செவ்வாய், 21 ஜூலை, 2015

"திருப்பதி லட்டு"


ராதே கிருஷ்ணா 21-07-2015





"திருப்பதி லட்டு"
கட்டுரையாளர்.-பி.ஸ்வாமினாதன்-(Pitchai Iyer Swaminathan)
கட்டுரையில் ஒரு பகுதி.
திருப்பதி தேவஸ்தானம் எத்தனை லட்டுகள் தயாரித்தாலும், சில நேரங்களில் பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமலேயே போய்விடுகிறது. இதற்காக, தடை இல்லாமல் லட்டு கிடைப்பதற்கும், சுவையை மேம்படுத்துவதற்கும், கள்ள மார்க்கெட்டில் விற்பனையாவதைத் தடுப்பதற்கும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்துதான் வருகிறார்கள்.
திருமலையில் லட்டு தயாரிப்பதற்குப் பயன்படும் கடலைப் பருப்பு, நெய், சர்க்கரை, முந்திரிப் பருப்பு, ஏலக்காய் போன்ற பொருட்களை டெண்டர் மூலமாக ஆரம்பத்தில் வாங்கி வந்தார்கள். அப்படி வாங்கப்படும் பொருட்களின் தரம், சில வேளைகளில் திருப்திகரமாக இல்லை என்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகுதான், லட்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களைத் தகுந்த அதிகாரிகளை வைத்து பரிசோதனை செய்த பின், நேரடியாகவே கொள்முதல் செய்வதென்று தேவஸ்தானத்தால் தீர்மானிக்கப்பட்டது. அப்படித்தான் அனைத்துப் பொருட்களும் தற்போது வாங்கப்படுகின்றன. உதாரணமாக, மும்பையில் இருக்கிற ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்திடம் இருந்து ஏலக்காய் மற்றும் முந்திரிப் பருப்பும், ஆந்திர மாநில அரசு நிறுவனமான விஜயா டைரியில் இருந்து நெய்யும் வாங்குகிறார்கள்.
உலகத்தையே தன் பக்கம் திருப்பி இருக்கும் திருப்பதி லட்டுக்கு இப்போது காப்புரிமையும் வழங்கப்பட்டுவிட்டது. இதைப் பெறும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள ‘உற்பத்தி இட அடையாளக் குறியீட்டுப் பதிவக’த்திடம் விண்ணப்பித்த திருப்பதி தேவஸ்தானம், ‘எங்கள் ஆலயம் சார்பில் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணமும் வேறு எங்கும் கிடையாது. உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படவும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை’ என்று பதிவு செய்திருக்கிறது.
இனிமேல் திருப்பதி லட்டு என்ற பெயரில் வேறு எந்த இனிப்புக் கடைக்காரரும், அதே சைஸில் - சுவையில் லட்டு தயாரித்து விற்க முடியாது. இதன் தயாரிப்பு முறையையும் வெளியில் பிரபலப்படுத்த முடியாது. ‘திருப்பதி லட்டு’ என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தமாகிவிட்டது.
மேல் திருப்பதியில் - அதாவது திருமலையில் பெருமாளுக்கு நிவேதனம் தயாராகிற மடைப்பள்ளி மிகவும் பெரியது. இந்தப் புனிதமான மடைப்பள்ளியில் லட்டு மட்டும்தான் என்று இல்லை. பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி இப்படி எண்ணற்ற நிவேத்தியங்கள் தயாராகின்றன. இவை அனைத்திலும் லட்டுதான் முதலிடம்.
என்றாலும், ஆதிகாலத்தில் ‘மனோகரம்’ என்கிற பிரசாதம்தான் பாப்புலராக இருந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் பழைய கல்வெட்டுகளும் இந்தத் தகவலை ஊர்ஜிதம் செய்கின்றன. ஆந்திராவில் மனோகரம் ரொம்ப ஃபேமஸ்.
மனோகரம் என்பது என்ன? கிட்டத்தட்ட ‘இனிப்பு முறுக்கு’ என்று சொல்லலாம். அதாவது, அரிசி மாவையும் வெல்லப் பாகையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். அதன்பின் உலர்ந்த இந்தக் கலவையை, எண்ணெயில் போட்டு முறுக்குபோல் பொறித்து எடுத்தால் அதுதான் மனோகரம். கரகரவென பல்லால் கடித்து உண்ணக்கூடிய ஒரு உணவு அயிட்டம் இது. இந்த மனோகரம் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை, பக்தர்களே ஆலயத்துக்கு தானமாகக் கொடுத்த தகவல்களையும் கல்வெட்டுக்களில் இருந்து அறிய முடிகிறது.
நீண்ட நாட்களுக்கு மனோகரம் கெடாமல் இருக்கும். எனவேதான், மலை ஏறி வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மனோகரம் கொடுக்கப்பட்டதாக 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.
தினமும் 1.5 லட்சம்!
தீபாவளி காலங்களில் இனிப்புகள் தயார் செய்வதற்கு கடலை மாவு, ரவா, சர்க்கரை, நெய், முந்திரி என்று ஏகப்பட்ட பொருட்கள் தேவைப்படும். இவற்றை வாங்குவதற்கு, ஒரு நீண்ட பட்டியலை எழுதிக்கொண்டு மளிகைக் கடையில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்போம்.
ஆனால், திருமலை மடைப்பள்ளியில் தினமும் ஒண்ணரை லட்சம் லட்டுகள் தயாராகின்றன. அதற்கு, 5 ஆயிரம் கிலோ கடலை மாவு, 10 ஆயிரம் கிலோ சர்க்கரை, 300 கிலோ நெய், 600 கிலோ முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை 540 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, டைமண்ட் கல்கண்டு 400 கிலோ, எண்ணெய் 20 கிலோ, வாதுமைப் பருப்பு 2 பெட்டி என்கிற அளவில் பொருட்கள் தேவைப்படுகின்றன.
பொங்கல்தான்... ஆனால்!
கி.பி. 1250ஆம் ஆண்டில் சுந்தரபாண்டியன் என்னும் மன்னன் காலத்திய கல்வெட்டுக்களில், திருப்பதி ஆலயத்தில் வழங்கப்பட்ட பிரசாதங்கள் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அதில் தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை இடம்பெறுகின்றன.
இதற்கடுத்த பதின்மூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் பாசிப் பருப்பு, அரிசி, உப்பு, மிளகு, நெய் இவை சேர்ந்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு, ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்பட்டதாக ஒரு தகவல் இடம் பெற்றிருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தால் வெண்பொங்கல்தானே! ஆனால், இதன் பெயர் பொங்கல் என்ற குறிப்பு இடம்பெறவில்லை. அப்போது வெண்பொங்கல் என்கிற வார்த்தை உபயோகத்தில் இல்லை போலிருக்கிறது



































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக