வெள்ளி, 28 நவம்பர், 2014

பாட்டி சொல்லும் கதைகள் - ருக்மணி சேஷசாயி 2009

ராதே கிருஷ்ணா 29-11-2014


பாட்டி சொல்லும் கதைகள் - ருக்மணி சேஷசாயி



Friday, December 25, 2009

அம்மாவும் நீயே என்ற மெட்டு

காத்தருளுவீரே கர்த்தாவே எம்மை

தோத்திரங்கள் செய்து நாங்கள் வாழ்த்தி நின்றோம் உம்மை (காத்தருளுவீரே )
--
நாட்டுமக்கள் நலமடைய நன்மை செய்தவரே பிறர்

துயரைத் தீர்க்கத் தன் துயரைத் தாங்கிக் கொண்டவரே

பகைவருக்கும் அன்பருளும் பண்பு கொண்டவரே

உம்மைப் பணிந்து நின்றோம் இனிமை தரும் ஏசுநாதரே

தேவா தேவா தேவா தேவா (காத்தருளுவீரே)

கன்னிமேரி அன்னையீன்ற அண்ணல் ஏசுவே -எமக்

கின்னலின்றி வாழும் வகை சொன்ன தியாகியே

அன்பு செய்தால் இன்பம் வரும் என்று சொன்னவரே

எமக்குப் பரமண்டல வழி காட்டிய பரம பிதாவே

தேவா தேவா தேவா தேவா (காத்தருளுவீரே)

Tuesday, December 15, 2009

பலன் நோக்காத பக்தி

பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேர். தருமன், பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் என்று அவர்களுக்குப் பெயர்.இவர்களுள் அர்ஜுனன் கண்ணனிடம் மிகவும் அன்பும் பக்தியும் கொண்டவன். தினமும் ஒரு வண்டி அளவு பூக்களைப் பறித்து வந்து கிருஷ்ணனைப் பூசிப்பான். அதனால் தானே மிகவும் பக்திமான் என்ற கர்வம் அவனிடம் குடி கொண்டது. தன்னை விட கண்ணனை நேசிப்பவர் இவ்வுலகில் யாருமில்லை என்று இருமாந்திருந்தான். உறவு முறையில் கண்ணன் அர்ஜுனனுக்கு மைத்துனன். கண்ணனின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனன் மணந்திருந்தான்.

பாரதப் போர் முடிந்து தருமன் பட்டமேற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். காலம் ஓடியது. பாண்டவரின் காலம் முடிந்தது. அனைவரும் ஸ்வர்க்கம் செல்ல விண் வழியே பயணப்பட்டனர். தருமன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து கண்ணன் செல்ல அவனருகே பீமன் சென்றான். அவன் பின்னே அர்ஜுனன் சென்றான். அர்ஜுனன் எவ்வளவு முயற்சித்தும் பீமனைத் தாண்டி கண்ணனின் அருகே செல்ல இயலவில்லை.


அப்போது அர்ஜுனன் கண்ணனிடம் கேட்டான். " கண்ணா! ஏன் உன்னிடம் என்னால் நெருங்க முடியவில்லை? என் பக்தியில் ஏதேனும் குறை உண்டா? பீமனால் மட்டும் உன்னருகே நெருங்க முடிகிறதே?


கண்ணன் புன்னகைத்தான். "அர்ஜுனா! என்னைப் பூஜித்ததால் அதுவும் வண்டி அளவு பூக்களைப் போட்டுப் பூஜித்ததால் நீயே மிகவும் பக்தி கொண்டவன் என்று எண்ணிக்கொண்டாயல்லவா?" என்று கூறியபோது அர்ஜுனன் திகைத்தான்.


"ஆம் கண்ணா! அதிலென்ன சந்தேகம்? எண்ணற்ற மலர்களைக் கொண்டு உன்னைப் பூஜித்தவனல்லவா நான்?"


"அப்படியானால் உ ன்னிலும் அதிக மலர்களைக் கொண்டு என்னைப் பூஜித்தவனை உன்னை விட அதிக பக்தியுள்ளவன் என்று கூறலாமல்லவா?"


"அப்படிப் பூஜித்தவன் உள்ளானா கிருஷ்ணா?"

"ஆம். அவன்தான் பீமன்.உன் அண்ணன்." அர்ஜுனன் திகைத்தான்.
"கண்ணா! பீமன் ஒருநாள் கூட உன்னைப் பூஜித்து நான் பார்க்கவில்லையே? "


"உண்மைதான். பீமன் பூஜித்தது யாருக்கும் தெரியாது. எனக்கும் பீமனுக்கும் மட்டுமே தெரியும்."


அர்ஜுனன் துக்கத்தில் ஆழ்ந்தான். அவன் உள்ளம் துயரத்தில் மூழ்கியது.கண்ணனைக் கண்ணீர் மல்கப் பார்த்தான்.


"அர்ஜுனா! துயரப்படாதே. உன் உள்ளத்தில் நீயே பக்திமான் என்றும் உனக்கே நான் உரிமையானவன் என்றும் நீ கர்வம் கொண்டிருந்தாய்.

அது சரியல்லவென்பதை அறிவிக்கவே இந்நிகழ்ச்சி நடந்தது."
"பீமன் யாரும் அறியாதவாறு எவ்வாறு பூஜை செய்தான்?"

"அர்ஜுனா! நீங்கள் வனவாசத்தின் போதும் அக்ஞாத வாசத்தின் போதும் காடுகளிலும் பல ஊர்களிலும் அலைந்து திரிந்தீர்கள் அல்லவா?

அப்போது பீமன் தன் கண்ணில் கண்ட மலர்கள் அத்தனையையும் கிருஷ்ணார்ப்பணம் என்று எனக்கு அர்ச்சித்து விடுவான். நானும் அவனது உள்ளத்தின் அன்பைப் புரிந்து கொண்டு அனைத்தையும் ஏற்றுக்கொண்டேன். அப்படி அவன் அர்ச்சித்த மலர்கள்தன்ன் அதோ பார். மலைபோல் குவிந்துள்ளது. நீஅர்ச்சித்தவை இதோ இச்சிறு குன்று போல் உள்ளது. உள்ளத்தின் தன்னலமில்லாத அன்பே உண்மையான பக்தி. நீ மலர் பறித்து பூஜை செய்ததை விட மனதளவில் பூஜித்த பீமனின் பக்தியே சிறந்தது. ஒப்புக்கொள்கிறாயா?"


அர்ஜுனனின் கண்கள் திறந்தன. அவனது கர்வம் அகன்றது. பரிசுத்தமான மனதோடு கண்ணனை தியானித்தான். தூய்மையான அர்ஜுனனை இப்போது கண்ணன் கைகளைப் பற்றி அழைத்துச் சென்றான். அனைவரும் வைகுண்டம் சேர்ந்தனர்.

Thursday, December 3, 2009

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

சிரவணன்  என்று  ஒரு  சிறுவன் இருந்தான். அவனது  தாயும்  தந்தையும்  மிகவும்  வயதானவர்கள்.அத்துடன்  இருவரும்  கண்  தெரியாதவர்கள்.தங்களின்  மகனின்  உதவியில்லாமல்  எந்த ஒரு  வேலை யையும்  செய்ய  இயலாதவர்கள்.  சிரவணனின்  தந்தையார்  ஒரு  ரிஷி.
 

ஆகவே  அவர்கள்  ஒரு  வனத்தில்  வாழ்ந்து  வந்தனர்.

அவர்கள்  தங்கியிருந்த  வனத்தில்  நீரின்றி  வறட்சி  ஏற்பட்டது.  ஆகவே  வேறு  வானத்தைத்  தேடிப்  புறப்பட்டனர்.  நடக்க இயலாமலும்  கண்  தெரியாமலும்  தவிக்கும்  தன்  பெற்றோருக்கு  ஊன்றுகோலாகவும்  கண்ணாகவும்  இருந்தான்  சிரவணன்.  இரண்டு  பெரிய  பிரம்புத் தட்டுகளில்  இருவரையும்  அமரவைத்து  அத்தட்டுகளைத்   தராசு  போல்  அமைத்து   அதைத்தன்  தோளில்  தூக்கிக்  கொண்டான்.  வாலிப  வயதை  நெருங்கியவன்  ஆனதால்  சிரவணன்  சிரமமின்றி   தன்  பெற்றோரைச்  சுமந்து  சென்றான்.

வெகு தூரம்  நடந்து  வேறு ஒரு  காட்டுப்  பகுதியை  அடைந்தனர்.  சிரவணனின்  தயார்  நீர்  அருந்தக்  கொண்டுவருமாறு  கூறினார். தந்தையாரும்  தாகமாக  உள்ளது   எனக்கூறவே  இருவரின்  தாகத்தையும்  நீக்க  எண்ணினான்.  குடுவையில்  நீர்  காலியாக  இருந்ததால்  குளமோ  கிணறோ  அருகில்  உள்ளதா  எனத்  தேடிச்  சென்று  நீர்  கொண்டு  வருவதாகக்  கூறினான்  சிரவணன்..விரைவில்  வந்துவிடுமாறு  கூறி   அனுப்பிவைத்தனர்  அந்த  வயோதிகத்  தம்பதியர்.   அவர்களை  வணங்கி  விடை  பெற்றுப்  புறப்பட்டான்  சிரவணன்.

அந்தப்  பகுதி  அயோத்தி  நகரைச்  சேர்ந்தது.  அயோத்தி  அரசன்  தசரதன்.  காட்டுவிலங்குகளின்  துன்பத்திலிருந்து  மக்களைக்  காப்பதற்காக  துஷ்ட    மிருகங்களை  வேட்டையாட  தசரதன்  கானகம்  வந்திருந்தான்.  மாலைநேரம்.  இருள்  லேசாகக்  கவிந்து  கொண்டிருந்தது.  மரத்தடியில்  ஓய்வெடுத்துக்  கொண்டிருந்தான்   மன்னன்.  அவன்  அருகே  மிருகம்  ஒன்று  தண்ணீர்  குடிப்பதுபோல  சத்தம்  கேட்டது. மன்னன்  துள்ளி  எழுந்தான்.தன்  வில்லில்  நாணைத்  தொடுத்தான்.  வில்லிலிருந்து  அம்பு  புறப்பட்ட  மறுகணமே   "அம்மா !"  என்ற  அலறல்  குரல்  கேட்டது.

மனிதக்  குரலைக்  கேட்ட  மறுகணம்   மன்னன்  திடுக்கிட்டான்.  குரல்  வந்த  திசை  நோக்கி  ஓடினான்.  அங்கே  சிரவணன்  அம்பு  பட்டு  வீழ்ந்து  கிடந்தான்.  அவனிடம்  தசரதன்  மன்னிக்குமாறு  வேண்டினான். தவறு  நேர்ந்துவிட்டது  என்று  புலம்பி அழுதான். அவனைத்  தடுத்த  சிரவணன்,
"அரசே!  என்  பெற்றோர்  வனத்தில்  தாகத்தால்  தவித்தவாறு  உள்ளனர்.  அவர்களிடம்  நான்  இறந்த  செய்தியைச்  சொல்லாமல்  அவர்களை  நீர்  அருந்தச்  செய்துவிடுங்கள். பெற்ற  தாய்  தந்தையரின்  நீர்  வேட்கையைத்  தீர்க்காமல்  சாகிறேன்  .நீங்கள்  அவர்களின்  மகனாக  இருந்து  அவர்கள்  தாகத்தைத்  தீர்த்து  விடுங்கள்.  இதுதான்  என் கடைசி  ஆசை."என்று  கூறிவிட்டு  இறந்தான். 

சிரவணன்  கூறியது  போல்  நீரை  எடுத்துக்கொண்டு  அவன்  பெற்றோர்    இருக்குமிடம்  நோக்கிச்  சென்றான்  தசரதன்.  குரலைக்  காட்டாமல்  நீரை  அந்த  வயோதிகத்  தாயிடம்  கொடுத்தான்.  தசரதனின்   கை  பட்டதுமே  "யார்  நீ?" என்று  சத்தமிட்டாள்  அந்தத்தாய்.  இருவரும்  "எங்கள்  மகன்  எங்கே?  நீ  ஏன்  வந்தாய்? எங்கள்  மகனுக்கு    என்னவாயிற்று?"  என்று  அழுது  புலம்பினர்.  அதைத்  தாங்காத  தசரதன்  தான்  தவறாக  அம்பெய்திய  காரணத்தால்  சிரவணன்  மாண்ட  செய்தியைக்  கூறினான்.  புத்திர  சோகம்  தாங்காத  அந்தப் பெற்றோர்  "ஏ! மன்னா!  நாங்கள்  மகனை  இழந்து  தவித்து  உயிர்  விடுவது  போலவே  நீயும்  எத்தனை  புத்திரர்களைப்  பெற்றாலும்  யாரும்  அருகே  இல்லாமல்  புத்திர  சோகத்தாலேயே உயிர்  விடுவாய்.   இது  எங்கள்  சாபம்  "  என்று  சபித்துவிட்டு  உயிர்  விட்டனர்.

பின்னாளில்  இந்த  தசரதன்  ராமனை  வனவாசத்திற்கு  அனுப்பிவிட்டு  புத்திரசோகத்தில்  ஆழ்ந்து  துன்பப்பட்டான்.  பரதனும்  சத்ருக்னனும்   கேகயநாடு  செல்லவும்   ராம  இலக்குவர்  வனம்  ஏகவும்  தசரதன்  தனிமையில்  தவித்து  பின்  உயிர்  விட்டான்.  நல்லோர்  சொல்லுக்கு  வலிமை  உண்டு.பெற்றோரை  தெய்வமாக  எண்ணி  அவர்களுக்கு  அன்புடன்  சேவை  செய்து  வந்த  சிரவணன்  பண்பால் பெருமை  பெற்றான். அவன்  பெற்றோரின்  சாபம்  பலித்துவிட்டது.  எனவே   பெற்றோரிடம்  நாம்  ஆசிபெற   என்றும்  அவர்களை  வணங்க  வேண்டும்.




Sunday, November 8, 2009

பிசிராந்தையார் நட்பு

பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அவனைப்  பற்றிய  பாடல்களைப்  பாடியுள்ளார்.சோழனைக்  காணவேண்டும்  என்னும்  பேரவா  கொண்டிருந்தார்.  ஆனால்  பாண்டிய  நாட்டிலுள்ள  பிசிர்  வெகு  தொலைவு  உள்ளதால்  இவரால்  சோழ  நாட்டுக்குச்  செல்ல  இயலவில்லை.

இவரது புகழையும்  தமிழையும்  கேள்விப்பட்ட  சோழனும்  இவரைக்  காணவேண்டும்  என்னும்  அவா  கொண்டிருந்தான்.  எனவே  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர். இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.

கோப்பெருஞ்சோழனின்  தலைநகர்  உறையூர்.  இம்மன்னன்  பிசிராந்தையாரை  நேரில்  காணாமலேயே  அவருடன்  நட்புக் கொண்டவன்.  இவனது  ஆட்சி  நடந்துகொண்டிருக்கும்  போதே  இவனது  இரண்டு  புதல்வர்களும்  சோழ  ஆட்சிக்  கட்டில்  ஏறுவதற்காக  தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.

இதை  அறிந்த  கோப்பெருஞ்சோழன்  ஆட்சியை  விட்டு  வடக்கிருந்து  உயிர்  விடத்  துணிந்தான்.  அப்போது  தன்  மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையார்  என்னைக்  காண  வருவார்.  என்னுடன்  வடக்கிருப்பார்.  அவருக்கும்  ஓர்  இடத்தைத்  தயார்  செய்யுங்கள்  எனக்  கூறினார்.    அதேபோல்  பிசிராந்தையாருக்கும்  ஒரு  இடம்  அமைக்கப்பட்டது.  நாட்கள்  கடந்தன.  சோழன்    பிசிரந்தையாரைக்  காணாமலேயே  வடக்கிருக்கத்  துணிந்தான்.   எப்படியும்  ஆந்தையார்  வந்து  விடுவார்  எனக்  கூறித்  தன்  தவத்தை  மேற்கொண்டான்.   

இவ்வுலக  வாழ்வைத்  துறக்க  விரும்பும்  மன்னவர்  வடக்கிருந்து  உயிர்  விடுதல்  அக்கால  மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன்நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை    அமைத்து   வடக்கு  திசை  நோக்கி  அமர்ந்து  உண்ணாநோன்பிருந்து  உயிர்  விடுதல்.

தன்  மக்கள்  மீது  இருந்த   மனக்  கசப்பின்  காரணமாக  கோப்பெருஞ்சோழனும்   வடக்கிருந்தான்.
இதனைக்  கேள்விப்பட்டார்  பிசிராந்தையார்.  உடனே   சோழ  நாட்டை  நோக்கி  ஓடி  வந்தார்.
வழியில்  எதிர்ப் பட்டவர்  இவரைப்  பார்த்து  மிகவும்  ஆச்சரியப்  பட்டனர்."புலவரே!  நான்  என்  சிறுவயது  முதலே  தங்களைப்  பற்றி  என்  தந்தையார்   கூறக்  கேட்டிருக்கிறேன்.  தங்கள்  மிகவும்  வயதானவராக  இருப்பீர்கள்  என்று  எண்ணியிருந்தோம்.  தங்களோ  மிகவும்  இளமையாக  இருக்கின்றீர்களே, அது  எப்படி?"என்று  வியந்து  கேட்டனர்.  அதற்கு  மறுமொழியாக  ஆந்தையார்   ஒரு  பாடல்  பாடினார்.  புறநானூற்றில்  உள்ள  இப்பாடல்  நமது  வாழ்வியலுக்கு  மிகவும்  தேவையான  ஒன்று.

         " யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
          யாங்காகியர்  என வினவுதிராயின், 
           மாண்ட  என்  மனைவியொடு  மக்களும்  நிரம்பினர்
           யான்  கண்டனையர்  என்  இளையரும்   வேந்தனும் 
          அல்லவை  செய்யான்   காக்கும்  அதன்  தலை 
           ஆன்று  அவிந்து  அடங்கிய  கொள்கைச்
           சான்றோர்  பலர்  யான்  வாழும்  ஊரே."    

என்று  பாடிய  பாடல்  மூலம்  " வயோதிகரானாலும்  இளமையோடிருக்கும்  காரணத்தைக்  கேட்பீரானால்   சிறந்த  பண்புள்ள  மனைவி,  மக்கள்  குறிப்பறிந்து  பணி  செய்யும்  பணியாளர்கள்  அறத்தையே  நாடிச்  செய்யும்  மன்னன்  இத்துணை  பேருடன்  நன்கு  கற்று    நல்ல  பண்புகளுடன்  விளங்கும்  சான்றோர்  பலரும்  எம்மைச்  சூழ்ந்து  இருக்க  நான்  வாழ்வதால்  எனக்கு  நரை  தோன்றவில்லை.  மூப்பும்  எம்மை  அணுகவில்லை."   என்று  விளக்கினார்.   

சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  பிசிராந்தையார்  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காக த்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார்.

இச்செய்தியை    இக்காட்சியைக்  கண்ட   பொத்தியார்  என்னும்  புலவர்   தன்  பாடலில்  இதனைக்  கூறுகிறார்.

      "இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
       இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
       வருவன்  என்ற  கோனது  பெருமையும் 
       அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
       வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."

பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  தம்முள்  காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாக  உயிர்  நீத்த  இச்சிறப்பினை  இலக்கியங்கள்  நமக்கு  எடுத்து  இயம்புகின்றன.  இத்தகு  நண்பர்களை  நம்மால்  மறக்க  இயலுமா?

Wednesday, November 4, 2009

முயற்சி திருவினை ஆக்கும்

ஒரு  கிராமத்தில்  ஒரு  பாட்டி  இருந்தாள். அவளுக்கு  ஒரு  பேரன் இருந்தான்.  அவன்  பெயர்  நம்பி.  நம்பிக்குப்  பெற்றோர்  கிடையாது. அவன்  உறவெல்லாம்  பாட்டி  மட்டுமே.  மிகவும்  ஏழையான  இவர்கள்  வயிற்றுப்  பிழைப்புக்காக  தினமும்  வயலில்  கூலி  வேலை  செய்து  வந்தனர்.  பாட்டி  வயலில்  வேலை  செய்யும்  பொழுது  நம்பி  மாடுகளை  மேய்த்து  விட்டு  வருவான்.  சூரியன்  மறைந்த  பிறகே  இருவரும்  வீடு  திரும்புவார்கள்.
 
இந்த  நிலையில்   நம்பிக்குப்  படிக்கவேண்டும்  என்று  மிகவும்  ஆசை.  அவன்  மாடு  மேய்க்கும்  பொழுது  தன்னைப் போன்ற  சிறுவர்கள்  பள்ளிக்குப்  போவதைப்  பார்த்து  தானும்  பள்ளிக்குப்  போக  விரும்பினான்.  பாட்டியிடம் ஒருநாள்,   " பாட்டி ,  நானும்  படிக்க  வேண்டும்  பாட்டி"  என்றான்.

பாட்டி  பெருமூச்சு  விட்டாள். " நாமெல்லாம்  படிக்க  முடியாதுப்பா.  அது  பணக்காரங்களுக்குதான்   முடியும்."

"ஏன்  பாட்டி,  நாம  ஏன்  படிக்கக்கூடாது?"

"நாம  வேலை  செய்துதான்  சாப்பிட  முடியும்.  படிக்கப்  போயிட்டா  யாரு  சோறு  போடுவாங்க?  அதனால  ஒழைக்கறதுதான்  நம்மளாலே  முடியும்."
 
இதை  நம்பியின்  மனம்  ஏற்கவில்லை.  எப்படியாவது  படித்தே  தீருவது  என்று  முடிவு  செய்தான்.  அந்த  ஊரில்  இருந்தது  ஒரே  பள்ளிக்கூடம்.  அதுவும்  ஐந்தாம்  வகுப்பு  வரை  மட்டுமே  உள்ளது.  ஒரு  கூரைக்  கட்டடத்தில்  பள்ளி  நடந்து  வந்தது.  நம்பி  மாடுகளை  மேய்ச்சலுக்கு  ஓட்டிவிட்டு  பள்ளிக்கூடத்தின்  வாசலில்  அல்லது  ஜன்னலின்  ஓரத்தில்  வந்து  நின்று  கொள்வான்.  மூன்று  மாதங்கள்  வரை  முதல்  வகுப்பிலும்  அதன்  பின்  இரண்டாம்  வகுப்பிலும்  என   இரண்டு  வருடங்களுக்குள்  ஐந்து  வகுப்பின்  பாடங்களையும்  கற்றுக்கொண்டான்.

இப்போது  நம்பி  யார்  துணையும்  இல்லாமல்  எல்லா   புத்தகங்களையும்  படிக்கத்  தொடங்கினான்.  கண்ணில்   கண்ட  தாள்களில்  உள்ள  செய்திகளையெல்லாம்  படித்துத்  தெரிந்துகொண்டான்.  தான் படிப்பதை  யாரும்  அறியாமல்  ரகசியமாகவே  வைத்திருந்தான்.ஏனெனில்  மாடு  மேய்க்கும்  சிறுவன்  படிப்பதைப்  பார்த்தால்  ஊர்  பெரியவர்கள்  தவறாக  நினைப்பார்கள்.  அவன்  சரியாக  மாடுகளை  மேய்க்கவில்லை  எனக்  கூறி   கூலி  தரமாட்டார்கள்  எனப்  பயந்திருந்தான். 

அந்த கிராமத்தில்   வாரம்  ஒருமுறைதான்  தபால்காரர்  வருவார்.  அவரும்  ஊருக்கு  வெளியே  நம்பியைப்  பார்த்தால்  அவனிடம்  இரண்டு  அல்லது  மூன்று  கடிதங்களைக்  கொடுத்துவிட்டு  ஊருக்குள்  வராமலேயே  போய்  விடுவார்.  அந்தக்  கடிதங்களை  நம்பி  மாலையில்  மாடுகளைக்  கட்ட  வரும்போது  உரியவர்களிடம்  சேர்த்து  விடுவான்.

அன்றும்  அதேபோல  தபால்காரர்  வந்தார்.  இரண்டு கடிதம்தான்  இருக்கிறது.  இதைத்  தருவதற்காக  ஊருக்குள்  வரவேண்டுமா  என  எண்ணி  அதை  வழக்கம்போல  நம்பியிடம்  கொடுத்துச்  சென்றார்.   வெகு  நேரம்  கழித்து  அந்தக்  கடிதங்களைப்  பார்த்தான்  நம்பி.  இப்போது  நம்பிக்குத்தான்  படிக்கத்  தெரியுமே. அதனால்  ஆர்வம்  அவனை  அந்தக்  கடிதங்களைப்  படிக்கத்  தூண்டியது.  மெதுவாகப்  படிக்கத்  தொடங்கினான்.

அந்த  கிராமத்தின்  தலைவர்  பெரியசாமி.  அவரது  நண்பர்  சுந்தரம்  பட்டணத்தில்  அரசாங்கத்தில்  வேலை  பார்ப்பவர்.  அவர்தான்  பெரியசாமிக்குக்  கடிதம்  எழுதியிருந்தார்.  வெள்ளிக்கிழமை  மாலை  ஐந்து மணிக்கு
அந்த  ஊருக்கு  அரசாங்க  அதிகாரி  வரப்போவதாக   எழுதியிருந்தார்.  கடிதம்  வந்து  சேர்ந்ததும்  வெள்ளிக்கிழமை.

அந்தக் கடிதம்  உடனே  கிராம  அதிகாரியின்  கைக்குப்  போய்ச்  சேரவேண்டுமே  என  முடிவு  செய்தான் நம்பி.
உடனே  தான்  பாட்டி  வேலை  செய்யும்  இடத்திற்குப்  போனான். "பாட்டி,  மாடுகளைக்  கொஞ்ச  நேரம்  பார்த்துக்கொள்.  நான்  இந்தக்கடிதாசியை  நம்ம  தலைவரய்யா கிட்டே   குடுத்துட்டு  வரேன்."என்றபடியே  ஓடினான்.

கடிதத்தைப்  படித்த  பெரியசாமி  உடனே  அதிகாரியை  வரவேற்க  ஆவன  செய்ய  உத்திரவு  பிறப்பித்தார்.  அன்று  மாலை  தலைவரை  நல்ல  முறையில்  வரவேற்று   உபசரித்தார்   அதிகாரி  மிகவும்  மகிழ்ந்து  அந்த  கிராமத்திற்கு என்ன  வசதிகள்  தேவை    என்பதைக்  கேட்டுத்  தெரிந்து கொண்டு  அதை  நிறைவேற்றக்  கட்டளையிட்டார்.

இரவு  நம்பியும்  பாட்டியும்  சாப்பிட்டுக்  கொண்டிருந்தனர்.  அப்போது  வீட்டு  வாயிலில்  யாரோ  அழைக்கும்  குரல்  கேட்டது. "யாரது?"  எனக்கேட்டவாறே  வெளியே  வந்தனர்  பாட்டியும்  பேரனும்.அங்கே  கிராமத் தலைவர்  பெரியசாமியும்  சில  பெரியவர்களும்  நின்றிருந்தனர். அவர்கள்  வேலைக்காரன்  ஒரு  தட்டில்  நல்ல  புதிய  உடை
களும்  இனிப்புகளும்  பழங்களுடன்  ஐந்நூறு  ரூபாய்  பணமும்  வைத்து  பாட்டியிடம்  கொடுத்தனர்.

பாட்டி  திகைத்தாள். எனக்கு  என்ன  மரியாதை  ஏன்  இந்த  மரியாதை?   அவளது  திகைப்பைப்  பார்த்து  புன்னகை  புரிந்த  பெரியசாமி  கூறினார்."பாட்டிம்மா!  உங்க  பேரன்  காலையிலேயே  கடிதத்தைக்  கொண்டு  வந்து  கொடுத்ததாலேதான்   அதிகாரியை  நன்கு  உபசரிக்க  முடிந்தது.  நானும்  வெளியூருக்குப்  போவதைத்   தள்ளிப்  போட  முடிஞ்சது.நம்ம  ஊருக்கும்  நல்லது  நடந்திருக்கு.  இத்தனைக்கும்  காரணம்  நம்பி  கடிதத்தை  சரியான  நேரத்தில்  கொண்டு  வந்து  கொடுத்தது  தானே.  அதனாலே  இந்தப்பரிசை    நாங்க  எல்லாருமா  சேர்ந்து  அவனுக்குக்  கொடுக்கிறோம்."

"இது  ஒரு  பெரிய  விஷயமாங்கய்யா?  அவன்  எப்பவும்  போல  கடிதாசி  கொடுத்திருக்கிறான்.  இதுக்குப்போயி...."
என்று  நீட்டினாள்.
பெரியசாமி  நம்பியைப்  பார்த்துக்  கேட்டார்."நம்பி!,இந்தக்  கடிதம்  மிக  முக்கியமானது  அப்பிடின்னு  உனக்கு  எப்படித்  தெரிஞ்சுது?"
"அய்யா!  என்னை  மன்னிச்சுடுங்க.  நாந்தான்  உங்களுக்கு  வந்த  அந்தக்  கடிதத்தைப்  படித்தேன்.  அதன்  அவசரத்தைப்  புரிந்து  கொண்டு  ஓடிவந்து  கொடுத்துவிட்டு  மாடுகளைப் பார்த்துக்கொள்ள மீண்டும் வயலுக்கு  வந்துவிட்டேன்"

"உனக்குத்தான்  படிக்கத்தேரியாதே?  எப்படிப்  படித்தாய்?"

நம்பி  கடந்த  இரண்டு  ஆண்டுகளாகத்  தான்  கல்வி  கற்ற  முறையைச்  சொன்னபோது  பெரியசாமி  கண்  கலங்கினார்.  இவ்வளவு  ஆர்வமுள்ள  சிறுவனை   முறையாகப்  படிக்கவைக்க  முடிவு  செய்தார்.  அதை  பாட்டியிடம்  சொல்ல  அவள்  மிகவும்  மகிழ்ச்சி  அடைந்தாள்.  அதைவிட  நம்பி  மிகவும்  மகிழ்ந்தான்.
மறுநாள்  முதல்  நம்பி  மாடு  மேய்க்கப்  போகவேண்டாம்.   இனி  அவன்  பள்ளிக்குச்  செல்லட்டும்  என  பெரியசாமி  கூறிவிட்டுச்  சென்றார்.

பாட்டி  தான்  பேரனின்  ஆசை  நிறைவேறிற்று  என  மகிழ்ந்ததோடு  நம்பியிடம்  "உன்  முயற்சி  உன்னை  உயர்த்திவிட்டது." என்றாள்.

இதைத்தான்  பாட்டி    "முயற்சி  திருவினை  ஆக்கும் " அப்படின்னு  வாத்தியார்  ஒருநாள்  சொன்னார்.  என்று  சொல்லிச்  சிரித்தான்.
பாட்டியும் தன் பேரன்  அப்போதே  பெரிய  படிப்புப்  படித்து  விட்டதுபோல  மகிழ்ந்தாள்.  முயற்சி  நமக்கு  எல்லா  வெற்றிகளையும்  தரும்  என்பதை  நாம்  ஒருபோதும்  மறக்கலாகாது.

Wednesday, October 28, 2009

டில்லி அரசரை வென்ற கதை

ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார்.  அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். 


கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார்.


டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார்.


ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை நிறுத்தினார்." பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"


" நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்." இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக் கூறினார்.


" ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? " என்று சிரித்தார்.


" அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?


எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்" 


"ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி." உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். " அரசே! அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம் 


பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே!"


பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. "ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே!" என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், "அரசே! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை?"


என்றார். "நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! " என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து "மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்." என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர்.


" சற்று நிற்க முடியுமா அரசே?" என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?


தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். "அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்."


"தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம்." என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்..


வெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர்.

Monday, October 19, 2009

அதியமானின் நட்பு

கடையேழு  வள்ளல்களில்  அதியமானும்  ஒருவன்.  இவனது  இயற்பெயர்   நெடுமான் அஞ்சி  எனப்படும். இவன்  அதியமான் எனவும்  வழங்கப் பட்டான்.  அதிகை  என்ற  ஊரில்  வாழ்ந்திருந்து  பின்னர்  சேர நாட்டில்  குடி ஏறியவனாக இருத்தல்  வேண்டும்.  அதனால்  அதிகமான்  எனவும்  வழங்கப்பட்டான்  எனவும்  கூறுவர்.  இம்மன்னனின்   தலைநகரம்  'தகடூர்'.  இது  தற்போது  தர்மபுரி  என  வழங்கப்படுகின்றது.   ஒளவையார்  இம்மன்னனைப்  பற்றி  பல பாடல்களைப்  பாடியுள்ளார்.  இப்பாடல்கள்  மூலம்  இவனது  கோடை,  வீரம்  வள்ளல்தன்மையினைப்  பற்றித்  தெரிந்து  கொள்ளலாம்.  பல  வரலாற்றுச்  செய்தியினையும்  தெரிந்து  கொள்ளலாம்.

ஒரு  முறை  தொண்டைமான்  என்னும்  மன்னன்  அதியனுடன்  போருக்குத்  தயாரானான்.  அதியன்  அமைதியை  விரும்பினான்.  அதியனுக்காக   ஒளவையார்   தூது  சென்றார்.  ஒளவையாரை  வரவேற்ற  தொண்டைமான்  தனது  படைக்  கலங்களைக்  காட்டிப்  பெருமைப்  பட்டுக்  கொண்டான்   அவனது  கர்வத்தை  ஒடுக்கவும்  அதியனின்  வீரத்தைத்  தெரிவிக்கவும்  பாடல்  ஒன்றைப்  பாடினார்  ஒளவையார்.
'இவ்வே  பீலியணிந்து  மாலை  சூட்டிக்
 கண்திரழ்  நோன்காழ்  திருத்தி  நெய்யணிந்து                                                                                                                     கடியுடை  வியனகரவ்வே,  அவ்வே
பகைவர்க்  குத்திக் கோடுனுதி சிதைந்து
கொல்துறைக்  குற்றிலமாதோ '..............................
.......................'   இப்பாடல்   மூலமாக  தொண்டைமானின்  படைக்  கலங்கள்  போர்க்களத்தைப்  பாராததால்  புதியதாக   நெய்யணிந்து  மாலை  சூட்டிக்  கொண்டிருப்பதாகவும்,      ஆனால்  அதியனின்  படைக்  கலங்களோ  எப்போதும்  போர்க் களத்திலேயே  இருந்து  பகைவரைக்  குத்திக்  கிழிப்பதால்  முனை  முரிந்து
கொல்லன்  உலைக் களத்திலே  கிடக்கின்றன.'  என்று  பாடியதைக்  கேட்ட  தொண்டைமான்  தன்னைப்  புகழ்வது  போலப்  பழித்தும்  அதியனைப்  பழிப்பது  போலப்  புகழ்ந்தும்  பாடியதைப்    புரிந்து  கொண்டு  போரை நிறுத்தி 
சமாதானம்   செய்து  கொண்டான்..


மற்றொருமுறை  அதியனுக்குத்  திரை  செலுத்தாதவரைத்  தேடிச் சென்று  அதியனின்  வாள்  திறம்   வேலின் உறுதி  யானைப்  படையின்  வீரம்  பற்றி  எடுத்துக்  கூறி  அவர்களைத்  திறை  செலுத்தும்படி  செய்தார்.   பின்னர் மலாடர் கோமானுடன்போரிட்டு  வென்ற  செய்தியைப்  புகழ்ந்து  பாடி  மகிழ்ந்தார்.  இவ்வாறு  அதியன்  மீது  கொண்ட  அன்பால்  அவன்  மீது  பலபாடல்களைப்  பாடி  மகிழ்ந்த  ஒளவையார்  ஒரு  முறை  அதியனைக்  காணச்  சென்றார்.  புலவர்களின்  வழக்கப்படி  பரிசிலை  நாடிச்  சென்றார்.  பல  நாட்கள்  அதியனின்  அரண்மனையில்  விருந்தினராய்  இருந்தார்.  



அதியன்  பரிசில்  தராமல்  காலம் தாழ்த்தினான். ஒளவையார்  மீது  கொண்ட  பேரன்பால்  பரிசில்  கொடுத்து  விட்டால்  அவர்  தன்னைப்  பிரிந்து  சென்று  விடுவார்  என்று  எண்ணியே  காலம்  தாழ்த்தினான்.  ஒளவையார்  'ஒரு  நாள்  பழகினாலும்  பலநாள்  பழகினாலும்  முதல்  நாள்  போலவே  என்றும்  அன்பு  செலுத்துபவன்  அதியன்.  அவன்  பரிசில்  தராவிடினும்   யானையின்  கொம்பிடை  வைத்த  உணவு  எப்படி  யானைக்குத்  தப்பாதோ  அதுபோலத்  தப்பாமல்  அவனது  பரிசில்  நமக்குக்  கிட்டும்.  மனமே  வருந்தாதே. அவன்  வாழ்க'  என  வாழ்த்திவிட்டுப்  புறப்பட்டார்.  இதனைக்  கேள்வியுற்ற  அதியன்  ஓடோடி  வந்து  ஒளவையாரிடம் மன்னிப்புக்  கேட்டுக்கொண்டு  பரிசிலைக்  கொடுத்தான்.  இப்பாடல்  மூலமாக  புலவர்கள்  ஒரு இடத்தில்  தங்காதவர்கள்  என்று  தெரிந்து  கொள்ளலாம்.  அத்துடன்  ஒளவையார்  மீது  அதியன்  கொண்டுள்ள  அன்பையும்   இந்நிகழ்ச்சி  காட்டுகிறது.  அதியமான்  ஒளவையாரிடம்  கொண்ட  அன்பினை  எடுத்துக்  காட்டும்  நிகழ்ச்சிகளிலேயே  மிகச்  சிறந்த  நிகழ்ச்சி  ஒன்று  உண்டு.  அதுதான்  நெல்லிக்கனி  அளித்த  செயல்.  அதியன்  மிகவும்  பாடுபட்டுப்  பெற்ற  நெல்லிக்கனி.  அதனை  உண்டவர்  நீண்ட  நாள்  வாழ்வார்கள்  என்னும்  சிறப்பினைப்  பெற்றது  அக்கனி.  அத்தகு  கனியைத்   தான்  உண்ணாது  ஒளவைக்குக் கொடுத்தான்  அதியன்.  


ஆதலால்  அக்கொடையை   நினைத்து  ஒளவையார்  நீ  சிவ பெருமானைப்  போல வாழ்வாயாக  என  வாழ்த்தினார். தன்னைப்  போல  மன்னர்  பலர்  தோன்றுவர்.  ஆனால்  ஒளவையாரைப்  போலப்  புலவர்கள்  சிலரே  தோன்றுவர்  எனவே  அவர்   நீண்ட  நாள்  வாழ்ந்து  தமிழுக்குத்  தொண்டு  செய்ய  வேண்டும்  என்ற  எண்ணத்தினால்  ஒளவையாருக்கு  இக்கனியைக்  கொடுத்தான்  அதியன்.  அத்துடன்  அக்கனியின்  சிறப்புக்களை  மறைத்து  ஒளவையார்  அக்கனியினை  உண்ட  பிறகே  அதன்  சிறப்புக்களை பற்றிக்  கூறினான்   .எனவே  அவனது  அன்புள்ளம்  புலனாகிறது   அதியனின்  வீரத்தை  முதலில்  கூறிப்  பின் வாழ்த்துகிறார்.அப்பாடல்,
'.............................
...........................
பால்புரை  பிறைநுதல்  பொலிந்த  சென்னி
நீல மணிமிடற்று  ஒருவன்  போல
மன்னுக  பெரும  நீயே  தொனனிலைப்
பெருமழை  விடரகத்து  அருமிசை  கொண்ட 
சிறியிலை  நெல்லித்தீங்கனி  குறியாது
ஆதல்  நின்னகத்து  அடக்கிச்
சாதல்  நீங்க  எமக்கு  ஈத்தனையே.'  என்ற  பாடல்  அதியமான்  ஒளவையார்  மீது  கொண்ட  நட்பையும்  அன்பையும்  புலப்படுத்துகிறது.

Thursday, October 8, 2009

நல்லோர் சேர்க்கை நலம் தரும்

மாலை நேரம் இருட்டிவிட்டது.மழைக்காலம் வேறு. குளிர் காற்று அடிக்கத் தொடங்கிவிட்டது. சோமுவின் பாட்டி சோமுவின் வரவிற்காகக் காத்திருந்தார்.நன்றாக இருட்டிய பின்பே சோமு வீடு திரும்பினான். பாட்டி வருத்தத்துடன் பேசியதைக் கூட அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இரவு நேரம் வழக்கம்போல் பாட்டியின் அருகே படுத்துக் கொண்ட சோமு "பாட்டி, கதை சொல் பாட்டி."என்றான்."என் கேள்விக்குப் பதில் சொல். பிறகு நல்ல கதை சொல்கிறேன் " என்றார் பாட்டி. "ம்" என்றான் மெதுவாக."ஏன் இன்று இருட்டிய பிறகு வீட்டிற்கு வந்தாய்?' என்னிடம் அதற்காக எந்த காரணத்தையும் சொல்லவில்லையே! ஏன் "என்றார். சோமு தயங்கியவாறே "பாட்டி, என்வகுப்புப் பையன் புதிதாகச் சேர்ந்தவன் என்னை விளையாட வெகு தூரம் அழைத்துப் போய் விட்டான். நான் வேண்டாமென்றுதான் சொன்னேன். 



அவன் கேட்கவில்லை அதோடு யாரிடமும் சொல்லாதே என்று சொல்லிவிட்டான் பாட்டி" என்றான் மெதுவாக. பாட்டி அவனைத் தடவிக் கொடுத்தார். "சோமு நண்பர்கள் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர்கள் நல்ல பண்பு உடையவர்களா என்று ஆராய்ந்து பார்த்த பிறகு தான் நட்புக் கொள்ளவேண்டும்.""அதனால் மட்டும் என்ன பயன் பாட்டி?" " உனக்கு ஒரு கதை சொல்கிறேன். நல்லோர் சேர்க்கை எத்தனை நல்லது என்று உனக்கே புரியும்." சோமு ஆவலுடன் கதை கேட்கத் தயாரானான். பாட்டி குரலைச் சீர்படுத்திக் கொண்டு சொல்லத் தொடங்கினார்.-- 'ஒருமுறை நாரதர் நாராயணனிடம் ஒரு கேள்வி கேட்டார். நல்ல சான்றோருடன் சேர்வதனால் என்ன பயன் ஏற்படும்? நாராயணன் பதில் சொன்னார். நாரதா! பூவுலகில் அதோ தெரியும் மரத்தடியில் ஒரு பசு சாணமிட்டுள்ளது. 

அதில் ஒரு புழு நெளிந்து கொண்டிருக்கிறது. அதனிடம் சென்று இக்கேள்வியைக் கேள். என்று சொல்லி அனுப்பி விட்டார். நாரதனுக்கு சந்தேகம் இருந்தாலும் நாராயணன் சொல்வதால் பூவுலகிற்கு வந்து அந்தப் புழுவைச் சந்தித்தார். ஏ புழுவே! நல்ல சான்றோருடன் சேர்வதனால் என்ன பயன்? புழு நாரதரைத் தன் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு தன் உயிரை விட்டுவிட்டது. பதறியபடியே மீண்டும் நாரதர் நாராயணனிடம் வந்தார். இறைவ! அந்தப புழு தன் உயிரை விட்டு விட்டதே! என்றார். புன்னகை புரிந்த நாரணன், சரி, அதோ அந்த மரத்தில் ஒரு கிளி குஞ்சு பொரித்துள்ளது. அந்தக் குஞ்சினிடம் சென்று கேள். என்று நாரதரை அனுப்பி வைத்தார். நாரதர் மீண்டும் பூவுலகம் வந்து கிளியிடம் வந்து நின்றார். கிளியிடம் தன் கேள்வியைக் கேட்டார்.


புழுவைப் போலவே கிளியும் நாரதரைப் பார்த்து விட்டு தன் உயிரை விட்டு விட்டது. அதைப் பார்த்த நாரதர் நாராயணா! என்று பதறியபடியே வைகுண்டத்தை அடைந்தார். அதே எழில் கொஞ்சும் புன்னகையுடன் பள்ளி கொண்டிருந்த நாராயணன் ஒன்றுமே அறியாதவர் போல் பேசினார். உன் கேள்விக்கு விடை கிடைத்ததா நாரதா? என்றார். சுவாமி நாராயணா! இது என்ன சோதனை! அந்தக் கிளியும் தன் ஜீவனை விட்டு விட்டதே! சரி இப்போது அந்நாட்டு மந்திரியின் வீட்டில் ஒரு பசு கன்று ஒன்றை ஈன்றிருக்கிறது. அதனிடம் சென்று கேள். உன் கேள்விக்கு இப்போதாவது விடை கிடைக்கிறதா பார்ப்போம். என்றார். நாரதரும் தயங்கியவாறே அந்தப் பசு இருக்குமிடம் தேடி வந்து சேர்ந்தார். புதிதாகப் பிறந்திருந்த அந்தக் கன்று மெதுவாக எழுந்து ஓடத் தொடங்கியிருந்தது. அங்குமிங்கும் ஓடியாடும் அழகிய கன்றினிடம் தன் கேள்வியைத் தயக்கத்துடனே கேட்டார் நாரதர். தன் ஓட்டத்தை நிறுத்தி விட்டு நாரதரைப் பார்த்தது அந்தக் கன்று. உடனே அதன் உயிர் பிரிந்தது. நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தக் கேள்வியில் ஏதோ பொருள் உள்ளது. 

இறைவன் நம்மையும் சோதிக்கிறார் என எண்ணியபடியே மீண்டும் வைகுண்டம் வந்தார். நாராயணனை வணங்கி நின்றார். நாராயணா! இது என்ன சோதனை! இந்தக் கன்றும் உயிர் விட்டுவிட்டதே! என் கேள்விக்கு விடையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இனி நான் யாரிடமும் சென்று இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டேன். என்றார் தலை குனிந்தவாறே. இந்தமுறை உன் கேள்விக்கு விடை கிடைத்து விடும். காசி ராஜனுக்கு ஒரு மகன் பிறந்துள்ளான். அவனிடம் சென்று இக் கேள்வியைக் கேள். என்றவுடன் நாரதர் அலறி விட்டார். நாராயணா! என்ன சோதனை. காசிராஜன் மகனுக்கு ஏதேனும் ஊரு விளைந்துவிட்டால் அந்த மன்னன் என்னை விட்டு விடுவானா ? என்ன பரீக்ஷை இது சுவாமி? என்று அச்சப்பட்டார். ஆனாலும் இறைவனின் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் காசி நகர் நோக்கிச் சென்றார். அங்கு நகரமே கோலாகலமாக இருந்தது. 


பல ஆண்டுகளுக்குப் பிறகு மன்னனுக்கு மகன் பிறந்ததில் மன்னன் மிகவும் மகிழ்ந்திருந்தான். நாரதர் யார் கண்ணுக்கும் படாதவாறு தன் உருவத்தை மறைத்துக் கொண்டார். நேரே பாலகன் படுத்திருந்த தொட்டில் அருகில் சென்று நின்றார். அவரைக் கண்டவுடன் பிறந்த குழந்தை சிரித்தது. அதன் அருகில் சென்று நின்றார் நாரதர். உங்கள் சந்தேகம் என்ன கேளுங்கள் நாரதரே என்றது குழந்தை. நற்பண்புகளுடன் கூடிய நல்லோரைக் காண்பதனால் என்ன பயன்,சான்றோர் சேர்க்கையால் நாம் அடையும் பயன் யாது? நாரதரே! முதலில் நான் ஒரு புழுவாகப் பிறவி எடுத்திருந்தேன். உங்கள் தரிசனம் கிடைத்தது. உடனே அந்தப் பிறவி எனக்கு நீங்கியது.அடுத்து கிளியாகவும் அதன் பின் பசுங்கன்றாகவும் பிறந்தேன். அப்போதும் தங்களின் தரிசனத்தால் அந்தப் பிறவிகளும் நீங்கப்பெற்றேன். இப்போது அரசன் மகனாகப் பிறக்கும் பாக்கியம் பெற்றேன். இப்போதும் தங்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றுள்ளேன்.ஒவ்வொரு முறையும் சான்றோராகிய தங்களின் தரிசனத்தால் எனது பிறவி உயர்ந்து கொண்டே சென்று இன்று மன்னன் மகனாகப் பிறக்கும் தகுதியை அடைந்துள்ளேன். இப்பிறவியும் நீங்கி இறைவனடி சேரும் பெரும் பேறு கிட்டிவிட்டது. தங்களுக்கு என் நன்றி. வருகிறேன் நாரதரே! என்றபடியே அக்குழந்தையும் கண்களை மூடிக்கொண்டது. நாரதர் நேரே நாராயணனிடம் வந்து சேர்ந்தார்.நாராயணா! சான்றோர் சேர்க்கை நன்மையையும் உயர்வையும் தரும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். என்றார்.'" அதனால்தான் நல்லவர்களோடு சேர்ந்தால் நமக்கு நன்மை கிட்டும் என்று சொன்னேன்.என்றார் பாட்டி.


சோமுவும் இன்று எங்கள் ஆசிரியர் கூட செய்யுளில் இதைத்தான் சொன்னார்கள் பாட்டி.என்றான். அப்படியா? என்ன அது? சொல் பார்ப்போம்.

"நல்லாரைக் காண்பதுவும் நன்றே 
நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று."

அழகாக சோமு சொல்லிய பாடலைக்கேட்டு பாட்டி மகிழ்ந்தாள்.சோமு எப்போதும் ஒருவரை நல்லவன் என்று தெரிந்து கொண்ட பிறகு நட்புக்கொள். தெரிந்ததா?சோமுவும் மகிழ்ச்சியுடன் படுத்துக் கொண்டான்.

Tuesday, September 1, 2009

கபிலரின் நட்பு

பாண்டிய நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது மதுரை மாநகர். இந்நகரின் கிழக்குப் பகுதியில் உள்ளது வாதவூர் என்னும் சிற்றூர். இச்சித்ரூரில் பிறந்தவர் தான் கபிலர் என்னும் செவி வழிச் செய்தி நிலவுகின்றது. 'புலனழுக்கற்ற அந்தணாளன் ' எனச் சங்கத்துச் சான்றோரால் பாராட்டப் பெற்றவர். 

வாதவூர் என்பது தென்பறம்பு நாட்டைச் சார்ந்தது. பறம்பு நாட்டை வேள்பாரி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.வேள்பாரியின் பால் மாறாத அன்பு கொண்ட கபிலர் பாரியின் உயிர் நண்பனாக அவனுடனேயே வாழ்ந்து வந்தார்.அன்பும் பண்பும் கொண்ட அந்தணராகிய கபிலர் பெரும் புலமை பெற்றவர்.பாரியின் அவைக்களப் புலவராகவும் திகழ்ந்தார்.செந்தமிழ்ப் பாக்கள் இயற்றும் சிறப்பு காரணமாக வேந்தர் பலரையும் இவர் சென்று கண்டு பரிசில் பெறுவதும் உண்டு.

ஒருமுறை சேர நாட்டை நாடிச் சென்றார். அப்போது அந்நாட்டை ஆண்டவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் மன்னன்.அவனைச் செந்தமிழால் சிறப்புச் செய்தார் கபிலர்.அவரது பாடலின் சிறப்பைக் கேட்டு வியந்த மன்னன் கபிலருக்கு நூறாயிரம் காணம் பொன் கொடுத்ததுடன் "நன்றா" என்னும் குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட இடமெல்லாம் புலவருக்குக் கொடுத்தான். பிற்காலத்தில் இவ்விடம் " நணா" என மருவியது. இதனைச் சூழ்ந்த பகுதிகள் கபிலருக்குக் கொடுக்கப் பட்டமைக்குச் சான்றாக அங்கே கபிலக் குறிஞ்சி என்ற ஊர் இன்னும் உள்ளது. 

கபிலரது பாடல்களில் குறிஞ்சி நில வர்ணனைகளே மிகுந்து காணப் படுகின்றன. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும் . மலையும் அருவியும், சுனையும் தேனடையும், பலாவும் இவர் பாடல்களில் அழகு சேர்ப்பன. இவ்வாறு குறிஞ்சி நிலத்தைப் பலபடப் பாடிய திறத்தால் "குறிஞ்சிக்குக் கபிலன்" என்ற பெயரையும் பெற்றார். 

ஆரிய நாட்டு மன்னன் பிரகத்தன் என்பான் சேர மன்னன் செல்வக் கடுங்கோவின் சிறந்த நண்பன். இவனது துணையால் கபிலரின் நட்பைப் பெற்றான். தமிழில் காணப்படும் அகப்பொருள் நலத்தை அறிய விரும்பிய பிரகத்தன் அதனை விளக்கிக் கூறுமாறு கபிலரைக் கேட்டான். அவனுக்காக கபிலர் எழுதிய நூல் "குறிஞ்சிப் பாட்டு" எனப்பட்டது. இந்த நெடும் பாட்டு தமிழகத்தின் ஒழுக்கத்தின் மாண்பினை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

ஒருமுறை காட்டின் வழியே நடந்து செல்லும் கபிலர் வழியில் ஆண் பன்றி நின்று கொண்டிருப்பதைக் காண்கிறார்.அவரது கற்பனை விரிவடைந்து பாடலாக வருகிறது. அப்பாடலின் கருத்து, " தன் குட்டிகளோடு பெண் பன்றி படுத்திருக்கிறது. அவற்றை வேட்டுவரும் அவரது நாய்களும் அணுகாதவாறு வெருட்டி ஓட்டியது ஆண் பன்றி. பின்னர் தனது பெண் பன்றியையும் அதன் குட்டிகளையும் வேறிடத்தில் சேர்த்து விட்டுக் காவலாக வழியிலேயே நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த வேட்டுவன் " படைமறவரோடு அஞ்சாது போரிடும் தன் தலைவனைப் போல் அதன் செயல் இருப்பது கண்டு அதனைக் கொல்லாது விட்டுச்சென்றான்." என்ற கருத்தமைந்த பாடல் இவரது குறிஞ்சி பாடும் திறமைக்குச் சான்றாகும்.இவரது உயிர் நண்பன் வேள்பாரி மூவேந்தரின் வஞ்சனையால் இறந்து பட்டான். அவன் பிரிவுக்குப் பெரிதும் வருந்திய கபிலர் பாரியுடன் தானும் உயிர் விடத் துணிந்தார்.ஆனால் பாரியின் வேண்டுகோள் காரணமாக அச்செயலைக் கபிலர் செய்யாது விடுத்தார். பாரியின் மக்கள் அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பல மன்னர்களையும் நாடிச் சென்றார். மூவேந்தரின் பகைக்கு அஞ்சியோ யாது காரணம் பற்ற்யோ எந்த அரசரும் அம மகளிரை மணந்து கொள்ள முன் வரவில்லை. கபிலர் எத்துணை முயன்றும் அவரது முயற்சி பயன் தரவில்லை. முடிவில் மலையமான் நாட்டுத் தலைநகர் திருக்கோவலூரை அடைந்தார்.அங்கே வாழ்ந்த பார்ப்பனர் ஒருவரிடம் பாரியின் மக்களை அடைக்கலப் படுத்தினார்.பார்ப்பனரிடத்திலுள்ள பொருட்கும் உயிர்கட்கும் எவ்விதத் தீங்கும் செய்தலாகாது என்பது அந்நாளைய முறை.அத்துடன் பெண் கேட்டு அதுவே காரணமாகப் போரிடுவதும் இல்லை. இதனை நன்கறிந்திருந்த கபிலர் பாரியின் மக்களை பார்ப்பனரிடம் அடைக்கலப் படுத்தித் தன் பெருஞ்சுமையை விளக்கிக் கொண்டார். 

உயிர் நண்பன் பாரியின்றி இந்நிலவுலகத்தில் வாழ்வதையே பெருஞ்சுமையாகக கருதினார் கபிலர். பாரியின்றி வாழும் கபிலர் உயிரற்ற உடல்போல் உணர்ந்தார்.இம்மையில் பிரிந்து விட்ட பாரியை மறுமையில் இணைந்து வாழ விருப்பம் கொண்டவரானார்.தென் பெண்ணை ஆற்றுக் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டார் கபிலர். அப்போது அவர் பாடிய பாடலில் பாரியின் மறைவுக்கு அவர் வருந்திய வருத்தமும் நண்பனின் பிரிவால் அவர் பட்ட துயரமும் நன்கு புலனாகும்." மாவண் பாரி ! என்னை நீ பலகாலம் பேணிக் காத்தாய். அது போழ்து ஏன் உயிர் நண்பனாக இருந்தாய்.ஆனால் நீ இவ்வுலகை விட்டுப் பிரியுங்கால் என்னை உன்னுடன் வரவிடாது "இங்கேயே இருந்து பின் வருக" என்று கூறிச் சென்று விட்டாய். இனியும் உன்னைப் பிரிந்து என்னால் தனித்து வாழ இயலாது. இப்பிறவியில் நம்மை நட்பால் சேர்ந்து வாழச் செய்த நல்லூழ் மறுமையிலும் உன்னுடன் வாழும் வாழ்வை ஈவதாக!" என்று பாடி மறைந்தார்.இன்றும் கோவலூர் அருகே கபிலக்கல் ஒன்று இருக்கிறது.அது கபிலரின் வடக்கிருந்த செய்தியைக் கூறிக்கொண்டிருக்கிறது. நட்பு என்றதும் வேள்பாரி கபிலரின் நட்பு நமக்கு நினைவுக்கு வரும் அளவிற்கு வாழ்ந்து மறைந்தவர் கபிலர். இவரது குறிஞ்சிப் பாட்டு நூல் தவிர ஐங்குறுநூறு என்னும் நூலில் குறிஞ்சித்திணை பற்றிய நூறு பாடல்கள் பாடியுள்ளார்.

இவையேயன்றி அகம் புறம் பதிற்றுப் பத்து கலித் தொகை குறுந்தொகை நற்றிணை பத்துப்பாட்டு நூல்களிலும் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.புலவர் வரிசையில் கபிலருக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு என்பதில் ஐயமில்லை.

Wednesday, August 26, 2009

நல்ல தீர்ப்பு - இரண்டாம் பகுதி

நேரமாகிவிடவே சந்திரன் தானே தனக்கு வேண்டிய பொருட்களைச் சேகரித்துக் கொண்டு தன்னையும் தயாரித்துக் கொண்டான். குறிப்பிட்ட நேரம் வந்தது.மேடையில் பல மாணவர்கள் தங்கள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். இதோ ஆசிரியர் சந்திரனின் பெயரை அறிவித்துவிட்டார். பேனா ரிப்பேர் செய்பவன்போல வேடம் புனைந்திருந்த சந்திரன் மேடையில் ஏறித் தன் திறமையை வெளிப் படுத்தி நடித்தான்.அடுத்தவன் சரவணன். 

அழகாக உடையணிந்து ரோஜா மலர் ஒன்றைத் தன் சட்டைப் பையில் குத்திக் கொண்டு நேருவாக வேடம் புனைந்தவன் மேடையேறினான். பொறாமையே உருவான சந்திரன் சரவணன் வருவது தெரியாதவன் போல் சட்டெனத் திரும்புவது போல் பாசாங்கு செய்து தயாராகத் திறந்து வைத்திருந்த இங்கி புட்டியை அவன் மீது சாய்த்து விட்டான். ஒரு கணம் திகைத்து நின்றான் சரவணன். தன் மீது சிந்தியிருந்த மையைக் கூர்ந்து நோக்கினான். அதற்குள் ஆசிரியர் அவன் பெயரை இரண்டு முறை அழைத்து விட்டார்.சந்திரன் "சாரி, சரவணா!, தெரியாமல் கொட்டிவிட்டது."என்று மெதுவாகக் கூறிவிட்டு நகர்ந்தான். அவன் உள்ளம் இனி எப்படி சரவணன் மேடை ஏறுவான்? என்று மகிழ்ச்சி கொண்டது. சரவணன் அருகில் நின்ற ராமுவின் காதில் ஏதோ கூறவே அவன் நீதிபதியாக வந்தவரிடம் ஓடிப் போய்ப் பேசிவிட்டு வந்தான். 

உடனே ஆசிரியர் தலையசைத்து அனுமதித்ததும் சரவணன் மேடை மீது ஏறினான்.பாரத மாதாவாக வேடமணிந்து வந்திருந்த மாணவன் கையிலிருந்த மூவர்ணக் கொடியைத் தன் கையில் ஏந்திக் கொண்ட சரவணன்,மேடை மீது நின்று திருப்பூர் குமாரனாக வீர வசனம் பேசி தடியடி பட்டவனாகக் கையில் கொடியுடன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். கடைசியில் கொடியைக் கீழே விடாமல் பிடித்துக் கொண்டே மேடையில் சாய்ந்தான். அவன் திறமையைக் கண்ட மாணவர் கூட்டம் முழுவதும் பலத்த கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.சற்று நேரத்தில் நீதிபதி எழுந்து நின்று அறிவிக்கத் தொடங்கினார்."மாணவர்களே!உங்கள் திறமையைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தோம். யாருக்கு முதல் பரிசு கொடுப்பது என்று திகைக்கும் அளவிற்கு நன்றாக நடித்தீர்கள். பேனா வியாபாரியாக வந்த மாணவனுக்குத்தான் முதல் பரிசு தரவேண்டுமென நாங்கள் முடிவு செய்திருந்தோம்.ஆனால் கடைசியாக வந்த மாணவன் சரவணன் நேருவாக நடிக்க வந்தவன் தன் மீது தவறுதலாக சிகப்பு மை கொட்டிவிட்டதால் திருப்பூர் குமாரனாக நடிக்கப் போவதாகச் சொல்லியனுப்பினான். 

தவறு நேர்ந்து விட்ட போதும் அதற்காகக் கலங்காமல் அதையே மாற்றித் தன் திறமையை வேறு வழியில் வெளியிட்ட அச் சிறுவனின் சமயோசித அறிவைப் பாராட்டுவதோடு முதல் பரிசையும் அவனுக்கே அளிக்க முடிவு செய்துள்ளோம். சரவணனுக்கு முதல் பரிசும் சந்திரனுக்கு இரண்டாம் பரிசும் அளிக்கிறோம்."என்று கூறிய போது அனைவரும் சரியான தீர்ப்பு எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.தன் தவறுக்கு தண்டனை கிடைத்ததை உணர்ந்து கொண்ட சந்திரன் சரவணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.அன்று முதல் பொறாமையைத் தன் மனத்திலிருந்து ஓட்டி விட்டு நல்ல நண்பனாகத் திகழ்ந்தான்.

Tuesday, August 25, 2009

நல்ல தீர்ப்பு - முதல் பகுதி

சரவணன் மிகவும் கெட்டிக்காரன். நன்றாகப் படிப்பவன். படிப்பில் மட்டுமல்லாமல் நாடகம் இசைப் போட்டி, பேச்சுப் போட்டி,போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிறையப் பரிசுகளைப் பெற்றிருக்கிறான். அந்த ஆண்டும் எல்லாப் போட்டிகளையும் வைப்பதற்காக தமிழாசிரியரும் பிற ஆசிரியர்களும் ஈடுபட்டிருந்தனர் . சரவணனின் வகுப்பில் சந்திரன் என்று ஒரு மாணவன் படித்து வந்தான்.அவன் எப்போதும் பெருமை பேசிக்கொண்டே இருப்பான். அதனால் அவனை அனைவரும் சவடால் சந்திரன் என்றே அழைப்பார்கள்.வழக்கம்போல் தன் சவடால் வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தான் சந்திரன்." இந்த ஆண்டு மாறு வேடப் போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். வேறு யாராலும் ஜெயிக்க முடியாது.

" என்று கர்வமாகப் பெசிவந்தான். அவன் நண்பர்கள் அதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர் .ராமுவுக்கு மட்டும் சந்திரனின் பேச்சு வெறும் சவடாலாகப் பட்டது. "டேய் சந்தர்! வெறும் சவடால் விடாதே! சரவண னை மாறு வேடப் போட்டியிலே யாராலும் ஜெயிக்க முடியாது.""சரவணன் என்னடா! அவனுக்கும் மேலே யார் வந்தாலும் அய்யாதான் ஜெயிப்பாரு. தெரியுமா!" " டேய், டேய்! எப்படிடா ஜெயிப்பே?"பலரது குரல்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள அவன் அந்த இடத்துக் கதாநாயகனானான்."அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஜெயிச்ச பிறகு சொல்றேன்." ஏமாற்றமடைந்த மாணவர்கள் கசமுசவென்று பேசியவாறே கலைந்து சென்றனர்.போட்டிகளுக்கான நாளும் வந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல சரவணன் பலபோட்டிகளில் முதல் பரிசு பெற்றான். மறு நாள் மாறுவேடப்போட்டி என அறிவித்தாய் விட்டது. சவடால் சந்திரன் நிலை கொள்ளாமல் தவித்தான். ஆனால் எப்போதும் முதல் பரிசு வாங்கும் சரவணனோ மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இருந்தான். சரவணனைப் பார்க்கும் போதெல்லாம் சந்திரன் பற்களைக் கடித்தான்."இரு, இரு, மாறு வேடப் போட்டியிலே உன்னை மண்ணைக் கவ்வ வைக்கிறேன்." என்று மனதுக்குள் கருவினான். ஆனால் சரவணன் என்ன வேடம் போடப் போகிறான் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருந்தான். அதனால் அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான்." சரவணா! நாளைக்கு மாறுவேடப் போட்டியிலே நீயும் கலந்து கொள்கிராயல்லவா?""ஆமாம், நீயும்தானே கலந்து கொள்கிறாய்?""ஆமாம் சரவணா! ஆனால் என்ன வேடம் போடறது அப்பிடின்னுதான் யோசிக்கிறேன். நீ என்ன வேடம் போடப் போகிறாய்?" அப்போது ராமு குறுக்கே வந்தான்."டேய் சந்திரா! யாரு கிட்டேயும் என்ன வேடம்னு கேக்கக் கூடாது. நீயா வேடம் போட வேண்டியதுதான்."சரவணன் மென்மையாகச் சிரித்தான்."ராமு! பரவாயில்லை. நமக்குள்ளே என்ன இருக்கு! நான் போடப்போற வேடம் நம் மாந்தருள் மாணிக்கம் நேரு மாமாவின் வேடம். சந்திரா! நீயும் நல்ல வேடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள். பரிசு உனக்கே கிடைக்க நான் வாழ்த்தறேன்." என்றான் சரவணன்.சவடால் சந்திரனின் மனதில் மெதுவாக ஒரு திட்டம் உருவானது. இப்போது அவன் மனதில் " நான் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை. 

இந்த சரவணன் ஜெயிக்கக் கூடாது" என்ற எண்ணமே நிறைந்திருந்தது.பொழுது புலர்ந்தது. அன்று மாலைதான் மாறுவேடப் போட்டி நடை பெறப் போகிறது. இதுவரை தனக்கு உதவி செய்வதாகச் சொல்லியிருந்த மேக் அப் மேனாகப் பணியாற்றும் சந்திரனின் மாமா வரவில்லை. அவர் வந்து தனக்கு ஒப்பனை செய்வார் என்ற எண்ணத்தில் தான் தன் நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொண்டிருந்தான். இது வரை அவர் வராதது அவனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.

Saturday, August 15, 2009

சுபாஷ் சந்திர போஸ்

இந்திய துணைக் கண்டத்தின் சுதந்திர வரலாறு உலக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றின் நாயகர்களாக விளங்கியவர் பலராவர். அவர்களுள் படை நடத்தி வீரத்தின் வேகத்தை ஆங்கிலேயருக்குக் காட்டியவர் நேதாஜி எனப்பெயர் பெற்ற சுபாஷ் சந்திர போஸ் ஆவார். 



பாரத நாட்டின் சுதந்திர வீரராகவும் வீரத்தின் விளைநிலமாகவும் திகழ்ந்தவர், பாரதத்தின் மணியாகவும் விளங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.1897 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 28 ஆம் நாள் கல்கத்தாவில் ஜானகி நாதிர் போஸுக்கும் பிரபாவதி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தனது கல்லுரிப் படிப்பை கல்கத்தாவில் படிக்கும்போதே வெள்ளையர்களை அவர்களின் அதிகாரத்தை எதிர்க்கும் உணர்வைத் தன் உள்ளத்தில் வளர்த்து வந்தார். 



இவரது நாட்டுப் பற்றை ஒரு சிறு நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளலாம். இவரது வகுப்பில் பாடம் நடத்தும் பேராசிரியர் ஓர் ஆங்கிலேயர். அவர் ஒரு நாள் வகுப்பறையில் இந்தியர்களையும் இந்தியக் கலாச்சாரத்தையும் இழிவாகப் பேசினார். தேசீய உணர்வு மிகுந்த சுபாஷ் அவரை ஆசிரியர் என்றும் பாராமல் நன்கு அடித்து விட்டார். அவர் உள்ளத்தில் ஆங்கில ஆட்சியை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்ற எண்ணம் வேரோடி இருந்தது. அவர்களை விரட்ட இந்தியர்களுக்குப் படைப் பயிற்சி தேவை என முடிவு செய்தார். அதனால் இவர் கடற்படைப் பயிற்சியும் பெற்றார். தன் மேல்படிப்புக்காக இவர் லண்டன் சென்றிருந்த போது கவிக்குயில் சரோஜினி தேவி, சித்தரஞ்சன்தாஸ் போன்றோரின் பேச்சுக்களைக் கேட்டார். அதனால் இவரது விடுதலை வேட்கை மேலும் வளர்ந்தது. இந்தியாவில் இந்தியரின் நிலையை நன்கு உணர்ந்து கொண்டார். நாட்டு மக்களின் உள்ளத்தில் மேல்படிப்பான i சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டார். மேல் படிப்பான ஐ.சி.எஸ். தேர்வு எழுதாமலேயே பாரதநாட்டுக்குத் திரும்பினார். 



கல்கத்தா திரும்பியவுடன் 1921 -ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதன் மூலம் அரசியலில் பிரவேசம் செய்தார். மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் ஆகியோரின் சுயராஜ்யக் கட்சிக்காக இவர் உழைத்தார். விவசாயிகளின் நலனுக்காகவும் இவர் பாடுபட்டார். நாட்டின் இளைஞர்களின் நலனே இவர் கருத்தாக இருந்தது. இளைஞர்களின் எழுச்சி மிக்க தலைவராக விளங்கினார் சுபாஷ் சந்திர போஸ். இவரது பேச்சுக்களும் செயல்களும் ஆங்கில அரசின் கவனத்தை ஈர்த்தன. இவர் ஏற்படுத்திய இளைஞர் கட்சியின் வளர்ச்சியும் இவர் தனது பத்திரிகையான ' பார்வர்ட்' ல் எழுதிய கட்டுரைகளும் ஆங்கில அரசாங்கத்தின் ஆத்திரத்திற்கு வித்திட்டன. இதைக் காரணம் காட்டி இவரைச் சிறை பிடித்தது ஆங்கில அரசு. அக்காலத்திய அரசியல் கைதிகளுக்குக் கொடுக்கப்படும் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. அலிபூர் சிறையிலும் பின்னர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறையிலும் அடைக்கப்பட்டார். இங்குதான் திலகர் பெருமானும் அடைக்கப் பட்டிருந்தார். - இச்சிறை மிகவும் கொடுமை வாய்ந்தது. விஷ ஜந்துக்களும் சுகாதாரமின்மையும் சரியான உணவின்மையும் இவரது உடல்நிலையை மிகவும் மோசமாக்கியது .சிறையில் பல இன்னல்களை அனுபவித்தபின் விடுதலையானார். 



இவர் காந்தி இர்வின் ஒப்பந்தத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. வன்முறைக்கு வன்முறையாலேயே தீர்வு காண விழைந்தார். துப்பாக்கி ஏந்தி போராடித்தான் வெள்ளையரை விரட்ட முடியும் என்பதில் தளரா நம்பிக்கை கொண்டிருந்தார். கல்கத்தா நகரில் இவரது செயல்களைக் கண்காணித்து வந்த வெள்ளையர் அரசு இவரை மீண்டும் கைது செய்தது. இவர் எழுதிய கட்டுரைகளும் நடத்திய ஊர்வலங்களும் அரசுக்கு எதிரானவை என்று காரணம் சொல்லப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பாரத விடுதலைக்கு படை திரட்ட முற்பட்டார் சுபாஷ். டோக்கியோவில் ராம்பிகாரி கோஷ் உதவியுடன் இந்திய விடுதலை லீக் அமைக்கப்பட்டது. சுபாஷ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து வானொலி மூலம் இந்திய மக்களின் உள்ளங்களில் எல்லாம் சுதந்திரக் கனல் மூளும்படி வீர உரை ஆற்றினார். மக்களைப் படை திரட்டிப் போருக்கு எழுமாறு குரல் எழுப்பினார். இந்தியப் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மக்கள் இவர் மீது கொண்ட அன்பும் மதிப்பும் காரணமாக இவரை ' நேதாஜி' என்று அழைத்தனர். 



சிங்கப்பூர் வந்தடைந்த நேதாஜி பெரும் அணிவகுப்பினை நடத்தியதோடு பெரும் படையும் திரட்டினார்.1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இடைக்கால அரசினை அமைத்தார். கொரில்லாப்படை என்று புதிய போர்ப்படையை நிறுவி அதற்கு காந்திஜி, அசாத், நேருஜி என்று பெயரிட்டார். பர்மாவிலிருந்து அஸ்ஸாம் வழியாக இப்படை இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆங்கிலப்படையை எதிர்த்து பெரும்படை கொண்டு தாக்கியது. உள்ளத்தில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போராடினார் நேதாஜி. பெரும்படை திரட்டி உறுதியுடன் போராடியபோதும் எதிர்பாராவகையில் இவ்வுலக வாழ்வை நீத்தவர் நேதாஜி அவர்கள். பகைவரான ஆங்கிலேயருக்கு எதிராகப் படை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பாங்காக்கிலிருந்து பார்மோசாவிற்குச் சென்றார். அவர் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் வீரத்திலகமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற உயர்ந்த மனிதர் இந்திய புரட்சித் தலைவராக விளங்கிய மாபெரும் வீரத்தியாகி தன் இன்னுயிரை இம்மண்ணுக்காக அர்ப்பணித்தார். வீரம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். அவர்தம் நினைவு பாரத மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

Tuesday, August 11, 2009

கூனனை ஏமாற்றிய கதை - தெனாலி ராமன் கதைகள்

ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார்.

ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார்.

" கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்" என்று தண்டனையளித்தார். மன்னரும் " அப்படியே செய்யுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும் பேசாமல் நடந்தனர்.

ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.

தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது.
"அய்யா!" தெனாலிராமன் பெருங் குரலெடுத்துக் கூவி அழைத்தான். அந்த மனிதன் ராமனின் குரல் கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன் "பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்."என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே அமர்ந்தான்.
"யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?" என்றான்.

இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான். சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன்.

"அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக இருக்கிறது" என்றான்.

கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான்.

யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.

Monday, August 10, 2009

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை - thenaali raaman kadhai

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.

தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். இராமனையும் கேலி செய்தார். " இராமா! போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது?" இராமனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது." அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை கூடப் பயன் படாது." என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். மன்னருக்குக் கோபம் வந்தது." என்ன இப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?" "


வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன்.""அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம்."என்று பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர் இருவரும் . அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை "தொபுகடீர்" என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார்."இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? "" அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள்."

ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார் அரசர்."இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா?" என்றார் அரசர் வருத்தத்தோடு. "அரசே!, நோய்வாய்ப்பட்டு வயோதிக நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள்.


இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பராமரிக்கும் செலவும் குறைவு. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது.எனவேதான் இப்படிச் செய்தேன்.என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. " என்றான். மன்னரும் அதை ஒப்புக்கொண்டு தெனாலிராமனின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தார்.

Wednesday, August 5, 2009

தெனாலி ராமன் வித்தைக்காரனை வென்ற கதை

தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.

ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்து காட்டிய வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார்.

ஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறுமுன்பாகவே இராமன் "அரசே! இவனை விட வித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் " என்றவாறு முன்னால் வந்து நின்றான்.

அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது மிகவும் சுவை யுடையதாகவே இருக்குமல்லவா? எனவே ' உன் வித்தைகளையும் காட்டு ' என்று அனுமதி வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். "உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்."என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்."அய்யா! எல்லா வித்தைகளையும் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும்."என்றான்.

வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக "ப்பூ, நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்துகொண்டே செய்ய வேண்டும் அவ்வளவுதானே? நீ செய்து காட்டு" என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து "இந்த வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்" என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும்? " நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க" ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.பிறகு " தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் " என்றார்.

இராமன் "அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள்." என்று கேட்டுக் கொண்டான்.

அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.. பின்னர் தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் கொண்டார்.

Monday, August 3, 2009

காளியிடம் வரம் பெற்ற கதை - தெனாலி ராமன் கதைகள்

தெனாலி என்ற ஊரில் இராமன் என்பவன் வாழ்ந்து வந்தான்.அவனுடைய தந்தை இளம் வயதில் காலமாகி விட்டார் .மாமன் வீட்டில் வளர்ந்து வந்த தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை தெனாலி ராமனுக்கு ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது.

ஒருநாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்ன மாவாள் என்றும் சொல்லிச் சென்றார். அதன்படியே இராமனும் ஊருக்கு வெளியே இருந்த காளி கோயிலுக்குச் சென்று முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்தான். காளி பிரசன்னமாகவில்லை. இராமன் யோசித்தான். சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. முனிவர் சொன்னது ஆயிரத்துஎட்டு முறை என்பது. உடனே மீண்டும் கண்களை மூடிக் கொண்டு காளியை ஜெபிக்கத் தொடங்கினான்.

இரவும் வந்து விட்டது. ஆனாலும் இராமன் காளி கோயிலை விட்டு அகலவில்லை. திடீரென்று காளி அவன் எதிரே தோன்றினாள்.

"என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கோபமாகக் கேட்டாள் காளி. அவளை வணங்கி எழுந்த இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான்.
"தாயே நானோ வறுமையில் வாடுகிறேன். என் வறுமை அகலும் வழியும் எனக்கு நல்லறிவும் தரவேண்டுகிறேன். காளி பெரிதாகச் சிரித்தாள்.

" உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?"
"ஆம் தாயே. புகழடையக் கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் தந்து அருள் செய்ய வேண்டும்." என்றான் இராமன்.
காளி புன்னகையுடன் தன் இரண்டு கரங்களை நீட்டினாள். அதில் இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தன. அந்தக் கிண்ணங்களை இராமனிடம் தந்தாள் காளி.

"இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டுமே குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும் தேவையோ அந்தக் கிண்ணத்தின் பாலை மட்டும் குடி" என்றாள் புன்னகையுடன்.

இராமன் " என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன்.ஒரு கிண்ணத்தை மட்டும் அருந்தச் சொல்கிறாயே. நான் எதை அருந்துவது தெரியவில்லையே" என்று சற்று நேரம் சிந்திப்பது போல நின்றான். பிறகு சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் கொட்டிவிட்டு அந்தக் கிண்ணத்துப் பாலை மடமடவெனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளி திகைத்து நின்றாள்.

"நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்!"
"ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்." என்றான்.
"ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?"
"கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே!"
காளி புன்னகை புரிந்தாள். "இராமா! என்னையே ஏமாற்றி விட்டாய். நீ பெரும் புலவன் என்று பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய்." என்று வரம் தந்து விட்டு மறைந்தாள்.

இராமன் விகடகவி என்று சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டான். திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே என்று மகிழ்ந்தான்.

Sunday, August 2, 2009

பாரி மகளிர்

மன்னர்கள் மட்டுமன்றி அவர்தம் மக்களும் பாடல் பாடும் அளவிற்குச் சிறந்த தமிழறிவு பெற்றிருந்தனர் என்பதற்குப் பாரி மகளிரான அங்கவையும் சங்கவையும் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்தனர். பாரி மகளிரான இவர்களின் இயற்பெயர் தெரியவில்லை. கபிலர் பெருமானின் மாணவியரான இவர்கள் பாடல் இயற்றும் திறன் பெற்றிருந்தனர் என்பது இவர்கள் இயற்றிய ஒரே ஒரு பாடல் மூலம் தெரிகிறது.


பாரி பறம்பு மலையின் மன்னன். கபிலர் என்னும் செந்நாப் புலவரின் உற்ற நண்பன். பாரியின் வள்ளல் தன்மை உலகறிந்ததே. முல்லைக் கொடியின் கொழு கொம்பாகத் தன் தேரையே நிறுத்தி வள்ளல் பாரி என்னும் புகழ் கொண்டவன். மனித உயிர்களுக்கு மட்டுமன்றி பயிர்களுக்கும் பெருதவிசெய்யும் பெருமை படைததவன். இக்காரணத்தால் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்தான்.

மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்களும் பாரியின் புகழைக் குறித்துப் பொறாமை கொண்டனர். அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டனர். மூவேந்தரும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல மாதங்களாகியும் பறம்பு மலையைக் கைப்பற்ற இயலவில்லை. வஞ்சனையே உருவான மூவேந்தரும் வஞ்சகத்தால் பாரியை வீழ்த்த எண்ணினர்.போரை விரும்பாத பாரிவள்ளலிடம் கூத்தர் போல் வந்து வஞ்சனையாக அவன் உயிரைக் கவர்ந்தனர்.

பாரி கொல்லப் பட்டதும் பறம்பு மலை மூவேந்தர் வசமாயிற்று. பாரியின் உயிர் நண்பரான கபிலர் பாரியுடனேயே உயிர்
விடத் துணிந்தார். ஆனால் தன் இரு பெண்களையும் கபிலர் வசம் ஒப்படைத்து " இருந்து வருக " எனக் கூறி மடிந்த பாரியின் சொல்லுக்காகத் தன் உயிரைத் தாங்கியிருந்தார். பாரி மகளிரை மணம் செய்து தரும் பொருட்டு பலப் பல மன்னர்களைத் தேடிச் சென்றார். மூவேந்தருக்கு அஞ்சியோ வேறு யாது காரணம் பற்றியோ பாரி மகளிரை மணம் கொள்ள மறுத்தனர் சிற்றரசர்கள். மனமொடிந்த கபிலர் தன் மக்களாகக் கருதிய அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோவலூரிலுள்ள ஒரு பார்ப்பனரிடம் அடைக்கலமாகத் தந்து விட்டு வேள் பாரியுடன் சேர்வதற்காக தென்பெண்ணை யாற்றின் கண் வடக்கிருந்து உயிர் நீத்தார். இவர் வடக்கிருக்குங்கால் பாடிய பாடல்கள் புறநானூற்றின் கண் இலக்கியச் சான்றாகத் திகழ்கின்றது.

பாரி மகளிர் திருக்கோவிலூர் பார்ப்பனரிடத்தே அடைக்கலப் படுத்த யாது காரணம் என நமக்கு ஐயம் தோன்றுவது இயல்பு. அக்காலத்தே பார்ப்பனரிடம் உள்ள பொருளுக்கோ அவரின் அடைக்கலப் பொருளுக்கோ யாதொரு தீங்கும் செய்ய மாட்டார். மகட்கொடை வேண்டி அவரிடத்துச் செல்வதோ போர் தொடுப்பதோ செய்ய மாட்டார். எனவே அவரின் அடைக்கலப் பொருளான பாரிமகளிற்குத் தீங்கு நேராது என எண்ணினார் கபிலர்.

பாரி மறைந்து ஒரு திங்களாயிற்று. அன்று முழு நிலவு நாள். நிலவைப் பார்த்து அமர்ந்திருந்த பாரியின் மக்கள் இருவருக்கும் கடந்த திங்களன்று தந்தையுடன் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. துயரம் பொங்க வெண்ணிலவைப் பார்த்தனர். தமிழறிவு மிகுந்த அவர்தம் உள்ளத்திலிருந்து அவலச் சுவை மிகுந்த பாடலொன்று எழுந்தது. இப்பாடல் ஒன்றே இவர்களைப் புலவர் வரிசையில் இடம் பெறச் செய்து விட்டது.
" அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் 

 
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்
 
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின் 


வென்றெறி முரசின் வேந்தர் எம் 
 
குன்றும் கொண்டார்யாம், எந்தையும் இலமே " 

(புறம்;௧௧௨)


இப்பாடல் மிக எளிமையான பாடலாக இருப்பினும் தந்தையை இழந்த பெண்மக்கள் மனத்துயரை அவலச் சுவையாகக் காட்டுகிறது. வென்றெறி முரசு என்றது வஞ்சனையால் வென்ற மூவேந்தரை இகழ்ச்சி தோன்றக் கூறுவதாக அமைந்துள்ளது.

சென்ற திங்களில் எம் தந்தையும் இருந்தார், எங்களது நாடும் இருந்தது. இந்தத் திங்களில் எமது நாடும் இல்லை எம் தந்தையும் எங்களைப் பிரிந்தார். எனத் துயரம் தோன்றக் கூறியுள்ள இப்பாடலில் சோகத்தின் ஊடே இகழ்ச்சியும் தோன்றுமாறு அமைத்துள்ள திறம் நோக்கத் தக்கது.

மிகச் சிறிய பாடலாக இருந்தாலும் பாரி மகளிர் இப்பாடலைத் தமிழகத்திற்குத் தந்ததன் மூலம் தந்தையைப் போலவே அழியாப் புகழைத் தேடிக் கொண்டனர்.இலக்கிய வரிசையில் இடம் பெற்ற இப்பாடல் சிறந்த வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது.

Saturday, August 1, 2009

அன்பின் சக்தி - இரண்டாம் பகுதி

அன்பின் சக்தி - முதல் பகுதி

நாட்கள் பறந்தன. ராஜாவைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. பத்து நாட்கள் வரைதான் ராஜாமோகம் அதிகமாக இருந்தது. பிறகு ஒவ்வொருவராக சோமுவைச் சுற்றத் தொடங்கினர். ராஜா தன் கையில் பிஸ்கட் சாக்லேட் என்று வைத்துக்கொண்டு கூப்பிட்டாலும் ஒதுங்கிச் சென்றனர்.ஏனென்று ராஜாவுக்கு விளங்கவில்லை.அவன் நண்பன் நாணாவைப் பார்த்து,"ஏண்டா நாணா! ஏன் சீனு, ரமேஷ், பாலு, ரங்கன் இவங்கெல்லாம் என்னை விட்டுவிட்டுப் போயிட்டாங்க. எவ்வளவு தின்பண்டம் வாங்கித்தந்தேன்?

இன்னும் என்ன வேணும்னாலும் வாங்கித்தரேன்னு சொல்லு. அவங்களையெல்லாம் கூட்டிட்டு வாடா!" என்றான் படபடப்பாக.

நாணா அலட்சியமாகப் பதில் சொன்னான்."போனாப்போறாங்க விடு.நாம ரெண்டு மூணு பேருதான் இருக்கோமே ஜாலியா இருக்கலாம் நீ ஏண்டா கவலைப் படுறே?"

அவன் கையில் ராஜா வாங்கிக் கொடுத்த ஐஸ் உருகி கை வழியே வழிய அதை வேக வேகமாக நாவால் நக்கியபடி பதிலளித்தான் நாணா. ராஜாவை கவலை லேசாக சூழத் தொடங்கியது. எப்படியாவது சோமுவிடம் அதிக நண்பர்கள் சேராமல் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனை இரவு முழுவதும் தூங்க விடாமல் செய்தது.

ராஜா அன்று பள்ளிவிட்டு வரும்போதும் தன் நண்பன் நாணாவைச் சந்தித்தான். அவனுடன் ஆலோசனை செய்தபடி நடந்தான். நாணா சொன்னபடியே மறுநாள் சோமுவின் புத்தகப் பையைத் திருடி எடுத்துப் போய் பள்ளித் தோட்டத்துக் கிணற்றில் போட்டுவிட்டான். புத்தகப்பையைக் காணாத சோமு மிகவும் வருத்தத்துடன் வீட்டுக்கு வந்தான்.

அவனுடன் வந்த அவன் நண்பர்கள் ஒவ்வொருவரும்,"கவலைப் படாதே சோமு! உனக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதை நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாக நாங்கள் தருகிறோம். நீயும் படித்துப் புரிந்து கொண்டு எங்களுக்குச் சொல்லிக் கொடு. உன்னிடம் பாடம் கேட்கும்போது நன்றாகப் புரிவதோடு பயப்படாமல் சந்தேகங்களையும் கேட்டுக் கொள்ள முடிகிறது." எனக் கூறியபோது சோமு அனைவருக்கும் நன்றி சொல்லி அனுப்பி வைத்தான்.

நாட்கள் கடந்தன , இன்னும் பத்து நாட்களே ஆண்டுதேர்வுக்கு இருந்தன. சோமுவின் புத்தகங்கள் தொலைந்து போனதால் மாணவர்கள் தரும் புத்தகங்களை கடனாகப் பெற்றுப் படித்த சோமு இன்னும் அதிக கவனத்துடன் படித்தான். படித்ததை தன் நண்பர்களுக்கு அவர் கேட்கும்போதெல்லாம் விளக்கி சொன்னான். சோமுவின் பாடம் சொல்லும் முறைக்க்காகவும் அவனது நல்ல பண்பிர்க்காகவும் வகுப்பில் பாதிபேருக்கு மேல் சோமுவின் வீட்டில் மாலை நேரங்களில் கூடதொடங்கினர். அவரவருக்குத் தேர்வில் வெற்றிபெரவேண்டுமே என்ற கவலை வந்துவிட்டது .

அன்று மாலை ஆறு மணியிருக்கும். கணிதப்பாடத்தில் கடினமான கணக்கை விளக்கி சொல்லிகொண்டிருந்த சோமு அவன் பெயர் சொல்லி பெரியவர் அழைப்பதைப் பார்த்து எழுந்து நின்றான் .ராஜாவும் அவன் அப்பாவும் நின்றுருப்பதைப் பார்த்து கைகுவித்து அவருக்கு வணக்கம் சொன்னான். அங்கிருந்த ஒரு கிழிந்த பாயை மடித்துப் போட்டு அவரை அமரசொல்லி உபசரித்தான். அவன் அம்மா உள்ளே இருந்து நீர் மோர் கொண்டுவந்து கொடுத்து உபசரித்தாள். ராஜா நாணித் தலை குனிந்து நின்றிருந்தான். பெரியவர் பெரியசமியே பேசினார்.

"தம்பி சோமு! இதனை பைய்யங்கள் உங்க வீட்லயே இருக்கங்களே. அவங்களையெல்லாம் நீயே வீட்டுக்கு வாங்கனு கூப்பிடியா? அல்லது அவங்களாவே உன்னைத் தேடி வந்தாங்களா?"
அருகே நின்றிருந்த ரங்கன் , "நாங்களாதான் வந்தோங்க" என்றபோது கணக்கை போட்டு கொண்டிருந்த ரமேஷ் நிமிர்ந்தான். அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது.

"சோமு! இப்போ செரியாப் போட்டுட்டேன் பார். விடை வந்திடுச்சு." கைகொட்டி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சொன்னபடியே நிமிர்ந்தவன் பெரியவரை பார்த்து மௌனமானான். நோட்டை மட்டும் சோமுவிடம் தந்தான்.அதை வாங்கி பார்த்தார் பெரியசாமி. அதில் சோமு சொல்லிக் கொடுத்த கணக்குகள் எழுதப்படிருந்தன.

"இத்தனை பேர் உன் வீட்டிலே இருக்கிறார்களே! இவங்களோட பெற்றோர் இவங்களைத் திட்ட மாட்டாங்களா?" என்று சொன்னபோது , ரங்கன் இடைமறித்தான் ."எங்கள் வீட்டிலெல்லாம் பத்திரமா போய்வானு அனுப்புவாங்க."

பெரியசாமி தன் மகனைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு பையனைக் கேட்டார். "ஏன் தம்பி! உனக்கு வாத்தியார் சொல்லிதருவதில்லையா? ஏன் சோமுவிடம் வந்து படிக்கிறாய்?"

"வாத்தியாரை விட சோமு சொல்றது நல்லாப் புரியுது. அதோட சந்தேகம் வந்தாலும் பயமில்லாம, தைரியமா கேக்க முடியுது. அதனால எங்க வீட்டிலெல்லாம் சோமு வீட்டுக்கு போனாதான் படிப்பே " ன்னு சொல்லி அனுப்பிடுவாங்க.

"ஐயா! எனக்கு தெரிஞ்சதை என் நண்பர்களுக்கு விளக்கி சொல்றதாலே எனக்கும் மறக்காம இருக்கு. பரீட்சையிலே நல்லா எழுத முடியுது. அதனால் கேக்குறவங்களுக்கு நான் மறுக்காம சொல்லி தர்றேன் . எல்லாரும் என் கூடவே மாலை நேரத்திலே கொஞ்சநேரம் விளையாடிட்டு எங்க வீட்டுலே கூடிப் படிப்பாங்க. வேற காரணம் எதுவுமில்லே ஐயா" பணிவுடன் சோமு கூறவே பெரியசாமி அவனைப் பார்த்து அன்புடன் புன்னகைத்தார்.

அவனை அருகே அழைத்து அன்புடன் அவனைத் தடவிக் கொடுத்தார். " சோமு, நீ ஏழை இல்லேப்பா, பெரிய பணக்காரன். அறிவும் பணிவும் யார்கிட்ட இருக்குதோ அவன்தான் செல்வம் உடையவன். யார்கிட்ட பிறருக்கு உதவணும் என்கிற எண்ணம் இருக்கோ அவனே உயர்ந்தவன். நீ உயர்ந்தவன் , செல்வந்தன். இனி நீயும் எனக்கு ஒரு மகன்போலதான். ராஜா! நீ சொன்னபடி சோமுகிட்ட மன்னிப்புக்கேள். போட்டியிலே நீ தோத்துட்டே" என்றபோது சோமு ஒன்றும் புரியாமல் திகைத்தான். "ஐயா! என்கிட்டே ராஜா ஏன் மன்னிப்பு கேட்கணும்னு சொல்றீங்க. அவன் எந்த தப்பும் பண்ணலியே" என்றான்.

"உனக்குத் தெரியாது சோமு, உன் புத்தகப்பைய்யை இவன் கூட்டாளி நாணா கூட சேர்ந்துகிட்டு கிணத்துக்குள்ளே போட்டுட்டு உன்னைப் படிக்கவிடாம செய்யப் பார்த்தாங்க. ஆனா அதுவும் நடக்கல", என்று சொல்லிவிட்டு ராஜாவைப் பார்த்தார். கண்டிப்புடன் பார்த்த அவரது ஆணையை மீற முடியாமல் சோமுவின் கையயைப் பற்றிக் கொண்டான் ராஜா. அவன் தோள் மீது கை போட்டு அணைத்துக் கொண்ட சோமுவைக் கண்டு பெருமையுடன் சிரித்தார் பெரியசாமி. தன் மகன் திருந்திவிட்டான் என்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.

அன்பின் சக்தி - முதல் பகுதி

சோமு எட்டாம் வகுப்பில் படிக்கும் சிறுவன். அவன் தகப்பனார் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருபவர் . சோமுவும் தன் தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து நன்கு படித்து வந்தான். அவன் எண்ணமெல்லாம் தான் நன்றாக படித்து பெரிய டாக்டராகி அந்த ஊரிலயே ஒரு மருத்துவ விடுதி கட்டவேண்டும் என்பதுதான்.

எனவே இரவும் பகலும் எந்நேரமும் படிப்பு படிப்பு தான். அத்துடன் தன் வ்குப்பு மாணவர்களுக்கு கணிதம் அறிவியல் போன்ற கடினமான பாடங்களை எல்லாம் எளிதாகக் கற்றுத்தருவான். இதனால் பல மாணவர்கள் சோமுவுக்கு நண்பர்களானார்கள்.

அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர் பெரியசாமி. அவ்வூரிலேயே பெரிய ஆலைக்குச் சொந்தக்காரர். அவரது மகன் ராஜாவும் சோமுவின் வகுப்பிலேயே படித்து வந்தான். மாணவர்கள் பணக்காரனான என்னிடம் சேராமல் சொமுவைச் சுற்றி வருவதைப் பார்த்துப் பொறாமை கொண்டான்.

இந்தச் செய்தியை அவன் தந்தை அறிந்து கொண்டார். ஏழைகளை எப்போதும் மதிப்புடன் நடத்துபவர். நல்ல பண்பாளர். தன் மகன் ஏழைகளை அலட்சியமாக நடத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது தன் மகனைத் திருத்த வேண்டும் என நினைத்தார்.
அன்று மாலை வீட்டுக்கு ஓடி வந்த ராஜாவை அன்புடன் அழைத்தார் 
பெரியசாமி.அருகே வந்து நின்ற ராஜாவை அன்புடன் பார்த்தார்.

" ராஜா!உன் வகுப்பில் முதலாவதாக வரும் மாணவன் யார்?"

"சோமுதான். வெறுப்பை உமிழ்ந்தான் ராஜா.

"உனக்கு அவன் மேல் என் இத்தனை வெறுப்பு? அவனைப்போல் நீயும் படித்து முதலாவதாக வர முயற்சிக்கலாமே?"

"நான் ஏன் கஷ்டப்படவேண்டும்? அவன் அப்பா கூலி வேலை செய்பவர். அதனால் அவன் கஷ்டப்பட்டுப் படிச்சுதான் ஆகணும்.நான் ஏன்....." என்று பேசிக்கொண்டே போனவனைத் தடுத்து நிறுத்தினார் அவன் அப்பா.

"இதோ பார் ராஜா! ஏழை ஏழை என்று ஏளனமாகப் பேசாதே.பல ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்தான் ஒருவனைப் பணக்காரனாக்கும் சாதனங்கள்."

"அப்பா! ரத்தமாவது வியர்வையாவது! எல்லாம் பணம் செய்யும் வேலையப்பா. ஒருவனிடம் பணம் இருந்தால் அவனிடம் எல்லோரும் கும்பிடு போட்டுக்கொண்டு நிற்பார்கள்." அவன் விளக்கத்தைக் கேட்ட பெரியசாமி புன்னகைத்துக் கொண்டார்.

" சரி நீதான் பணக்காரனாயிற்றே. சோமு ஏழையாயிற்றே. உனக்கு நண்பர்கள் அதிகமா சோமுவுக்கு நண்பர்கள் அதிகமா?"

"இப்போதைக்கு சோமுவுக்குத் தான் நண்பர்கள் அதிகம். ஆனால் நீங்கள் பணம் தந்தால் ஒரு மாதத்தில் அத்தனை பேரையும் எனக்கு நண்பர்கள் ஆக்கிக் காட்டுவேன்." சவால் விட்டான் ராஜா.

பெரியசாமியும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.
"சரி. உனக்கு தினமும் பத்து ரூபாய்கள் தருகிறேன்.உன் விருப்பம்போல் செலவு செய்.ஒரே மாதம்தான். கடைசி நாளன்று உன்னிடம் மாணவர்கள் அதிகம் சேர்ந்து உள்ளார்களா சோமுவுடன் சேர்ந்து உள்ளார்களா என்று பார்க்கிறேன்."

"கட்டாயம் என்னிடத்தில் தான் சேர்ந்திருப்பார்கள்."

"அப்படியில்லா விட்டால் நீ சோமுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவனுக்கு நண்பனாயிருக்க வேண்டும். அத்துடன் ஏழைகளை அலட்சியப் படுத்துவதை விட்டு விட வேண்டும்.. சரியா?" என்றார்.

"சம்மதம் அப்பா! நாளை முதல் பாருங்கள்." என்றான் ராஜா.

மறுநாள்காலை சோமுவை வெற்றி கொள்ளப் போகிறோம் என்ற நம்பிக்கையுடன் தன் பள்ளிச்சீருடை அணிந்து கொண்டு தன் தந்தையின் முன் வந்து நின்றான் .பெரியசாமி புன்னகையுடன் ,"என்ன ராஜா! போட்டிக்குத் தயாராகி விட்டாய் அல்லவா? இந்தா, பத்து ரூபாய். உன் விருப்பம்போல் செலவு செய் சரியாக முப்பது நாட்கள் கழித்து நானே உன் பள்ளிக்கு வருவேன் சம்மதமா?"என்றார்.
ராஜா மகிழ்ச்சியுடன் தலையை அசைத்தவாறே பத்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஓடினான்.

Thursday, July 30, 2009

புலவர் பெருந்தலைச்சாத்தனார்

சோழநாட்டைச் சேர்ந்த ஆவூர் என்பது வளம் நிறைந்த ஊர். அவ்வூர் நிலங்கள் மிகுந்த விளைச்சலைத் தரக்கூடியவை. சோலைகளும் தோப்புகளும் மிகுந்திருந்தன. அவ்வூரில் மூலங்கிழார் என்பவர் வாழ்ந்து வந்தார். கல்வி கேள்விகளிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்தவர்.இவர் தனது இல்லறத்தை இனிதே நடத்தி வந்தார். 

இறைவன் திருவருளால் இவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அம்மகவுக்குப் பெருந்தலைச்சாத்தன் என்று பெயரிட்டு வறுமையிலும் செம்மையாக வளர்த்து வந்தார். ஆவூர் மூலங்கிழார் தன மகனுக்குத் தானே ஆசானாக இருந்து கல்வி கற்பித்து வந்தார். இளமையிலேயே பெருந்தலைச்சாத்தன் சிறந்த தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை நன்கு பயின்றார். இதனால் இவர் கவி இயற்றும் ஆற்றல் பெற்றார். தக்க பருவத்தில் திருமணம் முடித்து நல்லறமாம் இல்லறத்தை ஏற்றார். பெற்றோர் காலமான பிறகு இவரே குடும்பத் தலைவரானார். அவ்வப்போது கிடைத்த பரிசில் பொருள்களைக் கொண்டு மன நிறைவுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். 

நாட்கள் செல்லச்செல்ல குடும்பச் சுமை அதிகரிக்கவே வள்ளல்களை நாடிச் செல்லவேண்டிய தருணம் வந்தது. கல்விமான்கள் பலர் செல்வா வளமின்றி இருக்கும் காரணத்தை எண்ணிப்பார்த்த வாறே நடந்தார். ஊரை விட்டு வெகு தூரம் நடந்தார். வழியில் புலவர் ஒருவர் யானை மீது வருவதைக்க் கண்ண்டார். அவரிடம் பெருஞ்செல்வம் இருப்பதையும் அறிந்தார். அவ்வாறு வந்தவர் பெருஞ்சித்திரனார் என்னும் புலவரே. குமணன் என்ற வள்ளலை நாடிச்சென்று பரிசில் பெற்று வருவதாகக் கூறி அவரையும் குமண வள்ளலிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்தினார். அவருக்கு நன்றி கூறி குமணனை நாடிச் சென்றார் பெருந்தலைச் சாத்தனார். பலநாட்கள் நடந்து குமணன் ஆளும் முதிர மலையை வந்தடைந்தார். 

முதிர மலையையும் அதனைச் சுற்றியுள்ள நாட்டையும் குமணன் திறம்பட ஆண்டு வந்தான்.கல்விமான்களை ஆதரித்தான். தமிழ்ப் புலவர்களைத் தெய்வமாக மதித்துப் போற்றி வந்தான். தன்னைச் சந்திக்க வரும் புலவர்களுக்கு அவர் வேண்டும் பொருள் கொடுத்து அவரது வறுமை நிலையைப் போக்கும் பண்பு கொண்டவன். இப்படிப் பட்ட சிறந்த புகழ் வாய்ந்த குமணனுக்கு இளங்குமணன் என்ற ஒரு தம்பி இருந்தான். அவன் தீ நட்புக் கொண்டவன். சில தீயவர்களின் ஆலோசனையால் குமணன் செய்யும் தான தருமங்களால் நாட்டின் செல்வம் அழிந்து வறுமை வந்துவிடுமோ என அஞ்சினான்.எப்படியேனும் தன அண்ணனைக் கொன்று விட்டுத் தானே மன்னனாகி விடத் திட்டமிட்டான். இச்செய்தியை ஒற்றர் மூலம் அறிந்தான் குமணன். 

தனக்கு வாரிசு இல்லாததால் தனக்குப் பிறகு தன தம்பி தானே நாட்டை ஆள வேண்டும் என எண்ணிய குமணன் தம்பியிடம் நாட்டை விட்டு விட்டு காட்டுக்குப் போய் தவம் செய்ய லானான். குமணன் காட்டுக்குச் சென்ற பின்னர் பெருந்தலைச் சாத்தனார் குமணன் வாழ்ந்திருந்த அரண்மனைக்குச் சென்றார். அடையாத குமணனின் அரண்மனைக் கதவு அடைக்கப் பட்டிருந்தது. குமணன் காட்டுக்கு ஏகியதை மக்கள் கூறக்கேட்டு அறிந்து கொண்டார். எனவே குமணனைக் காணும் எண்ணத்துடன் காட்டை நோக்கிச் சென்றார். பல துன்பங்களுக்குப் பின் குமணனைக் கண்டார். 

புலவரைக்கண்ட குமணன் மனம் மகிழ்ந்து வரவேற்றான். அன்புடன் பேசினான். புலவரின் சூழ்நிலையைக் கேட்டான்..புலவர், " வள்ளலே! நான் சோற்று வளம் மிக்க சோழ நாட்டைச் சேர்ந்தவன். ஆயினும் நான் வறுமையால் வாடுகிறேன்.என் வீட்டு அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. என் குழந்தை தாய் முகம் பார்த்து அழுகிறது. என் மனைவி என் முகம் பார்க்கிறாள். .நான் நின் முகம் நோக்கி ஓடி வந்தேன். நீயோ நாட்டை விட்டுக் காட்டில் அவதிப படுகிறாய். உன் நிலை கண்டு நான் வருந்துகிறேன். " என்ற பாடலைப்பாட குமணன் அவரது நிலை கண்டு கண்ணீர் விட்டான். " 
குமணனின் உள்ளம் புலவருக்கு ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டும் எனத் துடித்தது.ஆனால் எதைக் கொடுப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தான். புலவர் அவனைச் சிந்திக்க விட்டுக் காத்திருந்தார். சிந்தனை செய்தவாறே நடந்து கொண்டிருந்த குமணன் நின்றான். அவன் முகம் திடீரென ஒளி பெற்றுப் பிரகாசித்தது. 
மலர்ந்த முகத்துடன் அவன் புலவரைப் பார்த்தான். " புலவரே! நான் மன்னனாயிருந்தபோது தாங்கள் வந்திருந்தால் உமது வறுமையை விரட்டியிருப்பேன். இப்போது எதையும் கொடுக்க இயலாதவனாக உள்ளேன்.இருப்பினும் நீர் செல்வம் பெற ஒரு வழி உள்ளது." என்று சொல்லி தனது உடைவாளை உருவி புலவரின் கையில் கொடுத்தான். 

" புலவரே! என் தம்பி இளங்குமணன் என் தலையைக் கொண்டு வருபவருக்குப்பெரும் பொருள் தருவதாகக் கூறியுள்ளான். என் தலையை அவனிடம் கொடுத்துப் பெரும் பொருள் பெற்று தங்களின் வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள்."என்று குமணன் கூறியதைக் கேட்ட புலவர் கண்ணீருடன் அவனது உடைவாளைப் பெற்றுக்கொண்டார்.பின்னர் மன்னனைப் பார்த்துக் கூறினார்." வேந்தே! உமது தலையை எனக்குத் தந்து விட்டீர்கள். இனி இது எனக்குச் சொந்தம். நான் மீண்டும் வந்து இதனைப் பெற்றுக் கொள்ளும் வரையில் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். மீண்டும் வருகிறேன்." என்று சொல்லிவிட்டு வாளுடன் புறப்பட்டார் பெருந்தலைச்சாத்தனார். 

அவர் உள்ளத்தில் குமணன் தலையைப் பாதுகாத்துக் கொள்வான். வேறு யாரேனும் வந்தால் தலையைத் தந்து விட மாட்டான் என்ற அமைதி ஏற்பட்டது. நேராக இளங்குமணன் வாழும் அரண்மனைக்கு வந்தார். அரண்மனையில் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான் இளங்குமணன்.அவன் இயல்பிலேயே மிகவும் நல்லவன். சில தீய நண்பர்களின் ஆலோசனையினால் தான் தவறிழைத்து விட்டதை உணர்ந்து வருந்திக்கொண்டிருந்தான். அத்துடன் தன தீய நண்பர்களின் சுயநலப் போக்கையும் மக்களின் வெறுப்பையும் அண்ணனின் பெருமையையும் உணர்ந்து கொண்டதனால் மனம் திருந்தி வருந்திக் கொண்டிருந்தான். 

அதே நேரம் கையில் வாளுடன் புலவர் அவன் முன் நின்றார்.குமணனின் வாளைக் காட்டினர்."மன்ன! உன் அண்ணன் வாரிக் கொடுக்கும் வள்ளல். புலவர் போற்றும் புகழுடையோன்.இல்லையென்று நான் சென்ற போது தன தலையைக் கொண்டு சென்று தம்பியிடம் கொடுத்துப் பொருள் பெறுமாறு கூறிய பெருங் குணத்தான். இத்தகைய நற்பண்பு கொண்ட நல்லவனை சகோதரனாகப் பெற்ற நீயும் நற்பண்பு கொண்டவனாகவே இருப்பாய் என நம்புகிறேன்.உன் அண்ணனாகிய குமணவள்ளல் நாட்டில் வாழ்வதா காட்டில் மறைந்து வாழ்வதா?" என்று கோபமாகக் கேட்டார். 

அண்ணனைப் பிரிந்து துயரால் வாடிக்கொண்டிருந்த இளங்குமணன் உடனே அண்ணனைக் காணத் துடித்தான். அவரிடம் மீண்டும் அரசுரிமையைத் தரத் தயாராக இருந்தான். அவன் மன மாற்றத்தை அறிந்த பெருந்தலைச் சாத்தனார் அவனையும் அழைத்துக் கொண்டு காட்டை அடைந்தார். சகோதரர் இருவரும் அணைத்து மகிழ்ந்த காட்சியைக் கண்டு மகிழ்ந்தார் புலவர். மீண்டும் அரியணை எரிய குமணன் புலவருக்குப் பெருஞ்செல்வத்தை வழங்கினான். குமணனையும் இலங்குமனனையும் வாழ்த்திய பெருந்தலைச்சாத்தனார் தன நாட்டை அடைந்தார். மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். 

நாட்கள் கழிந்தன. மீண்டும் புலவர் பெருந்தலைச்சாத்தனார் வள்ளல்களை நாடிச் சென்றார். கோடைமலைத் தலைவன் கடிய நெடு வேட்டுவன் என்பவன். புலவர் அவனது மலையை நாடிச் சென்றார். இயற்கை அழகைக் கண்டு ரசித்த புலவர் அவன் மாளிகையை நாடிச் சென்றார். கடிய நெடு வேட்டுவன் புலவரை உபசரித்தான்.ஆனால் பல நாட்களாகியும் அவன் புலவருக்குப் பரிசளிக்காமல் காலங்கடத்தி வந்தான். புலவர் ஒவ்வொரு நாளும் பரிசிலை எதிர் பார்த்து ஏமாந்தார். 

ஏமாற்றமே பாடலாயிற்று."மன்னா! நீ வளமான வாழ்கையை உடையவன்.ஆயினும் எமக்குப் பரிசில் தரவில்லை.மூவேந்தரும் உள்ளன்போடு பரிசில் தராததால் அதை நாங்கள் ஏற்கவில்லை. ஏழையாயினும் நாங்கள் மானமுள்ளவர்கள். நாங்கள் யாரிடமும் பரிசில் பெறாது வெறுங்கையுடன் செல்வதில்லை.ஆனாலும் உன்னைப் பாடிய நான் வெறுங் கையனாய்ச் செல்கிறேன். புலவனாகிய எம்மை அவமதித்த நீ நோயின்றி வாழ்வாயாக!" எனப்பாடியதைக் கேட்ட மன்னன் புலவரின் கோபம் தனக்குத் தீங்கு விளைவிக்கும் என உணர்ந்தான். புலவரைப் பணிந்து பரிசில் அளித்து மன்னிக்க வேண்டினான். புலவரும் அவனை வாழ்த்திப் பாடினார். 

பின்னர் மூவன் என்ற சிற்றரசரை நாடிச் சென்றார். சிலநாள் தங்கியிருந்தும் பரிசில் தராமல் அலட்சியம் செய்தான் மூவன். அவனைப் பார்த்து "மூவா! உன்னைப் பாடிய நான் வேறுண் கையனாய்ச் செல்கிறேன். நீ கொடாமையால் நான் வருந்தவில்லை. நீ நோயின்றி நீண்ட நாள் வாழ வேண்டுமேயென்று தான் வருந்துகிறேன்." என்று பாடிச் சென்று புலவரின் மனம் வருந்தினால் அந்த வருத்தம் வீண் போகாது. சிறிது நாட்களிலேயே அந்த அரசன் சேர வேந்தனால் கொல்லப்பட்டு அவன் பற்கள் சேரத் தலைநகர் தொண்டியின் அரண்மனைக் கதவுகளில் பதிக்கப் பட்டது என்ற செய்தியை புறநானூற்றுப் பாடல் வாயிலாக அறிகிறோம்.
இதிலிருந்து கல்விமான்களை மதிக்கவேண்டும் என்னும் அறிவுரையைப் பெருகிறோமல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக