சனி, 7 மார்ச், 2015

குறுங்காலீசுவரர் திருத்தலம்.

ராதே கிருஷ்ணா 09-03-2015


மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, மார்ச் 06,2015, 4:45 AM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , மார்ச் 05,2015, 7:05 PM IST
சென்னை மாநகரின் நெரிசலான கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேம்பாலம் செல்லும் வழியில், சிக்னலைத் தாண்டி மேற்கு திசையில் இடதுபுறம் திரும்பினால் சிவன்கோவில் தெரு வரும். அந்தத் தெருவில் நடந்து சென்றால், வடக்கு நோக்கிய ராஜகோபுரம் நம் கண்களுக்கு பளிச்சென்று தென்படும்.

கோடி புண்ணியம் தரும் கோபுரத்தை தரிசனம் செய்து உள்ளே நுழைந்தால் நந்தியம்பெருமானை வழிபடலாம். அவரை வணங்கிவிட்டு அருகில் பார்த்தால், நம்பிக்கை தரும் தும்பிக்கை விநாயகர் வடதிசை நோக்கி அமர்ந்திருக்கிறார். அவருக்கு தோப்புக்கரணம் போட்டு ஆசிபெற்று விட்டு திரும்பினால், தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி திருவருள் செய்தவாறு சோமாஸ்கந்தர் சன்னிதி உள்ளது.

வடதிசை நோக்கிய இறைவன் 

பின்னர் மூலவரின் சன்னிதியை அடைந்தால், கருவறையின் உள்ளே குறுகிய தோற்றத்துடன், சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் லிங்க வடிவத்தில் அருள்காட்சி தருவது அற்புதமாக இருக்கிறது. குறுகிய வடிவில் தோற்றம் அளிப்பதால், இத்தல இறைவனுக்கு ‘குறுங்காலீசுவரர்’ என்ற சிறப்புப் பெயருள்ளது. சிவபெருமான் வடக்கு திசை நோக்கி அருள்புரிகிறார். பொதுவாக சிவபெருமான் வடக்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிப்பது அபூர்வத்திலும் அபூர்வமானதாகும்.

முக்கண் பரமன் வடக்கு நோக்கி காட்சி தரும் தலங்கள் இரண்டு மட்டுமே உள்ளது. ஒன்று கடம்பந்துறை எனப்படும் குளித்தலையில் உள்ள கடம்பவனநாதர் கோவில். மற்றொன்று சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள குறுங்காலீசுவரர் திருத்தலம். பெரும்பாலான கோவில்களில் இறைவன் கிழக்கு திசையிலும், அம்பிகை தெற்கு திசையிலுமே தோன்றி காட்சி தருவார்கள்.

மற்ற கோவில்களில் திசைகளில் சற்று மாறுபாடு உண்டு. வைத்தீஸ்வரன் கோவில், திருக்கடவூர், திருவானைக் காவல், கபாலீசுவரம், திருவான்மியூர் போன்ற திருத்தலங் களில் மேற்குதிசை நோக்கியும் சிவபெருமான் காட்சி தருகிறார். வடதிசை நோக்கி இறைவன் இருப்பதால் இது மோட்ச தலமாகவும், இங்குள்ள தீர்த்தம் பித்ரு பரிகார பூஜை செய்ய ஏற்ற இடமாகவும் கூறப்படுகிறது.

இத்தலத்தில் வேறொரு சிறப்பும் உண்டு. அது யாதெனில், தர்மசம்வர்த்தினி என்னும் அறம் வளர்த்த நாயகி அம்பாளும் வடதிசை நோக்கி நின்றவாறு தனிச் சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இடது காலை எடுத்து வைத்து நடப்பதனைப் போன்ற தோற்றம் காணப்படுகிறது. இதற்கு, ‘தர்மத்தைக் காப்பதற்கு தேவதை நடந்து வருகிறாள்’ என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.சுவாமிக்கு வலதுபுறம் அம்பிகை வீற்றிருப்பது, மணவாழ்வின் அடையாளத்தைக் காட்டுவதாகும். எனவே, இத்திருத்தலம் வந்து வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

இத்திருக்கோவிலில், சிவபெருமானின் கருவறையைச் சுற்றிவரும் போது, அனைத்திலும் மாறுபாடு காணப்படுகிறது. ஆம்! தட்சணாமூர்த்தி சுவாமி தேவ கோட்டத்தில் மூலவருக்குப் பின்புறம் இருக்கிறார். அவரை வணங்கி விட்டு வரும்போது துர்க்கை அம்மன் மேற்கு திசை நோக்கி நின்று திருவருள் தருகிறார். துர்க்கை அம்மன் என்றாலே, வடக்கு பார்த்து மகிஷாசுரமர்த்தினியாக நிற்பார். ஆனால் இங்கே, மகிஷன் என்னும் எருமை தலையில்லாமல் தனியே நிற்பது, அதுவும் மேற்கு நோக்கி சாந்த சொரூபமாக நிற்பது பெருஞ்சிறப்பு என்று வர்ணிக்கிறார்கள்.

சூரிய வழிபாடு

அம்பாள் சன்னிதியின் எதிரே ஈசானிய மூலையில், நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. சாயா தேவி, உஷாதேவி இருபுறமும் இருக்க, சூரியன் பகவான் ஏழு குதிரை பூட்டிய தேரில் வீற்றிருப்பதும், அந்தத் தேரை சூரியபகவானின் தேர் சாரதி அருணன் ஓட்டுவது போலவும் அமைந்த காட்சியும், சூரிய பகவானைச் சுற்றிலும் மற்ற கிரகங்கள் இருப்பதும் ஆன்மிகத்துக்கு மட்டுமல்ல, சிற்பக்கலைக்கும் மிகச் சிறந்த உயரிய சான்றாக விளங்குகிறது. மாதப் பிறப்பு அன்றும் ரத சப்தமி அன்றும் இங்கு சிறப்பான வழிபாடு நடைபெறுகிறது.

வெளிப்பிரகாரத்தை சுற்றிவரும் போது தென்மேற்கு மூலையில், வில்வமரத்தடியில் வில்வமர விநாயகர் சன்னிதி உள்ளது. பிற சிவாலயங்களைப் போல இந்த தலத்தில் வில்வ மரம் தலவிருட்சமாக இல்லை. மாறாக, பலா மரம் தல விருட்சமாக இருக்கிறது. அந்த தல விருட்சம், சுவாமி சன்னிதியின் நேராக பின்புறம் அமைந்திருக்கிறது.

வெளிச்சுற்றை முடித்து விட்டு வரும்போது, கொடி மரத்தின் அருகே தனிச் சன்னிதியில் வள்ளி– தெய்வானை சமேத முருகப் பெருமான் காட்சி தருகிறார். இவர் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற சிறப்புக்குரியவர் ஆவார்.

ராமாயணத் தொடர்பு

ராமாயணத்துக்கும் இத்தலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. ராமபிரானின் புதல்வர்களான லவனும், குசனும் இத்தலத்தில் பிறந்ததாகவும், அவர்கள் இத்தல இறைவனை வழிபட்டதாகவும் தல வரலாறு கதை சொல்லப்படுகிறது. ஆகவே இந்த தலத்திற்கு ‘குசலவபுரம்’ என்றும், ‘கோசை நகர்’ என்றும் பெயருண்டு.

இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கும் கூட, ‘குசலவ ஈசர்’ என்ற பெயரும் இருப்பது இதனை உறுதி செய்கிறது. வேள்விக் குதிரையை ராமன் தேடிக் கொண்டு வரும்போது இங்குள்ள ஆற்றின் கரையில் அமர்ந்ததால், அந்த பகுதிக்கு ‘அமர்ந்த கரை’ என்று அன்னாளில் பெயர் வந்தது. அதுவே தற்போது, ‘அமிஞ்சிகரை’ என்று வழங்கப்படுவதாக கூறுகிறார்கள்.

ராஜகோபுரத்தின் உட்புறம் இருபுறமும் வீரபத்திரரும், கால பைரவரும் காட்சி தருகிறார்கள். வெளித்தூணில் சரபேசுவரர் சிற்பம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்படும் ராகு கால பூஜை, இங்கு விசேஷமானதாகும்.

இத்திருக்கோவிலின் ராஜகோபுரத்தை ஒட்டி வைணவத் திருத்தலமான, வைகுண்டப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் கிழக்கு நோக்கிய சன்னிதியில் வலதுபுறம் கனகவல்லித் தாயாரோடு வீற்றிருந்து பெருமாள் அருள்பாலித்து வருகிறார்.

பெருமாள் சன்னிதியில், சீதை கர்ப்பிணியாக இருந்த கோலத்தில் திருஉருவம் உள்ளது. இது எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரே, கைகுவித்து வணங்கும்படியான ராமதூதன் ஆஞ்சநேயர் சன்னிதி இருக்கிறது.

–டாக்டர்.ச.தமிழரசன், தஞ்சாவூர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக