வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஸ்ரீ குணரத்ன கோஸம்

ராதே கிருஷ்ணா 30-01-2016





ஸ்ரீ குணரத்ன கோஸம்-1 October 12, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment

ஸ்ரீ:


ஸ்ரீமதே ராமானுஜாய நம:


ஸ்ரீ ரங்கநாயகி ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரஹ்மணே நம:


ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே சரணம்

இந்தச் ச்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியான ஸ்ரீரங்கநாச்சியார் விஷயமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ச்லோகமாகும்.
(படம் – கூரத்தாழ்வானுடன் பராசரபட்டர் கம்பீரமாக உள்ள காட்சி)
தனியன்
ஸ்ரீ பராசர பட்டார்ய : ஸ்ரீரங்கேச புரோஹித:
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மே அஸ்து பூயஸே
பொருள் – ஸ்ரீரங்கநாதனுக்கு முன்பாக வேத விண்ணப்பங்கள் செய்தல் போன்ற புரோஹிதங்களைச் செய்பவரும், கூரத்தாழ்வானின் திருக்குமாரரும் ஆகியவர் ஸ்ரீ பராசரபட்டர் ஆவார். ஸ்ரீரங்கநாயகி என்னும் உயர்ந்த செல்வத்தினை உடைய அந்தப் பராசரபட்டரின் திருவடிகளை அடைந்து நான் அதிகமான நம்மைகளை பெறுவேனாக!

ஸ்லோகம் – 1

ச்ரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்தயந்த்யை க்ருத: அஞ்ஜலி:
பொருள் – ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான். அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான். இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்). இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி? அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள். (அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்தயந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன). இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல. பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால் பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது). இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்! (இங்கு கூறப்படும் உட்பொருள் – பெரியபெருமாளின் படைப்புகளாகவே இருந்தாலும், மஹாலக்ஷ்மியாகிய பெரியபிராட்டியார் பார்வைபட்டால் மட்டுமே அவை பயன் பெறும் என்றார்).
படம் நன்றி – ஸ்ரீமாந் முரளிபட்டர்.


ஸ்ரீ குண ரத்ன கோசம் – 11 October 22, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
1 comment so far
ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விச்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈசம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
பொருள் – ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பலவிதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர். அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம்பொருளைக் காண்பிக்கவில்லை என்றனர் (இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்); இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை); நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்); சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம்பொருள் உள்ள போதிலும் அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்); மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவமதம்) – இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது உண்மை.
விளக்கம் – இங்கு பல மதங்களின் வாதங்களைத் தள்ளுகிறார். இவர்களில் சிலர் வேதமே இல்லை என்பவர்கள் ஆவர். மேலும் சிலர் வேதங்கள் உள்ளதை ஒப்புக் கொண்டாலும், அவை பரம்பொருளைக் கூறவில்லை என்றனர். மேலும் சிலர் வேதங்களை ஒப்புக் கொண்டு, அவை பரம்பொருளையே குறிக்கின்றன என்று ஒப்புக் கொண்டாலும், அந்த பரம்பொருளுக்குக் குணங்கள் இல்லை என்றனர். இப்படிப்பட்டவர்கள் ஸ்ரீரங்கநாச்சியாரின் பார்வைக்கு இலக்காகாதவர்கள் என்றார்.
இவளது பார்வை ஒரு நொடிப் பொழுது பட்டிருந்தாலும், அவர்கள் மிக்க பண்டிதர்களாகி இருப்பார்கள் என்று கருத்து. ஆக இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே உண்மையான அறிவு பெற்று, பரம்பொருளான பெரியபெருமாளை அறிய இயலும்.
படம் – இவளால் அறியப்படும் நம்பெருமாளும், “உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்று ஆழ்வார் போற்றும்படியாக அவனுக்கு ஏற்ற இவளும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 10 October 21, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
தேவி ச்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத்த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய இனிமையான திருக்கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர். இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவுகோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் – இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.
விளக்கம் – இந்தச் ச்லோகத்தின் மூலம் ஸ்ரீ குண ரத்ன கோசம் என்ற தலைப்பு வெளிப்பட்டத்தைக் காண்க. வேதங்கள் என்பவை இவளது குணங்களைக் காக்கும் பேழைகள் என்றார். ஆக மேலோட்டமாகப் பார்த்தால் வேதங்கள் பெரியபெருமாளைப் புகழ்வது போலத் தோன்றினாலும், ஆழ்பொருளில் இவளையே துதிக்கின்றன எனலாம்.
இவளது குணங்களை – ஒக – என்றார். இதன் பொருள் – கூட்டம் கூட்டமாக – என்பதாகும். அந்தக் குணங்களால் இவளுக்கு எந்தவிதமான புதிய ஏற்றம் வரப்போவதில்லை. ஆபரணங்களாலா தங்கத்திற்கு மதிப்பு? தங்கத்தால் அல்லவோ ஆபரணங்களுக்கு மதிப்பு? அது போல, இவளால் குணங்களுக்குப் பெருமை என்றார்.
படம் – குணங்களால் மட்டும் அல்ல, தனது அழகினாலும் சிறந்த ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 9 October 20, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ச்ரிய: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யாம் பகவதீம்
ச்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ச்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ச்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுகசதம்
பொருள் – உன்னை அடைய எங்களால் பற்றப்படுகின்ற ஸ்ரீரங்கநாயகியின் பதியே! ஸ்ரீரங்கநாதா! எங்கள் மனதிற்கு மட்டும் அல்ல, உனது மனதிற்கும் பிடித்த பல திருக்கல்யாண குணங்கள் கொண்டவளாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள். அவளது திருக்கல்யாண குணங்கள் காரணமாக உன்னை விட அவள் உயர்ந்தவள் என்று உன் முன்பாகவே கூறப்போகிறேன். இதனை உனது காதுகள் குளிர நீ கேட்க வேண்டும் . நீ கேட்பதன் காரணமாக உனது கண்களில் மகிழ்ச்சி நிலை நின்று, அதனால் உனது பெரிய கண்கள் மின்னியபடி காணப்படும். இவற்றைக் கேட்பதன் மூலம் உனது அகண்ட திரண்ட தோள்கள் மகிழ்ச்சியின் காரணமாக மேலும் வளர வேண்டும். இதனால் அந்தத் தோள்களில் அணிவிக்கப்படும் பல அங்கிகளும் வெடித்துக் கிழிந்து போக வேண்டும்.
விளக்கம் – இங்கு பட்டர் பெரியபெருமாள் முன்பாக நின்றார். அவரிடம் பெரியபெருமாள், “நீவிர் நமது பிராட்டியைக் குறித்து துதி இயற்றி வருகிறீராமே! அவற்றில் அவளது திருக்கல்யாண குணங்கள் வெளிப்படும்படி புகழ்ந்துள்ளீர் அல்லவா?”, என்றான். பட்டர், “ஆம்! உம்மை விட அவள் பல குணங்களில் உயர்ந்தவள் என்றே புகழ்ந்துள்ளோம்”, என்றார். இதனைக் கேட்ட அழகியமணவாளன் கடகடவென்று சிரித்தான். தன்னுடைய நாயகியைக் குறித்து பட்டர் கூறப்போவதைக் கேட்க தன்னை மறந்து நின்றான். இதனைக் கண்ணுற்ற பட்டர் – ச்ருணு – கேட்பாயாக – என்ற பதம் பயன்படுத்தியது காண்க. பட்டர் கூறக்கூற அரங்கனின் திருக்கண்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன, அவனது திரண்ட புஜங்கள் மேலும் வளர்ந்தன. அவன் அணிந்திருந்த அங்கிகள் கிழிந்தன.
இங்கு – ஹ்ருத்யாம் – என்ற பதம் காண்க. இதன் மூலம் பெரியபெருமாளின் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரைப் பட்டர் கூறுவதாகவும் கொள்ளலாம்.
எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்து உள்ளபோது, பிராட்டியைப் புகழ்வது சரியா என்று சிலர் கேட்கலாம். இதற்கான சமாதானம் – பட்டராக இவற்றைக் கூறவில்லை, பெரியபெருமாள் கேட்டதனால்தான் கூறினார்.
படம் – பட்டர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பெரியபெருமாள் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 8 October 19, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
அநாக்ராத அவத்யம் பஹுகுண பரீணாஹி மநஸ:
துஹாநம் ஸௌஹார்த்தம் பரிசிதம் இவ அதாபி கஹநம்
பதாநாம் ஸௌப்ராத்ராத் அநிமிஷ நிஷேவ்யம் ச்ரவணயோ:
த்வம் ஏவ ஸ்ரீ: மஹ்யம் பஹுமுகய வாணீவிலஸிதம்.
பொருள் – மஹாலக்ஷ்மி! ஸ்ரீரங்கநாயகி! எனக்கு உன்னைக் குறித்துத் துதிகளை இயற்றத் தேவையான வாக்கு வன்மையை, பல வழிகளில் நீ அளிக்கவேண்டும். அப்படி எனக்கு அளித்த வரம் மூலமாக உண்டான துதிகள் எப்படி இருக்கவேண்டும் என்றால் – குற்றம் என்பதன் வாசனையே அவற்றில் இருத்தல் கூடாது; பலவகையான இலக்கண குணங்கள் (நடை, பொருள் போன்றவை) அதில் காணப்படவேண்டும்; அதன் பொருளானது முன்பே கேள்விப்பட்டது போன்று எளிதில் விளங்குவதாக இருக்க வேண்டும்; இனிமையான சொற்கள் கோர்வையாக இணைந்து, அந்தத் துதிகளைக் கேட்பவர்களின் காதுகளை மூடாமல் விளங்க வேண்டும்.
விளக்கம் – சொற்குற்றம், பொருள் குற்றம், வாக்கியக் குற்றம் இருக்கக் கூடாது என்றார். இங்கு கேட்பவர்களின் காதுகள் இமைக்காமல் திறந்தபடி கேட்க வேண்டும் என்று ரஸமாக கூறுவது காண்க. ஸரஸ்வதி இவளது அடிமையாக உள்ளதால், அவளிடம் வேண்டுவதையும் ஸ்ரீரங்கநாச்சியாரிடமே வேண்டுகிறார். ஸரஸ்வதி இவளது அடிமை என்பதை, இவரது தந்தையான கூரத்தாழ்வான் – பாரதீ பகவதீ து யதீயதாஸி – என்றார்.
படம் – ஸரஸ்வதிக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் நானே எஜமானி என்று விளக்கும்படியாக ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள காட்சி. (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 7 October 18, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ணகுண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி
பொருள் – ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்தச் ச்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக்கூடும். ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை. அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள். இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள்பார்வை பொழிந்து நிற்கும். இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை, இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும். இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.
விளக்கம் – குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டால் அல்லவோ தாய்க்கு மகிழ்வு ஏற்படும்? ஆகவே தனது சொற்கள் பிழையாகவே இருந்தாலும் அதனால் நன்மையே, நான் அதனைத் திருத்தப் போவதில்லை என்கிறார் – காரணம், அப்போதுதான் ஸ்ரீரங்கநாச்சியார் இதனைக் குழந்தையின் மழலைச் சொல்லாக ஏற்று மகிழ்வாள் என்றார்.
ஆனாலும் தன்னுடைய சொல்லானது நல்ல சொல் என்கிறார். இவரே பிழை உள்ளது என்று கூறிவிட்டு, இப்போது நல்ல சொல் என்பது எப்படி? இந்தச் சொற்கள் தாயாரைப் புகழ்வதால் நல்வாக்கு ஆனது.
அடுத்து – மதுரை: கடாக்ஷை: – என்பது காண்க. இவளது பார்வை மிகவும் குளிர்ந்தது. இதனைக் கூறுவதற்கு முன்னால், இவளை ஸ்ரீரங்கராஜனின் மஹிஷி என்றது காண்க. இவ்விதம் கூறக் காரணம் – அரங்கனின் பார்வையானது சரிசமமானதாகும் – தண்டனை அளிப்பதாகவும், கருணை பொழிவதாகவும் அவனது பார்வை உள்ளது. ஆனால் இவள் பார்வை அப்படிப்பட்டது அல்ல என்று சுட்டிக் காட்டவே, அவனது மஹிஷி என்றார். இவள் பார்வையானது கருணையை மட்டுமே பொழியவல்லது.
படம் – ஸ்ரீரங்கநாச்சியாரின் கருணை பொங்கும் திருக்கண்கள். தாயே! பட்டரின் ச்லோகத்தில் உள்ள குறைகளை திருத்திக் கொள்வது போன்று, அடியேனின் இந்த உரையில் உள்ள குறைகளையும் நீயே திருத்திக் கொள்ளவேண்டும். (படம் நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 6 October 17, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய: யோவிஸ்த்ருணீதே குணாந்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விச்ராம்யதி
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
க்ஷாந்தி ஔதார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்துவீரந் ப்ரதாம்.
பொருள் – ஸ்ரீரங்கநாயகியே! தேவி! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே! இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும், யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் – எந்த ஒரு பொருள் துதிக்கத்தக்கதாக உள்ளதோ, ஆனால் அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ, அந்தப் பொருளை ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் – அவனையே பெரிதும் மதிப்பார்கள் . இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும் , உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும் முழுத்தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் – நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும் . ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய். இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான – குற்றங்களைப் பொறுத்தல், அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது, எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) – ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?
விளக்கம் – ஒரு பொருளைக் குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். பலரும் அந்தப் பொருளைப் பற்றிக் கூற முயன்று, தோற்றுவிடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில், அந்தப் பொருளைப் பற்றி ஒருவன் துதிக்க, இதனைக் கேட்ட அந்தப் பொருள் தனக்கு உள்ள தன்மைகளை தானாகவே அனைவருக்கும் வெளிப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியெனில், அந்த ஒருவன் பலராலும் புகழப்பட வேண்டியவன் அன்றோ?
அப்படிப்பட்டவன் யார் என்றால் – தானே (பட்டர்) என்கிறார். இதனைக் கேட்ட சிலர், “உம்முடைய சொற்களோ மிகவும் தாழ்ந்தவை. உனது வாயிலிருந்து சிறந்த சொற்கள் வெளிப்படவும் வாய்ப்பில்லை. இப்படி உள்ளபோது நீவிர் எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்?”, என்றனர்.
இதற்குப் பட்டர் வெகு சாமர்த்தியமாக விடையளித்தார் – எனது சொற்கள் தாழ்ந்தவையே. அந்தச் சொற்கள் மூலமே ஸ்ரீரங்கநாச்சியாரின் பலவிதமான குணங்கள் தாமாகவே வெளிப்படுகின்றன:
1. அந்தத் தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா? இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் – குற்றங்களைப் பொறுத்தல் – வெளிப்படுகிறது.
2. “இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்துவிட்டது என்று இதனை உலகம் பழிக்கக்கூடாது, என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள். இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது.
3. அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் – குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் – வெளிப்படுகிறது.
4. இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது.
ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை. எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே – என்றார்.
படம் – தனது உயர்வு அனைத்தையும் பொருட்படுத்தாமல், தன்னைப் பற்றித் துதிக்க முயலும் பட்டருக்கு அருள, தனது ஸ்வாமித்வத்தை மறைத்துக் கொண்டு, சாதாரண பெண் போன்று ஸ்ரீரங்கநாச்சியார் வரும் காட்சி (நன்றி: ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோஸம்–5 October 16, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment

யத் யாவத் தவ வைபவம் ததுசித
ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும் கேவயம் இதி அத: ச
ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச
அபி ஏவம் தவ தேவி வாங்மநஸயோ:
பாஷா அநபிக்ஞம் பதம்
காவாச: ப்ரயாதாமஹே கவயிதும்
ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.
பொருள் – அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை, அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத்தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது? பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர், உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம்மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர். இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன. இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான், முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்.
விளக்கம் – வேதங்கள் ஸ்ரீரங்கநாதனின் பெருமையைக் கூறிவிடலாம் என்று முயன்றாவது பார்த்தன. ஆனால் இவளது பெருமைகளை நம்மால் நிச்சயம் கூற இயலாது என்று முயற்சி செய்யவும் அஞ்சின. இங்கு “இவளது பெருமைகளைக் கூறும் திறன் யாருக்கு உள்ளது”, என்று கூறாமல், “இவளது பெருமைகளைக் கூற யாருக்கு விருப்பம் உள்ளது”, என்று ஏன் கூறவேண்டும்? ஒரு செயலைச் செய்ய இயலாது என்று பலரும் ஒதுங்கியிருக்க, ஒருவன் மட்டும் தன்னால் முடியும் என்று வருகிறான் என வைத்துக் கொள்வோம். அவன் தோற்றால் மிகுந்த அவமானம் அல்லவா? அது போன்று வேதங்களே ஒதுங்கிக் கொண்ட நிலையில், இவளைப் பற்றி நான் கூறுகிறேன் என்று வந்துவிட்டு, பின்னர் அனைவரும் பரிகசிக்கும் நிலையை யாராவது விரும்புவார்களா? இதனால்தான் “விருப்பம்” என்றார்.
இவ்விதம் கூறிவிட்டு நன்கு படித்த இவரே (பட்டர்), இவளைப் புகழ்ந்து பாட முயல்வது எப்படி என்று ஒரு சிலர் கேட்கலாம். இதற்கான விடையை இவர் கூறும்போது – இவளது கருணையால் தனது சொற்களுக்கு நன்மை ஏற்பட்டுவிடும், அதனால் தனது கவிதைகளும் ஏற்கப்பட்டுவிடும் – என்று கூறினார். இவருக்கு இந்த நம்பிக்கை எப்படி வந்தது? இவர் ச்லோகம் இயற்றத் தொடங்கியதைக் கண்ட ஸ்ரீரங்கநாச்சியார், “யாரும் செய்யத் துணியாத செயலை இந்தக் குழந்தை செய்கிறது. நாம் ஆதரிப்போம்”, என்று எண்ணி, தன்னைக் கடாக்ஷிப்பாள் என்றார்.
படம் – தன்னைப் பற்றித் தனது குழந்தையான பட்டர் ச்லோகம் இயற்றுவதைக் கண்டு இரசிக்க ஜகன்மாதாவாகிய ஸ்ரீரங்கநாச்சியார் தோளுக்கினியானில் புறப்படத் தயாராக உள்ள காட்சி. (படம் உதவி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குண ரத்ன கோஸம் – 4 October 15, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம்
ஸ்திர சர ரசநா தாரதம்யே முராரே:
வேதாந்தா: தத்வசிந்தாம்
முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித
பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம்
அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:
அறிமுகம் – ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷத்தின் பெருமையைக் கூறுகிறார்.
பொருள் – இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும். இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ, ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான். யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன. ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும். இவளது திருக்கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் – ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது. இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது. அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.
விளக்கம் – ஒவ்வொரு உயிரைப் படைத்த பின்னர் ஸ்ரீரங்கநாதன் இவளது திருமுகத்தைப் பார்க்கிறான் – இந்தப் பார்வையின் பொருள், “இந்த உயிரை எவ்விதம் படைக்கவேண்டும் என்று எனக்குக் குழப்பமாக உள்ளது, நீயே தெளிவுபடுத்துவாயாக”, என்பதாகும். இதனைப் புரிந்துகொள்ளும் இவள் தனது புருவத்தின் நெறிப்பு மூலம், “இந்த உயிரை புகழ் பெறும் வகையில் படை, இந்த உயிரை ஞானம் உள்ளதாகப் படை, இந்த உயிரை தாழ்ந்ததாகப் படை” என்று உணர்த்துகிறாள். இவனும் அப்படியே செய்துவிடுகிறான். இவளிடம், “ஏன் இவ்விதம் படைக்கச் சொல்லுகிறாய்?”, என்று அவன் கேட்பது கூட இல்லை – காரணம் அவளுக்கு அவன் அத்தனை ப்ரியமானவனாக வசப்பட்டு நிற்கிறான். வேதம் இல்லாமல் ப்ரம்மனால் படைக்க இயலாதது போல, இவளது புருவ நெறிப்பு இல்லாமல் ஸ்ரீரங்கநாதனும் ஏதும் செய்வதில்லை.
இங்கு முராரி என்று நம்பெருமாளைக் கூறியது காண்க. படைத்தல் குறித்துக் கூறும்போது ஏன் “அழித்தவன்” என்னும் திருநாமம் கொண்டு (முரன் என்ற அசுரனை அழித்தவன்) கூறவேண்டும்? அழிக்கும் வல்லமை இருந்தாலும், படைக்கும்போது மிகவும் எளியவனாக இவள் வசப்பட்டு நிற்பதை உணர்த்துகிறார்.

ஸ்ரீ குண ரத்ன கோஸம் – 3 October 14, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
அநுகல தநுகாண்ட ஆலிங்கநாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தநநயந குளுச்ச ஸ்பாரபுஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்பவல்லீ கடாக்ஷாந்
அறிமுகம் – தன் மீது ஸ்ரீரங்கநாச்சியார் அவளது கடாக்ஷத்தைச் செலுத்தவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.
பொருள் – ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள். இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று, அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன. இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க்கொத்துக்கள் போன்று உள்ளன. அந்த மலர்ச்செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள். இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்பவல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள். அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.
விளக்கம் – இங்கு ஸ்ரீரங்கநாதனை, ஸ்ரீஸக என்று கூறியது காண்க – ஸ்ரீயின் நாதன் என்னும்படி, அவள் இல்லாமல் இவனை அடையாளம் காண இயலாது என்பதைக் காட்டுகிறார். அவள் இல்லாமல் இவனது திருக்கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்துவிடும்.
படம் – ஸ்ரீரங்கநாச்சியாரின் கருணை பொங்கும் திருக்கண்கள் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோஸம்-2 October 13, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
உல்லாஸ பல்லவிதபாலித ஸப்தலோகீ
நிர்வாஹ கோரகித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்
ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம:
அறிமுகம் – கடந்த ச்லோகத்தில் அவன் படைப்பதை இவள் ஏற்பதாகக் கூறுகிறார். இங்கு, ஏற்பது மாத்திரம் அல்ல, படைப்பிற்கான காரணமும் இவளே என்றார்.
பொருள் – இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக்கண்களைத் திறந்து பார்க்கிறாள். அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன (கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன). இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல. இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள் (ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன? தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித்தருகிறாள். இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார். பெரியபெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் . மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.
விளக்கம் – இங்கு பல்லவித என்னும் பதம் உலகமானது துளிர்கிறது என்று நேரடியாகப் பொருள் தரவில்லை. பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது போன்று எனக் கருத்து. இவள் தனது திருக்கண்களைத் திறந்து பார்ப்பதை, பெரியபெருமாள் கவனித்தவுடன் இந்த உலகைப் படைக்கிறான். இவள் தனது கண்களை மூடிக்கொண்டால், இந்த உலகத்தைப் ப்ரளயத்தில் ஆழ்த்திவிடுகிறான்.
பரம்பொருளே உலகின் காரணம் என்று வேதங்களும் வேதாந்தங்களும் முழங்க, இவர் பெரியபிராட்டியைக் காரணமாகக் கூறுவது எப்படி? அவனே அதற்குக் காரணம் என்பது உண்மை, ஆனால் இவளது துணையின்றி அது இயலாது. இந்த உலகம் என்னும் இல்லறம் நடக்க, மனைவியாகிய இவள் துணை மிகவும் அவசியமானது என்று கருத்து.
இவளே பெரியபெருமாளை நமக்குக் காண்பித்துத் தருகிறாள். அவனிடம் செல்ல இவளது சிபாரிசு (புருஷகாரம்) தேவை. ஆனால், இவளை அடைவதற்கு எந்த ஒரு சிபாரிசும் தேவை இல்லை. தானே தனக்குச் சிபாரிசாக உள்ளாள்.



ஸ்ரீ குணரத்ன கோசம் -21 November 1, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது; அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது; அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது; அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு, உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்; அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்; அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது; அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது – இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?
விளக்கம் – இந்தச் ச்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார். இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.
படம் – ஸ்ரீவைகுண்டநாதனைப் போன்று ஒய்யாரமாக ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள காட்சி. நவராத்ரி உற்சவ திருவடி ஸேவை. (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் -20 October 31, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம்
வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந்
ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.
பொருள் – ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன? இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான். அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான். மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்? இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண்வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று, மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மனமகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?
விளக்கம் – இங்கு நாம் தடுமாறும் பல நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறார். முதலில் நாம் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை மறக்கடிக்கிறான். இதுவே ஸம்ஸார கலக்கத்திற்கு முதல் படியாகும். அடுத்து, நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்துகிறான். இதன் மூலம் நம்மை ஸம்ஸாரக் கடலில் அழுத்துகிறான். மூன்றாவதாக சிற்றின்ப விஷயங்களில் தள்ளுகிறான்.
தூர்த்தர் என்னும் பதம் காண்க. இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின் பின்னே செல்பவன் என்பதாகும். இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.
படம் – ச்லோகத்தில் ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு அனைவரையும் மயங்கச் செய்வது போல் – என்று கூறினார். இதற்கு முன் உதாரணமாக நம்பெருமாள் தானே உள்ளான் போலும். திருவரங்கம் பெரியகோயிலில் திருஅத்யயன உற்சவத்தின்போது நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் உள்ள காட்சி.

ஸ்ரீ குணரத்ன கோசம் -19 October 30, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ:
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை:
அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத:
ஸ்ரீரங்கேச்வரதேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:
பொருள் – ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும் ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன. அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகியமணவாளன், அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ? அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான். அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான். மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.
விளக்கம் – ப்ரளயம் முடிந்து சேதனங்களும் அசேதனங்களும் ஒரே குவியலாக, இறகு ஒடிந்த பறவைகளாகக் கிடந்தன. இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் – கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற – என்று அருளிச்செய்தார்.
இவ்விதம் இவர்கள் கிடப்பதைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை அடைந்துவிடக் கூடாது என்று நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.
படம் – தன் அருகில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் மீது மலர்க்குவியல்கள் உள்ளதை அழகியமணவாளன் கண்டான். அப்போது அவன் திருவுள்ளத்தில், “இந்தக் குவியல் போன்று அல்லவா ஜீவன்கள் அங்கு குவியலாகக் கிடக்கின்றன”, என்று எண்ணினான். இந்த மலர்கள் பயன்படுவது போன்று, அந்தக் குவியலும் பயன்பட வேண்டும் என்று எண்ணியவனாக ஸ்ருஷ்டியைத் தொடங்கினான். (படம் நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 18 October 29, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்
பொருள் – மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள், மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன், பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன? இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ? இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?
விளக்கம் – இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?
படம் – பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி. இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான். இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு?? நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது? இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்யத்ரயம் வெளிப்பட்டது? (படம் நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 17 October 28, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ரதிர்மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முகம் மதி இந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:
பொருள் – ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது புருவங்கள் கொடிபோன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது. அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன? அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம் ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை – ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.
விளக்கம் – இங்கு ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் யார் மீது விழுகின்றதோ, அந்த மனிதனிடம் அனைத்தும் குவிகின்றன என்றார்.
இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) – யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே – எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று, “நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.
படம் – அழகான திருமுக மண்டலத்துடன் கூடிய ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 16 October 27, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி
கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந்
யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம்
சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந:
உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்
பொருள் – இந்த உலகின் நிலை என்ன? ஒரு மணிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு , முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான். அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது. அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான். மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும், அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?
விளக்கம் – இவளது திருக்கண்கள் மூடுவதாலும், திறப்பதாலுமே அனைத்து உயிர்களின் ஏற்றத்தாழ்வுகள் என்றார். இங்கு வாமன அவதார கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம் காண்போம்.
வாமனனாக ஸ்ரீமந்நாராயணன் மஹாபலியிடம் யாசகம் பெற வந்தான். இவன் எதனைக் கேட்டாலும் அதனை அளிப்பதற்கு மஹாபலி தயாராகவே இருப்பதாக உறுதி அளித்தான். இதனைக் கண்ட வாமனனுக்கு வியப்பு அதிகமானது. இவனிடம் இத்தனை ஐச்வர்யம் எவ்விதம் வந்தது என்று யோசித்தான்.
பின்னர் தன்னுடைய திருமேனியைப் பார்த்தான். ப்ரம்மச்சாரி என்பதால், தனது திருமார்பை அவன் மூடவில்லை. அதனால் அங்கு வாஸம் செய்யும் பெரியபிராட்டி மஹாபலியைப் பார்த்தபடி உள்ளதை அறிந்தான். அந்தப் பார்வையாலேயே அவனுக்கு அத்தனை ஐச்வர்யம் என்று அறிந்தான். தனது அங்கவஸ்த்ரத்தினால் திருமார்பை மூடிக்கொள்ள, அதனால் பெரியபிராட்டியின் நேர்பார்வை தடைபட்டது. இதன் விளைவாக வாமனன் கேட்ட மூன்றாவது அடியை மஹாபலியால் அளிக்க இயவில்லை.
ஆக இவளது திருப்பார்வைக்கு இத்தனை சக்தி உண்டு என்று கருத்து.
படம் – அனைவருக்கும் அனைத்தையும் அளிக்கவல்ல திருப்பார்வை கொண்டவளான ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 15 October 26, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ:
பொருள் – ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக, அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள், இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் – இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது? எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?
விளக்கம் – இங்கு ஸ்ரீரங்கநாதனை ஏன் கூறினார்? அனைத்தையும் படைப்பது அவனே என்பதால் ஆகும். அவ்விதம் அவன் படைத்தாலும், இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே அவை துளிர்க்கும் என்பதை முன்னரே கூறினார்.
ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் – அவற்றை அனுபவிக்கக் கூடிய தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.
படம் – பட்டர் தனது ச்லோகத்தில் ஸ்ரீரங்கநாதனின் மனம் கவர்ந்தவளே என்றார். இவளுக்கும் அவன் மீது மிகவும் ப்ரியம் உண்டு. இதனை உலகிற்கு உணர்த்தும் வகையில் அவனது திருவுருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்தைத் தனது திருமார்பில் சாற்றிக் கொண்டுள்ளதைக் காண்க (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 14 October 25, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத்ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
பொருள் – நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும் தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை. ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது (ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான். இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட – புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.
விளக்கம் – இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்? இதனை வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் – என்று கூறியதைக் காண்க.
படம் – ஜனகனின் மகளான அரசகுமாரி ஸீதையாக குடை என்ன, பரிவாரங்கள் என்ன என்று பவனி வரும் ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 13 October 24, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
அஸ்ய ஈசாநா ஜகத: இதி அதீமஹே யாம் ஸம்ருத்திம்
ஸ்ரீ: ஸ்ரீஸூக்தம் பஹு முகயதே தாம் ச சாகாநுசாகம்
ஈஷ்டே கச்சித் ஜகத இதி ய: பௌருஷே ஸூக்த உக்த:
தம் ச த்வத்கம் பதிம் அதிஜகௌ உத்தர: ச அநுவாக:
பொருள் – ஹே ஸ்ரீரங்கநாயகி! மஹாலக்ஷ்மீ! இந்த உலகத்தின் ஈச்வரி, நாயகி என்று உன்னை வேதங்கள் சில இடங்களில் ஓதியுள்ளன. இப்படிப்பட்ட பெரும் செல்வமான உன்னை, ஸ்ரீஸூக்தம் என்ற உயர்ந்த க்ரந்தம் தனது ஒவ்வொரு மந்திரத்திலும் பலவாகப் புகழ்ந்து கூறுகிறது. புருஷஸூக்தத்தில் இந்த உலகம் முழுமைக்கும் நாயகன் என்றும், புருஷன் என்றும் ஸ்ரீரங்கநாதன் வர்ணிக்கப்படுகிறான். இப்படிப்பட்ட நம்பெருமாளை அநுவாகமும் விவரித்துக் கூறுகின்றது. அந்தக் க்ரந்தங்கள் அவனை உனது கணவனாக அல்லவா ஓதின?
விளக்கம் – புருஷஸூக்தம் தனது நாயகனைக் கூறுவதாகவும், ஸ்ரீஸூக்தம் தன்னையே கூறுவதாகவும் மஹாலக்ஷ்மி, பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மி தந்த்ரத்தில் கூறினாள். அந்த வரிகள்:
1. தத்ர பும்லக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் – புருஷர்களின் லக்ஷணம் கூறப்பட்டதால் அதனைத் தான் (திருவரங்கன்) கைக்கொண்டான்.
2. தத்ர ஸ்த்ரீலக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் – பெண்களின் பெருமைகள் பேசப்பட்டதால் அதனை நான் (ஸ்ரீரங்கநாச்சியார்) கைக்கொண்டேன்.
படம் – ஸ்ரீரங்கநாச்சியாரும் நம்பெருமாளும் இணைந்து இருக்கும் கண்கொள்ளாக் காட்சி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 12 October 23, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ச்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:
பொருள் – பகவானுடைய திருக்கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே! உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி? புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று , உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும். இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர். அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா? அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?
விளக்கம் – இங்கு கண் மை கொண்டு புதையலைத் தேடுவது போன்று, பக்தி என்பது கொண்டு ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி வேதாந்தங்கள் என்ன கூறுகின்றன என அறியமுடியும். அந்த ஞானம் கொண்டு அவளை அறியலாம். அதன் பின்னர்?
புதையலை எடுத்த பின்னர், அதனைக் கொண்டு ஆபரணம் செய்வது முதலான செயல்களைச் செய்து புதையலைப் பயனுள்ளதாக்குகிறோம். இது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றிய ஞானம் உண்டான பின்னர், அவள் மூலமாக நம்பெருமாள் என்ற ஆபரணத்தைப் பெற்று விடுகிறோம்.
படம் – ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)





ஸ்ரீ குணரத்ன கோசம்-31 November 11, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்
பொருள் – மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய். இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான். ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது. ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு, இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே. ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?
விளக்கம் – இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார். இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார். அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு, “இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.
படம் – நம்பெருமாள் என்னும் இரத்தினம் வீசும் ஒளி இந்த வெண்மைதானோ (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம்-30 November 10, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.
பொருள் – மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப்பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது. அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தைவிடத் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம். அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?
விளக்கம் – இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற பல தன்மைகள் நித்யமாக உள்ளன. இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால் ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
இறுதி வரியில் நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர். ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.
படம் – நம்பெருமாளின் க்ரீடத்தில் “இவனே ப்ரஹ்மம்” என்று அறிவிக்கும் விதமாக வைரம் ஒன்று ஜொலிக்கிறது. இவ்விதம் “இவனே ப்ரஹ்மம்” என்று அனைவரும் முழங்க, இவன் ப்ரஹ்மமாக இருப்பதற்கு அவளே காரணம் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-29 November 9, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
தவ ஸ்பர்சாத் ஈசம் ஸ்ப்ருசதி கமலே மங்களபதம்
தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீ: அஸி யத:
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு:
ந ச ஏவந்த்வாத் ஏவம் ஸ்வததே இதி கச்சித் கவயதே
பொருள் – தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு “ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி? உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா? அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது. ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை – ஏனெனில் நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்? ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது. ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல. யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?
விளக்கம் – நம்பெருமாளுக்கு மங்களம் என்பது ஸ்ரீரங்கநாச்சியார் உடன் இருப்பதால் மட்டுமே உண்டாகும். ஆனால் ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் , இயற்கையிலேயே மங்களகரமாக உள்ளாள்.
இவள் அருகில் உள்ளதாலேயே பெரியபெருமாளை ஸ்ரீரங்கநாதன் என்று கூறுகிறோம். இவள் அவன் அருகில் இல்லை என்றால், அவனை “ரங்கநாதன்” என்று மட்டுமே கூறுவோம். ஆக இவளால்தான் அவனது திருநாமத்திற்கும் ஏற்றம் என்று கருத்து.
படம் – இவ்விதம் இவளுடன் அவன் உள்ளதால் ஸ்ரீரங்கநாதன் எனப்படுகிறான் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம்-28 November 8, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ரவதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதிகலு நிஷ்கர்ஷஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம்த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி
பொருள் – சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!
விளக்கம் – இங்கு மிகவும் உயர்ந்த தத்துவமாகிய, “பிராட்டியைக் கொண்டே அவனை அறியவேண்டும்”, என்பதைக் கூறுகிறார். அவனது ஸ்வரூபம் இவ்விதம் என்று இவளே உணர்த்துகிறாள்.
இவள் இல்லாமல் அவனை நிரூபிக்க முடியாது. இதனை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான் ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் – பிரித்து நிலையில்லை (45) என்றும், ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார். இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் – இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.
படம் – தன் மூலமாக நம்பெருமாளை அறிய வைக்கும் ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-27 November 7, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண
வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷா: ஸவயஸ
இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்கபர்த்து: தவச பத
பரீசாரவ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவ ஆவில ஹ்ருதய
ஹாடாத் கார கைங்கர்ய போகா:
பொருள் – அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்யசூரிகள் – உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்; மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்; தங்கள் கோலங்களாலும் செயல்களாலும் உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்; அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்; என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்; உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் – இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.
விளக்கம் – கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல். செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்யசூரிகளும் கர்மவசப்படாமல் இருத்தல்.
படம் – நம்பெருமாளும் ஸ்ரீரங்கநாச்சியாரும் இணைந்து நிற்க, அவர்களுக்கு நடைபெறும் பல உபசாரங்கள் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-26 November 6, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.
பொருள் – தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ? அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர். ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும். இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர். இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய். அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ? அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க – இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?
விளக்கம் – இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார். இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.
படம் – பட்டர் கூறுவது போன்று, உபயநாச்சிமார்களுடன் நம்பெருமாள் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம் -25 November 5, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத்
உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்தபோகம் ததுபரி
நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண
விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ
கஹநாந் தேவி பத்நாஸி போகாந்
பொருள் – இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் – அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது; அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது – இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான். அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான். அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன. இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்? இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய். நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள். இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?
விளக்கம் – ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும். இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.
ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க. ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.
படம் – நம்பெருமாள் இவ்விதம் எழுந்தருள்வதைப் பார்த்தபடி நின்ற நிலையிலேயே பட்டர் இந்த ச்லோகத்தை அருளிச் செய்தார் போலும். ஆதிசேஷன் மீது கம்பீரமாக வரும் நம்பெருமாள் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம் -24 November 4, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி
ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம்
ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித
பரிகரை: பும்பி: ஆநந்த நிக்நை:
ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி:
அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி
யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்
பொருள் – தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில், உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ அதே போன்று கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது. அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது. உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது. உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தபோதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில், சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன. இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும் உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.
படம் – அடியார்கள் சூழ்ந்து நிற்க, நம்பெருமாளின் துணைவி பவனி வரும் காட்சி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம் -23 November 3, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேச்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:
பொருள் – ஸ்ரீரங்கநாதனுடைய பெரியகோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி! நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும் பெயர் கொண்ட நகரத்தை உங்கள் தலைநகரமாகக் கொண்டுள்ளீர்கள். (அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள், அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்). அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் – ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது. அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும், உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர். அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது. இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.
படம் – நம்பெருமாளின் பெரியகோயில் என்னும் ராஜதானியில், பேரரசியாக வீற்றுள்ள ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம் -22 November 2, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசாரகர்மணி ஸதா பச்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேச்வர தேவி கேவலக்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே
பொருள் – ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது. என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள, புண்ணியம் பல செய்தவர்களான நித்யசூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்) உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர். உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம். உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான். ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.
விளக்கம் – இங்கு அனைத்தும் ஸ்ரீரங்கநாச்சியாருக்காவே உள்ளது என்று கூறுகிறார். நாம் அனைவரும் ஸர்வேச்வரனான நம்பெருமாளுக்கு அடிமை என்று பல சாஸ்த்ரங்களும் கூறும்போது, இவ்விதம் பட்டர் உரைப்பது எப்படிப் பொருந்தும்?
இதற்கு நாம் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த முமுக்ஷுப்படியின் 44 – ஆவது சூர்ணையின் மூலம் விடை பெறலாம். அவர் அந்தச் சூர்ணையில் அருளிச் செய்யும் கருத்து – ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது, அந்த ஓலையில் அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை. ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர். இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.
படம் – நம்பெருமாள் போன்றே ஸ்ரீரங்கநாச்சியாரும் குடை என்ன, சாமரம் என்ன, தீபம் என்ன, அரையர் என்ன என்று தன்னுடைய பின்னழகைக் காண்பித்தபடி பவனி வரும் காட்சி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).



ஸ்ரீ குணரத்ன கோசம்-41 November 21, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல
ப்ரேம ஆர்த்ரை: அபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவித அஸ்மாத்ருசை:
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை:
ஐஸ்வர்ய உத்கம கத்கதை: அசரணம் மாம் பாலய ஆலோகிதை:
பொருள் – தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் – ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது; அப்படி, அவனை ழூழ்கடித்துவிட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்கவல்லது; கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது; வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது; இவ்வாறு தோன்றிய ப்ரம்மன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்; தடுமாறியபடிப் பெருகுவதாகும் – தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன். என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.
விளக்கம் – ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழவேண்டும், இன்னார் மீது விழக்கூடாது”, என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது. அளவற்ற ஐச்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது. தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை; அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால், அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.
படம் – கடாக்ஷம் பொங்கும் கனிவான பார்வையுடன் ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம்-40 November 20, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?
பொருள் – ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர். அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது). உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன. இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும். இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?
விளக்கம் – நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன. இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன. ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.
படம் – கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம்-39 November 19, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே
பொருள் – ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய். உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது; அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது. இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன. தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).
விளக்கம் – ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.
படம் – சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும், இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும். ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-38 November 18, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஏகம் ந்யஞ்ச்ய நதிக்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய். மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய். உனது திருக்கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய். இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய். உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் – கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள், கடைப்பார்வை வீசியபடி உள்ளன; இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது. இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.
படம் – இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார். என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?
படம் – திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள காட்சி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம்-37 November 17, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ப்ரணமத் அநுவிதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:
பொருள் – ஸ்ரீரங்கநாயகீ! உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும் பதில் வணக்கம் செய்கிறாய். இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது. உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது. உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது. இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?
விளக்கம் – சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும். இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய். இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
படம் – பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ளதைக் காண்க (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-36 November 16, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை: கும்பத:
க்ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா: மந்யே மஹார்கா: தத:
இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ணநாம்
ஸ்ரீரங்கேச்வரி சாந்த க்ருத்ரிமகதம் திவ்யம் வபு: ந அர்ஹதி
பொருள் – ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் – சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்; சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்; கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்; அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான். இதனால்தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன். இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன. இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா? அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குப் பொருந்துமா?
விளக்கம் – ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனிக்கு பல தன்மைகள் கொடுத்த பின்னர், அந்தப் பொருள்கள் தங்கள் சாறை இழந்தன. ஆயினும் பல கவிஞர்கள், அவற்றை உயர்வாகவே போற்றுவதை முரண்பாடு என்றார்.
இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு. சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால்தான் அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன – என்பதாகும். இவ்விதம் பொருள் கொண்டால் – இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் – என்றாகி விடும் அல்லவா? இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் – சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் – செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி – என்று முடித்தார். ஆக – அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள், தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்கவல்லது அல்ல – என்பதாகும்.
படம் – தெய்வீகமான திருமேனியுடன் கூடிய ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 35 November 15, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
கந கநக யுவதசாம் அபி முக்ததசாம்
யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம்
த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி
பொருள் – தாமரை மலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது. உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது; உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான். உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும் ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன. அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.
விளக்கம் – ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியானது பொன் போன்ற ஒளி உடையது என்பதை ஸ்ரீஸூக்தம் – ஹிரண்ய வர்ணாம் – என்று போற்றியது காண்க.
படம் – பட்டர் கூறுவது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஊஞ்சலில் ஒய்யாரமாக, புன்முறுவல் பூத்தபடி அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-34 November 14, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதிபாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா
பொருள் – ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன – மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் – இரக்கம் நிரம்பிய மனம், ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.
விளக்கம் – இதுவரை நம்பெருமாளுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் பொதுவாக உள்ள குணங்களைக் கூறி வந்தார். இந்தச் ச்லோகத்தில் அவர்கள் இருவருக்கும் உள்ள குண வேறுபாடுகளைக் கூறுகிறார்.
நம்பெருமாள்
1. யாருக்கும் வசப்படாமல் இருத்தல் (அபரவசதா)
2. அடியார்களில் விரோதிகளை அழித்தேனும் காப்பது என்னும் உறுதி
ஸ்ரீரங்கநாச்சியார்
1. நம்பெருமாளுக்கு வசப்படுதல்
2. விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)
படம் – ஒரு சில குணங்களில் மாறுபாடாக உள்ள திவ்ய தம்பதிகள். ஆனால் அடியார்களைப் பொறுத்தவரையில் ஒத்த குணங்கள் கொண்டவர்கள் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம்-33 November 13, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
அந்யே அபி யௌவநமுகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே
பொருள் – ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது. இப்படியாக உனது திருக்கல்யாணகுணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக்கல்யாணகுணங்களை நீயும் கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.
விளக்கம் – இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார். “உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!
படம் – பட்டர் இந்த ச்லோகத்தை அருளிச்செய்தவுடன், ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஒரு சந்தேகம் உண்டாகிவிட்டது. அவள் தனது மனதில், “எல்லோரும் நம்பெருமாள் அத்தனை அழகு என்கிறார்களே. ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர் – என்றாளே. இங்கு நம் பட்டர் அவனது அழகுக்கு ஏற்ற அழகு என்று என்னைக் கூறுகிறாரே. இது உண்மைதானோ?”, என்று எண்ணினாள். அதனால்தான் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாளோ? (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம்-32 November 12, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணதவரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:
பொருள் – ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்; அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது; அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி – ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?
விளக்கம்
  1. பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்
  2. தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன்வயப்படுத்தும் திறன்
  3. ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது
  4. ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்
  5. வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்
  6. ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்
  7. ப்ரணதவரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்
  8. ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்
  9. க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்
படம் – எளியவர்களுக்கு எளியவளாக, அடியார்களை மகிழவைக்க, அவர்கள் கட்டிய ஊஞ்சலில் ஸ்ரீரங்கநாச்சியார் ஆடி மகிழும் காட்சி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர் 




ஸ்ரீ குணரத்ன கோசம்-51 December 1, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச
பொருள் – தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம். உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம். எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில் மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை, “உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம். அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம். இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.
விளக்கம் – சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள் ஸ்ரீரங்கநாயகியான உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார். அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார். இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி, அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.
படம் – நம் வீட்டு மணப்பெண்ணை அழைத்துவரும் மகிழ்ச்சியில் அனைவரும் உள்ளனர் போலும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-50 November 30, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ
பொருள் – தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான். ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது. ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.
விளக்கம் – தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்; ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு, தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.
விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: – எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான். காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: – மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான். ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான். ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல், அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.
படம் – அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம்-49 November 29, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ
பொருள் – பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்தபோது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான். இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய். இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து, வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?
விளக்கம் – தேவர்களுக்காகத் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்தபோது, அதிலிருந்து வெளிவந்த அமிர்தத்தைத் தேவர்கள் எடுத்துக் கொண்டபனர். சந்த்ரனை சிவன் எடுத்துக் கொண்டார். ஐராவதம் என்ற யானையை இந்த்ரன் எடுத்துக் கொண்டான். இவ்விதம் ஏதும் செய்யாமல் நின்ற பலரும், பலவற்றை அடைந்தனர். ஆனால் முழுச்செயலையும் செய்த எம்பெருமான் ஏதும் கிட்டாமல் சோர்வுற்று நின்றான். அப்போது “உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள். இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.
படம் – திருப்பாற்கடலிலிருந்து தோன்றிய வெண்முத்து (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம்-48 November 28, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன் தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான். நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய். அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால், அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?
விளக்கம் – ஸீதை இல்லையென்றால் இராமாவதாரம் சுவைக்காது. ருக்மிணி இல்லையென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது. வாமனனாக வந்தபோதும் தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியைத் தரித்தே வந்தான். வராஹனாக வந்தபோதும் அப்படியே ஆகும்.
படம் – ராமக்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும்போது மட்டும் அல்ல, அர்ச்சாவதாரத்திலும் பெரியபிராட்டியைத் தரித்தே உள்ளான். அதற்கு இந்தப் படமே சான்று (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-47 November 27, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஸாமாந்ய போக்யம் அபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுத ஆதி ரமண: ஸ்வயம் ஏவ பிப்ரத்
தத் பார கேதம் இவ தே பரிஹர்த்து காம:
ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரீ காஹதே த்வாம்
பொருள் – ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தினமணி, வைஜயந்தி என்ற மாலை, ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை) ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும். ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால், உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது என்று கருதினான் போலும். அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.
விளக்கம் – இங்கு அனுபவிக்கிறான் என்று ஏன் கூறினார்? தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட அன்பில் மனம் உருகி நின்றாள். அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் – என்று கருத்து.
படம் – சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கும் நம்பெருமாள் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-46 November 26, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே
ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை:
வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்பலதா யதா
பொருள் – ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில் பல ஆபரணங்கள் – தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி, நவரத்ன மணிகளால் ஆன மாலைகள், அழகிய திருவடிகளில் சிலம்புகள் – என்று பல உள்ளன. அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற சர்க்கரைத் துண்டுகளாகவும், கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.
விளக்கம் – இந்த ச்லோகத்தில், ஸ்ரீரங்கநாச்சியாரின் பல ஆபரணங்களைக் கூறுகிறார். இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க. இதனை இராமாயணத்தில் இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் – அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் – என்பதன் மூலம் உணரலாம்.
படம் – பட்டர் கூறியது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஸ்ரீரங்கநாச்சியார். திருச்செவியில் உள்ள தோடு, “இவளே நம்பெருமாளின் நாயகி”, என்று பறைசாற்றுவது காண்க (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-45 November 25, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி:
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய். இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன. ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய். இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.
விளக்கம் – புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும். இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது. இங்கு இவளுடைய அழகை நம்பெருமாள் முற்றிலுமாக அனுபவிப்பதாகக் கூறுவது காண்க.
தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான். இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.
படம் – இந்தச் ச்லோகத்தில் பட்டர் ஸ்ரீரங்கநாச்சியாரை நம்பெருமாள் அனுபவிப்பதற்கு ஏற்ற மலர்மாலையாகக் கூறினார். இதனைக் கேட்ட நம்பெருமாள், “இதோ சென்று பார்த்து விடுவோம்”, என்று புறப்பட்டுவிட்டான் போலும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம்-44 November 24, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஆமோத அத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத்
ஸௌந்தர்ய அம்ருத ஸேக சீதலம் இதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம்
ஸ்ரீரங்கேச்வரி கோமல அங்க ஸுமந: ஸந்தர்பணம் தேவி தே
காந்தோர: ப்ரதியத்நம் அர்ஹதி கவிம் திக் மாம் அகாண்ட ஆகுலம்
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் – உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்; இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்; உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது; உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது; உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள் அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன – ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய். இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது. ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின் திருமார்பிற்கு, மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?
விளக்கம் – இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன? ச்லோகம் 42ல், மலரின் மகரந்தப்பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார். அதே ச்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல், திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார். இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு, இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் – என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.
படம் – இந்த மாலை பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரோ? (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-43 November 23, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தநயுகம் ந அத்யாபி ந ஆலோகித
ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதி வா நைஸர்கிகத்வ அயச:
ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம்
போகஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:
பொருள் – ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன. இதன் மூலம் நீ உனது யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது. ஆனால் உனது திருக்கண்களின் பார்வை, புருவத்தின் நெறிப்பு, உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை ஆகியவற்றைக் காணும்போது நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது. இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய். ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)? இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக, உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும். இப்படியாக குமரிப்பருவமும், யௌவநப்பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு, மிகுந்த நறுமணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.
விளக்கம் – இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குருபரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார். அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.
படம் – பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தனியே உபதேசிக்கிறான் போலும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-42 November 22, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
பாதாருந்துதமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசா லோகிதை:
அங்கம்லாநி: அத அம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்தக்ரஹ:
டோலாதே வநமாலயா ஹரிபுஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ: அதிகோமலா தநு: இயம் வாசாம் விமர்தக்ஷமா
பொருள் – தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள், உனது திருவடிகளை உறுத்தக்கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய். உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால், உனது மென்மையான திருமேனி, அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது. நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது (தாமரை மலரின் பாரம் தாங்காமல்). உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால், “ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”, என்று சிலர் கூறுகின்றனர். இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக்கூடும் அல்லவோ?
விளக்கம் – நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்? அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான். அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?
படம் – இவளது திருமேனியின் மென்மையைக் கண்ட இவளது தோழிகள், “இத்தனை மென்மையா?” என்று கண் வைத்தாலும், அந்தக் கண்த்ருஷ்டி விழக்கூடாது என த்ருஷ்டி பொட்டுடன் காட்சியளிக்கும் ஸ்ரீரங்கநாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-61 December 11, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ
ஸுஹ்ருத்வர்கேண நிஷ்கண்டகம்
நிர்துக்கம் ஸுஸுகஞ்ச
தாஸ்யரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ
அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ
பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும். அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல், இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும். உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும். உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன் நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும். நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும். நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய். இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.
விளக்கம் – இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்யதம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்; அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார். கத்யத்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.
படம் – சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று, இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளாக் காட்சி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
ஸ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீகுணரத்னகோசம் ஸம்பூர்ணம்
ஸ்ரீரங்கநாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம்
உலகம் உய்ய வந்த எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே தஞ்சம்

ஸ்ரீ குணரத்ன கோசம்-60 December 10, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
1 comment so far
இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து, நு ற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும், உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன் (இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்). எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை. வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.
விளக்கம் – இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும். இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.
படம் – ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்கவேண்டும் என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

ஸ்ரீ குணரத்ன கோசம்-59 December 9, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
dscn6592.jpg
ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ்ஸஹாநி
பத்த்நாமி மூர்க்கசரித: தவ துர்பர: அஸ்மி
பொருள் – தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடையவேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை. இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை. “சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை! இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன். மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன். இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.
விளக்கம் – இந்தச் ச்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான – என்னிடம் எந்த உபாயமும் இல்லை – என்று பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க. மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார். மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.
படம் – பட்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம், “இந்தக் குழந்தையை நீவிர் கரையேற்ற வேண்டும்”, என்று கூறினாள். இதனை ஏற்று நம்பெருமாள், “அப்படியே செய்வோம்”, என்று தனது அபயஹஸ்தத்தைக் காண்பிக்கிறான். இதனைக் கண்டவுடன், அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் தனது மகிழ்ச்சியை, தன்னுடைய ஒளிர்தல் மூலம் உணர்த்துவது காண்க (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-58 December 8, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய். இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே! நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி, நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய். இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.
விளக்கம் – இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் – இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா? நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.
படம் – பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலைதாழ்த்தி அமர்ந்துள்ளதைக் காண்க (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-57 December 7, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஔதார்ய காருணிகதா ஆச்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்), மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா), அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்) ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே! நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்தபோதும் அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர். அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.
விளக்கம் – அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ளவேண்டும் என்று எண்ணி, முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில் இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும். பட்டை தீட்டத்தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?
படம் – வானரர்களுக்கும் அன்பு பொழிந்த சீதை. இவ்விதம் விலங்கு இனத்திற்கும் கருணை செய்து பழகியதால்தான், இன்று நம் போன்று பாவம் செய்தவர்கள் ஸ்ரீரங்கநாச்சியார் முன்பாக நின்றாலும் அவளுக்குக் கோபம் வருவதில்லை போலும்.

ஸ்ரீ குணரத்ன கோசம்-56 December 6, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
ஜநநபவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹுமந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய். நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும், அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய். ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்! அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு, நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .
விளக்கம் – ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்கநாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும். ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.
படம் – பட்டர் இவ்விதம் கூறியதைக் கேட்ட நம்பெருமாள் பட்டரிடம், “ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் அவள் மகிழ்வுடன் இருக்கிறாள் என்று நீவிர் கூறினீர். அது சரியே! ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லையே! இதோ இது போன்று நம் திருமார்பில் உள்ளதால் அல்லவோ மகிழ்வுடன் உள்ளாள்”, என்று கூறியபடி, தன்னுடைய திருமார்பில் உள்ள பதக்கத்தில் அவள் அமர்ந்துள்ளதைக் காண்பிக்கிறான் போலும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-55 December 5, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
add a comment
தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே
பொருள் – தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன, இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக்கல்யாண குணங்கள் என்ன? இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்தபோதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும் உனது காதல் என்னும் பெருவெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?
விளக்கம் – இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும், அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்? அவளது கடைக்கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.
படம் – அவளைப் போன்றே தானும் தோற்றம் அளித்தாலாவது, பட்டர் தன்னை இவ்விதம் புகழ்கிறாரா என்று பார்க்க மோஹினி அலங்காரத்தில் வந்தான் போலும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-54 December 4, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
Tags: 
add a comment
அதிசயிதவாந் ந அப்திம் நாத: மமந்த பபந்த தம்
ஹர தநு: அஸௌ வல்லீ பஞ்சம் பபஞ்ஜ ச மைதிலி
அபி தசமுகீம் லூத்வா ரக்ஷ:கபந்தம் அநர்த்தயந்
கிம் இவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:
பொருள் – தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும், உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்? உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான். உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான். அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான். ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான். பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.
விளக்கம் – இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான். திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான். இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?
படம் – பட்டர் இந்தச் ச்லோகத்தை அருளிச் செய்தவுடன் அவரிடம் ஸ்ரீரங்கநாச்சியார், “குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை. ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும். உங்களுக்காக அவன் என்ன செய்தான்? நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி? இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள். உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான். ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்துதானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்.

ஸ்ரீ குணரத்ன கோசம்-53 December 3, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
Tags: 
1 comment so far
நேது: நித்ய ஸஹாயிநீ ஜநநி ந: த்ராதும் த்வம் அத்ர ஆகதா
லோகே த்வம் மஹிம அவபோத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹு
க்லிஷ்டம் க்ராவஸு மாலதீ ம்ருது பதம் விச்லிஷ்ய வாஸா: வநே
ஜாத: திக் கருணாம் திக் அஸ்து யுவயோ: ஸ்வாதந்த்ர்யம் அத்யங்குசம்
பொருள் – தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும், இந்த உலகத்தில் உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது. இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில் நீ இராமனின் துணைவியாக திருஅவதாரம் செய்தாய். எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய். ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா? மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப்பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய். உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது. இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள கருணையால் அல்லவா நடைபெற்றது. போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி இருக்கும் உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.
இப்படியாக நீ இங்கு வந்து எங்களைக் காக்க வேண்டுமா? இதற்கு நீ என்னிடம்,”இவ்வாறு நான் வரக்கூடாது என்று தடுப்பதற்கு நீ யார்?”, என்று உனது சுதந்திரத்தை முன்னிறுத்திக் கூறுகிறாய். அந்தச் சுதந்திரத்தையும் நான் வெறுக்கிறேன்.
விளக்கம் – தன்னால் ஸ்ரீரங்கநாச்சியார் எத்தனை இன்னல்கள் அனுபவித்தாள் என்று கூறிப் புலம்புகிறார். இத்தனைக்கும் காரணம் அவளது கருணை என்று கூறி, அந்தக் கருணையை தான் வெறுப்பதாகக் கூறுகிறார்.
படம் – அன்று சீதையாக இவள் கானகத்தில் நடந்ததைத் தடுக்க, பராசரபட்டர் இல்லை. ஆனால், அவளது திருவடிகள் அனுபவித்த வேதனைகளை துடைக்க வேண்டும் என்று பட்டர் எண்ணினார் போலும். அதனால்தான் அவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றளவும் இவளது திருவடிகளுக்குப் பட்டுத் தலையணை வைக்கிறார்களோ? இதற்கான விடை பராசரபட்டருக்கே தெரியும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

ஸ்ரீ குணரத்ன கோசம்-52 December 2, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்
Tags: 
add a comment
பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:
பொருள் – அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன், குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய். இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.
விளக்கம் – பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) – தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் – என்பது காண்க. இதன் பொருள் – இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன், அதனை பெரியபிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான். அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார். அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால், அவனே வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்கமாட்டேன் – என்றும், கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.
அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்? அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள். இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.
படம் – பட்டர் கூறியது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம் சிபாரிசு செய்தபடி உள்ளாள் போலும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக