேர்விடுகிறது, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதால் {சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதால்} அஃது உறுதி பெறுகிறது. அறிவு, நல்ல குலத்தில் பிறப்பு, தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு}, சாத்திரங்களின் அறிவு, ஆற்றல், வம்பளப்பு இல்லாமை {மிதமான பேச்சு}, சக்திக்குத்தக்கபடி தானம், நன்றியறிதல் ஆகிய எட்டு குணங்களும் அதைக் கடைப்பிடிப்பவனை மிளிரச் செய்கின்றன. ஆனால், ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, இந்தக் குணங்கள் அனைத்தையும் ஒன்றுபடச்செய்யக் கூடிய அறக்கொடை ஒன்று மட்டுமே உள்ளது. உண்மையில், ஒரு மன்னன் ஒரு குறிப்பிட்ட மனிதனை மதிக்கும்போது, அந்த அரச உதவி, இந்தப் பண்புகள் அனைத்தையும் (உதவி பெற்றவனிடம்) மிளிரச் செய்யும். மனிதர்களின் உலகில், அந்த எட்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தைக் குறிப்பதாகும்.

(கீழ்க்குறிப்பிட்ட) எட்டில், நான்கு, நன்மையுடன் பிரிக்கமுடியாதபடி தொடுக்கப்பட்டுள்ளது {இணைக்கப்பட்டுள்ளது}. மற்ற நான்கும் எப்போதும் நல்லவர்களால் பின்பற்றப்படுகிறது. நன்மையுடன் பிரிக்கமுடியாதபடி பிணைக்கப்பட்டுள்ள முதல் நான்கு, வேள்வி, கொடை, கல்வி மற்றும் தவம் ஆகியன ஆகும். அதேவேளையில், தன்னடக்கம், உண்மை, எளிமை, எவருக்கும் ஊறிழையாமை {அஹிம்சை} ஆகிய மற்ற நான்கும் எப்போதும் நல்லவர்களால் பின்பற்றப்படுகின்றன.

{நீதியின் எட்டு வெவ்வேறு பாதைகள்}


வேள்வி, கல்வி, ஈகை, தவம், உண்மை, மன்னிக்கும் மனநிலை {பொறுமை}, இரக்கம் {கருணை}, மனநிறைவு ஆகியன நீதியில் உள்ளடங்கிய எட்டு வெவ்வேறு பாதைகளாகும். இவற்றில் முதல் நான்கு பெருமைக்காகப் பயிலப்படலாம், ஆனால் கடைசி நான்கும் உண்மையில் உன்னதமானவர்களிடம் மட்டுமே இருக்கும்.

{சபை}


பெரியோரில்லாத சபையேதும் இல்லை {பெரியோரில்லாதது சபையாகாது}. அறநெறி எது என்பதைத் தீர்மானிக்காதவர்கள் பெரியோரல்ல {தர்மத்தைச் சொல்லாதவர் பெரியோரல்ல}. உண்மையில் இருந்து பிரிந்து இருப்பது அறநெறியல்ல {சத்தியம் இல்லாதது தர்மம் அல்ல}. வஞ்சனை நிறைந்தது உண்மையல்ல {கபடம் கொண்டது சத்தியம் அல்ல}. உண்மை, அழகு, சாத்திரம் அறிதல், அறிவு, உயர்பிறப்பு, நன்னடத்தை {ஒழுக்கம்}, வலிமை, செல்வம், துணிச்சல், பல்வேறு பேச்சுத்திறன்கள் ஆகிய பத்தும் சொர்க்கத்திற்கான காரணங்களாகும்.

{பாவம்}


பாவத்தை இழைக்கும் ஒரு பாவி, அனைத்து தீய விளைவுகளாலும் தாக்கப்படுகிறான். அறம் பயிலும் அறவோன் {நல்லவன்}, பெரும் மகிழ்ச்சியை அறுவடை செய்கிறான். எனவே, ஒரு மனிதன், கடுந்தீர்மானத்துடன் {கடும் விரதத்துடன்} பாவத்தில் இருந்து விலக வேண்டும், மீண்டும் மீண்டும் இழைக்கப்படும் பாவம், அறிவை அழிக்கிறது; அறிவை இழந்த மனிதன் மீண்டும் மீண்டும் பாவத்தைச் செய்கிறான்.

{அறம்}


மீண்டும் மீண்டும் பயிலப்படும் அறம் அறிவை மேம்படுத்துகிறது; அறிவு வளர்ந்த மனிதன் மீண்டும் மீண்டும் அறம் பயில்கிறான். அறத்தைப் பயிலும் அறவோன் அருள் நிறைந்த உலகங்களுக்குச் செல்கிறான். எனவே, ஒரு மனிதன் அறம் பயில உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும். பொறாமையுள்ளவன், பிறரை ஆழமாகக் காயப்படுத்துபவன், கொடூரன், தொடர்ச்சியாகச் சண்டையிடுபவன், வஞ்சகன் ஆகியோர் இந்தப் பாவங்களைப் பயில்வதால் விரைவில் பெருந்துன்பத்தைச் சந்திக்கின்றனர்.

பொறாமையில்லாதவனும், அறிவுடையவனும், எப்போதும் நன்மையைச் செய்வதால், பெருந்துன்பத்தை அவன் சந்திப்பதே இல்லை; மறுபுறம் அவன் எங்கும் ஒளிர்கிறான். ஞானிகளிடமிருந்து ஞானத்தைப் பெறுபவனே உண்மையில் கற்றவனும், ஞானியுமாவான். அறம், பொருள் ஆகிய இரண்டையும் கவனித்து, மகிழ்ச்சியை அடைவதில் வென்றவனே ஞானியாவான்.

இரவை மகிழ்ச்சியாகக் கடத்த உம்மைத் தகுந்தவராக்கும் காரியத்தைப் பகலில் செய்யும். மழைக்காலங்களை மகிழ்ச்சியாகக் கடத்த உம்மைத் தகுந்தவராக்கும் காரியங்களை வருடத்தின் எட்டு மாதங்களில் செய்வீராக. முதிர்ந்த வயதில் மகிழ்ச்சிக்கு எது உத்தரவாதம் அளிக்குமோ அதை இளமையில் செய்யும்; மறுமையில் மகிழ்ச்சியாக வாழத் தகுந்தவனாக்கும் எதையும் முழு வாழ்விலும் செய்யும்.

எளிதாகச் செரிக்கும் உணவையும், இளமை கடந்த மனைவியையும், வெற்றி பெற்ற வீரனையும், முயற்சிகளில் வெற்றி மகுடம் பெற்ற துறவியையும் ஞானிகள் புகழ்கின்றனர்.

அநீதியாக அடைந்த செல்வத்தால் ஏற்பட்ட இடைவெளி அடைபடாமலேயே நீடிக்கிறது. அதேவேளையில் புதியவற்றால் வேறு இடங்களிலும் {அடைபடாத இடைவெளிகள்} தோன்றுகின்றன. தங்கள் ஆன்மாக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போரை ஆசான் கட்டுப்படுத்துகிறார்; தீயோரை மன்னன் கட்டுப்படுத்துகிறான்; அதே வேளையில், கமுக்கமாகப் பாவமிழைப்போரை, விவஸ்வத்தின் மகனான யமன் கட்டுப்படுத்துகிறான்.

{ஆய்ந்து உறுதிபடுத்த முடியாதவை}


முனிவர்கள், நதிகள், நதிக்கரைகள், உயர் ஆன்ம மனிதர்கள் ஆகியவற்றின் பெருமைகளையும் பெண்களின் தீய குணங்களுக்கான காரணங்களையும் உறுதியாகச் சொல்ல முடியாது {அல்லது அவற்றின் மூலத்தை அறிய முடியாது}.

{உலகை எப்போதும் ஆள்பவர்கள் யார்?}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தணர்களின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், தானம் அளிப்பவனும், தன் உறவினர்களிடம் நீதியுடன் நடந்து கொள்பவனும், மேன்மையுடன் {உன்னதமாக} நடந்து கொள்ளும் க்ஷத்திரியனும் எப்போதும் உலகை ஆள்வான். துணிச்சல் உள்ளவனும், கல்வி உள்ளவனும், பிறரைப் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்தவனும் ஆகிய மூவரும், உலகத்தில் இருந்து தங்க மலர்களைச் சேகரிக்க {பொன்விளையும் பூமியை ஈட்ட} எப்போதும் இயன்றவர்களாவார்கள்.

அறிவால் சாதிக்கப்பட்ட செயல்களே முதன்மையானவை {சிறந்தவை}; கரங்களால் சாதிக்கப்பட்டவை இரண்டாம் {மத்திம} தரம்; தொடைகளாலும், தலையில் பாரஞ்சுமந்து செய்யப்பட்ட செயல்கள் மிக இழிந்தவை. துரியோதனன், சகுனி, மூடனான துச்சாசனன், கர்ணன் ஆகியோரிடம் உமது நாட்டின் பராமரிப்பைக் கொடுத்துவிட்டு, செழிப்பை நீர் எவ்வாறு நம்பலாம்? ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்து அறங்களையும் கொண்ட பாண்டவர்கள் தங்கள் தந்தை போல உம்மை நம்பி இருக்கிறார்கள். ஓ!, உமது மகன்களுக்கு அளித்தது போல அவர்களுக்கும் {நாட்டை} அளியும்” என்றான் {விதுரன்}.


  

தோழமை? - உத்யோக பர்வம் பகுதி 36அ

Companionship?| Udyoga Parva - Section 36a | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 36) {விதுர நீதி - 8}
பதிவின் சுருக்கம் : பழங்காலத்தில் ஆத்ரேயருக்கும்  சாத்யர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலை விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது;  அவதூறுகளையும் நிந்தனைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும்; கடுஞ்சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்றும்;  மௌனம் மற்றும் உண்மையின் சிறப்பையும்,  தோழமை குறித்தும்  ஆத்ரேயர் சாத்யர்களுக்குச் சொன்னது…

விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான் “இது தொடர்பாகப் பழங்கதையான அத்ரியின் மகனுக்கும் {ஆத்ரேயருக்கும்}, சாத்யர்கள் என்று அழைக்கப்பட்ட தேவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல் மேற்கோள் காட்டப்படுகிறது. பழங்காலத்தில் சாத்யர்கள் என்ற பெயரில் அறியப்பட்ட தேவர்கள், வாழ்வாதாரத்திற்காக இரந்துண்டு உலாவி கொண்டிருந்த உயர்ந்த ஞானமும், கடுந்தவமும் கொண்ட பெரும் முனிவரிடம் (அத்ரியின் மகனிடம்} கேள்வி கேட்டனர்.

{ஆத்ரேயருக்கும் சாத்யர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல்}


சாத்யர்கள் {ஆத்ரேயரிடம்}, “ஓ! பெரும் முனிவரே, சாத்யர்கள் என்று அறியப்படும் தேவர்கள் நாங்கள். உம்மைக் கண்டு, நீர் யார் என்பதை அனுமானிக்க இயலாமல் இருக்கிறோம். எனினும், சாத்திர அறிவின் விளைவால் ஏற்பட்ட புத்திக்கூர்மையும், தற்கட்டுப்பாடும் உடையவர் நீர் என்று எங்களுக்குத் தெரிகிறது. எனவே, கல்வி அறிவு நிறைந்த, பரந்த மனம் கொண்ட வார்த்தைகளை எங்களிடம் பேசுவதே உமக்குத் தகும்” என்றனர்.

{அவதூறுகளும் நிந்தனைகளும்}


அதற்கு அந்தப் பிச்சைக்கார முனிவர் {ஆத்ரேயர் சாத்யர்களிடம்}, “இறவாதவர்களே {அமரர்களே/தேவர்களே}, அமைதியான நிலை, அனைத்து உணர்வுகளிலும் ஆற்றல் {கட்டுப்பாடு}, உண்மை அறம் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் துணையுடன், ஒருவன், தனது இதயத்தில் இருக்கும் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து, ஏற்புடையவை, ஏற்பில்லாதவை ஆகிய இரண்டையும் தன்னைப் {சுயத்தைப்} போன்றே {தனக்குச் சமமாகக்} கருத வேண்டும்.

பிறர் செய்யும் நிந்தனைகளையோ, பழியையோ ஒருவன் திரும்பச் செய்யக்கூடாது. அவற்றைப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டால், தன்னால் உணரப்படும் வலி, நிந்திப்பவனை எரித்துவிடும். மேலும், {பழியையோ, நிந்தனையையோ} தாங்கிக் கொள்பவன், நிந்திப்பவனின் நல்வினைப் பயன்களையும் {புண்ணியங்களை} தனதாக்கிக் கொள்வதில் வெல்கிறான். {எனவே}, அவதூறு கூறுவதிலோ, நிந்திப்பதிலோ ஈடுபடாதீர். பிறரை இழிவு படுத்தவும் அவமதிக்கவும் செய்யாதீர். நண்பர்களுடன் சண்டையிடாதீர். தீயவர்கள் மற்றும் இழிந்தவர்களின் தோழமையில் இருந்து விலகுவீராக. ஆணவ மற்றும் இழிந்த நடத்தை கொள்ளாதீர்.

கோபம் நிறைந்த கடுஞ்சொற்களைத் தவிர்ப்பீர். எலும்புகள், இதயம், மனிதர்களின் வாழ்வாதாரங்கள், ஏன் உயிரையே கூடக் கடுஞ்சொற்கள் எரித்துவிடும். எனவே, அறம் சார்ந்து இருப்பவன் {நல்லவன்}, கோபம் நிறைந்த கடுஞ்சொற்களை எப்போதுமே விலக்க வேண்டும். முள்ளெனும் வார்த்தைகளால் பிறரின் உயிரையே துளைக்கும் கோபம் நிறைந்த கடும் பேச்சுடைய இழிந்தவன், தனது நாவில் நரகத்தையே கொண்டிருக்கிறான். எப்போதுமே மனிதர்களுக்குத் துயரத்தை வழங்குபவன் அவன் என்று கருதப்பட வேண்டும்.

சூரியனைப் போன்றோ நெருப்பைப் போன்றோ வெப்பமுடையவையும், கூரிய முனை கொண்டவையுமான பிறரின் சொல்லம்புகளால், ஆழமான காயமடைந்து, வலியால் எரிந்தாலும், ஒரு ஞானம் கொண்ட மனிதன், {அப்படித் தன்னை} நிந்திப்பவனுடைய நற்தகுதிகள் {நல்வினைப்பயன்கள்} தன்னுடையதாகும் என்பதை நினைவில் கொண்டு, அவற்றைப் {அந்தச் சொல்லம்புகளைப்} பொறுமையாகத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

நல்லவனுக்காகக் காத்திருப்பவன் {பணி செய்பவன்}, தீயவனுக்காகக் காத்திருப்பவன், தவத்தகுதியுடையவனுக்காகக் காத்திருப்பவன், திருடனுக்காகக் காத்திருப்பவன் ஆகியோர், சாயத்தில் தோய்த்த துணியைப் போல, விரைவில் தனது தோழனின் நிறத்தையே அடைவார்கள்.

நிந்தையால் காயப்பட்டவன், தானும் திரும்ப நிந்திக்காமல், பிறரையும் ஏவாமலோ, அடிவாங்கிய பிறகு திரும்ப அடிக்காமல், பிறரையும் ஏவாமலோ, தன்னைக் காயப்படுத்தியவனுக்குச் சிறு காயத்தையும் விரும்பாமலோ இருக்கும்போது, அவனுடைய தோழமையைத் தேவர்களே கூட விரும்புகிறார்கள்.

{மௌனமும், உண்மையும்}


பேச்சைவிட மௌனமே சிறந்தத்து என்று சொல்லப்படுகிறது. பேசத்தான் வேண்டும் என்றால், உண்மையைச் சொல்வதே சிறந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அதை ஏற்புடைய வகையில் இனிமையாகச் சொல்வதே சிறந்தது. ஏற்புடையவை சொல்லப்பட வேண்டுமென்றால் அறநெறிக்கு இசைவானதைச் சொல்வதே சிறந்தது.

{துணை [அ] தோழமை [அ] நட்பு}


ஒரு மனிதன் யாருடன் வாழ்கிறானோ, சரியாக அவனைப் போலவே அவன் ஆகிறான். அல்லது அவன் யாரை மதிக்கிறானோ அவனைப் போல ஆகிறான். அல்லது, தான் யார் போல ஆக வேண்டும் என்று நினைக்கிறானோ அவனைப் போலவே ஆகிறான்.

ஒரு மனிதன் எந்தப் பொருட்களைத் விலக்குகிறானோ அவற்றில் இருந்து விடுபடுகிறான். ஒருவன் அனைத்தையும் விட்டுவிட்டால், அவனைச் சிறு துயரமும் பாதிக்காது. அப்படிப்பட்ட ஒரு மனிதன் பிறரை வீழ்த்துவதில்லை, அதே போலப் பிறரால் வீழ்த்தப்படுவதுமில்லை. அவன் பிறரை எதிர்க்கவோ அவர்களைக் காயப்படுத்துவதோ இல்லை. அவன் புகழுக்கும், பழிக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அவன் துயரப்படுவதுமில்லை மகிழ்வதுமில்லை.

அனைவருக்கும் செழிப்பை விரும்புபவனும், பிறருக்குத் துயரேற்படுத்த மனதில் நினையாதவனும், பேச்சில் உண்மையுள்ளவனும், நடத்தையில் அடக்கம் கொண்டவனும், தனது அனைத்து ஆசைகளையும் கட்டுக்குள் வைத்திருப்பவனுமான ஒரு மனிதன் தன் வகை இனங்களிலேயே முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்.

உண்மையல்லாதவற்றைச் சொல்லி ஆறுதல் கூறாதவனும், உறுதியளித்தபடி கொடுப்பவனும், பிறரின் பலவீனத்தில் ஒரு கண் வைத்திருப்பவனுமான மனிதன், நல்ல தன்மையில் {முதன்மையானவனுமல்லாமல், இழிந்தவனுமல்லாமல் இருக்கும்} நடுத்தர மனிதன் என்று கருதப்படுகிறான்.

கட்டுப்படுத்த இயலாமை, ஆபத்துகளால் பாதிப்படையக் கூடிய நிலை, கோபத்துக்கு வழிகொடுத்து, அதற்கு உள்ளாவது, நன்றிமறப்பது, பிறருக்கு நண்பனாக இயலாமை, தீய இதயம் ஆகியவை ஒரு தீய மனிதனின் குறியீடுகளாகும். பிறரிடம் இருந்து வரும் நன்மையில் மனநிறைவு கொள்ளாமல், தன்னையே கூடச் சந்தேகித்துக் கொள்பவன், தன்னிடம் இருந்து தன் உண்மையான நண்பர்களையே விரட்டி விடுபவன் மனிதர்களில் இழிந்தவனாவான்.

தனக்குச் செழிப்பை விரும்புபவன், நல்லவர்களுக்குக் காத்திருக்க {பணி செய்ய} வேண்டும். சில நேரங்களில் பாகுபாடற்றவருக்கும் காத்திருக்கலாம். ஆனால் தீயவர்களுக்காகக் காத்திருக்கவே கூடாது. தீயவன், தன் பலத்தாலும், தொடர் முயற்சியாலும், புத்திக்கூர்மையாலும், ஆற்றலாலும் செல்வம் ஈட்டுவான் என்பது உண்மையே, ஆனால், அவனால் நேர்மையான புகழை வெல்லவே முடியாது. அதே போல, (அவன் எக்குலத்தில் பிறந்திருந்தாலும்) அவனால், உயர் குடும்பங்களின் நடத்தைகளையோ அறங்களையோ அடையவே முடியாது” என்றார் {ஆத்ரேயர்}


   

உயர் குடும்பங்கள்? - உத்யோக பர்வம் பகுதி 36ஆ

High families?| Udyoga Parva - Section 36b | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 36) {விதுர நீதி - 9}
பதிவின் சுருக்கம் : உயர்ந்த குடும்பங்கள், நட்பு, துயரம் ஆகியவற்றின் இலக்கணங்களை விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; எவை உயர்ந்த குடும்பங்கள்? எவை தாழ்ந்த குடும்பங்கள்? உயர்ந்த குடும்பங்கள் எப்படி வீழ்ச்சியடைகின்றன; வீழ்ச்சியடையாமல் இருக்க எதைப் பேண வேண்டும்? எது நட்பு? நட்பை எப்போது அறிய முடியும்? சோகம் மனிதனை எந்நிலைக்கு ஆளாக்குகிறது? அறிவு எப்படிப் புலன்கள் வழியாக அழிவடைகிறது? போன்றவற்றை விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது …

{உயர்ந்த குடும்பங்கள் [அ] உயர்குலங்கள்}


திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான், “அறம், பொருள் ஆகிய இரண்டிலும் இருந்து வழுவாமல், அந்த இரண்டையும் மதிப்போரும், பெரும் கல்வியறிவு உடையோரும், தேவர்களும் கூட உயர்ந்த குடும்பங்களைத் தாங்கள் விரும்புவதாகவே வெளிப்படுத்துகின்றனர். ஓ! விதுரா, உயர்ந்தவை {மகாகுலங்கள்} என எக்குடும்பங்கள் அழைக்கப்படுகின்றன? என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்” என்றான்.


அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “தவம், தன்னடக்கம் {புலனடக்கம்}, வேத அறிவு, {பொறுமை} [1], வேள்விகள், தூயத் திருமணங்கள், அன்ன தானங்கள் ஆகிய ஏழும் அந்தக் {உயர்} குடும்பங்களில் இருக்கும்; அங்கே {அந்த உயர் குடும்பங்களில்} அவை முறையாகப் பயிலப்பட்டு, உயர்வாக மதிக்கப்படுகின்றன. எவை சரியான பாதையில் இருந்து வழுவாமல் இருக்கின்றனவோ, எவற்றில் இருந்த உயிர்நீத்த மூதாதையர் (தங்கள் வழித்தோன்றல்கள் தவறுகள் இழைப்பதைக் கண்டு) வலிக்கு உள்ளாவதில்லையோ, எவை அனைத்து அறங்களையும் உற்சாகமாகப் பயில்கின்றனவோ, எவற்றில் பிறந்தோர் தாங்கள் பிறந்த குலத்தின் தூய புகழை மேம்படுத்த விரும்பி, எந்த வகையான பொய்மையையும் தவிர்க்கின்றனரோ அவையே உயர்ந்த குடும்பங்களாகும் {மகா குலங்களாகும்}.

[1] இது கங்குலியின் பதிப்பில் இல்லை. ஆனால் ஏழு என்று கங்குலி குறிப்பிடுகிறார். எனவே, வேறு பதிப்பில் இருந்து இது எடுத்துக் கையாளப்பட்டிருக்கிறது.

{உயர்ந்த நிலையில் இருந்து வீழ்ந்து இழிவடையும் குடும்பங்கள்}


வேள்விகள் செய்யாமை, தூய்மையற்ற திருமணங்கள், வேதங்களைப் புறக்கணித்தல், அந்தணர்களை அவமதித்தல் ஆகியவற்றைச் செய்யும் குடும்பங்கள் தங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து கீழே விழுந்து இழிந்தவை ஆகின்றன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குடும்பங்களின் உறுப்பினர்கள், அந்தணர்களைப் பற்றி அவதூறு பேசி, அவர்களை அவமதிப்பதாலோ, அவர்களிடம் {அந்தணர்களிடம்} உள்ளவற்றை மோசடி செய்து பறிப்பதாலோ அக்குடும்பங்கள் வீழ்ந்து இழிந்தவையாகின்றன. {குடும்ப} உறுப்பினர்களும், செல்வமும், பசுக்களும் கொண்டிருந்தாலும், நன்னடத்தை இல்லாவிட்டால் அவை குடும்பங்களாகக் கருதத்தக்கவையல்ல. அதே வேளையில், செல்வமற்றிருந்தாலும், தனித்துவக் குணங்களும், நன்னடத்தையும் கொண்ட குடும்பங்களே, குடும்பங்கள் என்று கருதப்பட்டுப் பெரும் புகழை வெல்கின்றன. எனவே, நல்ல குணங்களையும், நல்ல நடத்தையையும் கவனத்துடன் பேண வேண்டும். செல்வத்தைப் பொறுத்தவரை, அது வரும் அல்லது போகும். {செல்வம் இன்று வரும், நாளை போகும். அதனால் நன்னடத்தையையே எப்போதும் பேண வேண்டும்}.

செல்வமில்லாதவன் உண்மையில் குறைந்தவனல்ல. ஆனால், குணமோ, நடத்தையோ இல்லாதவன் உண்மையில் குறைந்தவனே {ஒன்றும் இல்லாதவனே}. பசுக்களும், கால்நடைகளும், உழவு உற்பத்தியும் நிறைந்து இருந்தாலும், நல்ல குணங்களும் நடத்தையும் இல்லாதிருந்தால், உண்மையில் அக்குடும்பங்கள் மதிப்புக்கும், புகழுக்கும் தகுந்தவை அல்ல.

சண்டைகளுக்கு வித்திடுபவனாகவோ, மன்னனுக்கு அமைச்சனாகவோ, பிறர் செல்வத்தைத் திருடுபவனாகவோ, குடும்பப் பகையைத் தூண்டுபவனாகவோ, ஏமாற்றுக்காரனாகவோ, பொய் நடத்தை கொண்டவனாகவோ, முனிவர்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர் ஆகியோரைச் உபசரிப்பதற்கு முன்பு உண்பவனாகவோ நமது குலத்தில் எவனும் இல்லாதிருக்கட்டும். அந்தணர்களைக் கொல்பவனோ, அவர்களிடம் வெறுப்பை ஊக்குவிப்பவனாகவோ, உழவைத் தடுப்பவனாகவோ, அதற்குத் தீங்கு விளைவிப்பவனாகவோ இருக்கும் ஒருவன் நமது குலத்தில் கலவாதிருக்கட்டும்.

(இருக்கைக்கு) வைக்கோலும் {புல்லும்}, (அமர்வதற்குத்) தரையும், (பாதம் மற்றும் முகம் கழுவ) நீரும், நான்காவதாக இனிய சொற்களும் நல்லோர் வீடுகளில் இல்லாதிருக்காது. நீதிமிக்கச் செயல்களைப் பயில்வதில் அர்ப்பணிப்போடு இருக்கும் அறம்சார்ந்த மனிதர்கள், மரியாதையுடன் கொடுத்து (விருந்தினர்களை) உபசரிக்க விரும்பி, {பாய், தரை, நீர், இனிய சொல் ஆகியவற்றை} எப்போதும் தயாராக வைத்திருப்பார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்தன மரம் மெலிதாக இருந்தாலும், (மிகத் தடிமனான) பிற மரங்கள் தாங்க முடியாத பாரத்தைத் தாங்குவது போல, உயர் குடும்பங்களில் உள்ளோர், சாதாராண மனிதர்களால் இயலாத காரியமான, பெரும் சுமையைச் சுமக்க இயன்றவர்களாக எப்போதும் இருக்கிறார்கள்.

{நட்பு}


எவனுடைய கோபம் பயத்தைக் கொடுக்கிறதோ, எவன் மீது கொண்ட பயத்தால் அவனுக்காக ஒருவன் காத்திருக்கிறானோ அவன் நண்பனல்ல. ஆனால், எவனிடம் ஒரு தந்தையிடம் கிடைக்கும் ஆறுதலை ஒருவன் பெறுகிறானோ, அவனே அவனுக்கு உண்மையான நண்பனாவான். பிற நட்புகள் சாதாரணத் தொடர்புகளே. பிறப்பால் இரத்தத் தொடர்பு இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆதரவளிப்பவனாகவும், பாதுகாப்பாளனாகவும் இருப்பவனே ஒருவனுக்கு உண்மையான நண்பனாக இருக்க முடியும். நிலையற்ற இதயம் கொண்டவனோ, பெரியோருக்காகக் காத்திருக்காதவனோ, மனநிலையில் உறுதியற்றவனோ நண்பர்களைப் பெறவே முடியாது.

நீர்வற்றிய குளங்களைக் கைவிடும் அன்னங்களைப் போல, (நோக்கங்களை அடைய விரும்பும்) நிலையற்ற இதயம் கொண்டவனையோ, மனதைக் கட்டுக்குள் வைக்காதவனையோ, புலன்களுக்கு அடிமையானவனையோ, வெற்றிக் கைவிடுகிறது. மனதளவில் பலமற்றவர்களே திடீரெனக் கோபத்தையோ, போதுமான காரணமே இல்லாமல் மனநிறைவையோ அடைகிறார்கள்; அவர்கள் நிலையற்ற மேகங்களைப் போன்றவர்களாவர்.

நண்பர்களால் உபசரிக்கப்பட்டும், {அவர்களால்} ஆதாயமடைந்தும்கூட, {அவர்களிடம்} நன்றிமறந்து இருப்பவர்களின் பிணங்களை, இரை தேடித் திரியும் பறவைகள் கூடத் தவிர்க்கின்றன. நீர் ஏழையாக இருந்தாலும், செல்வந்தனாக இருந்தாலும் உமது நண்பர்களை மதிப்பீராக. ஏதாவதொரு சேவை {உதவி} கேட்கப்படும் வரை, நண்பர்களின் நேர்மையையும், நேர்மையற்ற தன்மையையும் அறிய முடியாது.

{துயரம்}


சோகம் அழகைக் கொல்கிறது {அழிக்கிறது}; சோகம் பலத்தைக் கொல்கிறது; சோகம் புரிதலைக் கொல்கிறது; மேலும் சோகம் நோயைக் கொடுக்கிறது. துயரம் என்பது, ஒருவனின் நோக்கத்தை அடைய உதவாமல், {அவனது} உடலை வற்ற செய்து, எதிரிகளை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எனவே, துயரத்திற்கு உம்மைக் கொடுக்காதீர் {துயரத்துக்கு ஆட்படாதீர்}.

மனிதர்கள் இறந்து மீண்டும் பிறப்பது அடிக்கடி நிகழ்கிறது; அவர்கள் அடிக்கடி வளர்ந்து உதிர்கின்றனர். அடிக்கடி அவர்கள் பிறர் உதவியைக் கேட்கிறார்கள், அவர்களது உதவியும் பிறரால் கேட்கப்படுகிறது; அடிக்கடி அவர்கள் புலம்புகிறார்கள், அவர்களிடமும் {பலர்} புலம்புகிறார்கள். மகிழ்ச்சி மற்றும் துயரம், நிறை மற்றும் குறை, ஆதாயம் மற்றும் இழப்பு {இலாபம் மற்றும் நஷ்டம்}, வாழ்வு மற்றும் மரணம், ஆகியவை முறையான வரிசையில் அனைவராலும் அனுபவிக்கப்படுகின்றன. எனவே, தற்கட்டுப்பாடு கொண்ட ஒருவன் இன்பத்தில் மகிழ்ச்சியடையவும், துன்பத்தில் துயரடையவும் கூடாது.

ஆறுபுலன்களும் {மனத்துடன் கூடிய ஐம்பொறிகளும்} எப்போதும் அமைதியற்றே இருக்கின்றன. பானையின் ஓட்டைகளின் வழியாக ஒழுகும் நீரைப் போல, அவற்றில் {ஆறு புலன்களில்} முக்கியமான ஒன்றின் வழியாக, தான் கொண்ட பலத்துக்குத் தக்க வகையில் அறிவு அழிவடைகிறது”, என்றான் {விதுரன்}.


   

தனி மரம் தோப்பாகாது! - உத்யோக பர்வம் பகுதி 36இ

A single tree cannot be a grove?| Udyoga Parva - Section 36c | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 36) {விதுர நீதி - 10}
பதிவின் சுருக்கம் : நெருப்பு போல இருக்கும் யுதிஷ்டிரன் தனது மகன்களை அழித்துவிடுவான் என்று தான் அஞ்சுவதாகத் திருதராஷ்டிரன் சொல்வது; அச்சத்தைத் தவிர்க்கும் வழிவகைகளை விதுரன் சொல்வது; உறவினர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைச் சொல்வது; ஒற்றுமையின் வலிமை குறித்துச் சொல்வது; கொல்லத்தகாதவர்கள் யார்? உடல்நலத்தின் முக்கியத்துவம், சினத்தின் தன்மை ஆகியவற்றைச் சொல்லி வலிமை மற்றும் மென்மையுடன் கூடிய செழிப்பை அடைவதே உண்மையான கொள்கை எனச் சொல்வது;  சூதாட்டத்தின் போது தான் எச்சரித்ததையும், திருதராஷ்டிரன் அதை ஏற்காததையும் சொல்லி, துரியோதனனை அவனது தீய வழிகளில் இருந்து திருப்பும்படி விதுரன் சொல்வது...

திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “நெருப்புச்சுடர் போன்ற மன்னன் யுதிஷ்டிரன் என்னால் ஏமாற்றப்பட்டான். அவன் நிச்சயம் எனது மகன்களைப் போர்க்களத்தில் அடியோடு அழிப்பான். எனவே, அனைத்தும் ஆபத்து நிறைந்ததாகவே எனக்குத் தெரிகிறது. என் மனம் முழுவதிலும் கவலையே இருக்கிறது. ஓ! பெரும் புத்திசாலித்தனம் கொண்டவனே {விதுரா}, என் கவலைகளை அகற்றும் வகையிலான சொற்களை எனக்குச் சொல்வாயாக” என்றான்.


அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, அறிவு மற்றும் தவத்தைத் தவிர, புலன்களை அடக்குவதைத் தவிர, பேராசையைக் கைவிடுவதைத் தவிர வேறு எதிலும் நான் நன்மையைக் காணவில்லை. தன்னறிவால் {ஆன்ம ஞானத்தால்}, அச்சம் அகலுகிறது; தவத்தால், பெரியதும் மதிப்புமிக்கதும் வெல்லப்படுகிறது; பெரியோருக்காகக் காத்திருப்பதால் {பெரியோருக்குப் பணிவிடை செய்வதால்}, கல்வி அடையப்படுகிறது, தன்னடக்கத்தால் {புலனடக்கத்தால்}, அமைதி பெறப்படுகிறது.

கொடையாலோ, வேதச் சடங்குகளைப் பயில்வதாலோ கிடைக்கும் தகுதியை அடையாமல், விடுதலையை {முக்தியை} விரும்புவோர், கோபம் மற்றும் வெறுப்பில் இருந்து விடுபட்டு வாழ்வைக் கடத்துவதில்லை. சிறந்த வழியில் கிடைக்கும் கல்வியாலும், அறம்சார்ந்த போராட்டத்தாலும், கடுமையாகச் செய்யப்பட்ட தவத்தாலும் கிடைக்கும் மகிழ்ச்சி, இறுதிக்காலம் வரை எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

{உறவினர்கள் 1}


தன் உறவினர்களுடன் அமைதியாக இல்லாதவர்கள், நன்கு தயாரிக்கப்பட்ட படுக்கைகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் உறக்கத்தைப் பெறுவதில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் {உறவினர்களுடன் அமைதியாக இல்லாதவர்கள்} பெண்களிடத்திலோ, புலவர்கள் {மாகதர்கள்} மற்றும் துதிபாடிகளின் {சூதர்களின்} துதி பாடல்களிலோ கூட மகிழ்ச்சியை அடைவதில்லை. அப்படிப்பட்ட மனிதர்கள் அறம் பயிலவே முடியாது. இவ்வுலகில் மகிழ்ச்சி அவர்களுடையதாக இருக்காது.

எந்தச் சிறப்பும் அவர்களுடையதாக இருக்க முடியாது. அமைதி அவர்களிடம் எந்த அழகையும் கொடுப்பதில்லை. தங்களுக்கு நன்மை தரும் ஆலோசனைகள் அவர்களுக்கு நிறைவைத் தருவதில்லை. அவர்களிடம் இல்லாததை அவர்கள் பெறுவதுமில்லை, தங்களிடம் உள்ளதையும் அவர்கள் தக்க வைத்துக் கொள்ளவும் இயலாது. ஓ! மன்னா, அத்தகு மனிதர்களுக்கு அழிவைத் தவிர வேறு எந்த முடிவும் கிடையாது.

{ஒற்றுமையின் வலிமை}


பசுக்களிடம் பாலும், அந்தணர்களிடம் தவமும், பெண்களிடம் நிலையாமையும் {உறுதியற்ற தன்மையும்} உண்டாவதைப் போல, உறவினர்களிடம் அச்சமும் உண்டாக வேண்டும். ஒன்றாகச் சேர்க்கப்பட்ட சம நீளம் கொண்ட, எண்ணற்ற மெல்லிய நூல்கள், தங்கள் எண்ணிக்கையின் பலத்தால், தங்கள் மேல் முன்னும் பின்னும் நிலையாக உருண்டு கொண்டிருக்கும் உருளையைத் தாங்க முடிகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நல்ல உறவினர்களின் காரியத்திலும் இதுவே வழக்கு. {அதாவது, நல்ல உறவினர்களுடன் ஒற்றுமையாக இருப்பதே, பெரும் பாரத்தைச் சுமக்கும் வலிமையைத் தரும்}.

ஓ! திருதராஷ்டிரரே, அந்தணர்கள், பெண்கள், உறவினர்கள், பசுக்கள் ஆகியோர் மீது கொடுங்கோன்மை செலுத்துபவர்கள், கனிந்த கனிகள் விழுவதைப் போல, தங்கள் நிலையில் இருந்து விரைவில் விழுகிறார்கள்.

தனியாக நிற்கும் ஒரு மரம், என்னதான் பெரியதாக, பலமாக, ஆழமான வேர்கள் உடையதாக இருந்தாலும், பலத்த காற்று வீசும்போது, அதன் அடிமரம் திசை திரும்பவும், நொறுங்கவும் செய்கிறது. எனினும், நெருக்கமாகவும், கச்சிதமாகவும் வளரும் மரங்கள், {பரஸ்பரம்} ஒன்றோடு ஒன்று சார்ந்து இருக்கும் தங்கள் தகுதியின் காரணமாக, மிகப் பெரிய கடுமையான காற்றையும் எதிர்த்து நிற்கின்றன.

எனவே, {யாரோடும் சேராமல்} தனியாக இருக்கும் ஒருவன், அனைத்து அறங்களுடனும் இருந்தாலும், காற்றால் வீழ்த்தப்படும் தனி மரம் போல, எதிரிகளால் வீழ்த்தப்படக் கூடியவனே என்று கருதப்படுகிறான். அதே போல, உறவினர்கள், ஒருவருக்கு ஒருவர் சார்ந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதன் விளைவாக, தடாகத்தில் இருக்கும் தாமரைத் தண்டுகளைப் போல இணைந்தே வளர்கின்றனர். {உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழ்பவன், அவர்களோடு சேர்ந்து தானும் வளர்கிறான்}.

{கொல்லத்தகாதவர்கள்}


அந்தணர்கள், பசுக்கள், உறவினர்கள், குழந்தைகள், பெண்கள், உணவிட்டோர், பாதுகாப்பு கோரி சரணடைந்தோர் ஆகியோர் {எப்போதும்} கொல்லப்படவே கூடாது.

{உடல் நலம்}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, செல்வமில்லாமல், ஒருவனுக்கு மேனியில் நல்ல தரம் இருக்காது. எனினும் நீர் உடல்நலத்தோடு இருந்தால், நீர் உமது நன்மையை அடைய முடியும். உடல்நலமற்று நோயாளியாய் இருப்பவன் பிணமே.

{சினம்}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபம், அதன் கசப்பு, காரம், உறைப்பு, சூடு ஆகியவற்றால் வலிநிறைந்த விளைவுகளையே கொடுக்கும். அது {கோபம்}, எந்த உடல் நோயாலும் உண்டாகாத ஒருவகைத் தலைவலியாகும். அறிவற்றவர்களால் அவற்றைச் செரிக்கவே முடியாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் {அறிவுள்ளவராகையால்} அதை விழுங்கி {கோபத்தைச் செரித்து = அடக்கி} அமைதி அடைவீராக. பிணியால் வதைக்கப்படுவோர் {துன்பப்படுவோர்} எந்த இன்பங்களையும் விரும்புவதில்லை, செல்வத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அவர்கள் விரும்புவதில்லை}. எனினும், நோய்வாய்ப்பட்டவர், கவலையால் நிறைந்து, மகிழ்ச்சி என்ன என்பதையோ, செல்வத்தால் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதையோ அறியமாட்டார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையில் திரௌபதி வெல்லப்படுவதைக் கண்டு, “நேர்மையானவர்கள், விளையாட்டில் ஏமாற்றுத்தனத்தைத் தவிர்ப்பார்கள். எனவே, துரியோதனனை நிறுத்தும்” என்ற சொற்களை முன்பே நான் உம்மிடம் சொன்னேன். எனினும், எனது சொற்களின் படி நீர் செயல்படவில்லை. வலிமை என்பது, மென்மைக்கு எதிரானது அல்ல. {மென்மையானவர்களை எதிர்ப்பவர்கள் பலசாலிகளல்ல}. மறுபுறம், வலிமையுடன் கலந்த மென்மையே, எப்போதும் பின்பற்றப்பட வேண்டிய உண்மையான கொள்கையைக் கொண்டுள்ளது.

{செழுமை}


நேர்மையற்றதனத்தை {கொடுமையை} மட்டுமே சார்ந்திருக்கும் செழுமை, அழிக்கப்படும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், வலிமை, மென்மை ஆகிய இரண்டையும் சார்ந்த செழுமை, {ஒருவனின்} மகன்கள் மற்றும் பேரர்களிடம் திறத்துடன் இறங்கிச் செல்கிறது. எனவே, உமது மகன்கள் பாண்டவர்களைப் பேணிக் காக்கட்டும். பாண்டவர்களும் உமது மகன்களைப் பேணிக் காக்கட்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரே நண்பர்களையும், எதிரிகளையும் பெற்ற குருக்கள், பாண்டவர்கள் ஆகிய இருவரும், மகிழ்ச்சியுடனும் செழுமையுடனும் ஒன்றாக {ஒற்றுமையாக} வாழட்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்று, குருக்களின் மகன்களுக்கு நீரே புகலிடம்.

உண்மையில், குருவின் குலம், ஓ! அஜமீடரே {திருதராஷ்டிரரே}, உம்மையே சார்ந்து {நம்பி} இருக்கிறது. ஓ! அய்யா, உமது புகழுக்குக் களங்கம் ஏற்படாமல் பாதுகாத்து, கடுமையான வனவாச துன்பத்தை அனுபவித்த பாண்டுவின் பிள்ளைகளைப் பேணிக் காப்பீராக. உமது எதிரிகள் உம்மிடம் இருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடிக்காதிருக்கட்டும். ஓ! மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் உண்மைக்குத் {சத்தியத்துக்குத்} தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனை அவனது தீய வழிகளில் இருந்து திருப்புவீராக” ,என்றான் {விதுரன்}.


    

சமூக அரசியல் முறைமை! - உத்யோக பர்வம் பகுதி 37அ

Social polity!| Udyoga Parva - Section 37a | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 37) {விதுர நீதி - 11}
பதிவின் சுருக்கம் : பதினேழு வகை மூடர்கள் யார் என்று விதுரன் சொன்னது;  அந்தணனைக் கொன்ற பாவத்தைத்தரும் குற்றங்கள் குறித்தும், சொர்க்கம் யாரால் வெல்லப்படுகிறது என்றும்;  பிறருக்கு இனிமையானதைப் பேசுவது எளிது, ஆனால் இனிமையற்றதாக இருந்தாலும் உண்மைய் சொல்வது கடினம் என்றும்; எது எதை எது எதற்காகத் தியாகம் செய்யலாம் என்றும்; செல்வத்தை ஏன் பாதுகாக்க வேண்டும் என்றும்; சூதாட்டம் எவ்வளவு தீங்கானது என்றும் விதுரன் திருதராஷ்டிரனிடம் சொல்வது...

விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரரே}, ஓ! மன்னா, வெறும் வெளியில் தனது கை முட்டியை அடிப்பவர்களைப் போன்ற {ஆகாயத்தைத் தனது முட்டியால் உடைக்க நினைப்பவர்களைப் போன்ற}, வானத்தில் இருக்கும் ஆவி நிரம்பிய இந்திரவில்லை {வானவில்லை} வளைக்க முயல்பவர்களைப் போன்ற, சூரியனின் அருவக் கதிர்களைப் பிடிக்க விரும்புபவர்களைப் போன்ற பதினேழு வகையான மனிதர்களைக் குறித்துச் சுயம்புவின் மகனான மனு சொல்லியிருக்கிறார்.

{பதினேழு வகையான மூடர்கள்}


  1. கட்டுப்படுத்தப்பட இயலாதவனைக் கட்டுப்படுத்த முயல்பவன்.
  2. சிறு லாபங்களால் மகிழ்ச்சியடைபவன்.
  3. எதிரிகளிடம் பணிவாகப் பணி செய்பவன்.
  4. பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி {அவர்களைக்} கட்டுப்படுத்த முயல்பவன். {பெண்களால் வரும் பொருளைக் கொண்டு பிழைப்பவன்}.
  5. கேட்கக்கூடாதவனிடம் தானம் கேட்பவன்.
  6. எதையும் செய்யாமலே, தன்னைப் புகழ்ந்து கொள்பவன் {தற்பெருமை பேசிக் கொள்பவன்}.
  7. உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
  8. பலமற்றவனாக இருந்து கொண்டு, பலமானவனிடம் எப்போதும் பகை பாராட்டி வருபவன்.
  9. ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் பேசுபவன்.
  10. அடைய முடியாததை அடைய விரும்புபவன்.
  11. மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிடம் கேலி செய்பவன்.
  12. தனது மருமகளால் தனது அச்சங்கள் அனைத்தும் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
  13. தனது வித்துகளை வேறு நிலத்தில் சிதற விடுபவன். {பிறர் மனைவியரை அடைபவன்}.
  14. தன் மனைவியைக் குறித்துத் தவறாகப் பேசுபவன்.
  15. பிறரிடம் இருந்து எதையும் பெற்றுக் கொண்டு, அது நினைவில்லையே என்று சொல்பவன்.
  16. புனித இடங்களில் தானமளித்துவிட்டு, வீட்டில் தன் வார்த்தைகளால் {அவற்றைச் சொல்லித்} தற்பெருமை பேசுபவன்.
  17. பொய்மையை உண்மை என்று நிறுவ முயல்பவன்

ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர்.

கரங்களில் சுருக்குக் கயிறுகளோடு {பாசங்களோடு} வரும் யமனின் தூதர்கள், அம்மனிதர்களை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றனர்.

தன்னிடம் மற்றவன் நடந்து கொள்ளும் விதத்திலேயே, ஒருவன் அவனிடம் நடந்து கொள்ள வேண்டும். இதுவே சமூக அரசியல் முறைமைக்கு இசைவானதாக இருக்கும்.

முதுமை, அழகைக் கொல்கிறது {அழிக்கிறது}; பொறுமை, நம்பிக்கையையும்; மரணம், வாழ்வையும்; அறப்பயிற்சி, உலகம் சார்ந்த இன்பங்களையும்; காமம், தன்மானத்தையும் {அடக்கத்தையும்}; தீயோர் தோழமை, நன்னடத்தையையும்; கோபம், செழுமையையும்; செருக்கு அனைத்தையும் கொல்லும் {அழிக்கும்}” என்றான் {விதுரன்}.

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நூறு ஆண்டுகள் வாழ்நாள் {ஆயுள்} கொண்டவன் என்று மனிதன் வேதங்களில் பேசப்படுகிறான். {அப்படி இருக்கையில்}, என்ன காரணத்தினால், மனிதர்கள் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட வயதை அடைவதில்லை {நூறு வயது வரை வாழ்வதில்லை}” என்று கேட்டான்.

அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “அதிகமான செருக்கு, அதிகமான பேச்சு, அதிகமாக உண்ணுதல், கோபம், இன்பத்தில் விருப்பம், உட்பகை ஆகிய ஆறும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரினங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தை {ஆயுளை} அறுக்கும் {ஆறு} கூரிய வாட்களாகும். இவையே மனிதர்களைக் கொல்கின்றன; மரணமல்ல. இதை அறிந்து அருளப்பட்டிருப்பீராக!

{பரிகாரம் தேவைப்படும் தொடர்புகள்}


ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}. தன் மேல் நம்பிக்கை கொண்ட ஒருவனுடைய மனைவியின் உதவியை நாடுபவன் {தன்னை நம்பியவனின் மனைவியை அடைபவன்}; தனது ஆசானின் படுக்கையில் அத்துமீறி நடப்பவன் {குருவின் மனைவியை அடைபவன்}, சூத்திரப் பெண்ணின் கணவனாகவோ, மது குடிப்பவனாகவோ உள்ள பிராமணன்; அந்தணர்களை நிந்திப்பவன், அல்லது அவர்களுக்குத் {அந்தணர்களுக்குத்} தலைவனாக ஆகிறவன் {வேறு வர்ணத்தைச் சார்ந்தவன்}, அல்லது அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் {அந்தணர்களின் வாழ்வாதாரங்களாக இருக்கும்} நிலங்களை அபகரிப்பவன்; தன்னிடம் சரணடைந்தவர்களின் உயிரை எடுப்பவன் ஆகியோர் அனைவரும் அந்தணர்களைக் கொன்ற பாவத்தைச் செய்த குற்றவாளிகளாவர். இது போன்ற மனிதர்களுடன் தொடர்பு ஏற்பட்டால் பரிகாரம் தேவை என்று வேதங்கள் தீர்மானிக்கின்றன.

{சொர்க்கம் அடைவதில் வெல்பவர்கள்}


ஞானிகளின் கற்பித்தல்களை {போதனைகளை} ஏற்றுக் கொள்பவன்; அறநெறிகளின் விதிகளை அறிந்தவன்; பரந்த மனமுடையவன் {தானமளிக்கும் தயாளன்}; முதலில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உணவை அர்ப்பணித்த பிறகு உண்பவன்; யார் மேலும் பொறாமை கொள்ளாதவன்; பிறருக்குத் தீங்கை ஏற்படுத்தும் எதையும் செய்ய இயலாதவன்; நன்றி, உண்மை, எளிமை, கல்வி ஆகியவற்றுடன் இருப்பவன் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எப்போதுமே இனிமையான வார்த்தைகளைப் பேசுவோர் பலர் உண்டு. எனினும், இனிமையற்ற, ஆனால் மருத்துவக் குணம் கொண்ட வார்த்தைகளைப் பேசுவோரும், கேட்போரும் கிடைப்பதரிது. தனது தலைவனால் ஏற்கத்தக்கது, தகாதது எனக் கருதாமல், அறத்தை மட்டுமே {அகக்} காட்சியில் கண்டு, சுவையற்றதாக {கசப்பாக} இருப்பினும், மருந்தாக இருப்பவற்றைச் சொல்பவன், உண்மையில் அந்த மன்னனுக்குப் பலத்தையே சேர்க்கிறான்.

{தியாகம்}


ஒரு குடும்பத்துக்காக, அதன் உறுப்பினர் ஒருவரைத் தியாகம் செய்யலாம்; ஒரு கிராமத்துக்காக, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம்; ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம்; ஒருவனது ஆன்மாவுக்காக, முழுப் பூமியையும் கூடத் தியாகம் செய்யலாம்.

{செல்வத்தைப் பாதுகாக்க}


தனக்கு {வருங்காலத்தில்} வரக்கூடிய துன்பங்களை நோக்கில் கொண்டு, ஒருவன் தனது செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்; தனது செல்வத்தைக் கொண்டு ஒருவன் தனது மனைவிகளைப் பாதுகாக்க வேண்டும். தனது செல்வம் மற்றும் மனைவிகளைக் கொண்டு ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

{சூதாட்டம்}


சூதாட்டம் சண்டைகளைத் தூண்டிவிடும் என்பது பழங்காலத்தில் இருந்தே காணப்படுகிறது. எனவே, ஞானமுள்ள ஒருவன், வேடிக்கைக்காகக் கூட அதில் {சூதாட்டத்தில்} ஈடுபடக்கூடாது. ஓ! பிரதீபனின் மகனே {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதாட்டத்தின் போது, ஓ! மன்னா, நான் உம்மிடம், “இது சரியல்ல” என்று சொன்னேன். ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரரே}, நோயாளி மருந்தை விரும்பாதது போல, எனது வார்த்தைகள் உமக்கு ஏற்புடையனவாக {இனிமையாக} இல்லை. ஓ! மன்னா, பலவண்ணத் தோகை கொண்ட மயில்களைப் போல இருக்கும் பாண்டுவின் மகன்களை நீர் வீழ்த்த விரும்புகிறீர். உமது மகன்கள் அனைவருமோ வெறும் காக்கைகளாக இருக்கின்றனர். சிங்கங்களைக் கைவிட்டு, நரிகளைப் பாதுகாக்கிறீர்! ஓ! மன்னா, நேரம் வரும்போது, இவை அனைத்துக்காகவும் நீர் வருந்த வேண்டி வரும்” {என்றான் விதுரன்}.


    

மரத்தில் பதுங்கியிருக்கும் தீ! - உத்யோக பர்வம் பகுதி 37ஆ

Fire that lurketh in wood!| Udyoga Parva - Section 37b | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 37) {விதுர நீதி - 12}
பதிவின் சுருக்கம் : ஊழியர்களின் நம்பிக்கையை வெல்வதால் கிடைக்கும் பயன், விரட்டப்பட வேண்டிய ஊழியன் யார்? ஊழியனின் குணங்கள் என்ன? மனிதன் செய்யக்கூடாதவை எவை? எவர் பணப்பறிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது?  மனிதனுக்குப் புகழைத் தரும் எட்டுக் குணங்கள் எவை? புனித நீராடலால் கிடைக்கும் நன்மைகள் யாவை?  அளவான உணவால் கிடைக்கும் நன்மைகள் என்ன? யாருக்கு அடைக்கலம் அளிக்கக்கூடாது? யாரிடம் தானம் கேட்கக்கூடாது? யாரிடம் ஊழியம் செய்யக்கூடாது? பலங்களின் வகைகள் என்ன? நம்பத்தகாதவை எவை? புறக்கணிக்கப்படக்கூடாதவை எவை? ஆகியவற்றை விதுரன் திருதராஷ்டிரனிடம் விளக்கிச் சொன்னது...

{ஊழியர்கள் [பணியாட்கள்]}


{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} “ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, ஆர்வத்துடன் தனக்கு நன்மைகள் செய்வதைத் தொடர்ந்து வரும் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தாத தலைவன் {முதலாளி}, தன் ஊழியர்களின் நம்பிக்கையை வென்றவர்கள் பட்டியலில் சேர்கிறான். {அந்த முதலாளி, தனது ஊழியனின் மாறாப்பற்றைப் [விசுவாசத்தைப்] பெறுகிறான்}. உண்மையில் பின்னவர்கள் {ஊழியர்கள்} அவனது {முதலாளியின்} துயர்நிறைந்த காலங்களிலும் அவனைப் பின்தொடருவார்கள். தன் ஊழியர்களுக்குக் கிடைக்கும் மானியங்களைப் பறிமுதல் செய்வதாலோ, அவர்களின் ஊதியத்தை நிறுத்துவதாலோ, ஒருவன் தனது செல்வத்தைத் திரட்டக் கூடாது. {அப்படிச் செய்தால்}, தங்கள் வாழ்வு மற்றும் இன்பத்துக்குரிய வழிகள் அடைபட்டுப் போவதால், பாசம் நிறைந்த {அவனது} ஆலோசகர்களும்கூட, அவனுக்கு {அந்த ஒருவனுக்கு} எதிராகத் திரும்பி (அவனது துன்ப காலத்தில்) அவனை விட்டுப் பிரிந்துவிடுவார்கள்.


முதலில் செயல்களின் நோக்கங்கள் அனைத்தையும் ஆலோசித்து, தனது வருமானம் மற்றும் செலவுகளைக் கணக்கில் கொண்டு, ஊழியர்களின் ஊதியத்தையும், படிகளையும் சரிபார்த்து, {ஊழியர்களைக் கொண்ட} சரியான கூட்டணியை ஒரு மன்னன் உருவாக்க வேண்டும். {ஊழியர்களின்} கூட்டணிகளால் அடைய முடியாதது எதுவும் இல்லை.

தனது அரசத் தலைவனின் நோக்கங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு, அனைத்துக் கடமைகளையும் சுறுசுறுப்பாகச் செய்யும் ஓர் அலுவலர் {ஊழியன்}, மரியாதைக்குரியவனாக இருந்து, தனது தலைவனுக்கு அர்ப்பணிப்போடு இருந்து, தன் தலைவனின் நன்மையையே எப்போதும் சொல்லும் ஒருவன், தனது சொந்த பலத்தின் அளவை முழுமையாக அறிந்து, {ஒரு செயலில் தன்னோடு இணைந்து பணியாற்றப் போகும்} மற்றவர்கள் பலத்தையும் அறிந்து இருப்பவன் ஆகியோரை ஒரு மன்னன் தனது இரண்டாவது பாதி என்றே கருத வேண்டும்.

எனினும், (தனது தலைவனால்) கட்டளையிடப்பட்டும், அந்தத் தலைவன் சொன்ன தடைகளை அலட்சியம் செய்து, தன் அறிவில் செருக்குக் கொண்டு, {தன் தலைவனால்} அறிவுறுத்தப்பட்ட எதையும் ஏற்க மறுத்து, தனது தலைவனுக்கு எதிராகப் பேசும் ஊழியனைச் சிறு தாமதமும் இன்றி விரட்டி விட வேண்டும்.

{ஊழியனின் எட்டு குணங்கள்}


செருக்கில்லாமை, திறமை, தாமதம் செய்யாமை, அன்பு, தூய்மை, கறைபடியாமை, நோய்ச்சுவடு இல்லாத குடும்பத்தில் பிறப்பு, மதிப்புமிக்கப் பேச்சு ஆகிய எட்டுக் குணங்கள் ஓர் ஊழியனிடம் இருக்க வேண்டும் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள்.


{ஊழியன் செய்யக்கூடாதது}


முன்னறிவிப்புச் செய்திருந்தாலும், எந்த மனிதனும் அந்திப்பொழுதிற்குப் {மாலைநேரத்திற்குப்} பிறகு, நம்பிக்கையுடன், ஓர் எதிரியின் வீட்டில் நுழையக்கூடாது. இரவு நேரத்தில், மற்றவர் இடத்தின் முற்றத்தில், ஒருவன் பதுங்கக் கூடாது. மன்னனால் விரும்பப்படும் பெண்ணிடம் இன்பம் பெற முயலக்கூடாது. இழிந்தோர் சேர்க்கையும், தான் சந்திக்கும் அனைவரிடமும் ஆலோசிக்கும் பழக்கமும் கொண்ட ஒருவன் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக உம்மை அமைத்துக் கொள்ளாதீர். “நான் உன்னை நம்பவில்லை” என்று எப்போதும் அவனிடம் சொல்லாதீர்; மாறாக ஏதாவதொரு காரணத்தைக் கற்பித்து, சாக்குபோக்கு சொல்லி {அவனை} அனுப்பிவிடுவீராக.

{பணப் பறிமாற்றம்}


ஆதீத கருணை கொண்ட மன்னன், கீழ்த்தரமான நடத்தை கொண்ட பெண், மன்னனின் ஊழியன், மகன், தம்பி, ஓர் ஆண் குழந்தையுடைய {மகனுடைய} விதவை, படையில் ஊழியம் செய்பவன், பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்டவன் {பெரும் நஷ்டமடைந்தவன்}, ஆகியோர் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ கூடிய பணப்பரிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது.


{மனிதனைப் பிரகாசிக்கச் செய்யும் எட்டு குணங்கள்}


ஞானம், நற்குடி {நல்ல குலத்தில் பிறப்பு}, சாத்திரங்களறிதல், தன்னடக்கம், ஆற்றல், மிதமான உரை {பேச்சு}, தனது சக்தியின் அளவுக்குத்தக்க தானம், நன்றியறிதல் ஆகிய எட்டு குணங்களும் மனிதர்கள் மேல் மிளிர்வைச் சிந்தும். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, தானத்தினால், இந்த உயர்ந்த குணங்கள் அத்தனையும் ஒருவனால் அவசியம் ஒன்றாகக் அடையப்படுகிறது. ஒரு மனிதனுக்கு மன்னன் உதவி செய்யும்போது, அந்த (அரச உதவி) நிகழ்வு அனைத்து குணங்களையும் ஒன்றாகக் கொண்டு வந்து, அவற்றை ஒன்றாகப் பிணைக்கிறது.

{[புனித] நீராடல்}


{புனித} நீராடாலைச் செய்வதன் மூலம் ஒருவன், பலம், அழகு, தெளிவான குரல், அகரவரிசை ஒலிகள் அனைத்தையும் உச்சரிக்கும் திறன், மென்மை, நறுமணம், தூய்மை, அருள்நிறைவு, உறுப்புகளின் நுண்ணயம், அழகிய பெண்கள் ஆகிய பத்தை {10} வெல்லலாம்.

{மித உணவு}


உடல்நலன், நீண்ட வாழ்நாள், சுகம், உடல்நலமுள்ள குழந்தைகள், பெருந்தீனிக்காரன் என்று எவராலும் நிந்திக்கப்படாமை ஆகியவற்றை அளவாக உண்பவன் வெல்கிறான் {அடைகிறான்}.

{அடைக்கலம்}


எப்போதும் முறையற்ற செயல் செய்பவன், அதிகமாக உண்பவன், எல்லோராலும் வெறுக்கப்படுபவன், பெரும் ஏமாற்றுக்காரன், கொடுமைபுரிபவன், காலம் இடம் ஆகியவற்றின் தன்மைகளை அறியாதவன், பண்பற்ற வகையில் {அநாகரிகமாக} உடுத்துபவன் ஆகியோருக்கு ஒருவன் தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கக்கூடாது.

{இவர்களிடம் தானம் கேட்கக் கூடாது}


ஒருவன் எவ்வளவுதான் துன்பத்தில் இருந்தாலும், பிச்சையிடாத கஞ்சன், பிறரை குறை பேசுபவன் {நிந்திப்பவன்}, சாத்திரங்களை அறியாதவன் {மூடன்}, காட்டில் வசிப்பவன், தந்திரம் செய்யும் வஞ்சகன், மதிப்புக்குரியோரை மதிக்காதவன், கொடூரமான மூர்க்கன், பிறருடன் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவன், நன்றிமறந்தவன் ஆகியோரிடம் தானம் கோரவே கூடாது.

{இந்த ஆறு பேரிடம் ஊழியஞ்செய்யக்கூடாது}


எதிரி, எப்போதும் தவறிழைப்பவன், பொய்மைக்கு இணக்கமானவன் {எந்நாளும் பொய் சொல்பவன்}, தேவர்களிடம் பக்தி இல்லாதவன், அன்பில்லாதவன், அனைத்தையும் செய்ய வல்ல திறமையுள்ளவனாகத் தன்னைக் கருதிக் கொள்பவன் ஆகிய இந்த ஆறு இழிந்த மனிதர்களுக்காகக் காத்திருக்கவே {இந்த ஆறு இழிந்த மனிதர்களிடம் ஊழியஞ்செய்யவே} கூடாது.

ஒருவனின் நோக்கங்கள், (தங்கள் வெற்றிக்கு) வழிவகைகளையே சார்ந்திருக்கின்றன. அதே போல வழிமுறைகளும், {தங்களால் சாதிக்கப்பட வேண்டிய) அந்த நோக்கங்களின் தன்மையையே {இயல்புகளையே} சார்ந்துள்ளன. ஒன்றை ஒன்று சார்ந்து பிணைப்புடன் இருக்கும் இவற்றைச் {வழிமுறைகளும், நோக்கங்களும்} சார்ந்தே வெற்றி இருக்கிறது. மகன்களைப் பெற்று, யாரையும் சார்ந்தில்லாமல் அவர்கள் இருப்பதற்கு, ஏதாவது ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, கன்னிகைகளான தனது மகள்களைத் தக்க மனிதர்களுக்கு அளித்துவிட்டு {மணமுடித்துக் கொடுத்துவிட்டு}, காட்டிற்கு {ஓய்ந்திருக்க} சென்று, முனிவனாக வாழவே ஒரு மனிதன் விரும்ப வேண்டும். தனது மகிழ்ச்சிக்குச் செய்து கொள்வது போலவே, பரமாத்மாவின் உதவிகளை அடைய, அனைத்து உயிர்களுக்கும் நன்மையைச் செய்ய வேண்டும். அதுவே {பிற உயிரினங்களுக்கு நன்மையைச் செய்வதே} ஒரு மனிதனின் நோக்கங்கள் அனைத்தும் வெற்றியடைவதற்கு வேராக இருக்கும்.

புத்திசாலித்தனம், சக்தி, ஆற்றல், பலம், சுறுசுறுப்பு, விடாமுயற்சி ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவனுக்கு என்ன கவலை இருக்க முடியும்?

பாண்டவர்களிடம் {உமக்கு} முறிவு ஏற்படுவதால் சக்ரனுடன் {இந்திரனுடன்} கூடிய தேவர்களேகூடக் கவலை கொள்வார்கள். அதனால் உண்டாகும் தீமைகளைப் பாரும். முதலில், உமது மகன்களான அவர்கள் அனைவருடனும் {அந்த முறிவால்} பகைமை உண்டாகும்; இரண்டாவது, தொடர்ச்சியாகக் கவலை நிறைந்த வாழ்வு ஏற்படும்; மூன்றாவதாக, குருக்களின் {கௌரவர்களின்} நல்ல புகழுக்கு கேடு உண்டாகும். கடைசியாக, உமது எதிரிகளாக இருப்பவர்களுக்கு அது {பாண்டவர்களுடனான அந்த முறிவு} மகிழ்ச்சியை உண்டாக்கும்.

ஓ! இந்திரனைப் போன்ற பிரகாசம் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, பெரிய அளவிலான வால்நட்சத்திரம் பூமியின் மீது குறுக்காக விழுவதைப் போல, பீஷ்மர், துரோணர், மற்றும் மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரது கோபம் இந்த முழு உலகையும் எரித்துவிடும். உம்முடைய நூறு மகன்களும் {கௌரவர்களும்}, கர்ணனும், பாண்டுவின் மகன்களும் {பாண்டவர்களும்} ஒன்றாகச் சேர்ந்து கடல்களைக் கச்சையாகக் கொண்ட முழு உலகையும் ஆள முடியும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தார்த்தராஷ்டிரர்கள் {கௌரவர்கள்} காடென்றால், பாண்டவர்களை, நான் புலிகளாக நினைக்கிறேன். ஓ! காட்டை அதன் புலிகளைக் கொண்டு வெட்டிவிடாதீர்! ஓ! புலிகள் காட்டில் இருந்து விரட்டப்படாதிருக்கட்டும்! புலிகளில்லாத காடும், காடில்லாத புலிகளும் இருக்க முடியாது. காடு புலிகளுக்கு உறைவிடம். புலிகள் அக்காட்டைப் பாதுகாக்கும்!

பாவிகளாக இருப்பவர்கள், தங்கள் குறைகளை உறுதி செய்து கொள்ளாததைப் போலப் பிறருடைய நல்ல குணங்களையும் உறுதி செய்ய மாட்டார்கள். உலகம் சார்ந்த ஆதாயத்தோடு {இலாபத்தோடு} இணைந்திருக்கும் அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த வெற்றியை விரும்பும் ஒருவன், தொடக்க நிலையில் இருந்தே அறம் பயில வேண்டும். உண்மையான ஆதாயம் சொர்க்கத்தில் இருந்து பிரிந்திருப்பதில்லை. பாவங்களில் இருந்து விடுபட்ட ஆன்மா கொண்டவன், அறத்தில் உறுதியாக நிலைத்து நின்று, அனைத்துப் பொருட்களையும் அதன் இயல்பு மற்றும் இயல்பற்ற நிலைகளைப் புரிந்து கொண்டவனாக இருப்பான். அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பின்பற்றும் ஒருவன், அந்த மூன்றின் கலவையையும் இவ்வுலகிலும், மறு உலகிலும் சரியான காலங்களில் அடைகிறான். கோபம் மற்றும் மகிழ்ச்சியின் சக்தியைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவன், ஓ! மன்னா, பேரிடர் காலங்களிலும் தனது உணர்வுகளை இழக்காமல் செழிப்பை வெல்கிறான்.

{ஐந்து வகையான பலங்கள்}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் சொல்வதைக் கேளும். மனிதர்கள் ஐந்து வகையான வெவ்வேறு பலங்களைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில், கரங்களில் பலம் மிகத் தாழ்ந்த வகையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. நீர் அருளப்பட்டிப்பீராக. நல்ல ஆலோசகர்களை அடைவது இரண்டாவது வகைப் பலமாகக் கருதப்படுகிறது. செல்வம் அடைதலை மூன்றாவது வகைப் பலமாக ஞானிகள் கூறியுள்ளனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவனுடைய தந்தை, பாட்டன் மூலம் இயற்கையாக அடையப்படுவதான பிறப்பின் பலம் நான்காவது வகைப் பலமாகக் கருதப்படுகிறது. எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதைக் கொண்டு இவை அனைத்தையும் வெல்ல முடியுமோ, அனைத்து வகைப் பலங்களிலும் முதன்மையான அஃது, அறிவின் பலம் என்று அழைக்கப்படுகிறது.

சக உயிரின் மேல் பெரும் தீங்கை விளைவிக்க வல்ல ஒரு மனிதனின் எதிர்ப்பைத் தூண்டிவிட்ட பிறகு, அவன் தொலைவில்தான் இருக்கிறான் என்று நம்பக்கூடாது {நம்பி அமைதியாக இருக்கக்கூடாது}.

{நம்பத்தகாதவை}


பெண்கள், மன்னர்கள், பாம்புகள், தனது தலைவன் {முதலாளி}, எதிரிகள், இன்பங்கள், வாழ்வின் காலம் ஆகியவற்றில் எந்த ஞானிதான் {புத்திமான்தான்} நம்பி வைப்பான்? அறிவு என்ற கணையால் தாக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளோ மருத்துவர்களோ கிடையாது. அது போன்ற மனிதர்களைப் பொறுத்தவரை, ஹோம மந்திரங்களோ, மங்கள விழாக்களோ, அதர்வண வேத மந்திரங்களோ {ஆபிசார மந்திரங்களோ}, அல்லது விஷத்தினாலான மருந்துகளோ {ரசகுளிகைகளோ} பயனளிப்பதில்லை.

{புறக்கணிக்கக்கூடாதவை}


ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாம்புகள், நெருப்பு, சிங்கங்கள், இரத்த உறவுகள் ஆகியவற்றில் ஒன்றையும் எந்த மனிதனும் புறக்கணித்துவிடக்கூடாது; இவை அனைத்துமே பெரும் வல்லமை கொண்டவை.

இவ்வுலகில் நெருப்பு என்பது பெரும் சக்தி வாய்ந்தது. மரத்தில் பதுங்கியிருக்கும் அது {நெருப்பு}, பிறர் தூண்டும் வரை அந்த மரத்தை எரிப்பதில்லை. அதே நெருப்பு, உராய்வினால் உண்டாக்கப்படும்போது, தன் சக்தியைக் கொண்டு அது {நெருப்பு தான்} பதுங்கியிருந்த மரத்தை மட்டுமல்ல, மொத்த காட்டையும், இன்னும் பல பொருட்களையும் சேர்த்தே எரித்துவிடுகிறது.

உயர்ந்த குலத்தில் பிறந்த மனிதர்களும் சக்தியில் நெருப்பைப் போன்றவர்களே. மன்னிக்கும் தன்மையோடு {பொறுமையோடு} இருக்கும் வரை, அவர்கள் கோபத்தின் எந்த வெளிப்புற அறிகுறிகளையும் காட்டிக் கொள்ளாமல், மரத்தில் உள்ள நெருப்பு போலவே அமைதியாக இருக்கிறார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களோடு கூடிய நீர், கொடிகளின் தன்மையைப் பெற்றிருக்கிறீர், பாண்டுவின் மகன்களோ சால மரங்களாகக் கருதப்பட்டார்கள். சுற்றிப் படரப் பெருமரம் இல்லாமல் கொடி வளர்வதில்லை. ஓ! மன்னா, ஓ! அம்பிகையின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்} காட்டைப் போன்றவன். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் அந்தக் காட்டின் சிம்மங்கள் என்று அறிந்து கொள்வீராக. அதன் சிங்கங்கள் இல்லாமல் அந்தக் காடு அழிக்கப்பட்டு விடும். அதே போல {தங்கள் புகலிடமான} காடு இல்லாமல் சிங்கங்களும் அழிவுக்குள்ளாகும்” என்றான் {விதுரன்}.


     

ஆட்சித் திறம்! - உத்யோக பர்வம் பகுதி 38

Kingcraft!| Udyoga Parva - Section 38 | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 38) {விதுர நீதி - 13}
பதிவின் சுருக்கம் : விருந்தினர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளை விதுரன் சொன்னது;  விருந்தினராக வரும் எவரையும் அன்புடன் நடத்த வேண்டும் என்று சொன்னது; பிக்ஷு வகை யோகியர் யார்? எவற்றை அந்தணர்கள் விற்கக்கூடாது? சகோதரத்துவத்தில் முதன்மையானவன் யார்? யாரிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது? மனைவியரை ஏன் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும்? ஆட்சித்திறன்கள் என்னென்ன? நாட்டைப் பாதுகாக்கும் ஆறுவழிகள் எவை? மரணத்துக்குத் தகுந்தவர்கள் யார்? என்பன போன்றவற்றைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன், துரியோதனனிடம் நாட்டின் பொறுப்பைக் கொடுத்ததால் விரைவில் செல்வச்செழிப்பு வீழ்ச்சியடையும் என்று சொன்னது...

{விருந்தினர்}


விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான் “வயது முதிர்ந்த ஒரு மதிப்பிற்குரிய நபர், தனது இல்லத்திற்கு (விருந்தினராக) வரும்போது, ஓர் இளைஞனின் இதயம் {அவர் மீது கொண்ட மதிப்பால்} உயர எழுகிறது. அவரை நோக்கி முன்னேறி {அவரை எதிர்கொண்டு அழைத்து), வணங்கிய பிறகே அவன் {அந்த இளைஞன்} மீண்டும் வருகிறான். தற்கட்டுப்பாடுடைய ஒருவன் {சுயக்கட்டுப்பாடு கொண்டவன்}, {விருந்தினருக்கு} இருக்கையை அளித்து, நீரைக் கொண்டு வந்து, அவரது காலைக் கழுவச் செய்து, வழக்கமான விசாரிப்புகளைச் செய்த பிறகே, தனது சொந்த விவகாரங்களைப் {அவரிடம்} பேச வேண்டும். அனைத்தையும் கருத்தில் கொண்ட பிறகு, அவருக்கு உணவு அளிக்க வேண்டும்.


ஒருவன் மீது கொண்ட பயத்தினாலோ, அவனது கஞ்சத்தனத்தாலோ, அவனது விருப்பமின்மையாலோ, எவனுடைய வீட்டில், மந்திரங்கள் அறிந்த அந்தணர் ஒருவர் நீர், தேன், தயிர்க்கடைசல் மற்றும் பசுக்கள் ஆகிய தானங்களைப் பெறவில்லையோ, அவன் வீணாக வாழ்பவன் என்று ஞானிகள் கூறியுள்ளனர்.

மருத்துவர், அம்புகள் {[அ] ஆயுதங்கள்} செய்பவர், காலம் முடியும் முன்னரே பிரம்மச்சரிய நோன்பைக் கைவிடுபவன், திருடன், கோணல்புத்திக்காரன், மதுவுண்ணும் பிராமணன், கருச்சிதைவை ஏற்படுத்துபவன், படைக்குச் சேவை செய்து வாழ்பவன், வேதங்களை விற்பவன் ஆகியோர் விருந்தினராக வந்தாலும், அவன் என்னதான் நீர் கொடுக்கத் தகுதியற்றவனாக இருப்பினும், (அந்த வீட்டின் உரிமையாளன்}, அவனை அன்பாகக் கருத {நடத்த} வேண்டும்.

{பிக்ஷு வகை யோகி}


உப்பு, சமைத்த உணவு, தயிர்க்கடைசல், பால், தேன், எண்ணெய், தெளிந்த நெய், எள் இறைச்சி, பழங்கள், கிழங்குகள், கீரைவகைகள், சாயமேற்றப்பட்ட துணிகள், அனைத்து வகைச் சந்தனக்கலவைகள் {நறுமணப்பொருட்கள்} மற்றும் {வெல்லம் போன்ற} பாகு ஆகியவற்றை விற்பனை செய்பவனாக {வியாபாரியாக} ஓர் அந்தணன் இருக்கக்கூடாது.

கோபவசப்படாதவன், துயரத்தைக் கடந்தவன், எப்போதும் நட்போ சண்டையோ தேவைப்படாதவன், புகழ் மற்றும் பழி ஆகிய இரண்டையும் அலட்சியம் செய்பவன், விருப்பு மற்றும் வெறுப்பு இரண்டையும் விட்டு விலகி நிற்பவன், இவ்வுலகில் இருந்து முழுமையாக விடுபட்டவனாக இருப்பின், அவனே உண்மையான பிக்ஷுவகை யோகியாவான்.

காட்டில் முளைக்கும் தினை {அரிசி போலப் புல்லில் முளைக்கும் சிறுதானியங்கள், உ-ம், கம்பு, சோளம், கேழ்வரகு,வரகு அரிசி, குதிரைவாலி அரிசி}, கிழங்குகள், கீரைகள் ஆகியவற்றைக் கொண்டு வாழ்ந்து, தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்கள் வைத்து, தனது வழிபாட்டுக்குரிய நெருப்பைக் கவனமாக வைத்து, விருந்தினர்களை எப்போதும் மதிப்புடன் கருதி, காட்டில் வசிக்கும் அறம்சார்ந்த தவசியே, உண்மையில் சகோதரத்துவத்தில் {சமூக ஒற்றுமை உணர்ச்சி கொண்டோரில்} முதன்மையானவன் ஆவான்.


{நம்பிக்கை}


ஒரு புத்திசாலி மனிதனுக்குத் தீங்கிழைத்துவிட்டு, அந்தத் தீங்குக்குள்ளானவன் உண்மையில் தொலைவில்தான் வாழ்கிறான் என்று உறுதிசெய்தாலும் ஒருவன் அமைதியடையக்கூடாது {சமாதானம் அடையக்கூடாது}. புத்திசாலி மனிதர்களின் கரங்கள் நீளமானவை. அவற்றைக் கொண்டு அவர்கள் அந்தத் தீங்குக்கான பதில் தீங்கைத் திரும்பச் செய்ய முடியும்.

நம்பத்தகாதவனிடம் ஒருவன் நம்பிக்கை கொள்ளக்கூடாது. அதே போல, நம்பத்தகுந்தவனிடமும் அதீத நம்பிக்கை கொள்ளலாகாது. நம்பிக்கையைப் பெற்றவனிடம் இருந்து எழும் ஆபத்து, ஒருவனது வேர்களையே அறுத்துவிடும்.

ஒருவன், பொறாமையைக் கைவிட வேண்டும், தனது மனைவிகளைக் காக்க வேண்டும், பிறருக்கு உரியதைச் சரியாகக் கொடுக்க வேண்டும், பேச்சில் இனிமையுடையவனாகவும் இருக்க வேண்டும். தனது மனைவிகளைப் பொறுத்தவரை, ஒருவன், இனிய நாக்கும், பேச்சும் கொண்டவனாக இருக்க வேண்டும். ஆனால் அவன் அவர்களது அடிமையாக இருக்கக்கூடாது. உயர்ந்த அருள் கொண்டவர்களாவும், அறம்சார்ந்தவர்களாகவும், வழிபடத்தகுந்தவர்களாகவும், தங்கள் குடும்பத்தின் ஆபரணங்களாகவும் திகழும் மனைவிகளே ஒருவனது இல்லச் செழிப்பின் உருவகம் {அந்த வீட்டின் லட்சுமிகள்} என்று சொல்லப்படுகிறது. எனவே, அவர்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

தந்தைக்கு அந்தப்புரத்தின் மேற்பார்வையை அளிக்கலாம். தாய்க்கு சமையலறையையும் {பாகசாலையையும்}, தன்னைப் போன்ற ஒருவனுக்குப் பசுக்களை மேற்பார்வையிடும் பொறுப்பையும் அளிக்கலாம். ஆனால், உழவைப் {வேளாண்மையைப்} பொறுத்தவை, தானே நேரடியாக அதை மேற்பார்வையிட வேண்டும்.

வியாபார சாதியைச் சேர்ந்த விருந்தினர்களுக்குப் பணியாட்களைக் கொண்டும், பிராமணச் சாதியைச் சேர்ந்தவருக்குத் தனது மகன்களைக் கொண்டும் பணிவிடை செய்ய வேண்டும்.


{ஆட்சித்திறம்}


நெருப்பு அதன் தோற்றத்தை {மூலத்தை} நீரில் கொண்டுள்ளது; க்ஷத்திரியர்கள், தங்கள் தோற்றத்தை பிராமணர்களில் கொண்டுள்ளனர், இரும்பு தனது தோற்றத்தை கற்களில் கொண்டுள்ளது. தங்கள் முன்னோடிகளுடன் தொடர்பு ஏற்படும்போது, அனைத்தையும் பாதிப்படையச் செய்யும் (நெருப்பு, க்ஷத்திரியர்கள் மற்றும் இரும்பு ஆகிய) அவற்றின் சக்தி, விரைவில் சமநிலை அடைந்துவிடும்.

நெருப்புத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மரத்தில் மறைந்திருக்கிறது. நெருப்பு சக்தி கொண்டவர்களான நற்குடியில் பிறந்த நல்லவர்களும், மன்னிக்கும் இயல்பு கொண்ட பொறுமைசாலிகளும், அவர்களுக்குள் இருக்கும் {நெருப்பு போன்ற} அறிகுறிகளை {சக்திகளை} வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

தன்னைச் சார்ந்தவர்களாலும், வெளியில் இருப்பவர்களாலும் தனது ஆலோசனைகள் அறியப்படாமல் இருக்கச் செய்யும் அதே வேளையில், பிறரின் ஆலோசனைகளை ஒற்றர்கள் மூலமாக எந்த மன்னன் அறிந்து கொள்கிறானோ, அவன் நீடித்த செழிப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறான்.

தான் செய்ய நினைப்பதை ஒருவன் பேசக்கூடாது. அறம், பொருள், இன்ப வகைகளில் நீர் செய்யும் எதுவும், அது நிறைவடையும் வரை அறியப்படாமல் இருக்கட்டும். {செய்யப்படும்} ஆலோசனைகள் பலரால் அறியப்படாதிருக்கட்டும்.

மலையின் உச்சிக்கோ, மாளிகையின் மேல்தளத்திற்கோ {உப்பரிகைக்கோ}, மரங்களோ செடிகளோ அற்ற காட்டுப்பகுதிக்கோ சென்று, கமுக்கமாக உமது ஆலோசனைகளில் முதிர்வீராக.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கல்வியறிவில்லாத நண்பன், கல்வியறிவுள்ள, ஆனால் புலனடக்கம் இல்லாத நண்பன் ஆகியோர், அரசாங்க இரகசியத்தின் களஞ்சியங்களாக இருக்கத் தகுதிற்றவர்களாவர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு மன்னனின் நிதிகள், அவனது ஆலோசனைகள் ஆகிய இரண்டையும் பாதுகாக்கும் பொறுப்பு ஓர் அமைச்சனுடையது. எனவே, ஒருவனை நன்றாகச் சோதியாமல் உமது அமைச்சர்களில் ஒருவனாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்.

எவனுடைய அமைச்சர்கள், அவன் செய்யும் அறம், பொருள், இன்பம் சார்ந்த செயல்களை, அவை நிறைவேறிய பிறகு அறிகிறார்களோ, அந்த மன்னனே ஆட்சியாளர்களில் முதன்மையானவன் ஆவான்.

எவனுடைய ஆலோசனைகள் சந்தேகமில்லாமல் கமுக்கமாகப் பேணப்படுகிறதோ, அந்த மன்னனே வெற்றியடைவான்.

அறியாமையால் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்பவன், அந்தச் செயல்களின் விளைவால் தனது வாழ்வையே {உயிரையே கூட} இழக்கிறான்.

புகழத்தக்க காரியங்களைச் செய்யும்போது, அஃது எப்போதும் சுகத்தையே அளிக்கும். அத்தகு செயல்களைச் செய்யாமல் இருப்பதே மனவருத்தத்திற்கு வழிவகுக்கும்.

(பித்ருக்களை மதிக்கும் வண்ணம் {பித்ருக்களின் நினைவாகச்} செய்யப்படும்) சிரதங்களைச் செய்ய, வேதமறியாத பிராமணனுக்குத் தகுதியில்லாதது போல, (நாட்டைப் பாதுகாக்கும் வழிகளான) ஆறு வழிகளைக் [1] குறித்துக் கேள்விப்படாதவன் அரசியல் கருத்தரங்குகளில் {மந்திராலோசனைகளில்} பங்கு பெற தகுதியற்றவனாவான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, {வருவாய்} அதிகரித்தல், குறைதல், உபரி ஆகியவற்றில் ஒரு கண் கொண்டு, ஆறு வழிகளை [2] அறிந்து, தனது சுயத்தை அறிந்து, மெச்சத்தகுந்த நடத்தை கொண்டிருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான். விளைவை உண்டாக்கும் கோபத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு, எது செய்யப்பட வேண்டுமோ அதை நேரடியாகக் கண்காணித்து, தனது கருவூலத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான்.
...........................................................................................................         
[1], [2] குறள் 381 :

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு

1. படை, 2. குடிமக்கள், 3. குறையாத வளம் {செல்வம்}, 4. அமைச்சன், 5. நட்பு {அண்டை நாட்டு நட்பு}, 6. அரண் {காவல்} ஆகிய ஆறு அங்கங்களைக் கொண்டவனே மன்னர்களில் சிம்மமாவான்.
தனது தலைக்கு மேல் பிடிக்கப்படும் குடையையும், தான் வென்ற பெயரையும் கொண்டு ஒரு மன்னன் மனநிறைவு கொள்ள வேண்டும். தனக்கு ஊழியம் செய்வோருடன் தனது நாட்டின் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தனியாக அனைத்தையும் அவன் {ஒரு மன்னன்} தீர்மானிக்கக்கூடாது. ஓர் அந்தணன், {மற்றொரு} அந்தணனை அறிவான், ஒரு கணவன், மனைவியைப் புரிந்து கொள்வான், ஒரு மன்னன் அமைச்சரை அறிவான், ஏகாதிபதிகளே ஏகாதிபதிகளை அறிவார்கள்.
.............................................................................................................

{மரணத்திற்குத் தகுந்தவர்கள்}

மரணத்துக்குத் தகுந்த எதிரி ஒருவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்படும்போது, அவனை விடுவிடக்கக்கூடாது. {எதிரி} மரணத்திற்கே தகுந்தவனென்றாலும், பலம்நிறைந்த எதிரியிடம், பலவீனமாக இருக்கும் ஒருவன் வணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், பலத்தில் நிறைவடைந்தவுடனேயே, அவன், அந்த எதிரியைக் கொல்ல வேண்டும். அவன் கொல்லப்படவில்லையென்றால், அவனால் {அந்த எதிரியால்} விரைவில் ஆபத்து எழும். தேவர்கள், மன்னர்கள், அந்தணர்கள், முதிர்ந்தோர், குழந்தைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு எதிரான கோபத்தை ஒருவன் முயற்சியுடன் அடக்க வேண்டும்.

முட்டாள்கள் ஈடுபடுவது போல, ஆதாயமற்ற சண்டைகளில் ஒரு ஞானி ஈடுபடக்கூடாது. அதனால் {அப்படிப்பட்ட சண்டைகளில் ஈடுபடாமல் இருப்பதால்} அவன், இவ்வுலகில் பெரும் புகழை அடைந்து, ஆபத்து மற்றும் பெருந்துயரங்களைத் தவிர்க்கிறான். அலியாக இருக்கும் கணவனை விரும்பாத பெண்களைப் போல, பலனற்ற அருள், விளைவில்லாத கோபம் கொண்டோரைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள மக்கள் விரும்ப மாட்டார்கள்.

செல்வத்தை அடைய புத்தி காரணமல்ல, அதே போல, வறுமைக்கு மூடத்தனம் காரணமல்ல; இவ்வுலகில் உள்ள வேறுபாடுகளின் காரணங்களை ஞானிகள் மட்டுமே அறிவர்; பிறரல்ல.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வயதில் மூத்தோரையும், நடத்தை, அறிவு, புத்திசாலித்தனம், செல்வம், குலமரபு ஆகியவற்றில் தலைமையாக இருப்போரையும் மூடன் எப்போதும் அவமதிப்பான்.

தீய மனநிலை கொண்டோர், அறிவற்றவர்கள், பொறாமை கொண்டோர், பாவிகள், குற்றங்களையே பேசுபவர்கள், கோபமுடையவர்கள் ஆகியோர் விரைவில் துயரத்திற்கு உள்ளாகின்றனர்.

ஏமாற்றுத்தனமில்லாமை {சொல் தவறாமை}, தானம், நிறுவப்பட்டுள்ள புணர்வு விதிகளை நோற்பது, நன்கு அடக்கப்பட்ட பேச்சு ஆகியவை அனைத்து உயிர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

ஏமாற்றுத்தனமில்லாத, சுறுசுறுப்பான, நன்றியுணர்வு கொண்ட, புத்திசாலித்தனமுள்ள, கபடமற்ற ஒருவனது கருவூலம் வெறுமையாக இருப்பினும், நண்பர்கள், ஆலோசகர்கள், பணியாட்கள் ஆகியோரை அவன் அடைகிறான்.

புத்திக்கூர்மை, மன அமைதி, தற்கட்டுப்பாடு, தூய்மை, கடுஞ்சொல் பேசாமை, நண்பர்களுக்கு ஏற்பில்லாத எதையும் செய்யவிரும்பாமை {நண்பர்களுக்குத் துரோகம் செய்யாமை} ஆகிய ஏழும் ஒருவனுடைய செழிப்பு எனும் சுடருக்கு எரிபொருளாகக் கருதப்படுகின்றன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறருக்கு உரியதைக் கொடுக்காத இழிந்தவன், தீய ஆன்மா கொண்டவன், நன்றிமறந்தவன், வெட்கங்கெட்டவன் ஆகியோரைத் தவிர்க்க வேண்டும். {குற்றமற்ற} அப்பாவியைப் பற்றி, அடுத்தவனிடம் தூண்டிவிடும் குற்றவாளி, ஒரே அறையில் பாம்புடன் இரவைக் கடத்தும் மனிதனைப் போல, இரவில் அமைதியாகத் தூங்க முடியாது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எவன் கோபம் அடைந்தால், ஒருவனின் உடமைகளும், பொருள் கொள்ளும் வழிகளும் ஆபத்துக்குள்ளாகுமோ, அவனை, தேவர்களை அமைதிப்படுத்துவது போல அமைதிப்படுத்த வேண்டும். பெண்கள், பொறுப்பற்றவர்கள், தங்கள் சாதிக்குரிய கடமைகளில் இருந்து விழுந்தவர்கள், தீய மனநிலை கொண்டவர்கள் ஆகியோரை நம்பியிருக்கும் நோக்கங்களின் {இலக்குகளின்} வெற்றி சந்தேகத்திற்குரியதே. ஓ! மன்னா {திருதராஷ்டரரே}, பெண், ஏமாற்றுக்காரன், குழந்தை ஆகியோரைத் தனது வழிகாட்டியாகக் கொண்டிருப்பவன் கல் தோணியைப் போல ஆதரவற்று மூழ்குவான்.

வேலையின் பொதுவான நெறிமுறைகளில் திறமையுள்ளவர்கள், அவ்வேலையின் குறிப்பிட்ட வகைகளை அறியாதிருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட வகை வேலைகள் துணை வேலைகளே என்பதால், அவர்கள் கற்றவர்கள் என்றும், அறிவுள்ளவர்கள் என்றும் மனிதர்களால் கருதப்படுகிறார்கள்.

மோசடிக்காரர்கள், கூத்தாடிகள், கெடுபுகழ் கொண்ட மகளிர் {வேசிகள்} ஆகியோரால் புகழப்படும் மனிதன் உயிரோடிருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுகிறான்.

அளவிலா சக்தி கொண்ட பலமிக்க வில்லாளிகளான இந்தப் பாண்டு மகனை {யுதிஷ்டிரனை} விட்டுவிட்டு, ஓ! பாரதரே, பலமிக்கப் பேரரசின் பொறுப்பை நீர் துரியோதனனிடம் அளித்திருக்கிறீர். எனவே, மூவலகங்களில் இருந்து விழுந்த பலியைப் {மகாபலியைப்} போலப் பரந்திருக்கும் இந்தச் செல்வச் செழிப்பு வீழ்ச்சியடைவதை விரைவில் நீர் காண்பீர்” என்றான் {விதுரன்}.


      

குலம் கண்டறியும் முறை! - உத்யோக பர்வம் பகுதி 39அ

Testing one’s lineage!| Udyoga Parva - Section 39a | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 39) {விதுர நீதி - 14}
பதிவின் சுருக்கம் : பிறருக்கு ஏற்புடையவனாக மனிதன் எவ்வாறு ஆக முடியும்? எது ஆதாயம்? எது இழப்பு?  பணிவுடன் இருப்பவன் என்ன செய்வான்? அனைத்திலும் குறை சொல்பவர்கள் என்ன செய்வார்கள்? நட்பை எப்படி ஏற்க வேண்டும்? யார் நட்பைத் தவிர்க்க வேண்டும்? உறவினர்களால் என்ன செய்ய முடியும்? என்பன போன்றவற்றைச் சொல்லி பாண்டவர்களுக்குச் சில கிராமங்களையாவது கொடுக்கும்படி திருதராஷ்டிரனிடம் விதுரன் வேண்டுதல்; அறநெறிகளுக்கு எதிரான செயல்களைச் செய்யாதவர்கள் எவரும் உண்டா? எவன் புகழை இழப்பதில்லை?  எவன் செழிப்பில் எப்போதும் வளர்கிறான்? நேராமல் காக்க வேண்டிய ஆறு விஷயங்கள் என்ன? அறம், பொருளை யார் அறியமாட்டார்கள்? ஆசை எப்படிப்பட்டது? ஒருவனது குலத்தைக் கண்டுபிடிக்கும் முறைகள் போன்றவற்றையும் விதுரன் சொல்வது...

திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “செழிப்புக்கோ, வறுமைக்கோ மனிதன் காரணமானவன் அல்ல. அவன், நூலால் அசைக்கப்படும் மரப்பாவை {பொம்மையைப்} போன்றவனே. உண்மையில், படைப்பாளனே {பிரம்மனே} மனிதனை விதிக்கு ஆட்படுத்துகிறான். நீ சொல்வதைக் கவனமாகக் கேட்டு வருகிறேன். மேலும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.


{ஏற்புடையவனாதல்}


பிருஹஸ்பதியே ஆனாலும், காலம் தவறி பேசுபவன், நிந்தனையையும், அறியாமையுடையவன் என்ற குற்றச்சாட்டையும் அடைகிறான். ஒருவன் தானத்தால் ஏற்புடையவன் {இனிமையானவன்} ஆவான், இன்னொருவன் இனிய சொற்களால் ஏற்புடையவன் ஆவான். மூன்றாமவன், மந்திர ஆற்றல் மற்றும் மருந்துகளின் சக்தியால் ஏற்புடையவன் ஆவான். எனினும் இயல்பாகவே ஏற்புடையவனாக இருப்பவன் அப்படியே நீடித்து வருவான். ஒருவனால் வெறுக்கப்படும் மற்றவன், அவனால் {வெறுப்பவனால்} நேர்மையானவனாகவோ, புத்திசாலியாகவோ, அறிவாளியாகவோ  எப்போதுமே கருதப்படமாட்டான். தனக்கு நன்மை செய்யும் அனைத்தையும் ஒருவன் விரும்புகிறான்; {தனக்கு} தீமை செய்யும் அனைத்தையும் அவன் வெறுக்கிறான்.

{ஆதாயமும் இழப்பும்}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் பிறந்ததும், “இந்த ஒரு மகனை நீர் புறக்கணிக்க வேண்டும். அவனை {துரியோதனனைப்} புறக்கணித்தால் மற்ற நூறு மகன்களும் வளமையை அடைவார்கள். அவனை {துரியோதனனை உம்மிடமே} வைத்துக் கொண்டால், உமது நூறு மகன்களுக்கு அழிவு ஏற்படும்” என்றும் நான் உமக்குச் சொன்னேன்.

இழப்புக்கு வழிவகுக்கும் எந்த ஆதாயத்தையும் உயர்வாகக் கருதக்கூடாது. மறுபுறம், இழப்பேயானாலும் ஆதாயத்தைக் கொண்டு வரும் அந்த இழப்பை உயர்வாகவே கருத வேண்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆதாயத்தைக் கொண்டு வரும் அது இழப்பாகாது. எனினும், இன்னும் பெரிய இழப்பைக் கொண்டு வரப்போவதை இழப்பு என்றே கருத வேண்டும். [1]

[1] போர் என்ற இழப்புக்கு வழிவகுக்கும் துரியோதனனை, ஆதாயம் என்று நினைத்து உயர்வாகக் கருதக்கூடாது. துரியோதனனைப் புறக்கணித்து பாண்டவர்களை மீண்டும் கொண்டுவருவதால் உண்டாகப் போவது இழப்பாகாது. அதுவே பெரும் ஆதாயம். ஆனால், பாண்டவர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படப் போகும் போரால், துரியோதனனையும் இழந்து, பலரையும் இழக்கப் போவது பெரும் இழப்பே என்று பொருள்.

சிலர் நல்ல குணங்களின் விளைவாகச் சிறந்தவர்களாகிறார்கள்; பிறர் செல்வத்தின் விளைவால் அப்படி {சிறந்தவர்கள்} ஆகிறார்கள். ஓ! திருதராஷ்டிரரே, செல்வம் நிறைந்திருந்தாலும், நல்ல குணங்களற்று இருப்பவர்களைத் தவிர்ப்பீராக” என்றான் {விதுரன்}.

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நீ சொன்ன அனைத்தும் ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டதும், எனது எதிர்கால நன்மைக்கும் ஆனதே. எனினும், நான் எனது மகனை {துரியோதனனைப்} புறக்கணிக்கத் துணியேன். எங்கே நீதி இருக்கிறதோ அங்கே வெற்றி இருக்கிறது என்பது நன்கு அறியப்பட்டதே {எனக்கு நன்றாகத் தெரியும்}” என்றான் {திருதராஷ்டிரன்}.

விதுரன், “அனைத்து அறங்களும் அருளப்பட்டு, பணிவுடன் இருப்பவன், வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் சிறு பாதிப்புகளையும் பாரபட்சமின்றி எப்போதும் பார்ப்பான். எனினும், பிறரை எப்போதும் குறை சொல்வதில் ஈடுபடுபவர்கள், அனைத்து விஷயங்களிலும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடவும், அடுத்தவருக்கு வலியைத் தரவுமே எப்போதும் முயல்கிறார்கள்.

{நட்பு ஏற்றல்}


யாரைப் பார்த்தாலே கெடுதல் உண்டாகுமோ, யாருடைய தோழமை ஆபத்து நிறைந்ததோ அவர்களுக்குத் தானமளிப்பதாலோ, அவர்களிடம் தானத்தைப் பெறுவதாலோ பாவம் ஏற்படுகிறது. சண்டைக்காரர்கள் {சண்டையிடுவதையே வழக்கமாகக் கொண்டவன் {அ} பிரிவை ஏற்படுத்துபவன்}, பேராசைக்காரர்கள், வெட்கமற்றவர்கள், ஏமாற்றுக்காரர்கள், அநீதியானவர்களாக அறியப்பட்டவர்கள் ஆகியோரது தோழமை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதே போன்ற குறைகளுடன், கொடும் இயல்பும் கொண்ட மனிதர்களையும் தவிர்க்க வேண்டும். நட்புக்குக் காரணமான நிகழ்வு முடிந்ததும், இழிந்தவர்களின் நட்பும் முடிந்துவிடுகிறது. அந்தத் தொடர்பால் ஏற்பட்ட நல்ல விளைவுகளும், அதனால் உண்டான மகிழ்ச்சி ஆகிய அத்தனையும் முடிவுக்கு வந்துவிடும். பின்னர் அவர்கள் {அந்த இழிந்த மனிதர்கள்}, தங்கள் (முன்னாள்} நண்பனை நிந்தித்து, அவனுக்கு இழப்பேற்படுத்த முயல்கிறார்கள். தாங்கள் அடைந்த இழப்பு மிகச் சிறியதாக இருப்பினும், தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு} இல்லாமையால், அமைதியை அனுபவிக்கத் தவறிவிடுகின்றனர். கற்றவனொருவன், இவை அனைத்தையும் கவனமாகப் பரிசோதித்து, நன்றாக ஆலோசித்து, கீழ்த்தரமானவர்கள் மற்றும் தீய மனம் கொண்டவர்களின் இது போன்ற நட்புகளைத் தூரத்தில் இருந்தே தவிர்த்துவிட வேண்டும்.

{உறவினர்கள் 2}


ஏழைகள், இழிந்தவர்கள், ஆதரவற்ற உறவினர்கள் ஆகியோருக்கு உதவும் ஒருவன், பிள்ளைகள், விலங்குகள் {கால்நடைச் செல்வம்} ஆகியவற்றை அடைந்து, முடிவிலாத செழிப்பை அனுபவிக்கிறான். தங்கள் நன்மையை விரும்புபவர்கள், எப்போதும் தங்கள் உறவினர்களுக்கு உதவ வேண்டும். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது குலத்தை வளர்க்க முயல்வீராக. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் உமது உறவினர்களிடம் நன்றாக நடந்து கொண்டால், செழிப்பு உமதாகும். நற்குணங்களற்ற உறவினர்களும் {ஒருவனால்} பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்து அறங்களையும் கொண்டு, உமது உதவிகளைப் பணிவுடன் எதிர்நோக்குபவர்களை {பாண்டவர்களை} எந்த அளவுக்குப் பாதுகாக்க வேண்டும்?

பாண்டுவின் வீர மகன்களுக்கு உதவி செய்வீராக, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களின் பராமரிப்பில் சில கிராமங்களைக் கொடுப்பீராக. இப்படிச் செய்வதால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் புகழ் உமதாகும். நீர் முதிர்ந்தவராக இருக்கிறீர்; எனவே, உமது மகன்களை நீர் கட்டுப்படுத்த வேண்டும். உமக்கு எது நன்மையோ, அதையே நான் சொல்ல வேண்டும். நீர் நலமாக இருக்க விரும்புபவர்களில் நானும் ஒருவன் என்பதை அறிவீராக. ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, தனது நன்மையை விரும்பும் ஒருவன் தனது உறவினர்களுடன் சண்டையிடவே கூடாது.

இவ்வுலகில், உறவினர்களே ஒருவனை மீட்கிறார்கள் {காக்கிறார்கள்}. மேலும், உறவினர்களே {உறவினர்களை} அழிக்கவும் செய்கிறார்கள். நீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் {ஆபத்துகளில்} காக்கிறார்கள்; அதே வேளையில் அநீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் (தங்கள் சகோதரர்களை) {ஆபத்தில்) மூழ்கடிக்கிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! மரியாதைகளைக் கொடுப்பவரே, பாண்டுவின் மகன்களிடம் நீதியோடு நடப்பீராக. அவர்களால் சூழப்பட்டிருக்கும் நீர், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவராக இருப்பீர்.

கையில் கணைகளுடன் இருக்கும் வேடனைக் கண்ட மான் போல, செழிப்புடன் இருக்கும் ஒரு உறவினரின் முன்னிலையில் மற்றொரு உறவினன் {செழிப்பில்} சுருங்கிப் போனால் {வறுமை நிலை அடைந்தால்}, அவனது {அந்த வறியவனின்} பாவங்கள் அனைத்தையும் செழிப்புடன் இருக்கும் அந்த உறவினனே ஏற்றுக் கொள்ள வேண்டிவரும்.

ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, (தற்போதைய உமது செயல்பாடின்மையால்), எதிர்காலத்தில் பாண்டவர்களின் அல்லது உமது மகன்களின் இறப்பைக் கேள்விப்பட்டு, நீரே வருந்த வேண்டியிருக்கும். ஓ!, இவை யாவையும் சிந்திப்பீராக. வாழ்வே நிலையற்றதாக இருக்கும்போது, எதன் {எந்த செயலின் அல்லது செயலின்மையின்} விளைவால் ஒருவன் சோக அறைக்குள் நுழைந்து வருத்தத்தில் ஈடுபட வேண்டிவருமோ, அதை ஆரம்பத்திலேயே அவன் தவிர்த்துவிட வேண்டும்.

அறநெறிகளின் அறிவியலுக்கு {நீதி சாத்திரத்திற்கு} ஆசிரியரான பார்கவரைத் [2] {சுக்ராச்சாரியரைத்} தவிர, அறநெறிகளுக்கு எதிரான செயல்களை மேற்கொள்ளாதவர்கள் வேறு யாருமில்லை என்பதே உண்மை. {அறநெறிகளுக்கு எதிராகச் செயல்படாதவர்கள் யாருமே இல்லை என்பதே உண்மை}. எனினும், {நல்ல} விளைவுகளை உண்டாக்கும் நீதி மிக்கக் கருத்துகள், புத்திக்கூர்மையுள்ள அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறது என்பதும் காணப்படுகிறது.

[2] பார்கவர் என்றால் பிருகு முனிவரின் பரம்பரையில் வந்தவர் என்று பொருள் (http://en.wikipedia.org/wiki/Bhargava). சுக்ராச்சாரியார் பிருகுவின் மகன். சுக்ராச்சாரியார் பீஷ்மரின் குருக்களில் ஒருவர் ஆவார். பரசுராமருக்கும் பார்கவர் என்ற பெயருண்டு. ஆனால் இங்கே குறிப்பிடப்படுவது சுக்ராச்சாரியராகத்தான் இருக்க வேண்டும்.


நீர் குரு குலத்தின் கொழுந்துகளில் {குரு வம்சத்தவரில்} முதிர்ந்தவராவீர். துரியோதனன், பாண்டு மகன்களுக்கு இத்தீமைகளைச் செய்தால், ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தையும் நிவர்த்திச் செய்வது {தடுப்பது} உமது கடமையாகும். அவர்களை {பாண்டவர்களை}, மீண்டும் அவர்களது பொறுப்புகளில் அமர்த்தி, இவ்வுலகில் நீர் செய்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களைப் போல வழிபடத்தகுந்தவர் ஆவீராக.

ஞானிகள் கண்ட விளைவுகள் படி அவர்களால் சொல்லப்பட்ட நல்ல வார்த்தைகளை நினைவில் கொண்டு, எவன் செயலில் ஈடுபடுகிறானோ, அவன் தனது புகழை இழப்பதில்லை. கல்வியும், திறமையும் கொண்ட மனிதர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் கூட ஞானமற்றவையாக {அறிவற்றவையாக} இருக்கின்றன. ஏனெனில், சொல்லப்பட்டவையைத் தவறாகப் புரிந்து கொண்டு, {மனதில் ஆழப்} பதிய வைக்கப்படுகிறது. அல்லது, புரிந்து கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் அவை {கற்றோரால் சொல்லப்படும் வார்த்தைகள்} சாதிக்கப்படுவதில்லை. பாவம், துன்பம் ஆகியவற்றை விளைவிக்கும் எக்காரியத்தையும் எப்போதுமே செய்யாத கற்ற மனிதன், எப்போதும் (செழிப்பில்) வளர்கிறான். எனினும், தீய ஆன்மா கொண்ட மனிதன், தனது மூடத்தனத்தால், பாவ வழியில் தொடர்ந்து செல்ல ஆரம்பித்து, சேறு நிரம்பிய ஆழமான பள்ளத்தில் விழுகிறான்.

{நேராமல் காக்க வேண்டிய ஆறு}


{செய்யப்படும்} ஆலோசனைகளைப் பகிரங்கப்படுத்தும் (பின்வரும்) ஆறு குழாய்களை {வழிகளை}, அறிவுள்ள ஒருவன் எப்போதும் பார்வையில் {கவனத்தில்} வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றியையும், நீண்ட மரபையும் விரும்பும் ஒருவன் இந்த ஆறில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். {1} மயக்கம் {குடி}, {2} உறக்கம், {3} ஒற்றர்களைக் கவனியாமை, {4} தன் இதயச் செயல்பாட்டைச் சார்ந்து, ஒன்றின் மேல் ஒன்றை வைக்கும் அணுகுமுறை {தன்னிடம் உண்டாகும் குறிப்பு}, {5} தீய ஆலோசகரிடம் வைக்கப்படும் நம்பிக்கை, {6} திறமையற்ற தூதர்கள் ஆகியவையே அவை {அந்த ஆறும்}.

{ஆலோசனைகள் மறைத்தல்}


அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் ஒருவன், (ஆலோசனைகளைப் பகிரங்கமாக்கும்) இந்த ஆறு வாயில்களை {துவாரங்களை} அறிந்து, அவற்றைத் தவிர்ப்பதால் {செய்யப்படும் ஆலோசனைகளை அதன் மூலம் மறைப்பதால்}, எதிரிகளை அடக்குவதில் வெல்கிறான்.

சாத்திரங்கள் எதையும் அறியாமல், பெரியோருக்காகக் காத்திராமல் {பணிவிடை செய்யாமல்} இருக்கும் ஒருவன், பிருஹஸ்பதியின் அறிவையே பெற்றிருந்தாலும், அறத்தையோ, பொருளையோ அறியமாட்டான்.

கடலிலிட்ட பொருள் தொலைந்து போகும்; கேட்காதவனிடம் பேசப்படும் வார்த்தைகள் தொலைந்து போகும்; ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காத ஒருவனிடம் சாத்திரங்கள் {சாத்திர அறிவு} தொலைந்து போகும்; அணைந்த நெருப்பால் விடப்பட்ட சாம்பலில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யும் தொலைந்து போகும்.

புத்திசாலி ஒருவன், தனது புத்தியைப் பயன்படுத்தியும், தனது காதுகள், கண்கள் மூலம் {பிறர் மூலம் கேட்டும், தானே பார்த்தும்}. ஒரு தீர்மானத்தை எட்டி அறிவாளிகளுடன் {ஞானிகளுடன்} நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடக்கம், காதுகள் கேட்கும் அவதூறையும்; ஆற்றல், தோல்வியையும் அகற்றும். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கோபத்தை வெல்லும். மேலும், மங்களச் சடங்குகள் {ஆசாரங்கள்} தீய அறிகுறிகள் அனைத்தையும் அழிக்கும்.

ஒருவனது குலம், ஓ! மன்னா {திருதராஷ்டரரே}, இன்பத்தைக் கொடுக்கும் பொருள், பிறந்த இடம், வீடு, நடத்தை, உணவு, ஆடை ஆகியவற்றைக் கொண்டு சோதிக்கப்படுகிறது {அவற்றால் ஒருவனது குலம் அறியப்படுகிறது}. 

இன்பத்தைக் கொடுக்கும் பொருள் கிடைக்கும்போது, துறவை {விடுதலையை} அடைந்த ஒருவன் கூட, அதை அனுபவிக்க விரும்பாமல் இருப்பதில்லை {அதை அனுபவிக்கவே விரும்புகிறான்}. அப்படியிருக்கும்போது,  ஆசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனைக் குறித்து என்ன சொல்ல முடியும்? {ஆசையைத் துறந்த ஒருவனே காமத்தில் வீழும்போது, காமத்தில் ஆசை கொண்டவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்?}.


     

செழிப்பு தங்குமிடம்! - உத்யோக பர்வம் பகுதி 39ஆ

Where does prosperity reside! | Udyoga Parva - Section 39b | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 39) {விதுர நீதி - 15}
பதிவின் சுருக்கம் : ஆலோசகனைப் பேணுதல்; நூறு உயர்பிறப்பாளர்களைவிட உயர்ந்தவன் எவன்? யாவருடைய நட்பு கெடுவதில்லை? புத்திசாலி ஒருவன் யாரைத் தவிர்க்க வேண்டும்? யாருடன் நட்பு கொள்ளக்கூடாது? யாருடன் நட்பு கொள்ள வேண்டும்? எவை வாழ்நாளை நீட்டிக்கின்றன? எவன் ஆண்மை நிறைந்தவன்?  எவை செழிப்பைக் கொண்டுவரும்?  எவன் பெரிய மனிதன்? யாரிடம் செழிப்பு தங்காது? செழிப்பின் வேர்கள் எவற்றில் இருக்கின்றது? இரக்கப்படத்தக்கவன் யார்? என்பன போன்றவற்றைச் சொல்லி பாண்டுவின் மகன்கள் மற்றும் தன் மக்களிடம் திருதராஷ்டிரன் பாரபட்சம் பார்க்கக்கூடாது என விதுரன் சொன்னது....

{ஆலோசகர்களைப் பேணுதல்}


{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} “கல்வியறிவு, அறம், ஏற்புடைய {இனிய} தோற்றம், நண்பர்கள், இன்சொல் {இனிய பேச்சு}, நல்ல இதயம் ஆகியவற்றைக் கொண்டு, அறிவாளிகளை {ஞானிகளை} வழிபடும் ஓர் ஆலோசகனை மன்னன் பேணிப் பாதுகாக்க வேண்டும். தாழ்ந்த பிறப்போ, உயர் பிறப்போ கொண்டிருந்தாலும், கண்ணிய தொடர்புகளின் விதிகளை மீறாமல் {மரியாதையைத் தாண்டாமல்}, அறத்தில் ஒரு கண் கொண்டு {தர்மத்தை விரும்பி}, பணிவும் அடக்கமும் கொண்ட ஒருவன், நூறு உயர் பிறப்பாளர்களை விட உயர்ந்தவனாவான். கமுக்கமான {இரகசிய} நோக்கங்கள், இன்பங்கள், ஈட்டல்கள் {சம்பாதனைகள்} {அறிவீட்டல்கள்} போன்ற அனைத்து காரியங்களிலும் யாவருடைய {எந்த இருவர் அல்லது பலரின்} இதயங்கள் உடன்படுகின்றனவோ, அவர்களுக்குள் உள்ள நட்புக்கு எப்போதும் கெடுதல் உண்டாவதில்லை.


புற்களால் மறைக்கப்பட்டிருக்கும் குழியின் வாய் போல, தீய ஆன்மா கொண்ட மூடனை ஒரு புத்திசாலி தவிர்க்க வேண்டும். ஏனெனில், அப்படிப்பட்ட மனிதனுடனான நட்பு நிலைக்காது.

செருக்குடையவன், மூடன், கடுமையானவன், மூர்க்கன், நீதி வழுவியவன் ஆகியோருடன் அறிவுள்ள ஒரு மனிதன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

நன்றி, அறம் ஆகியவற்றைக் கொண்டு, உண்மைநிறைந்து, பெரிய இதயம்கொண்டு, அர்ப்பணிப்புடன் இருந்து, தனது புலன்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன், தனது கண்ணியத்தைக் காத்துக் கொண்டு, எப்போதும் நண்பர்களைக் கைவிடாமல் இருக்கிறான். அப்படிப்பட்டவனையே நண்பனாகக் கொள்ள விரும்ப வேண்டும்.

தங்களுக்குரிய பொருட்களில் {புலன் நுகர் பொருட்களில்} இருந்து புலன்களை {முற்றிலும்} விலக்குதல், மரணத்திற்கே ஒப்பானதாகும். அதே போல, அந்தப் பொருட்களில் புலன்களின் ஆதீத ஈடுபாடு தேவர்களையே கூட அழித்துவிடும்.

பணிவு, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு {ஜீவகாருண்யம்}, மன்னிக்கும் குணம் {பொறுமை}, நண்பர்களிடம் மரியாதை ஆகியவை வாழ்நாளை {ஆயுளை} நீட்டிக்கின்றன என்று கற்றோர் கூறியுள்ளனர்.

ஒருமுறை கையறு நிலையைத் {விரக்தி} தந்த அறக் கொள்கை நோக்கங்களை {அநியாயத்தால் கெடுக்கப்பட்ட ஒரு பொருளை} உறுதியான தீர்மானத்துடன் {நல்ல நியாயத்தால்} முயன்று அடைபவனே உண்மையான ஆண்மை {உத்தம புருஷர்களின் விரதம்} கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.

{செழிப்பும் பொறுமையும்}


எதிர்காலத்தில் பயன்படுத்த வேண்டிய தீர்வுகளை அறிந்தவன், தற்காலத்தில் உறுதியான தீர்மானத்துடன் இருப்பவன், கடந்த காலத்தைக் கருத்தில் கொண்டு, தொடங்கப்போகும் ஒரு செயல் எப்படி முடியும் என்பதை {சரியாக} எதிர்பார்ப்பவன் தனது நோக்கங்கள் அனைத்தையும் அடைகிறான்.

சொல், செயல், எண்ணம் ஆகியவற்றால் எவற்றை ஒரு மனிதன் தொடர்கிறானோ, அவற்றைத் தானே அடைகிறான்; எனவே, ஒருவன் தனக்கு நன்மையைத் தரும் காரியங்களையே முயல வேண்டும். நன்மையை அடைந்த பிறகும் முயற்சி செய்வது {மங்களத் திரவியங்களைத் தொடுவது}, காலம், இடம், வழிவகைகள் {முறைகள்} ஆகியவற்றின் தன்மைகளை அறிவது {உதவியின் நிறைவை அறிவது}, சாத்திரங்களை அறிவது, செயல்பாடு, ஒளிவுமறைவற்ற தன்மை, நல்லவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகள் ஆகியன செழிப்பையே கொண்டு வரும். நன்மை, ஆதாயம், செழிப்பு ஆகியவற்றின் வேர் விடாமுயற்சியே.

விடாமுயற்சியுடன், மனவேதனைக்கு ஆளாகாமல், தனது நோக்கத்தைத் தொடர்ந்து செய்வதால், ஒரு மனிதன் முடிவிலாக மகிழ்ச்சியை அடைந்து, உண்மையில் பெரிய மனிதன் ஆவான்.

ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, பலமும் சக்தியும் கொண்ட ஒரு மனிதனுக்கு, அனைத்து இடங்களிலும், எல்லாக் காலங்களிலும், மன்னிக்கும் தன்மையை {பொறுமையை} விட எதுவும் மிகுந்த மகிழ்ச்சியையும், நன்மையையும் தராது. பலவீனனோ அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையுடன் {மன்னிக்கும் தன்மையுடன்} இருக்க வேண்டும். சக்தியுள்ளவன், அறநோக்கத்தால் மன்னிப்பவனாக {பொறுமையுள்ளவனாக} வேண்டும்; வெற்றியையும், தோல்வியையும் சமமாகக் கருதுபவன் இயல்பாகவே மன்னிக்கும் தன்மையுடன் இருக்கிறான்.

அறத்திற்கும், பொருளுக்கும் பழுதேற்படுத்தாத நிறைவை அடைய, ஒருவன் இன்பத்தேடலை நிச்சயம் தொடரவேண்டும். எனினும், புலன்களில் முழுதாய் ஈடுபட்டுவிட்டு  மூடனைப் போலவும் அவன் நடந்து கொள்ளக்கூடாது.

துயரத்தால் துன்புறுத்தப்படுபவன், தீய வழிகளுக்கு அடிமையாக இருப்பவன், இறைமையை {பரமாத்மாவை} மறுப்பவன் {நாத்திகன்}, சோம்பேறி, புலன்களைத் தனது கட்டுப்பாட்டில் வைக்காதவன், முயற்சியற்றவன் ஆகியோரிடம் எப்போதுமே செழிப்பு தங்காது.

அடக்கமாக இருக்கும் எளிமையான மனிதன், தனது பணிவால் பலவீனமானவனாகக் கருதப்பட்டு, தவறான அறிவு படைத்தவர்களால் துன்புறுத்தப்படுகிறான் {அவமதிக்கப்படுகிறான்}.

அளவுக்கதிகமான தயாளன், அளவில்லாமல் தானமளிப்பவன், மிதமிஞ்சிய துணிவுள்ளவன், கடுமையான நோன்புகளைப் பயில்பவன், அறிவில் செருக்குடையவன் ஆகியோரிடம் கொண்ட பயத்தினால், செழிப்பு {எனும் லட்சுமி தேவி} அவர்களை அணுகுவதேயில்லை.

அதிகக் குணம் கொண்டவனிடமும், {நற்} குணமே அற்றவனிடமும் செழிப்பு தங்குவதில்லை. அனைத்து அறங்களின் சேர்க்கையை அவ ள் விரும்புவதில்லை. அதே போல எந்த அறங்களும் அற்றவர்களிடமும் அவள் மகிழ்ச்சி கொள்வதில்லை. கண்பார்வையற்ற {குருட்டு} பசுப் போல, செழிப்பானவள், குறிப்பிடத்தக்கவனாக இல்லாதவனிடம் கூட தங்குகிறாள் {யாரிடம் தங்குவாள் எனத் தெரியாது}.

வேதங்களின் கனிகளே {பயன்களே} நெருப்பின் முன் செய்யப்படும் (ஹோமச்} சடங்குகள்; நல்ல மனநிலை மற்றும் நடத்தையின் கனிகளே சாத்திரங்களின் அறிவு. கலவி இன்பமும், வாரிசுகளும் பெண்களின் கனிகள்; இன்பமும் ஈகையும் செல்வத்தின் கனிகள். பாவத்தால் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு தனது செழிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செய்யும் ஒருவன், (அக்காரியத்திற்காக) பாவத்தால் விளைந்த பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவாக, அதன் {செழிப்பின்} கனிகளை {பயன்களை} அடுத்த உலகில் பெறமாட்டான்.

பாலைவனங்கள், அல்லது ஆழ்ந்த கானகங்கள், அல்லது அடைவதற்கரிதான கடுமை நிறைந்த இடங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், அனைத்துவிதமான அச்சங்கள் மற்றும் ஆபத்துகளின் மத்தியிலும், அல்லது தன்னைத் தாக்கப்போகும் மரண ஆயுதம் ஓங்கப்பட்டிருந்தாலும், மனோபலம் கொண்ட ஒரு மனிதன், அவற்றுக்கு முன்னிலையில் அச்சத்தை அடைவதில்லை.

{செழிப்பின் வேர்}


முயற்சி, தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு}, திறன், கவனம், உறுதி, நினைவு {ஞாபக சக்தி}, முதிர்ச்சியுடன் தீர்மானித்த செயல்களின் துவக்கம் ஆகியவையே செழிப்பின் வேர் என அறிவீராக.

தவங்களே துறவிகளின் பலம்; வேதங்களே அதை அறிந்தவர்களின் பலம்; பொறாமையே தீயவர்களின் பலம்; அதே போல, மன்னிக்கும் தன்மையே {பொறுமையே} அறம்சார்ந்தவர்களின் பலமாகும்.

நீர், கிழங்குகள், பழங்கள், பால், தெளிந்த நெய், அந்தணரின் விருப்பம், ஆசானின் உத்தரவு, மருந்து {ஔஷதம்} ஆகிய எட்டும் நோன்பை அழிக்காதவையாகும்.

எது தனக்குக் கெடுதலாக இருக்கிறதோ, அதை அவன் வேறு ஒருவனுக்குச் செய்யக்கூடாது. சுருக்கமாக, இதுவே அறம் எனப்படுவதாகும். பிற வகை அறங்களும் இருக்கின்றன. ஆனால், அவை உறுதியற்றவை. கோபத்தை, மன்னிக்கும் தன்மையால் {பொறுமையால்} வெல்ல வேண்டும்; தீயவர்களை நேர்மையால் வெல்ல வேண்டும்; கஞ்சனைக் கொடையாலும், பொய்யை உண்மையாலும் வெல்ல வேண்டும்.

பெண்கள், ஏமாற்றுக்காரன், சோம்பேறி, கோழை, மூர்க்கன், பலத்தில் செருக்குடையவன், திருடன், நன்றிமறந்தவன், இறைமறுப்பாளன் {நாத்திகவாதி} ஆகியோரை ஒருபோதும் நம்பக்கூடாது.

பெரியோரை மரியாதையாக வணங்கி, முதிர்ந்தவர்களுக்குப் பணிவிடை செய்பவனின் சாதனைகள், வாழ்நாளின் {ஆயுளின்} அளவு, புகழ், சக்தி ஆகிய நான்கும் எப்போதுமே பெருகுகிறது.

வலிநிறைந்த முயற்சியல்லால் அடைய முடியாத பொருட்களிலோ {நோகாமல் கிடைக்கும் அரிய பொருட்களிலோ}, நீதியைத் தியாகம் செய்வதிலோ, எதிரியிடம் தலைவணங்குவதிலோ உமது இதயத்தைச் செலுத்தாதீர்.

{இரக்கப்படத் தக்கவன்}


அறிவில்லாத மனிதன் இரக்கப்படத்தக்கவன்; கனியற்ற கலவி இரக்கப்படத்தக்கது; ஒரு நாட்டில் உணவற்று இருக்கும் மக்கள் இரக்கப்படத்தக்கவர்கள்; மன்னன் இல்லாத நாடு இரக்கப்படத்தக்கது. உடல் கொண்ட உயிரினங்களின் வலிக்கும், பலவீனத்திற்கும் தோற்றுவாய்களாகும் இவை.

குன்றுகள் மற்றும் மலைகளுக்குச் சிதைவை உண்டாக்கும் மழை; பெண்களுக்கு வேதனையை உண்டாக்கும் இன்பமின்மை; இதயத்திற்குக் கணையாகும் கடுஞ்சொற்கள். வேதங்களின் களங்கமான கல்லாமை; அந்தணர்களிடம் நோன்பின்மை; பூமிக்கு {பூமியின் களங்கமான} வாஹ்லீகர்கள்; மனிதர்களின் {களங்கமான} பொய்மை; {அரிய பொருட்களின் மீது} கற்புடைய பெண்களின் ஆர்வம்; பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியேறுதல் களங்கம்}. தங்கத்தின் களங்கம் வெள்ளி; வெள்ளிக்கு ஈயம்; ஈயத்திற்குக் காரீயம்; காரீயத்துக்கு {களங்கமான} பயனற்ற கசடுகள் ஆகியவை ஒவ்வொன்றுக்கும் பலவீனத்தையும் வலியையும் தரும்.

படுப்பதால் உறக்கத்தையும்; ஆசையால் பெண்களையும்; எரிபொருளால் {விறகினால்} நெருப்பையும், குடிப்பதால் மதுவையும் ஒரு மனிதனால் வெல்ல முடியாது.

நண்பனை தானத்தாலும், எதிரிகளைப் போரினாலும், மனைவியை உணவு மற்றும் பானங்களாலும் வென்றவனுக்கு வாழ்வு பயனுள்ளதே. ஆயிரம் உள்ளவர்களும் வாழ்கிறார்கள்; நூறு உள்ளவர்களும் வாழவே செய்கிறார்கள்.

ஓ! திருதராஷ்டிரரே ஆசையைத் துறப்பீராக. ஏதாவதொரு வழியில் தங்கள் வாழ்வைப் பராமரிக்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை. இந்தப் பூமியில் இருக்கும் உமது நெல், கோதுமை, தங்கம், கால்நடைகள், பெண்கள் ஆகிய அனைத்தும் ஒரு மனிதனைக் கூட மனநிறைவு கொள்ளச் செய்யாது…

இதை நினைவில் கொண்டே, அறிவாளிகள் உலகளாவிய ஆளுகை இல்லை என்பதற்காக எப்போதுமே வருந்துவதில்லை.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் மீண்டும் உமக்குச் சொல்கிறேன். பாண்டுவின் மகன்கள் மற்றும் உமது மகன்கள் ஆகிய உமது பிள்ளைகளின் மீது சமமான நடத்தையைக் கடைப்பிடிப்பீராக. {அவர்களுக்குள் பாரபட்சம் பாராமல் இருப்பீராக}.” என்றான் {விதுரன்}.


        

அனைத்து கல்விகளிலும் உயர்ந்தது! - உத்யோக பர்வம் பகுதி 40

Highest of all teachings! | Udyoga Parva - Section 40 | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 40) {விதுர நீதி - 16}
பதிவின் சுருக்கம் : விரைவில் புகழ்பெறுபவன் எவன்? அந்தணரைக் கொன்ற பாவத்துக்கு நிகரானவை எவை? அறிவை அடைவதற்கு எதிரிகளாக இருப்பவை எவை? நிறைவடையாதவை எவை?  எவற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும்? அனைத்து கல்வியிலும் உயர்ந்தது எது? ஈமச்சிதையில் இடப்பட்டவனைத் தொடர்ந்து செல்பவை எவை? ஆன்மா எவ்வாறு நதியோடு ஒப்பிடப்படுகிறது?  கட்டுப்படுத்தப்பட வேண்டியவை எவை? நால்வகையினரின் கடமைகள் எவை? என்பன போன்றவற்றைச் சொல்லி, யுதிஷ்டிரனை மன்னனாக்கும்படி திருதராஷ்டிரனிடம் விதுரன் சொல்வது...

விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான் “நல்லவர்களால் வழிபடப்பட்டு, செருக்கைக் கைவிட்ட நல்ல மனிதன் ஒருவன், தனது சக்திக்கு மீறாமல், தனது நோக்கங்களைத் தொடர்ந்து சென்றால், அவன் விரைவில் புகழை வெல்வான். ஏனெனில், ஒரு மனிதனிடம் மனநிறைவு கொண்ட நல்லவர்கள், நிச்சயம் அவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள். அநீதி நிறைந்த ஒரு பெரும் பொருளை, தன் சொந்த விருப்பத்தின் பேரில் கைவிடும் ஒருவன், தோலை {சட்டையை} உரித்து வெளியேறும் பாம்பு போல, அனைத்து எதிரிகளையும் கைவிட்டு மகிழ்ச்சியாக வாழ்வான். பொய்மையால் ஈட்டப்பட்ட வெற்றி, மன்னனிடம் ஏமாற்றுகரமான நடத்தை, நோக்கங்களில் நேர்மையற்ற உணர்வுகளை ஆசான் முன்பு வெளிப்படுத்தல் ஆகிய மூன்றும் பிராமணனைக் கொன்ற பாவத்திற்கு நிகரானவை ஆகும்.

{மாணவர்கள்}


அதீத பொறாமை, மரணம், தற்புகழ்ச்சி ஆகியவையே செழிப்பின் அழிவுக்குக் காரணங்களாகும். ஆசானைக் கவனிப்பதில் கவனமின்மை, அவசரம், தற்பெருமையின்மை ஆகிய மூன்றும் அறிவுக்கு {ஞானத்திற்கு} எதிரிகளாகும்.

சோம்பல், கவனமின்மை, அறிவாற்றலில் குழப்பம் {மதிமயக்கம்}, அமைதியின்மை, நேரத்தை வீணடிக்கும் கூடுகை {கூட்டம்}, அகந்தை, பேராசை, ஆகிய ஏழும் கல்வி கற்கும் மாணவர்களுடைய குறைகள் என்று சொல்லப்படுகின்றன. இன்பத்தில் ஆசை கொண்டவர்களால் அறிவை {ஞானத்தை} எப்படி அடைய முடியும்? கல்வி கற்கும் மாணவர்கள், இன்பம் அனுபவிப்பது ஆகாது. {வித்தையை விரும்புகிறவன் சுகத்தை விட வேண்டும்}. இன்பத்தில் பற்றுடையோர் அறிவை விட்டு விட வேண்டும். அதே போல அறிவில் பற்றுடையோர் இன்பத்தை விட்டுவிட வேண்டும்.

விறகால் நெருப்பு நிறைவடைவதில்லை (ஆனால் அதைவிட எந்த அளவையும் அஃது உட்கொள்ளும்). தான் பெரும் நதிகளால் பெருங்கடல் நிறைவடைவதில்லை (ஆனால் எத்தனை நதிகளையும் அஃது உள்வாங்கிக் கொள்ளும்). வாழும் மொத்த உயிரினங்களாலும் மரணம் மனநிறைவைக் கொள்வதே இல்லை (வாழும் அனைத்தும் இறக்கவே செய்யும்). அதே போல, ஓர் அழகான மங்கை, {அவள் கொண்ட) எத்தனை ஆடவரிலும் மனநிறைவடைவதில்லை.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நம்பிக்கை பொறுமையைக் கொல்கிறது {அழிக்கிறது}; யமன் வளர்ச்சியைக் கொல்கிறான்; ஈயாமை {தானமளிக்காமை} புகழைக் கொல்கிறது; செய்நேர்த்திகள் இல்லாமை {பரிபாலனம் செய்யாமை} கால்நடைகளைக் கொல்கிறது; கோபக்கார அந்தணன் ஒருவன் மொத்த நாட்டையுமே அழிக்கிறான்.

ஆடுகள், வெண்கலம் {பாத்திரங்கள்}, வெள்ளி, தேன், நச்சுமுறிவு {விஷமுறிவு} மருந்துகள், பறவைகள், வேதங்களை அறிந்த அந்தணர்கள், முதிர்ந்த உறவினர்கள், உயர் பிறப்பு பிறந்து வறுமையில் மூழ்கியவர்கள் ஆகியோர் எப்போதும் உமது வீட்டில் இருக்கட்டும். ஓ! பாரதரே, ஆடுகள், காளைகள், சந்தனம், வீணைகள் {இசைக்கருவிகள்}, கண்ணாடிகள், தேன், தெளிந்த நெய், இரும்பு, தாமிரம், சங்குகள், சாளக்கிராமம் (உள்ளே பொன் கொண்ட விஷ்ணுவின் கல் உருவம்), கோரோசனை [1] ஆகியவற்றைத் தேவர்களை வழிபடுவதற்காக ஒரு வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று மனு கூறியிருக்கிறார்.

[1] பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள வாசனைப் பண்டம், அது மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. http://ta.wiktionary.org/wiki/ கோரோசனை

{கல்விகள் [போதனைகள்] அனைத்திலும் உயர்ந்தவை}


ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, பெருங்கனிகளை {பெரும்பலன்களைக்} கொடுக்க வல்ல மற்றொரு புனித பாடத்தை நான் உமக்குச் சொல்கிறேன். காமத்தாலோ, அச்சத்தாலோ, நிலையற்ற உள்ளத்தாலோ, சபலத்தாலோ அறத்தைக் {தர்மத்தைக்} கைவிடக்கூடாது. வாழ்வுக்காக {உயிருக்காக} கூட அறத்தைக் கைவிடக்கூடாது. இந்தப் பாடமே அனைத்துக் கல்வியிலும் {போதனைகளிலும்} உயர்ந்ததாகும். அறம் நித்தியமானது; இன்பமும், வலியும் {துன்பமும்} மாறி மாறி வருவன; வாழ்வோ {உயிரோ} உண்மையில் நித்தியமானதே என்றாலும், குறிப்பிட்ட பகுதிகளில் அது மாறி மாறியே வரும். நிலையாதிருப்பவற்றைக் {மாறி மாறி வருவனவற்றைக்} கைவிட்டு, நித்தியமானதைக் கடைப்பிடிப்பீராக. மனநிறைவு உமதாகட்டும். ஏனெனில், அடையக்கூடிய அனைத்திலும் மனநிறைவே உயர்ந்ததாகும். சிறப்புமிக்கவர்களும், பலமிக்கவர்களுமான மன்னர்கள், செல்வமும் சோளமும் {corn} {தானியங்களும்} அபரிமிதமாக விளையும் நிலங்களை ஆண்டு, தங்கள் நாடுகளை விட்டு, பரந்த இன்ப ஊற்றுகளை விட்டு, உலகத்தை அழிப்பவனுக்கு {யமனுக்கு} இரையானதைப் பாரும்.

மிகக் கவனமாக வளர்த்த மகன் இறக்கும்போது, அவனை மனிதர்கள் (சுடுகாட்டுக்குத்) தூக்கிச் சென்றுவிடுகிறார்கள். கலைந்த மயிருடனும், இரங்கத்தக்க வகையில் அழுதும் அந்த உடலை, ஏதோ ஒரு மரத்துண்டு போல ஈமச்சிதையில் இடுகிறார்கள். இறந்தவனின் செல்வத்தைப் பிறரே அனுபவிக்கின்றனர். அதே வேளையில் அவனது {இறந்தவனது} உடலின் தாதுக்களைப் பறவைகளும் நெருப்பும் உண்கின்றன. மறு உலகத்துக்கு, தன்னுடனே வரும் தனது தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்கள் ஆகிய இரண்டை மட்டுமே அவன் {இறந்தவன்} கொண்டு செல்கிறான். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, உறவினர்கள், நண்பர்கள், மகன்கள் ஆகியோர் அந்த உடலைத் தூக்கி எறிந்துவிட்டு, பூக்களும் கனிகளுமற்ற மரத்தைத் துறந்து செல்லும் பறவைகளைப் போல, தங்கள் சுவடுகளை மீண்டும் பின்பற்றி {வந்த வழியே} செல்கிறார்கள். ஈமச்சிதையில் இடப்பட்டவனுடன் அவனது செயல்கள் {கர்மங்கள்} மட்டுமே செல்கின்றன. எனவே, மனிதர்கள் கவனமாகவும் படிப்படியாகவும் நீதிமிக்கத் தகுதிகளை {புண்ணியங்களை} ஈட்ட வேண்டும்.

இதற்கு மேலுள்ள உலகிலும், இதற்குக் கீழுள்ள உலகிலும், பெரும் பிரகாசமும், காரிருளும் உள்ள பகுதிகள் இருக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பகுதிகளில் தான் மனிதர்களின் புலன்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வீராக. ஓ!, அந்த இடங்கள் எதுவும் உமதாகாதிருக்கட்டும்.

இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு, அதன்படி உம்மால் நடந்து கொள்ள முடிந்தால், நீர் மனிதர்களின் உலகில் பெரும்புகழை அடைந்து, இம்மையிலும் மறுமையிலும் அச்சத்தை அடையாதிருப்பீர்.

{ஆன்மா}


ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஆன்மா ஒரு நதியைப் போன்றது என்று சொல்லப்படுகிறது; அறத்தகுதிகளே {புண்ணியங்களே} அதன் புனித நீர்நிலைகள் {தீர்த்தங்கள்}; உண்மையே அதன் {ஆன்மா எனும் நதியின்} நீர்; தற்கட்டுப்பாடே அதன் {ஆன்மா என்ற நதியின்} கரைகள்; கருணையே அதன் அலைகள். ஆன்மா புனிதமானதென்பதாலும், ஆசையின்மையே உயர்ந்த தகுதி {புண்ணியம்} என்பதாலும், நீதிமான் அதில் நீராடுகிறான் {குளிக்கிறான்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐம்புலன்களை நீராய்க் கொண்ட நதியே உயிர். ஆசை மற்றும் கோபமே அதன் முதலைகளும், சுறாக்களும் ஆகும். உமது தற்கட்டுப்பாட்டைத் தோணியாகக் கொண்டு, {மீண்டும் மீண்டும் பிறக்கும்} பிறவிகள் என்ற மடுக்களைத் தாண்டுவீராக.

அறிவு, அறம், கல்வி, வயது ஆகியவற்றில் சிறப்பான நண்பர்களை வழிபட்டும் மனநிறைவு கொள்ளச் செய்தும் இருக்கும் ஒருவன், தான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் அவர்களது அறிவுரைகளை நாடுவதால் அவன் தவறாக வழிநடத்தப்படுவதே இல்லை.

ஒருவன் தனது காமத்தையும், வயிறையும் பொறுமையால் கட்டுப்படுத்த வேண்டும்; ஒருவனது கரங்களையும், பாதங்களையும் தனது கண்களாலும்; ஒருவனது கண்களையும் காதுகளையும் தனது மனதாலும்; ஒருவனது மனதையும் வார்த்தைகளையும் தனது செயல்களாலும் கட்டுப்படுத்த வேண்டும்.

தனது {புனித} நீராடல்களைத் தவிர்க்காமல், தனது புனித நூலை எப்போதும் அணிந்து, வேதகல்வியில் ஈடுபட்டு, சுத்தமற்ற உணவை எப்போதும் தவிர்த்து, உண்மையைப் பேசி, தனது குருவை மதித்துத் தனது செயல்களைச் செய்யும் ஓர் அந்தணன் பிரம்ம லோகத்தில் இருந்து எப்போதும் விழ மாட்டான்.

வேதங்களைக் கற்று, நெருப்பில் காணிக்கைகளைச் செலுத்தி, வேள்விகள் செய்து, குடிமக்களைக் காத்து, தனது ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அந்தணர்களையும் பசுக்களையும் காக்கும் வகையில் தனது ஆயுதங்களைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் மாளும் ஒரு க்ஷத்திரியன் சொர்க்கத்தை அடைகிறான்.

வேதங்களைக் கற்று, சரியான நேரத்தில் பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பிரித்து வழங்கி, மூன்று வகை நெருப்புகளில் வரும் புனிதப் புகையைச் சுவாசித்து இருக்கும் வைசியன் ஒருவன் மறுமையில் எப்போதும் அருளையே அனுபவிக்கிறான்.

பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோரை சரியான வகையில் முறையாக வழிபட்டு, அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்வதால் தனது பாவங்களை எரித்து, அமைதியாகத் தனது உடலைத் துறக்கும் ஒரு சூத்திரன் சொர்க்கத்தில் அருள்நிலை பெற்று இன்புறுகிறான்.

நால்வகையினரின் கடமைகளும் உம் முன்னே இப்படியே நிறுவப்பட்டுள்ளது. எனது பேச்சின் காரணத்தை நான் சொல்லும் போதே கேட்பீராக. பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், தனது க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து விழப் போகிறான். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னர்களின் கடமைகளைச் செய்யும் நிலையில் அவனை அமர்த்துவீராக” என்றான் {விதுரன்}.

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! இனிமையானவனே {விதுரே}, நீ கற்பித்தது போலவே அனைத்தும் இருக்கின்றன. நீ சொல்லும்படி செய்யவே எனது இதயம் விரும்புகிறது. எனினும், நீ கற்பித்ததைப் போலவே எனது மனம் பாண்டவர்களிடம் சென்றாலும், துரியோதனனிடம் தொடர்பு ஏற்பட்டதுமே நான் வேறு வழியில் திரும்பி விடுகிறேன். எந்த உயிரினத்தாலும் விதியைத் தவிர்க்க முடியாது. உண்மையில், விதியே பாதையைச் சமைக்கிறது என்பது உறுதி என்றே நான் நினைக்கிறேன்; தனிப்பட்டவர்களின் முயற்சிகள் வீணானவையே” என்றான் {திருதராஷ்டிரன்}.

(விதுர நீதி முற்றும்)

சேனோத்யோக பர்வம் முற்றும்

இந்த விதுர நீதி பகுதிகளைப் பிற பதிப்புகளில் பிரஜாகரப் பர்வம் என்ற உபபர்வமாகக் காணலாம்.



























































































































































































































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக