மாசி மகம் செய்திகள்
மாசி மகம் | |||
போட்டோ கேலரி | |||
| |||
மாசி மகம் செய்திகள் | |||
மாசி மகப் பெருவிழாவின் சிறப்பு தெரியுமா?பிப்ரவரி 27,2012
மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும். இம்மாதம் தவிர வேறு எப்போதெல்லாம் புனித நீராடலாம் என புராணங்கள் சொல்கின்றன தெரியுமா? அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு அயன காலங்கள், வெள்ளிக்கிழமை, ... மேலும்
மகாமக குளத்தின் சிறப்பு!பிப்ரவரி 27,2012
மாசிமகம் என்றதும் நினைவுக்கு வரும் கும்பகோணத்தில் புனிதமான மகாமகக்குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி 16 மண்டபங்கள் உள்ளன. அதில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், ... மேலும்
மாசி மகத்தில் நீராட வேண்டிய தலங்கள்!பிப்ரவரி 27,2012
ஈரோட்டில் இருந்து 12கி.மீ.,தொலைவில் உள்ள தலம் பவானி. பவானி ஆறு காவிரியில் சங்கமிக்கும் இடம் என்பதால் இங்கு உள்ள இறைவன் சங்கமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காவிரி, பவானி,அமுதநதி ஆகிய மூன்று நதிகள் கூடுவதால் முக்கூடல் ... மேலும்
|
மாசி மகப் பெருவிழாவின் சிறப்பு தெரியுமா?பிப்ரவரி 27,2012
மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும். இம்மாதம் தவிர வேறு எப்போதெல்லாம் புனித நீராடலாம் என புராணங்கள் சொல்கின்றன தெரியுமா? அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு அயன காலங்கள், வெள்ளிக்கிழமை, கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் நாட்கள் தான் அவை. மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர், பிரம்மதேவன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால் புண்ணியப்பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணம் சொல்கிறது. இக்குளத்தில் பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், நவகன்னியரான கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு நதிகள் நீராடி புண்ணியம் அடைந்தன. பவுர்ணமியன்று நீராடுவோருக்கு ஏழேழு பிறவிக்கும் நன்மை ஏற்படும்.
மாசி மாதத்தில் மாசி மகப் பெருவிழா பத்துத் தினங்கள் வரை நடைபெறும். அசுவினி நட்சத்திரம் கூடிய நன்நாளில் கொடி ஏற்றஞ் செய்து எட்டாவது நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளான மகம் நட்சத்திரம் கூடிய முழுநிலவு நாளில் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு மகாமக தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகம் நாளில் குரு, சிம்ம ராசியிலும் சூரியன், கும்ப ராசியிலும் வரும். அந்நாளே மகாமகப் பெருவிழா. ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார். அம்முனிவர், கும்பகோணம் வந்து சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம் எனக்கூறினார். அதன்படி ராமர் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டு, தன் உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதன் காரணமாக இவ்விடமும் காரோணம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இதன் பழைய பெயர், திருக்குடந்தைக் காரோணம். மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோயில். மாசித்திருவிழாவின் பத்தாம்நாளில் கும்பேஸ்வரர் பஞ்சமூர்த்தியுடன் இந்த குளக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குகிறார். மாசி மாத பூச நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்றுதான் முருகப் பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தருளினார். சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது அன்றைய தினம் தான். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவதுடன், பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான். காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றதும் எலும்புகள் பூக்களாக மாறிய அதிசயம் நிகழ்ந்ததும் மாசிமாதத்தில் தான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தது மாசி மகத் திருநாளில்தான். பன்னிரு ஆழ்வார்களும் ஒருவரான குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார். மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. மாசி மகத்தன்றுதான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். மாசி மகத்தன்றுதான் காமதகன விழா நடைபெறுகிறது. மாசிமகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. உயர் படிப்பு விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் இந்நாளில் அவற்றைத் துவங்கினால் அதில் சிறந்து விளங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பிற சிறப்புகள் : மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ்வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம் மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம் அத்துடன் மாசிப் பூணூல் மணிப்பூணூல் என்பர். அதனால் இம்மாதத்தில் உபநயனம் செய்வது சிறப்பானது. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும்; மாசிக் கயிறு பாசிபடியும் என்பதும் பழமொழி இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது. காரடையான் நோன்பும் கடைப்பிடித்து நோன்புக்கயிறு கட்டிக் கொள்வர். இம்மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர். | |
மகாமக குளத்தின் சிறப்பு!பிப்ரவரி 27,2012
மாசிமகம் என்றதும் நினைவுக்கு வரும் கும்பகோணத்தில் புனிதமான மகாமகக்குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி 16 மண்டபங்கள் உள்ளன. அதில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதரேஸ்வரர், முக்த தீர்த்தேஸ்வரர், ÷க்ஷத்ரபாலேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவன் கோயில்களுக்கு தலைமையாக கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 15 ஏக்கர் பரப்புள்ள இக்குளத்தை வெட்டியவர் அச்சுதப்ப நாயக்க மன்னரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இந்நகரில் ஏழு குளங்கள், மூன்று கிணறுகள், நான்கு காவிரித் தீர்த்தங்கள் உட்பட 14 தீர்த்தங்கள் உள்ளன.
பிற இடங்களில் வாழ்வோர் தங்கள் பாவம் தீர காசியில், கங்கையில் நீராடுவார்கள். காசியில் இருப்போர் செய்த பாவம் தீர வேண்டுமானால் குடந்தை மாமாங்கக் குளத்தில் நீராடுவராம். மகாமககுளத்தில் 66 கோடி தீர்த்தங்கள் கலந்துள்ளன. 9 நதிகளும் மாசியில் வந்து கூடும் இக்குளத்திற்குள் 16 ஊற்றுக் கிணறுகள் உள்ளன. இக்குளத்தில் அமிர்த்தம் கலந்துள்ளதால் எப்போது நீராடினாலும் புண்ணியம். அதிலும் மகாமகத்தன்று நீராட ஏராளமான புண்ணிய பலன் கிடைக்கும். இக்குளத்தில் ஒருமுறை வலம் வந்தால் பூமியை 100 முறை வலம் வந்த பலன் கிட்டும். இக்குளத்தை வணங்கினால் சிவபிரானோடு சேர்த்து எல்லா தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். இக்குள நீரை சிறிதளவு உட்கொண்டாலே சகலவித பாபங்களும் தீரும். இங்கு நீராட வேண்டுமென மனதால் நினைத்தாலேகூட புண்ணியம்தான். தொடர்ந்து ஐந்து வருடங்கள் மாசிமகத்தன்று மகாமகக் குளத்தில் மூழ்கி எழுவதால் புத்திரபாக்யம் கிட்டும். மகாமகத்தன்று நீராடினால் வாரிசுகளின் ஆயுள் அதிகரிக்கும். மாசிமக நாளில், இங்கு அமைந்த 17 சிவாலயத்தையும், 5 விஷ்ணு ஆலயத்தையும் அத்துடன் மாமாங்கக் குளக்கரையில் பக்கத்துக்கு நான்கு வீதம் அமைந்த பதினாறு சின்ன சிவ சன்னதிகளையும் தரிசிப்பது நல்லது. மாசி மகத்தன்று இத்தனை சுவாமிகளும் இக்குளத்தில் தீர்த்தவாரி காண்பர். அவற்றுள் ஒரு ஆலயமான ஏகாம்பரேஸ்வரர் ஆலய இறைவன் ஏகாம்பரநாதருக்கு பதில் காமாட்சியம்மை தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். அப்பனும் அம்மையும் ஒன்றே என்பதே இதனால் அறியலாம். | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
ஈரோட்டில் இருந்து 12கி.மீ.,தொலைவில் உள்ள தலம் பவானி. பவானி ஆறு காவிரியில் சங்கமிக்கும் இடம் என்பதால் இங்கு உள்ள இறைவன் சங்கமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காவிரி, பவானி,அமுதநதி ஆகிய மூன்று நதிகள் கூடுவதால் முக்கூடல் என்றும் பெயருண்டு. பத்மகிரி, நாககிரி, சங்ககிரி, மங்கலகிரி, வேதகிரி ஆகிய ஐந்து மலைகளுக்கு நடுவில் இத்தலம் உள்ளது. யாரொருவர் இப்பெருமானை தரிசிக்கும் பேறு பெறுகிறார்களோ அவரைப் பாவம் தீண்டாது. தேவாரப் பாடல்களில் திருநணா என்றே இத்தலம் குறிப்பிடப்படுகிறது. தீமை நண்ணாத ஊர் என்பதே திருநணா. இங்குள்ள அம்மன் வேதாம்பிகை எனப்படுகிறாள். இவள் மீது பக்தி கொண்ட ஆங்கிலேயர் காணிக்கையாக யானை தந்தக்கட்டில் ஒன்றை அளித்தார். குபேரனும், விஸ்வாமித்திரரும், பராசரரும் இறைவனை வழிபட்டு பேறு பெற்றனர். இங்கு முருகப்பெருமான் சோமாஸ்கந்தமூர்த்தி கோலத்தில் வீற்றிருக்கிறார். மாசிமகத்தன்று சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகியோரை சூரியன் வணங்குவதாக ஐதீகம்.
தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம். இந்திரனே ஈசனுக்கு எடுக்கும் விழாவிற்கு இந்திரப் பெருவிழா என்று பெயர். திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத அகோரமூர்த்தி ஆலயத்தில் இவ்விழா மாசி வளர்பிறையில் நடக்கிறது. இதை இந்திரனே நடத்தி வைப்பதாக ஐதீகம். இவ்விழாவில் சுவாமி காவிரி சங்கமத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். இதுவன்றி வாரம்தோறும் ஞாயிறன்று அகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் மட்டுமே ஐந்து முகம் கொண்ட பஞ்சமூர்த்தியாக அகோர சிவன் காட்சி தருகிறார். சோழர் காலத்தில் ஐம்பொன் விக்ரகங்களை உருவாக்கும் தொழிற்கூடமாக இது இருந்துள்ளது. சீர்காழியிலிருந்து 10 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. மாசிமகத்தன்று நெல்லையப்பர் கோயில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்பவிழா நடுத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர். ராமநாதபுரம் எமனேஸ்வர சிவாலய சிவன், எமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலய எமதீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்பவிழா நடக்கும். சிவ அம்சமாக முருகன் தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார். சென்னையில் மயிலை கபாலீஸ்வரனும் மாதவப் பெருமாளும் அல்லிக்கேணி அச்சுதனும் கடற்கரை சென்று தீர்த்தமாடித் திரும்புவார்கள். இத்தீர்த்தவாரி உருவாகக் காரணமானவர்கள் மகாலட்சுமியும் சமுத்திரராஜனும். பாற்கடல் கடையும் போது பல பொருட்களுடன் மகாலட்சுமியும் வெளிவந்தாள். விஷ்ணு அவளை மணம் புரிந்து கொண்டார். சந்தோஷமடைந்த சமுத்திரராஜன், திருமணம் முடிந்துவிட்டது இப்போது லக்ஷ்மியும் திருமாலும் வைகுண்டம் சென்று விட்டால், திரும்ப நாம் எப்போது இவர்களைக் காண்பது என வருத்தப்பட்டாள். அதை லக்ஷ்மி திருமாலிடம் கூறினாள். அதற்கு திருமால், கவலைப்படாதீர்கள். ஆண்டுதோறும் மாசி மகத்தன்று யாம் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காணும் போது உங்களுக்கும் காட்சி தருவோம் எனக் கூறிச் சென்றார். ஒரு சமயம் பார்வதி மீனவப் பெண்ணாய் அவதரித்தாள். அவளைத் திருமணம் முடிக்க காலம் கனிந்தபோது ஈசன் கடற்கரைக்குச் சென்று ஒரு பெரிய ராட்சத மீனை உருவாக்கி மீனவர்களுக்குத் துன்பம் தரச் செய்து பின் அவரே மீனவனாக உருமாறி, அம்மீனை அடக்கி நற்பெயர் பெற்று மீனவப் பெண்ணான பார்வதியை மணந்து கொண்டு பின் சிவனாகக் காட்சி தந்தார். மீனவத் தலைவன் உங்களை நாங்கள் எப்போது மீண்டும் காண்பது? எனக் கேட்க, மாசி மகத்தன்று நாங்கள் கடலாடவருவோம் அப்போது காணலாம் எனக் கூறிச் சென்றார். புராணப்படி இது நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி அன்று ஈசனும் ஈஸ்வரியும் கடற்கரைக்கு எழுந்தருள்வார்கள். அப்போது கடற்கரை ஊர்களான மண்டபத்தூர், காளிக்குப்பம், அக்கம்பேட்டை மீனவர்கள் தங்கள் இன மாப்பிள்ளையாக வரும் ஈசனை மாப்ளே, மாப்ளே என மகிழ்வுடன் கூவியழைத்து மகிழ்ந்து தரிசிப்பார்கள். வல்லாள மகாராஜா திருவண்ணாமலையை ஆண்டபோது தனக்கு புத்திரபாக்யம் வேண்டும் என அண்ணாமலையாரை தினம் வழிபட்டு வந்தார். அவனக்கு உதவ எண்ணம் கொண்ட ஈசன், அம்மன்னனின் அரண்மனைக்கு குழந்தையாக வந்து தவழ்ந்தார். குழந்தையை மன்னன் கையில் எடுத்தவுடன் ஈசன் காட்சியளித்து பக்தனே கவலைப்படாதே நானே உனக்கு மகனாகப் பிறப்பேன். உன் இறுதிக் காலத்திற்குப் பின் மகன் செய்யும் ஈமச் சடங்குகளை உனக்கு நானே செய்வேன் என்றார். அப்படியே மன்னன் சித்தியடைந்த இடமான பள்ளி கொண்டாபட்டில் கவுதமி நதிக்கரைக்கு அண்ணாமலையார் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று தவறாமல் நடைபெற்று வருகிறது. மாசிமகத்தன்று நூற்றுக்கணக்கான ஆலய சுவாமிகள் அலங்காரத்துடன் புதுவையில் வைத்திக் குப்பம் கடற்கரையில் அமைத்த பந்தலில் எழுந்தருளுவர். பின்னர் தீர்த்தவாரி விழா நடைபெறும். பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து அனைத்து சுவாமிகளையும் தரிசித்து புண்ணியம் பெறுவார்கள். திருக்காமீஸ்வரம், வரதராஜப் பெருமாளுடன் காரைக்கால் திருப்பட்டணத்தில் மாசிமக தீர்த்தவாரி விழாவில் திருக்கண்ணபுர சவுரிராஜப் பெருமாள், திருமருகல் வரதராஜப் பெருமாள், கோவில் பத்து கோதண்டபானி, நிரவி காளியம்மன், கரியமாணிக்கப் பெருமாள், காரை நித்யகல்யாணப் பெருமாள், கலந்து கொண்டு தீர்த்தவாரி காண்பது காணக்கிடைக்காத ஒன்று. கேரளாவில் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலை பெண்களின் சபரிமலை என்பர். பெண்கள் 41 நாட்கள் விரதம் இருந்து இக்கோயிலுக்கு இருமுடிக்கட்டி செல்வார்கள். பொங்கலா என்ற பொங்கல் விழா இங்கு மாசிமாதத்தில் நடைபெறும். விழாவின் 9-ம் நாள் பல லட்சக்கணக்கான பெண்கள் ஒரே சமயத்தில் பொங்கலிடுவார்கள். இதனாலேயே இக்கோயிலுக்கு இரண்டு முறை கின்னஸ் ரிக்கார்டு வழங்கப்பட்டது. இவ்விழா வடஇந்தியா கும்பமேளா, குடந்தை மகாமகம் போல உலகப் புகழ் பெற்ற விழாவாகும். அன்று கோயில் வளாகத்தில் இருந்து சுமார் 5 கி.மீ பரப்பளவிற்கு எங்கு பார்த்தாலும் பொங்கல் அடுப்பு எரியும் அந்த அடுப்புகளின் புகை மூட்டம் திருவனந்தபுர நகரையே மூடி மறைத்து விடும். பொங்கலிட்டு முடித்தபின் ஹெலிகாப்டரிலிருந்து பூசாரி புனித நீரை எல்லா பொங்கல் பானை மீதும் தெளிப்பார். அதற்கு புஷ்பசிருஷ்டி என்று பெயர். அப்போது பெண்கள் தாங்கள் இட்ட பொங்கலை தேவி ஏற்றுக் கொண்டாள் என நம்புவது ஐதிகம். திருச்செங்கோடு பஸ்நிலையம் அருகேயுள்ளது சின்ன ஓம்காளி ஆலயம். இங்கு அம்மன் சிறுமி போல் கல்லில் சுயம்பாக தானே தோன்றியவள். ஆலயத்தின் முன் 60 அடி நீளம் பெரிய குண்டம் அமைந்திருக்கும். இதற்கு மாசிக் குண்டம் என்று பெயர். இங்கு மாசி மாதம் 16 நாட்கள் குண்டவிழா நடைபெறும். அருகே பெரிய ஓம்காளி உள்ளாள். இவளுக்கு 40 அடி நீளம் சிறிய குண்டம் அமைந்திருக்கும். இங்கு பங்குனியில் குண்டவிழா நடைபெறும். இதற்கு பங்குனிக் குண்டம் என்று பெயர். பலன்: மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும், அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். மாசிமக ஸ்நானம் செய்வோருக்கு சிவனும் விஷ்ணுவும் உரிய பலன்தரக் காத்திருப்பர். அன்று புண்ணியநதியில் ஒருமுறை மூழ்கி எழுவோருக்கு பாவங்கள் விலக்குவார்கள். இரண்டாம் முறை மூழ்கி எழும்போது சொர்க்கபேறு தருவார். மூன்றாம் முறை மூழ்கி எழும் போது அவர்கள் புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதைக் கொடுக்கலாம் என ஈசனே பிரமிப்பார். இந்நீராடல் செய்ய இயலாதோர் மாசிமக புராணம் படிக்கலாம் அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே! மாசிமகத்தன்று கடல் நீராடலாம். அப்போது பூமியில் காந்தசக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். அச்சமயத்தில் நீராடுவோர் மனமும், உடலும் ஆரோக்கியமாகும். இதை புராணமும், விஞ்ஞானமும் கூறுகிறது. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக