நடிகர்திலகம் சிலை
ராதே கிருஷ்ணா 01-12-2013
நடிகர்திலகம் சிலை
நடிகர்திலகம் சிலை
கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதிலுமிருந்து தொலைபேசி அழைப்புகள். பல ரசிகர்களின் அழுகைக் குரல்கள், பல கோபக்குரல்கள்.
இதில் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நடிகர்திலகத்தின் சிலை 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டபோது தொடரப்பட்ட வழக்கிலேயே நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தன்னை இணைத்துக்கொண்டு, சிலை அமைய உறுதுணையாக இருந்தது.
அதுபோல தற்போதும், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் சிலையை அகற்றவேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தோம்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, முதலில் நவம்பர் 13 ஆம் நாள் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, அரசு வழக்கறிஞர், இந்த சிலையினால் போக்குவரத்து இடைஞ்சல் ஏதும் இல்லை என்று கூறியதை, மனுதாரரின் வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்ததால், போக்குவரத்து காவல்துறையிடம் இதுசம்பந்தமாக மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நவம்பர் 26 ஆம் நாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே அரசு வழக்கறிஞர் ஆதரவான கருத்துக்களைக் கூறியிருந்ததால் தற்போதும் அதேமாதிரியான கருத்துக்களே தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 10 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்து, இச்சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்கலாம் என்று தெரிவித்ததை அரசு வழக்கறிஞரும் ஆமோதித்தார்.
அதிர்ச்சியடைந்த நான், உடனே நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை வழக்கறிஞர் திரு.பிரபாகரன் மூலமாக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வைத்தேன்.
பேரவை தரப்பு வழக்கறிஞர் மட்டும் அன்று இல்லையென்றால், நடிகர்திலகத்தின் சிலைக்காக கேள்வி கேட்கக்கூட ஆள் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, அன்று இரவே நடிகர்திலகத்தின் சிலையும் அப்புறப்படுத்தப்பட்டு, மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே மணிமண்டபம் கேட்டுப் போராடிவருவது போதாது என்று, நாம் மீண்டும் சிலை வைக்கவேண்டும் என்று போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.
இன்று சிலை அப்புறப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அது விவாதப்பொருளாகவும் ஆக்கப்பட்டிருப்பதில் முதற்கண் நாம் வெற்றியே பெற்றிருக்கிறோம்.
சில விவாதத்திற்குரிய கருத்துக்கள்
1) நடிகர்திலகத்தின் சிலை நடுவிலிருந்து அகற்றப்பட்டு, அவ்வையார், வீரமாமுனிவர், காந்தி என்ற வரிசையில் வைக்கலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் கருத்தா என்பதை சொல்வதற்கில்லை. சிலையை அகற்றியபிறகு எங்கு வைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
2) நடிகர்திலகத்தின் சிலை சாலை நடுவில் இருக்கிறது என்று கூறுபவர்கள், ஒன்றை நினைத்துப் பார்க்கவேண்டும். இன்று சென்னையில் மிக அகலமான சாலை கடற்கரை காமராஜர் சாலை. எல்லாப் புறங்களிலும் மேலும் அகலப்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ள சாலை. போக்குவரத்து அதிகம் உள்ள, சென்னை அண்ணாசாலை என்று அழைக்கப்படுகிற மவுண்ட் ரோடில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், முத்துராமலிங்க தேவர், ராமசாமி படையாச்சி என்று வரிசையாக சிலைகள் சாலையின் நடுவேதான் உள்ளன. (யாருடைய சிலையையும் அகற்றவேண்டும் என்பது நமது நோக்கம் அல்ல) அவைகள் எல்லாம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லை என்கிறபோது, நடிகர்திலகத்தின் சிலை மட்டும் இடைஞ்சல் என்று கூறுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
3) கத்திபாரா நேரு சிலை, கோயம்பேடு அம்பேத்கார் சிலை ஆகியவை இடம் மாற்றி அமைக்கப்படவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள். அங்கெல்லாம் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டபோது, சாலை அகலப்படுத்தும் பணிக்கு அத்தியாவசியமானதால் அகற்றி இடம் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், நடிகர்திலகம் சிலை அமைந்துள்ள காமராஜர் சாலையைப் பொருத்தவரையில் அப்படி ஏதும் இல்லை.
4) பல தலைவர்களுக்கு சென்னையிலும், பல நகரங்களிலும், பல இடங்களில் சிலைகள் உள்ளன. அதனால், ஒரு இடத்தில் அகற்றப்பட்டாலும்கூட கவலையில்லை. நம் நடிகர்திலகத்திற்கு தலைநகரில் இருப்பதோ ஒரே சிலை. அதற்கும் பங்கம் எனும்போதுதான் இதயம் வலிக்கிறது.
5) நம் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் நடு ரோட்டில் சிலை அமைந்து, அது பொதுமக்களுக்கும் இடையூறாக அமைவதை விரும்பவில்லைதான். நடிகர்திலகத்தை மட்டும் இந்த அளவுகோலில் கொண்டுவருவதை ஏற்கமுடியாது. வாழும்போதும் விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர், சிலையாக நிற்கும்போதும் அவர்தான் விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதை விண்ணுலகிலிருக்கும் நடிகர்திலகம் வேண்டுமானால் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளலாம். கண்டிப்பாக நம்மைப்போன்ற ரசிகர்களால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
6) ஒரு மறைந்த தலைவருக்கு சிலை அமைக்கப்படுகிறது என்றால் அது அவரை கெளரவப்படுத்துவதற்காக. அதனை அகற்றுவது என்பது அவரை அவமரியாதை செய்யும் செயலாகவே அமையும்.
7) அப்படி நடிகர்திலகத்தின் சிலையை அகற்றித்தான் ஆகவேண்டுமென்றால், முதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள அனைத்து சிலைகளையும், உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில், IIT போன்ற ஒரு பொதுவான நிறுவனத்தின் மூலம் ஆய்வு செய்து, எந்தெந்த சிலைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதோ அதனையெல்லாம் அகற்றி வேறு இடத்தில் வைக்கலாம். இதில் ஒருவருக்கே அந்த நகரத்தில் எத்தனை சிலைகள் இருக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேன்டும். அதன் பரிந்துரையின் அடிப்படையில் இச்சிலையும் அகற்றப்பட்டு மாற்று இடத்தில் வைக்கப்பட்டால் ஏற்கலாம். ஏற்கனவே, மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களில் இருந்த தலைவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது நினைவிருக்கும்.
இன்று பல கட்சி தலைவர்களின் கண்டனக் குரல்கள், பல மாவட்டங்களிலுமிருந்தும், ஆர்ப்பாட்டம், கண்டன சுவரொட்டி என்ற தகவல்கள் வருகின்றன. சென்னையிலும் வரும் 4 டிசம்பர், புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
Implead petition க்காக வழக்கறிஞர் கேட்ட சில தகவல்களையும் திரட்டிக்கொண்டிருக்கிறேன். வரும் டிசம்பர் 13 ஆம் நாள் வழக்கு விசாரணைக்கு வரும்போது, சிலை அகற்றலை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் முழு மூச்சாக எதிர்ப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் - தோழர்களின் ஆதரவோடு.
நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக