ராதே கிருஷ்ணா 19-12-2015
முக நூல் அன்பர்கள் அனைவருக்கும் 2016 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
முக நூல் அன்பர்கள் அனைவருக்கும் 2016 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2016
01.01.2016 புத்தாண்டு கன்னியா லக்னத்தில் உத்திரம் நட்சத்திரம் சிம்மராசியில் உதயமாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். புதபகவான் லக்னம் மற்றும் பத்தாம் வீட்டுக்கு அதிபதியாவதால், சுபக்கிரகங்கள் கேந்திர வீடுகளுக்கு ஆதிபத்யம் பெற்றால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்கிற ஜோதிடவிதி அடிபட்டு அவர் திரிகோண ராசியில் அமர்ந்து முழுபலத்தையும் பெறுகிறார்.
புதபகவான் திருமாலின் அம்சத்தைப் பெற்றுள்ளதால் அவரே லக்னாதிபதியாக ஆவதால் இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாகக் கழியும். அதுவும் சுக்கிர வாரம் என்கிற மஹாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக் கிழமையில் தொடங்குவதும் மற்றொரு சிறப்பாகும்.
தன பாக்கியாதிபதியான சுக்கிர பகவான் பூர்வபுண்ணிய மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான சனி பகவானுடன் தைரிய ஸ்தானத்தில் இணைந்து பாக்கிய ஸ்தானம் என்கிற தன் ஆட்சி வீட்டைப் பார்வை செய்கிறார். வித்தை, கல்வி, ஞானம், பஞ்சதந்திரம், நுண்ணறிவு, சமயோசிதபுத்தி போன்றவற்றிற்கு புதபகவானே காரகராகிறார்.
இதனால் இந்த ஆண்டு வெளிநாட்டுக் கொள்கையில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். சிறந்த வழக்கறிஞர்களுக்கு புதபகவானின் பலம் இன்றியமையாதது. அதனால் இந்த ஆண்டு நீதி மன்றங்களில் வழக்கறிஞர்கள் சிறப்பான வாதத்தால் மக்களுக்குப் பெரிதும் உதவும் வகையில் தீர்ப்புகள் கிடைக்கும்.
புதபகவானே பத்திரிகைத் தொழில், நவீன தொலைத் தொடர்பு ஆகியவற்றிற்கும் காரகராகிறார். அதனால் இந்தத் துறைகளும் மேன்மையடையும் என்றால் மிகையாகாது.
சுக்கிரபகவானின் துறைகளான கலை, ஓவியம், நடனம், நாடகம், சங்கீதம், வியாபாரம் போன்றவைகளும் சீராக வளர்ச்சியடையும். புத, சுக்கிர பலத்தால் நமது நாட்டின் ஆலோசனைகளை உலகவர்த்தகக்கழகம் ஏற்றுக்கொள்ளும்.
கிரக, களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் விரய ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அவருக்கும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. அவருடன் சந்திரபகவான் இணைந்து இருப்பதால் குருசந்திர யோகமும் உண்டாகிறது.
குருபகவானின் பார்வை தன் ராசியான தனுசு ராசியில் அமர்ந்திருக்கும் விரயாதிபதியான சூரியபகவானின் மீதும் படிகிறது. அதோடு அவர்கள் இருவரும் பரிவர்த்தனை அடைந்திருக்கிறார்கள் என்பதையும் அறியவேண்டும். இதனால் சிவராஜயோகமும் உண்டாகிறது. மக்கள் சரியான தீர்ப்புகளை வழங்குவார்கள். வெளிநாடுவாழ் இந்தியர்களின் ஆதிக்கம் நம்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயரத்தொடங்கும்.
ராகு – கேது பகவான்கள் லக்னம் மற்றும் நட்பு ஸ்தானங்களில் இருக்கிறார்கள். அதேசமயம் அவர்கள் இன்னும் ஒருவாரம் கழித்து அதாவது 08.01.2016 அன்று முறையே சிம்ம, கும்ப ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆவதால் இது ஆறு மற்றும் பன்னிரண்டாம் ராசிகளாக ஆவதால் சர்ப்பக் கிரகங்களுக்கு இது உகந்த ராசிகளாக ஆகிறது என்று கூறவேண்டும்.
முருகப்பெருமானை அதிபதியாகக் கொண்ட அங்காரகபகவான், நவக்கிரகங்களில் தனாதிபதியாகிறார். இவர் குடும்ப ஸ்தானத்தில் சுயசாரத்தில் (சித்திரை நட்சத்திரத்தில்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிகத்தில் ஆட்சியும் பெறுகிறார். இதனால் தைரிய ஸ்தானமும் புதையல் ஸ்தானம் என்கிற எட்டாம் வீடும் வலுப்பெறுகிறது. மேலும் செவ்வாய்பகவானின் பார்வை எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. இதனால் ராணுவம், காவல், விவசாயம், கட்டுமானத் துறைகளும் ஏற்றம் பெறும் என்றால் மிகையாகாது.
08.01.2016 அன்று நண்பகல் 12.37 மணிக்கு மேஷ லக்னத்தில் மூலம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் ராகு- கேது பகவான்கள் கன்னி, மீன ராசிகளைவிட்டு சிம்ம, கும்ப ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.
ராகு – கேது பகவான்கள்:
சராசரியாக ராகு – கேது பகவான்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரிப்பார்கள். நவக்கிரக மண்டலத்தில் ராகுபகவான் தென் துருவத்திலும் கேது பகவான் வடதுருவத்திலும் 180 டிகிரி வித்தியாசத்தில் கிழக்கிலிருந்து மேற்காக அப்பிரதட்சணமாக கிரகமண்டலத்தைச் சுற்றுகிறார்கள்.
அசுரர் தலையுடன் சர்ப்பத்தின் உடலுடனும் காட்சியளிப்பவர் ராகுபகவான். சர்ப்பத்தின் தலையுடன் அசுரரின் உடலுடனும் காட்சியளிப்பவர் கேதுபகவான். ராகுபகவான் தந்தை வழி பாட்டனையும் கேதுபகவான் தாயார் வழி பாட்டனையும் குறிக்கும் காரகத்துவம் கொண்டவர்கள். ராகுபகவானை போக காரகர் என்றும் கேதுபகவானை மோட்ச காரகர் என்றும் அழைப்பார்கள்.
ராகுபகவான் சனிபகவானைப் போலவும் கேதுபகவான் செவ்வாய்பகவானைப் போலவும் பலனளிப்பார்கள் என்றால் மிகையாகாது. இவர்கள் பூர்வஜன்ம வினைப் பயன்களை விட்டுக் கொடுக்காமல் நிழல் போல் தொடர்ந்து கொடுப்பதால் இவர்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று கூறுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக, ராகு – கேது பகவான்கள் 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரிப்பது விசேடமாகும். ராகுபகவானுக்குரிய தலம் திருநாகேஸ்வரமாகும். கேதுபகவானுக்குரிய தலம் கீழப்பெரும்பள்ளமாகும்.
சர்ப்பதோஷம்:
ராகு-கேது பகவான்கள் லக்னம், இரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஐந்தாம் வீடுகளில் இருந்தால் சர்ப்ப தோஷமுண்டாகும். இதனால் திருமணத்தடை, வருமானத்தில் குறைவு, புத்திரபாக்கியத்தில் இடையூறுகள் போன்றவைகள் உண்டாகும்.
காலசர்ப்பயோகம்:
இதை, 1. விலோம காலசர்ப்ப யோகம் அதாவது முன்னால் கேதுபகவான், பின்னால் ராகுபகவான் என்கிற அமைப்பிலும் 2. அனுலோம காலசர்ப்பயோகம் அதாவது முன்னால் ராகுபகவானும் பின்னால் கேதுபகவான் என்கிற அமைப்பிலும் உண்டாகிறது என்று கூறுவர். இத்தகைய அமைப்பில் ராகு- கேது பகவான்களின் பிடிக்குள் அனைத்து கிரகங்களும் லக்னம் உட்பட அகப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு கிரகம் இந்த கட்டுக்குள் இல்லாமல் இருந்து அந்தக் கிரகம் ராகு- கேது பகவான்களின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், அசுவினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் சஞ்சரித்தால் அந்த கிரகம் ராகு, கேது பகவான்களின் பிடிக்குள்ளாகவே அமைந்துள்ளது என்று கொள்ளவேண்டும்.
இந்த இரண்டு அமைப்புகளில் எது சிறந்தது என்று சரியாகக்கூற சான்றுகள் இல்லை என்றே கூறமுடிகிறது. அதனால் இரண்டு அமைப்புகள் உள்ளவர்கள் சர்ப்பசாந்தி செய்து கொள்வது நலம். பெரும்பாலும் இந்த யோக அமைப்பில் உள்ளவர்கள் 32 வயதுக்குப்பிறகே சிறப்புகளைப் பெறுவார்கள் என்றும் கூறுவார்கள்.
காலசர்ப்பயோகம் உள்ளவர்களுக்கு காலசர்ப்பயோகம் உள்ள வரனையோ அல்லது பெண்ணையோதான் திருமணம் செய்ய வேண்டுமா என்கிற கேள்விக்கு இல்லை என்றே பதில் கூறவேண்டும்.
இத்தகையோருக்கு ராகு- கேது பகவான்கள் இருக்கும் இடங்களை பரிசீலித்து சேர்த்தால் மட்டுமே போதுமானது. அதாவது சர்ப்ப தோஷத்திற்கு பொருத்தம் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக