வியாழன், 4 செப்டம்பர், 2014

விசுவாமித்திரர் முனிவரான கதை

ராதே கிருஷ்ணா 05-09-2014




விசுவாமித்திரர்  முனிவரான  கதை

விசுவாமித்திரரைப் பற்றி நாம் படித்திருப்போம். அரசனாகப் பிறந்து, பின்பு முனிவராக ஆன அதே விசுவாமித்திரர் தான்!  அவர் ஏன் அப்படி ஆனார்? என்பதை, வியாசர் ஒரு சுவாரஸ்யமான கதை மூலமாக விளக்குகிறார். இதோ அந்தக் கதை!

காதி என்ற அரசனுக்கு, சத்யவதி என்ற மகள் இருந்தாள். அரசனுக்கு ஆண் குழந்தை ஏதும் பிறந்திருக்காத நேரமது.

அரசனின் மகள்

சத்யவதி வளர்ந்தாள்; திருமண வயதை அடைந்தாள். அவளை நல்ல செல்வ வளமுள்ள யாருக்காவது மணமுடிக்க வேண்டுமென்று அரசன் நினைத்தான். அதற்கேற்றவாறு முயற்சி களைச் செய்ய ஆரம்பித்தான்.

அந்த சமயம், ரிசீகர் என்ற முனிவர் அரசனைக் காண்பதற்காக அவன் அரண்மனைக்கு வந்திருந்தார். வந்த இடத்தில் சத்யவதியைக் கண்ட அவர், அவளை மணமுடிக்க எண்ணி அரசனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். சத்யவதியும் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள்.

‘இது என்ன கொடுமை! செல்வ வசதியுள்ள ஒருவருக்கு மகளை மணமுடிக்க எண்ணினால், இந்த ஏழை முனிவர் தான் எனக்கு மாப்பிள்ளையா?’ என்று மனதுக்குள் நினைத்தான் அரசன். எனவே, இவரை எப்படியாவது தட்டிக் கழித்துவிட வேண்டுமென்று ஒரு யோசனை செய்தான்.

முனிவருக்கு பரீட்சை

‘முனிவரே! எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள். ஒரு காது கருப்பாகவும், உடலெல்லாம் சூரியன் போல ஒளியும் வீசும் ஆயிரம் குதிரைகளை எனக்கு நீங்கள் வழங்க வேண்டும். அப்படிச் செய்தால், உடனே என் மகளை உங்களுக்கே மணமுடித்துத் தருகிறேன்’ என்று சொன்னான். ‘கருத்த காதுடன், ஜொலிக்கும் உடலுடன் எங்கிருந்து குதிரை வரப்போகிறது?’ என்று அவனுக்கு எண்ணம்.

முனிவருக்கா புரியாது? உடனே ரிசீகர், வருணபக           வானைப் பிரார்த்தனை செய்து அரசன் சொன்னபடியே குதிரைகளை வரவழைக்குமாறு வரம் வேண்டினார். அடுத்த விநாடி, அந்த அரண்மனையில் கருத்த காதுடனும், ஜொலிக்கும் உடலுடனும் ஆயிரம் குதிரைகள் தோன்றின.

இப்போது அரசனுக்கு வேறு வழி தெரியவில்லை.  எனவே, சொன்னபடி தன் பெண்ணை முனிவருக்குத் திருமணம் செய்து வைத்தான்.

ரிசீகரும், சத்யவதியும் நல்லபடியாக இல்லற வாழ்வை நடத்திக் கொண்டு வந்தார்கள்.

மனைவிக்கு வரம்

சத்யவதியிடம் மிகுந்த அன்போடிருந்த ரிசீகர், அவளுக்கு ஒரு வரமளிக்க விரும்பினார். சத்யவதியிடம் அவள் விரும்புவது என்ன என்றும் கேட்டார். மனம் மகிழ்ந்த சத்யவதி, பின்பு தன் விருப்பத்தைத் தெரிவிப்பதாகக் கூறினாள்.

மறுநாள், தன் தாயைப் பார்ப்பதற்காக அரண்மனைக்குச் சென்றிருந்தாள் சத்யவதி. தாயும், மகளும் ஆசை தீரப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது முனிவரின் வரம் பற்றி பேச்சு வந்தது.

‘அம்மா! என் கணவர் எனக்கு ஒரு வரம் அளிப்பதாகக் கூறியிருக்கிறார். நான் பின்பு கேட்பதாகக் கூறிவிட்டு வந்திருக்கிறேன். நான் கேட்பது இருக்கட்டும். உனக்கு ஏதாவது வேண்டுமா, கேள்’ என்றாள். அவள் தாயும் வெட்கத்துடன், ‘எனக்கு ஒரு ஆண் மகன் பிறக்க வேண்டும்’ என்று தன் விருப்பத்தைக் கூறினாள்.

சத்யவதிக்கோ ஆச்சரியம்! அவளும் தன் கணவனிடம் நல்ல பிள்ளை ஒன்றையே வரமாகக் கேட்க எண்ணியிருந்தாள். தாயின் விருப்பத்தைத் தெரிந்து கொண்டு, நேராக முனிவரிடம் வந்தாள்.

பிரசாதம் வழங்கினார்

‘அன்பரே! எனக்கு வரம் தருவதாகக் கூறியிருந்தீர்கள் அல்லவா? இதோ என் விருப்பம். எனக்கு நல்ல மகன் ஒருவன் பிறக்க வேண்டும். அது மட்டுமல்ல. என் தாயும் இப்போது ஒரு மகன் பிறக்க வேண்டுமென்று விரும்புகிறாள். இதுதான், நான் கேட்க விரும்பும் வரம்’ என்று பணிவோடு கேட்டாள்.

மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்த முனிவர், சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து விட்டு அவளிடம் வந்தார்.

‘இதோ பார்! இந்த இரண்டு பிரசாதங்களையும் அளிக்கிறேன். குறிப்பிட்ட இந்தப் பிரசாதத்தை நீ உண்ண வேண்டும். மற்றொன்றை உன் தாயிடம் கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல. நாளை காலை குளித்து முடித்து விட்டு, நீ அத்தி மரத்தையும், உன் தாய் அரச மரத்தையும் தழுவிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், நிச்சயமாக உங்களுக்குச் சிறந்த மகன்கள் பிறப்பார்கள்’ என்று அருளி விட்டு, மீண்டும் உள்ளே சென்று தன் தியானத்தைத் தொடர்ந்தார்.

சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன் தன் தாயைப் பார்க்கச் சென்றாள் சத்யவதி. முனிவர் சொன்ன விவரங்களைத் தன் தாயிடம் கூறி, தாய்க்குரிய பிரசாதத்தை அவளிடம் நீட்டினாள்.

ஒரு கணம் அதைப் பார்த்த அவள் தாய், அதை வாங்க மறுத்தாள்.

பிரசாதத்தை மாற்றினர்


‘மகளே! எந்தவொரு கணவனும், தன் சந்ததி சிறந்ததாக இருக்க வேண்டுமென்றே விரும்புவான். அதன்படி, உன் பிரசாதமே என்னுடையதை விட உயர்ந்ததாக இருக்கும் என்பது என்னுடைய அபிப்பிராயம். எனவே, அதை எனக்குக் கொடுத்து விடு. என்னுடையதை நீ எடுத்துக் கொள். அதே போல், நான் அத்தி மரத்தைத் தழுவிக் கொள்கிறேன். நீ அரச மரத்தைத் தழுவிக் கொள்.

‘நான் இப்படிச் சொல்கிறேனே என்று தவறாக எடுத்துக் கொள்ளாதே! என் மகன் யார்? உன் சகோதரன் தானே! நாளை இந்த நாட்டுக்கு அரசனாக வருபவன்தானே! அந்த நல்ல எண்ணத்தில்தான் இப்படிக் கேட்கிறேன்’ என்று சத்யவதியின் மனதைக் கரைத்தாள்.

தாயின் பேச்சைக் கேட்டு, சத்யவதியும் அவ்வாறே செய்தாள்.

மறுநாள் பொழுது விடிந்தது.

சற்று நேரம் கழித்து, சத்யவதியைச் சந்தித்தார் ரிசீக முனிவர். அவள் மீது ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்த அவர், தன் ஞான திருஷ்டியின் மூலம் நடந்ததை அறிந்து கொண்டார்.

விசுவாமித்திரர் பிறப்பு

‘சத்யவதி! நீ பெரும் தவறு செய்துவிட்டாய். நீ ஒரு அந்தணனை மணந்திருக்கிறாய். உன் தாயோ, ஒரு அரசனை மணந்திருக்கிறாள். எனவே, அவளுக்கு ஒரு சத்திரியனும், உனக்கு ஒரு அந்தணனுமே மகனாகப் பிறக்கும்படி பிரசாதம் கொடுத்திருந்தேன்.

ஆனால், இது தெரியாமல் நீ உன் தாயிடம் பிரசாதத்தை மாற்றிக் கொண்டு விட்டாய். இதனால் உனக்குப் பிறக்கும் மகன் பிறரைக் கொல்லும் சத்திரியனாகவும், அவள் மகன் தவம் செய்யும் அந்தணனாகவும் இருப்பார்கள்’ என்று விளக்கினார்.

பதறிப் போன சத்யவதி, ‘ஐயனே! தெரியாமல் இப்படிச் செய்து விட்டேன். நீங்கள்தான் இதைச் சரி செய்ய வேண்டும். என் பிழையைப் பொறுத்தருள வேண்டும்’ என்று மன்னிப்புக் கேட்டாள்.

மனமிரங்கிய முனிவர், ‘உன் மகன் சிறந்த அந்தணனாக இருப்பான். ஆனால், உன் தாய்க்குப் பிறக்கும் மகன் சத்திரியனாகப் பிறந்தாலும், பின்னொரு காலத்தில் அந்தணனாக மாறி விடுவான்’ என்று கூறினார்.

அதன்படி சத்யவதிக்குப் பிறந்தவர் ஜமதக்னி முனிவர். அவள் தாய்க்குப் பிறந்தவர், அரசனாக இருந்து பின்பு முனிவராக மாறிய விசுவாமித்திரர்.

















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக