வியாழன், 2 மார்ச், 2017

பொலிக ! பொலிக !! - இராமானுஜர் 1000 பகுதி 2

ராதே கிருஷ்ணா 03-03-2017



பொலிக ! பொலிக !! - இராமானுஜர் 1000  பகுதி 2



குருவே சரணம்!


Advertisement



Ramanujar Download






















அரையருக்கு மிகவும் சுவாரசியமாகி விட்டது. 'சொல்லும், சொல்லும்! ராமன் நினைத்தால் இருந்த இடத்தில் இருந்தபடிக்கே சீதையை மீட்டிருக்க முடியும்தான். ஆனால் ஏன் செய்யவில்லை?' ஆர்வம் தாள மாட்டாமல் கேட்டார்.'சுவாமி, இலங்கைக்குப் போவதற்கு முன்னால் ராமேஸ்வரத்துக் கடற்கரையில் இருந்தபடி ராமன் கடலரசனைக் கூப்பிட்டான் அல்லவா?''ஆமாம். கடலைத் தாண்ட அனுமதி கேட்பதற்காக.''அவன் வரத் தாமதமானதில் கோபமாகி வில்லை எடுத்து நாணேற்றி விட்டான் அல்லவா?''அதுவும் உண்மைதான். ராமன் அழைத்துத் தாமதம் செய்யலாமோ?''ஆனால் நாண் ஏற்றிய கணத்தில் கடலரசன் ஓடி வந்துவிட்டான். தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டு ராமனின் கோபத்தைக் கரைத்தான் அல்லவா?''ஆமாம், அதற்கென்ன?''அப்போது என்ன நடந்ததென்று யோசித்துப் பாருங்கள். ஏற்றிய அம்பை இறக்க முடியாது என்று சொல்லி, அதே கடலரசனின் எதிரியான யாரோ ஒரு அரக்கனை நோக்கி அந்த அம்பைச் செலுத்தி அவனை அழித்தானா இல்லையா? அதுவும் வடக்கே எங்கோ மூவாயிரம் காத துாரத்தில் இருந்த அரக்கன் அவன்.''நீர் சொல்வது உண்மைதான் உடையவரே. கவி வால்மீகி அப்படித்தான் எழுதியிருக்கிறார்.''இப்போது சொல்லுங்கள். ஒரே ஒரு அம்பை வைத்து மூவாயிரம் காத துாரத்தில் உள்ள ஓர் அரக்கனை அழிக்கத் தெரிந்தவனுக்கு, வெறும் நுாறு யோசனை துாரத்தில் இருந்த ராவணனை ஓர் அம்பால் வீழ்த்தத் தெரியாதா? எதற்கு வேலை மெனக்கெட்டுக் கடல் தாண்டிப் போக வேண்டும்?''அதானே... நான் இதை யோசித்ததே இல்லை உடையவரே!''ராமன் கடல் தாண்ட ஒரே காரணம் விபீஷண சரணாகதிதான். வைஷ்ணவத்தின் ஆதார சூத்திரமே பிரபத்தி என்கிற சரணாகதி அல்லவா? விபீஷணனின் சரணாகதியை அங்கீகரித்துக் காட்டுவதன் மூலம் உயிர்கள் அனைத்துக்கும் மௌனமாகத் தனது மனத்தைப் புரியவைத்துவிடத் தான் ராமன் இலங்கைக்குப் போனான்.''அருமை, அருமை ராமானுஜரே! எப்பேர்ப்பட்ட விளக்கம்! இதைத்தானே கிருஷ்ணாவதாரத்திலும் கீதையில் அறுதியிட்டுச் சொன்னான்! பிரமாதம். ஒருநாள் உமது காலட்சேபத்தை முழுமையாகக் கேட்க வேண்டும்.'ராமானுஜர் புன்னகை செய்தார். அவர் காலட்சேபம் செய்ய அங்கு சென்றிருக்கவில்லை. அரையரிடம் இருந்த பெரும் புதையல் ஒன்றைப் பெறுவதற்காகவே போயிருந்தார். திருமாலையாண்டான் குறிப்பிட்டதும் பெரிய நம்பி குறிப்பிட்டதும் அதனைத்தான். சரம உபாய நிஷ்டை என்கிற ஆசாரிய நிஷ்டை.என்றைக்கு அது எனக்குக் கிட்டும்? எப்போது காலம் கனியும் எம்பெருமானே?மனத்துக்குள் ஏங்கியபடியே அவர் ஆசாரியருக்கு மஞ்சள் காப்பு இட்டுக்கொண்டிருந்தபோது சட்டென்று அரையரின் முகம் சுருங்குவதைக் கண்டார். பதறிப் போனார். ஏதோ சரியில்லை.'மன்னியுங்கள் சுவாமி. ஒரே ஒரு நிமிடம் பொறுங்கள்.' என்று சொல்லிவிட்டு இட்ட மஞ்சள் காப்பைத் துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் புதிதாக, சரியான பதத்தில் மஞ்சள் காப்பு தயாரித்து அவருக்குப் பூசிவிட ஆரம்பித்தார். அரையர் வியப்படைந்தார். மஞ்சள் காப்பின் சேர்மானத்தில் ஏதோ சரியில்லை. மேனியில் சிறு உறுத்தல். தன்னையறியாமல் அவர் முகம் சுளித்தது அவருக்கே தெரிந்திருக்கவில்லை. இந்த ராமானுஜர் அதை எப்படிக் கவனித்தார்?'சுவாமி, தங்களுக்குச் சேவை செய்யக் கிட்டிய வாய்ப்பு என் பூர்வஜென்மப் பலன். அதில் நான் பிழை புரியலாமா? இனி இப்படி நேராது. வாருங்கள், நீராடலாம்.'அழைத்துச் சென்று அமர வைத்து வாசனை திரவியங்கள் சேர்த்த இதமான சுடு நீரில் அவரைக் குளிப்பாட்டினார். கோயிலில் மணிக்கணக்கில் பாடி, சோர்ந்து திரும்பியிருந்த அரையருக்கு அந்த நீராடல் மிகுந்த பரவசத்தை அளித்தது. அப்படியே கண்மூடி அதை ரசித்துக் கொண்டிருந்தார்.குளித்து முடித்து அவர் வந்து அமர்ந்ததும் சுண்டக் காய்ச்சிய பசும்பாலைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.'எம்பெருமானாரே, உம்மைப் போலொரு சீடனை நான் கண்டதில்லை. இந்த குரு பக்திக்கு, இந்த செய் நேர்த்திக்கு, இந்த அக்கறைக்கு, அன்புக்கு நான் ஏதாவது பதிலுக்குத் தங்களுக்குத் தந்தே தீரவேண்டும். என்னிடமுள்ள எல்லா செல்வத்தையும் அள்ளிச் செல்லுங்கள்.' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் அரையர்.'நன்றி சுவாமி. அனைத்து செல்வங்களிலும் மேலானதும் சிறப்பானதும் பெருமைக்குரியதுமான ஆசாரிய நிஷ்டையைத் தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். தங்களைத் தவிர அதை போதிக்க வேறொருவர் இல்லை என்று திருமாலையாண்டானும் பெரிய நம்பியும் சொன்னார்கள். எனக்கு அந்தப் பேறை அளிப்பீர்களா?'பரவசத்தில் அப்படியே உடையவரை வாரி அணைத்துக் கொண்டார் அரையர்.'உம்மைப் போலொரு சிஷ்யருக்குத்தான் அதைச் சொல்லவேண்டும். குருவே பிரம்மம் என்பதைப் புரிந்துகொள்ள சீடன் சரியானவனாக இருப்பது அவசியம். தந்தேன், ஏந்திக்கொள்ளும்!' என்று சொல்லி ஆரம்பித்தார்.'உடையவரே! அவ்வப்போதைய தேர்வுகளுக்கான பாடங்களை ஓர் ஆசிரியரால் சரியாகச் சொல்லித் தந்துவிட முடியும். தேர்ச்சி பெற்று மாணவன் அடுத்த வகுப்புக்குச் சென்றால் அங்கே வேறொரு ஆசிரியர் இருப்பார். அவர் அந்த நிலைக்கான தேர்வுகளுக்கு மாணவனைத் தயார் செய்து அனுப்புவார். மீண்டும் அடுத்த வகுப்பு. இப்படியே ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு ஆசிரியர் வருவார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தையைச் சொல்லிக் கொடுப்பார். அவரது எல்லை அதுதான்.ஆனால், குருவானவர் வேறு. அவர் முழு வாழ்வுக்குமான பாதையை அமைத்துக் கொடுப்பவர். தேர்வுகள் அல்ல அவரது நோக்கம். ஒரு பயிற்சியாளனைப் போல் மரணம் வரை மனத்துக்குள் உடன் வருபவர். இறுதிவரை வழி காட்டுபவர். சென்றடைய வேண்டிய இலக்கைச் சுட்டுபவர். இறுதியில் மாணவன் சென்று சேரும் இடம் பரமாத்மாவின் இடமாக இருக்கும். அங்கே தகிக்கும் பேரொளிப் பெருவெள்ளமாயிருக்கும் எம்பெருமானிடத்திலும் அவன் தன் குருவையே காண்பான். படுத்துக் கிடக்கிற பரமனேதான் எழுந்து நடமாடும் குருவாகவும் இருக்கிறான். இதுதான் சூட்சுமம். பிரம்ம ஞானமென்பது இதனை அறிவதில் தொடங்குவதுதான்.'ராமானுஜர் கண்மூடி, கைகூப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார். எப்பேர்ப்பட்ட உண்மை! இறுதி வரை உடன் வருகிற குரு. தன் விஷயத்தில் தமது இறப்புக்குப் பிறகு உடன் வரத் தொடங்கிய ஆளவந்தாரை அவர் எண்ணிப் பார்த்தார். பெரிய நம்பி வடிவத்தில் வந்து த்வயம் அளித்தது அவர்தான். திருக்கோட்டியூருக்குத் தன்னை வரவழைத்து சரமப் பொருள் சொல்லித் தந்தவரும் அவர்தான். திருமாலையாண்டான் ரூபத்தில் திருவாய்மொழிப் பாடம் சொல்லிக் கொடுத்ததும் அவரேதான். இதோ இப்போது ஆசாரிய நிஷ்டையை விளக்குகிற ஆசாரியரும் அவரன்றி வேறு யார்? குருவே சரணம் என்று அரையரின் தாள் பணிந்தார் ராமானுஜர்.
(நாளை தொடரும்...)writerpara@gmail.com- பா.ராகவன்



ஒரே சாதி

Advertisement



Ramanujar Download






















இதைக் காட்டிலும் ஒரு பெருங்கருணை இருந்துவிட முடியுமா என்று ராமானுஜர் திகைத்துத் திகைத்துத் தணிந்து கொண்டிருந்தார். ஆளவந்தாரின் ஐந்து பெரும் சீடர்களிடம் பாடம் கேட்கக் கிடைத்த வாய்ப்பு பற்றிய திகைப்பு. யாருக்கு இதெல்லாம் வாய்க்கும்? தன்னைத் தேர்ந்தெடுத்த பெருந்திருவின் உலகளந்த சித்தமே அவரது தியானப் பொருளாயிற்று.
பெரிய பெருமானே! என்னைக் காட்டிலும் ஞானிகள் நிறைந்த மண் இது. என்னைக் காட்டிலும் பக்தி செய்வதில் சிறந்த பலர் உதித்து மலர்ந்த உலகம் இது. தவமும் ஒழுக்கமும் தவறாத பற்பல ரிஷிகள் இருந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கருணைப் பெருவெள்ளத்தில் எத்தனை பேர் க்குளித்திருப்பார்கள்? எனக்கு இது சாத்தியமானதென்றால் நான் அப்படி என்ன செய்துவிட்டேன்?இடையறாத சிந்திப்பில் அவருக்குக் கிட்டிய விடை ஒன்றே. சரணாகதி. பக்தி சிறப்பானதுதான். பரமனை அடைய எளிய வழியும் கூட. ஆனால் ஜீவ சொரூபத்துக்கு பக்தியைக் காட்டிலும் சரணாகதியே எளிது; பொருத்தமானது. ஒரு பக்தனுக்கான தகுதிகளைப் பெறுவதைக் காட்டிலும் நீயே சரணம் என்று அடிபணிந்து விடுவது சுலபம். அது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பதல்ல. என்ன ஆனாலும் தாய் நம்மை விழ விடமாட்டாள் என்று நம்பி இடுப்பில் இருந்து எம்பிக் குதிக்க முனைகிற குழந்தையின் அசாத்திய நம்பிக்கை நிகர்த்தது. அந்தச் சரணாகதி மனநிலைதான் பெறற்கரிய செல்வங்களை ராமானுஜருக்குப் பெற்றுத் தந்திருந்தது.அன்றைக்குப் பங்குனி உத்திரம். திருவரங்கன் தமது நாச்சியாருடன் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருளியிருந்தபோது, சன்னிதியில் கரம் கூப்பி நின்றிருந்தவர் உள்ளத்தில் இருந்து மழையேபோல் பொழியத் தொடங்கியது நன்றி உணர்ச்சி. தத்துவங்களில் ஆகச் சிறந்ததும் மேலானதும் எளிமையானதும் சரணாகதியே. பிடித்தாரைப் பிடித்து நிற்கும் வழி அது. சரணாகதிக்கு எம்பெருமான்கூடத் தேவையில்லை. அவன் பாதங்கள் போதும். அதன்மீது வைக்கிற முழு நம்பிக்கை, அனைத்தையும் கொண்டு சேர்க்கவல்லது என்பதே முக்கியம். உள்ளுக்குள் அலையடித்த உணர்வை அப்படியே சுலோகங்களாகப் பொழிந்து கொண்டிருந்தார் ராமானுஜர். கத்ய த்ரயம், சரணாகதி கத்யம், வைகுந்த கத்யம் என்று அடுத்தடுத்து அவர் இயற்றிய நுால்கள் அனைத்தும் அதையேதான் பேசின. பற்றுக பற்றற்றான் தாள். 'மிகச் சிறப்பு. மிக மிகச் சிறப்பு எம்பெருமானாரே! இந்தச் சரணாகதியை ஆசாரியரின் திருப்பாதங்களில் வைத்தவர் ஒருவர் உண்டு. தெரியுமா உமக்கு?' என்று கேட்டார் பெரிய நம்பி.'எம்பெருமான் மீது வைத்தாலென்ன? ஆசாரியன் மீது வைத்தாலென்ன? இரண்டும் ஒன்றுதான். அதுசரி, யார் அவர்? எனக்கு அவரைக் காண வேண்டுமே?' ஆர்வத்துடன் கேட்டார் உடையவர்.'நீங்கள் அறிந்தவர்தாம். மாறனேர் நம்பி''ஆஹா!' என்று கரம் கூப்பினார் ராமானுஜர்.'நம்மாழ்வாரையே பரம புருஷனாகக் கொண்ட மதுரகவியை நிகர்த்தவர் அவர். ஆளவந்தாருக்கு மிகவும் உவப்பான சீடர். ''கேள்விப் பட்டிருக்கிறேன் சுவாமி. ஆளவந்தார் பரமபதம் அடைந்தபோது திருவரங்கம் வந்திருந்த அன்று அவரைக் கண்டேன். ஆனால் நெருங்கிப் பழக வாய்க்கவில்லை. ஞானத்தில் நம்மாழ்வாரை நிகர்த்தவர் என்பதால்தான் அவரை மாறன் நேர் நம்பி என்று அழைக்கிறார்களாமே?' 'அப்படியும் உண்டு. மாறன் ஏரி என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதாலும் அப்படிச் சொல்லுவார்கள்.'மாறனேர் நம்பி அரிஜன குலத்தில் பிறந்தவர். ஊருக்கு வெளியே அரிஜன மக்கள் வசித்து வந்த சேரிக்கும் அப்பால் ஒரு பொட்டல் வெளியில் சிறு குடிசை அமைத்துத் தனியே வசித்துக் கொண்டிருந்தார். வயதாகிவிட்டபடியால் வெளியே நடமாட்டம் முடியாதிருந்தது. தவிரவும் நோய்மை. ஆசாரியப் பிரசாதமாகத் தமது குரு ஆளவந்தாரிடமிருந்து விரும்பிக் கேட்டுப் பெற்ற புற்றுநோய். அதன் வலியும் தீவிரமும் மாறனேர் நம்பியை அசையவிடாமல் அடித்து விட்டிருந்தது. ஆளவந்தார் திருவடிகளையே எண்ணிக்கொண்டு தம் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.'எத்தனைக் கொடுமை தெரியுமா? மாறனேர் நம்பிக்கு நிகராக இன்னொரு பாகவதனைச் சொல்லவே முடியாது. அப்படியொரு உத்தமப் பிறவி. இந்த உலகில் அவர் அறிந்ததெல்லாம் இரு ஜோடிப் பாதங்கள் மட்டுமே. ஒன்று அரங்கனுடையது. இன்னொன்று ஆளவந்தாருடையது. ஞான, கர்ம, பக்தி யோகங்களால் எட்ட முடியாத மிக உயரிய நிலையைப் பாதாரவிந்தங்களைச் சரணடைந்து எட்டிப் பிடித்தவர் அவர். அவரைப் போய் இம்மக்கள் தீண்டத்தகாதவர் என்று சொல்லுகிறார்கள். அவரைத் தீண்டும் தகுதி அற்றவர்கள் அல்லவா இவர்கள்?''உண்மைதான் சுவாமி. நமது மக்கள் சாதியெனும் அழுக்குப் போர்வையைப் போர்த்திக்கொண்டு உலவுகிறார்கள். அது போர்வைதான். கழட்டித் துார எறிந்து விடுவது எளிது. ஆனால் காலகாலமாகக் கழட்ட மனம் வராமல் போர்வையையே தோலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி எத்தனை மாறனேர் நம்பிகளை இவ்வுலகம் இன்னும் ஒதுக்கி வைத்திருக்கிறதோ தெரியவில்லை. அத்தனையும் மகா பாவம். திருமாலின் அடியார் அனைவரும் ஒரே சாதியல்லவா? அல்லது சாதியற்றவர்கள் அல்லவா? பேதம், பெருவிஷம்.''சரியாகச் சொன்னீர் உடையவரே. இறைப்பணி என்பது முதலில் இவர்களைத் திருத்துவதுதான்.''எம்பெருமான் அருளுடன் அதையும் செய்வோம் சுவாமி. அதுசரி, எனக்கு மாறனேர் நம்பியைச் சந்திக்க வேண்டுமே? என்னை அவரிடத்துக்கு அழைத்துச் செல்கிறீர்களா?' பெரிய நம்பி ஒரு கணம் தயங்கினார். ஆகட்டும் அதற்கென்ன என்று மட்டும் சொல்லிவிட்டு விடை பெற்றுப் போனார்.அழைத்துச் செல்வதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லைதான். ஆனால் ஜீயரை ஓர் அரிசன குடிசைக்கு அழைத்துச் சென்றால் ஊர் சும்மா இருக்குமா என்கிற கவலை. அவரேகூட யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத்தான் நம்பியின் வீட்டுக்குப் போய்வந்து கொண்டிருந்தார். ஊரடங்கிய நேரத்தில் மாறனேர் நம்பிக்கு உணவு சமைத்து எடுத்துக்கொண்டு, மருந்து வகை, மாற்றுத் துணி உள்ளிட்ட தேவைகளுடன் புறப்படுவார். யாருக்கும் தெரியாமல் அவரது குடிசையை அடைந்து, கதவை மூடிவிடுவார்.பிறகு மாறனேர் நம்பியை எழுப்பி அழைத்துச் சென்று தானே குளிப்பாட்டுவார். மென்மையாக ஒற்றிவிட்டு, புண்பட்ட இடங்களில் மருந்துகளைத் தடவுவார். பிறகு அமரவைத்துத் தன் கையால் ஊட்டி விடுவார். சாப்பிட்டு ஆனதும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தன் வீடு திரும்பி விடுவார்.இதை எப்படி ராமானுஜரிடம் சொல்லுவது? எப்படி அவரை நம்பியின் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்வது? பொல்லாக் குடியினம் வசிக்கிற பூமி. ஆசாரத்தின் பெயரால் அறம் அழிக்கிற கூட்டத்துக்கு ஆசாரிய ஸ்தானத்தில் இருப்பவரின் அருமை புரியாதே? அவருக்கு ஒரே கவலையாகிவிட்டது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com- பா.ராகவன் -




இருட்டில் ஒரு வெளிச்சம்

Advertisement




Ramanujar Download






















கண்ணை மூடித் திறப்பதற்குள் காலம் உருண்டு விடுகிறது. ராமானுஜருக்கு மாறனேர் நம்பியை இன்னும் சந்திக்காதிருப்பதன் ஏக்கம் வாட்டியெடுத்தது. பெரிய நம்பி அப்படிப்பட்டவர் அல்லர். ஒன்று சொன்னால் உடனே செய்பவர். அதுவும் தன் விஷயத்தில் தாமதமோ அலட்சியமோ அவரால் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனாலும், இதோ அதோ என்கிறாரே தவிர ஏன் இன்னும் தன்னை அழைத்துச் செல்லவில்லை?இடையில் பலமுறை இருவரும் சந்தித்துப் பேசியபோதெல்லாம் ராமானுஜர் நினைவுபடுத்தத் தவறவில்லை.'சுவாமி, அடியேனுக்குப் பரம பாகவதரான மாறனேர் நம்பியை தரிசிக்கும் பாக்கியம் இன்னும் கிடைத்தபாடில்லை. நீங்கள் ஏற்பாடு செய்வதாகச் சொன்னீர்கள்.''அட, ஆமாம். மறந்தே விட்டேன். விரைவில் ஒருநாள் சென்று வருவோம் உடையவரே.'ஆனால், காலம் ஒன்றுதான் விரைவில் நகர்ந்து கொண்டிருந்ததே தவிர காரியம் கூடியபாடில்லை. காரணம் என்னவாக இருக்கும்? ராமானுஜருக்குப் புரியவில்லை. ஆனால், ஒவ்வொரு சந்திப்பின்போதும் பெரிய நம்பி மாறனேர் நம்பியைப் பற்றிப் பேசாதிருந்ததில்லை. ஆக, அடிக்கடி போகிறார். அநேகமாக தினமும். ஒருநாள் கூடவா நம் நினைவு வராது போகும்?இல்லை. இதற்கு வேறு ஏதோ காரணம். என்னவாக இருந்தாலும் அதைத் தெரிந்து கொண்டு தீர்க்காமல் விடுவதில்லை என்று ராமானுஜர் முடிவு செய்தார். அன்றைக்குப் பெரிய நம்பியைப் பின் தொடர்வதெனத் தீர்மானித்தார்.இருட்டி ஒரு நாழிகை கழிந்த பிறகு பெரிய நம்பி தன் வீட்டில் இருந்து புறப்பட்டார். ஒரு கையில் துாக்குச் சட்டி. அதில் உணவு. மறு கையில் மருந்துப் பெட்டி. வீட்டை விட்டு வெளியே வந்த பெரிய நம்பி, சாலையின் இருபுறமும் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். நடமாட்டம் இல்லை. விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார்.கண்ணெட்டாத தொலைவில் ஒதுங்கி நின்று இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ராமானுஜர், சத் தமின்றித் தாமும் பெரிய நம்பியைப் பின் தொடர ஆரம்பித்தார். விசித்திரம்தான். இப்பேர்ப்பட்ட மகான், ஞானாசிரியர் யாருக்கு பயந்து, எதற்காக இப்படி இருட்டிய நேரத்தில் பதுங்கிப் பதுங்கி வெளியே போகிறார்?பெரிய நம்பி கிளம்பிய கணத்தில் இருந்து நிற்கவேயில்லை. மூச்சிறைக்க நடந்து கொண்டே இருந்தார். ஊருக்கு வெளியே சேரிப் பகுதியை அடைந்தபோது ஒரு கணம் நின்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டார். அங்கும் நடமாட்டமில்லை. அனைத்து வீடுகளிலும் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. மேலும் காலை எட்டிப் போட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார்.ராமானுஜரும் விடாமல் பின் தொடர்ந்தார். இன்றைக்கு ஏதோ நடக்கப் போகிறது. மறக்க முடியாத பேரனுபவம் ஒன்று வாய்க்கத்தான் போகிறது என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. ஊரார் உறங்கினும் தானுறங்கா உத்தமராக இந்தப் பெரிய நம்பி என்னவோ செய்து கொண்டிருக்கிறார். சர்வ நிச்சயமாக அது ஊருக்கு நல்லதாகத்தான் இருக்கும். ஆனால், அதை இப்படி ஒளித்துச் செய்ய என்ன அவசியம்? புரியவில்லை.குடிசை ஒன்றை அடைந்ததும் பெரிய நம்பி வேகம் தணிந்தார். சத்தமின்றி நெருங்கி, கதவைத் திறந்தார்.உள்ளே மாறனேர் நம்பி படுத்திருந்தார். ஆஹா என்று சிலிர்த்துப் போனது ராமானுஜருக்கு.'சுவாமி, மெல்ல எழுந்திருங்கள். அடியேன் பெரிய நம்பி வந்திருக்கிறேன்.' குரல் தெளிவாகக் கேட்டது. ராமானுஜர் வியப்பும் திகைப்புமாக அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.மாறனேர் நம்பியால் எழுந்து உட்காரக் கூட முடியவில்லை. தள்ளாமையும் நோய்மையும் அவரை அடித்துச் சாய்த்திருந்தன. பெரிய நம்பியே அவரைக் கைத்தாங்கலாக எழுப்பி உட்கார வைத்தார். பிறகு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து வைத்து, ஒரு மெல்லிய துணியை அதில் நனைத்துப் பிழிந்து அவரது மேனி முழுதும் துடைத்து விட்டார். எடுத்து வந்திருந்த மருந்துப் பெட்டியைத் திறந்து களிம்பெடுத்து அவரது காயங்களில் பூசினார். வெளியே வந்து கைகளைக் கழுவிக்கொண்டு மீண்டும் உள்ளே சென்று மாறனேர் நம்பிக்கு உணவளிக்க ஆரம்பித்தார்.'உடையவருக்குத் தங்களை தரிசிக்க வேண்டுமாம். விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறார் சுவாமி. ஆனால் எனக்கு இந்தப் பொல்லா உலகை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.'மாறனேர் நம்பி புன்னகை செய்தார்.'எம்பெருமான் உலகைப் படைத்தான். எம்பெருமானாரோ வைணவ உலகில் எத்தனை எத்தனையோ மக்களைக் கொண்டு சேர்த்துக்கொண்டே இருக்கிறார். அவரது பிரசங்கம், அவரது சுபாவம், அவரது சிநேகபாவம் இதெல்லாம் ஆயிரமாயிரம் பேரை எங்கெங்கிருந்தோ கொண்டு வந்து இங்கு தள்ளுகிறது. சுத்த ஆத்மா அவர். அவரது பணிக்கு எந்த ஓர் இடையூறும் வந்துவிடக் கூடாதே என்றுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.''புரிகிறது.''ஒவ்வொரு முறை என்னைச் சந்திக்கிற போதும் தங்களைப் பற்றி விசாரிக்கிறார். இன்னும் தங்களைக் காண முடியாத ஏக்கத்தைத் தெரியப்படுத்துகிறார். அவருக்கு நான் எப்படிப் புரியவைப்பேன், என்ன சொல்லித் தெரியப்படுத்துவேன் என்றே புரியவில்லை சுவாமி.''புரியவைப்பதும் தெளிய வைப்பதும் உடையவருக்கு அவசியமில்லை பெரிய நம்பிகளே. நமது ஜனங்களுக்குத்தான் இதெல்லாம் அவசியம். அந்தணன் என்றும் பஞ்சமன் என்றும் இனம் பிரித்து வைத்தே பழகி விட்டார்கள். நமது ஆசாரியர் ஆளவந்தார் என்னைக் கீழ்க்குலத்தவன் என்று நினைத்திருந்தால் என்னை அண்ட விட்டிருப்பாரா? எத்தனை ஞானத்தை நம் தலைகளில் இறக்கி வைத்தார்! மழை கொடுக்குமோ அதெல்லாம்? நிலம் தருமோ அந்தளவு? புவியளவு பரந்த மனம் படைத்த மகானிடம் நாம் பாடம் கற்றிருக்கிறோம். ஜனங்களுக்கு அப்படிப்பட்ட ஆசிரியர்கள் கிடைக்காது போய்விட்டார்கள்.''உடையவர் அப்படியொரு ஆசாரியர் தாம் சுவாமி. நம்மாலும் நமது தலைமுறையாலும் மாற்ற முடியாத சமூகத்தை உடையவர் மாற்றுவார்.அற்புதங்கள் அவர்மூலம் நிகழ வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், அவர் ஒரு சக்தி. அவர் ஒரு விசை. படைக்கப்பட்டபோதே செலுத்தப்பட்ட வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறவர்.'சந்தோஷம். அவர் செயல்படட்டும். என்னைச் சந்திப்பதில் என்ன இருக்கிறது? என் ஆசீர்வாதம் என்றும் அவருக்கு உண்டு என்பதை மட்டும் தெரியப்படுத்தி விடுங்கள்.'பேசியபடி அவர் உண்டு முடித்தார். பெரிய நம்பி அவருக்கு வாய் துடைத்துவிட்டு, பருக நீர் கொடுத்தார். சிறிது ஆசுவாசமடைந்த பிறகு அவரைப் படுக்க வைத்துவிட்டு, 'நாளை வருகிறேன் சுவாமி' என்று விடைபெற்றுக் கொண்டு கிளம்புவதை ராமானுஜர் பார்த்தார்.சட்டென்று அவருக்கு முன்னதாகக் கிளம்பி விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்



தீயின் நாக்கு

Advertisement




Ramanujar Download






















மாறனேர் நம்பியின் குடிசையில் இருந்து வெளியே வந்த பெரிய நம்பி, தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். பொதுவாக அந்நேரத்தில் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது. அது அவர் மட்டும் உலவும் நேரமாகவே பலகாலமாக இருந்து வந்தது. ஆனால், இன்று தனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் யாரோ போய்க் கொண்டிருப்பது போலத் தெரிகிறதே? யாராக இருக்கும்?இருட்டில் சரியாகத் தெரிய வில்லை. பெரிய நம்பி சற்று நடைவேகம் கூட்டி, முன்னால் சென்றவரை எட்டிவிடப் பார்த்தார். அந்த உருவமோ நெருங்க முடியாத வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. குரல் கொடுத்துப் பார்க்கலாமா என்று யோசித்தவர், ஒரு கணம் தயங்கினார். மரங்கள் அடர்ந்த அந்தப் பாதையில் சிறு குரல் கூடப் பறவைகளின் உறக்கத்தைக் கலைக்கும். அவற்றுக்குப் பதற்றம் அளிக்கும். எனவே வேண்டாம் என்று நினைத்தார். ஆனால், எப்படியாவது அந்த நபர் யாரென்று அறிந்துவிட அவர் மனம் விரும்பியது. தன் வயதை மறந்த வேகத்தில் நடக்க ஆரம்பித்தார்.ஒரு திருப்பத்தில் மரங்களின் அடர்த்தி சற்றுக் குறைந்து, நிலவின் கீற்றுகள் மண்ணைத் தொட ஆரம்பித்திருந்தன. அந்த உருவம் அவ்விடத்தைக் கடந்தபோது பெரிய நம்பி பார்த்து விட்டார். அட எம்பெருமானே! நிலவின் வெளிச்சத்தில் நான் காண்பது சூரியனையே அல்லவா! இவர் எப்போது இங்கே வந்தார்? என்னைப் பின் தொடர்ந்திருப்பாரா? நான் மாறனேர் நம்பியின் இல்லத்துக்கு வந்து சென்றதை கவனித்திருப்பாரா?பெரிய நம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த ஒரு காரணம் இல்லாவிட்டால் ராமானுஜர் இங்கு இந்நேரத்தில் வரவேண்டிய அவசியமில்லை என்று மட்டும் தோன்றியது. ஆக, திட்டமிட்டுத்தான் தன்னைத் தொடர்ந்து வந்திருக்கிறார். அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி நாளைக் கடத்தியது பொறுக்காமல் இன்று தானே கிளம்பியிருக்கிறார்.சரி போ, கேட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு சும்மா இருந்துவிட்டார்.அன்று கிளம்பும்போது மாறனேர் நம்பி சொன்னது திரும்பத் திரும்ப அவர் நினைவை வருடிக் கொண்டே இருந்தது.'பெரிய நம்பிகளே, நான் வெகுநாள் இனி உயிர் வாழ மாட்டேன். வியாதி என்னை முக்கால்வாசி தின்று முடித்துவிட்டது. மீதியை நானே வழித்து அதற்குப் போட்டுவிடப் போகிறேன். ஆனால் ஒன்று. நான் இறந்தால் எனக்கான இறுதிச் சடங்குகளை ஓர் அந்தணன்தான் செய்ய வேண்டும்.''புரிகிறது சுவாமி. மாசுபட்ட சமூகத்துக்கு சாதி அமைப்பின் அபத்தங்களைப் புரியவைத்துவிட்டுப் போய்ச்சேர நினைக்கிறீர்கள். எம்பெருமான் சித்தம் அதுவானால், நிச்சயம் நடக்கும்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தார். ராமானுஜர் நின்று கவனித்திருப்பாரா? இது அவர் காதில் விழுந்திருக்குமா? குழப்பமாக இருந்தது.இரண்டொரு தினங்களில் அது நடந்துவிட்டது.அன்றைக்கு இரவு வழக்கம்போல் பெரிய நம்பி மாறனேர் நம்பிக்கு உணவு எடுத்துச் சென்றபோது அவர் எழுந்திருக்கவில்லை. அமர்ந்து உண்ணவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவர், எழுந்து விண்ணேகிப் போயிருந்தார். நிறைவாழ்வுதான். வாழ்ந்த காலம் முழுவதும் குரு பக்தியிலும் அரங்கன் நினைவிலுமே கழித்த மகான். அவர் ஒரு மகான் என்பதே அரங்க நகரில் பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதைப் பெரிய நம்பி எண்ணிப் பார்த்தார். 'மாறனேர் நம்பியா? அவர் அரிஜன குலத்தவர் அல்லவா?' என்பார்கள். நலம் தரும் சொல்லைக் கண்டுகொண்ட மனிதரின் குலம் மட்டும்தான் உலகுக்குத் தெரியும்.நல்லது. ஊரைத் திருத்துவது பிறகு. முதலில் பெரியவரின் இறுதிச் சடங்குகளை நடத்தியாக வேண்டும்.'நம்பிகளே, நான் இறந்தால் என் இறுதிச் சடங்குகளை ஓர் அந்தணன்தான் செய்ய வேண்டும்.' மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்த குரலை ஒரு கணம் தியானத்தில் நிறுத்தினார். இது ஒரு தருணம். சாதி அமைப்பின் கோரப் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிற சமூகம் அதிர்ந்து அலறவிருக்கிற தருணம். என்ன வேண்டுமானாலும் நிகழலாம். எத்தனை பெரிய கலவரமும் சாத்தியமே. ஆனால் என்ன நடந்தாலும் மாறனேர் நம்பி இறுதியாகச் சொன்னது மட்டும் நடக்காமல் போய்விடக் கூடாது.பெரிய நம்பி ஒரு முடிவுக்கு வந்தார். இன்னொருத்தரை எதற்குத் தேட வேண்டும்? இதோ, நான் இருக்கிறேன். என் தந்தைக்குச் செய்ததைக் காட்டிலும் மாறனேர் நம்பிக்குச் செய்வதில் உள்ள புனிதத்தன்மை புரிந்தவன். இதைக் காட்டிலும் பெரும் புண்ணியம் வேறில்லை. இதைக் காட்டிலும் மகத்தான திருப்பணி இன்னொன்று இருக்க முடியாது. ஆளவந்தாரின் சீடர்களுக்குள் பிரிவினை கிடையாது. பேதங்கள் கிடையாது. சாதி உள்ளிட்ட எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது. அத்தனை பேரும் எம்பெருமானின் பாததுாளிகளாகப் புரண்டெழுந்தவர்கள். ஒரு வைணவனுக்கு அடையாளம் அதுதான். வாழ்வின் அர்த்தமும் அதுவேதான்.அவர் யாரையும் எதிர்பார்க்கவில்லை. யாருக்கும் சொல்லவும் இல்லை. தனது தள்ளாமையை நகர்த்தி வைத்து விட்டுக் காரியங்களில் வேகமாக இறங்க ஆரம்பித்தார். பிரம்ம மேத சம்ஸ்காரம். இறந்த அந்தணருக்கு, இன்னொரு அந்தணர் மட்டுமே செய்கிற வழக்கமுள்ள இறுதிச் சடங்கு. இதோ இதை நீங்கள் தாழ்ந்தவர் என ஒதுக்கி வைத்த மாறனேர் நம்பிக்கு நான் செய்கிறேன். ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.பரபரவென இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. முதலில் அந்தப் பிராந்தியத்தில் வசித்து வந்த அரிஜன மக்கள் அதைக் கண்டார்கள். வியப்பில் வாய் பிளந்து சற்று நேரம் நின்றுவிட்டு ஓடோடிச் சென்று காண்போரிடமெல்லாம் சொல்லத் தொடங்கினார்கள். 'சேதி தெரியுமா? மாறனேர் நம்பிக்கு பெரிய நம்பி சடங்கு செய்கிறார்!' 'உண்மையாகவா? இதென்ன அக்கிரமம்! பெரிய நம்பி பிராமணர் அல்லவா? ஒரு கீழ்ச்சாதிக் கிழவருக்கு இவரெப்படி இறுதிச் சடங்கு செய்ய முடியும்?' 'நடக்கிறதப்பா. போய்ப் பார் அங்கே!' தீயின் நாவேபோல் திருவரங்க மெங்கும் பரவித் தீண்டியது அந்தச் செய்தி. கொதித்துப் போனார்கள் அந்தணர்கள்.'ஓய் பெரிய நம்பி! இப்படி ஒரு கேடுகெட்ட காரியத்தை நீர் செய்வீர் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இனி அக்ரஹாரத்துப் பக்கம் தப்பித் தவறியும் வந்துவிடாதீர்!''அந்தணருக்கு உரியதைப் பஞ்சமருக்குச் செய்வதுதான் உமது ஆசாரமோ? இது உமக்கல்ல; உமது ஆசாரியர் ஆளவந்தாருக்கே அவமானம்.'என்னென்னவோ பேச்சுகள். எத்தனை எத்தனையோ சாபங்கள். பெரிய நம்பி எதற்கும் பதிலே சொல்லவில்லை.சிறு குறையும் வைக்காமல் காரியத்தை முடிப்பதிலேயே அவரது கவனம் இருந்தது. அது முடிந்த நேரம் விவகாரம் அவர் எதிர்பார்த்தபடியே முற்றி வெடித்திருந்தது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -
பேய் பிடித்த நகரம்


Advertisement



Ramanujar Download





















குமுறிக் குமுறிக் கொட்டிக் கொண்டிருந்தது கூட்டம். பதற்றமும் கோபமும் அறிவை மறைக்க, பேசத் தகாத வசை மொழியில் பெரிய நம்பியை மென்று துப்பிக் கொண்டிருந்தார்கள்.

'பெரிய நம்பிக்கு புத்தி கெட்டுவிட்டது ஓய். ஆன வயதுக்கு அக்கடாவென்று வீட்டில் கிடக்காமல் இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்?' 'ஆளவந்தாரிடம் படித்தால் அறிவு வேண்டுமானால் விருத்தியாகியிருக்குமே தவிர குலம் உயர்ந்து விடுமா என்ன?''கிழவருக்கு ஆசையைப் பார்த்தீரா? அந்தணர் கையால் இறுதிக் காரியம் செய்யவேண்டும் என்பதைத் தமது இறுதி விருப்பமாகச் சொன்னாராம்.''அது வெறும் திமிர் சுவாமி. நம்மை அவமானப்படுத்து வதற்காகத்தான் அவர் அப்படிக் கேட்டிருக்கிறார்.''அதுசரி, அவர்தான் கேட்டாரென்றால் இவருக்கு எங்கே போயிற்று அறிவு?' 'இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டால் நாளை அக்ரஹாரத்தில் அரைக்காணி இடம் கிடைக்குமா என்று கேட்டு வருவார்கள்.'
'அதெப்படி விடுவது? பெரிய நம்பி செய்தது பெரிய தவறு. இதற்கான பலனை அவர் அனுபவித்தே தீரவேண்டும்.''சரியாகச் சொன்னீர். அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்வதுதான் சரி.''அவர் வீட்டு வாசல்முன் முள்ளைக் கொண்டு கொட்டி மூடுங்கள். யார் வீட்டு விசேஷத்துக்கும் அவருக்கு இனி அழைப்பு கூடாது.
அவர் வீட்டு நல்லது கெட்டதுக்கும் நமக்கும் இனி சம்பந்தமில்லை.'திருவரங்கத்து அந்தணர்கள் பெரிய நம்பியை விலக்கி வைப்பதாக அறிவித்தார்கள். நம்பி ஒன்றும் சொல்லவில்லை. அப்படியா என்று கேட்டுக் கொண்டார். இது அவர்களை மேலும் கோபப்படுத்தியது.'இவரை நாம் ஒதுக்குவது போதாது. உடையவர் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் புத்தி வரும்.'யாரோ சொன்னார்கள். உடனே ஒரு கூட்டம் ராமானுஜரைச் சந்திக்கக் கிளம்பியது.சேரன் மடத்து வாசலில் ராமானுஜரை அழைத்து நடந்ததை விவரித்தார்கள். காலமான மாறனேர் நம்பிக்குப் பெரிய நம்பி பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்திருக்கிறார். இறந்த பிராமணருக்கு உயிருடன் இருக்கிற இன்னொரு பிராமணர் மட்டுமே செய்ய வேண்டிய காரியம். இது எப்படித் தகும் உடையவரே? உமது ஆசாரியர் செய்ததால் மட்டும் சரியாகி விடுமோ?ராமானுஜர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். சிறிது யோசித்துவிட்டு, 'சரி, பெரிய நம்பியை விசாரிப்போம், பொறுங்கள்' என்றார்.நம்பி வந்து சேர்ந்தபோது கூட்டம் அதிகரித்திருந்தது. என்ன சொல்லப் போகிறார் பெரிய நம்பி? என்ன சொல்லப் போகிறார் ராமானுஜர்? இப்படியொரு சம்பவம் திருவரங்கத்துக்கு முற்றிலும் புதிது. யாரும் செய்யாதது. எண்ணிக்கூடப் பார்த்திராதது. வெறும் துணிச்சலோ, அலட்சிய உணர்வோ இதனைச் செய்ய வைத்திருக்காது. வேறென்ன காரணம் இருக்கும்?அவர்கள் காத்திருந்தார்கள்.ராமானுஜர் பெரிய நம்பியைப் பார்த்துக் கேட்டார், 'சுவாமி, இவர்கள் சொல்வது சரியா? மாறனேர் நம்பிக்கு நீங்கள் பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்தீர்களா?' 'ஆம், செய்தேன். அதிலென்ன தவறு?' 'எப்படிப் பேசுகிறார் பார்த்தீரா சுவாமி? இவரை ஜாதிப் பிரஷ்டம் செய்தது சரிதான்.' என்று ஒரு குரல் உயர, ஆமாம் ஆமாம் என்று கூட்டம் அலறியது. 'கொஞ்சம் பொறுங்கள் ஐயா. நீங்கள் சொல்லுங்கள் சுவாமி' என்றார் ராமானுஜர்.'மாறனேர் நம்பி ஒரு சிறந்த பாகவதர். ஆளவந்தாரின் அத்யந்த சீடர். அவரது இறுதி ஆசையை நிறைவேற்றுவது ஒரு திருப்பணியே அல்லாமல் வேறல்ல.' 'அது சரி, ஆனால்…' 'ஜடாயு இறந்தபோது ராமபி ரான் அந்தப் பறவை அரசனுக்கு பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்த தாக வால்மீகி மகரிஷி எழுதுகிறார். ராமனைவிட நான் பெரியவனா அல்லது மாறனேர் நம்பிதான் ஜடாயுவைவிடத் தாழ்ந்தவரா?'திடுக்கிட்டுப் போனது கூட்டம். ராமானுஜர் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். 'பாரதம் படித்திருக்கிறீர்களா? விதுரர் ஒரு பணிப்பெண்ணின் மகன். அவர் இறந்தபோது மாமன்னன் தருமபுத்திரன் அவருக்கு இறுதிச் சடங்கு செய்தான். நான் என்ன தருமபுத்திரனைவிடப் பெரியவனா அல்லது மாறனேர் நம்பிதான் விதுரரைக் காட்டிலும் தாழ்ந்தவரா?' 'நிச்சயம் இல்லை சுவாமி.''பிறகெதற்கு விசாரணை? ஆழ்வார்களைப் படித்தவர்கள் இப்படி அபத்தமாக உளறிக் கொட்ட மாட்டார்கள். குலமும் செல்வமும் நலமும் மற்ற அனைத்தும் தருவது நாராயணனின் திருநாமம் மட்டுமே. வாழ்வின் இறுதிக் கணம் வரை அதை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்த ஒருவர் இறந்திருக்கிறார் என்றால் அவருக்குச் செய்வதா பிழைபடும்? அது பிழை என்றால் நான் பிழை புரிந்தவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ஜாதிப் பிரஷ்டம்தான் இதற்குத் தண்டனை என்றால் எனக்கு என் ஜாதியே வேண்டாம்.'பெரிய நம்பி பேசியதைக் கேட்ட கூட்டத்தின் கொதிப்பு அதிகரித்தது. 'உடையவரே, எப்படிப் பேசுகிறார் கேட்டீரா? இவரை என்ன செய்யலாம் என்று நீங்கள் இப்போது சொல்லுங்கள்!''விழுந்து சேவித்து மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போங்கள். அது ஒன்றுதான் செய்யக்கூடியது' என்று அமைதியாகச் சொன்னார் ராமானுஜர்.ஆடிப் போனார்கள் அவர்கள்.'நீங்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்கள் என எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தணன் என்பவன் அறவோன் என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னால்
ஒருவர் சொல்லி வைத்திருக்கிறார்.
அறம் வளர்க்கிற விதம் இதுவா? மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம். மாறனேர் நம்பி அந்த விதத்தில் சந்தேகமின்றி அந்தணர். அதைப் புரிந்துகொண்டு அவருக்கு இறுதிக் காரியம் செய்துவைத்த இந்தப் பெரிய நம்பி அந்தணருக்கும் மேலே. அரங்கனுக்குப் பக்கத்தில் நிற்கிறவர். என்ன தெரியும் உங்களுக்கு?தீண்டாதவர் என்றும் திருக்குலத்தார் என்றும் நீங்கள் ஒதுக்கி வைத்த மாறனேர் நம்பி இல்லாவிட்டால் ஆளவந்தாரின் ராஜ பிளவை நோய் அவரை இன்னும் முன்னதாகவே எடுத்து விழுங்கியிருக்கும். அப்பேர்ப்பட்ட சிறந்த ஆத்மாவின்
இறுதி ஆசையை இவராவது நிறைவேற்றாது இருந்திருந்தால் இந்த அரங்கமாநகரையே இந்நேரம் நதி கொண்டு போயிருக்கும்.'உணர்ச்சி மேலிட்டு அவர் பொழிந்து கொண்டிருந்ததைக் கேட்ட கூட்டம் வாயடைத்து நின்றது. என்ன பேசுவதென்று யாருக்கும் புரியவில்லை.
'மாறனேர் நம்பியின் உடல் புண்களைக் கழுவித் துடைத்து இவர் மருந்திடுவதை நான் கண்டேன். உங்கள் உள்ளத்தின் புண்ணெல்லாம் சீழ் பிடித்து ஒழுகுவதை உங்களால் உணர முடியவில்லையா? சுத்த வைணவன் என்றால் சாதி பார்க்க மாட்டான். மனித குலம் முழுதும் ஒரே சாதி என எண்ண முடிந்தவனால்தான் பரமாத்மாவின் பாதங்களை எட்டிப் பிடிக்க முடியும். இனி நீங்கள் யார் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நம்பிகளே! நீங்கள் வீட்டுக்குப் போங்கள்' என்று சொல்லிவிட்டு ராமானுஜர் போய்விட்டார்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

மனம் வெளுத்தல்

Advertisement




Ramanujar Download





















வண்டவில்லியும் செண்டவில்லியும் மூச்சிரைக்க மடத்துக்கு ஓடி வந்தார்கள். 'எங்கே உடையவர்? நாங்கள் உடனே அவரைப் பார்க்க வேண்டும்!'
'பொறுங்கள் பிள்ளைகளே. கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ளுங்கள். எதற்கு இந்த அவசரம்?' என்று கேட்டார் கூரத்தாழ்வான்.'ஐயோ சுவாமி உங்களுக்கு விவரம் தெரியாது. பெரிய நம்பி வீட்டு வாசலில் இன்றைக்கு நடந்த களேபரம் ஊரையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அவரை ஜாதி விலக்கம் செய்த அந்தணர்கள் அத்தனை பேரும் இப்போது அவர் காலடியில் விழுந்து கதறிக் கொண்டிருக்கிறார்கள். உடையவருக்கு இதைச் சொல்லிவிட்டுத்தான் மறு காரியம். கொஞ்சம் ஒதுங்குங்கள்' என்று உள்ளே போகப் பார்த்தவர்கள், சட்டென்று நின்றார்கள். முதலியாண்டானும் ராமானுஜரும் அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.கூரத்தாழ்வான் புன்னகை செய்தார். 'நல்லது பிள்ளைகளே. அதோ அவர் வந்துவிட்டார். போய்ச் சொல்லுங்கள்.''என்னவாம்?' என்றார் ராமானுஜர்.'சுவாமி, இன்றைக்கு நம்பெருமாள் ரதோத்சவம் அல்லவா? ரதம் வீதிவலம் வந்துகொண்டிருந்தபோது ஒரு பெரிய சம்பவம் நடந்துவிட்டது.''அப்படியா? அசம்பாவிதம் ஒன்றும் இல்லையே?''அசம்பாவிதம் இல்லை சுவாமி. இது அற்புதம். பெரிய நம்பியின் மகள் அத்துழாய் ஒரு சத்தம் போட்டாள் பாருங்கள், நம்பெருமாளின் தேர் நகராமல் நின்றேவிட்டது.'திகைத்துவிட்டார் ராமானுஜர். முதலியாண்டான், கூரத்தாழ்வான் தொடங்கி மடத்தில் இருந்த அத்தனை சீடர்களும் அங்கே கூடிவிட நடந்ததை வில்லிதாசரின் மருமகன்கள் இருவரும் மாற்றி மாற்றி விவரிக்க ஆரம்பித்தார்கள்.'பெரிய நம்பியை அந்தணர்கள் ஜாதி விலக்கம் செய்து வைத்ததில் அத்துழாய்க்குக் கடும் கோபம் சுவாமி. ''நியாயமானதுதானே?''அவர்கள் நியாயம் கேட்க நேற்று உம்மிடம் வந்தார்கள். அத்துழாய் இன்று அரங்கனையே வழியில் நிறுத்தி நியாயம் கேட்டுவிட்டாள்.''அவள் செய்யக்கூடியவள்தான்.
''வியப்பு அதுவல்ல சுவாமி. அவள் தேரை நிறுத்தி, குமுறிக் கொட்டிய கணத்தில் இருந்து, அந்தணர்கள் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டதுவரை தேர் நகரவேயில்லை.''நகர்த்த முடியவில்லை சுவாமி! பெருமான் சித்தமே பெரிய நம்பியின் பக்கம்தான் என்பது அவர்களுக்குப் புரிந்த பிறகுதான் தேர் அசைந்து கொடுத்தது.'ராமானுஜர் கண்மூடிக் கரம் கூப்பி சில வினாடிகள் அப்படியே நின்றார். இது ஒரு தருணம். திருவரங்கத்து அந்தணர்கள் சிந்தைத் துலக்கம் பெறுவதற்கான தருணம். ஜாதியின் கோரப் பிடியில் சிக்கி எத்தனைக் களங்கப்பட்டு விட்டது இச்சமூகம்! தனி மனிதர்களா இதைச் சரி செய்ய முடியும்? அரங்கனே இறங்கி வந்தால்தான் முடியும்.'சுவாமி, திருக்கோயில் கைங்கர்யத்தில் அனைத்து சாதிக்காரர்களையும் நீங்கள் ஈடுபடுத்தியிருக்கிறீர்கள். அதிலேயே திருவரங்கத்து அந்தணர்களுக்குக் கடும் புகைச்சல் கண்டிருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள்' என்றார் முதலியாண்டான்.'புகைந்து என்ன ஆகிவிடும்? பரமன் திருமுன் படைப்புகள் அனைத்தும் சமம். பக்தி ஒன்றுதான் அளவுகோல். அந்தணர் என்பதால் அரங்கன் அரவணைத்து விடுவானா அல்லது பஞ்சமன் என்பதால் பத்தடி தள்ளித்தான் நிற்கச் சொல்லுவானா? இவர்களெல்லாம் யோசிக்க மறுக்கிறார்கள் தாசரதி.''சுவாமி, சில நாள் முன்பு சன்னிதிக்கு நீங்கள் ஒரு சலவைத் தொழிலாளியை அழைத்துச் சென்றது பற்றிச் சொன்னீர்களே...' கூரத்தாழ்வான் தயங்கித் தயங்கி மெல்ல ஆரம்பிக்க, சுற்றியிருந்தவர்கள் ஆர்வமாகிப் போனார்கள்.'அது தெரியாதே எங்களுக்கு? என்ன நடந்தது சுவாமி?'நடந்தது ஓர் அற்புதம்தான். ஆனால் ராமானுஜர் அதைப் பற்றி யாரிடமும் சொல்லியிருக்கவில்லை.
அன்றைக்கு அவர் கோயிலில் இருந்து வெளியே வந்தபோது எதிரே கூரத்தாழ்வான் வந்துகொண்டிருந்ததால் அவரிடம் மட்டும் நடந்ததைச் சொல்லியிருந்தார்.'தயவுசெய்து சொல்லுங்கள் சுவாமி. யார் அந்த சலவைத் தொழிலாளி? என்ன நடந்தது அவருக்கு?''இங்கே காலட்சேபம் கேட்க தினமும் வருகிறவர்தாம். பாகவதம் சொல்லிக் கொண்டிருந்தபோது கிருஷ்ணர் ஒரு சலவைத் தொழிலாளியை அடித்துவிட்டார் என்று சொன்னேன் அல்லவா?''ஆம் சுவாமி. மதுராவில் கம்சனை வதம் செய்யப் போய்க் கொண்டிருந்தபோது எதிர்ப்பட்ட சலவைத் தொழிலாளி. நன்றாக நினைவிருக்கிறது. மன்னரின் உடைகளைத் தாம் அணிந்துகொள்ள விரும்பி, கிருஷ்ணர் கேட்கப் போக, அவரை அவமானப்படுத்துகிற விதமாகப் பேசிவிட்டதால்…''அதேதான். இந்த சலவைத் தொழிலாளிக்கு அந்த சலவைத் தொழிலாளியைப் பற்றியே நினைப்பு போலிருக்கிறது. என்னிடம் வந்து பெருமாளுக்கு தினமும் சாற்றுகிற வஸ்திரங்களை நான் வெளுத்துத் தரலாமா என்று கேட்டார். அதற்கென்ன, தாராளமாகச் செய் என்று சொல்லி அனுப்பினேன்.' ராமானுஜர் சற்றே நிறுத்த, கூரத்தாழ்வான் தொடர்ந்தார்.'அ ந்த சலவைத் தொழிலாளி தினமும் பெருமாள் வஸ்திரங்களைத் துவைத்துக் காயவைத்துக் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தார். உடையவர் அடிக்கடி அவரை அழைத்து, அவரது வேலை சிறப்பாக இருப்பதாகப் பாராட்டிக் கொண்டிருந்தார்.''ஓ, அது தெரியுமே. நானே பார்த்திருக்கிறேனே' என்றார் வில்லிதாசர்.'அதேதானப்பா! அந்தத் தொழிலாளி ஒருநாள் என்னிடம் வினோதமாக ஒரு கேள்வியைக் கேட்டார். சுவாமி, என் வேலை சிறப்பாக இருப்பதாக நீங்கள் பாராட்டுகிறீர்கள். ஆனால் நான் வெளுத்துக் கொடுக்கும் ஆடையை தினமும் அணிந்துகொள்ளும் அரங்கன் என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லையே...''அதுசரி. அரங்கன் வாய் திறந்து பாராட்ட வேண்டும் போல.''அதேதான்! அவர் ஆசைப்பட்டதில் என்ன தவறு? எடுத்துக் கொண்ட பணியை சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறவருக்கு ஒரு அங்கீகாரம் வேண்டாமா? சரி வா என்னோடு என்று சன்னிதிக்கு அழைத்துச் சென்று நிறுத்தினேன்.''நம்பவே முடியவில்லை சுவாமி. சன்னிதியில் ஏதும் அற்புதம் நிகழ்ந்துவிட்டதா?''இல்லையா பின்னே? இவன் வெளுக்கும் ஆடைகள் உனக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று நீயே சொல்லு என்று கொண்டு போய் முன்னால் விட்டேன். கோரிக்கை நியாயம் என்பதால் அரங்கன் பேசிவிட்டான்.'ஆடிப் போனது கூட்டம். அப்படியா அப்படியா என்று வாய் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.'அரங்கன் பேசியது பெரிதில்லை. அவனுக்கு ஒரு வரமும் கொடுத்தான் பார், அதுதான் பெரிது!'திகைத்து விட்டார்கள் சீடர்கள். 'வரமா? என்ன வரம்? சீக்கிரம் சொல்லுங்கள் சுவாமி!'ஆர்வம் தாங்க மாட்டாமல் அத்தனை பேரும் தவித்தார்கள்.ராமானுஜர் புன்னகை செய்தார்.எதைச் சொல்லுவது? எப்படிச் சொல்லுவது? நடந்தது அவர் மனத்துக்குள் மீண்டும் ஒருமுறை ஓடத் தொடங்கியது. நம்ப முடியாத சம்பவம்தான். ஆனால் நடந்துவிட்டதே!
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

உய்ய ஒரு வழி

Advertisement



Ramanujar Download





















'ஆ, வரமா! உண்மையாகவா? அரங்கனே வாய் திறந்து வரம் தருவதாகச் சொன்னானா? என்ன அற்புதம்! என்ன அற்புதம்! இதைப் போய் எங்களிடம் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே சுவாமி!'

சீடர்கள் மிகவும் பரவசமாகிப் போனார்கள். விஷயம் கேள்விப்பட்டு மடத்துக்கு வெளியில் இருந்தும் பலபேர் உள்ளே வந்து நின்றுவிட, எதை எப்படிச் சொல்லுவதென்று புரியாமல் உடையவர் திகைத்துப் போனார்.
சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று அவர்கள் விடாமல் நச்சரிக்கவே அவருக்கு வேறு வழியில்லாது போனது.
'சொல்லக்கூடாது என்ற எண்ணமில்லையப்பா! சலவைத் தொழிலாளிக்கு வாய்த்த அனுபவம் நமக்கு வாய்க்கவில்லையே என்று வருத்தப்படுவீர்களே என்று எண்ணித்தான் தவிர்த்தேன்.'
'உண்மைதான் சுவாமி! இது பெரிய விஷயம். அந்தத் தொழிலாளி தமது பணிக்குள் பரமனைக் கண்டிருக்கிறார். அதனால்தான் நம்பெருமாள் அவரிடம் பேசியிருக்கிறான். அதுசரி, அவர் என்ன வரம் கேட்டார்?'
உடையவர் புன்னகையுடன் கூரத்தாழ்வானைப் பார்க்க, அவர் சொல்லத் தொடங்கினார்.
'நம்மிடம் இப்படி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன கேட்போம்?'
'இதிலென்ன சந்தேகம் கூரேசரே? நமக்கு நல்ல கதி கொடுக்கச் சொல்லிக் கேட்போம். மோட்சத்தினும் சிறந்தது வேறென்ன உள்ளது?'
'அதுதான் விஷயம். ஆனால் அந்த சலவைத் தொழிலாளி தனக்கு மோட்சம் கேட்கவில்லை.'
'பிறகு?'
'அரங்கப் பெருமானே, நீயேதான் கிருஷ்ணாவதாரம் எடுத்தவன் என்று உடையவர் சொன்னார். கிருஷ்ணாவதாரத்தில் நீ அடித்துக்கொன்ற சலவைத் தொழிலாளிக்கு இப்போதேனும் மோட்சம் கிடைக்கச் செய் என்று அவர் வேண்டிக் கொண்டிருக்கிறார்!'
ஆஹா... என்று சிலிர்த்துப் போனது சீடர் குழாம்.
நடந்தது ராமானுஜருக்கே வியப்புத்தான். ஓர் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. யாரும் நம்பமுடியாத சம்பவம். பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பரமாத்மா வாய் திறந்து பேசுகிறான். வில்லிக்குக் கண் திறந்து காட்டிய அதே அரங்கன். சுத்த பக்தர்கள் யாரானாலும் சரி, எந்தக் குலத்தவரானாலும் சரி, அவர்கள் எனக்கு முக்கியம் என்று திரும்பத் திரும்ப நிரூபிக்கிற பரமாத்மா.
அவனே வாய் திறந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறபோது அந்த சலவைத் தொழிலாளி கேட்ட வரம் ராமானுஜரைத் துாக்கிவாரிப் போடச் செய்துவிட்டது.
'ஏனப்பா, அரங்கனே வரம் தருகிறேன் என்று சொல்லுகிறபோது உனக்கு மோட்சம் கேட்காமல், எந்த யுகத்திலோ இறந்துபோன சலவைத் தொழிலாளிக்கு மோட்சம் கேட்கிறாயே, இது என்ன வினோதம்?' என்று அவனிடம் கேட்டார்.
'நீங்கள் சொல்லுவது சரிதான் சுவாமி. அந்த யுகத்து சலவைத் தொழிலாளி யாரோ என்னமோ நான் அறியேன். ஆனால் எங்கள் குலத்தில் பிறந்து கிருஷ்ணர் கையால் அடிபட்டு இறந்திருக்கிறார். பகவான் கேட்டு, மறுத்த பாவத்தை எப்படியோ செய்து தொலைத்து விட்டார்.
இது எங்கள் குலத்துக்கே ஒரு களங்கமல்லவா?'
'அப்படியெல்லாம் ஏன் நினைத்துக் கொள்கிறாய்? கிருஷ்ணர் கையால் இறப்பதென்பது அவனது விதியாக இருந்திருக்கிறது. கிருஷ்ணர் கால் பட்ட காளிங்கனுக்கே மோட்சம் கிடைத்திருக்கிறதே, கைபட்ட சலவைத் தொழிலாளிக்கா கிடைத்திருக்காது? எப்படியோ நீ ஒரு வரத்தை வீணாக்கி விட்டாயப்பா.'
'இல்லை சுவாமி. ஒருவேளை அவன் நரகம் போயிருந்தால்? இன்றைக்கு எங்களை நேர் வழியில் செலுத்தவும் நல்லது சுட்டிக்காட்டவும் மோட்சத்தின் பாதையைப் புலப்படுத்தவும் நீங்கள் இருக்கிறீர்கள். அந்த அப்பாவி சலவைத் தொழிலாளிக்கு அப்படி ஒரு ராமானுஜர் அன்று இல்லையே. அதனால்தானே கிருஷ்ண பரமாத்மாவையே கோபமுறச் செய்தான்?
அவன் சொர்க்கம் போக அன்றைக்கு வழி இருந்திருக்காது. அதனால்தான் இன்று எனக்குக் கிட்டிய வாய்ப்பை அதற்குப் பயன்படுத்தி அவனை அனுப்பி வைத்தேன்.'
'அதுசரி. நீ எப்படி சொர்க்கம் போவாய்?'
'அதற்கென்ன சுவாமி! எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள். அதெல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். எங்கள் கதி, யதிராஜ முனி!' என்று சொல்லி அவர் பாதம் பணிந்தான்.
அவனை அப்படியே துாக்கி நிறுத்தி ஆசீர்வதித்தார் ராமானுஜர்.
நடந்ததை கூரத்தாழ்வான் சொல்லி முடிக்கவும் சீடர்கள் பேச்சு மூச்சற்றுப் போனார்கள். நம்பிக்கை என்றால் இதுவல்லவா? பக்தி என்றால் இதுவல்லவா? சரணாகதி என்பதும் இதுவேயல்லாமல் வேறென்ன?
'உய்ய ஒரே வழி உடையவர் திருவடி என்பதை உணர்ந்திருக்கிறார் அந்த சலவைத் தொழிலாளி. அவர் என்ன குலம்? அவரது சீலம் இந்தத் திருவரங்கத்து அந்தணர்களுக்கு வருமா? அவருக்கு வாய்த்தது இங்கே வேறு யாருக்கு வாய்க்கும்? சாதியா அவரை அந்த உயரத்துக்குக் கொண்டு சென்றது? இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? இந்நேரம் ஊரைக் கூட்டி பறைசாற்றியிருக்க மாட்டார்களா? ஆனால் அந்த சலவைத் தொழிலாளி யாரிடமாவது வாய் திறந்தாரா? அவரது மனைவி மக்களுக்கே சொல்லியிருப்பாரா என்பதுகூடச் சந்தேகம்தான்.' கூரத்தாழ்வான் சிலிர்ப்புற்றுப் பேசிக்கொண்டே போனார்.
'கூரேசா, நமது குருகுலத்தில் உள்ளவர்களுக்கு முதலில் இது புரியவேண்டும். மாறனேர் நம்பியோ, அந்த சலவைத் தொழிலாளியோ, நமது வில்லிதாசரோ அடைந்த உயரம் மிகப் பெரிது. இடைவிடாத பக்தியும் தடையிலாது சரணாகதி செய்தலுமே மோட்சத்தின் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியவை. இது புரிந்துவிட்டால் சாதி பேதம் பார்க்கிற வழக்கம் நின்றுவிடும்.' என்றார் ராமானுஜர்.
பரபரவென்று காரியங்கள் நடக்கத் தொடங்கின. கோயில் திருப்பணியில் இன்னும் அதிகமாகப் பல சாதிக்காரர்களைக் கொண்டு வந்து சேர்த்தார் உடையவர். பெருமாளுக்கு தினமும் ஒரு புதிய மண் பாண்டத்தில்தான் அமுது செய்விக்க வேண்டும். குயவர்கள் உள்ளே வந்தார்கள். தச்சு வேலைகளுக்காக ஆசாரிகள் வந்தார்கள். வண்ண மாடங்களுக்கும் நின்ற நெடுமதில்களுக்கும் சுண்ணமடிக்க ஆள் வந்தார்கள். தேரைப் பராமரிக்கவும் கோபுரங்களை கவனிக்கவும் இன்ன பிற கட்டுமானம் சார்ந்த பணிகளைச் செய்யவும் பல சாதிக்காரர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள்.
அத்தனை பேரையும் கோயிலுக்கு அருகிலேயே தங்க வைத்தார் ராமானுஜர். அரங்கனைச் சுற்றி அந்தணர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று யார் சொன்னது? நான் சொல்கிறேன், அரங்க நகரத்தைச் சுற்றிய காவிரியின் அத்தனைத் துளி நீரும் காவிரியேதான் என்பதுபோல் அரங்கனைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரும் பாகவத உத்தமர்கள்தாம். சாதி சொல்லிப் பிரிப்பதை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன்.
விஷயம் காட்டுத் தீயே போல் எங்கெங்கும் பரவியது. எங்கெங்கிருந்தோ ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு ராமானுஜரைப் பார்க்க திருவரங்கம் வரத் தொடங்கினார்கள்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்


வாதம் செய்ய வா


Advertisement






Ramanujar Download





















காவிரிக் கரையோரம் பல்லக்கு வந்து கொண்டிருந்தது. பல்லக்கின் பின்னால் யக்ஞமூர்த்தியின் சீடர்கள் பத்திருபது பேர் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு மாட்டு வண்டியில் கட்டுக்கட்டாக ஓலைச் சுவடிகள். சுவடி வண்டிக்குப் பின்னால் இன்னொரு குழுவாக மேலும் பத்திருபது பேர்.
நதியின் மேல் பரப்பில் இருந்து பிறந்து வந்த குளிர்ச்சியைக் கரையோர மரங்கள் கலைத்து நகர்த்தி, காற்றோடு விளையாடிய கணத்தில், பல்லக்கின் திரைச்சீலை படபடத்து நகர்ந்தது. ஒரு சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு யக்ஞமூர்த்தி அமர்ந்திருப்பது தெரிந்தது. துாய காவியும் முண்டனம் செய்த தலையும் திருநீறு துலங்கும் நெற்றியும் அவரது தீட்சண்யம் மிக்க கண்களை அலங்கரிக்கச் செய்த ஏற்பாடு போலிருந்தது. அருகே சாய்த்து வைக்கப்பட்டிருந்த தனது ஏக தண்டத்தை எடுத்துச் சற்றே நிமிர்த்தி வைத்தார். தொண்டையை லேசாகக் கனைத்துக் கொண்டு வெளியே மெல்லத் தலைநீட்டிக் கேட்டார். 'இன்னும் எவ்வளவு துாரம்?''வந்துவிட்டோம் குருவே. அரங்க நகரின் எல்லையைத் தொட்டு விட்டோம். அங்கே பாருங்கள். கோபுரம் நெருக்கத்தில் தெரிகிறது.'பல்லக்கின் அருகே நடந்து வந்து கொண்டிருந்த சீடன் சுட்டிக்காட்டிய திசையில் அவர் பார்த்தார். விண்ணுக்கும் மண்ணுக்குமான இட்டு நிரப்ப இயலாத இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிற கோபுரம். ராமாயண காலத்து விபீஷணனுக்கு ராமச்சந்திர மூர்த்தி தன் நினைவின் பரிசாகக் கொடுத்தனுப்பிய விமானம். அது அவரது குலச் சொத்து. இக்ஷ்வாகு குலம் தோன்றிய காலம் முதல் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ரங்க விமானம். ராமன் அதை விபீஷணனுக்குக் கொடுக்க, விபீஷணன் அதைத் தலையில் ஏந்தி வந்து திருவரங்கத்தை அன்று ஆண்டு கொண்டிருந்த தர்மவர்மா என்னும் மன்னனிடம் ஒப்படைத்ததாகச் சொல்லுவார்கள். விமானம் வந்து சேர்வதற்கு முன்னால் திருவரங்கத்துக்கு அந்தப் பெயர் கிடையாது. அது சேஷ பீடம் என்று அழைக்கப்பட்டது. ரங்க விமானம் வந்த பிறகுதான் அது திருவரங்கம் ஆனது.யக்ஞமூர்த்திக்கு அந்தக் கதைகள் தெரியும். வடக்கில் உதித்த இக்ஷ்வாகு குலத்தின் தெற்கு வழித்தோன்றல்களே சோழ மன்னர்கள் என்பதும் தெரியும். அதை வசிஷ்டரே உறுதிப்படுத்தி எழுதி வைத்த சுலோகத்தை அவர் படித்திருந்தார். அவருக்குச் சிரிப்பு வந்தது. சோழர்கள் இன்று சிவபக்தர்கள். அத்வைத சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள். ஊருக்கு ஊர் சிவாலயங்களைக் கட்டியெழுப்பி அறம் வளர்ப்பவர்கள். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட திருவரங்கத்தில் அத்வைத சித்தாந்தமே ழிக்கப்பட்டுவிட்டது.ஒரு தனி மனிதர் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார். பிராந்தியத்தில் அத்தனை பேரையும் வைணவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார். திருவரங்கம் தாண்டித் தென் இந்திய நிலப்பரப்பு முழுதும் மக்கள் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர் புகழ் பாடுகிறார்கள். அவர் வழியே சிறந்ததெனக் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். என்னத்தைக் கண்டுவிட்டது இம்மூட ஜனம்? அவர் பேசுகிற விசிஷ்டாத்வைதம் புரியுமா இவர்களுக்கு? சாமானியர்கள் சித்தாந்தங்களால் கவரப்படுவதில்லை. அது அவர்களை முழுதாக எட்டுவதுமில்லை. ஒரு நம்பிக்கை. நாடி பிடித்துப் பார்க்கிற வைத்தியனின் முகக் கனிவு கொடுக்கிற நம்பிக்கை போன்ற ஒன்று. ஆனால் தோற்றமல்ல, மக்களே. அதற்கு அப்பால். எதற்கும் அப்பால் என்றும் நிலைத்திருப்பது என்று ஒன்று உள்ளது. மடத்தனமாக அதை எதற்கு வெளியே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? அறிவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. பிரத்யட்சம், பிரமாணம், சுருதி. கண்ணுக்குத் தென்படுவது பிரத்யட்சம். சூரியன் பிரத்யட்சம். சந்திரன் பிரத்யட்சம். மரங்களும் நதியும் கடலும் பிரத்யட்சம்.ஆனால் நெருப்பு சுடும் என்பது பிரமாணம். நீ தொட்டுத் தெளிய வேண்டாம். தொட்டுப் பார்த்தவர்கள் சொல்லி வைத்தது போதும். அது அனுமானம். நீ தொடாவிட்டாலும் அது சுடத்தான் செய்யும். தொட்டுத்தான் பார்ப்பேன் என்று கை வைத்து சுட்டுக்கொண்டால் உன் இஷ்டம்.சுருதி என்பது முன்னறிவு. வேதங்கள் வழங்குகிற பேரறிவு. அதுதான் பிரம்மம் ஒன்றே உண்மை என்கிறது. பிரம்மம் ஒன்றே உண்மை என்றால் மற்றதெல்லாம் மாயையே அல்லவா? இதுவல்லவா சத்தியம்? மாயையே சத்தியம் என்பதைக் கேட்டு நகைக்காதே. நான் நிரூபித்துக் காட்டுகிறேன். கூப்பிடுங்கள் உங்கள் ராமானுஜரை. இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன். இரண்டே இல்லை; ஒன்றுதான் (அ-த்வைதம் என்றால் இரண்டல்ல; ஒன்றே என்று பொருள்) என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்.தனது மானசீகத்தில் ஒரு பெரும் கூட்டத்தின் எதிரே நின்று அவர் பிரகடனம் செய்து கொண்டிருந்தார். திருவரங்கத்து மக்களின் எதிரே ராமானுஜர் முன்வைக்கும் வைணவ சித்தாந்தத்தைத் தோற்கடித்து அரங்கமாநகரில் அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டும் அடங்காத பேரவா அவரைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.அவர் பெரும் பண்டிதர். கங்கைக் கரையில் பல்லாண்டு காலம் பல்வேறு குருகுலங்களில் பயின்றவர். ஆதி சங்கரரின் அடிச்சுவடே உய்ய வழி என்று நம்பி ஏற்றுத் துறவறம் பூண்டவர். துறவுக்குப் பிறகு வட இந்தியா முழுதும் சுற்றித் திரிந்து அத்வைத சித்தாந்தத்தைப் பிரபலப்படுத்தியவர். ராமானுஜரின் பெயரும் புகழும் அங்கே எட்டியபோதுதான் யக்ஞமூர்த்திக்குக் கோபம் மூண்டது. அப்படியென்ன வெல்லவே முடியாத ஆளுமை? வென்று காட்டுகிறேன் பார்.பல்லக்கும் பரிவாரமும் சேரன் மடத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்தது.யக்ஞமூர்த்தியின் சீடர்கள் சிலர் உள்ளே சென்று தகவலைச் சொன்னார்கள். 'வந்திருப்பவர் மகா பண்டிதர். தெற்கில் பிறந்து வடக்கே போனவர்தாம். ஆனால் வட இந்தியா முழுதும் இன்று புகழ் பெற்ற அத்வைத மகாகுரு. உங்களுடைய ஆசாரியர் ராமானுஜரைச் சந்திக்க வந்திருக்கிறார்.''அதற்கென்ன சந்திக்கலாமே!' என்று எழுந்து வந்தார் ராமானுஜர்.'உம்மை வெறுமனே பார்த்துப் போக நான் வரவில்லை ராமானுஜரே. உம்முடன் வாதம் செய்ய வந்திருக்கிறேன்.''வாதமா? என்ன காரணம் பற்றி?''காரணமென்ன காரணம்? உமது சித்தாந்தத்தின் அபத்தத்தை உலகுக்குச் சொல்லப் போகிறேன். துணிவிருந்தால் வாதத்துக்குத் தயாராகுங்கள். மகாபாரத யுத்தம் பதினெட்டு தினங்கள் நடந்தன. நாமும் பதினெட்டு நாள் வாதம் செய்வோம். நீங்கள் வாதில் வென்றால் நான் உமது அடிமையாவேன். நீங்கள் வென்றால் உமது வைணவ சித்தாந்தத்தை விடுத்து, அத்வைதமே சத்தியமென்று ஏற்கவேண்டும்.'ராமானுஜர் ஒரு கணம் அமைதியாக யோசித்தார்.'வாதத்துக்கு நான் தயார். ஆனால் உயிர் இருக்கும்வரை மாய, சூனிய வாதங்களை என்னால் ஏற்க இயலாது. வேண்டுமானால் நான் தோற்றால் வைணவப் பிரசாரப் பணிகளை நிறுத்திக் கொள்கிறேன்' என்று சொன்னார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -




ஒன்றா? இரண்டா?
மார்ச் 08,2017
ரங்க நாச்சியார் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் கூட்டமான கூட்டம் திரண்டிருந்தது. ஒருபுறம் ராமானுஜரும் அவரது சீடர்களும் அமர்ந்திருக்க, எதிர்ப்புறம் யக்ஞமூர்த்தியும் அவரது சீடர்களும் இருந்தார்கள். யக்ஞமூர்த்தியின் ...










ஒன்றா? இரண்டா?


Advertisement



Ramanujar Download




















ரங்க நாச்சியார் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் கூட்டமான கூட்டம் திரண்டிருந்தது. ஒருபுறம் ராமானுஜரும் அவரது சீடர்களும் அமர்ந்திருக்க, எதிர்ப்புறம் யக்ஞமூர்த்தியும் அவரது சீடர்களும் இருந்தார்கள். யக்ஞமூர்த்தியின் ஓலைச் சுவடிகளை அடுக்கி வைத்துக்கொண்டு தலைமைச் சீடன் தயாராக இருந்தான். ஆதாரங்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் அவை முக்கியம். மேற்கோள் இல்லாமல் அவரால் பேச முடியாது.
'உடையவரே, நீங்கள் ஓலைச்சுவடிகள் ஏதும் கொண்டு வரவில்லையா? நாம் வாதம் புரிய வந்திருக்கிறோம். சொற்பொழிவாற்ற அல்ல.' என்றார் யக்ஞமூர்த்தி.'சமைக்கப்பட்டவற்றுக்குக் குறிப்புகள் அவசியம். இயல்பாக இருப்பதற்கு அது எதற்கு?' என்றார் ராமானுஜர்.ஒரு விருந்து தயாராகிறது. பலவிதமான ருசி மிக்க உணவு வகைகள் அணிவகுக்கின்றன. உண்ண உண்ண இன்னும் இன்னும் என்று ஆவல் எழுகிறது. எத்தனை பிரமாதமான விருந்து! இதை எப்படிச் செய்தீர்கள்? என்னவெல்லாம் சேர்த்தீர்கள்? என்று கேட்டால் குழம்பில் இன்னின்ன சேர்த்தேன், பாயசத்தை இப்படிச் செய்தேன், வடை மாவு இந்தப் பதம், அக்கார அடிசில் இப்படிச் செய்யவேண்டும் என்று விளக்கலாம்.இதுவே கடும் தாகமெடுக்கும் நேரம் ஒரு குவளை நீர் கொடுத்து ஆற்றுப்படுத்துகிறவரிடம், 'இந்தத் தண்ணீரை எப்படிச் சமைத்தீர்?' என்று கேட்பார்களா?ராமானுஜர் அதைத்தான் சொன்னார். வைணவம் இயல்பானது. காற்றையும் நீரையும் நெருப்பையும் போன்று அநாதியானது. ஏனெனில் பரம்பொருள் அவ்வாறானது. பிரம்மம், கர்மத்தால் தீண்டப்படுவதில்லை. அதற்கு தோஷங்கள் இல்லை. மூப்பில்லை, இறப்பில்லை, பிறப்பில்லை, சுக துக்கங்களோ, பசி தாகமோ இல்லை. அநாதியாக இருக்கிற அதனுள்ளேதான் அனைத்தும் அடங்கியிருக்கி றது.'அனைத்தும் என்று எதைச் சொல்வீர்? ஞானமயமான பிரம்மம் ஒன்றே மெய். இந்த உலகம் பொய். காட்சிகள் பொய். அனுபவங்கள் பொய். வெறும் மாயை. இந்தப் பொய்களும் மாயையும் எவ்வாறு பிரம்மத்தில் ஒடுங்கும்?' என்றார் யக்ஞமூர்த்தி.'மாயை என்று அத்வைதம் சொல்வதையும் உற்பத்தி செய்தது அந்த பிரம்மமே அல்லவா? மாயையும் பிரம்மத்துக்குள் அடங்கியிருப்பதுதான். ஒரு நோக்கம் உள்ளது ஐயா. படைப்பதும் காப்பதும் நிர்மூலம் செய்வதும் தொடர்ந்து நடைபெறுவதற்காகவே பிரம்மம் மாயையைத் தனக்குள் வைத்திருக்கிறது. ஜீவனும் ஈசனும் மெய்யென்றால் மாயை என்று நீங்கள் சொல்லும் உலகமும் மெய்யானதே. பிரம்மம் படைக்கும் ஒன்று எவ்வாறு பொய்யாகும்? முழு உண்மை பிரம்மமே என்றால் அது படைப்பதும் உண்மையே அல்லவா? பரம்பொருள் எப்படி பொய்யான ஒன்றைப் படைத்துக் காட்டும்?'வேதங்களை ஆதாரமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது, ஹிந்து மதம். த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று அதிலுள்ள மூன்று பிரிவுகளும் சந்தேகமற ஒப்புக்கொள்ளும் ஒரே விஷயம், பிரம்மம் அநாதியானது என்பது. பிரம்மத்துக்கும் ஜீவனுக்கும் உள்ள தொடர்பு சார்ந்துதான் வாத விவாதங்கள் அனைத்தும். ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறல்ல என்பது அத்வைதம். இரண்டும் வேறு வேறுதான்; எந்நாளும் சேராது என்பது த்வைதம். இரண்டும் வேறுதான்; ஆனால் இரண்டும் இணைந்திருக்கும் என்பது விசிஷ்டாத்வைதம்.'சுவாமி, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்குமான தொடர்பு பக்தியின்மூலம் கட்டி எழுப்பப்படுவது. பக்தி செய்வதே ஜீவனின் கடன். பக்தியின் மூலம் பரமாத்மாவை நெருங்கிச் செல்கிறோம். நாம் நெருங்கலாம், ரசிக்கலாம், அனுபவிக்கலாம், ஆனால் ஜீவன் ஒருபோதும் பரமாத்மாவாகாது. பரமாத்மாவாகிவிட்டால் ஜீவனுக்கு சொர்க்க நரகங்கள் எதற்காக ? அவற்றை அனுபவிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?''இல்லை. இதை ஒப்புக்கொள்ள முடியாது. தத்வம் அஸி ஸ்வேதகேதோ என்று வருணன் ஸ்வேதகேதுவைப் பார்த்துச் சொன்னதைப் பொய் என்பீரா? பிரபஞ்சத்தைப் படைத்த ஈஸ்வரனும் நீயும் ஒன்றே என்றல்லவா இதற்குப் பொருள்?''இப்படிப் பாருங்கள். ஒரு மீனுக்குக் கடலின் ஆழம் தெரியும். அகலம் தெரியும். பிரம்மாண்டம் தெரியும். ஆனந்தமாக அது நீந்திக் களிக்கிறது. கடலுக்குள் இருக்கப் பணிக்கப்பட்டது அது. ஆனால் மீன் தான் கடலா? இல்லை அல்லவா? மீனாக இருப்பதால்தான் அது கடலை அனுபவிக்கிறது. ஜீவாத்மா அப்படித்தான். பரமனுக்குள் ஒடுங்கி அனுபவிக்கவே படைக்கப்பட்டவன் அவன். நீங்கள் சொல்லுவது எப்படி என்றால், உப்பும் கடலில்தான் உள்ளது. மீனைப் போல் அல்லாமல் அது கடல் நீரில் இரண்டறக் கலந்திருப்பது. அதனால் கடலை அனுபவிக்க முடியுமா? உப்புக்குக் கடலின் ஆழ அகலங்கள் தெரியுமா? பிரம்மாண்டம் தெரியுமா? கடல் வேறு, உப்பு வேறு என்பதை ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? ஜீவாத்மாவும் சரி, இந்தப் பரந்த உலகமும் சரி. பரம்பொருளின் அங்கங்கள்தாம். பரமாத்மா என்றும் பிரம்மம் என்றும் இன்னும் பலவாகவும் சொல்லப்படுகிற எம்பெருமானின் அருள்தான் நமக்கு வேண்டியது. அதன்மூலம் சரீரத் தொடர்பை விடுத்து அவன் பாதாரவிந்தங்களை எட்டிப் பிடிப்பதே மோட்சம் என்று சொல்லப்படுகிறது. மோட்சத்துக்கு பக்தி ஓர் உபாயம். சரணாகதி மிகச் சிறந்த உபாயம். வைணவம் இதைத்தான் சொல்கிறது.' என்றார் ராமானுஜர்.யக்ஞமூர்த்தி ஏற்கவில்லை. வாதம் விடாமல் தொடர்ந்தது. ஒரு நாள். இரண்டு நாள். ஒரு வாரம். இரண்டு வாரம். மூன்றாவது வாரமும் முடிந்துவிடும் போலிருந்தது. ஆனால் வாதம் முடியவில்லை.யக்ஞமூர்த்தி பேசிய அத்வைதம், வேதங்கள் விரிக்கும் ஞான காண்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் சடங்குகளுக்கும் யாகங்களுக்கும் பெரிய இடம் கிடையாது. அது தத்துவங்களின் வெளி. அறிவின் கூர்மையால் அலசிப் பார்க்கப்படுவது. ஆத்மானுபவம் சேராது.ஆனால் ராமானுஜர் பேசிய விசிஷ்டாத்வைதம் சராசரி மனிதர்களுக்கான கதி மோட்ச உபாயம். மண்டை உடைக்கும் தத்துவச் சிக்கல்களுக்குள் புகாமல் மிக நேரடியாகச் சரணாகதியைச் சுட்டிக்காட்டுகிற பெரும்பாதை. சேருமிடம் குறித்த தேர்ந்த தெளிவும் சென்றடையும் வழி பற்றிய துல்லியமும் கொண்ட உபாயம்.யக்ஞமூர்த்தி அதை ஏற்கவில்லை. பதினேழு தினங்கள் தொடர்ந்து விவாதம் நடந்துகொண்டே இருந்தது. யார் வெல்லப் போகிறார் என்றே புரியாமல் மக்கள் தினமும் சபைக்கு வந்து அலுத்துத் திரும்பினார்கள்.அன்றைக்கு ராமானுஜருக்கே அலுப்பாகிவிட்டது. வறட்டுத் தத்துவ வாதங்களில் என்ன இருக்கிறது? பரம்பொருளான நாராயணனைச் சரணமடைவது ஒன்றே மோட்சத்துக்கு வழி என்பதை எப்படி இந்தப் பண்டிதருக்குப் புரியவைப்பது?களைத்துப் போய் மடத்துக்குத் திரும்பியவர், தமது திருவாராதனப் பெருமாளான பேரருளாளனிடம் கைகூப்பிக் கேட்டார். 'ஏனப்பா இப்படிச் சோதிக்கிறாய்? எதற்கு இந்த வீண் விவாதங்கள்? நீதான் எல்லாம் என்பதை அந்த யக்ஞமூர்த்திக்கு நீயே புரியவைக்கக் கூடாதா?'
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -


வாதமும் பாதமும்


Advertisement



Ramanujar Download



















ராமானுஜரின் பிரச்னை, யக்ஞமூர்த்தியல்ல. அவர் பேசிய மாயாவாதமும் அல்ல. அதன் அருகே வைத்து ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை நிரூபித்தாக வேண்டியிருக்கிறதே என்று அவருக்கு சலிப்பாக இருந்தது. இதுவும் இதுவும் சேர்ந்தால் அது என்று அறிவியலில் நிரூபித்து விடலாம். இதையும் அதையும் கூட்டினால் இது என்று கணிதத்தில் காட்டிவிடலாம். பரம்பொருளின் தன்மையையும் அதைப் பாடிப் பரவும் ஜீவாத்மாவின் ஒரே பெரும் லட்சியத்தையும் அறிவைக்கொண்டா அறிய முடியும்? அது ஆன்மாவின் அடியாழத்தில் பொங்கும் பெரும் புனலல்லவா? பக்தியின் பேராற்றலால் மட்டுமே திறக்க முடியும் பரமபதத்தின் வாயிற்கதவை கணிதச் சமன்பாடுகளால் கட்டுடைப்பது எப்படி?
ராமானுஜர், ஆதிசங்கரரின் மேதைமையை மதித்தார். ஆனால் அவர் பேசிய அத்வைதத்தை மாறுவேட பௌத்தம் என்றே கருதினார். பிரம்மத்தின் சொரூபத்தை உணர மறுத்த பௌத்த சித்தாந்தம், இயற்கை எனும் முடிவற்ற பேராச்சரியத்தையே உண்மை என்று சொன்னது. அதாவது நாம் அறிந்தது மட்டுமே உண்மை என்றாகிவிடுகிறது அல்லவா? பிரத்தியட்சத்துக்கும் பிரமாணத்துக்கும் அப்பால் வேத ஆதாரங்களின் அடிப்படையில் அறிய வேண்டியவற்றை நிராகரித்து அறியக்கூடியவைதான் என்ன? பரம்பொருளுக்கும் ஜீவனுக்குமான உறவு என்பது கண்ணுக்குத் தெரியாத நுாலிழைகளால் கோக்கப்பட்டது.ஜீவன், பக்தனாகப் பரிணாம வளர்ச்சி பெறும்போது பாதை புலனாக ஆரம்பிக்கிறது. பக்தியின் உச்சம் சரணாகதி. சகலமும் மறந்து, சகலமும் துறந்து, ஆதிமூலமே என்று ஆன்மாவின் அடியாழத்தில் இருந்து எழும் பெரும் அழைப்பில் சகலமும் துலக்கம் பெற்றுவிடுகிறது. இந்த அற்புத அனுபவத்தை மாயை தருமா? நான் தான் அது என்று சொல்லிவிட்ட பிற்பாடு தேடலுக்கு என்ன அவசியம்? தேடலற்ற வாழ்வில் அற்புதங்களுக்கு ஏது இடம்? அற்புதங்களின் சூட்சும வடிவத்தை, கரையற்ற பெருங்கடலை, எல்லைகளற்ற பெருவெளியை எட்டிப்பார்க்கக்கூட இடமின்றிப் போய்விடுகிறது.'எம்பெருமானே! உனக்கும் எனக்குமான உறவை நிரூபிப்பதன் பெயரா வாதம்? இதையா பதினேழு தினங்களாகச் செய்து கொண்டிருக்கிறேன்? இதன் அவசியம்தான் என்ன? இது சாதிக்கப் போவதுதான் என்ன?'அன்றிரவு அவருக்கு உறக்கமில்லாமல் போனது. சராசரி மக்களுக்கு, எளியோருக்கு, பாமரருக்குப் பெருவழி காட்டுகிற ஒரு மகத்தான சித்தாந்தத்தை அவர் முன்வைத்தார். மிக நேரடியான உபாயம். எளிமையானது. ஜோடனைகளற்றது. பூச்சற்றது. நேராகப் பரமனின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்க்கவல்லது. மாயையின் மேகத்திரை கொண்டு அதை மறைக்க நினைக்கிறார் யக்ஞமூர்த்தி. நிரூபணங்களில் விருப்பம் கொண்டவர்களால் மேலே கடந்து போக முடியாது. நிரூபிப்பது என்று இறங்கிவிட்டால் காலம் முழுதும் அதைச் செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான். செயலும் சாதனைகளும் நிரூபணங்களிலா பூரணமடைகிறது? திறந்து கிடக்கிற பெரும் கானகத்தில் யுக யுகமாகப் பூத்துக்கிடக்கிற வாசம் மண்டிய ஒற்றைச் சிறு மலரைத் தேடி அலையும் ஓ யக்ஞமூர்த்தியே! அது உமது உள்ளங்கைக்கு வெகு அருகிலேயேதான் உள்ளதென்பதை ஏன் கண் திறந்து பார்க்க மறுக்கிறீர்? எம்பெருமானே, நீயாவது அவருக்கு அதை எடுத்துக் காட்டலாகாதா?அதையே நினைத்தபடி படுத்துக்கிடந்த உடையவர் எப்போது உறங்கினார் என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால் உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. கனவில் காஞ்சிப் பேரருளாளன் வந்தான்.'ராமானுஜரே, எதற்குக் கவலைப்படுகிறீர்கள்? பதினேழு தினங்கள் யக்ஞமூர்த்தியுடன் வாதம் செய்திருக்கிறீர்கள். அவரது அறிவின் விரிவைக் கண்டீர்கள் அல்லவா? எத்தனை படித்திருக்கிறார் என்று பார்த்தீர் அல்லவா? எவ்வளவு பெரிய ஞானஸ்தர் என்று அறிந்தீர் அல்லவா? உமக்கு இப்படியொருவர் சீடராக அமைந்தால் இன்னும் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று எண்ணிப் பாரும். நாளை அது நிகழும்.'திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்துவிட்டார் ராமானுஜர். அடப்பெருமானே! ஒரு அத்வைத சாகரத்தை ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்துக்குள் இழுத்துவரவா இப்படியொரு நாடகம் நடத்துகிறாய்! இதற்கு என்னை ஒரு கருவியாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறாயா? பிரமாதம். என்ன விளையாட்டு இதெல்லாம்? 'தேவையான விளையாட்டுதான் ராமானுஜரே. பாமரர்கள் ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை ஏற்பது இயல்பாக நிகழும். வாதத்தின் வழியே ஒரு பண்டிதர் வந்து சேரும்போது அதன் எல்லைகள் மேலும் விரிவு கொள்ளும். நிம்மதியாகத் துாங்கி எழுந்து வேலையைப் பாரும். நாளை உமக்கொரு புதிய சீடர் வந்து சேரவிருக்கிறார்.'மறுநாள் அது நிகழ்ந்தது.அரங்க நகரத்து மக்கள் முழுதும் அந்தப் பதினெட்டாவது நாள் வாதத்தைக் காண ரங்க நாச்சியார் முன் மண்டபத்தில் வந்து குழுமியிருக்க, யக்ஞமூர்த்தியும் தமது சீடர் குழாத்துடன் வந்து அமர்ந்திருந்தார். எங்கே ராமானுஜர்? ஏன் இன்னும் வரக்காணோம்?'வ ந்து விடுவார் சுவாமி. மடத்தில் திருவாராதனப் பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறார். பூஜை முடிந்ததும் கிளம்பி விடுவார்.'உடையவரின் சீடர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோதே ராமானுஜர் விறுவிறுவென்று அங்கே வந்துகொண்டிருப்பது தெரிந்தது. யக்ஞமூர்த்தி திரும்பிப் பார்த்தார். ஞானத்தின் பூரணமும் தன்னம்பிக்கையின் நிகரற்ற பேரமைதியும் மேலான தெய்வீக சாந்தமும் நிலவிய முகம் அன்று அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்தது.இல்லை. இவர் நேற்றுப் பார்த்த உடையவர் இல்லை. பதினேழு தினங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிற மனிதர் இல்லை. இவர் வேறு. அல்லது இவருக்குள் நிகழ்ந்திருப்பது வேறு. எனது வாதங்களைத் தவிடுபொடியாக்கவா இவர் வந்து கொண்டிருக்கிறார்? ஆண்டவனே, நானே தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறேனே? இவரிடம் வாதம் செய்து எப்படி என்னால் நிரூபிக்க முடியப் போகிறது? எதை நான் நிரூபிப்பேன்? நிரூபணமே தேவையற்ற பூரண அருளுடன் அல்லவா இவர் வந்துகொண்டிருக்கிறார்? எனக்குத் தெரிந்துவிட்டது. சர்வநிச்சயமாக இவர் பகவானின் பிரதிநிதி. வெல்ல முடியாத ஆகிருதி. வெல்ல அவசியமற்ற பேருண்மையின் பிரசாரகர். நான் தோற்றேன்.தடதடவென்று அவரது உடல் நடுங்கியது. அப்படியே மெல்ல எழுந்து கரம் கூப்பி நின்றார். ராமானுஜர் நெருங்கி வந்தபோது, 'சுவாமி!' என்று அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார்.திடுக்கிட்டுப் போனார் ராமானுஜர். 'யக்ஞமூர்த்தி, என்ன இது? நான் உம்முடன் வாதம் புரிய வந்திருக்கிறேன். இன்று நம் வாதின் இறுதி நாள். ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை உமக்கு இன்று விளங்கச் செய்யாமல் மறு காரியமில்லை என்று எண்ணிக்கொண்டு வந்திருக்கிறேன். எழுந்திரும்.''அவசியமில்லை சுவாமி. வாதம் வீண். உமது பாதம் ஒன்றே என் கதி மோட்சம்.'கூட்டம் திகைத்து விட்டது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -



இடியுங்கள் மடத்தை!


Advertisement



Ramanujar Download


















யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வாதத்தின் இறுதி நாளான இன்று எப்படியும் ராமானுஜரைத் தோற்கடிப்பேன் என்று தமது சீடர்களிடம் சொல்லிவிட்டே யக்ஞமூர்த்தி புறப்பட்டிருந்தார். திருவரங்கத்து வைணவர்களும், ராமானுஜரைக் காண்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்களும் மண்டபத்தில் நிறைந்திருக்க, வாதம் இதோ தொடங்கிவிடும் என்று காத்திருந்தவர்கள் அத்தனை பேரும் திகைத்துப் போனார்கள்.
'ஏன் யக்ஞமூர்த்தி? உமக்கு நிரூபிக்க இன்னும் நிறைய இருக்கிறதே? இன்று மாலைக்குள் வாதத்தை முடிக்கலாம் என்றுதானே சொல்லியிருந்தீர்?' என்றார் ராமானுஜர்.கண்ணீரும் பரவசமுமாக யக்ஞமூர்த்தி கைகூப்பி நின்றார்.'சுவாமி, நிரூபணங்கள் தேவையற்ற பரமாத்மாவின் பரிபூரண அருளாசியுடன் நீங்கள் இன்று வந்திருப்பதை உமது முகமே சொல்கிறது. தத்துவங்களில் என்ன இருக்கிறது? தத்துவங்களுக்கு அப்பால் உள்ள பரமனே உங்கள் பக்கம் இருக்கிறபோது இந்த வாதங்களுக்கு அவசியம்தான் என்ன? என்னை ஆட்கொள்ள வந்த எம்பெருமானாரே, இந்த யக்ஞமூர்த்தி இனி உமது அடிமை.'கூட்டம் பேச்சற்றுப் போனது. யக்ஞமூர்த்தியின் சீடர்கள் அதிர்ந்துவிட்டார்கள். 'குருவே, என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?' 'என் குழந்தைகளே, நான் சாஸ்திரங்களில் கரை கண்டவனாக இருக்கலாம். வேதம் அளித்த ஞானத்தின் செழுமை எனக்கு இருக்கலாம். நுால் வாசிப்பும் வாத விவாதங்களில் பெற்ற அனுபவங்களும் என் பலமாக இருக்கலாம். உண்மை என்று நம்பி நான் ஏற்ற அத்வைத சித்தாந்தம் என் மூச்சுக்காற்றாக இருக்கலாம். ஆனால் எது பேருண்மையோ அது இவர் பக்கம் இருக்கிறது. நீயும் நானும் பேசுவதுபோல பகவான் இவரோடு உரையாடுகிறார். வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தருகிறார். பகவானின் பூரண அருளைப் பெற்றவரை வாதில் வென்று நான் எதை நிரூபிப்பேன்? அது அபத்தமல்லவா?'அவர் பேசியது யாருக்கும் புரியவில்லை. ராமானுஜருக்கு மட்டும் புரிந்தது. கனவில் வந்த பேரருளாளன் சொன்னதைச் செய்துவிட்டான். இது தெய்வ சங்கல்பம். நாம் செய்ய ஒன்றுமில்லை. எனவே, 'வாரும் யக்ஞமூர்த்தியே! ஸ்ரீவைஷ்ணவ தரிசனம் இனி உம்மாலும் செழுமை கொள்ளும். உமது ஞானத்தின் பலத்தை நாரணன் சேவைக்குத் திருப்புங்கள்!' என்று சொன்னார். யக்ஞமூர்த்தி, சிகை நீக்கிய, ஏகதண்டம் ஏந்திய அத்வைத சன்னியாசி. ராமானுஜர் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைத்து, மீண்டும் பூணுால் அணிவித்து, திரிதண்டம் வழங்கி, வைணவ தரிசனத்துக்குள் வரவேற்றார்.'காஞ்சிப் பேரருளாளன் சித்தம், நீங்கள் வைணவ தரிசனத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமென்று இருந்திருக்கிறது. எனவே நீங்கள் இனி அருளாளப் பெருமான் எம்பெருமானார் என்று அழைக்கப்படுவீர்.''ஆஹா. எம்பெருமானார் என்பது தங்களுக்கு சாற்றப்பட்ட பேரல்லவா? தங்களது பரம ஆசாரியர்களுள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி சூட்டிய நாமமல்லவா? அதைப் போய் எனக்கு அளிக்கிறீர்களே சுவாமி! நான் தங்கள் கால் துாசு பெறுவேனா?''இல்லை. எம்பெருமானே உவந்து தங்களை வைணவ தரிசனத்துக்கு அழைத்திருக்கிறான். எவ்விதத்திலும் நீங்கள் தாழ்ந்தவரல்லர்.''நான் என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள். 'ராமானுஜர் அவருக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்தார். யக்ஞமூர்த்தி சமஸ்கிருதத்தில் பெரும் பண்டிதர். வேத உபநிடதங்களில் தொடங்கி அவர் வாசிக்காததே கிடையாது. ஆனால் பிரபந்தம் படித்ததில்லை. அதில் ஆர்வம் செலுத்தியதும் இல்லை. எனவே ராமானுஜர் அதில் ஆரம்பித்தார். வெகு விரைவில் அவர் பிரபந்தங்களில் ஆழ்ந்த தேர்ச்சியுற்றது கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, 'சுவாமி, இனி நீங்கள் என்ன செய்யவிருக்கிறீர்கள் என்பதை நீங்கள்தாம் முடிவு செய்யவேண்டும். வைணவ தரிசனத்துக்கு நீங்கள் ஆற்றவிருக்கும் தொண்டு என்னவாயிருக்கும் என்று அறிய ஆவலாயிருக்கிறேன்.'யக்ஞமூர்த்தி காவிரிக் கரையோரம் தனியே ஓரிடம் அமைத்துத் தங்கி நுால்கள் எழுத விரும்பினார். அதை ராமானுஜரிடம் அவர் தெரிவித்தபோது, அவரே ஒரு மடம் கட்டிக் கொடுத்தார்.'நீங்கள் இனி இங்கே தங்கலாம். தங்கள் விருப்பப்படி நுால்கள் இயற்றலாம்.'அருளாளப் பெருமான் எம்பெருமானார் அன்றுமுதல் அந்தப் புதிய மடத்தில் தங்கி எழுத்துப் பணியில் ஈடுபட ஆரம்பித்தார். முதலியாண்டான் தொடங்கி ராமானுஜரின் அத்தனை சீடர்களுக்கும் இது பெரும் வியப்பாக இருந்தது. யக்ஞமூர்த்தியின் மனமாற்றம் அவர்கள் சற்றும் எதிர்பாராதது. இது எப்படி நிகழ்ந்தது, எப்படி நிகழ்ந்தது என்று பேசிப் பேசி மாய்ந்தார்கள்.'அவர் பெரிய ஞானஸ்தர். அவரது அறிவின் ஆழம் வைணவ தரிசனத்துக்கு அவசியம் என்று எம்பெருமான் நினைத்திருக்கிறான். இதில் நமது பங்கு என்ன இருக்கிறது?' என்றார் ராமானுஜர்.அன்றைக்கு எங்கோ வெளியூரிலிருந்து நான்கு இளைஞர்கள் மடத்துக்கு வந்தார்கள்.'சுவாமி, உம்மிடம் மாணாக்கர்களாகச் சேர்ந்து உய்ய வந்துள்ளோம். தயைகூர்ந்து எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம்' என்று பணிந்து கேட்டார்கள்.ஒரு கணம் ராமானுஜர் அமைதியாகக் கண்மூடி யோசித்தார். பிறகு, 'நல்லது பிள்ளைகளே. அருளாளப் பெருமான் எம்பெருமானார் அங்கே காவிரிக் கரையில் தனியொரு மடத்தில் இருக்கிறார். அவரிடம் செல்லுங்கள். அவரை உமது ஆசாரியராகக் கொண்டு பயின்று வாருங்கள். அவருக்கு உரிய சேவைகளைச் செய்துவாருங்கள். அவர் உங்களுக்கு நற்கதி கொடுப்பார்.' என்று சொல்லி அனுப்பி வைத்தார்.அனந்தாழ்வான், எச்சான், தொண்டனுார் நம்பி, மருதுார் நம்பி என்ற அந்த நான்கு இளைஞர்களும் அப்போதே கிளம்பி அருளாளப் பெருமான் எம்பெருமானாரின் திருமடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.'என்ன விஷயம்?''சுவாமி, நாங்கள் உடையவரிடம் சீடர்களாகச் சேர்வதற்காகப் போனோம். அவரோ எங்களைத் தங்களிடம் அனுப்பி வைத்தார். நீங்கள்தாம் எங்களுக்கு ஆசாரியராக இருந்து அருள்பாலிக்க வேண்டும்!' என்று தாள் பணிந்து நிற்க, திகைத்துவிட்டார் அவர்.ஒரு கணம்தான். சட்டென்று ஆட்களை அழைத்தார். 'இம்மடத்தை இப்போதே இடித்துவிடுங்கள். இங்கே மடம் இருந்த சுவடே தெரியக்கூடாது!' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று சேரன் மடத்துக்குச் சென்றார்.'உடையவரே, இதென்ன அபத்தம்? நானே தங்களுடைய சீடனாகச் சேர்ந்து பயின்று கொண்டிருப்பவன். என்னிடம் நான்கு பேரை அனுப்பி ஏன் பரிசோதிக்கிறீர்கள்? இனி எனக்குத் தனி மடம் வேண்டாம். தங்கள் நிழலாக இங்கேயேதான் இருப்பேன். காலம் முழுதும் தங்களின் சீடனாகவே இருந்து கழிப்பேன்!'ராமானுஜர் புன்னகை செய்தார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -


இருவர்...


Advertisement



Ramanujar Download

















'நகர்வலம் போகலாமா?' என்று அகளங்கன் கேட்டான். உறையூர் சிற்றரசனுக்கு அவ்வப்போது அந்த ஆசை வந்துவிடும். ஆங்காங்கே பல்லக்கை நிறுத்தி இறங்கி மக்களோடு பேசுகிற அரசன். விக்கிரம சோழனுக்குக் கட்டுகிற கப்பத்தொகையை அவர்களே அளிக்கிறார்கள் என்பதை எப்போதும் மறவாத மன்னன். முடிந்ததைச் செய்வதில் அவனுக்கு ஒரு திருப்தி. செய்ய முடியாவிட்டாலும் காது கொடுத்துக் கேட்பதிலும் அன்பாக நாலு வார்த்தை பேசுவதிலும் அவனை விஞ்ச ஆள் கிடையாது. மக்களுக்குப் பிடித்த மன்னனாக இருப்பது எல்லோருக்கும் முடிகிற காரியமல்ல. அகளங்கன் அப்படி இருந்தான்.வில்லி அவனிடம் மெய்க்காப்பாளனாக இருந்தபோது வாரம் ஒருமுறையாவது நகர்வலம் கிளம்பிவிடுவான். ஒவ்வொரு பகுதியின் பிரச்னையையும் வில்லி முன்கூட்டியே மன்னனிடம் விவரித்துவிடுவது வழக்கம். என்ன பேசவேண்டும், எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று அவனுடன் விவாதித்துக்கொண்டு கிளம்பினால் போகிற காரியம் எளிதாக முடியும்.சந்தேகமில்லாமல் அகளங்கனுக்கு வில்லி பெரும் பலமாக இருந்தான். சட்டென்று இடம் மாறிச் சென்றுவிட்ட வில்லி.'என்னால் நம்பவே முடியவில்லை அமைச்சரே. நமது உறங்காவில்லி திருவரங்கத்து உடையவரின் தாசானுதாசராகி, அவரது மடமே கதியென்று கிடக்கிறாராமே?''ஆம் மன்னா. சேரன் மடத்துக்குச் சற்றுத் தள்ளி ஒரு குடிசை போட்டுக்கொண்டு வசிக்கிறார் என்று கேள்வி.''பொன்னாச்சி ஒப்புக்கொண்டுவிட்டாளா? இந்த வாழ்க்கை அவளுக்கும் பிடித்திருக்கிறதாமா?''நீங்கள் வேறு. அரங்கன் சேவையில் அவள் வில்லியை விஞ்சிவிடுகிறாள் என்று திருவரங்கத்துக்காரர்கள் சொல்கிறார்கள். உடையவர் இட்ட பணியை மறு கணமே இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நிறைவேற்றுகிறார்களாம்.''வியப்புத்தான். என்னிடம் வில்லி பணியாற்றிக் கொண்டிருந்தவரை பொன்னுக்கும் பொருளுக்கும் அவருக்குப் பஞ்சமே கிடையாது. முடிந்தவரை அவரை நாம் சௌக்கியமாகத்தான் வைத்திருந்தோம். சட்டென்று எப்படி இப்படியொரு துறவு மனப்பான்மை வந்துவிட முடியும்?' 'அது துறவு மனப்பான்மை அல்ல மன்னா. தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் நேசிப்பதில் இருந்து உயர்ந்து புவி முழுவதையும் நேசிக்கிற பெருமனம். உடையவரைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேருமே அப்படித்தான். வில்லிக்கு அவர் அரங்கனின் கண்ணைத் திறந்து காட்டிவிட்டாரே. அதற்குமேல் ஒருவர் எப்படி மாறாதிருக்க முடியும்?'அகளங்கனுக்கு அது தீராத வியப்பு. அப்படியா அப்படியா என்று வாய் ஓயாமல் வெகுநாள் கேட்டுக்கொண்டே இருந்தான். இனி அரங்கனின் சேவையே வாழ்க்கை என்று வில்லி முடிவெடுத்து திருவரங்கத்திலேயே தங்கத் தொடங்கியபோது, 'தொந்தரவு செய்யாதீர்கள், அவர் விருப்பப்படி இருக்கட்டும்' என்று சொன்ன மன்னன் அவன்.'வில்லி இங்கில்லாவிட்டால் என்ன? அவரது மருமகன்கள் இருவரும் நமது படையில்தானே பணியாற்றுகிறார்கள்?''யார், வண்டவில்லியையும் செண்டவில்லியையும் சொல்கிறீர்களா? அவர்களும் பாதி நேரம் சேரன் மடமே கதியென்றுதான் இருக்கிறார்கள். இங்கே வேலை முடிந்தால் அடுத்த நிமிடம் திருவரங்கத்துக்கு கிளம்பி விடுகிறார்கள்.''அட, அப்படியா?''ஆம் மன்னா. ராமானுஜரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்று அவர்களும் வைணவ தரிசனத்துக்குத் தம்மை ஒப்புக்கொடுத்துவிட்டதாகக் கேள்வி.'அகளங்கனுக்கு இது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. வில்லியின் மருமகன்கள் இருவரும் இளைஞர்கள். வாலிப மிடுக்கும் வயதின் வேகமும் கொண்டவர்கள். தவிரவும் மல்லர்கள். வீரம் அவர்கள் ரத்தத்தில் தோய்ந்தது. அகளங்கனின் படையில் முக்கியமான வீரர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள். காதல், திருமணம், குடும்பம், செழிப்பான வாழ்க்கை என்று இயல்பாக எழக்கூடிய ஆசைகளை ஒதுக்கிவிட்டு எப்படி அவர்களாலும் இறைப்பணியில் ஒதுங்க முடிந்தது?எப்படி யோசித்துப் பார்த்தாலும் அகளங்கனுக்குப் புரியவில்லை. 'எங்கே, கூப்பிடுங்கள் அவர்கள் இருவரையும். இன்று நகர்வலத்துக்கு அவர்களும் வரட்டும் நம்மோடு' என்று உத்தரவிட்டான்.செய்தி வண்டவில்லிக்குப் போனது. 'மன்னர்பிரான் அழைக்கிறார். நகர்வலம் புறப்பட வேண்டுமாம். உன்னையும் உன் சகோதரனையும் கையோடு அழைத்து வரச் சொன்னார்!''அப்படியா? இதோ' என்று இருவரும் புறப்பட்டார்கள்.வீட்டை விட்டு வெளியே வந்ததும் வானம் பார்த்த வண்டவில்லிக்குச் சட்டென்று சிறு தயக்கம் எழுந்தது. கருமேகங்கள் சூழத் தொடங்கியிருந்தன. சட்டென்று அவன் அரண்மனையை நோக்கி ஓடத் தொடங்கினான். செண்டவில்லியும் அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து உடன் ஓட, சில நிமிடங்களில் அரண்மனையை அடைந்தார்கள்.'நில்லுங்கள். எதற்கு இப்படி ஓடி வருகிறீர்கள்?' வாயிற்காப்போன் தடுக்க, 'அட நகர்ந்து நில்லப்பா... மன்னர் எங்கே? கிளம்பிவிட்டாரா? அவரைத் தடுத்தாக வேண்டும். வழியை விடு' என்று அவனை விலக்கிவிட்டு இருவரும் சபையை நோக்கி ஓட்டமாக ஓடினார்கள்.மன்னர் அங்கே நகர்வலத்துக்குப் புறப்பட்டு, மந்திரிகளுடன் தயாராகக் காத்திருக்க, 'ஓ மன்னா! நாரணன் வந்தான், நாரணன் வந்தான்! நகர்வலம் இன்று வேண்டாம் மன்னா!' மூச்சிரைக்கப் பேசினான் வண்டவில்லி.அகளங்கனுக்கு ஒன்றும் புரியவில்லை.'என்ன ஆயிற்று வண்டவில்லி? ஏன் நகர்வலம் வேண்டாம் என்கிறாய்?''வெளியே நாரணன் வந்துவிட்டான். அவன் உலாப் போகிறபோது நாம் போவது எப்படி?'மன்னனுக்கு அப்போதும் புரியவில்லை. 'மந்திரியாரே, வெளியே சென்று பார்த்து வாரும். இவன் சொல்வது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.'அமைச்சர் வெளியே போய்ப் பார்த்தார். அப்போது மழை வேகம் எடுத்திருந்தது. நகர்வலம் போவது சிரமம் என்று அவருக்கும் தோன்றியது. யோசனையுடன் உள்ளே வந்தவர், 'மன்னா, வெளியே நல்ல மழை பெய்கிறது. நாம் இன்னொரு நாளைக்கு நகர்வலம் போகலாம் என்று தோன்றுகிறது!'மன்னனுக்குப் பெரும் வியப்பாகிப் போனது. 'வண்டவில்லி, வெளியே மழைதானே வந்திருக்கிறது? நீ நாரணன் வந்தான் என்று சொன்னாயே.'சட்டென்று அவன் ஆழி மழைக்கண்ணா என்று பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரம். மேகங்களின் அதிபதியான பர்ஜன்ய தேவனை அழைத்து, கண்ணனின் கருணைப் பெருமழையே போல் பொழியச் சொல்கிற பாசுரம்.வண்டவில்லி பாடத் தொடங்கியதும் செண்டவில்லியும் சேர்ந்துகொண்டான். இருவரும் கண்மூடிக் கைகூப்பிப் பாடிக் களித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அகளங்கனுக்கு ஒரு கணம் அவர்கள் லவகுசர்கள் போலத் தெரிந்தார்கள். என்ன ஒரு மாற்றம்! எப்பேர்ப்பட்ட மாற்றம்! மழையைக் கண்டதும் நாரணன் வந்தான் என்று அறிவிக்க முடிகிற மனம் எப்பேர்ப்பட்ட மனம்! எல்லோருக்கும் முடியுமா இது? சொல்லிக் கொடுத்து வருவதா? பக்தி அனைவருக்கும்தான் இருக்கிறது. ஆனால் சிந்தை முழுதும் எம்பெருமானே நிறைந்திருப்பதென்பது எப்படி சாத்தியம்?'முடியும் மன்னா. ஒரு சம்பவம் சொல்கிறேன். முடியுமா முடியாதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!' என்றார் அமைச்சர்.
(நாளை தொடரும்...)writerpara@gmail.com
- பா.ராகவன் -
நாரணா! ஓ, நாரணா!
Advertisement



Ramanujar Download

















தம்மை மறந்த லயிப்பில் பிரபந்தம் பாடியபடி ஊர்வலம் மெல்லப் போய்க் கொண்டிருந்தது. அத்தனை பேரும் ராமானுஜரின் சீடர்கள். அவ்வப்போது அருகிலுள்ள திவ்யதேசங்களுக்கு அவர்கள் இவ்வாறு யாத்திரை கிளம்பி விடுவார்கள். முதலியாண்டான் சிலசமயம் உடன் வருவார். அவர் வேறு வேலையாகப் போயிருக்கிற நாள் என்றால் கூரத்தாழ்வான் வருவார். மடத்தின் மூத்த சீடர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக உண்டு. புதிய சீடர்களுக்குப் பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்து, விளக்கம் சொன்னபடி யாத்திரை முன்னேறும்.

அன்றைக்கு வில்லிதாசர் முன்வரிசையில் பாசுரம் சொன்னபடி போய்க் கொண்டிருந்தார். பின்னால் நுாற்றுக்கணக்கான புதிய சீடர்கள். அத்தனை பேரும் உடையவரே கதி என்று நம்பி வந்து சேர்ந்தவர்கள். வண்டவில்லியும் செண்டவில்லியும் ஊர்வலத்தின் கடைசி வரிசையில் வந்து கொண்டிருந்தார்கள். ராமானுஜரிடம் சேர்ந்ததில் இருந்து அவர்கள் வில்லிதாசரைத் தாய்மாமன் என்று எண்ணுவதே இல்லை. அவர் உயவரின் பேரன்புக்குப் பாத்திர
மான சீடர்களுள் ஒருவர். தவிரவும் அரங்கனே கண் திறந்து நோக்கிய அற்புதப் பிறப்பு. சந்தேகமில்லாமல் மகான். அவர் பெற்ற அருளில், அவர் பெற்ற அறிவில் ஆயிரத்தில் ஒரு பங்கு தமக்கும் வாய்க்காதா என்ற ஞானத்தேடலுடன் வந்து இணைந்திருந்தார்கள். ஆனால் சக சீடர்களிடையே அவர்கள் இருவரைப் பற்றி அவ்வப்போது சில்மிஷமான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வில்லி சகோதரர்களின் தோற்றமும் நடையும். அவர்கள் மல்லர்கள். வரிந்து கட்டிக்கொண்டு குஸ்தியில் இறங்கினால் ஊரே அதகளப்படும்.
கட்டுமஸ்தான தேகமும் கொழுத்த கன்னங்களும் திரண்ட தோள்களும் முறுக்கிய மீசையுமாகப் பார்க்கவே சற்று பயங்கரமாக இருப்பார்கள். அந்தத் தோற்றத்தில் அவர்கள் தரிக்கும் திருமண் காப்பு சட்டென்று ஒரு சிறு நகைப்பைக் கொடுக்கும்.'அவன் தொப்பையைப் பாரேன்! பொங்கல் பானைக்குத் திருமண் சாற்றியது போல!''அந்த மீசைக் கண்ணராவியை எடுத்துத் தொலைக்கவும் மாட்டேன் என்கிறான். நடு ராத்திரி அவனைப் பற்றி நினைத்துக்கொண்டு விட்டால் விடிகிற வரைக்கும் பயமாகவே இருக்கிறது!' 'மன்னனுக்கு மல்லர்கள் சகாயம் தேவைதான். நமது மடத்துக்கு எதற்கு இவர்கள்? இவன் பிரபந்தம் சொல்லுகிற லட்சணத்தைப் பார்த்தால் நாராயணனே அலறிக்கொண்டு ஓடிவிடுவான். ல, ள, ழ உச்சரிப்பில் சகோதரர்கள் இருவரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்!''உடையவர் எப்படித்தான் சகித்துக் கொள்கிறாரோ.''அவரை விடப்பா. கேட்டால், மனத்தில் பக்தி இருந்தால் போதும் என்று சொல்லிவிடுவார்.
''இந்த மாமிச மலைகளின் மனத்தில் பக்தியும் இருக்குமா என்ன?''சந்தேகமாக உள்ளதா? பரிசோதித்துப் பார்த்து விடுவோமா?'அன்றைக்கு அவர்கள் விபரீதமாக ஒரு விளையாட்டை ஆடிப் பார்க்க முடிவு செய்தார்கள்.சீடர்கள் நடந்து கொண்டிருந்த பாதையில் ஒரு சமணர் கோயில் எதிர்ப்பட்டது. வாயிலில் சிங்கமும் யானையும் செதுக்கப்பட்ட பெரும் கற்கள் எழுந்து நின்றன. அந்த இடத்தை ஊர்வலம் கடந்தபோது விஷமக்காரச் சீடர்கள் சிலர் வில்லி சகோதரர்களை அழைத்தார்கள்.'வண்டவில்லி, பெருமாள் கோயிலைக் கடந்து கொண்டிருக்கிறோம்! கோயிலை கவனிக்காமல் எங்கே பராக்குப் பார்த்துக்கொண்டு வருகிறீர்கள் இருவரும்?'பாசுரத்தில் கவனமாக இருந்த வில்லி சகோதரர்கள் இருவரும் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். ஒரு கணம்தான். தடாலென இருவரும் அந்த இடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டார்கள். நாராயண, நாராயண என்று, ஓங்கி உலகளந்த உத்தமனை எட்டும் ஆவேசத்துடன் அவர்கள் குரல் கொடுத்தபடியே விழுந்து சேவித்துக் கொண்டிருக்க, முன்னால் சென்ற சீடர்கள் திகைத்துப் போய் அப்படியே நின்றுவிட்டார்கள்.'என்ன ஆயிற்று உங்கள் இருவருக்கும்? இது சமணர் ஆலயம். எழுந்திருங்கள்!'யார் யாரோ குரல் கொடுத்துப் பார்த்தும் இருவரும் எழவில்லை. நாராயண, நாராயண என்று தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருந்தவர்கள் பக்திப் பரவசத்தில் அப்படியே மயங்கிப் போனார்கள்.முன்னால் போய்க் கொண்டிருந்த வில்லிதாசர் திரும்பிப் பார்த்தார். 'என்ன அங்கே பிரச்னை?''சுவாமி, வண்டவில்லியும் செண்டவில்லியும் சமணர் ஆலயத்தைப் பெருமாள் கோயில் என்று நினைத்து விழுந்து சேவித்தார்கள். விழுந்தவர்கள் எழவில்லை. அப்படியே மயங்கி விட்டார்கள்.'வில்லிதாசர் புன்னகை செய்தார். மெல்ல அவர்கள் அருகே வந்தார். 'யாராவது ஓடிச் சென்று தண்ணீர் கொண்டு வாருங்கள். மயக்கம் தெளிவிக்க வேண்டும்.' யாரோ சொன்னார்கள்.'இல்லை, தண்ணீர் வேண்டாம். வில்லிதாசரே! நீர் நிற்கும் இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நில்லுங்கள்' என்றார் இன்னொரு சீடர்.வில்லிதாசருக்குப் புரியவில்லை. இருப்பினும் சட்டென்று நகர்ந்து நிற்க, அவர் குனிந்து வில்லிதாசர் நின்ற இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி மயங்கிக் கிடந்த வில்லி சகோதரர்கள் மீது துாவினார்.
சட்டென்று அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தார்கள்.கூட்டம் திகைத்துவிட்டது. வில்லிதாசருக்கே தாங்க முடியாத வியப்பு.'சுவாமி! துளசி தீர்த்தம் தெளித்து மயக்கம் தெளிவிக்கலாம். பரம பாகவதரான தங்களது பாதம் பட்ட மண்ணும் அதற்கு நிகரானதே. தவிரவும் பெருமாள் கோயில் என்று சொன்னதும் சற்றும் யோசிக்காமல் விழுந்து சேவித்த இவர்கள் இருவரும் தங்களுக்குச் சரியான வாரிசுகள்தாம். துாணிலும் துரும்பிலும் இருப்பவன் இச்சமணக் கோயில் இருக்கும் இடத்தில் மட்டும் இல்லாதிருந்து விடுவானா?'விளையாட்டுக்கு வில்லி சகோதரர்களை சமணர் ஆலயத்தின்முன் விழவைத்த சீடர்கள் வெட்கத்தில் சுருங்கிப் போனார்கள்.அகளங்கனிடம் இந்தக் கதையைச் சொன்ன அமைச்சர், 'மன்னா!
வண்டவில்லியும் செண்டவில்லியும் மழை வந்ததை நாரணன் வந்தான் என்று சொன்னதன் காரணம் புரிகிறதா? அவர்களுக்கு மழையும்
நாரணன்தான், வெயிலும் நாரணன்தான். இரவும் பகலும் ஒளியும் இருளும் அனைத்தும் நாரணனே. சமணர் ஆலய வாசலிலும் நாரணன் பொற்பாதங்களைக் கண்டவர்கள் அவர்கள்.''நம்பமுடியாத வியப்பாக இருக்கிறது அமைச்சரே. வில்லி சகோதரர்களே, உங்களது பக்தி மகத்தானது. நீங்கள் இங்கே அரண்மனைச் சேவை செய்துபொழுதை வீணாக்காதீர்கள். இனி நீங்கள் உங்கள் விருப்பப்படி எப்போதும் திருவரங்கத்திலேயே இருக்கலாம். உடையவர் அருகிலேயே வசிக்கலாம். மாதம்தோறும் உங்கள் சம்பளம் மட்டும் உங்களைத் தேடி வந்து
விடும். அந்தக் கவலை வேண்டாம்.' என்றான் அகளங்கன்.'நன்றி மன்னா. அங்கே ஆலயத் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. உடையவர் எங்கள் இருவரையும் அந்த வேலையில்தான் ஈடுபடுத்தியிருக்கிறார். உங்களுடைய நல்ல மனத்தால் இனி நாங்கள் முழு
நேரமும் அரங்கன் சேவையில் ஈடுபடுவோம்.' என்றான் செண்டவில்லி.'நல்லது. விரைவில் நான் திருவரங்கம் வருகிறேன். உங்கள் உடையவரை நானும் தரிசிக்க வேண்டும்!'

(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன் -

மன்னன் வந்தான்
Advertisement



Ramanujar Download

















வில்லிதாசரால் முதலில் நம்ப முடியவில்லை. உண்மையாகவா, உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

'ஆம் சுவாமி. மன்னருக்கு மனத்தில் என்னவோ பட்டிருக்கிறது. நமது ஆசாரியரை அவர் இதுவரை சந்தித்ததில்லை என்றாலும் அவர்மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறார். விரைவில் நேரில் வந்து தரிசிப்பதாகவும் சொன்னார்.'
'நல்லது செண்டவில்லி. இதுவும் அரங்கன் திருவுள்ளம்தான். அரங்கன் சேவையில் ஒரு மன்னனுக்கு ஈடுபாடு இருக்குமானால் மிகவும் நல்லது என்று உடையவர் சொல்லுவார். அகளங்கன் மூலம் அது நடக்குமானால் நமக்கும் மகிழ்ச்சியே.'
'அப்புறம் இன்னொரு விஷயம் உண்டு.'
'சொல் மருமகனே.'
'மன்னர் இனி எங்களை அரண்மனைப் பணிக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார். திருமடத்திலேயே இருந்து கொள்ளலாம் என்றும் மாதச் சம்பளம் சரியாக வந்துவிடும் என்றும் சொன்னார்.'
வில்லிதாசருக்கு இது இன்னும் நம்ப முடியாததாக இருந்தது. தாம் உறையூரை விட்டு வந்தது முதல் அங்கே திரும்பிச் செல்லவேயில்லை என்பதை எண்ணிப் பார்த்தார்.
'என்மீதே அவருக்கு நிரம்ப வருத்தம் இருக்கும் என்று நினைத்தேன்.'
'இல்லை சுவாமி. நீங்கள் உடையவரின் வழிகாட்டுதலில் அரங்கன்திருப்பணியில் ஈடுபட ஆரம்பித்ததில் அவருக்கு மகிழ்ச்சிதான். நாங்களும் உங்களைப் பின்பற்றி இங்கே வந்துவிட்டோம் என்பதுதான் அவருக்கு வியப்பே. ஆனால் அவரவர் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிட வேண்டாம் என்று மன்னர் கருதுகிறார் போலிருக்கிறது.'
'விருப்பங்களில் தலையிடாமல் இருப்பது பெரிய விஷயமில்லையப்பா. ஆனால் நீ மடத்தில் தங்கிக்கொண்டு கோயில் கைங்கர்யம் செய்வதற்கு அவர் மாதச் சம்பளம் அனுப்புவார் எனச் சொன்னாய் அல்லவா? அதுதான் பெரிது. நம்பவே முடியாத ஆச்சரியமாக இருக்கிறது.'
வில்லிதாசர் சொல்லிக் கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு குரல் இடைமறித்தது.
'ஆனால் இது தவறு பிள்ளைகளே!'
குரல் வந்த திசையில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். ராமானுஜர் அங்கே நின்றிருந்தார்.
'சுவாமி...'
'கேட்டேன் வில்லிதாசரே. அகளங்கன் பரந்த மனம் படைத்தவன் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அரசு உத்தியோகத்தில் இருக்கிறவர்கள், அரசாங்கத்துக்கு உழைக்காமல் சம்பளம் மட்டும் பெறுவது தவறு.'
'சுவாமி, நாங்கள் எங்களுக்காக அதைச் செலவிடப் போவதில்லை. மன்னர் அனுப்புகிற பணத்தை அப்படியே திருப்பணிகளுக்குத்தான் கொடுத்துவிட இருக்கிறோம்.'
'அது இன்னும் தவறு. உழைக்காமல் ஈட்டப்படும் செல்வத்தை அரங்கன் ஒருபோதும் ஏற்க மாட்டான். நீங்கள் உடனே அகளங்கனிடம் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்.'
வண்டவில்லியும் செண்டவில்லியும் அன்றே கிளம்பி உறையூருக்குப் போனார்கள். மன்னரைப் பார்த்து உடையவர் சொன்னதைச் சொன்னார்கள்.
'மன்னர்பிரானே, தாங்கள் தவறாக எண்ணக்கூடாது. உழைக்காமல் வருகிற செல்வத்தை அரங்கன் விரும்ப மாட்டான் என்று உடையவர் சொல்லிவிட்டார். அதனால் எங்களுக்கு இனி சம்பளம் ஏதும் அனுப்பாதீர்கள். உடையவரிடம் பணிபுரிய எங்களை அனுமதித்ததே எங்களுக்குப் போதும்.'திகைத்துப் போனான் அகளங்கன்.
'இப்படி ஒரு மனிதரா?'
'மன்னியுங்கள் மன்னரே. அவர் சராசரி மனிதரல்லர். சராசரிகளால் எட்ட முடியாத உயரங்களில் சஞ்சரிப்பவர். அரங்கனுக்கு உவப்பானவர்.' என்றான் வண்டவில்லி.
'அது மட்டும் இல்லை அரசரே. திருவரங்கத்துக்கு அவர் வந்த அன்று அரங்கப்பெருமானே அவரை அழைத்து நீரே இனி உடையவர் என்று திருவாய் மலர்ந்திருக்கிறான்!'
'அப்படியா? இது எனக்குப் புதிதாக இருக்கிறதே.'
'ஆம் மன்னா. உபய விபூதிச் செல்வங்களாகச் சொல்லப்படும் மண்ணுலகம், விண்ணுலகம் அனைத்துக்கும் உடையவர் அவர் ஒருவர்தாம். இதை இன்னொரு மனிதர் சொல்லியிருந்தால் நாம் பொருட்படுத்தியிருக்க வேண்டாம். ஆனால் அரங்கனே சொன்னது இது. இதற்கு அரங்க நகரமே சாட்சி.'
திகைத்துப் போனான் அகளங்கன். 'சரி, நீங்கள் போகலாம்' என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அடுத்த நாளே அவன் திருவரங்கம் புறப்பட்டான்.
முன்னறிவிப்பு கிடையாது. எப்போதும் உடன் வரும் மந்திரிகள் கிடையாது. மெய்க்காப்பாளர்கள் கிடையாது. பல்லக்கு பரிவாரங்கள் கிடையாது. அகளங்கன் தனியாகவே திருவரங்கம் கிளம்பினான். கோயில் வாசலில் அவனைப் பார்த்துவிட்ட வில்லிதாசருக்கு ஒரே பரபரப்பாகப் போய்விட்டது.
'வரவேண்டும் மன்னர் பிரானே! நீங்களா இப்படித் தன்னந்தனியாக...'
'அதெல்லாம் பிறகு. நீர் சுகமாயிருக்கிறீரா? அதைச் சொல்லும் முதலில்!'
'யாருக்கும் கிட்டாத பேரானந்த வாழ்வு எனக்கு வாய்த்தது ஐயா. எனது ஆசாரியரின் திருவடி நிழலில் பரம சுகமாக இருக்கிறேன். பாசுரங்கள் கற்கிறேன். கோயில் திருப்பணியில் ஈடுபடுகிறேன். உடையவர் தினமும் பாடம் சொல்லித் தருகிறார். உபன்னியாசம் செய்கிறார். அதையெல்லாம் கேட்கிறேன். ஒரு ஞானப்பெருங்கூட்டில் இந்தக் காட்டுக்குருவிக்கும் எப்படியோ இடம் கிடைத்துவிட்டது!'
'மிக்க மகிழ்ச்சி வில்லிதாசரே. நான் உங்கள் உடையவரைக் காணத்தான் கிளம்பி வந்தேன்.'
வில்லிதாசர் திகைத்துவிட்டார்.
'எங்கள் உடையவரா! மன்னா, அவர் அனைவருக்கும் உடையவர். அனைத்தும் உடையவர். வாருங்கள் என்னோடு' என்று அழைத்துக்கொண்டு மடத்துக்கு விரைந்தார்.
அன்று அது நடந்தது.
அகளங்கன் ராமானுஜரை வணங்கி எதிரே அமர்ந்து பேச ஆரம்பித்தான்.
'சுவாமி, வில்லியும் அவரது மருமகன்களும் எனது படையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள். அவர்களைப் பன்னெடுங்காலமாக நான் அறிவேன். நானறிந்த அவர்கள் வேறு. ஆனால் இப்போது காண்கின்ற நபர்கள் வேறு. அவர்கள் முகத்தில் தெரிகிற சாந்தம், பேச்சில் உள்ள அழுத்தம், செயல்பாடுகளில் காணப்படுகிற சிரத்தை, அனைத்துக்கும் மேலாக என்னவோ ஒன்று... அதை எனக்கு விளக்கத் தெரியவில்லை. மூன்று மல்லர்களை நீங்கள் என்னவாகவோ மாற்றிவிட்டீர்கள்.'
ராமானுஜர் சிரித்தார். 'நான் மாற்றவில்லை மன்னா. வில்லிதாசரை அரங்கனின் கண் மாற்றியது. அவரது மருமகன்களை அவரது மாற்றமே உருமாற்றியது.'
'ஆனால் ஊர் உலகெங்கும் உங்களைப் பற்றியே பேசுகிறார்களே! நீங்கள் புனிதங்களைப் பொதுமைப்படுத்துவதாகக் கூடச் சொன்னார்கள்.'
'புனிதம் என்று எதைக் கருதுகிறீர்கள்? பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே புனிதன். அவனது தாளைப் பற்றிக்கொள்கிற அத்தனை பேரும் புனிதத்துடன் சம்பந்தம் கொண்டு விடுகிறார்கள் அல்லவா? நீரில் கலப்பது நீராகிறது. நெருப்பில் கலப்பது நெருப்பாகிறது. புருஷோத்தமனின் பாததூளி
அனைத்தையும் பரிசுத்தமாக்கி விடுகிறது. எனவே புனிதம் என்று தனியே ஒன்றுமில்லை மன்னா.'
'ஜாதி, வருண வித்தியாசங்கள் கூடவா கிடையாது?'உடையவர் அவனை உற்றுப் பார்த்தார். கனிவாகப் புன்னகை செய்தார். பிறகு பேச ஆரம்பித்தார்.

(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன் -
ஆழ்வான் ஆனவன்
Advertisement



Ramanujar Download

















'மன்னனே... இந்த உலகையும் உயிர்களையும் படைத்தவன் இறைவனே என்றால் தனது படைப்புகளுக்குள் அவன் எப்படி பேதம் பார்ப்பான் அல்லது பிரித்து வைப்பான்? பேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுபவை. வாழ்வின் மீதான அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிப்போர் தமது குறைந்தபட்ச பாதுகாப்புக்காக உருவாக்கிக் கொண்டதே மேல் சாதி என்கிற அடையாளம். அது கீழே நிற்கும் சிங்கத்துக்கு பயந்து மரக்கிளை மீது ஏறி நின்று கொள்வது போல. ஒரு சூறைக்காற்று கிளையை முறித்துவிடும் என்பதை எண்ணிப் பாராமல் செய்கிற குழந்தைத்தனம். ஞானமும் பக்தியும் சாதி பார்க்காது. கனியின் ருசியைப் போன்றது அது. மண்ணுக்குள் இருக்கிறவரை எந்த விதை என்னவாக விளையும் என்று யாருக்குத் தெரியும்? விளைச்சல் சரியாக இருக்கிறபோது ருசியும் மணமும் இயல்பாகச் சேரும்.' என்றார் ராமானுஜர்.

'நீங்கள் சொல்வது வியப்பாக உள்ளது சுவாமி. இறைவனை நெருங்கத் தகுதி என்ற ஒன்று இல்லவேயில்லையா?''பக்தி ஒன்றே தகுதி. சாதியல்ல. வேறு எதுவும் அல்ல. ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். ஆழ்வார்களில் எத்தனை பேர் அந்தணர்கள்? வேதம் தமிழ் செய்த மாறன் என்ன இனம்? திருப்பாணாழ்வார் என்ன சாதி? மங்கை மன்னன் என்ன அந்தணனா? இவர்களை விட இறைவனை நெருங்கியவர்கள் யார்?''ஆஹா. அப்படியானால் என் பக்தி சரியாக இருந்தால் என்னாலும் இறைவனை நெருங்க முடியுமா?''நீ ஏன் நெருங்குகிறாய்? அவன் நெருங்குவான் மன்னா! உன்னை அள்ளி எடுத்து அரவணைத்துக் கொள்வதைவிட அவனுக்கென்ன வேலை? உமது வில்லியைக் கொள்ளை கொண்டவன் அவன். இங்கே தாழ்ந்த குலத்தவர் என்று ஊரார் ஒதுக்கி வைத்த மாறனேர் நம்பிக்கு மோட்சத்தின் வாசலைத் திறந்து வைத்தவன். பரமாத்மாவுக்கு பேதம் கிடையாது. பேதம் பார்ப்பது பரமாத்மாவாக இருக்க முடியாது.''நீங்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்குப் பரவசமாயிருக்கின்றன.

காலகாலமாக வேதம் ஓதுபவர் உயர்ந்தவர் என்றும் மற்றவர்கள் தாழ்ந்தவர் என்றும் சொல்லிச் சொல்லியே வளர்த்துவிட்ட சமூகம் சுவாமி இது! உங்களை ஏன் புரட்சிக்காரர் என்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது.' 'அடக்கடவுளே! இதுவா புரட்சி? இது அடிப்படை உண்மை மன்னா. மிக எளிமையான சுட்டிக்காட்டல். மோட்சத்தில் விருப்பம் கொண்ட யாரும் பேதத்தில் மயங்கிக் கிடக்க மாட்டார்கள். தக்கார் தகவிலார் என்பது எச்சத்தால் காணப்படும் என்பார்கள்.
சாதியின் உச்சம் அல்ல தகுதி. வாழ்ந்த வாழ்வின் சாரம் என்னவென்று பாருங்கள்.
பக்தி செய்தோமா, பாகவதனாக இருந்தோமா, பரோபகாரம் நமது இயல்பாக இருக்கிறதா, மனித குலத்தின்மீது நிபந்தனையற்ற அன்பு நமக்கு இருக்கிறதா, பிரதிபலன் நோக்காது இருக்கிறோமா... பார்க்க வேண்டியவை இவை மட்டும்தான்.'அகளங்கன் கண் கலங்கிப் போனான். பரவசம் பொங்கக் கைகள் இரண்டையும் கூப்பி நின்றான்.'சுவாமி, இந்த அற்பனை ஒரு பொருட்டாக மதித்து இத்தனை நல்லவற்றைச் சொல்லியிருக்கிறீர்கள்.

இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்!''வைணவம் கைம்மாறு எதிர்பார்க்காது அகளங்கா. சொன்னேனல்லவா? நிபந்தனையற்ற அன்பு ஒன்றே அதன் அடையாளம். அது மனித குலத்தின்மீது வைக்க வேண்டியது. எதிர்பார்ப்புகளற்ற சரணாகதி ஒன்றே உச்சம். அது பரமாத்மாவின்மீது செய்யப்பட வேண்டியது.''இரண்டையும் செய்ய நான் சித்தமாயிருக்கிறேன் சுவாமி!''அப்படியென்றால் நீயும் ஒரு வைணவனே.''வில்லிதாசருக்குக் கிட்டிய பேரருள் எனக்கும் வாய்க்குமா? காண்பதெல்லாம் கண்ணனே என்று தீர்மானமாக இருக்கிற அவரது மருமகன்களைப் போன்ற மனம் எனக்கும் அமையுமா? எனக்கு வேதம் தெரியாது. எதுவும் தெரியாது. நான் வெறும் மன்னன். தகுதியென்று எனக்கு இருக்கிற எதுவும் தகுதியே அல்ல என்று இன்று தெளிந்தேன்.
கடையனிலும் கடையனான எனக்கும் கதி மோட்சம் உண்டா?'ராமானுஜர் அவனை நெருங்கி ஆசீர்வதித்தார். அகளங்கன் அன்று முதல் அகளங்க நாட்டாழ்வான் ஆகிப் போனான்.'அகளங்கா! நாம் அனைவரும் அரங்கன் ஆளும் மண்ணில் வசிக்கிறவர்கள். அரங்கனின் கோயில்
தான் நமது கோட்டை. அங்கே நடைபெறுகிற சிறு அசைவும் ஒரு திருவிழாவாகவே இருக்கவேண்டும்.''ஆம் சுவாமி. ஒப்புக் கொள்கிறேன்.'
'அரங்கன் பணியில் இருப்போரை நாம் பத்து தனித்தனிக் கொத்துகளாகப் பிரித்துப் பணியாற்ற வைத்திருக்கிறோம். திருவரங்கத்துக்கு வருகிற பாகவத உத்தமர்களை கவனித்துக் கொள்கிறவர்கள் திருப்பதியார் கொத்து. திருப்பாற்கடல் தாசர், திருக்குருகைப் பிரான் பிள்ளை தொடங்கி, இங்கே உள்ள பல நிலச்சுவாந்தார்கள், பெரிய மனிதர்கள் அந்தக் கொத்தில் இருக்கிறார்கள்.''ஓ!''கோயில் திருப்பணியில் ஈடுபட்டிருப்போரை கவனித்துக் கொள்வதும், திருப்பணிகள் தடையற்று நடப்பதற்கு ஆவன செய்வதும் இரண்டாம் கொத்திலர்களின் பணி. நாலுகவிப் பெருமாள் தாசர், திருக்குருகூர் தாசர், சடகோப தாசர், திருக்கலிகன்றி தாசர், ராமானுச தாசரென ஐந்து பேர் அப்பணியில் இருக்கிறார்கள். மூன்றாவது கொத்து பாகவத நம்பிமார். இவர்கள் பெருமாளின் திருவாராதன கைங்கர்யங்களை கவனிப்பவர்கள். உள்ளூரார் என்கிற அடுத்தக் கொத்தினர் மேற்படி திருவாராதன கைங்கர்யம் செய்வோருக்கு உதவி
செய்கிற குழுவினர். தோதவத்தித் துாய்மறையோர் என்று சொல்லப்படும் கொடுவாள் எடுப்பார் குழுவில் இருந்து இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.' 'ஆஹா!''விண்ணப்பஞ்செய்வார் திருக்கரகக் கையார், ஸ்தானத்தார், பட்டாள் கொத்து என்று அடுத்தடுத்து பல குழுவினர்கள் உண்டு. கோயில் திருவாசல் காப்போரை ஆரியபட்டாள் கொத்து என்று சொல்கிறோம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் காலம் தொடங்கி கோயிலுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யும் புண்டரீகதாசர் வம்சத்தவர்கள் பத்தாம் கொத்தில் வருவார்கள். அவர்களை தாசநம்பி கொத்து என்போம்.''நல்லது சுவாமி. அரங்கன் சேவை யில் அடியேனை எந்தக் கொத்தில் தாங்கள் சேர்ப்பீர்கள் என்று அறிய ஆவலாயிருக்கிறேன்.'ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி யோசித்தார். 'அகளங்கா, நீ மன்னன். நிர்வாகம் தெரிந்தவன். வேலைகள் சரிவர நடக்கிறதா என்று கண்காணிக்க முடிந்தவன். அந்தத் திறமையை நீ அரங்கன் சேவையில் செலுத்து.'
'உத்தரவு சுவாமி!''இன்று முதல் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைப் பரிபாலிக்கிற பொறுப்பு உன்னுடையது. வருமானம் சிந்தாமல் ஸ்ரீபண்டாரத்தை வந்தடையும் வரை நீ கவனித்துக்கொள்ள வேண்டியது.'அகளங்கன் கைகூப்பித் தாள் பணிந்தான். ஸ்ரீபண்டாரம் என்கிற கஜானாவை கவனிக்கத் தொடங்கும்முன் ஆயிரம் பொற்காசுகளைத் தம் பங்காக அதில் கொண்டு வந்து சேர்த்தான். தன்னிடம் பணியாற்றிக் கொண்டிருந்த மணவாள மாராயன்,
கிடாரத்து அரையன், உலகநாத அழகான், சோழ மாராயன் என்று பலபேரைத் திருவரங்கன் திருப்பணியில் ஈடுபடுத்தினான்.வைணவ உலகம் வியப்பில் வாய்பிளந்து நின்றது.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


நந்தவனம்

Advertisement




Ramanujar Download

















பெரிய திருமலை நம்பி தகவல் அனுப்பியிருந்தார். உடையவர் சொல்லியிருந்தபடி திருமலையில் ஒரு பெரிய நந்தவனம் தயாராகிவிட்டது. பூத்துக் குலுங்கும் அதன் பேரெழில் பற்றி வியக்காதோர் கிடையாது. அனந்தாழ்வானும் அவனது மனைவியும் பகலிரவாக நந்தவனத்தை உருவாக்கும் பணியிலேயே ஈடுபட்டு அதையே தமது தியானமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு நடை திருமலைக்கு வந்து சேவித்துவிட்டு அனந்தாழ்வானின் நந்தவனத்தையும் பார்த்துவிட்டுப் போகலாமே?
ராமானுஜருக்கு மிகுந்த மன நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. திருமலையில் ஒரு நந்தவனம் என்பது அவர் கனவு. நெடுநாள் கனவு. ஒரு சமயம் தமது சீடர்களுக்கு அவர் திருவாய்மொழி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். முதலியாண்டான், கூரத்தாழ்வான் தொடங்கி, அருளாளப் பெருமான் எம்பெருமானார் வரை அத்தனை சீடர்களும் சபையில் கூடியிருந்தார்கள். மடத்தில் புதிதாகச் சேர்ந்திருந்த சீடர்களும் நெடுங்காலமாக ராமானுஜருடனேயே இருப்போருமாக நுாற்றுக்கணக்கானோர் நிறைந்த சபையாக இருந்தது அன்று.பாசுரங்களைச் சொல்லி விளக்கம் அளித்துக்கொண்டே வரும்போது சட்டென்று ஒரு வரியில் ராமானுஜர் நிலைத்து நின்றார்.எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும் முந்தை வானவர் வானவர் கோனொடும்சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே என்பது பாசுரம். மரணமற்ற பெருவாழ்வு வாழ்கிற தேவர்கள் தமது தலைவரான சேனை முதலி யாரோடு வந்து மலர் துாவிப் போற்றித் துதிக்கிற திருவேங்கடம். தேவர்கள் துதிக்க வரும்போது பூக்களைக் கையோடு எடுத்து வந்திருப்பார்களா அல்லது திருவேங்கடத்தில் இருந்தே பறித்துக் கொண்டிருப்பார்களா? 'அவர்கள் ஏன் எடுத்து வரப் போகிறார்கள் சுவாமி? அங்கேயேதான் பறித்திருப்பார்கள்.' என்றார்கள் சீடர்கள்.'தேவர்கள் உவந்து பறிக்கத்தக்க மலர்கள் அன்றைக்கு அங்கே பூத்திருக்கின்றன. ஆழ்வார் அதை எப்படி சிலாகித்திருக்கிறார் பாருங்கள். பறிக்கக்கூட வேண்டாம். பூக்கள் சிந்திக்கொண்டே இருந்திருக்கின்றன அன்றைக்கு. ஆனால், இன்றைக்குத் திருவேங்கடத்தில் ஒரு நந்தவனம் கூட இல்லையே.' என்றார் ராமானுஜர். சீடர்கள் அமைதியாக இருந்தார்கள். ராமானுஜரும் சில வினாடிகள் அமைதியாகவே இருந்தார். சட்டென்று, 'உங்களில் யாராவது திருவேங்கட மலைக்குச் சென்று அங்கே பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யத் தயாராக இருக்கிறீர்களா?' என்று கேட்டார். இதே போன்ற ஒரு தருணம் பெரிய திருமலை நம்பியின் வாழ்வில் நிகழ்ந்ததை அவர் எண்ணிப் பார்த்தார். அப்போது கேட்டவர் ஆளவந்தார். 'இதோ நான் இருக்கிறேன்' என்று அந்தக் கணமே திருமலைக்குக் கிளம்பிப் போன பெரிய திருமலை நம்பி இன்றுவரை அங்கேயேதான் இருக்கிறார். அவருக்கு உதவியாக ராமானுஜரின் தம்பி கோவிந்தன் அங்கே கைங்கர்யங்கள் புரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு நந்தவனம் உருவாக்கி, பராமரித்து, தினமும் திருமலையப்பனுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ய இன்னொருவர் தேவை. பொறுப்பை ஏற்கிற ஒருவர். அது ஒன்றே தமது வாழ்வின் நோக்கமாகக் கருதி ஏற்கக்கூடியவர். அப்படி யாரும் இங்கே உண்டா? ராமானுஜர் கேட்டபோது அனைவருமே தயங்கினார்கள். திருமலைக்குச் செல்வது என்பது பெரிய காரியம். பாதை கிடையாது. பகலிரவு தெரியாது. காட்டு மிருகங்களின் ஆதிக்கம் அதிகம். ஏழு மலைகளுக்கு அப்பால் எம்பெருமான் கோயில் கொண்டிருக்கிறான் என்பது உண்மையே. ஏறிப் போய்ச்சேர்ந்துவிட்டால் அவன் பார்த்துக்கொள்வான்தான். ஆனால் போய்ச் சேருகிறவரை புலிகளுக்குப் பசிக்காதிருக்க வேண்டுமே?அத்தனை பேருமே தயங்கிக் கொண்டிருந்தபோது சட்டென்று அனந்தாழ்வான் எழுந்து நின்று கைகூப்பினான். 'சுவாமி, அடியேனுக்கு உத்தரவிடுங்கள். நான் இன்றே திருமலை புறப்படுகிறேன்.'ராமானுஜர் புன்னகை செய்தார். 'சிறப்பு. ஆனால் நீ திருமணமானவன் ஆயிற்றே? உன் மனைவி இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே? திருவரங்கம் போல அங்கே வசதிகள் கிடையாது. ஜனசந்தடி கூட அநேகமாகக் கிடையாது. ஒரு அவசர ஆத்திரத்துக்கு எதுவும் கிடைக்காத இடம் என்று கேள்விப்பட்டேன்.''எம்பெருமான் இருக்கிறான் அல்லவா? அவன் நிழலில் நாங்கள் இருந்துகொள்வோம் சுவாமி. எங்களுக்கு வேண்டியது என்னவென்று அவனுக்கா தெரியாது?''அருமை அனந்தாழ்வான். உனது துணிவு என்னைக் கவர்கிறது. எம்பெருமான் என்றும் உனக்குத் துணை இருப்பான். கிளம்பு!' என்றார் ராமானுஜர்.அன்று கிளம்பிப் போனவன்த ான். அதன்பின் அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. திருமலைக்கு அனந்தாழ்வான் வந்து சேர்ந்த விவரத்தைக் கொஞ்ச காலம் கழித்து பெரிய திருமலை நம்பி சொல்லி அனுப்பியிருந்தார். அதன்பின் வேறு விவரங்கள் கிடையாது.சட்டென்று அன்று தகவல் வந்தது. நந்தவனம் உருவாகிவிட்டது. காண்போர் வியக்கும் வண்ணம் பூத்துக் குலுங்குகிற நந்தவனம். அத்தனையும் அனந்தாழ்வானின் உழைப்பு. அவனும் அவனது கர்ப்பிணியான மனைவியும் வேறு சிந்தனையே இன்றி உருவாக்கிப் பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். திருமலையப்பனுக்கு தினமும் மாலை கோத்து சாத்துகிற திருப்பணி தடையற நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 'ராமானுஜரே, ஒரு சரியான கர்மயோகியைப் பிடித்து அனுப்பி வைத்தீர்கள். உமது சீடன் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கிறான். நீங்கள் ஒரு நடை வந்து பார்க்கக் கூடாதா?' என்று கேட்டனுப்பியிருந்தார் பெரிய திருமலை நம்பி.'போகலாமே சுவாமி. திருவரங்கம் வந்ததில் இருந்து நாம் எங்குமே வெளியே போகவில்லை. காஞ்சிக்குக் கூட நீங்கள் செல்லவில்லை' என்றார் முதலியாண்டான்.'ஆம் தாசரதி. நீ சொல்லுவது உண்மைதான். பேரருளாளனை நான் நினைக்காத நாளில்லை. ஆனால் விட்டு வந்தது முதல் ஒருமுறைகூட அங்கே போகவேயில்லை என்பது எனக்கே உறுத்தலாகத்தான் இருக்கிறது.''நாம் கோஷ்டியாகத் திருமலைக்குச் சென்று வரலாமே சுவாமி? அது ஓர் அனுபவமாக இருக்குமல்லவா?' என்று கேட்டார் வில்லிதாசர்.'நிச்சயம் பிரமாதமான அனுபவமாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே அரங்கத்தில் பணிகள் எதுவும் தொய்வடைந்துவிடக் கூடாதே என்று கவலைப்படுகிறேன்.''அதெல்லாம் ஆகாது சுவாமி. நமது அகளங்க நாட்டாழ்வார் இருக்கிறார். பொறுப்பைத் துாக்கி அவர் தலையில் வையுங்கள். அவர் பார்த்துக் கொள்ளட்டும். நீங்கள் யாத்திரை கிளம்பும் யோசனையைத் தவிர்க்காதீர்கள்' என்றார் கூரத்தாழ்வான்.சீடர்கள் அத்தனை பேருக்கும் ஆர்வம் பிடித்துக் கொண்டது. உடையவருடன் ஒரு பயணம் என்பது அதுநாள் வரை அவர்களுக்கு வாய்க்காத விஷயம். அக்கம் பக்கத்து திவ்ய தேசங்களுக்கு அவ்வப்போது போய் வரக்கூடியவர்கள்தாம். உடையவரும் சமயத்தில் உடன் வருவார். ஆனால் அதெல்லாம் ஒரு சில தினங்களில் முடிவடைந்துவிடக்கூடிய பயணமாகவே இருக்கும். அவர்கள் எதிர்பார்த்தது ஒரு நெடும்பயணம்.'சுவாமி, யோசிக்காதீர்கள். திருமலை செல்லும் வழியில் உள்ள அத்தனை திவ்ய தேசங்களையும் சேவிக்க இது ஒரு வாய்ப்பு நமக்கு.'சிறிது யோசித்துவிட்டு, 'சரி, கிளம்பி விடுவோம்!' என்றார் ராமானுஜர்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -



திறந்த கதவு

Advertisement




Ramanujar Download

















சாலை ஓரமாக அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். முதல் வரிசையில் ராமானுஜரும் அவருடைய புதிய சீடர்களும் சென்று கொண்டிருக்க, மூத்த சீடர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். வழி முழுதும் பாசுர விளக்கங்கள். நடந்தபடி வேதாந்த விசாரம். குளம் கண்ட இடத்தில் தாகம் தணித்துக்கொண்டு, பிட்சை கிடைத்த இடத்தில் உணவு உண்டுகொண்டு, சாலையோர சத்திரங்களில் படுத்துத் துாங்கி, விடிந்ததும் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
ராமானுஜருக்குத் திருமலை யாத்திரை மிகுந்த உற்சாகத்தை அளித்தது. காஞ்சி வழியே செல்லப் போகிறோம் என்ற எண்ணம் நடை வேகத்தை அதிகரித்தளித்தது. திருக்கச்சி நம்பி எப்படி இருக்கிறாரோ என்னமோ. பார்த்தே பலகாலம் ஆகிவிட்டது. அவரில்லாவிட்டால் இந்த ஜென்மம் இந்நேரம் என்ன ஆயிருக்கும்? 'அவர் எப்படி இல்லாதிருந்திருப்பார் சுவாமி? உங்களை எங்களுக்கு அளிக்கவே அருளாளன் அவரை உலகுக்கு அளித்திருக்கிறான் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.''அற்புதமான ஆத்மா. அருளாளனைத் தவிர வேறு நினைவே இல்லாத மனிதர். சன்னிதியில் ஆலவட்ட கைங்கர்யம் செய் என்று ஆளவந்தார் அவரிடம் சொன்னாராம். இன்று வரை ஒரு நாளும் அவர் அதில் தவறியதே இல்லை. அருளாளனுக்கா வியர்க்கப் போகிறது? ஆனால் காஞ்சியில் வீசுகிற குளிர்க்காற்றெல்லாம் திருக்கச்சி நம்பியின் ஆலவட்ட கைங்கர்யத்தால் விளைவதுதான்!'பேசிக்கொண்டே நடந்தார்கள். ஒரு காட்டுப்பகுதியைக் கடந்து ஏதோ ஒரு கிராமத்தின் எல்லையை நோக்கி அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது அன்று மாலை ஆகியிருந்தது.ராமானுஜர் ஒரு சீடனை அழைத்தார். 'பிள்ளாய், இந்த ஊரில் நமது மடத்தில் பயின்ற மாணவன் ஒருவன் இருக்கிறான். யக்ஞேசன் என்று பேர். அவன் வீட்டுக்குப் போய் நமது குழு வந்துகொண்டிருக்கிற விவரத்தைச் சொன்னால் இரவு உணவுக்குச் சிரமம் இராது. தவிர இன்று நாம் இரவு தங்குவதற்கும் ஓர் இடம் வேண்டும். இங்கே சத்திரங்கள் ஏதும் இருக்காது என்று தோன்றுகிறது.''நீங்கள் மெதுவாக வாருங்கள் சுவாமி. நான் முன்னால் சென்று ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன்.' என்று சொல்லிவிட்டு சீடன் முன்னால் விரைந்தான்.சேரன் மடத்தில் பயின்ற யக்ஞேசன் வீடு எங்கே என்று கேட்டு விசாரித்துக்கொண்டு போனவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அது வீடல்ல. மாளிகை. யக்ஞேசன் அந்த ஊரில் ஒரு பெரிய நிலச்சுவாந்தாராக இருக்கிற விஷயம் அந்தச் சீடனுக்கு அப்போதுதான் தெரியவந்தது.பார்க்க வேண்டும் என்று சொன்னதும் காவலாளி உள்ளே அழைத்துச் சென்றான்.'யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?''ஐயா நான் உடையவரின் மாணாக்கன். உடையவர் தமது சீடர்களுடன் திருமலை யாத்திரை புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். இன்றிரவு இங்கே…'அவன் சொல்லி முடிப்பதற்குள் யக்ஞேசர் தனது பணியாளர்களை அழைத்தார். 'என் குருநாதர் இன்று நமது இல்லத்துக்கு வருகிறார். விருந்து அமர்க்களப்பட வேண்டும்.'அதோடு நிறுத்தாமல் உடனே ராமானுஜரை வரவேற்க, பரிவாரங்களை உபசரிக்க ஏற்பாடுகள் செய்யப் போய்விட்டார். 'குருநாதர் அசந்து போகும்படியாக உபசாரங்கள் இருக்க வேண்டும். புரிகிறதா? அவரோடு கூட வருகிறவர்கள் வாழ்நாளில் இப்படியொரு ராஜ விருந்தை உண்டிருக்கக் கூடாது! சீக்கிரம் நடக்கட்டும் எல்லாம்!'அடுப்படிக்கே சென்று உத்தரவிட்டார். தமது மனைவியிடம் விவரத்தைச் சொல்லி, அவளையும் தயாராகச் சொன்னார். உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் அத்தனை பேருக்கும் ஆளனுப்பித் தகவல் சொன்னார். உடையவர் வருகிறார். என் பழைய ஆசிரியர். வந்து சேவித்து ஆசி பெற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு முறை இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்காது. நீங்கள் சேரன் மடத்துக்குப் போனால் அங்கே பத்தோடு பதினொன்று. இங்கே என்னைத் தேடி அவரே வருகிறபடியால் என்னைச் சார்ந்தவர்களுக்கு என்று பிரத்தியேகமாக சிறப்புச் சொற்பொழிவு ஒன்றை ஏற்பாடு செய்கிறேன்.பரபரவென்று விருந்து தயாராக ஆரம்பித்தது. யக்ஞேசர் வீட்டுக்கு யார் யாரோ வந்து சேரத் தொடங்கினார்கள். உடையவர் வருகிறார் என்று முன்னால் வந்து தகவல் சொன்ன சீடனை யக்ஞேசர் மறந்தே போனார். கால் கடுக்க நடந்து வந்தவனுக்குக் குடிக்க அங்கே ஒரு வாய் நீர் கூட யாரும் தரவில்லை. நெடுநேரம் காத்திருந்து பார்த்துவிட்டு அவன் சலிப்படைந்து திரும்பிவிட்டான்.இதற்குள் ராமானுஜரும் அவரது பரிவாரங்களும் ஊர் எல்லைக்கு வந்துவிட்டார்கள்.'சுவாமி, அதோ பாருங்கள்!' சீடர்கள் சுட்டிய திசையில் முன்னால் போன மாணவன் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தான்.'வாவா. யக்ஞேசனைப் பார்த்தாயா? நாம் வருவதைச் சொல்லிவிட்டாய் அல்லவா?''மன்னிக்க வேண்டும் சுவாமி. தேடி வந்தவருக்குக் குடிக்க நீர் அளிக்க வேண்டும் என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை.' என்று தொடங்கி நடந்ததை முழுதுமாக எடுத்துச் சொன்னார்.ராமானுஜர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார்.'என்ன செய்யலாம்? நாம் வேறு எங்கேனும் போய்விடலாமா?' என்று இன்னொரு சீடர் கேட்க, அந்த வழியே சென்ற ஒருவனை நிறுத்தி, 'அப்பா! இந்த ஊரில் இரவு தங்கிச் செல்ல ஏதேனும் இடம் இருக்கிறதா?' என்று வேறொருவர் விசாரித்தார்.'பணக்காரர்களுக்கு யக்ஞேசர் என்பவரின் வீடு எப்போதும் திறந்திருக்கும். ஏழைபாழைகள் என்றால் வரதன் வீட்டுக்குத்தான் போயாக வேண்டும்.' என்றான் ஊர்க்காரன்.'அது யாரப்பா வரதன்?' என்றார் ராமானுஜர்.'இந்த ஊர்க்காரர்தான் ஐயா. பரம ஏழை அவர். ஆனால் யாராவது பசிக்கிறது என்று போனால் ஏதாவது செய்து ஒரு கவளம் உணவு இட்டுவிடுவார்.''அப்படியா? அவர் வீடு எங்கே இருக்கிறது?'அவன் வழி சொல்லிவிட்டுப் போய்ச் சேர்ந்தான். ராமானுஜரும் சீடர்களும் வரதன் வீட்டைத் தேடிக்கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.அவர்கள் கதவைத் தட்டியபோது வரதன் வீட்டில் இல்லை. உள்ளிருந்து, 'யாரது?' என்றொரு குரல் கேட்டது. வரதனின் மனைவி.'அம்மா, திருவரங்கத்தில் இருந்து உடையவர் தமது பரிவாரங்களுடன் வந்திருக்கிறார். வரதன் வீட்டில் இருக்கிறாரா?'அந்தப் பெண் கதவை மிகக் கொஞ்சமாகத் திறந்தார். 'அவர் வீட்டில் இல்லை. ஆனால் நீங்கள் வரவேண்டும். அதற்குமுன்...' என்று இழுத்தவள் சட்டென்று கதவை மூடிவிட்டாள். அரைக் கண நேரம்தான். கதவைத் திறந்ததும் பின்னால் மறைந்திருந்து முகத்தை மட்டும் சட்டென்று வெளியே காட்டி ஒருவரி பேசிவிட்டு அவள் உள்ளே இழுத்துக்கொண்டதும். அந்தச் சிறு அவகாசத்தில் ராமானுஜருக்குப் புரிந்துவிட்டது. சட்டென்று தம் தலையில் சுற்றியிருந்த பரிவட்டத்தைப் பிரித்து உள்ளே வீசினார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com- பா.ராகவன் -


உன்னைக் கொடு!

Advertisement



Ramanujar Download

















'இப்போது நீங்கள் அனைவரும் உள்ளே வரவேண்டும் சுவாமி!' என்று பளிச்செனக் கதவை விரியத் திறந்தாள் அந்தப் பெண்மணி. உடையவர் எடுத்து வீசிய பரிவட்டத் துணி அவளது புடைவையாக மாறியிருந்தது.
ராமானுஜரின் சீடர்கள் அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். அரைக் கணம் அவள் கதவு திறந்ததை அவர்கள் பார்த்திருந்தார்கள். ஆனால் ஆளைப் பார்க்கவில்லை. முகத்தைப் பார்க்கவில்லை. வெளியே எட்டிக் கூடப் பார்க்க முடியாதபடிக்குக் கட்டிப் போட்டிருந்த புடைவையின் பொத்தல்களைப் பார்க்கவில்லை. உடையவர் எப்படி கவனித்தார்? 'இதில் வியக்க என்ன இருக்கிறது? இந்த வீடு பாகவதர்களுக்கு எப்போதும் திறந்திருப்பது என்பது அந்தப் பெண்ணின் அழைப்பிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் கதவுக்குப் பின்னால் ஒளிந்து நின்று அழைக்கிறாள் என்றால் வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்? ஏழைமையால் கதவைத்தான் மூடி வைக்க முடியும். இதயத்தை அல்லவே?'மிகச் சிறிய வீடு அது. புழங்கும் இடத்தில் நாலைந்து பேர் அமர்வது சிரமம். ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக்கூடிய அளவில் அடுக்களை. பூச்சற்ற மண் சுவரும் கரி படிந்த தரையும் தாழ்ப்பாள் சரியில்லாத கதவும் உடையும் தரத்து உத்தரமுமாக இருந்தது. உடையவரும் ஓரிருவரும் மட்டும் வீட்டுக்குள் சென்று அமர, மற்றவர்கள் வெளியிலேயே இருந்தார்கள்.'அம்மா, உன் கணவர் எப்போது வருவார்?''தெரியவில்லை சுவாமி. ஆனால் அவர் இல்லாமல் பசியாறுவது எப்படி என்று தயவுசெய்து கவலைப்படாதீர்கள். பாகவத உத்தமர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். நீங்கள் குளத்துக்குச் சென்று நீராடிவிட்டு வாருங்கள். அதற்குள் உணவு தயாராகிவிடும்' என்றாள் அந்தப் பெண்.ராமானுஜர் தமது சீடர்களுடன் புறப்பட்டுப் போனார். அடுக்களைக்குள் நின்று யோசிக்க ஆரம்பித்தாள் அந்தப் பெண்.வீட்டில் ஒருவர் உண்ணும் அளவுக்குக் கூட உணவேதும் இல்லை. சமைப்பதென்றால் பிடி அரிசியும் இல்லை. வாங்கி வரப் பணமும் இல்லை. கடனுக்குத் தர ஆள்களும் இல்லை.ஆனால் வந்திருக்கும் திருமால் அடியார்களைப் பசியோடு அனுப்ப முடியாது. அதற்குப் பேசாமல் இறந்துவிடலாம். என்ன செய்வது?சட்டென்று அவளுக்கு அந்த மளிகைக்கடைக்காரன் நினைவுக்கு வந்தான். கண்ணில் காமத்தையும் சொல்லில் களவையும் எப்போதும் தேக்கி வைத்துக் காண்கின்ற போதெல்லாம் மனம் கூசச் செய்கிறவன். என்ன செய்ய? பணம் சேருகிற இடங்களில் குணம் கூடுவதில்லை. சற்றும் வெட்கமே இன்றி எத்தனையோ முறை தன்னைத் தவறாகக் கண்டவன் நினைவு சட்டென்று அவளுக்கு அப்போது வந்தது. ஒரு கணம் யோசித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாக விறுவிறுவென்று வீட்டை விட்டுக் கிளம்பி நேரே அவனிடத்துக்குப் போய் நின்றாள்.வணிகன் அவளைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'அட, நீயா!' என்றான் வியப்போடு.'ஐயா, எங்கள் வீட்டுக்கு பாகவத உத்தமர்கள் பலபேர் விருந்தாளிகளாக வந்திருக்கிறார்கள். என் கணவர் வீட்டில் இல்லாத நேரம் அவர்களை வெறும் வயிற்றுடன் என்னால் திருப்பி அனுப்ப இயலாது.''அதெப்படி முடியும்? விருந்தாளி என்று வந்துவிட்டால் சமைத்துப் போட்டுத்தான் ஆகவேண்டும்.''ஆனால் வீட்டில் அரிசி இல்லை. பருப்பில்லை. நெய்யில்லை. காய்கறி ஏதுமில்லை. மளிகைச் சாமான் எதுவுமே இல்லை. நீங்கள் உதவினால் மட்டும்தான் என்னால் அவர்களது பசியாற்ற முடியும்.'வணிகன் அவளை உற்றுப் பார்த்தான். சிரித்தான்.'உதவலாம் பெண்ணே. ஆனால் நான் வியாபாரி. வாங்கும் பொருளுக்கு, ஒன்று நீ பணம் தரவேண்டும் அல்லது பண்டமாற்றாகத்தான் எதையும் என்னால் தர முடியும்.'அவள் துக்கம் விழுங்கினாள். கண்ணை இறுக மூடி ஒரு கணம் அமைதியாக இருந்தாள். மானத்தை விலையாகக் கேட்கிற வியாபாரி. நிலையற்ற இந்த உடலின்மீதா இவனுக்கு இத்தனை இச்சை? எத்தனைக் காலமாக இதையே திரும்பத் திரும்பப் பல்வேறு விதமாகக் கேட்டுவிட்டான்? திருமணமான ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்கிறோமே என்கிற வெட்கம் சற்றும் அற்றுப் போன வெறும் பிறப்பு.'என்ன யோசிக்கிறாய் பெண்ணே? எனக்கு உன்னைப் பிடிக்கும் என்பது உனக்கும் நன்றாகத் தெரியும். உன் கணவனுக்கு அஞ்சியோ, ஊருக்கு பயந்தோ, அல்லது உனக்கே விருப்பமில்லாமலோ இன்றுவரை நீ என் கருத்தைக் கண்டுகொண்டதில்லை.எனக்கும் ஆசை தீராமல் அப்படியேதான் இருக்கிறது. சொல்லப் போனால் நாளுக்கு நாள் உன்மீது மையல் கூடிக்கொண்டேதான் போகிறது.'அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். சட்டென்று அவன் பேச்சை இடைமறித்து, 'நீங்கள் எனக்கு எதையும் விளக்க வேண்டாம். வீட்டுக்கு வந்திருக்கிறவர்களுக்கு நான் முதலில் உணவு படைத்தாக வேண்டும்.''அப்படியா? எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?''ஒரு முப்பது பேர் இருக்கும்.''ஒன்றும் பிரச்னை இல்லை பெண்ணே. நீ மட்டும் சம்மதம் சொல். அடுத்த நிமிடம் என் ஆட்கள் உன் வீட்டை அரிசி பருப்பால் நிரப்பி விடுவார்கள்.''பாகவத ததியாராதனத்துக்கு இச்சரீரம்தான் உதவ வேண்டுமென்றால் அப்படியே ஆகட்டும். அவர்கள் உண்டு இளைப்பாறிச் சென்றபின் நான் உம்மிடம் வருவேன்.' என்றாள் அவள்.அவன் திகைத்துவிட்டான். உண்மையாகவா, உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.'என் சொல் மாறாது. நீங்கள் என்னை நம்பலாம்.''சரி, நீ வீட்டுக்குப் போ. இன்றைக்கு விருந்து தடபுடலாக நடக்கும் பார்!' என்றான்.சில நிமிடங்களில் அந்த வணிகனின் ஆட்கள் வண்டி எடுத்துக்கொண்டு அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மூட்டை அரிசி. பானைகளில் பருப்பு வகை. உப்பு, புளி, மிளகாய் தனியே. நெய் ஒரு பக்கம். காய்கறிகள் ஒரு பக்கம். பாலும் தயிரும் பாத்திரங்களை நிரப்பின.'உன் வீட்டில் இத்தனை பேருக்குச் சமைக்கப் பாத்திரங்கள் போதாது என்று எஜமானர் இந்தப் பாத்திரங்களையும் கொடுத்து வரச் சொன்னார்' என்று சொல்லி பளபளக்கும் புதிய பித்தளைப் பாத்திரங்களையும் எடுத்து வந்து வைத்துப் போனார்கள்.அவள் பரபரவென்று சமையலை ஆரம்பித்தாள்.வெளியே சென்றிருந்த அவளது கணவன் வீட்டுக்கு வந்தபோது வியந்து போனான். 'இது நம் வீடுதானா?''சுவாமி, திருவரங்கத்தில் இருந்து அடியார் சிலர் வந்திருக்கிறார்கள். இங்கே உண்ணலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தவர்களை இல்லை என்று சொல்லித் திருப்பி அனுப்ப மனமில்லை. அதனால்தான்...''அதனால்தான்?'அவள் நடந்ததைச் சொன்னாள்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -


தீர்த்தமும் அர்த்தமும்

Advertisement



Ramanujar Download

















உலகு ஒரு கணம் நின்று இயங்கிய தருணம். வரதன் தன் மனைவி சொன்னதை உள்வாங்கி ஜீரணித்துக் கண் திறந்து பார்த்தார். புன்னகை செய்தார்.
'சுவாமி, நான் செய்தது தவறா?' 'நிச்சயமாக இல்லை லஷ்மி. நீ செய்ததும் செய்ய விருப்பதும் மகத்தான திருப் பணி. திருமால் அடியார்களுக்கு உணவிடுவதற்காக எதையும் செய்யலாம். உயிரையே தரலாம் என்னும்போது நீ ஓரிரவு அந்த வணிகனின் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்துவிட்டு வரப் போவது ஒன்றுமே இல்லை. இதைக் குறித்து வருத்தமோ கவலையோ அடையாதே. நமது கடன், அடியார்களுக்குத் தொண்டு புரிவது. அதில் தவறாமல் இருந்தால் போதுமானது.''நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனாலும் உங்களுக்கு இது சங்கடமாக இருக்குமே என்றுதான் சற்று ஞ்சலப்பட்டேன்.''சஞ்சலமே வேண்டாம். எனக்கு உன்னைத் தெரியும். நமக்கு பாகவத கைங்கர்யத்தின் மகத்துவம் தெரியும். மற்ற விஷயங்கள் எதுவுமே ஒரு பொருட்டல்ல.'அவர் பேசிக்கொண்டிருந்தபோது ராமானுஜரும் அவரது சீடர்களும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். திடுக்கிட்டுத் திரும்பிய வரதன், உடையவரைக் கண்டதும் பரவசமாகிப் போனார்.
'சுவாமி தாங்களா! ஒரு திருக்கூட்டம் வந்திருப்பதைத்தான் என் மனைவி சொன்னாள். எம்பெருமானாரான தாங்களே வந்திருப்பீர்கள் என்று நான் நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. என்ன புண்ணியம் செய்தேன் நான். வாருங்கள், வாருங்கள்!'பரவசமாகிப் போய் ராமானுஜரின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தார் வரதன். ராமானுஜர் அமைதியாக அவரது மனைவியைப் பார்த்தார்.
'சுவாமி, உணவு தயாராக இருக்கிறது. இலை போட்டு விடட்டுமா?''தாராளமாக' என்று சொல்லிவிட்டுத் தமது திருவாராதனப் பெருமாளை எடுத்து வைத்துக் கொண்டு பரபரவென பூஜை செய்து முடித்தார். பெருமானுக்கு அமுது செய்வித்த பிறகு உடையவர் கோஷ்டி உண்ண அமர்ந்தது.ராமானுஜர் ஒன்றும் பேசவில்லை. அமைதியாகவே உண்டு முடித்து எழுந்தார். 'இது எங்கள் கொடுப்பினை சுவாமி. எங்கள் இல்லத்தில் நீங்கள் இன்று உண்டது எங்கள் பிறவிப் பயன்.' என்று நெகிழ்ந்து நின்றார் வரதன்.'நல்லது ஐயா. உமது மனைவி இப்போது புறப்பட வேண்டுமே? அவளுக்கு நேரமாகிவிடக் கூடாதல்லவா?' திடுக்கிட்டுப் போனார்கள் வரதனும் அவர் மனைவியும். 'சுவாமி...!' 'இன்னொரு முறை பேச வேண்டாம் அம்மா. நீ உன் கணவரிடம் சொன்ன அனைத்தையும் கேட்டேன். திருமாலடியார்களை உபசரிக்க எதையும் இழக்கலாம் என்கிற உனது எண்ணம் ஒப்பற்றது. கருணாமூர்த்தியான எம்பெருமான், உலகத்தில் உள்ள அனைவருக்கும் வாரி வழங்கும் அனைத்துச் செல்வங்களைக் காட்டிலும் இதுவே உயர்ந்தது, இதுவே வற்றாததும்கூட!'அந்தப் பெண் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.'சரி, நீ கிளம்பு. ஆனால், இதோ இந்தத் தீர்த்தப் பிரசாதத்தை எடுத்துச் சென்று அந்த வணிகனுக்கு முதலில் கொடு.' என்று சொல்லி பெருமாள் தீர்த்தத்தை அவளிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். 'சுவாமி, நானே சென்று லஷ்மியை அவ்விடம் விட்டு வருகிறேன். தாங்கள் அதுவரை ஓய்வு கொள்ளுங்கள்' என்று சொல்லி விட்டு வரதன் மனைவியோடு வெளியேறினார். இருட்டி நெடுநேரம் ஆகிவிட் டிருந்தது. வணிகன் தன் வீட்டு வாசலில் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தான். இன்னுமா விருந்து முடிந்திருக்காது? ஏன் இன் னும் அவளைக் காணவில்லை? குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவனை வரதனின் குரல் கலைத்தது. 'ஐயா...' திடுக்கிட்டுப் போனான். லஷ்மி தன் கணவனோடு வருவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சட்டென்று அவனுக்குக் கோபம் வந்தது. 'ஐயா, நீங்கள் செய்த உதவியால் இன்று உடையவருக்கும் அவரது சிஷ்யர்களுக்கும் எங்கள் வீட்டில் உணவளிக்க முடிந்தது. இந்தப் புண்ணியம் யாவும் உங்களையே சேரட்டும்.'
'இதோ பார். எனக்குப் புண்ணியமெல்லாம் வேண்டாம்...' 'தெரியும் ஐயா. நீங்கள் வேண்டுவது என் மனைவியை மட்டுமே. இருட்டில் அவள் தனியே வரவேண் டாம் என்றுதான் நான் அழைத்து வந்தேன். இதோ கிளம்பி விடுகிறேன்.' வணிகன் குழப்பமானான். இப் படி ஒரு கணவன் இருப்பானா? அப்படி என்ன திருமாலடியார் பக்தி? அப்படியாவது அவர்களுக்கு உணவளித்து என்ன அள்ளிக்கொண்டு போகப் போகிறார்கள் இவர்கள்? 'அது ஒரு ஆத்ம திருப்தி. அவ்வளவே. இந்தாருங்கள். உடையவர் உங்களுக்கும் தீர்த் தப் பிரசாதம் கொடுத்தனுப்பி னார்' என்று சொல்லி தீர்த்தத்தை அவன் கையில் விட்டாள் லஷ்மி. அருந்திய மறுகணம் அவன் தடாலென அவர்கள் காலில் விழுந்தான். 'தாயே என்னை மன் னித்துவிடு. நான் கேட் டது தவறு. என் விருப்பம் தவறு. பெரும் பாவம் செய்ய இருந்தேன். மயிரிழையில் தப்பித்திருக்கிறேன்' என்று கதறத் தொடங்கினான். வரதனுக்கும் லஷ்மிக்கும் ஒன்றும் புரியவில்லை. 'ஐயா, நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்? ஒரு புண்ணிய காரியத்துக்கு உதவிதான் செய்திருக்கிறீர்கள். எதற்கு இப்படிக் கலங்கிப் புலம்புகிறீர் கள்?' உண்மையில் நடந்தது, விவ ரிப்புக்கு அப்பாற்பட்டது. தீர்த்தத்தை அருந்திய மறுகணம் வரத னும் லஷ்மியும் அவன் கண்களுக் குப் பாற்கடல்வாசிகளாகத் தெரிந்தார்கள். சங்கு சக்கரம் ஏந்திய பர மாத்மா. கையில் தாமரை மலருடன் உடனிருந்து அருள் புரியும் மகாலஷ்மி. எங்குமிருப்பவன் இங் குமிருக்கிறான். எதிலும் இருப்பவன் இதிலும் இருக்கிறான். எது உண்மையோ, எது சத்தியமோ, எது நிரந்தரமோ, எது காலம் கடந்ததோ, எது கற்பனைக்கு அப்பாற் பட்டதோ, அது வரதனாகவும் லஷ் மியாகவும் தோற்றம் கொண்டு நின் றதைக் கண்ட கணத்தில் அவன் வெலவெலத்துப் போனான். 'ஐயா இந்தப் பாவியை தயவு செய்து மன்னியுங்கள். இப்போதே என்னை உங்கள் உடையவரிடம் அழைத்துச் செல்லுங்கள். நான் அவரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.' லஷ்மி பரவசமாகிப் போனாள். வீட்டில் நடந்ததை ஒரு கணம் நினைத்துப் பார்த்தவளுக்குக் கண்ணீர் சொரியத் தொடங்கியது. 'இன் னொரு முறை பேசவேண்டாம் அம்மா!' உடையவரின் குரல் அவள் காதுகளில் மீண்டும் ஒலித்தது. அவர் கொடுத்தனுப்பிய தீர்த்தப் பிரசாதத்தை எண்ணிப் பார்த்தாள். கங்கையல்ல, யமுனையல்ல, கண் ணுக்குத் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் சரஸ்வதியல்ல. எந்தப் புனித நதியும் ஏந்தாத பரிசுத்தமும் தெய்வீகமும் பெரும் சக்தியும், அவர் கொடுத்தனுப்பிய அந்தக் கொஞ்சமே கொஞ்சம் தீர்த்தத்தில் இருந்து சாதித்ததை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தாள். அந்த வணிகனையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது உடையவர் காத்தி ருந்தார். 'வாரும் வரதாழ்வாரே! போன சுருக்கில் வந்துவிட்டீரே!' வணிகன் தடாலென அவர் காலில் விழுந்தான். கதறலில் அவன் பாவங்கள் கரையத் தொடங்கின.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

பங்கு போட நீ யார்?

Advertisement



Ramanujar Download

















'உண்மையாகவா! உடையவர் வந்து கொண்டிருக்கிறாரா! சுவாமி நீங்கள் என்னை உற்சாகப்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். பல்லாண்டுக் காலமாக திருவரங்கத்தைத் தாண்டாத உடையவர் இன்று திருமலைக்கு வருகிறார் என்றால் அதை நாம் ஒரு திருவிழாவாகக் கொண்டாட வேண்டும்!' என்றான் அனந்தன்.
பெரிய திருமலை நம்பி சிரித்தார். 'உடையவர் திருவரங்கத்தைத் தாண்டவில்லை என்று உனக்கு யார் சொன்னது? சிறிது காலம் அவர் திருவெள்ளறைக்குச் சென்று தங்கியிருக்கிறார். தெரியுமா உனக்கு?' 'இது தெரியாதே. எனக்கு இது செய்திதான்.' 'அநேகமாக நீ அப்போது உடையவரிடம் சேர்ந்திருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன். அவரை எப்படியாவது கொன்று தீர்த்துவிட வேண்டுமென்று அரங்க நகரில் சில பேருக்குத் தீராத ஆசை. பிட்சை உணவில் விஷம் வைத்துப் பார்த்தார்கள். கோயிலுக்குள்ளேயே வைத்து முடித்துவிட வேண்டும் என்று கூடிப் பேசினார்கள். அதற்கும் சில முயற்சி எடுத்துப் பார்த்தார்கள்.''ஐயோ, இதென்ன கொடுமை?''அரங்கமாநகரமாக இருந்தால் என்ன? அயோக்கியர்கள் எங்கும் உண்டு.''பாகவத உத்தமரான உடையவரைப் போய் எதற்குக் கொல்ல நினைக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை சுவாமி.''அரங்கனுக்கு அனைவரும் சமம். உடையவருக்கு அதுதான் தாரக மந்திரம். இது பிடிக்காத சாதி வெறியர்கள் வேறென்ன செய்ய நினைப்பார்கள்? ஆனால் வில்லிதாசர், அகளங்கன் மூலம் ஏதோ ஏற்பாடு செய்து உடையவரை வெள்ளறைக்கு அழைத்துச் சென்று விட்டார்.' 'அப்படியா?''ஆனால் ஒன்று. திருவெள்ளறைக்குப் போனாலும் அந்த ஊரை நம்மவர் திருவரங்கமாக ஆக்கிவிட்டார்.அழகிய மணவாளன் விக்கிரகம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து, ஊருக்கு ஒரு ஏரி வெட்டி, நந்தவனம் அமைத்து...'சட்டென்று அனந்தன் பரவசமாகிப் போனான். 'உடையவருக்கு நந்தவனங்கள் மீதுதான் எத்தனை விருப்பம்!''ஆம் அனந்தா! பக்தி செய்ய எளிய வழி பூஜைகள். பூக்களின்றி பூஜை ஏது? தவிரவும் மலர்களில் நாம் நம் மனத்தை ஏற்றி அவன் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். நம்மை அவன் ஏற்று அழகு பார்க்க இதைக்காட்டிலும் நல்ல உபாயமில்லை.'பேசியபடியே அவர்கள் நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். அனந்தன் தனியொருவனாக உருவாக்கிய நந்தவனம். ராமானுஜ நந்தவனம் என்றே அதற்குப் பெயரிட்டிருந்தான். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பூக்கள், பூக்கள், பூக்கள் மட்டுமே. புவியின் பேரெழில் அனைத்தையும் திரட்டி எடுத்து வந்து உதிர்த்தாற்போல அவை மலையில் மலர்ந்து நின்றன. காவல் அரண்போல் சுற்றிலும் மரங்கள். நீர் பாய வசதியாக வாய்க்கால் ஒன்று. நீருக்கு ஆதாரமாக அருகிலேயே ஏரியொன்று.அனந்தன் அந்த ஏரியை வெட்டிக் கொண்டிருந்தபோது அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவன் வெட்டுவான். அவள் மண்ணை அள்ளிச் சென்று கொட்டுவாள். யாராவது உதவிக்கு வருகிறேன் என்றாலும் ஒப்புக்கொள்ள மாட்டான். 'ஐயா, இது என் ஆசாரியர் எனக்கு இட்ட பணி. இந்த நந்தவனத்தையும் இதன் நீர் ஆதாரத்தையும் நானே என் கைகளால் உருவாக்குவதே சரி.''அட, புண்ணியத்தை நீயே வைத்துக் கொள்ளப்பா.கர்ப்பிணிப் பெண் இப்படி மண் சுமந்து கொட்டுகிறாளே, அவளுக்கு உதவியாகவாவது நாங்கள் கூட வருகிறோமே?''எங்களைத் தொந்தரவு செய்யாமல் வேலை பார்க்க விட்டால் மொத்தப் புண்ணியத்தையும்கூட உங்களுக்கே தந்து விடுகிறோம். வேலையில் மட்டும் பங்கு கேட்காதீர்கள்.'தீர்மானமாகச் சொல்லிவிடுவான்.ஒருநாள் அனந்தனின் மனைவிக்கு மிகவும் முடியாமல் போய்விட்டது. மண் சுமந்து நடந்ததில் மூச்சிரைத்தது. சோர்ந்து அமர்ந்த நேரம் ஒரு சிறுவன் அவளிடம் வந்தான். 'அம்மா, நீங்கள் இந்த இடம் வரை மண்ணைச் சுமந்து வாருங்கள். இங்கிருந்து நான் கொண்டு போய்க் கொட்டி விடுகிறேன். எதற்கு இப்படிக் கஷ்டப்படுகிறீர்கள்?''ஐயோ அவருக்குத் தெரிந்தால் சத்தம் போடுவாரே? இந்தப் பணியில் இன்னொருவரைச் சேர்க்கவே கூடாது என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார்.''நான் உங்களுக்கு உதவ வரவில்லையம்மா. உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு உபகாரமாகத்தான் இதனைச் செய்கிறேன்.'அவளுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. உண்மையில் யாராவது உதவினால் நன்றாக இருக்குமே என்று ஏங்கத் தொடங்கியிருந்தாள். அத்தனை அலுப்பு. அவ்வளவு களைப்பு.எனவே அனந்தன் ஏரி வெட்டிக் கொண்டிருந்த இடத்தில் இருந்து ஒரு பத்தடி திருப்பம் வரை மண்ணைச் சுமந்து வந்து அந்தச் சிறுவனிடம் கொடுப்பாள். சுமையை அவன் வாங்கிக்கொண்டு போய் ஓரிடத்தில் கொட்டிவிட்டு வந்து கூடையை மீண்டும் தருவான்.இப்படியே நாலைந்து நடை போனது. அனந்தனுக்குக் கொஞ்சம் வியப்பாக இருந்தது. மண்ணைக் கொண்டு கொட்டிவிட்டு வர இன்னும் நேரம் பிடிக்குமே? இவள் எப்படி இத்தனை சீக்கிரம் இந்த வேலையைச் செய்கிறாள்?சந்தேகத்தில் அடுத்த நடை அவள் மண்ணெடுத்துப் போனபோது சத்தமின்றிப் பின்னால் போனான். பாதி வழியில் அவன் மனைவியின் தலையில் இருந்த சுமையை ஒரு சிறுவன் வாங்கிக்கொண்டு ஓடுவதைப் பார்த்துவிட்டான்.'அடேய் பொடியனே, நில்!' என்று உரக்க ஒரு கூப்பாடு போட்டான்.திரும்பிப் பார்த்த சிறுவன் நிற்காமல் ஓடத் தொடங்கினான்.'டேய், நீ இப்போது நிற்கப் போகிறாயா இல்லையா? நீ செய்வது பெரிய தவறு. எங்கள் பணியில் பங்கு போட நீ யார்?'அவன் திரும்பிப் பார்த்து சிரித்தான். மீண்டும் ஓட ஆரம்பித்தான்.அனந்தனுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. பொடிப்பயல் என்ன ஓட்டம் ஓடி எப்படி ஆட்டம் காட்டுகிறான்? இன்று உன்னை என்ன செய்கிறேன் பார். 'டேய், மரியாதையாக நின்றுவிடு. எனக்குக் கோபம் வந்தால் உன்னால் தாங்க முடியாது!' 'உன் கோபம் என்னை ஒன்றும் செய்யாது அனந்தா! முடிந்தால் என்னைப் பிடி.' அவன் இன்னும் வேகமாக ஓடினான். விடாமல் துரத்திக்கொண்டு ஓடிய அனந்தனுக்கு மூச்சிரைத்தது. ஒரு சிறுவனிடம் தோற்கிறோம் என்ற எண்ணம் கடும் கோபத்தை அளித்தது. சட்டென்று குனிந்து ஒரு கல்லை எடுத்தான்.'டேய், பொடியனே!'ஒரு சத்தம். ஓடிக்கொண்டிருந்த சிறுவன் சிரித்தபடி திரும்ப, அனந்தன் கல்லை அவன்மீது விட்டெறிந்தான். சிறுவனின் முகவாயில் பட்டு கல் விழுந்தது. அவன் அப்போதும் சிரித்தபடி ஓடிப் போயேவிட்டான்.களைத்துப் போய் திரும்பிய அனந்தன் மறுநாள் கோயிலுக்கு மாலை கட்டி எடுத்துச் சென்றபோது பெருமாளின் முகவாயில் ஒரு வெட்டுக்காயம் இருப்பதைக் கண்டான். ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

பெரியவர்

Advertisement



Ramanujar Download

















பொழுது விடிகிற நேரம் அவர்கள் காஞ்சிபுரத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். அதே சாலைக் கிணறு. அதே நீர் இறைக்கும் பெண்கள். அங்கிருந்து தென்பட்ட அதே கோபுரம்.

ராமானுஜர் கைகூப்பி வணங்கினார். விவரிப்பில் அடங்காத பெரும் பரவசமொன்று மனத்தை நிறைத்து நின்று சுழன்றது. பேரருளாளா, உன்னை விட்டு நகர்ந்துபோய் எத்தனைக் காலமாகிவிட்டது!
நீ தூக்கிக் கொண்டு வந்து போட்ட இதே சாலைக் கிணற்றங்கரைக்கு இன்று நானே மீண்டும் வந்து நிற்கிறேன். அன்று நான் ஒன்றுமறியாச் சிறுவன். இன்று
உன்னைத் தவிர ஒன்றுமில்லை என்று உணர்ந்த மனிதன். நீ என்னை மீட்டுக் கொண்டுவந்ததே திருவரங்கத்துக்கு அனுப்பி வைக்கத்தான் என்று எண்ணிக் கொள்கிறேன். உன்னை விட்டுச் சென்றதாக நினைப்பதைக் காட்டிலும் இது சற்று ஆறுதல் தருகிறது.
'சுவாமி, ஏன் அப்படியே நின்றுவிட்டீர்கள்?' அருகில் இருந்த அருளாளப்பெருமான் எம்பெருமானார் கேட்டார்.
'ம்? ஒன்றுமில்லை. உம்மையும் என்னையும் இணைத்தவன் இருக்கிற இடத்துக்கு வந்துவிட்டோம் பாருங்கள்! இவன் இல்லாவிட்டால் நானும் இல்லை, நீங்களும் இல்லை என்பதை நினைத்துப் பார்த்தேன். வாரும், நல்லது செய்தவனுக்கு நன்றி சொல்லப் போவோம்.'
காலைக் கடன்கள் முடித்துவிட்டு அங்கேயே குளித்தெழுந்து திருமண் தரித்து உடையவரும் சீடர்களும் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
'உடையவரே, உங்களை எங்களுக்கு அளித்த மண் இது. அந்த விதத்தில் திருவரங்கத்தின் மண்ணைக் காட்டிலும் இதுவே எங்களுக்குப் புனிதமானது' என்றான் கிடாம்பி ஆச்சான்.
'நான் பெரியவனல்ல ஆச்சான்!
நம் அனைவரைக் காட்டிலும் மிகப் பெரியவர் ஒருவர் இந்த ஊரில் இருக்கிறார். நீங்களெல்லாம் அவரை தரிசிக்க வேண்டும்.'
'அருளாளப் பெருமானைத்தான் தரிசிக்கப் போகிறோமே சுவாமி!'
'நான் சொல்லுவது அவனைக் காட்டிலும் பெரியவர்.'
அவர்களுக்கு புரிந்தது. புன்னகை செய்தார்கள். பரிவாரம் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்தது. சட்டென்று ராமானுஜர் ஒரு மடத்தின் வாசலில் நின்றார். 'ஒரு நிமிடம் காத்திருங்கள்' என்று சொல்லிவிட்டு, படியேறி உள்ளே போனார்.
'சுவாமி..'
காற்றுக்கு வலிக்காமல் மெல்லிய குரலில் அழைத்தார். உள்ளே ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்த உருவம் விழித்தது. 'யாரது?'
'அடியேன் ராமானுஜன்.'
வாரிச் சுருட்டிக்கொண்டு அவர் எழுந்த கணத்தில் தடாலென்று அவர் தாள் பணிந்தார் ராமானுஜர்.
'ஆஹா, தாங்களா! வரவேண்டும், வரவேண்டும் உடையவரே. உம்மை நினைக்காத நாளே கிடையாது எனக்கு. எப்படி இருக்கிறீர்கள்? தனியாகவா வந்தீர்கள்? என்னைக் காணவா இத்தனை தூரம்?'
'சுவாமி, நீங்கள் இல்லாமல் நான் ஏது? திக்குத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவனைச் சரியான பாதையில் செலுத்தி அருளியவர் தாங்களே அல்லவா?'
'அடடா, என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்? உமக்கு வழிகாட்டியவன் அருளாளனே அல்லவா?'
'உம்மூலமாக அணுகியதால்தானே அந்த வழி எனக்குத் திறந்தது? அதை விடுங்கள். திருவரங்கத்தில் இருந்து திருப்பதி போய்க் கொண்டிருக்கிறோம். தங்களை தரிசிக்காமல் காஞ்சியை எப்படிக் கடப்பேன்? வெளியே நமது மாணாக்கர்கள் காத்திருக்கிறார்கள். தாங்கள் அனுமதி கொடுத்தால்...'
அவர் உற்சாகமாகிப் போனார். 'இதோ நானே வருகிறேன்!' என்று ஓரடி எடுத்து வைத்தார். முதுமை அவரது செயல்வேகத்தைச் சற்று முடக்கியிருந்தது. ராமானுஜர் அவர் தோளில் கை வைத்துப் பிடித்துக் கொண்டார். மடத்தை விட்டு இருவரும் வெளியே வர, சீடர்கள் கைகூப்பி வணங்கினார்கள்.
'பிள்ளைகளே, இவர்தான் நான் சொன்ன திருக்கச்சி நம்பி. இவரின்றி நானில்லை. இவரின்றி அந்தப் பேரருளாளனே இல்லை. ஒரு பாகவதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் இவரிடம் பயின்றேன். சிறந்த பக்தன் எப்படி இருப்பான் என்பதை இவர்மூலம் அருளாளன் உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறான். நானறிந்து இவரினும் பெரியவர் இவ்வுலகில் இல்லை' என்றவர், சட்டென்று திருக்கச்சி நம்பியிடம் திரும்பி, 'சுவாமி! இவர்கள் அத்தனை பேரும் அரங்கன் சேவையில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்கள். இவர்களுக்கு சாதி கிடையாது. பேதம் கிடையாது. பொருள்களின் மீது பற்று கிடையாது. தமக்காக வாழ்வோர் யாரும் இவர்களில் கிடையாது. சரீரம் இருக்கிறவரை சமூகத்துக்காக உழைக்கிற சீலர்கள். உங்கள் ஆசி இவர்களை இன்னும் உயர்த்தும்' என்றார்.
திருக்கச்சி நம்பி கண்ணீர் மல்கக் கரம் கூப்பிப் பேரருளாளனை வணங்கினார். அவன் கருணையின்றி இந்த அதிசயம் ஏது?
'ராமானுஜரே, அவன் மிகச்சரியாகக் கணக்கிட்டுத்தான் உம்மைத் தேர்ந்தெடுத்துத் திருவரங்கத்துக்கு அனுப்பியிருக்கிறான். வைணவ தருமம் தழைக்க வையம் முழுதும் பிரதிநிதிகளை உருவாக்கி அமர்த்திவரும் உமது திருப்பணிக்கு என்றும் என் ஆசி உண்டு. வாருங்கள், நாம் அவனைச் சென்று முதலில்
சேவித்து வருவோம்' ன்று அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்.
உடையவரின் சீடர்களுக்குத் திருக்கச்சி நம்பியைச் சந்தித்தது பெரிய பரவசத்தை அளித்தது. இவரா, இவரா என்று வியந்து வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். சக மனிதர்களுடன் பேசுவது போல இறைவனுடன் பேசுகிற மகான். எத்தனை பேருக்கு அது வாய்க்கும்?
'அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல பிள்ளைகளே. தினசரி கோயில் நடை சாத்துவதற்கு முன்னால் நம்பியிடம் பேசாமல் அருளாளனுக்குப் பொழுது முடியாது. நாம் பக்தர்களாக இருப்போம். பரம பாகவதர்களாக இருக்க முயற்சி செய்வோம். ஆயுள் முழுதும் அவனுக்கு அடிமை செய்து வாழப் பார்ப்போம். ஆனால் ஆண்டவனுக்கு நண்பராக இருப்பது யாரால் முடியும்? திருக்கச்சி நம்பியால் மட்டுமே அது முடியும்' என்றார் ராமானுஜர்.
சன்னிதியில் அன்று அர்ச்சனை பிரமாதமாக நடந்தது. ராமானுஜரும் சீடர்களும் பிரபந்தம் பாடினார்கள். தீர்த்தப் பிரசாதங்கள் வாங்கிக்கொண்டு அவர்கள் வெளியே வந்தபோது ராமானுஜர் திருக்கச்சி நம்பிக்கு அருளாளப் பெருமான் எம்பெருமானாரை அறிமுகப்படுத்தினார்.
'சுவாமி, இவர் வைணவ தரிசனத்துக்குக் கிடைத்த இன்னொரு யாதவப் பிரகாசர்!'
திருக்கச்சி நம்பி அவரை அன்போடு பார்த்தார். 'உம்மைப் பற்றி அருளாளன் சொன்னான். இரண்டு நூல்கள் எழுதியிருக்கிறீராமே?'
திகைத்துவிட்டது திருக்கூட்டம்.
'சுவாமி, நீண்ட காலமாகத் தங்களைக் காணாமல் ஏங்கிக் கிடந்தேன். இன்று அந்த ஏக்கம் தீர்ந்தது. திருப்பதி சென்று திரும்பும்போதும் தங்களை வந்து தரிசித்துப் போவேன். இப்போது எனக்குத் தாங்கள் விடைகொடுக்க வேண்டும்' என்றார் உடையவர்.
'நல்லது ராமானுஜரே. நீங்கள் அரங்கநகரில் இருந்தாலும் திருமலைக்குச் சென்றாலும் அருளாளன் உம்மோடு எப்போதும் இருப்பான். சென்று வாருங்கள்!' என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்
மலை ஏற மாட்டேன்!
Advertisement




Ramanujar Download

















இன்று எப்படியும் உடையவர் கீழ்த்திருப்பதிக்கு வந்து சேர்ந்துவிடுவார் என்று கோவிந்தன் சொல்லியிருந்தார். அனந்தாழ்வானுக்கு ஒரே பரபரப்பாகிவிட்டது. சற்றும் உறக்கமின்றி இரவைக் கழித்துவிட்டு அதிகாலை எழுந்து குளிக்கப் போனான்.

இருளும் பனியும் கவிந்த திருமலை. நரம்புகளை அசைத்துப் பார்க்கிற குளிர். உறக்கம் தொலைந்தாலே குளிர் பாதி குறைந்து விடுகிறதுதான். ஆனாலும் நினைவை அது ஆக்கிரமித்துவிட்டால் வெயிலடிக்கிற போதும் குளிர்வது போலவேதான் இருக்கும். குளிரை வெல்லத் திருமங்கை ஆழ்வார்தான்சரி. தடதடக்கும் சந்தங்களில் எத்தனை அற்புதமான பாசுரங்கள்!அனந்தாழ்வான் குளிக்கப் போகிறபோதெல்லாம் திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களைத்தான் சொல்லிக்கொண்டு போவான். உச்சரித்தபடியே ஏரியில் பாய்ந்தால் முதல் கணம் குளிர் நம்மை விழுங்கும். மறுகணம் நாம் அதை விழுங்கிவிடலாம்.குளித்தெழுந்து அவன் கரைக்கு வந்தபோது விடியத் தொடங்கியிருந்தது. ஈரத் துண்டால் துடைத்தான். காலைத் துடைத்தபோது அந்தத் தழும்பைச் சற்று உற்றுப் பார்த்தான். பாம்பு கடித்து வந்த தழும்பு. அனந்தனுக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. நந்தவன வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் அவனைப் பாம்பு தீண்டியது.

கணப் பொழுது வலி. நீரில் குதிக்கிற போது முதல் கணம் தாக்குகிற குளிர்ச்சியின் வீரியம் போன்றதொரு வலி. ஆனால் கணப் பொழுதுதான். கடித்த பாம்பைத் துாக்கி ஓரமாக விட்டுவிட்டு மண்வெட்டியுடன் மீண்டும் வேலையில் ஆழ்ந்து விட்டான். ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பாம்பு கடித்ததையும் வலி என்ற ஒன்று இருப்பதையும் அவன் முழுதாக மறந்து போனான். மண்ணும் மண்வெட்டியும் மட்டுமே புத்தியில் நின்றது. இங்கே ஒரு சோலை மலரப் போகிறது. வண்ணமயமான மலர்கள் பூத்துக் குலுங்கப் போகின்றன. ஒவ்வொரு மலரும் திருவேங்கடமுடையானின் திருமுடியை, தோள்களை, பாதங்களை அலங்கரிக்கப் போகின்றன. எங்கிருந்து வருகின்றன இம்மலர்கள் என்று கேட்போரிடம் எல்லாம் ராமானுஜ நந்தவனத்தைப் பற்றிச் சொல்லப் போகிறார்கள். திருமலையில் எம்பெருமானுக்குப் பிறகு உடையவரின் பெயர் எப்போதும் மணக்க மணக்க நிலைத்திருக்கும். எண்ணம் ஒரு தியானமாகி செயலின் வேகம் கூடியது. அவன் பாம்பு கடித்ததை முற்றிலும் மறந்து வேலை செய்து கொண்டிருந்தபோது பெரிய திருமலை நம்பியும் கோவிந்தனும் அந்தப் பக்கம் வந்தார்கள்.'வரவேண்டும் சுவாமி! அப்படி உட்காருங்கள்' என்றான் அனந்தன்.அவன் கண்கள் சுருங்கியிருப்பதை நம்பி பார்த்தார். என்னவோ தவறென்று பட, சட்டென்று அவன் நாடி பிடித்துப் பார்த்தார். அதற்குள் கோவிந்தன் அவன் காலில் வழியும் ரத்தத்தைக் கண்டு பதறி, 'சுவாமி, இங்கே பாருங்கள்!'

'அட, ஆமாம்! ரத்தம் வருகிறதே!''அனந்தா என்ன இது? பாம்பு தீண்டியிருக்கிறது. அதுகூடத் தெரியாமலா நீ வேலை செய்து கொண்டிருக்கிறாய்?' 'பாம்பு தீண்டியது தெரியும் சுவாமி. அதற்காக வேலையை எதற்கு நிறுத்துவானேன்?''அறிவிருக்கிறதா உனக்கு? பாம்பு கடித்தால் உடனே மருந்திட வேண்டும். இல்லாவிட்டால் உயிர் போய்விடும்!'அனந்தன் சிரித்தான். 'உயிர்தானே? சந்தோஷமாகப் போகட்டுமே சுவாமி! இன்றே இறந்தால் சொர்க்கத்தில் உள்ள விரஜா நதிக்கரையோரம் நந்தவனம் அமைப்பேன். இன்னும் சிலநாள் இருந்தால், இங்கே நானே வெட்டிய ஏரிக்கரையோரம் ஏகாந்தமாக எம்பெருமானைத் துதித்துக் கொண்டிருப்பேன். எங்கு போனாலும் என் பணி அதுதானே?'திகைத்துவிட்டார்கள் இருவரும்.'இது தவறு அனந்தா. நீ வா. உடனே உனக்கு பச்சிலை வைத்துக் கட்ட வேண்டும்!''இல்லை சுவாமி. அது வெறும் நேர விரயம். எனக்கு வேலை எக்கச்சக்கமாக இருக்கிறது. இந்த மலையே ஆதிசேஷனின் ரூபம்தான். ஏறி வந்தவனை வாரி விழுங்கி விடுவானா அவன்? அதுவுமில்லாமல் அதே ஆதிசேஷனின் அம்சமான உடையவரின் மாணவன் நான். என் குரு என்னை எப்படி தண்டிப்பார்?' கடைசிவரை அவன் பாம்புக் கடிக்கு மருந்திடவே இல்லை. அவனது நம்பிக்கை அன்று அவன் உயிரைக் காத்தது.நடந்ததை நினைத்துப் பார்த்த அனந்தன், இதை உடையவர் வந்ததும் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.ஆனால் அன்றைக்கு அவர் திருமலைக்கு வரவில்லை. மறுநாளும் வரவில்லை.

அடுத்த நாளும். என்ன ஆயிற்று ராமானுஜருக்கு? இங்குதானே வந்து கொண்டிருக்கிறார் என்றார்கள்? இந்நேரம் மலையேறி வந்திருக்கலாமே? எங்கே சுணங்கிவிட்டார்கள்?அனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெரிய திருமலை நம்பியிடம் சென்று தன் கவலையைச் சொல்லிக் காரணம் கேட்டான்.'தெரியவில்லையே அப்பா! ராமானுஜரின் பரிவாரங்கள் கீழ்த் திருப்பதிக்கு வந்து சேர்ந்துவிட்டதாகப் போன வாரமே சொன்னார்கள். ஒன்று செய். நீ ஒரு நடை கீழே இறங்கிச் சென்றே பார்த்துவிட்டு வாயேன்?'அவனுக்கும் அது சரியென்று பட்டது. மனைவியிடம் சொல்லிவிட்டு மலையை விட்டு இறங்க ஆரம்பித்தான்.பாதைகளற்ற ஆரண்யம். ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையாக ஏழு மலைகளைக் கடப்பது எளிதல்ல. ஒரு கணம் வழி பிசகிப் போனாலும் புறப்பட்ட இடத்துக்கோ, போய்ச்சேர வேண்டிய இடத்துக்கோ சேர முடியாமல் போகும். மாதக் கணக்கில் எத்தனையோ பேர் அப்படி வழி தெரியாமல் தவித்துத் திரும்பிய கதைகள் நிறையவே உண்டு.அனந்தன் திருமலைக்கு வந்து சேர்ந்தது முதல் ஒருமுறைகூடக் கீழே இறங்கிச் சென்றதில்லை. ஒரு நந்தவனம் அமைத்து, பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்து கொண்டிரு என்று ராமானுஜர் சொன்ன வார்த்தையைத் தாண்டி வேறெதையும் செய்யவில்லை. எனவே, இறங்குவது அவனுக்குச் சிரமமாக இருந்தது. உத்தேசமாக வழியை ஊகித்தே செல்ல வேண்டியிருந்தது. ஒருவாறாக அவன் கீழே வந்து சேர நான்கு தினங்கள் பிடித்தன. ராமானுஜரும் அவரது பரிவாரங்களும் எங்கே தங்கியிருக்கிறார்கள் என்று கேட்டு விசாரித்துக்கொண்டு ஓடினான். உடையவர் இருக்குமிடத்தை அடைந்தபோதுதான் அவனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.'சுவாமி…!'ராமானுஜர் புன்னகை செய்தார். 'வா, அனந்தாழ்வான்! நலமாக இருக்கிறாயா?'நெடுஞ்சாண்கிடையாக அவர் பாதங்களில் விழுந்து பணிந்து எழுந்த அனந்தனின் கண்களில் இருந்து கரகரவென நீர் வழிந்தது.'சுவாமி, தங்களைப் பார்த்து எத்தனைக் காலமாகிவிட்டது! இவ்வளவு துாரம் வந்துவிட்டு மலைக்கு
வராமல் இங்கேயே தங்கிவிட்டீர்களே!'ராமானுஜர் ஒரு கணம் யோசித்தார். பிறகு சொன்னார். 'வரலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இம்மலை ஆதிசேஷன் அம்சம். அதனாலேயே திருப்பதிக்கு வந்த பத்து ஆழ்வார்களும் மலை ஏறாமல் தவிர்த்து விட்டார்கள். ஆழ்வார்களே கால் வைக்கத் தயங்கிய மலையின்மீது அற்பன் நான் எப்படி வைப்பேன்?'திகைத்துப் போய் நின்றான் அனந்தாழ்வான்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


புகல் ஒன்று

Advertisement




Ramanujar Download

















ராமானுஜர் திருப்பதிக்கு வருவதற்கு முன்னமே அந்தப் பகுதி மக்களுக்கு அவரது பெயர் பரிச்சயமாக இருந்தது. திருவரங்கத்தில் அவர் செய்து கொண்டிருந்த சமயப் புரட்சி குறித்து திருப்பதி வட்டாரத்தை ஆண்டு கொண்டிருந்த மன்னன் விட்டல தேவன் அறிந்திருந்தான். உடையவர் திருமலைக்கு வரவிருக்கிறார் என்கிற தகவல் பெரிய திருமலை நம்பி மூலம் தெரிய வந்ததுமே மன்னன் அவரை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தான்.

திருப்பதியில் அவர் கால் வைத்ததுமே மன்னனும் மக்களும் அவரைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். திருமலைக்குச் செல்வது பற்றி யோசிக்கக்கூட அவகாசமின்றி, உடையவர் அவர்களுடன் நாளும் பொழுதும் பேசிக்கொண்டே இருந்தார். பக்தியின் மிகக் கனிந்த நிலையில் இருக்கிற ஒருவர். பரமாத்ம சிந்தனை தவிர இன்னொன்று இல்லாதவர். பார்க்கிற அனைவரையும் சமமாக பாவிக்கிற மனிதர்.அரசனும் குடிமக்களும் அவருக்கு ஒன்றே. மன்னனுக்குத் தனி ஆசனம் கிடையாது. உட்கார். சத்விஷயம் கேட்க வந்தாயா? கேள். அவர்களும் கேட்பார்கள். சந்தேகம் கேட்கிறாயா? தாராளமாகக் கேள். ஒரு மனிதன் ஒவ்வொரு விஷயத்திலும் அடைகிற தெளிவானது ஊருக்கு நல்லது செய்யும். அனைத்திலும் தெளிவுறும்போது கண்ணுக்குப் புலப்படாத அமைதிப் பேருலகில் அவன் வசிக்கத் தொடங்குகிறான். அங்கே பகவானுக்கும் பக்தனுக்கும் மட்டுமே இடம். இப்படி ஒவ்வொருவரும் அடைகிற அமைதியும் தெளிவுமே ஒரு திருக்கூட்டத்தை சாத்தியமாக்குகிறது. ஊருக்கொரு திருக்கூட்டம். உலகெல்லாம் திருக்கூட்டம். பார்க்குமிடமெல்லாம் பாகவதப் பெருமக்களே நிறைந்திருந்தால், பேதங்கள் இல்லாது போகும். குலமோ செல்வமோ வேறெதுவோ அங்கே அடிபட்டுப் போகும். பக்தன், தனக்கும் பகவானுக்கும் நடுவே உள்ள இடைவெளியை அப்போதுதான் கடக்க முடியும்.

அவனை நெருங்க அது ஒன்றே வழி. பேதமற்ற பெருவழி.ராமானுஜரின் சொற்பொழிவுகள் திருப்பதி மக்களைக் கட்டிப் போட்டன. விட்டல தேவன் தன்னை மறந்தான். ஆட்சி அதிகாரங்களை மறந்தான். அகங்காரம் விட்டொழித்தான். 'உடையவரே, எனக்கு உங்கள் திருவடி சம்பந்தம் அளியுங்கள்' என்று தாள் பணிந்தான். முப்பது பெரும் வயல்வெளி கள் நிறைந்த இளமண்டியம் என்னும் ஊரையே அவருக்கு எழுதிக் கொடுத்தான்.'மன்னா, நிலத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாய், இன்புருகு சிந்தை இடுதிரியாய் நம்பி ஞானத் திருவிளக்கேற்றுவதல்லவா நமது பணி? இந்தக் கிராமத்தை பாகவத உத்தமர்களுக்கு அளியுங்கள். பேதமின்றி அவர்கள் சேர்ந்து வாழட்டும். எந்நேரமும் பிரபந்தம் ஒலிக்கும் திருநகராக அம்மண் விளங்கட்டும்' என்றார் உடையவர்.கீழ்த்திருப்பதிக்கு வந்து இதையெல்லாம் கேள்விப்பட்டு அறிந்த அனந்தாழ்வான், மன்னனால்தான் உடையவர் மலையேறி வர மறுக்கிறாரோ என்று சந்தேகப்பட்டான்.'இல்லை அனந்தா! இம்மலையை சேஷாசலம் என்பார்கள். ஆதிசேஷன்மீது பாதம் படுவது அபசாரம்.'

'இது உங்களுக்கு முன்னமே தெரியாதா சுவாமி? என்னை மட்டும் எதற்காக அனுப்பினீர்கள்? அங்கு எதற்கு ஒரு பெருமாள்? எதற்காக அவனுக்கொரு நந்தவனம்? தவிர, நீங்கள் இன்று திருமலைக்கு வர மறுத்துத் திரும்பிச் சென்று விட்டால் நாளை உடையவரே கால் வைக்க மறுத்த இடத்துக்கு நாங்கள் எப்படிச் செல்வது என்று பக்தர்களும் வராதிருந்து விடுவார்கள் அல்லவா?'விட்டல தேவனும் மற்றவர்களும் அவர் மலைக்குச் செல்வதில்
தவறில்லை என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள். ராமானுஜர் யோசித்தார். பிறகு ஒரு முடிவுடன் சொன்னார், 'சரி வருகிறேன். ஆழ்வார்கள் கால் வைக்கத் தயங்கிய மலையில் கண்டிப்பாக என் கால்களும் படாது.'அது நிகழ்ந்தது. ஏழு மலைகளையும் அவர் தவழ்ந்தே ஏறிக் கடந்தார். உடன் வந்த சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு பக்தி, இப்படியொரு பணிவு, இப்படியொரு தீர்மானம் சாத்தியமாகுமா? 'இவர் மனிதப் பிறவியே இல்லை. நிச்சயமாக ஓர் அவதாரம்தான்' என்றான் விட்டல தேவன்.'அதிலென்ன சந்தேகம் மன்னா? உடையவர் ஆதிசேஷனின் அம்சம். தன்மீது தானே தவழ்ந்து செல்கிறார் இப்போது!'இதற்குள் உடையவர் மலைக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற விவரத்தை அனந்தாழ்வான் சில வேடர்கள் மூலம் மலை மீதிருந்த பெரிய திருமலை நம்பிக்குச் சொல்லி அனுப்பியிருந்தான். அவரை எதிர்கொண்டு அழைப்பதற்காகத் திருவேங்கடமுடையானின் தீர்த்தப் பிரசாதங்களை எடுத்துக்கொண்டு, நம்பி தமது சிஷ்யர்களுடன் மலையை விட்டு இறங்கத் தொடங்கினார். தவழ்ந்து சென்று கொண்டிருந்த ராமானுஜர் காலி கோபுரத்தை (காலி என்றால் காற்று) நெருங்குவதற்குள், திருமலை நம்பியின் பரிவாரம் ஆறு மலைகளைக் கடந்து இறங்கி வந்துவிட்டிருந்தது.காலி கோபுர வாசலில் பெரிய திருமலை நம்பியைக் கண்ட உடையவர் திகைத்துப் போனார். சட்டென்று அவர் கண்கள் நிறைந்தன. 'சுவாமி, என்னை வரவேற்கத் தாங்கள் வரவேண்டுமா? அதுவும் இத்தள்ளாத வயதில்? யாராவது சிறியவர்களை அனுப்பினால் போதாதா?'
திருமலை நம்பி பரவசத்துடன் ராமானுஜரை நெருங்கினார். 'உடையவரே! யாராவது சிறியவரை அனுப்பியிருக்கலாம் தான். ஆனால் மலைமீது நாலாபுறமும் தேடிப் பார்த்து விட்டேன். என்னைக் காட்டிலும் சிறியவன் அங்கு யாருமே இல்லை!' என்று சொன்னார்.

வாயடைத்து விட்டது கூட்டம்.'ஆ, எப்பேர்ப்பட்ட பணிவு! ஆளவந்தாரின் சீடர்கள் அத்தனை பேருமே இப்படித்தானா!' என்று வியந்தார்கள் ராமானுஜரின் சீடர்கள்.ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, திருவரங்கத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பேசிக்கொண்டு அவர்கள் திருமலை மீதேறி வந்து சேர்ந்தார்கள். குளத்தில் நீராடி, வராகப் பெருமாளைச் சேவித்துவிட்டு, திருமலையப்பனின் ஆலயத்துக்குள் நுழைந்தார் உடையவர். சட்டென்று அவர் மனத்தில் தோன்றியது நம்மாழ்வாரின் ஒரு வரிதான். 'புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!'சன்னிதியில் நின்றபோது பரவசத்தில் அவர் கண்கள் நிறைந்து சொரிந்தன. கிடந்தவனாகத் திருவரங்கத்தில் ஆண்டுக்கணக்கில் கண்டவனை, நின்றவனாகக் காணக்கிடைக்கிற தருணம். எந்தக் கணமும் 'இதோ வந்தேன்' என்று ஓரடி முன்னால் எடுத்து வைத்துக் கைநீட்டி ஏந்திக் கொள்வானோ என்று ஏங்கச் செய்கிற எம்பெருமான். வைத்த கண் வாங்காமல் விழுங்கிக் கொண்டிருந்தார் ராமானுஜர். கருணை தவிர மற்றொன்று அறியா விழிகள். அபயமன்றி இன்னொன்று வழங்காத கரங்கள். துயரம் அனைத்தையும் துாளாக்கிப் புதைக்கிற பாதங்கள்.'எம்மானே! ஏறி வருகிற யாவருக்கும் என்றென்றும் ஏற்றம் கொடு!' என்று மனமுருக வேண்டிக் கொண்டார்.
'போகலாமா?' என்றான் அனந்தாழ்வான்.'எங்கே?''சுவாமி, நந்தவனம் தங்களுக்காகக் காத்திருக்கிறது!'புறப்பட்டார்கள்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -
அன்பின் பரிசு


Advertisement



Ramanujar Download
















பூத்துப் பரந்திருந்தது நந்தவனம். பசுமைக்கு இடப்பட்ட வண்ணமயமான கிரீடங்களாகக் காண்கின்ற இடமெல்லாம் பூக்கள். அது மலையின் மகிழ்ச்சி. அனந்தனின் பக்தியின் விளைவு.
'சுவாமி, இந்த நந்தவனத் துக்குத் தங்கள் பெயரைத்தான் இட்டிருக்கிறேன். பக்கத்திலேயே சிறியதாக ஏரியொன்றையும் வெட்டியிருக்கிறேன். எனக்கு நீர் ஆதாரம் என்றால் இந்த வனத்துக்கு நீரே ஆதாரமல்லவா?'ராமானுஜர் புன்னகை செய்தார். 'அனந்தாழ்வான், உன்னை வளர்த்ததை நினைத்துப் பெருமை கொள்கிறேன். உன் மனம் போலவே மலர்ந்திருக்கிறது இந்த நந்தவனம். பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் தவறாது நடக்க இது என்றென்றும் மலர்ந்து கிடக்கட்டும்!' என்று ஆசீர்வதித்தார்.அன்று மதியம் உண்டு முடித்து, சிறிது ஓய்வெடுத்த பின்பு, 'கிளம்பலாமா?' என்றார் ராமானுஜர்.'அடடா, திவ்யதேசத்துக்கு வந்தால் மூன்று நாள்களாவது அங்கு தங்கியாக வேண்டும் என்பது சாஸ்திரம். இன்றே கிளம்பக்கூடாது ராமானுஜரே!' திருமலை நம்பி தடுத்தார்.'தங்க வேண்டும்தான். ஆனாலும் வானவர்களும் முனி சிரேஷ்டர்களும் வந்து உலவுகிற இடம் இது. கால் வைக்கிற கணமெல்லாம் உறுத்துகிறதே.''இருக்கட்டும் உடையவரே. ஆதிசேஷனின் அம்சமான தாங்கள் எந்த வானவருக்கும் கீழானவரல்லர்.''அபசாரம். திருமலையில் உள்ள அனைவரிலும் சிறியவன் என்று நீங்கள் உங்களைச் சொல்லிக் கொண்டீர்கள். அப்படியென்றால் உங்கள் மாணவனாகிய நான் யார்?''அதெல்லாம் முடியாது. நீங்கள் இன்றே புறப்படுவது நடக்காது. மூன்று நாள்களாவது இருந்துவிட்டுத்தான் போக வேண்டும்!' என்று தீர்மானமாகச் சொன்னார் பெரிய திருமலை நம்பி.வேறு வழியின்றி ராமானுஜர் மூன்று தினங்கள் திருமலையில் தங்கினார். 'சுவாமி, நான் இங்கே வந்ததன் நோக்கம் அனந்தாழ்வானின் நந்தவனத்தைக் கண்டுசெல்வதும் திருவேங்கடமுடையானைச் சேவித்துச் செல்வதும் மட்டுமல்ல.''பிறகு?''நமது ஆசாரியர் ஆளவந்தாரிடம் இருந்து ராமாயணத்தை முற்று முழுதாகக் கற்றுத் தேர்ந்தவர் தாங்கள். தங்களிடம் ராமாயணப் பாடம் கேட்க வேண்டுமென்பது என் விருப்பம்.'பெரிய திருமலை நம்பி புன்னகை செய்தார்.'பெரிய நம்பியிடம் பாடம் கேட்டேன். திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்டேன். திருவரங்கப் பெருமாள் அரையரிடம் பயின்றேன். திருமாலிருஞ்சோலைக்குப் பெருமை சேர்க்கும் திருமாலை ஆண்டானிடம் திருவாய்மொழி அறிந்தேன். ஆளவந்தாரின் ஐம்பெரும் சீடர்களுள் ஒருவரான தங்களிடம் ராமாயணமும் பயின்றுவிட்டால் பிறவிப் பயனடைவேன்.'சிறு வயதில் ராமானுஜருக்குச் சில பாசுரங்களும் சுலோகங்களும் கற்றுத் தந்தது பெரிய திருமலை நம்பியின் நினைவுக்கு வந்தது. எத்தனை வருடங்கள் கழித்துக் காலம் மீண்டும் ஒன்றிணைத்திருக்கிறது! இன்று ராமானுஜர் அன்று கண்ட இளையாழ்வான் அல்ல. துறவிகளின் அரசரெனப் போற்றப்படுகிறவர். வைணவ தரிசனத்தை வழிநடத்த இவரே சரியென ஆளவந்தார் தேடிப் பிடித்து அடையாளம் காட்டிப் போனது, சீடர்களான தங்களில் ஒருவரையல்ல. ராமானுஜரைத்தான். அது எத்தனை சரி என்று காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.நுாறு நுாறாக, ஆயிரம் ஆயிரமாக, ஊர் ஊராக, கிராம நகரங்களாக மக்கள் அவரை அண்டித் தாள் பணிந்து கொண்டிருக்கிறார்கள். மன்னர்கள் வரிசையில் வந்து வணங்கி ஏற்கிறார்கள். அவர்கள் தத்துவம் முற்றிலும் புரிந்து வருகிறவர்கள் அல்லர். இம்மனிதர் சத்தியமன்றி இன்னொன்றைப் பேச மாட்டார் என்ற நம்பிக்கையில் வருவது. இது அனைவருக்கும் சாத்தியமல்ல. வேறு யாருக்குமே சாத்தியமல்ல. அவர் ஒரு சக்தி. ஒரு பெரும் விசை. இது நிகழவேண்டும் என்று இருக்கிறது. அதனால் நிகழ்கிறது.பெரிய திருமலை நம்பி அன்போடு ராமானுஜரின் கரங்களைப் பிடித்துக் கொண்டார். 'ராமாயணம்தானே? தொடங்கி விடலாம்!'மூன்று நாள்களுக்குப் பிறகு மலையடிவாரத்தில் இருந்த பெரிய திருமலை நம்பியின் இல்லத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.'கோவிந்தப் பெருமானே!' நம்பி உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.'சுவாமி!' என்று ஓடி வந்த கோவிந்தன், உடையவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார்.ராமானுஜர் புன்னகையுடன் நெருங்கி, 'எப்படி இருக்கிறீர் கோவிந்தப் பெருமானே?''ஐயோ அபசாரம்! தாங்கள் என்னை இப்படி மரியாதையாக அழைப்பது அடுக்காது.''வயது முதல் ஞானம் வரை அனைத்திலும் நம் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவரான நம்பிகளே தங்களை அப்படி அழைக்கிறபோது நான் மட்டும் வேறெப்படி அழைப்பேன்?' என்றார் ராமானுஜர்.விந்திய மலைக்காட்டில் கடைசியாகக் கண்ட கோவிந்தன். அண்ணா அண்ணா என்றுஎன்றும் எப்போதும் பின்னால் வந்தவன். சட்டென்று ஒருநாள் காணாமல் போய்விட்டான். ஆனால் ராமானுஜர் அவனை என்றைக்குமே நினைக்காதிருந்ததில்லை. காளஹஸ்தியில் அவனைச் சந்தித்து மனம் மாற்றி அழைத்துவர அவர் பெரிய திருமலை நம்பியைத் தேர்ந்தெடுத்ததன் காரணம், அருகே இருக்கிறார் என்பது அல்ல. சிலரால்தான் சில காரியங்கள் முடியும். கல்லைத் தகர்ப்பதினும் கடினம், சில வைராக்கியங்களை வெல்வது. திருமலை நம்பிக்கு அது எளிது. அதனால்தான் கோவிந்தனைத் தடுத்தாட்கொள்ள அவரை அனுப்பி வைத்தார். மருமகனுக்குத் தெரியாதா தாய்மாமன் சுபாவம்?'சுவாமி, கோவிந்தப் பெருமான் தற்போது எப்படி இருக்கிறார்?' தனியே இருக்கும்போது உடையவர் கேட்டார்.'என்னத்தைச் சொல்ல? அவர் ஒரு வைராக்கிய சிகாமணி. உலகப்பற்று என்பது அறவே இல்லாத ஜீவன். சிவஸ்மரணையில் இருந்து விடுபட்டு எம்பெருமானின் திருவடித் தாமரைகளைப் பற்றிக்கொண்டது மட்டும்தான் ஒரே மாற்றம். மற்றபடி அவரது அலாதியான சுபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.''நல்ல விஷயம்தானே?''நாமெல்லாம் வைணவம் இன்னதென்று அறிந்து ஏற்றவர்கள். அவர் இயல்பிலேயே அதுவாக இருக்கிறவர். அது தெரியுமோ உமக்கு?''அப்படியா!''ஒருநாள் பாம்பு ஒன்றைப் பிடித்து வைத்துக்கொண்டு அதன் வாயில் கையைவிட்டு என்னவோ செய்து கொண்டிருந்தார். பதறிப் போய் விசாரித்தால் பாம்பின் வாயில் முள் தைத்திருக்கிறது. அதை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார். விளைவை எண்ணாமல் துயர் துடைத்தல் அல்லவா வைணவ தர்மத்தின் உச்சம்? அவர் அங்கேதான் வாசம் செய்து கொண்டிருக்கிறார்' என்றார் பெரிய திருமலை நம்பி.ராமானுஜர் புன்னகை செய்தார்.ஒரு நல்ல நாள் பார்த்து பெரிய திருமலை நம்பி ராமானுஜருக்கு ராமாயணம் சொல்ல ஆரம்பித்தார். கணப் பொழுதில் ஒரு முழு வருடம் ஓடி மறைந்த தருணத்தில் காலட்சேபம் முடிந்திருக்க, கிளம்பலாம் என்று ராமானுஜருக்குத் தோன்றியது.'ஆம். கிளம்பத்தான் வேண்டும். உம்மை நிரந்தரமாக இங்கே பிடித்து வைக்கவா முடியும்? ஆனால் உமக்கு என் அன்பின் பரிசாகக் கொடுத்தனுப்ப என்னிடம் எதுவுமே இல்லையே?' வருத்தத்தோடு சொன்னார் நம்பி.ராமானுஜர் ஒரு கணம் யோசித்தார். 'கோவிந்தனைக் கொடுத்து விடுங்களேன்!'
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -
விற்ற பசு


Advertisement



Ramanujar Download















பெரிய திருமலை நம்பிக்குப் புரிந்தது. தம்பி என்பதனால் அல்ல. வைணவம் பரப்பும் திருப்பணியில் வைராக்கியம் மிக்கவர்களின் பங்களிப்பு அவசியம். அது பெரிய காரியம். ஒரு கோவிந்தனல்ல; ஓராயிரம் கோவிந்தன்கள் இருந்தாலும் போதாத காரியம். எனவே அவர் சற்றும் யோசிக்காமல், 'இதோ தந்தேன்!' என்று சொல்லி, கோவிந்தனை அழைத்தார்.
'கோவிந்தப் பெருமானே, இனி நீர் உடையவரின் சொத்து. அவரோடு கிளம்பிச் சென்று, அவர் சொல்வதைச் செய்து கொண்டிருப்பதே உமது பணி!' என்று சொன்னார்.நம்பி சொல்லி கோவிந்தன் எதையும் தட்டியதில்லை. எனவே இதையும் தட்டாமல் ஏற்றுக்கொண்டு ராமானுஜருடன் புறப்பட்டு விட்டார்.வழி முழுதும் இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள். காளஹஸ்தியில் தாம் தங்கியிருந்த காலம் முதல் பெரிய திருமலை நம்பியிடம் சேர்ந்து பயின்ற தினங்கள் வரை ஒன்று விடாமல் கோவிந்தன் ராமானுஜருக்குச் சொல்லிக் கொண்டே வந்தார். 'சுவாமி, எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தாங்கள் சன்னியாச ஆசிரமம் ஏற்று, திருவரங்கத்துக்குச் சென்றபிறகு எத்தனையோ பேர் தங்களை அண்டி சீடர்களாகித் தங்களுடனே சேர்ந்திருக்கிறார்கள். நீங்கள் ஒருவார்த்தை சொல்லியிருந்தால் நான் என்றோ திருவரங்கம் வந்திருப்பேனே? எதற்காக இத்தனை ஆண்டுக்காலம் என்னை இங்கே இருக்க விட்டீர்?' என்றார் கோவிந்தன். ராமானுஜர் சில வினாடிகள் அமைதியாக இருந்தார். பிறகு, 'கோவிந்தரே, சிறு வயதிலேயே நீர் என்னினும் பக்குவம் பெற்றிருந்தீர். நீர் பாடம் பயில நம்பியின் இடமே சரியான ஆசாரிய பீடம் என்று கருதினேன். தவிர, நான் உறவறுத்தவன். சன்னியாச ஆசிரமம் பூண்டவன். என் இடத்தில் உம்மை வரவழைத்துக் கொண்டால் அது உமது இல்லற தருமத்துக்கு இடையூறு செய்யலாம். எதுவும் தானாக அமைய வேண்டுமல்லவா?' கோவிந்தனுக்குப் புரிந்தது. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.
இடைப்பட்ட காலத்தில் அவரது தனி வாழ்க்கை என்னவாக இருந்தது என்று அவர் உடையவரிடம் சொல்லியிருக்கவில்லை. கோவிந்தனுக்குத் திருமணம் ஆகியிருந்தது. ஆனால் மனைவி அவளது பெற்றோருடன்தான் இருந்தாள். வயது வரும் வரை அதுதான் முறை என்று கோவிந்தனின் தாயாரும் பொறுத்திருந்தார். ஆனால் அவள் குடும்ப வாழ்வுக்கு ஆயத்தமானபோதும் கோவிந்தனுக்கு அதில் பற்றற்று இருந்தது. எப்போதும் இறை சிந்தனை. எப்போதும் கைங்கர்யம். பெரிய திருமலை நம் பியைவிட்டு கணப் பொழுதும் அகலாதிருந்து, அவருக்குச் சேவையாற்றிக் கொண்டிருப்பது. இவற்றைத் தவிர கோவிந்தனுக்கு வேறெதிலுமே நாட்டமற்றிருந்தது.'அண்ணா, என் சுபாவத்துக்குப் பொருத்தமற்ற ஒரு ஆசிரமத்தை நான் எப்படி ஏற்பேன்?' என்று கேட்டுவிடத்தான் துடித்தார். ஆனால் இப்போது உடையவர் அண்ணன் உறவில் இல்லை. அவர் ஆசாரிய ஸ்தானத்தில் இருக்கிறவர். தவிர அனைத்தையும் விண்டுரைத்துக்கொண்டு இருப்பதில் என்ன இருக்கிறது? காலமும் கடவுளும் கட்டளையிட்டு வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் கட்டுப்பட்டுப் போய்க் கொண்டிருந்தால் போதுமானது என்று அவருக்குத் தோன்றியது. திருவரங்கம் திரும்பும் வழியில் இருந்த அனைத்து திவ்ய தேசங்களையும் ராமானுஜர் சேவித்துக்கொண்டே வந்தார். சோளிங்கபுரம் வந்து சேர்ந்தபோது அவர் மனத்தில் என்னவோ ஒன்று நெருடியது. கோவிந்தனை உற்றுப் பார்த்தார். முகம் வாடியிருந்தது. எதையோ நினைத்து அவர் கவலைப்பட்டுக் கொண்டும் ஏங்கிக் கொண்டும் இருப்பதாகத் தோன்றியது.'கோவிந்தப் பெருமானே, என்ன யோசனை?''ஒன்றுமில்லை சுவாமி. பெரியவரைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவரும் என்னைத்தான் நினைத்துக் கொண்டிருப்பார். இருந்த காலத்தில் ஒரு நாள்கூட அவரை விட்டு நான் பிரியவேயில்லை.
தாய்மாமனாக இருந்து குருவானவர். வாழ்வில் நான் பெற்ற நல்லதற்கெல்லாம் காரணமாக இருந்தார். சட்டென்று விட்டுவிட்டுப் புறப்பட்டு விட்டோமே என்று...''சரி, ஒன்று செய்யும். நீர் சென்று பெரிய திருமலை நம்பியுடன் இன்னும் சில காலம் இருந்துவிட்டு வாரும்!'திடுக்கிட்டுப் போனார் கோவிந் தன்.'இது நமது நியமனம். இன்றே கிளம்பி விடுங்கள்' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் ராமானுஜர். இதுவும் எம்பெருமான் சித்தம் என்று கருதிய கோவிந்தன், உடையவர் அனுப்பிய இரண்டு பேர் துணையுடன் மீண்டும் திருமலைக்குப் போய்ச் சேர்ந்தார். ராமானுஜரும் அவரது சீடர்களும் காஞ்சிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே மீண்டும் திருக்கச்சி நம்பியைச் சந்தித்து அவரோடு சிறிது காலம் தங்கி, பேரருளாளனை சேவித்துக் கொண்டிருந்தார் ராமானுஜர். திருமலைக்குச் சென்ற கோவிந்தன், நம்பியின் வீட்டை அடைந்தபோது, 'யாரது?' என்றார் பெரியவர். 'குரல் தெரியவில்லையா? நமது கோவிந்தன் தான் வந்திருக்கிறான்!' என்றார் அவரது மனைவி. 'கோவிந்தனா? அவனை யார் இங்கு வரச் சொன்னது? அப்படியே கிளம்பச் சொல்லு.'திடுக்கிட்டுப் போனார் அவர் மனைவி. வெளியே நின்றிருந்த கோவிந்தனுக்கும் இது கேட்டது.'என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? எத்த னையோ தொலைவு பய ணம் செய்து வந்திருக்கிறான். ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பச் சொன்னால்கூட நியாயம். அதை விட்டுவிட்டு...''விற்ற பசுவுக்குப் புல் இடுவார்களா? அவன் போய்ச் சேர்ந்த இடம்தான் இனி அவனுக்குக் கதி.
இதைச் சொல்லி வாசலோடு அனுப்பிவிடு' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். கொடுத்ததைத் திரும்பப் பெறுவது வைணவ தருமமல்ல. பாடங்களின் இடையே எத்தனையோ முறை நம்பி இதனைச் சொல்லியிருக்கிறார். இதோ மீண்டுமொரு முறை அனுபவமாக மலர்கிற பாடம். கோவிந்தனுக்குப் புரிந்தது. அங்கிருந்தே கைகூப்பி வணங்கிவிட்டு மீண்டும் ராமானுஜரைத் தேடிக் கிளம்பிவிட்டார். வேகவேகமாகப் பயணம் செய்து அவர் காஞ்சிக்கு வந்து சேர்ந்தபோது ராமானுஜர் அங்கே கிளம்பத் தயாராக இருந்தார். 'என்ன ஆயிற்று கோவிந்தரே? ஏன் வந்துவிட்டீர்?' கோவிந்தன் நடந்ததைச் சொன்னார். கண்மூடி யோசித்த ராமானுஜர், 'அப்படியானால் சரி. திருவரங்கம் வந்துவிடுங்கள்' என்று அழைத்துக்கொண்டு புறப்பட்டார். 'பற்றும் பாசமும் என்றும் துக்கமே. அன்று கேட்டீர்களே, ஏன் உம்மை என் பக்கத்தில் வைத்துக்கொள்ளவில்லை என்று...' 'புரிகிறது சுவாமி.''உமக்குப் பெரிய திருமலை நம்பியின் மீதுள்ளது மரியாதை கலந்த பாசம். அவர் உம்மீது வைத்திருப்பதோ அன்பு கலந்த நேசம். அந்த நேசம்தான் வீட்டுக்குள் கூட விடாமல் விரட்டியடிக்கவும் செய்தது. இந்த அனைத்தையும் எம்பெருமானின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்ப்பதுதான் நாம் உய்ய ஒரே வழி.' இந்தச் சொற்கள் கோவிந்தனின் வைராக்கியத்தை மேலும் பட்டை தீட்டியது. அவர் இன்னும் கூர்மை யடைந்தார். பளிச்சென்று ஒரு கை நீர் அள்ளி முகத்தில் அடித்து துடைப்பது போல மனத்தை நிர்மலமாக்கி எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பித்தார்.சொல்லிவைத்த மாதிரி அவ ருக்கு வேறொரு சிக்கல் உடனே வந்து சேர்ந்தது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

இருளும் தனிமையும்


Advertisement



Ramanujar Download














கோவிந்தனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடையவரோடு அவரும் பிற சீடர்களும் திருவரங்கம் வந்து சேர்ந்தபோது அவரது அம்மா தனது மருமகளை அழைத்துக்கொண்டு திருவரங்கத்துக்கு வந்து வீடு பார்த்துக் குடியேறியிருந்தாள்.

'எதற்காக நீங்கள் இங்கே வந்தீர்கள்?' என்று கோவிந்தன் கேட்டார்.'நல்ல கதையாக இருக்கிறதே. இன்னும் எத்தனை நாளைக்கு நீ உன் மனைவியைத் தனியே விட்டுவிட்டு குருகுலவாசம் செய்து கொண்டிருப்பாய்? திருமணம் என்று ஒன்று நடந்துவிட்டது. இல்லற தருமம் என்று ஒன்று இருக்கிறது. நேற்று வரைக்கும் தாய்மாமன் வீடு, இன்றைக்கு உடையவர் மடம். நாளைக்கு என்ன செய்வாய் என்று யாருக்குத் தெரியும்? எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. ஒழுங்காக உன் மனைவியோடு குடும்பம் நடத்துகிற வழியைப் பார்' என்றாள் அம்மா.கோவிந்தன் யோசித்தார். ஒரு முடிவுக்கு வந்து, 'சரி அம்மா. கொஞ்சம் பொறுங்கள். இப்போதுதான் இங்கே வந்திருக்கிறேன். சில நாள் போகட்டும்' என்று சொல்லிவிட்டு அப்போதைக்குத் தப்பித்துப் போனார்.

சில நாள்கள் பொறுத்திருந்துவிட்டு அம்மா மீண்டும் அந்தப் பேச்சைத் தொடங்கியபோது, 'ஓ, அதற்கென்ன? இருளும் தனிமையும் இருக்கும்போது அவள் வரட்டும்' என்று சொல்லிவிட்டு மடத்துக்குப் போய்விட்டார்.கோவிந்தனின் தாயாருக்கு மகிழ்ச்சியானது. மகன் ஒப்புக்கொண்டு விட்டான். இனி நல்ல நாள் பார்க்க வேண்டியதுதான். உடனே பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய ஆரம்பித்து விட்டாள்.
ஆனால் அவள் பார்த்த நல்ல நாள்களிலெல்லாம் கோவிந்தனைப் பிடிக்க முடியாமல் போனது. இருட்டிய போதெல்லாம் அவர் யாருடனாவது சத்விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பார். எப்போது உறங்குகிறார் என்றே வீட்டில் அவரது அம்மாவுக்கும் மனைவிக்கும் தெரியாது. தனித்திருக்கும் பொழுதுகள் பெரும்பாலும் பகலாக இருந்தது.என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று பல நாள் அவள் யோசித்துக்கொண்டே இருந்தாள். மகனிடம் பலவிதமாகப் பேசிப் பார்த்தும் பயனில்லாமல் இருந்தது. வேறு வழியின்றி ஒருநாள் ராமானுஜரிடம் போய் நின்றாள்.'நீங்கள் தருமம் அறிந்தவர். கோவிந்தன் செய்வது முறையா?''சரி தாயே. நான் பேசுகிறேன்' என்று மட்டும் சொல்லிவிட்டு கோவிந்தனை அழைத்தார் உடையவர்.

'சுவாமி...''உமது மனைவி காத்திருக்கிறாள். ஒரு நல்ல நாள் பார்த்து அவளிடம் போய்ச் சேரும். இது நமது உத்தரவு.'அதற்குமேல் என்ன பேசுவது? கோவிந்தன் அமைதியாகத் திரும்பிவிட்டார்.பரபரவென்று வேலை நடந்தது. கோவிந்தனின் தாயார் உடனடியாக ஒரு நாள் பார்த்தார். இருளும் தனிமையுமான பொழுது. தனது மருமகளை அழைத்து அறிவுரைகள் சொல்லி, அலங்காரம் செய்து அறைக்குள் அனுப்பி வைத்தாள்.'உட்கார்' என்றார் கோவிந்தன்.அவள் அமர்ந்ததும், 'நீ திருப்பாவை வாசித்திருக்கிறாயா?'
'இல்லை சுவாமி.''நமது உடையவருக்குத் திருப்பாவை ஜீயர் என்று இங்கே பெயர். அதன் ஒவ்வொரு சொல்லிலும் அவர் தோய்ந்தவர். ஆண்டாளின் மிகக் கனிந்த பக்தியே காதலாக உருப்பெறுகிறது.''ஓ. எப்படியாவது கற்கிறேன்.''கற்றால் போதாது பெண்ணே. அந்த பக்தியைப் பயில வேண்டும். இவ்வுலகில் நாம் பக்தி செய்யவும் நேசம் கொள்ளவும் சீராட்டவும் தாலாட்டவும் தகுதியான ஒரே ஒருவன், எம்பெருமான் மட்டும்தான். பரமனிடம் கொள்ளும் பக்திதான் ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான நேசமாக விரிவு கொள்ளும்.'அவளுக்குச் சங்கடமாக இருந்தது. என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. சரி பேசி ஓயட்டும் என்று காத்திருந்தாள்.கோவிந்தன் நிறுத்தவில்லை. ஆண்டாளில் ஆரம்பித்து அத்தனை
ஆழ்வார்களைப் பற்றியும் பேசினார்.
திருமலையில் நம்பியிடம் தான் பயின்ற பாடங்களை விரிவாகச் சொன்னார். ராமாயணம். ஆ, அது எத்தனை பெரிய மகாசமுத்திரம்!'தத்துவங்கள் அனைத்தும் ஒன்றுகூடும் இடம் ஒன்று உண்டென்றால் அது ராமசரிதம்தான். ஒருநாள் உனக்கு ராமாயணம் சொல்ல ஆரம்பிக்கிறேன். கேட்கிறாயா?'வேறு வழியின்றி அவள் தலையாட்டினாள்.'திருமலை நம்பி ராமாயணத்தில் கரை கண்டவர். ஆளவந்தாரிடம் பயின்றவர்களிலேயே அவர் மட்டும்தான் ராமாயண விற்பன்னர். அதை சரியான விதத்தில் உள்வாங்குவது பெரிய காரியம். அது வெறும் கதையல்ல பெண்ணே. மனித குலத்துக்கே அருமருந்தான தத்துவப் பெரும் திரட்டு.'அவளுக்கு உறக்கம் வந்துவிட்டது. 'நான் படுத்துக் கொள்ளட்டுமா?' என்று கேட்டாள்.'ஒ, தாராளமாக. துாக்கம் வரும்போது துாங்கிவிடுவதுதான் நல்லது. நீ படு' என்றார் கோவிந்தன்.மறுநாள் விடிந்ததும் கோவிந்தனின் அம்மா, தனது மருமகளை அழைத்து ஆர்வமுடன் கேட்டாள், 'நேற்று என்ன நடந்தது?''அவர் எனக்கு ராமாயணம் ஆரம்பிக்கவிருப்பதாகச் சொன்னார்.'
'என்னது? ராமாயணமா? விடிய விடிய நீ கேட்ட ராமாயணம் அதுதானா!'அவள் பதிலேதும் சொல்லவில்லை. அமைதியாக நகர்ந்து போய்விட்டாள். கோவிந்தனின் அம்மாவுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. இவன் சரிப்பட மாட்டான்.மீண்டும் ராமானுஜரிடம் போய் நின்றாள்.ராமானுஜர் கோவிந்தனை அழைத்து விசாரித்தார். 'நேற்றிரவு என்ன நடந்தது?''சுவாமி, நீர் சொன்னதை நிறை வேற்ற வேண்டுமென்றால் எனக்கு இருளும் தனிமையும் தேவை. அது எனக்கு அமையவில்லை.''என்ன சொல்கிறீர் கோவிந்தப் பெருமானே? இரவு தனியாக நீங்களும் உமது பத்தினியும் மட்டும்தானே அறைக்குள் இருந்தீர்கள்?''யார் சொன்னது? எங்குமுள்ள எம்பெருமான் அங்கும் இருந்தான். அவன் இருந்ததால் இருள் என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது. அவன் இருக்கும்போது நான் எப்படி உங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியும்?'பேச்சற்றுப் போனாள் கோவிந்தனின் தாய். ராமானுஜருக்கு
கோவிந்தனின் மனம் புரிந்துவிட்டது. கொஞ்சம் அவகாசம் எடுத்து, அந்தப் பெண்மணியிடம் விரிவாகப் பேசினார். கோவிந்தனின் மனைவியையும் ழைத்துப் பேசினார். 'அம்மா! உன் கணவர் வேறு விதமான மன நிலையில் உள்ளார். இல்லற தருமத்தைக் காப்பது அவருக்கு சிரமம். நீதான் புரிந்துகொள்ள வேண்டும்.'கஷ்டமாக இருந்தாலும் அவளுக்குப் புரிந்தது. துக்கமாக இருந்தாலும் ஏற்றுத்தான் தீர வேண்டும்.ஒருநாள் அது நடந்தது. உடை
யவர் கோவிந்தனுக்குத் திரிதண்டமும் காஷாயமும் அளித்து சன்னியாச ஆசிரமத்துக்கு வாயில் திறந்து வைத்தார்.'உமக்கு என் பெயரையே தருகிறோம். இனி நீரும் எம்பெருமானார் என்றே அழைக்கப்படுவீர்!' என்றார் உடையவர்.'அது தகாது சுவாமி. தங்கள் உயரம் எங்கே, நான் எங்கே? நான் தங்கள் பாதம் தாங்கியாகவே இருக்க விரும்புகிறேன். தங்கள் பெயரைச் சுமக்குமளவுக்கு எனக்குத் தகுதியில்லை.''சரி. பெயரைச் சற்று சுருக்கலாம். ஆனால் மாற்ற இயலாது. நீர் இனி எம்பார் என அழைக்கப்படுவீர்!' என்றார் ராமானுஜர்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


காஷ்மீரக் கனி


Advertisement



Ramanujar Download













'ஒன்று கவனித்தீரா? உடையவரின் சிறப்புக்கு அவரது சீடர்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற கிரீடங்களைச் சேர்த்துக் கொண்டே போகிறார்கள். இவர் உயர்வு, அவர் மட்டம் என்று ஒருத்தரைக்கூடத் தரம் பிரிக்க முடியாதபடி அத்தனை பேருமே எப்பேர்ப்பட்ட ஞானஸ்தர்களாக விளங்குகிறார்கள் பாரும்!'

பெரிய நம்பியிடம் அரையர் சொல்லிக் கொண்டிருந்தார்.
'உண்மைதான் அரையரே. முதலியாண்டான் ஆகட்டும், கூரத்தாழ்வான் ஆகட்டும், அருளாளப் பெருமான் எம்பெருமானாராகட்டும், எம்பாராகட்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஜொலிக்கிறார்கள். உடையவரைத் தவிர வேறு நினைவே இன்றி எப்போதும் அவரது சொற்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பதால் இப்படியாகிறது என்று நினைக்கிறேன்.'
'ராமானுஜரும் சொல்லித் தருவதில் சளைப்பதேயில்லை. மடத்துக்குச் சென்றால் இருபத்தி நாலு மணி நேரமும் ஏதாவது ஒரு வகுப்பு நடந்து கொண்டேதான் இருக்கிறது.'
'அவரது நேரத்தை சீடர்களும் பக்தர்களும் முழுதாக உண்டு கொண்டிருக்கிறார்கள். என் கவலையெல்லாம் அவர் எப்போது பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதப் போகிறார் என்பதுதான்!'சொல்லிவிட்டு ஏக்கத்துடன் எங்கோ வெறித்துப் பார்த்தார்
பெரிய நம்பி. ஆளவந்தாரின் மூன்று நிறைவேறாத ஆசைகள் ராமானுஜருக்காக இன்னமும் காத்திருப்பதை அவர் நினைக்காத நாளே இல்லை. சந்திக்கும்போதெல்லாம் அதைக் குறித்து நினைவுபடுத்த அவர் தவறுவதும் இல்லை.
'சுவாமி, எனக்கும் அதே யோசனைதான். ஆனால் பிரம்ம சூத்திர உரைக்கு அடிப்படை நூலாக நமக்குத் தேவைப்படுவது போதாயண விருத்தி (விருத்தி என்றால் உரை). இங்கே அந்நூலோ, பிரதியோ கிடையாது. வடக்கே எங்கோ ஒரு பிரதி இருப்பதாகச் சொல்லுகிறார்கள். தேடிச் செல்லுவது பெரிதல்ல. ஆனால் கிடைக்க வேண்டுமே?' என்பார் உடையவர்.
பெரிய நம்பிக்கும் அது தெரியும். ஆளவந்தாரின் ஆசையே அதுதான். பிரம்ம சூத்திரத்துக்கு போதாயண மகரிஷியின் உரையை அடியொற்றி ஓர் எளிமையான உரை செய்ய வேண்டும். அவர்தான் வியாசரின் மனத்தை முற்றிலுமாகப் புரிந்துகொண்டு உரை எழுதியவர் என்பது ஆளவந்தாரின் கருத்து. இறப்பதற்குமுன் பல சமயம் தமது சீடர்களிடம் அது பற்றி அவர் பேசியிருக்கிறார்.
'திரமிடர் என்றொருவர் எழுதியிருக்கிறார். குஹதேவர் என்ற ரிஷி எழுதியிருக்கிறார். டங்கர் என்று மற்றொருவர் பாஷ்யம் (உரை) செய்திருக்கிறார். நமக்குத் தெரிந்து இவ்வளவு. தெரியாமல் இன்னும் சிலர் இருக்கலாம். ஆனால் எத்தனை உரைகள் இருந்தாலும் போதாயணரின் உரையே சிறப்பு. அதனை அடியொற்றி ஓர் எளிய உரை செய்யப்பட வேண்டும்!'
கி.மு. நான்காம் நூற்றாண்டில் வசித்த (எட்டாம் நூற்றாண்டு என்றும் சொல்வார்கள்) போதாயணர் அடிப்படையில் ஒரு கணித வல்லுநர். யாக குண்டங்கள், யாக மேடைகள் அமைப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய அளவுகள் சார்ந்து முதல் முதலில் ஆய்வு செய்
தவர். செங்கோண முக்கோணத்தின் பக்க அளவுகளை வர்க்க - வர்க்க மூலமின்றிக் கண்டறியும் முறையைக் கண்டுபிடித்தவர். சூத்திரங்களின் சக்கரவர்த்தி. சூத்திரம் என்பது சுருங்கச் சொல்லுவது. வேதங்களின் இறுதிப் பகுதியில் வருகிற உபநிடதங்களின் சாரமே பிரம்ம சூத்திரம். இதை வேதாந்த சூத்திரம் என்றும் சொல்லுவதுண்டு. உபநிடதங்களின் உள்நுழைந்து புரிந்துகொள்ள பிரம்ம சூத்திரமே சரியான வாயில். பிரம்ம சூத்திரத்தை சரியாக விளங்கிக் கொள்ளத்தான் போதாயணரின் உரை.
போதாயணரின் உரை அடிப்படையில்தான் பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுத வேண்டும் என்று ஆளவந்தார் கருதியதற்கு அடிப்படைக் காரணம், போதாயண விருத்தி, விசிஷ்டாத்வைத அடிப்படையில் அமைந்தது என்பது. ஜீவனுக்கும் பரமனுக்குமான உறவைப் பேசுவதல்லவா அடிப்படைத் தத்துவம்? அதை விளக்கும் நூலும் சரியான விதத்தில் அமைய வேண்டுமென்பது அவரது கவலை.
ராமானுஜரும் பெரிய நம்பியும் இதைப் பற்றிப் பல சமயம் பேசியிருக்கிறார்கள். அரையர் பேசிவிட்டுப் போன பிறகும் பெரிய நம்பி ஒரு சமயம் உடையவரைச் சந்தித்து இதைக் குறித்துப் பேசினார்.
'ஒரு தகவல் கிடைத்திருக்கிறது சுவாமி. காஷ்மீரத்தில் உள்ள சாரதா பீடத்தில் போதாயண விருத்தி இருப்பதாகத் தெரிகிறது. இங்கிருந்து அங்குள்ளவர்களைத் தொடர்பு கொள்வதென்பது சாத்தியமில்லாத காரியம். நேரில் போனால் ஒருவேளை அதைக் காண முடியலாம்' என்றார் ராமானுஜர்.
'காஷ்மீரமா! அடேயப்பா, அது வெகு தொலைவில் உள்ள இடமாயிற்றே.'
'ஆம். பல்லாயிரக்கணக்கான காதங்கள் என்கிறார்கள். ஆனால் நமக்கு போதாயண விருத்தி வேண்டுமென்றால் அங்கே போய்த்தான் தீரவேண்டும்.'
'யாரையாவது அனுப்பிப் பார்க்கலாமா சுவாமி?'
'அது சரியாக வராது நம்பிகளே. நானே நேரில் போகலாமென்று இருக்கிறேன்.'
முடிவெடுக்கிறவரைதான் யோசனை. தீர்மானம் வந்துவிட்டால் அடுத்தக் கணம் செயல்தான். ராமானுஜரின் இந்தக் குணம் பெரிய நம்பிக்கு நன்றாகத் தெரியும். எனவே, 'எப்போது?' என்று கேட்டார்.
'இதோ புறப்பட வேண்டியதுதான். கூரத்தாழ்வானைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன். உதவிக்கு ஒரு சில சீடர்கள் போதும். நீங்கள் உத்தரவளித்தால் நாளையே கிளம்பி விடுவேன்!' என்று சொன்னார்.
ராமானுஜர் புறப்பட்ட செய்தி அவரைக் காட்டிலும் வேகமாக தேசமெங்கும் பரவியது. பயணத்தைவிட அதன் நோக்கம் பலருக்குக் கவலையளித்தது. ஏற்கெனவே அத்வைதத்துக்கு எதிரான சித்தாந்தம் ஒன்றை முன்வைத்துப் பரப்பிக் கொண்டிருக்கிற சன்னியாசி. இப்போது பிரம்ம சூத்திரத்துக்கும் விசிஷ்டாத்வைதம் சார்ந்து ஓர் உரை எழுதிவிட்டால் அத்வைத சித்தாந்தத்துக்கு அது பெரிய அச்சுறுத்தலாகிவிடுமோ?
'முடியாது. சாரதா பீடத்தில் போதாயண விருத்தி இருப்பது உண்மையென்றால் அது ராமானுஜர் கரங்களுக்குக் கிடைக்கக் கூடாது!' என்று ஆங்காங்கே பல அத்வைத சித்தாந்திகள் கூடிப் பேசினார்கள். ஆனால் சாரதா பீடத்தை எப்படித் தொடர்பு கொள்வதென்று யாருக்கும் தெரியவில்லை. ஆதி சங்கரர் அங்கொரு பீடம் அமைத்த விவரம் தெரியும். அத்வைத சித்தாந்தத்தைப் பரப்புகிற திருப்பணியில் அவர்கள் முனைப்புடன் இருக்கிற விவரம் தெரியும். அங்கே போதாயண விருத்தி இருப்பதும் அது விசிஷ்டாத்வைத ரீதியில் எழுதப்பட்ட விளக்கம் என்பதும் அப்போதுதான் அவர்களுக்குத் தெரிந்தது.
எப்படித் தடுப்பது?
அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது ராமானுஜர் காஷ்மீரத்துக்குப் போய்ச் சேர்ந்தார். கிட்டத்தட்ட நுாறு நாள் பயணம். நடுவில் அவர் எங்கும் தங்கவில்லை. சற்றும் நேர விரயம் இல்லை. ஒரே நோக்கம். ஒரே சித்தம். வழியில் கூரத்தாழ்வானிடம் ஒரே ஒரு விஷயம் சொல்லியிருந்தார்.
'போதாயணரின் உரை நம் கைக்குக் கிடைக்கிறதோ இல்லையோ. காண முடிந்த கணத்தில் ஒருமுறை வாசித்தேனும் பார்த்துவிட வேண்டும்!'
அது எத்தனை அவசியமான கட்டளை என்பது காஷ்மீரத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்


களவு போன சுவடி
Advertisement



Ramanujar Download












காஷ்மீரத்தில் இருந்தது போதாயண உரையின் முழு வடிவமல்ல. இரண்டு லட்சம் படிகள் (படி என்பது எழுத்தைக் குறிக்கும் பழைய அளவு) கொண்ட உரையின் சுருக்கப்பட்ட வடிவம் மட்டுமே. அந்தச் சுருக்கம் இருபத்தி ஐயாயிரம் படிகள் கொண்டது. எப்போது வந்து சேர்ந்தது என்பதே தெரியாமல் பலப்பல காலமாக காஷ்மீரத்தில் காப்பாற்றப்பட்டு வந்த ஓலைச்சுவடி அது. சரஸ்வதி பீடத்தில் இருந்த அந்தச் சுவடிக்கட்டை காஷ்மீரத்து மன்னன் கண்ணேபோல் காத்து வந்தான். அங்கே அதை எடுத்துப் படிக்கிறவர்களோ, சிந்திக்கிறவர்களோ, அதன் முக்கியத்துவம் உணர்ந்தவர்களோ யாரும் இருக்கவில்லை. புராதனமான ஓர் ஓலைச்சுவடிக்கு அளிக்கவேண்டிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதே தவிர, அதில் மூழ்க யாருமில்லை.

சீடர்களோடு காஷ்மீரத்தை அடைந்த ராமானுஜர் மன்னரைச் சந்தித்துத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
'அடியேன் ராமானுஜன். தென் திருவரங்கத்தில் இருந்து வருகிறேன்.'
மன்னனால் நம்ப முடியவில்லை. ஓர் ஓலைச்சுவடிக்காக அத்தனை தூரத்தில் இருந்து ஒருவர் வருவாரா! அவனால் எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.
'அது அவசியம் மன்னா. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயண விருத்தியை அடியொற்றி உரை எழுத வேண்டுமென்பது எங்கள் ஆசாரியர் ஆளவந்தாரின் விருப்பம். ஆசாரியர் உத்தரவை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் பயணம் ஒரு பொருட்டா?'
மன்னருக்கு ராமானுஜரைப் பிடித்துப் போனது. சில மணி நேரம் அவரோடு உரையாடியதில் அவரது ஞானத்தின் ஆழ அகலங்கள் புலப்பட்டு, என்ன கேட்டாலும் செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்திருந்தான்.
'ஆனால் மன்னா, போதாயண விருத்தியை இவருக்குக் கொடுத்தனுப்புவது அத்தனை சுலபமல்ல. அது புனிதப் பிரதி. காலகாலமாக நமது சாரதா பீடத்தில் இருந்து வருவது. அன்னையின் உத்தரவின்றி அதை இன்னொருவரிடம் ஒப்படைக்க இயலாது' என்றார்கள் அங்கிருந்த பண்டிதர்கள்.
ராமானுஜர் யோசித்தார். 'ஒப்படைப்பதெல்லாம் பிறகு. ஒரு முறை வாசிக்கவேனும் எனக்கு அனுமதி தரவேண்டும்' என்று சொன்னார்.
'அதில் பிரச்னை இல்லை ராமானுஜரே. இந்தச் சபையிலேயே நீங்கள் அதனை வாசிக்கலாம்' என்றான் மன்னன்.
மறுநாள் காஷ்மீரத்து மன்னனின் சபையில் அங்கிருந்த அத்தனை அத்வைத பண்டிதர்களும் சூழ்ந்திருக்க, போதாயண விருத்தியின் சுருக்கம் எடுத்து வரப்பட்டது.
'ஆழ்வான்! நீர் அதை வாங்கிப் படியும்!' என்று கூரத்தாழ்வானைப் பார்த்துச் சொன்னார் ராமானுஜர்.
கைபடாமல் காலகாலமாக சரஸ்வதி தேவியின் சன்னிதானத்தில் தவமிருந்த ஓலைச்சுவடியை நடுங்கும் கைகளில் கூரத்தாழ்வான் வாங்கினார். கண்ணில் ஒற்றிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார். ராமானுஜர் கேட்டார். மன்னர் கேட்டார். சபை முழுதும் கேட்டது.
பண்டிதர்களுக்கு உடனே புரிந்துபோனது. போதாயண விருத்தியை ராமானுஜர் பெற்றுச் சென்றால் சர்வ நிச்சயமாக அதற்கு விசிஷ்டாத்வைத அடிப்படையில் ஓர் உரை எழுதி விடுவார். காலகாலமாக இருந்து வரும் சங்கர பாஷ்யத்துக்கு அது ஒரு போட்டியாகப் பேசப்படும். எது சிறந்தது என்ற பேச்சு வரும். ஒப்பீடுகள் எழும். எதற்கு இந்தச் சிக்கல் எல்லாம்? சாரதா பீடம் என்பது சங்கரர் உருவாக்கியது. அங்கே பாதுகாக்கப்படும் பிரதி ராமானுஜரின் கைகளுக்குப் போய்ச் சேருதல் தகாது.
எதைத் தடுக்க வேண்டும் என்று காஷ்மீரத்துக்கு வெளியே இருந்த அத்வைத பண்டிதர்கள் தவித்துக் கொண்டிருந்தார்களோ, அதையேதான் காஷ்மீரத்துப் பண்டிதர்களும் நினைத்தார்கள். எனவே மன்னரிடம் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள்.
'இவர் ஒருமுறை கேட்டுவிட்டார் அல்லவா? இது போதும் மன்னா. சுவடியைக் கொடுத்தனுப்புவதெல்லாம் முடியாத காரியம்.'
ராமானுஜருக்குப் புரிந்தது. இது வாதம் செய்யும் இடமல்ல. வந்த காரியம் நல்லபடியாக நடந்தேற வேண்டும். அதற்கு மன்னனின் சகாயம் முக்கியம். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
'மன்னா, நான் இங்கே கிளம்பி வந்ததே தெய்வ சித்தம்தான். இது நிகழவேண்டும் என்று பரம்பொருள் விரும்பும்போது கூடாதென்று தடுப்பது முறையா?'
'இது தெய்வ சித்தம் என்பதை நான் எப்படி அறிவது? ஒன்று செய்யுங்கள். இப்போது உங்கள் சீடர் வாசித்ததன் சாரத்தை நீங்கள் உள்வாங்கியபடி எழுதிக் கொடுங்கள். சரஸ்வதி தேவி அதை ஒப்புக் கொள்கிறாளா பார்ப்போம்!' என்றான்.
'ஓ, அது செய்யலாமே!' என்று அப்போதே கிளம்பிச் சென்று எழுத உட்கார்ந்தார். விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தார்.
மறுநாள் மீண்டும் சபை கூடியபோது போதாயண விருத்தியைத் தாம் உள்வாங்கிய விதத்தில் எழுதிக் கொண்டு வந்திருந்த ராமானுஜர், அந்தச் சுவடிகளை மன்னனிடம் அளித்தார்.
'பண்டிதர்களே, இந்தச் சுவடியை சரஸ்வதி தேவியின் பாதங்களில் கொண்டு வையுங்கள். சன்னிதியை இழுத்து மூடுங்கள். நாளைக் காலை திறந்து பார்ப்போம். தேவி ஏற்றாலும் நிராகரித்தாலும் ஏதேனும் ஒரு விதத்தில் நமக்குத் தெரியப்படுத்துவாள்' என்று சொன்னான்.
மன்னன் சொன்னபடி அரசவைக் காவலர்கள் முன்னிலையில் ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலைச் சுவடிகள் சரஸ்வதி பீடத்தில் வைக்கப்பட்டு, சன்னிதி சாத்தப்பட்டது. மறுநாள் திறந்து பார்த்தபோது, தேவியின் பாதங்களில் வைக்கப்பட்ட சுவடிகள் அவளது சிரசின்மீது இருந்தது!
திகைத்துப் போனான் மன்னன்.
'இவர் மகா பண்டிதர். சரஸ்வதி தேவியே அங்கீகரித்துவிட்ட பிறகு நாம் சொல்ல ஒன்றுமில்லை' என்று அறிவித்துவிட்டு போதாயண உரைச் சுருக்கத்தை ராமானுஜரிடம் ஒப்படைத்தான்.
உடையவரும் கூரத்தாழ்வானும் பிற சீடர்களும் மகிழ்ச்சியோடு அங்கிருந்து திருவரங்கம் கிளம்பினார்கள்.
ஆனால் காஷ்மீரத்துப் பண்டிதர்களுக்கு மன்னனின் செயல் பிடிக்கவில்லை. 'இது தகாது. ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுத போதாயண விருத்தி உதவக்கூடாது! அத்வைத வழியிலான உரையைத் தவிர இன்னொரு தத்துவம் சார்ந்த விளக்கம் வரவே கூடாது!' என்று முடிவு செய்தார்கள். அன்றிரவே ஆள்களை அனுப்பி ராமானுஜர் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஓலைச் சுவடிகளைத் திருடிக்கொண்டு போனார்கள்.
மறுநாள் கண் விழித்துப் பார்த்த உடையவர், ஓலைச்சுவடிகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ந்து போனார்.
'ஐயோ, இத்தனைப் பாடுபட்டு வாங்கி வந்த சுவடிகள் களவு போய்விட்டனவே! ஒரே ஒருமுறை கேட்டதை வைத்து எப்படி நான் உரை எழுதுவேன்!' என்று திகைத்து நின்றார்.
சீடர்கள் குழப்பமும் கலக்கமுமாக அவரையே பார்த்துக் கொண்டிருக்க, கூரத்தாழ்வான் பணிவான குரலில் சொன்னார், 'சுவாமி, கவலைப்படாதீர்கள். வாசித்த உரை எனக்கு மனப்பாடமாகி விட்டது!'
'என்ன சொல்கிறீர் ஆழ்வானே?! முழுதும் மனப்பாடமா!'
'ஆம் சுவாமி. அத்திறமையும் தங்கள் அருளால்தான்!'அப்படியே கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் ராமானுஜர்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

அருளும் பொருளும்
Advertisement



Ramanujar Download











'போதாயண விருத்தியின் சுருக்கப் பிரதி கிடைக்காது போனால் என்ன? நமக்குக் கூரத்தாழ்வான் கிடைத்திருக்கிறார்! பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதும் பணியை இனி தொடங்கி விடுவோம்!' என்றார் ராமானுஜர்.
திருவரங்கம் திரும்பி, நடந்ததை அனைவருக்கும் விவரித்தபோது அத்தனை பேரும் வியந்து போனார்கள். 'ஆழ்வான்! உமது கூர்நோக்கும் கவனமும் ஆசாரிய பக்தியும் நிகரற்றது. இந்தப் பணி சிறப்பாக நடந்தேற நீர் உடையவருக்குப் பக்கபலமாக இரும்!' என்றார் முதலியாண்டான்.வேதங்களின் மிக முக்கியப் பகுதி, வேதாந்தம் எனப்படுகிற உபநிடதங்கள். பிரம்ம சூத்திரம், உபநிடதங்களுக்கான திறவுகோல். பிரம்ம சூத்திரத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள போதாயணரின் உரையே சரியான வழி என்பது ஆளவந்தார் கருத்து. போதாயணரின் உரையை அடியொற்றியே ராமானுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தை எழுதத் தொடங்கினார். அவர் சொல்லச் சொல்ல எழுத்தில் வடிக்கிற வேலையை கூரத்தாழ்வான் செய்ய ஆரம்பித்தார்.'ஆழ்வான், நான் சொல்லிக்கொண்டே போவேன். நீர் எழுதிக்கொண்டே வாரும். ஏதேனும் ஓர் இடத்தில் நான் சொல்லுகிற பொருள் உமக்கு ஏற்பில்லை என்றால் சட்டென்று நிறுத்திவிடும்.' என்று சொல்லிவிட்டு ஆரம்பித்தார் ராமானுஜர்.விறுவிறுவென்று உரை வளர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள். ஓரிடம். ராமானுஜர் சொல்லிக்கொண்டே இருக்க, ஆழ்வான் எழுதாமல் வெறுமனே அமர்ந்திருந்தார்.'என்ன ஆயிற்று ஆழ்வான்?'பதில் இல்லை. 'சொல்லும், என்ன பிரச்னை?'மீண்டும் பதில் இல்லை.'சரி, நான் சொல்வதை எழுத உமக்கு விருப்பமில்லை போலத் தெரிகிறது. நீரே எழுதிக் கொள்ளும்' என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டார் ராமானுஜர்.விஷயம் பரவி சீடர்கள் பதற்றமானார்கள். 'உடையவருக்குக் கோபம் வந்துவிட்டதா? அதுவும் கூரத்தாழ்வானிடமா? நம்பவே முடியவில்லையே?' என்று கூடிக்கூடிப் பேசிக் கொண்டார்கள்.'இது சிறிய விஷயம். சொல்லுகிற பொருளில் உடன்பாடில்லையென்றால் எழுதுவதை நிறுத்திவிட்டுச் சும்மா இரும் என்று ஆசாரியர் என்னிடம் சொன்னார். உரை எழுதும் சிந்தனையில் இருக்கும்போது முன் சொன்னதை மறந்திருப்பார். நாளைக்குத் தெரிந்துவிடும் பாருங்கள்' என்று சொல்லி கூரத்தாழ்வான் அவர்களை அமைதிப்படுத்தினார்.
அன்றிரவு ராமானுஜர் நடந்ததை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கத்தில் இல்லாத வினோதம் அது. சட்டென்று தனக்கு ஏன் கோபம் வந்துவிட்டது? ஆழ்வானைப் போய்க் கடிந்துகொண்டு விட்டேனே? சொல்லிக்கொண்டு வந்த வரியின் பொருளைச் சிந்தித்துப் பார்த்தார். பகவத் சேஷ பூத: இது ஜீவாத்மாவின் சொரூபத்தை விளக்குகிற இடம். ஜீவன், பகவானின் அடிமை என்பதே இதன் பொருள். ஜீவாத்மாவின் அடிப்படை லட்சணமே அதுதான். ஆனால் உரை விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தபோது ஜீவனின் அறிவை முன்னிலைப்படுத்தி உடையவர் விளக்கியிருந்தார். ஜீவனே கவானின் அடிமை என்னும்போது அறிவென்று தனியே ஒன்று ஏது? அதுவும் பகவானுக்குள் ஒடுங்குவதே அல்லவா?அடடா, இது தவறான விளக்கமல்லவா? இதனால்தான் கூரத்தாழ்வான் எழுதாமல் நிறுத்திவிட்டார் போலிருக்கிறது. மறுநாள் ராமானுஜர் கூரத்தாழ்வானை அழைத்தார். 'ஆழ்வான், நான் சொன்ன பொருள் தவறு. இதோ மாற்றிக் கொள்ளும்' என்று சரியான பொருளை மீண்டும் சொல்ல, கூரத்தாழ்வான் மீண்டும் எழுத ஆரம்பித்தார். இந்த விஷயம் திருவரங்கம் முழுதும் பரவிவிட்டது.
'உடையவரின் சீடர்கள் எப்பேர்ப்பட்ட ஞானச்சுரங்கங்களாக இருக்கிறார் கள்! உடையவர் உரைக்கே திருத்தம் கேட்கிற அளவுக்குக் கூரத்தாழ்வானின் கல்வி பெரிது!' என்று ஊரார் பேசியபோது கூரத்தாழ்வான் அதைப் பணிவுடன் மறுத்தார். 'இந்தக் கல்வியும் அவர் அளித்ததுதான் சுவாமி!'ஒருபுறம் ராமானுஜருடன் அமர்ந்து ஸ்ரீபாஷ்யப் பணி. மறுபுறம் வீட்டில் தனியே ராமாயணம் வாசித்துக் கொண்டிருந்தார் கூரத்தாழ்வான். வாசிப்பது என்றால் வேகமாக ஓட்டுவதல்ல. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் புரிந்து உள்வாங்குவது. பிறகு அதைத் தாம் உள்வாங்கிய விதத்தில் எழுதி வைப்பது.கோவிந்தன் திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்து எம்பாராகி, அவரோடு பேசிப் பழகத் தொடங்கியபிறகு கூரத்தாழ்வானுக்கு ராமாயணம் வாசிப்பதில் கட்டுக்கடங்காத பேராவல் எழுந்தது. உடையவரோடு செலவிட்ட நேரம் போக மிச்சப் பொழுதுகளையெல்லாம் வால்மீகியுடனேயே கழிக்கத் தொடங்கினார். வீட்டில் ஆண்டாள் எப்போதும் தனியே இருந்தாள். அவளைக் கவனிக்கக்கூட கூரேசனுக்கு நினைவின்றிப் போய்விடும். ராமானுஜரே அடிக்கடி நினைவுபடுத்தி வீட்டுக்கு அனுப்பி வைப்பார். 'கூரேசரே, ஆண்டாள் நலமாக இருக்கிறாள் அல்லவா? அவளை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறீர் அல்லவா?'ஆழ்வான் வெறுமனே தலையாட்டுவார். ஒன்றும் சொல்ல மாட்டார். என்ன சொல்வது? ஆண்டாளைப் பக்குவமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்கும் ஆசைதான். ஆனால் மனம் ராமாயணத்திலும் உடையவர் சொல்லும் உரையிலும் அல்லவா மூழ்கிக் கிடக்கிறது?'சுவாமி, கூரேசரைக் கேட்காதீர்கள். அவர் மழுப்பி விடுவார்.
இந்த மனிதர் அவளைப் பொருட்படுத்துவதேயில்லை' என்று மற்ற சீடர்கள் அன்பும் கோபமும் கலந்த ஆதங்கத்தை முன் வைப்பார்கள். 'ஆண்டாள் கர்ப்பவதியானால் அடுத்தக் கணம் எனக்குச் சொல்லுங்கள்!' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார் ராமானுஜர். அவர் ஒரு தீர்மானம் செய்திருந்தார். வெளியே சொல்லவில்லை. இது ஆளவந்தாரின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறத் தொடங்கியிருக்கும் தருணம். பரம பாகவதனான கூரத்தாழ்வானின் வாரிசும் அதனை நிறைவேற்றும் பணியில் ஈடுபடும் என்று அவர் திடமாக நம்பினார். காரணம், ஒரு சம்பவம். பெரும் பணக்காரராக இருந்த கூரத்தாழ்வான் அனைத்தையும் தானம் செய்துவிட்டு உடையவரே கதி என்று வந்த நாளாகப் பிட்சை எடுத்துத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார். அன்றன்றைய தேவைக்கு மட்டுமே பிட்சை. மறுநாளுக்கு என்று ஒரு அரிசியைக் கூடச் சேர்த்து வைக்கிற வழக்கமில்லை. ஒருநாள் இருநாளல்ல. ஆண்டுக்கணக்காக. ஆண்டாளுக்கு அதில் பிரச்னை ஏதும் இருக்கவில்லை. அவள் கூரத்தாழ்வானைக் காட்டிலும் இந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தவள்.ஆனால் ஸ்ரீபாஷ்ய உரை எழுதுவதில் ராமானுஜருக்கு உதவி செய்ய ஆரம்பித்து, அதே காலக்கட்டத்தில் ராமாயண வாசிப்பிலும் கூரத்தாழ்வான் ஈடுபட்டிருந்தபோது ஒருநாள் பிட்சைக்குப் போக மறந்து விட்டார். விடிந்ததில் இருந்து வேலையில் மும்முரமாக இருந்தவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று ஆண்டாளும் சும்மா இருந்தாள். மதியப் பொழுதாயிற்று. மாலை ஆயிற்று. இருட்டவும் தொடங்கிவிட்டது. ஆழ்வான் எழுந்திருக்கவே இல்லை. உலக கவனமே இன்றி வேலையில் மூழ்கியிருந்தார்.பணியிருந்தால் பசியிருக்காதா? ஆண்டாளுக்குக் கவலையாகிவிட்டது. என்ன செய்வதென்று புரியவில்லை.'ஆண்டாள், இன்று உன் வீட்டில் இருந்து சமைக்கிற வாசனையே வரவில்லையே? என்ன சாப்பிட்டாய்?' அக்கம்பக்கத்தில் கேட்டார்கள். என்ன சொல்லுவதென்று அவளுக்குத் தெரியவில்லை.'ஐயோ, கூரேசர் இன்று பிட்சைக்குச் செல்லவேயில்லையா? அப்படியென்றால் நீயும் பட்டினிதானா?'சட்டென்று கோயில் மணிச்சத்தம் கேட்டது. அது அரங்கன் அமுது செய்யும் நேரம்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -


பேர் சொல்லும் பிள்ளை
Advertisement



Ramanujar Download










அது பெருமான் அமுது செய்யும் நேரம். திருவரங்கப் பெருமானுக்கு இரவு நேர உணவு, அரவணை. அரங்கனுக்கு மட்டுமல்ல. அவனைத் தாங்கிக் கிடக்கும் ஆதிசேஷனுக்கும் அதுவே அமுது. வேகவைத்த பச்சரிசியைக் கெட்டியான வெல்லப்பாகில் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும்போது நெய்யைச் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். சமைப்பது மண் பாண்டத்தில்தான் என்பதால் கொட்டக் கொட்ட நெய்யை அது உறிஞ்சிக் கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட பதத்தில் சட்டென்று இறக்கி வைத்து ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறினால் அது அரவணை. இதற்குக் குங்குமப்பூ, நாட்டுச் சர்க்கரை சேர்த்த பசும்பால் துணை. இந்த இரண்டும் தினமும் உண்டு. எனவே அன்றும் இருந்தது.

கோயில் மணிச் சத்தம் கேட்டதும் ஆண்டாளுக்கு அரங்கன் இரவு உணவுக்குத் தயாராகிவிட்டது புரிந்தது. விறுவிறுவென்று உள்ளே வந்தாள். பூஜையில் இருக்கும் அரங்கனின் முன்னால் நின்று ஒரு பார்வை.'இது உனக்கே நியாயமா? உன் பக்தர் இங்கே காலை முதல் ஒரு பருக்கை சோறும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். நீ மட்டும் வேளை தவறாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? அன்னசாலை நிறுவி தினமும் ஆயிரம் பேருக்கு உணவிட்டுக் கொண்டிருந்தவர் அவர். பசியோடு இப்படி நாளெல்லாம் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறாரே, அவர் இன்னும் உண்ணவில்லையே என்று ஒருக் கணம் எண்ணிப் பார்த்திருப்பாயா? என்ன பெருமாள் நீ?'அது நெருக்கத்தால் வந்த கோபம். ஊரை விட்டுத் திருவரங்கம் வந்த பிறகு அரங்கனைத் தவிர வேறு உறவு கிடையாது அவளுக்கு. கொஞ்ச வேண்டுமானாலும் அவன்தான்; திட்ட வேண்டுமானாலும் அவன்தான். ஆண்டாளுக்குத் தன் பசி பொருட்டல்ல. கணவர் உண்ணாதிருப்பதுதான் உறுத்திக் கொண்டிருந்தது. ஒரு வார்த்தை கேட்டுவிடலாம். 'பசிக்கவில்லையா?'
என்றால், இன்று உஞ்சவிருத்திக்குச் செல்லவில்லையே என்று அர்த்தம். நீ உணவு கொண்டு வராததால் நானும் உண்ணாதிருக்கிறேன் என்று அர்த்தம். அந்த நினைவு வந்துவிட்டால் அப்புறம் வேலை கெட்டுவிடும். குற்ற உணர்ச்சி கூடிவிடும். கேவலம் தன் பசியா பெரிது? பணி புரிந்து கொண்டிருப்பவர் பசியோடிருப்பது மட்டும்தான் ஆண்டாளுக்குக் கவலை. அதுதான் கோபமானது. கோயில் சன்னிதியில் அரங்கனுக்கு அமுது செய்விக்க அரவணையும் பாலும் கொண்டு வந்து வைத்தார்கள். உத்தம நம்பி அதற்குப் பொறுப்பாளி. சன்னிதிக்குள் அவர் நுழைந்ததுமே அரங்கன் குரல் கொடுத்தான். 'உத்தம நம்பி! நமக்கு அமுது செய்விப்பது இருக்கட்டும். அங்கே ஆழ்வான் பட்டினி கிடக்கிறான். அவன் மனைவி என்னைப் பிடித்துத் திட்டிக் கொண்டிருக்கிறாள். முதலில் அவனுக்குப் பிரசாதத்தை எடுத்துச் செல்லும்!'திடுக்கிட்டுப் போனார் உத்தம நம்பி. என்ன நடக்கிறது இங்கே?'கேள்வியெல்லாம் அப்புறம். முதலில் பிரசாதம் ஆழ்வான் வீட்டுக்குப் போகட்டும். அவன் சாப்பிட்ட பிறகு இங்கே வந்தால் போதும்.'உத்தம நம்பி அரவணை பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கூரத்தாழ்வான் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.'யார்?''கூரேசரே, உத்தம நம்பி வந்திருக்கிறேன். கதவைத் திறவுங்கள்.'இந்நேரத்தில் இவர் எதற்கு இங்கே வரவேண்டும் என்ற யோசனையுடன் கூரத்தாழ்வான் கதவைத் திறக்க, கோயில் பிரசாதங்களுடன் நம்பி நிற்பது கண்டு குழப்பமானார்.
'என்ன விஷயம் நம்பி?''ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்தாரும் பிரசாதம். முதலில் சாப்பிடுங்கள். பிறகு பேசுவோம்' என்று சொல்லிவிட்டுப் போனார்.
கூரேசருக்கு ஒன்றும் புரியவில்லை. 'எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது ஆண்டாள். காலை முதல் நான் உணவின் நினைவே இன்றிக் கிடந்திருக்கிறேன். என்னால் பாவம், நீயும் எதையுமே சாப்பிடவில்லை. சொல்லி வைத்த மாதிரி அரங்கன் பிரசாதம் வருகிறது பாரேன்!'
ஒரு கணம் அமைதியாக இருந்த ஆண்டாள், நடந்ததைச் சொல்லிவிட்டாள். 'தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் சாப்பிடாமல் வேலை
செய்து கொண்டிருந்தீர்கள். எனக்கு அது பொறுக்கவில்லை. அரங்கனுக்கு அமுது செய்விக்கும் நேரம் நெருங்குவதை உணர்த்தும் மணிச்சத்தம் கேட்டதும் கொஞ்சம் முறையிட்டு, கடிந்துகொண்டு விட்டேன்!'திடுக்கிட்டுப் போனார் கூரத்தாழ்வான். 'நீ செய்த வேலைதானா!''இல்லை சுவாமி. இது அவன் செய்த வேலை.''சரி, நீ முதலில் சாப்பிடு!' என்று அன்போடு பிரசாதத்தை எடுத்து அவளுக்குக் கொடுத்தார்.அன்று உண்ட அரவணைப் பிரசாதமே ஆண்டாளின் வயிற்றில் கருவாக உருக்கொண்டது.ராமானுஜருக்கு இது தெரியும். கூரத்தாழ்வானே சொல்லியிருந்தார். அதனால்தான் ஆண்டாளுக்கு எப்
போது குழந்தை பிறக்கும் என்று அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அரங்கனின் ஆசியாக வந்து உதிக்கவிருக்கிற குழந்தை. கூரத்தாழ்வானின் வித்து. ஞான சூரியனாக இல்லாமல் வேறெப்படி இருந்துவிடும்?பத்து மாதங்கள் பிறந்து கடந்தபோது செய்தி வந்தது. ஆண்டாளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
பூரித்துப் போனார் ராமானுஜர். 'நான் குழந்தையைப் பார்க்க வேண்டுமே!' என்று முதலியாண்டானிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே எம்பார் மடத்துக்குள் நுழைந்தார். 'சுவாமி, இதோ ஆழ்வானின் பிள்ளை!'எங்கே எங்கே என்று ஆவலுடன் கையில் ஏந்திய ராமானுஜரின் முகம் சட்டென்று வியப்பில் ஆழ்ந்தது.'என்ன இது, குழந்தையின் மீது த்வயம் மணக்கிறதே!'சுற்றியிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. எம்பார் புன்னகை செய்தார். 'ஆம் சுவாமி! குழந்தைக்குக் காப்பாக இருக்கட்டுமே என்று வருகிற வழியில் அதன் காதில் த்வய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே வந்தேன்.''பிரமாதம்! நான் செய்ய நினைத்த காரியத்தை நீர் செய்து முடித்தே வீட்டீர். இவன் அரங்கனின் அருளோடு பிறந்தவன். விஷ்ணு புராணம் இயற்றிய பராசரரின் பெயரை ஏந்த எல்லாத் தகுதிகளோடும் உதித்தவன். இவனுக்குப் பராசர பட்டர் என்று பெயரிடுகிறேன்!'பரவசமாகிப் போனார்கள் உடையவரின் சீடர்கள். எப்பேர்ப்பட்ட தருணம்! ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகளில் அதுவும் ஒன்று. தகுதி வாய்ந்த ஒருவருக்கு வியாச பராசர ரிஷிகளின் பெயர்களை இடுவது. ஆனால் பெயரிட்டதன் மூலமே ராமானுஜர் அந்தக் குழந்தையின் பிற்காலத் தகுதியைத் தெரியப்படுத்திவிட்டாரே.'தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிரசாதம் பெற்றுத்தான் கோசலை ராமனைப் பெற்றாள். அதன்பின் ஆண்டாள் மட்டுமல்லவா இப்படி அரவணைப் பிரசாதம் உண்டு பிள்ளை பெற்றிருக்கிறாள்? ராமன் எப்படியோ அப்படித்தான் இந்தப் பிள்ளை!' தீர்மானமாகச் சொன்னார் ராமானுஜர்.பிறகும் கூரத்தாழ்வானுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு வேதவியாச பட்டர் என்று பெயரிட்டார்.பிரம்ம சூத்திர உரை எழுதும் பணியும் அப்போது நிறைவுற்றிருந்தது.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


யாத்திரை
Advertisement



Ramanujar Download









சேரன் மடம் பக்தர் கூட்டத்தில் நிரம்பிப் பிதுங்கிக் கொண்டிருந்தது. செய்தி பரவியதில் இருந்தே எங்கெங்கிருந்தோ வைணவர்கள் உடையவரைப் பார்க்கக் கிளம்பி வர ஆரம்பித்தார்கள். சீடர்களுக்கு நிற்க நேரமின்றி இருந்தது. ராமானுஜரைப் பார்க்க வருகிறவர்களை ஒழுங்குபடுத்தி அமர வைப்பதே பெரிய வேலையாக இருந்தது. ஒருபுறம் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் எதிரெதிரே அமர்ந்து, எழுதிய ஓலைச் சுவடிகளைப் படித்துப் பார்த்து ஒழுங்கு செய்து கொண்டிருக்க, மறுபுறம் ராமானுஜர் வந்தவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்.

பிரம்ம சூத்திரமும் அதன் முக்கியத்துவமும். சங்கரர் தமது பிரம்ம சூத்திர உரையில் என்ன சொல்லியிருக்கிறார்? இந்நுால் எவ்விதத்தில் அதனின்று வேறுபடுகிறது? போதாயணரின் உரை. அதைப் பெற்றுவர காஷ்மீரம் சென்ற கதை. கூரத்தாழ்வானின் காந்த சித்தம் செய்த பேருதவி.பேசி மாளவில்லை. பெரிய நம்பி வந்திருந்தார். அரையர் வந்திருந்தார். இன்னும் யார் யாரோ வந்து கொண்டிருந்தார்கள்.'சுவாமி, பிரம்ம சூத்திர உரை எழுதியது போதாது. வைணவ தரிசனத்தை பாரதம் முழுதும் தாங்கள்தாம் ஏந்திச் சென்று பரப்ப வேண்டும். இங்கிருந்தபடி பெரிய அளவில் எதையும் சாதிக்க இயலாது!'
'உண்மைதான். ஆனால் திருவரங்கத்தைவிட்டு எத்தனைக் காலம் ஆசாரியரால் வெளியே சுற்ற இயலும் என்று தெரியவில்லையே?''போதாயணரின் உரையைப் பெற்றுவர காஷ்மீரம் வரை சென்று திரும்பியவர் அவர். அந்தப் பயணத்தின் நோக்கம் இன்று நிறைவேறியிருக்கிறது. அன்று அருளிய கலைமகளுக்கு நன்றி சொல்லவேனும் மீண்டுமொருமுறை காஷ்மீரம் வரை போய்த்தான் ஆகவேண்டும்.'அவரவர் மனத்தில் பட்டதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.ராமானுஜர் மனத்தில் ஒரு திட்டம் இருந்தது. வைணவ தரிசனத்தைப் பரப்புவது என்கிற பெரும்பணியை திவ்யதேச யாத்திரையாக
அமைத்துக்கொண்டு புறப்பட்டால் சரியாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.
முதலில் சோழநாட்டுத் திருப்பதிகள். பிறகு பாண்டிய நாட்டுத் திருப்பதிகள். அப்படியே மலைநாடு என்னும் கேரளம். ஆந்திரம். கர்நாடகம். அப்படியே காஷ்மீரம்வரை போய்த் திரும்பலாம். ஆனால் அனைவரும் சொல் வதுபோல எத்தனைக் காலம் ஆகும் என்றுதான் சரியாகத் தெரியவில்லை.'குறைந்தது ஆறேழு வருடங்கள் பிடிக்கலாம் சுவாமி.' என்றார் எம்பார். அரங்கன் சன்னிதிக்குச் சென்று கண்மூடி நின்றார் ராமானுஜர். காரியம் மிகவும் பெரிது. பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதைவிட, திருவரங்கக் கோயில் பணிகள் தடையின்றி நடைபெறுவதும் அவசியம்.'யாரைப் பொறுப்பாக விட்டுச் செல்ல நினைத்திருக்கிறீர்கள்?' என்று கூரத்தாழ்வான் கேட்டார். 'முதலியாண்டானைத் தவிர வேறு யார் பொருந்துவார்? எம்பார் அவருக்கு உடன் இருந்து உதவிகள் செய்து கொண்டிருக்கட்டும்.'பரபரவெனக் காரியங்கள் நடந்தேறின. ஒரு நல்ல நாளில் உடையவர் தமது சீடர்களோடு பாரத யாத்திரை புறப்பட்டார். காவிரிக் கரையில் சீடர்களோடு பக்தர்களும் ஆசாரியர்களும் கூடி நின்று வழியனுப்பக் காத்திருந்தார்கள்.'முதலியாண்டான்...''சுவாமி, கவலையின்றிச் சென்று வாருங்கள். அரங்கன் திருக்கோயில் பணிகள் எந்தத் தடையுமின்றி நடக்கும்.'பெரிய நம்பியிடம் சொல்லிக் கொண்டார். அரையரிடம் சொல்லிக் கொண்டார். அனைவரிடமும் விடைபெற்று யாத்திரை புறப்பட்டார்.
திருவரங்கத்தில் கிளம்பிய குழு நேரே குடந்தை நகருக்கு வந்து சேர்ந்தது. அங்கே ஆராவமுதன். ஆழ்வார் பாசுரங்களால் நாவினிக்கப் பாடி மகிழ்ந்து, வரிசையாக ஒவ்வொரு சோழநாட்டுத் திருப்பதியாகச் சேவித்துக் கொண்டே போனார். ஒவ்வொரு ஊரிலும் கொத்துக் கொத்தாக அவருக்குச் சீடர்கள் சேர ஆரம்பித்தார்கள். பத்திருபது பேருடன் புறப்பட்ட யாத்திரைக் குழு, சோழநாட்டைக் கடந்து பாண்டிய நாட்டுத் திருப்பதிகளைத் தொடும்போது பெருங்கூட்டமாகி இருந்தது.திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதிக்கு உடையவர் வந்து சேர்ந்தபோது, கிடாம்பி ஆச்சானைப் பார்த்து 'ஏதேனும் ஒரு சுலோகம் சொல்லும் ஆச்சானே!' என்றார்.சட்டென்று கிடாம்பி ஆச்சான் சொல்லத் தொடங்கியது ஆளவந்தார் அருளிய ஒரு சுலோகம். 'பல்லாயிரம் குற்றங்கள் புரிந்து பாவக்கடலில் விழுந்து கிடக்கிற அகதி நான். எம்பெருமானே, உன்னைத் தவிர இப்பாவிக்கு அடைக்கலம் தர யாருமில்லை. உன் கருணைக் குடையை விரித்துக் காட்டு' என்ற பொருளில் வருகிற சமஸ்கிருத சுலோகம் அது.அவர் பக்தியுடன் கைகூப்பி அதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது சன்னிதியில் இருந்த அர்ச்சகர், 'நிறுத்தும்!' என்று குரல் கொடுத்தார்.கூட்டம் திடுக்கிட்டுப் போனது.
சொன்னது அர்ச்சகர்தாம். ஆனால் வந்தது அர்ச்சகரின் குரல் இல்லை. இது வேறு. யாரும் கேட்டிராதது. அபூர்வமான குரல். ஒரு அசரீரியின் தன்மை அதில் இருந்தது.'ஓய் கிடாம்பி ஆச்சானே! அகதி என்றும் பாவி என்றும் எதற்காக இப்படிச் சொல்லிக் கொள்கிறீர்? எம்பெருமானார் அருகே இருப்பவர்கள் யாரும் அகதியுமல்ல; பாவியுமல்ல.' வெலவெலத்துப் போனது கூட்டம். அவர்களுக்குப் புரிந்துவிட்டது. கோயில் அர்ச்சகர் வாய்வழியே குரல் கொடுத்தது கள்ளழகரேதான். பரவசத்தில் கரம் கூப்பிக் கண்ணீர் மல்க அப்படியே சிலையாகி நின்றார்கள். வாழ்வின் ஆகப்பெரிய சாதனை, ஒரு சரியான குருவைக் கண்டடைவது. அது முயற்சியால் கூடுவதல்ல. அதிர்ஷ்டத்தால் நேர்வதல்ல. அது ஒரு தரிசனம். தவத்தின் இறுதி விளைவு. இதற்குமேல் ஒன்றுமில்லை; எடுத்துப் போ என்று எம்பெருமான் அள்ளிக் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகிற தருணம்.'எம்பெருமானாரே!' என்று அத்தனை பேரும் உடையவர் தாள் பணிந்தார்கள்.திருமாலிருஞ்சோலையில் இருந்து கிளம்பி திருப்புல்லாணிக்குச் சென்று சேவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு ஆழ்வார் திருநகரிக்கு வந்து சேர்ந்தார் ராமானுஜர். நம்மாழ்வாரின் அவதாரத் தலம். பொலிக பொலிக என்று உடையவரின் பிறப்பை என்றோ முன்னறிவித்த மூதாதை. ராமானுஜருக்கு அம்மண்ணில் கால் வைத்தபோதே சிலிர்த்தது.
தெய்வத் தமிழ் என்பது திருவாய்மொழியைத் தவிர வேறில்லை என்பதில் அவருக்கு மறு கருத்தே கிடையாது. வேதம் தமிழ் செய்த மாறனின் திருவாய்மொழிக்கு ஒரு சிறந்த உரை படைக்க வேண்டுமென்ற ஆளவந்தாரின் மூன்றாவது நிறைவேறாக் கனவை அவர் எண்ணிப் பார்த்தார்.மறுநாள் கோயிலுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து அன்று இரவெல்லாம் உள்ளூரில் ஒரு மடத்தில் தங்கி இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். உறக்கம் வரவில்லை. மனத்தில் திருவாய்மொழியின் வரிகள் தன்னிச்சையாகப் பொங்கி வந்து நிறைத்துக் கொண்டிருந்தன.அறைக்கதவு லேசாக மூடியிருந்தது. வெளியே ஏதோ காரியமாக வேகமாக நடந்துபோன சீடன் பிள்ளான் சட்டென ஒரு கணம் நின்றான். முகத்தில் ஒரு முறுவல். கதவைத் திறந்து, 'என்ன சுவாமி, உள்ளே ஓடிக்கொண்டிருப்பது திருமாலிருஞ்சோலைமலை என்றேன் என்ன பாசுரம்தானே?' என்று கேட்டான்.திடுக்கிட்டுப் போனார் ராமானுஜர்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


பொலிந்த மண்

Advertisement




Ramanujar Download









அது நள்ளிரவுப் பொழுது. மடத்தில் ராமானுஜரோடு தங்கியிருந்த சீடர்கள் அத்தனை பேரும் உறங்கியிருந்தார்கள். அவர் மட்டும்தான் விழித்திருந்தது. ஆனால் விழித்திருப்பது தெரியாமல் படுத்து, கண்மூடியே இருந்தார். மனத்துக்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு பாசுரத்தின் ஒரு வரி, பிள்ளானுக்கு எப்படித் தெரிந்தது?

'பிள்ளான், உள்ளே வா!'அறைக்குள் வந்தவன் பணிவுடன் கைகூப்பி நிற்க, 'எப்படிச் சொன்னாய்? எனக்கு உள்ளே ஓடுகிற பாசுரம் உனக்கெப்படித் தெரிந்தது?''தெரியவில்லை சுவாமி. இந்தப் பொழுதில் உங்கள் மனத்தில் இதுதான் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்று தற்செயலாகத் தோன்றியது. நான் சொன்னது சரியா?''மிகவும் சரி. மாலிருஞ்சோலையில் கள்ளழகரைச் சேவித்துவிட்டுக் கிளம்பியதில் இருந்து அதே நினைவு. திருநகரிக்கு வந்து நம்மாழ்வாரை தியானிக்கத் தொடங்கிவிட்ட பிறகும் உள்ளுக்குள் இன்னும் திருமாலிருஞ்சோலைப் பாசுரம்தான் உருண்டு கொண்டிருக்கிறது.' பிள்ளான் புன்னகை செய்தான். 'எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது சுவாமி. எப்படியோ உங்கள் மனம் உணர்ந்தவனாக இருக்கிறேன்.'ராமானுஜர் அவனைப் பாசத்து டன் நோக்கினார். பெரிய திருமலை நம்பியின் மகன். இனி உங்கள் சொத்து இவன் என்று சொல்லி நம்பி ஒப்படைத்த கணத்தில் இருந்து உடையவருடன் கூடவே இருப்பவன். யார் யாரிடமெல்லாம் தாம் படிக்கச் சென்றோமோ அவர்களுடைய வாரிசுகளெல்லாம் தம்மிடம் பயில வந்தது ராமானுஜருக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது. பெரிய நம்பியின் மகளும் மகனும் முதலில் வந்தார்கள். திருக்கோட்டியூர் நம்பி தமது மகனான தெற்காழ்வானை அனுப்பி வைத்தார்.
திருமாலையாண்டானின் மகன் பிறகு வந்தான். அரையருக்கு வாரிசு இல்லை. அவர் தமது தம்பியை அனுப்பி வைத்தார். பெரிய திருமலை நம்பி பிள்ளானைத் தந்தார். ஒரு ஞானத் தலைமுறையை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு தன்னைச் சேர்ந்திருப்பதை ராமானுஜர் விழிப்போடு அறிந்தார். பொறுப்பும் பொறுமையுமாக அவர்களுக்கெல்லாம் தாம் கற்ற அனைத்தையும் போதித்துக் கொண்டிருந்தார்.
'அது எங்கள் கொடுப்பினை சுவாமி. உங்கள் நிழலில் வசிப்பது ஒரு பாதுகாப்புணர்வைத் தருகிறது. இது எனக்கு வேறெங்கும் கிட்டியதில்லை' என்றான் பிள்ளான்.'பிள்ளான், நீ கவனமாகக் கற்கிறாய். தெளிவாகப் புரிந்து கொள்கிறாய். புரிந்ததைத் துல்லியமாக எடுத்துச் சொல்லவும் அறிந்தவனாக இருக்கிறாய். முதலியாண்டான், கூரத்தாழ்வானுக்குப் பிறகு மொழியில் ஆளுமை கொண்டவனாகவும் இருக்கிறாய். ஒன்று செய்கிறாயா?'
'உத்தரவிடுங்கள் சுவாமி!''நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ஓர் உரை செய்ய வேண்டும் என்பது எனது ஆசாரியர் ஆளவந்தாரின் இறுதி விருப்பங்களுள் ஒன்று. இன்றுவரை அதற்குப் பொருத்தமான நபர் என்று ஒருவர் என் மனத்தில் தோன்றாமலே இருந்தது. இப்போது உன்னைப் பார்க்கும்போது நீ ஏன் அப்பொறுப்பை ஏற்றுச் செய்யக்கூடாது என்று தோன்றுகிறது.''சுவாமி!' பரவசத்தில் சட்டென்று விழுந்து வணங்கினான் பிள்ளான்.'இல்லை.
நான் முடிவு செய்து விட்டேன். நீதான் சரி. வேதசாரமான நம்மாழ்வாரின் வரிகளுக்குக் காலம் கடந்து நிற்கக்கூடிய ஓர் உரை அவசியம். உன் வாழ்நாள் பணியாக ஏற்று அதை நிறைவேற்று.''உத்தரவு சுவாமி! இது அடியேன் செய்த பாக்கியம்.''உன்னை நான் இனி திருக்குருகைப் பிரான் பிள்ளான் என்றே அழைப்பேன். உலகமும் அவ்வண்ணமே அழைக்கட்டும்!''இப்படியொரு கௌரவமா! அடியேன் இதற்குப் பாத்திரமானவன்தானா?' 'சந்தேகமில்லை பிள்ளான். குரு
கூர் சடகோபன் பொன்னடி நிழலில் வசிப்பவர்கள் நாம். நம் அனைவருக்கும் அவரது அருளும் ஆசியும் என்றும் உண்டு.'மறுநாள் காலை சீடர்களுக்கு விவரம் தெரிந்தது. பிள்ளானைக் கட்டியணைத்துக் கொண்டாடினார்கள். 'வாருங்கள். ஆற்றுக்குக் குளிக்கப் போவோம். குளித்துவிட்டுக் கோயிலுக்குக் கிளம்பினால் சரியாக இருக்கும்' என்றார் ராமானுஜர்.சீடர்கள் புடைசூழ அவர் தாமிரவருணியை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது ஒரு சலவைத் தொழி
லாளி எதிரே வந்தான். ராமானுஜரைச் சற்றே குழப்பமும் சந்தேகமும் கலந்த பார்வையில் பார்த்துக்கொண்டே இருந்தவன், சட்டென்று ஒரு கணத்தில் அடையாளம் கண்டுகொண்டு அருகே ஓடி வந்து, 'சாமி, நீங்க உடையவர் தானே?''ஆமாப்பா!''ஐயா கும்புடறேனுங்க. உங்கள பத்தி நெறைய கேள்விப்பட்டிருக்கேன். இப்பிடி எங்கூருக்கே வந்து தரிசனம் குடுப்பீங்கன்னு நினைக்கலீங்கய்யா. ஒரு நிமிசம் இருங்க...' என்று பரபரத்தவன் எங்கோ பார்த்
துக் குரல் கொடுத்தான். 'டேய் சடகோபா! வகுளாபரணா! காரிமாறா! ஓடியாங்கடா... உடையவர் சாமி வந்திருக்காருடா நம்மூருக்கு!'ராமானுஜர் வியந்து போனார். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே? இந்த சலவைத் தொழிலாளி யாரை இப்படி அழைக்கிறான்? சடகோபன். வகுளாபரணன். காரிமாறன். எல்லாமே நம்மாழ்வாரின் பெயர்கள். ஒருவரையே இப்படி மூன்று பேர்களில் அழைக்கிறானா அல்லது மூன்றும் வேறு வேறு நபர்களின் பெயர்களா?
'ஐயா எம்புள்ளைங்க தாங்க... அந்தா வரானுக பாருங்க!' அவன் கைகாட்டிய திசையில் மூன்று சிறுவர்கள் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.
'டேய், சாமிய கும்புட்டுக்கங்கடா... பெரிய மகான் இவரு. இப்ப புரியாது உங்களுக்கு. அப்பால இவரு யாரு, எப்படிப்பட்டவருன்னு சொல்லித் தாரேன்.' என்றதும் மூன்று சிறுவர்களும் உடையவரின் பாதம் பணிந்து எழுந்து வணங்கினார்கள்.'அப்பனே, இவர்கள் மூவரும் உன் மகன்களா?''ஆமா சாமி!'
'மூன்று பேருக்கும் நம்மாழ்வாரின் திருநாமங்களையே வைத்திருக்கிறாயே அப்பா! நீ அவரை வாசித்திருக்கிறாயா?''நாம படிக்காத தற்குறிங்க! ஆனா இந்துாருக் காத்துல திருவாய்மொழி கலந்திருக்குது பாத்தீங்களா? அது மூச்சுக்காத்தா உள்ள போயிடுதே! அதான்.'பிரமித்து விட்டார் ராமானுஜர். வெகுநேரம் அவருக்குப் பேச்சே எழவில்லை. பிறகு நிதானத்துக்கு வந்ததும் பிள்ளானிடம் சொன்னார். 'புரிகிறதா பிள்ளான்? நம்மாழ்வாரும் அவரது திருவாய்மொழியும் மூச்சுக் காற்றேபோல் உலகம் முழுதும் உள்ளோர் உள்ளத்தில் சென்று நிறைய வேண்டும். நீ எழுதப் போகிற உரை அதற்கு உதவ வேண்டும்.'ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாரின் சன்னிதிக்குச் சென்று வெகுநேரம் உடையவர் கண்மூடி நின்றிருந்தார். அது புறப்பட்ட
இடம். ஊற்றின் மையக் கண். காலமும் இடமும் கணப் பொழுது தடம் புரண்டு ஜாலம் காட்டுகிற பேரற்புதம். ராமானுஜரின் மனத்தில் மகாலஷ்மியுடன் இணைந்த விஷ்ணுவின் தோற்றம் ஒரு கணம் வந்து நின்றது. சட்டென்று அது மாறி, மகாலஷ்மித் தாயார் தனியே வந்து நின்றாள். அவள் இருந்த இடத்தில் நம்மாழ்வார் நின்றார். பிறகு நாதமுனி வந்தார். உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி என்று வரிசையாக ஆசாரியர்கள் அத்தனை பேரும் நினைவில் வந்து உதித்து நின்றார்கள்.பணிவில் அவர் மனம் குவிந் தது. தன்னை நம்மாழ்வாரின் பாதங்களாக பாவித்துக் கனிந்தார்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


சொல்லிக் கொடு!

Advertisement






Ramanujar Download









'சுவாமி, தாங்கள் சற்று நேரம் உறங்கினால் நல்லது. காலை விடியும் முன் நாம் புறப்பட்டால்தான் திருக்குறுங்குடி சென்று சேர வசதியாக இருக்கும்' என்றார் வடுக நம்பி.

நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தில் இருந்து புறப்பட்டு திருக்கோளூர் சென்று, அங்கிருந்து சிரிவரமங்கை தெய்வநாயகனைத் தரிசித்துவிட்டு அடுத்த திவ்யதேசத்துக்குக் கிளம்பத் தயாராகியிருந்தார் ராமானுஜர். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள். எத்தனைப் பேர் வாதம் புரிய வருகிறார்கள்! வைணவம் என்பது வெறும் தத்துவமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இதைப் பண்டிதர்களுடன் வாதாடி விளங்க வைப்பதே உடையவருக்குப் பெரிய வேலையாக இருந்தது. அவர் போகுமிடமெல்லாம் பண்டிதர்கள் வாதத்துக்கு வந்துவிடுவார்கள். வாதம் என்று தொடங்கினால் நாள் கணக்கில் நீண்டுவிடும். பொறுமையாக, நிதானமாக, ஒவ்வொன்றாக எடுத்து விளக்கி, வாதிட வந்தவர்களை வசப்படுத்தி வைணவத்தை ஏற்கச் செய்யும்வரை ராமானுஜர் விடமாட்டார்.

'நமது பணி இதுவே அல்லவா? உலகெல்லாம் வைணவம் தழைக்கிற காலம் என்று வரும் என்று தெரியாது. ஆனால் உயிர் இருக்கிறவரை அதற்காக உழைப்பதற்காகத்தான் எம்பெருமான் என்னைப் படைத்திருக்கிறான்' என்பார்.'பெருமான் நினைத்தால் கணப் பொழுதில் அதைச் சாதித்துவிட முடியாதா?' என்றார் வடுக நம்பி.ராமானுஜர் புன்னகை செய்தார். 'வடுகா! தானே அனைத்தையும் செய்துவிடுவதென்றால் அவன் நம்மையெல்லாம் எதற்குப் படைத்து உலவவிட வேண்டும்? நமது இருப்பின் நியாயத்தை நாம் நிலைநாட்ட வேண்டாமா? உண்பதும் உறங்குவதும் சந்ததி விருத்தியும் மற்றதும் அனைவருக்கும் பொது. படைக்கப்பட்ட அத்தனை உயிரினங்களும் இதைத்தான் செய்கின்றன. ஒரு மனிதப் பிறப்பாக நாம் என்ன செய்கிறோம் அதற்கு மேலே? அதுவல்லவா முக்கியம்?''நீங்கள் அதைச் செய்யுங்கள் சுவாமி. எனக்கு உங்களை கவனித்துக் கொண்டால் போதும்!' என்றார் வடுக நம்பி.
உடையவர்களின் சீடர்களில் அவர் ஒரு தனிப் பிறவி. தனது ஆசாரியரைத் தவிர அவருக்கு தெய்வம் என்று தனியே ஒன்றில்லை. பொழுது விடியும்போது
அவரது பணி தொடங்கும். ராமானுஜர் உறங்கும்வரை நிழல் மாதிரி உடன் இருப்பார். ராமானுஜருக்கு நுாற்றுக்கணக்கான சீடர்கள் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு இதோ என்று உடனே வந்து நிற்பவர் அவர்தாம். மற்ற சீடர்கள் கோயிலுக்குப் போவார்கள். திருவரங்கம்
தவிர மற்ற திவ்ய தேசங்களுக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் தவறாமல் போவார்கள். நாலாயிரம் சேவிப்பார்கள். கோயில் திருப்பணி ஏதேனும் இருந்தால் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். ஆனால் வடுக நம்பிக்கு ராமானுஜரைக் கவனித்துக் கொள்வது தவிர வேறு திருப்பணி ஏதும் கிடையாது.'வடுகா, நாளை நாம் திருவெள்ளறை புறப்படுகிறோம். திருவாராதனப் பெருமாளை எடுத்து வைத்துக் கொள்' என்று ஒரு சமயம் ராமானுஜர் சொன்னார்.'உத்தரவு சுவாமி.'சொல்லிவிட்டு ராமானுஜரின் பூஜைக்குரிய பெருமாளை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டவர், அதனோடுகூட அவரது கட்டைச் செருப்பையும் சேர்த்து எடுத்து வைத்தார்.ஊர் போய்ச் சேர்ந்த ராமானுஜர், குளித்து முடித்து பூஜைக்கு அமர்ந்து, 'வடுகா, திருவாராதனப் பெருமாளை எடு' என்றபோது அவரது செருப்புகளை வெளியே எடுத்து வைத்துவிட்டு அதன்பின் பெருமாளை வெளியே எடுத்தார் வடுக நம்பி.திடுக்கிட்டு விட்டார் உடையவர். 'ஐயோ இதென்ன அபசாரம்! திருவாராதனப் பெருமாளுடன் எனது செருப்புகளை ஏன் சேர்த்து வைத்தாய்?'
'நல்ல கதையாக இருக்கிறதே? உங்களுக்கு உங்கள் பெருமாள் என்றால் எனக்கு என் பெருமாள்!'ராமானுஜருக்கு அது நினைவுக்கு வந்தது. முகத்தில் முறுவல் பூத்தது.'சுவாமி, தங்களை உறங்கச் சொன்னேன்.''சரியப்பா. நீயும் போய்ப் படுத்துக் கொள்'மறுநாள் காலை உடையவரும் சீடர்களும் சிரிவரமங்கையில் இருந்து புறப்பட்டுத் திருக்குறுங்குடி போய்ச் சேர்ந்தார்கள். உடையவரை வரவேற்க ஊரே திரண்டுவிட்டது. சன்னிதிக்குள் நுழைய முடியாத அளவுக்கு மக்கள் முண்டியடித்தார்கள். வடுக நம்பி முன்னால் வந்து அனைவரையும் நகர்ந்து நிற்கச் சொல்லி ராமானுஜர் சன்னிதிக்குள் செல்ல வழியமைத்துக் கொடுத்தார்.நம்மாழ்வாராக அவதரித்த நம்பி. நம்பாடுவான் என்னும்மலைவாசி பக்தனுக்கு தரிசனம் தருவதற்காகத் தனது கொடி மரத்தைச் சற்று நகர்த்தி வைத்துக்கொண்ட நம்பி. நின்ற, நடந்த, இருந்த, கிடந்த, அமர்ந்த கோலங்களில் காட்சியளிக்கிற நம்பி. எப்பேர்ப்பட்டவருக்கும் பார்த்த கணத்
தில் மோட்சமளிக்கிற நம்பி. எனக்கு மோட்சம் வேண்டும் என்று திருமங்கையாழ்வார் திருவரங்கப் பெருமானிடம் கேட்டபோது, 'அதற்கு நான் பொறுப்பாளியல்ல ஆழ்வாரே! நீர் திருக்குறுங்குடிக்குச் செல்லும். நம்பியிடம்தான் மோட்சத்தின் வாசல் சாவி இருக்கிறது' என்று சொல்லியிருக்கிறான்.
வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைக் கொன்றபிறகு மகாவிஷ்ணு தனது பயங்கரமான வராக ரூபத்தைக் குறுக்கிக்கொண்டு வந்து அமர்ந்த மண் அது. அதனாலேயே அது குறுங்குடி ஆனது. நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடிய திருத்தலம்.ராமானுஜர் பக்திப் பரவசத்துடன் கைகூப்பிக் கண்மூடி நின்றார். 'கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும்பழம் புரண்டுவீழ வாளைபாய் குறுங்குடி நெடுந்தகாய், திரண்ட தோள் இரணியன் சினங்கொள் ஆகம் ஒன்றையும் இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்பது உன்னையே'
மனத்துக்குள் திருமழிசை ஆழ்வாரின் வரிகள் ஓடிக் கொண்டிருந்தன. ஏகாந்தம். முழு நிசப்தம். எம்பெருமானே, என்னை ஆட்கொள்ள வருவீர்.
சட்டென்று அர்ச்சகரின் குரல் அனைவரையும் கலைத்தது.'ஓய் உடையவரே, நானும் எத்தனையோ அவதாரங்கள் எடுத்துப் பார்த்து விட்டேன். எவ்வளவோ நல்லது சொல்லிப் பார்த்து விட்டேன். இந்த மனிதர்களைத் திருத்திப் பணிகொள்வது சிரம சாத்தியமாகவே இருக்கிறது. உமக்கு எப்படி இது எளிதாகக் கைவருகிறது? ஆயிரம் ஆயிரமாக ஜனங்களைத் திரட்டி நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறீரே, அந்த சூட்சுமத்தை எனக்கு சொல்லித்தாரும்!'
திடுக்கிட்டுப் பார்த்தார்கள் சீடர்கள். கோயில் அர்ச்சகரின் வழியாகப் பேசுவது குறுங்குடி நம்பியேதானா?!
'அட ஆமாமப்பா, நானேதான். உமது ஆசாரியரின் உத்தியை எனக்குக் கற்றுத்தரச் சொல்லுங்கள்!'ஒளிவில்லை, மறைவில்லை. அர்ச்சகர்தான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் கேட்டது அவர் குரலல்ல. அது தெய்வத்தின் குரல். உடையவர் புன்னகை செய்தார்.'என்ன சிரிப்பு? சொல்லுமய்யா!''அதற்கென்ன, சொல்லித் தரலாமே? ஆனால் நீர் கேட்கும்படி கேட்டால் நாம் சொல்லித் தருகிறபடி சொல்லித் தருவோம்!'இந்த பதிலை, குறுங்குடி நம்பியல்ல; உடையவரின் சீடர்களே எதிர்பார்க்கவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com
- பா.ராகவன் -



பாடம் கேட்டவன்

Advertisement




Ramanujar Download









கேட்பது எம்பெருமான் என்று தெரிந்தும் 'கேட்கும் விதத்தில் கேள்' என்று ஒருத்தர் சொல்வாரோ?

சீடர்களுக்கு அது தாங்க முடியாத வியப்பு. 'அதிலொன்றும் தவறில்லை. சிஷ்யபாவம் சரியாகக் கூடாவிட்டால் வித்தை எப்படி சேரும்?' என்றார் அமுதனார். திருவரங்கம் கோயிலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் அவர். ராமானுஜர் கோயில் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்ய ஆரம்பித்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர். புரிதலில் பிரச்னை. பிறகு உடையவரைப் புரிந்துகொண்ட போது தன்னையே அவரிடம் ஒப்படைத்துச் சரண் புகுந்தவர்.

'என்ன சொல்கிறீர் அமுதனாரே! குறுங்குடி நம்பி கேட்ட விதம் சரியில்லை என்றுதான் நீரும் கருதுகிறீரா?''அதிலென்ன சந்தேகம்? நமது வடுக நம்பியைக் கேளும். அவ்வளவு ஏன், உடையவரே திருக்கோட்டியூர் நம்பியிடம் பயிலப் போனபோது என்ன நடந்ததென்று யோசித்துப் பாரும்!''சரியாகச் சொன்னீர். அரையரிடம் பாடம் கேட்கப் போனபோது அவருக்கு மஞ்சள் காப்பு இட்டுக் குளிப்பாட்டி விடுகிற வேலை வரை செய்திருக்கிறார். இதை அவரே என்னிடம் சொல்லியும் இருக்கிறார்!' என்றார் கிடாம்பி ஆச்சான்.அர்ச்சகர் உருவில் பெருமான் சிரித்தான். 'ராமானுஜரே! உமது சீடர்கள் சொல்லுவதே சரி. இதோ வந்தேன் பாரும்!' என்று சட்டென்று தமது பீடத்தில் இருந்து இறங்கி கீழே வந்து அமர்ந்தான். அர்ச்சகர் மூலமாகவே உடையவருக்கு எங்கிருந்தோ ஒரு பீடம் தருவிக்கப்பட்டு அதில் அமர வைத்தான். பவ்யமாகக் கைகட்டி வாய் பொத்தி, 'இப்போது சொல்லும் சுவாமி! எப்படி உம்மால் இம்மக்களைத் திருத்திப் பணிகொள்ள முடிகிறது?'ராமானுஜர் ஒரு கணம் கண்ணை மூடினார். ஆளவந்தாரை மனத்துக்குள் வணங்கினார். தமக்கு போதித்த ஐம்பெரும் ஆசாரிய புருஷர்களை நினைத்துக் கொண்டார். மெல்ல, பெருமானை நெருங்கி அவன் காதுகளில் த்வய மந்திரத்தை ஓதினார்.'நம்பீ, கேள்! உலகத்தாரைக் காப்பாற்றவோ, கரையேற்றவோ என் முயற்சி ஒன்றுமில்லை. அதைச் சாதித்துத் தருவது எம்பெருமான் திருவடியும் திருநாமமும்தான். இதைச் செய்து கொடு என்று கேட்பதற்கு எனக்கு அவன் இருக்கிறான். பக்தியுடன் ஈடுபடும் எக்காரியமும் வெற்றி பெறாமல் போகாது.'ஆஹா ஆஹா என்று பரவசத்தில் திக்குமுக்காடி நின்றது கூட்டம். எப்பேர்ப்பட்ட தருணம்! யாருக்கு வாய்க்கும் இதெல்லாம்? பரமனுக்குப் பாடம் சொல்லும் ஆசாரியரிடம் நாமும் பயில்கிறோம் என்பது எப்பேர்ப்பட்ட நல்லுாழ்! எம்பெருமானே, எமது ஆசாரியரின் பெருமையை நாங்கள் இன்னும் தெளிவாக உணர்வதற்காகவா இப்படியொரு பேரழகு நாடகத்தை நிகழ்த்திக் காட்டுகிறாய்?அத்தனை பேர் மனத்திலும் அதே வினா.'இல்லையப்பா! இப்படியொரு ஆசாரியனுக்காக நான் காத்திருந்த கதை உங்களுக்குத் தெரியாது. உடையவரே, இன்று நாம் உம்முடைய சீடனானோம்!' பணிவுடன் கரம் கூப்பினான் திருக்குறுங்குடி நம்பி.ராமானுஜர் திருக்குறுங்குடி நம்பிக்கு 'ஸ்ரீவைஷ்ணவ நம்பி' என்ற திருநாமம் தந்தார். திருக்குறுங்குடியில் ராமானுஜ மடம் நிறுவ உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
'புறப்படுகிறேன் நம்பி. இங்கிருந்து திருவண் பரிசாரகம். திருவாழி மார்பனைச் சேவித்துவிட்டு நேரே திருவனந்தபுரம். அப்படியே திருவட்டாறு. எடுத்த பணி மிகப் பெரிது. இடரின்றி நிறைவேற எப்போதும் நீ பார்த்துக்கொள்ள வேண்டியது.'சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.ஒவ்வொரு திவ்யதேசமாகச்
சேவித்துக் கொண்டே திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்தபோது ராமானுஜருக்கு அங்கே இரண்டு சிக்கல்கள் இருந்தன. கோயிலுக்குச்சென்று சேவிக்கக்கூட விடாமல் வாதத்துக்கு அழைத்துக் கொண்டே இருந்த பண்டிதர் படை ஒரு பக்கம். அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் கடைப்பிடிக்கப்பட்ட திருவாராதன முறையை மாற்றி அமைக்கலாம் என்று அவர் நினைத்ததை, நிறைவேற்ற முடியாமல் தடுத்த திருவனந்தபுரத்து அர்ச்சகர் சமூகம் மறுபக்கம்.
உடையவரால் வாதத்துக்கு வந்தவர்களை எளிதில் வெல்ல முடிந்தது. வைணவத்தின் விரிந்த பெரும் பரப்பில் அத்தனை பேரையும் அள்ளி எடுத்து அமர வைக்க முடிந்தது. ஆனால் கோயில் நடைமுறைகளில் அவர் செய்ய விரும்பிய மாற்றங்களை மட்டும் செய்ய முடியவில்லை.
'பத்மநாபா! ராமானுஜர் என்னென்னவோ சொல்கிறார்.
இதெல்லாம் நமது சம்பிரதாயத்துக்கு ஒவ்வாதவையாக இருக்கின்றன. பக்தியும் சிரத்தையுமே பிரதானம் என்றால் வழிபாட்டு முறை எப்படி இருந்தால் இவருக்கு என்ன? அருள்கூர்ந்து அவரை விட்டுவிடச் சொல்லு. இந்தக் கோயில் எப்போதும் உள்ள வழக்கப்படியே இயங்கட்டும்!'அர்ச்சகர்களும் உள்ளூர் பக்தர்களும் அனந்த பத்மநாபனிடமே முறையிட்டார்கள். அனந்தன் அவர் கள் கட்சியில் இருந்தான். 'ஓய் உடையவரே, உமக்கு இன்னும் ஆயிரம் தலங்கள் காத்திருக்கின்றன. திருவனந்தபுரத்தை விட்டுவிடுங்கள். பாவம் ஜனங்கள் அழுகிறார்கள்!' என்று சொல்லிப் பார்த்தான். ம்ஹும். அவரா கேட்கிறவர்? திருவரங்கத்தில் வராத எதிர்ப்பா? வைகானச ஆகமத்தில் இருந்த நடைமுறைகளைப் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி மாற்றப் போய்த்தான் அவரைக் கொலை செய்யத் துணியும் அளவுக்கு அங்கே எதிரிகள் முளைத்தார்கள். இத்தனைக்கும் உடையவர் முன்னிறுத்திய பாஞ்சராத்ர ஆகமம் என்பது அவர் காலத்தில், அவரால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. ஆளவந்தாரே உவந்த ஆகம முறை அது.'ஆனால் காஷ்மீரத்து வைணவர்கள் மூலம்தான் இந்த ஆகம முறை பரவலானது என்று சொல்லுகிறார்களே சுவாமி?'உடையவர் சிரித்தார். 'காஷ்மீரத்து வைணவர்களா? நல்ல கதையாக இருக்கிறதே. செங்கட் காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் -- என்று
பாஞ்சராத்ர ஆகமம் சுட்டும் நான்கு வியூக மூர்த்திகளைப் பரிபாடல் போற்றுகிறதே. அப்படியென்றால் சங்க இலக்கிய காலத்திலேயே காஷ்மீரத்து வைணவர்கள் இங்கே வந்துவிட்டார்களா என்ன?'அதற்குமேல் என்ன பேச முடியும்?ஆனால் என்ன சொன்னாலும் திருவனந்தபுரத்துக்காரர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள். பள்ளிகொண்ட பத்மநாபனுக்குத் துாக்கம் கெட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்தான். அன்றைக்கு இரவு ராமானுஜர் உறங்கத் தொடங்கியதும் அப்படியே துாக்கிக் கொண்டு போய் திருவட்டாறில் போட்டு விட்டான்.காலை விடிகிற நேரம் ராமானுஜர் கண் விழித்ததும் வழக்கம்போல், 'வடுகா...' என்று அழைத்தார். வடுக நம்பி உள்ளிட்ட அத்தனை சீடர்களும் அப்போது திருவனந்தபுரத்தில்தான் இருந்தார்கள். இரவு என்ன நடந்தது என்பது எப்படி ராமானுஜருக்குத் தெரியாதோ, அதே மாதிரி அவர்களுக்கும் தெரியாது.ராமானுஜர் இரண்டாம் முறை அழைத்தார். 'வடுகா...''சுவாமி, இதோ வந்தேன்!' என்று ஒரு குரல் கேட்டது. அவர் திரும்பிப் பார்த்தார்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -



உரை என்றால் இதுதான்!

Advertisement




Ramanujar Download









அது வடுக நம்பிதான். எப்போதும் ராமானுஜர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து முன் நிற்கிற அதே நம்பி.
ஒரு நியாயம் வேண்டாமா? திருவனந்தபுரத்தில் இருந்து ராமானுஜரைத் தூக்கி வந்து திருவட்டாறில் போட்டாகி விட்டது. அவரது சீடர்கள் தேடிக்கொண்டு வந்து சேரும்வரை இங்கே அவருக்கு யார் துணை?
எம்பெருமான், தானே அப்பொறுப்பை ஏற்க முடிவு செய்தான். உடையவருக்குப் பிரிய சிஷ்யரான வடுக நம்பியின் தோற்றத்தில் அவர்முன் வந்து நின்றான்.
'வடுகா, ஸ்நானம் ஆயிற்றா?'
'ஓ, இப்போதுதான் முடித்தேன்.' என்று எதிரே வந்து அமர்ந்து முகத்தை நீட்டினார் வடுக நம்பி. தினமும் ராமானுஜர்தான் அவருக்குத் திருமண் இட்டுவிடுவது. அன்றைக்கும் குளித்து விட்டுத் திருமண் இட்டுக்கொண்டு, வடுக நம்பிக்கும் இட்டுவிட்டார். ராமானுஜரின் ஈரத் துணிகளை ஆற்றுக்கு எடுத்துச் சென்று துவைத்துக் கொண்டு வந்து ஒரு பாறை மீது உலர்த்தினார் வடுக நம்பி.
'அனந்தபத்மநாபனுக்கு கோயில் நடைமுறைகளை மாற்றுவதில் விருப்பமில்லை போலிருக்கிறது. என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டான் பார்!'
'பரவாயில்லை சுவாமி. திருவனந்தபுரத்தை விட்டுவிடுவோம். திருவட்டாறு ஆதிகேசவன் உமக்காகக் காத்திருக்கிறான், வாருங்கள்'
உடையவர் கோயிலுக்குச் சென்றார். கண் குளிர தரிசித்து, மனம் குளிர சேவித்து மகிழ்ந்தார்.
அன்றைக்குத் திருவனந்தபுரத்திலும் பொழுது விடியத்தான் செய்தது. உடையவரைக் காணாமல் குழப்பமான சீடர்கள் நகரெங்கும் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் இல்லை என்று தெரிந்ததும் பதற்றமானார்கள். அப்படி எங்கே போயிருப்பார் என்று ஊர் ஊராகத் தேடிக்கொண்டே அவர்கள் திருவட்டாறுக்கு வந்து சேர்ந்தபோது வடுக நம்பிதான் அவரை முதலில் பார்த்தது.
'ஆசாரியர் அதோ அங்கே இருக்கிறார் பாருங்கள்!' -சுட்டிக்காட்டிய திசையில் ராமானுஜர் கோயிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்.
'சுவாமி!' என்று குரல் கொடுத்தபடி வடுக நம்பி ஓடிவர, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் ராமானுஜர். ஒரு கணம்தான். சட்டென்று தன்னருகே வந்து கொண்டிருந்த வடுக நம்பியை அவர் திரும்பித் தேட, அங்கே வடுகன் உருவில் இருந்த பெருமான் இல்லை.
அவருக்குப் புரிந்துவிட்டது. 'எம்பெருமானே, இதென்ன லீலை! சீடனாகத் தரையில் அமர்ந்து உபதேசம் கேட்டது போதாதா உனக்கு?
வடுகனாக வேடமேற்று என் காஷாயத்தையெல்லாம் துவைத்து உலர்த்த வேண்டுமா? இந்த அற்பனுக்குச் சேவகம் செய்து எதை உணர்த்த நினைக்கிறாய்?'
உணர வேண்டியவர்களுக்கு அது உணர்த்தப்பட்டிருந்தது!
சேர, சோழ, பாண்டிய தேசத்துக் கோயில்கள் அனைத்தையும் சேவித்து முடித்து உடையவர் குழு வடக்கு நோக்கிப் பயணமானது. கோகுலம், துவாரகை, குருட்சேத்திரம், அயோத்தி என்று சேவித்துக் கொண்டே சென்று காஷ்மீரத்தை அடைந்தார் ராமானுஜர்.
மீண்டும் காஷ்மீரம். மீண்டும் அதே மன்னன். மீண்டும் அதே பண்டிதர்கள்.
ஆனால் இம்முறை சரஸ்வதி தேவி தொடக்கத்திலேயே ராமானுஜரைத் தூக்கித் தலைமேல் வைத்துக் கொண்டாள். பண்டிதர் நிறைந்த சபையில் அவரது பிரம்ம சூத்திர உரை அரங்கேறியபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது.
அத்தனை பேரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பீடத்தின் மீதிருந்த சரஸ்வதி தேவியின் சிலை மெல்ல அசைந்தது. அம்மா என்று அலறிப் புடைத்துக் கொண்டு அத்வைத பண்டிதர்கள் பாய்ந்து எழுந்தபோது, அவள் பீடத்தை விட்டு இறங்கி வந்து உடையவர் எதிரே நின்று ஆசீர்வதித்தாள்.
'ராமானுஜரே! உரை என்றால் இதுதான். விளக்கமென்றால் இதுதான். இது வெறும் பாஷ்யமல்ல; ஸ்ரீபாஷ்யம்!'
ராமானுஜர் கைகூப்பி நின்றார். தேவி, தான் வணங்கும் ஹயக்ரீவரின் விக்ரகத்தை ராமானுஜருக்குப் பரிசாக அளித்தாள்.
காஷ்மீரத்து மன்னனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம். 'அற்புதம் ராமானுஜரே. அன்று நீங்கள் இங்கு வந்து போதாயண விருத்தியை வாங்கிச் சென்றது முதல் அதே நினைவாகவே இருந்தேன். இன்று உரை எழுதி முடித்துத் திரும்பி வந்து, கலையரசியின் அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்கு நிகர் யாருமில்லை!'
'மன்னா, நிகரற்றதென்பது எம்பெருமானின் கருணை ஒன்றுதான். நமது பணிகள் அனைத்தும் மணல் துளியினும் சிறிது. இதில் பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயணரின் உரையை அடியொற்றி ஓர் உரை செய்ய வேண்டுமென்பது எனது ஆசாரியரின் கனவு. இன்று அதை எம்பெருமான் நிறைவேற்றியிருக்கிறான். நான் வெறும் கருவி.'
'உமது தன்னடக்கம் இப்படிப் பேச வைக்கிறது. ஆனால் காலகாலமாக இப்பீடத்தில் எத்தனை எத்தனையோ மகா பண்டிதர்கள் வந்து வணங்கியிருக்கிறார்கள். எவ்வளவோ நூல்கள் இயற்றி வெளியிடப்பட்டிருக்கின்றன. அனைத்தையும் பிற பண்டிதர்கள்தாம் போற்றவும் தூற்றவும் செய்திருக்கிறார்களே தவிர, தேவி வாய் திறந்ததில்லை. அப்படியொரு அதிசயம் முதல் முறையாக இன்று நடந்தேறியிருக்கிறது. நீர் பெரியவர். அனைவரிலும் பெரியவர்!'
மன்னனின் பரவசமும் உடனடியாக அவன் வைணவத்தை ஏற்று ராமானுஜரின் சீடனானதும் காஷ்மீரத்துப் பண்டிதர்களுக்குப் பிடிக்காமல் போனது.
'இந்த மனிதர் அபாயகரமானவர். இவரை விட்டு வைப்பது சரியல்ல.'
'உண்மை. காலகாலமாக நம் மக்கள் கடைப்பிடித்து வரும் அத்வைத சித்தாந்தத்தை ஒரு பிரம்ம ராட்சசனைப் போல் எடுத்து விழுங்கி விடுவார் போலிருக்கிறது.'
'மன்னன் வைணவனாகி விட்டான். மட ஜனங்கள் என்ன ஏது என்று யோசிக்காமல் அப்படியே அவனைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள் பாருங்கள்! இப்படியே விட்டால் தேசம் முழுதும் வைணவத்தை ஆராதிக்கத் தொடங்கிவிடும். அதன்பின் அத்வைதிகள் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டாலும்
வியப்பில்லை.'
அவர்கள் கூடிக் கூடிப் பேசினார்கள். இறுதியில் ராமானுஜரைக் கொல்ல சில துர்தேவதைகளை ஏவலாம் என்று முடிவு செய்தார்கள். மந்திரவாதிகளைப் பிடித்து விஷயத்தைச் சொல்லி, காதும் காதும் வைத்தாற்போல் காரியத்தை முடிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள்.
ஏவல், பில்லி, சூனிய வல்லுநர்கள் ஒன்றுகூடி பண்டிதர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முனைந்தார்கள். ஏற்பாடுகள் ரகசியமாக நடைபெற்றன. அக்னி
வளர்த்து, மந்திரங்கள் உச்சரித்து, அவர்கள் ஏவிவிட்ட துர்தேவதைகள் ராமானுஜரைத் தேடிச் சென்றன.
இதோ இதோ இதோ நடந்துவிடப் போகிறது, ராமானுஜர் மண்ணோடு மண்ணாகிவிடப் போகிறார் என்று காத்திருந்த பண்டிதர்கள் அப்படி ஏதும் நடக்காததைக் கண்டு குழம்பிப் போனார்கள்.
'ஏன், என்ன பிரச்னை? ஏவிய சக்திகள் என்ன ஆயின?'
மந்திரவாதிகளை அவர்கள் விசாரித்த கணத்தில், அனுப்பிய துர்தேவதைகள் பிசாசு வேகத்தில் திரும்பி வந்து அவர்களைக் கவ்வின. ஒரு கணம்தான். தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் அவர்கள் சித்தம் கலங்கி ஆடைகளைக் கிழித்துக்கொண்டு வீதியில் இறங்கி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்கள்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

காக்கும் கருணை

Advertisement






Ramanujar Download









விஷயம் அரண்மனையை எட்டியபோது மன்னன் பதறிப் போனான். 'என்ன சொல்கிறீர்கள்? நமது பண்டிதர்களா? நடுத்தெருவில் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு ஓடுகிறார்களா? அவர்களுக் கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?'
'ஒன்றுமே புரியவில்லை மன்னா. வெறுமனே கிழித்துக்கொண்டு ஓடினாலும் பரவாயில்லை. ஆனால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். கழுத்தை நெறிக்கிறார்கள். குப்புறத் தள்ளி ஏறி மிதி மிதியென்று மிதிக்கிறார்கள்.''முட்டாள் காவலர்களே, அவர்களை இழுத்து வந்து கட்டிப் போட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இங்கே வந்து கதை சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பயன்?''இல்லை மன்னா. இத்தனைக் காலம் அவர்கள் தங்கள் மரியாதைக்
குரிய புலவர் பெருமக்களாகவும் ஞானாசிரியர்களாகவும் வித்வான்களாகவும் இருந்தவர்கள். அவர்களை அடித்து இழுத்து வருவதென்பது...'மன்னன் யோசித்தான். ஒரு பண்டிதருக்குப் பைத்தியம் பிடிப்பது என்றால் சரி. மொத்தப் பேருக்கும் எப்படி ஒரே சமயத்தில் அப்படியாகும்? இந்த வினா அவன் மனத்தில் எழுந்த கணமே அமைச்சரை அழைத்தான். 'ஏதோ தவறு நடந்திருக்கிறது. அத்தவறு யார் பக்கம், என்ன பிரச்னை என்று முதலில் பாருங்கள்!'
விசாரித்து வந்த மந்திரி உண்மையைச் சொன்னார். ராமானுஜருக்கு எதிராக துர்தேவதைகளை ஏவிவிட்ட பண்டிதர்களை அந்தத் தேவதைகளே தாக்கத் தொடங்கியிருக்கிற விஷயம்.

'ஈஸ்வரா...!' என்று நெஞ்சில் கைவைத்த மன்னன் உடனே, 'உடையவரின் சீடர்கள் யாரையாவது அழையுங்கள். அந்தக் கூரத்தாழ்வான் இருக்கிறாரா பாருங்கள்!' என்றான்.கூரத்தாழ்வான் சபைக்கு வந்தபோது மன்னன் நடந்ததை அவரிடம் முழுதாக விவரித்தான். 'ஆழ்வாரே, காஷ்மீரத்துப் பண்டிதர்கள் அறியாமல் இப்படியொரு காரியம் செய்து விட்டார்கள். ராமானுஜர் அவர்களை மன்னித்துக் காப்பாற்ற வேண்டும்.''புரிகிறது மன்னா. நான் என் ஆசாரியரிடம் இதைத் தெரிவித்து விடுகிறேன்.''மிக்க நன்றி சுவாமி. உடையவரிடம் நான் இன்னும் ஒன்று கேட்க வேண்டும்.''சொல்லுங்கள்.'

'பண்டிதர்கள் அனுப்பிய துர்தேவதைகள் எப்படி திரும்பி வந்து அவர்களையே தாக்கும்? ராமானுஜர் அவற்றைத் திருப்பி அனுப்பினாரா அல்லது தாமாகத் திரும்பினவா என்பது எனக்குத் தெரிய வேண்டும்.' கூரத்தாழ்வான் புன்னகை செய்தார். 'மன்னா, உடையவருக்கு இத்தகைய சக்திகளுடன் பரிச்சயமில்லை. இவற்றால் கிடைக்கும் சிறு லாபங்களை அவர் கடுகளவும் மதிக்கிறவரில்லை. சொல்லப் போனால், சிறு தெய்வ வழிபாடுகள் மூலம் கிடைக்கும் சிறு சக்தி
களைப் பொருட்படுத்தாமல் கடந்து போவதே மோட்சத்தின் வாயில் திறக்க உதவும். உடையவர் அவற்றை வழிபட்டதும் இல்லை, அவை அவரது வழிக்கு வந்ததுமில்லை.''பிறகு எப்படி அவை எய்தவர்களை நோக்கித் திரும்பி வரும்?'கூரத்தாழ்வான் கணப் பொழுது கண்மூடி தியானித்தார். பிறகு சொன்னார். 'மன்னா, பிழைபட்ட வாழ்க்கை, அறமற்ற செய்கை, பழி கொண்ட பேச்சு, ஒழுக்கமில்லாத நடவடிக்கைகள், பக்தியற்ற நெஞ்சம், பண்பறுக்கும் வஞ்சம் எங்குள்ளனவோ, அங்குதான் தீய சக்திகள் குடியேறும்; சீரழிக்கும். இவை எதுவுமற்ற புனிதர்களை நோக்கி அவை ஏவப்படும்போது அவர்களின் தவ வாழ்வின் தகிப்பு அச்சக்திகளை எதிர்த்துத் தாக்கும். அப்படித் தாக்குதலுக்கு உள்ளாகும் துர்தேவதைகள் எதிர்த்து நிற்க முடியாமல் திரும்பும். எய்யப்பட்டது எதுவானாலும் ஓர் இலக்கு வேண்டுமல்லவா? அனுப்பிய இலக்கு தனக்கானதல்ல என்று தெரிந்தால் அவை உடனே எய்த இடத்தை நோக்கித்தான் திரும்பும்.

'திகைத்து விட்டார் மன்னர். 'கூரத்தாழ்வானே, என் தேசத்துப் பண்டிதர்களை நீங்களும் உடையவரும் தயவுசெய்து மன்னிக்க வேண்டும். அவர்களை எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்கள்!''என்னால் இயலாது மன்னா. நீங்கள் என் ஆசாரியரைத்தான் அணுக வேண்டும்!'ராமானுஜர் தங்கியிருந்த மடத்துக்கு மன்னன் ஓடி வந்தான்.'என்ன ஆயிற்று ராஜனே?''காஷ்மீர மண்ணின் சிறப்பே இங்கிருந்த ஞான பண்டிதர்கள்தாம். அவர்கள் புத்தி கெட்டுப் போய்த் தங்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்ததன் பலன், இன்று பைத்தியம் பிடித்து விதியின் வசத்தில் வீதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அருள்கூர்ந்து அவர்களைக் காப்பாற்றித் தரவேண்டும் சுவாமி!'பணிவோடு அவன் கரம் கூப்ப, நடந்ததைக் கூரத்தாழ்வான் விவரித்துச் சொன்னார்.
உடையவர் கண்மூடி அமைதியாக யோசித்தார்.'சுவாமி, காப்பாற்றலாம் என்று ரு சொல் உம்மிடமிருந்து வர வேண்டும். என்ன செய்ய வேண்டு
மென்பதை நான் பார்த்துக் கொள்வேன்!'ராமானுஜர் தலையசைத்தார். சட்டென்று கூரத்தாழ்வான் ஓடிச் சென்று ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்தார். அதை ராமானுஜரின் காலடியில் வைத்தார். 'இதில் தங்கள் பாதங்களை ஒரு முறை வைத்து எடுங்கள் சுவாமி.'ராமானுஜர் அப்படியே செய்
தார். அந்தத் தண்ணீர்ப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிய கூரத்தாழ்வான், 'மன்னா, வீரர்களை அனுப்பிப் பண்டிதர்களை அழைத்து
வரச் சொல்லுங்கள்!' என்று சொன்னார்.ஒரு மணி நேரத்தில் அத்தனைப் பண்டிதர்களும் அரண்மனைக்கு கட்டி இழுத்து வரப்பட்டார்கள்.
அவர்கள் இருந்த கோலத்தைக் கண்டு சபை மிரண்டு போனது. கிழிந்த ஆடைகள். தலைவிரி கோலம். ஒருவரையொருவர் அடித்துப் புரட்டியெடுத்த ரத்த காயங்கள். உடலெங்கும் மண் புழுதி. நாராசமான பேச்சு. பேய்பிடித்த தன்மை.'கூரத்தாழ்வாரே, இவர்கள் சரியாகி விடுவார்களா?' மன்னன் சந்தேகத்துடன் கேட்டான்.கூரத்தாழ்வான் பதில் சொல்லவில்லை. ராமானுஜரின் பாதம் பட்ட தீர்த்தப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் அருகே வந்தார். தண்ணீரை அள்ளி அவர்கள் தலைமீது தெளித்தார்.மறுகணம் மூர்ச்சித்து விழுந்த பண்டிதர்கள் சில வினாடிகளில் உறங்கி விழிப்பது போல எழுந்தார்கள்.
'ஆ! மன்னர் சபைக்கு நாம் எப்போது வந்தோம்?' ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள். 'பண்டிதர்களே, எத்தனை பெரிய பாவம் செய்து விட்டீர்கள் நீங்கள். பரம பாகவத உத்தமரான ராமானுஜரை அழிக்க எண்ணி நீங்கள் செலுத்திய கெட்ட தேவதைகள் தங்களைத் திருப்பித் தாக்கியதைக் கூட நீங்கள் உணரவில்லை. உங்களது பைத்தியக்காரப் பேயாட்டத்தை இன்று ஊரே பார்த்துக் கைகொட்டிச் சிரித்துவிட்டது!'
அவர்கள் வெட்கத்தில் தலைகுனிந்தார்கள். உடையவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டார்கள். 'நாங்கள் தோற்றோம் சுவாமி. இது இனி வைணவ மண். தங்கள் வழியே எங்கள் வழியும்.' தாள் பணிந்து நின்றார்கள். சரஸ்வதி தேவி பரிசாக அளித்த ஹயக்ரீவர் விக்ரகத்துடன் ராமானுஜர் காஷ்மீரத்தில் இருந்து புறப்பட்டார். வழியெங்கும் திவ்யதேசங்களை சேவித்துக்கொண்டு அவர் திருமலைக்கு அருகே வந்து சேர்ந்தபோது அங்கே ஒரு பிரச்னை காத்திருந்தது.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


மலையில் இருப்பவன் யார்?

Advertisement



Ramanujar Download









'என்ன பிரச்னை?' என்றார் ராமானுஜர். சுற்றியிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிரச்னை என்னவென்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்பதில் சிக்கல் இருந்தது.

காலக் கணக்கு கண்டறியப்பட முடியாத காலம் தொடங்கி இருந்து வருகிற கோயில். தொண்டைமான் என்ற பல்லவ குலத்து மன்னன் ஐந்தாம் நுாற்றாண்டுத் தொடக்கத்தில் வேங்கடவனுக்குக் கைங்கர்யங்கள் செய்திருப்பதில் ஆரம்பித்து வரலாறு விரியத் தொடங்குகிறது. ஐந்தாம் நுாற்றாண்டு முழுதுமே பல்லவர்கள் திருமலையப்பனின் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிறகு சோழர்கள் வந்தார்கள். அடுத்த ஐந்நுாறு ஆண்டுகளில் ஆட்சிகளும் மன்னர்களும் மாறினா லும் கோயில் கைங்கர்யங்களில் எந்தக் குறைவும் வைத்ததில்லை. ராஜேந்திர சோழன் காலத்தில் கோயிலில் இருபத்தி நான்கு விளக்குகள் தடையின்றி எரிய எண்ணெய் தர ஒப்புக்கொண்ட வணிகர்கள், தம் வார்த்தை தவறியதற்காக இழுத்து வைத்து பெரிய விசாரணையே நடத்தியிருக்கிறான். அவர்களது உரிமையை ரத்து செய்து தண்டித்திருக்கிறான். அப்புறம் வந்தவர்கள் காலத்திலும்
கோயில் காரியங்களில் குறையேதும் ஏற்பட்டதில்லை.
சட்டென்று ஒருநாள் எங்கோ ஒரு கல் உதிர்ந்து எல்லாம் கலையத் தொடங்கியதுதான் ஏனென்று யாருக்கும் புரியவில்லை. பெருமானுக்குப் பூஜைகள் நின்று போயின. உற்சவங்கள் இல்லாமல் போயின. தினமும் செய்யப்படுகிற நித்தியப்படியே காணாமல் போனது.'ஆச்சரியமாக இருக்கிறதே?' என்றார் ராமானுஜர். வந்திருந்த துாதுவர்கள், மன்னன் கட்டிதேவ யாதவன் கொடுத்தனுப்பியிருந்த ஓலையை அவரிடம் கொடுத்தார்கள். அவர் அதைப்
பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். பிரச்னை மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. ஆகம முறைப்படி நடைபெற்றுக் கொண்டிருந்த கோயில் நடைமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காத சில அர்ச்சகர்களால் வந்த சிக்கல் அது. மன்னன் கூப்பிட்டு அவர்களைக் கண்டிக்கப் போக, கோபித்துக் கொண்டு கோயிலை விட்டுப் போனார்கள்.
பூஜைகள் நின்றன. திருவாராதனம் நின்றது. பெருமானுக்கு அமுது செய்விக்க ஆளற்ற சூழ்நிலை உண்டானது. யாரும் வராத கோயில் படிப்படியாகத் திருமலை யில் இருந்த சில சிவாசாரியார்கள் வசம் போனது. அவர்கள் தமது வழக்கப்படி கோயிலில் பூஜைகள் செய்யத் தொடங்கியபோது வைணவர்கள் கொதித்துப் போனார்கள்.'அதெப்படி ஒரு வைணவ ஆலயத்தில் சிவாசாரியார்கள் பூஜை செய்யலாம்?'
'சரியப்பா. வைணவ அர்ச்சகர்கள் விட்டுச் சென்ற தலம்தானே இது? பூஜையே இல்லாமல் கதவு சாத்தப்பட்டிருப்பதை விட இது பரவாயில்லை அல்லவா?'
'அதெல்லாம் முடியாது. திருமலையப்பனை ஒரு சைவக் கடவுளாக்குவதை நாங்கள் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம்.' எதிர்ப்புகளும் மறுப்புகளும் வலுக்கத் தொடங்கின. சண்டை பெரிதானது. கோயில் யாருடையது என்ற வினா, உள்ளே இருக்கும் மூர்த்தி யார் என்பதில் போய் நின்றது. 'வேங்கடவனின் தாழ் சடையும் நீள்முடியும் வேறு எந்த வைணவக் கோயில் அர்ச்சாமூர்த்திக்கும் இல்லை. அவை சிவச் சின்னங்கள் அல்லவா? வேங்கடவன் வேறு யாருமல்ல; சிவபெருமானே' என்றது ஒரு தரப்பு.'யார் சொன்னது? சைவரும் அல்லாத, வைணவரும் அல்லாத சமணரான இளங்கோவடிகள், பெருமான் கையில் சங்கு சக்கரம் ஏந்தியிருப்பதை வருணித்திருக்கிறார். பகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி என்ற வரியைச் சிந்தித்துப் பாருங்கள். எத்தனையோ நுாற்றாண்டுகளுக்கு முன்னர் இளங்கோவடிகளுக்குத் தெரிந்திருக்கிறது. இது உங்கள் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? எந்தக் கோயிலில் சிவபெருமானுக்கு சங்கு சக்கரம் இருக்கிறது?'
'சமணர் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது. கோயிலில் வில்வ அர்ச்சனை உண்டா இல்லையா? அதைச் சொல்லுங்கள் முதலில். சிவனுக்குத்தான் வில்வத்தில் அர்ச்சனை செய்வது வழக்கம். எந்த விஷ்ணு கோயிலில் வில்வார்ச்சனை நடக்கிறது? இது சிவன் கோயில்தான்!''அட எம்பெருமானே! ஆதித்யவர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோத பில்வ: என்று ஸ்ரீசூக்தம் சொல்கிறதே. வில்வம் மகாலஷ்மிக்கு உரியது சுவாமி! மகாலஷ்மி தனியாகவா இருக்கிறாள்? அவள் விஷ்ணுவின் மார்பில் உறைபவள். வில்வ அர்ச்சனை இங்குதான் வெகு பொருத்தம்.'
'வேத காலத்தில் சைவ வைணவப் பிரிவுகள் ஏதும் கிடையாது. கோயில் நடைமுறை என்று உருவானதன்பின் சிவாலயங்களில் மட்டும்தான் வில்வார்ச்சனை நடக்கும். நாம் அதைத்தான் அனுசரிக்க வேண்டும்.''இது விதண்டாவாதம். பத்து ஆழ்வார்கள் திருமலையப்பனைப்
பாடியிருக்கிறார்கள். அவர்கள் பொய்யா சொல்லுவார்கள்?' 'ஆழ்வார் பொய் சொல்ல மாட்டார் என்றால், பொன் திகழும் மேனி பிரிசடையம் புண்ணியனும் என்ற பொய்கையார் வரிக்கு என்ன அர்த்தம்? திருமாலை சிவனாக அல்லவா அவர் போற்றித் துதித்திருக்கிறார்?' 'சுத்தம். நீ படைத்த சிவனின் உருவம் உனக்கும் பொருந்துகிறதே என்று ஆழ்வார் அதில் வியப்புத் தெரிவிக்கிறார் ஐயா!'வாதங்கள் இவ்வாறு ஒரு பக்கம் சூடு பிடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அது சிவனுமல்ல; விஷ்ணுவும் அல்ல; மலைக் காவல் தெய்வமான காளிதான் என்று ஒரு தரப்பினர் கொடி பிடித்தார்கள். புராதனமான கோபுரமொன்று திருமலை செல்லும் வழியில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, 'அதைக் காளி கோபுரம் என்றுதானே காலம் காலமாக அழைத்து வருகிறோம்? விஷ்ணு கோயில் உள்ள தலத்தில் காளி கோபுரம் எப்படி வரும்?' என்று அவர்கள் கேட்டார்கள். 'ஐயா அது காளி கோபுரமல்ல. காலி கோபுரம். காலி என்றால் காற்று.' என்று எதிர்த்தரப்பு பதில் சொல்லிக் கொண்டிருந்தது.
மன்னனின் ஓலை இந்த விவகாரத்தை விளக்கமாக எடுத்துச் சொல்ல, ராமானுஜர் பொறுமையாக அதைப் படித்து முடித்தார். அமைதியாக யோசிக்க ஆரம்பித்தார். ஏற்கெனவேஅவர் வேறொரு தீவிரமான யோசனையில் இருந்தார்.
சிதம்பரத்தில் கோயில் கொண்டு இருந்த கோவிந்தராஜப் பெருமாள் விக்கிரகத்தை சோழ மன்னன் குலோத்துங்கன் துாக்கிக் கடலில் எறிந்திருக்க, பக்தர்கள் அதை உடையவரிடம் எடுத்து வந்து சேர்த்திருந்தார்கள். 'தில்லையில் கோவிந்தன் மீண்டும் குடிகொள்ள ஏதா
வது செய்யுங்கள்' என்று கேட்டிருந்தார்கள். இது அவர் பாரத யாத்திரை புறப்படுவதற்கு முன்னரே நடைபெற்ற சம்பவம்.சிதம்பரத்தில் மீண்டும் எப்படி கோவிந்தராஜர் விக்கிரகத்தைக் கொண்டு வைப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தவர் மனத்தில் சட்டென்று திருமலை அடிவாரத்தில் தான் கண்ட புராதனமான வைணவ ஆலயம் ஒன்று நினைவுக்கு வந்தது. பல்லாண்டு காலமாகக் கேட்பாரற்றுக் காட்டுக்குள் இருந்த கோயில். சிதம்பரம் கோவிந்தராஜனைத் திருமலை அடிவாரத்துக்குக் கொண்டு வந்தால் என்ன?
மன்னன் கட்டிதேவனிடம் பேசி அதற்கு முயற்சி எடுக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தபோதுதான் திருமலையிலேயே பெரும் சிக்கல் என்பது தெரியவந்தது.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


அவன் பேசுவானா?

Advertisement




Ramanujar Download









வந்திருப்பது எளிய சிக்கல் அல்ல. சிக்கலுக்கு உள்ளாகியிருப்பது சராசரி மக்களும் அல்ல. இது மக்களால் எம்பெருமானுக்கு நேர்ந்திருக்கிற சிக்கல். அடையாளச் சிக்கல். அறிவின்மீது படிந்த பூஞ்சையால் விளைவது. ஆத்திர அரசியல்களால் முன்னெடுக்கப்படுவது. ஒரு மன்னன் கடிதம் எழுதுகிறான். என்னால் இச்சிக்கலைத் தீர்க்க முடியவில்லை; நீங்கள் பார்த்து ஏதாவது செய்யுங்கள் என்று கெஞ்சுகிறான். என்றால் என்ன அர்த்தம்?

மதம் கூர்மையானது. உணர்வு களின் அடியாழங்களில் நேரே சென்று தைக்கக்கூடியது. மதம் சார்ந்த நம்பிக்கைகளும் அவ்வாறே. இது ஒரு பவுத்தத்தோடோ, சமணத்தோடோ மோதுவதல்ல. ஹிந்து மதத்துக்குள்ளேயே இரு பிரிவினரின் அசைக்க முடியாத நம்பிக்கைகளை முன்வைத்து அலச வேண்டிய விவகாரம்.'சுவாமி, பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனே அல்லவா திருமலையில் எழுந்தருளியிருக்கிறான்? எதற்காக இவர்கள் இப்படி மாற்றிப் பேசுகிறார்கள்? ஆழ்வார்கள் பாடியிருப்பது ஒன்றே போதாதா?' என்றார்கள் சீடர்கள்.'பேசிப் பார்ப்போமே?' என்று சொல்லிவிட்டு ராமானுஜர் திருமலைக்குப் புறப்பட்டார்.கோயில் பிரச்னையைப் பேசுவதற்காக ராமானுஜர் வருகிறார் என்று தெரிந்ததுமே மலை மீதிருந்த சிவாசாரியார்கள் பரபரப்பா
னார்கள். சைவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ராமானுஜரை எதிர்த்து நிற்க முடிவு செய்து கூடினார்கள். அவர்களுக்கு ராமானுஜரைத் தெரியும். அவரது பராக்கிரமங்கள் தெரியும். தேசமெங்கும் அவர் வாதில் வீழ்த்திய பண்டிதர்களைப் பற்றிய கதைகளை அவர்கள் கேட்டிருந்தார்கள். அனைத்துக்கும் மேலாக கோவிந்தன்!காளஹஸ்தி சிவாலயத்துடன் சேர்த்தே எண்ணப்பட்ட மாபெரும் சிவபக்தர். எத்தனை ஆண்டுகள்! எத்தனை ஆண்டுகள் அங்கே சிவஸ்
மரணையில் தவம் கிடந்திருப்பார்! அது வெறும் பக்தியல்ல. கண்மூடித்தனமான பக்தியல்ல. கோவிந்தன் மெத்தப் படித்தவர். பெரிய ஞானஸ்தர். தன் இருப்பும் இடமும் தீர்மானத்தின் நித்தியமும் உணர்ந்தவர்.

அப்பேர்ப்பட்ட மகா யோகியே மனம் மாறி வைணவத்தைத் தழுவக் காரணமாயிருந்தவர் வருகிறார் என்றால் இது சிறிய விஷயமல்ல.கோவிந்தன் திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த போதெல்லாம் அவரை அந்த சிவா சாரியார்களுக்கு நன்கு தெரியும். சைவத்தை விடுத்து அவர் வைணவம் ஏற்ற அனுபவத்தை எத்தனையோ முறை அவர் சொல்லியே கேட்டிருக்கிறார்கள். இன்று உடையவருடன் அவரும் வருகிறார். பிரம்ம சூத்திர உரை எழுதி முடித்த கையோடு பாரதமெங்கும் நடந்தே சென்று வைணவ தருமத்தை நிலைநாட்டித் திரும்பி வருகிற அணி. காஷ்மீரம் வரை சென்று வென்ற மகாபுருஷர் தலைமையில் வருகிற அணி. எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?அவர்கள் கூடிக் கூடிப் பேசினார்கள். புராண, சரித்திர, சமகால உதாரணங்களும் சம்பவங்கள் சுட்டும் ஆதாரங்களுமாகத் தங்கள் தரப்புக்கு நியாயம் சேர்க்க என்னென்னவோ சேகரித்து வைத்தார்கள்.'என்ன ஆனாலும் சரி, யார் சொன்னாலும் சரி. நாம் கோயிலை விட்டுக் கொடுக்கக்கூடாது. திருமலையில் உள்ளது சிவாலயம்தான். இங்குள்ள பெருமான் பரமசிவனேதான்.' அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.
ராமானுஜர் தமது குழுவினருடன் மலைக்கு வந்து சேர்ந்தபோது அவர்கள் வாதத்துக்குத் தயாராக நின்றார்கள்.
'வாரும் ராமானுஜரே! கோயிலை அபகரிக்க வந்தீரா?''அபசாரம். இது எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். ஆழ்வார் பழியாய்க் கிடந்து பவளவாய் கண்ட இடம். என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்!''அதானே பார்த்தோம். உமது எம்பெருமான் இங்கே இல்லை சுவாமி. இக்குன்றில் இருப்பது குமரனின் தகப்பன். மருந்துக்கும் இங்கே வைணவ ஆலயச் சின்னம் என்று ஏதும் கிடையாது. தாழ்சடையும் நீள்முடியும் கொண்ட பெருமானைப் பாரும். வில்வார்ச்சனை நடக்கிற விதம் பாரும். கோயில் மதில் சுவரில் உள்ள சிங்கத்தைப் பாரும். அது சக்தி ரூபம். அனைத்தையும் ஒதுக்கிவிட்டுப் பெருமானுக்கு ஒரு திருமண் இட்டு முகத்தை மறைத்துவிட்டால் கதை முடிந்துவிடுமா?'ராமானுஜர் நிதானமாக அவர்களிடம் தம் வாதங்களை எடுத்து வைத்தார். காலம் நிர்ணயிக்க முடியாத கோயில். பரிபாடல் புலவர்களில் இருந்து முதலாழ்வார்கள் வரை பாடியதைக் கொண்டே இது ஒரு புராதனமான வைணவ ஆலயம் என்பதைக் கண்டுகொள்ள வேண்டும். ஒன்றல்ல, இரண்டல்ல. பத்து ஆழ்வார்கள் ஒரு சிவன் கோயிலை மங்களாசாசனம் செய்திருப்பார்களா? தவிரவும் சடையும் முடியும் சிவனுக்கு மட்டுமே உரியது என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதம்.ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார். ஒவ்வொன்றுக்கும் விளக்கம்
சொன்னார். எதிர்வாதங்களுக்கு நிதானமாக பதில் சொன்னார். இங்கே பொறுமைதான் அவசியம்.'சிவ பக்தர்களே, நான்காம் நுாற்
றாண்டுப் பல்லவர்களும் ஐந்திலிருந்து பத்தாம் நுாற்றாண்டு வரை இங்கு ஆண்ட சோழ யாதவர்களும் இதனை ஒரு சிவாலயமாகக் கருதி வழிபட்டதில்லை. சரித்திரத்தில் அப்படி ஒரு குறிப்பு கூட இல்லை. இது விஷ்ணுவின் ஆலயம் என்று அறிந்துதான் அவர்கள் வழிபட்டிருக்கிறார்கள், கைங்கர்யங்கள் செய்திருக்கிறார்கள். திடீரென்று ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறீர்கள்?''பல்லவர்களும் சோழர்களும் இதை விஷ்ணு ஆலயமாகத்தான் கருதினார்கள் என்பதை உம்மிடம் சொன்னார்களா? கோயிலுக்குச் செய்த கைங்கர்யங்களைக் கல்வெட்டில் பதித்தவர்கள் எங்காவது இது ஒரு வைணவத்தலம்தான் என்று சொல்லி வைத்திருக்கிறார்களா என்று எடுத்துக் காட்டும் பார்ப்போம்!'வாதம் வாரக் கணக்கில் நீண்டுகொண்டே போனது. அவர்களுக்குத் தெரியும், அது ஒரு வைணவ ஆலயம்தான் என்று. ஆனால் விட்டுக் கொடுக்க யாரும் விரும்பவில்லை. உள்ளே இருக்கும் தெய்வத்தை சிவனென்று நம்பி அவர்கள் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். பிரச்னை வந்தபோது அதுவும் நின்றுபோனது. மன்னன் தலையிட்டும் தீராத பிரச்னை.
'இது தீர்க்க முடியாதது ஓய். நீர் கிளம்பி ஊர் போய்ச் சேரும். இது சிவாலயம்தான். நடந்தால் சிவபூஜைதான் நடக்கும். இல்லா விட்டால் பெருமானுக்குப் பூஜையே கிடையாது!' தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள்.ராமானுஜர் யோசித்தார். கண்மூடிச் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு, 'சரி. ஒன்று செய்வோமா? இது சிவாலயமா, விஷ்ணுவின் ஆலயமா என்று நாம் முடிவு செய்ய வேண்டாம். உள்ளே இருக்கிற பெருமானே தான் யாரென்பதை நிரூபித்துக் கொள்ளட்டும்.'திடுக்கிட்டது கூட்டம். 'அதெப்படி சாத்தியம்? பெருமான் வாய் திறந்து பேசவா செய்வான்?' 'பேசுகிறானோ, உணர்த்துகிறானோ. பொறுப்பை அவனிடமே விட்டுவிடுவோம். கிடைக்கிற பதில் போதுமா உங்களுக்கு?' 'அவன் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்வான் என்றால் அதை நாங்கள் ஏன் மறுக்கப் போகிறோம்? பெருமானே சொல்லிவிட்
டால் மறுபேச்சு கிடையாது.''அப்படியானால் இன்றிரவு இப்பிரச்னைக்கு ஒரு முடிவு தெரிந்து விடும்!' என்றார் ராமானுஜர்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -



நானேதானாயிடுக!

Advertisement




Ramanujar Download









அது மடை திறந்த தருணமல்ல. மலை திரண்ட தருணம். திருமலையில் இருந்த அத்தனை பேரும் கோயில் வாசலில் வந்து கூடியிருந்தார்கள். செய்தி கேள்விப்பட்டு ஏழு மலைகளிலும் வசிக்கும் ஆதிவாசிகளும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். இத்தனைக் காலமாகத் தீராதிருந்த ஒரு பெரும் பிரச்னை இன்று முடிவுக்கு வந்துவிடும் என்று ராமானுஜர் சொல்லியிருக்கிறாராமே? அப்படி என்ன முடிவு கிடைத்துவிடப் போகிறது?

அனைவரும் காத்திருந்தார்கள். இருட்டுகிற நேரத்தில் உடையவர் தமது சீடர்களுடன் கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தார்.'வாரும் ராமானுஜரே. ஏதோ பிரமாதமான யோசனை இருக்கிறதென்று சொன்னீரே? அது என்ன?'சிவாசாரியார்கள் கேட்டார்கள்.'யோசனை என்றுதான் சொன்னேன். பிரமாதமான யோசனை என்பது உங்கள் மனம் ஏற்ற வடிவம். எப்படியானாலும் அது நல்லதே. இதோ பாருங்கள், நீங்கள் சைவர்களாக இருக்கலாம். நாங்கள்
வைணவர்களாக இருக்கலாம். அதோ அமர்ந்திருக்கும் ஆதிகுடி மக்கள் சக்தி வழிபாட்டை விரும்புவோராக இருக்கலாம்.

எது எப்படியானாலும் நாம் அனைவரும் நமக்கு மேலான ஒரு சக்தியை நம்புகிறவர்கள். உண்டா இல்லையா?''ஆம். அதிலென்ன சந்தேகம்?'
'இந்தக் கோயிலுக்குள் இருக்கிற தெய்வம் சிவனா விஷ்ணுவா என்று நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். அவனே ஒரு தீர்ப்பு சொல்லட்டும்.'
'அதைத்தான் ஐயா கேட்கிறோம். தெய்வம் எப்படிப் பேசும்?''எப்படியோ பேசிவிட்டுப் போகட்டும். நமக்கென்ன அதைப் பற்றி? தேவை இருந்தால் கண்டிப்
பாகப் பேசும். காஞ்சியில் எனது ஆசாரியர் ஒருவர் இருக்கிறார். அவருடன் பேரருளாளன் தினமும்தான் பேசிக் கொண்டிருக்கிறான். எப்படிப் பேசுகிறான், ஏன் பேசுகிறான் என்று நமக்குப் புரியாது. நம் அறிவுக்கு எட்டாத எதுவும் உண்மையில்லை என்று சொல்லுவது அறிவீனமல்லவா?''ஏற்கிறோம் ராமானுஜரே. நீங்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குச் சம்மதம். தெய்வம் தன்னை யாராக வெளிப்படுத்திக் கொள்கிறதோ, அதை ஒட்டியே கோயில் நிர்வாகத்தைக் கொடுத்து விடுவோம்.''மெத்த சரி. உங்கள் சிவனுக்கு உரிய சின்னங்களான மான், மழுவை எடுத்து வாருங்கள்.' என்று அவர்களிடம் சொல்லிவிட்டுத் தனது சீடர்களை நோக்கி, 'நீங்கள் சென்று சங்கு சக்கர சின்னம் ஒன்றை எடுத்து வாருங்கள்.' என்று உத்தரவிட்டார்.சின்னங்கள் வந்தன.
'உடையவரே, இவற்றை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?''நான் எதையும் செய்யப் போவதில்லை சுவாமி. இதோ சிவனுக்குரிய மான், மழு. அதோ விஷ்ணுவின் சங்கு சக்கரம். இரண்டையும் நீங்களே எடுத்துச் சென்று சன்னிதியில் பெருமான் பாதங்களில் வைத்துவிட்டு வாருங்கள். இரவு கதவைப் பூட்டி விடுவோம். காலை சென்று உள்ளே பார்ப்போம்.''பார்த்தால்?''எந்தச் சின்னத்தை அவன் ஏற்கிறானோ அதை வைத்து அவன் யார் என்று தெரிந்து கொள்வோம்.''புரியவில்லையே சுவாமி! பெருமான் என்ன செய்வான் என்று எதிர்பார்க்கிறீர்கள்?'ராமானுஜர் ஒரு கணம் அமைதியாக இருந்தார். பிறகு சொன்னார். 'இது வைணவத்தலம்தான் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை. அதே நம்பிக்கைதான் இது சைவத்தலம் என்பதில் உங்களுக்கும் உள்ளது. நமது நம்பிக்கைகளுக்கு அப்பால் உள்ளதன் பெயர்தான் உண்மை. உண்மையை உலகுக்கு உணர்த்துவது அவன் பணியல்லவா? அதை அவன் சரியாகச் செய்தால்தானே அவன் தெய்வம்? அவன் செய்வான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கும் அதே நம்பிக்கை இருக்குமானால் நான் சொன்னபடி செய்யுங்கள்!' என்றார் ராமானுஜர்.

சிறிது நேரம் அனைவரும் ராமானுஜர் சொன்னதை விவாதித்தார்கள். விளைவு என்னவாக இருக்கும் என்று யாருக்கும் புரியாத சூழலில், அந்த யோசனையை வேண்டாம் என்று ஒதுக்கவோ, சரிதான் என்று ஏற்கவோ யாருக்கும் முழு மனமில்லை. இருந்தாலும், இந்த விதத்திலேனும் ஒரு சரியான விடை கிடைத்துவிட்டால் நல்லதுதானே என்று நினைத்தார்கள். உடையவர் சொன்னபடி சிவச் சின்னங்களையும் விஷ்ணுவின் சின்னங்களையும் ஏந்திச் சென்று பெருமானின் பாதங்களில் வைத்தார்கள்.'காலை கதவு திறக்கிறோம். உன்னை அப்போது நீ அடையாளம் காட்டு!' என்று வேண்டிக்
கொண்டு நடை சாத்திவிட்டு வெளியே வந்தார்கள். வரிசையாகக் கோயிலின் அனைத்துக் கதவுகளும் இழுத்துப் பூட்டப்பட்டன. பிரதான வாயிலுக்கு வெளியே வந்ததும் அந்தக் கதவும் இழுத்துப் பூட்டப்பட்டது.ராமானுஜரும் சீடர்களும் கதவருகே ஒருபுறம் அமர்ந்தார்கள். எதிர்ப்புறம் சிவாசாரியார்களும் பிற சைவர்களும் அமர்ந்தார்கள். ஆதிகுடி மக்கள் ஆர்வம் தாங்க மாட்டாதவர்களாக இருபுறமும் பரவி அமர்ந்தார்கள்.'ஐயா, இறைவன் தன்னை நிரூபிப்பானா? இது நம்பமுடியாத விஷயமாக உள்ளதே?''நிரூபணம் என்பது அற்பர்களான நாம் நினைத்துக் கொள்வதுதான். அவன் தன் இயல்பை, தன் சொரூபத்தைக் காட்டுவான் என்பதுதான் உண்மை. அதற்கான அவசியம் இருப்பதாக அவன் நினைத்தால் கண்டிப்பாக அவன் அதைச் செய்வான். வேண்
டியது நம்பிக்கை மட்டுமே! அனைவரும் கண்மூடி அவனை வேண்டுங்கள்!'சொல்லிவிட்டு உடையவர் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். 'பெருமானே! இது உன் கோயில். ஆழ்வார்கள் பாடிய அற்புதத் தலம். காலகாலமாக இருந்து வரும் இந்நம்பிக்கை உண்மையானால் நாளைக் காலை இதை நீ இந்த சிவாசாரியார்களுக்கு எடுத்துச் சொல்லு. என்னால் கேட்கத்தான் முடியும். செய்ய வேண்டியது நீதான். நீ மட்டும்தான்.'இரவெல்லாம் அவர்கள் விழித்திருந்தார்கள். எல்லா இரவுகளையும்போல் அந்த இரவும் விடிந்தது. விழித்திருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றார்கள். ராமானுஜரும்
எழுந்தார்.'உள்ளே செல்லலாமா சுவாமி?''ஆம். நேரமாகிவிட்டது. கதவைத் திறவுங்கள்.'கோயில் கதவு திறக்கப்பட்டது. சைவர்களும் வைணவர்களும் சக்தி
வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட ஆதிகுடிகளும் கோயிலுக்குள் நுழைந்தார்கள். அனைவர் முகத்திலும் பதற்றம். நடையில் பரபரப்பு.
'உடையவரே, இப்போதும் கேட்கிறோம் என்று தவறாக எண்ணாதீர்கள். பெருமான் ஒருவேளை நமக்கு இன்று எதையும் உணர்த்தவில்லை என்றால்?'
ராமானுஜர் புன்னகை செய்தார்.

'அதையும் பார்த்து விடுவோமே!'சன்னிதி திறக்கப்பட்டது. அர்ச்சகர் ஒருவர் உள்ளே சென்று திருவிளக்கை ஏற்றினார். ஒரு புறம் ஹர
ஹர மகாதேவா என்ற கோஷம். மறுபுறம் நாராயணா என்னும் நாமம். அனைவர் கரங்களும் மேலெழுந்து குவிந்திருந்தன. ராமானுஜர் மட்டும் கண்மூடியே நின்றிருந்தார்.'அர்ச்சகரே, கற்பூரம் காட்டுங்கள்!' யாரோ கத்தினார்கள்.அர்ச்சகர் கற்பூரத்தை ஏற்றி பெருமானை நோக்கி நீட்ட, வெளிச்
சத்தில் அது பளிச்சென்று தெரிந்தது. பெருமான் சங்கும் சக்கரமும் ஏந்தியிருந்தான்! மானும் மழுவும் வைத்த இடத்திலேயே இருந்தன.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

அண்ணனுக்கு ஆலயம்

Advertisement



Ramanujar Download









உண்மையாகவா?' நம்ப முடியாமல் கேட்டான் மன்னன் கட்டிதேவ யாதவன்.'ஆம் மன்னா. எங்களாலேயே நம்ப முடியவில்லை. இரவு சன்னிதிக்குள் சிவச் சின்னங்களையும் விஷ்ணுவின் சின்னங்களையும் பெருமான் திருவடிகளில் வைத்துவிட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு வந்தது நாங்கள்தாம். கோயிலுக்குள் ஒரு ஈ, கொசு கூட இல்லை என்பதை உறுதி செய்த பிறகே கதவைப் பூட்டினோம். விடிய விடிய நாங்களும் ராமானுஜரும் கோயில் வாசலிலேயேதான் அமர்ந்திருந்தோம். உள்ளே சென்று பார்த்தால் பெருமான் கரங்களில் சக்கரமும் சங்கும் காட்சியளிக்கின்றன. இனி இதில் வாதத்துக்கு இடமில்லை. அது மகாவிஷ்ணுதான். திருமலை ஒரு வைணவத் தலம்தான்.'
சொல்லிவிட்டு வணங்கி விடை பெற்றுப் போனார்கள் சைவர்கள். மன்னன் உடனே தனது பரிவாரங்களுடன் கிளம்பினான். பல்லக்குத் துாக்கிகள் மன்னனைச் சுமந்துகொண்டு பாதையற்ற மலைப் பாதையில் ஓட்டமாக ஓடினார்கள். அதற்குமுன் மன்னர் மலைக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற விவரத்தை மேலே உள்ள ராமானுஜரிடம் தெரிவிக்க நாலைந்து வீரர்கள் விரைந்து கொண்டிருந்தார்கள். மறுநாள் மதிய நேரம் கட்டிதேவ யாதவன் திருமலை வந்த டைந்தான். நேரே ராமானுஜரைச் சந்தித்து கைகூப்பி வணங்கினான்.'இதற்காகத்தான் சுவாமி தங்களை இந்த விஷயத்தில் தலையிடச் சொன்னேன். ஆண்டாண்டுக் காலமாக இருந்து வந்த பெரும் குழப்பம் இன்று நீங்கிவிட்டது. திருமலையப்பனுக்கு இனி பூஜைகள் தடைபடாது. உற்சவங்கள் தடைபடாது. என் பெரிய கவலை விட்டது! உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?'ராமானுஜர் புன்னகை செய்தார்.'உங்களிடம் எனக்கு இன்னொரு கோரிக்கை இருக்கிறது சுவாமி.' 'சொல் மன்னனே.' 'நீங்கள் உடனே ஊருக்குக் கிளம்பி விடாதீர்கள். இங்கேயே சிறிது காலம் இருந்து கோயில் நடைமுறைகளை ஒழுங்கு செய்து கொடுத்தால் நல்லது என்று படுகிறது. இனி எக்காலத்திலும் இங்கு சமயச் சண்டைகள் வரக்கூடாது. அதேபோல் வழிபாட்டு முறையில் நெறிகள் வகுக்கப்பட வேண்டும். எக்காலத்துக்கும் அதுவே நிரந்தரமாகவும் இருக்க வேண்டும்.'ராமானுஜர் அதைச் செய்தார். திருமலையிலேயே சிலகாலம் தங்கியிருந்து வைகானச ஆகம முறைப்படி கோயில் இயங்க வழி செய்து கொடுத்தார். ஆனந்த நிலைய விமானம் அமைத்தது, வாரம் தோறும் வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் என்று ஏற்பாடு செய்தது, வியாழன் மட்டும் பூ அலங்காரத் தோற்றம் என்று நியமித்தது, நாச்சியார் திருமொழி பாடுகிற வழக்கம் ஏற்படுத் தியது, பெருமானுக்கு பூஜை தொடங்குமுன் வராக சுவாமிக்கு முதல் பூஜை என்னும் புராதனமான வழக்கத்தை மீளக் கொண்டு வந்தது, இன்னும் எத்தனையோ. பெருமாளின் நெற்றியில் பட்டையாகச் சுடர்விடும் பச்சைக் கற்பூரத் திருமண்ணை அறிமுகப்படுத்தியதும் அவரேதான். கட்டிதேவ யாதவன் நெஞ்சம் குளிர்ந்து போனான். 'சுவாமி! தாங்கள் என் வேண்டுகோளை ஏற்றுத் திருமலையில் தங்கியது நாங்கள் செய்த புண்ணியம். பதிலுக்கு நான் தங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் என்று தெரியவில்லை.'ராமானுஜர் புன்னகை செய்தார். 'அவசியம் கைம்மாறு செய்யத்தான் வேண்டுமா?' 'செய்ய முடிந்தால் மகிழ்வேன் சுவாமி.''அப்படியானால் தில்லை கோவிந்தராஜனைத் திருமலை அடிவாரத்தில் கோயில் கொள்ள வழி செய்வாயா ராஜனே?' கட்டிதேவனுக்குப் புரியவில்லை. தில்லைக்கும் திருமலைக்கும் என்ன தொடர்பு? 'நான் செய்யக்கூடிய எதுவானாலும் தயங்காமல் செய்வேன் சுவாமி. ஆனால் எனக்குத் தாங்கள் சொல்வது புரியவில்லை. தயவுசெய்து விளக்க வேண்டுகிறேன்.' ராமானுஜர் சொல்லத் தொடங்கினார். குளறுபடியாகிக் கொண்டிருக்கிற சோழர் சாம்ராஜ்ஜியத்தின் இறுதிக் காலம் நடந்து கொண்டி ருக்கிறது. ஆட்சியில் காட்ட வேண் டிய அக்கறையை மத துவேஷத்தில் காட்டிக் கொண்டிருக்கிறான் குலோத்துங்கன். சைவம் தழைக்க வேண்டுமென்று எண்ணுவது தவறில்லை. அதற்காக வைணவ ஆலயங்களை எதற்கு முடக்க வேண்டும்? ஆனால் அவன் அதைத்தான் செய்கிறான். அதுவும் ஆத்மசுத்தியுடன். தில்லை கோவிந்தராஜப் பெருமாள் அநாதியானவர். ஒருவிதத்தில் திருமலை வேங்கடவனுக்கு அண்ணா முறை. இங்கே வேங்கடவன் சிக்கல்கள் நீங்கி சௌக்கியமாக இருக்கிறான். அவனது அண்ணாவுக்கோ அமர்ந்து அருளாட்சி புரிய ஒரு கோயில் இல்லை.'ஐயோ!' என்று நெஞ்சில் கைவைத்தான் கட்டிதேவன்.'மன்னா! திருமலை அடிவாரத்தில் காட்டுக்கு நடுவே இருக்கும் விஷ்ணு கோயில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அந்தக் கோயிலை உன்னால் புனருத்தாரணம் செய்ய முடியுமா? நான் கோவிந்தராஜரை அங்கே எழுந்தருளச் செய்கிறேன். வேங்கடவனின் அண்ணாவுக்குத் திருமலை அடிவாரத்திலேயே நாம் இருக்க ஓர் இடம் உருவாக்குவோம். கோயிலைச் சுற்றி ஒரு நகர் நிர்மாணிப்போம். சோழன் ஒதுக்கிய தெய்வத்தை நீ கொண்டாடத் தயாரென்றால் காலகாலத்துக்கும் உன் பெயர் நிலைத்திருக் கும்!''உத்தரவிடுங்கள் சுவாமி. இதை விடப் பெருமகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் எனக்கு வேறில்லை. எப்போது கோவிந்தராஜர் இங்கே வருவார் என்று மட்டும் சொல்லுங்கள். அதற்குள் நான் நகரத்தை எப்படி நிர்மாணிக்கிறேன் என்று பாருங்கள்!' கண்மூடித் திறக்கும் நேரத்தில் உத்தரவுகள் பறந்தன. திருமலை அடிவாரத்தில் இருந்த பெரும் கானகம் திருத்தி அமைக்கப்பட்டது. பாழடைந்து, கேட்பாரற்றுக் கிடந்த பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் இடிபாடுகள் சரி செய்யப்பட்டன. எங்கெங்கிருந்தோ ஆட்கள் வேலைக்கு வந்தார்கள். கற்களும் மண்ணும் மலையெனக் கொண்டு குவிக்கப்பட்டன. இரவு பகல் பாராமல் பணி நடந்தது. தீரத் தீர மன்னன் பொன்னும் மணியும் அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தான்.கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கான அடிப்படை வடிவத்தைத் தீர்மானித்து அளித்தது உடையவர்தான். மேலிருந்து பார்த்தால் ஒரு கிருஷ்ணப் பருந்தின் தோற்றத்தில் இருக்கிற கோயில்.'பக்தர்கள் எப்போது கோயிலுக்கு வந்தாலும் பிரசாதம் இல்லாமல் இருக்கக்கூடாது' என்றார் ராமானுஜர். 'இங்கே திருப்தியாகப் பிரசாதம் சாப்பிட்டுவிட்டுப் பசியின்றி மலையேறட்டும்.''உத்தரவு சுவாமி. தங்கள் விருப்பம் என்றும் தொடரும்.' என்றான் கட்டிதேவன்.நல்ல நாள் பார்த்து கோவிந்த ராஜ பெருமாளைத் திருமலை அடிவாரத்துக்கு எழுந்தருளச் செய்தார் உடையவர். கோலாகல உற்சவம். ஆரவாரமான குடமுழுக்கு. 'எம்பெருமானே! என்றென்றும் இங்கிருந்து ஏழுலகையும் காத்து நில்!' மனம் குவிந்து வேண்டினார்.மன்னனுக்குப் பெருமகிழ்ச்சி. மக்களுக்குத் திகட்டாத பேரானந்தம். 'ராமானுஜரே, நீங்கள் இங்கேயே இருந்துவிட மாட்டீர்களா?' ஏங்கிப் போய்க் கேட்டார்கள்.'அது சிரமம். நமது பணி திரு வரங்கத்தில் உள்ளது. அரங்கன் திருப்பணிக்குக் காலமும் அரசும் சாதகமாக இல்லாத சூழலில் நான் இத்தனை ஆண்டுகள் வெளியேறிக் கிடந்ததே தவறு.' விடைபெற்றுக் கிளம்பினார். திருவரங்கம் வந்து சேர்ந்தபோது நிலவரம் அவர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சற்றுக் கலவரமாகித்தான் இருந்தது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

த்வயக் காப்பு
Advertisement



Ramanujar Download








ஒரு மேகத்தைப் போல் நின்று நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தது காவிரி. கரையோர மரங்கள் காற்றை நெம்பித் தள்ளும் விதமாக ஆடிக் கொண்டிருக்க, அண்ணாந்து பார்த்துவிட்டு, 'இன்றைக்கு மழை வரும் போலிருக்கிறதே!' என்றார் பெரிய நம்பி.

'நாங்கள் கிளம்பும்போது திருமலையில் நல்ல மழை. ஒரு பெரிய காரியம் சிறப்பாக நடந்தேறியதால் அதை அனுபவித்துக்கொண்டு நனைந்தபடியே கிளம்பி விட்டோம்.' என்றார் ராமானுஜர்.'ஒன்றல்ல, இரண்டு என்று சொல்லுங்கள் சுவாமி. திருமலையப்பனின் அடையாளச் சிக்கல் தீர்ந்தது என்றீர்களே, அது அளிக்கும் நிம்மதி மகத்தானதாக உள்ளது. உண்மையில் சொல்லுவதென்றால் எனது நுாறாவது பிறந்த நாளில் இதைக் காட்டிலும் ஒரு நற்செய்தி
கிடைத்திருக்க முடியாது. என்னைப் பாரும். நுாறு வயது போலவா தெரிகிறது? பத்திருபது வருடங்கள் உதிர்ந்து விட்டதைப் போல இருக்கிறது!' குழந்தை போலச் சிரித்தார் நம்பி.காலை அவரது இல்லத்தில் எளிமையாக நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டுவிட்டு, கோயிலுக்குப் போய் சன்னிதியில் நெடுநேரம் கண்மூடி நின்றிருந்தார் ராமானுஜர்.'உடையவரே, நுாறாண்டுகள் வாழ்வது ஒரு சாதனையல்ல. வாழ்வு நாள் முடியும் காலத்தில் மனக்கவலைகள் மிகுவதுதான் வேதனையளிக்கிறது. சோழன் நம்மைச் சும்மா விட்டுவைக்க மாட்டான் போலிருக்கிறது' என்று சொல்லியிருந்தார் பெரிய நம்பி.திருமலையில் இருந்து அவர் அரங்க நகர் திரும்பிய கணத்தில் இருந்து பலபேர் சுற்றிச் சுற்றி இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். குலோத்துங்கனின் வைணவ விரோத நடவடிக்கைகள். கோயில் மானியங்களை ரத்து செய்கிற நடவடிக்கை. உற்சவங்களைத் தடுக்கிற மனப்போக்கு.
வைணவர்களைத் தேடித்தேடி அவமானப்படுத்துவதில் அவன் அடையும் ஆனந்தம்.'அரசுப் பணியில் வைணவர்களுக்கு இடமில்லை என்கிறார்கள் சுவாமி! சிவனே பெரிய கடவுள் என்று ஏற்போருக்கு மட்டுமே மன்னன் சபையில் இடம்.'

'அப்படியா? நாலுாரான் கங்கை கொண்ட சோழபுரத்தில்தானே இருக்கிறார்? சோழனின் அமைச்சர் வைணவரே அல்லவா?' என்று கேட்டார் ராமானுஜர். 'கெட்டது கதை. நாலுாரான் விவகாரம் தெரியாதா உமக்கு? அவர் வைணவர் என்றாலும் மன்னன் வழியே தன்வழி என்று மாறிப் பலகாலமாகிறது.' 'உடையவருக்கு அதெல்லாம் எப்படித் தெரியும்? அவர் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பி ஆறு வருடங்களாகின்றன. நாலுாரான் கெட்டதெல்லாம் இப்போதுதானே?'ராமானுஜர் அமைதியாக யோசித்தார். முதலியாண்டான், கூரத்தாழ்வான் உள்ளிட்ட சில சீடர்களுடன் அன்று மாலை ஆற்றங்கரைக்கு உலவச் சென்றபோது தற்செயலாகப் பெரிய நம்பி அங்கு ஓரிடத்தில் அமர்ந்திருப்பது கண்டு அருகே சென்று வணங்கினார்.'சுவாமி, தள்ளாத வயதில் தாங்கள் இத்தனை துாரம் நடந்து வர வேண்டுமா?''வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை உடையவரே. மனம் முழுதும் சோழனின் நடவடிக்கைகளைப் பற்றிய கசப்பே நிரம்பியிருக்கிறது. கங்கை பாவம் கரைக்கும் என்றால் காவிரி துக்கமாவது கரைக்காதா?''சுவாமி, தங்களுக்குத் தெரியாததல்ல. வைணவம் அனாதியானது. இது ஒருவர் தோற்றுவித்த சமயமல்ல. என்றும் உள்ளது. எத்தனை இடர் வந்தாலும் வென்று மீள்வது. இங்கே ஒரு யக்ஞேசர் போல பரதக் கண்டம் முழுதும் இந்தப் பயணத்தில் எத்தனை யக்ஞேசர்களைக் கண்டேன் தெரியுமா? வாதத்தின் பெயரால் நிகழ்ந்த விதண்டாவாதங்களை வைணவமே வென்று வாகை சூடியது. காரணம், இது பெருமானுக்கு உகந்த வழி. பெருவழி என்பது இதுவே அல்லவா? எத்தனையோ மன்னர்கள், எவ்வளவோ ஆட்சி மாற்றங்கள். நிரந்தரமற்ற உலகில் வைணவ தருமம் ஒன்றே நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்பது தங்களுக்குத் தெரியாதா!''உண்மைதான் ராமானுஜரே. ஆனால் சோழன் கண்மண் தெரியாமல் ஆடுகிறான். பலப்பல சிறு கோயில்கள் இந்தச் சில வருடங்களில் இழுத்துப் பூட்டப்பட்டு விட்டன. மன்னனுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அறப்பணி செய்வோரும் வைணவத் தலங்களைக் கண்டும் காணாமலும் போக ஆரம்பித்து விட்டார்கள். விளக்கேற்றவும் வழியின்றி பல ஆலயங்கள் இருண்டு கிடக்கின்றன.'

பெரியவர் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.'புரிகிறது சுவாமி. இதில் நாம் செய்யக்கூடியது என்னவென்றுதான் தெரியவில்லை. உயிர் உள்ள வரை நாம் இத்தருமத்தைவிட்டு விலகப் போவதில்லை. திட சித்தம் கொண்ட யாரும் மன்னனுக்கு அஞ்சி மறுவழி தேடப் போவதுமில்லை. மழையோ வெயிலோ அடித்து ஓயத்தானே வேண்டும்? நாம் அது ஓயும் வரை அமைதி காப்பது தவிர வேறு வழியில்லை.' என்றார் ராமானுஜர்.
சிறு துாறல் விழத் தொடங்கியிருந்தது.'கூரேசரே, பெரியவரை பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வாரும்!' என்று சொல்லிவிட்டு ராமானுஜர் புறப்பட்டார்.'ஒரு நிமிடம் சுவாமி. என் ஆத்ம திருப்திக்கு நான் ஒரு காரியம் செய்யலாம் என்றிருக்கிறேன்!' என்றார் பெரிய நம்பி.
'சொல்லுங்கள்.''நாளைக் காலை த்வய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே கோயிலை நான் வலம் வரப் போகிறேன். நடக்கச் சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி தெரியவில்லை. நமக்கெல்லாம் நலம் தரும் சொல் என்றால் அது ஒன்றுதானே. அது காக்கட்டும்.'ராமானுஜர் புன்னகை செய்தார். 'தங்கள் சித்தம் சுவாமி.''அகந்தையற்ற சுத்த ஆத்மாவான இந்தக் கூரேசரை எனக்கு உதவியாக அனுப்பி வையுங்கள். பிடித்துக்கொள்ள ஒருத்தர் தேவைப்படுகிறார் இப்போதெல்லாம்.'மறுநாள் காலை பெரிய நம்பி, கூரேசரின் கையைப் பிடித்துக்கொண்டு த்வய மந்திரத்தை உச்சரித்தவண்ணம் திருவரங்கம் பெரிய கோயிலைச் சுற்றி வரத் தொடங்கினார். அது ஒரு காப்பு. மந்திரக் காப்பு. கெட்ட நோக்கத்தோடு யாரும் நெருங்க முடியாமல் தடுத்து நிறுத்துகிற காப்பு. உச்சரிப்பவரின் பரிசுத்தம், மந்திரத்துக்கு மேலும் வீரியம் கொடுக்கும். வெறும் உச்சாடனமல்ல. அது தியானம். தன்னை ஆகுதி ஆக்கி, மந்திரத்தில் நிகழ்த்துகிற வேள்வி.

'இது போதும் முதலியாண்டான். பெரிய நம்பியைக் காட்டிலும் ஒரு புனிதர் திருவரங்கத்தில் இன்றில்லை. அவர் செய்கிற த்வயக் காப்பு இம்மண்ணை சோழனிடம் இருந்து காக்கும்.' என்று சொன்னார் ராமானுஜர்.சிறிது காலம் அப்படித்தான் இருந்தது. சோழ தேசம் முழுதும் வைணவர்களைத் தேடித்தேடிச் சித்ரவதை செய்து கொண்டிருந்த குலோத்துங்கன், திருவரங்கத்தின் பக்கம் திரும்பாமலேதான் இருந்தான்.சட்டென்று ஒருநாள் அதுவும் நடந்தது. 'என்ன பெரிய ராமானுஜர்? என்ன பெரிய ஸ்ரீபாஷ்யம்? சிவனே பெரிய கடவுள் என்று அவரையும் சொல்ல வைக்கிறேன் பார்!'நச்சு உமிழ் சர்ப்பமாகச் சீறி எழுந்தது அவனது அகந்தை.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


நான் போகிறேன்!


Advertisement



Ramanujar Download






அவன் விக்கிரம சோழனுக்கு மகனாகப் பிறந்தவன். தனது பாட்டனான குலோத்துங்க சோழனின் பெயரையே அவனும் ஏந்தியிருந்தபடியால் ஓர் அடையாளத்துக்காக இரண்டாம் குலோத்துங்கன் என்று அழைக்கப்பட்டான். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு ராஜாதி ராஜ சோழன், அவனுக்குப் பின் இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், அதி ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்கிரம சோழன் என்று தடதடவென ஆட்சிகள் மாறிக்கொண்டே வந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு சோழர்கள் மீதிருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்திருந்தது.

அந்தச் சமயத்தில் விக்கிரம சோழனுக்குப் பிறகு மன்னனான இரண்டாம் குலோத்துங்கன், தனது உடனடி மூதாதையர்களைக் காட்டிலும் ஓரளவு நல்ல நிர்வாகி என்று பெயர் பெற்றிருந்தான். அவனது காலத்தில் சோழ தேசத்தில் போர்கள் கிடையாது. தந்தை விட்டுச் சென்ற பேரரசின் எல்லைகளைக் காத்து வந்தால் போதும் என்று நினைத்தான். யுத்தங்களில் ஆர்வம் கொண்டிருந்த சோழர் பரம்பரையில் அவன் மட்டும்தான் அந்த விருப்பமே இல்லாதிருந்தவன்.
மாறாக, மதம் அவனது பெரும் பலவீனமாக இருந்தது. சைவ மதம். அதைத் தவிர இன்னொன்று தனது அதிகாரத்துக்கு உட்பட்ட பிராந்தியங்களில் தழைக்கக் கூடாது என்று நினைத்தான் குலோத்துங்கன்.
'நாலுாரான், எப்போதும் என் மனம் தில்லையைச் சுற்றிச் சுற்றியே வருகிறது. எப்பேர்ப்பட்ட ஆலயம் அது! அதன் பிரம்மாண்டத்தையும் பேரழகையும் இன்னும் பெருகச் செய்ய என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்!'
நாலுாரான் வைணவர்தாம். ஆனாலும் அவருக்கு அமைச்சர் பதவி முக்கியம். அதிகாரம் அதனினும் முக்கியம். எனவே கூசாமல் பதில் சொன்னார், 'மன்னா, தில்லை நடராசர் ஆலய வளாகத்திலேயே கோவிந்தராஜருக்கு சன்னிதி ஒன்று இருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால் அந்தச் சன்னிதி அங்கொரு இடைஞ்சல்தான். தில்லையம்பலத்தான் திருக்கோயிலில் கோவிந்தன் எதற்கு?'
அப்படித் தூக்கிக் கடலில் எறியப்பட்டவர்தாம் கோவிந்தராஜப் பெருமாள். அவரைத்தான் ராமானுஜர் திருமலை அடிவாரத்துக்கு எடுத்துச் சென்று கோயில் கொள்ளச் செய்தார்.
குலோத்துங்கனுக்கு இந்த விவரம் தெரியவந்த போது கோபம் வந்தது. நான் மன்னன். அது தெய்வமல்ல; கல்லென்று முடிவு செய்து தூக்கிக் கடலில் போடுகிறேன். நீ யார் அதைக் கடவுள்தான் என்று நிறுவுவதற்கு?
ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு வைணவ சித்தாந்த அடிப்படையில் ஓர் உரை எழுதியதும் பாரதமெங்கும் சுற்றி வந்து பல சைவ பண்டிதர்களை வாதில் வென்றதும் காஷ்மீரத்து மன்னனையே வைணவனாக்கி வைத்துவிட்டு வந்ததும் அவனுக்கு மிகுந்த ஆவேசத்தை அளித்தது.
'அமைச்சரே, இந்த ராமானுஜர் உண்மையிலேயே அத்தனை பெரிய ஆளா?' என்று நாலுாரானிடம் கேட்டான்.
'எத்தனை பெரிய ஆளானால் என்ன மன்னா? பெரிய கடவுள் சிவன் தான் என்று ஏற்றுக்கொள்ளத் தானே வேண்டும்?'
'யார், ராமானுஜரா? ஏற்பாரா?'
'யாரானாலும் ஏற்கத்தான் வேண்டும். உண்மை அனைவருக்கும் பொதுவானதல்லவா?'
மன்னனை மகிழ்விக்கப் பேசுகிற வார்த்தைகள். தன் இருப்பின் உறுதித் தன்மையை நிரந்தரப்படுத்திக் கொள்கிற முயற்சி. நாலூரான் எப்படி அப்படி மாறிப் போனார் என்று திருவரங்கத்தில் பேசாத வாயில்லை. அரங்கனின் அடியாராக அவர்களுக்கு ஒரு காலத்தில் அறிமுகமான மனிதர். எப்படி மன்னனின் அடிமையாகிப் போனார்?
'நல்லது அமைச்சரே. என்ன செய்யலாம் சொல்லுங்கள். சிவனே பெரியவன் என்று ராமானுஜர் ஏற்க வேண்டும். தேவை ஒரு நல்ல உபாயம்.'
குலோத்துங்கன் ஏற்கெனவே இந்தக் காரியத்தை வேறு பலரிடம் செய்து கொண்டிருந்தான். 'சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை' என்று ஒவ்வொரு வைணவத் தலைவரிடமும் எழுதிக் கையெழுத்து வாங்குகிற வெறி அவனுக்கு இருந்தது. அதையே ராமானுஜரிடமும் செய்யலாம் என்று நாலுாரான் சொன்னார்.
'அருமை. கூப்பிடுங்கள் நமது தூதர்களை!'
ஓலை தயாரானது. தூதுவர்கள் வந்தார்கள். நாலூரான் அதை அவர்களிடம் கொடுத்து, 'நேரே திருவரங்கம் செல்லுங்கள். சேரன் மடத்தில் ராமானுஜர் இருப்பார். மன்னர் உத்தரவு என்று சொல்லி இந்த ஓலையைக் கொடுங்கள். படித்துவிட்டு அவர் ஒரு ஓலை எழுதித் தருவார். அதை வாங்கிக் கொண்டு வந்து மன்னனிடம் சேருங்கள்.'
மறுநாள் அதிகாலை சோழனின் தூதுவர்கள் திருவரங்கத்தை வந்தடைந்தார்கள். உடையவர் அப்போது குளிப்பதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தார். முதலியாண்டானும் வில்லிதாசரும் உடன் சென்றிருக்க, மடத்தில் கூரத்தாழ்வான் இருந்தார்.
ராமானுஜரின் பூர்வாசிரம சகோதரியின் மகனான நடாதூர் ஆழ்வான் இருந்தார். வேறு சில சீடர்கள் இருந்தார்கள்.
உறங்கி எழச் சற்றுத் தாமதமாகிவிட்ட குற்ற உணர்ச்சியுடன் நடாதூர் ஆழ்வான் அப்போதுதான் மடத்தை விட்டுக் கிளம்பி ஆற்றங்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார்.
இதென்ன விநோதமாக இந்தக் காலை நேரத்தில் மன்னனின் ஆட்கள் குதிரையில் வருகிறார்கள்?
எங்கோ எச்சரிக்கை மணி அடித்தது. எனவே நைச்சியமாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார் நடாதூர் ஆழ்வான்.
'ஏதேது, திருவரங்கத்துக்கு நல்ல காலம் வந்துவிட்டது போலிருக்கிறதே? மன்னரேவா தங்களை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்?'
'ஆம். நாங்கள் ராமானுஜரைத் தேடி வந்திருக்கிறோம். எங்கே அந்த சேரன் மடம்?'
நடாதூர் ஆழ்வாருக்குப் புரிந்து விட்டது. இது விபரீதம். விடிகிற நேரத்தில் வந்து நிற்கிற விபரீதம். இவர்கள் கண்ணில் உடையவர் பட்டுவிட்டால் பெரும் பிரச்னை. என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று உள்ளுக்குள் பதறியபடி யோசித்து, சட்டென்று ஒரு வழி கண்டார்.
'சேரன் மடம்தானே? வாரும்.' அழைத்துக்கொண்டு மடத்துக்கு வந்தார். 'ஒரு நிமிடம் இங்கே இருங்கள். உடையவர் உள்ளேதான் இருக்கிறார். எழுந்து விட்டாரா என்று பார்க்கிறேன்' என்று உள்ளே போனார்.
'கூரேசரே... அபாயம் வந்துவிட்டது!'
கணப் பொழுதில் மடத்தில் இருந்த அத்தனை பேருக்கும் விஷயம் புரிந்து விட்டது. வெளியே காத்திருப்பவர்கள் ராமானுஜரைக் காணாமல் திரும்ப வழியில்லை. அவர் நிச்சயமாக மன்னனின் ஆணையை ஏற்கப் போவதில்லை என்னும் பட்சத்தில் கைது செய்து இழுத்துச் செல்வதே அடுத்தக் கட்டமாக இருக்கும். என்ன செய்யலாம்?
கூரேசர் சற்றும் யோசிக்கவில்லை. 'பேச அவகாசமில்லை. நானே ராமானுஜரென்று சொல்லிக் கொண்டு அவர்களோடு போகிறேன். உடையவர் திரும்பி வந்தால் உடனே அவரை ஊரை விட்டு வெளியேறிவிடச் சொல்லுங்கள். சீடர்களில் சிலர் அவரோடு போகட்டும். காவி ஆடை வேண்டாம். அது காட்டிக் கொடுத்துவிடும். வெண்ணுடை அணிந்து அவர் கிளம்பட்டும்.'
படபடவென்று கூரேசர் உத்தரவிட்டுக் கொண்டிருந்தபோது, மடத்தின் பின்புற வாயிலில் பெரிய நம்பியின் குரல் கேட்டது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

தியாகச் சுடர்
Advertisement



Ramanujar Download





'சுவாமி, தாங்களா! இந்த நேரத்திலா நீங்கள் இங்கு வர வேண்டும்? வேண்டாம் சுவாமி, திரும்பிச் சென்று விடுங்கள்!' பதறினார் கூரேசர்.
பெரிய நம்பிக்குப் புரிந்தது. வெளியே காத்திருக்கும் துாதுவர்கள் வெகுநேரம் பொறுத்திருக்க மாட்டார்கள். சில நிமிடங்களுக்குள் என்னவாவது நடந்தாக வேண்டும். அந்தச் சில நிமிடங்களில் ராமானுஜர் திரும்பி வந்துவிட்டாலும் பிரச்னை. நிதானமாக யோசிக்க இது நேரமில்லை. அவர் ஒரு முடிவுடன் சொன்னார், 'கூரேசரே, மன்னன் சபைக்கு நீங்கள் தனியே செல்ல வேண்டாம். உடன் நான் வருகிறேன். எனக்குத் துணையாக அத்துழாய் வரட்டும். நாம் கிளம்பிப் போனதும் உடையவரை பத்திரமாக இங்கிருந்து அழைத்துக் கொண்டு வெளியேற வேண்டியது சீடர்களின் பொறுப்பு.''ஐயோ நீங்களா! வேண்டாம் சுவாமி.''பேச நேரமில்லை. உம்மைத் தனியே அனுப்ப என்னால் முடியாது. சீக்கிரம் ஆக வேண்டியதைப் பாருங்கள்' என்றார் பெரிய நம்பி.
ஒரு நுாறு வயதுக் கிழவரின் தீவிரமும் தெளிவும் அங்கிருந்த அத்தனை பேரையும் வாயடைக்கச் செய்துவிட்டது. ராமானுஜர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தவிர அவர்கள் யாருக்கும் வேறு எந்த நோக்கமும் இல்லை. அதேசமயம் மன்னன் சபையில் கூரேசருக்கு உதவியாக யாராவது இருந்தாக வேண்டும் என்பதும் நியாயம்தான். அப்பொறுப்பு என்னைச் சேரும் என்றார் பெரிய நம்பி.
இதற்குமேல் ஒன்றுமில்லை. இறைவன் விட்ட வழி.சட்டென்று கூரேசர், ராமானுஜரின் காவி உடையை எடுத்து அணிந்து கொண்டார். திரிதண்டத்தை எடுத்துக் கொண்டார். நெற்றியில் சாற்றிய திருமண்ணும் என்றும் சுடரும் ஞானப் பொலிவுமாக அவர் வெளிப்பட்டபோது அத்தனை பேரும் தம்மை மறந்து கரம் குவித்தார்கள்.'இதோ பாருங்கள், உடையவர் குளித்துவிட்டு வந்ததும் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி உடனே கிளம்பிவிடச் சொல்லுங்கள். சோழ
நாட்டை விட்டே அவர் வெளியேறிவிட வேண்டும் என்று நானும் பெரிய நம்பியும் சொன்னோம் என்று சொல்லுங்கள்!'நடாதுார் ஆழ்வான் முன்னால் செல்ல, கூரேசரும் பெரிய நம்பியும் மற்ற சீடர்கள் புடைசூழ மடத்தின் முன் வாசலுக்கு வந்தார்கள்.காத்திருந்த மன்னனின் துாதுவர்
கள், கூரேசரை ஏற இறங்கப் பார்த்தார்கள். 'நீர்தான் ராமானுஜரா?''ஆம். என்ன விஷயம்?'இதோ மன்னரின் ஓலை. எங்கே உமது பதில்?' என்று நீட்ட, கூரேசர் அதை வாங்கிப் படித்துப் பார்த்தார். புன்னகை செய்தார்.'நல்லது துாதுவனே. உமது மன்னனை நான் நேரில் சந்தித்துப் பேசிக் கொள்கிறேன். கிளம்புவோமா?'கிளம்பி விட்டார்கள். சீடர்களுக்கு ஒருபுறம் நிம்மதி. மறுபுறம் பெரும் கவலை. துாதுவர்கள் ராமானுஜரை நேரில் சந்தித்ததில்லை என்பது நிச்சயமாகி விட்டது. மன்னனின் சபையில் அது ராமானுஜரல்ல; கூரேசர் என்று வெளிப்படும் வரை பிரச்னை இல்லை. ஆனால் அப்படித் தெரியவருகிற நேரம் மன்னனின் கோபம் கூரேசரை என்ன செய்யுமோ என்றும் கவலையாக இருந்தது.'விடுங்கள். பெரிய நம்பிதான் உடன் செல்கிறாரே. அவர் பார்த்துக்
கொள்வார்.' என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள்.துாதுவர்களுடன் கூரேசரும் பெரிய நம்பியும் அத்துழாயுடன் கிளம்பிச் சென்ற சில நிமிடங்களில் உடையவர் குளித்துவிட்டு மடத்துக்குத் திரும்பி வந்தார்.'சுவாமி, என்னென்னவோ நடந்துவிட்டது. தாங்கள் உடனே திருவரங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது.'திகைத்து விட்டார் ராமானுஜர்.'ஏன், என்ன ஆயிற்று?'விவரம் சொல்லப்பட்டது. சீடர்களின் கண்ணீரும் பதற்றமும் அவருக்கு மேலும் கவலையளித்தன.'என்ன அபசாரம் இது? எனக்காக கூரேசர் ஏன் அங்கு செல்ல வேண்டும்? நானே போயிருப்பேனே? மன்னனை நானே நேரில் சந்தித்துப் பேசியிருப்பேனே?''இல்லை சுவாமி. குலோத்துங்கன் ஒரு முடிவோடுதான் தங்களுக்கு ஓலை அனுப்பியிருந்தான். சிவனுக்கு மிஞ்சி வேறு தெய்வமில்லை என்று எழுதிக் கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்டிருக்கிறான். தாங்கள் எப்படி அதைச் செய்வீர்கள்?''கூரேசரும் பெரிய நம்பியும்கூடத்தான் செய்ய மாட்டார்கள்.'அவர்கள் ஒரு கணம் தயங்கினார்கள். பின், 'தெரியும் சுவாமி. ஆனால் தங்களைவிட நீங்கள் பத்திரமாகவும் உயிருடனும் இருக்க வேண்டியது அவசியம் என்று கூரேசர் சொல்லச் சொன்னார். பெரிய நம்பியும் அதையேதான் சொன்னார்.'
ராமானுஜர் அதிர்ந்து போய் நின்றார். கரகரவென்று அவர் கண்களில் இருந்து நீர் சொரிந்தது.'நான் ஒருவன் உயிர்த்திருக்க, பரம பாகவதர்களான இரு ஞானிகள் தம் வாழ்வைப் பணயம் வைப்பதா? இது அடுக்கவே அடுக்காது.''இல்லை சுவாமி. வைணவ தருமம் தழைக்கத் தாங்கள் இருந்தாக வேண்டும். இத்தனைக் காலம் எத்தனையோ தடைகளைத் தாண்டி நமது தருமத்தை நாம் பரப்ப முடிந்திருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம் தங்கள் இருப்பும் செயல்பாடுகளும்தான். தங்களுக்கு ஏதேனும் ஒன்று ஆகிவிட்டால், மற்றவர்களை அடியோடு சைவத்துக்கு மாற்றிவிட மன்னனுக்குக் கணப் பொழுது போதும்.''என் உயிர் அத்தனை மேலானது இல்லையப்பா. என்னைக் காக்கத் தன்னையே கொடுக்கலாம் என்று நினைத்த கூரேசரே
மனிதரில் புனிதர்.''அவர் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் சுவாமி. அவரை எம்பெருமான் காப்பான்.'வேறு வழியின்றி ராமானுஜர்
தமது காவி உடையின்மீது வெள்ளை வேட்டி போர்த்திக் கொண்டு பாரம் சுமந்த இதயத்தோடு கிளம்பினார். முதலியாண்டான் உள்ளிட்ட சீடர்
கள் உடன் புறப்பட்டார்கள். ஒரு சிலரை ராமானுஜர் மடத்திலேயே இருக்கச் சொன்னார். 'கூரேசருக்கு ஒன்றும் நேரக்கூடாது. நீங்கள்
இங்கே இருங்கள். கூரேசர் திரும்பி வந்ததும் எனக்குத் தகவல் வரவேண்டும்.''ஆகட்டும் சுவாமி, நீங்கள் சீக்கிரம் புறப்படுங்கள்.'
அன்று அது நடந்தது. அரங்கனை விட்டு, அரங்கமாநகரை விட்டு, தன் பிரியத்துக்குரிய கூரேசரை விட்டு, ஆசாரியர் பெரிய நம்பியை
விட்டு, அனைத்தையும் விட்டு ராமானுஜர் வெளியேறினார். காவிரியைக் கடந்து வடதிசை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரையத் தொடங்கியது அத்திருக்கூட்டம்.'அழிவுக்காலம் வந்தால் மன்னர்களுக்கு இப்படித்தான் விபரீத எண்ணம் ஏற்படும். சோழன் நிச்
சயம் இதற்கு அனுபவிப்பான்!' சபித்துக் கொண்டே வந்தார்கள் சீடர்கள்.'வேண்டாம் பிள்ளைகளே. அனைவரும் கூரேசரின் நலனுக்
காகப் பிரார்த்தனை செய்யுங்கள். பெரிய நம்பியும் கூரேசரும் வைணவ தரிசனம் செழிக்க எம்பெருமான் அளித்த பெருங்கொடை. அவர்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டுங்கள்.' கண்ணீருடன் கேட்டுக் கொண்டார் ராமானுஜர்.ஆனால் விதி வேறாக இருந்தது. குலோத்துங்கன் சபைக்கு கூரேசரும் பெரிய நம்பியும் வந்து
நின்றபோது நாலுாரான் குதித்தெழுந்து அலறினார்.'மன்னா, மோசம் போனோம். இவர் உடையவரல்லர்!'

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com
- பா.ராகவன் -
நான்கு கண்கள்
Advertisement



Ramanujar Download




இது அவமானம். சபை நடுவே ஒரு மன்னன் தனது பிரஜையால் தோற்கடிக்கப்படுவதை நாடாளும் அகந்தை கொண்ட யாரும் ஏற்க மாட்டார்கள். குலோத்துங்கன் திரும்பத் திரும்பக் கேட்டான். உண்மையா? இது உடையவர் இல்லையா?

'ஆம் மன்னா. இவர் கூரத்தாழ்வான். நான் இவரிடமே சிறிது காலம் பாடம் கேட்டிருக்கிறேன்' என்றார் நாலுாரான். 'முட்டாள் வீரர்களே, ராமானுஜரைத் தப்பிக்க விட்டு, யாரோ ஒருவரை இழுத்து வந்திருக்கிறீர்களே, உங்களை என்ன செய்கிறேன்பார்!' என்று சீறியெழுந்தான் குலோத்துங்கன்.'மன்னா, ஒரு நிமிடம். கூரத்தாழ்வான் நீங்கள் நினைப்பது போல யாரோ ஒருவரல்லர். சிவனுக்கு விஞ்சிய தெய்வம் வேறில்லை என்று ஒப்புக்கொண்டு ராமானுஜர் கையெழுத்திட்டால் என்ன மதிப்போ, அதே மதிப்பு இவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டாலும் உண்டு' என்றார் நாலுாரான்.
குலோத்துங்கன் ஒரு கணம் வியப்பாகிப் போனான். 'ஓ, இவர் அத்தனை பெரியவரா!''ஆம் மன்னா. முதலியாண்டானும் கூரத்தாழ்வானும்தான் ராமானுஜரின் இரு கண்களும் கரங்களுமாக விளங்குபவர்கள். ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் எழுதப் பக்கபலமாக இருந்து உதவியவரே இவர்தான். உமது வீரர்களை அனுப்பி ராமானுஜரைத் தேடச் சொல்லுங்கள். அதற்கு முன்னால் கூரேசர் இதை ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போடுவதும் நடக்கட்டும். ராமானுஜர் கிடைக்காமலே போனால்கூட கூரேசர் ஒப்புக்கொண்டால் விஷயம் முடிந்தது!' என்றார் நாலுாரான்.கூரத்தாழ்வான் நாலுாரானை அமைதியாக ஒரு பார்வை பார்த்தார். தன்னிடம் பயில வந்த மாணவன்தான். சிறிது காலம் கற்ற கல்வியைக் கொண்டுதான் மன்னனின் சபையில் அமைச்சராக முடிந்திருக்கிறது. ஆனால் அக்கல்விக்கு இது எப்பேர்ப்பட்ட இழுக்கு! பொன்னும் பணமும் வசதியான வாழ்வும் பதவியும் பகட்டும் ஒரு மனிதனின் குணம் மாற்றி இழுத்துச் செல்லுமானால் கற்ற கல்விக்குப் பொருள்தான் ஏது? நல்லவேளை உடையவர் இந்தச் சபைக்கு வரவில்லை என்று அவருக்கு நிம்மதியாக இருந்தது.'என்ன யோசனை கூரேசரே? நாலுாரான் சொன்னது கேட்டதா? சிவனுக்கு விஞ்சியது ஒன்றுமில்லை என்று எழுதிக் கையெழுத்திடும்!' எக்காளமாக ஆர்ப்பரித்தான் மன்னன்.ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரப்பட்டது. கூரேசரிடம் அதை நீட்டியபோது அவர்
அமைதியாகச் சொன்னார், 'மன்னா! ஒரு வரியில் முடிவு காணக் கூடியதல்ல இது. உங்களுடைய பண்டிதர்களைக் கூப்பிடுங்கள். அவர்கள் சிவனே பெரிய கடவுள் என்பதை நிறுவட்டும். அது இல்லை என்பதை வேத, புராண, இதிகாச சாட்சிகளுடன் நான் மறுக்கிறேன். இரு தரப்பில் யார் வெல்கிறார்கள் என்று பாருங்கள். அதை ஏற்பதுதான் சரி. பொத்தாம் பொதுவாக ஒன்றை முடிவு செய்வது மன்னனுக்கு அழகல்ல.'
கோபம் உச்சிக்கு ஏறியது குலோத்துங்கனுக்கு. 'நிறுத்துங்கள் கூரேசரே. இது அரச கட்டளை. உம்முடன் வாதிட இங்கு யாரும் தயாரில்லை. ராஜகட்டளையை நிறைவேற்றுவது உமது கடமை.''முடியாதென்றால்?''உமது கதை முடியும்.'கூரேசர் புன்னகை செய்தார். அந்த ஓலையை வாங்கினார். விறுவிறுவென்று ஏதோ எழுதிக் கொடுத்தார்.படித்துப் பார்த்த நாலுாரான் திடுக்கிட்டுப் போய், 'மன்னா, இது பித்தலாட்டம். இவர் மொழி ஆட்டம் ஆடுகிறார். உங்களை மோசம் செய்யப் பார்க்கிறார்!' என்று அலறினார்.

'சிவாத் பரதரம் நாஸ்தி' என்று எழுதிக் கையெழுத்துப் போட வேண்டும் என்பதே மன்னனின் நிபந்தனை. என்றால், சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என்று பொருள். கூரேசர் அந்தச் சொற்றொடரின் இறுதியில் ஒரு கேள்விக்குறியைச் சேர்த்துவிட்டு அதன் கீழே, 'த்ரோணம் அஸ்தி தத: பரம்' என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார்.சிவம் என்ற சொல்லுக்குக் 'குருணி' என்று ஒரு பொருள் உண்டு. குருணி என்றால் மரக்கால். அது ஓர் அளவு. த்ரோணம் என்பது குருணியைக் காட்டிலும் பெரிய அளவு. இந்த த்ரோணத்துக்கு தும்பைப் பூ என்று இன்னொரு பொருளும் உண்டு. ஆக, சிவனைக் காட்டிலும் தும்பைப் பூ பெரிது என்று எழுதியிருந்தார் கூரேசர்.துடித்துப் போனான் குலோத்துங்கன். 'இந்த அகம்பாவம் பிடித்த வைணவன் கண்ணைப் பிடுங்குங்கள்!' என்று கத்தினான்.'சிரமப்படாதீர்கள் மன்னா. உம்மைப் போன்ற ஒரு வைணவ விரோதியைக் கண்ட இந்தக் கண்கள் எனக்கு எதற்கு என்றுதான் நானே நினைத்துக் கொண்டிருந்தேன். இதோ என் கண்கள் இனி எனக்கில்லை' என்று சொல்லி, தன் விரல் நகங்களால் கண்களைக் குத்திப் பெயர்த்தார்.
வாயடைத்துப் போனது சபை. 'ஐயோ என்ன காரியம் செய்கிறீர்!' என்று பெரிய நம்பி அலறினார்.'கண்ணே போன்ற கருமாணிக்கம் நெஞ்சில் நிற்கிறான் நம்பிகளே. இந்தப் புறச் சின்னங்கள் எனக்கு எதற்கு? போகட்டும் இவை. ஒழியட்டும் இந்த மன்னனின் ஆணவத்தோடு சேர்த்து.' என்றபடியே தன் கண்களைக் குத்திக் கிழித்துக் கருமணிகளை வெளியே எடுத்து வீசினார் கூரேசர். ரத்தம் பெருகத் தொடங்கியது. ஓ, ஓ என்று சபை ஆர்ப்பரித்தது. 'எங்கே, யாரவர், நான் அவரைப் பார்க்க வேண்டும்!' என்று அத்தனை பேரும் முண்டியடித்து முன்னால் வந்தார்கள்.ரத்தம் சொட்டச் சொட்ட, வலி பொறுக்க மாட்டாமல், நிலை தடுமாறிக் கூரேசர் மயங்கி விழ, 'யாரங்கே அந்த இன்னொரு கிழவரின் கண்ணைப் பிடுங்குங்கள்!' என்றான் குலோத்துங்கன்.
'நல்ல காரியம் மன்னா. அவரும் லேசுப்பட்ட ஆளில்லை. ராமானுஜருக்கே அவர்தான் குரு!' என்றார் நாலுாரான்.எங்கே பெரிய நம்பியும் தமது கண்களைத் தாமே பிடுங்கி எறிந்துவிடப் போகிறாரோ என்கிற அச்சத்தில் மன்னனின் வீரர்கள் வேலோடு அவர் மீது பாய்ந்தார்கள். கணப்பொழுதில் அவர் கண்களில் வேலைச் சொருகி, அகழ்ந்து எறிந்தார்கள்.'அப்பா…' என்று அலறிக் கொண்டு அத்துழாய் ஓடி வந்தாள். செய்வதறியாமல் திகைத்துப் போனது சபை. சிவனோ விஷ்ணுவோ யாரோ ஒருவர் பெரியவர்களாக இருந்துவிட்டுப் போகட்டும். மன்னன் சற்று மனிதத்தன்மை
உள்ளவனாக இருக்க வேண்டாமா? ஆனால் கேட்க முடியாது. பெரிய நம்பிக்குக் கண்தான் போனது. இதைத் தட்டிக் கேட்டுவிட்டால், யாரானாலும் உயிர் போய்விடும். ஆகவே, மதமெனும் உக்கிரப் பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிற மன்னனைத் தட்டிக்கேட்க யாருமில்லை. இது விதி. இன்று சபையில் பெருகிய இரு மகான்களின் உதிரம் சோழ வம்சத்தை சும்மா விடப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
மனத்துக்குள் எண்ணிக்கொண்டு அத்தனை பேரும் அவசரமாகக் கலைந்து போனார்கள்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

நல்லார் ஒருவர்
Advertisement



Ramanujar Download



ராமானுஜர் திருவரங்கத்தில் இல்லை என்ற விஷயம் தீயைப் போல் பரவிவிட்டது. ஐயோ என்ன ஆயிற்று என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே கூரத்தாழ்வானுக்கும் பெரிய நம்பிக்கும் கண் போன தகவல் வந்து சேர்ந்தது. ஆடிப் போனார்கள். மடத்தில் இருந்த சீடர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், அரங்க நகர்வாசிகள் சிலபேர் உடையவரைத் தேடிக் கிளம்பினார்கள்.

'சோழன் சும்மா இருக்க மாட்டான். எப்படியும் வீரர்களை அனுப்பி ராமானுஜரைத் தேடிப் பிடிக்கச் சொல்லியிருப்பான். அப்படி அவர் வீரர்களிடம் மாட்டிக் கொண்டால் நமக்கு அதுதான் இந்த ஜென்மத்தில் நிகழும் பேரிழப்பாக இருக்கும். ஒருக்காலும் அதை அனுமதிக்க முடியாது!' என்று சொல்லிவிட்டு நாலாபுறமும் தேடிக்கொண்டு கிளம்பினார்கள்.ராமானுஜர் அப்போது சோழ நாட்டின் எல்லை தாண்டி நீலகிரி மலைப்பக்கம் போய்க் கொண்டிருந்தார். கால் சோரும்போது ஓய்வு. வயிறு கேட்கிறபோது உணவு. கண் சொருகும்போது உறக்கம். இடைவிடாத பிரபந்தப் பாராயணத்துடன் உடையவர் குழு வடக்கு நோக்கி நடந்து கொண்டிருந்தது. கூரத்தாழ்வானுக்கு என்ன நேர்ந்தது என்பது மட்டும் தெரிந்தால் போதும். பயணத்தை அமைதியாகவே தொடர முடியும். ஆனால் அத்தகவல் எங்கிருந்து, எப்படி வரும்? அதுதான் தெரியவில்லை.'பிரம்ம சூத்திர உரை எழுத ஆரம்பிக்கும் முன் நீங்கள் அரங்கனை விட்டு நகர்ந்ததேயில்லை. கொஞ்சநாள் திருவெள்ளறைக்குப் போய்த் தங்கினீர்கள். முடிந்ததா? திரும்ப வந்துவிட்டீர்கள். ஆனால் எழுதி முடித்ததில் இருந்து ஓய்வே இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே சுவாமி?' என்றார் முதலியாண்டான்.'என்ன செய்ய? எம்பெருமான் சித்தம் அதுதான் என்றால் ஏற்கத்தான் வேண்டும்.''ஆனால் இது ஓய்வெடுக்க வேண்டிய வயதல்லவா? இப்படிக் காடு மேடு பாராமல் திரிய வேண்டியுள்ளதே சுவாமி! குற்ற உணர்ச்சி எங்களைத்தான் கொல்கிறது.'

ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி யோசித்துப் பார்த்தார். நுாறு வயதில் பெரிய நம்பியிடம் உள்ள உற்சாகம் யாருக்கு வரும்? தன்னைவிடச் சில வயதுகள் மூத்த கூரத்தாழ்வான் ஒரு வாலிபனைப் போல் வளைய வந்து கொண்டிருக்கிறார். இதோ, தனக்காகப் பரிவு கொள்ளும் முதலியாண்டான் மட் டுமென்ன வயதில் இளைத்தவரா? தமது முதல் தலைமுறை சீடர்கள் அனைவருமே எழுபதைத் தொட்டுத் தாண்டியவர்கள்தாம் என்பதை
ராமானுஜர் எண்ணிப் பார்த்தார். புன்னகை வந்தது.'என் எண்பது அப்படியொன்றும் ஓய்வு கொள்ளும் வயதல்ல தாசரதி! தவிர, திருமால் அடியார்களுக்கு ஓய்வு என்று ஒன்றேது? ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும். நம்மாழ்வார் நமக்கிட்ட கட்டளை அல்லவா இது?''அதெல்லாம் சரி. இன்றைக்கு இதற்குமேல் தங்களால் நடக்க முடியாது. தயவுசெய்து எங்காவது தங்குவோம் சுவாமி. தாங்கள் சிறிது நேரம் இங்கேயே இருந்தால் நாங்கள் சென்று உண்பதற்கும் உறங்குவதற்கும் அருகே ஏதாவது வசதி இருக்கிறதா என்று பார்த்து வருகிறோம்!'

சீடர்கள் விடாப்பிடியாக அவரை ஓரிடத்தில் அமரச் செய்துவிட்டுப் புறப்பட்டார்கள்.அது பாலமலை அடிவாரம். சுற்றிலும் அடர்ந்த வனாந்திரம். மரம் அசைந்தாலும் நிலவு தென்படாத பேரிருட்டு. மிருகங்களின் கூக்குரல் மட்டுமே வெளியை நிறைத்திருந்தது. ஒரு மரத்தடியில் ராமானுஜர் உட்கார, துணைக்கு நாலைந்து பேர் மட்டும் அவரோடு தங்கினார்கள். மற்றவர்கள் ஆளுக்கொரு பக்கம் கிளம்பிப் போனார்கள். மறுபுறம் உடையவரைத் தேடிக் கிளம்பிய திருவரங்கம் அடியார்களில் சிலர் நீலகிரிச் சாரல் பகுதிக்கும் வந்திருந்தார்கள். அவர்கள் அதே பாலமலை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தபோது சில வேடர்களை எதிர்கொண்டார்கள்.'யார் நீங்கள்?' பாதுகாப்புக்கு வில்லையும் அம்பையும் எடுத்து வைத்துக்கொண்டு அவர்கள் எச்சரிக்கையுடன் கேட்க, 'நாங்கள் திருவரங்கத்தில் இருந்து வருகிறோம். காட்டில் வழி தெரியவில்லை. மேலே எப்படிச் செல்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்!' என்று பதில் சொன்னார்கள்.'திருவரங்கத்தில் இருந்தா? உண்மையாகவா? அப்படியென்றால் அங்கே உடையவர் எப்படி இருக்கிறார்?'வேடர்களில் ஒருவன் கேட்டபோது அரங்கநகர்வாசிகளுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.'ஆஹா, உங்களுக்கு உடையவரைத் தெரியுமா! எங்களால் நம்பவே முடியவில்லை ஐயா. இந்தப் பக்கம் அவர் வந்ததே இல்லையே? அவரது சீடர்களும் கூட...'அவர்கள் பேசி முடிப்பதற்குள் பதில் வந்தது.

'யார் சொன்னது? உடையவரின் சீடர் நல்லான் சக்கரவர்த்தி எங்களுக்கு ஆசான். அவர் உடையவரைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார் எங்களுக்கு.'திகைத்து விட்டார்கள் அரங்கநகர்வாசிகள். இது எம்பெருமான் சித்தமன்றி வேறல்ல. நல்லான் சக்கரவர்த்தி. ஆம். அவரை மறந்தே போனோமே? எப்பேர்ப்பட்ட பாகவத உத்தமர்! உடையவரின் வழியில் சாதி பார்க்காமல், இனம் பார்க்காமல் மனித குலம் மொத்தத்தையும் சமமாகக் கருதுகிற உத்தமர்.ஒரு சமயம் ஆற்றில் பிணமொன்று மிதந்து வந்தது. நெற்றியில் திருமண் இருந்தது. அவ்வளவுதான். நல்லான் சக்கரவர்த்தி, அந்தப் பிணத்தைக் கரை சேர்த்து, முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்ய ஆரம்பித்து விட்டார்.'இதென்ன அக்கிரமம். அது பிராமணப் பிணம் இல்லை. பார்த்தாலே தெரிகிறதே. அதற்குப் போய் வைதிக முறைப்படி இறுதிக் காரியம் செய்வது அபசாரமல்லவா? ஓய் திருமலை சக்கரவர்த்தி! உம்மை நாங்கள் விலக்கி வைக்கிறோம்!'அக்ரஹாரத்து மக்கள் கூடி நின்று குற்றம் சாட்டினார்கள்.சட்டென்று அசரீரி ஒலித்தது. 'உமக்கு அவர் பொல்லான் என்றால் இருந்துவிட்டுப் போகட்டும். நமக்கு அவர் என்றும் நல்லான்.'திருமலை சக்கரவர்த்தி அன்று நல்லான் சக்கரவர்த்தி ஆகிப் போனார். கோயில் கோயிலாகச் சுற்றிக் கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில் அவர் சேரிப் பகுதிகளாகத் தேடித் தேடித் திரிபவராக இருந்தார். நன்மை செய்யும் நாராயணன் நாமத்தைப் பரப்புவதே வாழ்வின் ஒரே இலக்காகக் கொண்டு வாழ்ந்த பெரியவர்.'இது பெருமான் சித்தம். நீங்கள் நல்லான் சக்கரவர்த்தியின் சீடர்களா?'
'ஆம் ஐயா. பெரியவர்தான் எங்களுக்குப் பெருமாளைக் காட்டிக் கொடுத்தார். பெருமாளினும் பெரியவர் உடையவர் என்று உணர்த்தியவரும் அவர்தாம். அதை விடுங்கள். உடையவர் எப்படி இருக்கிறார்?'திருவரங்கத்து பக்தர்களின் கண்கள் கசிந்தன.

நெஞ்சை அடைத்த துக்கத்தை விழுங்கி, நடந்த சம்பவங்களை அந்த வேடர்களுக்கு விளக்கினார்கள். ஐயோ என்று துடித்துப் போன வேடர்கள், 'கவலையை விடுங்கள். இந்தக் கணம் முதல் உங்களுடன் சேர்ந்து நாங்களும் உடையவரைத் தேடுகிறோம். அவரைக் கண்டுபிடிக்காமல் மறுவேலை இல்லை.' என்று சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் கிராமத்துக்குத் திரும்பினார்கள்.அங்கே உடையவரின் சீடர்களும் வந்திருந்தார்கள்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


தாள் கண்டார், தாளே கண்டார்!


Advertisement


Ramanujar Download


அந்த வேடர் குடியிருப்பு ஒரு பள்ளத்தாக்கில் இருந்தது. நான்கு புறமும் சூழ்ந்திருந்த மலையின் மடி தெரியாமல் மரங்கள் அடர்ந்திருந்தன. தொலைவில் தெரிந்த சிறு விளக்கொளியைக் கண்டுதான் உடையவரின் சீடர்கள் அந்த இடம் நோக்கி வந்தார்கள்.
'யார் நீங்கள்?'குடிசைக்கு வெளியே படுத்திருந்த வேடர்கள் எழுந்து வந்து கேட்டார்கள்.'ஐயா நாங்கள் திருவரங்கத்தில் இருந்து வருகிறோம். இருட்டுவதற்குள் இக்காட்டைக் கடந்துவிட நினைத்தோம். ஆனால் முடியவில்லை. இரவு தங்க இடம் தேடிக் கொண்டிருக்கிறோம்.''திருவரங்கமா? அங்கே உடையவர் நலமாக இருக்கிறாரா?'அதே கேள்வி. திருவரங்கத்து பக்தர்களை வழியில் சந்தித்த வேடர்கள் கேட்டதும் அதுதான். அந்த பக்தர்களைப் போலவே ராமானுஜரின் சீடர்களும் வியப்பாகிப் போய், 'உங்களுக்கு உடையவரை எப்படித் தெரியும்?' என்று பதில் கேள்வி கேட்டார்கள்.அதே பதில். அதே நல்லான் சக்கரவர்த்தி. அதே இறைவன் சித்தம். ராமானுஜர் அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் குடியிருப்பில் இருந்த வேடர்கள் பரபரப்பாகி விட்டார்கள். 'ஐயோ, உண்ணவும் உறங்கவும் இடமின்றி உடையவர் காட்டில் தனித்திருக்கிறாரா! இதோ வருகிறோம்!' என்று பாய்ந்து உள்ளே சென்று, தத்தம் வீட்டில் இருந்த பழங்களையும் பிற உணவு வகைகளையும் எடுத்துக்கொண்டு அவர்களோடு புறப்பட்டார்கள்.
அவர்கள் உடையவர் இருக்குமிடம் நோக்கிப் போன பிறகே திருவரங்கத்து பக்தர்கள் தாம் சந்தித்த வேடர்களோடு அந்த வேடுவர் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தார்கள். பசி தீர உண்டு முடித்ததும் வேடர்கள் அவர்களை அங்கேயே உறங்கச் சொன்னார்கள். 'இல்லை ஐயா. உறங்கிப் பொழுதைக் கழிக்க எங்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் உடையவரை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும். காடானாலும் இரவானாலும் பொருட்டல்ல.''நல்லது. நாங்களும் தேடுகிறோம். நீங்கள் வடக்கு நோக்கித்தானே தேடிப் போகிறீர்கள்? எங்களுக்கு அவர் கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்குத் தகவல் கொண்டு வந்து சேர்ப்போம்' என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.மறுபுறம் உடையவரைச் சந்தித்த அதே வேடர் இனத்தின் வேறு சிலர், அவருக்கு உணவளித்து, நடந்ததையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு வருத்தப்பட்டார்கள்.'சுவாமி, தங்கள் அருமை அந்தச் சோழனுக்குத் தெரியவில்லையே. சோழன் எங்கள் குருநாதர் நல்லான் சக்கரவர்த்தியை ஒரு முறையாவது சந்தித்திருக்க வேண்டும். கண்டிப்பாக அவன் மனம் திருந்தியிருப்பான்!''அப்பனே, இந்தக் கொடுங்கானகத்தில் நல்லான் நாலு நற்பயிர்களை விதைத்துச் சென்றிருக்கிறார். நாடெங்கும் அவர் நடும் ஜீவத்தருக்கள் காலகாலத்துக்கும் செழித்திருக்கும். ஒரு சோழன் சரியில்லாதது ஒரு பொருட்டல்ல. மக்கள் தெளிந்து விட்டால் போதும்' என்றார் ராமானுஜர். அவர்கள் அங்கேயே உடையவரும் சீடர்களும் தங்க கூடாரம் அமைத்துக் கொடுத்தார்கள். இரவெல்லாம் உறங்காமல் விழித்திருந்து காவல் காத்தார்கள். விடிந்ததும் அவர்கள் குளிப்பதற்கும் நித்ய கர்ம அனுஷ்டானங்களைச் செய்வதற்கும் வழி செய்து கொடுத்தார்கள்.'வேடர்களே, எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்!' என்றார் ராமானுஜர்.'உத்தரவிடுங்கள் சுவாமி.''உங்களில் ஒருவர் திருவரங்கம் சென்று நாம் நலமாக இருப்பதை அங்குள்ளவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதேபோல் எங்களுடன் உங்களில் சிலர் இந்த நீலகிரி மலையைக் கடக்கும்வரை துணைக்கு வர வேண்டும்.'இரண்டும் நடந்தது. வேடுவர்களுள் ஒருவன் உடையவரின் சீடருடன் திருவரங்கம் நோக்கிச் செல்ல, உடையவரும் பிற சீடர்களும் நாலைந்து வேடுவர்களின் துணையுடன் அன்றே தம் பயணத்தைத் தொடர ஆரம்பித்தார்கள். மற்றவர்கள் தம் குடியிருப்புக்குத் திரும்பி வந்தபோது தான் திருவரங்கத்தில் இருந்தே சில பக்தர்கள் உடையவரைத் தேடி அங்கே வந்த விவரம் அவர்களுக்குத் தெரிந்தது.'அடக்கடவுளே! ஒரே இரவில் இரு தரப்பினரும் இந்தப் பகுதிக்கு வந்தும் ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் போய் விட்டதே' என்று மிகவும் வருத்தப்பட்டார்கள்.ராமானுஜர் தம் குழுவினருடன் இரண்டு நாள்கள் ஓய்வின்றிப் பயணம் செய்து கர்நாடகத்தின் எல்லையைத் தொட்டார். கொள்ளைக்கலம் என்னும் இடத்தை அவர்கள் வந்தடைந்தபோது ஒரு மூதாட்டி எதிர்ப்பட்டார்.'அதோ பாருங்கள்! வருவது யார் தெரிகிறதா?'உடையவர் சுட்டிக்காட்டிய திசையில் சீடர்கள் பார்த்தார்கள். 'சுவாமி, அது நம் கொங்குப் பிராட்டியார் அல்லவா?'சுமதி என்ற இயற்பெயர் கொண்டஅந்தப் பெண்மணி ராமானுஜரின் பரம பக்தை. திருவரங்கத்துக்கு வந்து மடத்தின் அருகே தங்கியிருந்து அவரிடம் உபதேசம் பெற்றுத் திரும்பியவர். ராமானுஜர் பாசத்துடன் அவரைக் கொங்குப் பிராட்டி என்று அழைப்பார். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் அந்தப் பிராட்டியைச் சந்திக்க நேர்ந்ததில் ராமானுஜருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. ஆனால் வெள்ளை உடையில் இருந்த ராமானுஜரை அந்தப் பெண்மணிக்கு அடையாளம் தெரியவில்லை.'ஐயா நீங்களெல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்?''திருவரங்கத்தில் இருந்து வருகிறோம் தாயே.''அப்படியா? அங்கு நிகழ்ந்த சம்பவங்களைக் கேட்டதில் இருந்து எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. எம்பெருமானார் எப்படி இருக்கிறார் என்ற தகவலே தெரியவில்லையாமே?'சீடர்கள் புன்னகை செய்தார்கள்.
'தாயே, எம்பெருமானார் இந்தக் கூட்டத்தில் இருக்கிறாரா பாருங்கள்!'திடுக்கிட்ட பெண்மணி, 'என்ன சொல்கிறீர்கள்?''எங்கள் முகங்களைப் பாருங்கள் தாயே. உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா?''இல்லை. எனக்கு அவர் முகத்தைக் காட்டிலும் பாதங்களே பரிச்சயம். இருங்கள்!' என்றவர், வரிசையாக ஒவ்வொருவர் பாதங்களையும் பார்த்துக்கொண்டே வந்து ராமானுஜரின் பாதங்களைக் கண்டதும் பரவசமாகிப் போனார்.'இதோ என் ஆசாரியர்!' என்று அப்படியே காலில் விழுந்துக் கதறத் தொடங்கினார். சீடர்கள் வியந்து போனார்கள்.'இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. கொங்குப் பிராட்டி திருவரங்கத்தில் இருந்து விடைபெற்றுக் கிளம்பும்போது உடையவரின் பாதுகைகளைக் கேட்டு வாங்கிச் சென்றார். அவருக்கு ஆசாரியரின் பாதங்களும் பாதுகைகளுமே உலகம்' என்றார் முதலியாண்டான்.'சுவாமி, வீதியிலேயே நின்று பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடியாளின் வீட்டுக்குத் தாங்கள் எழுந்தருள வேண்டும்!'உடையவரும் சீடர்களும் ஒரு சில நாள்கள் அந்தப் பெண்மணியின் வீட்டில் தங்கியிருந்தார்கள். அவரது கணவருக்கு த்வயம் உபதேசித்து, கொங்கிலாச்சான் என்ற பெயரிட்டு வைணவ தரிசனத்தில் இணைத்தார் ராமானுஜர். அதுவரை சோழனுக்கு அஞ்சி, சீடர்களின் வற்புறுத்தலுக்குப் பணிந்து அவர் அணிந்திருந்த வெண்ணுடைகளை அங்கே களைந்து மீண்டும் காவி ஏந்தினார். கொங்குப் பிராட்டியிடம் விடைபெற்றுப் பயணத்தைத் தொடர்ந்தார்.மைசூருக்கு மேற்கே சிறிது தொலைவில் இருந்த மிதிளாபுரியைச் சென்றடையும் வரை அவர்கள் வேறு எங்கும் தங்கவில்லை.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

குளமும் கடலும்
Advertisement


Ramanujar Download


ஹொய்சளர்களின் ஆட்சி அப்போது நடந்து கொண்டிருந்தது. கர்நாடகத்தின் பெரும்பகுதி அவர்களிடம்தான் இருந்தது. மைசூரைச் சுற்றிய பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த பிட்டி தேவன் சமண மதத்தைச் சேர்ந்தவன். அன்றைக்கு அந்தப் பிராந்தியத்தில் வீர சைவமும் சமணமும்தான் பிரதானமான மதங்கள்.

பிறந்த கணம் முதல் கழுத்தில் லிங்கத்தை அணியும் லிங்காயத மதம் என்னும் வீர சைவம், சைவத்தின் தீவிரப் பிரிவுகளுள் ஒன்று. தாந்திரீகத்தை உள்ளடக்கியது. தாந்திரீகம், அதர்வ வேதத்தில் இருந்து கிளைத்து வருவது. பக்தி இயக்கம் இதனை ஆதரிப்பதில்லை. ராஜராஜ சோழன் தென்னகமெங்கும் புகழ் பெற்ற மன்னனாக ஆட்சி புரிந்த காலத்தில், தனது சைவப் பணிகளில் ஒன்றாகத் தாந் திரீகத்தை வளரவிடாமல் செய்வதை மேற்கொண்டான். தாந்திரீகப் பாடசாலைகளைத் தமிழ் மண்ணில் இருக்க விடாமல் செய்தான். தமிழகம் ஏற்காத தாந்திரீகத்தைக் கர்நாடகம் ஏற்றது. வீர சைவர்களின் ரகசிய
அடையாளமாக அது மாறியது. அவர்களுக்கு சிவம் என்பது சகல உயிர்களுக்குள்ளும் இருப்பது. தனியே கோயிலில் உள்ளதல்ல. சதாசாரம், சிவாசாரம், விருத்தியாசாரம், கணாசாரம் என்று அவர்களுக்கென்று பிரத்தியேகமான ஒழுக்க நெறிகள் உண்டு. எட்டு வகைக் காப்புகள், ஆறு வகைப் பயிற்சிகள் என்று அவர்களது வாழ்க்கை முறை அலாதியானது.
மறுபுறம் ஜைனம், ஆருகதம், நிகண்டம், அநேகாந்தவாதம், சியாத்வாதம் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்ட சமணமும் கர்நாடகத்தில் தழைத்துக் கொண்டிருந்தது. சமணம் என்ற சொல்லுக்குத் துறவு என்று பொருள். துறவறத்தை வற்புறுத்திச் சொல்லுகிற மதம் அது. வீடு பேறு அடைய துறவேற்பதே ஒரே வழி என்பார்கள்.

ஆனால் இறை மறுப்பு என்பதே சமணத்தின் அடிப்படை. கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் தியாகத்தையும் வற்புறுத்துகிற மதம் அது. காலவரையறைக்கு அப்பாற்பட்டது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிற ரிஷப தேவரையே சமணர்கள் தமது முதல் தீர்த்தங்கரர் என்று சொல்லுவார்கள். இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் காலத்தில்தான் சமணம் ஒரு மதம் என்கிற அடையாளத்தையும் உரிய சீர்திருத்தங்களையும் பெற்றது.ராமானுஜர் தமது சீடர்களுடன் பிட்டி தேவனின் எல்லைக்கு உட்பட்ட பிராந்தியத்தில் அடியெடுத்து வைத்தபோது இந்த இரு மதத்தாரும் அவரைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களுக்கு உடையவரைத் தெரிந்திருந்தது. காஷ்மீரம் வரை சென்று வைணவம் பரப்பிய பெரியவர். மதத் தலைவர்களை வாதில் வென்று மன்னர்களை வைணவத்தின் பக்கம் திருப்பியவர். இவர் எதற்கு இங்கே வந்திருக்கிறார்? இதைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.வீர சைவர்களும் சமணர்களும் நண்பர்கள் அல்லர். ஆனால் உடையவரை எதிர்க்கும் விஷயத்தில் இருவரும் ஒரே நோக்கத்தோடு தனித்தனியே ஈடுபட்டார்கள்.மிதிளாபுரி என்ற பகுதிக்கு ராமானுஜர் முதல் முதலில் வந்து சேர்ந்தபோது ஊரே திரண்டு எதிர்த்தது.'என்ன செய்யலாம் சுவாமி? இங்கே இருக்க முடியாது போலிருக்கிறதே!' என்று கவலைப்பட்டார்கள் சீடர்கள்.ராமானுஜர் கண்மூடி அமைதியாகச் சில வினாடிகள் யோசித்தார். பிறகு முதலியாண்டானைப் பார்த்து, 'நீர் ஸ்நானம் செய்து விட்டீரா?' என்று கேட்டார்.
'இல்லையே? இனிதான் எல்லோருமே நீராட வேண்டும்.

''அப்படியானால் ஒன்று செய்யும். நீர் முதலில் கிளம்பிப் போய் இந்த ஊரில் இருக்கிற குளத்தில் குளித்துவிட்டு வாரும்.' ராமானுஜர் எதற்கு அப்படிச் சொல்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை. அது விடிகாலைப் பொழுது. வெளிச்சம் வந்திராத நேரம். முதலியாண்டான் ஏன் எதற்கு என்று கேள்வி ஏதும் கேட்டுக் கொண்டிருக்காமல் உடனே கிளம்பினார். நேரே ஊரின் மத்தியில் உள்ள குளத்துக்குச் சென்றார். குளக்கரையில் யாரும் இல்லை. நல்ல குளிர் இருந்தது. இருளில் குளத்தின் நீர் அலையடிப்பது மங்கலாகத் தெரிந்தது. அவர் ஆடைகளைக் களைந்து ஓர் ஓரமாக வைத்து
விட்டுக் குளத்தில் இறங்கினார்.நீரில் அவர் பாதம் பட்ட மறுகணமே ஒரு குரல் ஓடி வந்தது. 'சுவாமி! உம்மைக் கால் அலம்பிக் கொண்டு வந்தால் போதும் என்று ஆசாரியர் சொல்லச் சொன்னார்.'பின்னாலேயே விரைந்து வந்து தகவல் சொன்ன சீடருக்கே உடையவர் ஏன் தாம் முன்னர் சொன்னதை மாற்றிச் சொன்னார் என்று புரியவில்லை. முதலியாண்டான் கால்களை மட்டும் கழுவிக்கொண்டு கரை ஏறி விட்டார்.சில மணி நேரத்தில் அவர்கள் எதிர்பாராத சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. அந்த ஊரில் இருந்த வீர சைவர்களும் சமணர்களும் ராமானுஜர் இருக்கும் இடத்தைத் தேடி வர ஆரம்பித்தார்கள். 'சுவாமி! தங்கள் அருமை புரியாமல் வாய்க்கு வந்தபடி பேசி விட்டோம். நீங்கள் பெரிய மகான். தங்கள் சித்தாந்தம் மதிப்பு வாய்ந்தது. எங்களுக்கும் அதை விளக்கிச் சொல்லி அருள வேண்டும்!'ராமானுஜர் புன்னகை செய்தார். அன்று அந்த அற்புதம் நிகழ்ந்தது. மிதிளாபுரியின் அத்தனை வீர சைவர்களும் சமணர்களும் உடையவரிடம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தப் பாடம் கேட்டார்கள். 'இதுவல்லவோ முக்தி நெறி, இதுவல்லவோ கதி மோட்சம் தர வல்லது!' என்று பரவசப்பட்டுவைணவத்தைத் தழுவி, பரம பாகவதர்களாகிப் போனார்கள்.'சுவாமி, தயவுசெய்து சொல்லுங்கள். என்ன நடந்தது இங்கே? நாம் ஊர் எல்லையை நெருங்கும் முன்னரே விரட்டியடிக்கப் பார்த்தவர்கள் எப்படி இப்படி மனம் மாறினார்கள்?' சீடர்கள் ஆர்வம் தாங்க மாட்டாமல் கேட்டார்கள்.'நான் எதுவுமே செய்யவில்லையப்பா! செய்ததெல்லாம் முதலியாண்டானின் பாதம் பட்ட நீர்தான்!' என்றார் ராமானுஜர்.
திட சித்தமும் ஆழ்ந்த பக்தியும் தெளிந்த ஞானமும் பரந்த மனமும் கொண்ட முதலியாண்டானின் பாதம் பட்ட நீரில் அவர்கள் அன்று காலை குளித்தெழுந்தபோது அவர்கள் சித்தம் மாறியிருக்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்தது.'நம்பவே முடியவில்லை சுவாமி! இது அற்புதம்தான். சந்தேகமே இல்லை!''நிச்சயமாக இல்லை. இது சாதாரணம். பாகவத உத்தமர்களை பகவான் கைவிடுவதே இல்லை' என்றார் ராமானுஜர். மிதிளாபுரிக்கு அருகே தொண்டனுார் என்ற ஊரில் உடையவரின் பக்தர் ஒருவர் இருந்தார். அவர்மூலம் இந்த விவரம் மன்னன் பிட்டி தேவனுக்குத் தெரியவந்தது.'அத்தனை பெரிய மகானா? அவரது சீடரின் பாதம் பட்ட நீருக்கே இந்த சக்தி என்றால் அவரது பார்வை இங்கு பட்டால்?' 'அழைத்துப் பேசுங்கள் மன்னா. தங்கள் மனத்தை வாட்டும் எந்தக் குறையையும் அவரால் போக்க முடியும்!' என்றார் தொண்டனுார் நம்பி. மன்னனுக்கு உடனே தன் மகளின் நினைவுதான் வந்தது. மனநிலை பிறழ்ந்து இருந்த மகள்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


மன்னன் மகள்

Advertisement


Ramanujar Download


பிட்டி தேவனுக்கு அது ஒரு தீராத கவலை. நாடாளும் மன்னனாக இருந்தென்ன? யோசிக்காமல் செலவு செய்ய வல்லமை கொண்டிருந்தென்ன? ஒரு வார்த்தை உத்தரவிட்டால் போதும். ஓடி வந்து சேவகம் செய்ய நுாறு நுாறு பேர் இருந்தென்ன? பலகாலமாகப் பலவித முயற்சிகள் செய்து பார்த்தும் அவரது மகளுக்கு இருந்த மனநோய் தீரவில்லை. திடீர் திடீரென்று ஓலக் கூக்குரலிடுவாள். தலைவிரி கோலமாக வீதியில் இறங்கி ஓடுவாள். பேய் பிடித்த மாதிரி ஆவேசம் வந்து ஆடித் தீர்ப்பாள்.

கர்ம வினை என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள் சோதிடர்கள். சமண குருமார்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். கொடுத்த மூலிகை மருந்துகளும் பச்சிலை வைத்தியங்களும் ஆத்ம திருப்திக்காக மட்டுமே என்றாகிப் போனது. மன்னன் மகளின் மனநிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.சட்டென்று ராமானுஜரின் பெயரைத் தொண்டனுார் நம்பி சொன்னபோது மன்னன் ஒரு கணம் யோசித்தான். 'வைணவரா?' என்று கேட்டான். 'ஆம் சுவாமி. திருவரங்கம் பெரிய கோயில் நிர்வாகமே அவரிடம்தான் உள்ளது. பிரம்ம சூத்திரத்துக்கு அவர் எழுதிய உரையைக் காஷ்மீரத்தில் உள்ள சாரதா பீடத்தின் தெய்வமே ஏற்று அங்கீகரித்திருக்கிறது. அரங்கனின் தலைமகன். ஆதிசேஷன் அம்சம்!' என்றார் நம்பி.
மன்னனுக்கு அதெல்லாம் காதில் விழவில்லை. என்ன கெட்டு விட்டது? யாரோ முன்பின் தெரியாத ஒரு துறவி வந்திருக்கிறார். அவரால் தன் மகளைக் குணப்படுத்த முடியும் என்று இந்த நபர் சொல்கிறார். முயற்சி செய்து பார்ப்பதில் என்ன பிழை?'சரி, வரச் சொல்லுங்கள்' என்று
உத்தரவு கொடுத்தான் பிட்டி தேவன்.விஷயம் ராமானுஜருக்குப் போய்ச் சேருமுன் அங்கிருந்த சமணர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.
'ஐயோ நாம் மோசம் போய்க் கொண்டிருக்கிறோம். ராமானுஜர் மன்னன் மகளை குணப்படுத்திவிட்டால் அந்த முட்டாள் ராஜன் வைணவனாகி விடுவான். ஏற்கெனவே மிதிளாபுரியில் சமணத் துறவிகள் மதம் மாறி மக்களைக் குழப்பியிருக்கிறார்கள். இப்போது மன்னனும் மாறிவிட்டால் இங்கே சமணம் என்ற ஒன்று இருந்த சுவடே இல்லாமல் அழிந்துவிடும்!''ஆனால் நாம் செய்யக்கூடியது என்ன? மன்னன் முடிவு செய்து விட்டான். நாளை ராமானுஜர் அரண்மனைக்குச் செல்வது உறுதியாகிவிட்டது.

இதற்குமேல் என்ன நடந்தாலும் எதிர்கொண்டு தான் தீரவேண்டும்.'அவர்களுடைய பிரச்னை, அவர்கள் யாரும் அரண்மனைக்குள் சென்று மன்னனைச் சந்திக்க மாட்டார்கள் என்பது. மிக விநோதமான ஒரு காரணம் வைத்திருந்தார்கள். டெல்லி சுல்தானுடன் நடந்த ஒரு யுத்தத்தில் பிட்டி தேவனின் விரல் ஒன்று துண்டாகிப் போனது. ஓர் அங்கஹீனன் மன்னனாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே அரண்மனைக்குப் போகாதிருந்தார்கள். இப்போது ராமானுஜர் உள்ளே நுழைந்து தங்களது வேர்களை அசைத்துவிட்டால்?பயமாக இருந்தது. ஆனால் உடனடியாக எதுவும் செய்ய முடியும் என்றும் தோன்றவில்லை.
'பார்ப்போம். நாம் அச்சப்படுவதுபோல் ஏதும் நடக்காமலே போகலாம். அப்படி அசம்பாவிதமாகி விட்டால் இருக்கவே இருக்கிறது வாதப் போர்' என்றார் துறவிகளில் மூத்தவர்.
அவர்கள் காத்திருந்தார்கள்.மறுநாள் உடையவர் தமது சீடர்கள் முதலியாண்டான், பிள்ளான், கிடாம்பி ஆச்சான், வில்லிதாசர், நடாதுார் ஆழ்வான் ஆகியோரை அழைத்துக்கொண்டு மன்னனின் சபைக்குச் சென்றார். தொண்டனுார் நம்பி அவர்களை மன்னனுக்கு அறிமுகம் செய்து வைத்தபிறகு சித்தம் கலங்கிய இளவரசியை மன்னன் அழைத்து வந்தான்.ராமானுஜருக்கு ஒரு கணம் காஞ்சியில் இதேபோன்றதொரு சம்பவம் பல்லாண்டுகளுக்கு முன் நடந்தது நினைவுக்கு வந்தது.

யாதவப் பிரகாசரின் மாணவனாக மன்னனின் சபைக்குச் சென்ற தருணம். அங்கும் பேய் பிடித்த இளவரசி. அங்கு காத்த பரம்பொருள்தான் இங்கும் காக்க வேண்டும்.கண்மூடிப் பிரார்த்தனை செய்தார். அந்தப் பெண்ணுக்கு துளசி தீர்த்தம் கொடுத்து ஆசீர்வதித்தார். கணப் பொழுது மயங்கி விழுந்த இளவரசி, எழுந்தபோது குணம் மாறியிருந்தாள். தன் முன் நின்றிருந்த ராமானுஜரை நோக்கிக் கை கூப்பினாள். சட்டென்று காலில் விழுந்து எழுந்தாள்.பார்த்துக் கொண்டிருந்த மன்னனுக்கும் அவனது மனைவிக்கும் நம்பமுடியாத வியப்பு. 'மகளே...' என்று பாசம் பீறிட்டுப் பாய்ந்து சென்று அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தான்.'உடையவரே, தொண்டனுார் நம்பி சொன்னபோது நான் நம்ப வில்லை. ஆனால் உண்மையிலேயே நீர் மகத்தான துறவி. தெய்வ சக்தி பொருந்திய தாங்கள் என்னை நல்வழிப் படுத்தி அருள வேண்டும்' என்று பணிந்து கரம் கூப்பினான்.சமணத் துறவிகள் எதற்கு பயந்தார்களோ அது அப்போது நடந்தது. உடையவர் மன்னன் பிட்டி தேவனுக்கு வைணவத்தின் சிறப்பு களை எடுத்துச் சொன்னார். 'இவ்வுலக வாழ்வின் சந்தோஷங்களுக்கும், இறந்தபின் மோட்சம் அடையவும் உள்ள ஒரே திறவுகோல் இது தான். கண்ணை மூடிக்கொண்டு காலில் விழுந்துவிடு மன்னா. எம்பெருமான் என்றும் உன் பக்கம் இருப்பான்.''அப்படியே சுவாமி!' என்றான் பிட்டி தேவன். அக்கணமே அவன் உடையவரின் சீடனாகிப் போனான்.'இனி நீ விஷ்ணுவர்த்தன் என்று அழைக்கப்படுவாய்!' என்று ஆசீர்வதித்தார் ராமானுஜர். செய்தி பரவிய மறுகணமே பன்னிரண்டாயிரம் சமணர்கள் அரண்மனையை நோக்கித் திரண்டு வந்தார்கள்.
'இதை ஒப்புக்கொள்ள முடியாது. உணர்ச்சி மேலிட்டு ஒரு மன்னன் மதம் மாறுவது மக்களைக் குழப்பும். தவறாகச் செலுத்திச் செல்லும். உண்மையில் வைணவமே உயர்ந்தது என்றால் உடையவர் அதை எங்களுடன் வாதம் செய்து நிரூபிக்கட்டும்!' என்று ஆவேசக் கூக்குரலிட்டார்கள்.'வாயை மூடுங்கள்!' என்று சீறினான் பிட்டி தேவன். 'மன்னா, அமைதியாக இருங்கள். வாதம் நல்லதுதானே. ஒரு விதத்தில் அவர்கள் சொல்வதுமே சரிதான். கண்மூடித்தனமாக ஏன் ஒன்றை ஏற்க வேண்டும்? வைணவம் காலக் கணக்கற்றது. இயல்பாக இருப்பது. காற்றைப் போன்றது. நீரைப் போன்றது. வான்வெளி போன்றது. இதனோடு வாதிட்டு சமணம் வெல்லும் என்று அவர்கள் கருதினால், அந்த நம்பிக்கைக்கு மதிப்புத் தருவோம். இதனால், வாதத்தின் இறுதியில் உண்மையில் எது சிறந்தது என்று அவர்களுக்கும் புரியுமல்லவா? எங்கள் ஆசாரியர் வாதப்போருக்கு மறுப்பு சொல்வதே இல்லை!' என்றார் முதலியாண்டான்.'நல்லது. நாங்கள் பன்னிரண்டாயிரம் பேர் வாதம் புரிய வந்துள்ளோம். உங்கள் தரப்பில் எத்தனை பேர் உட்காருவீர்கள்?''இதென்ன அபத்தம்? நீங்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் வாருங்கள். உடையவர் மட்டுமே உங்களுக்கு பதில் சொல்வார்!' என்றார் வில்லிதாசர்.'ஒரே சமயத்தில் அத்தனை பேர் கேள்விகளுக்கும் ஒருவரே எப்படி பதில் சொல்ல முடியும்?'ராமானுஜர் புன்னகை செய்தார்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


பொலிந்த கணம்


Advertisement



Ramanujar Download

தொண்டனூர் ஆலயத்தில், நரசிம்மர் சன்னிதியில் அவர்கள் கூடியிருந்தார்கள். பன்னிரண்டாயிரம் சமணர்கள் ஒரு புறம். ராமானுஜரும் அவரது சீடர்களும் ஒருபுறம். வேடிக்கை பார்க்க வந்த மக்கள் ஒரு புறம். மன்னன் விஷ்ணுவர்த்தனும் அவனது பரிவாரங்களும் ஒரு புறம்.

'பன்னிரண்டாயிரம் பேரும் கேள்வி கேட்கப் போகிறீர்களா?' சந்தேகத்துடன் கேட்டான் விஷ்ணுவர்த்தன்.
'கண்டிப்பாக. எங்கள் அத்தனை பேர் வினாக்களுக்கும் இவர் விடை சொல்லியாக வேண்டும்' என்றார்கள் சமணர்கள்.
'சொல்கிறேன். நமக்கிடையே ஒரு திரை மட்டும் போட அனுமதியுங்கள்' என்றார் ராமானுஜர்.
திரையின் ஒரு புறம் ராமானுஜர் இருக்க, மறுபுறம் அத்தனை பேரும் கேள்விகளுடன் தயாராக இருந்தார்கள்.
'யார் முதல் வினாவைக் கேட்கப் போவது, அடுத்தது யார் என்று வரிசை ஏதும் வைத்திருக்கிறீர்களா?'
'அதெல்லாம் கிடையாது. அனைவரும் கேட்போம். ஒரே சமயத்தில் கேட்போம். ஆனால் அனைத்தும் வேறு வேறு வினா. அத்தனை பேருக்கும் இவர் பதில் சொல்லியாக வேண்டும். அது எங்களுக்குத் திருப்தியாக இருக்க வேண்டும்.'
இது எப்படி சாத்தியம் என்று மன்னனுக்குப் புரியவில்லை. மக்களுக்கும் புரியவில்லை. சமணர்களுடன் அவர்கள் பேசிப் பார்த்தார்கள். 'உங்கள் வினாக்களை எழுதிக் கொடுத்து விடலாமே?
ஒவ்வொன்றாக அவர் பதில் சொல்ல வசதியாக இருக்குமல்லவா? பன்னிரண்டாயிரம் கேள்விகளை நினைவில் வைத்து பதில் சொல்லுவது எப்படி சாத்தியம்?'
'அவருக்குத்தான் சரஸ்வதி தேவியே அருள் புரிந்து ஹயக்ரீவர் விக்ரகம் பரிசளித்திருக்கிறாளாமே? அதெல்லாம் அவரால் முடியும். வாதத்தைத் தொடங்கலாமா?'
சரி என்றார் உடையவர்.
திரையிட்ட மறைப்பில் பத்மாசனமிட்டு அமர்ந்தார். கண்களை மூடினார். ஓம் நமோ நாராயணாய.
காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்சபூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்தரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன.
அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன.
'ம், ஆரம்பியுங்கள்!' சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன.
நாராயணா! நாராயணா! என்று உடையவரின் சீடர்கள் சடாரென எழுந்து நின்று கரம் கூப்பினார்கள். கணப் பொழுதில் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. சப்த ரிஷிகளுள் ஒருவரான காஸ்யபர், அதிதியுடன் சேர்ந்து இந்திரனையும் அக்னியையும் பெற்றார். திதியுடன் சேர்ந்து அசுரர்களில் ஒரு பிரிவினரான தைத்தியர்களைப் பெற்றார். வினதாவுக்கு கருடனைப் பெற்றார். முனியுடன் இணைந்து அரம்பையரைப் பெற்றார். கத்ருவுடன் சேர்ந்து சேஷனைப் பெற்றார்.
ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளியமரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். 'பொலிக! பொலிக!' என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, 'இதோ புறப்பட்டு விட்டேன்' என்று ராமானுஜராக வந்துதித்தார்.
'ஆஹா! எப்பேர்ப்பட்ட தருணம்! உடையவர் இந்த சமணர் சபையில் தமது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர்களுக்கு இது புரியாது. அவர்களால் உணர முடியாது. திரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்தது என்பதைக் கூட அவர்கள் அறிய மாட்டார்கள். எழுந்து நிறைந்த பேரொளியைக் காண முடியாமல் கணப் பொழுது கண்ணை மூடிக்கொண்டவர்கள். ஆதிசேஷனின் மூச்சுக்காற்றின் சீற்றத்தில் மணந்த துளசியின் வாசம் உணர்ந்திருப்பார்களா! சந்தேகம்தான்.' முதலியாண்டான் பரவசத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
மறுபுறம் சமணர்கள் பன்னீராயிரம் பேரின் வினாக்களுக்கு உடையவர் தமது ஆதி அவதார வடிவில் ஆயிரம் நாக்குகளால் தங்கு தடையற்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்றே மன்னனுக்குப் புரியவில்லை. ஒரு திரை. அதற்கு அப்பால் ராமானுஜர் இருக்கிறார். ஒரே ஒருவர்தான் அங்கே இருப்பது. அதில் சந்தேகமில்லை. வெளிப்பட்டு வருவதும் ஒரு குரல்தான். ஆனால் அதெப்படி ஒரே சமயத்தில் ஆயிரம் பதில்கள் வருகின்றன? மொத்தம் பன்னிரண்டு முறை ஆதிசேஷன் திருவாய் மலர்ந்தார். பன்னிரண்டாயிரம் வினாக்களுக்கான பதில்கள். முடிந்தது.
திகைத்துப் போனார்கள் சமணர்கள். 'உடையவரே, நாங்கள் தோற்றோம். கேட்கும் தகுதி எங்களுக்கு இல்லை. உம்மைச் சரணடைவது ஒன்றே மிச்சமிருக்கும் பணி. எழுந்து வெளியே வாருங்கள்!' என்று கரம் கூப்பி நின்றார்கள்.
சில வினாடிகள் பெரும் நிசப்தம். திரைக்கு அப்பால் எழுந்தருளியிருந்த ஆதிசேஷன் உடையவராக மாறினார். திரை அசைந்தது. அதை விலக்கி ராமானுஜர் வெளியே வந்தார். தாள் பணிந்த பன்னிரண்டாயிரம் சமணர்களும் வைணவத்தை ஏற்றார்கள். ராமானுஜர் அவர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தார். அன்று ஹொய்சள மண்ணில் சமணம் இல்லாது போயிற்று.
தொண்டனூரிலேயே அவர் சிறிது காலம் தங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
'அதற்கென்ன? இந்த நரசிம்மப் பெருமாள் கோயிலே அற்புதமாக இருக்கிறது. இங்கேயே தங்குவோம்!' என்றார் ராமானுஜர். ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் சேர்ந்துவிட, அவர்கள் அனைவருக்கும் திருமண் காப்பு சேர்க்க என்ன செய்வது என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது. அது பெருமானின் பாதாரவிந்தம். அதை நெற்றியில் ஏந்தியிருப்பதே வைணவருக்கு அழகு என்பார் ராமானுஜர்.
ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால் இப்போது ராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகி விட்டது. இத்தனை பேருக்கும் திருமண் வேண்டும். அதுவும் தினமும் வேண்டும். என்ன செய்யலாம்?
உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்தார்.
அன்றிரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பெருமான் தோன்றினான். 'உடையவரே, கவலைப் படாதீர்கள். நேரே கிளம்பி யதுகிரிக்குச் செல்லுங்கள். அங்கே வேதபுஷ்கரணி என்றொரு குளம் உண்டு. அதன் வடமேற்கு மூலையில் நீங்கள் தேடுவது கிடைக்கும்!'
தேடிச் செல்வது மட்டுமல்ல; தேடாத ஒன்றும் சேர்த்துக் கிடைக்கப் போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

மண்ணில் உதித்தவன்

Advertisement
Ramanujar Download
யாதவாசலம் என்று அந்தக் குன்றுக்குப் பெயர். யதுகிரி என்றும் சொல்லுவார்கள். சட்டென்று அங்கே கிளம்பிப் போக வேண்டும் என்று ராமானுஜர் சொன்னபோது மன்னன் விஷ்ணுவர்த்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.

'அது பெரும் காடாயிற்றே. இங்கிருந்து சென்றடையவே பல நாள் பிடிக்குமே சுவாமி?' 'அதனால் பரவாயில்லை மன்னா. வைணவர்கள் திருமண் காப்பின்றி இருக்கக் கூடாது. பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது அது. மண்ணிலேயே பரிசுத்தமானது. என்றோ ஒருநாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாகும்போது நாம் நெற்றியில் தரிக்கும் திருமண் காப்பு நம்மைப் பரமனின் அடியார்களென்று நிலமகளுக்கு எடுத்துச் சொல்லும். அவன் பாதம் பற்றிய நம்மைப் பரமபத வாயிலுக்கு இட்டுச் செல்லும்.' 'சரி, அப்படியானால் நானும் தங்களுடன் வருகிறேன்' என்றான் விஷ்ணுவர்த்தன்.

மன்னனே கிளம்புகிறான் என்பதால் வீரர்கள் முன்னால் சென்று பாதை அமைத்துக் கொண்டே போனார்கள். ஒரு வாரப் பயணத்தின் இறுதியில் யதுகிரியை அடைந்தார்கள். அன்று பகுதான்ய வருடத்தின் தைமாதப் பிறப்பு. வேத புஷ்கரணியின் கரைக்கு வந்து நின்ற ராமானுஜர் கைகூப்பி வணங்கினார். கனவில் பெருமான் குறிப்பிட்ட இடத்தை உற்று நோக்கினார். 'ஆ, அதோ பாருங்கள்! மேலே கருடன் பறக்கிறது!' என்றான் ஒரு வீரன். ராமானுஜர் நிமிர்ந்து பார்த்தார். அவருக்கு அனைத்தும் புரிந்தது.அது புள்ளரையன் கோயில். எம்பெருமான் உத்தரவின் பேரில் ஸ்வேதத்வீபத்தில் இருந்து கருடன் எடுத்து வந்து சேர்த்த பரிசுத்தமான மண்.'புரியவில்லையே சுவாமி! ஸ்வேதத்வீபம் என்றால்?''எம்பெருமான் பிரம்ம வித்யையை அறியத் தவம் இருந்த தீவு 
அது. பாற்கடலுக்கு வடக்கே வெகு தொலைவில் உள்ள இடம்.''யாருமற்ற தீவா?''கண்டவர் நம்மில் யாரும் இல்லை. ஆனால் வேதங்களில் அந்தத் தீவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெய்வ நிலை அடைந்த பல மெய்ஞானிகள் அங்கு உண்டு. அவர்களுக்கு உணர்ச்சி கிடையாது. 
பசி தாகம் கிடையாது. உறக்கமோ விழிப்போ கிடையாது. பாவமற்ற பரிசுத்தமான ஆத்மாக்களான அவர்களின் தேகங்களில் இருந்து தெய்வீக மணம் வீசும். நான்கு கரங்களும் அறுபது பற்களும் கொண்டவர்கள் அவர்கள்.''கேட்கும்போதே சிலிர்க்கிறதே. அந்தத் தீவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணா இது?'
'ஆம். கருடாழ்வார் எடுத்து வந்து சேமித்து வைத்திருக்கிறார்.' என்றவர், சட்டென்று தமது திரிதண்டத்தால் அந்த இடத்தைத் தொட்டு சிறிதாகக் குத்தினார். வறண்டு, இறுகிக் கிடந்த அந்த இடத்தின் மேற்புறம் மறுகணம் நெகிழ்ந்து கொடுத்தது. வீரர்கள் உடனே அங்கு குவிந்து கரங்களால் தோண்ட ஆரம்பித்தார்கள். தோண்டத் தோண்ட மண்ணின் தோற்றம் மாறிக் கொண்டே வந்தது. அதன் பழுப்பு மெல்ல மெல்ல உதிர்ந்து வெண்மை நிறம் காட்டத் 
தொடங்கியதும் வீரர்கள் உற்சாகமாகி மேலும் வேகமாகத் தோண்டினார்கள். 

சரேலென்று ஒரு கட்டத்தில் மண்ணின் நிறம் முழு வெண்மையாக இருப்பதைக் கண்டார்கள்.'இதோ திருமண்! இதுதான் திருமண்! இந்த உலகில் இதனைக் காட்டிலும் தெய்வீகமான மண் வேறில்லை. இந்த இடத்தில் இது யுகம் யுகமாக இருந்து வருகிறது. இனி எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம் வைணவர்கள் வந்தாலும் அவர்களின் நெற்றியை அலங்கரிக்க இம்மண் வற்றாது தோன்றியபடியே இருக்கும்!' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் ராமானுஜர்.விஷ்ணுவர்த்தனின் வீரர்கள் அங்கே சேகரித்த திருமண்ணை கவனமாகக் கூடைகளில் எடுத்துக் கொண்டார்கள். மறுநாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று திருமண் சேகரிக்கும் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது.ஒருநாள் காலை குளித்து, பூஜை முடித்து, திருமண் சேகரிக்க அந்த இடத்துக்கு வரும்போது ஓரிடத்தில் புற்று ஒன்று இருப்பதை உடையவர் கண்டார். அதனைச் சுற்றி துளசி வளர்ந்திருந்தது. ஒரு கணம்தான். அவர் மனத்தில் ஏதோ பட்டது. புற்றும் துளசியும். கையெட்டும் துாரத்தில் திருமண் வேறு தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படியானால்? 'மன்னா நில்!' என்றவர், தமது திரிதண்டத்தால் அந்தப் புற்றைத் தொட்டுக் காட்டினார்.'சுவாமி? இது வெறும் புற்று.''ஆனால் எனக்கென்னவோ உள்ளே இருப்பது ஆதிசேஷனாகத் தோன்றவில்லை. அவன்மீது சயனிப்பவனே இங்கு இருக்கிறான் என்கிறேன். பார்த்து விடலாமா?'யாருக்கும் எதுவும் புரியவில்லை. அடுத்தடுத்து நிகழும் அதிசயங்கள் அளித்த பரவசத்தில் இருந்தார்கள். உடையவர் சொன்னால் செய்துவிட வேண்டியதுதான். உத்தரவிடுங்கள் சுவாமி.அந்தப் புற்றை அகழ்ந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது.யதுகிரி நாயகன் அந்த இடத்தில் மண்ணுக்கடியில் மோனத்தவம் இருந்து கொண்டிருந்தான். 'ஆஹா! ஆஹா!' என்று தலைக்குமேல் கரம் கூப்பிக் கூத்தாடினான் விஷ்ணு வர்த்தன். வீரர்கள் திகைத்துப் போய் கைகட்டி நின்றார்கள்.

'விஷ்ணுவர்த்தா! நீ புண்ணியம் செய்தவன். உனக்கு முன் எத்தனையோ மன்னர்கள் 
இங்கு ஆண்டிருக்கிறார்கள். ஆனால் உன் காலத்தில்தான் எம்பெருமான் தன்னை இங்கே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். இனி நீ என்ன 
செய்யப் போகிறாய்?'கிறுகிறுத்துப் போயிருந்த மன்னன் உடனே தன் வீரர்களை அழைத்தான். தலைநகருக்குச் செய்தி அனுப்பி மேலும் ஆயிரமாயிரம் வீரர்களையும் தொழிலாளர்களையும் அங்கு வரச் சொல்லி உத்தரவிட்டான். 'சுவாமி, இந்த நாள் என் வாழ்வின் பொன்னாள். இந்த இடத்தில் நான் இப்பெருமானுக்குக் கோயில் எடுப்பேன். என்றென்றும் உற்சவங்கள் தங்குதடையின்றி நடைபெற வழி செய்வேன். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று மட்டும் நீங்கள் பக்கத்தில் இருந்து சொல்லிக் கொடுங்கள்!' என்றான் மன்னன். உடையவர் மூன்று நாள்களுக்குப் பெருமானைத் தன்னுடனேயே 
வைத்துக் கொண்டார். பாலால் திருமஞ்சனம் செய்து, தியானித்தார். மறுபுறம் காட்டைத் திருத்தும் பணிகள் ஆரம்பித்து வேகமெடுத்தன. கண்ணெதிரே ஒரு குன்றம் சார்ந்த நகரம் உருவானது. மக்கள் தேடித்தேடி வந்தார்கள். கோயில் எழுந்தது. உடையவர் தாம் கண்டெடுத்த பெருமானை அங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார். ஆலயக் குடமுழுக்கும் ஆகம கைங்கர்யங்களும் செம்மையாக நடந்தேறின.'உடையவரே, இந்நகருக்கு ஒரு பெயர் சூட்டுங்கள்' என்று கேட்டுக் கொண்டான் விஷ்ணுவர்த்தன்.'நாராயணன் வந்துதித்த தலமல்லவா? திருநாராயணபுரம் என்பதே இந்நகரின் பெயராக இருக்கட்டும்' 
என்றார் ராமானுஜர்.மூலவர் கிடைத்து விட்டார். ஒரு பிரம்மோற்சவம் நடத்தலாம் என்றால் உற்சவர் விக்கிரகம் வேண்டுமே? உடையவர் மனத்தில் ஒரு சொல்லாக உற்சவர் உதித்தார்.'நான் ராமப்ரியன். டெல்லி சுல்தான் அரண்மனையில் இப்போது இருக்கிறேன்.'

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -


















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக