ராதே கிருஷ்ணா 20-06-2017
. மெய்யனா? பொய்யனா?
திருவஹீந்த்ரபுரத்தில் சாதுர்மாஸ்ய ஸங்கல்பத்தை அநுஷ்டிக்கும் அஹோபில மட ஜீயரையும், மாலோலனையும் சேவித்துக் கொண்டு எங்கக்கா பெண்ணும் நானும் ஹேமாம்புஜநாயிகாஸமேத தேவநாதனை சேவிக்கப் போனோம். நான் வர வழியெல்லாம் அவகிட்ட கோவிலைப் பற்றியும் ஸ்வாமி தேசிகன் அந்த ஊர்ல எழுந்தருளியிருந்த சரித்ரத்தையும் சொல்லிக் கொண்டே வந்தேன். கோயிலில் பட்டர் ஸேவை பண்ணிவைக்கும்போது இந்தப் பெருமாளை அடியவர்க்கு மெய்யன் என்று திருமங்கை மன்னன் மங்களாசாஸனம் செய்கிறார் என்றார்.
ஸன்னிதியை விட்டு வெளியே வந்தவுடன், சித்தி, அதென்ன அடியவர்க்கு மெய்யன்....அப்படின்னா மத்தவாளுக்கு பொய்யனா? என்று கேட்டாள். ஒருவகையில் ஆமான்னு சொல்லணும். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் மெய்யனாகும் விரும்பித்தொழுவார்க்கெல்லாம் பொய்யனாகும் புறமே தொழுவார்க்கெல்லாம் என்கிறார். திருமாலையில் தொண்டரடிப்பொடியாழ்வாரோ மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா வென்னைப்போல பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடியுடைய கோமான் என்கிறார். கொஞ்சம் இவா ரெண்டு பேரோட வார்த்தையையும் கூட்டி நம்ம ஆசார்யர்கள் சொன்ன அர்த்தத்தையும் சேர்த்துப் பார்த்தா மனுஷாளை முன்று வகையா பிரிக்கலாம். நான் சொல்ல, அவள் என்னை, அதென்ன மூன்றுன்னு கேட்டாள்.
நம்மாழ்வார் பாசுரத்துக்கு நம்பிள்ளை காட்டுகிற விருத்தாந்தத்தைப் பார். கண்ணனோட உதவி பாரதப் போருக்கு வேணும்னு அர்ஜுனனும் துரியோதனனும் போனது நமக்கெல்லாம் தெரியும். அர்ஜுனன் விரும்பியது கண்ணனை மாத்திரம். அவன் யாசகமாகக் கேட்டது அவசியம் நீ எங்க பக்கம் இருக்கணுங்கிறதுதான். ஆனால் துரியோதனனும் கண்ணனைத் தொழுதான். கண்ணனுக்காகன்னு இல்லாம அவனுடைய சைன்யத்துக்காக ..அதாவது அவனை விட்டுவிட்டு புறத்திலுள்ள வஸ்துக்களெல்லாம் வேணும்னு ஆசைப்பட்டு அவைகளைக் கேட்டான். எம்பெருமானுக்கு புறத்தே ஒரு பொருளும் கிடையாதுங்கிற தத்வஜ்ஞானம் அவன்கிட்டேயில்லை. ஆனால் அதுக்காக துரியோதனனுடைய விருப்பத்தை நிராகரிக்கலை. அவன் கேட்டதை மாத்திரம் கொடுத்து அவனோட ஆசையை நிறைவேற்றி வைத்தான். இதுல நம்பிள்ளை காட்ற சூஷ்மம்..எம்பெருமானை அவனோட ஸகலவிதமான கல்யாண குணங்களோடு உள்ளபடி மெய்யா உணர்ந்தவா ஒரு கோஷ்டி. அவர்களுக்கு அவனும் தன்னை முழுசாய் காட்டிக் கொடுத்து மெய்யன் என்பதைக் கொண்டாட வைக்கிறான். அவர்களுக்கு தாஸனாக இருந்து எல்லாவிதமான காரியமும் பண்ணுகிறான். இன்னொரு கோஷ்டி, அவனை ஒரு சாதாரணமான தேவதை மாதிரி நினைத்துக் கொண்டு இதைக் கொடு, அதைக் கொடுன்னு கேட்கிறவர்கள். அவர்களுக்கு, அவர்கள் எந்த அளவு அவனை புரிஞ்சு வச்சிண்டிருக்காளோ அந்த அளவுக்குக் காட்டிக் கொடுத்து - உள்ளபடி காட்டிக் கொடுக்காமல் பொய்யனாக நிற்கிறான்.
சித்தி நீ மூன்று category ன்னு சொன்னயே.. விடாமல் அவள் கேட்க, தொண்டரடிப்பொடியாழ்வாரைக் கவனித்தால் அது கிடைக்கும் என்றேன். நம்மாழ்வார் காட்டினது மெய்யாய் அவனைத் தொழுபவர்கள். பொய்யாய் புறம் தொழுபவர்கள். தொண்டரடிப்பொடியாழ்வார் காட்டுவது இரண்டு கோஷ்டி. ஒன்று நம்மாழ்வார் காட்டிய மாதிரி உள்ளபடி அவனையறிந்து கொண்ட மெய்யரான அன்பர்கள் இன்னொன்று அவன் இருக்கான்னே தெரிஞ்சுக்காம அவனோட லோகத்தில வாழ்ந்திண்டிருக்கிறவா. இவர்கள் புறமே தொழுவார்களைவிடக் கீழே இருக்கிறவா. . இவர்களுக்கு பகவான் என்ன பண்ணுகிறான் என்று கேட்டால் , அவனே பொய்யன்னு நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்குஅவனுடைய உண்மையான ஸ்வரூபத்தைக் காட்டாதது மட்டுமின்றி அவர்களுக்கு பொய்யான ஒரு தோற்றத்தைக் காண்பித்து திசை திருப்பி விடுகிறான் என்கிறார். இதுவும் ஒரு அருள்தான். அவர்களெல்லாம் எல்லாவிடத்திலேயும் சுத்தி கடைசியில் எம்பெருமான் காலில்தான் வந்து விழுவார்கள். இப்படி, அவனை உள்ளபடி அறிஞ்சவா, அவனை ஒரு தேவதைன்னு மட்டும் அறிஞ்சவா, அவனைப்பற்றி ஒன்றுமே அறிஞ்சிக்காம இருக்கிறவான்னு மூன்று வகை. இந்த மூணுவகைக்காரர்களுக்கும் மூன்று விதமா அருள் செய்கிறான்.
இதுமாத்திரமல்ல. ஸகஸ்ரநாமத்தில் அவனோட ஸத்யன் என்கிற திருநாமமும் மூன்று முறை வருகிறது. எம்பெருமானை உள்ளபடி அறிந்துகொள்பவர்கள் ஸத் என்றும், அப்படிப்பட்ட ஸத்துக்களுக்கு அநுகூலன் என்றும், அடியவர்களுக்கு நல்லவன் என்றும், க்ருஷ்ணன்-வாஸுதேவன் ஸத்யத்தில் நிலை பெற்றிருக்கிறான்.ஸத்யம் அவனிடத்தில் நிலை பெற்றிருக்கிறதுன்னு வ்யாக்யானம் செய்கிறார் ஸ்ரீபராஸரபட்டர்.
தத்வத்ரயமான அசித், சித், பரமாத்மாவில் அசித் ஸ்வரூபத்தாலும் ஸ்வபாவத்தாலும் மாறிக் கொண்டேயிருக்கும். சித் என்னும் ஜீவாத்மாக்கள் ஸ்வரூபத்தில் மாற்றம் இல்லையினும் ஸ்வரூபத்தில் மாறும். ஆனால் பரமாத்மாவோ ஸ்வரூபம், ஸ்வபாவம் இவைகளால் எக்காலத்திலும் மாறாமல் இருக்கிறான். ஸத்ய: ன்னு இந்த என்றைக்கும் மாறாத உண்மையைச் சொல்வதில் என்ன தப்பு!
ததியாராதனையை முடித்துக் கொண்டு மடத்திலிருந்து கிளம்பும்போது, சித்தி நீ சொன்ன மூன்று வகையில் நான் இரண்டாவது வகையில் இருக்கேன்னு நினைக்கிறேன். .கூடிய சீக்கிரம் எம்பெருமானிடத்தில் அவனையே கேட்கணும்னு பார்க்கிறேன்..ஆனால் சட்டம் இடம் கொடுக்காது போல் இருக்கிறதே.! என்றபடி எதிர்த்தாற்போல் பெட்டிக் கடையில் அன்றைய செய்தித் தாளின் வால் போஸ்டரைக் காட்ட அதில் ராமர் சிலையைக் காணோம் - போலீஸ் வலை வீச்சு என்றிருக்க அவள் தலையில் ஓங்கி வைத்தேன் ஒரு குட்டு!
நப்பின்னை...