ராதே கிருஷ்ணா 23-08-2019
33/40 ஸ்வதாம அவதாரம்
Dwaitha Tatthva Vaadha
posts with label 40Avatharas. Show all posts
Tuesday, February 20, 2018
40/40 பலராம அம்ச-அவதாரம்
40/40 பலராம அம்ச-அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: பலராமனின் கதையை சுருக்கமாகச் சொல்லுங்கள்.
பதில்: பூமியின் பாரத்தைக் குறைக்கவேண்டி பூதேவி பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீஹரியை பல்வேறு ஸ்தோத்திரங்களால் வணங்கினாள். அவளின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமன் நாராயணன் பலராமன் மற்றும் கிருஷ்ண அவதாரங்களை எடுத்தார்.
தேவகியிடம் ஸ்ரீகிருஷ்ண அவதாரம் நடப்பதற்கு முன்னர், பலராம அவதாரம் ஆயிற்று. வசுதேவனின் மனைவிகளான தேவகி மற்றும் ரோகிணி இவர்கள் இருவரும் மூன்று மாத கர்ப்பிணிகளாக இருந்தனர். ஸ்ரீஹரியின் ஆணைப்படியே, துர்காதேவி, தேவகியின் கர்ப்பத்தில் இருந்த பலராமனை, ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றினாள். மஹா சேஷனே பலராமன். தேவகிக்கு கர்ப்பம் கலைந்துவிட்டது என்ற பேச்சு பரவியது. எட்டாவது குழந்தையாக கிருஷ்ணாவதாரம் நடந்தது. பலராமனிடத்தில் ஸ்ரீஹரியின் ‘சுக்லகேஷ’ ஆவேசம் மட்டும் இருந்தது. ஆகையால் இது ஸ்ரீஹரியின் ஸ்வரூப அவதாரம் கிடையாது. ஆவேச அவதாரம் மட்டுமே. ஸ்ரீகிருஷ்ணனின் அனைத்து பால லீலைகளின்போதும் கூடவே இருந்தவர் பலராமன். ரைவதனின் மகளான ரேவதியை மணம் புரிந்தார். பிறகு, கிருஷ்ணன் ருக்மிணியை மணம் புரிந்துகொண்டார். ருக்மிணியின் தம்பியான ருக்மி ஒரு துஷ்டனானதால், பலராமனே இவனைக் கொல்லவேண்டியதாக இருந்தது.
பீமன் மற்றும் துர்யோதனனுக்கு கதாயுதத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களுக்கு குரு ஆனார் பலராமர். குருக்ஷேத்திரப் போர் துவங்கும்முன், தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டு, நைமிஷாரண்யத்தில் ஹரிகதை சொல்லிக்கொண்டிருந்த ரோமஹர்ஷணன், தனக்கு மரியாதை கொடுக்கவில்லையென்று கோபப்பட்டு, தர்ப்பையினாலேயே அவனைக் கொன்றார்.
தீர்த்தயாத்திரையிலிருந்து திரும்பி வந்தபோது, துர்யோதனன் தொடை முறிந்து கீழே விழுந்திருந்தான். ஸ்ரீகிருஷ்ணனின் மனதை அறியாமல், பலராமன், பீமன் மேல் போர் புரியத் தயாரானார். முந்தைய பிறவியில் லட்சுமணனாகப் பிறந்து தன் அண்ணனுக்கு செய்த சேவையினால் கிடைத்த அதிகப் புண்ணியத்தை, தற்போது இப்படி அடிக்கடி செய்து குறைத்துக்கொண்டார்.
யாதவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அடித்துக் கொல்லும்போது, பாம்பு உருவத்தில் கடலில் பிரவேசித்து தன்னுடைய அவதாரத்தை முடித்துக் கொண்டார் பலராமன்.
கே: தசாவதாரத்தில் புத்தனுக்குப் பதில் பலராமனை சிலர் சேர்க்கின்றனர். இது சரியா?
ப: பலராமன் ஸ்ரீஹரியின் ஸ்வரூப அவதாரம் அல்ல. இது ஆவேச அவதாரம் மட்டுமே. ஆகையால் தசாவதாரத்தில் இவரை சேர்க்கக்கூடாது. ஸ்ரீஹரி, ராமனாக இருந்தபோது லட்சுமணன், அண்ணனுக்கு அபாரமான சேவை செய்தார். தன் யோக்யதைக்கு மீறிய புண்ணியத்தை சம்பாதித்தார். அதை சரி செய்வதற்காக, ஸ்ரீஹரி, இவரை தன் அண்ணனாகப் பிறப்பாய் என்று சொல்லி கிருஷ்ணாவதாரத்தில் பிறக்கச் செய்தார். இதனால் தன் அதிகமான புண்ணியத்தை சரிசெய்துகொண்ட பலராமனின் கதை மிகவும் சுவாரசியமானது. சாத்வீகர்கள் சில சமயம் தவறுகளைச் செய்யும்போது, இதனால் அவர்கள் பாபிகளாகின்றனர் என்று சொல்லமுடியாது. அவர்களுடைய அதிகமான புண்ணியத்தை குறைப்பதற்காகவே ஸ்ரீஹரி அவர்களின் மூலம் இப்படிச் செய்கிறான் என்று பலராம அவதாரத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பிற்சேர்க்கை:
கே: கார்த்தவீர்யார்ஜுன அவதாரத்தைப் பற்றி சொல்வீரா?
ப: கார்த்தவீர்யார்ஜுன அவதாரத்தைப் பற்றி நினைப்பது மிகவும் அவசியம். வீடுகளில் சிறிய பொருட்கள் சில தொலைந்து போன சமயத்தில், கார்த்தவீர்யார்ஜுனனை நினைத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. நிரந்தரமான சுகத்தை நாம் தொலைத்துவிட்டு அதை தேடவேண்டும் என்ற சாக்கில் கார்த்தவீர்யார்ஜுனனை நினைக்கும் புதிய வழக்கம் வரவேண்டும். ஒருமுறை அக்னி, கார்த்தவீர்யார்ஜுனனிடம் வந்து, ‘மிகவும் பசிக்கிறது. பிட்சை போடு’ என்ற கேட்டபோது, மொத்த பூமியையே தானமாக கொடுத்த கார்த்தவீர்யார்ஜுனன், நாம் நினைத்த நேரத்தில் வருவார். நிரந்தர சுகத்தைத் தராமல் இருக்கமாட்டார். ஆகையால், ஹைஹய ராஜனிடம், கார்த்தவீர்யார்ஜுனனாக இருக்கும் இந்த ஸ்ரீஹரியின் ஆவேச அவதாரத்தை என்றென்றும் நினைப்போமாக.
முடிவுரை:
பரமாத்மனே சததமேக ரூபிணே
தசரூபிணே ஷதசஹஸ்ர ரூபிணே |
அவிகாரிணே ஸ்புடமனந்த ரூபிணே
சுகசித் சமஸ்ததனவே நமோ நம: ||
இதுவே ஸ்ரீமதாசார்யரின் வேண்டுதலின் சிறப்பு. ஸ்ரீஹரியானவர் தனது 10, 100, 1000 ஆகிய ரூபங்களை, அவதாரங்களை தனது லீலைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார். மூலரூபம் ஒன்றிலிருந்தே அனைத்து செயல்களையும் செய்ய வல்லவராக இருந்தாலும், பற்பல ரூப-அவதாரங்களை எடுத்திருப்பது அவரின் சிறப்பு மகிமையாகும். அனைத்து அவதாரங்களும் - எல்லா காலங்களிலும் எப்போதும் இருப்பவை; மூலரூபத்திற்கும் அவதாரங்களுக்கும் எந்தவித வேறுபாடுகளும் இல்லை; ஸ்ரீஹரிக்கும் அவரது உறுப்புகளுக்கும் எந்தவித வேறுபாடுகளும் இல்லை; என்று அறியவேண்டும்.
இத்தகைய ரகசியங்களை சொல்லிக்கொடுத்து, அனைவரைவிடவும் அதிகமாக ஸ்ரீஹரியின் சிறப்புகளை சிந்தனை செய்து பூஜித்தவர் ஸ்ரீமதாசார்யர். ஸ்ரீஹரியைக் குறித்த அதிகமான நல்ல ஞானத்தை பெற்றுக்கொள்வதை விஞ்ஞானம் என்கிறார். விஞ்ஞானம் = வி-ஞானம் = விசேஷமான ஞானம். ஸ்ரீஹரியே அனைவரையும் படைத்தவர் என்று பொதுவாக அறிவது சாதாரண ஞானம். அவரது ரூபங்கள், அவதாரங்கள், அவற்றின் சிறப்பு இவற்றையெல்லாம் நன்கு அறிவது புண்ணியத்தை தேடித்தரும் செயல். மோட்சத்தையும் அளிக்கும் செயலாகும்.
சாஸ்திரங்களை, ஸ்ரீமதாசார்யர் இயற்றியுள்ள நிர்ணயங்களின்படி அவதாரம், அம்சம், ஆவேசங்கள் இங்கு விளக்கப்பட்டிருக்கிறது. பகவத் தத்வங்கள் எவ்வளவு அறிந்தாலும் போதாது. மேற்சொன்னவைகளில் தவறு இருந்தாலோ, சந்தேகம் வந்தாலோ, கற்றறிந்தவர்களிடம் கேட்டுத் தெளிந்து கொள்ளவேண்டும்.
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள் மற்றும் இருக்கும் பற்பல அவதாரங்களும் நமக்கு அருளி, நம்மை மத்வ சித்தாந்தத்தில் நடத்தி காப்பாற்றட்டும் என்று குர்வந்தர்கத ஸ்ரீமன் நாராயணனை பக்திபூர்வமாக சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
Monday, February 19, 2018
39/40 ராஜராஜேஸ்வர அம்ச-அவதாரம்
39/40 ராஜராஜேஸ்வர அம்ச-அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: ராம கிருஷ்ணாதி ரூபங்களைப் போல், ராஜராஜேஸ்வர அவதாரத்தை ஸ்ரீஹரி எடுத்தார் என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?
பதில்: தனியாக அவதாரம் எடுக்கவில்லை. இது ஆவிஷ்டமான (ஒருவருக்குள் ஸ்ரீஹரியின் அம்சம் சிறப்பாக நிறைந்திருக்கும்) அவதாரம்.
கே: இந்த அவதாரம் யாரிடம் தோன்றியது? எந்த காலத்தில் எடுக்கப்பட்ட அவதாரம் இது?
ப: ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பெற்றோரிடம் நடந்தது என்று இந்த அவதாரத்தை சொல்லமுடியாது. 14 மன்வந்தரங்களில், எவ்வளவு சக்ரவர்த்திகள் இந்த பூமியில் வந்து ஆள்கின்றனரோ, அவர்களுக்கு சக்தி மற்றும் சாமர்த்தியத்தைக் கொடுக்கும் அவதாரமே ராஜராஜேஸ்வர என்னும் அவதாரம்.
கே: அப்படியா? ஆகையால் எல்லா காலங்களிலும் நடைபெறும் அவதாரம்தானே இது?
ப: ஆம். ஆனால் அத்தகைய ராஜன், ஹரிபக்தர் மற்றும் தர்மத்தைப் பின்பற்றுபவராக இருக்கவேண்டும்.
கே: இந்த அவதாரத்தைப் பற்றி எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?
ப: பாகவதத்தில் இரண்டாம் ஸ்கந்தத்தில், ஏழாவது அத்தியாயத்தில் இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.
‘சக்ரம் ச திக்ஷ்வ விஹதம் தஷஸு ஸ்வதேஜோ
மன்வந்தரேஷு மனுவம்சதயோ பிபர்தி |
துஷ்டேஷு ராஜஸு தமம் விததத் ஸ்வகீர்திம்
ஸத்யே நிவிஷ்ட உஷதீம் ப்ரதமம்ஸ் சரித்ரை: ||
எல்லா மன்வந்தரங்களிலும் சக்ரவர்த்திகளில் நின்று துஷ்டர்களைக் கொன்று, சஜ்ஜனர்களைக் காப்பாற்றி, பத்து திசைகளிலும் நிலைகொண்டு சங்கு-சக்கரம்-கதை-பத்மம் ஆகியவற்றை ஏந்தி நிறைந்திருப்பவன் ஸ்ரீஹரியான ராஜராஜேஸ்வரன்.
கே: ஸ்ரீமதாசார்யர் இந்த அவதாரத்தைப் பற்றி சொல்லியிருக்கிறாரா?
ப: ஆம். பாகவத தாத்பர்யத்தில் சத்யசம்ஹிதா என்னும் கிரந்தத்தைப் பற்றி சொல்லி இவ்வாறு எழுதுகிறார்.
மன்வந்தரேஷு பகவான் சக்ரவர்தீஷு சம்ஸ்தித:
சதுர்புஜோ ஜுகோபைதத் துஷ்டராஜன்ய நாஷக: |
ராஜராஜேஸ்வரே த்யாஹுர்முனயஷ் சக்ரவர்தினாம்
வீர்யதம் பரமாத்மானாம் சங்கசக்ரகதாதரம் ||
நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அபயங்களை ஏந்தியவாறு, ஸ்ரீஹரி, மன்வந்தரங்களில் துஷ்ட சக்ரவர்த்திகளைக் கொன்று, சஜ்ஜனர்களுக்கு அருள்வார். சக்ரவர்த்திகளிடம் இருக்கும் இந்த அவதாரத்தை அனைவரும் ராஜராஜேஸ்வர என்றே அழைக்கின்றனர்.
கே: ப்ருது சக்ரவத்தியிடம் மட்டுமே இந்த ராஜராஜேஸ்வர அவதாரம் நடைபெற்றிருக்கிறது என்கிறார்களே? இது சரியா?
ப: ப்ருது சக்ரவர்த்தியிடம்கூட ராஜராஜேஸ்வர என்னும் ரூபத்தின் ஆவேசம் இருக்கிறது. அதேபோல், ப்ரியவ்ரத முதலான அனைத்து சக்ரவர்த்திகளிடமும் இந்த ரூபம் உள்ளது. ப்ருது சக்ரவர்த்தியிடம், இது மட்டுமல்லாது, ‘ப்ருது’ என்னும் ஸ்ரீஹரியின் அம்ச-அவதாரமும் உள்ளது.
கே: ராஜராஜேஸ்வர என்னும் ஸ்ரீஹரியின் ரூபத்தை எப்படி நினைக்கவேண்டும்?
ப: மொத்த பூமண்டலத்தையும், ஸ்ருஷ்டி முதல் பிரளய காலம் வரை, காக்கும் பொறுப்பு இந்த ரூபத்திற்கு உண்டு. ஒவ்வொரு நொடியும் நம் அனைவரையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்த ரூபத்தை நாம் போற்றிப் பாடவேண்டும். அனைவரும் இந்த ரூபத்தை பக்தியுடன் வணங்கவேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
Sunday, February 18, 2018
38/40 ப்ருது அம்ச-அவதாரம்
38/40 ப்ருது அம்ச-அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
ப்ருது = Pruthu
கேள்வி: ப்ருது அவதாரத்தின் கதையை சொல்லவும்.
பதில்: அதர்மத்தின் மொத்த உருவமாக வேனன் என்னும் ராஜா இருந்தான். தவறான செய்கைகளால் தன் அரசையே அழித்துக் கொண்டவன். நாஸ்திக சிந்தனையை தன் நாட்டு மக்களிடம் விதைத்தவன். வேனனின் இத்தகைய கொடுஞ்செயல்களைக் கண்ட ரிஷிமுனிகள் மிகவும் கோபம் கொண்டனர். ப்ருகுமுனிகள் தன் ஹுங்காரத்தினாலேயே வேனனைக் கொன்றார்.
வேனனின் தாய் சுநீதி. அவள் சாத்வீகளாக இருந்தாலும், வேனனின் உயிரற்ற உடல் அழியாதவாறு அதை மந்திர-கோஷங்களினால் பாதுகாத்து வந்தாள். ராஜா இல்லாத நாடு இன்னும் சீரழியத் தொடங்கியது. அங்கராஜனின் வம்சமே நின்றுவிடும் நிலைமை வந்துவிடுமோ என்ற கவலை அனைவருக்கும் வந்தது. ரிஷிமுனிகள் அனைவரும் ஓரிடத்தில் சேர்ந்து இதைப்பற்றி ஆலோசித்தனர். வேனனின் உயிரற்ற உடலிலிருந்து அவனின் சந்ததியைப் பெறலாம் என்று முடிவெடுத்தனர்.
பாற்கடலை கடைந்தபோது ஹாலாஹல விஷம் வந்ததைப் போல, வேனனின் தொடையைக் கிழித்தபோது பாபியான நிஷாதன் வந்தான். பின்னர் வேனனின் கைகளைக் கிழித்தபோது சாத்வீகரான ப்ருதுராஜன் மற்றும் அர்ச்சி இருவரும் வந்தார்கள். ப்ருதுராஜன் மூலம் அங்கராஜனின் வம்சம் பின்னர் வளர்ந்து வந்தது.
ப்ருதுவிடம் ஸ்ரீஹரியும், அர்ச்சியிடம் லட்சுமிதேவியும் அவதரித்தனர். பின்னர் இவர்கள் இருவரும் மணந்து, மொத்த ராஜ்யத்தையும் நெறிப்பட்டு அரசாட்சி செய்தனர். பூமிக்கு ப்ருதிவி என்னும் பெயர் வரும் அளவிற்கு, பற்பல நற்காரியங்களைச் செய்தான். ப்ருதுவிடம் இருக்கும் ஸ்ரீஹரியின் அருள் என்றைக்கும் நமக்கு கிடைக்கட்டும்.
கே: ப்ருது அவதாரம் சொல்லும் செய்தி என்ன?
ப: நிறைய செல்வம் சேர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்கான சங்கல்பம் செய்துகொண்டு, மூன்று முறை பக்தியுடன் ப்ருது சக்ரவர்த்தியின் சரித்திரத்தை பாராயணம் செய்யவேண்டும். இப்படிச் செய்தால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பதில் சந்தேகமே இல்லை.
கே: செல்வங்களை சேர்க்கக்கூடாது என்பதே பாகவதத்தின் முக்கிய செய்தியாகும். ஆனால் இதே பாகவதத்தில், செல்வம் சேர்க்கவேண்டுமென்றால் ப்ருது சக்ரவர்த்தியின் சரித்திரத்தைப் படியுங்கள் என்று சொல்வது தப்பல்லவா?
ப: ஆம். ஸ்ரீஹரியை மறந்துவிட்டு, துக்கத்தைத் தரக்கூடிய செல்வத்தை சேர்த்துக் கொண்டேபோனால், அது தவறுதான். இதில் சந்தேகமேயில்லை. செல்வம் மட்டுமல்ல, அழியக்கூடிய எந்தவொரு செல்வத்தின் மேலும் ஆசைப்படக்கூடாது.
கே: இது எப்படி சாத்தியம்? எந்தவொரு செல்வமும் இல்லாமல் வாழ்வது எப்படி?
ப: எவ்வளவு தேவையோ அவ்வளவு செல்வத்தை சம்பாதிப்பதில் தவறு இல்லை. தேவைக்கும் அதிகமான செல்வத்தை சேர்ப்பது தவறு என்பது பாகவதம் முதலான கிரந்தங்களின் அபிப்பிராயம்.
கே: ஆனாலும், ஸ்ரீஹரியிடம் எதையும் வேண்டாத - சுயநலமில்லாத பக்தியையே செய்யவேண்டும். அழியக்கூடிய செல்வங்களை கேட்பது தவறுதானே?
ப: ஸ்ரீஹரியிடம் வேண்டுவதை விட்டு, யார்யாரிடமோ யாசகம் வேண்டி, அவர்களின் உதவிக்காக கெஞ்சி, அதன்மூலம் செல்வம் சம்பாதிப்பதைவிட, ஸ்ரீஹரியிடம் வேண்டுவது மிகவும் உத்தமமான செயலாகும். அதனாலேயே தாசர்கள் அனைவரும் ‘பேடிதரே என்னொடெயன பேடுவே’ (வேண்டினால் என் தலைவனிடம் (ஸ்ரீஹரியிடம்) மட்டுமே வேண்டுவேன்) என்று பாடினர்.
கே: அப்படியென்றால் ஸ்ரீஹரியிடம் பணம் வேண்டும் என்று வேண்டலாமா?
ப: சந்தேகமே வேண்டாம். உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை ஸ்ரீஹரியிடமே நேரடியாகக் கேளுங்கள். அவரைத் தவிர வேறு யாரிடமும் எதையும் கேட்பது வேண்டாம். ஆகையால், உங்களுக்கு பெரிய செல்வந்தர் ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ப்ருது சக்ரவர்த்தியின் சரித்திரத்தைப் படிக்கலாம். அதில் தவறில்லை. சம்பாதித்த செல்வத்தை ‘விஷ்ணு ப்ரேரணயா, விஷ்ணு ப்ரீத்யர்த்தம்’ என்று மட்டுமே செலவு செய்யவும்.
கே: நம் தேவைக்கேற்ப செல்வத்தை சேர்ப்பது தவறு என்றான பிறகு, கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்று ப்ருது சக்ரவர்த்தியின் சரித்திரத்தை பாராயணம் செய்வதும் தவறுதானே?
ப: அப்படியில்லை. சாத்விகமான நோக்கம் இருந்தால் மிகுந்த செல்வத்தை சம்பாதிப்பது தவறில்லை. செல்வம் வந்தபோது கர்வம் கொள்ளாமல் மற்றும் அந்த செல்வத்தினால் மற்றவர்களுக்கு பயன் இருந்தால், அப்படி வேண்டிக்கொள்வதில் தவறில்லை. தர்ம, அர்த்த, காம, மோட்ச ஆகியவைகளில், அர்த்த கூட ஒரு புருஷார்த்தம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. தர்மஸ்தாபனைக்காக, மிகப்பெரிய அளவில் ‘அர்த்த’த்தின் அவசியம் இருக்கிறது. அதற்காக ப்ருதுசக்ரவர்த்தியின் கதையைப் படித்து, அனைத்துவித செல்வங்களையும் பெற்று பாக்யசாலிகள் ஆகுங்கள்.
கே: இவ்வளவு செல்வங்களை நமக்குக் கொடுக்கவேண்டுமெனில், அந்த ப்ருதுராஜன் யார்? அவனின் சிறப்பு என்ன?
ப: வேனனின் உடலிலிருந்து பிறந்த ப்ருது என்னும் சக்ரவர்த்தியிடம், ஸ்ரீஹரி, ப்ருது என்னும் பெயரிலேயே நிறைந்திருக்கிறார். இது ஸ்ரீஹரியின் ஆவேச-அவதாரம். இவரின் கைகளில் சங்கு சக்கரம் ஆகிய சின்னங்களை ஏந்தியிருக்கிறார். ஸ்ரீஹரி சுதர்சன சக்கரத்தை ஏந்திருப்பதைப் போல, இவரும் சுதர்சன சக்கரம், கௌமோதகி என்ற கதை ஆகிய ஆயுதங்களை தரித்திருக்கிறார். ஆகையால், ஸ்ரீஹரியின் விசேஷமான ஆவேசம் உள்ள மிகப்பெரிய சக்ரவர்த்தி இவர்.
கே: ப்ருது ராஜன் மூலமாகவே பூமிக்கு ப்ருதிவி என்று பெயர் வந்ததென்று கேள்விப்படுகிறோம். இதன் காரணம் என்ன?
ப: வறட்சியினால் தன் நாட்டு மக்கள் துன்பப்படும்போது, கோபமடைந்த ப்ருதுராஜன், ப்ருதுதேவதையாக மாறி, பூமிதேவியை கொல்வதற்காக அவள் மேல் அம்பு தொடுத்தான். பூமிதேவி, ஒரு பசு ரூபத்தை எடுத்து அந்த அம்பிலிருந்து தப்புவதற்காக ஓடத் துவங்கினாள். ப்ருதுவும் அவளை விடாமல் துரத்த, எங்கும் ஒளிவதற்கு இடமில்லாமல், பூதேவி, ப்ருதுவிடமிருந்த ஸ்ரீஹரியையே சரணடைந்தாள். அப்போது ப்ருது, ஸ்வாயம்புபமனுவை கன்றுக்குட்டியாக மாற்றி, எல்லா செல்வங்களையும், அந்த பசுவிடமிருந்து பால் மூலமாகக் கறந்து தன் மக்களுக்கு வழங்கினான். தேவர்கள், ரிஷிகள் ஆகிய அனைவரும் தங்களில் முக்கியமானவரை ஒரு கன்றுக்குட்டியாக மாற்றி, தமக்கு வேண்டியவற்றை பாலின் ரூபத்தில் பெற்றுக்கொண்டனர். பிறகு ப்ருது தன் அம்பு மூலமாகவே முன்பு ஏற்பட்ட பள்ளத்தை அடைத்தான். மக்கள் வசிப்பதற்காக ஊர், நகரம், புரம் இவற்றை அமைத்தான். இதனாலேயே, இந்த பூமிக்கு ப்ருதிவி என்னும் மிகப் பொருத்தமான பெயர் வந்து, பின் வழக்கத்திலும் புகழடைந்தது.
கே: தன்னில் ஸ்ரீஹரியால் நிறைந்திருக்கிற ப்ருதுராஜன், மொத்த பூமண்டலத்தையே தனது அரசாட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான். ஸ்வர்க்க லோகத்தை ஏன் தனது அரசாட்சிக்குக் கீழ் கொண்டு வரவில்லை?
ப: 100 அஸ்வமேத யாகங்களைச் செய்யவேண்டுமென்று சொல்லி, அதில் 99 யாகங்களை செய்து முடித்தான். 100வது அஸ்வதேத்தின் குதிரையை, இந்திரன் திரும்பத்திரும்ப அபகரித்தபோது, பிரம்மதேவரின் கட்டளையின்பேரில் ப்ருது யாகத்தை நிறுத்தினான். ஸ்வர்க்க லோகத்தை தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் நோக்கம், ப்ருதுவுக்கு இருக்கவில்லை. ஸ்ரீஹரியின் கட்டளைப்படி, இந்திரனிடம் நட்பு கொண்டு, தன் தியாக உணர்வை வெளிப்படுத்தினான்.
கே: ப்ருதுராஜன் யாரிடமிருந்து உபதேசத்தைப் பெற்றான்?
ப: மோட்சத்தின் பாதையைப் பற்றி சனத்குமாரரிடம் உபதேசம் பெற்றான். ஸ்ரீஹரியிடம் பக்தி, பொருட்களில் விரக்தி - இவ்விரண்டுமே மோட்சத்திற்கான பாதைகள் என்று அறிந்தான். ஹரிபக்தியை ஒரு படகாக மாற்றி, சம்சார சாகரத்தை அதிக சிரமமில்லாமல் ஒரு விளையாட்டாக கடந்தான்.
கே: ப்ருதுராஜனிடம், ஸ்ரீஹரியின் ராஜராஜேஸ்வர என்னும் ரூபத்தின் ஆவேசம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர் ப்ருது ரூபத்தின் ஆவேசம் என்கிறார்கள். எது சரி?
ப: இரண்டுமே சரியானவை ஆகும். ஸ்ரீஹரி ராஜராஜேஸ்வர ரூபத்தில், அனைத்து சக்ரவர்த்தி மற்றும் ராஜர்களிடம் நிறைந்திருக்கிறார். ப்ருதுவிடம் மட்டும் ப்ருது ரூபத்திலும் நிறைந்திருக்கிறார். ஒருவேளை, ராஜராஜேஸ்வர என்பதே ஆவேச அவதாரம் என்று நினைத்தால், அனைத்து சக்ரவர்த்திகளிடம் இது சாதாரணமாகவே காணப்படுவதால், ப்ருதுராஜன் ஸ்ரீஹரியின் ஆவேச-அவதாரம் என்பது சரியல்ல என்றாகிவிடுகிறது. ஆகையால், ப்ருதுவிடம் மட்டும் ப்ருது நாமகனாக ஸ்ரீஹரி நிறைந்திருக்கிறான் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
கே: ப்ருது என்பது ஸ்ரீஹரியின் அவதாரம் என்பதற்கு என்ன ஆதாரம்?
ப:
‘அதாப்யுதாரஸ்ரவஸ: ப்ருதோர்ஹரே: கலாவதாரஸ்ய கதாம்ருதாத்ருதா:’ - என்று ஸ்ரீஹரியின் அவதாரமே ப்ருது என்று பாகவதம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. மேலும், ‘ஏஷ ஸாக்ஷாத்தரேரம்ஷோ ஜாதோ லோகரிரக்ஷயா’ என்றும் பாகவதம் சொல்கிறது.
ஸ்ரீமதாசார்யரும் பாகவத தாத்பர்யத்தில், ‘ப்ருது ஹைஹயாதிஷு ஜீவேஷ்வாவிஷ்டோ ஹரி: ஸ்வயம்’, ப்ருது, கார்த்தவீர்யார்ஜுனன் ஆகியோர் ஸ்ரீஹரியின் ஆவேச-அவதாரங்களே என்று தெரிவிக்கிறார்.
கே: துஷ்டனான வேனனிடமிருந்து சாத்விகனான ப்ருது மட்டும் எப்படி பிறந்தான்?
ப: வேனனின் உடலில், சாத்வீக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்று குணங்களும் இருந்தன. முதலில் ராஜஸ மற்றும் தாமஸ பாகங்களிலிருந்து நிஷாதன் என்னும் பாபாபிமானி பிறந்தான். பின்னர், சாத்விக பாகத்திலிருந்து ப்ருதுராஜன் பிறந்தான். இவனுடன் அர்ச்சி என்பவளும் ஸ்ரீலட்சுமியின் ஆவேசத்துடன் பிறந்தாள்.
கே: அர்ச்சி என்பவள் யார்?
ப: ஸ்ரீஹரியின் அம்சாவதாரமாக ப்ருது பிறந்தான். லட்சுமியின் அம்சாவதாரமாக அர்ச்சி பிறந்தாள். இவர்கள் இருவரும் மணம் புரிந்து, நல்லாட்சியைத் தந்தனர்.
கே: ஸ்ரீஹரியின் ஆவேசாவதாரத்திற்கு லட்சுமி காரணம் ஆவது எப்படி சாத்தியம்?
ப: ஸ்ரீஹரியின் ஆவேச அவதாரத்திற்கு லட்சுமியின் ஸ்வரூப அவதாரம்கூட காரணம் ஆவதில்லை. ஸ்ரீஹரி, லட்சுமி இருவருடையதும் ஆவேசாவதாரம் ஆன காரணத்தால், ஆவேசம் கொண்ட ஸ்ரீஹரிலட்சுமிக்கு மட்டுமே சங்கமம் சாத்தியம். ப்ருது-அர்ச்சி இருவரும் ஹரி-லட்சுமி இவர்களின் பக்தர்கள் அவ்வளவே. தத்வநிர்ணய என்னும் கிரந்தத்தில் இதைப்பற்றி சொல்லியிருப்பதாக, ஸ்ரீமதாசார்யர் நிர்ணயத்தில் சொல்லியிருக்கிறார்.
கே: ப்ருது அவதாரம் சொல்லும் செய்தி என்ன?
ப: ’ஸ்ரீஹரியே சர்வோத்தமன். அவனிடம் மட்டுமே பக்தி செய்யவேண்டும். பிரம்மஞானிகளிடம் அவர்களின் தாரதம்யத்தைப் பொறுத்து மரியாதை தரவேண்டும். சனாதன தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். இதற்காகவே நான் வாழவேண்டும்.’
இந்த தத்வத்திற்கேற்ப வாழ்ந்து நிரூபித்துக் காடியவர் ப்ருது சக்ரவர்த்தி. தன் தந்தைக்கு எதிராக, தன் தந்தையின் அதார்மிக பேச்சுகள் அனைத்தையும் மறுத்து, மக்களுக்கு வாழ்க்கைத் தத்வத்தை உபதேசித்தான். ஸ்ரீஹரியின் சனாதன தர்மத்திற்கு நம் முன்னோர்கள் யாரும் துரோகம் செய்திருந்தார்களேயானால், அவர்களின் பேச்சை மற்றும் அவர்களின் அதார்மிக செயல்களை நாமும் செய்யக்கூடாது. அத்தகையவர்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்தாலும், நீங்கள் பாவ கர்மங்கள் செய்யாதவர்களாக இருப்பீர்கள். மாறாக உங்கள் மூலமாகவே அவர்களும் நற்கதியை அடைவார்கள். ‘அஹம் ப்ரம்மேதி வேனஸ்து த்யாயன்னாபாதரந்தம:’ - இதி ஸ்ரீமதாசார்ய:’ (இது ஸ்ரீமதாசார்யரின் வாக்கியம்).
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
Saturday, February 17, 2018
37/40 ப்ருஷ்ணிகர்ப அவதாரம்
37/40 ப்ருஷ்ணிகர்ப அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
ப்ருஷ்ணிகர்ப = Prushnigarbha
கேள்வி: ஸ்ரீஹரிக்கு ப்ருஷ்ணிகர்ப என்னும் பெயர் எப்படி வந்தது?
பதில்: ரிஷியின் மனைவியான ப்ருஷ்ணி என்பவரிடத்தில் அவதரித்த காரணத்தால், ப்ருஷ்ணிகர்ப என்னும் பெயர் வந்தது. அதுமட்டுமல்லாமல், தன் தாயின் பெயரை உலகத்தில் பிரபலப்படுத்துவதற்காக, இந்தப் பெயரை ஏற்றார்.
கே: எந்த மன்வந்தரத்தில் இந்த அவதாரம் நடைபெற்றது?
ப: ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில்.
கே: ப்ருஷ்ணிகர்பனின் தந்தை?
ப: சுதபா என்னும் ப்ரஜாபதி
கே: இவர்களிடத்தில் அவதரிப்பதற்கு என்ன காரணம்?
ப: சுதபா மற்றும் ப்ருஷ்ணி இருவரும், ஸ்ரீஹரியைப் போன்றதொரு குழந்தை தமக்குப் பிறக்கவேண்டும் என்று நான்கு யுக-காலங்களில் கடும் தவத்தை மேற்கொண்டனர். அவர்களின் தவத்தை மெச்சிய ஸ்ரீஹரி, வேண்டிய வரத்தை கேளுங்கள் என்று அவர்கள் முன்னே தோன்றினார்.
கே: ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெற்ற அவர்கள், ஏன் மோட்சத்தை கேட்கவில்லை?
ப: ஸ்ரீஹரியின் தரிசனத்திற்கு முன், அவர்களுக்கு மோட்சமும் கூட அற்பமானதாக பட்டது. ஆகையால், உன்னைப் போன்றதொரு மகனைக் கொடு என்று வரம் கேட்டனர்.
கே: தன்னைப் போன்றதொரு மகனை அவர்களிடத்தில் பிறக்க வைத்திருக்கலாம். ஏன் ஸ்ரீஹரி தானே போய் அங்கே அவதரித்தார்?
ப: இவ்வுலகில் ஸ்ரீஹரிக்கு சமமானவர் என்றால் யாருமே இல்லை. அவருக்கு சமமென்று அவரே இருப்பதனால், சுதபா மற்றும் ப்ருஷ்ணி தம்பதியருக்கு தானே குழந்தையாக அவதரித்தார்.
கே: சுதபா மற்றும் ப்ருஷ்ணி இவர்கள் இருவரும் யார்?
ப: சுதபனே பின்னர் கஷ்யப மற்றும் வசுதேவனாக பிறந்தார். ப்ருஷ்ணி பின்னர் கஷ்பரின் மனைவியாக அதிதியாகவும், வசுதேவனின் மனைவியாக தேவகியாகவும் பிறந்தனர்.
கே: அப்படியென்றால், ஸ்ரீஹரி இந்த தம்பதிகளிடம் எவ்வளவு முறை அவதரித்தார்?
ப:
சுதபா - ப்ருஷ்ணியாக இருந்தபோது ப்ருஷ்ணிகர்ப.
அதிதி - கஷ்யபராக இருந்தபோது வாமனன்
வசுதேவ - தேவகியாக இருந்தபோது ஸ்ரீகிருஷ்ணன்
என்றும் அவதரித்தார்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
Friday, February 16, 2018
36/40 பசு அவதாரம்
36/40 பசு அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கே: மீன், பன்றி, சிங்கம், குதிரை இப்படி பல விலங்குகளின் ரூபத்தில் ஸ்ரீஹரி அவதரித்திருக்கிறார். ஆனால் அனைத்து விலங்குகளைவிட மிகவும் பவித்ரமான பசுவின் ரூபத்தில் ஏன் தன்னை காட்டிக்கொள்ளவில்லை? ஏன் பசுவின் ரூபத்தில் அவதாரம் செய்யவில்லை?
ப: பசுவின் ரூபத்தில் ஸ்ரீஹரி அவதாரம் செய்யவில்லை என்று பொதுவாக உலகத்தில் நம்பப்படுகிறது. ஆனால், கோவிந்தன், கோ’வின் ரூபத்திலும்கூட அவதாரம் செய்திருக்கிறார். இது ஒரு அற்புதமான கதை.
கே: அப்படியா? என்ன ஆச்சரியம்? ஸ்ரீஹரி எந்த சந்தர்ப்பத்தில் பசுவின் அவதாரத்தை எடுத்தார்?
ப: த்ரிபுராசுரர்கள், சித்தரசத்தின் (Siddha rasam - யாராலும் உருவாக்கப்படாத & அழிவில்லாத அமிர்தம்) கிணற்றைப் பெற்றிருந்தனர். அந்த சித்தரசம், அமிர்தத்தைப் போல் இருந்தது. அதைக் குடித்த தைத்யர்கள் அனைவரும் சாகாவரம் பெற்றனர். இத்தகைய அமிர்தத்தைப் பருகுவதற்காக ஸ்ரீஹரி பசுவின் ரூபத்தில் அவதரித்தார்.
கே: எப்போது, எதற்காக இப்படி அவதரித்தார்?
ப: த்ரிபுராசுரர்களை அழிக்கும் காலத்தில் ருத்ரரின் புகழை அதிகப்படுத்துவதற்காக.
கே: த்ரிபுராசுரர்களைக் கொன்றது ருத்ரர்தானே? இப்படி இருக்கும்போது ஸ்ரீஹரி ஏன் பசுவின் ரூபத்தை எடுத்தார்?
ப: ருத்ரர், த்ரிபுராசுரர்களின் நகரத்தின் மேல் பற்பல பாணங்களை விட்டு அசுரர்களை கொல்லத் துவங்கினார். ஆனால் அவர்கள் அனைவரும் மாய-அசுரர்களாகிருந்தனர். இறந்த அசுரர்களை அமிர்தம் நிறைந்த கிணற்றில் தள்ளி, மறுபடி அவர்களை பிழைக்க வைத்தனர். பிழைத்தவர்கள் மீண்டும் பலசாலியாக போருக்கு வந்தனர். இதனால் ருத்ரர் மிகவும் களைப்படைந்து, ஸ்ரீஹரியிடமே வந்து சரணடைந்தார். அந்த நேரத்தில் ஸ்ரீஹரி பசு அவதாரத்தை எடுத்தார்.
கே: த்ரிபுராசுரர்களின் நகரங்கள் யார் கண்ணிற்கும் தெரியவில்லை. மேலும் அவை ஆகாயத்தில் சுற்றிக்கொண்டிருந்தன. ஏகப்பட்ட ஆயுதங்களால் நிரம்பியிருந்தன. இந்த அசுரர்களின் தங்க, வெள்ளி, இரும்பாலான நகரங்களை, கோ (பசு) ரூபியான ஸ்ரீஹரி எப்படி அழித்தார்?
ப: கோரூபியான ஸ்ரீஹரி தானே இந்த நகரங்களை அழிக்கவில்லை. ருத்ரதேவர் மூலமாகவே இவற்றை அழித்தார்.
கே: பசு ரூபத்தில் ஸ்ரீஹரி என்னென்ன செயல்களை செய்தார்?
ப: ஸ்ரீஹரி பசுவின் ரூபத்தை எடுத்தபோது, பிரம்மன் கன்றுக்குட்டி அவதாரத்தை எடுத்தார். (முக்யபிராணரை கன்றுக்குட்டி ரூபத்தில் தியானிப்பவர்களுக்கு, சதுர்முக பிரம்மனின் இந்த கன்றுக்குட்டி ரூபமும்கூட மிகுந்த மகிழ்வைத் தரக்கூடியதாகும்) ஸ்ரீஹரி (பசு) நேராக சித்தரசம் இருந்த கிணற்றிற்கு சென்றார். அதிலிருந்த மொத்த அமிர்தத்தையும் குடித்து, கிணற்றை காலி செய்தார்.
கே: அப்போது அசுரர்கள் அந்த பசுவின் மேல் ஏன் போர் புரியவில்லை?
ப: அதுவே விஷ்ணுவின் மகிமை. பசுவின் மற்றும் கன்றுக்குட்டியின் மனதை மயக்கக்கூடிய அழகில் தங்களை பறிகொடுத்தனர். தங்களை அழிப்பதற்காகவே இவை வந்து கிணற்றிலிருக்கும் அமிர்தத்தைக் குடிக்கின்றன என்ற எண்ணம்கூட அசுரர்களுக்கு அந்த சமயத்தில் வரவில்லை.
கே: கிணறு காலியானபிறகு, மரித்த அசுரர்கள் மறுபடி உயிர் பிழைக்க சாத்தியம் இல்லைதானே?
ப: ஆம். எப்போது அமிர்த கிணறு காலியானதோ, அப்போது ருத்ரரால் கொல்லப்பட்ட அசுரர்கள் மறுபடி பிழைக்க வாய்ப்பில்லாமல் போனது.
கே: கோரூபியான ஸ்ரீஹரி போருக்கு எப்படி உதவி புரிந்தார்?
ப: பூமியை ரதமாக்கி, மேரு மலையை வில்லாக மாற்றி ருத்ரருக்குக் கொடுத்தார். மேலும், தன் சக்தியை அந்த போரில் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களிலும் நிறைத்து, ருத்ரரில் அந்தர்யாமியாக இருந்து, அபிஜித் முகூர்த்தத்தில், த்ரிபுராசுர பட்டணங்களின் மேல் பாணப் பிரயோகங்களைச் செய்தார்.
கே: பசுவின் ரூபத்தில் ஸ்ரீஹரி மட்டுமே போர் புரிந்திருக்கலாம். பிரம்மனை கன்றுக்குட்டியாக்கியதால், தான் அதற்குக் கட்டுப்பட்டதைப் போல் ஆயிற்றல்லவா?
ப: பிரம்மன் கன்றுக்குட்டியாக ஸ்ரீஹரியுடன் இருந்த காரணத்தால் மட்டுமே, அவரது ஸ்வதந்த்ரயத்திற்கு எந்தவித களங்கமும் வரவில்லை. ஏனென்றால், பிரம்மனே ஸ்ரீஹரிக்கு கட்டுப்பட்டவர் என்று அனைத்து ஆதாரங்களிலிருந்து தெரியவருகிறது. கன்றுக்குட்டியானது, பசுவிற்கு கட்டுப்பட்டது. பசு, கன்றுக்குட்டிக்கு கட்டுப்படுவது சாத்தியமே இல்லை. ஆக, ருத்ரரின் தந்தையான சதுர்முக பிரம்மன், தனது கட்டுப்பாட்டில் இருப்பவர் என்பதைக் காட்டுவதற்காகவே, ஸ்ரீஹரி பிரம்மனை கன்றுக்குட்டியாக மாற்றினார்.
இப்படி ஸ்ரீஹரியின் ஒவ்வொரு அவதாரமும் மிகவும் அற்புதமானது, சுவாரசியமானது, உலகத்தை ரட்சிப்பதற்கானது, ஞானம் வைராக்கியம் ஆகியவற்றைக் கொண்டது, இப்படி கோ ரூபத்தில் இருக்கும் ஸ்ரீஹரியை என்றென்றும் சரணடைவோமாக.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
Thursday, February 15, 2018
35/40 ப்ருஹத்பானு அவதாரம்
35/40 ப்ருஹத்பானு அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: மொத்தம் 14 மன்வந்தரங்கள் உள்ளன. கடைசி மன்வந்தரத்தில் ஸ்ரீஹரி எப்படி அவதரிப்பார்?
பதில்: இந்திரசுவர்ண என்பதே கடைசி மன்வந்தரம். அப்போது ஸ்ரீஹரி ‘ப்ருஹத்பானு’ என்னும் பெயரில் அவதாரம் எடுப்பார். ப்ருஹத்பானு என்னும் ஸ்ரீஹரி, இந்திர பதவிக்கு வரும் ஷுசி என்பவனுக்கு விசேஷமாக அருளுவார்.
கே: யாரிடம் இவர் அவதரிப்பார்?
ப: ஸத்ராயணஸ்ய தனயோ ப்ருஹத்பானுஸ்ததா ஹரி: |
வினதாயம் மஹாராஜ க்ரியாதந்தூன் விதாயிதா ||
ஸத்ராயண - வினுதாதேவி தம்பதியினரிடம் மகனாக ப்ருஹத்பானு என்னும் பெயரில் ஸ்ரீஹரி அவதரிப்பார்.
கே: இந்த அவதாரத்தின் சிறப்பு என்ன?
ப: யக்ஞங்கள் தொடர்பான காரியங்கள் அனைத்தும் துவங்கியதே இவரிடமிருந்துதான். இந்திராதி தேவர்கள் அனைவருக்கும் அருள்பவரும் இவரே.
கே: அன்றைய அமைப்பில் யார்யார் எந்தெந்தப் பதவிகளில் அமர்ந்திருப்பர்?
ப: உரு, கம்பீரபுத்தி ஆகியோர் மனுவின் புத்திரர்களாக இருப்பர். விசித்ரரு மற்றும் சாக்ஷுசாதிகள் தேவர்களின் பதவிகளில் இருப்பர். ஷுசி என்பவர் இந்திர பதவியில் இருப்பார். அக்னி, பாஹு, ஷுசி சித்த, மானஸ ஆகியோர் சப்தரிஷிகளின் இடங்களில் இருப்பர்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
Wednesday, February 14, 2018
34/40 யோகேஷ்வர அவதாரம்
34/40 யோகேஷ்வர அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: பதிமூன்றாம் மன்வந்தரம் எது? அந்த மன்வந்தரத்தின் அதிபதியின் மக்களின் பெயர் என்ன?
பதில்: தேவசாவர்ணி என்பவர் பதிமூன்றாவது மனு. அவரது பெயரிலேயே மன்வந்தரமும் தேவசாவர்ணி என்று அழைக்கப்படுகிறது. சித்ரசேன, விசித்ர ஆகியோர் இவரது மகன்கள்.
கே: தேவசாவர்ணியை அருள்வதற்காக ஸ்ரீஹரி எப்படி அவதரிப்பார்?
ப:
தேவஹோத்ரஸ்ய தனய உபஹர்தா திவஸ்பதே: |
யோகேஷ்வரோ ஹரேரம்ஷோ ப்ருஹத்யாம் ஸம்பவிஷ்யதி ||
ஸ்ரீஹரியின் அம்சமான யோகேஷ்வரன் தேவஹோத்ரனின் மகனாக ப்ருஹதிதேவியிடம் அவதாரம் செய்வார்.
கே: யோகேஷ்வர என்று அழைத்துக்கொண்ட ஸ்ரீஹரி, பதிமூன்றாம் மன்வந்தரத்தில் எப்படி அருள்வார்?
ப: திவஸ்பதி என்பவருக்கு இந்திரபதவியை கொடுப்பதன் மூலம், அவரின் விருப்பத்தின் பேரில் வேண்டிய செல்வங்களைக் கொடுத்து மொத்த மன்வந்தரத்தையே அருள்வார்.
மிகுந்த செல்வத்தைப் பெற்றாலும், அனைத்தையும் துறந்து யோகாசக்தன் ஆனதால், ஸ்ரீஹரி யோகேஸ்வரன் என்று பெயர் பெற்றார். இந்த யோகேஸ்வரன், நமக்கும் நம்முடைய யோக்யதைக்குத் (தகுதிக்குத்) தக்கவாறு, யோக்ய ஞானத்தை வழங்கி அருளட்டும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
Tuesday, February 13, 2018
33/40 ஸ்வதாம அவதாரம்
33/40 ஸ்வதாம அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: 12ம் மன்வந்தரத்தில் ஸ்ரீஹரி எந்த பெயரில் அவதரிப்பார்?
பதில்: ஸ்வதாம என்னும் பெயரில் அவதரிப்பார்.
கே: இவரின் அவதாரத்திற்கு காரணமான தம்பதிகள் யார்?
ப:
ஸ்வதாமாக்யோ ஹரேரம்ஷ: ஸாதயிஷ்யேதி தன்மனோ: |
அந்தரம் ஸத்யமஹஸ: ஸூன்ருதாயாம் ஸுதோ விப: ||
ஸூன்யதா மற்றும் ஸத்யஸஹ என்னும் தம்பதியரிடம் ஸ்வதாம என்னும் பெயரில் ஸ்ரீஹரி அவதரிப்பார்.
கே: இவரின் சிறப்பு என்ன?
ப: ருத்ரஸாவர்ணி மன்வந்தரத்தை முழுவதுமாக அருள்வதற்காக எடுக்கும் அவதாரம் இது.
கே: அப்போது இந்திராதி பதவிகளில் யார் இருப்பர்?
ப:
ருததாமா ச தத்ரேந்த்ரோ தேவாஸ்ச ஹரிதாதய: |
ருஷயஸ்ச தபோமூர்திதபஸ்வ் யாக்னேத்ரகாதய: ||
ருததாமனே இந்திரன் ஆவார். ஹரிதர் ஆகியோர் தேவர்களின் பதவிகளில் இருப்பர். தபோமூர்த்தி, தப, அக்னி, இந்திர ஆகியோர் சப்தரிஷிகளின் பதவிகளில் இருப்பர். தேவவான், உபதேவ, தேவஸ்ரேஷ்ட ஆகியோர் ருத்ரஸாவர்ணியின் மகன்கள் ஆவர்.
கே: ஸ்ரீஹரிக்கு ஸ்வதாம என்ற பெயர் வருவதற்கு என்ன காரணம்?
ப: ருததாம என்னும் இந்திரனுக்கு ஸ்வர்க்க லோகத்தை அருளிய ஸ்வதாமன், சர்வதந்திர - ஸ்வதந்திரனாக (அனைத்தையும் அறிந்தவர், சுதந்திரமாக சிந்திக்கக்கூடியவர்) இருந்தார். இவரின் இடத்தை / மகிமையை அடைவதற்கு இவருக்கு இன்னொருவரின் தயை / உதவி தேவைப்படுவதில்லை. ஆகவே, ஸ்வதாம என்னும் மிகப்பொருத்தமான பெயரைப் பெற்றார்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
Monday, February 12, 2018
32/40 தர்மசேது அவதாரம்
32/40 தர்மசேது அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: தர்மசேது என்னும் ஸ்ரீஹரியின் அவதாரம் எப்போது நடைபெற்றது?
பதில்: பதினொன்றாம் தர்மஸாவர்ணி மன்வந்தரத்தில் தர்மசேது என்று ஸ்ரீஹரி அவதாரம் எடுக்கிறார்.
கே: தர்மசேது அவதாரத்திற்கு யார் காரணம்?
ப: ஆர்யக - வைத்ருதா என்னும் தம்பதியருக்கு ஸ்ரீஹரி தன் அம்சமான தர்மசேது என்னும் பெயரில் அவதரிப்பார்.
கே: தர்மஸாவர்ணி மன்வந்தரத்தில் ஸ்ரீஹரி மூன்று உலகங்களையும் எப்படி காப்பாற்றினார்?
ப: வைத்ருத என்னும் இந்திரனை காப்பாற்றுவதன் மூலம், விஹங்கமர், காமகமர், நிர்வாணர் முதலான தேவதைகள் மற்றும் அருண முதலான ரிஷிகளை காப்பாற்றுவதின் மூலம் மொத்த மன்வந்தரத்தையே காப்பாற்றுபவர் ஆகிறார்.
கே: மன்வந்தரத்தின் அதிபதியான தர்மஸாவர்ணி, ஸ்ரீஹரியிடம் எப்படி சரணடைந்தார்?
ப: மனோபலம் நிறைந்த தர்மஸாவர்ணி, பதினொன்றாம் மன்வந்தரத்திற்கு அதிபதியாவதற்கு ஸ்ரீஹரியையே சரணடைந்தார். அந்த தர்மனிடம், ஸ்ரீஹரி, சேதுவாக அவதரித்தார். ஆகையால் இவருக்கு தர்மசேது என்ற பெயர் வந்தது.
ஸத்ய, தர்ம ஆகியவற்றைப் பின்பற்றி, தர்மஸாவர்ணியை காப்பாற்றி, அவரின் மகன்களான ஸத்ய, தர்ம ஆகியோர்களையும் காப்பாற்றி, தர்மசேதுவான ஸ்ரீஹரியே நம் எல்லா தர்மங்களுக்கும் சேதுவாகி அருளட்டும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
Sunday, February 11, 2018
31/40 ஸ்ரீமூர்த்தி அவதாரம்
31/40 ஸ்ரீமூர்த்தி அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: ஒன்பதாம் மற்றும் பத்தாம் மன்வந்தரங்களில் எந்த் அவதாரம் நடைபெறும்?
பதில்: தக்ஷஸாவர்ணி என்னும் ஒன்பதாம் மன்வந்தரத்தில், ரிஷப நாமகனான ஸ்ரீஹரி அவதாரம் செய்வார். பிரம்மஸாவர்ணி என்னும் பத்தாம் மன்வந்தரத்தில், ஸ்ரீமூர்த்தி எனும் ஸ்ரீஹரி அவதாரம் நடைபெறும்.
கே: ஸ்ரீமூர்த்தி யாரிடம் அவதரிப்பார்?
ப: விஸ்வஸ்ருஜ மற்றும் விஷூசி என்னும் தம்பதியினரிடம், அமைதிரூபமான ஸ்ரீஹரி ஸ்ரீமூர்த்தி என்னும் பெயரில் அவதரிப்பார்.
கே: பிரம்மஸாவர்ணி என்பவன் யார்? அவன் வாரிசுகள் யார்?
ப: உபஸ்லோகனின் மகனே பிரம்மஸாவர்ணி. பூரிஷேண ஆகியோர் இவனின் வாரிசுகள் ஆவர்.
கே: பிரம்மஸாவர்ணி மன்வந்தரத்தில் இந்திராதி பதவிகளில் யார் யார் இருப்பர்?
ப: ஹவிஷ்டான், ஸுக்ருத, ஸத்ய, ஜய, மூர்த்தி இவர்கள் மன்வந்தரத்தின் ரிஷிபதவிகளில் இருப்பர். சுவாசனர், விபுத்தர் ஆகியோர் தேவதா பதவிகளில் இருப்பர். ஷம்புவே இந்திர பதவியில் இருப்பார். பூரிஷேண முதலானவர்கள் இவரின் வாரிசுகளாக இருப்பர்.
கே: ஸ்ரீஹரிக்கு ஸ்ரீமூர்த்தி என்று பெயர் வருவதற்கு என்ன காரணம்?
ப:
தத்ராபி ஜன்ம பவிதா ஹரேர்விஷ்வஸ்ருஜாம் க்ருஹே |
ஸ்ரீமூர்த்திரிதி விக்யாதோ யோனாப்யாயேத வை ஜகத் ||
எந்த காரணத்திற்காக இந்த உலகத்தையே ஸ்ரீரூபமாக உருவாக்கினானோ, அதே காரணத்திற்காக ஸ்ரீமூர்த்தி என்னும் காரணப்பெயரை ஸ்ரீஹரி பெற்றார்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
Saturday, February 10, 2018
30/40 பிரபு அவதாரம்
30/40 பிரபு அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: நான்காம் மன்வந்தரத்தில் நடந்த ஸ்ரீஹரியின் அவதாரத்தின் சிறப்பு என்ன?
பதில்: தாபஸ ஹரி, நான்காம் தாபஸ மன்வந்தரத்தின் அதிபதி ஆவார். ஐந்தாம் மன்வந்தரத்திற்கு வைகுண்ட, ஆறாம் சாக்ஷுஷ மன்வந்தரத்திற்கு அஜிதன், ஏழாம் வைவஸ்வத மன்வந்தரத்திற்கு வாமனன் அதிபதிகளாக இருக்கின்றனர்.
கே: எட்டாம் மன்வந்தரம் எது? மற்றும் அந்த மன்வந்தர அதிபதியான ஸ்ரீஹரியின் அவதாரம் எது?
ப: ஸாவர்ணி என்பது எட்டாம் மன்வந்தரத்தின் பெயர். இதில் ஸ்ரீஹரி, ப்ரபு என்னும் பெயரில் அவதரிப்பார்.
கே: ஸாவர்ணி மன்வந்தரத்தில், இந்திரபதவியை யார் வகித்திருந்தபோது, ப்ரபு நாமக ஸ்ரீஹரி அவதரிப்பார்?
ப: எட்டாம் மன்வந்தரத்தின் இந்திரன் - பலிச் சக்ரவர்த்தி. பலி, இந்திரபதவியை அடைவதற்கு முன்னரே, ஸ்ரீஹரி பிரபு என்னும் பெயரில் அவதரிப்பார்.
கே: எட்டாம் மன்வந்தரத்தின் அதிபதி சாவர்ணி என்பவர் யார்?
ப: வைவஸ்வத மன்வந்தரத்தின் அதிபதியான விவஸ்வான் என்னும் சூரியனின் மகனே ஸாவர்ணி ஆவான். சூரியனுக்கு, சஞ்ஞா மற்றும் சாயா என்று இரு மனைவியர். சாயா என்பவரிடம் சாவர்ணி, தபதி, சனைஸ்வர ஆகிய மூன்று மக்கள் பிறந்தனர். இந்த மூவரில் முதல்வனான ஸாவர்ணி என்பவனே மன்வந்தரத்தின் அதிபதி ஆவான்.
கே: ஸாவர்ணி என்னும் மன்வந்தரத்தின் அதிபதிக்கு ப்ரபுரூபியான ஸ்ரீஹரி எப்படி அருளினார்?
ப: விரோசனனின் மகனான பலியை இந்திர பதவியில் அமர்த்தினார். விரஜர், அமிதப்ரஜர் ஆகியோர்களை தேவதா பதவிகளில் அமர்த்தி, மொத்த மன்வந்தரத்தின் வேலைகளைப் பற்றியும் உபதேசித்து, தானே ஸாவர்ணியில் நின்று மன்வந்தரத்தின் அரசாட்சியை நடத்துவார். இப்படி துவக்கம் முதல் இறுதி வரை, மன்வந்தரத்தை நிறுவியதாலேயே பிரபு என்னும் காரணப்பெயரை ஸ்ரீஹரி பெற்றார்.
கே: இந்த மன்வந்தரத்தில் நடைபெற்ற ஸ்ரீஹரியின் வேறு அவதாரங்கள் யாவை?
ப: எட்டாம் ஸாவர்ணி மன்வந்தரத்தில், பரசுராம மற்றும் வேதவியாஸ ரூபியான ஸ்ரீஹரி, சப்தரிஷி பதவிகளை வகிப்பர். இவரின்கூட அஸ்வத்தாம, க்ருபா, ரிஷ்யஸ்ருங்க, காலவ மற்றும் தீப்திமந்த என்பவர்கள் கூட சப்தரிஷி பதவிகளில் இருப்பார்கள்.
கே: பிரபு ரூபியான ஸ்ரீஹரி யாரிடம் அவதரிப்பார்?
ப: தேவகுஹ்ய மற்றும் ஸரஸ்வதி தம்பதியரிடம் ஸ்ரீஹரி பிரபு என்னும் பெயரில் அவதாரம் செய்வார். இவர் அரசர்களுக்கெல்லாம் அரசராக விளங்குவார்.
தேவகுஹ்யாத் ஸரஸ்வத்யாம் ஸார்வபௌமபதி: பிரபு: |
ஸ்தானம் புரந்தராத்ருத்வா பலயோ தாஸ்யதீஷ்வர: ||
கே: பிரபு நாமக இந்த ஸ்ரீஹரி, பலிக்கு எப்படி உதவினார்?
ப: முந்தைய மன்வந்தரத்தில் புரந்தர என்பவன் இந்திர பதவியில் இருந்தார். அவரிடமிருந்து பதவியைப் பறித்து, பலிக்கு கொடுத்தார் ஸ்ரீஹரி. மற்றும் மன்வந்தரத்தின் இறுதிவரை பலியிடம் பிரபு நாமக ஸ்ரீஹரி அந்தர்யாமியாக இருந்து, மொத்த ஸ்வர்க்காதிபத்யத்திற்கு முக்கியமான காரணம் ஆவார்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
Friday, February 9, 2018
29/40 சத்யசேன அவதாரம்
29/40 சத்யசேன அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: இரண்டாம் மன்வந்தரத்தில் விபு நாம ஸ்ரீஹரியின் அவதாரத்தின் வைபவத்தைப் பற்றி அறிந்தோம். இதேபோல, மூன்றாம் மன்வந்தரத்தில், ஸ்ரீஹரியின் அவதாரத்தின் விசேஷம் என்ன என்று பார்க்கலாமா?
பதில்: அவதாரத்தின் பெயர் சத்யசேன
கே: சத்யசேன அவதாரத்தின் நோக்கம்?
ப: மூன்றாம் மன்வந்தரத்தில் சத்யஜித் என்னும் யமதர்மராஜன் இந்திரபதவியில் இருந்தார். ஒருமுறை உலகத்தில் துஷ்டர்களான அரக்கர்களே நிரம்பியிருந்தார்கள். விலங்குகளைக் கொல்வதை தம் வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தனர். பொய் பேசுவதே அவர்களின் வழக்கமாயிருந்தது. இந்த சமயத்தில், யமதர்மன் வேறுவழியில்லாமல் ஸ்ரீஹரியை சரணடைந்தார். அவரின் ஸ்தோத்திரத்திற்கு செவிசாய்த்து, ஸ்ரீஹரி சத்யசேன என்னும் அவதாரம் எடுத்தார்.
கே: சத்யசேன என்னும் பெயர் வரக் காரணமென்ன?
ப: பொய் பேசும் வழக்கமுடைய அரக்கர்களைக் கொன்று, உண்மையை நிறுவியதால், சத்யசேன என்னும் காரணப்பெயரைப் பெற்றார்.
கே: சத்யசேனன் யாரிடம் அவதரித்தார்?
ப:
தர்மஸ்ய சூன்ருதாயாம் து பகவான் புருஷோத்தம: |
சத்யசேன இதி க்யாதோ ஜாத: ஸத்யவ்ரதை: ஸஹ ||
யமதர்மனின் மனைவியான சூன்ருதாதேவியிடம், புருஷோத்தமனான, நற்குணங்களால் நிரம்பியவனான, ஸ்ரீஹரி சத்யசேன என்ற பெயரில் அவதரித்தார்.
கே: யமதர்மன் - சூன்ருதாதேவியிடம், சத்யசேன ஸ்ரீஹரி மட்டுமே அவதரித்தாரா, அல்லது இன்னும் வேறு யாராவது அவதரித்தார்களா?
ப: ’சத்யவ்ரதை: ஸஹ’ என்னும் வாக்கியத்தின்படி இன்னும் பலர் சூன்ருதாதேவியிடம், சத்யசேனரின் சகோதரர்களாகப் பிறந்தனர்
கே: மூன்றாம் மன்வந்தரத்தின் பெயர் என்ன? மன்வந்தரத்தின் அதிபதி யார்?
ப: மூன்றாம் மன்வந்தரத்தின் பெயர் - உத்தம. ப்ரியவ்ரத ராஜனின் மகனான உத்தமனே இதன் அதிபதி. பவன, யக்ஞஹோத்ர ஆகியோர் இவனின் மகன்கள்.
கே: அப்போதைய அரசாட்சி எப்படி இருந்தது?
ப: யமதர்மராஜன் இந்திரபதவியை வகித்து வந்தார். வசிஷ்டரின் மக்களான ப்ரமத முதலானவர்கள் சப்தரிஷி பட்டத்தில் இருந்தனர். சத்யர், வேதஸ்ருதர் மற்றும் பத்ரகீ ஆகியோர் தேவதா பதவிகளில் இருந்தனர். சத்யவ்ரத முதலான சகோதரர்களுக்கு காவலனாக, இந்திரனை கட்டுப்படுத்துபவனாக, சத்யசேன என்னும் பெயரைப் பெற்ற ஸ்ரீஹரியிடம் நமக்கும் சத்ய நிஷ்டையை அருள்வாயாக என்று வேண்டி என்றென்றும் அவரை சரணடைவோமாக.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
Thursday, February 8, 2018
28/40 விபு அவதாரம்
28/40 விபு அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கேள்வி: விபு என்றால் எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவன் என்று பொருள். இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் ஸ்ரீஹரியின் ஒரு காரணப் பெயர்தானே?
பதில்: விபு என்பது வெறும் காரணப் பெயர் மட்டுமல்ல அது ஒரு அவதாரத்தின் பெயர் ஆகும். இரண்டாம் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் ஸ்ரீஹரி, விபு என்று அவதரித்து மிகவும் புகழடைந்தார்.
கே: தற்போதைய வைவஸ்வத மன்வந்தரத்தில் நாம் ராம கிருஷ்ணாதி ரூபங்களைக் கொண்டாடுவதைப் போல், அந்த காலத்தில், விபு என்னும் அவதாரத்தை கொண்டாடினார்களா?
ப: ஸ்ரீஹரியின் விபு ரூபம், மொத்த மன்வந்தரத்திற்கும் அதிபதியாக இருந்தது மட்டுமல்லாமல், அனைத்து பக்தர்களையும் ரட்சணை செய்து அருளிய மிகவும் அற்புதமான முக்கியமான ரூபம். அதற்காகவே இந்த அவதாரத்திற்கு விபு என்ற பெயர் வந்தது.
கே: இரண்டாம் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் விபு என்னும் அவதாரத்தைத் தவிர, வேறெதும் அவதாரம் நடந்திருக்கிறதா?
ப: ஸ்ரீஹரியின் அவதாரங்கள் அனைத்து காலங்களிலும் நடந்துகொண்டேயிருக்கின்றன. ஆனால், அந்த மன்வந்தரத்தில் பிரபலமான அவதாரம் விபு மட்டுமே.
கே: விபு யாரிடம் அவதரித்தார்?
ப:
ரிஷேஸ்து வேதஷிரஸஸ்துஷிதா நாம பத்ன்யபூத் |
தஸ்யாம் ஜக்ஞே ததோ தேபோ விபுரித்யபிவிஷ்ருத: ||
வேதஷிர என்னும் ரிஷிக்கும் துஷிதா என்னும் அவரது மனைவியின், தவத்தின் சக்திக்கு மெச்சி, ஸ்ரீஹரி விபு என்னும் பெயரில் இவர்களிடத்தில் அவதாரம் செய்தார்.
கே: விபு அவதாரத்தின் சிறப்பு என்ன?
ப: அஷ்பாஷீதி சஹஸ்ராணி முனயோ யோ த்ருதப்ரதா: |
அன்வஷிக்ஷன் ப்ரதம் தஸ்ய கௌமர ப்ரம்ஹசாரிண: ||
88,000 விரதங்களைச் செய்த, பால-பிரம்மசாரி-முனிகள், இந்த விபு என்னும் ஸ்ரீஹரியிடமிருந்து, பிரம்மசர்ய விரதத்தைப் பற்றி தெரிந்துகொண்டனர்.
இப்படி பிரம்மசர்ய விரதத்தை எப்படி அனுஷ்டானம் செய்வது என்பதை சொல்லிக்கொடுத்த இந்த விபு நாமக ஸ்ரீஹரியின் பூஜையை நம் அனைவரின் பிரம்மசர்யத்திற்காக நாமும்கூட எப்போதும் செய்யவே வேண்டும்.
கே: இரண்டாம் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் விபு நாமக ஸ்ரீஹரி அவதரித்தபோது, இந்திராதி பதவிகளில் யார் யார் இருந்தனர்?
ப: சாட்சாத் வாயுதேவரே, ரோசன என்னும் பெயரில் இந்திரபதவியில் இருந்தார். துஷிதர் அப்போது தேவதா பதவியில் இருந்தார். ஓஜஸ்தம்ப முதலான பிரம்மஞானிகளான ரிஷிகள் சப்தரிஷிகளாக இருந்தனர். ஸ்வாரோசிஷ என்பவர் மன்வந்தரத்தின் அதிபதியாக இருந்தார். தைமந்த, ஸுஷேண, ரோசிஷ்மத் முதலானவர்கள் மனுவிற்கு மகனாக இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் மேல், சர்வதந்த்ர ஸ்வதந்த்ரனான விபு என்னும் ஸ்ரீஹரியே இவர்களின் அதிபதியாக இருந்தார்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
Wednesday, February 7, 2018
27/40 அஜித அவதாரம்
27/40 அஜித அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கே: அஜித என்னும் ஸ்ரீஹரியின் அவதாரம் நடைபெற்றது எப்போது?
ப: சாக்ஷுஷ மன்வந்தரத்தில்.
கே: அவதாரத்தின் வேலை என்ன?
ப: அனைத்து தேவர்களுக்கும் அமிர்தத்தைத் தருவதற்காக பாற்கடலை கடையும் அவதாரம்.
கே; பாற்கடலை கடையும்முன்னர், ஸ்ரீஹரி அவதாரம் எடுக்கவில்லை. மூலரூபியின் அனுமதியில் தேவர்கள் அசுரர்களும் கடைவதை துவக்கினர். அப்படிதானே?
ப: அசுரர்களின் தொந்தரவு தாங்காமல் தேவர்கள், பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன் அனைத்து தேவர்களையும் அழைத்துக்கொண்டு, ஸ்ரீஹரியிடம் சென்றார். அற்புதமான முறையில் ஸ்ரீஹரியை ஸ்தோத்திரம் செய்தார். அவருடன் தேவர்களும் வணங்கினர்.
நமஸ்துப்யம் அனந்தாய துர்விதர்காத்ம கர்மணே |
நிர்குணாய குணேசாய ஸத்யஸ்தாய ச சாம்ப்ரதம் ||
அஜாய ஜன்மஸ்திதி ஸம்யமாய குணாய நிர்வாண ஸுகார்ணவாய |
அணோரணீன்மேS பரிகண்யதாம்னே மஹானுபாவாய நமோ நமஸ்தே ||
இப்படி ஸ்தோத்திரம் செய்தபோது, அஜித நாமக ஸ்ரீஹரி தோன்றினார்.
கே: பாற்கடல் கடையும் நேரத்தில் அஜிதரூபியான ஸ்ரீஹரியே அதை முன்னின்று நடத்தினார் என்று சிலர் சொல்கின்றனர். நீங்கள், அவர் அஜிதனாகத் தோன்றினார் என்று கூறுகிறீர்கள். இவற்றில் எது சரி?
ப: இரண்டுமே சரிதான். பாற்கடலை கடையும்போது அஜிதரூபியான ஸ்ரீஹரியே அதை நடத்தினார். அதற்கு முன், பிரம்மன் மற்றும் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கோடி சூரியர்களை விடவும் அதிக ஒளியுடையவராக, பற்பல அணிகலன்களை அணிந்தவராக, பிரம்மதேவரின் எதிரில் காட்சியளித்தார். பாற்கடலை கடையும் யோசனையையும் அஜிதரூபியான ஸ்ரீஹரியே தெரிவித்தார்.
அரயோபி ஹி ஸந்தேயா: ஸதி கார்யார்த்த கௌரவே |
அஹிமோஷிகவத்தேவா ஹைர்தஸ்ய பதவீம் கதை: ||
கே: அஜிதன் என்றால் என்ன பொருள்? அஜிதனை எப்படி வணங்கவேண்டும்?
ப: பாகவத பத்தாவது ஸ்கந்தத்தில், யாராலும் வெல்லப்பட முடியாதவன் ஆகையால், அஜிதன் என்று பெயர் பெற்றிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஜயஜய ஜஹ்யஜாமஜித தோஷகைஹேத குணாம் |
த்வமஸி யதாத்மனா ஸமவருத்த ஸமஸ்தபக: ||
என்றும் வெல்லப்பட முடியாத அஜிதனே | உனக்கு ஜெயம் ஆகட்டும் | உன் கல்யாண குணங்களை மறந்தவர்களை நீ நாசம் செய்.
கே: அஜிதரூபியான ஸ்ரீஹரி, பாற்கடல் கடைவதை முன்னின்று நடத்தியவர் மட்டுமா அல்லது தேவர்களுடன் சேர்ந்து நின்று பாற்கடலை கடைந்தவரா?
ப: துவக்கத்திலிருந்து இறுதிவரை அந்தர்யாமியாக இருந்து பாற்கடலை கடைந்தவர், இந்த அஜிதரூபியான ஸ்ரீஹரி.
கே: மந்தரமலையை கொண்டுவந்தவர்கூட அஜிதரூபியான ஸ்ரீஹரியே என்று சொல்கின்றனர். இது சரியா?
ப: ஆம். அனைத்து தேவர்களும் மந்தரமலையின் அதிக எடையினால் அதைத் தூக்கமுடியாமல் போனபோது, அஜிதரூபியான ஸ்ரீஹரி அங்கு தோன்றி, அந்த மலையை தானே தூக்கி வந்து, கருடனின் மேல் வைத்தார். கருடன் மேலும் அமர்ந்து, தானே அந்த மலையைத் தூக்கிவந்தார். அனைத்து தேவர்களின் உள்ளேயும், அனைத்து தைத்யர்களின் உள்ளேயும், மலைக்கு உள்ளும், வாசுகியின் உள்ளும் தானே நின்று, கடைவதைச் செய்தார்.
கே: ஆனால் மந்தரமலையைத் தூக்கி நிறுத்தியவர், கூர்ம ரூபியான ஸ்ரீஹரி என்று சொல்கிறார்களே?
ப: ஆம். இதே அஜிதரூபியான ஸ்ரீஹரி, கூர்மரூபத்தை எடுத்து மலையை தாங்கினார். மலை உடைந்துவிடக்கூடாதென்று, மலையின் உள்ளே, வெளியே மற்றும் கீழே தானே நின்றார். இப்படியாக பாற்கடலைக் கடைய உதவியாக இருந்து, தேவர்களுக்கு அமிர்தத்தைப் பெற்றுத் தந்தார்.
கே: அஜிதரூபியான ஸ்ரீஹரியை யார், எப்படி வணங்கினர்?
ப: அனைத்து தேவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ரூபம் அஜிதன். தங்கள் அனைவருக்கும் அமிர்தத்தைக் கொடுத்த ரூபம் ஆகையால் அஜிதனை அனைத்து தேவர்களும் மிகவும் விருப்பப்பட்டு வணங்கினர்.
கே: அஜிதரூபியான ஸ்ரீஹரியைக் குறித்து ஏதேனும் ஸ்தோத்திரம் உள்ளதா? மற்றும் அவரை நாம் எவ்வாறு வணங்கவேண்டும்?
ப: ஸ்ரீமதாசார்யர், மிகவும் அழகாக அஜிதனைக் குறித்து ஸ்துதித்துள்ளார். த்வாதச ஸ்தோத்திரத்தில்:
விஸ்வஸ்திதி ப்ரளயசர்க மஹாவிபூதி
விருத்திபிரகார நியமாவிருதி பந்தமோக்ஷா:
யஸ்யா அபாங்க லவமாத்ரத ஊர்ஜிதாஸா
ஸ்ரீயத் கடாக்ஷ பலவத்யஜிதம் நமாமி ||
கே: அஜிதரூபியான ஸ்ரீஹரியின் ரூபத்தைப் பற்றிய விவரங்கள் ஏன் அதிகம் வெளியாகவில்லை?
ப: அஜிதரூபியான ஸ்ரீஹரி, பற்பல (அனந்த) அவதாரங்களில் முதலிலேயே இருப்பவர். இவரை அனைவரும் கண்டிப்பாக வணங்கியே ஆகவேண்டும். பஞ்சரூபங்களில் - வாசுதேவ, தசாவதாரங்களில் - மத்ஸ்ய, 24 ரூபங்களில் - கேசவ, 100 ரூபங்களில் - அஜ, 1000 ரூபங்களில் - விஸ்வ என்று துவக்க ரூபங்களில் எப்படி உள்ளனவோ, அதைப்போலவே ஸ்ரீஹரியின் பற்பல (அனந்த) ரூபங்களில், அஜிதன் என்பது முதலாம் ரூபம். இதை வேதவியாஸ கத்யத்திலிருந்து அறியலாம்.
கே: அஜிதரூபியான ஸ்ரீஹரி, பாற்கடலை கடைவதற்காக தோன்றினார். இதைத்தவிர வேறு வேலைகள் ஏதேனும் செய்தாரா?
ப: ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொருவர் இந்திர பதவியில் இருக்கிறார்கள். மொத்த சாக்ஷுஷ மன்வந்தரத்திற்கும் அஜிதரூபியான ஸ்ரீஹரியே - ஸ்வர்க்கத்திற்கு அதிபதியான இந்திர பதவியில் இருந்தார். இதைவிட பெரிய மகிமை / வேலை வேறென்ன இருக்கமுடியும்? இத்தகைய அஜிதனை நிரந்தரமாக வேண்டி, தன்யர் ஆவோமாக.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
Tuesday, February 6, 2018
26/40 வைகுண்ட அவதாரம்
26/40 வைகுண்ட அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கே: வைகுண்ட என்னும் ஸ்ரீஹரியின் அவதாரத்தின் சிறப்பு என்ன?
ப: ஒவ்வொருவரும் எந்த வைகுண்டத்திற்குச் செல்லவேண்டும் என்று நினைக்கின்றனரோ, அந்த வைகுண்டத்தை நிர்மாணித்த சிறப்பான அவதாரம் இது.
கே: இந்த அவதாரம் எப்போது நடைபெற்றது?
ப: ஐந்தாவது ரைவத மன்வந்தரத்தில்.
கே: இந்த அவதாரம் யாரிடம் நடைபெற்றது?
ப: ஷுப்ர மற்றும் விகுண்ட என்னும் தம்பதியினரிடம் வைகுண்ட என்னும் ரூபத்தில் ஸ்ரீஹரி அவதரித்தார்.
கே: ஷுப்ர மற்றும் விகுண்ட தம்பதியினருக்கு, வைகுண்ட என்னும் ஸ்ரீஹரியின் அவதாரம் மட்டும் மகனா அல்லது வேறு யாரும் வாரிசு இருந்தனரா?
ப: விகுண்டாதேவியிடம் பல தேவர்கள் பிறந்தனர். ஆகையால் அவர்களுக்கும் வைகுண்ட என்று பெயர் வந்தது. அங்கு ஸ்ரீஹரியும் அங்கு பிறந்து, வைகுண்ட என்ற பெயர் பெற்றார்.
பத்னீ விகுண்டா ஷுப்ரஸ்ய வைகுண்டை: சுரசத்தமை: |
தமோ: ஸ்வகலம் ஜக்ஞே வைகுண்டோ பகவான் ஸ்வயம் ||
கே: வைகுண்ட லோகத்தை நிர்மாணம் செய்யவேண்டுமென்ற நிலை எப்போது வந்தது?
ப: வைகுண்ட நாமகனான ஸ்ரீஹரி ரமாதேவியை மணமுடித்தார். அப்போது தாம் வசிப்பதற்காக ஒரு அழகான லோகத்தை நிர்மாணம் செய்யவேண்டி ரமாதேவி பிரார்த்தித்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீஹரி வைகுண்டத்தை நிர்மாணித்தார்.
வைகுண்ட: கல்பிதோ யேன லோகோ லோகனமஸ்க்ருத; |
ரமயா ப்ரார்த்யமானேன தேவ்யா தத்ப்ரியகாம்யயா ||
கே: வைகுண்ட லோகத்திற்கு இந்தப் பெயர் வரக் காரணமென்ன?
ப: ரமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீஹரி தாம் வசிப்பதற்கு கட்டிய லோகத்திற்கு, அவரின் பிரார்த்தனையின்படியே வைகுண்டம் என்று பெயர் வைத்தார்.
கே: இது ஸ்ரீஹரியின் லோகமாக இருந்தாலும், முக்தர்களின் லோகம் என்று எப்படி சொல்கின்றனர்?
ப: வைகுண்டம் என்பது ஸ்ரீஹரியின் இருப்பிடமாக இருந்தாலும், தன் வீட்டில் முக்தர்களுக்கு தரிசனம் அளித்து, அவர்களுக்குத் தேவையான சுகங்களைக் கொடுத்து அருள்கிறார். பக்தர்களுக்காகவே தான் கட்டிக்கொண்ட உத்தமமான லோகமே வைகுண்டம்.
கே: வைகுண்ட லோகம் அழிவில்லாது. பிரளய காலத்திலும் அழியாதது. அப்படியிருக்கும்போது ‘நிர்மாணம்’ செய்வது என்றால் என்ன பொருள்?
ப: ஸ்ரீஹரி தனது லீலைகளில் ஒன்றாக வெளிப்படுத்தியதையே, நிர்மாணம் என்கிறார்கள்.
கே: மோட்சம் என்றால் வைகுண்டத்திற்குப் போவது மட்டும்தானா, வேறு உலகங்களும் உள்ளனவா?
ப: ஸ்வேதத்வீப, அனந்தாசன, வைகுண்ட என்பதாக மூன்று உலகங்கள் உள்ளன. வைகுண்டத்தை விட அனந்தாசனம் உத்தமம். அனந்தாசனத்தைவிட ஸ்வேதத்வீபம் உத்தமம்.
கே: வைகுண்டரூபியான ஸ்ரீஹரியின் சிறப்பு என்ன?
ப: ஒவ்வொரு சாதகரும் இறுதியாக தனக்கு வேண்டுவது மோட்சம். மோட்சத்திற்குப் போனபிறகு, நிரந்தரமாக சுகத்தை அனுபவிக்கும் இடமே வைகுண்டம். இத்தகைய வைகுண்ட லோகத்தை அடையவேண்டுமெனில், வைகுண்ட என்னும் பெயரைப் பெற்ற ஸ்ரீஹரியின் அருள் கண்டிப்பாகத் தேவை.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
Subscribe to: Posts (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக