சனி, 9 மார்ச், 2013

மகா சிவராத்திரியின் மகிமை!

ராதே கிருஷ்ணா 08-03-2013


 மகா சிவராத்திரியின் மகிமை!
 
temple
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ ... மேலும்
 
temple
சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண் விழித்தலும், லிங்கங்களுக்கு செய்யப்படும் பலவகையான அபிஷேகங்களும், நான்கு கால பூஜையும்தான். யுகம் யுகமாக நடந்து வரும் ... மேலும்
 
temple
ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, எங்கும் காரிருள் ...மேலும்
 
temple
சிவராத்திரியன்று புராணத்தோடு தொடர்புடைய தலங்களில் இறைவனை தரிசிப்பதால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். திருவண்ணாமலை : ஒரு மகா சிவராத்திரி நாளில் லிங்கோற்பவ காலத்தில் இறைவன் ... மேலும்
 
temple
தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு. அந்த வகையில் சிவனாரைத் ...மேலும்
 

1

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்!
மார்ச் 04,2013
அ-
+
Temple images
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.
சிவராத்திரி விரத மகிமை: விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும்.  மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.
செல்வம் தரும் சிவராத்திரி: மகாபாரதம் சாந்தி பர்வத்தில் சிவராத்திரியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார். இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னனைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னன் முனிவரிடம், ஐயனே! நான்  சுஸ்வரன் என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் தூக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின், இரு சிவதூதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது என்றனர். அதனால், நாடாளும் மன்னனாக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன், என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர். அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும்.
சிவராத்திரி விரதமிருந்து அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி+சிவன்) என்ற அஸ்திரத்தைப் பெற்றான். கண்ணப்ப நாயனார் குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண்மீது தன் கண்களைப் பெயர்த்தெடுத்து பொருத்தி முக்தி அடைந்தான். பகீரதன் கடுந்தவம் இயற்றிக் கங்கையை பூமிக்குக் கொணர்ந்தான். மார்க்கண்டேயனுக்காக யமனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்தார். பார்வதிதேவி அருந்தவம் இயற்றி சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம்பெற்றுச் சிவனையே உமையொரு பாகனாகச் செய்தார். சிவபெருமான் காலனை உதைத்தார். லிங்ககோற்பவராக ஈசனை தோன்றினார்.  உமயவள், மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றாள். சிவபெருமான், நஞ்சு உண்டார்.
சிவபூஜை செய்த வேடன்: ஒரு காட்டில் சண்டன் என்ற ஒரு வேடன் வாழ்ந்து வந்தான்; அவன் காட்டில் வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தான். காட்டில் அலையும் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிப் பிடித்து, அவற்றை விற்று ஜீவனம் செய்து வந்தான். அவனுக்கு சண்டிகா என்ற மனைவி இருந்தாள். ஒருநாள் அடர்ந்த காட்டிற்குள் விலங்குகளைத்தேடி அலைந்து கொண்டிருந்தபோது, வானுயர்ந்த ஒரு பெரிய வில்வ மரத்தினடியில், அழகிய சிவலிங்கம் ஒன்று புதியதாய்த் தோன்றி இருப்பதைக் கண்டான். அது ஒரு சுயம்பு லிங்கம். சிவலிங்கத்தைக் கண்டதும் அவனுக்கு மெய்சிலிர்த்தது. அவனுள் அன்பும் பக்தியும் பெருகி அவனையுமறியாமல் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகிவழிந்தது. அவன் உள்ளம் பெறற்கரிய பெருஞ்செல்வத்தைப் பெற்றதுபோல் குதூகலத்தால் குதித்துக் கூத்தாடியது. தானே தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜை எப்படிச் செய்ய வேண்டும்? இறைவனை எப்படி வணங்க வேண்டும்? என்ற விவரமெல்லாம் அவனுக்குத் தெரியாது. எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி வேடன் அவன். அப்போது அங்கே சிங்க கேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்தவன், தன் பரிவாரங்களைப் பிரிந்து, வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தவன், வேடன் சண்டன் இருக்குமிடம் வர நேர்ந்தது. வேடனைக் கொண்டு கானக வழியைக் கண்டுபிடித்து வெளியேறி விடலாம் என நம்பினான். மன்னன் சிங்ககேது வந்ததைக்கூட அறியாமல் சிவ லிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்த சண்டனைப் பார்த்து, வேடா, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வழி தவறி வந்து விட்டேன். காட்டைவிட்டு வெளியேற வேண்டும். வழிகாட்டு! என்று கேட்க, மன்னன் குரல் கேட்டு சண்டன் உணர்வு வரப்பெற்றான்.
அரசே, என்னை மன்னியுங்கள். பாராமுகமாய் இருந்து விட்டேன். என்னுடன் வாருங்கள் வழிகாட்டுகிறேன்! என்றான். தொடர்ந்து, மகாராஜா, இங்கே இருக்கும் சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும் என்பதை எனக்கு விளக்கமாய் கூறுங்கள்! என்று மிகுந்த பணிவுடன் மன்னனிடம் கேட்டான் சண்டன். உடனே மன்னன் பரிகாசமாய், வேடனே, உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின்மீது ஊற்று. சுடலையில் வெந்த சாம்பலைக் கொண்டு வந்து சிவலிங்கத்துக்குப் பூசு. கைக்குக் கிடைக்கிற பூக்களையெல்லாம் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவைக் கொண்டு வந்து நிவேதனமாக வை. விளக்கேற்றிவை. இரு கை கூப்பிக் கும்பிடு போடு! என்று அலட்சியத்தோடு கூறினான். மன்னன் சொன்ன விவரங்களையெல்லாம் சண்டன் கவனமாகக் கேட்டுக் கொண்டான். மன்னன் சிங்ககேது கூறியதையெல்லாம் அப்படியே மனதில் பதித்துக் கொண்டான் சண்டன். தோற்பையில் தண்ணீர் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது ஊற்றினான். சுடலையைத் தேடிச் சென்று, கை நிறைய வெந்த சாம்பலை அள்ளிக்கொண்டு வந்து சிவ லிங்கத்தின்மீது பூசினான். கைக்குக் கிடைத்த காட்டுப் பூக்களையெல்லாம் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது வைத்தான். தான் உண்ணும் உணவையே நிவேதனமாகப் படைத்தான். விளக்கேற்றி வழிபட்டான். இதனையே உறுதியாகக் கொண்டு தினமும் பூஜை செய்து வந்தான். இரவும் பகலும் அவன் நினைவில் சிவலிங்கமே நிறைந்திருந்தது. ஒரு நாள் சுடலையின் வெந்த சாம்பல் அகப்படாமல் போயிற்று. சிவபூஜை தடைப்பட்டது. இதனால் சண்டன் மிகுந்த கவலையுடன் இருந்தான்.
உண்ணாமல் உறங்காமல் உற்சாகமின்றிக் காணப்பட்டான். அவனுக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. இதனை அவனது கற்புடைய மனைவி சண்டிகா அறிந்து மனம் மிக நொந்தாள். கணவனை நோக்கி, அன்பரே, நீங்கள் சிவபூஜையைத் தொடர்ந்து செய்ய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நாம் குடியிருக்கும் இந்தக் குடிசையைக் கொளுத்தினால், நான் அதில் விழுந்து வெந்து சாம்பலாவேன். அந்த சாம்பலை எடுத்துக்கொண்டு போய் சிவலிங்கத்திற்குப் பூசுங்கள். உங்கள் விருப்பப்படியே பூஜையும் இனிதே நடக்கும் என்றாள் சண்டிகா. கள்ளங்கபடமில்லாத சண்டனும் அப்படியே செய்து முடித்தான். பூஜை முடிவில் வழக்கப்படி நிர்மால்யம் கொண்டு போனான். அன்று சிவராத்திரி என்று அவனுக்குத் தெரியாது. மெய் மறந்து வழிபட்ட நிலையில், அவன் செய்த புண்ணியத்தால், இறைவன் அவன் முன் தோன்றி அருள்பாலித்தார். அவன் மனைவி சண்டிகாவை உயிர்ப்பித்தார். குடிசையும் முன்பு இருந்தது போலாயிற்று. வேடன் சண்டன் ஞானம் வரப்பெற்றவனாய் இறைவனைப் போற்றினான். சிவகணங்கள் எதிர்கொள்ள கயிலையை அடைந்தான் என்று, சிவராத்திரியின் பெருமை பற்றிக் கூறும் பிரம்மோத்திர காண்டமும் வரதபண்டிதம் என்ற நூலும் விவரிக்கின்றன. எதுவும் தெரியாமலும் தன்னை அறியாமலும் செய்யும் சிவராத்திரி வழிபாடு கூட பலன்தரும். இப்படி அறியாமல் செய்த பூஜைக்கே பலனுண்டு என்றால் சிவராத்திரியை அறிந்தே பூஜை செய்பவர்களுக்கும், ஆலயம் சென்று முறையே வழிபாடு செய்பவர்களுக்கும் புண்ணியம் வந்துசேரும்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



மனை சிறக்கும் மகா சிவராத்திரியின் மகிமை தெரியுமா?
மார்ச் 04,2013
அ-
+
Temple images
சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண் விழித்தலும், லிங்கங்களுக்கு செய்யப்படும் பலவகையான அபிஷேகங்களும், நான்கு கால பூஜையும்தான். யுகம் யுகமாக நடந்து வரும் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் மஹா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும், மனை சிறக்கும், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் சித்திக்கும் என்கிறது சிவ புராணம். சிவராத்திரி பலவகைகளாகப் பிரிக்கப்படுகிறது. மாத சிவராத்திரி அல்லது நித்திய சிவ ராத்திரி, பட்சராத்திரி, யோக சிவராத்திரி மற்றும் மஹா சிவ ராத்திரி.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை சதுர்த்தசி, மற்றும் தேய்பிறை சதுர்த்தசி தினங்கள் மாத சிவராத்திரிகளாகும், அப்படிப் பார்க்கும்போது ஒரு வருடத்திற்கு இருபத்து நான்கு மாத சிவ ராத்திரிகள் உள்ளன.
பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை பிரதமையில் ஆரம்பித்து பதின்மூன்று நாட்கள், மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஒரு பொழுது மட்டுமே உணவு உண்டு, சிவனை பூஜித்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து, பதினான்காவது நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருந்து மறுநாள் விரதத்தை முடிப்பது பட்ச நாளான சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி: 24 மணி நேரமாகப் பகுக்கப்பட்டிருக்கும் ஒரு நாளை நம் முன்னோர்கள் 60 நாழிகை யாகப் பிரித்தார்கள். சூரிய உதயம் முதல், இரவு வரை அமாவாசைத் திதி இருந்தால் அன்று யோக சிவராத்திரி. மேலும் திங்கட்கிழமை இரவு முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி இருந்தால் அதுவும் யோக சிவராத்திரி என்று சொல்லப்படும். அதே போல திங்கட்கிழமை இரவு நான்காம் ஜாமத்தில் அமாவாசைத் திதி அரை நாழிகைப் பொழுதேனும் இருந்தால் அதுவும் யோக சிவராத்திரியாகக் கொள்ளப்படுகிறது. சிவனுக்கு உகந்தது திங்கட்கிழமை (சோமவாரம்) என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. யோக சிவராத்திரியின் போது விரதம் இருந்து பூஜை செய்தால் அது மூன்று கோடி மற்ற சிவராத்திரி விரதம் இருந்த பலனுக்கு சமம் என்பது ஐதிகம்.
மஹா சிவ ராத்திரி : மாசிமாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி எனப்படுகிறது. யுகம் யுகமாக கண் துஞ்சாமல் நம்மைக் காத்து ரட்சிக்கும் கயிலைக் கடவுளுக்காக, ஒரே ஒரு நாள் இரவு விழித்திருந்து, அவரை நாம் பூஜிக்கும் புண்ணிய ராத்திரி அது!
ராத்ர என்ற சொல்லுக்கு, யாவும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என்று பொருள். எனவேதான் உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப்பொழுது, ராத்திரி எனும் பெயர் ஏற்றது. ஒருமுறை உலகமே இருண்டு கிடந்த மகா சங்கார (சம்ஹார) காலமாகிய ஊழிக் காலத்தில், பஞ்சபூதங்களும் செயலற்று மாயையில் ஒடுங்கும், எங்கும் இருள் சூழ, உலகம் செயலற்று எங்கும் அமைதி நிலவும். இந்த நிலையில், சிவபெருமான் ஒருவரே செயலாற்றுவார். அவரை அடுத்திருக்கும் சக்தியான தேவி, உலக உயிர்களை மீண்டெழச் செய்திட  இரவு முழுதும் விழித்திருந்து மறுநாள் பொழுது விடிந்து  சிவபூஜை செய்து உலகம் மீண்டும் தழைக்கும் என்ற வரத்தைப் பெற்றாள்.  அதோடு, தான் சிவ வழிபாடு செய்ததை நினைவு கூரும் விதமாக அந்த இரவை சிவராத்திரியாக அழைத்து முறைப்படி விரதமிருந்து இரவில் நான்கு கால சிவபூஜை செய்வோர்க்கு மங்களங்கள் யாவும் தந்து நிறைவில் மேலான பதமும் தரவேண்டும் எனவும் வேண்டினாள். ஈசன் அவ்வாறே  வரம் அளித்தார். ராத்திரி என்ற சொல்லுக்கு அளித்தல் என்ற பொருளும் உண்டு. உலக உயிர்களும் மோட்சத்தை அளிப்பவர் சிவபெருமான். எனவே, சிவராத்திரி என அழைப்பதாகவும் கூறப்படுகிறது. ராத்ர என்பதற்குப் பூஜித்தல் என்பதும் ஒரு பொருள். ஆக, சிவனாரை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி என்றும் கூறுவர். உணவும், உறக்கமும் உயிர்க்குப் பகை. இந்த இடத்தில் உணவு என்பது வினைகள். அதனைச் செய்யச் செய்ய வினைகள் மூண்டு திரும்பத் திரும்ப பிறக்க நேரும். உறக்கம் என்பது மாயைக்குட்பட்டு மயங்குதலாகும். ஆக... உணவு நீக்கம் என்பது வினைகளை அகற்றுதலும், விழித்திருத்தல் என்பது ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதும் ஆகும். இந்த தாத்பரியத்தின்படி, மகா சிவராத்திரி தினத்தில் ஊண், உறக்கம் ஒழிப்பது என்பது உண்மையில் வினைகளை வென்று ஆன்மாவானது தன்னை உணர்ந்து கொள்வதற்காகவே என சிவராத்திரி விரதம் குறித்து அற்புதமாக விளக்கம் தருவார்கள் ஆன்றோர்கள்.
ஆதியும் அந்தமும் இல்லா பராபரவஸ்து ஜோதி ரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து பின்னர் லாவண்ய ரூபத்தை அடைந்த புண்ணிய தினம்தான் சிவராத்திரி.சிந்தை மகிழும் சிவராத்திரியில் லிங்க தரிசனம் செய்வதும், வழிபடுவதும் விசேஷம். லிங்கத்தில் இருந்தே அனைத்தும் உருவாயின. அதேபோன்று இறுதியில் லிங்கத்தில் எல்லாம் அடங்குகின்றன. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகியன அதிலேயே அடங்கியுள்ளன என்கின்றன புராணங்கள். சிவாலயங்களில் விளங்கும் பிரதிஷ்டா லிங்கங்கள் பிரம்மன், சிவா மற்றும் விஷ்ணுவைக் குறிக்கும் வகையிலேயே அமைகின்றன என ஆன்றோர் விளக்குவர். திருக்கோயில்களில் அருளும் சுயம்பு லிங்கங்களுக்கு அமையும் பீடம் பிரம்ம பாகமாகவும், நீர் விழும் கோமுகப் பகுதி மகாவிஷ்ணுவாகவும் போற்றப்படுகின்றன என்பர். ஆக, சிவலிங்க தரிசனத்தால் மும்மூர்த்தியரின் அருளையும் பெறலாம்.
சிவராத்திரியின் மிக முக்கியமான அம்சம் இரவில் நடக்கும் நான்கு கால பூஜைகள்தான். சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் விதவிதமான பொருட்களைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் அபிஷேகம் செய்வார்கள். அதே போல நிவேதனமும் வேறுபடும்.
முதல் காலம்: இந்தக் காலத்தில் சிவன் சோமஸ்கந்த ரூபத்தில் வணங்கப்படுகிறார் அப்போது அவருக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் நடக்கும். அது முடிந்ததும் களபம் சாத்தி (சந்தனப் பூச்சு) செய்து சிவப்புப் பட்டு வஸ்திரம் சார்த்துவார்கள், பச்சைப்பருப்பு கலந்த வெண் பொங்கல் நிவேதனம் செய்வார்கள். பழங்களில் வில்வம் பழம் முதல் காலத்தில் நிவேதனம் செய்யப்படுகிறது. ரிக் வேத பாராயணம் நடைபெறும் விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவர். அதோடு மாணிக்க வாசகரின் சிவபுராணமும் ஓதப்படும். ஸ்வாமிக்கு திருநீற்றுப் பச்சிலை, தாமரை, அரளி போன்ற மலர்களை சமர்ப்பிப்பர்.
இரண்டாம் காலம்: இரண்டாம் காலம் மவுன குருவான தட்சிணா மூர்த்தி ரூபம். பல பழங்களைப் பாலோடு சேர்த்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வர். அப்போது பச்சைக் கற்பூரக் காப்பு, மஞ்சள் பருத்தி ஆடை சாற்றப்படும். பாயசமும், லட்டும் நிவேதனமாகப் படைக்கப்படும். பலாப்பழம் இந்தக் காலத்துக்கு உரியது. யஜுர் வேத பாராயணம் நடைபெறும். அதோடு தாமரையும் வில்வமும் சமர்ப்பிக்கப்படும். இலுப்ப எண்ணெய் தீபம் ஏற்றப்படும். ருத்ர தாண்டகம் என்ற திருத்தாண்டகம் ஓதப்படும்.
மூன்றாம் காலம்: இந்தக் காலத்தில் சிவன் லிங்கோத்வ ரூபியாக ஆராதிக்கப்படுகிறார். இறைவனுக்குத் தேனால் அபிஷேகம் செய்து, அதில் காப்பு சாத்துவார்கள். வெள்ளைக் கம்பளி ஆடையாக சாத்தப்படும். நிவேதனமாக சத்து மாவும், பாயசமும் படைக்கப்படும், மாதுளம் பழமும் இந்த பூஜைக்கு உரியது. சாம வேதப் பிரியனான சிவனுக்கு சாம வேதத்தைப் பாராயணம் செய்வது இந்தக் காலத்தில்தான். நெய்விட்டு கும்ப தீபம் ஏற்றப்படும். அறுகம் புல்லும் தாழம் பூவும் சமர்ப்பிக்கப்படும். தாழம்பூ இந்த நாளில் மூன்றாம் காலத்தில் மட்டுமே இறைவனுக்கு சாத்தப்படும். வேறு எந்த சமயத்திலும் எந்த நாளிலும் அந்தப்பூ சிவ பூஜையில் பயன் படுத்தப்படுவதே இல்லை. லிங்க புராண திருக்குறுந்தொகை ஓதப்படும்.
மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவ ரூபியாக சிவன் வணங்கப்படுவதால், லிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அதே நேரம் கருவறைக்குப் பின்னால் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கும் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அவருக்கு நெய் பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து கம்பளி ஆடை அணிவிப்பர். ஸ்ரீ ருத்ரம், சமகம் போன்ற துதிளை பாராயணம் செய்வர், சிவ சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து பொரி உருண்டை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்யப்படும்.
நான்காம் காலம்: நான்காம் காலம் சிவஸ்வரூப மாகவே லிங்கம் வழிபடப்படுகிறது. அப்போது கரும்புச்சாறு அபிஷேகம் செய்து கஸ்தூரிக் காப்பு சாத்தப் படுகிறது. பச்சைவண்ண மலர்களே ஆடையாக அணிவிக்கப்படும். கோதுமை, நெய், சர்க்கரை சேர்த்த உணவினை நிவேதனம் செய்வர். அதர்வண வேத பாராயணம் நடைபெறும். நல்லெண்ணெய் விட்டு மகா மேரு தீபம் ஏற்றப்படும், எல்லா விதமான மலர்களும் கலந்து சமர்ப்பக்கப்படுகின்றன. அப்பர் அருளிய திருத்தாண்டகம் ஓதுவர். விரதம் இருப்பவர்கள் இந்த நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு பூஜைகளை கண்ணாரக் கண்டு உமாமகேசனை உளமார நினைத்து வழிபட வேண்டும். இந்த நான்கு கால பூஜை முடிந்தவுடன் சற்று நேரத்தில் உஷத் காலம் (அதிகாலை நேரம்) வந்துவிடும். அப்போது மறு நாளைக்குரிய உஷத் கால பூஜைகள் நியமப்படி நடக்கும். அதோடு உச்சிக்கால பூஜையையும் சேர்த்து முடித்து விடுவார்கள். பக்தர்கள் வீடு வந்து சிறிதுநேரம் அமர்ந்த பின்னர் நீராடி பஞ்சாட்சரத்தை ஜபித்து திருநீறு அணிந்து யாராவது ஒருவறியவருக்கு உணவிட்டு தானும் உண்ண வேண்டும். அதுவே விரதத்தை முடிக்கும் முறை, அவ்வாறு செய்தால் எல்லா ஞானமும் சித்தியும் கை வரப்பெறுவதோடு அவர்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பெண்கள் சிவராத்திரி விரதமிருந்து பூஜை செய்தால் மிகச் சிறந்த கணவன் வாய்க்கப் பெறுவார்கள். மணமான பெண்கள் விரதமிருந்தால் கணவனுக்கு நீண்ட நோய் நொடியற்ற வாழ்நாளும் புத்திரர்களுக்கு நல்ல படிப்பும் சேர்க்கையும் கிடைக்கும். மனை சிறக்கும் மங்களங்கள் பெருகும்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




சிவராத்திரி தோன்றியது எப்படி?
மார்ச் 04,2013
அ-
+
Temple images
ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி நிழையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர். அப்போது உமையவள். பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவனாரை வழிபட்ட பார்வதியாள், இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் என்று பரமனிடம் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகுக எனச் சிவபெருமானும் அருள்பாலித்தார். அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகா சிவராத்திரி.
பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்திய பின்னர், மயங்கியது போலக் கிடந்து திருவிளையாடல் புரிந்த சிவனார், திரயோதசி நாளில் மாலை வேளையில் சந்தியா நடனம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்த சதுர்த்தசி இரவின் நான்கு யாமங்களிலும், தேவர்கள் அவரை அர்ச்சித்துப் போற்றினர். அதுவே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. இப்படி புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, விரதம் இருந்து முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து, இரவு கண் விழித்து நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும். இதனால், துன்ப இருள் அகன்று, சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும். மகா சிவராத்திரிக்கு முந்திய மாலை காலத்தில் நடராஜ மூர்த்தியையும், பிரதோஷ நாயகரையும் வழிபடவேண்டும். தொடர்ந்து, இரவின் முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தென்முகக் கடவுளையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூட (சந்திரசேகரர்) மூர்த்தியையும் வழிபட வேண்டும். இந்தத் திருநாளில் கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவபுராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞானநூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம்,  உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது? என்று கேட்டாள். மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிகவும் பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் (பட்டினி) இருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்குகால பூஜை நடத்த வேண்டும். வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது, என்றார். சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கினர். விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம். இவ்விரதத்தின் பெருமையைக் கேட்டு யமனும் நடுங்குவதாகவும், எல்லா யாகங்களையும் எல்லா தருமங்களையும்விட மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது.
அடி - முடி தேடிய கதை!
ஒருமுறை பிரம்மனுக்கும் திருமாலுக்கும் இடையே, தங்களில் பெரியவர் யார் எனும் சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவருக்குமான மோதலால் உலகமும் உயிர்களும் பாதிப்படையுமே என அச்சம் கொண்ட தேவர்கள், பரமேஸ்வரரைச் சரணடைந்தனர். அவர்களை ஆறுதல்படுத்தினார் ஈஸ்வரன். திருமாலுக்கும் பிரம்மனுக்கும் நடுவில் பெரும் நெருப்பு தூணாய் தோன்றினார். அதன் பிரமாண்டம் அவர்களை அயரவைத்தது. அந்தப் பிரமாண்டத்தின் (நெருப்புத் தூணின்) திருவடியையோ அல்லது திருமுடியையோ முதலில் கண்டு வருபவரே பெரியவர் என்று முடிவானது. உடனே பெருமாள், வராக உருவெடுத்து பூமியை அகழ்ந்து, திருவடியைக் காணச்சென்றார். பிரம்மன், அன்னப் பறவையாக மாறி திருமுடி காண உயரப் பறந்தார். ஆனால் இருவராலும் அந்த நெருப்புத் தூணின் அடி-முடியைக் காண இயலாமல் போனது. செய்வதறியாமல் இருவரும் துதித்து நிற்க, தேவர்கள் யாவரும் போற்றி வழிபட, அந்த நெருப்புத் தூணின் மையத்தில்... மான், மழு, அபய, வரத முத்திரை தாங்கியவராக திருக்காட்சி தந்தார் சிவபெருமான். அங்கிருந்த அனைவருக்கும் அனுக்கிரஹம் தந்தவர், இவ்வாறு நான் காட்சியளித்த தினம் சிவராத்திரி ஆகும். இதுபோல், முன்னம் ஒரு சிவராத்திரி நாளில் தேவியும் என்னை பூஜித்து பேறு பெற்றாள். ஆகம முறைப்படி இந்த தினத்தில் எம்மை பூஜிக்க.. நல்லது யாவும் நடந்தேறும். பாவங்களைப் பொசுக்கி, சிவகதி காட்டும் அற்புதமான இந்த பூஜை, அஸ்வமேதம் முதலான யாகங்கள் செய்வதைக் காட்டிலும் நூறு மடங்கு பலன் தருவது என்று அருள்பாலித்த பின் திருக்கயிலைக்கு எழுந்தருளினார். இப்படி, திருமால் மற்றும் பிரம்மாதி தேவர்கள் சிவனருள் பெற்ற தினம் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நாள். இதையே உலகத்தார் மகா சிவராத்திரியாகக் கொண்டாடுகின்றனர்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிறப்பான தலங்கள்!
மார்ச் 04,2013
அ-
+
Temple images
சிவராத்திரியன்று புராணத்தோடு தொடர்புடைய தலங்களில் இறைவனை தரிசிப்பதால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். திருவண்ணாமலை : ஒரு மகா சிவராத்திரி நாளில் லிங்கோற்பவ காலத்தில் இறைவன் இத்தலத்தில் ஜோதி உருவாகக் காட்சி கொடுத்தார் என்கிறது சிவபுராணம். திருவண்ணாமலை தலத்தில் சிவராத்திரி தரிசனம் செய்வது வாழ்வில் தடைகளைப் போக்கி வெளிச்சமாக்கும்.
திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருத்தலம். கோடி ருத்திரர்கள் சிவராத்திரி காலத்தில் பூஜை செய்த இடம் இது. எனவே இத்தலத்தை உருத்திரகோடி என்பார்கள். சிவராத்திரியன்று இத்தலத்தில் வழிபடுவது செழிப்பான வாழ்வளிக்கும்.
காஞ்சிபுரம் : தன் பதியான பசுபதியின் கண்களை பார்வதி விளையாட்டாகப் பொத்த உலகங்களும் இருண்டன. அதனால் சிவன் தன் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதன் வெப்பம் தாளாமல் உலக உயிர்கள் வருந்தின. அந்த சங்கடம் நீங்கிட ருத்திரர்கள் இங்கு பூஜை செய்தனர். காஞ்சியில் உள்ள கோயில்களான ஆனந்தருத்ரேசம், மகாருத்ரேசம், ருத்திரகோடீசம் ஆகியவை ருத்திரர்கள் பூஜித்த தலங்கள். காஞ்சியில் ஒருபகுதி உருத்திர சோலை எனப்பட்டது. உலகத்தாருக்குத் துன்பம் ஏற்பட்ட பாவத்திலிருந்து விடுபட பார்வதி, காமாட்சியாக இருந்து சிவனை பூஜை செய்த இடமும் காஞ்சிபுரமே. எனவே காஞ்சியில் சிவராத்திரி தரிசனம் செய்வது, அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களைப் போக்கும்.
திருவைகாவூர் : தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள தலம். இத்தல இறைவன் வில்வவனேஸ்வரரையும் அம்பிகை சர்வஜனரட்சகியையும் ஒரு சிவராத்திரி நாளில் தவநிதி என்ற முனிவர் கோயிலில் வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வேடனால் துரத்தப்பட்ட ஒரு மான் கோயிலுக்குள் நுழைய, முனிவர் அபயமளித்தார். வேடன் முனிவரை தாக்க முற்பட, சிவபெருமான் புலி வடிவமெடுத்து வேடனைத் துரத்தவே வேடன் பயந்து அருகில் இருந்த வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நிற்க வேடன் தூங்கி விடுவோமோ என்ற பயத்தில் வில்வ இலையை பறித்துக் கீழே போட்டான். அவை கீழே புலியாக நின்ற சிவபெருமான் மேல் விழ, அதனையே பூசனையாக ஏற்று வேடனுக்குக் காட்சியளித்து மோட்சம் அளித்தார் இறைவன். இத்தல வழிபாடு மோட்ச சித்தியளிக்கும். பிறவிப்பிணி தீர்க்கும்.
திருக்கடவூர் : தன் பக்தன் மார்க்கண்டேயனை பிடிக்க வந்த காலனை சிவன் காலால் உதைத்த சம்பவம் நடந்தது சிவராத்திரி நாள் ஒன்றில் என்பர். காலசம்ஹாரரை சிவராத்திரி நாளில் வணங்குவது, அகால மரணபயம் போக்கும்.
ஓமாம்புலியூர் : சிவராத்திரி நாள் ஒன்றில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளைச் சொன்ன இடம் ஓமாம்புலியூர் இந்த ஊரை பிரணவ வியாக்ரபுரம் என்கிறார்கள். சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் இது. இங்கே சிவராத்திரி வழிபாடு செய்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும் என்பது ஐதிகம்.
தேவிகாபுரம் : ஒரு காலத்தில் இப்பகுதி பெரிய காடாக இருந்தது. ஒரு சமயம் சிவராத்திரி நாளில், வேடன் ஒருவன் இப்பகுதியில் நிலத்தைத் தோண்டியபோது, ஒரு லிங்கம் வெளிப்பட்டது. கடப்பாரை பட்டதால் லிங்கத்திலிருந்து ரத்தம் வழிந்தது. அதிர்ச்சியடைந்த வேடன், காயம்பட்ட இடத்தில் மூலிகை வைத்துக் கட்டினான். பிறகு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்தால் காய்ச்சல் வந்து விடுமோ என்று வெந்நீரால் அபிஷேகம் செய்தான். அதை தொடர்ந்து இன்றும் இத்தலத்தில் இவருக்கு வெந்நீர் அபிஷேகமே செய்யப்படுகிறது. இந்த வழியே போருக்குச் சென்ற மன்னன் போரில் வெற்றி அடைந்தால் அந்த லிங்கத்திற்கு மலையின் மீது கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டான். போரில் வெற்றி பெற்றதும் ஆலயம் அமைத்தான். பிரதிஷ்டை செய்ய வேண்டிய நேரத்தில் சுயம்பு லிங்கம் காணாமல் போனதால், காசியிலிருந்து லிங்கம் கொண்டு வரச் செய்தான். அப்போது, காணாமல் போன லிங்கம் கிடைத்துவிடவே, அதற்குக் கனககிரீஸ்வரர் என்று பெயர் சூட்டி, ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்தான். இக்கோயில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், வந்தவாசி சாலையில் மலைக்குன்றின் மேல் உள்ளது. இங்கே சிவராத்திரி பூஜை செய்வது வாழ்வில் வெற்றிக்கு வழிசெய்யும்.
கோகர்ணம் : ராவணனுக்கு ஈசனாலேயே வழங்கப்பட்ட பிராணலிங்கம் உள்ள தலம். பிள்ளையார், ராவணனுடன் நடத்திய திருவிளையாடலால் இறைவன் இங்கேயே அமைந்தார். சுவாமி மகாபலேஸ்வரர். அம்பிகை தாம்ரகவுரி. மாசி மாத சிவராத்திரி நாள் ஒன்றில் பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டதையொட்டி இங்கு பிரம்மோத்சவமும் சிவராத்திரி அன்று இரவு தேரோட்டமும் நடக்கும். கர்நாடக மாநிலம் ஹுப்ளிக்கு அருகில் உள்ள இங்கு சிவராத்திரி வழிபாடு செய்வது முன்வினை போக்கும்.
ஸ்ரீசைலம் : சிலாதமுனிவரின் மகனான நந்தி சிவவழிபாடு செய்து சிவனைத் தாங்கும் வரம் பெற்ற தலம். நந்தி தேவரே இங்கு மலை உருவில் இருக்கிறார். இத்தலத்தை திருப்பருப்பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் அழைப்பர். ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றான இங்குதான் ஆதிசங்கரமகான் சிவானந்தலஹரி ஸ்லோகத்தினை இயற்றினார். அச்சம்பவம் சிவராத்திரி நாள் ஒன்றில் நிகழ்ந்ததாகக் கூறுகின்றனர். இத்தலத்தில் சிவராத்திரியன்று சிவனை வழிபடுவது ஏராளமான புண்ணியப் பலன்களை தரக்கூடியது.
காளஹஸ்தி : இக்கோயிலில் ஒவ்வொரு பட்சத்தில் வரும் சதுர்த்தசி நாளும் நித்திய சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. கண்ணப்ப நாயனார் சிவராத்திரி நாள் ஒன்றில்தான் தன் கண்களை சிவபெருமானுக்குக் கொடுத்தார். சிவராத்திரி நாட்களில் இங்கு தேரோட்டம், ரிஷப வாகன சேவை நடக்கிறது. சிவராத்திரி தரிசனத்தை இத்தலத்தில் மேற்கொள்வது இறையருளால் வாழ்வில் இன்றியமையாத யாவும் கிடைக்கச் செய்யும்.
நாகராஜனான வாசுகியும் மற்ற நாகங்களும் சிவராத்திரி இரவில் நான்கு சிவாலயங்களை வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திரும்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் நாகராஜன் வழிபாடு செய்தான் என்பது தொன்மையான தகவல்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




மகா சிவராத்திரி பாடல்கள்!
மார்ச் 04,2013
அ-
+
Temple images
தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு. அந்த வகையில் சிவனாரைத் துதிக்கும் லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும். இதில் பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் தேவர்களால் அர்ச்சிக்கப்படும் லிங்க மூர்த்தியை... நிர்மலமாகவும் பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை.. பிறப்பினால் ஏற்படும் துக்கதைப் போக்குகின்ற லிங்க மூர்த்தியை.. எப்போதும் மங்கலத்தை அருளும் மகாலிங்கத்தைப் போற்றுகிறேன்... எனத் துவங்கி எட்டு ஸ்லோகங்களால் பரமனைப் போற்றும் ஆதிசங்கரர், இந்த ஸ்லோகங்களைச் சொல்லி பரமேஸ்வரனை வழிபட சிவலோகத்தில் வசிக்கும் பேரானந்த பெருநிலையை அடைவான் என்றும் அறிவுறுத்துகிறார். இதோ... மகாலிங்கத்தைப் போற்றும் லிங்காஷ்டகம் எட்டு ஸ்லோகங்களில் ஒன்று தரப்பட்டுள்ளது.
கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
பொருள் : தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன். இவ்வாறு விரதம் இருந்து வழிபட இயலாதவர்கள் சிவபெருமானின் எட்டு நாமங்களையாவது ஓயாமல் ஜபிக்க வேண்டும் அவை:
ஓம் ஸ்ரீபவாய நம
ஓம் ஸ்ரீசர்வாய நம
ஓம் ஸ்ரீருத்ராய நம
ஓம் ஸ்ரீபசுபதயே நம
ஓம் ஸ்ரீஉக்ரயே நம
ஓம் ஸ்ரீமகா தேவாய நம
ஓம் ஸ்ரீபீமாய நம
ஓம் ஸ்ரீஈசாநாய நம
சிவராத்திரியன்று இரவில் விழித்திருக்கும் போது, பாட வேண்டிய எளிய பாடல்கள்
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!
உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!
சிவராத்திரி பிரார்த்தனை
உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.
பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.
ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள வருவாயாக.
ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.
மங்கள லட்சணம் உடையவனே! பயத்தைப் போக்குகின்றவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.
புண்ணியம் செய்தவர்களுக்கு முகத்தைக் காட்டுபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.
தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி  அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழைத் தந்தருள்வாயாக.
திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி யவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டிய நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.
கிரகங்களால் ஏற்படும் சிரமத்தைப் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெலாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும், அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.
இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! கைலாய நாதனே! நிறைவான மனதைத் தந்தருள்வாய்.
ஐந்தெழுத்து நாயகனின் ஐந்து அடையாளம்: சிவபெருமானுக்குரிய அடையாளங்கள் ஐந்து. அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுந்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்























































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக