ராதே கிருஷ்ணா 16-02-2016
add a comment
பேசும் வைணவம் – 1 July 17, 2008
அடியேனின் ஆத்மநண்பரான ஸ்ரீமாந் முரளிபட்டர் ஸ்வாமி, அவருடைய இணையதளமான http://www.srirangapankajam.com என்பதில் திருவரங்கச்செல்வனைக் குறித்து ”பேசும் அரங்கன்” என்னும் தலைப்பில் தொடர் எழுதி வருவதைப் பலரும் அறிவீர்கள்.
அந்த ஸ்வாமியினுடைய தலைப்பை அடியொட்டி, அடியேன் “பேசும் வைணவம்” என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத முனைந்துள்ளேன். இந்தத் தொடரில் வைணவத்தைப் பற்றிய அடிப்படையான கருத்துக்கள் இடம் பெறும். உதாரணமாக – ப்ரக்ருதி என்றால் என்ன, அஹங்காரம் என்றால் என்ன, மஹத் என்றால் என்ன போன்ற அடிப்படையான விஷயங்கள் விளக்கப்பட உள்ளன. அடியேனின் இந்த முயற்சிக்கு வைணவ அஸ்திவாரமாக விளங்கும் ஸ்வாமி எம்பெருமானார் பக்கபலமாக நிற்பார் என்பதில் ஐயம் இல்லை.
இந்தப் பகுதியைப் படிக்கும் பாகவதோத்தமர்கள் தங்கள் கேள்விகளையும், மற்றவர்கள் கேள்விகளுக்கு பதில்களையும் எழுத முன்வரலாம் என்று வேண்டுகிறேன்.
அடியேன் தாஸன்
க. ஸ்ரீதரன்
பேசும் வைணவம் – 2 July 18, 2008
ப்ரமாணம், ப்ரமேயம் என்றால் என்ன?
எந்த ஒரு பொருளைப் பற்றி நாம் ஆராய்கிறோமோ, அந்தப் பொருளைப் பற்றிய உண்மையான கருத்துக்களை, உள்ளது உள்ளபடி எந்த ஒன்று தெரிவிக்கிறதோ, அதுவே ப்ரமாணம் எனப்படும். இப்படியாக உள்ள ப்ரமாணம் மூலம் அறியப்படும் பொருள் ப்ரமேயம் எனப்படும்.
நாம் அறிகின்ற விதம் கொண்டு, ப்ரமாணங்களை மூன்றாகப் பிரிக்கலாம். அவையாவன:
1.ப்ரத்யக்ஷம் (see and believe) – கண்களாலோ புலன்களாலோ ஒரு பொருளைப் பற்றி அறிகிறோம்.
2. அனுமானம் (assumption) – இதனை யூகம் எனலாம்.
3. சப்தம் (reading books) – எழுத்து மூலமாக உள்ளவற்றைக் கொண்டும் அறியலாம் – உதாரணம் வேதம்.
நமது மதத்தில் ப்ரமாணங்கள் என்று எவை உள்ளன?
வேதங்களே ப்ரமாணங்கள் என்று கொள்ளப்படுகின்றன.
புராணங்கள், இதிகாசங்கள் முதலானவை ப்ரமாணங்கள் அல்லனவா?
அவையும் ப்ரமாணங்களே. ஆனால் அவை ஏதோ ஒரு கருத்தில் வேதங்களுக்கு முரண்படுகின்றன என்றால், வேதங்களில் உள்ளவையே இறுதி என்று கொள்ளப்பட வேண்டும்.
பேசும் வைணவம் – 3 July 20, 2008
Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.add a comment
ஞான இந்த்ரியங்கள், கர்ம இந்த்ரியங்கள் என்றால் என்ன?
இவை ஆங்கிலத்தில் sense organs எனப்படும். ஞான இந்த்ரியங்கள் = கண், காது, மூக்கு, வாய் மற்றும் உடலின் மீது உள்ள தோல்.
கர்ம இந்த்ரியங்கள் = கைகள், கால்கள், நாக்கு, மலம் வெளியேறும் ஆசனவாய், மர்மக் குறிகள்.
பேசும் வைணவம் – 4 July 21, 2008
வேதங்களின் பலவகையான பிரிவுகள் என்ன?
1. முதலாவது வகை – ருக், யஜுர், ஸாமம், அதர்வணம். இவற்றில் ருக் வேதம் ஸர்வேச்வரனைப் புகழ்வதாகவும், யஜுர் வேதம் வைதிக கர்மங்களை இயற்றும் விதிகளைக் கூறுவதாகவும் உள்ளன.
2. இரண்டாவது வகை – பூர்வகாண்டம் (அல்லது கர்மகாண்டம்), உத்தரகாண்டம் (அல்லது ஞான காண்டம்) – பூர்வகாண்டம் என்பது கர்மங்கள் பற்றியும், அவற்றை இயற்றும் விதிகள் பற்றியும் கூறுகிறது. உத்தரகாண்டம் என்பது ப்ரஹ்மத்தைப் பற்றிக் கூறுவதாகும். (ப்ரஹ்மம் என்பது நான்முகன் அல்ல).
3. மூன்றாவது வகை – ஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிஷத்துக்கள். இவற்றில் உபநிஷத்துக்கள் என்பவை வேதங்களின் தலைப்பகுதியாகக் கொண்டாடப்படுகின்றன.
பேசும் வைணவம் – 5 August 1, 2008
நிமித்த காரணம், உபாதான காரணம், ஸஹகாரி காரணம் என்றால் என்ன?
ஒரு பானை செய்யும் குயவனைப் பாருங்கள். அவன் மண், நீர், சக்கரம் ஆகியவற்றைக் கொண்டு பானையைச் செய்கிறான். இதன் அடிப்படையில்:
1. உபாதான காரணம் – இது மூலப் பொருள் ஆகும். இங்கு மண் என்பது உபாதானக் காரணம் ஆகிறது. இதனை raw material எனலாம்.
2. நிமித்த காரணம் – மூலப் பொருள்களை கொண்டு குயவன் பானையை உருவாக்குகிறான். அவன் நிமித்த காரணம் ஆவான். இதனை doer, கர்த்தா எனலாம்.
3. ஸஹகாரி காரணம் – இவனது செயல்களுக்குத் துணையாக உள்ள மற்ற பொருள்கள். நீர், சக்கரம் போன்றவை ஸஹகாரி காரணம் எனப்படும். இதனை ஆயுதங்கள், equipments, tools எனலாம்.
பேசும் வைணவம் – 6 August 2, 2008
ஸ்ரீபாஷ்யம் என்பது என்ன?
உபநிஷத்துக்களில் உள்ள கடினமான கருத்துக்களை விளக்கவும், அவற்றில் உள்ள பல்வேறு ஐயங்களை நீக்கவும் வேதவ்யாஸர் ப்ரஹ்மஸூத்திரம் என்பதை இயற்றினார். இது நான்கு அத்யாயங்களைக் கொண்டதாகும்.
இந்த ப்ரஹ்மஸூத்திரம் என்பதும் மிகவும் கடினமானதாகும். எனவே இதற்குப் பலரும் பாஷ்யம் என்னும் பேருரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் ஆதிசங்கரர், பகவத் ராமாநுஜர் மற்றும் ஸ்ரீமத்வர் எழுதிய உரைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
ஸ்ரீ பகவத் ராமாநுஜர் அருளிச் செய்த ப்ரஹ்மஸூத்திரத்திற்கான பாஷ்யம் அல்லது பேருரையே ஸ்ரீபாஷ்யம் எனப்படும்.
பேசும் வைணவம் – 7 August 23, 2008
மனிதனுக்கு இந்த உலகில் இரண்டு விதமான மயக்கங்கள் ஏற்படுகின்றன. எம்பெருமானை அடையவும், ஸம்ஸாரத்தில் இருந்து விடுபடவும் அவன் இந்த இரண்டு மயக்கங்களில் இருந்து தெளியவேண்டும். அவையாவன:
1. உடலே ஆத்மா என்று எண்ணுவது.
2. ஆத்மா என்பதே ஸர்வேச்வரன் என்று எண்ணுவது.
இந்த மயக்கங்கள் எப்போது நீங்கும் என்றால் ஆத்மாவின் ஸ்வரூபம், ஸர்வேச்வரனின் ஸ்வரூபம் ஆகியவற்றை அறியும்போதே ஆகும். ஆகவே நமது பூர்வாச்சார்யர்கள் நாம் அறிந்து கொள்ளவேண்டிய தத்துவங்கள் என மூன்றைக் கூறியுள்ளனர். அவையாவன – சித் (சேதனம்), அசித் (அசேதனம்) மற்றும் ஈச்வரன் – என்பதாகும். இந்த மூன்றைப் பற்றித் தெளிவாக அறியும்போது, மேலே உள்ள மயக்கங்கள் அகன்றுவிடும். இனிவரும் பகுதிகளில் இந்த மூன்றை விரிவாகப் பார்ப்போம்.
பேசும் வைணவம் – 8 August 23, 2008
கடந்த பகுதியில் கண்ட சித், அசித், ஈச்வரன் என்ற மூன்றில், முதலில் அசித் என்பதைக் காண்போம். அசித் அல்லது அசேதனம் என்பது ஞானம் அற்றதாகும். அவை தானாகவே செயல்பட இயலாதவை ஆகும். பலன்களை அனுபவிக்கத் தெரியாதவை ஆகும். இவை மூன்று வகைப்படும். அவையாவன – த்ரிகுணம் (ப்ரக்ருதி), காலம் மற்றும் சுத்தஸத்வம் – ஆகும்.
த்ரிகுணம்
மூன்று குணங்களாவன – ஸத்வம், ரஜஸ் மற்றும் தாமஸம் ஆகும். இவை ஜீவனை எம்பெருமானின் ஸ்வரூபத்தையும், ஜீவனின் ஸ்வரூபத்தையும் மறைக்கவல்லவை ஆகும். ஜீவனைத் தங்கள் பக்கம் இழுக்கவல்லவை ஆகும். ஸத்வம் என்பது மேலோங்கும்போது மகிழ்வு, ஞானத்தின் மீது விருப்பம் ஆகியவை உண்டாகின்றன. ரஜஸ் தலை எடுக்கும்போது உலகவிஷயங்கள் மீது பற்றுதல், துன்பம் ஆகியவை உண்டாகின்றன. தாமஸ குணம் தலையெடுக்கும்போது மயக்கம், உறக்கம், சோம்பல் ஏற்படுகிறது. இவை மூன்று சமமாக உள்ள நிலை என்பது மஹாப்ரளய காலம் ஆகும். இவற்றுள் ஒன்று மட்டும் மேலோங்கும்போது ஸ்ருஷ்டி காலம் தொடங்குகிறது.
பேசும் வைணவம் – 9 September 15, 2008
ப்ரக்ருதிக்கு மூலப்ரக்ருதி, அக்ஷரம், ப்ரதானம், அவ்யக்தம் மற்றும் த்ரிகுணம் என்ற பல பெயர்கள் உண்டு. இந்த ப்ரக்ருதியே எம்பெருமானின் ஸ்வரூபத்தை நமக்கு மறைத்து, நம்மை பந்தப்படுத்துகிறது.
ப்ரளயகாலத்தில் ப்ரக்ருதியானது ஸூஷ்ம நிலையில் உள்ளது. ஸ்ருஷ்டி காலத்தில் மாறுபாடு அடைந்து மஹத் என்னும் தத்துவம் ஆகிறது. மஹத் என்னும் தத்துவத்தில் இருந்து அஹங்காரம் தோன்றுகிறது. ப்ரளய காலத்தில் ப்ரக்ருதி ஒரே போன்றமாறுபாடுகளை அடைவதால் அவ்யக்தம் எனப்படுகிறது. ஸ்ருஷ்டி காலத்தில் பலவிதமானமாறுபாடுகளை அடைவதால் வ்யக்தம் எனப்படுகிறது. இந்த வ்யக்தம் என்பது மஹத் தொடங்கி ப்ருத்வீ என்பது வரை 23 தத்துவங்களாக பிரிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக