ராதே கிருஷ்ணா 10-01-2013
அனைத்து வளமும் அருளும் அனுமன் ஜெயந்தி - வழிபாட்டு முறை!
அனைத்து வளமும் அருளும் அனுமன் ஜெயந்தி - வழிபாட்டு முறை!
அனுமன் ஜெயந்தியன்று அவரை வழிபடுவதற்காக இந்தப் பகுதியைத் தந்துள்ளோம். இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்பவர்களுக்கு பய உணர்ச்சி, எதிரிகளின் தொல்லை, கடன் நீங்கும்.
* இடது கையில் மலையும், வலது கையில் தண்டாயுதமும் கொண்டவரே! பிரகாசிக்கும் குண்டலம் அணிந்தவரே! அனுமனே! உம்மை வணங்குகிறேன். * பட்டாடை அணிந்தவரே! மான்தோல் போர்த்தியவரே! பிரகாசிக்கும் கூந்தலை முடிந்தவரே! உம்மைச் சரணடைகிறேன். * ஆபத்தில் சிக்கியவர்களின் மனக்கவலையை போக்குபவரே! எதிர்பாராமல் வந்து உதவுபவரே! விபத்துகளில் இருந்து பாதுகாப்பு தருகிறவரே! உம்மை பணிகிறேன். * சீதையைப் பிரிந்த ராமனின் சோகம், பயத்தைப் போக்கியவரே!, ஆசைகளை விரட்டுபவரே! உம்மை நமஸ்கரிக்கிறேன். * கவலை, வியாதி, கிரகபீடைகளைப் போக்குகிறவரே!, அசுரர்களைக் கொன்று அடக்குகிறவரே! ராமனின் உயிருக்கும் உயிராக விளங்கும் அனுமனே! உம்மை வணங்குகிறேன். * செயல்பாடுகளை தடங்கல் இன்றி சாதிக்க உதவுபவரே! மிருகங்கள், திருடர்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்ப்பவரே! வாயுவின் பிள்ளையே! வானரங்களுக்கு உயிரானவரே! அஞ்சனை மைந்தரே! உமக்கு என் பணிவார்ந்த வணக்கம். * கருணை நிறைந்தவரே! கெட்டவர்க்கு கெட்டவரே!, அனைத்து செல்வங்களையும் தருபவரே! எனக்கு வெற்றியும், புகழும் அருள வேண்டுகிறேன். * அனுமனே! பயணம் செய்யும் போதும், தேசத்திற்காகப் போராடும்போதும், என்னை நோக்கிவரும் ஆபத்தைத் தடுத்து உதவ பிரார்த்தனை செய்கிறேன். * வஜ்ராயுதம் போன்ற சரீரமும், அளவற்ற தேஜஸும் உள்ளவரே! போர்க்களத்தில் அக்னியாய் திகழ்பவரே!, பிரம்மாஸ்திரத்தையே ஸ்தம்பிக்கச் செய்பவரே! ருத்ரமூர்த்தியே! உமக்கு நமஸ்காரம் செய்கிறேன். * அளவற்ற உற்சாகம் கொண்டவரே! எதிரிகளைச் சம்ஹாரம் செய்பவரே! உமது பக்தனாகிய எனக்கு தைரியத்தை தந்தருளும். * சுத்தமான மனதுடையவரே! ராமதூதர்களில் முதல்வரே! பாலசூரியனுக்கு ஒப்பான முகத்தை உடையவரே! கருணை பொங்கும் கண்களை உடையவரே! யுத்தத்தில் இறந்த வீரர்களை சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து பிழைக்கச் செய்தவரே! புகழத்தக்க மகிமை உள்ளவரே! அஞ்சனாதேவி செய்த புண்ணியத்தால் அவதரித்த அனுமனே! உம்மை தரிசித்து மகிழ்கிறேன். * எல்லா ஆசையையும் துறந்தவரே! தாமரை போல பெரிய கண்களும், சங்கு கழுத்தும், அழகும் பொருந்தியவரே! அனுமனே! உம்மைச் சரணடைகிறேன். * சீதையின் கஷ்டங்களை விலக்கியவரே! ராமனின் நினைவை உருவாக்குபவரே! துன்பப்படுபவர்களை காப்பாற்றுபவரே! ஆஞ்சநேயப் பெருமானே! இந்த ஸ்தோத்திரத்தைப் படித்த எங்களுக்கு நீண்ட ஆயுளையும், செல்வத்தையும் தருவீராக. பிரபல அனுமன் கோயில்கள்: 1. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் 18 அடி உயர ஆஞ்சநேயர் 2. தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் 77 அடி உயர ஆஞ்சநேயர் 3. புதுச்சேரி பஞ்சவடி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் 4. திண்டுக்கல் சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஹஸ்த ஆஞ்சநேயர் 5. திண்டுக்கல் நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர் 6. , கோவை அஷ்டாம்ச ஆஞ்சநேயர், மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆஞ்சநேயர் 7. மதுரை சிம்மக்கல் ஆஞ்சநேயர் 8. நாமக்கல் ஆஞ்சநேயர் 9. சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் 10. திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர், கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் 11. திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) பெருமாள் கோயில் வீர ஆஞ்சநேயர் 12. நாகப்பட்டினம் அனந்தமங்கலம் அஷ்டதசபுஜ வீர ஆஞ்சநேயர் 13. கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயர் 14. வேலூர் சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் 15. தஞ்சாவூர் மூலை அனுமார் மலையில் இருக்கும் ஆஞ்சநேயர்: சோளிங்கர் அருகிலுள்ள இரட்டை மலை யோக நரசிம்மசுவாமி கோயிலில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்க 1500 படிகள் ஏற வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை ஞாயிறு மிக விசேஷம். இங்குள்ள சின்னமலையில் சங்கு சக்கரத்துடன் கூடிய மற்றொருஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி 12 நாட்கள் இவர்களைத் தொடர்ந்து தரிசிப்பது சிறப்பு. 108 முறை இவர்களை வலம் வந்தால் குழந்தைப் பேறு கிடைக்கும், திருமணத்தடை நீங்கும். மருந்து வாழ்மலை: இலங்கையில் ராவணனுடன் போர் செய்தபோது, லட்சுமணன் மூர்ச்சையானான். அவனை எழுப்ப, சஞ்சீவி மலையிலுள்ள ஒரு மூலிகையைப் பறித்து வரும்படி அனுமனை அனுப்பினார் ராமன். எந்த மூலிகை எனத் தெரியாததால், மலையையே பெயர்த்து வானவெளியில் பறந்து வந்தார் அனுமன். அதிலிருந்து சில துண்டுகள் கீழே விழுந்ததாம். அதுவே ராஜபாளையம் அருகிலுள்ள சஞ்சீவி மலை. கன்னியாகுமரி அருகிலுள்ள மருந்துவாழ்மலையும் இந்த மலையில் இருந்து விழுந்த ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. மலையுடன் ஆஞ்சநேயர்: சஞ்சீவி மலையை ஒரு கையிலும், இன்னொரு கையில் கதையையும் தாங்கியபடி அனுமனைத் தரிசிக்க வேண்டுமானால், ஆந்திர மாநிலம் செகந்திராபாத் செல்ல வேண்டும். இங்குள்ள ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள கோயிலில் பத்து கரங்களுடன் அனுமன் காட்சி தருகிறார். வராகம் (பன்றி), கருடன், வானரம் (குரங்கு), நரசிம்மம், ஹயக்ரீவம் (குதிரை) ஆகிய பஞ்சமுகங்களுடன் இருப்பதால் பஞ்சமுக ஆஞ்சநேயர் எனப்படுகிறார். இணைந்த இருவர்: கேரளமாநிலம் தலைச்சேரி அருகிலுள்ள திருவெண்காடு ராமசாமி கோயிலில் ராமனும், அனுமனும் மட்டும் அருள்பாலிக்கிறார்கள். அனுமன் ராமனுக்கு எதிரில் வணங்கிய படி காட்சி தருகிறார். இந்த அனுமனுக்கு அவல் நைவேத்யம் செய்யப்படுகிறது. ஏழு சிரஞ்சீவிகள்: ஏழுபேர் சிரஞ்சீவிகளாய்(அழியாப்புகழ் உள்ளவர்கள்) உள்ளனர். ராவணனின் தம்பி விபீஷணன் உறவென்றும் பாராமல், நியாயத்தின் பக்கம் நின்றார். மகாபலி, பெருமாளுக்காக தன் உயிரையே அர்ப்பணித்தவர். மார்க்கண்டேயர் சிவன் மீது கொண்ட உண்மை பக்தி காரணமாக, எமனையே வென்றார். மகாபாரதம் என்னும் அழியாகாவியத்தை எழுதி அதைப் படிப்போரின் பாவங்களைப் போக்கி அருளினார் வியாசர். தாயையே கொன்று, தந்தை சொல் காத்ததுடன் தாயையும் உயிர்ப்பித்தார் பரசுராமர். துரோணரின் மகன் அஸ்வத்தாமன் கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக தனது வீரத்தைக் காட்டினான். இவர்களுடன், யாரென்றே தெரியாத ராமனுக்கு, எந்த வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்த அனுமனும் சிரஞ்சீவி பட்டியலில் சேருகிறார். பெண்களின் தெய்வம்: ராவணனிடம் சிக்கிய சீதை, உயிரை விட்டு விடுவதென்று முடிவெடுத்து சுருக்குப் போட எண்ணினாள். அந்த தருணத்தில் வந்து சேர்ந்தார் அனுமன். மழை கொட்டினால், பட்டுப்போக இருந்த பயிர் எப்படி தளிர்க்குமோ அதுபோல் இருந்தது அனுமனின் இலங்கை வரவு. லோகமாதாவான திருமகளின் துன்பத்தைப் போக்கி நம்பிக்கை தந்தார். அனுமனை வணங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கணவருடன் ஒற்றுமையாக வாழ்வர். கன்னியருக்கு ஸ்ரீராமனைப் போன்ற கணவர் அமைவார். அனுமன் பெற்ற அவார்டு! .. இலங்கையிலிருந்து அயோத்திக்கு வந்து சேர்ந்தததற்கு முழுமுதல் காரணம் அனுமன் தான் என்று நன்றியுணர்வோடு ராமபிரானிடம் சொன்னாள் சீதை. ராமபிரானும் சீதாதேவியிடம், நாம் இருவரும் அனுமனுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன்பட்டிருக்கிறோம், என்றார். பட்டாபிஷேக ஞாபகார்த்தமாக பரிசுப்பொருள்களை ராமன் பலருக்கும் கொடுத்தார். அப்போது சீதை, பிரபு! அனுமனுக்கு ஏதாவது செய்து நம் நன்றியுணர்வைத் வெளிப்படுத்த வேண்டும், என்றாள். ராமன் தான் அணிந்திருந்த முத்துமாலையை சீதையின் கையில் கொடுத்துவிட்டு, மவுனமாக இருந்தார். சீதையும் ராமனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவளாய், பிரபு! முத்தாரத்தை உங்கள் பரிவாரத்தில் இருக்கும் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை உங்கள் திருவாயாலேயே சொல்லி விடுங்கள்! என்று வேண்டுகோள் விடுத்தாள். அப்போது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, பராக்கிரமம்,புத்தி, பணிவு யாருக்குப் பூரணமாக இருக்கிறதோ, அவருக்கு கொடு! என்றார். உடனே, சீதாதேவி அனுமனிடம் முத்தாரத்தைக் கொடுத்தாள். அனுமனுக்கு கிடைத்த இந்த அவார்டு அவரே ராமாயணத்தின் அச்சாணி என்பதை தெளிவுபடுத்துகிறது. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக