ராதே கிருஷ்ணா 17-07-2015
பகவத்கீதை | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
பகவத்கீதை | |
கீதாச்சாரம்!
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றோருவருடையதாகிறது மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும். - பகவான் கிருஷ்ணர் | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
பகவத்கீதை | |
கீதை அறிமுகம்!
ஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்து, தெரிந்திருக்க வேண்டிய நூல்கள் மூன்று: அவை கடவுளான கிருஷ்ணர் மனிதனான அர்ஜுனனுக்கு கூறிய பகவத்கீதை. மனிதனான மாணிக்கவாசகர் கடவுளான சிவனுக்கு கூறிய திருவாசகம். மனிதனான திருவள்ளுவர் மனிதனுக்கு கூறிய திருக்குறள். இதில் பகவான் கிருஷ்ணர் அருளிய கீதை இந்துக்களின் வேதநூல் ஆகும். பகவத்கீதையை பகவத்கீதா என்று சொல்வதும் வழக்கம். பகவத் என்றால் இறைவன். கீதா என்றால் நல்ல உபதேசம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது தாகீ என்று மாறும். தாகீ என்றால் தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் கீதா விற்குரிய ஆழமான பொருளாகும். கீதையும் 18 அத்தியாயங்களும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது. குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது. மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான். மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும். டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது. அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை. சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும். ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது. தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது. ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு. மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள். கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது. காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும். மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும். நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும். பதினெட்டு அத்தியாயங்களின் தாத்பரியம் என்ன? 1. விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம். 2. சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது. 3. கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம். 4.ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது. 5. சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது. 6.தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. 7. ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது. 8. அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது. 9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி. 10. விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி. 11. விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது. 12. பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது. 13. ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல். 14. குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே. 15. தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது. 16. சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது. 17. சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது. 18.மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது. சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும். பாண்டவர்களுக்குத் துணை போன கிருஷ்ணர் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குரு÷க்ஷத்திரப் போர் ஆரம்பமானது. பகவான் கிருஷ்ணர் அனைவருக்கும் பொதுவானவர். அப்படியிருக்கும் போது பாண்டவர்களுக்குத் துணையாக கிருஷ்ணர் ஏன் இருந்தார்? ஒரு முறை துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா? என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். ஆனால் அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான். யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்; என்றெல்லாம் பலவாறு வருந்தினான். அர்ஜுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு வேதநூல் இருக்கிறது. ஆனால் இந்து மதத்துக்கு மட்டும் பல வேதங்கள், உபநிஷத்கள், சாஸ்திரங்கள் உள்ளன. இருந்தாலும் பகவத்கீதையே அனைத்திலும் உயரிய வேதநூலாக கருதப்படுகிறது. எனவே தான் கீதையை ஐந்தாவது வேதம் என்கின்றனர். பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி. பகவத் கீதைக்கு அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றை ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன. பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள். சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ராமானுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; மத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்குப்பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு டீகா என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய கர்ம யோகம், மகாத்மா காந்தி எழுதிய அநாஸக்தி யோகம், ராஜாஜி எழுதிய கை விளக்கு ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன. கீதையின் பெருமை ஸ்ரீமத்பகவத்கீதை சாட்க்ஷõத் ஸ்ரீபகவானுடைய திருவாய்மொழி. அதன் பெருமை எல்லையற்றது; அளவற்றது. அதை உள்ளபடி வர்ணிக்க யாராலும் முடியாது. ஆதிசேஷன், சிவபெருமான், மஹாகணபதி ஆகியவரும்கூட இதன் பெருமையை முழுமையாகக் கூற முடியாது என்றால் மனிதர்களான நம்மால் மட்டும் எப்படி முடியும். இதிகாசங்களிலும், புராணங்களிலும் ஆங்காங்கு இதன் பெருமையைப் பாடியிருக்கிறார்கள். இப்படி இதுவரை கூறியுள்ள பெருமை அவ்வளவையும் ஒன்று திரட்டினால் கூட அதன் பெருமை இவ்வளவு தான் என்று கூற முடியாமலிருக்க, அதன் பெருமையை முழுமையாகக் கூறிவிட முடியும் என்பது எங்ஙனம் பொருந்தும். கீதை <உயர்ந்த ரஹஸ்யங்கள் பொதிந்த நூல். இதில் எல்லா வேதங்களின் ஸாரமும் திரட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் அமைப்பு எளிமையும், அழகும் பொருந்தியது. சிறிது காலப் பயிற்சியினாலேயே யாரும் இதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இதன் கருத்துக்கள் ஆழம் மிக்கவை; உட்பொருள் பொதிந்தவை. ஒருவர் வாழ்க்கை முழுவதும் இடைவிடாது இதைப் படித்துக் கொண்டே இருந்தாலும் இதை முழுமையாகக் கற்றுத் தேர்ந்துவிட்டதாக நினைக்க முடியாது. நாள்தோறும் புதிய புதிய கருத்துக்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். அதனால் கீதை என்றும் புதிதாகவே திகழ்கிறது. இவ்விதம் ஒரே முனைப்புடன் நம்பிக்கையும், பக்தியும் கொண்டு ஆராய்ந்து கொண்டே இருந்தால், இதனுடைய ஒவ்வொரு சொல்லிலும் நுண்ணிய ரஹஸ்யங்கள் பொங்கி வருவதை நேரிடையாக அனுபவிக்கலாம். பகவானுடைய கல்யாண குணங்கள், ப்ரபாவங்கள், ஸ்வரூபம், தத்வம், ரஹஸ்யம், உபாஸனை, கர்மம், ஞானம் இவற்றைப் பற்றியெல்லாம் கீதாசாஸ்த்ரத்தில் கூறப்பட்டுள்ளவாறு வேறு எந்த ஒரு நூலிலும் ஒருங்கே காண்பது அரிது. பகவத்கீதைக்கு இணையான நூலே கிடையாது. நன்னெறி புகட்டாத ஒரு சொல் கூட கீதையில் கிடையாது. கீதையில் எந்த ஒரு சொல்லும் வெறும் சுவையூட்டுவதற்காக மட்டுமே அமைந்ததில்லை. இதில் வருகின்ற அத்தனை விஷயங்களும் உண்மையானவை. ஸத்ய ஸ்வரூபனான பகவானுடைய பேச்சிலே சுவையைக் கற்பனை செய்து பார்ப்பது அவரது சொல்லை அவமதிப்பது போலாகும். கீதையில் எல்லா சாஸ்த்ரங்களும் அடங்கும். எல்லா சாஸ்த்ரங்களுமே கண்ட முடிவுகளின் ஸாரம் இதில் நிறைந்திருக்கின்றது. எல்லா சாஸ்த்ரங்களுக்கும் இது கருவூலம் என்று சொன்னால் அது மிகையன்று. கீதா சாஸ்த்ரத்தை ஒருவன் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டால் பிற சாஸ்த்ரங்களில் உள்ள தத்துவங்களின் அறிவு, தானே வந்து அமையும். அதற்காகத் தனியாக உழைக்க வேண்டியதில்லை. மஹாபாரதத்தில், ஸர்வஸாஸ்த்ரமயீ கீதா (பிஷ்ம. 43/2) என்று கூறப்படுகிறது. இவ்வளவு சொன்னாலும் போதாது. எல்லா சாஸ்த்ரங்களும் வேதங்களினின்றும் தோன்றியவை. வேதங்கள் ப்ரம்மதேவனின் திருமுகத்திலிருந்து வெளிவந்தவை. அந்த ப்ரம்மதேவன் பகவானுடைய உந்தித்தாமரையில் உதித்தவன். இவ்வாறு சாஸ்த்ரங்களுக்கும், பகவானுக்கும் இடையே மிக அதிகமான இடைவெளி உள்ளது. ஆனால் கீதையோ ஸாக்ஷõத் பகவானுடைய முகத்தாமரையிலிருந்து நேராக வெளி வந்தது. ஆகவே மற்ற சாஸ்த்ரங்களைவிடச் சிறந்தது என்று கூறுவதில் மிகை ஒன்றுமில்லை. பகவான் வேதவ்யாஸரே கூறுகிறார் : கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை: யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா - (மஹா. பீஷ்ம. 43/1) கீதையை நல்ல முறையில் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும், மனனம் செய்ய வேண்டும், மனதில் தரிக்க வேண்டும். கீதை பகவான் பத்மநாபனின் முகத்தாமரையிலிருந்து வெளிவந்தது. எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாஸ்த்ர நூல்கள் எதற்கு? இந்த ச்லோகத்தில் பத்மநாப: என்ற சொல் வருகிறது. எல்லா சாஸ்த்ரங்களுக்கும் ஆணிவேரான வேதங்களைத் தம் முகத்திலிருந்து வெளியிட்ட அந்த ப்ரம்மதேவரே பகவானின் உந்தித்தாமரையிலிருந்து உதித்தவர். அந்த பகவானுடைய திருவாயிலிருந்து வெளி வந்தது கீதை என்பது கருத்து. கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கங்கையில் நீராடுவதற்குப் பயன் முக்தி என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரைக் கரையேற்ற முடியாது. ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தியைப் பெறுவதில்லை. பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான். கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது. ஆனால் கீதை ஸாக்ஷõத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது. கங்கைக்குச் சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தியை அளிக்கிறது. கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது. ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கீதை காயத்ரியை விடச் சிறந்தது. காயத்ரி ஜபம் செய்தால் மனிதன் முக்தி பெறுவான். அது சரிதான். காயத்ரியை ஜபம் செய்பவன் ஒருவன் மட்டுமே முக்தி பெற முடியும். கீதாபாராயணம் செய்பவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவானே! முக்தியை அளிக்கும் பகவானே அவனைச் சார்ந்து விடுகிறான் என்றால் அப்புறம் முக்தியைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? முக்தி அவனுடைய திருவடித் தூசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவன் முக்தியெனும் சத்திரத்தைத் திறந்து விடுகிறான். கீதை பகவானைவிடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது. கிருஷ்ணர்சொல்கிறார். கீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம் கீதாஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம் - (வராஹபுராணம்) (கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதைதான் என்னுடைய சிறந்த வீடு. கீதையின் ஞானத்தைக் கைக்கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்) கீதை-ஒரு அறிமுகம் 1. பிரஸ்தானத்திரயத்தில் ஒன்று ஒவ்வொரு மதத்துக்கும் சாஸ்திரம் இன்றியமையாதது. மதம் மாறிப் போகாதிருப்பதற்கும், மறைந்து போகாதிருப்பதற்கும் சாஸ்திரம் துணைபுரிகிறது. எந்த சமயத்துக்கு சாஸ்திரம் இல்லையோ அது விரைவில் உரு மாறியமைகிறது. பின்பு நிலையற்றதாய் அது அழிந்துபட்டுப் போகிறது. ஆனால் ஒரு நூலை உறுதியான பற்றுக்கோடாகக் கொண்டுள்ள மதம் என்றைக்கும் அசைவற்றிருக்கிறது. எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் அது தாங்கி நின்று மீளுகிறது. உலகத்தில் நீடுழி நிலைத்துள்ள மதங்களுக்கெல்லாம் அதனதன் சாஸ்திரங்கள் உள. இந்து மதத்தில் கணக்கற்ற சாஸ்திரங்கள் இருக்கின்றன. பொதுவாக அவையனைத்துக்கும் வேதங்களே முதற் காரணமானவைகளென்று பகர்வார்கள். வேதங்களில் பல பகுதிகள் மறைந்து போய்விட்டன. ஆனால் வேதங்களினின்று தெள்ளி யெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம். இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது மற்றொரு பெயர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை. உபநிஷதங்களைப் பசுக்கள் என்று வைத்துக் கொண்டால் பகவத்கீதையைப் பால் என்று பகரலாம். நேரே பாலைப் பெற்றுக்கொள்ளும் வசதி வாய்க்கப்பெற்றவர்களுக்குப் பசுவை வளர்க்கும் சிரமம் வேண்டியதில்லை. உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம் என்னும் பெயர்பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள். இம்மூன்றனுள் கருத்து வேற்றுமை கிடையாது. தத்துவ விளக்கம் அல்லது மெய்ப்பொருள் விளக்கம் இவைகளுள் முறையாக அமைந்திருக்கிறது. ஹிந்து மதத்துக்கு சாஸ்திரம் எது என்னும் கேள்வி எழுமிடத்துப் பிரஸ்தானத்திரயம் என்றே பதில் அளிக்கவேண்டும். இவைகளில் அடங்காத தத்துவ விளக்கம் வேறு எந்த நூலிலும் இல்லையென்று உறுதி கூறலாம். மற்ற சாஸ்திரங்களில் சொல்லியுள்ள கோட்பாடுகள் பிரஸ்தானத்திரயத்தில் அடங்கியுள்ள கோட்பாடுகளுக்கு விளக்கமாக வந்து அமையலாம். அப்படியல்லாது முரண்படுபவைகளாக வந்தமையுமானால் முரண்படுகிற மற்ற சாஸ்திரங்களைப் புறக்கணிப்பது இந்தியாவில் தொன்றுதொட்டு நடைமுறையில் வந்துள்ள ஐதிகமாகும். 2. மஹாபாரதத்தில் அடங்கியது பகவத்கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது. பீஷ்மபர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம். ஆக, இதன்கண் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. இவைகளில் அமைந்துள்ள சுலோகங்களின் தொகை எழுநூறு. மஹாபாரதம் என்ற காவியம் முன்பு இயற்றப்பெற்றது என்றும், பகவத்கீதை என்ற சாஸ்திரம் பின்பு அதன்கண் புகுத்தப் பெற்றதென்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால் அகச் சான்று அதற்கு இடம் தருகிறதில்லை. இலக்கிய அமைப்பு பகவத்கீதை உட்பட ஆதியோடந்தம் ஒரே பாங்கில் இருக்கிறது. மொழியமைப்பில் ஒற்றுமையிருப்பது போன்று கருத்து அமைப்பிலும் ஒற்றுமையிருக்கிறது. மஹாபாரதத்தில் அடங்கியுள்ள விஷயங்களைப் பால் என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையில் அடங்கியுள்ள விஷயங்களை வெண்ணெயென்று பாராட்டலாம். மஹாபாரதம் என்னும் உடலுக்கு பகவத்கீதை ஹிருதயமாக அமைந்துள்ளது என்று பகர்வதும் பொருந்தும். உடல் ஒரு காலத்திலும் ஹிருதயம் இன்னொரு காலத்திலும் உண்டானவைகளல்ல. 3. ஸ்ரீ கிருஷ்ணன் சகாயத்தையே பாண்டவர் நாடினர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எவ்விதத்திலும் சமாதானம் உண்டாகவில்லை. முன்னையவர்க்கு உரிய நாட்டில் ஒரு சிறு பகுதியையும் திருப்பித்தரப் பின்னையவர் அறவே மறுத்துவிட்டனர். போர்புரிவதால் விளையும் கேடுகளை எண்ணிப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, சமாதானப்படுத்த வந்த ஸ்ரீகிருஷ்ண பகவான் துவாரகைக்குத் திரும்பிப் போவாராயினர். எனினும், போர் புரிவதைத் தவிர வேறு வழியில்லை. ஸ்ரீ கிருஷ்ணனுடைய சகாயத்தை நாடி இருதரத்தாரும் துவாரகைக்குச் சென்றார்கள். அவர்கள் வரும்பொழுது கண்ணன் கண்வளர்ந்திருந்தார். பாண்டவர்களின் சார்பில் இளையவன் அர்ஜுனன் முதலில் பள்ளியறைக்குள் சென்று கேசவரின் கால்மாட்டில் நின்றுகொண்டிருந்தான். கௌரவர்களுள் மூத்தவன் துர்யோதனன் பின்பு வந்து, தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டான். கண் விழித்ததும் கால்மாட்டில் நின்ற குந்தி மைந்தனைக் கேசவர் பார்த்தார்; பேச்சும் நடந்தது. பாண்டவர்களுக்குத் துணை புரிவதாகப் பகவான் ஒத்துக்கொண்டார். பின்பு துர்யோதனனிடத்திருந்தும் அதே விண்ணப்பம் வந்தது. தாம் ஒரு பக்கம், தமது சேனை யொருபக்கம் சேர்வதாக ஸ்ரீ கிருஷ்ணன் முடிவு கட்டினார். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய சகாயத்தையும், துர்யோதனன் சேனையின் உதவியையும் பொறுக்கி யெடுத்தார்கள். கடவுள் நமக்குத் துணையாயிருக்கும்போது பிரதிகூலமான மற்றவைகள் நமக்கு என்ன கேடு செய்யவல்லது? கடவுள் துணை நமக்கில்லாது போய்விட்டால் அனுகூலமான மற்றவைகள் நமக்கு என்னதான் நன்மை செய்துவிடும்? வாழ்க்கை சம்பந்தமான இரண்டு பெரிய கேள்விகள் இவை. மஹாபாரதப் போராட்டத்தின் முடிவே இவ்விரண்டு கேள்விகளுக்கும் விடை தருகிறது. மேலும், தாம் படையெதையும் எடுத்துப் போர் புரிவதில்லையென்றும், பார்த்தனுக்கு வெறும் தேர் ஓட்டும் தொண்டு புரிதலை மட்டும் வைத்துக்கொள்வதென்றும் கண்ணபிரான் இசைந்திருந்தார். துர்யோதனனுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பவராய் அவர் அங்ஙனம் வாக்குக்கொடுத்தார். அத்தகைய உடன்படிக்கை தங்களுக்கு எல்லா விதத்திலும் அனுகூலமானதென்று துர்யோதனன் எண்ணித் திருப்பினான். கண்ணனுடைய கண்காணிப்பு ஒன்று போதாதா, இனி அச்யுதன் ஆயுதம் வேறு எடுத்து அமர் தொடுத்தல் வேண்டுமா? என்று கௌரவர் கூட்டத்தை நண்ணி நின்ற விவேகியர் சிலர் எண்ணுவாராயினர். 4. இடையறாச் சோதனையே வாழ்க்கை போர்க்களத்துக்குப்போம் பரியந்தம் பதைபதைப்பும் துணிச்சலுமே வடிவெடுத்தவனாயிருந்தான் பார்த்தன். வெஞ்சமரில் விளையும் பயனை அவன் கிளறிப் பார்த்தானில்லை. தன்னை எதிர்க்கத் துணிந்ததன் மூலம் நீதியை எதிர்க்கத் துணிந்த போர் வீரர் யார் என்று பார்க்க அவன் விரும்பினான். போற்றுதற்குரிய பீஷ்மர், துரோணர், பெரும் பகைவனாகிய கர்ணன் ஆகியவர்கள் முன்னிலையிலே ஸாரதி ரதத்தைச் செலுத்தி நிறுத்தினார். வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத சோதனை. முன்பு எத்தனையோ சோதனைகளை அர்ஜுனன் மீண்டிருக்கிறான். இப்பொழுதோ மீள முடியாத நெருக்கடி ஒன்று வந்துள்ளது. போர் புரிவதா, அல்லது புறங்காட்டி ஓடுவதா? எது உசிதமென்று அவனுக்கே விளங்கவில்லை. ஒவ்வொரு மனிதனும் இப்படிச் சோதனைக்கு ஆளாகிறான். கடலில் திரைகள் போன்று வாழ்க்கையில் சோதனைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. மீள முடியாச் சோதனைகள் வருவதும் உண்டு. வாழ்க்கையின் மர்மம் தெரிந்தாலொழிய அவற்றினின்று மீள முடியாது. 5. ரூபகம் கீதையின் முதல் அத்தியாயம் முழுதும் வாழ்க்கைத் தத்துவத்தை ரூபகப்படுத்துகிறது. அவதார புருஷர் ஒவ்வொருவரும் மானுட வாழ்க்கையின் மேலாம் பாங்கை விளக்குதற்கென்றே மண்ணுலகில் வந்தவராவார். ஸ்ரீ கிருஷ்ணனுடைய பூலோக விஜயம் அலாதி மகிமை வாய்க்கப்பெற்றது. நரலோக வாழ்வு என்னும் நாடகத்தின் மூலம் மேலாம் தத்துவத்தையே விளக்க வந்தவர் அவர். குரு÷க்ஷத்திரப் பெரும் போரும், அதில் கலந்து கொண்ட பாத்திரங்களும் மானுட வாழ்வில் அமைந்துள்ள உண்மைகளைத் தெளிவுபடுத்துவனவாகின்றன. மானுட சரீரமே குரு÷க்ஷத்திரம். ஏனென்றால் அது ஒவ்வொரு ஜீவனுக்கும் தர்ம ÷க்ஷத்திரமாகிறது. அவரவர் வினையை நல்வினையாக்குதற்கு உற்ற இடம் உடல். பாண்டவர்கள் நல்ல இயல்பின் பிரதிநிதிகள் ஆவர். கௌரவர்கள் கெட்ட இயல்பின் பிரதிநிதிகள். பாண்டவர் கௌரவர் ஆகிய இருதரத்தாரும் ஒரே ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஜீவனிடத்து நல்லியல்பு, கெட்ட இயல்பு ஆகிய இரண்டும் உண்டு. பாண்டவகௌரவர்கள் தாயாதிகளாயிருப்பது போன்று, ஒரே ஜீவனிடத்திருந்து வந்துள்ள மேலான இயல்பும் கீழான இயல்பும் தாயாதிகளேயாம். பாண்டவர்களைப் போன்று நல்லியல்பு எண்ணிக்கையில் குறைவுபட்டவை. கௌரவர்களைப் போன்று கேடுடைய இயல்பு எண்ணிக்கையில் மிகுந்தவை. அக்ஞானக் குருடனுக்குப் பிள்ளையாகப் பிறந்தவைகள் புல்லிய இயல்புகள். விவேகம் என்னும் வெண்மையினின்று வந்தவைகள் நல்லியல்புகள். உடல் வாழ்வு என்னும் ராஜ்யத்தை இவ்விரண்டு இயல்புகளும் தத்தமக்குச்சொந்தமாக்கிக்கொள்ள முயலுகின்றன. பிரபஞ்சத்திலுள்ள வசதிகளையெல்லாம் கெட்ட இயல்புகள் தமக்கு உரிய சேனைகளாகச் செய்து கொள்கின்றன. நலம், கேடு ஆகிய கிரியைகளையெல்லாம் கடந்தவர் பரமாத்மா. எச்செயலையும் அவர் செய்வது கிடையாது; சாக்ஷி மாத்திரமாயிருப்பவர். அவர் சன்னிதான விசேஷத்தால் இயற்கையின்கண் உள்ள எல்லாச் செயல்களும் நிகழ்கின்றன. தாம் கர்மம் ஒன்றும் செய்யாவிட்டாலும் அவரது அனுக்கிரகம் நல்லார்பால் உளது. ஸ்ரீ கிருஷ்ணனன் பார்த்தனுக்குச் சாரதியாயமைந்ததின் கோட்பாடு இதுவே. எல்லா ஜீவர்களுக்கும் சாரதியாக சர்வேசுவரன் மனத்தகத்து வீற்றிருக்கிறார். அவர் மனச் சாக்ஷியாயிருந்து வாழ்வை ஒழுங்குப்படுத்துவது நல்லார்க்கு விளங்குகிறது. மற்றவர்களுக்கு அது விளங்குவதில்லை. மஹாபாரதம் என்னும் போராட்டத்தில் பெரிய கர்மவீரராயிருந்தவர் ஸ்ரீ கிருஷ்ணன். மற்ற மனிதர்களெல்லாரும் கூடிச் செய்த செயல்கள் அவருடைய கிருத்தியத்தின் காற்பங்கு ஆகா. அத்தனை செயல்களுக்கிடையில் ஒரு செயலிலும் பந்தப்படாதிருத்தவரும் அவரே இதுதான் அவருடைய நரலோக லீலை. இதை மனிதன் தெரிந்துகொண்டால் இவ்வுலகில் மனிதன் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டவன் ஆவான். 6. கிருஷ்ணனது வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டு மனிதன் உலகில் எப்படி வாழவேண்டுமென்று முன்மாதிரியாயிருந்து தங்கள் வாழ்க்கையின் மூலம் புகட்டுதலே அவதார புருஷர்களின் முதற் கடமை. இக்கோட்பாட்டுக்கு மாறுதலாக ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிப் பகர்வார் உளர். ஸ்ரீ ராமன் வாழ்ந்தது போன்று நாம் வாழவேண்டுமென்பதும் ஸ்ரீ கிருஷ்ணன் புகட்டியது போன்று நாம் நடந்துகொள்ள வேண்டுமென்பதும் அவர்களது கொள்கை. ஆனால் இதற்கு ஆதாரமொன்றுமில்லை. ஆயிரக்கணக்கான அரக்கர்களைக் கொன்றது சில அவதார புருஷர்களின் அசாதாரணச் செயல். மக்களுள் சிலர் தீ மீது நடக்கின்றனர். தன் உடல்மீது யானை ஏறி நிற்பதைத் தாங்கும் மனிதன் ஒருவன் இருக்கலாம். இவை மக்களுள் நாம் காணும் அசாதாரணச் செயல்களாம். எல்லாரும் இப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை. பிறகு கிருஷ்ணன் போன்று நாம் ஒழுகலாகாது என்று எதைக் குறித்து இவர்கள் இயம்புகிறார்கள்? கோபியர்கள் பலருக்கு அவன் வல்லபனாயிருந்தது நமக்கு ஒவ்வாது என்பது இவர்கள் கருத்து. தனக்கு வயது பத்து ஆவதற்குள் அவனது பிருந்தாவன விளையாட்டுகள் முடிந்துவிடுகின்றன. பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவன் ஒருவன் எண்ணிக்கையில் அடங்காத பேர்களுடன் தூர்த்தனாய் நடந்துகொள்வது சாத்தியமா? இயற்கை இதற்கு இடந்தருமா? ஆராய்ச்சிக்குரிய இக்கேள்விகளை நன்றாய் அலசிப் பார்க்கவேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஹ்ருஷீகேசன் என்பது ஒரு பெயர். இந்திரியங்களுக்கெல்லாம் ஈசன் என்று அது பொருள்படுகிறது. நாம் இந்திரியங்களுக்கு அடிமை. அவன் இந்திரியங்களுக்கு அதிபதி. உடல் பற்று இருக்கும் வரையில், உடலைத் தான் என்று எண்ணும் வரையில், உடல் ஞாபகம் இருக்கும் வரையில் பராபக்தி வருவதில்லை என்பதே ஸ்ரீ கிருஷ்ணன் கோபியர்களுக்குப் புகட்டிய பாடமாகும். உடல் ஞாபகத்தைக் கடந்து மேலே செல்லுதலே மானுட வாழ்க்கையின் மேலாம் லட்சியமாகும். ஆதரிப்பாரற்ற ஆயிரக்கணக்கான பெண்களுக்குக் கிருஷ்ணன் நாயகனாகிறான். அவர்களை ஆதரிப்பவன் என்றே அது பொருள்படுகிறது. அவர்களுக்கு அவன் மணாளன் என்று உடல் தொடர்வு வைத்துக் கருதுபவர்கள் உண்மையை அறியாதவர்கள். இன்றைக்கு அகதிகளை அரசாங்கம் காப்பது போன்று அன்றைக்கு அவன் அவர்களைக் காத்து வந்தான். அதற்கேற்ற நெருக்கடி அக்காலத்திலும் சமூகத்தில் உண்டாயிற்று. கோபிநாதன் என்பதும் ஜகந்நாதன் என்பதும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு உண்டான மற்ற பெயர்கள். ஜீவர்கள் எல்லாரும் கோபிகளாவர். ஏனென்றால் அவர்கள் பிரகிருதியின் வசப்பட்டுப் பிரகிருதி சொரூபமாயிருக்கிறார்கள். அத்தனை உயிர்களுக்கும் அவன் உயிராயிருக்கிறான். பரம புருஷனை நாயகனாக அறிந்து கொண்டவர்களே உண்மையை அறிந்துகொண்டவர்களாவர். உயிர்களுக்கெல்லாம் சாரதியாக மனத்தகத்து எழுந்தருளியிருக்கும் அதே பரமாத்மா அவர்களுக்கெல்லாம் மணாளனாகவும் மனத்தகத்து வீற்றிருக்கிறான். இக்கோட்பாட்டின் பிரகாரம் ஸ்ரீகிருஷ்ணனுடைய மனைவியர்கள் (ஜீவர்கள்) எண்ணிக்கையில் அடங்கமாட்டார்கள். 7. நர - நாராயணன்: கிருஷ்ணார்ஜுனன் முன்பு ஒரு காலத்தில் நாராயணன் என்றும், நரன் என்றும் பெயர் தாங்கி வந்த இரண்டு ரிஷிகள் துவாபரயுகத்தின் இறுதியில் கிருஷ்ணனாகவும் அர்ஜுனனாகவும் அவதரித்தார்கள் என்னும் கோட்பாடு ஒன்று உண்டு. பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையிலுள்ள தொடர்பை இக்கோட்பாடு விளக்குகிறது. இன்னும் வேறு பாங்குகளிலும் உபநிஷதங்களில் இக்கருத்து விளக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பறவைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தன. ஒன்று தன் மஹிமையில் நிலைபெற்றதாயிருந்தது. மற்றொன்று இனியவையும் இன்னாதவையும் ஆகிய கனிகளை உண்டு இன்ப துன்பத்துக்கு ஆளானது. அது துன்பப்படும்பொழுதெல்லாம் மேலான நிலையிலிருந்த பறவையை நினைந்து அதனருகில் வர முயன்றது. அருகில் வரவர அதன் இன்னல் குறைந்தது. தான் மற்ற பறவையின் தோற்றம் என்று உணர்ந்தது. பிறகு செயலற்ற பறவையில் அது லயமாயிற்று. ஜீவாத்மா நிறைநிலையடைந்து பரமாத்மாவில் லயமாகும் பாங்கு இங்ஙனம் விளக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஏற்பட்ட இணக்கம் இக்கோட்பாட்டை நன்கு தெளிவுபடுத்துகிறது. இருவரும் இணைபிரியாத தோழர்கள். அப்போதைக்கப்போது அர்ஜுனனுக்கு வந்த குறைகளைக் கிருஷ்ணன் அகற்றி வைத்தான். பள்ளியில் பயிற்சி பெற்றபொழுது துணை; விளையாடியபொழுது துணை; போட்டிகள் பல போட்டபொழுது துணை; வனவாசத்தில் வருந்திக்கொண்டிருந்தபொழுது துணை; மணம் புரிந்துகொள்ள விரும்பியபொழுது தன் தங்கையையே மணம் செய்வித்துத் துணை; போர்க்களத்தில் துணை; பிறகு கீதோபதேசம் என்ற ஞானோபதேசம்; இதுவே முடிவான துணை. பல பிறவிகளில் பகவான் மனத்தகத்து வீற்றிருந்து ஜீவர்களுக்கு அப்போதைக்கப்போது தேவையானவைகளைத் தந்தருள்கின்றார். இவையாவையும் வைத்தனுபவித்தான பிறகு வாழ்க்கையில் பெரியதொரு நெருக்கடி வருகிறது. பெற்ற செல்வமும், சுற்றமும், பதவியும், போகமும் அப்பொழுது ஒன்றுக்கும் உதவாதவைகளாகத் தென்படுகின்றன. மனத்தினுள்ளே இருள் சூழ்ந்து விடுகிறது. வாழ்வு வெறும் சூன்யமாய்த் தோன்றுகிறது. ஒவ்வோர் உயிரும் ஒரு காலமல்லாவிட்டால் ஒரு காலத்தில் அத்தகைய சோதனைக்கு ஆளாகவேண்டும். பரஞானம் ஒன்றே அவ்வேளைக்கு உற்ற துணையாகிறது. பரஞானத்தைப் பெற்ற பின்பே வாழ்வின் உட்பொருள் ஜீவனுக்கு உள்ளபடி விளங்குகிறது. கருமத்தின் கதி, ஜீவிதத்தின் பாங்கு, மரணத்தின் அவசியம் ஆகியவைகள் பரஞானம் வருவதற்கு முன்பு விளங்கமாட்டா. பிறவிப் பிணியையும் பிற பிணியையும் வேரறப் போக்கவல்லது பரஞானம். அதைப் பெறுதற்கேற்ற தருணம் வாய்த்தபொழுது பகவான் பரிவுடன் பார்த்தனுக்கு அதைப் பகர்ந்தருளினார். 8. அர்ஜுனன் மக்களின் பிரதிநிதி பாண்டவர் ஐவருள் பகவான் கீதையைப் பார்த்தனுக்கு உபதேசித்தருளியதின் கருத்து யாது? போர் புரிதல் அப்போதைக்கேற்பட்ட அவசரச் செயல் என்றால் அர்ஜுனனைவிட பீமன் அதற்கென்றே துடித்துக்கொண்டிருந்தான், கொஞ்சம் தூண்டியிருந்தால் அவனைக்கொண்டு அக்காரியம் எளிதில் நிறைவேறியிருக்கும். மற்று அமர் புரிதல் அல்ல, அறன் வலியுறுத்தலே அண்ணலின் நோக்கமென்றால் அதற்கேற்றவன் அறக்கடவுளின் வடிவாகிய அண்ணன் யுதிஷ்டிரன். போர் புரிதற்குப் பொருந்தியவன் பீமன், தர்மத்தை உணரத் தகுந்தவன் தர்மராஜா. இவ்விருவரையும் விட்டுவிட்டு, வில்லாளி அர்ஜீனனைப் பொறுக்கி யெடுத்ததில் பொருளொன்றுண்டு. பீமனிடத்திருந்தது முரட்டுத்தனம்; கிட்டத்தட்ட அது விலங்கின் பாங்கு. கீழ்மையே வடிவெடுத்திருப்பவனுக்கு யோக சாஸ்திரம் உதவாது. கீழ்மகன் அதைக் கேட்கவும் மாட்டான், அனுஷ்டிக்கவும் மாட்டான். மூத்தவன் தர்மராஜன் போன்று தெய்வத் தன்மையில் நிலை பெற்றிருப்பவனுக்கு யோக சாஸ்திரம் முற்றிலும் தேவையானதன்று. நூலின் துணையின்றியே அவன் நன்மை கடைப்பிடிக்க வல்லவன். இனி, அர்ஜுனனுடைய பாங்கு இவ்விருவருடைய பாங்குகளுக்கு நடுவில் இருக்கிறது. அவன் விலங்குத் தன்மையைக் கடந்து மேலே வந்துள்ளான். ஆனால் தெய்வத் தன்மையில் இன்னும் அவன் நிலைபெறவில்லை. விலங்குத் தன்மைக்கும் தெய்வத் தன்மைக்கும் இடைநிலையாகிய மனுஷத் தன்மை அர்ஜுனனுக்குச் சொந்தம். நலம், கேடு ஆகிய இரண்டும் மனிதன்பால் கலக்கப் பெற்றிருக்கின்றன. கேட்டைக் களைந்து நலத்தில் நிலை பெற்றிருப்பது மானுட வாழ்க்கையின் குறிக்கோள். கீதா சாஸ்திரம் அதற்கு உற்ற துணையாகிறது. அர்ஜுனன் சாதாரண மனிதரின் பிரதிநிதியாகிறான். அவன் போன்ற மக்கள் எல்லார்க்கும் அது சிறந்த வழிகாட்டியாகிறது. மக்கள் நிலையில் இருப்பார் எல்லாரும் கீதையைக் கற்கவும் அதன்படி நடக்கவும் அதிகாரிகளாகின்றார்கள். 9. ஏன் போர்க்களத்தில் புகட்டப்பட்டது? உயர்ந்த வேதாந்த தத்துவங்களைப் புகட்டுபவை பிரஸ்தானத்திரயம். வேதாந்த ஆராய்ச்சி எப்பொழுதும் விச்ராந்தி அல்லது மன நிம்மதியினின்று வருவதாகும். ஆரண்யங்களில் அமைதியாக இருந்துகொண்டு ஆன்றோர் அத்தகைய பரதத்துவங்களை ஆராய்ந்தனர். உபநிஷதங்கள் எல்லாம் தபோவனங்களினின்று தோன்றியவைகளாம். பின்பு, பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாகிய பகவத்கீதை பிறந்தது ஆரண்யத்திலன்று. அல்லல் நிறைந்த அமர்க்களத்தில் அது உபதேசிக்கப் பெற்றது. அதற்கும் தக்கதொரு காரணமுண்டு. வேதாந்தத்துக்கு சாந்தி பாடம் என்ற ஒரு பெயர் உளது. சாந்தியைப் பெறுதற்கு உற்ற இடம் எது? ஜன சஞ்சாரமில்லாத ஏகாந்தமான இடத்திலும் அதைப் பெறலாம்; பயங்கரமான போர்க்களத்திலும் அதைப் பெறலாம். எல்லாப் படித்தரங்களிலும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாவது வேதாந்தக் கோட்பாடுகளாம். விதவிதமான வினைகளில் ஈடுபட்டிருக்கும் மக்கள் அனைவர்க்கும் அது பயன்படும். வாழ்க்கையை எங்ஙனம் பொருள்படுத்த வேண்டுமென்று கிருஷ்ணன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான். அவன் பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவனாயிருந்தபோது பிருந்தாவனத்தில் லீலைகள் பல விளையாடினான். உலகம் ஒரு விளையாட்டு மேடை; வாழ்வு ஒரு பெரியவிளையாட்டு. அதை நன்கு விளையாடத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவனுடைய வரலாற்றின் முற்பகுதி விளக்குகிறது. விளையாடுவது போன்று வாழ்வை எளிதாக்குபவர்க்கு அது கொண்டாட்டம்; மற்றவர்க்கு அது திண்டாட்டம். இது பிருந்தாவனக் கிருஷ்ணனது செய்தி. வயது வந்த பிறகு அவன் குரு÷க்ஷத்திர கிருஷ்ணன் ஆகிறான். அப்பொழுது வாழ்வை மற்றொரு பாங்கில் அவன் படம் பிடித்துக் காட்டுகிறான். பிரபஞ்ச வாழ்க்கை ஒரு முடிவில்லாத போராட்டம். எதைப் பெற விரும்பினாலும் உயிர்கள் அதன் பொருட்டுப் போராடியாக வேண்டும். போர் புரியத் தெரியாதவர்களுக்கு இவ்வுலகிலும், வேறு எவ்வுலகிலும் ஒன்றும் அகப்படாது. பொருள் ஒன்று வேண்டுமென்று பிள்ளை தாயிடம் அழுகிறது. அது ஒருவிதப் போராட்டம். ஒரு வேலையில் அமரதற் பொருட்டுத் தொழிலாளி தன் வல்லமையைக் காட்டுகிறான். அதுவும் போராட்டமே. சாம்ராஜ்யங்கள் நிறுவுவதும் நடைபெறுவதும் போராட்டத்தின் பயனேயாம். எத்துறையிலாவது மனிதன் சிறிது முன்னேற்றம் அடைந்திருக்கிறான் என்றால், அவன் வெற்றிகரமாகப் போராடிடயருக்கிறான் என்னும் பொருள் அதில் அடங்கியிருக்கிறது. சண்டைகள் பலவற்றைக் கிருஷ்ணன் தானே திறம்படச் செய்து முடித்திருக்கிறான். அவனுடைய ஜீவிதமே போராட்டத்துக்கு எடுத்துக்காட்டு ஆகிறது. யுத்தமயமாயுள்ள வாழ்க்கையில் மனிதன் எத்தகைய பாங்குடன் பிரவேசிக்க வேண்டுமென்று பகவத்கீதை புகட்டுகிறது. வாழ்வு என்னும் போராட்டத்துக்கு மனிதன் தகுதியுடையவன் ஆகவேண்டும். 10. குறித்து வைத்தது யார்? ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் அமர்க்களத்தில் நடந்த பேச்சு இது. ஒரு சபைநடுவில் கற்றவர்களுக்கிடையில் இது நிகழ்ந்ததன்று. இந்த சம்வாதம் நிகழ்ந்தபடியே மற்றவர்களுக்கு எப்படிக் கிட்டியது என்ற கேள்வி எழலாம். அவதார புருஷர் ஒருவர் மண்ணுலகில் வரும்பொழுதெல்லாம் அவரது அற்புதச் சரிதத்தை உள்ளபடி எழுதிவைக்க வல்ல தீர்க்கதரிசி ஒருவர் அவருடன் வருவதுண்டு. ஸ்ரீராம சரிதத்தைக் குறிக்க வால்மீகி வந்தார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் செயல்களை விளக்க வியாசர் வந்தார். அவர் ஞானக்கண் படைத்தவர். ஸ்ரீ கிருஷ்ணன் அருகில் இருந்தாலும் எட்ட இருந்தாலும் அவன் கருத்துக்களை உள்ளபடி தெரிந்துகொள்ளும் ஞானம் வியாசருக்கிருந்தது. வியாசர் அருளால் ஸஞ்ஜயரும் தற்காலிகமாக ஞானக்கண்ணைப் பெற்றிருந்தார். ஆதலால் நிகழ்ந்தவைகளை உள்ளபடி திருதராஷ்டிரருக்கு எடுத்துச் சொல்ல ஸஞ்ஜயருக்கு இயன்றது. ஆக, பகவத்கீதை என்னும் அமிர்தத்தை அர்ஜுனன் நேரில் அருந்திக்கொண்டிருந்த அதே வேளையில் வியாசரும் ஸஞ்ஜயரும் எட்ட இருந்து அருந்தினார்கள். வியாசர் அதை எழுதிவைத்தார்; ஸஞ்சயர் அதை இயம்பிக்கொண்டே போனார். போர் முடிந்த பிறகு ஸஞ்ஜயருக்கு ஓசையை மட்டும் பரப்ப வல்லது; உணர்வு அதனிடத்து இல்லை. ஞானக் கண்ணோ உணர்வை அப்படியே வாங்கவல்லது. மொழியின் துணையிருந்தாலும் இல்லாவிட்டாலும் கருத்தையேற்க ஞானிக்கு முடியும். 11. கொலை நூல் பகவத்கீதையைப் படிக்கலாகாது என்று அதைத் தள்ளி வைப்பர் ஒரு சிலர் உண்டு. எப்படியாவது அர்ஜுனனைப் போரில் புகுத்திவிடவேண்டும். அந்த நெருக்கடிக்கு ஏற்றவாறு ஏதாவது பேசவேண்டிய நிர்ப்பந்தம் வந்திருந்தது. அதையெல்லாம் பகர்ந்து கிருஷ்ணன் காரியத்தை நிறைவேற்றிவிட்டான். முடிவாக நிகழ்ந்தது படுகொலை. பாட்டனாரையும் ஆசாரியரையும் அர்ஜுனன் ஒழித்து விட்டான். கொலைபுரிவது பாதகர்களது பொல்லாத செயல். கொலை மறுத்தல் சமயக்கோட்பாடு. எங்ஙனம் இருளும் வெளிச்சமும் ஒன்று சேரவோ, அங்ஙனம் கொலை செய்தலும் கொலை மறுத்தலும் ஒவ்வா. சமயநெறியைப் பின் பற்றுபவர் கொலை நூலைக் கையால் தொடலாகாது என்பது அவர்களது கோட்பாடு. இனி, கீதா சாஸ்திரம் இக்கோட்பாட்டின் மூலத்தையே துருவி ஆராய்கிறது. இயற்கை முழுதும் ஒரு முடிவில்லாத கொலைக்களம் என்கிறது கீதா சாஸ்திரம். அணுமுதல் அண்டம் வரையில் எங்கும் உயிர் நிறைந்திருக்கிறது. ஒரு துளி ஜலத்தில் எண்ணிறந்த சிற்றுயிர்கள் இருக்கின்றன. நம் அறிவுக்கு அவைகள் சிற்றுயிர். தம் அளவையில் அவைகளும் பேருயிர்களேயாம். நமது மூடிய கைக்குள் அடங்கியிருக்கும் காற்றில் அதே பாங்கில் கணக்கற்ற உயிர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மண்ணினுள் நிறைந்திருப்பதும் உயிர்த் தத்துவம். இவையாவும் ஒன்றையொன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன. வளரும் செடி யொன்றுக்குக் கோடானுகோடி பேக்டீரியா என்னும் உயிர்த் தத்துவங்கள் மண்ணிலிருந்து ஓயாது பலியாகின்றன. உயிர்த் தத்துவம் அடங்கப்பெற்றிருப்பதே உணவு. ஓர் உயிர் மற்றோர் உயிரை வாங்காது வாழமுடியாது. இதுவே இயற்கையின் அமைப்பு. இயற்கையில் எங்குக் கொலைச் செயல் நிகழா திருக்கிறது? பார்க்குமிடமெங்கும் கொலைக்களமே. கண் மூடித்தனத்தை அகற்றிவிட்டுக் கொலைக்களமாக இவ்வுலகைக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர். சிருஷ்டியில் முத்தொழிலும் அடங்கியிருக்கின்றன. ஓர் இடத்தில் சூரியோதயம் என்றால் மற்றோர் இடத்தில் சூரிய அஸ்தமனம். ஓர் இடத்தில் உயிர் பிறக்கிறதென்றால் மற்றோர் இடத்தில் உயிர் இருக்கிறது. உடலை உண்ணுபண்ணுதல் என்றால் உணவை அழித்தல் என்று பொருள்படுகிறது. ஓயாது புதிய உயிர்களாகப் பிறந்துகொண்டிருக்கிற உலகில் அவையாவும் பழைய உயிர்களாக மாறி மடிந்து கொண்டும் இருக்கின்றன. சிருஷ்டிக்கும் சம்ஹாரத்துக்கும் இடைநிலை ஸ்திதி என்று இயம்பப்படுகிறது. ஆக படைத்தல், காத்தல், மறைத்தல் என்ற முச் செயலும் முக்கோணம் போன்று ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. மரணத்தை அறிந்துகொண்டால் மற்ற இரண்டும் எளிதில் விளங்கும். இயற்கையைக் கொலைக்களம் என்று ஒப்புக்கொள்பவர் பிறகு கீதா சாஸ்திரத்தைக் கற்றே ஆகவேண்டும். கொலை மறுக்க விரும்பும் நீ கொலைக்களத்துக்குள் வரலாகாது. அதற்குள் வந்தான பிறகு நீ கொலை செய்யா திருக்கமுடியாது. கோழை போன்று போர்க்களத்தில் தயங்கி நில்லாதே. கோழைக்கு மண்ணுலகும் இல்லை; விண்ணுலகும் இல்லை; எவ்வுலகும் இல்லை. ஆண்மையுடன் எழுந்திரு. வாழ்வு என்னும் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்து. ஆயினும் அதனிடத்துப் பற்றுவைக்காதே. போர் நிலத்தில் நீ பாங்குடன் போர் புரிந்தால், போர் கடந்த பெரு நிலத்தைப் பண்புடன் பெற்றிடுவாய் என்பது கீதையின் கோட்பாடு. ஆக, பகவத்கீதை கொலை நூலே. இயற்கை என்னும் கொலைக்களத்தில் வாழ்வு என்னும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுதற்கு பகவத்கீதை என்னும் கொலை நூலை ஒவ்வொருவனும் கற்றாகவேண்டும். 12. புரட்சி நூல் பகவத் கீதையில் இரண்டு பெரிய குறைபாடுகளை எடுத்துக் காட்டி, அதை சாஸ்திரம் என்று பகர்வது பொருந்தாது என்று அதைத் தாக்குபவர் ஒரு சிலர் இருக்கின்றனர். இவ்வுலகத்தோடு சம்பந்தப்படாத பல கோட்பாடுகள் அதில் இருக்கின்றன. பாஷியக்காரர்களுக்கிடையில் ஓயாத போராட்டத்தை அது உண்டுபண்ணியிருக்கிறது. ஒவ்வொரு மதவாதியும் தன் கொள்கையே பெரியதென்றும், மற்றவர் கொள்கைகள் குறைபட்டவைகளென்றும் சொற்போர் நிகழ்த்துதற்கு பகவத்கீதை காலமெல்லாம் இடம்கொடுத்து வருகிறது. அந்த அளவில்கருத்து உலகில் அது ஓயாது புரட்சியை வளர்த்துக்கொண்டு வருகிறது. கெட்டவர்கள் தோன்றி சமூகத்தில் பெரிய குழப்பத்தைக் கிளப்புதற்குக் கீதை ஆதரவு தருகிறது. வெடிகுண்டு போட முயலுபவர்க்கு அது வெடிமருந்து போன்றது. போற்றுதற்கு உரிய பெரியோர்களைக் கொல்லும்படி அது தூண்டுகிறது. கொல்லுபவன் கொலை பாதகன் அல்லன் என்று அது புகட்டுகிறது. கருமம் மனிதனைப் பந்தப்படுத்தாது என்றும் அது போதிக்கிறது. சூது ஆடுபவரிடத்துக் கிருஷ்ணன் தானே சூதாட்டமாக இருப்பதாகவும் சொல்லுகிறான். இதையெல்லாம் படித்துவிட்டுப் பாமரர் தாறுமாறாக ஒழுக ஆரம்பித்து விட்டால் சமூகத்தின்கதி என்னாவது என்பது கேள்வி. இங்ஙனம் கீதையின்மீது ஆ÷க்ஷபம் கொண்டு வருவார் உளர். பகவத்கீதையில் இத்தகைய குற்றங்கள் இருக்கின்றனவாவென்று வாசகர்கள் கொஞ்சம் அறிந்து கொள்ளுதல் அவசியம். மத ஆசாரியர் ஒவ்வொருவரும் சமூகத்துக்குப் பெருநன்மை செய்தவர் ஆவார். ஒரு மரத்தின் பெருமையை அது தரும் கனியினின்று தெரிந்து கொள்ளலாம். சமய ஆசாரியர்களின் பெருமையை அவர்கள் சமூகத்துக்கு வழங்கியிருக்கும் நல்வாழ்வினின்று ஓரளவு தெரிந்துகொள்ளலாம். மக்களிடத்து அவர்கள் எல்லாரும் பேரன்பு பூண்டவர்கள். சுயநலத்துக்கும் அவர்களுக்கும் வெகுதூரம்; கல்விக்கு அவர்கள் களஞ்சியம்; ஒழுக்கத்துக்கு எடுத்துக்காட்டு. அத்தகையவர்கள் கீதா சாஸ்திரத்தைப் பின்பற்றினார்கள் என்றால் அது கீழ்த்தரமான போதனையுடையதாய் இருக்கமுடியாது. மேலான சம்பிரதாயம் அனைத்துக்கும் அது பிரமாணமாகிறது. இனி, அறிவிலிகள் ஒரு நூலை முறையாக அறிந்து கொள்ள வில்லையானால், அது அந்த நூலின் குற்றமாகாது. அமிர்தத்தை விஷமாக்குவார் உளர். அப்படி அவர்கள் செய்வது அமிர்தத்தின் குற்றமாகாது. தங்கள் கீழான இயல்புக்கு ஏற்றபடி யோக சாஸ்திரத்தைக் கீழ்மக்கள் பொருள்படுத்துவார்களானால் அது அந்த சாஸ்திரத்தின் குற்றமாகாது. பல்லாயிரம் மேன்மக்களுக்குப் பாரமார்த்திகவாழ்க்கைக்கு அது வழிகாட்டியிருக்கிறது. காலமெல்லாம் அச்செயலையே கீதா சாஸ்திரம் செய்ய வல்லது. புலனடக்கமும், பக்தியும், தன்னலத் தியாகமும், தபசும், தொண்டு புரிதலும் இல்லாத கீழ்மக்களுக்கு கீதாசாஸ்திரம் உதவாது என்பது கோட்பாடு. 13. கீதா சாஸ்திரம் புகட்டுவது யாது? அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்றென்றும் தோழன்; அதற்கு மேல் உறவினனும் ஆகிறான். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தின் புறத்தோற்றம் அது. அர்ஜுனனுடைய மனபரிபாகத்துக்கு ஏற்ற உதவியை அப்போதைக்கப்போது கிருஷ்ணன் செய்து வந்தான். நல்ல கல்வி பெறுதல் பயிற்சி பெறுதல், ராஜ்யம் நிறுவுதல், ஆபத்தினின்று தப்பித்துக் கொள்ளுதல், எதிரியினின்று மீளுதல், திரவியம் தேடுதல் இவை போன்ற உலகக் காரியங்கள் அனைத்துக்கும் அவன் சகாயம் செய்துவந்தான். தன் தங்கையையே அர்ஜுனனுக்கு மணம் முடித்துக்கொடுத்தான். இம்மையில் இன்பமூட்டும் இவையாவையும் பிரேயஸ் என்பர் பெரியோர். பல பிறவிகள் எடுத்துப் பிரியமானவைகளைப் பெற்று மகிழ்வுற்றிருக்கின்றனர் ஜீவர்கள். இவையாவையும் உயிர்களுக்கு நல்குபவர் கடவுள். வாழ்க்கையில் பிறகு நெருக்கடி ஒன்று வருகிறது. அர்ஜுனனுக்கு யுத்தம் என்னும் நெருக்கடி வந்தது. யுத்தத்துக்கு அவன் அஞ்சியவன் அல்லன். மகாதேவனையே முன்பு எதிர்த்துப் போர் புரிந்தவன். ஆனால் இந்த நெருக்கடியில் அவனுக்கு மனக்குழப்பம் உண்டாயிற்று. போர்புரிவது சிறந்ததா? எதிர்ப்பவர்க்கு எல்லாம் விட்டுக்கொடுத்து விடுவது சிறந்ததா? செய்வது இன்னதென்று தெரியாது திகைத்தான். அவன் பெற்ற பேறும், புகழும், போகமும் இந்த நெருக்கடியில் பயன்படவில்லை. சுருங்கச் சொன்னால் அவன் பெற்றிருந்த பிரேயஸ் பயன்படாது போய்விட்டது. ஆகவே அச்யுதனிடம் அவன் அடைக்கலம் புகுந்தான். சிஷ்யன் ஆனான்; சிரேயஸைப் புகட்ட வேண்டுமென்று விண்ணப்பித்தான். அர்ஜுனனுக்கு அத்தகைய மனநிலை வரும்வரை கிருஷ்ணன் காத்திருந்தான். ஏனென்றால் தோழமையில் பிரேயசை வழங்கலாம்; சிரேயஸை நல்கலாகாது. சிஷ்யபாவனை வரும் முன்பு சிரேயஸைப் புகட்டினால் அது பயன்தராது. பூமி விதைப்புக்குப் பண்படுவது போன்று அர்ஜுனனுடைய மனது சிரேயஸைப் பெறுதற்கு நன்கு பண்பட்டுள்ளது. அதைக் குறித்து கிருஷ்ணன் பெருமகிழ்வடைகிறான். உள்ளன்போடு சிரேயஸை எடுத்துப் புகட்டுகிறான். யோகமும், பக்தியும், ஞானமும் அடங்கப்பெற்றது சிரேயஸ். அது முக்தி மார்க்கம். பண்பட்ட பூமிக்குள் நல்ல விதையை விதைப்பது போன்று சிறந்த சாஸ்திரம் ஒன்று எப்பொழுதும் எடுத்த எடுப்பிலேயே சிரேயஸின் உட்கருத்தைத் தெளிவுபட உள்ளத்தினுள் புகட்டி வைக்கிறது. பிறகு அதற்கு விளக்கமாக மற்ற பகுதிகள் பின் தொடருகின்றன. சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். தோற்றத்துக்கு அப்பால் இருப்பது பூரணம். தோற்றத்துக்கு வந்திருப்பது பூரணம். பூரணமே யாண்டும் உள்ளது இந்த வாக்கு மூலத்தில் உபநிஷத்தின் உட்கருத்து அனைத்தும் வந்தமைகிறது. பிறகு இதற்கு விளக்கமாக மற்ற பகுதிகள் தொடர்ந்து வருகின்றன. பகவத்கீதையினுடைய போக்கும் இத்தகையதே. முதல் அத்தியாயத்தில், பகவானுடைய பேச்சு ஒன்றும் இல்லை. இரண்டாவது அத்தியாயத்தில், இரண்டாவது, மூன்றாவது சுலோகங்களில் அவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். அதாவது: அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது? பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வைத் துறந்துவிட்டு எழுந்திராய். வாழ்க்கைக்குத் திறவுகோலைக் கிருஷ்ணன் இக்கோட்பாட்டில் கொடுத்து அருளுகிறான். கீதையின் மூலக் கருத்து இதுவேயாம். தொடர்ந்து வருகிற ஒவ்வொரு அத்தியாயமும் இதற்கு ஒவ்வொரு விளக்கமாகிறது. வலிவு படைத்தவனே வாழ்வுக்குரியவன் என்பதை கீதையின் கோட்பாடு. இம்மைக்கும் மறுமைக்கும் உறுதுணையாவது வலிவு. வலிவு உயிரை வளர்க்கிறது; மெலிவு உயிரைத் தேய்க்கிறது. வலிவு நோயை நீக்குகிறது; மெலிவு நோயை வளர்க்கிறது. வலிவு நல்லறத்தையும் நேர்மையையும் நல்குகிறது. மெலிவு மனக்கோணலையும் ஒழுக்கமின்மையையும் யாண்டும் உண்டுபண்ணுகிறது. ஆத்ம போதத்தைப் பெருக்குவது வலிவு; பிரபஞ்ச உணர்ச்சியை ஊட்டுவது மெலிவு. பந்தத்தை மிகைப்படுத்துவது மெலிவு; மோக்ஷத்தை வழங்குவது வலிவு. 14. பகவத்கீதா உபநிஷதம் உபநிஷதங்கள் எல்லாம் நான்கு வேதங்களினின்று வந்தவை. பகவத்கீதையோ மஹாபாரதத்தினின்று வந்தது. ஆயினும் இது உபநிஷதம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் எல்லா உபநிஷதங்களின் சாரம் இதில் இருக்கிறது. உபநிஷதங்களையெல்லாம் பசு என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையை அவை தரும் பால் என்று பகரலாம். பசுக்கள் விதவிதமான நிறமுடையவைகளாக இருக்கின்றன. ஆனால் அவைகளினின்று வரும் பால் வெண்மையானது. பசுவை எல்லோராலும் வளர்க்க முடியாது. அதனின்று பால் கறப்பதும் கஷ்டமானது. பாலை அருந்துவது எல்லார்க்கும் இயலும். பாலினின்று தயிர், வெண்ணெய், நெய் முதலியன செய்துகொள்ளலாம். அங்ஙனம் கீதா சாஸ்திரத்தை இகபரமிரண்டுக்கும் ஏற்ற நல்ல வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம். போகுமிடத்துக்கெல்லாம் பசுவைக் கொண்டுபோக முடியாது. பாலை எங்கு வேண்டுமானாலும் பாதுகாத்து எடுத்துச் செல்லலாம். அதாவது கீதையை நன்றாக அறிந்துகொண்டவர்கள் பிறகு உபநிஷதங்களில் அடங்கியிருக்கும் கோட்பாடு யாதோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. எல்லார்க்கும் எளிதில் விளங்காத உபநிஷதங்களை விளங்கும்படி செய்து வைத்தவன் கிருஷ்ணன். அதற்கு முகாமையாக அமைந்தவன் அர்ஜுனன். கன்றுக்காகப் பசு பால் சுரக்கிறது. பின்பு அது உலகுக்கும் உணவாகப் பயன்படுகிறது. கீதையும் அங்ஙனம் உலகுக்குப் பயன்பட்டு வருகிறது. ஜீரணசக்திக்கு ஏற்ற அளவு பாலை அருந்தலாம். நோயாளிக்கும் ஆரோக்கியவானுக்கும் அது நல்லுணவு ஆகிறது. கீதையை அவரவர் பரிபக்குவத்துக்கு ஏற்ற அளவு பயன்படுத்தலாம். நல்வாழ்வை இன்று புதியதாகத் துவக்குகிற மனிதனுக்கும் அது பயன்படும்; சாதனத்தில் மேலான நிலைக்கு வந்திருப்பவனுக்கும் பயன்படும். கீதையில் அடங்கியில்லாத இகபர தத்துவம் ஒன்றுமில்லை. 15. பிரம்ம வித்தை வித்தைகள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். புதிய புதிய பௌதிக ஞானங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. மனிதனுடைய அறிவு எல்லாத்துறைகளிலும் அதிவேகம் விரி வடைந்து கொண்டே வருகிறது. அதற்கிடையில் மற்றொரு பேருண்மையை மனிதன் உணர்கிறான். புதியதாகப் பெறுகிற இயற்கையின் ஞானம் ஒன்றோ மனிதன் இன்னும் பெறவேண்டிய பகுதி பன்மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஞாபகமூட்டுகிறத. கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பது எல்லார்க்கும் உண்மை. பரந்த அறிவு வரவர, மேலும் அறிய வேண்டியது அகண்டாகாரத்தில் விரிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை உணர்ந்த சான்றோர் கேள்வியொன்று கேட்டனர். எதை அறிந்தால் அறிவு பூர்த்தியாகிறது? எதை அறிந்து கொண்டால் இயற்கையின் மர்மம் முழுதும் விளங்கி விடுகிறது? இந்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அனைத்துக்கும் முதற்காரணம் எது என்பதை அன்னவர் அனுபூதியில் உணர்ந்தனர். மூல தத்துவத்தை அறிந்தபின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை கிடைக்கிறது. மூலப் பொருளைப் பற்றிய வித்தை பிரம்மவித்தை என்ற பெயர் பெற்றிருக்கிறது. வேறு பல பெயர்களைக் கொண்டும் அதை அழைப்பதுண்டு அவைகளுள் பரவித்தை அல்லது பரஞானம் என்பது சர்வ சாதாரணமானது. சமயங்கள் தெய்வத்துக்குக் கொடுத்திருக்கிற பெயரை இந்த ஞானத்துக்கும் கொடுத்துக் கூறுவது இயல்பு. உதாரணம் ஒன்று எடுத்துக் கொள்வோம். சிவஞானம் என்பதும் பரஞானம் என்பதும் வெவ்வேறு ஆகமாட்டா. மெய்ப்பொருளுக்கு விளக்கம் சொல்லுமிடத்து இவையிரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என்பது வெளியாகும். இந்த பிரம்ம வித்தையைப் புகட்டுவது கீதையின் நோக்கமாகும். அர்ஜுனன் கேட்டது போர் புரிவதா, பின் வாங்குவதா என்பதாகும். அதற்கு இரண்டில் ஒன்றை இயம்புதற்குப் பதிலாக, பிரம்ம வித்தையை ஏன் பகவான் எடுத்துக்கொண்டார் என்ற கேள்வி பிறக்கக்கூடும். அப்போதைக்கப்போது உண்டாகும் சந்தேகங்களை அகற்றி வைப்பது ஒருவித உதவியாகும். புதிய சந்தேகம் பிறப்பதற்கு இடமில்லாது ஐயங்கள் அனைத்தையும் அறவே அகற்றிவைப்பது உயர்ந்த உபகாரமாகிறது. ஒரு ஜீவனுக்குக் கொடுக்கும் கொடைகளுள் முடிவானது பிரம்ம ஞானம். ஜீவாத்மா அதை ஏற்க வல்லவனாகும்போது பரமாத்மா அதை எடுத்து உவந்து அளிக்கிறார். 16. யோக சாஸ்திரம் ஒவ்வொரு சாஸ்திரத்திலும் உபபத்தி என்றும் அனுஷ்டானம் என்றும் இரண்டு பகுதிகள் உண்டு. ஆங்கிலத்தில் இவைகளை (தியரி அண்டு பிராக்டீஸ்) என்பார்கள். யுக்தியால் முடிவு கட்டுவது உபபத்தி; நடைமுறையில் செய்துகாட்டுவது அனுஷ்டானம். சாதாரண மனிதன் ஒருவனுக்கு பிரம்மஞானம் வெறும் உபபத்தியாகப் போய்விடலாம். அப்பொழுது அவன் அதில் நன்மையொன்றும் அடையமாட்டான். வாய் வேதாந்தம் என்பது அதுவே. ஆனால் பிரம்மஞானம் வேறு, வாய்ப்பேச்சு வேறு. பிரம்மஞானம் முற்றிலும் வாழ்க்கைக்கு உரியது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் அதை அனுஷ்டானத்துக்குக் கொண்டுவரலாம். ஆகையால் அது யோக சாஸ்திரம் என்னும் பெயர் பெறுகிறது. கூலி வேலை செய்பவனுக்குப் கீதா தத்துவம் தெரிந்திருந்தால் அவன் தன்வேலையைத் திறம்படச் செய்வான். பயிர்த்தொழில் செய்பவனுக்குக் கீதா தத்துவம் தெரிந்திருந்தால் அவன் நல்ல கிருஷிகன் ஆவான். வர்த்தகம் செய்பவனுக்கு இக்கோட்பாடுகள் தெரிந்திருந்தால் அவள் சிறந்த வியாபாரியாவான். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கீதையை நன்கு கற்றறிருந்தால் அவர்களுடைய உத்தியோகம் சீராக நிகழும். பாடம் புகட்டும் ஆசிரியர்கள் கீதையின் கோட்பாடுகளை அறிந்து கொண்டால் அவர்கள் சீரிய ஆசிரியர்கள் ஆவார்கள். சுருக்கிச் சொல்லுமிடத்து கீதையைக் கற்று அனுஷ்டிக்கும் ஒவ்வொரு மனிதனும் மேலான மனிதன் ஆவான். திறமை வாய்க்கப்பெற்ற மனிதனுக்கே யோகி என்று பெயர். கீதையில் பதினெட்டு அத்தியாயங்களுள் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒவ்வொரு யோகம் என்ற பெயர் வந்து அமைகிறது. மனத்தின் பண்பாடு யோகமாகிறது. மனம் தளர் வுறுவார்க்கும் துயருறுவார்க்கும் யோமில்லை என்பது கோட்பாடு. அதாவது வியாகூலமுடையவன் யோகியாகான். பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சாஸ்திரத்தில் அஷ்டாங்கங்களில் ஓர் அங்கமாகிய நியமம் என்னும் பகுதியில் சந்தோஷம் என்பது யோகத்துக்கு இன்றியமையாத கோட்பாடாகும். மனத்தகத்து அமையும் ஆனந்தமும் கொள்ளுதல் வேண்டும். அப்படியானால் கீதையின் முதல் அத்தியாயத்துக்கு யோகம் என்னும் தலைப்புப் பொருந்தாது. அர்ஜுன விஷாதயோகம் என்னும் பெயர் அதற்கு அமைந்துள்ளது. இருளை வெளிச்சம் என்று சொல்லுவது எப்படிப் பொருந்தாதோ அப்படித் துயரத்தை யோகம் என்று அழைப்பது சரியன்று. பின்பு அந்த அத்தியாயத்துக்கு ஏன் யோகம் என்ற பெயர் வந்தது? துயரத்தில் இரண்டு விதம் உண்டு. ஒன்று உலக ஆசையைக் குறித்தது. தனக்கு வந்து அமைந்த போகமும் பொருளும் போதவில்லையென்று துயருறுபவன் உண்டு. அத்தகைய துயரத்தால் ஆண்மை அகன்று அழிகிறது; வீரம் விரயமாய்ப்போகிறது; அக்ஞான இருள் அதிகரிக்கிறது. ஆனால் அர்ஜுனனுக்கு அமர்க்களத்தில் வந்த துயரம் அத்தகையதன்று. அவனுக்கு உலக ஆசை அகன்று ஒழிகிறது. மூவுலகின் ராஜ்யமும் வேண்டாம் என்கிறான். போர் புரிவதா, பின்வாங்குவதா, எது தன் கடமையென்று தனக்குப் புலப்படவில்லையென்று பரிதவிக்கிறான். வாழ்க்கையின் மர்மம் அவனுக்கு விளங்கவில்லை. உயிர்வாழ்க்கை அவனுக்குத் தாங்கமுடியாத தலைச்சுமைபோன்று தென்பட்டது. அதைக் குறித்து அவன் வருந்தினான். அது வாழ்க்கையில் விரக்தி அல்லது பற்றின்மைக்குச் சமானம். அருள்தாகம் என்றும் அதை இயம்பலாம். அர்ஜுனன் அடைந்த துயரம் அவனை யோகத்துக்கு ஆயத்தப்படுத்துகிறது. நல்லறிவும் அறநெறியும் வேண்டுமென்று பரிதாபப்படுபவர் பாக்கியவான்கள்; ஏனென்றால் அன்னவர் அருள்நிலையில் ஆறுதல் அடைவர் என்பது கோட்பாடு. வல்வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே, என்றார் ஆத்ம சாதகர் ஒருவர். இப்பொழுது விஜயனுக்கு வந்துள்ள விசனம் இனி யோகத்தை வருவிப்பதற்கு ஏதுவாகிறது. ஆகவே அந்த விசனமும் ஒருவித யோகம் என்று சொல்லப்படுகிறது. பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம். அந்த நான்கும் முறையே கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பெயர் பெறுகின்றன. இந்த நான்கினுள் ஆரம்பதசையில் இருப்பது கர்மயோகமென்றும், பிறகு அது ராஜயோகமாகப் பரிணமிக்கிறதென்றும், அதினின்று பக்தியோகம் ஓங்கிறதென்றும், இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதிகமாக வந்துள்ளது. கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே அதற்குத் தக்க சான்றாகிறது. நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணபகவான் இந்த நான்கினுள் வேற்றுமையோ தார தம்மியமோ பாராட்டுகிற அறிகுறிகளைக் காணமுடியாது. கர்மத்தோடு உயர்ந்த ஞானத்தை அவர் இணைக்கிறார். பிறகு பக்தியையும் ஞானத்தையும் ஒரே பாங்கில் பொருள்படுத்துகிறார். யோகத்தையும் பக்தியையும் மற்றோர் இடத்தில் ஒன்றுபடுத்துகிறார். இங்ஙனம் ஒரு யோகம் மற்றோன்றுக்கு முந்தியதுமல்ல பிந்தியதுமல்ல, மேலானதுமல்ல கீழானதுமல்ல என்று எடுத்துக்காட்டுவது அவரது சிறப்பியல்பு ஆகும். வாழ்க்கை என்னும் ரதத்துக்கு அவர் நான்கு யோகங்கள் என்னும் நான்கு குதிரைகளைப் பூட்டுகிறார். அவைகள் வெண்குதிரைகளாயிருப்பது அவைகளின் சாத்துவிக இயல்பையும் தூய்மையையும் விளக்குகிறது. ரதத்தை விரைந்து ஓட்டுதற்கு நான்கு குதிரைகளும் சேர்ந்து உழைக்க வேண்டும். அங்ஙனம் நான்கு யோகங்களும் ஏக காலத்தில் சேர்ந்து அனுஷ்டிக்கப்படும்பொழுது வாழ்க்கையின் லட்சியம் இனிது நிறைவேறுகிறது. நான்கு யோகங்களையும் சமரசமாக வழங்குகின்ற அப்பரம புருஷனுக்கு யோகேசுவரன் என்னும் பெயர் வந்துள்ளது. 17. போதனா முறை அவதார புருஷர்கள் எல்லாரும் மக்களுக்குத் தாங்கள் புகட்டியவைகளை மிக எளிய முறையில் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கும், பாமரருக்கும் விளங்கும்வண்ணம் மேலாம் தத்துவங்களைச் சுலபமாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய உபதேசங்களுக்கு வியாக்கியானம் செய்யவேண்டிய அவசியமில்லை. வியாக்கியானம் செய்ய முயன்றவர்கள் தங்களுடைய கொள்கை அவதார புருஷருடைய கூற்றில் அடங்கியிருக்கிறது என்பதைக் காட்டுதற்கே முன்வந்தனர். தர்க்கம் முதலிய உபகரணங்களைக் கையாண்டவர்களும், பாஷ்யக்காரர்களேயாம். ஆனால் அவதார புருஷர்கள் புகட்டியதிலோ தாய் தன் குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போன்று அவ்வளவு இனியதும், எளியதுமான முறையைக் கையாண்டிருக்கின்றனர். ஸ்ரீராமன், புத்தர், ஏசுநாதர் போன்றவர்களுடைய போதனைகளை நாம் உள்ளபடி அறிந்து கொள்ளுதற்கு யாருடைய வியாக்கியானமும் நமக்குத் தேவையில்லை. ஸ்ரீமத் பகவத்கீதையும் போதனா முறையில் மிக எளியதே. மூலத்தை அவரவர்க்குத் தெரிந்த மொழியிலே பெயர்த்தெடுத்துப் படித்துப் பார்த்தால் படிக்கின்றவர்களுக்கு விளங்காத பகுதி மிகக் குறைவு; விளங்குகிற பகுதியே பெரும்பான்மை எனலாம். அது அவ்வளவு எளியதாக இருப்பது மட்டுமல்ல மிக ஆழ்ந்ததாகவும் இருக்கின்றது. பகவத்கீதைக்கு மூலமொழியாகிய சம்ஸ்கிருதத்தில் அமைந்ததே அது ஆழத்தில் செல்லுதற்கு இடங்கொடுத்தது. மொழி அழகானது, விதவிதமான பொருள் அழகாக வடிவெடுக்க வல்லதாக கீதையில் அமைந்திருக்கிறது. விதவிதமான பொருள்களையும் சம்பிரதாயங்களையும் அதில் காணலாம் என்றாலும், அத்தனைவித விளக்கங்கள் ஒன்றோடொன்று முரண்படுபவைகளல்ல. ஆகையால்தான் அது பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது. ஒரு கோட்பாட்டை பகவான் ஓரிடத்தில் பகர்ந்தால் அதன் பொருள் நன்கு விளங்குதற்பொருட்டு வேறு பல இடங்களிலும் வேறு விதங்களில் அதை விளக்குகிறார். சான்றுகள் சில எடுத்துக்கொள்வோம். உயிரோடிருப்பவனைக் குறித்தோ, உயிர் துறந்தவனைக் குறித்தோ பண்டிதன் விசனப்படுவதில்லை என்கிறார் ஓரிடத்தில், ஒரு விதத்தில் பண்டிதன் என்னும் சொல்லுக்கு அது விளக்கமாகிறது. மற்றோர் இடத்தில் சிற்றுயிர் பேருயிர் ஆகிய அனைத்திடத்தும் சமதிருஷ்டி உடையவன் பண்டிதன் என்கிறார். இங்ஙனம் பண்டிதன் என்னும் சொல்லை எங்கெங்கு கையாண்டிருக்கிறார் என்று பார்த்தால் அதற்கு முழு விளக்கம் கிடைக்கின்றது. யோகம் என்னும் சொல்லை அடிக்கடி உபயோகப்படுத்துகின்றார். செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது யோகம் என்ற விளக்கம் ஓரிடத்தில் அமைகிறது. மனம் நடுநிலை வகிப்பது யோகம் என்ற விளக்கம் இன்னோரிடத்தில் வருகிறது. வலிய எடுத்துக்கொண்ட வருத்தங்களினின்று விடுபடுவது யோகம் என்ற விளக்கம் இன்னும் ஓர் இடத்தில் வருகிறது. இவைகளையெல்லாம் திரட்டினால் யோகத்தைப்பற்றிய எல்லாக் கோட்பாடுகளும் நமக்கு விளங்குவனவாகின்றன. புகட்டிய ஒரு கருத்தையே திரும்பவும் அவர் புகட்டுவது போன்று சில இடங்களில் தென்படும். ஆயினும் சொன்னதையே சொல்லுதல் என்னும் குற்றம் அவரைச் சாராது. யோகம் என்னும் சொல் முதல் ஆறு அத்தியாயங்களில் பெரும்பாலும் கரும யோகத்தையே குறிக்கும். இரண்டாவது ஆறு அத்தியாயங்களில் அது சிறப்பாக பக்தியோகத்தைக் குறிக்கும். கடைசி ஆறு அத்தியாயங்களில் அது ஞானயோகத்தைக் குறிக்கும். அஹங்காரம் என்னும் சொல்லும் அங்ஙனமே இடத்துக்கு ஏற்றாற் போன்று விதவிதமாகப் பொருள்படும். ஒரே கோட்பாட்டை கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங்களில் மூன்றுவிதமாகப் பொருள்படுத்தலாம். அப்படிப் பொருள்படுத்துவதும் முற்றிலும் அவசியமாகிறது. ஆத்மா என்னும் சொல் முதல் ஷட்கத்தில் சத் சொரூபமாக வடிவெடுக்கும். இரண்டாவது ஷட்கத்தில் அது ஆனந்த சொரூபமாக அல்லது பிரேமை சொரூபமாக வடிவெடுக்கும். கடைசி ஷட்கத்தில் ஆத்மா சித்சொரூபமாக வடிவெடுக்கும். இவை யாவற்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் பகர்ந்த கோட்பாட்டையே திரும்பவும் பகர்ந்திருக்கின்றார் என்ற குற்றத்தை கீதாசாரியின் மீது நாம் சாட்டமாட்டோம். எதையும் அவர் மிகைபடவோ, குறைவுபடவோ பகரவில்லை. அனைத்தையும் அளந்தெடுத்தே அவர் விளக்கியுள்ளார். 18. சுருதியும் ஸ்மிருதியும் பகவத்கீதைக்கு அமைந்துள்ள தனிச் சிறப்புக்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அது ஏககாலத்தில் சுருதியாகவும் ஸ்மிருதியாகவும் வழங்குகிறது. சுருதி எது, ஸ்மிருதி எது என்று முதலில் ஆராய்வோம். உபநிஷதங்களுக்குச் சுருதி என்று பெயர். கர்ண பரம்பரையாகக் காதால் கேட்டுப் காப்பாற்றி வைக்கப்பட்டது எதுவோ அது சுருதி. நெடுங்காலமாக ஒருவர் பின் ஒருவராகக்கேட்டு வந்தது எனினும் அதன் சொல் அமைப்பை யாரும் மாற்றிவிடவில்லை. ஆகையால் மூலப்பொருளமைப்பும் திரிவுபடாது இருந்து வந்திருக்கிறது. கணிதத்தில் எண்சுவடியையும் பெருக்கல் வாய்ப்பாட்டையும் எப்படி யாரும் மாற்றமுடியாதோ அப்படி சுருதிப்பொருளை யாரும் மாற்ற முடியாது. மெய்ப்பொருளை விளக்குகின்ற சுருதி மொழியும் என்றும் மாறாதிருக்கிறது. ஆக, சுருதி யாண்டும் சாசுவதமானது. ஸ்மிருதி என்பது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டது என்று பொருள்படுகிறது. சமூகவாழ்க்கை சம்பந்தமான கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் சேர்ந்து ஸ்மிருதி என்னும் பெயர் பெறுகிறது. நன்கு அமைக்கப்பெற்ற ஸ்மிருதிகள் எப்பொழுதும் பரதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவைகள். பராசர ஸ்மிருதி, மனுஸ்மிருதி முதலியவைகள் பிரசித்திபெற்றவைகள். ஸ்மிருதிகள் சாசுவதமானவைகளன்று. காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப அவைகள் மாறியமையும். சமூக நடைமுறைகளை நன்கு அறிந்துள்ள மேலோன் ஒருவன், அல்லது மேலோர் கூட்டம் ஒன்று ஸ்மிருதிகளைக் காலத்துக்கு ஏற்றவாறு திருத்தியமைத்துக் கொள்வதுண்டு. சுதந்தர இந்தியாவுக்கு இப்பொழுது இந்திய அரசாங்கம் அமைத்துள்ள சட்டதிட்டங்களையும் ஸ்மிருதியெனலாம். ஆக, ஸ்மிருதி யென்பது அப்போதைக்கப்போது மாறியமையும் தன்மையுள்ள சமூகக்கோட்பாடுகளாம். ஸ்ரீமந் பகவத்கீதையானது ஏககாலத்தில் சுருதியாகவும் ஸ்மிருதியாகவும் அமைந்துள்ளது. பரதத்துவத்தை அது நன்கு விளக்குவதால் அது சுருதியாகிறது. பரதத்துவத்துக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது சநாதன தர்மம். இந்நூலினின்று சநாதனதர்மத்தை உள்ளபடி கற்றுக்கொள்ளலாம். சமுதாய அமைப்பு எத்தகையது என்பதையும், அது எங்ஙனம் நடைபெற வேண்டும் என்பதையும் கீதை எடுத்து விளக்குகிறது. சநாதன தர்மம் யுகதர்மமாக வடிவெடுக்கும் விதத்தையும் அது காட்டிக் கொடுக்கிறது. இதை ஒரு உபமானத்தைக் கொண்டு அறிவது நன்று. பொன் என்றைக்கும் விலையுயர்ந்த பொருள் ஆகிறது. பொற்காசு பெறுகிற முத்திரை ஒவ்வொரு அரசாங்கத்திலும் மாறியமைகிறது. பொன் போன்றது சநாதன தர்மம். பொற்காசு போன்றது யுகதர்மம். இனி, ஸ்மிருதியும் பொற்காசுக்குச் சமானமானது. சாஸ்திரப் பிரமாணங்களைச் சொல்ல வருகிற மத ஸ்தாபகர்கள் ஸ்மிருதியும் அங்ஙனம் பகர்கிறது என்று சொல்லுவார்களானால் அவர்கள் குறிப்பிடுவது பகவத்கீதையாகும். ஆசாரியர்களுக்கிடையில் அது ஸ்மிருதி என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. மற்ற ஸ்மிருதிகள் காலத்துக்கு ஏற்றவாறு மாறியமையும். ஆனால் பகவத்கீதையை மாற்றியமைக்க முடியாது. ஏனென்றால் சமூக நடைமுறையிலும் எக்காலத்துக்கும் பொதுவாயுள்ள கோட்பாடுகள் உண்டு. மாறுபாடு அடையும் உலகில் மாறுபாடு அடையாத கோட்பாடுகளையே கீதா சாஸ்திரம் விளக்குகிறது. ஆகவே இது எக்காலத்துக்கும் எல்லா சமூகங்களுக்கும் உதவுகிற ஸ்மிருதியாகும். கீதையைக் கற்றறிந்தவன் பாரமார்த்திகத் தத்துவங்களையும் வியாவகாரிக தத்துவங்களையும் கற்றறிந்தவன் ஆவான். 19. மஹாவாக்கிய விளக்கம் உலகில் உள்ள சமயங்கள் போற்றும் உயர்ந்த நூல்களெல்லாம் பொது இயல்பு ஒன்றைப் படைத்திருக்கின்றன. நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அவை யாவும் மஹாவாக்கியத்துக்கு விளக்கமாக வந்து அமைந்திருக்கின்றன. மஹாவாக்கியம் என்பது பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்லுகிறது. வேதங்களில் நான்கு மஹாவாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளுள் மிகச் சிறப்புடையது தத் த்வம் அஸி என்னும் மூன்று சொற்களைக் கொண்டது. த்வம்-நீ, தத்-அதுவாக, அஸி-இருக்கிறாய் என்பது அதன்பொருள். ஜீவாத்மாவாகிய நீ பரமாத்மாவாகிய மெய்ப்பொருளுக்கு அன்னியமானவன் அல்லன் என அதற்கு விளக்கம் வருகிறது. இக் கோட்பாட்டை எல்லா சாஸ்திரங்களும் ஏதேனும் ஒரு விதத்தில் இயம்புகின்றன. இதை எடுத்து ஓதாத நூல் உயர்ந்த நூல் ஆகாது. தத் த்வம் அஸி என்னும் மகாவாக்கியத்துக்கு உற்ற உயர்ந்த விளக்கம் என்று பகவத்கீதையைச் சொல்லலாம். அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன. அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடையவேண்டியநிறை நிலை, அதற்காக அவன் எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சி ஆகிய இத்தனையும் முதல் ஆறு அத்தியாயங்களில் அடங்கியிருக்கின்றன. இது முதல் ஷ்டகம். ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம். மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம் அல்லது, பரமாத்மாவை அந்த ஆறு அத்தியாயங்களும் விளக்குகின்றன. உலகனைத்தும் அவர் எப்படியாயிருக்கின்றார், உலகங்களில் அவர் எப்படி அந்தராத்மாவாக இருக்கிறார், பிறகு உலகத்தைக் கடந்தவராகவும் அவர் எப்படி யிருக்கிறார் ஆகிய இவையாவும் இந்த இரண்டாவது பகுதியில் வந்தமைகின்றன. பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது. தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை. அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும் வேறு ஒரு நூல் செய்யக்கிடையாது. ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும். 20. பாஷ்யங்கள் ஒரு நூலின் உட்கருத்து எல்லாருக்கும் விளங்கும்படி அதை விரித்து எடுத்து விளக்குங்கால் அந்த விளக்கத்துக்கு பாஷ்யம் என்று பெயர். ஆழ்ந்த கருத்துடைய நூல்களுக்குப் பாஷ்யங்கள் பல அமைவது இயல்பு. பிரஸ்தானத்திரயமாகிய உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்றுக்கும் பாஷ்யக்காரர் பலர் உளர். ஒரு மதம் அல்லது சம்பிரதாயத்தை நிலைநாட்ட முயலுபவர் தமது கருத்தையே பிரஸ்தானத்திரயம் விளக்குகின்றன வென்று சாஸ்திரப் பிரமாணம் மூலமாகவும் யுக்தி பூர்வமாகவும் எடுத்துக்காட்டுவர். இதுவரையில் தோன்றியுள்ள விரிவுரைகளில் பல அந்தந்த மதக்கோட்பாட்டையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. பிரஸ்தானத்திரத்திலுள்ளும் பகவத் கீதைக்குத்தான் விரிவுரைகள் ஏராளமாயிருக்கின்றன. அதாவது உபநிஷதங்களுக்கும் பிரம்மசூத்திரங்களுக்கும் வியாக்யானங்கள் அமைந்திருப்பதைவிட அதிகமாக பகவத்கீதைக்கு உண்டு. பல மொழிகளில் மொழிபெயர்ப்பு ஏற்பட்டிருப்பது ஒரு நூலின் சிறப்பைக் காட்டுகிறது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது. கிறிஸ்து மத சாஸ்திரமாகிய பைபிள் ஆகும். அப்படி மொழி பெயர்ப்பை உண்டுபண்ணுவதற்குப் பணமும் ஆதிக்கமும் இருந்தால் போதுமானது. கிறிஸ்தவ ஆட்சியில் அவ்விரண்டும் சேர்ந்து அமைந்திருந்தன. ஆனால் கீதைக்கு அமைந்துள்ள மொழிபெயர்ப்புகள் ஆதிக்கத்தையோ பெருஞ் செல்வத்தையோ அடிப்படையாகக் கொண்டவைகளல்ல. இந்த உயர்ந்த கோட்பாடுகளை மக்கள் அறிந்துகொண்டால் அவர்களுக்கு நலன் ஏற்படும் என்ற எண்ணமே மொழிபெயர்ப்பில் மேலோரைத் தூண்டியது. சமயப்பற்றும் சமயப் பிரசாரமும் வேறு; தத்துவ ஞானமும் தத்துவப் பிரசாரமும் வேறு. கீதையின் மொழிபெயர்ப்புகளில் பல, தத்துவ ஞானத்தை ஆதாரமாகக் கொண்டவை என்பதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். ஆங்கில பாஷையில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற ஆங்கில ஆட்சியாளர்களால் செய்யப்பட்டது. அந்த மொழிபெயர்ப்புக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற ஆட்சித் தலைவர் முன்னுரையொன்று கொடுத்திருந்தார். அதில் அவர் பகர்ந்ததின் கருத்து :- இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியா தேசத்தை இழக்க நேரிடலாம். ஆனால் இந்தியாவில் உதித்த இந்த பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து என்றைக்கும் மேன்மையுற்று விளங்கும். வாழ்க்கைத் தத்துவத்தின் பெருமையை உணர்ந்த ஒரு பேரறிஞரே இங்ஙனம் பகரமுடியும். இனி, பகவத்கீதைக்கு வியாக்கியானம் எழுதியவர்கள் எல்லாரும் பணத்தையும் ஆதிக்கத்தையும் ஆதரவாகக் கொண்டவர்கள் அல்லர். குரு÷க்ஷத்திர பூமியில் இப்பொழுது கீதா மந்திரம் என்ற ஒரு ஆலயம் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதே இடத்தில்தான் கீதா உபதேசம் அன்று நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அறிஞர் யூகிக்கின்றனர். அந்த ஆலயத்தில் முந்நூறுக்கு மேற்பட்ட வியாக்கியானங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். அந்த விரிவுரைகளெல்லாம் வெவ்வேறு காலங்களில் எழுதப் பெற்றவை. அப்படி எழுதியவர்களெல்லாம் பேரறிவும் நல்லொழுக்கமும் வாய்க்கப் பெற்றவர்கள். சான்றோருலகில் கீதை எத்தகைய ஸ்தானம் வகித்து வருகிறது என்பதற்கு அதுவே சான்றாகும். அன்றைக்கு இருந்தது போன்று இன்றைக்கும் புதிய புதிய வியாக்கியானங்கள் கீதைக்கு வந்துகொண்டே இருக்கின்றன. 21. சிறந்த பாஷ்யம் எது? நூற்றுக்கணக்கான விரிவுரைகள் கீதைக்கு வந்திருக்கின்றன வென்றால் அவைகளில் எதை ஏற்பது, எதை விலக்குவது, எதைக் கற்பது, எதைத் தள்ளுவது என்ற கேள்விகள் எழலாம். சூரியோதயத்தின் அழகை ஒவ்வொரு கலைஞானியும் தன் தன் துறையில் வைத்து சிலாகித்துப் பேசலாம். வானநூல் துறை, மருத்துவ நூல் துறை, இயற்கையழகுத் துறை, கணித நூல் துறை, ஜோதிட நூல் துறை, பருவ விளக்கத்துறை, உயிர் தத்துவத் துறை இன்னும் என்னென்னவோ துறைகளினின்று உதய சூரியனை வர்ணிக்கலாம். அத்தனைவித வர்ணனைகளுக்கும் ஞாயிறு இடங்கொடுக்கும். கீதாசாஸ்திரமும் எண்ணிறந்த சம்பிரதாயங்களை விளக்குதற்கு ஆதரவாகும். அத்தனை விதமான விளக்கங்களையும் அது தன்னகத்து அடக்கிக்கொண்டிருக்கிறது. அவைகளுக்கெல்லாம் மேலாக கீதைக்கென்றே அமைந்துள்ள வியாக்கியானம் ஒன்று உளது. ஒருவிதத்தில் கீதையைவிட அது சிறந்தது. ஸ்ரீ கிருஷ்ணபகவான் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே அவருடைய கூற்றுக்கு ஒப்பற்ற விளக்கமாகிறது. அவதார புருஷர் ஒருவர் தமது ஜீவிதத்தின் மூலம் புகட்டுவது தான் முதன்மை பெறுகிறது. அவர் பகர்ந்தருள்வது அதற்கு அடுத்தபடியாக வருகிறது. அவதார புருஷருடைய பேச்சுக்கே அருளையும் பொருளையும் தருவது அந்த அவதார புருஷருடைய ஜீவிதம். இக்கோட்பாடு வாசுதேவரது வாழ்க்கையில் உச்ச நிலையைப் பெற்று விளங்குகிறது. மனத்தகத்திருந்து கச்மலத்தைக் களைந்து விடு என்று அவர் புகட்டினார். சூரியனிடத்து எப்படி இருள் இருக்க இடமில்லையோ அப்படி அச்யுதனிடத்துக் கீழ்மை குடிகொள்ள இடமில்லை. ஆற்றல் படைத்தவனாய் எழுந்திராய் என்று இயம்பினார் அவர். பின்பு, ஆற்றல்கள் அனைத்துக்கும் அவரே இருப்பிடமாய் இலங்கினார். உயிர்களிடத்து அன்பு பூண்டு ஒழுகுக என்று அவர் உபதேசித்தார். தாமே அன்பின் வடிவினராய் நன்கு மிளிர்ந்திருந்தார். நலத்தை நிலைநாட்டும் வீரன் ஒருவனுக்கு உற்றார் என்றும் வேற்றார் என்றும் வேற்றுமையில்லையென்று அவர் எடுத்தோதினார். கோவிந்தனது பாங்கும் அங்ஙனமே இருந்தது. இயற்கை கர்மமே வடிவெடுத்தது. அதற்கு ஆதாரமாயிருக்கும் ஆத்மாவின்கண் கர்மமில்லை என்பது கண்ணன் போதனை. கண்ணனாக வடிவெடுத்திருந்த சரீரம் கர்மவீரனாக வினையாற்றியது. மஹாபாரதத்தில் கூடியிருந்த பாத்திரங்கள் எல்லாரும் ஒன்றுகூடிக் கண்ணன் செய்த கர்மத்தில் கால்பங்கு செய்யவில்லை. சரீரம் அவ்வளவு வேலை செய்துகொண்டிருந்ததற்கு இடையில் கிருஷ்ண பரமாத்மா என்றைக்கும் பரமாத்ம சொரூபமாகவே இருந்தார். மற்ற உயிர்கள் போன்று அவர் அழக்கிடையாது; ஏமாற்றம் அடையக்கிடையாது; வியப்படையக்கிடையாது; கவலைப்படக் கிடையாது; துயருறக் கிடையாது. யாண்டும் நிறைநிலையிலேயே இருந்தார். கண்ணனை அறிபவர் கீதையை அறிவார்கள். கண்ணனே கீதைக்குச் சிறந்த பாஷ்யம். 22. பாஷ்யங்களின் பாகுபாடுகள் பாஷ்யங்கள் பல இருப்பதால் அவைகளுள் முரண்பாடு உண்டாவது இயல்பு. மாறுபடுகின்ற கருத்துக்களையெல்லாம் மேலானவைகளாக அங்கீகரிப்பது எங்ஙனம் என்ற கேள்வி எழலாம். மாறுபாடுகளுக்கிடையில் ஒற்றுமை பல அமைந்தாகவேண்டும். பகவத்கீதையை ஒரு நிலைக்கண்ணாடி என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு பாஷியமும் அதில் தோன்றும் பிம்பம் போன்றதாகும். அவரவர் முகம் எப்படியோ அப்படியே பிம்பமும் தென்படுகிறது. கண்ணாடியில் தோன்றுவது என்பது அனைத்துக்கும் பொதுவானது. அங்ஙனம் ஒவ்வொரு கொள்கைக்கும் மூலக்கருத்து கீதையில் இருக்கவேண்டும். மூலக்கருத்து கீதையில் இல்லாவிட்டால் வியாக்யானம் வைதிகத்துக்கு ஒவ்வாததாய்விடும். வைதிகத்துக்கு ஒத்ததாய் இருந்துகொண்டே விரிவுரைகள் பலவாக வடிவெடுப்பதுதான் முறை. ஒருவர் கீதையை முற்றும் பக்திநூல் என்று பகரலாம். இன்னொருவர் அதை ஞானமார்க்கம் என்று நவிலலாம். மற்றொருவர் அதை யோசாஸ்திரம் என்றே எடுத்துக்காட்டலாம். இகலோகத்தைப் பற்றிய பேச்செல்லாம் வெறும் பெயரளவில் என்று ஒருவர் நிரூபிக்கலாம். பரத்தைப்பற்றிப் பேசவேண்டியது அவசியமில்லை; சொற்பதங் கடந்த பொருளைப் பற்றிப் பேச்சு எதற்காக? கீதை பகர்வதெல்லாம் பாரமார்த்திகத்தை அடிப்படையாகக்கொண்ட சீரிய சமுதாய வாழ்க்கையே என்று ஒருவர் எடுத்தோதலாம். அரசியல் தத்துவம் அதில் ஏராளமாய் இருக்கிறது என்று ஒருவர் பொருள்படுத்தலாம். அங்ஙனமே ராணுவ தத்துவம் அதில் பொதிந்து கிடக்கிறது என்று இன்னொருவர் இயம்பலாம். இப்படியெல்லாம் வியாக்யானம் செய்தவர்கள் சிறுபான்மையோர். பாஷ்யக்காரர்களில் பெரும்பான்மையோர் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று மதங்களில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவர்களாயிருந்து வருகின்றனர். அவர்களுடைய மனப்பான்மையும் அதற்கேற்றவாறு மாறியமைகிறது. கீதா தத்துவத்துக்கு அவர்கள் பொருள் தருவதும் அவரவர் மனப்பான்மைக்கு ஏற்றபடி மாறியமைந்து வருகிறது. இனி, அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லார்க்கும் அதில் ஒரே விதமான நம்பிக்கையிருக்கிறது என்று சொல்ல முடியாது. அவர்களது கொள்கையில் உட்பிரிவுகள் ஏராளமாயிருக்கின்றன. எது அத்வைதம் என்பதை அத்வைதிகளே விதவிதமாக விளக்குவார்கள். அதேபாங்கில்தான் விசிஷ்டாத்வைதமும் அமைந்துள்ளது. விசிஷ்டாத்வைதம் என்னும் எல்லைக்குள் இருப்பவர்களுள் கருத்துவேற்றுகளைக் காணலாம். மற்று துவைத மதத்திலும் உட்பிரிவுகளை ஏராளமாகக் காணலாம். அவரவர் கோட்பாட்டைப் பரப்புதற்கென்றே ஒவ்வொருவரும் பாஷ்யம் எழுத முன்வந்தார். அத்வைத சம்பிரதாயத்துக்குச் சிறந்த முன்மாதிரியாயிருப்பவர் ஸ்ரீசங்கராச்சாரியர் ஆவார். விசிஷ்டாத்வைதிகள் அனைவர்க்கும் பிரதிநிதியாயிருப்பவர் ஸ்ரீ ராமானுஜாச்சாரியர். துவைத மதவாதிகள் எல்லார்க்கும் முன்னணியில் இருப்பவர் ஸ்ரீ மத்வாச் சாரியர். பகவத்கீதைக்கு இம்மூவரும் பாஷ்யங்கள் இயற்றியிருக்கின்றனர். இம்மூவரும் தென்னிந்தியாவில் தோன்றியவர்கள் என்பதும் கருத்தில் வைக்கவேண்டிய விஷயமாகும். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்ற மதத்தை அல்லது மதங்களைத்தாக்குவதையும் பாஷ்யங்களில் காணலாம். தத்துவ ஆராய்ச்சி என்ற முறையில் ஒரு கோட்பாட்டைத் தகர்த்தல் நியாயமே. ஆனால் அதில் வரம்பு கடந்து போவது யாருக்குமே பொருந்தாது. அச் செயலில் சில பாஷ்யக்காரர் வரம்பு கடந்தும் போயிருக்கின்றனர். 23. வேதாந்தம் பிரஸ்தானத்திரயம் புகட்டுகின்ற கோட்பாடுகளையெல்லாம் தொகுத்து வேதாந்தம் என்று சொல்லுவது முறை. வேதத்தினுடைய அந்தம் அல்லது முடிவு வேதாந்தம் என்பதாகிறது. இம்மை என்று சொல்லப்படும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும், மறுமை என்று சொல்லப்படும் சுவர்க்கம் முதலிய மறு உலக வாழ்க்கையைப் பற்றியும் பகர்வது வேதம். வேறு ஒரு விதத்தில் அதே கோட்பாட்டைப் பகர்வோமானால் இந்திரியங்கள் மூலம் நுகரப்பரடுகின்ற பிரபஞ்ச வாழ்க்கையைப்பற்றி பேசுவது வேதம். இந்திரியங்களுக்கும் மனதுக்கும் அப்பால் உள்ள பரத்தைப் பற்றிப் புகட்டுவது வேதாந்தம். இந்திரிய வாழ்க்கையைத் தியாகம் செய்தாலொழிய பரம் என்னும் பெருநிலை சித்திக்காது. இந்தியாவிலும் புற நாடுகளிலும் தோன்றியுள்ள எல்லா மதங்களின் அடிப்படைத் தத்துவங்களை வேதாந்தத்தில் காணலாம். வேதாந்தத்தில் இல்லாத கோட்பாடு உலகில் எந்த மதத்திலுமே இல்லையென்று உறுதி கூறலாம். ஆக, மதங்களுக்கெல்லாம் தாய். மதமாயிருப்பது வேதாந்தம். மெய்ப்பொருளுக்குப் பல பெயர் இட்டு அழைப்பதை வேதாந்தம் ஆமோதிக்கிறது. பெயரையும் விளக்கத்தையும் முன்னிட்டுச் சமயங்கள் பெரிதும் சண்டையிட்டுக்கொள்கின்றன. அடிப்படையாயுள்ள கோட்பாட்டைக் காணுமாறு தூண்டுவது வேதாந்தம். தாகத்தைத் தணிப்பது ஜலமா, தண்ணீரா, பானியா, வெள்ளமா என்று வாதாடாதே. ஜலம், தண்ணீர், பானி, வெள்ளம் என்ற சொற்கள் குறிக்கும் பொருள் யாது என்று ஆராய்ந்து பார். பின்பு வேற்றுமையும் வீண் விவாதமும் ஒடுங்கும். மனிதன் அடையும் மேலாம் நிலையை ஐயம் திரிபு இன்றி விளக்குவது வேதாந்தம். இனி துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்களின் உட்கருத்தைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். நமக்குப் புலப்படுவது இவ்வுலகம் அல்லது ஜகத் என்பதாம். இதில வாழ்ந்திருக்கும் உயிர்களுக்கு ஜீவர்கள் என்று பெயர். ஜகத்தையும், ஜீவர்களையும் தாங்கியிருக்கும் பெரிய பொருளுக்குப் பரம் என்று பெயர். அது பேரறிவும் பேராற்றலும் படைத்துள்ளது. உலகனைத்தையும், உயிர்கள் யாவையும் அது யாண்டும் ஆண்டுவருகிறது. ஜகத்தில் கட்டுண்டு கிடக்கும் ஜீவர்கள் எண்ணிறந்த பிறவிகளை எடுக்கின்றனர். பிறவிகள் வாயிலாக அவைகள் மேலான நிலைக்குப் போவதும் உண்டு; கீழான நிலைக்கு இறங்குவதும் உண்டு. புண்ணியம் மேல்நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது; பாபம் கீழ்மையில் ஆழ்த்துகிறது. பரம் அல்லது ஈசுவரனைச் சார்ந்திருந்து ஜகத்தினின்று ஜீவன் விடுதலையடைவது முக்தி. எல்லா உயிர்களும் முக்தி யடையவேண்டும். இக்கோட்பாடு துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் சம்மதம். இனி, மூன்று மதங்களின் தனியியல்புகளை ஆராய்வோம். துவைத மதத்தின்படி ஜகத், ஜீவன், பரம் ஆகிய மூன்றும் அனுதியானவைகள். அவைகளுக்கு முடிவும் இல்லை, துவக்கமும் இல்லை, பரம்பொருள் ஜகத்தையும் ஜீவர்களையும் ஆளுகின்றார். ஆனால் ஜகத்தும் ஜீவனும் யாண்டும் பரத்துக்கு வேறு ஆனவைகள். ஜீவனானது அவருடைய கருணையால் ஜகத்திலிருந்து விடுதலையடைந்து அவருக்குத் தொண்டனாய் ஆட்படுவது முக்தி. முக்தியிலும் பரம் வேறு, ஜீவன் வேறு. விசிஷ்டாத்வைதம் என்பது ஒரு விசேஷத்தோடு கூடிய அத்வைதம். கடவுள் ஒருவர்தான் இருக்கிறார். அவருக்கு உடலாயிருப்பது ஜகத். அந்த உடலில் கணக்கற்ற உயிர்த் தத்துவங்களாயிருப்பது ஜீவன். சூரியனிடத்திருந்து கிரணங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை தோன்றி வருவதுபோன்று ஜீவர்கள் பரமாத்மாவின் கிரணங்கள் ஆகின்றனர். பரமாத்மாவைப் பூரணனென்றும் அதில் தன்னை ஓர் அம்சம் என்றும் ஜீவன் சுவானு பவத்தில் அறிந்துகொள்ளுதல் முக்தி. அதற்கு ஜீவன் தன்னைப் பரமாத்மாவிடத்துப் பிரபத்தி பண்ணவேண்டும். பிரபத்தி என்பதும், சரணாகதி என்பதும், அடைக்கலம் என்பதும் ஒரே கருத்தைக் குறிக்கும் பல சொற்களாம். அவர் அருளால் ஜீவன் தன்னை அவருடைய ஓர் அவயவம் என்று அறிந்திருப்பது முக்தி. அத்வைதம் என்பது இரண்டற்றது எனப் பொருள்படுகிறது. ஜகத் ஜீவன் என்று சொல்லப்படுபவை வேறு, பரம் வேறு அல்ல; உள்ளது ஒரே பொருள். அது அகண்ட சத் சித் ஆனந்தம். தன்னை ஜகத் ஆகவும் ஜீவனாகவும் காட்டிக்கொள்ளுகிற வல்லமை அதனிடத்து உண்டு. அந்த வல்லமைக்கு அதனுடைய மாயா சக்தி என்று பெயர். பிரம்மமும் பிரமத்தினுடைய சக்தியும் இரண்டல்ல. அத்வைதம் என்பதற்கு இரண்டல்ல என்பது பொருள். ஜீவனிடத்துள்ள அக்ஞானத்தால் ஜகத் என்றும் ஜீவன் என்றும் பேதம் அவனுக்குத் தோன்றுகிறது. பிரம்ம ஞானத்தில் பிரம்மம் ஒன்றே யாண்டும் உளது. நதி கடலில் லயமாவது போன்று ஞானமடைந்த ஜீவன் பரத்தில் கலக்கிறான். இது அத்வைதம் புகட்டும் முக்தி. அதை இன்னும் நன்றாகத் தெளிவுபடுத்துமிடத்து, கடலில் தோன்றி, கடலில் நிலைபெற்றிருக்கும் அலையானது, தனது நாம ரூபத்தை அழித்துவிடும்பொழுது பழையபடி கடலாகிவிடுகிறது. அப்படி முக்தி நிலையில் ஜீவன் பரத்தில் ஒன்றுபடுகிறான். சாஸ்திரங்களில் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளுக்கும் இடம் உண்டு. மனிதனுடைய வாழ்க்கையிலேயே இம் மூன்று நிலைகளும் பொருந்திய ஸ்நானங்களைப் பெறுகின்றன. மனிதன் விழித்திருந்து வியவகாரம் பண்ணுகிறான். அது துவைத நிலை. ஆங்குத் தான் வேறு; மற்ற உயிர்கள் வேறு; உலகம் வேறு. பிறகு சொப்பனம் காண்கிறான். சொப்பனத்தில் தென்படும் மனிதர்களும் உலகமும் அவனுடைய மனத்துக்கு அன்னியமானவைகளல்ல. பேதம் போன்று தென்பட்டுக்கொண்டிருக்கும் அபேதநிலை அது. விசிஷ்டாத்வைத நிலையை இது நன்கு விளக்குகிறது. பிறகு சொப்பனமில்லாத அயர்ந்த உறக்கம் வருகிறது. அதில் பிரக்ஞை ஒன்றைத் தவிர பாக்கியெல்லாம் போய்விடுகின்றன. எல்லா அவஸ்தைகளுக்கும் பொதுவாகிய பிரக்ஞை யொன்றே அங்கு மிச்சம். அது அத்வைத நிலையாகும். இந்த மூன்று நிலைகளும் அக்ஞானத்தில் இருப்பது போன்று ஞானத்திலும் வந்து அமைக்கூடியவைகள். இவைகளில் எது பெரியது, எது சிறியது, எது சாதனம், எது சாத்தியம் என்று மதவாதிகள் விரிவாகவும் விதவிதமாகவும் பேசி வருகிறார்கள். 24. கிருஷ்ணனது பான்மை சுருதி என்று சொல்லப்படும் வேதாந்த சாஸ்திரம் கிருஷ்ணனை விளக்க முயலுகிறது. கிருஷ்ணன் என்பதும் பரமாத்மா என்பதும் ஒன்றே. ஒரு தேகத்துக்குள் கட்டுப்பட்டவன்போன்று அவன் தென்படுகிறான். உடைக்குள் கட்டுப்பட்டதுபோன்று நமது உடல் தென்படலாம். ஆனால் உடையிருப்பதாலும் போவதாலும் உடலுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. கண்ணன் காயத்தோடு அங்ஙனம் சம்பந்தப்பட்டவன் போன்று இருந்தான். லோக ஹிதத்தின் பொருட்டு உடல் என்னும் அங்கியை அவன் விளையாட்டுக்காக அணிந்தவன் ஆகிறான். அவன் துவைதியுமல்லன், விசிஷ்டாத்வைதியுமல்லன், அத்வைதியுமல்லன். இம் மூன்று சம்பிரதாயங்களும் அவனுக்குச் சேவை புரிகின்றன. அவனைக் காணவும், உணரவும், இணக்கம் கொள்ளவும் அம் மூன்று மதங்களும் தம்தம் போக்கில் முயலுகின்றன. மூன்று மதங்களையும் அவன் தன்னகத்து அடக்கியிருக்கின்றான்; பிறகு அவைகளுக்கு அப்பாலுமிருக்கிறான். நீ அத்வைதியாயிரு, விசிஷ்டாத்வைதியாயிரு, துவைதியாயிரு என்றெல்லாம் கீதை புகட்டுவதில்லை. ஆத்மபோதம் அடையப்பெற்றவன் ஆவாயாக. உனது பேரியல்பில் நிலைபெற்றிரு. பேராற்றல் படைத்துள்ள நீ கரவாது உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப் பிழைத்திருக்க நீ இந்தப் பூலோகத்துக்கு வந்துள்ளவனல்லன். உலகுக்கும் உனக்கும் தொடர்வுண்டு. அதை நிலைநாட்டுவது யோகம். தூக்கி வினைசெய்து அத்தொடர்வை நிரூபிப்பாயாக. ஆத்ம சொரூபத்தில் அனைத்தையும் அடக்கிக்கொள்வாயாக. மலரானது மணம் வீசுவது போன்று உன் அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும். ஒளிவீடும் ஞாயிறு போன்று உன் அறிவு ஓங்கியிருப்பதாகுக. பிறகு அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மதங்கள் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம சொரூபத்தில் பெறுகின்றன. இங்ஙனம் யோகேசுவரன் உயிர்களை யோகிகள் ஆகும்படி தூண்டுகிறான். ஓரளவில் கண்ணன் காட்டிய வழியையே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பின்பற்றுகிறார். அவர் சமயங்களின் உயர்வு தாழ்வைப் பற்றிக் கவலைப்படவில்லை. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய சம்பிர தாயங்களைப் பற்றியும் அவர் நினைக்கவில்லை. வாழ்வு எவ்வளவு சீரிய வாழ்வாகவேண்டும் என்பதிலேயே அவர் கருத்தைச் செலுத்தினார். அருள் தாகம் பிடித்து அவர் அலைந்து திரிந்தார். உடலைக்கொண்டு அவர் உழைத்ததெல்லாம் தெய்வ வழிபாட்டிற்கென்றே; உள்ளத்தில் அவருக்கு எழுந்த உணர்ச்சி யெல்லாம் இறைவனைப்பற்றியதே. அவருடைய தூய தெய்வீக அன்புக்கு இலக்காகாதது ஒன்றுமில்லை. தெய்வத்தைத் தவிர வேறு எந்த உறவையோ, இணக்கத்தையோ அவர் அறிந்திலார். தெய்வ அருள் ஒன்றே அவர் பெற்ற பேறு. இங்ஙனம் கீதையின் கோட்பாடே வடிவெடுத்தவராய் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்ந்துவந்தார். ஆனால் அவர் கீதையையோ வேறு எந்த சாஸ்திரத்தையோ கற்றது கிடையாது. புத்தகப் படிப்புக்கும் அவருக்கும் வெகுதூரம். பெருவாழ்வினின்று அவர் பெற்ற அனுபவங்களையே அவர் மற்றவர்களுக்குப் பகர்ந்தருளினார். அவருடைய உபதேசங்கள் எங்கெல்லாம் கீதைக்கு ஒத்திருக்கின்றனவோ ஆங்கெல்லாம் அவைகளை நமக்கு எட்டியவளவு கீதையுடன் இணைத்து அமைத்துள்ளோம். அத் துறையில் நாம் செய்துள்ள முயற்சி மிகக் குறைந்தது. அதை இன்னும் விரித்தும் திருத்தியும் அமைக்கலாம் என்பதை வினய பூர்வமான மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆக, எந்த சமயத்தையோ சம்பிரதாயத்தையோ நிலைநாட்டுதற்கு என்று அல்லாது, யோக சாஸ்திரம் என்கிற முறையில் ஸ்ரீமத் பகவத் கீதையை விளக்க ஈண்டு முயன்றுள்ளோம். 25. சொரூப லக்ஷணம் பரம்பொருள் மனம் மொழிக்கு எட்டாதது. அது பிரபஞ்ச மயமாக வடிவெடுக்குமிடத்து அதை ஸத் சித் ஆனந்தம் என்று சொல்லலாம். சொல்லற்கரிய பொருளை ஒரு சொல்லால் விளக்குமிடத்து ஸச்சிதானந்தம் என்பதற்கு நிகரான சொல் வேறு ஒன்றுமில்லை. ஸத் என்னும் சொல் உள்ளது எனப் பொருள்படுகிறது. ஸத்தியம் அல்லது உண்மை அதனிடத்திருந்து வருகிறது. காலத்தால், இடத்தால், செயலால் மாறுபடாதிருப்பது ஸத். காலதேச வர்த்தமானதைக் கடந்திருப்பது பரம்பொருள். அதே ஸத் பொருள் காலத்திலும், இடத்திலும், செயலிலும் தன்னை விளக்கிக் கொண்டிருக்கும்போது எண்ணிறந்த ஜீவகோடிகளாகக் காட்சி கொடுக்கிறது. ஜீவாத்மா தோற்றத்துக்கு வந்துள்ள நிலைமையில் கர்மமும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். சூரியனிடத்து வெப்பமும் வெளிச்சமும் இருப்பது போன்று ஜீவாத்மாவிடம் கர்மமுண்டு. ஆகவே, பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் ஜீவதத்துவத்தையும் கர்மயோக தத்துவத்தையும் சேர்த்தே புகட்டிக்கொண்டு போகின்றன. ஆறாவது அத்தியாயத்தில் உள்ள தியானம் அல்லது எண்ணம் சூக்ஷ்மமான கர்மமாகிறது. இனி, கர்மத்துக்கு அடிப்படையாயிருப்பது சங்கற்பம் அல்லது தீர்மானம். ஆங்கிலத்தில் அதை (வில்) என்று அழைக்கிறோம். கிரியா சக்தி என்பது பரிபாஷையில் அதற்கு அமைந்துள்ள பெயராகும். எல்லாக் கர்மங்களும் வில் அல்லது சங்கற்பத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நடமாட, உண்ண, உறங்க, எழுந்திருக்க மனிதன் முதலில் சங்கற்பிக்கிறான். பிறகு அங்ஙனம் கர்மம் செய்கிறான். சிருஷ்டி முழுதும் சங்கற்பத்திலிருந்து வந்தது. நேராகவோ மறைமுகமாகவோ எல்லா சங்கற்பங்களும் முடிவில் ஒரு சங்கற்பமாய் வடிவெடுக்கின்றது. (வில் டு லைவ்) வாழ விரும்புதல்தான் முடிந்த சங்கற்பம். ஜீவர்கள் எக்கர்மத்தைச் செய்தாலும் அதன் மூலம் வாழ்ந்து நிலைத்திருத்தல் என்பதை நிலைநாட்ட முயலுகின்றனர். அதாவது தங்களது யதார்த்த சொரூபமாகிய ஸத் சொரூபத்தை நிலைநாட்டவே ஜீவகோடிகள் கர்மம் புரிகின்றனர். (காட் இஸ் லைஃப்) என்பது கோட்பாடு ஆத்மாவானது உயிருக்கு உயிர் என்பது அதன் கருத்து. உயிர்களின் நடைமுறை அனைத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். ஆக, கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் ஸத்சொரூபத்தை விளக்குதற்கான சாஸ்திரமாகும். யந்திரங்கள் கர்மம் செய்கின்றன; உயிர்கள் கர்மம் செய்கின்றன-இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசம் யாது? யந்திரங்களிடத்து உணர்ச்சியில்லை; உயிர்களிடத்து உணர்ச்சியுண்டு. உணர்ச்சியும் உயிர்வாழ்க்கையும் இணைபிரியாதவைகள். உணர்ச்சி விதவிதமான வடிவெடுக்கிறது. விருப்பு வெறுப்பு, நட்பு பகை, ஆசை சினம், பொறை பொறாமை, பாராட்டுதல் புறக்கணித்தல் ஆகிய இவையாவும் உணர்ச்சியின் வெவ்வேறு தோற்றங்களாம். விருப்பு, நட்பு, ஆசை, பொறை போன்றவை உடன்பாடான உணர்ச்சிகள். வெறுப்பு, பகை, சினம், பொறாமை போன்றவை எதிர்மறையான உணர்ச்சிகள். உடன்பாட்டு உணர்ச்சிகள் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன. எதிர்மறை உணர்ச்சிகள் வளர்ச்சியைத் தடை செய்கின்றன. இவ்வுணர்ச்சிகள் ஆங்கிலத்தில் (எமோசன்) என்னும் பெயர் பெறுகின்றன. உணர்ச்சியைப் பயன்படுத்துமளவு மனிதன் மேலோன் ஆகிறான். பகவத்கீதையில் ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் வரையில் கடவுள் சொரூபத்தை விளக்குவதோடு பக்தியையும் அப்பகுதி வளர்க்கிறது. தூய உணர்ச்சியின் திரள் பக்தி என்னும் பெயர் பெறுகிறது. கேடுடைய உணர்ச்சிகளெல்லாம் பக்தியில் நலம் வாய்ந்த உணர்ச்சிகளாக மாறுகின்றன. கடவுளுடைய மகிமை விளங்குமளவு அவனிடத்து அன்பு அல்லது பக்தி ஊற்றெடுக்கிறது. ஊசியானது காந்தத்தினிடம் கவரப்படுவது போன்று அன்புடைய உயிர் தெய்வத்தினிடம் கவரப்படுகிறது. (காட் இஸ் லவ்) என்பது கோட்பாடு. அன்பே கடவுள் என்பது அதன் கருத்து. அன்பு என்னும் கவர்ச்சி ஓங்குதற்கு ஏற்ப இனிமை மிளிர்கிறது. அது ஆனந்தமாகப் பரிணமிக்கிறது. ஆனந்தம் வளர வளர அது உலப்பில்லா ஆனந்தமாகிறது. ஆனந்தமே பிரம்மம். பரமாத்மாவின் சொரூபம் ஆனந்தம். இந்த ஆனந்தத்தை நாடியே உயிர்கள் வாழ்க்கையில் பற்றுவைக்கின்றன. ஆனந்தம் இல்லாவிட்டால் உயிர்கள் கணப்பொழுதும் வாழ்ந்திருக்கமாட்டா. ஆக, ஆனந்தம் என்னும் ஆத்மசொரூபத்தை வளர்ப்பது கீதையின் இரண்டாவது ஷட்கத்தின் நோக்கமாகும். ஜடப்பொருள் ஒன்று இருக்கிறது. சேதனப்பொருள் ஒன்று இருக்கிறது. இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்னவென்று அறியவேண்டும். இருக்கிறேன் என்ற அறிவு சேதனப்பொருளுக்கு உண்டு; அந்த அறிவு ஜடத்துக்கு இல்லை. உயிர்களிடத்து உணர்வு இருப்பது போன்று அறிவு இருக்கிறது. சூரியன் இருப்பதை சூரியப்பிரகாசம் காட்டுகிறது. வேறு வெளிச்சத்தின்துணை கொண்டு சூரியனை நாம் அறிவதில்லை. ஜீவன் உயிரோடிருக்கிறான் என்பதற்கு அவனுடைய அறிவே பிரமாணம். ஒவ்வொரு உயிரும் தன்னைத்தான் அறிந்து கொண்டிருக்கிறது. இங்ஙனம் அறியும் தன்மையை ஆங்கிலத்தில் (காக்னிஷன்) என்கிறோம். அறியும் தன்மையில் ஏற்றத் தாழ்வு உண்டு. பேருயிர்கள் நன்கு அறிகின்றன. சிற்றுயிர்கள் மங்கிய அறிவு படைத்திருக்கின்றன. ஆயினும் அறிவு இல்லாத உயிர் இல்லை. அறிவை வளர்ப்பது வாழ்வின் நோக்கம். உணர்வுக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்வு உண்டு. இரும்பை உருக்கினால் அது இளகுகிறது; அத்துடன் ஒளிர்கிறது. இளகும் தன்மை உணர்வுக்கு ஒப்பானது; ஒளிவிடும் தன்மை அறிவுக்கு ஒப்பானது. இந்தச் சான்று ஜடப்பொருளிடத்திருந்து வருகிறது. சேதனப் பொருளாகிய ஜீவாத்மனிடத்து அன்பும் அறிவும் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. இருநண்பர் ஒருவரையொருவர் நேசிக்குமளவு ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்கின்றனர்; ஒருவரையொருவர் அறிந்து கொள்ளுமளவு நேசிக்கின்றனர். கடவுள்பால் அன்பு கொள்ளுமளவு பக்தன் கடவுளை அறிகிறான். அவரை அறியுமளவு அவனுக்குப் பக்தி அதிகரிக்கிறது. இக்கோட்பாட்டை வாழ்க்கையில் எல்லாப் படித்தரங்களிலும் காணலாம். அறிவு, ஞானம், சேதனம், பிரக்ஞை இவையாவும் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள். ஞானத்தை வளர்ப்பதற்கான வழிகளை பகவத்கீதையில் பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாவது அத்தியாயம் வரையில் காணலாம். எரியும் விளக்கு ஒன்று அதிகம் சுடர்விடுமானால் அது தன்னையும் தன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களையும் நன்றாக விளக்கிக்காட்டும். அந்த விளக்கைக் காத்துவரும் கண்ணாடிக் கூண்டு ஒன்று இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அழுக்குப்படிந்த கண்ணாடியில் வெளிச்சம் அதிகமாக வெளியே வராது. கண்ணாடியைத் துடைத்துத் தூயதாக்குமளவு வெளிச்சம் தடைபடாது ஒளிரும். அந்தக்கரண சுத்தி பண்ணுவதற்கான வழிகள் ஞான வாழ்க்கையில் காட்டப்பட்டிருக்கின்றன. ஜடம்போன்று தென்படும் ஜீவனை ஞானநெறி சித்சொரூபமாகத் திருத்தியமைக்கிறது. (காட் ஈஸ் லைட்) என்பது கோட்பாடு. ஆத்மா ஜோதிர் மயம் என்பது அதன் பொருள். இங்ஙனம் ஸத் சித் ஆனந்தமாகிய பர சொரூபத்தின்கண் ஜீவனை எடுத்துச் செல்லுதல் பகவத்கீதையின் திட்டமாகும். 26. பொது நூல் சாஸ்திரம் ஒன்று எல்லார்க்கும் பொதுவாவதற்கு விதிகள் சில உள. அத்தகைய நூல் எந்த மொழியில் அமைந்திருக்கிறது அல்லது எத்தனை மொழிகளில் இயற்றப்பெற்றிருக்கிறது என்பது முக்கியமானதன்று. எத்தனை பிரதிகள் அச்சிடப்பெற்று எத்தனைபேர் கைவசம் அது சேர்ந்துள்ளது என்பதும் முக்கியமல்ல. எத்தனை ஆயிரம் பேர் அல்லது லக்ஷம் பேர் அதை நாள் தோறும் ஓதுகிறார்கள் என்பதும் அந்நூலுக்கு மகத்துவம் கொடுத்துவிடாது. மொழியை முன்னிட்டு மனிதன் மேலோன் ஆகான். பின்பு ஒழுக்கமே மேன்மைக்கு முதற்காரணம். பெரும்பான்மையோர் கையாளுதலைப் பொறுத்தும் ஒரு நூலுக்குச் சிறப்பு வந்துவிடாது. சமாசாரப் பத்திரிகையைப் பெரும்பாலோர் நாள்தோறும் பார்க்கிறார்கள். ஆனால் அதன் மதிப்பு அன்றன்று அகன்று போகிறது. முக்தி நெறியை ஆராய்பவர் சிலரே. அதன்படி ஒழுகுபவர் அதிலும் சிலர். இனி, முக்தியை அடைவது அரிதிலும் அரிது. ஆயினும் முக்தி மார்க்கத்துக்கு என்றைக்கும் எல்லார்க்கிடையிலும் மதிப்பு உண்டு. ஏனென்றால் ஒரு காலம் அல்லாவிட்டால் வேறு ஒரு காலத்தில் எல்லாரும் அவ்வழிக்கு வந்தாகவேண்டும். கீதாசாஸ்திரத்தை ஸர்வகத சாஸ்திரம் (யுனிவர்செல் ஸ்கிரிப்சர்) என்றும், பொதுநூல் என்றும் பகருதற்குத் தக்க காரணங்கள் உண்டு. முக்தி மார்க்கத்தைப் புகட்டும் சாஸ்திரங்களே யாவற்றிலும் மேலானவைகள். முக்தி அடைதற்கு நிகரான பேறு மனிதனுக்கு இல்லை. இக்கோட்பாடு யாவர்க்கும் ஒப்ப முடிந்தது. கீதா சாஸ்திரம் முக்தியைப் புகட்டுகிறது. வாழ்க்கையின் குறிக்கோள் முக்தி என்பதை அது நன்கு தெளிவுறுத்துகிறது. வாழ்க்கையின் குறி முக்தி. அதற்கு உற்ற நெறி யோகம். கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங்களும் முறையே கீதையில் இடம் பெறுகின்றன. இரண்டு சிறகுகளும் ஒரு வாலும் இருந்தால் பறவை பறக்கும். ஜீவன் பரத்தை அடைதற்கு ஞானமும் பக்தியும் சிறகுகளாக அமைகின்றன. கர்மயோகம் சமப்படுத்தும் வால் ஆகிறது. எல்லாச் சாதனங்களும் இம்மூன்றினுள் அடங்கியிருக்கின்றன. பரத்தை எண்ணியெண்ணி இகத்தை மறந்துவிடும்படி புகட்டும் நூல்கள் உண்டு. இகத்தில் கருத்து அனைத்தையும் வைத்து மேலாம் நிலையாகிய பரத்தைப் புறக்கணிக்கும்படி போதிக்கும் புல்லிய நூல்களும் உண்டு. ஆனால் பகவத்கீதையோ இகம் பரம் இரண்டுக்கும் உரிய இடத்தை முறையாக வகுத்து வழங்குகிறது. அவைகளுள் ஒன்று மற்றொருன்றுக்கு முரண்பட்டதன்று என்பது கீதையின் கோட்பாடாகும். இக வாழ்க்கையை நன்கு நடாத்துபவன் பரத்துக்கு உரியவன் ஆகிறான். பரத்தைச் சார்ந்திருக்க வல்லவன் இகத்துக்கு நன்கு பயன்படுகிறான் என்பது கீதையின் போதனையாகிறது. கர்மத்தை இரண்டு பாங்குடையவைகளாகப் பிரித்து வைப்பவர் உளர். ஒன்றைப் பாரமார்த்திகத்துக்கு உரியது என்றும் மற்றதை இகலோகத்துக்குரியதென்றும் அன்னவர் கருதுகின்றனர். அவ்விரண்டு பிரிவுகளுக்கும் உரிய பதங்களை முறையே வைதிக கர்மம், லௌகிக கர்மம்; (சேக்ரட் அண்டு செக்குலர் ஆக்டிவிடீஸ்) ஆத்ம சாதனம், உலக வியவகாரம்; அருள் நாட்டம், பொருள் இன்பநாட்டம் இப்படியெல்லாம் பகர்கின்றனர். ஆனால் பகவத் கீதையானது வாழ்க்கையை இரண்டாகப் பகுத்து வைக்கிறதில்லை. ஆகையால் மனிதன் புரியும் கர்மத்தை மேலானது என்றும் கீழானது என்றும் அது பாகுபடுத்துவதில்லை. நல்வாழ்க்கை வாழத் தெரிந்துகொண்டவன் ஒருவன் எல்லாக் கர்மங்களையும் ஆத்ம சாதனத்துக்குரியவைகளாக்கலாம். நல்வாழ்க்கை வாழத் தெரியாதவன் ஒருவன் கடவுள் வழிபாடு போன்ற மேலாம் கர்மத்தைக் கெடுத்து பந்தபாசத்துக்குரிய தாக்கிவிடலாம். வினைகளை யெல்லாம் மேலாம் வினைகளாக மாற்றக் கற்றுக்கொடுப்பது பகவத்கீதை. இக்கோட்பாடு இந்த நூலின் தனிச்சிறப்பு ஆகும். மன அமைப்பில் செயல், உணர்வு, அறிவு என்று மூன்று பகுதிகள் உண்டு. நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர் அவைகளை முறையே (வில், எமோசன், காக்னிஷன்) என்று பகர்வர். அன்னை பராசக்தியே மாந்தர் உள்ளத்தில் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஸ்வரூபிணியாக எழுந்தருளியுள்ளாள் என்பது கோட்பாடு. மனதில் இந்த மூன்றுவித மாண்புகளும் ஒருங்கே மிளிருதல் வேண்டும். அப்பொழுதுதான் பண்பாடு பூர்த்தியாகிறது. மனிதன் திண்ணியன் ஆவதற்கும் அதுவே உற்ற உபாயம். நல்ல உள்ளத்துக்குரிய மூன்று மாண்புகளையும் கீதா சாஸ்திரம் முறையே இயம்புவதால் அது எல்லார்க்கும் பொது நூலாகும். மனிதனை நிறைமனிதன் ஆக்குவது கீதையின் கோட்பாடாகும். உறுதியான உடலும் உயர்ந்த உள்ளமும் தெளிந்த அறிவும் நிறைநிலைக்கு இன்றியமையாத உறுப்புகளாகும். பேராற்றல் படைத்திருப்பது முதல் கோட்பாடு. ஒழுக்கம் ஆற்றலில் அடங்கி விடுகிறது. நலத்தைச் செய்யும் செய்விக்கவும் ஆற்றல் உடையவனுக்கே சாலும். அடுத்த கோட்பாடாவது அன்பு. உயிர்கள் அனைத்துக்கும் அது பொதுவானது. அன்பைத் தூய அன்பாக மாற்றியமைப்பது பக்தியோகத்தின் நோக்கமாகும். தூய அன்பினின்று இனிமை யாவும் தோன்றும். எல்லாவற்றையும் ஒன்றுபடுத்துவது தூய அன்பு. உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தூய அன்பு படைத்திருப்பவனுக்குச் சொந்தமாய்விடுகின்றன. இனி, அறிவு மூன்றாவது கோட்பாடு ஆகும். பட்டப்பகலை உண்டு பண்ணும் ஞாயிறு போன்றது அறிவு; அனைத்தையும் அது விளக்குகிறது. மாண்புகளையெல்லாம் அது எடுத்துக்காட்டவல்லது. உயிர்களைச் செயலில் ஏவுவதும் அறிவு. தொடுத்த கர்மத்தைக் குற்றம் குறையின்றிச் செய்து முடிப்பதற்கு வழிகாட்டுவதும் அறிவு. அதைப் பாங்குடன் வளர்க்க மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். ஆக, ஆற்றலையும் அன்பையும் அறிவையும் ஒருங்கே அடையப்பெற்றிருப்பவனுக்கு மேலும் பெறவேண்டிய பேறு ஒன்றுமில்லை. அவன் நிறைமனிதன் ஆகிறான். அவனுக்கே நிறை நிலை சொந்தம். நிறைநிலையெய்தி நிறைமனிதன் ஆக விரும்புபவர் அனைவர்க்கும் ஸ்ரீமத் பகவத்கீதை பொது நூலாகும். சமயங்கள் அனைத்துக்கும் அதைப் பொது நூலாக வைத்துக்கொள்வதும் சாத்தியமாகிறது. கீதையின் போதனை போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது. * பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு. * பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு. * ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து. * அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள். * யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் உள்ளன. அவை: அவதூத கீதை, உத்தர கீதை, பிக்ஷú கீதை, அஷ்டாவக்ர கீதை, ராம கீதை, சுருதி கீதை, குரு கீதை, சிவகீதை. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
பகவத்கீதை | |
தியான சுலோகங்கள்!
1. ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேந ஸ்வயம் வ்யாஸேந க்ரதிதாம் புராணமுநிநா மத்யே மஹாபாரதம் அத்வைதாம்ருதவர்ஷிணீம் பகவதீ மஷ்டாதஸா த்யாயிநீமம் த்வாமநுஸந்ததாமி பகவத் கீதே பவத்வேஷிணீம் ஓம்-ஓம், அம்ப-தாயே, பகவத்கீதே-பகவத்கீதே, ஸ்வயம்-சாக்ஷõத், பகவதா-பகவானான, நாராயணேன- நாராயணனால், பார்த்தாய- பார்த்தனுக்கு, ப்ரதிபோதிதாம்- உபதேசிக்கப்பெற்றவள், புராண முனினா வ்யாஸேன-புராண முனிவரான வியாசரால், மத்யே மஹாபாரதம்-மஹாபாரதத்தின்கண், க்ரதிதாம்-அமைக்கப்பெற்றவள், அத்வைத அம்ருத வர்ஷிணீம்-அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பவத்வேஷிணீம்-பிறவிப்பிணியைப் போக்குபவள், அஷ்டாதச அத்யாயினீம்-பதினெட்டு அத்தியாயங்களையுடையவள், பகவதீம்-பகவதி த்வாம், உன்னை அனுஸந்ததாமி-தியானிக்கிறேன். பொருள் : ஓம். தாயே, பகவத்கீதே ,சாக்ஷõத் பகவான் நாராயணனால் பார்த்தனுக்கு உபதேசிக்கப்பெற்றவள், புராண முனியாகிய வியாசரால் மஹாபாரதத்தின்கண் அமைக்கப்பெற்றவள். அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பிறவிப் பிணியைப் போக்குபவள், பதினெட்டு அத்தியாயங்களை யுடையவள் ஆகிய பகவதீ, உன்னைத் தியானிக்கிறேன். 2. நமோ ஸ்துதே வ்யாஸ விஸாலபுத்தே புல்லாரவிந்தாயத பத்ரநேத்ர யேந த்வயா பாரததைலபூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞாநமய: ப்ரதீப: விசாலபுத்தே-விசால புத்தியுடையவரே, புல்ல அரவிந்த ஆயத பத்ர நேத்ர-நன்கு அலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்களையுடையவரே, வ்யாஸ-வியாசரே, யேன த்வயா-உம்மால், பாரத தைல பூர்ண-மஹாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த, ஞானமய ப்ரதீப-ஞானதீபம், ப்ரஜ்வாலித-ஏற்றிவைக்கப்பட்டது, தே-உமக்கு, நம-நமஸ்காரம், அஸ்து-இருக்கட்டும். பொருள் : விசால புத்தியுடையவரும், நன்கு அலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்களையுடையவரும் ஆகிய வியாசரே, மகாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த ஞான தீபத்தை ஏற்றிவைத்த உமக்கு நமஸ்காரம். 3. ப்ரபந்நபாரிஜாதாய தோத்ரவேத்ரைகபாணயே ஞாநமுத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருததுஹே நம: ப்ரபன்ன பாரிஜாதாய-சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனுக்கு, தோத்ர வேத்ர ஏக பாணயே-பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்தவனுக்கு, கீதா அம்ருத துஹே-கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனுக்கு, ஞான முத்ராய-சின்முத்திரையுடையவனுக்கு, க்ருஷ்ணாய-கிருஷ்ணனுக்கு, நம-நமஸ்காரம். பொருள் : சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனும், பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்திருப்பவனும், கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனும், சின்முத்திரை தாங்கியிருப்பவனும் ஆகிய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம். 4. ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபாலநந்தன: பார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ஸர்வ உபநிஷத-எல்லா உபநிஷதங்களும், காவ-பசுக்கள், கோபால நந்தன-கோபாலனுடைய மகன்(கிருஷ்ணன்), தோக்தா-பால் கறப்பவன், பார்த்த-பார்த்தன், வத்ஸ-கன்று, ஸுதீ-பேரறிவாளர், போக்தா-அருந்துபவர்கள், கீதா அம்ருதம்-கீதை என்னும் அமிர்தம், மஹத்-மேலான, துக்தம்-பால். பொருள் : உபநிஷதங்கள் யாவும் பசுக்கள்; கிருஷ்ணன் பால் கறப்பவன்; பார்த்தன் கன்று; அருந்துபவர் பேரறிஞர்; கீதை என்னும் அமிர்தம் ஒப்பற்ற பால் ஆகிறது. 5. வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூரமர்தநம் தேவகீபரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் வஸுதேவ ஸுதம்-வசுதேவருடைய மகனை, கம்ஸ சாணூர மர்தனம்-கம்ஸனையும் சாணூரனையும் கொன்றவனை, தேவகீ பரம ஆனந்தம்-(தாய்) தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவனை, ஜகத் குரும்-ஜகத் குருவை, தேவம் க்ருஷ்ணம்-தேவனாகிய கிருஷ்ணனை, வந்தே-வணங்குகிறேன். பொருள் : வசுதேவருடைய மகன், கம்சனையும் சாணூரனையும் கொன்றவன், தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவன், ஜகத்குரு, தேவன் ஆகிய கிருஷ்ணனை வணங்குகிறேன். 6. பீஷ்மத்ரோணதடா ஜயத்ரதஜலா காந்தாரநீலோத்பலா ஸல்யக்ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலா அஸ்வத்தாமவிகர்ணகோரமகரா துர்யோதநாவர்திநீ ஸோத்தீர்ணா கலு பாண்டவை ரணநதீ கைவர்தக: கேஸவ: பீஷ்ம த்ரோண தடா-பீஷ்மரும் துரோணரும் கரைகள், ஜயத்ரத ஜலா-ஜயத்ரதன் ஜலம், காந்தார நீல உத்பலா-காந்தார மன்னன் நீலோத்பலம் என்னும் புஷ்பம், சல்ய க்ராஹவதீ-சல்யன் என்பவன் சுறாமீன், க்ருபேண வஹனீ-கிருபன் என்பவன் பிரவாகம், கர்ணேன வேலா ஆகுலா-கர்ணன் பேரலைகள், அச்வத்தாம விகர்ண கோர மகரா-அச்வத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள், துர்யோதன ஆவர்தினீ-துர்யோதனன் நீர்ச் சுழல், ஸா-அந்த, ரண நதீ-ரண நதியானது, கலு-உண்மையாகவே, பாண்டவை-பாண்டவர்களால், உத்தீர்ணா-கடக்கப்பட்டது, கேசவ-கேசவன், கைவர்தக-படகோட்டி. பொருள் : குரு÷க்ஷத்திரப் போர்க்களத்தில் இருந்த ரண நதிக்கு பீஷ்மரும் துரோணரும் கரைகள்; ஜயத்ரதன் ஜலம்; காந்தார மன்னன் நீலோத்பலம் என்னும் புஷ்பம்; சல்யன் சுறாமீன்; கிருபன் என்பவன் பிரவாகம்; கர்ணன் பேரலைகள்; அச்வத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள்; துர்யோதனன் நீர்ச்சுழல், கிருஷ்ணனைப் படகோட்டியாகக் கொண்டு அது பாண்டவர்களால் கடக்கப்பட்டது. 7. பாராஸர்யவச: ஸரோஜமமலம் கீதார்தகந்தோத்கடம் நாநாக்யாநககேஸரம் ஹரிகதாஸம்போதநாபோதிதம் லோகே ஸஜ்ஜநஷட்பதைரஹரஹ: பேபீயமாநம் முதா பூயாத்பாரதபங்கஜம் கலிமலப்ரத்வம்ஸிந: ஸ்ரேயஸே பாராசர்ய வச ஸரோஜம்-பராசரர் புதல்வராகிய வியாசர் வாக்கு என்னும் நீரில் உதித்த, நா நா ஆக்யானக கேஸரம்-பல கதைகளை மகரந்தமாயுடைய, ஹரிகதா ஸம்போ தன ஆபோதிதம்-ஹரிகதா பிரசங்கத்தால் அலர்ந்தது, லோகே-உலகத்தில், ஸத்ஜன ஷட்பதை-ஸத் ஜனம் என்னும் தேன் வண்டுகளால், அஹ அஹ-நாள்தோறும், முதா-ஆனந்தமாக, பேபீயமானம்-அருந்தப் பெற்றது, கலிமல ப்ரத்வம்ஸின-கலியின் தோஷத்தை நீக்க விரும்புபவனுக்கு, கீதா அர்த்த கந்த உத்கடம்-கீதையின் மூலம் சுகந்தத்தையுடைய, அமலம்-குற்றமற்ற, பாரத பங்கஜம்- மகாபாரதம் என்னும் தாமரைப்பூ, ச்ரேயஸே-நலத்தின் பொருட்டு, பூயாத்-இருக்கட்டும். பொருள் : பராசரர் புதல்வராகிய வியாசரின் வாக்கு என்னும் நீரில் உதித்த, பல கதைகளை மகரந்தமாக உடைய, ஹரிகதா பிரசங்கத்தால் அலர்ந்து உலகத்தில் நல்லோர் என்னும் தேன் வண்டுகளால் நாள்தோறும் ஆனந்தமாக அருந்தப்பெற்ற, கீதையின் மூலம் நறுமணத்தையுடைய, குற்றமற்ற மகாபாரதம் என்னும் தாமரைப் பூவானது கலியினுடைய தோஷத்தை நீக்க விரும்புவனுக்கு நலம் தருவதாகுக. 8. மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் யத்க்ருபா தமஹம் வந்தே பரமாநந்தமாதவம் யத்க்ருபா-யாருடைய கிருபையானது, மூகம்-ஊமையை, வாசாலம்-பேசவல்லவனாய், கரோதி-செய்கிறது, பங்கும்-முடவனை, கிரிம் லங்கயதே-மலையைத் தாண்டச் செய்கிறது, தம்-அந்த, பரமானந்தமாதவம்-பரமானந்த மாதவனை, அஹம்-நான், வந்தே-வணங்குகிறேன். பொருள் : யாருடைய கிருபையானது ஊமையைப் பேச வைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்டச் செய்கிறதோ, அந்தப் பரமானந்த மாதவனை நான் வணங்குகிறேன். 9. யம் ப்ரஹ்மா வருணேந்த்ரருத்ரமருத: ஸ்துந்வந்தி திவ்யை: ஸ்தவை: வேதை: ஸாங்கபதக்ரமோபநிஷதைர்காயந்தி யம் ஸாமகா: த்யாநாவஸ்திததத் கதேந மநஸா பஸ்யந்தி யம் யோகிநோ யஸ்யாந்தம் ந விது: ஸுராஸுரகணா தேவாய தஸ்மை நம: ப்ரஹ்மா வருண இந்த்ர ருத்ர மருத-பிரம்மா வருணன் இந்திரன் ருத்திரன் மருத் தேவதைகள், யம்-யாரை, திவ்யை ஸ்தவை-திவ்யமான ஸ்துதிகளால், ஸ்துன்வந்தி-ஸ்துதிக்கிறார்கள், ஸாமகா-சாமகானம் செய்கின்றவர்கள், யம்-யாரை, ஸ அங்க பதக்ரம உபநிஷதை-அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய, வேதை-வேதங்களால், காயந்தி-பாடுகிறார்கள், யோகின-யோகிகள், யம்-யாரை, த்யான அவஸ்தித தத்கதேன மனஸா-தியான முதிர்ச்சியால் மனதை அவன்பால் வைத்து, பச்யந்தி-பார்க்கிறார்கள், ஸுர அஸுர கணா-சுர அசுரக் கூட்டங்கள், யஸ்ய-யாருடைய, அந்தம்-முடிவை, நவிது-அறிகிறார்களில்லை, தஸ்மை தேவாய-அந்த தேவனுக்கு, நம-நமஸ்காரம். பொருள் : பிரம்மா, வருணன், இந்திரன், ருத்திரன், மருத்தேவதைகள் யாரை திவ்யமான ஸ்துதிகளால் ஸ்துதிக்கிறார்களோ, ஸாமகானம் செய்கின்றவர்கள் யாரை அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய வேதங்களால் பாடுகிறார்களோ, யோகிகள் தியான முதிர்ச்சியால் மனதை யார்பால் வைத்து உணர்கிறார்களோ, சுர அசுரக் கூட்டங்கள் யாருடைய முடிவை அறிகிறார்களில்லையோ, அந்த தெய்வத்துக்கு நமஸ்காரம். | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
முதல் அத்தியாயம் | |
பகவத்கீதை | அர்ஜுன விஷாத யோகம்செப்டம்பர் 29,2011
1. அர்ஜுன விஷாத யோகம்
குரு÷க்ஷத்திரப் போரில் தனக்கு எதிராளியாக தனது உறவினர்களே இருக்கின்றனர் என அர்ஜுனன் வருந்தினான். அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, ... மேலும்
|
இரண்டாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஸாங்கிய யோகம்செப்டம்பர் 30,2011
போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி ...மேலும்
|
மூன்றாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | கர்ம யோகம்அக்டோபர் 11,2011
கர்ம யோக ஞான யோகங்களுள் ஞான யோகமே கடுகப் பலனை அளிக்குமென்றாலும் கர்ம யோகமே செய்யத் தக்கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். ... மேலும்
|
நான்காம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஞானகர்ம ஸந்யாஸ யோகம்அக்டோபர் 11,2011
அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக் கர்மயோகத்தை நான் மனுவுக்கு ...மேலும்
|
ஐந்தாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஸந்யாஸ யோகம்அக்டோபர் 11,2011
கர்ம யோகத்தில் ஞான பாகமடங்கி இருப்பதாலும் ஞான யோகத்தில் கர்ம பாகமடங்கியிருப்பதாலும் இரண்டும் ஒன்றே. அவை இரண்டும் ஒரே விதமான பலனைக் கொடுக்கக் கூடியவை. அவை வெவ்வேறு பலனை ... மேலும்
|
ஆறாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | தியான யோகம்அக்டோபர் 12,2011
கர்ம யோக ஞான யோகங்களில் சித்திபெற்றவனுக்குண்டாகும் ஆத்மானுபவம் இந்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது. இவ்வாத்மானுபவத்தில் ஈடுபட்டு ஆதியிலேயே திருப்தியடைந்தவன் வேறு ... மேலும்
|
ஏழாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஞானவிக்ஞான யோகம்அக்டோபர் 12,2011
பக்தி யோகத்திற்கு இலக்கான இறைவனுடைய சொரூபம், சுபாவம், மேன்மை முதலியன இந்த அத்தியாயத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. மனிதன், இவைகளை அறிய வொட்டாமல் பிரகிருதி சம்பந்தம் ...மேலும்
|
எட்டாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | அக்ஷரப்ரஹ்ம யோகம்அக்டோபர் 12,2011
முற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்ற வேண்டிய பக்தி வழிகளும் அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்ஞையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் ... மேலும்
|
ஒன்பதாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்அக்டோபர் 12,2011
இங்கு வித்தைகளுள் சிறந்ததும், ரகசியங்களுள் மேலானதுமான பக்தி யோகத்தின் சொரூபமும் மேன்மையும், பலன் முதலானவையும் கூறப்படுகின்றன. பக்தி யோகத்தில் இறங்குவோன், அதில் முழு ...மேலும்
|
பத்தாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | விபூதி யோகம்அக்டோபர் 13,2011
பக்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. ... மேலும்
|
பதினோன்றாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | விச்வரூபதர்சன யோகம்அக்டோபர் 13,2011
இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். ... மேலும்
|
பன்னிரண்டாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | பக்தி யோகம்அக்டோபர் 13,2011
ஞான யோக பக்தி யோகங்களுள், ஞான யோகம் தாமதித்தே பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும், பக்தியோகமோ கடுகப் பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது ... மேலும்
|
பதின்மூன்றாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம்அக்டோபர் 13,2011
இதில் தேகம், ஆத்மா இவைகளுடைய சொரூபமும் இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினோரு ...மேலும்
|
பதினான்காம் அத்தியாயம் | |
பகவத்கீதை | குணத்ரய விபாக யோகம்அக்டோபர் 17,2011
தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முற்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தை படைக்க எண்ணங்கொண்ட கடவுள் ...மேலும்
|
பதினைந்தாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | புரு÷ஷாத்தம யோகம்அக்டோபர் 17,2011
பிரகிருதி, ஆத்மா -இவ்விரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புரு÷ஷாத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார். அரசம் வித்து, ... மேலும்
|
பதினாறாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | தெய்வாசுர சம்பத் விபாக யோகம்அக்டோபர் 17,2011
முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் ...மேலும்
|
பதினேழாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | சிரத்தாத்ரய விபாக யோகம்அக்டோபர் 17,2011
அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் ... மேலும்
|
பதினெட்டாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | மோஷ சந்நியாச யோகம்அக்டோபர் 18,2011
சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது ... மேலும்
|
ஸ்ரீ கீதா மஹாத்மியம் | |
ஸ்ரீ கீதா மஹாத்மியம்அக்டோபர் 19,2011
ஸ்ரீ கணேஷாய நம: கோபால கிருஷ்ணாய நம:
தாரோ உவாச:
1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ
தரை சொன்னது:
பகவானே, ... மேலும்
|
ஸ்ரீ கீதா மஹாத்மியம் | |
ஸ்ரீ கீதா மஹாத்மியம்
ஸ்ரீ கணேஷாய நம: கோபால கிருஷ்ணாய நம: தாரோ உவாச: 1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ தரை சொன்னது: பகவானே, பரமேசா, பிராரப்த கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் மாற்று அறியாத பக்தியைப் பெறுவது எங்ஙனம்? ஸ்ரீ விஷ்ணுர் உவாச: 2. ப்ராரப்தம் பூஜ்ய மானோ ஹி கீதா அப்யாசரதா சதா ச முக்தா ச ஸுகீ லோகே கர்மணா நோபலிப்யதே ஸ்ரீ விஷ்ணு சொன்னது: கீதா அப்பியாசத்தில் ஒருவன் சதா மகிழ்வடைந்திருப்பானாகில், பிராரப்த கர்மத்தில் கட்டுண்டு கிடக்கினும், அவனே முக்தன், இவ்வுலகிலேயே சுகத்தை அனுபவிப்பவனும் அவனே. புதிய கர்மத்தில் அவன் தேய்வுறான். 3. மகா பாபாதி பாபானி கீதா தியானம் கரோதி சேத் க்வச்சித் ஸ்பர்ஷம் ந குர்வந்தி நளினி தளம் அம்புவத் கீதா தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மஹாபாபமும் தீண்டுவது கிடையாது. தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாதிருப்பது போன்று அவன் இருக்கிறான். 4. கீதாயஹ் புஸ்தகம் யத்ர யத்ர பாட: ப்ரவர்த்ததே தத்ர சர்வாணி தீர்தாணி பிரயாகாதீணி தத்ர வை கீதா புஸ்தகம் எங்கு இருக்கிறதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ அங்குப் புண்ணிய தீர்த்தங்களனைத்தும், பிரயாகைகளும் மற்றும் உள்ளவைகளும் வந்து கூடுகின்றன. 5. சர்வே தேவாச்ச ரிஷயோ யோகின: பன்னகாஷ்ச்ச யே கோபாலா கோபிகா வாபி நாரத் உத்தவ பார்சதை: தேவர்கள் அனைவரும், ரிஷிகளும், யோகிகளும், பன்னகர்களும், கோபாலர்களும், கோபிகளும், நாரதரும், உத்தவரும், அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்கு உளர். 6. சஹாயோ ஜாயதே ஷீக்ரம் யத்ர கீதா ப்ரவர்த்ததே யத்ர கீதா விசாரஷ்ச்ச பதனம் பாதனம் ஸ்ருதம் தத்ராஹம் நிஷ்சிதம் ப்ரித்வி நிவாசாமி சதைவ ஹி எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரம் சஹாயம் வருகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ, ஓதப்படுகிறதோ, புகட்டவும் கேட்கவும் செய்யப்படுகிறதோ, ஆங்கு நிலமகளே கேள், நான் நிச்சயமாக ஸதா வாசம் செய்கிறேன். 7. கீதாஸ்ரையேஹம் திஷ்தாமி கீதா மே சோட்டமம் க்ரிஹம் கீதா ஞானம் உபாஸ்ரித்ய த்ரீன் லோகான் பாலயாம் யஹம் கீதை என்னும் புகலிடத்தில் நான் வீற்றிருக்கிறேன். எனக்கு உத்தமமான இருப்பிடம் கீதை. கீதாஞானத்தில் நின்றுகொண்டு மூவுலகங்களையும் நான் பரிபாலிக்கிறேன். 8. கீதா மே பரமா வித்யா பிரம்மரூபா ந சம்ஷய: அர்த்த மாத்ர அக்ஷரா நித்யா ச்வாநிர் வாச்ய பதாத்மிகா எனது பரம வித்தையாயிருப்பது கீதை; அது பிரம்ம ரூபம் என்பதில் சம்சயமில்லை. அர்த்த மாத்திரையாய், அக்ஷரமாய், நித்தியமாய், எனது சொரூபத்தைச் சொல்லால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உளது. 9. சிதானந்தேன கிருஷ்னேன ப்ரோக்தா ஸ்வாமு கதோர்ஜுன வேத த்ரயீ பர ஆனந்தா தத்வார்த்த ஞான சம்யுதா மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாயுள்ள இந்த ஞானம் சிதானந்த கிருஷ்ணனால் அர்ஜுனனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது. 10. யோ அஷ்டதசா ஜபேன் நித்யம் நரோ நிஷ்ச்சல மானசா: ஞான சித்திம் ச லபதே ததோ யாதி பரம் பதம் உறுதியான உள்ளத்துடன் எம்மனிதன் நாள்தோறும் பதினெட்டு அத்தியாயங்களையும் ஓதுகின்றானோ, அவன் ஞான சித்தியடைந்து பிறகு பரமபதத்தைச் சேருகிறான். 11. பாடே அசமர்த்த சம்பூர்ணம் தடோர்தம் பாடம் ஆசரேத் ததா கோதா நஜம் புண்யம் லபதே நாட்ற சம்ஷயா முழுதும் படனம் செய்ய இயலாவிட்டால் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்கின்றவன் கோதானத்தினின்று விளையும் புண்ணியத்தைப் பெறுகிறான். அதில் சந்தேகமில்லை. 12. த்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத் ஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத் மூன்றில் ஒரு பகுதி படிக்கிறவன் கங்காஸ்நான பலனை அடைகிறான். ஆறில் ஒரு பங்கு படிப்பவன் சோமயாகப் பலனைப் பெறுகிறான். 13. ஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத: ருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம் பக்தியுடன் ஓர் அத்தியாயமாவது நித்தியம் படிப்பவன் ருத்திரலோகத்தையடைந்து அவனுடைய கணங்களில் ஒருவனாக அங்கு நெடிது வாழ்கிறான். 14. அத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர: ஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே வசுந்தரே, ஒரு அத்தியாயத்தின் அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கு நாள்தோறும் படிப்பவன் ஒரு மன்வந்தரம் முடியும் வரையில் மானுடப்பிறப்பு எடுக்கிறான். 15-16. கீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம் த்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர: சந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம் கீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத் கீதையினுடைய பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ, பாதியோ ஸ்லோகத்தைப் படனம் பண்ணுபவன் சந்திரலோகத்தில் பதினாயிரம் வருஷங்கள் வசிக்கிறான். கீதையைப் படித்துக்கொண்டிருக்கும் போது உயிர் துறப்பவன் மனுஷ்ய லோகத்தை அடைகிறான். 17. கீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம் கீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத் கீதா அப்பியாசம் செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடைகிறான். மரணமடையும் போது கீதை என்று உச்சரிக்கும் மனிதன் வீடுபெறுவான். 18. கீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா வைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே மஹாபாவம் செய்தவனும் கீதையின் அர்த்தத்தைக் கேட்பதில் விருப்பமுடையவனாயிருப்பானாகில் அவன் வைகுண்டம் ஏகி விஷ்ணுவுடன் பேரானந்தம் திளைப்பான். 19. கீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ: ஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம். ஓயாது கர்மம் செய்துகொண்டிருப்பதற்கு இடையில் யார் கீதையின் அர்த்தத்தை இடையறாது எண்ணிக் கொண்டிருக்கிறானோ அவனை ஜீவன் முக்தன் என்று கருதவேண்டும். உடல் அழியும்போது அவன் பரமபதத்தை அடைகிறான். 20. கீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா நிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம் இந்த கீதையைத் துணையாய்க்கொண்டு ஜனகன் போன்ற பூபாலர்கள் பலர் இவ்வுலகில் குறைகள் நீங்கப்பெற்றவராயினர். பின்பு பரமபதத்தையும் பெற்றனர் என்று பாடப்பட்டிருக்கிறது. 21. கீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத் வ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா: கீதையை வாசித்தான பிறகு, இங்கு இயம்பியபடி அதன் மஹாத்மியத்தை வாசிக்காதவனுக்கு வாசிப்பு வீண் போனதாகும்; முயற்சியும் வீண்போனதேயாம். 22. ஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ் ஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத் இந்த மாஹாத்மியத்தோடு கூடிய கீதா அப்பியாசத்தை யார் செய்கின்றானோ அவன் ஈண்டு இயம்பியுள்ள பலனைப் பெறுகின்றான். கிடைப்பதற்கு அரிய உயர்கதியும் அவனுக்குக் கிடைக்கிறது. சுத உவாச: 23. மஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம் கீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத் சூதர் சொன்னது: கீதையை வாசித்தான பிறகு என்னால் இயம்பப்பட்ட இந்த கீதா மாஹாத்மியத்தை யார் வாசிக்கிறானோ அவன் இதில் விளக்கியுள்ள பலனைப் பெறுவான். கீதா மாஹாத்மியத்தில் பகர்ந்துள்ள இக்கருத்துக்கள் ஒரு விதத்தில் மிகைப்பட்டவைகளாகும். ஆகவே அவைகளை இருக்கிறபடி வாச்சியார்த்தம் பண்ணலாகாது. தாய் ஒருத்தி குழந்தைக்கு உணவூட்டுகிறாள். விளையாட்டில் கருத்துடைய குழந்தையோ ஆகாரம் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறது. உணவு உண்டால் விளையாட்டுச் சாமான்கள் சில வாங்கித்தருவதாகத் தாய் இயம்புகிறாள். உண்மையில் விளையாட்டுச் சாமான்களை விடக் குழந்தைக்கு அதிகம் பயன்படுவது ஆகாரமே. கீதா மாஹாத்மியம் அங்ஙனம் சிறிய பொருள்களில் ஆசை காட்டிப் பெரிய பொருளை மறைமுகமாக வழங்க முயலுகிறது. இனி, உணவைச் சிறிது சிறிதாக நாள்தோறும் ஏற்று வந்தால் அது நன்கு ஜீரணமாகி உடல்மயமாய் மாறியமைகிறது. அங்ஙனம் கீதையின் கோட்பாடுகளில் அப்போதைக்கப்போது ஏற்கும் சிறுபகுதிகள் நாளடைவில் நிறைஞானமாகவும் யோகமாகவும் சாதகனுக்கு அமைவனவாகின்றன. அதன் மூலம் அவன் இகலோகத்தில் சாதிக்க வேண்டியவைகளை யெல்லாம் நன்கு சாதித்து விட்டுப் பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வல்லவனாவான். இதி ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம் வராஹ புராணத்தில் கீதாமாஹாத்மியம் ஸம்பூரணம். | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
இரண்டாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஸாங்கிய யோகம்
போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.” சஞ்ஜயன் சொல்லுகிறான்: பலவான் ஆவது குறிக்கோள் 2-3 -பெரியோரோடு போர் புரியேன் என்கிறான் அர்ஜுனன் 4-6 -அருள் பெறுவதற்கு ஏற்ற மன நிலை 7-8 -அருள் சுரப்பதன் அறிகுறி 10-யோகத்துக்கு அஸ்திவாரம் 11-ஆத்மாவுக்கு அழிவில்லை 12- மரணத்தின் கூறு 13-குளிரும் வெப்பமும் உடலுக்கு உண்டு 14-15 -ஸத் எது? அஸத் எது? 16-20 -வினையில் பற்று அற்று இரு 21 -மறு பிறப்பு 22- ஆத்மா நிஷ்பிரபஞ்சப் பொருள் 23-25- ஆத்மா அழிகிறது என்றாலும் வருந்துவது பொருந்தாது 26-28- ஆத்மா மனம் மொழிக்கு எட்டாதது 29-30 -கடமையினின்று வழுவலாகாது 31-37 -கர்மத்தைக் கர்மயோகமாக்கு 38-41 -உலகத்தவர் போக்கு 42-44- யோகத்துக்குத் திறவுகோல் 45-53 -நிறைஞானியின் லக்ஷணம் 54-72. ஸஞ்ஜய உவாச 1. தம் ததா க்ரிபயாவிஷ்டமஸ்ருபூர்ணாகுலேக்ஷணம் விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந: ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான் ததா க்ரிபயா ஆவிஷ்டம்-அவ்வண்ணம் இரக்கம் மிஞ்சியவனாய் அஸ்ருபூர்ண ஆகுல ஈக்ஷணம்- நீர் நிரம்பிய விழிகளுடன் விஷீதந்தம்-சோகத்தோடு கூடிய தம்-அவனை (அர்ஜுனனை) மதுஸூதந: இதம் வாக்யம் உவாச- மதுசூதனன் இந்த வாக்கியத்தை சொல்லுகிறான் பொருள் : அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்: தன் மனதை முற்றிலும் தன் வசத்தில் வைத்திருக்கும் ஒருவன் பிறர்படும் துக்கத்தைப் போக்க முயலுவது கிருபையாகும். இங்கு அர்ஜுனனிடத்துக் கிருபைபோன்று தென்படுவது உண்மையில் கிருபையன்று. உணர்ச்சியானது அவனது உடைமையாயிருப்பதுபோய், அவன் உணர்ச்சிக்கும் மனத்தளர்ச்சிக்கும் அடிமையாகிவிட்டான். ஸ்ரீ பகவாநுவாச 2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம் அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந ஸ்ரீ பகவான் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் அர்ஜுந!-அர்ஜுனா விஷமே-தகாத சமயத்தில் குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு தகாதது அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது அகீர்திகரம்-புகழையும் தராதது பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா! இதுவரையில் பேசாதிருந்த பகவான் இப்பொழுதுதான் திருவாய் மலர்ந்தருளுகிறார். ஆக, ஸ்ரீமத் பகவத்கீதையின் துவக்கம் இதுவே. எடுத்த எடுப்பில் இரண்டு சுலோகங்களில் இந்த சாஸ்திரத்தின் மூல தத்துவம் வெளியாகிறது. பகவானது போதனையின் சாரம் இவ்விரண்டு சுலோகங்களில் அடங்கப் பெற்றுள்ளது. இதுபோன்ற சிறப்பை மேலாம் நூல்கள் அனைத்திடத்தும் காணலாம். அதாவது ஆய்ந்த அடிப்படைக் கருத்தானது துவக்கத்திலேயே தெளிவுபட வந்தமைகிறது. 3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே க்ஷúத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப க்லைப்யம் மா ஸ்ம கம:-அலியின் தன்மையை அடையாதே ஏதத் ந உபபத்யதே-இது பொருத்தமன்று க்ஷúத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வா-இழிந்த மனத்தளர்ச்சியை விடுத்து உத்திஷ்ட பரந்தப-எழுந்து நில், பகைவரைச் சுடுவோனே. பொருள் : பார்த்தா பேடித்தன்மையடையாதே! இது நினக்குப் பொருந்தாது. இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே! ஆண்மையை இழந்து பேதைபோன்று நடந்துகொள்பவன் அலி ஆகின்றான். அர்ஜுனன் பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் அத்தகையவைகளல்ல. அவன் உண்மையில் எதிரிகளைப் பறந்தோடச் செய்பவன். மகாதேவனோடு போர் புரிந்த அர்ஜுனனுக்கும் மனத்தளர்ச்சிக்கும் வெகு தூரம். தற்காலிகமாக வந்துள்ள தளர்ச்சியை இழித்துப் பேச அதை அடியோடு அப்புறப்படுத்தும்படி பகவான் தூண்டுகிறார். அர்ஜுந உவாச 4. கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான் அஹம் ஸங்க்யே-நான் போரில் கதம் இஷுபி:-எவ்வாறு அம்புகளால் பூஜார்ஹௌ பீஷ்மம் த்ரோணம் ச-தொழுதற்குரிய பீஷ்மர், துரோணர் ஆகியோரை ப்ரதியோத்ஸ்யாமி-எதிர்ப்பேன் அரிஸூதந-பகைவர்களை அழிப்பவனே பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, பீஷ்மனையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரை யழிப்போய்! கிருஷ்ணா, உமக்கு அரிசூதனன் என்றும் மதுசூதனன் என்றும் பெயர் வந்துள்ளது பொருந்தும்; ஏனென்றால் பகைவனைக் கொல்லுவதும் அரக்கனை அழிப்பதும் முறை. மற்று, பீஷ்மரையும் துரோணரையும் நான் எதிர்த்து விவாதம் செய்வதே தகாது. அத்தகையவர்களைப் போரில் எதிர்த்து வில்லெடுத்து அடிக்க எனக்குத் துணிவு எப்படி உண்டாகும்? பாட்டனாரோடு போர் புரிந்தவன் என்றும், ஆசாரியரை எதிர்த்தவன் என்றும் எனக்கு அவதூறு வந்துவிடுமல்லவா? 5. குரூநஹத்வா ஹி மஹாநுபாவாஞ் ச்யுரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந் மஹாநுபாவாந் குரூந் அஹத்வா- பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல் இஹ லோகே-இவ்வுலகத்தில் பைக்ஷ்யம் அபி-பிச்சையெடுத்து போக்தும் ஸ்ரேய:-உண்பதும் நன்றுஹி-ஏனெனில் அர்தகாமாந் குரூந் ஹத்வா-பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று இஹ-உலகில் புஞ்ஜீய-துய்க்கும் போகாந் ருதிரப்ரதிக்தாந் ஏவ-இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம் பொருள் : பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சையெடுத்துண்பதும் நன்று. பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம். பீஷ்மர் நைஷ்டிக பிரம்மசாரியாவார். இச்சாமிருத்யு அல்லது விரும்பியபொழுது மரணத்தை அடையும் வல்லமையுடையவர். அவர் தன்னலம் கருதாத தபோ நிஷ்டையுடையவர். இனி துரோணரோ சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர்; ஆசார சீலமுடையவர். கிருபரும் அத்தகையவரே. ஆகையால் இவர்கள் எல்லாரும் மஹானுபாவர்களாகிறார்கள். இவர்களைக் கொல்லுவதால் இவ்வுலக வாழ்க்கையே நரக வாழ்க்கையாக மாறிவிடும். குருக்கள் என்னும் சொல் வயதிலும் அறிவிலும் மூத்தவர்கள் எனப் பொருள்படுகிறது. 6. ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு: யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ் தேவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா: ந:-நமக்கு கதரத் கரீயோ-இவற்றுள் எது மேன்மை யத்வா ஜயேம-இவர்களை வெல்லுதல் யதி வா நோ ஜயேயு:-இவர்கள் நம்மை வெல்லுதல் ந வித்ம:-விளங்கவில்லையாந் ஹத்வா ந ஜிஜீவிஷாம -எவரைக் கொன்றபின் நாம் வாழ விரும்ப மாட்டோமோ தே தார்தராஷ்ட்ரா: ஏவ-அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் ப்ரமுகே அவஸ்திதா:-முன்னே நிற்கிறார்கள் பொருள் : மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள். 7. கார்பண்யதோ÷ஷாபஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா: யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம் கார்பண்யதோஷ உபஹத ஸ்வபாவ:-கோழைத் தனத்தால் சீரழிந்த சுபாவம் தர்மஸம்மூடசேதா:-அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன் த்வாம் ப்ருச்சாமி-உன்னைக் கேட்கிறேன் யத் ஸ்ரேய: ஸ்யாத்-எது நல்லது தத் மே நிஸ்சிதம் ப்ரூஹி-அதை நிச்சயப் படுத்தி சொல்லுகஅஹம் தே ஸிஷ்ய-நான் உங்கள் சீடன் த்வாம் ப்ரபந்நம் மாம் ஸாதி-உன்னை சரணடைந்த எனக்கு கட்டளை இடுக பொருள் : சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக. மனதின்கண் அமைந்துள்ள ஏழ்மையானது கார்ப்பண்யம் எனப்படுகிறது. பிறர் பார்த்து இரங்கி வருந்துதற்கேற்ற நிலையும் கார்ப்பண்யமாம். ஒரு நெருக்கடியில் மனதினுள் வருவித்துக்கொண்ட தளர்வும் துயரமும் அதன்கண் உண்டு. யார் ஒருவனிடத்துக் கார்ப்பண்யம் இருக்கிறதோ அவன் கிருபணன். தன்னிடத்துள்ள செல்வத்தைச் சிறிதும் செலவு செய்ய மனம் துணியாதவனுக்கும் அப்பெயர் வந்தமைகிறது. உலகில் பிறந்துள்ள மானுடன் ஒருவன் பரம்பொருளைப்பற்றிய ஞானத்தை அடையாது போவானாகில் அவன் கிருபணன் ஆகின்றான் என்று உபநிஷதம் கூறுகிறது. தன்னைக் கிருபணன் என்று ஈண்டு அர்ஜுனன் பகவானிடம் பகர்வது முற்றிலும் பொருத்தமானதே. மனிதனால் தேடப் படுபவைகளில் பிரேயஸ், சிரேயஸ் என்று இரண்டு இயல்புகள் இருக்கின்றன. 8. ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத் யச்சோகமுச்சோஷணமிந்த்யூரியாணாம் அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம் ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம் ஹி-ஏனெனில் பூமௌ-பூமியில் அஸபத்நம்-எதிரிகளற்றருத்தம்-செழிப்பான ஸுராணாம் ச அதிபத்யம் ராஜ்யம்-வானோர்மிசை ஆட்சி அவாப்ய அபி-அடைந்தாலும் யத் மம இந்த்ரியாணாம்-என்னுடைய புலன்களை உச்சோஷணம் சோகம்-வாட வைக்கின்ற சோகம் அபநுத்யாத்-போக்கடிக்கும் ந ப்ரபஸ்யாமி-காணவில்லை பொருள் : பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர்மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை. தனக்கு ஏற்பட்ட துயரத்தைப் பார்த்தன் முதலில் கொஞ்சம் மறைத்துவைத்துப் பேசுகிறான். இம்மையிலும் மறுமையிலும் உயிர்களுக்குத் தீங்குவரும் என்று முதல் அத்தியாயத்தில் சொன்னதெல்லாம் மேற்பூச்சு. உனக்கு இத்தகைய சோர்வு ஏற்படுவதற்குக் காரணம் யாது? என்று பகவான் பரிந்து கேட்டவுடன், உண்மை உள்ளபடி வெளியாகிறது. மற்றவர்களிடத்துத் தனது மனத்துயரத்தை மறைத்துவைக்கும் இளம் மாது ஒருத்தி பெற்ற தாயினிடம் தயங்காது யாவையும் வெளியிடுவாள். அன்பும் அனுதாபமும் உள்ள இடத்தில் மனதை உள்ளபடி சமர்ப்பிப்பது மிக எளிதாகிறது. தாயினும் சாலப் பரிந்து கேட்பவர் ஒருவரிடம் அங்ஙனம் வாய்விட்டுப் பகர்வதால் துயரம் என்னும் மனச்சுமை குறைகிறது. ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் உள்ள இணக்கம் மிக நெருங்கியது. தாயின் இனிமையும், தந்தையின் பராமரிப்பும், குருவின் கட்டுப்பாடும், அரசனது நேர்மையும், கடவுளது கிருபையும் ஒன்று கூடியது கிருஷ்ணனுடைய இவ்விணக்கம். ஆகையால் தங்கு தடையின்றி அர்ஜுனன் தன் மனக்கிலேசத்தை விரித்து விளக்குகிறான். ஸஞ்ஜய உவாச 9. ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ: பரந்தப: ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான் பரந்தப:-எதிரிகளை எரிப்பவனே! குடாகேஸ: ஹ்ருஷீகேஸம் ஏவம் உக்த்வா-உறக்கத்தை வென்றவன் அர்ஜுனன்), ஸ்ரீ கிருஷ்ணனிடம் இவ்விதம் சொல்லி ந யோத்ஸ்யே இதி ஹ கோவிந்தம் உக்த்வா-இனி போர் புரியேன் என்று கோவிந்தனிடம் சொல்லி தூஷ்ணீம் பபூவ-மௌனம் ஆனான். பொருள் : சஞ்ஜயன் சொல்லுகிறான்: பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசுநிரை காக்கும் பகவனை நோக்கிப் போரினிப் புரியேன் என்று வாய்புதைத்திருந்தான். இங்கு ஸஞ்ஜயர் கையாளுகிற பதங்களில் பரந்த கருத்துக்கள் அடங்கப் பெற்றிருக்கின்றன. யுத்தமும் நடைபெறலாகாது, ராஜ்யமும் தன் பிள்ளைகளுக்கே இருக்கவேண்டும் என்பது திருதராஷ்டிர மன்னனது மனோரதம். அது நிறைவேறாது என்று குறிப்பிடப்படுகிறது. தன்னளவில் அர்ஜுனன் குடாகேசன் என்ற பட்டம் பெற்றவன். அதாவது அவன் தூக்கத்தை அறவே வென்றவன். விரும்பிய வேளையில் விரும்பிய அளவுக்குத்தான் அவனுக்கு உறக்கம் வரும். தன் உடலையும் உள்ளத்தையும் நன்கு கட்டி ஆளுபவனுக்கே இது இயலும். (நெப்போலியன், சிவாஜி முதலியவர்களும் அர்ஜுனனைப் போன்று குடாகேசர்களாக இருந்தார்கள்) அர்ஜுனன் தன்னையே கட்டி ஆண்டதுபோன்று எதிரிகளை விரட்டியோட்டவும், வென்று வசப்படுத்தவும் வல்லவனாயிருந்தான். அத்தகையவனுக்கு ஸாரதியாக வந்தமைந்தவர் ஹிருஷீ கேசர். அதாவது இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனாயிருப்பவர். ஸ்ரீகிருஷ்ணனிடம் அத்தகைய மகிமை யிருந்தமையால் அவர் அங்ஙனம் அழைக்கப்பட்டார். மேலும் அவர் கோவிந்தன். (கோ=உயிர்கள்; விந்தன் -அறிபவன்) ஆக, அர்ஜுனனுக்கு ஏற்பட்ட தளர்வு தற்காலிகமானது. தானே அதைத் துடைக்க வல்லவன். துணைபுரிபவனோ உலகில் ஒப்பிலான் ஆகிய கிருஷ்ண பரமாத்மா. ஆக, திருதராஷ்டிரனது எண்ணம் நிறைவேறாது என்று ஸஞ்ஜயர் குறிப்பிடுகிறார். 10. தமுவாச ஹ்ருஷீகேஸ: ப்ரஹஸந்நிவ பாரத ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச: பாரத-பாரதா உபயோ: ஸேநயோ: மத்யே-இரண்டு படைகளுக்கும் நடுவே விஷீதந்தம்- துயருற்று இருக்கும் தம்-அவனிடம் (அர்ஜுனன்) ப்ரஹஸன் இவ- புன்னகை பூத்து இதம் வச: உவாச-இவ்வசனம் கூறினான். பொருள் : பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசனமுரைக்கிறான்: பரத வம்சத்துதித்தவரே என்று திருதராஷ்டிரன் அழைக்கப்படுகிறார். பரதனுடைய ஆட்சியில் இருந்தமையால் இந்தியாவுக்கு பாரதவர்ஷம் என்ற பெயர் வந்தது. பகவான் புன்னகை பூத்ததில் பரந்த கருத்து அடங்கப்பெற்றிருக்கிறது. உலகெங்கும் இரவில் இருள் சூழ்ந்து செயலற்றுக் கிடக்கிறது. பின்பு, புன்முறுவல் பூத்தாற்போன்று கீழ்வானம் வெள்ளென வெளுக்கிறது. இனி சூரியோதயமாகி உயிர்களை எழுப்பிச் செயலில் ஈடுபடுத்தப் போகிறது என்பதற்கு அது முன் அறிகுறி. அங்ஙனம் பகவானது இளநகை இனிவருகின்ற யோகத்துக்கும் ஞானத்துக்கும் முன் அறிகுறி. அர்ஜுனன் அவரிடமிருந்து இதுபரியந்தம் பெற்றது பிரேயஸ் - பிரியத்தைத் தருவதாகிய இகலோகப் பிராப்தி. இனிப் பெறப்போவது சிரேயஸ். அது இருமையிலும் ஸர்வதுக்க நிவர்த்தி செய்வது. பாரமார்த்திகப் பெருநிலம் அளிப்பதும் அதுவே. அதைப் பெற்ற பின் அதற்குமேல் பெறவேண்டியது ஒன்றுமில்லை. அதற்கேற்ற தருணம் அர்ஜுனனுக்கு இப்பொழுது வந்துவிட, இளநகையின் மூலம் இறைவன் அதைப் பாராட்டி, அருள்புரிய ஆரம்பிக்கிறார். 11. அஸோச்யாநந் வஸோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே கதாஸூநகதாஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா: ஸ்ரீ பகவான் சொல்கிறான் த்வம்-நீ அஸோச்யாந்-துயர் படத் தகாதார் அந்வஸோச:-வருந்துகிறாய் ப்ரஜ்ஞாவாதாந்-பண்டிதர்களைப் போன்று பாஷஸே-பேசுகிறாய் கதாஸூந்-இறந்தார்க் கேனும் அகதாஸூந்-இருந்தார்க் கேனும் பண்டிதா: ந அநுஸோசந்தி-பண்டிதர்கள் வருந்துவது இல்லை பொருள் : துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கின்றாய்! இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர். முதல் அத்தியாயம் முப்பத்தைந்தாவது சுலோகத்திலிருந்து நாற்பத்து நான்காவது சுலோகம் வரையில் அர்ஜுனன் பகர்ந்ததை பிரக்ஞாவாதம் (ஞானியரது நல்லுரை) என்று பகவான் பரிகசிக்கிறார். புஸ்தங்கள் பல படித்திருப்பவனைப் பண்டிதன் என்று சொல்லுவது வழக்கம். ஆனால் பண்டிதனுக்கு பகவான் தரும் லக்ஷணம் வேறு. இயற்கையின் நடைமுறையை உள்ளபடி அறிந்திருப்பவன் பண்டிதன் ஆவான். சூரியன் தோன்றுவதையும் மறைவதையும் குறித்து யாரும் வருந்தாதிருப்பது போன்று ஜனன மரண தத்துவத்தை அறியும் ஆத்மஞானி சாவுக்கு வருந்துவதில்லை. வருத்தப்படுதலில் அவனுக்கு அர்த்தமில்லை. எதைக் குறித்தும் மனம் தளராமை பண்டிதனுடைய போக்கு. அர்ஜுனனோ தனது ஞானமொழியோடு பொருந்தாத மனத்தளர்ச்சி கொள்கிறான். 12. நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா: ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன், ந த்வம் இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே, அத: பரம்-இனி மேலும், வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம் பொருள் : இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம். தேகங்களத்தனையும் தோன்றியவாறு அழியும். எது ஓயாது தகனமாய்க்கொண்டிருக்கிறதோ அது தேகம். தேகங்களுள் குடியிருக்கும் ஆத்மா அழிவற்றது; முக்காலத்திலும் அது பொதுவாயுள்ளது. ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்தில் இல்லாமற் போய்விடுவது அதற்கில்லை. எப்படி அது காலத்தில் அடிபடுவதில்லை என்று வினவின், அதற்கு விடை வருகிறது: 13. தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி யதா தேஹிந:-எப்படி ஆத்மாவுக்கு, அஸ்மிந் தேஹே-இந்த உடலில் கௌமாரம் யௌவநம் ஜரா-பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் ததா தேஹாந்தரப்ராப்தி-அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது தீர தத்ர ந முஹ்யதி-தீரன் அதில் கலங்கமாட்டான். பொருள் : ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான். ஒருவன் குழந்தையாய்க் காளையாகிப் பிறகு கிழவனாகிறான் இந்த மாறுதல்களெல்லாம் ஒரே மனிதனிடத்து உண்டாகின்றன. குழந்தையாக இருந்தவன் ஒருவன், காளையானவன் மற்றொருவன் என்று சொல்லுதல் பொருந்தாது. அங்ஙனமே ஓர் உடலைவிட்டு இன்னோர் உடலுக்குப் போகிறவனும் அதே ஆள். ஞானிக்கு இவ்வுண்மை சுவானுபவமாக விளங்குவதால் அவன் மனக்கலக்க மடைவதில்லை. பின்பு மனங்கலங்காதிருந்து பழகுபவன் தீரன் அல்லது ஞானி ஆவதற்குத் தன்னை ஆயத்தப்படுத்துகிறான். மாறுபாடு யாவும் உடலினுடையது என்றும், மாறாத்தன்மை ஆத்மாவினுடையதென்றும் அறிபவன் தீரன். ஆத்மா நித்தியப்பொருள் எனினும் அதற்குக் குளிர் வெப்பம், இன்ப துன்பம் முதலியன இருப்பது இயல்புதானே என்ற எண்ணம் வரலாம். அதைப் பற்றிய உண்மை வருமாறு: 14. மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஸீ÷க்ஷதாஷ்ணஸுகது:கதா: ஆகமாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத கௌந்தேய-குந்தியின் மகனே, ஸீதோஷ்ண ஸுகது:கதா:-குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும், மாத்ராஸ்பர்ஸா: து-இயற்கையின் தீண்டுதல்கள், ஆகமாபாயிந:-உண்டாகி அழிபவை அநித்யா:-அநித்யமானவை பாரத - தாந் ஸ்திதிக்ஷஸ்வ-பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள். பொருள் : குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள். கண், செவி முதலிய ஐம்பொறிகள் அதனதன் புலனாகிய வடிவம், ஒலி முதலியவைகளில் உலவுகின்றன. அதனால் உலகம் வேண்டப்படுபவை, வேண்டப்படாதவைகளாகப் புலனாகி இன்ப துன்பங்களை விளைவிக்கின்றன. இந்திரியங்களுக்கு விஷயமாகும் பொழுது தோன்றவும், விஷயமாகாதபொழுது அவைகள் மறையவும் செய்கின்றன. ஒருவேளையில் இன்பம் தருகிற அதே பொருள் மற்றொரு வேளையில் துன்பம் தருகிறது. குளிர் அல்லது வெப்பம் இதற்குச் சான்று. இன்பம் தரும் உணவு நோய்வாய்ப் பட்டிருக்கும்போது துன்பம் தருகிறது. ஆகையால் அவையாவும் அநித்தியமானவைகள். அவைகளைப் பொறுத்துப் பழகுபவன் உறுதியைப் பெறுகிறான். திதிøக்ஷ அல்லது பொறையைப் பழகுதல் நல்வாழ்க்கைக்கு ஓர் இன்றியமையாத சாதனமாகிறது. அத்தகையவன் இன்ப துன்பங்களுக்கு ஆளாவதில்லை; ஞானத்துக்குத் தகுதியுடையவன் ஆகிறான். தகுதி அவனுக்கு எப்படி வந்து அமைகிறது என்று கேட்கின், அதற்கு விடை வருகிறது: 15. யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப ஸமது:கஸுகம் தீரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே ஹி-ஏனெனில், புருஷர்ஷப-புருஷர்களில் சிறந்தவனே, ஸமது:கஸுகம்-இன்பமுந்துன்பமும் நிகரென, யம் தீரம் புருஷம்-எந்த தீர புருஷன், ந வ்யதயந்தி-கலங்க வைப்பதில்லையோ, ஸ: அம்ருதத்வாய கல்பதே-அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான். பொருள் : யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான், அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான். உடல் என்னும் புரியிலே வாசம் பண்ணுபவன் புருஷன் எனப்படுகிறான். பொருள்களைப் புலன்கள் வாயிலாகச் சேர்வதால் உடலின்கண் இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்தமையும். அவ்வுடலைத் தான் என்று எண்ணுபவன் துன்புறுவது திண்ணம். ஆத்ம சொரூபத்திலேயே நிலைத்திருப்பவனது மனம் அசைவதில்லை. அமைதியே வடிவெடுத்தவனாக அவன் இருக்கிறான். நிலையற்ற நிகழ்ச்சிகளால் சஞ்சலப்படாதிருப்பது அவனது உள்ளத் தெளிவைக் காட்டுகிறது. ஆதலால் அவன் தீரன் அல்லது பேரறிவுடையவன் ஆகிறான். சாகாநிலையாகிய மோக்ஷத்துக்கு அவனே தகுதியுடையவன். இவ்வுலக நிகழ்ச்சிகளை முறையாகப் பயன்படுத்தி நம்மைத் தீரர்களாக்குதற்கு நாம் இவ்வுலகில் வந்துள்ளோம். அக்ஞானம் அகலுகின்றவளவு துக்க நிவர்த்தியும் வந்தமைகிறது. உள்ளது எது என்ற ஆராய்ச்சி அடுத்த படியாக வருகிறது: 16. நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத: உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி: அஸத: பாவ ந வித்யதே-இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை, ஸத: அபாவ ந வித்யதே-உள்ளதற்கு இல்லாதது என்பது இல்லை, அநயோ உபயோ அபி அந்த:-இந்த இரண்டுக்குமுள்ள தத்துவம் தத்த்வதர்ஸிபி: த்ருஷ்டா-தத்துவ தரிசிகள் உணர்வார். பொருள் : இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார். தத்துவ தர்சனம் என்பது உண்மையைக் காணுதல். உண்மையைக் காண்பதற்கே உயிர்கள் முயன்று வருகின்றன. தேடிய பொருளைக் கண்டெடுத்தவர்க்கு மேலும் தேடித்திரிய வேண்டிய அவசியமில்லை. உள்ளது எது என்று தேடுவது உயிர்களின் இயல்பு. இருப்பதை உரியதாக்கிக்கொள்ளச் செய்யும் முயற்சியே வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் நதியின் நீர் ஒடுங்கியிருக்கும்போது நெடுந்தூரத்துக்கு நனைந்த பூமி அதில் கண்ணுக்குத் தென்படுகிறது. ஆயினும் அதைச் சாகுபடிக்கு உரியதாக்கிக்கொள்ள யாரும் முயலுவதில்லை. ஏனென்றால் மாரிக்காலத்தில் மீண்டும் பெருக்கெடுத்து ஓடும் பிரவாகத்துக்கு அது உட்படும். நாளைக்குப் பயன்படாது போகுமாதலால் இன்றே அது பயனற்றதென்று கருதப்படுகிறது. தத்துவதர்சிகள் தேகத்தையும் அதினின்று தோன்றும் சுக துக்கங்களையும் அங்ஙனம் கருதுகின்றனர். முன்பு ஒரு காலத்தில் நம் தேகம் இல்லை. இடையில் அது வந்துள்ளது. பின்பு அது இல்லாமற்போம். ஆகையால் இடையில் இருக்கும்பொழுதும் உண்மையில் அது இல்லாததே-அபாவமே. கனவில் வந்துள்ள செல்வம் வந்திருக்கும்பொழுதும் உண்மையில் இல்லை. தேகம் அஸத்து, அதாவது இல்லாதது. ஏனென்றால் அதனிடத்து பாவமில்லை; இருக்கின்றேன் என்ற உணர்ச்சியில்லை. முன்பு இல்லாதது இடையில் வந்து, இறுதியில் மறைவது விகாரப்படும் தன்மையது. ஆதலால் அது இருக்கும்பொழுதும் இல்லாததெனத் தள்ளத் தகுந்தது. அதனிடத்திருந்து வரும் சுகதுக்கங்களையும் அப்படியே புறக்கணிக்க வேண்டியது பெரியோர் கடமை. ஆத்மாவோ ஸத்து, அதாவது உள்ளது. ஏனென்றால் அதனிடத்து உணர்வு உண்டு. இருக்கிறேன் என்ற உணர்ச்சி அல்லது பிரக்ஞை வடிவமானது அது. பிரக்ஞையானது காலத்தால், தேசத்தால் அல்லது அவஸ்தையால் அடிபடாதது. ஒரு விகாரத்தையும் அது எடுப்பதில்லை. மாறுபாடு என்பது ஆத்மாவுக்கு இல்லை. அது நித்தியமாய் உள்ளது. மேலும் அதன் சொரூபம் வருமாறு: 17. அவிநாஸி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம் விநாஸமவ்யயஸ்யாஸ்ய ந கஸ்சித்கர்துமர்ஹதி அவிநாஸி து-அழிவற்றது தான் என்று, தத் வித்தி:-அதை அறிந்து கொள். யேந இதம் ஸர்வம்-எதனால் இவை அனைத்தும், ததம்-வியாபிக்கப் பட்டிருக்கிறதோ அஸ்ய அவ்யயஸ்ய-அந்த அழிவற்றதற்கு, விநாஸம் கர்தும் கஸ்சித் ந அர்ஹதி-அழிவை ஏற்படுத்த யாருக்கும் இயலாது. பொருள் : இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது. ஆகாசத்தில் அதாவது வெட்டவெளியில் திடீரென்று மேகங்கள் தோன்றுகின்றன. நீக்கமற எங்கும் பரவியுள்ள வெட்ட வெளியைப் பிளவுபடுத்த அம்மேகங்களுக்கு இயலாது. பெரியதாகப் பரிணமிப்பதும் சிறியதாக ஒடுங்குவதும் மேகத்துக்கு உண்டு. ஆனால் ஆகாசத்துக்குக் கூடுதல் குறைதல் இல்லை. அங்ஙனம் சிதாகாசத்தில் அதாவது அறிவு வெளியில் ஜகத் தோன்றவும், நிலைபெற்றிருக்கவும், மறையவும் செய்கிறது. அதனால் சிதாகாசத்தில் ஒருவித மாறுதலும் உண்டாவதில்லை. அதைக் கூட்டவோ, தேய்க்கவோ, மறைக்கவோ யாருக்கும் இயலாது. சாக்ஷியாக உள்ளது அது. 18. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண: அநாஸிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத அநாஸிந:-அழிவற்றான், அப்ரமேயஸ்ய-அளவிடத்தகாதான், நித்யஸ்ய-நித்தியன், ஸரீரிண: இமே தேஹா-ஆத்மாவினுடைய இந்த வடிவங்கள், அந்தவந்த உக்தா:-அழியக் கூடியவையாக என்பர், தஸ்மாத் யுத்யஸ்வ பாரத-ஆதலால் பாரதா, போர் செய். பொருள் : ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய். கடல் இருந்தபடி இருக்க அதனுள் நீர் இடம் மாறி அமைகிறது; ஆறாக ஓடுகிறது; பனிக்கட்டியாக உறைகிறது. ஆத்மாவில் அதுபோன்ற மாறுதல் இல்லை. ஆதலால் ஆத்மா நித்தியம். குட்டையில் உள்ள நீர் ஆவியாகக் கிளம்பிக் குட்டைக்கு நாசம் ஏற்படுகிறது. ஆத்மாவினிடத்து அத்தகைய நாசம் ஒன்றுமில்லை. மேலும் மனம் மொழிக்கு எட்டாமையினால் அது அளப்பறியதாகிறது. கடலில் ஏற்படுகிற மாறுதல் உடலிலும் உண்டாகிறது. குட்டைக்கு வருகிற நாசம் போன்று ஆக்கைக்கு மரணம், தகனம் ஆகியவைகள் வாயிலாக நாசம் வருகிறது. தேகத்தின் தன்மையை மனதைக் கொண்டும், மற்றொரு தேகத்தைக்கொண்டும், அறிவைக் கொண்டும் அளந்தெடுக்கமுடியும். ஆத்மாவை அப்படி மதிப்பிடமுடியாது. பொருளைப்பற்றி வந்த மயக்கத்தால் அர்ஜுனன் போர்புரிய மாட்டேன் என்கிறான். மயக்கம் கொள்ளுதலும், போர் முனையினின்று பின்வாங்குதலும், அதாவது தன் கடமையைச் செய்யாது ஒழிதலும் ஒருவிதத்திலும் பார்த்தனுக்குப் பொருந்தாது. ஆதலால் பார்த்தா, போர்புரிக என்கிறார் பகவான். ஆதலால் போர்புரிக என்ற பல்லவியை இன்னும் பல தடவை கேட்கிறார்கள். 19. ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம் உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ய: ஏநம்-எவன் இந்த (ஆத்மாவை), ஹந்தாரம் வேத்தி-கொல்பவனாக நினைக்கிறானோ, ய: ஏநம் ஹதம் மந்யதே-எவன் இந்த ஆத்மாவை கொல்லப் பட்டவனாக நினைக்கிறானோ, தௌ உபௌ-அந்த இருவருமே, ந விஜாநீத:-அறியாதவர்கள், அயம் ந ஹந்தி-இவன் கொல்லுவதுமில்லை, ந ஹந்யதே-கொலையுண்டதுமில்லை. பொருள் : இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை; செல்வத்தில் பெரும் பற்றுடைய ஒருவனது செல்வம் திடீரென்று அழிந்துபோனால், நான் தொலைந்தேன் என்கிறான் அவன். செல்வம் தன் சொரூபமாகாது. தன்னுடைய ஒன்று அழிய, மனிதன் தானே அழிந்து போவதாக நினைக்கிறான். தன்னுடையது என்பது மமகாரம். தடித்த மமகாரம் அகங்காரம் போன்று ஆய்விடுகிறது. தேகத்தைத் தான் என்று எண்ணுவது அகங்காரம். மாறுபடும் தன்மையது தேகம். மாறாப்பெருநிலையில் வீற்றிருப்பது ஆத்ம சைதன்யம். தோன்றிய மேகம் மறையும்பொழுது ஆகாசம் எப்படி அழிவதில்லையோ, அப்படி ஆக்கை அழியும்போது ஆத்மா அழிவதில்லை. 20. ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய: அஜோ நித்ய: ஸாஸ்வதோऽயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே அயம் கதாசித்-இந்த ஆத்மா எப்போதும், ந ஜாயதே வா ம்ரியதே-பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை, பூத்வா பூய: ந பவிதா-முன் உண்டாகி பிறகு ஏற்படக் கூடியதும் இல்லை, அயம் அஜ: நித்ய: ஸாஸ்வத: புராண:-இவன் பிறப்பற்றான்; அனவரதன்; சாசுவதன்; பழையோன், ஸரீரே ஹந்யமாநே ந ஹந்யதே-உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான். பொருள் : எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான். பிறத்தல், இருத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், மாய்தல் ஆகிய ஆறுவித பாவ விகாரங்கள் பூதங்களாலாகிய உடலத்துக்கு உண்டு; ஆத்மாவுக்கு விகாரம் இல்லை. 21. வேதாऽவிநாஸிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம் கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம் பார்த-பார்த்தா! ஏநம்-இந்த பொருள் (ஆத்மா), அவ்யயம்-மாறாதது, நாஸிநம்-அழிவற்றது, நித்யம்-என்றும் உளது, அஜம்-பிறப்பற்றது, ய: புருஷ: வேத-எந்த மனிதன் உணர்கிறானோ, ஸ: கதம் கம் காதயதி ஹந்தி-அவன் யாரை கொல்வது? யாரை கொல்விப்பது? பொருள் : இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை? ஆத்மா செயலற்றது. ஆத்மஞானம் அடையப்பெற்றவன் அகங்காரமற்றவனாதலால் எவ்வினைக்கும் தான் கர்த்தா என்ற உணர்ச்சி அவனுக்கு வருவதில்லை. ஒரு வினையும் ஆத்ம ஞானியைச் சாராது என்பதற்குச் சான்றாகக் கொல்லுதல் கொல்வித்தல் ஆகிய இரண்டு கொடிய வினைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. எச்செயலைச் செய்தாலும், செயல்புரிந்தேன் என்ற எண்ணம் ஆத்மஞானியிடம் இல்லை. ஞானசாதனம் பழகுபவன் தனக்குற்ற கர்மத்தைச் செய்து கொண்டிருப்பதற்கிடையில் தன்னைக் கர்த்தாவாக உணரலாகாது. 22. வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி ததா ஸரீராணி விஹாய ஜீர்ணாந் யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ யதா நர:-எப்படி மனிதன், ஜீர்ணாநி வாஸாம்ஸி விஹாய-பழைய துணிகளை நீக்கி விட்டு நவாநி க்ருஹ்ணாதி-புதியதை எடுத்துக் கொள்கிறானோ, ததா தேஹி ஜீர்ணாநி ஸரீராணி விஹாய-அவ்வாறே ஆத்மா நைந்த உடல்களை களைந்து, அந்யாநி நவாநி ஸம்யாதி-வேறு புதியதை அடைகிறான். பொருள் : நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான். பழைய துணியை எறிந்துவிட்டு மனிதன் புதியது தேடுவதில்லை. புதியது கைக்குக் கிடைத்தபின்பே பழையது புறக் கணிக்கப்படுகிறது. பாம்பு புதிய சட்டையைப் பண்ணிக் கொண்டு பழையதை நீக்குகிறது. அங்ஙனம் ஆத்மா ஒரு சரீரத்தை விடுதற்கு முன்பே, தன் வினைக்கு ஏற்றாற் போன்று சூக்ஷ்மமாகப் புதியது ஒன்றைப் பண்ணிக்கொள்கிறது. அது காரண சரீரம் என்றும் சூக்ஷ்ம சரீரம் என்றும் சொல்லப்படுகிறது. மரத்தின் நுண்ணிய விதை போன்று அது நெடுநாள் தோன்றா நிலையிலிருந்து பிறகு பிறக்கிறது. ஸ்தூல உடல் எடுப்பதை நாம் பிறப்பு என்கிறோம். 23. நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக: ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஸோஷயதி மாருத: ஏநம் ஸஸ்த்ராணி ந சிந்தந்தி-இவனை ஆயுதங்கள் வெட்டுவதில்லை, ஏநம் பாவக: ந, தஹதி-இவனை நெருப்பு எரிப்பதில்லை, ஏநம் ஆப: ந க்லேதயந்தி-இவனை தண்ணீர் நினைப்பதில்லை, மாருத: ச ந ஸோஷயதி-காற்றும் உலர்த்துவதில்லை. பொருள் : இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது. ஐம்பெரும் பூதங்களில் ஆகாசம் செயலற்றது. ஆகையால் அதைப்பற்றிய பேச்சு ஈண்டு எழவில்லை. பாக்கி நான்கு பூதங்களின் செயல் ஆத்மாவினிடத்துச் செல்லா. மண்ணிலிருந்து ஆயுதம் வருகிறது. பிளவுபடாப் பொருள் ஒன்றை வெட்டுவ தெங்ஙனம்? பூதாகாசத்தையே, ஏனைய நான்கு பூதங்களும் விகாரப்படுத்த முடிவதில்லை. பின்பு அதற்கு அப்பாலுள்ள சிதாகாசத்தை அவை பாழ்படுத்தா என்பது சொல்லாமலே விளங்குகிறது. 24. அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽஸோஷ்ய ஏவ ச நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந: அயம் அச்சேத்ய:-இவன் பிளத்தற்கரியவன், அயம் அதாஹ்ய:-எரிக்கப் பட முடியாதவன், அக்லேத்ய:-நனைக்கப் படமுடியாதவன், அஸோஷ்ய:-உலர்த்தப் படமுடியாதவன், நித்ய: ஸர்வகத:-நித்தியன்; எங்கும் நிறைந்தவன், ஸ்தாணு அசல:-உறுதி உடையவன்; ஆசையாதான் ஸநாதந:-என்றும் இருப்பான். பொருள் : பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான். இவ்வாத்மா வெட்டப்படுகிறதில்லையாதலால் அது நித்தியமாயுள்ளது. ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் இல்லாதது நித்தியப்பொருள் ஆகாது. ஏனென்றால் இல்லாத இடத்துக்கு அது அநித்தியமாய்விடும். நித்தியமாதலால் அது எங்கும் நிறை பொருள் ஆகிறது. இடம் மாறுவது அசைவது எனப்படுகிறது. எங்கும் நிறைபொருளோ போவதற்குப் புதிய இடமில்லையாதலால் அது ஸ்தாணு, ஸ்திரமாய் இருப்பது. அப்படி நிலைத்திருப்பதால் அது அசலம், அசைவற்றதெனப்படுகிறது. எதற்குப் போக்கும் வரவும் இல்லையோ அது ஸநாதனம்; உண்டுபண்ணப்படாதது. அது எப்பொழுதுமிருப்பதாகிறது. ஆத்மாவானது சொல்லில் அடங்காத தொன்மையது ஆயினும் வெவ்வேறு சொற்களால் அதை விளக்குவதால் ஏதேனும் ஒருவித விளக்கம் ஒருவர் உள்ளத்தில் படியலாம். அதன் உண்மை மனதில் படிகின்றவளவு துக்க நிவிருத்தியாகும். யாண்டும் வேண்டப்படாத துக்கத்தை அக்ஞானத்தால் மனிதன் வருவித்துக்கொண்டு தனது மேன்மைகளையெல்லாம் இழக்கிறான். அக்கீழ்மை வேண்டப்படுவதன்று என்று அறிவுறுத்துதற்கே வாசுதேவர் இத்தனைவித விளக்கங்களைக் கையாளுகிறார். 25. அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஸோசிதுமர்ஹஸி அயம் அவ்யக்த:-இந்த ஆத்மா புலன்களுக்கு புலப் படாதவன், அயம் அசிந்த்ய:-மனத்தால் சிந்தனைக்கு அரியவன், அயம் அவிகார்ய:-மாறுதல் இல்லாதவன், உச்யதே-என்று கூறப் படுகிறது, தஸ்மாத் ஏநம் ஏவம் விதித்வா-இவனை இவ்வாறு அறிந்து கொண்டு அநுஸோசிதும் அர்ஹஸி-வருத்தப் படாமல் இரு. பொருள் : தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப! ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்.” ஆத்மா ஓர் இந்திரியத்துக்கும் விஷயமாகாதிருப்பதால் அது அவ்யக்தம் எனப்படுகிறது. இந்திரியங்களுக்கு எட்டாப் பொருள் ஒன்று மனதிலும் படியாது. ஆதலால் அது அசிந்த்யம். மாறுபடுகின்ற காற்று, தீ, நீர், நிலம் ஆகிய நான்கு பூதங்களும் நன்கு கட்புலனாவது போன்று மாறுபடாத ஆகாசம் கட்புலனாவதில்லை. ஆகாசத்தின்கண் அவயவங்கள் இன்மையால் அது மாறாதது. சிதாகாசமாகிய ஆத்மாவுக்கும் அவயவம் இல்லையாதலால் விகாரத்தை, மாறுபடும் தன்மையை அதனிடம் காணமுடியாது. இனி, அதைக் குறித்து வருந்துவது எங்ஙனம் பொருந்தும்? 26. அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம் ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் ஸோசிதுமர்ஹஸி அத ச த்வம்-ஆயினும், ஏநம் நித்யஜாதம் நித்யம் ம்ருதம் வா மந்யஸே-இந்த ஆத்மா எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது எப்போதும் இறந்து கொண்டே இருப்பான் என்று நினைப்பாயானால், மஹாபாஹோ-நீண்ட கைகளை உடையவனே, ததாபி த்வம் ஏவம் ஸோசிதும் ந அர்ஹஸி-அப்போதும் வருத்தப்படுவது தகாது. பொருள் : அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால், அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது. நித்தியவஸ்து ஒன்றும் இல்லை என்பது லோகாயதர்களுடைய கோட்பாடு. பேச்சுக்காக பகவான் இங்கு அதை எடுத்துக்கொள்கிறார். அவர்களுடைய கொள்கை உண்மையெனின் அப்பொழுதும் வருந்துதற்கு இடமில்லை. ஒருவன் ஆஸ்திகனாக இருப்பதும் நாஸ்திகனாயிருப்பதும் அவனுடைய வாழ்க்கைக்கு முக்கியமானதன்று. கொள்கை எதுவாயினும் அவன் வருத்தப்படாதிருக்க வேண்டும். துயரம் ஒரு மனிதனை அழித்து விடுவதுபோன்று வேறு எதும் அவனுக்குக் கேடு செய்யாது. 27. ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி ஜாதஸ்ய ம்ருத்யு: த்ருவ: ஹி-பிறந்தவன் சாவது உறுதி எனில், ம்ருதஸ்ய ச ஜந்ம த்ருவம்-செத்தவன் பிறப்பது உறுதி எனில், தஸ்மாத் அபரிஹார்யே அர்தே-ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்துக்காக, த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ துயரப் படுவது தகாது. பொருள் : பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில், இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று. இது இன்னும் முக்தியடையாதவர்களைக் குறித்துப் பேசும் பேச்சாகும். ஆசையிருக்கும் பரியந்தம் பிறப்பதும் இறப்பதும் இயல்பு. வினையின்படி வருகிற சாவைத் தடுக்க யாருக்கும் இயலாது. நாஸ்திகரின் கோட்பாட்டின்படி வினையிருக்கும் பரியந்தம் பிறப்பு இறப்பு இருக்கிறது. வினைமுடிவது தீபத்தில் எண்ணெய் முடிவது போன்றது. எரிகின்ற தீபம் பிறகு ஒன்றுமில்லாது போய்விடுகிறது. அதே விதத்தில் வினை முடிந்ததும் மனிதன் என்னும் தோற்றம் கலைந்து போய்விடுகிறது. நவீன நாஸ்திகர்களுக்கிடையில் இன்னொரு கோட்பாடு உண்டு. களிமண்ணில் வடிவம் செய்து உருமாற்றுவது போன்று பிரகிருதியில் உயிர்கள் என்ற வடிவங்கள் மாறி மாறி அமைகின்றன. அச் செயல் பிறப்பு இறப்பு என்னும் பெயர் பெறுகிறது. அதற்கு ஏன் வருந்தவேண்டும் என்பது அவர்களின் கேள்வி. 28. அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா பாரத-பாரதா! பூதாநி அவ்யக்தாதீநி-உயிர்கள் ஆரம்பம் தெளிவில்லை, அவ்யக்தநிதநாநி ஏவ-இறுதியும் தெளிவில்லை, வ்யக்தமத்யாநி-நடுநிலைமை தெளிவுடையது, தத்ர கா பரிதேவநா-இதில் துயற்படுவது என்ன ? பொருள் : பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது; இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்ன? உற்றார் உறவினரெனத் தோன்றும் உயிர்களெல்லாம் இடையில் வந்தவர்கள். கனவில் காணப்படுபவர் முன்பிருந்ததில்லை பின்பு இருக்கப்போவதில்லை; இடையில் இருந்தும் உண்மையில் இல்லாதவரேயாம்; பந்துக்கள் எனப்படுவர்கள் லோகா யதர்களின் கோபாட்டின்படி பூதங்களின் சேர்க்கையால் காரண காரியமாக இடையில் வந்தவர்கள். கடைசியில் அவர்கள் இருக்கப்போவதில்லை. ஆகையால் இடையில் தோன்றியுள்ளவர்களுக்காக இன்னல்படுவது தகாது. லோகாயதத்தின் கோட்பாடு இது ஈறாக மூன்று சுலோகங்களில் முடிவடைகிறது. பழையபடி ஆத்ம தத்துவ விசாரத்துக்கு பகவான் திரும்புகிறார். 29. ஆஸ்சர்யவத்பஸ்யதி கஸ்சிதேந மாஸ்சர்யவத்வததி ததைவ சாந்ய: ஆஸ்சர்யவச்சைநமந்ய: ஸ்ருணோதி ஸ்ருத்வாऽப்யேநம் வேத ந சைவ கஸ்சித் கஸ்சித் ஏநம்-யாரோ ஒருவன், ஆஸ்சர்யவத் பஸ்யதி-வியப்பெனக் காண்கிறான், ஆஸ்சர்யவத் வததி-வியப்பென ஒருவன் சொல்கிறான், ஆஸ்சர்யவத் அந்ய ஸ்ருணோதி-வியப்பென ஒருவன் கேட்கிறான், கஸ்சித் ஸ்ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத-கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன். பொருள் : இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.” கட்புலனாகின்ற உலகப் பொருள்களைப் போன்றதல்ல ஆத்மா. பொறி புலன்களுக்கு அதீதத்திலுள்ளதை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பே ஆயிரத்தில் ஒருவனுக்குக் கிடைப்பதரிது. ஆகையால் ஆத்ம விசாரம் செய்கின்றவர்களே ஆச்சரியத்துக்குரியவர்களாம். மன பரிபாகம் ஏற்படாமையால் அவர்களில் பெரும்பான்மையோருக்கு ஆத்ம தத்துவம் விளங்குவதில்லை. அழுக்குப் படிந்த கரடு முரடான கண்ணாடியின் வாயிலாக விளக்கு வெளிச்சம் சிதைந்து வெளிவருவது போன்று ஆத்ம சொரூபம் அவர்களுக்கு விளங்கியும் விளங்காமலும் இருக்கிறது. 30. தேஹீ நித்யமவத்யோऽயம் தேஹே ஸர்வஸ்ய பாரத தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஸோசிதுமர்ஹஸி பாரத-பாரதா, அயம் தேஹீ-இந்த ஆத்மா, ஸர்வஸ்ய தேஹே-எல்லா உடலிலும், நித்யம் அவத்ய-எப்பொழுதும் கொல்லப் படமுடியாதவன், தஸ்மாத் ஸர்வாணி பூதாநி-ஆகவே எந்த உயிரின் பொருட்டும், த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ வருந்துதல் தகாது. பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன். ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா! லோகாயதர்களுடைய கோட்பாடு இங்கு நிராகரிக்கப்படுகிறது. அதன்மேல் ஆத்ம தத்துவத்தைப் பற்றிய முடிவான சித்தாந்தமும் இயம்பப்படுகிறது. ஆத்ம ஞானமும் துக்க நிவிருத்தியும் மனிதன் மேன்மையுறுதற்கு இன்றியமையாதவைகள் என்பது நன்கு வற்புறுத்தப்படுகின்றன. 31. ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே ஸ்வதர்மம் சாவேக்ஷ்ய அபி-ஸ்வதர்மத்தைப் கருதினாலும், விகம்பிதும் ந அர்ஹஸி-நீ நடுங்குதல் தகாது, க்ஷத்ரியஸ்ய தர்ம்யாத் யுத்தாத் அந்யத்-மன்னருக்கு அறப்போரைக் காட்டிலும் ஸ்ரேய: ந வித்யதே-உயர்ந்ததொரு நன்மை இல்லை. பொருள் : ஸ்வதர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை. அரசனுக்கு உயிரிலும் பெரிதாக உள்ளது அறம். இது போன்ற போர் புரிவதால் அறம் வளர்க்கப்படுகிறது. போரினின்று விலகுவதால் மறம் மேலோங்குகிறது. மறம் மேலோங்க விடுபவன் அரசன் ஆகான். அறம் செய்யாது மறம் செய்யும் மனிதனோ சிரேயஸைப் பெறாது இழிவை அடைவான். ஒரு மனிதனுக்கு சிரேயஸைத் தருபவைகளில் முதலானது ஸ்வதர்மம். எம்மனிதன் எச்செயலுக்கு நன்கு தகுதியுடையவனாகிறானோ அச்செயல் அவனுடைய ஸ்வதர்மமாம். கிடைப்பதற்கு அரிய ஆங்காலம் அல்லது அனுகூலமான காலத்தை ஒரு மனிதன் எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற கேள்விக்கு இனி விடை வருகிறது. 32. யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம் ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஸம் பார்த-பார்த்தா, யத்ருச்சயா உபபந்நம்-தானே வந்திருப்பதும், அபாவ்ருதம் ஸ்வர்கத்வாரம்-திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில், ஈத்ருஸம் யுத்தம்-இத்தகைய போர் ஸுகிந: க்ஷத்ரியா: லபந்தே-பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள். பொருள் : தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது. இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்! வாழ்க்கையில் தற்செயலாய் வந்தமையும் ஆங்காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. முறை பிறழாது ஒருவன் தன் கடமையைச் செய்துகொண்டு போக வல்லவனாகவேண்டும். நதியில் நீரோட்டத்தை எதிர்த்து ஓடத்தைச் செலுத்துவதுபோன்று அது இடர் சூழ்ந்த செயலாகும். பிறகு கடல் பொங்கும் வேளை யொன்று வருகிறது. அப்பொழுது நதியில் நீர் எதிர்த்து ஓடுகிறது. ஓடத்தைக் கடத்துதற்கு அது அனுகூலமாகிறது. துடுப்புப் போடாவிட்டாலும் அது குறியை நோக்கி நகர்கிறது. காற்றும் வசதியாகவே தொடர்ந்து வீசுகிறது. அப்பொழுது பாயை விரிப்பதுதான் பாக்கி. சிறு முயற்சியில் பெரிய காரியம் நிறைவேறுகிறது. இதுதான் தற்செயலாய் வந்தமையும் நற்காலம். அர்ஜுனனுக்கு அந்த வாய்ப்பு இப்பொழுது கிடைத்திருக்கிறது. வனவாச துக்கமும் சோதனையும் முடிவடைந்துவிட்டன. இனி, தன் கடமையைச் சிறிது முயற்சியோடு செய்தால் போதுமானது. வலிய வந்து விண்ணுலகும் மண்ணுலகும், வெற்றியும் கீர்த்தியும் அமையப் போகின்றன. க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றிய சந்தேகமும் மனக் கிலேசமும் இவ்வேளையில் பொருந்தா. இதுபோன்று ஆங்காலம் எல்லா மனிதருக்கும் எப்பொழுதாவது வந்து வாய்ப்பதுண்டு. அதைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்பவனே இவ்வுலகில் சீரும் சிறப்பும் அடையப்பெறுகிறான். ஆங்காலத்தைப் பயன்படுத்தாது விட்டுவிட்டால் வரும் கேடு யாது என்பதற்கு விடை வருகிறது: 33. அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி அத-அன்றி, இமம் தர்ம்யம் ஸங்க்ராமம்-இந்தத் தர்மயுத்தத்தை, த்வம் ந கரிஷ்யஸி சேத்-நீ நடத்தாமல் விடுவாயானால், தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா-அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று, பாபம் அவாப்ஸ்யஸி-பாவத்தையடைவாய் பொருள் : அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய். அதர்மத்தைச் செய்பவன் யாண்டும் கேடு அடைகிறான். தன் கடமையாக வந்து அமைந்த தர்மத்தைத் தக்க தருணத்தில் செய்யாதவன் அதனினும் பெருங் கேட்டையடைகிறான். தகுந்ததைச் செய்யாமையால் வரும் கேடானது, தகாததைச் செய்வதால் வரும் கேட்டைவிடப் பெரியதாம். முறையான இகலோக வாழ்க்கையைக் கீர்த்தி பின் தொடர்வது போன்று முறை தவறிய வாழ்க்கையை அபகீர்த்தி பின் தொடர்கிறது. அது எப்படியெனில்: 34. அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேऽவ்யயாம் ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே பூதாநி ச-உலகத்தாரும், தே அவ்யயாம்-உனக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய, அகீர்திம் அபி கதயிஷ்யந்தி-வசை உரைப்பார்கள், ஸம்பாவிதஸ்ய-புகழ் கொண்டோன் அகீர்தி: மரணாத் அதிரிச்யதே-அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ? பொருள் : உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ? எப்படியாவது உயிர் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற உணர்ச்சி விலங்கினத்தைச் சேர்ந்தது. வீரன் ஒருவனுக்கோ நன்கு உயிர்வாழவும் தெரியும். வேண்டுமிடத்து உயிர் வழங்கவும் தெரியும். அப்படி முறையாக மகிழ்ச்சியுடன் உயிரைக் கொடுப்பதால் அவன் புகழ் பரவுகிறது. எதிரி காலால் உதைக்கையில் அவன் காலைத் தொட்டு வணங்கி உயிர்ப்பிச்சை கேட்பது எவ்வளவு இழிவோ அதிலும் பன்மடங்கு புன்மையது பழிக்கு ஆளாகி உயிர்வாழ்ந்திருத்தல். உலகில் பழிப்பவர் தமது மனத்துக்குத் தோன்றியதையெல்லாம் முகாமையாக வைத்துப் பழிப்பர். எப்படியெனில்: 35. பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா: யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம் ச யேஷாம் த்வம் பஹுமதோ பூத்வா-மேலும் எவர்களுடைய (கருத்தில்) நீ நன்மதிப்பைப் பெற்று இருந்து, லாகவம் யாஸ்யஸி-தாழ்மையாய் அடைவாயோ, மஹாரதா: த்வாம்-அந்த மகாரதர்கள் உன்னை, பயாத் ரணாத் உபரதம்-பயத்தினால் யுத்தத்திலிருந்து பின்வாங்கியவனாக, மம்ஸ்யந்தே-கருதுவார்கள். பொருள் : நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய். ஜன்ம சத்துருக்களாகிய துர்யோதனன் முதலாயினோர் அர்ஜுனனுடைய பராக்கிரமத்தைப் பாராட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. மகாதேவனை எதிர்த்துப் போர்புரிந்தவன் என்றும், பாசுபதாஸ்திரத்தைப் பெற்றவன் என்றும் பார்த்தனைப் பாராட்டி வந்துள்ளார்கள். ஆனால் அவனை எப்படியாவது ஒழித்துவிடவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அவர்கள். இந்த நெருக்கடியில் அர்ஜுனன் அன்பின் வழியில் பின்வாங்கினான் என்று அவன் செயலைப் பொருள்படுத்த மாட்டார்கள்; அஞ்சிப் புறங்காட்டி ஓடினான் என்று இகழ்வார்கள். போற்றுதல் மிக எளிதில் தூற்றுதலாக மாறிவிடும். அந்த இகழ்ச்சிக்குப் பிறகு எவ்விதத்திலும் ஈடு தேடிக்கொள்ள முடியாது. பயம் வீரனுக்கு அழகன்று. பயமுடையார் இவ்வுலகில் எதற்கும் உதவார் என்பது வெளிப்படை. அச்சத்துக்கு இடங் கொடுத்து நாளைக்கு வருந்துதற்கேற்ற ஒரு செயலை இன்று செய்வது தகாது. எள்ளி நகையாடுதல் இன்னும் எப்படியெல்லாம் வடிவெடுக்கும் எனில்: 36. அவாச்யவாதாம்ஸ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா: நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம் தவ அஹிதா:-உனக்கு வேண்டாதார், தவ ஸாமர்த்யம் நிந்தந்த-உன் திறமையைப் பழிப்பார்கள், பஹூந் அவாச்யவாதாம் ச-சொல்லத் தகாத வார்த்தைகள் பல, வதிஷ்யந் -சொல்லுவார்கள், தத: து:கதரம் நு கிம்-இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது பொருள் : உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது? ஒருவன் கெட்டுப் போய்விட்டால் அவனுடைய வாழ்க்கையின் காட்சி திடீரென்று மாறிவிடுகிறது. காலமெல்லாம் அர்ஜுனனைப் புகழ்ந்து கொண்டிருந்தவர்கள் இனி இகழ்ந்து பேசுதற்குக் கூசார்கள். அவன் பெற்றிருந்து பொருள் சேர்ந்த புகழ்ச்சி. அவனைப்பற்றி நினைக்கும்பொழுதே எதிரியின் உள்ளத்தில் அச்சம் வடிவெடுக்கும். பரபரப்போடு பார்த்தன் போர்க்களத்துக்கு வந்தது பகைவர் உற்சாகத்துக்கே அணைகட்டிற்று. இனி, அவன் பின்வாங்குவானாகில் அங்ஙனம் கட்டப்பட்ட அணை உடைக்கப்படும். முன்பு தாங்கள் புகழ்ந்து பேசியதற்கே புதிய வியாக்யானம் வந்தமையும். மனிதனால் கேட்டுச் சகிக்க முடியாத சுடு சொற்களை வேண்டியவாறெல்லாம் வழங்குவார்கள். இவ்வேளையில் யுத்தத்தினின்று விலகுவது பெருந்தவறாகும். அதனால் அர்ஜுனனுடைய ஆண்மையே அடிபட்டுப்போம். அதற்கு மேல் பெருவாரியாக வரும் வசைச்சொற்கள் அவனை இடையறாது துன்புறுத்திக்கொண்டிருக்கும். சிறுமையையும் துன்பத்தையும் வலிய வருவித்துக்கொள்வானேன்? போர்புரிவது பெருங்கேடு என்று சொன்ன அர்ஜுனனுக்கு பகவான் என்ன சொல்கிறார் என்றார். 37. ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய: ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்-கொல்லப்படினோ வானுல கெய்துவாய், ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்-வென்றால் பூமியாள்வாய், தஸ்மாத் கௌந்தேய-ஆகவே குந்தி மைந்தனே, க்ருதநிஸ்சய: யுத்தாய உத்திஷ்ட-நிச்சயித்துக் கொண்டு போருக்கு எழுந்திரு பொருள் : கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில். போர் புரியாமையினால் வரும் சீர்கேட்டை யெல்லாம் மேலே சொல்லியான பிறகு, போர்புரிவதால் வரும் சீர்மை ஈண்டு இயம்பப்படுகிறது. அறப்போர் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தருமேயொழிய ஒரு நாளும் துன்பம் தராது. அப்படி வலியக்கிடைத்த பெரு வாய்ப்பை எந்தப் போர்வீரன் தான் விட்டுவிடுவான். லௌகிகமாகப் பார்க்கிறவிடத்தும் அர்ஜுனன் துன்புறுவதும், போரினின்று பின்போவதும் பொருந்தாது என்பது பகரப்பட்டது. இனி, எத்தகைய மனப்பான்மையுடன் கடமையைச் செய்தால் அது யோகசாதனமாகும் என்ற கோட்பாடு வருகிறது. 38. ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ஸுக – து:கே-இன்பம், துன்பம், லாப – அலாப= பேறு, இழவு, ஜய அஜயௌ-வெற்றி, தோல்வி, ஸமே க்ருத்வா-நிகரெனக் கொண்டு, ததோ யுத்தாய யுஜ்யஸ்வ-அதற்கு பின் யுத்தத்துக்கு தயாராவாயாக, ஏவம் ந பாபம் அவாப்ஸ்யஸி-இவ்விதம் (செய்தால்) பாவத்தை அடைய மாட்டாய். பொருள் : இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய். சுகத்துக்கு ஏதுவான லாபம், ஜயம் ஆகியவைகளில் விருப்பமும், துக்கத்துக்கு ஏதுவான நஷ்டம், அபஜயம் ஆகியவைகளில் வெறுப்பும் கொள்ளுதல் பாமரர் இயல்பு. தங்களைப் பண்படுத்துவோர் அங்ஙனம் விருப்பும் வெறுப்பும் கொள்ளாது நிகழ்வன யாவையும் நடுநிலையிலிருந்து சமனாகக் கருதவேண்டும். விருப்பும் வெறுப்பும்தான் மனிதனைக் கருமத்தில் கட்டுப்படுத்துகின்றன. கருமத்தில் அல்லது கருமபலனில் பற்றில்லாது அதைச்செய்யும் பொழுது பழைய கருமம் குறைகிறது; புதியது ஒன்றும் சேர்க்கப்படுவதில்லை. இந்த மனநிலை முக்திக்கு மார்க்கமாகிறது. உலகப்பற்றுடைய ஒருவன் செய்கிற அதே கர்மத்தைக் கர்மயோகியும் செய்கிறான். ஆனால் மனநிலையில் இருவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மனநிலையைக் கொண்டுதான் எது பந்தபாசம், எது பற்றற்ற பாங்கு என்று தெரிந்து கொள்ள முடியும். 39. ஏஷா தேபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி பார்த-பார்த்தா, ஏஷா புத்தி தே-இந்த புத்தி (அறிவுரை) உனக்கு, ஸாங்க்யே அபி ஹிதா-ஸாங்கிய வழிப்படி சொன்னேன், து இமாம் யோகே ஸ்ருணு-இனி யோக வழியால் (சொல்லுகிறேன்) கேள், யயா புத்த்யா யுக்த: இந்தப் புத்தி கொண்டவன் கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி-கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான். பொருள் : இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான். ஆறு தர்சனங்களில் ஒன்று ஸாங்கியம் என்ற பெயர் பெறுகிறது. அது கபில முனிவர் இயற்றியது. எண்ணிக்கை என்பது ஸாங்கியம் என்ற சொல்லுக்கு அர்த்தம். பிரகிருதியும் புருஷனும் சேர்ந்து 25 தத்துவங்களாகின்றன என்பது அதன் கோட்பாடு. இங்கு பகவான் ஸாங்கியம் என்று சொல்லுவது ஆத்ம ஞானத்தைப்பற்றிய விசாரம் ஒன்றேயாம். பின்பு யோகம் என்று சொல்லப்படுவது பெரிதும் கருமயோகமாகும். ஒவ்வொரு கலைஞானத்திலும் சாஸ்திரத்திலும் தத்துவ விசாரம் அல்லது உபபத்தி (தியரி) என்றும் அனுஷ்டானம் (பிராட்டிஸ்) என்றும் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. முந்தியது புத்தியில் தத்துவத்தை நன்றாகப் படியும்படி செய்கிறது. பிந்தியது பழக்கத்தில் வந்து பயன்படுகிறது. சிற்பி ஒருவன் வீடுகட்டும் விஷயத்தை மனதில் தெளிபட ஓர்கிறான். அது தத்துவவிசாரம். பின்பு அதன்படி அதைக் கட்டி முடிக்கிறான்; அது அனுஷ்டானம். விசாரம், அனுஷ்டானம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. நன்கு விசாரிக்கின்றவன் முறையாக அனுஷ்டிக்கக் கூடும். திரும்பத் திரும்ப அனுஷ்டிக்கின்றவனுக்கு அதன் தத்துவம் உள்ளத்தில் தெளிவுபடப் பதியும். இங்கு பகவான் தத்துவ விசாரத்தை ஸாங்கியம் என்றும் அதன் அனுஷ்டானத்தை யோகம் என்றும் சொல்லுகிறார். ஆக, வாழ்க்கை சம்பந்தமான உண்மைகளை விசாரிப்பதும் அனுஷ்டிப்பதும் சேர்ந்து பெரு நன்மை விளைவிக்கும். பலபேர் விசாரித்துப் பார்க்காது வினையாற்றுகின்றனர். சிலர் கருத்தில் வாங்குவார்கள்; செயலில் கொண்டுவரமாட்டார்கள். அறிவைப்பெறுவதும், அது செயலாகப் பரிணமிப்பதும் சேர்ந்தே இருக்க வேண்டும். கர்மயோகம் பூர்த்தியாகாவிட்டால் அது வீண் நஷ்டந்தானே என்ற சந்தேகத்துக்கு விடை வருகிறது: 40. நேஹாபிக்ரமநாஸோऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் இஹ-இதில் (கர்ம யோகத்தில்), அபிக்ரமநாஸ: ந அஸ்தி-விதைக்கு (முயற்சிக்கு) நஷ்டம் இல்லை, ப்ரத்யவாய: ந வித்யதே-நேரெதிரான விளைவும் இல்லை, அஸ்ய தர்மஸ்ய ஸ்வல்பம் அபி-இந்த தர்மத்தில் (கர்ம யோகம்) சிறிதிருப்பினும், மஹதோ பயாத் த்ராயதே-பேரச்சத்தினின்று காப்பாற்றும். பொருள் : இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும். வீடு கட்டுபவர் அதற்குக் கூரை போடாவிட்டால் அதுவரையில் செய்த முயற்சி வீணாய்ப் போம். பயிர்த் தொழில் செய்பவர்கள் அறுவடை செய்யாவிட்டால் பட்டபாடெல்லாம் பயன்படாமற்போம். கருமயோக அனுஷ்டானம் அத்தகையதன்று. ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று அனுஷ்டானத்துக்கு ஏற்றவளவு யோகத்தில் பயன் உண்டு. மருந்து வகைகளை முறைதவறிக் கையாண்டால் நோயைப் போக்குதற்குப் பதிலாக உயிரைப் போக்கும் விஷமாக அவை மாறியமைக்கூடும். அத்தகைய குற்றம் யோகத்தில் ஏதாவது வந்துவிடுமோ என்ற சந்தேகம் வேண்டியதில்லை. அதைக் கொஞ்சம் அப்பியசித்தாலும் ஆத்ம சொரூபத்தை அது விளக்க வல்லது. ஆத்ம சொரூபத்தை அறிகிறவன் ஜனன, மரண சம்பந்தமான பெரும் பயத்தினின்று விடுபடுகிறான். ஸாங்கியம், யோகம் ஆகிய இரண்டையும் முறையாகக் கையாளுபவர்களுக்கு வந்தமையும் நன்மை யொன்று உண்டு. அதாவது: 41. வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம் குருநந்தந-குருகுலத் தோன்றலே! இஹ வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகா-இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமையுடையது, அவ்யவஸாயிநாம்-உறுதியில்லாதோரின் புத்தய:-புத்திகள், பஹுஸாகா-பல கிளைப்பட்டது, அநந்தா: ச-முடிவற்றது, பொருள் : குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது. பல மாணாக்கர்கள் ஒரு கணக்கைப் போடும்போது தப்பான விடைகள் கணக்கற்றவை வரக்கூடும். ஆனால் சரியான விடை ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அங்ஙனம் காமிய கருமங்கள் செய்கின்றவர்களுக்குக் கணக்கற்ற புத்திகள் உருவெடுக்கின்றன. எத்தனையோ விதங்களாக எண்ணியும் செயல் புரிந்தும் அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். ஆனால் செயல்களெல்லாம் ஈசுவரனுக்குரியவைகள் என்றறிந்து அவனுக்கே தொண்டு புரிகின்றவனுக்கு புத்தி ஒன்றேயாம். மனதை ஒருமுகப்படுத்துதல் உலகக் காரியத்துக்கும் பயன்படும், பாரமார்த்திகப் பெரும்பேறு பெறுதற்கும் பயன்படும். முதலில் மனம் ஒருமுகப்படுகின்றவளவு அதற்கு வல்லமை வருகிறது. விரிந்தோடும் சூரிய கிரணங்களைப் பூதக்கண்ணாடியின் வாயிலாகக் குவியச்செய்தால் ஒளியும் வெப்பமும் குவிந்து அதிகரிக்கின்றன. ஒரு செத்தையில் தீ மூட்டுதலும் அப்பொழுது சாத்தியமாகிறது. அங்ஙனம் மனது குவியும்பொழுது எதை எண்ணுகிறதோ அதன் பாவனையை அது விரைவில் எடுக்கிறது; செயலும் திறம்பட்டதாகிறது. அர்ஜுனன் துரோணாசாரியரிடத்தில் மாணாக்கனாயிருந்த போது ஒரு மரத்தின்மீது வைத்த குறியை மற்றவர்கள் அம்பால் அடிக்க இயலாதிருந்த சமயத்தில் அவன் எதை எளிதில் அடித்துப் பொத்தலாக்கினான். குவிந்த மனமே அவ்வெற்றிக்குக் காரணமாயிற்று. அமெரிக்காவில், நூலில் கட்டுண்டு ஓர் ஓடையில் தத்தளித்துக்கொண்டிருந்த முட்டையோடுகளை மாணாக்கர்கள் துப்பாக்கியால் சுடமுடியவில்லை. முன்பு துப்பாக்கியைக் கையால் கூடத் தொட்டறியாத விவேகானந்த சுவாமிகள் அவ்வோடுகளை ஒரே தடவையில் சுட்டுச் சுக்கலாக்கினார். அதற்குக் காரணம் கேட்ட போது மனம் குவிதல் என்று அவர் விடையிறுத்தார். நவீன பௌதிக சாஸ்திரிகளில் ஒருவராகிய ஜகதீச சந்திரவசு என்பவர் மனிதர்களுக்குள்ள உணர்ச்சிகள் யாவும் மரம் செடி கொடிகளுக்கும் உண்டு என்று காட்சி பூர்வமாக நிரூபித்துக் காட்டினார். அதையெல்லாம் தெரிந்துகொள்ளும் வல்லமை அவருக்கு எப்படி உண்டாயிற்று என்று கேட்டபொழுது செடியின் இயல்புகளைத் தெரிந்துகொள்ளுதற்கு மனதை ஒருமுகப்படுத்தி பாவனையில் நானே செடியானேன் என்று பதிலுரைத்தார். குவிந்து ஒருமுகப்பட்ட மனதுக்கு எதையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டாகிறது. ஒரே புத்தி படைத்திருப்பது எத்தகைய மகிமையையுண்டு பண்ணும் என்பதற்கு ஸ்ரீமதி ராதையின் பிரேமை பக்தி சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். அவளுடைய மனதும் இந்திரியங்களும் ஒரே ஒரு லட்சியத்துக்காகத்தான் வேலை செய்யும். உள்ளத்தில் எழும் எண்ணங்களெல்லாம் கிருஷ்ணனைப் பற்றியவைகள். கண்கொண்டு பார்ப்பதெல்லாம் அவனோடு சம்பந்தப்பட்டவைகள். காதால் கேட்பதெல்லாம் அவன் பெருமைக்கு விளக்கமாகின்றன. உண்ணும் உணவு அவன் ஊட்டுவதாகும். அவனது அருளே உயிர்க்கு உயிராகிறது. மற்றொரு மகிமை ஸ்ரீமதி ராதையின் ஒருமை புத்தியிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. குவிந்த மனமுடையார்க்கு ஓர் இந்திரியம் செய்யும் தொழிலை மற்ற இந்திரியங்களும் செய்யக் கூடும். கிருஷ்ணனது வேணுகானம் சுரக்கிறது. அது காற்றில் மிதந்து எங்கும் பரவுகிறது. ஸ்ரீமதி ராதையின் காதில் அந்த இன்னிசை விழுகிறது. அவள் உள்ளம் அந்த ஓசைக்கு உறைவிடமாகிறது. உள்ளம், புறம் என்ற வேற்றுமை அகலுகிறது. ஓசை வடிவினனாக, நாத பிரம்மமாகக் கிருஷ்ணன்தான் யாண்டும் நிறைந்துள்ளான். ஆங்குக் காது ஓசையைக் கேட்பதில் வியப்பொன்றுமில்லை. ஓசைக்கு ஒரு வடிவம் உண்டு என்பதைக் கண் காண்கிறது; ஓசைக்கு ஒரு மணம் உண்டு என்பதை மூக்கு முகர்கிறது; ஓசைக்கு ஓர் ஊறு உண்டு என்பதை மேனி உணர்கிறது. ஓசைக்குச் சுவையொன்று உண்டு என்பதை நா நுகர்கிறது. ஓசையின் உட்பொருள் அனைத்தும் எப்பொறிக்கும் புலனாகிறது. என்னே ஒருமை புத்தியின் மகிமை! இயற்கையில் நோக்கரிய நுண்பொருளையும் நுகர்ந்தறிதற்கு ஒருமை புத்தியே உற்ற துணையாகிறது. இறைவனையே கண்டுணரவும், அவனில் கலந்திருக்கவும் ஒருமை புத்தி முற்றும் உதவுகிறது. ஒரு புத்தியுடையவன் மக்களுள் மேலோன். சாங்கியமும் யோகமும் சேர்ந்தவிடத்துக் குவிந்த கூர்மையான புத்தி உண்டாகிறது. பல புத்தியுடையவரின் போக்குப் பின்வருமாறு: 42. யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித: வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந: 43. காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம் க்ரியாவிஸேஷபஹுலாம் போகைஸ்வர்யகதிம் ப்ரதி 44. போகைஸ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம் வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே பார்த-பார்த்தா!வேதவாதரதா:-வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார், புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய-பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள், ந அந்யத் அஸ்தி இதி வாதிந:-தமது கொள்கை தவிர மற்றது பிழையென்கிறார்கள். காமாத்மாந:-ஆசைகளில் மூழ்கியவர்கள், ஸ்வர்கபரா:-சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர் ஜந்மகர்மபலப்ரதாம்-பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர், போகைஸ்வர்யகதிம்-போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர், க்ரியாவிஸேஷபஹுலாம்-பலவகையான கிரியைகள். தயா அபஹ்ருத சேதஸாம்-அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு, போக ஐஸ்வர்ய ப்ரஸக்தாநாம்-போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர், வ்யவஸாயாத்மிகா புத்தி:-நிச்சய புத்தி, ஸமாதௌ ந விதீயதே-சமாதியில் நிலைபெறாது. பொருள் : வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள். பொருள் : இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள். பொருள் : இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது. ஆசை என்னும் பாசத்தில் கட்டுண்டு கிடப்பவர்கள் மக்களுள் கடைத்தரமானவர்கள். இம்மையிலும் மறுமையிலும் இந்திரிய சுகங்களை நாடுதல் ஒன்றிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். அவர்களது கல்வியும், கேள்வியும், சொல்வன்மையும் சிற்றின்பத்துக்கென்றே கையாளப்படுவனவாகின்றன. வேதத்தில் கருமகாண்டம் இத்தகைய புன்மையரது புல்லியல்பை நிறைவேற்றுவதற்காக அமைந்தது. பல் வகைப்பட்ட இன்பங்களை நாடிப் பிறவிப் பெருங்கடலில் அழுந்திக் கிடப்பவர்க்கு மட்டும் அது பயன்படும். வேதங்கள் மிகப் பழையவை எனினும் அவை புகட்டுவனவெல்லாம் சிறப்பு வாய்ந்தவைகளென்று எண்ணி ஏமாற்றமடையலாகாது. இன்பங்களைப் பெறுவது வாழ்க்கையின் லட்சியமன்று. பரிபூரணமடைவதே முடிவான லட்சியமாகும். அதற்கு ஞானத்திலும் யோகத்திலும் உறுதிபெற்ற உள்ளம் வேண்டும். வேதங்கள் புகட்டுகின்ற கரும காண்ட அனுஷ்டானத்தினின்று ஒருக்காலும் உறுதியான உள்ளம் (சமாதி) உண்டாகாது. பரிபூரண நிலையை அடைவதற்கு விலக்கப்படுவது எது, வேண்டப்படுவது எது என்ற கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை வருகிறது. (42-44) 45. த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோக÷க்ஷம ஆத்மவாந் வேதா-வேதங்கள், த்ரைகுண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன, நிஸ்த்ரைகுண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக, நிர்த்வந்த்வ-இருமைகளற்று, நித்யஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று, நிர்யோக÷க்ஷம-யோக ÷க்ஷமங்களைக் கருதாமல் ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக. பொருள் : மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக. ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணமயமாயிருப்பது பிரபஞ்சம். சுவர்க்கங்கள் அனைத்தும் இப்பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கின்றன. இதிலிருந்து பெறுகின்ற இன்பங்களுக்கு வழி காட்டியாயிருக்கும் நூல்களுக்கு வேதங்கள் என்று பெயர். அவைகள் எம்மொழியில், எக்காலத்தில், யாரால் இயற்றப் பெற்றிருப்பினும் நிலையற்ற பிரபஞ்சத்தைப் பற்றியவைகளேயாம். முக்குணங்கள் முப்பாழ் என்று இயம்பப்படுகின்றன. முப்பாழுக்கு அப்பால் இருக்கின்ற பரம்பொருளை அடைந்தாகவேண்டும். யோகத்தில் நிலைபெற்றிருப்பதே அதற்கு உற்ற உபாயம். யோக சாதனமும் ஈண்டு இயம்பப்படுகிறது. லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி, சுகம் துக்கம் ஆகியவைகளுக்கு துவந்த்வம் அல்லது இருமைகள் என்று பெயர். இவைகளில் கட்டுண்டு மனது ஊசலாடாது நடுவு நிலையிலேயே அமைதியுற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்வதே யோக சாதனமாகிறது. இனி யோகம் என்பதற்குச் சாமான்யமான பொருள் ஒன்று உண்டு. அதாவது பிரபஞ்சப் பொருள்களைத் தேடித்திரிதலுக்கு உலக வழக்கத்தில் யோகம் என்றும், அவைகளைக் காப்பாற்றி வைப்பதற்கு ÷க்ஷமம் என்றும் பெயர். அப்படி யோக÷க்ஷமத்திலும் மிகைபட்ட கருத்து வைக்கலாகாது. சுவாசிப்பதற்குக் காற்றுத்தானாக வந்தமைவதுபோன்று சரீரம் இருக்குமளவும் அதற்குத் தேவையானவைகள் ஈசுவரானுக்கிரகத்தால் ஆத்ம சாதகன் ஒருவனுக்குத் தாமாக வந்தமையும். முறை வழுவாத இக்கோட்பாட்டில் விசுவாசம் வைக்காதவர்களே யோக ÷க்ஷமத்தைப் பற்றி யெண்ணி மனங்கலங்குகின்றனர். அப்படி மனங்கலங்காது யாண்டும் ஆத்ம சொரூபத்திலேயே சாதகன் திளைத்திருக்க வேண்டும். எந்த யோகிக்கு இது சாத்தியமாகிறதோ அவன் முப்பாழைக் கடக்க வல்லவனாகிறான். திரிபுர தகனம் என்பது இதுவே. இவ் வையகத்தில் வேண்டியதை வேண்டியாங்கு வருவித்துக்கொள்ளலாம். அப்படி அவைகளைப் பெற்று இன்புற்றிராது முக்குணங்களைக் கடந்து செல்வதால் வரும் நன்மை யாது? விடை வருகிறது : 46. யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத: ஸர்வத: ஸம்ப்லுத உதகே-எங்கும் நீர் நிரம்பிய இடத்தில், யாவாந் அர்த உதபாநே-ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது, ஸர்வேஷு வேதேஷு-எல்லா வேதன்களினாலும், விஜாநத: ப்ராஹ்மணஸ்ய-ஞானமுடைய பிராமணனுக்கு, தாவாந்-அவ்வளவு தான் (பயன்). பொருள் :எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது; அன்னபொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன. நீர் இல்லாத இடங்களில் கிணறு நிச்சயமாகப் பயன்படுகிறது. எங்கும் தெளிநீர் மயமாயிருக்குமிடத்தில் கிணற்றைத் தேடுவார் யாருமிலர். அதுபோன்று அக்ஞானத்தில் இருக்குமளவு வேதங்களால் பயனுண்டு. அவைகள் காட்டுகின்ற நெறிகளைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் பலவிதமான இன்பங்களைப் பெற்று இனிது வாழ்ந்திருக்கலாம். ஆனால் பிரம்ம ஞானமோ பேரின்ப சொரூபமானது. அதன் கிரணங்களாக வந்தவைகளே ஏனைய இன்பங்கள் யாவும். கனவில் உண்ட உணவு உடலை வளர்ப்பதில்லை. நனவில் உண்ட உணவு நனவு, கனவு ஆகிய இரண்டிலும் உடலை வளர்க்கிறது. அப்படிப் பிரம்ம ஞானம் என்ற பேரானந்தத்தில் எல்லா ஆனந்தங்களும் அடங்கப் பெற்றிருக்கின்றன. கிணறு மட்டும் அமையப்பெற்றுள்ள ஊரில் இருக்கும் ஒருவன் கிணற்று நீரை உண்டு திருப்தியடைந்தாகவேண்டும். அங்ஙனம் அக்ஞானத்தில் இருக்கும் பரியந்தம் ஒருவன் உலக இன்பங்களைத் துய்த்திருப்பதுதானே அவன் கடமை? அப்படியல்ல. ஞானத்துக்குத் தன்னைப் பக்குவப்படுத்துதற்கு வழியொன்று உண்டு. அதாவது : 47. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு, கதாசந மா பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை, கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே, தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல், ஸங்க: மா அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது. பொருள் : தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே. வாழ்க்கையில் இது ஒரு பெரிய முரண்பாடாகத் தென்படுகிறது. வினைப்பயனை விரும்பாது யாரும் வினையாற்ற முடியாது. வினைப்பயனை விரும்பாதார் வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் பகவானோ இதற்கு நேர் மாறாக உபதேசிக்கிறார். கருமம் புரியாது வெறுமனே இருக்கவேண்டாம். ஓயாது பெரு வினையாற்றிக்கொண்டிரு. வினையினின்று விளையும் பயன் யாது என்ற ஏக்கம் உனக்கு வேண்டாம். அத்தகைய பற்றற்ற பாங்கினின்றுதான் நன்மை விளையும். ஏனென்றால் கருமம் தன்னளவில் கொடியதன்று. ஆசையோடு கூடிய கருமமே கொடியது. பிறவிப் பெருங்கடலில் அது மனிதனை ஆழ்த்துகிறது. சுவர்க்காதி போகங்களை விரும்பி வினையாற்றியவர்களெல்லாம் ஆசைக்கு அடிமைப்பட்டவர்களே. வினைப்பயனை விரும்பாதவர்களெல்லாம் ஆசையை வென்றவர்கள். ஆசையை வெல்லுமளவு மனிதன் சுதந்திரத்தில் நிலைபெறுகிறான். பயன் கருதாது பணிசெய்பவனுக்குச் சித்தம் தெளிவடைகிறது. ஞானத்தைப் பெற அவன் தகுதியுடையவன் ஆகிறான். ஆற்றலும் அவனுக்கு அதிகரிக்கிறது. ஆக, கருமம் நடைபெறவேண்டும். கரும பலனில் ஆசை வைக்கலாகாது. ஆசையை வென்றவன் நிஷ்காமிய கருமம் செய்யும் விதம் வருமாறு: 48. யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே தநஞ்ஜய-அர்ஜுனா! யோகஸ்த:-யோகத்தில் நின்று, ஸங்கம் த்யக்த்வா-பற்றை நீக்கி, ஸித்தி அஸித்தயோ: ஸமோ பூத்வா-வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு, கர்மாணி குரு-தொழில்களைச் செய்க, ஸமத்வம் யோக உச்யதே-நடுநிலையே யோகமெனப்படும். பொருள் : தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும். தான் செய்யும் வினையெல்லாம் ஈசுவரனுடையது என்கிற எண்ணத்தில் நிலைத்திருப்பது யோகத்தில் நிலைத்திருப்பதாகிறது. செயலெல்லாம் அவனுடையது என்று எண்ணுவதால் பற்றுதல் போய்விடுகிறது. ஈசுவரனுடைய வேலைக்காரனாகத் தன்னை வைத்துக்கொண்டு யோகி வினையாற்றுகிறான். பக்கத்து ஊரிலிருக்கும் ஒருவனை அழைத்து வரும்படி வேலைக்காரனை எஜமானன் ஏவுகிறான். வேலைக்காரன் அங்குச் சென்று அம்மனிதன் அவ்வூரில் அப்பொழுது இல்லையென்று அறிகிறான். அங்ஙனம் தன் யத்தனத்தில் நேர்ந்த தோல்வியை முன்னிட்டு அவன் வருந்துவதில்லை. மற்றொரு நாள் சென்று அம்மனிதனைக் காண்கிறான். அவ்வெற்றியால் அவன் தனி மகிழ்ச்சி யடைவதில்லை. தலைவன் தூண்டுதல்படி தன் கடனாற்றுவதே அவ்வேலைக்காரனுக்குப் போதுமானது. கருமயோகியும் அவ்வாறு வெற்றி தோல்விகளை ஒப்பாய் உணர்கிறான். தராசுமுள் போன்று மனது நடுவுநிலையில் இருப்பதற்கு யோகம் என்று பெயர். மனது நடுவுநிலையில் உறுதி பெறுமளவு அது மேன்மையுறுகிறது. ஓரம் சாரேல் என்பது கோட்பாடு. மனது இப்பக்கம் அப்பக்கம் சாராது இருத்தல் வேண்டும். இனியதைப் பெறுகிற வேளையில் இன்புறவும், இன்னாததைப் பெறுகிற வேளையில் துன்புறவும் செய்கிறது மனது. இவ்விரண்டும் ஓரம் சார்ந்த நிலைகளாகும். இன்ப துன்பமிரண்டையும் ஒரே பாங்கில் பொருள்படுத்துவது நடுவுநிலை. அதனால் மனத்தகத்துத் தெளிவும், உறுதியும் உண்டாகின்றன. தெளிந்து அசையாதிருக்கும் நீரில் பிம்பம் நன்கு புலப்படுகிறது. தெளிந்து உறுதி பெற்றுள்ள உள்ளத்தில் மெய்ப்பொருள் காட்சி நன்கு புலனாகும். அது நடுவு நிலையினின்று மனது பெறும் மேன்மையாம். எத்தகைய வாழ்க்கை அல்லது மனநிலை ஒவ்வாது என்பது இனி இயம்பப்படுகிறது : 49. தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ: தநஞ்ஜய-தனஞ்ஜயா! புத்தியோகாத் கர்ம-புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம், தூரேண அவரம்-நெடுந்தொலைவு தாழ்ந்தது, புத்தௌ ஸரணம் அந்விச்ச-புத்தியைச் சரணடை பலஹேதவ: க்ருபணா:-பயனைக் கருதுவோர் லோபிகள். பொருள் : தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள். இருப்புப்பாதை வண்டியில் பிரயாணம் செய்த ஒருவனுக்கு ஏவலாளன் ஒருவன் கூலிக்காக மூட்டை சுமந்தான். வழிப் போக்கனாக வந்த வேறு ஒரு பிரயாணி அன்பினால் தூண்டப் பெற்று சமபுத்தியுடன் மூட்டை சுமந்து அவனுக்கு உதவி புரிந்தான். இருவர் செயலும் ஒன்றே யெனினும் கூலிக்காகச் சுமந்தவன் கீழ்மகன். போதியவளவு கூலி கிடைக்கவில்லை யென்ற மனக்குறை அவனுக்கு வந்து அமைகிறது. தன்னைக் குறித்து அவன் தானே பரிதாபப் படுவதுமுண்டு. ஆகவே அவன் கிருபணன். அர்ஜுனன் தன்னைக் கிருபணன் என்று இயம்பிக்கொண்டதை ஈண்டு ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வுலகில் கரும பலனை நாடும் பெரும்பான்மையோர் கூலிக்காரன் போன்று அலைந்து திரிந்து அழிகின்றனர். வேற்றானாயிருந்தும் அன்புக்காக மூட்டை சுமந்தவனே மேன்மகன். கொடையாளி போன்று செயல்புரிபவன் மேன்மையுறுகிறான். நீரை இறைக்க இறைக்க அது மேலும் கிணற்றில் ஊறுவது போன்று சுயநலம் கருதாத சேவையானது ஆற்றலை வளர்க்கிறது. மனதின் சம நிலைக்கு அந்த ஆற்றல் யாண்டும் உற்ற துணையாகிறது. சமநிலையினின்று ஞானசமாதி இனிது வடிவெடுக்கிறது. மனதின் சமநிலை இவ்வுலக வாழ்க்கைக்கு எப்படித் துணை புரிகிறது என்னும் கேள்வி எழுகிறது. அதற்குப் பகவான் விடையளிக்கிறார். 50. புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஸலம் புத்தியுக்த:-புத்தியுடையவன், ஸுக்ருத துஷ்க்ருதே-நற்செய்கை தீச்செய்கை, உபே இஹ ஜஹாதி-இரண்டையும் இங்கு துறக்கிறான், தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ-ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு, யோக: கர்மஸு கௌஸலம்-யோகம் செயல்களில் திறமையாம் (விடுபட உபாயமாகும்). பொருள் : புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம். மனிதனை அக்ஞான இருளில் சேர்க்கும் இயல்புடையவைகள் இருவினையும். ஆனால் கருமயோகியை வினைகள் தளைக்கமாட்டா. அவனுக்கு சுயநல எண்ணம் சிறிதுமில்லாமையே அதற்குக் காரணம். இரண வைத்தியன் ஒருவன் நோயாளியின் உடலை அறுக்கிறான். நோயாளி உயிர் பிழைப்பதால் வைத்தியனுக்குப் புண்ணியம் இல்லை. அவன் சாவதால் வைத்தியனுக்குப் பாபம் இல்லை. நடுவு நின்று முறையாகத் தன் கடமையை அவ்வைத்தியன் புரிகிறான். நோயாளியைக் கொல்லவேண்டும் என்ற கெட்ட எண்ணம் அவனுக்கு இல்லை. ஈசுவர சங்கற்பத்தை மீறி நோயாளியைக் காப்பாற்ற முடியும் என்ற அகங்காரமும் அவனிடத்தில்லை. ஆதலால் இருவினையும் அவனைச் சேர்வதில்லை. இரண வைத்தியன் பல உடல்களை அங்ஙனம் அறுத்துச் சிகிச்சை செய்கிறான். பின்பு ஒரு நோயாளியைப் பார்த்து இவன் என் புதல்வன் என்று அவன் பற்று வைத்தால் அவனது நடுவு நிலை கலைந்து போகிறது. முறையாக இரண வைத்தியம் செய்ய அவனுக்கு இயலுவதில்லை. எல்லாக் கருமங்களுக்கும் இதுவே விதி. எல்லாத் தொழில்களிலும் மனது நடுவு நிற்பது யோகம். மனமானது நடுவுநிற்கின்றவளவு கருமம் திறம்படச் செய்யப்படுகிறது. விருப்பு அல்லது வெறுப்புக்கொள்ளுமிடத்துத் திறமை குறைந்துபோகிறது. யுத்தம் புரிதல் போன்ற ஒரு கோர கர்மத்தையும் நடுவு நின்று திறமையாகச் செய்துகாட்டினார் பீஷ்மர். கணவனுக்குப் பணிவிடை செய்த மாது ஒருத்தி திறம்படத் தன் கடமையைச் செய்ததினால் காட்டில் தவம்புரிந்து கொக்கை எரித்த தவசியைவிட மேலானவள் ஆயினாள். பற்றற்றுத் திறம்படக் கசாப்புக்கடை வைத்திருந்த வியாதன் அதே தவசிக்கு ஞானம் புகட்டவல்ல பரிபாகம் அடைந்தான். நடுவு நிற்பதால் புதிய வினைத்தளைகள் உண்டாவதில்லை; பழைய கட்டுகள் தாமே அவிழ்கின்றன. அதனால் மனபரிபாகம் உண்டாகிறது. திறம்படச் செய்யும் வினைகளுள் தலைசிறந்த வினை யாது என்ற கேள்வி எழுவதால் விடை வருகிறது. 51. கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண: ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம் ஹி புத்தியுக்தா மநீஷிண:-ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள், பலம் த்யக்த்வா-பயனைத் துறந்து, ஜந்மபந்தவிநிர்முக்தா:-பிறவித் தளை நீக்கி, அநாமயம் பதம் கச்சந்தி-மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள். பொருள் : புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள். துன்பத்துக்கு ஏதுவான இவ்வுலக வாழ்க்கையைத் துன்பமற்றதாக யோகி செய்துகொள்கிறான். பிறவிக்கு வித்தாயிருப்பதைப் பின்பற்ற பெருநிலையாகவும் அவன் செய்துகொள்கிறான். கேட்டைக் கேடின்மையாகச் செய்வதே வல்லமையில் பெரு வல்லமையாம். தம்மை விழுங்கவந்த விஷத்தை யெடுத்து அமிர்தமாகப் பானம் பண்ணுகிறார் சிவபெருமான். விஷ வைத்தியர்களுள் அவர் தலைசிறந்த வைத்தீசுவரன். மனிதனைக் கட்ட வந்த கருமத்தை யெடுத்துக் கருமயோகி முக்தி மார்க்கமாக மாற்றிக்கொள்கிறான். அப்படிச் செய்யும் செயலே செயற்கரிய செயலாகிறது. பெருநிலையடைந்ததன் அறிகுறி பின் வருகிறது. 52. யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச யதா தே புத்தி-எப்போது உனது புத்தி, மோஹகலிலம்-மோகக் குழப்பத்தை, வ்யதிதரிஷ்யதி-கடந்து செல்லுகிறதோ, ததா-அப்போது, ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச-கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும், நிர்வேதம் கந்தாஸி-வேதனையேற்படாது. பொருள் : உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது. ஆத்மா, அனாத்மா இவ்விரண்டுக்கும் வேற்றுமை விளங்காத நிலை அவிவேகமாகும். விவேகம் உதயமானதும் உண்மை விளங்குகிறது. கனவைக் கனவு என்று தெரிந்துகொண்டவனுக்குக் கேள்விப்பட்ட கனவும், இனிக் கேட்கப்போம் கனவும் ஆகிய இரண்டும் பொருள்படாதவைகளாம். அங்ஙனம் உலக நடைமுறையின் உண்மையை அறிந்துகொண்டவனது உள்ளத்தில் அதைப்பற்றிய செய்திகள் எந்தவிதமான தடுமாற்றத்தையும் உண்டுபண்ணுவதில்லை. தனக்கு அத்தகைய பெருநிலை எப்பொழுது வரும் என்று ஒரு சாதகன் கேட்கிறான். அதற்கு விடை வருகிறது. 53. ஸ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி ஸ்ருதிவிப்ரதிபந்நா-கேள்வியிலே கலக்கமுறாததாய், தே புத்தி-உனது புத்தி, மாதௌ-சமாதி நிலையில், நிஸ்சலா அசலா-உறுதிகொண்டு, அசையாது, யதா ஸ்தாஸ்யதி-நிற்குமாயின், ததா யோகம் அவாப்ஸ்யஸி-அப்போது யோகத்தை அடைவாய். பொருள் : உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில் அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய். தான் அனுபவியாத ஒரு பொருளைப்பற்றி பிறர் சொல்லுவதையெல்லாம் கேட்டுக் குழப்பமடைவது மனதின் இயல்பு. நான் உயிரோடு இருக்கிறேனா, அல்லது இறந்து ஒழிந்துபோய் விட்டேனா? என்று தன்னைப்பற்றி யாரும் பிறரிடம் கேட்பதில்லை. தான் உயிர் வாழ்வது தனக்குப் பிரத்தியக்ஷம். அதற்கு வேறு பிரமாணம் ஒன்றும் வேண்டியதில்லை. மனது ஒடுங்கி ஆத்ம சொரூபத்தில் நிலைத்திருக்குங்கால் அது சமாதி என்று சொல்லப்படுகிறது. அப்பொழுது ஆத்ம சொரூபத்தின் பெருமையை அதுவே சொல்லும். அந்நிலையில் ஆத்ம ஞானமும் யோகமும் பூர்த்தியாகின்றன. மனிதன் அடைய வேண்டிய பெருநிலையைப் பெற்றவனாகிறான். ஈண்டு வினா ஒன்று கேட்பதற்கு அர்ஜுனனுக்கு அவகாசம் ஏற்படுகிறது. ஆக, அவன் அதைப் பகவான் முன்னிலையில் சமர்ப்பிக்கிறான். அர்ஜுந உவாச 54. ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், கேஸவ-கேசவா! ஸமாதிஸ்தஸ்ய ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா-உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திததீ:-ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? கிம் ப்ரபாஷேத-என்ன சொல்வான்? கிம் ஆஸீத-எப்படியிருப்பான்? கிம் வ்ரஜேத-எதனையடைவான்? பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்? ஸமாதி கூடியவன், பிரம்மஞானி, ஸ்திதப்பிரக்ஞன் ஆகிய இச்சொற்களெல்லாம் ஒரே கருத்தை விளக்குகின்றன. பரிபூரணமுணர்ந்த ஞானி தானே பரிபூரணமாகிறான். அத்தகையவன் சமாதியில் இருக்கும்போது அவனுடைய அந்தக்கரணம் எத்தன்மையதாகிறது? பகிர்முகமாக அவன் மனதைத் திருப்பும் போது அவனுடைய செயல்கள் எப்படிப்பட்டவைகளாயிருக்கும்? இந்த அத்தியாயத்தின் இறுதிவரையில் இனி வரும் பதினெட்டு சுலோகங்களில் நிறைஞானியின் இயல் இயம்பப்படுகிறது. நல்ல எழுத்து எழுத விரும்புபவர் மாதிரி எழுத்தைத் தங்கள் முன்னிலையில் வைத்துக்கொள்கின்றனர். சிறந்த சித்திரம் வரைய விரும்பும் ஓவியக்காரன் அழகிய படம் ஒன்றைத் தன்முன்பு மாதிரியாக வைத்துக்கொள்கிறான். பரிபூரணத் தன்மையை முன்மாதிரியாக வைத்துக்கொள்ளுதல் ஒவ்வொரு துறையிலும் இடம்பெறுகிறது. ஆத்மீகத் துறையிலும் இம்முறை பொருந்தும். சான்றோர்க்கு சாத்தியமாகக்கூடிய சம்பூரண நிலை ஈண்டுச் சாற்றப்படுகிறது. அந்நிலையை அடைய முயல்வார் தம் சாதனத்தில் செய்யவேண்டியது யாது என்பதும் இதில் அடங்கப்பெறுகிறது. ஆக, இப்பெருநிலையைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு இதன் பொருட்டுப் பாடுபடுவதெல்லாம் யோக சாதனங்களாகின்றன. குறியும் நெறியும் அடங்கப்பெற்ற சிறந்த பதினெட்டு சுலோகங்களும் வருகிறது. ஸ்ரீ பகவாநுவாச 55. ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந் ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே ஸ்ரீ பகவாநுவாச- ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த-அர்ஜுனா! மநோகதாந் ஸர்வாந் காமாந்-மனதில் எழும் விருப்பங்களனைத்தையும், ப்ரஜஹாதி-துறக்கிறான், யதா ஆத்மநா ஆத்மநி ஏவ துஷ்ட:-தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், ததா ஸ்திதப்ரஜ்ஞ: உச்யதே-அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான். பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான். அர்ஜுனனுடைய கேள்வியில் முதல் பகுதிக்கு இது விடை: அக்கினி தானே உஷ்ண சொரூபம். வெப்பத்தை நாடி அது வேறு பொருளிடத்துப் போகவேண்டியதில்லை. அங்ஙனம் ஆத்மா ஆனந்த சொரூபம். தன்னிடத்துள்ள ஆனந்தத்தை அது பிறபொருள்மீது ஏற்றுவித்து, மனதைக் கொண்டு அவைகளை நாடிச் செல்லுகிறது. அத்தகைய நாட்டத்துக்குக் காமம் என்று பெயர். நீரில் அலை உண்டாவதுபோன்று காமம் மனதில் வடிவெடுக்கிறது. அலைகள் வீசும்பொழுது நீரின் அடிப்பாகம் தென்படுவதில்லை. மனதில் காம அலைகள் வீசும்பொழுது அதற்கு அடிப்படையாயுள்ள ஆத்மாவின் ஆனந்தசொரூபம் சிதறடைந்தது போன்று ஆகிறது. காம அலைகளற்று மனது தேங்கியிருக்கும் போது ஆத்மாவின் ஆனந்த சொரூபம் தனக்குத் தானே விளங்குகிறது. தான் உலகெல்லாம் தேடிய இன்பம் தன்னிடத்தே யாண்டும் இருக்கிறது என்று மனம் தெளிபவனே நிறைஞானி. ஆத்ம திருப்தன் நிறைஞானி. மனம் தெளிந்திருத்தல் என்பதன் விளக்கம் வருகிறது : 56. து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ: வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே து:கேஷு அநுத்விக்நமநா:-துன்பங்களிலே மனங்கொடாதவனாய், ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:-இன்பங் களிலே ஆவலற்ற வனாய், வீதராகபயக்ரோத:-அச்சமும் சினமுந் தவிர்த்தவன் முநி ஸ்திததீ உச்யதே-அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப. பொருள் : துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.” துன்பத்துக்கு ஏதுவான நிகழ்ச்சிகள் இவ்வுலகில் நிறைந்திருக்கின்றன. தெளிந்த மனமுடையவனை அவைகள் அசைத்துத் துன்படுத்தமாட்டா. விறகுக்கட்டை சேரச் சேரத் தீ வளர்கிறது. திடஞானியினிடத்து ஆசை அப்படி வளர்வதில்லை. சுகத்தைத் தரும் பொருள்கள் பெருகினாலும் அவன் அவைகளிடத்து நாட்டம் கொள்வான். பற்று, அச்சம், சினம் என்னும் மூன்று விதக் குற்றங்களினின்று நீங்கி அவனது மனம் நிறை நிலையடைகிறது. உலகப் பொருள்களிடத்துப் பற்றற்றிருக்கவேண்டும். பாம்பினிடத்தும் மரணத்தினிடத்தும் நமக்குப் பற்று இல்லை. ஆனால் அவைகளைக் குறித்துப் பயம் உண்டு. அது ஒண்ணாது. பற்றற்றிருப்பது போன்று பயமற்றும் இருக்கவேண்டும். பீமன் போன்றவனுக்குப் பகைவனிடத்துப் பற்றுமில்லை, பயமும் இல்லை. எனினும் பெருமிதமாகக் கோபம் இருந்தது. அதும் தகாது. பற்றற்று, பயமற்று, சினமற்றிருக்கும் மனதே சீரிய மனதாகிறது. தெளிவடைதலும் அத்தகைய மனதுக்குச் சாத்தியமாகிறது. இன்ப துன்பங்களை நிகராக நினைப்பவன் நிறைஞானி. விருப்பும், வெறுப்பும், அச்சமும் அற்றிருப்பவன் நிறைஞானி. மனன சீலத்தையுடையவன் முனி. அதாவது ஸதலதாரை போன்று யாருடைய மனது இடையறாது ஆத்ம சொரூபத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறதோ அம்மனிதன் முனியாகிறான். புறவுலகோடு முனிவன் எவ்வித இணக்கம் வைக்கிறான் என்னும் வினாவுக்கு விடை வருகிறது. 57. ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸுபாஸுபம் நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா ய:-எவன், ஸுப அஸுபம்-நல்லதும் கெட்டதும், ப்ராப்ய-அடைந்து, ந அபிநந், ததி -மகிழ்வதில்லை, ந த்வேஷ்டி-வெறுப்பதும் இல்லை, ஸர்வத்ர அநபிஸ்நேஹ-பகைப்பதுமின்றியிருப்பானோ, தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது. பொருள் : எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றியிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது. நலமும் கேடும் கலந்துள்ளது உலகம். பற்றுடையார்க்கு அது இன்ப துன்பங்களை விளைவிக்கிறது. பற்றற்ற ஞானிக்கு அதனால் இன்ப துன்பங்கள் உண்டாவதில்லை. ஆகையால் அவன் புகழ்வதுமில்லை, இகழ்வதுமில்லை. எப்படிப் பேசுகிறான் என்று கேட்ட கேள்விக்கு இது விடையாகிறது: 58. யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்காநீவ ஸர்வஸ: இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா கூர்ம ஸர்வஸ: ச-ஆமை தன் அவயங்களையும், ஸம்ஹரதே இவ-இழுத்துக்கொள்ளுவது போல், அர்தேப்ய இந்த்ரிய-விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை, யதா அயம்-எப்போது இந்த மனிதன் (இழுத்துக் கொள்ள வல்லானாயின்) தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது. பொருள் : ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது. ஆபத்துக்களினின்று தன்னைக் காத்துக்கொள்ள ஆமை மிக எளிதில் உறுப்புக்களை உள்ளே இழுத்துக்கொள்கிறது. அவ்வளவு எளிதில் இந்திரியங்களை ஆளும் அறிஞன் இந்திரியங்களை உன்முகமாகத் திருப்புகிறான். இப்படிச் செய்வது பிரத்தியாகாரம் எனப்படுகிறது. வீட்டின் கதவுகளைத் தாழ் இட்டு அடைத்து வெளியுலகின் வியவகாரத்தில் தொடர்வு அற்றவனாக மனிதன் உள்ளே வீற்றிருப்பது போன்று ஞானி பொறி வாயிலை அடைத்துவைத்துச் சமாதியில் சுகித்திருக்க வல்லவனாகிறான். அப்படிச் சமாதியில் திளைத்திருப்பதுதான் நிறைஞானியின் உண்மை நிலை. நிலத்தில் திண்டாடுகிற மீனை நீரில் விட்டால் அது எப்படி உணர்கிறதோ அப்படியிருக்கிறது ஞானிக்கு ஆத்ம சொரூபத்தில் இருப்பது. பூரணப் புலனடக்கம் நிறைஞானிக்கு முற்றிலும் இயல்பானது. ஸ்திதப்பிரக்ஞன் எங்ஙனம் அமர்கிறான் என்று அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு விடையாக அடுத்த மூன்று ஸ்லோகங்கள் வருகிறது. 59. விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந: ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே நிராஹாரஸ்ய தேஹிந:-கவராத ஜீவனிடமிருந்து, விஷயா விநிவர்தந்தே-விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன, ரஸவர்ஜம்-(எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை, அஸ்ய பரம் த்ருஷ்ட்வா-இவன் பரம்பொருளைக் கண்டதும், ரஸ: அபி நிவர்ததே-அச்சுவையுந் தீர்ந்துவிடும். பொருள் : தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும். நோய்வாய்ப்பட்டிருப்பவனுடைய இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களில் செல்லத் தகுதியற்றவைகளாகின்றன. ஆயினும் சுகமடைந்ததும் விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளத்தில் குடிகொண்டிருக்கிறது. சிறைச்சாலையில் அடைபட்டிருப்பவனுக்கும் இந்திரியார்த்தங்களை நுகர இயலாது. விஷயங்களையெல்லாம் விட்டு அவன் பலவந்தமாக விலக்கப்பட்டவனாகிறான். ஆனால் அவைகளை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் உதித்துக்கொண்டிருக்கிறது. யாராலும் அதை அடக்கிவைக்க முடியாது. புலனடக்கம் முதலிய தபசுகளைச் செய்பவனது நிலைமையும் அத்தகையது. வாசனைகள் மிக சூக்ஷ்மமாக இருந்துகொண்டு கூத்தாடும். தீயிலிட்டு வறுத்த விதை முளைக்காது. அவ்வாறு வாசனை அறவே ஒழியவேண்டும். இந்த ஆசையை பகவான் ரஸம் என்கிறார். வாசனை, ரஸம், ஆசை ஆகிய சொற்களுக்குப் பொருள் ஒன்றேயாம். ஆசையானது திரும்பவும் முளைக்காதபடி அவிந்துபட்டுப் போகவேண்டும். ஆசையை வேர் அறுப்பதற்கு வழியொன்று உண்டு. சிற்றின்பத்துக்கு ஏதுவான பொருள்களாகத் தென்படுபவைகளெல்லாம் உண்மையில் பரமாத்மாவே என்று அறிபவர்கள் அதன் கண் அசையோ அல்லது பயமோ கொள்ளமாட்டார்கள். அதைப் போற்றிப் பாராட்டுவார்கள். அடங்காத இந்திரியங்கள் செய்யும் இன்னல்கள்: 60. யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித: இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந: கௌந்தேய-குந்தியின் மகனே, ஹி-ஆனால், யதத: விபஸ்சித:-முயற்சியுள்ள புத்திசாலியான புருஷஸ்ய மந: அபி-புருஷனின் மனதிலே கூட, ப்ரமாதீநி இந்த்ரியாணி-கலக்குபவையான இந்திரியங்கள், ப்ரஸபம் ஹரந்தி-வலிய வாரிச் செல்கின்றன. பொருள் : குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும்போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன. இந்திரியங்கள் பொல்லாதவைகள். தவ விரதமுடையவர்களையும் அவைகள் தத்தளிக்கச் செய்கின்றன. அவைகளைப் பின்பற்றுவது காட்டுக் குதிரையின் மீது சவாரி செய்வதற்கு ஒப்பாகும். அறிஞர்களையே அவைகள் படுகுழியில் வீழ்த்துபவைகள். பின்பு, பாமரர்களை அவைகள் என் செய்யமாட்டா? இந்திரியங்களை வெல்லுமளவு மனிதன் மேலோன் ஆகிறான். தனி மனிதன் அல்லது ஒரு சமுதாயம் அடைந்துள்ள பண்பாட்டை ஆங்குத் தென்படும் புலனடக்கத்தைக்கொண்டு அளந்துவிடலாம். சீரிய புலனடக்கமே மேலான நாகரிகம் என்று கருதப்படுகிறது. இம்மை மறுமையாகிய இரண்டிலும் மேன்மைக்கு இந்திரிய நிக்கிரகமே உற்ற உபாயம். அவ்விந்திரியங்களை அடக்கும் வழி: 61. தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா தாநி ஸர்வாணி ஸம்யம்ய-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, மத்பர:-என்னைப் பரமாகக் கொண்டு, யுக்த ஆஸீத-யோகத்தில் அமர்ந்தவனாய், யஸ்ய இந்த்ரியாணி வஸே-எவன் புலன்களை வசப்படுத்தியிருக்கிறானோ, தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது. பொருள் : அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது. மனது ஏககாலத்தில் இரண்டு பொருள்களை நினைக்க முடியாது. நான் விஷயங்களை விட்டுவிடவேண்டும் என்று நினைக்கும்போதும் விஷய எண்ணங்கள் தான் மனதில் குடிகொள்கின்றன. வேர் ஊன்றி மனதுக்குள் பாய்ந்து மறைமுகமாக அவைகள் வலிவு பெறுகின்றன. விஷய எண்ணங்களுக்கு மனமுவந்து அனுமதி கொடுக்கிறபொழுது அவைகள் மேலே கிளைகளாகத் தளிர்க்கின்றன. வேண்டாமென்று அக்கிளைகளைக் கொய்ய முயலும்போது அவைகளின் ஆணிவேர் மனதினுள் ஆழமாகச் செல்லுகிறது. அதற்குப் பதிலாக எண்ணத்தையே மாற்றியமைக்க வேண்டும். இந்திரியங்களைப் பற்றிய எண்ணம் ஈசனைப் பற்றிய எண்ணமாக மாறவேண்டும். இவ்விரண்டு எண்ணங்களுள் எது வலுக்கிறதோ அது மற்றதைத் தகர்க்கிறது. தீயதைத் தகர்க்கும் தன்மை தெய்விக எண்ணத்துக்கு உண்டு. பக்தி ஓங்குமளவு இந்திரியங்களின் வேகம் தணிகிறது. கேடு அனைத்துக்கும் முதற்காரணம் யாது? விடை வருகிறது: 62. த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோऽபிஜாயதே பும்ஸ: விஷயாத் த்யாயத-மனிதன் விஷயங்களைக் கருதும் போது, தேஷூ ஸங்க: உபஜாயதே-அவற்றில் பற்றுதலுண்டாகிறது, ஸங்காத் காம: ஸஞ்ஜாயதே-பற்றுதலால் விருப்பமுண்டாகிறது, காமாத் க்ரோத: அபிஜாயதே-விருப்பத்தால் சினம் பிறக்கிறது. பொருள் : மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது. 63. க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம: ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாஸோ புத்திநாஸாத்ப்ரணஸ்யதி க்ரோதாத் ஸம்மோஹ: பவதி-சினத்தால் மயக்கம் உண்டாகிறது, ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:-மயக்கத்தால் நினைவு தவறுதல், ஸ்ம்ருதிப்ரம்ஸாத் புத்தி நாச நினைவு தவறுதலால் புத்தி நாசம், புத்திநாஸாத் ப்ரணஸ்யதி-புத்தி நாசத்தால் அழிகிறான். பொருள் : சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான். இந்திரியங்களை விஷயங்களில் உலவவிட்டுக் கொண்டு மனிதன் ஒருவன் வீதியில் நடக்கிறான். பல வடிவங்களை அவன் பார்க்கிறான். கண்ணாடியில் பிம்பம் போன்று அவைகள் தோன்றித் தோன்றி மறைகின்றன. மனதில் ஒரு பதிவையும் அவைகள் செய்வதில்லை. அவைகளுக்கிடையில் கட்டழகுள்ள வடிவம் ஒன்று தோன்றுகிறது. அதைக் கூர்ந்து பார்க்க மனது விரும்புகிறது. திரும்பவும் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. பன்முறை பார்க்கும் வாய்ப்பும் அமைகிறது. அதைப் பார்ப்பதில், பிறகு நினைப்பதில் மகிழ்ச்சி உண்டாகிறது. நினைந்து நினைந்து அவ்வழகு வடிவத்தின்கண் விருப்பம் வருகிறது. வலுத்த விருப்பம் பற்றுதல் எனப் பெயர் பெறுகிறது. பார்த்தல் என்கிற ஓர் இந்திரிய நுகர்ச்சி மற்ற இந்திரிய நுகர்ச்சிகளுக்கும் இடந்தேடப் பார்க்கிறது. அதாவது அச் சுந்தர சொரூபத்தைத் தனக்குரியதாக்கிக் கொள்ளத் தீர்மானம் செய்யப்படுகிறது. இத்தீர்மானத்துக்கு ஆசை அல்லது காமம் என்று பெயர். எரியும் தீயை விறகுக்கட்டை வளர்ப்பதுபோன்று என்ணம் காமத்தை வளர்க்கிறது. இனி, ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கான முயற்சி எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் உலகம் அதற்கு இடந்தருவதில்லை. இந்த ஆசையை அவர்கள் தடைப்படுத்துகின்றனர். தடைப்பட்ட ஆசை சினமாக வடிவெடுக்கிறது. சினத்தைக் காணுமிடத்தெல்லாம் அதைத் துருவி ஆராய்ந்தால் அது தடைப்பட்ட ஆசை என்பது தெளிவாகும். சினம் பைத்தியத்துக்கு ஒப்பானது. பைத்தியம் நிலைத்துள்ளது; சினம் தற்காலிகமானது. அவ்வளவுதான் வித்தியாசம். சினம் கொண்டவனுக்கும் பித்தம் பிடித்தவனுக்கும் நடைமுறை ஒன்றே. குழம்பிய மனநிலை அதன் விளைவு. அமைதி குடிகொள்ளுங்கால் வனத்தில் உள்ள மரம் செடி கொடிகள் உள்ளபடி தென்படுகின்றன. அவைகளுள் இது இப்பெயருடையது என்கிற நினைவு இருக்கிறது. ஆனால் புயல் காற்று அடிக்குங்கால் எல்லாம் ஒரே அமளி. சினம் கொண்ட மனதிலும் ஒரே புயல்காற்று. அது சம்மோகம் என்றும், குழப்பம் என்றும் பெயர் பெறுகிறது. நன்று இது, தீது இது என்ற நினைவு அப்பொழுது இருப்பதில்லை. பண்டு, பலகால் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள நலம் கேடுகளைப் பற்றிய ஞாபகம் போய்விடுகிறது. பழைய நினைவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு மனிதன் புதிய செயல்களை நன்றென்றும் தீதென்றும் பாகுபடுத்துகிறான். எப்பொருள் எத்தன்மையது என்கிற ஞாபகம் இருந்தால்தான் அப்பொருளின் மெய்ம்மையை புத்தியானது பாகுபடுத்த வல்லதாகும். ஆக, நினைவு போய்விட்டால் விவேகம் அல்லது நல்லறிவு அழிகிறது. அறிவை இழந்தவன் தானே அழிவுபட்டவன் ஆகிறான். ஏனென்றால் நெறி வழுவுதல் மாய்தலுக்கு ஒப்பாகிறது. விஷயாதிகளில் உலவும் எண்ணத்தை மீட்டெடுத்து எதன் கண் நிலை நிறுத்தினால் நன்மையுண்டாகும்? விடை வருகிறது : 64. ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ்சரந் ஆத்மவஸ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி விதேயாத்மா-தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் (சாதகன்), ராக த்வேஷ வியுக்தை: -விழைதலும் பகைத்தலுமின்றி, ஆத்மவஸ்யை இந்த்ரியை:-தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயாந் சரந்-போகத்தில் சஞ்சரித்துக் கொண்டு, ப்ரஸாதம் அதிகச்சதி-உள்ளத் தெளிவை அடைகிறான். பொருள் : விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான். இந்திரியங்கள் இயல்பாகப் புறவுலகில் செல்லும் பாங்குடையவைகள். புறப்பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்ற அவாவுடன் பொறிகள் அவைகளைத் தாவிப் பற்றுகின்றன. ஆனால் பொருள்கள் துன்பம் தருவனவாயிருப்பின் பொறிகள் அவைகளை வெறுத்துப் பின்வாங்குகின்றன. இங்ஙனம் விருப்பும் வெறுப்பும் இந்திரியங்கள்பால் இயல்பாய் அமைந்துள்ளன. அந்த இயல்பை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து ஆராயுமிடத்து மனது ஆட்டிவைக்கின்ற பிரகாரம் இந்திரியங்கள் ராகதுவேஷ வடிவெடுத்துத் தொழில்புரிகின்றன. மனதை அடியோடு அடக்கி வென்றவன் மனவேந்தன். அத்தகையவனது மனம் பெரிதும் ஆத்ம சொரூபத்திலேயே திளைத்திருக்கிறது. அது வெளி விஷயங்களில் செல்லுமாயின் ஆசைப்படாது புனித இயல்போடு சஞ்சரிக்கிறது. அதனால் அதனுடைய அமைதியும் தெளிவும் அதிகரிக்கின்றன. சுத்த மனதோடு இந்திரியங்களைப் பயன்படுத்துவதே ஒருவித சமாதியாகிறது. ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸர் கண்கொண்டு கார்மேகத்தையும் அதன் கீழ் உலாவிய கொக்கையும் பார்த்தார். அதனால் அவருக்கு ஆனந்த சமாதி ஏற்பட்டது. அவர் சிறுவராயிருந்தபோது நாடகத்துக்குச் சிவவேஷம் பூட்டினார்கள். சாம்பல் பூசுதல் முதலிய ஸ்பரிச உணர்ச்சி அவருக்கு சிவ பாவ சமாதியை உண்டுபண்ணிற்று. காதால் பகவந் நாமத்தைக் கேட்டபொழுதெல்லாம் அவருக்கு சமாதி வந்தது. நறுமணத்தை நுகர்ந்தபோதெல்லாம் ஈசுவர சிந்தனையும் சமாதியும் அவருக்கு வருவனவாயின. வாயில் வைத்துச் சுவைத்ததெல்லாம் அவருக்கு ஈசுவரப் பிரசாதம். ஆக, இந்திரியங்கள் ஐந்தையும் நன்கு பயன்படுத்தி அவர் ஈசுவர சந்நிதியையே சார்ந்திருந்தார். மனம் அடங்கப் பெற்றார்க்கு இந்திரியங்கள் கேடுடையவைகளல்ல என்பதற்கும், பிரசாதம் அல்லது தெளிந்த நிலையில் மனது திளைத்திருக்கும் என்பதற்கும் அவரது வாழ்க்கையே சான்றாகிறது. ஸ்திதப்பிரக்ஞன் எப்படி நடமாடுகிறான் என்ற கேள்விக்கு இது விடை : 65. ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு புத்தி: பர்யவதிஷ்டதே ப்ரஸாதே-உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில், ஸர்வது:காநாம்-எல்லாத் துன்பங்களுக்கும் ஹாநி: உபஜாயதே-அழிவு ஏற்படுகிறது, ப்ரஸந்ந சேதஸ:-சித்தம் சாந்தி பெற்ற மனிதன், புத்தி ஆஸு ஹி பர்யவதிஷ்டதே-புத்தி விரைவிலே நிலைப்படுகிறது பொருள் : சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின்ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது. பலபேர் உலகைக் கேடு மிக நிறைந்ததாக நினைக்கின்றனர். நலம் கேடு ஆகிய இரண்டும் நிறைந்தது உலகம் என்ற எண்ணம் பொதுவாக எல்லார்க்குமுண்டு. இவ்வுலகம் திருந்தியமையும்பொழுது தங்களுக்கு மனவமைதியுண்டாகும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். உலகில் அல்லல் நிறைந்திருப்பதும் தாங்கள் அசாந்தியில் மூழ்கியிருப்பதும் இணைபிரியாதவைகளாம். வெளியுலகில் காணும் கேடுகளெல்லாம் மனதில் இருக்கும் கேட்டின் புறத்தோற்றங்களாம். மனது திருந்தியமையுமளவு புறவுலகக் காட்சியும் திருந்தியமைகிறது. உண்மையில் புறவுலகம் கேடுடையது அன்று; அது ஈசுவர சொரூபம். அதைக் கடவுள் சொரூபமாகக் கருதுமளவு மனது அமைதியுறுகிறது. அமைதியுற்ற உள்ளத்தில் ஆத்ம சொரூபம் தென்படுகிறது. பிறகு அம்மனதே ஆத்ம சொரூபமாய் மாறுகிறது. 66. நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா ந சாபாவயத: ஸாந்திரஸாந்தஸ்ய குத: ஸுகம் அயுக்தஸ்ய-யோகமில்லாதவனுக்கு, புத்தி நாஸ்தி-புத்தியில்லை, அயுக்தஸ்ய ந பாவநா ச-யோகமில்லாதவனுக்கு மனோபாவனையும் இல்லை, அபாவயத: ந ஸாந்தி ச-மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை, அஸாந்தஸ்ய குத: ஸுகம்-சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது? பொருள் : யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோபாவனை இல்லை. மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது? விருப்பு வெறுப்பை வென்றவனே யோகி. அத்தகையவன் யுக்தன் எனப்படுகிறான். மேலே மொழிந்த விஷயம் மீண்டு மொருமுறை எதிர்மறையாகச் சொல்லப்படுகிறது. மனமடங்கப் பெறாதவனுக்கு இம்மிளயவும் இன்பமில்லை, புலன்களில் வேட்கையிருக்குமளவு மனிதன் துன்பப்பட்டே ஆகவேண்டும். துக்கப் பிராப்தி மட்டுமல்ல, வேறு என்னென்ன நஷ்டங்களெனின், இந்திரியங்களை வெல்லாதவனுக்கு ஆத்மாவைப் பற்றிய விவேகமில்லை. ஆகையால் ஆத்ம தியானம் அவனால் செய்யமுடியாது. ஆத்ம தியானம் செய்யாதவனுக்கு ஆத்ம சொரூப ஞானமில்லை. அதினின்று உண்டாகிற சாந்தியுமில்லை. இத்தனைவித நஷ்டங்கள் மனமடங்காமையால் வருகின்றன. மனமடங்காதவனுக்கு ஞானம் ஏன் உண்டாவதில்லை? அதற்கு விடை வருகிறது: 67. இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீயதே ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி ஹி-ஏனெனில், அம்பஸி நாவம் வாயு: ஹரதி இவ-கடலில் தோணியைக் காற்று இழுப்பது போல், சரதாம் இந்த்ரியாணாம்-(போகங்களில்) சஞ்சரிக்கின்ற இந்திரியங்கள் (புலன்கள்) யத் மந: அநுவிதீயதே-மனமும் ஒட்டி இருக்கிறதோ, தத் அஸ்ய ப்ரஜ்ஞாம் ஹரதி-அதுவே அவனது அறிவை இழுத்து செல்கிறது. பொருள் : இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம்மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவதுபோல் அறிவை மோதுகிறது. துடுப்பு, நங்கூரம், உள்யந்திரம், சுக்கான் முதலியவைகளால் ஆளப்பெறாத கப்பல் காற்றடிக்கும் திசையில் தள்ளுண்டு தடுமாற்றமடையும். அலைகின்ற இந்திரியங்களைப் பின்தொடரும் மனதுக்கு வரும் கேடும் அத்தகையது. புறவுலகைச் சார்தற் கென்றே இந்திரியங்கள் அமைந்தவைகள். ஒருவன் தூங்கும் பொழுது அவன் வாயில் இனிப்புப் பண்டத்தை வைத்தால் மனதின் வேகமின்றியே வாய் தானாக அப்பண்டத்தைச் சப்புகிறது; கசப்புப் பண்டத்தை வைத்தால் அதைத் துப்புகிறது. பழக்கத்தால் இவ்வியல்புகள் இந்திரியங்களுக்கு வந்துள்ளன. பண்படாத மனது இப்பொறிகள் வாயிலாகப் புறவுலகில் போமாயின் அது ஆத்ம சொரூபத்தைப் பற்றிய விவேகத்தை இழப்பதாகிறது. அப்படியானால் அத்தகைய இந்திரியங்களை என்ன செய்ய வேண்டும்? 68. தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ: இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா மஹாபாஹோ-பெருந்தோளாய், தஸ்மாத்-ஆகையால், யஸ்ய இந்த்ரியாணி-எவனுடைய புலன்கள், இந்த்ரிய அர்தேப்ய-புலன்களுக்குரிய போக விஷயங்களில் இருந்து நிக்ருஹீதாநி-மீட்கப் பட்டு விட்டதோ, தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனறிவே நிலைகொண்டது. பொருள் : ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலைகொண்டது. இந்திரியங்கள் தத்தம் தொழில் புரியாதிருக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள். வஸ்துக்களை போகத்துக்குரியவைகளென்று எண்ணி அவைகள் மீது இந்திரியங்கள் உலாவுதலால் கேடு விளைகிறது. நலன் தரக்கூடிய வேறு ஒரு போக்கில் இந்திரியங்களைப் பழக்கலாம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது பழமொழி. ஆனால் அது கெட்ட உபாதியை உண்டுபண்ணுகிறபடியால் அதைத் தொடவேமாட்டேன் என்று ஸ்ரீராம கிருஷ்ணர் ஆழ்ந்து சங்கற்பித்தார். அதன் பயனாக அவரது நாடி நரம்புகளில் பெரியதொரு மாறுதல் வந்தமைந்தது. ஒரு நாணயத்தால் அவரது உடலைத் தூங்கும்பொழுது தொட்டாலும் அவருக்குச் சகிக்க முடியாத வலி வருவதாயிற்று. அவரைக் கீழ்மையில் இழுக்கக் காமக்கிழத்திகள் தோன்றியவுடனே, அம்பிகையை எண்ணி அவருக்கு ஆழ்ந்த சமாதி கூடிற்று. இந்திரிய நிக்கிரகம் என்பது. இந்திரியங்களைக் கீழ்மையினின்று மீட்டெடுத்து மேன்மையில் வைப்பது என்று அவரது ஜீவிதம் விளக்குகிறது. அப்படி இந்திரியங்களை நியாஸம் செய்பவர் ஞானம் பெறுகின்றனர். (நியாஸம் -சப்ளிமேஷன்-கீழ்மையை மேன்மையாக மாற்றுதல்) அப்படி இந்திரியங்களின் தொழிலைத் தூயதாக மாற்றுபவன் அடையும் நன்மை யாது? 69. யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே: ஸர்வபூதாநாம் யா நிஸா-எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், தஸ்யாம் ஸம்யமீ ஜாகர்தி-(தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான், யஸ்யாம் பூதாநி ஜாக்ரதி-மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ, பஸ்யத: முநே: ஸா நிஸா-பரமனைக் கண்ட (உண்மையை உணர்ந்த) முனிக்கு அது இரவு. பொருள் : எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு. ஸ்தூல உலகில் மக்களுக்குப் பகலாயிருக்கும் வேளையில் ஆந்தை, புலி முதலியன நன்கு பார்க்கமாட்டா. ஆக, அவ்வேளை அவைகளுக்கு இரவு. அவைகளுக்குப் பகல் போன்று கண் தெரியும் வேளையோ மற்றப் பிராணிகளுக்கு இரவு. இனி, இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறை பகல் போன்றிருக்கிறது. திருடர்களுக்குத் திருட்டைப்பற்றிய விவரங்கள் பகல் போன்று விளங்கும். மற்ற இயக்கங்கள் இருள் போன்று அவர்களுக்குப் புலப்படா. சூது ஆடுபவர்க்கு அச்செயல்மட்டும் பகல் போன்று விளங்கும். கற்றவர்க்கு அறிஞர் கூட்டம் பகலுக்கு ஒப்பானது. இங்ஙனம் இவ்வுலகிலேயே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறை பகல் போன்று விளங்கவும், ஏனைய துறைகள் இரவு போன்று விளங்காமலும் இருக்கின்றன. இந்திரியங்களை வென்ற யோகிக்கு உலகக் காட்சிகள், உலக வியவகாரங்கள் ஆகியவைகள் இருள்போன்று மறைந்து கிடக்கின்றன. பரமாத்ம தத்துவ சம்பந்தமான யாவும் பகல் போன்று அவனுக்கு நன்கு விளங்குகின்றன. அனைத்தையும் ஈசுவர சொரூபமாகக் காண்பவனுக்கு யாண்டும் மங்களம் பொலிகிறது; அவனது வாழ்க்கை இன்பமே வடிவெடுத்ததாகிறது. இந்திரிய நுகர்ச்சியுடைய போகிக்கு உலகக் காட்சி பகல். இந்திரியங்களை அடக்கிய யோகிக்குக் கடவுள் காட்சி பகல். ஈசுவரக் காட்சி காண்பதால் வரும் நன்மை யாது? 70. ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத் தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ யத்வத்-எவ்விதம், ஆப: ப்ரவிஸந்தி-நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில், ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்டம் ஸமுத்ரம்-நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல் தத்வத்-அதே விதமாக, யம் காமா: ப்ரவிஸந்தி-எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ), ஸ ஸாந்திம் ஆப்நோதி-அவன் சாந்தியடைகிறான் காமகாமீ ந-விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான். பொருள் : கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான். பொருள் : கடலின்கண் கூட்டுதல் குறைத்தல் முதலியன செய்தல் எவருக்கும் இயலாது. உலகிலுள்ள நதிகளெல்லாம் ஓயாது அதில் வந்து வீழ்ந்தாலும் அது மிகைபடுவதில்லை. நதிகள் வராதொழியினும் கடல் குறைபடுதலில்லை. உள்ளே வரும் நதிகளோ உருவை இழந்துவிடுகின்றன. நாம ரூபம் அடிபட்டுப் போய் விடினும் நதி எப்பொருளாலானதோ அப்பொருளுக்கு நஷ்டமில்லை. கருவி கரணங்களை வென்ற முனிவனது மனம் கடல் போன்றது. காமத்தை உண்டுபண்ணும் பொருள்கள் ஓயாது அவனது முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கலாம். பொறிவாயிலாக அவன் அவைகளைப் பொருள்படுத்தவும் செய்யலாம். கடலில் நதிகள் ஒடுங்குவது போன்று இந்திரியார்த்தங்கள் என்னும் சித்த விருத்திகள் அவனது உள்ளத்தில் ஒடுங்கி மறைகின்றன. மனம் ஒரு விகாரத்தையும் அடையாத பரிபூரண நிலையில் அவன் வீற்றிருக்கின்றான். அகண்டாகார விருத்தி யென்று அதைப் பகர்வதுண்டு. கடல்போன்று அகண்டமாய்விடுகிறது ஞானியின் உள்ளம். கடலைக் கலக்கிச் சேறுபடுத்த யாராலும் முடியாது. முனியின் நிறைமனது கலங்கிய மனது ஆவதில்லை. சாந்தம் அல்லது ஜீவன் முக்தி என்ற பெருநிலையும் அவனுக்கே உரியது. ஆசை வலையில் அழுந்துபவர்க்கும் அதற்கும் வெகு தூரம். இந்நிலையை அடைதற் பொருட்டுச் சாதகன் என்ன செய்ய வேண்டும்? 71. விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ: நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸாந்திமதிகச்சதி ய: புமாந்-எந்த மனிதன், ஸர்வாந் காமாந் விஹாய-எல்லா இன்பங்களையும் துறந்து நிர்மம: நிரஹங்கார:-எனதென்பதற்றான், யானென்பதற்றான், நி:ஸ்ப்ருஹ: சரதி-இச்சையற்றான், ஸ ஸாந்திம் அதிகச்சதி-அவனே சாந்தி நிலை அடைகிறான். பொருள் : இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான். ஆசை இருக்குமளவு மனிதனுக்கு அசாந்தி; ஆசை அறுபடுமளவு அமைதி உண்டாகிறது. நான், எனது என்னும் எண்ணம் மனிதனைக் கரும பந்தத்தில் தளைக்கிறது. நான், எனது என்ற மன விருத்திகளை அகங்கார மமகாரம் என்று இயம்புவதுண்டு. கடலானது அலைகளாக வடிவெடுத்துச் தன்னைச் சிறு சிறு துண்டங்களாக மேற்பரப்பில் காட்டிக்கொள்கிறது. தோற்றத்தளவில் கடல் துண்டுபட்டது. உண்மையில் அது அகண்டமானது. அகங்காரமும் மமகாரமும் சேர்ந்து மனிதனிடத்து ஜீவபோதம் என்ற அலையை உண்டுபண்ணுகின்றன. ஆசை என்னும் காற்றே அகங்காரம் மமகாரம் என்ற அலையை உண்டுபண்ணுதற்கு முதற் காரணம். ஆசை ஒழிந்தால் நான், எனது என்பன ஒழிகின்றன. அகங்கார மமகாரம் அற்றவிடம் அகண்டாகார ஆனந்த சொரூபமே எஞ்சியுளது. நான், எனது என்னம் இப்பந்தங்களை ஒழித்தற்பொருட்டு வாழ்தலே பெருவாழ்வாம். ஸ்திதப்பிரக்ஞன் எப்படி வாழ்கிறான் என்பது மீண்டும் இயம்பப்படுகிறது. அத்தகைய வாழ்வினின்று உண்டாகும் மாண்பு வருமாறு : 72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி, ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை, அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும் அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு, ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-பிரம்ம நிர்வாண மெய்துகிறான். பொருள் : பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான். கனவில் இருக்கும்போது கனவில் காண்கிற பொருள்களுக்கு மதிப்புண்டு; ஆங்கு உண்டாகிற இன்ப துன்பங்களுக்கும் மதிப்புண்டு. அத்தகைய கனவைவிட பெருநிலையாகின்றது நனவு. நனவுக்கு வந்தமையுடனே கனவைப்பற்றிய மயக்கம் போய்விடுகிறது. கனவில் வந்த இன்ப துன்பங்களுக்குப் பிறகு மதிப்பில்லை. அங்ஙனம் கனவுக்கும் நனவுக்கும் மேம்பட்ட நிலையொன்று உண்டு. அது பிரம்ம நிர்வாணம் என்று பகரப்படுகிறது. அதை அடையப் பெற்றவனுக்குக் கனவு, நனவு ஆகிய அவஸ்தைகளைப்பற்றிய மயக்கம் கிடையாது. பிரம்ம நிர்வாணம் என்பது அபரோக்ஷ அனுபூதி. மனம் மொழிக்கு எட்டாத பேரானந்தப் பெருநிலை அது. அப்பெரு நிலையினின்று கீழே இறங்கி வந்தவன் ஜீவன். திரும்பவும் அப்பெருநிலையை அடையப்பெற்றவன் முக்தன். நதிகளெல்லாம் கடலைப் போய்ச் சேர்ந்து கடலில் இரண்டறக் கலத்தல் போன்று பிரம்ம நிர்வாணம் அடைதல் ஜீவர்களின் குறிக்கோளாம். சாகும் தறுவாயில் அது வந்து அமைவதாயினும் அது முக்தியேயாம். விடுதலை யென்றும் வீடுபேறு என்றும் அதைப் பகர்வதுண்டு. இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே ஸாங்க்யயோகோ நாம த்விதீயோऽத்யாய: பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ஸாங்கிய யோகம் என்ற இரண்டாம் அத்தியாயம். | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
பதினோன்றாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | விச்வரூபதர்சன யோகம்
இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விசுவரூபத்தைக் கண்டு மகிழ்கிறான். விசுவரூபத்தின் சொரூபம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அநேக வாய்களும், பல கண்களும், பல ஆயுதங்களும், சிறந்த ஆடை ஆபரணங்களும், சிறந்த வாசனைகளும் பொருந்திய அந்த விசுவரூபத்தில் வையக முழுவதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜுனன் வியப்புற்றுக் கண்ணனைத் துதிக்கிறான். பிறகு அர்ச்சுனனது வேண்டுகோளின் பேரில், கண்ணன் தமது விசுவரூபத்தைச் சுருக்கிக்கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு, சக்கரங்களையுமேந்தி நின்று, தமது உண்மையான சொரூபத்தைக் காணவும், தம்மைப் பெறவும் பக்தி ஒன்றே சிறந்த மார்க்கமாதலால் தம்மையே நேசித்திருக்கும்படி அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான். அர்ஜுனனது வேண்டுதல் 1-4 -ஞானக்கண்ணை வழங்குதல் 5-8 -அனைத்தும் ஈசன் எனத் தொகுத்துக் காணுதல் 9-14 -தான் கண்ட விசுவரூபத்தை அர்ஜுனன் விளக்கியுரைத்தல் 15-31 -கால சொரூபியாகிய ஈசன் தமது செயலைத் தாமே செய்துமுடிக்கிறார் 32-34 -அர்ஜுனன் செய்கிற ஸ்துதி 35-44 -அர்ஜுனன் விசுவரூபதர்சனம் தனக்குப் போதுமென்றது 45-46 -அர்ஜுனனுக்குக் கிட்டிய தனி வாய்ப்பு 47-49 -மீண்டும் எடுத்த சாந்த சொரூபம் 50-51- வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டிய முறை 52-55. அர்ஜுந உவாச 1. மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம் யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோऽயம் விகதோ மம அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், மத் அநுக்ரஹாய-என் மீது அருள் பூண்டு, த்வயா அத்யாத்ம ஸம்ஜ்ஞிதம்-உன்னால் ஆத்ம ஞானம் என்னும், பரமம் குஹ்யம்-மிக உயர்ந்ததும் மறைத்துக் காப்பாற்றத் தக்கதுமான, யத் வச: உக்தம்-எந்த உபதேசம் கூறப் பட்டதோ, தேந மம-அதனால் என்னுடைய, அயம் மோஹ: விகத:-இந்த மோகம்/மயக்கம் தீர்ந்து போயிற்று. பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: என்மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்து போயிற்று. தம்முடைய ஒரு சிறு அம்சம் இவ்வுலகனைத்தும் ஆனது என்றும், தாம் அகிலாண்டத்தையும் தாங்கிக் கொண்டு அதற்கப்பாலும் இருப்பதாக பகவான் சொன்னார். அதைக் கேட்ட அர்ஜுனன் தான் அந்த சொரூபத்தை நேரே சாக்ஷõத்கரிக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டான். அவன் பகர்ந்ததன் உட்கருத்தாவது : என்னைப்பற்றியும், உலகைப்பற்றியும், உலகுக்கும் எனக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், என் கடமையைப் பற்றியும் நான் இது பரியந்தம் கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் வெறும் மயக்கமேயாம். தாம் உபதேசித்தருளிய பரதத்துவ போதத்தால் அந்த மோஹம் அகன்று போயிற்று. மேலும் : 2. பவாப்யயௌ ஹி பூதாநாம் ஸ்ருதௌ விஸ்தரஸோ மயா த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் ஹி-ஏனெனில், கமலபத்ராக்ஷ-தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், மயா த்வத்த:-என்னால் உங்களிடமிருந்து, பூதாநாம் பவ அப்யயௌ-உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும், விஸ்தரஸ: ஸ்ருதௌ-விரிவாகக் கேட்டேன், ச அவ்யயம் மாஹாத்ம்யம் அபி-அவ்வாறே அழிவற்ற பெருமையும் (கேட்கப் பட்டது). பொருள் : உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன். பகவான் சுருக்கமாகச் சொன்னேன் என்றதை அர்ஜுனன் விரிவாகச் சொல்லப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறான். இருவர் கருத்தும் அவரவர் நிலைமையில் உண்மையே. அனைத்துக்கும் பகவான் முதற் காரணமாயிருக்கிறார். ஆனால் அவர் ஒன்றிலும் கட்டுப்படுவதில்லை. நடைமுறைகளனைத்துக்கும் விளக்கம் அவரிடத்திருந்து பெறலாம். இத்தனையும் உண்டு பண்ணியும் அவரிடத்துத் தேய்வு ஒன்றுமில்லை. இவை யாவும் அவருடைய மஹிமையாம். 3. ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஸ்வர த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஸ்வரம் புரு÷ஷாத்தம பரமேஸ்வர-பரமேசுவரா, புரு÷ஷாத்தம-மனிதர்களில் உயர்ந்தவனே, த்வம் ஆத்மாநம் யதா ஆத்த-நீ உன்னைப் பற்றி எவ்வாறு கூறினாயோ, ஏதத் ஏவம்-அது அவ்வாறே, தே ஐஸ்வரம் ரூபம்-உன்னுடைய ஈசுவர ரூபத்தை, த்ரஷ்டும் இச்சாமி-காண விரும்புகிறேன். பொருள் : பரமேசுவரா, புரு÷ஷாத்தமா, நின்னைப்பற்றி நீ எனக்குச் சொல்லியபடியே நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன். எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவாகிய அவரிடம் ஞானம், ஐசுவரியம், பலம், சக்தி, வீரியம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்திருக்கின்றன. பகவான் என்னும் சொல்லுக்கு ஷட்குண சம்பன்னன் என்று பொருள். ஆறுவித தெய்வ சம்பத்துக்கள் அவரிடம் இருக்கின்றன. அத்தனை மஹிமைகளோடு கூடிய அவரைக் காண அர்ஜுனன் விரும்பியது இயல்பே. 4. மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ யோகேஸ்வர ததோ மே த்வம் தர்ஸயாத்மாநமவ்யயம் ப்ரபோ-பிரபுவே, மயா தத் த்ரஷ்டும் ஸக்யம் இதி-என்னால் அதை பார்க்க முடியும் என்று, யதி மந்யஸே-நீ கருதுவாயெனில், யோகேஸ்வர:-யோகேசுவரா, தத:-அப்போது, த்வம் ஆத்மாநம் அவ்யயம்-நீ உன்னுடைய அழிவற்ற ஆத்மாவை, மே தர்ஸய-எனக்குக் காட்டுக. பொருள் : இறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக. யோகத்துக்கும் யோகிகளுக்கும் தலைவன் யோகேசுவரன். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய பஞ்ச கிருத்தியங்கட்கும் தலைவன் இறைவன். காட்சியளித்தல் அல்லது அருளல் வேண்டுமென்று அர்ஜுனன் விண்ணப்பிக்கிறான். ஈசுவரனது விசுவரூபத்தைக் காணவேண்டுமென்பது அவன் விருப்பம். ஞான தர்சனம் கொடுத்தருள யோகேசுவரனுக்கு இயலும். தன்னுடைய தீர்மானத்துக்கு முக்கிய ஸ்தானம் தராது, ஈசுவரனுடைய அனுக்கிரகத்துக்கு முதன்மை கொடுப்பது பக்தனுடைய இயல்பு. மனிதன் எதற்குத் தகுதியுடையவன் அல்லது தகுதியற்றவன் என்று தான் அறிந்துகொள்வதைவிட பகவானே அதை உள்ளபடி அறிகிறார். இங்ஙனம் அர்ஜுனனால் விண்ணப்பிக்கப் பெற்றதும் : ஸ்ரீ பகவாநுவாச 5. பஸ்ய மே பார்த ரூபாணி ஸதஸோऽத ஸஹஸ்ரஸ: நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ஸதஸ: ஸஹஸ்ரஸ:-பல நூறாகவும், பல்லாயிரமாகவும், நாநாவிதாநி ச-பல வகை, நாநாவர்ண ஆக்ருதீநி ச-பல நிறம் அளவு பலவாக, அத-இப்போது, திவ்யாநி ரூபாணி பஸ்ய பார்த-திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா! பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பல நூறாகவும், பல்லாயிரமாகவும், வகை பல, நிறம் பல, அளவு பலவாகும் என திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா. தெய்வத்தோடு சம்பந்தப்படாதவைகள் போல் தென்படுபவைகள் உண்மையில் தெய்வப் பெற்றியுடைத்திருக்கின்றன. ஆகையால் அவைகள் திவ்வியமானவைகள் எனப்படுகின்றன. வடிவத்திலும் நிறத்திலும் தன்மையிலும் வேறுபட்டு, எண்ணிக்கையில் அடங்காதிருப்பவைகளெல்லாம் ஒரு பொருளின் எண்ணிறந்த தோற்றங்கள் என்பது இனி விளங்கும். ஒவ்வொரு வஸ்துவும் நாராயணன். மனிதன் நாராயணன்; ஜீவப் பிராணி நாராயணன். ரிஷியும் நாராயணன்; போக்கிரியும் நாராயணனே. உலகில் உள்ள யாவும் நாராயணனே. நாராயணன் பல விதமான திருவிளையாடல்களைச் செய்தருள்கின்றான். எல்லாப்பொருள்களும் அவனுடைய பல்வேறு உருவங்களாகவும் அவனது பிரபாவத்தின் தோற்றங்களாகவும் இருக்கின்றன. 6. பஸ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஸ்விநௌ மருதஸ்ததா பஹூந்யத்ருஷ்டபூர்வாணி பஸ்யாஸ்சர்யாணி பாரத பாரத-அர்ஜுனா! ஆதித்யாந் வஸூந் ருத்ராந்-ஆதித்யர்களை, வசுக்களை, உருத்திரர்களை, அஸ்விநௌ மருத:-அசுவினி தேவரை, மருத்துக்களை, பஸ்ய-பார், ததா-அவ்வாறே, அத்ருஷ்ட பூர்வாணி-இதற்கு முன் கண்டிராத, பஹூநி ஆஸ்சர்யாணி பஸ்ய-பல ஆச்சரியங்களைப் பார். பொருள் : ஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; அசுவினி தேவரைப் பார்; மருத்துக்களைப் பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார். நீ இதுவரையில் கண்டிருந்தது மிகமிகக் குறைந்தது. மேலும் காணக்கிடப்பது கணக்கில் அடங்காதது என்பதை நீ இப்பொழுது உணர்வாய். அதுமட்டுமல்ல : 7. இஹைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் பஸ்யாத்ய ஸசராசரம் மம தேஹே குடாகேஸ யச்சாந்யத் த்ரஷ்டுமிச்சஸி குடாகேஸ-அர்ஜுனா, அத்ய இஹ மம தேஹே-இன்று, இங்கே என்னுடலில், ஏகஸ்தம்-ஒரே இடத்தில், க்ருத்ஸ்நம் ஜகத்-உலகம் முழுவதும், அந்யத் ச-அவ்வாறே மேற்கொண்டு, யத் த்ரஷ்டும் இச்சஸி-நீ எதைக்காண விரும்பினும், பஸ்ய-காண். பொருள் : அர்ஜுனா, இன்று, இங்கே என்னுடலில் சராசரமான உலகம் முழுவதும் ஒருங்கு நிற்பதைப்பார்; இன்னும் வேறு நீ எதைக்காண விரும்பினும், அதை இங்குக் காண். பாண்டவர்கள் கௌரவர்களை ஜயிப்பதா அல்லது கௌரவர்கள் பாண்டவர்களை ஜயிப்பதா? இதில் எது உசிதம் என்று தனக்குத் தெரியவில்லையென்று அர்ஜுனன் இரண்டாம் அத்தியாயம் ஆறாவது சுலோகத்தில் சொன்னான். அதுபோன்ற மர்மங்களைத் தெரிந்துகொள்ள விருப்ப மிருந்தாலும் அவைகளைத் தெரிந்துகொள்க. விசுவரூபதர்சனத்தில் அண்டங்களின் அமைப்பும், நடைமுறையும் மற்றும் யாவும் உள்ளபடி விளங்கும். ஆனால் அக்காட்சி ஊனக்கண்ணால் காணக் கூடியதா? இதற்கு விடை வருகிறது : 8. ந து மாம் ஸக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷúஷா திவ்யம் ததாமி தே சக்ஷú: பஸ்ய மே யோகமைஸ்வரம் து அநேந ஸ்வசக்ஷúஷா-ஆனால் இயற்கையான இக்கண்களால், மாம் த்ரஷ்டும் ஏவ ந ஸக்யஸே-என்னை பார்க்க முடியாது, தே திவ்யம் சக்ஷú: ததாமி-உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன், மே ஐஸ்வரம் யோகம் பஸ்ய-என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார். பொருள் : உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார். பிராகிருத கண்கொண்டு பிரகிருதியைத்தான் காணமுடியும். அதிலேயும் தூரத்தில் இருப்பதைப் பார்க்க தூர திருஷ்டிக் கண்ணாடியின் உதவிவேண்டும். நுண்பொருளை அதற்கேற்ற கண்ணாடியின் துணைகொண்டே காணலாம். அங்ஙனம் ஈசுவரனது விசுவரூபத்தைக் காண்பதற்கு ஞானக்கண் தேவை. நெறியான வாழ்க்கை யுடையவர்க்கு அது இறைவனது அருளால் உண்டாகிறது. பஞ்சேந்திரியங்களின் துணையின்றியே ஞானக் கண்ணானது அவ் இந்திரியங்களின் தொழில்களைச் செய்கிறது. அதற்குமேல் ஈசுவர மஹிமையை வேண்டியவாறு தெரிந்து கொள்ளவும் ஞானக் கண்ணுக்கு இயலும். தெளிந்த மனமே ஞானக் கண்ணாகிறது. பெரியோர்கள் பக்தியைக் கண்களில் தீட்டும் மைக்கு ஒப்பிட்டிருக்கின்றனர். ஸ்ரீமதி ராதை ஒரு சமயம் ஸகிகாள், நான் எனது கிருஷ்ணனை எல்லாவிடங்களிலும் காண்கிறேன் என்றான். அதற்குக் கோப ஸ்திரீகள், தோழி, நீ பக்தியாகிய அஞ்சனத்தைக் கண்களில் இட்டுக்கொண்டிருக்கிறாய். ஆதலால்தான் அப்படித் தெரிகின்றது என்றார்கள். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசிவது போன்று அந்த விசுவரூபக் காட்சியை ஸஞ்ஜயனும் வியாசபகவானும் அதே சமயத்தில் காண்கிறார்கள். தான் கண்டபடி ஸஞ்ஜயன் அதை திருதராஷ்டிரருக்கு விளக்குகிறான். ஸஞ்ஜய உவாச 9. ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகேஸ்வரோ ஹரி: தர்ஸயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஸ்வரம் ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், ராஜந்-அரசே, மஹாயோகேஸ்வர: ஹரி:-யோகத்தலைவனாகிய ஹரி, ஏவம் உக்த்வா தத:-இவ்வாறு உரைத்துவிட்டு அப்பால், பார்தாய-பார்த்தனுக்கு, பரமம் ஐஸ்வரம் ரூபம்-மிக உயர்ந்த தன் கடவுள் வடிவை, தர்ஸயாமாஸ-காட்டினான். பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத்தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான். 10. அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்ஸநம் அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம் அநேக வக்த்ர நயநம்-(அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது, அநேக அத்புத தர்ஸநம்-பல அற்புதக் காட்சிகளுடையது, அநேக திவ்ய ஆபரணம்-பல திவ்ய ஆபரணங்கள் பூண்டது, திவ்ய அநேக உத்யத ஆயுதம்-பல தெய்வீக ஆயுதங்கள் ஏந்தியது. பொருள் : (அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது; பல அற்புதக் காட்சிகளுடையது; பல திவ்யாபரணங்கள் பூண்டது; பல தெய்வீகப் படைகள் ஏந்தியது. உலகெலாம் அவன் சொரூபமாதலால் அவனுக்கு முகங்களும் கண்களும் கணக்கில் அடங்காதவைகள். மனிதனது சிற்றறிவுக்கு எட்டாத அரும்பெரும் செயல்கள் அவனால் நடைபெறுகின்றன. வாதலால் அவனிடத்து அற்புத தர்சனங்கள் நிறைந்துள்ளன. அழகுக்குப் பிறப்பிடம் அவன். பிரகிருதியிலும் அதற்கப்பாலும் உள்ள செந்தரியம் யாவும் அவனுடையவைகள். அதை முன்னிட்டு அவன் தெய்விக ஆபரணங்களை அணிந்தவன் எனப்படுகிறான். தேவகாரியம் எவ்விதத்திலும் நடைபெற்று விடுகிறது. யாரும் அதற்கு இடைஞ்சல் செய்ய முடியாது. அவன் ஏந்தியிருக்கும் திவ்விய ஆயுதங்கள் பல அத்திறனை விளக்குகின்றன. 11. திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம் ஸர்வாஸ்சர்யமயம் தேவமநந்தம் விஸ்வதோமுகம் திவ்ய மால்ய அம்பரதரம்-திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது, திவ்ய கந்த அநுலேபநம்-திவ்ய கந்தங்கள் பூசியது, ஸர்வ ஆஸ்சர்ய மயம்-எல்லா வியப்புக்களும் சான்றது, அநந்தம்-எல்லையற்றது, விஸ்வதோமுகம் தேவம்-எங்கும் முகங்களுடைய தேவரூபம். பொருள் : திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது; திவ்ய கந்தங்கள் பூசியது; எல்லா வியப்புக்களும் சான்றது; எல்லையற்றது; எங்கும் முகங்களுடைய தேவரூபம். இயற்கையை உடலாய் ஏற்றுக்கொண்டு அதனுள் இறைவன் உயிராய் ஒளிருமிடத்து இவ்வருணனைகளெல்லாம் ஊனக்கண்ணால் காண்பவர்களுக்கே பொருத்த முடையவைகளாகின்றன. பின்பு, ஞானக்கண் கொண்டு காணுமிடத்து தெய்வப் பெற்றியே யாண்டும் பொலியும். 12. திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா யதி பா: ஸத்ருஸீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந: திவி-வானத்தில், ஸூர்யஸஹஸ்ரஸ்ய-ஆயிரம் சூரியன்கள், யுகபத்-ஒரே நேரத்தில், உத்திதா-உதயமானால், பா: யதி பவேத்-பிரகாசம் எப்படி இருக்குமோ, ஸா-அந்த பிரகாசம், தஸ்ய மஹாத்மந:-அந்த மகாத்மாவின், பாஸ-ஒளிக்கு, ஸத்ருஸீ-நிகராக, ஸ்யாத்-இருக்கலாம். பொருள் : வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம். தெரிந்த ஒன்றை உபமானமாகக் கொண்டுதான் தெரியாத ஒன்றை ஏகதேசம் அறிந்துகொள்ளலாம். காணாதவர்க்கு ஈசனது காந்தி ஒன்றும் விளங்காது. உண்மையில் அவன் அவனுக்கே ஒப்பாவான். ஒருமிக்க உதயமான ஆயிரம் ஞாயிறுகளோடு ஒப்பிடுவதே அவன் ஒப்பில்லான் என்பதை விளக்குகிறது. ஆதலால் அவன் ஒருவனே மஹாத்மா என்னும் சொல்லுக்கு இலக்காகிறான். 13. தத்ரைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா அபஸ்யத்தேவதேவஸ்ய ஸரீரே பாண்டவஸ்ததா பாண்டவ: ததா-பாண்டவன் (அர்ஜுனன்) அப்போது, அநேகதா ப்ரவிபக்தம்-பல பகுதிப்பட்டதாய், க்ருத்ஸ்நம் ஜகத்-வையகம் முழுவதும், தேவதேவஸ்ய-அந்தத் தேவ தேவனுடைய, தத்ர ஸரீரே-அந்த உடலில், ஏகஸ்தம்-ஒரே இடத்தில், அபஸ்யத்-கண்டான். பொருள் : அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுவதும், அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான். வேற்றுமையில் ஒற்றுமை குடி கொள்வது இயற்கையின் அமைப்பு. வானவர், மக்கள், விலங்கு, பறவை, நிலைத்திணை ஆகிய எண்ணிறந்த இனங்களாக உயிர்கள் வடிவெடுக்கின்றன. இவையாவும் சேதனத்தின் பல்வேறு தோற்றங்கள். மண், உலகு, கீழ் உலகு, மேல் உலகு ஆகிய இவையாவும் போகத்துக்குரிய இடங்களாகின்றன. போகப் பொருள்கள் பல இவ்வுலகெங்கும் நிறைந்திருக்கின்றன. இவை யாவும் உயிர்க்குயிராய், அறிவுக் கறிவாய் உள்ள இறைவனில் அடங்கியிருப்பது ஒற்றுமையைக் காட்டுகிறது. 14. தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா தநஞ்ஜய: ப்ரணம்ய ஸிரஸா தேவம் க்ருதாஞ்ஜலிரபாஷத தத: ஸ: தநஞ்ஜய:-அப்போது அந்த தனஞ்ஜயன், விஸ்மய ஆவிஷ்ட:-பெரு வியப்பு அடைந்து, ஹ்ருஷ்ட ரோமா:-மயிர் சிலிர்த்து, தேவம்-அக்கடவுளை, ஸிரஸா ப்ரணம்ய-தலை குனிந்து வணங்கி, க்ருத அஞ்ஜலி:-கைகளைக் கூப்பிக் கொண்டு, அபாஷத-கூறினார். பொருள் : அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான். தேவதர்சனம் மனதின்கண் பெரிய மாறுதலை உண்டுபண்ணுகிறது. அது அகத்தும் புறத்தும் சில அறிகுறிகளுடன் பரிணமிக்கிறது. வியப்படைதல் உள்ளத்தின் இயல்பு. உரோமம் சிலிர்த்தல், தலைவணங்குதல், கைகூப்புதல் முதலியன உடலின் கண் தோன்றும் பரவசச் செயல்களாம். இனி, மன நிறைவு நிறைவுமொழியாய்ப் பொங்கி வழிகிறது. அது வருமாறு : அர்ஜுந உவாச 15. பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிஸேஷஸங்காந் ப்ரஹ்மாணமீஸம் கமலாஸநஸ்தம் ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச திவ்யாந் அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், தேவ! தவ தேஹே-தேவனே, உன் உடலில், ஸர்வாந் தேவாந்-எல்லாத் தேவர்களையும், ததா பூதவிஸேஷஸங்காந்-அவ்வாறே அநேகப் பிராணி வர்க்கங்களையும், கமல ஆஸநஸ்தம்-தாமரை மலரில் வீற்றிருக்கும், ஈஸம் ப்ரஹ்மாணம்-ஈசனாகிய பிரமனையும், ஸர்வாந் ருஷீந்-எல்லா ரிஷிகளையும், திவ்யாந் உரகாந் ச-தெய்வீக சர்ப்பங்களையும், பஸ்யாமி-காண்கிறேன். பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன். உயிர்களுக்கெல்லாம் தலைவனாயிருப்பதால் நான்முக பிரம்மா ஈசன் என்று அழைக்கப்படுகிறார். அவர் மஹாவிஷ்ணுவின் உந்திக் கமலத்தில் வீற்றிருப்பவர். சரம் அசரம் ஆகிய உயிர்த் தொகுதிகள் யாவும் விசுவ ரூபத்தில் அடங்கப்பெற்றிருக்கின்றன. வாஸுகி முதலிய ஸர்ப்பங்களும் வசிஷ்டர் முதலிய ரிஷிகளும் அங்குத் தென்படுகின்றனர். 16. அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம் பஸ்யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம் நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் பஸ்யாமி விஸ்வேஸ்வர விஸ்வரூப விஸ்வேஸ்வர-எல்லாவற்றுக்கும் ஈசனே, அநேகபாஹூ உதர வக்த்ர நேத்ரம்-பல தோளும், வயிறும், வாயும், விழிகளுமுடைய, அநந்த ரூபம்-எல்லையற்ற வடிவாக, த்வாம் பஸ்யாமி-உன்னைக் காண்கிறேன், விஸ்வரூப!-எல்லாம் தன் வடிவாகக் கொண்டவனே, தவ அந்தம் ந பஸ்யாமி-உன்னுடைய முடிவேனும் நான் பார்க்கவில்லை, மத்யம் ந-இடையும் காணவில்லை, புந: ஆதிம் ந-மேலும் ஆரம்பத்தையும் பார்க்கவில்லை. பொருள் : பல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நினை எங்கணும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும் காண்கிலேன். தோன்றிய யாவும் அவனேயாகி அவைகளுக்கு அப்பாலும் அவனே இருக்கிறான் என்பது பொருள். 17. கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச தேஜோராஸிம் ஸர்வதோ தீப்திமந்தம் பஸ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம் கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச-மகுடமும், கதையும், சக்கரத்தோடு, ஸர்வத: தீப்திமந்தம் தேஜோராஸிம்-எங்கும் ஒளிரும் ஒளிதிரளாகவும், தீப்த அநல அர்க த்யுதிம்-தழல்படு தீயும் ஞாயிறும் போல, துர்நிரீக்ஷ்யம்-பார்க்கக் கூசுகின்ற, ஸமந்தாத்-எங்கும் நிறைந்ததுமாக, அப்ரமேயம் த்வாம் பஸ்யாமி-அளவிடற்கரியதாக உன்னைக் காண்கிறேன். மகுடமும், தண்டும், வலயமும் தரித்தாய், ஒளித் திரளாகி யாங்கணும் ஒளிர்வாய், தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற்கரியதாக நினைக் காண்கிறேன். சொப்பனத்தில் காணும் ஜோதி ஊனக் கண்ணுக்குத் தட்டுப்படுதல் இல்லையெனினும் அதில் கண் கூசுவது போன்றிருக்கிறது. அதிலும் பரந்த பாங்கில் ஞானக் கண்ணுக்கும் கூசுதல் உண்டாகிறது. அவ்வொளி உள்ளத்தை உறுதிப்படுத்தும் தன்மையது. ஞானக்கண் மற்ற இந்திரியங்களைவிடப் பன்மடங்கு தெளிவுடையது எனினும், அதைக்கொண்டும் விசுவ ரூபத்தை முழுதும் அளக்க முடியாது. ஆகையால் அது அப்ரமேயம் எனப்படுகிறது. சத்வ குணத்தின் நிறம் தூவெண்மை. ஆத்ம பிரகாசம் அதன்கண் தோயுமிடத்து அது சுடர்விட்டெரியும் சூரியாக்கினி போன்று மிளிர்வது இயல்பு. இத்தகைய காட்சியை அடையப்பெற்ற அர்ஜுனன் சித்தாந்தப்படுத்துவது யாது என்றால்: 18. த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம் த்வமஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம் த்வமவ்யய: ஸாஸ்வததர்மகோப்தா ஸநாதநஸ்த்வம் புரு÷ஷா மதோ மே அவ்யயம்-அழிவிலாய், பரமம் வேதிதவ்யம்-அறியத்தக்கதில் சிறந்தது, த்வம் அஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்-நீயே உலகத்தில் உயர் தனி உறைவிடம், அக்ஷரம்-கேடிலாய், த்வம் ஸாஸ்வத தர்ம கோப்தா-நீ என்றும் நிலையாக அறத்தினை காப்பாய், த்வம் ஸநாதந: புருஷ:-சநாதன புருஷன் நீயே, மே மத:-எனக் கொண்டேன். பொருள் : அழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தது; வையத்தின் உயர் தனி உறையுளாவாய்; கேடிலாய்; என்று மியல் அறத்தினைக் காப்பாய்; சநாதன புருஷன் நீயெனக் கொண்டேன். பகவானை அறிந்தவன் பரத்துக்கு உரியவன் ஆகின்றான். ஆதலால் பகவான் ஒருவரே சாதகன் ஒருவனால் அறியத்தகுந்தவர். சஞ்சரிக்கும் மேகத்துக்குச் சலனமற்ற ஆகாசம் இருப்பிடமாவது போன்று உலகம் யாவுக்கும் இருப்பிடம் பரமாத்மா. உலகம் அழியும் பொழுது அவர் மாறாதிருக்கிறார். அவருடைய சந்நிதான விஷேத்தால் தர்மம் - இயற்கையின் நடைமுறை-கோணாது நிகழ்கிறது. இவை யாவும் இப்பொழுது அர்ஜுனனுக்குப் பிரத்தியக்ஷமாகின்றன. மேலும் அவன் அறிவதாவது : 19. அநாதிமத்யாந்தமநந்தவீர்ய மநந்தபாஹும் ஸஸிஸூர்யநேத்ரம் பஸ்யாமி த்வாம் தீப்தஹுதாஸவக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்வமிதம் தபந்தம் த்வம் அநாதி மத்ய அந்த-ஆதியும் நடுவும் அந்தமுமில்லாதவனாகவும், அநந்தவீர்யம்-வரம்பில்லாத வீரனாகவும், அநந்தபாஹும்-கணக்கிலாத் தோளுடையவனாகவும், ஸஸி ஸூர்ய நேத்ரம்-ஞாயிறுந் திங்களும் கண்களாகவும், தீப்த ஹுதாஸ வக்த்ரம்-கொழுந்து விட்டெறியும் தீ போன்ற வாயுடன் கூடியவனாகவும், ஸ்வதேஜஸா-தம்முடைய வெப்பத்தினால், இதம் விஸ்வம் தபந்தம் பஸ்யாமி-இந்த உலகத்தை எரிப்பவனாகவும் காண்கிறேன். பொருள் : ஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறலினை; கணக்கிலாத் தோளினை; ஞாயிறுந் திங்களும் நயனமாக் கொண்டனை; எரியுங்கனல் போலியலு முகத்தினை; ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்; இங்ஙனமுன்னைக் காண்கிறேன். காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்படாமையினால் அவருக்கு ஆதி நடு அந்தமில்லை. உலகத்தைப் படைத்துக் காத்துத் துடைப்பது அவருக்கு விளையாட்டாக நடைபெறுவதாதலால் அவர் அனந்த வீரியமுடையவர். உலகத்திலுள்ள கைகளையெல்லாம் கொண்டு அவர் தமது காரியத்தைச் செய்துமுடிப்பதால் அவர் கணக்கற்ற கைளையுடையவர் என்று சொல்லப்படுகிறார். இந்திரியங்களுக்குப் பிரகாசத்தைக் கொடுப்பது ஆத்மா. சந்திரன், சூரியன், அக்கினி ஆகியவைகள் பெற்றுள்ள ஒளி பரமாத்மாவினிடத்திருந்து பிரதிபலிக்கின்ற ஒளிகளாம். அகிலாண்டத்திலும் ஆத்ம பிரகாசம் ஜ்வலிப்பதால் உபசாரமாக ஞாயிறு திங்கள் கண்களென்றும், தீ வாயென்றும் வர்ணிக்கப்படுகின்றன. விறகுக் கட்டையில் தீ வியக்தமாவது போன்று விசுவத்தின் வாயிலாகப் பரம்பொருள் வியக்தமாகிறது. 20. த்யாவாப்ருதிவ்யோரிதமந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந திஸஸ்ச ஸர்வா: த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந் மஹாத்மந்-மகாத்மாவே! த்யாவா ப்ருதிவ்யோ:-வானத்துக்கும் பூமிக்கும், இதம் அந்தரம் - இந்த இடைவெளியும், ஸர்வா: திஸ: ச-எல்லாத் திசைகளும், த்வயா ஏகேந ஹி வ்யாப், தம்-உன் ஒருவனாலேயே நிறைந்திருக்கிறது, தவ இதம் அத்புதம் உக்ரம் ரூபம்-உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தை, த்ருஷ்ட்வா-கண்டு, லோகத்ரயம் ப்ரவ்யதிதம்-மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன. பொருள் : வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன. இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளான் என்பது இப்பொழுது அர்ஜுனனுக்கு பிரத்யக்ஷமாக விளங்குகிறது. இனிமையும் பயங்கரமும் ஆகிய இரண்டும் இறைவன்பால் உள. அவைகளுள் ஈண்டு பயங்கரக் காட்சியை பார்த்தன் பார்க்கிறான். அவனது மனப்பான்மையே அதற்குக் காரணம். பயங்கரமான யுத்தக்காட்சி தன்னுடைய சிருஷ்டியென்று முதலில் எண்ணினான். உலகைத் திருத்தியமைக்கத் தெய்வமே அத்தகைய உக்கிர வடிவெடுக்க வல்லவனென்று இப்பொழுது உணர்கிறான். வெற்றி யாருடையது என்ற ஐயம் அர்ஜுனனுக்கு இருந்தது (அத். 2; சு.6) அதை அகற்றுதற்கான காட்சியை பகவான் தருகிறார். பாண்டவர்களுக்கே வெற்றி என்பது விளங்குகிறது. அதைக் காணலுற்ற குந்தி மைந்தன் கூறுகிறான் : 21. அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஸந்தி கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி: அமீ ஸுரஸங்கா: ஹி-இந்த வானவர் கூட்டமெல்லாம், த்வாம் விஸந்தி-நின்னுள்ளே புகுகின்றது, கேசித் பீதா: ப்ராஞ்ஜலய: க்ருணந்தி-சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர், மஹர்ஷி ஸித்தஸங்கா:-மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார், ஸ்வஸ்தி இதி உக்த்வா-மங்களம் உண்டாகட்டும் என்று கூறி, புஷ்கலாபி: ஸ்துதிபி:-வண்மையுடைய புகழுரைகள் சொல்லி, த்வாம் ஸ்துவந்தி-உன்னை புகழ்கின்றார். பொருள் : இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றார். நர வடிவெடுத்து வந்துள்ள வசுக்கள் முதலிய தேவகணங்கள் தங்கள் பூலோக லீலையை முடித்துக்கொண்டு பகவானிடத்து ஒடுங்குகின்றனர். பூ பாரம் ஒழிகிறது என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் அவர்கள் மௌனமாக மறைகிறார்கள். பகவானுடைய உக்கிர விளையாட்டை ஒருவாறு அறிந்துகொண்ட சிலர் சிரசின்மீது கைகூப்பி நடுங்கி வணங்குகின்றனர். அச்சத்தால் நிறைமொழி யொன்றும் இயம்ப அவர்களுக்கு இயலவில்லை. உலகுக்குக் கேடுகள் பல வரப்போகின்றனவென்று குறிப்பால் அறிந்த நாரதர் போன்ற மஹரிஷிகளும் கபிலர் போன்ற சித்தர்களும் சம்பூரண ஸ்தோத்திரங்களால், சொற்சுவையும் பொருட் சுவையும் நிறைந்த புகழ்களால் உலகுக்கு மங்களம் உண்டாகுக என்று போற்றினார்கள். உடலில் உள்ள கேடுகளை நீக்குதற் பொருட்டு நோய் வருவது போன்று உலகில் உள்ள கேடுகளை நீக்குதற்பொருட்டு இறைவன் இத்தகைய ஸம்ஹாரச் செயலைச் செய்க. அதினின்று நன்மை விளைக என்ற கருத்தடங்கிய பாசுரங்களைப் பேரறிஞர் பாடிப் போற்றினார்கள். இறைவனது ஆணையால் நடைபெறும் உலகச் செயல்களில் பொருள் படாதவை ஒன்றுமில்லையென்பது பேரறிஞருக்கு விளங்குகிறது. 22. ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா விஸ்வேऽஸ்விநௌ மருதஸ்சோஷ்மபாஸ்ச கந்தர்வயக்ஷõஸுரஸித்தஸங்கா வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஸ்சைவ ஸர்வே யே ருத்ராதித்யா-எந்த ருத்திரர்கள் ஆதித்தியர்கள், வஸவ: ச-வசுக்களும், ஸாத்யா:-ஸாத்யர், விஸ்வே-விசுவேதேவர், அஸ்விநௌ ச-அசுவினி தேவரும், மருத: ச-மருத்துக்கள், உஷ்மபா: ச-உஷ்மபர், கந்தர்வ யக்ஷ அஸுர ஸித்த ஸங்கா-கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும், ஸர்வே ஏவ விஸ்மிதா: ச-எல்லோரும் வியப்புடன், த்வாம் வீக்ஷந்தே-உன்னைப் பார்க்கிறார்கள். பொருள் : ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர். ஊஷ்மபர் என்பது உஷ்ணமாயிருப்பதைப் பானம் செய்பவர்கள் என்று பொருள்படுகிறது. பித்ரு தேவர்கள் அங்ஙனம் அருந்துதலில் மகிழ்ச்சியடைகிறார்கள். அத்தகைய தேவகணங்களும் பகவானுடைய விசுவ ரூபத்தை முழுதும் தெரிந்துகொள்ள இயலாதவர்களாயிருக்கிறார்கள். தங்கள் அறிவுக்கு எட்டியவளவு அவர்கள் அந்த ரூபத்தைக் கண்டு வியந்து நிற்கிறார்கள். 23. ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம் மஹாபாஹோ பஹுபாஹூருபாதம் பஹூதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம் த்ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ்ததாஹம் மஹாபாஹோ-பெருந்தோளாய், பஹு வக்த்ர நேத்ரம்-பல வாய்களும், விழிகளும், பஹு பாஹூ ஊரு பாதம் பஹூதரம்-பல கைகளும், பல கால்களும் பல வயிறுகளும், பஹுதம்ஷ்ட்ராகராலம்-பல பயங்கரமான பற்களுமுடைய, தே மஹத் ரூபம் த்ருஷ்ட்வா-உன் பெரு வடிவைக் கண்டு, லோகா: ப்ரவ்யதிதா:-உலகங்கள் நடுங்குகின்றன, ததா அஹம்-யானும் அங்ஙனமே. பொருள் : பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன, யானும் அங்ஙனமே. தன் மனநிலையையே ஒருவன் உலகின்கண் காண்கிறான். பகவானது விசுவரூபத்தையும் அவரது பயங்கரச் செயலையும் முன்பு அர்ஜுனன் கண்டு அறிந்தவன் அல்லன். அதை அவன் இப்பொழுது முதல் கண்டு கலங்குகிறான். உலகிலுள்ள மற்ற உயிர்களும் கலங்குவதாக அவன் காட்சியில் படுகிறது. அவனது நிலையில் இருக்கிறவர்களுக்கெல்லாம் கலக்கமேயாம். ஏன் அவனுக்கு அச்சம் ஏற்பட்டதெனின் அதற்கு விடை அவனது வாயினின்று வருகிறது : 24. நப:ஸ்ப்ருஸம் தீப்தமநேகவர்ணம் வ்யாத்தாநநம் தீப்தவிஸாலநேத்ரம் த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா த்ருதிம் ந விந்தாமி ஸமம் ச விஷ்ணோ ஹி விஷ்ணோ-ஏனெனில் விஷ்ணுவே! நப:ஸ்ப்ருஸம்-வானைத் தீண்டுவது, தீப்தம் அநேகவர்ணம்-பல வர்ணங்களுடையது, வ்யாத்தாநநம்-திறந்த வாய்களும், தீப்தவிஸாலநேத்ரம்-கனல்கின்ற விழிகளுமுடைய, த்வாம் த்ருஷ்ட்வா-உன்னைக் கண்டு, ப்ரவ்யதிதா அந்தராத்மா-பயத்தினால் நிலைகொள்ளாமல், த்ருதிம் ஸமம் ச ந விந்தாமி-தைரியத்தையும் அமைதியையும் நான் அடையவில்லை. பொருள் : வானைத் தீண்டுவது, தழல்வது, பல வர்ணங்களுடையது, திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது, இளைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலைகொள்ளவில்லை, யான் அமைதி காணவில்லை. காணாத ஒன்றைக் காணுமிடத்து ஒருவனுக்குக் கலக்கம் உண்டாவது இயல்பு. கோர சொரூபத்தை சாந்த சொரூபத்தோடு சேர்த்துணரும் பரியந்தம் மனக் கலக்கத்தை மாற்றலரிது. அம் மனக்கலக்கத்தால் மேலும் விளைந்தது யாது? விடை வருகிறது : 25. தம்ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி த்ருஷ்ட்வைவ காலாநலஸந்நிபாநி திஸோ ந ஜாநே ந லபே ச ஸர்ம ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ தம்ஷ்ட்ராகராலாநி ச-கோரைப் பற்களால் பயங்கரமானவையும், காலாநலஸந்நிபாநி-பிரளய கால தீ போன்ற, தே முகாநி த்ருஷ்ட்வா-உன் முகங்களை, திஸோ ந ஜாநே-திசைகள் தெரியவில்லை, ச ஸர்ம ந லபே-சாந்தி தோன்றவில்லை, தேவேஸ ஜகந்நிவாஸ-தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடமே, ப்ரஸீத-அருள் செய்க. பொருள் : அஞ்சுதரும் பற்களை யுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே எனக்குத் திசைகள் தெரியவில்லை; சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடம் ஆவாய்; அருள் செய்க. ஒரு சூரியனை அல்லது சந்திரனை இலக்காக வைத்துக் கொண்டு திசைகள் அறியப்படுகின்றன. பார்க்குமிடமெங்கும் பரஞ்சோதியாயிருப்பதால் திக்குகள் தென்படாமற் போய்விட்டன. ஊழித்தீயானது பொருள்களையெல்லாம் விழுங்குவது மீண்டும் நாள் அமைதியடைதற் பொருட்டு சாந்த சொரூபத்தைக் காட்டியருள்வீராக. 26. அமீ ச த்வாம் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை: பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸௌ ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை: 27. வக்த்ராணி தே த்வரமாணா விஸந்தி தம்ஷ்ட்ராகராலாநி பயாநகாநி கேசித்விலக்நா தஸநாந்தரேஷு ஸந்த்ருஸ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை: அமீ த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஏவ-இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் அவநிபாலஸங்கை: ஸஹ த்வாம்-மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் உன்னுள்ளே (புகுகின்றனர்), பீஷ்ம: த்ரோண: ச-பீஷ்மனும், துரோணனும், ததா அஸௌ ஸூதபுத்ர: - அவ்விதமே சூதன் மகனாகிய இந்த கர்ணனும், அஸ்மதீயை: அபி யோதமுக்யை: ஸஹ-நம்மைச் சார்ந்த முக்கியப் போர்வீரர்களுடன் கூட. தே தம்ஷ்ட்ராகராலாநி-உன்னுடைய கொடிய பற்களுடைய, பயாநகாநி-பயங்கரமான க்த்ராணி-வாய்களில், த்வரமாணா விஸந்தி-விரைவுற்று வீழ்கின்றனர், கேசித் தஸந அந்தரேஷு விலக்நா:-சிலர் உன் பல்லிடுக்குகளில் அகப்பட்டு, சூர்ணிதை உத்தமாங்கை: - பொடிபட்ட தலையினராக, ஸந்த்ருஸ்யந்தே-காணப்படுகின்றனர். பொருள் : இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்). பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்தக் கர்ணனும், நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும். பொருள் : கொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர். (26-27) சூதபுத்திரன் என்றால் தேர் ஓட்டியின் மகன் என்று பொருள் இங்கு இச்சொல் கர்ணனைக் குறிக்கிறது. அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் பெரும்பகை. அத்தகைய பகைவனே அழிவதை முற்கூட்டி அர்ஜுனன் அறிகிறான் அதற்குமேல் பகைவர் எல்லாரும் அழிவதையும் அவன் அறிகின்றான். தன் பக்கத்திலும் பெரிய வீரர்கள் பலர் மடிவது திண்ணம். போரின்போக்கு பொதுப்பட பூபாரத்தைக் குறையிருப்பதாயிருக்கிறது. யாருக்காவது தனி நன்மை வந்தமையும் அறிகுறிகள் தென்படவில்லை. 28. யதா நதீநாம் பஹவோऽம்புவேகா: ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி ததா தவாமீ நரலோகவீரா விஸந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி நதீநாம் பஹவ: அம்புவேகா:-பல ஆறுகளின் வெள்ளங்கள், ஸமுத்ரம் ஏவ அபிமுகா :-கடலையே நோக்கி, யதா த்ரவந்தி-எவ்வாறு பாய்கின்றனவோ, ததா-அவ்வாறே, அமீ நரலோகவீரா-இந்த மண்ணுலக வீரர்கள், அபிவிஜ்வலந்தி தவ வக்த்ராணி-சுடர்கின்ற உன் வாய்களில்விஸந்தி-புகுகிறார்கள். பொருள் : பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல், இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர். மலையினின்று வெளிவந்ததும் நதிகள் கடலைநோக்கி ஓடியாக வேண்டும். அதைத்தவிர அவைகளுக்குப் புகலிடம் வேறு ஏதுமில்லை இந்த மண்ணுலக வீரர்கள் என்னென்னவோ மனக் கோட்டை கட்டுகின்றனர். ஆனால் அவர்களெல்லாம் உமது விராட் வடிவத்தில் மறைவது திண்ணம். அவர்கள் இன்னும் உண்மையை அறியவில்லை யெனினும் நீர் அவர்களை எடுத்து விழுங்க ஆரம்பித்துவிட்டீர். 29. யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா விஸந்தி நாஸாய ஸம்ருத்தவேகா: ததைவ நாஸாய விஸந்தி லோகா ஸ்தவாபி வக்த்ராணி ஸம்ருத்தவேகா: பதங்கா-விளக்குப் பூச்சிகள், ஸம்ருத்தவேகா:-மிகவும் விரைவுடன், ப்ரதீப்தம் ஜ்வலநம் - எரிகின்ற விளக்கில், நாஸாய யதா விஸந்தி-அழிவதற்காக எவ்வாறு புகுகின்றனவோ, ததா ஏவ-அவ்விதமே, லோகா: அபி நாஸாய-உலகங்களும் அழிவதற்காக, ஸம்ருத்தவேகா:-மிகவும் விரைவுடன், தவ வக்த்ராணி விஸந்தி-உன் வாய்களில் புகுகின்றன. பொருள் : விளக்குப் பூச்சிகள் மிகவும் விரைவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமுறுதல் போலே, உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன. சமுத்திரத்தில் சங்கமமான நதிகள் தமது நாமரூபங்களை இழக்கின்றன. ஆயினும் நதியின் நீருக்கு அழிவில்லை. தீயில் வீழும் விட்டில் பூச்சிகள் உடலையே இழக்கின்றன. போர்முனையில் கூடிய வீரர்கள் தங்கள் சுபாவத்தால் தூண்டப்பெற்று, அறிவை இழந்து உடலையும் இழக்க முந்துகின்றனர். அவர்களை அழித்துப் புதிய வடிவில் அமைப்பதன் மூலம் அவர்களைத் திருத்துதற்குப் பகவான் துணைபுரிகிறார். 30. லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தால் லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி: தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ ஸமக்ராந் லோகாந்-அனைத்து உலகங்களும், ஜ்வலத்பி: வதநை: க்ரஸமாந:-கனல்கின்ற வாய்களால் விழுங்கிக் கொண்டு, ஸமந்தாத்-எப்புறத்தும், லேலிஹ்யஸே-(நாக்குகளால்) தீண்டுகிறாய், விஷ்ணோ-விஷ்ணுவே, தவ உக்ரா: பாஸ-நின் உக்கிரமான சுடர்கள், ஸமக்ரம் ஜகத்-வையம் முழுவதையும், தேஜோபி: ஆபூர்ய ப்ரதபந்தி-வெப்பத்தினால் நிரப்பி சுடுகின்றன. பொருள் : கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் கதிர்களால் வைய முழுவதையும் நிரப்பிச் சுடுகின்றன. எங்கும் வியாபித்திருப்பவர் விஷ்ணு. அவர் மங்கள சொரூபமாக எங்கும் வியாபித்திருப்பது போன்று ஊழித்தீயாக உக்கிர சொரூபம் எடுத்து வியாபகமாவதும் உண்டு. உலகைச் சீர்படுத்த வேண்டிய நெருக்கடியில் அவர் அங்ஙனம் செய்கிறார். ஆனால் அவர் போக்கை அறியாத அர்ஜுனன் விண்ணப்பித்ததாவது : 31. ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ நமோऽஸ்து தே தேவவர ப்ரஸீத விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம் ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம் தேவவர-தேவர்களில் சிறந்தவனே, உக்ரரூப:-உக்கிர ரூபந் தரித்த, பவாந்-நீ க:-யார்? நமோऽஸ்து-உன்னை வணங்குகிறேன், ப்ரஸீத-அருள் புரி, ஆத்யம் பவந்தம்-ஆதியாகிய உன்னை, விஜ்ஞாதும் இச்சாமி-அறிய விரும்புகிறேன், ஹி-ஏனெனில், தவ ப்ரவ்ருத்திம் ப்ரஜாநாமி-உன்னுடைய செயலை அறிகிலேன் (புரிந்து கொள்ள முடியவில்லை). பொருள் : உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக. தேவர்களில் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள்புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன். அழகுத்தெய்வம் மனதைக் கவர்கிறது. அக் கவர்ச்சியே வணக்கமென்று சொல்லப்படுகிறது. பின்பு, பயங்கர சொரூபம் இன்னொரு போக்கில் உள்ளதைக் கவர்கிறது. அச்சமூட்டுகிற உக்கிர மூர்த்தியின் அருள் பிரசாதத்தை எப்படியாவது பெறவேண்டுமென்று மனது நடுநடுங்கி விண்ணப்பிக்கிறது. அப்படி அச்சமூட்டும் தெய்வத்தின் அருளாலேயே அச்சம் வெல்லப்படுகிறது. பயங்கர மூர்த்தியோடு அங்ஙனம் பயந்து செய்யும் இணக்கமும் வணக்கமெனக் கருதப்படுகிறது. ஜீவர்களின் இயல்பு உக்கிர மூர்த்தியை விரும்பி வணங்குவது அல்ல என்பதை ஈண்டு அர்ஜுனனது செயல் விளக்குகிறது. தேவர்கள் உட்பட அகிலத்துக்கும் முழுமுதற் பொருள் ஈசன் என்பது அர்ஜுனனுக்குப் பிரத்தியக்ஷம். ஆனால் அதனாலேயே அவன் அவரை முழுதும் அறிந்துகொண்டவன் அல்லன். ஒரு மனிதனும் அவனது செயலும் தொடர்ந்து சம்பந்தப்பட்டவைகள். செயலைக் கொண்டு மனிதனை அறியலாம். செயலைக்கொண்டு கடவுளையும் ஒருவாறு அறியலாம். அர்ஜுனன் விரும்புவதும் அதுவே. பகவானது கிருத்தியங்களைக்கொண்டு பகவானது மகிமைகளை அறிய அவன் அவாவுறுகின்றான். அவ்விருப்பத்தை அவன் அஞ்சி வெளியிடுவானாயினன். அதற்கு பகவானது விடையும் வருகிறது : ஸ்ரீபகவாநுவாச 32. காலோऽஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்தோ லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த: ருதேऽபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே யேऽவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா: ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருத்த:-உலகத்தை அழிக்க பெருகி வளர்ந்துள்ள, கால: அஸ்மி-காலனாக இருக்கிறேன், இஹ லோகாந் ஸமாஹர்தும்-இப்போது உலகனைத்தையும் அழிப்பதற்காக, ப்ரவ்ருத்த:-தொடங்கி இருக்கிறேன், யே யோதா: ப்ரத்யநீகேஷு அவஸ்திதா:-எந்த போர் வீரர்கள் எதிரில் இருக்கின்றார்களோ, ஸர்வே த்வாம் ருதே அபி-அவர்கள் எல்லோரும் நீ போர் புரியாமல் இருப்பினும், ந பவிஷ்யந்தி-இருக்க மாட்டார்கள். பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிரு திறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள் நீ யார்? என்ற கேள்விக்கு நான் வல்லமை வாய்ந்த காலம் என்று பகவான் விடை விடுக்கிறார். பகவானுக்கு அமைந்த பல விளக்கங்களுள் அவர் மஹா காலம் என்பதும் ஒன்று. காலம் முன்னும் பின்னும் அகண்டாகாரத்தில் விரிந்தோடுகிறது. செயல்களுக்கு இடையில் உள்ள இடையீடாக அது நமக்குத் தோன்றுகிறது. பிறகு செயல்களுக்கே அது அளவையாகிறது. பாக்கி நான்கு பூதங்களையும் ஆகாசம் தன்பால் அடக்கி வைத்திருப்பது போன்று காலமானது செயல்கள் யாவையும் தன்பால் அடக்கிவைத்திருக்கிறது; ஆதலால் அது எல்லாம் வல்லது. மலையுச்சிக்குப் போகப்போக சமவெளியில் உள்ள மேடுபள்ளங்களெல்லாம் ஒரே வெளியாய்த் தென்படுகின்றன. காலத்தை அகண்டாகாரக் காட்சியில் காணுமிடத்து அண்டங்களின் கிருத்தியங்களெல்லாம் அதில் வீழ்ந்து மறைகின்றன. நிகழ்கின்ற அனைத்தையும் என்றென்றும் அளந்து கொண்டிருக்கின்ற காலமே பகவத் சொரூபமாகிறது. உம் செயல் யாது? என்ற கேள்விக்கு உலகங்களையும் உலக மக்களையும் எடுத்து விழுங்குவது தம் பிரவிருத்தி என்று பகவான் சொல்லுகிறார். தோன்றியவைகளைச் சிறிது சிறிதாக அவர் சதா விழுங்கிக்கொண்டிருப்பது போன்று பெருவாரியாக சில வேளைகளில் விழுங்கவேண்டிய அவசியம் வருகிறது. மகாபாரத யுத்தம் அத்தகைய தொன்று. சிறிது சிறிதாக அழிவதை இயற்கையின் போக்கு என்கிறோம். பெருமிதமாக அழிவது யாருடைய செயல்; ஏன் அப்படி நடைபெறுகிறது என்று வியப்படைகிறோம். அவையாவும் ஈசன் செயல். எந்த வேளையில் உலகை எப்படி அழிக்க வேண்டுமோ அப்படி அவர் அழிக்கிறார். சிறியது பெரியது ஆகிய எல்லாம் அவர் செயல் என்று அறிபவன் அவரை உண்மையில் போற்றுகிறான். பின்பு, பயங்கரமான எச்செயலைக் கண்டும் அவன் நடுங்குவதில்லை. பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலிய போர் வீரர்கள் அழிவது திண்ணம் என்று அர்ஜுனனுக்கு இப்பொழுது காட்டப்படுகிறது. பாட்டனாரையும் ஆசாரியரையும் கொல்லுதல் தகுமோ என்று தயங்கிய தனஞ்ஜயனுக்கு அச்செயல் தன்னுடையதல்ல என்ற தேற்றம் இப்பொழுது பகவானால் ஏற்படுகிறது. கர்ணன் மடிவதும் தன்னைப் பொருத்ததன்று என்று அர்ஜுனன் அறிவிக்கப்படுகிறான். அர்ஜுனன் யுத்தத்தில் இறங்காவிட்டாலும் அவர்கள் அழியப்போகிறார்கள். அப்படியானால் அர்ஜுனன் யுத்தத்தில் தலையிடுவானேன்? இக்கேள்விக்கு விடைவருகிறது. 33. தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஸோ லபஸ்வ ஜித்வா ஸத்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம் மயைவைதே நிஹதா: பூர்வமேவ நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந் தஸ்மாத் த்வம் உத்திஷ்ட-ஆதலால் நீ எழுந்து நில், யஸ: லபஸ்வ-புகழெய்து, ஸத்ரூந் ஜித்வா-பகைவரை வென்று, ராஜ்யம் ஸம்ருத்தம் புங்க்ஷ்வ-செழிப்பான ராஜ்யத்தை ஆள்வாயாக, ஏதே பூர்வம் ஏவ மயா நிஹதா:-இவர்கள் முன்பே என்னால் கொல்லப் பட்டிருக்கிறார்கள், ஸவ்யஸாசிந்-இடது கையாளும் அம்பு எய்யும் வீரனே! நிமித்தமாத்ரம் பவ-நீ வெளிக் காரணமாக மட்டுமே இருப்பாயாக! பொருள் : ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள், நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாய்விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக் காரணமாக மட்டுமே நின்று தொழில் செய். ஜீவர்கள் செயல் புரிதலை அல்லது புரியாதிருத்தலை முன்னிட்டு பகவானுடைய காரியம் எவ்விதத்திலும் மாறுதல் அடையாது. அவனது திட்டத்தில் யாண்டும் ஒழுங்கும் உறுதியும் உண்டு. அதில் கலந்துகொள்ளுகிறவளவு ஜீவனுக்கு எல்லா நன்மையும் உண்டு. அதன் பொருட்டு அவன் எழுந்திருப்பது அவனது முதற் கடமையாகும். ஆத்ம போதம் பெற்று எழுந்திருக்கிறவளவு அவன் செயலுக்குத் தகுதியுடையவனாகிறான். நற்செயல் புகழைத் தருகிறது. நன்மைக்கு இடைஞ்சலாயிருப்பவனே பகைவன். அவனை வெல்லுவது நன்மைக்காகப் பாடுபடுவதாகும். தான் மட்டும் நன்மை செய்தால் போதாது. நன்மைக்கு இடையூறு உண்டு பண்ணுபவனை எதிர்ப்பது ராஜதர்மம். தர்மத்தை நன்கு கடைப்பிடிப்பவர்க்கு இம்மையுமுண்டு, மறுமையுமுண்டு, முக்தியுமுண்டு. அதில் முதலாவது இகலோக வாழ்க்கையில் சிறப்பு. ஆக, செல்வம் நிறைந்த ராஜ்யத்தோடு கூடிய இகலோக வாழ்க்கை வாய்ப்பது தர்மத்தின் பலனாம். அது படிப்படியாக முக்திக்கும் எடுத்துச் செல்லவல்லது. அதர்மத்தில் மூழ்கிய எதிரிகளை மாய்க்க பகவான் திட்டம் போட்டுள்ளார். அர்ஜுனன் அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒப்புக்குப் போர் புரிந்தாலும் போதுமானது. ஆயினும் அவனைப்பற்றிய உண்மை யென்ன? இடது கையாலும் நன்கு அம்பு எய்ய அவன் வல்லவன். துணிந்து சண்டை செய்வானானால் யாரையும் தோற்கடிக்க வல்லவன். அத்தகையவன் இந்தச் சிறந்த சந்தர்ப்பத்தைக் கைவிடலாகாது. தேவர்களையும் வெல்லவல்ல துரோணர், பீஷ்மர் முதலியவர்களை வென்றான் என்ற கீர்த்தி பகவான் கையில் கருவியாயிருப்பதால் எளிதில் வந்தமையும். தக்க வேளையில் தக்க கடமையைச் செய்கின்றவனுக்கு எல்லா மேன்மைகளும் எளிதில் வாய்க்கின்றன. தான் கண்காட்சி மனோகற்பிதமோ என்ற ஐயமும் யாரெல்லாம் உண்மையாகவே மடியப்போகின்றார்கள் என்ற ஐயமும் அர்ஜுனனுக்கு வருகிறது. அவைகளை நீக்குதற்கு பகவான் மேலும் பகர்கிறார்: 34. த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம் ததாந்யாநபி யோதவீராந் மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம்-துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும், ததா அந்யாந் அபி யோதவீராந்-அவ்வாறே மற்ற யுத்த வீரர்களையும், த்வம் ஜஹி-நீ கொல், மா வ்யதிஷ்டா-அஞ்சாதே, யுத்யஸ்வ-போர் செய், ரணே ஸபத்நாந் ஜேதாஸி-போர் களத்தில் பகைவரை வெல்வாய். பொருள் : துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. (வெளிப்படையாக) நீ கொல். அஞ்சாதே; போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய். துரோணரையும் பீஷ்மரையும் கொல்லுவது தர்மத்துக்கு முரண்பட்டதன்று என்பது ஏற்கனவே புகட்டப்பட்டது. இனி, அவர்களைக் கொல்லமுடியுமா என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் துரோணர் தெய்வீக அஸ்திர சஸ்திரங்களை யுடையவர்; மேலும் குரு பீஷ்மருக்கோ அவர் விரும்பினாலொழிய மரணம் வராது. இதுவரையில் அவரை யாரும் வென்றது கிடையாது. ஜயத்ரதனுடைய தலையை யார் பூமியில் வீழ்த்துகிறானோ அவனுடைய தலை வெடித்துப் பூமியில் விழும்படி ஜயத்ரதனுடைய தந்தை கடுந்தவம் புரிகிறார். ஆக, அதுவும் கஷ்டத்துக்கு ஏதுவான யுத்தம். இனி, கர்ணன் விஷயமும் அப்படியே இருக்கிறது. அவன் இந்திரனிடத்திருந்து சக்தி என்னும் ஆயுதத்தைப் பெற்றிருக்கிறான். கர்ணன் அதை யார்மீது பிரயோகித்தாலும் அது வீண் போகாது. அர்ஜுனனைக் கொல்லுதற்கென்றே அவன் அதை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறான். இந்த நெருக்கடிகளை நினைத்து அர்ஜுனன் அஞ்சி வருந்துவது இயல்பு. ஆனால் பகவானே அவர்களைத் திருவுளங் கொண்டுள்ளார். அவர்களுடைய வல்லமையை ஏற்கனவே கரந்தாயிற்று. சித்திரத்தில் வரைந்த சிங்கங்களைத் துடைப்பது போன்று அவர்களை ஒடுக்குவது எளிதாகும். வேடன் கையில் உள்ள அம்புபோன்று பகவானுடைய திட்டத்துக்குக் கருவியாயிருப்பது அர்ஜுனன் கடமையாகும். ஆனால் வெல்ல முடியாதவர்களை அவன்தான் வென்றான் என்ற கீர்த்தி அவனுக்கு வரும். இக்கருத்துகளை பகவான் பார்த்தனுக்குத் தெளிவுறுத்துகிறார். இதைக் கேட்ட அர்ஜுனன் என்ன செய்தான்? அது ஸஞ்ஜயரால் விளக்கப்படுகிறது : ஸஞ்ஜய உவாச 35. ஏதச்ச்ருத்வா வசநம் கேஸவஸ்ய க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம் ஸகத்கதம் பீதபீத: ப்ரணம்ய ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், கேஸவஸ்ய ஏதத் வசநம் ஸ்ருத்வா-கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டு, கிரீடீ வேபமாந: க்ருதாஞ்ஜலி: நமஸ்க்ருத்வ-பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி செய்து, பூய: ஏவ க்ருஷ்ணம் ப்ரணம்ய-மீண்டும் கண்ணனை வணங்கி, பீதபீத: ஸகத்கதம் ஆஹ-அச்சத்துடன் வாய் குழறி சொல்லுகிறான். பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான். கிரீடம் தரித்துள்ள கோமகன் யாருக்கும் தலை வணங்கலாகாது. அச்சம் தவிர்ப்பது அவனது தர்மம். பிறர் வணங்க அவ்வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுதல் அரசனுக்கு முறை. திட்பத்துடன் உறுதிமொழி கூறுதல் அவனது இயல்பு. இங்கு ஈசுவரனது முன்னிலையில் அம் முறைமைகளெல்லாம் பறந்தோடுகின்றன. கடவுள் முன்னிலையில் குறுகுதல் உயிர்களது முடிவான செயல் என்பது வெளியாகிறது. அப்படிக் குறுகிய அர்ஜுனன் யாது மொழிந்தான் ? விடை வருகிறது: அர்ஜுந உவாச 36. ஸ்தாநே ஹ்ருஷீகேஸ தவ ப்ரகீர்த்யா ஜகத்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே ச ரக்ஷõம்ஸி பீதாநி திஸோ த்ரவந்தி ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா: அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஹ்ருஷீகேஸ-இருஷீகேசா, தவ ப்ரகீர்த்யா-உன் பெரும் பெயரில் (புகழில்), ஜகத் ப்ரஹ்ருஷ்யதி-உலகம் மகிழ்கிறது, அநுரஜ்யதே ஸ்தாநே ச-இன்புறுவதும் பொருந்தும், பீதாநி ரக்ஷõம்ஸி திஸ: த்ரவந்தி-ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், ச ஸர்வே ஸித்தஸங்கா:-மேலும் சித்தர் கூட்டத்தினர், நமஸ்யந்தி-வணங்குகிறார்கள். பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: இருஷீகேசா, உன் பெருங்கீர்த்தியில் உலகங்களிப்பதும், இன்புறுவதும் பொருந்தும், ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள். முன்பு காணாத மோட்டார் வண்டி முதலியவற்றை நாட்டுப் புறத்தார் பார்த்தால் உடனே அச்சம் கொள்ளுதல் இயல்பு. காணாத அற்புதச்செயலை முதன் முதல் கண்டதும் அதனிடத்துப் பீதி கொள்ளுதல் அறிவிலிகளின் இயல்பு. ராக்ஷஸர்கள் இறைவனைப் பற்றிய ஞான மில்லாதவர்கள்; அகங்கரித்து அடாத செயலில் ஈடுபடுபவர்கள். அத்தகையவர் இறைவனது உலக நடை முறையைத் தொகுத்துக் காணுமிடத்து நடுங்கி நாலா பக்கமும் ஓடுவார்கள். மோட்டார் வண்டி ஒன்றன் அமைப்பையும் பயனையும் அறியுமளவு மக்கள் அதை மெச்சுவார்கள். அங்ஙனம் பகவானது மகிமைகளைத் தெரிந்துகொள்ளுமளவு பக்தர்கள் அவனைப் போற்றிப் புகழ்வார்கள். அப்படிச் செய்வதில் அவர்களுக்குப் பெருமகிழ்வு உண்டாகிறது. இனி, மோட்டார்வண்டியைப் பயன்படுத்துபவரோ ஒரு சிறு கூட்டத்தார். பகவானை வணங்கி அவனிடத்து யோகம் செய்து அவனுக்கு உரியவர் ஆகின்றவர்கள் சித்தர்கள். அங்ஙனம் நிறை நிலைகள் யாவையும் அவர்கள் எய்துகின்றனர். உலகை அறிகின்றவளவு ஒருவன் உலகைப் பயன்படுத்துகிறான். பகவானை அறிகின்றவளவு ஒருவன் பண்பும் பயனும் அடைகிறான். இது அர்ஜுனனுக்கு அனுபவ பூர்வமாக இப்பொழுது விளங்குகிறது. ஆக. ராக்ஷசர் முதல் சித்தர் ஈறாக அவரவர் அறிவுக்கு எட்டியவாறு கடவுளோடு இணக்கம் வைப்பது யுக்தமானதே என்று பார்த்தன் பகர்கிறான். தெய்விகம் வாய்ந்த ரிஷிகள் ஈசுவரனுடைய நெருங்கிய உறவினரைப் போன்றவர்கள். அவர்கள் அவனுடைய நண்பர்கள் போலவும், ஸகாக்கள் போலவும், உறவினர்கள் போலவும் இருக்கின்றனர். சாதாரண மனிதர்கள் எல்லாரும் எட்டிய உறவினர் போன்றவர்கள். அவர்கள் கேவலம் ஈசுவர சிருஷ்டிகள் மாத்திரமே. 37. கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந் கரீயஸே ப்ரஹ்மணோऽப்யாதிகர்த்ரே அநந்த தேவேஸ ஜகந்நிவாஸ த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத் மஹாத்மந்-மகாத்மாவே! ப்ரஹ்மண: அபி ஆதிகர்த்ரே-பிரம்ம தேவனையும் ஆதியில் படைத்தவனாகவும், கரீயஸே-மூத்தவராகவும் உள்ள, தே கஸ்மாத் ந நமரேந்-உனக்கு ஏன் வணங்கமாட்டார்? அநந்த தேவேஸ ஜகந்நிவாஸ-அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, யத் ஸத் அஸத்-எது சத்தாகவும் அசத்தாகவும், தத்பரம்-அவற்றைக் கடந்ததாகவும் உள்ள, அக்ஷரம்-அழிவற்ற பரம்பொருள் த்வம்-நீ. பொருள் : மகாத்மாவே, நின்னை எங்ஙனம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய், அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள், நீ சத்; நீ அசத்; நீ அவற்றைக் கடந்த பிரம்மம். பகவானைப் போற்றி வணங்கும் எண்ணம் இயல்பாகவே சித்தர்களது உள்ளத்தில் எழுகின்றது. ஏனென்றால் அவர் எல்லாருக்கும் பெரியவர், மஹாத்மா, காலதேச நிமித்தத்தில் கட்டுப்படாதவராதலால் அவர் அனந்தர். தேவர்களுக்கெல்லாம் அவரே அதிபதி. ஜகத்துக்கு இருப்பிடமாக அவர் இருக்கிறார். உலகைப் படைத்த ஹிரண்யகர்பன் அல்லது நான்முக பிரம்மாவுக்கும் அவர் முதற்காரணம். உலகாகத் தோன்றியுள்ளது ஸத்; தோன்றாத மூலப்பிரகிருதி அஸத் எனப்படுகிறது. தோன்றிய உலகம் அதனிடத்திருந்து வருவதால் அது சிறிதும் தேய்வடைவதில்லை. ஆகையால் அது அக்ஷரம். ஸத் அஸத் இரண்டையும் அது கடந்திருப்பதால் அது பரம். பகவான் இத்தனையுமாயிருப்பதால் அவரை வாழ்த்தி வணங்காது வேறு என்ன செய்ய முடியும்? பெரியதைப் போற்றுவதால் ஒருவன் பெரியவனாகிறான். 38. த்வமாதிதேவ: புருஷ: புராண: த்வமஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம் வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம த்வயா ததம் விஸ்வமநந்தரூப த்வம் ஆதிதேவ:-நீ ஆதிதேவன், புராண: புருஷ:-பழமையான புருஷன், த்வம் அஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்-நீ இந்த அகிலத்தின் பரம நிலையம், வேத்தா ச வேத்யம் ச-நீ அறிவோன், நீ அறிபடு பொருள், பரம் தாம: அஸி-பரமபதம், அநந்தரூப-அநந்தரூபனே, த்வயா விஸ்வம் ததம்-உன்னால் உலகனைத்தும் நிறைந்துள்ளது. பொருள் : நீ ஆதிதேவன், தொல்லோன், நீ இந்த அகிலத்தின் பரம நிலையம். நீ அறிவோன், நீ அறிபடு பொருள், நீ பரமபதம்; அநந்த ரூபா, நீ இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய். யாவும் அவரிடத்திருந்து உதயமாவதால் அவர் ஆதிதேவன். பிரபஞ்சம் என்னும் புரியிலே அவர் வாசம் செய்வதால் அவர் புருஷன். அவருக்கு மூத்தவர் ஒருவருமில்லை. ஆகையால் அவர் புராணன் அல்லது தொல்லோன். மஹா பிரளயத்தில் அனைத்துக்கும் அவர் ஒடுங்குமிடமாதலால் அவர் நிதானமாகிறார். அறியும் தன்மை அவரிடத்திருந்து வருகிறது. ஆதலால் அவர் வேத்தா. அறியப்படு பொருள்களெல்லாம் அவரிடத்திருந்து வந்தனவாதலால் அவர் வேத்யம். கடலில் அலை தோன்றி, கடலில் நிலைபெற்றிருந்து, கடலில் அது ஒடுங்குவது போன்று உலகம் அவரிடத்துத் தோன்றி, இருந்து, மறைகிறது. ஆதலால் அவர் யாண்டும் அதற்குப் பெருநிலம் அல்லது பரம்தாமம் ஆகிறார். அதுவே மஹா விஷ்ணுவுடைய பரமபதம் எனப்படுவது. அவர் இன்னும் என்னவாகிறார் எனில் : 39. வாயுர்யமோऽக்நிர்வருண: ஸஸாங்க: ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஸ்ச நமோ நமஸ்தேऽஸ்து ஸஹஸ்ரக்ருத்வ: புநஸ்ச பூயோऽபி நமோ நமஸ்தே வாயு: யம: அக்நி: வருண: ஸஸாங்க:-வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், த்வம் ப்ரஜாபதி-நீ பிரம்மன், ப்ரபிதாமஹ: ச-பிரமனுக்கும் தந்தை (பிதாமகன்-பிரம்மன்), ஸஹஸ்ரக்ருத்வ: நமோ நமஸ்தே அஸ்து-ஆயிரமுறை கும்பிடுகிறேன், பூய: அபி-மீண்டும், தே நம: - உனக்கு நமஸ்காரம், புந: ச நம:-திரும்ப திரும்ப நமஸ்காரம். பொருள் : நீ வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், முப்பாட்டானாகிய பிரம்மன் நீ, உன்னை ஆயிரமுறை கும்பிடுகிறேன். மீட்டுமீட்டும் உனக்கு “நமோ நம! காச்யபர் முதலிய லோகபிதாக்களுக்கு பிரஜாபதி என்று பெயர். பிரம்மா உலகுக்குப் பாட்டனார் ஆகிறார். அவருக்கு தந்தை விஷ்ணு. ஆகையால் முப்பாட்டனார் என்பது பகவானையே குறிக்கிறது. நமஸ்கரிப்பதற்கு முடிவின்மையானது பக்திப் பெருக்கை விளக்குகிறது. 40. நம: புரஸ்தாதத ப்ருஷ்டதஸ்தே நமோऽஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோऽஸி ஸர்வ: தே புரஸ்தாத் அத ப்ருஷ்டத நம:-உன்னை முன் புறத்தேயும் பின்புறத்தேயும் கும்பிடுகிறேன் ஸர்வ-எல்லாமாவாய், தே ஸர்வத ஏவ நமோऽஸ்து-உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன், அமிதவிக்ரம:-எல்லையற்ற வீரியமுடையாய், அநந்தவீர்ய:-அளவற்ற வலிமையுடையாய், ஸமாப்நோஷி-சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய், தத: ஸர்வ: அஸி-எனவே நீ அனைத்துமாக இருக்கிறாய். பொருள் : உன்னை முன் புறத்தே கும்பிடுகிறேன்; உன்னைப் பின்புறத்தே கும்பிடுகிறேன்; எல்லாமாவாய், உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன். நீ எல்லையற்ற வீரியமுடையாய், அளவற்ற வலிமையுடையாய், சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்; ஆதலால் நீ சர்வன். எங்குத் திரும்பிப் பார்த்தாலும் எல்லாம் இறைவனுடைய சொரூபம். ஆகையால் நாலா பக்கங்களிலும் அவனுக்கு நமஸ்காரம் செய்வது பொருத்தமாகும். வீரியம் என்பது வல்லமை. அளவற்ற வல்லமையை ஒருவன் உடைத்திருந்தும் அதைக் கையாளாது விட்டுவிடலாம் அதனால் அது வீணாகிறது. பகவான் அத்தகையவரல்லர். தமது முடிவற்ற வல்லமையை எண்ணிறந்த விதங்களில் அவர் செயலுக்குக் கொண்டு வருகிறார். இந்த ஜகத் நடைமுறையே அதற்குச் சான்று. ஆதலால் அவர் பரந்த பராக் கிரமத்தையுடையவர் எனப்படுகிறார். பழம் என்று சொல்லுமிடத்து அதன் சதை, மேல் தோல், கொட்டை ஆகிய எல்லாம் அதில் அடங்கப் பெறுகின்றன. அங்ஙனம் பகவான் என்று சொல்லுமிடத்து, ஜகத் ஜீவகோடியனைத்தும் அவரிடத்து அடங்கப்பெறுகின்றன. அவரைப் போற்றுதலில் எல்லாம் போற்றப்படுகின்றன; எல்லாவற்றையும் போற்றுதலில் அவர் போற்றப்படுகிறார். பகவானைப்பற்றிய உண்மையை அறிந்த அர்ஜுனனுக்கு மனப்பான்மை மாறுகிறதா? விடை வருகிறது : 41. ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி அஜாநதா மஹிமாநம் தவேதம் மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி 42. யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோऽஸி விஹாரஸய்யாஸநபோஜநேஷு ஏகோऽதவாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷõமயே த்வாமஹமப்ரமேயம் தவ இதம் மஹிமாநம் அஜாநதா-இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், ஸகா இதி மத்வா-தோழன் என்று கருதி, ப்ரமாதாத் அபி வா ப்ரணயேந-தவறுதலாலேனும் அன்பாலேனும், ஹே க்ருஷ்ண! ஹே யாதவ! ஹே ஸகே! இதி-ஏ கண்ணா, ஏ யாதவா, ஏ தோழா என்று யத் ப்ரஸபம் உக்தம் ச-எது துடிப்புற்று சொல்லி யிருப்பதையும் விஹார ஸய்யாஸந போஜநேஷு-விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், ஏக:-தனியிடத்தேனும், அதவா-அன்றி, தத்ஸமக்ஷம் அபி-மற்றவர் முன்னேயெனினும், அவஹாஸார்தம்-வேடிக்கையாக, யத் அஸத்க்ருத: அஸி-எந்தவிதமாக அவமதிக்கப் பட்டாயோ, தத் அப்ரமேயம் த்வாம் அஹம் க்ஷõயே-அவற்றையெல்லாம் அளவற்ற பெருமையுடைய உன்னை நான் பொறுக்கும்படி வேண்டுகிறேன். பொருள் : இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ஏ கண்ணா, ஏ யாதவா ஏ தோழா என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லி யிருப்பதையும். பொருள் : விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்! பகவானைப்பற்றிய மெய்யறிவு வந்ததும் அர்ஜுனனுடைய மனப்பான்மை அடியோடு மாறுகிறது. கிருஷ்ணனாகத் தோன்றிய தோற்றம் ஒன்றுமட்டுமல்ல; இவ்வுலகிலுள்ள தோற்றங்கள் யாவும் ஈசுவரனுடையவகளே. அறியாமையினால் நாம் அவைகளை அலட்சியப் படுத்துகிறோம். அவைகளைப் பாராட்டுமளவு நமக்கு நல்லறிவு வருகிறது. நல்லறிவுக்கு மற்றோர் அறிகுறியுண்டு. நம் அறிவு எவ்வளவு தெளிந்தது எனினும் நம் அறிவால் அவனை முழுதும் அளந்துவிட முடியாது. வணக்கம் நிறைந்த இணக்கம் இறைவனிடத்தும் இறைவனது சிருஷ்டியின் கண்ணும் வைக்கக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். இதுவே தெளிவுபட்ட மனமாறுதல் ஆகிறது. அர்ஜுனன் கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதற்குக் காரணம் யாது? விடை வருகிறது : (41-42) 43. பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர்கரீயாந் ந த்வத்ஸமோऽஸ்த்யப்யதிக: குதோऽந்யோ லோகத்ரயேऽப்யப்ரதிமப்ரபாவ த்வம்-நீ, அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய-இந்த சராசரமாகிய இவ்வுலகத்துக்கு, பிதா-தந்தை ஆவாய், ச பூஜ்ய: அஸி-இவ்வுலகத்தால் தொழத் தக்கவன், கரீயாந் குரு-மிகவும் சிறந்த குரு, த்வத்ஸம: ந அஸ்தி-உனக்கு நிகர் யாருமில்லை, அபி அப்யதிக: குத: அந்ய:-எனில் உனக்கு மேல் வேறுயாவர்? லோகத்ரயே அப்ரதிமப்ரபாவ-மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே! பொருள் : சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே! சிருஷ்டி முழுதுக்கும் ஈசுவரன் முதற்காரணமாதலால் அவர் நகர்வன, நிலைத்திருப்பன அனைத்துக்கும் பிதா என்று அழைக்கப்படுகிறார். அத்துடன் பெருமை யனைத்தும் அமையப் பெற்றிருப்பதால் அவர் எல்லாராலும் போற்றுதற்கு உரியவராயிருக்கிறார். ஈசன் எல்லார்க்கும் பெரியவர். அவருக்கு ஒப்பானவரே இல்லை யென்றால் அவரினும் உயர்ந்தவரைக் காண்பது எங்ஙனம்? ஆக, உலக நடைமுறைக்கு அதிபதியாக இருப்பவர் ஈசுவரன் ஒருவரே எனலாம். ஒருவருக்கு மேற்பட்ட ஈசுவரர்கள் இருப்பார்களானால் உலக நடைமுறையில் ஒழுங்கின்மை உண்டாகும். ஒருவர் சிருஷ்டிக்க எண்ணுகையில் மற்றொருவர் ஸம்ஹாரம் செய்ய நினைப்பாரானால் ஒரு செயல் மற்றொரு செயலோடு முரண்பட்டுக் குழப்பம் வந்து அமையும். மற்று ஒழுங்கான உலக நடைமுறைக்குத் தலைவனாக ஈசன் ஒருவரே இருக்கிறார். அவர் எல்லார்க்கும் பெரியவர். அவருக்கு மிக்கார் யாருமல்லாததால் மனிதன் என்ன செய்ய வேண்டும்? 44. தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரஸாதயே த்வாமஹமீஸமீட்யம் பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் தஸ்மாத் காயம் ப்ரணிதாய ப்ரணம்ய-ஆதலால், உடல் குனிய வணங்கி, ப்ரஸாதயே-அருள் கேட்கிறேன், ஈட்யம் ஈஸம் தேவ-வேண்டுதற்குரிய ஈசனே! பிதா புத்ரஸ்ய இவ-மகனைத் தந்தை போலும், ஸக்யு: ஸகா இவ-தோழனைத் தோழன் போலும், ப்ரிய: ப்ரியாயா:-அன்பனையன்பன் போலவும் (அன்பான மனைவியைக் கணவன் போலவும்), த்வாம் அஹம் ஸோடும் அர்ஹஸி-நீ என்னைப் பொறுத்தல் வேண்டும் பொருள் : ஆதலால், உடல் குனிய வணங்கி, நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும், அன்பனையன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும். பகவானது மகிமையை அறியும்போது அவன் போற்றுதற்குரிய பொருள் என்பது புலப்படுகிறது. ஆதலால் அர்ஜுனன் காயத்தால் வீழ்ந்து வணங்குகிறான். போற்றுதற்கு உரிய பொருள் அவன் என்று அறிவதால் பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள இணக்கம் தடைப்படுவதில்லை. அது படிப்படியாக நெருங்கி ஐக்கியத்தை உண்டுபண்ணுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் பிரிக்கமுடியாத தொடர்வுண்டு. ஆனால் பயபக்தியால் பிள்ளை பிதாவிடத்துச் சம உரிமை கொண்டாடுவதில்லை. தொடர்வு இருப்பது மட்டும் அல்ல, உயர்வு தாழ்வு பாராட்டாத தோழமையும் உண்டு என்பது அடுத்தபடியாகச் சொல்லப்படுகிறது. அத் தோழமையில் இனிமையும் உண்டு என்று காதல் நிலையில் வைத்து அது மேலும் விளக்கப்படுகிறது. அத்தகைய பேரிணக்கத்தில் குற்றங்காணாது குணமே காணும் பண்பு நன்கு அமையப் பெறுகிறது. பராபக்தியில் பக்தன் ஈசுவரனைத் தனக்கு அத்யந்தம் நெருங்கிய அன்பனாகக் கருதுகிறான். அது கிருஷ்ண பரமாத்மாவிடம் கோபஸ்திரீகளுக்கு இருந்த பக்தி போன்றது. அவர்கள் அவரை எப்பொழுதும் கோபிகாநாதன் என்று கருதி யழைத்தனரே தவிர ஜகந்நாதன் என்று கருதி அழைத்ததில்லை. அர்ஜுனன் எத்தகைய வடிவத்தைத் தொடர்ந்து காண விரும்பினான் என்பது மேலும் அவனது வாயினின்று வெளியாகிறது : 45. அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோऽஸ்மி த்ருஷ்ட்வா பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே ததேவ மே தர்ஸய தேவ ரூபம் ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ அத்ருஷ்டபூர்வம்-இதற்கு முன் காணாததை, த்ருஷ்ட்வா ஹ்ருஷித: அஸ்மி-கண்டு மகிழ்சியுறுகிறேன், மே மந: பயேந ப்ரவ்யதிதம் ச-என் மனம் அச்சத்தால் சோர்கிறது, தத் தேவரூபம் ஏவ மே தர்ஸய-அந்த தேவ வடிவத்தையே எனக்கு காட்டுக, தேவேஸ ஜகந்நிவாஸ-தேவேசா, ஜகத்தின் நிலையமே, ப்ரஸீத-அருள் செய்க. பொருள் : இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்சியுறுகிறேன்; எனினும் என் மனம் அச்சத்தால்சோர்கிறது. தேவா, எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா, ஜகத்தின் நிலையமே எனக்கருள் செய்க. விசுவரூபத்தைக் காட்டியருள வேண்டுமென்று அர்ஜுனன் பிரார்த்தித்தான். அதற்கு இரங்கிய பகவான் யுத்த நெருக்கடிக்குப் பொருத்தமாயிருந்த ஸம்ஹார சொரூபத்தை விசேஷமாகக் காட்டியருளினார். அதனால் அர்ஜுனனுக்கு யுத்தத்தைப் பற்றிய மயக்கம் ஒழிந்தது. எனினும் எப்பொழுதும் அதிலேயே திளைத்திருக்க தனஞ்ஜயனுக்குப் பிடிக்கவில்லை. கொந்தளிப்புள்ள கடலில் மீன் மருளுவது போன்று அவன் மயங்கினான். யாண்டும் இன்பம் தருகிற சாந்த சொரூபத்தைக் காணவேண்டுமென்று விண்ணப்பித்தான். உக்கிரரூபம் எடுப்பதும் பகவானது லீலை என்பதைத் தெரிந்து கொண்டால் போதுமானது. அக் காட்சியிலேயே நிலைபெற்றிருக்க பக்தன் விரும்புவதில்லை. சிங்கம் போலப் பொய்க்கோலம் பூண்டுகொண்ட ஹரி, பார்க்க வெகு பயங்கரமாகத்தான் இருக்கிறான். அவன் தன் தங்கை விளையாடுமிடத்துக்குச் சென்று பயங்கரமாகக் கூச்சலிடுகிறான். அதைக்கேட்டு நடுநடுங்கிய அவள், இந்த குரூரப் பிராணியிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமே யென்று துக்கத்தோடு உரக்கக் கூச்சலிட்டு அழுகிறாள். ஆனால் ஹரி தன் வேஷத்தைக் கலைத்து விட்டதும், பயந்து போயிருந்த சிறுமி தனது பிரிய சகோதரனைக் கண்டு, ஓ அண்ணாதானா இது என்று சொல்லிக் கொண்டு அவனிடம் ஓடுகிறாள். மாயையாகிற கோலத்தில் பிரம்மம் தன்னை மறைத்துக் கொள்கிறது. அப்பொழுது அது இரக்க மற்ற மூர்த்தியாகவும் தோன்றுகிறது. மாயையை அகற்றிவிட்டால் பிரம்மம் அன்புருவான அந்தர்யாமியாகவே தோன்றும். தான் விரும்பும் வடிவம் இன்னதென்று இனி அர்ஜுனன் தெளிவுபடுத்துகிறான்: 46. கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்த மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விஸ்வமூர்தே கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்தம்-கிரீடமும் கதையும் கையில் சக்கரமுமாக, ததா ஏவ த்வாம் த்ரஷ்டும் அஹம் இச்சாமி-அந்த விதமாகவே உன்னைக் காண நான் விரும்புகிறேன், விஸ்வமூர்தே-அகில மூர்த்தியே, ஸஹஸ்ரபாஹோ-ஆயிரத் தோளாய், தேந ஏவ சதுர்புஜேந ரூபேண-அதே நான்கு தோலுடன் கூடிய வடிவினை, பவ-எய்துக. பொருள் : முன்போலவே, கிரீடமும் தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே. ஆயிரத் தோளாய், முன்னை நாற்றோள் வடிவினை எய்துக. இரண்டு கைகளையுடைத்திருப்பவர் மக்கள். நான்கு கரங்கள் கடவுள்பால் வைத்து அறிவது அவருடைய அமானுஷிய சக்திக்கு அறிகுறியாகும். கெட்டிக்காரன் ஒருவன் பல கைகளை யுடையவனாகக் கருதப்படுகிறான். இனி, கடவுள் விசுவ வடிவத்துடன் இருப்பவர்; ஆதலால் கைகளெல்லாம் அவருடையவைகளேயாம். ஒரு தொழிற்சாலையில் இருப்பவர்கள் அத்தனை பேரும் தொழில் புரிகிறார்கள்; எனினும் தொழில் வல்லமையைக் காட்டுதற்கு அதில் திறமை வாய்ந்த ஒருவனது வேலைப்பாடு மற்றவர்களுக்குக் காண்பிக்கப்படுகிறது. கிருஷ்ணனது மானுட வடிவத்தின் மூலம் தெய்வச் செயல் யாவும் அறியப்படுகின்றன. ஆதலால் தான் எப்பொழுதும் கண்டுவந்த மானுட வடிவத்தையே மீண்டும் காட்டும்படி குந்தியின் மகன் வேண்டுகிறான். சில வேளைகளில் சிலருக்குத் தன் வடிவத்தை நான்கு கரங்களுடன் கிருஷ்ணன் காட்சி கொடுத்ததாகப் பாகவதப் புராணம் கூறுகிறது. தமது காட்சியை பகவான் மாற்றியருள்கிறார். மேலும் அர்ஜுனனுக்கு ஆறுதல் அளிக்கின்றார். 47. ஸ்ரீ பகவாநுவாச மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம் ரூபம் பரம் தர்ஸிதமாத்மயோகாத் தேஜோமயம் விஸ்வமநந்தமாத்யம் யந்மே த்வதந்யேந ந த்ருஷ்டபூர்வம் ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், அர்ஜுந-அர்ஜுனா, ப்ரஸந்நேந-அருள் கொண்டு, மயா ஆத்மயோகாத்-என்னுடைய யோக சக்தியினால், பரம் தேஜோமயம்-மிகச் சிறந்ததும் ஒளி மயமானதும், ஆத்யம் அநந்தம்-முதல் ஆனதும் முடிவற்றதுமான, யத் மே விஸ்வம் ரூபம்-எந்த என்னுடைய விஸ்வ ரூபத்தை, தவ தர்ஸிதம்-உனக்குக் காட்டப் பட்டதோ, இதம் த்வத் அந்யேந-இவ்வடிவம் உன்னைத் தவிர (வேறு எவராலும்), ந த்ருஷ்டபூர்வம்-பார்க்கப் படவில்லை. பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, யான் அருள்கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பரவடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய் அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ் வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது. ஈசுவர சாக்ஷõத்காரம் பண்ணினது அர்ஜுனனுடைய தனி யுரிமை யென்று பொருள்படுத்தலாகாது. மெய்ப்பொருள் காட்சிக்குத் தனியுரிமையிருக்குமானால் அது எல்லார்க்கும் பொது, எங்கும் வியாபகம், எல்லார்க்கும் அந்தராத்மா என்ற பேருண்மை அடிபட்டுப்போம். அதனுடைய பரிபூரணத்துக்குக் குறையும் வந்துவிடும். கருத்து யாது எனின் சகுணப் பிரம்மம், நிர்க்குண பிரம்மம்-அதன் இத்தனைவிதப் படித்தரங்கள் ஆகிய இவை யாவையும் தொகுத்து ஒருங்கே காட்சி காண்பவர் மிகச் சிலர். அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் காணவில்லை என்பது அதன் சிறப்பைக் குறிக்கிறது. 48. ந வேதயஜ்ஞாத்யயநைர்ந தாநைர் ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை: ஏவம்ரூப: ஸக்ய அஹம் ந்ருலோகே த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர வேத யஜ்ஞ அத்யயநை: தாநை:-வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், க்ரியாபி-கிரியைகளாலேனும், உக்ரை: தப: அபி ச-உக்ரமான தவங்களாலும் கூட, ந்ருலோகே-மனித உலகில், த்வத் அந்யேந-உன்னையன்றி, ஏவம் ரூப:-இந்த உருவத்தில், அஹம் த்ரஷ்டும் ஸக்ய-நான் காண இயலாதவன், குருப்ரவீர-குருகுலத்தில் சிறந்த வீரா! பொருள் : வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், கிரியைகளாலேனும், மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா! வேதத்தை அத்யயனம் செய்வது என்பதைச் சிலர் நெட்டுருப் போட்டு ஓதுதல் என்று பொருள்படுத்துகின்றனர். அதுவெறும் ஞாபகசக்தியையும் மனப்பாடம் பண்ணும் திறமையையும் உண்டுபண்ணுகிறது. அதற்குமேல் அதை அர்த்தம் பண்ணவும் அதில் சொல்லியுள்ள யாகங்களைச் செய்யவும் கற்றுக் கொள்ளவேண்டும். அப்படி நான்கு வேதங்களை அறிந்து எல்லா யாகங்களையும் அனுஷ்டிக்கத் தெரிந்துகொண்டால் வேதாத்யயனம் பூர்த்தியாகிறது. தனக்குப் பயன்படும் பொன், பசு முதலியவைகளைப் பிறர்க்கு வழங்குவது தானமாகும். பலவந்தத்தால் பொருளை ஏராளமாகச் சிரமப்பட்டுச் சேகரித்து அபிஷேகம் அலங்காரம் முதலியவைகளில் பெருமிதமாகச் செலவிடுவது கர்மமாகும். சாந்திராயண விரதம் போன்றவைகள் உக்கிர தபசு ஆகின்றன. இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறவர்கள் பவுர்ணமியன்று பதினைந்து கவளம் அன்னம் உண்கின்றனர். பிறகு நாள் ஒரு கவளம் கிருஷ்ணபக்ஷத்தில் குறைத்துக்கொண்டுவந்து அமாவாசையன்று ஒரு கவளம் உண்கின்றனர். திரும்பவும் சுக்கிலபக்ஷத்தில் நாள் ஒரு கவளம் அதிகப்படுத்திக்கொண்டு போகின்றனர். இவ் விரதத்தால் பெரிதும் சித்த சுத்தி உண்டாகிறது. விலைகொடுத்து ஒரு பொருளை வாங்குவது போன்று இத்தகைய யக்ஞ, தான, தப கர்மங்களால் ஈசுவரப் பிராப்தி யடைந்துவிடலாம் என்பதில்லை. அவனை அடைதற்கு அவன் அருளையே நாடி நிற்கவேண்டும். அவனை அடைந்தவர்களும் அவனை முழுதும் அறிந்துகொண்டவர்கள் அல்லர். கொஞ்சம் சாராயத்தைக் குடித்ததும் சிலர்க்குப் போதையுண்டாகிறது. இன்னும் சிலர்க்குப் போதையுண்டாக இரண்டு மூன்று புட்டிகள் வேண்டியிருக்கிறது. ஆயினும் இருவகையினரும் அடையும் ஆனந்தம் ஒன்றுதான். அதுபோல, ஈசுவர மகிமையில் தினையளவைக் கண்டதும் சிலருக்கு ஆனந்தம் உண்டாகிறது. வேறு சிலருக்கு ஈசுவர ஸந்நிதானத்தில் நேருக்கு நேராக வந்த பிறகு தான் ஆனந்தமுண்டாகிறது. ஆயினும் இருவரும் அடையும் ஆனந்தம் ஒன்றே. 49. மா தே வ்யதா மா ச விமூடபாவோ த்ருஷ்ட்வா ரூபம் கோரமீத்ருங்மமேதம் வ்யபேதபீ: ப்ரீதமநா: புநஸ்த்வம் ததேவ மே ரூபமிதம் ப்ரபஸ்ய ஈத்ருக் மம கோரம் ரூபம் த்ருஷ்ட்வா-இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு, தே வ்யதா மா-உனக்கு கலக்கம் வேண்டாம், மா விமூடபாவ: ச-மதி மயக்கமும் வேண்டாம், த்வம் வ்யபேதபீ:-நீ அச்சம் நீங்கி, ப்ரீதமநா:-இன்புற்ற மனத்துடன், தத் ஏவ மே இதம் ரூபம் புந: ப்ரபஸ்ய-எனது இந்த வடிவத்தை மறுபடி பார்! பொருள் : இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே; மயங்காதே, அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை நீ இதோ பார்! கொந்தளிப்புள்ள கடல் தேங்கியிருக்கும்போது மனமகிழ்வுண்டாவது போன்று ஹம்ஹார மூர்த்தியின் காட்சி சாந்த மூர்த்தியின் காட்சியாக மாறுகையில் அதைப் பார்க்கும் ஜீவனுக்கு மனவமைதி ஏற்படுவது இயல்பு. ஸஞ்ஜய உவாச 50. இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்ததோக்த்வா ஸ்வகம் ரூபம் தர்ஸயாமாஸ பூய: ஆஸ்வாஸயாமாஸ ச பீதமேநம் பூத்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், வாஸுதேவ: இதி அர்ஜுநம் உக்த்வா-இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடம் கூறி, பூய: ததா ஸ்வகம் ரூபம் ச-மறுபடியும் அதே விதமான தன்னுடைய உருவத்தையும், தர்ஸயாமாஸ-காட்டினான், புந: மஹாத்மா ஸௌம்யவபு: பூத்வா-அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி, ஏநம் பீதம் ஆஸ்வாஸயாமாஸ-இந்த அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான். பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடங் கூறி, மீட்டுத் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான். வசுதேவர் வீட்டில் எப்படிப் பிறந்தாரோ அப்படிப்பட்ட வடிவத்தை இப்பொழுது காட்டியருளினார். உயிர்களுக்குப் பாடம் புகட்டுதற்கு வேண்டியவளவே அவர் அச்சமூட்டுகிறார். பின்பு இனிய வடிவங்காட்டி அவர்களை மகிழ்விக்கிறார். அவர் இத்தகைய தன்மையுடையவராயிருப்பதால் அவர் மஹாத்மா வாகிறார். அர்ஜுந உவாச 51. த்ருஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தந இதாநீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் கத: அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஜநார்தந-ஜனார்த்தனா, தவ இதம் ஸௌம்யம் மாநுஷம் ரூபம்-நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தை, த்ருஷ்ட்வா இதாநீம்-கண்டு இப்போது, ஸசேதா: ஸம்வ்ருத்த: அஸ்மி-நிலையான மனம் கொண்டவனாக ஆகிவிட்டேன், ப்ரக்ருதிம் கத:-இயற்கை நிலையெய்தினேன். பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜனார்த்தனா, நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலையெய்தினேன். எல்லாம் ஈசன் வடிவெனினும் சிங்கத்தின் வடிவெடுத்துள்ள ஈசனிடத்திருந்து சிறிது எட்ட நிற்க ஜீவன் விரும்புகிறான். அவனிடத்து ஜீவபோதம் இருக்குமளவு இத்தகைய மனப்பான்மையும் இருக்கும். ஸ்ரீ பகவாநுவாச 52. ஸுதுர்தர்ஸமிதம் ரூபம் த்ருஷ்டவாநஸி யந்மம தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஸநகாங்க்ஷிண: ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், மம யத் ரூபம் த்ருஷ்டவாந் அஸி - என்னுடைய எந்த வடிவம் இப்போது பார்த்தாயோ, இதம் ஸுதுர்தர்ஸம்-இது காண்பதற்கு அரிதானது, தேவா அபி-தேவர்கள் கூட, நித்யம் அஸ்ய ரூபஸ்ய-எப்போதும் இந்த உருவத்தை, தர்ஸந காங்க்ஷிண:-காண விருப்பம் கொண்டு இருக்கிறார்கள். பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: காண்பதற்கரிய என் வடிவத்தை இங்குக் கண்டனை, தேவர்கள் கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள். தேவர்கள் இச்சித்துக்கொண்டிருக்கிறார்களாதலால் அவர்கள் இன்னும் இறைவனை முழுதும் கண்டதில்லை. ஒரு நதியில் நீராடப் போகின்றவன் அதை ஓர் இடத்தில் ஸ்பரிசித்து மூழ்கி நீராடினால் அந்நதியைக் கண்டவன் ஆகிறான். ஆனால் அது உற்பத்தியாகுமிடத்திலிருந்து சமுத்திரத்தில் சங்கமமாகும் பரியந்தம் அதைப் பார்த்தவர்கள் மிக மிகச் சிலர். அங்ஙனம் அர்ஜுனன் இறைவனைக் கண்டதுபோன்று அவரைப் பெரிதும் அறிந்தவர்கள் மிகச் சிலரேயாவர். கடவுளைக் காண்பதற்கு சாதகர்கள் கையாண்ட உபாயங்கள் எவை? விடை வருகிறது : 53. நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா ஸக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா யதா மாம் த்ருஷ்டவாந் அஸி-எவ்வாறு நீ என்னைப் பார்த்தாயோ, ஏவம்வித: அஹம் - இவ்விதமாக நான், வேதை: த்ரஷ்டும் ந ஸக்ய-வேதங்களாலும் காணப் பட முடியாதவன், தபஸா ந-தவத்தாலும் இல்லை, தாநேந ந-தானத்தாலும் இல்லை, இஜ்யயா ச ந-வேள்வியாலும் இல்லை. பொருள் : என்னை நீ கண்டபடி, இவ்விதமாக வேதங்களாலும் தவத்தாலும், தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது. பொற்காசு ஒன்றை இழந்தவன் அதன்மீது நின்றுகொண்டே அதை எவ்வளவு தேடினாலும் அதை அடையமாட்டான். வேதம், வேள்வி, தானம், தபசு முதலியன மனிதனைப் பண்படுத்துதற்குப் பயன்படலாம். ஆனால் கடவுளைக் காண இவையாவும் உதவமாட்டா. கடவுளைக் காண வேறு என் செய்வது? விடை வருகிறது: 54. பக்த்யா த்வநந்யயா ஸக்ய அஹமேவம்விதோऽர்ஜுந ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப து பரந்தப-ஆனால், எதிரிகளை எரிப்பவனே! அர்ஜுந-அர்ஜுனா, ஏவம் வித: அஹம் - இவ்விதமாக நான், அநந்யயா: பக்த்யா-வேறெதுவும் வேண்டாத பக்தியால், த்ரஷ்டும் ஸக்ய-காணுதல் இயலும், தத்த்வேந ஜ்ஞாதும் ப்ரவேஷ்டும் ச-உள்ளபடி அறியவும் ஒன்றவும் (முடியும்). பொருள் : பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும். அனன்ய பக்தி-கடவுளைத்தவிர வேறு ஒன்றையும் நாடாத பக்தி. அது கடவுளுக்குப் புறம்பாக எதையும் பொருள்படுத்துவதில்லை. எல்லாம் அவன் மயம், எல்லாம் அவன் செயல் என்ற மனநிலை அனன்ய பக்தியினின்று வருகிறது. ஒரு ராஜ மாளிகையில் சிப்பந்திகள் நடந்துகொள்ளும் முறையினின்று அரசன் அதில் வீற்றிருக்கின்றான் என்று யூகித்து உணரலாம். அந்த உணர்ச்சி மட்டும் போதாது. அரசனைக் கண்கூடாகக் காண்பது அதிலும் மேல். இனி, அவனைக் காண்பதிலும் பெரிய நிலையொன்று உண்டு. அரசனோ ஒட்டி உறவாடுதலே சாலச்சிறந்தது. அங்ஙனம் அனன்ய பக்தியால் ஒருவன் கடவுளின் சாந்நித்தியத்தை முதலில் உணர்கிறான். அதன்மேல் தர்சனம் உண்டாகிறது. பிறகு தானே அதில் ஒடுங்குகிறான். இத்தனையும் செய்ய வல்லது பக்தி. பலர் பாலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் பாலைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் பாலைப் பருகினவர்கள் அதிலும் சிலரே. ஊனக்கண் கொண்டு கடவுளைக் காணமுடியுமா என்ற பேச் செழுந்தது. இல்லை; ஊனக் கண்களால் காணமுடியாது. பக்தி பண்ணும்போது அன்பு மயமான சரீரம் ஒன்று நமக்குள் உண்டாகிறது. அச்சரீரத்துக்கு அன்பு மயமான கண்களும் காதுகளும் உண்டு. அவற்றால் நீ இறைவனைக் காணவும் கேட்கவும் முடியும். பக்தியைப் பெருக்கி இறைவனை அடைதற்கு என்ன செய்ய வேண்டும்? விடை வருகிறது : 55. மத்கர்மக்ருந்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித: நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ பாண்டவ-பாண்டவா! ய: மத்கர்மக்ருத்-எவன் செய்ய வேண்டிய கடமைகளை என் பொருட்டே செய்வானோ, மத்பரம:-என்னையே அடையவேண்டும் என்று குறிக்கோள் கொள்வானோ, மத்பக்த:-என்னிடம் பக்தி கொண்டவனோ, ஸங்கவர்ஜித:-பற்றற்றவனோ, ஸர்வபூதேஷு நிர்வைர:-எவ்வுயிரிடத்தும் பகை இல்லாதவனோ, ஸ:-அவன் மாம் ஏதி-என்னையே அடைகிறான். பொருள் : என்தொழில் செய்வான், எனைத் தலைக் கொண்டோன்,என்னுடைய அடியான் பற்றெலாம் இற்றான், எவ்வுயி ரிடத்தும் பகைமை யிலாதான் யாவன், பாண்டவா! அவனென்னை எய்துவான். எல்லா ஜீவர்களும் கர்ம சொரூபம். ஒருவன் எத்தகையவன் என்பதை அவன் செய்யும் கர்மம் விளக்குகிறது. மக்களுள் கடவுளுக்கென்றே கர்மம் செய்பவன் சிறந்தவன். அரசாங்கத்துக் கென்றே கர்மம் செய்கிறவர்கள் உளர். அதன் மூலம் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வது அவர்களிற் சிலரது குறிக்கோள். ஆனால் பக்தனோ கடவுளை அடைதலையே ஒப்பற்ற குறிக்கோளாகக் கொள்கிறான். ஆயுளெல்லாம் ஒருவன் சிறைவாசம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதில் விருப்பமில்லாது அவன் அவ்வாழ்வை நடத்துகிறான். ஆனால் கடவுள் வழிபாடு அத்தகையதன்று. நாள்தோறும் புதிய இனிமை அதினின்று பிறக்கிறது. இறைவன்பால் அளவில்லா அன்பு ஊற்றெடுக்கிறது. இறைவனிடம் அன்பு அதிகரிக்கின்றவளவு உலகப் பொருள்களிடத்துப் பற்று அகலுகிறது. ஒருவன் மற்றொருவனை வெறுப்பதற்குக் காரணம் தான் அடையவிரும்பும் பொருளை மற்றொருவன் கைக்கொள்ள முயலுவதால் வருகிறது. பக்தனுக்கோ ஒரு பொருளிலும் பற்றில்லை யாதலால் அதை முன்னிட்டு யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமில்லை. மனிதன் எதன்பால் தன்னை ஒப்படைக்கின்றானோ அதை அவன் அடைகிறான். கடவுள்பால் தன்னை ஒப்படைப்பவன் கடவுளை அடைகின்றான். ஈசுவரனிடம் நமக்கு எவ்வளவு தீவிரமான பக்தி இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாயா? தனது கணவனிடம் ஒரு கற்புடைய மாதுக்கு இருக்கும் அன்பு, தான் புதைத்து வைத்த பணத்தினிடம் ஒரு லோபிக்கு இருக்கும் ஆசை, உலகப் பொருள்களைப் பெறவேண்டுமென்று பற்றுள்ளவர்கள் கொள்ளும் ஆவல் இந்த மூன்றும் ஒன்று கூடினாற்போன்ற தீவிர பக்தியானது ஈசுவரனைக் காணவேண்டியதற்காக உன் மனதில் உதித்திருக்குமானால் அப்போது அவனை நீ நிச்சயமாக அடைவாய். | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக