வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஜகதாசார்ய இராமானுஜர் - பகுதி 1

ராதே கிருஷ்ணா 30-01-2017                                                                                                                                                                                                                                                                                          
ஜகதாசார்ய இராமானுஜர்  - பகுதி 1


நாளை அவன் வருவான்! (1)
Advertisement



Ramanujar Download
விடியும் நேரம்; அவர் சாரங்கபாணி கோயிலை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். குடந்தைத் திருநகரில் கோயில் கொண்ட பெருமாள்; மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன், மல்லாக்கப் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிற தலம் அது. எத்தனை தொன்மையானது! எத்தனை ஆழ்வாரால் பாடப்பெற்ற தலம்!

காட்டுமன்னார்கோயிலில் இருந்து குடந்தைக்கு வருகிற வழியிலெல்லாம், அவருக்கு வேறு நினைவே இல்லை. 'சார்ங்கமெனும் வில்லாண்ட பெருமானை தரிசிக்கப் போகிறோம்' என்கிற நினைவே, அவருக்கு சகலத்தையும் மறக்கச் செய்துவிட்டது.
அவரால் பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை மட்டுமல்ல; ஐம்புலன்களை மட்டுமல்ல; அதற்கும் மேலே, சிந்தனைக் குதிரையையும் அடக்கி ஓரிடத்தில் நிறுத்தி வைக்க முடியும். தேவைப்பட்டால், அதை இல்லாமலேயே அடித்து வீழ்த்தவும் முடியும். அவர் ஒரு யோகி. மிகப் பெரிய யோகி. எட்டு அங்கங்கள் கொண்ட யோகக்கலையை முற்றிலும் பயின்றவர். அனைத்தினும் மேலாக, பக்தி யோகத்தில் தன்னைக் கரைத்தவர்!
பட்டு விரித்துக் காட்டும் சேலை வியாபாரியின் லாகவத்தில், இயற்கை விரித்திருந்த அகண்ட பெரும் காவிரிக் கரையோரம் அவர் நடந்து கொண்டிருந்தபோது, குடந்தையின் அழகு அவர் கண்ணில் படவில்லை.
சலசலத்து ஓடும் நதியின் கரையெங்கும் விரிந்த வயல்வெளிகளும், அவற்றுக்கு அரண் போலச் சூழ்ந்து நின்ற தென்னையும், வாழையும், யாரையும் ஒரு கணம் நின்று நோக்கச் செய்யும். ஆனால், அவர் நிற்கவில்லை. 'பெருமானே! பெருமானே!' என்று பரிதவித்து விரைந்து கொண்டிருந்தார்.
கோயிலை நெருங்கியபோது, அவரது நடை மேலும் வேகம் கொண்டது. பாய்ந்து சென்று பெருமானைத் தூக்கி விழுங்கி விடும் வேகம். அது, கண்ணின் பசி. எண்ணமெங்கும் வியாபித்திருப்பவனை ஏந்தியெடுத்து நெஞ்சுக்குள் சீராட்டும் பேரழகுப் பசி.
அவருக்கு, வாயாரக் கொஞ்ச வேண்டும்; நெக்குருகிப் பாட வேண்டும்; பக்திப் பரவசத்தில், தன்னைக் கற்பூரமாக்கிக் கரைத்துக் காணாமல் செய்துவிட வேண்டும். ஆனால், மொழி தோற்கடித்து விடுகிறது. 'பெருமானே! பெருமானே!' என்று கதறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடிவதில்லை.
'ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்களாமே? அது மொத்தம் நாலாயிரமாமே? ஒவ்வொரு வரியிலும் உயிரைச் சேமித்து வைத்திருக்கிறார்களாமே? எல்லாம் சொல்லக் கேள்வி. 'ஒன்றும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்போ, என்ன வாழ்க்கையோ!' எண்ணியபடி அவர் சன்னிதிக்குள் நுழைந்த
போது, 'பொளேர்..' என, பிடறியில் யாரோ அடித்தாற் போல அப்படியே திகைத்து நின்று விட்டார். உள்ளே, யாரோ பாடிக் கொண்டிருந்தார்கள்.
'ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய
உருக்குகின்ற நெடுமாலே...'
ஆரா அமுதம்! ஐயோ, இந்த பெறற்கரிய பெருங்கருணையாளனை வேறெப்படி வருணிப்பது? இதைவிடப் பொருத்தமான ஒரு முதல்சொல் இருந்துவிட முடியுமா!
அப்படியே கண்மூடி நின்றார். அவர்கள் பாடிக்கொண்டே இருந்தார்கள். பத்துப் பாசுரங்கள் பாடி முடித்து, தீர்த்தப் பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே
வந்தவர்களை அவர் நெருங்கினார்.
'ஐயா இது என்ன? குருகூர்ச் சடகோபன் சொன்ன ஓராயிரத்தில் பத்து என்று முடித்தீர்களே; மிச்சம் தொள்ளாயிரத்தித் தொண்ணூறு பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா?'
'இது நம்மாழ்வாரின் திருவாய் மொழி. மொத்தம் ஆயிரத்துக்கும் சற்று மேலே என்கிறார்கள். எங்களுக்கு இந்தப் பத்துதான் தெரியும்.'
'என்றால், அனைத்தும் யாருக்குத் தெரியும்?'
'தெரியவில்லை ஐயா!'அவர் கண்களிலிருந்து கரகரவென நீர் வழிந்தது. அர்த்த ரூபமான ஆயிரம் பாடல்களில் வெறும் பத்து! அதுகூடத் தனக்கு இத்தனைக் காலம் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்பு இது!
அவர்களுக்கு, அந்த யோகியின் மனம் புரிந்து போனது. பக்தியின் மிகக் கனிந்த பேரானந்த நிலையில் இருப்பவர். பாசுரத்தின் அழகில் எப்படித் தன்னைக் கரைத்துக் கொண்டு விட்டார்!
'ஐயா, கவலைப்படாதீர்கள். நாதமுனி என்றொரு மகான் இந்த மண்ணில் பிறப்பார் என்றும், அவர் மூலம் ஆழ்வார்களின் அத்தனை பாசுரப் பாற்கடல்களும் இப்பூவுலகில் மீண்டும் பாயும் என்றும் எங்கள் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அக்காலம் வரும்வரை நாம் பொறுத்து இருப்போம்! அது கிடைக்கும் போது அள்ளிப் பருகுவோம்' அவர் திகைத்து விட்டார்.
நாதமுனி! நானா.... நானே தானா?! என்னைத்தான் சொல்கிறார்களா! எனக்கா அந்தக் கொடுப்பினை! இவர்கள் சொல்வது நிஜமா?
அவரால் நம்ப முடியவில்லை. அடுத்தக் கணம், அவர் காவிரிக் கரையை விடுத்து, தாமிரவருணி பாயும் கரையை நோக்கிப் பாய்ந்து விட்டார். நம்மாழ்வார் அவதரித்த குருகூர்.
'ஐயனே, ஒரு பாசுரம் என்னை இங்கு இழுத்து வந்தது. காலத்தின் காற்றுப் பைகளில் பொதிந்திருக்கும் உமது பாசுரங்கள் முழுவதையும் புகட்டி அருள மாட்டீரா?' நம்மாழ்வார், பிறந்தது முதலே பேசாத ஞானி. பிற்பாடு அவரைத் தேடி மதுரகவி ஆழ்வார் குருகூருக்கு வந்தபோது, எண்ணி நாலு வார்த்தை பேசியவர். ஆனால், நான்கு வேதங்களின் பொருளையும், தமது நான்கு நூல்களின் சாரமாக்கித் தந்தவர்.
ஆண்டாண்டு காலமாக மோனத்தவமிருந்து, ஆனிப் பொன்னே போல் வந்து நின்ற நாதமுனியிடம், மானசீகத்தில் அவர் திருவாய் மலர்ந்தார்.
'எழுதிக்கொள் நாதமுனி! நான் புனைந்தவை மட்டுமல்லாது, பன்னிரு ஆழ்வார்களின் அத்தனைப் பாசுரங்களும் உன் மூலம் உலகை அடைய வேண்டும் என்பதே உன் பிறப்பின் சாரம்.' நெக்குருகிப் போன நாதமுனி, பரபரவென அவர் சொல்லச் சொல்ல எழுதத் தொடங்கினார். திருவாய் மொழியில் தொடங்கியது அது.
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்று மில்லை
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.
சொல்லிக்கொண்டே வந்தபோது, நாதமுனியின் கையில் ஒரு சிலை வந்து அமர்ந்தது!
'என்ன பார்க்கிறாய்? இது உன் காலத்துக்கு முன் பிறந்த ஒருவரின் சிலையல்ல; உன் காலத்தைச் சேர்ந்தவரின் சிலையுமல்ல; உனக்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரவிருக்கிற ஒருவரின் சிலை. உன்மூலம் உயிர் பெறவிருக்கும் இப்பாசுரங்களை, உலகெல்லாம் ஒலிக்கச் செய்யப் போகிறவரின் சிலை.'
ராமானுஜரின் பெயர் அங்கு பேசப்படவில்லை. ஆனால், கலியின் வலிவைத் தகர்க்கப் போகிற பெரும் சக்தியாக பின்னாளில் அவர் உதிக்கவிருப்பதற்குக் கட்டியம் கூறிய சம்பவம் அது!
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா. ராகவன்




துறக்கப் பிறந்தேன்! பொலிக! பொலிக! -- 2

Advertisement



Ramanujar Download
'சரி, துறந்து விடலாம்' என்று ராமானுஜர் முடிவு செய்தார். ஊரே அதிர்ந்து நிற்கப் போகிறது. உறவு ஜனம் மொத்தமும் பழிக்கப் போகிறது. தஞ்சம்மா பிழிந்து பிழிந்து அழுவாள். அவளது பெற்றோர் வாய்விட்டுக் கதறுவார்கள். வயிறெரிந்து சபிப்பார்கள். அக்னி சாட்சியாக மணந்த ஒரு பெண்ணை, மனப்பூர்வமாக விட்டு விலகிச் செல்வது எப்பேர்ப்பட்ட பாவம் என்று சாஸ்திர உதாரணங்களுடன் கூடிக் கூடிப் பேசிக்கொள்வார்கள். எல்லாம் நடக்கும். எதையும் தவிர்க்க முடியாது.
'ஆனால் நான் இதனைச் செய்தே தீர வேண்டும் தாசரதி! இது, நான் எனக்கே இட்டுக் கொண்டிருக்கும் கட்டளை. அர்த்தமற்ற இல்லற வாழ்வில், எனது தினங்களை வீணடித்துக் கொண்டிருப்பது பெரும் பிழை. தஞ்சம்மாவுக்கு வாழ்க்கை புரியவில்லை. மனிதர்களைப் புரியவில்லை. மனிதர் வாழ்வை மலரச் செய்வதற்காகவே பிறந்திருக்கும் மகான்களை, இனம் காணத் தெரியவில்லை. அவள் ஜாதி பார்க்கிறாள். 'குலத்தில் உயர்ந்தவனா; குடியில் உயர்ந்தவனா' என்று யோசிக்கிறாள். என்னால் தாங்க முடியவில்லை.'அவர் குமுறிக் கொண்டிருந்தார். தாசரதிக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. ஏனெனில், அவர்கள் வைணவம் புரிந்தவர்கள்.
ராமானுஜரின் நிழலைப் போல் உடன் செல்பவர்கள். வருணங்களை அவர் பொருட்படுத்துவதில்லை. வாழ்க்கைத் தரம் பார்ப்பதில்லை. 'நீ ஒரு பாகவதனா? உன்னைச் சேவித்து, உனக்குத் தொண்டாற்றுவதே என் முதற்பணி' என்று முடிவு செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்!தஞ்சம்மாவின் பிரச்னை வேறு. பக்தராக இருந்தாலும், அவர் பிராமணரா என்று பார்க்கிறவள் அவள். பிழை அவள் மீதல்ல; வளர்ப்பு அப்படி; சூழல் அப்படி; காலம் அப்படி; குல வழக்கம் அப்படி!அன்றைக்கு அது நடந்தது.'ஐயா, இன்று என் வீட்டுக்கு நீங்கள் சாப்பிட வர வேண்டும்.'காஞ்சிப் பேரருளாளப் பெருமாள் சன்னிதியில், விசிறி வீசும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியிடம் ராமானுஜர் கேட்டார். அவர் மனதில், சில திட்டங்கள் இருந்தன. பிறப்பால் வைசியரான திருக்கச்சி நம்பி, தமது பக்தியால், பரமனுக்கு மிக நெருக்கத்தில் இருந்தவர். காஞ்சி அருளாளனுடன், தனியே மானசீகத்தில் உரையாடக் கூடியவர். அவர் பேசுவது பெரிதல்ல; அவன் பதில் சொல்லுவான்; அதுதான் பெரிது! இது ஊருக்கே தெரிந்த விஷயம். எத்தனையோ பேர் அவரிடம் வந்து, 'பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்' என்று தமது சொந்தப் பிரச்னைகளை சொல்லி, தீர்வு கேட்டுப் போவார்கள். திருக்கச்சி நம்பியை குருவாகப் பெற்று, அவரிடம், 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து கொள்ள வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். 'பஞ்ச சம்ஸ்காரம்' என்றால், ஐந்து அங்கங்கள் கொண்ட ஒரு சடங்கு. அதனைச் செய்து கொண்டால்தான் வைணவ நெறிக்கு உட்பட்டு வாழத் தொடங்குவதாக அர்த்தம்.வலது தோளில் சக்கரமும், இடது தோளில் சங்கும் தரிப்பது முதலாவது. நெற்றி, வயிறு, மார்பு, கழுத்து, இரு தோள்கள், பின் கழுத்து, பின் இடுப்புப் பகுதிகளில், பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருமண் தரிப்பது அடுத்தது. மூன்றாவது, பிறந்தபோது வைத்த பெயரை விடுத்து, தாஸ்ய நாமம் பெறுவது. அடுத்தது மந்திரோபதேசம். இறுதியாக, திரு ஆராதனம் என்று சொல்லப்படுகிற யாக சம்ஸ்காரம்.எளிய சடங்குகள்தாம். ஆனால், குருமுகமாக இவற்றை ஏற்றுக் கடைபிடிப்பதே மரபு.'என்னை ஆட்கொள்வீர்களா? எனக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைப்பீர்களா?' என்று அவரிடம் கேட்க வேண்டும். அதற்காகத்தான் ராமானுஜர் திருக்கச்சி நம்பியை வீட்டுக்கு அழைத்தார்.'அதற்கென்ன, வருகிறேன்' என்றார் திருக்கச்சி நம்பி.ராமானுஜர் பரபரப்பானார். 'ஆசார்யர் வருகிறார். அமுது தயாராகட்டும்' என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, இலை பறித்து வர தோட்டத்துக்குப் போனார். அவர் போய்த் திரும்பும் நேரத்துக்குள், நம்பி அவரது வீட்டுக்கு வந்துவிட்டது தான் விதி!'வாருங்கள்' என்றாள் தஞ்சம்மா.'ராமானுஜன் என்னை அழைத்திருந்தார்.''தெரியும், உட்காருங்கள்.''அவர் வீட்டில் இல்லையா?''இப்போது வந்துவிடுவார். காத்திருக்கலாமா அல்லது...''எனக்குக் கோயிலில் வேலை இருக்கிறது. அதிகம் தாமதிக்க முடியாது.'எனவே அவர் சாப்பிட அமர்ந்தார். எனவே தஞ்சம்மா பரிமாறினாள். சில நிமிடங்களில், உண்டு முடித்துவிட்டு அவர் கிளம்பி விட்டார்.'நல்லது. அவர் வந்தால் சொல்லி விடுங்கள்.' - போய் விட்டார்.தஞ்சம்மா, அவர் அமர்ந்து உண்ட இடத்தில் சாணமிட்டு எச்சில் பிரட்டினாள். அவருக்காகச் சமைத்த பாத்திரங்களை கிணற்றடிக்கு எடுத்துச் சென்று, கழுவிக் கவிழ்த்து வைத்தாள். தலைக்குக் குளித்து வீட்டுக்குள் வந்து மீண்டும் தமக்காக சமைக்கத் தொடங்கினாள்.அதிர்ந்து போனார் ராமானுஜர். எப்பேர்ப்பட்ட பாவம் இது! அவர் மகானல்லவா! குருவல்லவா! அவர் அமர்ந்த இடத்தைத் துடைத்து, அவருக்காகச் சமைத்ததில் மீதம் வைக்காமல் கழுவிக் கவிழ்த்து, தலைக்குக் குளித்து...'வேறென்ன செய்வார்கள்? அவர் வைசியரல்லவா?' என்றாள் தஞ்சம்மா.நொறுங்கிப் போனார்.'தவறு தஞ்சம்மா! குலத்தில் என்ன இருக்கிறது? பிறப்பால் ஒருவருக்கு எந்த ஏற்றமும் கிடையாது. எப்படி வாழ்கிறார்கள் என்று பார். வாழ்க்கையை எத்தனை அர்த்தமுள்ளதாக்குகிறார்கள் என்று பார். அவர் பேரருளாளனுக்கு நெருங்கியவர். நாம் அவருக்கு நெருக்கமாகவாவது இருக்க வேண்டாமா?'அவள் மரபுக்கு நெருக்கமாக இருக்க மட்டுமே விரும்பினாள். சொல்லிக் கொடுத்த ஆசார ஒழுக்கங்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க எண்ணினாள்.மீண்டும் ஒரு சம்பவம். இம்முறை, ஓர் ஏழைத் தொழிலாளி.'பசிக்கிறது என்கிறான். வீட்டில் என்ன இருக்கிறது?' என்று உள்ளே வந்து கேட்டார் ராமானுஜர்.'உங்களுக்கு இதே வேலையாகப் போய்விட்டது. இங்கே கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. இனி சமைத்தால்தான் உண்டு.''பழைய சாதம் இருக்கிறதா பார். அதுகூடப் போதும். பாவம், பசியில் கண்ணடைத்து நிற்கிறான்.''பழைய சாதமா? அதுவும் இல்லை' என்று சொல்லிவிட்டு தஞ்சம்மா போய்விட்டாள்.ராமானுஜருக்கு சந்தேகம். எதற்கும் தேடிப் பார்ப்போம் என்று சமையல் கட்டுக்குச் சென்று இருந்தவற்றைத் திறந்து பார்த்தார். நிறையவே இருந்தது.ஆக, பொய் சொல்லி இருக்கிறாள்! கடவுளே, பசிக்கு மருந்திடுவது அனைத்திலும் உயர்ந்த தருமம் அல்லவா! இதைக்கூடவா இவள் செய்ய மாட்டாள்?அப்போதே அவர் மனம் வெறுத்துப் போனார். உச்சமாக இன்னொரு சம்பவம் அடுத்தபடி நடந்தேறியது. அன்று முடிவு செய்ததுதான்.சரி, துறந்து விடலாம்.
- பா. ராகவன் -(நாளை தொடரும்...)writerpara@gmail.com



நீரால் ஆனது!-3

Advertisement




Ramanujar Download
ராமானுஜருக்கு, திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேர வேண்டும் என்பது விருப்பம். கடவுளோடு பேசுகிற நம்பி, கைங்கர்யமே வாழ்க்கையாக இருக்கிற நம்பி, அவர் சாப்பிட வந்த போது தான், தஞ்சம்மா அபசாரம் செய்து விட்டாள். ஆனாலும், அவர் பெரியவர். சிறுமைகளால் சலனப்படுகிற மனிதரல்லர். தவிரவும், அவருக்கு ராமானுஜரைப் பற்றித் தெரியும். அவரது பண்பு தெரியும். பக்தி தெரியும். பணிவு தெரியும். தவறாக எடுக்க மாட்டார்.
ராமானுஜர், அவர் தாள்பணிந்து விருப்பத்தை சொன்னார். 'சுவாமி, என்னை தாங்கள் சீடனாக ஏற்க வேண்டும். எனக்கு, ‛பஞ்ச சமஸ்காரம்' செய்து வைக்க வேண்டும்.'
அவர் யோசித்தார். ‛நாளை வாருங்கள். பேரருளாளனிடம் கேட்டுச் சொல்கிறேன்.'
ஆனால், கடவுள் சித்தம் வேறாக இருந்தது. ‛ உம்மை திருவரங்கம் பெரிய நம்பியிடம் போகச் சொல்லி அருளாளன் உத்தரவு கொடுத்திருக்கறான்' என்றார் திருக்கச்சி நம்பி.
‛பெரிய நம்பியா! வைணவ குலத்தின் ஒப்பற்ற பெருந்தலைவரான ஆளவந்தாரின் சீடரா?'
‛ ஆம். அவரேதான்.'
மறுவினாடியே புறப்பட்டு விட்டார் ராமானுஜர். வீட்டுக்கு போகவில்லை. மனைவியிடம் சொல்லவில்லை. மாற்றுத் துணிகூட எடுத்துக் கொள்ளவில்லை. தனது குரு யாரென்று தெரிந்துவிட்டபிறகு, மற்ற அனைத்தும் அர்த்தமற்றதாகி விட்டது!
காஞ்சியில் கிளம்பி, அன்று மாலைக்குள் அவர் மதுராந்தகம் வரைநடந்து விட்டார்.
அது, தேடிப் போன தெய்வம் குறுக்கே வந்த தருணம். எதிரே வருவது யார்? பெரிய நம்பியா? அவரேதானா? கடவுளே!
‛இதை என்னால் நம்ப முடியவில்லை சுவாமி. என்னைத் தேடியா நீங்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்?'
‛ஆம். எதையும் நாம் தீர்மானிப்பதில்லை. அரங்கன் சித்தம். ஆசார்ய சித்தம்.'
ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி நின்றார். அவருக்கு அனைத்தும் புரிந்தது. வைணவ உலகின் நிகரற்ற பெரும் ஆசார்யராக விளங்கிய ஆளவந்தார் காலமாகி விட்டார். ‛அடுத்து ஆள வருவார் யார்?' என, வைணவ உலகமே எதிர்பார்த்து நின்ற வேளை. இதோ,‛அரங்க நகருக்கு வா' என்று பெரிய நம்பி வந்துநிற்கிறார்.
‛என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு, எனக்கு நீங்கள் பஞ்ச சமஸ்கரங்களைச் செய்து வைக்க வேண்டும். இது, பேரருளாளன் சித்தம் என்று திருக்கச்சி நம்பி சொன்னார்.'
‛அதற்கென்னா? இப்போதே காஞ்சிக்குப் போவோம். அருளாளன் சன்னதியில் நடக்கட்டும்.'
‛இல்லை சுவாமி. அந்த தாமதத்தைக் கூட என்னால் பொறுக்க இயலாது. இன்றே, இங்கே, இப்போதே.'
பெரிய நம்பி புன்னகை செய்தார். மதுராந்தகம், ஏரி காத்த ராமர் சன்னதியில் அது நடந்தது.
ராமானுஜரின் மனம், பக்திப் பரவசத்தில் விம்மிக் கொண்டிருந்தது. இந்த தருணத்துக்காக எத்தனை காலம் ஏங்கிக் கொண்டிருந்தேன்! எத்தனைப் பாடுகள்; எவ்வளவு இடர்கள்; எண்ணிப் பார்த்தாலே, கண்கள் நிறைந்து விடும்.
‛சுவாமி, என் இல்லத்தில் தங்கி, நீங்கள் எனக்கு சில காலம் பாடம் சொல்லித்தர வேண்டும்.'
‛அதற்கென்னா? செய்து விடலாமே?' என்றார். ஆசார்யர். தமது பத்தினியுடன் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வீட்டில் திருவாய் மொழிப் பாடம் ஆரம்பானது. வரி வரியாகச் சொல்லி, பொருள் விளக்கி ஆசார்யர்போதித்து கொண்டிருந்த நாட்கள். இனிதாகவே இறுதிவரை சென்றிருக்க வேண்டும். விதி யாரை விட்டது?
அன்றைக்கு, நஞ்சம்மாவும், குரு பத்தினி விஜயாவும் ஒன்றாக கிணற்றில் நீர் எடுத்து கொண்டிருந்தார்கள். குரு பத்தினியின் குடத்தில் இருந்து, சில சொட்டுநீர்த் துளிகள் நஞ்சம்மாவின் குடத்துக்குள் விழுந்து வைத்ததில் ஆரம்பித்தது பிரச்னை.
‛என்ன! நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? ஆசாரம் தெரியாதா உங்களுக்கு? என் குடத்தில் உங்கள் குடத்து நீர்த்துளிகள் விழுந்துவிட்டன பாருங்கள்! ஜாதி வித்தியாசம் பாராமல்,யார் யாரையோ வீட்டுக்கு அழைத்து வந்து உட்கார வைத்தால் இப்படித் தான் அபத்தமாகும்'வெடித்துக் குமறி விட்டாள் நஞ்சம்மா.
அழுக்கு முதல் பாவம் வரை, அனைத்தையும் கரைக்கிற நீர்; அது நிறமற்றது; மணமற்றது; அனாதியானது; அள்ளி எடுக்கும் போது மட்டும் எனது, உனது! என்ன விசித்திரம்!
‛ நாம் இதற்கு மேலும் இங்கே இருக்கத் தான் வேண்டுமா?' விஜயா தனது கணவரிடம் கேட்ட போது, பெரிய நம்பி யோசித்தார். சம்பவம் நடந்த போது ராமானுஜர் வீட்டில் இல்லை. நடந்திருப்பது குரு அபசாரம். சர்வ நிச்சயமாக ராமானுஜரால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது.
‛நாம் கிளம்பி சென்றுவிட்டால், நஞ்சம்மா இந்த சம்பவத்தை அவரிடம் சொல்லாமலே இருந்து விடுவாள். அவர்களுக்குள் பிரச்னை வராது' என்றார். அவரது மனைவி.
‛ஆம் , நீ சொல்வது சரி.' கிளம்பிவிட்டார்கள்.
வீட்டுக்கு ராமானுஜர் வந்த போது, குருவும் இல்லை; குரு பத்தினியும் இல்லை.
‛நஞ்சம்மா... நம்பிகள் எங்கே சென்று விட்டார்?'
அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சொற்கள் கைவிட்ட தருணம். ஒருமாதிரி தன்னை திடப்படுத்திக் கொண்டு, ‛நாம் என்ன ஜாதி; அவர்கள் என்ன ஜாதி? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? கிணற்றிலிருந்து நீர் இறைக்கக்கூடத் தெரியவில்லை உங்கள் குரு பத்தினிக்கு.‛
நடந்த சம்பவம், அவளது விவரிப்பில் மீண்டும் நிகழ்ந்தது. நொறுங்கிப் போனார் ராமானுஜர்.
‛உன்னைத் திருத்திவிட முடியும் என்று நினைத்தேன். ஆனால், ஜாதி வெறி உன் ரத்தத்தில் ஊறி விட்டது நஞ்சம்மா. தேடிவந்த ஞானக்கடலைத் திருப்பி அனுப்பி இருக்கிறாய். இந்த பாவத்தில் என் பங்கைக் களைய, நான் எத்தனை பிறப்பு எடுத்துப் பிராயச் சித்தம் செய்தாலும் போதாது.'
அந்த விரக்தி தான் அவரைத் துறவு நோக்கித் திருப்பியது. அந்தக் கோபம் தான் அவரை வீட்டை விட்டு வெளியே போக வைத்தது. இந்த இயலாமை தந்த அவமான உணர்வுதான், அவரை வீறுகொண்ட இரும்பு மனிதராக்கியது.
விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். பேரருளாளப் பெருமாள் சன்னதியில், திருக்கச்சி நம்பி கைங்கர்யத்தில் இருந்தார். இழுத்து நிறுத்தி, தடாலென்று காலில் விழுந்தார்.
‛சுவாமி, எனக்கு சன்னியாச ஆசிரமத்தை வழங்கி அருளுங்கள். ‛
அது நடந்தேறி விட்டது.
அத்தி வரதர் உறங்கும் அனந்த புஷ்கரணியில் அவர் குளித்தெழுந்தார். தூய காவியுடை தரித்து முக்கோல் பிடித்தார். ‛ துறந்தேன், துறந்தேன், துறந்தேன்' என்று மூன்று முறை சொல்லி முற்றிலும் வேறொருவராக மாறிப்போனார்.
(நாளை மறுநாள் தொடரும்...)
writerpara@gmail.com
-பா.ராகவன்-

நெஞ்சில் நிறைந்தவன்! - 4

Advertisement



Ramanujar Download
'நான் உங்களை இனி மாமா என்று அழைக்க முடியாதல்லவா? பேரருளாளனே உங்களை யதிராஜன் (துறவிகளின் அரசன்) என்று சொல்லி விட்டான்!'

தாசரதி தயங்கி தயங்கித்தான் பேசினான். ராமானுஜர் புன்னகை செய்தார். வாய் திறந்து அவர் சொல்லவில்லை. 'துறந்தேன், துறந்தேன், துறந்தேன்' என்று மும்முறை சொல்லி மூழ்கி எழுந்த போது 'முதலியாண்டானைத் தவிர' என்று அவர்தம் மனதிற்குள் சொல்லிக் கொண்டதை நினைத்துப் பார்த்தார். வைணவத்தை வாழ்க்கையாக ஏற்றதில் தாசரதி ராமானுஜருக்கு முன்னோடி, தமக்கையின் மகன். சிறுவயதில் இருந்தே ராமானுஜரின் நிழலாகத் தொடர்ந்து வருகிறவன். அவரது ஞானத்தின் ஜீவப் பிரவாகம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் முந்தி வந்து முக்குளித்தவன்.
'முதலியாண்டான்! உறவென்பது நமக்கு இனி அவன் ஒருவனோடு மட்டுமே. ஆனால், அவன் உலகம் உண்ட பெருவாயனாக இருக்கும்போது உறவில்லை என்று யாரைச் சொல்ல முடியும்?'
தாசரதியிடம் மேலும் சில் வினாக்கள் இருந்தன. அவற்றுள் முதன்மையானது, துறவு ஏற்ற மறுகணம் ராமானுஜர் யாரை நினைத்தார் என்பது தன்னையா? தன்னைக் காட்டிலும் உயர்ந்த பாகவதோத்தமரான கூரத்தாழ்வானையா? அல்லது இன்னொரு தமக்கையின் மகனான வரத தேசிகனையா?
மூவருமே ராமானுஜர் துறவு கொண்டதும் முதன்முதலில் வந்து சீடர்களானவர்கள். அவரது உயிர்மூச்சு போல் உடனிருப்பவர்கள். இரவும் பகலும் அவர்களுக்கு யதிராஜரைத் தவிர வேறு நினைவே கிடையாது. அவருக்குச் சேவை செய்வதைக் காட்டிலும் வேறு திருப்பணி கிடையாது. ராமானுஜர் துறவுக் கோலம் கொள்வதற்கு முன்பிருந்தே அப்படித்தான்! அது ஞானத்தின் காந்த வடிவம். ஈர்க்கும் வல்லமை இயல்பிலேயே உண்டு.
'தயவு செய்து சொல்லுஙண்கள். ஒருவேளை வேறு யாரையாவது நினைத்தீர்களோ?'
தனது மானசீகத்தில் என்றோ குருவாக வரித்துவிட்ட ஆளவந்தாரையே கூட ராமானுஜர் எண்ணியிருக்கலாம். எப்பேர்ப்பட்ட தருணம்! எத்தனை பேருக்கு இதெல்லாம் வாய்க்கும்!
'சொல்லி விடுங்கள். நீங்கள் யாரை நினைத்தீர்கள்?'
மீண்டும் புன்னகை. அர்த்தம் பொதிந்த பேரமைதி. சொல்லலாமா? முதலியாண்டான் கேட்கிறான். என்னிடம் இருக்கிற பதில் அவனை எவ்விதமாக பாதிக்கும்? அவர் கண்மூடி, தன் நினைவில் மூழ்கத் தொடங்கினார்.
கண்ணுக்குள் மிதந்து வந்தது கோவிந்தனின் உருவம். கோவிந்த பட்டராகக் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் கிடக்கிற பூர்வாசிரமத்துத் தம்பி. சித்தி மகன். ஒரு கணம் ராமானுஜருக்கு சிலிர்த்து விட்டது. கோவிந்தன் இல்லாவிட்டால் அவர் கிடையாது. பதினெட்டு வயதிலேயே கங்கையில் போயிருக்கக்கூடும்.
'ராமானுஜா, எழுந்திரு. உடனே என்னோடு வா. இவர்கள் உன்னை கொல்லத் திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.'
அசரீரி போல் உட்செவியில் மீண்டும் ஒலிக்கிற அதே குரல்.
கோவிந்தனைக் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான். குருவும் சீடர்களுமாகப் புனித யாத்திரை போய்க் கொண்டிருந்த தினங்களில் ஒரு நள்ளிரவுப் பொழுது. தன்னை எழுப்பி, தப்பிக்க வைத்து திரும்பிச் சென்ற கோவிந்தன், அதன்பிறகு திரும்பவேயில்லை. ஒரு செய்தி மட்டும் வந்தது.
'ராமானுஜா! உன் சித்தி மகன் கங்கையில் குளிக்கிறபோது அவனுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்ததாம். திரும்பி வருகிற வழியில் காளஹஸ்தியில் பெருமானைச் சேவித்து, அங்கேயே கைங்கர்யம் செய்யத் தீர்மானித்து இருந்து விட்டான்!'
இது எப்படி, எப்படி எனறு ராமானுஜருக்கு ஆறவேயில்லை. தன்னினும் உயர்ந்த வைணவசீலராக கோவிந்தன் வரக்கூடுமென்று அவர் நினைத்திருந்தார். சட்டென்று எங்கோ தடம் மாறிவிட்டது.
எத்தனை முறை பேசியிருப்பேன்; எத்தனை விவாதித்திருப்போம். அத்வைதமும் அதன் ஏற்கவியலாத எல்லைப்பாடுகளும்.
யாதவப் பிரகாசரிடம் ராமானுஜர் பாடம் படிக்கச் சென்றபோது கோவிந்தனும் அதே பள்ளியில் வந்து சேர்ந்தவன்தான். காஞ்சியில் யாதவரைக் காட்டிலும் சித்தாந்தங்களில் கரை கண்டவர் யாருமில்லை என்று ஊரே சொல்லிக் கொண்டிருந்தது. என்னவோ, ராமானுஜருக்கு மட்டும் ஆசாரியருடன் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகவில்லை. கோவிந்தனுக்கு அது தெளிவாகப் புரிந்தது. இவன் வேறு. இவன் சிந்தனை வேறு. இவனது வார்ப்பு வேறு. ஒரு சுயம்புவை ஆராய்ந்து அறிவது கடினம்!
அன்றைக்கு சாந்தோக்ய உபநிடதப் படம் நடந்து கொண்டிருந்தது. யாதவப் பிரகாசர் வரி வரியாக சொல்லி பொருள் விளக்கிக் கொண்டிருந்தார். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ராமானுஜருக்கு, சட்டென்று ஓரிடத்தல் ஆசிரியர் விளக்கிய பொருள் திடுக்கிட வைத்தது.
கப்யாஸம் புண்டரீகம் ஏவ மக்ஷிணி.
'கப்யாஸம் என்றால் குரங்கின் பின்புறம்' என்றார் யாதவப் பிரகாசர். அவர் படித்தது அதுதான். பிழை அவர் மீதல்ல. வழி வழியாகச் சொல்லித் தரப்பட்ட அர்த்தம். 'ஆனால் குருவே, இது அனர்த்தமாக அல்லாவா உள்ளது' 'கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? அதை கம் - பிப்தி - இதி - ஆஸ:' என்று பிரித்துப் பாருங்கள். சுடர்மிகு சூரிய மண்டலத்தில் உறையும் பரம்பொருளின் நயனங்களுக்கு உவமை சொல்லும் விதமாக இது புதுப்பிறப்பு எடுக்கும்! கதிரவனைக் கண்டு தாமரை மலர்வது போல விரிந்தவை பரமனின் கண்கள் என்கிறது இந்தப் பதம்.
யாதவர் திடுக்கிட்டுப் போனார். 'இங்கே நான் குருவா; நீ குருவா?' என்று கேட்டார்.
மீண்டும் வேறொரு நாள், இப்போது தைத்திரிய உபநிடதம்.
'சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம' என்றார் யதவர். சத்தியம், ஞானம் உளளிட்ட அனைத்தும் பிரம்மத்தை மட்டுமே பொருளாகக் கொண்டவை என்பது அவரது விளக்கம்.
'இல்லை ஐயா. அவை பிரம்மத்தின் பொருளாக இருக்க இயலாது. அவை பிரம்மத்தின் பல்வேறு குணங்கள்'
'எப்படிச் சொல்கிறாய்?'
'ஒரு பூ வௌ்ளை வெளேரென்று இருக்கலாம். கமகமவென்று மணப்பதாக இருக்கலாம்.பார்த்தாலே பரவசமூட்டும் பேரழகு உடையதாக இரு்கலாம். ஆனால் மணம் மட்டும் பூவல்ல. நிறம் மட்டும் பூவல்ல. அழகு மட்டும் பூவல்ல. பன்மைத் தன்மை பூவின் இயல்பு. ஆனால், பூ ஒன்றுதான். அதே மாதிரிதான் இதுவும். சத்யம், ஞானம் எல்லாம் பிரம்மத்தின் பண்புகள். ஆனால், பிரம்மம் ஒன்றுதான். அதுதான் மூலம். அதுதான் எல்லாம்'
அன்றைக்கே யாதவப் பிரகாசருக்கு ராமானுஜரைப் பிடிக்கமல் போய் விட்டது. ஒன்று இவன் இருக்க வேண்டும்.அல்லது நான் இருக்க வேண்டும்.
'ஐயோ... எங்களுக்கு நீங்கள் வேண்டும் குருவே, நாம் அவனைக் களைந்து விடலாம்' என்றார்கள் மாணவர்கள்.
'அதுதான் சரி' என்று யாதவர் முடிவெடுத்த சமயத்தில் ராமானுஜரின் தந்தை இறந்து போனார்.

(நாளை தொடரும்)

writerpara@gmail.com

-பா.ராகவன்



கரையாத பாவம் - 5


Advertisement





Ramanujar Download
ஜடாயுவுக்கு ராமர் இறுதிச்சடங்கு செய்து மோட்சம் கொடுத்த தலம் அது. திருப்புட்குழி என்று பேர். அங்கு அருளும் விஜயராகவப் பெருமாளின் பேரழகைச் சொல்லி முடியாது. வலது தொடையில் ஜடாயுவையும், இடது தொடையில் மரகதவல்லித் தாயாரையும் ஏந்தியிருக்கும் எம்பெருமான் அவர்! பாடசாலை முடிந்த பிறகு தினமும் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டு வரலாம் என்கிற எண்ணமே, ராமானுஜருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

ஆனால், திருப்புட்குழி யாதவப் பிரகாசர் விஜயராகவப் பெருமாளை சேவிக்கிற வழக்கம் கொண்டவரல்லர். அவர் அத்வைதி. சிவனை தவிர அவருக்கு வேறு தெய்வமில்லை.ஊர்க்காரர்களுக்கு அவரைத் தெரியும். பெரிய ஞானஸ்தன். வேதம் படித்த விற்பன்னர். பிராந்தியத்தில், அவரளவு வேதத்தில் கரை கண்டவர்கள் யாரும் கிடையாது. பயம் அளிக்கிற மரியாதை என்பது, ஒரு விலகல் தன்மையை உடன் அழைத்து வரும். யாதவர் விலகி இருந்தார். கனிவில் இருந்து. சிநேகங்களில் இருந்து. சக மனித உறவுகளில் இருந்து.நினைவு தெரிந்த தினம் முதல் தனது தந்தை கேசவ சோமயாஜியிடமே பாடம் படித்து வந்தவர் ராமானுஜர்.

அவரை, யாதவப் பிரகாசரிடம் அழைத்துக் கொண்டு போனார் சோமயாஜி.'சுவாமி, வேதங்களில் நான் கற்ற மிகச்சொற்பப் பாடங்களை இவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அகக்கண் திறந்துவிடும் அளவுக்கல்ல. அதை நீங்கள்தான் செய்ய முடியும்.'இளையாழ்வாரை நிமிர்ந்து பார்த்தார் யாதவப் பிரகாசர். தகிக்கும் வெய்யோனின் கன்னத்தில் துளி கிள்ளி எடுத்து வந்து வைத்தாற் போன்ற அவரது கண்களின் சுடர், அவரது வேறெந்த மாணவர்களிட மும் இல்லாதது. தவிரவும், அந்தச் சுடரின் மீது கவிந்து நின்ற விலை மதிப்பற்ற சாந்தம், ஞானத்தின் பூரணத்தை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான அபூர்வம். இந்தப் பையனுக்கு எப்படி இது? அவருக்குப் புரியவில்லை.உமது மகனுக்கு விவாகம் ஆகிவிட்டதா?''ஆம் சுவாமி. சமீபத்தில்தான்.' 'சொந்த ஊர் காஞ்சிதானா?' 'இல்லை. திருப்பெரும்புதுார். பிள்ளை வரம் கேட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வேண்டி, யாகம் செய்து பிறந்தவன் இவன்.

பிறப்பின் பொருள் படிப்பில் அல்லவா உள்ளது? அதனால்தான் தங்களைத் தேடி வந்திருக்கிறேன்.' 'நல்லது. விட்டுச் செல்லுங்கள்.' அது தமிழகத்தில் சோழர்களின் கொடி பறந்து கொண்டிருந்த காலம். மாமன்னன் ராஜேந்திர சோழனும், அவனது மகன் இளவரசர் ராஜாதிராஜ சோழனும் மாநிலத்தின் இண்டு இடுக்கு விடாமல் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி ஆட்சி புரிந்து கொண்டிருந்த சமயம். தஞ்சைக்கு அருகே கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. வடக்கே ஆந்திரம் வரை நீண்டிருந்தது நாட்டின் எல்லை. மைசூர் முதல் ஈழம் வரை வென்றெடுத்த பிராந்தியங்கள் யாவும் குறுநிலங்களாக அறியப்பட்டன. நிலத்துக்கொரு பிரதிநிதி. நீடித்த நல்லாட்சி. ஆனால், சைவம் தவிர இன்னொரு மதத்துக்குப் பெரிய இடம் கிடையாது. கோயிலற்ற ஊரில்லை, சிவனற்ற கோயிலில்லை.

யாதவப் பிரகாசர் போன்ற மகாபண்டிதர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அரசு மானியங்கள் இருந்தன. மாலை மரியாதைகள் இருந்தன. வீதியில் தமது சீடர் குழாத்துடன் நடந்து போனால், மக்கள் தாள் பணிந்து ஒதுங்கி நிற்பார்கள். அது கல்விக்கான மரியாதை. ஞானத்துக்கான மரியாதை.ஆசூரி கேசவ சோமயாஜிக்கு, தனது மகன் ஒரு சரியான குரு குலத்தில் சேர்ந்துவிட்ட திருப்தி. திருமணத்தை முடித்து விட்டார். காலக்கிரமத்தில் வேதப்பாடங்களையும் நல்லபடியாகக் கற்றுத் தேறி விடுவான். இதற்குமேல் என்ன? தள்ளாத உடலத்தைத் தள்ளிக்கொண்டு போக சிரமமாக இருக்கிறது. நான் விடைபெற்றுக் கொள்கிறேன் என்று ஒருநாள் அமரராகிப் போனார். கடைசிவரை அவருக்குத் தெரியாது.

பாடசாலைக்குப் போக ஆரம்பித்த சிறிது காலத்திலேயே, ராமானுஜருக்கும் யாதவருக்கும் முட்டிக்கொண்ட சங்கதி. வியாதியின் படுக்கையில் கிடந்தவர் காதுகளுக்கு ராமானுஜர் இதை எடுத்துச் செல்லவில்லை. மனத்துக்குள் ஓர் இறுக்கம் இருந்தது. குருவுக்கும் தனக்கும் சரிப்பட்டு வராமல் போய்க்கொண்டிருக்கிற வருத்தம். பாடசாலையில் மற்ற மாணவர்கள் அப்படியில்லை. சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஏந்திக்கொண்டு விடுகிறவர்களாக இருந்தார்கள். தனக்கு மட்டும் ஏன் வினாக்கள் எழுகின்றன? தனக்கு மட்டும் ஏன் வேறு பொருள் தோன்றுகிறது? மனத்தில் உதிப்பதைச் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. ஆசிரியர் போதிக்கிற எதுவும் எளிய விஷயங்களல்ல. வேதத்தின் ஒவ்வொரு பதமும், ஒரு தீக்கங்கைத் தன்னகத்தே ஏந்தியிருப்பது. உரித்தெடுத்து உள்வாங்குவது எளிதல்ல.அது பிரம்மம் உணரச் செய்கிற பாதை. பிழைபடுவது தவறல்லவா? தந்தையின் மறைவுக்குப் பிறகு, சிறிதுகாலம் ராமானுஜர் பாடசாலைக்குப் போகாமல் இருந்தார். போய் என்ன செய்வது? தினமும் விவாதம், தினமும் தர்க்கம். ஆசிரியரின் மனக்கசப்புக்கு இலக்காவது. ஆனாலும், பிழைபட்ட பொருள்களை அவர் தீவிரம் குறையாமல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாரே என்கிற ஏக்கம். 'ஆனால், அவன் வகுப்புக்கு வராததை நாம் நிம்மதி என்று எடுத்துக்கொண்டு விட முடியாது குருவே. பயல் வெளியே போய் அத்வைத துவேஷம் வளர்ப்பான். வேதங்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லும் அரும்பொருளையெல்லாம் நிராகரித்து, தன் இஷ்டத்துக்கு வேறு அர்த்தம் சொல்லுவான். அதையும் தலையாட்டி ஏற்க ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.' - யாதவரின் சீடர்கள் ஓய்வுப் பொழுதில் ஓதி விட்டார்கள். யாதவருக்கே அந்தக் கவலை இருந்தது. தனது கருத்துகளை மறுத்துச் சொல்லும் ராமானுஜருடன் ஒருநாளும் அவரல் எதிர்வாதம் புரிய முடிந்ததில்லை. 'வாயை மூடு' என்று அடக்கிவிடத்தான் முடிந்தது.

இயலாமைக்குப்பிறந்த வெற்றுக் கோபம்.அந்த அடக்குமுறை பிடிக்காத படியால் மாணவன் விலகிப் போயிருக்கிறான். ஆனால், அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை! அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவன் சாதாரணமான மாணவன் அல்ல. பிராந்தியத்தில் தனது புகழை அழித்துத் தனியொரு தேஜஸுடன் தனியொரு ஞான சமஸ்தானம் நிறுவும் வல்லமை கொண்டவன். அத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைகளையே அசைத்து ஆட்டம் காணச் செய்துவிடக் கூடியவன். 'அவன் எதற்கு இருக்கவேண்டும்?' என்றார்கள் அவரது அருமைச் சீடர்கள். யாதவப் பிரகாசர் யோசித்தார்; மிகத் தீவிரமாக. 'சரி, அவனை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வாருங்கள். நாம் அவனையும் அழைத்துக்கொண்டு காசிக்கு யாத்திரை செல்வோம்.
' 'ஐயா காசிக்கு எதற்கு இப்போது?' அவர் சில வினாடிகள் கண்மூடி அமைதியாக இருந்தார். கொலைஉள்ளம் என்றாலும் குரு முகம் அல்லவா? எப்படிப் புரிய வைப்பது? மிகக் கவனமாகச் சொற்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார். 'கங்கை பாவங்களைக் கரைக்கவல்லது. மூழ்கி இறந்தோருக்கு மோட்சம் தரவல்லது.'

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன்


சதி யாத்திரை

Advertisement




Ramanujar Download
'இதோ பார், உனக்குத் தெரியாதது இல்லை. நமது குருவுக்கு வயதாகிவிட்டது. அவரால் மாற்றுக் கருத்துகளோடு மல்லுக்கட்ட முடியாது. அதேசமயம், நீ கோபித்துக்கொண்டு வகுப்புக்கு வராதிருந்தால் நஷ்டம் உனக்குத்தான். இவரளவுக்கு வேதமறிந்தவர்கள் இங்கு வேறு யாருமில்லை என்பதை எண்ணிப் பார்.'

ராமானுஜர் யோசித்தார். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால், கசப்பின் திரையை இடையே படரவிட்டுக் கொண்டு கல்வியை எப்படித் தொடர முடியும்?'அட என்னப்பா நீ! உன்னைக் கோபித்துக் கொண்டதில் அவருக்கே மிகுந்த வருத்தம். வெளியே காட்டிக் கொள்ள அகங்காரம் தடுக்கிறது. ஆனால் நீ பாடசாலைக்கு வருவதை நிறுத்திய பிறகு மனிதர் தவியாய்த் தவிக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவார் போலிருக்கிறது.''ஐயோ...' என்று பதறி எழுந்தார் ராமானுஜர். தன்னால் ஏற்க இயலாத கருத்துகளைச் சொல்லித் தருகிறவர்தான். என்றாலும், அவர் குரு. அவரது நம்பிக்கைகள் அவருக்கு. அல்லது அவரை நம்புகிறவர்களுக்கு. தன்னால் அவரை முற்றிலும் ஏற்க முடியாது போனாலும், முற்றிலும் நிராகரிக்கவும் முடியாது என்று ராமானுஜர் நினைத்தார்.

குரு என்பவர் தெய்வத்துக்கு மேலே.'அதைத்தான் சொல்கிறோம். அவர் சொல்வதைச் சொல்லட்டும். நீ ஏற்பதை ஏற்றுக்கொள். ஏற்க முடியாதவற்றுக்கு இருக்கவே இருக்கிறது உன் சுயபுத்தி. அது கொடுக்கிற அர்த்தங்கள். கிளம்பு முதலில்.' என்றார்கள்.

ராமானுஜர் மீண்டும் வகுப்புக்குப் போன போது, யாதவப் பிரகாசர் அவரைக் கட்டித்தழுவி வரவேற்றார். 'நீ இல்லாமல் இந்த வகுப்பே நிறைவாக இல்லை' என்று சொன்னார். ராமானுஜரைப் பொறுத்தவரை அது பகையல்ல. அபிப்பிராய பேதம் மட்டுமே. குருவுடன் வாதம் செய்து வீழ்த்துவதில் அவருக்குச் சற்றும் விருப்பம் இருக்கவில்லை. அதை ஒரு துரதிருஷ்டமாகவே கருதினார். எனவே மீண்டும் குரு தன்னை அரவணைக்க முன்வந்தபோது அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.மீண்டும் வகுப்புகள் தொடங்கின. சிலநாள்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைதியாகவே போனது. யாதவர் மெதுவாக ஆரம்பித்தார்.
'நாம் காசிக்கு யாத்திரை போனால் என்ன?''ஓ... போகலாமே' என்றார்கள் மாணவர்கள். பாவம் கரைக்கிற காசி. முனிவர்கள் வாழ்கிற காசி. முக்தியளிக்கிற காசி.'ராமானுஜா! நீ அவசியம் வரவேண்டும்.

இந்த யாத்திரை சிறப்படைவதே உன்னிடத்தில்தான் உள்ளது.''தங்கள் சித்தம்' என்றார் ராமானுஜர்.வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சொன்னார். மனைவி தஞ்சம்மாவிடம் சொன்னார். 'குருகுலத்தில் அனைவரும் காசி யாத்திரை போக முடிவாகியிருக்கிறது.''காசி யாத்திரையா? அது வெகுநாள் பிடிக்குமே?' என்றாள் தஞ்சம்மா. 'ஆம் தஞ்சம்மா. ஆனால், இது ஓர் அனுபவம். எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாத அனுபவம். நான் தனியாகப் போகப் போவதில்லை. என் குருநாதரும், உடன் படிக்கும் மாணவர்களும் எப்போதும் பக்கத்தில் இருப்பார்கள். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்.'அவள் தன்னைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் என்பதை அப்போது ராமானுஜர் எண்ணிப் பார்க்கவில்லை.

அவரது சிந்தனை முற்றிலும் யாத்திரையில் இருந்தது. அது தரப்போகிற பரவசப் பேரனுபவத்தில் இருந்தது. 'கோவிந்தன் வருகிறானோ?' என்றார் தாயார் காந்திமதி. ராமானுஜர் பயின்ற அதே பாடசாலையில்தான் அவரது தமக்கை மகன் கோவிந்தனும் படித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்தால், ராமானுஜனை பத்திரமாகப் பார்த்துக் கொள்வான். பொறுப்பறிந்தவன் என்பது தவிர, அண்ணன் மீது அவனுக்கு அளவற்ற பாசமும் உண்டு.'அத்தனை பேரும் கிளம்புகிறோம் அம்மா. இது குருவின் விருப்பம். முடியாது என்று சொல்ல நாங்கள் யார்?'கிளம்பி விட்டார்கள். வேத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் கிளம்பி, உச்சி வேளை வரை நடைப் பயணம். அதன்பிறகு உணவும் ஓய்வும். மீண்டும் மாலை கிளம்பி இருட்டும் வரை நடப்பது. எங்காவது சத்திரங்களில் படுத்துத் துாங்கி, மீண்டும் காலை நடை. ஆங்காங்கே, குரு வகுப்பு எடுப்பார். அந்தந்தப் பிராந்தியங்களில் வசிக்கும் மக்களோடு உரையாடு வார்கள். எதிர்ப்படும் கோயில்களில் வழிபாடு. நாள்கள் வாரங்களாகி, மாதங்களைத் தொட்டபோது அவர்கள் விந்திய மலைப் பிராந்தியத்தை அடைந்திருந்தார்கள். மத்தியப் பிரதேசத்து நிலப்பகுதி. இந்தியாவை
வட, தென் பிராந்தியங்களாகப் பிரிக்கிற மலைத்தொடர். நடந்து போகிறவர்களுக்கு அதுதான் பாதை. விந்திய மலையைத் தொட்டு, அதன் வழியாகவே உத்தர பிரதேசத்தில் கங்கை பாயும் வாரணாசியை அடைகிற வழி.இருட்டிய பொழுதில், அவர்கள் மலைக்காட்டில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து படுக்க ஒதுங்கினார்கள். நடந்த களைப்பில், ராமானுஜர் படுத்தவுடன் உறங்கிவிட்டார்.

ஆனால், கோவிந்தன் உறங்கவில்லை. அவனுக்குச் சில குழப்பங்களும், பல சந்தேகங்களும் இருந்தன. வழி முழுதும் மாணவர்கள் தமக்குள் ரகசியம் பேசியபடியே வந்ததை அவன் கவனித்திருந்தான். அவன் கவனிப்பது தெரிந்தால், சட்டென்று அவர்கள் பேச்சை நிறுத்தி விடுவார்கள். அதேபோல, யாதவருக்கு நெருக்கமான சில மாணவர்கள் அவருடன் தனியே சில சமயம் உரையாடிக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான். வேதபாடம் தொடர்பான உரையாடலாக இருக்குமோ என்று அவன் பக்கத்தில் போனால், அடுத்தக்கணம் அவர்கள் எழுந்து போய்விடுவார்கள்.ஒரு சிலருடன் மட்டும் குரு தனியே பேச வேண்டிய அவசியமென்ன? தான் நெருங்கும் போதெல்லாம் பேச்சு துண்டிக்கப்படுவதன் காரணம் என்ன? அவனது குழப்பத்தின் அடிப்படை அதுதான். அதனாலேயே, இரவு நெடுநேரம் துாங்காமல் வெறுமனே கண்மூடிப் படுத்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். மனிதர்களின் உறக்கத்தை மாய இறப்பாகவே கருதி விடுகிற சக மனிதர்கள். தன்னிலை மறந்து ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள, இரவுப் பொழுதுகளையே அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள். கோவிந்தன் நினைத்தது பிழையல்ல. அன்று அது நடந்தது. 'நாம் எப்போது கங்கைக் கரையை அடைவோம்?' 'இன்னும் இருபது நாள்கள் ஆக லாம் என்று குருநாதர் சொன்னார்.' 'அதற்குமேல் தாங்காது. சென்ற டைந்த மறுநாளே ராமானுஜன் கதையை முடித்துவிட வேண்டும்.' கோவிந்தனுக்குத் துாக்கி வாரிப் போட்டு விட்டது. அவர்கள் உறங்கும் வரை காத்திருந்தான். பிறகு பாய்ந்து சென்று ராமானுஜரைத் தட்டி எழுப்பினான். 'அண்ணா, நீங்கள் ஒரு கணம் கூட இனி இங்கே இருக்கக் கூடாது. உங்களைக் கொல்ல சதி நடக்கிறது. ஓடி விடுங்கள்''ஐயோ, நீ?' என்றார் ராமானுஜர்.'நீங்கள் காணாமல் போனது பற்றிக் கதைகட்டிவிடவாவது நான் இங்கே இருந்தாக வேண்டும். என்னை நான் பார்த்துக் கொள்வேன். நீங்கள் உடனே கிளம்புங்கள்.''இறைவன் சித்தம்' என்று ராமானுஜருக்குத் தோன்றியது.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் 



வேடமிட்டவன்

Advertisement




Ramanujar Download
பாதையற்ற கானகத்தில் எந்தப் பக்கம் போவது என்று ராமானுஜருக்குப் புரியவில்லை. பகலென்றால் திசை தெரியும். கவிந்த இரவுக்கு கடவுளைத் தவிர வேறு துணையில்லை. ஆனது ஆகட்டும் என்று அவர் புறப்பட்டார். கால் போன போக்கில் நடந்து கொண்டே இருந்தார்.

கோவிந்தன் சொன்ன தகவலும், அவனுக்கு இருந்த பதற்றமும் வேகமும், திரும்பத் திரும்ப அவரது நினைவில் மோதிக்கொண்டே இருந்தன. கொலைத் திட்டம். இவன் இருக்கவே கூடாது என்று நினைக்குமளவுக்கு அப்படி என்ன செய்தேன்? எத்தனை யோசித்தும் புரியவில்லை. 'மீண்டும் வகுப்புக்கு வா' என்று வீட்டுக்கு வந்து அழைத்தவர்கள்தாம், காசிக்கு அழைத்துச் சென்று கங்கையில் அழுத்திக் கொல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். குருவுக்குத் தெரியாமலா இது நடக்கும்? 'அண்ணா, என்னை மன்னியுங்கள். திட்டத்தை வகுத்துக் கொடுத்ததே குருவாகத்தான் இருக்கும் என்பது என் சந்தேகம்.'
வழி நெடுக யாதவர் அந்தச் சிலபேரைத் தனியே அழைத்துப் பேசியது. தற்செயலாகத் தான் குறுக்கிட்ட போதெல்லாம் பேச்சை நிறுத்தியது. பயணம் முழுதும் கூடியவரை தன்னையும் ராமானுஜரையும் அதிகம் பேசிக்கொள்ள முடியாதபடிக்குப் பிரித்து வைத்தது.

யோசிக்க யோசிக்க கோவிந்தனுக்கு இன்னும் பல காரணங்கள் அகப்பட்டன.'இனி என் முகத்திலேயே விழிக்காதே என்று துரத்தியடித்த குரு, நீங்கள் திரும்பி வந்தபோது ஒன்றுமே நடவாததுபோல எப்படிக் கட்டித் தழுவி வரவேற்றார் என்று யோசித்துப் பாருங்கள் அண்ணா. எனக்கு அதுவே திருதராஷ்டிரத் தழுவலாகத்தான் இப்போது படுகிறது.'ராமானுஜருக்குத் துக்கம் ததும்பியது. வேதத்தில் கரை கண்ட ஞானவித்து. வயதான மனிதர். தன் இருப்பு அத்தனை அச்சத்தைத் தந்திருக்குமா அவருக்கு? அழித்துவிடும் அளவுக்கா? 'இது, நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியப்படுத்த நிகழ்ந்த சம்பவமாக இருக்கட்டும். நீங்கள் இருந்தாக வேண்டும் அண்ணா. போய் விடுங்கள். ஓடி விடுங்கள்.'திரும்பத் திரும்பச் செவியில் மோதியது கோவிந்தனின் குரல். ராமானுஜர் நடந்து கொண்டே இருந்தார். அன்றிரவு முழுதும் நடந்து, மறுநாளும் நடந்து, வானம் இருட்டும் முன் கண் இருட்டிக் கீழே விழுந்தார்.

எத்தனை நேர உறக்கமோ. யாரோ எழுப்புவது போலிருந்தது. விழித்தபோது, எதிரே ஒரு வேடர் தம்பதி நின்றிருந்தார்கள்.'வெளியூரா?' 'ஆம் ஐயா. இந்தக் காட்டில் எனக்கு வழி தெரியவில்லை. நான் தெற்கே போக வேண்டியவன்.' 'நாங்கள் சத்யவிரத க்ஷேத்திரத்துக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறோம். பேச்சுத் துணைக்கு ஆச்சு. புறப்படுங்கள்' என்றான் வேடன். சத்ய விரத க்ஷேத்திரம். ராமானுஜருக்கு சிலிர்த்து விட்டது. காஞ்சிக்கு அதுதான் பெயர். எங்கிருந்தோ வந்தான். நானொரு வேடன் என்றான். இங்கிவனை நான் பெற எப்போதோ தவம் புரிந்திருக்கத்தான் வேண்டும்.உற்சாகமாக அவர்களுடன் ராமானுஜர் புறப்பட்டு விட்டார்.மறுநாள் இரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள். அப்போதும் கானக எல்லை வந்தபாடில்லை. அதே விந்தியம். அதே முரட்டுக் காடு. அதே பாதையற்ற பயணம். போய்ச்சேர எத்தனை மாதங்கள் ஆகப் போகிறதோ தெரியவில்லை. அன்றிரவு அவர்கள் மூவருக்குமே பயங்கரப் பசி. ஆனால் உண்ண ஒன்றுமில்லை. பருக நீருமற்ற வறண்ட பகுதியாக இருந்தது அது. சகித்துக் கொண்டு இரவைக் கழிக்கப் படுத்தார்கள். விடிவதற்குச் சற்று நேரம் முன்பாக, அந்த வேடுவனின் மனைவியின் முனகல் கேட்டது. தாகம். தாங்க முடியாத தாகம். தண்ணீர் வேண்டும். 'கொஞ்சம் பொறுத்துக்கொள். பொழுது விடிந்து விடட்டும். இங்கிருந்து சிறிது துாரத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அதன் நீர் அமிர்தத்தினும் மேலானதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்' என்று வேடுவன் ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தது ராமானுஜரின் காதில் விழுந்தது. சட்டென்று அவர் உதறிக்கொண்டு எழுந்தார்.

'ஐயா நீங்கள் எனக்கு உதவி செய்தவர்கள். உங்கள் மனைவியின் தாகத்தைத் தணிக்கும் புண்ணியமாவது எனக்குக் கிடைக்கட்டும். இருட்டானாலும் பரவாயில்லை. நீங்கள் திசை சொல்லுங்கள். நான் அந்தக் கிணற்றைத் தேடிச் சென்று நீர் எடுத்து வருகிறேன்' என்றார்.வேடுவன் புன்னகை செய்தான். குத்துமதிப்பாகக் கை காட்டி வழி சொன்னான். ராமானுஜர் நடக்க ஆரம்பித்தார். இந்த அடர் கானகத்தில் யார் கிணறு வெட்டியிருப்பார்கள்? அதுவும் அமிர்தத்தினும் மேலான நீர் உள்ள கிணறாமே?அரை மணி தேடி அந்தக் கிணற்றைக் கண்டுபிடித்தார். ஆனால், நீர் எடுத்து வர கைவசம் ஒன்றுமில்லை.
ஆனது ஆகட்டும் என்று கிணற்றில் இறங்கி, தன்னிரு கைகளில் நீரை அள்ளி ஏந்திக்கொண்டு அலுங்காமல் மேலேறி வந்தார். வந்த வழியே திரும்பிச் சென்று அந்த வேட்டுவப் பெண்ணின் வாயில் நீரை விட்டார். 'இவ்வளவு தான் முடிந்ததா?' என்றாள் அந்தப் பெண். 'பிரச்னை இல்லையம்மா! நான் மீண்டும் சென்று நீர் ஏந்தி வருகிறேன்.'இரண்டாவது முறையும் அரை மணி நடந்து நீர் எடுத்து வந்தார் ராமானுஜர். 'ம்ஹும்... தாகம் தணியவில்லை. எனக்கு இன்னும் வேண்டும்.' மூன்றாவது முறை ராமானுஜர் அந்தக் கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வந்து பார்த்தபோது, அந்த வேடர் தம்பதி அங்கே இல்லை.இருட்டில் நடந்து கொண்டே இருந்த களைப்பு. பசி மயக்கம். அப்படியெங்கே கண் காணாமல் போயிருப்பார்கள் என்கிற குழப்பம்
தந்த கிறுகிறுப்பு. ராமானுஜர் அப்படியே கண்சொருகிச் சரிந்தார்.

விழித்தபோது விடிந்திருந்தது. வழிகாட்ட உடன் வந்த வேடுவத் தம்பதி, பாதி வழியில் பரிதவிக்க விட்டுக் காணாமல் போனது பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை. ராமானுஜர் மீண்டும் அந்தக் கிணற்றடியை நோக்கி நடந்தார்.இப்போது அங்கே நாலைந்து பெண்கள் இருந்தார்கள். தண்ணீர் எடுக்க வந்த உள்ளூர்க்காரர்கள்.'அம்மா, இது எந்த இடம்?''நீங்கள் எங்கே செல்ல வேண்டும்?' 'நான் தெற்கே காஞ்சிக்குப் போக வேண்டும் தாயே. வழி தெரியாத விந்தியமலை காட்டுப்பாதையில் சிக்கிக்கொண்டு விட்டேன்.'அந்தப் பெண்கள் அவரை வினோதமாகப் பார்த்தார்கள்.'சொல்லுங்கள் அம்மா. இது எந்த ஊர்? எந்த இடம்? இங்கிருந்து நான் எப்படிப் போக வேண்டும்?''என்னப்பா நீ அசடாயிருக்கிறாயே. காஞ்சிக்கே வந்து சேர்ந்துவிட்டு, காஞ்சிக்கு வழி கேட்கிறவனுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?' என்று கேட்டார்கள்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -





கருணைப் பெருவெள்ளம்

Advertisement




Ramanujar Download
அற்புதங்கள் எப்போதேனும் நிகழ்கின்றன. அதற்கான நியாயங்களும் காரணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒளியும் நீரும் படைக்கப்பட்டது ஓர் அற்புதமென்று எண்ண முடியுமானால், ஒளிந்திருந்து ஆடும் ஆட்டங்களின் உள்ருசியை உணர்வது சிரமமாக இராது.
ராமானுஜர் ஒரு கணம் சிந்தித்துப்பார்த்தார். தனக்கு நேர்ந்த அற்புத அனுபவத்துக்கு யாருக்கு நன்றி சொல்வது? ஒரே இரவில் விந்திய மலைச் சாரலில் இருந்து காஞ்சி மாநகரத்துக்கு வந்து சேர்வதென்பது கற்பனையிலும் நடக்காத காரியம். ஆனால் நடந்திருக்கிறது. அந்த வேடுவ தம்பதிக்கு நன்றி சொல்வதா? வேடுவர் வடிவில் காஞ்சிப்பேரருளாளனும் பெருந்தேவித் தாயாருமே தனக்கு வழித்துணையாக வர வழி செய்தது எது? யாதவர் மட்டும் காசி யாத்திரைக்கு அழைத்திராவிட்டால் இப்படியொரு அனுபவம் வாய்த்திருக்குமா? அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமா? களைப்பு கொடுத்த அயற்சியில் அந்த இரவு துாங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். எனக்காக விழித்திருந்து காப்பாற்றிய கோவிந்தன் இல்லாது போனால் இது நடந்திருக்குமா? அவனுக்கு இல்லாத களைப்பா? அவனும் கால் கடுக்க நடந்தவன் தான். உண்மையில் நன்றிக்குரியவன் அவன்தானா? தேவரீர் இன்னும் என் வினாவுக்கு விடை சொல்லவில்லை' என்று மெல்ல நினைவூட்டினான் தாசரதி.
நினைவு மீண்ட ராமானுஜர் மீண்டும் புன்னகை செய்தார். துறவுக் கோலம் பூண்டிருந்த தருணம். தாசரதி என்கிற முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் முதலிரு சீடர்களாக ஏற்று அமர்ந்திருந்த நேரம். 'துறவு கொண்ட கணத்தில் யாரை நினைத்தீர்கள்?' என்று முதலியாண்டான் கேட்கிறான். என்ன பதில் சொல்வது? காளஹஸ்தியில் தங்கிவிட்ட கோவிந்தனை மீட்டுக் கொண்டு வந்து பக்கத்தில் இருத்திக்கொண்டாலொழிய எந்த பதிலும் பூரணமடையாது. அது தம்பி உறவு கொடுத்த பாசமல்ல. தடம் மாறிச்சென்றவனை மீட்டாக வேண்டும்என்கிற கடமையுணர்ச்சி கொடுத்த பரிதவிப்பு.உண்மையில் அது கடமைதானா? விந்தியக் காடுகளில் தடம் மாறிச் சென்ற தன்னை, வேடுவர் தம்பதி காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. கடமையின் மீது சற்று அன்பை தெளித்தால் அது கருணையாகி விடுகிறது. என்றால், தன்மீது மட்டும் அப்படியொரு கருணைப் பெருமழையைப் பொழிய என்ன காரணம்?அவரால் அப்போதும் நம்ப முடியவில்லை. அந்தக் கிணற்றுக்கு சாலைக் கிணறு என்று பேர்.
காஞ்சியில் இருந்து நாலு கல் தொலைவு (ஏழு கிலோ மீட்டர்). செவிலிமேடு என்று அந்த இடத்தைக் குறிப்பிடுவார்கள்.'அதோ பாருங்கள். வரதர் கோயில் விமானம் தெரிகிறதா?' அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டிய போதுதான் ராமானுஜருக்கு நடந்தது புரிந்தது. ஓரிரவில் ஒரு ஒளியாண்டையே கடந்தாற் போன்ற அனுபவம். யாரிடம் சொல்ல முடியும்? யாருக்குப் புரியும்? 'எனக்குப் புரிகிறது மகனே!' என்றார் காந்திமதி. வீட்டுக்கு வந்து நடந்ததை விவரித்த போது, ராமானுஜரின் தாயார் தாங்க முடியாத பரவசப் பெருவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனார். தஞ்சம்மாவுக்குக் கணவர் வீடு திரும்பியதே பெரிய விஷயமாக இருந்தது. அதுவும் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பித்து வந்து சேர்ந்திருக்கிற மனிதர். 'வேண்டாம். இனி அந்த குருகுலத்துக்கு தயவுசெய்து போகாதீர்கள்! கற்றது போதும். இனி எனக்குக் கணவராக மட்டும் இருங்கள்!'ராமானுஜர் புன்னகை செய்தார். கற்பதற்கு அளவேது? போதுமென்ற நிறுத்தற்குறி ஏது? 'ஆனால் அந்த இடம் வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்று கிறது மகனே. நீ உடனே கோயிலுக்குச் சென்று திருக்கச்சி நம்பியைப் பார். அவர் உனக்கு வழி காட்டுவார்' என்றார் காந்திமதி.
ஆ! திருக்கச்சி நம்பி, அருளாளனின் அன்பரல்லவா? அவரோடு உரையாடக்கூடிய வல்லமை கொண்ட மகான் அல்லவா? தாயார் சொல்வது சரி. அவர்தான் இனி தன்னை வழி நடத்த வேண்டும். அன்றே, அப்போதே கிளம்பினார் ராமானுஜர். வரதர் கோயிலில் அதே ஆலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியை நெருங்கி சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார். 'ஐயா, என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு வழி காட்டுங்கள். வேறு போக்கிடம் ஏதும் எனக்கு இனி இல்லை.' 'எழுந்திருங்கள் இளையாழ்வாரே! நீங்கள் யாதவருடன் காசிக்குச் சென்றிருப்பதாக அல்லவா சொன்னார்கள்?' ஒரு கணம் யோசித்த ராமானுஜர் திடமாக நடந்ததை மாற்றிச் சொன்னார். 'ஆம் ஐயா. ஆனால் வழி தவறிவிட்டேன். எனவே பாதியில் திரும்பும்படியாகி விட்டது.' கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகி விட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக்களங்கம் சேர்ப்பானேன்? பொய்மையும் வாய்மை இடத்து. திருக்கச்சி நம்பி நீண்ட நேரம் யோசித்தார். 'தேவரீர் எனக்குக் கருணை காட்ட மாட்டீர்களா? பேரருளாளனின் நிழலில் வாழ்பவர் நீங்கள். உமது நிழலில் நான் இளைப்பாறக் கூடாதா? எனக்கு அதற்கு இடமில்லையா? அத்தனைக் கீழ்மகனா நான்?'பதில் இல்லை.
'சரி போகட்டும். அருளாளனுக்குச் செய்யும் கைங்கர்யமாகவேனும் எனக்கு எதையாவது ஒதுக்கிக் கொடுங்களேன்!''கேட்டுச் சொல்கிறேன், நாளை வாரும்' என்று சொல்லிவிட்டார் திருக்கச்சி நம்பி. அன்றிரவு நடை சாத்தும் நேரத்துக்கு முன்பாக, ஆலவட்ட கைங்கர்யத்தை முடித்துவிட்டு அவர் அருளாளனிடம் பேச்சுக் கொடுத்தார். 'ராமானுஜர் இன்று என்னைச் சந்தித்தார். என்னை குருபீடம் ஏற்கச் சொல்கிறார். உமக்குக் கைங்கர்யம் செய்யவும் பிரியப்படுகிறார். நான் என்ன பதில் சொல்வது?' பேசும் தெய்வம் வாய் திறந்தது. 'அவரைச் சிலகாலம் சாலைக் கிணற்றில் இருந்து திருமஞ்சனத்துக்கும் (அபிஷேகம்), திருவாராதனத்துக்கும் (சமையல்) தினசரி நீர் எடுத்து வரச் சொல்லும். தாயாருக்கு உகந்த தீர்த்தம் அது. அவருக்கேற்ற ஆசாரியர் விரைவில் வந்து சேர்வார்.' மறுநாள் காலை விடியும் நேரமே திருக்கச்சி நம்பியின் இருப்பிடத்துக்குச் சென்று விட்டார் ராமானுஜர்.'அடியேன், பேரருளாளனின் உத்தரவென்ன என்று தெரிந்து செல்ல வந்தேன்.'
'தாயாருக்கு உகந்த சாலைக் கிணற்றிலிருந்து உம்மை தினசரி திருவாராதனத்துக்கும், திருமஞ்சனத்துக்கும் ஒரு குடம் நீர் எடுத்து வரச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.'சாலைக் கிணறு. தாயாருக்கு உகந்த தீர்த்தம். அந்தக் கணத்தில்தான் ராமானு ஜருக்கு அது விளங்கியது. வந்த வேடுவர் தம்பதி வேறு யாருமில்லை. பேரருளாளனும், பெருந்தேவித் தாயாருமேதான். எம்பெருமானே! இந்த அற்பன்மீதா இத்தனைக் கருணை! தன்னை மறந்து அவர் கைகூப்பி நின்றார். அவரது கண்களில் இருந்து கரகரவென நீர் சுரந்தபடியே இருந்தது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்



உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்

Advertisement





Ramanujar Download
கங்கைக் கரைக்கு யாத்திரை செல்லலாம் வா என்று யாதவப் பிரகாசர் கூப்பிட்டிருந்தார். ஆனால், ராமானுஜருக்கு வாய்த்தது கிணற்றங்கரை யாத்திரை. அது குருவின் அழைப்பு. இது பேரருளாளனின் உத்தரவு. அது வாழ்விலே ஒருமுறை. இது வாழும் கணமெல்லாம். எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவன் பேரருளாளன்தான். ஆனால், தனக்கு வாய்த்த அருள் பெரிதினும் பெரிதல்லவா? இன்னொருவர் எண்ணிப் பார்க்க இயலாததல்லவா?

திருக்கச்சி நம்பியை மானசீகமாக வணங்கிவிட்டு, மறுநாள் காலை முதலே ராமானுஜர் தமது கைங்கர்யத்தை ஆரம்பித்து விட்டார். விடிகிற நேரம் குளித்து, திருமண் தரித்து சாலைக் கிணற்றுக்குச் சென்றுவிட வேண்டியது ஒரு குடம் நீர். அதில்தான் திருமஞ்சனம் நடக்கும். தாயாருக்கு உகந்த நீர். இரண்டு முறை தன் கைகளால் அள்ளி ஏந்தி வந்ததை வாங்கிப் பருகிய பெருந்தேவித் தாயார். மூன்றாம் முறை நீர் எடுத்துச் சென்றபோது தான் இருவருமே மறைந்து நின்று மாயம் காட்டினார்கள்.நல்லது. நீரின்றி எதுவுமில்லை. எல்லாம் தொடங்குவது நீரில்தான். நிறைவடைவதும் அதிலேயேதான்.


ராமானுஜரின் மிக நீண்ட யாத்திரை அங்கே தொடங்கியது.மறுபுறம் விந்திய மலைக்காட்டில் யாதவர் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார். 'எங்கே ராமானுஜன்? எங்கே போனான்? எப்படித் தவறவிட்டோம்?''பதறாதீர்கள் குருவே. நாம் கங்கைக்கு அழைத்துச் சென்று செய்ய நினைத்ததை இங்கே காட்டு மிருகம் ஏதாவது செய்திருக்கும்.' என்றார்கள் சீடர்கள்.யாதவப் பிரகாசர் கோவிந்தனைத் தனியே அழைத்தார்.


'கோவிந்தா, நீ சொல். எங்கே உன் அண்ணன்? உன்னிடம் சொல்லாமல் அவன் எங்கும் போயிருக்க முடியாது.''என் கவலையும் அதுதான் ஐயா. விடிந்தது முதல், இக்காடு முழுவதும் அவரைத் தேடித் திரிந்துவிட்டு வருகிறேன். எங்குமே அவர் கண்ணில் படவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் பெரியம் மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?'கண்ணீரும் கவலையுமாக கோவிந்தன் பேசியது யாதவருக்கு மேலும் கவலையளித்தது. கோவிந்தன் அதை முன்னதாகத் தீர்மானித்திருந்தான். ஆத்ம சுத்தியுடன் நடந்ததை மறைத்துவிடுவது. தன் மூலம்தான் அண்ணன் தப்பித்தார் என்பது தெரிந்தால் தன்னை பலி கொடுத்து விடுவார்கள். உதட்டில் வேதமும் உள்ளத்தில் குரோதமுமாக என்ன பிழைப்பு இது! 'சரி, நாம் போகலாம்' என்றார் யாதவப் பிரகாசர். வழி முழுதும் கோவிந்தனுக்கு அவர் ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார். உள் மனத்தில் ஓர் உறுத்தல் இருந்தது.

ராமானுஜரைக் கொல்ல நினைத்துத்தான் அவர் அந்த யாத்திரைத் திட்டத்தையே வகுத்தார். ஆனால், பாதி வழியிலேயே தான் நினைத்தது நடந்துவிட்டது. கொன்ற பாவம் தன்னைச் சேராதுதான். ஆனால் மனச்சாட்சி எப்படிக் கொல்லாதிருக்கும்? வெளியிலும் காட்டிக்கொள்ள முடியாது. கோவிந்தன் இருக்கிறபோது மற்ற மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசவும் முடியாது. வெப்பம் கவிந்த யோசனைகளுக்குத் தன்னைத் தின்னக்கொடுத்தவராக வாரணாசியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.இரு வாரப் பயணத்துக்குப் பிறகு அவர்கள் காசியை அடைந்தார்கள்.

'என் அன்புக்குரிய மாணவர்களே, நமது ராமானுஜன் இன்று நம்மோடு இல்லை. அவனுக்கும் நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு கங்கையில் நீராடுங்கள்.'அவர்கள் வேத மந்திரங்களை முழங்கிக்கொண்டு கங்கையில் இறங்கினார்கள். கோவிந்தனும் இறங்கினான். அவர்கள் மும்முறை மூழ்கி எழுந்தார்கள். கோவிந்தனும் மூழ்கி எழுந்தான். அவர்கள் கரை ஏறியபோது கோவிந்தன் மட்டும் ஏறவில்லை.அங்கே சாலைக் கிணற்றில் இருந்து மூன்றாவது முறையாக வேடுவப் பெண்ணுக்கு நீர் ஏந்திக்கொண்டு ராமானுஜர் வந்தபோது பேரருளாளனின் லீலாவினோதம் அரங்கேறிய மாதிரி, இங்கே

கங்கையில் மூன்றாவது முறை மூழ்கி எழுந்த கோவிந்தனின் கரங்களில் ஒரு சிவலிங்கம் வந்து சேர்ந்திருந்தது!'ஆஹா! ஆஹா!' என்று பரவசப்பட்டுப் போனார் யாதவப் பிரகாசர். 'இது எல்லோருக்கும் வாய்க்காது கோவிந்தா. லட்சம் பேர் தினமும் கங்கையில் குளித்தெழுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரின் கரங்களில் சிவபெருமான் வந்து சேர்ந்திருக்கிறார்? ஒருவருக்கும் இல்லை; நான் உள்பட! உன்னை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். உன் பிறப்பு அர்த்தமுள்ளது. இனி நீ 'உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்' என்று அழைக்கப்படுவாய்!'அவரது பரவசம் ஒரு வகையில் உண்மையானதுதான். மறுபுறம்
ராமானுஜரின் தம்பியை ஒரு பூரணமான, நிரந்தரமான சிவபக்தனாக்கி விடக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என்ற எண்ணமும் அவருக்கு
இருந்தது. பரபரவென்று கணக்குப் போட்டார். ஊருக்குப் போனதும் அத்தனை பேரும் ராமானுஜனைப் பற்றித்தான் விசாரிக்கப் போகிறார்கள்.

விந்திய மலைக்காட்டில் அவன் மிருகத்தின் பசிக்கு இரையான கதையைச் சொல்ல வேண்டும். ஐயோ என்று ஊரும் உறவும் கதறுகிற நேரம், கோவிந்தனுக்கு சிவபெருமான் அளித்த மாபெரும் அங்கீகாரத்தை எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும். சர்வேஸ்வரனேதான் வழி காட்டியிருக்கிறான். இத்தனைக் காலம் வேதம் சொன்னதன் பலன் என்று எண்ணிக் கொண்டார்.கோவிந்தனும் மிகுந்த பரவச நிலையில்தான் இருந்தான். விவரிக்க முடியாத பேரானந்த நிலை. அன்றிரவு அவனுக்குக் கனவில் ஒருகுரல் கேட்டது. 'கோவிந்தா, காளஹஸ்திக்கு வா.' அதே குரல்,காளஹஸ்தியில் இருந்த கோயில் குருக்களுக்கும் உத்தரவாக ஒலித்தது. 'என் பக்தன் என்னை ஏந்தி வருகிறான். அவனை இந்த ஊர் ஏந்திக் கொள்ளட்டும்.'யாதவரின் குழு காஞ்சிக்குத் திரும்பியபோது கோவிந்தன் மட்டும் காளஹஸ்தியிலேயே தங்கிவிட்டான். தன் உள்ளங்கையில் கொண்டுவந்த லிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்து அங்கேயே அமர்ந்துவிட்டான். இனி இதுவே என் இடம். இனி சிவனே என் சுவாசம்.நடந்ததையெல்லாம் ராமானுஜர் எண்ணிப் பார்த்தார்.'நான் எப்படி கோவிந்தனை மறப்பேன்? எப்படி அவனை இனியும் இங்கே வரவழைக்காமல் இருப்பேன்? நான் பரப்ப விரும்பும் வைணவ சித்தாந்தத்தின் வேர்தாங்கிகளுள் ஒருவனாக அவன் இருந்தாக வேண்டும். பேரருளாளனின் பிள்ளை வேறொரு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கலாகாது.' முதலியாண்டானுக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. நடாதுாராழ்வான் என்று ராமானுஜரால் அழைக்கப்பட்ட வரத தேசிகனுக்குப் புரிந்தது. மூன்று சீடர்களுக்கும் குருவின் மனம் புரிந்த மறுகணம்முதலியாண்டான் சட்டென்று கேட்டான். 'எப்படி வரவழைப்பீர்?'ராமானுஜர் உடனே பதில் சொல்லவில்லை. கண்மூடி அமைதியாக இருந்தார். பெயர் வைத்தவரைத் தவிர உயர் வழியைச் சுட்டிக்காட்ட யாரால் முடியும் என்று அவருக்குத் தோன்றியது.


(நாளை தொடரும்...)


writerpara@gmail.com

பா.ராகவன் 





பெயரிட்ட பெரியவர்

Advertisement




Ramanujar Download
அவருக்கு இந்த உலகம் என்பது திருப்பதி மலையடிவாரத்தில் தொடங்கி, ஏழாவது மலை உச்சியில் உள்ள வேங்கடேசப் பெருமாளின் சன்னிதியில் முடிகிற பரப்பளவு கொண்டது. அவரது உலகத்தில் ஒருவர் மட்டுமே வசித்துக் கொண்டிருந்தார். வேங்கடம் எனும் அம்மலையின் பதியான எம்பெருமான். பெருமாளுக்கு தினசரி தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருந்த அவரைப் பிராந்தியத்தில் பெரிய திருமலை நம்பி என்று அழைத்தார்கள்.
திருவரங்கத்தில் வைணவ நெறி தழைக்கச்செய்து கொண்டிருந்த ஆளவந்தாரிடம் சீடராக இருந்தவர் அவர். ஆளவந்தார்தான் ஒருநாள் கேட்டார். 'வேங்கடமலைப் பெருமானுக்குக் கைங்கர்யம் செய்ய, பொறுப்பாக யாராவது அங்கு இருக்க வேண்டியுள்ளதப்பா. நமது மடத்தில் இருந்து யார் போகத் தயார்?'சீடர்கள் எதிரே அமர்ந்திருந்தார்கள். குரு சொன்னால் எதுவும் செய்யச் சித்தமாயிருந்த சீடர்கள். திருக்கோட்டியூர் நம்பி அவர்களுள் ஒருவர். திருமலையாண்டான் இன்னொருவர். திருவரங்கப் பெருமாளரையர் மற்றவர். பெரிய நம்பி. மாறனேர் நம்பி. இன்னும் எத்தனையோ பேர். எப்போதும் குருவின் சொல் வெளிப்பட்டு முடிவதற்குள், 'நான் தயார்' என்று எழுந்து நிற்கும் அவர்கள், அன்றைக்கு அவர் கேட்டு முடித்து நெடுநேரம் ஆன பிறகும் யோசித்தபடியே இருந்தார்கள்.காரணம், சிறிது அச்சம். அவர்கள் திருப்பதி மலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள்.
ஆளரவமற்ற அபாயகரமான பிராந்தியம். ஏழு மலைகளுள் எது ஒன்றிலும் பாதை கிடையாது. ஏறிச் செல்வதும், இறங்கி வருவதும் எளிய விஷயங்களல்ல. மலைமீது கோயில் கொண்டிருந்த எம்பெருமானுக்குக் காவலாக நுாற்றுக்கணக்கான மிருகங்கள் மலையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பசித்த மிருகங்கள். பெரும்பாலும் அவை மனிதர்களை அங்கு நடமாடக் கண்டதில்லை. காண நேர்ந்தால் சும்மா விட்டு வைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஒரு ஆத்திர சகாயத்துக்கு நாலு பேர் உடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.'என்ன யோசிக்கிறீர்கள்?' என்றார் ஆளவந்தார்.யாரும் பதில் சொல்லாதிருந்த அச்சமயத்தில் ஒரு குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது. 'இன்றே கிளம்புவதா அல்லது நாளை கிளம்ப உத்தரவாகுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி!'அவர்தாம் ஸ்ரீசைல பூர்ணர் என்று அழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பி. ஆளவந்தார் புன்னகை செய்தார். அவரிடம் ராமாயணத்தின் உட்பொருள் பயில வந்தவர் அவர். தீயின் செஞ்சுடைப் போன்ற புத்திக் கூர்மை. புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு. ஆளவந்தாரின் பிரிய மாணாக்கர்.அன்றைக்குத் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பி திருமலைக்குச் சென்று சேர்ந்தவர்தான். அதன்பிறகு அவர் இறங்கி வந்தது, தமது தமக்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டபோதுதான். திருப்பெரும்புதுாரில் இருந்து மைத்துனர் ஆசூரி கேசவ சோமயாஜி தகவல் அனுப்பியிருந்தார். 'உமக்கு மருமகன் பிறந்திருக்கிறான். வந்து பார்த்து, பெயர் வைத்து ஆசீர்வதித்துச் செல்லவும்.'திருமலை நம்பிக்கு அதுவரை தனக்கு இரு தங்கைகள் இருக்கிற விஷயமே கூட நினைவில்லை. நாளும் பொழுதும் நாரணன் சேவையிலேயே கழிந்து கொண்டிருந்தது அவருக்கு. சட்டென்று மருமகன் பிறந்திருக்கிற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. உடனே ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தார்.
அது பிங்கள வருஷம் (கி.பி.1017). சித்திரை மாதம் பன்னிரண்டாம் தேதி வளர்பிறை பஞ்சமி திதி கூடிய வியாழக்கிழமை. திருவாதிரை நட்சத்திரத்தில் மருமகன் மதியம் பன்னிரண்டு மணிக்கு ஜனித்திருக்கிறான்.ஆ..., ராகுவின் நட்சத்திரத்தில் அல்லவா பிறந்திருக்கிறான்? இவ்வுலகில் மாபெரும் மகான்கள், ஞானஸ்தர்கள் அத்தனை பேரும் இதுவரை ராகு அல்லது கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். தவிரவும் கடக லக்னம். அது தலைமைப் பதவிக்கான நுழைவாயில். லக்னாதிபதி சந்திரன் விரய ஸ்தானத்தில் இருக்கிறான். ஆக, ஆலயப் பணிகளில் நாட்டம் கொண்டவன். ஐந்தாம் இடத்தில் கேது உட்கார்ந்திருக்கிறான். சந்தேகமேயில்லை. ஒன்று சாம்ராஜ்ஜியம் அல்லது சன்னியாசம்தான்!பெரிய திருமலை நம்பி அன்றே கிளம்பி திருப்பெரும்புதுாருக்கு விரைந்தார். தமக்கையின் மகனை அள்ளி ஏந்தி உச்சிமோந்து சீராட்டி னார். அவரது உள்ளுணர்வு அவருக்கு அனைத்தையும் சொன்னது. அது ஆதிசேஷன் அம்சம். வாராது வந்த மாமணி. குழந்தைக்கு இளையாழ்வான் என்று அவர்தான் பெயரிட்டது. 'காந்திமதி! உன் மகன் உலகை ஆளப் போகிறவன். அறத்தின் காவலனாக நின்று தழைக்கப் போகிறவன். இது அவதாரம். நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.
' காந்திமதியும், கேசவ சோமயாஜியும் நெக்குருகிப் போனார்கள். பெரிய திருமலை நம்பியின் தாள் பணிந்து மகிழ்ந்தார்கள். அன்றைக்கு ராமானுஜருக்குப் பெயர் வைத்துவிட்டுப் போன பெரிய திருமலை நம்பி மீண்டும் மலையை விட்டு இறங்கி வந்தது, ஏழு வருடங்கள் கழித்து அடுத்த தங்கைக்கு பிள்ளை பிறந்தபோதுதான். அவள் காந்திமதிக்கு இளையவள். பெரிய பிராட்டி என்று பேர். அவள் பிள்ளைக்கு கோவிந்தன் என்று பெயர் வைத்தார் நம்பி.'இவன் இளையாழ்வானுக்குப் பிந்தி பிறந்தவன் மட்டுமல்ல தங்கையே. அவனுக்கு நிழலே போல் எப்போதும் உடனிருக்கப் போகிறவனும் கூட. அவனால் தழைக்கப் போகிற அறங்களுக்கு இவன் காவலனாக இருக்கப் போகிறான்.' என்று சொல்லிவிட்டுப் போனார்.
அதைத்தான் ராமானுஜர் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் வந்ததுதான் அந்தப் புன்னகை. அதனாலேயேதான் அவர் கோவிந்தனை மீட்டுக் கொண்டு வரும் பொறுப்பைப் பெரிய திருமலை நம்பியிடம் விட்டுவிடலாம் என்று நினைத்தார்.விவரம் தெரியாத ஒருவன் என்றால் யார் வேண்டுமானாலும் பேசி, மனத்தை மாற்றிவிட முடியும். கோவிந்தன் அப்படியல்ல. வேத வேதாந்தங்கள் பயின்றவன். பெரிய ஞானஸ்தன். ஒரு தரிசனம் போல் அவனுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது. கங்கையில் கிடைத்த சிவலிங்கம். ஒரு பெரும் பரவச நிலையில் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் லயித்துப் போனவன்.'எனக்கு அவன் வேண்டும் முதலியாண்டான்! வைணவ தரிசனம் வையம் முழுதும் பரவ வேண்டுமென்றால் அதற்கு வைராக்கிய சீலர்களின் தோள் வேண்டும். கோவிந்தனை மீட்டு வர நான் பெரிய திருமலை நம்பியைத்தான் நம்பியாக வேண்டும்' என்றார் ராமானுஜர். பேசிக்கொண்டிருந்தபோது மடத்தின் வாயிலில் யாரோ வருவது தெரிந்தது. 'யாரது...?' என்றார் ராமானுஜர்.உள்ளே நுழைந்தவர் ஒரு வயதான பெண்மணி. யாதவப் பிரகாசரின் தாயார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்



அம்மா, நலமா?

Advertisement




Ramanujar Download
'என்னைத் தெரிகிறதா மகனே? நினைவிருக்கிறதா?'நெருங்கி வந்து கரம் கூப்பிக் கேட்ட அந்தக் கிழவியைக் கண்டதும், துள்ளி எழுந்தார் ராமானுஜர்.
'அம்மா, வரவேண்டும். நலமாக இருக்கிறீர்களா? யாதவர் நலமாக உள்ளாரா?' அவள் பதில் சொல்லவில்லை. தன்னெதிரே தகதகவென ஆன்ம ஒளி மின்னப் புன்னகையுடன் நின்றிருந்த ராமானுஜரைத் தலைமுதல் கால் வரை விழுங்கிவிடுவது போலப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.'என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? உட்காருங்கள்.''என்னை மன்னிக்க வேண்டும். பழைய நினைவில் உங்களை மகனே என்று அழைத்து விட்டேன். குரு ஸ்தானத்தில் இருக்கிறவர் தாங்கள். தவிரவும் சன்னியாசி. என்னை ஆசீர்வதியுங்கள்' என்று தாள் பணியப் போனவரை ராமானுஜர் தடுத்தார்.
'அப்படிச் சொல்லாதீர்கள் தாயே. இப்பூவுலகைத் தாங்குவதும் பெண்கள்தாம், உலகு தழைப்பதும் பெண்களால்தான். சாட்சாத் பெருந்தேவித் தாயாரேதான், இவ்வுலகில் தோன்றும் அத்தனை பெண்களாகவும் இருக்கிறவள். உமது மகனும், எனது பழைய குருவுமான யாதவரைக் கேட்டுப்பாருங்கள். அவர் நம்பும் அத்வைத சித்தாந்தத்தை வகுத்தளித்த ஆதிசங்கரர், எப்பேர்ப்பட்ட துறவி! ஆனாலும், தமது தாயார் காலமானபோது அவருக்குச் செய்ய வேண்டிய அத்தனைச் சடங்குகளையும் சிரத்தையாகச் செய்து முடித்தவர். தாயாரைத் துறக்கத் திருமாலாலும் முடியாது; திருமால் அடியார்களாலும் முடியாது!'சிலிர்த்துவிட்டது அந்தக் கிழவிக்கு. பேச்செழவில்லை. திருப்புட்குழியில் இருந்து கிளம்பி காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தாள் அவள். கோயிலுக்கு வந்ததாகச் சொன்னது ஒரு பாவனைதான்.
உண்மையான நோக்கம் ராமானுஜரைச் சந்திப்பதுதான். அவளது மகனுக்கு இருந்ததோ என்னவோ. அவளுக்குக் குற்ற உணர்ச்சி நிறையவே இருந்தது.ராமானுஜருக்குத் தனது மகன் செய்த கொடுமைகள். சொல்லிக் கொடுக்கிற இடத்தில் இருந்துகொண்டு, எந்த விவாதத்துக்கும் இடம் தர மறுத்த ஏகாதிபத்தியம். சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த மாணாக்கனைத் தட்டி வைக்க நினைத்த சிறுமை. அது முடியாதபோது கொல்லவே நினைத்த கொடூரம்.ஆனால், விந்திய மலைக் காட்டில் இருந்து ராமானுஜர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த கதையை ஊரே வியந்து பேசியபோது, அந்தக் கிழவி தன் மகனிடம் எடுத்துச் சொன்னாள். 'மகனே, நீ செய்தது தவறு. செய்ய நினைத்தது மிகப் பெரிய தவறு. நாள் முழுதும் வேதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறவன் இப்படியொரு ஈனச் செயலை மனத்தாலும் நினைப்பது பெரும் பாவம். நீ நினைத்தது மட்டுமின்றி செயல்படுத்தவும் பார்த்திருக்கிறாய். இப்போது இளையாழ்வான் உனக்குப் பல மாதங்கள் முன்னதாகக் காஞ்சிக்கு வந்து சேர்ந்துவிட்டான். பேரருளாளனின் பெருங்கருணைக்குப் பாத்திரமானவன் அவன் என்பது நிரூபணமாகிவிட்டது. எப்படியாவது சென்று மன்னிப்புக் கேட்டுவிடு.'யாதவர் ஒன்றும் சொல்லவில்லை.
கண்மூடி அமைதியாக யோசித்தபடி இருந்தார். நடந்ததை அவரால் நம்பவும் முடியவில்லை; ஜீரணிக்கவும் முடியவில்லை. தமது சீடர்களுடன் அவர் யாத்திரை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த அன்றே, ஊர் எல்லையிலேயே ராமானுஜரை அவர் சந்தித்திருந்தார். தன் தாயிடம் அதைப் பற்றி அவர் சொல்லியிருக்கவில்லை.மறக்கமுடியாத தினம். சாகிற வரை மட்டுமல்ல. எத்தனை பிறப்பெடுத்தாலும் மறக்கக்கூடாத தினமும் கூட.ராமானுஜர் அப்போது சாலைக் கிணற்றில் இருந்து நீர் எடுத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். அதேசமயம் யாதவரின் குழு காஞ்சி எல்லையை நெருங்கியிருந்தது.'அதோ, அங்கே வருவது யார்? ராமானுஜன் மாதிரி தெரிகிறதே?' யாதவர் பரபரப்பானார்.'ஆம் குருவே. ராமானுஜனேதான். விந்தியக் காட்டில் இறந்து போனவன் இங்கு எப்படி வந்திருக்க முடியும்? நம்பவே முடியவில்லை.' மாணவர்கள் வாய் பிளந்தார்கள்.மேற்கொண்டு ஓரடி எடுத்து வைக்கவும் யாதவரால் முடியவில்லை. கால்கள் உதறின. உதடு உலர்ந்து போனது. நெஞ்சுக்குள் நடுக்கப் பந்தொன்று துள்ளிக் குதித்தது. பேயடித்த மாதிரி நின்றவரை ராமானுஜர் நெருங்கினார்.
ஒரு கணம்தான். சட்டென்று குடத்து நீரைக் கீழே வைத்துவிட்டு அப்படியே தாள் பணிந்தார். 'குருவே வணக்கம். யாத்திரை முடிந்து நலமாகத் திரும்பினீர் களா?''ராமானுஜா, நீ... நீயா?!'ராமானுஜர் எதையும் மறைக்கவில்லை. பேரருளாளனின் கருணையால் தாம் ஊர் திரும்பிய கதையை அவரிடம் அப்படியே விவரித்தார். 'காட்டில் வழி தவறிய என்னை அருளாளன் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தால் நானும் காசிக்கு வந்திருப்பேன். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.'மறந்தும் அவரது கொலைத் திட்டம் தனக்குத் தெரிந்து போனதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. யாதவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அழுகையும் வெட்கமும் அவரைப் பிடுங்கித் தின்றன. மொழி கைவிட்டு நிராயுதபாணியாக நின்றவர், அப்படியே ராமானுஜரைக் கட்டியணைத்துக் கொண்டார். 'நீ காட்டு மிருகங்களால் வேட்டையாடப் பட்டிருப்பாய் என்று நினைத்து விட்டோம். நல்லவேளை, நீ சாகவில்லை. உனக்கு மரணமில்லை ராமானுஜா!'யாதவரின் சீடர்களால் நம்பவே முடியவில்லை. அவர்கள் உண்மையில் பயந்திருந்தார்கள். பேரருளா ளனே வேடமிட்டு வந்து காத்திருக்கிறான் என்றால், இவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது.ஊர் திரும்பியதும் பிராந்தியம் முழுதும் இதே பேச்சாக இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். விந்திய மலையில் ராமானுஜர் காணாமல் போனதற்குச் சரியாக மூன்று தினங்களுக்குள் அவர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த விவரம். எப்படி முடியும், எப்படி முடியும் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு, ராமானுஜர் சொன்னதே உண்மை என்ற முடிவுக்கு வந்தார்கள்.'நல்லதப்பா! நாளை முதல் நீ மறுபடியும் பாடசாலைக்கு வந்துவிடு.
நீ இருந்தால்தான் வகுப்பு களை கட்டுகிறது' என்றார் யாதவர்.'நீ எப்படி அதை அன்று ஏற்றுக் கொண்டு மீண்டும் வகுப்புக்கு வந்தாய் என்பது இப்போதும் எனக்கு வியப்புத்தான்' என்றாள் யாதவரின் தாயார்.ராமானுஜர் புன்னகை செய்தார். அது திருக்கச்சி நம்பியின் உத்தரவு.அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் நடந்ததை ராமானுஜர் தனது தாயிடம் சொன்னார். 'என்னிடம் கேட்காதே; திருக்கச்சி நம்பியிடம் கேள்' என்று அவள்தான் திருப்பி விட்டது.'ராமானுஜரே! உமக்கான பாதை போடப்படும் வரை நீர் எங்காவது வாசித்துக் கொண்டிருப்பதுதான் நல்லது. யாதவர் வேதம்தானே சொல்கிறார்? போய் பாடம் கேளும். அர்த்தம் தவறாகத் தோன்றுமானால் அதை உமக்குள் குறித்துக்கொண்டு வாரும். அவரிடம் விவாதிக்க வேண்டாம்!' திருக்கச்சி நம்பி சொன்னதை யாதவரின் தாயாரிடம் எப்படிச் சொல்ல முடியும்?எனவே அவர் புன்னகை செய்தார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்



பேய்ப்பெண்

Advertisement




Ramanujar Download
யாதவப் பிரகாசரின் தாயார் உள்ளுக்குள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். ஒரு விஷயம் இருக்கிறது. நெடுநாள் உறுத்தல். அதை ராமானுஜரிடம் சொல்ல வேண்டும். அதன்மூலம் என்னவாவது நல்லது நடக்க வேண்டும். முடியுமா?

'அம்மா, உங்கள் மனக்குறையைச்சொல்லுங்கள். எதற்காகத் தயக்கம்?' என்று ராமானுஜர் திரும்பத் திரும்பக் கேட்டார். ஆனாலும், அவளால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் சம்மந்தப்பட்டிருந்தது அவளது மகன் யாதவப்பிரகாசர். அவருக்குத் தெரியாமல்தான் அவள் காஞ்சிக்கு வந்திருந்தாள். கேட்டால், கோயிலுக்குப் போனதாகச் சொல்லிக் கொள்வதில் பிரச்னை இல்லை. ஆனால் ராமானுஜரை தரிசிப்பதே அவளது காஞ்சி வருகையின் நோக்கம்

என்று சொன்னால் அவன் தாங்குவானா? யாதவர் சில காலமாக மிகுந்த மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தருணம் அது. பாடசாலை சரிவர இயங்கவில்லை. அவரால் முடியவில்லை என்பதுதான் காரணம். வயது கொடுத்த தள்ளாமை ஒருபுறம். குற்ற உணர்ச்சிகள் அளித்த குறுகுறுப்பு மறுபுறம். திருப்புட்குழியில் இருந்தபடிக்கு காஞ்சியில் ராமானுஜரின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்ததை அவர் கவனித்தபடியேதான் இருந்தார்.

ராமானுஜரின் செல்வாக்கு வளர்கிறது என்றால், அத்வைதம் என்னும் மகாதத்துவத்தின் ஆணிவேர் அசைக்கப்படுவதாக அர்த்தம். இது சரியா? இப்படித்தான் இது

நிகழ்ந்தாக வேண்டுமா? ஜகத்குருவான ஆதிசங்கரரின் தீர்மானங்களையே ஒருவன் நிராகரிப்பானா! அவனது வாதங்களும் வலுவாக இருந்துவிட முடியுமா! அதையும் மக்கள் ஆமோதிப்பார்களா? என்னதான் நடக்கிறது இங்கே?குழப்பம் அவரைக் கொன்று கொண்டிருந்தது. நேரே போய் சிண்டைப் பிடித்து ஆட்டிவிட ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் ராமானுஜரை நினைக்கும்போதெல்லாம் அவருக்கு இரண்டு விஷயங்கள் முதலில் நினைவுக்கு வந்துவிடும்.
கொல்ல நினைத்த கொடும் தருணம். வெல்ல முடியாமல் வாதங்களில் வீழ்ந்த பல தருணங்கள்.

'ரொம்ப யோசிக்க வேண்டாம் தாயே. நமக்கு அப்பால், நன்மை தீமைகளுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், சித்தாந்தங்களுக்கு அப்பால், வேதாந்தங்களுக்கும் அப்பால் விவரிக்க முடியாத பெரும் பொருளாகப் பரந்தாமன் வீற்றிருக்கிறான். அனைத்தையும் உதிர்த்துவிட்டு அவன் தாள்களை மானசீகத்தில் பற்றிக்கொண்டால் போதும். ஜீவாத்மா துவண்டு விழும் தருணம் உண்டு. அறிவும், ஞானமும் உதிரும் கணம் உண்டு. மாயை

கண்ணைக் கட்டுகிறதென்றால், செருக்கே மாயையின் வித்து. சரணாகதி ஒன்றே அனைத்தையும் அகற்றி அவனிடம் கொண்டு சேர்க்கும் வழி.'
அந்தக் கிழவிக்குப் புரிந்தது. ஆனால், அவள் மகனுக்குப் புரிய வேண்டுமே?ஒரு சம்பவம். அவளால் சாகிற வரைக்கும் மறக்க முடியாத சம்பவம். அப்போது வட தமிழகத்தில் காஞ்சியின் சுற்றுவட்டாரப் பிராந்தியத்தை ஆண்டு கொண்டிருந்த சோழச் சிற்றரசன் ஒருவனது மகளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வராத மருத்துவரில்லை, பார்க்காத வைத்திய மில்லை. பூஜைகள், யாகங்கள் ஒரு பக்கம். மந்திர தந்திரவாதிகளின் பேயோட்டப் பிரயத்தனங்கள் ஒரு பக்கம். எதுவும் பலனளிக்காமல் அந்த இளவரசி ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். யாரோ அரசனிடம் போய்ச் சொன்னார்கள்.

'திருப்புட்குழி யாதவப் பிரகாசர் பெரும் ஞானஸ்தர். தவிரவும், அவருக்கு மந்திரப் பிரயோகங்கள் தெரியும். மாந்திரிகம் அறிந்தவர். அரசர் அவரை அரண்மனைக்கு வரவழைத்து இளவரசியைக் காட்டலாமே?'உத்தரவு ஊருக்கு வந்து சேர்ந்தபோது யாதவருக்குக் கட்டுக்கடங்காத அகங்காரம் தலைக்கேறிவிட்டது. 'நான் எதற்கு வரவேண்டும்? யாதவப் பிரகாசன் உன்னைப் போகச் சொன்னான் என்று அந்த பிரம்ம ராட்சசனிடம் போய்ச் சொல்லுங்கள். ஓடியே விடுவான்' என்று அரசு ஊழியர்களிடம் சொல்லி அனுப்பி விட்டார். இது பெரிய இடத்து விவகாரம், நமக்கு பிரம்ம ராட்சசனையும் தெரியாது; யாதவப் பிரகாசரையும் தெரியாது; எதற்கு வம்பு என்று, அவர்களும் அதேபோல அரண்மனைக்குத் திரும்பி அவர் சொன்னதை அப்படியே சொன்னார்கள்.படுத்திருந்த இளவரசி சீறி எழுந்து கத்தினாள். 'அவனை ஓடிப் போகச் சொல்லுங்கள். நான் அடித்தால் நார்நாராகக் கிழிந்து விடுவான்.'

செய்தி கேட்டு அதிர்ந்து போனார் யாதவர். இது அவமானமல்லவா? விடமுடியாது. தனது மாணவர் பரிவாரத்துடன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். 'கூப்பிடுங்கள் உங்கள் மகளை' என்றார் அரசரிடம். சேடிகள் இளவரசியை சபைக்கு அழைத்து வந்தார்கள். பேய் பிடித்த இளவரசி. தலைவிரிகோல இளவரசி. சங்கிலி போட்டுப் பிணைத்திருந்தார்கள். அதை அறுத்தெறிந்து சீறிப் பாயும் வேகம் அவளது ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.

யாதவர் அவள் எதிரே வந்து நின்று மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார்.'டேய், எனக்கு உன்னையும் தெரியும், நீ சொல்லும் மந்திரங்களும் பொருளோடு தெரியும். என்னை விரட்ட உன்னால் முடியாது. உயிர்மீது ஆசை இருந்தால் ஓடிவிடு' என்றது அந்தப் பேய்ப்பெண். 'என்னைத் தெரியுமா? என்ன தெரியும் உனக்கு?''போன ஜென்மத்தில் மதுராந்தகம் ஏரிக் கரையில் ஓர் உடும்பாகப் பிறந்தவன் நீ. பரம பக்தர்கள் சிலர் சாப்பிட்டு மீந்த உணவைத் தின்றபடியால் இந்த ஜென்மத்தில் வேதம் சொல்லித்தரும் உயரிய பிறப்பு உனக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், இந்த ஜென்மத்துப் பாவங்கள் உன்னை இன்னும் இரண்டு ஜென்மங்களுக்கு ஆட்டிப் படைக்கப் போகிறது மூடா! ஓடிப் போ!'அதிர்ந்து விட்டார் யாதவர். வந்திருந்த அவரது மாணவர்களுக்குப் பேச்சு மூச்சில்லை. ராமானுஜருக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது. குருவல்லவா? மன்னனின் சபையில் அவருக்கு இது எப்பேர்ப்

பட்ட அவமரியாதை?சட்டென்று அவர் முன்னால் வந்து நின்றார். 'பேயே' என்று தொடங்காமல் 'பெண்ணே' என்று பேச ஆரம்பித்தார். ஒரு நிமிடம். ஐந்து நிமிடம். பத்து நிமிடங்கள். மந்திரங்கள் இல்லை. மாயம் ஏதுமில்லை. வெறும் பேச்சு. ஆனால் சாத்விகத்தின் சாறு பூசிய பேச்சு. பரமாத்மாவான நாராயணனின் பாத கமலங்களை முன்வைத்து, அந்தப் பெண் குணமாக மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டார் ராமானுஜர். அன்று அது நடந்தது. அவள் குணமானாள்.தொண்டை மண்டலம் முழுதும் ராமானுஜரின் புகழ் தீயெனப் பரவத் தொடங்கிய தருணம் அது.

'செய்தது நானில்லை; நாராயணனே' என்றார் ராமானுஜர். அந்தப் பணிவு அவரை இன்னும் உயரத்துக்கு எடுத்துச் சென்றது. யாதவர் மட்டும் புழுக்கத்தில் வெந்து கொண்டிருந்தார். தாங்க முடியவில்லை அவரால். 'வேண்டாமப்பா! என்னினும் பெரியவன் என்னிடம் படிக்க அவசியமில்லை. இனி பாடசாலைக்கு வராதே' என்று சொல்லிவிட்டார்.தன் மகன் தரம் தாழ்ந்து போனது அன்றே அத்தாய்க்கு புரிந்துவிட்டது.


(நாளை தொடரும்...)


writerpara@gmail.com

- பா.ராகவன் 

நன்மை பயக்கும் எனில்

Advertisement




Ramanujar Download
யாதவப் பிரகாசரின் தாய் என்னவோ பேசுவதற்காக வந்தாள். ஆனால், என்னென்னவோ பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டுப் போய்விட்டாள். ராமானுஜர் வெகுநேரம் அமைதியாகக் கண்மூடி அமர்ந்திருந்தார்.

'வாழ்வில் சில சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்பதற்கு நமக்குக் காரணங்கள் புரிவதில்லை. நடக்கிற காரியத்தின் சரியான பக்கத்தில் நிற்கிறோமா, எதிர்ப்புறம் இருக்கிறோமா என்று அந்தக் கணத்தில் முடிவு செய்யவும் முடிவதில்லை. மனித வாழ்க்கை என்பதே சம்பவங்களின் சாட்சிக்கூண்டில் ஏறி நிற்பதுதானே? ராமானுஜருக்கே அந்த வினா இருந்தது. ஒரு பத்து நிமிஷப் பேச்சில் பேய் பிடித்த பெண்ணைச்சரி செய்துவிட முடிகிறது. பூணுால் அறுத்து, சிகை கழித்து சன்னியாசியான பரம அத்வைத சிரேஷ்டரின் தாயாருக்கு,'பரம்பொருளை நெருங்கச் சரியான பாதை உமது மகன் காட்டுவதல்ல'

என்று எடுத்துச் சொன்னால் புரிந்து விடுகிறது. கோடீஸ்வரரான கூரத்தாழ்வான் தமது சொத்து சுகங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுத் தன்னிடம் சீடராக வந்து பணிந்து நிற்கிறார். காஞ்சி மாநகரமே கைகட்டி நிற்கிறது. ஆனால், பதினாறு வயதில் மணந்துகொண்டு, பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக உடன் வாழ்ந்த தஞ்சம்மாவை ஏன் தன்னால் சரி செய்ய இயலவில்லை?எத்தனையோபேர் என் பேச்சைக் கேட்கிறார்கள். பரம்பொருளான
நாரணனின் பாதம் பற்ற முன்வருகிறார்கள். பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று சொன்னால் சரி என்கிறார்கள். ஆண்டவன் சன்னிதானத்தில் அந்தணனா, பஞ்சமனா என்ற கேள்விக்கே இடமில்லை என்றால் ஒப்புக்கொள்கிறார்கள்.

சரணாகதியை விஞ்சிய உபாயமில்லை என்று சொல்லும் போதெல்லாம், தலைக்குமேலே கரம் கூப்பிக் கண்மூடி நீர் சொரிகிறார்கள். தஞ்சம்மாவை ஏன் அது தொடவில்லை? கடைசிவரை தனது குலப் பெருமை ஒன்றைத் தவிர இன்னொன்றை அவள் ஏன் ஏற்க மறுத்துவிட்டாள்? ஒரு முழுநீள வாழ்வில் ஒரு கட்டத்தில் கூடவா தனது அஞ்ஞானத்தை அறிய முடியாமல் போய்விடும்? அவருக்கு வேதனை சுட்டது. வைணவ சாம்ராஜ்ஜியம் ஒன்றை நாளை நான் கட்டியெழுப்பலாம். அது முடியாத காரியமல்ல. ஆனால் எனது எளிய முயற்சிகள் யாவும் தஞ்சம்மாவிடம் தோற்றுத்தான் போயிருக்கின்றன. இதனை எப்படி விழுங்கி ஜீரணிப்பது?ராமானுஜருக்கு நினைத்துப் பார்க்கவும் சங்கடமாக இருந்தது. தஞ்சம்மாவை விட்டு விலகுவது, பற்றுகள் அறுத்துத் துறவறம் ஏற்பது என்று முடிவு செய்தபோதுகூட, அவர் அவளை நினைத்துக் கொஞ்சம் அஞ்சவே செய்தார். எதுவும் அவளுக்குப் புரியாது என்பதல்ல. எதையும் புரிந்துகொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவள். காலம் முழுதும் கட்டுண்டு அவதிப்பட்டு மடிவதற்கா இப்பிறப்பு? அமைதியாக யோசித்தார். ஓர் உபாயம் தோன்றியது. தவறுதானா? சட்டென்று தர்ம சாஸ்திரங்களின் பக்கம் மனம் ஓடத் தொடங்கியது.


பொய்மையும் வாய்மை இடத்து. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எழுதியவன் என்னமோ ஒரு அவஸ்தைப்பட்ட பிறகுதான் இதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆயிரம் பேர் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாராமல் எழுதி வைக்க வாய்ப்பில்லை. மனத்தை திடப்படுத்திக்கொண்டு அம்முடிவை எடுத்தார். வைணவர் ஒருவரை அழைத்தார். குலத்தால் தாழ்ந்தவர் என்று சொல்லப்பட்டாலும் குணத்தால் உயர்ந்த மனிதர் அவர். ஒரு சமயம் அவருக்குச் சாப்பாடு போட மறுத்து தஞ்சம்மா விரட்டியடித்த சம்பவம் ராமானுஜருக்கு நினைவில் வந்து போனது.'ஐயா, இன்று நீங்கள் என் வீட்டுக்கு உணவருந்தச் செல்ல வேண்டும்!'ராமானுஜர் கேட்டபோது அவர் பயந்தார். 'ஐயோ திரும்பவுமா? வேண்டாமே?''இல்லை. இம்முறை என் மனைவி உங்களை நடத்துகிற விதமே வேறாக இருக்கும்.


அதற்கு நான் பொறுப்பு.''புரியவில்லையே.'ராமானுஜர் விறுவிறுவென்று ஒரு கடிதம் எழுதினார். அது தஞ்சம்மாவுக்கு அவளது அப்பா எழுதுவது போன்ற கடிதம்.அருமை மகளே, உன் தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு நீ உடனே ஊருக்கு வந்து சேர். இக்கடிதம் கொண்டு வரும் பாகவதோத்தமர் எனக்கு வேண்டப்பட்டவர்தான். களைப்போடு வருவார். அவரை உபசரித்து அனுப்பிவிட்டு ஊருக்குக் கிளம்பு.'இதைக் கொண்டுபோய் தஞ்சம்மாவிடம் கொடுங்கள்.' என்று ஒரு தட்டு நிறைய பழங்கள், வெற்றிலை பாக்கு, புடைவை, வேட்டியுடன் கொடுத்து அனுப்பி வைத்தார் ராமானுஜர்.


அந்த மனிதர் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். 'அம்மா நான் உங்கள் அப்பாவின் ஊரில் இருந்து வருகிறேன்.'தஞ்சம்மாவுக்குக் குழப்பமாக இருந்தது. ஏற்கெனவே விரட்டியடித்த மனிதர். இப்போது பழம் பூ மரியாதைகளோடு வந்து நிற்கிறாரே?'உங்கள் தகப்பனார் இக்கடிதத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.'அவள் படித்துப் பார்த்தாள். தம்பிக்குத் திருமணம். உடனே கிளுகிளுப்பாகிவிட்டது. 'ஐயா நிற்கிறீர்களே, உட்காருங்கள்.''அவகாசமில்லை தாயே. நான் கிளம்ப வேண்டும்.''முடியவே முடியாது. அன்று உங்களுக்கு நான் செய்தது பெரும் அபசாரம். அதற்குப் பரிகாரமாக இன்று என் கையால் நீங்கள் சாப்பிட்டுத்தான் போக வேண்டும்' என்று சொல்லி கணப் பொழுதில் இலை போட்டாள்.

பரபரவென்று பரிமாற ஆரம்பித்தாள். அவர் சாப்பிட்டு விடைபெற்றுப் போய்விட்டார்.அன்று மாலை ராமானுஜர் வீடு திரும்பியபோது தஞ்சம்மா ஓடோடி வந்து வரவேற்றாள். 'அப்பா கடிதம் அனுப்பியிருக்கிறார். தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.''நல்ல விஷயம் தஞ்சம்மா. நீ இன்றே புறப்பட்டுவிடு.''நீங்கள்?''சில வேலைகள் இருக்கின்றன. முடித்துவிட்டு வருகிறேன்.'அவள் ஊருக்குப் போன மறுகணமே ராமானுஜர் பேரருளாளன் சன்னிதியை நோக்கி ஓடத் தொடங்கினார்.

'வந்துவிட்டேன் பெருமானே! இதைத் தவிர வேறு உபாயமில்லை என்று தெளிந்தேதான் அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு உன் தாள்தேடி வந்தேன். இந்தக் கணமே எனக்குத் துறவு தாருங்கள். இனி தாங்கமாட்டேன்.'அதற்குமேல் அவரைக் கதறவைத்துப் பார்க்கப் பேரருளாளனுக்கும் விருப்பமில்லை. அதனால்தான் அவன் திருக்கச்சி நம்பிக்கு உத்தரவு கொடுத்தான். அதனால்தான் அன்று அது நிகழ்ந்தது. ஊரே வியந்தது. உறவு துறந்து, பற்று துறந்து, பந்தம் அறுத்து, காஷாயம் தரித்த ராமானுஜரைக் கைகூப்பி வணங்கி நின்றது.'தஞ்சம்மாவைப் போன்ற ஒரு பேரழகி இத்தேசத்திலேயே கிடையாது. அவளையே துறக்கிறா ரென்றால் இவரது வைராக்கியம் எப்பேர்ப்பட்டது!' என்று வியக்காத வாயில்லை. ராமானுஜர் பெருமூச்சு விட்டார்.

அன்று மறந்த தஞ்சம்மாவை அதற்குப் பிறகு யாதவரின் தாயார் வந்து போனபோதுதான் அவர் நினைக்க நேர்ந்தது.

(நாளை தொடரும்...)


writerpara@gmail.com

- பா.ராகவன் 





கல்லைக் கரைத்தவள்

Advertisement




Ramanujar Download
யாதவப் பிரகாசரின் தாயார், வீடு சென்றடைய வெகு நேரம் ஆகிவிட்டது. பாடசாலைத் திண்ணையை ஒட்டிய சுவர் மீதிருந்த மாடத்தில், சிறு அகல் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. யாரோ படுத்திருப்பது தெரிந்தது. 

'யாரப்பா அங்கே?'குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தது தனது மகனேதான் எனத் தெரிந்ததும், அவளுக்குச் சற்று பயமாகிவிட்டது. யாதவன் திண்ணைக்கு வந்து படுக்கிற வழக்கமில்லையே? அதுவும் விளக்கு வைத்து ஒரு நாழிகை கூட ஆகியிருக்காத சமயம். பெரும்பாலும் அந்நேரத்தில் யாதவர் முற்றத்து நிலவு வெளிச்சத்தில் அமர்ந்திருப்பார். சகாயத்துக்கு ஒரு விளக்கு வைத்துக்கொண்டு ஏதாவது சுவடி புரட்டிக் கொண்டிருப்பார். படிக்கத் தோன்றாத தினங்களில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவதும் உண்டு. 'மகனே, என்ன ஆயிற்று உனக்கு? எதற்காக வாசலுக்கு வந்து படுத்திருக்கிறாய்?' 'உள்ளே வரக் காலனும் தயங்குகிறானோ என்று தோன்றியது தாயே. அவனுக்கு வசதியாகத்தான் நானே வெளியே வந்து படுத்தேன்.' அவள் பெற்றவள். சன்னியாசி என்றாலும் மகன் அல்லவா? விரக்தியின் விதவிதமான வெளிப்பாடுகளை அந்நாள்களில் அவள் யாதவப் பிரகாசரிடம் தினமும் கண்டுகொண்டிருந்தாள்.

என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. யோசிக்கத் தெரியாதவன் என்றால் எப்படியும் வளைத்துவிட முடியும். பண்டிதன் என்றாலும் பாசத்தால் வென்றுவிடலாம். ஆனால், துறந்தவனுக்கான சாவித்துவாரம் எது? சட்டென்று அவள் மனக் கண்ணில் ராமானுஜர் ஒரு கணம் வந்து போனார். 'அம்மா நீங்கள் சாப்பிட்டீர்களா?''இல்லையப்பா. நீயும் பசியோடுதான் இருப்பாய். பிரசாதங்கள் இருக்கின்றன. அதைச் சாப்பிடலாமல்லவா?'
தயங்கித்தான் கேட்டாள். துணி சுற்றி எடுத்து வந்த பிரசாதத் தொன்னைகளை முன்னால் எடுத்து வைத்தாள். யாதவர் அவற்றைத் தொடவில்லை. 'எனக்குப் பசியில்லை' என்று சொன்னார். 'காஞ்சிக்குப் போயிருந்தீர்களோ?' அரைக் கணம் யோசித்த அந்தப் பெண்மணி, இன்று இதற்கு ஒரு முடிவு கட்டிவிடுவது என்று தீர்மானித்துக்கொண்டு, 'ஆம் மகனே. காஞ்சிக்குத்தான் போயிருந்தேன். ராமானுஜரை தரிசித்துவிட்டு வருகிறேன்' என்று சொன்னாள்.
'ராமானுஜரையா?!' அந்தத் தாய் அப்போது தன் மகனுக்கு ஞானாசிரியனாகிப் போனாள். அத்வைத சித்தாந்தத்தில் ஊறி முறுக்கேறிய கட்டை அது. அகம் பிரம்மம் என்பதை, அகம் அழித்துச் சரணாகதி அடைந்தால் மட்டுமே பிரம்மம் என்று புரியவைக்கத் தொடங்கினாள். 'மகனே, சாத்திரங்களில் மேலானது, தாழ்வானது என்று ஏதுமில்லை.

ஆனால் நீ நிம்மதியாக இருக்கிறாயா என்று யோசித்துப் பார். உன் மனத்தில் அமைதி என்று ஒன்று தென்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்று எண்ணிப் பார். துறந்தவனுக்குத் துயரமில்லை என்பது உண்மையானால் உன்னை வாட்டும் கொடுந்துயரங்களின் ஊற்றுக்கண் எது என்று சிந்தித்துப்பார்.' அம்மா என்று உள்ளுக்குள் உடைந்தார் யாதவப் பிரகாசர். 'மூவுலகையும் ஆளும் நாராயணனின் திருவடிக் கமலங்களின் பிரகாசத்தை, நான் ராமானுஜரின் முகத்தில் கண்டேன் மகனே. தெளிவு என்றால் அது. தீர்மானம் என்றால் அது. எத்தனை அமைதி, எவ்வளவு விவேகம்! நுாறு நுாறு பேராக, ஆயிரம் ஆயிரம் பேராக மக்கள் அவரை அண்டிச் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சாஸ்திரங்களில் நீ ஆண்டுக்கணக்கில் பூச்சி பிடித்து மூளை மரத்துப் போய்விட்டாய். பக்தி எளிமையானது. சாலையில் செல்லும் சிறு குழந்தை தன் தாயின் விரல் பிடித்து நடப்பது போல, அவன் தாளைப் பற்றிக்கொள்ள வழி காட்டுகிறார் ராமானுஜர்.

சரணாகதிக்குக் கால தேச நியமனங்கள் கிடையாது. நீ தகுதியுள்ளவன், நீ தகுதியற்றவன் என்ற பேதம் கிடையாது. இதற்குத்தான் இறைவனை நாடலாம், இன்னின்ன காரணங்களுக்குக் கூடாது என்ற சட்டதிட்டம் கிடையாது...' 'ராமானுஜர் அப்படிச் சொன்னாரா?' 'ஆம் மகனே. உயிர் போகும் நேரத்தில் தன்னைக் கூவியழைத்த கஜேந்திர யானைக்கு அவர் எதைக் கொடுத்தாரோ, அதையேதான் மானம் போகும் நேரத்தில் அழைத்த பாஞ்சாலிக்கும் கொடுத்தார். அது நிபந்தனையற்ற அன்பு. கட்டற்ற பெருங்கருணை.' 'ஆனால் அம்மா, சாஸ்திரங்கள் போட்டுத்தருகிற பாதையில் போவது தானே எனது தருமம்? நான் நம்பிய சித்தாந்தத்துக்காக என் குலம் துறந்தவன் நான். எனக்குக் குடுமி கிடையாது. பூணுால் கிடையாது. ஏகதண்ட சன்னியாசியாக எத்தனைக் காலமாக இருந்துவிட்டேன்!' 'புரிகிறது மகனே. இது எதுவுமே அவசியமில்லை என்கிறார் ராமானுஜர். உன்னால் தலைக்கு மேலே கைகளைத் துாக்க முடிந்தால் போதும். துாக்கிய கரங்களைக் குவித்தால் போதும். 'உற்றோ மேயாவோம், உமக்கேநாம் ஆட்செய்வோம்' என்று அவன் பாதங் களைப் பற்றிக்கொண்டால் போதும். மற்ற அனைத்தும் அநாவசியம் மகனே.' யாதவர் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தார்.
நினைவு தெரிந்த நாள்முதல் அவர் பின்பற்றிய சித்தாந்தத்தை ஒன்றுமில்லை என்று அவரைப் பெற்ற தாயே விவரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். சரிதான். என் சித்தாந்தம் எனக்கு என்ன சேர்த்தது? அகம்பாவத்தையும், பொறாமைத் தீயையும், பொங்கிய துவேஷத்தையும் சுமந்து கொண்டுதானே காலம் முழுதும் திரிந்திருக்கிறேன்? கண்ணெதிரே ராமானுஜர் கடைத்தேற ஒரு வழி காட்டுகிறார்.

ஜாதி பேதமற்ற ஒரு மாபெரும் சமூகம். திருமால் அடியார் என்னும் ஒற்றை அடைமொழி. 'அதுதான் மகனே விஷயம். மனத்தைப் பொதி சுமக்கும் கழுதை யாக்கிக் கொண்டு விட்டாய் நீ. அவர் இறக்கி வைத்துவிட்டு சிறகு விரித்துப் பறக்கச் சொல்லுகிறார். என்ன கஷ்டம் உனக்கு?' அன்றிரவு முழுதும் அந்தத் தாய் தன் மகனுடன் பேசிக்கொண்டே இருந்தார். அவரது விருப்பமெல்லாம் மிக எளிதானது. அந்திமக் காலத்தில் இருக்கிற தனது மகன், கண்மூடும்போதாவது கவலை களற்று நிம்மதியாக இருக்க வேண்டும். 'நாராயணன் உனக்கு அந்த நிம்மதியைக் கொடுப்பான். ராமானுஜர் உன்னை அந்த நாரணனுக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்று நிறுத்தக்கூடியவர். இது உன்னைப் பெற்றவள் கருத்து. இதற்குமேல் உன் விருப்பம். நேரமாகிவிட்டது. கொஞ்சமாவது துாங்கு.' என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். மறுநாள் யாதவப் பிரகாசர் விடியும் நேரம் கிளம்பி விட்டார்.
'போகிறபோது எங்கே என்று கேட்கக்கூடாது. நீயே சொல்லிவிட்டுப் போ' என்றாள் அவரது தாயார்.'எனக்கு இன்னும் பல சந்தேகங்கள் இருக்கின்றன அம்மா. நான் ராமானுஜரைப் பார்த்து விளக்கம் கேட்கப் போகிறேன்.' அவளுக்குப் புரிந்துவிட்டது. புன்னகை செய்தாள். ஆசீர்வதித்து அனுப்பி வைத்தாள்.

(நாளை தொடரும்...)


writerpara@gmail.com

- பா.ராகவன் 
கோவிந்த ஜீயர்
Advertisement




Ramanujar Download
வழி முழுக்க யாதவப் பிரகாசருக்கு ஒரே சிந்தனைதான். அவர் சடங்குகளை விட்டொழித்தவர். பூரண அத்வைத சித்தாந்தி. தனக்குள் இறைவனைக் காண விரும்பி, தன்னையே இறைவனாகக் கருதிக்கொண்ட அகங்காரத்தின் பிடியில் தன்னைக் கொடுத்தவர். ஆனால், சந்தேகமின்றி சன்னியாசி. அந்தணர்களின் அடையாளங்களாகப் பார்க்கப்பட்ட குடுமியோ, பூணுாலோ அவருக்குக் கிடையாது. ஜாதி துறக்க முடிந்தவருக்கு மீதி துறக்க முடியாது போனதுதான் பிரச்னை.
ஆனால், வயோதிகம் அவருக்கு சற்று நிதானத்தை அளித்திருந்தது. அதுநாள் வரை செய்த காரியங்கள் பற்றிய மீள் பரிசீலனையில், தன்னைத் தானே அவர் வெறுக்கத் தொடங்கியிருந்தார். அவரது ஆணவம், கல்வியால் வந்தது. தானறிந்த வேதமும், தனையறிந்த உலகமும் என்றும் தன்னை உச்சத்தில் உட்கார வைத்திருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், வேதத்தின் உச்சத்தில் உள்ளவன் வேறொருவன் அல்லவா? என்றும் உள்ளவனும், எங்கும் உள்ளவனுமான பரம்பொருளை உணர்த்துகிற கருவியல்லவா அது? சாமரத்தை வீச வேண்டிய திருப்பணியில் உள்ளவன், தனக்கே வீசிக்கொள்ள நினைப்பது விபரீதம். ஊர் சிரிக்கும். அதுதான் நடந்தது. உலகு எள்ளி நகையாடும். அதுவும் நிகழ்ந்தது. நேரில் கும்பிட்டு நகரும் ஜனங்கள், முதுகுக்குப் பின்னால் அவரது ஆணவத்தைக் குறிப்பிட்டு இழித்துப் பேசியதை அவர் அறிய நேர்ந்தபோதுதான் அவருக்குத் தனது தவறு புரிந்தது.
மறுபுறம், தன்னிடம் பயில வந்த ராமானுஜன் தனியொரு பாதை அமைத்து மேலே மேலே போய்க் கொண்டிருந்ததையும் அவர் விழிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார். ஆணவமற்ற ஆத்மா. அத்தனை பேரையும் அரவணைக்கிற ஆத்மா. ஒரு காழ்ப்புண்டா? சிறு துவேஷமுண்டா? பழி வாங்கும் சிந்தையுண்டா! 'அம்மா, நான் அவனைக் கொல்ல நினைத்ததை அவன் அறிவான். ஆனாலும், ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று என்னிடம் அவன் இருந்த இறுதி நாள் வரை கேட்கவில்லை.'இரவெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். 'மகனே, தன்னை மையப்படுத்தி உலகைப் பார்க்கிறவர்களுக்கும், பரம்பொருளான நாரணனை மையமாக்கி அவன் பாதாரவிந்தங்களில் தன்னைச் சேர்க்கத் துடிக்கிறவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். அவர் இல்லாது போனால் உனக்கு நல்லது என்று நீ நினைத்தாய். அவர் இருந்தால் ஊருக்கு நல்லது என்று இறைவன் நினைத்தான். யார் நினைப்பு வெல்லும்?' அன்றிரவு முழுதும் யாதவர் துாங்கவில்லை. தாம் செய்த பாவங்களுக்கெல்லாம் ஒரே பிராயச்சித்தம் இம்மாபெரும் பூமியை முழுதாக ஒருமுறை பிரதட்சணம் செய்வதுதான் என்று அவருக்குத் தோன்றியது.
விடிவதற்குச் சற்று முன்னால் அவர் கண்ணயர்ந்தபோது ஒரு கனவு வந்தது. கனவில் கேட்ட குரல் திடுக்கிட்டு எழ வைத்தது. 'யாதவப் பிரகாசா! நீ பூமியை வலம் வருவதும், எனது பக்தனான ராமானுஜனை வலம் வந்து பணிவதும் ஒன்றேதான்.' அதன்பிறகுதான் அவர் கிளம்பினார். ஆனால், அப்போதும் மனத்தில் சிறு குழப்பம். ஒருவேளை பிரமையாக இருக்குமோ? ராமானுஜர் இதனை ஏற்பாரா? தன்னை அங்கீகரிப்பாரா? தனது பாவங்களை மன்னிப்பாரா? காஞ்சிக்குப் போய்ச் சேர்ந்ததும் அவர் நேரே திருக்கச்சி நம்பியைச் சந்தித்துத் தனது சந்தேகத்தைக் கேட்டார். நேரடியாகக் கூடச் சொல்லவில்லை. அதிலும் பூடகம். 'என் மனத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அது சரியா என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்வீர்களா?' என்ன சந்தேகம் என்று திருக்கச்சி நம்பி கேட்கவில்லை. அத்வைத சிங்கம் இன்று அடிபணிந்து வந்து நிற்கிறது. ஒரு சரித்திரத்தின் தொடக்கப்புள்ளியாக விளங்கப் போகிற சம்பவ நாள் நெருங்கி வருகிறது. நாம் எதற்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்?'ஆகட்டும் சுவாமி. நீங்கள் நாளை வாருங்கள்.' என்றார் திருக்கச்சி நம்பி.
யாதவர் காஞ்சியிலேயே காத்திருந்தார். மறுநாள் பொழுது விடிந்ததும் அடித்துப் பிடித்துக் கொண்டு திருக்கச்சி நம்பியை ஓடோடிச் சென்று சந்தித்தார். 'அருளாளனைக் கேட்டீர்களா? உமக்கு என்ன பதில் கிடைத்தது?''அவன்தான் ஏற்கெனவே உமது கனவில் வந்து விடை சொல்லி விட்டானாமே? அதையே செய்யச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.' ஒரு கணம்தான். கதறி விட்டார் யாதவப் பிரகாசர். எப்பேர்ப்பட்ட மனிதர் இவர்! சக மனிதனிடம் பேசுவதுபோல இறைவனுடன் பேசுகிற வல்லமையெல்லாம் எத்தனை பேருக்கு சாத்தியம்? அப்படியே கைகூப்பி நின்றார். மேற்கொண்டு எதுவுமே கேளாமல், ராமானுஜரின் மடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அன்று அது நடந்தது. 'ராமானுஜரே! நான் யாதவப் பிரகாசன் வந்திருக்கிறேன்.' மேனி நடுங்க தனது முன்னாள் சீடரின் எதிரே, கூனிக் குறுகிப் போய் வந்து நின்றார் யாதவர். 'சுவாமி வர வேண்டும். நலமாயிருக்கிறீர்களா?' சொற்களைத் தேடித் தவித்துக் கொண்டிருந்த யாதவப் பிரகாசர், ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு தனது அகங்காரத்தை உருவி எடுத்து ராமானுஜரின் முன்னால் வைத்து வணங்கினார். 'நான் கதி பெற வழிகாட்டுங்கள். என் சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கள். சத்யம், ஞானம், அனந்தம் பிரம்மத்திலேயே நாம் மீண்டும் ஆரம்பித்தாக வேண்டும்.'ராமானுஜர் புன்னகை செய்தார்.
தன்னருகே இருந்த கூரத்தாழ்வானைப் பார்த்தார். 'இவர் உமக்கு அனைத்தையும் விளக்குவார்' என்று சொன்னார். ஆழ்வான் ஓர் அறிவுக்கடல். பெரும் பண்டிதர். தனது ஞானம் முழுதும் தன் குரு ராமானுஜரின் ஆசியெனப் பணிந்து வாழ்பவர். அன்று கூரத்தாழ்வான் யாதவரின் அனைத்து சந்தேகங்களுக்கும் ராமானுஜரின் சார்பில் பதில் சொன்னார். தத்துவச் சந்தேகங்கள். சிந்தாந்தச் சிடுக்குகளின் மீதான சந்தேகங்கள். வேதாந்த உட்பொருள் சார்ந்த விளக்கங்கள். சத்தியமும், ஞானமும் மட்டுமல்ல. சகலமும் பரம்பொருளின் குணங்கள்தாம். உலகம் ஒரு மாயை அல்ல. ஏன் அப்படி எண்ணிக்கொள்ள வேண்டும்? கயிறு ஏன் பாம்பாகத் தெரிய வேண்டும்? கயிறைக் காணும்போதே பாம்பின் தலைமீது நின்று நடமாடியவனின் பேரெழிலும், பெருங்கருணையுமல்லவா நம்மை ஆட்கொள்ள வேண்டும்? மையலேற்றி மயக்க அவன் முகம் மட்டுமே மாயமந்திரம்! கூரத்தாழ்வான் வைணவத்தின் சகல தரிசனங்களையும் யாதவர் முன் விளக்கி முடித்தபோது, யாதவர் கைகூப்பி எழுந்து நின்றார். 'ராமானுஜரே! நீர் யார் என்பதை உமது சீடரின் விளக்கங்கள் எனக்குப் புரியவைத்துவிட்டன. இனி நான் யாராக இருக்கவேண்டுமென்று நீங்களே தீர்மானம் செய்யுங்கள்' என்று சொல்லி ராமானுஜரை வலம் வந்து தாள் பணிந்தார். ராமானுஜர் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தார். கோவிந்த ஜீயர் என்ற பெயர் வழங்கி, தன்னோடு சேர்த்துக் கொண்டார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்





ஒரே ஒரு பிரார்த்தனை

Advertisement




Ramanujar Download
அப்போதுதான் பாடி முடித்திருந்தார். அரங்கனைச் சேவித்துவிட்டு ஆளவந்தாரின் சீடர்கள் அனைவரும் கருடாழ்வார் சன்னிதிப் பக்கம் வந்துகொண்டிருந்தபோது இரண்டு பேர் ஓடி வந்தார்கள்.

'பெரிய நம்பிகளே! காஞ்சியில் ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. இது இந்நுாற்றாண்டின் அதிசயம். பேரருளாளனின் பெருங்கருணை இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது!'மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, பரவசத்தில் தோய்த்த வார்த்தைகளைக் கோக்கத் தெரியாமல் அவர்கள் அள்ளிக் கொட்டினார்கள்.பெரிய நம்பிக்குக் காஞ்சி என்றதுமே ராமானுஜரின் நினைவு வந்தது. தமது இறுதி நாள் நெருங்கிய நேரத்தில், 'அவரை அழைத்து வா' என்று ஆசார்யர் ஆளவந்தார் தன்னைக் காஞ்சிக்கு அனுப்பிவைத்த சம்பவம் நினைவுக்கு வந்தது. பிறகு ஆளவந்தார் மறைந்த பின்னர் மீண்டும் காஞ்சிக்குச் சென்றது. வழியில் அவரை மதுராந்தகத்தில் சந்தித்தது. ஏரி காத்த ராமர் கோயிலில் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தது. ராமானுஜர் வீட்டுக்கே போய்த் தங்கி, பிரபந்தம் சொல்லிக் கொடுத்தது. தஞ்சம்மாவின் தண்ணீர்த் தகராறு. சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி வந்தது.

'நம்பிகளே, எந்த உலகில் இருக்கிறீர்? நாங்கள் சொல்வது கேட்கிறதா?'வந்தவர்கள் கேட்டார்கள். உண்மையில் பெரிய நம்பிக்கு அவர்கள் விவரித்துச் சொன்ன சம்பவத்தில் ஒருவரி கூட மனத்தில் ஏறவில்லை. அவரது எண்ணமெல்லாம் பழைய சம்பவங்களையே சுற்றி வந்தது. 'என்ன சொன்னீர்கள்?' என்று திரும்பக் கேட்டார்.திருவரங்கப் பெருமாள் அரையர் மீண்டும் எடுத்துச் சொன்னார். 'யாதவப் பிரகாசர் ராமானுஜரின் சிஷ்யராகி, ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு விட்டாராம். ராமானுஜர் அவருக்கு கோவிந்த ஜீயர் என்று பெயரிட்டு புத்தகம் எழுதப் பணித்திருக்கிறா ராம்.' நம்பி புன்னகை செய்தார்.

'இது நடக்காதிருந்தால்தான் நான் வியந்திருப்பேன்!''எப்படி? எப்படிச் சொல்கிறீர்கள்? யாதவரின் மனமாற்றம் எதிர்பார்க்கக்கூடியது இல்லையே?' 'ஆனால் ராமானுஜரின் பராக்கி ரமம் நாம் அறிந்தது அல்லவா? நாமெல்லாம் நமது ஆசாரியரின் கூடவே இருந்தவர்கள். ஆனால், வாழ்வில் ஒருமுறைகூட நேரில் சந்தித்துப் பேசியிராத ராமானுஜரை அல்லவா அவர் தமக்குப் பிறகு வைணவ உலகின் ஆசார்ய பீடாதிபதியாக எண்ணினார்? ஆளவந்தார் நெஞ்சையே ஆளப் பிறந்தவர் அல்லவா அவர்? யாதவரின் அகந்தை சரியான இடத்தில் நொறுங்கியிருக்கிறது. தமது சீடருக்கே சீடரான குரு இவ்வுலகில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். யாதவர் பெயர் இனி ராமானுஜர் பெயருள்ள வரை நிலைத்திருக்கும்.'அவர்கள் அத்தனை பேரும் பரவச நிலையில் இருந்தார்கள். காஞ்சிக்குச் சென்று வந்தவர்கள் கதை கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ராமானுஜர் துறவு ஏற்றது குறித்து. முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் முதல் சீடர்களாகச் சேர்ந்தது குறித்து. அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் திரள் திரளாகப்
பெருகி வந்து அவரை தரிசித்து, வைணவத்தை வாழ்க்கை முறையாக ஏற்பது குறித்து. 'ஐயா, காஞ்சி மக்கள் அவரைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம் ஒன்றுதான்.

இப்படியொரு அகந்தையே இல்லாத மனிதன் இப்பூமியில் வாழமுடியுமா என்று அவர்கள் வியக்கிறார்கள். அத்வைதிகளுடன் வாதம் செய்து வெல்லும்போதுகூட கூப்பிய கரங்களை இறக்குவதில்லையாம்.' 'அரையரே, நமது ஆசாரியர் ராமானுஜரைச் சந்திப்பதற்காகக் காஞ்சி சென்ற தருணம் உமக்கு நினைவிருக்கிறதா?' என்றார் பெரிய நம்பி. யாரால் மறக்க முடியும்? சரித்திரம் மறக்காத ஒரு பக்கச் சந்திப்பு அது!

யாதவரின் கொலை முயற்சியில் இருந்து தப்பித்து ராமானுஜர் காஞ்சி வந்து சேர்ந்திருந்த சமயம் அது. அவரைக் காத்ததும் மீட்டதும் பேரருளாளனே என்கிற தகவல், பனிக் காற்றைப் போல் இண்டு இடுக்கு விடாமல் தேசமெங்கும் பரவிக் கொண்டிருந்தது. ஊர் திரும்பிய யாதவர் மீண்டும் அவரைப் பாடசாலைக்கு வரச் சொன்னார். அதனால் பாதகமில்லை என்று திருக்கச்சி நம்பியும் சொன்னதால், ராமானுஜர் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார்.
அந்தச் சமயத்தில்தான், திருவரங்கத்தில் இருந்த ஆளவந்தாரை இந்தத் தகவல் சென்று தொட்டது. அருளாளன் அன்புக்குப் பாத்திரமான ஒரு பிள்ளை யாதவரிடம் வாசித்துக் கொண்டிருக்கிறானா? வியப்பாக இருக்கிறதே. நான் அவனைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார். ஆளவந்தார் திடகாத்திரமாக இருந்த காலம் அது. எனவே நினைத்த மாத்திரத்தில் கிளம்பியும் விட்டார். காஞ்சியில் ஆலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியும் அவரது மாணவர்தாம். ஸ்ரீசைல பூர்ணரைத் திருப்பதிக்கு அனுப்பியது போலத்தான் நம்பியை அவர் காஞ்சியில் விட்டிருந்தார்.
எனவே ஆசார்யர் வருகிறார் என்றதும் நம்பி பரபரப்பாகிவிட்டார். கோயில் மரியாதைகளுடன் ஊர் எல்லைக்கே சென்று அவரை வரவேற்று அழைத்து வந்தார். சன்னிதியில் சேவை ஆனதும், ஆளவந்தார் திருக்கச்சி நம்பியுடன் பொதுவாகச் சில விஷயங்கள் பேசி யபடி வெளியே வந்தார். அப்போது அது நடந்தது. யாதவப் பிரகாசர் கோயில் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். பின்னால் அவரது மாணவர்கள். 'நம்பி, அவர்தானே யாதவப் பிரகாசர்?'
'ஆம். அவரேதான்.''அவரது குழுவில் அதோ ஒரு பிள்ளை நெடுநெடுவென வளர்த்தியாக, சூரியனைக் கரைத்துச் செய்தாற்போன்ற பொலிவுடன் வருகிறானே, அவன் யார்?' 'குருவே, அவர் பெயர் ராமானுஜன். யாதவரிடம் வாசிக்கும் அவர்தான் அருளாளனுக்குத் தீர்த்த கைங்கர்யமும் செய்து கொண்டிருக்கிறார்.'ஆளவந்தார் புன்னகை செய்தார்.

திருக்கச்சி நம்பி ராமானுஜரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவரிடம் எடுத்துச் சொன்னார். 'சுவாமி சத்யம், ஞானம் அனைத்தும் பிரம்மத்தின் குணங்கள் என்று இவர் சொல்லப் போக, யாதவருக்கு இவரைப் பிடிக்காது போய்விட்டது. அன்று ஆரம்பித்து அவர்களிடையே அடுக்கடுக்காக எத்தனையோ பிரச்னைகள். காசிக்கு அழைத்துச் சென்று கொன்றுவிடவே பார்த்திருக்கிறார் யாதவர். ஆனால் பேரருளாளன் காப்பு உள்ளது இவருக்கு.'அந்தக் கணத்தில் ஆளவந்தார் முடிவு செய்தார். வைணவ குருபீடம் தனக்குப் பிறகு இவரைச் சேர வேண்டியது.நம்பி ராமானுஜரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தத் தயாராகத்தான் இருந்தார். ஆனால் அது அவசியமில்லை என்று ஆளவந்தார் நினைத்தார். விறுவிறுவென்று மீண்டும் சன்னிதிக்குள் சென்றார். ஒரே ஒரு பிரார்த்தனை.'இவர் இருக்கவேண்டிய இடம் யாதவரின் குருகுலமல்ல. வைணவ உலகம் இவருக்காகக் காத்திருக்கிறது. மற்றபடி உன் சித்தம்.'கண்மூடி ஒரு நிமிடம் நின்றவர், உடனே கிளம்பிப் போயே விட்டார்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் 




வாழ வைப்பார்! (17)

Advertisement




Ramanujar Download
ஆளவந்தார் காஞ்சி சென்று திரும்பிய சில காலம் கழித்து இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, ராமானுஜர் நிரந்தரமாக யாதவப் பிரகாசரை விட்டு வெளியேறியது. மன்னர் மகளின் மனநோய் நீங்கியதை அடுத்து நிகழ்ந்தது அது. இரண்டாவது சம்பவம், ஆளவந்தாருக்கு உடல் நலன் குன்றிப் போனது.

அவருக்குப் புற்றுநோய் இருந்தது. எத்தனைக் காலமாக என்று யாருக்கும் தெரியாது. நோயின் தீவிரம் அதிகரித்தபோது அவர் செயல்பாடற்றுப் போனார். கொல்லும் வலியைக் காட்டிக்கொள்கிற மனிதரில்லை அவர். ஆனால் உடன் இருப்பவர்களுக்கு ஆசாரியரின் அவஸ்தை தெரியாதா?

'ஆசாரியரே! உமது சீடனுக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. அளவிட முடியாத ஞானத்தையும், நல்லறிவையும் எனக்கு அள்ளித்தந்த தாங்கள் இதனையும் ஏற்றுக் கொடுத்தருள வேண்டும்!' கேட்டவர் மாறனேர் நம்பி. மாறன் என்பது நம்மாழ்வாரின் பெயர். நம்மாழ்வாருக்கு நிகராக வைணவ உலகம் கருதி மதித்த மகான் அவர். குரு பக்தியில் ஈடு இணையற்ற பெரியவர். அவர் கேட்கிறார். அதுவும் முதல் முறையாக 'தன் விருப்பம்' என்ற ஒன்று.
'என்ன வேண்டும் நம்பி?'
'நீங்கள் கொடுப்பதாக முதலில் வாக்களியுங்கள். அதன்பின் சொல்கிறேன்.'
'சரி, அப்படியே ஆகட்டும். சொல், என்ன வேண்டும்?'
'வைணவம் தழைக்க நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டியது அவசியம். இந்த நோய் உங்களை விழுங்கிவிட்டால் நாங்கள் அனாதைகளாகிப் போவோம். எனவே உங்களுக்கு வந்திருக்கிற ராஜபிளவையை ஆசாரியப் பிரசாதமாக நீங்கள் எனக்குத் தந்தருள வேண்டும். நான் இருப்பது என்
குடும்பத்துக்கு மட்டுமே நல்லது. நீங்கள் இருந்தால் நாட்டுக்கு நல்லது.'சிலிர்த்துவிட்டது ஆளவந்தாருக்கு. ஒரு கணம் கண்மூடி யோசித்தார். என்னவென்று கேட்காமல், தருவதாக வாக்களித்துவிட்ட சொல்லும் முக்கியம். நல்ல மனம் கொண்ட சீடனின் நல்வாழ்வும் முக்கியம். எனவே, தனது புண்ணியங்களைப் புண்ணுக்குள் செலுத்தி, அதன் ஒரு பகுதியை மாறனேர் நம்பிக்கு மாற்றினார்.
'நம்பி! நீங்கள் கேட்டுவிட்டதால் இதனைச் செய்திருக்கிறேன். ஆனால் எனது இறுதி நெருங்கிவிட்டது என்பதை நான் அறிவேன். உமது புகழை உலகறியச் செய்ய இச்சம்பவம் ஒரு சாட்சியாகட்டும்.'
ஆளவந்தார் இறுதியாகப் படுத்தார். அவரது வலியும் வேதனையும் சற்றுக் குறைந்திருந்தது. ஆனால் அவரது சீடர்களுக்கு வருத்தம் மிகுந்திருந்தது.
'ஆசாரியரே! இப்படி எங்களைத் தனியே விட்டுச் செல்கிறேன் என்கிறீர்களே? இனி எங்களை யார் காப்பார்?' என்று பெரிய நம்பி அவரது கால்களைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார்.
'காஞ்சியில் நான் அவரைக் கண்டேன். பார்த்த கணத்திலேயே அவர் ஆதிசேஷனின் அம்சம் என்று என் மனத்தில் பட்டது. ஞானத்தின் செஞ்சுடர் தகதகக்கும் அத்தெய்வீக முகம் இப்போதும் என் கண்ணில் நிற்கிறது நம்பி. ராமானுஜர் இப்போது யாதவப் பிரகாசரை விட்டு விலகி, பேரரு
ளாளனுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். வைணவ உலகம் அவரால் தழைக்கும். அடியேன் ஆளவந்தார். அவர் வாழ வைப்பார்!'
குருவின் மனம் சீடர்களுக்குப் புரிந்துபோனது. தாமதம் பயனில்லை. இன்றே கிளம்புங்கள் என்று அனைவரும் துரிதப்படுத்தி, பெரிய நம்பியைக் காஞ்சிக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஒளியின் வேகத்தில் கால்கள் இயங்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்! ஆனால் அவர் காஞ்சியைச் சென்றடைய ஒரு வார காலமாயிற்று. திருக்கச்சி நம்பியைச் சந்தித்து ஆசாரியரின் விருப்பத்தைச் சொன்னார்.
'வைணவ தரிசன பீடம் ராமானுஜருக்காகக் காத்திருக்கிறது நம்பிகளே.
நமது ஆசாரியரின் எண்ணம் அதுதான். அவர் வருவாரா? மரணப் படுக்கையில் இருக்கும் ஆளவந்தார் தமது இறுதிக் கணத்துக்கு முன்னால் இளையாழ்வாரைச் சந்தித்துவிட வேண்டும். எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்.'
ராமானுஜரின் தாயார் காந்திமதி அப்போது காலமாகியிருந்தார். அந்தத் துயரின் சுவடுகள் மறைந்திராத நேரம். அருளாளன் திருப்பணியில் மட்டுமே அவர் ஆறுதல் தேடிக்கொண்டிருந்தார்.
'இது அவர் வரும் நேரம்தான். நீங்கள் முதலில் பெருமாளைச் சேவித்துவிட்டு வாருங்கள். நாம் பேசுவோம்' என்றார் திருக்கச்சி நம்பி.
பெரிய நம்பி சன்னிதிக்குச் சென்றார். வையம் காக்கும் வரதராஜப் பெருமாள். கற்பூர வெளிச்சத்தில் கடலெனப் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த அவனது பேரருள் தன்னை நெருங்கி வருடுவதாக அவருக்குத் தோன்றியது. 'பெருமானே! என் வருகையின் நோக்கம் உனக்குத் தெரியும். வேண்டியது உனது அனுமதி ஒன்றே.'
கண்மூடி அவர் சில சுலோகங்களை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினார். ஆளவந்தார் இயற்றிய சுலோகங்கள்.
மிகச் சரியாக அந்நேரம் ராமானுஜர் சன்னிதிக்குள் நுழைந்தார். தான் அதுவரை கேட்டிராத அந்த சுலோகங்களின் கம்பீரத்திலும், ஆற்றல் மிக்க ஆராதனைகளிலும் மனம் பறிகொடுத்தவராக, 'ஐயா! இந்த சுலோகங்களை இயற்றியவர் யார்?' என்று கேட்டார்.
கண் திறந்து அவரைப் பார்த்தார் பெரிய நம்பி.
'இவர்தான் ராமானுஜர்.' என்று திருக்கச்சி நம்பி அறிமுகம் செய்தார்.
பரபரப்பாகிவிட்டது அவருக்கு. எங்கே தொடங்குவது, என்னவென்று சொல்லுவது, எப்படி அழைப்பது என்று கணப் பொழுதில் மனத்தில் எழுந்த நூறு வினாக்களில், எதை முதலில் விடுவிப்பது என்று புரியாமல் குழம்பி நின்ற கணத்தில் திருக்கச்சி நம்பியே எடுத்துக் கொடுத்தார்.
'அவர் இந்த சுலோகங்களைப் பற்றிக் கேட்டார்.'
'ஆம். இவை ஆளவந்தார் அருளிய சுலோகங்கள்.' பரவசமானார் ராமானுஜர். 'ஆ! ஆளவந்தாரா? வைணவம் தழைக்கப் பரமன் இவ்வையத்துக்கு அளித்த பெருங்கொடை அல்லவா அவர்! வாழ்வில் ஒருமுறையாவது அவரைத் தரிசித்துவிட மாட்டோமா என்று எத்தனைக் காலமாக நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் தெரியுமா?'
'திருவரங்கத்தில் இருக்கிறார். உடல்நலம் குன்றிய நிலையில், பேசவும் சக்தியற்றவராக...' அவர் முடிக்கவில்லை. 'கிளம்புங்கள். நான் உம்மோடு இப்போதே
திருவரங்கம் வருகிறேன். எனக்கு அவரைப் பார்த்தே தீரவேண்டும். உடனே. மிக உடனே.'
அது நடந்தது, பேரருளாளன் சித்தம். ராமானுஜர் வீட்டுக்குப் போகவில்லை. மனைவியிடம் சொல்லிக்கொள்ளவில்லை. சன்னிதியில் நின்றிருந்த பெரிய நம்பியை இழுத்துக்கொண்டு அப்படியே வீதிக்குப் பாய்ந்துவிட்டார்.
ஓட்டமும் நடையுமாகக் காஞ்சியில் இருந்து திருவரங்கம் சென்று சேரும் வரை இருவரும் ஆளவந்தாரைத் தவிர வேறு எதையுமே நினைக்கவில்லை.
ஆனால் விதி வேறாக இருந்தது. அவர்கள் திருவரங்கம் சென்று சேர்ந்தபோது ஆளவந்தார் காலமாகியிருந்தார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்
மூன்று விரல்
Advertisement




Ramanujar Download
காவிரியைக் கடந்து, திருவரங்கத்தின் எல்லையைத் தொட்டபோதே ஏதோ சரியில்லை என்று தோன்றியது. கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்த மக்களின் பதற்றமும், தவிப்பும் பெரிய நம்பிக்குக் குழப்பம் தந்தது. யாரையாவது நிறுத்தி விசாரிக்கலாம். ஏதாவது தகவல் வரும். ஆனால் அதற்கெல்லாம் நமக்கு அவகாசமிருக்கிறதா, தவிரவும் அது அவசியமானதாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

'ஆனால் இம்மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், ஒரே துக்கத்தின் ஓரங்களைப் பிய்த்துத் தம் முகங்களில் ஒட்டவைத்துக் கொண்டு போகிறாற் போலத் தெரிகிறது சுவாமி!' என்றார் ராமானுஜர்.

ஒரே துக்கம்! உணர்வளவில் ஒன்றுதான். ஆனால் அவரவர் துக்கத்தின் கனம் நிச்சயமாக வேறு வேறாக அல்லவா இருக்கும்?
'எதற்கும் விசாரித்து விடுவோமே?'
சரி என்று பெரிய நம்பி ஒருவரை அழைத்தார். 'எல்லோரும் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?'
'ஐயா உங்களுக்கு விவரம் தெரியாதா? ஆளவந்தார் சுவாமிகள் பரமபதம் அடைந்துவிட்டார்கள். திருக்கரம்பன் படித்துறையில் இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.'
ராமானுஜருக்கு நெஞ்சடைத்துப் போனது. பெரிய நம்பி ஐயோ என்று அலறியே விட்டார். நின்று பேசவோ, அழுது தீர்க்கவோ அவகாசமற்ற தருணம். எய்த அம்பைப் போல் அவர்கள் படித்துறையைப் பாய்ந்து அடைந்தபோது, ஆளவந்தாரின் திருமேனி அங்கு கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிலும் சீடர்கள். சூழ்ந்த பெரும் துயரம். நாலாபுறங்களில் இருந்தும் அவரது பக்தர்களும், அன்பர்களும் அந்த இடத்தை நோக்கி வந்தபடியே இருந்தார்கள்.
'நாம் மோசம் போய்விட்டோம் நம்பிகளே! ஆசாரியர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்!' என்று கதறினார் திருக்கோட்டியூர் நம்பி.
'அவரது நோயை நான் விரும்பிப் பெற்றதன் காரணமே அவரது மரணத்தை நான் களவாட நினைத்ததுதான். ஆனால் விதி இத்தனைக் குரூரம் காட்டும் என்று எண்ணவில்லை நம்பிகளே!' மாறனேர் நம்பி சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார்.
அரையர் ஒருபுறம் அழுது கொண்டிருந்தார். திருமாலையாண்டான் மறுபுறம் அழவும் தெம்பற்றுச் சரிந்து விழுந்திருந்தார். ஒவ்வொருவர் மனத்திலும் ஊடுருவியிருந்த அந்த மகான், அத்தனை பேரின் துக்கத்துக்கும் சாட்சியே போல சும்மா கிடந்தார்.
பெரிய நம்பி நம்ப முடியாமல் தமது ஆசாரியரின் திருமேனியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
'ஐயா, கண்ணைத் திறந்து பாருங்கள். நீங்கள் விரும்பிய மகாபுருஷனைக் காஞ்சியில் இருந்து அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் பார்க்க விரும்பியதாகச் சொல்லித்தான் அழைத்து வந்திருக்கிறேன். இப்போது இவருக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?'
அங்கிருந்த அத்தனை பேரும் அப்போதுதான் ராமானுஜரை கவனித்துப் பார்த்தார்கள். இவரா?
இவரேதானா? இவரைத்தான் நமது ஆசாரியர் தமது வாரிசாக மனத்துக்குள் சுவீகரித்து வைத்திருந்தாரா? ஆளவந்தார் மனத்தையே ஆண்டு வந்தாரென்றால் இவர் எப்பேர்ப்பட்ட யோகியாக இருப்பார்!
ராமானுஜர் யாரையும் பார்க்கவில்லை. எதையும் கவனிக்கவில்லை. யார் பேச்சும் அவர் சிந்தைக்குள் நுழையவில்லை. கிடத்தி வைக்கப்பட்டிருந்த ஆளவந்தாரின் திருமேனியையே சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
'குருவே சரணம். உம்மை நான் நேரில் தரிசித்ததில்லை. ஆனால் மனத்தில் எண்ணாதிருந்ததும் இல்லை. மிகச் சிறு வயதில் வீட்டுத் திண்ணையில் பாடம்
சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிற போது, சில சமயம் என் அப்பா உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வருகை தரும் என் மாமா பெரிய திருமலை நம்பி, மூச்சுக்கு மூச்சு உமது திருநாமத்தைத்தான் உச்சரித்துக்கொண்டே இருப்பார். திருக்கச்சி நம்பியுடன் பழக்கமான பிற்பாடு நாளைக்கொரு முறையாவது உம்மைப் பற்றி அவர் பேசாதிருந்ததில்லை. ஞானத்தின் பூரண வடிவான தங்களை என்றேனும் ஒருநாள் தரிசிப்பேன், உங்கள் தாள் பணிவேன் என்று தினமும் எண்ணிக்கொள்வேன். வைணவம் என்னும் பெரும் சித்தாந்தம் இப்பூவுலகில் தழைப்பதற்கு எம்பெருமான் உம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தான்.
இன்று நீங்கள் விடைபெற்று விட்டீர்கள். வீட்டில் தகப்பன் மறைந்தாலே குடும்பம் திண்டாடித் தெருவுக்கு வந்துவிடும். நீங்கள் ஒரு சமூகத்தின் தகப்பன் அல்லவா? இனி எங்களை யார் கரை சேர்ப்பார்?'
பெருகிய கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை. அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.
சட்டென்று ஏதோ இடறியது. ராமானுஜர் முகத்தில் கணப் பொழுது ஒரு குழப்பம் தோன்றியது.
'இது விசித்திரமாக இருக்கிறதே? ஆசாரியரின் வலக்கரத்தைப் பாருங்கள். மூன்று விரல்கள் மடங்கியிருக்கின்றன. முன்பே இவை இப்படித்தான் இருந்தனவா?'
அப்போதுதான் மற்றவர்கள் அதைக் கவனித்தார்கள். அவரது வலது கரத்தின் கட்டை விரல், ஆள் காட்டி விரல் தவிர, பிற மூன்று விரல்களும் மடங்கியிருந்தன.
'இல்லையே, நான் பார்க்கவில்லையே'
'நானும் கவனிக்கவில்லையே!'
யாரும் பார்த்திருக்கவில்லை. ராமானுஜர்தான் முதலில் கண்டது.
'ஆசாரியர் திருநாடு அலங்கரித்த நேரம் இம்மாதிரி மூன்று விரல்கள் மடங்கியிருக்கின்றன என்றால், அவை எதையோ உணர்த்தும் குறியீடாக எனக்குத் தோன்றுகிறது. அவரை அறிந்த உங்களில் ஒருவர்தாம் அவர் எதை இப்படி உணர்த்துகிறார் என்று சொல்ல வேண்டும்.'
பெரிய நம்பி திடுக்கிட்டுப் பார்த்தார். 'ஆம் ராமானுஜரே! நீங்கள் சொல்லும்போதுதான் நினைவுக்கு வருகிறது. ஆசாரியருக்கு மூன்று பெரும் விருப்பங்கள் இருந்தன. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன மகரிஷி எழுதிய உரையை அடியொற்றி, விசிஷ்டாத்வைத சித்தாந்தப் பிரகாரம் ஓர் உரை எழுதவேண்டும் என்பது அதில் முதலாவது.'
'சரி.'
'திருவாய்மொழிக்கு மிகத் துல்லியமான ஓர் உரை எழுத வேண்டும். வேதம் தமிழ் செய்த மாறனான நம்மாழ்வாரின் பெயர் விளங்கும்படியாக, தகுதியுள்ள ஒரு நபருக்கு அவரது திருநாமத்தைச் சூட்ட வேண்டும் என்பது இரண்டாவது அவா.'
'அடுத்தது?'
'விஷ்ணு புராணம் படைத்த பராசர பட்டர், மகாபாரதம் தந்த அவரது புதல்வர் வியாசர் இருவரது பெயர்களையும், காலமுள்ள வரையும் ஏந்திப் பெருமைப்படுத்தும் விதத்தில் வாழப் போகிறவர்களைக் கண்டடைந்து சூட்ட வேண்டும் என்பது மூன்றாவது விருப்பம்.'
ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி ஆளவந்தாரை தியானித்தார். பிறகு சொன்னார், 'ஆசாரியரின் ஆசியும் எம்பெருமான் திருவருளும் கூடுமானால் என் வாழ்
நாளுக்குள் இம்மூன்று ஆசைகளையும் நான் நிறைவேற்றுவேன்.'
துந்துபி முழங்கியது போல் ஒலித்த அந்தக் குரலின் உறுதியும், ஈர்ப்பும் அங்கு கூடியிருந்தவர்களைச் சிலிர்ப்புற வைத்தது. இவர்தான், இவரேதான், சந்தேக
மில்லை என்று ஒருமித்து முடிவு செய்தார்கள்.
அக்கணம் அது நிகழ்ந்தது. மூடியிருந்த ஆளவந்தாரின் மூன்று விரல்களும் விரிந்தன.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

அழைத்து வாரும் அரையரே!
Advertisement





Ramanujar Download
ஒன்றுமே நடவாதது போல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது காவிரி. ஊர் தோன்றிய காலம் தொடங்கி அனைத்துக்கும் சாட்சியாக அரங்கனுக்கு ஜோடி போட்டுக்கொண்டு கவனித்துக் கொண்டிருக்கிற நதி. மகிழ்ச்சியும் துயரமும் நதிக்குக் கிடையாது. ஆனால், எத்தனையோ மகிழ்ச்சித் தருணங்களுக்கும் துயரப் பொழுதுகளுக்கும் தனது இருப்பைச் சகாயமாக்கியிருக்கிறது.
இதே காவிரிக் கரையில் எத்தனை நாள், எத்தனை பொழுதுகள் ஆளவந்தாரோடு சத்விஷயம் பேசியபடி நடந்து சென்றிருக்கிறோம்! நம்பமுடியாத அபூர்வப் பிறப்பு அவர். நம்மாழ்வாரிடமிருந்து நேரடியாகத் தமிழ் மறைகளைப் பெற்ற நாதமுனியின் பேரன் வேறு எவ்விதமாகவும் இருந்துவிட முடியாதுதான். தமது ஞானத்தையும் சரி; தான் கற்ற பிரபந்தங்களின் உள்ளுறை பொருள்களையும் சரி. ஒரு நதியைப் போலவே வாரி வழங்கியவர் அவர். திருவரங்கக் கோயில் நிர்வாகம் ஒருபுறம். வைணவ தரிசன விஸ்தரிப்பு ஒருபுறம். ஆ, அதுதான் பெரிய சவால். எந்தச் சோழன் மறைந்தாலும், எந்தப் புதிய சோழன் வந்தாலும் தேசத்தில் சைவத்துக்குத்தான் மரியாதை. காணுமிடம் எங்கும் சிவத்தலங்கள். கால் படும் இடங்களில் எல்லாம் திருப்பணிகள்.
வைணவ தரிசனத்தை மூடி மறைத்துத்தான் பரப்ப வேண்டியிருந்தது.மன்னர்களும் மனிதர்களே அல்லவா? மனிதர்களால் எதைத் தடுத்துவிட முடிகிறது? ஒரு பூ மலரும் கணத்தில் யாரும் அதை நேரில் கண்டதில்லை. எல்லாப் பூக்களும் மலர்ந்தபடியேதான் இருக்கின்றன. யுகம் யுகமாக. இன்றுவரை ஒரு சாட்சி ஏது? ஆனால், ஆளவந்தார் எதைக் குறித்தும் கவலைப்பட்டதில்லை என்பதைப் பெரிய நம்பி நினைத்துப் பார்த்தார். 'ஆசாரியரே, உமக்குப் பின் எங்களுக்குக் கதிமோட்சம் தரப் போவது யார்?' என்று அவரது இறுதி நாள்களில் சீடர்கள் கதறியபோது கூட அவர் அமைதியாகத்தான் இருந்தார். ராமானுஜரை அழைத்து வரச்சொன்னதைக் கூட, எந்த நுாற்றாண்டிலோ எழுதி மறைக்கப்பட்ட ஒரு புராதனமான ஓலைச் சுவடியைத் தேடி எடுத்து துாசு தட்டும் விதமாகத்தான் வெளிப்படுத்தினார். என் விருப்பம் இது. எம்பெருமான் விருப்பம் என்னவோ அதுதான் நடக்கப் போகிறது என்கிற பாவனை. ஒருவேளை நோயின் கடுமை அளித்த உளச்சோர்வாகவும் இருக்கலாம்.
பலவிதமாக யோசித்தபடியே பெரிய நம்பி நதிக்கரையோரம் நடந்து கொண்டிருந்தார். சற்றுப் பின்னால் அவரது நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு யோசனைதான். பெரிய நம்பி எதற்கு இத்தனை யோசிக்கிறார்? ஆளவந்தாரின் விருப்பம் ராமானுஜர்தான் என்பது தெரிந்துவிட்டது. அவரது மடங்கிய விரல்கள் நிமிர்ந்த கணத்தில் அதைத் தவிர வேறு யோசனைக்கே இடமில்லை என்பது நிரூபணமாகிவிட்டது. அப்புறம் என்ன? ஒரு கணம் நின்று திரும்பிய பெரிய நம்பி அவர்களை உற்றுப் பார்த்தார். ஒரு கேள்வி கேட்டார். 'அரங்கன் சித்தம் அதுதான் என்றால் ராமானுஜர் ஏன் உடனே காஞ்சிக்குத் திரும்பிச் சென்றிருக்க வேண்டும்?''அதுதானே? காரியங்கள் முடிகிற வரைக்கும் இருந்த மனிதர், பெருமாளைச் சென்று சேவிக்கக்கூட இல்லாமல் அப்படியே போய்விட்டாரே?' என்றார் மாறனேர் நம்பி. 'திருவரங்கத்துக்கு வந்துவிட்டு, கோயிலுக்குப் போகாமல் திரும்பிய ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார்!' என்றார் திருக்கோட்டியூர் நம்பி. 'இல்லை நம்பிகளே! ராமானுஜரைத் தவறாக எண்ணாதீர்கள். அவருக்கு அரங்கன்மீது கோபம். தமது மானசீக ஆசாரியரான ஆளவந்தாரை, தான் வந்து சேவிக்கும் சில நிமிட நேரம்கூட விட்டு வைக்காமல் எடுத்துக்கொண்டு விட்டானே என்கிற ஏமாற்றம்.' என்றார் பெரிய நம்பி. 'பெரிய நம்பி சொல்வதுதான் சரி. இதுவே எங்கள் காஞ்சிப் பேரருளாளன் என்றால் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டுத்தான் நியாய தருமத்தையே யோசிப்பான் என்று முணுமுணுத்துக் கொண்டேதான் அவர் கிளம்பிச் சென்றார். நான் கவனித்தேன்!' என்றார் திருமாலையாண்டான்.
'நமக்கு நமது ஆசாரியரின் விருப்பம் நிறைவேறியாக வேண்டும். ஸ்ரீவைஷ்ணவ தரிசனம், ஒரு சரியான நிர்வாகியில்லாமல் அப்படியே இருந்துவிட முடியாது. ஏதாவது செய்தாக வேண்டும். யாராவது செய்துதான் தீரவேண்டும்' என்றார் அரங்கப் பெருமாள் அரையர். அரை வினாடி கண்மூடி யோசித்த பெரிய நம்பி ஒரு முடிவுடன் சொன்னார், 'நல்லது அரையரே. பொறுப்பை உம்மிடமே விடுகிறோம். செய்து முடித்து, அழைத்து வாருங்கள்' என்றார்.திடுக்கிட்ட அரையர், 'நானா? என்னால் எப்படி முடியும்?'அவர்கள் மொத்தமாகக் கோயிலுக்குப் போனார்கள். கைகூப்பிக்கேட்டார்கள். 'எம்பெருமானே, திருக்கச்சி நம்பியைப் போல உன்னுடன் நேரடியாக உரையாடும் வக்கெல்லாம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்கள் பக்தி உனக்குத் தெரியும். எங்கள் நோக்கம் நீ அறியாததல்ல. ஆளவந்தாரின் பீடத்தை அடுத்து அலங்கரிக்க ராமானுஜரை நாங்கள் இங்கே தருவிக்க விரும்புகிறோம்.
இது நடக்குமா? யாரால் சாத்தியமாகப் போகிறது?'அவர்களது தயக்கத்திலும், தடுமாற்றத்திலும் ஒரு நியாயம் இருந்தது. ஏனென்றால், ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனுடன் தனது மானசீகத்தில் இரண்டறக் கலந்திருந்தார். கோயிலென்றால் வரதர் கோயில். தெய்வமென்றால் பேரருளாளன். விந்திய மலைக்காட்டில் வேடுவனாக வரதன் வந்த கணத்தில் உருவான சொந்தம் அது. பேரருளாளனின் திருவடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு விட்டோம் என்கிற உணர்வுதான் அவரது உணவாகவும் உயிர் மூச்சாகவும் இருந்தது.பெரிய நம்பிக்கு இது தெரியும். அவரது சகாக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் ராமானுஜர் திருவரங்கம் வந்தே தீரவேண்டும். காஞ்சியில் இருந்து அவரைக் கிளப்புவது எப்படி? அரங்கன் சன்னிதியில் இந்தக் கோரிக்கையுடன் அவர்கள் கைகூப்பி நின்றபோது, சட்டென்று ஓர் எண்ணம் ஒரே சமயத்தில் அனைவர் மனத்திலும் உதித்தது. அது அரங்கன் திருவுள்ளம்.காஞ்சிப் பேரருளாளனுக்கு சங்கீதம் என்றால் இஷ்டம். நாட்டியம் என்றால் அதைவிட இஷ்டம். கலாரசிகனான அவன் உத்தரவு தராமல் ராமானுஜர் காஞ்சியை விட்டுக் கிளம்ப மாட்டார்.
எனவே இசையிலும் நடனத்திலும் நிகரற்றவரான அரையர், காஞ்சிக்குச் சென்று வரதராஜனை மகிழ்வித்து, காரியத்தை சாதித்துவிட வேண்டியது. இப்படி ஒரு யோசனை மனத்தில் பட்ட மறுகணமே அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அரையருக்கு வியப்பில் கிறுகிறுத்துவிட்டது. 'நான் அப்போதே சொன்னேனே?' என்றார் பெரிய நம்பி.'தாமதிக்க வேண்டாம் அரையரே. இன்றே கிளம்பிவிடுங்கள். திரும்பி வரும்போது ராமானுஜரோடுதான் நீங்கள் வரவேண்டும்!''அரங்கன் சித்தம்!' என்று சொல்லிவிட்டு அரையர் புறப்பட்டார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்




என்ன வேண்டும் உமக்கு?

Advertisement




'என்ன சொல்கிறீர்? ஆளவந்தார் இறந்துவிட்டாரா! எம்பெருமானே!' என்று நெஞ்சில் கைவைத்து அப்படியே சரிந்துவிட்டார் திருக்கச்சி நம்பி. 'நம்பமுடியவில்லை சுவாமி. அவர் பாதம் பணிந்து, உபதேசமாக ஓரிரு ரத்தினங்களையேனும் பெற்றுவரலாம் என்று எண்ணித்தான் திருவரங்கத்துக்கே போனேன். ஆனால், போன இடத்தில் எனக்கு வாய்த்தது இதுதான்.'
ராமானுஜர் கண்களைத் துடைத்துக் கொண்டார். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு முன்னால், இப்படியொரு அடி விழுந்து விடுகிறது. மிகச் சிறு வயதில் தந்தையை இழந்தது முதல் அடி. சுதாரித்துக்கொண்டு கல்வியைத் தொடர்ந்தபோது, தமது குணத்துக்குச் சற்றும் பொருந்தாத ஒரு பெண்ணை மணந்து வாழ நேர்ந்தது அடுத்த அடி. அம்மா எப்படியாவது அவளைத் திருத்தி சரிசெய்து விடுவாள் என்று ராமானுஜர் நினைத்திருந்தார். ஆனால், அவளும் போய்விட்டாள். அது மூன்றாவது. பயிலச் சென்ற இடத்தில் ஆசாரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நான்காவது. எப்படியாவது திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேர்ந்துவிடலாம் என்று எண்ணியிருந்தபோது, அந்த வாய்ப்பு தனக்கில்லை என்று தெரிந்தது ஐந்தாவது. இதோ, ஆளவந்தாரை தரிசிக்கப் போய் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நேர்ந்தது ஆறாவது.'மனத்தைத் தளரவிடாதீர் ராமானுஜரே! இருந்த காலம் வரை அவரிடமிருந்து என்ன பெற்றோம், எத்தனை பெற்றோம் என்று எண்ணிப் பார்த்து நிம்மதியடைவோம்.''எனக்கு அதுவும் வாய்க்கவில்லையே. என்றேனும் ஒருநாள் அவரை தரிசித்துத் தாள் பணியும் கணத்தில், அப்படியே அவரது ஞானத்தின் ஜீவரசத்தை உறிஞ்சி எடுத்துக்கொண்டுவிட மாட்டோமா என்று ஒரு காலத்தில் பைத்தியம் போல் எண்ணிக் கொண்டிருப்பேன்.
வேத உபநிடத வகுப்புகளில் ஒவ்வொரு வரிக்கும் யாதவர் சொல்லும் பொருளை எதிரே வைத்து, ஆசாரியர் ஆளவந்தார் இதற்கு எவ்வாறு பொருள் சொல்வார் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவரது எண்ணத்தின் வரி வடிவங்கள் ஒரு தரிசனம் போல் என் மனத்தில் அப்படியே ஏறிவிடுவதாக உணர்வேன்.'திருக்கச்சி நம்பி புன்னகை செய்தார். 'புரிகிறது ராமானுஜரே! அவர் விடைபெற்றுத்தான் போயிருக்கிறார். விட்டுவிட்டுப் போகவில்லை. அதுவும் உம்மை.''என்னையா! நிச்சயமாக இல்லை நம்பிகளே. நான் அற்பனிலும் அற்பன். பாவிகளில் பெரும் பாவி. இல்லாவிட்டால் ஆசாரியரின் தரிசனம்கூடவா எனக்கு கிடைத்திருக்காது?'ராமானுஜர் வெகுநாள் சமாதானமாகவே இல்லை. திருவரங்கத்தில் ஆளவந்தாரின் நேரடிச் சீடர்கள் எதிரே காட்ட முடியாத தமது உணர்ச்சிகளையெல்லாம், காஞ்சியில் நம்பிகளிடம் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்தார்.'நீர் கோயிலுக்கு வாரும். பேரருளாளன் சன்னிதியில் பிரபந்தம் சொல்லிக் கொண்டிரும். ஆசுவாசம் உமக்கு அதில்தான் கிடைக்கும்.' என்று திருக்கச்சி நம்பி அவரைத் தேற்றி கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.அப்போதுதான் திருவரங்கப் பெருமான் அரையர் அங்கு வந்து சேர்ந்தார்.திருக்கச்சி நம்பிக்கு அப்போதே புரிந்துவிட்டது. ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. அரையரை வரவேற்று மரியாதை செய்து சன்னிதிக்கு அழைத்துச் சென்றபோது அவர் கேட்டார்.
'நம்பிகளே, நான் வரதன் திருமுன் நாலு பாசுரம் பாட விரும்புகிறேன். உத்தரவு கிடைக்குமா?'காஞ்சி கோயிலுக்கும் அரையர் உண்டு. இசையாலும் நாட்டியத்தாலும் இறைவனை மகிழ்விக்கும் திருப்பணியாளர். அவர் சொன்னார், 'அரங்கன் அனுபவித்தது எங்கள் வரதனுக்கும் இன்று கிட்டுமென்றால் யார் தடுப்பார்கள்? தாராளமாக ஆரம்பியுங்கள்!'கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் பேரருளாளன் வீற்றிருந்தான். சுற்றிலும் கோயில் முக்கியஸ்தர்கள். ஆலவட்டம் வீசுகிற திருக்கச்சி நம்பி. அவருக்குச் சற்றுத் தள்ளி தமது சீடர்களுடன் அமர்ந்திருந்த ராமானுஜர். இங்கே காஞ்சி நகர் அரையர். எதிரே திருவரங்க அரையர்.'பாடுங்கள் அரையரே!'அவர் ஆரம்பித்தார். அது உயிரை உருக்கும் குரல். பூச்சற்ற பக்தியின் பூரண வெளிப்பாடு. உருகி உருகிப் பாடிக் களித்த பன்னிரண்டு பேரின் உள்ளத்தை உருவி எடுத்து முன்னால் வைத்து வணங்குகிற பெருவித்தை. பாசுரங்களின் உருக்கத்தில், அரையர் தன்னை மறந்து ஆடவும் ஆரம்பித்தார். பத்து நிமிடம். அரை மணி. ஒரு மணி நேரம். அவர் எப்போது தொடங்கி எப்போது நிறுத்தினார் என்று யாருக்குமே தெரியவில்லை.ராமானுஜர் பிரமை பிடித்தாற்போலப் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன குரல்! என்ன தெய்வீகம்! எப்பேர்ப்பட்ட கலை ஆளுமை இவர்! இப்படியொரு சங்கீதத்திலா அரங்கன் தினசரி குளித்துக் குளிர்ந்து கொண்டிருக்கிறான்! அவனுக்கு எப்பேர்ப்பட்ட கொடுப்பினை!மண்டபத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் அரையரைப் போற்றிப் பேச வாய் திறந்த தருணத்தில், அது நிகழ்ந்தது. வரதனே வாய் திறந்தான்!அது அசரீரியா, அந்தராத்மாவுக்குள் ஒலித்த பேரருளாளனின் ரகசியக் குரலா, யாருக்கும் புரியவில்லை. ஆனால் பேசியது அவன்தான். அதில் சந்தேகமில்லை.'அரையரே, நெக்குருகச் செய்துவிட்டீர்! என்ன வேண்டும் உமக்கு? தயங்காமல் கேளும்.'கோயில் பிரசாதங்களும், பரிவட்ட மரியாதையும், மற்றதும் முன்னால் வந்து நின்றன.
அரையர் கைகூப்பி மறுத்தார். 'அருளாளா! எனக்குப் பரிவட்ட மரியாதை யெல்லாம் வேண்டாம். பதிலாக இந்த ராமானுஜரை என்னோடு அனுப்பி வைத்துவிடு. ஸ்ரீவைஷ்ணவ தரிசனம் தழைக்க, இவர் இங்கிருப்பதைவிட அரங்க நகரில் வந்து ஆசாரிய பீடத்தை அலங்கரிப்பதே உகந்தது.'ராமானுஜர் திடுக்கிட்டுப் போனார். 'நானா! நானெப்படி வருவேன்? என்னால் வரதனைவிட்டு நகர முடியாது.'அரையர் அவருக்கு பதில் சொல்லவில்லை. அருளாளனைப் பார்த்தேதான் பேசினார். 'என்ன வேண்டுமென்று நீ கேட்டாய். நான் வேண்டியதைச் சொல்லிவிட்டேன். மற்றபடி உன் இஷ்டம்.''தர்மசங்கடப் படுத்துகிறாய் அப்பனே. ராமானுஜர் நமக்கு உகந்தவர். அவரை எப்படி நான் அரங்கனுக்கு விட்டுக் கொடுப்பேன்?''அது உன் இஷ்டம். கேட்டதைக் கொடுக்கும் தெய்வமென்று பேரெடுத்தவன் நீ. பேர் நிலைக்க நினைத்தால் அதற்குரியதைச் செய்.'ராமானுஜருக்குப் புரிந்துவிட்டது. மதுராந்தகம் ஏரிக்கரையில் பெரிய நம்பியை முன்னொரு சமயம் சந்தித்தபோதே தோன்றியதுதான். எம்பெருமான் சித்தம் நடைமுறைக்கு வர இத்தனைக் காலம் பிடித்திருக்கிறது. நல்லது. இதுவும் அவன் விருப்பம்.'முதலியாண்டான்! நீ திருமடத்துக்கு உடனே சென்று நமது திருவாராதனப் பெருமாளை எடுத்து வந்துவிடு. திருவரங்கத்துக்கு நாம் போனாலும் அருளாளனுக்குச் செய்யும் ஆராதனை நிற்காது.'அன்றே ராமானுஜர் அரங்கமாநகருக்குப் புறப்பட்டார்.
(நாளை தொடரும்...)

writerpara@gmail.com
- பா.ராகவன்


ஒரு பெரும் விசை



Advertisement






Ramanujar Download
வடகாவிரிக் கரையில் ஊர் திரண்டு நின்றிருந்தது. அத்தனை பேருக்கும் நெஞ்சு கொள்ளாத மகிழ்ச்சி. ஒருபுறம் திருமால் அடியார்கள் பிரபந்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் மங்கல வாத்திய ஒலி விண்ணை நிறைத்துக் கொண்டிருந்தது. கோயிலில் இருந்து அழகிய மணவாளனே புறப்பட்டு விட்டான் என்று சேதி வந்தபோது கூட்டத்தின் பரவசம் உச்சத்துக்குப் போனது. ராமானுஜரை வரவேற்கப் பெருமானே வருகிறான் என்றால் இது எப்பேர்ப்பட்ட தருணம்!

எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும். இங்குதானே வருகிறார்? இங்கு இருக்கத்தானே வருகிறார்? ஆளவந்தாரின் பீடத்தை அலங்கரிக்கத்தானே வருகிறார்? எப்படியோ அரையர் சாதித்துவிட்டார். தம் பாட்டுத் திறத்தால் காஞ்சி வரதராஜனைக் கட்டிப்போட்டு விட்டார். ஒப்புக்கொண்டு ராமானுஜரும் புறப்பட்டு விட்டார் என்று சேதி வந்தபோதே திக்குமுக்காடிப் போனார்கள் திருவரங்கவாசிகள்.பரமபதம் அடைந்துவிட்ட ஆளவந்தாரின் மூடிய விரல்களை நிமிர்த்
திக் காட்டிய மகான். பேசியது ஒருவரிதான். ஆனால் எத்தனை தெளிவு, எவ்வளவு அழுத்தம், தன்னம்பிக்கை! தவிரவும் இளைஞர். வைணவ தரிசனம் இவரால்தான் தழைக்க வேண்டுமென்று எம்பெருமான் எண்ணிவிட்டால் யார் மாற்ற முடியும்?
வானில் கருடன் வட்டமிட்டான்.

காற்று குளிர்ந்து வீசி அரவணைத்தது. ரங்கா ரங்கா என்று கூட்டம் உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்க, தாள வாத்தியங்கள் உச்சத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, கோயிலில் ஒலித்த மணிச்சத்தம் அனைத்தையும் மீறி வடகாவிரிக் கரையை வந்து தொட்டபோது ராமானுஜர் திருவரங்கம் வந்து சேர்ந்தார். 'எம்பெருமானே! எனக்காக நீங்களா முன்னால் வந்து காத்திருக்க வேண்டும்? இது என்ன அபசாரம்?' என்று பதறி ஓடி வந்து, எழுந்தருளியிருந்த உற்சவ மூர்த்தியின் திருமுன் விழுந்து வணங்கினார் ராமானுஜர்.'தவறில்லை ராமானுஜரே! வைணவத்தில் பாகவதனே பெரியவன். பகவான் அவனுக்கு அடுத்தபடிதான். நீங்கள் அறியாததா? ஸ்ரீவைஷ்ணவ தருமத்தைப் புவியெங்கும் அறிவித்துக் கொண்டிருப்பவர் தாங்கள். உங்களைப் பேரருளாளன் விட்டுக் கொடுத்ததே எங்களுக்குப் பெரிய விஷயம். வாருங்கள்!' என்று வரவேற்றார் பெரிய நம்பி. கூட்டம் ஊர்வலமாகக் கிளம்பிக் கோயிலுக்குச் சென்றது. வழியெங்கும் வீட்டு வாசல்களில் மலர்ந்திருந்த பெரிய பெரிய கோலங்களிலும், நிலைப்படிகளை அலங்கரித் திருந்த மாவிலைத் தோரணங்களிலும் மக்களின் மகிழ்ச்சியைப் புரிந்து கொண்டார் ராமானுஜர்.

நான் என்ன செய்துவிட்டேன்! ஆளவந்தாரின் ஞானத்தின் முன் கால் துாசு பெறுவேனா! திருக்கச்சி நம்பியின் பிரேம பக்திக்கு முன் நிற்க முடியுமா என்னால்? இதோ, இந்தப் பெரிய நம்பியின் சிரத்தை எத்தனை பிறப்பெடுத்தாலும் எனக்கு வருமா? எடுத்த காரியத்தை முடிக்கிற வல்லமை கொண்ட அரையரின் திறன் எப்பேர்ப்பட்டது! என்னை வரவேற்கவா இத்தனைக் கோலாகலம்?கூச்சத்தில் சுருங்கியவரைக் கண்டு புன்னகை செய்த பெரிய நம்பி, 'சுவாமி! இந்தப் பணிவுதான் உமது உயரம்' என்றார்.கோயில் சன்னிதியில் நெடுநேரம் ராமானுஜர் கண்மூடி நின்றிருந்தார். செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம். நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் அதைக் காட்டிலும் அதிகம். அனைத்தையும்விடக் கற்கவேண்டியவை கடலளவு உள்ளன. பெருமானே! நான் பயின்று தெளிய இந்த ஒரு ஜென்மம் எப்படிப் போதும் எனக்கு?சம்பிரதாயங்கள் முடித்து திருமடத்துக்கு வந்து அமர்ந்தபோது முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் 'முதல் பணி என்ன?' என்று கேட்டார்கள். 'கோவிந்தன்!' என்றார் ராமானுஜர். திருமலையில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த பெரிய திருமலை நம்பிக்கு உடனே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினார். 'நீங்கள் பெயர் வைத்த பிள்ளை கோவிந்தன். காளஹஸ்தியில் சிவ ஸ்மரணையில் தன்னை மறந்து இருக்கிறான். கீதை சொல்லுவதை அவனுக்கு நினைவுபடுத்துங்கள். அவரவர் ஸ்வதர்மம் என்று ஒன்று இருக்கிறது. வைணவ குலத்தில் பிறந்து பெருமானுக்குச் சேவை செய்ய வேண்டியவன் இப்படிப் பொறுப்பு மறந்து வாழலாமா என்று கேளுங்கள்.' பெரிய திருமலை நம்பி, கோவிந்தனுக்கும் தாய்மாமன்தான். ஆனால் பெயர் வைத்த பிறகு அவர்கள் சந்தித்ததே இல்லை. நம்பி மலையை விட்டு இறங்கி ஊருக்கு வருவதற்கு, அப்புறம் சந்தர்ப்பமே கூடவில்லை.

அவர் வந்தபோது கோவிந்தன் அங்கு இல்லாமல் போயிருந்தான்.எனவே அவருக்குச் சிறு குறுகுறுப்பு இருந்தது. என்னை அவன் எப்படி எதிர்கொள்ளப் போகிறான்? காளஹஸ்திக்கு நம்பிகள் வந்து சேர்ந்தார். கோவிந்தன் தினமும் குளித்து முழுகி சிவபூஜைக்குப் பூப்பறித்துச் செல்லும் குளக்கரைக்கு வந்து உட்கார்ந்தார். கோவிந்தன் பூப்பறிக்க வந்தபோது மெல்ல பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். 'அப்பனே, உனக்கு உன் சகோதரன் இளையாழ்வானை ஞாபகமிருக்கிறதா? குருவே ஆனாலும் மாயாவாதம் பேசுகிற இடத்தில் மறுத்துப் பேசி அவன் வெல்லும் போதெல்லாம் கரகோஷம் செய்து நீ சந்தோஷப்பட்டது நினைவிருக்கிறதா? இருவருமாகக் காஞ்சிப் பேரருளாளன் சன்னிதியில் பழி கிடந்த தினங்கள் மறக்காதிருக்கிறதா?' 'ஐயா, நீங்கள் யார்?'அன்று தொடங்கி பத்து நாள்களுக்குப் பெரிய திருமலை நம்பி இடைவிடாமல் கோவிந்தனுடன் பேசிக்கொண்டே இருந்தார். 'நான் யார் என்று சொன்னால் நீ யார் என்பது உனக்குப் புரியுமா கோவிந்தா? எம்பெருமானின் பாதாரவிந்தங்களில் பழிகிடக்க வேண்டிய உன் கடமை புரியுமா? இந்தப் பூக்களைக் கொண்டுபோய் நீ சேர்க்க வேண்டிய இடம் விஷ்ணுவின் பாதங்கள் அல்லவா? எத்தனை சிறப்பானதானாலும் உனது தருமத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொன்றைக் கைக்கொள்வது கற்றவனுக்கு அழகா? நீ படித்தவன் அல்லவா? ஞானஸ்தன் அல்லவா?''ஆனால் ஐயா, கங்கைக் கரையில் பாணலிங்க வடிவில் என்னிடம் வந்து சேர்ந்தவர் சாட்சாத் ஈஸ்வர மூர்த்தியே அல்லவா?' 'ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். உனக்குக் கிடைத்தது சாளக்கிராம
மாக இருந்திருந்தால்தான் நீ பிறந்த குலத்தின் பெருமை காத்திருப்பாயா? ஒன்றுமே கிடைக்காதிருந்திருந்தால்? நாத்திகனாகியிருப்பாயோ?'பெரிய திருமலை நம்பி, ஆளவந்தாரின் சீடர். அவரது ஞானத்தின் சாறை அப்படியே ஏந்திக் குடித்த மகாபண்டிதர். சித்தாந்தங்களுக்கு
அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், தருக்கங்களுக்கு அப்பால் அனைத்துக்கும் பொருளாக நிறைந்திருக்கிற பரமாத்மாவின் சொரூபம் அறிந்தவர். கோவிந்தன் மனத்தை மாற்ற அவருக்கு ஒரு கணம் போதும். இருப்பினும் அவன் நம்பிக்கொண்டிருந்த அத்வைத சித்தாந்தத்தைவிட சரணாகதி என்னும் ஒற்றைத் தாரக மந்திரத்தின் அருமையை அவனுக்கு உணர்த்தவே அவர் அந்த அவகாசத்தை எடுத்துக்கொண்டார்.பத்தாம் நாள் முடிவில் கோவிந்தன் மனம் மாறினார். 'என் அண்ணா இப்போது எங்கே இருக்கிறார்?' என்று கேட்டார்.'திருவரங்கத்துக்குச் செல் மகனே. ஒரு பெரும் விசை அங்கு உன்னைச் செலுத்தக் காத்திருக்கிறது!'

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் 



கொடுத்து வைத்தவன்
Advertisement




Ramanujar Download
கோவிந்தன் இப்போது இங்கு வர அவசியமில்லை. அவன் பெரிய திருமலை நம்பியிடமே சிறிது காலம் இருக்கட்டும் என்று ராமானுஜர் சொன்னார்.

சுற்றியிருந்த சீடர்களுக்கு இது வியப்பாக இருந்தது. 'ஆசாரியரே, உமது தம்பி மனம் மாறி வைணவ தரிசனத்துக்கு மீண்டும் வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் நீங்கள் உடனே அவரைக் காண விரும்புவீர்கள் என்று நினைத்துத்தான் நம்பிகள் அவரைத் திருவரங்கத்துக்குக் கிளம்பச்சொல்லியிருக்கிறாராம்.'
'மாற்றம் நிகழவேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். கோவிந்தனால் ஆக வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவன் பக்குவம் அடையவேண்டியது அனைத்திலும் முக்கியம். அவன் திருவரங்கம் வருவதைவிட நம்பியிடமே இருந்து பயில்வதுதான் சிறப்பு' என்றார் ராமானுஜர்.
விஷயம் பெரிய திருமலை நம்பிக்கு எட்டியது. ஒரு நல்ல நாள் பார்த்தார். கோவிந்தனைத் தன்னோடு திருமலைக்கு அழைத்துச் சென்று பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார். அன்றே அவனுக்கு ராமாயண வகுப்பைத் தொடங்கி விட்டார். ராமாயணத்தின் கதைக்கு அப்பால் உள்ள ஆழ்ந்த உட்பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி விளக்குவதில் நம்பிகள் கைதேர்ந்தவர். அது ஆளவந்தார் அவருக்கு அளித்த வரம்.'கோவிந்தா, ராமன் பிறப்பின் சாரம் உனக்குச் சரியாகப் புரிந்துவிட்டால் நீ நான்கு வேதங்களையும் கணப்பொழுதில் புரிந்து கொண்டுவிட முடியும். தத்துவங்களின் உச்சம் என்பது ராமாவ
தாரம். புரிகிறதா?'செய்தி மீண்டும் திருவரங்கத்தை எட்டியது. முதலியாண்டான் ராமானுஜரை அணுகி, கோவிந்தனுக்கு ராமாயணப் பாடம் ஆரம்
பிக்கப்பட்ட விவரத்தைச் சொல்ல, 'அப்படியா? மிக்க மகிழ்ச்சி. 'உடனே கூரேசனை ஊருக்கு அனுப்பி, அவனது பத்தினியோடு இங்கே திரும்பி வரச் சொல்!' என்றார் ராமானுஜர். முதலியாண்டானுக்குப் புரியவில்லை. தன்னைத் தேடிக் கிளம்பிய தம்பியைத் திருவரங்கத்துக்கு இப்போது வரவேண்டாம் என்று சொல்லித் தடுத்தவர், கூடவே இருக்கும் கூரத்தாழ்வானை எதற்கு இப்போது ஊருக்குத் துரத்துகிறார்?கூரத்தாழ்வானே சற்றுத் தயங்கத்
தான் செய்தான். 'அத்தனை அவசரமில்லை ஆசாரியரே. நான் உங்களுடன் இருக்கவே விரும்புகிறேன்.''தவறு கூரேசா! நீ திருமணமானவன். உன் மனைவியை அங்கு தனியே விட்டுவிட்டு இங்கு நீ எந்த தருமத்தையும் காக்க இயலாது. மட்டுமல்ல. உனது தவம் எத்தனை சிறப்பானதென்றாலும், அது பூரணமடைவது உன் மனைவியால்தான்.'வேறு வழியின்றி கூரத்தாழ்வான் காஞ்சிக்குப் புறப்பட்டான். பழைய கூரேசன் என்றால் பல்லக்கில்தான்
போவான். பல்லக்குத் துாக்கிகள் தவிர, சேவகத்துக்கென ஒரு படையே பின்னால் வரும். இப்போது அதெல்லாம் இல்லை. அனைத்தும் உதிர்ந்த நினைவுகள். அந்தக் கூரேசன் வேறு. அவனது ஆகிருதி வேறு. ஊரில் அவனுக்கு இருந்த பேரும் மரியாதைகளும் வேறு.முதலியாண்டான் அடிக்கடிக் கேட்பான். 'எப்படி விட முடிந்தது? எப்படி உதற முடிந்தது? ஒன்றுமில்லாதவர்கள் உஞ்சவிருத்திக்குப் போவது பெரிய விஷயமல்ல. நீங்கள் ராஜ வாழ்க்கை வாழ்ந்த மனிதர். ஒரு கணத்தில் உதறித் தள்ள எப்படி சாத்தியமானது கூரேசரே?'கூரேசன் புன்னகை செய்வான். ஒரு சம்பவம் நடந்தது. அதை எப்படி அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்க முடியும்? கேட்பவருக்கு ஆஹாவென வாய் பிளக்கத் தோன்றினாலும் அவனைப் பொறுத்தவரை அது அவமானகரமான விஷயம். முதலியாண்டான் துருவித் துருவிக் கேட்டபோது வேறு வழியின்றி சொன்னான்.கூரேசன் பிறவிப் பணக்காரன். கூரத்தில் இருந்து காஞ்சியைத் தாண்டி நெடுந்தொலைவுக்கு அவனது புகழ் பரவியிருந்த நேரம் அது.

'பணத்தோடு சேர்த்துக் குணம் படைத்த பெரிய மனிதர். எப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கிறார் இந்த மகாத்மா! யாருக்கு இந்த மனம் வரும்!' என்று வியக்காத வாயில்லை. தனது மாளிகைக்கு அருகே ஓர் அன்ன சத்திரத்தை நிறுவி, நாளும் பொழுதும் பசித்து வருவோருக்குப் பந்தி பரிமாறி மகிழும் சுபாவம் அவனுக்கு. பரம பக்திமான். தனது சொத்து முழுதும் தான தருமங்களுக்குத்தான் என்பதில் நெல்லளவு மாற்றுச் சிந்தனையும் அவனுக்கு இருந்ததில்லை.சொல்லி வைத்த மாதிரி அவனுக்கு வாய்த்த மனைவியும் அதே குணம் கொண்டவளாக இருந்தாள். ஆண்டாள். ஆ, எப்பேர்ப்பட்ட பேரழகி! ஆனால், விதி அவளுக்கு ஜாதகக் கட்டங்களில் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.'ஐயா உமது மகளை யார் திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கு உடனடி மரணம் நிச்சயம்' என்று சோதிடர்கள் சொல்லிவிட்டுப் போயிருந்தார்கள். கூரேசனுக்கு அது வியப்பாக இருந்தது. வாழ்வையும் மரணத்தையும் தீர்மானிப்பது பரமாத்மா அல்லவா? சோதிடர்களுக்கு அச்சக்தி உண்டென்றால் பரந்தாமன் எதற்கு? 'சரி, உங்கள் மகளை நான் மணந்து கொள்கிறேன்' என்று ஆண்டாளின் தந்தையிடம் போய்ச் சொன்னான். 'நீங்கள் பெருங்கோடீஸ் வரர். ஊரறிந்த உபகாரி. அப்பழுக்கற்ற பக்திமான். ஆனால் ஐயா, என் மகளை நீங்கள் மணந்தால் உங்கள் வாழ்க்கை முடிந்து விடுமே?''அதையும் பார்க்கிறேன்' என்று சொல்லித்தான் அவன் ஆண்டாளைக்
கைப்பிடித்திருந்தான். 'ஆண்டாள்! மனித வாழ்க்கை மிகவும் சிறியது. தவிரவும் அற்பமானது. கண்மூடித் திறக்கும் நேரத்தில் பிறவி முடிந்துவிடும். வாழும் கணங்கள் ஒவ்வொன்றிலும் நாம் அடுத்தவருக்குப் பயன்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை.' என்றான் கூரேசன். 'பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாலு இலையை எடுத்துப் போடலாமே? வெளியே பசியோடு பலபேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றாள் ஆண்டாள்.
அப்படி ஒரு மனைவி இன்னொருத்தருக்கு வாய்க்க மாட்டாள். இருவருக்கும் பேரருளாளனை விஞ்சிய தெய்வம் இல்லை. ராமானுஜரை விஞ்சிய ஆசாரியர் இல்லை.

'நாம் அவரை அண்டித் தாள்பணிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது ஆண்டாள். நம் ஊருக்கு இத்தனை பக்கத்தில் ஞானச்சுடரொளி தகித்துக் கொண்டிருக்கிறபோது நாம் அர்த்தமே இல்லாமல் இங்கு தினங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.' 'ஏன் வீணடிக்க வேண்டும்? கிளம்பிவிட வேண்டியதுதானே?' 'கிளம்பலாம்தான். ஆனால் இருக்கிற சொத்துபத்தையெல்லாம் அத்தனை சீக்கிரம் தானம் செய்து விட முடியாது போலிருக்கிறதே.'
'பொறுப்பை என்னிடம் விடுங்கள்' என்றாள் ஆண்டாள். அன்று முதல் கூரேசனின் இல்லம் ஒரு தானத் திருமாளிகையானது. போகிற
வருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தார்கள். இரு கரம் ஏந்தி அளிக்கையில் சிந்தும் சத்தம் இருபது காத துாரம் வரை கேட்டது. பொன்னும் மணியும் ரத்தினங்களும் வைர வைடூரி யங்களும், கல்லும் மண்ணுமெனத் தோன்றியது அவர்களுக்கு! ஊரே மூச்சடைத்து நின்றது. என்ன ஆகிவிட்டது கூரேசனுக்கு? நுாற்றாண்டு கால சொத்து சுகங்களை எதற்காக இப்படிக் கண்மூடித்தனமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்?
பதில் சொல்லிக் கொண்டிருக்கக்கூட அவகாசமில்லாமல் இருவரும் காரியத்தில் கண்ணாக இருந்தார்கள்.அப்போது அது நடந்தது.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் 

பொன் வேண்டேன்! பொருள் வேண்டேன்!
Advertisement




Ramanujar Download
வரதராஜர் கோயிலில் அப்போது உற்சவம் நடந்து கொண்டிருந்தது. திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கும் அத்தி வரதர் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை வெளிப்பட்டுக் காட்சியளிக்கும் பரவசத் திருவிழா. அக்கம்பக்கத்து தேசங்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாகக் காஞ்சியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். கோயிலில் நிற்க இடம் கிடையாது. எங்கும் பக்தர்கள். எல்லா பக்கங்களிலும் பிரபந்த பாராயணம். வாண வேடிக்கைகளும் மங்கல வாத்திய முழக்கங்களுமாக நான்கு வாரங்களுக்கு நீண்டு கொண்டிருந்த உற்சவம்.
உற்சவ களேபரங்களில் பெருமாளுக்கான நித்தியப்படி நியமங்கள் தினமுமே சற்றுத் தாமதமாகிக் கொண்டிருந்தன. பக்தர்களின் சந்தோஷத்துக்கு முன் னால் தனது நேர ஒழுங்கை அவன் அத்தனை பெரிதாகக் கருதாதவன் தான். ஆனாலும் அன்று அது நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது. இரவு பெருமாளுக்குத் திருவாராதனம் முடியத் தாமதமாகிப் போனது. வீதி உலா போயிருந்த உற்சவர் இன்னும் சன்னிதிக்குத் திரும்பியபாடில்லை. ஆனால் கதவு அடைக்கப்படும் சத்தம் கேட்டு, வரதனுக்குக் குழப்பமாகிவிட்டது. 'இதென்ன நம்பிகளே, விசித்திரமாக இருக்கிறதே. இன்னும் நமக்குத் திருவாராதனமே ஆகவில்லை. அதற்குள் ஏன் கோயில் நடை சாத்தப்படுகிறது?' என்று திருக்கச்சி நம்பியிடம் கேட்டான் பெருமான்.
'பெருமானே, அது கோயில் நடை சாத்தும் சத்தமல்ல. கூரத்தில் கூரேசனின் அன்ன சத்திரக் கதவு அடைக்கப்படுகிற சத்தம். இப்போது இன்னொரு சத்தம் வரும் கேளுங்கள்' என்றார் திருக்கச்சி நம்பி. வரதன் கவனித்துக் கொண்டிருந்தான். சொல்லி வைத்த மாதிரி கலகலவென்று பொன்னும் மணியும் சிதறும் பெரும் சத்தம். 'ஆ, இது என்ன?' 'இன்று தான தருமங்களை முடித்தபிறகு மிச்சம் இருப்பதை அளந்து கொட்டிக் கொண்டிருக்கி றார் கூரேசர். நாளைப் பொழுது விடிந்ததும் மீண்டும் தருமங்களைத் தொடங்க இப்போதே ஆயத்தம் செய்துவிட்டுத்தான் அவர் படுக்கப்போவது வழக்கம்.' ஒரு கணம் திகைத்து விட்டான் எம்பெருமான். 'அத்தனை செல்வமா கூரேசனிடம்!'மறுநாள் திருக்கச்சி நம்பி கூரே சனைச் சந்தித்து இந்த விவரத்தைச் சொன்னார்.'அப்பனே, அருளாளப் பெருமானையே உனது ஐஸ்வர்யம் மயக்கிவிட்டதப்பா!'தனக்குள் சிறுத்துப் போனார் கூரேசன்.'எம்பெருமானே! இந்தப் பொன்னின் ஒலி உன்னையே மயக்குகிறதென்றால், இத்தனைக் காலம் இதனை வைத்திருந்த பெரும் பாவத்தையல்லவா நான் செய்திருக்கிறேன்! உன் பேரருளையும் பெருங்கருணையையும் தவிர வேறு எதற்கும் கட்டிப்போடும் சக்தி இருந்துவிடக் கூடாது. முடிந்தது இன்றோடு!'ஆண்டாளைக் கூப்பிட்டான் கூரேசன். 'இதோ பார் ஆண்டாள்! நீ என்ன செய்வாய் என்று எனக்குத் தெரியாது. இன்றோடு நமது சொத்து சுகம் அத்தனையும் வெளியே போயாக வேண்டும். நாளைக் காலை நாம் காஞ்சிக்குக் கிளம்புகிறோம். அங்கு ராமானுஜரைச் சந்தித்து, அவரோடு ஐக்கியமாகிவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பொன் மூட்டைகளின் சுமையில் நாம் மூச்சடைத்து இறந்து விடுவோம்.''ஆகட்டும் சுவாமி' என்றாள் ஆண்டாள். மறுநாள் முழுதும் அவர்கள் அன்ன சத்திரத்தின் வாசலிலேயே நின்றுகொண்டார்கள். வாயிற்கதவின் இருபுறமும் மூட்டை மூட்டையாகப் பொற்காசுகள், அணிகலன்கள், சேர்த்து வைத்த பெரும் சொத்துகள். சாப்பிடப் போகிற அனைவரையும் வேண்டிய அளவுக்கு எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். ஒரே ஒரு நிபந்தனை. சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது, முதலில் எடுத்த அதே அளவுக்கு மீண்டும் எடுத்தாக வேண்டும்.கூரேசனின் மனம் அப்படிப்பட்டது. அவனுக்கு வாய்த்தவள் அவனைவிட சுத்த ஆத்மா. முதலியாண்டான் இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபடியே கூரத்தாழ்வானுடன் திருவரங்க எல்லை வரை நடந்து போனான்.'தாசரதி! நீ மடத்துக்குத் திரும்பிவிடு. ஆசாரியர் அங்கே தனியாக இருப்பார்.நான் வரும்வரை அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு' என்றார் கூரேசர்.முதலியாண்டானுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஆசாரியர் தனியாக இருப்பதா? திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்த நாள் முதல் ஒரு கணம் கூட அப்படி ஒரு சந்தர்ப்பம் அவருக்கு வாய்த்ததே இல்லை. எப்போதும் அவரைச் சுற்றி நுாறு பேர் இருந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் புறப்பட்டால் அடுத்த வரிசையில் இன்னும் நுாறு பேர். 'எனக்கு வாசிக்கவே நேரமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறதப்பா!' என்று எத்தனை முறை கவலைப்பட்டிருக்கிறார்.'கூரேசரே, நீங்கள் தமது பத்தினியை அழைத்துக்கொண்டு சீக்கிரம் திரும்பும் வழியைப் பாருங்கள். நீங்கள் வந்து சேரும்வரை நமது ஆசாரியருக்கு இருப்புக் கொள்ளாது.'முதலியாண்டான் மடத்துக்குத் திரும்பிவிட, கூரேசர் காஞ்சியை நோக்கி நடக்கத் தொடங்கினார். இரு வாரங்களில் அவர் கூரத்தை அடைந்து வீடு சேர்ந்தார்.'வாருங்கள். ஆசாரியர் நலமாக உள்ளாரா?''போகிற வழியில் பேசிக் கொள்வோமே! நீ உடனே கிளம்பிவிடு ஆண்டாள்!'வேறு ஒரு வார்த்தை கிடையாது. வாசற்படியிலேயே நின்றபடிக்குத்தான் கூரேசர் சொன்னார்.'ஒரு நிமிடம்' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று பத்து வினாடிகளில் திரும்பிய ஆண்டாள், 'கிளம்பலாம்' என்று சொல்லிவிட்டாள்.கதவைப் பூட்டவில்லை. யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. எத்தனை நாள் பயணம், எங்கே போகிறோம், எப்போது திரும்புவோம் அல்லது திரும்புவோமா -என எதுவுமே கேட்கவில்லை. கிளம்பு என்றால் கிளம்புவது மட்டுமே கடன்.அன்றிரவு அவர்கள் மதுராந்தகத்தைக் கடந்து ஒரு காட்டு வழியே போக வேண்டியிருந்தது.'இந்தக் காட்டைக் கடக்காமல் போக முடியாதா?' என்று கவலையுடன் கேட்டாள் ஆண்டாள்.'ஏன் கேட்கிறாய்? காட்டைக் கண்டால் பயமா?'அவள் மெல்லத் தலையசைத்தாள். 'காட்டில் கள்வர் நடமாட்டம் இருக்குமல்லவா?''பைத்தியமே. மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயம். நம்மிடம் என்ன இருக்கிறது?'ஆண்டாள் தயங்கியபடி தன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த ஒரு சிறு பொன் வட்டிலை எடுத்துக் காட்டினாள். 'பயணம் எத்தனை நாளாகுமோ தெரியவில்லை. நீங்கள் சாப்பிடுவதற்கு ஒரு பாத்திரம் கூட எடுத்துக் கொள்ளாவிட்டால் எப்படி? அதுதான்..'கூரேசர் புன்னகை செய்தார். அன்போடு அந்த வட்டிலை வாங்கித் துாரப் போட்டார்.'ஆண்டாள், இந்தப் பொன் செய்யும் மாயத்தைக் கண்டாயா? அகந்தையைக் கொடுக்கிற பொருள் அச்சத்தையும் தருகிறது. நமக்கெதற்கு அது? ஆசாரியரின் திருவடியை எப்போதும் மனத்துக்குள் ஏந்தியிருப்போம். நிரந்தரமான நிதி என்பது அதுதான். வா, போகலாம்!' என்று அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். அடுத்த பதினைந்து தினங்களில் அவர்கள் திருவரங்கத்துக்குச் சென்று சேர்ந்தார்கள்.'அப்பாடா! வந்துவிட்டீர்களா! இனி நான் நிம்மதியாகப் படிக்கப் போவேன்!' என்றார் ராமானுஜர்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்



இது மட்டுமே அவசியம்!
Advertisement




Ramanujar Download
திருவரங்கம் பெரிய கோயிலின் நிர்வாக விவகாரங்களைப் பெரிய நம்பிதான் அப்போது கவனித்துக் கொண்டிருந்தார். ஆளவந்தாரின் பீடத்துக்குப் பொறுப்பேற்று ராமானுஜர் வந்து சேர்ந்த உடன், இந்தப் பணிகளும் அவருடையதாயின. பகல் பொழுதுகள் முழுதும் திருக்கோயில் ஊழியத்திலேயே அவருக்குக் கழிந்து கொண்டிருந்தது. மடத்துக்கு வந்து உட்கார்ந்தால் காலட்சேபம் கேட்க பக்தர்கள் வந்துவிடுவார்கள். இரவு உணவுக்குப் பிறகு படுக்கப் போகிற நேரத்தில்தான் சீடர்களுடன் கொஞ்சமாவது உரையாட அவகாசம் கிடைக்கும்.

ராமானுஜருக்கு இது தான் பிரச்னையாக இருந் தது. தன்னளவில் அவர் ஓர் ஆத்மஞானி. வைணவம் என்னும் சித்தாந்தம் இயல்பிலேயே அவரது சிந்தனைப் போக்கை வடிவமைத்திருந்தது. தாம் சிந்திக்கும் வகைமைக்கு வைணவம் என்று பேர் என்பதை மட்டும்தான் அவர் போகப் போக அறிந்து கொண்டார். நம்மாழ்வார் தொடங்கி, ஆளவந்தார் வரை சொல்லி வைத்த அனைத்துமே இதன் விரிவும் ஆழமும் தேடிச் செல்கிற வழிகள்தாம் என்பதை அவர் உணர்ந்தார். எனவே சரணாகதியை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலின் அடி முதல் நுனிவரை பாடம் கேட்டு, அலசி ஆராய்ந்து பயிலும் பெருவிருப்பம் அவருக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.'சுவாமி, நான் பயிலவேண்டும். ஆளவந்தாரின் திருவடி சம்பந்தம் எனக்கு வாய்க்கவில்லை. அதற்குப் பதிலாக உங்களைச் சரண் புகுந்தேன். பாசுரங்களும் மற்றவையும் பயின்று கொண்டுதான் இருக்கிறேன் என்றாலும் போதாமை உறுத்துகிறது. அர்த்த விசேஷங்களில் மனம் லயித்துக் கிடக்கிறது. அனைத்தையும் அனைவர் மூலமும் அறிந்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கிடக்கிறேன். நீங்கள்தான் ஆரம்பித்து வைக்க வேண்டும்!' என்று பெரிய நம்பியின் தாள் பணிந்து கேட்டார் ராமானுஜர்.நம்பிக்குப் புரிந்தது. ஆளவந்தாரிடம் ஒரு வழக்கம் இருந்தது. தமது அனைத்துச் சீடர்களையும் அவர் சமமாகவே நடத்தினார்,

அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார் என்றாலும் ஒவ்வொருவரிடமும் ஒரு குறிப்பிட்ட மந்திரம் அல்லது சுலோகம் அல்லது தத்துவத்தின் சிறப்புப் பொருளைத் தமது பிரத்தியேகப் பரிசாக வழங்கியிருந்தார். அது இன்னொருவருக்குத் தெரியாது. சம்பந்தப்பட்டவரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. அதைத்தான் ராமானுஜர் கேட்டார். எனக்கு அனைத்தும் வேண்டும். அனைவரிடம் இருந்தும் வேண்டும்.'புரிகிறது ராமானுஜரே. நானறிந்த த்வய மந்திரத்தைத் தங்களுக்கு போதிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.' என்று சொல்லிவிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து வகுப்பை ஆரம்பித்தார்.'த்வயம் என்பது வேதங்களின் சாரம். காற்றைப் போல், ஒளியைப் போல் இவ்வுலகெங்கும் நீக்கமற நிறைந்து நீந்திக் கொண்டிருக்கும் அத்தனை மந்திரங்களிலும் ஆகச் சிறந்ததும் உயர்ந்ததும் இதுவே.''அற்புதம் சுவாமி! த்வய மந்திரத்தின் அவசியத்தை முதலில் சொல்லுங்கள்.' பெரிய நம்பி ஒரு கணம் கண்மூடி யோசித்தார். 'அவசியம்தானே? சொல்கிறேன். பந்தங்களில் இருந்து விடுதலை பெறவும் மிக நேரடியாக
மோட்சத்தை அடையவும் இது அவசியம். இது மட்டுமே அவசியம்.'

தொடர்ந்து பல நாள்களுக்குப் பெரிய நம்பி ராமானுஜருக்கு த்வய மந்திர வகுப்பெடுத்தார். ஒன்றைத் தொட்டு ஒன்று என்று அர்த்த விசித்திரங்கள் எத்தனை எத்தனையோ எல்லைகளைக் கடந்து வேதத்தின் மையத்தைச் சென்று தொட்டுக் காட்டியது.ராமானுஜர் ஆனந்தப் பரவசத்தின் உச்சத்தில் இருந்தார். எப்பேர்ப்பட்ட பெருங்கருணை இந்த மனிதருக்கு! அற்பனான என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, சீடனாக ஏற்று எத்தனை உயர்வான விஷயங்களை போதிக்கிறார்!கண்ணீர் மல்க அப்படியே பெரிய நம்பியின் கால்களில் விழுந்து வணங்கினார்.'ஆசாரியரே! எத்தனை பூடகமான பேருண்மைகளை எனக்கு நீங்கள் எளிதாக விளக்கியிருக்கிறீர்கள் என்று விவரிக்கவே முடியாது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தங்களுக்குக் கடன்பட்டிருப்பேன்.'
பெரிய நம்பி புன்னகை செய்தார். 'ராமானுஜரே! நான் சொன்னதைக் காட்டிலும் அர்த்த விசேஷம் திருக்கோட்டியூர் நம்பியிடம் உண்டு. ஆளவந்தாரின் சீடர்களிலேயே மாபெரும் ரகசியப் பேழை என்றால் அவர்தாம். திருமந்திரமாகட்டும், த்வயமாகட்டும், சரம சுலோகமாகட்டும். அவர் அறிந்த அர்த்த ரகசியங்கள் அபாரமானவை. நாங்கள் ஒன்றாகப் பயின்றவர்கள்தாம். ஆனால் அவர் நன்றாகப் பயின்றவர்களில் ஒரு நாயகன் என்று சொன்னால் உங்களுக்கு விளங்குமா?'ராமானுஜருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. ஒரு மேதை. மாபெரும் ஞானி. அரங்கனின் அரவணைப்பில் வசிக்கிற பெருமான். ஆளவந்தாரின் நேரடிச் சீடர். தம்மைக் காட்டிலும் இன்னொருவர் உயர்ந்தவர் என்று கைகாட்டுகிறார் என்றால், இவரது பணிவின்
ஆழ அகலங்களுக்கு முன் இப்பூவுலகு எம்மாத்திரம்?'இல்லை ராமானுஜரே! என்னைவிட அவர் உயர்ந்தவர். திருக்கோட்டியூர் நம்பி நம்பமுடியாத அளவுக்கு ஞானஸ்தர். ஆசாரியர் ஆளவந்தாருக்குப் பாதமும் கரமுமாக இருந்தவர். என்னைக் கேட்டால் நீங்கள் அவரை நேரில் சந்தித்துப் பாடம் கேட்பது மிகவும் அவசியம் என்பேன்.' என்றார் பெரிய நம்பி.'நீங்கள் அவரைப் பற்றிச் சொல்லும்போதே எனக்கு அவரைக் காண மனம் துடிக்கிறது சுவாமி. எங்கிருக்கிறார் அவர்? சொல்லுங்கள், இப்போதே புறப்படுகிறேன்.''சிவகங்கைக்குப் பக்கத்தில் உள்ள திருக்கோட்டியூரில்தான் வசிக்கிறார். ஆசாரியர் இருந்தவரை திருவரங்கத்திலேயே தங்கியிருந்தவர், அவரது மறைவுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போய்விட்டார்.''ஓ. ஒன்றும் பிரச்னையில்லை சுவாமி. நான் திருக்கோட்டியூருக்குச் சென்றே அவரை தரிசிக்கிறேன்.''நல்லது. மீண்டும் சொல்கிறேன், அவர் அத்தனை சாதாரணமான மனிதரல்ல. பாண்டிய நாட்டில் பெரியாழ்வார் வசித்து வந்த காலத்தில், அவருக்கு நெருக்கமான சீடராக இருந்த செல்வநம்பியின் வம்சத்தில் பிறந்தவர் இவர்.

குருகேசன் என்பது இயற்பெயர். தெரியுமா உமக்கு? உங்களுடைய திருக்கச்சி நம்பிகூட இவரிடம் சிலகாலம் குருகுலவாசம் செய்திருக்கிறார்!''அப்படியா? நம்பிகள் சொன்னதில்லை. எப்படியானாலும் சரி, நான் திருக்கோட்டியூர் நம்பியைச் சென்று சேர்ந்து அவரிடம் ரகஸ்யார்த்தங்களைக் கற்றே தீருவேன்.'பெரிய நம்பி ஆசீர்வதித்துவிட்டுக் கிளம்பிச் சென்றார்.அன்று இரவெல்லாம் ராமானுஜர் முதலியாண்டானிடம் திருக்கோட்டியூர் நம்பியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.'ஆசாரியர் ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளிய சமயம் திருக்கோட்டியூர் நம்பியை இங்கு சந்தித்தேன். ஆனால் அப்போது அவரைச் சரியாக அறிந்து கொள்ளவோ, பேசவோ முடியா மல் போய்விட்டது.''அதனாலென்ன சுவாமி! நாளை கிளம்பி விடுவோமல்லவா?''அவசியம். அதைவிட வேறென்ன வேலை நமக்கு?'திருவரங்கத்தில் இருந்து திருக்கோட்டியூர் சுமார் நுாறு காத துாரம் (337 கிலோ மீட்டர்). 'பல்லக்கெல்லாம் வேண்டாம்; ஆசாரியரை சேவிக்கப் போவதால் நடந்தே போய்விடுவோம்' என்றார் ராமானுஜர்.
ஆனால், அவர் பதினெட்டு முறை நடக்க வேண்டியிருந்தது!

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன்




இது மட்டுமே அவசியம்!

Advertisement




Ramanujar Download
திருவரங்கம் பெரிய கோயிலின் நிர்வாக விவகாரங்களைப் பெரிய நம்பிதான் அப்போது கவனித்துக் கொண்டிருந்தார். ஆளவந்தாரின் பீடத்துக்குப் பொறுப்பேற்று ராமானுஜர் வந்து சேர்ந்த உடன், இந்தப் பணிகளும் அவருடையதாயின. பகல் பொழுதுகள் முழுதும் திருக்கோயில் ஊழியத்திலேயே அவருக்குக் கழிந்து கொண்டிருந்தது. மடத்துக்கு வந்து உட்கார்ந்தால் காலட்சேபம் கேட்க பக்தர்கள் வந்துவிடுவார்கள். இரவு உணவுக்குப் பிறகு படுக்கப் போகிற நேரத்தில்தான் சீடர்களுடன் கொஞ்சமாவது உரையாட அவகாசம் கிடைக்கும்.

ராமானுஜருக்கு இது தான் பிரச்னையாக இருந் தது. தன்னளவில் அவர் ஓர் ஆத்மஞானி. வைணவம் என்னும் சித்தாந்தம் இயல்பிலேயே அவரது சிந்தனைப் போக்கை வடிவமைத்திருந்தது. தாம் சிந்திக்கும் வகைமைக்கு வைணவம் என்று பேர் என்பதை மட்டும்தான் அவர் போகப் போக அறிந்து கொண்டார். நம்மாழ்வார் தொடங்கி, ஆளவந்தார் வரை சொல்லி வைத்த அனைத்துமே இதன் விரிவும் ஆழமும் தேடிச் செல்கிற வழிகள்தாம் என்பதை அவர் உணர்ந்தார். எனவே சரணாகதியை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலின் அடி முதல் நுனிவரை பாடம் கேட்டு, அலசி ஆராய்ந்து பயிலும் பெருவிருப்பம் அவருக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.'சுவாமி, நான் பயிலவேண்டும். ஆளவந்தாரின் திருவடி சம்பந்தம் எனக்கு வாய்க்கவில்லை. அதற்குப் பதிலாக உங்களைச் சரண் புகுந்தேன். பாசுரங்களும் மற்றவையும் பயின்று கொண்டுதான் இருக்கிறேன் என்றாலும் போதாமை உறுத்துகிறது. அர்த்த விசேஷங்களில் மனம் லயித்துக் கிடக்கிறது. அனைத்தையும் அனைவர் மூலமும் அறிந்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கிடக்கிறேன். நீங்கள்தான் ஆரம்பித்து வைக்க வேண்டும்!' என்று பெரிய நம்பியின் தாள் பணிந்து கேட்டார் ராமானுஜர்.நம்பிக்குப் புரிந்தது. ஆளவந்தாரிடம் ஒரு வழக்கம் இருந்தது. தமது அனைத்துச் சீடர்களையும் அவர் சமமாகவே நடத்தினார்,

அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார் என்றாலும் ஒவ்வொருவரிடமும் ஒரு குறிப்பிட்ட மந்திரம் அல்லது சுலோகம் அல்லது தத்துவத்தின் சிறப்புப் பொருளைத் தமது பிரத்தியேகப் பரிசாக வழங்கியிருந்தார். அது இன்னொருவருக்குத் தெரியாது. சம்பந்தப்பட்டவரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. அதைத்தான் ராமானுஜர் கேட்டார். எனக்கு அனைத்தும் வேண்டும். அனைவரிடம் இருந்தும் வேண்டும்.'புரிகிறது ராமானுஜரே. நானறிந்த த்வய மந்திரத்தைத் தங்களுக்கு போதிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.' என்று சொல்லிவிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து வகுப்பை ஆரம்பித்தார்.'த்வயம் என்பது வேதங்களின் சாரம். காற்றைப் போல், ஒளியைப் போல் இவ்வுலகெங்கும் நீக்கமற நிறைந்து நீந்திக் கொண்டிருக்கும் அத்தனை மந்திரங்களிலும் ஆகச் சிறந்ததும் உயர்ந்ததும் இதுவே.''அற்புதம் சுவாமி! த்வய மந்திரத்தின் அவசியத்தை முதலில் சொல்லுங்கள்.' பெரிய நம்பி ஒரு கணம் கண்மூடி யோசித்தார். 'அவசியம்தானே? சொல்கிறேன். பந்தங்களில் இருந்து விடுதலை பெறவும் மிக நேரடியாக
மோட்சத்தை அடையவும் இது அவசியம். இது மட்டுமே அவசியம்.'

தொடர்ந்து பல நாள்களுக்குப் பெரிய நம்பி ராமானுஜருக்கு த்வய மந்திர வகுப்பெடுத்தார். ஒன்றைத் தொட்டு ஒன்று என்று அர்த்த விசித்திரங்கள் எத்தனை எத்தனையோ எல்லைகளைக் கடந்து வேதத்தின் மையத்தைச் சென்று தொட்டுக் காட்டியது.ராமானுஜர் ஆனந்தப் பரவசத்தின் உச்சத்தில் இருந்தார். எப்பேர்ப்பட்ட பெருங்கருணை இந்த மனிதருக்கு! அற்பனான என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, சீடனாக ஏற்று எத்தனை உயர்வான விஷயங்களை போதிக்கிறார்!கண்ணீர் மல்க அப்படியே பெரிய நம்பியின் கால்களில் விழுந்து வணங்கினார்.'ஆசாரியரே! எத்தனை பூடகமான பேருண்மைகளை எனக்கு நீங்கள் எளிதாக விளக்கியிருக்கிறீர்கள் என்று விவரிக்கவே முடியாது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தங்களுக்குக் கடன்பட்டிருப்பேன்.'
பெரிய நம்பி புன்னகை செய்தார். 'ராமானுஜரே! நான் சொன்னதைக் காட்டிலும் அர்த்த விசேஷம் திருக்கோட்டியூர் நம்பியிடம் உண்டு. ஆளவந்தாரின் சீடர்களிலேயே மாபெரும் ரகசியப் பேழை என்றால் அவர்தாம். திருமந்திரமாகட்டும், த்வயமாகட்டும், சரம சுலோகமாகட்டும். அவர் அறிந்த அர்த்த ரகசியங்கள் அபாரமானவை. நாங்கள் ஒன்றாகப் பயின்றவர்கள்தாம். ஆனால் அவர் நன்றாகப் பயின்றவர்களில் ஒரு நாயகன் என்று சொன்னால் உங்களுக்கு விளங்குமா?'ராமானுஜருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. ஒரு மேதை. மாபெரும் ஞானி. அரங்கனின் அரவணைப்பில் வசிக்கிற பெருமான். ஆளவந்தாரின் நேரடிச் சீடர். தம்மைக் காட்டிலும் இன்னொருவர் உயர்ந்தவர் என்று கைகாட்டுகிறார் என்றால், இவரது பணிவின்
ஆழ அகலங்களுக்கு முன் இப்பூவுலகு எம்மாத்திரம்?'இல்லை ராமானுஜரே! என்னைவிட அவர் உயர்ந்தவர். திருக்கோட்டியூர் நம்பி நம்பமுடியாத அளவுக்கு ஞானஸ்தர். ஆசாரியர் ஆளவந்தாருக்குப் பாதமும் கரமுமாக இருந்தவர். என்னைக் கேட்டால் நீங்கள் அவரை நேரில் சந்தித்துப் பாடம் கேட்பது மிகவும் அவசியம் என்பேன்.' என்றார் பெரிய நம்பி.'நீங்கள் அவரைப் பற்றிச் சொல்லும்போதே எனக்கு அவரைக் காண மனம் துடிக்கிறது சுவாமி. எங்கிருக்கிறார் அவர்? சொல்லுங்கள், இப்போதே புறப்படுகிறேன்.''சிவகங்கைக்குப் பக்கத்தில் உள்ள திருக்கோட்டியூரில்தான் வசிக்கிறார். ஆசாரியர் இருந்தவரை திருவரங்கத்திலேயே தங்கியிருந்தவர், அவரது மறைவுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போய்விட்டார்.''ஓ. ஒன்றும் பிரச்னையில்லை சுவாமி. நான் திருக்கோட்டியூருக்குச் சென்றே அவரை தரிசிக்கிறேன்.''நல்லது. மீண்டும் சொல்கிறேன், அவர் அத்தனை சாதாரணமான மனிதரல்ல. பாண்டிய நாட்டில் பெரியாழ்வார் வசித்து வந்த காலத்தில், அவருக்கு நெருக்கமான சீடராக இருந்த செல்வநம்பியின் வம்சத்தில் பிறந்தவர் இவர்.

குருகேசன் என்பது இயற்பெயர். தெரியுமா உமக்கு? உங்களுடைய திருக்கச்சி நம்பிகூட இவரிடம் சிலகாலம் குருகுலவாசம் செய்திருக்கிறார்!''அப்படியா? நம்பிகள் சொன்னதில்லை. எப்படியானாலும் சரி, நான் திருக்கோட்டியூர் நம்பியைச் சென்று சேர்ந்து அவரிடம் ரகஸ்யார்த்தங்களைக் கற்றே தீருவேன்.'பெரிய நம்பி ஆசீர்வதித்துவிட்டுக் கிளம்பிச் சென்றார்.அன்று இரவெல்லாம் ராமானுஜர் முதலியாண்டானிடம் திருக்கோட்டியூர் நம்பியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.'ஆசாரியர் ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளிய சமயம் திருக்கோட்டியூர் நம்பியை இங்கு சந்தித்தேன். ஆனால் அப்போது அவரைச் சரியாக அறிந்து கொள்ளவோ, பேசவோ முடியா மல் போய்விட்டது.''அதனாலென்ன சுவாமி! நாளை கிளம்பி விடுவோமல்லவா?''அவசியம். அதைவிட வேறென்ன வேலை நமக்கு?'திருவரங்கத்தில் இருந்து திருக்கோட்டியூர் சுமார் நுாறு காத துாரம் (337 கிலோ மீட்டர்). 'பல்லக்கெல்லாம் வேண்டாம்; ஆசாரியரை சேவிக்கப் போவதால் நடந்தே போய்விடுவோம்' என்றார் ராமானுஜர்.
ஆனால், அவர் பதினெட்டு முறை நடக்க வேண்டியிருந்தது!

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன்
தனியே வா!
Advertisement




Ramanujar Download
'சுவாமி, இது எங்களுக்குப் புரியவேயில்லை. இதுவரை நீங்கள் பதினேழு முறை திருக்கோட்டியூருக்குச் சென்று திரும்பி விட்டீர்கள். உங்களிடம் என்ன குறை கண்டார் என்று நம்பிகள் இப்படி முகத்திலடித்தாற் போலத் திருப்பி அனுப்புகிறார்?'
ராமானுஜரின் சீடர் களுக்கு ஆறவேயில்லை. வித்யாகர்வம் இருக்க வேண்டியதுதான். ஆனால் இப்படியா? அதையும் இப்படியொரு மகாபுருஷனிடமா காட்டுவார்கள்? ஒருமுறை இருமுறை என்றால் பரவாயில்லை. பதினேழு முறை! 'தயவுசெய்து போதும். இனி நீங்கள் திருக்கோட்டியூருக்குச் செல்ல வேண்டாம் சுவாமி!' கண்ணீரோடு விண்ணப்பித்துக் கொண்டார்கள்.'இல்லை. அவரிடம் ரகஸ்யார்த்தம் கேட்க எனக்குத் தகுதி வரவில்லை என்று நினைக்கிறேன். பிழை அவர் மீதில்லை' என்று சொல்லிவிட்டு ராமானுஜர் நகர்ந்து விட்டார். ஆனால் அவருக்கும் அந்த உறுத்தல் இருந்தது. அப்படி என்ன பிழை செய்துவிட்டேன்? ஒவ்வொரு முறை செல்லும் போதும் இன்னொரு சமயம் வரச் சொல்லி விடுகிறார். வந்ததற்கும் சந்தித்ததற்கும் அடையாளமாக ஒருவரி போதனை. அதைத் தவிர வேறில்லை.நான்காவது முறை ராமானுஜர் விடாமல் திருக்கோட்டியூருக்குப் போனபோது 'அகங்கார மமகாரங்களை ஒழிக்க வலுவில்லாவிட்டால் ஆத்மஞானம் இல்லை' என்றார் நம்பி. ஆத்மஞானம் இல்லாது போனால் போகங்களின் மீதான இச்சை போகாது. இச்சை இருந்தால் இறை அன்பு இல்லை. பரம்பொருள் மீது அன்பு குவியாவிட்டால் பற்று நீங்காது. பற்று நீங்காவிட்டால் பரமனுக்கு அர்ப்பணமாக மாட்டோம். அப்படி அர்ப்பணமானால்தான் காமம் விலகும். காமம் விலகினால் வைணவ மனநிலை கைகூடும். அது கூடினால் சத்சங்கம் சேரும். சத்சங்கமே பாகவத சம்பந்தத்துக்குப் படி. பாகவத சம்பந்தமே பகவத் சம்பந்தத்தின் வாயில். அது கிடைத்துவிட்டால் மற்ற சிறு பலன்கள் ஒரு பொருட்டாகாது. சிறு பலன்களில் வெறுப்பு வந்தால், பெரும் பலனாகப் பரமனின் அடிமை ஆவான். அவனையே சரணமடைவான். அப்படிச் சரணாகதியடைந்த ஒருவனே திருமந்திரத்தையும் அதன் பொருளையும் ஏற்கத் தகுதி பெறுவான். அத்தகுதி யாருக்கு வாய்க்கிறதோ, அவருக்கே ரகஸ்யார்த்தம் வாய்க்கும்.இதை முதல்நாளே மொத்தமாகச் சொல்லியிருந்தால் குருகைப் பிரானின் நோக்கம் அன்றே ராமானுஜருக்கு விளங்கியிருக்கும். அவர் ஒவ்வொரு முறை சென்றபோதும் ஒவ்வொரு வரியாகச் சொல்லி அனுப்பியதுதான் விசித்திரம்.மொத்தமாகச் சேர்த்து யோசித்துப் பார்த்தார் ராமானுஜர். அடடா! சரணாகதியைத்தானே ஆசாரியர் வலியுறுத்துகிறார்! சன்னிதியில் நெடுநேரம் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். 'அரங்கப் பெருமானே! சரணாகதியைத் தவிர வேறெதையும் நான் அறியேனே? உற்றோமேயாவோம் உமக்கேநாம் ஆட்செய்வோம் என்றல்லவா ஒப்புக் கொடுத்திருக்கிறேன்?ஆசாரியருக்கு இதை யார் எடுத்துச் சொல்வார்கள்? அவரது கருணைக் கண் எப்போது என் மீது திறக்கும்?'அன்றைக்குத் திருவரங்கம் கோயிலுக்குத் திருக்கோட்டியூரில் இருந்து நம்பியின் சீடர் ஒருவர் வந்திருந்தார். 'சுவாமிகளே, நீங்கள் ஒவ்வொருமுறையும் நம்பிக்கையுடன் திருக்கோட்டியூருக்கு வருகிறீர்கள். ஆசாரியர் ஒவ்வொருமுறையும் தங்களைத் திருப்பி அனுப்புகிறார். தாங்களும் சளைக்காமல் மீண்டும் வருகிறீர்கள். எங்களுக்கெல்லாம் இது எவ்வளவு சங்கடமாக உள்ளது தெரியுமா?' என்று கேட்டார் அவர். 'எம்பெருமான் இன்னும் ஆசாரி யருக்கு அனுமதி தரவில்லை போலிருக்கிறது. அவர்மீது பிழை இல்லை ஐயா!'உண்மையில் முதல்முறை ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்று திரும்பிய உடனேயே குருகைப் பிரானுக்கு அரங்கனின் அனுமதி கிடைத்துவிட்டது.'நம்பி! ராமானுஜர் தகுதி வாய்ந்த பாத்திரம். நீர் அவருக்கு ரகஸ்யார்த்தங்களை தாராளமாகச் சொல்லிக் கொடுக்கலாம்!' என்று அவரது உட்செவியில் கேட்ட குரல் அரங்கனுடையதேதான். ஆனாலும் அவர் தயங்கினார். ஏனெனில் காலமாவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் ஆளவந்தார் அவரைத் தனியே அழைத்து ஒரு விஷயம் சொல்லியிருந்தார். 'ரகஸ்யார்த்தங்கள் சக்தி மிக்கவை. யாரையும் பரிசோதித்துப் பாராமல் போதித்துவிடாதே! தகுதியற்ற ஒருவருக்கு அவை தப்பித் தவறிக்கூடப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது!'ராமானுஜர் முதல் முறை திருக்கோட்டியூருக்கு வந்து சென்ற பிறகு குருகைப் பிரான் ஒரு சமயம் திருவரங்கத்துக்குப் போனார். சன்னிதியில் வைத்துப் பெருமானிடம் இதனை விண்ணப்பித்துக் கொண்டு, 'எம்பெருமானே! ராமானுஜர் தகுதி வாய்ந்த பாத்திரம் என்று நீ சொல்கிறாய். ஆனால் பரிசோதித்துப் பாராமல் பாடம் சொல்ல வேண்டாம் என்று என் ஆசாரியர் சொல்லியிருக்கிறார். ஆசாரியர் சொன்னதைத்தான் நான் கேட்க முடியும். நீ கொஞ்சம் பொறுத்துக்கொள்' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். திருக்கோட்டியூர் நம்பியின் ஆசாரிய பக்தி அப்படிப்பட்டது. அரங்கனே உத்தரவு கொடுத்தாலும், ஆசாரியரின் உத்தரவுக்கு அப்புறம்தான் அது. அவருக்கு ஒன்றே ஒன்றுதான் தெரிய வேண்டியிருந்தது. ராமானுஜரின் தீவிரம். ஒப்புக்காக ஒருதரம் வந்து கேட்டுவிட்டுப் போகிற நபராக இருந்துவிட்டால்? ஆனால் அவர் அப்படி இல்லை.பதினாறு முறை ஏமாந்து, பதினேழாவது முறையும் ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்றபோது நம்பிக்கு அது விளங்கிவிட்டது. அன்று சரணாகதி நிலையை அடை வதற்கான கடைசிக்கு முந்தைய படியைத் தமது ஒருவரிப் பாடமாக அவர் சொல்லி அனுப்பியபோதே, அடுத்த வருகையில் காரியம் கைகூடிவிடும் என்று தமது மானசீகத்தில் ஆசீர்வதித்துத்தான் அனுப்பியிருந்தார். ராமானுஜருக்கு அது எப்படித் தெரியும்! திருவரங்கம் சென்று திரும்பிய நம்பியின் சீடர், நடந்ததைத் தமது ஆசாரியரிடம் எடுத்துச் சொன்னார். 'சுவாமி, ராமானுஜர் மிகவும் மனம் நொந்திருக்கிறார். தாங்கள் இனியும் அவரைச் சோதிக்க வேண்டாமே?'நம்பி கண்மூடி வெகுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு கண்களைத் திறந்து புன்னகை செய்தார்.'சரி, வரச் சொல்லுங்கள். ஆனால் பரிவாரங்களுடன் அல்ல. தண்டும் பவித்திரமுமாகத் தனியாகத்தான் வரவேண்டும்!' தண்டும் பவித்திரமும் மட்டுமே துறவியின் சின்னங்கள். உறங்கும்போதும் உடனிருப்பவை. மற்ற எதனோடும் அவருக்கு உறவு கிடையாது. தவிரவும் ரகஸ்யார்த்தம் என்பது அனைவருக்கும் வினியோகிக்கிற பிரசாதமல்ல. தகுதி முக்கியம். தெய்வானுக்கிரகம் முக்கியம். அது நியமிக்கப்படுவது. பெரும் தவத்துக்குப் பிறகு மட்டுமே சித்திக்கும் வரம்.செய்தி கிடைத்ததும் ராமானுஜர் பரவசக் கூத்தாடினார். 'என்ன தவம் செய்தேன்! என்ன தவம் செய்தேன்! ஆசாரியர் ஒப்புக்கொண்டு விட்டாரா? உண்மையாகவா? இப்பிறவியில் இதனைக் காட்டிலும் பெரும்பேறு வேறு சாத்தியமில்லை. நான் புறப்பட்டுவிட்டேன் என்று சொல்லுங்கள்!'தகவல் கொண்டு வந்தவரிடம் சொல்லி அனுப்பிவிட்டு ராமானுஜர் பெரிய நம்பியிடம் ஓடினார். விஷயத்தைச் சொல்லி மகிழ்ந்து அவர் பாதம் பணிந்தார்.
'போய் வாருங்கள் ராமானுஜரே! ஆனால் உம்மைத் தனியே வரச் சொல்லியிருக்கிறார்! கவனம்.'தலையசைத்து வணங்கி விடைபெற்ற ராமானுஜர் மடத்துக்கு வந்ததும் முதலியாண்டானையும் கூரத்தாழ்வானையும் அழைத்தார்.'புறப்படுங்கள். நாம் இப்போதே திருக்கோட்டியூர் செல்கிறோம்!' என்றார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்


ஓம் நமோ நாராயணாய!
Advertisement




Ramanujar Download














கொதித்துப் போய்விட்டார் குருகைப் பிரான். 'ஓய் ராமானுஜரே! நாம் என்ன சொல்லி அனுப்பி வைத்தோம், நீர் எப்படி வந்து நிற்கிறீர்? இதுதான் நீங்கள் ஆசாரியர் சொல் கேட்கிற லட்சணமா? உம்மைப் பெரிய ஞானஸ்தன் என்று ஊரே கொண்டாடுகிறது. போதாக்குறைக்கு உமக்குத் திருமந்திர உபதேசம் செய்யும்படி அரங்கனே வேறு சிபாரிசு செய்கிறான். குருவின் ஒரு சொல்லைக் காக்க உம்மால் முடியாதபோது அத்தனை பெரிய ஞானப்புதையலை எப்படி எடுத்து ஏந்துவீர்?'
கோபத்தில் அவரது முகம் சிவந்து ஜொலித்தது. ராமானுஜர் அமைதியாக அவர் தாள் பணிந்து நிதானமாக பதில் சொன்னார். 'ஆசாரியரே! உங்கள் வார்த்தையை நான் மீறு வேனா? ஒருக்காலும் மாட்டேன். என்ன பிழை கண்டீர் என்று சொன்னால் உடனே திருத்திக் கொள்வேன்.''உம்மைத் தனியாக அல்லவா நான் வரச் சொல்லியனுப்பினேன்? எதற்காக இந்த இரண்டு பேரை உடன் அழைத்து வந்திருக்கிறீர்?'முதலியாண்டானுக்கும் கூரத்தாழ்வானுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. இது என்ன கஷ்டம்! பதினெட்டு முறை நடையாய் நடந்து ஆசாரிய அனுக்கிரகம் கிட்டுகிற நேரத்தில் தம்மால் அதற்குத் தடையா? பேசாமல் வெளியே போய்விடலாமா? அவர்கள் ராமானுஜரைப் பார்த்த கணத்தில் அவர் அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு குருகைப் பிரானை நோக்கினார். 'சுவாமி, நீங்கள் என்னைத் தனியாகத்தான் வரச் சொல்லியிருந்தீர்கள். ஆனால், தண்டும் பவித்திரமுமாகத் தனியே வரவும் என்றல்லவா உமது சீடர் என்னிடம் சொன்னார்?''ஆம், சொன்னேன். அதிலென்ன?''இந்த முதலியாண்டான் எனது தண்டு. கூரேசனே பவித்திரம்!' என்று இருவரையும் முன்னால் அழைத்து அவரது தாள் பணியச் செய்தார்.
திகைத்து விட்டார் குருகைப் பிரான்.'என்னது? இவர் தண்டு, அவர் பவித்திரமா?''ஆம் சுவாமி. அனைத்தையும் துறந்து நான் சன்னியாசம் பெற்ற போதுகூட தாசரதியைத் தவிர உள்ள மற்றனைத்தையும்தான் துறந்தேன். இது என் மனத்துக்கும் எம்பெருமான் திருவுள்ளத்துக்கும் தெரியும். இன்று தங்கள் முன் அந்த ரகசியத்தை வெளிப்படுத்துகிறேன். முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் வைணவம் தழைக்கத் தம்மை அர்ப்பணித்தவர்கள். திருத்தொண்டு தவிர இன்னொரு சிந்தையில்லாதவர்கள். எனது திரிதண்டமும் பவித்திரமும் இவர்களே ஆவர். எனவே, தாங்கள் எனக்கு போதிக்கும் ரகஸ்யார்த்தங்களை இவர்களுக்கும் சேர்த்து அருள வேண்டும்!'குருகைப் பிரானுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ராமானுஜர் தமது இரு சீடர்களைப் பற்றி ஆதியோடு அந்தமாக அவருக்கு எடுத்துச் சொன்னார். முதலியாண்டானின் ஆசாரிய பக்தி. தவத்தில் அவனுக்கிருந்த தீவிரம். பற்றற்ற பான்மை. கோடானுகோடி ஜன சமூகத்தையும் தன் சொந்தமாக எண்ணுகிற பெருந்துறவு மனம். பிறகு கூரேசனின் தியாகம். எப்பேர்ப்பட்ட செல்வந்தன் அவன்! அனைத்தையும் கணப்பொழுதில் விசிறியடித்துவிட்டுத் திருமால் சேவைக்கு ஓடி வந்தவன். 'ஆசாரியரே! தகுதியற்ற இருவரைத் தங்கள் முன் நான் கொண்டு வந்து நிறுத்துவேனா? எத்தனைப் பிரயத்தனப்பட்டு எனக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது? இதை இழக்க விரும்புவேனா? தங்கள் மூலம் இவர்கள் திருமந்திரப் பொருள் அறிந்தால் அது தொண்டர் குலம் பெறும் பேறாகும். தங்களைத் தவிர வேறு யாரால் இதனை வாழ்விக்க இயலும்?' நெடுநேரம் அவர் யோசித்தார். பிறகு என்ன நினைத்தாரோ? 'சரி, போகிறது. தண்டும் பவித்திரமுமாக வரச் சொன்னது நான்தான். நீர் இவர்களே உமது தண்டும் பவித்திரமும் என்று சொல்லிவிட்டீர். இனி பேச்சில்லை. ஆனால் ஒன்று. உம்மைத் தாண்டி இந்த ரகஸ்யார்த்தங்கள் வேறு யாருக்கும் போய்ச் சேரக்கூடாது.''ஆகட்டும் சுவாமி.''உயிர் பிரியும் காலம் நெருங்கும்போது தக்க பாத்திரம் ஒன்றைக் கண்டடைந்தால் அங்கு சொல்லி வைக்கலாம். அதற்குமுன் திருமந்திரப் பொருளை வெளியிட்டால் உமக்கு நல்ல கதி கிட்டாது.'
'தங்கள் சித்தம்.''இப்படி வந்து அமரும்.'ராமானுஜர் பணிவும் பக்தியுமாகத் திருக்குருகைப் பிரான் எதிரே சென்று சேவித்து அமர்ந்தார். நம்பிகள் தொடங்கினார்.ஓம் நமோ நாராயணாய. திருமந்திரம் என்பது அதுதான். அனைத்து ரகசியங்களுக்கும் மூலாதாரம் அதுதான். நான்கு வேதங்களும் அவற்றின் அங்கங்களான உபநிடதங்களும் அவற்றின் சுருக்க விளக்கங்களான பிரம்ம சூத்திரமும் கீதையும் இன்ன பிற தத்துவ ஞானத் தேடல்களின் விளைவுகள்
யாவும் சென்று சேரும் இடம் அதுவே. தன்னை அறிந்தவனால் மட்டுமே இறைவனை அறிய இயலும். பூரணமாக இறைவனை அறிந்தவனுக்கே தாம் பெறவேண்டிய பேறு எது என்பது புரியும். தெரிந்துவிட்டால் கிடைத்துவிடுமா? எத்தனைத் தடைகள், எவ்வளவு இடர்பாடுகள்! அந்த இடர்களை அறிந்து களையும்போதுதான் பால்வழிப் பாதையின் கதவு திறக்கும். பரமன் அருள் சித்திக்கும். அவனைச் சென்று சேரும் வழி புலப்படும்.
அந்த வழியைத் திறக்கும் சாவித்துவாரமே திருமந்திரம். ஓம் நமோ நாராயணாய.குருகைப் பிரான் ரகஸ்யார்த்தங்களை விளக்கத் தொடங்கியதுதான் ராமானுஜருக்குத் தெரியும். மறுகணமே அவர்தம் ஆசாரியரின் அந்தராத்மாவுக்குள் ஊடுருவிப் போனார். வெளியே நிகழும் எதுவும் தெரியாத மோன நிலை. குருவும் அவர் தரும் சொல்லும். சொல்லும் அது தரும் பொருளும். பொருளும் அது விரியும் வெளியும். வெளியும் அதன் உள்ளுறைக் கருவும்.
ஆசாரியரின் வாய் திறந்து உதிர்ந்து கொண்டிருந்த பெரும்பொருளைக் கரம் கூப்பிக் கண்மூடிய நிலையில் நெஞ்சில் ஏந்திக் கொண்டிருந்தவரின் கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிந்து கொண்டிருந்தது.காலம் உறைந்து மீண்டதொரு கணத்தில் அர்த்த விசேஷங்களைச் சொல்லி முடித்து, குருகைப் பிரான்
நிறுத்தினார்.ராமானுஜர் சாஷ்டாங்கமாக அவரை விழுந்து வணங்கி, 'என்ன தவம் செய்தேன் சுவாமி! இப்பிறவி அர்த்தம் கண்டது.''ஆனால் சொன்னது நினைவிருக்கட்டும் ராமானுஜரே! நீர் சரியான பாத்திரம் என்று நம்பித்தான் உம்மிடம் இதனைச் சொல்லி வைத்தேன். தப்பித்தவறிக் கூட பாத்திரம் பொத்தலாகி விடலாகாது.'தலைவணங்கி விடைபெற்று வெளியே வந்தார் ராமானுஜர்.முதலியாண்டான் ஏதோ சொல்ல வாயெடுக்க, சட்டென அவனைத் தடுத்து, 'கோயிலுக்குப் போக வேண்டும் தாசரதி! அதன்பிறகுதான் பேச்செல்லாம்.'ரகஸ்யார்த்தம் கேட்டு வந்தவர்கள் அவர்கள். ஆனால் ராமானுஜர் சொன்னதற்குள் ஒரு ரகஸ்யார்த்தம் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com


- பா.ராகவன் -



கோபுர வாசல்
Advertisement




Ramanujar Download













ராமானுஜர் செய்ய உத்தேசித்திருந்தது, அவரது சீடர்களுக்குத் தெரியாது. அவர் சொல்லவில்லை. அவர்கள் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் வாசலுக்கு வந்தபோது, சேவித்துவிட்டு ஊர் திரும்பிவிடப் போகிறோம் என்றுதான் நினைத்தார்கள்.
'சுவாமி, சன்னிதிக்குச் செல்லலாமே?' என்றான் முதலியாண்டான். ராமானுஜர் யோசனையுடன் கோயிலுக்கு வெளியிலேயே நின்றிருந்தார். அது அங்கே உற்சவ நேரம். ஊர் மக்கள் நிறையப் பேர் கோயிலுக்கு வந்திருந்தார்கள். 'கூட்டமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?' என்றான் கூரத்தாழ்வான்.ராமானுஜர் புன்னகை செய்தார். ஒன்றும் பேசாமல் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். சீடர்களால் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. என்ன ஆயிற்று இன்று இவருக்கு? எதற்காக இத்தனை வேகம்? வந்த காரியம் நல்லபடியாக முடிந்துவிட்டது. நிதானமாகக் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டுப் போனால்தான் என்ன?ராமானுஜர் கோயிலை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தார். ஆனால் அந்த வேகம் அசாத்தியமானது.உள்ளே நுழைந்தவர் சன்னிதிக்குச் செல்லவில்லை. நேரே கோபுரத்தின் மேல் மாடத்தை அடையும் படிகள் இருக்கிற பக்கத்தை விசாரித்துக்கொண்டு அங்கே சென்றார்.
யாரையும் பார்க்கவில்லை. எது குறித்தும் கவலை கொள்ளவும் இல்லை. என்ன ஏது என்று யாரும் விசாரிப்பதற்கு முன்னர் கோபுரத்தின் மீது ஏறிவிட்டார். ஒன்றும் புரியாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த கூரத்தாழ்வானிடம் ஊர்க்காரர் ஒருவர் கேட்டார், 'அவர் ராமானுஜர் அல்லவா? கோயிலுக்கு வந்தவருக்கு கோபுரத்தின் மீது என்ன வேலை?''தெரியவில்லை சுவாமி. எங்களுக்கும் அதே யோசனைதான்.''அதுசரி, குருகைப் பிரான் இம்முறை அவருக்கு உபதேசம் செய்து விட்டாராமே? அந்தப் பக்கம் இருந்துதான் வருகிறேன். நம்பிகள் மாளிகை வாசலில் அவரது சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.''ஆம் சுவாமி. இன்றைய தினம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. யாருக்கும் கிட்டாத மிகப்பெரும் ரகஸ்யார்த்தங்கள் இன்று எங்கள் ஆசாரியருக்குக் கிடைத்தன. எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ, அதை அறிய நேர்ந்தது. எது கிடைத்துவிட்டால் வேறு எதுவுமே அவசியமில்லையோ, அது கிடைத்து விட்டது. எந்த மந்திரம் நிகரற்றதோ, எந்த மந்திரம் இப்பிறப்புக்கும் மறுபிறப்பற்ற பேரானந்த நிலைக்கும் ஆதாரமோ, அந்த மந்திரம் வசப்பட்டு விட்டது.' புல்லரித்து விவரித்துக் கொண்டிருந்தான் முதலியாண்டான்.
'இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் ஐயா. ராமானுஜர் ஆசீர்வதிக்கப்பட்டவர். இதே ஊரில் இத்தனை நுாறு பேர் வசிக்கிறோமே, எங்களையெல்லாம் குருகைப் பிரான் இதுகாறும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை என்பதை அறிவீரா?''அதுமட்டுமா... அவரிடம் சீடனாகச் சென்று சேரக்கூட எங்களுக்கு வழியில்லை சுவாமி. அவர் எந்த அடிப்படையில் தமது மாணாக்கர்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதே எங்களுக்குப் புரியவில்லை.' 'அப்படிச் சேருகிற சிலரைக் கூட சில காலம் வைத்திருந்துவிட்டு அனுப்பி விடுகிறார். தொடர்ந்து வாசிக்கிறவர்கள் வெகு சொற்பம்.''வேதபாடம் பயிலவே இத்தனை கெடுபிடிகள். அதற்கெல்லாம் மூலாதாரமான சத்விஷயத்தை போதிப்பதென்றால் எத்தனையெத்தனை தகுதிகள் எதிர்பார்ப்பார்!'ஒருவர்தான் ஆரம்பித்தது. வரிசையாக ஏழெட்டு உள்ளூர்க்காரர்கள் அங்கே சேர்ந்து விட்டார்கள். குருகைப் பிரானின் குணாதிசயங்களைப் பற்றியும், ராமானுஜருக்கு அவர் ரகஸ்யார்த்தம் போதித்தது பற்றியும் ஆச்சரியப்பட்டுப் பேசத் தொடங்கினார்கள்.'ஓய் ராமானுஜரே! கோபுரத்தின்மீது ஏறி நின்று என்ன செய்து கொண்டிருக்கிறீர்? கீழே வாருமய்யா. ரகஸ்யார்த்தம் அறிந்த உம்மைச் சேவித்தாவது புண்ணியம் தேடிக் கொள்கிறோம்!' கீழிருந்து ஒருவர் குரல் கொடுத்தார்.'அப்படியா விரும்புகிறீர்கள்? ஏன், நீங்களே அதன் உட்பொருளை அறியலாமே? பிறவிப் பெருங்கடலை நீந்த உமக்கொரு உபாயம் உள்ளதென்றால் வேண்டாமென்று சொல்லி விடுவீர்களோ?'திடுக்கிட்டுப் போனது கூட்டம். என்ன சொல்கிறார் இவர்? புரியவில்லையே.ராமானுஜர் பேசத் தொடங்கினார்.
'திருக்கோட்டியூர் மக்களே! திருமந்திரத்தின் உட்பொருளை அறிவதற்கு நான் பதினெட்டு முறை இந்த ஊருக்கு நடையாய் நடந்தேன். இந்தக் காலக்கட்டத்தில் தவமும் விரதங்களும் என்னை மெலிவுற வைத்தன. உடலும் உள்ளமும் வருந்தி படாதபாடுபட்டு ஒரு வழியாக ஆசாரியரின் கருணைக் கண் திறக்கப் பெற்றேன். ஆனால் இத்தனை மெனக்கெடல் அத்தனை பேருக்கும் சாத்தியமா?''நிச்சயமாக இல்லை சுவாமி!' 'ஆனால் காற்று பொதுவானது. வெளிச்சம் பொதுவானது. நீர் பொதுவானது. இப்புவி அனைவருக்கும் பொதுவானது. அவ்வண்ணமே அண்டப் பெருவெளியை ஆளும் பரம்பொருளின் அருளும் அனைவருக்கும் பொதுவானது. அவனை அறிய, அவனது சொரூபத்தை அறிய, அவனது சுபாவத்தை அறிய, இறுதியில் அவனையே சென்றடைய உங்களுக்கெல்லாம் ஆசை இல்லாதிருக்குமா?''அதெப்படி சுவாமி! தெரிந்த அளவுக்கு பக்தி செய்கிறோம். முடிந்த அளவுக்கு சிறப்பாக வாழ முயற்சி செய்கிறோம். ஆனால் முழுமை என்ற ஒன்று எங்கே நமக்கெல்லாம் வாய்க்கிறது?''சரியாகச் சொன்னீர்கள். முழுமை என்பது பரம்பொருளே. எதை அறிந்தால் வேறெதுவும் முக்கியமில்லையோ, அதை அறிய விருப்பம் இருக்கிறதா உங்களுக்கு?'கோபுரத்தின் உச்சியில் ஒரு மனிதர். கீழே பத்திருபது பேர் கொண்ட கூட்டம். என்ன உரையாடல் நடக்கிறது அங்கே?ஆர்வத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் மக்கள் அங்கே வந்து சேரத் தொடங்கினார்கள். சில நிமிடங்களில் நுாற்றுக்கணக்கானவர்கள் அங்கே வந்து குழுமி விட ஆளாளுக்குக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். 'ராமானுஜர் எதற்கு கோபுரத்தின் உச்சிக்குச் சென்று நிற்கிறார்? என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அவரிடம்?'ராமானுஜர் சொன்னார். 'இக்கணத்துக்காகவே நான் இங்கே காத்திருக்கிறேன் அன்பர்களே! திருமந்திரத்தின் உட்பொருள் எனக்குத் திருக்கோட்டியூர் நம்பி மூலம் இன்று அறியக் கிடைத்தது.
இம்மந்திரத்தை அதன் உண்மை சொரூபத்துடன் அறிபவனுக்கு மோட்சம் எளிது. எண்ணற்ற முனிவர்களும் யோகிகளும் யுகக்கணக்கில் தவமிருப்பது இதற்காகத்தான். என் பேறு, இன்று நான் இதனைப் பெற்றேன். உங்களுக்கு விருப்பம் உண்டானால் நான் பெற்றதை உங்களுக்கும் அறிவிப்பேன்!' ஆ, ஆ என்று ஆரவாரம் எழுந்தது. அனைவரும் வியப்பிலும் பரவசத்திலும் மெய்சிலிர்த்துப் போய், 'கூறுங்கள் ராமானுஜரே! எங்களையும் கடைத்தேற்றுங்கள்!' என்று கூக்குரலிட்டார்கள்.முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் திகைத்து விட்டார்கள்.'இது ரகசியமானது. பகிரங்கப்படுத்தினால் உனக்கு நரகம் நிச்சயம்' என்று நம்பிகள் சொல்லியனுப்பியதுதான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.ராமானுஜர் அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்தார். மனவோட்டம் புரியாதவரா அவர்? ஆனால் ஆறுதல் ஏதும் சொல்லவில்லை. புன்னகைதான் செய்தார்.தன்னை திடப்படுத்திக்கொண்டு ஆரம்பித்தார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்


கருணைப் பெருங்கடல்
Advertisement




Ramanujar Download












பேரமைதி. படபடவென சிறகடித்து மாடம் மாறி அமரும் கோபுரத்துப் புறாக்களும் அசையாது அமர்ந்திருந்தன. உற்சவ களேபரத்தில் இருந்த கோயிலும் சட்டென்று அமைதி கொண்டது. அத்தனை பேரும் கோபுர வாசலுக்கு வந்து குழுமி விட்டார்கள். கோபுரத்தின் மீது மோதி திசை நகர்ந்த காற்றின் மெல்லிய ஓசை தவிர ஒன்றுமில்லை. என்ன சொல்லப் போகிறார் ராமானுஜர்?
ஓம் நமோ நாராயணாய. அவர் ஆரம்பித்தார். சில நிமிடங்களுக்கு முன்னர் திருக்கோட்டியூர் நம்பி தன்னை எதிரே அமர வைத்து ரகசியமாகச் சொல்லிக் கொடுத்த மூலமந்திரத்தின் பொருள் விளக்கம் முழுவதையும், வீட்டுக்கு வந்து நினைத்துப் பார்த்து சொல்லிப் பார்க்கிற மாணவனைப் போல கடகடவென உச்சரிக்கத் தொடங்கினார்.'கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்! ரகசியம் ரகசியம் என்று சொல்லி யுகம் யுகமாகப் பூட்டி வைத்த பெருங்கதவு இது. புனிதம் என்பது ரகசியத்தில் இல்லை. புனிதம் என்பது புரிந்து கொள்வதில் உள்ளது. இதனை அறிந்தால் மோட்சம் நிச்சயம் என்றால், மக்கள் அத்தனை பேருக்கும் இதனை அறியும் உரிமை இருக்கிறது. இதில் சாதி முக்கியமில்லை. அந்தஸ்து முக்கியமில்லை. பரமனின் பாதாரவிந்தங்களே கதியென்று எண்ணக்கூடிய அனைவரும் வாருங்கள். எது அனைவருக்கும் நலம் தருமோ, அது அனைவருக்கும் பொதுவானது. அதை நான் இப்போது உங்களுக்குத் தருகிறேன்.'நாராயணா! நாராயணா! என்று மக்கள் உணர்ச்சி வயப்பட்டு உரக்கச் சொன்னார்கள். பாற்கடல் பெருக்கெடுத்தாற்போல அவரது வாய் திறந்து திருமந்திர உட்பொருள் வெளிப்படத் தொடங்கியது. எதையெல்லாம் குருகைப் பிரான் அவருக்குத் தந்தாரோ, அதெல்லாம். எதையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது என்று அவர் நிபந்தனை விதித்தாரோ, அதுவெல்லாம். எதைச் செய்தால் உனக்கு நரகம் நிச்சயம் என்று எச்சரித்தாரோ அது.சொல்லி முடித்து ராமானுஜர் கோபுரத்தின் மீதிருந்து கீழே இறங்கி வந்தபோது கோபம் தகிக்க நம்பியின் சீடர் ஒருவர் எதிரே வந்து நின்றார். 'ஆசாரியர் உம்மை அழைத்து வரச் சொன்னார்.''அப்படியா? இதோ வருகிறேன்.'திருக்கோட்டியூர் நம்பியின் மாளிகைக்கு ராமானுஜர் மீண்டும் சென்றபோது வாசலிலேயே நம்பிகள் வெடித்தார்.'நில் நீசனே! ஆசாரிய அபசாரம் செய்தவன் வாழத் தகுதியற்றவன்.உன்னை நம்பி உனக்கு ரகஸ்யார்த்தங்களை நான் போதித்தது பெரும் பிழையாகிவிட்டது. இப்படியா ஊரைக்கூட்டி அதைப் பொதுவில் உரக்கச் சொல்லுவாய்? மதிப்புத் தெரியாதவனுக்கு போதித்து விட்டேன். உன் அகம்பாவம் அறியாமல் பெரும்பிழை செய்துவிட்டேன்.''மன்னித்துவிடுங்கள் ஆசாரியரே. இதனை அறிந்தால் இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தாங்கள் சொன்னீர்கள். திருமந்திர உட்பொருள் தெரிந்தவனுக்கு மோட்சம் நிச்சயம் என்றீர்கள். மோட்சத்தின் கதவு திறக்கும் சாவி இதுதான் என்றால், இது மக்கள் அத்தனைபேர் கையிலும் இருக்கவேண்டிய சாவியல்லவா? பசியிலும், ஏழைமையிலும் ஒதுங்க ஓர் இடமற்ற வெறுமையிலும் அவதிப்படுபவர்கள், மரணத்துக்குப் பிறகாவது நிம்மதியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்க வேண்டாமா?''இது தர்க்கமா? இது அபத்தம். வெறும் அபத்தம். தராதரம் என்ற ஒன்றில்லையா? ஓட்டைப் பாத்திரங்களில் அமிர்தம் கொடுத்தனுப்ப விரும்பியிருக்கிறீர். தகுதி பாராமல் தருகிற தானமே தரமற்றது. மக்கள் கூட்டம் என்பது நீசர்களை உள்ளடக்கியது. நாத்திகர்களை உள்ளடக்கியது. பிரித்தறியத் தெரியாத மூடரா நீர்?''நீசர்களும் நாத்திகர்களும்கூட நற்கதி பெற வழி செய்வது நல்லது என்றே நினைத்தேன். பிறக்கும்போது யார் நீசன்? காலம் அப்படி உருமாற்றுகிறது. சந்தர்ப்ப சூழல் ஒருவனைத் தடம் மாறிப் போகச் செய்கிறது. நம்மிடம் மருந்து இருக்கிறபோது நோயுற்றவனுக்கு அதை வழங்குவதில் என்ன பிழை?''நீர் செய்தது குரு துரோகம்.''ஆம் ஆசாரியரே. அதில் சந்தேகமில்லை. உமது சொல்லில் நான் நின்றிருந்தால் நீங்கள் உவக்கும் மாணவனாக இருந்திருப்பேன். ஆனால் உலகம் உய்ய இதுவே வழி என்று கருதியதால் குரு துரோகப் பிழையை அறிந்தேதான் செய்தேன்.''இதற்கு என்ன தண்டனை தெரியுமா உமக்கு?''அறிவேன் சுவாமி. நான் கற்ற திருமந்திரப் பொருள் எனக்கு உதவாது போகும். நான் நரகம் புகுவேன். இதில் எனக்கு சந்தேகமில்லை.' 'முட்டாள்! இது தெரிந்துமா அதை பகிரங்கப்படுத்தினாய்?''ஆம். நான் ஒருவன் நரகம் போனாலும் நாடு நகரமெல்லாம் சொர்க்கம் போகுமல்லவா? அத்தனைப் பெருங்கூட்டமும் அரங்கனுக்குள் அடைக்கலமாவதற்காக நான் ஒருத்தன் நரகத்தை ஏற்பதில் பிழையில்லை என்று நினைத்தேன். அதனால்தான் இப்படிச் செய்தேன். இது பாவமென்றால் அது என்னைச் சேரட்டும். இது துரோகமென்றால் நான் துரோகிப்பட்டம் சுமக்கிறேன். இதற்குத் தண்டனை நரகம்தான் என்றால் மகிழ்ச்சியோடு நான் அங்கு செல்ல இப்போதே தயாராகிறேன்!' என்று சொல்லி அவரது பாதம் பணிந்தார்.திகைத்துவிட்டார் திருக்கோட்டியூர் நம்பி.பல நிமிடங்கள் அவருக்குப் பேச்சே வரவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதர் இவர்! எம்மாதிரியான மன அமைப்பு இது! தன்னலத்தின் சிறு சாயல்கூட இல்லாத படைப்பு என்று ஒன்று உண்டா! இது கருணைப் பெருங்கடல். கட்டுப்படுத்த இயலாதது. நியாய தருமம் என்று வழி வழியாக வகுத்து வைத்திருந்த இலக்கணச் சட்டங்கள் எதுவும் இவருக்குப் பொருந்தாது என்பது புரிந்துவிட்டது.'ராமானுஜரே! இப்படி வாரும்!' கண்ணீர்த் திரை தெரிய அவர் இருகரம் நீட்டி அழைத்தார்.ஊர் கூடி வேடிக்கை பார்க்க, ராமானுஜர் மெல்ல அவரை நெருங்கினார். அப்படியே அவரைக் கட்டியணைத்துக் கதறி விட்டார் திருக்கோட்டியூர் நம்பி.'எம்பெருமானைக் கருணைக்கடல் என்போம். நான் உம்மைச் சொல்வேன் இனிமேல். அவன் எம்பெருமான். நீர் இனி எம்பெருமானார்! வைணவம் என்னும் வாழ்வியல் இதுவரை வைணவ தரிசனம் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. நான் சொல்கிறேன்,இனி இது எம்பெருமானார் தரிசனம் என்று சொல்லப்படும். உமது பாதை புதிதானதுதான். ஆனால் புதிர்களற்றது. பூட்டுகளற்றது. புனிதம் நிரம்பியது. உலகை உம் வீடாகக் கருதும் நீரே உலகம் உய்ய வழி காண்பீர்!'நெகிழ்ந்து போய்த் தாள் பணிந்தார் ராமானுஜர். சுற்றியிருந்த அனைவரும் பக்திப் பரவசத்தில் நாராயணா, நாராயணா என்று கூக்குரலிட்டார்கள். வைணவ சித்தாந்தமே அதன்பின் ராமானுஜ சித்தாந்தம் என்று ஆகிப் போனது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்


'இவர் நமக்கு வேண்டாம்!'



Advertisement






Ramanujar Download











வைணவத்தில் மந்திரோபதேசம் என்பது மூன்று உபதேசங்களை உள்ளடக்கியது. அதாவது மூன்று முக்கியமான மந்திரங்களும் அவற்றின் பொருள்களும்.
முதலாவது, எட்டெழுத்து மூல மந்திரமான ஓம் நமோ நாராயணாய.அடுத்தது, ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே -- ஸ்ரீமதே நாராயணாய நம: என்கிற த்வய மந்திரம்.மூன்றாவது மந்திரம் சரம சுலோகம் என்று சொல்லப்படும். இது கீதையில் ஜகத்குரு கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்குச் சொன்னது. மோட்ச சன்னியாச யோகத்தில் அறுபத்தி ஆறாவது சுலோகமாக வருவது.ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:
இந்த மூன்றில் முதலிரண்டின் பொருளும் உட்பொருளும் ராமானுஜருக்கு திருக்கோட்டியூர் நம்பி மற்றும் பெரிய நம்பி மூலம் உபதேசிக்கப்பட்டிருந்தது. மூன்றாவதான சரம சுலோகம் மிச்சம் இருந்தது. அதற்கொரு நாள் வரும்; அதற்கொரு ஆசாரியர் அமைவார் என்று ராமானுஜர் காத்திருந்த கணத்தில் திருக்கோட்டியூர் நம்பியே திருவாய் மலர்ந்தார்.'அடடா, இதிலேயே திருப்தியடைந்து விட்டீரே ராமானுஜரே! உமக்கு சரமத்தின் ரகஸ்யார்த்தத்தையும் சொல்லி வைக்கலாம் என்று இருந்தேனே!'ஒரு கணம் யோசித்த ராமானுஜர் சட்டென்று பதில் சொன்னார், 'சுவாமி! நீங்கள் இன்று எனக்குச் சொன்ன அர்த்தத்துக்கு மேல் இன்னொன்று இருக்க முடியும் என்று நான் எப்படி நினைப்பேன்? முழுமையை தரிசித்து விட்டதாகவே எனக்குத் தோன்றிவிட்டது.'குருகைப் பிரான் புன்னகை செய்தார். 'சரி பரவாயில்லை. சரம சுலோகத்தை அதன் ரகஸ்யார்த்தங்களுடன் நீர் அறியவேண்டியது முக்கியம். ஆனால் இப்போது வேண்டாம். திருவரங்கத்துக்குச் சென்று சில காலம் கழித்துத் திரும்பி வாருங்கள். ஆனால் கண்டிப்பாக இம்முறை தனியாகத்தான் வரவேண்டும். உமது தண்டுக்கும் பவித்திரத்துக்கும் சேர்த்து போதிப்பதாயில்லை.'குருகைப் பிரான் சிரித்தபடி சொன்னார். ராமானுஜருக்கும் புன்னகை வந்தது.விடைபெற்று, திருவரங்கம் திரும்பியவர், பெரிய நம்பியிடமும் பிறரிடமும் நடந்ததை விளக்க, அத்தனை பேரும் புல்லரித்துப் போனார்கள். உண்மையில், ராமானுஜர் திருவரங்கம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே திருக்கோட்டியூரில் நடைபெற்ற சம்பவம் திருவரங்கத்தின் செவிகளை வந்து சேர்ந்திருந்தது. குருகைப் பிரானே ராமானுஜரை 'எம்பெருமானார்' என்று அழைத்ததைச் சொல்லிச் சொல்லி வியந்து கொண்டிருந்தது பக்தர் சமூகம்.'ஆனால் ராமானுஜரின் அணுகுமுறை புதிராக உள்ளதே. புனிதங்களைப் பொதுமைப்படுத்துவது ஆபத்தில் முடியுமல்லவா? அவற்றின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணராதவர்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்துவது வீணான செயல் அல்லவா?''மந்திரங்கள் விஷயத்தில் மட்டுமா அவர் புரட்சி செய்கிறார்? கோயில் நிர்வாகத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறார் என்று பாரும் ஓய். திருக்கோயில் கைங்கர்யத்தில் மெல்ல மெல்ல எல்லா சாதிக்காரர்களும் நுழைய ஆரம்பித்து விட்டார்கள். கேட்டால் வைணவனுக்கு சாதி கிடையாது. வைணவன் என்கிற அடையாளம் மட்டுமே உண்டு என்கிறாராம்.''இதுவும் புனிதங்களைப் புறந்தள்ளும் காரியம்தான். இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.''ஆளவந்தாரின் சீடர்கள் எப்படி இதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லையே ஐயா. ஒரு எதிர்ப்புக்குரலும் வரவில்லையே இன்னும்?''எப்படி வரும்? அந்த மனிதரிடம் என்னவோ மாய சக்தி இருக்கிறது. எதிரே வருகிற அத்தனை பேரையும் எப்படியோ மயக்கி உட்கார வைத்துவிடுகிறார். விவாதங்களுக்கோ, விசாரணைகளுக்கோ இடமே இருப்பதில்லை.''எல்லாம் பேச்சு ஜாலம். காலட்சேபம் கேட்கப் போகிறவர்கள் திரும்பி வருகிறபோது கவனியும் ஓய். கள்ளுக்கடைக்குப் போய் வருகிறவர்களைப் போல் தள்ளாடிக்கொண்டு வருகிறார்கள். இதெல்லாம் நல்லதுக்கே இல்லை.''அதுசரி, ஆனானப்பட்ட திருக்கோட்டியூர் நம்பியையே தன் வலையில் வீழ்த்தி விட்டாரே. வெறும் மக்கள் எம்மாத்திரம்?'அது மெல்ல மெல்லத் திரண்டு எழுந்து கொண்டிருந்தது. பொறாமைப் புயல். சில மனங்களுக்குள் மட்டும் தகித்துக் கொண்டிருந்த விரோதக் கங்கு. என்னவாவது செய்து ராமானுஜரின் பிடியில் இருந்து திருக்கோயில் நிர்வாகத்தைப் பிடுங்கிவிட முடியாதா என்று ஒரு கூட்டம் யோசிக்கத் தொடங்கியிருந்தது. காலகாலமாக நடைமுறையில் இருந்து வந்த வைதிகமான முறைப்படி கோயில் சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் அவர்கள்.ஆகமம் என்பார்கள். திருவரங்கத்தில் மட்டுமல்ல.ராமானுஜர் வருவதற்கு முன்னர் அனைத்து வைணவ ஆலயங்களிலுமே அதுதான் நடைமுறை. வைகானசம் என்று பேர். விகனச முனிவரால் உருவாக்கப்பட்ட வழிபாட்டு நெறி அது. ஆழ்வார்களின் காலத்துக்கு முன்பிருந்து நடைமுறையில் இருந்து வந்த நெறி. அந்த வழியில் பஞ்ச சம்ஸ்காரம் என்கிற ஐந்து விதமான துாய்மைச் சடங்குகள் அவசியமில்லை. என்னை வைணவன் என்று இன்னொருவர் முத்திரை குத்த என்ன அவசியம்? தாயின் கருவிலேயே நான் வைணவன்தான். அதற்காக ஒரு சடங்கு அவசியமில்லை.ராமானுஜர் அடிப்படையிலேயே அதனை மறுத்தார்.'பிறப்பில் ஒருவருக்கு எந்த அடையாளமும் கிடையாது. அனைத்து உயிர்களும் சமம். உயர்வும் தாழ்வும் நடத்தையில் இருக்கிறது. வாழும் விதத்தில் இருக்கிறது. பரம பாகவதரான திருக்கச்சி நம்பி அந்தணர் அல்லர். திருப்பாணாழ்வார் அந்தணரா? வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் தொடங்கி எத்தனை ஆழ்வார்கள் அந்தண குலத்தில் பிறந்தவர்கள்? குலப்பெருமையாலா அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்? பக்தியும் மானுடத் தொண்டுமல்லவா அவர்கள் புகழ் தழைக்கச் செய்திருக்கிறது? இது ஏன் உங்களுக்குப் புரிவதில்லை?' என்று கேட்டார்.சனாதனவாதிகளால் இதைத் தாங்க முடியாமல் போனது.'அவர் எக்கேடோ கெட்டுப் போகட்டும். திருக்கோயில் கைங்கர்யத்தை மாசு படுத்தாதிருந்தால் போதும்' என்றார்கள். மாசென்று அவர்கள் கருதியது, மறுமலர்ச்சியை! மகத்தான சீர்திருத்தங்களை. சமஸ்கிருதம் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த சன்னிதிகளில் ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களை ராமானுஜர் ஒலிக்கச் செய்தது அவர்களுக்குப் பெரிய இம்சையாக இருந்தது. பரமாத்மாவின் அர்ச்சாவதார சொரூபத்தை (சிலை ரூபம்) மட்டுமே வணங்கினால் போதும் என்பது அவர்கள் நிலைபாடு. ராமானுஜரோ, பரத்துவம் (வைகுண்டத்தில் உள்ள நிலை), வியூகம் (பாற்கடலில் சயன கோலத்தில் உள்ள நிலை), விபவம் (அவதார நிலை), அந்தர்யாமி (உள்ளுக்குள் உணரும் நிலை) என எந்த நிலையிலும் பரமனைக் கருதலாம், வணங்கலாம் என்று சொன்னார்.'ம்ஹும். இவரோடு ஒத்துப் போக முடியாது.வெகு விரைவில் திருவரங்கத்தையே இவர் சர்வநாசமாக்கிவிடுவார். உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்!'என்ன செய்யலாம் என்று அவர்கள் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தபோது ராமானுஜர் மீண்டும் திருக்கோட்டியூருக்குப் புறப்பட்டார். சரம சுலோகத்தின் உட்பொருளை போதிக்கிறேன் என்று குருகைப் பிரான் சொல்லியிருக்கிறாரே.'சுவாமி... அடியேன் தங்களுடன்...'கூரத்தாழ்வான் தயங்கினான்.'வேண்டாம்!' என்று சொல்லிவிட்டுத் தனியே புறப்பட்டார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்



ஒரே ஒரு நிபந்தனை












Advertisement






Ramanujar Download









கீதையின் மோட்ச சன்னியாச யோகத்தில் இடம்பெறும் 'சர்வ தர்மான் பரித்யஜ்ய, மாம் ஏகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோட்ச இஷ்யாமி மாஸுச:' என்னும் வரி மிக மிக நுணுக்கமானது. மேலோட்டமாக இதன் பொருளை இப்படிச் சொல்லலாம்:

அனைத்து தருமங்களையும் விடுத்து என்னைச் சரணடைந்தால், உன் பாவங்கள் அனைத்தையும் நான் தீர்ப்பேன்; அனைத்துக் கட்டுகளில் இருந்தும் உன்னை நான் விடுதலை செய்வேன்.
இந்த வரி இடம் பெறுவதற்கு முந்தைய சுலோகம் வரை, அதாவது பதினேழு அத்தியாயங்களிலும் பகவான் கிருஷ்ணர் தர்மத்தைப் பற்றித்தான் பேசுகிறார். அவரவர் தருமங்களும் உலகப் பொதுவான தருமங்களும். தருமங்களைத் தழைக்க வைக்கும் உபாயங்களாகப் பலவித யோகங்களை அறிமுகப்படுத்து
கிறார். கர்ம யோகம். ஞான யோகம். பக்தி யோகம். இன்னபிற யோகங்கள். ஒவ்வொன்றுக்குமான செயல்முறை விளக்கங்கள். தரும நெறி தவறாத வாழ்வுக்கான வழிமுறைகள்.
அனைத்தையும் விளக்கிச் சொல்லிவிட்டு இந்த இடத்துக்கு வருகிறார். சர்வ தர்மான் பரித்யஜ.
எல்லா தருமங்களையும் அவற்றை எட்டிப் பிடிக்க உதவுகிற யோகங்களையும் விட்டு விடுதலையாகி சரணாகதியைப் பற்றிக்கொள்; அதுவே பரிபூரண விடுதலை நிலைக்கான உபாயம்.
என்றால், இதை ஏன் முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாது? வேலை மெனக்கெட்டு எனக்குரிய உபாயத்தைத் தேடிப் பிடித்து, எனது தருமத்தைக் காக்கிற வெட்டி வேலை எதற்கு? அனைத்தையும் தூக்கிக் கடாசி விட்டு நீயே சரணம் என்று முதல் வரியிலேயே வந்து விழுந்து விட்டிருப்பேனே?
என்றால், அங்குதான் இருக்கிறது சூட்சுமம். கீதை, ஒரு சிமிழில் அடைக்கப்பட்ட பாற்கடல். சிமிழைத் திறக்கத்தான் தருமங்களும் யோகங்களும். திறந்ததும் குதிக்கச் சொல்லுவதே இந்த சரம சுலோகம். ஒரு வரியில் விளக்கிவிடக்கூடிய விஷயமல்ல. தவம் வேண்டும். தியானம் வேண்டும். பக்தி வேண்டும். மேலாக வேண்டுவது சரணாகதி.
ராமானுஜருக்கு இது தெரியும். திருக்கோட்டியூர் நம்பி தாமே முன்வந்து சரம சுலோகத்தின் உட்பொருளை உனக்கு விளக்குகிறேன் என்று சொன்னபோது நெகிழ்ந்து போய் விட்டார். என்ன கற்கிறோம் என்பதைக் காட்டிலும் யாரிடம் அதைக் கற்கிறோம் என்பதும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
கோட்டியூருக்குப் போகிற வழியில் ராமானுஜருக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் திருக்கோட்டியூர் நம்பியிடம் சீடரொருவர் கேட்டார், 'சுவாமி, நீங்கள் தினமும் தியானம் செய்கிறீர்கள். எதை நினைத்து தியானம் செய்வீர்கள்? உங்களுடைய தியான மந்திரத்தை எங்களுக்கும் சொல்லிக் கொடுக்கலாமே?'
நம்பிகள் சிரித்தார். 'அப்பனே, என் ஆசாரியர் ஆளவந்தார் அடிக்கடி காவிரியில் குளிக்கப் போவார். அவருக்கு ரொம்பப் பிடித்த விஷயம் அது. நீரில் அமிழ்ந்து அவர் நீந்திச் செல்லும்போது அவரது முதுகு மட்டும் வெளியே தெரியும். நதிப்பரப்பில் ஒரு திடல் நகர்ந்து செல்வது போல இருக்கும். சம்சாரக் கடலில் மனித குலம் அப்படித்தான் ஒரு தக்கை போல மிதந்து நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சட்டெனத் தோன்றும். எனக்கு அந்த முதுகுத் திடலை நதிப்பரப்பில் பார்த்துக் கொண்டிருப்பது என்றால் ரொம்ப இஷ்டம். அதைத்தான் நான் தியானத்தின் போது நினைத்துக் கொள்வேன். தியான மந்திரமென்பது எனது ஆசாரியரின் திருப்பெயர்தான்!'
எப்பேர்ப்பட்ட குரு! எக்காலத்துக்கும், எத்தலைமுறைக்குமான பேரனுபவமல்லவா இது! குருட்சேத்திரத்தில் அர்ஜுனனுக்குக் கிடைத்தது, ஆசாரியரின் வெற்று முதுகில் குருகைப் பிரானுக்கு வாய்த்திருக்கிறது! இங்கே தேரோட்டி இல்லை. தெளிய வைப்பவன் இல்லை. விஸ்வரூபம் காட்டி வியப்பூட்ட ஆள் இல்லை. சட்டென்று பொறி தட்டிய ஞானம். சிப்பிக்குள் உதித்த முத்தொன்று தானே உவந்து வெளிவந்து தனது பேரெழில் காட்டி நிற்கிற பரவசத் தருணம்.
'நான் கொடுத்து வைத்தவன்!' என்று ராமானுஜர் தனக்குள் எண்ணிக் கொண்டார். நம்பிகளின் வீட்டை நோக்கி வேகவேகமாக நடந்தார்.
வீட்டில் அவரது மகள் தேவகி இருந்தாள்.
'அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன். நம்பிகளைச் சேவிக்க வேணும்.'
'அப்பா மச்சில் தியானத்தில் இருக்கிறார். சற்றுப் பொறுங்கள். கேட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே போனாள். சில நிமிடங்களில் திரும்பி வந்து, 'தங்களை அங்கே வரச் சொல்கிறார்!'
ராமானுஜர் படியேறி மாடிக்குச் சென்றார்.
'வாரும் ராமானுஜரே! சரம சுலோகப் பொருள் கேட்க வந்தீரா?'
'ஆம் சுவாமி! தாங்கள் அன்று சொன்னதில் இருந்து வேறு நினைவே இல்லாதிருக்கிறேன்.'
குருகைப் பிரான் கண்மூடி ஒரு நிமிடம் தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு எழுந்து சென்று அறைக்கதவைத் தாளிட்டார். ஜன்னல்களை மூடினார். எதிரே வந்து
அமர்ந்து...
'இது மூல மந்திரத்தைக் காட்டிலும் பரம ரகசியமானது. தயவுசெய்து கோபுரத்தில் ஏறி அறிவித்து விடாதீர்கள்!'
'இல்லை சுவாமி, மாட்டேன்.
'உம்மை நம்புகிறேன்!' என்று சொல்லிவிட்டு சரம சுலோகத்தின் ஆழ்ந்த உட்பொருள்களை ராமானுஜருக்கு விளக்கத் தொடங்கினார். கண்மூடிக் கரம் கூப்பிக் கேட்டுக் கொண்டிருந்த ராமானுஜரின் விழிகளில் இருந்து கரகரவென நீர் வழிந்தபடியே இருந்தது. பரமாத்ம சொரூபம் என்பது சிலைகளில் தென்படுவதல்ல. மனத்துக்குள் உணர்வது அல்ல. கற்பனை எல்லைகளுக்குள் அகப்படுவதல்ல.
தத்துவ ஞானத் தேடல்களில் சிக்குவதல்ல. அது உருவமுள்ள காற்று. மை மறைத்த பெருவெளிச்சம். அண்டப் பெருவெளியெங்கும் தங்குதடையின்றிப் பொங்கிப் பரவுகிற பேரானந்தத்தின் ஊற்றுக்கண். உணர்வல்ல; அதற்கும் மேலே.
அந்த சொரூபத்தின் பேரெழிலைத்தான் திருக்கோட்டியூர் நம்பி ராமானுஜருக்குக் காண்பித்தார். இந்தா எடுத்து விழுங்கு. இதனை நினை. இதனை மட்டுமே நினை. உன் நினைவில் நீ அடையும் சரணாகதி உன்னை அந்தச் சொரூபத்திடம் கொண்டு சேர்க்கும். பெறற்கரிய பேரானந்தம் என்பது அதுதான். உடலும் மனமும் உதிர்த்த நிலையில் உதிப்பது சரணாகதி. அது மட்டும்தான் உய்ய வழி.
கரம் கூப்பி எழுந்து நின்றார் ராமானுஜர். 'சுவாமி, எப்பேர்ப்பட்ட அனுபவத்தை எனக்கு வழங்கி விட்டீர்கள்! என்னை நீர் ஏற்றது என் பேறு. ஆனால்...'
'சொல்லும் ராமானுஜரே!'
'கோபித்துக் கொள்ளாதீர்கள். இந்த அற்புதத்தை ஒரே ஒருவருக்காவது நான் சொல்லித்தர எனக்கு அனுமதி வேண்டும். பாகவத உத்தமனான கூரத்தாழ்வானுக்கு மட்டுமாவது...'
ஒரு கணம் அவரை உற்றுப் பார்த்த குருகைப் பிரான் சட்டென்று சிரித்து விட்டார்.
'உம்மைத் திருத்த முடியாது ராமானுஜரே! சரி, ஒரே ஒரு நிபந்தனை!' என்றார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

பா.ராகவன்
தொண்டில் தோய்ந்தவன்
Advertisement




Ramanujar Download








நேரே போய்க் கதவைத் தட்டி என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கைகூப்பி நின்றிருந்தால் விஷயம் வேறு. முடியாது என்றவரின் நியாயங்களை எண்ணி மனத்தைத் தேற்றிக் கொண்டிருக்கலாம். முதலியாண்டான் அப்படிச் செய்யவில்லை. அவனுக்கு முறை தெரியும். தனது விருப்பமும் அதன் அசாத்தியத்தன்மையும் எப்பேர்ப்பட்டவை என்பதை வெகு நன்றாக அறிந்தவன் அவன். போராடித்தான் திருக்கோட்டியூர் நம்பியின் மனத்தைக் கவர வேண்டும் என்பதை உணர்ந்தேதான் திருவரங்கத்தில் இருந்து கிளம்பிச் சென்றிருந்தான்.
கோயில் மண்டபத்தில் தங்கிக் கொண்டான். தினமும் காலை குளித்தெழுந்து சௌமிய நாராயணப் பெருமாளைச் சேவித்துவிட்டு நேரே ஆசாரியரின் வீட்டுக்குப் போய்விட வேண்டியது. அவர் ஒன்றும் கேட்கவும் மாட்டார், சொல்லவும் மாட்டார். அங்கேயே ஒரு ஓரமாக நின்றுகொள்ள வேண்டியது. எடுபிடி வேலைகளுக்கு இதோ நான் இருக்கிறேன் என்று முந்திக்கொண்டு ஓடுவான். தொண்டைக் காட்டிலும் உளத்துாய்மைக்குச் சிறந்த உபாயமில்லை என்பது அவனுக்குத் தெரியும்.இந்நாள்களில் திருக்கோட்டியூர் நம்பியின் சீடர்கள் அனைவருக்கும் அவன் நெருங்கியவனாகிப் போனான். அவரது குடும்பத்து உறுப்பினர்களுக்கு முதலியாண்டான் வேண்டப்பட்டவனானான். ஊரில் இப்போது அவனைத் தெரியாதவர்கள் கிடையாது. நம்பியின் சீடர்களுள் ஒருவன் என்றே அவர்கள் எண்ணத் தொடங்கிவிட்டார்கள். ஒருநாள் இருநாள் அல்ல. ஆறு மாதங்கள். ஒரு தவமே போல நம்பிக்கு சிசுருஷை செய்து கொண்டிருந்த முதலியாண்டானிடம் அதன் பிறகுதான் நம்பி வாய் திறந்தார். 'யாரப்பா நீ? என்ன வேண்டும் உனக்கு?' முடியாது என்று ஒரே சொல்லில் குருகைப் பிரான் மறுத்திருந்தால் அதோடு முடிந்திருக்கும். அவரது சுபாவம் அதுதான்.
திருமந்திர விளக்கம் கேட்கப் போன ராமானுஜருக்கே பதினேழு முறை அதுதான் அவரது பதிலாக இருந்தது. 'இன்னொரு சமயம் பார்ப்போம்.' இதற்கெல்லாம் காரணமே கேட்க முடியாது. அவர் அப்படித்தான்.ஆனால், முதலியாண்டானை அவர் மறுத்தபோது அதனைச் சொன்னார். 'உமக்கு மூன்று கர்வங்கள் இருக்கின்றன. கல்வி சார்ந்த கர்வம். செல்வம் குறித்த கர்வம். குலத்தைப் பற்றிய கர்வம். இதனை முதலில் ஒழித்துவிட்டு உட்காரும். எம்பெருமானே நல்ல வழி காட்டுவான்.'ஒருவகையில் முதலியாண்டானின் ஞானக் கண் திறந்த தருணம் அது. ஆறு மாத சேவைக்குக் கிடைத்த மாபெரும் பரிசு அந்த போதனைதான். சரம சுலோக விளக்கமல்ல. வேறு எதுவுமல்ல. கர்வம் களையச் சொன்ன உபாயம்.எனக்கு அந்த கர்வங்கள் இருக்கிறதா என்ன? முதலியாண்டானுக்குச் சற்று வியப்பாகத்தான் இருந்தது. உண்மையில் கிடையாது. அவன் மனத்தில் மிச்சம் இருந்த ஒரே பெருமிதம், தாம் ராமானுஜரின் உறவினன் என்பது மட்டுமே. உடையவரின் மிக நெருங்கிய சீடன் என்னும் பெருமிதம்தான் அவனது கல்வி, செல்வ, குல கர்வங்களாக மூன்று வடிவங்களில் உருண்டு திரண்டிருந்தன.
திருக்கோட்டியூர் நம்பி எடுத்துச் சொல்லாவிட்டால் கடைசி வரை அது புரியாமலே போயிருக்கும். நல்லது. ஆறு மாத சேவையின் பலன் ரகஸ்யார்த்தங்கள் அல்ல. ஒரு சுட்டிக்காட்டல். பெரிதுதான். ஒரு விதத்தில் ரகஸ்யார்த்தங்களை விடவுமே.இல்லை என்று தெரிந்த கணத்தில் முதலியாண்டானுக்குக் கண்ணில் நீர் கோத்துவிட்டது என்றாலும் அவன் அதைத் தோல்வியாக உணரவில்லை. அது ஒரு தருணம். ஞானத்தின் வாசல் திறந்த தருணம். உள்ளுக்குள் அமைதி கண்டு ஒடுங்கி நிற்கிற தருணம். அடைய நினைக்கிற அனைத்தையும் அடைவதற்கு, விலகி நிற்கப் பயில வேண்டுமென்ற பெரும் பாடம் புரிந்த தருணம். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான் முதலியாண்டான். அதற்குமேல் ஒன்றும் பேசாமல் திருக்கோட்டியூர் நம்பியின் வீட்டில் இருந்து கிளம்பி விட்டான்.இப்போது அவன் மாறியிருந்தான். மகத்தான பெரும் மாற்றம். தனது பிழை புரிந்த மாணவன் அதைக் களைவதிலேயே கவனம் காட்டுவான். முதலியாண்டான் ஒரு மிகச் சிறந்த மாணவன். உள்ளுக்குள் மறைந்திருந்த ஒரு பெரும் ஊற்றின் கண்ணியை நம்பிகள் சுட்டிக்காட்டி விட்டார். இனிக் குடைந்து வெளியே தள்ள வேண்டியதுதான்.திருவரங்கம் வந்து சேர்ந்த முதலியாண்டான் நடந்த கதையை ராமானுஜரிடம் விவரித்தான்.'எனக்கு ரகஸ்யார்த்தம் கேட்கத் தகுதி வரவில்லை சுவாமி! தகுதியை வளர்த்துக்கொண்டு உங்களிடமே மீண்டும் கேட்பேன்.''என்னிடமா! ஆனால் எம்பெருமானே உனக்கு வழி காட்டுவான் என்றல்லவா குருகைப் பிரான் சொல்லியனுப்பியிருக்கிறார்?'முதலியாண்டான் புன்னகை செய்தான். 'உங்களை அவர் எம்பெருமானாரே என்று அழைத்ததை மறந்துவிட்டீர்களா சுவாமி? எனக்கு நீங்கள்தான் அவன்!' என்று தாள் பணிந்தான்.வெளியே ஏதோ சத்தம் கேட்டது. யாரோ அழுகிற சத்தம். நாலைந்து பேர் சமாதானப்படுத்துகிற சத்தம்.'யார் அங்கே?' என்றார் ராமானுஜர். அத்துழாய் கண்ணைக் கசக்கிக்கொண்டு உள்ளே வந்தாள்.'அட, வா அத்துழாய்! எப்படி இருக்கிறாய்? உன் புருஷன் சுகமா? புகுந்த வீட்டுப் பெரியவர்கள் நலமா?' பாசம் பொங்கக் கேட்டார் ராமானுஜர். அத்துழாயை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவள் பெரிய நம்பியின் மகள். துறுதுறுவென்று ஓரிடத்தில் கால் பொருந்தாமல் ஓடிக் களித்துக் கொண்டிருந்த குழந்தை. சட்டென்று ஒருநாள் மணமாகிப் புகுந்த வீடு போய்விட்டவள். இதோ இன்று மீண்டும் வந்து நிற்கிறாள். ஆனால் கண்ணில் எதற்கு நீர்?'அழாமல் என்ன செய்வேன் அண்ணா? என் திருமணத்துக்கு அப்பா உரிய சீர் செய்யவில்லையாம். அவரால் என்ன முடியும் என்று தெரிந்துதானே சம்பந்தம் செய்தார்கள்? அதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை. தினமும் என் மாமியார் எதையாவது சொல்லி குத்திக்காட்டிக் கொண்டே இருக்கிறார்!''அடடா..!''நேற்றைக்கு ஆற்றுக்குக் குளிக்கப் போகும்போது துணைக்கு வருகிறீர்களா என்று சாதாரணமாகத்தான் கேட்டேன். அதற்குப் போய் நான் என்ன உன் வேலைக்காரியா என்று சத்தம் போட்டு விட்டார்.''அட நாராயணா!''அப்பாவை எப்படியெல்லாம் இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள் தெரியுமா? என்னால் தாங்க முடியவில்லை. உனக்குத் துணைக்கு ஆள் வேண்டுமென்றால் உன் அப்பனை ஒரு வேலைக்காரி பார்த்து அனுப்பி வைக்கச் சொல் என்று சொல்கிறார்கள்.'சீதன வெள்ளாட்டி என்பார்கள். பெண்ணுக்கு மணம் முடித்து அனுப்புகிறபோது உதவிக்கு ஒரு வேலைக்காரியைச் சேர்த்து அனுப்புகிற வழக்கம் இருந்த காலம்.'இது ஒரு பிரச்னையா? நீ கிளம்பு அத்துழாய். உன் சீதன வெள்ளாட்டியாக இந்த முதலியாண்டான் உன்னோடு வருவார்!' என்றார் ராமானுஜர்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
பா.ராகவன்


பந்தார் விரலி
Advertisement




Ramanujar Download







மடத்தில் இருந்தவர்கள் திகைத்து விட்டார்கள். முதலியாண்டான், அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியா? பெரிய நம்பியே இதனை ஒப்புக்கொள்ள மாட்டாரே?
'இல்லை ஓய். அத்துழாய் சின்னப் பெண். அவளை சமாதானப்படுத்துவதற்காக ஜீயர் சுவாமிகள் அப்படிச் சொல்லியிருக்கிறார். வேறு ஏதாவது ஏற்பாடு செய்வார், பொறுத்திருந்து பாரும்!''பாவம், சின்னப் பெண் என்று பாராமல் மாமியார் வீட்டில் படுத்துகிறார்கள் போலிருக்கிறது. பெரிய நம்பிக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார்.'அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு சட்டென்று அத்துழாய் வந்து நின்றாள். 'நான் ஊருக்கு வந்தது இன்னும் அப்பாவுக்குத் தெரியாது. வீட்டுக்கே இன்னும் நான் போகவில்லை. அண்ணாவைப் பார்த்து விவரத்தைச் சொல்லிவிட்டு அதன்பின் தேவைப்பட்டால் அப்பாவைப் பார்க்கப் போகலாம் என்றிருந்தேன். வந்த காரியம் முடிந்து விட்டதால் இப்படியே ஊருக்குத் திரும்பி விடலாம் என்று பார்க்கிறேன்.' என்று சொன்னாள்.அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பதிலேதும் சொல்லாமல் முதலியாண்டானை நெருங்கி, 'என்ன நடக்கிறது இங்கே? நீங்களா இந்தப் பெண்ணுடன் வேலைக்காரனாகப் போகப் போகிறீர்கள்?''ஏன், அதிலென்ன பிழை? இது என் ஆசாரியர் உத்தரவு. யோசிக்க என்ன இருக்கிறது?''அதில்லை சுவாமி... தாங்கள் போய் இந்தச் சிறுமிக்கு…''இவள் சாதாரண சிறுமி இல்லை ஐயா. ராமானுஜருக்கு ஒரு சமயம் கோதைப் பிராட்டியாகவே காட்சி கொடுத்தவள். பெரிய நம்பியைக் கேட்டுப் பாருங்கள். கதை கதையாகச் சொல்லுவார்!'அவர்களுக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை. அத்துழாய், கோதையானாளா? அது எப்போது? 'ஓய், வேஷமிட்டிருப்பாள் குழந்தை. அதைச் சொல்கிறார் இவர்.' 'இல்லை ஐயா. அது வேடமில்லை. தோற்றமோ, தோற்ற மயக்கமோ இல்லை. அது ஒரு நிலை. எனது ஆசாரியரின் பரம பக்தியின் உச்ச நிலை ஒருநாள் அத்துழாயைக் கோதையாக்கிவிட்டது.''சுத்தம். ஒன்றுமே புரியவில்லை ஐயா!'முதலியாண்டானுக்குப் புன்னகை வந்தது. எண்ணிப் பார்க்கும்தோறும் சிலிர்ப்பூட்டுகிற நினைவுகள் எத்தனை எத்தனை!அப்போது ராமானுஜர் திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்திருந்த புதிது. பெரிய நம்பி அவருக்குப் பாடம் சொல்ல ஆரம்பித்திருந்த சமயம். ஆளவந்தாரின் நுால்களில் இருந்துதான் அவர் ஆரம்பித்திருந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபந்தப் பாசுரங்கள்.துறவு இலக்கணப்படி ராமானுஜர் வீடு வீடாகச் சென்று பிட்சை எடுத்தே உண்பார். அப்படிப் பிட்சைக்குச் செல்கிற நேரம், உண்ணுகிற நேரம் தவிர மற்றப் பொழுதனைத்தும் பெரிய நம்பியுடனேயேதான் இருந்தார். நம்பியின் மகன் புண்டரீகாட்சனுக்கும், மகள் அத்துழாய்க்கும் அவர் பிரியத்துக்குரிய அண்ணா. ஜீயர் அண்ணா. ராமானுஜர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அத்துழாய்க்கு சந்தோஷம் பிடிபடாது. மணிக்கணக்கில் அவரோடு பேசிக் கொண்டிருப்பாள். ஒரு ஞானத் திருவிளக்கு தன் வீடு தேடி வந்திருக்கிறது என்பது அவளுக்குத் தெரியாது. அவரது ஆளுமையின் பிரம்மாண்டம் தெரியாது. அவரது பக்தியின் ஆழம் தெரியாது. அவரது அறிவின் வீச்சு தெரியாது. ஒன்றும் தெரியாது. ராமானுஜர் அவளது அண்ணா. சமத்து அண்ணா. நல்ல பேச்சுத்துணை. சிரிக்கச் சிரிக்கப் பேசி மகிழ வைக்கிற அண்ணா. என்னமோ காரணத்தால் வீடு வீடாகப் போய் பிட்சை எடுத்துச் சாப்பிடுகிறார். ஆனால் ஊரே அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறது. எனவே அண்ணா ரொம்பப் பெரிய ஆள்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். அன்றைக்கும் ராமானுஜர் பிட்சைக்குக் கிளம்பினார். நாளுக்கொரு வீதி. வீதிக்கொரு பாசுரம். உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருந்தாலும் உள்ளம் அரங்கனின் பாதாரவிந்தங்களில் மட்டுமே நிலைத்திருக்கும். பிட்சைக்குக் கிளம்பி, பாட ஆரம்பித்துவிட்டால் ராமானுஜருக்கு உலகம் மறந்து விடும். பாசுரங்களின் பொருளோடு இரண்டறக் கலந்து தன்னை இழந்து விடுவார்.அன்று அவர் பாடியபடி நடந்தபோது, குறுக்கே பந்தோடு ஓடி வந்தது ஒரு விளையாட்டு குழந்தை. அது அத்துழாய். அது பெரிய நம்பியின் வீடிருந்த வீதியேதான்.திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரமான 'உந்துமதகளிற்றன்' அவரது உதடு திறந்து உதித்துக் கொண்டிருந்தது. அதிலே ஒரு வரி, 'பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட' என்று வரும். 'செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்' என்று முடித்திருப்பாள் ஆண்டாள்.ராமானுஜர் பந்தார் விரலியைப் பாடி வந்த சமயம் செந்தாமரைக் கையில் சீரார் வளையொலிக்க அத்துழாய் பந்தோடு குறுக்கே ஓடி வந்ததும் அவருக்குப் புல்லரித்துப் போய்விட்டது. அவர் கண்ணுக்கு அவள் அத்துழாயாகத் தெரியவில்லை. ஆண்டாளாகவேதான் தெரிந்தாள்.'ஆஹா, என்ன தவம் செய்துவிட்டேன்! உன்னைத்தானே அம்மா எண்ணிக்கொண்டே வருகிறேன். என்னைப் பார்க்க நீயே வீதிக்கு வந்துவிட்டாயா? இச்சிறியவன்மீது அப்படியொரு கருணையா?'பரவசத்தில் கண்கள் நீர் சொரிய, நடுச்சாலையில் அவள் பாதங்களைத் தொட்டு அப்படியே விழுந்து சேவித்தார். மயக்கமாகிப் போனார்.திகைத்து விட்டாள் அத்துழாய். 'ஐயோ அண்ணா, என்ன காரியம் இதெல்லாம்? அப்பா... அப்பா...' என்று அழைத்தபடியே வீட்டுக்குள் ஓடினாள்.'என்ன அத்துழாய்?''பிட்சைக்குப் போய்க் கொண்டிருந்த ஜீயர் அண்ணா என் காலில் போய் விழுந்து விட்டார் அப்பா. என்ன ஆகிவிட்டது அவருக்கு? ஓடி வந்து பாருங்களேன்!'பெரிய நம்பி அவள் கையில் வைத்திருந்த பந்தைப் பார்த்தார். ஒரு கணம் கண்மூடி யோசித்தார்.'ம்ம்... ராமானுஜர் உந்துமத களிற்றன் பாடிக்கொண்டு வந்தாரோ?''ஆமாம் அப்பா. உங்களுக்கு எப்படித் தெரியும்?'புன்னகையுடன் எழுந்து வீதிக்கு வந்தார் பெரிய நம்பி. மயக்கமுற்றிருந்த ராமானுஜரைத் தெளிவித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தார்.'உம்மைப் போல் திருப்பாவையில் கரைந்து போகிற பாக்கியம் எனக்கென்று இல்லை; யாருக்குமே வாய்க்கவில்லை ராமானுஜரே. ஓதுவதும் உணர்வதுமா பக்தி? வரிகளின் வீரியத்தில் தன் வசமிழந்து போகிறீர் பாரும். அதுதான் ஐயா பக்தி! நீர் வெறும் ஜீயரல்லர். இன்றுமுதல் நீர் திருப்பாவை ஜீயர்!'கரம் கூப்பி நின்றார் ராமானுஜர்.'நீர் பிட்சைக்குச் சென்று கொண்டிருக்கிறீர். வழியில் நான் உள்ளே இழுத்து வந்துவிட்டபடியால் வெறும் கையுடன் அனுப்ப முடியாது. ஒரு நிமிடம் பொறுங்கள்' என்றவர் தன் மகன் புண்டரீகாட்சனையும் அத்துழாயையும் அழைத்து ராமானுஜரின் கரங்களில் ஒப்படைத்தார்.'உம்மைக்காட்டிலும் ஓர் உயர்ந்த ஆசாரியர் எனது குழந்தைகளுக்கு வாய்க்க மாட்டார். இனி இவர்கள் உம் பொறுப்பு!' என்றார்.முதலியாண்டான் இச்சம்பவத்தை நினைவு கூர்ந்து அவர்களிடம் சொன்னபோது அவர்கள் வாயடைத்துப் போனார்கள். 'ஐயா, ஆண்டாளாகவே என் ஆசாரியருக்குத் தோன்றியவளுக்கு சீதன வெள்ளாட்டியாகப் போவது என் பாக்கியமல்லவா?' என்று கேட்டான்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்

சமையல்காரன்


Advertisement




Ramanujar Download






காலை எழுந்தவுடன் வாசல் பெருக்க வேண்டும். பிறகு ஆற்றுக்குச் சென்று நீர் எடுத்து வருதல். வீடு பெருக்கிச் சுத்தமாக்கிய பிறகு துணிமணிகளைத் துவைத்துப் போட வேண்டும். சமையலறை சார்ந்த நானாவித காரியங்கள். மழைக்குக் குடை. பசி நேரத்துக்கு உணவு. வாழ்வினுக்கு எம்பெருமானாரின் திவ்ய நினைவுகள்.
முதலியாண்டான் அத்துழாயின் புகுந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து மாதங்கள் ஓடிவிட்டன. அவளது மாமியாருக்குப் பெரிய திருப்தி. அப்படி வா வழிக்கு. சொல்லிக் காட்டினால்தானே காரியம் நடக்கிறது? இல்லாவிட்டால் அந்தப் பெரிய நம்பியிடம் இருந்து எதைப் பெற முடிகிறது?அவர்களுக்கு முதலியாண்டான் யார் என்று தெரியாது. அவனது புலமை தெரியாது. தெளிவுகளும் தீர்மானங்களும் தெரியாது. ஒரு தவமாக ஏற்று அவன் அத்துழாயின்
இல்லத்தில் சேவைபுரிய வந்ததன் பின்னணி தெரியாது.அவனுக்கென்ன அதனால்? பணியில் இழிவென்று எதுவும் இல்லை. தவிரவும் அது குரு உத்தரவு. குருகைப் பிரான் சொன்னதை அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொள்வான். மூன்று ஆணவங்கள். பிறப்பால், கல்வியால், செல்வத்தால் வருகிற சிக்கல்கள். எண்ணிப் பார்த்தால் ராமானுஜர் மிகச் சரியான பணியைத்தான் கொடுத்திருக்கிறார் என்று தோன்றியது. மூன்றையும் மொத்தமாகக் களைய இது ஓர் உபாயமல்லவா? மகா பண்டிதனானாலும் மடைப்பள்ளி உத்தியோகத்துக்குக் கைப்பக்குவமே முக்கியம். அள்ளிப் போடுகிற உப்புக்கும் மிளகுக்கும், கிள்ளிச் சேர்க்கிற வாசனாதி திரவியங்களுக்கும் அவனது படிப்பு முக்கியமல்ல. பதமே பிரதானம். நிதானம் அதனினும் முக்கியம்.அத்துழாய்க்கு ஒரு கவலை விட்
டது. மாமியாரின் வாயை அடைத்தாகிவிட்டது. இனி அவளால் என்ன பேச முடியும்? முதலியாண்டானின் பணி செய்யும் வேகம் எண்ணிப் பார்க்க இயலாததாக இருந்தது. எதையும் சொல்லி முடிப்பதற்குள் செய்து முடிக்கிற வித்தகன் அவன். தவிரவும் ஓய்வுப் பொழுதில் எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியராகவும் விளங்குகிறவர்.
ஜீயர் அண்ணா அனுப்பிய ஆள் என்றால் சும்மாவா? ஒருநாள் வீட்டுக்குச் சில பண்டிதர்கள் வந்திருந்தார்கள். அத்துழாயின் மாமனாருக்கு வேண்டப்பட்டவர்கள். வால்மீகி ராமாயணத்தில் கரை கண்டவர்கள் என்று வீட்டில் பேசிக் கொண்டார்கள்.'ஓய் தாசரதி! விருந்து தடபுடலாக இருக்கவேண்டும். வந்திருக்கிறவர்கள் மகா பண்டிதர்கள். காலட்சேபம் முடிந்ததும் இலை போட்டாக வேண்டும்!' என்று சொல்லிவிட்டு அவர்களோடு உட்
கார்ந்து விட்டார் அத்துழாயின் மாமனார். குடும்பமே கூடத்தில் இருந்தது. வந்த பண்டிதர்கள் ராமாயணம் சொல்ல ஆரம்பித்தார்கள்.சமையலறையில் முதலியாண்டான் வேலையை ஆரம்பித்தான். காது மட்டும் வெளியே இருந்தது. உபன்னியாசத்தைக் கேட்டுக்கொண்டே வந்தவனுக்கு ஓரிடத்தில் சுருக்கென்றது. பண்டிதரானவர் வால்மீகி முனிவரின் ஒரு குறிப்பிட்ட பாடலுக்குத் தவறான பொருள் சொல்லிக் கொண்டிருந்தார். அது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பெருமைக்குக் களங்கம் சேர்க்கும் விதமான பொருளாக இருந்தது. தாங்க முடியவில்லை அவனால். கதவோரம் வந்து நின்று கவனிக்க ஆரம்பித்தான். உதடு துடித்தது. ஆனால் அவர்களிடம் எப்படிச் சொல்லுவது? இது அபசாரம். மிகப்பெரிய பாவம். ஒரு தவறான பொருள் நாலு பேருக்குப் பரவினால் அது அவ்வண்ணமே நாநுாறு பேருக்குப் போய்ச் சேரும். நாநுாறு நாலாயிரமாகும்.
மேலும் பரவும்.தாங்க முடியாமல் மெல்ல விசும்பினான்.சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த அத்துழாயின் மாமனாருக்கு ஒன்றும் புரியவில்லை. 'என்ன ஆயிற்று தாசரதி? ஏன் அழுகிறீர்?''தாங்க முடியவில்லை சுவாமி. மகாகவி வால்மீகியின் சுலோகங்களுக்கு இச்சபையில் மிகத் தவறான பொருள் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.'அதிர்ந்து விட்டார்கள் வந்திருந்த பண்டிதர்கள். 'ஓஹோ. சமையல்காரனுக்கு சாஸ்திரம் தெரியுமோ? எங்கள் விளக்கத்தில் குற்றம் கண்டுபிடிக்கும் அளவுக்கு நீர் தேர்ச்சி பெற்றவரோ?''நான் அற்பன் ஐயா. ஆனால் எனது ஆசாரியர் ஓர் ஞானக்கடல். அதன் ஓரத்தில் நின்று கால் நனைத்தவன் அடியேன். அதனால்தான் பிழை பார்த்தபோது பதைத்துவிட்டது. தவறாக எண்ணாதீர்கள்.''எங்கே, சொல்லுங்கள் பார்ப்போம்! நீர் சொல்லும் விளக்கத்தை நாமும் கேட்போம்!'முதலியாண்டான் ராமானுஜரை மனத்தில் வேண்டிக்கொண்டு குறிப்பிட்ட சுலோகத்தின் பொருளைத் தாம் அறிந்தவாறு எடுத்துச் சொன்னான். திகைத்துப் போனது கூட்டம். பண்டிதர்களுக்குப் பேச்செழவில்லை. 'இது மகாபாவம் ஐயா. இப்பேர்ப்பட்ட ஞானஸ்தனை நீர் உமது சமையற்காரனாக வைத்திருப்பது பெரும்பிழை. நரகத்தில்கூட உம்மை நுழையவிட மாட்டார்கள் பார்த்துக் கொள்ளுங்கள்!' என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டார்கள்.
திகைத்துப் போனது அத்துழாயின் குடும்பம்.'ஐயா, உண்மையைச் சொல்லும். நீங்கள் யார்?' அப்போதுதான் முதல் முறையாகக் கேட்டார் அத்துழாயின் மாமனார்.'அவர் பெயர் முதலியாண்டான். என் ஜீயர் அண்ணாவின் சீடர்!' என்றாள் அத்துழாய்.கலவரமாகிப் போய் தடாலெனக் காலில் விழுந்தார் அந்த மனிதர். 'மன்னித்து விடுங்கள் சுவாமி! உங்கள் தகுதி தெரியாமல் நடந்துகொண்டு விட்டோம். நீங்கள் கிளம்பி விடுங்கள். இனியும் எங்கள் இல்லத்தில் நீங்கள் சமைத்துக் கொண்டிருப்பது தகாது.''சாத்தியமில்லை ஐயா. இது என் குருவின் உத்தரவு. அவர் சொல்லாமல் நான் இங்கிருந்து நகர மாட்டேன். தவிர, ஒரு சீதன வெள்ளாட்டி வராத காரணத்தால்தானே பெரிய நம்பியின் குழந்தை இங்கே சீண்டப்பட்டது? அத்துழாயின் நிம்மதியும் மகிழ்ச்சியும் எனக்கு முக்கியமானது. நான் பண்டிதனானால் என்ன? என் சமையல் ருசிக்கிறதல்லவா? அதை மட்டும் பாருங்கள்.' 'முடியவே முடியாது. இது எங்களது பாவக்கணக்கைக் கூட்டும் ஐயா. நீங்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டாம்.''என் குரு சொல்லாமல் நான் நிறுத்த மாட்டேன்' என்று முதலியாண்டான் சொல்லி விட்டதால் அந்த மனிதர் தலைதெறிக்க திருவரங்கத்துக்கு ஓடினார். ராமானுஜரைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்தெழுந்தார். 'பெரிய மனசு பண்ணுங்கள் சுவாமி! முதலியாண்டானைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள்! இனி பெரிய நம்பியின் மகளுக்கு எமது இல்லத்தில் எந்தக் குறையும் இராது. அதற்கு நான் உத்தரவாதம்.'ராமானுஜர் புன்னகை செய்தார். 'என்ன அத்துழாய், முதலியாண்டானை நானே திரும்ப அழைத்துக் கொள்ளட்டுமா?'
'ஓ! நீங்கள் என்ன செய்தாலும் சரிதான் அண்ணா' என்றாள் அத்துழாய்.தமது மூன்று கர்வங்களும் அழியப்பெற்ற முதலியாண்டானுக்கு அதன்பிறகு ராமானுஜரே ரகஸ்யார்த்தங்களை போதித்தார்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் 


உள்துறை வீதி


Advertisement




Ramanujar Download





கொட்டார வாசலுக்குத் தெற்கே உமிக்கட்டிலில் அமர்ந்திருந்தார் உடையவர். கோயில் மாடுகளுக்காகக் கொண்டு வரப்படும் தவிடைச் சேகரித்து வைக்கிற இடம் அது. முதலியாண்டான் பக்கத்தில் இருந்தான். கூரத்தாழ்வான் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தான். கோயில் நிர்வாகிகள் பலபேர் சுற்றி நின்றிருந்தார்கள்.
'கூரேசா! நாங்கள் கணக்கு வழக்கு பார்க்கப் போகிறோம். உனக்கு இடைஞ்சலாக இருக்குமானால் நீ வேறு இடம் சென்று அமர்ந்து உன் வேலையைப் பார்க்கலாம்' என்றார் ராமானுஜர்.தமது முதன்மைச் சீடர்கள் இரண்டு பேருக்கும் வேலைகளைப் பகிர்ந்து கொடுத்திருந்தார் அவர். வைணவ நடைமுறைகளை எளியோரும் புரிந்துகொள்ளும்படி எழுத்தில் ஆவணமாக்கும் பொறுப்பு கூரத்தாழ்வானுக்கு. கோயில் நிர்வாகம் சிக்கலின்றி நடைபெற உரியதைச் செய்து மேற்பார்வை இடுகிற பொறுப்பு முதலியாண்டானுக்கு. கூரத்தாழ்வான் வேலையில் ராமானுஜருக்குப் பெரிய பிரச்னைகள் இல்லை. அது அவரும் அவனும் மட்டும் சம்பந்தப்பட்டது. அவன் கர்மயோகி என்கிறபடியால் சுணக்கத்துக்கு வாய்ப்பில்லை. ஆனால் கோயில் நிர்வாகம் அப்படிப்பட்டதல்ல. ஏராளமான தொழிலாளர்கள், எக்கச்சக்கமான உத்தியோகஸ்தர்கள், அவர்களுக்கு மேலே அதிகாரிகள், அதற்கும் மேலே மேற்பார்வையாளர்.திருக்கோயில் பணியே என்றாலும் தொழிலாகி விடுகிறபோது தொல்லைகள் வராதிருப்பதில்லை. இண்டு இடுக்குகளில் கரப்பான்பூச்சிகளும், சந்து பொந்துகளில் ஊழல்களும் எங்கும் எதிலும் தவிர்க்க முடிவதில்லை. அது பெரிய கோயில். எத்தனை தலைமுறைகளாக, எத்தனை எத்தனை மன்னர்களின் மானியங்கள் சேர்ந்து கிடக்கின்றன! நிலங்களாக, வயல்களாக, தோப்பும் துரவுமாக, பொன்னும் மணியுமாக, காலகாலமாகத் தொடரும் கட்டளைக் கல்வெட்டுகளாக யாரும் அதுவரை எண்ணிப் பார்த்ததுகூட இல்லை.ராமானுஜர் செய்ய ஆரம்பித்தார்.'இதோ பார் முதலியாண்டான்! ஒவ்வொன்றுக்கும் எனக்குக் கணக்கு வேண்டும். தினசரி வரவு செலவு முதல் ஆண்டிறுதிக் கணக்கு வரை எதிலும் ஒரு சிறு பிழையும் நேர்ந்துவிடக் கூடாது. இது புல்லுக்குப் பொசிகிற நீர் அல்ல. அரங்கன் சொத்தில் அரை நெல்லளவும் வீணாகிவிடக் கூடாது.''உத்தரவு சுவாமி!'அன்று அது ஆரம்பித்தது. கோயில் நிலங்களில் இருந்து வருகிற தானியங்கள் அளக்கப்பட்டன. யார் யாரிடமிருந்து என்ன வருகிறது, எவ்வளவு வருகிறது என்று எழுதி வைக்கப்பட்டது. எடுத்து செலவு செய்யும்போதெல்லாம் தவறாமல் குறித்து வைக்கப்பட்டது. வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் ராமானுஜரே சம்பளம் நிர்ணயித்தார். அவரவர் பணிகளுக்கு நியாயமான சம்பளம். உரிய நாளில் அது சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்று பார்க்க ஓர் ஊழியர்.அரங்கனுக்கு ஆண்டு முழுதும் உற்சவம்தான். உற்சவம் என்றால் செலவில்லாமல் எப்படி? எப்போதும் கட்டுமானப் பணிகள் இருக்கும். எப்போதும் செப்பனிடும் பணிகள் இருக்கும். மதில் சுவர்களைப் பராமரிப்பதே பெரும்பணி. ஒவ்வொன்றையும் கவனித்துச் செய்ய நிபுணர்களைத் தருவித்தார்.ஆ, சோலைகள் முக்கியம். வண்டினம் முரலும் சோலை. மயிலினம் ஆலும் சோலை. கொண்டல் மீதணவும் சோலை. குயிலினம் கூவும் சோலை.'காவிரி பாய்ந்து செழிக்கிறது தாசரதி! இந்நகரில் கண்ணில் படும் இடமெல்லாம் சோலைகளாக இருக்க வேண்டாமா? அரங்கனின் அர்ச்சனைக்கு நானாவித மலர்களும் துளசியும் தவனமும் வந்து குவிய வேண்டாமா?''அவசியம் சுவாமி!'கண்கட்டு வித்தையே போல் திருவரங்கம் முழுதும் சோலைகள் உதித்தன. எங்கும் பூத்துக் குலுங்கின. தோட்டப் பணிகளுக்கு ஏராளமான பேர் சேர்க்கப்பட்டார்கள். கோயில் வேலைக்கு யாரும் வரலாம். குலம் பொருட்டல்ல. சாதி பொருட்டல்ல. அந்தஸ்து பொருட்டல்ல. அரங்கன்மீது மாளாக்காதல் கொண்டவனா? வா, போதும். செய்வது சேவைதான். ஆனால் சம்பளம் உண்டு. அதுவும் சரியான சம்பளம்.மறுபுறம் கருவூல நிர்வாகம். கணக்காளர். உதவியாளர்கள். யாரும் தனியே உட்கார்ந்து வேலை பார்க்கக்கூடாத இடம். 'கொத்திலவராகவே இருக்கட்டும்!' என்றார் ராமானுஜர். கொத்துக் கொத்தாகத்தான் அவர் ஆள்களைப் பணியமர்த்தினார். யாரும் நப்பாசையில் கூடத் தவறு செய்துவிட முடியாதபடிக்கு ஏற்பாடு.மடைப்பள்ளி நிர்வாகத்துக்குத் தனியொரு குழுவை அமைத்தார். எம்பெருமானுக்கு அமுது செய்விப்பது பெரிய காரியம். பிரசாதமாக அதுதான் பக்தர்களுக்குப் போகிறது. மடைப்பள்ளிக்கு உள்ளே வருகிற அரிசி, பருப்பு, மிளகு, வெல்லம், நெய் எதிலும் தரத்தில் ஒரு மாற்றும் குறையக் கூடாது.'அனைத்தும் செய்துவிடலாம் உடையவரே! ஆனால் சிப்பந்திகள் அத்தனை பேருக்கும் கோயிலுக்கு அருகிலேயே வீடு கட்டித் தரவேண்டும் என்கிறீர்களே, அதுதான் சற்று…'நிர்வாகிகள் தயங்கினார்கள்.'ஏன், இதிலென்ன தயக்கம்? ராஜாவுக்கு சேவகம் செய்கிறவர்கள் கோட்டைக்குள்ளேயேதான் இருப்பார்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர வேண்டாமா? இவன் ராஜனுக்கெல்லாம் ராஜன். இவனது சேவகர்கள் மட்டும் எதற்குச் சிரமப்பட வேண்டும்? தவிர, கோயில் காரியத்தில் இருக்கிற அத்தனை பேரும் அரங்கன் திருமுன் சமமானவர்கள். அவர்கள் வசிக்கும் வீடுகளும் ஒரே மாதிரிதான் இருந்தாக வேண்டும்.'அதிகாரியா, அடிமட்ட ஊழியனா என்ற பேச்சுக்கே இடமில்லை. அரங்கன் சேவையில் இருக்கிறவர்கள். அவ்வளவுதான். விக்கிரம சோழன் வீதியில் ராமானுஜர் மேற்பார்வையிலேயே ஊழியர் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அத்தனை பேரையும் அவரே அழைத்து வந்து அங்கே குடி வைத்தார்.'சுவாமி, கோயில் பணியாளர்களுக்காக இப்படியொரு வீதியே அமைவது இதுதான் முதல் முறை. இந்த வீதிக்கு என்ன பெயர் இடலாம்?''பெயரென்ன பெயர்? கோயில் உள்துறைப் பணியாளர்கள் வீதி இது. அவ்வளவுதானே!'உள்துறைப் பணியாளர் வீதிதான் பிறகு உத்தர வீதியாக மருவிப் போனது. 'சுவாமி, எனக்கென்னவோ நீங்கள் உள்துறை ஊழியர்கள் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் குடி வைத்ததற்கு வேறு காரணம் இருக்கலாம் என்று திரும்பத் திரும் பத் தோன்றுகிறது!' தயங்கித்தான் சொன்னான் முதலியாண்டான்.'எளிய காரணம்தான் தாசரதி. திருவரங்கப் பெருமான் உற்சவங்கள் பெரும்பாலும் இரவில் தொடங்குகின்றன. இரவுப் பொழுதிலேயேதான் முடியவும் செய்கின்றன. பணியாளர்கள் நள்ளிரவுக்குப் பிறகு கோயில் காரியங்களை முடித்துவிட்டு அவரவர் வீடு போய்ச் சேர்வது சிரமம். கோயிலுக்குப் பக்கத்திலேயே வீடிருந்தால் அவர்களுக்குச் சற்று நிம்மதியாக இருக்கும். தவிர, அரங்கனுக்கு அருகில் இருக்கிறோம் என்னும் எண்ணம் எப்போதும் அவர்களைத் தவறுகளில் இருந்து தள்ளி நிற்கச் சொல்லும்.'முதலியாண்டானுக்குப் புரிந்தது. மிகவும் பிடித்தது. ஆனால் வேறு சிலருக்கு இது அறவே புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை.'சீர்திருத்தமாவது மண்ணாங்கட்டியாவது? இந்த மனிதரைத் தீர்த்துக்கட்டி விட்டுத்தான் மறுவேலை!' என்று முடிவு செய்தது ஒரு கூட்டம்.
(நாளை தொடரும்...)writerpara@gmail.com- பா.ராகவன் 


விஷம்


Advertisement



Ramanujar Download




அவர்களால் தாங்க முடியவில்லை. கோயில் நிர்வாகத்தில் ராமானுஜர் செய்த மாற்றங்களை மட்டுமல்ல. பக்தியின் மிகக் கனிந்த நிலையில் அரங்கனை ஒரு குழந்தையைப் போல் கவனித்துக்கொள்ள அவர் மேற்கொண்ட சில ஏற்பாடுகளும் அவர்களுக்கு வெறுப்பூட்டியது.
சட்டென்று ஒருநாள் ராமானுஜர் கேட்டார், 'முதலியாண்டான்! அரங்கனின் திருமுகம் வாடியிருக்கிறதே. இன்று என்ன அமுது செய்யப்பட்டது?' மடைப்பள்ளியில் என்ன தளிகையாகிறது என்று கவனிக்க வேண்டியது முதலியாண்டான் பொறுப்பு. அரங்கனுக்கு அமுது செய்விக்கப்படுகிற அனைத்து வகை உணவினங்களும் உயர்தரமாக இருக்கவேண்டும் என்பது உடையவர் கட்டளை. புளியோதரையோ, சர்க்கரைப்பொங்கலோ, வெண்பொங்கலோ, வேறெதுவோ. சேர்மானங்களில் ஒரு சிறு பிழையும் நேர்ந்துவிடக் கூடாது.நேர்ந்ததும் இல்லை. முதலியாண்டான் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டிருந்த நாளில்தான் ராமானுஜர் கேட்டார். 'அரங்கன் திருமுகம் ஏன் வாடியிருக்கிறது?'தோற்றமா, தோற்ற மயக்கமா என்ற வினாவுக்கே இடமில்லை. உடையவர் மனத்தில் அப்படிப் பட்டுவிட்டது.'தெரியவில்லை சுவாமி! இன்று ததியோதனம் (பால் சேர்த்த தயிர்சாதம்) தான் அமுது செய்யப்பட்டது. வழக்கம் போலத்தான் தளிகையானது.''இல்லையே. அப்படித் தெரியவில்லையே. அவர் முகம் வாடியிருக்கிறது. ஜலதோஷம் உண்டாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏதோ தவறு நடந்திருக்கிறது.'முதலியாண்டான் யோசித்துக் கொண்டிருந்தபோது ராமானுஜரே கேட்டார், 'வெறும் ததியோதனம் மட்டுமா?''ஆம் சுவாமி. அது மட்டும்தான். ஆனால் அதற்குப் பிறகு நாவல் பழம் அமுது செய்யப் பண்ணினேன். நல்ல பழங்கள்தாம். பரிசோதித்துவிட்டுத்தான் சன்னிதிக்குள் எடுத்துச் சென்றேன்.''அதுதான் பிழை' என்றார் ராமானுஜர். 'தயிர் சாதத்துக்குப் பிறகு யாரேனும் நாவல் பழம் உண்பார்களோ? கண்டிப்பாக அது உடல்நலக் குறைவைத்தான் உண்டு பண்ணும்.'யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'ஆனால், சுவாமி…''ம்ஹும். கூப்பிடுங்கள் கருட வாகன பண்டிதரை!'அவர் திருக்கோயில் தன்வந்திரி சன்னிதிக்குப் பொறுப்பாளர். உடையவர் அழைக்கிறார் என்றதும் ஓடோடி வந்தவரிடம், 'உடனே எம்பெருமானுக்குக் கஷாயம் தயாராகட்டும்.' என்றார்.அதோடு நிற்கவில்லை. கற்பூரம், கஸ்துாரி மஞ்சள், குங்குமப்பூ மூன்றையும் சேர்த்து அரைத்து பெருமான் திருமேனியில் உடனே சாற்றச் சொன்னார்.பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள். இது எம்மாதிரியான கரிசனம்! பக்திதான். ஆனால் வெறும் பக்தியல்ல. பாவனைதான். ஆனால் அனைவருக்கும் சாத்தியமானதல்ல. ஆத்மார்த்தமாக அரங்கனோடு கரைந்து போகாத ஒருவருக்கு இப்படியெல்லாம் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு ஜீவன் உள்ளே உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கிறது; அதைப் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை என்று வீட்டில் இருப்போர் நினைப்பது போன்றே கோயில் கொண்டிருப்பவனையும் கருத முடியுமா! ராமானுஜரால் முடிந்தது.'வெறும் அபத்தம். சரியான கிறுக்குத்தனம்!' என்றது எதிர்க்கூட்டம்.ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் பெருமாளுக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, அந்த வெற்றிலை மடிப்பில் சிறிது பச்சைக் கற்பூரம் சேர்ப்பது, தாலாட்டி உறங்கச் செய்வது, தாலாட்டுக்கு முன்னால் ரங்க நாச்சியார் சன்னிதிக்கு எழுந்தருள வைத்து ஊஞ்சலில் அமர வைப்பது, ஊஞ்சலை மெல்லப் பிடித்து ஆட்டி விடுவது என்று அவர் கொண்டு வந்த நடைமுறைகள் யாவும் கலாபூர்வமானவை. வெறும் நம்பிக்கையல்ல. அதற்கும் அப்பால். வெறும் பக்தியல்ல. பிரேம பக்தி. பூரண சரணாகதிக்குப் பிறகு கிடைக்கிற உள்ளார்ந்த நெருக்கம்.'ஓய், இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது. இவர் அடிக்கிற அத்தனை கூத்துக்கும் நாம் கணக்கு எழுதிக் காட்ட வேண்டியிருக்கிறது. முன்னைப் போல் கோயில் மடைப்பள்ளியில் இருந்து வீட்டுக்கு எதுவும் எடுத்துச் செல்ல முடிவதில்லை. நன்கொடைகளில் நமக்குப் பங்கு வருவதில்லை. முன்னெல்லாம் விளைச்சல் நடந்து அறுவடையாகி வந்தால் மூட்டை மூட்டையாக நமக்குத் தானியங்கள் தனியே வரும். இப்போது அதெல்லாம் இல்லை என்றாகிவிட்டது. இப்படியே போனால் நாமும் பிட்சைக்குப் போக வேண்டியதுதான்.''புலம்பாமல் யோசிக்கலாம் சுவாமி. என்ன செய்யலாம் என்று நீரே சொல்லும்.'முகமும் பெயருமற்ற அந்தக் கூட்டம் அடிக்கடிக் கூடிப் பேசி ஒரு முடிவு செய்தது. ராமானுஜரைக் கொன்று விடலாம்.சன்னியாசிகளுக்கான இலக்கணப்படி, தினமும் ஏழு வீடுகளில் பிட்சை எடுத்து உண்பதே ராமானுஜரின் வழக்கம். வசதியாகப் போய்விட்டது. ஏழிலொரு வீட்டானைப் பிடித்து, போடுகிற பிட்சையில் விஷத்தைக் கலக்கச் சொன்னால் தீர்ந்தது. பிடித்தார்கள். பேசினார்கள். சம்மதிக்க வைக்கப் பொன்னும் பொருளும் கொடுத்தார்கள்.'நீ என்ன செய்வாய் என்று தெரியாது. நாளைக் காலை ராமானுஜர் உன் வீட்டுக்குப் பிட்சைக்கு வரும்போது உணவில் விஷம் கலந்துவிட வேண்டும். உண்ட மறுகணம் அவர் உயிர் பிரிந்துவிட வேண்டும்.''ஆனால் இது தவறல்லவா? ஆசாரிய அபசாரம் அல்லவா? நமக்கு நரகமல்லவா கிடைக்கும்?என்று தவித்தாள் அவனது மனைவி.'நாளைய நரகத்தைப் பற்றி இன்று ஏன் நினைக்கிறாய்? இதோ பார், வந்து குவிந்திருக்கும் பொன்னையும் பொருளையும். நான் வாழ்நாள் முழுதும் சம்பாதித்தாலும் நமக்கு இத்தனை சொத்து சேராது. நீ சொன்னதைச் செய். ராமானுஜருக்கு இடுகிற உணவில் இந்த விஷத்தைக் கலந்தே தீரவேண்டும்!' கட்டாயப்படுத்தி மனைவியிடம் விஷத்தைக் கொடுத்துவிட்டு, காரியம் முடிந்துவிடும் என்று நிம்மதியாகப் போனான் அவன். மறுநாள் ராமானுஜர் அந்த வீட்டுக்குப் பிட்சைக்கு வந்தார். அன்னமிட வந்தவளுக்குக் கைகள் நடுங்கின. நடை தளர்ந்தது. சட்டென்று உடையவரின் பாதம் பணிந்து தம் கண்ணீரால் கழுவினாள்.'தாயே, ஏன் அழுகிறீர்கள்?''ஒன்றுமில்லை உடையவரே! இந்தாரும்…'கணவன் சொல்லைத் தட்ட முடியாமல் உணவை இட்டாள். ராமானுஜர் ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்தார். தயிர் சாதத்துக்குப் பிறகு நாவல் பழம் சாப்பிட்டு அரங்கனுக்கு வந்த ஜலதோஷத்தையே அறிய முடிந்தவருக்கு அந்தப் பெண் இட்ட உணவில் விஷம் கலந்திருப்பதையா புரிந்து கொள்ள முடியாது?ஒரு கணம் கண்மூடி அமைதியாக நின்றார். இட்ட பிட்சையை அப்படியே எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் நீரில் கரைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.பிட்சைக்குச் சென்று நெடுநேரமாகியும் ராமானுஜர் மடத்துக்குத் திரும்பவில்லையே என்று கவலைப்பட்டு அங்கிருந்து தேடிக்கொண்டு ஆட்கள் போனார்கள். ஆற்றங்கரையில் அவரைக் கண்டதும் ஓடி வந்து, 'என்ன ஆயிற்று சுவாமி? ஏன் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையா?' 'இல்லை. நான் இன்று முதல் உணவருந்தப் போவதில்லை.' என்றார் ராமானுஜர்.(நாளை தொடரும்...)writerpara@gmail.com- பா.ராகவன்


இது தகுமா?


Advertisement





Ramanujar Download



'முதலியாண்டான்! உமக்குத் தெரியாதிருக்காது. தயவுசெய்து நீர் சொல்லும். இது எதற்கான விரதம்?'
'தெரியவில்லை சுவாமி. உடையவர் என்னிடம் இது குறித்துப் பேசவேயில்லை!' என்றான் முதலியாண்டான்.'அன்று காலைகூட பிட்சை கேட்டுத்தானே கிளம்பிப் போனார்? உபவாசம் என்றால் கிளம்பியிருக்கவே மாட்டாரே!' கூரத்தாழ்வான் வேறொரு கூட்டத்தின் நடுவே சிக்கிக்கொண்டு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதானது.'போன இடத்தில் ஏதோ நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் இப்படி திடீரென்று ஆரம்பித்திருக்க வாய்ப்பே இல்லை.''ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் உபவாசம் என்றால் சரி. இதென்ன வாரக்கணக்கில் நீண்டு கொண்டே போகிறதே!'கவலை அலையெனப் பரவிக் கொண்டிருந்தது. பெரிய நம்பி மடத்துக்கு வந்து ராமானுஜரைச் சந்தித்துப் பேசிப் பார்த்தார். 'தேகம் மெலியத் தொடங்கி விட்டதே, ஏன் இப்படி வருத்திக் கொள்கிறீர்கள்?' என்று திருவரங்கப் பெருமாள் அரையர் கவலையோடு வந்து கேட்டார். கூரத்தாழ்வானின் தர்ம பத்தினியான ஆண்டாள் கெஞ்சிப்
பார்த்துப் பலனின்றிக் கதறியே விட்டாள்.
ஆளவந்தாரின் சீடர்கள், அவரவர் குடும்பத்தார், ராமானுஜரின் நேரடி சீடர்கள், பக்தர்கள், திருவரங்கத்து மக்கள், கோயில்பணி ஆற்றுபவர்கள் ஒருவர் மிச்சமில்லை.எதற்காக இந்த உபவாசம்?ராமானுஜர் யாருக்கும் பதில் சொல்லவில்லை. இது தீர்மானம். கேவலம் இந்த உடலம் இருப்பதும் இயங்குவதும் அல்லவா அவர்களைச் சங்கடப்படுத்தியிருக்கிறது? இயக்குபவன் அரங்கனே என்பதை எண்ணிப் பாராதிருந்து விட்டார்கள். செய்வது அனைத்தும் அவனுக்குத்தான். செய்ய வைப்பதும் அவனேதான். எனில் கலந்த விஷம் யாரைச் சென்று தாக்கும்?அரங்கப் பெருமானே, அவர்கள் தெரியாமல் பிழை புரிந்து விட்டார்கள். தண்டித்து விடாமல் இரு. பிராயச்சித்தமாக நான் இருக்கிறேன் உபவாசம்.அது மழை மேகம் நிகர்த்த பெருங்கருணையின் மௌன
வெளிப்பாடு. யார் என்ன சொன்னாலும் கேளாத திட சித்தத்தின் தீவிரம் அன்று அவர்களுக்குப் புரிந்தது.'இல்லை. இப்படியே விட்டால் உடையவர் நமக்கு இல்லாமல் போய்விடுவார். உபவாசம் தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. பருக்கைச் சோறு கூட உள்ளே போகவில்லை. இது ஆபத்து. பெரிய ஆபத்து. ஏதாவது செய்தாக வேண்டும்!' என்றார் பெரிய நம்பி.
என்ன செய்வது என்றுதான் யாருக்கும் புரியவில்லை. விஷயம் மெல்ல மெல்ல திருவரங்கத்தைத் தாண்டியும் பரவத் தொடங்கியது. எங்கெங்கு இருந்தோ பக்தர்கள் அலையலையாகத் திரண்டு வர ஆரம்பித்தார்கள். 'வேண்டாம் இந்த உபவாசம். தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள்!' என்று கதறத் தொடங்கினார்கள்.'ஒரு மாதம் கடந்து விட்டதா! எம்பெருமானே, இதென்ன விபரீதம்?' என்று அங்கே திருக்கோட்டியூரில் துடித்து எழுந்தார் குருகேசப் பிரான்.'இதற்குமேல் பொறுத்திருக்க இயலாது. கிளம்புங்கள்!' என்று தமது சீடர்களுக்கு உத்தரவிட்டுவிட்டு அந்தக்கணமே வெளியே பாய்ந்து விட்டார்.
ராமானுஜரைப் பார்க்க திருக்கோட்டியூர் நம்பி புறப்பட்டிருக்கிறார் என்னும் தகவல் அவர் வந்து சேருமுன் திருவரங்கத்தை எட்டிவிட்டது.
'நம்பிகள் மிகவும் வயதானவர். அவர் எதற்கு என்னைக் காண வர வேண்டும்? அபசாரம்!' என்று ராமானுஜர் துடித்துப் போனார். ஆனால் தடுத்து நிறுத்துவது இயலாத காரியம்.'வரட்டும். அவர் சொன்னாலாவது கேட்கிறாரா பார்ப்போம்!' என்று முதலியாண்டான் உள்ளிட்ட சீடர் குழாம் அமைதியாக இருந்தது.ராமானுஜரால் அப்போது எழக்கூட முடியவில்லை. உடல் முற்றிலும் துவண்டு ஒரு ஓரத்தில் சுருண்டு கிடந்தார். கண்கள் இருண்டு, நரம்புகள் தளர்ந்து விட்டிருந்தன. பேச்சில்லை. செயல் இல்லை. அசைவும் இல்லை. மூச்சு மட்டும் விட்டுக் கொண்டிருந்தார். எந்தக் கணத்திலும் அது நின்று போகலாம் என்னும் அபாயம் அரங்க நகர் முழுதும் அறிவிக்கப்பட்டிருந்தது.என்ன நிகழப் போகிறதோ என்று அத்தனை பேரும் மனத்துக்குள் அலறிக் கொண்டிருந்தபோது யாரோ ஓடி வந்து சொன்னார்கள், 'திருக்கோட்டியூர் நம்பி ஆற்றைக் கடந்து விட்டார்.
காவிரிக் கரையோரம் அவரது கோஷ்டி வந்து கொண்டிருக்கிறது.'எங்கிருந்துதான் அந்த பலம் அவருக்கு வந்ததோ. சட்டென்று வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார் ராமானுஜர். 'புறப்படுங்கள். ஆசாரியரை நாம் எதிர்கொண்டு வரவேற்க வேண்டும்!'சீடர்கள் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் செல்ல, காவிரி மணல் படுகையில் திருக்கோட்டியூர் நம்பியை ராமானுஜர் பார்த்துவிட்டார்.'சுவாமி…!' என்று ஓடோடிச் சென்று தடாரென்று அப்படியே அவர் காலில் விழுந்தார்.அது உச்சிப் பொழுது. வெயில் அடித்து வீழ்த்திக் கொண்டிருந்த சமயம். வெறுங்காலுடன் ஆற்று மணல் வெளியில் ஓடிய ராமானுஜர் தமது மெலிந்த தேகத்தை அப்படியே சுடுமணலில் கிடத்தி சேவித்துக் கொண்டிருந்தார்.எழுந்திரு என்று ஆசாரியர் சொல்லாமல் எழுந்திருக்க முடியாது. அது மரியாதை இல்லை. ஆனால் இந்தத் திருக்கோட்டியூர் நம்பி ஏன் வாய் திறக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறார்?சீடர்கள் துடித்தார்கள். என்ன வெயில், எப்பேர்ப்பட்ட சூடு! ஆற்று மணலில் ஒரு மனிதர் விழுந்து கிடக்கிறார். எழுந்திரு என்று ஏன் இவர் இன்னும் சொல்லவில்லை? ஐயோ ஐயோ என்று அவர்கள் மனத்துக்குள் அலறிக் கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு குரல் கேட்டது.'இது தகாது நம்பிகளே! உபவாசத்தால் அவர் ஏற்கெனவே மெலிந்து கருகி விட்டிருக்கிறார். நீங்கள் இப்படி வெயிலில் இட்டு வாட்டிக் கொண்டிருப்பது அராஜகம்!' என்று கூவியபடி சட்டென்று ராமானுஜருக்கு அருகே தான் படுத்துக்கொண்டு அவரை அப்படியே துாக்கித் தன்மீது போட்டுக் கொண்டான் அவன்.அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். யார், யார் என்று கூட்டம் முண்டியடித்து எட்டிப் பார்த்தது.அவன் கிடாம்பி ஆச் சான். பெரிய திருமலை நம்பியின் துாரத்து உறவினன். அவர்தான் ஆச்சானை ராமானுஜரிடம் சென்று சேரச் சொல்லி அனுப்பி வைத்தவர்.செயல் சரியானதுதான். ஆனால் கோபக்காரப் பெரியவரான திருக்கோட்டியூர் நம்பி இதனை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்?திகிலுடன் அவர்கள் நம்பியைப் பார்த்தபோது அவர் முகத்தில் மிகச் சிறிதாக ஒரு புன்னகை விரிந்தது.
'வாரும் கிடாம்பி ஆச்சான்! உம்மைப் போல் ஒருவரைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். இந்தப் பெருங்கூட்டத்தில் உடையவரின் திருமேனி மீது யாருக்கு அதிகப் பரிவு உள்ளதென்று சோதித்துப் பார்க்க விரும்பித்தான் அவரை எழச் சொல்லத் தாமதித்திருந்தேன். உமது அன்பும் குரு பக்தியும் ஒப்பற்றதென இப்போது விளங்கிவிட்டது. உடையவருக்கு உணவிட நீரே சரியான நபர்!' என்று திருக்கோட்டியூர் நம்பி சொன்னதும் திடுக்கிட்டுப் பார்த்தார் ராமானுஜர்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பாராகவன்

வசந்த உற்சவம்


Advertisement


Ramanujar Download


தகித்துக் கொண்டிருந்தது மணல் வெளி. முந்தையக் கணம் வரை சூடு பொறுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் திருக்கோட்டியூர் நம்பி பேசத் தொடங்கியதும் அந்நினைவே இல்லாது போனது. உலகு மறந்து கரம் கூப்பி நின்று விட்டார்கள்.

'எம்பெருமானாரே, நீர் பட்டினி கிடந்து வாடியது போதும். இதோடு உமது உபவாசத்தை நிறுத்திக் கொள்ளும்.'ராமானுஜரால் பதில் சொல்ல முடியவில்லை.
'சொல்வது காதில் விழுகிறதா? இன்னொரு விஷயம். இனி நீங்கள் ஏழு வீடுகளில் பிட்சை எடுக்க வெளியே செல்ல வேண்டியதில்லை. நான் சொல்கிறேன். உமக்கு இனி ஓரிடத்துப் பிட்சைதான். அதையும் இந்தக் கிடாம்பி ஆச்சான் மட்டுமே செய்வார்.'
'சுவாமி..!'
'மறு பேச்சே கிடையாது. வைணவம் தழைக்க நீங்கள் வேண்டும். நீங்கள் வேண்டுமென்றால் நீங்கள் நீடு வாழ வேண்டும். உணவில் விஷம் கலக்கிற உத்தமர்களிடம் பிட்சை எடுத்து உண்டு என்னாவது?' திடுக்கிட்டுப் போனது கூட்டம்.
மிக அந்தரங்கமான ஒரு சிலரிடம் ராமானுஜர் நடந்ததைத் தெரிவித்திருந்தது உண்மையே. ஆனால் அத்தனை பேருக்கும் வெட்டவெளிச்சமாக்கி விட்டார் திருக்கோட்டியூர் நம்பி.
'என்ன, ராமானுஜருக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? யார் செய்தது இந்நீசச் செயலை?' கொதித்துப் போய் விட்டார்கள் அரங்கன் அடியார்கள்.
'இல்லை. விட்டுவிடுங்கள். யார் என்பது முக்கியமல்ல. எண்ணத்தில் விஷம் தோய்ந்தவர்களும் எம்பெருமான் கோயில் கொண்டிருக்கிற தலத்திலேயேதான் வசிக்கிறார்கள். அவனே சகித்துக் கொள்ளும்போது நாம் பொறுமை இழக்கக்கூடாது' என்று தடுத்துவிட்டார் ராமானுஜர்.
'இங்கேயே பேசிக்கொண்டிருந்தால் எப்படி? அனைவரும் திருமடத்துக்கு வாருங்கள். இலை போடத் தயாராக நான் முன்னால் போகிறேன்' என்று சொல்லிவிட்டுக் கிடாம்பி ஆச்சான் முன்னால் விரைந்தான்.
அன்று மடத்தின் சமையலறை அவனது கட்டுப்பாட்டுக்கு வந்தது.
உடையவர் உண்ண ஏற்றது எது என்று அவனே தீர்மானிப்பான். இன்னொருத்தரை நெருங்க விடாமல் தன் கையால் தானேதான் சமைப்பான். சீடர்கள், பக்தர்கள், விருந்தினர்கள் யாரானாலும் சரி. எத்தனை பேரானாலும் சரி. ராமானுஜர் வசித்து வந்த சேரன் மடத்தில் தளிகை அவனுடையதுதான்.
'எம்பெருமானாரே! நீர் என்னிடம் கேட்ட ரகஸ்யார்த்தங்களுக்கு அப்பால், பெரிய நம்பிகள் சொல்லிக்கொடுத்த ரகஸ்யார்த்தங்களுக்கு அப்பால் அவசியம் பயிலவேண்டிய இன்னொன்று உண்டு. அது, திருவாய்மொழி விளக்கம். நான் திருமாலையாண்டானிடம் சொல்லி வைக்கிறேன். அவர் உமக்கு இனி திருவாய்மொழி வகுப்பெடுப்பார்' என்று பரிவோடு சொன்னார் திருக்கோட்டியூர் நம்பி.
திருமாலையாண்டான் நம்பியும் ஆளவந்தாரின் சீடர்களுள் ஒருவர். பெரும் ஞானஸ்தன். ஆளவந்தார் சொல்லிக் கொடுத்ததற்கு மேல் அணுவளவும் இன்னொருவர் சொன்னது அவர் செவியில் ஏறாது. அப்படியொரு குருபக்தி கொண்டவர்.
அன்று மதிய உணவின்போது திருக்கோட்டியூர் நம்பி இதனைச் சொன்னபோது, 'சுவாமி, இதைவிட எனக்கு பாக்கியம் ஏது? காத்திருக்கிறேன்!' என்றார் ராமானுஜர்.
'இப்போதெல்லாம் உடையவருக்குப் பாடம் கேட்க நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது நம்பிகளே. திருக்கோயில் பணிகள் மூச்சு முட்ட வைக்கின்றன' என்றார் பெரிய நம்பி.
'உண்மைதான் சுவாமி. ஆனால் அரங்கன் ஆளும் பூமி இது. அக்கிரமங்கள் கூடாதல்லவா? அதிகார துஷ்பிரயோகம் தவறல்லவா? ஒரு சாதாரண அரசனுக்கு அவப்பெயர் வந்தாலே தாங்க மாட்டாமல் தவியாய்த் தவித்து விடுவான். இவன் அரசனுக்கெல்லாம் அரசனல்லவா! அருளாட்சி புரிகிறவனல்லவா? அவனது திருக்கோயிலில் தவறுகள் நடைபெறுவதை என்னால் காணச் சகிக்கவில்லை.'
அவர்களுக்குப் பிரச்னையின் தன்மை தெரியும். அதன் தீவிரம் தெரியும். சிறு ஊழல்களைப் பற்றி ராமானுஜர் சிந்திக்கவில்லை. நெடுநாள் நோக்கில், பிழைபடாத பெருந்தொண்டாகக் கோயில் நிர்வாகம் வார்த்தெடுக்கப்பட வேண்டுமென அவர் விரும்பினார். செய்த சீர்திருத்தங்கள் எல்லாமே அதற்காகத்தான்.
சோழ தேசத்தில் சைவம் செழித்துக் கொண்டிருந்த காலம். ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசனும் சிவத்தொண்டனாக இருந்தான். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி சிவாலயங்களைக் கட்டுவித்து, தினப்பணிகளும் திருவிழாக்களும் தவறாமல் நடக்க மானியங்கள் எழுதி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
'என் பெருமானுக்கு அப்படியொரு தொண்டு மனம் கொண்ட மன்னன் வாய்க்க மாட்டானா' என்று ராமானுஜர் ரகசியமாக ஏங்கிக் கொண்டிருந்தார். ஒரு மன்னனின் கவனிப்பு இருந்துவிட்டால் மற்றவர்களின் ஆட்டமும் கொட்டமும் அடங்கிவிடும். அதிகார துஷ்பிரயோகங்கள், இருந்த சுவடு தெரியாமல் ஓடிவிடும். மானியங்கள் பொருட்டல்ல. தானியங்களும் பொருட்டல்ல. மாலவன் தாள் பணியும் மன்னன் ஒருவன் வேண்டும்.
'எனக்குப் புரிகிறது உடையவரே. ஒரு மன்னனே தொண்டன் ஆகி உம் மனக்குறையைப் போக்கட்டும்!' என்று சொல்லிவிட்டு திருக்கோட்டியூர் நம்பி கிளம்பிப் போனார். ராமானுஜர் தமது வழக்கமான பணிகளில் மூழ்கத் தொடங்கினார்.
கோயிலில் வசந்த உற்சவம் ஆரம்பமானது. வண்ண விளக்கொளியும் வாண வேடிக்கைகளும் சுடர்விடத் தொடங்கின. எங்கெங்கிருந்தோ பக்தர்கள் திருவரங்கத்தை நோக்கி வரத் தொடங்கினார்கள். நான்கு புறமும் சூழ்ந்த காவிரிக்கு அணை கட்டினாற்போல எங்கும் மனித முகங்கள். ஊரெங்கும் மங்கல வாத்திய முழக்கங்கள். ஆடல் பாடல் அரங்கேற்றங்கள். திரும்பும் இடமெல்லாம் பிரபந்தப் பாராயணம் ஒலித்துக் கொண்டிருந்தது. இங்கே காலட்சேபங்கள். அங்கே கலை நிகழ்ச்சிகள். பூவுலக சொர்க்கமென வருணிக்கப்படும் திருவரங்கம் அப்போது சொர்க்கத்தை விஞ்சிய பேரெழில் நகரமாக ஜொலித்துக் கொண்டிருந்தது.
கண்ணிமைக்க நேரமில்லாமல் உடையவரும் அவரது சீடர்களும் திருக்கோயில் பணிகளில் தம்மைக் கரைத்துக் கொண்டார்கள். அதிகாலை
துயிலெழுந்து காவிரிக்குக் குளிக்கப் போகிற வரைதான் நேரம் அவர்களுடையதாக இருக்கும். நித்ய கர்ம அனுஷ்டானங்கள் முடிந்தபிறகு கோயில் வேலைகள் கூடிவிடும்.
அன்றைக்கு அப்படித்தான் உடையவரும் அவரது சீடர்களும் காவிரிக்குக் குளிக்கப் போனார்கள். பிரபந்தம் பாடியபடியே நீராடி முடித்துக் கரையேறிய ராமானுஜர் ஒரு கணம் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டார்.
'சுவாமி, என்ன ஆயிற்று?' என்றான் கூரத்தாழ்வான்.
'அங்கே பார்!' என்று அவர் சுட்டிக்காட்டிய திசையில் அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தார்கள்.
புவி காணாத ஒரு சம்பவம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. எந்த யுகத்திலும் யாரும் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாத ஒரு சம்பவம். அறியாமையின் எல்லையும் கவித்துவ மனத்தின் வெளிப்பாட்டு உச்சமும் கூடிக் களிக்கிற மகத்தானதொரு மாயத் தருணம்.
அவர்கள் யாருக்கும் பேச்சே எழவில்லை. திகைப்பு நீங்கவே பல கணங்கள் பிடித்தன.

(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்
கண்ணைப் பார்!
Advertisement


Ramanujar Download


அவள் பேரழகிதான். சந்தேகமில்லை. உச்சந்தலை முதல் பாத நுனிவரை பார்த்துப் பார்த்து வரைந்த பேரோவியம் ஒன்று எழுந்து நடந்து கொண்டிருந்தாற் போல் இருந்தாள். நின்று பார்த்த துாரத்திலேயே அவளது நாசியின் கூர்மை தனித்துத் தெரிந்தது. காற்றில் அசைந்த காதோரக் குழலில் ஒரு கவிதை ஒளிந்திருந்தது. ஒரு தேரில் இருந்து தேவதை இறங்குவது போலிருந்தது அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும்.

மெல்லிய வெட்கமும் மிதமான புன்னகையுமாக நடந்து கொண்டிருந்தவளின் முன்னால் ஒரு மல்லன் குடை பிடித்தபடி பின்புறம் அடியெடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தான். அவன் கண்கள் அவள் மீதே இருந்தன. குடையுடன் சேர்த்து அவன் மனமும் கவிந்தே இருந்தது. அவனுக்கு முன்னும் பின்னுமாகச் சில வீரர்கள். நடக்கிற தேவதையின் பாதம் மணலில் பட்டுத் தேய்ந்துவிடாதபடிக்கு அவள் கால் படும் பாதையெல்லாம் மென்கம்பளம் விரித்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.ராமானுஜர் சுட்டிக்காட்டிய காட்சியைக் கண்ட அவரது சீடர்கள் வெலவெலத்துப் போய்விட்டார்கள்.'ஐயோ இதென்ன அக்கிரமம்! பட்டப்பகலில் பெண்டாட்டிக்கு இப்படி ஒருத்தன் குடை பிடித்துப் போவானா!''பார்த்தால் எந்த நாட்டு அரசியாகவும் தெரியவில்லையே. வீரர்கள் அவளுக்குப் பட்டுப்பாதை விரித்துச் செல்வதைப் பாரேன்!''அட அரசியாகவே இருக்கட்டுமே. எந்த நாட்டு அரசிக்கு வீதியெங்கும் விரிப்பு வாய்க்கிறது?''ஆளைப் பார்த்தால் ஆஜானுபாகுவாக இருக்கிறான். ஆனால் இப்படியா ஒரு பெண் பித்தனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வான்? வெட்கங்கெட்டவன்.'
ராமானுஜர் அவர்களைச் சற்று அமைதியாக இருக்கச் சொன்னார். 'அவன் முகத்தைப் பாருங்கள். அவன் பார்வை அவளது விழிகளைத் தாண்டி நகரவேயில்லை. கண்ணிமைக்காமல் எப்படி அவளைப் பார்த்தபடியே நடக்கிறான்! அதுவும் கால்களைப் பின்னால் அடியெடுத்து வைத்து எத்தனை துாரம் நம்மால் நடக்க முடியும்? அவனால் அது முடிகிறது என்றால் என்ன அர்த்தம்?''அவன் ஒரு கிறுக்கன் என்று அர்த்தம் சுவாமி.'ராமானுஜர் புன்னகை செய்தார்.
'வெறும் கிறுக்கனல்ல சுவாமி. பெண் கிறுக்கன். காமக் கிறுக்கன்.''உங்கள் பதற்றம்தான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. சரி, ஒன்று செய்யுங்கள். யாராவது போய் அவனை இங்கே அழைத்து வாருங்கள்' என்றார் ராமானுஜர்.சீடனொருவன் அந்த மல்லனை நோக்கி ஓடினான். தொலைவில் இருந்து பார்த்தபோது நினைத்தபடி இழித்துப் பேச முடிந்ததுபோல நெருங்கியபோது முடியாது என்று தோன்றியது. நெருக்கத்தில் அவன் பெரும் பலசாலி என்று தெரிந்தது. தடித்துத் திரண்டிருந்த தோல் அவனது முரட்டுத்தனத்தைப் பறைசாற்றியது. முகம் மீறிய சுருள் மீசையின் அடர்த்தியில் அவனது பேராண்மை புலப்பட்டது. கம்பீரமும் பிரம்மாண்டமும் நிறைந்த விழிகளை உருட்டி அவன் சீடனைப் பார்த்தான்.'என்ன?''ஐயா, உடையவர் தங்களை அழைக்கிறார்' மெல்லிய நடுக்கத்துடன் தொலைவில் சுட்டிக்காட்டினான். அவன் பார்த்தான்.சட்டென்று அவனது விடைப்பு குலைந்து ஒரு பணிவு கூடியது. 'ஆஹா, அவரா ராமானுஜர்! என்ன பாக்கியம் செய்தேன் நான்! ஊரெல்லாம் அவரைப் பற்றித்தானே பேச்சாக இருக்கிறது? தரிசிக்கவும் தாள் பணியவும் இன்று எனக்கு வாய்த்திருக்கிறதா? இது என் பேறன்றி வேறல்ல.'இரு கரம் கூப்பியபடியே அவன் உடையவரை நோக்கி விரைந்தான். நெருங்கியதும் அப்படியே பாதம் பணிந்து நின்றான்.'எழுந்திரப்பா. யார் நீ? உன் பெயர் என்ன?''ஐயா, என் பெயர் வில்லி. உறையூர் மன்னன் அகளங்கனிடம் சேவகம் புரிகின்றேன். பிறப்பால் வேடன். பிழைப்பால் மல்லன்.''அப்படியா? எனக்கென்னவோ நீ உறையூர் மன்னனிடம் சேவகம் புரிபவனாகத் தெரியவில்லையே அப்பா. அதோ நிற்கிறாளே, அவள் யார்? உன் ராணியா? அவளது சேவகனோ என்று நினைத்துவிட்டேன்.'
சட்டென்று அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. 'ஒரு நிமிடம் சுவாமி!' என்று சொல்லிவிட்டு ஓடோடிச் சென்று தனது மனைவியை அழைத்து வந்தான்.'பொன்னாச்சி, நமது இன்றைய தினம் உடையவர் தரிசனத்துடன் விடிந்திருக்கிறது. விழுந்து வணங்கிக்கொள்!'அந்தப் பெண் பணிவோடு ராமானுஜரை வணங்கி எழுந்தாள்.'தீர்க்க சுமங்கலியாக இரம்மா. உன் புருஷனுக்குத்தான் உன்மீது எத்தனை அபாரமான காதல்! அப்பப்பா. பொதுவெளி என்றும் பாராமல் இப்படிக் குடை பிடித்து வருகிறானே?''அவர் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார் சுவாமி. எனக்குத்தான் வெட்கம் பிடுங்கித் தின்கிறது.'அப்போதும் அவள் வெட்கப்பட்டாள்.'அதனால் பாதகமில்லை. மனைவியைமதிக்கத் தெரிந்த கணவன் அமைவது ஒரு கொடுப்பினை. ஆனால் மல்லனே, உன் மனைவிக்கு இருக்கிற நாணம் உனக்கு ஏன் இல்லை? பார்க்கிறவர்களெல்லாம் எப்படி கேலி பேசிச் சிரிக்கிறார்கள் தெரியுமா?''தெரியும் சுவாமி. ஆனால் நான் அதைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. இந்த உலகில் யாருக்கும் வாய்க்காத ஒரு பேரழகி எனக்கு மனைவியாக வாய்த்திருக்கிறாள். இந்த அழகை சிந்தாமல் சிதறாமல் கணம்தோறும் நான் நெஞ்சில் ஏந்திப் பருகிக் கொண்டிருக்கிறேன். வெயில் பட்டு அவள் மேனி வாடிவிடக் கூடாதே என்று கவலைப்படுகிறேன். கல்லும் மண்ணும் பட்டால் அவள் பாதம் மேலும் சிவந்துவிடுமே என்று அஞ்சுகிறேன். காற்றுசற்று வேகமாக வீசினாலும் கவ
லையாகி விடுகிறது ஐயா. பொன்னில் குழைத்துச் செய்த மேனியை அது உரசி காயப்படுத்திவிட்டால் என் நெஞ்சே வெடித்துவிடும்.'ராமானுஜர் புன்னகை செய்தார்.'ஓ. நீ வெறும் மல்லன் என்று நினைத்தேன். பெரும் கவிஞனாகவும் இருப்பாய் போலிருக்கிறதே?'இப்போது அவன் வெட்கப்பட்டான். 'அதற்குக் காரணம் நானல்ல சுவாமி. என் தேவி பொன்னாச்சியின் கண்கள். வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன். நாளெல்லாம் பொழுதெல்லாம் இவளது கண்களை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு குளத்தைப் போன்ற அதன் அகலத்தில் நான் என்னைத் தொலைத்து விடுகிறேன். முக்குளித்து மீண்டு வரும்போது மீண்டும் அக்கண்களின் நட்சத்திர ஜொலிப்பில்தான் தலை துவட்டிக் கொள்கிறேன். அவள் இமைக்கிற போதெல்லாம் எனக்குச் சிலிர்க்கிறது. அவள் பார்வை நகரும் போதெல்லாம் நான் பொடிப்பொடியாகி விடுகிறேன். இந்தக் கண்கள்தாம் என் கலங்கரை விளக்கம். இந்த உலகை நான் என் தேவியின் விழிகளில் மட்டுமே தரிசிக்கிறேன்.'திகைத்து விட்டார்கள் ராமானுஜரின் சீடர்கள். 'இவன் ஒரு முழுப் பைத்தியம்தான்; சந்தேகமில்லை!' என்று தமக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

(நாளை தொடரும்...)writerpara@gmail.com

- பா.ராகவன் 

கமலச்செங்கண்
Advertisement


Ramanujar Download


ராமானுஜருக்குத் தமது சீடர்களின் மன ஓட்டம் புரிந்தது. இதற்குமேல் நீட்டித்துக் கொண்டிருந்தால், மல்லனின் மனம் சுருங்கும்படி யாராவது ஏதேனும் சொல்லிவிடும் அபாயம் இருக்கிறது. நல்லது. முடித்து வைத்து விடுவோம் என்று முடிவு செய்தார்.

'மல்லனே, பேரழகியான உன் மனைவியின்மீது வெயிலும் காற்றும் படுவதுகூட உனக்குச் சகிக்கவில்லை என்றால் அவளை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? எதற்கு இத்தனை சிரமப்பட்டு வெளியே அழைத்து வருகிறாய்?' என்று கேட்டார்.'நான் என்ன செய்யட்டும் சுவாமி? பொன்னாச்சிக்கு வசந்த உற்சவத்தைக் காணவேண்டும் என்று ஆசை. இதற்காகவேதான் திருவெள்ளறையில் இருந்து புறப்பட்டு வந்தேன். உற்சவம் முடிகிறவரை விடுமுறை கேட்டு நேற்றே மன்னர்பிரானுக்கு விண்ணப்பித்து விட்டேன். அவரும் ஒப்புக்கொண்டு விட்டதால் உடனே கிளம்பி விட்டேன்.'

'ஓ. அப்படியென்றால் உனக்கு உற்சவத்தில் பெரிய இஷ்டம் இல்லை என்று சொல். ''எனக்குத்தான் எப்போதும் உற்சவமாயிருக்கிறதே. பாருங்கள் என் தேவியின் விழிகளை! என் பிரியை எனக்காகவே ஏந்திக் கொண்டிருக்கிறாள் பாருங்கள்!'இப்படியும் ஒருத்தன் இருப்பானா? என்ன வார்ப்பு இது! ஆனால் ராமானுஜர் காட்டிக் கொள்ளவில்லை. மிகவும் அமைதியாகச் சொன்னார், 'நீ சொல்வதெல்லாம் சரிதான் அப்பனே. உன் மனைவியின் விழிகள் அழகானவைதான். கவிதை பொங்கச் செய்பவைதான். அதில் சந்தேகமில்லை.
ஆனால் இதைக் காட்டிலும் பேரழகும் எதைக்காட்டிலும் ஒளி பொருந்தியதுமான விழிகளை நீ காண நேரிட்டால் என்ன செய்வாய்?'அவன் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான். சட்டென்று கோபம் வந்துவிட்டது.'என்ன உளறுகிறீர்கள்? இவளது விழிகளைவிடச் சிறந்த விழிகள் இந்த உலகில் யாருக்குமே இருக்க முடியாது.''ஒருவேளை இருந்துவிட்டால்?''நாந்தான் முடியாது என்கிறேனே.''அட ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். அப்படியொரு விழியை நானே உனக்குக் காட்டுகிறேன் என்று வைத்துக்கொள். அப்போது என்ன செய்வாய்?'ஒரு கணம் அவன் யோசித்தான். பிறகு சொன்னான். 'இவளது விழிகளைக் காட்டிலும் பேரெழில் படைத்த விழிகளைக் காண்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை சுவாமி. அப்படிக் காண நேரிட்டால் அவ்விழிகளுக்கு அடிமையாகிப் போவேன்.''நல்லது வில்லி. என்னோடு வா, இப்போதே காட்டுகிறேன். ஆனால் அதற்குமுன் நீ நதியில் குளித்துவிட்டு வந்துவிடு.'அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடையவர் அப்படி யாருடைய விழிகளைத் தனக்குக் காட்டப் போகிறார்? யோசனையுடன் காவிரியில் இறங்கிக் குளித்தான். ஈரம் சொட்டச் சொட்ட எழுந்து வந்து நின்றான்.'நான் தயார் சுவாமி. புறப்படலாம் வாருங்கள்!'ராமானுஜர் அவனை திருவரங்கன் சன்னிதிக்கு அழைத்துச் சென்று நிறுத்தினார்.
அங்கே பச்சைமா மலைபோல் மேனி படுத்துக் கிடந்தது. பவளவாய் முறுவலித்துக் கொண்டிருந்தது. கமலச் செங்கண் திறந்திருந்தது.'அச்சுதா, அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! இவனைப் பார். கண்ணிருந்தும் குருடனாக இருக்கிற இம்மல்லன்மீது கொஞ்சம் கருணை காட்டு. கணப் பொழுதில் இல்லாமல் போய்விடக்கூடிய இவ்வுலக வாழ்வில் உன்னை நினைக்கக்கூட நேரமின்றித் தன் மனைவியின் விழிக் குளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறான். இவனது ஆண்மை, இவனது கம்பீரம், இவனது ஆளுமை அனைத்தும் நசுங்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதைக் கூட உணராதிருப்பவனை என்னால் என்ன செய்ய இயலும்? அதனால்தான் உன்னிடம் அழைத்து வந்தேன். அர்ஜுனனுக்குக் காட்டிய விசுவரூபத்தில் கொசுவளவு இவனுக்கு நீ காட்ட முடிந்தால் போதும். உன் விழி திறக்கிறபோதுதான் உலகம் இயங்குகிறது என்பதை இவனுக்கு உணர்த்தியே தீரவேண்டும். பேரொளியே! பெரும் பொருளே! உன் கருணை பொங்கும் விழிகளின் பேரெழிலுக்கு முன் காண்பதெல்லாம் வெறும் துாசென இவனுக்கு எப்படியாவது புரிய வை.'கண்மூடிக் கைகூப்பி மானசீகமாக வேண்டினார் ராமானுஜர்.அந்த அற்புதம் அப்போது நிகழ்ந்தது.சன்னிதியில் ராமானுஜரின் எதிரே நின்று கொண்டிருந்த வில்லி மெல்லத் தலை திருப்பி அரங்கனைக் கண்டான். பாதங்கள். முழங்கால். நாபிக் கமலம். திருமாமகள் உறையும் மார்பு. முகவாய். விரிந்த பெரும் இதழ்கள். உலகு சுவாசிக்கும் நாசி. அவனது பார்வை இன்னும் சற்று நகர்ந்து அரங்கனின் விழிகளைத் தொட்டபோது அது விரிந்தது.கோடி சூரியன்களின் கொள்ளைப் பிரகாசம்.
கொட்டும் அருவியின் குளிர்ப் பிரவாகம். சுழலும் புவியும், விரியும் வானும், நிலைத்த அண்ட பேரண்டப் பெருவெளியில் நீந்தும் நட்சத்திரங்களும் அங்கே அடங்கியிருக்கக் கண்டான். அது கருணையின் ஜீவ ஊற்று. கனிவின் பெரும்பாற்கடல். கற்பனைக்கெட்டாத பேரெழில் புதையல். பல்லாயிரம் கோடி ஆண்டுகள் தவம் புரிந்தாலும் கிட்டாத மகத்தான அனுபவத்தில் திக்குமுக்காடிப் போனான் வில்லி.கண்டேன், கண்டேன், கண்டறியாதது கண்டேன் என்று அவன் நெஞ்சு விம்மி விம்மி வெடித்துச் சிதறியது. கண்ட காட்சியில் தன்னை மறந்து கதறிக் கொண்டிருந்தான்.'ஐயோ இதுவல்லவா அழகு! இதுவல்லவா ஒப்பற்ற பெருவிழிகள்! இதுவல்லவா தரிசனம்! இதுவல்லவா பிறவிப் பயன்!'அணை உடைத்த வெள்ளமெனப் பெருகிய அவன் விழி நீரை ராமானுஜர் பார்த்தார். புன்னகை செய்தார். அவனைக் கலைத்து விடாமல் அமைதியாக சன்னிதியை விட்டு வெளியேறிப் போனார்.வில்லி அங்கிருந்து நகரவேயில்லை. காலம் அவனுக்குள் உறைந்து போனது. இரவா பகலா இது? தெரியவில்லை.
இன்று வந்தேனா? நேற்று வந்தேனா? புரியவில்லை. எதுவுமே தெரியவில்லை. அங்கே அவன் இருந்தான். அரங்கன் இருந்தான். இடையில் வேறு எதுவும் இருக்கவில்லை.வெகுநேரம் கழித்துத் தன் நினைவு மீண்டதும் அவன் சன்னிதியை விட்டு வெளியே வந்தான். இருட்டியிருந்தது. அங்கிருந்த ஒரு காவலரிடம், 'என்ன நாழி?' என்று கேட்டான். தன்னை அழைத்து வந்த உடையவர் எப்போதோ திரும்பிச் சென்றுவிட்டதையும் தெரிந்துகொண்டு நேரே சேரன் மடத்துக்கு விரைந்தான்.'எம்பெருமானாரே! நான் வில்லி வந்திருக்கிறேன். உங்கள் அடிமை வந்திருக்கிறேன் சுவாமி, கதவைத் திறவுங்கள்!' என்று குரல் கொடுத்தான்.மடத்தின் கதவும் உடையவர் மனத்தின் கதவும் ஒருங்கே திறந்தன. அன்றே, அந்தக் கணமே அவன் ராமானுஜரின் சீடனாகிப் போனான்.
'சுவாமி, இந்தப் பிறவிக்கு இது போதும். எதைக் கண்டுவிட்டால் வேறு எதையும் காண அவசியமில்லையோ, அதை நான் கண்டுகொண்டேன். இனி இந்த ஜென்மம் அரங்கன் சேவையில் மட்டுமே ஈடுபடும்.' என்று சொல்லி அவர் தாள் பணிந்தான்.ராமானுஜர் புன்னகை செய்தார்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் 

பற்றிய கரங்கள்
Advertisement



Ramanujar Download


கனவே போலத்தான் எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் நடந்துவிட்டது. சேரன் மடத்தில் ராமானுஜரோடு இருந்த சீடர்களுக்கு மட்டுமல்ல. திருவரங்கத்து மக்களுக்கே அது நம்ப முடியாத வியப்புத்தான். மல்லன் வில்லியா, உறங்காவில்லிதாசனாகிப் போனான்? அரங்கன் சேவையில் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டானாமே? பசி துாக்கம் பாராமல் எப்பொழுதும் எம்பெருமான் சிந்தனையிலேயே இருக்கிறானாமே? உடையவருக்குப் பார்த்துப் பார்த்து சேவை செய்கிறானாமே? அவன் மனைவியும் வைணவத்தை ஏற்று திருப்பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டாளாமே?
அத்தனை வாய்களும் அவனைப் பற்றியே பேசின. நெஞ்சு நிமிர்த்தி, நிலம் அதிர நடந்த வில்லி, மண்ணுக்கு வலித்து விடாதபடிக்கு பூவடி எடுத்து வைத்து உடையவரின் பின்னால் சென்ற காட்சியைக் கண்ட கண்கள் இமைக்க மறந்து கிடந்தன. அவனது தோரணை மாறிப் போனது. பேச்சு மாறிப் போனது. வாழ்வெனும் மாபெரும் மல்யுத்தக் களத்தில் வெல்ல அரங்கனின் பாதங்களும் ஆசாரியரின் வழிகாட்டுதலுமே அவசியம் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. எனவே தனது பழைய வாழ்க்கையை பாம்பெனத் தோலுரித்துப் போட்டான். பணிவும் சேவையும் அவனது அடையாளங்களாகிப் போயின.
'தெரியுமா உனக்கு? அவன் மாறிப் போனது பெரிதல்ல. அவனது மருமகன்கள் இரண்டு பேரையும் உடையவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறானாம்.' 'யார், வண்ட வில்லி, செண்ட வில்லி என்பார்களே... உறையூர் மன்னன் அகளங்கனின் படையில் முன் வரிசையில் நிற்பார்களே, அவர்களா?' 'அவர்களேதான். பயல்கள் இருவரும் திருமடமே கதியென்று கிடக்கிறார்களாம். உடையவர் அவர்களுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து, வண்டலங்கார தாசர், செண்டலங்கார தாசர் என்று வாஞ்சையோடு அழைக்கிறாராம்.''அடக்கடவுளே, அப்படியென்றால் இந்த மூன்று வில்லாதி வில்லர்களும் அகளங்கன் படையில் இப்போது இல்லையாமா?''வில்லிதாசர் நிச்சயம் இல்லை. அது தெரியும். ஆனால் அவரது மருமகன்கள் இருவரும் இன்னும் அகளங்கனிடம்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலும் திருவரங்கத்தில்தான் இருக்கிறார்கள்.'என்னென்னவோ பேசினார்கள். பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒரு மூர்க்கனும் முரடனும் பெண்டாட்டிதாசனுமாக இருந்த ஒருவன் சட்டென்று ஒருநாள் தானும் மாறி, தன்னைச் சார்ந்தவர்களையும் மாற்றிய விந்தை அவர்களுக்குப் புரியவில்லை.
அதைவிட வியப்பு, வில்லியின்மீது ராமானுஜர் கொண்டிருந்த பேரன்பு.தினமும் காவிரிக்குக் குளிக்கப் போகிறபோது உடையவர், முதலியாண்டானின் கையைப் பிடித்துக்கொண்டுதான் நடந்து போவார். போகிற வழியெங்கும் பிரபந்த விளக்கங்கள். தத்துவ விவாதங்கள். சீடர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடவே மாட்டார்கள். மடத்தில் இருந்து புறப்படுவது முதல், குளித்துக் கரை ஏறுவது வரை மூச்சுவிடாமல் அவர்கள் ராமானுஜரை ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.குளித்து, கரை ஏறிய மறுகணம் ராமானுஜர் வில்லியின் கையைப் பிடித்துக்கொண்டு விடுவார். நடந்தவாக்கில் அவனுக்குப் பிரபந்தம் சொல்லித் தருவார். பாடலும் பொருளும். பொருளும் அதற்கு அப்பால் உள்ள உண்மைகளும். உண்மையைப் போன்றே பேரெழில் கொண்ட கவி மனத்தின் விரிவும் ஆழங்களும்.'வில்லி, பாசுரங்களை பக்தியுடன் மனப்பாடம் செய்வது நல்லதுதான். அதேசமயம் அவற்றின் கவித்துவ அழகை ரசிக்கத் தவறக்கூடாது. ஆழ்வார்கள் மாபெரும் கவிஞர்கள். நிகரே சொல்ல முடியாத ரசனையுள்ளம் கொண்டவர்கள். நீ அவர்களை அப்படியே மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் மனத்துக்குள் அவர்களாகவே மாறி அனுபவிக்கப் பார். இன்னும் புதிய தரிசனங்கள் உனக்கு வாய்க்கும்.'மடத்துக்கு வந்து சேருகிறவரை அவர் வில்லியின் கையை விடமாட்டார். திருவரங்கத்து மக்களுக்கு இது தினசரிக் காட்சியாகிப் போனது. சனாதனவாதிகளுக்கு இதுவே விமரிசனப் பொருளுமானது.'உடையவரின் நடவடிக்கை ரொம்பப் பிரமாதம். குளிக்கப் போகிறபோது சுத்தப் பிராமணரான முதலியாண்டான் கையைப் பிடித்துக்கொண்டு போவாராம். நீராடிய பிறகு வில்லியின் கையா? அமோகம். எப்பேர்ப்பட்ட புரட்சி இது! திருமடத்தில் ஆசாரம் செழித்து வளர்கிறது.'வம்பு விரும்பாத வாய் ஏது? விஷயம் ராமானுஜரின் காதுகளை எட்டியது. சொன்னது சீடர்கள்தாம்.'சுவாமி, வில்லிதாசர் அப்படி என்ன ஒசத்தி? அதுவும் முதலியாண்டானைவிட?'ராமானுஜர் அப்போது பதில் சொல்லவில்லை.
அமைதியாக நகர்ந்துவிட்டார். அன்றிரவு அவர் வில்லியை அழைத்தார்.'வில்லி, ஒரு காரியம் செய்கிறாயா? நமது சீடர்கள் அத்தனை பேரும் அயர்ந்து உறங்குகிறார்கள். வெளியே முற்றத்தில் அவர்களது மாற்று வேட்டிகள் காய்ந்து கொண்டிருக்கின்றன. போய் அத்தனை துணிகளிலும் அரை முழம் கிழித்துக் கொண்டு வாயேன்.'ஏன் என்று அவன் கேட்கவில்லை. இதோ என்று அப்போதே முற்றத்தை நோக்கிப் போனான். உடையவர் சொன்ன மாதிரி அங்கே காற்றில் ஆடிக்கொண்டிருந்த அத்தனை வேட்டிகளிலும் அரை முழம் கிழித்துக் கொண்டு வந்து நீட்டினான்.மறுநாள் விடிந்தபோது மடத்தில் ஒரே கலாட்டாவாகிப் போனது. முற்றத்தில் காய்ந்து கொண்டிருந்த வேட்டிகளை யார் கிழித்தது?'சுவாமி, நான் உண்மையைச் சொல்லிவிடவா? கிழித்தது நானே அல்லவா?'ராமானுஜர் வில்லியை அமைதியாக இருக்கச் சொன்னார். சீடர்களை அழைத்து ஏதோ சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். பிறகொரு நாள் அவர்களில் இரண்டு பேரைக் கூப்பிட்டு, 'மடத்தில் நிதி வசதி அத்தனை சரியாக இல்லை. ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டுமே?' என்றார்.
'சுவாமி, சிவாலயங்களுக்கு மன்னர்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள். சைவ மடங்கள் செழிக்கின்றன. வைணவத் தலங்களுக்கோ, வைணவ மடங்களுக்கோ ஆதரிப்பார் அதிகமில்லை. நாம் ஜனங்களிடம்தான் கையேந்த வேண்டும்.''ஜனங்களிடமா! அது எனக்குச் சரியாகப் படவில்லை. ஒன்று செய்யுங்கள். நமது வில்லிதாசரின் மனைவி பொன்னாச்சி ஏகப்பட்ட நகை வைத்திருக்கிறாள். அவற்றை விற்றாலே நல்ல தொகை சேரும். அவர்களும் நமது மடத்தைச் சேர்ந்தவர்கள்தானே?''ஆனால் எப்படிக் கேட்பது சுவாமி? அது சரியாக இருக்காதே.''அரங்கனின் கருணை வில்லியின்மீது கேட்டா விழுந்தது? எப்போது அவன் நம்மைச் சேர்ந்தவனாகி விட்டானோ, அவனது உடைமைகளும் நமது திருமடத்தைச் சேர்ந்தவையே. நீங்கள் அவள் துாங்குகிறபோது வீட்டுக்குள் நுழைந்து நகைகளைக் கழட்டி வந்துவிடுங்கள்.'அவர்கள் பயந்து விட்டார்கள். 'ஐயோ வில்லிக்குத் தெரிந்தால்கொன்று விடுவானே? இன்றைக்கு அவன் அரங்கன் சேவையில் இருந்தாலும் அடிப்படையில் அவன் முரடனல்லவா? மல்யுத்த வீரனல்லவா?''அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். நாளைக்கு இரவு நீங்கள் வில்லி வீட்டுக்குப் போகும்போது அவனை நான் இங்கே இருக்க வைத்து விடுகிறேன். இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியவேண்டாம்.'
'சரி சுவாமி. அப்படியே.' என்றார்கள்.மறுநாள் இரவு அது நடந்தது.

(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

மனத்தைப் பார்!

Advertisement


Ramanujar Download


'உட்கார் வில்லி. இன்றைக்கு நாம் சிறிய திருமடலைச் சற்று சிந்திக்கலாம்' என்றார் ராமானுஜர்.அது, அவன் மடத்துப் பணிகளை முடித்துவிட்டு வீடு கிளம்பும் நேரம். ஆனால் உடையவர் சொல்லிவிட்ட பிறகு மறு பேச்சு ஏது? அவன் உட்கார்ந்து விட்டான்.
ராமானுஜர் அவனுக்குத் திருமங்கையாழ்வார் வாழ்க்கையில் இருந்து ஆரம்பித்தார். மன்னனாக இருந்து கள்வனாக மாறி, பெருமானால் களவாடப்பட்டவரின் கதை. பக்திதான் எத்தனை அற்புதங்களை நிகழ்த்தி விடுகிறது!மறுபுறம் ராமானுஜர் அனுப்பிய இரண்டு பேரும் வில்லியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருந்தார்கள். வீடென்றா சொல்ல முடியும்? சிறு குடிசை. அவனது சொத்தாக அங்கு இருந்தது பொன்னாச்சியும் அவளது நகைகளும்தான்.அந்த நகைகளைத்தான் எடுத்து வரச் சொல்லியிருந்தார் ராமானுஜர்.சீடர்கள் வில்லியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வேலைகளை முடித்துவிட்டுப் பொன்னாச்சி படுத்திருந்தாள். ஆனால் உறங்கியிருக்கவில்லை. வெளியே யாரோ வந்திருக்கும் சத்தம் கேட்டு, எழுந்திருக்கலாமா என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் பேச்சுக்குரல் அவளைத் தடுத்தது.'சத்தம் போடாதே. பொன்னாச்சி துாங்கிவிட்டாளா என்று உறுதிப்படுத்திக் கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும்.'அட, இது கேட்ட குரலாக இருக்கிறதே என்று அவளுக்குச் சட்டென்று வியப்பாகி விட்டது. கண நேர யோசனையில் யாருடைய குரல் என்றும் தெரிந்துவிட்டது. அவர் உடையவரின் சீடர் அல்லவா! நான் உறங்கும்வரை வெளியே நிற்பதென்றால் அவருக்குக் கால்கள் துவள ஆரம்பித்து விடுமே? அதற்காகவேனும் சீக்கிரம் உறங்கிவிடலாம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயற்சி செய்தாள். ஆனால் அது வருவேனா என்றது.சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் கதவை மெல்லத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள். உறங்கும் பெண்ணைப் பார்த்தார்கள். மெல்ல நெருங்கி அவள் அணிந்திருந்த நகைகளைக் கழட்டத் தொடங்கினார்கள்.'விழித்துக் கொண்டு விட்டால்?''உஷ். சத்தம் போடாதே. திருமடத்தின் செலவுகளுக்காகத்தான் நாம் இதனைச் செய்கிறோம். நமக்காக அல்ல.'அவர்கள் காற்றுக்கு மட்டும் கேட்கிற குரலில் தமக்குள் பேசிக்கொண்டு காரியத்தில் முனைப்பாக இருந்தார்கள். ஒரு கால் சலங்கை. ஒரு கை வளையல்கள். ஒரு காதின் லோலாக்கு. ஒரு பக்க மூக்குத்தி. நெற்றிச் சுட்டி. கழட்ட முடிந்தவரை கழுத்தணிகள்.'ஒட்டியாணத்தைக் கழட்ட வரவில்லை' என்றான் ஒருவன்.'அடடா. அதுதான் கனமான ஆபரணம். கிடைத்தால் நல்ல விலை போகுமே?'என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது உறக்கத்தில் புரண்டு படுக்கிறவளைப் போலப் பொன்னாச்சி எதிர்ப்புறம் திரும்பிப் படுத்தாள்.ஒரு கணம்தான். வெலவெலத்துவிட்டது அவர்களுக்கு. கிடைத்தவரை போதும் என்று ஓடியே போனார்கள்.மடத்துக்கு அவர்கள் திரும்பிவிட்டதை உறுதி செய்துகொண்டு, 'நீ கிளம்பு வில்லி. மிகவும் தாமதமாகிவிட்டது இன்று' என்று அவனை அனுப்பி வைத்தார் ராமானுஜர்.அவன் தலை மறைந்ததும் சீடர்கள் நெருங்கினார்கள். 'சுவாமி, நீங்கள் சொன்னவாறு...''இருக்கட்டும். வில்லி வீட்டுக்குப் போகிறான். அவன் பின்னாலேயே நீங்களும் சென்று அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு வாருங்கள்.'மீண்டும் வில்லியின் வீடு.'என்ன இது வினோதக் கோலம்? உன் ஒரு பக்க நகைகள் மட்டும்தான் இருக்கின்றன. மறு பக்க ஆபரணங்கள் என்னவாயின?' வில்லி உள்ளே நுழைந்ததும் பொன்னாச்சியிடம் கேட்டான்.'அதை ஏன் கேட்கிறீர்கள்? மடத்துச் செலவுக்குப் பணப்பற்றாக்குறை போலிருக்கிறது. சீடர்கள் இருவர் நகைகளைத் திருடிச் செல்ல வந்தார்கள். எனக்கு எதற்கு நகைகள்? நல்ல காரியத்துக்குச் செலவானால் சந்தோஷம்தானே? அதான், அவர்கள் கழட்டிச் செல்கிற வரைக்கும் துாங்குவது போலவே பாசாங்கு செய்து கொண்டிருந்தேன்.''நல்ல காரியம் செய்தாய். ஆனால் செய்ய நினைத்தது முழுமையடையவில்லை போலிருக்கிறதே.''நான் என்ன செய்வேன் சுவாமி? அவர்கள் ஒரு பக்க நகைகளைக் கழட்டி முடித்ததும், அவர்களுக்கு வசதியாக இருக்கட்டுமே என்று மறுபுறம் திரும்பிப் படுத்தேன். அவர்களோ, நான் விழித்துக்கொண்டு விட்டதாக எண்ணி அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.'வில்லி ஒரு கணம் அமைதியாக யோசித்தான்.'தவறு செய்துவிட்டாய் தேவி. நகைகளை எடுத்துச்செல்ல வந்தவர்களுக்கு வழிமுறை தெரியாதா? அவர்களுக்கு உதவுவதாக நீ ஏன் நினைக்க வேண்டும்? அப்படியே அசையாமல் கிடந்திருக்கலாம்.'வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த சீடர்களுக்குப் பேச்செழவில்லை. யாரோ எதிலோ ஓங்கி அடித்தாற் போலிருந்தது. அநேகமாக அது அகந்தையின் மீது விழுந்த அடியாக இருக்கவேண்டும்.மடத்துக்குத் திரும்பி நடந்ததை ராமானுஜரிடம் அவர்கள் விளக்கியபோது உடையவர் சிரித்தார்.'இப்போது சொல்லுங்கள். வில்லிதாசனைக் காட்டிலும் பரம பாகவதன் ஒருவன் இருக்க முடியுமா? அவனது மனைவி எப்பேர்ப்பட்ட மனம் கொண்டவள் என்று பார்த்தீர்கள் அல்லவா?''நீங்கள் சொல்லுவது சரிதான் சுவாமி.''அன்று உங்கள் வேட்டியில் அரை முழம் கிழிந்திருந்ததைக் கண்டு எத்தனை கலவரம் செய்தீர்கள்? கேவலம் அரை முழம் துணியைத் திருடிச் சென்று ஒருவன் என்ன சாதிக்க முடியும்?'அவர்கள் தலைகுனிந்தார்கள்.'ஆனால் பொன்னாச்சி அணிந்திருந்த விலைமதிப்பற்ற நகைகளை நீங்கள் திருடி வந்திருக்கிறீர்கள். அவளோ, ஒரு பக்க நகைகள் போதாமல் போய்விடுமோ என்று மறு பக்க நகைகளைக் கழட்டிக்கொள்ள வசதியாகப் புரண்டு படுத்தாள் என்று நீங்களே சொன்னீர்கள். வைணவ மனம் என்றால் இதுதான். வைணவ மதமென்பதும் இதுதான்.''ஆம் சுவாமி. நீங்கள் சொல்லுவது சரிதான்.''வில்லி அந்தண குலத்தில் பிறந்தவனில்லைதான். ஆசார அனுஷ்டானங்கள் பழகாதவன்தான். ஆனால் நீங்கள் திருடிச் செல்ல வசதி செய்து கொடுத்த தன் மனைவியைக்கூடக் கண்டித்திருக்கிறான். அதற்கு அவன் சொன்ன காரணத்தை யோசித்துப் பாருங்கள்! குலமா அவனுக்கு அந்தக் குணத்தைக் கொடுத்தது? பிறப்பால் யாரும் வைணவராவதில்லை. அது வாழும் விதத்தில் உள்ளது. அவன் மகாத்மா. நீராடிக் கரையேறும்போது அவன் கரத்தைப் பிடித்துக் கொள்ளாமல் வேறு யார் கரத்தை நான் பற்றுவேன்?'வில்லிக்கு அரங்கன் கண்ணைத் திறந்து காட்டி எதைப் புரியவைத்தானோ, அதையேதான் உடையவர் தமது சீடர்களுக்கும் புரியவைத்தார். ஆனால், கண்ணைத் திறந்து காட்டி அல்ல. வில்லியின் மனத்தைத் திறந்து காட்டி.
(நாளை தொடரும்...)writerpara@gmail.com- பா.ராகவன்


ஏகலைவன்
Advertisement


Ramanujar Download


சேரன் மடத்துக்குத் திருமாலையாண்டான் வந்திருந்தார். ஆளவந்தாரின் ஐம்பெரும் சீடர்களுள் ஒருவர். திருக்கோட்டியூர் நம்பி சொல்லி, ராமானுஜருக்குத் திருவாய்மொழி வகுப்பெடுக்க ஒப்புக்கொண்ட பெரியவர்.

ராமானுஜருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. திருக்கோட்டியூர் நம்பியின் ஆசியும் அணுக்கமும் கிடைத்ததே ஒரு வரமென்றால் அவர்மூலம் ஆளவந்தாரின் மற்றொரு சீடரிடம் பாடம் கேட்கக் கிடைத்த வாய்ப்பை அவர் கிடைத்தற்கரிய பெரும் வாய்ப்பாகவே கருதினார்.'உம்மைப் பற்றி நம்பி ரொம்பப் பிரமாதமாக நிறைய சொன்னார். நாம் பாடத்தை ஆரம்பிக்கலாமா?'' காத்திருக்கிறேன் சுவாமி!'திருவாய்மொழிப் பாடம் தொடங்கியது.ராமானுஜர் தம்மை மிகத் தெளிவாக இருவேறு நபர்களாக்கிக் கொண்டிருந்தார். தாம் குருவாக இருந்து தமது சீடர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறபோது அவர் பேசிப் பழகும் விதம் வேறு. அதில் அன்பும் கம்பீரமும் கலந்திருக்கும். இதுவே, அவர் மாணாக்கராகி, ஆசிரியரின் தாள் பணிந்து பயிலும் நேரங்களில் அவரது வடிவம் வேறாகியிருக்கும். பணிவுக்கும் பக்திக்கும் மட்டுமே அங்கு இடம் உண்டு. மனத்தின் வாயிலை விரியத் திறந்து வைத்து ஆசிரியரின் ஞானத்தின் பூரணத்தை அப்படியே ஏந்தி எடுக்கப் பார்ப்பார்.அது உபநிஷத நிலை. உபநிஷத் என்றால் பிரம்ம வித்யை. முழுமையின் மூலப்பொருளை அடைவது. உப என்ற சொல்லுக்கு குருவின் அருகில் செல்லுதல் என்று பொருள். நி என்றால் எந்தச் சந்தேகமும் இன்றி அறிவை அடைதல். ஷத் என்ற மூன்றாவது சொல்லுக்கு நாசம் செய்தல் என்று பொருள்.இதென்ன பயங்கரம்? குருவின் அருகே சென்று சந்தேகமின்றி அறிவை அடைந்து எதை நாசம் செய்வது?அது துயரங்களின் நாசம்.ஒரு குருவிடம் எவ்வளவோ கற்க முடியும். ஆனால் சற்றும் சந்தேகமின்றி எதைக் கற்றால் துயரங்களை நாசமடையச் செய்ய முடியுமோ அதைக் கற்பதைத்தான் உபநிஷத் என்பார்கள். பிரம்ம வித்யை என்பது அதுதான்.உபநிஷத் என்பது ஒரு பிரதியல்ல. அது ஒரு நிலை. பெரிய நம்பியிடம் பாடம் கேட்டபோது அப்படித்தான். திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்டபோதும் அப்படித்தான். சொல்லித்தருபவர் கற்பகத் தரு. ஏந்திக்கொள்பவரின் தரம் சரியாக இருந்தால் போதுமானது. ராமானுஜர் நிகரற்ற பாண்டம். கொட்டக் கொட்டக் கொள்ளளவு விரிந்து கொண்டே செல்லும் பேரற்புதம்.திருமாலையாண்டானுக்கு அது பெரும் மகிழ்ச்சியளித்தது. ஒரு சரியான மாணவரைத்தான் திருக்கோட்டியூர் நம்பி தமக்கு அளித்திருக்கிறார் என்கிற திருப்தி. அவரும் உற்சாகமாகத் திருவாய்மொழிப் பாசுரங்களைச் சொல்லி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு வெகுநாள் நீடிக்கவில்லை. சட்டென்று ஒருநாள் பாடம் நின்றது.அன்றைக்குத் திருமாலையாண்டான், திருவாய்மொழியின் இரண்டாவது பத்தில், 'அறியாக் காலத்துள்ளே' என்று தொடங்கும் பாசுரத்தை ஆரம்பித்தார்.''அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து அறியாமா மாயத்து அடியேனை வைத்தாயால்அறியாமைக் குறள் ஆய், நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே''என்பது பாசுரம்.'பொருள் சொல்கிறேன் கேளும். அறியாப் பருவத்தில் என்னை அன்பாக உன் பக்கத்தில் வைத்திருந்தாய். பிறகு புத்தி தெளியும்போது சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்து விட்டாயே என்று வருத்தப்படுகிறார் ஆழ்வார்.'ராமானுஜர் திடுக்கிட்டுப் பார்த்தார். ஒரு கணம் அவர் மனத்துக்குள் யாதவப் பிரகாசர் வந்து போனார்.'சொன்னது விளங்கிற்றா உடையவரே?''மன்னிக்க வேண்டும் சுவாமி. பொருள் சற்றுப் பிழையாக உள்ளது போலப் படுகிறது.''பிழையா? இதிலா?''ஆம் சுவாமி. இந்தப் பாசுரத்துக்கு முன்னாலும் பின்னாலும் வருகிற பாசுரங்கள் அனைத்தும் எம்பெருமானின் பெருங்கருணையைப் போற்றிப் புகழ்வது போல வருகின்றன. சட்டென்று இந்த ஒரு பாசுரத்தில் எப்படி ஆழ்வார் குறை சொல்லுவார்?''புரியவில்லையே?''சம்சார சாகரத்தில் அவன் தள்ளினான் என்று எடுத்துக்கொள்ள முடியாது சுவாமி. நான் அறியாமையில் பிழை புரிந்து விட்டேன்; அப்போதும் நீ வந்து என்னை ஆட்கொண்டாய் என்பதாகத்தான் இருக்க வேண்டும்.'திருமாலையாண்டான் எழுந்து விட்டார்.'ஓஹோ, உமக்குத் தோன்றும் நுாதன விளக்கமெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது, புரிகிறதா? என் குரு ஆளவந்தார் எனக்கு என்ன விளக்கம் சொன்னாரோ அது மட்டும்தான் எனக்குச் சரி. வருகிறேன்.' என்று சொல்லிவிட்டுப் போயேவிட்டார்.ராமானுஜருக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. ஆனால் கோபித்துக் கொண்டு போய்விட்டவரை என்ன செய்ய முடியும்?விஷயம் திருக்கோட்டியூர் நம்பிக்கு எட்டியது. யோசித்தார். சட்டென்று புறப்பட்டு திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்தார்.'என்ன பிரச்னை சுவாமி? ராமானுஜருக்கு நீங்கள் திருவாய்மொழிப் பாடம் சொல்லித் தருவதில்லையா?''ஆம். அவர் பாசுரங்களுக்கு வழக்கில் இல்லாத அர்த்தங்களைச் சொல்லுகிறார். எனக்கு அது உவப்பாக இல்லை. நமது ஆசாரியர் ஆளவந்தாருக்கு மேல் ஒருத்தர் வியாக்கியானம் தர முடியுமோ?''அப்படியா? நீங்கள் என்ன சொன்னீர்கள், அதற்கு ராமானுஜர் என்ன புதிய வியாக்கியானம் சொன்னார்?'திருமாலையாண்டான் சொன்னார். அமைதியாகக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி புன்னகை செய்தார்.'ஆண்டான் சுவாமிகளே! ராமானுஜர் சொன்ன இந்த விளக்கத்தை நமது ஆசாரியர் ஆளவந்தார் சொல்ல நானே கேட்டிருக்கிறேன்!'திடுக்கிட்டுப் போனார் திருமாலையாண்டான். அப்படியா, அப்படியா என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.'எம்பெருமானார் சாதாரணத் துறவியல்ல சுவாமி. ஜகத்குருவான கிருஷ்ண பரமாத்மா, சாந்திபீனி முனிவரிடம் பாடம் கேட்டது போலத்தான் ராமானுஜர் உம்மிடம் பாடம் கேட்பது. புரிகிறதா?'ஒரு கணம்தான். கண் மூடித் திறந்த திருமாலையாண்டானுக்கு அது புரிந்துவிட்டது.'நம்மிடம் அவர் பயிலவேண்டும் என்பது நியமிக்கப்பட்டது. அதனால் இது நிகழ்கிறது. வாரும். மீண்டும் வகுப்பைத் தொடங்கியாக வேண்டும்.'திருக்கோட்டியூர் நம்பியே அவரை ராமானுஜரிடம் அழைத்துச் சென்றார்.மீண்டும் பாடங்கள் ஆரம்பமாயின. மீண்டும் அர்த்த பேதங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. ஆனால் இம்முறை ஆண்டான் கோபித்துக் கொள்ளவில்லை.'ராமானுஜரே, உம்மை ஒன்று கேட்கிறேன். பாசுரங்களுக்கு நீர் சொல்லும் சில விளக்கங்கள், எனக்குப் புதிதாக உள்ளன. உமக்கு இவை எங்கிருந்து கிடைத்தன?''சுவாமி, ஆளவந்தார் சுவாமிகள் இப்பாசுரங்களுக்கு எவ்வாறு வியாக்கியானம் செய்திருப்பார் என்று எண்ணிப் பார்ப்பேன். அப்போது என் மனத்தில் உதிப்பதைத்தான் உடனே சொல்லி விடுகிறேன்.'வியந்து போனார் திருமாலையாண்டான்.'உண்மையாகவா? ஆனால், நீங்கள் ஆளவந்தாருடன் ஒருமுறை கூடப் பேசியது கிடையாது.''ஆம் சுவாமி. ஆனால் என் மானசீகத்தில் நான் அவருக்கு ஏகலைவன்.'
(நாளை தொடரும்...)writerpara@gmail.com
- பா.ராகவன் -

அந்த ஆறு சொற்கள்
Advertisement


Ramanujar Download


திருமாலையாண்டான் நெடுநேரம் வைத்த கண் வாங்காமல் ராமானுஜரையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பேசத் தோன்றவில்லை. உலகில் உதிக்கும் ஒவ்வொரு உயிரும் இன்னொன்றின் மீது தன்னையறியாமல் உறவும் தொடர்பும் கொண்டு விடுகின்றன. அது கண்ணுக்குத் தெரியாத நுாலிழையில் கட்டப்படுகிற பந்தம். பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்தார் வரை புத்தியில் நிலைக்கிறது உறவு. பிறவற்றை எண்ணிப் பார்ப்பதில்லை பெரும்பாலும். உலகை வீடாகவும் பரம புருஷனைக் குடும்பத் தலைவனாகவும் எண்ண முடிந்துவிட்டால் புழு பூச்சிகளில் தொடங்கி சகலமானவற்றுடனும் நமக்குள்ள உறவு புரிந்து விடுகிறது. அது வசுதேவ குடும்பம். வையமெங்கும் உறவுகள்.

ஏகலைவன் கூட எட்டி நின்று வித்தை கற்றவன். ஆனால் ஆளவந்தார் பரமபதம் அடைந்த தருணத்தில்தானே ராமானுஜர் திருவரங்கத்துக்கே வந்தார்? ஆனால் சட்டென்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டார். 'நான் அவருக்கு ஏகலைவன்.'என்ன கற்றிருப்பார்? எப்படிக் கற்றிருப்பார்? வேதப் பிரவாக நுட்பங்களை மனம் கடத்துமா? திருவாய்மொழியை, சொல்லிக் கொடுத்தாலே அதில் பூரண ஞானம் எய்துவது சிரமம். இவர் அள்ளிக் கொண்டிருக்கி
றாரே அவரிடம்? எப்படி நிகழ்ந்திருக்கும்?பிரமிப்பில் வாயடைத்து நின்றார் திருமாலையாண்டான்.'சுவாமி, அடியேன் காஞ்சியில் இருந்தபோது திருக்கச்சி நம்பிகளை தினசரி சந்திப்பேன். துயரமோ, மகிழ்ச்சியோ எனக்குள் நிகழ்கிற அனைத்தையும் அவரது திருவடிகளில்தான் அவ்வப்போது சேர்த்து வைப்பேன். துறவு கொள்வது என்ற வைராக்கியம் பிறந்தபோது, மறுகணமே அவரைத் தேடித்தான் ஓடினேன். எனக்குச் சில வினாக்கள் அப்போது இருந்தன. அதைக்காட்டிலும் பாரமாக வீட்டில் என் பார்யாள் இருந்தாள்…'ராமானுஜர் தன்னை மறந்து நடந்த சம்பவத்தை விவரித்துக் கொண்டிருந்தார். திருமாலையாண்டான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.'அவள் ஆசார்ய அபசாரம் செய்துவிட்டாள் சுவாமி. என்னால் தாங்க முடியவில்லை அதை. விட்டுவிடுவோம் என்ற தீர்மானம் வந்தபோது என் மனத்தில் இருந்த ஆறு வினாக்களுக்கு விடை வேண்டியிருந்தது. திருக்கச்சி நம்பிகள்தாம் அவற்றைப் பேரருளாளனிடம் எடுத்துச் சொல்லி என் குழப்பத்தை நீக்கும் பதில்களைப் பெற்றுத் தந்தார்.'

'அப்படியா? இது எனக்குத் தெரியாதே. பெரிய நம்பிகூட சொல்லவில்லை.''நான் தெரிவித்ததில்லை சுவாமி. இத்தனைக்கும் என் மனத்தில் இருந்த வினாக்களை நான் திருக்கச்சி நம்பியிடம் சொல்லவில்லை. எனக்கு இருக்கும் சந்தேகங்களுக்குப் பேரருளாளனிடம் பதில் பெற்றுத் தாருங்கள் என்றுதான் சொன்னேன்.''பிரமாதம்! கேட்காத கேள்விக்குக் கிடைத்த பதில்கள். அப்படித்தானே?''ஆனால் நினைத்த கேள்விகள். மனத்தை உறுத்திக் கொண்டிருந்த கேள்விகள்.''நல்லது. அருளாளன் என்ன சொல்லி அனுப்பினான் நம்பியிடம்?''நானே பரம்பொருள் என்பது முதல் பதில். ஜீவன் வேறு, பரமாத்மா வேறு என்பது இரண்டாவது வினாவுக்கான பதில். அவனைச் சரணடைவதே முக்திக்கு மார்க்கம் என்பது மூன்றாவது. பகவானைச் சரணடைந்தவர்கள் அந்திமக் காலத்தில் அவனை நினைக்கவேண்டிய தேவையில்லை என்பது நான்காவது. அவர்கள் சரீரத்தை விடுத்துக் கிளம்புகிறபோது மோட்சம் நிச்சயம் என்பது ஐந்தாவது…'உணர்ச்சி மேலிட்ட ராமானுஜரின் கண்களில் இருந்து கரகரவென நீர் வழிந்து கொண்டிருந்தது.'எம்பெருமான் திருவருள் உமக்கு என்றும் உண்டு உடையவரே. அந்த ஆறாவது வினாவுக்கான விடையும் கிடைத்துவிட்டதா?''ஆம் சுவாமி. யாதவப் பிரகாசரிடம் மாணாக்கனாக இருந்து வந்தேன். என்ன காரணத்தாலோ என்னால் அவரோடு ஒத்துப் போக முடியவில்லை. மாயாவாதத்தை என் மனம் ஏற்க மறுத்தது. திருக்கச்சி நம்பியைச் சரணடைந்தபோது, நான் உனக்கு குருவல்ல என்று சொல்லிவிட்டார். அப்படியானால் யார்தாம் என்னை ஆட்கொள்வார் என்று அறிந்துகொள்ள விரும்பினேன். அதற்கான பதிலைத்தான் பேரருளாளன் சொன்னான்.''என்ன பதில்? தயவுசெய்து சொல்லுங்கள்.''பெரிய நம்பியை குருவாகக் கொள்ளச் சொல்லி அப்போதுதான் எனக்கு உத்தரவானது.'
வியப்பில் வாய் பிளந்து நின்றார் திருமாலையாண்டான்.'இப்போது புரிகிறது எனக்கு. நீர் ஆளவந்தாருக்கு ஏகலைவனான சூட்சுமம் இதுதானா? சரிதான். அது பேரருளாளன் சித்தம் சுவாமி! பெரிய நம்பி சம்பந்தம் வாய்த்துவிட்டதென்றால் ஆளவந்தார் சம்பந்தமும் சேர்ந்து வாய்த்ததாகத்தான் அர்த்தம்.''இது என் பிறவிப் பயன் சுவாமி! ஆளவந்தாருக்கு நான் ஏகலைவன் என்றாலும் அவரது அத்யந்தசீடர்களான நான்கு பேரிடம் நான் பாடம் கேட்டுவிட்டேன்.
அறியா வயதில் பெரிய திருமலை நம்பிகள். அதன்பின் பெரிய நம்பி. அவர் மூலம் திருக்கோட்டியூர் நம்பி. இன்று தாங்கள். ஒரு குரு கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருந்தவனுக்குத் தகுதி மிக்க நான்கு பேர் வாய்த்தது அவனருள் அன்றி வேறில்லை.''நான்கல்ல ராமானுஜரே! ஐந்தென்று திருத்திக் கொள்ளுங்கள்.''அதென்ன?''ஆம். நீங்கள் ஐந்தாவதாகச் சென்று பயிலவேண்டியவர் ஒருத்தர் இருக்கிறார். அவர் திருவரங்கப் பெருமாள் அரையர். ஆசாரியரான ஆளவந்தாரின் திருமகன். நாங்கள் ஐந்து பேரும் ஆளவந்தாரிடம் ஒன்றாகப் பாடம் கேட்டோம். குருவானவர் எங்கள் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு சிறப்புக் கல்வியை ஆசீர்வதித்தார்.''ஆஹா! அத்தனையும் என்னை வந்து சேரும்படி அரங்கன் விதித்திருக்கிறானா? இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!''இதைத்தான் திருக்கோட்டியூர் நம்பி என்னிடம் வேறு விதமாகச் சொன்னார். இளவரசனுக்கு கிரீடம் சூடும் வயது வருகிறவரை மன்னனானவன் தமது மந்திரிகளிடம் பொறுப்பைக் கொடுத்து, இளவரசனைப் பதவியேற்கத் தயார் செய்யும்படிச் சொல்லிவிட்டுக் காலமாவது போல, உம்மைத் தயாரிக்கச் சொல்லி மௌனமாக எங்களுக்கு உத்தரவு கொடுத்துவிட்டு ஆளவந்தார் கண்மூடிவிட்டார்!'நெகிழ்ந்து போய் அவர் பாதம் பணிந்தார் ராமானுஜர்.
'எழுந்திரும் ராமானுஜரே. திருவரங்கப் பெருமாள் அரையரிடம் ஆசார்ய நிஷ்டை என்னும் பொக்கிஷம் ஒன்று உள்ளது. அத்தனை எளிதாக அவர் அதை யாருக்கும் சொல்லித் தந்துவிட மாட்டார். அவர் மனத்துக்கு உகந்தாற்போல நீங்கள் அவருக்குப் பணிவிடைகள் செய்து அன்புக்குப் பாத்திரமானால்தான் உமக்கு அது கிடைக்கும்.''இனி எனக்கு இதைக்காட்டிலும் வேறு பணியில்லை சுவாமி. இன்றே அரையர் பெருமான் இல்லத்துக்குச் செல்கிறேன்!''இன்னொரு விஷயம். திருக்கோட்டியூர் நம்பி தமது குமாரனையும் குமாரத்தியையும் தங்களிடம் மாணாக்கர்களாகச் சேர்த்து விட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.'
'ஆம் சுவாமி. ஞான சூரியனின் பிள்ளைகள் மட்டும் வேறெப்படி இருப்பார்கள்? எதைச் சொன்னாலும் உடனே பற்றிக்கொண்டு விடுகிறார்கள்.''நல்லது உடையவரே. என் மகனையும் உம்மிடமே அனுப்பி வைக்கிறேன். அவனுக்கும் நீரே ஆசாரியராக இருந்து அனுக்கிரகிக்க வேணும்.'கரம் கூப்பி ஏற்றுக்கொண்டார் ராமானுஜர்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் 

ஐந்தாவது குரு
Advertisement


Ramanujar Download


பெரிய நம்பியைப் பார்க்கப் போயிருந்தார் ராமானுஜர். திருவாய்மொழிப் பாடம் முடிவடைந்திருந்தது. அடுத்த யோசனையாக திருமாலையாண்டான் சொல்லிவிட்டுப் போனதைச் செயல்படுத்திவிட வேண்டியதுதான். அதற்குமுன் நம்பிகளிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடலாம் என்று நினைத்துத்தான் அவர் வீட்டுக்குப் போயிருந்தார்.

'வாரும் ராமானுஜரே! திருவாய்மொழி வகுப்பு நிறைவடைந்து விட்டதெனக் கேள்விப்பட்டேன்.'
'ஆம் சுவாமி. எப்பேர்ப்பட்ட ஞான சமுத்திரத்திடம் பாடம் கேட்டிருக்கிறேன்! நான் புண்ணியம் செய்தவன்.'
'அதற்குள் திருப்தியடைந்து விடாதீர்கள். இன்னும் ஒன்று மிச்சம் இருக்கிறது உமக்கு.'
ராமானுஜர் சற்றே வியப்புடன் பார்க்க, 'அடுத்தபடியாக நீர் அரையரைச் சென்று பாரும். மற்ற யாரிடமும் இல்லாத ஓர் அர்த்த விசேஷம் அவரிடம் உண்டு. சரம உபாய நிஷ்டை என்கிற ஆசாரிய நிஷ்டை!'
'ஆம் சுவாமி. இதையேதான் திருமாலையாண்டானும் சொன்னார்.'
'சொன்னாரா? அதுதான்! எதைக் கற்றுவிட்டால் மற்றதெல்லாம் ஒன்றுமில்லையோ அதை நீர் கற்றே தீரவேண்டும்.' என்றவர் ஆசாரிய நிஷ்டையின் முக்கியத்துவத்தைப் பற்றி ராமானுஜருக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார்.
'சாமானியர்களால் பரம புருஷனை நேரில் பார்க்க முடியாது.
அவன் பக்தி செய்யலாம். கர்ம, ஞான யோகங்களில் சாதகம் செய்யலாம். இன்னுமுள்ள எத்தனையோ விதமான உபாயங்களைக் கடைப்பிடித்துப் பார்க்கலாம். ஆனால், பகவான் தரிசனம் அத்தனை சுலபமா? ஆனால், பகவானைக் காணவேண்டுமென்கிற தாபம் இல்லாதிருக்காதல்லவா? அதற்கான எளிய உபாயம் இது. ஆசாரியரே நடமாடும் பரம புருஷன்.'ராமானுஜர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
'உறங்கும் பெருமான் தானே உலவும் பெருமானாய் வந்தான் என்பார்கள். உலவும் பெருமான் என்றால் அது ஆசாரியரைக் குறிக்கும். 'தேவு மற்றறியேன்' என்று மதுரகவி யாரைச் சொன்னார் என்று சிந்தித்துப் பாரும். அவரது ஆசாரியர் நம்மாழ்வாரைத்தான் அவர் அப்படிச் சொன்னார்.'
'புரிகிறது சுவாமி.'
'அதனால்தான் சொல்கிறேன். ஆசாரிய நிஷ்டையைப் பூரணமாகக் கற்க வேண்டியது மிக அவசியம். அதை அரையர் சுவாமியிடம்தான் நீர் பயின்றாக வேண்டும். அதைச் சொல்லித்தர அவரைக் காட்டிலும் வேறு சரியான நபர் இல்லை.'
அன்று இரவு ராமானுஜர் அரையரின் இல்லத்துக்குச் சென்றார். அரையர் அப்போது கோயிலில் இருந்து வந்திருக்கவில்லை. கையோடு எடுத்துச் சென்றிருந்த பாலை சுண்டக் காய்ச்சினார். பனங்கற்கண்டு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ என்று பசும்பாலுக்குக் குணம் சேர்க்கக்கூடிய பொருள்களைச் சேர்த்தார். அரையர் வீடு திரும்பியதும், 'அடியேன்' என்று அவர் பாதம் பணிந்து, தயாராக வைத்திருந்த காய்ச்சிய பாலை எடுத்து நீட்டினார்.
'வாரும் உடையவரே, என்ன இந்நேரத்தில் இங்கே?'
'பாலை அருந்துங்கள் சுவாமி. பாடிக் களைத்து வந்திருக்கிறீர்கள். முதலில் சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள்'
அரையர் சாய்ந்து அமர்ந்து பாலைப் பருக ஆரம்பித்தார். ராமானுஜர் அவர் காலருகே அமர்ந்து அவரது பாதங்களை எடுத்துத் தம் மடிமீது வைத்து மெல்லப் பிடித்துவிடத் தொடங்கினார்.
அரையர் சேவை என்பது ஆனந்தத்தின் உச்சம். சன்னிதியில் அவர் பாடத் தொடங்கினால் காற்றும் வீசுவதை நிறுத்திவிட்டு நின்று கவனிக்கும். பக்திப் பரவசத்தில் பாடிக்கொண்டே அவர் மெல்ல ஆடவும் ஆரம்பிப்பார். தன்னை மறந்து, உலகை மறந்து, இரவு பகல் மறந்து, இடம் மறந்து, இருப்பு மறந்து இறைவனோடு இரண்டறக் கலக்கிற பரவசப் பேரனுபவம் அது. பிரேம பக்திதான். ஆனால் அந்தப் பிரேமை நிகரற்றது. ஆண்டாளுக்கும் பக்த மீராவுக்கும் ராதைக்கும் சாத்தியமான பக்தி. அந்தப் பரவசப் பெருவெள்ளம் தாங்க முடியாமல் பாய்ந்து வந்து பரமனே கட்டியணைத்துக் கடாட்சிக்கிற உச்சக்கட்ட பக்தி.
ராமானுஜருக்கு அரையரைத் தெரியும். காஞ்சியிலேயே அவர் பார்த்திருந்தார். பேரருளாளனையே தன் வசப்படுத்திய பெரியவர். ஆளவந்தாரின் மகனுக்கு பக்தி செய்யச் சொல்லித்தரவும் வேண்டுமா?
காலம் மறந்து பாடியும் ஆடியும் களைத்து வந்திருந்த அரையருக்கு அந்த சூடான பசும்பாலும் இதமான கால் பிடித்து விடலும் பரம சுகமாக இருந்தன.
'அருமை உடையவரே. உமக்கு ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்தினம் தெரியுமோ?'
'இல்லை சுவாமி. தாங்கள் சொல்லித் தந்தால் பயில ஆர்வமாயிருக்கிறேன்.'
அன்றைக்கு அவருக்கு ஸ்தோத்திர ரத்தினம் கிடைத்தது. இன்னொரு நாள் 'சதுச்லோகி' என்கிற இன்னொரு வைர வைடூரியம் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொற்கிழி. ஒவ்வொரு முத்துக்குவியல்.
ராமானுஜர் தினமும் அரையர் வீட்டுக்குப் போய்விடுவார்.
அரையர் குளிப்பதற்குத் தயாராவதற்கு முன்னால் அவர் குளிப்பாட்டத் தயாராகி விடுவார். அரையருக்கு மஞ்சள் காப்பிட்டுக் குளிப்பதென்றால் இஷ்டம். இதை அறிந்த ராமானுஜர் தினசரி தானே அவருக்கு மஞ்சள் காப்பு தயாரிக்கத் தொடங்கினார். அருமையான கஸ்தூரி மஞ்சள் தூளில் பலவித வாசனைத் திரவியங்களைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து அவரது மேனியெங்கும் மென்மையாகப் பூசிவிடுவார். மஞ்சள் காயும் நேரம் அரையர் கீழ்க்குரலில் மென்மையாக ஏதாவது பாசுரம் பாடிக்கொண்டே இருப்பார். சட்டென்று நிறுத்தி, 'இதற்குப் பொருள் தெரியுமோ?' என்று ஆரம்பித்தால் அன்றைய
பொழுதுக்கு ஒரு ரத்தினம் கிடைத்துவிடும்.
ஒருநாள் இருநாள் அல்ல. ஆறு மாதங்களாக ராமானுஜர் இதனைச் செய்து கொண்டிருந்தார்.
அரையருக்குப் பழகிவிட்டது. 'இன்றைக்கு உடையவர் இன்னும் வரவில்லையோ?' என்று வீட்டுக்குள் நுழையும்போதே கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்.
'மன்னித்துக் கொள்ளுங்கள் சுவாமி. மடத்தில் இன்று ஏகப்பட்ட விருந்தினர்கள். காலட்சேபம் முடியத் தாமதமாகிவிட்டது.'
'அப்படியா? அதனால் பரவாயில்லை. இன்றைக்கு என்ன காலட்சேபம் நடந்தது?'
'சுவாமி, ராமாயணம் நடந்து கொண்டிருக்கிறது. விபீஷண சரணாகதிக் கட்டம் வந்திருக்கிறது.'
'அடடா... அருமையான இடமாயிற்றே. எங்கே, இன்றைக்கு என்ன சொன்னீர் என்று சொல்லும்?'
ராமானுஜருக்குக் கூச்சமாகிவிட்டது. ஆளவந்தாரின் திருமகன். தவிரவும் அவரது பிரதான சீடர். அவருக்கு நாம் ராமாயண உபன்யாசம் செய்வதா?
'அட பரவாயில்லை சுவாமி. ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லும், நாமும் கேட்போம்.'
மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு ராமானுஜர் ஆரம்பித்தார்.
'சுவாமி, ராமன் எப்பேர்ப்பட்ட பராக்கிரமசாலி. அவன் நினைத்தால் ராமேஸ்வரத்தில் இருந்தபடியே ராவணனை அழித்துவிட முடியாதா? எதற்காக அவன் வேலை மெனக்கெட்டு இலங்கைக்குப் போகவேண்டும்?'
'நல்ல கதையாக இருக்கிறதே. சீதாதேவியை சிறை மீட்க வேண்டாமா?'
'ஏன் ராமன் நினைத்தால் இருந்த இடத்தில் இருந்தபடியே சீதையை மீட்டிருக்க முடியாதா?'
'அதெப்படி முடியும்?'
'முடிந்திருக்கும் சுவாமி. நடந்ததைச் சற்று யோசித்துப் பாருங்கள்!' என்று பொடி வைத்தார்.

(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன
குருவே சரணம்!