ஞாயிறு, 4 நவம்பர், 2012

பீட்சா விமர்சனம்


ராதே கிருஷ்ணா 05-11-2012



விமர்சனம்

பீட்சா

நடிகர்கள்: 
விஜய் சேதுபதி,ரம்யா நம்பீசன்,
இசை: 
சந்தோஷ் நாராயணனன்
ஒளிப்பதிவு: 
கோபி அமர்நாத்
இயக்கம்: 
கார்த்திக் சுப்புராஜ்
தயாரிப்பு: 
-
கதையின் கரு: பீட்சா கடையில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த திகிலான அனுபவங்கள்.
நரேன் நடத்தும் ‘பீட்சா’ கடையில், ‘டெலிவரி பாய்’ ஆக வேலை செய்கிறார், விஜய் சேதுபதி. இவருடைய காதல் மனைவி, ரம்யா நம்பீசன். இவருக்கு ஆவி, பேய் கதைகளில் ஈடுபாடு அதிகம். விஜய் சேதுபதி அதைக் கேட்டாலே நடுங்குகிறார்.ஒருநாள் இரவில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு தனிமை பங்களாவுக்கு, ‘பீட்சா’ டெலிவரி செய்ய போகிறார், விஜய் சேதுபதி. அழைப்பு மணியை அழுத்தியதும், ஒரு பெண் கதவை திறக்கிறாள். சில்லறை எடுத்து வருவதாக கூறிவிட்டு, மாடிக்கு போனவள் திரும்பி வராததால், விஜய் சேதுபதி மாடிக்கு போகிறார்.
அங்கே அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். சற்று நேரத்தில் அவளுடைய உடல் மாயமாக மறைந்து விடுகிறது. அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த விஜய் சேதுபதி அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கிறார். கதவு உள்பக்கமாக பூட்டிக்கொள்கிறது.அந்த வீட்டுக்குள் விஜய் சேதுபதிக்கு நடக்கும் திகிலான அனுபவங்களும், அதன்பிறகு நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களும்தான் கதை.
விஜய் சேதுபதி, கடை முதலாளி நரேன் வீட்டுக்கு போவதில் இருந்து திகில் ஆரம்பம். பேய் பிடித்த நரேனின் மகள் விஜய் சேதுபதியை உக்கிரமாக பார்க்கும் பார்வை, குலை நடுங்க வைக்கிறது.பீட்சா பெட்டியுடன் விஜய் சேதுபதி அந்த பேய் பங்களாவுக்குள் போனதும், கதவு உள்புறமாக பூட்டிக்கொள்வது, சில்லறை எடுத்து வரப்போன பெண் திரும்பி வராதது, அவரைத்தேடி நரேன் மாடி ஏறுவது என காட்சிக்கு காட்சி இதய துடிப்பு எகிறுகிறது.
கடைசியில், ‘சஸ்பென்ஸ்’ உடையும்போது, அட, இதற்கு போய் இவ்வளவு பயப்பட்டு இருக்கிறோமே என்று சிரிப்பு வருகிறது.
பீட்சா டெலிவரி செய்யும் இளைஞராக விஜய் சேதுபதி, முக்கால்வாசி படம் வரை அனுதாபம் சம்பாதிக்கிறார். அவருடைய காதல் மனைவியாக ரம்யா நம்பீசன். இருவரின் நெருக்கம், கதகதப்பான கிளுகிளுப்பு.‘ஆடுகளம்’ நரேன், ஓவியர் வீரசந்தானம் போன்ற பழகிய முகங்களுடன் சில புதுமுகங்களும் இருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் மிரட்டலான அம்சங்கள்.ஒரு இளம் காதல் தம்பதிகளின் இயல்பான ஊடல்–கூடலுடன் ஆரம்பிக்கும் படம், மெதுவாக திகில் பாதையில் பயணித்து, ஒரு கட்டத்தில் தியேட்டரை அமைதியில் உறைய வைக்கிறது.
கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் காணாமல் போனதை பீட்சா கடை அதிபர் நரேன் அத்தனை சுலபமாக எடுத்துக்கொள்வது, காதுகளில் முழம் கணக்கில் பூ சுற்றுகிற சீன். ‘சஸ்பென்ஸ்’ உடையும்போது, எல்லாமே காசுக்காகவா? என நம்ப முடியவில்லை.
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல், பீதியூட்டியவன் அந்த பீதிக்குள் சிக்குகிற முடிவு, சூப்பர்.




மாற்றான்


நடிகர்கள்: 
சூர்யா, காஜல் அகர்வால்,சச்சின் கடேக்கர்,தாரா
இசை: 
ஹாரீஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு: 
சவுந்தரராஜன்
இயக்கம்: 
கே.வி.ஆனந்த்
தயாரிப்பு: 
-
கதையின் கரு: ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களின் கதை.
சச்சின் கடேக்கர், ஒரு விஞ்ஞானி. அவருடைய மனைவி தாரா. இவர்களுக்கு ஒட்டிப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. சச்சின் கடேக்கர் குழந்தைகள் உணவு தயாரிப்பதில், `நம்பர்-1' தொழில் அதிபராக உயர்கிறார். அந்த உணவில், குழந்தைகளை பாதிக்கும் நச்சுத்தன்மை இருப்பதை ஒரு ரஷ்ய பெண் நிருபர் கண்டுபிடிக்கிறார். அவரை சச்சின் கடேக்கர் கொலை செய்கிறார். அப்பாவின் நடவடிக்கைகளில் இரட்டை மகன்களில் ஒருவரான விமலுக்கு சந்தேகம் வருகிறது. அவரும் கொலை செய்யப்படுகிறார். இன்னொரு மகன் அகில் தன் காதலியுடன் ரஷ்யா சென்று, அப்பாவின் ரகசிய தொழில் தொடர்புகள் பற்றி துப்பறிகிறார்.
இருவரையும் அங்கேயே போட்டுத்தள்ள உத்தரவிடுகிறார், சச்சின் கடேக்கர். அகிலும், காதலியும் தப்பினார்களா, இல்லையா? என்பது மீதி கதை. அகில்-விமல் என்ற ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா. நடை-உடை-பேச்சு-சிகை அலங்காரம் என இரண்டு பேருக்கும் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார், சூர்யா. இரண்டு பேரில், அந்த ஜாலியான அகில் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார், சூர்யா. இரண்டு பேருமே காஜல் அகர்வாலின் அழகில் மயங்க-இருவருக்கும் இடையே காதல் போட்டி வருமோ என்ற ïகத்தை ஏற்படுத்தி, கதையின் போக்கை எதிர்பாராத கோணத்தில் திருப்புகிறார், டைரக்டர்.
``நீங்க ஏதோ தப்பு பண்றீங்க'' என்று அப்பாவுடன் விமல் மோத-``நீ குப்பை லாரி ஓட்டியா சம்பாதிச்சே?'' என்று அகில் அப்பாவுக்கு ஆதரவாக குரல் எழுப்ப-இருவரும் மோதிக்கொள்ளும் காட்சியில் இருந்து கதை வேகம் பிடிக்கிறது. விமலின் முகத்தில் ரத்தத்தை பார்த்ததும், அகில் ஆவேசத்தின் உச்சத்துக்குப் போவதும், அடிபட்டு மயங்கிக் கிடக்கும் சகோதரனைப் பார்த்து, ``ஸாரிடா, எங்கிட்ட பேசுடா'' என்று கலங்குவதும், நெகிழ்வான இடம். எம்.ஜி.எம். தீம் பார்க்கில் இருவரும் சேர்ந்து ஆந்திரா ரவுடிகளிடம் மோதுகிற சண்டை காட்சி, உறைய வைக்கிறது.
கவர்ச்சியுடன் நின்று விடாமல் கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார், காஜல் அகர்வால். மேட்டுக்குடி வில்லன் வேடத்தில், சச்சின் கடேக்கர் கச்சிதம். முன்னாள் கதாநாயகி தாரா, அம்மா வேடத்துக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்தார் போலும். இரண்டு சூர்யாக்கள் இருக்கும்போது, கலகலப்புக்கு தனியாக `காமெடியன்கள்' தேவையில்லை என்று கருதியிருக்கிறார், டைரக்டர். படத்தில், காமெடி பஞ்சம் நிறையவே தெரிகிறது.ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், ஒரே ஒரு பாடல் தேறியிருக்கிறது. சவுந்தரராஜனின் ஒளிப்பதிவில், வெளிநாட்டு காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பாக கதை சொன்ன டைரக்டர் கே.வி.ஆனந்த், இரண்டாம் பாதியில் வேக குறைவை கவனிக்க தவறிவிட்டார். குறிப்பாக, ரஷ்யா சம்பந்தப்பட்ட காட்சிகளில், நீளம் நீளமாக நிறைய வசனம்.
குழந்தைகள் உணவில் நச்சுத்தன்மையை கலக்கும் விஞ்ஞானியும், அதை கண்டுபிடித்து தடுக்க முயற்சிக்கும் அவருடைய மகனும் என்ற உயிரோட்டமான கருவும், சூர்யாவின் இரட்டை வேட நடிப்பும் கவனம் ஈர்க்கின்றன.




தாண்டவம்


நடிகர்கள்: 
விக்ரம்,அனுஷ்கா,எமிஜாக்சன்,ஜெகபதிபாபு,நாசர்,கோட்டா சீனிவாசராவ்,தம்பி ராமய்யா,லட்சுமி ராய்,சந்தானம்
இசை: 
ஜீ.வி.பிரகாஸ்
ஒளிப்பதிவு: 
நீரவ்ஷா
இயக்கம்: 
விஜய்
தயாரிப்பு: 
-
2011–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி லண்டன் நகரில், குண்டு வெடிப்பது போல் படம் தொடங்குகிறது. அந்த குண்டு வெடிப்பில், இந்திய உளவுத்துறையின் தலை சிறந்த அதிகாரியான விக்ரம் தன் கண் பார்வையை இழப்பதுடன், மனைவி அனுஷ்காவையும் பறி கொடுக்கிறார். அதற்கு காரணமான நண்பனையும், தீவிரவாத கும்பலையும் அவர் எப்படி பழிதீர்க்கிறார்? என்பதே கதை.
இறுக்கமான முகம் கொண்ட கொலைகாரராகவும், உளவுத்துறையின் அழகான உயர் அதிகாரியாகவும் இரு வேறு முகம் காட்டியிருக்கிறார், விக்ரம். கண்பார்வையற்ற அவர், ஒலிகளின் ஓசையை வைத்தே எதிரிகளின் அசைவுகளை புரிந்துகொண்டு தாக்குகிற யுக்தி, புதுசு. தீவிரவாதிகள் தலைவனை சுட்டுவிட்டு, ‘‘நான் இம்ரான் இல்ல...ஷிவா...’’என்று விக்ரம் முகத்தில் உள்ள துணியை அவிழ்க்கிற காட்சியில், தியேட்டரில் கைதட்டுகிறார்கள். இரண்டே அடிகளில் எதிரிகளை சடலங்களாக சாய்க்கும் சண்டை காட்சிகளில், விக்ரம் சிலிர்க்க வைக்கிறார்.
அழகும், நடிப்பும் சரிசமமாக கலந்த நாயகி, அனுஷ்கா. திருமண காட்சிகளில் விக்ரம், அனுஷ்கா இரண்டு பேரும் சேர்ந்து மனதை அள்ளுகிறார்கள். இந்திய அப்பாவுக்கும், வெளிநாட்டு அம்மாவுக்கும் பிறந்த சாரா கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார், எமிஜாக்சன். லட்சுமி ராயை சோகப்பதுமை ஆக்கி விட்டார்கள். அவரை, ரசிகர்கள் இப்படி எதிர்பார்க்கவில்லை.
விக்ரம் ஒவ்வொரு கொலை செய்யும்போதும், டாக்சி டிரைவர் சந்தானம் அவராக வந்து மாட்டிக்கொள்வது–கலகலப்பு. இந்த கலகலப்பையும் மீறி, சந்தானம் முகத்தில் களைப்பு தெரிகிறது. விக்ரம்–அனுஷ்கா சம்பந்தப்பட்ட கிராமிய காட்சிகளில், எம்.எஸ்.பாஸ்கர் சிரிக்க வைக்கிறார். விக்ரம் நண்பராக ஜெகபதிபாபு, லண்டன் போலீஸ் அதிகாரி வீரகத்தியாக நாசர், மத்திய மந்திரியாக கோட்டா சீனிவாசராவ், ஊர் தலைவர் தம்பி ராமய்யா–மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள்.
படத்தின் மிக சிறந்த அம்சங்கள்: ஜீ.வி.பிரகாசின் இசையும், நீரவ்ஷாவின் கேமராவும். பாடல்கள், பின்னணி இசை, வெளிநாட்டு காட்சிகள் ஆகிய மூன்றும் மனதை வருடிக் கொடுக்கின்றன. லண்டன் மாநகரையும், கீழ பூங்குடி கிராமத்தையும் இணைத்து திரைக்கதை அமைத்து இருக்கிறார், டைரக்டர் விஜய். படத்தின் முதல் பகுதியில் வேகம் இல்லாதது, மைனஸ். லண்டன் தொடர்பான சில காட்சிகள், குழப்பமாக இருக்கிறது.
நகைச்சுவை, காதல், குடும்ப உறவுகளை கொண்ட அந்த கிராமத்து காட்சிகள், கவனம் ஈர்க்கின்றன. விக்ரம் தன் திருமணத்தை நிறுத்துவதற்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியில் முடிய– கடைசியாக, மணப்பெண்ணை பார்த்து பேசுவது என்று முடிவெடுத்து, அனுஷ்காவை பார்த்த முதல் பார்வையிலேயே மனதை பறிகொடுப்பது, கவிதை.
‘‘முதலில் பார்க்கணும், பழகணும், அப்புறம்தான் எல்லாம்...’’என்ற அனுஷ்காவின் முதல் இரவு நிபந்தனைகளும், விக்ரம் கொடுக்கும் இன்ப அதிர்ச்சிகளில் மெது மெதுவாக அவருடைய நிபந்தனைகள் தளர்வதும்–சுவாரஸ்யமான காட்சிகள். துப்பறியும் மர்ம பட பாணியில் ‘சஸ்பென்சாக’ ஆரம்பிக்கிற படத்தை அதே பாணியில் முடித்திருந்தால், ‘தாண்டவம்’ இன்னும் ஆக்ரோஷமாக இருந்திருக்கும்.




அட்டகத்தி


நடிகர்கள்: 
தினேஷ்–நந்திதா
இசை: 
சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: 
பி.கெ. வர்மா
இயக்கம்: 
பா. ரஞ்சித்
தயாரிப்பு: 
-
கதையின் கரு: ஒரு இளைஞனின் ஒரு தலை காதல்.
ஒரு கிராமத்து இளைஞனின் காதலும், தோல்வியும்தான் கதை. ‘பிளஸ்–2’வில் பெயிலாகி, டுட்டோரியலில் படிக்கும் தினேசுக்கு படிப்பை விட, காதல்தான் முக்கியம்.  கல்லூரியில் உடன் படிக்கும் மாணவி நந்திதாவை காதலிக்கிறார்.
நந்திதா திடீரென்று கல்லூரியில் இருந்து நின்று விடுகிறார். அவருக்கு திருமண ஏற்பாடு நடப்பதாக கேள்விப்பட்ட தினேஷ், நண்பர்கள் உதவியுடன் நந்திதாவை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பது ‘கிளைமாக்ஸ்.’  ஏற்கனவே பல படங்களில் பார்த்த காதல்தான் என்றாலும், கதை சொன்ன விதம், வித்தியாசம். ஒரு கிராமத்து இளைஞனின் சராசரி வாழ்க்கையை காதல், மோதல், நகைச்சுவையுடன் அமர்க்களப்படுத்தியிருக்கிறார், டைரக்டர்.
படத்தின் முதல் பாதி முழுவதும் தினேசின் ஒருதலை காதல். கல்லூரி சண்டியராக அடி கொடுப்பதும், வாங்குவதுமாக சுவாரஸ்யமாக போகிறது. இரண்டாம் பாதியில், தினேஷ்–நந்திதா காதல் என்ன ஆகும்? என்ற கேள்விக்குறியுடன் கதை விறுவிறுப்பாக பயணிக்கிறது.  படத்தில் வசனம், காட்சி அமைப்பு, சம்பவங்கள் அத்தனையும் மிக இயல்பாக இருக்கிறது.
குறிப்பாக, அந்த குடிகார தந்தை கதாபாத்திரம், நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை. போதை அதிகமானதும் அவர், ‘‘நாங்க எல்லாம் வீர பரம்பரையில் வந்தவங்க. இன்னிக்கு உன்னை வெட்டாமல் விட மாட்டேன்’’ என்று தனியாக நின்று ஆவேசமாக புலம்புவதும்; ‘‘அப்பா, சும்மா இருக்க மாட்டே?’’ என்று தட்டிக் கேட்கும் மகனைப் பார்த்து, ‘‘என் புள்ள மீசை எவ்வளவு கறு கறுன்னு இருக்கு பாரு’’ என்று பெருமைப்படுவதும்–சரியான ‘அட்டகத்தி’ காமெடி.
தினேஷ், ஒப்பனை எதுவும் இல்லாமல், யதார்த்தமாக தெரிகிறார். ஓடும் பஸ்சில் அவர் ‘புட்போர்ட்’ அடிப்பதும், நந்திதாவை காதலுடன் பார்ப்பதும், ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறையும் காதலில் தோற்றுப்போய், ‘‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’’ என்று கலங்கும்போதும், கடைசி காட்சியில் நந்திதாவை பஸ்சில் பார்த்து, உணர்ச்சிகளை கொட்டவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறும்போதும், நடிப்பில் உயரம் தொடுகிறார்.
நந்திதா, அழகான புதிய வரவு. சிரிக்கும்போது இன்னும் அழகாக தெரிகிறார். தன் பிறந்தநாளையொட்டி தினேசுக்கு அவர் பிரியாணி வாங்கி தருகிற காட்சியில், நந்திதாவின் நடிப்பும், வசனமும் ரசனையானது.
நினைவில் நிற்கிற இன்னொரு நாயகி, ஐஸ்வர்யா.  சந்தோஷ் நாராயணனின் இசையில், பாடல்கள் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட். பின்னணி இசை, சில இடங்களில் உயிரோட்டம். சில இடங்களில் சாவு மேளம்.  சமீபகால படங்களில், ‘டாஸ்மாக்’ காட்சிகள் இல்லாத படம் என்ற வகையிலும், இந்த காலத்து காதலையும், இளைஞர்களின் மனநிலையையும் இயல்பாக படம்பிடித்த வகையிலும், டைரக்டர் ரஞ்சித் பாராட்டப்பட வேண்டியவர்.
‘கிளைமாக்ஸ்,’ எதிர்பாராத திருப்பம்தான். ஆனால், நந்திதாவுக்கு வேறு ஒரு காதல் இருப்பது அவர் பின்னால் சுற்றும் தினேசுக்கு தெரியாது என்பதை நம்ப முடியவில்லை. தினேஷ் மீது காதல் இல்லை என்றால், அவர் கடிதம் கொடுக்கும்போது நந்திதா ஏன் கண்ணீர் விட வேண்டும்?  இப்படி சில கேள்விகளை தவிர்த்துப் பார்த்தால்...  படம் பார்த்து விட்டு வீடு திரும்பிய பிறகும் அதன் தாக்கம் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்குமே...அந்த வகை படம் இது.




முகமூடி


நடிகர்கள்: 
கதாநாயகன்-கதாநாயகி: ஜீவா-பூஜா ஹெக்டே,நரேன்,நாசர்,செல்வா
இசை: 
ஹாரிஷ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு: 
சத்யா
இயக்கம்: 
மிஷ்கின்.
தயாரிப்பு: 
லிங்குசாமி
கதையின் கரு: முகமூடி கொள்ளையர்களை வேட்டையாடும் முகமூடி நாயகன்.
நகரில் அடிக்கடி நடக்கும் கொலை-கொள்ளையில் துப்பு துலக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. போலீஸ் செய்யாத சாகசங்களை, ஒரு நடுத்தர குடும்பத்தின் பொறுப்பு இல்லாத இளைஞன், முகமூடி மனிதனாக மாறி சாதிப்பது கதை.ஒரு நடுத்தர குடும்பத்தின் சராசரி இளைஞராக-பூஜா ஹெக்டேயிடம் மனதை கொடுத்துவிட்டு, அவரை சந்திக்க துடிக்கும் காதலராக முற்பாதியில் கலகல ஜீவா.இவர் பூஜா ஹெக்டேயின் தோழியிடம் ஓட்டை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த வழியாக வரும் அவருடைய தந்தை இவரை ஒன்றுக்கும் உதவாத தறுதலை என்று திட்டித்தீர்த்துவிட்டுப் போவதும்-அதைப்பார்த்து பூஜா ஹெக்டே தூஎன ஜீவாவை நோக்கி காறி உமிழ்வதும்-கலகலப்பின் உச்சம்.மீன் மார்க்கெட்டில் ஜீவா தன் கையை நீட்டி, இதை வெட்டுங்க பார்க்கலாம். வெட்ட முடியாதவங்க என் மாஸ்டரிடம் பணம் கட்டி குங்பூ கற்றுக்கொள்ள வேண்டும்என்று போட்டி வைப்பதும், வெட்ட வருபவர்களை ஜீவா துவம்சம் செய்வதும்-சிலிர்க்க வைக்கும் அதிரடி சண்டை காட்சி.
இடைவேளைக்குப்பின் ஜீவா, முகமூடி அணிந்து கொண்டு சூப்பர் மேன் ஆக பல சாகசங்களை செய்கிறார். நாசரை கொல்வதற்காக ஆஸ்பத்திரிக்குள் வரும் கொள்ளையர்களை ஜீவா விரட்டியடிக்கும்போது, தியேட்டரில் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.பூஜா ஹெக்டேக்கு அதிக வேலை இல்லை. துணிச்சல் மிகுந்த பெண்ணாக அவரை அறிமுகப்படுத்தி, அப்புறம் அவரை கண்டுகொள்ளாமல் விட்டிருக்க வேண்டாம்.நரேன், வில்லன் அவதாரம் எடுத்து இருக்கிறார். குங்பூ பயிற்சியை முடித்துக்கொண்டு தனது அடியாளிடம், யார் அவன்?என்று முறைத்தபடி கேட்கும்போதும், செல்வாவை கொல்வதற்கு ஆடிக்கொண்டே படியேறும்போதும், மிரட்டியிருக்கிறார். குங்பூ மாஸ்டராக செல்வா, நெகிழவைக்கிறார். இனி இவரை தேடி நிறைய குணச்சித்ர வேடங்கள் வரும்.போலீஸ் அதிகாரி கவுரவாக நாசர். ஆஸ்பத்திரியில் தன்னை கொல்ல வரும் போலீஸ்காரரிடம், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேன் பத்ரி என்று கூறுகிற ஒரு இடம் போதும். நாசர், நாசர்தான்.
மென்மையானகவித்துவமான பின்னணி இசையும், இனிமையான பாடல்களும் இசையமைப்பாளர் யார்? என்று கேட்க தூண்டுகின்றன. இசையமைப்பாளர் கே, ஒரு ரவுண்டு வருவார். விடிந்தும் விடியாத அதிகாலை சென்னையை படம்பிடித்த விதத்திலும், வெளிநாட்டு பாடல் காட்சிகளிலும் ஒளிப்பதிவு (சத்யா) பளிச்.இடைவேளை வரை தமாசான காதலும், குறும்புத்தனம் மிகுந்த நகைச்சுவையுமாக ஜாலியாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் மிஷ்கின். ஜீவா சூப்பர் மேன் ஆனபின் வரும் காட்சிகள், நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. கதை சொன்ன விதத்திலும், காட்சி அமைப்பிலும் ஹாலிவுட்டுக்கு சரியான சவால்.நடுக்கடல்-கப்பல் என வரும் உச்சக்கட்ட காட்சியில், உயிர் பணயம் வைத்து உழைத்திருப்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்திருந்தால், உலக தரம் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கும்.


ஆரோகணம்


நடிகர்கள்: 
விஜி, டைரக்டர் மாரிமுத்து, ஜெய் குஹேனி, ஜெயப்பிரகாஷ், சம்பத்
இசை: 
கே
ஒளிப்பதிவு: 
என்.சண்முகசுந்தரம்
இயக்கம்: 
லட்சுமி ராமகிருஷ்ணா
தயாரிப்பு: 
மங்கி கிரியேடிவ் லேப் மற்றும் ஏவிஏ கிரியேஷன்ஸ்
‘பைபோலார் டிஸ்சார்டர்’ என்ற ஒருவித மனநோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றிய படம். அந்த பாதிப்புக்குள்ளான பெண்ணாக, விஜி வருகிறார். இவருடைய கணவர், மாரிமுத்து. இவர்களுக்கு ஒரு மகள், மகனும் இருக்கிறார்கள். விஜி, கணவரிடம் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு, எங்காவது காணாமல் போய் விடுகிறார். ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும், அவரை தேடிப் பிடிக்க வேண்டியது, கணவர்–பிள்ளைகளின் வேலை.
சலித்துப்போன மாரிமுத்து, தன் மனைவிக்கு பைத்தியம் என்று நினைத்து, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். விஜி, காய்கறி வியாபாரம் செய்து மகளையும், மகனையும் வளர்க்கிறார். மகளுக்கு திருமணமும் பேசி முடிக்கிறார். இந்த நிலையில், அவர் திடீரென்று காணாமல் போகிறார். கணவரும், மகனும் அவரை தேடி அலைகிறார்கள். விஜி கிடைத்தாரா, இல்லையா? என்பதே கதையின் ஜீவன்.
‘பைபோலார் டிஸ்சார்டர்’ நோய் பாதித்த பெண்ணாக–2 பிள்ளைகளுக்கு தாயாக–மூன்று சக்கர சைக்கிளில் தெருத்தெருவாக போய் காய்கறி விற்கும் வியாபாரியாக விஜி, படம் முழுக்க மனதில் அழுத்தமாக பதிகிறார். குழந்தைகளுக்கு பாசத்துடன் சாப்பாடு பரிமாறும்போது, வெண்டைக்காய் பிடிக்காது என்று மகன் கூறியதும் ஆவேசப்படுவது; அம்மன் அருள் வந்து ஆடுவது; தன் மீது மோதிய காருக்குள் உட்கார்ந்து, ‘‘இது என்ன கார், பென்ஸ் காரா?’’ என்று அப்பாவித்தனமாக கேட்பது ஆகிய இடங்களில், விஜி நடிப்பில் வியக்க வைக்கிறார்.
அவருடைய கணவராக டைரக்டர் மாரிமுத்து, மிக இயல்பான நடிப்பால், கவனம் ஈர்க்கிறார். இவர்களின் மகளாக வரும் ஜெய் குஹேனி, அம்மா மீது பாசம் கொண்ட பெண்ணாக உருக்கமாக நடித்து இருக்கிறார். எம்.எல்.ஏ.வாக வரும் ஜெயப்பிரகாசை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். டாக்டர் வேடத்தில், சம்பத் கச்சிதம். விஜி மீது காரால் மோதும் மேட்டுக்குடி பெண், பொருத்தமான தேர்வு.
‘கே’யின் இசையில், ஒரு பாடல் தேறுகிறது. பின்னணி இசை, கதையோட்டத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறது. லட்சுமி ராமகிருஷ்ணா டைரக்டு செய்திருப்பதுடன், ஒரு காட்சியில் தலையை காட்டியிருக்கிறார். உணர்ச்சிவசப்படும்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியேறுகிற ஒரு பெண், ஒருநாள் இரவு முழுவதும் காணாமல் போகிறாள்...அவள் என்ன ஆனாள்? என்ற கருவை வைத்துக்கொண்டு, உணர்வுப்பூர்வமாக கதை சொல்லியிருக்கிறார்.
பயமுறுத்துகிற மாதிரி, அடிக்கடி விஜியின் முகத்தை ‘குளோஷப்’பில் காட்டியிருப்பதை தவிர்த்து இருக்கலாம். மகளின் திருமண வேலைகள் அப்படியே கிடக்கிறது. உடனே வீட்டுக்குப்போக வேண்டும் என்று ஆஸ்பத்திரியில் ஆவேசப்படுகிற விஜிக்கு, காரில் ஜாலியாக பயணம் செய்து, நட்சத்திர ஓட்டலில் தங்கி ஆட்டம் போடும்போது, மகள் திருமணம் நினைவுக்கு வரவில்லையா?
கணவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரு பெண் தனி மனுஷியாக உழைத்து, இரண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்குகிற முதல் பாதி கதையில் இருந்த உருக்கம், இரண்டாவது பாதியிலும் இருந்திருந்தால், டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணா பரபரப்பாக பேசப்பட்டிருப்பார்.



கேடி பில்லா கில்லாடி ரங்கா


நடிகர்கள்: 
விமல், சிவகார்த்திகேயன், பிந்துமாதவி, ரெஜினா, சூரி, சுஜாதா
இசை: 
யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு: 
விஜய்
இயக்கம்: 
பாண்டிராஜ்
தயாரிப்பு: 
பசங்க புரொடக்‌ஷன்ஸ்
’பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’ படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் வழங்கும் பசங்க புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. தங்கள் எதிர்காலம் பற்றிய கனவு நிறைவேற கேடித்தனமாகவும் கில்லாடித்தனமாகவும் செயல்படும் நான்கு இளைஞர்களின் நகைச்சுவையான கதைதான் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. விமல், சிவகார்த்திகேயன், பிந்துமாதவி, ரெஜினா, சூரி, சுஜாதா நடிக்கிறார்கள். இது திருச்சி மண்ணை கதைத்தளமாக கொண்டது.
இப்படத்தில் 2 கதாநாயகர்கள், 2 கதாநாயகிகள் என்று எல்லாமே இரண்டு என்று இருந்தாலும் வெற்றி ஒன்றையே குறிவைத்து உழைத்து வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ். திருச்சியைச் சேர்ந்த 200 பேரை இதில் நடிக்க வைக்கிறார் இயக்குநர். படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



புதுவை மாநகரம்


நடிகர்கள்: 
மம்முட்டி,நதியா,டாப்ஸி,சுரேஷ்,ஆனந்தராஜ், ஒய்.ஜி.மகேந்திரன்
இசை: 
ஜேம்ஸ் வசந்தன்
ஒளிப்பதிவு: 
-
இயக்கம்: 
ஷோகன்
தயாரிப்பு: 
ஆர்.பாலா.
கேரளாவில், ‘ட்வின்ஸ்’ என்ற பெயரில் வெளியான மலையாள படம், தமிழில் ‘புதுவை மாநகரம்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.இதில், மம்முட்டி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நதியா நடித்து இருக்கிறார்.இவர்களுடன் சுரேஷ், ஆனந்தராஜ், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரே ஒரு பாடல் காட்சிக்கு கிரண் ஆடியிருக்கிறார்.ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க, ஷோகன் டைரக்டு செய்திருக்கிறார். தயாரிப்பு: ஆர்.பாலா.படத்தின் கதை பற்றி டைரக்டர் ஷோகன் கூறியதாவது:–‘‘மம்முட்டியும், நதியாவும் இரட்டையர்களாக பிறந்தவர்கள். அவர்களின் பெற்றோர்கள் விபத்தில் பலியாகிவிட, வளர்ந்த பிறகு இருவரும் சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் உயர்ந்த தொண்டாற்றி வருகிறார்கள்.அப்படியொரு கட்டத்தில், விபத்தில் இருந்து டாப்சியை காப்பாற்றுகிறார், மம்முட்டி. அதன்பிறகு பிரச்சினை ஆரம்பமாகிறது. அதில் இருந்து மம்முட்டி மீண்டாரா, இல்லையா? என்பதே கதை.’’




இளமை ஊஞ்சல்


நடிகர்கள்: 
நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி
இசை: 
கார்த்திக் பூபதி ராஜா
ஒளிப்பதிவு: 
ஜே.ஜி கிருஷ்ணன்.
இயக்கம்: 
மங்கை அரிராஜன்
தயாரிப்பு: 
எஸ்.ஆர். மனோகரன்
ஸ்ரீ ப்ரியம் கிரியேஷன்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'இளமை ஊஞ்சல்'.
அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படம் இது. திடுக்கிடும் சம்பவங்களும், கவர்ச்சி காட்சிகளும், மர்ம முடிச்சுகளும், எதிர்பாராத திருப்பங்களும், சஸ்பென்ஸும் நிறைந்த இந்தப் படத்தில் நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி ஆகிய நடிகைகள் படம் முழுக்க இளமை விருந்து படைக்கிறார்கள்.
இந்தப் படத்தின் கதைக்கு கட்டாயம் கவர்ச்சி  தேவை என்பதால், இதில் நடித்திருக்கும் நடிகைகள் கதையின் தன்மையைப் புரிந்து கொண்டு, காட்சிகளுடன் முழுமையாக ஒன்றிப் போய், படம் பார்ப்போரைக் கிறங்க வைக்கும் அளவிற்கு தங்களின் உடலழகை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒகனேக்கல், பெங்களூர், மைசூர், ஹைதராபாத், மூணாறு ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
கார்த்திக்பூபதிராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிஞர் பிறைசூடன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு : ஜே.ஜி கிருஷ்ணன். முடிவடையும் நிலையில் இருக்கும் இந்த இளமை ததும்பும் படத்தை பிரபல பட வினியோகஸ்தர் எஸ்.ஆர். மனோகரன் தயாரிக்கிறார். மங்கை அரிராஜன் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.












































































































































































































































































































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக