ராதே கிருஷ்ணா 25-04-2012
ஸ்ரீமத் பகவத் கீதா தமிழில் ( அத். 6 to அத். 10 )
முதல் அத்தியாயம் | |
பகவத்கீதை | அர்ஜுன விஷாத யோகம்செப்டம்பர் 29,2011
1. அர்ஜுன விஷாத யோகம்
குரு÷க்ஷத்திரப் போரில் தனக்கு எதிராளியாக தனது உறவினர்களே இருக்கின்றனர் என அர்ஜுனன் வருந்தினான். அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, ... மேலும்
|
இரண்டாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஸாங்கிய யோகம்செப்டம்பர் 30,2011
போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி ... மேலும்
|
1
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
மூன்றாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | கர்ம யோகம்அக்டோபர் 11,2011
கர்ம யோக ஞான யோகங்களுள் ஞான யோகமே கடுகப் பலனை அளிக்குமென்றாலும் கர்ம யோகமே செய்யத் தக்கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். ... மேலும்
|
நான்காம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஞானகர்ம ஸந்யாஸ யோகம்அக்டோபர் 11,2011
அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக் கர்மயோகத்தை நான் மனுவுக்கு ... மேலும்
|
ஐந்தாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஸந்யாஸ யோகம்அக்டோபர் 11,2011
கர்ம யோகத்தில் ஞான பாகமடங்கி இருப்பதாலும் ஞான யோகத்தில் கர்ம பாகமடங்கியிருப்பதாலும் இரண்டும் ஒன்றே. அவை இரண்டும் ஒரே விதமான பலனைக் கொடுக்கக் கூடியவை. அவை வெவ்வேறு பலனை ...மேலும்
|
ஆறாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | தியான யோகம்அக்டோபர் 12,2011
கர்ம யோக ஞான யோகங்களில் சித்திபெற்றவனுக்குண்டாகும் ஆத்மானுபவம் இந்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது. இவ்வாத்மானுபவத்தில் ஈடுபட்டு ஆதியிலேயே திருப்தியடைந்தவன் வேறு ... மேலும்
|
ஏழாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஞானவிக்ஞான யோகம்அக்டோபர் 12,2011
பக்தி யோகத்திற்கு இலக்கான இறைவனுடைய சொரூபம், சுபாவம், மேன்மை முதலியன இந்த அத்தியாயத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. மனிதன், இவைகளை அறிய வொட்டாமல் பிரகிருதி சம்பந்தம் ... மேலும்
|
எட்டாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | அக்ஷரப்ரஹ்ம யோகம்அக்டோபர் 12,2011
முற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்ற வேண்டிய பக்தி வழிகளும் அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்ஞையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் ... மேலும்
|
ஒன்பதாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்அக்டோபர் 12,2011
இங்கு வித்தைகளுள் சிறந்ததும், ரகசியங்களுள் மேலானதுமான பக்தி யோகத்தின் சொரூபமும் மேன்மையும், பலன் முதலானவையும் கூறப்படுகின்றன. பக்தி யோகத்தில் இறங்குவோன், அதில் முழு ... மேலும்
|
பத்தாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | விபூதி யோகம்அக்டோபர் 13,2011
பக்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. ... மேலும்
|
பதினோன்றாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | விச்வரூபதர்சன யோகம்அக்டோபர் 13,2011
இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். ... மேலும்
|
ஆறாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | தியான யோகம்
அவன் ஜனங்களுடைய சேர்க்கையை வெறுத்துத் தனிமையிலே விருப்பமுற்றுத் திடமான ஆசனத்திலமர்ந்து தனது ஆத்ம சொரூபத்தை எண்ணி எண்ணி மகிழ்வான். இவ்வாத்மானுபவமே பேரானந்தமென்று எண்ணியிருப்பான். எல்லா ஆத்மாக்களும் தேக சம்பந்தத்தை நீக்கிப் பார்த்தால் ஒருவகைப்பட்டவை என்று எண்ணி, முடிவில் கடவுளும் அவ்வாத்மாக்களும் ஒருவகைப்பட்டவர்களென்று உணர்வான். இந்நிலை பெற்றவனே யோகிகளில் சிறந்தவன். யோகமும் ஸந்யாஸமும் ஒன்றே 1-9 -யோகத்துக்கு ஏற்ற சூழ்நிலை 10-11 -யோகம் பயிலும் முறை 12-15 -முன்னேற்றத்துக்கு நிபந்தனைகள் 16-20 -யோகத்தில் முன்னேற்றம் 21-28 -யோக ஸித்தி 29-32 -அடங்காத மனதை அடக்கவேண்டும் 33-36 -யோகப்பிரஷ்டனது கதி 37-45 -யோகம் ஒப்பற்றது 46-47. ஸ்ரீபகவாநுவாச 1. அநாஸ்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய: ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய: ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ய: கர்மபலம் அநாஸ்ரித:-எவனொருவன் செய்கையின் பயனில் சார்பின்றி, கார்யம் கர்ம கரோதி-செய்யத்தக்கது செய்கிறானோ, ஸ ஸந்ந்யாஸீ யோகீ ச-அவன் சந்யாசியும் யோகியும் ஆவான், ச நிரக்நி ந-மேலும் அக்னி காரியங்களை மட்டும் துறப்பவன் ஆகமாட்டான், அக்ரிய: ச ந-செயல்களை துறப்பவனும் ஆகமாட்டான். பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார். உலக வழக்கத்தில் ஸந்யாஸி என்பதற்குத் தப்பான ஒரு பொருள் உண்டு. அதாவது அவன் ஒரு கடமையையும் ஏற்றுக் கொள்ளலாகாது. அக்னிஹோத்ரம் என்றால் யாகம் செய்வது என்று பொருள். ஸந்யாஸி யாகம் செய்யாது, ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது செயலற்று இருக்கவேண்டுமாம். அர்ஜுனன் யுத்தம் செய்யமாட்டேன் என்று இயம்பி பிக்ஷõன்னம் அருந்தி உயிர் வாழ்வது நலம் என்று கருதியதே இக்கொள்கைக்குச் சான்றாகும். பின்பு பகவானுடைய கோட்பாடு அதுவன்று. பகவானுடைய கோட்பாடே உண்மையான வேதாந்தமாகும். தேகம் எடுத்தவர் யாரும் கர்மத்தை விட்டுவிடலாகாது. அவரவர் கடமையை நன்கு செய்துகொண்டிருக்கவேண்டும். ஆனால் கர்மபலனை யார் பொருட்படுத்துவதில்லையோ, தனது நித்திய கர்மத்தை நிஷ்காமியமாக யார் செய்கிறானோ அவன் ஸந்யாஸி; அவனே யோகியும் ஆகிறான். கர்ம பலனில் ஆசை அறவே அகன்று விடுவதால் அவன் ஸந்யாஸி. பின்பு, கர்மம் ஓயாது அவன் மூலம் நடைபெறுவதால் அவன் யோகி. அப்படியானால் ஸந்யாஸத்துக்கும் யோகத்துக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது : 2. யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஸ்சந பாண்டவ-பாண்டவா! யம் ஸந்ந்யாஸம் இதி ப்ராஹு-எதனை சந்நியாச மென்கிறார்களோ, யோகம் தம் வித்தி-அதுவே யோகமென்று அறி, ஹி அஸந்ந்யஸ்த ஸங்கல்ப:-ஏனெனில் கோட்பாடுகளைத் துறக்காத, கஸ்சந யோகீ ந பவதி-எவனும் யோகியாக மாட்டான். பொருள் : பாண்டவா, எதனை சந்நியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி. தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான். கர்ம பலனைப்பற்றி மனதில் உண்டாகும் கற்பனா சக்திக்கே சங்கற்பம் என்று பெயர். இனி, கிடைக்கப்போம் பலனைப்பற்றி மனது இப்பொழுதே திட்டம் போடுகிறது. ஒரு போக்கில் ஏராளமாக மனோராஜ்யம் செய்துவிட்டுப் பின்பு அதை அடியோடு துடைத்துவிடுகிறது. திரும்பவும் இன்னொரு போக்கில் அது எண்ணுகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் கிடைக்கப்போம் பலனைப்பற்றிய எண்ணத்துக்கு ஒரு முடிவில்லை. இங்ஙனம் ஆசையின் வேகத்தால் அனந்தங்கோடி எண்ணங்கள் உதிப்பதே சங்கற்பம் எனப்படும். இதனால் மனம் சலனமடைகிறது. மனச் சலிப்பு (மனஅலைச்சல்) இருக்குமளவு ஒருவன் யோகியாக முடியாது. ஆக, ஸந்யாஸத்தால் சங்கற்பம் துறக்கப்படுகிறது. சங்கற்பத்தைத் துறப்பதால் யோகம் உறுதி பெறுகிறது. மனது உறுதிபெற்றவனுக்கே நன்கு கர்மம் செய்யவும், தியானம் செய்யவும் முடியும். இங்ஙனம் கர்மபல ஸந்யாஸமும் கர்மயோகமும் ஒன்றாகின்றன. சங்கற்ப ஸந்யாஸத்தால் யோகம் உறுதிபெறும் விதம் அடுத்த ஸ்லோகத்தில் விளக்கப்படுகிறது. 3. ஆருரு÷க்ஷõர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே யோகாரூடஸ்ய தஸ்யைவ ஸம: காரணமுச்யதே யோகம் ஆருரு÷க்ஷõ முநே-யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்கு, கர்ம காரணம் உச்யதே-தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது, தஸ்ய யோகாரூடஸ்ய-அந்நிலையில் ஏறியபின் ஸம: ஏவ காரணம் உச்யதே-சாந்தம் கருவியாகிறது. பொருள் : யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது. அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது. தியானம் செய்வதில் விருப்பம் கொண்டிருக்குமளவு ஒருவன் முனியாகிறான். ஆயினும் மனம் குவிந்து தியானம் அமைவதில்லை. அத்தகைய யோகி நிஷ்காமிய கர்மத்தை ஊக்கத்துடன் செய்யவேண்டும். காமிய கர்மத்தை ஊக்கத்துடனும் ஓயாதும் செய்பவனுக்கு நன்றாக உறக்கம் பிடிக்கிறது. நிஷ்காமிய கருமத்தை அதே ஊக்கத்துடனும் செய்பவனுக்குத் தியானம் கூடுகிறது. அதனால் மனம் தெளிவடைகிறது. தெளிந்த மனதில் தியான சித்தி தானாக அமைகிறது. சமம் என்பது செயலை ஒழுங்குபடுத்திய நடு நிலை. ஆத்மா செயலைக் கடந்திருப்பது போன்றதல்ல இது. பம்பரம் நடு நிலையில் நின்று வேகமாகச் சுழலும்போது அதனிடத்து ஒரு செயலும் வெளிக்குத் தென்படுவதில்லை. ஓய்ந்து நிற்பதுபோன்று அது காட்சி கொடுக்கிறது. ஒழுங்கான இயக்கம் என்பது அதுவே. அகர்மம் போன்று தென்படுகிற கர்மம் அது. தியானம் நன்கு கூடிவரும்பொழுது யோகியானவன் கர்மத்தை யெல்லாம் ஒழித்துவிட்டவனாகக் காட்சி கொடுக்கிறான். தியானத்தில் நிலைபெற்றிருத்தல் என்ற ஒப்பற்ற சூக்ஷ்ம கர்மம் ஆங்கு நிகழ்கிறது. கர்ம சொரூபமான மனதின் தெள்ளத் தெளிந்த கர்மம் அது. அகர்மம் என்றே அதைச் சொல்லலாம். விகல்பம் ஒன்றும் ஆங்கில்லாமையால் ஆத்ம சொரூபத்தை அது விளக்கவல்லது. மனத்தெளிவு என்பதும் சித்த சுத்தி என்பதும் ஒன்றே. இதுவே ஒரு மனிதனுக்கு ஒப்பற்ற செல்வமாகிறது. இதினின்று ஒற்றுமை, சமத்துவம், உண்மை, ஒழுக்கம், உறுதி, அஹிம்சை, நேர்மை, கர்மங்களினின்று விலகுதல் ஆகியவைகள் முறையாக வந்தமைகின்றன. மனம், மொழி, மெய்களால் எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்தல் ஒழுக்கம் எனப்படும். யோகாருடன் அல்லது யோகத்தை அடைந்தவனாக ஒரு மனிதன் எப்பொழுதும் கருதப்படுகிறான்? விடை வருகிறது : 4. யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே யதா இந்த்ரியார்தேஷு ந அநுஷஜ்ஜதே-எப்போது புலன்களுக்குரிய போகப் பொருட்களில் பற்றுக் கொள்வதில்லையோ, கர்மஸு ஹி ந-கர்மங்களிலும் பற்றுக் கொள்வதில்லையோ, ததா ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ-அப்போது எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனான அவன், யோகாரூட உச்யதே-யோகாரூடன் என்று கூறப் படுகிறான். பொருள் : ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன் யோக நிலையில் ஏறியவன் என்று சொல்லப்படுகிறான். யோகத்தில் நிலைபெற்றவன் யோகாருடன் எனப்படுகிறான். தியானம் முதிர்ந்து சமாதியாகும்போது அவனுக்கு வெளியுலகோடு ஒருவிதத் தொடர்வும் இல்லை. சப்தம், ஸ்பர்சம் முதலிய இந்திரியார்த்தங்களில் அவனது மனது ஒட்டுகிறதில்லை. நித்திய நைமித்திக கர்மங்களெல்லாம் உறக்கத்தில் ஒடுங்குவதுபோன்று சமாதியில் நின்றுவிடுகின்றன. பிறகு சங்கற்பங்களெல்லாம் அற்றுப்போகுமிடத்து ஓய்ந்த கடல்போன்று, எண்ணம் என்ற அலையற்றிருக்கிறது மனது. இவ்வுலகத்தை அல்லது மறுவுலகத்தைப் பற்றிய விசாரம் சிறிதளவும் அதனிடத்தில்லை. சங்கற்பத்தினின்றே ஆசையும் செயலும் வடிவெடுக்கின்றன. மனு 11-2. ஆசையே, உனக்குப் பிறப்பிடம் எது என்பதை நான் அறிகிறேன். சங்கற்பத்திலிருந்து நீ உதித்துள்ளாய். உன்னை நான் சங்கற்பிக்காமல் விட்டு விடுகிறேன். நீ நிர்மூலமாய்ப் போய்விடுவாய். சாந்திபர்வம் 177-25. பிராணன் போனால் இந்திரியங்கள் ஒடுங்குவது போன்று சங்கற்பம் போனால் ஆசையும் கர்மமும் அடிபட்டுப் போகின்றன. இங்ஙனம் ஒருவன் யோகாரூடன் ஆகும்போது சம்சார துக்கங்களினின்று விடுபட்டு ஆத்மாவைக் கொண்டு ஆத்மாவை உன்னதத்துக்குக் கொண்டுவருகிறான். ஆசைகளாகிய பெருங்காற்றினால் சித்தமாகிய ஆகாசம் அலைக்கழிக்கப்படும் வரையில், ஈசுவரனாகிய ஒளியை அங்குக் காண இயலாது. ஈசுவரனுடன் ஐக்கியமாகி சாந்தமாக இருக்கும் மனதில்தான் அந்த திவ்விய தர்சனம் தோன்றும். ஆகையால் சாதகன் என்ன செய்யவேண்டும்? 5. உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத் ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந: ஆத்மாநம் ஆத்மாநா உத்தரேத்-தன்னைத் தான் உயர்த்திக் கொள்க, ஆத்மாநம் ந அவஸாதயேத்-தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா, ஹி ஆத்மா ஏவ ஆத்மந: பந்து-தனக்குத்தானே நண்பன், ஆத்மா ஏவ ஆத்மந: ரிபு:-தனக்குத்தானே பகைவன். பொருள் : தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா; தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன். பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடலில் மூழ்கிப் போகாது தன்னைத்தானே மேல்நிலைக்குக் கொண்டுவரவேண்டும். மனிதன் அடைந்துள்ள சிறுமைக்கும் பெருமைக்கும் தானே பொறுப்பாளன். வேறு யாரும் அதற்குப் பொறுப்பாளர் அல்லர். பகைவன் தன்னைக் கெடுத்துவிட்டான் என்று ஒருவன் குறை கூறுவது உண்டு. அப்படிக் கெடுப்பது ஒரு நாளும் பகைவன் அல்லன். பகைவனாகத் தோன்றுபவனையே தனது சாதனத்துக்குற்ற துணையாக யோகி ஒருவன் எடுத்துக்கொள்ள முடியும். அறியாமையினால் அல்லது சரியான வாழ்க்கை வாழாமையினால் மனிதன் தன்னையே கெடுத்துக்கொள்கிறான். அப்படித் தன்னையே கெடுப்பதால் தனக்குத்தானே பகைவன் ஆகிறான். நல்வாழ்க்கை வாழ்ந்து தன்னை எடுப்பவன் தனக்கே தோழனாகிறான். தனக்குத் தன்னிலும் மிக்கதொரு நண்பனோ பகைவனோ எவ்வுலகிலும் இல்லை என்பதை அறிபவன் வாழ்க்கையைப்பற்றிய ஒரு பேருண்மையை அறிபவன் ஆகிறான். பகையை யாரும் வேண்டுவதில்லை; தோழமையையே வேண்டுகின்றனர். அப்படியாயின் தனக்குத் தானே பகைவனாகாது தோழனாவது எங்ஙனம்? விடை வருகிறது : 6. பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித: அநாத்மநஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத் ஏன ஆத்மநா ஆத்மா ஜித:-எந்த ஜீவாத்மாவினால் புலன்களுடன் கூடிய உடல் அடக்கி ஆளப் பட்டிருக்கிறதோ, தஸ்ய ஆத்மநா-அந்த ஜீவாத்மாவிற்கு, ஆத்மா ஏவ பந்து-தனக்குத் தானே நண்பன், து அநாத்மந:-ஆனால் தன்னைத்தான் வெல்லாதவன், ஆத்மா ஏவ ஸத்ருவத்-தனக்குத் தான் பகைவனைப் போல, ஸத்ருத்வே வர்தேத-பகைமையாக செயல்படுவான். பொருள் : தன்னைத்தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்; தன்னைத்தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான். யோகத்தில் நிலைபெறாத மனிதனிடத்து இரண்டு இயல்புகள் உண்டு. ஒன்று காட்டில் அடங்காத சிற்றியல்பு. மன்றொன்று தெய்வப் பெற்றியுள்ள பேரியல்பு. இவைகளுள் சிற்றியல்பு தலையெடுக்கும்போது பேரியல்பு தோல்வியடைகிறது. பேரியல்பு வலுக்குமிடத்துச் சிற்றியல்பு நசிக்கிறது. தேகம், இந்திரியங்கள், மனம், புத்தி ஆகியவைகள் கட்டில் அடங்கியிருக்கும் பொழுது பேரியல்பு தலையெடுக்கிறது. அந்நிலையில் மனிதன் தன்னைத் தான் வென்றவனாகிறான். கீழான இயல்புக்கு அவன் இடங்கொடுக்குங்கால் தன்னையே அவன் அடியோடு கெடுத்துப் பாழ்படுத்துகிறான். புறத்தில் உள்ள பகைவன் ஏதோ சில வேளைகளில்தான் தாக்குகிறான். அப்படியிருந்தும் அவனால் துன்பமடையாத மனநிலையை யோகி யொருவன் பெறக்கூடும். அகத்திலுள்ள பகையோ அல்லும் பகலும் அவனை அலக்கழிக்கிறது. தோழன் போன்றிருந்து பெருந்தீங்கை அது விளைவிக்கிறது. ஆகவே, தான் அடையும் துக்கத்துக்கெல்லாம் தானே முதற் காரணம். யோகி ஒருவனே தனக்குத்தான் உறவினன் ஆகின்றான். மற்றெல்லாரும் ஆசை என்ற ஹிதசத்துருவின் வசப்பட்டுத் தங்களுக்குத் தாங்களே பகைவர் ஆகின்றனர். பந்தம் மனத்தை யொட்டியது; முக்தியும் அவ்வாறே. நான் ஒரு முக்தாத்மா; நான் ஈசுவரனுடைய புத்திரன்; என்னை யாரால் பந்தப்படுத்த முடியும்? என்று நீ சொல்வாயானால் நீ முக்தனாக ஆவது நிச்சயம். பாம்பினால் கடிக்கப்பட்டவன் விஷமில்லை, விஷமில்லை என்று முழு நம்பிக்கையுடனும் மனோதிடத்துடனும் சொல்லக் கூடுமானால் அவனுக்கு விஷ உபத்திரவமே இராது. தனக்குத்தானே நண்பன் ஆனவன் அடையும் நலங்களில் சிறந்தது யாது? விடை வருகிறது : 7. ஜிதாத்மந: ப்ரஸாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: ஸீதோஷ்ணஸுகது:கேஷு ததா மாநாபமாநயோ: ஸீதோஷ்ண ஸுகது:கேஷு-சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மாந அபமாநயோ:-மானாபிமானங்களிலும், ப்ரஸாந்தஸ்ய-சமநிலைப்பட்ட, ஜிதாத்மந:-தன்னை வென்ற மனிதனிடத்தில், பரமாத்மா ஸமாஹித:-பரமாத்மா நன்கு நிலைத்து நிற்கிறார். பொருள் : தன்னை வென்று ஆறுதலெய்தவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது. புறத்தில் பூதங்களிடத்திருந்தும், உயிர்களிடத்திருந்தும் வரும் நன்மை தீமைகள் அவனை அசைக்கமாட்டா. தன்னை வென்றவனுக்கு வெளியுலகம் சுற்றமும் அன்று, பகையுமன்று. கீழான ஆசைகளை அடக்கித் தானே வெல்லுபவனுக்கு மனம் தெளிகிறது. தூய கண்ணாடியில் போன்று தெளிந்த மனதில் பரமாத்மாவின் சொரூபம் பிரகாசிக்கிறது. உலக நிகழ்ச்சி எதுவும் அக்காட்சியை மறைப்பதில்லை. நலங்கள் அனைத்திலும் தலை சிறந்ததாகிய பரமாத்ம தரிசனமே தன்னை வென்றவனுக்கு வாய்க்கிறது. மற்ற நலங்களெல்லாம் எளிதில் அந்த யோக சித்தனுக்கு அமைகின்றன. மனிதன் பெறவேண்டிய சிரேயஸ் என்பதும் இதுவே. விஷய சுகங்களில் சிறிதும் சம்பந்தப்படாத மனம் ஈசுவரனிடம் சென்று அவனிடம் ஒற்றுமையடைகிறது. இப்படித்தான் பந்தத்தினின்று ஆத்மாக்கள் முக்தியடைகின்றன. ஈசுவரனிடம் போகும் பாதைக்கு எதிராகச்செல்லும் ஆத்மா பந்தப்படுவதாகும். யோகியின் மாறாத மனநிலை மேலும் விளக்கப்படுகிறது : 8. ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய: யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந: ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா-எவனது உள்ளம் ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தியாக நிறைந்திருக்கிறதோ, கூடஸ்த:-எந்த சூழ்நிலையிலும் தம் நிலையிலிருந்து பிறழாமல் இருக்கிறானோ, விஜிதேந்த்ரிய:-புலன்களை வென்று வசப் படுத்தியுள்ளானோ, ஸம லோஷ்ட அஸ்ம காஞ்சந:-ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும், யோகீ யுக்த: இதி உச்யதே-அந்த யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான். பொருள் : ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று, ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான். சாஸ்திர ஆராய்ச்சியால் வரும் அறிவு ஞானம் எனப்படுகிறது. அது சுவானுபவமாக முதிருமிடத்து அதற்கு விக்ஞானம் என்று பெயர். மற்றவைகளெல்லாம் மாறும்போது எது அகாசம் போன்று மாறாதிருக்கிறதோ அது கூடஸ்தன் எனப்படுகிறது. இந்திரியார்த்தங்களின் போக்கு வரவுகளில் தட்டுப்படாது தன்மயமாயிருக்கும் மனபரிபாகம் அடையப்பெற்றவன் கூடஸ்தன் எனப்படுகிறான். முதற்காரணமாகிய மனது ஒடுங்கியிருக்குமிடத்து இந்திரியங்களுக்கு வேகம் வருவதில்லை. ஆகையால் மனம் அடங்கிய யோகி இந்திரியங்களை நன்கு வென்றவனாகிறான். பாலர்களால் பெரிதும் மதிப்பிடப்படுகின்ற மணற்சோறு, கோலி, பொம்மை, பம்பரம் முதலியவைகளை முதியோர் பற்று வைக்காது சமதிருஷ்டியோடு காண்கின்றனர். பற்றுடைய உலகத்தவர் வெவ்வேறு படித்தரங்களில் வைத்து மதிப்பிடுகின்ற மண், கல், பொன் ஆகியவைகளைப் பற்றற்ற யோகி பஞ்ச பூதங்களால் ஆகியவைகளென்று சமதிருஷ்டியோடு காண்கிறான். பரதிருஷ்டி ஒன்றுதான் அவனுக்குளது. உலகப் பற்றுள்ளவர்கள் உபயோமற்ற பொருள்களைத் தேடுகின்றவராவர். உலகப்பற்றற்ற சுத்தாத்மாக்கள் ஈசுவரனை விசுவாசித்து அவனையே சதா சர்வ காலமும் சிந்தித்திருப்பார்கள். உயிரற்ற பொருள்களை இங்ஙனம் பொருள்படுத்துபவர் இனி உயிர்களை எங்ஙனம் பொருள்படுத்துகின்றனர்? விடை வருகிறது : 9. ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஸிஷ்யதே ஸுஹ்ருத் மித்ர உதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு-அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், ஸாதுஷு பாபேஷு ச அபி-சாதுக்கள், பாவிகளிடம் கூட, ஸமபுத்தி-எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன், விஸிஷ்யதே-மேலோனாவான். பொருள் : ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன் மேலோனாவான். நல்ல மனமுடையவரே நல்ல எண்ணமுடையவர் ஆகின்றனர். பிரதிபலனை எதிர்பாராது அன்னவர் பிறர்க்கு நன்மை செய்கின்றனர். நல்லெண்ணமும் நற்செயலும் வடிவெடுத்துத் தோழனுக்காகத் தொண்டுபுரிய ஆயத்தமாயிருப்பவர் நண்பர் ஆவர். பகைவர் அதற்கு நேர் மாறாகக் கேடு செய்கின்றனர். உதா சீனரோ நலம் கேடு ஒன்றும் செய்யாது வெறுமனே ஒதுங்கிப் பொதுவாயிருக்கின்றனர். மத்யஸ்தர் இருதரத்தாருக்கும் நடுவு நின்று ஒற்றுமையை உண்டுபண்ணிவைக்க முயலுகின்றனர். வெறுப்பவரோ தங்களை நேசித்து நலம் புரிபவருக்கும் கேடே நினைக்கின்றனர். கெட்ட எண்ணம் எண்ணுவதே அவர்களது இயல்பு. இரத்தத் தொடர்வுடையவர் சுற்றத்தார் ஆகின்றனர். பாரமார்த்திக விஷயத்தில் ஈடுபடுவர் சத்புருஷர்களாகின்றனர். அதற்குத் தடையாகத் தீங்கு விளைவிக்கும் செயலில் இறங்குபவர்கள் பாபிகள். இத்தனைவித வேறுபாடுடைய மனிதர்களிடத்து சாதாரண மனிதன் ஒருவனுக்கு வேறுபாடான மனப்பான்மை வருவது உலக இயல்பு. ஆனால் யோகியோ எல்லாரிடத்தும் ஒரே நல்ல மனமுடையவனாகிறான். ஆகையால் அவன் சிறந்தவன். நாடகத்தில் நடிப்பவருள் ஒருவன் இராமனாக நடித்தான் என்று அவனை விரும்பவும், இராவணனாக நடித்தான் என்று மற்றொருவன் வெறுக்கவும் செய்வதில்லை நாடகத்தைப் பார்த்து ரசிப்பவர். யோகியோ உலக நடைமுறையனைத்தையும் நாடகமாகப் பார்க்கிறான். சர்வேசுவரனே இத்தனை பாத்திரங்களாகி விளையாடுகிறான் என்பது அவனுக்குத் தேற்றம். ஆகையால் எல்லாரிடத்தும் ஒரே மனமுடையவனாகிறான் யோகியானவன். ஒருவன் பூமியிலிருக்கையில் புல்லையும் வானுற ஓங்கி வளர்ந்த தேவதாரு மரத்தையும் கண்டு, இந்த மரம் எவ்வளவு பெரிது, புல் எவ்வளவு சிறியது என்கிறான். ஆனால் அவன் ஒரு மலை மீதேறி உச்சியிலிருந்து கீழே நோக்கும்போது, பெரிய தேவதாரு மரமும் சிறிய புல்லும் ஒருங்கே உருத்தெரியாத பச்சைப் படலமாகத் தோன்றுவதைக் காண்பான். அது போல உலகப் பற்றுள்ளவர்களுடைய பார்வைக்கு ஒருவன் அரசனென்றும், மற்றொருவன் தெரு பெருக்கும் தோட்டி யென்றும், ஒருவன் தகப்பன் என்றும் மற்றொருவன் மகனென்றும் இம்மாதிரியான ஸ்தான பேதங்களும், அந்தஸ்து வித்தியாசங்களும் தோன்றும். ஆனால் தெய்வ தரிசனம் பெற்றபிறகு எல்லாம் ஒரே தோற்றம். அப்போது நல்லவர் கெட்டவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வித்தியாசங்களே இருப்பதில்லை. இத்தகைய சமதிருஷ்டி வருவதற்கு எத்தகைய யோக சாதனம் செய்யவேண்டும்? விடை வருகிறது : 10. யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித: ஏகாகீ யதசித்தாத்மா நிராஸீரபரிக்ரஹ: யத சித்தாத்மா நிராஸீ-உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து, அபரிக்ரஹ:-ஏற்பது நீக்கிய யோகீ ஏகாகீ-யோகி தனியனாக, ரஹஸி ஸ்தித:-மறைவிடத்தில் இருந்துகொண்டு, ஸததம் ஆத்மாநம் யுஞ்ஜீத-எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான். பொருள் : மறைவிடத்தில் இருந்துகொண்டு, தனியனாய் உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து, ஏற்பது நீக்கி எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான். உள்ளத்தை உள்ளபடி அறிதற்கு ஏகாந்த வாசம் இன்றியமையாதது. ஓர் அறைக்குள் யோகியானவன் தன்னை அடைத்துக்கொள்வானாகில் மற்றவர்க்குத் தென்படாதிருக்கிறான். ஆனால் அவன் அறையில் இருப்பது மற்றவர்க்குத் தெரியும். மற்றவர் தன்னைச் சூழ்ந்திருப்பது யோகிக்குத் தெரியும். ஆக, அது தனியனாய் இருக்கிற ஏகாந்த வாசமன்று. யோக சாதகன் எங்கே இருக்கிறான் என்பது வேறு யாருக்கும் தெரியலாகாது. கடவுளைத் தவிர தனக்குத் துணையாக வேறு யாரும் இல்லையென்று யோகியுணரவேண்டும். இதற்காகத்தான் அவன் இரகசியனாகவும் தனியனாகவும் இருக்கவேண்டும் என்றியம்பப்படுகிறது. உண்ணாவிரதம் இருக்கும் பொழுதுதான் உணவைப் பற்றிய எண்ணம் அதிகம் வரும். அங்ஙனம் ஏகாந்த வாசத்தில்தான் அடங்காத மனது அதிகம் கூத்தாடும். அப்படி மனதை அலைந்து திரியவிடலாகாது. எதன்கண் அதற்கு ஆசையோ அதனிடத்து மனது ஓடும். வழிபடு தெய்வத்தைத் தவிர வேறு ஒரு பொருளிடத்தும் மனது செல்லா திருப்பது நிராசையாகும். மோட்டார் வண்டியை ஒருவன் ஓட்டத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதன் வேகத்தை அதிகப்படுத்தவும் குறைக்கவும் வேண்டுமென்கிறபொழுது அவ்வண்டியை நிறுத்தவும் தெரிந்து கொள்ள வேண்டும். வண்டியை நிறுத்தத் தெரியாதவனை நம்பி அவ்வண்டியில் பயணம் போவது ஆபத்து. மோட்டார் வண்டியை நிறுத்தத் தெரியாத வண்டிக்காரன் போன்று பலபேர் உடல் வாழ்வு என்னும் வண்டியை நிறுத்தத் தெரியாதவர்களாயிருக்கின்றனர். உடல் வாழ்க்கைக்குத் தாங்கள் தலைவர்களாயிருப்பது போய் அதற்கு அவர்கள் அடிமைகளாயிருக்கின்றனர். தலைவன் ஆவதற்கு உபாயம் ஒன்றுண்டு. உடலைக் கொண்டு முறையாக வேலை செய்யத் தெரிந்திருப்பது போன்று அதற்கு ஒரு வேலையும் கொடாது அமைதியுற்றிருக்கும்படி அதை அடக்கிவைக்கவும் தெரிந்திருப்பவனே யோகி. அவனது ஆணைக்குட்பட்டு அது உழைக்கிறது அல்லது உபரதி பெறுகிறது. உபரதி பெற்றிருப்பதற்கு உபாயமாவது தியானம். தேக ஸம்ரக்ஷணைக்காகவென்று யோகி வைத்திருக்கும் உடை, உணவுப்பொருள் முதலியன பரிக்கிரஹம் அல்லது உடைமைப் பொருள் எனப்படும். அவைகளை அதிகப்படுத்துகின்ற அளவு யோகம் தடைப்படும். அப்பொருள்களைக் காப்பாற்றுவதைப் பற்றிய எண்ணம் தியான வேளையில் வரும். அவைகளுக்காக உழைப்பதும் பின்பு அதிகரிக்கும். தேவைகளைக் குறைத்தால் உடல் அடக்கம் உண்டாகும். ஆகவே, பொருள்களை மிகவும் குறைத்துக்கொள்ளவேண்டும். அவைகளை உடைத்திருத்தல் என்ற உணர்ச்சி சிறிதேனும் இருக்கலாகாது. அப்பொழுது யோகி அபரிக்கிரஹத்தில் (பொருள் படையாமையில்) நிலை பெற்றவனாகிறான். இங்ஙனம் அகப்பற்று, புறப்பற்று நீங்கிய மனதே குவிய வல்லதாகிறது. இருவித யோகிகள் இருக்கிறார்கள். ஒருவர் மறைந்து எவரது கண்ணுக்கும் தெரியாது தமது யோக சாதனங்களைச் செய்கிறார்; மற்றவர் யோகியின் சின்னங்களாகிய தண்டம், கமண்டலம் ஆகியவைகளைத் தாங்கிச் சமய சம்பந்தமாகப் பலரோடும் பேசுகின்றார். மனிதர் பார்க்காமற்போனாலும், ஈசுவரன் பார்க்கிறான் என்று நம்பித் தனியாக இருக்கும்போது எவனொருவன் ஒரு பாபத்தையும் செய்யதில்லையோ அவன்தான் வாஸ்தவமான தர்மசீலனாவான். மனிதர் கண்ணுக்குப் புலப்படாமலிருந்தாலும் ஈசுவரதிருஷ்டிக்குட்படுவோம் என்ற பயத்தினால் எவனொருவன் காட்டில் தனியாக இருக்கும்போதும் ஒரு கட்டழகியின் வலைக்குட்படாமலும், காம எண்ணத்தால் அவளைக் கண்ணெடுத்துப் பாராமலும் இருக்கிறானோ அவன்தான் வாஸ்தவமான யோகி. ஒருவருமில்லாது தனித்துள்ள ஒரு வீட்டில் காணப்படும் பொன்முடிப்பை எவனொருவன் எடுத்துக்கொண்டுபோக இச்சைப்பட மாட்டானோ அவனே தர்மவான். ஊரார் வசைமொழிக்குப் பயந்து வெளிவேஷத்துக்காக எவனொருவன் தர்மத்தை அனுஷ்டிக்கிறானோ அவனை தர்மவான் என்று சொல்லக்கூடாது. மௌனமாயும் மறைவாயும் அனுஷ்டிக்கும் தர்மமே வாஸ்தவமான தர்மம். ஏகாந்தத்தில் எத்தகைய ஆஸனம் அமைத்துக்கொள்ள வேண்டும்? 11. ஸுசௌ தேஸே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந: நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஸோத்தரம் ஸுசௌ தேஸே-சுத்தமான இடத்தில், சைல அஜிந குஸ உத்தரம்-துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது, ந அத்யுச்ச்ரிதம் ந அதிநீசம்-அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், ஆத்மந: ஸ்திரம் ஆஸநம்-தனக்கோர் உறுதியான ஆசனம், ப்ரதிஷ்டாப்ய-அமைத்துக் கொண்டு. பொருள் : சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு, தூயதும் மனதுக்கினியதுமான இடத்திலேதான் யோகி வாசம் செய்யவேண்டும். தூய வாசஸ்தானம் மனதைத் தூய தாக்குதற்குத் துணைபுரிகிறது. இயற்கையழகு இன்னொருவிதத்தில் அதைப் பண்படுத்துகிறது. சூழ்நிலைக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. கந்தைத் துணி கட்டியிருப்பவனது உள்ளத்தில் கீழ்மையுணர்ச்சி உதயமாகிறது. அகசியான இடத்தில் வசிப்பவனுக்கு மனத்தகத்தும் மாசு படிகிறது. மேலான எண்ணங்களை ஊட்டவல்ல சூழ்நிலையே யோகிக்கு உகந்த இருப்பிடமாகும். மரத்தில் கட்டித் தொங்கும் ஊஞ்சல் உறுதியானதன்று; அது அசையும் தன்மையுடையது. புற்குவியல், அடுக்கி வைக்கப்பட்ட மரக்கட்டை, குவிக்கப்பட்ட கூழாங்கற்கள் இவைகளாலும் ஸ்திரமான ஆஸனம் அமையாது. இயற்கையாக அமைந்த பாறை, கட்டுவிக்கப்பட்ட மேடை இவைகளே சிறந்தவைகளாம். பூமி மட்டத்துக்கு மேல் ஆஸனம் அதிக உயரமாய்ப் போனால் உட்காருதற்கு அச்சத்தை உண்டுபண்ணும்; மயங்கி அல்லது தூங்கி விழுந்தால் காயமாகும். ஆக, பூமி மட்டத்துக்கு இரண்டு அடிக்குமேல் போகலாகாது. பூமி மட்டத்தில் இருந்தால் புழு பூச்சிகள் வரும். அதனால் இடைஞ்சல் ஏற்படும். பூமி மட்டத்துக்குக் கீழே போனால் ஆரோக்கியத்துக்குக் கேடு வரும். ஆகையால் ஆஸனம் மிகத் தணிந்திருக்கலாகாது. மேடையின் மீது தர்ப்பாஸனம், அதன் மேல் மான்தோல் அல்லது புலித்தோல், அதன்மேல் துணி விரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அது மிக மிருதுவாயும் இராது; மிகக் கடினமாயும் இராது. இந்நிபுந்தனைகளுக்கு உட்பட்ட ஆஸனம் சாதனத்துக்குத் தகுதியுடையது ஆகும். மிக மிருதுவான ஆஸனம் நிமிர்ந்து உட்காருதற்கு உதவாது. சுக ஜீவனத்தைப்பற்றிய எண்ணத்தை அது ஊட்டுவதாகும். கடினமான ஆஸனமோ உடலை உறுத்தி வலியை உண்டுபண்ணும். ஆக, அது உதவாது. இரண்டுக்கும் இடைநிலையில் ஆஸனம் இருப்பது முறை. அத்தகைய ஆஸனத்தமர்ந்து யோகி என்ன செய்ய வேண்டும்? பகவான் பதில் அளிக்கிறார். 12. தத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா: உபவிஸ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஸுத்தயே தத்ர ஆஸநே உபவிஸ்ய-அந்த ஆசனத்தில் அமர்ந்து, யதசித்த இந்த்ரிய க்ரி, ய:-உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, மந: ஏகாக்ரம் க்ருத்வா-மனதை ஒருமுகமாக்கி, ஆத்மவிஸுத்தயே-ஆத்மா நன்கு தூய்மையடையும்படி, யோக யுஞ்ஜ்யாத்-யோகத்திலே பொருந்தக் கடவான். பொருள் : அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான். இந்திரியங்கள் வாயிலாக மனது வெளி விஷயங்களில் செல்லுகிறவளவு அது தன் பரிசுத்தத்தை இழக்கிறது. சேற்றில் புரண்டோடும் பிரவாஹம் போன்று அது தன் நீர்மையைப் பறிகொடுக்கிறது. கருவி கரணங்களை மீட்டெடுத்து ஆத்ம சொரூபத்தில் வைக்கின்றவளவு சித்தம் சுத்தியடைகிறது. ஆத்மாவைச் சார்ந்திருப்பது அதன் எதார்த்த நிலை; அதன் கலப்பற்ற பாங்கு. வெளி விஷயாதிகளைச் சார்ந்திருப்பது மாசு படிந்தநிலை. மாசு படிந்திருக்குமளவு அதன் பேராற்றல் குன்றுகிறது. தூயதாகுமளவு அதன் அருள் சக்தி வலுக்கிறது. ஆரம்பத்தில் ஒருவன் தன்னந்தனியனாக உட்கார்ந்துகொண்டு மனதை ஒருமுகப்படுத்த, அதாவது ஏகாக்ர சித்தத்தையடைய முயலவேண்டும். இல்லாவிட்டால் மனம் பற்பல விஷயங்களில் ஓடிச் சஞ்சலத்துக்குள்ளாகும். பாலையும் ஜலத்தையும் ஒன்றாக்கி வைத்தால் இரண்டும் நன்றாகக் கலந்துவிடுவது நிச்சயம். ஆனால், பாலைக் கடைந்து வெண்ணெயை எடுத்து ஜலத்தில் போட்டு வைத்தால் அவ்வெண்ணெய் ஜலத்துடன் கலக்காமல் அதன் மேலே மிதக்கும். அதுபோல இடைவிடாத பழக்கத்தால் ஒருவனுக்கு ஏகாக்கிர சித்தம் நிலைக்குமானால், அவன் எங்கிருந்த போதிலும் சரியே, அவனுடைய மனம் சுற்றிலுமுள்ள பொருள்களின்மீது சொல்லாமல் ஈசுவரனிடத்திலேயே செல்லும். மனவொடுக்கத்துக்கு உடலைப்பற்றிய நியமனம் ஏதேனும் உண்டா? உண்டு. அது வருமாறு : 13. ஸமம் காயஸிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர: ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஸஸ்சாநவலோகயந் காய ஸிரோ க்ரீவம் ஸமம்-உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக, ச அசலம் தாரயந்-அசைவின்றி வைத்துக்கொண்டு, திஸ: அநவலோகயந்-திசைகளை நோக்காமல், ஸ்வம் நாஸிகாக்ரம்-தன்னுடைய மூக்கு நுனியை, ஸம்ப்ரேக்ஷ்ய-பார்த்துக் கொண்டு. பொருள் : உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு, உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல், உடல், கழுத்து, தலை ஆகியவைகள் நேராயிருக்கும்போது மேருதண்டம் அல்லது முதுகின் முள்ளந்தண்டும் நேராகிறது. சுவாசம் ஒழுங்காகப் போகவும் வரவும் செய்யும். சிறந்த எண்ணங்கள் மனதில் உண்டாவதற்கு அத்தகைய உடல் நிலை முற்றிலும் வேண்டப்படுகிறது. யோகி ஆஸனத்தமரும்போது மேருமலைபோன்று அசையாது உறுதியாயிருக்கவேண்டும். அதனால் உடலைப்பற்றிய உணர்ச்சி தானே அகன்றுபோம். அவயவங்களைத் துன்புறுத்துகிற பாங்கில் அமரலாகாது. சுகமாக இருக்கும் பாங்கில் அமர்ந்திருக்கவேண்டும். மனது ஒடுங்குகிறவளவு கண் விழிகளும் அசைவற்றவைகளாகின்றன. ஓயாது இங்கும் அங்கும் பார்க்கும் இயல்பும் தானே குறைகிறது. இனி, தியானத்தமரும்பொழுது கண்கள் மூக்கு நுனியைப் பார்ப்பவைகள் போல் தென்படுகின்றன. உண்மையில் மூக்கைப் பார்த்தால் மூக்கைப் பற்றிய ஞாபகம்தான் மனதில் வரும். அந்தக்கரணம் ஆத்ம சொரூபத்தில் திளைத்திருக்கிற வேளையில் உடலைப்பற்றிய எண்ணம் உண்டாகாது. மனதில் அந்நிலை வரும்பொழுது கண்கள் மூக்கு நுனியைப் பார்ப்பவைகள் போல் தென்படும். தன் முட்டையின்மீது உட்கார்ந்து அடைகாக்கும் குருவி புறப்பொருள் ஒன்றையும் பாராது வெறுமனே விழித்துட்கார்ந்திருக்கிறது. யோகியினுடைய கண்ணும் அத்தகையதாகிறது. தியானத்தில் தீவிரமான ஏகாக்ரம் உண்டாகிறது; அப்போது வேறொன்றும் கண்ணுக்குப் புலப்படாது; காதுகளிலும் சப்தம் விழாது; ஸ்பரிச உணர்ச்சியும் அகன்றொழிகிறது. அப்போது பாம்பு ஒன்று சரீரத்தின்மீது ஊர்ந்து போனாலும் அது தெரிவதில்லை. தியானிப்பவர்க்குப் பாம்பைப்பற்றிய உணர்ச்சி இருப்பதில்லை; பாம்புக்கும் அம்மனிதனைப்பற்றிய உணர்ச்சியிராது. இனி உள்ளத்தை எப்படி ஒழுங்குபடுத்துவது? 14. ப்ரஸாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித: மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர: ப்ரஸாந்தாத்மா விகதபீ-நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித:-பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மந: ஸம்யம்ய-மனதை வசப்படுத்தி, மச்சித்த: மத்பர:-என்னிடத்தே சித்தத்தை இசைத்து, என்னையே அடையத்தக்க கதி எனக்கொண்டு, யுக்த: ஆஸீத-யோகத்திலிருக்கக் கடவான். பொருள் : நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான். தேங்கிய தடாகம் போன்று மனது தெளிவும் அமைதியும் அடையப்பெறுமிடத்து அது பிரசாந்தாத்மா எனப்படுகிறது. அந்த அமைதியில் வீரமும் சேர்ந்திருக்கிறபடியால் அச்சத்துக்கு ஆங்கு இடமில்லை. சிற்றின்ப போகம் எதிலும் ஈடுபடாதிருப்பது பிரம்மசரிய விரதம். குருவுக்கும் உலகுக்கும் சேவைபுரிவதன் மூலம் மனதினின்று காம எண்ணங்கள் அடியோடு அகற்றப்படுகின்றன. அதன் பிறகு மனதை அடக்குதல் எளிதாகிறது. அடங்கிய மனதில் ஈசுவரனைப்பற்றிய எண்ணமே குடிகொண்டிருக்குமானால் கீழான எண்ணங்கள் அங்குத் தலையெடுக்க மாட்டா. ஈசுவரன் ஒருவனே ஒப்பற்ற பொருள் என்றும், அவனை அடைதலே வாழ்வின் முடிவான நோக்கம் என்றும் கருதியிருப்பவன் நல்ல யோகியாகிறான். ஒருவன் பன்னிரண்டு வருஷங்கள் வழுவாத பிரம்மசரிய விரதம் அனுசரித்தால் அவனிடம் மேதாநாடி தோன்றுகிறது. அதாவது எதையும் அறிந்துகொள்ளும் சக்தி மலர்கிறது. வெகு சூக்ஷ்மமான விஷயங்களையும் அவன் சுலபமாக அறிந்துகொள்வான். அவ்வித அறிவால் ஒருவன் ஈசுவர தரிசனத்தையும் அடையக்கூடும். இவ்விதம் பரிசுத்தமடைந்த தெளிந்த அறிவுள்ளவர்களாலேயே கடவுளையடைய முடியும். யோகத்தினின்று விளையும் ஆக்கம் இனி விளக்கப்படுகிறது : 15. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ: ஸாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி நியதமாநஸ:-மனதைக் கட்டுப்படுத்தி, யோகீ ஏவம்-யோகி இவ்விதம், ஆத்மாநம் ஸதா யுஞ்ஜந்-ஆத்மாவை இடையறாது (பிரம்மத்துடன்) இணைத்துக் கொண்டு, மத்ஸம்ஸ்தாம் நிர்வாணபரமாம்-என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள, ஸாந்திம் அதிகச்சதி-ஆறுதலை அடைவான். பொருள் : இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி, என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான். புசித்தவனுக்குப் பசி யடங்குகிறது. மேலே சொல்லியபடி யோக சாதனம் செய்து மனது அடங்கப்பெற்றவனுக்கு இயல்பாக சாந்தி உதயமாகிறது. அக்னியில் சூடு இருப்பதுபோன்று ஸர்வேசுவரனிடத்து சாந்தி நிலவுகிறது. அதை அடையுமளவு ஒருவன் முக்த புருஷனாகிறான். இறைவனை அடைதல், சாந்தி பெறுதல், முக்தி சேர்தல் இவையாவும் ஒன்றாம். இதுவே யோகத்தின் பயனாகிறது. பட்டணத்துக்குப் புதிதாக வருபவன் ராத்திரி வேளையில் தங்குதற்கு வசதியான விடுதியொன்றை முதலில் தேடி அதில் தன் சாமான்களை வைக்கவேண்டும். பிறகு அவன் ஊர் சுற்றி வேடிக்கை பார்க்கலாம். இல்லாவிட்டால் இருளில் இடம் தேடுவதில் சிரமப்படுவான். அதுபோல இவ்வுலகுக்குப் புதிதாக வருபவனும் ஈசுவரனாகிய நித்திய விடுதியைத் தேடிவைத்துவிட்டு, பயமின்றி இவ்வுலகில் திரிந்து, தான் செய்யவேண்டிய காரியங்களை யெல்லாம் செய்யலாம். இல்லாவிட்டால் மரணமாகிய பயங்கரமான அந்தகாரம் வரும்பொழுது மிகுந்த துயரங்களை அவன் அனுபவிக்க நேரும். வாழ்க்கையில் யோகி எத்தகைய நியமனங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும்? விடை வருகிறது : 16. நாத்யஸ்நதஸ்து யோகோऽஸ்தி ந சைகாந்தமநஸ்நத: ந சாதிஸ்வப்நஸீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந அர்ஜுந!-அர்ஜுனா! அத்யஸ்நத து யோக: ந அஸ்தி-மிகைபட உண்போனுக்கு யோகமில்லை, அநஸ்நத: ச ஏகாந்தம் ந-உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது, ந ச அதிஸ்வப்நஸீலஸ்ய-மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை, ஜாக்ரத: ஏவ ந-மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை. பொருள் : மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது. மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை. விணையின் தந்தியை அளவுக்கு மீறி இறுக்கினால் அது உடைந்துபோம்; மிக இளக்கினால் அதில் ஓசை வராது. உடலோ வீணை போன்றது. உணவு, உறக்கம் இவைகளில் மிகைபடுதலும் குறைபடுதலும் கூடாது. அந்தந்த சரீரத்துக்கு ஏற்ற உணவு எது, அளவு எது என்பதை அவரவரே தீர்மானம் செய்யவேண்டும். மிகைபட உண்பதால் சோம்பல் வருகிறது. குறைபட உண்பதால் மெலிவு ஏற்படுகிறது. அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால்வயிறு காற்றோட்டத்துக்கு இடம் இப்படி அமைப்பது சிறந்தது. உறக்கம் உடலைப் புதுப்பித்துத் தெளிவுபடுத்துகிறது. ஆனால் மிகைபட்ட அல்லது குறைபட்ட உறக்கம் தமோ குணத்தை வளர்க்கிறது. அதனால் தியானம் தடைப்படுகிறது. பகற்பொழுதில் திருப்தியாகப் போஜனம் செய். ஆனால் இரவில் உட்கொள்ளும் உணவு குறைவாயும் இலேசாயுமிருக்கட்டும். சரீரத்துக்கு உஷ்ணத்தையும் மனதுக்குச் சஞ்சலத்தையும் எந்த உணவு கொடுக்காதோ அந்த உணவைத்தான் சாதகன் உட்கொள்ளவேண்டும். யோக சித்தி கைகூடும் முறை வருகிறது : 17. யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா யுக்த ஆஹார விஹாரஸ்ய- ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிறவனுக்கு கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய-வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கும் ஸ்வப்ந அவபோதஸ்ய யுக்த-உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின் து:கஹா யோக: பவதி-துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது பொருள் : ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது. உடற்பயிற்சி யோகிக்கு முற்றிலும் தேவையானது. ஆனால் அதை அளவுடன் செய்யவேண்டும். குறித்த வேளையில் குறித்த காரியங்களை அளவெடுத்துச் செய்யவேண்டும். சந்திர சூரியன் செயல்களெல்லாம் ஒழுங்காக நடைபெறுவது போன்று யோகியின் வாழ்க்கை முறையும் பெருந்திட்டத்துக்கு உட்பட்டிருக்கிறது. அதனால்தான் தியானம் செய்வது எளிதாகிறது. நெறியான வாழ்க்கையுடைய யோகிக்கு உடல் உணர்ச்சியே இல்லாது போய்விடுகிறது. துக்கம் துடைக்கப்படுவதும் அதனாலேயாம். யோகி தியானத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறான் என்று உறுதி கூறுவது எப்பொழுது? உத்தரம் உரைக்கப்படுகிறது: 18. யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா விநியதம் சித்தம்-தன்வசப் பட்டுள்ள உள்ளம், யதா ஆத்மநி ஏவ-எப்பொழுது தனதுள்ளேயே, அவதிஷ்டதே-நிலைபெற்றிருகிறதோ, ததா ஸர்வகாமேப்ய: நி:ஸ்ப்ருஹ:-அப்போது எந்த விருப்பத்திலும் பற்று நீங்கிய மனிதன், யுக்த: இதி உச்யதே-யோக முற்றான் எனப் படுவான். பொருள் : உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும் வீழ்ச்சியற்றானாயின், யோக முற்றானெனப் படுவான். காற்று அடிக்கும்போது கடல் கொந்தளிப்பால் நிலை குலைந்ததாகிறது. காமம் என்னும் காற்று வீசும்போது சித்தமும் நடுநிலையினின்று வழுவுகிறது. சித்தத்தில் எண்ணங்கள் உதிக்குமளவு அது தன் அமைதியை இழக்கிறது. மனம் தேங்கித் தூய தாயிருக்குமிடத்து யோகம் வலுக்கிறது. அசையாத மனதையுடையவன் யோகத்தில் மிக மேலேறியவன் ஆகிறான். கிழிந்த மூட்டையிலிருந்து சிதறி நாலாபக்கங்களிலும் ஓடிய கடுகைப் பொறுக்கி யெடுப்பது சிரமம். அதுபோல, உலக விஷயங்கள் பலவற்றிலும் உழலும் மனதைக் குவியச் செய்வது எளிதன்று. மனம் குவிந்து ஒருமைப்படுவதே தியானம். ஒருமைப்பட்ட மனது எத்தகையது என்பது விளக்கப்படுகிறது : 19. யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந: நிவாதஸ்த: தீப:-காற்றில்லாத இடத்தில் விளக்கு, யதா ந இங்கதே-எப்படி அசையாமல் இருக்குமோ, ஸா உபமா-அதே உவமை, ஆத்மந: யோகம் யுஞ்ஜத: யோகிந:-ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியினுடைய, யதசித்தஸ்ய ஸ்ம்ருதா-வெற்றி கொள்ளப பட்ட மனதிற்கும் சொல்லப் பட்டது. பொருள் : சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில் அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர். தியானத்தில் அமர்ந்திருப்பவன் தானே ஜோதி சொரூபம் என்றும், சுத்த சைதன்யம் என்றும் பாவித்தல் வேண்டும். காற்று அடிக்காத இடத்தில் ஏற்றிவைத்த தீபம் தனது நிலை பிறழாது வரைந்த சித்திரம் போன்று நின்று எரிகிறது. ஆசை என்ற காற்று அடியாதிருக்கும் போது யோகியின் சித்தமும் அங்ஙனம் அசைவற்றிருக்கிறது. தியானத்தில் முதிர்ந்தவனுக்கு முக்தி வெகு சமீபம் என்பது ஒரு பழமொழி. தியானத்தில் ஒரு மனிதனுக்கு எப்போது முதிர்ச்சி உண்டாகிறது தெரியுமா? அவன் தியானத்துக்கு உட்கார்ந்தவுடன் திவ்வியதேஜஸ் அவனைச் சுற்றிக் கொள்கிறது. அவனுடைய ஆத்மா ஈசுவரனுடன் கலந்துகொள்கிறது. யோக முதிர்ச்சியால் வரும் வேறு பல அனுபவங்களும் இருக்கின்றன. அவைகளாவன : 20. யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா யத்ர சைவாத்மநாத்மாநம் பஸ்யந்நாத்மநி துஷ்யதி யோகஸேவயா-யோகப் பயிற்சியினால், நிருத்தம் சித்தம்-கட்டுண்ட சித்தம், யத்ர உபரமதே-எங்கு ஆறுதல் எய்துமோ, ச யத்ர ஆத்மநா ஆத்மாநம் பஸ்யந்-எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து, ஆத்மநி ஏவ துஷ்யதி-ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ. பொருள் : எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ மனம் அடங்கி அமைதிபெறுகிறவிடத்து ஆனந்தம் மிளிர்கிறது என்பதற்கு சுழுத்தியவஸ்தையே சான்று. ஆனால் சுழுத்தியில் ஆத்ம தரிசனம் மிகக் குறைவு. யோக சாதனத்தால் சித்த சுத்தி யடையுங்கால், தெளிவடைந்த மனதால் ஆத்ம சொரூபம் நன்கு அறியப்படுகிறது. ஆத்ம ஞானமே ஆத்ம திருப்தியாகிறது. இன்னும் என்ன அடையப்பெறுகிறது? 21. ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம் வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஸ்சலதி தத்த்வத: அதீந்த்ரியம்-புலன்களைக் கடந்து நிற்பதும், புத்திக்ராஹ்யம்-புத்தியால் தீண்டத்தக்கதும், யத் ஆத்யந்திகம் ஸுகம்-எந்த முடிவற்ற பேரின்பத்தை, தத் யத்ர வேத்தி-அதை எங்கு காண்பானோ, யத்ர ஸ்தித-எங்கு நிலைபெறுவதால், தத்த்வத: ந ஏவ சலதி-இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ. பொருள் : புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ, சுகம் வெளியுலகில் இல்லை; அது ஆத்ம சொரூபத்திலேயே இருக்கிறது. உள்ளே இருப்பதை உணர இந்திரியங்களுக்கு இயலாது. தெளிவடைந்த புத்தியே அதைத் தெரிந்துகொள்கிறது. அது ஆத்ம சுகமாதலால் அது முடிவில்லாதது. ஆத்ம சொரூபத்திலே நிலைபெற்ற யோகி நீருக்குள்ளே திரும்பவும் இடம் பெற்ற மீன் போன்றவன். மீன் நீரினின்று நிலம் போக விரும்புவதில்லை. தெவிட்டாத ஆத்மானந்தத்தை அனுபவிப்பவன் தெவிட்டுகிற விஷய ஆனந்தத்துக்குப் போவதில்லை. உண்மையான சமாதியடையும்போது ஒருவன் தன் இயல்பான சச்சிதானந்த சாகரத்தில் ஆழ மூழ்குகிறான். அவன் கருவி கரணங்கள் ஒடுங்குகின்றன. 22. யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத: யஸ்மிந்ஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே யம் லாபம் லப்த்வா-எதனை யெய்தியபின், தத: அபரம் அதிகம் ந மந்யதே ச-அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, யஸ்மிந் ஸ்தித:-எங்கு நிலை பெறுவதால், குருணா து:கேந அபி-பெரிய துக்கத்தாலும், ந விசால்யதே-சலிப்பெய்த மாட்டானோ. பொருள் : எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, எங்கு நிலை பெறுவதாய் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ, அடையப் பெறாத உலகப் பொருள் ஒன்று பெரியதாகத் தோன்றுகிறது. அடைந்தவுடனே அது சிறியதாய்விடுகிறது. பிறகு அதனினும் பெரியதாக வேறு ஒரு பொருள் தோன்றுகிறது. இப்படி இவ்வுலகம் தருகிற நிலையற்ற இன்பம் ஒரு பொருளிலிருந்து மாறி இன்னொரு பொருளுக்குப் போய்க் கொண்டே யிருக்கிறது. பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள பரப்பிரம்மத்தை அடைந்தான பிறகு அதற்கு ஒப்பானது ஒன்றும் தென்படுவதில்லை. இனி, அதற்கு மிக்கதொரு பொருள் தோன்றுவது எங்ஙனம்? கடலை அடைந்த மின் அதிலும் பெரியது எதைப் பெறமுடியும்? அகண்ட சச்சிதானந்தத்தைப் பெற்ற பிறகு அதற்குமேல் பெறுதற்கு ஒன்றுமில்லை. துக்கமெல்லாம் உடல் சம்பந்தமானவைகள். பிரம்மானந்தத்தில் திளைத்திருப்பவர்களுக்குத் தேகவுணர்ச்சி வருவதில்லை. நிழல்போன்று தேகம் யோகியைச் சார்ந்திருக்கிறது. நிழலைக் கத்தியால் வெட்டுவதால் மனிதனுக்குத் துன்பம் வருவதில்லை. தேகத்தைச் சிதைப்பதால் ஆத்மஞானிக்குத் துன்பம் வருவதில்லை. சரீரத்தில் அனுபவிக்கும் துன்பங்களும் இன்பங்களும் எப்படிப் பட்டவையாயினும் உண்மையான பக்தனுக்கு ஞானம், பக்தி இவைகளின் மஹிமையும் சக்தியும் ஒருபோதும் குறைவதில்லை. பாண்டவர்கள் அனுபவித்த கஷ்டங்கள் எவ்வளவு கொடியனவாக இருந்தன! என்றாலும் ஒரு நிமிஷங்கூட அவர்களுடைய ஞான ஒளி மங்கின தில்லை. 23. தம் வித்யாத்து:கஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம் ஸ நிஸ்சயேந யோக்தவ்யோ யோகோऽநிர்விண்ணசேதஸா து:க ஸம்யோக வியோகம்-துன்பத்துடன் கலத்தலை விடுதலை, தம் யோகஸம்ஜ்ஞிதம்-அந்நிலையே யோக நிலையென்று, வித்யாத்-உணர், ஸ யோக:-அந்த யோகத்தை, அநிர்விண்ணசேதஸா-உள்ளத்தில் ஏக்கமின்றி, நிஸ்சயேந யோக்தவ்ய:-உறுதியுடன் பற்றி நிற்கக் கடவான். பொருள் : அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர். உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவான். மனிதன் உண்மையில் சுக சொரூபி. அறியாமையினால் தன்னைத் துக்கத்தோடு இணைத்துக்கொண்டிருக்கிறான். வருவிக்கப்பட்ட துக்கத்தை விலக்கிவிட்டால் தனது எதார்த்தநிலை விளங்குகிறது. சொப்பனத்தில் வருந்துகின்ற ஒருவனை எழுப்பி ஜாக்கிர தாவஸ்தையோடு யோகம் பண்ணிவைப்பது போன்றது இது. யோகம் என்பதற்கு இணைத்தல் அல்லது சேர்த்துவைத்தல் என்று பெயர். எக்காரணத்தை முன்னிட்டாவது விசனப்படுபவன் யோகத்துக்குத் தகுதியுடையவன் ஆகான். அகமகிழ்வுடனும் குன்றாத ஊக்கத்துடனும் யோக சாதனம் செய்பவனுக்கு அது கைகூடும். ஏனென்றால் தனது நிஜசொரூபத்தை யணுகுதற்கு அத்தகைய மனபரிபாகம் முற்றிலும் அவசியமானது. பாத்திரத்தின் அடியில் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும் வரையில், அதிலுள்ள பால் கொதித்துப் பொங்கும். நெருப்பை எடுத்து விட்டாலோ, பொங்குதல் நின்றுவிடும். அதுபோல ஸாதன மார்க்கத்தில் இருக்கும் வரையில்தான் புதிய ஸாதகனது மனம் குதூகலத்தால் பொங்கும். யோகசாதனத்தில் இன்னும் சில அம்சங்கள் இருக்கின்றன. அவையாவன : 24. ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஸேஷத: மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத: ஸங்கல்பப்ரபவாந்-சங்கல்பத்தினின்றும் எழும், ஸர்வாந் காமாந் அஸேஷத: த்யக்த்வா-எல்லா விருப்பங்களையும் மிச்சமற துறந்துவிட்டு, மநஸா இந்த்ரியக்ராமம் ஸமந்தத: ஏவ விநியம்ய-மனதினால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி. பொருள் : சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு, எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி, சங்கல்பம் என்பது மனதில் வரும் எண்ணம். அது விதை போன்றது. ஆசையோ செடிபோன்றது. விறகுக் கட்டைகளுக்கிடையிலுள்ள சிறு தீ, பிறகு பெருந்தீயாகப் பரிணமிப்பது போன்று மனதில் ஆசை கொஞ்சம் மிச்சமிருந்தால் அது நாளடைவில் சாதகனுக்கும் தெரியாது பேராசையாகத் தடித்து விடும். ஆசைக்குச் சிறிதும் இடம் தரலாகாது. விவேகம் வைராக்கியத்தோடு கூடிய மனதால் இந்திரியங்களை அறவே அடக்குதல் வேண்டும். புகைசூழ்ந்த அறையில் எவ்வளவு ஜாக்கிரதையுடன் நீ இருந்தாலும் உனது சரீரத்தில் கொஞ்சமாவது கரியேறத்தான் செய்யும். அதுபோல ஒருவன் எவ்வளவு சாமர்த்தியமாயும் ஜாக்கிரதையாயும் இருந்தாலும் இந்திரிய விஷயங்களுக்கிடையில் வாசம் செய்வதால் அவனுக்குக் காம இச்சை கொஞ்சமாவது உண்டாவது நிச்சயம். 25. ஸநை: ஸநைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா ஆத்மஸம்ஸ்தம் மந: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத் ஸநை: ஸநை: உபரமேத்- மெல்ல மெல்ல ஆறுதல் பெறச் செய்து, த்ருதி க்ருஹீதயா புத்த்யா-துணிந்த மதியுடன், மந: ஆத்மஸம்ஸ்தம் க்ருத்வா-மனதை ஆத்மாவில் நிறுத்தி, கிஞ்சித் அபி ந சிந்தயேத்-எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான். பொருள் : துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்; எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான். த்ருதி அல்லது தைரியம் என்பது நெறியான வாழ்க்கையினின்று வரும் வல்லமை. ஊசிப்புல் ஊசியைவிடக் கூர்மையாயிருக்கும். ஆனால் குத்தித் தைப்பதற்கு அது உதவாது. விஷய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள சிலருக்கு நுண்ணறிவு உண்டு. தங்களுடைய புத்திக் கூர்மையினால் நித்திய அநித்திய வஸ்து விவேகம் மிகச் சாமர்த்தியமாகச் செய்வார்கள். ஆனால் ஆசையை அடக்கும் வல்லமை அவர்களுக்கில்லை. மனவலிவும் தைரிய புத்தியும் படைத்தவர்க்கே அது சாத்தியம். மனம் ஆத்மாவில் நிலைபெறுகிறவளவு அது விஷயங்களில் போகாது. விஷய போகங்களை எண்ணலாகாது. ஈசுவர சிந்தனையே மெள்ள மெள்ள வலுக்கவேண்டும். மனம்தான் எல்லாம். அது தனது சுயேச்சையை இழக்குமானால் நீயும் உனது சுயேச்சையை இழப்பாய். மனம் சுயேச்சையோடு இருக்குமானால் நீயும் சுயேச்சையோடு இருப்பாய். மனதை, வண்ணானிடமிருந்து வந்த வெளுப்பு வஸ்திரத்தைப் போல, எந்தச் சாயத்திலும் தோய்த்தெடுக்கலாம். ஆங்கில பாஷையைப் படித்தால் உனது சம்பாஷணையில், நீ தடுக்க முயன்றாலும் ஆங்கிலச் சொற்கள் கலந்துவிடும். சம்ஸ்கிருதம் படித்த பண்டிதன் நிச்சயமாய் சுலோகங்களை மேற்கோளர்க எடுத்துக் காட்டுவான். கெட்டவர்களோடு சகவாசம் செய்தால் மனமும் வாக்கும் கெட்டுப்போம். பக்தர்களின் மத்தியிலிருந்தால் மனம் ஈசுவரனைப் பற்றிச் சிந்திப்பது நிச்சயம். சகவாசத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி மனதின் சுபாவம் மாறுபடும். சிறிது சிறிதாகப் பழகவேண்டும் என்று பகவான் சொல்லியிருப்பதால் சாதகன் ஒருவன் தீவிரமான முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. பல பிறவிகளுக்குப் பிறகு யோகானு பூதி வந்தமைந்தால் போதும் என்று எண்ணி முயற்சியைக் குறைக்கலாம். அத்தகைய சந்தேகம் வாராதிருத்தற்பொருட்டு அதன் உட்கருத்தை பகவான் மேலும் விளக்குகிறார் : 26. யதோ யதோ நிஸ்சரதி மநஸ்சஞ்சலமஸ்திரம் ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஸம் நயேத் யத: யத:-எங்கெங்கே, எதத் அஸ்திரம்-இந்த நிலையில்லாத, சஞ்சலம் மந: நிஸ்சரதி -சஞ்சலமான மனம் அலைகிறதோ, தத: தத: நியம்ய-அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி, ஆத்மநி ஏவ வஸம் நயேத்-ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க. பொருள் : எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க. ஓடும் தன்மையுடைய மனது ஒரு பொருளிடத்திருந்து விலக்கி யெடுக்கப்பட்டவுடன் மற்றொரு பொருளிடத்து அது பாய்கிறது. அப்படிக் பாய்தற்குத் தக்க காரணத்தையும் அந்த மனதே கண்டுபிடிக்கிறது. அரசாங்கம் உண்டுபண்ணும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் போன்று பாசாங்கு செய்துகொண்டே தங்கள் சுயநலத்துக்காக அதை மீறி நடக்கும் குணக்கேடர் பலர் உளர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு புதிய அடாத செயலையும் சட்டத்துக்கு உட்படுத்தப் புதிய சட்டங்கள் அமைப்பது அவசியமாகிறது. விஷயங்களில் செல்லும் மனது செய்கிற தொழிலும் அத்தகையது. அப்போதைக்கப்போது அதற்கு விவேகத்தை ஊட்டுதல் அவசியம். இச்செயலைத்தான் சிறிது சிறிதாக வசப்படுவது என்று பகவான் பகர்கிறார். ஆத்மாவில் ஊன்றி மனது உறுதிபெறும் வரையில் அதனோடு ஓயாது போராடியாக வேண்டும். இச்சையானது கடுகளவு இருந்தாலும் ஈசுவரனைக் காணமுடியாது. ஆதலால் உன்னிடத்துள்ள குற்றமற்ற சிறிய இச்சைகளைத் திருப்தி செய்துகொண்டு, விஷயாதிகளிலுள்ள கொடிய பெரிய இச்சைகளை விவேகத்தாலும் விசாரத்தாலும் ஒழித்துவிடு. ஆசைகளை அடக்கியபின் ஆவதென்ன? 27. ப்ரஸாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம் உபைதி ஸாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம் ஹி ப்ரஸாந்தமநஸம்-ஏனெனில் மனம் சாந்தமாக, அகல்மஷம் ஸாந்தரஜஸம்-மாசு நீங்கி, ரஜோ குணம் ஆறி, ப்ரஹ்மபூதம்-பிரம்மமேயாகிய, ஏநம் யோகிநம்-இந்த யோகிக்கு, உத்தமம் ஸுகம் உபைதி-மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது. பொருள் : மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது. துன்பத்துக்கு ஏதுவான பற்றுதல்களை ரஜோகுணம் உண்டு பண்ணுகிறது. அதன் வேகம் தணியும்பொழுது மனதில் பிரசாந்தம்-இனிமையோடு கூடிய அமைதி-தானாக வந்தமைகிறது. அப்பொழுது யோகி ஜீவன் முக்தனாகிறான். எல்லாம் பிரம்மம் என்று அறிகிறவன் தானே பிரம்மமாகிறான். தானே பிரம்மமானவனுக்கு இருள்சேர் இருவினையும் சேர்வதில்லை. வினையே பாபம் எனப்படுகிறது. தர்மம் அதர்மமாகிய கர்மத்தில் கட்டுப்படாதவனுக்குப் பாபமில்லை. பின்பு சித் சுகமே யாண்டும் அவனை அடுத்திருக்கும். தனது வேலைக்காரனது வீட்டுக்கு அதிதியாகப் போவதற்கு முன்னால், அவ்வேலைக்காரன் தன்னைத் தகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரிக்க வேண்டியதற்காக அரசன் ஒருவன் தன்னுடைய பண்டகசாலையிலிருந்தே வேண்டிய ஆசனங்கள், ஆபரணங்கள், ஆகாராதிகள் இவைகளை அவ்வேலைக்காரனுக்கு அனுப்புகிறான். அதுபோல ஈசுவரன் பக்தனிடம் செல்லும் முன்னால் ப்ரேமை, பக்தி, சிரத்தை ஆகிய இவைகளை அந்த பக்தனுடைய ஆர்வமுற்ற ஹிருதயத்தில் புகும்படி அனுப்பியருள்கிறான். 28. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ: ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஸமத்யந்தம் ஸுகமஸ்நுதே விகதகல்மஷ:-குற்றங்களைப் போக்கி, ஏவம் ஸதா ஆத்மாநம் யுஞ்ஜந்-இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், ப்ரஹ்ம ஸம்ஸ்பர்ஸம்-(அந்த யோகி) பிரம்மத்தைத் தொடுவதாகிய, அத்யந்தம் ஸுகம்-மிக உயர்ந்த இன்பத்தை, ஸுகேந ஸுகம் அஸ்நுதே-எளிதில் துய்க்கிறான். பொருள் : குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான். பிரம்ம ஸம்ஸ்பர்சம், பிரம்மத்தைத் தொட்டுணர்வதால் வரும் பேரானந்தம் என்பது மூலம். ஸ்பர்சமணி என்று ஒரு கல் இருப்பதாகவும், அதைக்கொண்டு எதைத் தொட்டாலும் அது பொன்னாய்விடும் என்றும் ஓர் ஐதிகம் உண்டு. பொன் ஆவது என்பதன் பொருள் கீழானது மிக மேலானதாகும் என்பதாம். பிரம்மம் தான் அந்த ஸ்பர்சமணி. அது எளிதில் அகப்படுவது அன்று. ஆயினும் அதனோடு இணக்கம் வைத்துக்கொள்பவர்களெல்லாம் அதன் சொரூபத்தை அடையப்பெறுகின்றனர். அதன் அலகிலா ஆனந்தமும் அவர்களுக்குரியதாகிறது. ஜலத்தில் அமிழ்த்தி வைத்த பாத்திரத்தின் உள்ளேயும் வெளியிலும் ஜலம் நிரம்பியிருக்கும். அதுபோல ஈசுவரனிடம் ஆழ்ந்துள்ள ஆத்மாவானது உள்ளும் புறமும் ஸர்வவியாபகமான சைதன்யத்தைத்தான் காணும். தன்னகத்து ஆத்ம சொரூபத்தை அறிந்து அனுபவித்தவனுக்கு உலகக் காட்சியில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா? அதற்கு விடை வருகிறது : 29. ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந: யோகயுக்தாத்மா-யோகத்தில் கலந்தவன், ஸர்வத்ர ஸமதர்ஸந:-எங்கும் சமப் பார்வையுடையவனாய், ஸர்வபூதாநி ஆத்மாநம்-எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், ஆத்மநி ச ஸர்வபூதாநி-தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும், ஈக்ஷதே-காணுகிறான். பொருள் : யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான். யோகத்தில் முதிர்ச்சியடைந்துவருபவனுக்கு இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற வேற்றுமை யெண்ணம் போய்விடுகிறது. சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மா முதல் சிருஷ்டிப்பொருள்களில் மிகச் சிறியதாகிய புல் பரியந்தம் எல்லாவற்றையும் சிறந்தபான்மையுடன் கருதுதல் அவனுக்கு இயல்பாகின்றது. பிறகு அவன் தன்னுயிர் போன்று மன்னுயிரையும், மன்னுயிர்போன்று தன்னுயிரையும் பாராட்டுபவன் ஆகிறான். அதற்குமேல் தன் உடல் முழுவதையும் தன் சொரூபமாகக் கருதுவது போன்று, பிரம்மா முதல் புல் வரையில் எல்லா உயிர்களையும் தன் சொரூபமாகவும், தன்னை எல்லா உயிர்களின் சொரூபமாகவும் உணரும் தன்மை அவனுக்கு வந்தமைகிறது. நான் தனிப்பட்ட ஜீவன் என்று கூறுவது கங்கைப் பிரவாகத்துக்குள் ஒரு சிறு பாகத்தை அணையிட்டுக் கட்டி அவ்வணைக்குள்ளிருக்கும் நீரைத் தன்னுடய கங்கை என்று கூறுவதற்கொப்பாகும். ஜீவர்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள் என்றால் இனி அவர்களுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது : 30. யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்யதி தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி ய: ஸர்வத்ர மாம் பஸ்யதி-எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, ஸர்வம் ச மயி பஸ்யதி-எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி-அவனுக்கு நான் காணப் படாமல் போவதில்லை, ஸ ச மே ந ப்ரணஸ்யதி-எனக்கும் அவன் காணப் படாமல் போவதில்லை. பொருள் : எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான். உயிர்கள் அனைத்துக்குமிடையில் ஒற்றுமை கண்டான பிறகு அவைகள் எப்பொருளால் ஆக்கப்பெற்றவை என்ற மெய் அறிவு வருகிறது. பொன் ஆபரணங்கள் எல்லாம் பொன்னால் ஆக்கப்பட்டவை போன்று உயிர்கள் அனைத்தும் பரமாத்மாவினிடத்திலிருந்து வந்தவை என்ற ஞானம் உதிக்கிறது. நகை பொன் மயமாயிருப்பது போன்று பரமாத்மாவை அறிபவன் தானே பரமாத்மாவின் சொரூபமாயிருக்கிறான். அவன் எந்த இடத்தில் இருப்பினும், எத்தகைய மனநிலையை யுடையவனாயிருப்பினும், காலவேறுபாடு எதுவாயினும், பரமாத்மாவைப்பற்றிய ஞானம் அவனை விட்டகலுவதில்லை. ஒரே வஸ்துவான சர்க்கரையினால் பக்ஷி போலவும், மிருகம் போலவும் வேறு வேறு உருவங்களைக்கொண்ட மிட்டாய் செய்யக்கூடும். அதுபோல ஆனந்த சொரூபியாகிய ஒரே கடவுள் பலவித நாம ரூபங்களால் பலவித கால தேசங்களில் ஆராதிக்கப்படுகிறான். ஞானம் தடைப்படுவதில்லை யாதலால் பரமாத்மாவுக்கும் யோகிக்கும் உள்ள தொடர்வு தெளிவுறுத்தப்படுகிறது. 31. ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: ஸர்வதா வர்தமாநோऽபி ஸ யோகீ மயி வர்ததே ய: ஏகத்வம் ஆஸ்தித-எவன் ஒருமையில் நிலைகொண்டவனாக, ஸர்வபூதஸ்திதம்-எல்லா உயிர்களிடத்திலுமுள்ள, மாம் பஜதி-என்னைத் தொழுவோன், ஸ யோகீ:-அந்த யோகி ஸர்வதா வர்தமாந அபி-யாங்கணும் சென்றபோதிலும், மயி வர்ததே-என்னுள்ளேயே செயல் பட்டுக் கொண்டிருக்கிறான். பொருள் : ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான். சிறைச்சாலையிலிருந்து விடுபட்ட ஒருவன் ஓர் அறைக்குள்ளே தன்னை மூடிவைத்துக்கொண்டாலும், கை கால்களைத் தளைத்துக் கொண்டாலும் தான் இனி பந்தப்பட்டவன் அல்லன் என்று ஐயம் திரிபு அற உணர்கிறான். பிரம்மம் ஒன்றே இத்தனைக்கும் மூலப்பொருள் என்று அறிந்தவன் பிரம்மத்தையே யாண்டும் காண்கிறான். பிரம்ம பாவனையில் அவன் நிலைத்திருப்பதால் அவன் கொள்ளுகிற இணக்கமெல்லாம் இறை வணக்கமாகிறது. ஸர்வதா என்பதன் பொருள் தியானவஸ்தை, வியவகாரம், விச்ராந்தி ஆகிய எல்லா வேளைகளிலும் நிலைகளிலும் என்பதாகிறது. ஸகஜ நிஷ்டை என்பது இதுவே. நீரில் இருப்பவன் நனைவதும், நெருப்பின் அருகில் இருப்பவன் வெப்பம் பெறுவதும் இயல்பு. பிரம்ம சன்னதியில் இருப்பவன் தானே பிரம்ம சொரூபம் ஆகிறான். ஜீவன் முக்தன் நிலை இதுவே. வாஸ்தவமான ஞானம் வாய்ந்தவன் ஈசுவரன் வெகு தூரத்திலிருப்பதாகக் காண்பதில்லை. அவன் என்று எட்ட இருப்பது போல் அல்லாது இது என்று இங்கே அவனுடைய உள்ளத்திலேயே இருப்பதாக அவன் உணர்கிறான். ஈசுவரன் எல்லாரிடத்திலும் இருக்கிறான். ஆகவே தேடுபவர்களுடைய காட்சிக்கு அவர்களிடமே அவ் ஈசுவரன் தென்படுகிறான். அந்த யோகியிடத்து மேலும் அமையும் பெருமையாவது : 32. ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோऽர்ஜுந ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத: அர்ஜுந ய:-அர்ஜுனா! எந்த யோகி, யதி ஸுகம் வா து:கம் வா-இன்பமாயினும், துன்பமாயினும், ஸர்வத்ர ஆத்ம ஒளபம்யேந-எல்லாவற்றிலும்/எல்லாவற்றையும் தன்னைப் போலவே, ஸமம் பஸ்யதி-சமமாக பார்க்கிறானோ, ஸ: பரம யோகீ மத:-அவன் பரமயோகியாகக் கருதப்படுவான். பொருள் : இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான். தன் உடலில் உள்ள உறுப்புகளுக்கிடையில் மனிதன் உயர்வு தாழ்வு பாராட்டுவதில்லை. அவயவத்துக்கு உண்டாகும் இன்பமும் துன்பமும் தன்னுடையது. ஏனென்றால் அவயவங்கள் வேறு, தான் வேறு அல்ல. தானே அவயவங்கள் அவயவங்களே தான். இந்த ஞானம் சாதாரண ஜீவனுக்கு உறுதியாயிருப்பது போன்று சிறந்த யோகிக்குத் தானே உலகம், உலகமே தான் என்ற அனுபவம் அசையாதது. தானும் உலகும் பரம்பொருளுக்கு அவயவங்கள் போன்றவை. தனக்குத் துன்பம் வாராது தடுப்பது போன்று உலகுக்குத் தன்னால் துன்பம் வாராது அவன் தடுக்கிறான். தனது இன்பத்தை வளர்ப்பது போன்று உலகுக்கு இன்பத்தை அவன் நல்குகிறான். இத்தகைய ஐக்கிய உணர்வால் அவன் பரமயோகி யாகிறான். ஒரு கிராமத்தில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்திலிருந்த சந்யாஸிகள் தினந்தோறும் பிக்ஷõ பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வெளியே பிøக்ஷக்காகப் போவதுண்டு. ஒருநாள் ஒரு சந்யாஸி அப்படிப் போகும்போது ஏழைக் குடியானவன் ஒருவனை ஒரு மிராசுதாரன் கடுமையாக அடிப்பதைக் கண்டார். தயாளுவாகிய அந்தச் சாது, குடியானவனை அடிப்பதை நிறுத்த வேண்டுமென்று மிராசுதாரனைக் கேட்டுக்கொண்டார். கோபத்தால் தன்னை மறந்த மிராசுதாரன் உடனே, சாதுவின் மேல் பாய்ந்து அவரையும் அடி அடியென்று அடித்தான். அதனால் அவர் பிரக்ஞையற்றுத் தரையில் விழுந்தார். அதைக் கேள்வியுற்ற மற்ற சந்யாஸிகள் உடனே அவர் விழுந்து கிடக்குமிடத்துக்கு ஓடிவந்து, அவரை மடத்துக்குக் கொண்டுபோயினர். என்றாலும் அவருக்கு நெடுநேரம் வரையில் பிரக்ஞை வரவில்லை. ஆதலால் மற்றைய சாதுக்கள் அவருக்குக் காற்று வரும்படி விசிறி, முகத்தைக் குளிர்ந்த ஜலத்தால் துடைத்து, வாயில் பாலை வார்த்து, பிரக்ஞை வருவதற்கான சைத்யோபசாரங்களைச் செய்துகொண்டிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குத் தம் நினைவு வரத் தலைப்பட்டது. அவர் கண்ணைத் திறந்து மற்றைய சந்யாஸிகளைப் பார்த்ததும், அவர்களில் ஒருவர் சுவாமீ, இப்போது தங்களுக்குப் பால் வார்த்துக்கொண்டிருப்பது யார் என்று தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு அந்த சாது, எவன் என்னை அடித்தானோ அவனே இப்போது பால் கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்று பதில் சொன்னார். ஈசுவரனே அடைந்து நன்மை தீமை, பாப புண்ணியம் இவைகளைக் கடந்து நின்றாலொழிய இப்படிப்பட்ட ஐக்கிய ஆத்மசொரூபம் ஸித்தியாகாது. யோகம் இங்ஙனம் விளக்கப்படும்போது அர்ஜுனனுக்கு ஓர் ஐயப்பாடு உண்டாயிற்று. அதாவது : அர்ஜுந உவாச 33. யோऽயம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸூதந ஏதஸ்யாஹம் ந பஸ்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம் அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், மதுஸூதந!-மதுசூதனா, அயம் யோக ஸாம்யேந-இந்த யோகம் சம பாவனையோடு கூடியதென்று, ய: த்வயா ப்ரோக்த:-எது உங்களால் சொல்லப் பட்டதோ, ஏதஸ்ய ஸ்திராம் ஸ்திதிம்-அந்த யோகத்தினுடைய உறுதியான இருப்பை, சஞ்சலத்வாத் அஹம் ந பஸ்யாமி-எனது சஞ்சலத் தன்மையால் எனக்குத் தோன்றவில்லை. பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால். சமமாகப் பார்த்தல் என்பது வி÷க்ஷபங்கள் அற்று மனம் ஒடுங்கியிருத்தலாம். விதவிதமான எண்ணங்கள் வி÷க்ஷபங்கள் என்று இயம்பப்படுகின்றன. அலையில்லாத கடல்போன்ற தேங்கிய மனநிலை வி÷க்ஷபங்கள் அற்ற மனநிலையாகிறது. 34. சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் ஹி க்ருஷ்ண-ஏனெனில் கண்ணா! மந: சஞ்சலம்-மனம் சஞ்சலமுடையது, ப்ரமாதி-தவறும் இயல்பினது, பலவத் த்ருடம்-வலியது; உரனுடையது, தஸ்ய நிக்ரஹம் வாயு: இவ-அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல், ஸுதுஷ்கரம் அஹம் மந்யே-மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன். பொருள் : கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன். இக்கேள்வியில் மனதின் இயல்பு முழுதும் அடங்கி யிருக்கிறது. ஓயாது அலைந்து திரிவதால் மனது சஞ்சல முடையது. மான் போன்று அது அலைகிறது எனலாம். மான் யாருக்கும் துன்பம் தருவதில்லை. மனது அத்தகையதன்று. புலிபோன்று அது உயிர்களைத் துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது. அவைகள் அத்துஷ்ட ஜந்துவால் கலக்கமடைகின்றன. மனதும் அப்படி மனிதனைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் அது பிரமாதி எனப்படுகிறது. துன்புறுத்தும் கொசு ஒன்றுக்குப் பலமில்லை. ஆனால் புலிக்குப் பலமுண்டு. மனதும் அப்படிப் பலம் மிக உடையது. எனவே அது பலவத் எனப்படுகிறது. புலியைப் பட்டினி போட்டு அதன் பலத்தைக் குறைத்துவிடலாம். இரத்தத்தை உறிஞ்சும் அட்டை ஒன்றைப் பட்டினி போட்டால் அதன் தோல் அதிக வலியுடையதாகிறது. அதைக் கிள்ளித் துண்டிக்க முடியாது. மனதும் அத்தகைய அட்டை போன்றது. அது விரும்புவதைக் கொடாவிட்டால் இன்னும் பன்மடங்கு அது திடமுடையதாகிறது. ஆகையால் அது த்ருடம் என்று இயம்பப்படுகிறது. காற்றைப் போன்று அது கட்டில் அடங்காதது என்று இயம்பப்படுகிறது. நவீன மனிதன் ஒரு விதத்தில் காற்றைப் பிடித்து அடைத்துவைக்கக் கற்றிருக்கிறான். ஆனால் மனதைக் கட்டுவது மாந்தருக்குச் சாத்தியமன்று. இனி, இத்தகைய மனதைக் கிருஷ்ணன் தான் ஒழுங்குபடுத்த வேண்டும். ஏனென்றால் அவன் பெயரே அவனது வல்லமையைக் குறிக்கிறது. கிருஷ் என்பதற்குச் சுரண்டுதல் என்று பொருள். அதைப் பகுதியாகக் கொண்டு பிறந்தது கிருஷ்ணன் என்ற சொல். கிருஷ்ணன் பக்தர்களுடைய பாபத்தைச் சுரண்டிப் போக்க வல்லவன். இதற்குப் பகவானது விடை வருகிறது : ஸ்ரீ பகவாநுவாச 35. அஸம்ஸயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், மஹாபாஹோ-பெருந்தோளாய், அஸம்ஸயம் மந: சலம்-ஐயமின்றி மனம் சலனமுடையதுதான், துர்நிக்ரஹம் து-கட்டுதற்கரியது தான், கௌந்தேய! அப்யாஸேந வைராக்யேண ச-குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும், க்ருஹ்யதே-வசப் படுத்தப் படுகிறது. பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம். அப்பியாசம் என்பது பழக்கம். பழக்கத்தால் தன்னை எப்படி வேண்டுமானாலும் திருத்தியமைத்துக்கொள்ளலாம். அவரவர் பெற்றுள்ள பான்மை பழக்கத்தைப் பொறுத்தது. இடையறாப் பழக்கத்தால் எப்பான்மையை வேண்டுமானாலும் பெறலாம். நாடிய லட்சியத்தினிடத்து அல்லது வழிபடு தெய்வத்தினிடத்து மனதை அடிக்கடி திருப்புவது அப்பியாசமாகும். ஈசுவர தியானத்தை முறையாகச் செய்வது அப்பியாசம். எண்ணம் இறைவனைப் பற்றிய தாகுமளவு மனது வெளி விஷயங்களில் செல்லாது ஒருமுகப்படும். வைராக்கியம் என்பது ராகமின்மை. புலன்களில் பற்றில்லாதிருப்பது வைராக்கியம். மனம் அடங்காது ஓடுதற்குக் காரணம் யாது என்று விசாரித்துப் பார்த்தால் அது எப்பொழுதாவது எதனிடத்தாவது பற்று வைத்திருந்தால் அப்பொருளையே அது நாடியலைகிறது என்பது விளங்கும். இந்திரிய விஷயங்களிலுள்ள கேடுகளை மனதுக்கு ஞாபகமூட்டி அதை அவைகளிடத்திருந்து மீட்டெடுப்பது வைராக்கியமாம். நீந்தக் கற்றுக்கொள்ள விரும்புகிறவன் அதைத் தொடர்ந்து அப்பியசிக்கவேண்டும். ஒரே ஒரு நாள் அப்பியசித்தவுடன் கடலில் நீந்துவதற்கு ஒருவனும் துணியமாட்டான். அது போல பிரம்மமாகிய கடலில் நீந்தப் பிரியப்பட்டால் முதலில் அநேகம் தரம் பயன்படாத பிரயத்தனங்கள் செய்து தீரவேண்டும். அப்போதுதான் அங்கு நீந்தக் கூடிய சக்தி உனக்கு உண்டாகும். விஷமுள்ள ஒருவகைச் சிலந்திப் பூச்சியிருக்கிறது. அதனால் உண்டாகும் கடி எந்த மருந்தினாலும் எளிதில் குணமடைவதில்லை. மஞ்சள் வேரினால் கடியின் மீது குழையடித்த பிறகுதான் எந்த மருந்தும் குணங்கொடுக்க ஆரம்பிக்கும். அதுபோலக் காமமும் காசு ஆசையுமாகிய சிலந்திப்பூச்சி ஒருவனைக் கடித்துவிட்டால் வைராக்கியமென்னும் மனோசக்தி அவனிடம் முதன் முதலில் உதிக்க வேண்டும். அப்பால்தான் அவன் ஆத்ம சாதனத்துக்கு அருகனாவான். யோகத்தை அடைபவர் யார், அடையாதவர் யார் எனின்: 36. அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி: வஸ்யாத்மநா து யததா ஸக்யோऽவாப்துமுபாயத: அஸம்யத ஆத்மநா-தன்னைக் கட்டாதவன், யோக: துஷ்ப்ராப-யோக மெய்துதல் அரிது, து வஸ்ய ஆத்மநா யததா உபாயத:- தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும், அவாப்தும் ஸக்ய:-யோகத்தை அடைவதும் சாத்தியமானது, இதி மே மதி:-என்று நான் கருதுகிறேன். பொருள் : தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன். தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான். சித்த விருத்திகளைத் தடுத்தவன் மனதை அடக்கியவன் ஆகிறான். உபாயத்தால் முயலுதல் என்பது அப்பியாசத்தையும் வைராக்கியத்தையும் முறையாக அனுஷ்டித்தல் என்பதாம். என் குழந்தைகளே, நான் அக்காலங்களில் தியானம் செய்வதற்கு முன்னால் என் மனதிலுள்ள கெட்ட எண்ணங்கள், ஆசைகள் முதலான சகல கல்மஷங்களையும் அலம்பிச் சுத்தப்படுத்தி விட்டதாகப் பாவனை செய்துகொண்டு அதன் பிறகு பகவானை அவ்விடத்தில் எழுந்தருளப் பண்ணுவேன். நீங்களும் அவ்வாறு செய்யுங்கள் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சாதன நாட்களைப்பற்றி சிஷ்யர்களிடம் கூறுவார். யோகத்தைப் பூர்த்திபண்ணாதவனைப் பற்றி இப்பொழுது அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அதாவது : அர்ஜுந உவாச 37. அயதி: ஸ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ: அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஸ்ரத்தயா உபேத:-யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும், அயதி: யோகாத் சலிதமாநஸ:- தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவி, யவன் யோகஸம்ஸித்திம் அப்ராப்ய-யோகத்தில் தோற்றுப் போய், காம் கதிம் கச்சதி க்ருஷ்ண!-என்ன கதியடைகிறான் கண்ணா! பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா? யோகம் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஆனால் மனதில் உறுதியில்லை. அதனால் பூரணத்தை அவன் அடையவில்லை. அப்படி யோகத்தில் தோல்வியடைந்து உயிர் துறப்பவன் கதி என்னவாகும்? 38. கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நஸ்யதி அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி மஹாபாஹோ ப்ரஹ்மண:-பெருந்தோளாய்! பிரம்மத்தை அடைகின்ற, பதி விமூடோ-மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி, அப்ரதிஷ்ட:-உறுதியற்றவனாக, உபய விப்ரஷ்ட-இரண்டுங் கெட்டவனாக, சிந்ந அப்ரம் இவ-உடைந்த மேகம்போல், கச்சித் ந நஸ்யதி-அழிந்து போக மாட்டானா? பொருள் : ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ? பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்? சிதறடைந்த மேகம் மண்ணுலகில் மழையாய்ப் பெய்வதில்லை; விண்ணுலகில் உருத்தெரியாது மறைந்து போகிறது. யோகப்பிரஷ்டன் இகம் பரம் ஆகிய இரண்டினின்றும் வழுவியவன் ஆகிறான். கர்மபலத்தில் பற்று வைக்காமையால் சுகபோகத்தைப் பூவுலகிலும் வானுலகிலும் அவன் அனுபவிப்பதில்லை. பிரம்ம மார்க்கத்தில் மனத்தெளிவு அடையாமையால் அவன் பிரம்மஞானியாகவில்லை. ஆக, புத்தி, முக்தி (போகம், யோகம்) ஆகிய இரண்டையும் இழந்தவன் ஆகிறான். இதைவிடப் பரிதாபகரமான நிலை மனிதனுக்கு யாது உளது? 39. ஏதந்மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஸேஷத: த்வதந்ய: ஸம்ஸயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே க்ருஷ்ண! மே ஏதத் ஸம்ஸயம்-கண்ணா! எனக்குள்ளே இந்த ஐயத்தை, அஸேஷத: சேத்தும் அர்ஹஸி-மீதமின்றி போக்க (நீயே) தகுதியானவன், ஹி அஸ்ய ஸம்ஸயஸ்ய சேத்தா-ஏனெனில் இந்த சந்தேகத்தை போக்குபவர், த்வத் அந்ய: உபபத்யதே-நின்னையன்றி வேறெவருமிலர். பொருள் : கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர். தேவர்கள், ரிஷிகள் ஆகிய மேலோர் யாரும் இச் சந்தேகத்தை நீக்குதலில் உமக்கு நிகராகமாட்டார்கள். ஏனென்றால் நீர் சர்வக்ஞனான ஈசுவரன். யாருக்கு யார் குரு? ஈசுவரன் ஒருவனே ஜகத்குருவும் வழிகாட்டியுமாவான். அவதார புருஷரால் ஆகாத காரியம் ஒன்றுமேயில்லை. ஜீவனையும் ஆத்மாவையும் பற்றிய சூக்ஷ்மமான பிரச்னைகளை யெல்லாம் அவர் வெகு சுலபமாகத் தீர்த்துவிடுகிறார். அவருடைய போதனைகளை ஒரு சிறு குழந்தைகூடத் தெரிந்துகொள்ளும், அவர் கற்பகோடி காலங்களாகச் சேர்ந்துள்ள அக்ஞானத்தை அகற்றும் ஒளியையுடைய திவ்விய ஞானி சூரியன் ஆவார். ஸ்ரீபகவாநுவாச 40. பார்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ்தஸ்ய வித்யதே ந ஹி கல்யாணக்ருத்கஸ்சித்துர்கதிம் தாத கச்சதி ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த-பார்த்தா, தஸ்ய இஹ விநாஸ ந வித்ய,தே-அவனுக்கு இவ்வுலகிலும் அழிவில்லை, அமுத்ர ஏவ ந-மேலுலகத்திலும் இல்லை, தாத-பிரியமானவனே (மகனே!), ஹி கல்யாணக்ருத்-ஏனெனில் ஆன்மீக மேம்பாட்டிற்காக, கஸ்சித் துர்கதிம் ந கச்சதி-எவனும் கெட்ட கதியடைய மாட்டான். பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான். தாத என்றால் தகப்பன். தந்தையே பிள்ளையாகப் பரிணமிப்பதால் பிள்ளையை அப்பா என்று அழைப்பது வழக்கம். தகப்பனுக்குப் பிள்ளை போன்றவன் குருவுக்கு சிஷ்யன். ஆகையால் குரு சிஷ்யனை மைந்தா என்றோ அப்பா என்றோ அழைப்பது முறை. ஈண்டு பகவானது கிருபை சுரப்பதற்கு இச் சொல் சான்றாகிறது. இவ்வுலகம் நலத்தை அடிப்படையாகக் கொண்டதா, அல்லது கேட்டை அடிப்படையாகக் கொண்டதா என்று யார் வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம். கடவுளே இவ்வுலகம் அனைத்தும் ஆனார். கடவுளே நலமுடையான், கேடு இலான். நலத்தினின்று வருவது நலம். இவ்வுலகில் நன்மை செய்வோன் எவனும் கேடு அடைவதே யில்லையென்பது பகவானுடைய உறுதிமொழி. பாண்டவர் உட்பட எல்லா பக்தர்களது வாழ்க்கையே இக்கோட்பாட்டுக்குச் சான்றாகும். யோகத்தில் வழுவிய ஒருவன் தான் அதுபரியந்தம் அடைந்த நிலையைவிடக் கீழான நிலைக்கு எவ்வுலகிலும் போவதில்லை. அது எப்படி யென்று பகவான் மேலும் விளக்குகிறார். ஒரு மனிதனுடைய எண்ணத்துக்கும் நோக்கத்துக்கும் தக்கபடி அவனுக்குச் சன்மானம் கிடைக்கிறது. ஈசுவரன் பக்தர்கள் விரும்புவனவற்றை யெல்லாம் கொடுக்கும் கற்பக விருக்ஷம் போன்றவன். 41. ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீ: ஸமா: ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோऽபிஜாயதே யோகப்ரஷ்ட:-யோகத்தில் தவறியவன், புண்யக்ருதாம் லோகாந் ப்ராப்ய-புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, ஸாஸ்வதீ: ஸமா: ஊஷித்வா-அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே-தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் அபிஜாயதே-பிறக்கிறான். பொருள் : யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான். போகமும் யோகமும் ஒன்றோடொன்று பொருந்தாது. போகத்தில் ஆசை கொண்டவன் யோகத்திலிருந்து தவறியவன் ஆகிறான். தான் விரும்பின சுகபோகங்களை அவன் சுவர்க்கத்துக்குச் சென்று நெடுங்காலம் அனுபவிக்கிறான். இப்பூலோகத்தில் பிறக்கும்பொழுதும் ஆக்கம் நிறைந்த வாழ்க்கைக்கு ஏற்ற செல்வர்கள் வீட்டில் பிறக்கிறான். செல்வமுடையவர்களுள் தூய வாழ்க்கை வாழ்பவர் மிகச் சிலர். அத்தகைய நல்லொழுக்கமுடைய ஐசுவரியவான்கள் வீட்டிலேயே யோகப்ரஷ்டன் பிறக்கிறான். ஏனென்றால் யோகியின் இயல்பு எப்பொழுதும் தூயதானது. ஒவ்வொரு ஜீவனும் அதனதன் தன்மைக்கும் வினைக்கும் ஏற்ற இடத்தில் பிறப்பெடுப்பது இயல்பு. மற்றொரு பாங்குடைய யோகப்ரஷ்டன் இருக்கிறான். இனி, அவன் வரலாறு விளக்கப்படுகிறது. 42. அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம் ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஸம் அதவா தீமதாம் யோகிநாம்-அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின், குலே ஏவ பவதி-குலத்திலேயே பிறக்கிறான், ஈத்ருஸம் யத் எதத் ஜன்ம-இதுபோன்ற பிறவியெய்துதல் ஹி லோகே துர்லபதரம்-ஐயமின்றி மிகவும் அரிது. பொருள் : அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது. முற்பிறப்பில் யோகம் நிறைவேறப்பெறாத ஒருவன் அதை நிறைவேற்றிக்கொள்ளுதற்காகப் பொருள் உடையார் வீட்டில் பிறப்பதைவிட அருள் உடையார் வீட்டில் பிறப்பது சாலச் சிறந்தது. அதற்குக் காரணம் மேலும் விளக்கப்படுகிறது. 43. தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம் யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தந தத்ர தம் பௌர்வதேஹிகம்-அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய, புத்திஸம்யோகம்-புத்தியைப் பெறுகிறான், குருநந்தந-குருநந்தனா, தத: பூய: ஸம்ஸித்தௌ-அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு, யததே-முயற்சி செய்கிறான். பொருள் : அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான். பொருளானது மனிதனைப் போகத்தில் ஈடுபடுத்தி யோகத்தைத் தற்காலிகமாக மறைத்து வைத்துவிடுகிறது. ஆசைகள் நிறைவேறியபின் யோகத்தைப் பற்றிய ஞாபகம் வருகிறது. அதைவிட மேலானது பிறந்தது முதல் தனியாக யோகத்திலே முயலுதல். முற்பிறப்பில் செய்த சாதனங்கள் சம்ஸ்காரமாக மனதில் புதைந்து மறைந்து கிடக்கின்றன. யோகிகள் குலத்தில் பிறந்து அவர்கள் செய்யும் சாதனங்களைப் பார்க்கும்போது பால யோகிக்குத் தன் பூர்வ ஜன்ம சாதனங்கள், பழைய பாடம் ஞாபகத்துக்கு வருவது போன்று மனதில் உதிக்கும். இடம், பொருள், ஏவல் இவைகளின் சகாயத்தால் முற்பிறப்பில் செய்த சாதனங்களைவிட இன்னும் தீவிரமாக அவன் இப்பிறப்பில் செய்கிறான். மீன் நீரை நாடுவது போன்று அவன் முக்தியை நாடுவது இயல்பாகிறது. சுவாமி விவேகானந்தரும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் யோகாரூடர்கள். பிறவியிலிருந்தே பரிபூரணத் தன்மை அவர்களிடம் பொலிந்துகொண்டிருந்தது. அவர்களுடைய வாழ்க்கையே வேதாந்தத்துக்கு விளக்கமாகும். சுவாமி விவேகானந்தர் செல்வம் நிறைந்த நல்லோர்க்குப் பிள்ளையாகப் பிறந்து பூவுலக சம்பத்துக்களில் வாழ்ந்திருந்து யோகத்துக்கு வருகிறார். ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சரோ யோகியர் குலத்தில் பிறந்து மேலும் யோக சாதனத்தில் ஈடுபடுகிறார். கீதா சாஸ்திரப் பிரகாரம் இருவர் பிறப்புகளும் மேலானவை. ஆனால் சுவாமி விவேகானந்தர் பிறப்பைவிட ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறப்பு பெறுவதற்கு அரிதாம். 44. பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஸோऽபி ஸ: ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஸப்தப்ரஹ்மாதிவர்ததே ஸ: அவஸ:-அவன் தன் வசமின்றியும், தேந பூர்வாப்யாஸேந ஏவ ஹ்ரியதே-பண்டைப் பழக்கத்தால் இழுக்கப்படுகிறான், யோகஸ்ய ஜிஜ்ஞாஸு அபி-யோகத்தை அறிய வேண்டுமென்று விரும்பவன் கூட, ஸப்த ப்ரஹ்ம-ஒருவன் ஒலியுலகத்தைக் (வேதத்தையும்) கடந்து, அதிவர்ததே-செல்லுகிறான். பொருள் : பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான். திரள் திரளாக ஜனங்கள் தேவாலயத்துக்குள் நுழையும் போது அக்கூட்டத்தில் கலந்துகொள்பவன் சுயப்பிரயத்தனமின்றி ஆலயத்துக்குள் இழுத்துச் செல்லப்படுவான். அங்ஙனம் முற்பிறப்பில் செய்த யோகாப்பியாசம் வலிவுடைய சம்ஸ்காரங்களாக மனதில் புதைத்திருந்து இப்பிறப்பில் யோகப்ரஷ்டனைப் பரிபூரண நிலையின்கண் இழுத்துச் செல்கிறது. புதிதாகச் செய்த அதர்மம் சிறிதுகாலத்துக்கு அவனது சாதனத்தைத் தடைப்படுத்தினும், அதர்மத்தின் வலிவு குறைந்தவுடன் யோக சாதன சம்ஸ்காரம் அவனைச் சமாதி நிலைக்குக் கொண்டு சேர்க்கும். இரண்டு போர்வீரர்கள் எதிரியின் கையில் அகப்பட்டுக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் தன் தாய்நாட்டை மறந்து விட்டு அடிமையாய் எதிரிகளுக்குக் குற்றேவல் செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருக்கிறான். மற்றவன் எதிரிகளை விட்டுத் தப்பித்துக்கொண்டு தன் தேசம் போவது எப்படி என்று எண்ணிப் பார்க்கிறான். அங்ஙனம் எண்ணுபவன் அடிமையைவிட மேலானவன். இனி முயற்சி பண்ணுபவன் அவனிலும் மேலானவன். வேதம் ஓதுபவர், வேதம் புகட்டுகிற கர்மகாண்டத்தில் ஈடுபடுபவர் முக்குணமயமான இயற்கைக்கு அடிமைகளாய் முடிவில்லாத பிறவிப் பிணியில் வருந்துபவர். அவர்களைவிட மேலோர் யோக ஜிக்ஞாசு அல்லது யோக ஆராய்ச்சி செய்பவர். ஏனென்றால் இவர்களுக்கு விரைவில் விமோசனம் கிடைக்கும். யோகத்தில் பன்முறை முயன்று தவறிப்போன யோகப்ரஷ்டர்கள் யோக ஜிக்ஞாசுகளிலும் மேலோர். ஏனென்றால் முயற்சியுடைய இவர்கள் இன்னும் விரைவில் யோகாரூடர்கள் அல்லது முக்தர்கள் நிலையை அடைவார்கள். கர்ம காண்டத்தில் உழல்பவனைவிட யோக சாதனம் செய்பவனது வாழ்க்கை எவ்விதத்தில் சிறந்தது? விடை வருகிறது : 45. ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஸுத்தகில்பிஷ: அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம் ஸம்ஸுத்த கில்பிஷ:-பாவம் நீங்கியவனாய், து ப்ரயத்நாத் யதமாந-முழு முயற்சியுடன் பயிற்சி செய்யும், யோகீ அநேகஜந்ம ஸம்ஸித்த:-யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய தத: பராம் கதிம் யாதி-அக்கணமே பரகதியை அடைகிறான். பொருள் : பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான். கல்வியும் செல்வமும் இரண்டொரு நாளில் சேகரிக்கப்படுபவைகளல்ல. அவைகளின் பொருட்டு இடையறாத முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும். கல்வி கற்கும்பொழுதே ஒருவன் கற்றவனாகக் கருதப்படுகிறான். செல்வம் சேர்ந்துகொண்டிருக்கும்போதும் ஒருவன் தனவான் எனப்படுகிறான். யோகம் தருகிற மோக்ஷமோ ஒப்பற்றது; நித்தியமானது. இனி, அதன் பொருட்டு அநேக ஜன்மங்களில் முயலவேண்டும் என்றால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அங்ஙனம் முயலுகிற மனிதன் யோகி எனப்படுகிறான். இப்படி யோகி தன்னை நெடிது பண்படுத்தி முக்தியடைகிறான். புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி நிற்கக் கற்றுக் கொள்ளுவதற்கு முன்னால், தட்டித் தள்ளாடிப் பல தடவை கீழே விழுகின்றது. அதுபோல சாதன மார்க்கத்தில் கடைசியாக ஜயம் பெறுவதற்கு முன்னால் அனேகம் தோல்விகள் நேரிடும். அப்படியானால் பெருநிலையடைதற்கு யோகத்தைப் புறக்கணித்துவிட்டு வேறு ஏதாவது உபாயத்தைக் கையாளலாகாதா? விடை வருகிறது : 46. தபஸ்விப்யோऽதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோऽபி மதோऽதிக: கர்மிப்யஸ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந யோகீ தபஸ்விப்ய: அதிக:- யோகி தவஞ் செய்வோரைக் காட்டிலும் சிறந்தோன், ஜ்ஞாநிப்ய: அபி அதிக: மத:-ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருதப்படுகிறான், ச கர்மிப்ய: யோகீ அதிக:-கர்மிகளிலும் அவன் சிறந்தோன், தஸ்மாத் யோகீ பவ அர்ஜுந!-ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக. பொருள் : தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக. வெறும் சாஸ்திர ஞானம் உடைத்திருப்பவனைவிட அதில் பகர்ந்துள்ளபடி யோகம் பயிலுவதனால் யோகி சிறந்தவனாகிறான். காமிய தபசு, காமிய கருமம் இவைகளை நெடுநாளாக வருந்திச் செய்து, இம்மையிலும் மறுமையிலும் மாந்தர் சுகபோகம் பெற முயலுகின்றார்கள். சாந்திராயணம் முதலிய தபசு புரிகின்றவர்களும், அக்னிஹோத்திரம் முதலிய கர்மம் செய்கிறவர்களும் அதற்குச் சான்றாவார்கள். அவர்கள் அப்படி வருந்தியடையும் சுவர்க்கப் பதவியும் பூலோகப் பதவியும் யோகப்ரஷ்டனுக்குத் தற்செயலாய் வந்தமைகின்றன. அதற்குக் காரணமுண்டு. நிராசையில் நிலைத்திருப்பவன் யோகி. ஆசையில்லாத மனதுக்குப் பேராற்றல் தானே உண்டாகிறது. பேராற்றல் படைத்துவரும் அவனுக்கு இன்னும் பரிபூரணம் அடையும்முன் ஆசை இடையில் தோன்றுமாகில் அவன் யோகப்ரஷ்டன் ஆகின்றான். சுத்தியடைந்த அவனது சித்தத்தில் உதிக்கும் இச்சை உடனே நிறைவேறப்பெறுகிறது. யோக சாதனத்தால் மனது எவ்வளவுக் கெவ்வளவு தூயதாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதில் உதிக்கும் ஆசையானது விரைவில் நிறைவேறுவதாகிறது. இது வாழ்க்கை சம்பந்தமான ஒரு பேருண்மையாகும். ஆகையால் தான் புண்ணிய கர்மம் செய்பவர்கள் அடையும் லோகமாகிய சுவர்க்கமும் பூலோகத்தில் பெருவாழ்வும் யோகிக்கு விளையாட்டாக வந்தமைகின்றன. இனி யோகாரூடனுக்கு ஒப்பற்ற பிரம்ம ஞானம் உண்டாகிறது. யோகப்ரஷ்டனுக்கோ இகபரமிரண்டிலும் பெரும் பதவியும் யோகமும் எளிதில் கிட்டுகின்றன. ராஜகுமாரன் ஒருவன் அரசனாகாவிட்டாலும் மற்ற உத்தி யோகத்தை நாடுபவர்களையெல்லாம்விட மேலானவன். அதே பாங்கில் யோகப்ரஷ்டனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பெரும் பேறு கிட்டுகிறது. ஆக, யோகத்தில் முயலுதல் ஒன்றே வாழ்க்கையின் பெரும் லட்சியமாகிறது. சாஸ்திர ஞானத்தால் மட்டும் என்ன பயன்? பண்டிதர்களுக்கு கிரந்தங்களிலும் சுலோகங்களிலும் நல்ல பரிச்சயமிருக்கலாம். ஆனால் அவைகளைத் திருப்பித் திருப்பிச் சொல்வதில் பிரயோஜனமென்ன? கிரந்தங்களில் சொல்லியவற்றையெல்லாம் அனுபவத்துக்குக் கொண்டுவரவேண்டும். ஒருவனுக்கு உலகப் பற்றுள்ள வரையில் அதாவது காமமும் காசாசையும் இருக்கும் வரையில், கேவலம் படிப்பு மட்டும் ஞானத்தையாவது மோக்ஷத்தையாவது தராது. லௌகிகன் ஒருவன் ஒரு ஞானியைப் போலவே மேலான அறிவையும் புத்தி வன்மையையும் பெற்றிருக்கலாம். அவன் ஒரு யோகியைப் போல சாதனத்தில் மிகவும் சிரமப்படலாம்; அல்லது சந்யாசியைப் போல எளிய வாழ்க்கை வாழக்கூடியவனாயும் இருக்கலாம். என்றாலும் அவனுடைய முயற்சிகளெல்லாம் பயனற்றவையே. ஏனெனில் அவனுடைய சக்திகள் வேறு மார்க்கத்தில் செலுத்தப்படுகின்றன. மேற்கூறியவைகளை யெல்லாம் அவன் ஈசுவரனுக்காக அல்லாமல், கௌரவம், அந்தஸ்து, செல்வம் இவைகளைப் பெறுவதற்காகவே செய்கிறான். இனி யோகிகளுள் சிறந்தவன் யார் எனின் அதற்கு விடை வருகிறது : 47. யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத: ய: ஸ்ரத்தாவாந்-எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ, மத்கதேந அந்ராத்மநா -என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால், மாம் பஜதே-என்னை போற்றுகிறானோ, ஸ: மே யுக்ததம மத:-அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை. பொருள் : மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை. தியான யோகிகள் எல்லாரும் மேலோரே. அவர்கள் எதைத் தியானிக்கிறார்களோ அதுவாகிறார்கள். சுத்தியடைந்து ஒருமுகப்பட்ட மனது தியானிக்கப்பட்ட லட்சியத்தை விரைவில் அடைகிறது. கீழான லட்சியங்களைத் தியானிக்கின்ற யோகிகளை விட மனதை முற்றும் சர்வேசுவரன்பால் செலுத்தி அவனையே சிரத்தையுடன் தியானிக்கின்ற யோகிகள் மிக மேலானவர்கள். ஏனென்றால் அத்தகைய தியானத்தால் அவர்கள் சர்வேசுவரனையே அடைகிறார்கள். அதற்குமேல் அவர்களால் அடையப்படுவது ஒன்றுமில்லை. நித்தியமாயுள்ள ஞானத்தையும் ஆனந்தத்தையும் பற்றித் தியானம் செய். அப்போது உனக்கு ஆனந்தம் உண்டாகும். ஆனந்தமோ எப்பொழுதும் சாசுவதமானது; ஆனால் அக்ஞானத்தினால் அது மூடுபட்டு மறைந்துள்ளது. விஷய சுகங்களில் உனது ஆசை குறையுமளவு ஈசுவரனிடம் உனக்குப் பிரேமை அதிகமாகும். இதுவரையில் ஆறு அத்தியாயங்களில் ஜீவதத்துவம் விளக்கப்பெற்றது. ஜீவன் எவ்வளவு மேலோன் ஆகக்கூடும் என்பதும் காட்டப்பட்டது. மேன்மையுற்ற ஜீவன் பரமாத்மாவிடம் பக்தி பண்ணுதற்கு நிகரான செயல் வேறொன்றுமில்லை. இனி வரும் ஆறு அத்தியாயங்களில் பரமாத்ம சொரூபம் விளக்கப்பெறுகிறது. பக்தியும் படிப்படியாக வளர்க்கப்படுகிறது. ஆறாவது அத்தியாயத்தின் கடைசி சுலோகமாகிய இது கடந்த ஆறு அத்தியாயங்களில் உள்ள விஷயத்துக்கும், வரப்போகும் ஆறு அத்தியாயங்களில் உள்ள விஷயத்துக்கும் இணைப்பை உண்டுபண்ணுகிறது. இளைஞன் வாலிபன் ஆவது போன்று ஒரு யோகம் மற்றொன்றாகப் பரிணமிப்பதும் இதில் அடங்கியுள்ளது. கர்மயோகம் தியானயோகமாக வடிவெடுத்தது. இனி அது பக்தியோமாக மாறப்போகிறது. இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே த்யானயோகோ நாம ஷஷ்டோऽத்யாய: பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ஸந்யாஸ யோகம் என்ற ஆறாம் அத்தியாயம். | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
ஏழாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஞானவிக்ஞான யோகம்அக்டோபர் 12,2011
பக்தி யோகத்திற்கு இலக்கான இறைவனுடைய சொரூபம், சுபாவம், மேன்மை முதலியன இந்த அத்தியாயத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. மனிதன், இவைகளை அறிய வொட்டாமல் பிரகிருதி சம்பந்தம் ... மேலும்
|
ஏழாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ஞானவிக்ஞான யோகம்
அந்த நிலையைப் பெறுவதற்கு வெகு பிறப்புகள் எடுத்தாக வேண்டும். இறைவனைத் தவிர்த்து மற்ற தெய்வங்களைத் தொழுபவர்களும் உண்மையில் இறைவனளிக்கும் பயனையேதான் பெறுகின்றனர். ஆனால், அவ்விதமான பயன்கள் அழிவுற்றிருக்கும். இறைவனையே வணங்குபவர்கள் இறைவனையே யடைந்து அழிவிலா ஆனந்தத்தைப் பெறுகின்றனர். ஈசனும் அவருடைய சேதன அசேதன பிரகிருதிகளும் 1-7 -பூதங்களின் தன்மாத்திரைகளாயிருப்பவர் ஈசன் 8-9 -உயிர்களின் சிறப்புகள் ஈசனிடத்திருந்து வந்தவை 9-12 -முக்குண மயமான மாயை 13-15 -நான்குவித நல்லார்கள் 16-19 -சிறு தேவதைகளிடம் காமிய உபாஸனை 20-23 - பகவானது பாங்கு 24-26 -அறிவிலிகளும் அறிஞரும் 27-30. ஸ்ரீ பகவாநுவாச 1. மய்யாஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந்மதாஸ்ரய: அஸம்ஸயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு ஸ்ரீபகவாநுவாச, பார்த-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த்தா, மயி ஆஸக்தமநா:-என்பால் இசைந்த மனத்தினனாய், மத் ஆஸ்ரய:-என்னைச் சார்ந்து, யோகம் யுஞ்ஜந்-யோகத்திலே அமர்ந்தவனாய், ஸமக்ரம் மாம்-எல்லா ஐஸ்வர்யங்களும், விபூதிகள் பொருந்திய என்னை, யதா அஸம்ஸயம் ஜ்ஞாஸ்யஸி தத் ஸ்ருணு-எந்தவித ஐயமும் இன்றி உணருமாறு (சொல்கிறேன்), அதை கேள்! பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னைச் சார்ந்து, யோகத்திலே அமர்ந்தவனாய் என்னை முழுதும் உணருமாறு சொல்லக் கேளாய். மத் ஆச்ரய: என்பது கர்மபலன் கீர்த்தி முதலியவைகளில் பற்று வைக்காது இறைவனையே நாடியிருத்தல் எனப் பொருள்படுகிறது. ஸமக்ரம் என்றால் விபூதி, பலம், சக்தி, ஐசுவரியம் ஆகிய குணசம்பன்னனாயிருக்கிற ஈசுவரன் என்பதாகிறது. ஒரு அரசாங்கத்தின் அமைப்பு முழுவதையும் தெரிந்து கொள்ளுகிற அளவு நாம் அதைப் பாராட்டுகிறோம். அங்ஙனம் அறிவுக்கு எட்டுகிற அளவு இறைவனை நாம் தெரிந்துகொண்டால் அவன்பால் பக்தி நமக்கு அதிகரிக்கிறது. 2. ஜ்ஞாநம் தேऽஹம் ஸவிஜ்ஞாநமிதம் வக்ஷ்யாம்யஸேஷத: யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோऽந்யஜ்ஜ்ஞாதவ்யமவஸிஷ்யதே யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்தால், இஹ பூய: ஜ்ஞாதவ்யம்-இவ்வுலகில் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய, அந்யத் ந அவஸிஷ்யதே-வேறு ஒன்றும் மீதம் இருக்காதோ, ஸவிஜ்ஞாநம் இதம் ஜ்ஞாநம்-விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை, அஸேஷத: அஹம் தே வக்ஷ்யாமி-முழுமையாக நான் உனக்கு சொல்வேன். பொருள் : ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது மிச்சமொன்றுமில்லை. ஞானம் என்பது சிந்தனைக்குரிய அறிவு; விக்ஞானமோ அனுஷ்டானத்துக்கு உரிய அறிவு. ஞானம் விக்ஞானமாக மாற வேண்டும். சுவானுபவத்தில் பிரம்ம சாக்ஷõத்காரம் பண்ணினவனுக்கு, அதாவது அபரோக்ஷ அனுபூதியைப் பெற்றவனுக்கு வாழ்க்கையின் தத்துவம் முழுதும் விளங்கிவிடுகிறது. அவன் மேலும் கற்றுக்கொள்ளவேண்டியது ஒன்றுமில்லை. 3. மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்யததி ஸித்தயே யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்த்வத: ஸஹஸ்ரேஷு மநுஷ்யாணாம்-பல்லாயிர மனிதரில், கஸ்சித் ஸித்தயே யததி-ஒருவன் சித்திபெற முயல்கிறான், யததாம் ஸித்தாநாம் அபி-(அவ்விதம்) முயற்சி செய்கிற யோகிகளிலும் கூட, கஸ்சித் மாம் தத்த்வத: வேத்தி-யாரோ ஒருவன் தான் என்னை உள்ளபடி அறிகிறான். பொருள் : பல்லாயிர மனிதரில் ஒருவன் சித்திபெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான். சித்தி என்னும் பதம் பேறு அடைதல், வெற்றி, இலக்கையடித்தல், நோயைப் போக்குதல், நிலைநாட்டுதல், சித்தாந்தப்படுத்துதல், அன்னம் முதலியன சமைத்தல், முதிர்தல், தகுதியுடையதாக்குதல், பேரின்பம், பரிபாகம், முக்தி, மனதின் அஷ்ட சித்தி அல்லது எட்டுவித வலிவுகள்-ஆக இத்தனை விதங்களாகப் பொருள்படுகிறது. இங்கு இச்சொல் நல்வினையின் காரியமாக, ஞானத்துக்காக மனது அடையும் பரிபாகத்தைக் குறிக்கிறது. ஞானத்தைப் பெறுதல் மிக அரிது என்பது இதன் கருத்து. மரம் ஒன்றில் ஆயிரக்கணக்கான விதைகள் உண்டாகின்றன. அவைகளில் பெரும்பகுதி வேறு உயிர்களுக்கு உணவுப் பொருள்களாய்ப் போய்விடுகின்றன. விதைக்கப்பட்டவைகளுள் தரிசு நிலத்திலோ, பாறையிலோ வீழ்ந்தவைகள் சரியாக முளைத்து வளர்வதில்லை. நல்ல விருக்ஷமாவது ஒன்றிரண்டே. பெறுதற்கரிய மானுடப் பிறவி ஈசுவர லாபத்துக்கென்று அமைந்தது ஆயினும், அதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று அறிந்துகொள்பவரோ மிகச் சிலர். பின்பு அனுகூலமான சூழ்நிலை, முறையான முயற்சி ஆகியவைகள் வாயிலாகக் கடைத்தேறுவாரைக் காண்பது அரிதலும் அரிது. லட்சியம் எவ்வளவுக்கெவ்வளவு பெரியதோ அதை அடைதல் அவ்வளவுக்கவ்வளவு துர்லபம். காசியில் மாதா அன்னபூரணியின் கோயிலுக்குள் நுழைந்தவர்கள் பிரசாதம் பெறாது வெளியில் வரமுடியாது. சிலருக்கு உடனே பிரசாதம் கிடைக்கிறது. சிலர் காத்திருந்து பெறுகின்றனர். நெடுநேரம் காத்திருந்து பெறுபவர்களும் உண்டு. ஆனால் யாருக்காவது பிரசாதம் இல்லை என்பது கிடையாது. அங்ஙனம் பிறப்பெடுப்பவர்கள் எல்லார்க்கும் முக்தியுண்டு. சிலர் இப்பிறப்பிலேயே முக்தியடைகின்றனர். சிலர் இன்னும் இரண்டு மூன்று பிறவிகளில் எடுத்த பின்பு முக்திக்குரியவர் ஆகின்றனர். ஆனால் எல்லார்க்கும் முன்னது பின்னது ஆக முக்தியுண்டு. ஈசனை உள்ளபடி அறிதற்கு அவனுடைய ஸ்தூல சொரூபத்தை முதலில் அறிய முயலுதல் நன்று. அதைப்பற்றிய விளக்கம் வருகிறது : 4. பூமிராபோऽநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா பூமி: ஆப: அநல: வாயு: கம்-மண், நீர், தீ, காற்று, ஆகாயம் மந: புத்தி அஹங்காரம் ச ஏவ-மனம், மதி, அகங்காரமும் மே இயம் ப்ரக்ருதி-என் இந்த இயற்கை இதி அஷ்டதா பிந்நா-இவ்வாறு எட்டு விதமாக பிரிந்து தோன்றுகிறது மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது. மூலவஸ்துக்களைப் பாகுபடுத்துதலில் நவீன ரசாயன சாஸ்திரத்துக்கும் இந்திய தத்துவ தர்சனத்துக்கும் ஒரு வேற்றுமையுண்டு. ரசாயன சாஸ்திரப் பிரகாரம் எப்பொருளை அதனினும் வேறான ஒரு பொருளாகப் பிரிக்க முடியாதோ அது மூலவஸ்து (எலிமென்ட்) நீர் மூலவஸ்து அன்று; அது ஒரு கூட்டுப் பொருளாய் இருக்கிறது. ஜலவாயுவும் பிராணவாயுவும் சேர்ந்து நீர் ஆகிறது. ஆனால் ஜலவாயு ஒரு முதற்பொருள்; பிராணவாயுவும் ஒரு முதற்பொருள் அல்லது மூலவஸ்து. வேறு எதினின்றும் இவைகள் ஆனவைகள் அல்ல. அப்படித் தொண்ணாறுக்குக் குறையாமல் மூலவஸ்துக்கள் இருக்கின்றன. அவைகளின் கூட்டாக உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் ஆயிருக்கின்றன. ரசாயன சாஸ்திரப்படி மண்-கூட்டுப்பொருள்; நீர்-கூட்டுப்பொருள்; தீ-பொருள் அல்ல, ஆனால் சக்தி (நாட் மேட்டர் பட் எனர்ஜி); காற்று-கூட்டுப்பொருள்; வானம்-எங்கும் எதிலும் வியாபித்து உள்ள மூலவஸ்து (எதர்). இந்திய தத்துவ தர்சனத்தின்படி பொறி ஐந்தின் வாயிலாக உலகப் பொருள்படுத்தப்படுகிறது. பஞ்சேந்திரியங்களாலன்றி ஜகத் புலனாகாது. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்(று) ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு. காது கேட்கிறது. ஓசைக்கு ஏதுவாயிருப்பது ஆகாசம் (வானம்). தேகம் ஸ்பர்சிக்கிறது. ஊறுதற்கு ஏதுவாயிருப்பது வாயு (காற்று). கண் வடிவத்தைப் பார்க்கிறது. ஒளிக்கு ஏதுவாயிருப்பது அக்னி (தீ அல்லது தேஜஸ்). நா சுவைக்கிறது. சுவை அல்லது ரஸத்துக்கு மூலகாரணம் அப்பு (நீர்). மூக்கு நாற்றத்தை முகர்கிறது. கந்தத்துக்குக் காரணம் பிருத்வி (மண்). ஆக, உலகாக அறிதற்கு மூலவஸ்துக்கள் (எலிமென்ட்ஸ்) பூதங்கள் ஐந்தாம். இவ்வைந்து பூதங்களும் சூக்ஷ்மம், ஸ்தூலம் என்று இரண்டு நிலைகளில் இருக்கின்றன. சூக்ஷ்ம பூதங்கள் ஸ்தூல பூதங்களாக வடிவெடுப்பதற்கு ஒரு கணக்குக் கிரமம் இருக்கிறது. சூக்ஷ்ம பூதம் ஒவ்வொன்றும் இரண்டு சமபாகங்களாகப் பிரிகிறது. ஒரு பாதி தன்னுடைய ஸ்தூல அமைப்புக்கு நின்று விடுகிறது. மற்ற பாதி நான்கு அரைக்கால் ஆகி, ஏனைய நான்கு பூதங்களுக்குச் சமனாகப் பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது. இங்ஙனம் சூக்ஷ்ம பூதங்கள் ஐந்தும் ஸ்தூல பூதங்களாக மாறுதற்குப் பஞ்சீகரணம் என்று பெயர். உணரும் தன்மை மனதுக்குண்டு. நல்லது கெட்டது என்று புத்தி பாகுபடுத்துகிறது. தன்னைக் கர்த்தாவென்று கருதுவது அஹங்காரம். அஹங்காரம் இல்லாது கர்மம் ஒன்றும் நடைபெறாது. மண்ணுக்குள் மண்ணோடு மண்ணாக விதையானது புதைந்து கிடப்பது போன்று வாசனை சொரூபமாக அஹங்காரம் முதலிய அந்தக்கரணங்கள் மூலப்பிரகிருதியில் புதைந்திருக்கின்றன. தக்க வேளையில் எண்ணமாகவும் செயலாகவும் வடிவெடுக்க வல்ல இயல்புக்கு வாசனையென்று பெயர். இந்த எட்டுவிதப் பிரகிருதியையே இருபத்து நான்கு தத்துவங்களாக விரித்துச் சொல்வது வழக்கத்தில் உண்டு. 5. அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் மஹாபாஹோ!-பெருந்தோளாய்! அபரா-இது என் (அபரா என்னும்) கீழியற்கை, இத: அந்யாம்-இதனின்றும் வேறுபட்டதாகிய, யயா இதம் ஜகத் தார்யதே-எந்தப் பிரக்ருதியினால் இந்த உலகம் முழுவதும் தாங்கப் படுகிறதோ, மே ஜீவபூதாம் பராம் ப்ரக்ருதிம்-எனது உயிர் வடிவான (பரா என்னும்) மேலியற்கையை, வித்தி-தெரிந்து கொள். பொருள் : இது என் கீழியற்கை. இதனின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி; அதுவே உயிராவது; பெருந்தோளாய், அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது. பஞ்ச பூதங்களும் அந்தக்கரணங்களும் சேர்ந்து உரு ஆயிருப்பது கீழான பிரகிருதி. ஜீவபோதம் பெற்றிருப்பது மேலான பிரகிருதி. ஓர் உபமானத்தைக்கொண்டு இதை அறியலாம். தீ எரிகிறது; அதிலிருந்து புகை வருகிறது. புகை தீயின் கீழான பிரகிருதி. பொறி பறக்கிறது. பொறியோ தீயின் மேலாம் பிரகிருதி. தீயின் சொரூபம் பொறியில் இருக்கிறது. தீயின் செயல் புகையில் தோன்றுகிறது. புகையானது தீயினுடைய தடஸ்த லக்ஷணம். பொறி அதனுடைய சொரூப லக்ஷணம். பொறியை அறிவது தீயை அறிவதற்குச் சமானம். சுத்த சைதன்யமாகிய பரமாத்மாவின் இயல்பு சித் ஆபாசனாகிய ஜீவனிடத்து ஏகதேசம் இருக்கிறது. இனி, தீப்பொறியானது தீயை விட்டுச் சற்றுப் பிரிந்திருக்கிறது. ஜீவனோ பரமாத்மாவை விட்டுப் பிரியவில்லை. கடலில் அலைபோன்று பரமாத்மாவிலேயே அது ஓர் உபாதியுடன் கூடியிருக்கிறது. ஜீவப்பிரகிருதி அல்லது ÷க்ஷத்ரக்ஞன் ஜடப்பிரகிருதியைத் தனது உடலாக அமைத்துக்கொண்டு அதைத் தாங்கியுள்ளது. ஆகாசம் என்ற பூதம் எங்ஙனம் மற்ற நான்கு பூதங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறதோ அங்ஙனம் ஜீவ ஆத்ம சைதன்யம் ஜடப் பிரகிருதிக்கு இருப்பிடமாயிருக்கிறது. 6. ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா ஸர்வாணி பூதாநி-எல்லா உயிர்களும், ஏதத் யோநீநி-இந்த இரண்டு பிரக்ருதிகளிலிருந்து உண்டானவை (என்றும்), அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ:-நானே முழுமையாக உலகிற்கும் உற்பத்தியாகும் இடம், ததா ப்ரலய-அவ்வாறே ஒடுங்குகின்ற (அழிவு) இடம் இதி உபதாரய-என்று உணர்ந்து கொள். பொருள் : எல்லா உயிர்களுக்கும் அது காரண மென்றுணர். அதனால், நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன். உடலும் உயிரும் சேர்ந்து வாழ்வாகப் பரிணமிக்கிறது. உயிரற்ற உடல் பிரேதமாய்விடும். உடலற்ற உயிர் செயல் புரியச் சக்தியற்றதாய்விடும். உயிரும் மெய்யும் (÷க்ஷத்ரக்ஞனும் ÷க்ஷத்ரமும்) சேர்ந்தால் ஜீவிதம் சாத்தியமாகிறது. தோற்றத்துக்கு வந்துள்ள உலகெங்கும் இவ்விரண்டு பிரகிருதிகளுடைய கூட்டுறவைக் காண்கிறோம். மேகமானது ஆகாசத்தில் தோன்றி, ஆகாசத்தில் நிலைத்திருந்து, பிறகு ஆகாசத்திலேயே ஒடுங்குகிறது. அங்ஙனம் ஈசுவரன் ஜகத்துக்கும் ஜீவர்களுக்கும் பிறப்பிடமாகிறான். அவைகள் ஒடுங்குவதும் அவனிடத்தேயாம். மாயையைக் காணவேண்டுமென்ற அபிப்பிராயங்கொண்ட நான், ஒருநாள் ஒரு காட்சியைக் கண்டேன். ஒரு சிறிய நீர்த்துளி கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணமிப்பது ஒரு சிறு பெண்ணாயிற்று. அப்பெண் ஒரு ஸ்திரீயாகி ஒரு குழந்தையைப் பெற்றாள். பெற்றதும் அவள் அக்குழந்தையை எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டாள்; இவ்விதம், அவளுக்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் அவள் விழுங்கினாள். அப்போது அவள் மாயை யென்பதை நானறிந்தேன். 7. மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ தநஞ்ஜய-தனஞ்ஜயா, மத்த: அந்யத் கிஞ்சித்-என்னைக் காட்டிலும் வேறு ஒன்றும், பரதரம் ந அஸ்தி-உயர்ந்த பொருள் இல்லை, இதம் ஸர்வம்-இவ்வையகமெல்லாம், ஸூத்ரே மணிகணா இவ-நூலில் மணிகளைப் போல், மயி ப்ரோதம்-என் மீது கோக்கப்பட்டது. பொருள் : தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது. உலகு அனைத்தினுடைய உற்பத்தி, ஒடுக்கத்துக்கு ஈசனே முதற்காரணம். அவனுக்கு அன்னியமானது, அதன் நடைமுறையில் தலையிடவல்லது ஒன்றுமில்லை. ஜகத்தைத் தோற்றுவிப்பதும் துடைப்பதும் அவன் செயல் என்று முன் சுலோகத்தில் சொல்லப்பட்டது. அது நிலை பெற்றிருப்பதும் அவனாலேயாம். ஸூத்ரம் என்பது நூல். நூலிலே விதவிதமான முத்து, மணி, ரத்னம் முதலியவைகளைக் கோத்துவைப்பது போன்று அண்டங்களனைத்தும் சர்வேசுவரன் என்னும் ஸூத்திரத்தில் கோத்துவைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அவனுக்கு ஸூத்ராத்மன் என்ற பெயர் வந்துள்ளது. இணைக்கப்பெற்றுள்ள மணிகளும், முத்துக்களும், ரத்னங்களும் வெவ்வேறு பாங்குடையவகளாயிருக்கலாம். பின்பு, அவைகளை இணைக்கும் நூலோ ஒரே பாங்குடையது. அது போன்று எண்ணிறந்த குணபேதங்களையுடைய உயிர்களையும் ஜடப் பொருள்களையும் தாங்கி நிற்கும் ஆத்ம சைதன்யம் ஒன்றே. சச்சிதானந்த பிரம்மம் இப்படிப்பட்டது என்று ஒருவராலும் அறிய முடியாது. அதனால்தான் இறைவன் பாதி புருஷனாகவும் பாதி பெண்ணாகவும் அர்த்தநாரீசுவர வடிவம் எடுத்தான். பிரகிருதியும் புருஷனும் தானே என்பதைக் காட்டவே அவ்வித வடிவம் தாங்கினான். அதே சச்சிதானந்தக் கடவுள் இன்னும் சிறிது கீழ்நிலைக்கு வந்து பல புருஷர்களாகவும் பல பிரகிருதிகளாகவும் விளங்குகின்றான். அவன் உலகனைத்தும் ஆனதை நாம் அறிவது எங்ஙனம்? விடை வருகிறது : 8. ரஸோऽஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஸஸிஸூர்யயோ: ப்ரணவ: ஸர்வவேதேஷு ஸப்த: கே பௌருஷம் ந்ருஷு கௌந்தேய-குந்தி மகனே! அஹம் அப்ஸு ரஸ:-நான் நீரில் சுவையாகவும், ஸஸி ஸூர்யயோ: ப்ரபா-ஞாயிறிலும் திங்களிலும் ஒளியாகவும், ஸர்வவேதேஷு ப்ரணவ:-எல்லா வேதங்களிலும் பிரணவமாகவும், கே ஸப்த:-வானில் ஒலியாகவும், ந்ருஷு பௌருஷம் அஸ்மி-ஆண்களிடத்து நான் ஆண்மை. பொருள் : நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் பிரணவம். வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை. சர்க்கரையில் செய்த பண்டங்கள் எத்தனை விதங்களாயிருந்தாலும் அவையாவும் தித்திக்கும் தன்மையுடையவைகளாம். பரம் பொருளினின்று உண்டாயிருக்கும் பிரபஞ்சம் முழுதிலும் பரம் பொருளின் மகிமை தோன்றுகிறது. இயற்கையில் மிளிரும் ஈசனது மகிமையை விசாரித்து அறிதல் வேண்டும். அத்தகைய ஞானம் விக்ஞானமாக வடிவெடுப்பதும் அவசியமாகிறது. சுத்த ஜலத்துக்குச் சுவை கிடையாது. ஆனால் ஜலத்தின் துணையில்லா விட்டால் எது கல், எது கற்கண்டு, எது படிகாரம் என்று தெரிந்துகொள்ள முடியாது. பண்டங்களைக் கரைந்து அதன் தன் சுவையை வெளிப்படுத்துவது நீர். பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய நீரினுள் ஆத்மாவின் சொரூபம் சுவை என்னும் வடிவெடுத்திருக்கிறது என்று உணரவேண்டும். வடிவத்தைக் காட்டவல்லது ஒளி அல்லது வெளிச்சம். நமக்குத் தெரிந்துள்ள பொருள்களுள் வெளிச்சத்தை எங்கும் வியாபகமாக வழங்கவல்லவை சூரியனும் சந்திரனுமாம். வடிவங்களின் அழகை விளக்கவும், அறிவைப் பெருக்கவும் சந்திர சூரியர்களுடைய பிரபை எவ்வளவு பயன்படுகின்றதென்று ஓர்ந்து பார்ப்பவர்களுக்கு அது விளங்கும். ஞானமானது சரியான பாங்கில் ஓங்கும்பொழுது அது விக்ஞானமாகிறது. ஞான வளர்ச்சிக்கு ஐந்து பூதங்களும் துணைபுரிகின்றன. ஆகாசம் என்னும் பூதத்தின் தன்மாத்திரை சப்தம். ஓசைக்கு முதற்காரணம் ஆகாசம். ஆகாசவாணி அல்லது வான் ஒலி என்பது இன்றைக்கு எல்லாரும் அறிந்துள்ள விஷயம். ஒலியானது பேச்சுக்குரியதாக மாறும்பொழுது அது பாஷையாகின்றது. பிரணவம் அல்லது ஓங்காரம் மொழிகளுக்கு பீஜம் போன்றது. எல்லா வேதங்களிலும் பீஜ மந்திரமாயிருப்பது ஓங்காரம். சப்த பிரம்மம் என்று அது அழைக்கப்படுகிறது. அது எத்தனை பதங்களாக வடிவெடுத்து அவைகளின் அர்த்தத்தை இயற்கையின் வாயிலாகப் புகட்டிக்கொண்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அதைப்பற்றிய உண்மை விளங்கும். ஓசையின் துணையில்லாவிட்டால் இத்தனை சாஸ்திரங்களும் ஞானங்களும் மறைந்துபோம். பரம்பொருளே நாத வடிவெடுத்துத் தன்னை ஓயாது விளக்கிக்கொண்டிருக்கிறது. ஓசை அல்லது மந்திரத்தைச் சரியாக அறிதலும் அவ் ஓசையின் பொருளாகிய பரத்தை அறிதலும் ஒன்றே. வெறும் மனித வடிவை எடுத்திருப்பதாலேயே ஒருவனுக்குச் சிறப்பு வந்துவிடாது. அவன் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் ஆண்மை திகழவேண்டும். செயற்கரிய செயல் ஒருவனைச் சான்றோனாக்குகிறது. மனிதனிடத்திருந்து கிளம்பும் சீரிய செயல்களெல்லாம் உண்மையில் தெய்வ சம்பத்துக்களாம். சீரிய செயலைப் போற்றுவது ஈசுவர ஆராதனையாகும். 9. புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச தேஜஸ்சாஸ்மி விபாவஸௌ ஜீவநம் ஸர்வபூதேஷு தபஸ்சாஸ்மி தபஸ்விஷு ப்ருதிவ்யாம் புண்ய: கந்த: ச-மண்ணில் தூய நறுமணமாகவும், விபாவஸௌ தேஜ: அஸ்மி-நெருப்பில் ஒளியாகவும் இருக்கிறேன், ச ஸர்வபூதேஷு ஜீவநம்-அவ்வாறே எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும், தபஸ்விஷு தபஸ் அஸ்மி-தவம செய்வோரின் தவமாகவும் இருக்கிறேன். பொருள் : மண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும், யான். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான், தவஞ் செய்வோரின் தவம் யான். பிருதிவி அல்லது மண்ணில் எல்லாவித மணமாகவும் இருப்பது தெய்வம். அவைகளுள் நறுமணம் அல்லது சுகந்தத்தை ஈண்டு எடுத்துச் சொல்லுதலில் பொருள் உண்டு. தெய்வப் பெற்றியை நறுமணம் ஞாபகமூட்டுவதுபோன்று துர்நாற்றம் ஊட்டாது. எது தெய்வ சொரூபத்தை எளிதில் விளக்குகிறதோ அது தெள்ளியெடுத்து ஓதப்படுகிறது. சாதகன் ஒருவனுக்குச் சாம்பிராணியினின்று வரும் நறுமணம் தெய்வ ஞாபகத்தை ஊட்டுவது போன்று ஏனைய கந்தங்கள் ஊட்டமாட்டா. சூரியனுடைய பிரபை எளிய முறையில் அக்கினியிடத்திருக்கிறது. ஆத்மப் பிரகாசத்தின் பௌதிகத் தோற்றம் தீ என்றுணர்வது ஆத்ம உபாசனைக்கு உற்ற உபாயமாம். அழியும் தன்மையுடைய பூத உடலுக்குள் அழியாத ஆத்மா இயங்கிக்கொண்டிருப்பதால் உயிர் வாழ்தல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உயிர்கள் ஜீவித்திருத்தல் அல்லது வாழ்தலுக்கு இயற்கையில் முடிவில்லை. என்றென்றும் உயிர் வாழ்க்கையானது நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. ஆதலால் அறிதற்கு அரிதாகிய ஆத்மாவின் சத்சொரூபம் இயற்கையின் வாயிலாக ஏகதேசம் விளங்குகிறது. உயிர் வாழ்வது வேறு, வாழ்வை மேலானதாக மாற்றுவது வேறு. உருக்கி இரும்பை எஃகு ஆக்குகிறோம். தெய்வீக உணர்ச்சியைக் கொண்டு வாழ்வை உருக்கி மேலான வாழ்வாக மாற்றுமிடத்து அது தபஸ் என்னும் பெயர் பெறுகிறது. எங்கே தபசு ஓங்குகிறதோ அங்கு தெய்வ சான்னித்தியம் திகழ்கிறது. கடவுளையே கோரதபஸ்வி என்று அழைக்கிறோம். 10. பீஜம் மாம் ஸர்வபூதாநாம் வித்தி பார்த ஸநாதநம் புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் பார்த ஸர்வபூதாநாம்-பார்த்தா, எல்லா உயிர்களுக்கும், ஸநாதநம் பீஜம்-சநாதனமாகிய விதை என்று, மாம் வித்தி-என்னை அறிவாய், அஹம் புத்திமதாம் புத்தி-புத்தியுடையோரின் புத்தி நான், தேஜஸ்விநாம் தேஜ: அஸ்மி-ஒளியுடையோரின் ஒளியாக இருக்கிறேன். பொருள் : எல்லா உயிர்களுக்கும் நான் சநாதனமாகிய விதையென்றுணர். பார்த்தா, புத்தியுடையோரின் புத்தி நான், ஒளியுடையோரின் ஒளி நான். ஸநாதனம் பீஜம் என்பது நிலைபேறுடைய வித்து எனப் பொருள்படுகிறது. கடல் நீர் ஆவியாக மாறி, பிறகு கார்மேகம் என்ற பெயர் பெறுகிறது. அது மழையாகப் பொழிந்துவிட்டாலும் பழையபடி கார்மேகத்துக்கு ஓயாத பிறப்பிடமாகக் கடல் இருக்கிறது. அங்ஙனம் பிரபஞ்சத்தில் விதவிதமான உயிர் வகைகளுக்கு ஸநாதன பீஜமாக ஈசுவரன் இருக்கிறான். அறிவானது தெளிந்த நிலைக்கு வருமளவு அது ஆத்ம சொரூபத்தைக் கிரகிக்க வல்லதாகிறது. ஆத்ம சொரூபத்தை அறிவதும் ஆத்ம சொரூபமாவதும் ஒன்றே. ஆக, புத்திமான்களிடத்துள்ள புத்தி போற்றுதற்குரியது. நல்ல தேகத்தினின்று கிளம்பும் ஒளி, வீரியம், பேராற்றல், கூர்மை ஆகியவைகளுக்கு தேஜஸ் என்று பெயர். தூய வாழ்வினின்று தோன்றும் திட்பமும் தேஜஸ் என்று அழைக்கப்படுகிறது. இறைவனுடைய பேராற்றல் மக்களிடத்து தேஜஸ் ஆகத் துலங்குகிறது. தேஜஸை வளர்ப்பது தெய்வ வணக்கமாகும். 11. பலம் பலவதாம் சாஹம் காமராகவிவர்ஜிதம் தர்மாவிருத்தோ பூதேஷு காமோऽஸ்மி பரதர்ஷப பரதர்ஷப-பரதர் ஏறே, பலவதாம்-வல்லோரிடத்தே, காமராகவிவர்ஜிதம் பலம் அஹம்-விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான், ச தர்ம அவிருத்த:-மேலும் அறத்திற்கு மாறுபடாத, காம: அஸ்மி-விருப்பமாவேன். பொருள் : வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான். பரதரேறே, உயிர்களிடத்து நான் கடமை தவறாத விருப்பமாவேன். காமம் என்பது புலப்படாத பொருள்களைப் பெறவிரும்புதலாம். பின்பு புலப்படுகின்ற பொருள்களைப் பெற விரும்புதல் ராகம். பலத்தை உடைத்திருப்பவன் அதை நலத்துக்கென்றே பயன்படுத்த வேண்டும். ஆசைகளை நிறைவேற்றுவதற்காகக் கையாளும் சாமர்த்தியம் புனிதத்தை இழந்துவிடுகிறது. நிராசையில் நிலை நின்று கையாளுகிற திறமையிலோ தெய்வசான்னித்தியம் தோன்றுகிறது. அதனால் பலமும் பெருகிக்கொண்டே போகிறது. இனி, காமம் அல்லது ஆசை தன்னளவில் கேடுடையதன்று. பசித்திருக்கும் பொழுது உணவை உண்ண ஆசைப்படுகிறோம். இக்காமம் தர்மத்துக்கு உடன்பாடானது. நமது முன்னேற்றத்துக்குத் தூண்டுகோலாயிருக்கும் காமங்களெல்லாம் வேண்டப்படுபவைகளாம். ஆக, அறநெறி ஆமோதிக்கும் காமம், கடவுளிடத்துக்கொண்டுள்ள அருள் தாகம் முதலியன கடவுள் சொரூபமாகும். தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது ஏன் மனம் சலிக்கின்றது? வீட்டு ஈயானது பக்ஷணங்களின் மீது சில வேளைகளில் உட்காருகிறது. அது உடனே பக்ஷணத்தை விட்டு விட்டு மலத்தின் மேல் போய் உட்காருகிறது. தேனீயோ தேனைக் கிரஹிக்கும் பொருட்டு மலர்ந்த புஷ்பங்களில் உட்காருமே தவிர அருவருக்கத் தக்க பதார்த்தங்களை அது ஒருபோதும் அணுகுவதில்லை. உலகப் பற்றுள்ளவர்கள் முன்னே சொன்ன வீட்டு ஈக்குச் சமானம். ஏதோ சில வேளைகளில் ஈசுவரப் பிரேமையாகிய இன்பத்தை ஒரு சிறிது அனுபவித்தாலும், பழைய வாசனையால், அவர்கள் சிற்றின்ப சுகமாகிய மலக்குழியைத் தேடிப்போய் விழுகின்றனர். பரமஹம்ஸர்களான மஹான்களோவெனில் சதாசர்வகாலமும் பகவத் பிரேமையிலேயே ஆழ்ந்திருக்கின்றனர். 12. யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாஸ்ச யே மத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி ச ஏவ-மேலும் கூட, யே பாவா:-எந்த உணர்வுகள், ஸாத்த்விகா: ராஜஸா: தாமஸா:-சத்வ ரஜஸ் தமோ குணங்களில் தோன்றியவையோ, தாந் மத்த: ஏவ-என்னிடத்தே பிறந்தன, இதி வித்தி-என்று அறிந்து கொள், து தேஷு மயி-ஆனால் அவை என்னுள் இருக்கின்றன, அஹம் ந-நான் அவற்றுள் இல்லை. பொருள் : சத்வ ரஜஸ் தமோ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடத்தே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. நான் அவற்றுள் இல்லை. முக்குணத்தாலாகிய உலகெலாம் அவனிடத்திருந்து வந்தவைகள். பால் தயிராகப் பரிணமிப்பது போன்று அவன் உலகமாக மாறிவிடவில்லை. கயிறு பாம்பாகத் தென்படுவது போன்று தனது மாயாசக்தியால் அவன் உலகமாகத் தோன்றுகிறான். மூல வஸ்துவாகிய கயிறு மோக வஸ்துவாகிய பாம்பை அதிஷ்டானமாகக் கொள்ளவில்லை. வெறும் தோற்றமாகிய பாம்போ மூலப்பொருளாகிய கயிற்றை அதிஷ்டானமாக அல்லது நிலைக்களமாகக்கொண்டுள்ளது. அதாவது பாம்பு கயிற்றின் மீது ஆரோபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே முக்குணமயமாகிய உலகம் பரமாத்மாவை அதிஷ்டானாமாகக் கொண்டுள்ளது. பரமாத்மா முக்குணப் பொருள்களை அதிஷ்டானமாகக் கொண்டிருப்பவன் அல்லன். தன்னுடைய மாயாசக்தியால் அவன் ஜகத்தாகத் தோன்றுகிறான். நான் அவைகளைச் சாரவில்லை; அவைகள் என்னைச் சார்ந்திருக்கின்றன என்பதன் பொருள் இதுவே. ஆரோபிக்கப்பட்டுள்ள ஜகத் ஒடுங்கிட, அதிஷ்டானமாயிருக்கிற பரமாத்மாவின் தரிசனம் பெறுதலே ஜீவனுடைய லட்சியம். (அத்தியாயம் இரண்டு, சுலோகம் 45; அத்தியாயம் ஒன்பது, சுலோகங்கள் 4,5 ஆகியவைகளைப் பார்க்கவும்) தொங்கும் விளக்கின் முப்பட்டைக் கண்ணாடிகளை இரவும் பகலும் ஒரு சாது நோக்கிப் புன்முறுவல் பூப்பது வழக்கம். காரணமென்னவெனில், அந்த ஸ்படிக மூலமாய் சிவப்பு, மஞ்சள், நீலம் முதலிய பல வர்ணங்களை அவர் காண்பார். இவ்வித வர்ணங்கள் உண்மையானவையல்ல என்பதை அவர் தெரிந்துகொண்டதும் உலகமும் அம்மாதிரியே உண்மையல்லவென்று அறிந்தார். 13. த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸர்வமிதம் ஜகத் மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம் ஏபி: த்ரிபி: குணமயை: பாவை:-இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால், இதம் ஸர்வம் ஜகத் மோஹிதம்-இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், ஏப்ய: பரம்-இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட, மாம் அபிஜாநாதி-என்னை உணராதிருக்கிறது. பொருள் : இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட என்னை உணராதிருக்கிறது. பரம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாதது. அவ்யயம் என்றால் நிர்விகாரம் அல்லது மாறாத்தன்மை வாய்ந்தது. சினிமாப் படக்காட்சியைக் காண்பதில் கண்ணும் கருத்துமாயிருப்பவர்கள் அத்தோற்றத்துக்கு அடிப்படையாயிருக்கும் திரையைப்பற்றி நினைப்பதில்லை. குண பேதத்தால் உண்டான விருப்பு வெறுப்பு ஆகியவைகளின் வசப்பட்டிருப்பவர் உலகப் பொருள்களை வெவ்வேறு மனப்பான்மையுடன் பார்க்கிறார்கள். அப்பொருள்களில் தடைப்படாது எங்கும் வியாபகமாயுள்ள ஆகாசத்தை யாரும் அறிகிறதில்லை. குணபேதத்தால் வேறுபடும் சேதன அசேதனப் பொருள்களுக்கிடையில் நிறைபொருளாய், பேரறிவாய் எங்கும் வியாபித்து, அனைத்தையும் தன்னகத்து அடக்கியிருக்கும் சித்சொரூபத்தை முக்குணத்தில் வசப்பட்டவர் யாரும் அறிகிறதில்லை. மனித ரூபமாக விளையாடுபவன் ஈசுவரனே. அவன் ஒரு செப்படி வித்தைக்காரன் போலாவான். ஜீவன், ஜகத் என்ற மாயைத் தோற்றமெல்லாம் அவனுடைய பெரிய வித்தைகள். செப்படி வித்தைக்காரன் மட்டுமே உண்மை. வித்தைகள் எல்லாம் மாயை. இம்மயக்கத்தினின்று தெளிதல் எப்படி? உபாயம் இயம்பப்படுகிறது : 14. தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே ஹி ஏஷா குணமயீ மம தைவீ மாயா-ஏனெனில் இந்த குணமாகிய எனது தேவமாயை, துரத்யயா-கடத்தற்கரியது, யே மாம் ஏவ ப்ரபத்யந்தே-யாவர் என்னையே சரணடைவரோ, தே ஏதாம் மாயாம், தரந்தி-அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள். பொருள் : இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள். தேவமாயை என்பது ஈசுவரனிடத்திருந்து உண்டான மாயாசக்தி. அது அவனுக்குச் சரீரம் போன்று அமைந்திருக்கிறது. விஷ்ணுவுக்கு மிகப்பெரியவன் என்பது அதன் பொருள். அவன் தன் சொரூபத்தை மாயையைக்கொண்டு மறைத்து வைத்திருக்கிறான். ஆனால் அவனிடத்து அடைக்கலம் புகுகின்றவர்களுக்கு அவன் தன்னைக் காட்டித் தருகிறான். அவனுடைய மெய்க் காட்சி கிட்டும்பொழுது மாயையின் பொய்க் காட்சி மறைகிறது. கயிற்றைக் காணுமிடத்துப் பாம்பின் காட்சி மறைவது போன்றது அது. திவ்விய மாதாவை நம்மால் ஏன் காணமுடியவில்லை? அவள் திரைக்குப் பின்னால் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்தி, பிறர் கண்ணிற்படாமல் தான்மட்டும் எல்லாவற்றையும் பார்க்கும் உயர்குலத் துதித்த ஸ்திரீ போன்றவளாவாள். அவளுடைய உண்மையான பக்தர்கள் மட்டும், மாயையாகிய திரையைத் தாண்டி, சமீபத்தில் சென்று, அவளைத் தரிசிக்கின்றனர். ஈசனைச் சரண்புகாதவர் யார்? 15. ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பாவமாஸ்ரிதா: மாயயா அபஹ்ருத ஜ்ஞாநா-மாயையினால் ஞானம் அழிந்தோர், ஆஸுரம் பாவம் ஆஸ்ரிதா:-அசுரத் தன்மையை பற்றி நிற்போர், நராதமா: துஷ்க்ருதிந: மூடா:-மனிதரில் தாழ்ந்தவர்களும் இழிவான செயல்களை புரிகின்றவர்களுமான அறிவிலிகள், மாம் ந ப்ரபத்யந்தே-என்னைச் சரண் புகார். பொருள் : தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப்பட்டார், மாயையால் ஞான மழிந்தோர், அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர், (இனையோர்) என்னைச் சரண் புகார். பிறரைத் துன்புறுத்துதல், பொய் பேசுதல் முதலியவைகளை இயல்பாகக் கொண்டிருப்பவர்கள் அசுரர். அவர்களுடைய இயல்பு அசுர சுபாவம் எனப்படுகிறது. (அத்தியாயம் 16, சுலோகம் 4-ல் இந்த இயல்பு மீண்டும் விளக்கப்படுகிறது) பரமேசுவரன் அல்லது நாராயணனைப் போற்றுதலை அசுரர் சிறிதும் அறியார். தங்களுடைய கொடூரம் தலையெடுக்கச் செய்வதே அவர்களுடைய தொழில். தெய்வத் தன்மையை மறைத்து, அசுரத் தன்மையை ஓங்குவிப்பது எதுவோ அது பாபச் செயல். அது அசுரர்களை முதலில் மூடர்களாக்குகிறது. கடவுளின் மகிமைப்பற்றிய விவேகம் இல்லாதவர்கள் மூடர். ஒருவனுடைய விவேகம் அழிந்தால் பின்பு அவன் தானே அழிந்துபட்டுப்போவது திண்ணம். மூடர் அங்ஙனம் நராதமர் அல்லது மக்களுள் கடைப்பட்டவர் ஆகின்றனர். ஏனென்றால், ஏதாவது ஒரு நலத்தையாவது கடைப்பிடித்து அவர்கள் முன்னேற்றமடைய முடியாது. மேலும் அவர்களது ஞானம் மாயையினால் அபகரிக்கப்படுகிறது. ஈசுவரனது சொரூபமாகப் பிரபஞ்சம் அனைத்துமிருக்க அவ்வுண்மை அவர்களுக்குச் சிறிதும் புலப்படுவதில்லை. எனவே கடவுள் சம்பந்தமான அனைத்தையும் வெறுக்கின்ற கயவர் ஆகின்றனர் அன்னவர். நுண்மையான தானியத்தைத் தள்ளிவிட்டு, பருமனான குப்பை முதலியவைகளைத் தங்கச் செய்வது சல்லடையின் இயல்பு. அது போல, நன்மையை விட்டுவிட்டுத் தீமையை மட்டும் கைக்கொள்வது தீயோருடைய குணம். பின்பு, இறைவனைப் போற்றுபவர் யார்? 16. சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா! அர்தார்தீ-பயனை வேண்டுவோர், ஆர்த:-துன்புற்றார், ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர், ஜ்ஞாநீ-ஞானிகள் என, சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள், மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர். பொருள் : நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே, துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. துன்பத்தைத் தவிர்க்க எந்த உயிர்க்கும் இயலாது. தேகம் எடுத்தவனை அது ஏதேனும் ஒரு விதத்தில் வந்து தாக்குகிறது. நோய்க்கு மருந்தை நாடுவது போன்று துன்பத்தைத் துடைப்பதற்குத் தெய்வத்தின் துணையை நாடுவது நல்லோரது இயல்பு. திரௌபதிக்குத் துன்பம் வந்தபோது கண்ணனுடைய உதவியை அவள் நாடியது இதற்குச் சான்றாகும். திருநாவுக்கரசு சுவாமிகளது செயலும் அத்தகையது. பரம்பொருளைப்பற்றிய உண்மையை அறிய விரும்புபவன் ஜிக்ஞாசு அல்லது ஞான வேட்கையுடையவன் எனப்படுகிறான். சைவ சமயக் குரவர் நால்வருள் மாணிக்கவாசகர் ஒரு நல்ல ஜிக்ஞாசு ஆவார். விவேகானந்த சுவாமிகள் பரமஹம்ஸரால் ஆட்கொள்ளப்படுதற்கு முன்பு சிறந்ததொரு ஜிக்ஞாசுவாக விளங்கினார் மெய்ப்பொருளை அறிய வேண்டும் என்ற ஞானவேட்கை மனிதனுக்கு எளிதில் உண்டாவதில்லை. அர்த்தார்த்தீ என்பவன் செல்வத்தின்மீது ஆசை வைப்பவன். இம்மையில் போகத்தைத் தேடிக் கொடுப்பது திரவியம். அது தமக்கு வேண்டுமென்று கடவுளிடத்து விண்ணப்பிப்பவரும் பக்தர் ஆகின்றனர். சைவசமயக் குரவருள் *சுந்தரர் இக்கூட்டத்தவர்க்கு நல்ல சான்றாவார். சுகப்பிரம்மம், திருஞானசம்பந்தர் முதலாயினோர் பிறவியிலிருந்தே ஞானிகள். பரம்பொருளின் சொரூபத்தை அவர்கள் சாக்ஷõத்கரித்தவர்கள். அதன் பலனாக அவர்கள் சதா பரம்பொருளையே போற்றினார்கள். அப்படி அவனைப் போற்றுதலைவிடச் சிறந்த செயலை ஞானியர் அறிந்திலர். இந்த நான்கு தரத்தாரது மனப்பான்மைகள் நல்வினையினின்று வந்தவைகளாம். ஆகவே அவர்கள் ஸுக்ருதின: (அறச்செயலாளர்) என அழைக்கப்படுகின்றனர். பகவானை முதலாக வைத்துக்கொண்டு புருஷார்த்தங்களைத் தேடுபவர் புண்ணியசாலிகள். ஒன்று என்னும் இலக்கத்தோடு பூச்சியங்களைச் (சுழிகளைச்) சேர்த்தால் அவைகளுக்கு மதிப்பு உண்டு. ஒன்றை விட்டுப் பிரித்தால் அவைகள் வெறும் பூச்சியங்களே. கடவுள் ஒன்று என்னும் இலக்கமாவார். உலகப் பொருள்களெல்லாம் அவரோடு சேர்க்கப்பட்ட பூச்சியங்கள். தம்மளவில் அவைகளுக்கு மதிப்பில்லை. இந்த நான்கு வகையினரில் சிறந்தவர் யார்? 17. தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஸிஷ்யதே ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய: தேஷாம் நித்யயுக்த-அவர்களில் நித்திய யோகம் பூண்டு, ஏகபக்தி: ஜ்ஞாநீ விஸிஷ்யதே-ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன், ஹி ஜ்ஞாநிந:-ஏனெனில் ஞானிக்கு, அஹம் அத்யர்தம் ப்ரிய:-நான் மிகவும் இனியவன், ஸ ச மம ப்ரிய:-அவன் எனக்கு மிகவும் இனியன். பொருள் : அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன். மஹாவிஷ்ணுவுக்கு சிஷ்டேஷ்ட: அறிஞர்களால் விரும்பப்படுபவன் என்று ஒரு பெயர் உண்டு. பக்தியின் மிகுதியால் பக்தனுக்கு இந்த ஞானம் வருகிறது. போற்றுதற்கு உரிய பொருள் பரமாத்மா ஒருவரே என்று ஞானி அறிகிறபடியால் அவரிடத்து மாறாத பக்தி உண்டாகிறது. தன்னைத் தான் விரும்புவது உயிர்களின் இயல்பு. பின்பு, தன் உயிர்க்கு உயிர் இறைவன் என்பதை சுவானுபவத்தில் அறிபவன் ஞானி. ஆகையால் அவன் இறைவனிடத்து அத்தகைய உறவு பூணுகிறான். பகவத் தரிசனம் பெற்ற பிறகு ஒருவன் தானே தெய்வப் பெற்றியுடையவனாக மாறிவிடுகிறான். மற்ற மூவர் புறக்கணிக்கப்படவில்லை; ஏனென்றால் : 18. உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம் ஏதே ஸர்வே உதாரா: ஏவ-மேற்சொல்லிய யாவரும் நல்லாரே, து ஜ்ஞாநீ ஆத்மா ஏவ-எனினும், ஞானி என்னுடைய ஸ்வரூபமே, மே மதம்-(என்பது) என்னுடைய கருத்து, ஹி ஸ: யுக்தாத்மா-அவன், யோகத்தில் இசைந்து, அநுத்தமாம் கதிம்-உத்தம கதியாகிய, மாம் ஏவ ஆஸ்தித:-என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான். பொருள் : மேற்சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் யானாகவே கொண்டுளேன். அவன், யோகத்தில் இசைந்து, உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான். பக்தர்கள் எல்லாரும் பகவானுக்குப் பிரியர்களே. ஆனால் அனன்ய பக்தி பண்ணும் ஞானி பகவத் சொரூபத்தை அடைந்திருப்பதால் அவன் அவர்களுள் விசேஷமானவன். பகவானுக்கு (மாதவ:) என்பது ஒரு பெயர். (மா) ஞானத்தினுடைய (தவ:) தலைவன் என்று அது பொருள்படுகிறது. ஞானத்துக்கு அவன் நிலைக்களம். ஆதலால் ஞானிகளை அவனுடைய ஆத்ம சொரூபம் என்பது பொருந்துகிறது. தீயில் வைக்கப்பட்ட விறகுக்கட்டை தானே தீயாகின்றது. கடவுளிடத்துப் பக்தி பண்ணுபவன் தானே அவர் மயமாகிறான். முழு மனதுடன் தொண்டுபுரியும் வேலைக்காரனிடத்து எஜமானனுக்கு அதிகப் பிரியம் ஏற்படுகிறது. அவனுடைய தூய பாங்கையும் திறமையையும் கண்டு திருப்தியடைந்து தம்முடைய ஸ்தானத்திலேயே வேலைக்காரனை வைக்கவும் அவர் செய்வார். பகவானும் தம் பக்தனிடத்து இங்ஙனம் செய்கிறார். ஞானி மேலும் சிறப்பிக்கப்படுகிறான் : 19. பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: பஹூநாம் ஜந்மநாம் அந்தே-பல பிறவிகளின் இறுதியில், ஜ்ஞாநவாந்-ஞானவான், ஸர்வம் வாஸுதேவ: இதி-எல்லாம் வாசுதேவனே என்று, மாம் ப்ரபத்யதே-என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான், ஸ: மஹாத்மா ஸுதுர்லப:-அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன். பொருள் : பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், எல்லாம் வாசுதேவனே என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன். வாசுதேவ என்றால் பிரத்தியகாத்மன், எதிலும் ஊடுருவி நிலைத்திருப்பவன் எனப் பொருள்படுகிறது. (ஸர்வம்) எல்லாம் என்பது சரம், அசரம், மேன்மக்கள், கீழ்மக்கள், நல்லார், பொல்லார் எனப் பொருள்படுகிறது. ஞானிக்கு நித்தியவஸ்து எது என்பது மனதில் தெளிவடைந்த பிறகும் அது சுவானுபவம் ஆதற்குப் பல பிறவிகள் பிடிக்கின்றன. காண்கின்ற அனைத்தும் பரமாத்ம சொரூபமாகத் தென்படும்போது ஞானம் பூர்த்தியாகிறது. இத்தகைய பிரம்ம ஞானி நடமாடும் தேவதையாகிறான். இம் மகோன்னத நிலையை அடைந்த மனிதன் உலகில் அரியருள் அரியனாவான். இந்த அத்தியாயத்தின் மூன்றாவது சுலோகம் இதைக் குறிப்பிடுகிறது. வேதாந்தத்தை அனுஷ்டானத்தில் கொண்டுவர முயலும் நல்ல ஆத்ம சாதகர்கள் உலகத்தில் உள்ள மக்கள் எல்லாரையும் கடவுள் சொரூபமாகக் கருதி யொழுகுகிறார்கள். அதனால் தாங்கள் ஞானமடைவதுமன்றி சமூகத்திலுள்ள பல கேடுகளைக் களைதற்கு அவர்களுடைய மனப்பான்மை ஊக்கங் கொடுக்கிறது. பேதபுத்தியைத் தருவது அக்ஞானம்; ஐக்கியபுத்தியைத் தருவது ஞானம். ஞானமும் பக்தியும் இல்லாதவர்கள் என்ன செய்கிறார்கள் எனின்: 20. காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தேऽந்யதேவதா: தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா தை: தை: காமை:-அந்த அந்த விருப்பங்களால், ஹ்ருதஜ்ஞாநா:-கவரப்பட்ட அறிவினையுடையோர், ஸ்வயா ப்ரக்ருத்யா நியதா:-தத்தம் இயற்கையால் கட்டுண்டு, தம் தம் நியமம் ஆஸ்தாய-வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய், அந்ய தேவதா: ப்ரபத்யந்தே-அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர். பொருள் : வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர். பிற தெய்வங்கள் என்பவை, யாவுமாகிய சர்வேசுவரனுக்கு அன்னியமானவைகளல்ல. அவனுடைய சிறு அம்சங்களே அன்னிய தேவதைகள் எனப்படுகின்றன. ஓர் அரசாங்கத்திலுள்ள சிறு உத்தியோகஸ்தர்கள் அரசனுக்கு அடிமைப்பட்டவர்களே. அரசனுடைய நட்பைப் பெற்றால் சிப்பந்திகள் அனைவரும் நமக்கு உரியவர் ஆகின்றனர். ஆனால் அரசனது நட்பைப் பெறுதற்கு நாம் தகுந்தவர் ஆகவேண்டும். அதில் சிரமம் அதிகம். சிறு உத்தியோகஸ்தர் நட்பைப் பெறுவது எளிது. அவர்களைக்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை முடித்துக்கொள்ளுதலும் எளிது. அதேபோன்று இறைவனுடைய அம்சங்களாகிய சிறு தெய்வங்களை வணங்கி, சிறிய பலனை அடைவது எளிது. லட்சியம் ஒன்று எவ்வளவுக்கெவ்வளவு பெரியதோ அவ்வளவுக்கவ்வளவு அதை அடைதலும் அரிது. ஆசை மிகுந்திருப்பவர் சிறிய பொருளை நாடுகின்றனர். குறைபொருளை நிறைபொருளாய் எண்ணும்படி ஏவுவது ஆசை. மனபரிபாகத்துக்கு ஏற்ற படி ஆசையும் வெவ்வேறு வடிவெடுக்கிறது. அதை நிறைவேற்றுதற்கான உபாயங்களும் பலவாகின்றன. தாழ்ந்த சுபாவமுள்ளவர்கள்தான் வியாதிகளைக் குணமாக்கல், வியாஜ்யங்களை வெல்லல், நீர் மேல் நடத்தல் முதலிய சித்திகளை நாடி ஓடுவார்கள். உண்மையான பக்தர்களோவெனில் ஈசுவரனுடைய பாதாரவிந்தகளைத் தவிர வேறெதையும் நாடுவதில்லை. இத்தகைய காமிகளுள் : 21. யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்தயார்சிதுமிச்சதி தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் ய: ய: பக்த:-எந்த எந்த பக்தன், யாம் யாம் தநும்-எந்த எந்த வடிவத்தை (தெய்வத்தை), ஸ்ரத்தயா அர்சிதும்-நம்பிக்கையுடன் அர்ச்சிக்க விரும்புகிறானோ, தஸ்ய தஸ்ய ஸ்ரத்தாம்-அந்த அந்த பக்தனுக்கு சிரத்தையை, அஹம் தாம் ஏவ-நான் அந்த தேவதையிடமே, அசலாம் விததாமி-ஸ்திரமாக செய்கிறேன். பொருள் : எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன். மனிதனுக்குத் தேவையாயிருப்பது கடவுள் பக்தி. தெய்வத்துக்கு அவன் எத்தகைய வடிவத்தைக் கற்பித்துக்கொண்டாலும் அது கடவுளுக்குச் சம்மதம். யானை, குதிரை, பசு வடிவம் பெற்றுள்ள மிட்டாய்களில் ஒவ்வொரு குழந்தைக்கும் விருப்பமான வடிவத்தோடு கூடியதைக் கடைக்காரன் அதற்குக் கொடுக்கிறான். பகவானும் அதே முறையில் பக்தனுக்கு உற்சாகம் ஊட்டுகிறார். சிறு தெய்வ வணக்கத்தையும் பாங்குடன் செய்தால் அது முடிவில் ஈசுவர ஆராதனையாகத் திருந்தியமைகிறது. பக்தனுடைய பக்தியைப் பெருக்குவது பகவானுடைய கருணையாகும். அத். 4, சுலோகம் 11; அத். 9, சுலோகம் 23 ஆகியவைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும். 22. ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே லபதே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந் ஸ தயா ஸ்ரத்தயா யுக்த:-அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து, தஸ்ய ஆராதநம் ஈஹதே-அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான், ச தத: காமாந் லபதே-மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான், ஹி தாந் விஹிதாந் மயா ஏவ-எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது. பொருள் : அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே. கேணி, குளம், குட்டை மூலம் மக்களுக்குப் பயன்படுவது மழை நீரே. சர்வேசுவரனுடைய அருளும் அத்தகையது. சிற்றுயிர்களுக்கு வேண்டத்தக்கதை அறிபவன் சர்வேசுவரன். அவர்கள் வணங்கும் தேதைவைகள் வாயிலாக இறைவனே வேண்டத்தக்கவைகளை அவர்களுக்கு வழங்குகிறான். வீட்டுக் கூரையின் மீது பசு, புலி, சிங்கம் முதலிய மிருகங்களின் வாய்போன்ற குழாய்கள் வைத்திருக்கின்றனர். அவ்வாய்களினின்று விழுகின்ற மழைநீர் உண்மையில் மனிதனுடைய தாகத்தை அடக்குதற்காக வானத்தினின்று பொழிந்ததாம். அவ்வாறே மேன்மக்கள் வாயினின்று வரும் சொற்கள் பல தடவைகளில் சர்வேசுவரனிடத்திருந்து வருபவைகளாம். அவர்கள் வேண்டுவது நிலையாய் பொருள்களாதலால் : 23. அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம் தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி து அல்பமேதஸாம் தேஷாம்-எனினும், அற்ப மதியுடைய அன்னோர், தத் பலம் அந்தவத் பவதி-எய்தும் பயன் இறுதியுடையதாக ஆகிறது. தேவ யஜ: தேவாந் யாந்தி= தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர், மத்பக்தா: மாம் அபி யாந்தி-என்னடியார் என்னையே எய்துகிறார்கள். பொருள் : எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என்னடியார் என்னையே எய்துகிறார்கள். நிலைத்த இன்பம், நிலையற்ற இன்பம் இவ்விரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அற்ப அறிவாளர்களாம். காட்டுக்குச் செல்லும் விறகுத் தலையர் எல்லாரும் எடுத்துக்கொள்ளும் முயற்சி ஒரேவிதமானது. ஆனால் எல்லைப் புறத்தில் சிறு விறகு எடுப்பவன் அடையும் பயன் அற்பமானது. உட்புறத்தில் இருக்கும் விலை மிகுந்த மரம் எடுப்பவன் எய்தும் பயன் பெரியது. அதுபோன்று தேவைகளை வணங்குவதிலும் சர்வேசுவரனை வணங்குவதிலும் முயற்சி யொன்று; பலன் வேறுபட்டது. அதே முயற்சியால் அந்தமில்லா ஆனந்தத்தைப் பெறுதற்குப் பதிலாக அற்ப சுகத்தைப் பெறுபவர் சிற்றறிவாளர் ஆகின்றனர். முழுமுதற் பொருளை எல்லாரும் ஏன் வணங்குவதில்லை? விடை வருகிறது : 24. அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய: பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் அபுத்தய: மம அநுத்தமம்-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும், அவ்யயம் பரம் பாவம்-அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பரநிலையை, அஜாநந்த:-அறிந்து கொள்ளாமல், அவ்யக்தம் மாம்-புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை, வ்யக்திம் ஆபந்நம்-கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக), மந்யந்தே-கருதுகின்றனர். பொருள் : மறைவும் வெளிப்பாடும் உடையோனாக என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற உத்தம மாகிய பரநிலையை அன்னார் அறிகிலர். ஜீவர்கள் வினையின் வசப்பட்டு உடல் எடுப்பது போன்று அவதார புருஷர் உடல் எடுப்பதில்லை. ஜன்னலில் கட்டுண்டது போன்று வானம் தென்படுகிறது. ஆனால் உண்மையில் அது எதிலும் கட்டுப்படவில்லை. அவதார புருஷர் உடல் எடுத்தும் அதில் கட்டுப்படாதவர். பெருங்கொடையாளி ஒருவன் விளையாட்டுக்காகக் கந்தைத் துணியணிந்திருக்கலாம். அணிந்திருக்கும் துணியைப் பார்த்து அவ்வள்ளலின் பரந்த பாங்கைப் பாமரன் ஒருவன் புறக்கணித்துவிடலாம். கொடையாளியினிடமிருந்து பெறவேண்டிய பயனையும் பெறாது போய்விடலாம். அதனால் கொடையாளிக்கு நஷ்டமில்லை. அழியும் இயல்புடைய உடலை எடுத்திருக்கிற வேளையிலும் அவதார புருஷர் பரமாத்ம சொரூபமேயாவர். இவ்வுண்மையை அறியாத மானுடர் பரமாத்மாவின் உபாசனைக்குத் தகுதியற்றவர்களாகின்றனர். அவர்களுடைய அக்ஞானத்துக்குக் காரணம் : 25. நாஹம் ப்ரகாஸ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத: மூடோऽயம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் அஹம் ஸர்வஸ்ய ப்ரகாஸ:-எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோகமாயா ந ஸமாவ்ருத:-யோக மாயை சூழ்வதில்லை, அஜம் அவ்யயம் மாம்-பிறப்பும், கேடுமற்ற என்னை, அயம் மூட லோக:-இந்த மூடவுலகம், ந அபிஜாநாதி-அறியவில்லை பொருள் : எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை மூடவுலகம் அறியவில்லை. தன்னுடைய ஜால வித்தையினால் மாயாவி ஒருவன் மற்றவர்களுடைய மதி மயங்கும்படி செய்கிறான். அது விஷயத்தில் அவர்கள் மூடர்கள் ஆய்விடுகின்றனர். ஆனால் அந்த மாயாவியின் சொந்தக்காரர்கள் உள்ளத்தில் அதனால் எந்த விதமான குழப்பமும் உண்டாவதில்லை. தான் எடுத்துக்கொண்ட விளையாட்டு (யோக மாயை) எத்தகையது என்பது மாயாவிக்கு நன்குதெரியும். எதனாலும் மறைக்கப்படாத சூரியன் மேகத்தால் மறைக்கப்பட்டது போன்று தென்படுகிறது. தன்னை மறைப்பதுபோன்று தென்படும் மேகத்தின் இருப்பிடத்தையே விளக்கவல்லது சூரியன். அதன் பிரகாசத்தாலன்றி மேகத்தைக் காணமுடியாது. முக்குணத்தாலாகிய பிரகிருதி சர்வேசுவரனுடைய யோக மாயை. அவனைவிட்டு மாயை பிரிந்திருக்க முடியாதாதலால் அதற்கு யோகம் என்ற அடைமொழி வழங்கப்படுகிறது. சூரியப் பிரகாசத்தால் உண்டாகிற மேகம் சூரியனை மறைப்பதுபோன்று ஈசனுடைய யோகமாயை அவனுடைய அகண்ட சச்சிதானந்த சொரூபத்தை மறைத்துக்கொண்டிருக்கிறது. ஆதலால் அறிவிலிகளுக்கு அவன் ஒரு சாதாரண ஜீவன் போன்று தென்படுகிறான். ஈசுவரனுடைய லீலா விசித்திரம் அவ் ஈசுவரனுக்கும் அவனுடைய பக்தர்களுக்கும் நன்கு விளங்குகிறது. மேலும் தன்னுடைய யோக மாயையினால் ஈசுவரன் ஒருவிதக் கேடும் அடைவதில்லை. மயக்கம் முழுவதும் மற்றவர்களைச் சார்ந்தது. இறைவனோ சர்வக்ஞன். ஆக : 26. வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஸ்சந அர்ஜுந!-அர்ஜுனா, ஸமதீதாநி வர்தமாநாநி பவிஷ்யாணி ச-சென்ற, நிகழ்வன, வருவன, பூதாநி-ஆகிய உயிர்களையெல்லாம், அஹம் வேத-நானறிவேன், து கஸ்சந மாம் ந வேத-ஆனால் எவரும் என்னை அறிவதில்லை. பொருள் : சென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர். பகவான் மாயைக்கு அதிபதி. மாயை முற்றும் அவர் வசத்தில் இருக்கிறது. உயிர்களின் தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகியவைகள் மாயையின் காரியம். காலமும் மாயையின் சொரூபம். ஆகையினால் சர்வக்ஞனாகிய அவர் இவை யாவையும் அறிகிறார். கடந்துபோன, உயிர்கள், இப்பொழுது இருப்பவை, இனி வருபவையாகிய அனைத்தையும் அவர் அறிகிறார். ஜீவர்களோ தங்களையே தெரிந்து கொள்ளவில்லை; இனி சர்வேசுவரனை எப்படித் தெரியப்போகிறார்கள் ! பக்தர்கள் இக்கோட்பாட்டுக்கு விலக்காகின்றனர். பகவானை உபாசித்து அவனை அவர்கள் சரணடைகின்றனர். ஆகையால் அவர்கள் ஓரளவு ஈசனை அறிகிறார்கள். அவனைப்பற்றிய அறிவில்லாத மற்றவர்கள் அவனை உபாசிப்பதில்லை. ஜலம் கலந்த பாலிலிருந்து ஜலம் வேறு, பால் வேறாகப் பிரிக்கக்கூடிய அன்னப்பறவை, பாலை மட்டும் குடித்து நீரைத் தள்ளி விடுகிறது. ஆனால் மற்ற பறவைகளுக்கு இப்படிச் செய்யச் சக்தியில்லை. ஈசுவரன் மாயையோடு இரண்டறக் கலந்திருக்கின்றார். சாதாரண மனுஷ்யர்களுக்கு மாயையினின்றும் தனித்து அவரைக் காணச் சக்தியில்லை. பரமஹம்ஸர்கள் மட்டுமே மாயையை அகற்றிவிட்டுச் சுத்தாத்மாவான ஈசுவரனைப் பற்றிக்கொள்ளச் சக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள். மக்களது அக்ஞானத்துக்கும் பக்தியின்மைக்கும் காரணம் : 27. இச்சாத்வேஷஸமுத்தேந த்வந்த்வமோஹேந பாரத ஸர்வபூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப பரந்தப பாரத-பகைவரைச் சுடுவோய்! பாரதா! ஸர்கே இச்சா த்வேஷ ஸமுத்தேந-உலகில் விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த, த்வந்த்வ மோஹேந-இருமைகளின் மயக்கத்தால், ஸர்வபூதாநி ஸம்மோஹம் யாந்தி-எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன. பொருள் : விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், பாரதா, எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன, பகைவரைச் சுடுவோய். துவந்துவ மோகம் என்பது இருமை மயக்கம். நன்மை தீமை என்று இரண்டு இயல்புகள் இணைபிரியாது வாழ்க்கையில் அமைந்திருக்கின்றன. இன்பத்தைத் தருவது நன்மையென்றும் துன்பத்தைத் தருவது தீமையென்றும் கருதப்படுகின்றன. நன்மையை விரும்புவது மனதில் ஒருவித மயக்கத்தை உண்டுபண்ணுகிறது. தீமையை வெறுப்பது மற்றொருவித மயக்கத்தை உண்டு பண்ணுகிறது. விருப்பு வெறுப்பு என்னும் இரண்டு இயல்புகளும் மனிதனுக்கு நலம் செய்பவைகள் போன்று தோன்றிக் கேடு செய்துவருகின்றன. ஆக, அவைகளை ஹிதசத்ருக்கள் என்பது பொருந்தும். விருப்பு வெறுப்பு என்னும் வில்லங்கத்துக்கு உட்பட்டவர் உலக இயல்போடு கூடிய அறிவையே உள்ளபடி பெறுகிறதில்லை. ஓரம் சார்தல் என்ற குற்றத்துக்கு ஆளாகின்றனர். பின்பு, விருப்பு வெறுப்பு நீங்கப்பெற்று நடுவு நின்றார்க்கன்றி பரஞானம் (கடவுளைப்பற்றிய உணர்வு) உதிப்பதில்லை. விருப்பு வெறுப்பு என்ற பகைவர்களை வாட்டி வெல்லுதற்கு ஒவ்வொரு ஜீவனும் கடமைப்பட்டிருக்கிறான். துவந்துவங்களை வென்றவர் என் செய்கின்றனர்? 28. யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம் தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ரதா: து யேஷாம் ஜநாநாம்-எந்த ஜனங்கள், பாபம் அந்தகதம்-பாவந் தீர்ந்து, புண்ய கர்மணாம்-புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ, தே த்வந்த்வ மோஹ நிர்முக்தா:-அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து, த்ருடவ்ரதா: மாம் பஜந்தே-திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர். பொருள் : எந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர். சுயநலத்தை அகற்றும் செயல்களெல்லாம் புண்ணிய கருமங்களாகின்றன. நெடுநாள் நிஷ்காமிய கருமம் புரிந்து, மனதைத் தூயதாக்கியவர்களே உறுதியான உள்ளத்தோடு இறைவனை வணங்குகின்றனர். வெற்றி தோல்வி, லாபம் நஷ்டம் ஆகியவைகளுக்கிடையில் மாறாத பக்தி பூண்டொழுகுபவர் திட விரதமுடையவர் ஆகின்றனர். துருப்பிடித்த இரும்பு காந்தத்தின் கவர்ச்சிக்கு உட்படுவதில்லை. துரு நீங்கப்பெற்றதும் அது காந்தத்தால் இழுக்கப்படுகிறது. விருப்பு வெறுப்பு என்னும் துருப்பிடித்த உள்ளத்தில் பக்தி பெருக்கெடுப்பதில்லை. சுத்த மனதின்கண் பக்தி விரைவில் தோன்றுகிறது. ஈசுவரனை உபாசிப்பவர் அறிவது யாது? 29. ஜராமரணமோக்ஷõய மாமாஸ்ரித்ய யதந்தி யே தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்நமத்யாத்மம் கர்ம சாகிலம் யே மாம் ஆஸ்ரித்ய-என்னை வழிபட்டு, ஜரா மரண மோக்ஷõய யதந்தி-மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு முயற்சி செய்வோர், தே தத் ப்ரஹ்ம-அவர்கள் அது என்ற பிரம்மத்தையும், க்ருத்ஸ்நம் அத்யாத்மம்-ஆத்மஞான முழுதையும், அகிலம் கர்ம ச விது:-செய்கையனைத்தையும் உணர்வார். பொருள் : மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர் அது என்ற பிரம்மத்தை யுணர்வார்; ஆத்மஞான முழுதையும் உணர்வார்; செய்கையனைத்தையு முணர்வார். துவந்துவ மோகம் அல்லது இருமை மயக்கத்தில் இருப்பவர்களுக்கும் வாழ்வைப்பற்றி ஆராய்தற்குப் பெரியதொரு தூண்டுகோல் உண்டு. அவர்கள் கடவுளை அறியாதிருந்தாலும் கடவுளை நம்பாதிருந்தாலும் மக்களது வாழ்வில் உண்டாகும் மாறுதல்களை அறிந்தாக வேண்டும். மூப்பு, மரணம் ஆகிய இரண்டு மாறுதல்களும் மனிதனால் வேண்டப்படாதவைகள். வலிவிழந்து அழிந்துபட்டுப் போவதுதானா வாழ்வின் முடிவு? அரும்பெரும் செயல்களைச்செய்துவிட்டு ஏமாற்றம் அடைந்தவனாக மனிதன் இவ்வுலகைவிட்டு ஏகுதலில் பயன் யாது உளது? இப்படி யெல்லாம் விசாரித்து ஜீவிதத்தின் தத்துவத்தை உள்ளபடி அறிதற்கு மரணம் துணைபுரிகிறது. ஆக, முறையாக மூப்பையும் மரணத்தையும் ஆராய்ச்சி செய்பவர் உண்மையை அறிகின்றனர். பிரம்மத்தைப்பற்றியும், தங்களது ஆத்ம சொரூபத்தைப்பற்றியும், கர்மத்தின் முடிவான இயல்பைப்பற்றியும் அன்னவர் அறிந்தாக வேண்டும். வில்வப்பழத்தில் ஓடு, விதைகள், சதை இவைகள் எல்லாம் இருக்கின்றன. இவைகளில் எது ஒன்று மாத்திரம் வில்வப் பழத்தைக் குறிக்கும் ! ஓடு பழமல்ல; அது முக்கியமன்று என்று ஒருவன் தள்ளிவிடுகிறான். பிறகு விதைகளையும் அப்படியே அகற்றி விடுகிறான். கடைசியில் சதையைத் தனியாக எடுத்து அதுதான் வில்வப் பழமொன்று கருதுகின்றான். சிறிது சிந்தித்தபிறகு அவன் தெளிவு கொள்கிறான். சதை, விதை, ஓடு இம்மூன்றும் சேர்ந்ததே முழுப்பழம் என்று அறிய வருகிறான். அதேபோல ஒருவன் குணங்குறியற்ற நிராகாரக் கடவுளைச் சாக்ஷõத்கரித்த பிறகு நித்தியமாகிய அதே பரப்பிரம்மம் லீலாரூபமாய் இந்த உலகமாகவும் பரிணமித்திருக்கிறது என்று அறிய வருகிறான். 30. ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது: ப்ரயாணகாலேऽபி ச மாம் தே விதுர்யுக்தசேதஸ: ஸாதி பூதாதிதைவம் ஸாதியஜ்ஞம் ச-பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் கூடியவனாக, யே மாம்-யாவர் என்னை, ப்ரயாணகாலே அபி விது:-இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யுக்த சேதஸ:-யோகத்திற் பொருந்திய சித்தமுடைய, தே மாம் ச விது:-அவர்கள் என்னையே அறிகிறார்கள். பொருள் : பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் என்னை யாவர் இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னாரே அறிஞர். அதிபூதம், அதி தெய்வம், அதியக்ஞம் ஆகியவைகளைப் பற்றிய விளக்கம் அடுத்த அத்தியாயத்தில் வருகிறது. மரண காலத்தில் மனக்குழப்பமடைவது மாந்தரது இயல்பு. ஆனால் யோகிக்கு அத்தகைய குழப்பம் வருவதில்லை. இயற்கையையும் அதன்பால் பொலிகிற மேன்மையையும், அதில் நிகழும் மேலாம் செயல்களையும் முறையாக அறிபவர்க்கு தெய்வபக்தி இன்னும் அதிகரிக்கும். பக்தியும் ஞானமும் அதிகரிப்பதை மரணகாலம் விளக்குகிறது. அவ்வேளையில் பகவானுடைய சொரூப ஞானம் இன்னும் அதிகரிக்கிறது. இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே ஞானவிக்ஞானயோகோ நாம ஸப்தமோऽத்யாய: | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
எட்டாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | அக்ஷரப்ரஹ்ம யோகம்அக்டோபர் 12,2011
முற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்ற வேண்டிய பக்தி வழிகளும் அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்ஞையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் ... மேலும்
|
எட்டாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | அக்ஷரப்ரஹ்ம யோகம்
வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டு பண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். ஆகையால் பக்தர் அனைவரும் தங்கள் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டும். நான்காவது வகையான பக்தர்கள் பெறும் பரமபதம்தான் அழிவற்றது. மற்ற பலனெல்லாம் அழிவுற்றது. பக்தர்கள் இறந்தபிறகு ஆத்மா செல்லும் வழி இருவகைப்பட்டிருக்கும். ஒன்றில் சென்றால் என்றைக்கும் திரும்பி வராத வீட்டைப் பெறலாம். மற்றொன்றில் சென்றால், காலக் கிரமத்தில் திரும்பி வரவேண்டிய இடத்தை அடையலாம். சகுண பிரம்ம உபாஸனை 1-8 -மரணத்தின்பொழுது இருக்க வேண்டிய மனநிலை 9-13 -மீண்டும் பிறவாநிலை 14-16 -சிருஷ்டி கர்த்தாவின் இரவுபகல் 17-19 -மரணமிலாப் பெருநிலம் 20-22 -ஒளி மார்க்கமும் இருள் மார்க்கமும் 23-26 -யாண்டும் யோகியாயிரு 27-28. அர்ஜுந உவாச 1. கிம் தத்ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புரு÷ஷாத்தம அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே அர்ஜுந உவாச-அர்ஜுனன் செல்லுகிறான், புரு÷ஷாத்தம தத் ப்ரஹ்ம கிம்?-புரு÷ஷாத்தமா, அந்த பிரம்மம் எது? அத்யாத்மம் கிம்-ஆத்ம ஞானம் யாது? கிம் கர்ம-கர்மமென்பது யாது? அதிபூதம் கிம் ப்ரோக்தம்-பூத ஞானம் என்று எது அழைக்கப் படுகிறது? அதிதைவம் கிம் உச்யதே-தேவ ஞானம் என்பது எதனை அழைக்கிறார்கள்? பொருள் : அர்ஜுனன் செல்லுகிறான்: அந்த பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? புரு÷ஷாத்தம, கர்மமென்பது யாது? பூத ஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை? 2. அதியஜ்ஞ: கதம் கோऽத்ர தேஹேऽஸ்மிந்மதுஸூதந ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோऽஸி நியதாத்மபி: மதுஸூதந! அதியஜ்ஞ: அத்ர க:-யாகஞானம் என்பதென்ன? அஸ்மிந் தேஹே கதம் ?-இந்த தேகத்தில் எப்படி (இருக்கிறார்?) ச நியதாத்மபி:-மேலும் தம்மைத் தாம் கட்டியவர்களால், ப்ரயாணகாலே கதம் ஜ்ஞேய: அஸி-இறுதிக் காலத்திலேனும் எவ்வாறு அறியப் படுகிறாய்? பொருள் : யாகஞானம் என்பதென்ன? தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவதெங்ஙனே? இவ்விரண்டு சுலோகங்களில் அடங்கிய ஏழும் அறியத் தகுந்த பொருள்கள் ஆகின்றன. முன் அத்தியாயத்தின் இறுதியில் வந்த சுலோகங்கள் இரண்டும் இக்கேள்விகளுக்கு இடந்தருகின்றன. ஆகவே, அர்ஜுனன் அவைகளைக் கேட்கிறான். ஸ்ரீ பகவாநுவாச 3. அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோऽத்யாத்மமுச்யதே பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்ஜ்ஞித: ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ப்ரஹ்ம அக்ஷரம் பரமம்-அழிவற்ற பரம்பொருளே பிரம்மம், ஸ்வபாவ: அத்யாத்மம் உச்யதே-அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும், பூதபாவ: உத்பவகர:-உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை, விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:-இயற்கை கர்மமெனப்படுகிறது. பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது. பிரம்மம் என்பது முழுமுதற்பொருள். அது எக்காலத்திலும் உள்ளது; எங்குமிருப்பது; எக்காரணத்தைக்கொண்டும் அதனிடத்து மாறுதல் உண்டாவது கிடையாது. ஆக, அது கால தேச நிமித்தத்தில் அடிபடாதது. ஆதலால் அதற்கு அக்ஷரம் என்ற பெயர் வந்துள்ளது. இந்திரியங்களுக்கு அது எட்டாதது. ஆகையினால் அது பரமம் என்றும் பகரப்படுகிறது. அண்டங்கள் அனைத்துக்கும் பரப்பிரம்மம் இருப்பிடமாகிறது. ஒரு மனிதன் கோபிக்கும் தன்மையுடையவனாயிருக்கிறான். அது அவனுடைய ஸ்வபாவம் என்கிறோம். மற்றொருவன் யாண்டும் நேசிக்கும் தன்மையுடையவனாயிருக்கிறான். அப்படி இருப்பது அவனுடைய ஸ்வபாவம். அதே பாங்கில் பரப்பிரம்மத்தினுடைய சுபாவம் (ஸ்வபாவம்) உண்டு. எண்ணிறந்த ஜீவாத்மாக்களாகத் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொள்வது பரப்பிரம்மத்தின் ஸ்வபாவமாகும். அந்த ஸ்வபாவமே அத்யாத்மம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு தேகத்தினுள்ளும் நான் என்னும் சொல்லுக்கு இலக்காக அது இருக்கிறது. அலைகள் கடலில் ஒடுங்குவதுபோன்று இந்த ஜீவர்கள் அனைத்தும் பரப்பிரம்மத்தில் ஒன்றுபடும் தன்மையனவாம். இயற்கையின் நடைமுறை அனைத்துக்கும் கர்மம் என்பது பொதுப்பெயர். மனிதனுடைய தோற்றத்துக்கும் முன்னேற்றத்துக்கும் முதற் காரணமாயிருக்கும் கர்மமே இங்கு கர்மம் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. அது ஆக்கத்துக்கு ஏதுவாயுள்ள நற்செயலாம். ஒவ்வொரு படித்தரத்திலும் மனிதனை மேலோன் ஆக்குவது எதுவோ, அது கர்மம். ஆறு சாஸ்திரங்களில் ஒன்றாகிய பூர்வமீமாம்ஸம் கர்மத்துக்கு உயர்ந்தது ஒன்றுமில்லை என்கிறது. கர்மத்தின் மூலம் எதையும் பெறலாம் என்பது அதன் கோட்பாடு. 4. அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷஸ்சாதிதைவதம் அதியஜ்ஞோऽஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர: க்ஷரோ பாவ: அதிபூதம்-அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம், புருஷ அதிதைவதம் ச-புருஷனைப் பற்றியது தேவ ஞானம், தேஹப்ருதாம் வர:-உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! அத்ர தேஹே அஹம் ஏவ அதியஜ்ஞ:-உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம். பொருள் : அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். புருஷனைப் பற்றியது தேவ ஞானம். உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம். அதிபூதம் : தேகம் முதலிய அழியும் தன்மையுடையவைகள் இப்பெயர் பெறுகின்றன. சைதன்யத்துக்கு அன்னியமானவைகள் எனினும், இவைகள் சைதன்யத்தைச் சார்ந்திருக்கின்றன. பிராணிகள் உயிர் பெற்றிருப்பதற்கு பூதங்கள் இன்றியமையாதவைகளாம். புருஷன் : புரியிலே சயனிப்பவன் புருஷன். அகிலாண்டத்தையும் தன் இருப்பிடமாகக்கொண்டு, அதில் நீக்கமற நிறைந்திருக்கிறவன் புருஷன். அதிதெய்வம் : ஹிரண்யகர்ப்பன், எல்லார்க்கும் முதலிலே உடலை எடுத்தவன், சுயம்பு அல்லது பிரம்மதேவனை இப்பதம் குறிக்கிறது. ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு வியக்தி இருப்பது போன்று, ஜீவத்தொகுதிக்கு உள்ள வியக்தியே பிரம்மதேவன் ஆகிறது. அதியக்ஞம் :- ஜீவன் தன்னை அடியோடு இறைவனிடத்து ஆஹுதியாகக் கொடுத்துவிடும்பொழுது யக்ஞம் உச்ச ஸ்தானம் பெறுகிறது. தன்னைக் கடவுளுக்குக் கொடுத்துவிடுங்கால் ஜீவ போதம் அழிகிறது; பரபோதம் தோன்றுகிறது. ஆக, அதியக்ஞம் நடைபெறுகிற இடத்தில் பரமாத்மாவின் சான்னித்தியம் காணப்பெறுகிறது. முதிர்ந்த சாதகர்களிடத்தும் ஸித்த புருஷர்களிடத்தும் ஈசுவர சான்னித்தியம் தெளிவுறத் தென்படுவது போன்று வேறு எங்கும் அப்பாங்கில் காணமுடியாது. மானிட சரீரம் எடுத்ததன் முடிவான பலனும் இதுவே. தன்னை இறைவனுக்குக் கொடுப்பவனே உடல் எடுத்தவர்களுள் உயர்ந்தவன் ஆகிறான். எவனுடைய உடலும் உள்ளமும் பூரணமாக ஈசுவரனுக்கே அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றனவோ அவன்தான் உண்மையான ஸாது. ஸதா ஸர்வகாலமும் ஈசுவரனைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பான். அவ்வீசுவரன் எல்லா ஜீவர்களிடத்தும் இருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொண்டு எல்லாருக்கும் தொண்டு செய்வான். இவைகள்தான் உண்மையான ஸாதுவின் முக்கியமான அடையாளங்கள். 5. அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸய: ய: அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரந்-எவன் இறுதிக் காலத்தில் எனது நினைவுடன், கலேவரம் முக்த்வா ப்ரயாதி-உடம்பைத் துறந்து கிளம்புகிறானோ (இறப்போன்), ஸ: மத்பாவம் யாதி-எனதியல்பை எய்துவான், நாஸ்தி அத்ர ஸம்ஸய:-இதில் ஐயமில்லை. பொருள் : இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை. என் சொரூபம் என்பது முழுமுதற் பொருளாகிய விஷ்ணு அல்லது பரத்தினைக் குறிக்கிறது. உடலை உகுக்கும்பொழுது ஜீவன் பரத்தினைப் பாவிக்க வல்லவனாயின், அவன் மீண்டும் பிறவாது பரத்தினை அடைகிறான். இது விதேக முக்தி எனப்படும். இவ்விதிக்கு விலக்கு இல்லை. ஆகவே இதைப்பற்றி ஐயம் கொள்ளவேண்டிய அவசியமில்லை. இறைவனை நினையாது வேறு எண்ணத்தோடு உயிர் விடுகின்றவர்களது நிலை என்னாகிறது என்னும் கேள்வி பிறக்குமிடத்து : 6. யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித: கௌந்தேய! அந்தே-குந்தியின் மகனே! மரணத்தருவாயில், யம் யம் பாவம் வா ஸ்மரந் அபி-எந்தெந்த ஸ்வரூபத்தை சிந்தித்த வண்ணமாய், கலேவரம் த்யதி-உடலைத் துறக்கின்றானோ, ஸதா தத்பாவ பாவித:-எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய், தம் தம் ஏவ ஏதி-அந்த அந்த ஸ்வரூபத்தையே அடைகிறான். பொருள் : ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பானாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான். சொப்பனத்தில் தோன்றுகிற வடிவம் தன் மனதால் சிருஷ்டிக்கப்பட்டது. விலக்கமுடியாது தன் முன்னிலையில் அது நிற்பதுபோன்று சாகும் தறுவாயில் ஓர் எண்ணம் மனதில் தோன்றுகிறது. வாழ்நாளில் அது ஆழ்ந்து நெடிது எண்ணப்பட்டதோ அதுதான் அப்பொழுது முன்னணியில் வந்து நிற்கிறது. மேலும் வரும் பிறப்பானது அந்த எண்ணத்தின் ஸ்தூல அமைப்பாம். ஆக, இனி வரும் ஜன்மத்தை விரும்பியபடி மாற்றலாம். இம்மையிலும் மறுமையிலும் நலம் நாடும் ஒருவன் இடையறாது செய்ய வேண்டியது யாது எனின் : 7. தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச மய்யர்பிதமநோபுத்திர்மாமேவைஷ்யஸ்யஸம்ஸயம் தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு-ஆதலால், எல்லாக் காலங்களிலும், மாம் அநுஸ்மர:-என்னை நினையுத்ய ச-போர் செய், மயி அர்பித மந: புத்தி:-என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால், அஸம்ஸயம் மாம் ஏவ ஏஷ்யஸி-ஐயமின்றி என்னையே பெறுவாய். பொருள் : ஆதலால், எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய். போர் புரி என்கிறார் பகவான். அர்ஜுனனுடைய ஸ்வ தர்மத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு எல்லாரும் அவரவர் கடமைகளைச் செய்யவேண்டும் என்பதாகிறது. இறைவனை உபாசிக்கின்றவர்கள் பலர் உலகக் கடமைகளைப் புறக்கணிக்கின்றனர். உலக வியவகாரங்களைச் செய்கின்றவர்கள் அநேகர் கடவுளை மறக்கவும் செய்கின்றனர். ஈசுவர சிந்தனையும் தொழில் புரிதலும் ஒன்றோடொன்று ஒவ்வாது என்பது அவர்கள் எண்ணம். ஆனால் காயத்தால் கடமைகளைச் செய்துகொண்டிருக்கையில் கருத்தைக் கடவுளிடம் செலுத்தவேண்டும் என்பது கண்ணனது கோட்பாடு. இத்தகைய பயிற்சி இகபரமிரண்டுக்கும் சாதனமாகிறது. தெருப்பாடகன் ஒரு கையால் சுருதி மீட்டிக்கொண்டும், மற்றொரு கையால் ஒருவகை மேளத்தைத் தட்டிக்கொண்டும், அதே சமயத்தில் பாடிக்கொண்டுமிருக்கிறான். அதைப்போல உலக பந்தத்துக்குட்பட்ட மனிதன் தனக்கேற்பட்ட காரியங்களைக் கைகளால் செய்துகொண்டிருக்கையிலும் பகவந் நாமத்தை முழுமனதோடு சொல்லி, அவனைச் சிந்தனை பண்ணுவதை மறக்கக்கூடாது. பரத்தினைச் சாரும் வழி : 8. அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந் பார்த! ந அந்ய காமிநா-பார்த்தா! வேறிடஞ் செல்ல விரும்பாமல், யோக அப்யாஸ யுக்தேந சேதஸா-யோகம் பயிலும் சித்தத்துடன், அநுசிந்தயந்-சிந்தனை செய்து கொண்டிருப்போன் திவ்யம் பரமம் புருஷம்-தேவனாகிய பரம புருஷனை, யாதி-அடைகிறான். பொருள் : வேறிடஞ் செல்லாமலே யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை செய்து கொண்டிருப்போன் தேவனாகிய பரம புருஷனை அடைகிறான். உபாசனா மூர்த்தியைப் பற்றிய தியானத்தை வாழ்நாள் முழுதும் விடாது திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருப்பது அப்பியாச யோகமாகிறது. சூரியனைப்போன்று சுயம்பிரகாசமுடையவன் தேஜோமயமான புருஷனாகிறான். அவன் புரி என்னும் தேகத்தின்கண் எழுந்தருளியிருக்கிறான் என்பது இயம்பப்பட்டது. நாள்தோறும் அவனை ஒழுங்காக நினைக்க நினைக்க உடல் ஞாபகம் குறைந்து போகிறது. பழுத்த பழம் மேல் தோலினின்று பிரிவதுபோன்று ஆத்மபோதமானது தேக உணர்ச்சியைக் கடந்து மேலோங்குகிறது. அத்தகைய பரிபாகம் அடைந்த யோகியை மரணகாலம் நன்கு விளக்கிக் காட்டுகிறது. எப்படி எனின் : 9. கவிம் புராணமநுஸாஸிதார மணோரணீயாம்ஸமநுஸ்மரேத்ய: ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூப மாதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் 10. ப்ரயாணகாலே மநஸாசலேந பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஸ்ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம் கவிம் புராணம்-அறிவாளியானவரை, பழமையானவரை, நுஸாஸிதாரம்-எல்லாவற்றையும் ஆள்பவரை, அணோ: அணீயாம்ஸம்-அணுவைக் காட்டிலும் நுண்ணியவரை, ஸர்வஸ்ய தாதாரம்-எல்லாவற்றையும் தாங்குபவரை, ஆதித்யவர்ணம்-சூரியனின் நிறம் கொண்டிருப்பவரை, அசிந்த்யரூபம்-எண்ணுதற்கரிய வடிவுடையவரை, தமஸ: பரஸ்தாத்-அஞ்ஞான இருளுக்கு அப்பற்பட்டவரை, ய: அநுஸ்மரேத்-எவன் நினைக்கிறானோ. ப்ரயாணகாலே-இறுதிக் காலத்தில், அசலேந மநஸா-அசைவற்ற மனத்துடன், ப்ருவோ: மத்யே ப்ராணம் ஸம்யக் ஆவேஸ்ய-புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்த்யா யோகபலேந ச யுக்த:-பக்தியுடனும், யோக பலத்துடனும் (நினைத்துக் கொண்டு), தம் திவ்யம் பரம் புருஷம் உபைதி-அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான். பொருள் : கவியை, பழையோனை, ஆள்வோனை, அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனது நிறங்கொண்டிருப்பானை, எவன் நினைக்கின்றானோ, பொருள் : இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான். (9-10) இத்தகைய உயர்நிலையில் மனதையும் பிராணனையும் வைத்து, உடலை உகுப்பவனுக்கு பரம்பொருளோடு ஒன்றித்தல் அல்லது பிரம்ம நிர்வாணம் அடைதல் சாத்தியப்படுகிறது. அதற்காக அப்பியாச யோகம் உறுதியாதற்கு நாள்தோறும் சிந்தையில் வைக்கவேண்டிய இஷ்ட மூர்த்தியின் அஷ்ட குணங்கள் ஈண்டு வர்ணிக்கப்படுகின்றன. அவையாவன: 1. கவி-சர்வக்ஞன், அனைத்தையும் அறிபவன். எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் அறிவுக்கு அறிவாய், நுண்ணுணர்வாய் இருப்பதை உன்னிப்பார்க்க. 2. புராணன்-பழையவன்; பரமாத்மாவுக்கு முன்னவன் யாருமில்லை. 3. அனுசாஸிதாரம்-உலக நடைமுறை என்ன போக்கில் இருக்க வேண்டுமென்று ஆணையிடுபவன். 4. அணோரணீயாம்ஸம்-சூக்ஷ்மத்தில் மிக சூக்ஷ்மம்; நுணுக்கரிய நுண்மையன். 5. ஸர்வஸ்ய தாதாரம்-தோன்றிய யாவுக்கும் இருப்பிடமாயிருப்பவன் கானல் நீருக்குக் கானல் இருப்பிடமாவது போன்று, அவனிடத்துத் தோன்றிய உலகுக்கு அவனே இருப்பிடமாகிறான். 6. அசிந்த்யரூபம்-சித்தியடையாத சித்தத்தால் அவனது வடிவம் கிரகிக்கப்படாதது. 7. ஆதித்திய வர்ணம்-சூரியனுடைய நிறம் என்றும் மாறாதது. சூரியன் உதிப்பதுமில்லை, அஸ்தமனம் ஆவதுமில்லை. அதுபோன்று பரமாத்மா சைதன்ய வடிவினன். அவனுடைய சைதன்யத்தில் மாறுதல் ஒன்றும் ஏற்படுவதில்லை. 8. தமஸ: பரஸ்தாத்-மேகம் சூரியனை ஒரு நாளும் மறைப்பதில்லை. அவ்வாறே அக்ஞான இருள் ஆத்ம சைதன்யத்தைப் பாதிப்பதில்லை. அசல மனசு, பக்தி, யோகபலம்-இம் மூன்றும் நெருங்கிய தொடர்வுடையவைகள். எக்காரணத்தை முன்னிட்டும் தளர்வடையாத மனது அசலத்தில் பிரதிஷ்டை பெற்றதாகிறது. தூய அன்பே வடிவெடுத்துள்ள மனது பக்தியில் நிலைபெற்றதாகிறது. யோக சாதனங்களை முறையாகவும் தீவிரமாகவும் அனுஷ்டிக்கின்றவர்களுக்கு இவை அமைவதால் யோகபலம் என்று இவை பெயர் பெறுகின்றன. ஆத்ம சாதனங்களெல்லாம் ஒருவனை பலவான் ஆக்குகின்றன. வலிவுடையவனாக ஆதலே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து வருவதற்கு அறிகுறியாகும். உடல் வலிவு பெற்றுக் கொண்டு வரவர, ஒருவன் வளர்ச்சியடைகிறான். மனவலிவும் வளர்ச்சியைக் குறிக்கிறது. அறிவின் வலிவு அதிலும் மேலானது. யானைப்பாகன் யானையை அடக்கியாளுதலே அதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். சமுதாயத்தில் அறிவுடையோர் மற்றவர்களைத் தங்கள் காரியத்துக்குப் பயன்படுத்துவதை எக்காலத்திலும் எவ்விடத்திலும் காணலாம். ஆத்மபலத்தில் ஏனைய பலங்களெல்லாம் அடங்கியிருக்கின்றன. ஆத்மபலம் அடையப் பெற்றவன் மரணத்துக்கு அஞ்சுவதில்லை. மரணத்தை வென்று, அதற்கு அஞ்சாத வீரன் அஞ்சுதற்கு உரியது வேறு எதுவும் எவ்வுலகிலும் இல்லை. எதற்கும் அஞ்சாத பலவான் ஆவதே கீதையின் குறிக்கோள் என்பது இரண்டாவது அத்தியாயத்தின் துவக்கத்திலேயே விளக்கப்பட்டுள்ளது. புருவங்களுக்கு மத்தியில் பிராணனை வைத்தல் : விஷய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அக்ஞானி ஒருவனுக்கு அந்திய காலத்தில் பிராணன் நவத்துவாரங்களில் கூட்டைவிட்டுப் போகிறது. ஞானிக்கோ அது புருவத்தின் மத்தியில் நின்று, உச்சந்தலையில் பிரம்மரந்தரத்தின் வாயிலாக வெளியேகுகிறது. 11. யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விஸந்தி யத்யதயோ வீதராகா: யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே யத் அக்ஷரம் வேதவித: வதந்தி-எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர், வீதராகா: யதய: யத் விஸந்தி-விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர், யத் இச்சந்த: ப்ரஹ்மசர்யம் சரந்தி-எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், தத் பதம் தே-அந்த பதத்தைப் பற்றி உனக்கு, ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே-சுருக்கமாகச் சொல்லுகிறேன் பொருள் : எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர். எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். இயற்கை என்கிற வேதத்தை முறையாக ஆராய்ந்துபார்த்தாலும் சரி; தத்துவ தரிசனம் அடையப்பெற்ற ஆன்றோர்கள் திருவாய் மலர்ந்தருளிய வேத சாஸ்திரங்களை ஆராய்ந்து பார்த்தாலும் சரி; அவைகள் வாயிலாக உண்மையொன்று நமக்கு விளங்கும். அழியும் இயல்புடைய இப்பிரபஞ்சத்தினுள்ளே, இதற்கு ஆதாரமாக நிலை பொருளொன்று உள்ளது. அது குணம் குறியற்ற நிர்குணப் பிரம்மம். அக்ஷரம் அல்லது அழிவற்றது எனப்படுவதும் அதுவே. நிராசையில் நிலைநின்று, பிரம்மசரிய விரதத்தை முறையாக அனுஷ்டிக்கின்றவர்களே சந்யாசிகள் ஆகின்றனர். பாதரசம் பூசிய கண்ணாடியில் முகம் நன்றாகப் பிரதிபிம்பிப்பது போன்று பிரம்மசரியத்தை நன்றாக அனுஷ்டிக்கின்றவர் உள்ளத்தில் அந்தப் பிரம்மத்தைப்பற்றிய ஞானம் உண்டாகிறது. நைஷ்டிக பிரம்மசாரிகளிடத்து மேதா என்னும் நாடி உண்டாகிறது. அது பேரறிவையும் பிரம்ம ஞானத்தையும் வளர்க்க வல்லது. ஆத்ம சாதகன் ஒருவன் காமங்கொண்டவனாகப் பெண்களின் படத்தையும் கண்ணெடுத்துப் பார்க்கலாகாது. 12. ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச மூர்த்ந்யாதாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம் 13. ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் ஸர்வத்வாராணி ஸம்யம்ய-எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மந: ஹ்ருதி நிருத்ய-மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, ப்ராணம் மூர்த்நி ஆதாய-உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி, ஆத்மந: யோகதாரணாம் ஸ்தித:-யோக தாரணையில் உறுதி பெற்று. ஓம் இதி ஏகாக்ஷரம் ப்ரஹ்ம-ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே, வ்யாஹரந் மாம் அநுஸ்மரந்-ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய், ய: தேஹம் த்யஜந் ப்ரயாதி-உடம்பைத் துறந்து, பரமாம் கதிம் யாதி-பரமகதி பெறுகிறான். பொருள் : எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று, பொருள் : ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான். (12-13) யோகி ஒருவனுக்கு உடல் வாழ்க்கை முற்றுப் பெறுகிற நிலை இதுவாம். நதியானது கடலினுள் நுழைவது போன்று யோகியினுடைய ஜீவபோதம் பரபோதமாக மாறியமைகிறது. அதாவது உலக வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. அப்பொழுது பொறிவாயில்களாகிய கண், செவி, மூக்கு முதலியவைகளைப் பற்றிய உணர்ச்சி யோகிக்கு இல்லை. உடல் வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருந்தபோதும் அவைகள் முரட்டுத்தனமாய் வெளியுலகில் சஞ்சரிக்கவில்லை. தூங்கப் போவது போன்று இப்பொழுது அவைகள் தாமாக ஒடுங்கிவிடுகின்றன. அந்திவேளை வரும்போது, தான் வாசம் செய்யும் மரத்துக்குப் பறவையானது பறந்து வருவது போன்று யோகியின் மனது மரண காலத்தில் ஹிருதயத்தில் அடங்குகிறது. (யோகியர் அல்லாதவர்களுடைய உள்ளம் உலகப் பொருள்களில் பற்று வைத்துப் பரிந்து திரிகிறது.) உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயவத்தையும் விட்டு விலகுகிறது. பிரயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போன்று பிராணன் யோகியின் உச்சந்தலைக்கு வருகிறது. ஆதலால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு மிஞ்சியிருக்கும். (யோகியல்லாதவர்க்குப் பிராணன் வாயில் அல்லது மூக்கில் போவது வழக்கம்.) ஈசுவர சிந்தனை வலுத்து ஈசுவர சொரூபத்தில் மனது ஒன்றித்திருப்பது யோகதாரணையாகும். அப்பொழுது ஓம் என்ற ஓசையொன்றே ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஓம் என்னும் ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்விய சொரூபம், அலகில்லா ஜோதி, பேரின்பம், சித் அம்பலம்-இந்நிலையை யோகி அடையப்பெறுகிறான். மற்றவர்களது உடல் போன்று யோகியின் உடலும் பிணமாய் ஒதுக்கப்படுகிறது. வீடுபேறு அடைந்தது யோகியின் சிறப்பு. ஜீவனானது இவ்வுலகத்தைவிட்டுப் போகும் தருணத்தில் கடைசியாக எதைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்குமோ அதற்குரிய உடலில் மறுபடியும் வந்து பிறக்கின்றது. ஆதலால் பக்தி சாதனை மிகவும் அவசியமெனத் தோன்றுகிறது. இடையறாத அனுஷ்டானத்தினால் உலகப் பொருள்களைப் பற்றிய எண்ணம் மனதில் உண்டாகமாட்டாது. ஈசுவரனைப் பற்றிய சிந்தனையே ஆத்மாவினிடம் குடிகொள்ளும். சாகும் தறுவாயிலும் கூட அந்தச் சிந்தனை நீங்குவதில்லை. சாகும்பொழுது தானாக அந்த நிலை வருகின்றதா? இல்லை. உலகில் வாழ்ந்திருக்கும்போது சாதகன் அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்த வேண்டும். எப்படி மனதை லயப்படுத்துவது எனின் : 14. அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ: தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந: பார்த: ய:-பார்த்தா! எவன், அநந்யசேதா:-பிரிது நினைப்பின்றி, நித்யஸ: ஸததம் மாம் ஸ்மரதி-என்னை எப்பொழுதும் நினைக்கிறானோ, நித்யயுக்தஸ்ய தஸ்ய யோகிந:-அந்த நித்தியமாக யோகத்தில் இசைந்திருக்கும் யோகிக்கு, அஹம் ஸுலப:-நான் எளிதில் அகப்படுவேன். பொருள் : நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன், பார்த்தா. ஈசன் அடியார்க்கு எளியவன். நாம் முழுமனதை அவனிடத்துத் திருப்பாமையால் அவனை அடைகிறதில்லை. பொருள் உடையவர்க்கே மேலும் பொருள் சேருவது போன்று அருள் உடையவர்க்கே மேலும் அருள் வளர்கிறது. பகவானை நோக்கி நாம் ஓர் அடி வைத்தால் அவன் நம்மை நோக்கிப் பத்து அடி வருகிறான். 15. மாமுபேத்ய புநர்ஜந்ம து:காலயமஸாஸ்வதம் நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்திம் பரமாம் கதா: மாம் உபேத்ய-என்னையடைந்து, பரமாம் ஸம்ஸித்திம் கதா:-பரம சித்தி பெற்ற, மஹாத்மாந:-மகாத்மாக்கள், அஸாஸ்வதம் து:காலயம்-நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய புநர்ஜந்ம ந ஆப்நுவந்தி-மறு பிறப்பை யடைய மாட்டார். பொருள் : என்னையடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறு பிறப்பை யடைய மாட்டார். மனிதன் தன்னை எதற்குத் தகுதியுடையவனாக்குகின்றானோ அதைத்தான் அவன் பெறுகின்றான். பகவானைப் பெறத் தகுந்தவனுக்கு பகவான் தன்னைக் கொடுத்துவிடுகிறான். பகவானை அடைந்தவனுக்கோ பிறவிப்பிணியில்லை. இறைவனை அடைந்தவன் இன்பமே எந்நாளும், பிறப்பு எப்பொழுதும் மாறுபடும் தன்மையுடையது. பிறவி எது, பிறவாமை எது என்று கேட்குமிடத்து : 16. ஆப்ரஹ்மபுவநால்லோகா: புநராவர்திநோऽர்ஜுந மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே அர்ஜுந! ஆப்ரஹ்மபுவநாத்-பிரம்மலோகம் வரை, லோகா: புந: ஆவர்திந:-எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன, து கௌந்தேய-ஆனால் குந்தி மகனே! மாம் உபேத்ய-என்னை அடைந்தவனுக்கு, புநர்ஜந்ம ந வித்யதே-மறுபிறப்பு இல்லை பொருள் : அர்ஜுனா, பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை. உலகம் என்பது இங்கு ஆகுபெயர். பிரம்மலோகம் பரியந்தம் எல்லா உலகங்களுக்கும் தோற்றமும் மறைவும் இருக்கின்றன. ஆதலால் அந்த உலகங்களில் உள்ள ஜீவர்களும் பிறக்கவும் இறக்கவும் செய்கின்றனர். அத்தகைய உலகங்களில் அடையும் பேற்றுக்கு பதவி முக்தி என்று பெயர். சாலோக்யம், சாமீப்யம், சாரூப்யம் என்று அப்பதவி பலதரப்படுகிறது. இப்பதிகள் காலத்துக்கு உட்பட்டவைகள். ஆனால் கிரம முக்தியில் போகின்றவர்கள் வழிப்போக்கர்களாகப் பிரம்மலோகத்தில் தங்குகின்றனர். அவர்கள் மண்ணுலகுக்குத் திரும்பி வருவதில்லை. ஆங்கு அவர்கள் மேலும் பரிபக்குவம் அடைந்து பரத்தினைப் பெறுகின்றனர். ஆனால் இவ்வுலகிலிருந்தே நேர் பரத்தினை அடைகின்றவர்கள் விதேக முக்தி என்னும் பேரின்பவீடு அடைகின்றனர். வேகவைத்த நெல்லை பூமியில் விதைத்தால் அது மறுபடியும் பயிராக முளைக்காது. அதுபோல சித்தனான பிறகு ஒருவன் இறப்பானானால் அவன் மறு ஜன்மம் அடைவதில்லை. பிரம்மாவின் நாள்: 17. ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது: ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ ஜநா: ப்ரஹ்மண: யத் அஹ:-பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ (அது), ஸஹஸ்ர யுக பர்யந்தம்-ஆயிரம் யுகங்களைக் கொண்டது, ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தரம்-இரவும் ஆயிரம் யுகங்களைக் கொண்டது என்று, விது:-அறிகிறார்களோ, தே ஜநா: அஹோராத்ரவித:-அந்த மக்களே இரவு பகலின் தத்துவத்தை அறிந்தவர்கள். பொருள் : பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல் ஆயிரம் யுகம் ஓரிரவு. இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார். ஒரு வாரம் என்பதில் ஏழுநாள் அடங்கியிருப்பது போன்று, ஒரு சதுர்யுகத்தில் கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களும் அடங்கியிருக்கின்றன. இப்படி ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். இன்னும் ஓர் ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது ஓர் இரவு. இப்படி ஒரு பகலும் இரவும் சேர்ந்தது பிரம்மாவுக்கு ஒருநாள். 365 நாள் சேர்ந்தது ஒரு வருஷம். நூறு வருஷம் அவருடைய பூரண ஆயுள். இங்ஙனம் காலமானது காலாதீதத்தில் புரண்டோடுகிறது. காலம் எல்லையில் அடங்காதது என்பதும், இடம் அல்லது வெட்டவெளி எல்லையில் அடங்காதது என்பதும் நவீன வான சாஸ்திரம் கற்பவர்களுக்கு நன்கு விளங்கும். நமக்குத் தென்படும் இந்த அண்டம் எவ்வளவு பெரியது என்று அறியுமளவு நமது மனம் அகண்டாகார விருத்தி பெறும். நாம் பற்றுவைத்துள்ள இச்சிறு உடலும் உலகும் மிக அற்பமானவை என்பது அப்பொழுது விளங்கும். 18. அவ்யக்தாத்வ்யக்தய: ஸர்வா: ப்ரபவந்த்யஹராகமே ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே அஹராகமே-பிரம்மாவின் பகல் தொடங்கும் போது, ஸர்வா: வ்யக்தய:-எல்லா விதமான சராசர தொகுதிகளும், அவ்யக்தாத் ப்ரபவந்தி-மறைவுபட்ட உலகத்தினின்றும் வெளிப்படுகின்றன, ராத்ர்யாகமே-இரவு வந்தவுடன், தத்ர அவ்யக்த ஸம்ஜ்ஞகே ஏவ-அந்த மறைவுலகத்திலேயே, ப்ரலீயந்தே-மீண்டும் மறைகின்றன பொருள் : அவ்யக்தம்,அதாவது, மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்துவிடுகின்றன. ஒவ்வொரு ஜீவனும் உறங்கப்போகும் பொழுது அவனது உலகம் அவனது உள்ளத்தில் ஒடுங்குகிறது; விழித்து எழுங்கால் அவனது உலகமும் விரிகிறது. அதே போன்று பிரம்மாவின் உறக்க விழிப்பில் அகிலாண்டங்களும் மறையவும் தோன்றவும் செய்கின்றன. இத்தோற்றமும் ஒடுக்கமும் சிருஷ்டி, சம்ஹாரம் எனவும் பெயர் பெறுகின்றன. ஒரு பிரம்மாவுக்கு இங்ஙனம் ஆயுள் முடியும்போது அவர் கிரம முக்தியடைகிறார். ஜீவன் ஒருவன் ஜீவபோதத்தில் இருந்துகொண்டே அடையும் பதவிகளில் தலையாயது பிரகிருதி லயம் என்பது. ஒரு பிரம்மா முக்தியடைந்த பிறகு பிரகிருதி லயத்தின் மூலம் அவருக்கு அடுத்தபடி அப்பதவிக்குத் தகுதியாயிருப்பவர் அந்த ஸ்தானத்திற்கு அவரைப் பின்பற்றுகிறார். 19. பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே ராத்ர்யாகமேऽவஸ: பார்த ப்ரபவத்யஹராகமே பார்த ஸ: ஏவ அயம்-அர்ஜுனா! அதே இந்த, பூதக்ராம:-உயிரினங்களின் தொகுதிகள், பூத்வா பூத்வா அவஸ:-மீண்டும் மீண்டும் தன் வசமின்றியே, ராத்ர்யாகமே ப்ரலீயதே-இரவு வந்தவுடன் அழிகிறது, அஹராகமே ப்ரபவதி-பகல் வந்தவுடன் பிறக்கிறது. பொருள் : இந்த பூதத் தொகுதி ஆதியாகித் தன் வசமின்றியே இரவு வந்தவுடன் அழிகிறது. பார்த்தா, பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது. கரும வசப்பட்டிருப்பதால் உயிர் வகைகளுக்குத் தன்வசம் என்பது இல்லை. கரும வசத்தால் அவைகள் கற்பாந்தரத்தில் மறையவும் கற்பாரம்பத்தில் தோன்றவும் செய்கின்றன. பல கற்பங்களுக்குப் பிறகும் அவரவர் கர்மமே அவரைத் தொடர்ந்து வருகிறது. 20. பரஸ்தஸ்மாத்து பாவோऽந்யோऽவ்யக்தோऽவ்யக்தாத்ஸநாதந: ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நஸ்யத்ஸு ந விநஸ்யதி து தஸ்மாத் அவ்யக்தாத்-ஆனால் அந்த அவ்யக்தத்தை காட்டிலும், பர: அந்ய: நாதந:-மிகவும் உயர்ந்த வேறான சாஸ்வதமான, அவ்யக்த: பாவ: ய:-வெளிப்படாத தன்மையுடன் எது இருக்கிறதோ, ஸ: ஸர்வேஷு பூதேஷு நஸ்யத்ஸு-அது எல்லா உயிர்களும் அழிகையில், ந விநஸ்யதி-அழிவதில்லை. பொருள் : அவ்யக்ததினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது பிரம்மா உட்பட தோன்றியுள்ள அனைத்தும் தோன்றா நிலைக்கும் போகும்பொழுது அவ்யக்தம் என்று பெயர் பெறுகிறது. நீரானது ஆவியாகும் பொழுது கட்புலனாவதில்லை. அங்ஙனம் பிரம்மாவின் சிருஷ்டி மறையும்பொழுது புலன்களுக்குத் தென்படுவதில்லை; அவித்தையில் மறைந்து கிடக்கின்றது. மற்றொரு அவ்யக்தம் இதற்கு அன்னியமாக, பரமாக, ஸநாதனமாக இருக்கிறது. அது இந்திரியங்களுக்கு எப்பொழுதுமே எட்டுவதில்லை. வந்துள்ள உயிர்களுக்குப் போக்கு இருக்கிறது. அதீத அவ்யக் தமோ போக்கும் வரவும் இல்லாதது. என்றென்றைக்கும் அது தன்மயமாயிருக்கிறது. அதன் சொரூபம் எத்தகையது என்று மேலும் ஆராயுமிடத்து: 21. அவ்யக்தோऽக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம் யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம அவ்யக்த: அக்ஷர: இதி உக்த:-அவ்யக்தம் அழிவற்றதெனப்படும், தம் பரமாம் கதிம் ஆஹு:-அதனையே பரமகதி யென்பர், யம் ப்ராப்ய ந நிவர்தந்தே-எதை எய்திய பின் மீள்வதில்லையோ, தத் மம பரமம் தாம-அது என்னுடைய பரம பதம் (உயர்ந்த வீடு). பொருள் : அவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம். அவ்யக்தம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாதது. அக்ஷரம் என்றால் பழுதுபடாதது. பரப்பிரம்மம் எப்பொழுதுமே இந்திரியங்களுக்கு எட்டாததாகவும் பழுதுபடாததாகவும் இருக்கிறது. தோன்றா நிலையிலுள்ள பிரகிருதியும் அவ்யக்தம் என்று சொல்லப்படுகிறது. பரப்பிரம்மமும் அவ்யக்தமென்று சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டுக்குமுள்ள பொருள் வேற்றுமையைக் கருத்தில் வைக்க வேண்டும். பிரகிருதி க்ஷரம் அல்லது அழியும் தன்மையது. பிரம்மமோ அக்ஷரம். பிரகிருதியில் ஒடுங்குபவைகள் திரும்பவும் தோன்றுகின்றன. பிரம்மத்தில் ஒடுங்குபவைகள் தோற்றத்துக்குத் திரும்பி வருவதில்லை. பிரம்மத்துக்கு ஒப்பானது வேறு எதுவும் இல்லையாதலால், அது பரமபதம் எனப்படுகிறது. அதை அடையும் வழி: 22. புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம் பார்த பூதாநி யஸ்ய அந்த: ஸ்தாநி-அர்ஜுனா எவனுள்ளே எல்லா உயிர்களும் இருக்கின்றனவோ, யேந இதம் ஸர்வம் ததம்-எவனால் இவை எல்லாம் நிறைந்திருக்கின்றதோ, ஸ: பர: புருஷ: து-அந்த பரம புருஷன், அநந்யயா பக்த்யா-வேறிடஞ் செல்லாத பக்தியால், லப்ய-அடையப் படுவான். பொருள் : வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா, அந்தப் பரம புருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான். அனன்ய பக்தி என்பது வேறு ஒன்றையும் நினையாது அவனிடத்திலேயே செலுத்தும் பக்தி. இதை ஆத்ம சொரூபானு சந்தானம் என்பர். கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. ஆனால் அம்மலைகளுள் கடல் ஊடுருவிப் பாய்ந்து வியாபகமாயில்லை. ஸ்தூல வஸ்துவுக்கு வியாபகமும், தன்னகத்து அனைத்தையும் அடக்கும் வல்லமையும் இல்லை. ஆகாசத்தில் ஏனைய பூதங்களெல்லாம் அடங்கியிருக்கின்றன. மண், புனல், தீ, காற்று ஆகிய பூதங்களில் ஆகாசமானது நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறது. அங்ஙனமே சிதாகாசமாகிய பரம்பொருளில் சரம், அசரம் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. மேலும் அந்த சிதாகாசம் ஒன்றே எல்லாப் பொருள்களுக்கும் பிரிவற நிறைந்திருக்கின்றது. கடவுள் எல்லாரிடத்திலும் இருக்கிறார். ஆனால் எல்லாரும் கடவுளிடத்து இல்லை. 23. யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகிந: ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப பரதர்ஷப-பரதர் ஏறே! யத்ர காலே ப்ரயாதா யோகிந:-எக்காலத்தில் இறப்பதால் யோகிகள், அநாவ்ருத்திம் ச ஆவ்ருத்திம் ஏவ யாந்தி-மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, தம் காலம் வக்ஷ்யாமி-அக்காலத்தைச் சொல்லுகிறேன். பொருள் : யோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன். 24. அக்நிர்ஜ்யோதிரஹ: ஸுக்ல: ஷண்மாஸா உத்தராயணம் தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநா: அக்நி: ஜ்யோதி: அஹ:-தீ, ஒளி, பகல், ஸுக்ல: உத்தராயணம் ஷண்மாஸா-சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள், தத்ர ப்ரயாதா ப்ரஹ்மவித: ஜநா:- இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள், ப்ரஹ்ம: கச்சந்தி-பிரம்மத்தை அடைகிறார்கள். பொருள் : தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை யடைகிறார்கள். 25. தூமோ ராத்ரிஸ்ததா க்ருஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயநம் தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே தூம: ராத்ரி: ததா க்ருஷ்ண:-புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயநம் ஷண்மாஸா -தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள் இவற்றில் இறக்கும், தத்ர யோகீ சாந்த்ரமஸம் ஜ்யோதி ப்ராப்ய-அந்த யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து, நிவர்ததே-மீளுகிறான். பொருள் : புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான். 26. ஸுக்லக்ருஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: ஸாஸ்வதே மதே ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந: ஹி ஜகத: ஏதே ஸுக்ல க்ருஷ்ணே கதீ-ஏனெனில் உலகத்தில் இந்த ஒளி வழியும், இருள் வழியும், ஸாஸ்வதே மதே-சாசுவதமாகக் கருதப்பட்டன, ஏகயா அநாவ்ருத்திம் யாதி- இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான், அந்யயா: புந: வர்ததே-மற்றொன்று மீளும் பதந் தருவது. பொருள் : உலகத்தில் எந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந் தருவது. 24,25,26 இம்மூன்று சுலோகங்களின் உட்கருத்து சிந்தனைக்குரியது. மரணத்தின் வாயிலாக மறுபிறப்புக்குப் போம் ஜீவர்கள் தேவயானம், பித்ருயானம் என்னும் இரண்டு மார்க்கங்களில் செல்லுகின்றனர். அவைகளை முறையே ஜோதிர் மார்க்மென்றும் தூம மார்க்கமென்றும் பகர்வதுண்டு. முந்தையது ஒளி நிறைந்தது; பிந்தியது இருள் சூழ்ந்தது. ஒன்று படிப்படியாக ஜீவனை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவல்லது. மற்றது மனிதனை நெடுங்காலம் இடைநிலையிலும் கடைநிலையிலும் வைத்துவிடுகிறது. இனி, இவ்விரண்டு மார்க்கங்களுக்கு இந்தச் சுலோகங்களில் வந்துள்ள பதங்களுக்கு வாச்சியார்த்தம் எடுத்துக்கொண்டால் குறைபாடுகள் பல தென்படும். எப்படியென்று ஆராய்ந்து பார்ப்போம். அக்னி, ஜோதி நிறைந்த சூழ்நிலையில் மரணமடைபவன் மேன்மையடைகிறான். புகையில் மூடுபட்டு மறைபவன் கீழ்மையடைகிறான். ஒருவன் உயிர் துறக்கும்போது வீட்டில் கொழுந்துவிட்டு எரியும் அக்னியும் மின் விளக்கு ஜோதியும் நிறைந்திருக்கும்படி சுலபத்தில் செய்துவிடலாம். ஆனால் அதை முன்னிட்டு மறுபிறப்பில் மேன்மை வந்தமைகிறது என்பது யுக்திக்கும் அனுபவத்துக்கும் சிறிதும் பொருந்தாது. அடுத்தபடியாகப் பகலில் சாகின்றவனுக்கு ஜோதிர் மார்க்கமென்றும் இரவில் சாகின்றவனுக்கு தூம மார்க்கமென்றும் சொல்லப்படுகிறது. இன்றைக்கு ஆகாய விமானத்தின் துணைகொண்டு என்றென்றும் சூரியன்தென்படுகிற இடங்களில் சென்று வசிக்கலாம். பின்பு, அதை முன்னிட்டு மேலாம் பிறவி வருகிறது என்பது பொருந்தாது. வளர்பிறையில் வரும் சுக்ல பக்ஷம் மேன்மைக்குரியது; தேய்பிறையில் வரும் கிருஷ்ணபக்ஷம் கீழ்மைக்குரியது. இந்த ஒரு சூழ்நிலையை வெல்ல நவீனத்தில் அமைந்துள்ள உபாயம் எதுவும் உதவாது. இனி, உத்தராயணம் சூரிய வெளிச்சம் நிறைந்தது; தக்ஷிணாயனம் இருள் நிறைந்தது. ஆனால் ஆகாய விமானத்தின் துணைகொண்டு மனிதன் தக்ஷிணாயன காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் போய்விடுவானானால், அதே தக்ஷிணாயனம் அவனுக்குப் புண்ணிய காலம் ஆய்விடும். ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொழுது ஆங்கு அதிகமாக இருக்கிறது. ஆக மனிதன் அடையும் மேன்மையும் கீழ்மையும் மரணத்தின்போது அவனுக்கு அமையும் காலத்தையும், இடத்தையும், சூழ்நிலையையும் முன்னிட்டு அல்ல என்பது வெளியாகிறது. வெளிச்சத்துக்கு அறிகுறியாகும் காலம், இடம்; இருளுக்கு அறிகுறியாகும் காலம், இடம் ஆக இருவகையாக அவை பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டும் ஆத்ம தத்துவத்துக்கு ரூபகமாக அமைந்தவையாகும். படிப்படியாக மேல் நிலைக்குப் போகும் ஜீவன் ஆத்மப் பிரகாசம் அடைகிறது. முன்னேற்றமடையாது இருந்தபடி இருக்கும் ஜீவனும் படிப்படியாகக் கீழ் நிலைக்குப் போகும் ஜீவனும் அக்ஞான இருளில் மறைபவையாகின்றன. வாழ்நாளில் ஒரு ஜீவன் அடைந்துள்ள மேன்மையை அல்லது கீழ்மையை அவனது மரணம் விளக்கும். அணையும் போது தீபம் அதிகம் சுடர் விடுவதுண்டு. நல்லார் அங்ஙனம் உடல் நீங்கும்போது பிரக்ஞை தெளிவடைவதுண்டு. பிரக்ஞையின் தெளிவுக்கு ஏற்றவாறு அதை அக்னி, ஜோதி, பகல், சுக்ல பக்ஷம், உத்தராயணம் என்று யோகிகள் இயற்கையோடு ஒப்பிட்டு வகைப்படுத்தினார்கள். அதேபாங்கில் பிரக்ஞையின் மறைவுக்கு ஏற்றபடி புகை, இரவு, கிருஷ்ணபக்ஷம், தக்ஷிணாயனம் என்று அவர்கள் வகைப்படுத்தினார்கள். பல ஜன்மாந்தரங்களில் மேலும் மேலும் ஆத்மஞானப் பிரகாசம் அடைபவர் மேலோர், மற்றவர்கள் கீழோர் என்பது இதன் கோட்பாடாகும். 27. நைதே ஸ்ருதீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஸ்சந தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந பார்த! ஏதே ஸ்ருதீ ஜாநந்-பார்த்தா! இவ் வழிகளிரண்டையும் உணர்ந்த, கஸ்சந யோகீ முஹ்யதி-எந்த யோகியும் மயக்கமுறுவதில்லை, தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு-ஆதலால் எப்போதும் யோகத்தில், யோக யுக்த: பவ-யோகத்தில் கலந்திரு. பொருள் : இவ் வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுன, எப்போதும் யோகத்தில் கலந்திரு. குறிப்பிட்ட வேளைகளில் மட்டும் யோக சாதனம் பயிலுதல் என்பதன்றி, எத்தொழிலைச் செய்தாலும், யாதவஸ்தைப்பட்டாலும் அவைகளுக்கெல்லாம் இடையில் யோகபரனாய். ஸகஜ நிஷ்டையில் இருப்பவன் மேலே சொல்லிய இரண்டு வழிகளில் சுக்ல கதி அல்லது ஜோதிர் மார்க்கத்தில் செல்பவனாகின்றான். கப்பல் எத்திசையில் போய்க்கொண்டிருந்தாலும் அதில் உள்ள திசைகாட்டி முள் வடதுருவத்தையே நோக்கி நிற்கிறது. அங்ஙனம் மனிதன் எதைச் செய்துகொண்டிருந்தாலும் அவனது மனது யாண்டும் சர்வேசுவரனிடத்தே நிலைத்திருக்கட்டும். 28. வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ தாநேஷு யத் புண்யபலம் ப்ரதிஷ்டம் அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம் யோகீ இதம் விதித்வா-யோகி இதனை யறிவதால், வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு தாநேஷு ச-வேதங்களிலும், யாகங்களிலும், தவங்களிலும், தானங்களிலும், யத் புண்யபலம் ப்ரதிஷ்டம்-எந்த புண்ணியத்தின் பயன் சொல்லப் பட்டிருக்கிறதோ, தத் ஸர்வம் அத்யேதி-அவை அனைத்தையும் கடந்து செல்கிறான், ச ஆத்யம் பரம் ஸ்தாநம் உபைதி-மேலும் ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான். பொருள் : இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் அர்ஜுனன் கேட்ட ஏழு கேள்விகளுக்கும் விடைகளாக வந்த இதை அறிபவன் அக்ஷர பிரம்மத்தை அறிபவன் ஆகிறான். முறையாக வேதங்களை ஓதி, யாகங்களைச் செய்து, தவம் புரிந்து தானத்தை வழங்குவதினின்று விளையும் புண்ணிய கர்மபலனாகிய சுவர்க்காதி பதவிகளைப் பெறுவதைவிட மேலானதாகிற பிரம்ம சாக்ஷõத்காரம் அந்த யோகிக்கு ஏற்படுகிறது. இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே அக்ஷரப்ரஹ்மயோகோ நாம அஷ்டமோ அத்யாய: பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் அக்ஷரப்ரஹ்ம யோகம் என்ற எட்டாம் அத்தியாயம். | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
ஒன்பதாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்அக்டோபர் 12,2011
இங்கு வித்தைகளுள் சிறந்ததும், ரகசியங்களுள் மேலானதுமான பக்தி யோகத்தின் சொரூபமும் மேன்மையும், பலன் முதலானவையும் கூறப்படுகின்றன. பக்தி யோகத்தில் இறங்குவோன், அதில் முழு ... மேலும்
|
ஒன்பதாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
மற்ற விஷயங்களைத் துறந்து கடவுளையே தியானம் செய்பவன் எத்தகைய கொடிய பாவியாயினும் நல்லோன் என்றே கருதப்பட வேண்டும். கடவுளிடத்திலேயே மனத்தைச் செலுத்த வேண்டும். கடவுளையே நேசிக்க வேண்டும். கடவுளையே வணங்க வேண்டும். இப்படி இருப்பவன் கடவுளையே அடைவான். சகுண பிரம்மத்துக்கும் பிரகிருதிக்குமுள்ள தொடர்வு 1-10 -அறிவிலிகளது தரம் 11-12 -பக்தர்களது போக்கு 13-15 -அனைத்துமாயிருப்பவன் ஈசன் 16-19 -போகப்பிரியர்களின் பாங்கு 20-21 -வந்தனைக்கேற்ற விளைவு 22-25 -இறைவணக்கம் மிக எளிது 26-28 -நடுநிற்கும் இறைவன் இறைஞ்சுவார்க்கு எளியன் 29-34. ஸ்ரீபகவாநுவாச 1. இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத் ஸ்ரீபகவாநுவாச-கடவுள் சொல்லுகிறான், யத் ஜ்ஞாத்வா து-எதை தெரிந்து கொள்வதாலேயே, அஸுபாத் மோக்ஷ்யஸே-தீமையில் இருந்து (துக்கவடிவமான உலகியலில் இருந்து) விடுபடுவாயோ, குஹ்யதமம்-ரகசியமான விஞ்ஞானத்துடன் கூடிய, இதம் ஜ்ஞாநம்-இந்த ஞானத்தை, அநஸூயவே தே-அசூயை யற்றவனாகிய உனக்கு, விஜ்ஞாநஸஹிதம் ப்ரவக்ஷ்யாமி-விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். பொருள் : கடவுள் சொல்லுகிறான்: அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய். அசுபம் என்பது பிரபஞ்ச வாழ்க்கையிலிருந்து வருகிற கேடு. அக்ஞானமே அசுபம் அனைத்துக்கும் காரணமாகும். வெறும் வாசாஞானமல்லாது சுவானுபவத்தோடு கூடிய ஞானமே கேடுகளையெல்லாம் நீக்கவல்லது. அசூயை அல்லது பொறாமை என்பது மற்றவர் அடையும் மேன்மையைக்கண்டு சகிக்கமுடியாதிருப்பதாம். ஆனால் மற்றவரை மகிழ்ச்சியோடு மேன்மைப்படுத்துகிற அளவு, மற்றவர் முன்னேற்றத்தில் முயற்சி கொள்ளுமளவு ஒருவன் தானும் மேன்மையடைகிறான். பொறாமையானது மனத்தகத்துப் பெரு நோயாயமைந்து மனிதனது சிறப்பையெல்லாம் அழித்துவிடுகிறது. இம்மையிலும் மறுமையிலும் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாயிருப்பது பொறாமை. அர்ஜுனன் பொறாமை யென்னும் நோய்க்கு இடங்கொடாத நல்ல மனமுடையவனாதலால் அவன் ஞான விக்ஞானத்துக்குத் தகுதியுடையவனாகிறான். அந்த ஞானத்தின் சிறப்பு வருமாறு : 2. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம் ப்ரத்யக்ஷõவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம் இதம்-இது, ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரம் உத்தமம்-ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது, ப்ரத்யக்ஷõவகமம்-கண்ணெதிரே காண்டற்குரியது, தர்ம்யம்-அறத்துக் கிசைந்தது, ஸுஸுகம் கர்தும்= செய்தற்கு மிக எளிது, அவ்யயம்-அழிவற்றது. பொருள் : ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது. கண்ணெதிரே காண்டற்குரியது. அறத்துக் கிசைந்தது. செய்தற்கு மிக எளிது. அழிவற்றது. யோகங்களுள் சிறந்தது ராஜயோகம் என்று பெயர் பெறுகிறது. அங்ஙனம் வித்தைகளுள் பிரம்மவித்தைக்கு ராஜவித்தை என்ற பெயர் வருகிறது. ராஜ மார்க்கத்தில் (பொது வழியில்) எல்லார்க்கும் செல்ல உரிமையிருப்பதுபோன்று பிரம்ம ஞானத்துக்கு ஜீவர்கள் எல்லார்க்கும் உரிமையுண்டு. ஆனால் பொறாமை முதலிய தோஷங்களினின்று மனபரிபாகம் அடையாதவர்களுக்கு இது ராஜ குஹ்யம். அதாவது ராஜ ரகசியம் அல்லது மிக மறைபொருள் ஆய்விடுகிறது. நீரானது உடலைத் தூயதாக்குவது போன்று பிரம்ம ஞானம் மனிதனைத் தூயவனாக்குகிறது. பிரம்ம ஞானி தானே பிரம்மம் ஆகிறபடியால், தூய்மை தருதலில் இது தலைசிறந்தது (உத்தமம் பவித்ரம்) ஆகிறது. துக்கத்துக்கு ஏதுவான கனவு ஒன்றை ஒரு மனிதன் காண்கிறான். அங்ஙனம் கனவு கண்டுகொண்டிருக்கும் போது, அவனது துக்கத்துக்கு நிவர்த்தி கிடையாது. ஆனால் விழிப்பு என்னும் ஞானம் உதயமானால் கனவில் தோன்றிய துன்பமெல்லாம் முற்றும் அடிபட்டுப் போகிறது. பிரம்ம ஞானம் என்னும் விழிப்பு மனிதனுக்கு உண்டானால் பிறவிப் பெருங்கடலில் அவனுக்கு உண்டாகும் துன்பத்தை யெல்லாம் அது துடைத்துத் தள்ளுகிறது. இந்த ஞானத்துக்கு ஒப்ப மனிதன் வாழ்வானாகில், அவனுடைய செயலெல்லாம் தர்ம மயமாகிறது. நிலத்தில் துள்ளும் மீன் சேற்றினுள்ளும் நீரினுள்ளும் செல்வது எளிதாவது போன்று, தர்மத்தைக் கடைப்பிடித்து ஞானத்தை அடைபவனுக்குத் தன் சொரூபமாகிய பேரானந்தம் கிட்டுகிறது. ஆக, அது (கர்த்தும் ஸுஸுகம்) செய்தற்கு மிக எளியதாகிறது. எளிதில் அகப்பட்டது எளிதில் போய்விடுமோ என்ற ஐயம் வரலாம். ஆனால் மனிதன் அடைந்த பிரம்ம ஞானம் (அவ்யயம்) அழிவற்றது; காலத்தையும் கடந்த பெரு நிலையாம் அது. ஆனால் யாருக்கு அது கிட்டுவதில்லை எனின் : 3. அஸ்ரத்ததாநா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி பரந்தப-பகையைச் சுடுவோய், அஸ்ய தர்மஸ்ய-இந்த அறத்தில், அஸ்ரத்ததாநா: புருஷா-நம்பிக்கையற்ற மனிதர், மாம் அப்ராப்ய-என்னை அடையாமல், ம்ருத்யு ஸம்ஸார வர்த்மநி-நரக சம்சாரப் பாதைகளில், நிவர்தந்தே-மீளுகின்றனர். பொருள் : பகையைச் சுடுவோய், இல்லறத்தில் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக சம்சாரப் பாதைகளில் மீளுகின்றனர். நிலத்திலே துள்ளி வீழ்ந்து வருந்துகின்ற மீனானது அருகில் நீர் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளாவிட்டால், அந்நீருக்குள்ளே அது திரும்பித் துள்ளிக் குதிக்காவிட்டால், அது படும் துயரத்துக்கு முடிவில்லை. மனிதனுக்கு சர்வதுக்க நிவர்த்தி செய்வது பரஞானம். அதற்கு ஏதுவான நெறியைச் சிரத்தையுடன் பின்பற்றுதல் வேண்டும். அப்படிப் பின்பற்றாதவர்கள் பிறவிப் பிணியில் வருந்துவார்கள். 4. மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா மத்ஸ்தாநி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்தித: அவ்யக்தமூர்திநா-அவ்யக்த வடிவாய், மயா-என்னால், இதம் ஸர்வம் ஜகத்-இந்த அனைத்து உலகம் முழுவதும், ததம்-சூழ்ந்திருக்கிறேன், ஸர்வபூதாநி மத்ஸ்தாநி-பூதங்களெல்லாம் என்னிடத்தே நிலைபெற்றன, அஹம் தேஷு அவஸ்தித:-நான் அவற்றில் நிலை பெற்று இருக்கவில்லை. பொருள் : அவ்யக்த வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என்நிலை. கடலில் அலைகளெல்லாம் அடங்கப்பெற்றிருப்பது போன்று பிரம்மா முதல் புல் பரியந்தம் உள்ள பூதங்களெல்லாம் பரமாத்மாவில் அடங்கியிருக்கின்றன. பாத்திரத்தில் நீர் இருப்பது போன்று பரமாத்மா உயிர்களிடத்து அடங்கப்பெறாதவர். ஆகாசம் போன்று அனைத்திடத்தும் ஊடுருவி அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார். 5. ந ச மத்ஸ்தாநி பூதாநி பஸ்ய மே யோகமைஸ்வரம் பூதப்ருந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந: பூதாநி ந மத்ஸ்தாநி ச-பூதங்கள் என்னுள் நிலை பெறுவன அல்ல, மே ஐஸ்வரம் யோகம் பஸ்ய-இந்த ஈஸ்வரத் தன்மையுடைய யோக சக்தியை பார், பூதப்ருத் ச-பூதங்களைத் தாங்குபவனும், பூதபாவந: ச-பூதங்களை உண்டாக்குகிறவனாக இருந்த போதிலும், மம ஆத்மா-என் ஆத்மா, பூதஸ்த: ந-உயிரினங்களில் நிலை பெற்று இருப்பதில்லை. பொருள் : (மற்றொரு வகையால் நோக்குமிடத்தே) பூதங்கள் என்றும் நிற்பனவுமல்ல, என் ஈசுவர யோகத்தின் பெருமையை இங்குப் பார், பூதங்களைத் தரிக்கிறேன். அவற்றுட்பட்டேனல்லேன். என் ஆத்மாவில் பூத சிந்தனை இயல்கிறது. அத்தியாயம் ஏழு, சுலோகம் பன்னிரண்டுக்குத் தந்துள்ள விளக்கத்தைப் பார்க்கவும். பிரம்மம் அசங்கனாதலால் ஒன்றிலும் பற்றுவைப்பதில்லை. 6. யதாகாஸஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹாந் ததா ஸர்வாணி பூதாநி மத்ஸ்தாநீத்யுபதாரய ஸர்வத்ரக: மஹாந் வாயு:-எங்கும் செல்கின்ற, பெருங்காற்று, யதா நித்யம் ஆகாஸஸ்தித:-எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, ததா ஸர்வாணி பூதாநி-அவ்வாறே எல்லா பொருட்களும், மத்ஸ்தாநீ இதி உபதாரய-நிலைபெற்றனவென்று தெரிந்துகொள். பொருள் : எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்துகொள். வாயு முதலிய நான்கு பூதங்கள் ஆகாசத்தில் நிலைத்திருந்தாலும் அதில் அவைகள் ஒட்டுவதும் இல்லை, ஒரு மாறுதலையாவது உண்டுபண்ணுவதும் இல்லை. அங்ஙனம் பிரம்மத்தின் மாயாகாரியங்களெல்லாம் பிரம்மத்தில் நிலைத்திருந்தும் அதன் கண் ஒரு விகாரத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ஆகாச தத்துவத்தைத் தெரிந்துகொள்ளுதல் பிரம்ம தத்துவத்தைத் தெரிந்துகொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும் கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை. பரம்பொருளும் அந்தக் காற்றைப் போன்றது. 7. ஸர்வபூதாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ விஸ்ருஜாம்யஹம் கௌந்தேய-குந்தி மகனே, கல்பக்ஷயே ஸர்வபூதாநி-கல்ப முடிவில் எல்லா உயிர்களும், மாமிகாம் ப்ரக்ருதிம் யாந்தி-என் இயல்பை எய்துகின்றன, கல்பாதௌ தாநி புந:-மறுபடி கல்பத்தின் துவக்கத்தில் அவற்றை மீண்டும், அஹம் விஸ்ருஜாமி-நான் படைக்கிறேன். பொருள் : குந்தி மகனே, கர்ப்ப நாசத்தால் எல்லா உயிர்களும் என் இயல்பை எய்துகின்றன. மறுபடி கர்ப்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன். பிரம்மாவுக்கு இரவு வரும்பொழுது பிரளயம் அல்லது கற்பத்தின் முடிவு ஏற்படுகிறது. அவருக்குப் பகல் ஆரம்பிக்கும் பொழுது சிருஷ்டி அல்லது கற்பத் துவக்கம் ஏற்படுகிறது. பிரகிருதி என்பது முக்குண மயமான அபர பிரகிருதியாம். 8. ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ருஜாமி புந: புந: பூதக்ராமமிமம் க்ருத்ஸ்நமவஸம் ப்ரக்ருதேர்வஸாத் ப்ரக்ருதே: வஸாத்-இயற்கையின் வசத்தால், அவஸம் இமம் க்ருத்ஸ்நம் பூதக்ராமம்-தன் வசமிழந்த இந்த அனைத்து உயிர் தொகுதிகளையும், புந: புந:-திரும்ப திரும்ப, ஸ்வாம் ப்ரக்ருதிம் அவஷ்டப்ய- என்னுடைய இயற்கையின் வசத்தால் ஏற்றுக் கொண்டு, விஸ்ருஜாமி-படைக்கிறேன். பொருள் : என் சக்தியில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் பூதத் தொகுதி முழுவதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன். அஷ்டப்ய என்பது உயிர் ஓங்கச் செய்து அல்லது அருளுடையதாகச் செய்து என்று பொருள்படுகிறது. பூமியைச் சாரமுடையதாகச் செய்கிறான் கிருஷிகன். தூங்கினவன் விழித்தெழுந்து, தன் உடலில் ஒவ்வொரு உறுப்பையும் முறுக்கி உறுதியாக்குகிறான். மாணாக்கனது உள்ளத்தினின்று கல்வி கிளம்பும்படி ஆசிரியன் துணைபுரிகின்றான். இச் செயல்கள் யாவும் அவஷ்டம்பனம் என்னும் சொல்லுக்குப் பொருளாகின்றன. இங்ஙனம் ஈசுவரனுடைய முன்னிலையில் பிரகிருதியாகிய தாய்க்கு வல்லமை அல்லது அருள் சுரக்கிறது. அவ் அருளைக்கொண்டு அவள் உலகனைத்தையும் இயக்குகின்றான். அது ஈசன் செயல் எனப்படுகின்றது. ஆனால் அதைப்பற்றிய உண்மை என்னவெனில் : 9. ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய உதாஸீநவதாஸீநமஸக்தம் தேஷு கர்மஸு தநஞ்ஜய-தனஞ்ஜயா! தேஷு கர்மஸு-அந்த தொழில்களில் (கர்மங்களில்), அஸக்தம்-பற்றில்லாமலும், தாநி கர்மாணி-அந்த செயல்கள், உதாஸீநவத் ஆஸீநம் ச-(ஒதுங்கி) மேற்பட்டவன் போல் இருக்கின்ற, மாம் ந நிபத்நந்தி-என்னை கட்டுப் படுத்துவதில்லை. பொருள் : தனஞ்ஜயா, என்னை அத்தொழில்கள் தளையுறுத்தா. அவ்வினைகளிடையே நான் மேற்பட்டவன் போல் அமர்ந்திருக்கிறேன். ஜகத் சிருஷ்டியில் நானாவகைக் கர்மங்களும் அடங்கியிருக்கின்றன. அவைகளில் பற்றுவிட்டவரே உதாஸீனர் ஆகின்றார். ஈசுவரன் அந்நிலையில் நிலைத்திருப்பதால் அவருடைய பிரகிருதி செய்யும் இத்தனைவிதக் கர்மங்களும் அவரைக் கட்டுப்படுத்துவதில்லை. தான் கர்த்தாவென்று ஈசுவரன் அஹங்கரிக்காதிருப்பது போன்று, சாதகன் புரியும் வெவ்வேறு கர்மங்களுக்கிடையே தான் கர்த்தாவென்ற உணர்ச்சி நீங்கப்பெற்று நடுநிலையில் இருப்பானாகில் இருள் சேர் இருவினையும் அவனை வந்து சாரா. நான் என்பது இறந்தால் துன்பமெல்லாம் தொலையும். ஈசுவர கிருபையால் என் செயலாலாவது யாதொன்றுமில்லை என்னும் கொள்கை மனதில் ஸ்திரமாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்த ஜன்மத்திலேயே முக்தியுண்டாகும். 10. மயாத்ய÷க்ஷண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம் ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே கௌந்தேய-குந்தி மகனே,அத்ய÷க்ஷண மயா-தலைவனான என்னால் (என் மேற்பார்வையில்), ப்ரக்ருதி: ஸசராசரம்-ப்ரக்ருதியானது அசைவன, அசையாதன எல்லாம், ஸூயதே-தோற்றுவிக்கிறது. அநேந ஹேதுநா-இந்த காரணத்தால், ஜகத் விபரிவர்ததே-உலகமே சுழல்கிறது. பொருள் : என் மேற்பார்வையில் சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே, இந்த ஏதுவால் உலகமே சுழல்கிறது. 7 முதல் 10 வரை நான்கு சுலோகங்களில் உலக நடைமுறைக்கும் தமக்கும் உள்ள தொடர்வு எத்தகையது என்பதை பகவான் நன்கு விளக்குகிறார். அதற்கு அருந்ததி நியாயம் கையாளப்படுகிறது. அதாவது ஒரு மரம், அதில் ஒரு கிளை, அதற்குப் பின் வானத்தில் ஒரு பெரிய மீன், அதற்குப் பக்கத்தில் உள்ள சிறு மீன்கள், அவைகளுக்கிடையில் நுண்ணியதாகத் தென்படுவது அருந்ததி நக்ஷத்திரம். இங்ஙனம் தெரிந்த பருப்பொருளிலிருந்து தெரியாத நுண்பொருளுக்குப் போதல் அருந்ததி நியாயமாகும். 7-வது சுலோகத்தில் நான் சிருஷ்டிக்கிறேன் என்கிறார்; 8-வது சுலோகத்தில் பிரகிருதியைக்கொண்டு அக் காரியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்; 9-வது சுலோகத்தில் நடுவுநிலை வகிக்கின்ற தம்மைப் பிரகிருதியின் அச்செயல் தளைப்பதில்லை என்கிறார்; 10-வது சுலோகத்தில் தாம் சாக்ஷியாய் வீற்றிருந்து கண்காணிக்கையில், தமது சன்னிதான விசேஷத்தால் பிரகிருதிக்கு ஜகத் காரியங்களைச் செய்யும் வல்லமை வந்தமைகிறது என்கிறார். சூரியனுடைய முன்னிலையில் சூரிய கிரணங்களால் பொருள்கள் பரிணமிப்பது போன்று, ஈசுவரனுடைய முன்னிலையில் அவனுடைய மாயா சக்தியால் உலகனைத்தும் உரு எடுப்பனவாகின்றன. அத்யக்ஷன் என்பது சபாபதி அல்லது கண்காணிப்பவன் என்று பொருள்படுகிறது. உலக நடைமுறைக்கு இறைவன் சபாபதியாகின்றான். அரசன் சிங்காசனத்தில் வீற்றிருக்கையில் சிப்பந்திகள் தம் தொழில்களைப் புரிவது போன்று, பரமாத்மாவின் முன்னிலையில் பிரகிருதியானது அண்டங்களை இயக்கவல்ல உயிரையும் அருளையும் பெற்றுத் தொழில் புரிகிறது. 11. அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தநுமாஸ்ரிதம் பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஸ்வரம் மம பரம் பாவம்-என்னுடைய மேலான இயல்பை, அஜாநந்த: மூடா-அறியாதவர்களான மூடர்கள், மாநுஷீம் தநும்-மனித உடலை, ஆஸ்ரிதம் பூதமஹேஸ்வரம்-தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு தலைவனான, மாம் அவஜாநந்தி-என்னை புறக்கணிக்கிறார்கள். பொருள் : மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர். கர்மத்தில் கட்டுப்படாதவன் வடிவத்திலும் கட்டுப்படுவதில்லை. ஜடாகாசத்தை எப்பொருளும் சிதைப்பதில்லை. பின்பு, அதற்கப்பாலுள்ள சிதாகாசம் சிதைவுபடுகிறது என்பது பொருந்தாது. அது நித்ய-சுத்த-புத்த-முக்த-ஸ்வபாவமுடையது. எல்லார்க்கும் பொதுவாக அந்தர்யாமியாயிருக்கின்ற பரமாத்மா உடலில் எங்ஙனம் வாழவேண்டும் என்பதை மக்களுக்குக் காட்டுதற் பொருட்டே ஓர் அவதார புருஷராக தேகத்தைத் தரிக்கிறார். இதை அறியாதவர் அவரை அவமதிக்கின்றனர். யானைக்கு வெளியே தோன்றும் தந்தமும் உள்ளே இருக்கும் பற்களுமாக இரண்டுவகைப் பற்களிருக்கின்றன. அவ்வாறு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா போன்ற அவதார புருஷர்கள் சாதாரணமான வெளித்தோற்றம் உள்ளவர்களாய், எல்லாருடைய பார்வைக்கும் மனுஷ்ய ரீதியை உடையவர்களாகப் புலப்படுகின்றனர். ஆயினும் அவர்கள் கர்மவசத்துக்கு வெகுதூரம் அப்பாற்பட்டவர்களாகிப் பரமசாந்தியில் நிலைத்திருக்கின்றனர். அவதார புருஷர்களை அவமதிக்கின்றவர்களது இயல்பு எத்தகையது எனின்: 12. மோகாஸா மோககர்மாணோ மோகஜ்ஞாநா விசேதஸ: ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்ரிதா: மோகாஸா:-வீணாசையுடையோர், மோககர்மாண:-வீண் செயலாளர், மோகஜ்ஞாநா - வீணறிவாளர், விசேதஸ:-மதியற்றோர், ராக்ஷஸீம் ஆஸுரீம் மோஹிநீம் ச-மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளின், ப்ரக்ருதிம் ஏவ ஸ்ரிதா:-இயல்பையே சார்ந்து நிற்கின்றனர். பொருள் : வீணாசையுடையோர், வீண் செயலாளர், வீணறிவாளர், மதியற்றோர், மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளைச் சார்ந்து நிற்கின்றனர். (ராக்ஷத, அசுர, மோகினி சக்திகளாவன – அவா, குரூரம், மயக்கம் என்ற சித்த இயல்புகள்). பொய்யுடலை மெய்யென்று நம்பி, அதன் மூலம் போகம் துய்த்தலே குறிக்கோள் என்ற மயக்கம் மோஹம் ஆகிறது. பின்பு, அதன் பொருட்டுக்கொள்ளும் ஆசையும், செய்யும் வினையும், வளர்க்கும் அறிவும், கையாளும் யுக்தியும் ஆத்ம லாபத்துக்கு உதவாதவைகளாய் வீணாகின்றன. இத்தகைய கீழான இயல்புடையவர்களுள் ரஜோ குணத்தோடு கூடியவர் ராக்ஷசர்; தமோ குணத்தோடு கூடியவர் அசுரர் ஆவர். மற்று, பக்திமான்களுடைய போக்கு பின் வருமாறு: 13. மஹாத்மாநஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஸ்ரிதா: பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம் து பார்த-ஆனால் பார்த்தா, தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா:-தெய்விக இயல்பைக் கைகொண்ட, மஹாத்மாந:-மகாத்மாக்கள், மாம் பூதாதிம் அவ்யயம் ஜ்ஞாத்வா-என்னை எல்லா உயிர்களுக்கும் முதல் என்றும், அழிவற்றவன் என்றும் அறிந்து, அநந்யமநஸ:-வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன், பஜந்தி-வழிபடுகிறார்கள். பொருள் : பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைகொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள். தெய்விக இயல்பு சத்துவ குணத்தினின்று வருகிறது. ஜீவர்களெல்லாம் பகவானிடத்திருந்து தோன்றியவர்கள். இப்பேருண்மையை உணர்ந்து திரும்பி அவனைச் சென்று அடைய விரும்புபவர்கள் மகாத்மாக்கள் ஆகின்றனர். கரணங்களை அடக்குதல், அவனுடைய உயிர்களிடத்து அன்பாயிருத்தல், அவனை அடைதற்கு சிரத்தை காட்டுதல் முதலிய நல்லியல்புகள் அத்தகைய மேலோர்க்கு எளிதில் வந்து அமைகின்றன. மேலோர் எப்படி யெல்லாம் வழிபடுகின்றனர் என்னும் வினா எழுமிடத்து : 14. ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா: நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே த்ருடவ்ரதா:-திடவிரதத்துடன், ஸததம் கீர்தயந்த: ச-இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும், யதந்த: ச-முயற்சி புரிவோராகவும், நமஸ்யந்த: ச-என்னைப் பக்தியால் வணங்குவோராய், நித்யயுக்தா: பக்த்யா உபாஸதே-நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள். பொருள் : திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள். மனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது; எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்தியயோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள். 15. ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே ஏகத்வேந ப்ருதக்த்வேந பஹுதா விஸ்வதோமுகம் அந்யே மாம் ஜ்ஞாநயஜ்ஞேந ஏகத்வேந-வேறு சிலர் ஞான வேள்வியால் ஒன்றிய பாவனையுடன், யஜந்த: அபி-வழிபட்டுக் கொண்டும், ச பஹுதா விஸ்வதோமுகம்-மற்றும் சிலர் விராட்ஸ்வரூபத்துடன் ஈஸ்வரனாக என்னை, ப்ருதக்த்வேந உபாஸதே-தன்னிலும் வேறாக எண்ணி உபாசிக்கிறார்கள். பொருள் : வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய் என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லாவிடத்தும் வழிபடுகிறார்கள். (ஞானயக்ஞேன)- பரம்பொருளை உள்ளபடி அறிகிறவர்கள் தங்களைப் பரம்பொருளுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். ஆகையால் அது ஞான யக்ஞமாகின்றது. (ஏகத்வேன)- ஒன்றாய் என்னும் அத்வைத பாவனை, பரமாத்மா ஒன்றுதான் உள்ளது என்ற எண்ணம். (ப்ருதக்த்வேன)- வேறாய் இருக்கும் துவைத பாவனை. ஆண்டவன் அடிமைக்குப் புறம்பானவன் என்ற எண்ணம். (விச்வதோமுகம்)- பலவாய் உள்ள எல்லா அங்கங்களும் ஒரு புருஷனைச் சார்ந்தவைகள். இது விசிஷ்டாத்வைத பாவனை. ஒருவனே இத்தனையும் ஆனான் என்ற எண்ணம் இப்பாவனையில் உண்டு. ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தை துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளில் எதில் வைத்துச் சாதனம் செய்தாலும் அது ஞான யக்ஞம் ஆகிறது. இத்தனைவித உபாசனைகள் எப்படி ஒரே பொருளைச் சார்வதாகும் என்ற ஐயம் எழுகிறது. அதற்கு இறைவன் விடையளிக்கிறார்: 16. அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம் மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம் அஹம் க்ரது:-நான் ஹோமம், அஹம் யஜ்ஞ:-நான் யாகம், அஹம் ஸ்வதா-நான் ஸ்வதா என்ற வாழ்த்துரை, அஹம் ஒளஷதம்-நான் மருந்து, அஹம் மந்த்ர:-நானே மந்திரம், அஹம் ஆஜ்யம்-நானே நெய், அஹம் அக்நி-நானே தீ, அஹம் ஹுதம்-நான் அவி, அஹம் ஏவ-நானே தான்! நான் ஓமம்; நான் யாகம்; நான் ஸ்வதா என்ற வாழ்த்துரை; நான் மருந்து; மந்திரம்; நான் நெய்; நான் தீ; நான் அவி. கிரது என்பது வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ஒருவகைக் கர்மத்தின் பெயர். யக்ஞமாவது ஸ்மிருதியில் விதிக்கப்பட்டுள்ள கர்மம். பித்ருக்களுக்குப் படைக்கப்படும் உணவுக்கு ஸ்வதா என்று பெயர். எது மருந்தாகவும் உணவாகவும் பயன்படுகிறதோ அது ஒளஷதம். என்ன எண்ணத்துடன் கொடுக்கப்படுகிறதோ அவ்வெண்ணமே மந்திரம். ஹோமத்தில் சொரியப்படும் நெய்க்கு ஆஜ்யம் என்று பெயர். இங்கு ஹோமாக் கினியே அக்னி என்று குறிப்பிடப்படுகிறது. வேள்வி வேட்டல் என்னும் வினையானது ஹுதம் என்று சொல்லப்படுகிறது. நான்காவது அத்தியாயம் இருபத்து நான்காவது சுலோகத்தில் செய்கிற வினை யெல்லாவற்றையும் பிரம்ம சொரூபமாகக் கருதுபவனை வினை தளைப்பதில்லையென்பது சொல்லப்பட்டது. இங்கு பொருள்களெல்லாம் பாரமார்த்திக திருஷ்டியில் பிரம்ம சொரூபம் ஆகின்றனவென்பது சொல்லப்படுகிறது. பொருள்களையெல்லாம் அவன் சொரூபமாகக் காண்பது பாரமார்த்திக திருஷ்டியைப் பெறுவதற்கு உபாயமாகிறது. 17. பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: வேத்யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச அஸ்ய ஜகத: தாதா-இந்த உலகம் அனைத்தையும் தாங்குபவனும், பிதா மாதா பிதாமஹ: -தந்தை, தாய், பாட்டனாரும், வேத்யம் பவித்ரம்-அறியத் தக்கவனும், புனிதமானவனும், ஓங்கார:-ஓங்காரமும், ருக் ஸாம யஜு: ச-ரிக்; ஸாம; யஜுர் என்ற வேதங்களும், அஹம் ஏவ-நானே தான். பொருள் : இந்த உலகத்தின் அப்பன் நான்; இதன் அம்மா நான்; இதைத் தரிப்போன் நான்; இதன் பாட்டன் நான்; இதன் அறியப்படு பொருள் நான்; தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்; நான் ஸாமம்; நான் யஜுர். உலகனைத்துக்கும் ஈசுவரன் முதற் காரணமாயிருப்பதால் அவன் தந்தை, தாய், பாட்டனார் ஆகின்றான். அவரவர் செய்கின்ற வினைக் கேற்றவாறு கர்ம பலனைக் கொடுப்பவன் தாதா. யாரை அறிந்தால் வாழ்க்கையின் மர்மம் முழுதும் விளங்குகிறதோ அவன் அறியத்தக்கவன், ஈசுவரன். தம்மை வந்து சாரும் பொருள்களைத் தூயதாக்கும் இயல்பு மண், நீர், தீ, காற்று முதலியவைகளுக்கு உண்டு. அங்ஙனம் பூதங்களால் புனிதமடைந்த பொருள்கள் திரும்பவும் மலினமடையக்கூடும். பகவானை அணுக அணுக உயிர்கள் பெருநிலையைப் பெறுகின்றன. அந்த அளவில் அவைகள் புனிதப்படுகின்றன. இக்காரணத்தை முன்னிட்டே பக்தர்களுக்கு பகவானுடைய நாமம் குலம் தரும் என்று கருதப்படுகிறது. பகவானை அடைவதால் வரும் புனிதம் என்றும் மாறாதது. அதர்வண வேதம் மிகப் பிற்காலத்தில் உண்டானதால் அது ஈண்டு பகரப்படவில்லை. இயற்கையினுடைய தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகியவைகளை ரிக், சாமம், யஜுர் ஆகிய வேதங்கள் விளக்குகின்றன. இந்த வேதங்களே சப்தல் அல்லது ஓசையின் துணையைக்கொண்டு தோன்றியவைகள். ஓசை யனைத்தும் ஓங்காரத்தில் அடங்கியிருக்கின்றன. ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் மூலமந்திரமாகும். அது அ-உ-ம் ஆகிய மூன்று ஓசைகளின் வடிவம் கொண்டது. அது என்னும் எழுத்து தோற்றத்தையும் உ என்பது இருப்பையும் ம் ஒடுக்கத்தையும் குறிக்கின்றன. பகவான், பாகவதம், பக்தர்கள் இறைவரது ஒன்றேயாம். 18. கதிர்பர்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத் ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம் கதி:-அடையத் தக்க பரம பதம், பர்தா-காப்பவன், ப்ரபு:-ஆள்பவன், ஸாக்ஷீ-நல்லன – தீயனவற்றைப் சாட்சியாக இருந்து பார்ப்பவன், நிவாஸ:-உறைவிடம், ஸரணம்-சரண் புகலிடம் ஸுஹ்ருத்-தோழன், ப்ரபவ: ப்ரலய:-தொடக்கமும் அழிவும், ஸ்தாநம் நிதாநம்-நிலையாகத் தாங்குமிடமும், நிதானமும், அவ்யயம் பீஜம்-அழியாத விதை. பொருள் : இவ்வுலகத்தின் புகல், இதனிறைவன், இதன் கரி, இதனுறையுள், இதன் சரண், இதன் தோழன், இதன் தொடக்கம், இதன் அழிவு, இதன் இடம், இதன் நிலை, இதன் அழியாத விதை. செய்த கர்மத்துக்கு ஏற்றவாறு அடையுமிடம் அல்லது புகலிடம் கதி எனப்படுகிறது. கர்மம் ஓய்ந்தவிடத்து பகவானைத் தவிர புகலிடம் பிறிதொன்றில்லை. உண்டி முதலியன கொடுத்து வளர்ப்பவன் பர்த்தா. ப்ரபு என்பதற்கு சுவாமி, தலைவன், இறைவன், உடையவன் என்று பொருள். உயிர் வகைகள் தத்தம் கடமைகளை முறையாகச் செய்ததற்கும் செய்யாததற்கும் சாக்ஷி அல்லது பார்த்திருப்பவராக உள்ளார் பகவான். நிவாஸ: என்றால் உயிர்கள் வசிக்குமிடம், இருப்பிடம் என்று பொருள்படுகிறது. சரணம், தன்னைத் தஞ்சமடைந்தவர்களது துக்கத்தைத் துடைப்பவன் அல்லது அடைக்கலம் என்பதாம். ஸுஹ்ருத் என்பதற்குக் கைம்மாறு கருதாது நன்மை செய்பவன், தோழன் என்று பொருள். நிதானமாவது எதிர்காலத்தில் உயிர்வகைகள் அனுபவிப்பதற்குச் சேகரித்து வைத்துள்ள களஞ்சியம். பூமியில் நட்ட வித்து அழிந்து செடியாக மாறுகிறது. ஆனால் பிரம்மம் என்கிற வித்து ஒருவிதமான மாறுதலையும் அடையாது இருந்துகொண்டு ஜீவ ஜகத் வகைகளைத் தன்னிடத்திருந்து தோன்றிவர இடங் கொடுக்கிறது. 19. தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச அம்ருதம் சைவ ம்ருத்யுஸ்ச ஸதஸச்சாஹமர்ஜுந 9 அஹம் தபாமி-நான் வெப்பந் தருகிறேன், வர்ஷம் நிக்ருஹ்ணாமி உத்ஸ்ருஜாமி ச-மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன், அம்ருதம் ச ம்ருத்யு: ச-நானே அமிர்தம்; நானே மரணம், ஸத் அஸத் ச அஹம் அர்ஜுந-உள்ளதும்; இல்லதும் நான் அர்ஜுனா! பொருள் : நான் வெப்பந் தருகிறேன்; மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன். நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா, உள்ளதும் யான்; இல்லதும் யான். சூரியனைக்கொண்டு பகவான் வெப்பத்தை உண்டுபண்ணுகிறார்; சூரிய கிரணத்தால் மழை பெய்யவும், நிற்கவும் செய்கிறார். அவரவர் கர்மபலனுக்கு ஏற்றாற் போன்று தேவர்கள் சாகாமையும் நரர் சாவையும் பெறுகின்றனர். சாகாமை, சாவு ஆகிய இரண்டும் சில வேகைளில் விருப்பையும் வேறு சில வேளைகளில் வெறுப்பையும் தருகின்றன. ஆக, ஜீவனை ஞானத்துக்குப் பக்குப்படுத்துதற்கு தேவர்களுடைய சாகாமையயும் நரர்களுடைய சாவும் மாறி பயன்படுகின்றன. கர்மம் காரியப்படுவதால் உயிர்களிடத்து ஏற்படும் தோற்றம் ஸத்தென்று ஈண்டு இயம்பப்படுகிறது; தோன்றா நிலையே அஸத்தாகிறது. ஆக, அஸத்து என்பது சூன்யமல்ல. காமிய கர்மத்தின் பலன் : 20. த்ரைவித்யா மாம் ஸோமபா: பூதபாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோக மஸ்நந்தி திவ்யாந்திவி தேவபோகாந் த்ரைவித்யா: ஸோமபா:-மூன்று வேதம் அறிந்தோர், சோமம் உண்டோர், பூதபாபா-பாவம் அகன்றவர்கள், மாம் யஜ்ஞை: இஷ்ட்வா-என்னை வேள்விகளால் உபாசித்து, ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே-வானுலகு தர வேண்டுகின்றனர், தே புண்யம் ஸுரேந்த்ரலோகம் ஆஸாத்ய-அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை அடைந்து, திவி-ஸ்வர்கத்தில் திவ்யாந் தேவபோகாந் அஸ்நந்தி-திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள். பொருள் : சோமமுண்டார், பாவமகன்றார், மூன்று வேதமறிந்தார், என்னை வேள்விகளால் வேட்டு வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை யெய்தி வானுலகில் திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள். ரிக், சாம, யஜுர் ஆகிய மூன்று வேதங்களில் சொல்லியுள்ள காமகாண்டத்தைப் பின்பற்றுபவர்கள் அடையும் மறுமைப் பயன்களில் மிகப்பெரியது இதுவாம். இந்திர பதவியே அவைகளுள் தலையாயது. காமிய கர்மி ஒருவன் நூறு யாகங்கள் செய்தால் அவனுக்கு இந்திர பதவி கிட்டுகிறது. 21. தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஸாலம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸந்தி ஏவம் த்ரயீதர்மமநுப்ரபந்நா கதாகதம் காமகாமா லபந்தே தே தம் விஸாலம் ஸ்வர்கலோகம் புக்த்வா-அவர்கள் விரிவாகிய வானுலகத்திலே இன்புற்று, புண்யே க்ஷீணே மர்த்யலோகம் விஸந்தி-புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய உலகத்துக்குத் திரும்புகிறார்கள், ஏவம் த்ரயீதர்மம்-இப்படி மூன்று வேத முறைகளை, அநுப்ரபந்நா: காமகாமா:-சார்ந்திருக்கிற போகப் பற்றுள்ளவர்கள், கதாகதம்-திரும்ப திரும்ப பிறந்து இறத்தலை, லபந்தே-அடைகிறார்கள். பொருள் : விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார். பொருள் உள்ள அளவு மண்ணுலகில் மதிப்பு இருப்பது போன்று புண்ணியம் உள்ள அளவு விண்ணுலகில் மதிப்பு உண்டு. அது அழிந்ததும் ஆங்கு அவர்களுக்கு இடமில்லை. புதிய புண்ணியத்தைத் தேடக் கர்ம பூமிக்கு அவர்கள் திரும்பி வருகிறார்கள். சுதந்திரமற்று இன்ப நுகர்ச்சிக்காக அவர்கள் யாண்டும் உழன்றாகவேண்டும். ஆசையை வென்று பக்தி பூண்டுள்ளவர்களோவெனின் : 22. அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக÷க்ஷமம் வஹாம்யஹம் அநந்யா: யே ஜநா-வேறு எதிலும் நாட்டமில்லாத எந்த பக்தர்கள், மாம் சிந்தயந்த:-என்னை தியானித்துக் கொண்டு, பர்யுபாஸதே-எந்த பயனும் எதிர்பார்க்காது உபாசிக்கின்றாரோ, நித்யாபியுக்தாநாம் தேஷாம்-இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுடைய, யோக÷க்ஷமம் அஹம் வஹாமி-நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பாவேன். பொருள் : வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன். அனன்யம் என்றால் பரமாத்மா தங்களுக்கு அன்னியமானவர் அல்லர் என்று எண்ணுதல் அல்லது அவரைத் தவிர வேறு எதையும் எண்ணாதிருத்தல். யோகம் என்பது வேண்டியதைப் பெறுதல். பின்பு பெற்றதை வைத்துக் காப்பாற்றுதல் ÷க்ஷமமாகும். கர்ப்பத்திலிருக்கும் சிசு தாய்க்கு அன்னியமானதல்ல; ஆதலால் அதன் போஷணை முழுதும் தாயினிடத்திருந்தே இயல்பாக வருகிறது. பிறந்த பின்பும் தாயைத் தஞ்சமடைந்திருக்குமளவு அவள் உணவைத் தேடிவந்து ஊட்டுகிறான். அனன்னிய பக்தியில் ஈடுபடுவோர் அடையும் பேறு யாண்டும் அதைவிடப் பெரியது. பொருளைத் தேடுபவர்க்குப் பொருள் அமையவும், பிறகு அழியவும் செய்கிறது. இறைவனது அருள் ஒன்றையே நாடுபவர்க்கு அழியாத அவனது அருள் சுரக்கிறது. மேலும் உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளின் யோக ÷க்ஷமமும் இறைவனாலேயே அளிக்கப்படுகிறது. பக்தர் மீது பித்தம் கொண்டுள்ள பகவான் தாயினும் சாலப்பரிந்து அவர்களைப் பராமரித்து வருவதாக வாக்குக் கொடுக்கிறார். அனன்னிய பக்தி பண்ணுபவர்களுடைய பெரு வாழ்க்கையே பகவானது பிரமாணிக்கத்துக்குப் பரம சான்றாகிறது. பக்தியின் பெருக்கால் தங்கள் உயிரையே அவர்கள் பொருள்படுத்துவதில்லை. ஆகையால் அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு பகவானுடையதாகிறது. பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி வைத்தால் பகவான் பக்தனை நோக்கிப் பத்து அடி வருகிறார். மற்ற தேவதைகளை வணங்குதல் ஈசுவர ஆராதனையாகாதோ வெனின்: 23. யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம் கௌந்தேய-குந்தியின் மகனே, யே பக்தா-எந்த பக்தர்கள், ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும், அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்), மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர். பொருள் : அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர். சிரத்தையோடு கூடியிருத்தல் என்பது ஆஸ்திக்ய புத்தியுடைத்திருத்தல் அல்லது தெய்வம் துணைபுரியும் என்ற நம்பிக்கையுடனிருத்தலாம். அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது. ஓர் அரசாங்கத்தை நிர்வகிக்கும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் ஆதிக்கத்தையெல்லாம் அரசனிடமிருந்து பெறுகிறார்கள். விண்ணப்பதார் ஒருவன் தன் காரியம் நிறைவேறுவதற்கு உத்தியோகஸ்தருடைய தயவைப் பெற்று அதினின்று தனக்குக் காரிய சித்தி ஏற்பட்டதென்று எண்ணுவானாகில் அவ்வெண்ணம் அரசனது ஆதிக்கத்தைப்பற்றிய அக்ஞானத்தினின்று உதித்ததாகும். அரசனுடைய ஆட்சி முறையே காரியசித்திக்கு அடிப்படையான காரணமாகும். காரியசித்தி, புக்தி, முக்தி ஆகிய யாவும் முழுமுதற் பொருளாகிய சர்வேசுவரனிடத்திருந்து வருபவைகள் என்ற உண்மையை அறியாது, சிறு தேவதைகள் ஈசனுக்குப் புறம்பானவைகள் என்றெண்ணி, அச்சிறு தேவதைகளிடத்து வரம் வேண்டுபவர் விதிவழுவி விண்ணப்பித்தவர் ஆகின்றனர். ஏன் அதை முறை வழுவிய விண்ணப்பம் என்று சொல்ல வேண்டும்? விடை வருகிறது : 24. அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே ஹி ஸர்வயஜ்ஞாநாம்-ஏனெனில் எல்லா வேள்விகளிலும், போக்தா ச ப்ரபு ச அஹம் ஏவ-உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்! து தே மாம்-ஆனால் என்னை அவர்கள் தத்த்வேந ந அபிஜாநந்தி-உள்ளபடி அறியாதவர், அத: ச்யவந்தி-ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள். பொருள் : நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வார். போக்தா என்பது உண்பவன் என்று பொருள்படுகிறது. தலைவன் அல்லது சொந்தக்காரன் பிரபு எனப்படுகிறான். சிறு உத்தியோகஸ்தர்களிடமிருந்து சிறு நன்மையைத் தற்காலிகமாகப் பெற்றுப் பிறகு அதை இழந்துவிடுவது போன்று சிறுதேவதைகளை வணங்கி, அத்தேவலோகங்களை அடையப்பெற்றுக் காலாவதியில் பிறப்புலகுக்குத் திரும்புகிறார்கள். ஆதலால் சிறுதேவதைகளை வணங்குதல் விதிவழுவிய விண்ணப்பமாகும். இனி நானே ஈண்டு தேகத்தினுள் அதியக்ஞமாகிறேன் என்று பகவான் 8வது அத்தியாயம், நான்காவது சுலோகத்தில் சொல்வதைக் கவனிக்கவும். ஒவ்வொருவரும் அடையும் நிலையைப்பற்றிய உண்மையாவது : 25. யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா: பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோऽபி மாம் தேவவ்ரதா: தேவாந் யாந்தி-தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள், பித்ருவ்ரதா: பித்ரூந் யாந்தி-பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார், பூதேஜ்யா பூதாநி யாந்தி-பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார், மத்யாஜிந: அபி மாம் யாந்தி-என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள். பொருள் : தேவ விரதிகள் தேவரை எய்துவார்; பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார்; பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்; என்னை வேட்போர் என்னை எய்துவார். மனிதனினும் மேம்பட்டவர், ஆனால் தேவர்களுக்குக் கீழோர் பூதங்கள் எனப்படுகின்றனர். இங்கு என்னை என்பது பரமாத்மாவைக் குறிக்கிறது. தன்னிலும் மிக்காரை அணுகி, அவர்களுக்கு ஒப்பாக வேண்டுமென்று முயலுவது உபாசனையாம். வழிபாடு என்பதும் அதுவே. சிறு செல்வம் உடையவன் பெருஞ் செல்வம் படைக்க முயலுகிறான். சிற்றறிவுடையோன் பேரறிஞனாதற்குப் பாடுபடுகிறான். ஆற்றலில் தாழ்ந்தவன் மேலோனாக விரும்புகிறான். இங்ஙனம் பெருநிலை யடையப் பாடுபடுதலே உபாசனையாகிறது. மனது ஆழ்ந்து எதை எண்ணுகிறதோ அதன் தன்மையைப் பெறுகிறது. உபாசகனுக்கு உபாசனா மூர்த்தியின் விபூதி அல்லது மகிமையெல்லாம் வந்தமைகிறது. உயரத்தில் இருக்கிற நீர்ப்பாண்டத்தோடு இணைத்துள்ள குழாயிலும் நீர் உயர ஏறுகிறது. சீரிய பொருளைச் சிந்திக்கிற மனது சீரியதாகிறது; தாழ்ந்ததை நினைப்பது தாழ்ந்ததாகிறது. ஆகையால்தான் தேவதைகளை உபாசிப்பவன் தேவதைகளை அடைகிறான். பிதிர்க்களை வணங்குபவன் பிதிர்க்களைச் சேருகிறான். பூதப் பிசாசுகளைப் போற்றுபவன் தானே பிசாசு ஆகிறான். ஈசுவரனை உபாசிப்பவன் ஈசுவரனை அடைகிறான். ஓர் சாயக்காரன் வஸ்திரத்துக்குச் சாயமேற்றுவதில் ஒரு அலாதியான முறையைக் கைப்பற்றிவந்தான். உன் வஸ்திரத்துக்கு எந்த நிறம் வேண்டும்? என்று அவன் ஒருவனைக் கேட்பான். சிவப்பு வர்ணம் என்று விடை வந்தால் சாயக்காரன் தனது தொட்டியில் அவ் வஸ்திரத்தைத் தோய்த்து எடுத்து இதோ உன் வஸ்திரத்துக்குச் சிவப்புச் சாயம் போட்டாயிற்று என்று கொடுப்பான். மஞ்சள் சாயம் வேண்டுமென்று இன்னொருவன் கேட்பான். அதே தொட்டியில் சாயக்காரன் அவனுடைய வஸ்திரத்தையும் தோய்ப்பான்; வெளியில் எடுக்கும்போது அது மஞ்சள் நிறமாயிருக்கும். நீலம், ஊதா, பச்சை முதலிய எந்த நிறம் வேண்டியிருந்தாலும் சரியே, ஒரே தொட்டியில்தான் சாயக்காரன் வேஷ்டியை நனைப்பான். வேண்டப்பட்ட சாயம் வஸ்திரத்தில் ஏற்றப்பட்டிருக்கும். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஒருவன் சாயக்காரனிடம் வந்து, நண்பா, எனக்குத் தகுந்தது எது என்று நீயே தீர்மானம் செய்து அந்தச் சாயத்தில் தோய் என்று சாயக்காரனிடத்தில் பொறுப்பை ஒப்படைத்து விட்டான். நமது மனம் வஸ்திரம் போன்றது. ஈசுவரனே சாயக்காரனாகவும் அவனுடைய சாயத்தொட்டியாகவும் இருக்கிறான். விரும்பியதை அவனிடம் கேட்கிற மனநிலை நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஒன்றும் கேளாது நம்மை அவனிடம் கொடுத்துவிடுவது நலம். அப்பொழுது அவன் தன்னை நமக்குக் கொடுக்கிறான். சிறு உத்தியோகஸ்தர் முன்னிலைக்கு யாரும் எளிதில் செல்லலாம். ஆனால் அரசன் முன்னிலைக்குச் செல்ல எல்லார்க்கும் தகுதியில்லை. சிறு தேவதைகளை எளிதில் வசப்படுத்தலாம். சர்வேசுவரனைத் திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதன்று என்று ஒருவர் கருதலாம். அதற்குப் பகவானது விடை வருகிறது : 26. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந: ய: பக்த்யா-எவர் அன்புடனே, பத்ரம் புஷ்பம் பலம் தோயம்-இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் மே ப்ரயச்சதி-எனக்கு அளிப்பவன் ஆயின், ப்ரயதாத்மந:-முயற்சியுடைய அவர், பக்த்யுபஹ்ருதம்-அன்புடன் அளித்த, தத் அஹம் அஸ்நாமி-அவற்றை நான் அருந்துகிறேன். பொருள் : இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான். ஒரு பொருளின் விலை மதிப்புக்கு ஏற்றபடி அதைப் பெரிய சம்மானமாகக் கருதுதல் உலகத்தவர் இயல்பு. இந்திராதி தேவர்களது போக்கும் அத்தகையதே. ஆனால் லக்ஷ்மி தேவியையே பணிப்பெண்ணாகவுடைய பகவானுடைய பண்பு வேறானது. ஜகத்துக்கெல்லாம் நாதன் எனினும் தன்னில் தானே திருப்தியடைந்திருப்பவன் அவன். எப்பொருளைக்கொண்டும் அவனைப் பெறமுடியாது. நல்ல மனமுடையாரது பக்திவலையொன்றில் மட்டும் அவன் படுகிறான். பக்திக்கு அறிகுறியாக இயற்கையில் எளிதில் அகப்படுகின்ற கனி, மலர், இலை, நீர் ஆகிய எதைப் படைத்தாலும் அவன் மகிழ்வோடு வாங்கிக்கொள்கிறான். விதுரர் வார்த்த கஞ்சியை அமிழ்தெனப் பாராட்டி அவர் அருந்தினார். சுதாமா என்று அழைக்கப்பட்ட குசேலர் கொண்டு வந்த அவலை அவர் வலியப் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டார். சபரி கொடுத்த உலர்ந்த காய்கனிகள் இராமனுக்கு ஏற்புடையனவாயின. கண்ணப்பனது உமிழ் நீரும் அவன் மென்ற மாமிசமும் சிவனாருக்கு ஒப்பற்ற நைவேத்தியமாயின. பக்தியானது பகவானுக்கு அவ்வளவு பெரியது. பக்தியையே பகவான் பெரிதும் பாராட்டுகிறபடியால் : 27. யத்கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத் யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம் கௌந்தேய-குந்தி மகனே! யத்கரோஷி-எந்த கர்மத்தை செய்கிறாயோ, யதஸ்நாஸி-எதை உண்கிறாயோ, யத் ஜுஹோஷி-எதை ஹோமம் செய்கிறாயோ, யத் ததாஸி-எதை தானம் அளிக்கிறாயோ, யத் தபஸ்யஸி-எந்த தவம் செய்கிறாயோ, தத் மதர்பணம் குருஷ்வ-அதை எனக்கு அர்ப்பணம் செய்து விடு. பொருள் : நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய். வாழ்க்கையில் வந்தமையும் நிகழ்ச்சிகளை யெல்லாம் யத்கரோமி யதச்னாமி யஜ்ஜுஹோமி ததாமி யத் யத்தபஸ்யாமி பகவான் தத்கரோமி த்வதர்ப்பணம் என்று இவ்வாறு ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணத் தெரிந்து கொண்டால் இது ஈசுவர ஆராதனை, இது லௌகிகம் என்கிற வேறுபாடு இல்லாது இனிது அமைகிறது. வாழ்க்கையே ஓர் இடையறாத ஆராதனையாகிறது. செய்வது தீவினையாயிருந்தாலும் அது இறைவனது கைங்கரியம் என்கிற எண்ணம் வலுக்க வலுக்க தீவினை யொழிந்து நல்வினை நிலைபெறுகிறது. உணவில் வைத்துள்ள பற்றானது போகப்பிரியத்துக்கு அறிகுறியாகும். தீனியில் வைத்துள்ள நாவாசையை அடக்காதவன் மற்ற ஆசைகளை அடக்க முடியாது. உண்பதையே கடவுள் ஆராதனையாகச் செய்து பழகப் பழக போகமானது யோகமாக மாறியமைகிறது. எதைத் தானமாகக் கொடுக்கிறாயோ அதையும் ஈசுவரார்ப் பணமாகச் செய். ஈயாத லோபியைவிட மேலானவன் ஐயமிடுபவன். ஈதல் அறம் எனப்படுகிறது. அப்படிக் கொடுக்கிறவன் தன்னைப் பெரியவனாகக் கருதுவானானால் அஹங்காரத் தடிப்பால் அவன் சிறியவனாகிறான். தானம் செய்வதை நாராயண சேவையாகக் கருதுமிடத்து அஹங்காரம் தேய்கிறது. கடவுளுக்குப் பூஜை செய்யும் பாவனையே தானம் செய்வதிலும் வந்தமையவேண்டும். தவம் புரிதலைத் தன் சித்தியின் பொருட்டு ஒருவன் செய்யக்கூடும். அது காமிய தபசு ஆகிறது. அதனால் ஜீவபோதம் வளர்கிறது. தவசிகளுக்கிடையில் நான் தபசாயிருக்கிறேன் என்று பகவான் பகருகிறார். (அத்.7, சுலோகம் 9) ஆகையால் தபசு என்னும் தெய்வ சம்பத்து அவரிடத்திருந்து வந்தது. அதனால் அவரது பெருமையே நிலைபெறுக, என்றெண்ணித் தவம் புரிதல் சாலச்சிறந்தது. இங்ஙனம் வாழ்க்கையில் வந்து அமைந்துள்ள செயல்களெல்லாம் ஈசுவர ஆராதனையாகின்றன. அதனால் ஜீவபோதம் குறைகிறது; பரபோதம் மேலிடுகிறது. எல்லாம் அவன் உடைமையே; எல்லாம் அவன் செயலே என்ற திருக்காட்சி அமையப்பெறுகிறது. தாயே நான் ஒரு யந்திரம்; நீ ஒரு யந்திரீ. நான் ஓர் அறை; நீ அதில் குடியிருப்பவள். நான் உறை; நீ அதனுள் போடப்படும் வாள். நான் ரதம்; நீ சாரதி. நீ ஆட்டிவைக்கிறபடி நான் ஆடுகிறேன். நீ பேசுவிக்கிறபடி நான் பேசுகிறேன். என் செயல் என்பதெல்லாம் என் உள்ளிருக்கும் உன் செயலே. நான் அல்லேன், நான் அல்லேன், எல்லாம் நீ தான். எல்லாம் ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணுவதால் ஜீவன் அடையும் நன்மை வருமாறு : 28. ஸுபாஸுபபலைரேவம் மோக்ஷ்யஸே கர்மபந்தநை: ஸம்ந்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி ஏவம் ஸுப அஸுப பலை:-இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களை, கர்மபந்தநை:-கர்மத் தளைகளினின்றும், மோக்ஷ்யஸே-விடுபடுவாய், ஸந்யாஸ யோக யுக்தாத்மா-துறவெனும் யோகத்திசைந்து, விமுக்த:-விடுபட்டவனாக, மாம் உபைஷ்யஸி-என்னையும் பெறுவாய். பொருள் : இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய். என்னையும் பெறுவாய். இப்படி ஈசுவரனுக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் வினைத்தளைகள் போம். நன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும் ஆகிய வினைகளெல்லாம் பிறவிக்கு வித்தாகின்றன. பிறவி என்னும் இருளில் சேர்க்கின்ற இரு வினைகளையும் ஈசுவரார்ப்பணம் என்னும் தீயில் போட்டுவிட்டால், அவைகள் வெந்த விதைபோன்று வலிவை இழக்கின்றன. வெந்த விதை பின்பு முளைக்காது. ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணின கர்மம் பிறவியை உண்டு பண்ணாது. கர்மத்தை விடுதல், கர்மத்தைச் செய்தல் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள முரண்பாடு இங்கு சந்நியாச யோகத்தில் சமரசம் பெறுகிறது. மனிதன் தனக்கென்று ஒன்றும் செய்யாது எல்லாம் ஈசுவரார்ப்பணமாகச் செய்கிறபடியால் அது சந்நியாசமாகிறது. பகவான் பொருட்டு முறையாகவும் ஊக்கத்துடனும் கர்மம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறபடியால் அது யோகமாகிறது. அத்தகைய யோகிக்குக் கர்ம சொரூபமாயுள்ள வாழ்க்கையில் குறையொன்றுமில்லை. ஜீவன் முக்தனாக யோகி உடலில் வாழ்கிறான். உடலை உகுத்ததும் அவன் விதேக முக்தனாகிறான். இவ்வுலகில் இருக்கையில் நீ என்ன செய்யவேண்டும்? எல்லாவற்றையும் ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்துவிடு. நீயும் அவனைச் சரணமடை. அப்பால் உனக்குத் துன்பமே இராது. சீக்கிரத்தில் ஈசுவர சன்னிதானத்தை அடைவாய். 29. ஸமோऽஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய: யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் அஹம் ஸர்வபூதேஷு ஸம:-நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன், மே த்வேஷ்ய: ந-எனக்குப் பகைவனுமில்லை, ப்ரிய: ந அஸ்தி-நண்பனுமில்லை, து யே பக்த்யா மாம் பஜந்தி-ஆனால் என்னை அன்புடன் தொழுவோர், தே மயி ச அஹம் தேஷு அபி-அவர்கள் என்னிடமும் நான் அவர்களிடமும் (காணக் கூடியவனாக இருக்கிறேன்). பொருள் : நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன். நல்லது கெட்டது என்று வேற்றுமை பாராட்டாது எல்லாப் பொருள்கள் மீதும் சூரிய வெளிச்சம் சமனாகப் படிகிறது. அவ் வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொள்ளுதல் அந்தந்தப் பொருள்களின் இயல்பைப் பொறுத்ததாகும். கருமணல், வெண்மணல், கண்ணாடி ஆகிய இவை யாவும் ஒரு பொருளின் வெவ்வேறு தோற்றங்கள். சூரிய வெளிச்சம் இவைகளின் மீது ஒரே விதமாகப் படிகிறது. ஆனால் சூரியனுடைய சான்னித்தியத்தைக் கண்ணாடியில் காண்பது போன்று வெண்மணலில் காண முடியாது; வெண்மணலில் காண்பதுபோன்று கருமணலில் காண முடியாது. ஈசுவர சான்னித்தியம் ஓரளவு அதுபோன்றது. சூரியன் மணலுக்கு வெகுதூரத்தில் இருக்கிறான். ஆனால் ஈசுவரன் ஜீவனுக்குப் புறம்பாயில்லை. தீப்பற்றி எரியும் தன்மை மரமெங்கும் வியாபகமாயிருக்கிறது. பச்சை மரத்திலும் அவ்வியல்பு மறைந்துள்ளது. அது உலரவேண்டும். பிறகு தொடர்ந்து உராய்வதால் அல்லது தீயோடு தொடர்வு வைப்பதால் மரக்கட்டை பற்றி எரிகிறது. அவ்வேளையில் விறகுக்கட்டை வேறு, தீ வேறு அல்ல. விறகே தீ; தீயே விறகு. நீக்கமற எங்கும் நிறைந்துள்ள இறைவன் இமைப்பொழுதும் நீங்காது நெஞ்சத்தில் குடிகொண்டிருக்கிறான். உள்ளத்தைத் தூயதாக்காதவர்களுக்கு அவ்வுண்மை விளங்குவதில்லை. அனன்ய பக்தியால் மனதைப் பண்படுத்தியவர்களுக்கு அது விளங்குகிறது. யாண்டும் பகவானுடைய முன்னிலையிலேயே அத்தகைய பக்தர்கள் வாசம் செய்கிறார்கள். கண்ணாடியில் சூரியன் போன்றும், உலர்ந்த விறகுக்கட்டையில் தீப்போன்றும் கருவி கரணங்கள் ஓய்ந்த தொண்டர்களிடத்து பகவான் வீற்றிருக்கிறான். எல்லா மனிதர்களிடத்தும் ஈசுவரன் இருக்கிறான். ஆனால் ஈசுவரனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் அவர்கள் துன்பப்படுவதற்குக் காரணம். பக்தியின் சிறப்பு எத்தகையது என்பது விளக்கப்படுகிறது : 30. அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ: ஸுதுராசார: அபி-மிகவும் தீய நடத்தை உள்ளவனானாலும், அநந்யபாக்-வேறு எதிலும் நாட்டமின்றி என் பக்தனாக ஆகி, மாம் பஜதே சேத்-என்னை வழிபடுவானாகில், ஸ: ஸாது: ஏவ மந்தவ்ய:-அவன் நல்லோனென்றே கருதுக, ஹி ஸ: ஸம்யக் வ்யவஸித:-ஏனெனில் அவன் நன்கு முயல்கின்றான். பொருள் : மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கின்றான் ஆதலின், தர்மத்தை முறையாகச் செய்கின்றவர்களும் இந்திரிய நிக்கிரகம் நன்கு செய்கிறவர்களும் சதாசாரம் உடையவர்கள் ஆகின்றனர். கொலை, களவு முதலிய பாபச் செயலைச் செய்கின்றவர்களும் மனம் அடங்காது இந்திரியங்கள் வழியாக விஷயங்களில் மூழ்குபவரும் துராசாரம் உடையவர் ஆகின்றனர். அன்னவர் மேலும் மேலும் அதோகதியை அடைகின்றனர். அத்தகைய கீழ் மக்களும் விரைவில் மேன்மக்கள் ஆதற்கு வழியுண்டு. எண்ணமே பெருமைக்கும் சிறுமைக்கும் முதற்காரணம். இடையறாது இறைவனிடத்துப் பக்தி பண்ணவேண்டும் என்ற எண்ணம் வலுக்கும் போது முன்பு பாபச் செயல்களைப்பற்றியும் கீழான விஷய போகங்களைப்பற்றியும் எண்ணிய எண்ணங்கள் அடிபடுகின்றன. பகவானைப் பற்றிய நல்லெண்ணம் ஒன்றே பாக்கியிருக்கிறது. சுடர் வெளிச்சமுள்ள வீட்டுக்குள் திருடன் நுழையான். அது போன்று பகவத் சிந்தனையுள்ள மனதில் துராசாரத்துக்கு ஏதுவான எண்ணங்களுக்கு இடமில்லை. நற்செயலுக்கும் நல்லியல்புக்கும் வித்தாவது நல்லெண்ணம். ஆக, இடையறாது இறைவனைப் பஜிக்கத் தீர்மானம் செய்கிற வளவில் கேடுடைய ஒருவன் சாதுவாகிறான். சிறப்பு அனைத்தும் அதினின்று வருமாதலால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான். எல்லாவற்றையும் பரித்தியாகம் செய்துவிட்டு, ஈசுவரனுடைய பாதாரவிந்தங்களில் சேரவேண்டுமென்று செய்யும் உபதேசங்களை உலகப்பற்றுள்ளவர்கள் கேட்கமாட்டார்கள். இப்படிப் பட்டவர்களை எப்படி நல்வழிக்குக் கொண்டுவரலாமென்பதை நன்றாக ஆலோசனை செய்து தெளிந்த கௌராங்க சுவாமியும் நித்தியானந்த சுவாமியும், ஜனங்களே! வாருங்கள்; பகவந் நாமத்தை வாய்விட்டுப் பாடினால் உங்களுக்கு நல்லுணவும் நாரியர் போகமும் கிடைக்கும் என்று ஆசைகாட்டி அழைத்தனர். அநேகர் அவ்வுணவையும் போகத்தையும் அடையலாம் என்ற நோக்கத்தோடு பகவந் நாமத்தைச் சொல்ல ஓடிவந்து அவர்களை திரளாகச் சூழ்ந்துகொண்டனர். ஆகவே அவர்கள் எல்லாரும் வலைக்குள் அகப்பட்டுக்கொண்டனர். பகவந் நாமமாகிய அமிர்தத்தின் இன்பத்தைச் சிறிது சிறிதாகச் சுவைத்ததும் அவர்கள் நித்தியானந்த சுவாமி சொன்ன வார்த்தைகளின் உட்கருத்தை யறிந்துகொண்டனர். ஈசுவரனிடம் பூரண பக்தி செய்வதாலுண்டாகும் ஆனந்த பாஷ்பந்தான் நல்லுணவு; பக்தி பரவசமானவன் தன்னையறியாமல் இள நங்கையாகிய தரையைத் தழுவிப் புரளுவதுதான் நாரியர் போகம். எத்தனை பிறவிக்குப் பிறகு சாதகன் சாது ஆகிறான் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது. 31. க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச்சாந்திம் நிகச்சதி கௌந்தேய ப்ரதி ஜாநீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி க்ஷிப்ரம் தர்மாத்மா பவதி-விரைவிலேயே தர்மாத்மாவாக ஆகிறான், ஸஸ்வத் ஸாந்திம் நிகச்சதி-நித்திய சாந்தியு மெய்துவான், கௌந்தேய-குந்தி மகனே, மே பக்த:-என்னுடைய பக்தன், ந ப்ரணஸ்யதி-அழிவதில்லை, ப்ரதி ஜாநீஹி-சத்தியத்தை உறுதியாக அறிந்து கொள். பொருள் : அன்னவன் விரைவிலே அறவானாவான்,நித்திய சாந்தியு மெய்துவான். குந்தி மகனே; குறிக்கொள்! என தன்பன் சாகமாட்டான். வால்மீகி, கண்ணப்பர் முதலாயினோர் முதலில் துராசாரமுடையவர்களாயிருந்தார்கள். ஏனென்றால் மேலோர்களால் ஆமோதிக்கப்படாத வாழ்க்கை முறை அவர்களிடத்திருந்தது. பகவத்பக்தியில் அவர்கள் மனது திரும்பியது. அதே பிறவியில் அதிவிரைவில் அவர்களது வாழ்க்கை மாறியது. அறச்செயலுக்கு அவர்கள் இருப்பிடமானார்கள். முன்பு அறிந்திராத நித்திய சாந்தியும் அவர்களுக்கு உண்டாயிற்று. அவர்கள் கேடு அனைத்தும் நீங்கப்பெற்று, நலம் அனைத்தும் அடைவாராயினர். கண்ணனிடத்து மாறாத பக்தி பூண்டு வாழ்ந்தவர்கள் பாண்டவர்கள். அவர்கள் ராஜ்யத்தை இழந்தார்கள்; ஆபத்துக்கள் பல நேர்ந்தன; கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வந்தது; வனவாசத்தில் படாத பாடுபட்டனர். ஆனால் பக்தியை மட்டும் அவர்கள் கைவிடவில்லை. கிருஷ்ணனைச் சார்ந்து இருந்தது ஒன்றே அவர்களுக்கு எல்லா வல்லமையையும் ஊட்டியது. நித்திய வாழ்க்கையை அவர்களே பெற்றனர். பிரஹ்லாதன், அப்பர் முதலாயினோர் வாழ்க்கையும் இதற்குச் சான்றாகும். பக்தர்களுக்கு அழிவில்லையென்பதைப் பக்தர்களுடைய வாழ்க்கையே விளம்பரம் செய்கிறது. கடைத்தரமான பாபிகளும் கடைத்தேற முடியும் என்று சொல்லியான பிறகு இடைத்தரமானவர்களைப் பற்றிய பேச்சு வருகிறது. அதாவது : 32. மாம் ஹி பார்த வ்யபாஸ்ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: ஸ்த்ரியோ வைஸ்யாஸ்ததா ஸூத்ராஸ்தேऽபி யாந்தி பராம் கதிம் ஹி பார்த-ஏனெனில் பார்த்தா, ஸ்த்ரிய: வைஸ்யா: ஸூத்ரா:-பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும், ததா-அதே போல, பாபயோநய:-பாவிகளானாலும், யே அபி ஸ்யு:-எவர்களாக இருந்தாலும், தே அபி மாம் வ்யபாஸ்ரித்ய-அவர்களும் என்னை தஞ்சமடைந்து, பராம் கதிம் யாந்தி-மேலான கதியை அடைகிறார்கள். பொருள் : பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார். மனபரிபாகத்துக்கு ஏற்றாற்போல பிறவி மேலானது அல்லது கீழானது ஆகிறது. ஈண்டு இயம்பப்பட்ட மூவரும் கீழான பிறவியரே. எக்குலத்தில் பிறந்தவராயினும், இயல்பாக மாதர் உறுதியான உள்ளம் உடையவர் அல்லர். பேதைமையே பெண்டிரது இயல்பு. திண்மை வாய்ந்திருக்கும் தையலர் மிகக் குறைவு. அத்தகைய சிறுபான்மையர் விதிக்கு விலக்கானவர் என்றே சொல்லாம். ஆக, பொதுவாகப் பெண்மக்களைக் கீழான பிறவியர் என்பது இயற்கைக்கு ஒத்ததொரு சொல்லாகும்; இழிச்சொல் அல்ல. இவ்வுலக வாழ்க்கைக்குப் பயன்படுகிற பொருளைச் சேகரிப்பதிலேயே மனதை வைப்பவர்கள் வைசியர்கள். அருளை நாடாது, பொருளை நாடுதலே அவர்களது போக்கு. ஜடப்பொருளை எண்ணுகின்றவளவு ஜட புத்தியே அவர்களிடத்து வலுக்கிறது. அத்தகைய பிரவிருத்தியையுடைவர்களெல்லாம் கீழான பிறவியை யுடையவர்களாகக் கருதப்படுகின்றனர். அதிலும் கீழ்ப்பட்டவர் சூத்திரர். ஏனென்றால் பிறரிடத்து அடிமைத்தொழில் செய்தல் ஒன்றுதான் அவர்களுக்கு இயலும். ஜீவனோபாயத்தின் பொருட்டுத் தம் வாழ்க்கையை யார் பிறரிடத்து ஒப்படைக்கின்றனரோ அவரே சூத்திரர். இவ்வுலகம் ஒன்றைமட்டும் அறிந்து, அதைச் சார்ந்திருக்கும் அன்னவர் இறைவனைச் சார்கிறதில்லை. அழுக்குப் படிந்த உடல் நீராடுவதால் சுத்தியடைகிறது. பரமனைப் பக்தியுடன் போற்றுவதால் சித்தமலம் அகலுகிறது; மனம் குவிகிறது; பரபோதம் ஓங்குகிறது; பரகதியும் கைகூடுகிறது. கீழான பிறவி ஒருநாளும் பக்திக்கு இடைஞ்சல் அல்ல. கடலை அடையும் நதிகளெல்லாம் கடல் மயம் ஆகின்றன. புண்ணியநதி, சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன. அங்ஙனம் கடவுளைக் கருதும் மனிதர்களெல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர். செயலில் அல்லது பிறவியில் கீழோரும் பக்தியால் மேலோர் ஆகின்றனர். கடவுளின் அருள் அவர்களை மேலோர் ஆக்குகிறது. கடவுளை அடையத்தகாதார் என்பார் எவருமில்லை. புயற்காற்று அடிக்கும்போது அரசமரம் இன்னது, ஆலமரம் இன்னது என்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. அதுபோல பக்தி என்னும் புயற்காற்று ஒருவனுக்குள் அடிக்கும்போது அவனிடம் ஜாதிபேதம் இருக்க முடியாது. இனிப் பாரமார்த்திகத்துக்கென்றே பிறந்து வாழ்ந்திருப்பவர் நிலை யாது? 33. கிம் புநர்ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் புண்யா:-புனிதமான, ப்ராஹ்மணா: ராஜர்ஷய: பக்தா:-அந்தணரும் ராஜரிஷிகளும் எனக் கன்பராயின், கிம் புந:-சொல்லவும் வேண்டுமோ! அநித்யம் அஸுகம்-நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய, இமம் லோகம் ப்ராப்ய-இவ்வுலகப் பிறவி யெய்திய நீ, மாம் பஜஸ்வ-என்னை வழிபடக் கடவாய். பொருள் : அப்படியிருக்கத் தூய்மை யார்ந்த அந்தணரும் ராஜரிஷிகளும் எனக் கன்பராயின், என்னே! ஆதலால்; நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய இவ்வுலகப் பிறவி யெய்திய நீ என்னை வழிபடக் கடவாய். மேலே சொன்ன பாபயோனிகளுக்கு எதிரிடையாக இங்குப் புண்ணியவான்கள் பகரப்படுகின்றனர். அவை கீழான பிறவிகளாவது போன்று, இவை மேலான பிறவிகளாகின்றன. ஏனென்றால் பிரம்மரிஷிகளும் ராஜரிஷிகளும் சர்வேசுவரனிடத்து அனன்னிய பக்தி பண்ணுவதையே லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். அறம் வளர்ப்பவர் அந்தணர் ஆகின்றனர். அறம் வழங்குபவர் அரசர் ஆகின்றனர். கேணியில் நீர் ஊறவும் வேண்டும்; உண்ணுதற்கு அதை உலகுக்கு எடுத்து வழங்கவும் வேண்டும். மரம் காய்த்துப் பழுக்கவும் வேண்டும்; அதை உலகுக்கு உணவாகக் கொடுக்கவும் வேண்டும். திரவியத்தை மணலுக்கு ஒப்பாகத் தள்ளி விட்டுத் தவத்தையே தனமாகத் தேடுபவர், ஈசுவர சேவையிலேயே கண்ணுங் கருத்துமாயிருப்பவர், ஈசுவர பக்திக்குப் புறம்பாகிய எதற்கும் சிந்தையில் இடங்கொடாதவர் அந்தணர் ஆகின்றனர். அவர்களது நல்வாழ்க்கையால் அறம் வளர்கிறது. உயிர்களை அல்லும் பகலும் அறநெறியில் ஓம்புதலே அரசர் செயல். அதுவும் சிறந்த ஈசுவர சேவையாகின்றது. ஆக, கடவுள் வழிபாட்டுக்கென்றே பிறந்து வாழ்ந்திருப்பவர் கடவுளையடைதற்குச் சந்தேகம் யாதுளது? கீழான மனதையுடையவர் நிலையற்ற உலகத்தை நிலைபெற்ற உலகம் என்று எண்ணி, அதில் பற்று வைக்கின்றனர். இயற்கையில் எவ்வுயிரை அல்லது எப்பொருளைப் பார்த்தாலும் அது அழியும் தன்மையுடையது என்ற உண்மையையே அது ஓயாது புகட்டிக்கொண்டிருக்கிறது. வளரும் வாலிபன் மரணத்தை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறான் அல்லவா? நேற்றுப் பச்சிலையாயிருந்தது இன்று உதிர் சருகு ஆகின்றது. அணு முதல் அண்டம் வரையில் எல்லாம் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகளிடத்து அமையும் மாறுதலே இன்பத்தைத் துன்பமாகச் சமைக்கிறது. இன்று பிள்ளை பிறந்தான் என்ற பூரிப்பானது நாளை அவன் இறந்தான் என்ற வாட்டமாகிறது. வெற்றி என்ற மகிழ்ச்சி, தோல்வி என்ற துன்பமாக மாறுகிறது. தவளையின் பின்னங்காலைப் பாம்பு பிடித்துக்கொண்டது; அதை விழுங்கவும் ஆரம்பித்துவிட்டது. அதற்கிடையில் தன்னெதிரே வந்த பூச்சியொன்றைத் தவளை பிடித்துத் தின்று திருப்தியடைகிறது. இங்ஙனம் மனிதனை நமன் பற்றிக்கொண்டான்; காலத்தைக்கொண்டு அளந்து அவனை விழுங்கவும் ஆரம்பித்துவிட்டான். அதைப் பொருட்படுத்தாது உலகம் தருகிற இன்பத்தை நுகர்ந்து அவன் இறுமாந்திருக்கிறான். அறிவுடையோனுக்கு இது பொருந்தாது. அநித்தியமும் அசுகமுமான இவ்வுலகைப் பெற்றதனால் ஆய பயன் ஒன்றே உளது. அது யாது எனின், இதைப் பொருட்படுத்தாது சர்வேசுவரனைப் பஜித்தலேயாம். அதுவே செயற்கரிய செய்கையாகும். எந்த வழியாக நமக்கு ஈசுவர தரிசனம் கிடைக்கும்? உருகிய உள்ளத்துடன் அவனுக்காக உன்னால் கதறியழ முடியுமா? மனைவி, மக்கள், பொன், பொருள் இவைகளுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் உகுக்கிறார்கள். ஆனால் இறைவன் வேண்டும் என்று அழுபவர் யார்? குழந்தை விளையாட்டுப் பொருள்ளோடு ஈடுபட்டிருக்கும் வரையில் தாய் தன் சமையல் வேலைகளையும் இதர அலுவல்களையும் கவனிக்கிறாள். விளையாட்டுக் கருவிகள் பசியை நீக்குகின்றதில்லை. எனவே குழந்தை அவைகளை வீசி எறிந்துவிட்டுத் தாயை வேண்டிக் கோவென்று கத்தி அழுகின்றது. உடனே தாய் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், சாதத்தின் கஞ்சி வடித்துக்கொண்டிருந்தாலும் கூட எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து குழந்தையை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொள்கின்றாள். இறைவன் அங்ஙனம் பக்தனை ஓம்புகிறான். அவனைப் போற்றும் விதம் வருமாறு : 34. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு, மத்பக்த:-பக்தியை எனக்காக்கு, மத்யாஜீ-என்னைத் தொழு, மாம் நமஸ்குரு-என்னை வணங்கு, ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி, மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக. பொருள் : மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய். மனது முழுதும் ஈசுவர எண்ணத்தால் நிறையப் பெறவேண்டும். ஒருவனை வெறுத்தால் அல்லது ஒருவனுக்கு அஞ்சினால் மனது முழுதும் அவனைப்பற்றிய எண்ணமுடையதாகிறது. அப்படிச் செய்யாது பக்தியோடு கூடிய பேரன்பு ததும்பிய எண்ணமாயிருக்கவேண்டும். சிறுவன் ஒருவனுக்குத் தன் தாயினிடத்து அத்தகைய நிறைமனதும் பேரன்பும் உண்டாகின்றன. ஆனால் அவனுக்கு ஆகவேண்டிய காரியங்களையெல்லாம் தாய் செய்து முடிக்க வேண்டும் என்று அச்சிறுவன் எதிர்பார்க்கிறான். அர்ஜுனா, நீ அப்படிச் செய்யாதே, என்னிடத்து பக்தி பண்ணுவதோடு சேர்த்து எனக்கு யாகம் செய். அதாவது நீ வாங்கிப் பிழைப்பவனாக உலகத்தில் வாழாது பெருங்கொடையாளியாயிரு. அப்படி எங்கு யாருக்கு எதைக் கொடுத்தாலும் அதை என்னுடைய ஆராதனையாகக் கருது. நான் கொடையாளி என்ற கர்வம் வராதிருத்தற்பொருட்டு, உன் கொடையை ஏற்றுக்கொள்பவர்களையெல்லாம் என் சொரூபமாகக் கருதி நமஸ்காரம் செய். பகவானை அடைதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பக்தியும் பூஜையும் சேவையும் சர்வகாலமும் செய்துவரவேண்டும். அதனால் உள்ளம் யோகத்தில் உறுதியடைகிறது. துரு நீங்கப்பெற்ற இரும்பு காந்தத்தினிடத்தில் சேர்வதுபோன்று பக்தியில் பண்பட்ட மனது பகவானிடம் சேர்கிறது. இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே ராஜவித்யா ராஜகுஹ்யயோகோ நாம நவமோ அத்யாய: பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் என்ற ஒன்பதாம் அத்தியாயம். | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
பத்தாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | விபூதி யோகம்அக்டோபர் 13,2011
பக்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. ... மேலும்
|
பத்தாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | விபூதி யோகம்
பசுக்களில் காமதேனு. அசுரருள் பிரகலாதன். பறவைகளுள் கருடன். வீரர்களுள் ராமன். எழுத்துகளுள் அ என்னும் முதலெழுத்து, மாதங்களுள் மார்கழி. மேற்கூறியவையெல்லாம் உதாரணமாக ஒவ்வொன்றிலும் சிறந்தவையாக எடுத்துக் கூறப் பட்டிருக்கின்றன. அவரின் பெருமையைத் தனித்தனியே முற்றிலும் கூறுவது இயலாத காரியம். எந்த அசைபொருளும் அசையாப் பொருளும் அவரை விட்டுத் தனித்து நிற்க முடியாது. அனைத்துக்கும் ஆதிமூலமாயிருப்பவர் பகவான் 1-6 -ஈசனது விபூதியைப் பற்றிய ஞானம் பக்தியை வளர்க்கிறது 7-9 -அதனால் புத்தியோகம் உண்டாகிறது 10-11 -தெவிட்டாத இன்பம் தருவது பகவானது விபூதி 12-18 -தமது சிறப்பு இயல்புகளை பகவான் விளக்குகிறார் 19-40 -விபூதிகளின் ஸாரம் 41-42. ஸ்ரீபகவாநுவாச 1. பூய ஏவ மஹாபாஹோ ஸ்ருணு மே பரமம் வச: யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா ஸ்ரீபகவாநுவாச-பகவான் சொல்லுகிறான், மஹாபாஹோ-பெருந்தோளுடையாய், ப்ரீயமாணாய-மிகவும் அன்பு கொண்டவனான, தே அஹம்-உனக்கு நான், ஹிதகாம்யயா-உன் நலம் கருதி, யத் பூய ஏவ வக்ஷ்யாமி-எதை மீண்டும் கூறுவேனோ, மே-என்னுடைய பரமம் வச:-மிகவும் உயரிய அந்த வாசகத்தை, ஸ்ருணு-கேள். பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்; நீ எனக்கு உகந்தவன்; ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே. பகவத் விபூதியைக் கேட்பதில் அர்ஜுனன் கொண்டுள்ள பிரியத்தை பகவான் பெரிதும் பாராட்டுகிறார். கேள்வியில் முயற்சியுடையார்க்கு அதை எடுத்துச் சொல்லுதலில் சொல்லுபவர்க்கு ஊக்கம் பிறக்கும். அதை இங்குக் காண்கிறோம். புகட்டுபவர் அதிசயிக்கத் தகுந்த மேலானவர்; அதைக் கேட்கப் பெறும் சிஷ்யன் கெட்டிக்காரன் என்ற வேதாந்த வாக்கியம் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுனனாகிய இவ்விருவர் மூலம் நிரூபிக்கப்படுகிறது. அமிர்தபானம் பண்ணுவது போன்று அர்ஜுனன் அவரது அருள்மொழியைக் கேட்கின்றான். ஏழாவது அத்தியாயத்திலும் ஒன்பதாவது அத்தியாயத்திலும் பகரப்பட்ட பொருள் இங்கு மீண்டும் விளக்கப்படுகிறது. உருக்கிய பொன்னைத் திரும்பவும் உருக்கினால் அது மாசு நீங்கி ஒளிவீசும். அவ்வாறே பகவத் விபூதியை ஆராய ஆராய உபாசனை வலுக்கிறது; பக்தி பெருகுகிறது; தியானம் தெளிவுபடுகிறது; பரமவஸ்துவைப்பற்றிய மெய்ம்மொழியாதலால், அச் சொல்லும் பரம வசனமெனப்படுகிறது. விளைநிலத்தின் நலம் கோலும் வேளாளன் அதைப் பண்படுத்துகிறான். அங்ஙனமே பார்த்தனது ஹிதத்தில் காமுற்ற கிருஷ்ண பகவான் பரம வசனத்தைப் பகர்கிறார். அப்படி ஒரு மனிதனோடு பேசிக்கொண்டிருப்பதனால் காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்பட்டவர்போன்று தென்படுகிற இறைவனது உண்மை இயல்பு இத்தகையது என்பதை அவரே ஈண்டு இயம்புகிறார் : 2. ந மே விது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய: அஹமாதிர்ஹி தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ: ஸுரகணா: மே ப்ரபவம் ந விது:-வானவர் கணங்கள் என் மகிமையை உணரார், மஹர்ஷய: ந-பெருந்தகை முனிவருமுணரார், ஹி அஹம் ஸர்வஸ:-ஏனெனில் நான் எல்லாவிதங்களிலும், தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஆதி-வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே. பொருள் : வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்; பெருந்தகை முனிவருமுணரார்; யாங்கணும், வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே. பிள்ளையின் பிறப்பு முதலியவைகளைப் பிதா அறிகிறார். ஆனால் பிதாவின் பிறப்பு, பால்யம் முதலியவைகளைப் புத்திரன் ஒருநாளும் அறியான். பரம புருஷனிடத்திருந்து பிரம்மா முதலிய தேவர்களும், பிருகு முதலிய ரிஷிகளும் தோன்றினார்கள். சூரியனிடத்திருந்து கிளம்பிய கிரணம் சூரியனை முற்றும் அளந்து அறிய இயலாதது. அதுபோன்று தங்களுக்கு முதற்காரணமாயுள்ள பரம புருஷனுக்கு உற்பத்தி காண தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இயலாது. உண்மையில் அவனுக்கு உற்பத்தி இல்லவே இல்லை. பிறவாத அவன் பிறப்பவன் போன்று அவதாரங்களில் காட்டுகிறான். அப்படி மனித வடிவெடுத்திருக்கையிலும் அவனது மகிமையை முழுதும் யார் அறிவார்? பிரபவம் என்பதற்கு மகிமை என்று பொருள் உண்டு. அனைத்துக்கும் முதற்காரணனாகிய அவள் பெருமையை அவன்தான் உணர்வான். பிரம்மமாகிற சமுத்திரத்திலிருந்து வீசும் காற்று, அது மோதும் ஒவ்வொரு ஹிருதயத்தையும் விகஸிக்கச் செய்கின்றது. ஸனகர், ஸனந்தனர் முதலிய பூர்வ ரிஷிகள் இந்தக் காற்றினால் பக்குவமாயினர். ஈசுவர பிரேமையால் பைத்தியங்கொண்ட நாரதர் கொஞ்ச தூரத்திலிருந்து அதை ஸமுத்திரத்தைத் தரிசித்தனர் போலும்! அது காரணமாக அவர் தம்மையே மறந்து சதா சர்வகாலமும் ஸ்ரீ ஹரியின் புகழைப் பாடிக்கொண்டு, பித்தரைப் போல உலகமெங்கும் திரிகின்றார். பிறவித் துறவியான சுகதேவர், அந்த மஹாஸமுத்திர ஜலத்தை மூன்றுதரம் கையினால் தொட்ட மாத்திரத்தில் பரிபூரண ஆனந்தத்தினால் குழந்தையைப்போல் அங்கும் இங்கும் ஓடியாடிக்கொண்டிருக்கிறார். லோக குருவாகிய மஹாதேவர், அந்த ஸமுத்திர ஜலத்தில் மூன்று கை அள்ளிக் குடித்ததனால், திவ்யானந்தப் பித்தேறி, பிணம்போல அசைவற்றுக் கிடக்கிறார். இந்த மஹா சமுத்திரத்தின் ஆழத்தையோ அல்லது அபூர்வ சக்தியையோ எவரால் கண்டுபிடிக்க முடியும்? அவனைப்பற்றி ஒன்றுமே தெரிந்துகொள்ள முடியாதோ என்ற கேள்விக்கு விடை வருகிறது : 3. யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேஸ்வரம் அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே அஜம் அநாதிம் லோகமஹேஸ்வரம் ச-பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்குத் தலைவன் என்று, ய: வேத்தி-எவர் அறிகிறாரோ, மர்த்யேஷு அஸம்மூட: ஸ-மானிடருக்குள்ளே மயக்கம் தீர்ந்த – தெளிந்த அறிவுடைய அவர், ஸர்வபாபை: ப்ரமுச்யதே-பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான். பொருள் : பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான், பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான். இயற்கையில் காணப்படும் பொருள்களெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியவைகள். மரத்திலிருந்து விதை உண்டாகிறது. பிறகு விதையிலிருந்து மரம் உண்டாகிறது. இவ்வாறு காரண காரிய மயமாக அவைகளிடத்துப் பெருந் தொடர்பு உண்டு. இக்கோட்பாட்டின்படி பரமாத்மாவினிடத்திருந்து தேவர்களும் ரிஷிகளும் உண்டானார்களானால், அப்பரமாத்மா யாரிடத்திருந்து உண்டானார் என்ற கேள்வி பிறக்கக்கூடும். இதற்கு விடையாக அவர் தம்மை அனாதி என்று சொல்லுகிறார். அவருக்குத் துவக்கம் கிடையாது. ஆகையால் அவர் பிறவாதவர் ஆகிறார். கானலில் நீர் தோன்றுவதுபோன்றும், சூரியனிடத்திருந்து கிரணங்கள் வருவது போன்றும், கடலிலிருந்து ஆவியாக நீர் வருவதுபோன்றும் சர்வேசுவரனிடத்திருந்து சரம் அசரம் ஆகிய அனைத்தும் தோன்றுகின்றன. அதனால் அவரிடத்து ஒரு குறையும் ஏற்படுவதில்லை. யாண்டும் நிறைபொருளாகவே இருக்கிறார். அவருடைய முன்னிலையில் இந்த உலகங்களின் நடைமுறை கோணலின்றிக் காரியப்படுகிறது. அணுவும் அவரது ஆணையை மீறி நடப்பதில்லை. ஆதலால் அவர் லோக மகேசுவரன் என்று அழைக்கப்படுகிறார். மடியும் தன்மையுடைய மக்களுக்கு மடியாப் பொருளைப் பற்றிய உண்மை தெரிவதில்லை. பக்தி சாதனத்தால் சித்த சுத்தி அடையப் பெறுபவர் சர்வேசுவரனது விபூதியைச் சிறிது அறிகின்றனர். அழியும் பொருள்களுக்கு ஆதாரமாயுள்ள அழியாப் பொருள் அவர் என்பது ஓரளவு விளங்குகிறது. அகண்டாகாரத்தில் விரிந்தோடுகிற வெட்டவெளியை ஒரு சிறு துவாரத்தின் வாயிலாகப் பார்ப்பது போன்றது அது. சுவானுபூதியில் அவரது விபூதியை அறிபவனுக்கு மயக்கம் ஏற்படுவதில்லை. சர்வேசுவரனுக்குப் புறம்பாக உலகத்தையும் வாழ்க்கையையும் பொருள்படுத்துவதே பாபம். மயக்கத்திலிருந்து தெளிவடைந்து ஈசுவரக் காட்சியைக் காண்பவன் பாபத்திலிருந்து விடுபடுகிறான். மேலே மொழிந்தது அவருடைய அபிராகிருத விபூதியாம். அதாவது இயற்கைக்கு அப்பாற்பட்டது. பிரகிருதியோடு சேர்ந்த விபூதிகளும் பல உண்டு. அவையாவன : 4. புத்திர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஸம: ஸுகம் து:கம் பவோऽபாவோ பயம் சாபயமேவ ச 5. அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தாநம் யஸோऽயஸ: பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக்விதா: புத்தி: ஜ்ஞாநம் அஸம்மோஹ:-மதியும், ஞானமும், மயக்கமின்மையும், க்ஷமா ஸத்யம் தம: ஸம:-பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், ஸுகம் து:கம் பவ: அபாவ:-இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், பயம் ச அபயம் ஏவ ச-அச்சமும், அஞ்சாமையும். அஹிம்ஸா ஸமதா துஷ்டி-துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், தபோ தாநம் யஸ: அயஸ:-தவமும், ஈகையும், புகழும், இகழும், பூதாநாம் ப்ருதக்விதா: பாவா-உயிரினங்களுடைய வெவ்வேறான மனப்பாங்குகள் இயல்புகள், மத்த: ஏவ பவந்தி-என்னிடமிருந்தே உண்டாகின்றன. பொருள் : மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும், பொருள் : துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், இங்ஙனம் பலமிடுமியல்புகளெல்லாம் என்னிடம் பெறுவன உயிர்கள். (4-5) புத்தி-நுண்ணறிவு அல்லது ஆழ்ந்த கருத்துக்களை வாங்க வல்ல அந்தக்கரணம். ஞானம்-ஆத்மாவை அறியவல்ல இயல்பு. அஸம்மோஹம்-எந்த நெருக்கடியிலும் மனக்குழப்பம் ஏற்படாமை. க்ஷமை-பொறுமை அல்லது பிறரால் தாக்கப்படும் போதும் மனம் நோகாதிருத்தல். சத்தியம்-வாய்மை அல்லது பார்த்தும் கேட்டும் அனுபவித்தும் அறிந்தவைகளை அப்படியே பிறர்க்கெடுத்துப் பகர்தல். தமம்-புறக்கரணங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவைகளை அடக்குதல். சமம்-அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவைகளிடத்து அமைதியேற்படுதல். சுகம்-இன்பம் அல்லது ஆஹ்லாதம். துக்கம்-துன்பம் அல்லது சந்தாபம். அஹிம்சை-ஓருயிர்க்கும் தீங்கு செய்யாமை. ஸமதா-விருப்பு வெறுப்புகளை விளைவிக்கும் செயல்களுக்கிடையில் மனது நடுநிலை பிறழாதிருத்தல். துஷ்டி-திருப்தி, சந்தோஷம் அல்லது போதுமென்ற மனநிலை. தபசு-இந்திரியங்களை ஒடுக்குதல், அல்லது உடலை அடக்கியாளுதல். தானம்-தனக்குப் பயன்படும் பொருள்களை மற்றவர்களுக்கும் உவந்தளித்தல். யச:-தர்மம் செய்வதால் வரும் புகழ்ச்சி. அயச:- அதர்மம் செய்வதால் வரும் இகழ்ச்சி. மின்சாரத்தை ஒரு அடுப்பு, ஒரு தணுப்பைத் தரும் கருவி, ஒரு விசிறி, ஒரு விளக்கு, ஒரு யந்திரம் ஆகிய இவைகளுள் அதனதன் அமைப்புக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். அதுபோன்று, ஜீவர்கள் இவ்வித விபூதிகளை ஈசுவரனிடத்திருந்து அவரவர் வினைக்கேற்றபடி வாங்கிக்கொள்கின்றனர். ஈசுவரனுடைய விபூதிகளை ஏராளமாக ஏற்றவர்கள் யார் எனின்: 6. மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: லோகே இமா: ப்ரஜா:-உலகில் இந்த பிரஜைகள் அனைவரும், யேஷாம் ஜாதா-எவரிடம் இருந்து உண்டானார்களோ அந்த, ஸப்த மஹர்ஷய: பூர்வே-சப்த ரிஷிகளுக்கும் முந்தையவர்களான, சத்வார: ததா-சனகர் முதலான நான்கு முனிவர்களுக்கும் அவ்வாறே, மநவ: மாநஸா: மத்பாவா ஜாதா:-மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். பொருள் : முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும். ஏழு மஹரிஷிகளின் பெயர்கள்-பிருகு, மரீசி, அத்ரி, புலகர், அங்கிரஸ், கிரது, புலஸ்தியர். நான்கு மனுக்களின் பெயர்கள்-சுவாரோசிஷர், சுவாயம்புவர், ரைவதர், உத்தமர். ஈசுவரனுடைய மனதிலிருந்து அவனுடைய மானச புத்திரர்களாக ஏழு மஹரிஷிகளும் பதினான்கு மனுக்களில் முக்கியமானவர்கள் நால்வரும் உண்டானார்கள். தங்களுடைய மனதை அவர்கள் எப்பொழுதும் சர்வேசுவரனிடத்தே வைத்திருந்தபடியால் ஈசுவர பிரபாவம் அவர்களுக்கு உண்டாயிற்று. மனது எதை உபாசிக்கிறதோ அதன் தன்மைகளை எடுத்துக்கொள்ளவல்லது. ஆகையால்தான் அது ஈசுவரனிடத்தே வைக்கப்படவேண்டும். ஈசுவரனிடத்திருந்து உதித்த ஞானத்தைக்கொண்டு ஏழு ரிஷிகள் உலகில் ஞானத்தைப் பரப்பி வந்தார்கள். அவனிடத்திருந்து வந்த ஐசுவரியத்தைக்கொண்டு நான்கு மனுக்கள் உலகையெல்லாம் ஆண்டுவந்தார்கள். இன்னும் அந்த ஏழு ரிஷிகள் உயிர்வகைகள் அனைத்தையும் சிருஷ்டித்தார்கள். மனுக்களோ அவைகளைப் பரிபாலித்தார்கள். இங்ஙனம் சிருஷ்டிக்கிரமம் நடைபெறுகிறது. ஏழு பிறப்பு என்பது ஏழு படித்தரங்களாயுள்ள ஞான பூமிகளாம். சராசரங்களாகிய உயிர்வகைகள் அனைத்தும் ஏழு ஞான பூமிகளில் அடங்கப்பெறுகின்றன. அவைகளின் உருவகமாயிருப்பவர்கள் ஏழு ரிஷிகள். ஆக, எல்லா உயிர்களுக்கும் மூலமாக இந்த ரிஷிகள் அமைகிறார்கள். ஈசுவரனுடைய இத்தகைய வல்லமையைத் தெரிந்துகொள்பவனுக்கு உண்டாவது யாது? விடை வருகிறது: 7. ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத: ஸோऽவிகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்ஸய: ய: மம-எவன் என்னுடைய, ஏதாம் விபூதிம் யோகம் ச-இத்தகைய எனது பெருமையும் யோகந்தனையும், தத்த்வத: வேத்தி-உள்ளவாறு உணர்வோன், ஸ: அவிகம்பேந யோகேந யுஜ்யதே-அவன் அசைவில்லாது யோகத்தில் அமர்கிறான், அத்ர ஸம்ஸய: ந-இவ்விஷயத்தில் ஐயமில்லை. பொருள் : இத்தகைத்தாகும் எனது பெருமையும் யோகந்தனையும் உள்ளவாறுணர்வோன் அசைவிலா யோகத்தமர்வான்; இதிலோர் ஐயமில்லை. பகவானே இத்தனை விதமான விரிவுகளை அடையவல்லவனாதலால் அவை யாவும் அவனுடைய விபூதிகளாகின்றன. இத்தனையுமாய் விரிந்தபின் அவன் அவைகளோடு எத்தகைய இணக்கம் வைத்திருக்கிறான் என்பதை ஆராயுங்கால் அவனுடைய யோகம் அறியப்படுகிறது. தீயின் தன்மையை உள்ளபடி அறிகிறவர்கள் அதில் கையை வைத்துக் காந்திப்போக விடமாட்டார்கள். ஆனால் அதைச் சமைப்பதற்கென்று நன்கு பயன்படுத்துவார்கள். ஈசுவரனுடைய விபூதிகளையும் யோகத்தையும் உள்ளபடி பேரறிவுகொண்டு அறிகிறவர்கள் அவனிடத்துத் தளராத இணக்கம் அல்லது அசையாத யோகம் வைப்பார்கள். எண்ணெய் இல்லாதுபோனால் விளக்கு எரியாது. அதுபோல ஈசுவரனில்லாமற் போனால் மனிதன் ஜீவித்திருக்க முடியாது. அசையாத யோகம் என்றால் என்ன? விடை வருகிறது : 8. அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா: அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:-நான் அனைத்திற்கும் தொடக்கம், மத்த: ஸர்வம் ப்ரவர்ததே-என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது, இதி மத்வா-என்று புரிந்து கொண்டு, பாவஸமந்விதா: புதா:- நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அறிஞர்கள், மாம் பஜந்தே-என்னை தொழுவார். பொருள் : நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த புலவர் என்னை அன்புடன் தொழுவார். செடிகளின் வளர்ச்சிக்கு முதற்காரணம் பூமி என்று அறியும் கிருஷிகர் அந்தப் பூமியைப் பண்படுத்தலிலேயே கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர். உலகு அனைத்துக்கும் முதற்காரணம் கடவுள் என்றும், கடவுளிடத்து மனதைத் திருப்புகிறவர்களுக்கே தெய்வப்பெற்றிகள் யாவும் வந்தமைகின்றன வென்றும் அறியும் சான்றோர் அன்புடன் தங்கள் மனதைக் கடவுளிடத்துத் திருப்புகிறார்கள். ஏது நிகழ்ந்திடினும் அவர்கள் மனது கடவுளைவிட்டு மாறுவதில்லை. செடி பூமியைப் பற்றிக்கொண்டிருப்பதுபோன்று அவர்களது இயல்பு முழுதும் ஈசனையே பற்றிக்கொண்டிருக்கிறது. அப்படி அவனைப் பற்றுமளவு யோகம் அசைவற்றதாகிறது. வாழ்க்கையில் மனிதன் கொண்டுள்ள வெவ்வேறு இயல்புகளுக்கு ஈசுவர உபாசனையில் இடமில்லையா? விடை வருகிறது : 9. மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச மத்சித்தா-அகத்தினை என்பால் வைத்து, மத்கதப்ராணா-உயிரை என்னுள்ளே புகுத்தி, பரஸ்பரம்-தங்களுக்குள்ளே, போதயந்த: ச-விளக்கிக் கொண்டும், கதயந்த: ச-(என்னுடைய புகழைப் பற்றி) பேசிக் கொண்டும், நித்யம் துஷ்யந்தி ச மாம் ரமந்தி-எப்போதும் மகிழ்கிறார்கள்; என்னிடமே இன்புறுகிறார்கள். பொருள் : அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரை யருவர் உணர்விப்பாராய், எக்காலுந் தம்முள் என்னைக் குறித்தியம்புவார்; அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார். விரும்பிய பொருளில் மனதை வைப்பது மிக எளிது. தாய் தந்தையர்களிடத்திருந்து தங்களுக்கு எல்லாம் வந்தமைந்தனவென்று அறியும் குழந்தைகள் முழுமனதையும் அவர்களிடத்தே திருப்புகின்றனர். தனக்குத் தோற்றமும் இருப்பிடமும் பகவான் என்பதை அறிகிற பக்தன் தன்னுடைய உள்ளத்தை இறைவன் பால் வைக்கிறான். தான் வளர்ந்தபின் பெற்றோரைப் பேணப் பிள்ளை ஒருவன் தன் உயிரையே கொடுக்கிறான். உயிரினும் மிக்க தொன்று யாருக்குமில்லை. பக்தன் அதைப் பகவானுக்குக் கொடுக்கிறான். காதலன் காதலிக்கு உயிர்கொடுப்பது போன்றது அல்ல பக்தன் செயல். காதலில் தனி நலமும் தனியுரிமையும் இருக்கிறது. பக்தியில் மற்றவர்கள் எல்லாரும் சேர வேண்டுமென்று, தான் பகவானைக் காண்கிறவாறு மற்றவர்களுக்கு பக்தன் விளக்குகிறான். மற்றவர் புகட்டுவதையும் தெவிட்டாது சுவைக்கிறான். அதைப் பலதடவை சொல்லுதலிலும் கேட்பதிலும் மகிழ்வு வருகிறது. ஆனால் சிற்றின்பம் போன்று அது முடிவில் மனக்கிலேசத்தையோ, குறையையோ உண்டுபண்ணுவதில்லை. பக்தியினால் என்றைக்கும் நிறை மனது அமையப்பெறுகின்றது. அந்த நிறைவில் ஆனந்தமும் ஓயாது ஊற்றெடுக்கிறது. வெறுங் கண்ணாடியில் யாதொரு உருவமும் பதிவதில்லை. ஆனால் தகுந்த ரசாயனப் பொருளை அக்கண்ணாடியின்மேல் பூசிய பிறகு, படங்களை எழுதலாம். அதுபோல பக்தியாகிய ரசாயனப் பொருளை ஹிருதயத்தின்மீது தடவினால், ஆங்கு ஈசுவரனுடைய ரூபத்தைப் பதியச் செய்யலாம். இங்ஙனம் பக்தி பண்ணுகிறவர்களிடத்து பகவான் எப்படி நடந்துகொள்கிறார்? விடை வருகிறது : 10. தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே ஸததயுக்தாநாம்-எப்போதும் யோகத்தில் இருப்பாராகில், ப்ரீதிபூர்வகம் பஜதாம்-அன்புடன் என்னை வழிபடும், தேஷாம்-அவர்களுக்கு, யேந-எந்த உபாயத்தின் மூலம், மாம் உபயாந்தி-என்னை அடைவார்களோ, தம் புத்தியோகம் ததாமி-அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கிறேன். பொருள் : எப்போதும் யோகத் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் என்னை யவர் எய்துவார். சர்க்கரையை நாவில் வைத்தால் அது தித்திக்கிறது என்பது தெரிகிறது. பிறகு அந்தச் சர்க்கரையை என்னென்ன வகைப் பட்சணங்களாகச் செய்தால் அதன் சுவையை நன்கு ரசிக்கலாம் என்று அறிவது சர்க்கரையைப் பற்றிய புத்தியோகமாகிறது. உள்ளன்போடும் உறுதியாகவும் யோகத்தில் நுழைபவர்க்கு இறைவனது மகிமை கொஞ்சம் விளக்குகிறது. அது யோகத்துக்கு இன்னும் தூண்டுகோலாகிறது. பகவான் தந்து கொண்டே வருகிற புத்தியோகத்தால் அவருடைய சொரூபம் மேலும் மேலும் அறியப்படுகிறது. அவருடைய சொரூபத்தைத் தொடர்ந்து அறியுமளவு பக்தன் இன்னும் அதிகமாகப் பகவானைச் சார்ந்து நிற்கிறான். இங்ஙனம் புத்தியோகத்தின் மூலம் பக்தி வளர்கிறது. ஒரு சிறு துவாரத்தின் வழியாக ஒரு இருட்டறைக்குள் ஒரு கிரணம் வெளிச்சம் வருகிறது. அவ்வறைக்குள்ளிருப்பவனுக்கு வெளிச்சத்தைப் பற்றியிருக்கும் அபிப்பிராயமானது அந்தக் கிரணத்தின் அளவுக்குத் தகுந்தபடிதானிருக்கும். கதவுகளிலும் ஜன்னல்களிலும் துவாரங்கள் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகமான வெளிச்சம் வரும். அதைப்பற்றிய அறிவும் அதிகரிக்கும். அக்கதவுகளையும் சாளரங்களையும் நன்றாகத் திறந்துவிட்டால் வெளிச்ச மயமாக அவ்வறை இருப்பதை அவன் காண்பான். ஆனால் வெட்ட வெளியில் நிற்பவனோ வெளிச்சத்திலேயே இருக்கிறான். அதுபோல பக்தர்களுடைய சுபாவத்துக்கும் சக்திக்கும் தகுந்தபடி ஈசுவரன் தன்னைத் தோற்றுவித்தருள்கிறான். பகவான் கொடுக்கிற புத்தியோகத்தால் பக்தன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது : 11. தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம: நாஸயாம்யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா தேஷாம் அநுகம்பார்தம்-அவர்களுக்கு இரங்கி நான், ஆத்மபாவஸ்த:-அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று, அஹம் ஏவ-நானே, அஜ்ஞாநஜம் தம:-அறியாமையால் உண்டான இருளை, பாஸ்வதா-ஒளிமயமான, ஜ்ஞாநதீபேந-ஞான வடிவான விளக்கினால், நாஸயாமி-அழிக்கிறேன். பொருள் : அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன். அன்பர்களது உள்ளத்தில் நீங்காது குடியிருந்து, அவர்கள் நன்மையடைய வேண்டும் என்று கருதுவது கடவுளின் கருணையாகும். அவர் ஏற்றிவைக்கும் ஞான தீபத்தின் தத்துவங்களாவன: விவேகம் அந்த விளக்கின் உருவமாகிறது. பக்தியினின்று வரும் மனத்திருப்தியே அதற்கு எண்ணெய். விஷக்காற்றில் விளக்கு எரியாது. ஆழ்ந்த ஈசுவரத் தியானமே இவ்விளக்கை எரிப்பதற்கான தூய காற்று ஆகிறது. தடைப்படாத பிரம்ம சரிய விரதத்தால் வளரும் பிரக்ஞை இதற்குத் திரியாகிறது. ஓய்வடைந்த அந்தக்கரணமே இதற்கு அகலாக அமைகிறது. பெருங் காற்று வீசி தீபத்தை அணைத்துவிடலாகாது. விருப்பு வெறுப்பற்ற தெளிந்த மனது அதற்கேற்ற வீடாக அமைகிறது. தங்கு தடையற்ற ஒருமுகப்பட்ட தியானத்தினின்று உதிக்கும் நிறை காட்சியே இத்தீபத்தின் ஒளிப்பிழம்பாகும். இதுவே பக்தனது உள்ளத்தில் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஞான தீபமாகும். இதனால் அவன் கடவுள் காட்சியை உள்ளபடி அடையப்பெறுகிறான். தாணாக்காரன் தனது விளக்கின் வெளிச்சம் எவர்மீது படும் படி திருப்புகிறானோ அவரைப் பார்க்கக்கூடும். ஆனால் அந்த விளக்கைத் தன்மீது திருப்பாதிருக்கும் வரையில் அவனை ஒருவராலும் பார்க்க முடியாது. அதுபோல ஈசுவரன் எல்லாரையும் பார்க்கிறான். ஆனால் தனது கிருபை மூலமாக அவன் தன்னைத் தோற்றுவிக்கும் வரையில் ஒருவராலும் அவனைக் காணமுடியாது. ஈசுவர விபூதியைப்பற்றியும் ஐசுவரியத்தைப்பற்றியும் தான் கேட்டறிந்து கொண்டதன் கருத்தை இப்பொழுது அர்ஜுனன் சொல்கிறான் : அர்ஜுந உவாச 12. பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந் புருஷம் ஸாஸ்வதம் திவ்யமாதிதேவமஜம் விபும் 13. ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், பவாந்-நீங்கள், பரம் ப்ரஹ்ம பரம்தாம-பரப்பிரம்மம்; பரம பதம் (வீடு பேறு), பரமம் பவித்ரம்-தூய்மை அனைத்திலும் சிறப்புடைய தூய்மை, ஸாஸ்வதம் திவ்யம் புருஷம்-என்றும் உள்ளவர் – என்றும், தெய்வீகமான புருஷன் என்றும், ஆதிதேவம் அஜம் விபும்-ஆதி தேவன் என்றும்; பிறப்பற்றவன் என்றும்; எங்கும் நிறைந்தவர் என்றும். ஸர்வே ருஷய: த்வாம் ஆஹு-முனிவரெல்லாரும் உன்னைப் பற்றி கூறுகிறார். ததா தேவர்ஷி: நாரத-அவ்வாறே தேவரிஷி நாரதரும், அஸிதோ தேவலோ வ்யாஸ: ச-அசிதரும் தேவலரும் வியாசரும் (கூறுகிறார்கள்), ஸ்வயம் ஏவ மே ப்ரவீஷி-நீயும் அதையே என்னிடம் கூறுகிறாய். பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: நீயே பரப்பிரம்மம், நீயே பரவீடு, தூய்மை யனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை நீ. நின்னையே நித்திய புருஷ னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைமைக் கடவுளென்றும், பொருள் : முனிவரெல்லாரும் மொழிகிறார்; தேவரிஷி நாரதருமங்ஙனே நவில்கிறார். அசிதரும் தேவலரும் வியாசரும் அங்ஙனமே செப்புகிறார். இங்கு நீ நேரே எனக்கு அதை உரைக்கின்றாய். பர பிரம்மம் - நிர்க்குண நிருபாதிக பிரம்மம். அபர பிரம்மம் - சகுண சோபாதிக பிரம்மம் அல்லது ஈசுவரன். பரம் தாமம் - சினிமாப் படம் முழுதுக்கும் திரை இருப்பிடமாவது போன்று சராசரம் அனைத்துக்கும் பிரம்மம் முடிவான இருப்பிடமாகிறது. அனைத்தையும் விளக்கவல்ல பரஞ்ஜோதியும் அதுவே. ஆதி தேவன் - மற்ற தேவர்களெல்லாம் தோன்றுதற்கு முன்பே இருந்தவன். பரமம் பவித்ரம் - நீர், நிலம், தீ முதலியவைகள் தற்காலிகமாகப் பொருள்களைத் தூய்மைப்படுத்த வல்லவைகள். பரபிரம்மத்தைச் சாருமளவு ஜீவர்கள் பிரம்ம சொரூபமாகிறார்கள். அவர்களது குற்றமெல்லாம் அகலுகிறது. ஆகையால் ஜீவர்களைப் புனிதமாக்குபவைகளில் பரபிரம்மம் தலையாயது. ரிஷி - மனதையும் இந்திரியங்களையும் அடக்கிப் பர தத்துவத்தை சுவானுபவத்தில் கண்டறிந்தவர். தேவ ரிஷிகளில் சிறந்தவர் நாரதர். (12-13) 14. ஸர்வமேதத்ருதம் மந்யே யந்மாம் வதஸி கேஸவ ந ஹி தே பகவந்வ்யக்திம் விதுர்தேவா ந தாநவா: கேஸவ-கேசவா! யத் மாம் வதஸி-எதை என்னிடம் கூறுகிறாயோ, ஏதத் ஸர்வம் ருதம் மந்யே-இந்த அனைத்தும் உண்மையே என்று எண்ணுகிறேன், பகவந் தே வ்யக்திம்-பகவானே! உங்களுடைய ஸ்வரூபத்தை, தாநவா: ந விது:-அசுரர்கள் அறிந்து கொள்ளவில்லை, தேவா ஹி ந-தேவர்கள் கூட அறிந்து கொள்ள வில்லை. பொருள் : கேசவா, நினது கிளவி யனைத்தையும் மெய் யெனக் கொண்டேன். பகவனே, விண்ணவரும் அசுரரும் நின் விளக்கத்தை யறிவரோ? யாரிடத்தில் பலம், தர்மம், ஐசுவரியம், வீரியம், வைராக்கியம், தேஜஸ் ஆகிய இவைகள் ஆறும் நிறைந்திருக்கின்றனவோ அவர் பகவான். பகவான் என்பதற்கு ஷட்குண சம்பன்னன் என்னும் பொருள் உண்டு. இந்த ஆறுவித குணங்களை ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், வீரியம், ஸ்ரீ, கீர்த்தி என்று பொருள்படுத்துவதும் உண்டு. ஜீவர்களுடைய முக்கால நிலையை அறியும் வல்லமை அவருக்குண்டு. பகவானுடைய வியக்தியென்பது அவருடைய பிரபாவம் அல்லது தோற்றம். அவர் அவதரிப்பதன் உட்கருத்து தேவர்களுக்கே விளங்குவதில்லை; இனி, தானவர்கள் அல்லது அசுரர்கள் எப்படி அறியப்போகிறார்கள் ! நல்லோரைக் காப்பதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் அவர் அவதரிக்கிறார் என்பது ஓரளவு சில பக்தர்களுக்குப் புலப்படுகிறது. சூரியன் பூமியைக் காட்டிலும் பன்மடங்கு பெரியதாயினும், வெகுதூரத்துக்கப்பாலிருப்பதால் ஒரு சிறிய தட்டைப் போலக் காணப்படுகிறது. அதுபோலவே, ஈசுவரன் அளவற்ற மகத்துவமுடையவனாயிருந்தும், நமக்கும் அவனுக்குமிடையே உள்ள தூரத்தினால் நாம் அவனுடைய உண்மையான மகத்துவத்தை அறியச் சக்தியற்றவர்களாக இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் அவனே மூலகாரணமாதலால்: 15. ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த த்வம் புரு÷ஷாத்தம பூதபாவந பூதேஸ தேவதேவ ஜகத்பதே புரு÷ஷாத்தம! த்வம்-புரு÷ஷாத்தமா நீ, ஆத்மநா ஆத்மாநம்-தன்னால் தன்னை, ஸ்வயம் ஏவ வேத்த-தானே அறிய வல்லவன், பூதபாவந-பூதங்களானாய், பூதேஸ-பூதத் தலைவனே, தேவதேவ-தேவ தேவ, ஜகத்பதே-வையத்து இறைவா! பொருள் : புரு÷ஷாத்தமா, உன்னை நீயே அறிவாய். பூதங்களானாய்! பூதத் தலைவனே! தேவ தேவ! வையத் திறைவா! புருஷர்களில் இவர் ஒருவரே அழிவற்றவர், ஒப்பற்றவர்; ஆதலால் இவர் புரு÷ஷாத்தமர். உயிர்களுக்கெல்லாம் இவர் முதற் காரணமாதலால் இவர் பூதபாவனன். படைத்தபின் அவைகளுக்குத் தலைவராயிருக்கிறார். ஆதலால் அவர் பூதேசன். பின்பு, அவைகளையெல்லாம் ஆளுகிறபடியால் அவர் ஜகத்பதி. தமது முழுமகிமையை அவர் தாமே அறிந்துகொள்கிறார். அனந்த கல்யாண குணங்களையுடைய அப்புரு÷ஷாத்தமனை மற்றவர்கள் உள்ளபடி அறிந்துகொள்ள இயலாதவர்கள். வைரம் ஒன்றை ஒருவன் கடைத்தெருவுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றான். அது என்ன விலைபெறும் என்று அவன் ஒரு கத்தரிக்காய்க்கடையில் கேட்டான். கத்தரிக்காய்க் கடைக்காரன் அதற்கு ஒரு கூடை கத்திரிக்காய் கொடுக்கலாம் என்றான். அரிசிக் கடைக்காரன் அந்த வைரத்துக்கு ஒரு மூட்டை அரிசி கொடுக்கலாம். இப்படி ஒவ்வொருவனும் தன் அறிவுக்கு எட்டியபடி அதை மதிப்பிட்டான். பிறகு ஒரு வைர வியாபாரி அது பத்து லட்சம் ரூபாய் பெறும் என்று மதிப்பிட்டான். இப்படி பிரம்மத்தையும் அவரவர் அறிவுக்கு எட்டியபடி மதிப்பிடுகிறார்கள். பிரம்மமே பிரம்மத்தை முழுதும் அறியும். 16. வக்துமர்ஹஸ்யஸேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய: யாபிர்விபூதிபிர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸி யாபி: விபூதிபி:-எந்த மகிமைகளால், இமாந் லோகாந் வ்யாப்ய திஷ்டஸி-நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, திவ்யா: ஆத்மவிபூதய:- தெய்வீக சிறப்புடைய பெருமைகளை, த்வம் ஹி-நீயேதான், அஸேஷேண வக்தும் அர்ஹஸி-முழுமையாக கூறுவதற்கு திறமை உள்ளவன். பொருள் : எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த நின் மகிமைகள் தேவத்தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன். சங்கீதத்தின் மகிமையை சங்கீத வித்வானே நன்கு விளக்க வல்லவன். யானையின் பலத்தை யானையே தன் செயலால் விளக்கவல்லது. அரசனுடைய ஐசுவரியத்தை அரசனே நன்கு எடுத்துச் சொல்ல வல்லவன். அங்ஙனம் ஈசுவர விபூதிகளை ஈசுவர அவதாரமே நன்கு விளக்க வல்லதாகிறது. ஈசுவரன் தனது கிருபையாலேயே தன்னைத் தோற்றுவிக்கிறான். அவன் ஞான சூரியன். அவனுடைய ஒற்றைக் கிரணமே இவ்வுலகம் முழுமைக்கும் அறிவைக் கொடுத்துள்ளது. அதனால் தான் நாம் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ளவும் பலவிதமான ஞானங்களைப் பெறவும் வல்லவர்களாய் இருக்கிறோம். அவன் தனது ஒளியைத் தனது திருமுகத்திலே திருப்பிக்கொள்ளும் பொழுதுதான் நம்மால் அவனைக் காணமுடியும். 17. கதம் வித்யாமஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந் கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோऽஸி பகவந்மயா யோகிந்-யோகியே! கதம் ஸதா பரிசிந்தயந்-எவ்வாறு எப்போதும் தியானித்து, அஹம் த்வாம் வித்யாம்-நான் உன்னை உணருவேன்? பகவந்!-பகவனே! கேஷு கேஷு பாவேஷு ச-எந்தெந்த ஸ்வரூபங்களில், மயா சிந்த்ய: அஸி-என்னால் தியானிக்குமாறு இருக்கிறாய். பொருள் : யோகி! எப்போதும் உன்னையே சிந்தித்து நின்னை யுணருமாறெங்ஙனே? பகவனே! எவ்வெப் படிகளில் நின்னை யான் கருதல் வேண்டும்? என் மனம் வெளி விஷயங்களில் போய்க்கொண்டிருந்தாலும் அவ்விஷயங்களை நான் எங்ஙனம் பொருள்படுத்தினால் என் எண்ணம் உம்மைப்பற்றியதாக மாறும்? தாய் ஒருத்திக்குத் தன் குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகளைப் பார்த்தாலும் குழந்தையின் ஞாபகம் வந்தமைகிறது. எனக்கு அப்படி உலகினை இந்திரியங்கள் மூலமாகப் பார்ப்பதற்கிடையில் உம்மைப்பற்றிய சிந்தனையை வருதற்கு ஏதேனும் உபாயம் உண்டா? விளையாட்டுப் பழமும் விளையாட்டு யானையும் வாஸ்தவமான பழத்தையும் யானையையும் நினைப்பூட்டுவதைப்போல, ஆராதிக்கப்படும் விக்கிரகங்கள் நித்தியனும் அரூபுயுமான ஈசுவரனை நினைப்பூட்டுகின்றன. 18. விஸ்தரேணாத்மநோ யோகம் விபூதிம் ச ஜநார்தந பூய: கதய த்ருப்திர்ஹி ஸ்ருண்வதோ நாஸ்தி மேऽம்ருதம் ஜநார்தந-ஜனார்த்தனா, ஆத்மந: யோகம் விபூதிம் ச-உன்னுடைய யோகத்தையும் பெருமையையும், விஸ்தரேண-விரிவாக, பூய: கதய-மற்றொரு முறை சொல்க, ஹி அம்ருதம் ஸ்ருண்வத:-ஏனெனில் அமுதம் போன்ற சொற்கள், மே த்ருப்தி நாஸ்தி-எனக்கு திருப்தி ஏற்படவில்லை (மேலும் கேட்க வேண்டும் போல இருக்கிறது). பொருள் : ஜனார்த்தனா, நின் யோகத்தையும் பெருமையையும் விரித்து மற்றொரு முறை சொல்க. அமிர்தம் போன்ற நின் சொற்கள் எனக்குத் தெவிட்டவில்லை. புக்தி, முக்தி ஆகிய இரண்டின் பொருட்டு ஜனங்களால் ஆராதிக்கப்படுபவர் ஜநார்தனர். இங்கு யோகம் என்பது அனைத்தையும் அறியும் தன்மை, ஆளும் தன்மை ஆகிய இரண்டு இயல்பையும் குறிக்கிறது. எந்தெந்த வஸ்துவின் மூலம் அவன் உபாஸிப்பதற்குத் தகுந்தவனோ, அவையெல்லாம் அவனுடைய விபூதிகளாம். உலகப்பொருள்களெல்லாம் தெவிட்டும் தன்மையுடையவைகள். பகவத் விஷயம் ஒன்றுதான் தெவிட்டாதது. நிலத்திலிருந்து சேறு, சேற்றினின்று சிறு பாண்ட நீர், அதினின்று பெரு நீர்நிலை இவைகளுக்குப் போகப்போக மீன் ஒன்று தன் இயல்பையே இன்னும் உறுதியாகப் பெறுகிறது. அங்ஙனம் ஜீவன் ஈசுவரனுடைய விபூதிகளில் சிந்தையைச் செலுத்துமளவு தன் பேரியல்பையே பெறுகிறான். அதில் போதுமென்ற மனநிலை வருவதில்லை. ஈசுவரனுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தம் காந்தத்துக்கும் இரும்புக்குமுள்ள சம்பந்தத்தைப் போன்றது. ஸ்ரீபகவாநுவாச 19. ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய: ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், குருஸ்ரேஷ்ட-குரு குலத்தில் சிறந்தவனே! ஆத்மவிபூதய: திவ்யா:-என் பெருமைகள் தெய்வீகமானவை, ஹந்த-இப்பொழுது, தே-உனக்கு, ப்ராதாந்யத:-பிரதானமானவற்றை, கதயிஷ்யாமி-சொல்லுகிறேன், ஹி மே-ஏனெனில் என்னுடைய, விஸ்தரஸ்ய-விரிவுக்கு, அந்த: நாஸ்தி-முடிவு இல்லை. பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே. அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை. இயற்கையின் சிறப்பு அனைத்தும் ஈசுவர விபூதிகளே. அவைகளைச் சொல்லில் அடக்குவது ஈசுவரனுக்கே இயலாது. ஆங்காங்கு முக்கியமான சிலவற்றை மட்டும் எடுத்து மொழிய முடியும். அவைகளினின்று மற்றவைகளை யூகித்து அறிந்து கொள்ளலாம். கிரந்தங்களைப் படித்துவிட்டு மட்டும் ஈசுவரனை விவரிக்க முயலுவது தேசப்படத்தில் மட்டும் காசியைப் பார்த்துவிட்டு, அந்நகரைப்பற்றி இன்னொருவனுக்கு விவரிக்க முயல்வதை ஒக்கும். உலகைப்பற்றிய முடிவான உண்மையை முதலிலேயே தெரிந்துகொள். அதாவது : 20. அஹமாத்மா குடாகேஸ ஸர்வபூதாஸயஸ்தித: அஹமாதிஸ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச குடாகேஸ-அர்ஜுனா, ஸர்வபூத ஆஸயஸ்தித: ஆத்மா அஹம்-உயிர்கள் அனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான், பூதாநாம் ஆதி ச-அவ்வுயிர்களின் ஆதி, மத்யம் ச-இடையும் அந்த: ச அஹம் ஏவ-அவற்றின் இறுதியும் நானே தான். பொருள் : அர்ஜுனா, உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். இடையும் அவற்றின் இறுதியும் யானே. குடாகேசன் என்றால் தூக்கத்தை வென்றவன் அல்லது அடர்ந்த கூந்தலையுடையவன் என்று பொருள். தூக்கத்தை வென்று, ஆன்மபோதத்தில் விழிப்பு அடையப் பெறுபவர்க்கே பரமாத்மாவின் வியாபகம் விளங்கும். உயிர்கள் தோன்றுவதும் நிலைபெற்றிருப்பதும் ஒடுங்குவதும் பரமாத்மாவினிடத்திலேயாம். ஏகமாய் இருக்கும் என் தாய் பராசக்தி பல்வேறு தோற்றத்துடன் விளங்குகிறாள். அளவில்லாத சக்தியுடைய அவள் ஜீவனாகவும் ஜகத்தாகவும் பேதப்பட்டு, சரீரம் புத்தி சன்மார்க்கம் ஆத்மார்த்தம் முதலிய வேறுபட்ட சக்திகளையுடைவளாய்க் காணப்படுகிறாள். சக்தி, வேதாந்தத்தில் கூறப்படும் பிரம்மமே தவிர வேறல்ல. கட்புலனாகாத பிரம்மத்தின் பிரத்யக்ஷ ஸ்வரூபமே அவள். 21. ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந் மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ ஆதித்யாநாம் விஷ்ணு-ஆதித்யர்களில் நான் விஷ்ணு, ஜ்யோதிஷாம் அம்ஸுமாந் ரவி:-ஒளிகளில் நான் கதிர்களுடன் கூடிய சூரியன், மருதாம் மரீசி:-வாயு தேவர்களில் நான் மரீசி, நக்ஷத்ராணாம் அஹம் ஸஸீ அஹம் அஸ்மி-நட்சத்திரங்களுள் சந்திரனாக நான் இருக்கிறேன். பொருள் : ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன். விளைபொருள்கள் யாவும் ஒரே பூமியைச் சேர்ந்தவைகள் எனினும், அவைகளுள் மிக முக்கியமானவைகளையே பொருட் காட்சிகளில் வைத்துக் காட்டுவது வழக்கம். அனைத்தும் பகவானுடைய விபூதி எனினும், எவை விசேஷமாக பகவானை ஞாபக மூட்டுபவைகளாக அல்லது மனதைக் கவர வல்லவைகளாக இருக்கின்றனவோ அவைகளைத் தனியாகப் பொறுக்கி யெடுத்துத் தம் சொரூபம் என்று பகவான் சொல்லுகிறார். பன்னிரண்டு மாதங்களுக்குப் பன்னிரண்டு ஆதித்தியர்கள் இருக்கிறார்கள். ஒருவரே பன்னிரண்டு பெயர் பெற்றுப் பன்னிரண்டு விதமாகத் தொழில் புரிகிறார். அவர்களின் வரிசைக் கிரமம் :-சித்திரைக்கு அம்சு, வைகாசிக்கு தாதா, ஆனிக்கு இந்திரன், ஆடிக்கு அரியமா, ஆவணிக்கு விவசுவான், புரட்டாசிக்கு பகன், ஐப்பசிக்கு பர்ஜந்நியன், கார்த்திகைக்கு துவஷ்டா, மார்கழிக்கு மித்திரன், தைக்கு விஷ்ணு, மாசிக்கு வருணன், பங்குனிக்கு பூஷா என்று அமைந்துள்ளது. இத்தகைய பன்னிரண்டு ஆதித்தியர்களுள் தை மாதத்தில் உத்தராயண புண்ணிய காலத்தை யுண்டுபண்ணி, பனியைக் குறைத்து, வெப்பத்தை அளவுபட வளர்க்கும் விஷ்ணுவாகிய ஆதித்யன் எல்லாராலும் பெரிதும் விரும்பப்படுகிறான். விஷ்ணு சஹஸ்ர நாமம் 258வது பெயர், நகர்வதால் அவர் விஷ்ணு என்று அழைக்கப்படுகிறார் என்பதாகும். விஷ்ணுவே சூரியன் ஆனதாக ஐதிகம் உண்டு. நாற்பத்தொன்பது மருத்து தேவதைகளுள் (வாயு தேவதைகளுள்) மரீசி என்பவன் பகவான். காற்று வீசுவது உலக நடை முறைக்குப் பெரிதும் பயன்படுகிறது. அவைகளுள் மிக முக்கியமானது ஈண்டு அவர் சொரூபமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பகலில் ஒளிர்பவைகளுள் சிறந்தது சூரியன், இரவில் ஒளிர்பவைகளுள் சிறந்தது சந்திரன். அது உண்மையில் நக்ஷத்திரம் அல்லவெனினும் நாம் அடையும் பயனை முன்னிட்டு அது முன்னணியில் வைக்கப்படுகிறது. ஆக, அவ்விரண்டும் பகவத் சொரூபமாகக் கருதப்படுபவைகளாம். 22. வேதாநாம் ஸாமவேதோऽஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ: இந்த்ரியாணாம் மநஸ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா வேதாநாம் ஸாமவேத: அஸ்மி-வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன், தேவாநாம் வாஸவ: அஸ்மி-தேவரில் இந்திரனாக இருக்கிறேன், இந்த்ரியாணாம் மந அஸ்மி-புலன்களில் மனமாக இருக்கிறேன், ச பூதாநாம் சேதநா அஸ்மி-மேலும் உயிர்களிடத்தே உணர்வாக இருக்கிறேன். பொருள் : வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான். மஹா விஷ்ணுவுக்கே ஸாமக அதாவது ஸாமவேதம் ஓதுபவர் என்ற பெயர், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் அமைந்துள்ளது. இசையோடு கூடியிருப்பதால் ஸாமவேதம் பொருள் விளங்காதவர்களுக்கும் உள்ளத்தைக் கவர வல்லதாகிறது. ஈசுவர எண்ணத்தை விரைவில் கொண்டுவர வல்லதாகையால், அது முதன்மை வகிப்பதாகச் சொல்லப்படுகிறது. தேவர்களுக்குத் தலைவனாயிருப்பதால் இந்திரனிடம் ஈசுவர சம்பத்து அதிகமாக இருக்கிறது. நூறு யாகங்களைச் செய்தவன் தேவேந்திரன் ஆகிறான் என்பது அவனது மேன்மையை விளக்குகிறது. மனம் இல்லாது மற்ற இந்திரியங்கள் தொழில் புரிவதில் பயன் இல்லை. மனம் எங்கேயோ போய்விடும் பொழுது காதால் கேட்டாலும் கண்ணால் பார்த்தாலும் ஒன்றும் பொருள்படுவதில்லை. மனதின் உதவியில்லையெனின் ஓர் இந்திரியமும் உதவாது. உயிரற்றதற்கும் உயிர் உற்றதற்கும் வித்தியாசம் உணர்வில் அல்லது அறிவில் இருக்கிறது. சேதனம் அல்லது அறிவு அதிகரிக்குமளவு உயிர் மேலானதாகிறது. இறுதியில் தூய அறிவே தெய்வமாகிறது. செல்வத்தின் மூலம் செல்வனைத் தெரிந்து கொள்ளுதல்போன்று, இந்த விபூதிகள் மூலம் இறைவனைத் தெரிகிறோம். 23. ருத்ராணாம் ஸங்கரஸ்சாஸ்மி வித்தேஸோ யக்ஷரக்ஷஸாம் வஸூநாம் பாவகஸ்சாஸ்மி மேரு: ஸிகரிணாமஹம் ருத்ராணாம் ஸங்கர:-ருத்திரர்களில் நான் சங்கரன், யக்ஷரக்ஷஸாம் வித்தேஸ:-இயக்கர் அரக்கருள் குபேரன், வஸூநாம் பாவக:-வசுக்களில் நான் தீ, ச ஸிகரிணாம் அஹம் மேரு: அஸ்மி-மலைகளில் மேருவாக இருக்கிறேன். பொருள் : ருத்திரர்களில் நான் சங்கரன்; இயக்கர் அரக்கருள் யான் குபேரன். வசுக்களில் நான் தீ; மலைகளில் மேரு. ருத்திரர்கள் பதினோரு பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர் புராணங்களில் பல இடங்களில் பலவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அஜைகபதன், அஹிர்புத்னியன், வீரபத்ரன், கிரீசன், சங்கரன், அபராஜிதன், ஹரன், அங்காரகன், பிநாகன், பகன், சம்பு என்பன அவர்களின் வெவ்வேறு பெயர்களாம். அவர்கள் எல்லாரும் சிவனுடைய அம்சங்களாகின்றனர். ருத்திரன் என்பதன் பொருள் ரோதனம் உண்டுபண்ணுபவன், அழச்செய்பவன் என்பதாம். ராவணன் என்னும் சொல்லுக்கும் அதே பொருள். ஆனால் இவ் இருவர் உண்டுபண்ணும் அழுகையில் வரும் பயன் வெவ்வேறானவைகள். கொலை களவு செய்பவன் மக்களுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணி அழச் செய்கிறான். ராவணன் அங்ஙனம் உயிர்களுக்குக் கேடு உண்டுபண்ணி, மக்களை அழச் செய்கிறான். ரண வைத்தியனோடு உடலை அறுத்து அழச் செய்கிறான் எனினும் அதனால் உயிர்கள் பிணி நீங்கப்பெறுகின்றன. ருத்திரன் மக்களை அழச்செய்தவன் மூலம் அவர்களைப் பண்படுத்தி மேலோராக மாற்றுகிறான். சங்கரன் என்றால் மங்களத்தைச் செய்பவன் என்று பொருள். ருத்திரர்களுள் நான் சங்கரனாக இருக்கிறேன் என்பதன் கருத்து துன்பத்தின் மூலம் மக்களைப் பண்படுத்துபவன் என்பதாம். இடையறாது ஈசன் இச் செயலைச் செய்துவருவது வெளிப்படை. யக்ஷஸர்கள் ரக்ஷஸர்கள் ஆகிய இருவரும் தேவகணத்தைச் சேர்ந்தவர்கள். விரைந்தோடிப் பொருள்தேடும் தன்மையுடையவர்கள் யக்ஷஸர்கள். பொருளைக்காக்கும் இயல்புடையவர்கள் ரக்ஷஸர்கள். இவ்விருதரத்தாரும் குபேரனுடைய சேனைகளாகின்றனர். செல்வம் யாரிடம் சேருகிறதோ அவன் குபேரனாகிறான். எங்கு உழைப்பும் சேமிப்பும் இருக்கின்றனவோ அங்குச் செல்வம் பெருகுகிறது. செல்வம், ஐசுவரியம் அல்லது வல்லமையைத் தருகிறபடியால் அது ஈசுவர ஸம்பத்து எனப்படுகிறது. வஸுக்கள் எட்டுப்பேர். நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி, சந்திரன், சூரியன், நக்ஷத்திரம் ஆகிய இவையெட்டும் ரூபகப்படுத்தி வஸுக்கள் என்று இயம்பப்படுகின்றன. அக்கினி வெவ்வேறு வடிவெடுத்து உயிர்களை ஓம்புவதால் வஸுக்களுள் நாள் அக்கினி என்கிறார் பகவான். சிகரத்தையுடைய மலைகளுள் பொன்மலையாகிய மேருவானது சந்திர சூரியன் ஆகிய அனைத்துக்கும் நடு நாயகமானது. அத்யாத்மிகத்தில் பிரம்ம தண்டம் அல்லது சுஷும்னை நாடி ரூபகப்படுத்தி மேருமலை யெனப்படுகிறது. பொன்னின் ஒளியானது சைதன்யத்தோடு கூடிய சுஷும்னைக்குத் தக்க சான்றாகிறது. தேவர்களெல்லாம் மேருவைச் சார்ந்திருப்பதுபோன்று சரீரத்தில் இந்திரியங்கள், பிராணன் யாவும் சுஷும்னை நாடியைச் சார்ந்திருக்கின்றன. ஆதலால் இயற்கையின் அமைப்பிலும் மானுட உடல் அமைப்பிலும் மேருமலை முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. 24. புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம் ஸேநாநீநாமஹம் ஸ்கந்த: ஸரஸாமஸ்மி ஸாகர: புரோதஸாம் ப்ருஹஸ்பதிம்-புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி, மாம் வித்தி பார்த-என்று என்னை அறிந்து கொள் பார்த்தா! ஸேநாநீநாம் அஹம் ஸகந்த: -படைத்தலைவரில் நான் கந்தன், ஸரஸாம் ஸாகர: அஸ்மி-நீர் நிலைகளில் நான் கடலாக இருக்கிறேன். பொருள் : பார்த்தா, புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி நான் என்றுணர். படைத்தலைவரில் நான் கந்தன். நீர் நிலைகளில் நான் கடல். நல்வழியில் நடப்பவர்கள் தேவர். அவர்களுக்குத் தலைவன் இந்திரன். இந்திரனுக்கே வழிகாட்டியாக பிரஹஸ்பதி யிருப்பதால் அவர் புரோகிதர்களுள் முக்கியமானவராகிறார். வியாழ பகவான் என்றும் அவரை இயம்புகிறோம். ஈசுவர விபூதியைச் சிறப்பாக அத்தகையவரிடத்துக் காண்பது எளிது. படை ஒன்றின் வெற்றியானது சேனாபதியின் வல்லமையைப் பொருத்ததாகும். தக்க செயலைத் திறமையுடன் காலத்தில் செய்தலே வல்லமையாம். சிவனது குமாரர்களுள் கணபதி அறிவு சொரூபம்; சுப்ரமண்யர் அல்லது முருகக் கடவுள் ஆற்றலே வடிவெடுத்தவர். ஸ்கந்தன் என்னும் சொல் துள்ளிக்குதிப்பவன் எனப் பொருள்படுகிறது. அறிவும் ஆற்றலும் உடையவரே இறைவனையடைவர். ஆற்றல் வடிவினன் ஆகிய ஸ்கந்தன் என்று கிருஷ்ணன் தன்னைப் பகர்வது பொருந்தும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வப்பற்றியுண்டு. அவைகளில் பெரியது கடல். அதில் மகிமை காண்பவர் கடவுள் சான்னித்தியத்தை உணர்கின்றனர். 25. மஹர்ஷீணாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம் யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோऽஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய: மஹர்ஷீணாம் ப்ருகு அஹம்-மகரிஷிகளில் நான் பிருகு, கிராம் ஏகம் அக்ஷரம் அஸ்மி-வாக்குகளில் நான் ஓம் என்ற ஓரெழுத்தாக இருக்கிறேன், யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி-யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம், ஸ்தாவராணாம் ஹிமாலய:-மலைகளில் நான் இமாலயம். பொருள் : மகரிஷிகளில் நான் பிருகு; வாக்குகளில் நான் ஓம் என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் இமாலயம். பிரம்மாவின் மானஸ புத்திரர்களில் தவத்தில் சிறந்தவர் பிருகு. ஆதலால் அவரிடத்து ஈசுவர விபூதி ஓங்கப் பெற்றிப்பது இயல்பு. எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆகிறது. பிரணவம் என்னும் ஏகாக்ஷர பதத்துக்கு அர்த்தம் பிரம்மம். அது அனைத்தும் அடங்கப் பெற்றது. அந்த ஏகாக்ஷரத்தையே நாத பிரம்மம் என்கிறோம். ஆக அதற்கு ஒப்பான சொல் இல்லை. எனவே, அது ஈசுவர சொரூபம் . ஜீவன் தன்னைப் பரமாத்மாவுக்குக் கொடுத்துவிடுகிற கர்மம் எதுவோ அது யக்ஞம். அத்தகைய யக்ஞங்கள் எல்லாவற்றிலும் மிக எளிதில் செய்யக்கூடியது ஈசுவர நாம ஜபமாகிய யக்ஞம். எல்லாரும் எப்பொழுது வேண்டுமானாலும் அதைச் செய்யலாம். மற்ற யக்ஞங்களிலெல்லாம் நன்மை, தீமை இரண்டும் ஓரளவில் கலந்திருக்கின்றன. ஜபயக்ஞத்திலோ கேடு எதற்கும் இடமில்லை. ஈசுவர எண்ணத்தில் ஜீவன் தன்னை இழந்துவிடுதல் என்ற நன்மையானது நன்கு அமையப்பெறுகிறது. ஆக, யக்ஞங்களுள் ஈசன் தானே ஜப யக்ஞமாக இருப்பது மிகப் பொருத்தமானது. ஸ்தாவரம் என்பது நிலைத்திணை. பூமியில் முளைத்து, அவ்விடத்திலேயே உயிரோடிருப்பது எதுவோ அது ஸ்தாவரம். மலைக்கு உயிருண்டு என்பது அறிஞர் கொள்கை. ஆக பூமியில் முளைத்து உயிரோடிருப்பவைகளில் மிகப் பெரியது ஹிமாலயம் என்பது தேற்றம். ஹிமாலயத்தைக் காண்பது இறைவனைக் காண்பதற்கு ஒப்பாகும். மலையில் ஈசுவர மஹிமை காண விரும்புபவர் ஹிமாலயம் காண்க. 26. அஸ்வத்த: ஸர்வவ்ருக்ஷõணாம் தேவர்ஷீணாம் ச நாரத: கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தாநாம் கபிலோ முநி: ஸர்வவ்ருக்ஷõணாம் அஸ்வத்த:-மரங்களனைத்திலும் நான் அரசமரம், ச தேவர்ஷீணாம் நாரத:-தேவரிஷிகளில் நான் நாரதன், கந்தர்வாணாம் சித்ரரத:-கந்தர்வருள்ளே நான் சித்ரரதன், ஸித்தாநாம் கபிலோ முநி: -சித்தர்களில் கபில முனி. பொருள் : மரங்களனைத்திலும் நான் அரசமரம். தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே நான் சித்ரரதன்; சித்தர்களில் கபில முனி. அரசமரம், அதன் இலை, காய், பூ முதலியன ஒன்றுக்கும் உதவாவெனினும், தொன்று தொட்டு ஆத்ம சாதனங்கள் யாவும் அரசமரத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. அதைக் காணுந்தோறும் வேறு ஞாபகம் இல்லாது ஈசுவர சிந்தனையே தோன்றும். ஆதலால் பகவான் அம்மரத்தைத் தமது விசேஷ விபூதி என்கிறார். தேவர்கள் நரர்களிலும் மிக்கார். ஆனால் தேவர்கள் எல்லாரும் ரிஷிகள் ஆகார். அவர்களில் தத்துவ தர்சனம் அடையப்பெற்றவர்களே ரிஷிகள். தேவரிஷிகளுள் நாரதர் மிக முக்கியமானவர். ஏனென்றால் அவர் பக்தர் கூட்டத்தில் தலை சிறந்து விளங்குகிறார். மேலும் அவர் கிளப்பும் கலகங்களெல்லாம் இறுதியில் மங்களத்தையே உண்டுபண்ண வல்லவைகள். நோய் தோன்றி, உடலை நலப்படுத்துவது போன்று அவரது கலகங்களெல்லாம் நன்மை பயப்பனவாம். கந்தர்வர்கள் தேவகணத்தில் ஒரு பிரிவினர். சோம பானத்தைப் பாதுகாப்பது அவர்களுடைய முக்கிய வேலை வைத்தியத்தில் அவர்கள் வல்லவர்கள்; இசை ஞானத்தில் அலாதித் தேர்ச்சியுடையவர்கள். காமத்தில் அவர்கள் பெரிதும் ஈடுபட்டவர்கள். ஆதலால் விவாகத்துக்கு அவர்களுடைய துணை நாடப்படுகிறது. சூதாட்டத்தில் கந்தர்வர்கள் நிபுணர்கள். சூதாடுபவர் அவர்களின் உதவியை நாடுகின்றனர். வேதம் அவர்களால் விளக்கப்பட்டது. ரிஷிகளுக்கு ஆச்சாரியர்களாக அவர்கள் அமைவதுண்டு. அவர்களுக்கு அரசன் சித்ரரதன். ஆதலால் பகவான் தம்மைக் கந்தர்வர்களுள் சித்ரரதன் என்பது பொருத்தம். பிறவியிலேயே விசேஷமான தர்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம் ஆகியவைகளையுடையவர்கள் சித்தர்கள் எனப்படுகின்றனர். மனன சீலத்தை யுடையவர் அல்லது ஜப யக்ஞத்தில் உறுதி பெற்றவர் முனி எனப்படுகின்றார். ஆறு தர்சனங்களில் ஒன்றாகிய சாங்கிய தர்சனத்தை விளக்கியவர் கபிலர். இவர் மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர் எனப்படுகிறார். நித்திய சித்தராய் இவர் இருப்பதால் பகவான் தம்மைச் சித்தர் கணத்தில் கபில முனி என்கிறார். 27. உச்சை:ஸ்ரவஸமஸ்வாநாம் வித்தி மாமம்ருதோத்பவம் ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம் அஸ்வாநாம் அம்ருத உத்பவம்-குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த, உச்சை:ஸ்ரவஸம்-உச்சை சிரவம் என்றுணர், கஜேந்த்ராணாம் ஐராவதம் ச-யானைகளில் என்னை ஐராவதமென்றும், நராணாம் நராதிபம் மாம் வித்தி-மனிதரில் அரசனென்றும் என்னை தெரிந்து கொள். பொருள் : குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவமென்றுணர். யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அரசனென்றும் அறி. இன்பம் என்னும் அமிர்தத்துக்காக வாழ்க்கை என்னும் பாற்கடலை நல்லாரும் பொல்லாரும் கடைந்தார்கள். அமிர்தத்துடன் வாழ்க்கைக்கு இன்றியமையாத பல திரவியங்கள் உண்டாயின. அவைகளுள் இந்திரன் ஏற்றுக்கொண்ட உச்சைசிரவஸ் என்கிற அழகிய குதிரையும், ஐராவதம் என்கிற வெள்ளை யானையும் அடங்கப்பெறுகின்றன. இராவதியின் குழந்தை ஐராவதம் என்பது ஐதிகம். மக்களைக் காக்கவும் ஆளவும் வல்லவன் அரசன். பிறப்பு உரிமையினால் அரசனாக உபசரிக்கப்பட்டு, வெறுமனே சிம்மாசனத்து வீற்றிருப்பவன் அரசன் ஆகான். இறைமை யாரிடத்து இருக்கிறதோ அவன் அரசன். ஆகையால்தான் ராஜா, விஷ்ணுவினுடைய அம்சம் என்ற கொள்கை எழலாயிற்று. சிறந்த பரி, கரி, நரன் ஆகியவர்களிடத்துத் தெய்வப்பெற்றி பொலிவதை பகவான் இங்கு ஞாபகமூட்டுகிறார். 28. ஆயுதாநாமஹம் வஜ்ரம் தேநூநாமஸ்மி காமதுக் ப்ரஜநஸ்சாஸ்மி கந்தர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி: ஆயுதாநாம் அஹம் வஜ்ரம்-ஆயுதங்களில் நான் வஜ்ரம், தேநூநாம் காமதுக் அஸ்மி - பசுக்களில் நான் காமதேனுவாக இருக்கிறேன், ப்ரஜந: கந்தர்ப: அஸ்மி-பிறப்பிப்போரில் நான் மன்மதன், ச ஸர்பாணாம் வாஸுகி: அஸ்மி-மேலும் பாம்புகளில் வாசுகியாக இருக்கிறேன். பொருள் : ஆயுதங்களில் நான் வஜ்ரம்; பசுக்களில் நான் காமதேனு; பிறப்பிப்போரில் நான் மன்மதன்; பாம்புகளில் வாசுகி. விஷ்ணுவினுடைய ஆயுதங்களாகிய கதை, சக்கரம் ஆகியவைகளை பகவான் இங்குக் குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவைகள் உண்டுபண்ணப்பட்டவைகளல்ல. ஈசுவர சொரூப லக்ஷணத்தில் அவைகள் நித்தியமாய், உருவகமாக அடங்கப் பெற்றவைகள். உண்டுபண்ணப்பட்ட ஆயுதங்களில் இந்திரன் கையாளும் வஜ்ராயுதம் தலைசிறந்தது. விருத்திராசுரனைக் கொல்லுதற்கென்றே அது ஆயத்தப்படுத்தப்பட்டது. ததீசி என்ற முனிவரது எலும்பினின்று அது உண்டாக்கப்பட்டது. அந்த மஹரிஷியின் நைஷ்டிக பிரம்மசரியமும், தபோவலிவும், அவர் பெற்ற ஈசுவரப் பிரசாதமும் சேர்ந்து அவரது எலும்புக்கே அலாதி சக்தியை உண்டுபண்ணின. அசுரரை அடக்குதல் என்ற தேவ காரியத்துக்கு ஆயுதமாக அவரது எலும்பு வேண்டியிருக்கிறது என்று விண்ணவர் விண்ணப்பித்தவுடனே, ததீசி மனமுவந்து தேகத் தியாகம் செய்தார். பிறகு அவரது எலும்பினின்று வஜ்ராயுதம் செய்யப்பட்டது. மனிதன் தூய வாழ்க்கை வாழ்ந்து அதை உலக நன்மைக்காக ஒப்படைக்கவேண்டும் என்ற சிறந்த லட்சியத்தின் சின்னமாக வஜ்ராயுதம் அமைந்துள்ளது. மக்கள் இதை வாழ்க்கைக்குக் குறிக்கோளாக வைப்பது அவசியம். பாற்கடலில் அமிர்தம் கடைந்தபொழுது உண்டான திரவியங்களுள் ஒன்று காமதேனு. வேண்டிய பொருள்களை யெல்லாம் வேண்டியவாறு அது வழங்கவல்லது. வசிஷ்டமஹரிஷி ஆச்ரமத்தில் அது நிறைந்த செல்வத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. நல்ல மனதுடன் முறையாக உழைத்தலே காமதேனுவாகிறது என்று கீதை மூன்றாம் அத்தியாயம் பத்தாவது சுலோகத்தில் விளக்கப்பட்டது. நல்ல மனமும் பேருழைப்புமே ஈசுவர விபூதியாகின்றன. பிரஜா விருத்தி சம்பந்தமான ஆசையே மன்மதன் அல்லது கந்தர்ப்பன் என்று உருவகப்படுத்திய பெயர் பெறுகிறது. இந்த ஆசையின் வலிவால்தான் உயிர்கள் விரிவடைந்து வருகின்றன. ஜகத் சிருஷ்டிக்கே மூல காரணமாயிருப்பது இந்த இச்சா சக்தியாம். கடவுள் காதல் சொரூபம் என்பது உண்மை. சர்ப்பம் விஷமுடையது; ஒற்றைத் தலையோடு இருப்பது. எல்லாத் தெய்வங்களோடும் பாம்பு ஏதேனும் ஒருவிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கடவுளின் சக்திக்கு இது ஒரு சின்னம். மனிதனிடத்துள்ள சக்தியும் குண்டலினி என்னும் சர்ப்ப வடிவெடுத்திருக்கிறது. சக்தியினின்று இன்ப துன்பம் இரண்டும் தோன்றுகின்றன. துன்பத்தைக் குறிப்பது விஷம். துன்பம் எல்லார்க்கும் பொதுவானது. ஆகையால் அது ஒற்றைத் தலையுடையது. கடல் கடைவதற்கு வாசுகி என்ற விஷப் பாம்பு பயன்பட்டது. சிரமப்பட்டுச் சக்தியைப் பயன் படுத்தினால்தான் உயிர்வாழ முடியும். பிறகு, அவ் உயிர் வாழ்க்கையிலிருந்து மரணம் என்னும் விஷமும் வருகிறது. ஈசுவர சிருஷ்டியில் கேட்டுக்கும் இடமுண்டு. நலம், கேடு ஆகிய இரண்டும் கலந்தது உலகம். 29. அநந்தஸ்சாஸ்மி நாகாநாம் வருணோ யாதஸாமஹம் பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் அஹம் நாகாநாம் அநந்த:-நான் நாகர்களினிடையே அநந்தன், யாதஸாம் வருண: ச அஸ்மி-நீர் வாழ்வோரில் வருணனாக இருக்கிறேன், பித்ரூணாம் அர்யமா ச அஸ்மி-பிதிர்க்களில் நான் அரியமான், ஸம்யமதா: அஹம் யம:-அடக்கி ஆள்பவர்களில் நான் யமன். பொருள் : நாகர்களினிடை நான் அநந்தன்; நீர் வாழ்வோரில் வருணன்; பிதிர்க்களில் நான் அரியமான்; தம்மைக் கட்டினவர்களில் நான் யமன். விஷமில்லாததும் பல தலைகளையுடையதும் நாகம். அவைகளுள் நாகராஜாவாயிருப்பது அனந்தன். அது மகாவிஷ்ணுவுக்குச் சயனம். அது ஐந்து தலையோடிருப்பது, மாயாசக்தி முழுதும் பஞ்சபூத சொரூபம் என்பதை விளக்கும். ஐந்துதலை நாகம் ஹரிக்குச் சயனமாய் அமைந்திருப்பதுமல்லாது, அவர் தலைக்குமேல் குடையாகவும் அமைந்திருக்கிறது. சிலந்திப்பூச்சி தன் உடலினின்று வந்த வலையிலேயே வசிப்பது போன்று, தன்னிடத்திருந்து உண்டான பிரகிருதியிலேயே பகவான் வீற்றிருக்கிறான் என்பதை சயனம் விளக்குகிறது. நாகமே குடையாயமைவது, வழிபாடு எப்பொழுதும் பிரகிருதிக்கு உட்பட்டது என்பதை விளக்குகிறது. பகவானுக்கு அனந்தன் சேஷம் ஆதலால் அதை அவருடைய விபூதி என்பது தகும். வேதங்களில் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ள தேவர்களில் ஒருவன் வருணன். அவனுக்கு விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டிலும் ஆதிக்கம் உண்டு. அறிவில் சிறந்தவன் அவன். நாளடைவில் அவன் ஜல தேவதைகளோடு இணைக்கப்பட்டு, அவர்களுக்கு அரசனாகிறான். சிந்துபதி அல்லது கடல் வேந்தன் என்ற பட்டமும் அவனுக்கு அளிக்கப்படுகிறது. மேற்குத் திசைக்குத் திக்பாலனாக அமைந்திருப்பவனும் வருணன். ஜல தேவதைகளுக்குள் அவனே அரசனாயிருப்பதால், அவன்பால் ஈசுவர விபூதி விளங்குதல் இயல்பு. மரணத்தின் வாயிலாகப் பித்ரு லோகத்துக்குச் சென்ற முன்னோர்களுள் முதலானவன் அரியமான். ஆதலால் அவன் பித்ருக்களுக்கெல்லாம் தலைமை வகிக்கிறான். பித்ருக்களை வணங்குபவர்களெல்லாம் அவனையும் வணங்குவதுண்டு. ஆதலால் பித்ருக்களுள் தான் அரியமான் என்று கிருஷ்ணன் சொல்லுவது பொருத்தம். தானே தன்னையடக்கி ஆளுதற்கு யமம் என்று பெயர். அடக்கம் அமையாதவிடத்து அது தண்டனையாகிறது. மனிதன் தன் வாழ்க்கையிலேயே இவ்வுண்மையைக் காணலாம். துக்கமாகத் தனக்கு வந்து அமையும் தண்டனைக்கெல்லாம் காரணம் தான் அடக்கம் பழகாமையேயாம். அஷ்டாங்க யோகத்தில் யமம் முதல் அங்கமாகிறது. ஏனென்றால் அடக்கமில்லாது யோகமில்லை. மனிதர்களுள் யுதிஷ்டிரன் தர்மராஜா என்று அழைக்கப்படுகிறான். தேவர்களுள் யமன் தர்மராஜா என்று அழைக்கப்படுகிறான். தர்மன் என்றாலும் யமனையே குறிக்கிறது. அவனது ஆட்சி செங்கோல் வளையாது நடைபெறுகிறது. யமபுரம் என்பது அவன் இருப்பிடம். மரணத்திற்குப் பிறகு ஜீவன் அவனுடைய முன்னிலைக்குப் போகிறது. அங்கு சித்திரகுப்தன் என்பவன் அந்த ஜீவனுடைய பாப புண்ணியங்களின் கணக்கை வாசிக்கிறான். அவனது கணக்குப் புஸ்தகத்திற்கு அக்ரசந்தானம் என்று பெயர். பிறகு, வினைக்கேற்ற தீர்ப்பை யமன் சொல்லுகிறான். அதன்படி சுவர்க்கம், நரகம் முதலியன வந்தமைகின்றன. யமன் தென் திசைக்கு இறைவன். தர்மம் இம்மியளவும் பிசகாது நடைபெறுவதால், அடக்கியாள்பவர்களில் தான் யமன் என்று பகவான் சொல்லுவது பொருத்தமானது. 30. ப்ரஹ்லாதஸ்சாஸ்மி தைத்யாநாம் கால: கலயதாமஹம் ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோऽஹம் வைநதேயஸ்ச பக்ஷிணாம் தைத்யாநாம் ச ப்ரஹ்லாத: அஸ்மி-அசுரரில் பிரகலாதனாக இருக்கிறேன், கலயதாம் அஹம் கால:-இயங்குனவற்றில் நான் காலம், அஹம் ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ர:-நான் விலங்குகளில் சிங்கம், பக்ஷிணாம் வைநதேய: ச-பறவைகளில் கருடன். பொருள் : அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன். திதி என்பவள் தக்ஷப்பிரஜாபதியின் புதல்வி. காச்யபருக்கு அவள் மனைவியானாள். அவளுடைய மக்களுக்குத் தைத்தியர்கள் என்று பெயர். அவர்கள் அனைவரும் தேவர்களுக்குப் பகைவர்கள். அவர்களுள் ஹரண்யகசிபுவின் மகன் பிரஹ்லாதன். அவனது பக்தி உலகுக்கோர் எடுத்துக்காட்டாகும். கீழ் மக்கள் கூட்டத்திலும் மேலோர் தோன்றுவதுண்டு. அத்தகைய மேலோனாகிய பிரஹ்லாதனைத் தம் சொரூபம் என்கிறார் பகவான். அண்டங்களும் அவைகளில் உள்ள அனைத்தும் தோன்றி, நிலைத்திருந்து, மறைவதைக் காலம் முறையாக அளந்துகொண்டே இருக்கிறது. ஆதலால் எண்ணிக்கை எடுப்பவர்களில் காலம் முதன்மை பெறுகிறது. அத்தகைய காலமாய் இருப்பது தாமே என்று பகவான் பகர்கிறார். விலங்குகளுள் வேந்தனாயிருப்பது சிம்மம். அது அம்பிகைக்கு வாஹனம். ஈசுவர விபூதிக்கு அது இருப்பிடமாவது வெளிப்படை. விஷ்ணுவின் வாஹனமாகிய கருடன் விஷ்ணுவை ஞாபகமூட்டுவதால், பறவைகளுள் அது சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. ஈசுவர சொரூபத்தை ஞாபக மூட்டுபவைகளெல்லாம் ஈசுவர விபூதி அமையப்பெற்றுள்ளன. 31. பவந: பவதாமஸ்மி ராம: ஸஸ்த்ரப்ருதாமஹம் ஜஷாணாம் மகரஸ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ பவதாம் பவந: அஸ்மி-தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான், ஸஸ்த்ரப்ருதாம் அஹம் ராம:-ஆயுதம் தாங்கியவர்களில் நான் ராமன், ஜஷாணாம் மகர: ச அஸ்மி-மீன்களில் நான் சுறா, ஸ்ரோதஸாம் ஜாஹ்நவீ அஸ்மி-ஆறுகளில் கங்கையாக இருக்கிறேன். பொருள் : தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்; படைதரித்தோரில் நான் ராமன்; மீன்களில் நான் சுறா; ஆறுகளில் கங்கை. நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கும் தூய்மைப்படுத்தும் தன்மையுடையவைகள். அவைகளுள் காற்று எங்கும் நிறைந்திருந்து, எப்பொழுதும் பொருள்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வருகிறது. நிலம், நீர், தீ ஆகியவைகளையும் தூய்மைப்படுத்தவல்லது காற்றே. அது தீயை எரியும்படிச் செய்கிறது; நீரை ஆவியாக மாற்றி, மழை நீராகப் பண்ணுகிறது. பூமி, பிணம் முதலியவைகளில் உள்ள துர்நாற்றத்தை அது அகற்றுகிறது. ஆகையால் காற்றைப் பகவானோடு ஒப்பிடுவது பொருந்தும். ஆயுதம் பிடித்தவனுக்கு ஆற்றல் அதிகம். அதை முறையோடு கையாளுபவன் மேலோன். ஸ்ரீ ராமன் எங்கும் தன் கோதண்டத்தைச் சரியாகவே கையாண்டான். அவன் ஆயுதத்தை ஓரிடத்திலாவது துர்ப்பிரயோகம் பண்ணியது கிடையாது. தர்மத்தை ஸ்தாபனம் பண்ணுதற்கே அது கையாளப்பட்டது. நல்வழியில் ஆயுதப் பிரயோகம் பண்ணுதலிலும் பராக்கிரமம் வேண்டும். பராக்கிரமத்தில் ராமனுக்கு ஒப்பான ஒரு வீரனைக் காண்பது அரிது. அவனது வில்லும் அம்பும் கெட்டவர்க்குத் துன்பத்தைக் கொடுத்து, நல்லார்க்கு இன்பத்தை வளர்த்தன. ஆகையால் படைபிடித்தவர்களுள், தான் ராமன் என்று கிருஷ்ணன் சொல்லுகிறான். நீரில் வாழ்பவைகளுள் மகரம் வலிவு மிகப்படைத்தது. சுறா என்பது அதற்கு மற்றொரு பெயர். ஆற்றல் மிகுதியால் அது இறைவனோடு ஒப்பிடப்படுகிறது. கங்கைக்கு ஜாஹ்னவீ என்பது ஒரு பெயர். ஜன்னு மஹரிஷியின் புத்திரி என்று அது பொருள்படுகிறது. பகீரதனது வேண்டுதலுக்கு இரங்கி, ஆகாச கங்கை பூலோக கங்கையாக வந்தது. தவத்தில் இருந்தபொழுது தம்மீது அந்த நதி மோதுவதைக் கண்டு கோபித்து, ஜன்னு முனிவர் அதை எடுத்து விழுங்கிவிட்டார். பிறகு, பகீரதனது வேண்டுதலுக்கு இணங்கித் தம் காது வழியாகக் கங்கையை வெளியில் விட்டார். ஆகையால் அந்நதிக்கு ஜாஹ்னவீ என்ற பெயர் வந்தது. நதிகளுள் இது புனிதமே வடிவெடுத்தது. இது முற்றிலும் பிரம்ம சொரூபம் என்பது ஆன்றோர் கொள்கை. 32. ஸர்காணாமாதிரந்தஸ்ச மத்யம் சைவாஹமர்ஜுந அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத: ப்ரவததாமஹம் ஸர்காணாம் ஆதி அந்த: மத்யம் ச அஹம் ஏவ-படைப்புகளின் ஆதியும் அந்தமும் நடுவும் நானேதான், அர்ஜுந-அர்ஜுனா! வித்யாநாம் அத்யாத்மவித்யா-வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை, ப்ரவததாம் அஹம் வாத:-பேசுவோரிடையே நான் பேச்சு. பொருள் : படைப்புகளின் ஆதியும் அந்தமும் நான். அர்ஜுனா, வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை; பேசுவோரிடையே நான் பேச்சு. இந்த அத்தியாயம் 20-வது சுலோகத்தில் சொல்லியபடி இறைவன் உயிர்களுக்குத் தோற்றம், இருப்பு, ஒடுக்கமாவது போன்று, பஞ்ச பூதங்களுக்கும் பிறப்பிடம், இருப்பிடம், ஒடுங்குமிடமாகிறான். ஆபரணத்தை யுண்டுபண்ணும் போதும், அது ஆபரணமாக நிலைத்திருக்கும் போதும், அதை அழிக்கும்போதும் அது பொன்னேயாம். அங்ஙனம் உலகமாகப் பரிணமிக்கும் போதும் மூல வஸ்துவாகிய பரம் பொருள் அனைத்துக்குமே ஆதாரமாயிருக்கிறது. ஆத்ம வித்தை என்பது பிரம்ம வித்தை. பிரம்மத்தை யறிந்தால் அக்ஞானம் அறவே அகலுகிறது. பிறவிப் பிணி போகிறது. ஆக, அவனே ஆத்ம வித்தையாயிருக்கிறான். வாதிப்பது அல்லது முறையாகப் பேசுவது உண்மையை அறிதற்கு உற்ற உபாயமாகிறது. வாதம், ஜல்பம், விதண்டை என்று அது மூவகைப்படுகிறது. விருப்பு, வெறுப்பு இன்றி உண்மையை அறியவேண்டும் என்ற ஓர் எண்ணத்துடன் முறையாகப் பேசுவது வாதம். இதில் வெற்றி தோல்வியைப் பற்றிக் கேள்வியில்லை. உண்மையை அறியவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ஒவ்வொருவனும் தன் கொள்கையையே நிலை நாட்டப் பார்ப்பது ஜல்பம். சாஸ்திரப் பிரமாணம், யுக்தி இவைகளைக் கையாண்டு, எதிரியை வாயடக்குவது இதன் நோக்கம். விதண்டத்தில் தன் கொள்கையை ஸ்தாபிப்பதுமில்லை, எதிரியின் கொள்கையை ஏற்றுக் கொள்ளுதலுமில்லை. மற்று எதிரியையும் அவனது கொள்கையையும் ஏளனம் பண்ணுவதே அதன் நோக்கமாகும். உண்மையாராய்ச்சிக்கு வாதம் ஒன்றே துணைபுரிவதால் தர்க்கத்தில் தாம் வாதமாக இருப்பதாக பகவான் பகர்கிறார். மூலமாகிய ஒன்றைத் தெரிந்துகொள்; பிறகு உனக்கு எல்லாம் தெரியவரும். ஒன்று என்ற இலக்கத்தின்பின் பூஜ்யங்களைச் சேர்த்தால், அது நூறாகவும் ஆயிரமாகவும் ஆகின்றது. ஆனால் அந்த ஒன்று என்னும் இலக்கத்தை அழித்துவிட்டால் மிகுந்திருப்பனவற்றுக்கு மதிப்பு இல்லை. ஒன்றில்தான் பலவற்றுக்கு யோக்கியதை யுண்டாகிறது. முதலில் ஒன்று; பின்னர் பல. முதலில் ஈசுவரன்; பின்னர் ஜீவனும் உலகமும். ஒன்றை அறிவது ஆத்மவித்தை அல்லது பரவித்தை. பூஜ்யங்களை அறிவது அபரவித்தை. 33. அக்ஷராணாமகாரோऽஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச அஹமேவாக்ஷய: காலோ தாதாஹம் விஸ்வதோமுக: அக்ஷராணாம் அகார: அஸ்மி-எழுத்துகளில் நான் அகரம், ஸாமாஸிகஸ்ய த்வந்த்வ: ச - புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு, அக்ஷய: கால: அஹம் ஏவ-அழிவற்ற காலம் நானே, விஸ்வதோமுக: தாதா அஹம்-எல்லா பக்கங்களிலும் முகம் கொண்ட விராட் ஸ்வரூபனும், எல்லாவற்றையும் சுமப்பவனும் நான். பொருள் : எழுத்துகளில் நான் அகரம்; புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு; நான் அழிவற்ற காலம்; எப்பாரிசத்தும் சுமப்போன் யானே. நாத பிரம்மமே அகரமாகத் துவங்குகிறது. பிறகு அது வெவ்வேறு விதங்களாகப் பரிணமித்து மற்ற எழுத்துக்களாகின்றது. அகர முதல வெழுத்தெல்லாம் என்பது வள்ளுவர் வாக்கு. சம்ஸ்கிருத சொற்கள் கூட்டுச் சொற்களாக அமைதற்குச் சில முறைகள் இருக்கின்றன. அவைகளுள் இரண்டு சொற்கள் சேர்ந்து கூட்டுச்சொல் ஆனபிறகு, இரண்டும் சம அந்தஸ்து வகிப்பது எதுவோ அது துவந்துவ ஸமாஸம் அல்லது இருசொற் கூட்டு. ராமன்+கிருஷ்ணன்=ராமகிருஷ்ணன் என்பது இதற்கு உதாரணம். ஒரு க்ஷணம், ஒரு மணி. ஒருநாள், ஒரு கற்பம் என்று பார்க்குமிடத்து, காலத்துக்கு உற்பத்தியும் நாசமும் உண்டு. ஆனால் அதற்கு முன்னும் பின்னும் அதை அளந்துகொண்டுபோனால் காலம் அகண்டாகாரத்தில் விரிந்தோடும். ஆக, அது அழிவற்றதாகிறது. ஆகையால் சர்வேசுவரனே மகாகாலன் எனப்படுகிறான். அவன் ஒருவனே பல்கோடி உருவங்களாகப் பரிணமிப்பது, ஒவ்வொரு வடிவத்தின் மூலம் ஒருவிதக் கர்மபலனை அனுபவித்து வருகிறான். அவன் எங்கும் நிறைந்திருந்து, எண்ணரிய முகங்களை உடைத்திருந்து, வினைப்பயனை வழங்கி வருதல் இயற்கையில் நாம் யாண்டும் காணும் காட்சியாகும். 34. ம்ருத்யு: ஸர்வஹரஸ்சாஹமுத்பவஸ்ச பவிஷ்யதாம் கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா த்ருதி: க்ஷமா அஹம் ஸர்வஹர: ம்ருத்யு: ச-எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான், பவிஷ்யதாம் உத்பவ: ச-எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான், நாரீணாம்-பெண்களிடத்து நான், கீர்தி: ஸ்ரீ: வாக் ஸ்ம்ருதி:-கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதா த்ருதி: க்ஷமா-மேதை, ஸ்திதி, பொறுமை. பொருள் : எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான். எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான். பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை தோன்றிய யாவும் அழிவது திண்ணம். அவைகளைத் தோற்றுவிப்பது போன்று, ஈசன் சம்ஹாரமும் செய்கிறான். ஆகையால் அவன் அனைத்தையும் துடைக்கும் தெய்வமாகிறான். பிறப்பையும் இறப்பையும் ஒன்றாகக் கருதுபவர் அவனை அறிய வல்லவர் ஆவர். திருமகள் இருக்குமிடத்தில் செல்வம் வளர்கிறது. திருமகளும் திருமாலும் ஒன்றே. ஆக, எங்குச் செல்வமோ, ஆங்கு அவனே இருக்கிறான். அம்பிகையின் பிரபையில் மற்றும் சில அம்சங்கள் ஈண்டு இயம்பப்பெறுகின்றன. நல் வாழ்க்கை நிலைத்திருக்குமிடத்து கீர்த்தி தானே வந்தமைகிறது. வடிவம் பொருத்தமாக அமைந்தால், அது அழகு எனப்படுகிறது. ஓசையில் அழகு பொலிந்தால், அது இசை எனப்படுகிறது. அசைதலில் பொலியும் அழகுக்கு நாட்டியம் என்ற பெயர் வருகிறது. கடவுளே அழகன். ஆக, எதன்கண் திருவானது திகழ்கிறதோ அது தெய்வம். உள்ளத்தில் உள்ள கருத்து சொல்லாகப் பரிணமிக்கிறது. சொல்லில் முறைமையும் மகிமையும் இருக்குமாகில் அது ஈசுவர விபூதியே. சக்தி சொல்வன்மையாகப் பரிணமிக்கும்போது அவள் வாணி என்ற பெயர் பெறுகிறாள். முன்பு நிகழ்ந்தவைகளை ஞாபகத்துக்குக் கொண்டுவருவது நினைவு அல்லது ஸ்மிருதி எனப்படுகிறது. நினைவு நெடிது தெளிந்திருப்பது சக்தியின் பிரபாவமாகும். சாஸ்திரங்களின் உட்கருத்தை உள்ளபடி உள்ளுதல் மேதை அல்லது அறிவு என்று பெயர் பெறுகிறது. உடலும் இந்திரியங்களும் துன்பங்களுக்கிடையில் தடுமாற்றமடையாமல் இருக்குமாகில் அது திருதி அல்லது திண்மையாகிறது. உண்ணும் பொழுது அல்லது பேசும் பொழுது பல்லானது தவறி உதட்டைக் கடித்துவிடுமாகில் அதற்காக யாரும் பல்லை நொந்து கொள்ளுவதில்லை. அங்கு மனிதன் பொறையே வடிவெடுத்தவனாகிறான். ஒவ்வொருவனும் தான் செய்த குற்றத்தைத் தானே மன்னித்துக்கொள்கிறான். அங்ஙனம் பிறர் செய் குற்றத்தையும் கேட்டையும் பொறுத்துக் கொள்ளுதலே க்ஷமை அல்லது பொறையாகிறது. இம்மேலாம் தன்மைகளே சிறந்த பெண்மைகளாகின்றன. மாயைதான் பிரம்மத்தைத் தோற்றுவிக்கின்றது. மாயையில்லா விட்டால் பிரம்மத்தை யாரால் அறிந்துகொள்ள முடியும்? ஈசுவரனுடைய சக்தியை அறிந்துகொள்ளாமற் போனால் அவனை அறியவே முடியாது. 35. ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம் மாஸாநாம் மார்கஸீர்÷ஷாऽஹம்ருதூநாம் குஸுமாகர: ததா ஸாம்நாம் ப்ருஹத்ஸாம:-சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் பிருகத்சாமம் என்ற பெரிய சாமம், சந்தஸாம் காயத்ரீ அஹம்-சந்தஸ்களில் நான் காயத்ரி, மாஸாநாம் மார்கஸீர்ஷ: அஹம்-மாதங்களில் நான் மார்கழி, ருதூநாம் அஹம் குஸுமாகர:-பருவங்களில் நான் மலர் சான்ற இளவேனில். பொருள் : அங்ஙனமே, சாமங்களில் நான் பிருகத்சாமம் என்ற பெரிய சாமம்; சந்தஸ்களில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் மலர் சான்ற இளவேனில். இசை நிறைந்தது ஸாமவேதம். சங்கரனும் நாராயணனும் ஸாமகானப்பிரியர்கள். ஸாமகானம் செய்து சிவனை இராவணன் மகிழ்வித்தான். அத்தகைய ஸாமவேதத்தில் பிருஹத் ஸாமம் என்பது மிகச் சிறந்தது. இசையும் நுண்பொருளும் ஒன்று சேர்ந்து அதை அங்ஙனம் பெரியதாக்குகின்றன. சந்தம் என்பது செய்யுள் அமைப்பு அல்லது யாப்பிலக்கணம். வேதத்தில் அமைந்துள்ள பலவிதமான செய்யுள் வண்ணங்களில் காயத்ரீ என்பது மிக முக்கியமானது. பல தெய்வங்களைப் பற்றிய புகழும், வணக்கமும், வேண்டுதலும் காயத்ரீ சந்த வடிவமாக அமைந்திருக்கின்றன. ருத்திர காயத்ரீ, தேவி காயத்ரீ, சூரிய காயத்ரீ, பரமஹம்ஸ காயத்ரீ இவை போன்றவைகளை மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். செய்யுள் அமைப்பையும் கருத்து விசேஷத்தையும் முன்னிட்டுத் தாம் சந்தங்களுள் காயத்ரீ என்கிறார் பகவான். பெரும்பான்மையோர் ஜபித்தும் தியானித்தும் வரும் சூரிய காயத்ரீயை ஆராய்வோம். 36. த்யூதம் சலயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் ஜயோऽஸ்மி வ்யவஸாயோऽஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் சலயதாம் த்யூதம் அஸ்மி-வஞ்சகரின் சூது நான், தேஜஸ்விநாம் தேஜஸ் அஹம-ஒளியுடையோரின் ஒளி நான், ஜய: அஸ்மி-நான் வெற்றி, வ்யவஸாய:-நான் நிச்சயம், ஸத்த்வவதாம் ஸத்த்வம் அஹம் அஸ்மி-உண்மையுடையோரின் உண்மை நான் இருக்கிறேன். பொருள் : வஞ்சகரின் சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். நான் வெற்றி; நான் நிச்சயம். உண்மையுடையோரின் உண்மை நான். பிறரை ஏமாற்றுவது யாருக்கும் பொருந்தாத காரியம். திருடுவது, பொய்ப் பத்திரம் தயாரிப்பது, விலையை மிகைபட உயர்த்தி விற்பது, போலிப் பொருள்களை நல்ல பொருள்களென்று சொல்லி விற்பது இவையாவும் வஞ்சகமாகும். சூதாட்டத்தை அத்தகைய ஏமாற்றங்களோடு சேர்க்கலாம். ஆனால் ஒவ்வொரு அரசாங்கமும் சில சூதாட்டங்களைச் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கிறது. குதிரைச் சவாரியின் மீது பந்தயம் கூறுவது சிலர்க்கு உடன்பாடு. சூதாட்டமாக சீட்டாடுவது மற்றொரு சாரார்க்குச் சம்மதமானது. பாண்டவர், கௌரவர்க்குப் பகடைகள் மூலம் சூதாடுவது சட்ட பூர்வமானது எனத் தோன்றிற்று. வெளிப்படையாக மற்ற வஞ்சகங்களைச் செய்யமுடியாது. சூதாடுவது ஒன்றுமட்டும் பெரிய சபை நடுவே வெளிப்படையாகச் செய்யப்படுகிறது. அதனால் வரும் லாப நஷ்டங்களுக்கும், சுக துக்கங்களுக்கும் மக்கள் கட்டுப்பட்டவர்கள் ஆகிறார்கள். வஞ்சகச் செயல்கள் யாடுமே கேடுடையவைகள். அவைகளுள் சூதாட்டம் ஒன்று மட்டும் ஓரளவு விதிக்கு உட்பட்டதாயிருக்கிறது. அதற்கு அறிவுத் திறமை வேண்டும். அறிவு தெய்வத்திடமிருந்து வருகிறது. பொய்ப்பத்திரம் தயாரிப்பவர்களுக்கு தீப வெளிச்சம் பயன்படுவது போன்று சூதாடுபவர்களுடைய அறிவுத்திறனும் தெய்வத்திடமிருந்தே வருகிறது. ஆதலால் வஞ்சகர்களுள் தாம் சூதாட்டமாக இருப்பதாக பகவான் சொல்லுகிறார். அதனால் சூதாட்டம் ஆதரிக்கப்படுகிறது என்று பொருள் படுத்தலாகாது. தேஜஸ் என்பது ஒளி என்று பொருள்படுகிறது. ஆரோக்கியம், இந்திரிய நிக்கிரகம், பிரம்மசரியம் முதலியவைகளினின்று உண்டாகும் பொலிவும், மனத்தெளிவும், செயலாற்றும் வன்மையும் சேர்ந்து தேஜஸ் ஆகின்றன. கீழ்மையை அகற்றி, மேன்மையை நிலைநாட்டுதல் வெற்றியாகும். அது அரசர்கள், ஆசாரிய புருஷர்கள், மதஸ்தாபகர்கள் ஆகிய இவர்களுடைய செயலாம். பண்பும் பயனுமுடைய தொழிலைத் தளராமனதுடன் புரிதல் வியவசாயமாகும். முயற்சி திருவினையாக்கும். முயற்சியே மனிதனை ஈசுவர முன்னிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது. மூன்று குணங்களும் பிரகிருதி சொரூபம் எனினும், அவைகளுள் சத்துவ குணம் சாதகனை இறைவனது சன்னிதிக்கு அழைத்துச் செல்ல வல்லது. 37. வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோऽஸ்மி பாண்டவாநாம் தநஞ்ஜய: முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸநா கவி: வ்ருஷ்ணீநாம் வாஸுதேவ: அஸ்மி-விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன், பாண்டவாநாம் தநஞ்ஜய:-பாண்டவர்களில் தனஞ்ஜயன், அபி முநீநாம் அஹம் வ்யாஸ:-முனிகளில் வியாசன், கவீநாம் உஸநா கவி:-கவிகளில் சுக்கிர கவி. பொருள் : விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் தனஞ்ஜயன்; முனிகளில் வியாசன்; கவிகளில் சுக்கிர கவி. யாதவர்கள் எல்லாரும் விருஷ்ணியின் வம்சத்தில் வந்தவர்கள். ஆதலால் அவர்களுக்கு விருஷ்ணிகள் என்று ஒரு பெயர் உண்டு. கிருஷ்ணன் வசுதேவருடைய புதல்வர். எனவே அவருக்கு வாசுதேவன் என்ற பெயர் வந்துள்ளது. யாதவர் கூட்டத்தில் இவரே எல்லார்க்கும் மிக்கார் என்பது வெளிப்படை. தனஞ்ஜயன் என்பது அர்ஜுனனுக்கு ஏற்பட்ட மற்றொரு பெயர். ஆங்காங்குப் புதைந்து, பயன்படாது கிடந்த செல்வங்களை யெல்லாம் அந்தந்த அரசர்களிடத்திருந்து வென்று வந்து , நல்வழியில் பயன்படுத்தியபடியால் தனஞ்ஜயன் என்ற பெயர் அர்ஜுனனுக்கு வந்தது. பாண்டவர்களுள் பகவான் தம்மை தர்மராஜா என்று சொல்லாது, தனஞ்ஜயன் என்று சொன்னது அர்ஜுனனுக்குத் தன் யதார்த்த சொரூபத்தைப் புகட்டுதற் பொருட்டேயாம். மேலும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் யாண்டும் இணைபிரியாது இருந்துவருவது ஈண்டு நினைவூட்டப்படுகிறது. பகவானே எல்லா ஜீவர்களாகவும் பரிணமித்திருக்கிறார். அர்ஜுனன் தனக்குத் தனி வியக்தி யிருக்கிறதென்றாவது, தன் வெற்றிக்கெல்லாம் தானே முதற்காரணம் என்றாவது எண்ணுவது ஒவ்வாது. ஆகையால் நேரே அர்ஜுனனுடன் பேசும்போது அவனுக்கும் முதற்காரணம் பகவான் என்பதை நினைவூட்டுகிறார். ஒவ்வொரு ஜீவனும் தனக்கு முதற்காரணம் கடவுள் என்று அறிந்து, அதன்படி நடந்துகொண்டால் அந்த ஜீவன் சிறப்பு எய்துவான். அந்தர்முக திருஷ்டியில் மனதை முழுதும் செலுத்தி, மெய்ப் பொருளை முற்றும் அறிந்துகொள்ள வல்லவர் ஒருவர்க்கு முனி என்று பெயர். அத்தகைய பூரண ஞானிகளுள் பிரதானமானவர் வியாசர். அவருக்கு வேதவியாசர் என்றும், பாதராயணர் என்றும் துவைபாயனர் என்றும் வேறு பெயர்கள் உண்டு. அவரது கருநிறத்தை முன்னிட்டு கிருஷ்ண துவைபாயனர் என்றும் அவர் அழைக்கப்படுவதுண்டு. பராசரருக்கும் சத்தியவதிக்கும் பிள்ளையாகப் பிறந்தவர் அவர். வேதங்களை யெல்லாம் தொகுத்தவர்; வேதாந்த சூத்திரங்களை வகுத்தவர். மகாபாரதத்தையும் புராணங்களையும் எழுதியவர் அவர். அவர் சுகருக்குத் தந்தையாவார். அவரை மகாவிஷ்ணுவின் அம்சம் என்பதில் வியப்பொன்றுமில்லை. வெளியுலகத்தைப்பற்றிய பரந்த அறிவுடையவர் கவி என்று அழைக்கப்பட்டது பழைய வழக்கம். நாளடைவில் புலவர்களுக்குக் கவி என்ற பெயர் வந்தது. உசனா என்பது சுக்கிரருக்கு மற்றொரு பெயர். செத்தவர்களைப் பிழைப்பிக்கும் வல்லமை அவருக்கு இருந்தது. அவர் தந்த பயிற்சியால் அசுரர்களுக்கு ஆற்றல் மிக உண்டாயிற்று. 38. தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம் மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் தமயதாம் தண்ட: அஸ்மி-ஆள்வோரிடத்தே கோல் (அடக்கும் சக்தி) நான் ஜிகீஷதாம் நீதி: அஸ்மி-வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி (நியாய உணர்வு) நான் குஹ்யாநாம் மௌநம் ச-ரகசியங்களில் நான் மௌனம்! ஜ்ஞாநவதாம் ஜ்ஞாநம் அஹம் ஏவ அஸ்மி-ஞானமுடையோரிடத்தே ஞானம் நானே. பொருள் : ஆள்வோரிடத்தே கோல் நான்; வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி நான். ரகசியங்களில் நான் மௌனம்! ஞானமுடையோரிடத்தே நான் ஞானம். தண்டனையை மிகைப்படுத்தாமலும் குறைக்காமலும் அளந்து வழங்குதல் அரசன் கடமை. முறையான தண்டனைக்கு அறிகுறியாயிருப்பது செங்கோல். குற்றத்துக்கு ஏற்ற தண்டனை விதிக்கப்படும்பொழுது குற்றவாளியானவன் யார்மீதும் குறை கூறாது தண்டனையை ஏற்றுக்கொள்கிறான். அத்தகைய தண்டனையே அவனைச் சீர்திருத்துகிறது. அது பாமரர்க்கிடையில் பெரிய சீர்திருத்தம் செய்கிறபடியால் அதை இறைவனிடத்துள்ள இறைமை எனலாம். இனி, இயற்கையானது நோய் முதலியவைகளை விளைவிப்பது தவறுதலான வாழ்க்கைக்காக விதிக்கப்பட்ட தண்டனை என்பது பொருந்தும். யமதர்மராஜாவாக பகவான் இருப்பது போன்று, தண்டனையை விதிப்பவரிடத்தில் செங்கோல் சொரூபமாகவும் அவர் இருக்கிறார். நேர்மையான முறையில் எடுத்துக்கொள்ளும் முயற்சி நீதி எனப்படுகிறது. அரசனுக்கு சாமம், தானம், பேதம், தண்டம் இந்நான்கும் நீதிக்குட்பட்டவைகளாகும். முறைவழுவிய முயற்சி வெற்றியைக் கொடுத்தாலும், அது நிலைத்த வெற்றியாகாது. கையாளும் முறை நேர்மையானதாயிருக்குமாகில், அதினின்று விளையும் வெற்றியும் நிலைத்ததாகும். பிறரிடத்தில் பகரப்படாதது இரகசியம். வாய் பேசாதிருக்கும்போது ஒன்றும் பகரப்படுவதில்லை. ஆகையால் மௌனம் இரகசியத்தை நன்கு காக்கின்றது. சப்தம் செய்யாதிருப்பது மௌனம். எது அசைகின்றதோ அது சப்தம் செய்கிறது. பிரகிருதி முழுதும் அசைகிறது. ஆக, பிரகிருதியின்கண் மௌனம் இல்லை. மனது அடங்க அடங்க, அது மௌனத்தில் நிலை பெறுகிறது. முற்றிலும் மனது அடங்கி ஒடுங்கினால் ஆத்ம சொரூபம்மட்டும் எஞ்சியிருக்கும். ஆத்மா அசையாதது. ஆதலால் அதில் சப்தமில்லை. ஆத்மாவே மௌன சொரூபம். இந்த ஆத்மாவை இன்னதென்று வாய்விட்டுப் பேசி விளக்கமுடியாது. ஆகையால் இரகசியங்களுள் முடிவானது மௌனம் அல்லது ஆத்ம சொரூபம். ஞானி, ஞானம், ஞேயம் (அறிபவன், அறிவு, அறியப்படு பொருள்) என மூன்றாகப் பிரிகிறவிடத்துப் பிரபஞ்சமுண்டு. மூன்றும் ஒன்றாகுமிடத்து அது பரம்பொருள். அவைகளுள் முதலில் ஞானம், ஞானி ஆகிய இரண்டையும் ஒன்றாக்கும் வழியை பகவான் சொல்லுகிறார். பிறகு மூன்றும் ஒன்றாவது எளிது. அக்கினியின் உஷ்ணம் போன்று அறிஞர் இடத்து அறிவாயிருப்பது பகவான். அறிவுக்கு அன்னியராய் அறிஞர் இல்லை. ஈசுவரனே ஜீவர்களிடத்து ஞான சொரூபமாயிருக்கிறார் என்பது பொருள். 39. யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம் ச அர்ஜுந-மேலும் அர்ஜுனா! ஸர்வபூதாநாம்-எல்லா உயிர்களிலும், யத் பீஜம் தத் அபி அஹம்-விதை எதுவோ அது நானே, மயா விநா-நான் இன்றி, யத் ஸ்யாத்-எது இருக்கக் கூடுமோ, தத் சராசரம் பூதம் ந அஸ்தி-அத்தகைய அசையும், அசையாததுமான பொருட்கள் எதுவும் இல்லை. பொருள் : எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா, சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றுமில்லை. மேலே சொன்னவைகளை யெல்லாம் தொகுத்து ஆராயுமிடத்து ஈசுவரன் ஒருவனே உலகு அனைத்துக்கும் முதற்காரணம். இயங்குவன, இயங்காதவனவாகிய அனைத்தும் அவனிடத்திருந்தே வந்தவைகள். அப்படியானால் பகவானுடைய விபூதி முழுதையும் அவர் சொல்லிவிட்டாரா? அதற்கு விடை வருகிறது : 40. நாந்தோऽஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப ஏஷ தூத்தேஸத: ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா பரந்தப-எதிரிகளை சுடுபவனே! மம திவ்யாநாம் விபூதீநாம்-என் திவ்ய மகிமைகளுக்கு, ந அந்த: அஸ்தி-முடிவில்லை, விபூதே:-பெருமைகளில், ஏஷ: விஸ்தர: து-இந்த விரிவும் கூட, உத்தேஸத: மயா ப்ரோக்த:-ஓரளவுதான் என்னால் கூறப்பட்டது. பொருள் : பார்த்தா, என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன். கோழி ஒன்று தன் குஞ்சுக்கு உணவு தேடும் விதத்தைச் சிறிது காட்டித் தருகிறது. அவ்வழியைப் பின்பற்றிப் பின்பு தனக்குத் தேவையாயுள்ள உணவை யெல்லாம் அக்குஞ்சே தேடிக்கொள்கிறது. அங்ஙனம் ஈசுவர மஹிமையைக் காண்பதற்கான வழியை பகவான் புகட்டியருள்கிறார். அதன்படி அனுஷ்டிக்கும் சாதகன் தன் அறிவுக்கு எட்டிய அளவு ஈசுவரனை அறிகிறான். ஈசுவரனை யாரால் முற்றிலும் அறிய முடியும்? அந்தப் பாக்கியம் நமக்கு இல்லை. நாம் அவனைப் பூரணமாக அறிய வேண்டுமென்பதுமில்லை. அவனைக் கண்டு, அவன் ஒருவனே உண்மைப் பொருள் என்று உணர்ந்தால் போதுமானது. ஒருவன் புண்ணிய நதியாகிய கங்கைக்கு வருவதாக வைத்துக்கொள்வோம். அதைக் கங்கோத்திரியிலிருந்து கங்கா சாகரம் வரையில் தரிசிக்கவும் ஸ்பர்சிக்கவும் வேண்டியதில்லை. ஓர் இடத்தில் அதைத் தொட்டு நீராடினாலே அவன் கிருதார்த்தனாகிறான். ஈசுவரனுடைய மகிமையைச் சிறிதாவது சுவானுபவத்தில் அறிந்துகொண்டவன் பிறகு உலகை எங்ஙனம் பொருள்படுத்துகிறான்? விடை பகவானுடைய வாக்கியத்திலிருந்தே வருகிறது : 41. யத்யத்விபூதிமத்ஸத்த்வம் ஸ்ரீமதூர்ஜிதமேவ வா தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ऽஸஸம்பவம் யத் யத் விபூதிமத்-எதெது பெருமையுடையது, ஸத்த்வம்-உண்மையுடையது, ஸ்ரீமத் -அழகுடையது, ஊர்ஜிதம் வா-வலிமையுடையது, தத் தத்-அது எல்லாம், மம தேஜோம்ऽஸ ஸம்பவம் ஏவ-எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது, த்வம் அவகச்ச-நீ புரிந்து கொள். பொருள் : எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர். சூரிய கிரணம் எங்கும் வியாபித்து, எல்லாப் பொருள்களையும் விளக்குகிறது. ஈசுவரனோ எல்லாப் பொருளுமாய் அதனதன் வாயிலாகத் தன் பெருமையையும், சிறப்பையும், அழகையும், வல்லமையையும் விளக்குகிறான். ஏதேனும் ஒரு பொருள் அல்லது உயிர் ஏதேனும் ஒரு விதத்தில் மனதைக் கவர வல்லதாயின், அத்தகைய மாண்பு ஈசுவரனுடையதே என்றும், அது அவ்வடிவத்தின் வாயிலாக மிளிர்கிறது என்றும் அறிந்து கொள்க. பகவானது சாகாரநிலை அதாவது ரூபத்தோடு கூடிய நிலையென்றால் என்ன என்பது உனக்குத் தெரியுமா? நீர்ப்பரப்பின் மேல் தோன்றும் குமிழிகள் போன்றது அந்நிலை. சிதாகாசத்தில் பலவித ரூபங்கள் எழுவதை உண்மையாகக் காணலாம். பகவத் அவதாரமும் அவ்வித ரூபங்களில் ஒன்று. அப்படியாயின் அகிலாண்டங்களிலுமுள்ள உருவத் தொகுதி தானே கடவுள்? இக்கேள்விக்கு விடை வருகிறது : 42. அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம்ஸேந ஸ்திதோ ஜகத் அதவா-அன்றி, அர்ஜுன-அர்ஜுனா, ஏதேந பஹுநா ஜ்ஞாதேந தவ கிம்-இதைப் பலவாறாகத் தெரிந்து கொள்வதில் உனக்குப் பயன் யாது? அஹம் இதம் க்ருத்ஸ்நம் ஜகத்-நான் இந்த உலகனைத்தும், ஏகாம்ஸேந-எனது சக்தியின் ஓர் அம்சத்தால், விஷ்டப்ய ஸ்தித:-தாங்கிக் கொண்டு இருக்கிறேன். பொருள் : அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது? எனது கலையன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன். வல்லவன் ஒருவனை ஒரு கோணிப்பையில் கட்டி ஓடவிட்டால் அவன் தனது முழு ஆற்றலையும் அப்பொழுது காட்ட முடியாது. பல வடிவங்கள் வாயிலாக பகவான் தமது மகிமையை விளக்குகிறார் எனினும், அவ்விளக்கம் அரைகுறையானதே. இனி அலையாகப் பரிணமித்திருப்பது சமுத்திரத்தின் ஒரு சிறு பகுதியே. அங்ஙனம் அகிலாண்டமாய்ப் பரிணமித்திருப்பது ஈசுவரனுடைய ஒரு சிறு கலை மட்டுமே. அவனுடைய சொரூபத்தின் பெரும் பகுதி தோற்றத்துக்கு அப்பால் பரம்பொருளாய் உள்ளது. கடவுள் உருவமற்றவரும், உருவமுள்ளவரும் ஆவார். உருவம் அருவம் இவ்விரண்டையும் கடந்தவரும் ஆகிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரேதான் முற்றிலும் அறிவார். இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே விபூதியோகோ நாம தசமோऽத்யாய: பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின் கண் விபூதி யோகம் என்ற பத்தாம் அத்தியாயம். | |
பதினோன்றாம் அத்தியாயம் | |
பகவத்கீதை | விச்வரூபதர்சன யோகம்அக்டோபர் 13,2011
இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். ... மேலும்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக