திங்கள், 7 ஜனவரி, 2013

பேலூர் மடம்: இறைவன் தேர்ந்த தலம்!

ராதே கிருஷ்ணா 07-01-2013


பேலூர் மடம்: இறைவன் தேர்ந்த தலம்!



முதல் பக்கம் >> பேலூர் மடம்

பேலூர் மடம்: இறைவன் தேர்ந்த தலம்!
கங்கையின் மேற்குக் கரை காசிக்கு நிகர் என்று போற்றப்படுகிறது. கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ள பேலூர் மடம். இவ்வாறு, [...]
ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயில்
ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலிலிருந்து நமது தீர்த்த யாத்திரை தொடங்குகிறது. கோயிலின் கம்பீரத் தோற்றமே நம்மில் ஒருவித பரவச [...]
ஆரம்பகால மடம்
ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலுக்குப் பின்னால் அமைந்துள்ளது ஆரம்பகால மடம். பேலூர் மடத்து நிலம் (ஆரம்பத்தில் சுமார் 7.3 ஏக்கர் [...]
சுவாமிஜியின் மாமரம்!
முற்றத்தின் கிழக்கு ஓரத்தில் நிற்கிறது. சுவாமிஜியின் மாமரம். மடத்து நிலம் வாங்கியபோதே நிற்கின்ற மரங்களுள் ஒன்றான இந்த மரம் [...]
பழைய கோயில்
மாமரத்திற்கு வடக்கில் மாடிக்குச் செல்லும் படிகள் காணப்படுகின்றன. அவற்றின் வழியாகச் சென்றால் பழைய கோயிலை அடையலாம். அங்கே [...]
சுவாமிஜியின் அறை
மாமரத்தின் கீழிருந்து கங்கையை நோக்கி நடந்தால், நமக்கு இடது பக்கமாக, சுவாமிஜியின் அறைக்குச் செல்வதற்கான படிக்கட்டினைக் காணலாம். [...]
பிரம்மானந்தர் கோயில்!
நாம் முதலாவதாகக் காண்பது பிரம்மானந்தர் கோயில், ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப் புதல்வராகக் கருதப்பட்ட சுவாமி பிரம்மானந்தர் [...]
சாரதா தேவி கோயில்!
அடுத்ததாக நான் காண்பது சாரதா தேவி கோயில், அருள்மிகு அன்னை, அழகிய மரப்பீடம் ஒன்றில், என்றென்றும் தாம் போற்றுகின்ற கங்கையைப் [...]





பேலூர் மடம்: இறைவன் தேர்ந்த தலம்!டிசம்பர் 31,2012
கங்கையின் மேற்குக் கரை காசிக்கு நிகர் என்று போற்றப்படுகிறது. கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ள பேலூர் மடம். இவ்வாறு, இயல்பாகவே ஒரு தீர்த்தத்தலமாக அமைந்துள்ளது. இந்த இடம் அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமிஜி, ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்ற சீடர்கள், மற்றும் வாழையடி வாழையாக இங்கே வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற மகான்கள்- இவர்களின் திருப்பாதத் துகள்களால் புனிதமாக்கப்பட்டது. அத்துடன், சுவாமிஜி எழுந்தருளச் செய்த(ஸ்ரீராமகிருஷ்ணர் தமது இறுதி நாட்களில் ஒருமுறை சுவாமிஜியிடம், நீ என்னை உன் தோள்களில் சுமந்து, எங்கே கொண்டு சென்று வாழச் செய்தாலும், உலகின் நன்மைக்காக, அங்கே நான் நிரந்தரமாக வாழ்வேன் என்று கூறியிருந்தார். அது இங்கே குறிப்பிடப்படுகிறது) பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சான்னியத்தியமும் சேர்ந்து பேலூர் மடம் ஒரு தலைசிறந்த தீர்த்தத்தலமாகத் திகழ்கிறது.

பேலூர் மடத்தைப்பற்றி ஒருமைற அன்னை கூறினார்: பேலூர் மடத்தில் எத்தகையதோர் அமைதி நிலவுகிறது! அங்கே என் மனம் என்னவோர் உயர்ந்த நிலையில் திளைத்தது! தியானம் அங்கே இயல்பாகவே கைகூடுகிறது. அதனால்தான் நரேன்(சுவாமிஜி) அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான்.

பேலூர் மடம் அமைந்துள்ள இந்த இடம் இறைவனால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது. அதற்கான அறிகுறிகளைப் பலரும் தெய்வீகக் காட்சிகளில் கண்டுள்ளார்.

ஒருமுறை அன்னை படகில் தட்சிணேசுவரத்திற்குச் சென்றார். படகு, தற்போது பேலூர் மடம் அமைந்துள்ள பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. அந்த நாட்களில் இந்த இடம் வாழைத் தோட்டமாக இருந்தது. திடீரென்று அன்னைக்குக் காட்சி ஒன்று தோன்றியது- ஸ்ரீராமகிருஷ்ணர் வாழை மரங்களுக்கிடையே நடந்து செல்வதைக் கண்டார் அவர். இவர் ஏன் இங்கே செல்கிறார் என்று சிந்தித்தார் அன்னை. இந்த விவரத்தைத் தம்முடன் பயணித்த ஓரிருவரிடம் தெரிவிக்கவும் செய்தார். பின்னாளில் சுவாமிஜி மடத்திற்காகத் தேர்ந்தெடுத்த நிலம், தாம் தெய்வீகக் காட்சியில் கண்ட அதே இடம் என்பதைப் புரிந்துகொண்டபோது அன்னை மிகவும் மகிழ்ந்து, ஸ்ரீராமகிருஷ்ணர் ஏற்கனவே தேர்ந்தெடுத்த இடம் அது. கங்கையின் மேற்குக் கரை காசிக்கு நிகர். அங்கே மடத்தை நிறுவி, ஒரு மாபெரும் பணி செய்திருக்கிறான் நரேன் என்று கூறினார்.

சுவாமிஜிக்கும் அதுபற்றிய காட்சி கிடைத்திருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவிற்குப் பிறகு அவரது இளஞ்சீடர்கள் பராநகர் என்ற இடத்தில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் தவ வாழ்வில் ஈடுபட்டிருந்தனர். அங்கேயுள்ள கங்கை படித்துறையில் நின்றுகொண்டிருந்தபோது சுவாமிஜி பேலூர் மடம் தற்போது அமைந்துள்ள பகுதியைச் சுட்டிக்காட்டி, கங்கையின் அக்கரையில், அதோ அங்கேதான் நமது நிலையான மடம் அமையுமென்று என்னுள் ஏதோ ஒன்று சொல்கிறது என்று கூறினார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப் புதல்வரான சுவாமி பிரம்மானந்தர், இந்தப் பேலூர் மடம் திருக்கயிலாயமே தான். இங்கே குருவும் கங்கையும் உள்ளனர். சுவாமிஜி வாழ்ந்திருந்தார். வைகுண்டமும் இதுவே... பேலூர் மடத்தின்மீதுள்ள பற்றை என்னால் விடவே இயலாது. மரணத்திற்குப் பிறகுகூட நான் மேலிருந்து பேலூர் மடத்தைப் பார்த்துக்கொண்டிருப்பேன் என்று குறிப்பிட்டார்.

சுவாமிஜி, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தமது தோள்களில் தாங்கிவந்து, இந்த பேலூர் மடத்தில் பிரதிஷ்டை செய்தார். எங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்கிறாரோ, அங்கே அன்னை, மற்ற சீடர்கள் அனைவரும் வாழ்வார்கள். அவர்கள் இங்கே பேலூர் மடத்தில் நிரந்தரமாக வாழ்கிறார்கள்... சிலவேளைகளில் நாங்கள் அவர்களைக் காண்கிறோம் என்றார் மஹாபுருஷ்ஜி மஹராஜ்
Bookmark and Share



ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயில்டிசம்பர் 31,2012
ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலிலிருந்து நமது தீர்த்த யாத்திரை தொடங்குகிறது. கோயிலின் கம்பீரத் தோற்றமே நம்மில் ஒருவித பரவச பக்தியை எழுப்புகிறது. முன்வாசல் படியேறி முகப்பை அடையும்போது ஸ்ரீராமகிருஷ்ணரின் அற்புதத் திருவுருவம் கண்களில்படுகிறது. சக்கரவர்த்தித் திருமகனே! நிறைந்த செல்வமும் நீங்கிடா வெற்றியும் நல்குபவனே, உன்னை நான் வணங்குகிறேன்! (ராஜாதிராஜாய ப்ரஸஹ்யஸாஹினே நமோ வயம் வைச்ரணவாய குர்மஹே- தைத்திரீய ஆரண்யகம்) என்று வேதங்கள் போற்றுவது நம் மனத்தில் எழுகிறது. இது நமது கோயில். இங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் உயிருணர்வுடன் உண்மையாகவே வீற்றிருக்கிறார். அவர் நம்மைப் பார்க்கிறார், நமது குறைகளைக் கேட்கிறார்.... பக்தி, முக்தி, பணம், பதவி, உலக சுகங்கள் என்று எதை வேண்டுமானாலும் கேளுங்கள். கேட்பதை நீங்கள் பெறுவீர்கள். என்று மஹா புருஷ்ஜி கூறியது நம் நினைவில் நிழலாடுகிறது. நாம் சற்றுநேரம் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமுன்னர் அமர்கிறோம். நமது பிரார்த்தனைகளை அவரிடம் சமர்ப்பிக்கிறோம்.

திருக்கோயிலைச் சற்று பார்போம். 

ஸ்ரீராமகிருஷ்ணர் தியாகத்தின் திருவுருவாகத் திகழ்ந்தவர்; தியாகம் எளிமையின் வாயிலாக வெளிப்படுவதால்தானோ என்னவோ அவரது திருக்கோயில் மூலஸ்தானமும் எளிமையின் சின்னமாகத் திகழ்கிறது! அலங்கார ஆடம்பரங்கள் எவையும் பெரிதாக அங்கே இல்லை. அப்பழுக்கற்றவராகத் திகழ்ந்தவரான ஸ்ரீராமகிருஷ்ணரது புனிதத்தைப் பிரதிபலிப்பதுபோல் அவரது திருவுருவச் சிலை. அவர் அமர்ந்துள்ள வெண்தாமரை மலர், பீடம் ஆகியவை வெண்பளிங்கினால் அமைந்துள்ளன. பீடம், இடையில் சிறுத்து உடுக்கின் வடிவில் அமைந்துள்ளது. பீடத்தின் மூன்று பக்கங்களிலும் அன்னப்பறவையின்(புராணங்கள் குறிப்பிடுகின்ற இந்தப் பறவை, பாலும் நீரும் கலந்த கலவையிலிருந்து பாலை மட்டும் பிரித்துப் பருக வல்லது. இது சம்ஸ்கிருதத்தில் ஹம்ஸம் என்று அழைக்கப்படுகிறது. உலகிலிருந்து இறைவனைப் பிரித்து, இறைவனிலேயே வாழவல்ல உயிர் ஆன்மீக நிலைகளை அடைந்த துறவியரை அன்னப் பறவையுடன் ஒப்பிட்டுக் கூறுவதுண்டு. ஸ்ரீராமகிருஷ்ணர், மிக வுயர்ந்த துறவி என்ற பொருளில் பரமஹம்ஸர் என்று அழைக்கப்பட்டார். அன்னப் பறவையின்மீது மலர்ந்த தாமரை மலரில் அமர்ந்திருப்பதுபோல் ஸ்ரீராமகிருஷ்ணரது சிலையை வடிக்க வேண்டும் என்பது சுவாமிஜியின் விருப்பமாக இருந்தது.) உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இடது பக்கச் சுவர்மாடத்தில் அன்னையின் திருப்பாதத் துகள்கள் அடங்கிய பேழை உள்ளது; அது தினமும் பூஜிக்கப்படுகிறது. வலது பக்கச் சுவர்மாடத்தில், பாணேசுவர சிவன் எனப்படுகின்ற சிறிய சிவலிங்கம் உள்ளது; தினசரி பூஜையின்போது, ஸ்ரீராமகிருஷ்ணர் இதிலேயே வழிபடப்படுகிறார். ஸ்ரீராமகிருஷ்ணருக்கு மேலே தேக்கினால் செய்த அலங்காரப் பந்தல் உள்ளது; அதன் முன்புறம் ஓம் என்னும் பிரணவ மந்திரம் சம்ஸ்கிருதத்தில் செதுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தின் கதவுகள் சீனத் தச்சர் ஒருவரால் செய்யப்பட்டவை.

உலக அரங்கில் ஸ்ரீராமகிருஷ்ணர் சமய சமரசத்தூதராக அறியப்படுகிறார். அவரது இந்தக் கோயில், சமரசத்தின் சின்னமாகத் திகழ வேண்டும் என்று விரும்பினார் சுவாமிஜி. சுவாமிஜியின் இந்தக் கருத்து எவ்வாறு ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலில் வெளிப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

இந்தத் திருக்கோயில், கீழை மற்றும் மேலை நாட்டுக் கட்டிடக் கலைகளில் சங்கமிப்பில் புதிய பாணி கோயில்களுக்கான முன்னோடியாக விளங்குகிறது. மூலஸ்தானத்தை ஒட்டி பெரிய பிரார்த்தனை மண்டபம் அமைந்திருப்பது சர்ச்களின் பாணியாகும். பாரம்பரிய இந்துக் கோயில்களில் இத்தகைய பிரார்த்தனை மண்டபமோ, அதில் பலர் ஒருசேர அமர்ந்து கூட்டு வழிபாடு செய்வதோ கிடையாது. குவிந்த மேற்கூரை, அதில் மாடி போன்ற அமைப்பு, மண்டபத்தில் காணப்படுகின்ற பெரிய தூண்கள் ஆகியவை பவுத்தக் கோயில்களில் பாணியாகும். மும்பைக்கு அருகிலுள்ள கார்லா பவுத்தக் குகைகளில் இவற்றை நாம் காணலாம்.

ஜன்னல்களும், மூலஸ்தானத்தைச் சுற்றி காணப்படுகின்ற அலங்கார வளைவுகளும் ராஜபுதன மற்றும் முகலாய கட்டிடக் கலை பாணியில் அமைந்தவை.

இனி, கோயிலை வலம் வருவோம். 

மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள அலங்கார வளைவுகளுக்கு மேலே நவக்கிரகங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளனர். வடக்கில் சூரியன், பிருஹஸ்பதி, செவ்வாய், கிழக்கில் சந்திரன்; சுக்கிரன், புதன்; மேற்கில் ராகு, சனி, கேது இவை ஒரிய கட்டிடக் கலைபாணியில் அமைந்தவை. மூலஸ்தானத்தை வலம் வரும் போது நவக்கிரகங்களையும் வலம் வந்தாகி விடுகிறது.

மேற்கு வாசலுக்கு மேலே ஆஞ்சநேயரும், கிழக்கு வாசலுக்கு மேலே விநாயகரும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். அலங்கார வளைவுடன் கூடிய முக்கிய வாசல் பவுத்த கட்டிடக் கலை பாணியில் அமைந்துள்ளது. அதன் மேலே தென்னிந்தியக் கோயில்களின் கோபுர அமைப்பு காணப்படுகிறது. முக்கிய வாசலுக்கு மேலே ராமகிருஷ்ண இயக்கத்தின் சின்னம், காற்று புகவும் வெளிவரவும் ஏற்றவாறு ஒரு ஜன்னல்கள் அமைப்பில் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சின்னம் சுவாமிஜியால் வடிவமைக்கப்பட்டது. தன்னலமற்ற பணி(நீரலைகள்), பக்தி (தாமரை), ஞானம் (சூரியன்) மற்றும் தியானம் (மனிதனில் உறைகின்ற சக்தியின் வடிவான பாம்பு) ஆகியவற்றைச் சீராக இணைத்துச் செயல்படுவதன் வாயிலாக மனிதன் ஆன்மஞானம் (அன்னப் பறவை) பெறுகிறான் என்ற தத்துவத்தை இந்தச் சின்னம் குறிக்கிறது.

ராமகிருஷ்ண இயக்கச் சின்னத்திற்கு மேலே சிவலிங்கம் உள்ளது. சிவலிங்கம், ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறப்புடன் மிகுந்த தொடர்பு உடையது. சிவலிங்கம் ஒன்றிலிருந்து கிளம்பிய ஒளிவெள்ளம் தம்முள் புகுவதாக ஸ்ரீராமகிருஷ்ணரின் தாயான சந்திரமணி தேவி ஒருமுறை ஓர் அனுபவம் பெற்றார். இந்த அனுபவத்திற்குப் பிறகே ஸ்ரீராமகிருஷ்ணரைக் கருவுற்றார் அவர்.

ஸ்ரீராமகிருஷ்ண் திருக்கோயில் உருவான வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணருக்கான திக்கோயில் ஒன்று கட்ட வேண்டும், அதில் அவரது புனித அஸ்தியைப் பாதுகாக்க வேண்டும் என்பது சுவாமிஜியின் கனவாக இருந்தது. அவரது குறுகிய வாழ்நாளில் இது பெரிய அளவில் நடைபெறவில்லை; சிறியதோர் இடத்தில் அவர் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பிரதிஷ்டை செய்தார்; அது ஒன்று பழைய கோயில் என்று அறியப்படுகிறது. ஆனால் தாம் மறையும்முன் பெரியதொரு கோயிலுக்கான திட்டங்களையும் வரைபடத்தையும் தயார் செய்துவிட்டிருந்தார். அவரது கருத்துக்களை மனத்தில் வாங்கிக்கொண்டு, அவரது வழிகாட்டுதலின் வரை படத்தை உருவாக்கியவர், ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்களுள் ஒருவரான சுவாமி விஞ்ஞானானந்தர். திருக்கோயில் கட்டுமுன்பே சுவாமிஜி மறைந்துவிட்டார். ஆயினும் அதனை மேலேயிருந்து காண்பதாகக் கூறினார் அவர்.

1929 மார்ச் 13, ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி நாளன்று மஹாபுருஷ்ஜி மஹராஜ் கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார். எனினும் பணமின்மை காரணமாகப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தாராளமான தங்கள் நன்கொடை மூலம் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயில் பணிகள் துவங்கக் காரணமாக அமைந்தவர்கள் இரு அமெரிக்கப் பெண்கள், செலவின் பெரும்பகுதியை அவர்களே ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு, ராமகிருஷ்ண இயக்கத்தின் வரலாற்றிலும், பக்தர்களின் இதயங்களிலும் நீங்கா இடம் பெற்ற அந்த இருவர் ஹெலன் ரூபல் பக்தி என்று ம் அறியப்படுபவர் மற்றும் அன்னா வோர் செஸ்டர் அன்னபூர்ணா என்றும் அறியப்படுபவர்.

இந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பொறியியல் வல்லுனர்கள், அடிக்கல் நாட்டிய இடம் சரியில்லை, அங்கிருந்து நூறடி தள்ளியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். அவர்களின் கருத்திற்கு ஏற்ப விஞ்ஞானானந்தர் 1935 ஜூலை 16 குரு பூர்ணிமை நன்னாளில் மீண்டும் அடிக்கல் நாட்டினார். காலை 8.15 க்கு அடிக்கல் நாட்டுவதற்கான சுபவேளை குறிக்கப்பட்டது. அதற்கு முன்பாக அவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளைப் பெறுவதற்காக கோயிலுக்குச் சென்றார். பொதுவாக நேரம் தவறாதவர் அவர். ஆனால் அன்று வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் கழிந்தும் அவர் கோயிலை விட்டு வெளியே வரவில்லை. கடைசியாக அவர் வந்தபோது குறித்த வேளை கடந்துவிட்டிருந்தது. தாமதத்திற்கான காரணம் கேட்ட போது அவர் என்ன செய்வது! ஸ்ரீராமகிருஷ்ணர் என்னை வரவிட்டால்தானே! என்று கூறினார்.

அடிக்கல் நாட்டு விழாவின்போது அற்புதச் சம்பவம் ஒன்று நடைபெற்றது; விசேஷ பூஜைக்காக ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் ஒன்று அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவருக்குச் சமர்ப்பிப்பதற்கான அர்க்கியத்தைக் (பூ, சந்தனம், வில்வ இலை முதலியவை) கையில் ஏந்தி, பிரார்த்தித்தபடி நின்றுகொண்டிருந்தார் விஞ்ஞானானந்தர். அப்போது, திடீரென்று மென்மையாகக் காற்று வீசியது. விஞ்ஞானானந்தரின் கையில் இருந்த அர்க்கியம், அந்தக் காற்றில் தானாகத் தவழ்ந்து சென்று, ஸ்ரீராமகிருஷ்ணரின் முன்னால் எந்த இடத்தில் சமர்ப்பிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் அமர்ந்தது. விஞ்ஞானானந்தர் அர்க்கியம் சமர்ப்பிக்கு முன்னர், முதல் அர்க்கியத்தை சுவாமிஜியே சமர்ப்பிப்பது போலிருந்தது அந்த நிகழ்ச்சி. அதன் பின்னர் விஞ்ஞானானந்தர் வேறு அர்க்கியம் சமர்ப்பித்தார்.

1938 ஜனவரி 14 மகர சங்கராந்தி நன்னாளில் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விஞ்ஞானானந்தரே புதிய கோயில் பிரதிஷ்டையை நடத்தி வைத்தார். பிரதிஷ்டைக்குப் பிறகு அவர் கூறினார்: எல்லாம் நிறைவுற்ற பிறகு நான் சுவாமிஜியிடம் சுவாமிஜி, இந்தப் பிரதிஷ்டையை மேலேயிருந்து, பார்ப்பதாகக் கூறினீர்கள். இதோ, பாருங்கள்! நீங்கள் இங்கே எழுந்தருளச் செய்த ஸ்ரீராமகிருஷ்ணர், நீங்கள் மனத்திற்கண்ட புதிய கோயிலில் வீற்றிருக்கிறார்! என்றேன். அப்போது அதோ, (தென்மேற்குத் திசையைக் காட்டி) அங்கே சுவாமிஜி, பிரம்மானந்தஜி, மஹாபுருஷ்ஜி, சாரதானந்தஜி, துரீயானந்தஜி, அகண்டானந்தஜி எல்லோரையும் கண்டேன். அவர்கள் நிகழ்ச்சிகளை எல்லாம் ஆனந்தமாகக் கண்டுகளித்து, அனைவரையும் ஆசீர்வதித்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் பேலூர் மடத்தில் வாழ்கிறார். 

பேலூர் மடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் சான்னித்தியத்தைப்பற்றி மஹாபுருஷ்ஜி மஹராஜ் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் தமது எல்லையற்ற மகிமையுடன் இங்கே விற்றிருக்கிறார். தட்சிணேசுவரத்தில் எப்படி நாங்கள் ஸ்ரீராமகிருஷ்ணருடன் வாழ்ந்தோமோ, பேசிப் பழகினோமோ அப்படியே இப்போதும் வாழ்கிறோம். அவரது சான்னித்தியத்தால் மனம் எப்போதும் ஆனந்தத்தில் திளைக்கிறது.

பேலூர் மடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் நிரந்தர சான்னித்தியத்தை, புதிய துறவியர் உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பதில் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்கள் மிகுந்த அக்கறை செலுத்தினர். ஸ்ரீராமகிருஷ்ணரின் நைவேத்தியத்திற்குப் பழம் நறுக்கிய இளந்துறவி ஒருவரின் கவனக்குறைவைக் கண்ட மஹாபுருஷ்ஜி மஹராஜ் கூறினார். என்ன சேவை செய்கிறாய் நீ! வாழை மற்றும் ஆரஞ்சுப் பழங்களின் தோலை நீக்கியுள்ளாய். ஆனால் பிசிறுகள் சரியாக நீங்கவில்லை. கவனமாக வேலை செய், தவறுகள் நேராமல் பார்த்துக்கொள். ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்கிறார், எனவே மிகுந்த கவனத்துடன் பூஜை செய். பூஜையை அவர் ஏற்றுக்கொள்கிறார். நான் அதைக் காண்கிறேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர் இன்னும் தமது நுண்ணுடலை விட்டுவில்லை. ராமகிருஷ்ண உடம்பிலேயே வாழ்ந்து வருகிறார். பாக்கியசாலிகள் அவரைக் காண்கிறார்கள். அவர் பேசுவதைக் கேட்கிறார்கள். உண்மையான ஆர்வமும் விடாமுயற்சியும் இருக்குமானால் நிச்சயமாக அவரைக் காணலாம். என்பார் சுவாமிஜி. 
Bookmark and Share



ஆரம்பகால மடம்ஜனவரி 03,2013
ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலுக்குப் பின்னால் அமைந்துள்ளது ஆரம்பகால மடம். பேலூர் மடத்து நிலம் (ஆரம்பத்தில் சுமார் 7.3 ஏக்கர் நிலம் மட்டுமே மடத்திற்குச் சொந்தமாக இருந்தது; மீதி பகுதிகள் பின்னர் வாங்கப்பட்டவை) பிப்ரவரி 1898-இல் ராமகிருஷ்ண மடத்தின் கீழ் வந்தது. அப்போது, நிலத்தின் வடக்கு மூலையில் ஒரு மாடிக் கட்டிடம் மட்டுமே இருந்தது. சுவாமிஜிக்குப் பழக்கமானவரான ஓலி புல் அளித்த நன்கொடையுடன், விஞ்ஞானானந்தரின் மேற்பார்வையில் தொடங்கிய சீரமைப்பு பணி ஓராண்டு நடைபெற்றது.

சீரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது நவம்பர் 12-ஆம் நாள் அன்னை இங்கு வருகை புரிந்தார். தாம் தினமும் பூஜிக்கின்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை அவர் கொண்டு வந்திருந்தார். ஓரிடத்தைச் சுத்தம் செய்து, அந்தப் படத்தை அங்கே வைத்துப் பூஜிக்கவும் செய்தார்.

அந்த ஆரம்பகால மடத்தின் முற்றத்தில் நாம் இப்போது நிற்கிறோம். வலது புறக் கட்டிடங்கள் சுவாமிஜியின் காலத்தில் உள்ளவை. தற்போது மடத்து அலுவலகம் என்று அறியப்படுகின்ற இடது புறக் கட்டிடங்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டவை.

நாம் நிற்கின்ற இந்த முற்றம் புனிதமானது ஸ்ரீராமகிருஷ்ணர் இங்கே நடப்பதை மஹாபுருஷ்ஜி ஒரு காட்சியில் கண்டார். அதன்பிறகு, இந்த முற்றத்தைப் துப்புரவாக வைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். முற்றத்தைப் பெருக்கிய பிரம்மச்சாரி ஒருவரிடம், நீ கவனக்குறைவாகப் பெருக்கியுள்ளாய்; எரிந்த தீக்குச்சிகள் அங்கங்கே விழுந்து கிடக்கின்றன. தூசியும் சரியாகப் போகவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் நடக்கும் முற்றம் இது. அதை மனத்தில் வைத்து வேலை செய். அவர் நடக்கும்போது அவரது திருப்பாதங்களில் எதுவும் குத்தாதபடி சுத்தம் செய் என்று ஒருமுறை கூறினார்.

அன்னையின் வாழ்க்கையிலும் இடம் பெற்றது இந்த முற்றம். 1916-ஆம் ஆண்டு துர்க்கா பூஜையின் போது அன்னை பேலூர் மடத்திற்கு வந்திருந்தார். அஷ்டமி நாளன்று காலையில் அவர் இந்த முற்றம் வழியாகச் சென்றார். எதிர்க் கட்டிடத்தின் (பழைய கோயிலின் கீழ்ப்பகுதி; தற்போது மடத்து அலுவலகத்தின் சில பகுதிகள் இங்கே இயங்கி வருகின்றன. அந்த நாட்களில் இது சமையலறை, ஸ்டோர் ரூம் மற்றும் உணவுக்கூடமாக இருந்தது) கீழ்ப்பகுதியில் துறவியரும் பக்தர்களும் விழாவிற்காகக் காய்கறிகள் நறுக்கிக்கொண்டிருந்தனர். அதைக் கண்ட அன்னை, ஆகா! என் பிள்ளைகள் என்னமாய் காய்கறி நறுக்கிறார்கள்! என்று உவகையுடன் கூறினார். அங்கிருந்த ரமணி (பின்னாளில் சுவாமி ஜகதானந்தர்) அதற்கு, தேவியின் அருளைப் பெறுவது எங்கள் நோக்கம்; அது, தியானத்தினமூலமாக இருந்தாலும் சரி, காய்கறி நறுக்குவதன்மூலம் இருந்தாலும் சரி என்றார்.

சுவாமிஜியின் வாழ்க்கையிலும் அழியா இடம் பெற்றது இந்த முற்றம். அவர் தமது உடலை உகுத்த நாளன்று மிக முக்கியமான கருத்து ஒன்றை இந்த முற்றத்தில் நின்றே கூறினார். அன்று காலையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் பள்ளியறையில் சுமார் மூன்று மணி நேரம் தியானித்த பிறகு, கீழே வந்து இந்த முற்றத்தில் முன்னும் பின்னுமாக நடந்தார். அவரது மனம் இந்த உலகத்தைக் கடந்து வேறு ஏதோ ஓர் உலகில் சஞ்சரிப்பது போலிருந்தது. இந்த உலக உணர்வே இல்லாதவர் போல் அவர் கூறினார்: இந்த விவேகானந்தன் என்ன செய்தான் என்பது யாருக்குத் தெரியும்! ஒருவேளை இன்னொரு விவேகானந்தன் இருந்தான் அவன் புரிந்துகொண்டிருப்பான். அதனால் என்ன! காலப்போக்கில் இன்னும் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தானே போகிறார்கள்!
Bookmark and Share


சுவாமிஜியின் மாமரம்!ஜனவரி 03,2013
முற்றத்தின் கிழக்கு ஓரத்தில் நிற்கிறது. சுவாமிஜியின் மாமரம். மடத்து நிலம் வாங்கியபோதே நிற்கின்ற மரங்களுள் ஒன்றான இந்த மரம் சுவாமிஜியின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது. காலைவேளைகளில் இதன்கீழ் நாடாக் கட்டிலில் அமர்ந்து கொண்டு படிக்கவோ, எழுதவோ, தம்மைக் காண வருபவர்களுடன் பேசவோ செய்வார் அவர். அவர் விரும்பி தியானம் செய்கின்ற இடங்களுள் ஒன்று இது, சுவாமிஜியின் ஆன்மீக ஆற்றலை வெளிப்படுத்துகின்ற சில நிகழ்ச்சிகள் இந்த மாமரத்தின் கீழ் நடைபெற்றுள்ளன. ஓரிரண்டைக் காண்போம்.

ஒருநாள் மாலை வேளை, சுவாமிஜி கங்கைக் கரையில் நின்றுகொண்டு, ஆயாஹி வரதே தேவி (ஆயாஹி வரதே தேவி த்ர்யக்ஷரே ப்ரஹ்மவாதினி காயத்ரி சந்தஸாம் மாதர்ப்ரஹ்மயோனி நமோஸ்துதே(காயத்ரி தேவி, வரங்களை அளிப்பவளே, ஓம் என்னும் பிரணவ மந்திரத்தால் பரம்பொருளைக் காட்டுபவளே, வேதங்களின் தாயே, சக்தியின் வடிவே, உன்னை வணங்குகிறேன். கருணைகூர்ந்து இங்கே எழுந்தருள்வாய்) வேத கால முனிவர் சிந்து நதிக் கரையில் நின்றபடி இந்த மந்திரத்தை உணர்ச்சிபெருக்குடன் ஓதுவதை ஒரு தெய்வீகக் காட்சியில் சுவாமிஜி கண்டிருந்தார்.) காயத்ரி ஆவாஹன மந்திரத்தைக் கூறியபடியே மடத்தை நோக்கி நடந்து வந்தார். அவரது இனிய கம்பீரக் குரல் கேட்பவரை மெய்மறக்கச் செய்தது. மந்திரத்தை ஓதியபடியே வந்த சுவாமிஜி இந்த மாமரத்தின்கீழ் வந்ததும் பரவச நிலையில் அப்படியே நின்றார். அவரது கண்கள் செம்பருத்திப்பூபோல் சிவந்து காணப்பட்டன. மது அருந்தியவர் போல் தள்ளாடினார் அவர். மாமரத்தின்கீழ் நடந்தபடியே இடையிடையே ஹும் ஹும் என்று ஹுங்கார த்வனி எழுப்பினார். அங்கே நின்றிருந்த அனைவரும் அவரைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் அமைதியானார் சுவாமிஜி. அசாதாரணமானதொரு தெய்வீகம் அந்த வேளையில் அவரிடம் பொலிந்தது. மனிதர்கள் மட்டுமல்ல. மிருகங்களையும் பறவைகளையும்கூட தம்மிடம் கவர்ந்திழுக்கவல்ல ஈர்ப்பாற்றல் அவரிடமிருந்து வெளிப்பட்டதுபோல் தோன்றியது.

மற்றொரு நாள்: சுவாமிஜி கல்பதருவாக பலருக்கும் உயர்ந்த ஆன்மீக அனுபவத்தை அள்ளி வழங்கிய நிகழ்ச்சி அது. பலவீனங்களை வெல்ல வேண்டுமானால், மகாவீரரான ஆஞ்சநேயரைத் தியானிக்க வேண்டும். அவரை லட்சியபுருஷராகக் கொள்ள வேண்டும் என்று சீடர் ஒருவரிடம் கூறியபடியே வந்த சுவாமிஜி, இந்த மாமரத்தின்கீழ் வந்து நாடகக் கட்டிலில் மேற்கு நோக்கி அமர்ந்தார். ஆஞ்சநேய உணர்வில் அவர் திளைப்பது போலிருந்தது. அந்த நிலையிலேயே, அங்கே கூடியிருந்த துறவிகளையும் பிரம்மச்சாரிகளையும் பார்த்துத் திடீரென்று இதோ இதோ பிரத்தியட்சமான கடவுள்! அவரை ஒதுக்கி விட்டு, மற்ற விஷயங்களில் மனத்தைச் செலு<த்துவார்களா? சீ, சீ! இதோ, அவர் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகத் தெரிகிறார். நீங்கள் பார்க்க வில்லையா? இதோ.... இதோ என்று கூறினார். அப்போது அங்கிருந்த அனைவரும் திடீரென்று தியானத்தின் ஆழத்திற்குள் இழுக்கப்படுவதாக உணர்ந்தார்கள் ஆனந்தவுணர்வில் திளைத்தவர்களாக, ஓவியத்தில் வரைந்த உருவங்கள்போல் அசையாமல் நின்றார்கள். கங்கையில் குளித்துவிட்டு, பூஜை செய்வதற்காகக் கையில் கமண்டல நீருடன் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த பிரேமானந்தரும் அவர்களுள் ஒருவர். சுமார் 15 நிமிடங்கள் இவ்வாறு கழிந்தன. அதன்பிறகு சுவாமிஜி பிரேமானந்தரைப் பார்த்து, இனி பூஜைக்குப் போ என்றார். அவருக்குப் புறவுணர்வு திரும்பியது. அவர் மெல்லமெல்ல கோயிலை நோக்கிச் சென்றார். மற்றவர்களும் படிப்படியாகச் சாதாரண நிலைக்குத் திரும்பினார்கள்.
Bookmark and Share



பழைய கோயில்ஜனவரி 03,2013
மாமரத்திற்கு வடக்கில் மாடிக்குச் செல்லும் படிகள் காணப்படுகின்றன. அவற்றின் வழியாகச் சென்றால் பழைய கோயிலை அடையலாம். அங்கே இரண்டு அறைகள் உள்ளன. இடது பக்கம் இருக்கின்ற அறை தான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலாகத் திகழ்ந்தது. ஆரம்பத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் புனித அஸ்தி (ஆத்மா ராம் என்று வழங்கப்பட்டது) , ஒரு கலசத்தில் இங்கே பூஜிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் வைக்கப்பட்டு, 1938 ஜனவரி 14 வரை சுமார் 40 வருடங்கள் பூஜை நடைபெற்றது. அன்னை சுவாமிஜி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களுள் பெரும்பாலோர் இங்கே வழிபட்டுள்ளனர். தற்போது இங்கே நாம் காண்கின்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் பெரிய படம், அன்னை, சுவாமிஜி மற்றும் பிரம்மானந்தரின் படங்கள் மிகவும் பின்னாளில் வைக்கப்பட்டவையாகும்.

வலது பக்கம் அறை மஹாபுருஷ்ஜியின் அறை என்று அழைக்கப்படுகிறது. ஆரம்ப நாட்களில் இது ஸ்ரீராமகிருஷ்ணரின் பள்ளியறையாக இருந்தது. சுவாமிஜி தமது உடலை உகுத்த நாளில் இந்த அறையில்தான் சுமார் மூன்று மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த நிகழ்ச்சி வருமாறு: 1902 ஜூலை 4 காலை 8. 30 மணிக்கு சுவாமிஜி கோயிலுக்குச் சென்றார். அங்கே தியானத்தில் ஆழ்ந்தார் ஆழ்ந்தார். 9.30 மணியளவில் தினசரி பூஜைக்காகப் பிரேமானந்தர் வந்தார். உடனே சுவாமிஜி அவரிடம் தமது ஆசனத்தை அடுத்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் பள்ளியறையில் விரித்துவிட்டு, அந்த அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை எல்லாம் மூடிவிடுமாறு கூறினார். மற்ற நாட்களிலும் அவர் அந்த வேளையில் தியானம் செய்வதுண்டு; ஆனால் கதவுகளும் ஜன்னல்களும் திறந்தே இருக்கும். அன்று அந்த மூடிய அறையில் சுமார் மூன்று மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் சுவாமிஜி. பின்னாளில் கோயில் தற்போதைய இடத்திற்கு மாற்றப் பட்ட பிறகு, மஹாபுருஷ்ஜி பயன்படுத்திய கட்டில் முதலிய பொருட்கள் இந்த அறையில் வைக்கப்பட்டன. ஸ்ரீராமகிருஷ்ணரின் பள்ளியறை மஹா புருஷ்ஜியின் அறை ஆகியது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் சன்னிதிக்கு வலது பக்கம் வராந்தா ஒன்று உள்ளது. அங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் நடப்பதை மஹாபுருஷ்ஜி ஒரு காட்சியில் கண்டார். ஒரு மழைநாளில் சாரல் தெறித்து அந்த வராந்தாவில் அங்கங்கே நீர் தேங்கி நின்றது. அதனைத் துடைத்துச் சுத்தம் செய்யத் தவறிய இளந்துறவி ஒருவரிடம் அவர் கூறினார். என்னப்பா, என்ன சேவை செய்கிறாய் நீ! தினமும் மாலை வேளையில் ஸ்ரீராமகிருஷ்ணர் அந்த வராந்தாவில் நடப்பதை நான் காண்கிறேன். நீர் தேங்கிக் கிடப்பதால் அவர் நடக்கச் சிரமப்படுகிறார். அவரது திருப்பாதங்கள் நனைகின்றன. என் மகனே! அவருக்கு எந்தச் சிரமமும் ஏற்படாதபடி வேலை செய். நமது எல்லாமே அவர்தான். அவர் மகிழ்ந்தான் உலகமே மகிழ்கிறது. கோயிலிலிருந்து வெளியே வந்து வாசலில் நின்றால் எதிர் மாடிக்குச் செல்வதற்கான ஒரு சிறிய கதவைக் காணலாம். சுவாமிஜி தமது அறையிலிருந்து இந்த வழியாகக் கோயிலுக்கு வருவது வழக்கம்.

நாம் இறங்கி வருகின்ற மாடிப்படிகளும் புனிதத்தில் குறைந்தவை அல்ல. சுவாமிஜி தமது உடலை உகுத்த நாளில் ஸ்ரீராமகிருஷ்ணரின் பள்ளியறையில் சுமார் மூன்று மணி நேரம் தியானித்த பிறகு வெளியே வந்தார். அவரது வரலாற்றைப் பார்ப்போம். கதவுகளைத் திறந்து வெளியே வந்த சுவாமிஜி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். கரிய நிறத்தவளா காளி என் அன்னை! என்ற அழகிய பாடலைத் தமது இனிய குரலில் பாடியபடியே படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கினார். ஏதோ தொலைதூர வெளி ஒன்றில் சஞ்சரிப்பவர் போல் காணப்பட்டார் அவர்.

பழைய கோயிலுக்கு அருகிலுள்ள கட்டிடம் (தற்போது பேலூர் மடத்து மேனேஜர் சுவாமிகளின் அலுவலகம் இயங்குகின்ற கட்டிடம்) ராமகிருஷ்ண இயக்கத்தின் தூய துறவியர் எண்ணற்றோரின் புனித வாழ்க்கையுடன் தொடர்பு உடையது. ஆரம்ப நாட்களில் மடத்தில் இந்தக் கட்டிடம் மட்டுமே இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்களில் ஏறக் குறைய அனைவரும், ராமகிருஷ்ண இயக்கத்தின் குருமார்களுள் சுவாமி விசுத்தானந்தர் வரையுள்ள முதல் எட்டுபேரும், உயர் ஆன்மீக அனுபூதி நிலைகளில் திளைத்த துறவியர் பலரும் வாழ்ந்த இடம் இது. எனவே அந்தக் கட்டிடம் புனித நினைவுகளின் ஆலயமாகிறது. அந்தப் புனிதர்களுக்கு மானசீகமாக நமது அஞ்சலியைச் செலுத்தி அவர்களின் ஆசிகளை வேண்டுவோம். இந்தக் கட்டிடத்திற்கும் பழைய கோயிலுக்கும் இடையிலுள்ள பகுதியில்தான் (தற்போது ஓரிரு அலுவலங்கள் இங்கே இயங்குகின்றன) ஆரம்ப நாட்களில் துர்க்கா பூஜை நடைபெற்றது.
Bookmark and Share



சுவாமிஜியின் அறைஜனவரி 03,2013
1
மாமரத்தின் கீழிருந்து கங்கையை நோக்கி நடந்தால், நமக்கு இடது பக்கமாக, சுவாமிஜியின் அறைக்குச் செல்வதற்கான படிக்கட்டினைக் காணலாம். மாடியிலுள்ள சுவாமிஜியின் அறையைத் தரிசிப்பதற்காக பின்னாளில் கட்டப்பட்ட படிக்கட்டு இது.

தியான சித்தன் என்று ஸ்ரீராமகிருஷ்ணரால் அடையாளம் காட்டப்பட்டவரும், உலகின் சிந்தனைப் போக்கிற்கே ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்தவருமான அந்த மாமுனிவர் வாழ்ந்த அறையைப் பார்ப்போம். கட்டில், நாற்காலி, அலமாரி என்று சுவாமிஜியின் அறை, பொருட்மயமாகக் காட்சியளிக்கிறது. இத்தனை பொருட்களுக்கிடையே அவர் எப்படி வாழ்ந்தார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. உண்மை என்னவென்றால், அறையில் காணப்படுகின்ற பொருட்களுள் பலவும் அவரது காலத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்டவை. அவர் பல்வேறு இடங்களிலும் பயன்படுத்திய பொருட்கள் ஒவ்வொன்றாக அவரது கால்திற்குப் பிறகு பேலூர் மடத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றை வைக்கப் போதிய வேறு இடம் இல்லாத காரணத்தால் இந்த அறையில் வைக்கப்பட்டன. இவ்வாறு பல பொருட்கள் சேர்ந்துவிட்டன.

சுவாமிஜியின் நாட்களில் மிகச்சில பொருட்களே அந்த அறையில் இருந்திருக்க வேண்டும். மனம் எப்போதும் எல்லையற்ற ஆன்மப் பெருவெளியின் சிறகடித்துப் பறந்த, எல்லைக்கோடுகளால் கட்டுப்படுத்த முடியாத சுதந்திர மனிதர் அவர். இந்தப் பெரிய அறையிலும் குறைந்த பொருட்களுடன் சுதந்திரமாகவே வளைய வந்திருப்பார்; இதை நம்மால் ஊகிக்க முடியும்.

சுவாமிஜியின் பயன்படுத்திய பொருøட்கள், அவரது துணிகள், செருப்புகள் முதலியவை இந்த அறையில் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றுள் அவரது கைத்தடிகள், தலைப்பாகை, அவர் பயன்படுத்திய தம்புரா மற்றும் தபேலா காணப்படுகின்றன. இங்கு இருக்கும் பெரிய கட்டில் அவரது மேலை நாட்டுச் சீடர்கள் அவருக்குப் பரிசளித்தது. அதை அவர் அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை. அங்கு சிறிய நாடாக் கட்டிலையே பயன்படுத்தினார். ஆனால் தரையில் பாயில் படுப்பதையே விரும்பினார் அவர்.

கிழக்கு ஓரத்தில் நாற்காலியும் மேஜையும் உள்ளன. மேஜைமீது ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் ஒன்று மரப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்பும் ஆர்வமும் ததும்ப அந்தப் படத்தைப் பார்த்தபடி சுவாமிஜி நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுண்டு. அந்தப் படத்தின் அருகில் ஒரு நீள்வட்டப் படிக உருவம் மரப் பீடம் ஒன்றில் உள்ளது. கூர்ந்து கவனித்தால் அதில் சுவாமிஜியின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்-கையில் தடியுடன் நிற்கின்ற பரிவிராஜகத் (சஞ்சரிக்கும் துறவி) தோற்றம் அது; அவர் சிவபெருமானாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். அவரது திருப்பாதங்களின் கீழே சிவபெருமானின் வாகனமான நந்தி படுத்திருப்பதைக் காணலாம். 1917 களில் இதனை வடிவமைத்தவர் சுவாமிஜிக்கு நெருக்கமானவரும், அவரிடம் எல்லையற்ற அன்பு கொண்டவருமான மிஸ் மெக்லவுட் என்னும் அமெரிக்கப் பெண்மணி ஆவார். இதன் பிரதிகள் நபல எடுத்து பலருக்கும் வழங்கினார்அவர். சுவாமிஜியின் திருவுருவைச் செய்வதற்குப் படிகத்தை ஏன் அவர் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்விக்கு, ஏனெனில் படிகம் மட்டுமே சுவாமிஜியின் மனத்தைக் காட்ட வல்லது என்ற ஆழ்ந்த பதிலைத் தந்தார் மிஸ் மெக்லவுட்

சுவாமிஜி இந்த அறையை மிகவும் நேசித்தார். கல்கத்தாவிற்கோ வெளியூர்களுக்கோ சென்றால் விரைந்து இந்த அறைக்குத் திரும்ப விரும்புவார் அவர். இங்கே அவர் படித்தார், எழுதினார், சிந்தித்தார், நண்பர்களைச் சந்தித்தார், சீடர்களுக்கு உபதேசித்தார், உண்டார், உறங்கினார், கங்கையை ரசித்தார், கடவுளுடன் தொடர்பு கொண்டார். இறுதியில் உடலையும் உகுத்தார்.

இந்த அறையில் அமர்ந்து அவர் எழுதிய ஓரிரு கடிதங்களின் சில பகுதிகளைக் காண்போம்:

இப்போது நான் இங்கே மடத்தில் கங்கைக்கரையில் என் அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் அமைதியில் ஆழ்ந்துள்ளன. அருகில் பாய்ந்தோடும் கங்கை பிரகாசமான சூரிய ஒளியில் நடனமாடிச் செல்கிறாள். சூழ்நந்துள்ள அமைதி, சரக்கேற்றிச் செல்லும் படகுகளின் துடுப்புகள் நரைத் துளைவதால் மட்டும் எப்போதோ சிலவேளைகளில் குலைகிறது (1900 டிசம்பர் 19 அன்று எழுதியது)

நிலவு இதுவரை உதிக்கவில்லை. சூரியன் இல்லாமலேயே ஒரு மெல்லிய ஒளி நதிமீது படிந்துள்ளது. எங்கள் மாபெரும் கங்கை மடத்துச் சுவர்களின்மீது வந்து மோதிச் செல்கிறாள். எண்ணற்ற சிறு படகுகள் இந்த மெல்லிய இருளில் அங்குமிங்குமாக உலவிக் கொண்டிருக்கின்றன. அவை மீன் பிடிக்க வந்தவை... வெளியில் மழை பெய்து கொண்டிருக்கிறது- கொட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் மழை நிற்கின்ற அந்தக் கணமே எனது மயிர்க்கால் ஒவ்வொன்றிலிருந்தும் (வியர்வை) மழை கொட்டத் தொடங்கும்- அவ்வளவு சூடு!

இன்று இரவு நான் சாப்பிடப் போவதில்லை... படுத்த படி சிந்திக்க வேண்டும்; சிந்தனை, சிந்தனை, சிந்தனை! சில விஷயங்களைப் படுக்கையில்தான் என்னால் நன்றாகச் சிந்திக்க முடிகிறது. ஏனெனில் சிந்தனைக்கான விடைகளைக் கனவில் நான் பெறுகிறேன். எனவே இப்போது நான் படுக்கப் போகிறேன். இரவு வணக்கம்! மாலை வணக்கம்! இல்லை, இல்லை! இப்போது டெட்ராய்ட்டில்(டெட்ராய்ட்டில் வாழ்ந்த தமது சிஷ்யையான சிஸ்டர் கிறிஸ்டைனுக்கு சுவாமிஜி எழுதிய கடிதம் இது.) காலை 10 மணியாக அல்லவா இருக்கும், எனவே காலை வணக்கம்! கனவுகளை எதிர்நோக்கியபடி நான் படுக்கப் போகின்ற இந்த வேளையில் எல்லா நன்மைகளையும் சுமந்தபடி பகல் உன்னை அணுகட்டும்!

அன்பாசிகளுடன் என்று உன் விவேகானந்த (1901 செப்டம்பர் 3 அன்று எழுதியது) சுவாமிஜியின் ஜெயந்தி நாளன்று பக்தர்கள் இந்த அறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த அறையில் சுவாமிஜி வாழ்கிறார்!

சுவாமிஜி பேலூர் மடத்தில் இப்போதும் வாழ்ந்து வருகிறார். அவர் தமது அறையில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதை எத்தனையோ நாட்கள் நான் கண்டிருக்கிறேன். அவர் அந்த அறையில் அங்குமிங்குமாக உலவுவதையும் சிலவேளைகளில் கண்டிருக்கிறேன். இது மஹாபுருஷ்ஜி 1924 ஜனவரியில் விவேகானந்தர் கோயில் பிரதிஷ்டை விழாவின்போது கூறியது.

இது பற்றி ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்கள் ஒரிருவரின் அனுபவங்களைப் பார்ப்போம்!
1. சுவாமிஜி மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருமுறை விஞ்ஞானானந்தரிடம் ஒருவர், நீங்கள் சுவாமிஜியை இப்போதும் காண்பது உண்டா? என்று கேட்டார். அதற்கு அவர் சுவாமிஜி அந்த அறையில் இப்போதும் வாழ்ந்து வருகிறார், வாழ்கின்ற ஒருவரை நான் காணாமல் இருப்பேனா? என்று பதில் கூறினார். சுவாமிஜி இப்போதும் அவரது அறையில் வாழ்கிறார்! அவரைத் தொந்தரவு செய்யக் கூடாதே என்பதற்காகத்தான், நான் அந்த அறையைக் கடந்து செல்ல நேரும்போதெல்லாம். குதிகாலை உயர்த்தி, ஓசையின்றி நடந்து செல்கிறேன். அவரது கண்களைச் சந்திக்க நேருமே என்பதற்காக, பொதுவாக, நான் அந்த அறையைப் பார்ப்பதையே தவிர்க்கிறேன். அவர் இப்போதும் இங்கே நடக்கிறார், பாடுகிறார், மாடியில் உலவுகிறார், இன்னும் என்னென்னவோ செய்கிறார்.

2. அகண்டானந்தரின் இயற்பெயர் கங்காதர், சுவாமிஜி அவரை கங்கா என்று அழைப்பார். 1933 துர்க்கா பூஜை நாட்களில் அதிகாலை வேளையில் அகண்டானந்தர் தினமும் சுவாமிஜியின் அறைக்கு அருகில் அமர்ந்து உரத்த குரலில் துர்க்கா நாமம் சொல்லலானார். காரணம் கேட்டபோது அவர், சுவாமிஜி கேட்பதற்காகவே என்று பதில் கூறினார். ஒருநாள் இரவு அவர் கனவொன்று கண்டார். அதில் சுவாமிஜி அவரிடம் வந்து, கங்கா! என் துணிகளைப் பார்த்தாயா? பூச்சி வில்லைகளின் நாற்றம் சகிக்க வில்லை. இந்த விசேஷ நாளிலாவது எனக்கு ஒரு நல்ல வேட்டி தரங்கூடாதா! என்று கேட்டார். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த அகண்டானந்தர் இரவென்றும் பாராமல் அப்போதே பூஜாரி சுவாமியின் அறைக்குச் சென்றார். அவரை எழுப்பி, எழுந்திரப்பா, ஒரு புதிய வேட்டியை எடுத்துக்கொண்டு என்னுடன் வா என்றார். படுக்கையிலிருந்து எழுந்த அந்த இளம்துறவிக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும், சொல்வது அகண்டானந்தர் என்ற காரணத்திற்காக அவர் சொன்னபடியே செய்தார். நேராக சுவாமிஜியின் அறைக்குச் சென்றார் அகண்டானந்தர். அறையைத் திறந்து உள்ளே சென்றதும் பத்தி கொளுத்தி வைக்குமாறு கூறினார். அப்படியே செய்தார் பூஜாரி சுவாமி. அதன்பிறகு அகண்டானந்தர் அந்தப் புதிய வேட்டியைக் கையில் எடுத்து, அதில் சிறிது வாசனைத் தைலம் தெளித்து, சுவாமிஜியின் படத்திற்கு முன்பு அதனைப் பணிவுடன் சமர்ப்பித்தார். பின்னர் பூஜாரி சுவாமியிடம், இனி கற்பூர ஆரதி காட்டு என்றார். முற்றிலுமாகக் குழம்பிப்போன அந்த இளம்துறவி, ஆனால் மஹராஜ்! இப்போது அதிகாலை 2.30 மணி என்று தயங்கினார். ஒருவித ஆனந்த பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்த அகண்டானந்தர், பரவாயில்லை இன்று 2.30 மணியை 4 மணியாக நினைத்து மங்கல ஆரதி செய் என்றார் அகண்டானந்தர் ஆரதி காட்டினார் அந்த இளம்துறவி.

3. இடம் போதாமை காரணமாக ஒருமுறை இளம் துறவியர் இருவர் சுவாமிஜியின் அறைக்கு முன்புள்ள சிறிய இடைவெளியில் தூங்கினர். அதைக் கண்ட மஹாபுருஷ்ஜி அவர்களை எழுப்பி அவர்களிடம் கூறினார்: அப்பா, இது சுவாமிஜி நடக்கின்ற இடம். நீங்கள் படுத்திருந்தால் அவருக்கு இடைஞ்சலாக இருக்கும். அவர் இங்கே வாழ்கிறார். இது முற்றிலும் உண்மை. அவருக்கு இடைஞ்சலாக இருக்காதீர்கள்.

4. ஒருநாள் மஹாபுருஷ்ஜி சுவாமிஜியின் அறைக்கு முன்பு நின்று அறைக்குள் கூர்ந்து பார்த்தபடி காலை வணக்கம் சுவாமிஜி என்று மீண்டும்மீண்டும் பலமுறை கூறினார். பிறகு மற்றவர்களிடம், இன்று ஒரு பொன்னாள். இன்று எனக்கு சுவாமிஜியின் தரிசனம் கிடைத்தது. காலையில் சற்று காலாற நடந்துவிட்டு அறைக்குள் நுழையும்போது தான் நான் அவரைக் கண்டேன். அவர் ஆனந்த பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்தார் என்றார். அன்று முழுவதும் மஹாபுருஷ்ஜி, சுவாமிஜியைப் பற்றிய விஷங்களையே பேசினார். சுவாமிஜியின் உணர்விலேயே திளைத்தார்.

இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற அந்தத் தியான சித்தரை நாமும் நமது மனக்கண்ணால் கண்டு, பணிந்து நமது பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்து, அவர் வாழ்ந்த புனிதக் கோயிலை வணங்குவோம்.

பாதையின் ஆரம்பத்தில் வலது பக்கம் ஒரு சிறிய பூந்தோட்டம் உள்ளது. ஆரம்ப நாட்களில் இந்த இடத்தில் ஒரு வில்வ மரம் நின்றது. நீலாம்பர் வீட்டில் இருந்து மடம் இந்த இடத்திற்கு மாற்றப்பட்ட நாளில் (1898 டிசம்பர் 9, வெள்ளி) சுவாமிஜி அந்த வில்வ மரத்தின் கீழ்தான் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு விசேஷ பூஜை செய்தார். பாதையின் இடது பக்கம் நிற்கின்ற நாகலிங்கம் மற்றும் கிருஷ்ண-ஆல்( ஆல மரங்களில் சுமார் 200 வகைகள் உள்ளன. அவற்றுள் கிருஷ்ண- ஆல் அரிய வகைப் பிரிவைச் சேர்ந்தது. இதன் இலைகள் கிண்ணம் போலுள்ளன. ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன) மரங்கள் சுவாமி பிரம்மானந்தரால் நடப்பட்டவை. அவர் மேலும் பல மரங்கள் நட்டிருந்தார்; இவை மட்டுமே எஞ்சின.
Bookmark and Share



பிரம்மானந்தர் கோயில்!ஜனவரி 05,2013
நாம் முதலாவதாகக் காண்பது பிரம்மானந்தர் கோயில், ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப் புதல்வராகக் கருதப்பட்ட சுவாமி பிரம்மானந்தர் ராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் தலைவர். ராஜா மஹாஜ், ராக்கால் மஹராஜ் என்றெல்லாம் அழைக்கப்படுபவர். 1922 ஏப்ரல் 10 ஆம் நாள் மறைந்த அவரது திருமேனியை எரியூட்டிய இடத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. அவரது சீடரான சியாம் கோஷ்(இவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான நவகோபால் கோஷின் புதல்வர்) முழுச்செலவான ரூ40,000 ஐயும் ஏற்றுக்கொள்ள, இரண்டு ஆண்டுகளில் கோயில் கட்டப்பட்டது. 1924 பிப்ரவரி 7, பிரம்மானந்தரின் பிறந்த நாளன்று மஹாபுருஷ்ஜி கோயில் பிரதிஷ்டையை நடத்தி வைத்தார்.

கோயிலினுள் பிரம்மானந்தரின் சலவைக்கல் திருவுருவம் உள்ளது. தமது முற்பிறவியில் இவர் ஸ்ரீகிருஷ்ணரின் சிறுவயதுத் தோழனாக இருந்தார் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதுண்டு. எனவே இவரது சிலைக்குக் கீழே பால கோபாலனின் ஒரு சிறிய சிலை வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி முதலான சில விசேஷ நாட்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு இங்கே சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கோயிலின் கோபுர முகட்டிலும் மஹாவிஷ்ணுவின் ஆயுதமான சக்கரம் அழகு செய்வதைக் காணலாம். கோயிலின் மாடியில் பிரம்மானந்தரின் கட்டில் முதலான பொருட்கள் வைக்கப்பட்டு அவரது பள்ளியறையாகப் பயன்படுத்தப்படுகிறது. அவரது ஜெயந்தி நாளன்று இங்கே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 
Bookmark and Share



சாரதா தேவி கோயில்!ஜனவரி 05,2013
அடுத்ததாக நான் காண்பது சாரதா தேவி கோயில், அருள்மிகு அன்னை, அழகிய மரப்பீடம் ஒன்றில், என்றென்றும் தாம் போற்றுகின்ற கங்கையைப் பார்த்த வண்ணம் எழுந்தருளியுள்ளார். அன்னைக்கு வலது புறம் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் உள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யையும் ஆன்மீகத்தில் மகோன்னத நிலைகளை அடைந்த வருமான கோபாலேர்-மா அன்னைக்கு அளித்தது இந்தப் படம். அன்னைக்கு இடது புறம் பாணேசுவர சிவலிங்கம் உள்ளது. இதுவும் தினசரி பூஜிக்கப்படுகிறது.

உலகில், அதாவது நம்மில், சக்தியை விழித்தெழச் செய்வதற்காகத் தோன்றியவர் அன்னை ஸ்ரீசாரதா தேவி என்றார் சுவாமிஜி, அவர் கூறுகிறார் அன்னை ஸ்ரீசாரதாதேவி யார், அவரது வாழ்க்கையின் பொருள் என்ன என்பதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ள வில்லை.... சக்தி இல்லாமல் உலகிற்கு முன்னேற்றம் கிடையாது. நமது நாடு அனைத்து நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? பலமிழந்து கிடப்பது ஏன்? நம் நாட்டில் சக்தி அவமதிக்கப்படுவதுதான் காரணம். இந்தியாவில் அந்த மகாசக்தியை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வதற்கே அன்னை தோன்றியுள்ளார். அவரை ஆதாரமாகக் கொண்டு அன்னை கார்க்கிகளும் மைத்ரேயிகளும் உலகில் தோன்றுவார்கள். அந்த மகாசக்தியான அன்னை ஸ்ரீசாரதாதேவியின் திருமேனிக்கு எரியூட்டிய இடத்தில் இந்தத் திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. எனவே இது ஒரு சக்தி பீடமாகத் திகழ்கிறது.

அன்னை மறைந்தபிறகு, சிதை மூட்டுவதற்காகப் பலவேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. கடைசியில், மஹாபுருஷ்ஜி இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கூறினார். அன்னை இந்த இடத்தில் கங்கையை நோக்கி அமர்ந்து, என்றென்றும் மனித குலத்தின்மீது நிலைத்த சாந்தியைப் பொழிவார். கோயில் கங்கையை நோக்கியிருந்தால் அது கம்பீரம் பொலிந்து தோன்றும் என்று துரீயானந்தரும் கருத்து தெரிவித்தார். கோயில்களுள், அன்னையின் கோயில் மட்டுமே கங்கையை நோக்கி அமைந்துள்ளது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: நூலின் ஆசிரியரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடருமான மஹேந்திர நாத் குப்தா (ம) அன்னையிடம் மாறாத பக்தி கொண்டவர், அன்னையின் மறைவை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. மிகுந்த மனத்துயரில் ஆழ்ந்திருந்த அந்த நாட்களில் அவர் கனவொன்று கண்டார். அதனை பக்தர் ஒருவருக்கு எழுதினார்; அன்று அன்னை என் கனவில் வந்து என்னிடம் நான் இறந்து போனதை அன்று நீ கண்டாயே, அது வெறும் மாயை! இதோ பார், நான் அதே உருவில் அப்படியே இருக்கிறேன் என்று கூறினார். மஹாபுருஷ்ஜி ஒருமுறை, அன்னை உண்மையில் ஆதிசக்தியே ஆவார். இந்தக் கோயிலில் அவர் நிரந்தரமாக வாழ்கிறார் என்று கூறினார். சாரதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர், அன்னைக்கு நீண்ட காலம் சேவை செய்தவர். அவரது பெருமுயற்சி காரணமாக ஓர் ஆண்டிற்குள் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. அன்னை மறைந்த அதே ஆண்டில் (1920) அவரது பிறந்த நாளான டிசம்பர் 31-ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது. 1921-டிசம்பர் 21 அன்னையின் 68-ஆம் பிறந்த நாளன்று பிரதிஷ்டையும் நிறைவேறியது.

பாதையின் வலது புறம் இரண்டு தேவதாரு மரங்கள் நிற்கின்றன. மடத்து நிலம் வாங்கியபோதே இவை உள்ளன. அதாவது இந்த மரங்களின் வயது 100 க்கும் மேல். பேலூர் படகுத் துறைக்குச் செல்வதற்கான வாசல் இந்தப் பாதைக்குத் தென்மேற்கில் தெரிகின்றது. சுவாமிஜியின் நாட்களில் இதுதான் மடத்தினுள் வருவதற்கான முக்கிய வாசலாக இருந்தது. சுவாமிஜி இரண்டாம் முறை தமது மேலைநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு பேலூர் மடத்திற்கு வந்து சேர்ந்தபோது இரவு வேளையாக இருந்தது. முன்பாக மடத்தில் அவர் தெரிவிக்கவும் இல்லை. வாசலில் யாரும் காத்திருக்காத அந்த நிலையில் வாசலில் ஏறிக் குதித்து உள்ளே சென்றார் அவர். அந்த நாட்களில் இந்த வாசல் இவ்வளவு பெரியதாக இல்லை! 1911-இல் அன்னை தமது தென்னிந்திய பயணத்தை முடித்துவிட்டு பேலூர் மடத்திற்கு வந்தபோது இந்த வாசலில்தான் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Bookmark and Share









































































































































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக