ராதே கிருஷ்ணா 03-09-2014
10 hrs ·
மரணத்திருக்கு பின்னால் என்ன நடக்கிறது ? பகுதி 17
பகுதி 16 இன் தொடர்ச்சி...
மரணத்திருக்கு பின்னால் என்ன நடக்கிறது ? பகுதி 17
பகுதி 16 இன் தொடர்ச்சி...
"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.
ஆன்ம அனுபூதி, இறையனுபூதி, இறைக்காட்சி என்றெல்லாம் பொதுவாக நாம் கேள்விப்படுபவைகள் எல்லாம் உண்மையில் என்ன என்பது பற்றி யாராலும் கூற முடியாது. ஏனினெல் அது அராய்ச்சி செய்து விளக்கமுடிவதில்லை. அவை அனுபவத்திற்கு உரியது. அத்தகைய அனுபவத்தை பெறுவதற்கு சுய ஆராய்ச்சி தேவை. அவ்வாறான ஆராய்ச்சியின் காரணமாக நசிகேதன் இங்கே அதுபற்றி கேட்க எமதர்மனும் சிறுவனான நசிகேதனுக்கு சிறந்ததொரு பதிலைக் கொடுக்கிறார்.
"குறிப்பிட்டு சொல்ல முடியாததும் மேலானதுமான அந்த ஆனுபூதி இன்பத்தை நேரடியாக அனுபவிக்கின்றனர். அந்த அனுபவம் தானாக ஒளிர்கிறதா அல்லது வேறொன்றால் ஒளிரச் செய்யப்படுகிறதா? இது பற்றி நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்கிறான் நசிகேதன்.
எமதர்மன் கூறுகிறார்! "நசிகேதா! அங்கே சூரியன் ஒளிர்வதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன."
ஆன்ம ஒளியைக் காட்ட புற ஒளியால் இயலாது என்கிறார் எமதர்மன். ஆன்ம அனுபூதி என்பது ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. ஆன்ம ஒளியே நாம் புறப்பொருளைக் காணும் விளக்காக இருக்கின்றது. ஆன்ம ஒளியால் தான் நாம் அனைத்தையும் உணர்கிறோம். ஆகையால் சாதகத்தால் ஆன்ம ஒளியை நீ உணர்வாய் என்கிறார் எமதர்மன். எவனொருவன் ஆன்ம ஒளியை காண்கிறானோ அவன் மரண பயத்தை வெல்கிறான்.
மரணத்தை விட கொடியது மரண பயம். ஆனால் அத்தகைய மரண பயத்தை ஒருவன் எப்படி வெல்ல முடியும் என்பதற்கு எமதர்மன் வழி கூறுகிறார். வாழ்க்கையின் துவக்கத்தையும் முடிவையும் பற்றிய உண்மை நிலையை உணர்பவன் மரண பயத்தை வெல்கிறான் என்கிறார்.
உதாரணமாக ஆற்றங்கரையில் ஒரு அரச மரம் இருப்பதாய்க் கொள்வோம். நாம் அதைப் பார்க்கிறோம். அதன் பிரதிபிம்பம் நீரில் தெரிகிறது. நிலத்தில் வேர்கள் கீழேயும் கிளைகள் மேலேயும் தெரியும், ஆனால் நீரில் அவை தலைகிழாகத் தெரியும். மரம் நீரின் பிரதிபிம்பத்தில் வேர்கள் மேலாகவும் கிளைகள் கீழாகவும் போல! அதாவது வாழ்க்கையில் நாம் இன்பமாகக் காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அதுபோலவே துன்பமாகக் காண்பவை துன்பம் அல்ல. பிறப்பை நாம் இன்பமாகக் காண்கிறோம். மரணத்தை துன்பமாகக் காண்கிறோம். அதனைக் கண்டு அஞ்சுகிறோம். ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு துன்பம் என்றும் மரணத்தை இன்பம் என்றும் கூறுகிறார்கள். இதுவே மரம் நீரில் பிரதிபிம்பமாக தலைகீழாக தெரிவதற்கு எடுத்துக்காட்டு.
அதுவே உண்மை எனப்படுகிறது. துறவி மரணத்தை நேசிக்கிறான். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். அது போலவே உலகம் அதன் உறவுகள் அது தரும் சுகங்கள் எல்லாவற்றையும் உண்மை நிலையானவை என்று நம்புகிறோம். ஆனால் அது உண்மை இல்லை. இவ்வாறு நாம் காணும் உண்மைக்கு ஒரு தலைகீழ் நிஜம் இருப்பதை, நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு பிரதிபிம்பமான இன்னொரு கோணம் இருப்பதை நீரில் காணும் மரத்தோடு ஒப்பிட்டு விளக்குகிறார் எமதர்மன்.
"நசிகேதா! இந்த அரச மரம் பழமையானது. மேலே வேரும், கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்ட உண்மை அதுவே!"
"இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன. பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்திருப்பது போல் இறைவன் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத் தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."
இறைவன் மிகப்பெரிய பிரம்மாண்டத்தன்மை கொண்டவன் என்கிற உண்மையை உணர்வதாலேயே இயக்கங்கள் தடங்கலின்றி நடைபெறுகின்றன. பேராற்றலின் சக்தியே பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கத்தையும் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றது என்பதை விளக்குகிறார் எமதர்மன்.
"நசிகேதா! இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்கினி எரிக்கின்றது; சூரியன் சுடுகிறது. இந்திரனும் வாயுதேவனும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். ஐந்தாவதான மரண தேவனும் அந்த பயத்தினால் தான் தன் தொழிலைச் செய்கின்றன."
இங்கே இறைவன் என்ற பதத்தை மூலப் ப்ருக்ருதி எனக்கொள்ளலாம். அளவிட முடியாத அண்டவெளியும் பிரபஞ்சங்களும் ஒருவித ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டும் ஏதோ ஒரு செலுத்துப் பாதையிலேயே வலம் வந்து கொண்டிருப்பதையும் காணும் போது, இவைகள் எல்லாம் எதிலிருந்து உருவானதோ அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றல் மிகப்பெரியது. எல்லையற்ற பரப்பளவையும் அவை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதை நாம் உணர முடிகிறது. ஆகவே அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றலின், கட்டுப்பாட்டின் காரணமாகவே அக்னி எரிக்கின்றது என்றும் சூரியன் சுடுகின்றது என்றும், வாயு அதன் வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றது என்றும் எமதர்மன் கூறுவதாகக் கொள்ளலாம்.
"இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியுமானால் அவர்களுக்கு அகக்காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது" - எமதர்மன்.
ஆன்மாவை அறிவோம்....
தொடரும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக