செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

05 உத்யோகபர்வம் 001-199 முழுவதும்

ராதே கிருஷ்ணா 01-08-2017


முக்கியமானவை


ஆறு வகைத் துறவுகள்? - உத்யோக பர்வம் பகுதி 43ஆ

Six kinds of renunciations! | Udyoga Parva - Section 43b | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 3)


பதிவின் சுருக்கம் : தவத்தின் தன்மைகள் குறித்துத் திருதராஷ்டிரன் வினவ, அதற்குரிய விளக்கத்தைச் சனத்சுஜாதர் அளிப்பது; ஆபத்தைத் தரக்கூடிய தீய குணங்கள் எவை? தீயவர்கள் யார்? உண்மை ஆதிக்கம் செலுத்தும் காரணிகள் எந்தப் பண்புகளில் இருக்கின்றன? சுயக்கட்டுப்பாடு எத்தனை பண்புகளைக் கொண்டது? ஆறு வகையான துறவுகள் எவை? அவை ஒவ்வொன்றுக்குமான விளக்கம் ஆகியவற்றைச் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது...

திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “தவறுகளால் கறைபடியாத தவத்தைக் குறித்து நீர் சொன்னதை நான் கேட்டுவிட்டேன். அதனால் நிலைத்த மர்மம் ஒன்றை அறிந்து கொள்வதில் வென்றேன். ஓ! சனத்சுஜாதரே, இப்போது, தவறுகளால் கறைபடிந்த தவம் குறித்து எனக்குச் சொல்லும்” என்று கேட்டான்.

சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரா} கோபத்துடன் கூடிய பனிரெண்டும் {12}, இன்னும் பதிமூன்றுவகைத் {13} தீய குணங்களும் தவத்தைக் கறை படுத்தும் தவறுகளாகும். கோபம், காமம், பேராசை, சரி தவறு அறியாத அறியாமை, நிறைவின்மை, கொடுமை, தீய குணம், மாயை, துக்கம், இன்பத்தில் நாட்டம், பொறாமை, பிறர் குறித்துத் தவறாகப் பேசுதல் [1] ஆகியவை மனிதர்களின் பொதுவான தவறுகளாகும். இந்தப் பனிரெண்டும் {12} மனிதர்களால் எப்போதும் விலக்கத்தக்கவையே. ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரா}, இவற்றில் ஏதாவது ஒன்று கூடத் தனியாகவே ஒரு மனிதனை அழிவுக்கு உள்ளாக்கத்தக்கதுதான். உண்மையில், மானை அடைய {கொல்ல} சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கும் வேடுவனைப் போல, இவற்றில் ஒவ்வொன்றும், மனிதர்களைப் பொறுத்தவரை, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.


[1] குரோதம், காமம், லோபம், மோஹம், விதிதஸை, அக்ருபை, அஸூயை, மானம், சோகம், ஸபருஹை, ராஷை, ஜுகுபஸை

தனது சொந்த மேன்மையை வலியுறுத்தும் முனைப்பு, பிறர் மனைவியிடம் இன்பம் கொள்ள நினைக்கும் ஆசை, அதீத செருக்கால் பிறரை அவமதிப்பது, சீற்றம் {கோபம்} நிறைந்திருத்தல், நிலையின்மை, தன்னால் பேணிக் காக்கப்பட வேண்டியவர்களைப் பேண மறுத்தல் ஆகிய தீய குணம் கொண்ட இந்த ஆறும் {6} செயல்களும் இவ்வுலகிலும் மறுஉலகிலும் நேரக்கூடிய ஆபத்துகளையெல்லாம் மீறி {பெரும் ஆபத்துகள் வரும் என்று தெரிந்தும் அதற்கு அஞ்சாமல்} பாவிகளால் எப்போதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. காமத்தைத் தணித்துக் கொள்வதே வாழ்வின் இலக்கு என்று கருதுபவன், ஆதீத செருக்குடையவன், கொடுத்ததற்காக வருந்துபவன், எப்போதுமே பணத்தைச் செலவு செய்யாதவன் {கஞ்சன்}, வெறுக்கத்தக்க வரிகளை {tax} வற்புறுத்துவதன் {கேட்பதன்} மூலம் தனது குடிமக்களைத் துன்புறுத்துபவன், பிறரை அவமதிப்பதில் இன்பம் காண்பவன், தன் சொந்த மனைவியரை வெறுப்பவன் ஆகிய இந்த ஏழு {7} பேரும் தீயவர்கள் என்று அழைக்கபடும் பிறராவர்.

நெறிசார்ந்திருக்கும் தன்மை {அறம் கடைப்பிடித்தல்}, உண்மை (தாக்காமல் பேசப்படும் உண்மை நிறைந்த பேச்சு), தற்கட்டுப்பாட்டு {சுயக்கட்டுப்பாடு}, தவம், பிறரின் மகிழ்ச்சியில் இன்புறுவது, அடக்கம், பொறுமை, பிறரிடம் அன்பு, வேள்விகள், பரிசுகள், விடாமுயற்சி, சாத்திர அறிவு ஆகிய பனிரெண்டும் {12} அந்தணர்களின் நடைமுறைகள் ஆகின்றன. இந்தப் பனிரெண்டையும் {12} அடைவதில் வெற்றி அடைபவன், இந்த முழுப் பூமியையும் ஆளும் திறன் பெற்றவன் ஆவான். இவற்றில் மூன்றையோ{3}, இரண்டையோ{2}, ஏன் ஒன்றையோ{1} கூடப் பெற்றிருப்பவனை தெய்வீகச் செழிப்புடையவன் {பாக்கியம் பெற்றவன்} என்று கருத வேண்டும். சுயக்கட்டுப்பாடு, துறவு, தன்னறிவு {சுயஞானம்} ஆகிய இவற்றில் தான் விடுதலை {முக்தி} இருக்கிறது. உண்மை {சத்தியம்} ஆதிக்கம் செலுத்தும் காரணிகள், இந்தப் பண்புகளிலேயே இருக்கின்றன’, என்று அறிவுள்ள அந்தணர்கள் {ஞானம் கொண்ட பிராமணர்கள்} சொல்கின்றனர்.

சுயக்கட்டுப்பாடு

பதினெட்டு{18} நல்லொழுக்கங்களைக் கொண்டது சுயக்கட்டுப்பாடு. அத்துமீறல்கள், விதிக்கப்பட்ட செயல்களைக் கடைப்பிடிக்காமல் தவிர்ப்பது, பொய்மை, கெடுநோக்கு, காமம், செல்வம், (புலன்) இன்பத்தில் வருப்பம், கோபம், துக்கம், தாகம், பேராசை, ஏமாற்றுத்தனம், பிறர் துயரில் மகிழ்வது, பொறாமை, பிறரைக் காயப்படுத்தல், வருத்தம், பக்திச் செயல்களை வெறுத்தல், கடமை மறத்தல், பிறர் மீது பழிகூறுதல், தற்பெருமை ஆகிய இந்த (பதினெட்டு-18) தீமைகளில் இருந்து விடுபட்டவன் தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு} உடையவன் என்று நெறிசார்ந்தவர்களால் சொல்லப்படுகிறான். (வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப்) பதினெட்டுத் தவறுகள் மதம் என்றோ செருக்கு என்றோ அழைக்கப்படும் ஒன்றில் இருக்கின்றன. 

துறவு


துறவு ஆறு{6} வகைகளைக் கொண்டது. அவற்றுக்கு நேர் எதிரான ஆறும் மதம் என்று அழைக்கப்படும் தவறுகளாகும். (எனவே, {மேற்கண்ட} பதினெட்டும், {துறவுக்கு எதிரான இந்த} ஆறும் {அதாவது இந்த 24ம்} மதம் என்று அழைக்கப்படுபவை ஆகும். ஆறுவகையான துறவுகள் அனைத்துமே வரவேற்கத்தக்கவையாக இருக்கின்றன. அதில் மூன்றாவது வகை நடைமுறைக்குக் கடினமானதாகும், ஆனால் அதுவே துயரங்கள் அனைத்தையும் கடந்து செல்ல உறுதுணையாக இருக்கும். உண்மையில், அந்த வகையான துறவு நடைமுறையில் சாதிக்கப்பட்டால், அவன் உலகத்தில் உள்ள முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்துவிடுவான்.

ஆறுவகைத்{6) துறவுகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவையே. அவற்றில்

{1}முதலாவது, செழிப்புமிக்கச் சந்தர்ப்பங்களில் இன்பம் அனுபவிக்காமை.

{2}இரண்டாவது, வேள்விகள், துதிகள், பக்திச் செயல்கள் ஆகியவற்றைக் கைவிடல். ஓ! மன்னா {திருதராஷ்டிரா}

{3}மூன்றாவதாக அழைக்கப்படுவது யாதென்றால், ஆசையைத் துறத்தல் அல்லது உலகத்தில் இருந்து விடுபடுதல். உண்மையில், இன்பம் தரும் அனைத்துப் பொருட்களையும் (அவற்றை அனுபவியாமல்) கைவிடுதலால் அல்லாமல், அவற்றை நிறைவாக அனுபவித்துவிட்டு கைவிடமுடியாது என்பதும். அவற்றை அடைந்த பிறகு கைவிடுதலோ, பசியின்மையால் {தேவையின்மையால்} அவற்றை அனுபவிக்கும் திறனற்று கைவிடுதலோ முடியாது என்பதும் இந்த மூன்றாம் வகையான ஆசையைத் துறத்தலின் விளைவாகவே {அவற்றில் உள்ள ஆசையைத் துறக்க முற்படும்போதே} சாட்சியாகக் காணப்படுகிறது.

{4}நான்காம் வகைத் துறவில், ஒருவனுடைய செயற்பாடுகள் தோல்வியடையும்போது, அவனது அனைத்து அறங்கள் மற்றும் அனைத்து வகைச் செல்வம் ஆகியவற்றை எதிர்த்துத் தாக்குப்பிடிக்க இயலாமலோ அவன் துக்கப்படவோ, வேதனை கொள்ளவோ கூடாது. அல்லது ஏற்பில்லாத எது நடைபெற்றாலும், ஒருவன் வலியை உணரக்கூடாது.

{5}ஐந்தாவது வகைத் துறவானது தனக்கு மிகவும் அன்பான தனது மகன்கள், மனைவியர் மற்றும் இன்னும் பிறரையும் கேட்காமல் {யாசிக்காமல்} இருப்பதேயாகும்.

{6}ஆறாவது வகைத் துறவானது கேட்கும் {தன்னிடம் யாசிக்கும்} தகுதிவாய்ந்த மனிதனுக்குத் தானமளிப்பதே ஆகும். அந்தத் தானம் எப்போதும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கும். மேலும், இவற்றால் ஒருவன் தன்னறிவை {சுய அறிவை} அடைகிறான். இந்தக் கடைசிப் பண்பைப் பொறுத்தவரை, இது எட்டுக்{8} குணங்களை உடையதாகும். அவை, உண்மை {சத்தியம்}, தியானம், பொருள்கள் மற்றும் கருத்தின் வேறுபாடு அறிதல், ஊகிக்கும் திறன், உலகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளல், பிறர் உடைமைகளை அபகரிக்காமை, பிரம்மச்சரிய நோன்புகளின் நடைமுறைகள், (பரிசுகள்) ஏற்காமை ஆகியவையே.

அதே போல (தமம் அல்லது தற்கட்டுப்பாட்டிற்கு {சுயக்கட்டுப்பாட்டுக்கு} எதிரான) மதத்தின் பண்புகளுடைய தவறுகள் அனைத்தும் (சாத்திரங்களில்) சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்தத் தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும். நான் (உன்னிடம்) துறவு மற்றும் தன்னறிவு {சுய அறிவு} ஆகியவற்றைக் குறித்துப் பேசியிருக்கிறேன். தன்னறிவு {சுய அறிவு) எட்டு{8} அறங்களைக் கொண்டிருப்பதைப் போல, தன்னறிவு இல்லாமையும் எட்டு{8} தவறுகளைக் கொண்டுள்ளது. அந்தத் தவறுகளும் தவிர்க்கப்பட வேண்டும். ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, இந்த ஐம்புலன்கள், மனம், கடந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவன் மகிழ்ச்சியடைகிறான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது ஆன்மா உண்மையில் {சத்தியத்தில்} அர்ப்பணிப்புடன் இருக்கட்டும்; அனைத்து உலகங்களும் உண்மையிலேயே நிறுவப்பட்டுள்ளன; உண்மையில், சுயக்கட்டுப்பாடு, துறவு மற்றும் தன்னறிவு ஆகியவை உண்மையையே தனது முதன்மையான பண்பாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. (இந்த) தவறுகளைத் தவிர்க்கும் ஒருவன், தவம் பயில வேண்டும். உண்மை {சத்தியம்} மட்டுமே நீதிமிக்கவர்களின் நோன்பாக இருக்க வேண்டும் என்று விதி சமைப்போன் {பிரம்மன்} விதித்திருக்கிறான். இந்தத் தவறுகளில் இருந்து விடுபட்டு, அந்த அறங்களைக் கைக்கொண்ட தவமே, பெருஞ்செழிப்பின் ஊற்றுக்கண்ணாகும். பிறப்பு, இறப்பு மற்றும் முதுமையில் இருந்து ஒருவனை விடுவிக்கும் திறன் பெற்றதும், பாவத்தை அழிப்பதும், புனிதமான கருத்துமான இதை நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {சனத்சுஜாதர்}.




+/- 05 உத்யோகபர்வம் 001-199 முழுவதும்


தற்போது மொழிபெயர்க்கப்படுவது

+/- 09 சல்லிய பர்வம் 001-065
















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக