ராதே கிருஷ்ணா 17-06-2012
ராதே கிருஷ்ணா 17-06-2012
பாரதியார் கவிதைகள்
கண்ணன் பாட்டு
பாஞ்சாலி சபதம் - முதற்பாகம்
பாஞ்சாலி சபதம்- இரண்டாம் பாகம்
குயில் பாட்டு
புதிய பாடல்கள்
உயிர் பெற்ற தமிழர் பாட்டு
ராதே கிருஷ்ணா 17-06-2012
பாரதியார் கவிதைகள்
| |||||||||||||
|
முப்பெரும் பாடல்கள் | |
பாஞ்சாலி சபதம் - முதற்பாகம்ஜனவரி 21,2012
துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்
1. பிரம்ம ஸ்துதி நொண்டிச் சிந்து
பாஞ்சாலி சபதம்- இரண்டாம் பாகம்ஜனவரி 21,2012
மூன்றாவது அடிமைச் சருக்கம்
39. பராசக்தி வணக்கம்
ஆங்கொரு கல்லை வாயிலிற் படி என்
றமைத்தனம் சிற்பி, மற் றொன்றை ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென் றுயர்த்தினான்; ... மேலும் குயில் பாட்டுஜனவரி 21,2012
1. குயில்
காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து ... மேலும் |
கண்ணன் பாட்டு
1. கண்ணன் - என் தோழன்
(புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம்) வத்ஸல ரசம் 1. பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவ தற்கே - இனி என்ன வழியென்று கேட்கில், உபாயம் இருகணத் தேயுரைப் பான்; - அந்தக் கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு உன்னை யடைந்தேன் என்னில் உபாயம் ஒருகணத் தேயுரைப் பான். 2. கானகத்தே சுற்று நாளிலு<ம் நெஞ்சிற் கலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ் சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில் தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன் ஊனை வருத்திடு நோய்வரும் போதினில் உற்ற மருந்துசொல் வான்;- நெஞ்சம் ஈனக் கவலைக ளெய்திடும் போதில் இதஞ்சொல்லி மாற்றிடு வான்; 3. பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு பேச்சினி லேசொல்லு வான்; உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன் உண்ணும் வழியுரைப் பான்; அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரைநொடிக் குள்வரு வான்; மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன் வாழ்வினுக் கெங்கள்கண் ணன்; 4. கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங் கேலி பொறுத்திடு வான்; எனை ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல் செய்திடு வான்; - என்றன் நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று நான்சொல்லும் முன்னுணர் வான்; அன்பர் கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு கொண்டவர் வேறுள ரோ? 5. உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில் ஓங்கி யடித் திடுவான்; நெஞ்சில் கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு காறி யுமிழ்ந்திட வான்; சிறு பள்ளத்தி லேநெடு நாள்ழு குங்கெட்ட பாசியை யெற்றி விடும் - பெரு வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடு வான். 6. சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச் சிரித்துக் களித்திடு வான்; நல்ல வன்ன மகளிர் வசப்பட வேபல மாயங்கள் சூழ்ந்திடு வான்; அவன் சொன்ன படி நடவாவிடி லோமிகத் தொல்லை யிழைத்திடு வான்; கண்ணன் தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின் சகத்தினில் வாழ்வதி லேன். 7. கோபத்தி லெயொரு சொல்லிற் சிரித்துக் குலுங்கிடச் செய்திடு வான்; மனஸ் தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி தழைத்திடச் செய்திடு வான்; பெரும் ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று அதனை விலக்கிடு வான்; சுடர்த் தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந் தீமைகள் கொன்றிடு வான். 8. உண்மை தவறி நடப்பவர் தம்மை உதைத்து நசுக்கிடுவான்; அருள் வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள் மலைமலை யாவுரைப் பான்; நல்ல பெண்மைக் குணமுடையான்; சில நேரத்தில் பித்தர் குணமுடை யான்; மிகத் தண்மைக் குணமுடை யான் சில நேரம் தழலின் குணமுடை யான். 9. கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர் குணமிகத் தானுடை யான்; கண்ணன் சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு சூதறி யாதுசொல் வான்; என்றும் நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது நயமுறக் காத்திடு வான்; கண்ணன் அல்லவ ருக்கு விடத்தினில் நோயில் அழலினி லுங்கொடி யான். 10. காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண்மகிழ் சித்திரத் தில் - பகை மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம் முற்றிய பண்டிதன் காண்; உயர் வேத முணர்ந்த முனிவ ருணர்வினில் மேவு பரம்பொருள் காண்; நல்ல கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன். 2. கண்ணன் - என் தாய் (நொண்டிச் சிந்து) 1. உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்; வண்ணமுற வைத்தெனக் கே - என்றன் வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள், கண்ணனெனும் பெயருரடையாள், என்னைக் கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து மண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பல மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். 2. இன்பமெனச் சில கதைகள் - எனக் கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள் துன்பமெனச் சில கதைகள் - கெட்ட தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள். என்பருவம் என்றன் விருப்பம் - எனும் இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே அன்பொடவள் சொல்லிவரு வாள்; அதில் அற்புதமுண் டாய்ப்பர வசமடை வேன். 3. விந்தைவிந்தை யாக எனக்கே - பல விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்; சந்திரனென் றொரு பொம்மை - அதில் தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும் மந்தை மந்தையா மேகம் - பல வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும் முந்தஒரு சூரியனுண்டு - அதன் முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. 4. வானத்து மீன்க ளுண்டு - சிறு மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்; நானத்தைக் கணக்கிடவே - மனம் நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை; கானத்து மலைக ளுண்டு - எந்தக் காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை; மோனத்தி லேயிருக்கும் - ஒரு மொழியுரை யாதுவிளை யாடவருங் காண். 5. நல்லநல்ல நதிகளுண்டு - அவை நாடெங்கும் ஓடிவிளை யாடி வாருங்காண்; மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும் விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்; எல்லையதிற் காணுவ தில்லை; அலை எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்; ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். 6. சோலைகள் காவினங்கள் - அங்குச் சூழ்தரும் பலநிற மணிமலர்கள் சாலவும் இனியனவாய் - அங்குத் தருக்களில் தூங்கிடும் கனிவகைகள் ஞாலமுற்றிலும் நிறைத் தே - மிக நயந்தரு பொம்மைகள் எனக்கென வே; கோலமுஞ் சுவையுமுற - அவள் கோடிபல் கோடிகள் குவித்துவைத் தாள். 7. தின்றிடப் பண்டங்களும் - செவி தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக ளும், ஒன்றுறப் பழகுதற்கே - அறி வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்; கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக் கொடுநெருப் பாய், அனற் சுவையமு தாய், நன்றியல் காதலுக் கே -இந்த நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். 8. இறகுடைப் பறவைக ளும் - நிலந் திரிந்திடும் விலங்குகள் ஊர்வன கள் அறைகடல் நிறைந்திட வே -எண்ணில் அமைத்திடற் கரியபல் வகைப்பட வே சுறவுகள் மீன்வகை கள் - எனத் தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்; நிறைவுற இன்பம்வைத் தாள்; - அதை நினைக்கவும் முழுதி<லுங் கூடுதில்லை. 9. சாத்திரம் கோடி வைத்தாள்; அவை தம்மினும் உயர்ந்ததொர் ஞானம் வைத்தாள்; மீத்திடும் பொழுதினி லே - நான் வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே கோத்தபொய் வேதங்க ளும் - மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும் மூத்தவர் பொய்ந்நடை யும் - இள மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; 10. வேண்டிய கொடுத்திடு வாள்; அவை விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்; ஆண்டருள் புரிந்திடு வாள்; அண்ணன் அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்; யாண்டுமெக் காலத்தி னும் -அவள் இன்னருள் பாடுநற் றொழில்புரி வேன் நீண்டதொர் புகழ்வாழ் வும் -பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். 3. கண்ணன் - என் தந்தை நொண்டிச் சிந்து ப்ரதான ரஸம் - அற்புதம் 1. பூமிக் கெனைய னுப்பி னான்; அந்தப் புதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு; நேமித்த நெறிப்படி யே - இந்த நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே போமித் தரைகளி லெல்லாம் - மனம் போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார். சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்கள் தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். 2. செவ்வத்திற்கோர் குறையில்லை; எந்தை சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை; கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன் கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை; பல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு; நல்வழி செல்லு பவரை - மனம் நையும்வரை சோதலைசெய் நடத்தை யுண்டு. 3. நாவு துணிகுவ தில்லை - உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே; யாவருந் தெரிந்திடவே - எங்கள் ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு. மூவகைப் பெயர் புனைந்தே - அவன் முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்; தேவர் குலத்தவன் என்றே - அவன் செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். 4. பிறந்தது மறக் குலத்தில்; அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்; சிறந்தது பார்ப்பனருள்ளே; சில செட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு; நிறந்தனிற் கருமை கொண்டான்; அவன் நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்! துறந்த நடைக ளுடையான் - உங்கள் சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். 5. ஏழைகளைத் தோழமை கொள்வான்; செல்வம் ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்; தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத் தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்; நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு நாளிலிருந்த படிமற்றோர் நாளினி லில்லை. பாழிடத்தை நாடி யிருப்பான் - பல பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். 6. இன்பத்தை இனிதென வும் - துன்பம் இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை; அன்பு மிகவுடையான் - தெளிந் தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே, வன்புகள் பல புரிவான்; ஒரு மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்; முன்பு விதித்த தனையே - பின்பு முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். 7. வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை; வேதங்க ளென்று புவியோர் சொல்லும் வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை; வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன் வேதத்திற் சிலசில கலந்ததுண்டு; வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். 8. நாலு குலங்கள் அமைத்தான்; அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர், சீலம் அறிவு தருமம் - இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்; மேலவர் கீழவ ரென்றே - வெறும் வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம் போலிச் சுவடியை யெல்லாம் - இன்று பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். 9. வயது முதிர்ந்து விடினும் - எந்தை வாலிபக் களையென்றும் மாறுவதில்லை; துயரில்லை; மூப்பு மில்லை - என்றும் சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை; பயமில்லை, பரிவொன்றில்லை, எவர் பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான். 10. துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத் தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்; அன்பினைக் கைக்கொள் என்பான்; துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்; என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில் ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்; இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும் இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். 4. கண்ணன் - என் சேவகன் கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார் வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார் ஏனடா நீ நேற்றைக் கிங்குவர வில்லை யென்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்; வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார் 5 பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார் ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார் தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார் உள்வீட்டுச் செய்தி யெல்லாம் ஊரம் பலத்துரைப்பார் எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார். 10 சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு கண்டீர்; சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில் எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்; மாடு கன்றுமேய்த்திடுவேன், மக்களைநான் காத்திடுவேன்; 15 வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்; சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்; சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்; காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானா<லும்; 20 இரவிற் பகலிலே எந்நேர மானா<லும் சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்; கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே! ஆன பொழுதுங்கோலடி குத்துப்போர் மற்போர் 25 நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன் என்று பலசொல்லி நின்றான். ஏதுபெயர்? சொல் என்றேன் ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலு<ள்ளோர் என்னை என்றான். கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்ல குணம் ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் - ஈங்கிவற்றால்; 30 தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன், மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய் கூலியென்ன கேட்கின்றாய்? கூறு கென்றேன். ஐயனே! தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் 35 ஆன வயதிற் களவில்லை; தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை யென்றான். பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே கண்டு மிகவும் களிப்புடனே நானவனை 40 ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப் பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என்குடும்பம் 45 வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன் வீதி பெருக்குகிறான்; வீடுசுத்த மாக்குகிறான் தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான் மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் 50 பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோவந்தான், இடைச்சாதியென்று சொன்னான். 55 இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்துவிட்டேன்! கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், 60 தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்! கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்ணனெனை யாட் கொள்ளக் காரணமும் உள்ளனவே! 5. கண்ணன் - என் அரசன் 1. பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும் பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்; நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான். 2. கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம் கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே; எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம் இழந்த நாள்கள் யுகமெனப் போகுமே. 3. படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்; இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன் என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான். 4. கொல்லப் பூத மனுப்பிடு மாமனே கோலு யர்த்துல காண்டு களித்திட முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான். 5. வான நீர்க்கு வருந்தும் பயிரென மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும், தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள் தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான். 6. காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம் கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால் நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்; நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே? 7. நாம வன்வலி நம்பியி ருக்கவும், நாண மின்றிப் பதுங்கி வளருவான்; தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்; சிறுமை கொண்டொழித் தோடவுஞ் செய்குவான். 8. தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்; சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான் மந்தி ரத்திற னும்பல காட்டுவான்; வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்குவான். 9. காலம் வந்துகை கூடுமப் போதிலோர் கணத்தி லேடதி தாக விளங்குவான்; ஆல கால விடத்தினைப் போலவே, அகில முற்றும் அசைந்திடச் சீறுவான். 10. வேரும் வேரடி மண்ணு மிலாமலே வெந்து போகப் பகைமை பொசுக்குவான்; பாரும் வானமும் ஆயிர மாண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான். 11. சக்கரத்தை யெடுப்ப தொருகணம்; தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ? இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன்காண்! 12. கண்ண னெங்கள் அரசன் புகழினைக் கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன் திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத் தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான். 13. நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன் நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான் வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான். 14. கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே! கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே! அண்ண லின்னருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! 6. கண்ணன் - என் சீடன் ஆசிரியப்பா யானே யாகி என்னலாற் பிறவாய் யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய் யாதோ பொருளாம் மாயக் கண்ணன் என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும், என்னைத் துணைக்கொண்டு, என்னுடை முயற்சியால் 5 என்னடை பழகலால் என்மொழி கேட்டலால் மேம்பா டெய்த வேண்டினோன் போலவும், யான்சொலுங் கவிதை என்மதி யளவை இவற்றினைப் பெருமை யிலங்கின வென்று கருதுவான் போலவும், கண்ணக் கள்வன் 10 சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே! பேதையேன் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்து பட்டன தொல்லை பலபெரும் பாரதம்; உளத்தினை வென்றிடேன்; <உலகினை வெல்லவும் தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் 15 சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும், தன்னுளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும் உற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ள மாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத் 20 தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு, மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து, புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும் பல்வகை யால்அகப் பற்றுறச் செய்தான், வெறும்வாய், மெல்லங் கிழவிக் கிஃதோர் 25 அவலாய் மூண்டது; யானுமங் கவனை உயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய், இன்னது செய்திடேல், இவரொடு பழகேல், இவ்வகை மொழிந்திடேல், இனையன விரும்பேல், இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய், 30 இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய் எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி, ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன் கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம் எதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டும் 35 நெறியினுக் கெல்லாம் நேரெதிர் நெறியே நடப்பா னாயினன், நானிலத் தவர்தம் மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும் தெய்வமாக் கொண்ட சிறுமதி, யுடையேன் கண்ணனாஞ் சீடன், யான் காட்டிய வழியெலாம் 40 விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும், உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும் தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும் இகழுமிக் கவனாய், என்மனம் வருந்த நடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக் 45 கண்ணனும் தனது கழிபடு நடையில் மிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர் கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும் நிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத் 50 தோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாது முத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன் பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென் நெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும் தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் 55 சொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன் தேவ நிலையிலே சேர்த்திடா விடினும், மானுடந் தவறி மடிவுறா வண்ணம், கண்ணனை நானும் காத்திட விரும்பித் தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும் 60 சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும், கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும் எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக் கொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றிலை கண்ணன் பித்தனாய்க் காட்டா ளாகி, 65 எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய், எவ்வகைப் பயனிலுங் கருத்திழந் தவனாய், குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய் யாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான் இதனால், 70 அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற; யான்கடுஞ் சினமுற்று எவ்வகை யானும் கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன் எனப்பெருந் தாபம் எய்தினே னாகி, எவ்வா றேனும் இவனையோர் தொழிலில் 75 ஓரிடந் தன்னில் ஒருவழி வலிய நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான் என்றுளந் தெண்ணி இசைந்திடுஞ் சமயங் காத்திருந் திட்டேன், ஒருநாள் கண்ணனைத் தனியே எனது வீட்டினிற் கண்டு 80 மகனே, என்பால் வரம்பிலா நேசமும் அன்பும்நீ யுடையை; அதனையான் நம்பி, நின்னிட மொன்று கேட்பேன்; நீயது செய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியே மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய். 85 சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில் மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும் கொண்டோர் தமையே அருகினிற் கொண்டு பொருளினுக் கலையும் நேரம் போக மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி 90 இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்; பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும் அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன். ஆதலால், என்பயன் கருதி, எனக்கொரு துணையாய் 95 என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை வேண்டி நிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தே என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே, இவ்வுரைக் கிணங்குவாய் என்றேன், கண்ணனும், அங்ஙனே புரிவேன். ஆயின் நின் னிடத்தே 100 தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது? காரிய மொன்று காட்டுவை யாயின், இருப்பேன் என்றான். இவனுடைய இயல்பையும் திறனையுங் கருதி, என் செய்யுளை யெல்லாம் நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக் 105 கொடுந்திடுந் தொழிலினைக் கொள்ளுதி என்றேன் நன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்; செல்வேன் என்றான்; சினத்தோடு நானும் பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன் கையினிற் கொடுத்துக் கவனுற இதனை 110 எழுதுக என்றேன்; இணங்குவான் போன்றதைக் கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான் செல்வேன் என்றான். சினந்தீ யாகிநான் ஏதடா, சொன்ன சொல் அழிந்துரைக் கின்றாய்; பித்தனென் றுன்னை உலகினர் சொல்வது 115 பிழையிலை போ<லும் என்றேன், அதற்கு நாளைவந் திவ்வினை நடத்துவேன் என்றான். இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச் செய்கின் றனையா? செய்குவ தில்லையா? ஓருரை சொல் என் றுறுமினேன். கண்ணனும் 120 இல்லை யென் றொருசொல் இமைக்குமுன் கூறினான். வெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக் கண்சிவந் திதழ்கள் துடித்திடக் கனன்றுநான் சீச்சி, பேயே! சிறிதுபோழ் தேனும் இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே; 125 என்றுமிவ் வுலகில் என்னிடத் தினிநீ போந்திடல் வேண்டா, போ, போ, போ என்று இடியுறச் சொன்னேன். கண்ணனும் எழுந்து செல்குவ னாயினன். விழிநீர் சேர்ந்திட மகனே! போகுதி வாழ்கநீ; நின்னைத் 130 தேவர் காத்திடுக! நின்தனைச் செம்மை செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன், தோற்றுவிட் டேனடா! சூழ்ச்சிகள் அழிந்தேன். மறித்தினி வாராய், செல்லுதி வாழி நீ! எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன். 135 சென்றனன் கண்ணன் திரும்பியோர் கணத்தே எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்; காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான்; ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்ளுவேன். தொழில்பல புரிவேன். துன்பமிங் கென்றும். 140 இனிநினக் கென்னால், எய்திடா தெனப்பல நல்லசொல் <லுரைத்து நகைத்தனன் மறைந்தான் மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன் நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன் மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல் 145 அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்; தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே வென்றாய், உலகினில் வேண்டிய தொழிலெலாம் ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ என்றான், வாழ்கமற் றவனே! 150 7. கண்ணன் - எனது சற்குரு புன்னாகவராளி - திஸ்ர ஜாதி - ஏகதாளம் ரசங்கள்: அற்புதம், பக்தி 1. சாத்திரங் கள்பல தேடினேன் - அங்குச் சங்கையில் லாதன சங்கையாம் -பழங் கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்ம்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில் மாத்திரம் எந்த வகையிலும் - சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும் ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம் ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன 2. நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல நாள்கள் அலைந்திடும் போதினில், - நிறைந் தோடும் யமுனைக் கரையிலே - தடி ஊன்றிச் சென்றாரொர் கிழவனார்; - ஒளி கூடுமுகமும், தெளிவுதான் - குடி கொண்ட விழியும், சடைகளும் - வெள்ளைத் தாடியும் கண்டு வணங்கியே - பல சங்கதி பேசி வருகையில் 3. என்னுளத் தாசை யறிந்தவர் - மிக இன்புற் றுரைத்திட லாயினர் - தம்பி நின்னுளத் திற்குத் தகுந்தவன் - சுடர் நித்திய மோனத் திருப்பவன், - உயர் மன்னர் குலத்தில் பிறந்தவன் - வட மாமது ரைப்பதி யாள்கின்றான் - கண்ணன் தன்னைச் சரணென்று போவையேல் - அவன் சத்தியங் கூறுவன் என்றனர். 4. மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, - என்றன் நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி நன்மை தருகென வேண்டினன்; - அவன் காமனைப் போன்ற வடிவமும் - இளங் காளையர் நட்பும் பழக்கமும் - கெட்ட பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப் போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும் 5. ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர் ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனி வேடந் தரித்த கிழவரைக் - கொல்ல வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் - சிறு நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன் நாளுங் கவலையில் மூழ்கினோன்; தவப் பாடுபட் டோர்க்கும் விளங்கிடா - உண்மை பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்? 6. என்று கருதி யிருந்திட்டேன் - பின்னர் என்னைத் தனியிடங் கொண்டுபோய், - நினை நன்று மருவுக! மைந்தனே! - பர ஞான முரைத்திடக் கேட்பைநீ - நெஞ்சில் ஒன்றுங் கவலையில் லாமே - சிந்தை ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே - தன்னை வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு விண்ணை யளக்கும் அறிவுதான்! 7. சந்திரன் சோதி யுடையதாம் - அது சத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச் சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச் சேர்ந்து தழுவி அருள்செயும்; அதன் மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த மாயக் களிப்பெருங் கூத்துக்காண் - இதைச் சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச் சாத்திரம் பொய் யென்று தள்ளடா! 8. ஆதித் தனிப்பொரு ளாகுமோர் - கடல் ஆருங் குமிழி உயிர்களாம் - அந்தச் சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச் சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; இங்கு மீதிப் பொருள்கள் எவையுமே - அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்-வண்ண நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு நேர்மைத் தொழிலில் - இயங்குவார்; 9. சித்தத்தி லேசிவம் நாடுவார் - இங்குச் சேர்ந்து களித்துல காளுவார்; நல்ல மத்த மதவெங் களிறுபோல் - நடை வாய்ந்திறு மாந்து திரிகுவார்; இங்கு நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம் சுத்த சுகந்தனி யாநந்தம் - எனச் சூழ்ந்து கவலைகள் தள்ளியே 10. சோதி அறிவில் விளங்கவும் - உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அற நீதி முறைவழு வாமலே - எந்த நேரமும் பூமித் தொழில்செய்து - கலை ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர் உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே - இன்பம் மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், 11. ஆடுதல், பாடுதல், சித்திரம் - கவி யாதி யினைய கலைகளில் - உள்ளம் ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர் நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில நாளினில் எய்தப் பெருகுவார் - அவர் காடு புதரில் வளரினும் - தெய்வக் காவனம் என்றதைப் போற்றலாம். 12. ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த ஞானம் விரைவினில் எய்துவாய் - எனத் தேனி லினிய குரலிலே - கண்ணன் செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன்; அறி வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன் ஆட லுலகென நான் கண்டேன்! 8. கண்ணம்மா - என் குழந்தை (பராசக்தியைக், குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு) (ராகம் - பைரவி) (தாளம் - ரூபகம்) ஸ ஸ ஸ - ஸா ஸா-பபப தநீத - பதப - பா பபப - பதப - பமா - கரிஸா ரிகம - ரிகரி - ஸா என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக. 1. சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய்! 2. பிள்ளைக் கனியமுதே, - கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே! அள்ளி யணைத்திடவே - என் முன்னே ஆடி வருந் தேனே! 3. ஓடி வருகையிலே - கண்ணம்மா உள்ளங் குளிரு தடீ! ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் ஆவி தழுவு தடீ! 4. உச்சி தனை முகந்தால் - கருவம் ஓங்கி வளரு தடீ! மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ! 5. கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ! உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா உன்மத்த மாகு தடீ! 6. சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது சஞ்சல மாகு தடீ! நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு நெஞ்சம் பதைக்கு தடீ! 7. உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில் உதிரங் கொட்டு தடீ! என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா! என்னுயிர் நின்ன தன்றோ? 8. சொல்லு மழலையிலே - கண்ணம்மா! துன்பங்கள் தீர்த்திடு வாய்; முல்லைச் சிரிப்பாலே - எனது மூர்க்கந் தவிர்த்திடு வாய். 9. இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ? அன்பு தருவதிலே - உனைநேர் ஆகுமொர் தெய்வ முண்டோ? 10. மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ? சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் செல்வம் பிரிது முண்டோ? 9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை கேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம் ரசங்கள்: அற்புதம், சிருங்காரம் தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால் அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) 2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் - சற்று மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத) 3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை அழஅழச் செய்துபின், கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத) 4. பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத) 5. புள்ளாங் குழல்கொண்டு வருவான்; அமுது பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்; கள்ளால் மயங்குவது போலே - அதைக் கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத) 6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன் ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன் எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத) 7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில் வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்; இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத) 8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே. எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத) 9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன் - பொய்ம்மை குத்திரம் பழிசொலச் கூசாச் சழக்கன்; ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில் அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத) 10. கண்ணன்-என் காதலன் செஞ்சுருட்டி-திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரசம் தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே சுடர் விளக்கினைப் போல், நீண்ட பொழுதாக -எனது நெஞ்சத் துடித்த தடீ! கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்; வேண்டும் பொருளை யெல்லாம்-மனது வெறுத்து விட்ட தடீ! பாயின் மிசை நானும்-தனியே படுத் திருக்கையி லே, வாயினில் வந்ததெல்லாம்-சகியே! தாயினைக் கண்டாலும்-சகியே! சலிப்பு வந்த தடீ! வளர்த்துப் பேசிடு வீர்; நோயினைப் போலஞ்சி னேன்;-சகியே! நுங்க ளுறவையெல் லாம். உணவு செல்லவில்லை;-சகியே! உறக்கங் கொள்ளவில்லை; மணம் விரும்பவில்லை;-சகியே! மலர் பிடிக்கவில்லை; குண முறுதி யில்லை;-எதிலும் குழப்பம் வந்த தடீ! கணமும் உள்ளத்திலே-சுகமே காணக் கிடைத்த தில்லை. பாலுங் கசந்ததடீ!-சகியே! படுக்கை நொந்த தடீ! நாலு வயித்தியரும்-இனிமேல் நம்புதற் கில்லை யென்றார்; பாலந்துச் சோசியனும்-கிரகம் படுத்து மென்று விட்டான். கனவு கண்டதிலே-ஒருநாள் கண்ணுக்குத் தோன்றா மல், இனம் விளங்க வில்லை-எவனோ என்னகந் தொட்டு விட்டான், வினவக் கண் விழித்தேன்;-சகியே! மேனி மறைந்து விட்டான்; மனதில மட்டிலுமே -புதிதோர் மகிழ்ச்சி கண்ட தடீ! உச்சி குளிர்ந்ததடீ;-சகியே! உடம்பு நேராச்சு மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல் மனத்துக் கொத்த தடீ! இச்சை பிறந்ததடீ-எதிலும் இன்பம் விளைந்த தடீ; அச்ச மொழிந்த தடீ;-சகியே! அழகு வந்த தடீ! எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை இட்ட விடத்தினி லே தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர் சாந்தி பிறந்ததடீ! எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்; கண்ணன் திருவுருவம் -அங்ஙனே கண்ணின் முன் நின்ற தடீ! 11. கண்ணன் -என் காதலன் உறக்கமும் விழிப்பும். நாத நாமக்கிரியை-ஆதி தாளம் ரசங்கள் :பீபத்ஸம்.சிருங்காரம் நேரம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி-உங்கள் நினைப்புத் தெரியவில்லை,கூத்தடிக்கிறீர்; சோரன் உறங்கிவிழும் நள்ளி ரவிலே-என்ன தூளி படுகுதடி,இவ்விடத்திலே? ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்-அன்னை ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்; சாரம் மிகுந்ததென்று வார்த்தை சொல்கிறீர்,-மிகச் சலிப்புக் தருகுதடி சகிப் பெண்களே! நானும் பலதினங்கள் பொறுத்திருந்தேன்,-இது நாளுக்கு நாளதிக மாகிவிட் டதே; கூன னொருவன் வந்ததிந் நாணி பின்னலைக் கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும், ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின் அருகினி லோடஇவள் மூர்ச்சை யுற்றதும் பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால் பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும். பத்தினி யாளையொரு பண்ணை வெளியில் பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும், நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்த நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும் கொத்துக் கனல்விழியக் கோவினிப் பெண்ணைக் கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்ததும், வித்தைப் பெயருடைய வீணியவளும் மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும். எத்தனை பொய்களடி! என்ன கதைகள்! என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்; சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம் தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே; மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர் நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்லுவீர். (பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்) கண்கள் உறங்கவொரு காரண முண்டோ, கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே? பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்; பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான். வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலிப் புறத்திலெனைக் காணடி யென்றான்; கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ, கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? 12. கண்ணன்-என் காதலன் (காட்டிலே தேடுதல்) ஹிந்துஸ்தானி தோடி-ஆதி தாளம் ரசங்கள்-பயாநகம், அற்புதம் திக்குத் தெரியாத காட்டில்-உனைத் தேடித் தேடி இளைத்தேனே. மிக்க நலமுடைய மரங்கள்,-பல விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்கு பாடி நகர்ந்து வரு நதிகள்,-ஒரு (திக்குத்) நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்,-எங்கும் நீளக் கிடக்குமலைக் கடல்கள்,-மதி வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,-முட்கள் மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்,-ஒரு (திக்குத்) ஆசை பெறவிழிக்கும் மான்கள்-உள்ளம் அஞ்சக் குரல் பழகும்,புலிகள்,-நல்ல நேசக் கவிதைசொல்லும் பறவை,-அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு,-ஒரு (திக்குத்) தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன் சத்தத் தினிற்கலங்கும் யானை-அதன் முன்னின் றோடுமிள மான்கள்-இவை முட்டா தயல்பதுங்குந் தவளை-ஒரு (திக்குத்) கால்கை சோர்ந்துவிழ லானேன்-இரு கண்ணும் துயில்படர லானேன்-ஒரு வேல்கைக் கொண்டுகொலை வேடன்-உள்ளம் வெட்கங் கொண்டொழிய விழித்தான்-ஒரு (திக்குத்) பெண்ணே உனதழகைக் கண்டு -மனம் பித்தங் கொள்ளு’ தென்று நகைத்தான்-அடி கண்ணே,எனதிருகண் மணியே-உனைக் கட்டித் தழுவமனங் கொண்டேன். (திக்குத்) சோர்ந்தே படுத்திருக்க லாமோ?-நல்ல துண்டக் கறிசமைத்துத் தின்போம்-சுவை தேர்ந்தே கனிகள்கொண்டு வருவேன்-நல்ல தேங்கள் ளுண்டினிது களிப்போம். (திக்குத்) என்றே கொடியவிழி வேடன்-உயிர் இற்றுப் போகவிழித் துரைத்தான்-தனி நின்றே இருகரமுங் குவித்து-அந்த நீசன் முன்னர்இவை சொல்வேன்; (திக்குத்) அண்ணா உனதடியில் வீழ்வேன்-எனை அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன் கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை-உன்தன் கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ? “ஏடீ,சாத்திரங்கள் வேண்டேன்-நின தின்பம் வேண்டுமடி,கனியே!-நின்தன் மோடி கிறுக்குதடி தலையை,-நல்ல மொந்தைப் பழையகள்ளைப் போல காதா லிந்தவுரை கேட்டேன்-அட கண்ணா’வென் றலறி வீழ்ந்தேன்-மிகப் போதாக வில்லையிதற் குள்ளே-என்தன் போதந் தெளியநினைக் கண்டேன். கண்ணா!வேடனெங்கு போனான்?-உனைக் கண்டே யலறிவிழுந் தானோ?-மணி வண்ணா! என தபயக் குரலில்-எனை வாழ்விக்க வந்த அருள் வாழி! 13. கண்ணன்-என் காதலன் (பாங்கியைத் தூது விடுத்தல்) தங்கப் பாட்டு மெட்டு ரசங்கள்: சிரங்காரம்,ரௌத்ரம் 1. கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் (அடி தங்கமே தங்கம்) கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்-பின்னர் ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். 2. கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள் காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்; அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்-என்னும் அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம் 3. சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே-எங்கும் தோழமை யில்லையடி தங்கமே தங்கம்; என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?-அவை யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ 4. மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ? பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே-கிழப் பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம். 5. ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம் தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம். 6. சோர மிழைத்திடையர் பெண்களுடனே-அவன் சூழ்ச்சித் திறமை ப காட்டுவ தெல்லாம் வீர மறக்குலத்து மாதரிடத்தே வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ! 7. பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப் பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்; பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதிவந்திட்டான்-அதைப் பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே 8. நேர முழுதிலுமப் பாவி தன்னையே-உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்-பின்பு தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம். 14. கண்ணன்-என் காதலன் (பிரிவாற்றாமை) ராகம்-பிலஹரி 1. ஆசை முகமறந்து போச்சே-இதை ஆரிடம் சொல்வேனடி தோழி? நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில் நினைவு முகமறக்க லாமோ? 2. கண்ணில் தெரியுதொரு தோற்றம்-அதில் கண்ண னழழுமுழு தில்லை; நண்ணு முகவடிவு காணில்-அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம் 3. ஓய்வு மொழிதலுமில்லாமல்-அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம் வாயு முரைப்பதுண்டு கண்டாய்-அந்த மாயன் புகழினையெய் போதும். 4. கண்ணன் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு; பெண்க ளினத்திலிது போல-ஒரு பேதையை முன்புகண்ட துண்டோ? 5. தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும்-இந்த வைய முழுதுமில்லை தோழி! 6. கண்ணன் முகமறந்து போனால்-இந்தக் கண்க ளிருந்துபய னுண்டோ? வண்ணப் படமுமில்லை கண்டாய்-இனி வாழும் வழியென்னடி தோழி? 15. கண்ணன்-என் காந்தன் வராளி-திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரசம் 1. கனிகள் கொண்டுதரும்-கண்ணன் கற்கண்டு போலினிதாய்; பனிசெய் சந்தனமும்-பின்னும் பல்வகை அத்தர்களும், குனியும் வாண்முகத்தான்-கண்ணன் குலவி நெற்றியிலே இனிய பொட்டிடவே-வண்ணம் இயன்ற சவ்வாதும். 2. கொண்டை முடிப்பதற்கே-மணங் கூடு தயிலங்களும், வண்டு விழியினுக்கே-கண்ணன் மையுங் கொண்டுதரும்; தண்டைப் பதங்களுக்கே-செம்மை சார்த்துசெம் பஞ்சுதரும்; பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன் பேசருந் தெய்வமடி! 3. குங்குமங் கொண்டுவரும்-கண்ணன் குழைத்து மார்பெழுத; சங்கையி லாதபணம்-தந்தே தழுவி மையல் செய்யும்; பங்கமொன் றில்லாமல்-முகம் பார்த்திருந் தாற்போதும்; மங்கள மாகுமடீ!-பின்னோர் வருத்த மில்லையடீ! 16. கண்ணம்மா-என் காதலி (காட்சி வியப்பு) செஞ்சுருட்டி-ஏகதாளம் ரசங்கள்:சிருங்காரம்,அற்புதம் 1. சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா! சூரிய சந்திர ரோ? வட்டக் கரிய விழி,-கண்ணம்மா! வானக் கருமை கொல்லோ? பட்டுக் கருநீலப்-புடவை பதித்த நல் வயிரம் நட்ட நடு நிசியில்-தெரியும் நக்ஷத் திரங்க ளடி! 2. சோலை மல ரொளியோ-உனது சுந்தரப் புன்னகை தான்? நீலக் கட லலையே-உனது நெஞ்சி லலைக ளடி! கோலக் குயி லோசை-உனது குரலி னிமை யடீ! வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா! மருவக் காதல் கொண்டேன். 3. சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா! சாத்திர மேதுக் கடீ! ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா! சாத்திர முண்டோ டீ! மூத்தவர் சம்ம தியில்-வதுவை முறைகள் பின்பு செய்வோம்; காத்திருப் பேனோ டீ?-இது பார். கன்னத்து முத்த மொன்று! 17. கண்ணம்மா-என் காதலி (பின்னே வந்து நின்று கண் மறைத்தல்) நாதநாமக்கிரியை-ஆதிதாளம் சிருங்கார ரசம் மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்; மூலைக் கடலினையவ் வான வளையம் முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்; நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே சாலப் பலபலநற் பகற் கனவில் தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். 1 ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே, ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே, பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன், பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்; ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்; ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்; வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா! மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன். 2 சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே. திருமித் தழுவி“என்ன செய்தி சொல்என்றேன்; “நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்? திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்? சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்? பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே. பெற்ற நலங்கள் என்ன?பேசுதிஎன்றாள். 3 “நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்; பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை; சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே, திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன். 4 18. கண்ணம்மா-என் காதலி (முகத்திரை களைதல்) நாதநாமக்கிரியை -ஆதி தாளம் சிருங்கார ரசம் தில்லித் துருக்கர் செய்த வழக்கமடீ!-பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்; வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்; வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணி மறைத்தத னாலழகு மறைந்த தில்லை; சொல்லித் தெரிவ திலலை,மன்மதக்கலை-முகச் சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1 ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்-பண்டை ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ஓரிரு முறைகண்டு பழகிய பின்-வெறும் ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ? யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்-வலு வாக முகத்திரையை அகற்றி விட்டால்? காரிய மில்லையடி வீண்ப சப்பிலே -கனி கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ? 2 19. கண்ணம்மா-என் காதலி (நாணிக் கண் புதைத்தல்) நாதநாமக்கிரியை-ஆதிதாளம் சிருங்கார ரசம் மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை-இவன் மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ? சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ?-இங்கு செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ? வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன்-நின்றன் மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன். என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்?-எநனக் கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! 1 கன்னி வயதிலுனைக் கண்ட தில்லையோ?-கன்னங் கன்றிச் சிவக்க முத்த மிட்ட தில்லையோ! அன்னிய மாகநம்மள் எண்ணுவ தில்லை-இரண் டாவுயுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ? பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? துகில் பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ என்னைப் புறமெனவுங் கருதுவதோ-கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? 2 நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்-சுவை நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ? பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால்-தம்முள் பன்னி உபசரணை பேசுவ துண்டோ? நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே-விண்ணை நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ? மூட்டும் விறகினையச் சோதி கவ்வுங்கால்-அவை முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? 3 சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்;-அவர் சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்; நேற்று முன்னாளில் வந்த உறவன் றடீ!-மிக நெடும்பண்டைக் காலமுதல் சேர்ந்து வந்ததாம். போற்றுமி ராமனென முன்புதித்தனை,-அங்கு பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்; ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன்-கண்ணன் உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான். 4 முன்னை மிகப்பழமை இரணியனாம்-எந்தை மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ; பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன்-ஒளிப் பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன். சொன்னவர் சாத்திரத்தில மிகவல்லர் காண்;-அவர் சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை; இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்;-இதில் ஏதுக்கு நாண முற்றுக் கண்புதைப்பதே? 5 20. கண்ணம்மா-என் காதலி (குறிப்பிடம் தவறியது) செஞ்சுருட்டி-ஆதிதாளம் சிருங்கார ரசம் தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே, பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா! மார்பு துடிக்கு தடீ! பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே பாவை தெரியு தடி! 1 மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே வேதனை செய்கு தடீ! வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்! மோனத் திருக்குதடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே, நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர் நரகத் துழலுவதோ? 2 கடுமை யுடைய தடீ!எந்த நேரமும் காவலுன் மாளிகையில்; அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான் அங்கு வருதற் கில்லை; கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே; நடுமை யரசி யவள்-எதற் காகவோ நாணிக் குலைந்திடுவாள். 3 கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை ஆயிரங் கோடி முறை நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம் பண்ணிய தில்லை யடி! 4 21. கண்ணம்மா-என் காதலி யோகம் பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு, தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு. வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா! 1 வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு; காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா! 2 வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு; பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு; ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம், ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா! 3 வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு; பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு; எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா! 4 வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு; பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு; நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்? ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா! 5 காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு; வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு; போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே! நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6 நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு; செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு; எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே! முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா! 7 தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு; வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு; தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா! 8 22. கண்ணன்-என் ஆண்டான் புன்னாகவராளி-திஸ்ர ஏகதாளம் ரசகங்கள் : அற்புதம்,கருணை தஞ்ச முலகினில் எங்கணு மின்றித் தவித்துத் தடுமாறி பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன், பார முனக் காண்டே! ஆண்டே!-பாரமுனக் காண்டே! 1 துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச் சுகமருளல் வேண்டும்; அன்புடன் நின்புகழ் பாடிக்குறித்து நின் ஆணை வழி நடப்பேன்; ஆண்டே-ஆணைவழி நடப்பேன். 2 சேரிமுழுதும் பறையடித் தேயருட் சீர்த்திகள் பாடிடுவேன்? பேரிகை கொட்டித் திசைக ளதிர நின் பெயர் முழுக்கிடுவேன்; ஆண்டே!-பெயர் முழக்கிடுவேன். 3 பண்ணைப் பறையர்தங் கூட்டத்தி லேயிவன் பாக்கிய மோங்கி விட்டான்; கண்ணனடிமை யிவனெனுங் கீர்த்தியில் காதலுற் றங்கு வந்தேன்; ஆண்டே! காதலுற் றிங்கு வந்தேன்; 4 காடு கழனிகள் காத்திடுவன்,நின்றன் காலிகள் மேய்த்திடுவேன்; பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென் பக்குவஞ் சொல்லாண்டே! ஆண்டே!-பக்குவஞ் சொல்லாண்டே! 5 தோட்டங்கள் மொத்திச் செடி வளர்க்கச் சொல்லிச் சோதனை போடாண்டே! காட்டு மழைழக்குறி தப்பிச் சொன்னா லெனைக் கட்டியடி யாண்டே! ஆண்டே!-கட்டியடி யாண்டே! 6 பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப் பிழைத்திட வேண்டுமையே! அண்டை யயலுக்கென் னாலுப காரங்கள் ஆகிட வேண்டுமையே? உபகாரங்கள்-ஆகிட வேண்டுமையே! 7 மானத்தைக் காக்கவோர் நாலு முழத்துணி வாங்கித் தரவேணும்; தானத்துகுச் சில வேட்டிகள் வாங்கித் தரவுங் கடனாண்டே! சில வேட்டி-தரவுங் கடனாண்டே! 8 ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி யொரு சில பேய்கள் வந்தே துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து தொலைத்திட வேண்டுமையே! பகையாவுந் -தொலைத்திட வேண்டுமையே! 9 பேயும் பிசாசுந் திருடரு மென்றன் பெயரினைக் கேட்டளவில், வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க வழி செய்ய வேண்டுமையே! தொல்லைதீரும்-வழிசெய்ய வேண்டுமையே! 10 23. கண்ணம்மா-எனது குல தெய்வம் ராகம்-புன்னாக வராளி பல்லவி நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா! நின்னைச் சரணடைந்தேன்! சரணங்கள் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்) மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில் குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று (நின்) தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்) துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை, அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்) நல்லதுதீயது நாமறியோம் அன்னை நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்) | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
பாஞ்சாலி சபதம் - முதற்பாகம்
துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்
1. பிரம்ம ஸ்துதி நொண்டிச் சிந்து ஓ மெனப் பெரியோர் கள்-என்றும் ஓதுவ தாய் வினை மோதுவ தாய், தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர் தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய், நாமமும் உருவும் அற்றே-மனம் நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய், ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்; 1 நின்றிடும பிரமம்என் பார்;-அந்த நிர்மலப் பொருளினை நினைத்திடு வேன்; நன்றுசெய் தவம் யோகம்-சிவ ஞானமும் பக்தியும் நணுகிட வே வென்றி கொள்சிவ சக்தி-எனை மேவுற வே,இருள் சாவுறவே, இன்தமிழ் நூலிது தான்-புகழ் ஏய்ந்தினி தாயென்றும் இலகிட வே. 2 2. சரஸ்வதி வணக்கம் வெள்ளைக் கமலத் திலே-அவள் வீற்றிருப் பாள் புக ழேற்றிருப் பாள், கொள்ளைக் கனியிசை தான்-நன்கு கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள், கள்ளைக் கடலமு தை-நிகர் கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொல வே பிள்ளைப் பருவத் திலே-எனைப் பேணவந் தாளருள் பூணவந் தாள். 3 வேதத் திருவிழி யாள்-அதில் மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள், சீதக் கதிர்மதி யே-நுதல் சிந்தனையே குழ லென்றுடை யாள், வாதத் தருக்க மெனுஞ்-செவி வாய்ந்தநற் றுணிவெனுந் தோடணிந் தாள், போதமென் நாசியி னாள்,-நலம் பொங்குபல் சாத்திர வாயுடை யாள். 4 கற்பனைத் தேனித ழாள்,-சுவைக் காவிய மெனுமணிக் கொங்கையி னாள், சிற்ப முதற்கலை கள்-பல தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள், சொற்படு நயமறி வார்-அசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார் விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்த மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள். 5 வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள் வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்; பேணிய பெருந்தவத் தாள்,-நிலம் பெயரள வும்பெயர் பெயரா தாள், பூணியல் மார்பகத் தாள்-ஐவர் பூவை;திரௌபதி புகழ்க் கதையை மாணியல் தமிழ்ப்பாட் டால்-நான் வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே! 6 3. ஹஸ்தினாபுரம் அத்தின புரமுண் டாம்;-இவ் அவனியி லேயதற் கிணையிலை யாம்; பத்தியில் வீதிக ளாம்;வெள்ளைப் பனிவரை போற்பல மாளிகை யாம்; முத்தொளிர் மாடங்க ளாம்;-எங்கும் மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்; நத்தியல் வாவிக ளாம்;-அங்கு; நாடு மிரதிநிகர் தேவிக ளாம். 7 அந்தணர் வீதிக ளாம்;-மறை யாதிக ளாம்கலைச் சோதிக ளாம்; செந்தழல் வேள்விக ளாம்;-மிகச் சீர்பெருங் சாத்திரக் கேள்விக ளாம்; மந்திர கீதங்க ளாம்;-தர்க்க வாதங்க ளாம்;தவ நீதங்க ளாம்; சிந்தையி லறமுண் டாம்;-எனிற் சேர்ந்திடுங் கலிசெயும் மறமுமுண் டாம். 8 மெய்த்தவர் பலருண் டாம்;-வெறும் வேடங்கள் பூண்டவர் பலருமுண் டாம்; உய்த்திடு சிவஞா னம்-கனிந் தோர்ந்திடும் மேலவர் பலருண் டாம்; பொய்த்த விந்திரசா லம்-நிகர் பூசையும் கிரியையும் புலைநடை யம் கைத்திடு பொய்ம்மொழி யும்-கொண்டு கண்மயக் காற்பிழைப் போர்பல ராம். 9 மாலைகள் புரண்டசை யும்-பெரு வரையெனத் திரண்டவன் தோளுடை யார், வேலையும் வாளினை யும்-நெடு வில்லையுந் தண்டையும் விரும்பிடு வார், காலையும் மாலையி லும்-பகை காய்ந்திடு தொழில்பல பழகிவெம் போர் நூலையும் தேர்ச்சிகொள்வோர்,-கரி நூறினைத் தனிநின்று நொறுக்கவல் லார். 10 ஆரிய வேல்மற வர்,-புவி யாளுமொர் கடுந்தொழில் இனிதுணர்ந் தோர், சீரியல் மதிமுகத் தார்-மணித் தேனித ழமுதென நுகர்ந்திடு வார், வேரியங் கள்ளருந் தி-எங்கும் வெம்மத யானைகள் எனத்திரி வார் பாரினில் இந்திரர் போல்-வளர் பார்த்திவர் வீதிகள் பாடுவ மே 11 நல்லிசை முழுக்கங்க ளாம்;-பல நாட்டிய மாதர்தம் பழக்கங்க ளாம்; தொல்லிசைக் காவியங் கள்-அருந் தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங் கள் கொல்லிசை வாரணங் கள்-கடுங் குதிரைக ளொடுபெருந் தேர்களுண் டாம்; மல்லிசை போர்களுண் டாம்;-திரள் வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண் டாம். 12 எண்ணரு கனிவகை யும்-இவை இலகிநல் லொளிதரும் பணிவகை யும், தண்ணுறுஞ் சாந்தங்க ளும்-மலர்த் தார்களும் மலர்விழிக் காந்தங்க ளும் சுண்ணமும் நறும்புகையும்-சுரர் துய்ப்பதற் குரியபல் பண்டங்க ளும் உண்ணநற் கனிவகை யும்-களி வுகையும் கேளியும் ஓங்கின வே, 13 சிவனுடை நண்பன்என் பார்,-வட திசைக்கதி பதியள கேசன் என் பார்; அவனுடைப் பெருஞ்செல் வம்-இவர் ஆவணந் தொறும்புகுந் திருப்பது வாம்; தவனுடை வணிகர்க ளும்-பல தரனுடைத் தொழில்செயும் மாசன மும் எவனுடைப் பயமு மிலா-தினிது இருந்திடு தன்மையது எழில்நக ரே. 14 4. துரியோதனன் சபை கன்னங் கரியது வாய்-அகல் காட்சிய தாய்மிகு மாட்சிய தாய், துன்னற் கினியது வாய்-நல்ல சுவைதரும் நீருடை யமுனை யெனும் வன்னத் திருநதி யின்-பொன் மருங்கிடைத் திகழ்ந்த அம் மணிநக ரில், மன்னவர் தங்கோ மான்-புகழ வாளர வக்கொடி யுயர்த்துநின் றான். 15 துரியோ தனப்பெய ரான்,-நெஞ்சத் துணிவுடை யான்,முடி பணிவறி யான். கரியோ ராயிரத் தின்-வலி காட்டிடு வோன்என்றக் கவிஞர் பிரான் பெரியோன் வேத முனி-அன்று பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன், உரியோர் தாமெனி னும்-பகைக் குரியோர் தமக்குவெந் தீயனை யான். 16 தந்தைசொல் நெறிப்படி யே-இந்தத் தடந்தோள் மன்னவன் அரசிருந் தான், மந்திர முணர்பெரி யோர்-பலர் வாய்த்திருந் தார்அவன் சபைதனி லே, அந்தமில் புகழுடை யான்.-அந்த ஆரிய வீட்டுமன்,அறம்அறிந் தோன், வந்தனை பெருங்குர வோர்-பழ மறைக்குல மறவர்கள் இருவரொடே. 17 மெய்ந்நெறி யுணர்விது ரன்-இனி வேறுபல் அமைச்சரும விளங்கிநின் றார்; பொய்ந்நெறித் தம்பிய ரும்-அந்தப் புலைநடைச் சகுனியும் புறமிருந் தார்? மைந்நெறி வான்கொடை யான்-உய் மானமும் வீரமும் மதியுமு ளோன், உய்ந்நெறி யறியா தான்.இறைக்கு உயிர்நிகர் கன்னனும் உடனிருந் தான். 18 5. துரியோதனன் பொறாமை வேறு எண்ணிலாத பொருளின் குவையும் யாங்க ணுஞ்செலுஞ் சக்கர மாண்பும் மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர் வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று வேண்டு மின்பமும் பெற்றவ னேனும் கண்ணி லாத்திரி தாட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர். 19 வேறு பாண்டவர் முடியுயர்த்தே-இந்தப் பார்மிசை யுலவிடு நாள்வரை தான் ஆண்டதொர் அரசா மோ?-எனது ஆண்மையும் புகழுமொர் பொருளா மோ? காண்டகு வில்லுடை யோன்-அந்தக் காளை யருச்சுனன் கண்களி லும மாண்டகு திறல்வீ மன்-தட மார்பிலும் எனதிகழ் வரைந்துள தே! 20 பாரத நாட்டி லுள்ள-முடிப் பார்த்திவர் யார்க்குமொர் பதியென்றே நாரதன் முதன்முனி வோர்-வந்து நாட்டிடத் தருமன் அவ் வேள்விசெய் தான்; சோரனவ் வெதுகலத் தான்-சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலியும் வீரமி லாத்தரு மன்-தனை வேந்தர் தம் மதலென விதித்தன வே. 21 ஆயிரம் முடிவேந் தர்-பதி னாயிர மாயிரங் குறுநிலத் தார் மாயிருந் திறைகொணர்ந் தே-அங்கு வைத்ததொர் வரிசையை மறந்திட வோ? தூயிழை யாடைக ளும்-மணித் தொடையலும் பொன்னுமொர் தொகைப்படு மோ? சேயிழை மடவா ரும்-பரித் தேர்களுங் கொடுத்தவா சிறுதொகை யோ, 22 ஆணிப் பொற் கலசங்க ளும்-ரவி யன்னநல் வத்தின் மகுடங்களும் மாணிக்கக் குயிவல்க ளும்-பச்சை மரகதத் திரளும்நன் முத்துக்க ளும் பூணிட்ட திருமணி தாம்-பல புதுப்புது வகைகளிற் பொலிவன வும் காணிக்கை யாக்கொணர்ந் தார்;-அந்தக் காட்சியை மறப்பதும் எளிதா மோ? 23 நால்வகைப் பசும்பொன் னும்-ஒரு நாலா யிரவகைப் பணக்குவை யும் வேல்வகை வில்வகை யும்-அம்பு விதங்களும் தூணியும் வாள்வகை யும் சூல்வகை தடிவகை யும்-பல தொனிசெய்யும் பறைகளும் கொணர்ந்துவைத் தே பால்வளர் மன்னவர் தாம்--அங்குப் பணிந்ததை என்னுளம் மறந்திடு மோ? 24 கிழவியர் தபசியர் போல்-பழங் கிளிக்கதை படிப்பவன்,பொறுமையென்றும் பழவினை முடிவென்றும்-சொலிப் பதுங்கிநிற் போன் மறத் தன்மையி லான், வழவழத் தருமனுக்கோ-இந்த மாநில மன்னவர் தலைமைதந் தார்! முழவினைக் கொடிகொண் டான்-புவி முழுதையுந் தனியே குடிகொண் டான். 25 தம்பியர் தோள்வலி யால்-இவன் சக்கர வர்த்தியென் றுயர்ந்தது வும், வெம்பிடு மதகலி யான்-புகழ் வேள்விசெய் தந்நிலை முழக்கிய தும், அம்புவி மன்னரெ லாம்-இவன் ஆணைதம் சிரத்தினில் அணிந்தவ ராய் நம்பரும் பெருஞ்செல் வம்-இவன் நலங்கிளர் சபையினில் மொழிந்தது வும். 26 எப்படிப் பொறுத்திடு வேன்?-இவன் இளமையின் வளமைகள் அறியே னோ? குப்பை கொ லோமுத்தும்-அந்தக் குரைகடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார்; சிப்பியும் பவளங்க ளும்-ஒளி திரண்டவெண் சங்கத்தின் குவியல்க ளும் ஒப்பில்வை டூரிய மும்-கொடுத்து ஒதுஞ்கி நின்றார் இவன் ஒருவனுக் கே. 27 மலைநா டுடையமன் னர்-பல மான்கொணர்ந் தார் புதுத் தேன்கொணர்ந் தார், கொலைநால் வாய்கொணர்ந் தார்-மலைக் குதிரையும் பன்றியும் கொணர்ந்துதந் தார்; கலைமான் கொம்புக ளும்-பெருங் களிறுடைத் தந்தமும் கவரிக ளும் விலையார் தோல்வகை யும்-கொண்டு மேலும்பொன் வைத்தங்கு வணங்கிநின் றார், 28 செந்நிறத் தோல்,கருந் தோல்,-அந்தத் திருவளர் கதலியின் தோலுட னே வெந்நிறப் புலித்தோல் கள்,-பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத் தோல், பன்னிற மயிருடை கள்,-விலை பகரரும் பறவைகள் விலங்கினங் கள், பொன்னிறப் பாஞ்சாலி-மகிழ் பூத்திடும் சந்தனம் அகில்வகை கள். 29 ஏலம் கருப்பூ ரம்-நறும் இலவங்கம் பாக்குநற் சாதி வகை, கோலம் பெறக்கொணர்ந்தே-அவர் கொட்டி நின்றார் கரம் கட்டிநின்றார்; மேலுந் தலத்திலு ளார்-பல வேந்தர் அப்பாண்டவர் விழைந்திட வே ஓலந் தரக்கொணர்ந் தே-வைத்த தொவ்வொன்றும் என்மனத் துறைந்தது வே. 30 மாலைகள் பொன்னும்முத் தும்-மணி வகைகளிற் புனைந்தவும் கொணர்ந்துபெய் தார்; சேலைகள் நூறுவன் னம்-பல சித்திரத் தொழில்வகை சேர்ந்தன வாய், சாலவும் பொன்னிழைத் தே-தெய்வத் தையலர் விழைவன பலர்கொணர்ந் தார், கோலநற் பட்டுக்க ளின்-வகை கூறுவதோ?எண்ணில் ஏறுவ தோ 31 சுழல்களும் கடகங்க ளும்-மணிக் கவசமும் மகுடமும் கணக்கில வாம் நிழற்நிறப் பரிபல வும்-செந் நிறத்தன பலவும்வெண் ணிறம்பல வும் தழல்நிறம் மேக நிறம்-விண்ணில் சாரும் இந்திர வில்லை நேரும் நிறம் அழகிய கிளிவயிற் றின்-வண்ணம் ஆர்ந்தன வாய்ப்பணி சேர்ந்தன வாய். 32 காற்றெனச் செல்வன வாய்-இவை கடிதுகைத் திடுந்திறம்மறவ ரொடே, போற்றிய கையின ராய்ப்-பல புரவலர் கொணர்ந்து,அவன் சபைபுகுந் தார். சீற்ற வன்போர் யானை-மன்னர் சேர்த்தவை பலபல மந்தையுண் டாம்; ஆற்றல் மிலேச்சமன் னர்-தொலை அரபியா ஓட்டைகள் கொணர்ந்துதந் தார். 33 தென்றிசைச் சாவக மரம்-பெருந் தீவு தொட்டேவட திசையத னில் நின்றிடும் புகழ்சீ னம்-வரை நேர்ந்திடும் பலபல நாட்டின ரும், வெற்றிகொள் தருமனுக் கே,-அவன் வேள்வியில் பெரும்புகழ் விளையும்வண் ணம், நன்றுபல் பொருள் கொணர்ந் தார்-புவி நாயகன் யுதிட்டிரன் எனவுணர்ந் தார். 34 ஆடுகள் சிலர்கொணர்ந் தார்;-பலர் ஆயிர மாயிரம் பசுக்கொணர்ந் தார்; மாடுகள் பூட்டின வாய்ப்-பல வகைப்படு தானியம் சுமந்தன வாய் ஈடுறு வண்டி கொண்டே-பலர் எய்தினர்;கரும்புகள் பல கொணர்ந் தார்; நாடுறு தயில வகை-நறு நானத்தின் பொருள்பலர் கொணர்ந் தார்; 35 நெய்க்குடம் கொண்டுவந் தார்-மறை நியமங்கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே; மொய்க்குமின் கள்வகை கள்-கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுற வே; தைக்குநற் குப்பா யம்.-செம்பொற் சால்வைகள்,போர்வைகள்,கம்பளங் கள், கைக்குமட் டினுந்தா னோ-அவை காண்பவர் விழிகட்கும் அடங்குப வோ? 36 தந்தத்தில் கட்டில்க ளும்,-நல்ல தந்தத்தின் பல்லக்கும்,வாகன மும், தந்தத்தின் பிடி வாளும்-அந்தத் தந்தத்திலே சிற்பத் தொழில்வகை யும், தந்தத்தி லாதன மும்-பின்னும் தமனிய மணிகளில் இவையனைத் தும் தந்தத்தை கணக்கிட வோ?-முழுத் தரணியின் திருவும் இத் தருமனுக் கோ? 37 வேறு என்றிவ் வாறு பலபல எண்ணி ஏழை யாகி இரங்குத லுற்றான். வன்றி றத்தொரு கல்லெனும் நெஞ்சன், வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான், குன்ற மொன்று குழைவுற் றிளகிக் குழம்பு பட்டழி வெய்திடும் வண்ம் கன்று தலத் துள்ளுறை வெம்மை காய்ந்தெழுந்து வெளிப்படல் போல. 38 நெஞ்சத் துள்ளோர் பொறாமை யெனுந்தீ நீள்வதால் உள்ளம் நெக்குரு கிப்போய், மஞ்சன் ஆண்மை மறந்திண்மை மானம் வண்மை யாவும் மறந்தன னாகிப் பஞ்சை யாமொரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப் பானாய்க் கொஞ்ச நேரத்திற் பாதகத் தோடு கூடி யேஉற வெய்திநின் றானால். 39 யாது நேரினும் எவ்வகை யானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வைத் தீது செய்து மடித்திட எண்ணிச் செய்கை யொன்றறி யான்திகைப் பெய்திச் சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட துட்ட மாமனத் தான்சர ணெய்தி, ஏது செய்வம் எனச்சொல்லி நைந்தான், எண்ணத் துள்ளன யாவும் உரைத்தே. 40 மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மாம கத்தினில் வந்து பொழிந்த சொன்னம் பூண்மணி முத்திவை கண்டும், தோற்றங் கண்டும் மதிப்பினைக் கண்டும், என்ன பட்டது தன்னுளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம் முன்னம் தான் நெஞ்சிற் கூறிய வெல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான். 41 6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது வேறு உலகு தொடங்கிய நாள்முத லாகநம் சாதியில்-புகழ் ஓங்கி நின்றாரித் தருமனைப்போலெவர்?மாமனே! இலகு புகழ்மனு வாதி முதுவர்க்கும்,மாம னே!-பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி யுண்டுகொல்?மாமனே? கலைக ளுணர்ந்தநல் வேதியப் பாவலர் செய்தவாம்-பழங் கற்பனைக் காவியம் பற்பல கற்றனைமாம னே! பலகடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும்-சொல்லப் 42 பார்த்ததுண்டோ?கதை கேட்டதுண்டோ?புகல் மாமனே! எதனை யுலகில் மறப்பினும்,யானினி,மாம னே!-இவர் யாகத்தை என்றும் மறந்திட லென்பதொன் றேது காண்? விதமுறச் சொன்ன கொருட்குவை யும்பெரி திலைகாண்;அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பலவுண் டே; இதனை யெலாமவ் விழியற்ற தந்தையின் பாற்சென்றே சொல்லி, இங்கிவர் மீதவ னும்பகை எய்திடச் செய்குவாய் மிதமிகு மன்பவர் மீதுகொண்டானவன் கேட்கவே-அந்த வேள்விகண் டென்னுயிர் புண்படுஞ் செய்தி விளம்பு வாய். 43 கண்ணைப் பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர்-பல காமரு பொன்மணிப் பூண்க ளணிந்தவர் தம்மை யே மண்ணைப் புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில்-கொண்டு வாழ்த்தி யளித்தனர் பாண்டவர்க் கே,எங்கள் மாமனே! எண்ணைப் பழிக்குந் தொகையுடை யாரிள மஞ்சரைப் பலர் ஈந்தன் மன்ன ரிவர்தமக் குத்தொண் டியற்ற வே! விண்ணைப் பிளக்குந் தொனியுடைச் சங்குகள் ஊதினார்;-தெய்வ 44 வேதியர் மந்திரத் தோடுபல் வாழ்த்துக்கள் ஓதினர். நாரதன் தானும் அவ்வேத வியாசனும் ஆங்ஙனே-பலர் நானிங் குரைத்தற் கரிய பெருமை முனிவரும், மாரத வீரர்,அப் பாண்டவ வேள்விக்கு வந்ததும்,-வந்து மாமறை யாசிகள் கூறிப் பெரும்புகழ் தந்த தும், வீரர்தம் போரின் அரியநற் சாத்திர வாதங்கள்-பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே, சார மறிந்த யுதிட்டிரன் கேட்டு யிந்ததும்,-நல்ல தங்க மழைபொழிந் தாங்கவ்க் கேமகிழ் தந்த தும். 45 விப்பர ராதிய நால்வரு ணத்தவர் துய்ப்பவே-நல் விருந்து செயலில் அளவற்ற பொன்செல விட்டதும் இப்பிற விக்குள் இவையொத்த வேள்வி விருந்துகள்-புவி எங்கணும் நான்கண்ட தில்லைஎனத்தொனி பட்டதும், தப்பின்றி யநேல் விருந்தினர் யாருக்குந் தகுதிகள்-கண்டு தக்கசன் மானம் அளித்து வரிசைகள் இட்டதும், செப்புக நீயவ் விழியற்ற தந்தைக்கு;நின்மகன்-இந்தச் செல்வம் பெறாவிடில் செத்திடு வான்என்றும் செப்புவாய். 46 அண்ணனை மைந்தன் அவனிக் குரியவன் யானன்றோ? அவர் அடியவ ராகி யெமைப்பற்றி நிற்றல் விதியன் றோ? பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர்தந்தார்? அந்தப் பாண்ட வர்நமைப் புல்லென எண்ணுதல் பார்த்தை யோ? கண்ண னுக்கு முதல்உப சாரங்கள் காட்டினார்;-சென்று கண்ணி லாத்தந்தைக் கிச்செய லின்பொருள் காட்டுவாய்; மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான்? என்றன் மாமனே! அவன் நம்மில் உயர்ந்த வகைசொல் வாய்! 47 சந்தி ரன்குலத் தேபிறந் தோர்தந் தலைவன்யான்-என்று சகமெ லாஞ்சொலும் வார்த்தைமெய் யோவெறுங் சாலமோ? தந்திரத்தொழில் ஒன்றுண ரும்சிறு வேந்தனை-இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ? மூந்தி ரத்திலச் சேதியர் மன்னனை மாய்த்திட்டார்;-ஐய! மாம கத்தில் அதிதியைக் கொல்ல மரபுண்டோ? இந்திரத்துவம் பெற்றிவர் வாழும் நெறிநன்றே!-இதை எண்ணி எண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே! 48 சதிசெய் தார்க்குச் சதிசெயல் வேண்டும்என் மாமனே!-இவர் தாமென் அன்பன் சராசந் தனுக்குமுன் எவ்வ கை விதிசெய் தார்?அதை என்றும் உள்ளம் மறக்குமோ?-இந்த மேதினி யோர்கள் மறந்து விட்டார்.இஃதோர்விந்தை யே? திதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர்,மாமனே!-எந்த நெறியி னாலது செய்யினும்,நாயென நீள்பு வி துதிசெய் தேயடி நக்குதல் கண்டனை மாமனே!-வெறுஞ் சொல்லுக் கேயற நூல்கள் உரைக்கும் துணிவெலாம். 49 வேறு பொற்றடந் தேரொன்று வாலிகன் கொண்டு விடுத்ததும்-அதில் பொற்கொடி தியர் கேமன் வந்து தொடுத்ததும், உற்றதோர் தம்பிக்குத் தென்னவன் மாப்ணி தந்ததும்;-ஒளி யோங்கிய மாலையும் மாகதன் தான்கொண்டு வந்ததும், பற்றல ரஞ்சும் பெரும்புக ழேக லவியனே -செம்பொற் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்தும், முற்றிடு மஞ்சனத் திற்கப் பல பலதீர்த்தங்கள்-மிகு மொய்ம்புடை யான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும். 50 மஞ்சன நீர்தவ வேத வியாசன் பொழிந்ததும்,-பல வைதிகர் கூடிநன் மந்திர வாழ்த்து மொழிந்ததும், குஞ்சரச் சாத்தகி வெண்குடை தாங்கிட,வீமனும்-இளங் கொற்றவ னும்பொற் சிவிறிகள் வீச,இரட்டையர் அஞ்சுவர் போலங்கு நின்று கவரி இரட்டவே-கடல் ஆளு மொருவன் கொடுத்ததொர் தெய்விகச் சங்கினில் வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங் கங்கை நீர்க்கொண்டு-திரு மஞ்சன மாட்டும்அப் போதில் எவரும் மகிழ்ந்ததும் 51 மூச்சை யடைத்த தடா!சபை தன்னில் விழுந்ததுநான்-அங்கு மூர்ச்சை யடைந்தது கண்டனையே! என்றன் மாமனே! ஏச்சையும் அங்கவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய்;-அந்த ஏந்திழை யாளும் எனைச்சிரித் தாளிதை எண்ணுவாய்; பேச்சை வளர்த்துப் பயனொன்று மில்லை,என் மாமனே!-அவர் பேற்றை அழிக்க உபாயஞ்சொல்வாய், என்றன் மாமனே! தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து,நாம்-அவர் செல்வங் கவர்ந்த வரைவிட வேண்டும் தெருவிலே. 52 7. சகுனியின் சதி வேறு என்று சுயோதனன் கூறியே-நெஞ்சம் ஈர்ந்திடக் கண்ட சகுனி தான்-அட! இன்று தருகுவன் வெற்றியே;-இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்ப தேன்?-இனி ஒன்றுரைப் பேன்நல் உபாயந்தான்;.அதை ஊன்றிக் கருத்தொடு கேட்பையால்;-ஒரு மன்று புனைந்திடச் செய்தி நீ,-தெய்வ மண்டப மொத்த நலங்கொண்டே 53 மண்டபங் காண வருவி ரென்-றந்த மன்னவர் தம்மை வரவழைத்-தங்கு கொண்ட கருத்தை முடிப்ப வே-மெல்லக் கூட்டிவன் சூது பொரச் செய்வோம்-அந்த வண்டரை நாழிகை யொன்றிலே-தங்கள் வான்பொருள் யாவையும் தோற்றுனைப்-பணி தொண்ட ரெனச்செய் திடுவன் யான்,-என்றன் சூதின் வலிமை அறிவை நீ. 54 வெஞ்சமர் செய்திடு வோமெனில்-அதில் வெற்றியும் தோல்வியும் யார்கண்டார்?-அந்தப் பஞ்சவ் வீரம் பெரிது காண்-ஒரு பார்த்தன்கை வில்லுக் கெதிருண்டோ?-உன்றன் நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சியாக் -கொள்ள நீத மில்லை முன்னைப் பார்த்திவர்-தொகை கொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால்-வெற்றி கொண்டு பகையை அழித்துளோர். 55 நாடும் குடிகளும் செல்வமும்-எண்ணி, நானிலத் தோர்கொடும் போர் செய்வார்;-அன்றி ஓடுங் குருதியைத் தேக்கவோ?-தமர் ஊன்குவை கண்டு களிக்கவோ?அந்த நாடும் குடிகளும் செல்வமும்-ஒரு நாழிகைப் போதினில் சூதினால்-வெல்லக் கூடு மினிற்பிறி தெண்ணலேன்?-என்றன் கொள்கை இதுவெனக் கூறினான். 56 இங்கிது க்டட சுயோதனன்-மிக இங்கிதம் சொல்லினை,மாமனே!என்று சங்கிலிப் பொன்னின் மணியிட்ட,-ஒளித் தாமம் சகுனிக்குச் சூட்டினான்;-பின்னர் எங்கும் புவிமிசை உன்னைப் போல்-எனக் கில்லை இனியது சொல்லுவோர்-என்று பொங்கும் உவகையின் மார்புறக் -கட்டிப் பூரித்து விம்மித் தழுவினான். 57 8. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல் மற்றதன் பின்னர் இருவரும்-அரு மந்திக் கேள்வி உடையவன்-பெருங் கொற்றவர் கோன்திரி தராட்டிரன்-சபை கூடி வணங்கி இருந்தனர்;-அருள் அற்ற சகுனியும் சொல்லுவான்;-ஐய!, ஆண்டகை நின்மகன் செய்திகேள்!-உடல் வற்றித் துரும்பொத் திருக்கின்றான்;-உயிர் வாழ்வை முழுதும வெறுக்கின்றான். 58 உண்ப சுவையின்றி உண்கின்றான்;-பின் உடுப்ப திகழ உடுக்கின்றான்;-பழ நண்பர்க ளோடுற வெய்திடான்;.எள நாரியரைச் சிந்தை செய்திடான்;-பிள்ளை கண்பசலை கொண்டு போயினான்-இதன் காரணம் யாதென்று கேட்பையால்;-உயர் திண்ப ருமத்தடந் தோளினாய்!-என்று தீய சகுனியும் செப்பினான். 59 தந்தையும் இவ்வுரை கேட்டதால்-உளம் சாலவும் குன்றி வருந்தியே,-என்றன் மைந்த!நினக்கு வருத்தமேன்?-இவன் வார்த்தையி லேதும் பொருளுண்டோ? நினக்கு எந்த விதத்துங் குறையுடோ?நினை யாரும் எதிர்த்திடு வாருண்டோ?-நின்றன் சிந்தையில் எண்ணும் பொருளெலாம்-கணந் தேடிக் கொடுப்பவர் இல்லையோ? 60 இன்னமு தொத்த உணவுகள்-அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள்,-பலர் சொன்ன பணிசெயும் மன்னவர்,-வருந் துன்பந் தவிர்க்கும் அமைச்சர்கள்,-மிக நன்னலங் கொண்ட குடி படை-இந்த நானில மெங்கும் பெரும்புகழ்-மிஞ்சி மன்னும்அப் பாண்டவச் சோதரர்-இவை வாய்ந்தும் உனக்குத் துயருண்டோ? 61 தந்தை வசனஞ் செயிவுற்றே-கொடி சர்ப்பத்தைக் கொண்டதொர் கோமன் வெந்தழல் போலச் சினங்கொடே-தன்னை முறிப் பலசொல விளம்பினான்;.இவன் மந்த மதிகொண்டு சொல்வதை-அந்த மாமன் மதித்துரை செய்குவான்;-ஐய; சிந்தை வெதுப்பத்தி னாலிவன்-சொலும் சீற்ற மொழிகள் பொறுப்பையால். 62 தன்னுளத் துள்ள குறையெலாம்-நின்றன் சந்நிதி யிற்சென்று சொல்லிட-முதல் என்னைப் பணித்தனன்;யானிவன்-றனை இங்கு வலியக் கொணர்ந்திட்டேன்; நன்னய மேசிந்தை செய்கின்றான்;-எனில் நன்கு மொழிவ றிந்திலன்;-நெஞ்சைத் தின்னுங் கொடுந்தழல் கொண்டவர்-சொல்லுஞ் செய்தி தெளிய உரைப்பரோ? 63 நீ பெற்ற புத்திர னேயன்றோ?-மன்னர் நீதி யியல்பின் அறிகின்றான்-ஒரு தீபத்தில் சென்று கொளுத்திய-பந்தம் தேசு குறைய எரியுமோ?-செல்வத் தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்-மன்னர் சாத்திரத் தேமுதற் சூத்திரம்;-பின்னும் ஆபத் தரசர்க்கு வேறுண்டோ-தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல்போல்? 64 வேள்வியில் அன்றந்தப் பாண்டவர்-நமை வேண்டுமட் டுங்குறை செய்தனர்;-ஒரு வேள்வி யிலாதுன் மகன்றனைப்-பலர் கேலிசெய் தேநகைத் தார்,கண்டாய்!-புவி ஆள்வினை முன்னவர்க் கின்றியே-புகழ் ஆர்ந்திளை யோரது கொள்வதைப்-பற்றி வாள்விழி மாதரும் நம்மையே-கய மக்களென் றெண்ணி நகைத்திட்டார். 65 ஆயிரம் யானை வலிகொண்டான்-உன்றன் ஆண்டகை மைந்த னிவன் கண்டாய்!-இந்த மாயரு ஞாலத் துயர்ந்ததாம்-மதி வான்குலத் திற்குமுதல்வனாம்; ஞாயிறு நிற்பவும் மின்மினி-தன்னை நாடித் தொழுதிடுந் தன்மைபோல்,-அவர் வேயிருந் தூதுமொர் கண்ணனை -அந்த வேள்வியில் சால உயர்த்தினார். 66 ஐய!நின் மைந்தனுக் கில்லைகாண்-அவர் அர்க்கியம் முற்படத் தந்ததே;-இந்த வையகத் தார்வியப் பெய்தவே,-புவி மன்னவர் சேர்ந்த சபைதனில்-மிக நொய்யதோர் கண்ணனுக் காற்றினார்;-மன்னர் நொந்து மனங்குன்றிப் போயினர்;-பணி செய்யவும் கேலிகள் கேட்கவும்-உன்றன் சேயினை வைத்தனர் பாண்டவர். 67 பாண்டவர் செல்வம் விழைகின்றான்;-புவிப் பாரத்தை வேண்டிக் குழைகின்றான்;-மிக நீண்டமகிதலம் முற்றிலும்-உங்கள் நேமி செலும்புகழ் கேட்கின்றான்;-குலம் பூண்ட பெருமை கெடாதவா-றெண்ணிப் பொங்குகின் றான்நலம் வேட்கின்றான்;-மைந்தன் ஆண்டகைக் கிஃது தகுமன்றோ?-இல்லை யாமெனில வையம் நகுமன்றோ? 68 நித்தங் கடலினிற் கொண்டுபோய்-நல்ல நீரை அளவின்றிக் கொட்டுமாம்-உயர் வித்தகர் போற்றிடுங் கங்கையா-றது வீணிற் பொருளை யழிப்பதோ?-ஒரு சத்த மிலாநெடுங் காட்டினில்-புனல் தங்கிநிற் குங்குளம் ஒன்றுண்டாம்,-அது வைத்ததன் நீரைப் பிறர்கொளா-வகை வாரடைப் பாசியில் மூடியே. 69 சூரிய வெப்பம் படாமலே-மரம் சூழ்ந்த மலையடிக் கீழ்ப்பட்டே-முடை நீரின் நித்தலும் காக்குமாம்;-இந்த நீள்சுனை போல்வர் பலருண்டே?-எனில் ஆரியர் செல்வம் வளர்தற்கே-நெறி ஆயிரம் நித்தம் புதியன-கண்டு வாரிப் பழம்பொருள் எற்றுவார்;-இந்த வண்மையும் நீயறி யாததோ? 70 9. திரிதராட்டிரன் பதில் கூறுதல் கள்ளச் சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லித்தன் உள்ளத்தின்-பொருள் கொள்ளப் பகட்டுதல் கேட்டபின்-பெருங் கோபத் தொடேதிரி தாட்டிரன்,-அட! பிள்ளையை நாசம் புரியவே-ஒரு பேயென நீ வந்து தோன்றினாய்;-பெரு வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ:-இள வேந்தரை நாம்வெல்ல லாகுமோ? 71 சோதரர் தம்முட் பகையுண்டோ?-ஒரு சுற்றத்தி லேபெருஞ் செற்றமோ?-நம்மில் ஆதரங் கொட்வ ரல்லரோ?-முன்னர் ஆயிரஞ் சூழ்ச்சி இவன்செய்தும்-அந்தச் சீதரன் தண்ணரு ளாலுமோர்-பெருஞ் சீலத்தி னாலும் புயவலி-கொண்டும் யாதொரு தீங்கும் இலாமலே-பிழைத் தெண்ணருங கீர்த்திபெற் றாரன்றோ? 72 பிள்ளைப் பருவந் தொடங்சிகயே-இந்தப் பிச்சன் அவர்க்குப் பெரும்பகை -செய்து கொள்ளப் படாத பெரும்பழி-யன்றிக் கொண்டதொர் நன்மை சிறிதுண்டோ?-நெஞ்சில் எள்ளத் தகுந்த பகைமையோ?-அவர் யார்க்கும் இளைத்த வகையுண்டோ?-வெறும் நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய்,-பழ நூலின் பொருளைச் சிதைக்கிறாய், 73 மன்னவர் நீதி சொலவந்தாய்-பகை மாமலை யைச்சிறு மட்குடம்-கொள்ளச் சொன்னதொர் நூல்சற்றுக் காட்டுவாய்!-விண்ணில் சூரியன் போல்நிக ரின்றியே-புகழ் துன்னப் புவிச்சக்க ராதிபம்-உடற் சோதரர் தாங்கொண் டிருப்பவும்-தந்தை என்னக் கருதி அவரெனைப் -பணிந்து என்சொற் கடங்கி நடப்பவும், 74 முன்னை இவன்செய்த தீதெலாம்-அவர் முற்றும் மறந்தவ ராகியே-தன்னைத் தின்ன வருமொர் தவளையைக்-கண்டு சிங்கஞ் சிரித்தருள் செய்தல்போல-துணை யென்ன இவனை மதிப்பவும்-அவர் ஏற்றத்தைக் கண்டும் அஞ்சாமலே-நின்றன் சின்ன மதியினை என்சொல்வேன் -பகை செய்திட எண்ணிப் பிதற்றினாய், 75 ஒப்பில் வலிமை யுடையதாந் -துணை யோடு பகைத்தல் உறுதியோ-நம்மைத் தப்பிழைத் தாரந்த வேள்வியில்-என்று சாலம் எவரிடஞ் செய்கிறாய்?-மயல் அப்பி விழிதடு மாறியே-இவன் அங்கு மிங்கும் விழுந் தாடல் கண்டு-அந்தத் துப்பிதழ் மைத்துனி தான்சிரித் -திடில் தோஷ மிதில்மிக வந்ததோ? 76 தவறி விழுபவர் தம்மையே-பெற்ற தாயுஞ் சிரித்தல் மரபன்றோ?-எனில் இவனைத் துணைவர் சிரித்ததோர்-செயல் எண்ணரும் பாதக மாகுமோ?-மனக் கவலை வளர்த்திடல் வேண்டுவோர்-ஒரு காரணங் காணுதல் கஷ்டமோ?-வெறும் அவல மொழிகள் அளப்பதேன்?-தொழில் ஆயிர முண்டவை செய்குவீர். 77 சின்னஞ் சிறிய வயதிலே-இவன் தீமை அவர்க்குத் தொடங்கினான்-அவர் என்னரும் புத்திரன் என்றெண்ணித் -தங்கள் யாகத் திவனைத் தலைக்கொண்டு-பசும் பொன்னை நிறைத்ததொர் பையினை-மனம் போலச் செலவிடு வாய்என்றே-தந்து மன்னவர் காண இவனுக்கே-தம்முள் மாண்பு கொடுத்தன ரல்லரோ? 78 கண்ணனுக் கேமுதல் அர்க்கியம்-அவர் காட்டினர் என்று பழித்தனை!-எனில், நண்ணும் விருந்தினர்க் கன்றியே-நம்முள் நாமுப சாரங்கள் செய்வதோ?-உறவு அண்ணனும் தம்பியும் ஆதலால்-அவர் அன்னிய மாநமைக் கொண்டிலர்;-முகில் வண்ணன் அதிதியர் தம்முளே-முதல் மாண்புடை யானெனக் கொண்டனர். 79 கண்ணனுக் கேயது சாலுமென்று-உயர் கங்கை மகன்சொலச் செய்தனர்-இதைப் பண்ணரும் பாவமென் றெண்ணினால்-அதன் பார மவர்தமைச் சாருமோ?-பின்னும், கண்ணனை ஏதெனக் கொண்டனை-அவன் காலிற் சிறிதுக ளொப்பவர்-நிலத் தெண்ணரும் மன்னவர் தம்முளே-பிறர் யாரு மிலையெனல் காணுவாய். 80 ஆதிப் பரம்பொருள் நாரணன்-தெளி வாகிய பொற்கடல் மீதிலே-நல்ல சோதிப் பணாமுடி யாயிரம்-கொண்ட தொல்லறி வென்னுமோர் பாம்பின்மேல்-ஒரு போதத் துயில்கொளும் நாயகன்,-கலை போந்து புவிமிசைத் தோன்றினான்-இந்தச் சீதக் குவளை விழியினான்-என்று செப்புவர் உண்மை தெளிந்தவர். 81 நானெனும் ஆணவந் தள்ளலும்-இந்த ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும்-பர மோன நிலையின் நடத்தலும்-ஒரு மூவகைக் காலங் கடத்தலும் நடு வான கருமங்கள் செய்தலும்-உயிர் யாவிற்கும் நல்லருள் பெய்தலும்-பிறர் ஊனைச் சிதைத்திடும் போதினும்-தனது உள்ளம் அருளின் நெகுதலும், 82 ஆயிரங் கால முயற்சியால்-பெற லாவர் இப்பேறுகள் ஞானியர்;-இவை தாயின் வயிற்றில் பிறந்தன்றே-தம்மைச் சார்ந்து விளங்கப் பெறுவரேல்,-இந்த மாயிரு ஞாலம் அவர்தமைத்-தெய்வ மாண்புடை யாரென்று போற்றுங்காண்!-ஒரு பேயினை வேதம் உணர்த்தல்போல்,-கண்ணன் பெற்றி உனக்கெவர் பேசுவார்? 83 10. துரியோதனன் சினங் கொள்ளுதல் வேறு வெற்றி வேற்கைப் பரதர்தங் கோமான், மேன்மை கொண்ட விழியகத் துள்ளோன், பெற்றி மிக்க விதுர னறிவைப் பன்னும் ம்ற்றொரு கண்ணெனக் கொண்டோன், முற்று ணர்திரி தாட்டிரன் என்போன் மூடப் பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை எற்றி நல்ல வழக்குரை செய்தே ஏற்ற வாறு நயங்கள் புகட்ட, 84 கொல்லும் நோய்க்கு மருந்துசெய் போழ்தில் கூடும வெம்மைய தாய்ப்பிணக் குற்றே தொல்லு ணர்வின் மருத்துவன் தன்னைச் சோர்வு றுத்துதல் போல்,ஒரு தந்தை சொல்லும் வார்த்தையி லோதெரு ளாதரன் தோமி ழைப்பதி லோர்மதி யுள்ளான், கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும் கட்டு ரைக்குக் கடுஞ்சின முற்றான் 85 11. துரியோதனன் தீ மொழி வேறு பாம்பைக் கொடியேன் றுயர்த்தவன்-அந்தப் பாம்பெனச் சீறி மொழிகுவான்;-அட! தாம்பெற்ற மைந்தர்குத் தீதுசெய்-திடும் தந்தையர் பார்மிசை உண்டுகொல்?-கெட்ட வேம்பு நிகரிவ னுக்குநான்;சுவை மிக்க சருக்கரை பாண்டவர்;-அவர் தீம்பு செய்தாலும் புகழ்கின்றான்,-திருத் தேடினும் என்னை இகழ்கின்றான். 86 மன்னர்க்கு நீதி யொருவகை;-பிற மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை-என்று சொன்ன வியாழ முனிவனை-இவன் சுத்த மடையனென் றெண்ணியே,-மற்றும் என்னென்ன வோகதை சொல்கிறான்,-உற வென்றும் நட்பென்றும் கதைக்கிறான்,-அவர் சின்ன முறச்செய வேதிறங்-கெட்ட செத்தையென் றென்னை நினைக்கிறான்; 87 இந்திர போகங்கள் என்கிறான்,-உண வின்பமும் மாதரின் இன்பமும்-இவன் மந்திர மும்படை மாட்சியும்-கொண்டு வாழ்வதை விட்டிங்கு வீணிலே-பிறர் செந்திருவைக் கண்டு வெம்பியே-உளம் தேம்புதல் பேதைமை என்கிறான்;-மன்னர் தந்திரந் தேர்ந்தவர் தம்மிலே-எங்கள் தந்தையை ஒப்பவர் இல்லைகாண்! 88 மாதர் தம் இன்பம் எனக்கென்றான்,-புவி மண்டலத் தாட்சி அவர்க்கென்றான்-நல்ல சாதமும் நெய்யும் எனக் கென்றான்,-எங்கும் சர்ற்றிடுங் கீர்த்தி அவர்க்கென்றான்;-அட! ஆதர விங்ஙனம் பிள்ளைமேல்-வைக்கும் அப்பன் உலகினில் வேறுண்டோ?உயிர்ச் சோதரர் பாண்டவர் தந்தை நீ-குறை சொல்ல இனியிட மேதையா! 89 சொல்லின் நயங்கள் அறிந்திலேன்,-உனைச் சொல்லினில் வெல்ல விரும்பிலேன்;-கருங் கல்லிடை நாருரிப் பாருண்டோ?-நினைக் காரணங் காட்டுத லாகுமோ?-என்னைக் கொல்லினும் வேறெது செய்யினும்,-நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிறேன்;-அந்தப் புல்லிய பாண்டவர் மேம்படக்-கண்டு போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்; 90 வாது நின்னொடு தொடுக்கிலேன்;-ஒரு வார்த்தை மட்டுஞ்சொலக் கேட்பையால்;ஒரு தீது நமக்கு வராமலே-வெற்றி சோர்வதற் கோர்வழி யுண்டு,காண்!-களிச் சூதுக் கவரை-வெற்றி தோற்றிடு மாறு புரியலாம்;-இதற் கேதுந் தடைகள் சொல்லாமலே-என தெண்ணத்தை நீகொளல் வேண்டுமால் 91 12. திரிதராட்டிரன் பதில் வேறு திரிதாட் டிரன் செவியில்-இந்தத் தீமொழி புகுதலுந் திகைத்து விட்டான்! பெரிதாத் துயர் கொணர்ந்தாய்;-கொடும் பேயெனப் பிள்ளைகள் பெற்று விட்டேன்; அரிதாக் குதல்போலாம்-அமர் ஆங்கவ ரொடுபொரல் அவலம் என்றேன்; நரிதாக் குதல்போலாம்-இந்த நாணமில் செயலினை நாடுவ னோ? 92 ஆரியர் செய்வாரோ?-இந்த ஆண்மையி லாச்செயல் எண்ணுவரோ? பாரினில் பிறருடைமை-வெஃகும் பதரினைப் போலொரு பதருண்டோ? பேரியற் செல்வங்களும்-இசைப் பெருமையும் எய்திட விரும்புதியேல், காரியம் இதுவாமோ?-என்றன் காளை யன்றோ இது கருத லடா! 93 வீரனுக் கேயிசை வார்-திரு, மேதினி எனுமிரு மனைவியர் தாம், ஆரமர் தமரல் லார்-மிசை ஆற்றிநல் வெற்றியில் ஓங்குதி யேல், பாரத நாட்டினிலே-அந்தப் பாண்டவ ரெனப்புகழ் படைத்திடு வாய்; சோரர்தம் மகனோ நீ?-உயர் சோமன்ற னோருகுலத் தோன்ற லன்றோ? 94 தம்மொரு கருமத்திலே-நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர்பொருளை இம்மியுங் கருதாமை,-சார்ந் திருப்பவர் தமைநன்கு காத்திடுதல்: இம்மையில் இவற்றினையே-செல்வத் திலக்கணம் என் றனர் மூதறிஞர். அம்ம,இங் கிதனை யெலாம் நீ அறிந்திலையோ? பிழையாற்றல் நன்றோ? 95 நின்னுடைத் தோளனை யார்-இள நிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ? என்னுடை யுயிரன்றோ?-எனை எண்ணிஇக் கொள்கையை நீக்குதியால்! பொன்னுடை மார்பகத் தார்-இளம் பொற்கொடி மாதரைக் களிப்பதினும் இன்னும்பல் இன்பத்தினும்-உளம் இசையவிட் டேஇதை மறந்தி டடா! 96 13. துரியோதனன் பதில் வேறு தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே, தாரி சைந்த நெடுவரைக் தோளான்; எந்தை,நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பன்முறை கூறியும் கேளாய்; வந்த காரியங் கேட்டி மற் றங்குன் வார்த்தை யன்றிஅப் பாண்டவர் வாரார்; இந்த வார்த்தை உரைத்து விடாயேல் இங்கு நின்முன் என் ஆவி இறுப்பேன். 97 மதித மக்கென் றிலாதவர் கோடி வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும் பதியுஞ் சாத்திரத் துள்ளுறை காணார், பானைத் தேனில் அகப்பையைப் போல்வார் துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச் சுருதி யாமெனக் கொண்டனை நீ தான்; அதிக மோகம் அவனுளங் கொண்டான் ஐவர் மீதில்,இங் கெம்மை வெறுப்பான். 98 தலைவன் ஆங்குப் பிறர்கையில் பொம்மை; சார்ந்து நிற்பவர்க் குய்ந்நெறி உண்டோ? உலைவ லால் திரி தாட்டிர வர்க்கத் துள்ள வர்க்கு நலமென்ப தில்லை; நிலையி லாதன செல்வமும் மாண்பும் நித்தம் தேடி வருந்த லிலாமே விலையி லாநிதி கொண்டனம்என்றே மெய்கு ழைந்து துயில்பவர் மூடர். 99 பழைய வானிதி போதுமென் றெண்ணிப் பாங்கு காத்திடு மன்னவர் வாழ்வை விழையும் அன்னியர் ஓர்கணத் துற்றே வென்ற ழிக்கும் விதி அறி யாயோ? குழைத லென்பது மன்னவர்க் கில்லை; கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும்; பிழைஒன் றேஅர சர்க்குண்டு, கண்டாய்; பிறரைத் தாழ்ந்து வதிற்சலிப் பெய்தல். 100 வேறு வெல்வதெங் குலத்தொழி லாம்;-அந்த விதத்தினில் இசையினும் தவறிலை காண்! நல்வழி தீய வழி-என நாமதிற் சோதனை செயத்தகு மோ? செல்வழி யாவினு மே-பகை தீர்த்திடல் சாலுமென் றனர்பெரி யோர்; கொல்வது தான் படையோ?-பகை குமைப்பன யாவும்நற் படையல வோ? 101 வேறு கற்றத் தாரிவர் என்றனை ஐயா! தோற்றத் தாலும் பிறவியி னாலும், பற்றல ரென்றும் நண்பர்க ளென்றும் பார்ப்ப தில்லை உலகினில் யாரும்; மற்றெத் தாலும் பகையுறல் இல்லை; வடிவினில் இல்லை அளவினில் இல்லை; உற்ற துன்பத்தி னாற்பகை உண்டாம், ஓர்தொ ழில்பயில் வார்தமக் குள்ளே 102 பூமித் தெய்வம் விழுங்கிடும கண்டாய் புரவ லர்பகை காய்கிலர் தம்மை; நாமிப் பூதலத் தேகுறை வெய்த நாளும் பாண்டவர் ஏறுகின் றாரால்; நேமி மன்னர் பகைசிறி தென்றே நினைவ யர்ந்திருப் பாரெனில்,நோய்போல், சாமி,அந்தப் பகைமிக லுற்றே சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய். 103 போர்செய் வோமெனில் நீதடுக் கின்றாய்; புவியி னோரும் பழிபல சொல்வார், தார்செய் தோளிளம் பாண்டவர் தம்மைச் சமரில் வெல்வதும் ஆங்கெளி தன்றாம்; யார்செய் புண்ணியத் தோநமக் குற்றான் எங்க ளாருயிர் போன்றஇம் மாமன்; நேர்செய் சூதினில் வென்று தருவான்; நீதித் தர்மனும் சூதில்அன் புள்ளோன். 104 பகைவர் வாழ்வினில இன்புறு வாயோ? பார தர்க்கு முடிமணி யன்னாய்! புகையும் என்றன் உளத்தினை வீறில் புன்சொற் கூறி அவிதிதிட லாமோ? நகைசெய் தார்தமை நாளை நகைப்போம்; நமரிப் பாண்டவர் என்னில் இஃதாலே மிகையு றுந்தன்ப மேது? நம் மோடு வேறு றாதெமைச் சார்ந்துநன் குய்வார். 105 ஐய சூதிற் கவரை அழைத்தால், ஆடி உய்குதும்,அஃதியற் றாயேல், பொய்யன் றென்னுரை;என்னியல் போர்வாய்; பொய்மை வீறென்றுஞ் சொல்லிய துண்டோ? நைய நின்முனர் என்சிரங் கொய்தே நானிங் காவி இறுத்திடு வேனால்; செய்ய லாவது செய்குதி என்றான்; திரித ராட்டிரன் நெஞ்ச முடைந்தான். 106 14. திரிதராட்டிரன் சம்மதித்தல் வேறுவிதிசெயும் விளைவி னுக்கே-இங்கு வேறு செய்வோர் புவிமீ துளரோ? மதிசெறி விதுரன் அன்றே-இது வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான். அதிசயக் கொடுங் கோலம்-விளைந் தரசர்தங் குலத்தினை அழிக்கும் என்றான்; சதிசெயத் தொடங்கி விட்டாய்-நின்றன் சதியினிற்றானது விளையும்என்றான். 107 விதி!விதி! விதி!மகனே!-இனி வேறெது சொல்லுவன் அட மகனே! கதியுறுங் கால னன்றோ-இந்தக் கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்? கொதியுறு முளம் வேண்டா;-நின்றன் கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்; வதியுறு மனை செல்வாய்.-என்று வழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான். 108 15. சபா நிர்மாணம் வேறு மஞ்சனும் மாமனும் போயின பின்னர், மன்னன் வினைஞர் பலரை அழைத்தே, பஞ்சவர் வேள்வியிற் கண்டது போலப் பாங்கி னுயர்ந்ததொர் மண்டபஞ் செய்வீர்! மிஞ்சு பொருளதற் காற்றுவன் என்றான்; மிக்க உவகையொ டாங்கர் சென்றே கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக் கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றை. 109 வேறு வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும், வண்மைக் கவிஞர் கனவினைப் போலும், நல்ல தொழிலுணர்ந் தார்செய லேன்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக் கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்துச் சொல்லை யிசைத்துப் பிறர்செயு மாறே சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார். 110 16. விதுரனைத் தூதுவிடல் தம்பி விதுரனை மன்னன் அழைத்தான்; தக்க பரிசுகள் கொண்டினி தேகி, எம்பியின் மக்கள் இருந்தர சாளும் இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால், கொம்பினை யொத்த மடப்பிடி யோடும் கூடிஇங் கெய்தி விருந்து களிக்க நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தைஎனஉரை செய்வாய். 111 நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் நன்மணி மண்டபம் செய்ததும் சொல்வாய்; நீடு புகழ்பெரு வேள்வியில் அந்நாள் நேயமொ டேகித் திரும்பிய பின்னர் பீடுறு மக்களை ஓர்முறை இங்கே பேணி அழைத்து விருந்துக ளாற்றக் கூடும் வயதிற் கிழவன் விரும்பிக் கூறினன் இஃதெ னச் சொல்லுவை கண்டாய்! 112 பேச்சி னிடையிற்சகுனிசொற் கேட்டே பேயெனும் பிள்ளை கருத்தினிற் கொண்ட தீச்செயல் இஃதென் றதையுங் குறிப்பாற் செப்பிடு வாய்என மன்னவன் கூறப் போச்சுது! போச்சுது பாரத நாடு! போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்! ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்; ஐய இதனைத் தடுத்தல் அரிதோ? 113 என்று விதுரன் பெருந்துயர் கொண்டே ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர் சென்று வருகுதி,தம்பி,இனிமேல் சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன் வென்று படுத்தனன் வெவ்விதி என்னை; மேலை விளைவுகள் நீஅறி யாயோ? அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கெளிதென்றுமெய் சோர்ந்து விழுந்தான். 114 17. விதுரன் தூது செல்லுதல் வேறு அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்; அடவிமலை ஆறெல்லாம் கடந்து போகித் திண்ணமுறு தடந்தோளும் உளமுங்கொண்டு திருமலியப் பாண்டவர் தாம் அரசு செய்யும் வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான் வழியிடையே நாட்டினுறு வளங்கள் நோக்கி வண்ணமற லாகித்தன் இதயத் துள்ளே இனையபல மொழிகூறி இரங்கு வானால், 115 நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு, நீரமுதம் எனப்பாய்நது நரம்பும் நாடு, கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங் குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு, ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப் பாலடையும் நறுநெய்யும் தேனு முண்டு பண்ணவர்போல் மக்களெலாம் பயிலும் நாடு, 116 அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர் கன்னங்கள் அமுதூறக் குயில்கள் பாடும் காவினத்து நறுமலரின் கமழைக் தென்றல் பொன்னங்க மணிமடவார் மாட மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச, வன்னங்கொள் வரைத்தோளார் மகிழ,மாதர் மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு. 117 பேரறமும் பெருந்தொழிலிலும் பிறங்கு நாடு, பெண்க ளெல்லாம் அரம்பையர்போல் ஒளிரும்நாடு, வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி வேள்விஎனும் இவையெல்லாம் விளங்கும் நாடு, சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு, தொல்லுலகின் முடிமணிபோல் தோன்றும் நாடு, பாரதர்தந் நாட்டினிலே நாச மெய்தப் பாவியென் துணைபுரியும் பான்மை என்னே! 118 18. விதுரனை வரவேற்றல் வேறு விதுரன் வருஞ்செய்தி தாஞ்செவி யுற்றே, வீறுடை ஐவர் உளமகிழ் பூத்துச் சதுரங்க சேனை யுடன்பல பரிசும் தாளமும் மேளமும் தாங்கொண்டு சென்றே எதிர்கொண் டழைத்து,மணிமுடி தாழ்த்தி, ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி, மதுரமொழியிற் குசலங்கள் பேசி, மன்ன னொடுந்திரு மாளிகை சேர்ந்தார். 119 குந்தி எனும்பெயர்த் தெய்வதந் தன்னைக் கோமகன் கண்டு வணங்கிய பின்னர், வெந்திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கித் தலைகுனிந் தாங்குவந் தெய்தி. அந்தி மயங்க விசும்பிடைத் தோன்றும் ஆசைக் கதிர்மதி யன்ன முகத்தை மந்திரந் தேர்ந்தொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றான், 120 தங்கப் பதுமை எனவந்து நின்ற தையலுக் கையன்,நல் லாசிகள் கூறி அங்கங் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்குவந் துற்ற உறவினர் நண்பர் சிங்க மெனத்திகழ் வீரர் புலவர் சேவகர் யொரொடுஞ் செய்திகள் பேசிப் பொங்கு திருவின் நகர்வ லம்வந்து போழ்து கழிந்திர வாகிய பின்னர். 121 19. விதுரன் அழைத்தல் ஐவர் தமையுந் தனிக்கொண்டு போகி, ஆங்கொரு செம்பொன் னரங்கில் இருந்தே:- மைவரைத் தோளன்,பெரும்புக ழாளன், மாமகள் பூமகட் கோர்மண வாளன், மெய்வரு கேள்வி மிகுந்த புலவன், வேந்தர் பிரான்,திரி தாட்டிரக் கோமான் தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச் சீரொடு நித்தலும் வாழ்கென வாழ்த்தி, 122 உங்களுக் கென்னிடம் சொல்லி விடுத்தான் ஓர்செய்தி;மற்றஃ துரைத்திடக் கேளீர மங்களம் வாந்தநல் அத்தி புரத்தே வையக மீதில் இணையற்ற தாகத் தங்கும் எழிற்பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர்! அங்கதன் விந்தை அழகினைக் காண அப்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன். 123 வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து மீண்டு பலதின மாயின வேனும், வாள்வைக்கும் நல்விழி மங்கைய டேநீர் வந்தெங்க ளூரில் மறுவிருந் தாட நாள்வைக்குஞ் சோதிட ராலிது மட்டும் நாயகன் நும்மை அழைத்திட வில்லை; கேக்விக் கொருமி திலாதிப னொத்தோன் கேடற்ற மாதம் இதுவெனக் கண்டே, 124 வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என்னரு மக்காள்; சந்துகண் டேஅச் சகுனிசொற் கேட்டுத் தன்மை இழந்த சுயோதன மூடன் விந்தை பொருந்திய மண்டபத் தும்மை வெய்யபுன் சூது களித்திடச் செய்யும் மந்திர மொன்றும் மனத்திடைக் கொண்டான்; வன்ம மிதுவும் நுமக்கறி வித்தேன் 125 20. தருமபுத்திரன் பதில் என்று விதுரன் இயம்பத் தருமன் எண்ணங் கலங்கிச் சிலசொல் உரைப்பான்; மன்று புனைந்தது கேட்டுமிச் சூதின் வார்த்தையைக் கேட்டுமிங் கென்தன் மனத்தே சென்று வருத்தம் உளைகின்ற தையா! சிந்தையில் ஐயம் விளைகின்ற தையா! நன்று நமக்கு நினைப்பவ னல்லன்; நம்ப லரிது சுயதனன் றன்னை. 126 கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு குத்திர மான சதிபல செய்தான்; சொலலப் படாதவ னாலெமக் கான துன்ப மனைத்தையும் நீ அறி யாயோ? வெல்லகக் கடவர் எவரென்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ? தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தக் சொல்லுதி நீஒரு சூழ்ச்சிஇங் கென்றான். 127 21. விதுரன் பதில் வேறு விதுரனும் சொல்லு கிறான்;-இதை விடமென்ச சான்றவர் வெகுளுவர் காண்; சதுரெனக் கொள்ளுவ ரோ?-இதன் தாழ்மை யெலாமவர்க் குரைத்து விட்டேன்; இதுமிகத் தீதென் றே-அண்ணன் எத்தனை சொல்லியும் இள வரசன் மதுமிகுத் துண்டவன் போல்-ஒரு வார்த்தையை யேபற்றிப் பிதற்றுகிறான். 128 கல்லெனில் இணங்கி விடும்-அண்ணன் காட்டிய நீதிகள் கணக்கில வாம்; புல்லனிங் கவற்றை யெலாம்-உளம் புகுதலொட் டாதுதன் மடமையினால் சல்லியச் சூதினி லே-மனம் தளர்வற நின்றிடுந் தகைமை சொன்னேன்; சொல்லிய குறிப்பறிந் தே-நலந் தோன்றிய வழியினைத் தொடர்கஎன்றான். 129 22. தருமபுத்திரன் தீர்மானம் தருமனும் இவ்வ ளவில்-உளத் தளர்ச்சியை நீக்கியொர் உறுதி கொண்டே பருமங்கொள் குரலின னாய்-மொழி பதைத்திட லின்றிஇங் கிவைஉரைப் பான்; மருமங்கள் எவைசெயி னும்-மதி மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடி னும், கருமமொன் றேஉள தாம்-நங்கள் கடன்;அதை நெறிப்பட புரிந்திடு வோம். 130 தந்தையும் வரப்பணித் தான்;-சிறு தந்தையும் தூதுவந் ததைஉரைத் தான்; சிந்தை யொன்றினி இல்லை,-எது சேரினும் நலமெனத் தெளிந்துவிட் டேன்; முந்தையச் சிலைரா மன்-செய்த முடிவினை நம்மவர் மறப்பது வோ? நொந்தது செயமாட் டோம்;-பழ நூலினுக் கிணங்கிய நெறிசெல் வோம். 131 ஐம்பெருங் குரவோர் தாம்;-தரும் ஆணையைக் கடப்பதும் அறநெறி யோ? வெம்பொரு மத யானை -பரி வியன்தேர் ஆளுடன் இருதினத் தில் பைம்பொழில் அத்தி நகர்-செல்லும் பயணத்திற் குரியன புரிந்திடு வாய், மொய்ம்புடை விறல் வீமா!-என மொழிந்தனன் அறநெறி முழுதுணர்ந் தான். 132 23. வீமனுடைய வீரப்பேச்சு வீமனும் திகைத்துவிட் டான்;-உள விசயனை நோக்கிஇங் கிதுசொலு வான்; மாமனும் மருகனு மா-நமை மழிததிடக் கருதிஇவ் வழிதொடர்ந் தார்; தாமதஞ் செய்வோ மோ?-செலத் தகுந்தகு மெனஇடி யுறநகைத் தான்; கோமகன் உரைப்படியே-படை கொண்னடுசெல் வோமொரு தடையிலை காண்! 133 நெடுநாட் பகைகண் டாய்!-இந்த நினைவினில் யான்கழித் தனபல நாள்; கெடுநாள் வருமள வும்-ஒரு கிருமியை அழிப்பவர் உலகிறுண்டோ, படுநாட் குறி அன் றோ-இந்தப் பாதகம் நினைப்பவர் நினைத்தது தான் விடுநாண் கோத்திட டா!தம்பி! வில்லினுக் கிரைமிக விளையு தடா! 134 போரிடச் செல்வ மடா!-மகன் புலைமையும் தந்தையின் புலமைக ளும் யாரிடம் அவிழ்க்கின் றார்?-இதை எத்தனை நாள்வரை பொறுத்திருப் போம்? பாரிடத் திவரொடு நாம்-எனப் பகுதியிவ் விரண்டிற்கும் காலமொன் றில் நேரிட வாழ்வுண் டோ?-இரு நெருப்பினுக் கிடையினில் ஒருவிற கோ? 135 24. தருமபுத்திரன் முடிவுரை வேறு வீமன் உரைத்தது போலவே-உளம் வெம்பி நெடுவில் விசயனும்-அங்கு காமனும் சாமனும் ஒப்பவே-நின்ற காளை இளைஞர் இருவரும்-செய்ய தாமரைக் கண்ணன் யுதிட்டிரன்- சொல்லைத் தட்டிப் பணிவொடு பேசினார்;தவ நேமந் தவறலும் உண்டுகாண்,-நரர் நெஙசம் கொதித்திடு போழ்திலே. 136 அன்பும் பணிவும் உருகொண்டார்-அணு வாயினும் தன்சொல் வழாதவர்-அங்கு வுன்பு மெமாழிசொல்லக் கேட்டனன்;-அற மன்னவன் புன்னகை பூத்தனன்;-அட! முன்பு சுயோதனன் செய்ததும்-இன்று மண்டிருக் குங்கொடுங்கோல மும்-இதன் பின்பு விளைவதும் தேர்ந்துளேன்;-எனைப் பித்தனென் றெண்ணி உரைத்திடீர்! 137 கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்-தன் கணக்கிற் சுழன் றிடும் சக்கரம்-அது தப்பி மிகையுங் குறையுமாச்-சுற்றும் தன்மை அதற்குள தாகுமோ?-இதை ஒப்பிட லாகும் புவியின்மேல்-என்றும் உள்ள உயிர்களின் வாழ்விற்கே,-ஒரு செப்பிடு வித்தையைப் போலவே-புவிச் செய்திகள் தோன்றிடு மாயினும், 138 இங்கிவை யாவுந் தவறிலா-விதி ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும் ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு சங்கிலி யோக்கும் விதி கண்டீர்;-வெறுஞ் சாத்திர மன்றிது சத்தியம்;-நின்று மங்கியொர் நாளில் அழிவதாம்-நங்கள் வாழ்க்கை இதனைக் கடந்ததோ? 139 தோன்றி அழிவது வாழ்க்கைதான்;-இங்குத் துன்பத்தொ டின்பம் வெறுமையாம்-இவை மூன்றில் எதுவரு மாயினும்.-களி, மூழ்கி நடத்தல் முறைகண்டீர்!-நெஞ்சில் ஊன்றிய கொள்கை தழைப்பரோ,-துன்பம் உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி போன்று நடக்கும் உலகென்றே-கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர். 140 சேற்றில் உழலும் புழுவிற்கும்,-புவிச் செல்வ முடைய அரசர்க்கும்.-பிச்சை ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும்,-உயிர் எத்தனை உண்டவை யாவிற்கும்,-நித்தம் ஆற்றுதற் குள்ள கடமைதான்-முன்வந்து அவ்வக் கணந்தொறும் நிற்குமால்-அது தோற்றும் பொழுதிற் புரிகுவார்-பல சூழந்து கடமை அழிப்பரோ? 141 யாவருக் கும்பொது வாயினு-சிறப் பென்பர் அரசர் குலத்திற்கே-உயர் தேவரை யொப்ப முன்னோர் தமைத்-தங்கள் சிந்தையிற் கொண்டு பணிகுதல்;-தந்தை ஏவலை மைந்தர் புரிவதற்கே-வில் இராமன் கதையையும் காட்டினேன்;-புவிக் காவலர் தம்மிற் சிறந்தநீர்-இன்று கர்மம் பிழைத்திடு வீர்கொலோ? 142 25. நால்வரும் சம்மதித்தல் வேறு என்றினைய நீதிபல தரும ராசன் எடுத்துரைப்ப,இளைஞர்களுந் தங்கை கூப்பிக் குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக் குவலயத்திற் கறங்காட்டத் தோன்றி னாய் நீ! வென் றிபெருந் திருவடியாய்!நினது சொல்லை மீறிஒரு செயலுண்டோ? ஆண்டான் ஆணை யன்றி அடி யார்தமக்குக் கடன்வே றுண்டோ? ஐயனே! பாண்டவர்தம் ஆவி நீயே! 143 துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின்வாய்ச் சொல்லைமறுத் துரைத்தோமோ? நின்பா லுள்ள அன்புமிகை யாலன்றே திருவு ளத்தின் ஆக்கினையை எதிர்த்துரைத்தோம் அறிவில்லாமல் மன்பதையின் உளச்செயல்கள் தெளியக் காணும் மன்னவனே!மற்றதுநீ அறியா தொன்றோ? வன்புமொழி பொறுத்தருள்வாய்,வாழி!நின்சொல் வழிச்செல்வோம்,எனக்கூறிவணங்கிச் சென்றார் 144 26. பாண்டவர் பயணமாதல் ஆங்கதன்பின் மூன்றாம்நாள் இளைஞ ரோடும் அணியிழையப் பாஞ்சாலர் விளக்கி னோடும் பாங்கினுறு பரிசனங்கள் பலவி னோடும் படையினொடும் இசையினொடும் பயண மாகித் தீங்கதனைக் கருதாத தருமக் கோமான் திருநகர்விட் டகல்கின்றான் தீயோர் ஊர்க்கே! நீங்கி அகன் றிடலாகுந் தன்மை உண்டோ. நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே? 145 நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவிவிழும்;சிற்றெறும்பால் யானை சாகும்; வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்; வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்; கிரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப் போற்றிடுவார் விதிவகுத்த போழ்தி னன்றே. 146 27. மாலை வருணனை மாலைப்போ தாதலும்,மன்னன் சேனை வழியிடைஓர் பூம்பொழிலின் அமர்ந்த காலை, சேலைப்போல் விழியாளைக் பார்த்தன் கொண்டு சென்றாங்கோர் தனியிடத்தே பசும்புல் மேட்டில் மேலைப்போம் பரியினைத் தொழுது கண்ன் மெல்லியலும் அவன்தொடைமேல் மெல்லச் சாய்ந்து பாலைப்போல் மொழிபிதற்ற அவளை நோக்கிப் பார்த்தனும்அப் பரிதிஎழில் விளக்கு கின்றான். 147 பாரடியோ!வானத்திற் புதுமை யெல்லாம், பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி உவகையுற நவநவமாத் தோன் றுங் காட்சி; யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே எண்ணரிய பொருள்கொடுத்தும் இயற்ற வல்லார்! சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ் செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய். 148 கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்; கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே, கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக் காளிபரா சக்திஅருள் களிக்குங் கோலம் கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். 149 அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம் அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்; இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து, முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே, மொய்குழலாய், சுற்றுவதன் மொய்ம்பு காணாய்! வடிவான தொன்றாகத் தகடி ரண்டு வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். 150 அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே!பின்னே அசைவுமோர் மின்செய்த வட்டு;முன்னே, சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்; தரணியிலிங் கிதுபோலார் பசுமை உண்டோ? இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள் எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்; உமை கவிதை செய்கின்றாள்,எழுந்து நின்றே உரைத்திடுவோம்,பல்லாண்டு வாழ்க!என்றே. 151 வேறு பார்;சுடர்ப்பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட் டெரிவன!ஓகோ! என்னடீ!இந்த வன்னத் தியல்புகள்! எத்தனை வடிவம்! எத்தனை கலவை! தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே எரிந்திடுந் தங்கத் தீவுகள்!-பாரடீ! நீலப் பொய்கைகள்!-அடடா,நீல வன்ன மொன்றில் எத்தனை வகையடீ! எத்தனை செம்மை!பசுமையுங் கருமையும் எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்! நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத் தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட கருஞ்சிக ரங்கள்!-காண்டி,ஆங்கு தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும் இருட் கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும் ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்! 152 வேறு செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினை தேர்கின்றோம்-அவன் எங்க ளறிவினைத் தூண்டி நடத்துக என்பதோர்-நல்ல மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு வாழ்த்தியே-இவர் தங்க ளினங்க ளிருந்த பொழி லிடைச்சார்ந்தனர்-பின்னர் அங்கவ் விரவு கழிந்திட,வைகறை யாதலும் -மன்னர் பொங்கு கடலொத்த சேனைக ளோடு புறப்பட்டே,-வழி எங்குந் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே,-கதிர் மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார். 153 (துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம் முற்றும்) சூதாட்டச் சருக்கம் 28. வாணியை வேண்டுதல் தெளிவுறவே அறிந்திடுதல்;தெளிவுதர மொழிந்திடுதல்;சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல காட்டல்,கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்,இங் கியெல்லாம் நீ அருளும் தொழில்க ளன்றோ? ஒளிவளருந் தமிழ்வாணீ! அடியனேற் கிவையனைத்தையும் உதவு வாயே. 154 29. பாண்டவர் வரவேற்பு அத்தின மாநக ரத்தினில் வந்தனர் ஆரியப் பாண்டவர் என் றது கேட்டலும், தத்தி எழுந்தன எண்ணருங் கூட்டங்கள்; சந்திகள்,வீதிகள்,சாலைகள்,சோலைகள்; எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர்; இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர் இத்தின மட்டும் எனவியப் பெய்துற எள்ளும் விழற்கிட மின்றி யிருந்தார். 155 மந்திர கீதம் முழுங்கினர் பார்ப்பனர்; வன்தடந் தோள்கொட்டி ஆர்த்தனர் மன்னவர்; வெந்திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள் தோறும் ஒலிமிகச் செய்தன; வந்தியர் பாடினர்,வேசையர்.ஆடினர்; வாத்தியங் கோடி வகையின் ஒலித்தன; செந்திரு வாழும் நகரினில் அத்தினஞ் சேர்ந்த ஒலியைச் சிறிதென லாமோ! 156 வாலிகன் தந்ததொர் தேர்மிசை ஏறி,அம் மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள் நாலிய லாம்படை யோடு நகரிடை நல்ல பவனி எழுந் பொழுதினில், சேலியல் கண்ணியர் பொன்விளக் கேந்திடச் சீரிய பார்ப்பணர் கும்பங்கள் ஏந்திடச் கோலிய பூமழை பெய்திடத் தோரணம் கொஞ்ச நகரெழில் கூடிய தன்றே. 157 வேறு மன்னவன் கோயிலிலே-இவர் வந்து புகுந்தனர் வரிசை-யொடே பொன்ன ரங் கினிலிருந் தான்-தண்ணில் புலவனைப் போய்நின்று போற்றியபின் அன்னவன் ஆசிகொண் டே,-உயர் ஆரிய வீட்டுமன் அடி வணங்கி, வின்னய முணர் கிருபன்-புகழ் வீரத் துரோணன் அங்கவன் தல்வன் 158 மற்றுள பெரியோர் கள்-தமை வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கிநின் றார்; கொற்றமிக் குயர்கன் னன்-பணிக் கொடியோன் இளையவர் சகுனியோ டும் பொற்றடந் தோள் சருவப்-பெரும் புகழினர் தழுவினர்,மகிழ்ச்சிகொண் டார்; நற்றவக் காந்தா ரி-முதல் நாரியர் தமைமுறைப் படிதொழு தார். 159 குந்தியும் இளங்கொடி யும்-வந்து கூடிய மாதர் தம்மொடு குலவி முந்திய கதைகள் சொல்லி-அன்ஹப மூண்டுரை யாடிப்பின் பிரிந்து விட்டார்; அந்தியும் புகுந்தது வால்;-பின்னர் ஐவரும் உடல்வலித் தொழில் முடித்தே சந்தியுஞ் சபங்களுஞ் செய்-தங்கு சாருமின் னுணவமு துண்டதன் பின். 160 சந்தன மலர்புனைந் தே,-இளந் தையலர் வீணைகொண் டுயிருருக்கி விந்தைகொள் பாட்டிசைப் ப,-அதை விழைவொடு கேட்டனர் துயில்புரிந் தார்; வந்ததொர் துன்பத் தினை-அங்கு மடித்திட லன்றிப் பின்வருந் துயர்க்கே சிந்தனை உழல்வா ரோ?-உளச் சிதைவின்மை ஆரியர் சிறப்பன் றோ? 161 30. பாண்டவர் சபைக்கு வருதல் பாணர்கள் துதிகூ ற-இளம் பகலவன் எழுமுனர்த் துயிலெழுந் தார்; தோணலத் திணையில் லார்-தெய்வந் துதித்தனர்;செய்யபொற் பட்டணிந்து பூணணிந் தாயுதங் கள்-பல பூண்டுபொற் சபையிடைப் போந்தன ரால்; நாண மில் கவுரவ ரும்-தங்கள் நாயக னொடுமங்கு வீற்றிருந் தார். 162 வீட்டுமன் தானிருந் தான்;-அற விதுரனும்,பார்ப்பனக் குரவர்களும், நாட்டுமந் திரிமா ரும்,பிற நாட்டினர் பலபல மன்னர்க ளும், கேட்டினுக் கிரையா வான்-மதி கெடுந்துரி யோதனன் கிளையின ரும், மாட்டுறு நண்பர்களும்-அந்த வான்பெருஞ் சபையிடை வணங்கிநின் றார். 163 31. சூதுக்கு அழைத்தல் புன்தொழிற் கவறத னில்-இந்தப் புவிமிசை இணையிலை எனும்புக ழான் நன்றறி யாச்சகு னி,-சபை நடுவினில் ஏறெனக் களித்திருந் தான்; வென்றிகொள் பெருஞ்சூ தர்-அந்த விவிஞ்சதி சித்திர சேனனு டன் குன்றுசத் தியவிர தன்-இதழ் கூர்புரு மித்திரன் சய னென்பார். 164 சாலவும் அஞ்சு தரும்-கெட்ட சதிக்குணத் தார்பல மாயம் வல்லோர் கோலநற் சபைதனி லே-வந்து கொக்கரித் தார்ப்பரித் திருந்தனரால், மேலவர் தமை வணங்கி-அந்த வெந்திறற் பாண்டவர் இளைஞர் தமை ஆல முற்றிடத் தழுவிச்-செம்பொன் ஆதனத் தமர்ந்தவப் பொழுதினி லே. 165 சொல்லுகின் றான்சகு னி:-அறத் தோன்றல்!உன் வரவினைக் காத்துளர் காண் மல்லுறு தடந் தோளார் இந்த மன்னவ ரனைவரும் நெடும்பொழு தா; வில்லுறு போர்த்தொழி லாற்-புவி வென்றுதங் குலத்தினை மேம்படுத் தீர்! வல்லுறு சூதெனும் போர்-தனில் வலிமைகள் பார்க்குதும் வருதிஎன்றான் 166 32. தருமன் மறுத்தல் தருமனங் கிவைசொல் வான்-ஐய! சதியுறு சூதினுக் கெனை அழைத் தாய்; பெருமைஇங் கிதிலுண்டோ?-அறப் பெற்றிஉண் டோ?மறப் பீடுள தோ? வருமம் நின் மனத்துடை யாய்!-எங்கள் வாழ்வினை உகந்திலை என லறிவேன்; இருமையுங் கெடுப்பது வாம்-இந்த இழிதொழி லாலெமை அழித்த லுற் றாய். 167 33. சகுனியின் ஏச்சு கலகல வெனச்சிரித் தான்-பிழக் கவற்றையொர் சாத்திர மெனப்பயின் றோன்; பலபல மொழிகுவ தேன்?-உனைப் பார்த்திவன் என்றெணி அழைத்துவிட்டேன், நிலமுழு தாட்கொண் டாய்-தனி நீ எனப் பலர்சொலக் கேட்டதனால், சிலபொருள் விளையாட் டிற்-செலுஞ் செலவினுக் கழிகலை எனநினைத் தேன். 168 பாரத மண்டலத் தார்-தங்கள் பதிஒரு பிசுனனென் றறிவே னோ? சோரமிங் கிதிலுண் டோ?-தொழில் சூதெனி லாடுநர் அரசரன் றோ? மாரத வீரர்முன் னே?-நடு மண்டபத் தே,பட்டப் பகலினி லே, சூரசி காமணி யே,-நின்றன் சொத்தினைத் திருடுவ மெனுங்கருத் தோ? 169 அச்சமிங் கிதில்வேண் டா,-விரைந் தாடுவம் நெடும்பொழு தாயின தால்; கச்சையொர் நாழிகை யா-நல்ல காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்? நிச்சயம் நீவெல் வாய்;-வெற்றி நினக் கியல் பாயின தறியா யோ? நிச்சயம் நீவெல் வாய்;-பல நினைகுவ தேன்? களி தொடங்குகென்றான். 170 34. தருமனின் பதில் வேறு தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும் துட்டன் இவ்வுரை கூறுதல் கேட்டே, நூல்வி லக்கிய செய்கைக ளஞ்சும் நோன்பி னோனுளம் நொந்திவை கூறும்; தேவ லப்பெயர் மாமுனி வோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர் காவ லர்க்கு விதித்த தந்நூலிற் கவறும் நஞ்செனக் கூறினர்,கண்டாய்! 171 வஞ்ச கத்தினில் வெற்றியை வேண்டார். மாயச் சூதைப் பழியெனக் கொள்வார், அஞ்ச லின்றிச் சமர்க்களத் தேறி ஆக்கும் வெற்றி அதனை மதிப்பார். துஞ்ச நேரினுந் தூயசொல் லன்றிச் சொல்மி லேச்சரைப் போலென்றுஞ் சொல்லார், மிஞ்சு சீர்த்திகொள் பாரத நாட்டில் மேவு மாரியர் என்றனர் மேலோர் 172 ஆத லாலிந்தச் சூதினை வேண்டேன்! ஐய,செல்வம் பெருமை இவற்றின் காத லாலர சாற்றுவ னல்லேன்; காழ்த்த் நல்லறம் ஓங்கவும் ஆஙகே ஓத லானும் உணர்த்துத லானும் உண்மை சான்ற கலைத்தொகை யாவும் சாத லின்றி வளர்ந்திடு மாறும், சகுனி யானர சாளுதல்,கண்டாய்! 173 என்னை வஞ்சித்தென் செல்வத்தைக் கொள்வோர் என்ற னக் கிடர் செய்பவ ரல்லர் முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார் மூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார், பின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில் பீடை செய்யுங் கலியை அழைப்பார்; நின்னை மிக்க பணிவோடு கேட்பேன்; நெஞ்சிற் கொள்கையை நீக்குதிஎன்றான். 174 35. சகுனி வல்லுக்கு அழைத்தல் வேறு சாத்திரம் பேசுகின் றாய்-எனத் தழல்படு விழியொடு சகுனிசொல் வான்; கோத்திரக் குலமன் னர்-பிறர் குறைபடத் தம்புகழ் கூறுவ ரோ? நாத்திறன் மிகஉடை யாய்!-எனில் நம்மவர் காத்திடும் பழவழக் கை மாத்திரம் மறந்துவிட் டாய்;-மன்னர் வல்லினுக் கழைத்திடல் மறுப்பதுண்டோ 175 தேர்ந்தவன் வென்றிடு வான்;-தொழில் தேர்ச்சி இல் லாதவன் தோற்றிடு வான்; நேர்ந்திடும் வாட்போரில்-குத்து நெறி அறிந் தவன்வெலப் பிறனழி வான்; ஓர்ந்திடு சாத்திரப் போர் தனில் உணர்ந்தவன் வென்றிட,உணரா தான் சோர்ந்தழி வெய்திடு வான்;இவை சூதென்றும் சதிஎன்றும் சொல்வா ரோ? 176 வல்லவன் வென்றிடு வான்:-தொழில் வன்மை இலாதவன் தோற்றிடு வான்; நல்லவ னல்லா தான்-என நாண மிலார்சொலுங் கதைவேண் டா; வல்லமர் செய்திட வே-இந்த மன்னர் முன்னேநினை அழைத்துவிட்டேன்; சொல்லுக வருவதுண் டேல்-மனத் துணி விலை யேலதுஞ் சொல்லுகென் றான். 177 36. தருமன் இணங்குதல் வேறு வெய்ய தான விதியை நினைந்தான் விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்; பொய்ய தாகுஞ் சிறுவழக் கொன்றைப் புலனி லாதவர் தம்முடம் பாட்டை ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான் ஐயகோ!அந்த நாள்முத லாகத் துய்ய சிந்தைய ரெத்தனை மக்கள் துன்பம் இவ்வகை எய்தினர் அம்மா! 178 முன்பி ருந்ததொர் காரணத் தாலே, மூடரே,பொய்யை மெய்என லாமோ? முன்பெனச் சொலுங் கால மதற்கு, மூடரே,ஓர் வரையறை உண்டோ, முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்; மூன்று கோடி வருடமும் முன்பே முன்பிருந் தெண்ணி லாது புவிமேல் மொய்த்த மக்க ளெலாம்முனி வோரோ? 179 நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர் நேர்ந்த தில்லை எனநினைந் தீரோ? பார்பி றந்தது தொட்டின்று மட்டும், பலப லப்பல பற்பல கோடி கார்பி றக்கும் ம்ழைத்துளி போலே கண்ட மக்க ளனைவருள் ளேயும், நீர்பி றப்பதன் முன்பு,மடமை நீசத் தன்மை இருந்தன வன்றோ? 180 பொய்யொ ழுக்கை அறமென்று கொண்டும், பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும், ஐயகோ,நங்கள் பாரத நாட்டில் அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர் நொய்ய ராகி அழிந்தவர் கோடி, நூல்வ கைபல தேர்ந்து தெளிந்தோன், மெய்ய றிந்தவர் தம்மு ளுயர்ந்தோன் விதியி னாலத் தருமனும் வீழ்ந்தான். 181 மதியி னும்விதி தான்பெரி தன்றோ? வைய மீதுள வாகு மவற்றுள் விதியி னும்பெரி தோர்பொரு ளுண்டோ? மேலை நாம்செய்யுங் கர்மமல் லாதே, நதியி லுள்ள சிறுகுழி தன்னில் நான்கு தக்கி லிருந்தும் பல்மாசு பதியு மாறு,பிறர்செய்யுங் கர்மப் பயனும் நம்மை அடைவ துண்டன்றோ? 182 37. சூதாடல் வேறு மாயச் சூதி னுக்கே-ஐயன்,மன மிணங்கி விட்டான்; தாய முரட்ட லானர்;-அங்கே சகுனி ஆர்ப்ப ரித்தான்! நேய முற்ற விதுரன்-போலே,நெறி ளோர்க ளெல்லாம் வாயை மூடி விட்டார்;-தங்கள்,மதி மயங்கி விட்டார். 183 அந்த வேளை யதனில்-ஐவர்க் கதிபன் இஃதுரைப்பான்; பந்த யங்கள் சொல்வாய்;-சகுனி பரபரத் திடாதே! விந்தை யான செல்வம்-கொண்ட,வேந்த ரோடு நீ தான் வந்தெ திர்த்து விட்டாய்;-எதிரே,வைக்க நிதியமுண் டோ? 184 தருமன் வார்த்தை கேட்டே-துரியோதன னெழுந்து சொல்வான் அருமையான செல்வம்-என்பால்,அளவிலாத துண்டு ஒரு மடங்கு வைத்தால்-எதிரே,ஒன்ப தாக வைப்பேன்; பெருமை சொல்ல வேண்டா,-ஐயா!பின் னடக்குகென்றான். 185 ஒருவ னாடப் பணயம்-வேறே,ஒருவன் வைப்ப துண்டோ? தரும மாகு மோடா!-சொல்வாய்,தம்பி இந்த வார்த்தை? வரும மில்லை ஐயா;-இங்கு,மாம னாடப் பணயம் மருகன் வைக் கொணாதோ?-இதிலே வந்த குற்றமேதோ? 186 பொழுதுபோக்கு தற்கே-சூதுப் போர் தொடங்குகின்றோம்; அழுத லேதிற்கே?-என்றே,அங்கர் கோன் நகைத்தான். பழு திருப்ப தெல்லாம்-இங்கே பார்த்திவர்க் குரைத்தேன்; முழுது மிங் கிதற்கே-பின்னர்,முடிவு காண்பிர்என்றான். 187 ஒளி சிறந்த மணியின்-மாலை,ஒன்றை அங்கு வைத்தான்; களி மிகுந்த பகைவன்-எதிரே,கன தனங்கள் சொன்னான்; விழி இமைக்கு முன்னே-மாமன் வென்று தீர்த்து விட்டான்; பழி இலாத தருமன்-பின்னும்,பந்தயங்கள் சொல்வான்; 188 ஆயிரங் குடம்பொன் -வைத்தே,ஆடுவோமிதென்றான்; மாயம் வல்ல மாமன்-அதனை,வசம தாக்கி விட்டான்; பாயுமா வொரெட்டில்-செல்லும்.பார மான பொற்றேர்; தாய முருட்ட லானார்;-அங்கே,சகுனி வென்று விட்டான். 189 இளைய ரான மாதர்,-செம்பொன்,எழி லிணைந்த வடிவும் வளை அணிந்த தோளும்-மாலை,மணி குலுங்கு மார்பும் விளையு மின்ப நூல்கள்-தம்மில்,மிக்க தேர்ச்சி யோடு களை இலங்கு முகமும்-சாயற்,கவினும் நன்கு கொண்டோர், 190 ஆயிரக் கணக்கா-ஐவர்க்,கடிமை செய்து வாழ்வோர்; தாய முருட்டலானார்;-அந்தச்,சகுனி வென்று விட்டான். ஆயிரங்க ளாவார்-செம்பொன்,னணிகள் பூண்டிருப்பார் தூயிழைப் பொனாடை-சுற்றுந்,தொண்டர் தம்மை வைத்தான்; 191 சோரனங் கவற்றை-வார்த்தை,சொல்லு முன்னர் வென்றான். தீர மிக்க தருமன்-உள்ளத்,திட னழிந் திடாதே, நீரை யுண்ட மேகம்-போலே நிற்கு மாயிரங்கள் வாரணங்கள் கண்டாய்-போரில்,மறலி யொத்து மோதும் 192 என்று வைத்த பணயந்-தன்னை,இழிஞன் வென்று விட்டான்; வென்றி மிக்க படைகள்-பின்னர்,வேந்தன் வைத் திழந்தான்; நன்றிழைத்த தேர்கள்-போரின்,நடை யுணர்ந்த பாகர் என் றிவற்றை யெல்லாம்-தருமன்,ஈடு வைத் திழந்தான். 193 எண் ணிலாத,கண்டீர்,-புவியில்,இணை யிலாத வாகும் வண்ண முள்ள பரிசுகள்-தம்மை,வைத் திழந்து விட்டான்; நண்ணு பொற் கடாரந்-தம்மில்,நாலு கோடி வைத்தான்; கண்ணி ழப்பவன் போல்-அவையோர்,கண மிழந்து விட்டான் 194 மாடி ழந்து விட்டான்,-தருமன்,மந்தை மந்தை யாக; ஆடி ழந்து விட்டான்-தருமன்,ஆளிழந்து விட்டான்; பீடிழந்த சகுனி-அங்கு,பின்னுஞ் சொல்லுகின்றான்; நாடிழக்க வில்லை,-தருமா!நாட்டை வைத்திடென்றான். 195 38. நாட்டை வைத்தாடுதல் வேறு ஐய கோஇதை யாதெனச் சொல்வோம்? அரச ரானவர் செய்குவ தொன்றோ? மெய்ய தாகவோ மண்டலத் தாட்சி வென்று சூதினி லாளுங் கருத்தோ? வைய மிஃது பொறுத்திடு மோ,மேல் வான் பொறுந் திடுமோபழி மக்காள்! துய்ய சீர்த்தி மதிக்குல மோ நாம்? தூ! வென் றெள்ளி விதரனும் சொல்வான்,. 196 பாண்ட வர்பொறை கொள்ளுவ ரேனும், பைந்து ழாயனும் பாஞ்சாலத் தானும் மூண்ட வெஞ்சினத் தோடுநஞ் சூழல் முற்றும் வேர றச் செய்குவ ரன்றோ? ஈண்டி ருக்குங் குருகுல வேந்தர் யார்க்கு மிஃதுரைப் பேன்,குறிக் கொண்மின்; மாண்டு போரில் மடிந்து நரகில் மாழ்கு தற்கு வகைசெயல் வேண்டா 197 குலமெ லாமழி வெய்திடற் கன்றோ குத்தி ரத்துரி யோதனன் றன்னை நலமி லாவிதி நம்மிடை வைத்தான்; ஞால மீதி லவன் பிறந் தன்றே அலறி யோர்நரி போற்குரைத் திட்டான்; அஃது ணர்ந்த நிமித்திகர் வெய்ய கலகந் தோன் றுமிப் பாலக னாலே காணு வீரெனச் சொல்லிடக் கேட்டோம். 198 சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு சொர்க்க போகம் பெறுபவன் போலப் பேதை நீயு முகமலர் வெய்திப் பெட்பு மிக்குற வீற்றிருக் கின்றாய்; மீது சென்று மலையிடைத் தேனில் மிக்க மோகத்தி னாலொரு வேடன் பாத மாங்கு நழுவிட மாயும் படும லைச்சரி வுள்ளது காணான். 199 மற்று நீருமிச் சூதெனுங் கள்ளால் மதிம யங்கி வருஞ்செயல் காணீர்! முற்றுஞ் சாதி சுயோதன னாமோர் மூடற் காக முழுகிட லாமோ? பற்றுமிக்க இப்பாண்டவர் தம்மைப் பாத கத்தி லழித்திடு கின்றாய்; கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே! கடலிற் காயங் கரைத்ததொப் பாமே? 200 வீட்டு ளேநரி யைவிடப் பாம்பை வேண்டிப் பிள்ளை எனவளர்த் திட்டோம்; நாட்டு ளேபுக ழோங்கிடு மாறிந் நரியை விற்றுப் புலிகளைக் கொள்வாய்; மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களைக் கொள்வாய்; கேட்டி லேகளி யோடுசெல் வாயோ? கேட்குங் காதும் இழந்துவிட் டாயோ? 201 தம்பி மக்கள் பொருள் வெஃகு வாயோ சாதற் கான வயதினில் அண்ணே? நம்பி நின்னை அடைந்தவ ரன்றோ? நாத னென்றுனைக் கொண்டவ ரன்றோ? எம்பி ரானுளங் கொள்ளுதி யாயின் யாவுந் தான மெனக்கொடுப் பாரே; கும்பி மாநரக கத்தினி லாழ்த்துங் கொடிய செய்கை தொடர்வதும் என்னே? 202 குருகு லத்தலை வன்சபைக் கண்ணே, கொற்ற மிக்க துரோணன் கிருபன் பெருகு சீர்த்தி அக் கங்கையின் மைந்தன் பேதை நானும் மதிப்பிழந் தேகத் திருகு நெஞ்சச் சகுனி ஒருவன் செப்பு மந்திரஞ் சொல்லுதல் நன்றே! அருகு வைக்கத் தகுதியுள் ளானோ? அவனை வெற்பிடைப் போக்குதி அண்ணே! 203 நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம் நேரு மென்று நினைத்திடல் வேண்டா, பொறி இழந்த சகுனியின் சூதால் புண்ணி யர்தமை மாற்றல ராக்கிச் சிறியர் பாதகர் என்றுல கெல்லாம் சீஎன் றேச உகந்தர சாளும் வறிய வாழ்வை விரும்பிட லாமோ? வாழி,சூதை நிறுத்துதிஎன்றான். 204 (சூதாட்டச் சருக்கம் முற்றும்) முதற்பாகம் முற்றிற்று. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
பாஞ்சாலி சபதம்- இரண்டாம் பாகம்
மூன்றாவது அடிமைச் சருக்கம்
39. பராசக்தி வணக்கம் ஆங்கொரு கல்லை வாயிலிற் படி என் றமைத்தனம் சிற்பி, மற் றொன்றை ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென் றுயர்த்தினான்; உலகினோர் தாய் நீ! யாங்க ணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற் கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய். ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை இருங்கலைப் புலவனாக் குதியே. 205 40. சரஸ்வதி வணக்கம் இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்; இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென வானூலார் இயம்பு கின்றார். இடையின்றித் தொழில்புரிதல் உலகி னிடைப் பொருட்கெல்லாம் இயற்கை யாயின் இடையின்றிக் கலைமகளே! நினதருளில் எனதுள்ளம் இயங்கொ ணாதோ! 206 41. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல் வேறு அறிவு சான்ற விதுரன்சொற் கேட்டான் அழலு நெஞ்சின் அரவை உயர்த்தான், நெறிஉ ரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீச ரானவர் கொள்ளுவ துண்டோ? பொறி பறக்க விழிக ளிரண்டும் புருவ மாங்குத் துடிக்கச் சினத்தின் வெறித லைக்க, மதிம ழுங்கிப் போய் வேந்தன் இஃது விளம்புத லுற்றான். 207 வேறு நன்றி கெட்ட விதுரா! -சிறிதும் நாண மற்ற விதுரா! தின்ற உப்பி னுக்கே-நாசந் தேடுகின்ற விதுரா! அன்று தொட்டு நீயும்-எங்கள் அழிவு நாடுகின்றாய்; மன்றி லுன்னை வைத்தான்-எந்தை மதியை என் னுரைப்பேன்! 208 ஐவருக்கு நெஞ்சம்-எங்கள் அரண்மனைக்கு வயிறும், தெய்வமன் றுனக்கே-விதுரா! செய்து விட்டதேயோ? மெய்வகுப் பவன்போல், -பொதுவாம் விதி உணர்ந்தவன்போல், ஐவர் பக்கம் நின்றே, -எங்கள் அழிவு தேடுகின்றாய். 209 மன்னர் சூழ்ந்த சபையில்-எங்கள் ம்ற்றலார் களோடு முன்னர் நாங்கள் பணயம்-வைத்தே முறையில் வெல்லுகின்றோம், என்ன குற்றங் கண்டாய்? -தருமம் யார்க் குரைக்க வந்தாய்? கன்னம் வைக்கி றோமோ? -பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ? 210 பொய்யுரைத்து வாழ்வார், -இதழிற் புகழுரைத்து வாழ்வார். வைய மீதி லுள்ளார், -அவர்தம் வழியில் வந்ததுண்டோ? செய்யொணாத செய்வார்- தம்மைச் சீருறுத்த நாடி, ஐயா! நீ எழுந்தால்-அறிஞர் அவல மெய்தி டாரோ? 211 அன்பிலாத பெண்ணுக்கு-இதமே ஆயிரங்கள் செய்தும், முன்பின் எண்ணு வாளோ? -தருணம் மூண்ட போது கழிவாள்; வன்பு ரைத்தல் வேண்டா, -எங்கள் வலி பொறுத்தல் வேண்டா, இன்ப மெங்க ணுண்டோ, -அங்கே ஏகி டென் றுரைத்தான். 212 42. விதுரன் சொல்லுவது வேறு நன்றாகும் நெறியறியா மன்னன், அங்கு நான்குதிசை அரசர்சபை நடுவே, தன்னைக் கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொற் கூறிக் குமைவதனில் அணுவளவுங் குழப்ப மெய்தான்; சென்றாலும் இருந்தாலும் இனிஎன் னேடா? செய்கைநெறி அறியாத சிறியாய், நின்னைப் பொன்றாத வழிசெய்ய முயன்று பார்த்தேன்; பொல்லாத விதிஎன்னைப் புறங்கண் டானால்! 213 கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும் கருங்கல்லில் விடந்தோய்ந்த நெஞ்சுங் கொண்டோர் படுஞ்செய்தி தோன்றுமுனே படுவர் கண்டாய். பால்போலும் தேன்போலும் இனிய சொல்லோர் இடும்பைக்கு வழிசொல்வார்; நன்மை காண்பார் இளகுமொழி கூறார்என நினைத்தே தானும், நெடும்பச்சை மரம்போலே வளர்ந்து விட்டாய்- நினக்கெவரும் கூறியவ ரில்லை கொல்லோ? 214 நலங்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா நரபதி! நின் அவைக்களத்தே அமைச்ச ராக வலங்கொண்ட மன்னரொடு பார்ப்பார் தம்மை வைத்திருத்தல் சிறிதேனுந் தகாது கண்டாய். சிலங்கைப் பொற் கச்சணிந்த வேசை மாதர் சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர், மற்றுங் குலங்கெட்ட புலைநீசர், முடவர், பித்தர் கோமகனே! நினக்குரிய அச்சர் கண்டாய்! 215 சென்றாலும் நின்றாலும் இனிஎன் னேடா? செப்புவன நினக்கெனநான் செப்பி னேனோ? மன்றார நிறைந்திருக்கும் மன்னர், பார்ப்பார் மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன். இன்றோடு முடிகுவனதோ? வருவ தெல்லாம் யானறிவேன், வீட்டுமனும் அறிவான் கண்டாய். வென்றான் உள் ஆசையெலாம் யோகி யாகி வீட்டுமனும் ஒன்றுரையா திருக்கின் றாரேன. 216 விதிவழிநன் குணர்ந்திடினும், பேதை யேன்யான், வெள்ளைமன முடைமையினால், மகனே, நின்றன் சதிவழியைத் தடுத்துரைசள் சொல்லப் போந்தேன் சரி, சரி இங் கேதுரைத்தும் பயனொன் றில்லை, மதிவழியே செல்லு கென விதுரன் கூறி வாய்மூடித் தலைகுனிந்தே இருதக்கைகொண்டான். பதிவுறுவோம் புவியிலெனக் கலிம கிழ்ந்தான், பாரதப்போர் வருமென்று தேவ ரார்த்தார். 217 43. சூது மீட்டும் தொடங்குதல் வேறு காயு ருட்ட லானார்-சூதுக் களி தொடங்க லானார். மாய முள்ள சகுனி-பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்: நீ அழித்த தெல்லாம்-பின்னும் நின் னிடத்து மீளும், ஓய் வடைந்திடாதே-தருமா! ஊக்க மெய்துகென்றான். 218 கோயிற் பூசை செய்வோர்-சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயில் காத்து நிற்போன்-வீட்டை வைத் திழத்தல் போலும் ஆயிரங்க ளான-நீதி யவை உணர்ந்த தருமன் தேயம் வைத் திழந்தான்; -சிச்சீ! சிறியர் செய்கை செய்தான். 219 நாட்டு மாந்த ரெல்லாம்-தம்போல் நரர்க ளென்று கருதார்; ஆட்டு மந்தை யா மென்-றுலகை அரச ரண்ணி விட்டார். காட்டு முண்மை நூல்கள்-பல தாங் காட்டினார்களேனும். நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை 220 ஓரஞ் செய்திடாமே தருமத் துறுதி கொன் றிடாமே, சோரஞ் செய்திடாமே-பிறரைத் துயரில் வீழ்த் திடாமே ஊரை யாளு முறைமை-உலகில் ஓர் புறத்து மில்லை சார மற்ற வார்ததை! -மேலே சரிதை சொல்லுகின்றோம். 221 44. சகுனி சொல்வது் வேறு செல்வம்முற் றிழந்த விட்டாய்! -தருமா தேசமுங் குடிகளுஞ் சேர்த்திழந் தாய். பல்வளம் நிறை புவிக்கே-தருமன் பார்த்திவன் என்ப தினிப்பழங் கதைகாண்! சொல்வதோர் பொருள் கேளாய்; -இன்னுஞ் சூழ்ந்தொரு பணயம்வைத் தாடுதி யேல், வெல்வதற் கிடமுண் டாம்; ஆங்கவ் வெற்றியி லனைத்தையும் மீட்டலாம். 222 எல்லா மிழந்த பின்னர்-நின்றன் இளைஞரும் நீரும் மற்றெதிற் பிழைப்பீர்? பொல்லா விளையாட்டில்-பிச்சை புகநினை விடுவதை விரும்புகிலோம். வல்லார் நினதிளை ஞர்-சூதில் வைத்திடத் தகுந்தவர் பணய மென்றே; சொல்லால் உளம்வருந் தேல்; -வைத்துத் தோற்றதை மீட்டென்று சகுனி சொன்னான். 223 வேறு கருணனும் சிரித்தான்:-சபையோர் கண்ணின் நீருதிர்த் தார். இருள்நிறைந்த நெஞ்சன், -களவே இன்ப மென்று கொண்டான் அரவு யர்த்த வேந்தன்-உவகை ஆர்த்தெழுந்து சொல்வான்; பரவு நாட்டை யெல்லாம்-எதிரே பணய மாக வைப்போம். 224 தம்பிமாரை வைத்தே-ஆடித் தருமன் வென்று விட்டால், முன்பு மாமன் வென்ற-பொருளை முழுதும் மூண் டளிப்போம். நம்பி வேலை செய்வோம்; -தருமா! நாடிழந்த பின்னர் அம்பி னொத்த விழியாள்-உங்கள் ஐவருக்கு முரியாள் 225 அவள் இகழ்ந்திடாளோ? -அந்த ஆயன் பேசுவானோ? கவலை தீர்த்து வைப்போம்; -மேலே களி நடக்குகென்றான். இவள வான பின்னும்-இளைஞர் ஏதும் வார்த்தை சொல்லார். துவளும் நெஞ்சினா ராய்-வதனம் தொங்க வீற் றிருந்தார். 226 வீமன் மூச்சு விட்டான்-முழையில் வெய்ய நாகம் போலே; காம னொத்த பார்த்தான்-வதனக் களை இழந்து விட்டான்; நேம மிக்க நகுலன்-ஐயோ! நினை வயர்ந்து விட்டான் ஊமை போலிருந் தான்-பின்னோன் உண்மை முற்றுணர்ந் தான். 227 கங்கை மைந்த னங்கே-நெஞ்சம் கன லுறத் துடித்தான்; பொங்கு வெஞ் சினத்தால்-அரசர் புகை யுயிர்த் திருந்தார்; அங்கம் நொந்து விட்டான், -விதுரன் அவல மெய்தி விட்டான், சிங்க மைந்தை நாய்கள் கொல்லுஞ் செய்தி காண லுற்றே. 228 45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல் வேறு எப்பொழு தும்பிர மத்திலே சிந்தை ஏற்றி உலகமொ ராடல் போல்.எண்த் தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும்-வகை தானுணர்ந் தான்சஹ தேவானம்-எங்கம் ஒப்பில் புலவனை ஆட்டத்தில்-வைத்தல் உன்னித் தருமன் பணயமென்று -அங்குச் செப்பினன் காயை உருட்டினார்-அங்குத் தீய சகுனி கெலித்திட்டான். 229 46. நகுலனை இழத்தல் நகுலனை வைத்தும் இழந்திட்டான்; -அங்கு நள்ளிருட் கண்ணொரு சிற்றொளி-வந்து புகுவது போலவன் புந்தியில்என்ன புன்மை செய்தோம்? என எண்ணினான்-அவ்வெண்ணம் மிகுவதன் முன்பு சகுனியும்-ஐய! வேறோரு தாயிற் பிறந்தவர்-வைக்கத் தகுவ ரென்றிந்தச் சிறுவரை-வைத்துத் தாயத்தி லேஇழந் திட்டனை. 230 திண்ணிய வீமனும் பார்த்தனும்-குந்தி தேவியின் மக்களுனை யொத்தே-நின்னிற் கண்ணியம் மிக்கவர் என்றவர்-தமைக் காட்டுதற் கஞ்சினை போலும் நீ? -என்று புண்ணியமை மிக்க தருமனை-அந்தப் புல்லன் வினவிய போதினில், -தர்மன் துண்ணென வெஞ்சின மெய்தியே, -அட! சூதில் அரசிழந் தேகினும். 231 47. பார்த்தனை இழத்தல் எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; ஐவர் எண்ணத்தில், ஆவியில் ஒன்றுகாண், -இவர் பங்கமுற் றேபிரி வெய்துவார்-என்று பாதகச் சிந்தனை கொள்கிறாய்; -அட! சிங்க மறவர் தமக்குள்ளே-வில்லுத் தேர்ச்சியி லேநிக ரற்றவன், -எண்ணில் இங்குப் புவித்தலம் ஏழையும்-விலை யீடெனக் கொள்ளத் தகாதவன். 232 கண்ணனுக் காருயிர்த் தோழனாம்-எங்கள் கண்ணிலுஞ் சால இனியவன், வண்ணமும் திண்மையும் சோதியும்-பெற்று வானத் தமரரைப் போன்றவன்-அவன் எண்ணரு நற்குணஞ் சான்றவன், -புக ழேறும் விஜயன் பணயங் காண்! -பொய்யில் பண்ணிய காயை உருட்டுவாய்-என்று பார்த்திவன் விம்மி உரைத்திட்டான். 233 மாயத்தை யேஉரு வாக்கிய-அந்த மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட தாயத்தைக் கையினில் பற்றினான்; -கையில் தாய முரடடி விழுத்தினான்; -அவன் சாற்றிய தேவந்து வீழ்ந்ததால், -வெறும் ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார்-மன்னர் இப்புவி மீதுள ராமன்றோ? 234 48. வீமனை இழத்தல் கொக்கரித் தார்த்து முழுங்கியே-களி கூடிச் சகுனியுஞ் சொல்லுவான், -எட்டுத் திக்கனைத்தும் வென்ற பார்த்தனை-வென்று தீர்த்தனம் வீமனைக் கூறென்றான்.தர்மன் தக்கது செய்தல் மறந்தனன், -உளஞ் சார்ந்திடு வெஞ்சின வெள்ளத்தில்-எங்கும் அக்கரை இக்கரை காண்கிலன், -அறத் தண்ணல் இதனை உரைக்கின்றான்; 235 ஐவர் தமக்கொர் தலைவனை-எங்கள் ஆட்சிக்கு வேர்வலி அஃதினை, -ஒரு தெய்வம்முன் னேநின் றெதிர்ப்பினும்-நின்று சீறி அடிக்குந் திறலனை-நெடுங் கைவளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும்புகழ் வீமனை-உங்கள் பொய்வளர் சூதினில் வைத்திட்டேன்-வென்று போஎன் றுரைத்தனன் பொங்கியே. 236 போரினில் யானை விழக்கண்ட பல பூதங்கள் நாய்நரி காகங்கள்-புலை ஓரி கழுகென் றிவையெலாம்-தம துள்ளங் களிகொண்டு விம்மல்போல், -மிகச் சீரிய வீமனைச் சூதினில் அந்தத் தீயர் விழுந்திடக் காணலும்-நின்று மார்பிலுந் தோளிலுங் கொட்டினார்-களி மண்டிக் குதித்தெழுந் தாடுவார். 237 49. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல் மன்னவர், தம்மை மறந்துபோய், -வெறி வாய்ந்த திருடரை யொத்தனர், -அங்குச் சின்னச் சனுனி சிரிப்புடன்-இன்னும் செப்புக பந்தயம் வே றென்றான்-இவன் தன்னை மறந்தவ னாதலால்-தன்னைத் தான்பண யமென வைத்தனன், -பின்பு முன்னைக் கதையன்றி வேறுண்டோ? -அந்த மோசக் சகுனி கெவிலத்தனன். 238 50. துரியோதனன் சொல்வது பொங்கி யெழுந்து சுயோதனன்-அங்கு பூதல மன்னர்க்குச் சொல்லுவான்; -ஒளி மங்கி யழிந்தனர் பாண்டவர்; -புவி மண்டலம் நம்ம தினிக்கண்டீர், -இவ் சங்கை யிலாத நிதியெல்லாம்-நம்மைச் சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள்! -இதை எங்கும் பறையறை வாயடா-தம்பி! என்றது கேட்டுச் சகுனி தான். 239 51. சகுனி சொல்வது புண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல்-நின்னைப் போன் றவர் செய்யத் தகுவதோ? -இரு கண்ணி லினியவ ராமென்ற-இந்தக் காளையர் தம்மைஇங் குந்தைதான்-நெஞ்சில் எண்ணி யிருப்ப தறிகுவாய்; -இவர் யார்? நின்றன்சோதர ரல்லரோ? களி நண்ணித் தொடங்கிய சூதன்றோ? -இவர் நாணுறச் செய்வது நேர்மையோ? 240 இன்னும் பணய்ம்வைத் தாடுவோம்? -வெற்றி இன்னும் இவர் பெற லாகுங்காண், பொன்னுங் குடிகளுந் தேசமும்-பெற்றுப் பொறபொடு போதற் கிடமுண்டாம்; -ஒளி மின்னும் அமுதமும் போன்றவள்-இவர் மேவிடு தேவியை வைத்திட்டால், -(அவள்) துன்னும் அதிட்ட முடையவள் இவர் தோற்ற தனைத்தையும் மீட்டலாம் 241 என்றந்த மாமன் உரைப்பவே வளர் இன்பம் மனத்தி லுடையனாய்-மிக நன்றுநன்றென்று சுயோதனன்-சிறு நாயொன்று தேன்கல சத்தினை -எண்ணித் துன்று முவகையில் வெற்றுநா-வினைத் தோய்த்துச் சுவைத்து மகிழ்தல்போல்-அவன் ஒன்றுரை யாம லிருந்திட்டான்-அழி வுற்ற துலகத் தறமெலாம். 242 அடிமைச் சருக்கம் முற்றும். திரௌபதியை சபைக்கு அழைத்த சருக்கம் 52. திரௌபதியை இழத்தல் பாவியர் சபைதனி லே, -புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை, ஆவியில் இனியவ ளை, -உயரித்து அணிசுமந் துலவிடு செய்யமு தை, ஓவியம் நிகர்த்தவ ளை, -அரு ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத் தேவியை, நிலத்திரு வை-எங்குந் தேடினுங் கிடைப்பருந் திரவியத் தை, 243 படிமிசை இசையுற வே-நடை பயின் றிடுந் தெய்விக மலர்க்கொடி யைக் கடிகமழ் மின்னுரு வை, -ஒரு கமனியக் கனவினைக் காதலினை, வடிவுறு பேரழ கை-இன்ப வளத்தினைச் சூதினில் பணயம் என்றே கொடியவர் அவைக்களத் தில்-அறக் கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான். 244 வேறு வேள்விப் பொருளினை யே-புலை நாயின் முன் மென்றிட வைப்பவர் போல், நீள்விட்டப் பொன் மாளி கை-கட்டிப் பேயினை நேர்ந்து குடியேற்றல் போல், ஆள்விற்றுப் பொன்வாங்கி யே-செய்த பூண யோர் ஆந்தைக்குப் பூட்டுத்ல் போல், கேள்விக் கொருவரில் லை-உயிர்த் தேவியைக் கீழ்மக்கட் காளாக்கி னான். 245 செருப்புக்குத் தோல்வேண்டி யே-இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையி னை? விருப்புற்ற சூதினுக் கே-ஒத்த பந்தயம் மெய்த் தவப் பாஞ்சாலியோ? ஒருப்பட்டுப் போன வுடன் -கெட்ட மாமனும் உன்னியத் தாயங்கொண் டே இருப்பகடை போடென்றான்-பொம்மைக் காய்களும் இருப்பகடை போட்டவே. 246 53. திரௌபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி திக்குக் குலுங்கிடவே-எழுந் தாடுமாம் தீயவர் கூட்டமெல் லாம். தக்குத்தக் கென்றே அவர்-கதித் தாடுவார் தம்மிரு தோள்கொட்டு வார், ஒக்குந் தருமனுக் கே-இஃதென்பர், ஓ! ஓ! வென் றிரைந்திடு வார்; கக்கக்கென் றேநகைப் பார்-துரியோ தனா கட்டிக் கொள் எம்மைஎன் பார். 247 மாமனைத் தூக்காயென் பார்-அந்த மாமன் மேல் மாலை பலவீசு வார், சேமத் திரவியங் கள்-பல நாடுகள் சேர்ந்ததி லொன்று மில்லை; காமத் திரவிய மாம்-இந்தப் பெண்ணையும் கைவச மாகச் செய் தான்; மாமனொர் தெய்வமென்பார்; -துரியோதனன் வாழ்கவென் றார்த்திடு வார். 248 54. துரியோதனன் சொல்வது நின்று துரியோத னன்-அந்த மாமனை நெஞ்சொடு சேரக் கசட்டி, என்துயர் தீர்த்தா யடா! -உயிர் மாமனே! ஏளனந் தீர்த்துவிட் டாய். அன்று நகைத்தா ளடா! -உயிர் மாமனே! அவளைஎன் ஆளாக்கி னாய். என்றும் மறவே னடா! -உயிர் மாமனே! என்ன கைம்மாறுசெய் வேன்? 249 ஆசை தணித்தா யடா! -உயிர் மாமனே! ஆவியைக் காத்தா யடா! பூசை புரிவோ மடா! -உயிர் மாமனே! பொங்க லுனக்கிடு வோம்! நாச மடைந்த தடா! -நெடு நாட் பகை, நாமினி வாழ்ந்தோ மடா! பேசவுந் தோன்று தில்லை; -உயிர் மாமனே! பேரின்பங் கூட்டிவிட டாய் 250 என்று பலசொல்லு வான், -துரியோ தனன் எண்ணி எண்ணிக்குதிப் பான்; குன்று குதிப்பது போல்-துரியோ தனன் கொட்டிக் குதித்தாடு வான். மன்று குழப்பமுற் றே, -அவர் யாவரும் வகைதொகை யொன்று மின்றி அன்று புரிந்ததெல் லாம்-என்தன் பாட்டிலே ஆக்கல் எளிதாகு மோ? 251 55. திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச்சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம் வேறு தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக, பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக, வானத்துத் தேவர் வயிற்றிலே துப்பாய், மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க, வேதம் பொருளின்றி வேற்றுரையே யாகிவிட, 5 நாதங் குலைந்து நடுமையின்றிப் பாழாக, கந்தருவ ரெல்லாங் களையிழக்கச் சித்தர்முதல் அந்தரத்து வாழ்வோ ரனைவோரும் பித்துறவே, நான்முகனார் நாவடைக்க, நாமகட்குப் புத்திகெட, வான்முகிலைப் போன்றதொரு வண்ணத்திருமாலும் 10 அறிதுயில்போய் மற்றாங்கே ஆழ்ந்ததுயி லெய்திவிட செறிதருநற் சீரழகு செல்வமெலாந் தானாகுஞ் சீதேவி தன்வதன்ம செம்மைபோய்க் காரடைய, மாதேவன் யோகம் மதிமயக்க மாகிவிட- வாலை, உமா தேவி மாகாளி, வீறுடையாள். 15 மூலமமா சக்தி, ஒரு மூவிலைவேல் கையறேறாள், மாயை தொலைக்கும் மஹாமாய தானாவாள், பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள். சிங்கத்தி லேறிச் சிரிப்பாள் <உலகழிப்பாள் சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள், 20 நோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும் சாவுஞ் சலிப்புமெனத் தான்பல் கணமுடையாள், கடாவெருமை ஏறுங் கருநிறத்துக் காலனார் இடாது பணிசெய்ய இலங்குமஹா ராணி, மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி 25 துங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள். ஆக்கந் தானாவாள், அழிவுநிலை யாவாள் போக்கு வரவெய்தும் புதுமையெலாந் தானாவாள், மாறிமாறிப் பின்னும் மாறிமாறிப் பின்னும் மாறிமா றிப்போம் வழக்கமே தானாவாள் 30 ஆதி பராசக்தி-அவள்நெஞ்சம் வன்மையுறச் சோதி கதிர்விடுக்கும் சூரியனாந் தெய்வத்தின் முகத்தே இருள் படர- 56. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன், துரியோதனனும் சுறுக்கெனவே தான்திரும்பி 35 அரியோன் விதுர னவனுக் குரைசெய்வான்:- செல்வாய், விதுரா! நீ சக்தித் திருப்பதேன்? வில்வா ணுதலினாள், மிக்க எழி லுடையாள், முன்னே பாஞ்சாலர் முடி வேந்தன் ஆவிமகள், இன்னேநாம் சூதில் எடுத்த விலைமகள்பால் 40 சென்றுவிளை வெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி, மன்றினிடை யுள்ளான்நின் மைத்துனன்நின் ஓர் தலைவன் நின்னை அழைக்கிறான் நீள்மனையில் ஏவலுக்கே என்ன உரைத்தவளை இங்கு கொணர் வாய் என்றான். 57. விதுரன் சொல்வது துரியோ தனன் இச் சுடுசொற்கள் கூறிடவும் 45 பெரியோன் விதுரன் பெரிதுஞ் சினங்கொண்டு, மூட மகனே! மொழியொணா வார்த்தையினைக் கேடுவரல் அறியாய், கீழ்மையினாற் சொல்லிவிட்டாய், புள்ளிச் சிறுமான் புலியைப்போய்ப் பாய்வதுபோல் பிள்ளைத் தவளை பெரம்பாம்பை மோதுதல்போல், 50 ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய், தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகிறாய்; நின்னுடைய நன்மைக்கிந் நீதியெலாஞ் சொல்லுகிறேன்; என்னுடைய சொல், வேறு எவர்பொருட்டும் இல்லையடா? பாண்டவர்தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார், 55 மாண்டு தலைமேல், மகனே! கிடப்பாய் நீ, தன்னழிவு நாடுந் தறுகண்மை என்னேடா? முன்னமொரு வேனன் முடிந்தகதை கேட்டிலையோ? நல்லோர் தமதுள்ளம் நையச் செயல்செய்தான் பொல்லாத வேனன், புழுவைப்போல் மாய்ந்திட்டான். 60 நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ? மஞ்சனே, அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ? கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்து விடும்; பட்டார்தம் நெஞ்சில் பலநாள் அகலாது வெந்நரகு சேர்த்துவிடும், வித்தை தடுத்துவிடும், 65 மன்னவனே, நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல். சொல்லிவிட்டேன்; பின்னொருகால் சொல்லேன், கவுரவர்காள்! புல்லியர்கட் கின்பம் புவித்தலத்தில் வாராது. பேராசை கொண்டு பிழைச்செயல்கள் செய்கின்றீர்! வாராத வன்கொடுமை மாவிபத்து வந்துவிடும். 70 பாண்டவர்தம் பாதம் பணிந்தவர்பாற் கொண்டதெலாம். மீண்டவர்க்கே ஈந்து விட்டு, விநயமுடன் ஆண்டவரே! யாங்கள் அறியாமை யால்செய்த நீண்ட பழிஇதனை நீர்பொறுப்பீர் என்றுரைத்து, மற்றவரைத் தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர் 75 குற்றந் தவிர்க்கும் நெறிஇதனைக் கொள்ளீரேல், மாபா ரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர், பூபால ரேஎன்றப் புண்ணியனும் கூறினான். சொல்லிதனைக் கேட்டுந் துரியோதன மூடன், வல்லிடிபோல் சீச்சீ! மடையா, கெடுக நீ 80 எப்போதும் எம்மைச் சபித்தல் இயல்புனக்கே, இப்போதுன் சொல்லை எவருஞ் செவிக்கொள்ளார், யாரடா, தேர்ப்பாகன்! நீபோய்க் கணமிரண்டில் பாரதர்க்கு வேந்தன் பணித்தான் எனக்கூறிப் பாண்டவர்தந் தேவிதனைப் பார்வேந்தர் மன்றினிலே 85 ஈண்டழைத்து வாஎன் றியம்பினான்.ஆங்கே தேர்ப் பாகன் விரைந்துபோய்ப் பாஞ்சாலி வாழ்மனையில் சோகம் ததும்பித் துடித்தகுரலுடனே, அம்மனே போற்றி! அறங்காப்பாய், தாள் போற்றி! வெம்மை யுடைய விதியால் யுதிட்டிரனார் 90 மாமன் சகுனியொடு மாயச்சூ தாடியதில், பூமி யிழந்து பொருளிழந்து தம்பியரைத் தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்திழந்தார். சாற்றிப் பணயமெனத் தாயேஉனை வைத்தார். சொல்லவுமே நாவு துணியவில்லை; தோற்றிட்டார் 95 எல்லாருங் கூடி யிருக்கும் சபைதனிலே, நின்னை அழைத்துவர நேமித்தான் எம்மரசன் என்ன உரைத்திடலும், யார்சொன்ன வார்த்தையடா! சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து மாதர் வருதல் மரபோடா? யார் பணியால் 100 என்னை அழைக்கின்றாய்? என்றாள் அதற்கவனும். மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால்.என்றிட்டான். நல்லது; நீ சென்று நடந்தகதை கேட்டுவா வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம் என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே 105 முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா? சென்று சபையில்இச் செய்தி தெரிந்து வா என்றவளுங் கூறி இவன்போ யியபின்னர், தன்னந் தனியே தவிக்கு மனத்தாளாய் வன்னங் குலைந்து மலர்விழிகள் நீர்சொரிய. 110 உள்ளத்தை அச்சம் உலைவுறுத்தப் பேய்கண்ட பிள்ளையென வீற்றிருந்தாள் பின்னந்தத் தேர்ப்பாகன் மன்னன் சபைசென்று, வாள் வேந்தே! ஆங்கந்தப் பொன்னரசி தாள்பணிந்து போதருவீர்என்றிட்டேன். என்னை முதல்வைத் திழந்தபின்பு தன்னைஎன் 115 மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற பின்னரெனைத் தோற்றாரா? என்றேநும் பேரவையை மின்னற் கொடியார் வினவிரத் தாம் பணித்தார் வந்துவிட்டேன்என்றுரைத்தான் மாண்புயர்ந்த பாண்டவர்தாம் நொந்துபோ யொன்றும் நுவலா திருந்துவிட்டார். 120 மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்ன ரெலாம் முற்றும் உரையிழந்து மூங்கையர்போல் வீற்றிருந்தார். 252 58. துரியோதனன் சொல்வது வேறு உள்ளந் துடித்துச் சுயோ தனன்-சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லு வான்; -அட! பிள்ளைக் கதைகள் விரிக்கி றாய்.-என்றன் பெற்றி யறிந்திலை போலும், நீ! -அந்தக் கள்ளக் கரிய விழியி னாள்-அவள் கல்லிகள் கொண்டிங்கு வந்த னை! -அவள் கிள்ளை மொழியின் நலத்தை யே-இங்குக் கேட்க விரும்புமென் னுள்ள மே 253 வேண்டிய கேள்விகள் கேட்க லாம்.-சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்ல லாம்-மன்னர் நீண்ட பெருஞ்சபை தன்னி லே-அவள் நேரிடவே வந்த பின்பு தான், -சிறு கூண்டிற் பறவையு மல்ல ளே! -ஐவர் கூட்டு மனைவிக்கு நாண மே-சினம் மூண்டு கடுஞ்செயல் செய்யு முன்-அந்த மொய்குழ லாளைஇங் கிட்டு வா. 254 மன்னன் அழைத்தனன் என்று நீ- சொல்ல மாறி யவளொன்று சொல்வ தோ? -உன்னைச் சின்னமுறச் செய்குவே னடா! -கணஞ் சென்றவளைக் கொணர்வாய் என்றான்-அவன் சொன்ன மொழியினைப் பாகன் போய்-அந்தத் தோகைமுன் கூறி வணங்கி னன்-அவள் இன்னல் விளைந்திவை கூறு வாள்-தம்பி, என்றனை வீணில் அழைப்ப தேன்? 255 59. திரௌபதி சொல்லுதல் நாயகர் தாந்தம்மைத் தோற்ற பின்-என்னை நல்கும் உரிமை அவர்க்கில்லை-புலைத் தாயத்தி லேவிலைப் பட்டபின்-என்ன சாத்திரத் தாலெனைத் தோற்றிட் டார்? -அவர் தாயத்தி லேவிலைப் பட்டவர்; -புவி தாங்குந் துருபதன் கன்னி நான்-நிலை சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், -பின்பு தார முடைமை அவர்க்குண் டோ? 256 கௌரவ வேந்தர் சபைதன் னில்-அறங் கண்டவர் யாவரும் இல்லை யோ? -மன்னர் சௌரியம் வீழ்ந்திடும் முன்ன ரே-அங்கு சாத்திரஞ் செத்துக் கிடக்கு மோ? -புகழ் ஒவ்வுற வாய்ந்த குருக்க ளும்-கல்வி ஒங்கிய மன்னருஞ் சூதி லே-செல்வம் வவ்வுறத் தாங்கண் டிருந்த னர்! -என்றன் மான மழிவதும் காண்ப ரோ? 257 இன்பமுந் துன்பமும் பூமியின்-மிசை யார்க்கும் வருவது கண்ட னம்; -எனில் மன்பதை காக்கும் அரசர் தாம்-அற மாட்சியைக் கொன்று களிப்ப ரோ?-அதை அன்புந் தவமுஞ் சிறந்துளார்-தலை யந்தணர் கண்டு களிப்பரோ? -அவர் முன்பென் வினாவினை மீட்டும் போய்ச்-சொல்லி முற்றுந் தெளிவுறக் கேட்டு வா 258 என் றந்தப் பாண்டவர் தேவி யும்-சொல்ல, என்செய்வன் ஏழையப் பாகனே? -என்னைக் கொன்றுவிட் டாலும் பெரிதில்லை-இவள் கூறும் வினாவிற் கவர் விடை-தரி னன்றி இவளை மறுமுறை -வந்து அழைத்திட நானங் கிசைந்திடேன்-(என) நன்று மனத்திடைக் கொண்டவன் சபை நண்ணி நிகழ்ந்தது கூறி னான். 259 மாத விடாயி லிருக்கி றாள்-அந்த மாதர சென்பதும் கூறினான்-கெட்ட பாதகன் நெஞ்சம் இளகி டான்-நின்ற பாண்டவர் தம்முகம் நோக்கி னான்-அவர் பேதுற்று நிற்பது கண்ட னன்-மற்றும் பேரவை தன்னில் ஒருவரம-இவன் தீதுற்ற சிந்தை தடுக்க வே-உள்ளத் திண்மையி லாதங் கிருந்த னர். 260 பாகனை மீட்டுஞ் சினத்துடன்-அவன் பார்த்திடி போலுரை செய்கின் றான்; -பின்னும் ஏகி நமதுளங் கூற டா-அவள் ஏழு கணத்தில் வரச் செய் வாய்? -உன்னைச் சாக மிதித்துடு வேன ! -என்று தார்மன்னன் சொல்லிடப் பாக னும்-மன்னன் வேகந் தனைப்பொருள் செய்திடான்-அங்கு வீற்றிருந் தோர்தமை நோக்கியே. 261 சீறும் அரசனுக் கேழை யேன்-பிழை செய்த துண்டோ? அங்குத் தேவி யார்-தமை நூறு தரஞ்சென் றழைப்பி னும், -அவர் நுங்களைக் கேட்கத் திருப்பு வார்; -அவர் ஆறுதல் கொள்ள ஒருமொழி-சொல்லில் அக்கண மேசென் றழைக்கி றேன்; -மன்னன் கூறும் பணிசெய வல்லன் யான்; -அந்தக் கோதை வராவிடில் என்செய் வேன்? 262 60. துரியோதனன் சொல்வது பாகன் உரைத்தது கேட்ட னன்- பெரும் பாம்புக் கொடியவன் சொல்கி றான்; -அவள் பாகன் அழைக்க வருகிலள்; -இந்தப் பையலும் வீமனை அஞ்சி யே-பல வாகத் திகைப் புற்று நின்றனன்; -இவன் அச்சத்தைப் பின்பு குறைக்கி றேன்-தம்பீ! போகக் கடவை இப்போ தங்கே; -இங்கப் பொற்றொடி யோடும் வருக நீ! 263 திரௌபதியை சபைக்கு அழைத்த சருக்கம் முற்றும் ஐந்தாவது சபதச் சருக்கம் 61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்கு கொணர்தல் இவ்வுரை கேட்டதுச் சாதனன்-அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன்-இவன் செவ்வி சிறிது புகலு வோம்; -இவன் தீமையில் அண்ணனை வென்றவன்; -கல்வி எவ்வள னேனுமி லாதவன்; -கள்ளும் ஈரக் கறியும் விரும்பு வோன்; -பிற தெவ்வர் இவன்றனை அங்சுவார்; -தன்னைச் சேர்ந்தவர் பேயென் றொதுங்கு வார்; 264 புத்தி விவேக மில்லாத வன்; -புலி போல உடல்வலி கொண்டவன்; -கரை தத்தி வழியுஞ் செருக்கி னால-கள்ளின் சார்பின் றியேவெறி சான்ற வன்; -அவ சக்தி வழிபற்றி நின்ற வன்; -சிவ சக்தி நெறிஉண ராத வன்; -இன்பம் நத்தி மறங்கள் இழைப்ப வன்; -என்றும் நல்லவர் கேண்மை விலக்கி னோன்; 265 அண்ண னொருவனை யன்றி யே-புவி அத்தனைக் குந்தலை யாயி னோம்-என்னும் எண்ணந் தனதிடைக் கொண்டவன்; -அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்தி டான்; -அருட் கண்ணழி வெய்திய பாத கன்; .அந்தக் காரிகை தன்னை அழைத்து வா-என் றவ் அண்ண னுரைத்திடல் கேட்ட னன்; -நல்ல தாமென் றுறுமி எழுந்த னன். 266 பாண்டவர் தேவி யிருந்த தோர்-மணிப் பைங்கதிர் மாளிகை சார்நத் னன்; -அங்கு நீண்ட துயரில் குலைந்துபோய்-நின்ற நேரிழை மாதினைக் கண்ட னன்; -அவள் தீண்டலை யெண்ணி ஒதுங்கி னாள்; -அடி! செல்வ தெங்கேயென் றிரைந்திட்டான்; -இவன் ஆண்டகை யற்ற புலையனென்று -அவள் அச்ச மிலா தெதிர் நோக்கி யே 267 62. திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம் தேவர் புவிமிசைப் பாண்ட வர்; -அவர் தேவி, துருபதன் கன்னி நான்; -இதை யாவரும் இற்றை வரையி னும், -தம்பி, என்முன் மறந்தவ ரில்லை காண்; -தம்பி, காவ லிழந்த மதிகொண் டாய்; -இங்குக் கட்டுத் தவறி மொழி கிறாய்; -தம்பி நீ வந்த செய்தி விரைவி லே-சொல்லி நீங்குகஎன்றனள் பெண்கொடி. 268 பாண்டவர் தேவியு மல்லைநீ; -புகழ்ப் பாஞ்சாலத் தான்மக ளல்லை நீ; -புவி யாண்டருள் வேந்தர் தலைவ னாம்-எங்கள் அண்ணனுக் கேயடி மைச்சிநீ; -மன்னர் நீண்ட சபைதனிற் சூதிலே-எங்கள் நேசச் சகுனியோ டாடியங்கு-உன்னைத் தூண்டும் பணய மெனவைத் தான்-இன்று தோற்று விட்டான் தருமேந்திரன். 269 ஆடி விலைப்பட்ட தாதி நீ; -உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோத னன்; -மன்னர் கூடி யிருக்குஞ் சபையிலே-உன்னைக் கூட்டி வருகென்று மன்ன வன் சொல்ல ஓடி வந்தேனிது செய்திகாண்; -இனி ஒன்றுஞ் சொலா தென்னோ டேகுவாய்-அந்தப் பேடி மகனொரு பாகன் பாற்-சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்க வே 270 வேறு துச்சா தனனிதனைச் சொல்லினான், பாஞ்சாலி; - அச்சா, கேள் மாதவிலக் காதலா லோராடை தன்னி லிருக்கின்றேன்.தார்வேந்தர் பொற்சபைமுன் என்னை யழைத்தல் இயல்பில்லை, அன்றியுமே, சோதரர்தந் தேவிதனைச் சூதில் வசமாக்கி, 5 ஆதரவு நீக்கி, அருமை குலைத்திடுதல், மன்னர் குலத்து மரபோகாண்? அண்ணன்பால் என்னிலைமை கூறிடுவாய், ஏகுக நீஎன்றிட்டாள். கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன் பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக் 10 கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான், ஐயகோவென்றே யலறி யுணர்வற்றுப் பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி முன்னிழுத்துச் சென்றான்.வழிநெடுக.மொய்த்தவராய். 15 என்ன கொடுமை யிதுவென்று பார்த்திருந்தார், ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதத்துத் தராதலத்திற் போக்கியே, பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல், 20 நெட்டை மரங்களென நின்று புலம்பினார், பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ? பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச் சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க் கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே 25 கூடுதலும் அங்கேபோய்க் கோவென்றலறினாள். 63. சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல் விம்மி யழுதாள்; -விதியோ கணவரே! அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து பாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ? 30 என்றாள், விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமே குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார், தருமனும்மற் றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான் பொருமி யவள்பின்னும் புலம்புவாள்:-வான் சபையில் கேள்விபல வுடையர் கேடிலா நல்லிசையோர். 35 வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள் மேலோ ரிருக்கின்றார், வெஞ்சினமேன் கொள்கிலரோ? வேலோ ரெனையுடைய வேந்தர் பிணிப்புண்டார், இங்கிவர்மேற் குற்றம் இயம்ப வழியில்லை, மங்கியதோர் புன்மதியாய்! மன்னர் சபைதனிலே 40 என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்லுகிறாய், நின்னை யெவரும்நிறுத் தடாஎன்பதிலர், என்சேய்கேன்? என்றே இரைந்தழுதாள், பாண்டவரை மின்செய் கதிர் விழியால் வெந்நோக்கு நோக்கினாள். மற்றவர்தாம் முன்போ வாயிழந்து சீர்குன்றிப் 45 பற்றைகள்போல் நிற்பதனைப் பார்த்து, வெறிகொண்டு தாதியடி தாதி; யெனத் துச்சாதனன் அவளைத் தீதுரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான்; சகுனி புகழ்ந்தான்.சபையினோர் வீற்றிருந்தார்! தகுதியுயர் வீட்டுமனுஞ் சொல்லுகிறான்; தையலே 50 64. வீட்டுமாசார்யன் சொல்வது சூதாடிநின்னையுதிட்டிரனே தோற்று விட்டான் வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய், சூதிலே வல்லான் சகுனி தொழில்வலியால், மாதரசே, நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான், மற்றிதனி லுன்னையொரு பந்தயமா வைத்ததே 55 குற்றமென்று சொல்லுகிறாய், கோமகளே, பண்டையுக வேத முனிவர் விதிப்படி, நி சொல்லுவது நீதமெனக் கூடும்; நெடுஞ்காலச் செய்தியது; ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில் பேணிவந்தார்; பின்னாளில் இஃது பெயர்ந்துபோய் 60 இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால், ஆடவருக் கொப்பில்லை மாதர்.ஒருவன்தன் தாரத்தை விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம் முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை தன்னை யடிமையென விற்றபின் னுந்தருமன் 65 நின்னை யடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு. செல்லு நெறியோர் செய்கையிங்கு பார்த்திடிலோ கல்லும் நடுங்கும் விலங்குகளும் கண்புதைக்கும். செய்கை அநீதியென்று தேர்ந்தாலும், சாத்திரந்தான் வைகும் நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால். 70 ஆங்கவையும் நின்சார்பி லாகா வகையுரைத்தேன். தீங்கு தடுக்குந் திறமிலேன்என்றந்த மேலோன் தலைகவிழ்ந்தான்.மெல்லியளுஞ் சொல்லுகிறாள்:- 65. திரௌபதி சொல்வது சாலநன்கு கூறினீர்! ஐயா! தருமநெறி பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால் 75 கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின், கூட்டமுற மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே, செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால் தக்கது நீர் செய்தீர்; தருமத்துக் கிச்செய்கை ஒக்கும்என்று, கூறி உகந்தனராம் சாத்திரிமார்! 80 பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்! மாய முணராத மன்னவனைச் சூதாட வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ? முற்படவே சூழ்ந்து முடீத்ததொரு செய்கையன்றோ? மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ? 85 பெண்டிர் தமையுடையீர் பெண்க ளுடன்பிறந்தீர்! பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ? கண்பார்க்க வேண்டும்! என்று கையெடுத்துக் கும்பிட்டாள் அம்புபட்ட மான்போல் அழுது துடி துடித்தாள். வம்புமலர்க் கூந்தல் மண்மேற் புரண்டுவிழத் 90 தேவி கரைந்திடுதல் கண்டே, சில மொழிகள் பாவிதுச் சாதனனும் பாங்கிழந்து கூறினான், 271 வேறு ஆடை குலைவுற்று நிற்கிறாள்; -அவள் ஆவென் றழுது துடிக்கிறாள்-வெறும் மாயட நகர்த்த துச்சாதனன்-அவள் மைக்குழல் பற்றி யிழுக்கிறான்-இந்தப் பீடையை நோக்கினன் வீமனும்-கரை மீறி எழுந்தது வெஞ்சினம்; -துய் கூடித் ததருமனை நோக்கியே, -அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ? 272 66. வீமன் சொல்வது வேறு சூதர் மனைகளி லே-அண்ணே! தொண்டு மகளி ருண்டு, சூதிற் பணயமென் றே-அங்கோர் தொண்டச்சி போவ தில்லை. 273 ஏது கருதி வைத்தாய்? -அண்ணே யாரைப் பணயம் வைத்தாய்? மாதர் குல விளக்கை-அன்பே வாய்ந்த வடி வழகை. 274 பூமி யரச ரெல்லாங்-கண்டே போற்ற விளங்குகிறான், சாமி, புகழினுக்கே-வெம்போர்ச் சண்டனப் பாஞ்சாலன், 275 அவன் சுடர் மகளை-அண்ணே! ஆடி யிழந்து விட்டாய். தவறு செய்து விட்டாய்-அண்ணே! தருமங் கொன்று விட்டாய். 276 சோரத்திற் கொண்ட தில்லை; -அண்ணே! சூதிற் படைத்த தில்லை. வீரத்தினாற் படைத்தோம்; -வெம் பார் வெற்றியினாற் படைத்தோம்; 277 சக்கரவர்த்தி யென்றே-மேலாந் தன்மை படை திருந்தோம்; பொக்கென ஓர்கணத்தே-எல்லாம் போகத் தொலைத்து விட்டாய். 278 நாட்டை யெல்லாந் தொலைத்தாய்; -அண்ணே! நாங்கள் பொறுத் திருந்தோம். மீட்டும் எமை யடிமை-செய்தாய், மேலும் பொறுத் திருந்தோம் 279 துருபதன் மகளைத் -திட்டத் துய்ம னுடற் பிறப்பை, இரு பகடை யென்றாய், -ஐயோ! இவர்க் கடிமை யென்றாய்! 280 இது பொறுப்ப தில்லை, -தம்பி! எரி தழல் கொண்டு வா. கதிரை வைத் திழந்தான்-அண்ணன் கையை எரித்திடுவோம். 281 67. அர்ஜூனன் சொல்வது வேறு எனவீமன் கசதேவ னிடத்தே சொன்னான் இதைக் கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்; மனமாரச் சொன்னாயோ? வீமா! என்ன வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர் முன்னே? கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக் களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்; சினமான தீ அறிவைப் புகைத்த லாலே திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 282 தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும் எனு மியற்கை மருமத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான். கருமத்தை மேன்மேலுங காண்போம்; இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போம். தனுஉண்டு காண்டீவம் அதன் பேர்என்றான். 283 68. விகர்ணன் சொல்வது அண்ணனுக்குத் திறல்வீமன் வணங்கி நின்றான். அப்போது விகர்ணனெழுந்த தவைமுன் சொல்வான்; பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன பேச்சதனை நான்கொள்ளேன்.பெண்டிர் தம்மை எண்ணமதில் விலங்கெனவே கணவ ரெண்ணி ஏதெனிலுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன், வண்ணமுயர் வேதநெறி மாறிப் பின்னாள் வழங்குவதிந் நெறி என்றான்; வழுவே சொன்னான். 284 எந்தையர்தம் மனைவியரை விற்ப துண்டோ? இதுகாறும் அரசியரைச் சூதிற் தோற்ற விந்தையைநீர் கேட்ட துண்டோவிலைமாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக் காரர் சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார்! சொல்லளவே தானாலும் வழக்கந் தன்னில் இந்தவிதஞ் செய்வதில்லை, சூதர் வீட்டில் ஏவற்பெண பணயமில்லை என்றுங் கேட்டோம். 285 தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த் தாரமெது? வீடேது? தாத னான பின்னையுமோர் உடைமை உண்டோ? என்று நம்மைப் பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால். மன்னர்களே! களிப்பதுதான் சூதென் றாலும் மனுநீதி துறந்திங்கே வலிய பாவந் தன்னைஇரு விழிபார்க்க வாய்பே சீரோ? தாத்தனே நீதிஇது தகுமோ? என்றான். 286 இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்; எழுந்திட்டார் சிலவேந்தர்; இரைச்ச லிட்டார், ஓவ்வாது சகுனிசெயுங் கொடுமைஎன்பார்; ஒருநாளும் உலகிதனை மறக்காதென்பார்; எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவீர்; ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா, செவ்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயச் செருக்களத்தே தீருமடா பழியிஃதென்பார். 287 69. கர்ணன் பதில் வேறு விகருணன் சொல்லைக் கேட்டு வில்லிசைக் கர்ணன் சொல்வான்:- தகுமடா சிறியாய் நின்சொல் தாரணி வேந்தர் யாரும் புகுவது நன்றென் றெண்ணி வாய்புதைத் திருந்தார் நீ தான் மிகு முறை சொல்லி விட்டாய். விரகிலாய்! புலனு மில்லாய்! 288 பெண்ணிவள் தூண்ட லெண்ணிப் பசுமையால் பிதற்று கின்றாய்; எண்ணிலா துரைக்க லுற்றாய்; இவளைநாம் வென்ற தாலே நண்ணிடும் பாவ மென்றாய். நாணிலாய்! பொறையு மில்லாய்! கண்ணிய நிலைமை யோராய்; நீதிநீ காண்ப துண்டோ? 289 மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கங்கீ ழடியார்க் கில்லை சீரிய மகளு மல்லள்; ஐவரைக் கலந்த தேவி யாரடா பணியாள்! வாராய்; பாண்டவர் மார்பி லேந்தும் சீரையுங் களைவாய்; தையல் சேலையுங் களைவாய்என்றான். 290 இவ்வுரை கேட்டா ரைவர்; பணிமக்க ளேவா முன்னர் தெவ்வர்கண் டஞ்சு மார்பைத் திறந்தவர், துணியைப் போட்டார். நவ்வியைப் போன்ற கண்ணாள், ஞான சுந்தரி, பாஞ்சாலி எவ்வழி உய்வோமென்றே தியங்கினாள், இணைக்கை கோத்தாள். 291 70. திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை துச்சா தனன்எழுந்தே-அன்னை துகிலினை மன்றிடை யுரித லுற்றான். அச்சோ, தேவர்க ளே! -என்று அலறி அவ் விதுரனுந் தரைசாய்ந் தான். பிச்சே றியவனைப் போல்-அந்தப் பேயனுந் துகிலினை உரிகையி லே, உட்சோ தியிற் கலந்தாள்-அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமை யுற்றாள். 292 ஹரி, ஹரி, ஹரி என்றாள்; -கண்ணா! அபய மபயமுனக் கபய மென் றான். கரியினுக் கருள்புரிந் தே-அன்று கயத்திடை முதலையின் உயிர்மடித் தாய்! கரிய நன்னிற முடையாய்! -அன்று காளிங்கன் தலைமிசை நடம்புரிந் தாய்! பெரியதொர் பொருளா வாய்! -கண்ணா! பேசரும் பழமறைப் பொருளா வாய்! 293 சக்கர மேந்தி நின்றாய்! -கண்ணா! சாரங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்! அட்சரப் பொருளா வாய்! -கண்ணா! அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்! துக்கங்கள் அழித்திடுவாய்!-கண்ணா! தொண்டர்கண் ணீர்களைத் துடைத்திடு வாய்! தக்கவர் தமைக்காப் பாய், -அந்தச் சதுர்முக வேதனைப் படைத்துவிட் டாய். 294 வானத்துள் வானா வாய, -தீ மண், நீர், காற்றினில் அவையா வாய்; மோனத்துள் வீழ்ந்திருப் பார்-தவ முனிவர்தம் அகத்தினி லொளிர்தரு வாய்; கானத்துப் பொய்கையி லே-தனிக் கமலமென் பூமிசை வீற்றிருப்பாள், தானத்து ஸ்ரீ தேவி, -அவள் தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப் பாய்! 295 ஆதியி லாதி யப்பா! -கண்ணா! அறிவினைக் கடந்தவிண் ணகப்பொரு ளே! சோதிக்குஞ் சோதி யப்பா! -என்றன் சொல்லினைக் கேட்டருள் செய்திடு வாய்! மாதிக்கு வெளியினி லே-நடு வானத்திற் பறந்திடும் கருடன் மிசை சோதிக்குள் ஊர்ந்திடு வாய், -கண்ணா! சுடர்ப் பொருளே பே ரடற்பொரு ளே! 296 கம்பத்தி லுள்ளா னோ-அடா! காட்டுன் றன் கடவுளைத் தூணிடத் தே! வம்புரை செயு மூடா-என்று மகன்மிசை யுறுமியத் தூணுதைத் தான் செம்பவிர் குழலுடை யான்; -அந்தத் தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்! நம்பிநின் னடிதொழு தேன்; -என்னை நாணழி யாதிங்கு காத்தருள் வாய். 297 வாக்கினுக் சுசனை யும்-நின்றன் வாக்கினிலசைத்திடும் வலிமையி னாய், ஆக்கினை கரத்துடை யான்-என்றன் அன்புடை எந்தை! என் னருட்கடலே! நோக்கினிற் கதிருடை யாய்! -இங்கு நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள் வாய்! தேக்குநல் வானமு தே! -இங்குச் சிற்றிடை யாய்ச்சி யில் வெண்ணெ யுண்டாய்! 298 வையகம் காத்திடு வாய்! ; -கண்ணா! மணிவண் ணா, என்றன் மனச் சுடரே! ஐய, நின் பதமல ரே-சரண். ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி! என்றாள். பொய்யர்தந் துயரினைப் போல், -நல்ல புண்ணிய வாணர்தம் புகழினைப் போல், தையலர் கருணையைப் போல், -கடல் சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல். 299 பெண்ணொளி வாழ்த்திடு வார்-அந்தப் பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல் போல், கண்ண பிரானரு ளால், -தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணிபுதி தாய் வண்ணப்பொற் சேலைக ளாம்-அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தன வே! எண்ணத்தி லடங்கா வே; -அவை எத்தனை எத்தனை நிறத்தன வோ! 300 பொன்னிழை பட்டிழை யும்-பல புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைக ளாய் சென்னியிற் கைகுவித் தாள்-அவள் செவ்விய மேனியைச் சார்ந்துநின் றே முன்னிய ஹரிநா மம்-தன்னில் மூளுநற் பயனுல கறிந்திட வே, துன்னிய துகிற்கூட் டம்-கண்டு தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட் டான். 301 தேவர்கள் பூச்சொரிந் தார்-ஓம் ஜெயஜெய பாரத சக்திஎன்றே. ஆவலோ டெழுந்து நின்று-மன்னை ஆரிய வீட்டுமன் கைதொழு தான். சாவடி மறவரெல் லாம்-ஓம் சக்திசக்தி சக்திஎன்று கரங்குவித் தார். காவலின் நெறிபிழைத் தான்-கொடி கடியர வுடையவன் தலைகவிழ்ந் தான். 302 71. வீமன் செய்த சபதம் வேறு வீமனெழுந் துரைசெய் வான்:-இங்கு விண்ணவ ராணை, பரா சக்தி யாணை; தாமரைப் பூபினில் வந்தான்-மறை சாற்றிய தேவன் திருக்கழ லாணை; மாமகளைக் கொண்ட தேவன் எங்கள் மரபுக்குத் தேவன் கண்ணன் பதத்தாணை காமனைக் கண்ணழ லாலே-சுட்டுக் காலனை வென்றவன் பொன்னடிமீதில் 303 ஆணையிட் டிஃதுரை செய்வேன்:-இந்த ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை, பேணும் பெருங்கன லொத்தாள்-எங்கள் பெண்டு திரௌபதியைத் தொடைமீதில் நாணின்றி வந்திருஎன்றான்-இந்த நாய்மக னாந்துரி யோதனன் றன்னை, மாணற்ற மன்னர்கண் முன்னே, -என்றன் வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே, 304 தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன்-தம்பி சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; -அங்கு கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன், நடைபெறுங் காண்பி ருலகீர்! -இது நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா தடையற்ற தெய்வத்தின் வார்த்தை-இது சாதனை செய்க, பராசக்தி! என்றான். 305 72. அர்ஜுனன் சபதம் பார்த்தனெழுந்துரை செய்வான்:-இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன். தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு-எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழ லாணை; கார்த்தடங் கண்ணி எந்தேவி -அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை; போர்த்தொழில் விந்தைகள் காண்பாய், -ஹே! பூதலமே! அந்தப் போதினில்என்றான். 306 73. பாஞ்சாலி சபதம் தேவி திரௌபதி சொல்வாள்-ஓம், தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்; பாவி துச்சாதனன் செந்நீர், -அந்தப் பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம், மேவி இரண்டுங் கலந்து-குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல்முடிப் பேன் யான்; -இது செய்யு முன்னே முடியேனென் றுரைத்தாள். 307 ஓமென் றுரைத்தனர் தேவர்; -ஓம் ஓமென்று சொல்லி உறுமிற்று வானம். பூமி யதிர்ச்சி உண்டாச்சு-விண்ணைப் பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று. சாமி தருமன் புவிக்கே -என்று சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்! நாமுங் கதையை முடித்தோம்-இந்த நானில முற்றும் நல் லின்பத்தில் வாழ்க! 308 சபதச் சருக்கம் முற்றும் பாஞ்சாலி சபதம் முற்றிற்று. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
குயில் பாட்டு
1. குயில்
காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5 செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின் மேற்கே,சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை, நாற்கோத் துள்ளபல நத்தத்து வேடர்களும் வந்து பறவைகூட வாய்ந்த பெருஞ்சோலை;- அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, 10 வேடர் வாராத விருந்துத் திருநாளில், பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில் வீற்றிருந்தே,ஆணகுயில்கள் மேனி புளகமுற, ஆற்ற லழிவுபெற,உள்ளத் தனல் பெருக, சோலைப் பறவையெலாம் சூழ்ந்து பரவசமாய்க் 15 காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்கக, இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல், மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல்போல்,வானத்து மோகினியாள் இந்தவுரு வெய்தித்தன் ஏற்றம் விளங்குதல்போல், 20 இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை- முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப் பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே-கண்டேன் யான். கன்னிக் குயிலன்று காவிடத்தே, பாடியதோர் 25 இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய், மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ? இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல், காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ? நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ? 30 என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால். அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ? குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே; அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; 35 விந்தைக் குரலுக்கு,மேதினியீர்,என்செய்கேன்! 2. குயிலின் பாட்டு ராகம்-சங்கராபரணம் ஏக-தாளம் ஸ்வரம் ஸகா-ரிமா-காரீ பாபாபாபா-மாமாமாமா ரீகா-ரிகமா-மாமா (சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்க.) காதல்,காதல்,காதல், காதல் போயிற் காதல் போயிற் சாதல்,சாதல்,சாதல். (காதல்) 1. அருளே யாநல் லொளியே; ஒளிபோ மாயின்,ஒளிபோ மாயின். இருளே,இருளே,இருளே, (காதல்) 2. இன்பம்,இன்பம்,இன்பம்; இன்பத் திற்கோ ரெல்லை காணில், துன்பம்,துன்பம்,துன்பம். (காதல்) 3. நாதம்,நாதம்,நாதம்; நாதத் தேயோர் நலிவுண் டாயின், சேதம்,சேதம்,சேதம். (காதல்) 4. தாளம்,தாளம்,தாளம்; தாளத் திற்கோர் தடையுண் டாயின், கூளம்,கூளம்,கூளம். (காதல்) 5. பண்ணே,பண்ணே,பண்ணே; பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின் மண்ணே,மண்ணே,மண்ணே. (காதல்) 6. புகழே,புகழே,புகழே; புகழுக் கேயோர் புரையுண்டாயின், இகழே,இகழே,இகழே. (காதல்) 7. உறுதி,உறுதி,உறுதி; உறுதிக் கேயோர் உடையுண் டாயின், இறுதி,இறுதி,இறுதி. (காதல்) 8. கூடல்,கூடல்,கூடல்; கூடிப் பின்னே குமரர் போயின், வாடல்,வாடல்,வாடல். (காதல்) 9. குழலே,குழலே,குழலே; குழலிற் கீறல் கூடுங் காலை. விழலே,விழலே,விழலே. (காதல்) 3. குயிலின் காதற் கதை மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும் ஏக மவுன மியன்றதுகாண்: மற்றதிலோர் இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால், பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால் மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ் 5 ஒற்றைக் குயில் சோக முற்றுத் தலைகுனிந்து வாடுவது கண்டேன்.மரத்தருகே போய்நின்று பேடே! திரவியமே! பேரின்பப் பாட்டுடையாய்! ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்! பீழையுனக் கெய்தியதென் பேசாய்! எனக்கேட்டேன். 10 மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர் மாயச்சொல் கூற மனந்தீயுற நின்றேன் காதலை வேண்டிக் கரைகின்றேன்,இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்என்றதுவால் வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய் 15 ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய் காதலர்நீ யெய்துலாக் காரணந்தான் யாதென்றேன். வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே கானக் குயிலி கதைசொல்ல லாயிற்று:- மானக் குலைவும் வருத்தமுநான் பார்க்காமல், 20 உண்ம முழுதும் உரைத்திடவேன் மேற்குலத்தீர்! பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன். அறிவும் வடிவுங் குறுகி,அவனியிலே றியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும், தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ, 25 யாவர் மொழியு எளிதுணரும் பேறுபெற்றேன்; மானுடர் நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்; கானப் பறவை கலகலெனும் ஓசையிலும், காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும், ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும், 30 நீலப் பெருங்கடலேந் நேரமுமே தானிசைக்கும் ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும், மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும், ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்,நெல்லிடிக்குங் 35 கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்கதிடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும். 40 வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர் வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன். நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப் 45 பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னையோ? நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர் மஞ்சரே;என்றன் மனநிகழ்ச்சி காணீரோ? காதலை வேண்டிக் கரைகின்றேன்,இல்லையெனில், சாதலை வேண்டித் தவிக்கின்றேன்என்றதுவே, 50 சின்னக் குயிலதனைச்செப்பியவப் போழ்தினிலே, என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர, உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப் பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்; காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல் 55 சாதலோ சாதல்எனச் சாற்றுமொரு பல்லவியென் உள்ளமாம் வீணைதனில்,உள்ளவீ டத்தனையும் விள்ள ஒலிப்பதலால் வேறோர் ஒலியில்லை, சித்தம் மயங்கித் திகைப்பொடுநான் நின்றிடவும், அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச் 60 சோலைக் கிளியிலெலாந் தோன்றி யொலித்தனவால், நீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்; காதல் வழிதான் கரடுமுரடாமென்பர்; சோதித் திருவிழியீர்! துன்பக் கடலினிலே நல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்; 65 அல்லற நும்மோ டளவளாய் நான்பெறுமிவ் வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே; அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில் வந்தருளல் வேண்டும்.மறவாதீர்,மேற்குலத்தீர்! சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல், 70 ஆவி தரியேன்.அறிந்திடுவீர் நான்காநாள், பாவியிந்த நான்குநாள் பத்துயுகமாக் கழிப்பேன்; சென்று வருவீர்,என் சிந்தைகொடு போகினிறீர், சென்று வருவீர்எனத் தேறாப் பெருந்துயரங் கொண்டு சிறுகுயிலுங்கூறி மறைந்ததுகாண். 75 4. காதலோ காதல் கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன், எண்ணுதலுஞ் செய்யேன்,இருபது பேய் கொண்ட வன்போல் கண்ணும் முகமும் களியேறிக் காமனார் அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க, கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் 5 ஒன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற, சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி, நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ? தறிபடுமோ?யார் படுவார் நாளொன்று போயினது நானு மெனதுயிரும். 10 நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும், மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும், சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா மிஞ்சி நின்றோம்.ஆங்கு,மறுநாள் விடிந்தவுடன், (வஞ்சனைநான் கூறவில்லை)மன்மதனார் விந்தையால், 15 புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல், வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே நீலிதனைக் காண வந்தேன்,நீண்ட வழியினிலே நின்றபொருள் கண்ட நினைவில்லை.சோலையிடைச் 20 சென்றுநான் பார்க்கையிலே,செஞ்ஞாயிற் றொண்கதிரால் பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின் இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெலாம் வேறெங்கோ போயிருப்ப,வெம்மைக் கொடுங்காதல் மீறவெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் 25 காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன் கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன், 5. குயிலும் குரங்கும் மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை. சுற்றுமுற்றும் பார்த்தும் துடித்து வருகையிலே- வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே! நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே! - கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்! 5 பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ! காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ! மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ! மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் 10 விம்மிப் பரிந்துசொலும் வெந்துய்ச்சொல் கொண்டதுவாய், அம்மவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன், துதேது?நன்றேது?செய்கைந் தௌவிவேது? அந்தக் கணமே அதையுங் குரங்கைனையும் 15 சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன். கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும், ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே, 20 பேடைக் குயிலிதனைப் பேசியது;-வானரரே! ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான் எப்பிறப்புக் கொண்டாலும்,ஏந்தலே! நின்னழகைத் தப்புமோ?மையல் தடுக்குந் தரமாமோ? மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே, 25 எண்ணிநின்றார் தம்மை;எனிலொருகால்,ஊர்வகுத்தல் கோயில் அரசு,குடிவகுப்புப் போன் றசில வாயிலிலே,அந்த மதிர் உயர்வெனலாம். மேனி யழனினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, 30 வானரர்தஞ் சாதிக்கு மாந்தர்நிக ராவாரோ? ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும், பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும், மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் 35 ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும் ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே கூடிக் குடித்துக் குதித்தாலும்,கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும், வேறெத்தைச் செய்தாலும்,வேகமுறப் பாய்வதிலே 40 வான ரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே? ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ? பாகையிலே வாலிருக்கப் பாத்ததுண்டு,கந்தைபோல்; வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? 45 சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்- வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ? வானரர் தம்டுள்ளே மணிபோல் உமையடைந்தேன். பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும், நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால் 50 தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே ஆவலினாற் பாடுகின்றேன்,ஆரியரே கேட்டருள்வீர், (வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை யானறிந்து கொண்டுவிட்டேன்,யாதோ ஒருதிறத்தால்) நீசக் குயிலும் நெருப்புச் சுவைக்குரலில் 55 ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:- காதல்,காதல்,காதல்; காதல் போயிற் காதல் போயிற் சாதல்,சாதல்,சாதல் முதலியன (குயிலின் பாட்டு) காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும், பாட்டின் சவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார். வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே, 60 தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும் ஆவி யுருகுதடி,ஆஹாஹா! என்பதுவும், கண்ணைச் சிமிட்டுவதும்,காலாலுங் கையாலும் மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும், ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! 65 பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன், காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்; காதலினால் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய், எப்பொழுதும் நின்னை இனிப்விரிவ தாற்றுகிலேன், இப்பொழுதே நின்னைமுத்த மிட்டுக் களியுறுவேன் 70 என்றுபல பேசுவதும் என்னுயிரேப் புண்செயவே, கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன் கைவாளை யாங்கே:கனவோ?நனவுகொலோ? தெய்வ வலியோ?சிறுகுரங்கென் வாளுக்குத் தப்பி,முகஞ்சுளித்துத் தாவியொளித்திடவும், 75 ஒப்பிலா மாயத் தொருகயிலுந் தான்மறைய, சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க மேலைச் செயலறியா வெள்ள றிவிற் பேதையேன் தட்டித் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை. 80 6. இருளும் ஒளியும் வான நடுவினிலே மாட்சியுற ஞாயிறுதான் மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான். மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற, உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க, நாணுந் துயரும் நலிவுறுத்த நான்மீண்டு 5 பேணும்னை வந்தேன்;பிரக்கினைபோல் வீழ்ந்துவிட்டேன், மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்; நாலுபுறமுமெனை நண்பர்வந்து சூழ்ந்துநின்றார். ஏனடா மூர்ச்சையுற்றாய்?எங்குசென்றாய்?ஏதுசெய்தாய்? வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச் 10 சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி நின்றதென்னே?என்று நெரித்துவிட்டார் கேள்விகளை. இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல் என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம். நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன்இவ் 15 வேளை எனைத்தனியே விட்டகல்வீர்என்றுரைத்தேன். நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார் நைந்து நின்றதாயார் தாம் உண்பதற்குப் பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார் சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்; முற்றும் மறந்து முழுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன். 20 பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும், மண்டு துயரெனது மார்பையெலாங் கவ்வுவதே! ஓடித் தவறி உடைவனவாம் சொற்களெலாம்; கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம் நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் 25 பேசு மிடைப்பொருனிள் கின்னே மதிபோக்கிக் கற்பனையும் வர்ணனையுங் காட்டிக் கதைவளர்க்கும் விற்பனர்தஞ் செய்கை விதமுந் தெரிகிலன்யான் மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம். காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன். 30 தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ? கண்ணையினி தென்றுரைப்பார்;கண்ணுக்குக் கண்ணாகி 35 விண்ணை அளக்குமொளி மேம்படுமோர் இன்பமன்றோ? மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும் மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல் நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப்புளதோ? புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி 40 மண்ணைத் தெளிவாக்கி,நீரில் மலாச்சிதந்து விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக் காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன். நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும், இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன், 45 துன்பக் கதையின் தொடருரைப்பேன்,கேளீரோ! 7. குயிலும் மாடும் காலைத் துயிலெழுந்து,காலிரண்டு முன்போலே சோலைக் கிழுத்திட, நான் சொந்தவுணர் வில்லாமே சோலையினில் வந்தநின்று, சுற்றுமுற்றுந் தேடினேன், கோலப் பறவைகளின் கூட்டமெல்லாங் காணவில்லை. மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே 5 நீலக் குயிலிருந்து நீண்டகதை சொல்லுவதும, கீழே யிருந்தோர் கிழக்காளை மாடதனை ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும், கண்டேன்,வெகுண்டேன்,கலக்கமுற்றேன்;நெஞ்சிலனல் கொண்டேன்,குமைந்தேன்,குமுறினேன்,மெய்வெயர்த்தேன்; 10 கொல்லவாள் வீசல் குறித்தேன். இப் பொய்ப்பறவை சொல்லுமொழி கேட்டதன்பின் கொல்லுதலே சூழ்ச்சியென முன்போல் மறைந்துநின்றேன்;மோகப் பழங்கதையைப் பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும் கொண்டு,குயிலாங்கே கூறுவதாம்;நந்தியே! 15 பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே! காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே! பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுடோ? மானுடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர் தமை மேனியுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார். 20 காளயர்தம் முள்ளே கனமிகுந்தீர், ஆரியரே! நீள முகமும்,நிமிர்ந்திருக்குங் கொம்புகளும், பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும், மிஞ்சுப் புறச்சுமையும்,வீரத் திருவாலும், வானத் திடிபோல மாவென் றுறுமுவதும், 25 ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால் வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும்,பல் காலம்நான் கண்டு கடுமோக மாய்விட்டேன். பார வடிவும் பயிலு முடல்வலியும் தீர நடையும் சிறப்புமே இல்லாத 30 சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன். அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு, மூட மனிதர் முடைவயிற்றுக் கோருணவாம் சின்னக் குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி 35 என்னபயன் பெற்றேன்? எனைப்போலோர் பாவியுண்டோ? சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன்வயிற்றில் போற்றுமொளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ? நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும் ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே 40 சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ? வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை. மூட மதியாலோ, முன்னைத் தவத்தாலோ, ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன்! மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் 45 கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும் தெய்வமென நீருதவி செய்தபின்னர்,மேனிவிடாய் எய்தி யிருக்கு மிடையினிலே,பாவியேன் வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்; வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன், 50 வாலிலடி பட்டு மனமகிழ்வேன்,மாவென்றே ஒலிடு நும் பேரொலியோ டொன்று படக் கத்துவேன் மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன், கானிடையே சுற்றிக் கழனியெல்லாம் மேய்ந்து,நீர் மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில் 55 பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன். காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே! தாளைச் சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர். காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன். 60 ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல்கொண்டால், தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ? ஒஒதத குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம். இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாணமுண்டோ? தேவர் முன்னே அன்புரைக்கச் சிந்தை வெட்கங் கொள்வதுண்டோ? 65 காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்? ஆசைதான் வெட்கம் அறியுமோ?என்றுபல நேசவுரை கூறி நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே. 70 காதல்,காதல்,காதல்; காதல் போயிற் காதல் போயிற், சாதல்,சாதல்,சாதல் முதலியன (குயிலின் பாட்டு) பாட்டுமுடியும்வரை பாரறியேன்,விண்ணறியேன்; கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்! தன்னை யறியேன்,தனைப்போல் எருதறியேன்; பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே கண்டேன்,படைப்புக் கடவுளே! நான்முகனே! 75 பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார். நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டிவைத்தாய் நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய், காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி தோறுவித்தாய்,நின்றன்,தொழில்வலிமை யாரறிவார் 80 உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்; எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் 85 பொல்லாப் பிரமாஇபுகுத்தி விட்டாய்,அம்மாவோ! காலம் படைத்தாய்,கடப்பதிலாத் திக்கமைத்தாய்; ஞாலம் பலவினிலும் நாடோறுந் தாம்பிறந்து தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்; சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான் முகனே! 90 சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்! தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்? ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே, கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா! காட்டுநெடு வானம்,கடலெல்லாம் விந்தையெனில் 95 பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா! பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில் நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ? ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே, ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ? 100 செத்தைக் குயில்புரிந்த தெய்விகத்தீம் பாட்டெனுமோர் வித்தை முடிந்தவுடன்,மீட்டுமறி வெய்திநான் கையினில் வாளெடுத்துக் காளையின்மேல் வீசினேன் மெய்யிற் படுமுன் விரைந்ததுதான் ஓடிவிட, வன்னக் குயில் மறையப் பறவையெலாம் 105 முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க, நாணமில்லாக் காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை வீணிலே,தேடியபின்,வீடுவந்து சேர்ந்துவிட்டேன். எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை; கண்ணிலே நீர்ததும்பக் கானக் குயிலெனக்கே 110 காதற் கதையுரைத்து நெஞ்சங் கரைத்ததையும், பேதைநா னங்கு பெரியமயல் கொண்டதையும், இன்பக் கதையின் இடையே தடையாகப் புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும் ஒன்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல் 115 தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும், சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும், இத்தனைகோ லத்தினுக்கும் யான்வேட்கை தீராமல் பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும்- 120 எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை; கண்ணிரெண்டும் மூடக் கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன். 8. நான்காம் நாள் நான்காம்நாள் எனனை நயவஞ் சனைபுரிந்து வான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த பொய்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள் மெய்மை யறிவிழந்தேன்,வீட்டிலே மாடமிசை சித்தந் திகைப்புற்றோர் செய்கை யறியாமல். 5 எத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச்சியெலாம் மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே, காட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால் வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும் யானதனைக் கண்டே,இது நமது பொய்க்குயிலோ? 10 என்று திகைத்தேன்: இருந்தொலைக்கே நின்றதனால் நன்று வடிவம் துவங்கவில்லை; நாடுமனம் ஆங்கதனை விட்டுப் பிரிவதற்கு மாகவில்லை. ஓங்குந் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான் வீதியிலே வந்துநின்றேன்.மேற்றிசையில் அவ்வுருவம் 15 சோதிக் கடலிலே தோன்றுவரும் புள்ளியெனக் காணுதலும்,சற்றே கடுகி யருகேபோய், நாணமிலாப் பொய்க்குயிலோ என்பதனை நன்கறிவோம் என்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால். நின்ற பறவையுந்தான் நேராகப் போயினதால், 20 யான்நின்றால் தான்நிற்கும் சென்றால் தான்செல்லும்; மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது வானி லதுதான் வழிகாட்டிச் சென்றிடவும். யான்நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்புநாம் கூறியுள்ள மாஞ்சோலை தன்னைக் குறுகியந்த 25 ஊரிலாப் புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால். மாஞ்சோலைக் குள்ளே மதியிலிநான் சென்றாங்கே ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல் சின்னக் கருங்குயிலி செவ்வனே வீற்றிருந்து, பொன்னங் குழலின் புதிய ஒலிதனிலே 30 பண்டைப் பொய்க்காதற் பழம்பாட்டைத் தான்பாடிக் கொண்டிருத்தல் கண்டேன்.குமைந்தேன்;எதிரேபோய். நீசக் குயிலே,நிலையறியாப் பொய்மையே, ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும் எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை 35 நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை என்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன், கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன்;மறுபடியும் நெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன் ஈங்கிதற்குள், வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக் 40 கண்ணிலே பொய்ந்நீர் கடகடெனத் தானூற்றப் பண்ணிசைபோ லின்குரலாற் பாவியது கூறிடுமால்; ஐயனே,என்னுயிரின் ஆசையே ஏழையெனை வையமிசை வைக்கத் திருவுளமோ? மற்றெனையே கொன்று விடச் சித்தமோ?கூறீர் ஒருமொழியில்! 45 அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது, ஞாயிறுதான் வெம்மைசெயில்,நாண்மலர்க்கு வாழ்வுளதோ? தாயிருந்து கொன்றால்,சரண்மதலைக் கொன்றுளதோ? தேவர் சினந்துவிட்டால்,சிற்றுயிர்கள் என்னாகும்? ஆவற் பொருளே! அரசே! என் ஆரியரே! 50 சிந்தையில் நீர் என்மேற்சினங்கொண்டால் மாய்ந்திடுவேன் வெந்தழலில் வீழ்வேன்,விலங்குகளின் வாய்ப்படுவேன். குற்றம் நீர் என்மேற் கொணர்ந்ததனை யானறிவேன். குற்றநுமைக் கூறுகிலேன் குற்றமிலேன் யானம்ம! புன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான்கண்டு 55 மென்மையுறக் காதல் விளையாடினேன் என்றீர்; என்சொல்கேன்! எங்ஙனுய்வேன்! ஏதுசெய்கேன்,ஐயனே! நின்சொல் மறக்க நெறியில்லை;ஆயிடினும் என்மேல் பிழையில்லை;யாரிதனை நம்பிடுவார்? நின்மேல் சுமைமுழுதும் நேராகப் போட்டுவிட்டேன், 60 வெவ்விதியே! நீ என்னை மேம்பாடுறச் செய்து செவ்விதினிங் கென்னை என்றன் வேந்தனொடு சேர்த்திடினும், அல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட,நான் அக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும், 65 எக்கதிக்கும் ஆளாவேன்;என்செய்கேன்?வெவ்விதியே! 9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல் தேவனே! என்னருமைச் செல்வமே! என்னுயிரே! போவதன் முன்னொன்று புகல்வதனைக் கேட்டருள்வீர்! முன்னம் ஒருநாள் முடிநீள் பொதியமலை தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில் மாங்கிளையி லேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன். 5 ஆங்குவந்தார் ஓர்முனிவர்,ஆரோ பெரியரென்று பாதத்தில் வீழ்நது பரவினேன்; ஐயரென ஆதரித்து வாழ்த்தி யருளினார்,மற்றதன்பின், வேத முனிவரே,மேதினியில் கீழ்ப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன், சாதிக் குயில்களைப்போல் 10 இல்லாமல்,என்தன் இயற்கை பிரிவாகி, எல்லார் மொழியும் எனக்கு விளங்குவதேன்? மானுடர்போற் சித்தநிலை வாய்த்திருக்குஞ் செய்தியேன்? யானுணரச் சொல்வீர் என வணங்கிக் கேட்கையிலே கூறுகின்றார் ஐயர்;குயிலே கேள். முற்பிறப்பில் 15 வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன் வீர முருகனெனும் வேடன் மகளாகச் சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர் மலையில் வந்து பிறந்து வளர்ந்தாய் நீ, நல்லிளமை முந்து மழகினிலே மூன்றுதமிழ் நாட்டில் 20 யாரும் நினக்கோர் மணையில்லை என்றிடவே சீருயர நின்றாய்;செழுங்கான வேடரிலுன் மாமன் மகனொருவன் மாடனெனும் பேர்கொண்டான்; காமன் கணைக்கிரையாய்,நின்னழகைக் கண்டுருகி, நின்னை மணக்க நெடுநாள் விரும்பி,அவன் 25 பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு நித்தம் கொடுத்து,நினைவெல்லாம் நீயாகச் சித்தம் வருந்துகையில்,தேமொழியே,நீ யவனை மாலையிட வாக்களித்தாய்;மையலினா லில்லை;அவன் சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய்; 30 ஆயிடையே,நின்றன் அழகின் பெருங்கீர்த்தி தேயமெங்குந் தான்பரவத் தேன்மலையின் சார்பினிலோர் வேடர்கோன்,செல்வமும் நல் வீ ரமுமே தானுடையான்; நாடனைத்தும அஞ்சி நடுஞ்குஞ் செயலுடையான், மொட்டை புலியனுந்தன் மூத்த மகனான 35 நெட்டைக் குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி, நின்னை மணம்புரிய நிச்சயித்து,நின்னப்பன் தன்னை யணுகி,நின்னோர்தையலையென் பிள்ளைக்குக் கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன் என்னிடலும், எண்ணாப் பெருமகிழ்ச்சி எய்தியே,நின்தந்தை 40 ஆங்கே உடம்பட்டான்;ஆறிரண்டு நாட்களிலே பாங்கா மணம்புரியத் தாமுறுதி பண்ணிவிட்டார். பன்னிரண்டு நாட்களிலே பாவையுனைத் தேன்மலையில் அன்னியன்கொண் டேகிடுவான் என்னும் அதுகேட்டு, மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னை வந்து 45 நாடிச் சினத்துடனே நானா மொழிகூற, நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால், காயுஞ் சினந்தவிர்ப்பாய் மாடா,கடுமையினால் நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும், கட்டுப் படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும் 50 மாதமொரு மூன்றில் மருமம் சிலசெய்து பேதம் விளைவித்துப் பின்னங்கே வந்திடுவேன்; தாலிதனை மீட்டுவர் தங்களிட மேகொடுத்து நாலிரண்டு மாதத்தே நாயகான நின்றனையே பெற்றிடுவேன்;நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ? 55 மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா என்றுரைத்தாய்; காதலினா லில்லை கருணையினால் இஃதுரைத்தாய் (மாதரசாய்,வேடன் மகளான முற்பிறப்பில், சின்னக் குயிலியென்று செப்பிடுவார் நின்நாமம்) பின்னர்ச் சிலதினங்கள் சென்றதன்பின்,பெண்குயிலி, 60 நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே மின்னற் கொடிகள் விளையாடு தல்போலே காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே, வேட்டிக் கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான் தன்னருமை மைந்தன்;தனியே,துணைபிரிந்து, 65 மன்னவன்றன் மைந்தனொரு மானைத் தொடர்ந்துவரத் தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை வாழியவன் கண்டுவிட்டான்,மையல் கரைகடந்து நின்னைத் தனக்காக நிச்சயித்தான்,மாதுநீ மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய். 70 நின்னையவன் நோக்கினான்;நீயவனை நோக்கி நின்றாய்; அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர், தோழியரும் வேத்ன் சுடர்க்கோலந் தான்கண்டே ஆழியரசன் அரும்புதல்வன் போலு மென்றே அஞ்சி மறைந்து விட்டார்.ஆங்கவனும் நின்னிடத்தே. 75 வஞ்சித் தலைவன் மகன்யான்எனவுரைத்து, வேடர் தவமகளே. விந்தை யழகுடையாய்! ஆடவனாத் தோன்றி யதன்பயனை இன்று பெற்றேன்; கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன்என்றிசைக்க, மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய். 80 ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்; கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்; அன்னவரைச் சேர்ந்தேநீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர், மன்னவரை வேண்டேன் மலைக்குறவர் தம்மகள்யான்; 85 கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ? வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்? பத்தினியா வாழ்வதெல்லால் பார்வேந்தர் தாமெனினும் நத்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை, பொன்னடியைப் போற்றுகின்றேன்,போய் வருவீர் தோழியரும் 90 என்னைவிட்டுப் போயினரே,என்செய்கேன்? என்று நீ நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே,வேந்தன் மகன் விஞ்சிநினிறன் காதல் விழீக்குறிப்பி னாலறிந்தே, பக்கத்தில் வந்து பளிச்சென் றுனது கன்னஞ் செக்கச் சிவக்க முத்தமிட்டான்,சினங்காட்டி 95 நீ விலகிச் சென்றாய்-நெறியேது காமியர்க்கே?- தாவி நின்னைவந்த தழுவினான் மார்பிறுக, நின்னையன்றி ஓர்பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே பொன்னே,ஒளிர்மணியே புத்தமுதே,இன்பமே, நீயே மனையாட்டி,நீயே அரசாணி, 100 நீயே துணைஎனக்கு,நீயே குலதெய்வம். நின்னையன்றிப் பெண்ணை நினைப்பேனோ? வீணிலே என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம்? இப்பொழுதே நின்மனைக்குச் சென்றிடுவோம்;நின்வீட்டி லுள்ளோர் பால் என்மனத்தைச் சொல்வேன்,எனதுநிலை யுரைப்பேன். 105 வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன் மாதரசே! என்று வலக்கைதட்டி வாக்களித்தான். பூரிப்புக் கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய். வாரிப் பெருந்திரை போல் வந்த மகிழ்ச்சியிலே நாணந் தவிர்த்தாய்;நனவே தவிர்ந்தவளாய், 110 காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவினிலே சேர்ந்துவிட்டாய்,மன்னன்றன் திண்டோளை நீயுவகை ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச் சிந்தை கொண்டாய்,வேந்தன்மகன்,தேனில் விழும் வண்டினைப்போல். விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல், 115 ஆவலுடன் நின் யறத்தழுவி,ஆங்குனது கோவை யிதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே; சற்றுமுன்னே ஊரினின்று தான்வந் திறங்கியவன், மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டுக் குதூகலமாய் 120 ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்திக் காணவந்தோன்,- நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்துவிட்டான். பட்டப் பகலிலே! பாவிமகள் செய்தியைப் பார்! கண்ணாலங் கூடஇன்னுங் கட்டி முடியவில்லை. மண்ணாக்கி விட்டாள்! என் மானந்தொலைத்து விட்டாள்! 125 நிச்சிய தாம்பூலம்நிலையா நடந்திருக்கப் பிச்சைச் சிறுக்கிசெய்த பேதகத்தைப் பார்த்தாயோ? என்று மனதில எழுகின்ற தீயுடனே நின்று கலங்கினான் நெட்டைக் குரங்கனங்கே மாப்பிளைதான் ஊருக்கு வந்ததையும்,பெண்குயிலி 130 தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று பாடி விளையாடும் பண் புகேட் டேகுரங்கன் ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம் யாரோ உரைத்துவிட்டார்;ஈரிரண்டு பாய்ச்சலிலே நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே 135 மாடனங்கு வந்துநின்றான்.மற்றிதனைத் தேன்மலையின் வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பாக்கவில்லை நெடைக் குரங்கன்ங்கு நீண்ட மரம்போலே எட்டி நிற்குஞ் செய்தி இவன் பார்க்க நேரமில்லை. அன்னியனைப் பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று 140 தன்னையே இவ்விருவர் தாங்கண்டார்,வேறறியார், மாடனதைத் தான்கண்டான்,மற்றவனும் அங்ஙனமே மாமன் வெறிகொண்டான் மற்றவனும் அவ்வாறே காவலன் றன் மைந்தனுமக் கன்னிகையுந் தானுமங்கு தேவசுகங் கொண்டு விழியே திறக்கவில்லை. 145 ஆவிக் கலப்பின் அழுத சுகந்தனிலே மேவியங்கு மூடீ யிருந்த விழிநான்கு ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு மாடனுத்ன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே 150 ஓடி வந்தான்; நெட்டைக் குரங்கனும் வாளோங்கி வந்தான் வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே சட்டெனவே மன்னவனும் தான் திரும்பி வாளுருவி வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான்; வீழ்ந்தவர் தாம் பேச்சிழந்தே அங்கு பிணமாகக் கிடந்துவிட்டார். 155 மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்து விட்டான், பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில் வாரி யெடுத்துவைத்து வாய்ப்புலம்பக் கண்ணிரண்டும் மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே கண்ணை விழித்துனது காவலனும் கூறுகின்றான்; 160 பெண்ணே,இனிநான் பிழைத்திடேன்;சில்கணத்தே ஆவி துறப்பேன்,அழுதோர் பயனில்லை. சாவிலே துன்பமில்லை;தையலே,இன்னமும் நாம் பூமியிலே தோன்றிடுவம்,பொன்னே,நினைக்கண்டு, காமுறுவேன்;நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்; 165 இன்னும் பிறவியுண்டு;மாதரசே இன்பமுண்டு, நின்னுடனே வாழ்வனினி நேரும் பிறப்பினிலே என்று சொல்லிக் கண்மூடி,இன்பமுறு புன்னகைதான் நின்று முகத்தே நிலவுதர,மாண்டனன் காண். மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது 170 பீடையுறு புள்வடிவம் பேதையுனக் கெய்தியது, வாழிநின்றன் மன்னவனும் தொண்டை வளநாட்டில் ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில் மானிடனாத் தோன்றி வளருகின்றான் நின்னையொரு கானிடத்தே காண்பான்.கனிந்துநீ பாடும்நல்ல 175 பாட்டினைத்தான் கேட்பான்.பழவினையின் கட்டினால் மீட்டு நின்மேற் காதல்கொள்வான் மென்குயிலே! என்றந்தத் தென்பொதியை மாமுனிவர் செப்பினார்.சாமீ, குயிலுருவங் கொண்டேன் யான்,மோமானோ மேன்மை பயிலு மனிதவுருப் பற்றிநின்றான்,எம்முள்ளே 180 காதலிசைந் தாலுங் கடிமணந்தான் கூடாதாம். சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல் பொய்யாய் முடியாதோ?என்றிசைத்தேன் புன்னகையில் ஐயர் உரைப்பார்-அடி பேதாய்,இப்பிறவி தன்னிலும் நீ விந்தகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக் 185 கன்னியெனத் தான் பிறந்தாய் கர்ம வசத்தினால், மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக் காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார் நின்னையங்கே.இப்பிறப்பில் நீயும் பழமைபோல் மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும் 190 நின்னைக் குயிலாக்கி நீ செல்லுந் திக்கிலெலாம் நின்னுடனே சுற்றுகின்றார்.நீயிதனைத் தேர்கிலையோ? என்றார் விதியே! இறந்தவர்தாம் வாழ்வாரை நின்று துயருறுத்தல் நீதியோ பேய்களெனைப் பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி 195 வாதைப் படுத்தி வருமாயில்,யாதெனது காதலனைக் காணுங்கால்,காய்சினத்தால் ஏதேனும் தீதிழைததால் என்செய்வேன்? தேவரே,மற்றிதற்கோர் மாற்றிலையோ?என்று மறுகி நான் கேட்கையிலே, தேற்றமுறு மாமுனிவர் செப்புகின்றார்:-பெண்குயிலே! 200 தொண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன்மகன் கண்டுனது பாட்டில் கருத்திளகிக் காதல்கொண்டு நேசம் மிகுதியுற்று நிற்கையிலே,பேயிரண்டும் மோசம் மிகுந்த முழுமாயச் செய்கை பல செய்துபல பொய்த்தோற்றங் காட்டித் திறல் வேந்தன் 205 ஐயமுறச் செய்துவிடும்,ஆங்கவனும் நின்றனையே வஞ்சகியென் றெண்ணி மதிமருண்டு நின்மீது வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான். பிந்தி விளைவதெல்லாம் பின்னேநீ கண்டு கொள்வாய், சந்தி ஜபம் செய்யுஞ் சமயமாய் விட்டதென்றே 210 காற்றில் மறைந்து சென்றார் மாமுனிவர் காதலரே! மாற்றி உரைக்கவில்லை.மாமுனிவர் சொன்னதெல்லாம் அப்படியே சொல்லிவிட்டேன் ஐயோ! திருவுளத்தில் எப்படிநீர் கொள்வீரோ யானறியேன்.ஆரியரே! 215 காத லருள்புரிவீர் காதலில்லை யென்றிடிலோர், சாத லருளித் தமது கையால் கொன்றிடுவீர்! என்று குயிலும் எனதுகையில் வீழ்ந்ததுகாண், கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ பெண்ணென்றால் பேயு மிரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி மாயமிழைத் தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ? 220 காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ? மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ? அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு முன்புவைத்து நோக்கியபின் மூண்டுவரும் இன்பவெறி கொண்டதனை முத்தமிட்டேன்.கோகிலத்தைக் காணவில்லை. 225 விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா! ஆசைக் கடலின் அமுதடா! அற்புதத்தின் தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா! பெண்ணொருத்தி அங்குநின்றாள்;பேருவகை கொண்டுதான் கண்ணெடுக்கா தென்னைக்கணப்பொழுது நோக்கினாள், 230 சற்றே தலைகுனிந்தாள் சாமீ! இவளழகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும் ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ? மீள விழியில் மிதந்த கவிதையெலாம் சொல்லில் அகப்படுமோ? தூயசுடர் முத்தையொப்பாம் 235 பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினை யான் என்றும் மறத்தல் இயலுமோ? பாரின்மிசை நின்றதொரு மின்கொடி போல் நேர்ந்தமணிப் பெண்ணரசின் மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும் தேனி லினியாள் திருத்த நிலையினையும் 240 மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை கற்றவர்க்குச் சொல்வேன்,கவிதைக் கனிபிழிந்த சாற்றினிலே,பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான் கலந்து, காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் 245 மாதவளின் மேனி வகுத்தான் பிரமனெப்பேன். பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்த பின்னே, 250 பக்கத் திருந்தமணிப் பாவையுடன் சோலையெலாம் ஒக்க மறைந்திடலும்,ஓஹே! எனக்கதறி வீழ்ந்தேன்.பிறகு விழிதிறந்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்மைச் சுவடி,எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம்,பழம்பாய்-வரிசையெல்லாம் 255 ஒத்திருக்கநாம் வீட்டில் உள்ளோம்எனவுணர்ந்தேன். சோலை,குயில்,காதல்,சொன்னகதை யத்தனையும், மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன். ஆன்ற தமிழ்ப் புலர்,கற்பனையே யானாலும், 260 வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறிரோ? | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
புதிய பாடல்கள்
உயிர் பெற்ற தமிழர் பாட்டு
பல்லவி
இனிஒரு தொல்லையும் இல்லை-பிரி வில்லை,குறையும் கவலையும் இல்லை (இனி) ஜாதி மனிதரில் ஆயிரம் ஜாதி-என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை; கனிதரும் மாமரம் ஒன்று-அதில் காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு. 1 பூவில் உதிர்வதும் உண்டு-பிஞ்சைப் பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு நாவிற் கினியதைத் தின்பார்-அதில் நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்வார். 2 ஒன்றுண்டு மானிட சாதி-பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்; இன்று படுத்தது நாளை-உயர்ந் தேற்றம் அடையும் உயர்ந்த திழியும். 3 நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்-இந்த நாட்டினில் இல்லை;குணம் நல்லதாயின், எந்தக் குலத்தின ரேனும்-உணர் வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம். 4 இன்பத்திற்கு வழி ஐந்து புலனை அடக்கி-அரசு ஆண்டு மதியைப் பழகித் தெளிந்து, நொந்து சலிக்கும் மனதை-மதி நோக்கத்திற் செல்ல விடும்பகை கண்டோம். 5 புராணங்கள் உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம் உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது உள்ள மறைகள் கதையெனக் கண்டோம். 6 கடலினைத் தாவும் குரவும்-வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும், வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும், 7 நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த நாகர் உலகிலோர் பாம்பின் மகளை விதியுற வேமணம் செய்த-திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம். 8 ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில் உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும் நன்று புராணங்கள் செய்தார்-அதில் நல்ல கவிதை பலபல தந்தார். 9 கவிதை மிகநல்ல தேனும்-அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்; புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம். 10 ஸ்மிருதிகள் பின்னும்(ஸ்)மிருதிகள் செய்தார்-அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை; மன்னும் இயல்பின வல்ல-இவை மாறிப் பயிலும் இயல்பின ஆகும். 11 காலத்திற் கேற்ற வகைகள்-அவ்வக் காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞால முழுமைக்கும் ஒன்றாய்.எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை 12 சூத்திர னுக்கொரு நீதி-தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி; சாத்திரம் சொல்லிடு மாயின்-அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம். 13 மேற்குலத்தார் எவர்? வையகம் காப்பவ ரேனும்-சிறு வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும், பொய்யக லத்தொழில் செய்தே-பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர். 14 தவமும் யோகமும் உற்றவர் நாட்டவர் ஊரார் -இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் நற்றவம் ஆவது கண்டோம்-இதில் நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை. 15 பக்கத் திருப்பவர் துன்பம்-தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி; ஒக்கத் திருந்தி உலகோர்-நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி. 16 யோகம்,யாகம்,ஞானம் ஊருக் குழைத்திடல் யோகம்;-நலம் ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம் போருக்கு நின்றிடும் போதும்-உளம் பொங்கல் இல்லாத அமைதிமெய்ஞ் ஞானம். 17 பரம்பொருள் எல்லையில் லாத உலகில்-இருந் தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம் எல்லையில் லாதன வாகும்-இவை யாவையு மாயிவற் றுள்ளுயி ராகி, 18 எல்லையில் லாப்பொருள் ஒன்று-தான் இயல்பறி வாகி இருப்பதுண் டென்றே, சொல்லுவர் உண்மை தெளிந்தார்-இதைத் தூவெளி யென்று தொழுவர் பெரியோர். 19 நீயும் அதனுடைத் தோற்றம்-இந்த நீல நிறங்கொண்ட வானமும் ஆங்கே, ஓயுதல் இன்றிச் சுழலும்-ஒளி ஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே, 20 சக்திகள் யாவும் அதுவே-பல் சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே நித்திய மாமிவ் வுலகில்-கடல் நீரில் சிறுதுளி போலும்இப் பூமி, 21 இன்பமும் ஓர்கணத் தோற்றம்-இங்கு இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்; துன்பமும் ஓர்கணத் தோற்றம்-இங்கு தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம். 22 முக்தி தோற்றி அழிவது வாழ்க்கை-இதில் துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும் மூன்றில் எதுவரு மேனும்-களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி. (இனி) 23 இளசை ஒருபா ஒருபஃது காப்பு நித்தரெனும் தென்னிளசை நின்மலனார் தாம்பயந்த அத்திமுகத் தெங்கோ னடியிணையே-சித்திதரும் என்தமிழி லேது மிழுக்கிலா மேயஃது நன்றாகு வென்றருளும் நன்கு. நூல் தேனிருந்த சோலைசூழ் தென்னிளசை நன்னகரின் மானிருந்த கையன் மலரடியே-வானிற் சுரர்தம னியன்மால் தொழுங்காற் கிரீடத் தரதனங்கள் சிந்து மகம். 1 அகவிடத்திற் கோர்திலக மாமென் னிளசைப் பகவனென் னெட்டீசன் பதமே-திகிரி பொருந்துகரத் தானன்றோர் போத்திரியாய்த் தேடி வருந்தியுமே காணாச்செல் வம். 2 செல்வ மிரண்டுஞ் செழித்தோங்குந் தென்னிளசை யில்வளரும் ஈசன் எழிற்பதமே-வெல்வயிரம் ஏந்துகரத் தான்கரியன் எண்கணன்தம் உள்ளத்துப் போந்துவளர் கின்ற பொருள். 3 பொருளாள ரீய வேற்போ ரிளசை மருளாள ரீச ரடியே-தெருள்சேர் தமனா மறையவன்மேற் றன்பாச மிட்ட சமனாவி வாங்கும்பா சம் 4 சங்கந் தவழ்கழனி தண்இளசை நன்னகரில் எங்கள் சிவனார் எழிற்பதமே-துங்கமிகும் வேத முடியின் மிசையே விளங்குறுநற் சோதியென நெஞ்சே துணி 5 துணிநிலவார் செஞ்சடையன் தோள்இளசை ஊரன் மணிகண்டன் பாத மலரே-பிணிநரகில் வீழச்செய் யாது விரும்பியஈந் தேஅடியர் வாழச்செய் கின்ற மருந்து. 6 மருளறக் கற்றோர்கண் மருவிளசை ஊரில் வருமிறைவன் பாத மலரே-திருவன் விரைமலரா விட்ட விழியாம் வியன்றா மரைபூத்த செந்தா மரை. 7 தாமரையின் முத்தெங்குந் தான்சிதறுந் தென்னிளசைக் கோமானெட் டீசன்மலர் கொள்பதமே-நாமவேல் வல்லரக்கன் கைலை வரையெடுத்த காலவனை அல்லற் படவடர்த்த தால் 8 ஆல விழியா ரவர்முலைநேர் தண்வரைசூழ் கோல மணிஇளசைக் கோன்பதமே-சீல முனிவர் விடுத்த முயலகன் மீதேறித் தனிநடனஞ் செய்ததுவே தான் 9 தானே பரம்பொரளாந் தண்ணிளசை யெட்டீசன் தேனேய் கமலமலர்ச் சீரடியே-யானேமுன் செய்தவினை தீர்த்துச் சிவாநந்தம் பொங்கியருள் எய்திடவுஞ் செய்யும் எனை. 10 தனி கன்னனெனும் எங்கள் கருணைவெங்க டேசுரெட்ட மன்னவன் போற்றுசிவ மாணடியே-அன்னவனும் இந்நூலுந் தென்னா ரிளசையெனும் நன்னகரும் எந்நாளும் வாழவைக்கு மே. 11 தனிமை இரக்கம் குயிலனாய் நின்னொடு குலவியின் கலவி பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்துபின் இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும் குன்றமும் வனமும் கொழுதிரைப் புனலும் மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால். 5 பாவியென் நெஞ்சம் பகீரெனல் அரிதோ? கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன் முடம்படு தினங்காள்! முன்னர்யான் அவளுடன் உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாள்களில் 10 வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும் செயலையென் இயம்புவல் சிவனே! மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே? இப்பாடல் பாரதியாரின் குறிப்புகளுடன் மதுரை விவேகபாநு பத்திரிகையில் (1904-ஆம் ஆண்டு ஜூலை மாத இதழில்) வெளியானது. (1. கப்பல்கட்கு வெளிச்சங் காட்டும் கலங்கரை விளக்கு; இதனை லைட் ஹவுஸ் என்பர். 2. கோடியாக. 3. காலக் கழிவின் அருமையைக் குறித்தது. 4. காற்று) குருவிப் பாட்டு (புதுவை, தமிழ் அன்பன் - 23-10-1946) அருவி போலக் கவிபொழிய - எங்கள் அன்னை பாதம் பணிவேனே குருவிப் பாட்டை யான்பாடி - அந்தக் கோதைபாதம் அணிவேனே. கேள்வி சின்னஞ்சிறு குருவி - நீ செய்கிற வேலை யென்ன? வன்னக் குருவி - நீ வாழும் முறை கூறாய்! குருவியின் விடை கேளடா மானிடவா - எம்மீல் கீழோர் மேலோர் இல்லை. மீளா அடிமையில்லை - எல்லோரும் வேந்தரெனத் திரிவோம் உணவுக்குக் கவலையில்லை - எங்கும் உணவு கிடைக்கு மடா. பணமும் காசுமில்லை - எங்குப் பார்க்கினும் உணவேயடா. சிறியதோர் வயிற்றினுக்காய் - நாங்கள் ஜன்மமெல்லாம் வீணாய் மறிகள் இருப்பதுபோல் - பிறர் வசந்தனில் உழல்வதில்லை. காற்றும் ஒளியுமிகு ஆகா யமே எங்களுக்கு ஏற்றதொரு வீடு - இதற் கெல்லை யொன் றில்லையடா. வையகம் எங்குமுளது உயர்வான பொருளெல்லாம் ஐயமின் றெங்கள் பொருள் - இவைஎம் ஆகாரமாகுமடா. ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றுமில்லை. வாழ்வுகள் தாழ்வுமில்லை - என்றும் மாண்புடன் வாழ்வ மடா. கள்ளம் கபடமில்லை - வெறும் கர்வங்கள் சிறுமையில்லை. எள்ளற்குரிய குணம் - இவையாவும் உம் குலத்திலடா. களவுகள் கொலைகளில்லை - பெருங் காமுகர் சிறுமை யில்லை. இளைத்தவர்க்கே வலியர் - துன்பம் இழைத்துமே கொல்லவில்லை. சின்னஞ்சிறு குடிலில் - மிகச்சீரழி வீடுகளில் இன்னலில் வாழ்ந்திடுவீர் - இது எங்களுக்கு இல்லையடா. பூநிறை தருக்களிலும் - மிகப் பொழிவுடைச் சோலையிலும் தேனிறைமலர்களிலும் - நாங்கள் திரிந்து விளையாடுவோம். குளத்திலும் ஏரியிலும் - சிறுகுன்றிலும் மலையினிலும் புலத்திலு<ம் வீட்டினி<லும் - எப்பொழுதும் விளையாடுவோம். கட்டுகள் ஒன்றுமில்லை - பொய்க் கறைகளும் ஒன்றுமில்லை. திட்டுகள் தீதங்கள் - முதற் சிறுமைகள் ஒன்றுமில்லை. குடும்பக் கவலையில்லை - சிறு கும்பியத் துயருமில்லை இடும்பைகள் ஒன்றுமில்லை - எங்கட் கின்பமே என்றுமடா. துன்ப மென்றில்லையடா - ஒரு துயரமும் இல்லையடா. இன்பமே எம்வாழ்க்கை - இதற்கு ஏற்ற மொன்றில்லையடா காலையில் எழுந்திடுவோம் - பெருங்கடவுளைப் பாடிடுவோம். மாலையும் தொழுடுவோம் - நாங்கள் மகிழ்ச்சியில் ஆடிடுவோம் தானே தளைப்பட்டு - மிகச் சஞ்சலப்படும் மனிதா நானோர் வார்த்தை சொல்வேன் - நீ மெய்ஞ்ஞானத்தைக் கைக் கொள்ளடா. விடுதலையைப் பெறடா - நீ விண்ணவர் நிலைபெறடா. கெடுதலை ஒன்றுமில்லை - உன் கீழ்மைகள் உதறிடடா. இன்ப நிலைபெறடா - உன் இன்னல்கள் ஒழிந்ததடா. துன்பம் இனியில்லை - பெருஞ் சோதி துணையடா. அன்பினைக் கைக்கொள்ளடா - இதை அவனிக்கிங்கு ஓதிடடா துன்பம் இனியில்லை - உன் துயரங்கள் ஒழிந்ததடா, சத்தியம் கைக்கெள்ளடா - இனிச் சஞ்சலம் இல்லையடா. மித்தைகள் தள்ளிடடா - வெறும் வேஷங்கள் தள்ளிடடா. தர்மத்தைக் கைக்கொள்ளடா - இனிச் சங்கடம் இல்லையடா. கர்மங்கள் ஒன்றுமில்லை - இதில் உன் கருத்தினை நாட்டிடடா அச்சத்தைவிட்டிடடாநல் ஆண்மையைக் கைக் கொள்ளடா இச் சகத்தினிமேல்நீ - என்றும் இன்பமே பெறுவையடா. வங்கமே வாழிய (சுதேசமித்திரன் 15-9-1905) 1. அங்கமே தளர் வெய்திய காலையும் அங்கோர் புன்னரி தந்திடு மூனுணாச் சிங்கமே யென வாழ்தல் சிறப்பெனாச் செம்மை கூறிநந் தாய்ப் பெருந் தேயத்தைப் பங்கமே பெறு மிந்நிலை நின்றுயர் பண்டை மாண்பிடைக் கொண்டினி துய்த்திடும் வங்கமே யென வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய! வாழிய!! 2. கற்பகத் தருப் போலெது கேட்பினும் கடிது நல்கிடும் பாரத நாட்டினிற் பொற்புறப் பிறந்தோம். நமக்கோர்விதப் பொருளு மன்னிய ரீதல் பொறுக்கிலேம் அற்பர் போலப் பிறர் கர நோக்கியோ மவனி வாழ்தலா காதென நன்கிதை வற்புறுத்திடத் தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய! வாழிய!! 3. கண்ணினீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய் கவினுறும் பார தப்பெருந் தேவியே உண்ணி கழ்ந்திடுந் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேனெறி யுற்றனர். பெண்ணி னெஞ்சிற் கிதமென லாவது பெற்ற பிள்ளைகள் பீடுறவே யன்றோ? மண்ணினீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய! வாழிய!! வந்தே மாதரம் (சுதேசமித்திரன் 20-2-1906) 1. ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டவெம் அன்னையின் மீதுதிகழ் அன்பெனு மென்கொடி வாடிய காலை யதற்குயிர் தந்திவான் மாரியெ னும்படி வந்து சிறந்தது வந்தே மாதரமே மாணுயர் பாரத தேவியின் மந்திரம் வந்தே மாதரமே வீரிய ஞான மரும்புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை யிருட்கணம் வீவுற வங்கமகா வாரிதி மீதி லெழுந்த இளங்கதிர் வந்தே மாதரமே வாழிந லாரிய தேவியின் மந்திரம் வந்தே மாதரமே. 2. காரடர் பொன்முடி வானி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்தொரு தென்றிசை யார்கலி காதல் செயா யிடையும் வீரர்கள் மிஞ்சி விளங்கு புனாமுதல் வேறுள வூர்களிலும் விஞ்சை யெனும்படி யன்புடன் யாரும் வியந்திடு மந்திரமும் பாரத தேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடு மந்திரமும் பாதக ரோதினு மேதக வுற்றிடு பண்புயர் மந்திரமும் வாரமுறுஞ்சுவை யின்னற வுண்கனி, வான மருந்தெனவே மாணுயர் பாரத தேவி விரும்பிடும் வந்தே மாதரமே. என்னே கொடுமை! (சுதேசமித்திரன் 4-4-1906) 1. மல்லார் திண்டோட் பாஞ்சாலன் மகள் பொற்கரத்தின் மாலுற்ற வில்லால் விஜயன் அன்றிழைத்த விந்தைத் தொழிலை மறந்திலிரால் பொல்லா விதியால் நீவிரவன் போர்முன் னிழைத்த பெருந் தொழில்கள் எல்லா மறந்தீ ரெம்மவர்காள் என்னே கொடுமை யீங்கிதுவே! 2. வீமன் திறலு மவற்கிளைய விஜயன் திறலும் விளங்கிநின்ற சேம மணிப்பூந் தடநாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறுங் காம நுகர்தல் இரந்துண்டல் கடையாம வாழ்க்கை வாழ்ந்துபினர் ஈமம் புகுத லிவைபுரிவார் என்னே கொடுமை யீங்கிதுவே! யான் (சுதேசமித்திரன் 17-9-1906) ஆயிரங் கோடி அறிஞர்கள் பற்பல ஆயிர யுகங்க ளாராய்ந் தறிகிலா யான் உடையியற்கை யானோ அறிவன்! மீனுணர்ந் திடுங்கொல் வியன்கடற் பெருமை? அருள்வழிக் காண்கென் றருளினர் பெரியோர், மருள்வழி யல்லான் மற்றொன் றுணர்கிலேன் அகிலமும் யான் என ஆன்றோ ரிசைப்பர் மகிதலத் திருளின் மண்டிய மனத்தேன் யானதை யொரோவழிக் கண்டுளேன், எனினும் மானத ஒளியது மங்குமோர் கணத்தே யானெனும் பொருள்தான் என்னை கொல்? அதனையிவ் வூனெனக் கொள்வ ருயிலார் சிலரே, பிரமமே யானெனப் பேசுவர் பேசுக! பிரமமே யானெனப் பேசினர் பெரியோர்! சந்திரிகை (சுதேசமித்திரன் 25-9-1906) யாணர்க் குறையுளா மிந்து நாடதனிற் காணற் கினிய காட்சிகள் பலவினு மாணப் பெரிய வனப்பமைந் தின்கவி வாணர்க் கமுதா யிங்கிடும் பொருளிதென் றூணப் புலவோ னுரைத்துளன் முன்னாள் அஃதுதான், கருமையிற் படர்ந்த வானமாங் கடலிடை ஒருமையிற் றிகழு மொண்மதித் தீவினின் றெல்லாத் திசையினு மெழில்பெற வூற்றுஞ் சொல்லா லினிமைகொள் சோதியென் றோதினன். ஓர் முறை கடற்புற மணன்மிசைத் தனியே கண்ணயர்ந் திடைப்படு மிரவி லினிதுகண் விழித்துயான் வானக நோக்கினேன் மற்றதன் மாண்பினை யூனமா நாவினி லுரைத்தலும் படுமோ? நினைவறுந் தெய்விகக் கனவிடைக்குளித்தேன் வாழிமதி! அனுபந்தங்கள் ஜாதீய கீதம் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் வங்காளியில் இயற்றிய வந்தே மாதரம்கீதம். ஸுஜலாம்,ஸுபலாம் மலயஜ சீதலாம் ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம். -வந்தே மாதரம் ஸுப்ர ஜ்யோத்ஸ்நா புளகித யாமிநீம் புல்ல குஸுமித த்ருமதள ஸோபிநும் ஸுஹாஸிநீம்,ஸுமதுர பாஷிணீம் ஸுகதாம்,வரதாம்,மாதரம். -வந்தே மாதரம் ஸப்த கோடி கண்ட கலகல நிநாத கராலே த்விஸப்த கோடி புஜைர் த்ருதகர கரவாலே கே போலே,மா துமி அபலே பஹுபல தாரிணீம்,நமாமி தாரிணீம் -வந்தே மாதரம் துமி வித்யா,துமி தர்ம, துமி ஹ்ருதி,துமி மர்ம, த்வம்ஹி ப்ராணா:சரீரே பாஹுதே துமி மா சக்தி தொமா ரேயி ப்ரதிமா கடிமந்திரே மந்திரே. -வந்தே மாதரம் த்வம்ஹி துர்கா தசப்ரஹரண தாரிணீ கமலா கமலதள விஹாரிணீ வாணீ வித்யா தாயிநீ,நமாமித்வாம். -வந்தே மாதரம் நமாமி,கமலாம்,அமலாம்,அதுலாம், ஸுஜலாம்,ஸுபலாம் மாதரம் ஸ்யாமளாம்,ஸரளாம்,ஸுஸ்மிதாம்,பூஷிதாம், -வந்தே மாதரம் பாரதியாரின் சமர்ப்பணமும், முகவுரையும் இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாங்மன கோசரமாகிய சவுந்தர்யத்தைப் பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும் தன்னையறியாது குதூகலமடைகின்றது. சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருதி மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதியும், புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இவற்றினை யொப்பவே, நாட்டில் ஓர் புதிய ஆதர்சம்-ஓர் கிளர்ச்சி-ஓர் மார்க்கம்-தோன்றுமேயானால் மேன்மக்களின் நெஞ்சமனைத்தும், இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர்போல, அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறையுடையவனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதிய சுடரினிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சென்ற வருஷம் சில கவிதை மலர் புனைந்து மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன். நான் எதிர்பார்த்திராத வண்ணமாக மெய்த்தொண்டர்கள் பலர் இம்மலர்கள் மிக நல்லன என்று பாராட்டி மகிழ்ச்சியறிவித்தார்கள். மாதாவும் அதனை அங்கீகாரம் செய்து கொண்டாள். இதனால் துணிவு மிகுதியுறப் பெற்றேனாகி, மறுபடியும் தாயின் பாதமலர்களுக்குச் சில புதிய மலர்கள் கொணர்ந்திருக்கிறேன். இவை மாதாவின் திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சியளிக்குமென்றே நினைக்கின்றேன். குழலினிது யாழினி தென்பதம் மக்கள் மழலைச் சொற் கேளா தவர் என்பது வேதமாதலின். சமர்ப்பணம் எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இக்கவிதைத் தொகுப்பை சமர்ப்பிக்கின்றேன். -சி.சுப்ரமணிய பாரதி, 1909. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக