ராதே கிருஷ்ணா 26-10-2013
சுந்தரகாண்டம் - இரண்டாம் பகுதி
வானரனே! மக்களுக்கு ஏதாவது கஷ்டமும், பிரச்னையும் ஏற்படும் சமயத்தில் ராமனுக்கு உற்சாகமும், சந்தோஷமும் அதிகரிக்கும், என்பதே அந்த வார்த்தை.இதைப் படித்தவுடன் சற்று அதிரத்தோன்றும். ஏனெனில், இன்றைய உலகத்தின் மனநிலை அப்படிப்பட்டது. பக்கத்து வீட்டில் நன்றாக இருந்த ஒருவருக்கு கஷ்டம் வந்துவிட்டால் அடுத்த வீட்டுக்காரனுக்கு சந்தோஷம் வந்துவிடுகிறது. மாட்டிக்கிட்டானா, இவ்வளவுநாளும் என்ன கர்வமா இருந்தான்! இப்போ என்ன செய்யப்போறான் என்று கைகொட்டி சிரிப்பவர்களே ஏராளம். பிறர் துன்பத்தில் இவர்கள் சந்தோஷம் காண்கிறார்கள். ஆனால், ராமபிரான் பிறருக்கு துன்பம் வந்து விட்டால், அவர்களுக்கு உதவி செய்ய சரியான சந்தர்ப்பம் வந்துவிட்டதே என்று சந்தோஷப்படுவாராம். தன் தந்தைக்கு கைகேயியால் கஷ்டம் வந்தபோது, இவர் ராஜ்யமே வேண் டாம் என்று தம்பியிடம் அரசாங்கத்தைக் கொடுத்து விட்டு காட்டிற்கும் போய்விட்டார். எவ்வளவு பெரிய மனம் இதற்கு வேண்டும்! தந்தையின் கஷ்டத்தைப் போக்க தன் சுகவாழ்வையே இழந்தவர் அவர். இந்த நிகழ்ச்சியை ஆஞ்சநேயரிடம் வெளிப்படுத்தி தன் கணவரைப் பற்றி உயர்த்திச் சொன்னாள் அன்னை சீதா.பெண்கள் எக்காரணம் கொண்டும் தன் கணவரை உதாசீனப்படுத்தக் கூடாது. அது பெரிய பாவம். ராமன் சீதாவுக்கு சுகமான வாழ்வைத் தந்தார். ஒரு கட்டத்தில் அது பறிபோனது. ஆனால், சீதா தன் கணவனே பெரிதெனக் கருதி அவருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்று காட்டையே தன் வீடாகக் கொண்டாள் அந்த மகாதேவி.கணவனும், மனைவியும் ஒற்றுமை பேண வேண்டும். இருவரும் ஈருடல் ஓருயிர் என வாழ வேண்டும். சுந்தரகாண்டம் உணர்த்தும் மிகப்பெரிய தத்துவம் இது. பிரிந்திருக்கும் தம்பதியர் இதைப்படித்த பிறகாவது தங்கள் பிணக்குகளை கைவிட வேண்டும். இருதரப்புக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை நிறையவே வேண்டும்.சீதாதேவி தங்கள் வரலாற்றைச் சொல்லச் சொல்ல ஆஞ்சநேயரும் அவள் அருகில் நெருங்கி வந்து கொண்டே இருந்தார். சீதாவுக்கு இப்போது சந்தேகம்.
இவன் அருகில் நெருங்கி வருவதைப் பார்த்தால் ஒருவேளை ராவணன் அனுப்பிய ஆளாக இருப்பானோ என்று. சற்று விலகி நின்று, இவனிடம் போய் நம்முடைய கதையைச் சொல்லிவிட்டோமே! முன்பின் தெரியாதவர்களிடம் வீட்டுப்பிரச்னையை சொல்லியிருக்கக் கூடாதே என்ற மனோபாவம் வேறு அவளை வருத்தியது. அவளது முகக்குறிப்பை உணர்ந்து கொண்ட ஆஞ்சநேயர், அன்னையே! கலக்கம் வேண்டாம், என்றவர் ஸ்ரீராமனின் நற்குணங்களையெல்லாம் பட்டியலிட்டார். அதைக் கேட்டு உருகிப்போனாள் சீதா. பின்னர் தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டார்.தாயே! என் பெயர் அனுமான். நீங்கள் சந்தேகப்படுவது போல் ராவணன் அல்ல. நான் ராமதூதன் என்பதை நம்புங்கள், என்று பணிவாகவும், கனிவாகவும் சொன்னார்.பின்னர் சீதா அனுமானிடம், அனுமானே! உனக்கும் என் கணவருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்று கேட்க அவர் அந்த வரலாற்றைச் சொன்னார். பின்னர் சீதையைப் பிரிந்த ராமனின் நிலை பற்றி உருக்கமாக எடுத்துச் சொன்னார்.அம்மா! ராவணன் தங்களை அபகரித்த பிறகு, ஸ்ரீராமன் துக்கத்தால் வாடுகிறார். தாங்கள் ராவணனால் கடத்தப்பட்ட போது கழற்றி எறிந்த ஆபரணங்களைக் கண்டெடுத்து சுக்ரீவ னிடம் ஒப்படைத்தேன். அவர் அவற்றை ராமனிடம் கொடுத்தார். அதைப் பார்த்து அவர் புலம்பியதை நினைத்தால் சோகம் நெஞ்சை அடைக்கிறது. தங்களை பார்க்காமல் வேதனை யால் தவிக்கிறார். நித்திரையின்றி புலம்புகிறார். மரங்களையும், செடிகளையும் பார்த்து நீங்கள் அவளைக் கண்டீர்களா என்று கேட்கும்போது ஏற்படும் துக்கத்தை என்ன வார்த்தைகளால் வடிப்பேன்! ஆயினும், இனி உங்களுக்கு கவலை வேண்டாம். இந்த ராவணனை அழித்து உங்களை அவர் மீட்டுச்செல்வார், என்றார்.இத்தனையும் கேட்டபிறகு அனுமான் ராமனின் தூதர் என்பதை உறுதியாக நம்பினாள் சீதா.
இந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில், தாயே! ஸ்ரீராமபிரான் தங்களுக்கு அடையாளம் காட்டும் வகையில் ஒரு மோதிரத்தை என்னிடம் தந்தார். இதோ! அந்தக் கணையாழி, என்று அவளிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் கிரகணத்தில் இருந்து விடுபட்ட சந்திரன் போல் அவளது முகம் பிரகாசித்தது. இவன் உயிர்களை வாழ வைப்பவன் என்று முன்னர் கருதினோமோ அது நூற்றுக்கு நூறு உண்மை என்று வாய்விட்டுச் சொன்னாள். அந்த சந்தோஷத்துடன், வானரனே! இந்த இலங்கைக்குள் நுழைவது என்பது நடக்காத காரியம். ஆனால், மகாபுத்திமானான நீ இங்கே நுழைந்ததில் இருந்தே உன் புத்தியும், சக்தியும், பலமும் அளவிடற்கரியது என்று சொல்வேன். அது மட்டுமா? நூறு யோஜனை தூரமுள்ள கடலை பசுவின் குளம்படியைப் போல மிகச்சாதாரணமாக தாண்டி வந்தாயே! அந்த பராக்கிரமத்தை என்ன சொல்வது? என்று ஆஞ்சநேயரைப் புகழ்ந்தவள், ராம லட்சுமணர் நலம் பற்றி விசாரித்தாள்.என் ராமன் எப்படியிருக்கிறார்? என் கொழுந்தன் லட்சுமணன் எப்படியிருக்கிறான்? ராகவன் நலமாயிருந்தால் என்னைக் கடத்திய குற்றத்திற்காக இதற்குள் இந்த பூமியை எரித்திருப்பாரே? அவருக்கு ஒருவேளை ஏதாவது ஆகி விட்டதா? என்னைப் பிரிந்த வருத்தத்தில் இளைத்து விட்டாரா? சக்தியிழந்து போனாரா? இப்போதும் நல்ல நண்பர்களைத் தான் தேர்ந்தெடுக்கிறாரா? என்று நிறுத்தினாள். மனைவி போய்விட்டாள். அதிலும் இன்னொருவன் தூக்கிக்கொண்டு போய்விட்டான். அவள் சுத்தமாக இருப்பாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நீ இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப்பா என்று தானே சாதாரண உலகம் தன் நண்பர்களுக்கு கற்றுத்தரும்!அப்படிப்பட்ட கெட்ட போதனை தரும் நண்பர்களாக இல்லாமல், ராமனுக்கு உத்தம நண்பர்கள் கிடைத்துள்ளார்களா என்பதே சீதாவின் கவலை.
நட்பு என்பது வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. மகளை ஒருவனுக்கு திருமணம் முடித்துக் கொடுப்பவர், வேலை, குடும்பப் பின்னணி இவையெல்லாம் நன்றாக இருந் தாலும் கூட, மிக முக்கியமாக விசாரிப்பது அவனது நண்பர்களைப் பற்றித்தான். யாருடன் சேர்கிறானோ, அவனைப் பொறுத்தே ஒருவனது குணநலன் அமைகிறது. அதனால், ராமனின் நட்பைப் பற்றி அக்கறையுடன் விசாரித்தாள் சீதா.அடுத்து, அவளே சொன்னாள்.என் ராமனைப் பற்றி எனக்குத் தெரியும். அவரிடம் அவரது அன்னை கவுசல்யா மிகுந்த பற்று வைத்திருந்தார். தந்தை தசரதர் அவரைப் பிரிந்த துக்கத்தில் உயிரையே விட்டார். மற்ற உறவினர்களும் அவர் மீது கொண்ட அன்பிற்கு குறைவில்லை. ஆனாலும், இவர்களையெல்லாம் விட அவர் என் மீதே அதிக பாசம் வைத்திருந்தார், என்கிறாள்.மகனுக்கு திருமணம் முடித்ததும், மருமகளும், மகனும் சந்தோஷமாக இருக்கப் பொறுக்காத மாமியார்கள் இந்த வரிகளை அவசியம் படிக்க வேண்டும். ஒரு பெண் தன் பெற்றவர்களை விட்டுவிட்டு புதிய இடத்துக்கு வருகிறாள். கணவனையே நண்பனாக, உறவினனாக, தாயாக, தந்தையாக ஏற்றுக் கொள்கிறாள். அவனைச் சார்ந்தவர்களை தன் பந்துக்களாக உரிமை கொண்டாடுகிறாள். இப்படி எல்லார் மீதும் பிரியமாக இருக்கும் மருமகள், தன் மகனோடு ஐக்கியமாகி தங்களை குடும்பத்தை விட்டு விரட்டி விடுவாளோ என பயந்தே பல மாமியார்கள் கொடுமைகளை அரங்கேற்றி விடுகிறார்கள். சீதாதேவியே தன் மாமியார், மாமனார், புகுந்த வீட்டு உறவை விட தன் மீது தன் கணவன் பாசம் வைக்க வேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறாள்! சுந்தரகாண்டத்தை மேலோட்டமாக படிக்காமல் ஆழ்ந்த உள்ளர்த்தத்தோடு படிக்க வேண்டும். அதிலுள்ள கருத்துக்களை சிந்திக்க வேண்டும். அவ்வாறு செய்தால் குடும்ப ஒற்றுமை பலப்படும். என்றும் சிரிப்பும் கும்மாளமுமாக வாழ்க்கை கழியும்.ஆஞ்சநேயர், இப்போது சீதாதேவியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அம்மா! தங்கள் கணவர் தாங்கள் இருக்குமிடத்தை அறியவில்லை. இனி, நான் போய் சொன்னதும், அவர் வானரப்படைகளுடன் வந்து தங்களை மீட்டுச் செல்வார். அவரால் இந்தக் கடலைத் தாண்டி வர முடியுமா என்ற சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். அவர் பராக்கிரமசாலி. அவர் நல்ல உணவு வகைகளை சாப்பிடுவதில்லை. பழம், கிழங்கு முதலானவையே அவரது உணவு. காட்டிலே வசிக்கும் பூச்சிகள் அவரைக் கடிக்கும் உணர்வு கூட இல்லாமல் சோகமே வடிவாக இருக்கிறார். தூக்கம் மிகவும் குறைந்து விட்டது. தூங்கினாலும் வாய் சீதா என்றே கூறுகிறது. இதுகேட்ட சீதா மிகவும் வருத்தப்பட்டாள்.ஆஞ்சநேயா! விதி மிகவும் சக்தி வாய்ந்தது. அயோத்திக்கு மன்னனாக வேண்டிய சகல ஐஸ்வர்யங்களும் பொருந்திய ராமனாக இருந்தால் என்ன! அவரது மனைவியான நானாக இருந்தால் என்ன! சாதாரண பிரஜையாக இருந்தால் என்ன! விதிக்கு தப்புபவர் யாரும் கிடையாது. அதையே நாங்கள் இப்போது அனுபவிக்கிறோம், என்றாள்.பாருங்களேன்! ராமனாக பூமிக்கு வந்தவர் சாட்சாத் மகாவிஷ்ணு. அவரைச் சுமந்த ஆதிசேஷன் லட்சுமணன். லட்சுமி தாயாரே சீதா. தெய்வங்களாக இருந்தாலும் கூட, மானிடப் பிறப்பெடுத்து அவஸ்தைப்பட வேண்டும் என்ற விதியிருந்தால் அதை மாற்ற யாராலும் முடியாது என்பது இதன் உட்பொருள். அதனால், நமக்கு கஷ்டம் வரும்போது கலங்கக்கூடாது. அது என்ன செய்து விடும் என்று மோதிப்பார்க்க வேண்டும். கலியுகம் என்றாலும் கூட, இங்கும் கூட ஒரு சில நல்லவர்கள் உண்டு. அவர்கள் ஆஞ்சநேயரைப் போல் நமக்கு துணை வருவார்கள். என்ன நடந்தால் என்ன! ஆண்டவனிடம் பாரத்தைப் போட்டு விட்டு நம் வழியில் போய்க்கொண்டிருக்க வேண்டும்.சீதா தொடர்ந்தாள்.ஆஞ்சநேயா! நீ ராமனிடம் செல். ராவணன் என்னை அவனது மனைவியாக்கிக் கொள்ள ஒரு வருடம் அவகாசம் தந்திருக்கிறான்.
பத்து மாதங்கள் முடிந்து விட்டன. இன்னும் இரண்டு மாதத்திற்குள் என் கணவர் இங்கு வந்து என்னை அழைத்துச் செல்லா விட்டால், நான் உயிரை விடுவேன் என அவரிடம் சொல்லிவிடு. ராவணனின் சகோதரன் விபீஷணன், என்னை விடுவிக்கும்படி அண்ணனுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறான். அதையும் அவன் லட்சியம் செய்யவில்லை. விபீஷணனின் மனைவி சுரஸை, இந்தத் தகவலை தன் மூத்தமகள் அனலை மூலமாக எனக்கு சொல்லியனுப்பினாள். எனவே, நான் ராவணனால் சிரமப்படப் போவது நிச்சயம். அதற்குள் அவர் வந்து என்னை மீட்டுவிடுவார் என்றே கருதுகிறேன், எனச்சொல்லி கண்ணீர் வடித்தாள். ஆஞ்சநேயரும் மனம் கலங்கி, தாயே! கவலையை விடுங்கள். தங்களை மீட்டுச் செல்ல ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தான் வரவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? என் முதுகில் அமர்ந்து கொண்டால் கணநேரத்தில், நான் தங்களை அவரிடம் கொண்டு சேர்த்து விட மாட்டேனா? என்றார்.இதைக் கேட்டு சீதைக்கு கோபம் வந்துவிட்டது. நீ குரங்கு என்பதையும், உன் குரங்கு புத்தியையும் காட்டிவிட்டாய் அல்லவா? என்னை நீ கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறுவது நகைப்பையே வரவழைக்கிறது. மிகச்சிறியவனான நீ என்னை எப்படி அங்கே கொண்டு சேர்க்க முடியும், என்று கேட்டாள். ஆஞ்சநேயருக்கு அவமானமாகப் போய்விட்டது.என்னை ஒருவர் கூட இப்படி அவமானமாகப் பேசியதும் இல்லை, என் சக்தியை சந்தேகப்பட்டவரும் இல்லை என்று மனதில் நினைத்தபடியே, பொறுமையுடன், தாயே! என்னை நீங்கள் சாதாரண குள்ளக்குரங்கு என்று நினைக்கிறீர்கள். இதோ பாருங்கள்! என்றார். அப்போது அவரது உருவம் வானத்தையும், பூமியையும் அடைத்த வகையில் மிக உயரமானது. ஆஞ்சநேயரின் அந்த விஸ்வரூபம் கண்டு சீதா ஆச்சரியப்பட்ட போது, அன்னையே! உங்களை இந்த இலங்கை மண்ணோடு பெயர்த்துக் கொண்டு செல்லும் ஆற்றல் கூட என்னிடம் உண்டு. என்னை சந்தேகிக்காதீர்கள், என்றார். சீதா உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனாள். அவசரப்பட்டு ஆஞ்சநேயனை திட்டிவிட்டோமே என்று மனதுக்குள் சலித்தாள்.
சுந்தரகாண்டம் என்றால் என்ன? ஆஞ்சநேயர் கிஷ்கிந்தையில் இருந்து கிளம்பி, இலங்கை சென்று, சீதையைச் சந்தித்து, அசோகவனத்தை அழித்து, ராவணன் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேசி, இலங்கையின் பெரும்பகுதியை எரித்து, ராமனிடம் சீதை உயிருடன் இருக்கிறாள் என்ற நல்ல செய்தி சொல்லி அவருக்கு உயிரூட்டினார் என்ற அளவிலான பகுதி என்பதை மட்டும் நாம் அறிந்து கொண்டால் போதாது. இந்த காண்டத்தைப் படித்தால், இறக்கும் நிலையில் உள்ளவர்களே பிழைத்துக் கொள்வார்களாமே, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்களாமே, என்னவெல்லாமோ அதிசயங்கள் நிகழுமாமே என்று பிறர் சொல்லக் கேட்கிறோம். மேலோட்டமாக கடமைக்கு படித்தால், அந்தப் பயன்கள் நமக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. சுந்தரகாண்டத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும். ஒவ்வொரு வரிக்கும் நமக்கு நாமே வியாக்கியானம் செய்து கொள்ள வேண்டும். சுந்தரகாண்டத்தை முழுமையாகப் படித்து, அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்ன என்று சிந்தனையைப் படரவிட்டால், குறைந்தபட்சம் ஒரு ஆண்டைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு அதில் வாழ்க்கைக்கு ஒளியூட்டும், நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் அடங்கிக் கிடக்கின்றன.ஆஞ்சநேயர் கிளம்பிவிட்டார். அப்போது, அவரது மனதில் ஒரு எண்ணம்.சுக்ரீவன் கொடுத்த வேலையைச் செய்தாயிற்று. சீதையைக் கண்டுபிடித்தாயிற்று. அடையாளத்துக்கு சூடாமணியை வாங்கியாயிற்று. இலங்கையைச் சுற்றிப்பார்த்து நகர அமைப்பைத் தெரிந்தாயிற்று. ஆனால், இந்த ராட்சஷப் பதர்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள் என்கிறார்களே. இவர்களது பலத்தை சோதித்து பார்க்க வேண்டுமே. எல்லாவற்றிற்கும் மேலாக ராவணனின் இருப்பிடத்தை பார்த்த நான், அவனது பராக்கிரமத்தை அறிந்து போக வேண்டுமே. சரி..அவனுடைய பராக்கிரமத்தை அறிய வேண்டுமானால், அவனுடன் இப்போதே போரிட்டாக வேண்டும். அவன் ஒன்றும் சாதாரணமாக வெளியே வருபவனல்ல. தன் கைத்தடிகளைத் தான் என் மீது ஏவுவான்.
அவர்கள் என்னுடன் போர் செய்வார்கள். போர் என்று வந்துவிட்டால் வெற்றி தோல்வி யாருக்கு என்பது உறுதியில்லை என்று பெரியவர்களெல்லாம் சொல்கிறார்கள். அது நிஜமும் கூட. ஒருவேளை அவர்கள் என்னை விட வீரமுள்ளவர்களாக இருந்தால் நான் தோற்றுப்போவேன். பின்னர், இங்கே சீதை இருக்கும் விஷயம் ராமனுக்கு தெரியாமலே போய்விடும். என்ன செய்யலாம்? என்று தீவிரமாக யோசித்தார்.முடிவில், போரில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். ஆனால், பலசாலிக்கு எப்போதுமே வெற்றி உறுதி என்பதும் போர் சாஸ்திரம் சொல்வது தானே! நான் ஒப்பற்ற வீரமுள்ளவன் என்று நம்புகிறேன். அதனால் எனக்கு தோல்வி என்பதே கிடையாது. எனவே, இந்த ராட்சஷர்களுடன் போரிடுவதில் தப்பே இல்லை என்று முடிவெடுத்தார். ஆஞ்சநேயர் இப்படி எண்ணியதை, ஆணவம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அது நம்பிக்கை. ஒரே பாடத்தை பல மாணவர்கள் படிக்கிறார்கள். சிலர் அதைக் கடினமாகக் கருதி திண்டாடி குறைந்த மதிப்பெண் வாங்குகிறார்கள். வேறு சிலர் அதை எளிதாக எடுத்துக் கொண்டு நூற்றுக்கு நூறு வாங்கி பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஆஞ்சநேயர் இதில் இரண்டாவது ரகமாக இருந்தார். நான் நிச்சயம் ஜெயிப்பேன், மகாராஜா சுக்ரீவனுக்கு பெருமை சேர்ப்பேன் என்று நம்பினார். இப்போது புரிந்ததா? ஒருவன் முதலில் தன்னை நம்ப வேண்டும். தன்னை நம்புபவன் எதிலும் வெற்றிவாகை சூடுவான். எவ்வளவு பெரிய தத்துவத்தை சுந்தரகாண்டம் நமக்குச் சொல்கிறது பாருங்களேன்! இப்படி அணுஅணுவாக ஆய்வு செய்து சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களே வெற்றி வாகை சூட முடியும். சரி.. வம்புக்குத்தான் போகக்கூடாது. ஆனால், வந்த சண்டையை எப்படி விடுவது? ராவணன் தான் இந்த சண்டைக்கு மூலகர்த்தா. அவன் இப்போது மாளிகையில் இருக்கிறான். அவனது கவனத்தை ஈர்ப்பது எப்படி? என்று சிந்தித்தார்.
தன் கண்முன்னால் பரந்து விரிந்து கிடந்த அசோகவனத்தைப் பார்த்தார். இதை அழித்து விட வேண்டும். இதை அழித்தால் சீதை இருக்குமிடத்தை யாரோ அழிப்பதாக ராவணனின் கவனத்துக்குச் செல்லும். அவனுடைய ஆட்களை அனுப்புவான். அவர்களைக் கொன்று குவிக்க வேண்டும். பின்னர் ராவணனே வருவான், என்று சிந்தித்தார். தன் எண்ணத்தை உடனடியாக செயல்படுத்தி விட்டார். குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல என்பார்களே...அதுபோல், அந்த அழகிய அசோகவனம் களையிழந்து போய்விட்டது. மரங்களைச் சாய்த்து, அங்கிருந்த தடாகக்கரைகளை நொறுக்கி அடையாளமே தெரியாமல் செய்துவிட்டார். சீதாதேவி அமர்ந்திருந்த சிம்சுபா மரத்தின் பக்கம் மட்டும் அவர் செல்லவில்லை. ராட்சஷிகள் இந்த சப்தம் கேட்டு எழுந்தனர். தாங்கள் இருப்பது அசோகவனத்தில் தானா அல்லது வேறு ஊரிலா என்ற சந்தேகம் வந்துவிட்டது. சீதை அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து, யார் இவன்? உனக்குத் தெரிந்தவனா? என்று கேட்டார்கள்.எனக்கு அவனை யாரென்றே தெரியாதே. இது ராட்சஷர்கள் வாழும் நாடு. யாரோ ஒரு சக்திவாய்ந்த ராட்சஷன் தான் இப்படி செய்திருக்கிறான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரியாத விஷயமா? பாம்பின் பால் பாம்பறியுமே, என்று சொல்லிவிட்டாள்.ஒருவருக்கு நன்மை விளைகிறதென்றால் அப்போது பொய் பேசுவதில் தவறில்லை. சாட்சாத் மகாலட்சுமியே பூமிக்கு வந்து விட்டாலும், சில நன்மைகள் கருதி பொய் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு நல்லவனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி அவள் சொல்லிவிட்டாள்.ராட்சஷிகள் ராவணனிடம் ஓடினார்கள்.மகாராஜா! நம் அசோகவனத்திற்குள் புகுந்த ஒரு குரங்கு வனத்தை பாழ்படுத்தி விட்டது. அது நீர் விரும்பும் சீதையிடம் பேசியதாக நாங்கள் அறிகிறோம். உமக்கு சொந்தமாக உள்ள ஒருத்தியிடம் பிறர் பேச நீர் அனுமதிக்கலாமா? அதை உடனே பிடித்து விசாரிக்க வேண்டும். அது ராமனால் அனுப்பப்பட்டதாக இருக்கும் என நம்புகிறோம், என்றனர். ராவணனின் கண்கள் சிவந்தன.
யாரடா அங்கே! உடனே செல்லுங்கள், அந்த வானரனைக் கொல்லுங்கள், என்று கட்டளை பிறந்தது ராவணனுடைய வாயில் இருந்து!பலத்தில் ராவணனுக்கு இணையான எண்பதாயிரம் அசுர வீரர்கள் பெரிய ஆயுதங்களுடன் புறப்பட்டார்கள். மாருதி அமர்ந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரைச் சுற்றி வளைத்தார்கள். அவரை அடித்தார்கள். கத்திகளை வீசினார்கள். இதுவரை ஆஞ்சநேயர் என்ற சொல் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டது. இப்போது மாருதி என்று மாறக் காரணம் ஏதும் உண்டா? என நீங்கள் யோசிக்கலாம்.மாருதி என்ற சொல், மாருதம் என்ற சொல்லில் இருந்து உருவானது. மாருதம் என்றால் காற்று. காற்றின் மைந்தனல்லவா ஆஞ்சநேயர். அதனால் அவரை மாருதி என்பர். காற்றடைக்கப்பட்ட பந்தை நீருக்குள் அமிழ்த்தினால் என்னாகும்? அது மேலே மேலே தான் வரும். அதுபோல், இங்கே மாருதிக்கு அசுரர்கள் கோபத்தை ஊட்ட ஊட்ட சிறு குரங்காக இருந்த அவர் உயர்ந்தார்...உயர்ந்தார்...உயர்ந்து கொண்டே இருந்தார். விஸ்வரூபம் தரித்தார்.எவ்வளவோ பூஜை, புனஸ்காரங்களைச் செய்யும் நாம் மாருதியின் தரிசனம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். பார்த்தீர்களா! குடிகெடுக்கும் ராட்சஷர்கள் கண்களுக்கு அவர் தெரிகிறார். அதிலும் விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார். ஏன் தெரியுமா? அவர்களுடைய தலைவன் கெட்டவனே ஆயினும் சிவபக்தன். அந்த சிவனே ராமனுக்கு சேவை செய்ய வானரமாய் அவதரித்துள்ளார். ஒருவன் செய்த பிரார்த்தனையால், அவனது நாட்டிலுள்ள எல்லோருக்கும் இறை தரிசனம் கிடைக்கிறது. ஒருவேளை கலியுகத்தில் இருப்பதால், நம் பிரார்த்தனைக்கு அவர் செவி கொடுக்க மறுக்கிறாரோ என்னவோ?அவர்கள் வீசிய ஆயுதங்களை நொறுக்கித் தள்ளினார். இலங்கையே நடுங்கும்படி சிங்கம் போல் கர்ஜித்தார். அந்த ஓசை கேட்டு பறவைகள் எல்லாம் மயங்கி தரையில் விழுந்து விட்டன.
அடேய் ராட்சஷப் பதர்களே! ராமன், அவர் தம்பி லட்சுமணன், என் மகாராஜா சுக்ரீவன் ஆகியோருக்கு நிகரான பலசாலிகள் இவ்வுலகில் இல்லை. நான் ராமதூதன். அவரது பக்தன். வாயுவின் புத்திரன். எதிரிகளுக்கு எமன். நீங்கள் என் காலுக்கு தூசு. உங்கள் அரசன் ராவணனைப் போல் ஆயிரம் அசுரர்கள் வந்தாலும் அவர்களைப் பந்தாடி விடுவேன். சீதையைக் கண்டேன். அவளிடம் பேச வேண்டியதைப் பேசி விட்டேன். இனி, உங்களையெல்லாம் கொன்று இலங்கையை சர்வநாசமாக்கி விட்டு, சுகமாக என் இருப்பிடம் திரும்புவேன், என சவால் விட்டார். நம் ஊரில் ஜெயிப்பது முக்கியமல்ல. பக்கத்து ஊரில் போய் ஜெயிக்க வேண்டும். அப்படி செய்யாமல், நம்மை நம்பர் ஒன்று என சொல்லிக் கொள்வது எப்படி முட்டாள்தனமோ, அது போல் இல்லாமல், மாருதி பக்கத்து நாட்டில் போய் சவால் விட்டார்.ராட்சஷர்கள் அந்தக் குரல் கேட்டே நடுங்கி விட்டார்கள். மாருதியின் பார்வையில் ஒரு இரும்பு உலக்கை பட்டது. அதை உருவி எடுத்தார். களத்தின் நடுவில் அவர் நிற்க சுற்றிலும் ராட்சஷர்கள் நின்றார்கள். அவர்களை எல்லாம் அந்த உலக்கையை சுழற்றி நாசம் செய்தார். சிலருக்கு பயம் வந்து விட்டது. அவர்கள் ராவணனிடம் ஓடினார்கள்.நாங்கள் மட்டும் தான் மிச்சம். மற்றவர்களை அந்தக் குரங்கு நாசம் செய்து விட்டது. விண்முட்ட உயர்ந்து நின்ற குரங்கிடம் இருந்து தப்பி வந்ததே பெரிய காரியம் என்றார்கள்.ராவணன், தன் முதலமைச்சர் பிரஹஸ்தனுடைய புத்திரன் ஜம்புமாலியை அழைத்து, நீ போய் அந்த குரங்கைக் கொன்று வா, என்றான். இதற்குள் மாருதி, அசுரர்களைக் கொன்றால் போதுமா? அசோகவனம் அழிந்தால் போதுமா? அதோ! அங்கே தெரியும் ராவணனின் அரண்மனை மாடத்தை இடித்து தள்ள வேண்டும், என முடிவு செய்தார். அந்த உப்பரிகை நவரத்தினங்களால் ஜொலித்தது.
மாருதி அதன் எதிரே ஒளி பொங்க நின்றார். அதைக் காவல் காத்த அசுரர்களை நோக்கி, அடேய்! இந்த அரண்மனையை அழிக்க வந்திருக்கிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள், என சவால்விட்டார். அசுர காவலர்கள் மாருதியை நோக்கி ஆவேசத்துடன் ஓடி வந்தார்கள்.அந்த பலவான்களில் பலர் ஓகம் எனப்படும் பலமுடையவர்கள். நூறு யானை பலம், ஆயிரம் யானை பலம் என்பது போல ஓகம் என்பது இதையெல்லாம் விட அதிக எண்ணிக்கையுள்ள யானைகளின் பலமுடையவர்கள். அவர்களை எதிர்கொள்ள மாருதி தயாரான போது, ஜம்புமாலி கோவேறு கழுதைகள் பூட்டிய தனது ரதத்தில் வந்து சேர்ந்தான். அவனது கோரைப் பற்களைப் பார்த்தாலே மயக்கம் வந்து விடும். அவ்வளவு பெரியது. அந்த பற்களைக் காட்டியபடி கடும் கோபத்துடன் இருந்தான்.வீரர்கள் உடனே யாரையும் கொல்லமாட்டார்கள். தன் சக வீரனோடு சண்டை போடுவதில் அவர்களுக்கு அலாதி இன்பம். பலவானான ஜம்புமாலியுடன் யுத்தம் செய்ய மாருதிக்கு ஆசை வந்து விட்டது. அதற்கேற்றாற் போல், ஜம்புமாலி தன் பாணங்களை மாருதி மேல் தொடுத்தான். மாருதி ஒரு பெரிய பாறையைப் பிடுங்கி அவன் மேல் எறிந்தார். அவன் அதை தன் அம்புகளால் தகர்த்து விட்டான். பார்த்தார் மாருதி. ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி வீசினார். அதையும் அவன் தடுத்து விட்டான். பின்னர் ஒரு மிகப்பெரிய இரும்பு உலக்கையை எடுத்து அவன் மீது வீசினார். அவ்வளவு தான்! ஜம்புமாலியைக் காணவில்லை. அவன் தலை ஓரிடத்தில் சிதைந்து கிடக்க, கை, கால்கள் கழன்று கிடக்க மண்ணோடு மண்ணாகி விட்டான்.இதைக் கேள்விப்பட்ட ராவணன், கோபத்தில் மீசை துடிக்க, தன் மந்திரி பிரதானிகளின் குமாரர்கள் அனைவரையும் அனுப்பி, அந்தக் குரங்கைப் பிடித்து வாருங்கள், என ஆணை பிறப்பித்தான். மின்னலென வந்த அவர்களும் மாருதியின் ஆவேசத்துக்கு பலியானார்கள்.ராவணனுக்கு பயம் வந்து விட்டது.
விரூபாக்ஷன், யூபாக்ஷன், துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன் என்ற தனது ஐந்து சேனாதிபதிகளை அவன் அழைத்தான். அவர்கள் போர் செய்வதில் மிகுந்த திறமைசாலிகள்.அவர்களிடம்,சேனாதிபதிகளே! அந்தக் குரங்கு சாதாரணமானதாகத் தெரியவில்லை. அது குரங்கின் வேடத்தில் வந்துள்ள ஏதோ ஒரு சக்தி. இல்லாவிட்டால், நம் வீரர்கள் 80 ஆயிரம் பேரை அது சாய்த்திருக்குமா? இந்திரன் முதலான தேவர்கள் கடும் தவம் செய்து அனுப்பிய மாயசக்தி என்றே அந்தக்குரங்கை நினைக்கிறேன். நீங்கள் மிக கவனமாக அதனருகில் சென்று அதைப் பிடியுங்கள். எனக்கு ஏற்கனவே வாலி, சுக்ரீவன், நீலன், த்விவிதன் ஆகிய பராக்கிரமம் மிக்க வானர வீரர்களைப் பார்த்த அனுபவமுண்டு. ஆனால், அவர்களையெல்லாம் விட இந்தக் குரங்கு அதிக வலிமையுடையதாக இருக்கிறது. நீங்கள் போரில் வல்லவர்கள். அதை பிடித்து விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், போரில் வெற்றி பெற நினைப்பவர்கள் சிறுவிஷயத்தில் கூட கவனக்குறைவாக இருக்கக்கூடாது. போர் வீரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும், என்று புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தான்.ஆனால், அந்த சேனாதிபதிகளை மட்டுமல்ல, அவரது தேர்கள், உடன் சென்ற கணக்கற்ற வீரர்களை தூள்தூளாக்கி விட்டார் மாருதி.ராவணன் இதை எதிர்பார்த்தவன் போல, அடுத்து யாரை அனுப்பலாம் என ஆலோசிக்கையில் ராவணனின் மகன், அட்சயகுமாரன் தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தான். அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட ராவணன் அவனையே அனுப்ப முடிவெடுத்து ஜாடையாலேயே புறப்படும்படி உத்தரவிட்டான். அவன் வானில் பறந்து சண்டையிடும் திறமையுள்ளவன். மாருதியும் வாயு புதல்வரல்லவா! தனக்கு சரியான ஜோடி சண்டையிட கிடைத்ததென்று மகிழ்ந்து அட்சயகுமாரனை எதிர்கொண்டார்.அட்சயனின் தேரை அடித்து நொறுக்கினார்.
அவன் வானில் பறந்து அவருடன் சண்டையிட்டான். ஆனால், வாயுமைந்தன் அவனது கால்களை இறுகப்பிடித்தார். அவன் கிறங்கும் வகையில் சுழற்றினார். சுழற்றியே கொன்று விட்டார்.பெற்ற மகனை இழந்த துக்கம் ராவணனை வருத்தியது. அவன், வேறு வழியின்றி தன் மகன் இந்திரஜித்தை அழைத்தார். தேவர், அசுரர் போரில் இந்திரனையே வென்றவன் என்பதால் இவன் இந்திரஜித் என்று பெயர் பெற்றவன். கடும் தவமிருந்து பிரம்மாவிடம் இருந்து அஸ்திரம் பெற்றவன். அந்த பிரம்மாஸ்திரம் உலகிலுள்ள எப்பேர்ப்பட்ட சக்தியையும் கட்டும் சக்தி பெற்றது. அவனிடம், அன்பு மகனே! நான் ஏற்கனவே அனுப்பிய வீரர்களிடம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால், நீ மகாவீரன். தேவர்களையே வென்றவன். ஆனாலும், அந்தக் குரங்கை குறைத்து மதிப்பிடாதே. அந்த வானரனின் திறமை பற்றி சொல்கிறேன், கேள், என்று ஆரம்பித்தான்.நீ பல வீரர்களை அழைத்துச் சென்று பலனில்லை. ஏனெனில், அது கணநேரத்தில் அவர்களை ஒழித்துக் கட்டி விடுகிறது. ஆயுதங்களாலும் அவனைக் கொல்ல முடியாது. ஏனெனில், அவன் காற்றை விட வேகமாக இருப்பவன். எந்தத்திசையில் இருந்து தாக்குவான் என்றே தெரியாது. அப்படிப்பட்டவனிடம் ஆயுதம் எடுத்து பலனில்லை. எனவே, உன்னிடமுள்ள முக்கிய அஸ்திரங்களுடன், அவற்றிற்குரிய மந்திரங்களை ஜபித்துக்கொண்டே செல். இவ்வளவு சக்தி வாய்ந்த குரங்கை அழிக்க நானே போயிருப்பேன். ஆனால், நாளைய உலகம், ஒரு சாதாரணக் குரங்கை அழிக்க ராவணனே நேரில் சென்றான் என்று இந்த ராவணனைக் கேலி செய்யும். மேலும், வீரர்கள் இருக்கும் நிலையில் மன்னனே முதலில் நேரில் செல்வதென்பது அரசியல் தர்மமல்ல, என்றான்.இந்திரஜித்துக்கு இப்படிப்பட்ட வீரனை எதிர்கொள்ளப் போவதில் பெரிய மகிழ்ச்சி.
தனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்தமைக்காகவும், பெற்றவருக்கு மரியாதை செய்து வெற்றி வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் தன் தந்தையை வலம் வந்து நமஸ்கரித்தான். உற்சாகமாக மாருதி இருக்குமிடம் சென்றான். மாருதிக்கோ இன்னும் சந்தோஷம். மாருதிக்கு மட்டுமா! இலங்கையில் வசித்த பறவைகளுக்கு கூட சந்தோஷமாம். யார் இறந்தாலும் வலிய உடல் ஒன்று கீழே சாயும். அவர்களின் பிணம் தங்களுக்கு பலநாள் இரையாகும் என்பது அவற்றின் கணிப்பு. இந்தக் காட்சியைக் காண வானலோகத்தில் இருந்தவர்களெல்லாம் கூடி விட்டார்கள். பிரம்மாஸ்திரம் மாருதியைக் கட்டிப்போடும் என்பது உறுதி. அதில் இருந்து அவர் எப்படி விடுபடப்போகிறார் என்பதைப் பார்த்தாக வேண்டுமே! அது மட்டுமல்ல! அழியப்போவது இந்திரஜித்தா, மாருதியா? ஒருவேளை மாருதியின் கதை முடியுமானால் சீதாராமரின் நிலை என்னாகும்? நெஞ்சம் படபடக்க அவர்கள் உயரத்தில் நின்றார்கள்.இந்திரஜித் களத்திற்குள் புகுந்தான். மாருதி தன் உருவத்தைப் பெரிதாக்கினார். இந்திரஜித் தன் வில் நாணை இழுத்து விட்ட போது எழுந்த ஒலி பேரிடியையும் மிஞ்சியது. பல பாணங்களை அவன் மாருதியின் மேல் பிரயோகித்தான். மாருதி பறந்தபடியே அவற்றை விலக்கித் தள்ளினார். இதுகண்டு இந்திரஜித்தே ஆச்சரியப்பட்டான்.தன் தந்தை சொன்னது போல, இவன் பராக்கிரமசாலி தான் என்பதைப் புரிந்துகொண்ட புத்திமானான இந்திரஜித், பிரம்மாஸ்திரத்தை ஏவி இவனைப் பிடித்து கட்டி இழுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான்.பிரம்மாஸ்திரம் பறந்து வந்தது. மாருதி அந்த அஸ்திரத்துக்கு தானாகவே கட்டுப்பட்டு விட்டார். சகல அஸ்திரங்களுக்கும் கட்டுப்படாத அந்த மாவீரன் இதற்கு மட்டும் ஏன் கட்டுப்பட வேண்டும்? அது ஒரு ரகசியம்!
பிரம்மா சகல ஜீவராசிகளையும் படைப்பவர். இன்னாருக்கு இன்னாரென எழுதி வைப்பவர். அதற்கு எல்லாரும் கட்டுப்பட்டே தீர வேண்டும். படைத்தவருக்குரிய மரியாதையை நாம் தரவேண்டாமா அதனால், அவருக்குரிய அஸ்திரத்திற்கு கட்டுப்பட்டார் ஆஞ்சநேயர். ஏற்கனவே, ஒரு சந்தர்ப்பத்தில் பிரம்மாவிடம் ஒரு வரத்தையும் வாங்கியிருந்தார் மாருதி.அதாவது, பிரம்மாஸ்திரத்துக்கு நீ கட்டுப்படும் காலம் வரும். அதனால் உனக்கு ஆபத்து எதுவும் நேராது. ஆனால், ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணிநேரம்) வரை நீ அதற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். அப்போது ஏற்படும் கஷ்டங்களை சகித்துக் கொள்ள வேண்டும், என்பது தான். கடவுளை வணங்காதவனை விட வணங்குபவனுக்கு தான் அதிக சோதனை வரும். இது வாழ்க்கை நடைமுறை. அதாவது, நம் வினைகளின் பலனை இங்கேயே முடித்துவிட்டு, இறைவனின் லோகத்தை அடைந்ததும் சுகவாழ்வு அடைய வேண்டும் என்ற காரணமே இதற்கு இருக்க முடியும். இவ்வளவு நேரம் வெற்றிக்களியாட்டம் போட்ட மாருதி, இப்போது கஷ்டப்பட வேண்டிய நேரம் வந்தது. அவர் கட்டப்பட்டார்.ஆனால், ராட்சஷ முட்டாள்கள் என்ன செய்தனர் தெரியுமா அந்த அஸ்திரத்தின் ரகசியம் தெரியாமல், அவசரப்பட்டு அவரைக் கயிறுகளாலும், விழுதுகளாலும் கட்டிவிட்டனர். இப்படி பிற பொருட்களால் கட்டினால், அந்த அஸ்திரத்தின் கட்டு அவிழ்ந்து விடும். அது மட்டுமல்ல! அதை மீண்டும் எய்யவும் முடியாது. இந்திரஜித் இந்த அவசர செயலைக் கண்டு அதிர்ந்து விட்டான்.இனி இந்தக் குரங்கைப் பிடிப்பது கஷ்டமாயிற்றே! இது இப்போது கட்டுக்களை அவிழ்த்து இங்கே நிற்பவர்களை எல்லாம் வேட்டையாடி விடுமே! நமக்கும் அதோகதிதானோ என்று சிந்தித்த வேளையில், மாருதியோ கட்டில் இருந்து அவிழாதது போல நடித்தார்.இப்போது, இந்திரஜித்துக்கு இன்னும் குழப்பம்.
இந்தக் குரங்கு தன் கட்டுகள் அவிழாதது போல நாடகமாட வேண்டிய அவசியம் என்ன! அசுரர்கள் இது கட்டப்பட்டிருப்பதாக நினைத்து அடிக்கிறார்கள், குத்துகிறார்கள், ஆயுதங்களால் தாக்குகிறார்கள். அத்தனையையும் இது தாங்குகிறது என்றால், இது இன்னும் என்ன செய்யப்போகிறதோ!என்பதே குழப்பத்துக்கு காரணம்.மாருதி மிகுந்த பொறுமை காத்தார்.இவர்களை அடிப்பதை விட, இந்த கட்டிலேயே இருப்பதைப் போல் நடித்தால், நிச்சயம் இவர்கள் நம்மை ராவணனிடம் கொண்டு செல்வார்கள். அவனுடைய பராக்கிரமத்தை நாம் எடை போட்டு விடலாம். இது எதிர்வரும் போருக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணக்குப் போட்டார்.எதிரிகளின் பலம் தெரியாமல், அவர்களை எதிர்த்து யாரும் களத்தில் இறங்கக்கூடாது என்பது இதன்மூலம் தெரிய வரும் பாடம். அவர் நினைத்தது போலவே ராவணனின் முன்னால் அதைக் கொண்டு போய் நிறுத்தினார்கள். ராவணனை மிகவும் அருகில் பார்த்து மாருதி உண்மையிலேயே அதிசயித்தார். எப்படிப்பட்ட மகாபுருஷன் இவன்! இவன் மட்டும் தன் மனதை தர்மத்தின் வழியில் செலுத்தினால், இந்திரனையும், பிற தேவர்களையும் நிரந்தரமாக ஆளும் பாக்கியத்தைப் பெற்றிருப்பானே! என்று மனதுக்குள் பாராட்டினார். எதிரியை பாராட்டும் இந்த தன்மை மட்டும் அரசியலில் இருந்துவிட்டால், சண்டைகளுக்கு இடமில்லை. தேசமும் விருத்தியாகும் என்பது சுந்தரகாண்டம் இவ்விடத்தில் நமக்கு உணர்த்தும் கருத்து.இதே போன்ற யோசனை தான் ராவணனுக்கும் தோன்றியது.யார் இவன் ஒரு காலத்தில் நான் கைலாயத்தை அசைத்த போது எனக்கு சாபமிட்ட நந்தி பகவானா அல்லது யாரேனும் அசுரனா இப்போது, குரங்கு ரூபத்தில் வந்திருக்கிறானோ என்னுடைய அரண்மனைக்குள் தகுதியானவர்கள் மட்டுமே நுழைய முடியும். இவன் எப்படியோ இங்கே வந்துவிட்டான் என்றால் இவன் தகுதியுடையவர்களில் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என்ற யோசனையுடன், தனது மந்திரி பிரஹஸ்தனிடம் கண்ஜாடை காட்டினான்.அவனது கருத்தைப் புரிந்து கொண்ட பிரஹஸ்தன், குரங்கே! எனது கேள்விகளுக்கு பயப்படாமல் பதில் சொல்.
உனக்கு நன்மை உண்டாகட்டும். உன்னை யார் இங்கே அனுப்பினார்கள் இந்திரனா வாயுவா விஷ்ணுவா குபேரனா எமனா பார்ப்பதற்கு குரங்கு போல் தோன்றினாலும், உன் சக்தியை மதிப்பிடும் போது அவ்வாறு நினைக்க எங்களால் முடியவில்லை. உண்மையைச் சொன்னால் உன்னை விட்டுவிடுவோம். பொய் சொன்னால் உன் உயிர் போய் விடும். எதற்காக இலங்கைக்கு வந்தாய்? சொல், என்று கேட்டான்.மாருதி அவனைக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யவில்லை. தைரியசாலியல்லவா அவர்! நேராக ராவணனை நேருக்கு நேர் பார்த்தார். அவனிடமே பதில் சொன்னார்.எந்த தேவரும் என்னை அனுப்பவில்லை. நான் வானரன் தான். ராட்சஷர்களின் மகாராஜாவான உன்னைப் பார்க்கவே இங்கு வந்தேன். உன் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே அசோகவனத்தை அழித்தேன். நீ அனுப்பிய ஆட்கள் என்னை துன்புறுத்தினார்கள். அவர்களிடம் இருந்து என் உடலைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர்களிடம் பலப்பரீட்சை செய்து கொன்றேன். எந்த அஸ்திரமும் என்னைக் கட்டுப்படுத்தாது என்ற வரத்தை நான் பிரம்மாவிடம் பெற்றுள்ளேன். ஆனாலும், ராட்சஷர்கள் என்னை உபத்திரவம் செய்ததையும் பொறுத்துக் கொண்டு, பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் நடித்ததன் காரணம், உன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். நான் சொல்லும் நல்வார்த்தைகளைக் கேள், என்று ஆரம்பித்தார்.கிஷ்கிந்தையின் அரசன் சுக்ரீவன் என்னை இங்கே அனுப்பினார். தசரத புத்திரரான ராமனின் மனைவி சீதையை நீ கடத்தி வந்துள்ளாய். ராமபிரானும், சுக்ரீவனும் இப்போது நண்பர்கள். ராமனின் மனைவியை மீட்டுத்தருவதாக சுக்ரீவனும், சுக்ரீவனின் அண்ணன் வாலியைக் கொன்று வானர ராஜ்யத்திற்கு சுக்ரீவனை அதிபதியாக்குவதாக ராமனும் உடன்பாடு செய்து கொண்டனர். ராமன் தான் சொன்னதை நிறைவேற்றி விட்டார். சுக்ரீவன் தன் பங்கை நிறைவேற்றும் நடவடிக்கை எடுத்துள்ளார். நீயாகவே, சீதையைக் கொண்டு போய் ராமனிடம் ஒப்படைத்து விட்டால் உன் பத்து தலைகளும் பிழைக்கும். இங்கிருக்கும் சீதாபிராட்டி சாதாரணமானவள் அல்ல. அவள் இலங்கையை அழிக்க வந்திருக்கும் காளராத்ரி என்ற சக்தி. கவனம், என்றவர் மேலும் தொடர்ந்தார்.
ராவணா! எங்கள் ராமனைப் பற்றி நீ தெரிந்து கொள். நான் அவருடைய தொண்டன். அவரே எனக்கு உயிர் என்பதால், இப்போது நான் சொல்லும் அனைத்தும் நிஜம். அவர் சத்தியத்தின் வடிவம். தர்மத்தின் சொரூபம். அவரை வெல்வதற்கு உலகில் யாரும் பிறக்கவில்லை. எனவே, அவருக்கு துரோகம் செய்துவிட்டு, நீ பிழைத்திருக்கலாம் என கருதாதே. நீ சிவபக்தன் என்பதால், அந்த சிவன் மூலம் அவரை வென்று விடலாம் என நினைத்தால் அதுவும் நடக்காது. மன்மதனையும், திரிபுர அசுரர்களையும் சிவன் கொன்றிருக்கிறாரே என நீ கேட்கலாம். அவர்கள் தவறு செய்தவர்கள், அதனால், அவரது நெற்றிக்கண்ணால் அவர்களை எரித்து விட்டார். எங்கள் ராமனோ நற்குணமுள்ளவர். நற்குணமுள்ளவர்களாகிய சத்தியசீலர்களை சிவனின் நெற்றிக்கண்ணால் ஏதும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள். படைக்கும் கடவுளான பிரம்மாவால் அவரை அழிக்க முடியாதா என நீ கேட்டால், அதற்கும் என்னிடம் பதில் உள்ளது. அந்த பிரம்மனும் நல்லவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து வந்தாலும் அவரை அழிக்க முடியாது. அதனால், எங்கள் ராமனைச் சரணடைந்து உன்னைக் காப்பாற்றிக்கொள், என்றார். மாருதியின் இந்தச் சொற்கள் ராவணனை மிகுந்த ஆத்திரமடையச் செய்தன. கோபத்தில் அந்த அசுரன், இந்தக் குரங்கைக் கொன்று விடுங்கள், என்று ஒரேயடியாக உத்தரவு போட்டுவிட்டான்.அப்போது விபீஷணன் எழுந்தான்.அண்ணா! இது முறையல்ல. தனது எஜமானன் சொல்லியனுப்பியதை தூதனாகிய இவன் வந்து சொன்னான். அது ஒன்றும் தவறல்ல, அதற்காக, இவனைக் கொல்வது என்பது தங்களது புகழுக்கு இழுக்கைத் தரும். நியாயத்தைக் கடைபிடிக்கும் எந்த அரசனும் தூதர்களைக் கொல்வதில்லை. தங்களை வெல்வதற்கு இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம். எனவே, இந்தக் குரங்கு இப்படி சொல்லிவிட்டதே என்பதற்காக கலங்க வேண்டாம். தாங்கள் இந்த தூதனை விடுவித்து விடுங்கள், என்றான்.
ராவணனோ ஆத்திரம் அடங்காமல், விபீஷணா! இவன் பாவி. பாவிகளைக் கொல்வது தவறல்ல, என்றதும், இடைமறித்த விபீஷணன், அண்ணா! வேண்டாம்! இவன் நமது படையினரைக் கொன்றிருக்கிறான் என்பது நிஜமே. இருப்பினும், தூதன் என்ற நிலையில் வந்திருப்பதால், தூதர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதற்கு பெரியோர்கள் வகுத்து வைத்துள்ள விதிகளின்படி, அங்கஹீனம் செய்தல், சாட்டையடி கொடுத்தல், மொட்டையடித்தல் போன்ற தண்டனைகளைக் கொடுக்கலாம். இது எதிரிகளை அவமானப்படுத்தியதற்கு சமம். நம் பராக்கிரமத்தை அவர்கள் உணர்வதற்குரிய சந்தர்ப்பமாகவும் அமையும். இதில் எந்த தண்டனையைக் கொடுப்பது என்ற முடிவைத் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம், என்று யோசனை சொன்னான். ராவணன் இதை ஏற்றுக்கொண்டான்.விபீஷணா! தக்க சமயத்தில் சரியான யோசனை சொன்னாய். இந்த தூதனுக்கு மறக்க முடியாத தண்டனை ஒன்றைக் கொடுக்க வேண்டும். குரங்குகளுக்கு அழகும் ஆபரணமுமாக இருப்பது வால் தான். இந்தக் குரங்கின் வாலில் நெருப்பு வைத்து இந்த பட்டணம் முழுவதும் இழுத்துச் செல்லுங்கள், என்றான். வால் என்றதும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ராவணனிடம் இருந்து சீதை மீட்கப்பட்டதும், கிஷ்கிந்தையில் அவர்கள் இறங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்த வானரப் பெண்களுக்கு, இந்த யுத்தத்துக்கு காரணமான சீதையைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. சுக்ரீவனின் வேண்டுகோளுக்கு இணங்க, புஷ்பக விமானத்தில் வந்த ராமனும், சீதையும் தரையிறங்கினர். அப்போது, ஒரு வானரப் பெண், இந்த சீதாவின் அழகில் மயங்கி தான் ராவணேஸ்வரன் இவளைக் கடத்திப் போனான் என்றார்கள். இவள் அழகாகத்தான் இருக்கிறாள். ஆனால், அதிலும் ஒரு குறை. இவளுக்கு நம்மைப் போல் வால் இல்லையே! என்றாளாம். அவரவருக்கு அவரவர் இயல்பு அழகு. அதிலும் குரங்குகளுக்கு நீண்ட வால்தான் அழகு. அதனால் தான் வாலுக்கு தீ வைக்கச் சொன்னான் ராவணன்.நாம் கூட குழந்தைகள் சேஷ்டை செய்தால், இவன் சரியான வாலு என்போம். காரணம், அந்த வால் எத்தகைய சேஷ்டைகளைச் செய்யப் போகிறது என்பதை இனிமேல் தானே பார்க்கப் போகிறோம்.அசுரர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.
அடேய்! சரியான சந்தர்ப்பம். இந்தக் குரங்கு நம் உறவினர்களில் பலரைக் கொன்று விட்டது. அதற்கு பழிவாங்க சரியான சந்தர்ப்பம். இதன் வாலில் துணிகளைச் சுற்றுங்கள். எண்ணெய்யை ஊற்றுங்கள். நெருப்பு வையுங்கள், என்று கூச்சலிட்டனர்.அப்போது மாருதி தன் மனதில், இவர்களை மட்டுமல்ல! இங்கிருக்கும் ராவணனையும் என்னால் கொல்ல முடியும். ஆனால், ராவணனைக் கொல்வதாக ராமபிரான் சபதம் எடுத்திருப்பதால், நான் அவரை மீறியதாக ஆகிவிடும். எனவே, இவர்களுக்கு உயிர் பிராணன் தருவது என் கடமையாகிறது.இப்போது, இவர்கள் என்னைக் கட்டி இழுத்துச் செல்வதும் நன்மைக்குத் தான்! இலங்கையை அணுஅணுவாகப் பார்த்து விடலாம். போருக்கு வரும் போது, எந்த இடத்திற்குச் செல்வது என்று முடிவு செய்ய வசதியாயிருக்கும், என்று நினைத்தார். ராட்சஷர்கள் அவரது வாலுக்கு தீ வைத்தனர். அந்த வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு அவர்களுடன் நகர்வலம் வந்தார்.இந்த விஷயத்தை ராட்சஷிகள் சிலர் சீதாவிடம் சென்று தெரிவித்தார்கள். அவள் உயிரே போனது போல துடித்துப் போனாள்.சீதாதேவி போன்ற தாயை உலகில் பார்க்க முடியாது. நமக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டால் அவளிடம் உடனடியாக மானசீகமாக முறையிட்டு விட்டால் போதும். அவள் நம்மைக் காப்பாற்ற ஓடோடி வந்து விடுவாள். நமக்காக கண்ணீர் வடிக்கும் கருணை தெய்வம் அவள். எனக்காக இங்கு வந்தவனுக்கு இந்தக் கதியா! என்றவள், அக்னி பகவானிடம், பகவானே! நான் என் கணவருக்கு செய்த பணிவிடைகள் அனைத்தும் உண்மையானால், நான் கற்புக்கரசி என்பது நிஜமானால், மாருதிக்கு நீ எந்த துன்பத்தையும் தரக்கூடாது. வெம்மைக்கு பதிலாக குளிர்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்தித்தாள்.மாருதிக்கு ஆச்சரியம்.வாலில் நெருப்பு எரிகிறது. ஆனால், உஷ்ணமே இல்லை. இது எப்படி சாத்தியம்? என்று ஆச்சரியப்பட்டார்.
ஆஞ்சநேயர் மிக மிக வருத்தப்பட்டார். ஐயோ! கோபத்தின் காரணமாக தகாத காரியம் செய்துவிட்டேனே! இலங்கைக்கு தீ வைக்க வேண்டும் என்று எண்ணிய என் வானர புத்திக்கு, சீதாதேவியும் இங்கே தான் இருக்கிறாள் என்று தெரியாமல் போய்விட்டதே! பல இடங்களில் பற்றிய தீ அசோகவனத்திலும் பற்றி, சீதாதேவியை அழித்திருந்தால் நிலைமை என்னாகும்? ஸ்ரீராமபிரானிடம் என்ன பதில் சொல்வேன்? அது மட்டுமல்ல! ஒரு உத்தம பத்தினியைக் கொன்ற தீராத பாவத்துக்கு ஆளாவேனே! ஒருவனுடைய உள்ளத்தில் கோபத்திற்கு மட்டும் இடம் கொடுத்து விட்டால், அவன் எத்தகைய பாவம் செய்யவும் அஞ்சமாட்டான், ஏன்...அவன் கற்றுத் தந்த ஆசிரியரையே கூட கொன்று விடுவான். கோபம் ஒருவனுடைய மனதில் எழுந்தால், நெருப்பை தண்ணீரால் அணைப்பது போல அப்படியே விட்டு விட வேண்டும். கோபக்காரன் துறவிகளையும், முனிவர்களையும், பெரியோர்களையும் உபத்திரவம் செய்ய தயங்கமாட்டான். பாம்பு சட்டையை உரிப்பது போல, கோபக்காரன் கோபத்தை புத்தியால் அடக்க வேண்டும். நான் கொடிய பாவி, என் புத்தியை தீயால் சுட வேண்டும், ஒருவேளை சீதாதேவிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமானால், நானும் இந்த அக்னியில் விழுந்து இறப்பேன். கோபக்காரனான என்னை அது குரங்கு தானே! அதற்கென்ன புத்தியிருக்கும் என்று பலரும் என்னைப் பழிப்பதற்கு முன் மரணத்தை ஏற்பேன், என புலம்பினார். பார்த்தீர்களா! ஒரு நிமிட கோபம் பிறரை மட்டுமின்றி, தன்னையே அழித்து விடும் தன்மையுடையது. கோபம் காரணமாக பெற்றவர்களை பிரிந்திருக்கும் பிள்ளைகள், பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் பெற்றோர், வாழ்க்கைத் துணையைப் பிரிந்திருப்பவர்கள் எல்லாம் இதைப் படித்த பிறகாவது, அந்தக் கோபத்தால் இதுவரை தங்களுக்கு என்ன பலன் கிடைத்துள்ளது என்பதைச் சிந்தித்துப் பார்த்து சேர்ந்து கொள்ள வேண்டும். இதனால் தான் சுந்தரகாண்டம் ஆயுள் முழுவதும் படிக்க வேண்டிய அருமருந்தாக திகழ்கிறது. ஆனால், மாருதி நினைத்தது போல் ஏதும் நடக்கவில்லை.
இலங்கையில் நெருப்பில் அகப்பட்டு இறக்கும் நிலையில் முனகிய ராட்சஷர்களில் சிலர், நாம் அழிகிறோம், ஆனால், ராமனின் துணைவியான அந்த சீதாவை மட்டும் இந்த நெருப்பு ஏதும் செய்யவில்லையே, என்று சொல்லி உயிர்விட்டார்கள். இதைக் கேட்ட ஆஞ்சநேயருக்கு போன உயிர் திரும்பியது போல் இருந்தது. சீதாதேவி தன் மகிமையால் பிழைத்தாள் என்று எண்ணியவராய், பாக்கியிருந்த அசுரர் வீடுகளையும் அழித்தார். பின்னர் சீதாதேவியை சந்தித்தார்.மாருதி! நீயே இங்கிருக்கும் மிச்சம் மீதி ராட்சஷர்களையும்...ஏன், ராவணனையே அழித்து என்னை மீட்டுச் சென்று விடுவாய் என்பதை பரிபூரணமாக நம்புகிறேன். நீ மகாதீரன். ஆனால், என் பர்த்தாவே என்னை மீட்டுச் செல்ல வேண்டும். அதுவே அவரது புகழுக்கும், ராவணன் செய்த தீங்கிற்கு பதிலடி கொடுப்பதாகவும் அமையும், என்றாள். அவளைப் பணிந்து வணங்கிய மாருதி, அரிஷ்டம் என்று பெயர் கொண்ட மலையில் ஏறி கிஷ்கிந்தை கிளம்பினார். அந்த மலையை அவர் அழுத்திய வேகத்தில் பூமிக்குள் புதைந்து போனது. பின்னர் மின்னல் வேகத்தில் பறந்து கடலின் அடுத்த கரையை அடைந்தார். அவர் வரும் வேகத்தைப் பார்த்தவுடனேயே, ஜெயத்துடன் திரும்பி வருகிறார் என்பதை வானர வீரர்கள் புரிந்து கொண்டனர். அவர் வந்து இறங்கியதும், அவருக்கு கிழங்கு, பழங்களை சாப்பிடக் கொடுத்தார்கள்.அவசர வேலையாக சென்றிருக்கும் நம் குடும்ப உறுப்பினர் ஒருவர் வீட்டுக்குள் நுழைகிறார். அவர் மகிழ்ச்சியான சூழலில் வந்தாலும் கூட, அவரிடம் உடனே என்ன நடந்தது என்று கேட்கக்கூடாது. வந்தவருக்கு ஒரு டம்ளர் தண்ணீராவது கொடுக்க வேண்டும். அவர் ஆசுவாசமானவுடன் பேச ஆரம்பிக்க வேண்டும். அதே போல வீட்டுக்குள் நுழைபவரும் அவசர அவசரமாக பேச்சைத் துவங்கக்கூடாது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்க வேண்டும். மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திலும் கூட நிதானம் இழக்காமல் இருப்பது நமது உடல்நிலைக்கு நல்லது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. பின்னர் மாருதி, தான் சென்று வந்த விபரத்தை வானர வீரர்களிடம் சொன்னார். அவர்கள் மகிழ்ச்சியுடன், அங்கதனின் அனுமதியுடன் சுக்ரீவனுக்குச் சொந்தமான மதுவனத்தில் தேன் குடித்து மகிழ்ந்தனர். இருப்பினும், சுக்ரீவனின் அனுமதியின்றி யாரும் அங்கு செல்லக்கூடாது என்பதால், வனத்தின் பாதுகாவலனான ததிமுகன் சுக்ரீவனிடம் சென்று முறையிட்டான். அவனது சொல்லில் இருந்தே, மாருதி சென்ற காரியம் ஜெயமாயிற்று என்பதை சுக்ரீவன் புரிந்து கொண்டான்.
பின்னர், வானரர்களும் வந்து சேர்ந்தனர். மாருதி அடைந்த வெற்றியின் காரணமாக, அனுமதியின்றி மதுவனத்தை அழித்து தேன்குடித்த வானரர்களை சுக்ரீவன் மன்னித்து விட்டான். அவர்கள் செய்த வேலைக்கு என்ன கூலி கொடுத்தாலும் தகும் என்பதே அவனது இந்த பெருந்தன்மைக்கு காரணம். பின்னர் மாருதி, சீதையைக் கண்டு வந்த வரலாற்றை ராமனை நமஸ்கரித்து சொல்ல ஆரம்பித்தார்.கண்டனென் கற்பினுக்கு அணியை என் கண்களால் என்றார். சொல்லின் செல்வர் அல்லவா? சீதையைப் பார்த்தேன் என்று சொல்ல ஆரம்பித்தால், சீதையை என்றவுடனேயே பார்க்கவில்லை என்று அடுத்த வார்த்தை வந்துவிடுமோ என்ற பயத்தில், ராமனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? அதனால் பார்த்தேன் சீதையை என பவ்யமாக உரைத்தார். அங்கு நடந்த எல்லா விபரங்களையும், சீதாபிராட்டி அசுரர்களிடம் படும் வேதனையையும் விவரித்து, அவள் தந்த சூடாமணியை வணக்கத்துடன் சமர்ப்பித்தார். அதைப் பார்த்து ராமன் அடைந்த துக்கத்திற்கு அளவேயில்லை.லட்சுமணா! இந்த ஆபரணத்தை என் சீதையின் சிரசில் பார்த்துள்ளேன். ஆனால், இப்போது தனியாகப் பார்க்கிறேன், என்று சொல்லி வருந்தினார். ஏன் லட்சுமணன் இதைப் பார்த்திருக்க மாட்டானா என்றால், பார்த்ததே இல்லை. அவனுக்கு அண்ணியின் முகம் இப்போது வரை தெரியாது. அவளது திருவடி மட்டுமே அவனுக்குத் தெரியும். தமையன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்காத உத்தமசீலனாக அவன் விளங்கினான்.பின்னர், ஸ்ரீராமா! நான் ஜனகபுத்திரியிடம் நீங்கள் உடனடியாக வந்து மீட்டுச் செல்வீர்கள் என தைரியமூட்டி, ஜீவனை விட இருந்த அவர்களுக்கு நம்பிக்கையூட்டினேன். தாங்கள் இட்ட கட்டளையை என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகச் செய்தேன், என அடக்கத்துடன் சொன்னார். நிஜ வீரன் ஆர்ப்பரிப்பதில்லை அல்லவா? ஆஞ்சநேயரின் இந்த இலங்கைப் பயணம் பல பாடங்களை நமக்கு தந்திருக்கிறது. யார் ஒருவருக்கு உயிர்க்கண்டம் இருக்கிறதோ, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது. நாமும், பிறர் நலம் கருதி வாழ்ந்து ஆஞ்சநேயரின் திருவருள் பெறுவோம்.
ஸ்ரீராம ஜெயம்.
சுந்தரகாண்டம் - இரண்டாம் பகுதி
சுந்தரகாண்டம் | |
சுந்தரகாண்டம் பகுதி-16மார்ச் 08,2011
தசரதர் என்ற மாமன்னரின் புத்திரனாய் அவதரித்தவர் ஸ்ரீராமன். அவர் பவுர்ணமி நிலா முகம் போன்ற முகமுடையவர். வில்வித்தையில் உலகிலேயே உயர்ந்தவர். பல ராட்சஷர்களை அழித்து வெற்றி வாகை ...மேலும்
சுந்தரகாண்டம் பகுதி-17மார்ச் 08,2011
வானரனே! மக்களுக்கு ஏதாவது கஷ்டமும், பிரச்னையும் ஏற்படும் சமயத்தில் ராமனுக்கு உற்சாகமும், சந்தோஷமும் அதிகரிக்கும், என்பதே அந்த வார்த்தை.இதைப் படித்தவுடன் சற்று ... மேலும்
சுந்தரகாண்டம் பகுதி-18மார்ச் 08,2011
நட்பு என்பது வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. மகளை ஒருவனுக்கு திருமணம் முடித்துக் கொடுப்பவர், வேலை, குடும்பப் பின்னணி இவையெல்லாம் நன்றாக இருந் தாலும் கூட, மிக முக்கியமாக ...மேலும்
சுந்தரகாண்டம் பகுதி-19மார்ச் 08,2011
பின்னர் அவனுக்கு ஆறுதல் வரும் வகையில் பேசினாள்.ஆஞ்சநேயா! உன் தேஜஸ், பராக்கிரமம் பற்றி நான் அறிவேன். உன்னோடு நான் வந்தேன் என்றால், நீ வேகமாக பறந்து செல்லும் போது, காற்றின் ...மேலும்
சுந்தரகாண்டம் பகுதி-20மார்ச் 08,2011
சுந்தரகாண்டம் என்றால் என்ன? ஆஞ்சநேயர் கிஷ்கிந்தையில் இருந்து கிளம்பி, இலங்கை சென்று, சீதையைச் சந்தித்து, அசோகவனத்தை அழித்து, ராவணன் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ...மேலும்
சுந்தரகாண்டம் பகுதி-21மார்ச் 08,2011
யாரடா அங்கே! உடனே செல்லுங்கள், அந்த வானரனைக் கொல்லுங்கள், என்று கட்டளை பிறந்தது ராவணனுடைய வாயில் இருந்து!பலத்தில் ராவணனுக்கு இணையான எண்பதாயிரம் அசுர வீரர்கள் பெரிய ...மேலும்
சுந்தரகாண்டம் பகுதி-22மார்ச் 08,2011
விரூபாக்ஷன், யூபாக்ஷன், துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன் என்ற தனது ஐந்து சேனாதிபதிகளை அவன் அழைத்தான். அவர்கள் போர் செய்வதில் மிகுந்த திறமைசாலிகள்.அவர்களிடம்,சேனாதிபதிகளே! ...மேலும்
சுந்தரகாண்டம் பகுதி-23மார்ச் 08,2011
பிரம்மா சகல ஜீவராசிகளையும் படைப்பவர். இன்னாருக்கு இன்னாரென எழுதி வைப்பவர். அதற்கு எல்லாரும் கட்டுப்பட்டே தீர வேண்டும். படைத்தவருக்குரிய மரியாதையை நாம் தரவேண்டாமா அதனால், ...மேலும்
சுந்தரகாண்டம் பகுதி-24மார்ச் 08,2011
ராவணா! எங்கள் ராமனைப் பற்றி நீ தெரிந்து கொள். நான் அவருடைய தொண்டன். அவரே எனக்கு உயிர் என்பதால், இப்போது நான் சொல்லும் அனைத்தும் நிஜம். அவர் சத்தியத்தின் வடிவம். தர்மத்தின் ... மேலும்
சுந்தரகாண்டம் பகுதி-25மார்ச் 08,2011
அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி.அக்னி சுடவில்லை என்றால் அது ராமனின் கிருபையினாலேயே நடக்கிறது. சீதாதேவியின் பிரார்த்தனையால் இது நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் அக்னியும், ... மேலும்
சுந்தரகாண்டம் பகுதி-26மார்ச் 08,2011
ஆஞ்சநேயர் மிக மிக வருத்தப்பட்டார். ஐயோ! கோபத்தின் காரணமாக தகாத காரியம் செய்துவிட்டேனே! இலங்கைக்கு தீ வைக்க வேண்டும் என்று எண்ணிய என் வானர புத்திக்கு, சீதாதேவியும் இங்கே தான் ...மேலும்
|
< Previous 1 2
சுந்தரகாண்டம் பகுதி-16
ஆஞ்சநேயர், வாயுவின் மைந்தனாக ஏன் பிறந்தார் தெரியுமா?காற்றிலுள்ள ஒரு வாயு தான் உலக உயிர்கள் பிராணனுடன் திகழ காரணமாக இருக்கிறது. அதனால் தான் அதை பிராணவாயு என்கிறார்கள். சீதாதேவி பிராணனை விட இருந்தாள். அந்த சமயத்தில் வாயுமைந்தன் அருகில் வந்தார். பிராணவாயு கிடைத்தால் எப்படி உயிர்கள் வாழுமோ, அதுபோல் வாயுவின் மைந்தன் மரணத்துக்கு தயாரான அவளை வாழ வைத்தான். சீதாவை வாழ வைத்ததால் ராமனை அவர் வாழ வைத்திருக்கிறார். ராமன் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை. ஆக, சகல ஜீவராசிகளையும் அவர் பாதுகாத்திருக்கிறார். தெய்வம் உலக உயிர்களை வாழ வைக்கும். அந்த தெய்வத்தையே வாழ வைத்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் அவர் வாயுமைந்தனாகப் பிறந்தார். உயிரே போகுமளவுக்கு இடைஞ்சல் வந்தாலும், அதைப்போக்கி நம்மை வாழ வைப்பார் அந்த சிரஞ்சீவி!என் பர்த்தா இங்கே வரப்போகிறார் என நினைக்கிறேன். அதற்கு முன்னதாக நானிருக்கும் இடத்தை அறிய இவர் தூதுவனாக வந்திருக்கிறார் என மகிழ்ச்சி பொங்கப் பார்த்தாள். அதே நேரம் சந்தேகமும் அவளைப் பிடித்துக் கொண்டது.நிஜத்திலேயே இவன் ராமதூதன் தானா? ஒருவேளை மாயக்காரனோ? ஒருவேளை நான் கனவு காண்கிறேனோ? கனவில் குரங்கைக் கண்டால் நம் சொந்தங்களுக்கு தீங்கு வருமென்று சாஸ்திரம் சொல்கிறதே! என் தந்தைக்கோ, ராமலட்சுமணர்களுக்கோ கேடு வந்துவிடக் கூடாதே! ஆனால், நிச்சயமாக இது கனவல்ல. நிம்மதியில்லாதவர்களுக்கு எப்படி உறக்கம் வரும்? நான் தூங்கி தான் பலநாளாகிறதே. எனவே, நிச்சயம் இது கனவல்ல. ஒருவேளை நாமாகவே கற்பனை செய்து கொள்கிறோமோ! கற்பனைக்கு உருவம் கிடையாது. ஆனால், இங்கே குரங்கு முகத்துடன் ஒருவன் அமர்ந்திருக்கிறானே! இவனது உருவஅமைப்பு, பேச்சு இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், நிச்சயமாக இவன் நமக்கு சகாயம் செய்யவே வந்திருக்கிறான். பிரகஸ்பதி, இந்திரன், பிரம்மா, அக்னி ஆகிய தெய்வங்கள் நான் நினைப்பதை உறுதியாக்கட்டும் என்று அவர்களைப் பிரார்த்தனை செய்தாள். இன்று குரு பெயர்ச்சி. ஆனானப்பட்ட சீதாதேவியே, பிரகஸ்பதியான குருவிடம் தனது கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்திருக்கிறாள். சாதாரண ஜென்மங் களான நாம் எம்மாத்திரம்? இந்த இனியநாளில், இந்த அத்தியா யத்தைப் படிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். நாம் ராசிபலன்களைப் படித்து மனம் குழம்பிப் போயிருப்போம். சீதாதேவி குருவிடம் வேண்டிக்கொண்டது போல, நாமும் நம் கஷ்டம் நீங்க அவரிடம் மனதார வேண்டிக்கொண்டால், கெடுபலன்களெல்லாம் தீர்ந்து போகும். ஆஞ்சநேயர் இப்போது மரத்தில் இருந்து கீழே இறங்கினார். சீதாவின் முன்னால் வந்து நின்றார். தலைமேல் கை கூப்பி, சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார். தாயே! தாமரைக் கண்களும் பிரகாசமான முகமும் கொண்ட தாங்கள் யார்? தாங்கள் சோகமே உருவாக கண்ணீர் வடிக்க காரணம் என்ன? நீங்கள் கிழிந்த ஆடையுடன் இருப்பது சற்றும் பொருத்தமாக இல்லையே! வசிஷ்டரைப் பிரிந்து சென்ற அருந்ததி போலவும், கணவரையோ, குழந்தைகளையோ, உடன்பிறந்தவர்களையோ இழந்து வருந்துபவர்களைப் போலவும் தெரிகிறதே! தங்கள் கதையை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றார். அவரது பணிவான வார்த்தைகள் கேட்டு மகிழ்ந்த சீதா, ராமருக்கு வாழ்க்கைப்பட்டது முதல் அன்று வரை நடந்த சகலத்தையும் அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தாள்.பொதுவாக பெண்கள் தங்கள் கணவரின் பெருமை பற்றி தம்பட்டம் அடிக்க வேண்டுமென்றால், சாப்பாடு, தூக்கம், துக்கம் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். தன் பர்த்தாவைப் பற்றி பேசுவார்கள்...பேசுவார்கள்.....பேசிக் கொண்டே இருப்பார்கள். இப்போது, நம் சீதாவுக்கு ஒரு ஆஞ்சநேயர் கிடைத்துவிட்டார். விடுவாளா அவள்...தன் நாயகனின் பெருமையை ஒரு இடத்தில் மிகமிக உச்சமாக வர்ணித்தாள். அது என்ன? | |
சுந்தரகாண்டம் பகுதி-17
இவன் அருகில் நெருங்கி வருவதைப் பார்த்தால் ஒருவேளை ராவணன் அனுப்பிய ஆளாக இருப்பானோ என்று. சற்று விலகி நின்று, இவனிடம் போய் நம்முடைய கதையைச் சொல்லிவிட்டோமே! முன்பின் தெரியாதவர்களிடம் வீட்டுப்பிரச்னையை சொல்லியிருக்கக் கூடாதே என்ற மனோபாவம் வேறு அவளை வருத்தியது. அவளது முகக்குறிப்பை உணர்ந்து கொண்ட ஆஞ்சநேயர், அன்னையே! கலக்கம் வேண்டாம், என்றவர் ஸ்ரீராமனின் நற்குணங்களையெல்லாம் பட்டியலிட்டார். அதைக் கேட்டு உருகிப்போனாள் சீதா. பின்னர் தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டார்.தாயே! என் பெயர் அனுமான். நீங்கள் சந்தேகப்படுவது போல் ராவணன் அல்ல. நான் ராமதூதன் என்பதை நம்புங்கள், என்று பணிவாகவும், கனிவாகவும் சொன்னார்.பின்னர் சீதா அனுமானிடம், அனுமானே! உனக்கும் என் கணவருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்று கேட்க அவர் அந்த வரலாற்றைச் சொன்னார். பின்னர் சீதையைப் பிரிந்த ராமனின் நிலை பற்றி உருக்கமாக எடுத்துச் சொன்னார்.அம்மா! ராவணன் தங்களை அபகரித்த பிறகு, ஸ்ரீராமன் துக்கத்தால் வாடுகிறார். தாங்கள் ராவணனால் கடத்தப்பட்ட போது கழற்றி எறிந்த ஆபரணங்களைக் கண்டெடுத்து சுக்ரீவ னிடம் ஒப்படைத்தேன். அவர் அவற்றை ராமனிடம் கொடுத்தார். அதைப் பார்த்து அவர் புலம்பியதை நினைத்தால் சோகம் நெஞ்சை அடைக்கிறது. தங்களை பார்க்காமல் வேதனை யால் தவிக்கிறார். நித்திரையின்றி புலம்புகிறார். மரங்களையும், செடிகளையும் பார்த்து நீங்கள் அவளைக் கண்டீர்களா என்று கேட்கும்போது ஏற்படும் துக்கத்தை என்ன வார்த்தைகளால் வடிப்பேன்! ஆயினும், இனி உங்களுக்கு கவலை வேண்டாம். இந்த ராவணனை அழித்து உங்களை அவர் மீட்டுச்செல்வார், என்றார்.இத்தனையும் கேட்டபிறகு அனுமான் ராமனின் தூதர் என்பதை உறுதியாக நம்பினாள் சீதா.
இந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில், தாயே! ஸ்ரீராமபிரான் தங்களுக்கு அடையாளம் காட்டும் வகையில் ஒரு மோதிரத்தை என்னிடம் தந்தார். இதோ! அந்தக் கணையாழி, என்று அவளிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் கிரகணத்தில் இருந்து விடுபட்ட சந்திரன் போல் அவளது முகம் பிரகாசித்தது. இவன் உயிர்களை வாழ வைப்பவன் என்று முன்னர் கருதினோமோ அது நூற்றுக்கு நூறு உண்மை என்று வாய்விட்டுச் சொன்னாள். அந்த சந்தோஷத்துடன், வானரனே! இந்த இலங்கைக்குள் நுழைவது என்பது நடக்காத காரியம். ஆனால், மகாபுத்திமானான நீ இங்கே நுழைந்ததில் இருந்தே உன் புத்தியும், சக்தியும், பலமும் அளவிடற்கரியது என்று சொல்வேன். அது மட்டுமா? நூறு யோஜனை தூரமுள்ள கடலை பசுவின் குளம்படியைப் போல மிகச்சாதாரணமாக தாண்டி வந்தாயே! அந்த பராக்கிரமத்தை என்ன சொல்வது? என்று ஆஞ்சநேயரைப் புகழ்ந்தவள், ராம லட்சுமணர் நலம் பற்றி விசாரித்தாள்.என் ராமன் எப்படியிருக்கிறார்? என் கொழுந்தன் லட்சுமணன் எப்படியிருக்கிறான்? ராகவன் நலமாயிருந்தால் என்னைக் கடத்திய குற்றத்திற்காக இதற்குள் இந்த பூமியை எரித்திருப்பாரே? அவருக்கு ஒருவேளை ஏதாவது ஆகி விட்டதா? என்னைப் பிரிந்த வருத்தத்தில் இளைத்து விட்டாரா? சக்தியிழந்து போனாரா? இப்போதும் நல்ல நண்பர்களைத் தான் தேர்ந்தெடுக்கிறாரா? என்று நிறுத்தினாள். மனைவி போய்விட்டாள். அதிலும் இன்னொருவன் தூக்கிக்கொண்டு போய்விட்டான். அவள் சுத்தமாக இருப்பாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நீ இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப்பா என்று தானே சாதாரண உலகம் தன் நண்பர்களுக்கு கற்றுத்தரும்!அப்படிப்பட்ட கெட்ட போதனை தரும் நண்பர்களாக இல்லாமல், ராமனுக்கு உத்தம நண்பர்கள் கிடைத்துள்ளார்களா என்பதே சீதாவின் கவலை.
சுந்தரகாண்டம் பகுதி-18
அம்மா! தங்கள் கணவர் தாங்கள் இருக்குமிடத்தை அறியவில்லை. இனி, நான் போய் சொன்னதும், அவர் வானரப்படைகளுடன் வந்து தங்களை மீட்டுச் செல்வார். அவரால் இந்தக் கடலைத் தாண்டி வர முடியுமா என்ற சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். அவர் பராக்கிரமசாலி. அவர் நல்ல உணவு வகைகளை சாப்பிடுவதில்லை. பழம், கிழங்கு முதலானவையே அவரது உணவு. காட்டிலே வசிக்கும் பூச்சிகள் அவரைக் கடிக்கும் உணர்வு கூட இல்லாமல் சோகமே வடிவாக இருக்கிறார். தூக்கம் மிகவும் குறைந்து விட்டது. தூங்கினாலும் வாய் சீதா என்றே கூறுகிறது. இதுகேட்ட சீதா மிகவும் வருத்தப்பட்டாள்.ஆஞ்சநேயா! விதி மிகவும் சக்தி வாய்ந்தது. அயோத்திக்கு மன்னனாக வேண்டிய சகல ஐஸ்வர்யங்களும் பொருந்திய ராமனாக இருந்தால் என்ன! அவரது மனைவியான நானாக இருந்தால் என்ன! சாதாரண பிரஜையாக இருந்தால் என்ன! விதிக்கு தப்புபவர் யாரும் கிடையாது. அதையே நாங்கள் இப்போது அனுபவிக்கிறோம், என்றாள்.பாருங்களேன்! ராமனாக பூமிக்கு வந்தவர் சாட்சாத் மகாவிஷ்ணு. அவரைச் சுமந்த ஆதிசேஷன் லட்சுமணன். லட்சுமி தாயாரே சீதா. தெய்வங்களாக இருந்தாலும் கூட, மானிடப் பிறப்பெடுத்து அவஸ்தைப்பட வேண்டும் என்ற விதியிருந்தால் அதை மாற்ற யாராலும் முடியாது என்பது இதன் உட்பொருள். அதனால், நமக்கு கஷ்டம் வரும்போது கலங்கக்கூடாது. அது என்ன செய்து விடும் என்று மோதிப்பார்க்க வேண்டும். கலியுகம் என்றாலும் கூட, இங்கும் கூட ஒரு சில நல்லவர்கள் உண்டு. அவர்கள் ஆஞ்சநேயரைப் போல் நமக்கு துணை வருவார்கள். என்ன நடந்தால் என்ன! ஆண்டவனிடம் பாரத்தைப் போட்டு விட்டு நம் வழியில் போய்க்கொண்டிருக்க வேண்டும்.சீதா தொடர்ந்தாள்.ஆஞ்சநேயா! நீ ராமனிடம் செல். ராவணன் என்னை அவனது மனைவியாக்கிக் கொள்ள ஒரு வருடம் அவகாசம் தந்திருக்கிறான்.
பத்து மாதங்கள் முடிந்து விட்டன. இன்னும் இரண்டு மாதத்திற்குள் என் கணவர் இங்கு வந்து என்னை அழைத்துச் செல்லா விட்டால், நான் உயிரை விடுவேன் என அவரிடம் சொல்லிவிடு. ராவணனின் சகோதரன் விபீஷணன், என்னை விடுவிக்கும்படி அண்ணனுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறான். அதையும் அவன் லட்சியம் செய்யவில்லை. விபீஷணனின் மனைவி சுரஸை, இந்தத் தகவலை தன் மூத்தமகள் அனலை மூலமாக எனக்கு சொல்லியனுப்பினாள். எனவே, நான் ராவணனால் சிரமப்படப் போவது நிச்சயம். அதற்குள் அவர் வந்து என்னை மீட்டுவிடுவார் என்றே கருதுகிறேன், எனச்சொல்லி கண்ணீர் வடித்தாள். ஆஞ்சநேயரும் மனம் கலங்கி, தாயே! கவலையை விடுங்கள். தங்களை மீட்டுச் செல்ல ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தான் வரவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? என் முதுகில் அமர்ந்து கொண்டால் கணநேரத்தில், நான் தங்களை அவரிடம் கொண்டு சேர்த்து விட மாட்டேனா? என்றார்.இதைக் கேட்டு சீதைக்கு கோபம் வந்துவிட்டது. நீ குரங்கு என்பதையும், உன் குரங்கு புத்தியையும் காட்டிவிட்டாய் அல்லவா? என்னை நீ கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறுவது நகைப்பையே வரவழைக்கிறது. மிகச்சிறியவனான நீ என்னை எப்படி அங்கே கொண்டு சேர்க்க முடியும், என்று கேட்டாள். ஆஞ்சநேயருக்கு அவமானமாகப் போய்விட்டது.என்னை ஒருவர் கூட இப்படி அவமானமாகப் பேசியதும் இல்லை, என் சக்தியை சந்தேகப்பட்டவரும் இல்லை என்று மனதில் நினைத்தபடியே, பொறுமையுடன், தாயே! என்னை நீங்கள் சாதாரண குள்ளக்குரங்கு என்று நினைக்கிறீர்கள். இதோ பாருங்கள்! என்றார். அப்போது அவரது உருவம் வானத்தையும், பூமியையும் அடைத்த வகையில் மிக உயரமானது. ஆஞ்சநேயரின் அந்த விஸ்வரூபம் கண்டு சீதா ஆச்சரியப்பட்ட போது, அன்னையே! உங்களை இந்த இலங்கை மண்ணோடு பெயர்த்துக் கொண்டு செல்லும் ஆற்றல் கூட என்னிடம் உண்டு. என்னை சந்தேகிக்காதீர்கள், என்றார். சீதா உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனாள். அவசரப்பட்டு ஆஞ்சநேயனை திட்டிவிட்டோமே என்று மனதுக்குள் சலித்தாள்.
சுந்தரகாண்டம் பகுதி-19
அவன் வல்லவன், நல்லவன். என் கணவர் இட்ட கட்டளையை சற்றும் மறுக்காமல் செய்யக்கூடியவன். என் ஆசிர்வாதம் அவனுக்கு என்றும் உண்டு. ஆஞ்சநேயா! நான் குறிப்பிட்ட காலத்துக்குள் ராம லட்சுமணர் இங்கு வராவிட்டால், நான் பிழைத்திருக்க மாட்டேன் என்பதை உறுதியாகச் சொல்லி விடு, என்று சொல்லி, தனது புடவையில் முடிந்து வைத்திருந்த சூடாமணியை எடுத்துக் கொடுத்தாள்.அதைப் பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் அவளுக்கு மேலும் ஆறுதல் வார்த்தைகள் கூறி, ரகுநாதன் ராமனுடன் விரைவில் வருவேன் என்று உறுதியளித்தார். கிஷ்கிந்தைக்கு திரும்பிச் செல்ல அனுமதி கேட்டார். அவளுக்கோ அவருக்கு அனுமதியளிக்க மனம் வரவில்லை.ஆஞ்சநேயா! உனக்கு களைப்பாக இருந்தால் ஒன்றிரண்டு நாள் இங்கேயே தங்கிப் போயேன். நீ இங்கிருந்தால் எனக்கும் ஆறுதலாக இருக்கும். நீ வரும் முன்பு மிகுந்த சோகத்தில் இருந்தேன். உன்னைப் பார்த்ததும் என் துக்கத்தை மறந்து விட்டேன். நீ போய் விட்டால், முன்பை விட என்னைத் துக்கம் வாட்டுமே! சரி போகட்டும்! ஒரு சந்தேகம்! இந்தக் கடலைத் தாண்ட வாயுவும், நீயும், கருடனும் மட்டுமே தகுதியுள்ளவர்கள். என் நாதனும், லட்சுமணனும் எப்படி இங்கு வருவார்கள்? ஆனால், உன் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உன்னால் எதையும் சாதிக்க முடியும். அவர்களை இங்கே கூட்டி வர வேண்டியது உன் பொறுப்பு, என்றாள். உடனே தன்னடக்கத்துடன் ஆஞ்சநேயர் என்ன சொன்னார் தெரியுமா? அதைப் படிப்பதற்கு முன் உங்களுடைய அலுவலகம், வீடு ஆகியவற்றை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். சிலர் அலுவலகங்களில், தங்களால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என பெருமையடித்துக் கொள்வார்கள். அனைத்தும் அறிந்த மேதாவி களாகக் காட்டிக் கொள்வார்கள். மற்றவர்களை மட்டம் தட்டுவதில் சிலருக்கு அலாதி இன்பம். வீட்டை எடுத்துக் கொண்டால் ஒரு குடும்பத்தலைவர், தன் சம்பாத்தியம் இல்லாவிட்டால் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடும் என பெருமையடித்துக் கொள்வார். ஆனால், எந்த சாதனையையும் படைக்கத் தகுதியுள்ள ஆஞ்சநேயர் என்ன சொன்னார் தெரியுமா? அம்மா! எங்கள் தலைவர் சுக்ரீவன் அளவற்ற பராக்கிரமம் கொண்டவர். அவரைச் சார்ந்துள்ள வீரர்கள் எல்லோருமே என்னை மிஞ்சிய பலசாலிகள். எனக்கு குறைந்தவர்கள் அங்கு யாருமில்லை. அதனால், அங்கிருந்து இங்கே வந்து சேர்வதில் எந்த தடையும் இராது. இதில் சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். நிச்சயம் ராமன் எங்களுடன் வருவார். ராவணனைக் கொல்வார். நாங்கள் இலங்கை சமுத்திரத்தை தாண்டுவோம். நீங்கள் துக்க சமுத்திரத்தை தாண்டுவீர்கள், என்றார்.சீதா மிகவும் சந்தோஷப்பட்டாள்.ஆஞ்சநேயனே! பயிர் பாதி விளைந்து பலனைக் கொடுக்கும் சமயத்தில், மழையில்லாமல் போனால் பயிர் வாடும். அப்போது தெய்வ அனுக்கிரஹத்தால் மழை பெய்தால் பயிர் எப்படி தழைக்குமோ அந்த நிலைமையில் நான் இருக்கிறேன். நான் ராமபிரானுடன் சுகவாழ்வு நடத்தினேன். பின்னர் அவரைப்பிரிந்து உயிரை விட இருந்த சமயத்தில் நீ வந்து காப்பாற்றினாய். இப்போது என்னிடம் இருப்பது என் நாதன் எனக்களித்த சூடாமணி மட்டும் தான். அதைப் பார்க்கும் போதெல்லாம் அவர் முகம் அதில் தெரியும். இப்போது, அதையும், என்னை நீ பார்த்த அடையாளத்திற்காக கொடுத்து விட்டேன். இப்போது என்னிடம் எதுவுமே இல்லை. என் ராமன் இங்கு வரும் நாள் மட்டுமே எனக்கு நம்பிக்கையூட்டும் நாள், என்று சொல்லி அழுதாள்.மாருதி அவளை மீண்டும் தேற்றி புறப்படத் தயாரானார். அவரது முகத்தில் வெற்றியைக் குறிக்கும் விதத்தில் ஜெயலட்சுமி குடி கொண்டாள். | |
சுந்தரகாண்டம் பகுதி-20
அவர்கள் என்னுடன் போர் செய்வார்கள். போர் என்று வந்துவிட்டால் வெற்றி தோல்வி யாருக்கு என்பது உறுதியில்லை என்று பெரியவர்களெல்லாம் சொல்கிறார்கள். அது நிஜமும் கூட. ஒருவேளை அவர்கள் என்னை விட வீரமுள்ளவர்களாக இருந்தால் நான் தோற்றுப்போவேன். பின்னர், இங்கே சீதை இருக்கும் விஷயம் ராமனுக்கு தெரியாமலே போய்விடும். என்ன செய்யலாம்? என்று தீவிரமாக யோசித்தார்.முடிவில், போரில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். ஆனால், பலசாலிக்கு எப்போதுமே வெற்றி உறுதி என்பதும் போர் சாஸ்திரம் சொல்வது தானே! நான் ஒப்பற்ற வீரமுள்ளவன் என்று நம்புகிறேன். அதனால் எனக்கு தோல்வி என்பதே கிடையாது. எனவே, இந்த ராட்சஷர்களுடன் போரிடுவதில் தப்பே இல்லை என்று முடிவெடுத்தார். ஆஞ்சநேயர் இப்படி எண்ணியதை, ஆணவம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அது நம்பிக்கை. ஒரே பாடத்தை பல மாணவர்கள் படிக்கிறார்கள். சிலர் அதைக் கடினமாகக் கருதி திண்டாடி குறைந்த மதிப்பெண் வாங்குகிறார்கள். வேறு சிலர் அதை எளிதாக எடுத்துக் கொண்டு நூற்றுக்கு நூறு வாங்கி பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஆஞ்சநேயர் இதில் இரண்டாவது ரகமாக இருந்தார். நான் நிச்சயம் ஜெயிப்பேன், மகாராஜா சுக்ரீவனுக்கு பெருமை சேர்ப்பேன் என்று நம்பினார். இப்போது புரிந்ததா? ஒருவன் முதலில் தன்னை நம்ப வேண்டும். தன்னை நம்புபவன் எதிலும் வெற்றிவாகை சூடுவான். எவ்வளவு பெரிய தத்துவத்தை சுந்தரகாண்டம் நமக்குச் சொல்கிறது பாருங்களேன்! இப்படி அணுஅணுவாக ஆய்வு செய்து சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களே வெற்றி வாகை சூட முடியும். சரி.. வம்புக்குத்தான் போகக்கூடாது. ஆனால், வந்த சண்டையை எப்படி விடுவது? ராவணன் தான் இந்த சண்டைக்கு மூலகர்த்தா. அவன் இப்போது மாளிகையில் இருக்கிறான். அவனது கவனத்தை ஈர்ப்பது எப்படி? என்று சிந்தித்தார்.
தன் கண்முன்னால் பரந்து விரிந்து கிடந்த அசோகவனத்தைப் பார்த்தார். இதை அழித்து விட வேண்டும். இதை அழித்தால் சீதை இருக்குமிடத்தை யாரோ அழிப்பதாக ராவணனின் கவனத்துக்குச் செல்லும். அவனுடைய ஆட்களை அனுப்புவான். அவர்களைக் கொன்று குவிக்க வேண்டும். பின்னர் ராவணனே வருவான், என்று சிந்தித்தார். தன் எண்ணத்தை உடனடியாக செயல்படுத்தி விட்டார். குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல என்பார்களே...அதுபோல், அந்த அழகிய அசோகவனம் களையிழந்து போய்விட்டது. மரங்களைச் சாய்த்து, அங்கிருந்த தடாகக்கரைகளை நொறுக்கி அடையாளமே தெரியாமல் செய்துவிட்டார். சீதாதேவி அமர்ந்திருந்த சிம்சுபா மரத்தின் பக்கம் மட்டும் அவர் செல்லவில்லை. ராட்சஷிகள் இந்த சப்தம் கேட்டு எழுந்தனர். தாங்கள் இருப்பது அசோகவனத்தில் தானா அல்லது வேறு ஊரிலா என்ற சந்தேகம் வந்துவிட்டது. சீதை அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து, யார் இவன்? உனக்குத் தெரிந்தவனா? என்று கேட்டார்கள்.எனக்கு அவனை யாரென்றே தெரியாதே. இது ராட்சஷர்கள் வாழும் நாடு. யாரோ ஒரு சக்திவாய்ந்த ராட்சஷன் தான் இப்படி செய்திருக்கிறான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரியாத விஷயமா? பாம்பின் பால் பாம்பறியுமே, என்று சொல்லிவிட்டாள்.ஒருவருக்கு நன்மை விளைகிறதென்றால் அப்போது பொய் பேசுவதில் தவறில்லை. சாட்சாத் மகாலட்சுமியே பூமிக்கு வந்து விட்டாலும், சில நன்மைகள் கருதி பொய் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு நல்லவனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி அவள் சொல்லிவிட்டாள்.ராட்சஷிகள் ராவணனிடம் ஓடினார்கள்.மகாராஜா! நம் அசோகவனத்திற்குள் புகுந்த ஒரு குரங்கு வனத்தை பாழ்படுத்தி விட்டது. அது நீர் விரும்பும் சீதையிடம் பேசியதாக நாங்கள் அறிகிறோம். உமக்கு சொந்தமாக உள்ள ஒருத்தியிடம் பிறர் பேச நீர் அனுமதிக்கலாமா? அதை உடனே பிடித்து விசாரிக்க வேண்டும். அது ராமனால் அனுப்பப்பட்டதாக இருக்கும் என நம்புகிறோம், என்றனர். ராவணனின் கண்கள் சிவந்தன.
சுந்தரகாண்டம் பகுதி-21
அடேய் ராட்சஷப் பதர்களே! ராமன், அவர் தம்பி லட்சுமணன், என் மகாராஜா சுக்ரீவன் ஆகியோருக்கு நிகரான பலசாலிகள் இவ்வுலகில் இல்லை. நான் ராமதூதன். அவரது பக்தன். வாயுவின் புத்திரன். எதிரிகளுக்கு எமன். நீங்கள் என் காலுக்கு தூசு. உங்கள் அரசன் ராவணனைப் போல் ஆயிரம் அசுரர்கள் வந்தாலும் அவர்களைப் பந்தாடி விடுவேன். சீதையைக் கண்டேன். அவளிடம் பேச வேண்டியதைப் பேசி விட்டேன். இனி, உங்களையெல்லாம் கொன்று இலங்கையை சர்வநாசமாக்கி விட்டு, சுகமாக என் இருப்பிடம் திரும்புவேன், என சவால் விட்டார். நம் ஊரில் ஜெயிப்பது முக்கியமல்ல. பக்கத்து ஊரில் போய் ஜெயிக்க வேண்டும். அப்படி செய்யாமல், நம்மை நம்பர் ஒன்று என சொல்லிக் கொள்வது எப்படி முட்டாள்தனமோ, அது போல் இல்லாமல், மாருதி பக்கத்து நாட்டில் போய் சவால் விட்டார்.ராட்சஷர்கள் அந்தக் குரல் கேட்டே நடுங்கி விட்டார்கள். மாருதியின் பார்வையில் ஒரு இரும்பு உலக்கை பட்டது. அதை உருவி எடுத்தார். களத்தின் நடுவில் அவர் நிற்க சுற்றிலும் ராட்சஷர்கள் நின்றார்கள். அவர்களை எல்லாம் அந்த உலக்கையை சுழற்றி நாசம் செய்தார். சிலருக்கு பயம் வந்து விட்டது. அவர்கள் ராவணனிடம் ஓடினார்கள்.நாங்கள் மட்டும் தான் மிச்சம். மற்றவர்களை அந்தக் குரங்கு நாசம் செய்து விட்டது. விண்முட்ட உயர்ந்து நின்ற குரங்கிடம் இருந்து தப்பி வந்ததே பெரிய காரியம் என்றார்கள்.ராவணன், தன் முதலமைச்சர் பிரஹஸ்தனுடைய புத்திரன் ஜம்புமாலியை அழைத்து, நீ போய் அந்த குரங்கைக் கொன்று வா, என்றான். இதற்குள் மாருதி, அசுரர்களைக் கொன்றால் போதுமா? அசோகவனம் அழிந்தால் போதுமா? அதோ! அங்கே தெரியும் ராவணனின் அரண்மனை மாடத்தை இடித்து தள்ள வேண்டும், என முடிவு செய்தார். அந்த உப்பரிகை நவரத்தினங்களால் ஜொலித்தது.
மாருதி அதன் எதிரே ஒளி பொங்க நின்றார். அதைக் காவல் காத்த அசுரர்களை நோக்கி, அடேய்! இந்த அரண்மனையை அழிக்க வந்திருக்கிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள், என சவால்விட்டார். அசுர காவலர்கள் மாருதியை நோக்கி ஆவேசத்துடன் ஓடி வந்தார்கள்.அந்த பலவான்களில் பலர் ஓகம் எனப்படும் பலமுடையவர்கள். நூறு யானை பலம், ஆயிரம் யானை பலம் என்பது போல ஓகம் என்பது இதையெல்லாம் விட அதிக எண்ணிக்கையுள்ள யானைகளின் பலமுடையவர்கள். அவர்களை எதிர்கொள்ள மாருதி தயாரான போது, ஜம்புமாலி கோவேறு கழுதைகள் பூட்டிய தனது ரதத்தில் வந்து சேர்ந்தான். அவனது கோரைப் பற்களைப் பார்த்தாலே மயக்கம் வந்து விடும். அவ்வளவு பெரியது. அந்த பற்களைக் காட்டியபடி கடும் கோபத்துடன் இருந்தான்.வீரர்கள் உடனே யாரையும் கொல்லமாட்டார்கள். தன் சக வீரனோடு சண்டை போடுவதில் அவர்களுக்கு அலாதி இன்பம். பலவானான ஜம்புமாலியுடன் யுத்தம் செய்ய மாருதிக்கு ஆசை வந்து விட்டது. அதற்கேற்றாற் போல், ஜம்புமாலி தன் பாணங்களை மாருதி மேல் தொடுத்தான். மாருதி ஒரு பெரிய பாறையைப் பிடுங்கி அவன் மேல் எறிந்தார். அவன் அதை தன் அம்புகளால் தகர்த்து விட்டான். பார்த்தார் மாருதி. ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி வீசினார். அதையும் அவன் தடுத்து விட்டான். பின்னர் ஒரு மிகப்பெரிய இரும்பு உலக்கையை எடுத்து அவன் மீது வீசினார். அவ்வளவு தான்! ஜம்புமாலியைக் காணவில்லை. அவன் தலை ஓரிடத்தில் சிதைந்து கிடக்க, கை, கால்கள் கழன்று கிடக்க மண்ணோடு மண்ணாகி விட்டான்.இதைக் கேள்விப்பட்ட ராவணன், கோபத்தில் மீசை துடிக்க, தன் மந்திரி பிரதானிகளின் குமாரர்கள் அனைவரையும் அனுப்பி, அந்தக் குரங்கைப் பிடித்து வாருங்கள், என ஆணை பிறப்பித்தான். மின்னலென வந்த அவர்களும் மாருதியின் ஆவேசத்துக்கு பலியானார்கள்.ராவணனுக்கு பயம் வந்து விட்டது.
சுந்தரகாண்டம் பகுதி-22
அவன் வானில் பறந்து அவருடன் சண்டையிட்டான். ஆனால், வாயுமைந்தன் அவனது கால்களை இறுகப்பிடித்தார். அவன் கிறங்கும் வகையில் சுழற்றினார். சுழற்றியே கொன்று விட்டார்.பெற்ற மகனை இழந்த துக்கம் ராவணனை வருத்தியது. அவன், வேறு வழியின்றி தன் மகன் இந்திரஜித்தை அழைத்தார். தேவர், அசுரர் போரில் இந்திரனையே வென்றவன் என்பதால் இவன் இந்திரஜித் என்று பெயர் பெற்றவன். கடும் தவமிருந்து பிரம்மாவிடம் இருந்து அஸ்திரம் பெற்றவன். அந்த பிரம்மாஸ்திரம் உலகிலுள்ள எப்பேர்ப்பட்ட சக்தியையும் கட்டும் சக்தி பெற்றது. அவனிடம், அன்பு மகனே! நான் ஏற்கனவே அனுப்பிய வீரர்களிடம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால், நீ மகாவீரன். தேவர்களையே வென்றவன். ஆனாலும், அந்தக் குரங்கை குறைத்து மதிப்பிடாதே. அந்த வானரனின் திறமை பற்றி சொல்கிறேன், கேள், என்று ஆரம்பித்தான்.நீ பல வீரர்களை அழைத்துச் சென்று பலனில்லை. ஏனெனில், அது கணநேரத்தில் அவர்களை ஒழித்துக் கட்டி விடுகிறது. ஆயுதங்களாலும் அவனைக் கொல்ல முடியாது. ஏனெனில், அவன் காற்றை விட வேகமாக இருப்பவன். எந்தத்திசையில் இருந்து தாக்குவான் என்றே தெரியாது. அப்படிப்பட்டவனிடம் ஆயுதம் எடுத்து பலனில்லை. எனவே, உன்னிடமுள்ள முக்கிய அஸ்திரங்களுடன், அவற்றிற்குரிய மந்திரங்களை ஜபித்துக்கொண்டே செல். இவ்வளவு சக்தி வாய்ந்த குரங்கை அழிக்க நானே போயிருப்பேன். ஆனால், நாளைய உலகம், ஒரு சாதாரணக் குரங்கை அழிக்க ராவணனே நேரில் சென்றான் என்று இந்த ராவணனைக் கேலி செய்யும். மேலும், வீரர்கள் இருக்கும் நிலையில் மன்னனே முதலில் நேரில் செல்வதென்பது அரசியல் தர்மமல்ல, என்றான்.இந்திரஜித்துக்கு இப்படிப்பட்ட வீரனை எதிர்கொள்ளப் போவதில் பெரிய மகிழ்ச்சி.
தனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்தமைக்காகவும், பெற்றவருக்கு மரியாதை செய்து வெற்றி வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் தன் தந்தையை வலம் வந்து நமஸ்கரித்தான். உற்சாகமாக மாருதி இருக்குமிடம் சென்றான். மாருதிக்கோ இன்னும் சந்தோஷம். மாருதிக்கு மட்டுமா! இலங்கையில் வசித்த பறவைகளுக்கு கூட சந்தோஷமாம். யார் இறந்தாலும் வலிய உடல் ஒன்று கீழே சாயும். அவர்களின் பிணம் தங்களுக்கு பலநாள் இரையாகும் என்பது அவற்றின் கணிப்பு. இந்தக் காட்சியைக் காண வானலோகத்தில் இருந்தவர்களெல்லாம் கூடி விட்டார்கள். பிரம்மாஸ்திரம் மாருதியைக் கட்டிப்போடும் என்பது உறுதி. அதில் இருந்து அவர் எப்படி விடுபடப்போகிறார் என்பதைப் பார்த்தாக வேண்டுமே! அது மட்டுமல்ல! அழியப்போவது இந்திரஜித்தா, மாருதியா? ஒருவேளை மாருதியின் கதை முடியுமானால் சீதாராமரின் நிலை என்னாகும்? நெஞ்சம் படபடக்க அவர்கள் உயரத்தில் நின்றார்கள்.இந்திரஜித் களத்திற்குள் புகுந்தான். மாருதி தன் உருவத்தைப் பெரிதாக்கினார். இந்திரஜித் தன் வில் நாணை இழுத்து விட்ட போது எழுந்த ஒலி பேரிடியையும் மிஞ்சியது. பல பாணங்களை அவன் மாருதியின் மேல் பிரயோகித்தான். மாருதி பறந்தபடியே அவற்றை விலக்கித் தள்ளினார். இதுகண்டு இந்திரஜித்தே ஆச்சரியப்பட்டான்.தன் தந்தை சொன்னது போல, இவன் பராக்கிரமசாலி தான் என்பதைப் புரிந்துகொண்ட புத்திமானான இந்திரஜித், பிரம்மாஸ்திரத்தை ஏவி இவனைப் பிடித்து கட்டி இழுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான்.பிரம்மாஸ்திரம் பறந்து வந்தது. மாருதி அந்த அஸ்திரத்துக்கு தானாகவே கட்டுப்பட்டு விட்டார். சகல அஸ்திரங்களுக்கும் கட்டுப்படாத அந்த மாவீரன் இதற்கு மட்டும் ஏன் கட்டுப்பட வேண்டும்? அது ஒரு ரகசியம்!
சுந்தரகாண்டம் பகுதி-23
இந்தக் குரங்கு தன் கட்டுகள் அவிழாதது போல நாடகமாட வேண்டிய அவசியம் என்ன! அசுரர்கள் இது கட்டப்பட்டிருப்பதாக நினைத்து அடிக்கிறார்கள், குத்துகிறார்கள், ஆயுதங்களால் தாக்குகிறார்கள். அத்தனையையும் இது தாங்குகிறது என்றால், இது இன்னும் என்ன செய்யப்போகிறதோ!என்பதே குழப்பத்துக்கு காரணம்.மாருதி மிகுந்த பொறுமை காத்தார்.இவர்களை அடிப்பதை விட, இந்த கட்டிலேயே இருப்பதைப் போல் நடித்தால், நிச்சயம் இவர்கள் நம்மை ராவணனிடம் கொண்டு செல்வார்கள். அவனுடைய பராக்கிரமத்தை நாம் எடை போட்டு விடலாம். இது எதிர்வரும் போருக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணக்குப் போட்டார்.எதிரிகளின் பலம் தெரியாமல், அவர்களை எதிர்த்து யாரும் களத்தில் இறங்கக்கூடாது என்பது இதன்மூலம் தெரிய வரும் பாடம். அவர் நினைத்தது போலவே ராவணனின் முன்னால் அதைக் கொண்டு போய் நிறுத்தினார்கள். ராவணனை மிகவும் அருகில் பார்த்து மாருதி உண்மையிலேயே அதிசயித்தார். எப்படிப்பட்ட மகாபுருஷன் இவன்! இவன் மட்டும் தன் மனதை தர்மத்தின் வழியில் செலுத்தினால், இந்திரனையும், பிற தேவர்களையும் நிரந்தரமாக ஆளும் பாக்கியத்தைப் பெற்றிருப்பானே! என்று மனதுக்குள் பாராட்டினார். எதிரியை பாராட்டும் இந்த தன்மை மட்டும் அரசியலில் இருந்துவிட்டால், சண்டைகளுக்கு இடமில்லை. தேசமும் விருத்தியாகும் என்பது சுந்தரகாண்டம் இவ்விடத்தில் நமக்கு உணர்த்தும் கருத்து.இதே போன்ற யோசனை தான் ராவணனுக்கும் தோன்றியது.யார் இவன் ஒரு காலத்தில் நான் கைலாயத்தை அசைத்த போது எனக்கு சாபமிட்ட நந்தி பகவானா அல்லது யாரேனும் அசுரனா இப்போது, குரங்கு ரூபத்தில் வந்திருக்கிறானோ என்னுடைய அரண்மனைக்குள் தகுதியானவர்கள் மட்டுமே நுழைய முடியும். இவன் எப்படியோ இங்கே வந்துவிட்டான் என்றால் இவன் தகுதியுடையவர்களில் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என்ற யோசனையுடன், தனது மந்திரி பிரஹஸ்தனிடம் கண்ஜாடை காட்டினான்.அவனது கருத்தைப் புரிந்து கொண்ட பிரஹஸ்தன், குரங்கே! எனது கேள்விகளுக்கு பயப்படாமல் பதில் சொல்.
உனக்கு நன்மை உண்டாகட்டும். உன்னை யார் இங்கே அனுப்பினார்கள் இந்திரனா வாயுவா விஷ்ணுவா குபேரனா எமனா பார்ப்பதற்கு குரங்கு போல் தோன்றினாலும், உன் சக்தியை மதிப்பிடும் போது அவ்வாறு நினைக்க எங்களால் முடியவில்லை. உண்மையைச் சொன்னால் உன்னை விட்டுவிடுவோம். பொய் சொன்னால் உன் உயிர் போய் விடும். எதற்காக இலங்கைக்கு வந்தாய்? சொல், என்று கேட்டான்.மாருதி அவனைக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யவில்லை. தைரியசாலியல்லவா அவர்! நேராக ராவணனை நேருக்கு நேர் பார்த்தார். அவனிடமே பதில் சொன்னார்.எந்த தேவரும் என்னை அனுப்பவில்லை. நான் வானரன் தான். ராட்சஷர்களின் மகாராஜாவான உன்னைப் பார்க்கவே இங்கு வந்தேன். உன் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே அசோகவனத்தை அழித்தேன். நீ அனுப்பிய ஆட்கள் என்னை துன்புறுத்தினார்கள். அவர்களிடம் இருந்து என் உடலைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர்களிடம் பலப்பரீட்சை செய்து கொன்றேன். எந்த அஸ்திரமும் என்னைக் கட்டுப்படுத்தாது என்ற வரத்தை நான் பிரம்மாவிடம் பெற்றுள்ளேன். ஆனாலும், ராட்சஷர்கள் என்னை உபத்திரவம் செய்ததையும் பொறுத்துக் கொண்டு, பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் நடித்ததன் காரணம், உன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். நான் சொல்லும் நல்வார்த்தைகளைக் கேள், என்று ஆரம்பித்தார்.கிஷ்கிந்தையின் அரசன் சுக்ரீவன் என்னை இங்கே அனுப்பினார். தசரத புத்திரரான ராமனின் மனைவி சீதையை நீ கடத்தி வந்துள்ளாய். ராமபிரானும், சுக்ரீவனும் இப்போது நண்பர்கள். ராமனின் மனைவியை மீட்டுத்தருவதாக சுக்ரீவனும், சுக்ரீவனின் அண்ணன் வாலியைக் கொன்று வானர ராஜ்யத்திற்கு சுக்ரீவனை அதிபதியாக்குவதாக ராமனும் உடன்பாடு செய்து கொண்டனர். ராமன் தான் சொன்னதை நிறைவேற்றி விட்டார். சுக்ரீவன் தன் பங்கை நிறைவேற்றும் நடவடிக்கை எடுத்துள்ளார். நீயாகவே, சீதையைக் கொண்டு போய் ராமனிடம் ஒப்படைத்து விட்டால் உன் பத்து தலைகளும் பிழைக்கும். இங்கிருக்கும் சீதாபிராட்டி சாதாரணமானவள் அல்ல. அவள் இலங்கையை அழிக்க வந்திருக்கும் காளராத்ரி என்ற சக்தி. கவனம், என்றவர் மேலும் தொடர்ந்தார்.
சுந்தரகாண்டம் பகுதி-24
ராவணனோ ஆத்திரம் அடங்காமல், விபீஷணா! இவன் பாவி. பாவிகளைக் கொல்வது தவறல்ல, என்றதும், இடைமறித்த விபீஷணன், அண்ணா! வேண்டாம்! இவன் நமது படையினரைக் கொன்றிருக்கிறான் என்பது நிஜமே. இருப்பினும், தூதன் என்ற நிலையில் வந்திருப்பதால், தூதர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதற்கு பெரியோர்கள் வகுத்து வைத்துள்ள விதிகளின்படி, அங்கஹீனம் செய்தல், சாட்டையடி கொடுத்தல், மொட்டையடித்தல் போன்ற தண்டனைகளைக் கொடுக்கலாம். இது எதிரிகளை அவமானப்படுத்தியதற்கு சமம். நம் பராக்கிரமத்தை அவர்கள் உணர்வதற்குரிய சந்தர்ப்பமாகவும் அமையும். இதில் எந்த தண்டனையைக் கொடுப்பது என்ற முடிவைத் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம், என்று யோசனை சொன்னான். ராவணன் இதை ஏற்றுக்கொண்டான்.விபீஷணா! தக்க சமயத்தில் சரியான யோசனை சொன்னாய். இந்த தூதனுக்கு மறக்க முடியாத தண்டனை ஒன்றைக் கொடுக்க வேண்டும். குரங்குகளுக்கு அழகும் ஆபரணமுமாக இருப்பது வால் தான். இந்தக் குரங்கின் வாலில் நெருப்பு வைத்து இந்த பட்டணம் முழுவதும் இழுத்துச் செல்லுங்கள், என்றான். வால் என்றதும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ராவணனிடம் இருந்து சீதை மீட்கப்பட்டதும், கிஷ்கிந்தையில் அவர்கள் இறங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்த வானரப் பெண்களுக்கு, இந்த யுத்தத்துக்கு காரணமான சீதையைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. சுக்ரீவனின் வேண்டுகோளுக்கு இணங்க, புஷ்பக விமானத்தில் வந்த ராமனும், சீதையும் தரையிறங்கினர். அப்போது, ஒரு வானரப் பெண், இந்த சீதாவின் அழகில் மயங்கி தான் ராவணேஸ்வரன் இவளைக் கடத்திப் போனான் என்றார்கள். இவள் அழகாகத்தான் இருக்கிறாள். ஆனால், அதிலும் ஒரு குறை. இவளுக்கு நம்மைப் போல் வால் இல்லையே! என்றாளாம். அவரவருக்கு அவரவர் இயல்பு அழகு. அதிலும் குரங்குகளுக்கு நீண்ட வால்தான் அழகு. அதனால் தான் வாலுக்கு தீ வைக்கச் சொன்னான் ராவணன்.நாம் கூட குழந்தைகள் சேஷ்டை செய்தால், இவன் சரியான வாலு என்போம். காரணம், அந்த வால் எத்தகைய சேஷ்டைகளைச் செய்யப் போகிறது என்பதை இனிமேல் தானே பார்க்கப் போகிறோம்.அசுரர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.
அடேய்! சரியான சந்தர்ப்பம். இந்தக் குரங்கு நம் உறவினர்களில் பலரைக் கொன்று விட்டது. அதற்கு பழிவாங்க சரியான சந்தர்ப்பம். இதன் வாலில் துணிகளைச் சுற்றுங்கள். எண்ணெய்யை ஊற்றுங்கள். நெருப்பு வையுங்கள், என்று கூச்சலிட்டனர்.அப்போது மாருதி தன் மனதில், இவர்களை மட்டுமல்ல! இங்கிருக்கும் ராவணனையும் என்னால் கொல்ல முடியும். ஆனால், ராவணனைக் கொல்வதாக ராமபிரான் சபதம் எடுத்திருப்பதால், நான் அவரை மீறியதாக ஆகிவிடும். எனவே, இவர்களுக்கு உயிர் பிராணன் தருவது என் கடமையாகிறது.இப்போது, இவர்கள் என்னைக் கட்டி இழுத்துச் செல்வதும் நன்மைக்குத் தான்! இலங்கையை அணுஅணுவாகப் பார்த்து விடலாம். போருக்கு வரும் போது, எந்த இடத்திற்குச் செல்வது என்று முடிவு செய்ய வசதியாயிருக்கும், என்று நினைத்தார். ராட்சஷர்கள் அவரது வாலுக்கு தீ வைத்தனர். அந்த வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு அவர்களுடன் நகர்வலம் வந்தார்.இந்த விஷயத்தை ராட்சஷிகள் சிலர் சீதாவிடம் சென்று தெரிவித்தார்கள். அவள் உயிரே போனது போல துடித்துப் போனாள்.சீதாதேவி போன்ற தாயை உலகில் பார்க்க முடியாது. நமக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டால் அவளிடம் உடனடியாக மானசீகமாக முறையிட்டு விட்டால் போதும். அவள் நம்மைக் காப்பாற்ற ஓடோடி வந்து விடுவாள். நமக்காக கண்ணீர் வடிக்கும் கருணை தெய்வம் அவள். எனக்காக இங்கு வந்தவனுக்கு இந்தக் கதியா! என்றவள், அக்னி பகவானிடம், பகவானே! நான் என் கணவருக்கு செய்த பணிவிடைகள் அனைத்தும் உண்மையானால், நான் கற்புக்கரசி என்பது நிஜமானால், மாருதிக்கு நீ எந்த துன்பத்தையும் தரக்கூடாது. வெம்மைக்கு பதிலாக குளிர்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்தித்தாள்.மாருதிக்கு ஆச்சரியம்.வாலில் நெருப்பு எரிகிறது. ஆனால், உஷ்ணமே இல்லை. இது எப்படி சாத்தியம்? என்று ஆச்சரியப்பட்டார்.
சுந்தரகாண்டம் பகுதி-25
அவர்களை தூக்கிக் கொண்டு, ராட்சஷ தாய்மார்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல ராட்சஷர்கள் தீயில் சிக்கி மரணமடைந்தனர். ஆனாலும், மாருதிக்கு திருப்தி ஏற்படவில்லை. இந்த சேதம் போதாதென்றே நினைத்தார். இலங்கை முழுவதையும் எரித்தாக வேண்டும் என்பது அவரது எண்ணம்.எனவே பர்வதசிகரம் எனப்படும் திரிகூடமலையில் ஏறி தீ வைத்தார். அங்கிருந்த ராட்சஷர்களின் வீடுகள் பற்றி எரிந்தன. ராட்சஷர்கள் மிகப்பெரிய உடலை உடையவர்கள் என்பதால் அவர்களது உடல் வெடித்துச் சிதறி நெருப்புத்துண்டங்களாகி தீயை மேலும் பெருக்கியது.இந்த நேரத்தில் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி பிரிவினை ஏற்படுவது சகஜம். இதை குடும்பத்திலுள்ள பெரியவர்கள் தீர்த்து வைக்க முன்வர வேண்டும். பதிலாக, பிரச்னையை ஊதிப் பெரிதாக்கினால், அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சல், இலங்கையைப் போல, துன்பம் செய்தவர்களின் குடும்பத்தையே அழித்து விடும். பொன்மான் மீது கொண்ட ஆசையால், இரண்டு கொழுந்தன்மாரை சந்தேகப்பட்டாள் சீதா. ஒன்று லட்சுமணன். இன்னொருவன் பரதன்.ஓஹோ! அந்த பரதன் ஒருவேளை என் மீது ஆசைப்பட்டு, உன் மூலமாக என்னை அபகரிக்க திட்டம் போட்டிருக்கிறானோ! அதனால் தான் உன் சகோதரர் காட்டில் ராட்சஷர்களிடையே மாட்டி, சீதா...லட்சுமணா என்று அபயக்குரல் கொடுத்தும் நீ செல்ல மறுக்கிறாயோ, என்று லட்சுமணனிடம் கேட்டாள் சீதா. இந்த சொல் நெருப்பாய் அவன் உள்ளத்தைச் சுட்டது. அம்புகளாய் பாய்ந்தது. ஆனாலும், பொறுமையுடன், தாயே! எனது சகோதரர் சாதாரணமான வீரர் அல்ல. எந்தச் சூழலிலும், அவருக்கு என்ன துன்பம் வந்தாலும், பிறர் உதவியை அவர் நாடவே மாட்டார். தன் பிரச்னையை தானே தீர்த்துக் கொள்ளும் சூராதி சூரர் அவர். அவருக்காவது ஆபத்தாவது... எல்லாம் அந்த மாரீசனின் மாயச்செயல், தாங்கள் கலங்காதீர்கள், நான் அண்ணனின் கட்டளையை மீறி இங்கிருந்து செல்லவே மாட்டேன், என்றான். ஆனாலும், மேற்கண்ட சொல்லம்பு அவனை அங்கிருந்து அகலும்படி செய்தது. அவள் துன்பப்பட்டாள்.ஆனால், இந்த செய்கைகளுக்கெல்லாம் மூலகாரணம் யார்? ராவணன். அவன் ஒரு பெண்ணின் சாபத்தை சம்பாதித்தான்.பெண்களின் சாபம், அவளைப் பாதிப்புக்குள்ளாக்கியவரின் குடும்பத்தை மட்டுமல்ல! அவளைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களையும் அழித்து விடும். ராவணன் செய்த பாவம், அவன் தேசத்திலுள்ள மக்களையும் சேர்த்து எரிப்பதைப் போல! சுந்தரகாண்டம் படிக்கும் அன்பர்கள் தங்கள் மனைவியை எந்தக் காரணத்தால் பிரிந்திருந்தாலும் சரி...அதையெல்லாம் மறந்து விட்டு, ஒன்று சேர வேண்டும்.எப்படியோ, ஒட்டுமொத்தமாக இலங்கையை நாசமாக்கி விட்டார் மாருதி.தேவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நம்மால் ஏறெடுத்தும் பார்க்க முடியாத லங்காபுரியை இவன் ஒருவனே நாசமாக்கி விட்டானே என்று! நாம் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றால், வாலில் வெண்ணெய் பூசி வழிபடுகிறோம். அவரது வாலில் சூடுபட்டதால் வலிக்கும் என்ற அன்பின் காரணத்தால் செய்யப்படும் வழிபாடு அது. நிஜத்தில், அவருக்கு வலிக்கவில்லை. எந்த வால், சீதாபிராட்டியைக் காத்ததோ, அந்த வால் தங்களையும் காக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் வழிபாடே அது. அதனால் தான் வாலில் மணியைக் கட்டி அதை தெய்வாம்சமானதாகவும் கருதுகிறோம்.இலங்கை பற்றி எரிந்த பிறகு தான், மாருதிக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. பகீர் என மனதை வாட்டியது அந்த நினைவு. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், ராமபிரானுக்கு என்ன பதில் சொல்வது! அவசரப்பட்டு விட்டோமே என கலங்கினார் அவர். அந்தக் கலக்கத்துக்கு என்ன காரணம்? | |
சுந்தரகாண்டம் பகுதி-26
இலங்கையில் நெருப்பில் அகப்பட்டு இறக்கும் நிலையில் முனகிய ராட்சஷர்களில் சிலர், நாம் அழிகிறோம், ஆனால், ராமனின் துணைவியான அந்த சீதாவை மட்டும் இந்த நெருப்பு ஏதும் செய்யவில்லையே, என்று சொல்லி உயிர்விட்டார்கள். இதைக் கேட்ட ஆஞ்சநேயருக்கு போன உயிர் திரும்பியது போல் இருந்தது. சீதாதேவி தன் மகிமையால் பிழைத்தாள் என்று எண்ணியவராய், பாக்கியிருந்த அசுரர் வீடுகளையும் அழித்தார். பின்னர் சீதாதேவியை சந்தித்தார்.மாருதி! நீயே இங்கிருக்கும் மிச்சம் மீதி ராட்சஷர்களையும்...ஏன், ராவணனையே அழித்து என்னை மீட்டுச் சென்று விடுவாய் என்பதை பரிபூரணமாக நம்புகிறேன். நீ மகாதீரன். ஆனால், என் பர்த்தாவே என்னை மீட்டுச் செல்ல வேண்டும். அதுவே அவரது புகழுக்கும், ராவணன் செய்த தீங்கிற்கு பதிலடி கொடுப்பதாகவும் அமையும், என்றாள். அவளைப் பணிந்து வணங்கிய மாருதி, அரிஷ்டம் என்று பெயர் கொண்ட மலையில் ஏறி கிஷ்கிந்தை கிளம்பினார். அந்த மலையை அவர் அழுத்திய வேகத்தில் பூமிக்குள் புதைந்து போனது. பின்னர் மின்னல் வேகத்தில் பறந்து கடலின் அடுத்த கரையை அடைந்தார். அவர் வரும் வேகத்தைப் பார்த்தவுடனேயே, ஜெயத்துடன் திரும்பி வருகிறார் என்பதை வானர வீரர்கள் புரிந்து கொண்டனர். அவர் வந்து இறங்கியதும், அவருக்கு கிழங்கு, பழங்களை சாப்பிடக் கொடுத்தார்கள்.அவசர வேலையாக சென்றிருக்கும் நம் குடும்ப உறுப்பினர் ஒருவர் வீட்டுக்குள் நுழைகிறார். அவர் மகிழ்ச்சியான சூழலில் வந்தாலும் கூட, அவரிடம் உடனே என்ன நடந்தது என்று கேட்கக்கூடாது. வந்தவருக்கு ஒரு டம்ளர் தண்ணீராவது கொடுக்க வேண்டும். அவர் ஆசுவாசமானவுடன் பேச ஆரம்பிக்க வேண்டும். அதே போல வீட்டுக்குள் நுழைபவரும் அவசர அவசரமாக பேச்சைத் துவங்கக்கூடாது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்க வேண்டும். மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திலும் கூட நிதானம் இழக்காமல் இருப்பது நமது உடல்நிலைக்கு நல்லது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. பின்னர் மாருதி, தான் சென்று வந்த விபரத்தை வானர வீரர்களிடம் சொன்னார். அவர்கள் மகிழ்ச்சியுடன், அங்கதனின் அனுமதியுடன் சுக்ரீவனுக்குச் சொந்தமான மதுவனத்தில் தேன் குடித்து மகிழ்ந்தனர். இருப்பினும், சுக்ரீவனின் அனுமதியின்றி யாரும் அங்கு செல்லக்கூடாது என்பதால், வனத்தின் பாதுகாவலனான ததிமுகன் சுக்ரீவனிடம் சென்று முறையிட்டான். அவனது சொல்லில் இருந்தே, மாருதி சென்ற காரியம் ஜெயமாயிற்று என்பதை சுக்ரீவன் புரிந்து கொண்டான்.
பின்னர், வானரர்களும் வந்து சேர்ந்தனர். மாருதி அடைந்த வெற்றியின் காரணமாக, அனுமதியின்றி மதுவனத்தை அழித்து தேன்குடித்த வானரர்களை சுக்ரீவன் மன்னித்து விட்டான். அவர்கள் செய்த வேலைக்கு என்ன கூலி கொடுத்தாலும் தகும் என்பதே அவனது இந்த பெருந்தன்மைக்கு காரணம். பின்னர் மாருதி, சீதையைக் கண்டு வந்த வரலாற்றை ராமனை நமஸ்கரித்து சொல்ல ஆரம்பித்தார்.கண்டனென் கற்பினுக்கு அணியை என் கண்களால் என்றார். சொல்லின் செல்வர் அல்லவா? சீதையைப் பார்த்தேன் என்று சொல்ல ஆரம்பித்தால், சீதையை என்றவுடனேயே பார்க்கவில்லை என்று அடுத்த வார்த்தை வந்துவிடுமோ என்ற பயத்தில், ராமனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? அதனால் பார்த்தேன் சீதையை என பவ்யமாக உரைத்தார். அங்கு நடந்த எல்லா விபரங்களையும், சீதாபிராட்டி அசுரர்களிடம் படும் வேதனையையும் விவரித்து, அவள் தந்த சூடாமணியை வணக்கத்துடன் சமர்ப்பித்தார். அதைப் பார்த்து ராமன் அடைந்த துக்கத்திற்கு அளவேயில்லை.லட்சுமணா! இந்த ஆபரணத்தை என் சீதையின் சிரசில் பார்த்துள்ளேன். ஆனால், இப்போது தனியாகப் பார்க்கிறேன், என்று சொல்லி வருந்தினார். ஏன் லட்சுமணன் இதைப் பார்த்திருக்க மாட்டானா என்றால், பார்த்ததே இல்லை. அவனுக்கு அண்ணியின் முகம் இப்போது வரை தெரியாது. அவளது திருவடி மட்டுமே அவனுக்குத் தெரியும். தமையன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்காத உத்தமசீலனாக அவன் விளங்கினான்.பின்னர், ஸ்ரீராமா! நான் ஜனகபுத்திரியிடம் நீங்கள் உடனடியாக வந்து மீட்டுச் செல்வீர்கள் என தைரியமூட்டி, ஜீவனை விட இருந்த அவர்களுக்கு நம்பிக்கையூட்டினேன். தாங்கள் இட்ட கட்டளையை என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகச் செய்தேன், என அடக்கத்துடன் சொன்னார். நிஜ வீரன் ஆர்ப்பரிப்பதில்லை அல்லவா? ஆஞ்சநேயரின் இந்த இலங்கைப் பயணம் பல பாடங்களை நமக்கு தந்திருக்கிறது. யார் ஒருவருக்கு உயிர்க்கண்டம் இருக்கிறதோ, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது. நாமும், பிறர் நலம் கருதி வாழ்ந்து ஆஞ்சநேயரின் திருவருள் பெறுவோம்.
ஸ்ரீராம ஜெயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக