வியாழன், 21 மார்ச், 2019

Uthara Kandam Ramayanam

ராதே கிருஷ்ணா 21-03-2019




ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 93 – 111

பிப்ரவரி 26, 2014

அத்தியாயம் 93 (630) வால்மீகி சந்தேஸ: (வால்மீகியின் செய்தி)


வெகு சிறப்பாக யாகம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, வால்மீகி முனிவர் தன் சிஷ்யர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். பரம பாவனமாக யாகத்தின் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதைப் பார்த்து வியந்தார். தனியாக ரிஷி ஜனங்கள் மத்தியில் தனக்கும் இருப்பிடம் அமைத்துக் கொண்டார். அரசனும் வந்து அவர் தங்கும் இடத்தில் வசதிகள் சரிவர இருக்கின்றனவா, உணவுக்கான பழங்கள், காய் கிழங்குகள் கிடைக்கிறதா என்றும், என்று விசாரித்து தெரிந்து கொண்டு, முனிவரை வணங்கி ஆசிகள் பெற்றுச் சென்றான். வால்மீகி தன் பிரதான சிஷ்யர்கள் இருவரிடம், நீங்கள் சென்று ராமாயண கதை முழுவதும் ஆனந்தமாக பாடுங்கள். சேர்ந்து பாடுங்கள். எங்கெல்லாம் ஜனங்கள் நடமாட்டம் உள்ளதோ, கடை      வீதிகளிலும், ராஜ வீதிகளிலும், ரிஷிகள் வசிக்கும் இடங்களிலும், ராஜ பவன வாசலிலும், குறிப்பாக வேதம் அறிந்தவர்கள் கூடும் இடங்களிலும் பாடுங்கள். இதோ இந்த பழங்கள். இவைகளை எடுத்துச் செல்லுங்கள். மலைகளில் விளையும் ருசியான பழங்கள். கையோடு வைத்துக் கொள்ளுங்கள். பசித்த பொழுது சாப்பிட. யாரிடமும் எதையும் யாசிக்காதீர்கள். ராகத்தை கவனித்து பாடுங்கள். யாரும் குறை சொல்ல முடியாதபடி, கவனமாக பாடுங்கள். ஒரு வேளை மாகாராஜா, ராமர் கேட்க விரும்பி அழைத்தால், ரிஷிகளும் அமர்ந்திருக்கும் சபையில் பாடுங்கள். மதுரமான குரலில், ஒரு நாளில், இருபது அத்தியாயங்கள் பாடுங்கள். நான் சொல்லிக் கொடுத்துள்ளபடி, பிரமாணம், தாளக் கட்டுடன் பாடுங்கள். தனம், செல்வம் இவற்றில் சற்றும் மோகம் கொள்ளாதீர்கள். எதற்கும் ஆசைப் பட வேண்டாம். நமக்கு எதற்கு தனம், ஆசிரம வாசிகள் நாம். நமக்குத் தேவையானவை பழங்களும், காய் கிழங்குகளுமே. அவை தான் ஆசிரமத்தில் நிறைய கிடைக்கின்றனவே. காகுத்ஸன் ஒரு வேளை நீங்கள் யார் என்று கேட்டால், வால்மீகி முனிவரின் சிஷ்யர்கள் என்று மட்டும் சொல்லுங்கள். இதோ தந்தி வாத்யங்கள். நல்ல இடமாக பார்த்து அமர்ந்து கொண்டு சுருதி சேர்த்துக் கொண்டு லயத்துடன் பாடுங்கள். பயப்பட வேண்டாம். அரசனை அவமதித்ததாகவும் இல்லாமல், ஆரம்பத்திலிருந்த விஸ்தாரமாக பாடுங்கள். உலகில் உள்ள ஜீவன்களுக்கு, அரசன் தந்தைக்கு சமமானவனே. தார்மீகமான உறவு இது. அதனால் நீங்கள் இருவரும் நாளைக் காலை, மன மகிழ்ச்சியுடன், சுருதி, தாளம், இவற்றுடன் இணைந்து பாடுங்கள். இப்படி பல விதமாக அவர்களுக்கு உபதேசித்து, ப்ராசேதஸ் (நுண்ணிய அறிவுடையவர்) என்று பெயர் பெற்ற வால்மீகி முனிவர், சற்று நேரம் மௌனமாக இருந்தார். மைதிலியின் குமாரர்கள், குருவான வால்மீகி சொன்னதைக் கேட்டு அப்படியே செய்கிறோம், என்று சொல்லிக் கிளம்பினர். ரிஷி சொன்ன வார்த்தைகளை ஒன்று விடாமல் மனதில் ஏற்றுக் கொண்டவர்களாக, உற்சாகமாக பொழுது விடிவதை எதிர் நோக்கியபடி படுக்கச் சென்றனர். அஸ்வினி குமாரர்கள் இருவரும், பார்கவரிடம், நீதி ஸம்ஹிதை கேட்டு விட்டு வந்தது போல.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வால்மீகி சந்தேஸ: என்ற தொன்னூற்று மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

அத்தியாயம் 94 (631) ராமாயண கானம் (ராமாயணத்தைப் பாடுதல்)


விடிந்தது. இருவரும் ஸ்நான பானாதிகளை முடித்துக் கொண்ட பின், ரிஷி சொன்னபடியே தயாராக சென்று பாட ஆரம்பித்தார்கள். காகுத்ஸனும் இந்த இனிய கானத்தைக் கேட்டான். பல விதமான சஞ்சாரங்களும், தந்தி வாத்ய (சுருதி), தாள (லயம்) வாத்யங்களும் இணைந்து இழைந்து வந்த பாடலைக் கேட்டான். இரு சிறுவர்கள், சுஸ்வரமாக பாடிய பாடலைக் கேட்டு ராகவன் குதூகலம் அடைந்தான். அன்று வேலைகள் முடிந்ததும், மகானான முனிவர்களை அழைத்து, பல அரசர்களையும் வரவழைத்து, பண்டிதர்களையும் நிகமம் அறிந்தவர்களையும், பௌராணிகர்கள் (புராணம் சொல்பவர்கள்), சப்தங்களை அறிந்த (இலக்கண பண்டிதர்கள்), மற்றும் அறிஞர்கள், கலைஞர்கள், பலரையும் வரவழைத்தான். ஸ்வர ஞானம், லக்ஷணம் அறிந்தவர்களையும் பாட்டை ரஸிக்கும் ரசிகர்களையும், கந்தர்வ வித்தையான பாட்டு, நடனம் என்ற கலைகளை அறிந்தவர்களையும், பாத, அக்ஷர, சமாஸம், சந்தஸ் என்று (இலக்கியத்தின் பல துறைகளிலும்) தேர்ச்சி பெற்ற வித்வான்களையும், கலையே பிரதானம் என்று வாழ்ந்து வந்த பல கலைஞர்களையும், அதன் பல பிரிவுகளை அலசி ஆராய்ந்து வைத்திருந்த மூதறிஞர்களையும், ஜ்யோதிஷ சாஸ்திரம் அறிந்தவர்களையும், கவிகள், காவ்யத்தின் செய் முறைகளை அறிந்தவர்களையும், மொழியில் விற்பன்னர்களையும், இங்கிதம் தெரிந்த ரசிகர்களையும், நைகமத்தைக் கரை கண்ட அறிஞர்களையும், உபசாரங்களை அதன் இடத்தில் செயல்படுத்தத் தெரிந்த குசீலர்களையும் (ஆற்றல் மிகுந்தவர்கள்) தவிர, சொல் வளம் மிக்க            பேச்சாளிகள், சந்தம் அறிந்தவர்கள், புராணம் அறிந்தவர்கள், வைதிகர்கள், உத்தமமான அந்தணர்கள், சித்ர கலைஞர்கள், வ்ருத்த, சூத்ரம், இவற்றைக் கற்றுத் தேர்ந்தவர்கள், (சமஸ்க்ருத இலக்கணம்), கீதம், நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள், சாஸ்திரங்களை அறிந்தவர்கள், நீதி நிபுணர்கள், வேதாந்த பொருளை  தெளிவாக விளக்கத் தெரிந்தவர்கள், இவர்கள் அனைவரையும் அழைத்து, சபையைக் கூட்டினான். குழந்தைகளை உரிய ஆசனம் தந்து கௌரவித்து, பாடச் செய்தான். இப்படி சபையில் கலந்து கொண்டவர்கள், அரசனையும், குழந்தைகளையும் மாறி மாறிப் பார்த்து வியப்பெய்தினர். தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இருவரும் ராமரைப் போலவே இருக்கிறார்கள். பிம்பத்திலிருந்து வரும் பிரதி பிம்பம் போல காணப் படுகிறார்கள், ஜடா முடியும், வல்கலையும் இல்லாவிட்டால், பாடிக் கொண்டு வராதிருந்தால், நாம் இவர்களை ரகு குலத் தோன்றல்கள் என்றே நம்பியிருப்போம் என்று பேசிக் கொண்டனர். கேட்கும் ரசிகர்களுக்கு மேன் மேலும் ஆனந்தம் அளிக்கும் வண்ணம் அந்த முனி குமாரர்கள் இருவரும் பாட ஆரம்பித்தவுடன் சலசலப்பு, அடங்கியது. காந்தர்வமான, அதி மானுஷமான கானம் புறப்பட்டு அலை அலையாக பரவியது. கான சம்பத்தை, கேட்டு மகிழ்ந்த ரசிகர்கள், திருப்தியடைவதாக இல்லை. மேலும் மேலும் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். முதன் முதலில் நாரதரைக் கண்டதிலிருந்து கானம் ஆரம்பித்தது. இருபது அத்தியாயங்கள் பாடினர். நன்பகல் ஆன சமயம், ராகவன் தன் சகோதரன் லக்ஷ்மணனனிடம், லக்ஷ்மணா, பதினெட்டாயிரம் சுவர்ணங்களை இந்த கலைஞர்களுக்குக் கொடு, இன்னும் ஏதாவது வேண்டுமா என்றும் கேள் என்றார். உடனே லக்ஷ்மணனும் அந்த குழந்தைகளுக்கு சன்மானங்களை தனித் தனியாக கொண்டு வந்தான். பாடலில் தேர்ச்சி பெற்ற குசீலவர்கள் (குசீலவர்கள் -ஆற்றல் மிக்க பாடகர்கள்) அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வோம் என்று மறுத்து விட்டனர். எங்களிடம் உள்ளதில் நாங்கள் திருப்தியாக இருக்கிறோம் என்றனர். பற்றைத் துறந்த முனி குமாரர்கள், வனத்தில் தேவையான பழம், கிழங்குகள் கிடைக்கின்றன, தனத்தை, சுவர்ணமும், தங்கமும் வைத்துக் கொண்டு என்ன செய்வோம், இப்படி ஒரே குரலில் மறுத்ததைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் வியந்து பாராட்டினர். இப்படிக் கூட இருப்பார்களா? என்றனர். காவ்யத்தை தொடர்ந்து கேட்க ஆசைப் பட்ட ராமர், மகா தேஜஸுடன் நின்றிருந்த குமாரர்களைப் பார்த்து, இந்த காவ்யம் எவ்வளவு பெரியது? இதை இயற்றிய மகான் யார்? மகா கவியான அவர் எங்கு இருக்கிறார் என்று அடுக்கிக் கொண்டே போன ராமரைப் பார்த்து குழந்தைகள் பதில் சொன்னார்கள். இதை இயற்றியவர் வால்மீகி பகவான். இந்த யாகத்துக்கு வந்திருக்கிறார். இந்த சரித்திரம் முழுவதும் எழுதியிருக்கிறார். அவருக்கு நடந்தது நடந்தபடி கண் முன்னால் தெரிய வந்தது. ஸ்லோகங்களில், அழகாக சந்தஸ், எதுகை, மோனையோடு எழுதியிருக்கிறார். இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்கள். தபஸ்வியான முனிவர் அதை, நூறு உபாக்யானங்கள், முதலிலிருந்து ஐநூறு அத்தியாயங்கள், ஆறு காண்டங்கள், என்றும் மேலும் சற்று அதிகமாகவும் வரிசைப் படுத்தி எழுதியிருக்கிறார். அவர் தான் எங்கள் குரு. தான் இயற்றியதை எங்களுக்குப் பயிற்றுவித்தார். தங்கள் சரித்திரத்தை உலகில் ஜீவ ராசிகள் இருக்கும் வரை நிரந்தரமாக இருக்கச் செய்ய, இதை செய்திருக்கிறார், ராஜன், மேலும் கேட்க விரும்பினால், வேலை முடிந்தபின் சகோதரர்களுடன் கேளுங்கள் என்று சொல்லி விடை பெற்றனர். மகிழ்ச்சியுடன் முனி புங்கவர் இருந்த இடம் வந்து சேர்ந்தனர். ராமரும், அந்த இனிமையான கானம் மனதில் திரும்பத் திரும்ப ஒலிக்க அதை மனதினுள் அசை போட்டபடி மாளிகையினுள் சென்றார். சர்க்கங்களாக (அத்தியாயங்கள் என்ற பிரிவுகளாக) அமைக்கப் பெற்று, சுஸ்வரமாக, அழகான பதங்களுடன், தாளமும் சுருதியும் இணைந்து, வ்யஞ்ஜனம், யோகம் இவை இழைந்து வர, சிறந்த பாடகர்கள் பாடிய பாட்டை, வெகு நேரம் வரைஅவர் மனதில் ரசித்தபடி இருந்தார்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராமாயண கானம் என்ற தொன்னூற்று நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

அத்தியாயம் 95 (632)  வால்மீகி தூத ப்ரேஷணம் (வால்மீகி முனிவரை அழைக்க துர்தர்களை அனுப்புதல்)


இந்த கீதத்தினால் கவரப்பட்ட ராஜா ராமன், பலரையும் வரவழைத்து சிறுவர்களின் இசையைக் கேட்க வழி செய்தார். அரசர்களும், முனிவர்களும், வானரங்களும் கேட்டன. அவர்கள் இருவரும் சீதையின் மகன்கள் தானோ என்ற எண்ணமும் வலுப் பெற்றது. ராமர், ஆற்றலும், நன்னடத்தையும் உள்ள தூதர்களைப் பொறுக்கி எடுத்து, நான் சொன்னதாகச் சொல்லுங்கள். வால்மீகி முனிவரிடம், சீதை குற்றமற்றவளாக, அப்பழுக்கில்லாத நடத்தை உள்ளவளாக இருந்தால், இங்கு அழைத்து வரச் சொல். முனிவரின் விருப்பத்தையும், சீதையின் அபிப்பிராயத்தையும் தெரிந்து கொண்டு, அவள் என்ன சாக்ஷி சொல்கிறாள் என்பதையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்றார். நாளைக் காலை ஜனகாத்மஜாவான மைதிலி, இந்த சபையின் முன்னால் சபதம் செய்யட்டும். தன்னையும் என்னையும் இந்த சிக்கலிலிருந்து விடுவிக்கட்டும். இதைக் கேட்டு தூதர்கள், முனிவர் இருந்த இடத்தை நோக்கி விரைவாகச் சென்றார்கள். முனிவரை வணங்கி, ராம வாக்யத்தை மதுரமாக, ம்ருதுவாக சொன்னார்கள். அவர்கள் சொன்னதை வைத்து ராமரின் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட முனிவர்., சற்று யோசித்து, அப்படியே செய்வோம். பெண்களுக்கு கணவன் தான் தெய்வம் என்றார். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல தன் தவ வலிமையால் பிரகாசித்துக் கொண்டிருந்த முனிவர் சொன்னதை அப்படியே தூதர்கள் ராமரிடம் வந்து தெரிவித்தனர். அதன் பின் ராமர், கூடியிருந்த ரிஷி, முனிவர்கள், அரசர்கள் இவர்களைப் பார்த்து, நாளை நீங்கள் அனைவரும், உங்கள், சிஷ்யர்கள், காவலர்களுடன் சீதை சபதம் செய்வதைக் காண வாருங்கள் என்றார். விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் வரலாம். இதைக் கேட்ட ரிஷி ஜனங்கள் சாது, என்று வாழ்த்தினர். அரசர்களும், நரஸ்ரேஷ்டா, இது உனக்கு ஏற்றதே. நீ தான் இப்படி நடந்து கொள்ளக் கூடியவன். வேறு யாராலும் இப்படி நினைக்கக் கூட முடியாது என்றனர். அவர்களை மறுநாள் வரச் சொல்லி ராஜ சிங்கமான ராமன் விடை கொடுத்து அனுப்பினார். மறுநாள் நடக்கப் போகும் சபதத்தை உறுதியாக நினைத்தபடி சென்றார்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வால்மீகி தூத ப்ரேஷணம் என்ற தொன்னூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

அத்தியாயம் 96 (633) வால்மீகி ப்ரத்யாய தானம் (வால்மீகி உறுதி அளித்தல்)


அன்று இரவு நகர்ந்து பொழுது விடிந்தது. ரிஷிகள், மகா தேஜஸ்விகளான முனிவர்களை பெயர் சொல்லி அழைத்த ராமர், வசிஷ்டரே, வாம தேவ, ஜாபாலி மற்றும் காஸ்யபரே, தீர்கமான தவ வலிமை உடைய விஸ்வாமித்திரரே, துர்வாஸரே, புலஸ்தியரே, சக்தி மிகுந்த பார்கவரே, வாமனரே, தீர்காயுவான மார்க்கண்டேயரே, புகழ் வாய்ந்த மௌத்கல்யரே, கர்கரே, ஸ்யவனரே, தர்மம் அறிந்த சதானந்தரே, தேஜஸ்வியான பரத்வாஜரே, அக்னி புத்திரரே, சுப்ரப, நாரதரே, பர்வதன், கௌதமரே, காத்யாயன், சுயக்ஞரே, தவத்தின் நிதியாக விளங்கும், அகஸ்தியரே, மற்றும் ஆவலுடன் இங்கு கூடியிருக்கும் ஜனங்களே, வீரர்களான வானர, ராக்ஷஸர்களும், அரச குலத்தினர், வியாபாரம் செய்யும் வைஸ்யர்கள், சூத்ரர்கள், பல தேசங்களிலிருந்து வந்துள்ள பிராம்மணர்களே, ஆயிரக் கணக்கில் இங்கு வந்து கூடியிருக்கும், புகழ் வாய்ந்த செயல் வீரர்கள், ஞானத்தில் பெரியவர்கள், யோகத்தில் சிறந்தவர்கள் என்று பலரும் கேளுங்கள். சீதா சபதம் செய்வதைக் காண, இவர்கள் அனைவரும் வந்துள்ளனர். இவ்வாறு கூடியிருக்கும் ஜனங்களிடையே, கல்லான மலையைப் போல இறுகிய முகத்துடன், எந்த உணர்ச்சியையும் காட்டாது, கூட்டத்தை பிளந்து கொண்டு, வால்மீகி முனிவர் சீதையுடன் வந்து சேர்ந்தார். பின்னால், சீதையும் குனிந்த தலை நிமிராது நின்றாள். கணவனான ராமனைப் பார்த்து அஞ்ஜலி செய்தாள். பிராம்மணரைத் தொடர்ந்து வேதமே உருக் கொண்டு வந்து விட்டதோ எனும் படி இருந்தவளைப் பார்த்து ரிஷிகள் மத்தியில் சாது, சாது என்ற கோஷம் எழுந்தது. எங்கும் கல கலவென்ற சப்தம். எல்லோர் மனதிலும் வேதனையோடு கூடிய எதிர்பார்ப்பே இருந்தது. சிலர் சாது என்று ராமனை, சிலர் சாது என்று சீதையைப் போற்றினர். கூடியிருந்தவர்கள் வால்மீகி சொல்வதைக் கேட்கத் தயாரானார்கள். சீதைக்கு ஒரே சகாயமாக இருந்த முனிவர் சபை நடுவில் வந்து நின்றார். ராமனைப் பார்த்துச் சொன்னார். தாசரதே, இந்த சீதை தர்ம சாரிணி, நன்னடத்தை உள்ளவள். உன்னால், தனித்து விடபட்டவள். நீ ஏதோ அபவாதம் என்ற காரணம் சொல்லி என் ஆசிரமத்தின் அருகில் தியாகம் செய்து விட்டாய். லோகத்தில் யாரோ தவறாக பேசுகிறார்கள் என்று பயந்து விட்டாய். மகாவ்ரதனே, அனுமதி கொடு. சீதை தன் நடத்தைக்கு சாக்ஷி சொல்வாள். கேள். இந்த இரட்டையர்கள் ஜானகியின் குழந்தைகள். உன் வம்சத்தை விளங்கச் செய்ய வந்த உன் மகன்கள். நான் சொல்வது சத்யமே. ராகவ நந்தனா, நான் ப்ரசேதஸ முனிவரின் வம்சத்தில் வந்த பத்தாவது ப்ராசேதஸன் என்ற முனிவன். சத்யமல்லாததை நான் சொன்னதில்லை. இவர்கள் உன் குமாரர்கள். பல ஆயிர வருஷ காலம் நான் தவம் அனுசரித்து வந்திருக்கிறேன். இப்பொழுது நான் சொல்வதுக்கு மாறாக சீதை துஷ்ட சாரிணி என்று ஆனால், என் தவப் பலன்கள் அனைத்தும் நஷ்டமாகட்டும். என் மனதால், வாக்கால், சரீரத்தால், என் நடத்தையிலும், விரதங்களிலும், எந்த குறையும் வர விட்டதேயில்லை. இந்த மைதிலி, பாபமற்றவள், மாசற்றவள் என்றால் மட்டுமே நான் என் தவத்தின் பயனை அனுபவிப்பேனாக. நான் அறிந்து பஞ்ச பூதங்களும், ஆறாவது என் மனமும், இவளை பரிசுத்தமானவள் என்று நம்பியதால், என் ஆசிரமத்தில் தனித்து நின்றவளை அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்திருக்கிறேன். பதியே தெய்வம் என்று நம்பும் அபலைப் பெண் இவள். மாசற்றவள். எண்ணத்திலும், செயலிலும் பரிசுத்தமானவள். நீ தான் ஏதோ அபவாதம் என்ற காரணம் சொல்லி பயந்தாய். உனக்கு சரியான சாட்சியம் சொல்வாள். நரவரனே, தசரதன் மகனே, நீயே அறிந்திருந்தும், மனப்பூர்வமாக உணர்ந்திருந்தும், உலகில் யாரோ சொன்னார்கள் என்பதற்காக தியாகம் செய்தாயே, கேள் என்றார்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வால்மீகி ப்ரத்யய தானம் என்ற தொன்னூற்று ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 97 (634) சீதா ரஸாதள ப்ரவேச: (சீதை பூமிக்குள் மறைதல்)


வால்மீகி இவ்வாறு சொல்லவும் ராமர் பதிலளித்தார். கூடியிருந்த ஏராளமான ஜனங்கள் மத்தியில், அஞ்ஜலி செய்தபடி, அழகிய நிறமுடைய சீதையைப் பார்த்தபடி, நீங்கள் சொல்வது எனக்கும் சம்மதமே. உங்கள் வாக்கே இவள் கல்மஷமற்றவள் என்று நிரூபிக்கப் போதுமானது. தேவர்கள் முன்னிலையில் ஒரு பரீஷை வைத்து இவள் சபதமும் செய்தபின் தான் வீட்டில் சேர்த்துக் கொண்டேன். ஆனாலும், லோகாபவாதம் பலமாக எழுந்தது. ப்ரும்மன், எனக்குத் தெரியும், இவள் பாபமற்றவள் என்று. ஊர் ஜனங்களுக்கு நம்பிக்கை வர, இவளைத் துறந்தேன். பகவானே, மன்னிக்க வேண்டுகிறேன். இவர்கள் இருவரும் எனக்குப் பிரியமானவர்கள் என்பதையும் இப்பொழுது தானே தெரிந்து கொள்கிறேன். இந்த உலகில், எனக்கு மைதிலியிடம் உள்ள ப்ரீதியும் அன்பும் நிரூபிக்கப்படட்டும். ராமருடைய மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட தேவர்களும், ப்ரும்மாவுடன் சாக்ஷியாக வந்து விட்டனர். ஆதித்யர்களும், வசுக்களும், ருத்ரனும், அஸ்வினி குமாரர்களும், மருத் கண்டகளும், கந்தர்வ, அப்ஸரஸ் கணங்களும், அனைவரும் கூடினர். உலகில் செயற்கரியன செய்தவர்களும், எல்லா தேவர்களும், பரம ரிஷிகளும், நாகர்கள், சுபர்ணர்கள், சித்தர்கள் எல்லோருமே மகிழ்ச்சி நிறைந்த மனதுடன், பரபரப்புடன், எதிர்பார்ப்புடன் சீதை சபதம் செய்வதைக் காண வந்து சேர்ந்தார்கள். தேவர்களும், மகரிஷிகளும், வந்து கூடி விட்டதைப் பார்த்து ராமர் சொன்னார். தேவர்களே, ரிஷி வாக்கினால், அவரது தூய்மையான வார்த்தைகளே போதும், சீதை தூய்மையானவள் என்பதை நிரூபிக்க. உங்கள் அனைவரின் மத்தியில் என் அன்பும் நிரூபிக்கப் படட்டும். (நான் அவளைத் திரும்ப பெறுவேனாக). அந்த சமயம், திடுமென மென்மையான காற்று, சுகந்தமாக அனைவரையும் தடவிக் கொடுப்பது போல வீசியது. கூடியிருந்தோர் அத்புதம் என்றனர். முன்பு க்ருத யுகத்தில் இருந்தது போல. அனைத்து தேசங்களிலிருந்தும் வந்திருந்த ஜனங்கள், காஷாய வஸ்திரம் தரித்திருந்திருந்த சீதையை நோக்கினர். சீதை அவர்கள் அனைவரும் வந்து விட்டதை தெரிந்து கொண்டு, தன் கண்களை பூமியை விட்டு அகற்றாமல், தலை குனிந்தபடி, மாதவீ தேவி, (பூமித் தாயே,) நான் ராகவனைத் தவிர வேறு யாரையும் நினைக்காமல் இருந்தது உண்மையானால், எனக்கு அடைக்கலம் கொடு. மனம், வாக்கு, காயம் செயலால் ராமனுக்கே என்று இருந்தது உண்மையானால், பூமித் தாயே எனக்கு அடைக்கலம் கொடு. நான் சொல்வது உண்மையானால், ராமனைத் தவிர வேறு தெய்வம் என் மனதில் இல்லை என்பது சத்யமானால், பூமித் தாயே எனக்கு அடைக்கலம் கொடு. இப்படி சீதை சபதம் செய்து கொண்டிருக்கும் பொழுதே அந்த அதிசயம் கண் முன்னால் நிகழ்ந்தது. பூமியிலிருந்து உத்தமமான சிம்மாசனத்தை தலையில் தாங்கிக் கொண்டு, நாகர்கள், திவ்யமான சரீரத்துடனும், திவ்யமான அலங்காரத்துடனும்  வெளி வந்தன. அதில் அமர்ந்து வந்த தரணி தேவி, பூமித் தாய், மைதிலியை கைகளைப் பிடித்து ஸ்வாகதம் சொல்லி அழைத்து, தன்னுடன் அமர்த்திக் கொண்டாள். அந்த ஆசனத்தில் அமர்ந்து ரஸாதளம் செல்பவளை புஷ்ப வ்ருஷ்டி, இடைவிடாமல் வாழ்த்தி அனுப்பியது. தேவர்கள் இடை விடாமல் மலர் மாரி பொழிந்தனர். ஸாது, ஸாது என்ற வாழ்த்தொலி சபையை நிறைத்தது. அந்தரிக்ஷத்தில் இருந்து சீலம் மிகுந்தவளே சீதே, என்று அழைத்தது கேட்டது. சீதை ரஸாதளம் சென்று விட்டதை தேவர்கள் உடனே ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பது தொடர்ந்து வந்த மகிழ்ச்சி ஆரவாரத்தால் புரிந்தது. யாகசாலையில் கூடியிருந்த ஜனங்கள் திகைத்தனர். அந்தரிக்ஷத்திலும், பூமியிலும் இருந்த ஸ்தாவர, ஜங்கம, தானவர்கள், பெரும் சரீரம் உடைய பன்னகாதிபர்கள், பாதாளத்திலிருந்தும் யார், யாரோ மகிழ்ச்சி ஆரவாரம் செய்வது கேட்டது. சிலர் கண் மூடி தியானம் செய்தனர். சிலர் ராமனை கண் கொட்டாமல் பார்த்தனர். பலர் திகைப்பில், வாய் எழாமல் மௌனமாக நின்றனர். சிலர் பூமிக்குள் சீதை சென்ற இடத்தையே பார்த்தபடி நின்றனர். எதுவும் செய்ய இயலாத நிலையில் அந்த இடத்தை மௌனமே நிறைத்தது.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சீதா ரஸாதள ப்ரவேச: என்ற தொன்னூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 98 (635) ராம கோபோபசம: (ராமரின் கோபமும், சாந்தமடைதலும்)


சீதை ரஸாதளம் சென்றவுடன், வானரர்களும், முனி ஜனங்களும் சாது, சாது என்று கத்தினர். ராமர் தான் வாயடைத்து, மிகவும் சோர்ந்து போனவராக, துக்கத்துடன் நின்றிருந்தார். வெகு நேரம் வாய் விட்டே அழுத பின்னும் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. க்ரோதமும், சோகமும் வாட்டியது. இதுவரை கண்டிராத வேதனை என் மனதை வாட்டுகிறது. கூரிய ஆயுதம் கொண்டு மனதை கீறி கிழிப்பது போல தாக்குகிறது. என் சீதை கண் எதிரில் காணாமல் போவதை பார்த்துக் கொண்டு நின்றேனே, ஸ்ரீ போன்றவள், முன் லங்கையிலிருந்து மீட்டு வந்தது போல இப்பொழுது பாதாளத்திலிருந்து மீட்டு வரத் தெரியாதா என்ன? தேவி, வசுதே, என் சீதையைத் திருப்பிக் கொடு. என்னை அலட்சியம் செய்யாதே. நான் என் ரோஷத்தைக் காட்ட வேண்டி வரும். நீ எனக்கு மாமியார் அல்லவா? உன் மடியிலிருந்து தானே ஜனக ராஜா கலப்பையால் உழும் பொழுது கண்டெடுத்தார். அதனால் சீதையைத் திருப்பிக் கொடு. அல்லது உன்னுடன் பள்ளத்தில் நானும் வந்து வசிக்கிறேன். பாதாளத்திலோ, நாகங்களோடோ நானும் அவளுடன் வசிப்பேன். பூமித் தாயே, அவளை அதே ரூபத்துடன் திரும்ப ஒப்படைக்க முடியாவிட்டால், இந்த வனம், மலைகள், எல்லாவற்றையும் சேர்த்து உன்னை நாசம் செய்து விடுவேன். எங்கும் தண்ணீராக பெருகட்டும், பூமியே இல்லாது செய்கிறேன். கோபமும், வருத்தமுமாக, பரிதாபமாக ராமர் புலம்ப ஆரம்பிக்கவும் ப்ரும்மா சமாதானம் செய்ய தேவர்கள் சூழ வந்தார். ராம, ராமா, ரகு நந்தனா, இப்படி வருத்தப் படாதே. சமாளித்துக் கொள் உன் இயல்பான தன்மையை நினைவு கொள். வீரன் நீ. சத்ருக்களை நாசம் செய்ய வல்லவன். உனக்கு நான் நினைவு படுத்த வேண்டுமா என்ன? உன் வைஷ்ணவமான அவதாரத்தை நினைத்துப் பார். சீதா தூய்மையானவள். ஸாத்வீ. உன்னையே அனவரதமும் நினைத்து வாழ்ந்தவள். உன்னையே ஆசிரயித்து இருந்தவள். தற்சமயம், தன் தவ வலிமையால் பாதாள லோகம் சென்று விட்டாள். ஸ்வர்கத்தில் நிச்சயம் உன்னுடன் சேருவாள், கவலைப் படாதே. இந்த கூட்டத்தில் மத்தியில் நான் சொல்வதை கவனமாகக் கேள். இந்த காவியம் உத்தமமாக இருக்கப் போகிறது. ஒரு நிகழ்ச்சியையும் விடாமல், முனிவர் விவரித்து இருக்கிறார். பிறப்பிலிருந்து வாழ்க்கையில் நீ அனுபவித்த சுக, துக்கங்கள், வால்மீகி தன் காவியத்தில் திறம்பட எழுதி பிரபலபடுத்துவார். உன்னை நாயகனாக கொண்டு எழுதப் பட்ட இந்த காவியமே ஆதி காவியமாகும். ராகவனைத் தவிர வேறு யார் இது போன்ற காவிய நாயகனாக முடியும். முன்பே தேவர்கள் மூலம் கேள்விப் பட்டேன். சத்ய வாக்யமாக,  தெளிவாக, திவ்யமாக, அத்புதமாக இந்த காவியம் எழுதப் பட்டிருப்பதாகச் சொன்னார்கள். புருஷ சார்துர்ல, நீயும் மனதை கட்டுப் படுத்திக் கொண்டு முழுவதுமாக கேள். மீதி நடக்க இருப்பதையும் இதைக் கேட்டுத் தெரிந்து கொள். ரிஷி எழுதியது உன் பொருட்டே. நீயன்றி வேறு யார் இதைக் கேட்டு விமரிசிக்க முடியும். இவ்வாறு சொல்லி விட்டு ப்ரும்மா, கூடியிருந்தவர்களிடம் விடை பெற்றுச் சென்று விட்டார். ராகவன் வாழ்க்கையில் மீதி கதையையும் கேட்க ராகவனும், வால்மீகியிடம் ப்ரும்மா சொன்னபடியே ராமாயணத்தை தொடர்ந்து கானம் செய்யும் படி கேட்டுக் கொண்டான். தான் பர்ண சாலைக்குள் சென்று விட்டான். சீதையின் நினைவாகவே இரவு கழிந்தது.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராம கோபோபசம: என்ற தொன்னூற்று எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

அத்தியாயம் 99 (636) கௌஸல்யாதி கால தர்ம: (கௌஸல்யை முதலானோர் காலகதி அடைதல்)


விடிந்தது, மகா முனிவரை அழைத்து, எந்த வித தடுமாற்றமும் இன்றி பாடிக் கொண்டிருந்த புத்திரர்களையும் அழைத்து வரச் செய்தான். உள்ளே வந்து காவியத்தின் மீதி பாகங்களையும் குழந்தைகள் பாடிக் காட்டினர்.  சீதை பூதலம் சென்றதும், உலகமே சூன்யமாக இருப்பதாக உணர்ந்தார். யாக காரியங்களை கவனித்து விட்டு, திரும்பியவரிடம் மன சாந்தி அருகில் கூட வர மறுத்தது. மிகவும் வேதனையை அனுபவித்தார். அரசர்களை திருப்பி அனுப்பி விட்டு, கரடிகள், வானரங்கள், ராக்ஷஸர்கள், மற்ற ஜனக் கூட்டம், எல்லோரையும் வழியனுப்பி வைத்தார். பிராம்மணர்களுக்கு வேண்டிய தக்ஷிணைகள் கொடுத்து யாக காரியத்தை முடித்து விட்டு சீதை நினைவாகவே அயோத்தி திரும்பினார். புத்திரர்கள் இருவருடனும் மேலும் மேலும் பல யாகங்களைச் செய்தார். தங்கத்தாலான சீதை உடன் இருந்தாள். பத்தாயிரம் ஆண்டுகள், அஸ்வமேத யாகங்கள் செய்து, வாஜபேய, வாஜிமேத என்ற யாகங்களை செய்வித்தவர்களுக்கு பத்து மடங்கு சுவர்ணங்கள் கொடுத்து, ஆதரித்து, இரவு பகல் அக்னி ஹோத்ரம் செய்பவர்களுக்கு கணக்கில்லாத பசுக்களையும் பெரும் தனம் கொடுத்து திருப்தி செய்தபடி, மற்றும் பலருக்கும் நிறைவாக தக்ஷிணைகள் கொடுத்த படி, பல யாகங்கள் செய்தார். மகானான ராமர், பல காலம் இவ்வாறு சிறப்பாக ராஜ்யத்தை ஆண்டார். அவருடைய ஆட்சியில் ருக்ஷ, வானர, ராக்ஷஸர்கள், ராமனின் அரசியல் சட்டத்தை அனுசரித்து நடந்தனர். காலத்தில் மழை பொழிந்தது. திசைகள் விமலமாக இருந்தன. நகரங்களும், கிராமங்களும், ஜனங்கள் ஆரோக்யமாக வளைய வர, சந்தோஷமாக இருந்தது. யாரும் அகால மரணம் அடையவில்லை. எந்த பிராணியும் வியாதியால் வாடவில்லை. ராமர் ராஜ்யத்தை ஆண்ட காலத்தில், எந்த வித அனர்த்தமும் நேரிடவில்லை. வெகு காலம் சென்ற பின் பல வித தான தர்மங்கள் செய்து வாழ்ந்தவளான ராம மாதா, கால கதியடைந்தாள். புத்ர பௌத்ரர்கள் சூழ இருந்து காலமானாள். அவளைத் தொடர்ந்து சுமித்ரையும், கைகேயியும் சென்றனர். தசரத ராஜாவின் மற்ற மனைவிகளும் ஒவ்வொருவராக அவரை ஸ்வர்கத்தில் காணச் சென்று விட்டனர். இவர்களுக்கான மகா தானம் முதலியவைகளை ராமர் அந்தந்த காலங்களில் செய்தார். தாய் மார்களுக்கான நீத்தார் கடன்களை பிராம்மணர்களைக் கொண்டு குறைவர செய்தார். பித்ருக்களையும், தேவர்களையும் திருப்தி செய்ய விதிக்கப் பட்டுள்ள கர்மாக்களை விடாமல் செய்தார். இவ்வாறாக பல வருஷ காலம் சென்றது.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், கௌஸல்யாதி கால தர்ம:என்ற தொன்னூற்று ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

அத்தியாயம் 100 (637) கந்தர்வ விஜய விஜய யாத்ரா (கந்தர்வனை வெற்றி கொள்ள விஜய யாத்திரை)


சில காலம் சென்ற பின் கேகய ராஜாவான யுதாஜித், தன் குருவை ராகவனிடத்தில் அனுப்பினார். மகா தேஜஸ்வியும், ஆங்கிரஸ புத்திரருமான, கார்க்யர் என்பவர் தான் அந்த குரு. அன்பளிப்பாக அவருடன் பத்தாயிரம் அஸ்வங்கள் வந்தன. கம்பளங்களும், ரத்னங்களும், சித்ர வஸ்திரங்களும், உயர் வகை மற்ற பொருட்களும், சுபமான ஆபரணங்களும், ராகவனுக்காக கொடுத்து அனுப்பியிருந்தார். ப்ரும்ம ரிஷியான கார்க்யர் வந்திருக்கிறார், மாமன் வீட்டிலிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறார் என்பதையறிந்து, தன் சகோதரர்களுடன் இரண்டு மைல் நடந்து எதிர்கொண்டு சென்று, மகா முனிவரை அழைத்து வந்தார் அரசரான ராமர். இந்திரன் ப்ருஹஸ்பதியை எதிர்கொண்டு அழைப்பது போல இருந்தது. அவர் கொண்டு வந்த அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்டு, அவரை வணங்கி மரியாதைகள் செய்த பின், மாமன் வீட்டு குசலம் விசாரித்தார். அவர் வசதியாக அமர்ந்த பின், ராகவன், மாமன் என்ன சொன்னார்.? எதற்காக பகவானான தங்களை இங்கு அனுப்பியிருக்கிறார். சாக்ஷாத் ப்ருஹஸ்பதி வந்தது போல், தங்கள் வரவு எங்கள் பாக்கியம் என்றார். மகரிஷி விஸ்தாரமாக தான் வந்த காரியத்தை விவரித்தார். உன் மாமன் யுதாஜித், மிகவும் அன்புடன் சொல்லியனுப்பிய விஷயத்தை சொல்கிறேன், கேள். இங்கு அருகில் கந்தர்வ தேசம் உள்ளது. பழங்கள், காய் கறிகள் செழிப்பாக உள்ள இடம். சிந்துவின் இரு              கரைகளிலும் இந்த தேசம் மிகவும் சோபனமானது. அழகானது. கந்தர்வர்கள் ரக்ஷிக்கிறார்கள். எப்பொழுதும், ஆயுத பாணிகளாக வீரர்கள், காவல் இருப்பர். சைலூஷன் மகள்கள், (சைலூஷன் என்பவரின் பெண்கள், அல்லது சைலூஷ-நடனமாடுபவர், நடன, நாட்டியம் ஆடும் பெண்கள்). மூன்று கோடி பேர். அவர்களை ஜயித்து, அந்த சுபமான, கந்தர்வ நாட்டை உன் ராஜ்யத்தோடு இணைத்துக் கொள். மிக அழகிய நகரம் இது. மாற்றான் கையில் இருக்கிறது. உனக்கு நன்மையைத் தான் சொல்கிறேன். இதைக் கேட்டு ராமர் மகிழ்ச்சியடைந்து, மாமனின் குருவான மகரிஷியைப் பாரத்து, அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, பரதனை நோக்கினார். மகரிஷியிடம், இந்த குமாரர்கள், பரதனின் புத்திரர்கள். தக்ஷ:, புஷ்கலன் என்ற பெயருடைய குமாரர்கள். பரதன் தலைமையில் இவ்விருவரும், மாமனுடன் சேர்ந்து, படை பலத்தோடு வருவார்கள். இவர்கள் கந்தர்வ நகரத்தை ஜயித்து, இரண்டு நகரமாக தங்களுக்குள் பிரித்துக் கொள்ளட்டும். அந்த உயர்ந்த நகரில் தன் புத்திரர்களை ஸ்தாபித்து விட்டு பரதன் திரும்பி வருவான். இவ்வாறு சொல்லி, படை பலங்களை ஏற்பாடு செய்து, பரதனுடன் கிளம்ப கட்டளையிட்டு, குமாரர்கள் இருவருக்கும் முடி சூட்டி ஆசிர்வாதங்கள் செய்து அனுப்பினார். ஆங்கிரஸரான (அங்கிரஸ் என்ற ஒருவரின் மகன் ஆங்கிரஸ்) கார்க்யர், நல்ல நேரம் பார்த்து, பரதன், அவன் புத்திரர்கள், மற்றும் பெரும் சேனையுடன் கிளம்பினார். ராகவன் வெகு தூரம் உடன் சென்று வழியனுப்பினான். மாமிசம் உண்ணும் மாமிசபக்ஷிணிகளான பல மிருகங்கள் பரதனுடன் அனுப்பப் பட்டன. ரத்தத்தைக் குடிக்கும் வகையைச் சேர்ந்தவைகள். சிங்க, வராஹ, வ்யாக்ர போன்ற மிருகங்கள், தவிர, ஆகாயத்தில் பறக்கும் பக்ஷிகள், ஆயிரக் கணக்காக சேனைக்கு முன் சென்றன. பாதி மாதம் பிரயாணத்தில் செல்ல, படை ஆரோக்யமான வீரர்களுடன் கேகய நாட்டில் நுழைந்தது.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், கந்தர்வ விஷய விஜய யாத்ரா என்ற நூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

அத்தியாயம் 101 (638) தக்ஷ, புஷ்கல நிவேச: (தக்ஷன், புஷ்கலன் இவர்கள் பதவியேற்றல்)


பரதன் சேனையுடன் வந்து சேர்ந்து விட்டதை அறிந்ததும், கேகயாதிபன், அவர்களைக் காண வந்து சேர்ந்தான். சீக்கிரமே ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, தங்கள் படையும் கந்தர்வ நகரத்தை இணைத்து முற்றுகையிட்டனர். பரதனும், யுதாஜித்தும் சேர்ந்து கந்தர்வ நகரத்தை தாக்கினர். கந்தர்வ வீரர்களும் போருக்குத் தயாராக தங்கள் வாத்யங்களை முழங்கினர். அதன் பின் பெரும் யுத்தம் நடந்தது. ஏழு இரவுகள் பயங்கரமான யுத்தம். இரு தரப்பிலும் வெற்றியோ, தோல்வியோ நிர்ணயிக்க முடியாமல் தொடர்ந்தது. நதிகள் ரத்தமே நீராக பிரவகித்தன. கத்தியும், சக்தியும், வில் அம்புகளும் வெட்டி சாய்த்த உடல்கள் அந்த நதியில் அடித்துச் செல்லப் பட்டன. பின் ராமானுஜனான பரதன், கோபத்துடன், காலாஸ்திரம், சம்வர்த்தம் என்ற அஸ்திரத்தை கந்தர்வர்கள் மேல் பிரயோகித்தான். கால பாசம் தாக்கியதைப் போல மூன்று கோடி வீரர்களும் விழுந்தனர். இது போன்ற தாக்குதலை அவர்கள் கண்டதேயில்லை. நிமிஷ நேரத்தில் அவர்கள் அனைவரும் விழ, கைகேயி புத்திரன் பரதன், அந்த வளமான பிரதேசத்தில், தன் புத்திரர்களை அரசர்களாக நியமித்தான். தக்ஷசிலா என்ற இடத்தில், தக்ஷனையும், புஷ்கலாவதி என்ற நகரத்தில் புஷ்கலனையும் அரசனாக முடி சூட்டினான். கந்தர்வர்களின் ராஜ்யமே அழகிய நகரமாக இருந்தது. செல்வம் கொழித்த வளமான கானனங்கள் நிறைய இருந்தன. உத்யான, வன போக்குவரத்து வழிகள் செம்மையாக செய்யப்பட்டு இரு நகரங்களும் இணைக்கப் பட்டிருந்தன. கடைகளும், கடை வீதிகளும், பெரிய மாளிகைகளும், வீடுகளும், வாசஸ்தலங்களும், அவைகளின் விமானங்கள் (மேற் கூரைப் பகுதி) ஒரே வர்ணத்தில் அமைந்து அழகிய காட்சி தந்தது. தாள, தமால மரங்கள், திலக, வகுள மரங்கள், ஆங்காங்கு சோபையுடன் வளர்ந்து நிற்க, ஐந்து வருஷங்கள் பரதன் அவர்களுடன் இருந்து ராஜ்ய நிர்வாக விஷயங்களை சொல்லிக் கொடுத்து விட்டு, அயோத்தி திரும்பி வந்தான். ராமனை வணங்கி. கந்தர்வர்களுடன் செய்த யுத்தம், வெற்றியடைந்தது பற்றி விவரங்களைச் சொன்னான். ராகவனும் மகிழ்ச்சியடைந்தான்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், தக்ஷ, புஷ்கல நிவேச: என்ற நுர்ற்று ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 102 (639) அங்கத, சந்திர கேது நிவேச: (அங்கதன், சந்திர கேது பதவியில் அமர்த்தப் படுதல்)


ஒரு சமயம், ராகவன் தன் சகோதரர்களுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தான். லக்ஷ்மணனைப் பார்த்து, சௌமித்ரே, உன் குமாரர்களும், கல்வி கற்று தேர்ந்து விட்டார்கள். தர்மம், நீதி முறைகளைத் தெரிந்து கொண்டு விட்டார்கள். அங்கதனும், சந்த்ர கேதுவும், தற்சமயம் ராஜ்யத்தை ஆளும் தகுதி பெற்று விட்டனர். இவர்களை ஒரு தேசத்தில் முடி சூட்டி அமர்த்த வேண்டும். தகுதியான தேசம் எது என்று தெரிந்து கொண்டு வா என்றார். இருவரும் வில்லா ளிகள். ரமணீயமான தேசத்தில், இடையூறு இன்றி இவர்களை ஸ்தாபனம் செய்வோம். அரசர்களால் தொந்தரவு இல்லாத, ஆசிரமங்கள் நலமாக இருக்கும் இடமாகப் பார்த்துச் சொல். நாம் யாருக்கும் தொல்லை தராமல், யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருக்க ஏற்ற இடமாக சொல். லக்ஷ்மணா. பரதன் பதில் சொன்னான். இங்கு காரூபதம் என்ற ஒரு அழகிய தேசம் ஆரோக்யமாக இருக்கிறது. அங்கு புத்திரன் அங்கதனை நியமிப்போம். சந்திர கேதுவுக்கு மற்றுமொரு ரமணீயமான தேசம், சந்திர காந்தம் என்ற பெயரில் உள்ளது. இதை ராமர் அப்படியே ஏற்றுக் கொண்டார். பரதன் சொன்னபடியே அந்த தேசத்தை தன் வசமாக்கிக் கொண்டு, அங்கதனை அரசனாக்கி முடி சூட்டிய பின், மல்லனான சந்திர கேதுவுக்கு, மல்லர்கள் நிரம்பிய சந்திர காந்தம் என்ற நகரில் முடி சூட்டி வைத்தார். அந்த நகரம் ஸ்வர்க புரி போல இருந்தது. ராமரும், பரத லக்ஷ்மணர்களும், மிகவும் திருப்தியுடன்., அந்த நகரம் சென்று யுத்தம் செய்தனர். வெற்றி வாகை சூடி இரு குமாரர்களையும் தனித் தனியாக ராஜ்ய பரிபாலனம் செய்ய வழி வகுத்தனர். அங்கதனுடன் லக்ஷ்மணனும், சந்திர கேதுவுடன் பரதனும் சென்று நிர்வாக விஷயங்களை அவர்களுக்கு பயிற்றுவித்தனர். ஒரு வருஷம் இவ்வாறு சென்றது. சகோதரர்கள் இருவரும், ராமனுக்கு சேவை செய்வதையே தங்கள் பாக்யமாக கருதி வாழ்ந்து வந்தனர். மூவரும் அரசு நிர்வாகத்தை ஒற்றுமையாக செய்து வந்தனர். பெரும் யாக குண்டத்தில் தோன்றும் மூன்று வித அக்னி போல ஒத்து வாழ்ந்தனர்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், அங்கத, சந்திர கேது நிவேச: என்ற நூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 103 (640) காலாகமனம் (காலன் வருதல்)

இவ்வாறு காலம் சென்றது. ஒரு சமயம், காலனே தாபஸ உருவம் தரித்து ராஜ  மாளிகை வாசலில் வந்து நின்றான். லக்ஷ்மணனைப் பார்த்து, மிக முக்கியமான காரியம், ராமனைப் பார்க்க வேண்டும் என்றான். எனக்கு அனுமதி கொடு. மிகவும் பலசாலியான ஒருவரின் தூதன் நான். மிக அவசர காரியம் என்பதால் ராமனை நேரில் காண வந்துள்ளேன் என்றான். சௌமித்ரியும் உடனே அவசரமாக ராமனிடம் சென்று தபஸ்வி ஒருவர் வந்திருப்பதை தெரிவித்தான். ராமா, வெற்றி பெறுவாயாக. ஜயஸ்வ. யாரோ, ஒரு தேஜஸ்வியான தூதன், உன்னைக் காண வந்திருக்கிறார். இதைக் கேட்டு ராமர், அனுப்பி வை, யார் என்று பார்ப்போம் என்றார். சௌமித்ரியும் சரி என்று சொல்லி அந்த முனிவரை அனுப்பி வைத்தான். காணவே கூசும் தேஜஸுடன் இருந்த அந்த முனிவர் அரசனிடம் சென்று வாழ்க என்று வாழ்த்தி விட்டு, ராமர் அளித்த அர்க்யம் முதலிய மரியாதைகளை ஏற்றுக் கொண்ட பின், பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டனர். ஸ்வாகதம், மகா முனிவரே, கொண்டு வந்த செய்தியைச் சொல்லுங்கள் என்றார் ராமர். தங்க மயமான ஆசனத்தில் அமர்ந்து, மதுரமாக பேச ஆரம்பித்தார் வந்தவர். நான் சொல்லப் போவது இரண்டு விஷயம். இதில் நீ விரும்புவது எது என்று சொல். இடையில் நம்மை யாரும் பார்த்தாலோ, நாம் பேசுவதைக் கேட்டாலோ, நீ அவர்களை வதம் செய்து விட வேண்டும். என் தலைவரின் செய்தியை நமக்குள் மட்டுமே பகிர்ந்து கொள்ளச் சொல்லி எனக்கு கட்டளை என்றார். உடனே ராமர் லக்ஷ்மணனிடம் சென்று, லக்ஷ்மணா, வாசலில் நில். மற்ற காவல் காரர்களை அனுப்பி விடு. யார் கேட்டாலும் வதம் செய்யும்படி நேரிடும். எங்களுக்குள் நடக்கும் சம்பாஷனையை யாரும் கேட்கக் கூடாது. எங்கள் இருவரையும் சேர்த்து பார்த்தாலும் இதே தண்டனை தான். அதனால் சௌமித்ரே, ஜாக்கிரதை என்று லக்ஷ்மணனை காவலுக்கு நியமித்து விட்டு, திரும்பி வந்து, முனிவரிடம், சொல்லுங்கள், என்றார். யார் தங்களை அனுப்பியுள்ளது. எனக்கு என்ன செய்தி? சற்றும் கவலையின்றி நிதானமாக, விவரமாக சொல்லுங்கள். எனக்கும் கேட்க ஆவல் அதிகமாகிறது என்று சொல்லி எதிரில் அமர்ந்தார்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், காலாகமனம் என்ற நூற்று மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

அத்தியாயம் 104 (641) பிதாமஹ வாக்ய கதனம் (பிதாமகரான ப்ரும்மாவின் செய்தியை தெரிவித்தல்)


ராஜன், நான் வந்த காரியம் என்ன என்பதைச் சொல்கிறேன், கேள். பிதாமகர், ப்ரும்மா தான் என்னை அனுப்பி வைத்தார். முன் ஜன்மத்தில் நான் தங்கள் புத்திரன். சகலத்தையும் தன்னுள் சம்ஹாரம் செய்யும் காலன். மாயையால் தோற்றுவிக்கப் பட்டவன். லோகபதியான பிரபு, பிதாமகர் என்று பெயர் தந்ததும் நீங்கள் தான். தாங்கள் தன் இருப்பிடம் திரும்பி வர காலம் வந்து விட்டது. தேவலோகத்தை ரக்ஷிக்க தாங்கள் திரும்ப வர வேண்டும், முன்பு ஒரு சமயம், உலகங்களை உங்கள் மாயையால் பிரளய ஜலத்தில் மூழ்கச் செய்து, அந்த பெரும் கடல் வெள்ளத்தில் தூங்குவது போல படுத்திருந்த தாங்கள், முதலில் என்னை ஸ்ருஷ்டித்தீர்கள். போகவந்தன் என்ற நாகத்தை, தண்ணீரில் வசிக்கும் நாகராஜாவான அனந்தனை, உங்கள் மாயையால் தோன்றச் செய்த பின், மது, கைடபன் என்ற இரு ஜீவன்களையும் பிறப்பித்தீர்கள். இவர்களது உடல், தசை, எலும்பு இவற்றால், மலைகளுடன் கூடிய இந்த மேதினி, பூமி உண்டாயிற்று. திவ்யமான தங்கள் நாபியிலிருந்து, சூரியனுக்கு சமமான பத்மத்தை வரவழைத்து, என்னையும் ஸ்ருஷ்டித்தீர்கள். ப்ராஜாபத்யம்- உலகில் ஸ்ருஷ்டி தொழிலை என்னிடம் ஒப்படைத்தீர்கள். அந்த பொறுப்பை நான் நிர்வகித்து வருகிறேன். ஜகத்பதே, உங்களையே நான் உபாசித்து வருகிறேன். இப்பொழுது உலகில் உள்ள ஜீவன்களை ரக்ஷிப்பதும் நீயே. எனக்கும் தேஜஸை, சக்தியைத் தருபவன் நீயே. அதனால் இப்படி நெருங்க முடியாமல் இருக்கும் நிலையிலிருந்து, விஷ்ணுவாக உலகை காப்பவனாக வா, என்று வேண்டிக் கொண்டேன். அதிதியிடம், வீர்யம் உள்ள மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு உள் உறையும் சக்தியாக, அவர்கள் சொல்லிலும் செயலிலும், உதவியாக என்றும் இருக்கிறாய். ஜகத்பிரபுவே, உலகில் ஆபத்து வரும் பொழுது, ஜனங்கள், பயந்து நடுங்கும் பொழுது, நீ தான் அடைக்கலம் தருகிறாய். இது போல, ராவணன் மனித இனத்துக்கு இடையூறு செய்ததை நீக்க, மனிதனாக பிறக்க திருவுள்ளம் கொண்டாய். நூறாயிரம் வருஷங்கள், மேலும் பல நூறு ஆண்டுகள், நீங்கள் இங்கு வாசம் செய்து விட்டீர்கள். மனிதர்கள் கணக்கில் பூர்ண ஆயுள். நீண்ட காலம் வாழ்ந்து விட்டீர்கள். நரஸ்ரேஷ்டா, இதோ தங்கள் காலமும் நெருங்கி விட்டது. திரும்பி வா. பிரஜைகள் உபாசிக்க விரும்பினால், தாங்கள் மேலும் வசிக்க விரும்பினாலும், இங்கு தங்கியிருங்கள். அல்லது வைஷ்ணவ லோகம் திரும்பி வாருங்கள். இவ்வாறு பிதாமகர் சொல்லி அனுப்பினார். ராகவா, சுரலோகத்தையும் ஜயிக்க மற்ற தேவர்களோடு, விஷ்ணுவாக தேவர்களையும் மகிழ்விக்க வா. பிதாமகர் சொன்னதை காலன் வந்து சொன்னதைக் கேட்டு ராமர் சிரித்தபடி, சர்வ சம்ஹாரகாரனான காலனிடம், தேவதேவனுடைய அத்புதமான செய்தியைக் கேட்டேன். தாங்கள் செய்தி கொண்டு வந்ததும் நல்லதாயிற்று. மூன்று உலகுக்கும் நன்மை செய்யத் தான் அவதாரம் செய்கிறேன். உனக்கு மங்களம். நான் வந்தபடியே கிளம்புகிறேன். நீ வந்ததில் எதுவும் யோசிக்கவும் தேவையில்லை. சர்வ சம்ஹாரனே, தேவர்களுக்கு உதவியாக ப்ரும்ம தேவர் சொன்ன செய்திக்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன் என்றார்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், பிதாமஹ வாக்ய கதனம் நூற்று நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

அத்தியாயம் 105 (642) துர்வாசாகம: (துர்வாசர் வருகை)


இவர்கள் இருவரும் அறைக்குள் பேசிக் கொண்டிருந்த பொழுது, துர்வாச முனிவர் வந்து சேர்ந்தார். தவ வலிமை மிக்க அந்த ரிஷி, சீக்கிரம் ராமனைக் காண வேண்டும். எனக்கு ஒரு காரியம். அவனிடம் சொல்ல வேண்டும் என்று பரபரத்தார். லக்ஷ்மணன் இதைக் கேட்டு, பணிவாக வேண்டினான். எப்படிப்பட்ட வீரனானாலும், யுத்தத்தில், ஜயித்து விடக்கூடிய வலிமை மிக்கவன், அவரிடம் மரியாதையுடன் வரவேற்று, ப்ரும்மன், என் சகோதரன் மிக முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார். தற்சமயம் அந்த காரியத்தில் நான் குறுக்கிடுவதற்கில்லை. என்ன காரியம் சொல்லுங்கள். நான் செய்கிறேன். ஏதாவது வேண்டுமா? என்று கேட்டான். அல்லது, ஒரு முஹுர்த்தம் காத்திருங்கள். இதைக் கேட்டு முனிவர் கோபம் கொண்டார். ஆத்திரம் கண்களை மறைக்க கண்களாலேயே லக்ஷ்மணனை எரித்து விடுபவர் போல பார்த்தார். இந்த க்ஷணத்தில் ராமனிடம் நான் வந்திருப்பதைச் சொல். ராமனிடத்தில் இந்த க்ஷணமே நான் வந்திருப்பதை சொல். இல்லாவிடில், நீ, உன் ராஜ்யம், ராகவன், இந்த நகரம், எல்லாவற்றையும் சேர்த்து பொசுக்கி விடுவேன். பரதனையும் தான், சௌமித்ரே. உன் சந்ததிகளில் யார் யார் இருக்கிறார்களோ, அவர்களையும் பஸ்மமாக்கி விடுவேன். என் மனதில் கோபத்தை அடக்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. இவ்வாறு பயங்கரமாக ரிஷியின் வாயிலிருந்து வார்த்தைகள் வரவும், க்ஷண நேரம் லக்ஷ்மணன் யோசித்தான். என் ஒருவன் மரணம் சம்பவிக்கட்டும், பரவாயில்லை. மற்றவர்கள் அழிவும் சர்வ நாசமும் தடுக்கப்படும், இவ்வாறு தீர்மானம் செய்தவனாக ராமனிடத்தில் செய்தியைத் தெரிவித்தான். லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்டு, காலனை அனுப்பி விட்டு,  வெளி வாசலுக்கு வந்து அத்ரி புத்திரரான துர்வாசரை வரவேற்க வந்தார். துர்வாசரை வணங்கி வரவேற்று, என்ன காரியம் சொல்லுங்கள் என்று வினவினார். தர்ம வத்ஸலா, கேள். இன்று நான் ஆயிர வருஷங்கள் தவம் செய்து முடிக்கிறேன். அதனால் நல்ல உணவு வேண்டும். மாசற்றவனே, உன்னால் முடிந்தவரை எனக்கு போஜனம் செய்து வைக்க ஏற்பாடு செய். இதைக் கேட்டு ராகவன் உடனே அவசரமாக, முனிவரின் போஜனத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான். அம்ருதத்திற்கு இணையான அந்த போஜனத்தை உண்டு முனிவர், திருப்தியானார். சாது, ராமா என்று வாழ்த்தி விட்டு தன் ஆசிரமம் சென்றார். முனிவர் தன் ஆசிரமம் சென்றபின் காலனின் எச்சரிக்கை ஞாபகம் வர, மிகவும் வேதனைக்குள்ளானார். வேதனையோடு, காலனின் கோர உருவமும் மனதில் தெரிய, தலை குனிந்தபடி, எதுவும் செய்யத் தோன்றாமல் வாயடைத்து நின்றார். காலன் சொல் திரும்பத் திரும்ப மனதில் வந்து அலைக்கழித்தது.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், துர்வாசாகம: நூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

அத்தியாயம் 106 (643) லக்ஷ்மண பரித்யாக: (லக்ஷ்மணனை தியாகம் செய்தல்)


தலை குனிந்தபடி நின்றிருந்த ராகவனைப் பார்த்து, லக்ஷ்மணன், மதுரமாக சொன்னான். என் பொருட்டு வருந்தாதே. காலனின் கதி முன்னாலேயே நிர்ணயிக்கப் பட்டு விடுகிறது. அப்படித்தான் மன வருத்தமாக இருக்கும். நீ உன் பிரதிக்ஞையை பாலனம் செய். காகுத்ஸா, தான் கொடுத்த வாக்கை நிறை வேற்றாத அரசர்கள் நரகம் தான் போவார்கள். எனக்குத் தண்டனை கொடு. மரண தண்டனை தான் என்றாலும் தயங்காதே. தர்மத்தை காப்பாற்று, ராகவா, வதம் செய்து விடு எனவும் ராமர் தர்மசங்கடத்துக்கு உள்ளானார். மந்திரி வர்கங்களை அழைத்து நடந்ததைச் சொன்னார்.  தாபஸராக வந்தவருக்கு (காலன் )தான் வாக்கு கொடுத்ததையும், துர்வாசர் வந்து அவசரப் படுத்தியதையும் விவரித்தார். இதைக் கேட்டு எல்லோருமாக யோசித்தனர். மகான் வசிஷ்டர் சொன்னார். லக்ஷ்மணனை இழக்க உன்னால் முடியாது. அவன் பிரிவை தாங்க முடியாது தான் என்றாலும், அவனை தியாகம் செய்து விடு. காலனுக்கு கொடுத்த வாக்கும் வீணாகாது. வாக்கு மீறுவது தர்மத்திற்கு புறம்பானது. அதை அரசன் பாலித்தே ஆகவேண்டும். தர்மம் நஷ்டமானால், மூவுலகமும், சராசரமும், தேவ, ரிஷி கணங்களுடன் நாசமாகும். சந்தேகம் இல்லை. புருஷ சார்துர்லா, நீ தர்ம பாலனம் செய்ய, லக்ஷ்மணனை தவிர்த்து உலகை க்ஷேமமாக இருக்கச் செய். எல்லோரும் ஒருமித்துச் சொன்ன ஆலோசனையைக் கேட்ட, ராமர் சபை மத்தியில் லக்ஷ்மணனைப் பார்த்துச் சொன்னார். லக்ஷ்மணா, நான் உன்னை விட்டேன். தர்மத்திற்கு மாறாக நான் செய்யக் கூடாது. த்யாகமும் வதமும் ஒன்றே. நல்ல மனிதர்களுக்கு இரண்டுமே வேதனை அளிக்கக் கூடியதே. ராமர் இப்படிச் சொல்லவும் கண்களில் நீர் நிரம்ப, மனம் வேதனையில் வாட,  வெளியேறிய லக்ஷ்மணன் தன் வீட்டுப் பக்கம் செல்லாமல், நேராக சரயூ நதிக்கரை சென்றான். நீரில் மூழ்கி, தன் சுவாசத்தை  வெளி விடாமல் அடக்கிக் கொண்டான். மூச்சை அடக்கி, நீரினுள் கிடந்தவனைப் பார்த்து, இந்திரனுடன் கூட வந்த அப்ஸர கணங்களும், தேவ, ரிஷி கணங்களும் பூமாரி பொழிந்தனர். மற்ற ஜனங்களுக்குத் தெரியாமல், இந்திரன், லக்ஷ்மணனைத்  தூக்கி, தேவலோகத்தில் சேர்ப்பித்தான். விஷ்ணுவின் நான்கில் ஒரு பாகம் வந்து சேர்ந்து விட்டது என்று தேவர்கள் எல்லோரும் மகிழ்ந்து கொண்டாடினர்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லக்ஷ்மண பரித்யாக: என்ற நூற்று ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  



அத்தியாயம் 107 (644) குசலவாபிஷேக: (குச லவர்க ளின் அபிஷேகம்)


லக்ஷ்மணனை அனுப்பி விட்டு ராமர், தாங்க முடியாத துக்கமும், வேதனையும் அனுபவித்தார். புரோஹிதரையும் மந்திரிகள், மற்றும், நீதி முறைகளை அறிந்த அறிஞர்களையும் பார்த்து, இன்று பரதனை அயோத்யா ராஜ்யத்தில் முடி சூட்டி அபிஷேகம் செய்து வைக்கிறேன். அயோத்யாபதியாக பரதன் இருப்பான். நான் வனம் செல்கிறேன். ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நானும் இன்றே லக்ஷ்மணனை தொடர்ந்து செல்கிறேன். பிரஜைகள் திகைத்து தலை வணங்கி நின்றனர். செய்வதறியாது, சிலையாக நின்றனர். பரதனும் திகைத்தான். ராஜ்யம் என்ற சொல்லையே கேட்கப் பிடிக்காதவன் போல, பதில் சொன்னான். சத்யமாக சொல்கிறேன். ராமா, ஸ்வர்கமே ஆனாலும், நீ இல்லாத இடத்தில் எனக்கு வாசமே வேண்டாம் என்றான். ராஜ்யத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன். எனக்கு ஆசையும் இல்லை. இதோ இந்த குச, லவர்கள் இருக்கிறார்கள். நராதிபனே, இவர்களை ராஜ்யத்தில் முடி சூட்டி வை. கோசல தேசத்தில் குசனையும், உத்தர பிரதேசத்தில் லவனையும் அரசனாக்கு. தூதர்கள் வேகமாக சென்று சத்ருக்னனை அழைத்து வரட்டும். நாங்கள் ஸ்வர்காரோஹணம் செய்யப் போவதை மட்டும் சொல்லாமல் அழைத்து வா. பரதன் சொன்னதையும், ஊர் ஜனங்கள் தலை குனிந்து நிற்பதையும் பார்த்து வசிஷ்டர் சொன்னார். வத்ஸ ராமா, இதோ இந்த பிரஜைகளைப் பார். இவர்கள் விருப்பம் என்ன என்று தெரிந்திருந்தும், மாறாக இவர்கள் விருப்பப் படாததைச் செய்யாதே. உடனே ராமன் அவர்களை உற்சாகப் படுத்தி, நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டான். எல்லோரும் ஏகோபித்த குரலில், நாங்கள் ராமனை பின் தொடர்ந்து செல்வோம். ராமன் இருக்கும் இடத்தில் நாங்களும் இருப்போம். அவன் செல்லும் இடம் தொடர்ந்து செல்வோம். ராமா, பிரஜைகளிடம் உனக்கு அன்பு உண்டு. ராமா, புத்திரர்கள், மனைவி மக்களோடு எங்களையும் அழைத்துச் செல். தபோ வனம் தான் போவாயோ, நுழைய முடியாத கோட்டையோ, காடோ, சமுத்திரமோ, எதுவானாலும் நாங்களும் உடன் வருகிறோம். எங்களைத் தியாகம் செய்து விடாதே என்று வேண்டினர். இது தான் எங்கள் விருப்பம். நாங்கள் வேண்டுவதும் இதைத்தான். அரசனே, உங்களுடன் கூடவே பயணம் செய்வது தான் எங்கள் ஆசை என்றனர். பிரஜைகள் உறுதியாகச் சொன்னதை ராமரும் ஆமோதித்தார். தன் முடிவையும் அன்றே நிச்சயித்து விட்ட ராமர், கோஸல தேசத்துக்கு குசனையும், உத்திர பிரதேசத்துக்கு லவனையும் அபிஷேகம் செய்வித்தார். நல்ல பாடகர்களான இருவரையும் மடியில் இருத்தி, அணைத்து உச்சி முகர்ந்து,ஆயிரக் கணக்கான ரதங்கள், இருபதாயிரம் யானைகள், அதே அளவு குதிரைகள், ஒவ்வொருவருக்கும் தேவையான தனம் இவற்றைக் கொடுத்தார். நிறைய தனம், நிறைய ரத்னம், ஆரோக்யமான மகிழ்ச்சி நிறைந்த மக்கள் என்று தன் நகரங்களுக்கு அவர்களை அனுப்பி வைத்தார். அதன் பின் சத்ருக்னனுக்கு தூதனை அனுப்பினார்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், குசலவாபிஷேக: என்ற நூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

அத்தியாயம் 108 (645) விபீஷணாத்யாதேஸ: (விபீஷணன் முதலானோருக்கு செய்தி)


ராமரின் கட்டளையை ஏற்று தூதர்கள், வழியில் எங்கும் நிற்காமல் தொடர்ந்து பிரயாணம் செய்தனர். மதுராம் என்ற அந்த நகரை மூன்று இரவுகள் பிரயாணம் செய்து அடைந்தனர். சத்ருக்னனிடம் உள்ளது உள்ளபடி விவரித்தனர். லக்ஷ்மணனை தியாகம் செய்ததையும், ராகவ பிரதிக்ஞையையும் சத்ருக்னன் கேட்டான். புத்திரர்களுக்கு அபிஷேகம் செய்வித்ததையும் விரிவாகச் சொன்னார்கள். ஊர் ஜனங்கள் அனுகமனம் (உடன் நடத்தல்) செய்யப் போவதையும் தெரிவித்தார்கள். விந்த்ய மலைச் சாரலில், குசனுக்காக குசாவதி என்ற அழகிய நகரம் ஸ்தாபனம் செய்ததை, ஸ்ராவஸதி என்ற நகரம், லவனுக்காக நிரமாணித்ததை, சொன்னார்கள். வரும் நாட்களில் ராமனும் பரதனும் அயோத்தி நகரில் ஒருவர் மீதியில்லாமல் உடன் அழைத்துக் கொண்டு ஸ்வர்கம் செல்ல இருப்பதையும் சொன்னார்கள். மகாரதிகள் இருவரும், கிளம்பி விட்டனர், ராஜன், தாங்களும் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்றனர். இதைக் கேட்டு தன் குலம் முழுவதும் முடிவை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து, பிரஜைகளை வரவழைத்து, காஞ்சனர் என்ற புரோகிதரையும் வரவழைத்து, நானும் என் சகோதர்களுடன் செல்ல வேண்டும், அதனால் என் புத்திரர்களுக்கு அபிஷேகம் செய்து வைக்கிறேன் என்றான். சுபாஹு  என்ற மகன், மதுரா நகரையும், சத்ரு காதி வைதிசம் என்ற நகரையும், மதுரா நகரை இரண்டாகப் பிரித்து இருவருக்குமாக அளித்து விட்டு, அவர்களை அரசர்களாக நியமித்தான். சேனை செல்வம் யாவும் இருவருக்கும் சமமாக பிரித்து அளித்தான். ஒரே ஒரு ரதத்தில் (ராகவன்-ரகு குலத் தோன்றல்) சத்ருக்னன் அயோத்தி நோக்கி புறப்பட்டான். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல தவக் கோலத்தில் இருந்த அண்ணலைக் கண்டான். சூக்ஷ்மமான வெண் பட்டுடுத்தி, முனிவர்களுடன் அமர்ந்திருந்த ராமரைப் பார்த்து, என் புதல்வர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்து விட்டேன். நானும் அனுகமனம் செய்யவே வந்தேன். என்னைப் பிரித்து அன்னியமாக நினைக்க வேண்டாம் என்றான். ராமரும் தலையசைத்து அனுமதி கொடுத்தார். இதற்குள், சுக்ரீவனும் அவனைச் சார்ந்த வானரங்கள், கரடிகள், வந்து சேர்ந்தனர், தேவ, ரிஷி, கந்தர்வர்களிடம் வானர ரூபத்துடன் பிறந்து ராம கைங்கர்யமே பிறவிப் பயனாக வந்தவர்கள், ராமர் தன் முடிவை நிச்சயித்துக் கொண்டு விட்டதையறிந்து, பணிவாக தாங்களும் அனுகமனம் செய்ய விரும்புவதாகச் சொன்னார்கள். ராஜன், நாங்களும் அனுகமனம் செய்வதாக தீர்மானித்து தான் வந்தோம். எங்களை விட்டுப் போனால் தான் யம தண்டம் தாக்கியது போல தவிப்போம் என்றனர். ராமரும் சிரித்துக் கொண்டே – பா3ம்- அப்படியே ஆகட்டும் என்றார்.  சுக்ரீவனும், நரேஸ்வரா, நானும் அங்கதனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டுத் தான் வந்தேன் என்றான். உங்களுடன் அனுகமனம் செய்யத் தான் வந்திருக்கிறேன் எனவும் ராமரும் சிரித்துக் கொண்டே சுக்ரீவா, நீ என் நண்பன். நீ வேறு நான் வேறல்ல. தேவலோகமானாலும், பரம பதமானாலும் சேர்ந்தே போவோம் என்றார். விபீஷணனைப் பார்த்து கட்டளையிடுவது போலச் சொன்னார். விபீஷணா, பிரஜைகள் உள்ள வரை லங்கையில் நீ இருப்பாய். சந்திர, சூரியன் உள்ளவரை, மேதினி இருக்கும் வரை, என் கதை உலகில் நிலவும் வரை உன் ராஜ்யத்தில் ஸ்திரமாக இருப்பாய். நீ தான் ராஜ்யம் ஆளுவாய். என் நட்பை நினைத்து இந்த கட்டளையை ஏற்றுக் கொள் என்றார். எதுவும் பதில் பேசாதே. பிரஜைகளை நீதி தவறாது பாலனம் செய். ராக்ஷஸ ராஜனே, நீ பெருந்தன்மையான மனம் உடையவன். இக்ஷ்வாகு குல தெய்வமான ஜகந்நாதனை எப்பொழுதும் ஆராதனை செய்து வா. (ஸ்ரீ ரங்கநாதன் என்பது வழக்கு) இந்த தெய்வம் எங்கள் குல தெய்வம். அப்படியே என்று ராமர் அளித்ததை ஏற்றுக் கொண்டு ராக்ஷஸ ராஜாவான விபீஷணன், ராகவனுடைய கட்டளையை சிரமேற் கொண்டவனாக அப்படியே செய்வதாக வாக்கு கொடுத்தான். இதன் பின் ராமர் ஹனுமானைப் பார்த்து, புவியில் ராம கதை நிலவும் வரை நீயும் இரு. நீயாகவே அப்படி ஒரு விருப்பம் தெரிவித்திருக்கிறாய். ஹரீஸ்வரா, என் வாக்யத்தை பரி பாலித்துக் கொண்டு, என் நாமம் உலகில் உள்ளவரை சந்தோஷமாக இரு. ஹனுமானும் தன் திருப்தியை தெரிவித்துக் கொண்டான். இந்த உலகில் தங்கள் சரித்திரம் நிலவும் வரை, உங்கள் கட்டளையை பரி பாலித்தபடி உலகில் இருக்கிறேன் என்றான். பின் ஜாம்பவானைப் பார்த்து, முதியவர் இவர். ப்ரும்மாவின் பிள்ளை. இவரும், மைந்த, த்விவதனோடு ஐந்து பேரை, கலி காலம் வரும் வரை உலகில் ஜீவிதர்களாக இருங்கள் என்று கட்டளை இட்டார். இவர்களுக்குத் தனித் தனியாக இப்படி கட்டளைகள் கொடுத்து விட்டு மற்ற ருக்ஷ, வானரங்களை அனுப்பி விட்டார்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், விபீஷணாத்யாதேஸ: என்ற நூற்று எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)




அத்தியாயம் 109 (646) ஸ்ரீ ராம மகா ப்ரஸ்தானம் (ஸ்ரீ ராமரின் மகா பரஸ்தானம்)


விடிந்தவுடன், விசாலமான மார்பும் கமல பத்ரம் போன்ற கண்களும் உடைய ராமர், புரோஹிதர்களை அழைத்து, முன்னால் அக்னி ஹோத்ரம் செல்லட்டும். பிராம்மணர்களுடன் அக்னி பிரகாசமாக வாஜபேய குடைகளுடன் பிரதான       வீதிகளில் செல்லட்டும் என்று உத்தரவிட்டார். உடனே தேஜஸ்வியான வசிஷ்டர், மஹா ப்ராஸ்தானிகம் – என்ற செயலுக்குத் தேவையான ஏற்பாடுகளை குறைவற செய்தார். சூக்ஷ்மமான ஆடைகளைத் தரித்து, கையில் குசத்துடன், தயாராக கிளம்பினர். ராமரும் வழியில் தென்பட்ட எதுவானாலும், யாரானாலும், உணராமல், பாதிக்கப் படாமல், சூரிய, சந்திர கிரணம் போலச் சென்றார். அவருடைய வலது பக்கத்தில் லக்ஷ்மி தேவியும் வந்து நின்றாள். இடது பக்கத்தில் ஹ்ரீ என்ற மகாதேவியும், முன்னால் வ்யவஸாயம் என்ற தேவியும் சென்றனர். பல விதமான ஸரங்கள், வில், மற்ற ஆயுதங்கள் மனித உருவம் எடுத்து முன் சென்றன. வேதங்கள் பிராம்மணர்களாக, எல்லோரையும் ரக்ஷிக்கும் காயத்ரி, ஓங்காரமும், வஷட்காரமும் ராமரைத் தொடர்ந்தன. மகானான ரிஷிகளும், பல அரசர்களும், ஸ்வர்கம் நோக்கிச் செல்லும் ராமரை அனுகமனம் செய்தன. சென்று கொண்டிருந்த ராமரை அந்த:புர ஸ்திரீகள் பின் தொடர்ந்தனர். முதியவர்களும், பாலர்களும், வயதொத்த கிங்கரர்கள், கிளம்பினர். பரத, சத்ருக்னர்களும், தங்கள் அந்த:புர ஸ்திரீகளுடன், தங்கள் அக்னி ஹோத்ரம் இவைகளுடன் கிளம்பினர். ஊர் ஜனங்களும் அதே போல, தங்கள் அக்னி ஹோத்ரம், புதல்வர்கள், மனைவி, மக்கள் சகிதம் பின் தொடர்ந்தனர். இதன் பின் அனைத்து பிரஜைகளும், இது வரை மகிழ்ச்சியும் ஆரோக்யமுமாக வளைய வந்த ஜனங்கள், சென்று கொண்டிருந்த ராமனைத் தொடர்ந்து சென்றன. ராகவனின் குணங்கள் அவன் பால் ஈர்த்தது தான் காரணமாக இருக்க வேண்டும். பக்ஷிகளும், பசு, வாகனங்களை இழுக்கும் மிருகங்களும், ஸ்திரீ புருஷர்களுமாக, விகல்பமின்றி, ஆனந்தமாக ராமனுடன் சென்றனர். வானரங்களும் ஸ்நானம் செய்து, கில கில சப்தத்துடன், நடந்தனர். யாருமே இதற்காக வெட்கப் பட்டதாகவோ, தீனமாகவோ, துக்கத்துடனோ காணப் படவில்லை. பரமாத்புதமான காட்சியாக, ஆனந்த மயமாக இருந்தது. ஜனபத ஜனங்கள், ராகவனைப் பார்க்க வந்தவர்கள், பின்னால் பக்தியுடன் நடந்து வந்தனர். நகரத்தில் இருந்த ஜீவன்கள், அந்தர்தானமாக கண்ணுக்குத் தெரியாமல் இருந்தவை, ஸ்வர்கம் செல்ல கிளம்பி விட்ட ராகவனுடன், உடன் நடந்தனர். ஸ்தாவர, ஜங்கம, யார், எது ராமரைக் கண்டாலும், ராம கமனம் என்று தெரிந்தவுடன், அனுகமனம் செல்ல (உடன் செல்ல) தயாராக சேர்ந்து கொண்டனர். மூச்சு விடும் ஜீவன்களில் ஒன்று கூட அயோத்தியில் பாக்கியில்லை. சூக்ஷ்மமாகக் கூட காண முடியவில்லை. பறவைகளும் ராமரைத் தொடர்ந்தன.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஸ்ரீ ராம மகா ப்ரஸ்தானம் என்ற நூற்று ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

அத்தியாயம் 110 (647)  ஸஹானுகம ஸ்ரீராம ஸ்வர்காரோஹனம் (உடன் வந்தவர்களுடன் ஸ்ரீ ராமர் சுவர்கம் செல்லுதல்)


நதியை நோக்கி அரை யோஜனை தூரம் சென்றபின், சரயூ நதியின் பாவனமான ஜலத்தை ரகுநந்தனன் கண்டார். நதியில் சுழல் சுழலாக தண்ணீர் பிரவகித்து கொண்டிருந்தது. நாலாபுறமும் நதியை பார்த்தபடி கரையில் வந்து பிரஜைகளுடன் நின்றார். அந்த முஹுர்த்தத்தில், பிதாமகர் ப்ரும்மா, தேவர்களும் ரிஷிகளும் சூழ, மற்றும் பல மகான்களோடு வந்து சேர்ந்தார். காகுத்ஸன் ஸ்வர்கம் செல்லத் தயாராக வந்து நின்ற இடத்தில், பல திவ்ய விமானங்கள், நூறு, கோடிக் கணக்காக வந்து இருந்தன. ஆகாயமே திவ்ய ஜோதி பரவி பிரகாசமாக இருந்தது. தாங்களே பிரபையுடன், தன் தேஜஸால் ஸ்வர்கம் செல்லும் புண்யாத்மாக்கள், புண்ய கார்யங்களை, நற்செயல்களைச் செய்தவர்கள், இவர்களால் அங்கு வீசிய காற்றே பாவனமாக ஆயிற்று. சுகமாக, வாசனையாக காற்று வீசியது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். ராமர் சரயூ நதியில் கால் வைத்தவுடன் நூற்றுக்கணக்கான கந்தர்வ, அப்ஸர கணங்கள் வாத்யங்களை முழங்கினர். அந்தரிக்ஷத்திலிருந்து பிதாமகர் விஷ்ணோ, வா, வா, உனக்கு மங்களம். ராகவா, எங்கள் பாக்கியம். சகோதரர்களுடன் வந்து சேர்ந்தாய். (சகோதர்களுடன் என்று பன்மையில் சொன்னதால், லக்ஷ்மணனும் அங்கு சேர்ந்தான் என்பது தீர்த்தருடைய உரை). மற்ற தேவர்களும் உடன் வர, உன் இருப்பிடமான ஸ்வர்கத்தில் காலடி எடுத்து வை. தன் இயல்பான சரீரத்தை ஏற்றுக் கொள், எந்த சரீரம் விருப்பமானதோ, பழமையான வைஷ்ணவீம்- விஷ்ணுத் தன்மை அல்லது, பரப்ரும்ம ஸ்வரூபத்தையோ ஏற்றுக் கொள். தேவா, தாங்கள் தான் உலகுக்கு கதி. யாரும் உங்களை உள்ளபடி அறிந்தவர்கள் என்பது இல்லை. விசாலாக்ஷியான மாயா தேவியைத் தவிர, உங்கள் முன் அவதாரங்களை யார் அறிவார். நினைத்து பார்க்க முடியாத உங்களை, (அசிந்த்யம்), வியாபித்து மகானாக இருப்பவரை (மஹத்பூதம்), அழிவில்லாதவரை (அக்ஷயம்), அனைத்தையும் தன்னுள் அடக்கியவரை (சர்வ சங்க்ரஹ) என்ற ரூபங்க ளில் தாங்கள் விரும்பும் ரூபம் எதுவோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். பிதாமகர் சொன்னதைக் கேட்டு, சற்று யோசித்து, சகோதரர்கள் சரீரத்துடன், தன் சரீரமும் சேர வைஷ்ணவமான தன் தேஜஸை ஏற்றுக் கொண்டார். தேவதைகள் உடனே விஷ்ணு மயமான தேவனை பூஜித்தார்கள். ஆதித்யர்கள், மருத்கணங்கள், இந்திரர்கள், அக்னி முதலானவர்கள், மற்றும் உள்ள திவ்யமான ரிஷி கணங்கள், கந்தரவ, அப்ஸர, நாக, யக்ஷர்கள், தைத்யர்கள், தானவ, ராக்ஷஸர்கள் அனைவரும், நினைத்ததை சாதித்து பூர்ணமாக ஆனவரை சாது, சாது என்று போற்றி புகழ்ந்தனர். இதன் பின் விஷ்ணு, பிதாமகரிடம், இதோ என்ணுடன் வந்துள்ள ஜனங்கள், இவர்களுக்கும் இடம் தர வேண்டும் என்றார். இவர்கள் அனைவரும் ஸ்னேகத்துடன் என்னைத் தொடர்ந்து வந்துள்ளனர். பக்தர்கள். இவர்களை நாமும் கவனித்து மதிப்புடன் நடத்த வேண்டும். ஆத்மாவைத் துறந்தவர்கள் (நான் எனும் எண்ணத்தை விட்டவர்கள்). என் பொருட்டு தியாகம் செய்தவர்கள். இதைக் கேட்டு பிதாமகர், இவர்கள் சாந்தானிகர்கள் என்ற உலகை அடையட்டும் என்று ஆசிர்வதித்தார். உன்னை நினைத்து உன்னுடன் வந்த பறவைகள், உட்பட அனைத்து ஜீவன்களும், மற்றொரு ப்ரும்ம லோகம் போன்ற இந்த உலகில் வசிக்கட்டும். வானரங்களும், கரடிகளும், எந்த தேவனின் அம்சமாக புவியில் தோன்றினவோ, அந்த தேவதைகளுடன் சேரட்டும். சுக்ரீவன் உடனே சூரிய மண்டலத்தில் பிரவேசித்தான். தேவர்கள் கண் முன்னே அவரவர் பித்ருக்களை சென்று அடைந்தனர். இவ்வாறு பிதாமகர் சொன்னவுடன் சரயூ நதியில் முழ்கி அச்சமயம் உயிரை விட்ட பிராணிகள் அனைத்தும், பூவுலகில் இருந்த சரீரத்தை விட்டு விமானத்தில் ஏறி, தேவலோகத்தின் பிரகாசமான சரீரங்களைப் பெற்றார்கள். திவ்யமான தேவ சரீரத்துடன்  ஒளி மயமாகி நின்றார்கள். சரயூ நதி தீரம் சென்ற ஸ்தாவர ஜங்கமங்கள், அந்த நீர் மேலே பட்டவுடன் தேவ லோகம் சென்றனர். ருக்ஷ (கரடிகள்) வாநரங்கள், ராக்ஷஸர்களும் ஸ்வர்கம் சென்றனர். ஜலத்தில் தங்கள் சரீரத்தை விட்ட அனைவரையும் தேவ லோகத்தில் ப்ரும்மா, முப்பதாயிரம் பேருடன் வந்து, மகிழ்ச்சியோடு தேவ லோகத்தில் இடம் கொடுத்து அழைத்துச் சென்றார்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஸஹானுகம ஸ்ரீராம ஸ்வர்காரோஹனம் என்ற நூற்று பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 111 (648) ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி: (ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி)


உத்தர சரித்திரத்தோடு, ராமாயணம் என்ற இந்த மகா காவ்யம் நிறைவு பெறுகிறது. இதை இயற்றிய வால்மீகி முனிவரை ப்ரும்மாவும் போற்றினார். எந்த பரப்ரும்மம் உலகம் முழுவதும் வியாபித்து நிற்கிறதோ, சராசரத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு விளங்குகிறதோ, அந்த விஷ்ணு பழையபடி ஸ்வர்க லோகத்தில் ஸ்திரமாக வாசம் செய்யலானார். தேவர்களும், சித்தர்களும், கந்தர்வர்களும் பரம ரிஷிகளும் நித்தியம் மகிழச்சியோடு ராமாயண கதையைக் கேட்கின்றனர். இந்த ஆக்யானம்-சரித்திரம், ஆயுளையும், சௌபாக்யத்தையும் தர வல்லது. பாப நாசனம். ராமாயணம் வேதத்திற்கு இணையானது.  சிரார்த காலத்தில் அறிந்தவர்களைக் கொண்டு சொல்ல வைக்க வேண்டும்.

புத்ரன் இல்லாதவர்கள், புத்ரனை, தனம் இல்லாதவர்கள் தனம் அடைவார்கள். இதில் ஒரு பதமாவது படித்தவர்கள், பல நன்மைகளை அடைவர். மனிதர்கள், தினம் ஒரு ஸ்லோகமாவது படித்தாலே, அன்றாடம் செய்யும் பாபங்களிலிருந்து விடுபடலாம். இதை படிப்பவர்களுக்கு, வஸ்திரம், பசு, ஹிரண்யம் முதலியவை தாராளமாக கொடுக்க வேண்டும். இதை படித்து சொல்பவர்கள், திருப்தியாக, மகிழ்ச்சியாக இருந்தால், சர்வ தேவதைகளும் மகிழ்ச்சியடைவார்கள். ஆயுளைத் தரும் இந்த ராமாயணத்தை படிப்பவர்கள், புதல்வர்கள், மற்றும் உற்றார் உறவினரோடு மகிழ்ச்சியாக உலகில் வாழ்வர். பரலோகத்திலும் நன்மையடைவர். விடியற்காலையில், அல்லது பிற்பகலில், கட்டுப் பாட்டுடன், நியமத்துடன் ராமாயணத்தை படிக்க வேண்டும். அயோத்தி நகரம் பல வருஷங்கள் சூன்யமாகவே இருக்கும் பின் ரிஷபன் என்ற அரசன் ஆளுவான்.

இந்த கதை வருங்காலத்திற்கும், உத்தர காண்டத்தோடு சேர்த்து ஆயுளைத் தரக் கூடியது. ப்ரசேதஸின் பிள்ளையான வால்மீகி ப்ரும்மாவின் அனுமதியுடன் இயற்றினார். இதன் ஒரு அத்தியாயத்தைப் படிப்பவர்கள் நூறு அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். இருபதினாயிரம் வாஜபேய யாகம் செய்த பலனை அடைவார்கள். இதைக் கேட்பவர்களும் அதே பலனை அடைவார்கள். ப்ரயாகம் முதலிய தீர்த்தங்கள், கங்கை முதலிய நதிகள், நைமிசம் முதலிய அரண்யங்கள், குரு ஷேத்திரம் முதலிய க்ஷேத்திரங்களுக்கு செல்பவர்களும் பெறும் பலனை ராமாயணத்தைக் கேட்பதாலேயெ பெறுவார்கள். குரு க்ஷேத்திரத்தில், கிரஹண சமயத்தில் துலா பாரமாக தங்கம் தானம் செய்பவர்களும், ராமாயண ஸ்ரவணம்( கேட்பவர்கள்) செய்பவர்கள் பெறுவார்கள். எல்லா வித பாபங்களிலிருந்தும் விடுபடுவர். விஷ்ணு லோகம் செல்வார்கள். முன்பு வால்மீகியினால் இயற்றப் பட்ட இந்த காவியம், மகா கவி, மகானுடைய வாக்கு என்ற எண்ணத்துடன் படிப்பவர்களும், வைஷ்ணவ சரீரத்தை அடைவார்கள். மனைவி, மக்களுடன் இனிதே வாழ்வர். செல்வம் பெருகும், சந்ததி குறைவின்றி இருக்கும். இதை சத்யம் என்ற நம்பிக்கையோடு, தகுதி வாய்ந்த அறிஞர்களிடம் படிக்கச் சொல்லி கேளுங்கள். காயத்ரியுடைய ஸ்வரூபமே இந்த ராமாயணம். செல்வம் இல்லாதவன் செல்வம் பெறுவான். படிப்பவனோ, கேட்பவனோ, ராகவ சரித்திரத்தை எந்த வித கெட்ட எண்ணமும் இன்றி பக்தியுடன் நினைப்பவனோ, தீர்காயுள் பெறுவான். நன்மையை விரும்புபவன் எப்பொழுதும் ராமனை தியானிக்க வேண்டும். மற்றவர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும். ரகுநாத சரித்திரமான இதை முழுவதும் படிப்பவர்கள், ஆயுள் முடியும் தறுவாயில் விஷ்ணு லோகம் செல்வான். சந்தேகமேயில்லை. அவன் தந்தை, தந்தைக்குத் தந்தை, அவர் தந்தை என்ற வம்ச முன்னோர்களும் விஷ்ணு லோகத்தை அடைவார்கள். நான்கு வித சௌக்யங்களையும் தரக் கூடிய ராகவ சரித்திரம் இது அதனால் சற்று முயற்சி செய்தாவது தவறாமல் கேட்க வேண்டும். ராமாயணத்தை ஒரு பாதமோ, அரை பாதமோ கேட்பவன் கூட ப்ரும்ம லோகம் செல்வான். ப்ரும்மாவால் மரியாதையுடன் வரவேற்கப் படுவான். இது தான் புராண கதை. எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும். இதை விஸ்தாரமாக சொல்லுங்கள். விஷ்ணுவின் பலம் பெருகட்டும். விஷ்ணுவின் பலம் பெருகட்டும்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஸ்ரீமத் ராமாயண பல ஸ்ருதி: என்ற நூற்று பதினோராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

ஸ்ரீமத் ராமாயணத்தின் உத்தர காண்டம் நிறைவுற்றது.
ஸ்ரீமத் ராமாயணம் நிறைவுற்றது.

1 கருத்து: