புதன், 17 டிசம்பர், 2014

அநத்யயன காலமும் அத்யயன உத்ஸவமும், ஸ்ரீ குண ரத்ன கோசம் – 6

ராதே கிருஷ்ணா 18-12-2014


Adiyen Elaiyazhwar Ramanuja Dasan added 2 new photos.
அநத்யயன காலமும் அத்யயன உத்ஸவமும்
உண்மை விளக்கம்
- ஸ்ரீமான் சாரதி ஸ்வாமி
அநத்யயன காலமும் அத்யயன உத்ஸவமும்
உண்மை விளக்கம்
- ஸ்ரீமான் சாரதி ஸ்வாமி
ஸ்ரீவைஷ்ணவ ஸத் ஸம்ப்ரதாயம் உபயவேதாந்தத்தைச் சார்ந்துள்ளது. உபய என்றால் ‘சேர்ந்து’ அல்லது ‘இரண்டும் சேர்ந்து’ என்றும், அந்தம் என்றால் முடிவு அதாவது வேதத்தின் முடிவு பகுதியே வேதாந்தம் என்றும் காண்கிறோம். ஸம்ஸ்க்ருத மொழியிலுள்ள ரிக், யஜுர், ஸாம அதர்வண வேதங்களும், உபநிஷத்துகளான வேதாந்தமும் சேர்ந்தே காண்பது போல், தமிழில் த்ராவிட வேதம் என்றழைக்கப்படும் திவ்ய ப்ரபந்தமும், அவற்றின் வ்யாக்யானமாக தமிழ் வேதாந்தத்தையும் சேர்த்தே நம் பூர்வாசார்யர்கள் போற்றினார்கள். உபய வேதாந்தமும் இரண்டு கண்களாகக் கருதப்படுகின்றன. எம்பெருமானால் ‘மயர்வற மதிநலம் அருளப் பெற்ற’ ஆழ்வார்கள், அற்புதமான திவ்ய ப்ரபந்தத்தை அருளிச்செய்து, அதன் மூலம் ஸம்ஸ்க்ருத வேதத்தின் ஸாரார்த்தத்தை தெளிவாக்கி, இவ்வுலகோர் உய்ய வழி காட்டியருளினார்கள். அவர்கள் மீது நம் ஆசார்யர்களும், நாமும் ப்ரேமத்தோடே பேணி அநுஸந்திக்க இதுவே காரணமாகத் தட்டில்லை.
அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது. பிறகு நித்யாநுஷ்டான முறையில் கற்றுக்கொண்ட வேதத்தை அனுதினமும் ஒத வேண்டும். அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல். வருடத்தில் சில காலங்கள் நாம் வேதம் ஒதுவதில்லை. இந்த சில காலங்களில் ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றைக் கற்றுக்கொள்வர்கள் . மேலும், அமாவாசை, பௌர்ணமி, ப்ரதமை போன்ற நாட்கள் வேதம் கற்றுக் கொள்ள ஏற்றவையல்ல. த்ராவிட வேதமும் ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையாகக் கருதப்படுவதால், இதற்கும் அநத்யயன காலம் உள்ளது. த்ராவிட வேதத்திற்கு எவ்வாறு இந்த அநத்யயன காலம் ஏற்பட்டது என்பதைப் பற்றி மேலே காண்போம்.
அநத்யயன காலத்திலேயே நாம் அத்யயன உத்ஸவம் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார் பரமபதம் சென்ற நாளை அத்யயன உத்ஸவமாக போற்றிக் கொண்டாடுவது நம் ஸம்ப்ரதாய வழக்கம். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இவற்றுக்கு உண்டான விசேஷ தொடர்பு பற்றி பெரியவாச்சான் பிள்ளை ‘கலியன் அருள் பாடு என்ற க்ரந்தத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
இந்த க்ரந்தத்தின் விரிவுக்கஞ்சி, நம் தலைப்பிற்குத் தொடர்பான சில முக்கிய விஷயங்களை மட்டும் நாம் மேலே பார்க்கலாம்.
பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணன், தன் நிர்ஹேதுக க்ருபையால் சகல ஜீவாத்மாக்களும் ஸம்ஸாரம் என்ற கரையைக் கடக்க, பரமபதத்திலிருந்து இறங்கி வந்து அர்ச்சாவதார திருமேனியுடன் அதாவது, எளியவர்களும் பார்க்கும்படியாகவும், கைங்கர்யம் செய்ய ஹேதுவாகவும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று ப்ரஸித்தமாக போற்றப்படும், ஸ்ரீரங்கம், திருவேங்கடம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் அவதரித்து அருள் செய்கின்றான்.
ஆழ்வார்களுள் கடைசியாக அவதரித்த திருமங்கையாழ்வார், எம்பெருமானால் திருத்திப் பணிகொள்ளப்பட்டு, பகவானின் அர்ச்சாமூர்த்திகளில் ஆழ்ந்து, மங்களாசாசனம் செய்து, ஸ்ரீரங்கம் சென்று சேர்ந்து பல கைங்கர்யங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இருந்தமிழ் நூல் (திருவாய்மொழி) புலவன் மங்கையாளன் என்று தன்னைப் பற்றிக் கூறியவர், ஆழ்வாரின் பாசுரங்களில் மிகவும் ஆழ்ந்து அநுபவித்து, ஸேவித்து வந்தார்.
பொதுவாக நாம் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்ரத்தில், பௌர்ணமி திதி அன்று திருக்கார்த்திகை தீபம் கொண்டாடுகின்றோம். அப்படி ஒரு திருக்கார்த்திகை அன்று, நம்பெருமாளும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சிமார்களும் திருமஞ்சனம் கண்டருளி, ஸ்ரீ வைஷ்ணவ பக்த கோஷ்ட்டியில் எழுந்தருளியிருக்கும் காலத்தே, திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் என்ற ப்ரபந்தத்தை இயற்றி, எம்பெருமானுக்கு இசையோடு பாடிக் காண்பித்தார். மேலும், திருவாய்மொழியிலிருந்தும் சில பாசுரங்களை திவ்யமான இசையோடு பாடினார்.
இதைக் கேட்ட நம்பெருமாள் மிகவும் உகந்து, உமக்கு ஏதேனும் விருப்பம் இருந்ததாகில் கேளும் அதை நாம் என்று திருமங்கையாழ்வாரிடம் கூறினார்.
திருமங்கையாழ்வார் தனக்கு இரண்டு விருப்பங்கள் என்று மேலே விண்ணப்பிக்கிறார்:
1. எம்பெருமான் வைகுண்ட ஏகாதசி, அதாவது, மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் அன்று அத்யயன உத்ஸவம் கொண்டருளும்போது வேத பாராயணத்துடன், திருவாய்மொழியை முழுவதுமாக கேட்டு அநுபவிக்க வேண்டும்.
2. திருவாய்மொழியை உலகோர் உணர ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையானது என்று அறிவிக்க வேண்டும்
எம்பெருமான் திருவுள்ளம் உகந்து இரண்டு விருப்பங்களையும் நிறைவேற்றினார்.
கலியன் தொடர்ந்து பாடியாதால் அவருடைய குரல்வள சிரமத்தைக் கண்ட எம்பெருமான், திருக்கார்த்திகை தீபமன்று தன் திருமேனியில் சார்த்தியது போக உள்ள எண்ணெயை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று உடனடியாக உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், ஆழ்வார் திருநகரியில் உள்ள அர்ச்சா ரூபத்திலுள்ள ஸ்வாமி நம்மாழ்வாருக்குத் திருமுகம் (தகவல்) அனுப்பப்பட்டு, அவர் உடனடியாக கிளம்பி ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.
திருமங்கையாழ்வார், வைகுண்ட ஏகாதசி தொடக்கமாக தொடர்ந்து பத்து நாட்கள், காலையில் வேத பாராயணமும், மாலையில் திருவாய்மொழி கோஷ்டியும் நடந்தேற வழி செய்தார். உத்ஸவத்தின் கடைசி நாளன்று, ஆழ்வார் திருவடி தொழல், அதாவது, நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடியைத் தன் திருமுடியால் தீண்டும் நன்னாளை பக்தியுடன் கொண்டாடும் ஸம்ப்ரதாயத்தை அன்று ஏற்படுத்தினார். பிறகு, நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டுச் செல்கிறார். இப்படிச் சிலகாலம் சென்றது.
கலியுகத்தின் கோலம், காலப் போக்கில் திவ்ய ப்ரபந்தம் தாற்காலிகமாக மறைந்து, ஆழ்வாரும் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளுவது நின்றது.
நாதமுநிகள் அவதரித்து, எம்பெருமானின் க்ருபையால், ஆழ்வாரைப் பற்றியும் திவ்ய ப்ரபந்தத்தைப் பற்றியும் அறிந்து, ஆழ்வார் திருநகரி அடைந்து, மதுரகவியாழ்வாரின் ஆசார்ய பக்தி தெள்ளத் தெளிவாகத் தோற்றும் கண்ணிநுன் சிறுத்தாம்பை கற்றுக் கொண்டு, அதன் மூலம் நம்மாழ்வாரின் பரம க்ருபையைப் பெற்று, நாலாயிரமும் ஸம்ப்ரதாய அர்த்தத்துடன் கற்று நம்மையெல்லாம் உய்வித்தார்.
நாதமுநிகள் தன் சிஷ்யகோடிகளுக்கு அத்யயனம் செய்து வைத்து, ஸ்ரீரங்கத்தில் மறுபடியும் அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்து வைத்தார். திவ்ய ப்ரபந்தத்தின் ஏற்றத்தையும், ஆழ்வார்களின் பெருமைகளையும் நம்மாழ்வார் மூலம் அறிந்த ஸ்ரீமந்நாதமுநிகள், நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருளும்படி வழி செய்தார்.
வேதத்திற்கு இணையானது திருவாய்மொழி என்ற எம்பெருமானின் நியமனத்தை அநுசரித்து, நாதமுநிகள் திருவாய்மொழிக்கும் மற்ற ப்ரபந்தங்களுக்கும் அநத்யயன காலத்தை ஏற்படுத்தினார். திவ்ய ப்ரபந்தங்களுக்கு, அநத்யயன காலம் திருக்கார்த்திகை தீப நாளிலிருந்து தொடங்கி அத்யயன உத்ஸவ நாளுக்கு முன்பாக முடியும். அத்யயன காலம் அத்யயன உத்ஸவ முதல் நாளில் தொடங்கித் திருக்கார்த்திகை தீபமன்று முடியும்.
நாதமுனிகள் நின்று போயிருந்த அத்யயன உத்ஸவத்தைத் தொடங்கும் பொருட்டு, எம்பெருமானிடம் இருந்து ஆழ்வாருக்கு ஸ்ரீமுகம் (தகவல்) செல்லும்படியும், பெரிய பெருமாள் ஆழ்வார் பாசுரங்களை அத்யயன உத்ஸவத்தில் கேட்டு முடிக்கும் வரை ஸ்ரீவைஷ்ணவர்கள் அவற்றை நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழியாமல் இருக்கும்படிக்கும் ஏற்பாடு செய்தார்.
மேலும், திருக்கார்த்திகை தீபம் அன்று எம்பெருமானுக்குச் சாத்திய எண்ணெய்க்காப்பு சேஷத்தை நம்மாழ்வார் தொடக்கமான மற்றைய ஆழ்வார் ஆசார்ய்களுக்குச் சாத்தி அந்த சேஷத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்குக் ப்ரசாதிக்குமாறு செய்தார்.
நம்மாழ்வாரின் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி நான்கு வேதங்களுக்கு ஸமமாகவும் மற்றைய ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்கள் வேதத்தின் அங்க (சீக்ஷா, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜ்யோதிஷம்) உபாங்ககளாகவும் கருதப்படுகிறது. இந்த ப்ரபந்தங்கள் திருமந்திரம், த்வயம் மற்றும் சரம் ச்லோகத்தின் அர்த்தங்களையும் விளக்குகின்றன.
மேலும், நாதமுனிகள் பின்வரும் நியமனங்களைச் செய்தார்.
அத்யயன உத்ஸவத்தின் முதல் 10 நாட்கள் (அமாவாஸ்யை தொடங்கி வைகுண்ட ஏகாதசி வரை) முதலாயிரம் (திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமனாதிபிரான், கண்ணிநுண் சிறுத் தாம்பு), பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை) சேவிக்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி அன்று, திருவாய்மொழி தொடக்கம் செய்யப்படும்.
10 நாட்களும், காலையில் வேத பாராயணமும் மாலையில் திருவாய்மொழியும் (ஒரு நாளைக்கு ஒரு பத்து வீதம்) சேவிக்கப்படும். கடைசி நாள் நம்மாழ்வார் திருவடி தொழல் உயர்ந்த சாற்றுமுறையுடன் கொண்டாடப்படும்.
21ஆம் நாள் இயற்பா (முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்) பூர்த்தியாகச் சேவிக்கப்படும். (குறிப்பு: இராமானுச நூற்றந்தாதி நம்பெருமாளின் ஆணையின் பேரில் எம்பெருமானார் காலத்திலேயே இயற்பாவில் சேர்க்கப்பட்டது.)
மேலும், நாதமுனிகள் எப்படி ப்ராஹ்மணன் தவறாமல் வேதம் கற்றுக்கொள்கிறானோ, அது போல ப்ரபந்நர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் திவ்ய ப்ரபன்தங்களை அவசியம் கற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று நியமிக்கிறார்.
மேலும், மார்கழி மாதத்தில், அதிகாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும் ஆண்டாளின் திருப்பாவையும் சேவிக்கப்படுகிறது (அநத்யயன காலமாக இருந்தாலும் இந்த இரு ப்ரபந்தங்களும் முறையே பகவானையும் பாகவதர்களையும் துயிலெழுப்புவதால், இவற்றைச் சேவிக்கத் தடை ஏதும் இல்லை).
இவ்வாறு உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி மற்றும் எம்பெருமானாரின் காலம் வரை சென்றது. எம்பெருமானார் காலத்தில் ஒரு முறை ஏதோ சில காரணங்களினால் நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருள முடியவில்லை. எம்பெருமானார் நம்மாழ்வாரின் அர்ச்சா திருமேனியையும் மற்றைய ஆழ்வார்களின் திருமேனிகளையும் எல்லா திவ்ய தேசங்களிலும் ப்ரதிஷ்டை பண்ணும்படி நியமித்தார். திருமலையே எம்பெருமானின் திருவுடம்பாகக் கருதப்படுவதால் ஆழ்வார்களை திருவேங்கட மலையடிவாரத்தில் ப்ரதிஷ்டை பண்ணச் செய்தார். மேலும் அனைத்து திவ்ய தேசங்களிலும் அத்யயன உத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடும்படி நியமித்தார்.
பின்பு, பராசர பட்டர் திருநாராயணபுரத்துக்குச் சென்று வேதாந்தியிடம் வாதம் செய்து, வாதத்தில் ஜெயித்து அவரை சிஷ்யராக ஏற்றுக் கொள்கிறார். வேதாந்தியும் பட்டரைத் தன் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டு சந்யாஸம் பெற்றுக் கொள்கிறார். பிற்காலத்தில் நஞ்ஜீயர் என்று ப்ரசித்தமாக அழைக்கப்படுகிறார். பட்டர் வேதாந்தியை வாதத்தில் வென்று அத்யயன உத்ஸவத்தின் முதல் நாள் ஸ்ரீரங்கத்தை அடைகிறார். பெரிய பெருமாள் பட்டரிடம் வாதத்தைப் பற்றி விசாரிக்க பட்டர் வேதாந்தியை திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம் திவ்ய ப்ரபந்தத்தை வைத்து வென்றேன் என்கிறார். பெரிய பெருமாள் மிகவும் திருவுள்ளம் உகந்து பட்டரை மிகவும் பெருமைப்படுத்தவேண்டும் என்று நியமிக்கிறார். மேலும் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உத்ஸவம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க வேண்டும் என்று நியமிக்கிறார்.
நம்மாழ்வாரின் பெருமைகளும் திருவாய்மொழியின் பெருமைகளும் உச்சத்தை எட்டியது மணவாள மாமுனிகளின் அவதரித்த பின்னே. திவ்ய ப்ரபந்தங்களில் உள்ள ஸாரமான அர்த்தங்களைப் பிறர்க்கு எடுத்து உரைத்து அனைவரையும் உஜ்ஜீவிப்பதிலேயே தன்னுடைய பொழுதைப் போக்கினார் மாமுனிகள். அது மட்டுமல்லாமல் ஆழ்வார் ஆசார்யர்களின் உயர்ந்த ஸ்ரீ ஸூக்திகளின் படி நடந்து ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்தும் காட்டியுள்ளார். இதனாலேயே நம்பெருமாள் தானே மாமுனிகளின் உயர்ந்த நிலையை அங்கீகரித்து, திருவாய்மொழிக்கு உண்டான நம்பிள்ளை ஈடு மற்றும் இதர வ்யாக்யானங்களையும் கொண்டு பகவத் விஷய காலக்ஷேபம் தன்னுடைய ஸந்நிதியின் முன்னே ஒரு வருட காலம் செய்யும்படி மாமுனிகளை நியமித்தார். காலக்ஷேப சாற்றுமுறை தினமான சிறந்த ஆனித் திருமூலத்தன்று, ஸ்ரீ ரங்கநாதன் ஒரு பாலகனாகத் தோன்றி மிக ஆச்சர்யமான “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” தனியனைச் சமர்ப்பித்து மாமுனிகளைத் தன் ஆசார்யனாக ஏற்றுக் கொண்டான்.


ஸ்ரீ குண ரத்ன கோசம் – 6
ஸ்தோதாரம் உசந்தி தேவி

ஸ்ரீ குண ரத்ன கோசம் – 6
ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய: யோவிஸ்த்ருணீதே குணாந்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விச்ராம்யதி |
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
க்ஷாந்தி ஔதார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்துவீரந் ப்ரதாம் ||
பொருள் – ஸ்ரீரங்கநாயகியே! தேவி! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே! இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும், யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் – எந்த ஒரு பொருள் துதிக்கத்தக்கதாக உள்ளதோ, ஆனால் அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ, அந்தப் பொருளை ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் – அவனையே பெரிதும் மதிப்பார்கள் . இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும் , உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும் முழுத்தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் – நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும் . ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய். இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான – குற்றங்களைப் பொறுத்தல், அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது, எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) – ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?
விளக்கம் – ஒரு பொருளைக் குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். பலரும் அந்தப் பொருளைப் பற்றிக் கூற முயன்று, தோற்றுவிடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில், அந்தப் பொருளைப் பற்றி ஒருவன் துதிக்க, இதனைக் கேட்ட அந்தப் பொருள் தனக்கு உள்ள தன்மைகளை தானாகவே அனைவருக்கும் வெளிப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியெனில், அந்த ஒருவன் பலராலும் புகழப்பட வேண்டியவன் அன்றோ?
அப்படிப்பட்டவன் யார் என்றால் – தானே (பட்டர்) என்கிறார். இதனைக் கேட்ட சிலர், “உம்முடைய சொற்களோ மிகவும் தாழ்ந்தவை. உனது வாயிலிருந்து சிறந்த சொற்கள் வெளிப்படவும் வாய்ப்பில்லை. இப்படி உள்ளபோது நீவிர் எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்?”, என்றனர்.
இதற்குப் பட்டர் வெகு சாமர்த்தியமாக விடையளித்தார் – எனது சொற்கள் தாழ்ந்தவையே. அந்தச் சொற்கள் மூலமே ஸ்ரீரங்கநாச்சியாரின் பலவிதமான குணங்கள் தாமாகவே வெளிப்படுகின்றன:
1. அந்தத் தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா? இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் – குற்றங்களைப் பொறுத்தல் – வெளிப்படுகிறது.
2. “இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்துவிட்டது என்று இதனை உலகம் பழிக்கக்கூடாது, என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள். இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது.
3. அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் – குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் – வெளிப்படுகிறது.
4. இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது.
ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை. எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே – என்றார்.































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக