திங்கள், 13 ஆகஸ்ட், 2012

வால்மீகி ராமாயணம் என்னும் தேன்


ராதே கிருஷ்ணா 13-08-2012


வால்மீகி ராமாயணம் என்னும் தேன்






வால்மீகி ராமாயணம் பிறந்த கதை

1.வால்மீகி ராமாயண பாராயணத்துக்கு முன்பாக சொல்லப்படும் த்யான ச்லோகங்கள். இதில் பிள்ளையார், சரஸ்வதி தேவி, வால்மீகி முனிவர், ஹனுமார், ராமாயணம், சீதா சமேத ஸ்ரீ ராமர் பற்றிய ச்லோகங்கள் உள்ளன. (த்யான ஸ்லோகங்களைக் கேட்க கீழே உள்ள முக்கோணத்தில் க்ளிக் செய்யவும்)
[வால்மீகி ராமாயணம் த்யான ச்லோகங்கள்]
2. வால்மீகி ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்? காதுகள் என்கிற மடல்களில், வால்மீகி முனிவரின் முகம் என்கிற தாமரையில் இருந்து வெளிப்பட்ட ராமாயணம் என்னும் தேனை அடிக்கடி வாங்கி, விருப்பத்தோடு குடிப்பவர்கள், உபத்ரவம் மிகுந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு சாஸ்வதமான விஷ்ணு பகவானின் பதத்தை அடைவார்கள்.
[வால்மீகி ராமாயணம் என்னும் தேன்]
3. வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.
[வால்மீகி முனிவரின் பூர்வ சரிதம்]
4. இந்த உலகில் ‘சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று வால்மீகி முனிவர் கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராம சரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும் வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸர்கம்.
[ஸங்க்ஷேப ராமாயணம்]
5. வால்மீகி முனிவர் தமஸா நதியில் ஸ்நானத்திற்கு செல்கிறார். வழியில் வேடன் ஒருவன் அம்பால் ஒரு பக்ஷியை அடித்ததைப் பார்த்து சோகத்தால் அவர் சொன்ன வார்த்தைகள் அனுஷ்டுப் சந்தத்தில் ஒரு ஸ்லோகமாக வெளிப்படுகிறது. வியப்படைந்த முனிவருக்கு பிரம்மதேவர் தர்சனம் தந்து, நாரதர் சொன்ன ராம சரிதத்தை, அனுஷ்டுப் சந்தத்தில் ஸ்லோகங்களாக இயற்றி விஸ்தாரமாக, ஒரு காவியமாக பாடும்படி அநுக்ரகம் செய்தார்.
[முனிவரின் சோகம் ச்லோகம் ஆனது]
6. வால்மீகி முனிவர்  தாம் மனக்கண்ணில் கண்ட வண்ணம் ராமாயணத்தை 24000 சுலோகங்களில்  இயற்றி முடிக்கிறார். முடித்தவுடன் வந்து வணங்கிய லவ குசர்களுக்கு அதைக் கற்றுத் தருகிறார். அவர்கள் அதை மற்ற முனிவர்களுக்கும் பின்னர் அஸ்வமேத யாக மண்டபத்தில் ஸ்ரீராமருக்குமே பாடிக் காண்பித்தார்கள்.
[லவ குசர்கள் பாடின ராமாயணம்]

ஸ்ரீ ராம ஜனனம்

7. அயோத்யா நகர வர்ணனை, அயோத்யா மாந்தர்கள் குணநலம், தசரதரின் மந்த்ரிகள் சிறப்பு, அவர் சபையை அலங்கரித்த ரிஷிகளின் மேன்மை
[அயோத்தியில் தசரதர் ஆக்ஷி]
8. தசரத சக்ரவர்த்தி பிள்ளை வரம் வேண்டிஅஸ்வமேத யாகம் செய்ய விரும்புகிறார். வசிஷ்டர் முதலான முனிவர்களிடம் தன் எண்ணத்தைக் கூறி அவர்கள் ஆசியைப் பெறுகிறார்.
[தசரதர் அஸ்வமேத யாகம் செய்ய அநுமதி பெற்றார்]
9. தசரதர் ரிஷ்யசிருங்க மகரிஷியின் மகிமையை சுமந்த்ரரிடம் கேட்டறிகிறார். அங்கதேசம் சென்று அந்த முனிவரை அவர் பத்னியுடன் அயோத்யைக்கு அழைத்து வருகிறார்.
[ரிஷ்யசிருங்கர் சரிதமும் மேன்மையும்]
10. ரிஷ்யஸ்ருங்கர் முதலான ரிஷிகள் உதவியோடு தசரதர், அஸ்வமேத யாகத்தை முறையாக பூர்த்தி செய்து தெய்வங்களின் அருளுக்கு பாத்திரமாகிறார். ஹவிர் பாகம் பெற அங்கு கூடிய தேவர்கள் விஷ்ணு பகவானிடம் ராவணனிடமிருந்து அபயம் வேண்ட, பகவான் ‘தசரத மன்னனின் நான்கு குமாரர்களாய் பூமியில் அவதரித்து ராவணாதி ராக்ஷசர்களை வதைத்து தர்மத்தை நிலை நாட்டுவேன்’ என்று வரமளிக்கிறார். [அஸ்வமேத பூர்த்தி]
11. தன் கொட்டாவியிலிருந்து ஜாம்பவான் என்ற கரடியை உற்பத்தி செய்த பிரம்மா, ராமாவதாரத்திற்கு துணை புரிய வானரர்களையும் கரடிகளையும் பிறப்பிக்கும்படி மற்ற தேவர்களுக்கு கட்டளை இடுகிறார். அவ்வாறே வாலி, சுக்ரீவன், ஹனுமான், நளன், நீலன் முதலான வானரர்கள் பூமியில் அவதரிக்கிறார்கள். [வானரோத்பத்தி]
12. புத்ரகாமேஷ்டி முடிவில் தசரதர் பாயச பிரசாதம் பெற்று தம் மூன்று மனைவிகளுக்கு பகிர்ந்தளிக்கிறார். பங்குனி மாதம் நவமி திதி புனர்வசு நக்ஷத்ரம் கூடிய நன்னாளில் கௌசல்யா தேவியின் மைந்தனாக ஸ்ரீ ராமர் அவதரிக்கிறார். பின் கைகேயி தேவியின் மைந்தனாக பரதனும், அதன் பின் சுமித்ரா தேவியின் மைந்தர்களாக லக்ஷ்மண சத்ருக்னரும் அவதரித்தார்கள்.
[ஸ்ரீ ராம ஜனனம்]








விஸ்வாமித்ரர் யாக ஸம்ரக்ஷணம்

13. ராம லக்ஷ்மண பரத சத்ருகனர்கள் வசிஷ்டரிடம் சதுர்தச வேத வித்யைகளையும் கற்றனர். தசரதர், சபையில் அரசகுமரர்களின் திருமணத்தை குறித்து பேசிக் கொண்டு இருக்கும் போது விச்வாமித்ர முனிவர் வருகிறார். [விஸ்வாமித்ரர் வருகை]
14. விஸ்வாமித்ரர் தசரதரிடம் தன் யாகத்தை காக்கும் பொருட்டு ராமனை தன்னோடு அனுப்பும்படி கேட்க, தசரதர் மனம் கலங்குகிறார். ராமனைத் தர மறுக்கிறார். வசிஷ்டர் விஸ்வாமித்ரரின் மகிமையை எடுத்துச் சொன்ன பின் ராம லக்ஷ்மணர்களை முனிவரோடு அனுப்புகிறார். [தசரதர் சபையில் விஸ்வாமித்ரர் ]
15. விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணர்களுக்கு பலை அதிபலை என்ற மந்திரங்களை உபதேசிக்கிறார். மறுநாள் காலை ‘கௌசல்யா ஸுப்ரஜா ராம’ என்று சுப்ரபாதம் பாடி எழுப்புகிறார். [பலை அதிபலை மந்திரோபதேசம்]
16. விஸ்வாமித்ரர் குழந்தைகளுடன் காமாஸ்ரமத்தில் தங்குகிறார். சரயுவும் கங்கையும் சங்கமிக்கும் கூடலில் நதிகளை வணங்கிய பின் தாடகா வனத்துள் நுழைகிறார்கள். ராமர் முனிவரின் உத்தரவின் பேரில் தாடகையுடன் போரிட்டு அவளைக் கொல்கிறார். [தாடகா வதம்]
17. விஸ்வாமித்ரர் ராமருக்கு எல்லா அஸ்த்ரங்களையும் உபதேசிக்கிறார். பின்னர் அஸ்த்ரங்களை திரும்ப பெரும் மந்த்ரங்களையும் கற்றுத் தருகிறார். ஸித்தாஸ்ரமத்தை நெருங்கும் போது முனிவர் ராமருக்கு வாமன சரித்திரத்தை சொல்கிறார். [வாமன சரித்ரம்]
18. ஸித்தாஸ்ரமத்தை அடைந்த பின் முனிவர் தீக்ஷை ஏற்று யாகத்தை துவங்குகிறார். யாகத்தை தடுக்க வந்த மாரீசனை, ராமர், மானவாஸ்த்ரத்தால் கடலில் தள்ளி, சுபாகுவை ஆக்னேய அஸ்த்திரத்தாலும் மற்ற அரக்கர்களை வாயு அஸ்த்ரத்தாலும் வதம் செய்கிறார். விஸ்வாத்மித்ரர் யாகத்தை பூர்த்தி செய்து ராமனை வாழ்த்துகிறார். [விஸ்வாமித்ரர் யக்ஞ ரக்ஷணம்]

கங்காவதரணம்


19. முனிவர்கள் விஸ்வமித்ரரிடம் ‘ராம லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அழைத்துச் செல்லுவோம்’ என்று சொல்ல விஸ்வாமித்ரரும் ஆமோதிக்கிறார். சித்தாஸ்ரமத்திலிருந்து விடைபெற்று கிளம்பி கிரிவ்ரஜம் என்ற இடத்தை அடைகிறார்கள். அன்றிரவு முனிவர் ராம லக்ஷ்மணர்களுக்கு தம் முன்னோர்களின் கதைகளைக் கூறுகிறார்.[விஸ்வாமித்ரர் முன்னோர்கள் கதை]
20. விஸ்வாமித்ரர் இரவின் அழகை வர்ணித்து பின் குழந்தைகளை தூங்கச் சொல்கிறார். மறுநாள் கிளம்பி புண்ய நதியான கங்கைக் கரையை அடைகிறார்கள். ராமர் ‘கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது?’ என்று கேட்க முனிவர் ‘விரிவாக சொல்கிறேன் கேள். ஹிமவானின் மூத்த பெண் கங்கா தேவி. இளைய பெண் பார்வதி தேவி’ என்று சொல்லி பார்வதி தேவியின் கதையை ஆரம்பிக்கிறார். [உலகமெல்லாம் வணங்கும் உமா தேவி]
21. சிவபெருமானின் தேஜஸை, அக்னி பகவான் கங்கையிடம் அளிக்கிறார். கங்கை அதை சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கு முருகப் பெருமான் ஆறு குழந்தைகளாய் அவதரிக்கின்றார். பார்வதி தேவி அள்ளி எடுத்தவுடன் ஆறுமுகராக ஆகிறார். பின் தேவர்களுக்கு சேனாதிபதி ஆகி சூரபத்மனை சம்ஹாரம் செய்கிறார். [குமார சம்பவம்]
22. முருகப் பெருமானின் பெருமையை தமிழ்ப் புலவர்களும் பக்தியோடு பாடியுள்ளார்கள். அவற்றுள் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை மிகத் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான நூல்கள் முருகனின் மார்பில் தவழும் மதாணியின் நவரத்தினங்கள் . [திருமுருகாற்றுப்படை]
23. சகர மன்னருக்கு ப்ருகு முனிவர் பிள்ளை வரம் அளிக்கிறார். சகர மன்னர் செய்த அஸ்வமேத யாகத்தில் யாகக் குதிரையை இந்திரன் திருடிச் சென்று பாதாளத்தில் கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டி விட, சகர புத்ரர்கள் அந்த குதிரையை தேடிச் செல்லும் போது கபில முனிவரின் கோபத்துக்கு ஆளாகி சாம்பலாகி விடுகிறார்கள். அம்சுமான் அக்குதிரையை மீட்டு வந்த பின் சகர மன்னர் யாகத்தை பூர்த்தி செய்கிறார். [சகர புத்ரர்கள்]
24. சகர மன்னரும், அம்சுமானும், திலீபனும் முயற்சி செய்த பின் பகீரதன் நாட்டைத் துறந்து காடு சென்று கடும் தவம் செய்து பிரம்ம தேவரை வேண்ட அவரும் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைகிறார். ஆனால் கங்கை விழும் வேகத்தை தாங்க பரமேஸ்வரன் ஒருவரால் தான் முடியும் என்று பிரம்மா சொல்ல பகீரதன் சிவபெருமானை வேண்டுகிறான். சிவபெருமான் கங்கையை தன் ஜடாபாரத்தில் தாங்கி பூமியில் விட, புண்ய கங்கை பூமியிலும், பாதாளத்திலும் ஓடி சகர புத்ரர்களை கரை சேர்க்கிறாள்.[கங்காவதரணம்]








அஹல்யா சாப விமோசனம்


25. ராம லக்ஷ்மணர்களுக்கு விஸ்வாமித்ரர், பாற்கடலைக் கடைந்து தேவர்கள் அமிர்தம் பெற்ற கதையையும், மருத்துகள் பிறந்த கதையையும் கூறுகிறார்.[மருத்துகள் பிறப்பு]
26.விஷால தேசத்தில் சுமதி மகாராஜாவின் உபசரிப்பை ஏற்ற பின், மிதிலைக்கு செல்லும் வழியில் கௌதம மகரிஷியின் ஆஸ்ரமத்தை பார்க்கிறார்கள். விஸ்வாமித்ரர் ராமரிடம், லோப மோஹத்தால் இந்த்ரனும் அகலிகையும் தவறிழைத்து, கௌதமரின் சாபத்துக்கு ஆளானதைக் கூறி, ராமரை அந்த ஆஸ்ரமத்திற்கு அழைத்துக் செல்கிறார். ராம த்யானத்தால் தூய்மை அடைந்த அகலிகை, ராம தர்சனத்தால் சுயரூபம் பெற்று தன் கணவரான கௌதமரை அடைகிறாள். [அஹல்யா சாப விமோசனம்]
27. ராம லக்ஷ்மணர்களுடன் விஸ்வாமித்ரர் மிதிலையை அடைகிறார். ஜனக மகாராஜா தன் குலகுருவான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்கிறார். அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின், சதாநந்தர் ராம லக்ஷ்மணர்களுக்கு விஸ்வாமித்ரர் கடும் தவம்செய்து பிரம்மரிஷி ஆன கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.[ஜனகர் விச்வாமித்ரரை தரிசித்தல்]

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி

28. விஸ்வாமித்ரர் அரசராக இருந்தபோது, தன் பெரிய படையுடன் உலகைச் சுற்றி வருகிறார். அப்போது அவர் வசிஷ்ட முனிவரின் ஆச்ரமத்தைப் பார்க்கிறார். முனிவரை தரிசித்து வணங்குகிறார். வசிஷ்டர், அரசரை வரவேற்று தன்னிடமிருந்த சபலா என்ற காமதேனு பசுவின் உதவியினால், அரசருக்கும் அவர் படையில் இருந்த அனைவருக்கும் ஒரு அற்புதமான விருந்தளிக்கிறார். விருந்து உண்ட பின் விஸ்வாமித்ரர் வசிஷ்டரிடம் அந்த பசுவை தனக்கு தந்து விடுமாறு கூற வசிஷ்டர் தரமுடியாது என்று மறுக்கிறார். [விஸ்வாமித்ரர் வசிஷ்டரை சந்தித்தல்]
29. விஸ்வாமித்ரர் காமதேனுவை பலவந்தமாக இழுத்துச் செல்ல முயன்றபோது, அப்பசு வசிஷ்டரின் அனுமதியோடு ஒரு படையை ஸ்ருஷ்டி செய்து விஸ்வமித்ரரின் பெரும் படையை அழித்து விடுகிறது. விஸ்வாமித்ரர் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து அஸ்திர வித்தைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு மீண்டும் வந்து வசிஷ்டரை எதிர்க்கிறார். வசிஷ்டர் தன் பிரம்ம தண்டத்தால் எல்லா அஸ்திரங்களையும் அடக்கி விட, விஸ்வாமித்ரர் கர்வம் ஒழிந்து, ‘க்ஷத்ரியனின் அஸ்திர பலம் கீழானது. முனிவரின் தபோ பலமே உயர்ந்தது. நானும் தவம் செய்து பிரம்மரிஷி ஆவேன்’ என்று தீர்மானிக்கிறார். [பிரம்ம தேஜசின் பலமே எல்லாவற்றிலும் மேலானது]
30. விஸ்வாமித்ரர் தெற்கு திக்கில் சென்று தவம் செய்து ராஜரிஷி ஆகிறார். தன்னை வந்து சரணடைந்த திரிசங்கு மகாராஜாவை பூத உடலோடு சொர்க்கம் அனுப்ப ஒரு யாகம் செய்கிறார். தேவர்கள் அந்த யாகத்தை ஏற்காததால், விஸ்வாமித்ரர் தன் தபோ பலத்தால் திரிசங்குவிற்காக ஒரு புதிய சொர்கத்தையே ஸ்ருஷ்டி செய்கிறார்.  [விஸ்வாமித்ரர் திரிசங்குவை சொர்க்கம் அனுப்புதல்]
31. சுனச்சேபன் என்ற ரிஷிகுமாரனை அவன் பெற்றோர்கள் ஒரு யாகத்தில் பலியிட விற்று விடுகிறார்கள். அவன் விஸ்வாமித்ரரை வந்து சரணடைந்த போது, அவர் அவனுக்கு இரண்டு ஸ்துதிகளை சொல்லிக் கொடுத்து அதன் மூலம் அவன் உயிரைக் காப்பாற்றுகிறார். தவத்தால் ரிஷி என்ற நிலையை அடைகிறார். சிறிது காலம் மேனகையிடம் மயங்குகிறார். பிறகு தெளிந்து தவம் செய்து மகரிஷி என்ற நிலையை அடைகிறார். [சுனச்சேபன் உயிர் பிழைத்தான்]
32. ரம்பை தன் தவத்தை கலைக்க வந்தவுடன், விச்வாமித்ரர் கோபத்தால் அவளை சபிக்கிறார். பின்னர் மனம் வருந்தி தன் மூச்சையும் பேச்சையும் அடக்கி, ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உணவு உண்டு தவம் செய்கிறார். பிரம்மா தேவர்களுடன் வந்து அவருக்கு பிரம்மரிஷி என்ற நிலையை அருளுகிறார். விஸ்வாமித்ரர், வசிஷ்ட பகவான் தன்னை பிரம்மரிஷி என்று ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்ட, வசிஷ்டரும் அங்கு வந்து அவ்வாறே அனுக்ரஹம் செய்கிறார். [வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி]








ஸீதா கல்யாண வைபோகமே

33. விஸ்வாமித்ரரின் உத்தரவின் பேரில் ஜனக மஹாராஜா தன்னிடமிருந்த சிவ தனுசை ராம லக்ஷ்மணர்களுக்கு காண்பிக்கிறார். இந்த வில்லை ராமன் எடுத்து நாண் ஏற்றினால் என் மகள் ஸீதையை அவனுக்கு மணமுடித்து தருவேன் என்று கூறுகிறார். ராமர், முனிவரிடம் உத்தரவு பெற்று அந்த வில்லை எடுத்து நாண் பூட்டும் போது அந்த வில் அவருடைய அபார பலத்தினால் இரண்டாக முறிந்து விழுகிறது. ஜனக மஹாராஜா தன் மகளுக்கேற்ற மணாளன் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார்.
[சிவ தனுசை ராமர் நாண் ஏற்றினார்]
34. ஜனகர், விஸ்வாமித்ரர் அனுமதி பெற்று, தசரதரை அழைத்து வர தூதர்களை அனுப்புகிறார். தசரதர் கல்யாண சேதி கேட்டு சந்தோஷத்துடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு மிதிலை வந்து சேர்கிறார். ஜனகர் அவர்களை வரவேற்று உபசரித்து கல்யாணத்திற்கு நாள் குறிக்கிறார்.
[தசரதர் மிதிலை வந்து சேர்ந்தார்]
35. ஜனகர் சபையில் வசிஷ்ட பகவான், தசரதரின் பூர்வ வம்சத்தைக் கூறி ராமனுக்கு சீதையை பெண் கேட்கிறார். ஜனகர் தன் பூர்வ வம்சத்தைகச் சொல்லி ராமருக்கு சீதையையும் லக்ஷ்மணனுக்கு ஊர்மிளையையும் மணம் செய்து தர சம்மதிக்கிறார். விஸ்வாமித்ரர், பரதனுக்கும் சத்ருக்னனுக்கும் ஜனகரின் தம்பியின் பெண்களான மாண்டவியையும் சுருதகீர்த்தியையையும் மணமுடிக்கலாம் என்று கூற, ஜனகர் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறார்.
[வசிஷ்டர் சீதையை ராமருக்கு பெண் கேட்கிறார்]
36. முனிவர்கள் குறித்த மங்கள நன்னாளில், ஜனகர் தன் நான்கு பெண்களை அலங்கரித்து அழைத்து வர, தசரதரும் தன் நான்கு புதல்வர்களையும் அழைத்து வருகிறார். ஸீதா தேவியின் கரங்களை ஜனகர் ஸ்ரீ ராமரின் கரங்களில் கொடுத்து ‘என் பெண் சீதையை உன் மனைவியாக ஏற்றுக் கொள். இவள் உன்னை நிழலெனப் பின்தொடர்வாள். தருமத்தில் துணை நிற்பாள். உனக்கு மங்களம் உண்டாகட்டும்’ என்று கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார். அவ்வாறே மற்ற மூன்று பெண்களான ஊர்மிளை மாண்டவி மற்றும் ஸ்ருதகீர்தியை முறையே லக்ஷ்மண பரத சத்ருக்னருக்கு பாணிக்ரஹனம் செய்து தருகிறார்.
[ஸீதா கல்யாணம்]

பரசுராமர் கர்வ பங்கம்

37. சீதா கல்யாணம் முடிந்தபின் விஸ்வாமித்ரர் அரசர்களிடம் விடை பெற்று ஹிமயமலைக்கு செல்கிறார். தசரதர் ஜனகரிடம் விடை பெற்று புது மணத்தம்பதிகளோடு அயோத்திக்கு திரும்பும் வழியில் பரசுராமர் எதிரில் வருகிறார். ராமரிடம் தான் கொண்டு வந்த விஷ்ணு தனுசை வளைத்து நாணேற்றி அம்பு தொடுத்தால் யுத்தம் புரிவோம் என்று அறைகூவல் விடுக்கிறார்.
[பரசுராமர் வருகை]
38. ஸ்ரீராமர் பரசுராமரிடமிருந்து அந்த விஷ்ணு தனுசை வாங்கி நாணேற்றி அம்பு தொடுத்தவுடன் பரசுராமர் ராமரை விஷ்ணு பகவானே என்று அறிந்து கொள்கிறார். தன் நாராயண தேஜஸை ராமரிடம் ஒப்படைத்துவிட்டு, ராமரின் அம்பிற்கு இலக்காக தான் தவத்தால் வென்ற உலகங்களையும் அளித்து விடை பெறுகிறார்.
[பரசுராமர் கர்வ பங்கம்]
39. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள் தம்தம் மனைவிகளோடு அயோத்தி வந்தவுடன், அயோத்தி மக்களும் தசரதர் மனைவிகளும் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். சீதையோடு கூடிய ராமர், லட்சுமி தேவியுடன் கூடிய விஷ்ணு பகவானைப் போல் ஆனந்தமாய் விளங்கினார்.
[அயோத்தியில் சீதையோடு ராமர்]








ராமருக்கு யுவராஜ பட்டாபிஷேகம்


40. பரதன், சத்ருக்னனோடு கேகய ராஜ்யத்திற்கு செல்கிறான். தசரதர், ராமரின் உயர்ந்த குணங்களையும், மக்கள் அவனிடம் கொண்டிருந்த அன்பையும் நினைத்து, தனக்கு முதுமை வந்ததுவிட்டது என்பதையும் எண்ணி, ராமனை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்தார்.
[ஸ்ரீராமரின் கல்யாண குணங்கள்]
41. தசரதர், ராஜசபையை கூட்டி, பெரியோர்களிடம், தன் மகன் ராமனை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்து வைத்து, தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கூறி உத்தரவு கேட்கிறார். அனைவரும் பெருமகிழ்ச்சியோடு அதை வரவேற்கிறார்கள். தசரதர் ‘இவ்வளவு சந்தோஷப் படுகிறீர்களே, என் ஆட்சியில் ஏதும் குறை இருக்கிறதா?’ என்று வேடிக்கையாக கேட்கிறார். ஜனங்கள் ராமருடைய பெருமைகளை விரிவாக எடுத்துக் கூறி ‘இப்பேர்பட்ட ராமனை நாங்கள் ராஜாவாக அடையும்படி நீங்கள் வரம் தர வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்கள்.
[ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்கு பெரியோர்கள் அனுமதி]
42. தசரதர் வசிஷ்டரிடம், ராம பட்டாபிஷேகத்தை முன்னின்று நடத்தி தருமாறு வேண்டுகிறார். வசிஷ்டர், மந்த்ரிகளிடமும் புரோஹிதர்களிடமும், தேவையான பொருட்களை சேகரிக்க உத்தரவிடுகிறார். தசரதர் ராமனை சபைக்கு வரவழைத்து ‘உனக்கு பதவி அளிக்க போகிறேன். நீ மேலும் வினயத்தோடும் புலனடக்கதோடும் மக்களின் நன்மையை பேண வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்.
[ராமருக்கு தசரதர் செய்த உபதேசம்]
43. தசரதர் தன் அரண்மனைக்கு ராமனை வரவழைத்து ‘என் மனத்தில் சில சஞ்சலங்கள் இருப்பதால் உனக்கு நாளையே பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன். இன்றிரவு நீயும் சீதையும் விரதமாக இருங்கள்.’ என்று கூறுகிறார். ராமர் கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு வந்து அம்மாவிடம் நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறார். கௌசல்யை ராமனை ஆசிர்வதிக்கிறாள்.
[தசரதரின் சஞ்சலம்]
44. வசிஷ்டர் ராமருடைய அரண்மனைக்கு வந்து, ராமருக்கும் சீதைக்கும் விரதம் எடுத்து வைக்கிறார். ராமர் சீதையோடு விஷ்ணுவை பூஜித்து, பின் தரையில் தர்பையில் படுத்துறங்கி மறுநாள் காலை வெகு விரைவில் எழுந்து சந்த்யாவந்தனம் செய்கிறார். அயோத்யா ஜனங்கள் தசரதரையும் ராமரையும் புகழ்ந்து கொண்டே ஊரை அலங்கரிக்கிறார்கள்.
[ராமர் சீதையோடு விரதமிருந்தார்]

கைகேயி மனமாற்றம்

45. மந்தரை என்ற கைகேயின் பணிப்பெண் ஒருத்தி, ராமருக்கு பட்டாபிஷேகம் என்று கேட்டவுடன் பொறாமை அடைகிறாள். கைகேயியிடம் வந்து செய்தியை தெரிவித்து ‘இதனால் உனக்கும் பரதனுக்கும் ஆபத்து’ என்கிறாள். கைகேயி அதை காதில் வாங்காமல் ‘ஆஹா! என் ராமனுக்கு பட்டபிஷேகமா’ என்று மிக மகிழ்ந்து கூனிக்கு முத்து மாலை ஒன்றை பரிசளிக்கிறாள்.
[கூனி வருகை]
46. கூனி ‘ராமன் ராஜாவானால் நீ கௌசல்யைக்கு வேலைக்காரியாக தான் இருக்க வேண்டும். பரதனை ராமன் மேலுலகம் அனுப்பிவிடுவான்’ என்று பலது கூறி கைகேயியின் மனத்தில் பொறாமையை வளர்கிறாள். கைகேயி மனம் மாறி, பரதனை அரசனாக்க உபாயம் கேட்கிறாள். முன்பு தசரதர் உயிரைக் காப்பாற்றிய போது அவர் தந்த இரண்டு வரங்களைக் கொண்டு பரதனை அரசனாக்கி ராமனை காட்டுக்கு அனுப்பும்படி கூனி யோசனை கூறுகிறாள்.
[கூனி சொன்ன யோசனை]
47. தசரதர் கைகேயியின்  அரண்மனைக்கு நல்ல செய்தியைச் சொல்ல வருகிறார். கைகேயி கோபத்தோடு இருப்பதை பார்த்து அவளை சமாதானம் செய்ய, ‘ராமன் பேரில் ஆணையாக நீ எது கேட்டாலும் தருகிறேன்’ என்று வாக்களிக்கிறார். கைகேயி, தேவாசுர யுத்தத்தில் அவர் உயிரைக் காப்பாற்றிய போது, தனக்கு அவர் அளித்த இரண்டு வரங்களை நினைவூட்டி, ஒரு வரத்திற்கு ‘ராமனுக்கு பதிலாக பரதனுக்கு பட்டம் சூட்ட வேண்டும். இரண்டாவது வரத்திற்கு ராமன் பதினான்கு வருடங்கள் காட்டிற்கு போக வேண்டும்’ என்று கேட்கிறாள்.
[கைகேயி கேட்ட இரண்டு வரங்கள்]








தசரதரின் சத்தியப் பற்று

48. தசரதருக்கு விஷ்ணு பகவானே பிள்ளையாக ராமனாக பிறந்து, கைகேயி மேல் அவர் வைத்திருந்த மோகத்திலிருந்து மீட்டு, அவரை ஆட்கொண்டார். அது போல பட்டினத்தாரை, பரமேஸ்வரனே பிள்ளையாக வந்து பணத்தசையிலிருந்து மீட்டு அவரை ஆட்கொண்டார்.
[தசரதர் மகத்துவம்]
49. கைகேயி ‘ராமனைக் பதினான்கு வருடங்கள் காட்டிற்கு அனுப்பவேண்டும்’ என்று வரம் கேட்டதும் தசரதர் மயங்கி விழுந்து விடுகிறார். பின்னர் தெளிந்து ‘ஒரு குற்றமும் அறியாத ராமனை எப்படி காட்டிற்கு அனுப்புவேன்? ஐயோ! இவ்வளவு கொடியவளான உன்னிடம் அன்பு வைத்தேனே! ராமன் என் வார்த்தையை மறுத்து பேசவும் மாட்டானே! அவனை பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்?’ என்று பலவாறு புலம்புகிறார்.
[தசரதர் புலம்பல்]
50. தசரதர் மேலும் ராமனின் குணங்களை நினைத்து ‘நன்றாக வாழவேண்டிய வேளையில் காட்டில் என் குழந்தை கஷ்டப் படுவதா? உனக்கு பெரிய அபவாதமும் எனக்கு கேட்ட பெயரும் தான் மிஞ்சும். பரதன் இதை ஒரு நாளும் ஏற்க மாட்டான். உன் காலில் விழுகிறேன். தயவு செய்’ என்று கெஞ்சுகிறார். கைகேயி தன் பிடிவாதத்தை விடாமல் ‘கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றும்’ என்று கடுமையாகச் சொல்கிறாள்.
[கைகேயி பிடிவாதம்]
51. தசரதர் மனம் வெறுத்து, ‘கைகேயி, தர்மத்தை கைவிட்ட உன்னை நான் கைவிடுகிறேன். நீ இனி என் மனைவி இல்லை. பரதன் உன் ஏற்பாட்டை ஒத்துக் கொண்டால் அவன் எனக்கு மகன் இல்லை. எனக்கு இப்போது தர்மாத்மவான என் மகன் ராமனைப் பார்க்க வேண்டும்’ என்கிறார். பொழுது விடிந்தவுடன் வசிஷ்டர் முதலான அனைவரும் பட்டாபிஷேக பொருட்களுடன் அரண்மனை வாசலை அடைகிறார்கள். சுமந்திரர் மங்கள வசனங்களைச் சொல்லி தசரதரை எழுப்புகிறார். கைகேயி சுமந்திரரிடம் ‘தசரதர் தூங்குகிறார். கவலை வேண்டாம். ராமனை அழைத்து வாருங்கள்’ என்று உத்தரவிடுகிறாள்.
[சுமந்திரர் தசரதரை எழுப்புகிறார்]

ஸ்ரீராமரின் பித்ருபக்தி

52. சுமந்திரர், ராமரை அழைத்து வர அவருடைய அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு சித்ரா நக்ஷத்ரத்துடன் கூடிய சந்திரனைப் போல, தங்கக் கட்டிலில் சர்வாலங்கார பூஷிதராக சீதா தேவியோடு அமர்ந்திருக்கும் ராமரைக் கண்டு வணங்குகிறார். தசரதர் அழைப்பதாக சொன்னவுடன், ராமர் சீதையிடம் விடைப் பெற்று கைகேயி அரண்மனைக்கு புறப்படுகிறார். சீதை ஆரத்தி எடுத்து வழியனுப்புகிறாள்.
[சுமந்திரர் ராமரை அழைக்கிறார்]
53. ராமர் லக்ஷ்மணனோடு தேரில் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார். வழியில் பெண்களும் பெரியவர்களும் அவரை வாழ்த்துகிறார்கள். அவர் அரண்மனைக்குள் நுழைந்தபின் ராமசந்திரனின் வருகையை எதிர்பார்த்து ஜனக்கடல் காத்துக் கொண்டிருக்கிறது.
[ராமர் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார்]
54. ராமரைக் கண்டவுடன் தசரதர் பேசவும் முடியாமல் அழுது பரிதவிக்கிறார். ராமர் பயந்து கைகேயியிடம் அப்பாவின் கலக்கத்திற்கு காரணம் கேட்கிறார். கைகேயி ‘தசரதர் எனக்கு குடுத்த சத்தியத்தை காப்பாற்ற, நீ அவர் சொல்வது எதுவானாலும் செய்வாயா?’ என்று கேட்கிறாள். ராமர் ‘அப்பா சொன்னால் நான் நெருப்பில் வேண்டுமானாலும் விழுவேன். அப்பா வார்த்தை எதுவானாலும் கேட்பேன். இது சத்தியம். ராமன் வார்த்தை மாறமாட்டான்.’ என்று சொன்னவுடன் கைகேயி தான் கேட்ட இரண்டு வரங்களை சொல்கிறாள். ராமர் வருத்தம் அடையவில்லை. அவர் முகம் இரவில் நிலவு போல் ஒளியுடனே விளங்கியது.
[ராமரின் பித்ரு பக்தி]
55. ராமர் கைகேயி சொன்ன வரங்களைக் கேட்டு ‘அவ்வாறே செய்கிறேன். என் தந்தையும், வயதில் மூத்தவரும், ராஜாவுமான தசரதர் குடுத்த வரத்திற்காக நான் ஜடை பூண்டு மரவுரி உடுத்தி காடு செல்கிறேன்’ என்று வாக்களிக்கிறார். ‘இன்றே நீ கிளம்பு’ என்று கைகேயி அவசரப்படுத்த ‘நான் ரிஷிகளைப் போல தர்மத்தில் உறுதி கொண்டவன். பணத்தில் பேராசை கொண்டவன் அல்ல’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு செல்கிறார்.
[ராமரின் வனவாசத்திற்கு ஒப்புதல்]








கௌசல்யாதேவி அரண்மனையில் ராமர்


56. ராமர் கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு வந்து அம்மாவை வணங்குகிறார். கௌசல்யை மகனை ஆசிர்வதித்து அமர்ந்து சாப்பிடச் சொல்கிறாரள். ராமர், தசரதர் தனக்கிட்ட உத்தரவைச் சொல்கிறார். கௌசல்யை அதைக்கேட்டு வெட்டுண்ட மரம் போல் மயங்கி விழுந்து விடுகிறாள். தெளிந்த பின், தாங்க முடியாத அந்த கஷ்டத்தை நினைத்து பலவாறு புலம்புகிறாள்.
[ராமர் கௌசல்யா தேவியிடம் வனவாசத்தைப்பற்றி கூறுதல்]
57. லக்ஷ்மணன் ‘ஒரு தவறு செய்யாத ராமனைக் காட்டிற்கு அனுப்புவது என்ன நியாயம்? நான் தந்தையை மீறி ராமனுக்கு முடி சூட்டுகிறேன். யார் தடுப்பார் பார்க்கலாம்’ என்று சொல்கிறான். கௌசல்யா ‘நீ கைகேயி விருப்பத்திற்காக காட்டுக்கு போக நான் அனுமதி தர மாட்டேன்’ என்கிறாள். ராமர் ‘தந்தை சொல்லை நான் மீற முடியுமா? நாம் மூவரும் அவர் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். இது தான் தர்மம். அப்பா பேச்சைக் கேட்டு யாரும் குறைவு அடைந்ததில்லை’ என்று கூறி உத்தரவு கேட்கிறார்.
[தந்தை சொல்மிக்க மந்திரமில்லை]
58. ராமர் தன்னோடு வனத்திற்கு வர விரும்பும் கௌசல்யா தேவியிடம் ‘தர்மரஜாவான என் தந்தை, உன் கணவர் உயிருடன் இருக்கும்போது நீ அவரை விட்டு என்னோடு எப்படி காட்டிற்கு வரமுடியும்? அவருக்கு துணையாக இருப்பதே உன் கடமை’ என்று சொல்கிறார். லக்ஷ்மணனிடம்  ’நடப்பது விதியின் செயல். கைகேயி கார்யம் இல்லை. நான் வனவாசம் கிளம்ப ஏற்பாடுகளை செய்’ என்று கூறுகிறார்.
[விதியின் வலிமை]
59. லக்ஷ்மணன் ராமரிடம் ’விதியை என் வீரத்தால் மாற்றிக் காண்பிக்கிறேன். உன்னை அரசனாக்குகிறேன். உத்தரவு கொடு’ என்று கேட்கிறான். ராமர் ‘தந்தை சொல்படி நடப்பேதே நல்வழி. அதுவே என் வழி’ என்று கூறி மறுத்து விடுகிறார்.  அம்மாவிடம் ‘கணவனை தெய்வமாக வழிபடுவளே நல்லுலகம் அடைவாள் என்று வேதங்கள் கூறுகின்றன. கைகேயி அப்பாவை கைவிட்டு விட்டாள். நீ அவருக்கு இப்போது துணையாக இருக்க வேண்டும்’ என்று எடுத்துக் கூறியதும் உத்தமியான கௌசல்யை அதை ஒப்புக் கொள்கிறாள்.
[கணவனே கண்கண்ட தெய்வம்]
60. கௌசல்யாதேவி ராமனிடம் ‘எந்த தர்மத்தை நீ இவ்வளவு விருப்பத்துடனும் உறுதியுடனும் கடைபிடிக்கிறாயோ எந்த தர்மமே உன்னை எல்லா விதத்திலும் காப்பாற்றட்டும். நான் பூஜிக்கும் சிவபெருமான் முதலான தெய்வங்கள் உனக்கு வனவாசத்தில் துணையாக இருப்பார்கள். நல்லபடியாகப் போய் சீக்கிரம் திரும்பி வா’ என்று கூறி விடை அளிக்கிறாள். ராமர் அங்கிருந்து சீதையை பார்க்க வருகிறார்.
[கௌசல்யாதேவி மங்களாசாசனம்]

சீதையும் ராமரோடு கிளம்பினாள்

61. ராமர் சீதையின் பிரிவுத் துன்பத்தை நினைத்து வருத்தத்துடன் வரும்போது சீதை, ‘ஏன் உங்கள் முகத்தில் என்றும் இல்லாத வாட்டம்?’ என்று கேட்கிறாள். ராமர் ‘மதிப்பிற்குரிய தந்தையார் என்னை வனவாசம் போகும்படி ஆணை இட்டுள்ளார். நீ என் பெற்றோரை தினமும் வணங்கி, அவர்களுக்கு பணிவிடை செய்து, பரத சத்ருகனர்களிடம் அன்புபாராட்டி, விரதங்களை கடைபிடித்து எளிமையாக வாழ்ந்து வா’ என்று அறிவுரை கூறுகிறார்.
[ராமர் சீதைக்கு சொன்ன அறிவுரை]
62. சீதை ராமரிடம் ‘உங்களை காட்டிற்கு போகச் சொன்னால் அது என்னையும் சொன்னது போல தான். உங்கள் கஷ்ட நஷ்டத்தில் எனக்கும் பங்கு உண்டு. என்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறாள். ராமர் ‘வனம் என்பது ஆபத்தான இடம். வனவாசம் மிகவும் கஷ்டமானது’ என்று கூறும் போது சீதை, ‘உங்களோடு இருந்தால் எனக்கு எதுவும் கஷ்டமில்லை. எனக்கு உங்கள் அன்பு ஒன்றே போதும்’ என்று கூறுகிறாள்.
[சீதாதேவியின் வேண்டுகோள்]
63. ராமர் அனுமதி தரத் தயங்கவே, சீதை ‘உங்களோடு இருப்பதே எனக்கு சொர்க்கம். நீங்கள் இல்லாத இடம் எனக்கு நரகம். நீங்கள் என்னை இங்கே விட்டுச் சென்றால் நான் உயிரை விட்டு விடுவேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறாள். ராமர் ‘அம்மா அப்பா குரு மூவரும் கண்கண்ட தெய்வம். அப்பா குடுத்த வாக்கை காப்பற்ற நான் வனம் செல்கிறேன். அந்த தர்மத்தில் துணையாக நீயும் என்னோடு வா’ என்று அனுமதி அளிக்கிறார்.
[அம்மா அப்பா குரு மகிமை]














































































































































2 கருத்துகள்: